பழந்தமிழர் வாழ்வின் களவியல், கற்பியல் என்ற இருபெரும் இயல்களுள் மாந்தர்தம் வாழ்வுநிலை, அவருள்ளே விளைந்த பேரன்பின் பெருமை முதலியவற்றை அழகியலோடு கூறுவது அகநானூறு. இத்தகைய சிறப்புமிக்க அகநூனூற்றின் இரு பாடல்கள் வழி, காதல் மனம் கொண்ட தலைவியரின் எண்ணம் (பெண்களின் குணம்) எவ்வாறு இருவேறுபட்ட எதிரெதிர் மனநிலைகளில் இயங்கும் என்பதைக் காணலாம்.
தன் கணவன், பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருப்பதை (களவு உறவு) ஒருத்தி அறிந்தாள். அவ்வண்ணம், அவள் அறிந்ததை தன் கணவனுக்குத் தெரியப்படுத்தும்போது, அவனோ "தான் யாரையும் அறியேனென்று' மறுத்துரைத்தான். அவ்வாறு மறுத்துரைத்த தன் கணவனை நோக்கி, அவன் உறவாடும் பரத்தையானவள், தன் கணவனின் சாயலையொத்த தமது புதல்வனை அணைத்து, வாஞ்சையுடன் அன்பு காட்டிய நிகழ்ச்சியைக் கூறி, அவனுடைய மறைமுக நட்பைத் தானும் அறிந்திருப்பதைப் புலப்படுத்துகிறாள்.
நினது காதலியான பரத்தை, நம் புதல்வன் தெருவிலே சிறுதேர் ஓட்டி விளையாடிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். உன்னுடைய தோற்றப்பொலிவை ஒத்த அவனது உருவைக்கண்டு உளம் மகிழ்ந்து, எவரும் காண்பவர் இல்லாமையால், துணிவுடன் நம் புதல்வன் அருகே சென்றாள். மகிழ்வான மனதுடையவளாய் ""என் உயிரே! என்னிடம் வா!'' எனக் கூறி, அவனை அருகழைத்து அணைத்துக்கொண்டதை நானும் கண்டேன்.நான் அருகில் சென்று, அவளை வெருட்டாமல் என்னருகில் அழைத்து அணைத்துக் கொண்டேன். ""களங்கமற்ற இளையவளே! ஏன் மயங்குகிறாய்! பயம் வேண்டாம்! நீயும் இவனுக்கு ஒரு தாய்தான்!'' என்று அவளை அமைதிப்படுத்தினேன்.
களவினைச் செய்தவர் பிடிபடும்போது, பிடித்தவர் முன்பாக வெட்கித் தலைகுனிந்து நிற்பதுபோல, அவளும் என் முன் தலைகவிழ்ந்து, தன் கால் விரலால் நிலத்தைக் கீறியவளாய் வெட்கி நின்றாள். அருமைமிகு அப்பெண், நின் மகனுக்குத் தாயாகுதல் பொருந்துவதேயாகும். என் மகிழ்நனே! அவ்வாறே யானும் அவளைப் போற்றினேன்'' என்று தன் கணவனிடம் அவனது களவு உறவைத் தானும் அறிந்த நிலையை விளக்குகிறாள் (அகம்: பா-16).
கணவன், மனதுக்கியைந்த பெண்ணொருத்தியுடன் களவு நிகழ்த்துவதை அறிந்தும், அவன் விருப்பத்தையே தனது விருப்பமாக எண்ணி, கணவனின் அன்புக்குரியவளைத் தன் மகனுக்கு மற்றொரு தாயாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறாள் ஒருத்தி.
அவளுக்கு நேரெதிர் மனப்பான்மை கொண்டவளாக, தன் கணவனை இல்லத்துக்குள்ளே அனுமதிக்காத மற்றொரு பெண்ணொருத்தியை பாடல் 56 வழி காணலாம்.
""நகையாகின்றே தோழி! நெருநல்
மணிகண்டன்ன துணிகயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கிருங்கோட்டு எருமை,
ஆம்பல் மெல்லடை கிழியக், குவளைக்
கூம்புவிடு பன்மலர் மாந்திக், கரைய
காஞ்சி நுண்தாது ஈர்ம்புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண்துறை ஊரன் திண்தார் அகலம்
வதுவை நாள்அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்றியாய்ப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ்இட்டு
எம்மனைப் புகுதந்தோனே! அதுகண்டு
மெய்ம்மலி உவகை மறையினென், எதிர்சென்று
"இம்மனை அன்று; அஃது உம்மனை' என்ற
என்னும் தன்னும் நோக்கி,
மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே''
(அகம்-56)
தலைவியாகிய பாணினி தன் தோழியிடம் கூறுகிறாள், ""தோழி! இரும்பால் செய்தவைபோன்று உறுதியான, வலிமைமிக்க கருநிறக் கொம்புகளையுடைய எருமையானது, பளிங்கினையொத்த தெளிந்த குளத்து நீரைக் கலங்கச்செய்து, குளத்தே பூத்து நிறைந்திருந்த ஆம்பலின் மெல்லிய இலைகளைக் கிழித்து, குவளையின் அரும்புகளை நீக்கி, ஏனைய அனைத்துவகை மலர்களையும் தின்றது. பின்னர், அக்குளத்தின் கரையிலிருந்த காஞ்சி மரத்து நிழலில் தன் பெரிய உடலைக் கிடத்தி, அம்மரத்தின் நுண்மைமிக்க தாதுக்களைச் சிந்தும் வகையில் அசைபோட்டுக் கிடந்தது. பின் தனக்குரிய கொட்டிலைச் சென்று அடைந்தது.
அத்தகைய குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊரனாகிய நம் தலைவன், அவனது திண்ணென்ற மார்பிலே மாலை அணிந்து, மணக்கோலத்தில் செய்யப்படும் அலங்காரங்களைப் புனைந்துகொண்டு காத்திருக்கும் பரத்தையரைப் புணர வேண்டுமென்ற மிக்க விருப்போடும், பரிவோடும் வந்தான் பாணனாகிய நம் தலைவன். அப்போது கன்று ஈன்ற பசுவானது, வெருண்டு தலைவனைத் தனது கூரிய கொம்புகளால் குத்துமாறு பாய்ந்து வந்ததைக்கண்டு கலங்கி, தன் யாழாகிய இசைக்கருவியையும் தெருவிலே விட்டுவிட்டு எம் வீட்டினுள் புகுந்தான்.
அதைக்கண்ட நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தாலும், உள்ளம் புளகாங்கிதம் அடைந்தாலும் அதை மறைத்துக் கொண்டவளாய் அவனெதிரே சென்று, ""இம்மனை உம்மனை அன்று; உம்மனை அப்பரத்தையர் மனையாகும். நீர் அங்கு செல்க'' என்றும் கூறி விரட்டினேன். அவன் என்னையும், தன்னையும் நோக்கி மயங்கிய மனதுடன் என்னைத் தொழுது நின்றான். அத்தோற்றம் எனக்கு நகைப்பையே உண்டாக்கியது தோழி!''
இவ்வாறு, பரத்தையரைத் தேடிச்சென்ற தனது தலைவனை தனது மனைக்கு வரவிடாமல் துரத்தி, பரத்தையரோடு தொடர்பு கொண்டதனால் தலைவனையே துறக்கும் எண்ணம் கொண்டவளாய் விளங்குகிறாள் ஒருத்தி. கணவன் மேல் கொண்ட அன்பால், அவன் பிற பெண்ணுடன் உறவாடியபோதும், அப்பெண்ணைத் தனது புதல்வனுக்குத் தாயாகவும், அதன் மூலம் தனது உடன்பிறப்பாகவுமே ஏற்றுக்கொள்கிறாள் மற்றொருத்தி.
இவ்வாறு இரு பாடல்கள் மூலம், காதல் மனம் கொண்ட இருபெண்களின் மாறுபட்ட மனநிலையையும், எண்ண ஓட்டத்தையும் தம் தலைவன்மேல் கொண்ட அன்பின் ஆழத்தையும் அகநானூற்றுப் பாடல்கள் வழி அறிந்துகொள்ள முடிகிறது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக