சந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பூச்சி - சந்திரா

அவன் பொரி வண்டியின் மணிச்சத்தமும் வண்டியில் இருந்த லாந்தர் விளக்கின் வெளிச்சமும் அந்தத் தெருவின் இருளை விலக்கிக்கொண்டு போயின. அவன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வந்தான். ஒரு கையில் மணியடித்துக்கொண்டே, இன்னொரு கையில் ஹேன்டில் பாரைப் பிடித்துக்கொண்டு பேலன்ஸ் செய்வது கடினமாகத்தான் இருந்தது. மிக இருட்டான கீழ்முக்குத் தெரு வந்ததும் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தொடர்ந்து மணியடித்துக்கொண்டிருந்தான். அந்த இருட்டு அவனுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. யார் முகத்தையும் அவன் பார்க்க விரும்பவில்லை. அதேபோல் யாரும் தன்னைப் பார்த்துப் பேசாமல் இருக்கவே விரும்பினான்.

ஆனால் நிலைமை அப்படியில்லை. புற்றீசலைப்போல் எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியவில்லை. அத்தனை குழந்தைகளும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இவ்வளவு நேரம் கைவலிக்க மணியடித்துக்கொண்டிருந்தான். சீண்டுவார் யாருமில்லை. ஆனால், இப்போது பார்த்தால் "ஏய் பூச்சி எனக்குக் குடு எனக்குக் குடு"என்று எல்லோரும் ஒரே நேரத்தில் முண்டியடித்துக்கொண்டு காசை நீட்டுகிறார்கள். "இருப்பா தர்றேன் அவசரப்படாதீங்க" என்று பூச்சி சொல்வதை யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை. விட்டால் போதும் என்று, கணக்குப் பார்க்காமல் பொரியை அவசரமாகக் காகிதத்தில் போட்டு விற்றுக்கொண்டிருந்தான். இல்லையென்றால் ஆளாளுக்கு நான் போட்டி நீ போட்டி என்று எப்படியும் சைக்கிளைக் கீழே தள்ளிவிட்டுவிடுவார்கள்.

இப்படித்தான் சித்திரை மாதம் வீரபாண்டித் திருவிழாச் சமயத்தில் சின்னப் பசங்களெல்லாம் மொத்தமாக ஓடிவந்து ஒருத்தன் மேல ஒருத்தன் விழுந்து வண்டியைக் கொடைச் சாய்த்தார்கள். பொரி, பட்டாணி, பொரிகடலை அவ்வளவும் கொட்டிப்போய், லாந்தர் விளக்கும் உடைந்துவிட்டது. கோபத்தில் கையில் கிடைத்த இரண்டு பேரைச் சும்மா இரண்டு அடி அடித்தால் வீட்டிலிருந்து அருவாளைத் தூக்கிவருகிறார்கள் டவுசர்போட்ட குட்டிப் பயல்கள். வேறு வழியில்லாமல் பூச்சி சைக்கிளையும் கீழே போட்டுவிட்டுத் துணைக்கு ஆளைக் கூப்பிட ஓட வேண்டியதாகிவிட்டது. பெரியவர்கள் வந்து குட்டிப் பசங்களையெல்லாம் சமாதானப்படுத்திவிட்டு ஒரு வழியாகப் பூச்சியை வீட்டுக்கு அனுப்பப் போதும் போதுமென்றாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் அம்மா குடிமுழுகிப்போச்சு என்று பெரிதாக ஒப்பாரி வைத்து..., இவனையும் விளக்குமாற்றால் அடிக்கிறாள். அவளும் பாவம் என்ன செய்வாள்? புருஷன் குடிச்சுக் குடிச்சுக் கொடலு வெந்து செத்துப்போனான். மலைக்குப் போய் விறகு வெட்டி அதை விற்றுப் பொழைக்கிறாள் அவள். உடல் பலமான வேலையைப் பூச்சி ஒரு நாளும் செய்யமாட்டான் என்று பொரி விற்கச் சொன்னாள். அதையும் ஒழுங்காச் செய்யாமல் பூச்சி கேனப்பயலாக இருக்கிறான் என்று வருத்தப்படுகிறாள்.

"ஏய்... கால்ரூவாய்க்கு இம்புட்டுதான! இன்னும் கொஞ்சம் போடுடா பூச்சி" என்று டவுசர் போடாத ராசுப்பயல் சொன்னபோதுச் சுருக்கென்று கோபம் வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டு அவனை அடிப்பதற்கு மேலே தூக்கிய கையைக் கீழே இறக்கினான். "என்னாடா மொறைக்கிற... போடு" என்று அவன் மேலும் பேசிக்கொண்டேபோக எரிச்சலோடு இன்னும் கொஞ்சம் பொரிகடலையை எடுத்துப் போட்டான். இன்றைக்கும் அவனுக்குப் பெரிதாக லாபம் வரப்போவதில்லை. பத்தோ இருபதோ லாபம் கிடைத்தால் அம்மாவைச் சந்தோசப்படுத்தலாம். "இந்தப் பொடிப் பயலுக பண்ற அழிச்சாட்டியத்தில ஒரு ரூவாகூடக் கிடைக்காது போலிருக்கே" என்று நினைத்தவன், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு பெண் பிள்ளைகள் பொரி கேட்க அவர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு, அதற்கு மேல் மணியடிக்காமல் அப்படியே வண்டியை வீட்டுக்குத் திருப்பினான்.

கூரை வேய்ந்த தன் வீட்டுக்குள் நுழைந்த பூச்சி லாந்தர் விளக்கை ஆணியில் மாட்டிவிட்டுக் குட்டிச்சாக்கில் இருந்த பொரிகடலையை இறுக்கமாகக் கட்டிவைத்தான். வீட்டின் முன் இரண்டு பக்கமும் மண் திண்ணை இருந்தது. இன்றைக்கு அவன் அம்மா திண்ணையைச் சாணி போட்டு மெழுகியிருந்தாள். வலது பக்கம் இருக்கும் திண்ணையில் சைக்கிளைத் தூக்கி நிறுத்திவிட்டு அதன் ஓரத்தில் அவன் உட்கார்ந்துகொண்டான். இடது பக்கத் திண்ணையின் ஓரத்தில் இருந்த அடுப்படியில் அம்மா எதையோ சமைத்துக்கொண்டிருந்தாள். சுருக்கங்கள் நிறைந்து கறுமையேறியிருந்த அவள் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்ததாகப் பூச்சிக்கு ஞாபகம் இல்லை. "என்னடா பூச்சி இன்னைக்கு எம்புட்டு ஏவாரம் பண்ணுன?" இவன் பதிலேதும் பேசாமல் முகம் சிவக்கக் கோபத்தை அடக்கி உட்கார்ந்திருந்தான். "ஏண்டா நாம் பேசாம கேட்டுக்கிருக்கேன். நீயென்னமோ பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருக்க?" என்றாள்.

ஆங்காரம் வந்தவனைப் போல விருட்டென்று எழுந்த பூச்சி, "ஏம்மா எனக்குன்னு ஒரு பேரு வச்சிருக்கயில அதைச் சொல்லிக் கூப்பிட வேண்டியதுதான, அதை விட்டுட்டு நீயும் ஊர்க்காரங்ஙெ மாதிரியே பூச்சி பூச்சின்னு கூப்பிடுற" கோபத்தோடு கத்தினான். "இப்ப பூச்சின்னு கூப்பிட்டதில என்னா குடிமுழுகிப்போச்சு. ஆமாம் இவரு பெரிய சொல்லுப் பொறுக்காத சோழ ராசா மகன். கட்டிட்டு வாடான்னா வெட்டிட்டு வாரே. ஒரு கூறும் இல்லாம பொரி விக்கப் போறேன்னு பொரியைக் கீழே கொட்டிப்பிட்டு வாரே... இல்லன்னா கணக்குத் தெரியாம மீதி சில்லரத் துட்டகூடக் குடுத்துபிட்டு நஷ்டமாகி வந்து நிக்கிற" வாய் ஓயாமல் அவனைத் திட்டித் தீர்த்தாள். என்னைக்கோ ஒரு நாள் அவன் நஷ்டமாகி வந்து நிற்பது உண்மைதான். ஆனால் மற்ற நாள்களில் குறைந்தது பத்து ரூபாயாவது லாபம் பார்த்து வருகிறான். அவன் உழைப்பைக் கணக்கில் கொள்ளாமல் அவன் மனத்தைக் காயப்படுத்துகிறாள் அம்மா.

பூச்சிக்கு இருபது வயதை நெருங்கிக்கொண்டிருந்தது. அவன் வயதுடையவர்கள் அவனைச் சரிக்குச் சமமாக மதிப்பதில்லை. சிறுவர்கள் அவனைக் கோமாளியாக்கி வேடிக்கைப் பொருளாகப் பார்த்துக்கொண்டி ருந்தார்கள். அவனுக்கென்று நண்பர்கள் இல்லை. பகல் முழுவதும் தனிமையில் கிடந்து யோசித்தான். எல்லாவற்றுக்கும் காரணமான தன் உடல்மீது பெரும் வெறுப்பு மூண்டது அவனுக்கு. தன் உடலிலிருந்து எல்லா உறுப்புகளையும் தனித் தனியே பிய்த்து எறிந்துவிட்டால் நிம்மதியாக இருக்குமென்று தோன்றியது. உருண்ட தலையும் சுருட்ட முடியும் உள்ளொடுங்கிய கண்களும் பருத்த தப்பட்டையான உடம்பும் குச்சி மாதிரியான கை கால்களும் மந்திரவாதி கதையில் வரும் குள்ள அரக்கனைப் போல இருப்பதாக நினைத்தான். ஒட்டு மொத்தமாக அவலட்சணமாக இருக்கும் உடலைப் பார்க்கும் போது அவனுக்கே தன்மீது கழிவிரக்கமும் சோர்வும் தோன்றியது. ஒரு உறுப்பையும் உருப்படியாகப் படைக்காத கண்ணுக்குத் தெரியாத கடவுளை மிகக் கேவலமாக இரவெல்லாம் ஏசிக்கொண்டிருந்தான். கடவுளைத் தவிர வேறு யாரை அவன் நேரிடையாகத் திட்டிவிட முடியும்?

பொரி விற்றுவிட்டுத் தெற்கே பள்ளிவாசல் தெருவைக் கடந்து அவன் வீட்டுக்குப் போகையில் குண்டு ராவுத்தர் இவன் வண்டியை நிறுத்திச் சிறுபையனைப் போலத் தினமும் பட்டாணியை வாங்கித் தின்பார். பூச்சியும் குண்டு ராவுத்தரும் இணக்கமாகப் பேசிக்கொண்டார்கள். "ஏம்ப்பா இன்னைக்கு நல்லா ஏவாரம் ஆச்சா. மேற்குத் தெருவுல என்னா விசேசம், கீழ்முக்குத் தெருவுல என்னா விசேசம்" என்று இவனைப் பெரிய மனுசனாக நினைத்துத் தினமும் விசாரிப்பார். இவனும் எல்லாப் பிரச்சினைகளையும் சாமிகிட்ட சொல்வதைப் போன்று அவரிடம் சொல்வான். "என்னாண்ணே அவங்ஙெ குடுக்கிற அஞ்சு காசுக்கு ஒரு சாக்குப் பொரியை மொத்தமா பேப்பர்ல சுருட்டிக் குடுத்தாலும் கடைசியில இன்னும் கொஞ்சம் குடுன்னு, கையில கொஞ்ச பொரிகடலையை ஓசியாக் கேட்டு வாங்கிப் போனாதான் மனசு அடங்குது. அப்படிக் குடுக்கலன்னா என்னாடா... ரெண்டு பொரியைப் பேப்பர்ல சுருட்டிக் குடுத்து ஏமாத்துறேன்னு அவங்களே சாக்குல கையைவிட்டுப் பொரியை எடுத்துப்போறாங்கே" என்று பூச்சி அவரிடம் வேதனை பொங்கச் சொன்னான். அவனுக்குத் தெரிஞ்சு அவர்தான் அவனைப் பூச்சி என்று கூப்பிடாதவர். குண்டு ராவுத்தரை நேராப் பார்க்காமல் அவர் குரலை மட்டும் கேட்கிறவர்கள் நிச்சயம் ஒரு பெண் பேசுவதாகத்தான் நினைப்பார்கள். கடுமையான ஒரு சொல்கூட வெளியே வராது. அவர் பேச்சு மயிலிறகைப் போன்று தடவிக் குடுப்பதாய் அவனுக்கிருக்கும். "இங்க பாருப்பா நீ வருத்தப்பட்டுகிடாத உனக்கொரு விசயத்தைச் சொல்லித் தாரேன்... அதுப்படி செய்யி. பேப்பரை உள்சொருகு சொருகிச் சின்னதா மடிச்சு அதுல பொரியைப் போட்டேன்னா கொஞ்சமாத்தான் பிடிக்கும். அப்புறம் நீயே கொஞ்ச பொரியை ஓசியா கையிலெடுத்துக் குடுத்தேன்னா சந்தோசமா வாங்கிட்டுப் போவாங்க. ஓங் கணக்கும் சரியாப் போகும் அவங்க கணக்கும் சரியாப் போகும்" புது சூட்சுமத்தைக் குண்டுராவுத்தர் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவனும் அப்படியே செய்ய யாரும் ஒரு குறையும் சொல்லாமல் வாங்கிப் போனார்கள்.

சிறுவனாக இருந்தபோது எல்லாச் சிறுவர்களையும் போலப் பூச்சி இச்சிமரத்தில் ஏறி விளையாடப் போனான். நெடுந்தூரம்வரை கிளைகளே இல்லாமல் கட்டையான அடிப்பாகத்தைக் கொண்டிருந்தது இச்சி மரம். பதினைந்தடி உயரத்திற்கு பின்பே அதன் கிளைகள் அகன்று விரிந்திருக்கும். அந்த மரத்தில் ஏறுபவனைத்தான் வீரம் நிறைந்தவனாகக் கருதினார்கள். கணுக்கள் இல்லாத பிசின் பிடித்திருந்த மரத்தில் பூச்சி, கால்களைத் தேய்த்துத் தேய்த்து மேலேறினான். அகன்ற பாதம் மேலெழும்பாமல் வழுக்கி வழுக்கிச்சென்றது. அவனுக்குப் பின்னால் மரத்தில் ஏற நின்ற சிறுவர்கள் அவனை வேகமாக ஏறச்சொல்லி அவசரப்படுத்தினார்கள். சிலர் பொறுமையிழந்து விடுவிடுவென்று ஏறி அவன் காலுக்குக் கீழிருந்து "வேகமா ஏறு... இல்ல கீழே எறங்குடா" என்று அவனை ஏறச் சொல்லி வேகம் கூட்டிக்கொண்டிருந்தார்கள். கிட்டத் தட்ட அவன் கிளைகளை எட்டும் தூரத்தில் இருந்தான்.

தம் பிடித்துக் கால்களை உந்தித் தள்ளியவன் ஒரு வேகத்தில் பிடி நழுவவிட்டு மட்ட மல்லாக்காகக் கீழே விழுந்தான். அவன் விழுந்த சத்தம் கேட்டதும் மற்ற சிறுவர்கள் சரசரவென்று மரத்திலிருந்து கீழிறங்கி ஓடிவிட்டார்கள். பூசானம்பட்டிக்குத் தூக்கிப்போய் பூச்சியின் ஒடிந்த கால்களைத் தப்பையை வச்சுக் கட்டிச் சரிபடுத்த இரண்டு மாதமானது. அப்போதிலிருந்து பூச்சியை அவன் அம்மா ஆண்பிள்ளைகளைப் போல விளையாட அனுமதிக்கவில்லை.

கோடையில் எல்லோரும் வட்டக் கிணத்துக்குள் தவ்வி நீச்சலடித்துப் பழகும்போது, அவர்களின் கைகள் காற்றைத் தள்ளி, கால்கள் நீரைப் பிளப்பதைக் கிணத்து மேட்டில் நின்று பூச்சி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான். ஒட்டாங்குளத்துக்குக் கீழே வயல்வெளியில் நடுநாயமாக இருந்தது வட்டக்கிணறு. அந்தக் கிணத்துக்குச் சொந்தக்காரக் கவுண்டர் மிகவும் நல்லவராக இருந்தார். பயிர் வைக்காத கோடை காலத்தில் கிணத்துக்குள் குதித்து விளையாடுவதை அவர் தடுப்பதில்லை. கிணத்தைச் சுற்றியிருக்கும் இலவ மரத்திலிருந்து இலவங்காய் வெடித்து இலவம் பஞ்சும் இலவங்கொட்டைகளும் கிணத்துக்குள் விழுந்துகிடக்கும். பஞ்சு நீரூறி கிணத்துக்குள் போய்விட, இலவங்கொட்டை மட்டும் பருத்து ஊதித் தண்ணீரின் மேலே மிதக்கும். பூச்சிக்குக் கிணத்துக்குள் இறங்க ஆசையாக இருந்தாலும் அவன் வயிற்றில் கயிற்றைக் கட்டி நீச்சல் பழகிக்கொடுக்கயார்தான் இருக்கிறார்கள். கண்கள் சிவக்கும்வரை சிறுவர்களும் இளைஞர்களும் நீரூக்குள் குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்ததை ஏக்கத்துடன் கரையிலிருந்து பார்த்தான். அந்தப் பகுதியிலேயே நூறு ஆள் மட்டங்கொண்ட கிணறு அது மட்டுந்தான். கிணத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் காம்பவுண்டு சுவரிலிருந்துக் கையை நீட்டினால் தண்ணீரைத் தொட்டுவிட முடியும். அதில் நீச்சலடிப்பது பெருமையான விசயமாக இருந்தது. அதன் ஆழத்தைக் கண்டறிந்து பிடிமண் எடுத்து வருவதற்கு வயதுவாரியாகப் போட்டி வைக்கப் பட்டது. ஆனால் இதுவரை யாருமே வட்டக்கிணத்தின் ஆழத்தை அறிந்து பிடிமண்ணை எடுத்துவர முடியவில்லை. நீச்சலடிக்கத் தெரியாத பூச்சி அதன் பிடி மண்ணை எடுத்துவர விரும்பினான். தான் ஒரு ஆண் என்பதை ஊர்க்காரர்கள் முன் நிரூப்பிப்பதே தான் வாழ்வதற்கான ஆதாரமாகக் கருதினான். முட்டி மோதி ஒரு ஆண் செய்யும் அத்தனை காரியங்களையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று தீவிரமாக இயங்கினான்.

முட்டி நனையும்வரை ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் தானாக நீச்சலடித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்துச் சிரித்துச் சென்றார்கள் சிறுவர்கள். தன் வயலுக்கு வேலைக்குப் போய்க்கொண்டிருந்த குண்டு ராவுத்தர் பூச்சியைப் பார்த்து என்னாப்பா "மீன் பிடிக்கிறியா". "இல்லண்ணே நீச்சலடிச்சுப் பழகுறேன்". "முட்டியளவுத் தண்ணியில நீச்சலெல்லாம் பழக முடியாது... நாளைக்கு வட்டக் கெணத்துக்கு வா அங்க சொல்லித் தாரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். பூச்சியின் சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவங்கம்மா வெறகுக்கு எடுத்துப் போற கொச்சைக் கயிரை எடுத்துகிட்டு அடுத்தநாளு வெள்ளனவே வட்ட கெணத்துக்குப் போயிட்டான். அவன் கிணத்தை எட்டிப் பார்த்தபோது எந்த அசைவும் இல்லாம கிணறு முழுதும் இலவங்கொட்டை பரவிக்கிடந்தது. "இன்னைக்குக் கெணத்துக்கு நாமதான் முதல் அசைவைச்கொடுக்கணும். குண்டுராவுத்தர் வர்ராரா" என்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். வெயிலேறிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவராக வந்து நீரை அசைத்துக்கொண்டிருந்தார்கள். ஊறிப் பெருத்திருந்த இலவங்கொட்டைகள் அவர்களின் வாய்க்குள்ளும் காதுக்குள்ளும் டவுசர் பாக்கெட்டுக்குள்ளும் போய்க்கொண்டிருந்தன. குண்டு ராவுத்தரும் கையில் கயிரோடு வந்திருந்தார். இவனுடைய கொச்சக் கயிறு இத்துப் போயிருந்தது. தன் கயிறால் அவன் இடுப்பில் கட்டி அவனை இறக்கிவிட்டார். மிகப் பழகியதுபோலத் துடுப்பைப் போன்று அவன் கைகள் பரபரத்தன. கால்களால் அநாயசமாக நீரைத் தட்டிச் சிதறிப் பிளந்தான். "தம்பி மெதுவா பண்ணுடா ஒரே நாள்ல எல்லாத்தையும் கத்துக்க முடியுமா?" கயிறு பிடித்திருந்த குண்டு ராவுத்தரின் கைசிவக்கும்வரை வட்டமடித்துக்கொண்டிருந்தான் பூச்சி. உள்நீச்சலடித்த கரிமேட்டுப்பட்டிப் பையன்கள் தண்ணீருக்குள் இவன் கால்களைச் சுண்டி இழுத்துவிட்டுப் போயினர். இவன் தண்ணீருக்குள் நிலைதடுமாறும்போதெல்லாம் ராவுத்தர் கயிரைச் சுண்டி மேலிழுத்து அவன் ஓட்டத்தை நிதானப்படுத்தினார். தண்ணீரைக் குடித்தும் மூக்கில் தண்ணீர் ஏறியும் பூச்சி நீச்சலடித்துப் பழகிக்கொண்டான். நீருக்குள் தம்கட்டி மூச்சுவிடாமல் நீந்தி உள்நீச்சல் பழகுவதில் மும்முரமாக இருந்தான்.

வெயில் முற்றிய ஒரு நாளில் வட்டக் கிணத்துக்குள் பிடிமண் எடுக்கும் போட்டி ஆரவாரமாக நடந்தது. கண்சிவந்து கை சோர்ந்து தோற்றுப்போய் எல்லோரும் மேடேறிக்கொண்டிருந்தார்கள். முத்துக்காளை உள்நீச்சல் அடிப்பதில் மன்னன். பெரியாற்றில் தண்ணீர் கரையை முங்கி அடர்ந்து பாயும் நாள்களில்கூட ஆற்றைக் கடந்து வருபவன். இன்று வட்டக் கிணத்துக்கு குளிக்க வந்திருந்தான். அவனையும் போட்டிக்கு ஏத்திவிட்டார்கள் இளைஞர்கள். அவனோடு போட்டி போடத்தான் ஆளில்லை. பூச்சியும் கிணத்தின் ஓரத்தில் நீச்சலடித்துக்கொண்டிருந்தான். முத்துக்காளையோடு போட்டி போட அவன் முன்வந்ததும், சிலர் அவனை அடிக்கவே வந்துவிட்டார்கள். "இதென்ன சினிமாவாடா பயில்வான ஒல்லிகுச்சி ஹீரோ அடிச்சு நொறுக்கிறாப்பில காட்ட, போடா போயி ராத்திரி பொரி விக்கிறத பாரு" என்று விரட்டினார்கள். முத்துக்காளைதான் அவனைத் தன்னோடு போட்டி போட விளையாட்டாக அனுமதித்தான். ஒரு ஜோக்கர் படத்தைப் பார்க்கும் தோரணையில் பூச்சியைக் கூட்டத்தினர் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். இருவரும் நெடுநேரம் தண்ணீருக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். பூச்சி மூச்சடக்க முடியாமல் கிணற்றின் மேல் பகுதிக்கு வரும்போதெல்லாம் "டேய் உனக்கெல்லாம் தேவையாடா வெளியே வாடா" என்று கத்தினார்கள். முத்துக்காளை மேலே வரும்போது "உள்ள போ உள்ள போ" என்று கத்தினார்கள். பூச்சியை வெளியே வரச்சொல்லிக் கூட்டம் கத்தும்போதெல்லாம் "உசுரைவிட்டாவது இவங்கே முன்னாடி ஜெயிக்கணும்" என்று வெறியோடு மூச்சடக்கி உள்ளே போனான் பூச்சி. கிணற்றின் சுவர்களில் நீட்டிக்கொண்டிருந்த செங்கலில் பூச்சியின் உடல் உராய்ந்து சென்றது. இந்தமுறை கவனமாக உள்நோக்கிச் சென்றான் பூச்சி. தண்ணீரை அடித்துக்கொண்டே ஒரு கை தண்ணீரின் ஆழத்தை நோக்கி அலைந்தது. அவன் கை மண்ணைத் தொட்டதுபோல்தான் இருந்தது. பிசுபிசுப்பாக வழுக்கிக்கொண்டுபோனது மண். எல்லா விசையும் ஒன்று சேர்த்து ஒரு பிடி மண்ணை எடுத்து மேல்நோக்கிக் கிளம்பினான். மூச்சுவிட்டுக் கரையேறிவனை முடியாமல்தான் வெளியே வந்துவிட்டான் என்று கூட்டம் "ஹேய்" என்று கத்திச் சிரித்தது. கூட்டிப் பிடித்திருந்த வலதுகையை விரித்ததும் எல்லோர் முகமும் அமைதியானது. கறுப்பான ஈரமண் அவன் கைகளில் வெயில்பட்டு மின்னிக்கொண்டிருந்தது. கொஞ்ச பேர் "பரவாயில்லடா... பூச்சி பிடி மண்ணெடுத்துட்டு வந்துட்டாண்டா" என்று சொல்லச் சுதாரித்துக்கொண்ட சிலபேர் "என்னாடா எங்ககிட்டயே பொய் சொல்றீயா டவுசர் பாக்கெட்டுல மண்ணை ஒளிச்சுவச்சுக் கெணத்துக்குள்ள தவ்விட்டு இப்ப ஜெயிச்சிட்டேன்னு பொய் சொல்றீயா". "எங்கம்மா சத்தியமா உள்ள முங்கித்தான் எடுத்தேன்" என்று பூச்சி கெஞ்சியபடி சொன்னான்.

எப்போதும் பிடிமண் எடுக்கும் போட்டியில் டவுசர் பாக்கெட்டைச் செக் பண்ணித்தான் கிணத்துக்குள் அனுப்புவார்கள். பூச்சியை ஒரு போட்டியாளராக யாரும் மதிக்காததால் யாரும் அவன் பாக்கெட்டைச் செக் பண்ணவில்லை. முத்துக்காளை பிடிமண் எடுக்காமல் மேலேறி வந்துவிட்டான். பூச்சி கிணத்துக்குள் மூழ்கித்தான் பிடிமண் எடுத்தானென்று அவனுக்குத் தெரியும். அவன் கால்களைக் கடந்துதானே பூச்சி கிணற்றின் ஆழத்திற்குள் போனான். தான் ஒரு கேவலமான பிறவியிடம் தோத்துவிட்டோ ம் என்றால் எவ்வளவு அவமானம் என்று அவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வெயிலில் உட்கார்ந்தான்.

இப்போது பூச்சிக்குத் தைரியம் வந்தது. "என் டவுசர் பாக்கெட்டைச் செக் பண்ணிக்கோங்க இன்னொரு தடவை கெணத்துக்குள்ள போயி மண்ணெடுத்துட்டு வர்றேன்" என்றான். இவன் ஜெயிக்கப்போவதில்லை என்று நினைத்த கூட்டம் அதற்குச் சரியென்றது. அடி ஆழத்தைத் தேடி உள்ளே போனான் பூச்சி. கூட்டம் இவனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே நீருக்குள் அலைந்து திரிந்ததில் சோர்ந்து போயிருந்தான். இழிவாகப் பார்க்கும் அவர்களிடம் தன்னை நிரூபிக்க வேண்டுமென்பதில் அவனுக்கு வைராக்கியம் பிறந்தது. உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரே மனதாக மூச்சடக்கி அடியை நோக்கி அப்படியே குதித்தான். தரையை அடைந்து மண்ணை அள்ளிய வேகத்தில் எம்பி எம்பி மேல்நோக்கிப் பாய்ந்தான். தண்ணீரின் கனம் அவனை வேறொரு திசைக்கு இழுத்தது. கட்டித் தொங்கவிடப்பட்ட ஆடும் பந்து சுவரில் மோதி மோதி விலகுவது போன்று சுவரில் மோதி மோதிக் கீழ்நோக்கிப் போனான். படிக்கட்டு இருக்கும் திசையறிய முடியவில்லை. மண்ணை நழுவவிடாமல் கையை இறுக்கிப் பிடித்திருந்தான். படிக்கட்டைக் கண்டுபிடித்த உற்சாகத்தில் காலை வேகமாக ஒரு உந்து உந்தினான். படிக்கட்டில் மோதிய அவன் தலையிலிருந்து கிளம்பிய மிகப்பெரும் சத்தம் தண்ணீரில் அமுங்கியது. ஒரு நொடி எதிலோ இடித்துக் கொண்ட வலியை உணர்ந்தவன் பரபரவென்று படிக்கட்டு வழி மேலேறினான் கையில் பிடி மண்ணோடு. "டேய் இவன் உண்மையிலே ஜெயிச்சிட்டாண்டா" என்று குசுகுசுவென்று பேசியபடி ஆளாளுக்கு வீட்டுக்குக் கிளம்பினர். இவன் வெற்றியைப் பற்றிய பெருமிதம் யாருக்குமில்லை. ரத்தம் தலையில் வழிந்துகொண்டிருந்தது.

இரவில் பொரி விற்கப்போன பூச்சிக்குச் சிறிதளவும் மரியாதை இல்லை. அவர்களுக்கு அதே பூச்சியாகத்தான் இருந்தான். அவர்களுக்குப் பூச்சியை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கும் எண்ணந்தான் அதிகரித்தது. "ஏய் பூச்சி தப்பட்டக் காலா, சப்பை மூக்கா, குண்டுச்சட்டி" என்று அவனை ஏகத்துக்குக் கூப்பிட்டு அவனை மனமுறியச் செய்தார்கள். எல்லாவற்றையும் மீறி அவர்களைத் தோற்கடித்துச் சாதிக்கும் வேகம் மட்டும் பூச்சிக்கு கூடிக்கொண்டுபோனது. உயிர்ப் பயமின்றி வீரதீரச் செயல்களைச் செய்ய ஆரம்பித்தான். தேங்காயைத் தலையால் உடைத்தான். ஆணி வைத்த செருப்பைப் போட்டு நடந்தான். "டேய் உன்னால இது முடியுமாடா" என்று யாராவது கேட்டாலே அதைச் செய்து முடிக்காமல் ஓயமாட்டான். சிறுவர்கள் எல்லாம் "பூச்சி இதைச் செய்யுடா அதைச் செய்யுடா" என்று அவனை ஒரு மந்திரவாதியைப் போல இயக்கினார்கள். அப்போதும் அவர்களுக்கு அவன் வீரனாக இல்லாமல் கோமாளியாகத்தான் தெரிந்தான். திருவிழா இல்லாத காலத்தில்கூட வாயில் வேல் சொருகி ஊருக்குள் வலம் வருவான். பொரி விற்பதை மறந்து போனான். குண்டுராவுத்தர் அவனிடம் பட்டாணி வாங்கித் தின்பதற்காகக் காத்திருந்து ஏமாந்துபோனார். "வேலை செய்யாம கிறுக்குத்தனம் பண்றியேடா" என்று அம்மா அடிப்பதும் திட்டுவதும் உறைக்கவில்லை. ஊருக்குள்ளிருக்கும் அத்தனை பேரையும் தன்னை நோக்கித் திருப்புவதிலே பூச்சி குறியாக இருந்தான்.

சுடுகாட்டு மரத்தில் ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஆணி அடித்து வந்ததாகப் பூச்சி சொன்னதை யாரும் நம்பாததால் அடுத்த நாள் விநோதமாக ஊருக்குள் வந்தான். வெற்றுடம்பில் சுடுகாட்டு எலும்பை மாலையாக்கி அணிந்து எலும்புக்கூடு நடந்து வருவதைப்போல நடந்து வந்தான். சிறுவர்கள் அதைப் பொய் எலும்புக்கூடாக நினைத்துப் பிடித்து இழுத்தார்கள். சிறுமிகள் விலகி ஓடினார்கள். பெண்கள் அவனை அருவெருப்பாகப் பார்த்தார்கள். அவன் எந்தக் காலத்திலும் அவர்களுக்குக் கதாநாயகனாகத் தெரியவில்லை. சோர்ந்துபோனான் பூச்சி. அதற்கு பின் அந்த ஊருக்குள் பொரிவண்டியின் மணிச்சத்தம் கேட்கவில்லை. ஊரே பயந்துறங்கும் ஒரு ராத்திரியில் வெளியூர் குடுகுடுப்பைக்காரனோடு பூச்சி ஊரைவிட்டு போனதாகச் சொன்னார்கள்.

இப்போது ஊருக்குள் இரவில் பம்பாய் மிட்டாய் விற்பவனின் மணிச்சத்தம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. சிறுவர்கள் "சோனக்காதா" என்று பட்டப்பெயர் வைத்து அவன் மணிச் சத்தத்துக்குப் பின்னால் போய் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி - காலச்சுவடு

கிழவி நாச்சி - சந்திரா

எங்கள் வீட்டின் காலியான பெரும் பரப்பு எப்போதும் சினேகிதர்கள் மத்தியில் எனக்குப் பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது. குட்டிக் குட்டியாகக் கூரை வேய்ந்த இரண்டு மண் வீடுகள், ஒரு கோழித் திண்ணை, படல் அடைத்த குளியலறை தவிர மீதி இடமெல்லாம் வெட்ட வெளியாகத் திறந்து கிடக்கும். கில்லி, கிட்டி குச்சி, பச்சைக் குதிரை, கோலிக் குண்டு, இப்படி எந்த விளையாட்டானாலும் எங்கள் வீடுதான் மைதானம். இதனாலேயே எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட மிக அதிகமாக என் வீட்டை நேசித்தேன். அதெல்லாம் இருட்டத் தொடங்குவதற்கு முன்னால். மேற்கு மலையில் வெளிச்சம் பின்னோக்கிச் சென்று இருட்ட ஆரம்பித்தவுடன் எங்கள் வீட்டின் தனிமையும் ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எங்கள் வீடு மற்ற வீடுகளிலிருந்து ஒதுங்கிச் சந்துக்குள்தான் இருந்தது. பேய்க் கதைகள் சொல்வதில் பெயர் போனவன் வீரசேகர். எங்கள் வீடு பற்றியும் எங்கள் வீட்டருகில் ஆளரவமற்று வேப்பம்பூ உதிர்ந்து கிடக்கும் பாழுங்கிணறு பற்றியும் அவன் சொல்லிப்போன பேய்க் கதைகள் எல்லா இரவுகளையும் என்னைப் பயத்துடனே கழிக்கச் செய்யும்.

கிணறு இருக்கும் பகுதியிலிருந்து பிரித்து எங்களுக்குச் சொந்தமான இடம்வரை படல் அடைத்திருந்தோம். அந்தப் படலைத் தினம் தினம் அப்பா சரிசெய்தாலும் ஆளில்லாத நேரத்தில் கழுதையோ பன்றியோ வந்து படலைப் பிரித்துவிட்டுச் சென்றுவிடும். ஒரு கட்டத்திற்குமேல் அப்பா அதன்மேல் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார். பேருக்கு இரண்டு குச்சிகளைத் தவிர வேலி எதுவும் இல்லாமல் திறந்து கிடந்தது எங்கள் வீடு. என்னைப் பயமுறுத்த, அது வீரசேகருக்கு வசதியாகப் போய்விட்டது. அடைப்பு எதுவும் இல்லாததால் கிழவி நாச்சி எளிதாக வீட்டுக்குள் வந்துவிடுவாள் என்று சொன்னான். இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று அவனிடம் எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே செய்துகொண்டிருந்தான். எல்லோர் முன்னாலும் என்னைப் பயமுறுத்தி அவமதிப்பதே அவன் நோக்கமாக இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து இருபதடி தூரத்தில் இருக்கும் பாழுங்கிணறு கிராமத்துக்குப் பொதுவான இடம். அங்கே ஆலமரம், வேப்பமரம், பன்னீர்மரம் என்று வகைக்கு ஒன்றாக அமைந்து அந்த இடத்தை அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதில் பெண்பிள்ளைகள் பன்னீர் மரத்தையும் ஆண்பிள்ளைகள் ஆலமரத்தையும் மிகவும் விரும்பினார்கள். ஆனால், வேப்பமரம் இருபாலாருக்கும் பிடித்தமானதாக இருந்தது. அதற்குக் காரணம் கிணறுதான். வேப்பமரத்தின் வளைவான நீண்ட கிளை கிணற்றுக்குள் படிந்ததைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதுவும் வேப்பமரத்தின் அடியிலிருந்து கிளை விரிந்து மேல்நோக்கிச் செல்வதால் அந்த மரத்தில் ஏறுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று. கிணற்றுக்குள் விழுந்துவிடுவோம் என்னும் பயமின்றி ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பிள்ளைகளும் பூச்சியைப் போன்று மரத்தின் கிளைகளில் உடல் பரப்பிக் கிடப்பார்கள். சில வீரமான பையன்கள் கிளைகளின் மேல் கைகளை வீசி நடந்து செல்வார்கள். அதுவும் கிளையின் உச்சி முடியும் இடம் கிட்டத்தட்ட கிணற்றுக்குள் இருக்கும். அந்த இடத்தில் உட்காருவதற்குப் போட்டி நடக்கும். அந்தப் போட்டியில் இடம் பிடிப்பதற்காகத்தான் வீரசேகர் பேய்க் கதைகள் சொல்லத் தொடங்கினான். அந்த இடத்தில் உட்காருவதற்கு அவனோடு நானும் போட்டிபோட்டதால் பயமுறுத்தலை என்னிடம் ஆரம்பித்தான்.

திடீரென்று காய்ச்சலில் விழுந்த தெற்குத் தெரு டெயிலர் முனியாண்டி என்ன வைத்தியம் செய்தும் தீராமல் மூன்றே நாள்களில் இறந்துபோனான். கம்பத்திற்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது முண்டம் செத்த ஆலமரத்துப் பேய் அடித்துச் செத்துப்போனதாக ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். இந்தச் செய்தியை எங்களுக்கு முதலில் சொன்னவன் வீரசேகர். இதனாலேயே அவன் சொல்லும் பேய்க் கதைகளை எங்களால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

கிழவி நாச்சிக்கு எப்போதும் குழந்தைகள் மேல்தான் விருப்பமாம்; சிறுவயதில் அவளுக்கு நாச்சியம்மாள் என்ற பெயர் இருந்திருக்கிறது. எப்போதும் மஞ்சள் பூசியதைப் போன்ற நிறமாம் அவளுக்கு. ஊர்ப் பெண்கள் அவள் அழகைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும் எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போல் சோகமாக இருப்பாளாம். அவள் வேண்டாத தெய்வம் இல்லையாம். கல்லுக்குக்கூடப் பொட்டுவைத்துச் சாமி கும்பிடுவாளாம். அப்படியும் அவளுக்குக் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவில்லையாம். கிழவியான பின்பும் அந்த ஏக்கத்தில் ஊர் முழுவதும் பைத்தியமாகச் சுற்றி அலைந்தவள் கடைசியில் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். அப்போதெல்லாம் கிணறு நிறையத் தண்ணீர் இருந்திருக்கிறது. இறந்த ஒரு வாரத்திலேயே தன் விசுவரூபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறாள் நாச்சியம்மாள். வயதுக்கு வந்த பெண்களை ஆட்டத் தொடங்கியவள், அம்மாக்களுடன் வரும் குழந்தைகளையும் ஆசையுடன் பிடித்திருக்கிறாள். கிழவி நாச்சி பேயான பின் அந்த ஊர்க் கோடாங்கியின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லையாம். தினம் தினம் ஒருவருக்குப் பேயோட்டிக் காசு பார்த்துவிடுவானாம். நட்ட நடு மத்தியானம் தனியாகத் தண்ணீர் இறைக்கும் பெண்களிடம் "புள்ள வேணும், புள்ள வேணும்" என்னும் கிழவி நாச்சியின் குரல் கிணறு முழுவதும் நிறைந்து எதிரொலிக்குமாம். அப்புறம் பெண்கள் அந்தக் கிணற்றை விட்டுவிட்டு, கொஞ்சம் தூரமானாலும் பரவாயில்லை என்று மடத்துத் தெருவில் உள்ள கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் எடுத்துவந்திருக்கிறார்கள். அதன் பின் எந்த மனித வாசனையுமின்றிக் கிணறு தனித்துக் கிடந்தது. கவனிப்பில்லாமல்போன மரங்கள் சூழ்ந்த கிணறு பின்பு பாழுங்கிணறாகிப் பாலற்றுக் கிடந்தது.

இந்தக் கதைகளையெல்லாம் பாட்டி சொல்வதற்கு முன்பே வீரசேகர் எங்களுக்குச் சொல்லியிருந்தான். பாட்டி திரும்பச் சொல்லும்போது, கேட்ட கதைதான் என்னும் சலிப்பு மிஞ்சும். இருந்தாலும் ஒவ்வொரு ராத்திரியையும் பிரமிப்போடு கழிக்கப் பாட்டி சொன்ன கதைகள் தேவையாக இருந்தன. அதேபோல் வீரசேகர் சொன்ன கதைகளும்தான்.

ஒருவேளை பேய் நேரில் வந்தாலும் இவ்வளவு பயம் இருக்காதுபோல. ஆனால் உடல் குறுக்கி, நாக்குத் துருத்தி, கண்களை உருட்டி, கைகளை அசைத்து அசைத்து அவன் சொல்லும் விதத்திலேயே குலைநடுங்கப் பயம் வந்துவிடும். கிழவி நாச்சி வெள்ளிக்கிழமை ராத்திரியில்தான் ஆங்காரமாக அலைவாளாம். குழந்தை ஆசையில் திரியும் அவள் 'ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரியில் திறந்திருக்கும் படல் வழியாக நுழைந்து உன்னைத் தூக்கிச் சென்றுவிடுவாள். பின்பு ஒருபோதும் நீ வீடு திரும்ப முடியாது. உன்னைக் கிழவி விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவாள்' என்று வீரசேகர் சொன்னான்.

அன்றும் அப்படித்தான் கிழவி நாச்சி பற்றி ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்லக் கேட்கப் பிடிக்காதவள்போலக் காதுகளை இறுக மூடிக்கொண்டேயிருந்தும் அவன் பயமுறுத்தல் ஓய்ந்தபாடில்லை. "கிழவி நாச்சி நேர்ல வந்தாலும் நான் பயப்படமாட்டேன்" என்றேன் வீராப்பாக! ஒரு நிமிடம் அவன் கதைகள் எல்லாம் பொய்த்துப்போனதில் அதிர்ச்சியடைந்தான். பிறகு சுதாரித்து, "ம்கும்!" என்று இளக்காரமாக நெற்றியில் கைவைத்து, "இப்படித்தான் கணேசன் கிழவி நாச்சிகிட்ட பயம் இல்லன்னு சொல்லி, பந்தயம் கட்டி நடுச்சாமத்துல கெணத்துக்கிட்ட போயி ஒரு மாசம் காய்ச்சல்ல படுத்துக் கெடந்தான். அப்புறம் அவன் கெணத்து மேட்டுப் பக்கம்கூட வரல. பொட்டப் புள்ள நீ மாத்திரம் கெணத்துக்கிட்ட போயிருவியாக்கும்" என்றான் சிரித்துக்கொண்டே. அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளும் கெக்கே பிக்கே என்று சிரித்துப் பழிப்புக் காட்டினார்கள். எனக்கு ஒரே அவமானமாகிவிட்டது. "நானெங்க ராத்திரி கெணத்துக்கிட்ட போறேன்னு சொன்னேன். பொழுது சாய ஆறு மணியானாலே கெணறு இருக்கிற பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன். இதுல ராத்திரி பன்னெண்டு மணிக்குப் போறதாவது, கெனாவுலகூட நடக்காது. இவனா சொல்லிகிட்டு என்னை இப்படி மாட்டிவிட்டுட்டானே" என்று மனத்திற்குள்ளேயே பயந்துகொண்டேன். ஆனால், அதையெல்லாம் வெளிக் காட்டிக்கொள்ளாமல் "வர்ற வெள்ளிக்கிழமை ராத்திரி கெணத்துப் பக்கம் போறேன்... என்னடா பந்தயம் கட்டுற?" என்றேன் ஆவேசமாக. மற்ற பிள்ளைகள் அதிர்ச்சியோடு வாயில் கைவைத்து, கண்களை அகல விரித்து லேசாகச் சிரித்தார்கள். பந்தயப் பரிசு நிர்ணயிக்கப்பட்டது. எல்லோரும் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தார்கள். அது நான் பந்தயப் பரிசை வெல்லப் போவதற்காக அல்ல. தோற்றுப் போய் எல்லோரையும் உப்புமூட்டை தூக்குவேன் என்பதற்காக.

அந்த வெள்ளிக்கிழமை ராத்திரியில் பருத்திப்பூ போட்ட என் பாவாடையை உயர்த்திப் பிடித்துக்கொண்டே எப்போதும் எனக்குப் பிடித்த கிணற்றின் வடக்கு மூலையில் காலைத் தொடங்கப்போட்டு உட்கார்ந்துகொண்டேன். வீரசேகரிடம் போட்ட பந்தயத்தில் நான் ஜெயிக்கப்போகிறேன் என்று நினைத்தபோது, எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது. பந்தயத்தில் நான் ஜெயித்துவிட்டால், அவன் தன்னிடம் உள்ள சைக்கிளில் எனக்கு ஓட்டிப் பழகிக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். அப்படி மட்டும் நடந்துவிட்டால், அந்த ஊரிலேயே சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரே பெண் என்ற கிரீடம் எனக்குக் கிடைத்துவிடும். கிரீடம் என்றால் உண்மையாகவே கிரீடம்தான். நண்பர்களுக்குள் வைக்கும் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஆல் இலையை விளக்குமாற்றுக் குச்சியில் செருகிக் கிரீடம் செய்து சூட்டிவிடுவார்கள். எனக்கு போனஸாக சைக்கிள் ஓட்டக் கிடைக்கும்போது அதைக் கேட்கவா வேண்டும். நெஞ்சுக்குள் வைராக்கியம் பிறந்தது. பயத்தை மூட்டைகட்டிவைத்துவிட்டேன்.

இலைகள்கூடத் துளும்பாத கடும் இருட்டு அது. கிணற்றின் உள்சுவர்களில் முளைத்திருந்த துளசியின் மணம் என் மனத்தில் எந்தவிதப் பயமும் இல்லாமல் செய்தது. புகையைப் போன்று மிக மெதுவாக எழும்பி அது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியாமல் ஓர் உருவம் கிணற்றின் அடியாழத்திலிருந்து நான் இருக்கும் திசையை நோக்கி வந்தது. அப்போதும் நான் அமைதியாக இருட்டின் நிறத்தைக் குறைக்கும் அதன் சாம்பல் நிறக் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குக் கோபம் வந்ததைப் போலக் கண்களை உருட்டியது. இருட்டில் தெரியாத அதன் சேலையின் நிறத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். எப்போதும் கிழவி நாச்சி சிகப்புச் சேலையைத்தான் உடுத்தியிருப்பாள் என்று வீரசேகர் சொல்லியிருந்தான். சேலையின் நிறம் தெரியவில்லை என்றாலும் திரள் திரளாகச் சுருண்டு பாதம் நோக்கி நீண்டிருந்த முடி அது கிழவி நாச்சிதான் என்பதை உறுதிப்படுத்தியது. அடுத்து அது தன் கோரைப் பற்களைக் காட்டி, ஆங்காரமான சிரிப்பொலியை எழுப்பியது. இப்போது என் தொடைகள் லேசாக நடுங்கத் தொடங்கின. நான் பயப்பட்டாலும் பந்தய விதிப்படி தோற்றுப் போனதாகத்தான் அர்த்தமாம். நான் பயத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒளியேறிய அதன் கண்கள் மட்டும் அது சாந்தமானது என்பதை எனக்கு உணர்த்தியது. எவ்வளவு முயன்றும் தன் சாந்தமான பார்வையை இழக்க முடியவில்லை என்பதால் கண்களை என்னிடம் காட்டாமல் இருக்க முயன்றது.

அதன்மீது மட்டும் நிலைகுத்திப்போன என் இயல்பான பார்வையை அதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மிகப் பெரும் காற்றை எழுப்பிக் கிணறு முழுமையும் தன் கூந்தலைப் பரப்பி நின்றது. அதன் கூந்தல் என்னையும் மூடியிருந்தது. அது எனக்கு வசதியாக இருந்தது. இப்போது அதன் கோரைப் பற்கள் என் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதுதான் காரணம். அதனுடைய இந்தச் செயலைப் பார்த்து நான் சப்தமிட்டு அழுவேன் என்று எதிர்பார்த்தது. விரல் நீண்ட கைகளை என்னை நோக்கி வீசியது. இப்போது அதன் கைகளுக்குள் நான் இருந்தேன். நான் பயமற்று அதன் கைகளில் கிடந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அது தன் உடலைக் குறுக்கிக் கிணற்றின் தரைக்குள் போனது. நானும் அதனோடு சேர்ந்துபோனேன். கீழே போகப் போகக் கிணற்றுச் சுவரின் பொந்துகளிலிருந்து வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது. நாங்கள் வெளிச்சத்தில் மிதந்துகொண்டிருந்தோம். கிணற்றின் நடுவே அமர்ந்து அதன் மடியில் ஒரு பச்சைக் குழந்தையைப் போல என்னைப் படுக்கவைத்துக்கொண்டது.

எங்கள் தெருவில் யார் வீட்டில் கண்ணாடி பாட்டில், பீங்கான் உடைந்தாலும் இந்தப் பாழுங்கிணற்றில்தான் கொண்டுவந்துபோடுவார்கள். பீங்கான்மீது அது எப்படி உட்கார்ந்திருக்கிறது என்று பார்த்தால், கிணற்றின் தரை முழுவதும் வைக்கோல் பரப்பப்பட்டு இருந்தது. ஆங்காங்கே பறவையின் றெக்கைகள் பறந்துகொண்டிருந்தன. இப்போது அதன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். சுருங்கிய முகம் நீங்கி வளுவளுவான மஞ்சள் நிறமான முகம் வந்திருந்தது. இளம் வயது நாச்சியம்மாளாக அவள் இருந்தாள். கீழே குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு "உன் பேரென்ன?" என்றாள் அமைதியான குரலில். அது என் அம்மாவின் குரலைப் போன்று மென்மையாக இருந்தது. "குட்டிப்பிள்ளை" என்றேன் மிக மெதுவாக. பிறகு நாக்கைக் கடித்துக்கொண்டு "மைவிழிதான் என் பேரு. ஆனா, எங்க வீட்ல எல்லாரும் குட்டிப் பிள்ளைன்னுதான் கூப்பிடுவாங்க" என்றதும் "நானும் குட்டிப்பிள்ளன்னே கூப்பிடுறேன்" என்றாள் கிழவி நாச்சி.

இப்போது எந்தப் பயமுமின்றி அவளோடு பேச ஆரம்பித்தேன். "நீ இதுவரைக்கும் எத்தன பொம்பளைகளப் பிடிச்சிருக்கே" என்றேன். சிறிது நேரம் வார்த்தையின்றி என்னைக் குறுகுறுவென்று பார்த்தவள், என் கண்களில் தெரிந்த லேசான கலக்கத்தைப் பார்த்ததும் உதடு பிரிக்காமல் மெலிதாகச் சிரித்து "நான் யாரையுமே பிடிச்சதில்ல" என்றாள் அமைதியாக. "சின்னப் பிள்ளைகள நீ முழுங்கிடுவேன்னு சொல்றாங்களே" என்றேன். இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் என் முகத்தில் பட்டது. "யாரையுமே பிடிக்கமாட்டன்னா அப்புறம் எதுக்கு இவ்வளவு பெரிய" ஜடா முடி, கோரைப்பல்? நீ அழகாகவே இருந்திடலாம்ல! என்றதும் "எனக்குப் பெரியவங்களப் பிடிக்கல. சின்ன பிள்ளைகளோட சத்தத்தை மட்டும் கேட்டுக்கிட்டு இங்கத் தனியா இருக்கணும். அதுக்குத்தான் இந்த ஜடா முடியும் கோரைப்பல்லும்."

"ஐயோ, ஒன்னோட பயங்கரமான முகத்தைப் பார்த்து நாங்க பயந்துகிட்டு இங்க வராமப் போயிட்டா என்ன செய்வே?" என்றேன். "எனக்குத் தெரியும், நீங்க பெரியவங்க மாதிரி இல்ல. எவ்வளவுதான் பயமுறுத்தினாலும் நீங்க பயப்படமாட்டீங்க. விளையாட்டைத் தேடி நீங்க திரும்பத் திரும்ப இங்க வருவீங்கன்னு தெரியும்" என்று சொன்னவள், எனக்கு "ஆலாம்பழமும் இச்சிப் பழமும் புடுங்கித் தர்றியா" என்றாள் சிறு குழந்தையாக. கிழவி நாச்சியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "எனக்கு ஆம்பளப் பயங்க மாதிரி அந்த மரத்தில எல்லாம் ஏறத் தெரியாது. உதிர்ந்த பழத்தை வேணா எடுத்துத் தரவா" என்று சொல்லிவிட்டு, "ஆமா அந்தப் பழத்தை நான் உனக்கு எப்படிக் குடுப்பேன்?" என்றேன். அதற்குக் கிழவி நாச்சி, "நீ மேல இருந்து போடு, நான் புடுச்சிக்கிறேன்" என்றாள்.

பழங்களைப் போல் கிழவி நாச்சிக்கு ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதும் மிகப் பிடித்தமான ஒன்றாம். ஆனால், அவளால் ஒருபோதும் கிணற்றைவிட்டு வெளியே வர முடியாதபடி கிணறு அவள் பாதங்களைப் பிணைத்துவைத்திருக்கிறதாம். கழிவுகளும் தூசிகளும் மரச் சருகுகளும் கிணற்றை முழுமையாக நிறைக்கும்போது, அதனோடு சேர்ந்து கிழவி நாச்சியும் உள்ளே அமுங்கிப்போய்விடுவாளாம். அதன்பின் அவளால் எந்தச் சத்தத்தையும் கேட்க முடியாது என்று சொன்னாள். ஒருபோதும் கிணறு நிறையக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். பொந்துகளிலிருந்த வெளிச்சம் உள்நோக்கிப் போனதும் கிணற்றின் மேலிருந்து வெளிச்சம் கீழ்நோக்கி வந்தது. நான் வெளியே செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவளாகவே உணர்ந்துகொண்டாள். முன்பைவிட அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். மறுபடியும் அவள் உடல் கிணற்றின் விளிம்புவரை நீண்டது. நான் கிணற்றுக்கு வெளியே இருந்தேன். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். அவள் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. இந்நேரம் கிழவி நாச்சி வெளிச்சம்போலத் தன்னைக் குறுக்கிக் கிணற்றின் பொந்துக்குள் போயிருப்பாள். இனி வீரசேகர் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பான்; கிரீடம் கிடைக்கும்.

பாயில் படுத்து முனகிக்கொண்டிருந்த என்னிடம் அம்மா வந்தாள். என் உடம்பில் கைவைத்துப் பார்த்துச் சுட்டுக்கொண்டவள்போல் கையைப் பின்னுக்கிழுத்து "அய்யையோ, பிள்ளைக்குக் காய்ச்ச கொதிக்குதே. பாங்கெணத்துப் பக்கம் போகாத . . . கிழவி நாச்சி புடுச்சிக்குவான்னு இவகிட்ட எத்தனை தடவை சொல்றது? மொதல்ல பிள்ளய எழுப்பிப் பின்னியக்காகிட்ட போயி மந்திரிச்சுட்டு வரணும்" என்றாள் என்னைப் பந்தயத்தில் தோற்கடிக்கும் விதமாக.

நன்றி - காலச்சுவடு

அழகேசனின் பாடல் - சந்திரா

மகேந்திரா வேன் மலைப் பாதையில் பயணித்துக்கொண்டு இருந்தபோது, மதியப் பொழுதின் வெயில் மலையின் பனியைக் குறைத்து மிதமான வானிலையால் உடலை இதமாக்கிக்கொண்டு இருந் தது. ஒழுங்கற்று ஓடிக்கொண்டு இருந்த தனத்தின் இதயம் சீராக இயங்கி, ஒரே ரிதமான துக்க நிலையை அடைந்தது. அந்த இயற்கை, துக்கத்தை போதைபோல் நெஞ்சில் மிதக்கவைத்தது. மலையின் வளைவுச் சாலையில் செல்லும்போது பள்ளத்தில் ஒரு பறவையின் இறக்கையைப்போல் மிதந்துகொண்டு இருந்த மஞ்சளாற்றை அவளிடம் காட்டி, அந்த மலைக் கிராமத்தில்தான் அவள் வாழப்போகிறாள் என்றார்கள் உறவினர்கள். அந்த ஆற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே வந்தாள் தனம். மஞ்சளாற் றின் தூய்மை, மௌனமான அவள் மனக் கசப்பை, அவள் துயரை நீக்கிவிடுமா? அவள் எதையும் ரசிக்கும் மன நிலையில் இல்லை.

மலைச் சாலையோர மரத்தில் அமர்ந்து இருந்த குருவி சந்தோஷக் குரல் எழுப்பிப் பறந்து சென்றது. 'இத்துனூண்டு மூக்கும் ஒரு விரல் அளவு றெக்கையும் மட்டுமே இருக்கிற இந்த நீலக் குருவி அம்புட்டுப் பெரிய வானத்துல பறந்து போகுது. அந்தக் குருவி மாதிரி ஆகாசத்தைக் கடக்க வேணாம். பிடிச்சவங்களோட வாழக்கூட முடியாத இந்த மனுச வாழ்க்கை கொடூரமானது’ என்று நினைத்தாள்.

மலைப் பாதையில் இருந்து இறங்கி, பள்ளத்தாக்கில் பயணமானது வண்டி. ஆற்றைக் கடந்து செல்கையில் வண்டியை நிறுத்தி அதன் அழகைப் பார்க்க இறங்கினார்கள் எல்லோரும். வண்டியில் இருந்து இறங்க மறுத்து உட்கார்ந்து இருந்தாள் தனம். ஆற்றை அருகில் இருந்து பார்ப்பது அவளுக்குப் பெரும் துன்பமாக இருந்தது. எல்லோரின் வற்புறுத்தலால் கீழே இறங்கி, மஞ்சளாற்று நீரைக் கையில்  எடுத்தாள். பனி நிறைந்த நீர் குளிர்ந்து கனத்தது. நீரில் அவன் முகம் தோன்றி சிறிது சிறிதாக நீர் அலைவுற்று கடைசியில் உருத் தெரியாமல் மறைந்தது. அவன் முகம் மறைந்த நீரைக் கையில் அள்ளிப் பருகினாள். குளிர்ந்த பனி ஊசியாய் உள்ளிறங்கி தொண்டைக் குழி சிலிர்த்தது. ''விட்டுட்டுப் போகாத தனம்'' - தூரத்தில் அவனது துயரக் குரல் காற்றில் சுழன்று அடித்தது.

மஞ்சளாறு கிராமத்தை அடைந்தது வண்டி. மாப்பிள்ளையின் உறவினர் வீட்டில் தனம் மற்றும் உறவினர்கள் தங்கிக்கொண்டார்கள். அடுத்த நாள் நடக்கப்போகும் திருமணத்துக்கு வேலை பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. யாருடைய கல்யாணத்தையோ வேடிக்கை பார்க்க வந்தவளைப்போல் உட்கார்ந்து இருந்தாள் தனம். அவள் அம்மா அவளை முறைத்து ''சகஜமா இருடி'' என்று திட்டியபோதும் தனத்தின் முகம் துயரத்தின் சாயலை இழக்காமல் இருந்தது.

அவளுடைய அத்தனை துயரங்களுக்கும் டானா வடிவச் சந்தில் குடியிருந்ததுதான் காரணம் என்று நினைத்தாள்.

பிற்பகலில் மட்டுமே வெயில் தெருவில் விழும் டானா வடிவச் சந்தில் இருந்த கடைசி இரண்டு வீடுகளும் ஒரே வடிவமைப்பில் இருந்தன. முட்டுச் சந்தின் கடைசி வீட்டில் குடியிருந்த அழகேசன் எப்போதும் ரேடியோவில் பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். அவன் ஒலிக்கச் செய்யும் பாடல்களில் தன் கனவினைக் கண்டுகொண்டு இருந்தாள், அவனுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த தனம். அரண்மனையைச் சுற்றி எழுப்பப்பட்டு இருக்கும் நெடுஞ்சுவர்களைப்போல டானா வடிவத் தெருவில் எதிர்ப்புறம் வாசல்கள் அற்ற வெறும் சுவர்களே மூடியிருந்தன. புதிர் கட்டங்களில் பாதை மூடப்பட்டு இருப் பதுபோல, அழகேசன் வீட்டோடு அந்தத் தெரு முடிந்து இருந்தது. அடுத்த தெருவுக்குக் கடந்து செல்ல வழி இல்லாத தால், விற்பனையாளர்கள் யாரும் அந்தத் தெருவுக்கு வருவது இல்லை. அது தனத்துக்குப் பெரும் துக்கமாக இருந்தது. பதினைந்து வீடுகள் தாண்டிக் கேட்கும் விற்பனையாளர்களின் குரலைக் கேட்டு தெரு வழியாக மூச்சிரைக்க ஓடுவாள். அவள் தெருவின் முனையை அடைவதற் குள் விற்பனையாளர்கள் அந்தத் தெரு வைக் கடந்து போய்விடுவார்கள். குச்சிமிட்டாய்க்காரனைத் தவறவிடும் நாட் களில் அந்தத் தெருவில் குடியிருப்பது பிடிக்கவில்லை என்று பெருங் குரலெடுத்து அழுவாள். விற்பனையாளர்களின் குரலைப் பின்தொடர்ந்து பல தெருக்களிலும் அலைந்து திரிவாள்.

அழகேசன் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது இவள் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். இவள் வாசல்படியில் தனியாக உட்கார்ந்து எழுதிக்கொண்டு இருக்கும் நாட்களில் அழகேசன் இவளைக் கிள்ளிவிட்டு ஓடுவான். அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் உட்பட அந்தத் தெருவில் வசிப்பவர்கள் பெரும்பாலான நாட்கள் காட்டுக்குச் சென்றுவிடுவதால், பிராது கொடுக்கக்கூட ஆள் இல்லாமல் இவள் எதிர்ப்புறம் இருக்கும் சுவரைப் பார்த்து அழுவாள். அவளைப்போலவே தனித்து இருக்கும் சுவர் அவள் வேதனையை மேலும் கூட்டியபடி இருக்கும். எந்த சுவாரஸ்யமும் ஒளிந்து இருக்காத அந்தத் தெருவுக்கு விளையாட வர அவளுடைய சிநேகிதிகளும் சம்மதிப்பது இல்லை. இவளே மற்ற தெருக்களுக்குப் போய் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அந்தத் தெருவில் அவளுக்கு ஒரே ஆறுதல், சக்கரைக் கிழவிதான்.

அந்தச் சந்தின் தனிமையைத் தன் ஆகச் சிறந்த கதை சொல்லலால் தடவி அழிக்கும் சக்தி சக்கரைக் கிழவிக்கே உண்டு. மகன் வேறு தெருவில் மனைவி, மக்களோடு தனிக் குடித்தனம் நடத்த, டானா வடிவ சந்து தெருவின் நடுவில் இருந்த தன் பூர்வீக வீட்டில் தனியாகக் குடியிருந்தாள் கிழவி. வானத்தை நிறைக்கும் சிறகுகளால் ஓர் ஊரையே தூக்கி இன்னோர் இடத்தில் வைத்துவிடும் தேவதைக் கதைகளால் மனம்கொள்ளாப் பூரிப்பையும் அதிசய உலகத்தையும் தனத்துக்கு அளிப்பாள். அவளிடம் கதை கேட்ட நாள் முழுவதும் சிறகுகள் பறந்துகொண்டே இருக்கும் தனத்துக்கு. பறவையின் இறக்கையில் அமர்ந்து பறந்துபோவதாகக் கற்பனைகொள்ளும் தனம், அப்படி ஊர் மாறிப்போகும் தேவதைக் கதைகளிலாவது இந்தச் சந்து வீடோ, அழகேசன் வீடோ பக்கத்தில் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அழகேசனின் அக்காவோடு அவள் சிறிதளவு சிநேகிதத்துடன் இருந்தாள். அவள் தனத்தை அழைத்து விதவிதமாக ஜடை பின்னி அழகு பார்ப்பாள். அவளுக்குத் திருமணமாகிப் போன பின் தனம் கடைசி வீட்டுக்குச் செல்வது நின்றுபோயிருந்தது. அழகேசன் அம்மா அவளை வீட்டுக்குள் வரும்படி அழைத்தா லும் பெண் பிள்ளை இல்லாத அந்த வீட்டுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள் தனம். அழகேசனின் அக்கா முதல் பிரசவத்துக்கு அங்கே வந்திருந்தபோது, ஒரே முறை குழந்தையைப் பார்க்கத் தன் அம்மாவோடு சென்றாள். ஏனோ தெரியவில்லை, இரண்டு குடும்பங்களுக்கான பழக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. அவரவர் காட்டு வேலைகளில் கவனமாக இருந்தார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பு முழுத் தேர்வில் தோல்வி அடைந்த பின் அழகேசன் படிப்பை நிறுத்திவிட்டு, டிராக்டர் ஓட்டப் பழகினான். அந்த நாட்களில்தான் அவனுக்குப் பாடல்கள் கேட்கும் வழக்கம் உருவானது. ஒரு டேப் ரிக்கார்டரை விலைக்கு வாங்கி, வீட்டில் எப்போதும் பாடல்களை ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். படிப்பில் கவனமாக இருந்த தனத்துக்கு அந்தப் பாடல்கள் சஞ்சலத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன. இப்போது எல்லாம் அவன் அவளைக் கிள்ளுவது இல்லை. அவள் தாவணி போட்டு இருந்தாள். தன் குடும்பத்து ஆண்களைத் தவிர, வெளி ஆண்களுடன் பேசுவது நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அழகேசன் கடந்து செல்லும் கணங்களில் எல்லாம் அவள் வெட்கப்படும்படியான பார்வையினை ஏற்படுத்திச் சென்றான். அவன் சிறு வயதில் கிள்ளிவைத்த நினைவில் அவன் மேல் உள்ளுக்குள் கசப்பினைக்கொண்டு இருந்தாள் தனம். அவன் ஒலிக் கச் செய்யும் காதல் பாடல்களால்கூடஅந்தக் கசப்பினை விலக்கச் செய்ய முடியவில்லை. ஆனால், அவனைத் தவிர, அவளை வெட்கப் படும்படியாகச் செய்யும் பார்வையை வேறு எவரிடமும் காணாதது அவளுக்குப் பெரும் வியப்பாக இருந்தது. வாசற்படியை ஒட்டி இருவரின் வீட்டு முற்றங்களும் திறந்து இருந்ததால், இரண்டு வீட்டின் பொதுச் சுவர்கள் மூடப்படாமல் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குச் சுவர் வழியாக எகிறிக் குதித்துவிடும் அமைப்பில் இருந்தன அவர்களின் வீடுகள். அந்தச் சுவரை உயர்த்தி முற்றத்தை மூடிவிடலாம் என்று இரு வீட்டாரும் யோசிக்கவே இல்லை. அது இரண்டு வீட்டுக்கும் ஏதோ ஓர் உறவை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது.

தனம் மிகப் பெரிய படிப்பாளியும் இல்லை... முட்டாளும் இல்லை. ஆனால், படித்து வேலைக்குப் போக வேண்டும் என்று தீவிரமாக இருந்தாள். பத்தாம் வகுப்பு முடித்ததும் பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள். காக்கிச் சட்டை, பேன்ட் அணிந்துகொண்டு படிக்கப் போவதுபோல் பல ஆயிரம் தடவை கற்பனை செய்து பார்த்திருப்பாள். ஆண் களைப்போல் தொழிற்சாலையில் மெக்கானிக் வேலை பார்க்க வேண்டும் என்ற அவள் விருப்பத்தை அவள் அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பாள். வீட்டில் இருந்த பழைய ஃபிலிப்ஸ் ரேடியோதான் அவளின் அந்த ஆர்வத்துக்கு வடிகால். அது பாடாமல் தன் செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது எல்லாம் ரேடியோவின் பாடு திண்டாட்டம்தான். ரேடியோவைப் பிரித்து அக்குவேறு ஆணிவேறாக அலசிக்கொண்டு இருப்பாள். ''அதுக்கு வாயிருந்தா அழுதிரும்'' என்று சொல்லும் அம்மாவிடம் ''அதைப் பேசவைக்கத்தானே இந்தப் பாடுபடுறேன்'' என்று சொல்லி அம்மாவின் வாயை அடைப்பாள். வயரைப் பிரித்து இணைத்து, கடைசியில் ரேடியோவைப் பாடவைத்ததும் பாலிடெக்னிக் படிக்க தான் தகுதியானவள்தான் என்று திருப்திப்பட்டுக்கொள்வாள்.

பத்தாம் வகுப்பு முழுத் தேர்வுக்காக அவள் தீவிரமாகப் படித்துக்கொண்டு இருந்தபோது, அழகேசன் இளையராஜா பாடல்களை டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்துகொண்டு இருந்தான். 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்...’, 'ராசாவே உன்னைத்தான் எண்ணித்தான்...’ இந்த இரண்டு பாடல்களைக் கேட்கும்போது அவளுக்குக் குறுகுறுப்பாக இருக்கும். அழகேசனைத் திருமணம் செய்து கொள்வதைப்போல் கற்பனை கொள்வாள். அடுத்த நொடியே அந்த நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துப் படிக்கத் தொடங்குவாள். ஒரு கட்டத்தில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே படிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டாள். அவள் தீவிரமாகப் படிப்பதைப் பார்க்கும்போது அழகேசனுக்கு எரிச்சலாக இருக்கும். அவள் பத்தாம் வகுப்பில் ஃபெயிலாக வேண்டும் என்று விரும்பினான். அப்போதுதான் அவள் தன்னைக் காதலிப்பாள் என்றும் திருமணம் செய்துகொள்வாள் என்றும் அவனுடைய நினைப்பு இருந்தது. பத்தாம் வகுப்பு தேர்வில் 390 மார்க் எடுத்திருந்தாள். ''பாலிடெக்னிக் படிக்க வேண்டும்'' என்றதற்கு, ''பன்னிரண்டாவது முடிச்சிட்டு படிச்சிக்க'' என்றார் அப்பா. அவரின் பேச்சுக்கு மறுபேச்சுப்  பேச முடியாது. தனம் பன்னிரண்டாவது வரை பொறுமையாக இருக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாள்.

தனத்தின் அம்மா எப்போதும் அவளை யும் அழகேசனையும் கண்கொத்திப் பாம்பாகத்தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். பாட்டைப் போட்டே தன் மகளை அவன் மயக்கிவிடுவான் என்ற அவளுடைய நினைப்பில் நியாயம் இருந்தது. தனம் படித்துக்கொண்டு இருக்கும்போதே படிப்பை நிறுத்திவிட்டு, மனதை எங்கேயோ சஞ்சரிக்கவிடுவதை அவள் பல தடவை பார்த்து இருக்கிறாள். ''படிச்சது போதும்; போய் சட்டி பானையைக் கழுவு'' என்று அம்மா எரிந்துவிழும்போதுதான் தனம் நிதானத்துக்கு வந்து ''பரீட்சைக்குப் படிக்கவிடுமா'' என்பாள்.

''அதான் நீ படிக்கிறதைப் பார்க்கிறேன்ல'' என்று சொல்லும்போது, தனம் அமைதியாகி அம்மா சொல்லும் வேலை யைச் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு விடுமுறையில் முழுவதுமாகத் தன் மனதை அழகேசனிடமும் அவன் ஒலிக்கச் செய்யும் பாடல்களிடம் இழந்திருந்தாள் தனம். ஆனால், அவனை நேருக்கு நேர் பார்க்கும்போது அலட்சியம் செய்து அவமானப்படுத்துவது ஏனென்று அவளுக்கே புரிவது இல்லை. அவள் அலட்சியம் செய்த நாளின் இரவில் நடுஜாமம் வரைக்கும் அழகேசன் சோகப் பாடல்களை ஒலிக்கச் செய்வான். அவனுடைய வேதனையைப் பொறுக்காமல், தனம் அடுத்த நாள் அவனைப் பார்க்க நேர்கை யில், வெட்கத்துடன் லேசான புன்முறுவலைப் பூக்கச் செய்கை யில் அவன் மகிழ்ந்துபோய், மீண்டும் காதல் பாடல்களைப் போடுவான். பாடல்கள் மாறி மாறிக் கேட்பதை தனத்தின் அம்மா கவனிக்காமல் இல்லை.

விபரீதம் நடப்பதற்கு முன்பே ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும் என்று தன் கணவனிடம் ''பக்கத்துல இளந்தாரிப் பய இருக்கிற சந்துவீட்டுக்குள் மகளை வைத்து ருப்பது சரியில்ல; கல்யாணம் செஞ்சு கொடுத்திடலாம்'' என்று நச்சரிக்க... அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று தனம் அழுது தீர்த்ததை எல்லாம் கணக் கில் கொள்ளாமல், தன் உறவினர் குடும் பத்தைப் பெண் பார்க்கச் வரச் சொல்லி விட்டாள் அம்மா.

படிக்கவில்லை என்றாலும் அழகேசனை யாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நினைப்பு இருந்தது தனத்துக்கு. ஆனால், அவனை நேரில் பார்க்கும்போது பேசுவதற்குத் தைரியம் இல்லை. உண்மையிலேயே 'அவனைத் தனக்குப் பிடிக்கவில்லையோ? அவன் போடும் பாடல்கள் மட்டுமே காதல் உணர்வை எழுப்புகின்றனவோ?’ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. மதுரையில் ஒரு சின்ன கலர் கம்பெனி வைத்திருக்கும் மணிகண்டன் அவளைப் பெண் பார்க்க வந்தான். சொந்தம் என்பதால், அவர்களின் திருமணத்தைப்பற்றி பேச பெரிதாக எதுவும் இல்லை. பெண் பார்த்துச் சென்ற அடுத்த வாரமே நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். கல்யாணத்தை அவனுடைய சொந்த ஊரான மஞ்சளாற்றில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவாகியது.

அந்த நாட்கள் முழுவதும் பித்துப் பிடித்தவனைப்போல 'ஒருதலை ராகம்’ படப் பாடல்களைத் திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டுக்கொண்டு இருந்தான் அழகேசன். தனத்தின் அம்மாவுக்கே அது கலக்கமாக இருந்தது. சீக்கிரம் திருமணத்தை முடித்து, மகளை அந்தத் தெருவில் இருந்து அனுப்பிவிட வேண்டும் என்று நினைத்தாள். அழகேசனின் அம்மா அவனைக் கேவலமாகத் திட்டினாள். டேப் ரிக்கார்டரைப் போட்டு உடைத்துவிடுவேன் என்று மிரட்டினாள். அவன் அப்பாவோ, தனத்துக்குத் திருமணம் முடிந்த பின் சரியாகிவிடும் என்று நம்பினார். தன் வீட்டில் யாரும் ஏன் தனக்காக தனம் வீட்டில் பேசாமல் இருக்கிறார்கள் என்று அவனுக்குக் கோபம் வந்தது. அவளைப் பெண் கேளுங்கள் என்று அவர்களிடம் சொல்வதற்கும் அவனுக்குத் தயக்கம். முரடனைப்போல அவன் தாடி வளர்த்துக்கொண்டு இருந்தது தனத்துக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்காக அவள் மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டு, அந்தத் தெருவைவிட்டு ஓடிவிடலாம் என்று விரும்பவும் இல்லை. பாழாய்ப்போன பாடல்கள் மட்டும் இல்லை என்றால், அவள் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் அழகேசனைப் பற்றிக் கவலைப்படாமல் திருமணம் செய்துகொண்டு போயிருப்பாள். தன் நினைவில் இருக்கும் எல்லாப் பாடல்களை யும் அழித்துவிட விரும்பினாள். இனி எந்தப் பாடல்களையும் கேட்க முடியாதபடி செவிடாகிப் போனாலும் நல்லது என்று தோன்றியது. அவர்கள் இருவருக்கும் பகலும் இரவும் துக்கத்தால் நிரம்பிக்கொண்டு இருந்தன. இருவருமே தற்கொலை செய்துகொள்ளும் மன நிலையில் இருந்தார்கள். முழு மனதான காதலும் இல்லாமல், அவனைக் கைவிட்டுவிடும் மனமும் இல்லா மல் சீர்குலைந்து முடிவெடுக்க முடியாமல் பித்தாகிக் கிடந்தாள் தனம்.

அழகேசனோ குடித்தால் வேதனை தீரும் என்று குடித்துக்கொண்டு இருந்தான். கல்யாணம் நெருங்கிக்கொண்டு இருந்தது. தனத்தின் அம்மாவும் அப்பாவும் வெளியூருக்குத் திருமணப் பத்திரிகை கொடுக்கக் கிளம்பிவிட்டார்கள். தனம் வெகு நேரம் ஒரே சிந்தனையில் வராண்டாவில் படுத்திருந்தாள். அன்று முழுவதும் அழகேசன் வீட்டில் பாட்டு கேட்கவில்லை. அவன் வீட்டிலும் யாரும் இல்லை. தெருவே வெறிச்சோடிக்கிடந்தது. அவன் வீட்டுக்குள் இருக்கிறானா? அவனிடம் போய்ப் பேசுவோமா என்று யோசித்தபடியே இருந்தாள் தனம். அவன் பாடல்களைப் போடாமல் இருந்தது ஏதோ விபரீதத்தை உணர்த்தியது அவளுக்கு. ஒருவேளை அவன் தற்கொலை செய்துகொண்டுவிடுவானோ என்று பயந்தாள். ஒரு ஸ்டூலை எடுத்துப்போட்டு இரண்டு வீட்டுக்கும் பொதுவாக எழுப்பப்படாமல் இருந்த சுவர் தாண்டி எட்டிப் பார்த்தாள். அழகேசன் வராண்டாவில் விட்டத்தைப் பார்த்தபடி தலைக்குக் கையை வைத்துப் படுத்து இருந்தான். அவன் முகத்தில் இருந்த கடும் சோகம் அவளை உலுக்கியது. அவன் அவளைப் பார்ப்பதற்கு முன்பு கீழே இறங்கினாள். அவன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்த்துப் பேசிவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அடுத்த நொடியே அவன் மீது ஏதோ ஒரு கசப்பு பரவியது. அதுவும் இல்லாமல் பத்திரிகை கொடுக்க ஆரம்பித்த பின் என்ன செய்ய முடியும்? அப்பா 'கொன்னுப் போட்டுடுவார்’ என்று பயந்து அமைதியாகி, மறுபடியும் படுத்துக்கொண்டாள். துக்கம் அதிகரித்துக்கொண்டு இருந்ததே தவிர, குறைந்த பாடு இல்லை. குளித்தாலாவது மனம் அமைதியாகும் என்று நினைத்தாள். வெளிக் கதவைத் தாழிட்டுவிட்டுக் கடும் வெயிலில் பாத்ரூமுக்குள் குளித்துக்கொண்டு இருந்தாள். அவள் குளிக்கும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு இருந்த அழகேசன், பொதுச் சுவர் அருகே வந்து நின்றான். ஏதோ ஒரு வேகத்தில் அவன் சுவரேறி தனம் வீட்டுக்குள் குதித்தான். பாத்ரூமுக்குள் இருந்து வெளியே வந்த தனம், தன் முன் குரோதத்துடன் நின்றிருக்கும் அழகேசனைப் பார்த்ததும் நடுங்கிப்போனாள். எப்போதும் அவன் மேல் இருக்கும் கசப்பு அவள் முகத்தில் பரவியது. அவனோ வாழ்வின் மேல் மிகப் பெரிய அவநம்பிக்கைகொண்டவனாக வெறியோடு அவளைக் கட்டி அணைத்தான். மனதின் அலைவுறும் நேசத்தினை கட்டியணைத்துத்தான் சொல்லத் தெரிந்திருந்தது அவனுக்கு. எங்கிருந்துதான் அவளுக்கு அத்தனை கோபம் வந்தது என்று தெரியவில்லை. மூர்க்கத்தோடு அவனை நெட்டித் தள்ளி பலமாகத் தாக்கினாள். அவன் எந்த மூர்க்கத்தையும் காட்டவில்லை. அவளை அணைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் அவனுக்கு இருந்தது. அவள் அவனை விலக்கியதும் நோஞ்சானைப் போலத் தடுமாறி நின்றான். ''இப்ப நீ போகப்போறியா... இல்லையா?'' என்று அவள் கோபத்தோடு கத்த... அவன் அவளை ஈர்க்கும் விதமான சிரிப்பு ஒன்றைச் சிரித்தபடி நின்றான். அவளுக்கு உண்மையாகவே குழப்பமாகிப்போனது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவன் எதற்காக இப்படிக் குதித்து வர வேண்டும்? இவ்வளவு நேரம் கதவு திறந்துதானே இருந்தது. இப்படியான ஓர் அதிரடி நடவடிக்கையை அவன் எப்போதும் செய்திருக்கவில்லை. ''போ வீட்டுக்கு ஆள் வரப்போறாங்க'' என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் அவளருகே வந்தான். அவள் அவனைக் கையால் தடுத்து விலக்கியதும், தள்ளி நின்று சிரித்தான். ''நீயென்ன பைத்தியமா? போகப்போறியா இல்லையா? எதாவது பேசித் தொலை'' என்று அவள் அவனைக் கெஞ்ச ஆரம்பித்தாள். அப்போதும் அவன் சிரித்தபடி நிற்க... நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த தனம், தலையில் அடித்து வராண்டாவில் உட்கார்ந்தாள். பல நாள் பேசிப் பழகிய காதலனைப்போல அவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான். எப்போதும் இல்லாத அன்போடும் வாஞ்சையோடும் அவன் பார்வை இருந்தது. துக்கத்தில் இருக்கும் தன்னை அவன் மீட்க வந்திருப்பதுபோல் அவனை உணரத் தொடங்கினாள். அவன் மீதிருந்த கசப்பு நீங்கி உடல் முழுவதும் அவன் மீதான காதல் பரவியது. உடலில் ஏதோ மயக்க மருந்தைச் செலுத்தியதுபோல் மனதில் போதையும் நிலைகுலைதலுமாக இருந்தாள். அத்தனை நாள் அவனிடம் பேசாத வார்த்தைகள் எல்லாம் உயிர்கொண்டு எழுந்து, அவள் மனதை நிறைத்தன. அன்பின் ரகசிய இழைகளை அத்தனை நாளும் அறியாது இருந்தாள். அவன் மீது இருந்த கசப்பெல்லாம் வெறும் மூகமூடியாகத்தான் இருந்திருக்கிறது. விலக்கிப் பார்த்தால் மன ஆழத்தில் ஆற்று மணலைப்போல அன்பு பரவிக்கிடக்கிறது.

''உனக்கு என்னைப் பிடிக்கலையா?'' என்று அவன் கேட்டதும் ''தெரியல, ஆனா நீ போடுற பாட்டு பிடிக்கும்...'' என்றாள்.

''எனக்குத் தெரியும்'' என்று அவன் சிரித்தபடி ''ஏன், நீ என்ன இப்படித் தவிக்க விடுற? உன் மேல ஆசைப்பட்ட நாளில் இருந்து இப்ப வரைக்கும் எனக்கு வேற சிந்தனை இல்ல. நீ மட்டும்தான் என் நெனப்புல இருக்க. நான் படிக்கலனு உனக்குப் பிடிக்கலையா'' என்று கேட்க... அவள் 'இல்லை’ என்று தலையாட்டிவிட்டு ''எனக்கு ஒரு நேரத்துல உன்னைப் பிடிக்கும், இன்னொரு நேரத்துல உன்னைப் பிடிக்காது. நீ சின்ன வயசுல என்னை அடிக்கிறது ஞாபகத்துக்கு வந்து வெறுப்பாயிடும். அப்புறம் நீ உருகி உருகிப் பாட்டு போடுறப்ப உன் மேல விருப்பம் வரும். இப்ப வரைக்கும் எனக்கு உன்னைப் பிடிக்குதா, பிடிக்கலையாங்கிறதுல குழப்பமாத்தான் இருக்கு. நீ ஏன் இவ்வளவு கேவலமா சுவரேறிக் குதிச்சு வந்த? அதை நெனைக்கிறப்ப இப்பவும் உன் மேல வெறுப்பாதான் இருக்கு. இப்படித்தான் நிலையா உன்னை எனக்குப் பிடிக்காத மாதிரி எதையாவது செய்ற.''

- அவள் பேசுவதைக் கேட்டுவிட்டு, அவள் கைகளைப் பிடித்தபடி, ''உன்னை விரும்புறேங்கிறதை எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியல. எப்பவும் நீ கோபமாவே என்னைப் பார்ப்ப. எப்பவாவது லேசா சிரிப்ப. அதுகூட நீ வேற யாரையோ பார்த்துச் சிரிச்சியா, இல்ல தானா சிரிக்கிறியானு புரியாது. அப்பல்லாம் வருத்தமா இருக்கும். பாட்டு போடுறதைத் தவிர எனக்கு வேற வழி தெரியாது. பிடிக்காத பிள்ளையையே நெனச்சுக் கிட்டு இருக்கோமோனு கவலைப்பட ஆரம்பிச்சிடுவேன். எங்க நேர்ல சொன்னா, 'உன்னைப் பிடிக்கலடா’னு சொல்லிருவியோனு பயந்துக்கிட்டுதான் உன்கிட்ட பேசல. உனக்குக் கல்யாணம் பேசின உடனே செத்துப்போயிடலாம்னுதான் நெனைச்சேன். ஆனா, உன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கதான் இப்ப இப்படிச் செஞ்சேன்.''

சில நிமிஷங்கள் இருவரும் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். நேரம் ஆக ஆக... தனத்துக்குக் காய்ச்சல் வருவது போல் இருந்தது. ''இப்ப எதுவும் செய்ய முடியாது. கிளம்பு. வீட்டை எதுத்து ஒண்ணும் செய்ய முடியாது... சாக வேண்டியதுதான்'' என்று புலம்பினாள்.

''வா, எங்கயாவது ஓடிப்போகலாம். இல்ல, எங்க அக்கா வீட்டுக்குப் போவோம். நான் ஊருக்குப் போறப்பல்லாம் எங்க அக்கா உன்னைப்பத்திக் கேட்கும். நீ எப்படி இருக்கனு. நான் பதில் சொல்லாம முறைப்பேன். எங்கக்கா அமைதியாகிடும். உன்னை எனக்குப் பிடிக்காதுன்னு எங்கக்கா நெனைச்சிட்டு இருக்கு. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா அக்கா சந்தோஷப்படும். கல்யாணம் பண்ணிக்குவோம். அப்புறம் எல்லாஞ் சரியாயிடும்.''

''அம்மா அப்பாவைத் தவிக்க விட்டுட்டு அப்படியெல்லாம் வர முடியாது. இப்ப நீ போ. நான் நாளைக்குச் சொல்றேன்'' என்று கதவைத் திறந்து வெளியே ஆள் இருக்கிறார் களா என்று பார்த்துவிட்டு, அவனைக் கையைப் பிடித்து வாசற்படிக்கு இழுத்து வந்தாள். அவன் அவளைப் பார்த்துச் சிரித்தபடியே அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றான். அவனுடைய செயல் ஒரு குழந்தையைப்போல அவளுக்குத் தோன்றியது. அவன் மீது அன்பு பெருகியது. சந்தோஷமும் பயமும் கலந்த மன நிலையில் இருந்தாள்.  வாசல்படிக்கு வெளியே அவனை இறக்கிவிட்டாள். அவன் அங்கேயே நின்று அவளைப் பார்த்துச் சிரித்தும் பின் கெஞ்சியும் ''தனம் என்னை விட்டுட்டுக் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிடாதே. வா, நாம எங்கயாவது போயிடலாம்'' என்றான்.

''இப்ப நீ போ... நான் அப்புறமா சொல்றேன்'' என்று அவனைக் கையெடுத்துக் கும்பிட்டு, தெருவில் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். அவள் வீட்டுக்குஉள்ளே யும் அவன் வாசல்படியிலேயும் நின்று ஒருவருக்கு ஒருவர் கெஞ்சிக்கொண்டு இருந் தார்கள். அவள் கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலைக்குப் போய் கண்ணைக் கசக்கியதும், ''சரி... நீ அழாதே... நான் போறேன். ஆனா, எனக்கு நல்ல முடிவைச் சொல்லு. கை விட்டுடாத'' என்றபடி அவன் தன்னுடைய வீட்டு வாசல்படியில் போய் உட்கார்ந்தான். தனமும் உடனே வீட்டுக்குள் போய்ஒளிந்து கொள்ளாமல் தன் வீட்டு வாசல்படியில் நின்று அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். இத்தனை ஆண்டுகளில் இது போல் எப்போதும் அவர்கள் இப்படிப் பார்த்துக்கொண்டது இல்லை. அந்த நொடி யில் அவனோடு வாழ வேண்டும் என்று மனம் ஆர்ப்பரித்தது. சந்துக்குள் யாரோ வருவதுபோல் தெரிய வீட்டுக்குள் போய் விட்டாள் தனம். இருவரும் எட்டிவிடும் தூரத்தில் இருந்துகொண்டு ஒருவரை ஒருவர் விருப்பத்துடன் நினைத்து ஏங்கிக்கொண்டார் கள். தனத்தின் மனதில் அன்பும் தவிப்பும் தாண்டவமாடியது. அழகேசனை மறந்து, மணிகண்டனைக் கட்டிக்கொண்டு வாழ முடியாது என்று முடிவு செய்தாள்.அழகேசன் அதற்குப் பின் பாடல்களை ஒலிக்கச் செய்யவில்லை. அதற்கான தேவை யும் இல்லாமல் இருந்தது. பாடல்கள் எதுவும் இல்லாமல் தனத்தை முழுவதுமாக ஆக்கிர மித்து இருந்தான் அழகேசன். அவனுடைய சிரிப்பு, தான் சொல்வதை எல்லாம் கேட்கிற தன்மையை யோசித்துச் சிரித்தாள். ''கொஞ்சம் முரட்டுக் குணம் இருக்கு. அது சரியாப் போய்டும்'' என்று ஏதோ அவனோடுதான் அவளுடைய திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதைப்போல கனவில் மிதந்துகொண்டு இருந்தாள். அதே கணத்தில் உண்மை தாக்க, நொறுங்கிச் சிதறுவதைப்போல பயம் கொண்டாள்.

அன்று இரவு அம்மாவிடம் மெதுவாக ''அம்மா, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்'' என்று ஆரம்பித்ததும் பதறியடித்து எழுந்து உட்கார்ந்தாள் அம்மா.

''நீ எதை மனசுல வெச்சுட்டுப் பேசுறேனு தெரியும். ஒன்ன ஒத்த பிள்ளனு ஆசையா வளத்ததுக்கு உங்க அப்பாவை அவமானப் படவிட்டு சாக வைக்கப்போறியா?''

தனம் அழகேசனைப்பற்றி எதையும் சொல்லாமல் இருக்கும்போதே, அம்மா அவனைப்பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள். ''குடிகாரப் பய, டிராக்டர் ஓட்டித் திரியுறான், முட்டாளு. படிப்பாவது ஒழுங்கா வந்துச்சா? நீ அவன்கூட ஓடிப்போகணும்னு நெனச்சே... குடும்பம் அழிஞ்சுதான் போகும். பக்கத்துப் பக்கத்து வீட்ல குடியிருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக் குத்திட்டுத்தான் சாவாங்கெ... எல்லாத்தையும் அழிக்கணும்னு நீ முடிவு பண்ணினா, நீ எதை வேணுனாலும் செய்...'' என்று அம்மா படபடப்பாகப் பேசியதும் தனத்துக்குப் பயம் தொற்றிக்கொண்டது.

''நான் ஒண்ணுஞ் சொல்லலம்மா... நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்'' என்று அம்மாவை அமைதிப்படுத்திவிட்டுத் திரும்பிப் படுத்து அழுதாள். ஒருத்தர் சந்தோஷத்துக்காக இன்னொருத்தர் சந்தோஷத்தைப் பறிச்சுக்கிட்டேபோற இந்த வாழ்க்கையில மொத்தத்துல யாரும் சந்தோஷமா இருக்கறது இல்ல என்பதை உணர்ந்த தனம், சிறு குழந்தையைப் போல் மனம் ஏங்கித் தவித்தாள். யாரும் அறியாத பொழுதில், அழகேசனோடு அந்தத் தெருவில் இருந்து மறைந்துவிடத் துடித்தாள். சக்கரைக் கிழவியின் மனதுக் குள் படிந்துகிடக்கும் கதைகளில் இருந்து எல்லோரையும் மயக்கமுறச் செய்யும் மாயக் கிழவியின் மந்திர சக்தி யைத் தேடினாள் தனம். கிழவியோ நினைவு தப்பி கண்களை மூடியபடி அந்தச் சந்தின் மூலையில் சுவரின் நிழலில் சாக்கை விரித்துப் படுத்துக்கிடக்கிறாள். அவள் நினைவில் இருந்த தேவதைக் கதைகள் எங்கோ வனாந்திரக் காட்டுக்குள் ஒளிந்துகொண்டன.

அடுத்த நாளும் அதற்கு அடுத்து வந்த நாட்களிலும் தனத்துக்காக அழகேசன் காத்திருந்தான். அவள் அவன் கண் முன் நிழலாடவில்லை. எப்படியும் அவள் வந்துவிடுவாள் என்றே அவன் நினைத்தான். தனம் வீட்டைவிட்டு வெளியேறி அழகேசனைச் சந்திக்கும் சூழ்நிலையை யோசித்துப்பார்க்க முடியாதபடி அம்மாவோ அல்லது உறவினர்களோ வீட்டில் அவளோடு இருந்தார்கள். பாட்டுச் சத்தம் கேட்கா மல் அழகேசனின் வீடு சாவு வீட்டைப் போல் இருந்தது. அழகேசன் என்ன ஆனான் என்பதுபற்றி எதுவும் தெரியா மலே திருமணத்துக்கு முதல் நாள் தனத்தை ஊரைவிட்டு அழைத்துப்போய்விட்டார்கள். அந்தச் சந்தின் நீண்ட மதில் சுவர்கள் மிகப் பெரிய மயானச் சுவர்களாக நின்று அவளை வழி அனுப்பியதாக அவளுக்குத் தோன்றியது. கடைசியாக அவனை, அவன் வீட்டு வாசல்படியில் உட்கார்ந்து இருந்தபோது பார்த்த அவனுடைய சித்திரம் அவளை உருத்தெரியாமல் அழிக்கக்கூடியதாக இருந்தது. அழகேசன் மீதான கசப்பு நீங்கி, நேசத்தின் சிறகுகளைச் சுமந்து காலம் எல்லாம் வலி கூட்டும் அன்புடன் அந்தத் தெருவினைக் கடந்து செல்கிறாள் தனம். வறண்ட காற்றை மேலும் வறண்டுபோகச் செய்யும் துயர் மூச்சினை விட்டபடி முற்றத்தில் கிடக்கிறான் அழகேசன்.

நன்றி - விகடன்

பூனைகள் இல்லாத வீடு - சந்திரா



எங்கள் தெருமுழுக்கத் தோரணம் கட்டியிருந்தார்கள். மாவிலை
மணத்துக்கொண்டிருந்தது. அண்ணனும் நானும் ஒலிநாடாவின் இசையை
அதிகப்படுத்திக்கொண்டிருந்தோம். ஒலி பெருத்து, தெப்பங்குளம் தாண்டி மீனாட்சி
அம்மன் கோவில் வரை கேட்டிருக்கும் போலிருக்கிறது. எங்கள் தெரு முழுக்க கூட்டம்
நிரம்பி வழிந்திருந்தது. நான் புதிதாய்ப் போட்டிருந்த பச்சை கலர் கோடு போட்ட
வெள்ளைச் சட்டையும், கால்களை மூழ்கிக்கொண்டிருந்த நீல பேண்ட்டுமாய் வாசலில்
நின்ற கூட்டத்தை கர்வத்துடன் பார்த்தேன். அம்மாவின் பட்டுப்புடவையைப் போன்று
அக்காவும் கத்தரிப்பூ நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். இன்று அவள்
கூந்தல் நீளமாகி சிவப்பு கலர் குஞ்சத்துடன் தொங்கிக் கொண்டிருந்தது. தலையில்
நிறைய பூ வைத்திருந்தாள். தெருவில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் நின்றிருந்தது.
நான் ஒரு மகாராஜனைப் போல வீறுநடை போட்டு படியில் இறங்கினேன். பேண்ட் பாதம்
முழுதும் நிரப்பி என்னைத் தடுக்கி விழ வைத்தது. உடனே பிரபுவையும்
சிவக்குமாரையும் பார்த்தேன். அவர்கள் சிரிக்கவில்லை. ஒரு கையில் பேண்ட்டை
நன்றாக தூக்கிப் பிடித்தபடி காரின் முன்சீட்டில் உட்கார்ந்தேன். பேன்ட்டின்
நீளத்தின் குறைக்கவாவது நான் வளர வேண்டும் என்று நினைத்தேன். பிரபுவும்,
சிவக்குமாரும் நாங்களும் காரில் வருகிறோம் என்றார்கள். எனக்கும் அவர்களை என்
பக்கத்தில் உட்கார வைத்துக்கொள்ள ஆசைதான். அப்போது என் அண்ணன் வில்லனைப் போல்
அவர்களை ஒரு முறை முறைத்து ஸ்டைலாக கார் கதவை திறக்க முயன்றான். அவனின்
ஒல்லியான கைகளுக்கு கதவு அசைந்துகூட கொடுக்கவில்லை. பிரபு ஓடி வந்து ஒரு
சேவகனைப் போல கதவைத் திறந்துவிட்டான். அப்பவும் அண்ணன் அவனை முறைத்தான். அவன்
தள்ளிப்போய் நின்று கொண்டான்.

காரில் உட்கார்ந்திருப்பதற்கான அனைத்து பந்தாக்களையும் செய்தேன். காரில் இருந்த
கண்ணாடியில் தலையைச் சீவிக் கொண்டேன். அடம்பிடித்து அழுது தைத்த முழுக்கைச்
சட்டையை அப்பாவைப் போல் மடக்கிவிட்டு அண்ணனின் அரைக்கைச் சட்டையைப் பார்த்துச்
சிரித்தேன். சாந்தி அக்காவும் அவளது தோழிகளும் சிரித்தபடி காரில் பின்சீட்டில்
உட்கார்ந்தார்கள். செல்வி அக்கா வழக்கம்போல் சாந்தி அக்காவுடன் சண்டை
போட்டிருப்பாள் போல,  அவள் காரில் ஏறாமல் பழத்தட்டை கையில் ஏந்தியபடி சித்தி,
பெரியம்மா, அத்தை கோஷ்டிகளுடன் நடந்துவர தயாரானாள். ‘சின்னவளே இன்னைக்குமா
வீம்பு புடிக்கணும் நீயும் கார்ல உட்கார்ந்துக்கடி’ என்ற அம்மாவை
முறைத்துவிட்டு, தட்டை படிக்கட்டில் வைத்துவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போய்
உட்கார்ந்துகொண்டாள். செல்வி அக்காள், சாந்தி அக்காவைப் போல் இன்று தாவணி
போட்டிருந்தது அழகாயிருந்தது. மேளக்காரர்கள் காருக்கு முன்னால் நின்று வாசிப்பை
ஆரம்பித்தார்கள். ‘செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா’ பாட்டு ஒலிபெருக்கியில்
வாசிப்பை மீறி கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று ஒலிபெருக்கியின் சத்தம்
நின்றுவிட்டது.

புது வெள்ளை வேட்டியை மடக்கி கட்டியிருந்த அப்பா விடுவிடுவென்று காருக்குப்
பக்கத்தில் வந்தார். எல்லோரையும் இறங்கச் சொன்னார். சாந்தி அக்காவை தரதரவென்று
வீட்டுக்குள் இழுத்துப் போனார். ஒலிபெருக்கி, பாட்டு, கார், மேளம் எல்லா
சந்தோசமும் போச்சு. எனக்கு அவமானம் பிய்த்துத் தின்றது. அவர் எங்களை பார்த்த
ஒரு பார்வையிலேயே பிரபு, சிவக்குமாரு, கூட்டம் யாரையும் திரும்பிப் பார்க்காமல்
அவர் பின்னால் ஒடுங்கிக்கொண்டு போனோம். முற்றத்திலிருந்த மர நாற்காலியில்
அக்காவை உட்கார வைத்து அறிவியல் புத்தகத்தை கையில் கொடுத்தார் அப்பா. அக்காவும்
அதுவரை படித்துக்கொண்டிருந்துவிட்டு சமையலறையில் தண்ணீர் குடிக்கப் போனவளைப்
போல இயல்பாக படிக்க வேண்டிய பக்கத்தை எடுத்துப் படித்தாள். நீர்மூழ்கிக்
கப்பலின் செயல்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு வரியாக மனப்பாடம் செய்தாள்.
அப்பா எங்களிடம் அதிகாரத்தைக் கட்டவிழ்க்கும் முன்னே நான் முற்றத்தின் தெற்கு
மூலையிலும் அண்ணன் வடக்கு மூலையிலும் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தோம்.
செல்வி அக்கா கோவிலை தாண்டியிருந்த கொய்யா மரத்தருகில் நடந்தபடி படித்தாள்.
அம்மா, கல்யாணம் நின்று போனதில் பெரும் வருத்தம் அடைந்தவளாக சித்தி
பெரியம்மாவுடன் சமையலறையில் உட்கார்ந்து அழுதாள். அப்பா வாத்தியாரைப் போல்
கைகளைப் பின்னால் கட்டி எங்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார்.

எல்லாத்துக்கும் காரணம் செல்வி அக்காதான். அவள்தான் முதலில் கோபித்துக்கொண்டு
வந்தாள். மாப்பிள்ளையையும் பார்க்கவில்லை. கார் ஊர்வலமும் போச்சு. கோபத்துடன்
எழுந்துபோய் அவளை என் கை ஓயுமட்டும் அடித்தேன். “டேய் செந்திலு எந்திரிடா
எதுக்கடா இப்படி கையைத் தூக்கி காத்துல அடிச்சுகிருக்க. ராத்திரி பேய்க்கதை
கேட்காத. கெட்ட கெட்ட கனவா வரும்ன்னு சொன்னா கேட்குறியா?”

“எம்மா ராத்திரி கல்யாணக்கதைதானம்மா சொன்ன” என்றேன் கண்களைக் கசக்கியபடி.
“உனக்கு தெனமும் இதே வேலையாப் போச்சுடா ராத்திரி கதை கேக்கிறது. காலையில கனவு
கண்டுட்டே எந்திரிக்கிறது? சரி எந்திரி காப்பியை குடிச்சிட்டு பெரியப்பா
வீட்டுக்கு போயிட்டு வா. சீக்கிரம் சோறாக்கணுமில்ல” என்ற அம்மாவிடம் “சீனி
அண்ணனை போகச் சொல்லு. தெனைக்கும் நானே போக முடியாது. பெரியப்பா
முறைக்கிறாரும்மா.” “அண்ணன் பெரிய பையனாயிட்டான்ல வெட்கப்படுறாண்டா. நீ
போயிட்டு வாடா.” “நான் ஆறாவது படிக்கிறேன் அவன் எட்டாவது படிக்கிறான்
அதுக்குள்ள அவன் பெரிய பையனாயிட்டானா! நானும் டவுசர் போட்டிருக்கேன். அவனும்
டவுசர் போட்டிருக்கான். அவன் பேண்ட் போடட்டும் அப்பதான் பெரியவனாவான்.” அம்மா
என் நாடியை பிடித்து கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. செல்வி அக்கா அதற்குள் குளித்து
முடித்து யூனிபார்ம் போட்டிருந்தாள். அவள் ஆம்பளப் பையன் சட்டை போட்டிருந்தது
எனக்கு எரிச்சலாக இருந்தது. இப்படி இவள் சட்டை போட்டுக்கொண்டு அலைந்தால், ஊரில்
யார்தான் என்னை ஆம்பளையாக மதிப்பார்கள். அதுவும் கூடப்படிக்கும் இந்துமதி நான்
ஆம்பளப் பையன் என்பதை கொஞ்சம்கூட மதிக்காமல் சண்டை வரும்போதெல்லாம் என் மேல்
உட்கார்ந்து முதுகில் குத்துகிறாள். அவளுடன் சண்டை போட தினமும் கொஞ்சம் அதிகமாக
சாப்பிட வேண்டியிருக்கிறது. அதற்கும் கொஞ்ச காலமாக வீட்டில் வழியில்லாமல்
போய்விட்டது. ராத்திரி விளையாடும்போது அவள் என்னை அடித்ததும் வீட்டுக்கு வந்து
சாப்பிட்டு விட்டு வீரமாகிப் போய் அடிக்கலாம் என்றால் அம்மா சோத்து
பாத்திரத்தையெல்லாம் கழுவி வைத்திருக்கிறது. பெரியப்பா வீட்டுக்குப் போய்
அரிசியும் பருப்பும் வாங்கும் நாளிலிருந்து இப்படித்தான் வீட்டில் மறுசோறு
சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. தினமும் ஒரு படி அரிசி என்று கணக்கு
வைத்துதான் கொடுக்கிறார் பெரியப்பா.

அம்மா எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி தினமும் என்னை பெரியப்பா வீட்டிற்கு காலையில்
அனுப்பி விடுகிறது. நானும் சாந்தி அக்கா தையல் பீரியடில் பின்னிய சிவப்பும்
வெள்ளையும் கலந்த வயர் பைக்குள் ஒரு மஞ்சள் துணிப்பையை எடுத்து வைத்துக்கொண்டு
அடுத்த தெருவில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குப் போகிறேன். பெரியம்மா நான்
போவதற்கு முன்பே அரிசி பருப்பு காய் எல்லாவற்றையும் ரெடியாக வைத்திருக்கும்.
முன்னெல்லாம் சாப்பாட்டுச் செலவுக்கு மாதம் ஒரு முறை என்று பணமாகத்தான்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாதி மாதத்திலேயே பணத்தை செலவழித்துவிட்டு
சாப்பாட்டுக்கு வழியில்லை என்று அவர்கள் வீட்டுப் பக்கம் போய் நின்றதும்,
இப்படி தினமும் அரிசியாக கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டார்கள். பெரியம்மா
அரிசியைத் துணிப்பையில் கொட்டி வயர்பைக்குள் வைக்கும். காகிதத்திலிருக்கும்
பருப்பு, காய்கறிகளை மேலாக்க போட்டு “சூதானமா கொண்டு போ செந்திலு”. இந்த
வார்த்தையை பெரியம்மா தினமும் சொல்வதைப் போல பெரியப்பாவும் ஒரு விசயத்தை
தினமும் சொல்லிக்கொண்டிருந்தார். “உங்கப்பா கடைப்பக்கம் வரமாட்டாராமா? வேலை
பார்த்தா கிரீடம் இறங்கிப் போகும், ரெண்டு பொம்பளப் பிள்ளைக வளர்ந்து
கல்யாணத்துக்கு நிக்கப் போகுதுக, இவரு சாமிய கட்டிக்கிட்டு அழுகுறாரு. வயலை
வித்தாச்சு, வடக்குத்தெரு வீட்டை வித்தாச்சு இன்னும் எதை விக்கப் போறாரோ?
விக்கிறதுக்கு இன்னும் என்னயிருக்கு, உங்க அத்தகாரிகதான் சொத்தில பங்கு
வேணுமின்னு எல்லாத்தையும் கோர்ட்டுல கொண்டு நிறுத்திட்டாளுகளே” எங்கப்பா
காலையில் கந்தசஷ்டி கவசத்தை பயபக்தியுடன் சொல்வதைப் போல, பெரியப்பாவும்
சிரத்தையுடன் இதை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “சின்னப்பையன் அவங்கிட்ட
போய்த் தெனமும் இதையே சொல்லிக்கிட்டிருந்தா நல்லாவாயிருக்கு” என்று சொல்லும்
பெரியம்மாவை, “எல்லாம் உன் தங்கச்சியை சொல்லணும் புருசன வீட்டுக்குள்ள பொத்தி
பொத்தி வச்சிகிட்டு, புருசனை லட்சணமா வேலைக்கு போகச் சொல்ல துப்பில்ல” என்று
பெரியப்பா பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் வீட்டின் நீளமான படியைத் தாண்டி
குறுக்குச் சந்து வழியாக எங்க வீட்டின் பின்பக்கம் நுழைந்து வீட்டுக்குள்
வந்திருப்பேன்.

ஊரில் எங்கள் வீட்டை ‘கோவில் வீடு’ என்றுதான் கூப்பிடுவார்கள். துட்டு
பெருத்திருந்த காலத்தில் என்னோட தாத்தா வீட்டோடு சிவன் கோயிலை கட்டி
வைத்திருந்தார். கோவில் வாசல் வடக்குத் தெருவிலும் வீட்டு வாசல் கிழக்குத்
தெருவிலும் இருக்கும். இப்படி இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு செவ்வக
வடிவமைப்பில் இருந்தது எங்கள் வீடு. வீட்டின் நடுவில் நான்கு பக்கமும் ஓடுகள்
மேய்ந்த முற்றம் இருந்தது. முற்றத்தின் மேற்கு பக்கம் இரண்டு அறைகளும்,
முற்றத்தின் கிழக்குப் பக்கம் இரண்டு அறைகளும் இருந்தன. ஒவ்வொரு அறைக்கு
முன்னால் வராண்டாவைப் போன்று கொஞ்சம் இடம் காலியாக இருக்கும். ஒவ்வொரு
முற்றமும் தனித்தனி வீடு போலிருக்கும். தெற்கு முற்றத்தினை தொடர்ந்து ஒரு
படுக்கை அறையும், ஒரு நீண்ட வராண்டாவும், தானியங்களை அடைத்து வைக்க மரத்தால் ஆன
சேந்தியும், அதனைத்தாண்டி கடைசியாக சமையலறையும் இருக்கும். வடக்கு முற்றம்
அறைகளற்று வாசலைக் கொண்டிருந்தது. இதிலிருந்து இருபதடி தூரத்தில் சிவன்
கோவிலும் கிணறும் இருந்தது. சிவன்தான் பிரதான கடவுள் என்றாலும் பிள்ளையார்,
நந்தி, முருகன் எல்லாமே சேர்ந்திருந்தது. வீட்டு கோவில் என்பதால் எப்போதாவது
வரும் ஒன்றிரண்டு ஊர்க்காரர்களைத் தவிர யாரும் எங்கள் கோவிலுக்கு வருவதில்லை.
வீட்டில் கோவில் கட்டியிருந்ததுதான் எங்களின் எல்லா துன்பத்திற்கும் காரணம்
என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். எங்கள் கோவிலில் நந்தி மட்டும் எனக்கு
விருப்பமானதாக இருந்தது. வீட்டில் அப்பா இல்லாத நேரத்தில் அம்மா வீட்டுக்குள்
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது யாருக்கும் தெரியாமல் நந்தியில் சவாரி
செய்வேன். அப்பாவோடு பூஜை செய்துகொண்டிருக்கும் போது “என் மேல் சவாரி செஞ்சதை
உங்கப்பாகிட்ட சொல்லிடவா” என்பதைப் போல் நந்தி பார்ப்பதாகத் தோன்றும். பார்வையை
நந்தி பக்கத்திலிருந்து திருப்பிக் கொள்வேன். அதுமட்டும் அப்பாவுக்கு
தெரிந்தால் என்னைக் கொன்றே விடுவார்.

சாப்பிடுவது தூங்குவதைப் போல தினமும் திருவாசகமும் கந்தசஷ்டி கவசமும் படிக்க
வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகயிருந்தது. அண்ணன் எட்டாம் வகுப்பு
போனதிலிருந்து “பள்ளிக்கூடத்தில நெறையா படிக்கச் சொல்றாங்க” என்று காலையில்
புத்தகத்தை தூக்கி உட்காந்து கொள்கிறான். இன்னும் இரண்டு முழுபரீட்சை லீவு
முடிந்தால்தான் நான் திருவாசகத்திலிருந்தும் கந்தசஷ்டி கவசத்திலிருந்தும்
விடுபட முடியும். ஆனால் தமிழ்ப் பாடத்தில் நான் தான் முதல் மதிப்பெண்
வாங்கினேன். திருக்குறளை அப்பா தினமும் தலைகீழாக மனப்பாடம் பண்ண
வைத்துவிட்டார்.

நாங்கள் சாப்பிடும்போதே அப்பாவும் எங்களோடு சேர்ந்து சாப்பிட்டு, வேலைக்கு
போகிறவரைப் போல நாங்கள் கிளம்பும்போது அவரும் வெளியே கிளம்பிவிடுவார். அப்புறம்
அனுப்பானடியிலிருக்கிற அத்தனை வீட்டுப் பிரச்னைகளுக்கும் சோனையா கோவிலில்
இருக்கும் புங்கைமரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பேச ஆரம்பித்து விடுவார்.
அந்தக் கூட்டத்தில் இவர் வயதுள்ளவர்கள் கொஞ்ச பேர்தான் இருப்பார்கள் வேலை
வெட்டி செய்து ஓய்ந்து போய் வீட்டில் பொழுதைக் கழிக்க முடியாமல் இருக்கும்
கிழடுகள் அந்தக் கூட்டத்தில் அதிகமாக இருக்கும். ராத்திரி கூட்டத்தில்
வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியிருக்கும் இவர் வயதுக்குக் கீழே உள்ள
இளைஞர்களோடு தெப்பக்குளத்துப் படிக்கட்டில் உட்கார்ந்து கதைப்
பேசிக்கொண்டிருப்பார். வாரத்திற்கு இரண்டு நாள் இவர் வக்கிலைப் போய் பார்க்கும்
நாளில் ஏதோ மிகப்பெரும் பிரச்னை முடிக்கப்படாமல் கெட்டுப்போய் கிடப்பில்
கிடக்கிறது என்பதைப் போல ராத்திரி பதினொரு மணிவரை அவசரமாகப்
பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பா பேசிப் பேசி ஓய்ந்து கொண்டிருந்தார். பீடி,
சிகரெட், சீட்டு இப்படி எந்த கெட்ட பழக்கமும் இல்லை. நிறையப் பேசுவார். நிறைய
டீ சாப்பிடுவார். அதுவும் ஓசி டீ என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் எப்படிப்பட்ட
குடும்பத்து ஆளு ஒருத்தன்கிட்ட ஓசி டீ குடிக்கிறதா என்று குடும்பப் பெருமை பேசி
அடுத்தவனுக்க்கு டீ வாங்கித் தருவாரே தவிர அவர்  யாரிடமும் ஓசி டீ
குடிக்கமாட்டார். பெரியப்பாவிற்குத் தெரியாமல் பெரியம்மா கொடுக்கும் சில்லறைப்
பணத்தை வீட்டு மேற்செலவுக்குப் போக மிச்சத்தை அம்மா அப்பாவுக்கு கொடுக்கும்.

அப்பா வீட்டுக்கு லேட்டாக வரும் ராத்திரிகளில் நாங்கள் முற்றத்தில் பாயை
விரித்து வரிசையாகப் படுத்திருப்போம். அப்போதெல்லாம் யாருடையதோ போல அம்மா
தன்னுடைய கதையை எங்களிடம் சொல்லும். அம்மாவின் ஜாக்கெட் பின்னை நோண்டியபடி
வயிற்றுச் சூட்டின் வெதுவெதுப்பில் படுத்தபடி கதையைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
அம்மாவின் ஜாக்கெட் பின்னை நோண்டும் பழக்கம் வெகு நாட்களாக என்னைவிட்டுப்
போகவில்லை. அக்காக்களும் அண்ணனும் என்னை ஓயாமல் கிண்டல் செய்த பின்புதான்
அதனைக் கைவிட்டேன்.

அம்மாவிடம் கதை கேட்டுக்கொண்டே அதற்கு இணையாக கற்பனையிலும் மூழ்கிவிடுவேன்.
செல்வி அக்கா, சாந்தி அக்கா, சீனி அண்ணன் எல்லோரும் கதையைக்
கேட்டுக்கொண்டிருந்தாலும் அம்மா என்னைப் பார்த்துதான் கதையைச் சொல்லிக்
கொண்டிருக்கும்.

“என்னடா செந்திலு கதையை கேக்குறியா” என்று என் கற்பனையை அறிந்ததுபோல அவ்வப்போது
கடிவாளத்தைப் போட்டு கதையைத் தொடர்ந்து சொல்லும். உலகத்தில் மிக
சுவாரசியமானதும் நெகிழ்வானதும் எங்கம்மா வாழ்ந்த கதைதான் என்று
நினைத்துக்கொள்வேன். வாழ்க்கையைச் சொல்லி தீர்ந்துபோன அம்மா ஒரே கதையை வேறு
வேறு வடிவங்களில் மாற்றிச் சொல்லும். ராஜா ராணி கதை சொல்லும்போதும் முதல்ல ராணி
சந்தோசமாக இருப்பாள் அப்புறம் ராணியோட வாழ்க்கை அலைபுரண்டு சோகமாயிடும்.
இல்லையென்றால் கொடுமைப்பட்டு வேலைக்காரியாக இருக்கும் இளவரசி ஏஞ்சலாக
மாறிவிடுவாள். அம்மா சொல்லும் எல்லாக் கதைகளும் சந்தோசமும் துக்கமும்
சேர்ந்ததாகத்தான் இருக்கும். முன்பு சொன்ன கதையின் ஜாடையில் இன்னொரு கதை
இல்லாமல் இருந்தாலும் அம்மாவைத்தான் எல்லாக் கதைகளிலும் கதாநாயகியாக
நினைத்துக்கொள்வேன்.

எங்கள் வீட்டில் வறுமை இருந்தாலும் அம்மாவும் நாங்களும் நண்பர்களைப் போல்
விளையாடிக்கொண்டிருந்தோம். எது வாங்கிச் சாப்பிட்டாலும் அம்மாவுக்கும் சேர்த்து
ஐந்து பங்காக்கி சாப்பிடுவோம். நான் என்னோட பங்கைச் சீக்கிரம் சாப்பிட்டு
விடுவேன். அம்மா எப்போதும் தன் பங்கை கடைசியில்தான் சாப்பிடும். அது எனக்கு
கொடுப்பதற்காகத்தான். “சீக்கிரம் சாப்பிடும்மா. இவன் உன் பங்கை
பிடுங்கிக்குவான்” என்று அண்ணன் என் பங்கு இருக்கும் கையை பிடித்துக்கொள்வான்.
“சின்ன பையன் அவனுக்கு ஆசையா இருக்கும்ல, இனிமேல் நான் சாப்பிட்டு என்ன
ஆகப்போகுது” என்று தன் பங்கில் பாதியை அம்மா கொடுத்துவிடும். எனக்கு விவரம்
தெரியத் தெரிய என் பங்கை கடைசியாக சாப்பிட்டேன். திருடன் போலீஸ் விளையாட்டு,
தாயம், ஒளிந்து விளையாடுவது என்று விளையாடித் தீர்க்காத தனது இளமைக்
காலத்தையெல்லாம் அம்மா சரிக்குச் சமமாக எங்களோடு பகிர்ந்து கொண்டது.

கையில் பணம் புழங்கவில்லை என்றாலும் வீட்டில் இருந்த பல பொருள்கள் நாங்கள்
வசதிபடைத்தவர்கள் என்பதை எங்களையறியாமல் எங்களுக்குள் ஞாபகப்படுத்திக்கொண்டே
இருந்தது. சுவருக்குள் புதைந்து இருக்கும் மர அலமாரிகள், நீளமான சமையலறை
முற்றத்து பெரிய மரத்தூண்கள், இப்போது காலியாகக் கிடக்கும் தானிய சேந்தி
இன்னும் இன்னும்... சிதிலமடைந்து  கரையான் ஏறிக்கிடந்த மரச்சாமான்கள் ஏழ்மையை
மீறிய ஒரு கர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. புங்கைமரத்தடியில் விளையாடும்போது
உடன் விளையாடும் சிநேகிதர்கள் சாப்பிடக் கொடுக்கும் பண்டங்களை வாங்க மறுத்து
நாங்கள் அறியாத எங்கள் வீட்டின் பழைய செழுமையை அவர்களுக்கு உணர்த்தினோம். ஆனால்
இந்துமதி காக்காகடி கடித்துக் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்காமல் இருக்க
முடியவில்லை.

எங்கள் வீட்டில் இருக்கும் பழங்காலத்துப் பொருள்களில் எனக்குப் பிடித்தமானது
வெண்கல அன்னபட்சி விளக்குதான். பம்பரம் மாதிரியான குடுவை அமைப்பில் இருக்கும்
நடுப்பகுதி. கீழ்பகுதியில் இருக்கும் திரிபோட்ட விளக்கு நடுப்பகுதியோடு திருகு
போட்டு இணைந்திருக்கும். வெண்கலத்தின் அன்னபட்சி உருவம் செய்யப்பட்டு அது
குடுவையின் மேல்பகுதியில் அழகுக்காக பொருத்தப்பட்டிருக்கும். இதுவும்
நடுப்பகுதியோடு திருகு போட்டு இணைந்திருக்கும். அன்ன பட்சியையும், விளக்கையும்
நடுப்பகுதியிலிருந்து தனித்தனியே கழற்றி எடுத்துவிடலாம். விளக்குப் பகுதியைத்
திருகி எடுத்துக் குடுவையில் எண்ணைய் ஊற்றி, பின் விளக்கை மாட்டினால்,
குடுவையிலிருந்து எண்ணைய் வழிந்து விளக்கில் விழும். அன்னப்பட்சிக்கு மேலே
கொக்கியை அரை அடி நீளத்திற்கு செயின் போல செய்து முற்றத்துச் சுவரில்
மாட்டியிருப்பார்கள்.

குடுவையில் ஒரு படி எண்ணைய் நிறையுமாம். கார்த்திகை மாதங்களில் நாளெல்லாம்
விளக்கு எரிந்து கொண்டிருக்குமாம். எங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து
குடுவை முழுமையாக நிறைந்ததில்லை. விளக்கின் கீழ்ப்பகுதியில் மட்டும் எண்ணெய்
ஊற்றி விளக்கு ஏற்றினோம். குடுவை முழுவதும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற
வேண்டுமென்று செல்வி அக்காவும், சாந்தி அக்காவும் தீராத ஆசை கொண்டிருந்தார்கள்.

வீட்டில் யாரும் இல்லாத நாட்களில் எங்களுக்கு விளையாட ஏதாவது பழங்காலத்துப்
பொருள்கள் ஒளிந்து கிடக்கின்றதா என்று வீட்டை நானும் அண்ணனும் சல்லடை போட்டுத்
தேடிக்கொண்டிருப்போம். அப்படித்தான் தானிய சேந்திக்குப் போகும் மெச்சு
படிக்குக் கீழே தூசி படிந்து கிடந்த பழைய தொட்டில், துருப்பிடித்த இரும்புச்
சாமான்களை வெளியே எடுத்துவிட்டு அங்கே தேடியபோது மரப்பலகை ஒன்று தரையோடு தரையாக
சேர்ந்திருந்தது. மரப்பலகையை தனியே எடுத்துப் பார்த்தால் சதுரமான குழி ஒன்று
தரைக்கு அடியில் ஓடியது. யாருக்கும் தெரியாத வீட்டின் பாதாள அறையை
கண்டுபிடித்துவிட்டதாக நானும் அண்ணனும் குதியாட்டம் போட்டோம். இருண்ட குழி
ஆழமாகி உள்ளே இழுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அப்பா வரும் அரவம் கேட்க எல்லாவற்றையும் பழையபடி
மூடிவிட்டோம். ராத்திரி வீட்டில் எல்லோரும் தூங்கிய பின் நானும் அண்ணனும்
குசுகுசுவென்று இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஆளரவமற்ற இன்னொருநாள்
அண்ணன் பேட்டரிலைட்டை உள்ளே அடிக்க நான் குழிக்குள் இறங்கினேன். அது என்
உயரத்திற்கும் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. அந்த குழிக்குள் ஒரு பழங்காலத்து
இரும்பு பெட்டி புதைக்கப்பட்டிருந்தது. அதை முழுவதுமாக துழாவித் தேடினேன். ஒரு
பித்தளை செம்பு, குழந்தைக்கு பால் புகட்டும் சங்கு, களிமண்ணில் செய்யப்பட்ட ஏதோ
சாமியின் உருவம் தவிர காலியாகத்தான் கிடந்தது பெட்டி. ஏமாற்றம் பொங்க பித்தளைச்
செம்பை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறினேன். கடகடவென்று செம்புக்குள் ஏதோ
சத்தம் வந்தது. செம்பை கவிழ்த்துப் பார்த்தால் பழைய தாயத்து, பழைய நாணயம்,
அப்புறம் முடிந்த துணி ஒன்றும் இருந்தது. முடிச்சை அவிழ்த்துப் பார்த்தால்
சரஸ்வதி படம் போட்ட ஒரு வெள்ளிக்காசும் ஒரு தங்கக்காசு மின்னிக் கொண்டிருந்தது.
ஓடிப்போய் அம்மாவிடம் கொடுத்தோம். எல்லாச் சொத்தும் திரும்பி வந்ததைப் போல
அம்மா சந்தோசப்பட்டது. தங்கக்காசும் கிடைத்தபின் எல்லோருக்கும் தெரியும்படியே
வீட்டை நோண்ட ஆர்மபித்தோம். அதற்குபின் ஒரு பித்தளைக்காசு கூட எங்கள் கைக்குச்
சிக்கவில்லை. ஆனால் அம்மா மறுபடியும் தாத்தாவின் செல்வச் செழிப்பைப் பற்றி கதை
சொல்ல அது ஆதாரமாய் அமைந்துவிட்டது. அப்போதெல்லாம் தாத்தாவிடம் பெட்டி
பெட்டியாக வெள்ளிக்காசு இருக்குமாம். மாதம் ஒரு முறை பௌர்ணமி வெளிச்சத்தில்
வெள்ளிக்காசையெல்லாம் காயப்போடுவாராம். பளீரென்று மின்னும் நிலா வெளிச்சம்
பட்டால் வெள்ளி கறுத்துப்போகாமல் பளபளவென்று அப்படியே இருக்குமாம். அம்மா
இப்படி கதை சொல்லியே தன்னைத்தானே திருப்திப்படுத்திக்கொண்டது.

நல்லா படிக்காமச் சொத்தை நம்பி இருந்ததாலதானே எந்த வேலைக்கும் போக முடியாமப்
போச்சு, படிக்காததால கோர்ட்டு கேஸுன்னு ஏமாந்து போயாச்சு. நாங்களாவது படித்து
பேங்க் ஆபிஸர், கலெக்டர், டாக்டர் என்று பெரிய வேலையில் இருக்க வேண்டுமென்று
அப்பா ஆசைப்பட்டார். சர்வாதிகாரியைப் போல வீட்டில் அமர்ந்துகொண்டு எங்களை
அட்டம் பிசகவிடாமல் படிக்கச் சொல்லுவார். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க
வேண்டும் என்று வெறி கொண்டு அடக்கினார். அக்காக்களை சமையலறை பக்கம் கூட எட்டிப்
பார்க்க விடமாட்டார். வீட்டுக்குத் தேவையான தண்ணீரையும் கிணத்திலிருந்து அவரே
எடுத்தார். எங்களுக்கு கிடைத்த குறைந்தபட்ச வீட்டு வாடகையிலும், ஒத்தி கிடைத்த
வரன்கட்டை வயலை அம்மா அப்படி இப்படி என்று பணத்தைச் சேர்த்து வைத்து திருப்பி
அதை வாரத்திற்கு விட்டதில் கிடைத்த நெல்லும் எங்களின் வருச சாப்பாட்டுக்குச்
சரியாகப் போய்விட்டது.

சாந்தி அக்கா எம்.எஸ்.சி. முதல் வருசம் படித்துக் கொண்டிருந்தது. அது
காலேஜுக்கு போய்க்கொண்டே பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது. சின்ன
அக்கா பி.ஏ. மூன்றாம் வருசமும், சீனி அண்ணன் பி.எஸ்.ஸியும் படித்துக்
கொண்டிருந்தார்கள். அப்பா இப்போதெல்லாம்  பேச்சையும் டீயையும்
குறைத்துக்கொண்டார். குடும்பத்துப் பெருமைகளையெல்லாம் பிள்ளைகளின் படிப்பில்
மீட்டெடுத்துவிடலாம் என்று அவர் மனதில் புது நம்பிக்கை விட்டிருந்தது. அக்கா
படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை விலைக்கி வாங்க முடியாதென்பதால் அப்பா
மதுரையில் இருக்கும் சென்ட்ரல் நூலகத்திலும், யுனிவர்சிட்டி நூலகத்திலும்
உறுப்பினரானார். அக்காக்கள், அண்ணன் எழுதிக் கொடுக்கும் புத்தகங்களை பகலெல்லாம்
நூலகத்தில் தேடி அலைந்தார். தேவையான பக்கங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு
அவர்கள் படித்தார்கள்.

‘சொத்தில்லாம, வேலைக்கு போகாம பிள்ளைகளப் படிக்க வைச்சிட்டாருப்பா’ என்று
ஊர்க்காரர்கள் அப்பாவை பெருமையாகச் சொன்னார்கள். “வீட்ல கஞ்சிக்கில்ல, அதுல
பிள்ளைகளுக்கு படிப்பு என்ன வேண்டி கிடக்குன்னு” பெரியப்பா பொறுமிக்
கொண்டிருந்தார். நான் இப்போது பேண்ட் போட்டு ப்ளஸ் ஒன் போய்க்கொண்டிருந்தேன்.
இப்போதெல்லாம் பெரியப்பா வீட்டுக்குப் பையை எடுத்துப் போவதில்லை. ஆனால் அக்கா
கல்லூரியில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் பெரியம்மா மகள் சுமதி அக்காவிடம் போய் நல்ல
பூப் போட்ட சேலை வாங்கி வா என்று அனுப்பி விடுகிறது. “நல்ல சேலையை குடுடி”
என்று பெரியம்மா சொல்வதைக் காதில் வாங்காமல், சிறிதும் விருப்பமின்றி தன்னிடம்
இருக்கும் மிக மோசமான சேலையைத் தூக்கிக் கொடுக்கும் சுமதி அக்கா. அதுவே சாந்தி
அக்காவிற்கு சந்தோசமாகத்தான் இருக்கும். எப்போதும் கட்டும் மூன்று சேலையைத்
தவிர்த்து, இன்னொரு சேலை கட்டிக்கொண்டு போவதே திருப்தி தந்தது, அக்கா முகம்
சந்தோசமாகிவிடும். அக்காவிற்கு எந்தச் சேலையைக் கட்டினாலும் அழகாக இருப்பது
வேறு சுமதி அக்காவிற்கு எரிச்சலாக இருந்தது.

படிப்புச் செலவு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவருடைய
சந்தோசமெல்லாம் மிகப்பக்கத்தில் இருந்தது. இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில்
எல்லாம் சம்பாதிக்கப் போகிறார்கள் என்பதே அவர் வாழ்வதற்கான புது உத்வேகமாக
இருந்தது. பிள்ளைகள் படிப்பை முடிக்கும் நேரத்தில் காரியத்தை கெடுத்து
விடக்கூடாதென்று அவர் ஒரு போதும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்தார்.
ஏற்கனவே நாங்கள் வாடகைக்கு விட்டிருந்த தெற்கு தெரு வீட்டில் இருந்து கொண்டு
இந்த வீட்டை வாடகைக்கு விடலாமென்று அம்மா சொன்ன போதெல்லாம், ‘எங்கப்பா வாழ்ந்த
பூர்வீக வீட்ல வேறெவனும் காலடி எடுத்து வைக்கிறதா? என் உயிரே போனாலும் அதைச்
செய்யமாட்டேன்’ என்றவர் எங்கள் கோவில் வீட்டு முற்றத்தை வாடகைக்கு விட முடிவு
செய்தார். இரண்டு சமையலறையைக் கட்டி இரண்டு குடும்பங்களை வாடகைக்கு
அமர்த்தினார். ஒவ்வொரு வீட்டுக்கும் நானுறு, நானுறு  என்று எந்நூறு கிடைத்தது.
வீட்டின் நிதிநிலைமைக்கு அது உதவியாகத்தானிருந்தது. ஆனால் நாங்கள் எங்கள்
முற்றத்தை இழந்திருந்தோம். அதற்குப் பின் எங்கள் முற்றத்து விளையாட்டுகளும்
பேச்சுக்களும் அம்மா சொல்லும் கதைகளும் எங்களை விட்டுப் போயிருந்தது. தெற்கு
முற்றத்தினைத் தாண்டியிருக்கும் பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். செல்வி
அக்காவும் சாந்தி அக்காவும் அறையினுள் போய் ஓயாமல் படித்துக்கொண்டிருந்தார்கள்.
அண்ணன் வராண்டாவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். எல்லோரும் தனித்தனி
தீவுகளாக படிப்பில் மூழ்கிவிட்டார்கள். நான் நன்றாகப் படிக்கவில்லை உருப்படாமல்
போகப் போகிறேன் என்று அப்பா வழக்கம்போல என்னைத் திட்டிக் கொண்டிருந்தார்.

வாடகைக்கு விடப்பட்ட மேற்கு பக்க முற்றத்தில் ஒரு கணவன், மனைவி அவர்களின்
குழந்தை மூவரும் குடியிருந்தனர். ராத்திரியில் குழந்தையின் அழுகை முற்றம்
முழுதும் நிரம்பி கனத்துக் கிடந்தது. பகல் முழுக்க முற்றத்தில் எப்போதும்
ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அப்பளம் போடும் சிறுகம்பெனிக்கு கிழக்கு
முற்றத்தினை வாடகைக்கு விட்டிருந்தோம். சாயம் மங்கிய சேலையும் உடைந்து
கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்த பெண்களும், சேலை கட்டும் பருவம்
வந்தும் தாவணி உடுத்தியிருந்த பெண்களும் செல்வி அக்காவையும் சாந்தி அக்காவையும்
ஞாபகமூட்டி கலக்கமடையச் செய்தார்கள். அவர்களும் எங்களைப் போல் சிரிப்பை
மறந்தவர்களாகவோ அல்லது முற்றத்தை இழந்தவர்களாகவோ இருக்கலாம். ஏக்கங்களின்
பெருமூச்சுகளை சுமந்திருக்கும் முற்றத்தினை நான் முழுவதுமாக துறக்கத்
தொடங்கினேன்.

முற்றத்து ஓடு நனைந்து கிடக்கும் ஐப்பசி மாத மழைக்காலத்தில், என்னோடு எப்போதும்
சண்டைபோடும் இந்துமதியை அவங்க மாமாவிற்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்தார்கள்.
அவளும் நானும் ஒரே வயதில் இருந்தோம். அவள் கல்யாணம் பண்ணிப்போனதும் நான் என்னை
ஒரு இளைஞனைப் போல உணர்ந்தேன். எனக்கான காதலியை நான் கண்டுபிடிக்கவில்லை
என்றாலும் காதல் உணர்வு மனதிற்குள் துருத்திக்கொண்டு நின்றது. வறுமையை மீறி ஒரு
சந்தோசம் புதிதாய் வேர் கொண்டிருந்தது.

தண்ணீரில்லாமல் வற்றிக் கிடக்கும் காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து
தெப்பக்குளத்திற்குள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தண்ணீர் நிறைந்திருக்கும்
காலங்களில் படிக்கட்டில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டும் இருந்தபோது எங்கள்
வீட்டுக்கு ஒரு சாம்பல் பூனை வந்தது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு
குடிவந்திருந்த சாம்வேல் பாதிரியார் வீட்டு பூனைதான் அது. சாயங்கால வேலையில்
ஜெபக் கூட்டம் நடந்தது அந்த வீட்டில். ஜெபக்கூட்டம் நடக்கும் போது உருகி உருகி
மன்னிப்பு கேட்கும் வயிறு கனத்த மனிதரின் கால்களுக்கிடையே பூனை ஓடி அவரை ரத்தம்
பரிய பிராண்டி விட்டது. பாதிரியாருக்கு கோபம் பொத்துக்கொண்டுவர சாம்பல் பூனையை
கையிலிருந்த ஜெபக்கட்டையால் அடித்து விலகி ஓடச் செய்தார். பூனை பெருங்கத்தலாக
தன் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு எங்கள் வீட்டு மதில்களில் நடக்க ஆரம்பித்தது.
பாதிரியாரின் ஜெபக்கூட்டதிலிருந்து தப்பி வந்த பூனைக்கு அப்பாவின் கந்தசஷ்டி
கவசம் பாடாய்படுத்தியது. முற்றத்தின் ஆள் நடமாட்டம் பூனைக்கு மிகவும் வேதனையைத்
தந்து சுதந்திரமற்ற ஒரு இருப்பிடத்தில் அல்லாடிக்கொண்டிருந்தது.

வீட்டில் கிடந்த சிதிலமடைந்த பொருள்களால் விடு பூச்சி பல்லி பாம்பு பூரான்
எலிகளின் வசிப்பிடமாகிப் போனது. முற்றத்தில் அப்பளக் கம்பெனிக்காரர்கள் தினம்
ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்கள். நான் படுத்திருந்த பாய்க்கு கீழே பாம்பை
பார்த்தபின் வீடெல்லாம் பாம்பாகி எங்கள் காலடியில் ஊர்வதாகத் தோன்றியது.
வெளியாட்களை வீட்டுக்கு குடிவைத்து வீடு சுத்தமில்லாமல் போனது சாமிக்குப்
பிடிக்காமல் இப்படி பாம்பாக வீட்டில் நெளிகிறது என்று, அப்பா முற்றத்தில்
குடியேறிய வாடகைக்காரர்களை வெளியேற்றினார். வீட்டில் தேவையில்லாமல் கிடந்த
பொருள்களையெல்லாம் தூக்கி வீசியெறிந்தார். வீட்டைச் சுத்தம் செய்யும்போது
இரண்டு பாம்புகள் அப்பாவின் கைக்குச் சிக்காமல் கோவில் பக்கம் ஊர்ந்து
ஒளிந்துகொண்டது. எங்கள் முற்றம் திரும்ப கிடைத்தது. ஆனால் அதில் பழைய சந்தோசம்
இல்லை. அம்மா கதை சொல்வதை நிறுத்திவிட்டது. முன்புபோல் முற்றத்தில்
பாய்விரித்து வரிசையாக படுத்துறங்குவதில்லை. அக்காக்கள் கல்லூரிப் படிப்பினை
முடித்து விட்டு உள் அறையே கதியென்று ஏதாவது கவர்மெண்ட் பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கல்லூரியில் முதல் வருடம்
சேர்ந்துவிட்டாலும் இன்னும் மனதளவில் அன்பைத் தேடும் சிறுவனாகவே இருந்தேன்.
வீட்டில் எல்லோரும் என்னை ஒரு இளைஞனைப் போலவே நடத்தினார்கள். அப்பா இப்போது
எதற்காகவும் கை ஓங்குவதில்லை. மடியில் சாய்த்துக்கொள்ளும் அம்மாவின் ஸ்பரிசத்தை
இழந்தேன். எல்லோரும் என்னிலிருந்து தூரமாகிப் போனார்கள். பிடி நழுவிப்போன
அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். சமைக்கும்போதெல்லாம் அம்மாவுக்கு
உதவிசெய்து சிநேகிதத்தை வளர்த்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் பார்வையில்
படவென்றே ஓயாமல் தடுக்கி தடுக்கி விழுந்தேன். நான் ஒவ்வொரு முறையும் தடுக்கி
விழப்போகும் வேளையில் ‘டேய் செந்திலு பாத்துடா’ என்று அம்மா பதறித்
துடிக்கும்போது அம்மாவிற்கு என் மேல்தான் அதிக பாசம் என்று நினைத்துக்கொள்வேன்.
ஒரு நாளும் அம்மாவைவிட்டு பிரிந்திருக்க முடியாது என்று தோன்றியது. ‘ஏண்டா
எப்பப்பாரு அம்மாவை பயமுறுத்துற’ என்று சீனி அண்ணன் என்னைத் திட்டியது.
அண்ணனும் என்னைப் போலவே அம்மாவின் மேல் யாரும் அறியாத தனிப் பிரியத்தை
வைத்திருந்தது.

தினம் தினம் தொடரும் தனது பால்யகால கனவினை அம்மா மறந்துவிட்டது. மகள்களின்
திருமணத்தைப் பற்றி யோசிக்கும் போது பெருமலையைத் தலையில் தூக்கி வைத்திருக்கும்
சுமையுடன் மருகிப் போனது. சாந்தி அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்தார்கள்.
மாப்பிள்ளை நல்ல வேலையில் இருந்தார். ஓரளவுக்கு வசதியும் இருந்தது. அக்கா
படித்திருப்பதால் பத்து பவுன் நகை போட்டால் போதும் என்றார்கள். வீட்டில் ஒரு
பொட்டுத் தங்கமில்லை. இந்தக் கல்யாணம் நடக்குமென்று யாருக்குமே
நம்பிக்கையில்லை. சாந்தி அக்கா மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது.
கட்டிக் கொள்வதற்கு நல்ல சேலைகூட இல்லை அப்புறம் நகைக்கு எங்கே போவது. இப்போது
அம்மா பெரியப்பா வீட்டிற்குப் போனது. நகையோடு திரும்பி வந்து சாந்தி அக்கா
கழுத்தில் பத்துபவுன் பெருமானமுள்ள நகையும் மீதி நகையை செல்வி அக்கா
கழுத்திலும் போட்டது. பெரியப்பாவிற்கு கோவில் கட்டி கும்பிடலாம் என்று செல்வி
அக்காவும் நானும் பேசிக் கொண்டோம். எல்லாம் தெரிந்ததைப் போல சீனி அண்ணன்
பேசாமல் இருந்தது. என்னைவிட அண்ணனிடம்தான் அம்மா இன்னும் ரகசியப் பகிர்வினை
கொண்டிருந்தது. அம்மா வாய்திறந்து “இது நம்மளோட நகைதாண்டா” என்றது. ஒன்றும்
புரியாமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். “நம்ம சொத்து கோர்ட்டு கேஸுன்னு
போயிட்டிருந்தப்ப பெரியப்பா ஜவுளிக்கடையிலும் பெருத்த நஷ்டமா போச்சு. தன்னோட
நகைகளை குடுத்தும் பணம் பத்தலன்னு அக்கா எங்கிட்ட வந்து நகையை கொடு தொழில்
விருத்தியானதும் திருப்பி தந்திர்றேன்னு கேட்டுச்சு. நம்ம வீட்லயும் இருக்கிற
பொருளெல்லாம் அழிஞ்சுகிட்டே போகுது அதாவது மிஞ்சட்டுமேன்னுதான் அதை கணக்குல
வைக்காம விட்டுட்டேன். பெரியப்பா நகையை திருப்பி குடுக்கிறேனு சொன்னப்பல்லாம்
வேணான்னுட்டேன். அதுக்கு வட்டி மாதிரிதான் தினம் தினம் சாப்பாட்டுக்கு அரிசி
கொடுத்தாங்க” என்றதும் எனக்கு கண்ணீர் மிதந்து கொண்டு அம்மாவின் மேல் கோபமாக
வந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு பிச்சைக்காரனைப் போல அவங்க வீட்டு வாசற்படியில்
வெட்கம் பிய்த்து தின்னக் கூனிக் குறுகி நின்று அரிசியை வாங்கி
வந்திருக்கிறேன். அதுவும் பெரியப்பா பையனுடன் கூட விளையாடும்போது நான்
ஜெயித்தாலும் அவனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால்
‘நாளைக்கு எங்க வீட்டுக்கு அரிசி வாங்க வாடி எங்கப்பாகிட்ட சொல்லிக் குடுக்க
விடாம செய்யிறேன்’ என்பான். அம்மா என்னைப் பழிவாங்கிவிட்டதாக மொட்டை மாடியில்
தனிமையில் அழுதுகிடந்தேன். ‘டேய் இதைப் போய் பெரிய விசயமா நெனைச்சுக்கிட்டு’
என்று எல்லோரும் என்னை சமாதானம் செய்தார்கள். அம்மாவைத் தவிர யாரும் என்  வலி
அறியாதவர்களாக இருந்தார்கள். அம்மா மட்டும் என் கைகளை பிடித்துக் கெஞ்சியது.

சாந்தி அக்காவிற்கு கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே செல்வி
அக்காவிற்கு கல்யாணம் முடிந்தது. அப்பா ஒத்திக்கு கிடந்த தெற்குத் தெரு வீட்டை
விற்று கல்யாணச் செலவுக்கு பயன்படுத்திக்கொண்டார். அக்கா பற்றிய என் கல்யாணக்
கனவில் வந்தது போல அப்பா நடந்துகொள்ளவில்லை. எல்லா வேலையும் உற்சாகமாக அவரே
செய்து முடித்தார். அக்காக்களை வீட்டில் இருக்காமல் வேலைக்கு போகச் சொன்னார்.
சீனி அண்ணனுக்கு சிவகங்கையில் புரொஃபஸர் வேலை கிடைத்தது. நானும் அம்மாவும்
அப்பாவும் வீட்டில் தனித்திருந்தோம். எங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தை
குறைந்து போயிருந்தது. மசக்கையில் மயங்கிக் கொண்டிருந்த சாம்பல் பூனை
மதிலிலிருந்து இறங்கி மெச்சில் தானிய அறையில் ஒதுங்கிக் கொண்டது. ஐந்து பூனைக்
குட்டிகளை பிரசவித்தது சாம்பல் பூனை. அம்மா தானிய அறையில் ஒரு வட்டியில் பாலை
ஊற்றி வைத்தது. சாம்பல் பூனை குட்டிப்பூனையை வாயில் கவ்வி ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் அழகைப் பார்த்து அம்மா மகிழ்ச்சி கொண்டது.
சாம்பல் பூனை பாதிரியார் வீட்டை முழுவதுமாக மறந்து அதன் குட்டிகளுடன் எங்கள்
முற்றத்து வெளியில் நடந்து திரிந்தது. பூனையின் பொருட்டு நானும் அம்மாவும்
பழையபடி சிநேகிதமானோம். சாம்பல் பூனையையும் அதன் குட்டிகளையும் பற்றி வாய்
ஓயாது அம்மா பேசிக் கொண்டிருந்தது. இரண்டு பூனைகளை நாய் கவ்விக்கொண்டு போனதும்
சாம்பல் பூனை வெறிகொண்டு, என்ன செய்தும் வீட்டில் பெருகிக்கிடந்த எலிகளை
துப்புரவாக வீட்டிலிருந்து அடித்துத் துரத்தியது.

கறுப்பி, சிவப்பி, பொன்னி, என்று ஒவ்வொரு பூனைக்கும் ஒரு பெயர் வைத்து நானும்
அம்மாவும் கூப்பிட்டோம். சாம்பல் பூனையை மட்டும் பெரிய பூனை என்றோம். “டேய்
இந்த கறுப்பிக்கு எவ்வளவு திமிரு பாருடா நான் வச்ச சோறை சாப்பிடாம அப்படியே
வச்சிருக்கு, கறுப்பியும் சிவப்பியும் சண்டை போட்டுச்சுடா...” தினமும் நான்
கல்லூரியிலிருந்து திரும்பும்போது இப்படி பூனைகளைப் பற்றிய கதைகளை மட்டுமே
சொல்லிக்கொண்டிருந்தது அம்மா. நானும் பதிலுக்கு “இந்த கறுப்பி அப்படியா
செஞ்சுச்சு? நான் கவனிச்சிக்கிறேன்” என்பேன். பொன்னி யாருக்கும் தெரியாமல்
காணாமல் போன அன்று அம்மா சாப்பிடாமல் தூங்கியது. பிள்ளைப் பாசம் போல பூனை
பாசமும் அம்மாவிற்கு ஒட்டிக் கொண்டது. சேட்டை செய்யும் சிறுவனை கண்ணெதிரிலேயே
வைத்திருப்பது போல கறுப்பி பின்னாடியும் சிவப்பி பின்னாடியும் அம்மா
அலைந்துகொண்டிருந்தது. எங்கம்மாவின் குழந்தைகளைப் போல கறுப்பியும், சிவப்பியும்
அம்மா மடியில் படுத்துறங்கியது. கறுப்பி பாலை மட்டும் விரும்பி சாப்பிடும்.
மற்ற பொருள்களை மோந்து கூட பார்க்காது. சிவப்பி எது கொடுத்தாலும் சாப்பிட்டுக்
கொள்ளும். சாந்தி அக்கா பிரசவத்துக்கு அம்மா போயிருந்த நேரத்தில் கறுப்பியும்
ஒரு நாள் காணாமல் போனாள். அக்கா வீட்டில் இருந்த அம்மாவிடம் இதை நான்
தெரியப்படுத்தவில்லை. வீட்டுக்குத் திரும்பிய அம்மா நான் கறுப்பிக்கு பால்
ஊற்றாததால்தான் அது வீட்டைவிட்டு ஓடிப்போனது என்று என்மேல்
குறைப்பட்டுக்கொண்டது. தான் ஆசைப்படும் அனைத்தும் இப்படி பாதியிலேயே முறிந்து
போகும் துரதிருஷ்டத்தை நினைத்துப் பெருங் கவலை கொண்டது அம்மா.

அண்ணன் தனியாகச் சமைக்க சாப்பிடக் கஷ்டப்படுகிறது என்று அம்மா அண்ணனோடு
சிவகங்கையில் ஒரு வீடெடுத்து தங்கியது. சிவப்பியை மட்டும் தன்னோடு எடுத்துப்
போகலாம் என்ற ஆசை இருந்தாலும் பெரிய பூனை தனியாகக் கஷ்டப்படுமென்று அதை
விட்டுப் போனது. அப்பா எனக்குத் துணையாக வீட்டில் இருந்தார். நானும் அப்பாவும்
சமைத்துச் சாப்பிட்டோம். சிவப்பி ஒரு குழந்தையின் சிணுங்கலைப் போல கத்திக்
கொண்டு வீடெங்கு அம்மாவை தேடியலைந்து துரும்பாகிப் போனது. கடைசி செமஸ்டர்
முடிந்ததும் சிவகங்கைக்கு உடனே வரச்சொல்லி அம்மாவும் அண்ணனும் கடிதம்
எழுதினார்கள். ‘சிவப்பி எப்படியிருக்கு’ என்று அம்மா விசாரித்து எழுதிய
கடிதத்திற்கு, தெருவில் அடிபட்டு சிவப்பி செத்துப்போனது என்று சொல்லாமல்
சிவப்பியும் எங்கேயோ போய்க் காணாமல் போனது என்றேன். அதற்குப் பின் வந்த
கடிதங்களில் மீதமிருந்த பெரிய பூனையைப் பற்றி ஒரு வார்த்தையைக் கூட அம்மா
குறிப்பிடவில்லை.

எலிகளை வேட்டையாடி ஓய்ந்த பெரிய பூனை தானிய சேந்தியில் செத்து கிடந்தது
பற்றியும் அதை புதைத்த அன்று என் மேல் வீசிய பூனை வாசனைப் பற்றியும் அம்மாவிடம்
சொல்லவில்லை. முற்றத்து வீட்டை அடைத்து போட்டுவிட்டு நானும் அப்பாவும்
சிவகங்கைக்கு போன பின்பும் அம்மா ‘பெரிய பூனை எப்படியிருக்கு’ என்று
கேட்கவில்லை. அதற்கு மேல் பூனையின் தொடர்பாக எந்த கெட்ட செய்தியையும் அம்மா
அறிய விரும்பாமல் இருந்தது. அப்பாதான் போகிற போக்கில் ‘நம்ம பெரிய பூனையும்
செத்து போச்சில்ல’ என்றார். அம்மா எதுவுமே காதில் விழாதது மாதிரி நடந்து
கொண்டது. நானும், அம்மாவும், செல்வி அக்காவும், சாந்தி அக்காவும், சீனி
அண்ணனும் சேர்ந்து படுத்துறங்கிய முற்றம் இன்று பூனைகளும் இல்லாமல் யாருமற்று
வெறுமையாகி தனித்துக் கிடக்கிறது என்பதை அம்மாவுக்கு எப்படிச் சொல்வது.