இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சங்க இலக்கியங்களில் இசைத்தமிழ் - முனைவர் வெ.வரதராசன்

கலைகளுள் சிறந்தது இசைக்கலை. இசையில் இன்பக்கூறு இயல்பாகவே அமைந்துள்ளது. இசை உயிரினங்களைத் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இசைக்கலை உணர்வின் உறைவிடம்; இறைமையின் மறைவிடம்.


சங்ககாலத்து மக்களின் அன்றாட வாழ்வில்இசைபெரிதும் இடம்பெற்றிருந்தது. இசையை அனுபவிக்க மொழி தடையில்லை, பகுத்தறிவும் தேவையில்லை, பொருள் விளக்கமும் கட்டாயமன்று. பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார்,


ஆறலைக் கள்வர் படைவிட அருளின

மாறுதலைப் பெயர்க்கும் மருவின் பாலை (21-22)


எனப் பாலை யாழின் சிறப்பை, “வழிப்பறி செய்து பொருளை அபகரிக்கும் கள்வர்களின் கல்மனதையும் கரையச்செய்யும் தன்மை யாழிசைக்கு உண்டு. அதனால் அவர்தம் கையிலுள்ள கொலைக் கருவிகளை கைவிட்டு நல்லவர்களாக மாறிவிடுவர்என்று கூறியுள்ளார்.


ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்றில், “தலைவியின் பேச்சு யாழிசையின் இன்பம் போன்றதுஎன்பதை, “நரம் பார்ந்தன்ன தீங்கிளவி” (185) எனப் பாராட்டியுள்ளான் தலைவன். கலித்தொகைப் பாடல் ஒன்றில்,

இசை நினைவுகள் - அசோகமித்திரன்


சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் 'கிளாக் டவர்' என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும் எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும்.

மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும் கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது. அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும்.

ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள். கீழே என்ன இருந்தது என்று தெரியாது. மாடியில் சுமார் இருநூறு பேர் உட்காரக்கூடிய பெரிய அறை. அந்த அறையின் முக்கியச் சங்கடம் நான்கு பெரிய தூண்கள். அந்த அறையில் நிகழ்த்தப்படும் நாடகத்துக்கோ இசைக் கச்சேரிக்கோ சற்றுத் தாமதமாக வருபவர்களுக்குத் தூண்களுக்கு பின்னால் இருக்கும் நாற்காலிகள்தான் கிடைக்கும். நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் இப்பக்கமும் அப்பக்கமுமாக எட்டிப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படித்தான் நானும் என் அப்பாவும் தண்டபாணி தேசிகர் கச்சேரியைக் கேட்டோம். ஜகந்நாத பக்த சபா என்ற அமைப்பு, அக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண்டுக்கு இரண்டு ரூபாயோ ஐந்தோ சந்தா. அது ஏழைகள் சபா என்று அறியப்பட்டது. பெரிய மனிதர்கள் சபா கிருஷ்ண கான சபா என்று ஹைதராபாத்தில் இருந்தது. அவர்கள் வருடாவருடம் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் பெரிய கச்சேரிகள் நிகழ்த்துவார்கள். அங்கு எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கச்சேரி செய்ய வருவார்கள். அவருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகருக்குச் சில நூறு ரூபாய்தான் கொடுத்திருப்பார்கள். அதற்கு ஈடுசெய்வதுபோல்

மஹபூப் காலேஜ் பிரின்சிபால் கோடீசுவரன் அழகாக அறிமுகம் செய்து பாடகர்களைக் கௌரவிப்பார். நான் அவர் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று எப்படி எப்படியோ நெளிவேன். ஆனால் அவர் பார்த்துவிடுவார். திடீர் திடீரென்று பொது இடங்களில் என்னைப் பாடச் சொல்லி என்னை நடுநடுங்க வைப்பது அவருக்குப் பிடித்தமான செயல்.

அந்த 1944ஆம் ஆண்டு தண்டபாணி தேசிகர் புகழேணியின் உச்சியில் இருந்தார். சிகந்தராபாத்தில்கூட அவருடைய 'நந்தனார்' திரைப்படம் ஒரு மாதம் ஓடிற்று. திரைப்படத்தில் மூன்று சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுக்க 'ஆனந்த விகடன்' ஒரு போட்டி அறிவித்திருந்தது. முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய்.

தண்டபாணி தேசிகர் உரத்தே பாடமாட்டார். செம்பை, மகாராஜபுரம்போல உடலையும் தலையையும் ஆட்ட மாட்டார். மிகத் தெளிவான தண்ணீர் ஓடைபோல அவரிடமிருந்து இசை பொழியும். அவரும் ராக ஆலாபனம், சுவரம் எல்லாம் பாடுவார். ஆனால் அலட்டலே கிடையாது.

அன்று ஜம்ஷட் ஹாலில் அவருடைய கச்சேரியைக் கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள். பல சம்பிரதாயக் கீர்த்தனைகளை எல்லாம் பாடிவிட்டு அவர் 'ஐயே மெத்தக் கடினம்' பாடினார். அந்தப் பாட்டைக் கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

கச்சேரி முடியப்போகும் தருணத்தில் கோடீசுவரன் பேச வந்தார். அவர் பரம பக்தர். நல்ல ரசிகர். சுருக்கமாக, ஆனால் மனநிறைவு ஏற்படும் வகையில் பேசித் தேசிகருக்கும் இதர இசைக் கலைஞர்களுக்கும் மாலை அணிவித்தார்.

இன்றைக்கு அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோடீசுவரன் தேசிகருக்குப் பின்பாட்டுப் பாடிய இளைஞரை விசேஷமாகப் பாராட்டினார். அடுத்தமுறை அந்த இளைஞரே தனிக் கச்சேரி செய்பவராக இருப்பார் என்றார். அந்த இளைஞர் மதுரை சோமு.

நான் இதெல்லாம் மறந்துவிட்டேன். தேசிகர் கச்சேரி நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு சார்லஸ் ரயர்ஸன் என்ற அமெரிக்க ஆய்வாளர், தான் உடன் அழைத்துவந்த அமெரிக்க மாணவர்களுக்கு, மதுரை சோமு கச்சேரிக்கு ஏற்பாடுசெய்திருந்தார். அன்று எவ்வளவோ பாடகர்கள் சோமுவைவிடப் புகழ்பெற்று இருந்தார்கள். ஆனால் சார்லஸ் ரயர்ஸன் அந்த ஆண்டு என்றல்ல, ஒவ்வொரு ஆண்டும் அவர் அழைத்துவரும் ஆய்வாளர் குழுவுக்கு மதுரை சோமு கச்சேரிதான் ஏற்பாடுசெய்தார். நானும் போயிருந்தேன். ஒரு விஷயத்தை அமெரிக்கர்கள் கவனித்தார்களா என்று தெரியாது. சோமு பாடும்போது அவர் உடல் அனைத்தும் அப்பாட்டில் ஈடுபட்டிருக்கும். "அவருடைய கச்சேரியைக் கேட்பது ஓர் உணர்ச்சிகரமான அனுபவம்" என்று சார்லஸ் ரயர்ஸன் கூறுவார். சோமு பாடும்போது என் நண்பர் உடலெல்லாம் சிவந்துவிடும். அப்படி ஒரு உறவு அவருக்குச் சோமுவின் இசையோடு இருந்தது.

சார்லஸ் ரயர்ஸன் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டும். அவர் அங்கி அணியாத மதப் போதகர். (இதற்குப் பட்டப் படிப்பு, உயர் பட்டப் படிப்பு எல்லாம் உண்டு.) இந்தியாவில் அவருக்கு நங்கூரமாக இருந்தது மதுரை அமெரிக்கன் கல்லூரி. அவருடைய ஆய்வுத் தலைப்பு 'தமிழகத்தில் எதிர்ப் போக்குகள்'. அவருடைய முதல் வழிகாட்டி திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி. சார்லஸ§க்கு அவரோடு ஆங்கிலத்தில் விவாதம் புரியக் கிடைத்தவர்கள் நானும் என் போன்ற ஐந்தாறு பேரும். நட்பு தோன்றவும் இருப்பார், நம்பவும்மாட்டார். இப்போது அவருக்கும் வயது எழுபதுக்கு மேலாகிவிட்டது. அவருடைய வீட்டைவிட்டு நகர முடியாதபடி பருமனாகிவிட்டார். இப்போதும் ஆண்டுக்கு இரு முறையாவது கடிதம் கையெழுத்தில் எழுதுவார். அவருக்கு இன்னும் இரு நண்பர்கள் - தியடோர் பாஸ்கரன், எஸ்.வி. ராஜதுரை - உள்ளார்கள்.

உணர்ச்சிகரமான இசை என்பதை ஓரளவு நான் சோமுவின் முதிர்ந்த காலக் கச்சேரிகளைக் கேட்டுத்தான் ஒருமாதிரி புரிந்துகொண்டேன். தென்னிந்திய முன்னணிக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாகப் பாடுவார்கள். ஆனால் அநேகமாக எல்லாருமே சபையையும் பக்கவாத்தியக்காரர்களையும் கவனத்தில் இருத்தியே பாடுவார்கள். இவ்வளவு ஏன் புன்சிரிப்பு செய்ய வேண்டும் என்றுகூட நான் நினைத்திருக்கிறேன். அது கர்நாடக இசையின் இயல்போ என்று தோன்றுகிறது.

இப்போது சோமு பாட்டைக் கேட்க முடியாது. ஆனால் பாடும்போது தன் முழு உடலுடன் பாடுபவர்கள் இருக்கிறார்களோ? வேப்பத்தூர் கிட்டு என்று எனக்கொரு நண்பர் இருந்தார். ஒருமுறை இரு நடிகைகள் பற்றிப் பேச்சு வந்தது. இந்தியில் நடித்த தென்னிந்திய நடிகை பற்றி அவர் சொன்னார். "பாருங்கள், அவர் தன் வருங்கால மாமனாரைப் பார்க்க வருகிறார். முகம் மட்டுமல்ல, உடலெல்லாம் அந்த உணர்வைக் காட்டும், பாருங்கள்," என்றார்.

உடலெல்லாம் உருகப் பாடுபவர்கள் பஜனைத் துறையில் இருக்கிறார்கள். "பாண்டுரங்கா, பாண்டுரங்கா" என்று அவர்கள் உடலெல்லாம் அந்த விட்டலனைக் கோரி உருகும்.

வட இந்திய இசை உணர்ச்சிபூர்வமானது என்பார்கள். அது ஓரளவு உண்மை. எல்லாக் கலைஞர்களும் தம்மை மறந்து தலை முதல் பாதம் வரை இசையில் கரைந்து பாடுவதில்லை. நான் பார்த்து படேகுலாம் அலிகான் அப்படித்தான் மெழுகாக உருகுவார். சாகித்யமென எடுத்துக்கொண்டால் அது ராதை, கிருஷ்ணன், யமுனா தீரம் என்று இருக்கும். ஆனால் அவர் ராதையாக முறையிடும்போது எங்கோ ஒரு முலையில் அவருக்குக் கண்ணன் தோன்றிக்கொண்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.

பிஸ்மில்லாகான் அந்தக் கீச்சுக் கீக்சு ஷெனாய் வாத்தியத்தில், இதைச் சாத்தியமாக்கிவிடுவார். காசியில் வசித்த அவருக்குச் சிவன், பார்வதி தோன்றிக் கொண்டிருப்பார்களோ?

மியூசிக் அகாடமி கட்டடம் கட்டிக் கச்சேரிகள் நடக்கத் தொடங்கிய பின், ஒவ்வொரு ஆண்டும் ரவி ஷங்கர் வருவார். எனக்குக் கிருஷ்ணானந்த் என்றொரு வட இந்திய இசைப் பாடகர் நண்பர். நான் அவர் மூலம் ரவிஷங்கர் கக்சேரிக்கு வரிசையாக நான்கைந்து ஆண்டுகள் சென்றிருக்கிறேன். இரவு பத்து மணிக்குக் கச்சேரி தொடங்கும். முதலில் ஒரு சுவரத்தைத் தாண்டி அடுத்ததற்கு வரப் பத்து நிமிடங்களாவது ஆகும். ஒரு ராகத்தின் முழு சுவரங்களையும் கொண்டு அவர் விஸ்தரிக்க ஒரு மணி நேரம் ஆகும். அதன் பிறகு உங்கள் மூளையே ஸ்தம்பித்துவிடும் வேகத்தில் இசை பெருகி ஓடும். 'கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்' என்று சொல்லலாம். ஆனால் திடீரென்று ரவி ஷங்கர் நம்மைக் கீழே தள்ளிவிடுவார். சிதார் வாசிப்பதை நிறுத்தி, "நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்" என்று அறிவிப்பார். டிசம்பர் முடிந்து ஜனவரி இரவு 12 மணிக்குப் பிறந்திருக்கும். கொட்டகையில் அநேகமாக எல்லாரும் கரகோஷம் செய்வார்கள். எனக்கு ஏமாற்றமாக இருக்கும். அடுத்த ஆண்டு ரவிஷங்கர் கச்சேரிக்குப் போகக் கூடாது என்றுகூட நினைத்திருப்பேன். ஆனால் அடுத்த ஆண்டு நான் போகத் தவறவில்லை. எனக்கு அவருடைய சினிமா நட்சத்திரப் போக்கு பிடிக்காமலிருக்கலாம். ஆனால் மகத்தான கலை அவரிடமிருந்தது. எனக்குக் குறை என்று தோன்றியதை நான் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

புளூட்மாலிக்கு எனக்குத் தெரிந்து இரு சிஷ்யர்கள். ஒருவர் உலகமறிந்த ரமணி. இன்னொருவர் அகில இந்திய வானொலியில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஸ்ரீனிவாசன். இருவரும் எனக்கு நண்பர்கள் என்றாலும் ஸ்ரீனிவாசன் அநேகமாக என்னைத் தினமும் பார்க்க வந்துவிடுவார். என்னுடைய ஆங்கில நாடகங்களை அவர்தான் முதலில் படிப்பார். அப்போதுதான் டேப் ரிக்கார்டர்கள் வர ஆரம்பித்த காலம். ஸ்ரீனிவாசனுக்கு அவரே புல்லாங்குழல் வாசித்து அதற்கு அவரே மிருதங்கமும் வாசிக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்க ஆசை. அப்போது ஆர்.ஏ. பத்மநாபன் (ஆம். 'சித்திர பாரதி' பத்மநாபன்தான்) அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு டேப் ரிக்கார்டர் உண்டு. நானும் ஸ்ரீனிவாசனுமாக அவரிடம் சென்று, எங்கள் பரிசோதனை பற்றிச் சொன்னோம். அதாவது முதலில் ஸ்ரீனிவாசன் குழல் வாசித்துவிடுவார். பிறகு அதே காஸட்டைத் திரும்பப் போட்டு மிருதங்கம் வாசிப்பது. உண்மையில் இந்த உத்தி திரைப்பட ஒலிப்பதிவில் சாதாரணமாகப் பயன்படுத்துவது. ஆனால் டேப் ரிக்கார்டரில் குழலொலி அழிக்கப்பட்டு, வெறும் மிருதங்க வாசிப்புத்தான் கேட்டது. இரண்டு டேப் ரிக்கார்டுகள் இருந்தால் அது சாத்தியம். ஆர். ஏ. பத்மநாபன் அலுவலகத்தில் ஒரு கருவிதான் இருந்தது என்று கூறிவிட்டார். ஸ்ரீனிவாசன் மூலம்தான் பி.எஸ். ஹைஸ்கூல் என்பது பென்னத்தூர் சுப்பிரமணிய அய்யர் பள்ளி என்று எனக்குத் தெரியவந்தது. ஸ்ரீனிவாசன், சுப்பிரமணிய அய்யருடைய பேரன். அவர்கள் வீடு டி.டி.கே. சாலையில் மியூசிக் அகாடமிக்கு எதிர்ச்சாரியில் இருந்தது.

நடிகர் ரஞ்சனுடைய சகோதரர் வைத்தியநாதனும் புல்லாங்குழல் வாசிப்பார். அவர் மேலைய சங்கீதத்திலும் குறிப்பாக, பியானோ வாசிப்பதிலும் மிகுந்த தேர்ச்சிபெற்றவர். அவர் புல்லாங்குழலுக்கு இணையாக இன்னொரு இசைக் கருவி கிடையாது என்பார். "எவ்வளவு எளிமையானது! ஓரடி மூங்கில், அவ்வளவுதான். மேலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு சிரமம் இல்லாது எடுத்துச் செல்லலாம். பியானோவையோ வீணையையோ அப்படி எடுத்துச்செல்ல முடியுமா? ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு சுருதியில் ஒலியெழுப்பிச் சங்கடப்படுத்தும்" என்பார்.

இந்திய இசையில் பக்திதான் பிரதானம். இறையுணர்வுதான் சிகரங்களை எட்டவைத்தது. எனக்குத் தெரிந்து அரசியல் சார்புடைய இசை நிபுணர்களையும் கேட்டிருக்கிறேன். அவர்களும் தியாகய்யர் கிருதி வாசிக்கும்போது அவர்கள் தோற்றமே மாறிவிடும்.

மேலைய சங்கீதத்தில் சில பிரிவுகளே இறையுணர்வோடு தொடர்பு கொண்டவை. பதினெட்டு-பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடூரமாகவும் ஈவிரக்க மற்றும் ஆப்பிரிக்கர்களை விலங்குகள்போலக் கடத்திக் கூண்டிலடைத்து, அமெரிக்காவில் பெரிய எஸ்டேட்டுகளில் அடிமைகளாக உழைக்கவைத்தார்கள். அவர்களைக் கிறித்துவர்களாக மதமாற்றி அவர்களுக்குத் தனிச் சர்ச்சும் ஏற்படுத்திவிட்டார்கள். அந்த அடிமைகள் ஒரு தனிப் பிரிவாக ஒரு இசையை உருவாக்கினார்கள். அது 'புளூஸ்' என்று பெயரிடப்பட்டது. அந்த ஆப்பிரிக்கர்கள் மனதார ஏங்கிக் கதறுவார்கள். அந்தச் சோகம் வயிற்றைக் கலக்கும். இன்றும் 'புளூஸ்' இருக்கிறது. ஆனால் அந்தச் சோகம் இருக்குமா என்று உறுதி கூற முடியாது.

நன்றி - காலச்சுவடு 2008

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 36 : தமிழ் இசை!

 ஜஸ்டிஸ் எஸ்.மகராஜன்

தமிழ் இசை இயக்கம் ஒரு தலைசிறந்த குறிக்கோளோடு தொடங்கப்பெற்றது. அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஒவ்வொருவர் மீதும் குறிக்கோள் பெருமையின் நிழல் வீசுகின்றது. அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முயன்ற பல பெரியார்களில் சுப்பிரமணிய பாரதியாரும் ஒருவர். அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் பாரதியார். அவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தமிழ் இசைக்கு ஓர் ஆபத்து ஏற்படப் போகின்றது என்பதனை அப்பொழுதே சொன்னார். என்ன சொன்னார்?

"தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீண்டும் மீண்டும் சொல்லுதல் நியாயம் இல்லை (பாரதியார் வார்த்தை; வேதவாக்கு. அயல் மொழிப் பாடல்களைத் தமிழ்ச் சபைகளில் மீண்டும் மீண்டும் பாடுதல் நியாயம் இல்லை என்பது அவர் கருத்து) அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்து போகும்படி நேரிடும்.'' (நம் தமிழ்ச் சாதி இழந்து போகும்படி நேரிடும்) என்று சொன்னார். நம் கண் முன்னால், நமது ஜாதி, சங்கீத ஞானத்தை இப்போது இழந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
 தமிழ் நாட்டிலுள்ள இளம் தலைமுறையினர் மெல்லிசை என்ற வல்லிசை வெள்ளத்தில் பயங்கரச் சுழிகளிலே அகப்பட்டு, அமைதியைக் குலைக்கும் உணர்ச்சிச் சூறாவளியிலே சுழன்று, கர்நாடக சங்கீதம் என்ற தமிழிசையின் ஞானத்தையும் இழந்து வருகின்றார்கள். நமது இசைவாணர்கள், தமிழர்களுக்குப் புரியாத மொழிகளிலேயே பாடிப் பாடி, மரபு வழிவந்த நமது இசையின் மீதே தமிழர் சமுதாயத்திற்கு - தமிழ்ச் சாதிக்கு வெறுப்பு ஊட்டி விட்டார்கள். இன்று நடந்து கொண்டிருப்பதை ஞான திருஷ்டியால் அன்றே கண்டுவிட்டார் பாரதியார். தாம் கண்டதைப் பொருத்தில் (பொட்டில்) அடித்த மாதிரி அல்லவா அவர் சொல்லிவிட்டார்.

ஒவ்வொரு தமிழனும் அவர் கூறியதை மனத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்ஆனால், மெல்லிசைக் கச்சேரிகளுக்கும் நாட்டியக் கச்சேரிகளுக்கும் நாடகங்களுக்குமே பெரும் கூட்டம் வருகிறது என்று சென்னையிலுள்ள சங்கீத சபா நிர்வாகிகள் பலரும் ஒருமனதாகச் சொல்கிறார்கள். அப்படியானால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிவழியாகத் தமிழர்கள் அனுபவித்து வந்த இசையைத் தமிழர்களே இப்போது புறக்கணிக்கிறார்கள் என்றுதானே பொருள்? புறக்கணிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றிலெல்லாம் முக்கியமான காரணம், தமிழர்களுக்குப் புரியாத மொழியிலே உள்ள இசைப் பாடல்களைப் பாகவதர்கள் மாறி மாறிப் பாடி அவர்களுக்குக் கசப்பை ஊட்டி விட்டார்கள்.
 இசை ஞானத்தை மாத்திரம் நாம் இழந்துகொண்டிருக்கவில்லை. இதயக் கல்லைப் பிசைந்து கனியாக்கி, அருள் வெள்ளத்தில் அமிழ்த்தும் இசையின் பயனாகிய பக்தியையும் நாம் இழந்து வருகிறோம். இதை உணர்ந்த சில இசை மேதைகள், ""சங்கீதத்துக்குப் பாஷை அவசியமில்லையே. அதற்குத் தனித்து இயங்கும் ஆற்றல் இருக்கிறதே'' என்று சொல்லி, தந்திரமாக நம்மை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

 தந்திரிகளுக்கெல்லாம் மேலான தந்திரி, ராஜாஜி; திசை திருப்பிகளுடைய வாதத்துக்கு ராஜாஜி அருமையாகப் பதில் சொன்னார். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இந்த இயக்கத்தைத் தொடங்கியபோது டி.கே.சி., ராஜா சர்ரிடம் ""நீங்கள் ராஜாஜியிடம் போகவேண்டும். அவர் பலம் கொடுப்பார்'' என்று சொன்னார். நம் ராஜா.சர்., அவ்வாறே சென்று வந்தார். அதற்கு ஒரு மணி நேரம் கழித்து நம் மீ..சோமசுந்தரம், ராஜாஜியிடம் சென்றார். ""அடடா ஒரு மணி நேரத்திற்கு முன் நீ வரவில்லையே! நான் தமிழ் இசையைப் பற்றி என்ன சொன்னேன் தெரியுமா? அதனை இப்போது சொல்கிறேன்; எழுதிக்கொள்'' என்று சொன்னார். இது நடந்தது 24-5-1943, என் நண்பர் மீ..சோமசுந்தரம், ராஜாஜி கூறிய வாசகங்களை அப்படியே எழுதி வைத்திருக்கிறார்கள் அதனைக் கூறுகின்றேன்.

"தமிழ் இசை சம்பந்தமாக, சங்கீதத்துக்கு மொழி வேண்டுமா, வேண்டாமா என்கிற வாதம் பிரமாதமாக இந்த இசை இயக்கத்தில் அடிபடுகிறது. மொழி பற்றி வித்தியாசம் ஏற்பட்டபடியால், மொழியே வேண்டாம் என்ற வாதம் போட்டால், நம் கட்சி பலமாகப் போய்விடுகிறது என்ற உத்தேசத்தின் மேல் சங்கீதத்துக்கு மொழியே வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் தென்கலை வேண்டுமா, வடகலை வேண்டுமா என்று கேட்டால், இந்து மதமே வேண்டாம் என்பது போலவும், சிவன் கோயில் வேண்டுமா, விஷ்ணு கோயில் வேண்டுமா என்று கேட்டால், கோயிலே வேண்டாம் என்பது போலவும் இருக்கிறது. தியாகையர் தமிழில் பாடுவதற்குப் பதில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தெலுங்கில் பாடினார். அது ஒன்றே போதும், தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவு''.

"அவர் (தியாகையர்) தமிழ் நாட்டில் வளர்ந்து, தமிழ் தேசத்தில் புகழ் பெற்றவர். ஆயினும் அவர் ஏன் தெலுங்கில் பாடினார்? தெலுங்கு நல்லது என்று அதில் அவர் பாடவில்லை. தெலுங்கு அவருக்குத் தாய் பாஷை ஆகியதால், அவர் அதில் பாடினார். நாமும் நம் தாய் பாஷையில் பாடினால்தான் நம் ஆத்மாவுக்குத் திருப்தி கிடைக்கும், கடவுளுக்கும் காது கேட்கும்''
 ராஜாஜியின் இந்த வாசகத்தைப் படித்த சிலர், ""இது என்ன, ராஜாஜி ஒரு கட்சிக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவதுபோல் இருக்கிறதே? தெலுங்கில் பாடினால் கடவுளுக்குக் காது கேட்காதா, தமிழில் பாடினால்தான் காது கேட்குமா?'' என்று கேட்கலாம். இப்படிக் கேட்பவர்கள், ராஜாஜியைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

 எஸ்கிமோ மொழியிலே பேசினாலும், சர்வஞ்ஞனான இறைவனுக்குக் காது கேட்கும். மொழிகளையெல்லாம் படைத்த முழுமுதல் அல்லவா அந்த இறைவன்! அவனுக்கா காது கேட்காது! ஆனால், ஒன்றை மறந்துவிடக்கூடாது. எஸ்கிமோ பாஷை தெரியாத நாம், எஸ்கிமோ பாஷையில் எழுதிய சாகித்யத்தை எப்படி அழகாகப் பாடினாலும், நமக்கு உருக்கம் ஏற்படாது; எஸ்கிமோ தெரியாத தமிழ் மக்களும் உருக மாட்டார்கள். உருகினால் அல்லவா இறைவனோடு ஒட்டலாம்! இரண்டும் ஒன்றுமாகக் கலக்கலாம்! அப்படி ஒன்றி உறவாட நம்மால் முடியவில்லையென்றால், நாம் பாடிய எஸ்கிமோ பாட்டு, விருதா பாட்டு (வீண்பாட்டு) தானே. நம் விண்ணப்பத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளும்படியாக நாம் சொல்லவில்லை என்றுதானே பொருள்! அப்படியானால் இறைவனுக்குக் காது கேட்கும் படியாக நாம் பாடவில்லை. இதைத்தான் ராஜாஜி சொன்னார்.

ஆகவே, பிற மொழிகளிலே பாடுவதால், பாரதியார் சொல்வதுபோல், நம்முடைய இசை ஞானம் மறைந்துபோகும்; அதன் விளைவாக, ராஜாஜி சொல்வதுபோல, நமக்கே உரிய பக்தியும் மறைந்து போகும்; இதற்கெல்லாம் மேலாக, பாகவதர்களுடைய பிழைப்பும் கெட்டுப்போகும். மெல்லிசையை வல்லிசை கபளீகரம் பண்ணிவிடும் என்பதைப் பாகவதர்கள் இப்போதாவது உணர்ந்தால், அவர்களுக்கும் நல்லது; நம்முடைய இசை ஞானத்துக்கும் நல்லது; நமது பக்திக்கும் நல்லது.

ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் சொன்னதுபோல, ""கடலை மாவுக்கும் சர்க்கரைக்கும் நமக்கு வேற்றுமை தெரியத்தான் செய்யும். கடலை மாவையே தின்றுகொண்டு இருக்கவும் முடியாது. சர்க்கரையையே தின்றுகொண்டு இருக்கவும் முடியாது; இரண்டையும் சேர்த்து "லட்டு' செய்து கொடுத்தால், நன்றாகவே சாப்பிடலாம். அதுபோலத்தான் இசையும் மொழியும் சேர்ந்தால் நன்றாக அனுபவிக்கலாம். ஆகவே, தமிழிலுள்ள ஏராளமான, ஆனால் துருப்பிடித்துப்போன சாகித்தியங்களை இசைவாணர்கள் துலக்கி, கச்சேரிகளில் பாடித் தமிழ் மக்களை மகிழ்விக்க வேண்டும்.

 (1978-இல் சென்னை தமிழ் இசைச் சங்கத்தில் பேசிய வரவேற்புரை)

நன்றி - தமிழ்மணி

பாடினியின் வடிவழகு! - வ.கோபால்ராசு

கரிகாற்பெருவளத்தானின் சிறப்புகளை 248 அடிகளில் விவரிக்கும் நூல் பொருநராற்றுப்படை. ஆற்றுப்படை என்பது, ஒரு வள்ளலிடம் பரிசில் பெற்றுத்திரும்பும் ஒரு புலவன், எதிர்ப்பட்ட வேறொரு புலவனை, தான் பரிசில் பெற்ற தலைவனின் இயல்பு, கொடை முதலியவற்றைக் கூறி அவனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துவது ஆகும்.

பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை - எச்.முஜீப் ரஹ்மான்

பின்நவீன இசை(postmodern music) என்பது இசை ஸ்டையிலையும்,இசை நிலையையும் கொண்டதாகிறது.இசை ஸ்டையிலைப் பொறுத்தவரை பின்நவீன கலையின் குணாம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. பலவடிவங்களையும், வகையினங்களையும் அது தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சுய நோக்குக் கொண்டதுடன் உயர்கலையின் எல்லைகளை முரண்நகையாக கொண்டு இது இயங்குகிறது.டானியல் ஆல்பிரைட்(2004) என்பவர் பின்நவீனஇசை ஸ்டையில் பற்றிக்கூறும் போது பிரிகொலாஜ்,பாலிஸ்டையிலிசம்,ராண்டம்னஸ் முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.இசை நிலை எனும் போது இசையின் தன்மை பின்நவீனத்தை கொண்டதாகிறது.மேலும் பின்நவீன இசை ஒரு குறிப்பிட்ட ஸ்டையிலையோ அல்லது குணாம்சத்தையோ வலியுறுத்தவில்லை என்பதும் முக்கியமாகிறது.பின்நவீன இசை நவீன இசை சொல்லும் வெளிப்படுத்தலுக்கு வேறுபாடுடையதாக அடையாளதின் பண்டப்பொருளாகவும்,குறியீடாகவும் விளங்குகிறது.உதாரணமாக பின்நவீன சமூகத்தில் உபபண்பாட்டின் அடையாளமாக மொழியைப்போல இசை செயலாற்றுகிறது.

நவீன காலத்தில் இசையை பதிவு செய்வது என்பது புகைப்படத்தைப்பதிவு செய்வது போன்றதே.1930ல் ரிக்கார்டிங் சமயத்தில் எடிட் செய்யும் முறை வந்தபோது கலை நுணுக்கத்தின் மற்றோர் சாத்தியமாக மாறியது.1950ல் பாப் இசை மைக்கில் நிகழ்த்தும் போது எல்லா திசைகளிலிருந்தும் கேட்பது பிரதானமானது.எட்கர் வர்கீஸ் எலக்றாணிக் இசையாக மாற்றியதும்,பியாரி ஸ்சாப்பார் கம்போஸ் செய்த குறிப்பிட்ட பகுதியை ரிக்கார்டு செய்த விசயமும்,பில் ஸ்பெக்டார் ராக் இசையை நிகழ்த்தியதும்,கிளீன் குட் செவ்வியலிசையை ரிக்கார்டு செய்ததும் முக்கிய மைல்கற்களாக இருந்தது.ஸ்டுடியோ ரிக்கார்டிங்கில் பல டிராக் ரிக்கார்டிங் பொதுவானதாக வெகுஜன பரப்பில் நுழைந்தது. ராக்கும் கிப்ஹாப்கும் போதிய அளவில் பல நுணுக்கங்களோடு மிக்ஸிங் செய்யப்பட்டது.பின்நவீன காலத்தில் பாபிசை அடுத்த கட்டத்துக்கு தாவும் நிலை ஏற்பட்டது.இதில் உயர்ந்த அல்லது தாழ்ந்த என்ற படித்தர பண்பாடு கிடையாது எனலாம்.பின்நவீன இசை, இசை பற்றிய அடிப்படை புரிதலை மாற்றி மறித்தது.இசை என்பது இசைக்கு மாத்திரமே என்ற நிலை முக்கியமாக கருதப்படுகிறது.இசை வேலைப்பாடுகள் மற்ற இசைகளை மேற்கோளாக கொண்டமையவேண்டும்.மேற்கோள் என்பது ஒரு உத்தியல்ல மாறாக இசையின் சாரம் ஆகிறது.

நவீனத்துவத்தின் பகுதியாக அடிப்படையான கலையம்சத்துடன் நல்ல இசையின் உத்திகள் இடைவெளிகளாக,ரிதம்களாக,துண்டாடப்பட்ட உறுப்புகளாக இருப்பதிலிருந்து பின்நவீனத்துவம் அடிப்படையில் கலையாக,ஊடக ஓடையாக,தாயாரிக்கப்பட்ட பொருளாக, வகைமாதிரியான பொருட்களாகவே பாவிக்கிறது.இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பின்நவீனநிலை என்பது இசையில் நுகர்வு சமூகத்தின் பொருளாக,தயாரிக்கப்பட்ட பொருளாக மாத்திரமாக இருக்கிறது.நவீனத்துவம் உலகை அடிப்படையான வடிவமான உண்மையாக இசையை கருதியது.ஆனால் பின்நவீன உத்திகளும் பயன்பாட்டுகளும் ரிக்கார்டு செய்யும் திறமையிலும்,மிக்ஸ் செய்யும் திறமையிலும் ஒழிந்திருக்கிறது.அதாவது சப்தங்களை கண்டுபிடிப்பதும்,மற்ற ரிக்கார்டிங்குகளை பயன்படுத்துவதிலும்,பேசப்பட்ட ஒலிகளை,ஓசைகளை திறம்பட இணைப்பது முக்கியமானதாகும்.எட்கர் வர்கீஸ் இசையில் எல்க்ட்றாணிக் உபகரணங்களை பரிசோதனை செய்தல் ஒருங்கிணைவையும்,டேப் லூப்புகளை பயன்படுத்துவதிலிருந்து துவங்கியது. ஜாண்கேஜ் டேப்புகளையும்,ரிக்கார்டு செய்யப்பட்டவற்றை விதமான முறைகளில் மறு உற்பத்தி செய்தும் கற்பனை நிலதோற்றங்களையும் யூரோபேரா முதலிய ஸீரீஸ்களை உலகிற்க்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆபி ரோடு,பிங்க் பிளாயிட்ஸ் மெடில்,பெர்ரி போன்றோர்கள் இசையில் டப் ஸ்டைலை பயன்படுத்தினர்.டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு ஹிப்ஹாப் பிரபலமானது.கம்போசர்கள் பலவிதமான சப்தங்களை எபக்ட் மூலம் வித்தியாசபடுத்தியும்,குறிபிட்ட கருவிகளுக்கு முக்கியத்துவம் அளித்தும் வந்தனர்.ரிச்சர்டு ஸ்ற்றாஸ்,சார்லஸ் ஜவஸ் போன்றோர்கள் சிம்பொனிகளையும்,சப்தங்களையும் இணைத்து புதுவகை இசைவகையை உருவாக்கினர்.

ரோச்பர்க் போன்றோர்கள் செவ்வியல் இசை பீஸ்களையும் அடிக்கடி பயன்படுத்தி முரண்நகை விளக்கங்களை கொடுத்து வித்தியாசப்படுத்தினர்.

Olivier Messiaen னின் 'Oiseaux Exotiques ' ம் 'Catalogue d 'Oiseaux ' ம்

கொலாஜ் அடிப்படையில் பறவைபாடல்களாக புதுமாதிரியான இசையை

வெளியிட்டார்.tour-de-force பின்நவீன மியூசிக் கொலாஜ் ஆக இருந்து Luciano Berio ன் 'Sinfonia, 'மூன்றாவது இயக்கமாக இருந்து Gustav Mahler ன் 'Resurrection Symphony ' ஆகவும் Samuel Beckett ன் 'The Unnameable, ' பிரதியிலிருந்து உருவாக்கபட்ட இசையாகவும் இருக்கிறது.பின் நவீன கிளசிகல் மியூசிக்கை பொறுத்தவரை கம்போசருக்கு வேலையதிகம் இல்லாமல் வரிசையடிப்படையில் மியூசிக்கை பயன்படுத்துவது மட்டுமே ஆகும்.காலஞ்சென்ற நவீனத்துவத்தில் தர்க்க முடிவுக்கும்,மொத்த வரிசைக்கும் நிறைய வாய்ப்பு இருந்தது.நவீன கம்போசர்களான Arnold Schoenberg, Pierre Boulez, Karlheinz Stockhausen முதலியோர்களும் Boulez, Stockhousen, John Cage போன்றோர்களும் அலியேடரி மியூசிக்கை தான் பயன்படுத்தினர்.கேஜ் தனது ஜ ஸிங் மியூசிக்கில் கம்போஸ் முறையை நிராகரித்து உருவாக்கியதால் புகழ் பெற்றது.அதேசமயம் அவரது 4.33 பியானோவையும்,சுற்றுசூழல் சப்தத்தையும் வைத்து மிகச்சிறந்த முறையில் உருவக்கப்பட்டதாகும்.ஏற்கனவே கம்ப்போசருக்கும்,மக்களுக்கும் உள்ள இடைவெளியும் இசையமைப்பளனுக்கும்,சுழ்நிலைக்குமான எல்லைகள் உடைப்பட்டிருந்தது.இதை தான் பின்நவீன டிரண்ட் என்றழைக்கிறார்கள்.மேற்கத்திய மியூசிக் அல்லாத மியூசிக் முறைகளில் இது ஏற்கனவே(பரோக்கிற்கு முந்திய காலம்) பாப் மியூசிக்காக இருந்தது.பின்நவீன மியூசிக்கை பொறுத்தவரையில் எல்லா மரபுகளும் பின்பற்றப்பட்டு உயர்ந்தது அல்லது மோசமானது என்றவரையறைகள் மீறப்பட்டது. Gyrgy Ligeti

பிக்மி பாட்ல்களின் ரிதமிக்க கூறுகளை பின்னாளில் உணர்வு பூர்வமாக பயன்படுத்தினார்.Olivier Messiaen இந்திய இசையை கற்றுக்கொண்டு இந்திய தாலக்களை அதிகம் பயன்படுத்தினார்.Tan Dun தனது இசைக்கோர்வைகளில் சைனீஸ் இசையை பயன்படுத்தினார்.Steve Reich மேற்காப்பிரிக்க டிரம்மையும்,ஹீப்ரு இசையையும்,இந்தோனேஷிய இசையையும் கலந்த ராக் பாடல்களை அதிகம் உருவாக்கினார். 'art music ' க்கிற்கும் 'popular music 'க்கிற்கும் உள்ள சுவரை உடைத்து ரீமிக்ஸ்ஸாக Glenn Branca , Rhys Chatham னும் பயன்படுத்தினர்.

பின்நவீன மியூசிக் கலைஞர்களை பொறுத்தவரை(Postmodern musical artists)

Classical/Jazz:

Patricia Barber, Luciano Berio,John Cage,Ornette Coleman,John Adams,Philip Glass, Steve Reich,George Rochberg ,Alfred Schnittke,Ezequiel Viண்ao,LaMonte Young ,John Zorn.

Rock/Pop:

The Beatles ,Can,Kraftwerk ,The Velvet Underground ,Pink Floyd,Frank Zappa,

Wire (band) ,The Butthole Surfers ,Beck, Suicide ,Throbbing Gristle.

Hip Hop/Rap/DJ:

King Tubby, Kurtis Blow ,Grandmaster Flash ,Grand Wizard Theodore,Run DMC,

Pete DJ Jones ,Kool DJ Herc,Public Enemy ,Invisibl Skratch Piklz ,Q-Bert , Mixmaster Mike ,DJ Shadow,Cut Chemist ,DJ Spooky .போன்றோர்கள் முக்கியமானவர்களாவார்கள்.பின் நவீன இசைக்கோர்வையாளர்களை பொறுத்தவரை

கம்போஸில் எசொடிக்கை பயன்படுத்துவார்கள்.மொசாத்தின் “ராண்டோ ஆல டர்கா”

வில் துருக்கிய இசையை தூய கிளசிக்கலில் இணைத்திருப்பார்.பின் நவீன கம்போஸர்கள் பொதுவாக எசோட் மியூசிக்கை புரிந்து அதன் விதிகளை தேவைக்கு தக்கவாறு சிறிது திரிபுடன் பயன்படுத்துவதால் வெளிநாட்டு இசைகள் அதன் தனித்தன்மையான கூறுகளை இழக்காது ஒருவிதமான பிம்பத்தை இசையில் உருவாக்கி தருகிறது.

1950ன் பாதியிலும்,1960களிலும் தொடர்ந்து ஸ்டையிலில்,பின்நவீனநிலைகளை

வடிவத்திலும்,இனைப்பிலுமாக பாப் இசையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.பின்நவீன கூறுகளுடன் பாப் இசை,ஜாஸ்,ரிதம்,புளூஸ்,ஆரம்ப ராக்,ரோல் போன்ற இசைவகைகள்

தொழில்நுட்பநுணுக்கங்கள் இன்றியே ரிக்கார்டிங்கில் செய்யப்பட்டது. முப்பரிணாம இசை முயற்சியும் முயற்சித்து பார்க்க பட்டது.1960ன் மத்தியில் வால் ஆப் சவுண்டு ஸ்டையில் வந்தபோது ரேடியோக்களில் பிரபலமானது.முழுதும் ஸ்டுடியோவில் டிராக் பிரித்து இசை அமைப்பதும்,குரலிசையை அடித்தளத்துக்கு கொண்டுபோய் மற்ற சப்தங்களை மேலுக்கு கொண்டுவந்து இசையனுபவத்தை மாற்றிமறித்தனர்.ஸ்டுடியோவில் மிக்ஸிங் நுட்பங்கள்,எல்க்ற்றாணிக்கை பயன்படுத்தி

சிங்கிள் வால் என்ற முறையில் ராக்கில் பயன்படுத்தப்பட்டது.பாப் இசையில் குறிப்பாக உபபிரிவு வகையில் எலக்ற்றிக் கித்தார் பயன்படுத்தப்பட்டு ரிதம் முறை பரவலாக மாற்றப்பட்டது.பின்னர் இது ராக்கிலும் பயன்படுத்தப்பட்டது.அதிகமான இசை உபகரணங்களின் சங்கமத்தில் பரவசம் அடைய முயற்சிமேற்கொள்ளப்பட்டது.

அதே சமயம் நாட்டிய இசையில் டிஸ்க் ஜாக்கீஸ் பயன்படுத்தப்பட்டு பின்நவீன நிலையை இசை எட்டியது.நகர்புற இசை பார்டிகள் தங்களது தனிதன்மை வாய்ந்த முயற்சிகள் மூலம் பின்நவீன இசை வளர்ந்தது என்று சொல்லமுடியும்.அவர்கள்

டர்ண்டேபிள் மூலம் ரிக்கார்டிங்கையும்,வேகத்தையும்,பல சவுண்ட் எபக்டையும் உருவாக்கியதன் வாயிலாக மிக்ஸிங் போர்டுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.அதேசமயம் மைக்ரோ போண் மூலம் பேசி டான்ஸ் டிராக்கில் தங்களது சொந்த குரலை பின்னணியாக இணைத்தன் வாயிலாக டிஜிங்,எம்சிங் வகை ஹிப்ஹாப் இசை பிரபலமானது.1990களில் டர்ண்டேளிசம் இயக்கமாக வளர்ந்ததால் டிஜிங் அம்சம் கொண்ட ஹிப்ஹாப் அதிகம் பயன்பாடடைந்தது.டர்ண்டேபிளிஸ்ட் டிஜேயில் டிஜே சாடோ,க்யூபர்ட்,டிஜே ஸ்பூகி,இன்விசிபிள் ச்கேறேச் பிக்ள்ஸ் போன்றவை அதிகம் செல்வாக்கு செலுத்தியது.கிளாசிகல் மியூசிக்கும்,மினிமலிசமும் பயன்படுத்தி முதல் பின்நவீன ஸ்டையில் உருவாக்கப்பட்டது.மினிமசிசம் என்பது ஒருவகை எதிர்வினை முறையாகும்.அதாவது நவீன கிளசிக்கல் மியூசிக் கம்போசகளின் உதாரணமாக

Arnold Schoenberg, Pierre Boulez, John Cage போன்ற அவந்த் கார்டு வல்லுநர்களின் இசைக்கூறுகளை பின்பற்றி எதிர்வினையாற்றுவது என்பதாகும்.பின்னாளில் மினிமலிசம் பின்நவீன ஸ்டையிலாக மாறியது.ஆரம்ப கால மினிமலிஸ்ட் கம்போசர்களான LaMonte Young, Terry Riley போன்றவர்கள் சிரியலிசத்தையும்,இந்தியவகைப்பட்ட இசையை திருப்பி பயன்படுத்திக்கொண்டதும் முக்கியமாக நடந்தேறியது.

நவீன இசைக்கு சற்று மாற்றமாக வந்த மினிமலிச படைப்புகள் பாப்புலர் இசையையும்,ஹைபுரோ இசையையும் மறு ஒருங்கிணைப்பு செய்தது.1970 களில் அவந்த் கார்டு ராக் பயன்படுத்தப்பட்டபோது(Suicide,Throbbing Gristle)

பாப் இசைகலைஞர்கள் எல்க்ற்றணிக் உபகரணங்கள் வாயிலாக கிழக்கத்திய ரிதம்களையும்,ஒசையை திருப்பி பயன்படுத்துவதுமான மினிமலிச முறைகளை பரிசோதனை செய்தனர்.

மினிமலிச மியூசிக் வகையிலுள்ள The Velvet Underground, Tangerine Dream, Kraftwerk போன்றவை டெக்னோ மியூசிக்கையும்,ஹவுஸ் மியூசிக்கையும் பாப் இசையிலும்,ராக் இசையிலும் 1990 கள் வரை பயன்படுத்தின.தற்சமயம் பின்நவீன ஜாஸ் இசையே பிரபலமாக இருக்கிறது.இதற்கு பிரதானமாக இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் காரணமாயின.Charlie Parker,Arnold Schoenberg போன்றோர்கள் பயன்படுத்திய சீரியல் வொர்க்குகள் வடிவங்களை கைவிட்டு பிரபலமடைந்தன.

John Coltrane, Albert Ayler and Sun Ra போன்றோர்கள் அவந்த் கார்டு மரபையும்,

நியூ ஜெனரேசன் மியூசிக்கையும் இணைத்தனர்.இதை Free jazz என்றழைத்தனர்.

Captain Beefheart, The Stooges, Lou Reed ,The Lounge Lizards போன்றவைகள் மிகவும் பிரபலமடைந்தால் பங்க் மியூசிக் பிரபலமாயின.இது ராக்கும்,ஜாஸும் இணைந்த

வடிவில் உருவானதாகும்.

பின்நவீன இசை நிலையை பொறுத்தவரை நவீன காலத்துக்கு பிறகான இசையான போதிலும் இசையில் இசை எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற நிலையே பிரதான விஷயமாயிருக்கிறது.1970 வதிலிருந்து பின்நவீன இசை செல்வாக்கு செலுத்தி வருகிறது.இன்று இவ்விசை சார்ந்து பல கோட்பாடுகள் உருவாக்க பட்டுள்ளது.எல்லாவற்றையும் கலைத்து போடுதல் என்ற முரையில் துவங்கிய இவ்விசை டிவி,ரேடியோ,னெட்,ஆல்பம், ஸீரிஸ்,செல்போன் வரை அதிகம் பாதிப்பதாக இருக்கிறது.அடிப்படையில் இது இசை பற்றிய இசையாகவே இருந்து வந்துள்ளதால்

இதன் தன்மைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது.தற்போது மெட்டல் இசை சற்று பிரபலமாகிக்கொண்டு இருக்கிறது.தமிழ் சூழலில் பின்நவீன இசை தனியாக உருவாகவில்லை என்ற போதிலும் அதன் கூறுகள் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.விரைவில் தமிழுக்கும் பின்நவீன இசை வரும் என்பதில் அய்யமில்லை.

----