கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள “காட்டுமாவது உரித்து” எனத் தொடங்கும் தேவாரப் பதிகமாகும். இப்பதிகத்தில், சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று தமது கோரிக்கையினைப் பத்து பாடல்கள் மூலமாகச் சம்பந்தர் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பது மட்டுமின்றி, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதும் - அல்லது கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் - சம்பந்தரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வாறு சிலர் வாதிடுவதற்கு ஆதாரமாக இருப்பது “பெண்ணகத்து எழிற் சாக்கியப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே” என்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் வரியாகும். ‘பெண்ணகத்து எழில்’ என்ற அடைமொழி இடம் பெற்றிருப்பதால் ‘கற்பழிக்க’ என்று சம்பந்தர் குறிப்பிட்டிருப்பது “சாக்கிய (பெளத்த) மதத்தையும், சமண மதத்தையும் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்க” என்ற பொருளிலேயே ஆகும் என்பது இவ்வாறு வாதிடுவோரின் கட்சியாகும்.