ரமேஷ் - பிரேம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரமேஷ் - பிரேம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ் - பிரேம்


ஜூலை-14, 1789 அன்று கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள். 


தேய்பிறைக்கால நிலாக்களைப் போல உனது தீர்மானங்கள் எப்பொழுதும்  தாமதமாகத்தோன்றுகின்றன. எந்தத் தீர்மானமும் இதுவரை உன்னால் நடைமுறைப்படுத்தப்பட்டதே இல்லை. உனது ஒவ்வொரு எத்தனிப்பும் சற்றுக் கூடுதலாய்க் கரையேறி மணல் தொட்ட அலைகளைப் போல் குமிழ் எழுப்பி மறைந்து போகின்றன. உனது ஒவ்வொரு நெடும் பயணமும் கப்பல்வரைச் சென்று கரை மீண்டுவிடும் பணிப்படகுகளோடு முடிந்து விடுகின்றன. உனது தொடக்கத்திற்கான நீண்ட ஆயத்தங்கள் ஒவ்வொன்றும், இல்லாத ஒரு இசைக்கருவிக்கு எழுதிய குறிப்புகள் போல தனித்துக் கிடக்கின்றன. ஒரு சுடர் தனது எரிதலையே வடிவமாக்கிக் கொள்ளுவது போலவும், ஒரு துளி தான் மறைகிற கணங்களையே தனது இருப்பின் தருணங்களாக்கிக் கொள்ளுவது போலவும் நீ உனது இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாயோ என்று தோன்றுகிறது. ழீல், உனது வயலினையும் இசைக்குறிப்புகளையும் எரித்துவிட்டு எங்காவது தொலைந்து போய்விடுவதே நல்லது. இனியும் உனது அடுத்த பெரும் சாகசத்திற்கான திட்டத்துடன் என்னை வந்து சந்திப்பதை நிறுத்திவிடு. 


மதாம் பெர்னாதேத் , உங்களுடைய சிறிய வீட்டிற்குள் ஒரு வேற்றுக் கிரக இயந்திரம் போலவோ, கைவிடப்பட்ட விண்கலம் போலவோ தோன்றும் உங்களது பியானோ நிசப்தமாக உள்ளபோது பயங்கரங்கள் நிரம்பியதாகவும், ஏதோ ஒரு சிறு ஒலியையாவது எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுது, தெளிவான ஒரு மீன் தொட்டி போலவும் எனது சிறு வயதிலிருந்து எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் ஏதும் சாகசங்கள் செய்யும் பொருட்டோ  சாதனைகள் செய்யும் பொருட்டோ இசையை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இசைக் கருவிகளின் நிசப்தமும் மௌனமும் உருவாக்கும் மகா பயங்கரத்திலிருந்து தப்பிக்கவே நான் இசைக்குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என்றாலும், எனது அடுத்த சாகசம் என்று ஒன்று உண்டென்றால் அது புவியீர்ப்பு விசையை ஒரு இடத்தில் இல்லாமல் ஆக்கவோ அல்லது, புவியீர்ப்பு விசை ஒரு உடலைத் தாக்காமல் இருக்கவோ ஆன உத்தியைக் கண்டுபிடிப்பதாகத்தான் இருக்கும். ஆம், நான் தூக்குதண்டனையிலிருந்தும் கில்லெட்டினிலிருந்தும் தப்பிக்க வேண்டும். தூக்குதண்டனை எனது உடல் மீது புவியீர்ப்புவிசை செயல்படுவதால் நிகழ்த்தப்படுவது. கில்லெட்டின் புவியீர்ப்பால் இயங்கும் ஒரு பொருள் என் உடல்மீது செயல்படுவதால் நிகழ்த்தப்படுவது. இரண்டையும் நான் மீறவேண்டும். இதற்கு இசை ஏதாவதுவொரு வழியில் பயன்படுமா என்று நீங்கள்தான் கூறவேண்டும். 


எனது செல்லமான மாணவனே! நீ தண்டனை பற்றி சிந்திக்க வேண்டிய தேவை என்ன இப்போது? நீ உனது விநோத சிம்ஃபொனிகளையும், மிக அபூர்வமான ஒபேராக்களையும் நிகழ்த்திக் காட்டவோ வெளியிடவோ இன்னும் காலம் கடந்துவிடவில்லை. நீ ஒரு இளைஞன். முப்பதே வயதான இளைஞன். மிக பால்யத்திலேயே நீ ஒரு அதிசயக் கலைஞனாக மாறிவிட்டதனால் எனக்கும்கூட நீ நீண்டகாலமாக செய்ய வேண்டிய சாதனையை செய்து முடிக்கவில்லை என்றும், மிகப் பிடிவாதமாக உனது அபூர்வ இசைகளை மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றும் தோன்றிக்கொண்டிருக்கிறது.

எனது முதுமை என் பார்வையையும், விரல்களையும் பாதிக்கத் தொடங்கிவிட்ட பிறகு உனது இசைக் குறிப்புகளை, நீ தரப்போகும் மாபெரும் கன்ஸர்ட்டில் ஒருத்தியாக இருந்து வாசிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற அச்சம் என்னை அடிக்கடி சூழ்ந்து கொள்கிறது. நான் உன்னைப்போல் மந்திர இசை வல்லுநன் இல்லை. வெறும் இசையாசிரியை. பியானோவையும் வயலினையும் கருவிகளாக எப்படிக் கையாள்வது என்பதையும், எழுதப்பட்ட ஒரு ஸ்வரத்தை இக்கருவிகளில் எப்படி எழுப்புவது என்பதையும் மட்டுமே அறிந்த ஆசிரியை. நீ உனது மூன்றாவது வயதில் முதன்முறை வயலினை வாசித்து நான் பார்த்த பொழுதுதான் வயலின் ஒரு கருவி அல்ல, இசை ஒரு உத்தியல்ல என்று நான் தெரிந்து கொண்டேன். முதன்முறையாக இசை எனது மூச்சை அடைத்தது. உடல் சிலிர்ப்புற்று வெடிக்கும் மௌனசப்தத்தில் ஓராயிரம் நரம்புகள் அதிர்ந்தன. அதற்குப் பிறகு ஒவ்வொரு நிசப்தமும் மௌனமும் வேறுவேறு அர்த்தங்களால் நிறைந்தன.

அந்த அர்த்தங்களூடாகவே உன்னை இந்த இருபத்தேழு ஆண்டுகளாக நான் கவனித்து வருகிறேன்.
உனது ஒவ்வொரு அசைவும் எனக்குப் பழக்கமாகி இருக்கிறது. உனது உடலின், செய்கையின்,
நடத்தையின் ஒவ்வொரு மாற்றமும் என் நினைவுகளின் பள்ளத்தாக்குகளில் நீர்ப்பொதிந்த மேகங்களெனத் தேங்கிக் கிடக்கின்றன. அதன் ஈர அசைவுகளே என்னைத் தாலாட்டி தூங்க வைக்கின்றன. நீ ஒரு பனி மேகக் குழைவு; உனக்குள் ஏன் குருதிச் சூடு? நீ தண்டனை பற்றி; அதுவும் மரண தண்டனைப் பற்றி பயம் கொள்ள வேண்டிய காரணம் என்ன? உன் மீதான எனது கோபங்களையும் கடும் சொற்களையும் நீ தவறாகப் புரிந்து கொள்ளமாட்டாய் என்று எனக்குத் தெரியும். நேரில் வந்து என்னிடம் பேசு ழீல்! உதறிவிட்டு எழும்போதும் தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டொரு குட்டிகள் தாயின் காம்புகளில். 


மதாம்... உடலையும் சைகைகளையும் போலில்லை கனவுகளும் ஏக்கங்களும் உங்களுக்குத் தெரியாது. எனது உடலுக்குள் ஏற்பட்ட நெரிசல் வேறு சில உருவங்கள் என்னை ஒரு பதுங்கு குழியாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும், எனது அங்கங்கள் ஒவ்வொன்றும் வேறுவேறு உயிரிகளின் ரகசியக் கட்டளைகளை ஏற்று இயங்கிக் கொண்டிருப்பதும், எனது நினைவும் கனவும் இனம் புரியாத குரல்களின் சூறாவளியால் கலைந்து கொண்டிருப்பதும் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கே பல தருணங்களில் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. எனது பேச்சு அறியப்படாத மொழிகளின் உருவகங்களாலும், எனது மௌனம் இல்லாத நிலப்பரப்புகளின் காட்சிகளாலும் நிரம்பியபொழுது நான் எனது இசைக்கருவிகளுடன் தனித்தே இருந்தேன். நான் தேடி அலைந்த வீடு அகழ்ந்தெடுக்கப்பட்ட நகரம் ஒன்றின் வீதியில் அடையாளம் காணப்படுவதுபோல் திகைப்புகளுக்கு நடுவே நான் உலவிக் கொண்டிருந்தேன். நான் மறுமுறை நினைவுகூர முடியாத வாக்கியங்களால் சிந்தித்துக் கொண்டிருந்தேன். என்றாலும் நான் மீறமுடியாத ஒரு குற்றவுணர்வால் குமைந்து கொண்டிருந்தேன். அது என்னை ஓயாமல் பின்னப்படுத்திக் கொண்டே இருந்தது. நான் அந்த வாதை நிறைந்த நினைவிலிருந்து தப்பி, எங்காவது பதுங்கிக் கொண்ட பொழுதெல்லாம், ஒரு உருவம் தவறாமல் வந்து என்னைத் தொட்டெழுப்பி அந்த வாசகங்களை நினைவூட்டி விட்டுச் சென்றது. நான் இரண்டாவது கொலைக்குத் தயாராகிவிட்டதாகத் தோன்றியது. கொலை, உங்களுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு சொல். என்றாலும், உங்களுடைய செல்லமான மாணவனும் இசைவரலாற்றில் பெரும் சாகசங்களைச் செய்ய வேண்டியவனுமான ழீல் ஒரு கொலைகாரன். அவனது மாபெரும் இசைச் சேர்க்கைக்கான குறிப்புகளெல்லாம் இரண்டு கொலைகளுக்கான ரகசிய திட்டங்களின் சங்கேதவரிகள்தான். ஒன்று பச்சையான கொலை. மற்றது, அந்தக் கொலைக்குச் சாட்சியாக அமைந்ததை அழித்த கொலை. குற்றவுணர்விலிருந்து மீள பல வழிகள் உண்டு என்றாலும், உத்தரவாதமான ஒரு வழி அக்குற்றத்தை மீண்டும் செய்வதுதான் என்று ஒரு துறவி என்னிடம் எப்பொழுதோ கூறிச் சென்றார். நான் குற்றவுணர்வுடன் இல்லை; மாறாக, தண்டனையிலிருந்து தப்பிக்கும் தந்திரத்தைக் கண்டு பிடிக்கும் பரிசோதனையில். 


ழீல்! நீ கொலை செய்ததாகக் கூறிய இரண்டு நபர்களும் தற்போது உயிருடன் இருக்கிறார்கள். நீ அவர்களை ஏதும் செய்யமுடியாது. உன்னால் பார்க்கக்கூட முடியாத இடங்களில் அவர்கள் இருக்கிறார்கள். என் பிரியமான குழந்தையே! இப்படிப் பேசுவதை எல்லாம் விட்டுவிடு. நீ கண்டது வெறும் கனவு. உனது இசைக்குறிப்புகளையும் உனது வயலினையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடு. இனி நீ தனியாக எங்கும் இருக்கவேண்டியதில்லை. உன்னை அடையாளம் கண்டுகொள்ள இந்தச் சிறிய நகரத்தில் யாரும் இல்லை; என்னைத் தவிர. பிரெஞ்சுப் பெயர்களும், வடஇந்தியக் கடைகளும், ஆங்கிலப்பள்ளிகளும் நிறைந்த இந்த பொந்திஷேரியில் உனது வயலினுக்குள் பதுங்கிக் கிடக்கும் மாய விநோதங்கள் பற்றி பேச நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். நீ இப்படி மறைந்து விளையாடுவதையும் செய்யாத குற்றங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பதையும் விட்டுவிட்டு என்னை வந்து பார். வேறு யாரேனும் இவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் அதன்மூலம் வேறு பிரச்னைகள் ஏற்படவுமான சூழ்நிலைகளை நீ உருவாக்கிவிட வேண்டாம். உனது பியானோ பயிற்சி கடந்த மூன்று மாதங்களாகத் தடைபட்டிருக்கிறது. மாற்று உடை ஏதும் எடுத்துக்கொள்ளாமலேயே சென்ற நீ தற்போது எந்த உடுப்பைப் போட்டுக் கொண்டிருக்கிறாய்? இனி உனது இசை நிகழ்ச்சியை எப்பொழுது நிகழ்த்தப் போகிறாய் என்றோ, உனது இசையாக்கங்களை உலகிற்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றோ கேட்டு உன்னைத் தொல்லைப்படுத்தப் போவதில்லை. உனக்குப் பிடித்தமான பிரம்பு ஊஞ்சல் ஒன்று வாங்கி வாதுமை மரத்தில் தொங்கவிட்டிருக்கிறேன். உனக்குப் பிடித்தமான நாவல்கள் சிலவும் பாரிசிலிருந்து வரவழைத்திருக்கிறேன். மொசார்டின் ஓவியத்திற்கு அழகான சட்டமாக மாற்றி வைத்திருக்கிறேன். இசை வகுப்புக்கு வரும் குழந்தைகள் உன்னைத் தினம் கேட்கும் பொழுதெல்லாம் நீ திபேத்திற்குச் சென்றிருப்பதாகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இரண்டு நாளைக்கு ஒரு முறைதான் என்னால் சாப்பிட முடிகிறது. உனது மனச்சிதைவிற்கும் மூளைவலிக்கும் வைத்தியம் பார்த்துக் கொள்வதை என்னிடமிருந்தும் நீ மறைக்கத் தேவையில்லை. அந்த வைத்தியம் எனக்கும் தேவைப்படுவதாக இருக்கலாம். நீ எத்தனை கொலைதான் செய்தால் என்ன? என் பிரியமான நட்சத்திர மீனே! என் உள்ளங்கையில் வந்து உறங்கு செல்லமே! என்னை இந்த வயதிற்குப்பின் அலையவிடாதே. அழுதால் மயக்கம் வருகிறது. தனிமையில் மயக்கம் வந்தால் தண்ணீர் தர யார் இருக்கிறார்கள் ழீல்? 


அப்பா, சவப்பெட்டி செய்யும் நேரம் தவிர வயலின் வாசித்துக் கொண்டிருப்பார். மிகப் பழைய வயலின். மெர்ஸ்யே பெனுவா தன் வீட்டை விற்றுவிட்டு பிரான்ஸுக்குச் சென்றபொழுது தந்துவிட்டுச் சென்ற தட்டுமுட்டுச் சாமான்களில் வயலினும் ஒன்று. சாராயவாடை வயலினிலிருந்து வருவதற்குக் காரணம் அப்பா அதை தன் முகத்தோடு ஒட்டி வைத்தே எப்பொழுதும் வாசிப்பதுதான் என்று அம்மா சொல்லும். அம்மா, காயரில் முக்கிய பாடகி. தனியே பாடும் பொழுதெல்லாம் சில பிரெஞ்சுப் பாடல்கள் மட்டும் பாடும். அம்மாவுக்கு அதற்கு அர்த்தம் தெரியாது என்று அப்பா சொல்லுவார். அப்பாவுக்கு வயலின் வாசிக்கத் தெரியாது என்றும், தன் மனம் போன போக்கில் வாசித்து ஊரை ஏமாற்றுவதாகவும் அம்மா சொல்லும். ஆனால், ஊரில் எல்லோரும் அப்பாவைப் பெரிய வயலின்காரன் என்றே கூறுவார்கள். பங்கில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் வயலின் உண்டு. அம்மாவின் பாடல்களும் உண்டு. அம்மா பாடும் பொழுது எப்போதும் மூடிய கண்களும் முனைமட்டும் தெரியும் கண்ணீரும் உண்டு. அம்மா வேலை செய்யும் போதும், கோவிலைப் பெருக்கும்போதும், நடக்கும் போதும் கவனமாகக் கேட்டால் பாடல் ஒலிக்கும். உதடுகள் அசையாது. கன்னத்திலிருந்து காது வழியாக சில சமயம் ஒரு ரேகை அசையும்.

அப்பா என்னை வயலின் வாசிக்கச் சொன்னபோது எனக்கு இரண்டு வயது. கொஞ்சமாக ஞாபகம் இருக்கிறது. சப்தம் என்னை முதலில் பயமுறுத்தியது காதுக்கு வெகு அருகே. விரல்களைப் பிடித்து, வில்லை நகர்த்தி அப்பா, பின்னாலிருந்து என் கை வழியே வாசித்தபோது மெல்லிய இசை ஒன்று புகைபோல் புறப்பட்டது. திரும்பத் திரும்ப அதை வாசித்தபோது அசைவுகள் புரிந்தன. அப்பா இல்லாதபோது அம்மா ஒரு நாள் எனக்குச் சொல்லித் தந்தது. அப்பொழுதுதான் அம்மாவுக்கும் வயலின் வாசிக்கத் தெரியும் என்பது தெரிந்தது. அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று அம்மா கேட்டுக்கொண்டதன் காரணம் பின்னால் புரிந்தது.
மதாமை நான் பார்த்தது எனது மூன்றாவது வயதில். கோவிலில் பியானோ வாசிக்கப் புதிதாக வந்தவர். அப்பாவுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அம்மா என்னையும் வயலினையும் தூக்கிக்கொண்டுச் சென்றது. எனக்குப் பக்கத்தில் நின்றபடி அம்மா பாட, முதன்முறையாக ஒரு பொது இடத்தில் வயலின் வாசித்தேன். நான்தான் வாசித்ததாக நிறைய பேருக்குத் தெரியாது. ‘பியானோ மதாம்’ என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது கண்களில் பரவசமான ஒரு ஒளி. வாசித்து முடித்ததும் என்னைக் கூப்பிட்டார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா தலையசைத்ததும் மதாம் அருகில் சென்றேன். ‘குட்டி மொசார்ட்’ என்றபடி என் இரு கைகளையும் பிடித்துத் தன் கண்களில் வைத்துக் கொண்டார். பிறகு அம்மாவும் மதாமும் பேசிக் கொண்டதும், அம்மா அப்பாவிடம் பேசிக்கொண்டதும் அதிகம் ஞாபகம் இல்லை. மூன்றாவது நாளிலிருந்து மதாம் வீட்டிற்கு மாலை நேரத்தில் இசைவகுப்புக்குச் செல்லவேண்டியிருந்தது. அம்மா அழைத்துச் செல்லும்.

வயலினும் இசையும் என் நினைவை முற்றிலுமாகச் சூழ்ந்து கொண்டதும், என் உறக்க நேரங்களில் புதிய இசைகள் தோன்ற அந்த நினைவுகளில் நான் வாசிக்க முயற்சி செய்வதை மதாம் பியானோவில் வாசித்து, எழுத்தாகக் குறித்துக் கொண்டதும் அப்பொழுது எனக்கு இயல்பாகத் தோன்றினாலும், மதாம். பெர்னாதேத்துக்கும், அம்மா, அப்பாவுக்கும் பேரதிசயமாகவே தோன்றியது. இப்படியாகத்தான் நான் இந்த வலி நிறைந்த உயிர் அரிக்கும் இசையை எனக்குள் நிறைத்துக் கொண்டதும்,ஒரு இசைக் கலைஞன் என்று பெயர் பெற்றதும் நடந்தது.
எனது நான்காவது வயதில் என்னை ஒரு அதிசயக் குழந்தையாக இசை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துவிட மதாம் செய்த ஏற்பாடுகளும், அதற்காக நான் செய்த பயிற்சிகளும் முழுமையாகப் பயனளித்திருந்தால், தற்போது நான் சிகிச்சைக்காக உங்களிடம் வருவதற்கு பதிலாக ஏதாவது அய்ரோப்பிய நாடு ஒன்றில் வரலாற்றுப் புகழ் பெற்ற மனநோய் மருத்துவமனையில் தங்கி இருக்க நேர்ந்திருக்கலாம். வான்கோ போல், ஆர்தோ போல், அல்தூஸர் போல்... மெர்ஸ்யே தொனாதேன். 


மரியாதைக்குரிய மதாம். பெர்னாதேத் அவர்களே! தங்கள் வளர்ப்பு மகனும்; அனாதை குழந்தைகள் இல்லத்தின் இசையாசிரியனும்; தனது வயலின் இசையால் தேவாலயத்தின் கர்த்தர் சிலையில் உள்ள காயத்திலிருந்து குருதி வடிய வைத்த அதிசய கலைஞனுமான மெர்ஸ்யே. ழீல் அமாதியே தற்போது எனது கண்கானிப்பில்தான் இருக்கிறார். தான் இருக்குமிடத்தை உங்களுக்குத் தெரிவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியை என்னிடம் பெற்றிருக்கிறார். உங்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களை அவருக்கும், அவர் தரும் தகவல்களை உங்களுக்கும் கிடைக்கச் செய்வதில் நான் கவனமாக இருக்கிறேன்.

நான் மனநல மருத்துவன் என்று அறியப்பட்டவன். பிராங்கோ தமிழனான நான் இதுவரை முப்பதுக்கும் மேலான நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன். மூன்று அய்ரோப்பிய நாடுகளிலும், இரண்டு ஆப்ரிக்க நாடுகளிலும் சில ஆண்டுகள் தங்கி பணி செய்திருக்கிறேன். என் அம்மா ஒரு பிரெஞ்சு மருத்துவர் வீட்டில் வேலை செய்தவர். அவரது இருபத்தேழாவது வயதில் நான் பிறந்தேன். கன்னிமரியாள் பெற்றெடுத்தது போல என்னைப் பெற்றெடுத்ததாக அம்மா சொல்வார். அம்மா பின்னல் வேலைகளில் கைத்திறன் பெற்றவர். தனது அய்யா வீட்டின் அத்தனைப் பொருட்களையும் துடைத்தபடி அவர் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார். மாட்டு மாமிசம் சமைப்பதில் அம்மாவைப் போல் அய்ரோப்பா முழுதும் தேடினாலும் ஆள் இல்லை என அந்த பிரெஞ்சு மருத்துவர் கூறுவார். மருத்துவர் என்னைத் தனது மகனாக என்னுடைய பதினெட்டாவது வயதில் ஏற்றுக்கொண்டார். நான் அவரைக் கடைசிவரை ‘மெர்ஸ்யே’ என்றுதான் அழைத்து வந்திருக்கிறேன். எனக்கு அவர் கற்றுத் தந்தவை பிரெஞ்சு வரலாறு, இசை, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் தனியே வாழ்வதற்கான மனநிலை. அம்மா எனக்குக் கற்றுத் தந்தவை எவருடைய முகத்தையும் பார்த்து அவருடைய சிந்தனை ஓட்டத்தைப் படித்துக்கொள்ளும் கணிப்பு, கண்களை உற்று நோக்குவதனூடாக ஒருவரை புற நினைவற்றவராக மாற்றி அந்தரமனதுடன் பேசும் உத்தி மற்றும் செடிகளுடன் பேசுவதற்கான சங்கேத மொழி. மெர்ஸ்யேவின் நூலகமும், அம்மாவின் பின்னல் ஓவியங்களும் வீட்டின் இரண்டு பெரிய அறைகளை நிறைத்தபடி எனது சொத்துக்களாக அமைந்தன. என்னைச் சர்வதேச உளவியல் அமைப்பு, மருத்துவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகை மனநோயாளியாக அடையாளம் காண வேண்டும் என்பது அவர்களின் விதிமுறைகளில் ஒன்றாக உள்ளபோது; அந்த வகையில் மனம் என்பதுதான் முதல் நோய் என்றும், நோய் குணமாவது என்பது மரணம்தான் என்றும் நான் நம்பத் தொடங்கிவிட்டது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது. நான் எனது நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க ஒரு சமரசம் செய்து கொண்டேன். ‘சிகிச்சை என்பது ஒரு நோயிலிருந்து மற்றொரு நோய்க்கு மாற்றும் கலை’ என்ற கருதுகோளை முன் வைத்தேன். நான் கடைசியாக பாரிஸில் இருந்தபோது மருந்துகளில் இருந்து வாசனைத் தைலங்கள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்ததால் சட்டபூர்வமான நடவடிக்கைக்கு உட்பட்டு மீண்டும் பொந்திஷேரி வந்தேன். நான் மிலித்தேரியில் இருந்தபொழுது எனது ஒரு கண்ணில் மட்டும் நிறப்பார்வை இழந்தேன். தலையில் காயம் பட்டதால் ஏற்பட்டக் கோளாறில் இரண்டு காதுகள் வழியாக நுழையும் ஒலி தனித் தனியே இம்மி நேர இடைவெளிகளுடன் கேட்கும் தன்மை எனக்கு ஏற்பட்டது. இந்த இரண்டு குறைபாடுகளையும் இதுவரை நான் யாரிடமும் தெரிவித்ததில்லை. உங்களிடம் மட்டும் இதைக் கூறுவதற்குக் காரணம், ழீல் அமாதியேவுடன் எனக்கு ஏற்பட்ட நட்புக்கு இவை காரணமாக அமைந்தன என்பதனால்தான். நான் உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதெல்லாம் இசை ழீலை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அவரை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டும் இருக்கிறது.

ஓசைகளில் மரணமும்  அவற்றிற்கிடையே வரும் மௌனங்களில் உயிர்ப்பும் மாறி மாறி நம்மைத் தாக்குவதை நீங்கள் அறிவீர்கள்தானே. எனக்கும் ழீலைப் போலவே அச்சமாக இருக்கிறது. எனது கனவுகளில் அடிக்கடி நான் ஒரு கொலை செய்து கொண்டிருக்கிறேன். விழித்ததும் எனது கைகளை ரத்தக் கறைகளுடன் கண்டு பதறிப்போகிறேன். கழுவக் கழுவ தீராத கறை எனது கைகளில் படிந்து போயிருக்கிறது. எனது நூலகத்தில், எனது அம்மாவின் பின்னல் ஓவிய அறையில் அந்த ரத்த வாடையும், கறையும் அவ்வப்பொழுது தென்படுகிறது. நானும் என் அம்மாவைப் போல துணியை வைத்து நாள் முழுதும் அந்தப் பழமையான வீட்டையும், அதிலுள்ள ஒவ்வொரு பொருள்களையும் மீண்டும் மீண்டும் துடைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருமுறை துடைக்கும்பொழுது ரத்தக் கறையையும் மறுமுறை துடைக்கும்பொழுது எனது குற்றம் பதிந்த ரேகையையும் மாறி மாறி அழித்துக் கொண்டிருக்கிறேன்.

ழீல், எனது அம்மா தங்கியிருந்த கடைக்கோடி அறையில் தனது இசையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது எனது பியானோவையும் தனது வயலினையும் பயன்படுத்திக்கொள்கிறார். நான் உங்களை வந்து சந்தித்துவிட்டு செல்லும் ஒவ்வொரு முறையும் ழீல் உங்கள் உடல் நிலைப் பற்றி கேட்கிறார். இந்த மிகச்சிறிய நகரத்திலேயே நாம் இப்படி ஒளிந்து வாழ முடியுமா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது

* * * * *

நன்றி - அழியாச்சுடர்கள்

நிலவறைப் பாட்டைகள் - ரமேஷ் - பிரேம்

மொழியியல், குறியியல் மற்றும் கலாச்சார ஆய்வுகள் பற்றி சிருஷ்டிபரமான சிந்தனைகளையும் ஆக்கபூர்வமான கோட்பாடுகளையும் பதிவு செய்ததின் மூலம் பரவலாக அறியப்பட்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த உம்பர்ட்டோ ஈகோ முதலில் ஒரு தத்துவவாதியாகவே அறிமுகமானவர். சமகாலச் சிந்தனைகளுடன் நெருக்கமான உறவுள்ளவர்களுக்கும், பல்வேறு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ ஆய்வறிவு இலக்கியப் பார்வையுடன் தொடர்ந்து இயங்கும் எங்களைப் போன்றவர்களுக்கும் அணுக்கமான ஒரு கோட்பாட்டாளர் இவர்.

 

இவ்வகைச் சிந்தனைகள் மேற்குலகின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு குழுக்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும், அதிகமாக ஃப்ரெஞ்சு சிந்தனையாளர்களின் பெயர்களே இவற்றில் இடம் பெற்றிருப்பது இவற்றைப் பயில்பவர்களுக்குச் சிறு புதிராகத் தோன்றுவதுண்டு. இந்தப்போக்கில் முதல் முறையாக ஒரு மாற்றமாக இடம் பிடித்தது உம்பர்ட்டோ ஈகோவின் பெயர். ஐரோப்பிய வரலாறு, தத்துவம், இலக்கியம் போன்றவற்றில் தனித்தன்மையுடன் கூடிய மேதமை ஈகோவிடம் உண்டு. அதே சமயம் மற்ற கோட்பாட்டாளர்களுக்கு இல்லாத ஒரு சிறப்பம்சமும் இவரிடம் உண்டு. இவர் படைப்பிலக்கியவாதியும் கூட, இதுவே இவரை இலக்கிய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒருவராக மாற்றியது.

 

இவருடைய ''ரோஜாவின் பெயர்'' (Name of the Rose), "ஃபூக்கோவின் ஊசல்" (Foucault''s Pendulum), ''நாளுக்கு முந்திய தீவு'' (Island of the Day before) என்ற மூன்று நாவல்களும் இத்தாலிய மொழியிலிருந்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டவை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் மூலம் உலகின் பல நாடுகளிலும் பலமுறை வாசிக்கப்பட்டவை. தீவிர இலக்கியப்பயிற்சி இன்றி பொழுதுபோக்கும் வாசகர்களுக்கும் கூட மிகவும் பிடித்தவையாக அமைந்து சிறந்த விற்பனைப் பிரிவில் (Best Sellers) இடம் பிடித்தவை இவரின் முதல் இரு நாவல்களும். பல பதிப்புகள் பல வடிவில் வெளிவந்தன. இலக்கியத் தரமும் விற்பனைக்கவர்ச்சியும் கொண்டு அமையும் ஆக்கங்கள் இவைபோல மிகச் சிலவே காணக்கிடைக்கின்றன. அதே சமயம் அதிகம் பேசப்பட்டவையும் கூட.

 

ரோஜாவின் பெயர் - நாவலின் அமைப்பும் எழுத்துச் சுழலும்:-

 

இந்நாவல் ஒரு நூலைப் பற்றிய நூலாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கற்பனையான எழுத்தாளன் 1968 இல் Abbe Vallet என்பவரால் மொழி பெயர்த்தும் தொகுத்தும் எழுதப்பட்ட ஒரு நூல் பிரதியைக் கண்டெடுக்கிறான். 1842 இல் வெளியிடப்பட்ட அந்த நூலோ பதினான்காம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் Adso de Melk என்ற பெனடிக்டன் பிரிவைச் சேர்ந்த துறவியால் 1327இல் இத்தாலியைச் சேர்ந்த ஒரு துறவோர் மடத்தில் நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நினைவு கூர்ந்து தொகுத்து எழுதப்பட்ட குறிப்புகளை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. Adso எழுதிய லத்தின் மொழியில் Vallet எழுதியது பிரெஞ்சு மொழியில் - இப்பொழுதைய எழுத்தாளன் எழுதியது நாம் வாசிக்கும் மொழியில்.

 

அட்சோ தனது குருவான சகோதரர் வில்லியம்சுடன் இத்தாலியின் ஒரு பகுதியில் அமைந்திருந்த (Abbey) துறவோர் மடம் ஒன்றில் நடக்கும் கொலைகளைத் துப்பறிவதற்காகத் தங்கி இருந்த ஏழுநாட்களில் நடந்தவைகளை நினைவிலிருந்து தனது இறுதிகாலத்தில் பதிவு செய்வதாக நூலின் பகுதிகள் அமைகின்றன. முதல் நாள், இரண்டாம் நாள் எனத் தொடங்கும் ஒவ்வொரு பேரத்தியாயமும் விடிகாலை, காலை, பகல் என இரவுவரையான சிறு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியே தலைப்பு வாக்கியங்கள் இடப்பட்டிருக்கின்றன. (தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதைப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம்; இரண்டாம் அதிகாரம்; இரண்டாவது, மூன்றாவது வசனம்).

 

ஆகக் கற்பனையான மூன்றாவது நூலாசிரியன் எழுதிய கதை. Eco என்ற நான்காவது நூலாசிரியன் எழுதிய பிறகு உள்ள பிரதியே நாம் தற்போது வாசிப்பது. பிரதியைப் பற்றிய பிரதியாக, மடிந்து மடிந்து அமைந்திருக்கும் இப்பிரதி கடைசியாக நம்மைப் பொறுத்தவரை ஒரே பிரதியாகத் தான் வாசிக்கக் கிடைக்கிறது. எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப்புறம்பான எதையும் நுழைத்துவிட முடிவதில்லை. (ஆழ முகக்கினும் நாழி முகவாது நாநாழி) என எழுத்தாய் விரியும் பிரதி தன் அமைப்பால் ஒரு மெட்டாபிக்ஷன் தன்மை கொண்டுள்ளது.

 

நூலைத் தேடிச்செல்லும் பயணத்தில் தமது உயிரை இழக்கும் துறவிகள் பற்றியும், நூலைப்பதுக்கி வைத்து உலகின் அறிவிற்கான பரிணாமத்தைத் தடைசெய்ய முயலும் துறவிகள் பற்றியும், நூல்களால் நிரம்பியுள்ள புதிர்வட்டப்பாதை மண்டபத்திற்குள் பதுக்கப்பட்ட நூல்களைத் திறந்தால் அவற்றிற்குள்ளும் விரிந்து விரிந்து செல்லும் அறிவின் - கற்பனையின் - மனித எண்ணங்களின் - புதிர் வட்டப்பாதைகளே காணப்படுவதையும் எழுதிச் செல்லும் மூலநூலை எழுதியதாகச் சொல்லப்படும் அட்சோவுக்கும் அழிந்து போன மகாமடம் ஒன்றின் இடிபாடுகளுக்கு நடுவே மிஞ்சுவதும்; சிதைந்து போன மக்கிப்போன சில நூல் பிரதிகளே.

 

* At the end of my patient reconstruction, I had before me a kind of lesser library, a symbol of the greater, vanished one: A library made up of fragments, quotations, unfinished sentences, amputed stumps of books. (p. 609 ரோஜாவின் பெயர். 1984)

 

* இந்நூலின் முக்கியமான பாத்திரமாக இடம் பெறும் புதிர்வட்டப்பாதை பற்றி : A spiritual labyrinth, it is also a terrestrial labyrinth. You might enter and you might not emerg. ( p.37 ரோ.பெ. 1984).

 

* இந் நூலில் இடம் பெறும் கொலைகளுக்குக் காரணமான பாத்திரம்: பார்வையற்ற முதிய துறவியான Jorge of Burgos.

 

* ''ரோஜாவின் பெயர்'' துப்பறியும் நாவல் அமைப்பில் எழுதப்பட்டது. மத்தியகால ஐரோப்பியச் சூழலில் ஒரு துறவிகள் மடத்தில் தொடர்ச்சியாக கொலைகள் நடக்கின்றன. கொலையாளியைக் கண்டுபிடிக்க வேறு இடத்தைச் சேர்ந்த ஒரு துறவியும் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் மடத்திற்கு வருகின்றனர். அவர்கள் தனது புலனாய்வைச் செய்யும் அதே சமயத்தில் அம்மடத்தின் ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அவர்கள் புலனாய்வுச் சமயத்திலும் கூடக் கொலைகள் தொடர்கின்றன. அம்மடத்தில் அமைந்துள்ள புதிர் வட்டப் பாட்டைகளால் ஆன நுலாகம் ஒன்றைச் சுற்றியே இந்தக் கொலைகள் நிகழ்வதையும், இந்தக் கொலைகளுக்குப் பின் ஒருவித கோட்பாட்டு, இறையியல் பிடிவாதமுடைய துறவி ஒருவர் உள்ளத்தையும் அவர்கள் அறிந்து கொள்கின்றனர். விலக்கப்பட்ட ரகசிய அறிவு சார்ந்த நூல்களைத்தேடும் சிலர் கொல்லப்படுவதும் தெரியவருகிறது. கிருஸ்திய மதத்தின் சம்பிரதாயப் பிரிவின் மரபிலிருந்து விலகும் சிந்தனைகளைத் தேடும் துறவிகள் அந்த மரணப் பொறியில் சிக்கிக் கொள்கின்றனர் இறுதியில் ஜார்ஜ் ஆஃப் பர்கோஸ் என்ற பெயருடைய பார்வையற்ற முதிய துறவி ஒருவர் அரிஸ்டாட்டிலின் ''கவிதையியல் பற்றி'' என்ற நூலில் இன்பியல் பகுதியை யாரும் படிக்கக்கூடாது என்றும், இன்பியல் உலகின் இறையியல், ஒழுக்கவியலை நாசம் செய்துவிடும் என்றும் அதைத்தேடி வருகிறவர்களைக் கொல்கிறார். அந்நூலின் ஒவ்வொரு பக்க மூலையிலும் கடுமையான விஷம் ஒன்றைத் தடவி வைப்பதன் மூலம் நாக்கில் தொட்டுத் தொட்டுப் புரட்டிப் படிப்பவர்கள் முழுமையும் படித்து முடிக்கும் போது சாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதைப் துப்பறியும் துறவி கண்டுபிடிக்கும் போது ஏற்படும் குழப்பத்தில் அந்தப் பெருமடமே எரிந்து சாம்பலாகிவிடுகிறது. அது மட்டுமல்லாமல் நூல்களும் அழிகின்றன.

 

இன்றுள்ள அரிஸ்டாட்டிலின் ''கவிதையியல் பற்றி'' - நூலில் இன்பியல் பகுதி இல்லாமல் இருப்பதற்கும் அந்தக் குருட்டுத் துறவியே காரணமாக அமைவதாக கற்பனை நிரூபணம் ஒன்று காட்டப்படுகிறது.

 

கதையெழுத்தின் பல்வேறு சாத்தியங்களை விளக்கும் இந்நாவலில் குறிப்பிடும்படியான அம்சங்களாகச் சிலவற்றைக் கூறலாம்.

 

* மத்தியக் கால ஐரோப்பிய வரலாறு, கலாச்சாரம் பற்றிய தகவல்கள் ஆய்வுப் பூர்வமாக பல்வேறு பிரதிகளிலிருந்து தொகுத்து ஒரு முன்பிரதித்தொகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

 

* பொருள்கள், மரபுகள் பற்றிய புராதானத் தன்மையுடன் தகவல்கள், பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன.

 

* துப்பறியும் எழுத்துமுறையின் பெருவழக்கில் உள்ள ஒரு வடிவம் அப்படியே கையாளப்படுகிறது.

 

* துப்பறியும் கதையின் எதிர்பார்ப்பும் வரலாற்று நாவலின் விவரணைகளும் ஒன்றாக அமைக்கப்படுவதன் மூலம் வரலாறு பற்றிய துப்பறிதலாக கதை மாறுகிறது.

 

* துப்பறிதல் என்பதற்கும் (Investigation), பொருள் கூறல் என்பதற்கும் (Interpretation) இடையில் உள்ள உறவு உருவக நிலையில் கையாளப்படுகிறது. அதாவது துப்பறிதல் என்பது ஒருவிதக் கதை சொல்லலாக இருக்கிறது.

 

கதைசொல்லல் மாறும்போது கண்டுபிடிக்கப்படும் உண்மையும் மாறுகிறது. உண்மையைத் தேடுதல் என்பதும் துப்பறிதல் போலவே தடயங்களையும் சான்றுகளையும் வைத்து நிகழ்த்தப்படும் ஒரு பயணமாகவே அமைகிறது. இவை இரண்டிலும் எதேச்சைகள், திடீர் திருப்பங்கள், புதிர்வட்டப்பாதைகள், தடம் மாறும் பாட்டைகள் போன்றவை இடம் பெறுகின்றன. அதே சமயம் அறிதல் முறை மாறும் போது மொத்தப் போக்கும் மாறிவிடக்கூடியதாகவும் உள்ளது.

 

* துப்பறிகிறவர், தொடரப்படுபவர் இருவரும் ஒரே கதையின் இருவேறு புள்ளிகளில் இயங்குகிறார்கள் அதே சமயம் இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்குவதும் இல்லை இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கும் போது கூட வேறுவேறு நபர்களாக இருக்கிறார்கள்.

 

* துப்பறிதல் என்னும் செயல் ஒரே சமயத்தில் தன்னுடைய பாதையைத் தானே அமைத்துக் கொள்கிறது. இன்னொன்றின் பாதையைத் தொடருவதாகவும் உள்ளது. அடுத்த கணம் என்பது நிச்சயமற்றதாக உள்ள நிலையில் முன் நிகழ்ந்தவைகளின் தர்க்கத்தை வைத்து நகர்வதாக உள்ளது. இந்தப் துப்பறிதல் என்ற நிகழ்வில் ஒரு இறந்தகாலம் அதன் எதிர்காலமாக அமைவதை முரண் அழகாகக் கொள்ள முடியும். ரோஜா நாவலில் ஒரு மர்மம் கண்டறியத் தோற்றம் தந்தவைகள் மர்மங்களாக மாற்றப்படுகின்றன.

 

* ஒரே புள்ளியை அடைய எண்ணற்ற வழிகள் உள்ள நிலையில் இந்தத் துப்பறிதல் வகை எழுத்து தனது வழியையே முதன்மைப்படுத்துகிறது. இங்கு மையம் என்பது கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுடன் வரலாறு என்பதும் கூடத் தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளின் தொகுப்பே என்பது விளக்கிக்காட்டப்படுகிறது.

* மேற்குலகின் - குறிப்பாக கிறிஸ்திய-இறையியல் பற்றியும், தத்துவ முரட்டுவாதம் பற்றியும் பல கேள்விகளை விளையாட்டுத் தனமாக இந்நாவல் எழுப்பி சந்தேகப்படுதலின் சாத்தியங்களை அதிகமாக்கிவிடுகிறது. இந்தப் புனிதமறுப்பு கதைகூறல் எல்லா புராணிக, புனிதப் பிரதிகளின் முற்றொருமையையும் கலைத்துப்போட்டு அவற்றின் ''கதைப்பாட்டு'' சாத்தியங்களை அதிகமாக்கிவிடக்கூடியது.

 

* மிகையில் பக்தினின் ''நகைப்புணர்வின் ஆதிக்க நீக்க உத்தி'' இந்நாவலின் மொழியமைப்பிலேயே அமைந்துள்ளது. நேரடியாக எதையும் கிண்டலோ கேலியோ செய்யாமல்; வேறு ஒரு காலம் பற்றிய சித்தரிப்பைத் தற்காலம் என்ற மறைமுகப் பிரதியுடன் நேரெதிர்ப்படுத்தும் பொழுது நாம் இதில் உள்ளவைகள் உண்மை என்று கொள்ளாமல் கதையெழுத்தை மட்டுமே நம்பி நகர்கிறோம். இதில் உள்ள பன்முகப்பிளவு நிலை நிஜம் பற்றிய நகைப்புணர்வாக மாறுகிறது. அதாவது எழுத்து தானே உருவாக்கும் கற்பனை தர்க்கத்தின் மூலம் வரலாற்றை வேறாக விளக்கும் பொழுது இந்நாவலின் வாசிப்பு முழுக்க ஒரு நீடித்த குறுஞ்சிரிப்பாக செயல்படக்கூடியது.

 

* ''மறையெதிர்ப்பு'' அறிவைத்தேடும் வாசக மனமும் - அறிவைத் தணிக்கை செய்து நம்பிக்கையின் மீது தன்னை நிர்மாணித்துக் கொள்ளும் தொழுகை ஒழுங்கும் முரண்பட்டு இயங்குவதும், இவற்றின் தொடர் போராட்டமே தத்துவங்களையும் இலக்கியங்களையும் உருவாக்கிக் கொண்டிருப்பதும் இந்நாவலில் விவரிக்கப்படுகிறது. தேவாலாய அதிகாரம் அறிவை மறைத்தும் கட்டுப்படுத்தியும் உருவாகிய ஒன்று (எல்லா அதிகாரமும்தானே) என்பது இந்த எழுத்தில் நாடகத்தன்மையுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

 

* ஜ“சஸ் தனது வாழ்நாளில் சிரித்ததே இல்லை. அது சாத்தியம் இல்லை என்று கூறும் கிழத்துறவி சிரிப்பு பற்றிக் குறிப்பிடுபவர் மீது கடுங்கோபம் கொள்கிறார். அதே காரணத்திற்காகவே அவர் ''இன்பியலையும்'' மறுதலிக்கிறார். சிரிப்பற்ற உலகே ஆன்மவியலுக்கானது என்று அவர் நம்புவதன் மூலமும், விபரீத அறிவுகள் அல்லது பல தரப்பு அறிவுகள் மதநம்பிக்கையைக் குலைத்துவிடும் என்று தீர்மானிப்பதன் மூலமூம் கொலை என்ற வழிமுறையை அழித்தொழிப்பு என்ற முறையைக் கையாள்கிறார். அப்போகிரிபா என்ற வேத மறுப்பு நூல்களைப்பற்றி மேற்குலகின்மரபு கொண்டிருந்த பயம் இந்நாவலின் முக்கிய பின்புலமாக உள்ளது. அதேசமயம் தன்னை நிறுவிக்கொள்ள அது கையாண்ட கொடூரங்களைப் பற்றிய உள்ளீடான குறிப்புகளும் இதில் உள்ளன.

 

* இலக்கிய ஆக்கமுறையில் ''பாவனை எழுத்து'' அல்லது ''நிகழ்த்துதல் எழுத்து'' என்பது முக்கியமானது. அதாவது இங்கு உண்மை என்று எதுவும் கூறப்படாமல் - கூறுதல் முறை மட்டுமே - ''இது இப்படியாக'' .. என்பது போல் எழுதிச் செல்லும் முறை. இந்நூல் இப்படியாக அமைவதன் மூலம் கூறப்பட்ட ஒன்றை கூறுவதாக மூன்றாம் தள கதை கூறுநிலை உருவாக்கப்படுகிறது.

 

* இந்நூல் வாசிப்பு என்ற வினையை சுதந்திரமாக்கக்கூடியது. பல்வேறு பிரதி மேற்கோள்கள், ஊடுபிரதி இணைப்புகள் (Inter Textuality) மூலம் வேறுவேறு இலக்கியப் பிரதி ஞாபகங்களை எழுப்பிச் செல்வதாக அமைந்திருக்கிறது. (இந்நாவல் ழான் ழாக் அன்னூத் என்ற இயக்குநரால் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் வாசிப்பு என்பது தனித்தன்மை உடையது).

 

ரோஜாவின் பெயர் என்ற தன் முதல் நாவலுக்காக போர்கஸ’டமிருந்து ''புதிர் வட்டப்பாதை'' என்ற உருவாக்கத்தைப் பெற்று பெரும் பிரதி மாற்றத்தை நிகழ்த்திய ஈகோ அதற்காகத் தான் செய்த Medical History பற்றிய ஆய்வுகளின் தகவல்களை அசாத்திய தந்திரத்துடன் உருமாற்றம் செய்ததின் மூலம் தனது இரண்டாவது நாவலான ஃபூகோவின் ஊசல்-ஐ எழுதி முடிக்கிறார். இந்நாவல் பலமுறை வாசிக்கத்தூண்டும் ஜாலத்தன்மை கொண்டது.

 

* ஊசல் நாவல் Jacopo Belbo, Casaubon, Diotellavi என்ற நபர்களையும் Abulafia என்ற கம்ப்யூட்டரையும் முக்கிய பாத்திரங்களாகக் (A,B,C,D) கொண்டு எழுதப்பட்டது. கதையைக் கூறுவது காசேர்போன் என்ற பாத்திரம், தன்னை விட வயதில் மூத்த பெல்போவைப்பற்றி இப்பாத்திரம் கூறுவதாகக் கதை நிகழ்கிறது. அதே சமயம் தன் நினைவுகள், தான் வாசித்தவைகள், பெல்போ தனது கம்ப்யூட்டரில் எழுதி வைத்திருந்தவைகள் எனக் கதை கூறல் கதை எழுதுதலாக மாற்றமடைந்து கதை உருவான கதையாக நீண்டு செல்கிறது.

 

காசோபோனும், பெல்போவும் ஒரு பதிப்பகத்தில் வேலை செய்யும் ஆய்வாளர்கள். பெல்போ தனது ஆய்வுகளுக்கு நடுவே கிருஸ்திய மதத்தின் வரலாற்றையும் ஆய்வு செய்கிறான். அதிலும் குறிப்பாக ''Templars என்ற ரகசிய சங்கம் பற்றி ஈடுபாட்டுடன் தகவல்களைச் சேகரிக்கிறான். இதன் மூலம் ஐரோப்பாவின் பல்வேறு ரகசிய இயக்கங்கள், அமைப்புகள் பற்றிய விபரங்களும், வரலாற்றில் அவற்றின் இடமும், ஊடுருவலும் பற்றிய வினோதமான செய்திகளும் அவனுக்குக் கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் ரகசிய சங்கங்களின் வலைப்பின்னலுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். ஆய்வுக்காக அவன் அணுகும் நபர்கள், நூல்கள், தொல்பொருள் சாலைகள் இவற்றின் மூலம் ரகசிய சங்கத்தின் இன்றைய காலத்திட்டம் ஏதோ ஒன்று இருக்கலாம் என்பது பற்றி அவனுக்குத் தெரிய வருகிறது.

 

இவை ஏதோ பழைய காலத்துடன் முடிந்து போனவை அல்ல என்பதும் இன்னும் அவற்றின் உறுப்பினர்கள், செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியவருகிறது. இச்சங்கத்தின் ஒரு பிரிவினர் அவனைத் தொடர்ந்துவர ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்களின் ரகசியத் திட்டம் தொடர்பாக அவர்கள் தேடிக் கொண்டிருக்கும் ஒரு வரைபடம் ஆய்வுகள் மூலம் பெல்போவிடம் கிடைத்திருப்பதாக நம்பும் அவர்கள் அவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். அவனிடம் அது இல்லை என்பதையும் நம்ப மறுக்கிறார்கள். அவர்களின் சதிவலையில் அவன் சிக்கிக் கொள்கிறான். அவனது உயிருக்கான போராட்டமாக அது மாறிவிடும் சூழ்நிலையில் தன் நண்பனான காசாபோனிடம் தனது நெருக்கடிகளைத் தெரிவிக்க தனது கம்ப்யூட்டரான அபுலாஃபியாவைப் பயன்படுத்துகிறான்.

 

அதுவரை பெல்போவுடன் சேர்ந்து தான் செய்த ஆய்வுகளை இல்லாத ஒரு காலம் பற்றிய தகவல் திரட்டாக மட்டுமே நம்பிவந்த காசாபோன் அதன் பயங்கர எதார்த்தத்தை அறிந்து கொள்கிறான். இதன் மூலம் அவனும் அதன் சதிநாடகத்திற்குள் சிக்கிக்கொள்கிறான். தன் நண்பன் திடீரெனக் காணாமல் போன நிலையில் அவனை மீட்கவும்., இந்த பயங்கரத்திலிருந்து தப்பிக்கவும் ஏதாவது வழி இருக்கிறதா என்று தேடுகிறான். இதைப்பற்றி யாரிடமும் கூறவும் முடியாத நிலை. அனைத்தையும் பிரம்மை, மனநோய்மயக்கம் என்று யாரும் இலகுவாகக் கூறிவிடமுடியும். இந்நிலையில் தனியாகத் தன் நண்பனின் தடத்தைப் துப்பறிந்து செல்லும்பொழுது, அவனது நண்பனான பெல்போ ரகசிய சங்கத்து உறுப்பினர்களைப் பாரிசிலுள்ள தொல்பொருள் சாலைக்கு வரும்படியும் அங்கு அவர்கள் தேடும் வரைபடம் பற்றிக் கூறுவதாகவும் அறிவிக்கிறான். ஆனால் அவர்களிடமிருந்து தப்பமுடியாது என்ற மனநெருக்கடியில் பொருள்சாலையில் இருக்கும் ஃபூக்கோ ஊசலில் தூக்கிலிட்டு இறந்துவிடுகிறான். அவன் அங்கு வருவதை அறிந்து சென்ற காசாபோன் நண்பனின் உயிரற்ற உடல் ஊசலின் அசைவை நிறுத்திவிட்டபடித் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, ரகசிய சங்கத்தினர் இன்னும் சில நேரத்தில் அங்கு வந்து விடுவார்கள் என்பதால் தப்பி தனது கிராமத்திலுள்ள பழைய வீட்டுக்குச் செல்கிறான். ஆனால் ரகசிய சங்கத்தினரின் அடுத்த இலக்கு தான்தான் என்பதும்; ஏற்கெனவே அவர்கள் தன்னைத்தொடர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிற நிலையில் தனது மரணம் பற்றிய ஒரு உறுதிப்பாட்டுடன் எதுவும் நடக்கலாம் எனக் காத்திருக்கிறான்.

 

இந்நாவல் காசாபோனின் கூற்றாக எழுதப்படுகிறது. தன்னிலைக் கூற்றாக கதை கூறப்படும் அதேசமயம் அபுலாஃபியா என்ற கம்ப்யூட்டரில் உள்ள பெல்போனின் மொழியும் இணைக்கப்படுகிறது. பல்வேறு நூல்களிலிருந்து குறிப்புகளும் இருவரின் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இணைக்கப்படுகின்றன. நிகழ்ந்தவைகளாகவும், நினைவுகளாகவும் நீளும் கதையுடன் வரலாற்றுக் குறிப்புகள் அப்படியப்படியே பல்வேறு நூல்களிலிருந்தும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் கதைகூறல் என்ற நிலையிலிருந்து கதை வரைதல் என்ற நிலைக்கு எழுத்து மாற்றப்படுகிறது. அது மட்டுமின்றி கதை காட்சிக்குறியாக எழுத்துப் பரப்பில் உருவாக்கப்படுகிறது. இந்நாவல் மர்மநாவலின் அமைப்பிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. துப்பறிதல் என்பது இந்நாவலிலும் அடிப்படை உருவமாக அமைக்கப்பட்டிருக்கிறது பதைபதைப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் ''Thriller'' என்ற வகை நாவல் வடிவத்திலும் இந்தப்பிரதி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இலகுவான வேகமான வாசிப்புக்கு உரியதாக மாற்றப்படுகிறது. அதே சமயம் மிக உள்ளோடிய தத்துவார்த்த, மெய்யியல், வரலாற்றியல், தொல்லாய்வியல், தொன்மவியல், கதையியல் பிரச்சனைகளும் இதில் கையாளப்படுகின்றன.

 

இந்நாவலின் சில கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வகைக் கூறுகளின் மூலம் இது ஒரு பேரிலக்கியப் பிரதியாக தன்னை மாற்றிக் கொள்ள முனைகிறது.

 

* ஐரோப்பியச் சமூகங்களின் கூறப்பட்ட வரலாற்றை இந்நாவல் முதலில் கேலி செய்கிறது. கிறிஸ்திய உலகின் மாற்றங்கள், வளர்ச்சிகள் என்பதை இந்நாவல் கேள்விக்குரியதாக மாற்றிவிடுகிறது.

 

* வரலாறு எப்பொழுதும் ஒருபோக்குத்தன்மை உடையதாக இருப்பதில்லை. ஏன் சிலசமயங்களில் வரலாறு என்ற தன்மைகூட இருப்பதில்லை என்பதை விரிவாக இந்நாவல் எழுதிச் செல்கிறது.

 

* வரலாறு என்பது பிரதிகளின், மொழிகளின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. இவற்றில் நேரும் பின்னல்களும், சிக்கல்களும் வேறுவகை எதார்த்தத்தைக் கட்டமைத்து விடக் கூடியவைகளாக உள்ளன. இதில் உண்மை என்ற ஒன்று உருவாக்கப்படுவதேயொழிய - வனைந்தெடுக்கப்படுவதே ஒழிய - கண்டறியப்படுவதில்லை என்பதை இந்நாவல் திரும்பத்திரும்பப் பேசிச்செல்கிறது.

 

* வரலாறு எழுதுதல் என்பது ஒருவகைப் பொருள் கோள் - உரைகூறல் - முறையே. இது எழுதப்படுதலுக்கேற்ப தனது உண்மையை மாற்றிக்கொள்கிறது என்பதை முரண்காரணிகள், ஜால-தர்க்கங்கள், விளையாட்டுச் சேர்க்கைகள் புனைவுவைப்பு முறைகள் மூலம் இந்த எழுத்து நிகழ்த்திக் காட்டுகிறது.

 

* புனிதப் போர்கள் முடிந்து மதச்சாம்ராஜ்யம் உருவானபின் சிலுவைக்காக ரத்தம் சிந்தியவர்களில் பலர் ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் தமக்குள் உருவாக்கிக் கொள்ளும் ''டெம்ப்ளார்'' என்ற அமைப்பு தடைசெய்யப்பட்டதாக மாறுகிறது. அதனால் அந்த அமைப்பு ரகசியமாகச் செயல்படத் தொடங்குகிறது. இதேபோல் உருவான ரோஸ’க்குருசியன்ஸ், ஃபிரிமெசன்ஸ், ரேடிக்கல் கிறிஸ்தியன், ஆர்டர் ஆஃப் ஹோலிகிரெய்ல் போன்ற பல்வேறு மார்க்கங்களும் தடைசெய்யப்பட்டவையாக, தண்டிக்கப்பட்டவையாக மாறுகின்றன. இன்குசிஷன் மூலம் அழித்தொழிக்கப்படுகின்றன. ஒரு வகையில் மாற்று நம்பிக்கைகளே இல்லாமல் ஒருகாலத்தில் தடைசெய்யப்படுவதும் வேறொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கிறிஸ்திய வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியது. அதற்குள் நேர்ந்த பல்வேறு பிரிவுகளும் இவ்வாறே உருவாயின. இந்தப் பின்னணியை மிக விரிவாக விவரிக்கும் ''ஊசல்'' நாவல் முற்றிலும் கற்பனையான தர்க்கத்தின் மூலம் வரலாற்றின் புனைவுத்தன்மையை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடுகிறது.

 

* வரலாறு என்பது நம்பப்படுவது போல பெரும் நிகழ்வுகளால் வரிசைக் கிரமமாக அமையும் தர்க்கபூர்வ ஒழுங்கல்ல; மாறாக மனப்பிரம்மைகளால், எதேச்சைத்தன்மைகளால், மிகச் சிறிய வார்த்தை விளையாட்டுகளால், திடீர் திருகல்களால், ஒரு வித சூதாட்டத் தன்மையுடன் அமையும் குழப்படியே என்பதையும் - இந்த குழப்பத்திற்குள் ஒரு ஒழுங்கைக் கற்பிக்க நினைக்கும் முயற்சியே வரலாறு எழுதுதல் என்பதும் இந்நாவலில் தடம் காட்டப்படுகிறது.

 

* புனைவு மற்றும் உண்மை என்பவை தனித்தனியே இல்லை எனவும் புனையப்படுபவையே எல்லாம் என்பதையும் இந்நாவல் அடையாளப்படுத்தும் அதே நிலையில் மனித வரலாறே புனைவுகளின் மண்டலத்திற்குள் நகரும் ஒரு வலைப்பின்னல் தான் என்பதையும் கூறிச்செல்கிறது.

 

* புனைவுகள், மாயங்கள், கனவுகள் போன்றவை பருண்மை உலகின் மீது கவிந்து வடிவப்பரப்பாக மாறக்கூடியவையே என்பதையும் இந்நாவல் புலப்படுத்துகிறது.

 

* நிகழ்காலம் என்பதற்குள் பலகால அடுக்குகள் உள்ளதையும் - தொன்மங்களும், புராதான நினைவுகளும் ஒவ்வொன்றிற்குள்ளும் ஊடாடி இருப்பதையும் இவை மொழியின் மூலமே சாத்தியப்படும் ஒரு நிலை என்பதையும் இந்நூல் நிரூபிக்க முயற்சிக்கிறது.

 

* இந்நாவலில்: மதங்களின் வரலாற்றுக் கதைகள், மந்திரவாதங்கள் பற்றிய கதைகள், அமானுஷ்யங்கள் பற்றிய கதைகள், வினோத மனிதர்களைப்பற்றிய கதைகள், வெவ்வேறு போர்களைப் பற்றிய கதைகள், தத்துவ ஞானம் பற்றிய கதைகள், தத்துவவாதிகள், ஞானிகள், மதத்தலைவர்கள் பற்றிய கதைகள், ரகசிய சங்கங்கள், ரகசிய சடங்குகள், மர்மமான வாழ்வியல் முறை பற்றிய கதைகள், அரசியல் மாற்றங்கள், புரட்சிகள் பற்றி கதைகள், விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றிய கதைகள், பல்வேறு புராதானப் பொருள்கள் பற்றிய கதைகள் எனக்கதை கதையாய் விரிந்து செல்லும் புதிர்க்கிளைப்பதைகளூடாக மையமற்ற ஒருமொழிக்காடு பரவிக்கிடக்கிறது. அதே சமயம் மிகத்துல்லியமான ஒரு தொடரொழுங்கும் ஒரு புனைவுத்தர்க்கமும் செயல்பட்டபடியும் இருக்கிறது.

 

* மனிதர்கள் பின்னும் மொழிக்குள் மனிதர்களே சிக்கிக்கொள்வதும் எந்த ஒரு சொல்லும் வேறு ஏதோ ஒரு தருணத்திலாவது விளைவாக மாறவே செய்கிறது என்பதையும் இந்நாவல் பதிவு செய்திருக்கிறது.

 

* ஒரு சொல்லில் ஆரம்பிக்கும் பொருள்கூறல் சங்கிலி எல்லையற்றும் முடிவுற்றும் வளர்கிறது. எந்த ஒன்றும் மையமுமில்லை: எந்த ஒன்றும் நுனியும் இல்லை - பெரும் சுழல் கிருக்கலின் விபரிதமே மனிதப் பிரபஞ்சம். இந்நாவலில் பெல்போவும், காகாபோனும், ஒரு பன்னிரண்டு ஆண்டுகால வாசிப்பின் மூலம் உருவாகும் மேற்கோள்களின் திரள் அவர்களை இதே வகைக் சுழல்கிருக்கலுக்குள் தள்ளிவிடுகிறது. ஒரு வகையில் எந்த அர்த்தமும் முக்கியத்துவமும் இல்லாத தனிமனிதர்களான பெல்போ, காசாபோன், டியோடாலேவி என்ற நபர்கள் திடீரென உலக வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளியை நெருங்கிவிடுகிறார்கள், சில நூற்றாண்டு மர்மத்தின் ஒரு பகுதியாகி விடுகின்றனர். பிரபஞ்ச வினோத நிகழ்வொன்றின் அத்தியாயமாக ஆகிவிடுகின்றன.

 

* தெளிவானதாக, பகுத்தறிவுக்கு அடங்கக் கூடியதாக தோற்றம் தரும் சமூக வெளியும், உலக மற்றும் அரசியல் வரலாற்றுப் போக்குகளும் திடீரென மர்மங்களும், மந்திர விபரீதங்களும், சதிநாடகங்களும் நிரம்பியதாக மாறிவிடுகின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு ரகசிய சங்கங்களால் மர்மமார்க்கங்களால் திட்டமிடப்பட்டு ஊடுறுவப்பட்டு, திசைமாற்றப்பட்டு கையாளப்படுபவைகளாக தோற்றம் தருகின்றன.

 

* விஞ்ஞானிகள் அனைவரும் மர்மவாத மாயாஜாலக் கலை மரபை பின்பற்றும் மந்திர மார்க்கிகளாகத் தோற்றம் தருகின்றனர்.

 

* உலகின் பல புரட்சிகளும், சமூகக்கிளர்ச்சிகளும் இவ்வகை ரகசிய, நிலத்தடி இயக்கங்கள் - மார்க்கங்களால் நிகழ்த்தப்பட்டவையாக விளக்கமுறுகின்றன.

 

* தத்துவவாதிகள், கலைஞர்கள் போன்றவர்கள் மாந்திரிக மரபின் மாறுவேடமிட்ட செயல்பாட்டாளர்களாக விளக்கப்படுகின்றனர்.

 

* ஷேக்ஸ்பியர், தாந்தே, நியூட்டன், மோசார்ட், வால்டேர், ரூசோ எனத் தொடங்கும் ரகசியமார்க்க பற்றாளார்கள் பட்டியல் மெல்ல மெல்ல நீண்டு உங்களையும் எங்களையும் கூடத் தன்வரிசையில் நி

றுத்திக் கொள்வதன் மூலம் நாம் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொள்கிறோம். ஏனெனில் சில ரகசிய மார்க்கங்களின் உறுப்பினர்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாது என்பது மட்டுமல்ல ஒருவருக்கே அவர் உறுப்பினராகச் செயல்படுவது தெரியாமல் கூட இருக்க முடியலாம்.

 

* பகுத்தறிவில் ஆகக்கூடிய மூடநம்பிக்கையும், தத்துவத்தில் மிகத்தீவிரமான காமார்த்தகமும், அறிவியலில் மிகவினோதமான தொன்மத்தன்மையும், வரலாற்றில் மிகக்குழப்பமான கட்டுக்கதையும் கலந்து கிடப்பதாக இப்பிரதி குழம்பியபடி விவரித்துச் செல்கிறது.

 

* அபுலாஃபியா என்ற பெல்போவின் கம்ப்யூட்டருக்குள் எல்லாக் கதையும் புதைந்திருக்கிறது. காசாபோனுக்கு உள்ளே நுழையும் சங்கேத வார்த்தை தெரியாது. பலநூறு சொற்களை முயற்சி செய்து முடியாத நிலையில் ''உன்னிடம் நுழைவுச் சொல் உள்ளதா? என்ற கேள்விக்கு விளையாட்டாக ''இல்லை'' என்ற சொல்லைத் தருகிறான். அதுவே அனைத்திற்கும் திறவுகோலாகிவிடுகிறது. இதுவே எல்லா அறிவிற்குமான உத்தி என அவன் இன்னொரு இடத்தில் நினைவு கூறுகிறான்.

 

* ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு மந்திரத் தன்மையுடன் உள்ளது என்றும் அதை அறிய ஒரு முறை உள்ளது என்றும் அம்முறையை அறிந்து பழகுவதன் மூலம் எந்த ஒரு பொருளையும் வெவ்வேறு விதமாகக் கையாளலாம், வசப்படுத்தலாம் என்று கூறுவது மாந்திரிக மார்க்கங்கள் தானே என்று தோன்றலாம். ஆனால் எல்லாக் கலாச்சாரங்களும் மரபுகளும் ஏதோ ஒரு வகையில் மாந்திரிக மார்க்கங்களாகவே இருக்கின்றன.

 

இந்த முரண் நிலையை இந்நாவல் ஓர் அழுத்தமான கேலியுடன் நடித்துக்காட்டுகிறது.

 

* இன்றைய உலக நடவடிக்கையில் ரகசிய சங்கங்களின் ஏதாவதொன்றின் பங்கும் பின்புலமும் இருக்கலாம் என்றும் - எதிரும் புதிருமான ரகசிய மார்க்கங்கள் தமது யுத்தத்தை மிகப்பூடகமாக உலகத்தளத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம் என்றும் - நாமெல்லாம் அவற்றிற்கு நடுவே வேறு எதையோ நம்பியபடி அலைக்கழிக்கப்படுகிறோம் என்றும் இந்தப்பிரதி கூறும் பொழுது அதை மறுக்க நாம் வேறு ஒரு பிரதியை உருவாக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

 

(எந்த ஒரு அமைப்பும், கலாச்சாரமும், மதமும் அவற்றிற்கு வெளியே உள்ளவர்களுக்கு ஒரு மர்மமான ரகசிய சங்கம் போல் புதிர்களால் அமைவதே என்பதை நினைவுகூர்வோம்).

 

* இந்நூல் மேலதிகம் பொருள்கோடல் (Overinterpretation) முறைமீறிய பொருள்கோடல் (Misinterpretation) என்ற இரு உத்திகளின் மூலம் வரலாற்றைத் தலைகீழாக்குவதுடன், அதன் தர்க்க வழியிலேயே அதன் புனித இடத்தைக் கலைத்துப் போட்டுவிடுகிறது.

 

* இந்நூல் இணையெதிர்வுகளை (Dichotomy) மோதவிட்டு வசதியான ஒரு சாராம்சவாத முடிவுக்கு வந்து சேராமல் கலப்பு முரண்களை நழுவவிட்டு முற்றொருமையைக் குலைத்துவிடுகிறது. தன்னிலைக்கும், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கும் உள்ள உறவை அதன் விபரீதமான வடிவத்துடன் அடையாளம் காணும் நிலையில் இந்நாவல் பின் நவீனத்துவ எழுத்தாக அடையாளம் பெறுகிறது.

 

* it was becoming harder for me to keep apart the world of magic and what today we call the world of facts (p.360).

 

* And I began to question everything around me; the house, the shop signs, the clouds in the sky, and the engravings in the library, asking them to tell me not their superficial story but another, deeper story, which they surely were hiding - but finally would reveal thanks to the principle of mystic resemblances. (p.361)

 

* பூமியின் சுழற்சியை நிரூபிப்பதற்காக ழான் பெர்னார் பூக்கோ என்ற விஞ்ஞானி 1851 இல் அமைத்த ஊசலும், மிஷேல் ஃபூக்கோ வரலாற்றை மறுக்க வரலாற்றை எழுதியதின் ஊசலாட்டமும் இணைந்து நினைவுக்கு வரும்படியான Foucault''s Pendulum என்ற தலைப்பும், இருவருமே பிரஞ்சு நாட்டவர்கள் என்பதும் இந்நாவலை வாசிக்கப் பெரிதாக எந்த உதவியும் செய்யப்போவதில்லை. ஆனால் டெம்ப்ளார்கள் அமைத்த சுரங்கப்பாதைகள், நிலத்தடி நகரம் போன்றவை பாரிசில் உள்ளவை என்றும் எஃபில் டவர் ஒரு Hermatic Valve என்றும் நாவல் குறிப்பிடும் பொழுது - நாவலை வாசிக்க ப்ரான்ஸ் நாட்டின் வரலாறு ஒரு பின்புலமாக அமைவதை நாம் அறியமுடியும். இப்படியாக நாவல் நெடுக அமையும் சிறு குறிப்புகள் கூட மேலதிக வாசிப்பை அவசியமாக்கிவிடுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்றைச் சுட்டி விரியும் பிரதிப்பின்னல் இது. இதன் மூலம் எல்லையற்ற பிரதிப்பரப்புகளின் சுரங்கவழித்தடங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

* இந்நாவல் வாசிக்கப்படும் பொழுது நமது அறிதல் முறை, மற்றும் மெய்காண்முறையின் எல்லைகள் கரைந்து எல்லாப்புறமும் பரவும் பாட்டைகள் விரிவதை உணரமுடியும். ஏனெனில் இது ஒரு தர்க்கப்பூர்வமாக அமைந்த அதர்க்க எழுத்து.

 

(பி.கு). ''நாளுக்கு முந்திய தீவு'' என்ற நாவல் 39 அத்தியாயாங்களுடன் 513 பக்கங்களுடைய ஒரு ஆக்கம். இந்நாவலும் இடைக்கால ஐரோப்பியச் சூழலைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. Roberto என்ற பாத்திரம் திசைதவறித் தொலைந்த கப்பல் ஒன்றில் இருந்தபடி தனது அனுபவங்களை கண்டவைகளை கேட்டவைகளை காதலை நினைவு கூர்ந்து பதிவு செய்கிறது. அந்தக் குறிப்புகளிலிருந்து வேறொருவரால் எழுதப்படுவதாக இந்நாவல் அமைகிறது.

17ஆம் நூற்றாண்டின் பிரான்ஸ் இத்தாலி நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளும் இடையே ஒரு துயரமான காதல் கதையும் எனத்தொடரும் இந்நாவலின் 37ஆம் அத்தியாயம் இப்படியாக முடிகிறது. ''He did not know that especially when their authors are now determined to die, stories often write themselves, and go where they want to go''. (p.482) இன்னும் இருமுறை நிதானமாகப் படித்தபின் விரிவாக எழுதலாம் என்று தோன்றுகிறது. வாசிக்கும் பொழுது ''இதாலோ கால்வினோ'' வின் பக்கங்கள் அடிக்கடி ஞாபகம் வருவதும் Don Quixote, அங்கங்கே தட்டுப்படுவதும் தன் முன்னீட்டுப் பிரதிகளை அடையாளம் காட்டும் குறிப்புகள் ஈகோவின் மூன்று நாவல்களையுமே இத்தாலியிலிருந்து ஆங்கிலத்தில் தந்தவர் William weavar. சில பேரிலக்கியங்களின் எழுத்தாளர்களைப் போலவே மொழி பெயர்ப்பாளர்களும் நினைவு கூறத் தக்கவர்களாக அமைவதும் இப்படியாகத்தான்.

 

கேள்வியாக ஒன்று: இலக்கியம் வாழ்க்கை அனுபவத்தையே பிரதிபலிக்க வேண்டும் என்ற அரிஸ்ட்டாடிலியக் கோட்பாட்டை ஆழமாக பதிவு செய்து வைத்திருக்கும் தமிழ் இலக்கியவாசகமனம், இலக்கியம் என்பதே தனி வாழ்க்கையும், தனி அனுபவமுமாக இருக்கலாம் என்ற முற்கோளை அடிப்படையாகக் கொண்டு முழுப்புனைவுகளாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த மூன்று நாவல்களையும் எப்படி வாசிக்கும் என்பது சற்றே புதிரான ஒன்றுதான். இப்படிச் சொல்வதன் மூலம் வாழ்க்கையின் தனித் தன்மையும் குலைகிறது. இலக்கியத்தின் தனித் தன்மையும் குலைகிறது என்பதும் இரண்டும் ஒன்றில் ஒன்று அடங்காதது என்பதையும் கூடச் சொல்லித்தரப் பின் நவீனத்துவம் தேவை இல்லை.

 

''You Know how they wrote in that Centuty..... people with no soul'' (நாளுக்கு முந்திய தீவு. பக்கம் : 513).

 

நன்றி: திறனாய்வு சில புதியதேடல்கள்

தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் - ரமேஷ்-பிரேம்

பின் - நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் - பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். ''கம்பன் புகழ் விருது'' இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ரமேஷ், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம், டெல்லி பல்கலைக்கழகத்தில் ''Indian languages and Literary Studies" துறையில் விரிவுரையாளராக உள்ளார். இந்நேர்காணல் பாண்டிச்சேரியில் உள்ள ரமேஷ் - பிரேம் இல்லத்தில் எடுக்கப்பட்டது. இதன் மொழிபெயர்ப்பு ''மாத்தியமம்'' மலையாளப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

எழுத்து என்பது தனி மனித மனம் சார்ந்த படைப்புக் கலையென நம்பப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் - பிரேம் எவ்வாறு இணைந்து சிந்திக்கவும் எழுதவும் சாத்தியப்படுகிறது?

நாங்கள் கலையை மட்டுமல்ல. எந்த ஒரு படைப்புச் செயலையுமே தனி மனித மனம் சார்ந்த, தனித்த உணர்வு சார்ந்த செயலாக எண்ணுவதில்லை. தனித்தனியே எழுதிக்கொண்டிருந்த நாங்கள். கவிதையை மனம் சார்ந்த ஊடாட்டங்களின் விளைவாகவும், மொழியைப் பரந்துப்பட்ட கூட்டு நினைவு மற்றும் கனவின் களமாகவும் புரிந்துகொண்டபின், இணைந்து எழுதத் தொடங்கினோம். இன்றைய சூழலில் கலைத்துவமான மனமும், அறிவும் மிகவும் தனிமைப்பட்டும் விலகியும் இருக்கின்றன. பிற மொழிச் சூழல்களைப் போலவே, தமிழிலும் கலைத்துவமான, கவித்துவமான நட்பும் புரிதலும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் எங்களுக்குள் தொடர் உரையாடலும், பேச்சும், முரண்பட்ட எதிரெதிர் வாதங்களும் நிகழ்வதென்பது எங்களுடைய எழுத்துக்கு மட்டுமல்ல, சிந்தித்தல், வாழ்தல் என்பவற்றிற்குக்கூட அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. மையம் உடைய, சுயத்தை நிறுவும் பல எழுத்துக்கள்கூட தனி மனித, தனிமனம் சார்ந்த படைப்புகள் அல்ல. எங்களுடையதோ இவற்றிலிருந்து விலகியது. நாங்கள் இணைந்து சிந்திப்பதும், எழுதுவதும் இயல்பானதும் அறிவியல் அடிப்படையில் சரியானதுமாகவே உள்ளது. தமிழ் மரபின் மிகத் தொன்மையான திணைக் கவிதைகள்கூட கூட்டு மனதின், கூட்டுக் கவித்துவத்தின் படைப்புகளே. தனியே எழுதுகிறவர்கள் தாங்கள் கற்றது, பிறரிடமிருந்து பெற்றது, பிற உணர்வுகளுடன் ஊடாடுவது என்பதை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மறைப்புக்கு உட்படுத்தி, தமது ''பெயரை'' மட்டும் முன்னிலைப்படுத்தி உறுதி செய்து விடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இணைந்து எழுதுதல், ''சுயம்'' மற்றும் ''தனித்த நிலையென்ற'' ஒரு பிளவு நிலையை, சிறிய அளவில் கடந்து செல்வதற்கான ஏற்பாடு. இது சாத்தியப்படுவது என்பது பண்பாடு, அரசியல், அறம் என்பவற்றில் ஏற்படும் சிதைவு, வலி, துயரம் என்பவற்றை முழுமையாக எதிர்கொண்ட படைப்பாளிகளுக்கு இன்று தேவையும் நிர்ப்பந்தமும் கூட.

சிந்தித்தலிலும், எழுதுதலிலுமான இந்த இணைப்பு எப்போது தொடங்கியது?

எங்களின் பதின் பருவத்தில் தொடங்கியது. நாங்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி காலங்களில், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள், மேலும் ஒரே வகை சமூகச் சூழல், ஒரே வகை வர்க்கப்பின்னணி, இவற்றோடு எங்கள் இருவருடைய குடும்பங்களின் பாடுகளும் வலிகளும்கூட ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. எங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களும், எழுத்தாளர்களும், திரைக்கலைஞர்களும் கலகக்காரர்களும், மகான்களும் கூட எனது ஒத்த சிந்தனை முறைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

யாருடன் உங்கள் கனவுகளையும் வலிகளையும் மிக உயர்ந்த அறங்களையும் மிகக் கீழான மனச்சிக்கல்களையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறீர்களோ, அவருடன் உங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குருவும், ஒரு வழித்துணையும், மனநோய் மருத்துவரும் தேவைப்படுகிறார். நீங்கள் எதைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். நீங்கள் எவருக்காக கண்­ர் சிந்துகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள், நீங்கள் எவற்றைக் கண்டு வெறுப்பு கொள்கிறீர்கள் என்பவற்றையெல்லாம் பொறுத்ததுதான் சிந்தித்தலும் எழுதுதலும். உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குழந்தையுடனோ, ஒரு நாய்க்குட்டியுடனோ நீங்களும் குட்டிக்கரணம் போடுகிறீர்கள். உங்கள் அரசியலும், அறமும் இவைப்பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் ஒன்றாக உள்ளன. பிறகு இணைந்து எழுதலாம். ஏனெனில் முடிவுகளை நோக்கியோ சாராம்சத்தை நோக்கியோ நீங்கள் செல்லவில்லை. செயல் மற்றும் சிந்தனை மட்டுமே நிகழ்கிறது. ஒருவர் எழுதிய இசைக்குறிப்பை மற்றவர் தனது கருவியில் இசைக்கிறார். நூறு பேர் இணைந்து ஒரே இசையை உருவாக்குகிறார்கள். கலையின் பல வடிவங்கள் கூட்டாகவே உருவாக்கப்படுகின்றன. மார்க்ஸ் - எங்கெல்ஸ். ழீல் தெலஸ் - பெலிக்ஸ் குத்தாரி போன்றவர்கள் சிலவற்றை இணைந்து எழுதியிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து எழுதுவது பற்றியே சிந்திக்கிறோம், உரையாடுகிறோம், எழுத்துக்காக மௌனமாகவும் இருக்கிறோம். யார் முதலில் தொடங்கினாலும், முடியும்போது இருவருடைய சொற்களாலும் அவை நிரம்பிவிடுகின்றன.

உங்கள் அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?

எங்கள் அரசியல் மிகச் சுருக்கமான வடிவில் வன்முறையை மறுப்பது, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, விடுதலையை ஏற்பது. எங்கள் எழுத்துக்களுக்கோ பலவித அரசியல்கள் உண்டு. பன்மையை நிறுவுதல், பலவித அணுகுமுறைகளை உணர்த்துதல், உடல் மனம் என்பவற்றின் அதிசயத்தை வியந்து கூறுதல், சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தல், மையப்படுத்தப்பட்ட உண்மைகளைக் கலைத்து, பலவித நிஜங்களின் சாத்தியப்பாடுகளை எடுத்துரைத்தல், முரண்படும் உரிமையை முன்வைத்தல், மாற்று அழகியல்களுக்குக் களம் அமைத்தல். இப்படி எத்தனையோ கூறலாம். என்றாலும், எழுதுவதே எங்களுக்கு ஒரு அரசியல் செயல்பாடாகத்தான் தோன்றுகிறது; அதன் பலவித அர்த்தங்களில், அறமும், அழகியலும் தீவிரமடையும் பொழுது நாம் அரசியல் வயப்படுகிறோம்தானே. எங்கள் எழுத்துக்கள் சில சமயங்களில் நாங்கள் இப்படி அரசியல் வயப்படுவதையும்கூட விமர்சிக்கக்கூடிய ஒரு ஆய்வுக்களமாக இயங்குகிறது. அரசியல் இல்லாமல் இருக்கமுடியாதா என்றும்கூட கேட்கிறது.

ஒரு சமூகத்தில் எழுத்தாளருக்கும் எழுத்துக்குமான பங்கு என்ன என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

எழுத்து ஒரு சமூகத்தின் மனச்செயல்பாடு. அது மொழியை இயக்கத்தில் வைக்கும் தளம். இலக்கியம் என்பதும், எழுத்து என்பதும் உண்மை என்று சொல்லப்படுபவற்றிற்குள் உள்ள புனைவுகள் பற்றியும், அழகு என்பதற்குள் உள்ள அச்சமுறுத்தும் தன்மைகள் பற்றியும் தொடர்ந்து பேசுவது. அர்த்தமுடையவை என்பவற்றுக்குள் உள்ள அபத்தங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கப்பட்டவற்றிற்குள் உள்ள அதிசயத் தன்மைகளையும் தேடிக் கண்டடைவது. உலகைப் புரிந்துகொள்ள ஒற்றைவழி மட்டும் இல்லை என்றும், மனிதர்கள் என்பதும் வாழ்வு என்பதும் ஏதோ ஒரு வகையும், வடிவமும் கொண்டு முடிந்து போவதில்லை என்பதையும் ஓயாமல் கூறிக்கொண்டிருப்பது. உண்மைகளால் ஒரு சமூகம் மூடப்படும் பொழுது கற்பனைகள், கனவுகள், புனைவுகளின் சாத்தியங்களைத் திறந்துவிடுவதாக உள்ள எழுத்து புனைவுகளால் மூடப்படுபவற்றில் உள்ள உண்மைகளை வெளிக்காட்டுவதாக மாறிவிடுகிறது. மறதிகளால் சூழப்பட்ட ஒரு சமூகத்தில் நினைவுகளை மீட்டுத் தருவதாக உள்ள எழுத்து, அதிக நினைவுகளால் பீடிக்கப்பட்ட சமூகத்திற்கு சில தேவைப்படும் மறதிகளைத் தரக்கூடியதாகவும் மாறுகிறது. மையங்களில் உள்ள முடிவுகளை ஓயாமல் சந்தேகப்படுவதன் மூலம், விளிம்புகளில் மறைந்துபோன மற்றவற்றின் இருத்தலை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தில் ஏதோ ஒரு புலன் மட்டும் மையப்பட்டு, மற்றவை பொருளற்றவைகளாக மாற்றப்படும் பொழுது, மறுக்கப்பட்ட புலன்களைச் செயல்பட வைக்கக்கூடியதாக எழுத்து உள்ளது. ஒரு வகையில் எழுத்து தனிப்பட்ட நோக்கத்திற்குள் அடங்குவதும்கூட இல்லை. அது பன்முகத் தன்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டியது. மனித இருப்பில் இத்தனைச் சாத்தியப்பாடுகளா? என்ற வியப்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், வேறுபட்ட தன்மைகளுக்கான நியாயத்தை வழங்கும் எழுத்துதான், சில சமயங்களில் எத்தனை முரண்பட்டாலும் வேறுபட முடியாத தன்மையையும் கூறிக்காட்டுகிறது.

பன்மைத் தன்மை உடைய ஒரு சமூகத்தில் ஒன்றிணைந்த சிந்தனையும் எழுத்தும் அரசியலடிப்படையில் சாத்தியமா?

எங்களைப் பொருத்தவரை ''ஒன்றிணைந்த சிந்தனை''. ''ஒன்று கலந்த சிந்தனை முறை'' என்பவற்றை நாங்கள் ஏற்கவில்லை. பன்மைத்தன்மையும் பல வகை வடிவமும் ஏற்கப்பட வேண்டும்; வேறுபாடுகளுக்கான நியாயமும் அவற்றிற்கான இடமும் ஏற்கப்படவேண்டும். இந்த ஏற்பில், புரிதலில் உருவாகும் ஒருங்கிணைப்பே அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை. மையப்படுத்தப்பட்ட அறமோ, சிந்தனை முறையோ, மதிப்பீடோ எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் வன்முறையானதாகவே இருக்கும். நிலவியல், பண்பாட்டியல், வரலாறு, வட்டாரத்தன்மை, சூழலியல் என வேறுபாடுகள் விரியும்போது அறிவியலிலும் உலகு பற்றிய பார்வையிலும் அழகியல், அறம் என்பவற்றிலும் பன்மையும் வேறுபாடுகளும் இருக்கும். நவீனத்துவம் இந்த வேறுபாடுகளை மறுத்து ஒற்றைத் தன்மையுடைய உலகையும், கனவையும், அறிவையும், அறத்தையும் முன்வைத்து தனது செயலை நியாயப்படுத்தியது. அதன் அழிவுத் தன்மைதான் இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. பரவலையும் வேறுபாட்டையும் மாறுபடும் உரிமையையும் விலகிச் செல்லும் விடுதலையையும் இன்று புரிந்துகொள்ளத் தொடங்கவேண்டும். இன்றைய எழுத்து இவற்றைப் புரிய வைக்கவேண்டும்.

மேற்குலக அறிவு இன்று அடைந்துள்ள இடம் பற்றி எப்படி விளக்குவீர்கள்?

உலகில் எத்தனை இனக்குழு சமூகங்களும் எத்தனை மொழியினச் சமூகங்களும் இருந்தனவோ அத்தனைவித பண்பாடுகளும் அறிவுமுறைகளும் அரசியல் நாகரிகங்களும் இருந்திருக்கின்றன. ஆனால். இன்று இதைச் சொல்வதே முரண்பட்ட ஒரு பயங்கரம் என்று அர்த்தம் ஆகிவிடக்கூடும் என்ற அளவுக்கு அவை அழிவுக்குள்ளாகி இருக்கின்றன. நாகரிகமடைந்த - நாகரிகமடையாத என்ற எதிரிடைகளும், அறிவியல் அடிப்படையிலான சமூகங்கள் - அறிவியல் அடிப்படை அற்ற சமூகங்கள் என்ற எதிரிடைகளும்கூட இன்று உருவாக்கப்பட்டுவிட்டன. இன்று அறிவு, சிந்தனை, தொழில்நுட்பம் என்பதே மேற்குலகின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய வன்முறை கொண்ட புனைவு. இன்றுள்ள உலகமயமாதல் என்ற வன்முறைக்கு இதுவே அடிப்படை. பலம் குறைந்த நாடுகளை, தமது பயங்கரவாதச் செயல்களால் அடிமை கொண்டு, பல இன மக்களை அழித்தொழித்த, பல நாடுகளின் இயற்கை வளங்களை நாசம் செய்த மேற்குலக பேரதிகாரத்தின் அழிவுக்கூறுகள் மாறுவேடமிட்டபடி இன்று உலக அறிவியலாக, அழகியலாக, கலை இலக்கியங்களாக, தொழில் நுட்பங்களாக பெரும் தாக்குதலைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலமும், பண்பாடும் இதில் தனது இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது. இந்திய நிலப்பரப்பில் உள்ள மொழிச் சமூகங்கள் கட்டாயம் இந்தச் சிக்கலைப் புரிந்துகொண்டு தமக்கான அறிவை, சிந்தனை முறையை எதிர்காலத்திற்காக கட்டமைக்க வேண்டியது உடனடியாகத் தேவையாக உள்ளது. உலக அறிவைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், உங்கள் நிலத்திற்கானதை உருவாக்கவேண்டும்.

உலகமயமாதலின் பயங்கரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உலகமயமாதல் என்பது மிகத் தொன்மையான அளவில் ஆக்கிரமிப்புப் போர்களின் மூலம் தொடங்கப்பட்டு, மத்திகால காலனியாதிக்க வன்முறையினால் விரிவுபடுத்தப்பட்டு, நவீனத்துவத்தால் உலக அளவில் உறுதி செய்யப்பட்டு, தற்போது முழுமையான மனித இனங்களை, நிலங்களைப் பற்றிப் பிடித்திருக்கிறது. இது அரசியல், பொருளாதாரம், உற்பத்திமுறை, போர் அச்சுறுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படும் முறைகளிலும்; பண்பாட்டு அழிப்புகள், இனக்குழு அழிப்புகள், பன்மைத்துவ அழிப்புகள், சிந்தனை முறைகளை மையப்படுத்துதல் என்ற கண்ணுக்குப் புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்களுக்கு எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது. மனிதகுல முன்னேற்றம், உலகளாவிய பரிமாற்றம் என்ற பொய்யான உறுதி மொழிகளுடன் இந்த உலகமயமாதல் எல்லாத்துறைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் வன்முறை பயங்கரமானது. ஏகாதிபத்திய பாசிசம் இதன்மூலம் உருவாகக்கூடியது. பலகோடி மனிதர்களைப் பயனற்றவர்கள் என்று கொன்றழிப்பதை நியாயப்படுத்தக்கூடியது இந்த உலகமயமாதல். உயர் தொழில்நுட்பவெறி, போராதிக்க அச்சுறுத்தல், ஒற்றைத்தள அறிவு, உலக மேலாண்மை, உலகமயமாதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. விடுதலையை, மனித நுண்ணுணர்வுகளை, பிற மனித இருப்பை நேசிக்கும். மரியாதை தரும் யாரும் உலகமயமாதலை ஏற்கவோ, சரியென்று கூறவோ முடியாது. உலகமயமாதலையும் அமெரிக்க, ஐரோப்பிய மேலாண்மையையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் வரும் வன்முறைப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி ஆயுதங்கள் அனைத்தும் உலகமயமாதலை ஏதோ ஒருவகையில் விரிவுபடுத்தி மக்களையே அழிக்கும். உலக ஆயுத வியாபாரிகள் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களையும், மோதல்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயமாதலின் பிரச்சினை பயங்கரம் பற்றிப் பேசும்போது உலகளாவிய சிந்தனை, உலகளாவிய அறிவுமுறை என்பவற்றை எப்படி விளக்குவீர்கள்?

நவீனத்துவம் கூறிய உலகளாவிய, மனித குலம் சார்ந்த என்ற உறுதிமொழிகள் பொய்யானவை என்பது தற்போது புலப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நிலத்திற்கும், இனத்திற்கும், இனக்குழுவுக்கும் தனித்தனியே அறிவும், பண்பாடும், அணுகுமுறையும், மொழியும், அழகியலும், அறமும், அறிவியல் தொழிநுட்பங்களும் இருக்கும். இவற்றையெல்லாம் பொருளற்றவை என்றும், பயனற்றவையென்றும், தவறானவை என்றும் கூறி ஒதுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த இனமும் மற்றொரு இனத்தைவிட உயர்ந்ததோ, மேலாண்மை செய்யும் உரிமை உடையதோ அல்ல. அழித்தொழிப்பு, போர்த்தாக்குதல், கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் மூலம்தான் ஒரு அறிவின்மீது மற்றொரு அறிவு மேலாண்மை கொள்கிறது. இன்றுள்ள உலகமயத் தன்மைக்குப் பின்னே உள்ள படுபாதகக் கொலைகள் எத்தனை கோடி. போர்கள் எத்தனை ஆயிரம். இன அழிப்பு எத்தனை பயங்கரமானது. இவற்றை சற்றே நினைவுப்படுத்திக் கொண்டால் உலகமயமான, மேற்கு மயமான சிந்தனை முறைகள் அறிவுமுறைகள் என்பவற்றை நாம் மௌனமாக ஏற்றுக்கொண்டு இருக்கமுடியாது. மேற்குலகின் சில மாற்றுச் சிந்தனையாளர்கள் வெள்ளை மையவாதத்தையும் இன ஒழிப்பு அரசியலையும் எதிர்த்து ஏகாதிபத்திய வன்முறையைத் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றனர்.

வரலாற்றின் முடிவு (End of History) என்பது பற்றி கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எண்பதுகள் தொடங்கி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தத்துவார்த்தச் சிக்கல் பற்றி நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

கம்யூனிசம் என்பதை ஒரு தத்துவம் என்பதைவிட, ஒரு கூட்டுக்கனவு என்று கூறலாம். மனிதர்களை நேசிப்பவர்கள் யாருக்கும் இந்தக் கனவு தோன்றலாம். இந்தியாவில் பௌத்தம் இதை வேறு வகையில் முவைத்தது. அம்பேத்கரும், காந்தியும் இதனை வேறு வேறு வார்த்தைகளில் விளக்க முயற்சித்தார்கள். இந்தியாவில் பல மகான்களும் ஞானிகளும் உண்மையான துறவிகளும் இந்தக் கனவைக் கொண்டிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் வடிவமாக, செயல் திட்டமாக மாறும்போது வேறு வடிவம் கொள்கிறது. விடுதலையை நோக்கிய கனவில் மார்க்ஸ”ம், ஏங்கெல்ஸ”ம் முன்வைத்த சோசலிசம் என்பது அற அடிப்படையில் கவித்துவமான ஒன்று. ஆனால் வழிமுறை என்பது, அவ்வளவு தெளிவானதோ, எளிதானதோ அல்ல. சோஷலிச அரசுகள் இருந்த நாடுகளில், கட்சிகளின் ஆட்சி இருந்த அளவுக்கு, சோஷலிச அறங்களும் சோஷலிச பண்பாடுகளும் இருந்தனவா என்பது மிக முக்கியமான கேள்வி. அதே சமயம் சோஷலிச கோட்பாடுகள் இன்று அய்ரோப்பா முழுக்க உள்ளீடான பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.

சோஷலிச நாடுகளின் சிதைவுகளுக்குக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?

முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் வன்முறைகளும், மூன்றாம் உலக நாடுகளின் துயரங்களும் நிரம்பிய இருபதாம் நூற்றாண்டில், சில நாடுகளில் சோஷலிச அரசுகள் உருவானது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவை தேசிய அரசுகளே தவிர வேறு இல்லை. இரண்டாம் உலகப் போரினால் உருவான தேசிய அரசுகள், சோவியத் யூனியனில் ராணுவ கண்காணிப்பின் கீழ் ஒருவித சமூகம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் பண்பாடு, அணுகுமுறைகள், சமூக உளவியல், மதிப்பீடுகள் என்பவற்றில் என்ன வகை மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி இன்றுவரை சரியான பதிவுகள் இல்லை. இந்நிலையில் அந்நாட்டு மக்களே நமது அரசுகளை மாற்றிக்கொண்டார்கள். இது அந்த வகை நாடுகளில் முடிந்திருக்கிறது. ஆனால், மற்ற ஏகாதிபத்திய நாடுகளில் முடியக்கூடியதா என்ன? அந்நாடுகளில் ஏற்பட்டது மாற்றங்கள்தாம். சிதைவுகள் அல்ல. இதனை முன்வைத்து, உலக அரசியல் - சமூகப் பார்வையிலிருந்தே - விடுதலை மற்றும் சமநீதி, சம உரிமை, மக்கள் நல இலட்சியங்களை, கோட்பாடுகளை நீக்கிவிட வேண்டும் என்று மனித அழிப்பு, ஆதிக்கக் கருத்தியலாளர்களும் முதலாளித்துவ ஜந்துக்களும் கூறுவது விஷமத்தனமானது. அறிவியல் அடிப்படையற்றது.

இதற்கு மாற்றுக்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

மேற்கத்திய அய்ரோப்பிய உதாரணங்களை விட்டுவிட்டு இந்தியச் சூழலை, இந்திய வரலாற்றை, இந்தியாவின் எண்ணற்ற மரபுகளைக் கற்று, இந்திய மரபுகளிலிருந்தே சிலவித விடுதலைக் கோட்பாடுகளைக் கண்டறிய வேண்டும். பண்பாட்டு அரசியல், தனி மனித உளவியல், நுண்ணரசியல், சாதியத்தின் கொடூரம், மதவெறி பாசிசத்தின் வேகம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மாற்றுகளை உருவாக்க வேண்டும். இந்தியச் சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்புகளை நிதானமாக ஆய்ந்தறிய வேண்டும். ஏதோ ஒரு கோட்பாடு எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என்று முரட்டுவாதம் செய்து கருத்தியல் அதிகாரத்தை நிறுவுவதை விட்டுவிட்டு, எல்லா மனிதநேயக் கருத்துக்களிலிருந்தும், அணுகு முறைகளிலிருந்தும் நமக்கான கூறுகளைக் கண்டெடுத்து இணைத்து ஆக்கபூர்வமான அரசியல் அறங்களை, மக்கள் மயமான செயல் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அம்பேத்கரையும், காந்தியையும், பெரியாரையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பல அடிப்படைக் கூறுகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீகம், அறம், சிறு மரபுகளின் ஆக்கபூர்வமான கூறுகள் ஆகியவற்றைப் புரிந்து புதியவகை சேர்க்கைகளை உருவாக்க வேண்டும். இந்திய - தமிழ் - பின் நவீனத்துவப் புரிதல்கள் எங்களுக்கு இதுபோல் சிலவற்றைக் காட்டித் தந்திருக்கின்றன. என்றாலும், இவைப் பற்றிய நீண்ட ஆய்வுகளும், விவாதங்களும் தேவை. அதுவரை ஜனநாயகத்தையும் தேசியத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் வளர்ந்து பாதுகாப்பதற்கே மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.

இன்றைய சூழலில் நீங்கள் கூறும் பௌத்தத்தின் முக்கியத்துவம் என்ன?

இதுகுறித்து அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து கூறியிருக்கிறார். காந்தியின் செயல்பாடுகளில் பௌத்தத்தின் முக்கியமான பல கூறுகள் உள்ளன. இந்திய மண்ணிலிருந்தே தோன்றிய மிகப் பெரும் அறச்சிந்தனையான பௌத்தம் தமிழகத்திலும், இந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் வாழ்வியலில் பிணைந்து இருந்திருக்கிறது. இன்றைய அரசியல் சிதைவுகள், சமூக நோய்கள், மதவெறி வன்முறைகள், உலகமயத்தாக்குதல்கள் என்பவற்றிற்கு மாற்றான புதிய வாழ்வு என்ற கோட்பாட்டை, பௌத்தத்தின் அறமும் தத்துவமும் அமைத்துத்தர முடியும். நமது மக்கள் மறந்துபோன தமது பூர்வீக சமயமான பௌத்தத்தை நினைவூட்டி, மறுஉயிர்ப்பு செய்வதன் மூலம், ஒரு மாற்று அரசியல் சமூக அறத்தையும், பண்பாட்டையும் கட்ட முடியும். மக்கள் இயக்கங்கள் பௌத்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை சிந்தனை மற்றும் பண்பாட்டுத்தளத்தில் கொண்டு செல்லும்போது பாசிசம் விரிவடைவதைத் தடுக்கமுடியும். நாங்கள் கூறும் தமிழ் பௌத்தம் இன்னும் பல விரிவான பொருளை உடையது.

உங்கள் பார்வையில் தற்கால தமிழ் அறிவுஜீவிகளின் நிலைப்பாடு அல்லது நிலை என்னவாக உள்ளது?

தமிழகத்தில் காலம்காலமாக ஒரு எதிர்மரபு இருந்து வந்துள்ளது. அறத்தையும் உண்மையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை சிந்தனையாளர் குழு இருந்து வந்துள்ளது. மக்களுக்கானவற்றைப் பேசவும், அதிகாரத்திற்கும் அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரானவற்றை வளர்க்கவும், இந்த வகை அறிவு மரபு தொடர்ந்து முயன்று வந்திருக்கிறது. காலனிய, நவீன காலச் சிக்கல்களிலிருந்து உருவான வைகுண்டசாமி, இராமலிங்க அடிகள் தொடங்கிய அயோத்திதாசர், பெரியார், ஈ.வே.ரா. வழியாக சிந்தனை மரபுகள் தமிழில் விரிவடைந்திருக்கின்றன. ஆனால், இவை மக்களிடத்தில் முழுமையாகச் சென்றடையவில்லை.

தற்போது அறிவு ஜீவிகள் என்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் குழப்பத்தை மறைக்க பல முடிவுகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் சிக்கலும், அவலமும் பன்முகப்பட்டது. இவற்றைக் கண்டறிந்து பேசவும் ஆய்வு செய்யவுமான அறிவுத்தளம் மிகச் சிறியதாக உள்ளது. மார்க்சிய, பெரியாரிய, காந்திய, அம்பேத்கரிய சிந்தனைகள் ஏதோ கட்சி மற்றும் அமைப்பு கட்டும் செயல் திட்டங்களாகக் குறுக்கப்பட்டுவிட்டன. அய்யோத்திதாசரை முன்வைத்து உருவான பௌத்த சிந்தனை அய்ரோப்பிய தொண்டு நிறுவனமாகிவிட்டது. விவாதங்கள் விரிவாக்கப்படுவதில்லை. மார்க்சியம் பேசுபவர்களுக்கு கிராமிய, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. பெரியாரியம் பேசுபவர்களுக்கு சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டு உள்ளீடுகள் பற்றியும் சமூக மனவியல் பற்றியும் புரிதல் இருப்பதில்லை. காந்தியம் என்பது செயலற்ற, தனி மனிதப் பேச்சாகவும், வசதியான கௌரவ வேடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அம்பேத்கரியம் என்பது கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டசபையில் இடம் பிடிப்பதன் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு குறுக்கப்பட்டுவிட்டது.

தமிழில் அறிவு - சிந்தனை என்பதன் விரிவான அக்கறைகள் மறதிக்குள்ளாகியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிறுவனங்கள், அமைப்புகள் இவற்றைத் தமது கருவிகளாக்கிக் கொண்டது முதல் காரணம். மக்கள் குழு என்பது கும்பல் அரசியல், திரைப்பட அரசியல், மத அமைப்பு அரசியல் என்பவற்றைத் தவிர எதையும் அரசியலாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது. அறிவுஜ“விகள், சமூகச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகமயமான சிக்கல்கள் பற்றியும் இந்தியச் சமூகம், தமிழ் சமூகம் அடைந்துள்ள சிதைவுகள் பற்றியும் மிகக் குறைவான புரிதல் மட்டுமே கொண்டவர்களாக இருப்பதுடன் தத்தமது சிந்தனைகளை முடிவுகளிலிருந்து தொடங்குபவர்களாகவும் உள்ளனர். இவை பற்றிய ஓரளவு புரிதல் உள்ளவர்கள் சிதறிப்போய் தனிமைப்பட்டு கண்ணில் காணமுடியாத சிறுபான்மையினராகவே இருக்க வேண்டியிருக்கிறது. தமிழக பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் மேடைகளையும் பார்த்து வரும் ஒருவருக்கு எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையும் ஏற்பட வழியில்லை. கல்பாக்கம், கூடங்குளம் என இரு அணு உலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு பெரும் ஆபத்தை எப்போதும் தனக்குள் கொண்டுள்ளது. இது பற்றிய எந்தவொரு சொரணையும் தமிழரிடத்தில் இல்லை. பச்சையற்ற மண்ணாக மாறிவரும் தமிழகத்தில் 90 சதவீதம் பேச்சுக்கள் திரைப்படங்கள், திரைப்பட நடிக, நடிகைகள், கிரிக்கெட் பற்றி மட்டுமே இருப்பதை எந்தப் பின்னணியில் புரிந்து கொள்வது. விவசாயம் அழிந்துபோன நிலங்கள் பற்றிய பேச்சும் அழிந்துகொண்டிருக்கும் காடுகள், மலைகள், நீர்நிலைகள் பற்றிய பேச்சும் கூட சிறுபான்மை பேச்சுகளாகவே இருக்கும் இந்தச் சூழலில் அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்பவர்களின் இடம் என்ன? காலம் இன்னும் தேவை என்றுதான் தோன்றுகிறது. தமிழில் அறிவுத்துறையும், சமூக அரசியல் சிந்தனையும் மன அமைப்புடன் ஒன்றிய தொடர் நிகழ்வாக மாற இன்னும் காலம் எடுக்கும். அமைப்புகள் தமது எல்லைக்குள் இயங்குவது தவிர்க்கமுடியாதது. ஆனால், சிந்தனையாளர்கள் அவை கடந்த கேள்விகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவர்கள்.

தமிழிலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

தமிழின நவீன இலக்கியம் தொடங்கிய காலத்திலிருந்து மிக முக்கியமான பிரச்சினைகளும் கேள்விகளும் ஆராயப்பட்டு வருகின்றன. தமிழின் நவீன மனம், நவீன வாழ்வு, நவீன அடையாளம், நவீன மதிப்பீடுகள் அதன் மரபான அமைப்புகளுடன் மோதும்போது ஏற்படும் சிக்கல்களும், மாற்றங்களும் ஏற்பதில் நேரும் குழப்பங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால் எதார்த்த எழுத்து, எதார்த்தவியல் பார்வை என்பது முக்கியம் பெற்று உறுதியான வடிவமாகிப் போனதனால், தமிழ்ச் சமூகங்களின் பலவித கதை மரபுகள், கதை கூறும் முறைகள் மறுதலிக்கப்பட்டு, எழுத்துக்கான ஒரு உள்ளார்ந்த தணிக்கையும் ஒடுக்குதலும் ஏற்பட்டுவிட்டது. தற்போது புதிய வகை எழுத்து கதை கூறுதல், கதை அமைத்தல், முரண்பார்வைகள், பலகுரல் தன்மை என்பவற்றின் வகைமைகள் மூலம் புதிய வடிவங்களை நோக்கிச் செல்ல முனைந்திருக்கிறது. ஆனால் தமிழில் பலவகைத்தன்மை, சிறு மரபுகள், கதை கூறலின் பன்மைச் சாத்தியப்பாடுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட செவ்வியல் தன்மை உடைய எழுத்துகள் இனி தேவைப்படுகிறது. எதிர்கால எழுத்துக்கள் அதை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து என்பது நுண்மையான ஒரு கலைத்தொழில் என்பதுடன் பன்முக அறிவும் பல்துறைப்பயிற்சியும் தேவைப்படும் நிகழ்கலை வடிவம் என்ற பிரக்ஞையுடன் எழுதப்படும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எப்போதும் போல் வெறும் பேச்சுக் கதைகள், பெருங்கலாச்சாரக் கதைகள் அதிகம் பெருகி நுண்ணுணர்வுகளை, நுண்ணறங்களை, நுண்ணழகியல்களை நசிவுபடுத்தும் என்பது மட்டும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை எதிர்த்து நிற்கும் வலிமையுடன் சிறுபான்மை நுண்ணிலக்கியவாதிகள் செயல்படுகிறார்களா என்பதை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஒன்றையும் நுகர்பொருளாக்கி ஆற்றல் அழித்துவிடும் சக்தி தற்போதைய ஊடகங்களுக்கு உண்டு. அவற்றின் வன்முறையை மீறி தமிழிலக்கிய வகைமைகள் வளருவதற்கு கடின உழைப்பும் போராட்டமும் நிறைந்த வாழ்வும் எழுத்தாளர்களுக்குத் தேவைப்படுகிறது.

நன்றி: தீராநதி 2005

 

மூன்று பெர்னார்கள் - பிரேம் ரமேஷ்

1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.

குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் சப்தம். இடம் மாறும் காலடிகளின் ஓசை, கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வாகனங்கள் எழுப்பும் இரைச்சல்களும் அடங்கிவிட, சற்றுமுன் மணியோசையில் அதிர்ந்து கோபுரத்தை விட்டுப் பறந்த புறாக்கள் மீண்டும் வந்தடையும் சிறகோசை. எல்லாம் முடிந்துவிட்டது. ஆம் அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது. நீர் கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.

கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நனைந்தபடி நடந்துகொண்டிருக்கும்போது முதன்முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.

நெடிய உருவம். தமிழனா ஐரோப்பியனா என அறுதியிட இயலாதத் தோற்றம். கட்டுத் தளராத குரல். பிரெஞ்சு மொழி பேசிப் பழகிய வாய்க்கே உரித்தான கரகரப்போடு வெளிப்படும் தமிழ். எந்தவொரு அசைவிலும் அவசரங்காட்டாத ஒரே சீரான தாள கதி. பெர்னாரை இத்தனை சீக்கிரத்தில் இழந்துவிடுவேன் என நான் நினைத்ததில்லை.

கப்பித்தேன் மரியூஸ் ஸவியே தெருவில் வெளித்தோற்றத்தில் காரை பெயர்ந்து இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை. வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன் கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை. கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க, எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறு மரம்போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள். பெர்னார் குடும்பத்தினரின் பல்வேறு வடிவங்கள் கொண்ட தொப்பிகள். பல தொப்பிகள் தங்களுக்கானத் தலைகளை என்றோ இழந்துவிட்டதன் சோகத்தை என்னைக் கண்டதும் மீண்டும் பொருத்திக்கொண்டு அசைந்தன. உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம். தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற வெள்ளாடையுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள். அதற்கடுத்து சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் அவருடைய பூசையறை என்று சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமான ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில், புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஒரு முறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப்பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அதற்கு அவள், ‘மெர்ஸ்யே திட்டுவாரு’ எனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.

பெர்னாரின் வினோதமான பழக்கவழக்கங்களையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.

ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பெர்னார் ஒயினில் தனது சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கி அருந்தியதைக் கண்ட நாங்கள் எல்லோருமே திடுக்கிட்டோம். மேலும் அவர் புகையிலை ஊறிய ஒயினை அருந்துவதற்கு ஈடான ருசியும் போதையும் வேறெவற்றிலும் இல்லை எனவும் சொல்வார்.

பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.

பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார். விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார். மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்துத் தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

எனக்கு எப்பொழுதுமே பிறருடைய வாழ்க்கை பற்றிய செய்திகளில் ஈடுபாடு இருந்ததில்லை. பெர்னாருடைய வாழ்க்கைக் கதையில் எனக்குத் தேவைப்படுவது எதுவுமே இல்லை என்றபோதும், என் மனைவிக்கு உதவுமே என அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை அவர் சொன்னார்: தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று. வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது, எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.

வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வள்ளலார் தான் நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார். கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் சொல்ல; தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேசவேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

ஒருமுறை பெர்னாரிடம் நான் கேட்டேன், “உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன். உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்குத் திறந்து காட்டவில்லையே” என்று. அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு நிதானமாக, “வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்” என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். பிறகு அதையே தமிழிலும் சொல்ல எத்தனித்து சரியான சொற்கள் வந்து சேராமல் குழறினார்.

அவர் வீட்டில் குழல் விளக்குகளை பயன்படுத்துபவர் அல்லர். எல்லாயிடங்களிலும் குண்டு விளக்குகளையே பொருத்தியிருந்தார். வீட்டின் பழமையும் குண்டு விளக்கின் ஒளியும் நல்ல போதையில் ஒருவித மாயப் புதிரென மனசெல்லாம் படியும். அப்படித்தான் அன்றும் இருந்தது. மஞ்சள் மின்னொளியில் வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது. நான் பெர்னாரிடம் சொன்னேன், “வள்ளலார் இறக்கவில்லை. அவர் மறைந்துவிட்டார். சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள். நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்.”

பெர்னார் கடகடவென சிரித்து “போதையில் உனது பிரெஞ்சு மொழி அப்படியொன்றும் மோசமில்லை” என பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாகத் தெரிந்தது.

நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோ” எனக் கத்திவிட்டேன்.

கிழவர் ஆடிப்போய்விட்டார். தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்துசென்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூசையறைக்குள் சென்றார். பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்றுத் தெரிகின்றன. என் மனைவியிடன் நான் அதைச் சொல்ல அவள் கலவரத்தோடு என் மனோநிலையைச் சோதித்தாள். அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் எனக் கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக்கூடாது என என் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்தியைக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் அவர் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் பிரான்சிலிருந்து வந்த பிறகு ஈமக்கிரியையை முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை.

ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசினான். தான் இந்த வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி கட்ட இருப்பதாகவும் நான்தான்  அவனுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டான். நான் கலவரப்படலானேன்.

“கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடைய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்தானே” என ஒருவிதக் கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.

நான் மௌனமாக இருந்தேன்.

“சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”

நான் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தேன். பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக்கொள்ளலாமா என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.

அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன்.

“நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டாள்.

மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் “என்ன முடிவு செய்தீர்கள்” எனப் பதறினான்.

”அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல, இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ, அற்புதமோ இதன் மூலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது” என நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.

நீண்டநேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான்.

விடிந்தால் போகி. விடிய விடிய குடித்தபடி இருந்தோம். என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம். சவப்பெட்டி ஒரு காவித்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கிவிட்டு ஆணியறையப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித்துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சடசடவென தீ எழுந்தது.

ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர். அரைமணி நேரத்ஹ்டில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்துகொண்டிருந்தது.