திலீப்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திலீப்குமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அசோகமித்திரனின் 'விமோசனம் ': ஒரு சிறு குறிப்பு - திலீப்குமார்


தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்று 'விமோசனம் '. கதையைப் பற்றிக் கூறும்முன் அசோகமித்திரனின் மொழிநடையைப் பற்றிக் கூறவேண்டும். அசோகமித்திரனின் மொழிநடையின் ஆதார இயல்பு மிகவும் எளிமையானது. வாக்கிய அமைப்புக்களிலும் சொற்பிரயோகங்களிலும் மிகச்சாதாரணமான ஒரு பாணியையே கையாள்பவர் அவர். அவரது எழுத்தின் ஆற்றல் என்பது அவரது மொழிநடைக்கு அப்பாற்பட்டே உள்ளது. அசோகமித்திரன் பிரக்ஞை பூர்வமாக கடைபிடிக்கும் இந்த எளிமை பல சந்தர்ப்பங்களில் ஒரு வாசகனை அலுப்புறச் செய்துவிடும். ஆனால் நுண்ணுணர்வு கொண்ட ஒரு வாசகனுக்கு இந்த எளிமை ஒரு இலக்கிய அனுபவத்தைத் தரக்கூடும். தவிர, ஒரு வாசகன் பெறக்கூடிய இலக்கிய அனுபவம் பெரிதும் இக்கதைகளின் மொழிநடையின் எளிமையையே மறைமுகமாகச் சார்ந்திருக்கிறது.

'விமோசனம் ' என்ற கதை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகிறது. கீழ்-மத்தியத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சராசரி கணவன் - மனைவி பற்றிய கதை. கணவன் மென்மையான உணர்வுகளற்ற ரொம்பவும் சாதாரணமான ஒரு மனிதன். மனைவியை சிறு-சிறு விஷயங்களுக்காக துன்புறுத்துபவன். தேக ஆரோக்கியமில்லாதவன், பொறுமையற்றவன்; ஏழை. ஒரு பூஜைக்காக ஒரு மகான் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்கு இவர்கள் செல்லும் தினத்திலிருந்து கதை சொல்லப்படுகிறது. பூஜைக்குச் சென்ற இடத்தில் அவன் மனைவி குழந்தைக்கு பால் புகட்டும் புட்டியை கொண்டு செல்கிறாள். அவளால் மகானை சந்திக்க முடிவதில்லை. அந்த மகான் இவளைப் பார்த்த சில நொடிகளில் இவளுக்குத் தன் துக்கத்தையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்ற துடிப்பு ஏற்படுகிறது. ஆனால் எப்படியோ அவளால் எதுவும் சொல்ல முடியாமல் போகிறது. அவள் திரும்பி வீட்டுக்கு வருகிறாள். அவள் கணவன் அன்று வரவில்லை; பின் எப்போதுமே வரவில்லை. இது 'விமோசனம் ' கதையின் சாராம்சம்.

இந்தக் கதை கணவன்-மனைவி என்ற பேதத்திற்கு அப்பாற்பட்டு மனித இயல்பின் தன்மைகளை பற்றியதாக இருந்தாலும், பிரதானமாக ஒரு இந்தியத் தன்மை மிகுந்த கதை. இக்கதையில் தோன்றும் முரண், இரு மனிதர்களுக்கிடையேயும் தோன்றக்கூடிய ஒன்றுதான்; இருந்தாலும் ஒரு சராசரி இந்திய தம்பதியினர்க்கிடையே வைத்து இந்த முரண் இயங்கும் போது இந்தக்கதை பல பரிமாணங்கள் பெற்று கூர்மையடைந்து விடுகிறது.

பொதுவாகக் கணவன்-மனைவி என்றில்லாமல் இரு தனி நபர்களுக்கிடையேயான உறவுகூட அவர்களது தனித்தனியான மனவார்ப்புகளின் சமநிலையையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த மனவார்ப்பின் மூலக்கூறுகளை ஒரு மனிதனுக்கு அவன் சார்ந்திருக்கும் சமூகம்; நடை முறையிலிருக்கும் மதிப்பீடுகள், கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் இவற்றின் வாயிலாக வழங்குகிறது. ஒருவன் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நடைமுறையிலுள்ள கலாச்சார மற்றும் மதிப்பீடுகளைக் கொண்டு தன் மனவார்ப்பின் தன்மையை அமைத்துக் கொள்கிறான் என்றாலும், கூடவே தன் அறிவு, அனுபவம் இவற்றிற்கு ஏற்ப சமூகம் அவனிடம் வலியுறுத்தும் மதிப்பீடுகளில் சிலவற்றை அங்கீகரித்து ஏற்கவும், சிலவற்றை நிராகரித்தும் விடுகிறான். இச்செயல்முறையின் மூலம் அவன் தனக்குள், தனக்கே உரிய ஒரு இசைவையும் சமநிலையையும் அடைகிறான். இதுவே அவன் தன் சமூகத்துடனும் சகமனிதனுடனும் உறவு கொள்ள அவனுக்கு உறுதுணையாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மனவார்ப்பு, அச்சமூகத்தின் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பவே ஒரு சமநிலையை அடைகிறது. காலமாறுதலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின், ஒரு குறிப்பிட்ட தனி மனிதனின் மனவார்ப்பின் சமநிலை அறவே சமன் இழந்தும் தோன்றக்கூடும்.
ஒரு சராசரி இந்தியக்கணவன்-மனைவிக்கிடையேயான உறவு, முக்கியமாக அவர்களுக்கிடையேயான அன்யோன்யமான கணங்களின் தொகுப்பிலிருந்தே உருக்கொள்கிறது. இந்த அன்யோன்யமான கணங்களின் தொகுப்பானது எத்தனையோ சிறுசிறு உணர்வுகளையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியது. அழகு, இருவரது உடலமைப்பின் பரஸ்பர அங்கீகரிப்பு, உடலுறவு, உடலுறவுக்கொள்ளும் பாங்கு, மற்றும் மனநிலை, பேச்சு, சிரிப்பு, வியாதிகள், சாப்பாடு, சாப்பாட்டின் ருசிகள், பொருளாதார நிலை, சமய நம்பிக்கை ஆகியவை. ஒரு கணவனும் மனைவியும் இந்த அன்யோன்யமான கணங்களினூடேதான் ஒருவருக்குள் மற்றவர் பிரவேசிக்கவேண்டியுள்ளது. ஆனால் இந்த பிரவேசமானது ஒரு குறிப்பிட்ட எல்லைவரையே சாத்தியமாகிறது. ஒருவர் மற்றவரது மதிப்பீடுகள், லட்சியங்கள், கற்பிதங்கள் சார்ந்த ஆதாரமான மனவார்ப்பை என்னதான் அன்யோன்யமாக அவர்கள் இருந்தாலும் நெருங்கவே, பாதிக்கவோ முடிவதில்லை. இவர்களுக்கிடையே எத்தனை அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இருந்தாலும்கூட இது சாத்தியமாவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்களது ஆதார மனவார்ப்பின் சமநிலை பராமரிக்கப்படுவதால்தான் மேற்குறித்த அன்யோன்யமான கணங்களே சாத்தியமாகின்றன. தம்பதியினருள் ஒருவரது ஆதாரமான மனவார்ப்பின் சமநிலை குலைந்து போனாலும்கூட அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் ஒரு நொடியில் மறைந்துவிடக்கூடும்.
அசோகமித்திரனின் 'விமோசனத்தில் ' நிகழ்வது இதுதான். இக்கதையில் வரும் மனைவி, கணவன் தன்னை துன்புறுத்தும் ஒரு கட்டத்தில் அவனை வழக்கத்துக்கு மாறாக எதிர்க்கிறாள். இப்படி எதிர்ப்பதன் மூலம் அவள் தன் கணவனின் மனவார்ப்பின் சமநிலையை குலைத்துவிடுகிறாள். இது நடந்த உடனேயே, அவர்களுக்கிடையேயான அன்யோன்யம் சுத்தமாய் மறைந்து விடுகிறது. கூடவே, மனைவியும் தன் கணவனை எதிர்த்ததன் மூலம் தானும் தன் மனவார்ப்பின் சமநிலையை இழந்துவிட்டதாக உணர்கிறாள். எத்தனையோ அன்யோன்யமான உணர்வுகளும் நிகழ்வுகளும் இந்த தம்பதியினர்க்கு இடையேயும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தும்கூட இவர்களது வாழ்க்கை ஒரு இசைவை திரும்பப்பெறுவதேயில்லை. கணவன் தன் மனைவியை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடுகிறான்.

'விமோசனம் ' கதையில் வரும் மேற்குறித்த நிகழ்ச்சியில் உள்ள மனோதத்துவப் பரிமாணங்களை தவிர அதற்கிருக்கும் சமூகப் பொருண்மையும் மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இது ஒரு தனிப்பெண்ணின் எதிர்ப்பாக இல்லாமல், நம் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட கால வரையிலான மொத்தப் பெண்மையின் எதிர்ப்பாகவும் இது சொல்லப்படலாம். மேலும் நம் காலத்துப் பெண்மைக்கு சாத்தியப்பட்ட எதிர்ப்பு இவ்வளவுதான் என்பதையும் இக்கதை வரையிறுத்துச் சொல்கிறது. இதன் விளக்கமாகவே இந்தப் பெண் மீண்டும் தன் கணவனுடன் தனக்கிருந்த உறவை மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள தன் கணவனின் காலில் விழுந்து மன்றாடுகிறாள். இச்செய்கையிலுள்ள மனோதத்துவ யதார்த்தத்தைப் போன்றே ஒரு சமூக நிலையின் பிரதிபலிப்பும் உள்ளது. இவள், தன் கணவனோடு தனக்கு ஏற்பட்ட பிணக்கு தீராத ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அந்த மகானைத் தேடி செல்கிறாள். இக்கதையில் வரும் மகான் ரொம்பவும் இயல்பான ஒரு பாத்திரமாக படைக்கப்பட்டு இருந்தாலும், இப்பெண் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது அவர் யதார்த்த உலகிற்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின், ஒரு உணர்வின் குறியீடாக மாறிவிடுகிறார். இந்தப் பெண்ணும் அத்தகைய ஒரு சக்திக்காகவே, தர்க்க அடிப்படையில் அது விவேகமற்றதான ஒரு செயலாகப்பட்டாலும் ஏங்கி நிற்கிறாள். நாம் நினைப்பது போலவே அவளுக்கு அவள் எதிர்பார்த்த 'விமோசனம் ' கிடைப்பதில்லை.
இதில் வரும் கணவன் தன் மனைவியின் செயலுக்குக் காட்டும் எதிர்வினை ஒரு சமூக உண்மையின் பிரதிபலிப்பாக மட்டும் காணப்பட வேண்டிய ஒன்றல்ல. இக்கதையின் நீட்சிக்கான ஆதாரக்கூறுகள் இந்தக்கதையின் சமூக மற்றும் நடைமுறை மதிப்பீடுகளின் மீதான விமர்சனத்தையும் தாண்டி இக்கதையின் மனோதத்துவப் பரிமாணங்களிலேயே உள்ளன என்று நான் சொல்லுவேன்.

உருவ ரீதியாகவும் இக்கதையில் பல சிறப்புகள் உள்ளன. இக்கதையின் சக்தி முழுவதும் இதில் வரும் மனைவி தன் கணவனை எதிர்க்கும் கட்டத்தில் 'உம் ' என்று சொல்லும் ஒலிக்குறிப்பில் தான் மையம் கொண்டிருக்கிறது. இம்மையத்தில் இருந்து ஒரு ரொம்பவும் சாதாரணமான ஒலிக்குறிப்பு வாயிலாக வெளிப்படும் சக்தி, கதையின் ஒவ்வொரு சொல்லையும் உயிர்ந்தெழச் செய்கிறது. அதைத் தாண்டியும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அசோகமித்திரன் இக்கதை நெடுகிலும் நாம் எளிதில் அலட்சியப்படுத்திவிடக் கூடிய சிறு சிறு நடைமுறைத் தகவல்களை எவ்வித ஆயாசமும் இன்றி கூறிக்கொண்டே செல்கிறார். இந்தக் கதையில் வரும் கணவன்- மனைவி பாத்திரங்கள் தங்கள் மனவார்ப்பின் சமநிலையை ஒரு கட்டத்தில் இழந்து விடும்போது மேற்குறித்த தகவல்களும், அவை கூறப்பட்டிருக்கும் விதத்தில் காணப்படும் துல்லியமும், அவை கூறப்பட்ட விதமும் திடாரென்று ஒரு விஷேசத்துடிப்புடன் இயங்குவதை பார்க்கமுடியும்.

இன்னொரு முக்கியமான அம்சம். பொதுவாக பெரும்பாலான கதைகளில் வருவதுபோல ஒரு முரண், அதன் இயக்கம், அதற்கொரு தீர்வு என்றில்லாமல் இக்கதையில் அதன் முரணை ஆரம்பத்திலேயே கூறி, அதன் இயக்கத்தை நாம் பொருட்படுத்திவிட முடியாத ஒரு தொணியில் விளக்கி, தீர்வு என்று ஏதும் ஆவேசமாக கூறாமல் கதையம்சத்தின் சுவாரஸ்யத்திலிருந்து விடுவித்து வாழ்க்கையின் பிரத்யட்சங்களை நோக்கி நம்மை அழைத்துவருகிறார் அசோகமித்திரன். கணவன் மனைவி உறவு பற்றி பல நிலைகளிலிருந்தும் நாம் படித்து உணரக்கூடிய கதை 'விமோசனம் '.

நன்றி - திண்ணை 

அக்ரகாரத்தில் பூனை – திலீப்குமார்

”இந்த கிழட்டுமுண்டைக்கு ஒரு சாவு வர மாட்டேன் என்கிறது. இதோடு இது ஏழாவது தடவை!” பப்லிப் பாட்டி அசூயையுடன், தாழ்ந்த குரலில் குஜராத்தியில் கறுவினாள்.

சமையற்கட்டிலிருந்து வெளியே வந்த மதூரி பாய் பார்த்ததும் புரிந்துகொண்டாள். “குடித்துவிட்டுப் போய்விட்டதா, மறுபடியும்!” “பீடை, ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இப்படி அப்படி நகர முடிகிறதா”… என்ற பப்லிப் பாட்டி சட்டென்று, “அது சரி மகாராணி, திறந்த வீட்டில் பூனை நுழைந்ததுகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்துகொண்டிருந்தீர்களோ!” என்று தன் மருமகளைப் பார்த்து இலக்கணச் சுத்தமாக வக்கணை செய்தாள்.

கிழவிக்கு இதற்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று மதூரிக்குத் தெரியும். ‘நான் பூஜை முடிப்பதற்குள் கடலை மாவு பிசைந்து முருங்கைக்காய் கறியைச் செய்து முடித்துவிடு’ என்று அவள்தான் சற்றுமுன் கூறியிருந்தாள். கடலை மாவு ‘கமகம’ என்று வறுபட்ட வாசனையைக் கிழவி மோப்பம் பிடிக்காமலா இருந்திருப்பாள். சமையலறைக் கதவருகே, தன் முக்காட்டை நழுவவிடாமல் இரு விரல்களாள் பிடித்தபடி, வழக்கமான கோணத்தில் வழக்கம்போல் அமைதியாக நின்றாள் மதூரி.

“சரி, சரி என்ன பார்க்கிறாய், போ, இன்னொரு கிண்ணம் பால் எடுத்துக்கொண்டு வா!… இன்று நட்டூ வந்ததும் இந்தப் பூனைச் சனியனுக்கு ஏதாவது வழிசெய்ய வேண்டும்” என்றாள் பப்லிப் பாட்டி.

பப்லிப் பாட்டி வீட்டில் சலசலப்புக் கேட்டதும், அந்த முதல் மாடி முற்றத்தில் ஜட்டி அலசிக்கொண்டிருந்த கோபால் பாயும், பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த சாரதா பெஹ்னும் வந்து எட்டிப்பார்த்தார்கள். “கெட்டிக்காரப் பூனைதான்! நான் பார்க்கப்பார்க்க நொடியில் மாயமாக மறைந்துவிட்டதே” என்று தாடையில் கைவைத்து நாசூக்காய் அங்கலாய்த்தாள் சாரதா பெஹ்ன். பப்லிப் பாட்டி பதில் சொல்லாமல் பூஜை அலமாரிப் பக்கம் திரும்பினாள்.

தங்கசாலைத் தெருவில் ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குப் பின்புறம் தெப்பக்குளத்தைச் சுற்றி ஏகாம்பரேஸ்வர் அக்ரஹாரம் ‘ப’ வடிவில் இருந்தது. பொதுவாக ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகளே நுழைவதில்லை. கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளில் அக்ரஹாரத்தில் ஒரு பூனைகூட நுழைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அக்ரஹாரவாசிகளும் பூனைகளை அவ்வப்போது தங்கசாலைத் தெருவிலோ கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ அல்லது  கொண்டித்தோப்பிலோதான் பார்க்க நேரிட்டது. ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில் பூனைகள் நுழையாததற்குச் சூழலியல் காரணங்கள் என்பதைவிடவும் தத்துவார்த்தக் காரணங்கள்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அக்ரஹாரவாசிகளில் பெரும்பாலோர் புஷ்டி மார்க்கி வைஷ்ணவர்கள். தென்கலை வைஷ்ணவர்களுக்குப் பூனைகளின்மீது இருக்கக்கூடிய அபிமானம் புஷ்டி மார்க்கிகளிடம் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ‘பாலகிருஷ்ண’ பிரதானமான புஷ்டி பார்க்கத்திலும் பஷு பட்சிகளிடம் அன்பு என்ற உப கோட்பாடு இருப்பது வாஸ்தவம்தான். ஆனாலும், பாலித்தின் பைகளையும், சினிமாப் போஸ்டர்களையும் தின்று, கண்ட இடத்தில் சாணி போடும் மாடுகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிருஷ்ண பரமாத்மனே ஒரு மாட்டுக்காரந்தானே! பூனைகளின் உள்ளுணர்வு இந்தப் பேருண்மையைச் செம்மையாக விளக்கிக்கொண்டிருந்தது போலும் — அஃதாவது சென்ற ஏப்ரல் மாதம்வரை.

மே மாதம், மேற்கூறிய கிழட்டுப் பெட்டைப் பூனை எதேச்சையாக அக்ரஹாரத்தில் நுழைந்ததை யாரும் எதேச்சையாகக்கூடக் கவனிக்கவில்லை. அக்ரஹாரத்தின் 24 மத்தியவர்க்கக் குஜராத்திக் குடும்பங்கள் வாழும் 25-ஆம் எண் கட்டடத்தில், முதல் மாடியில் 9ஆம் எண் வீட்டின் முன்னறையில் பப்லிப் பாட்டி பூஜைக்குப் பால் எடுத்துவைத்துவிட்டு பாலகிருஷ்ணனுக்காக பீடா தயாரிக்க வெற்றிலையைக் கழுவ உட்கட்டுக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் துல்லியமாகப் பிரசன்னமாகி, தயக்கமின்றி உள்ளே புகுந்து ஒரு முழுக் கிண்ணப்பாலை நக்கித்தீர்த்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் அது திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் முதல்முறையாகக் கண்ணில் பட்டது.

பூனையைப் பார்த்ததும் பப்லிப் பாட்டிக்கு முதலில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. “அரே… அரே… பிலாடி., பிலாடி. மதூ பிலாடி… மதூ பிலாடி.”(பிலாடி - பூனை மதூ - மதூரி) என்று சத்தமாக குஜராத்தியில் உளறினாள். சத்தம் கேட்ட பூனை திரும்பிப் பார்த்துச் சலனமின்றி ஓரிரு கணங்கள் நடுக்கூடத்தில் நின்று, பாட்டியைக் கண்ணுக்கு கண் பார்த்தது. பிறகு அலட்சியமாக நடந்து சென்றது. கதவருகே இருந்த மடிக்கோலைப் பாட்டி சட்டென்று எடுத்துப் பூனையை நோக்கித் தாறுமாறாக எறிந்தாள். பூனை லாவகமாக நகர்ந்து மறைந்தது.

குழாயடியிலிருந்து ஈரக்கையுடன் ஓடிவந்த மதூரிக்குத் தன் மாமியாரின் கலவரமடைந்த முகத்தைப் பார்த்ததும் முதலில் சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரிக்கவில்லை அவள். பப்லிப் பாட்டி உதட்டை மடித்து ஆதங்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். “போனால் போகிறது விடுங்கள் பா, வாயில்லா ஜீவன்” என்ற மதூரியை, “ச்சீ வாயை மூடு, மலட்டுக் கழுதை” என்று வன்மத்துடன் இரைந்தாள். சிறுமைப்பட்டு நின்றாள் மதூரி.

பப்லிப் பாட்டிக்கு பாரியான சரீரம். நரைதிட்டான சிறு கொண்டை. நீண்ட பெரிய மூக்கு. மெலிதான எஃகு பிரேம் போட்ட மூக்குக்கண்ணாடி. கழுத்தில் துளசிமாலை.

செக்கச்செவேலென்று பழம்போல் இருப்பாள்.

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து குளித்து, வெள்ளைப் புடவை அணிந்து, பாழும் நெற்றியோடு, ஐந்து கட்டடம் தள்ளியிருந்த ஹவேலிக்குச் (புஷ்டி மார்க்கிகளின் கோயில்) சென்றால் 10 மணிக்குத்தான் திரும்பிவருவாள். வந்தபின், தன் குடும்ப விக்ரஹங்களுக்கு விஸ்தாரமாகப் பூஜை செய்யத் துவங்குவாள். சமையலைறைக் கதவருகே இருக்கும் கண்ணாடிச்

சட்டமிட்ட ஒரு தேக்கு அலமாரிமுன் உட்கார்ந்துகொள்வாள். அலமாரியைத் திறந்தால் சின்னச்சின்ன விக்ரஹங்கள் ஜரிகைத் துணி அணிவிக்கப்பட்டுக் குட்டிக்குட்டி மெத்தைகள்மேல் உட்கார்ந்திருக்கும். பாட்டி எல்லாவற்றையும் முறையாக வெளியே எடுப்பாள். ஜரிகை உடைகளைக் கழற்றிவிட்டு, விக்ரஹங்களுக்கு ஸ்நானம் செய்விப்பாள். வெல்வெட் துணியால் அவற்றைத் துடைத்து, பிறகு பெரிய பிஸ்கட் டப்பாவிலிந்து புதிய வஸ்திரங்களை எடுத்து நிதானமாக அணிவிப்பாள். பிரதான விக்ரஹமான பாலகிருஷ்ணனுக்குக் கட்டைவிரல் சுற்றளவில் ஒரு ஜரிகைத் தொப்பியும் இருக்கும். குங்குமப்பொட்டு வைத்து முடித்தபின் மீண்டும் அவற்றைக் குட்டிக்குட்டி மெத்தைகள் மேல் உட்காரவைப்பாள். பிறகு, அலமாரிக்குமுன் ஒரு பலகைமேல், ஒரு பெரிய தாம்பாளத்தில் அன்றைய உணவு வகைகள் எல்லாவற்றையு, சிறுசிறு கிண்ணங்களில் வட்டமாக அடுக்கிவைப்பாள். ஒரு கிண்ணத்தில் சின்னச்சின்ன பீடாக்கள்கூட இருக்கும். சற்றுக் கழித்து தீபாராதனை காட்டி, மணி அடித்து, ஜெய ஜெகதீஸ்வர ஹரே மெட்டில் ஒரு பஜனை பாடி அலமாரியை மூடிவிடுவாள். அதற்குப் பிறகுதான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள்.

பப்லிப் பாட்டியை முன்னிட்டு ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்திற்க்கு அபார பிரக்யாதி ஏற்பட்டிருந்தது. ஆன்மீக விஷயங்களில் கரைகண்டவள் என்று பெயரெடுத்திருக்கிறாள். அதிலும் குறிப்பாகப் புஷ்டி மார்க்க நியம நிஷ்டைகளில் அவள் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. என்ன பிரச்சினைக்கு என்ன விரதம், என்ன பூஜைக்கு என்ன பலன், சிரார்த்தத்திர்ற்கு, திருமணத்துக்கு, வளைகாப்புக்கு, நவராத்திரிக்கு, நலங்குக்கு என்று எல்லா வைபவ விதிமுறைகளும், பரிகார உப விதிமுறைகளும் அவளுக்கு அத்துபடி. பாகவதத்தை தலைகீழாக ஒப்பிப்பாள். தத்துவ விசாரத்தில்கூட அதன் நுட்பமான எல்லைகள்வரை சென்று வாதிடுவாள். (சில வாரங்களுக்கு முன்பு, புஷ்டி பார்க்கம் குறித்து முனைவர் பட்ட ஆய்வுசெய்துகொண்டிருந்த ஒரு மாணவி பரோடாவிலிருந்து வந்து இவளுடன் பேசிக் தெளிந்துவிட்டுப் போனாள்.) ஒரு விசேஷத்திற்கு அவள் வந்திருக்கிறாள் என்றால் அங்கு மந்திரம் சொல்ல வந்திருக்கும் பிராமணர்கள்கூட உஷாராக இருப்பார்கள்.

பப்லிப் பாட்டி இவ்வளவு அருமை பெருமைகளுடன் திகழ்ந்து கொண்டிருந்தாலும் அவளது மாட்டுபெண்ணான மதூரி அவற்றைப் பிடிவாதமாக ஏற்க மறுத்தாள். மதூரியைப் பொறுத்தவரை “கிழவி லேசுபட்டவள் இல்லை” என்ற எண்ணமே இருந்தது.

என்றாலும், தன் மாமியாரின் பூஜைக்கு இப்படி அடிக்கடி பங்கம் ஏற்படுவது குறித்து அவளுக்கும் வருத்தம்தான். சென்ற ஆறு முறையும் இப்படித்தான் நிகழ்ந்தது. விளக்குத் திரி எடுக்க, பருப்பு சாதம் பிசைய, பழங்கள் நறுக்க, தீப்பெட்டி எடுக்க என்று பப்லிப் பாட்டி உட்கட்டுக்குள் மறைந்த ஓரிடு நிமிடங்களில் சொல்லிவைத்தாற்போல் வந்து கண் இமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டுப் போய்விடும் அந்தக் கில்லாடிப் பூனை.

அன்று மாலை, பப்லிப் பாட்டியின் மகன் நட்டூ(என்கிற நட்வர்லால்) அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் அவனிடம் பாட்டி பூனையைப்பற்றிப் புகார்செய்தாள்.

“நட்டூ, நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கிழட்டுப் பீடையை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடு.”

நட்டூ பார்ப்பதற்க்குத்தான் போலீஸ்காரன் போல் வாட்டசாட்டமாக இருப்பானே ஒழிய சரியான அசமாந்தம். சத்தம்போட்டு பேசக்கூடப் பயப்படுவான். செம்புதாள் தெருவில் ஒரு மார்வாடி வியாபாரிக்கு 2-ஆம் நம்பர் கணக்கு எழுதுகிறான். நட்டூ 1-ஆம் நம்பரில் ஆயிரமும் 2ம் நம்பரில் ஆயிரமும் சம்பளம் வாங்குகிறான். வம்புதும்பு, பீடி சிகரெட், சினிமா-டிராமா எதுவும் கிடையாது. அவன் உண்டு. அவன் வேலையுண்டு. அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் உடைமாற்றி, டீ சாப்பிட்டுவிட்டு ஹவேலிக்குப் போய்விடுவான். இரவு எட்டு மணிக்கு மேல்தான் திரும்புவான். சனிக்கிழமை மட்டும் இரவு பத்து மணிக்கு பஜனைக்குப் போவான். குஜராத்தி வருஷப்பிறப்பு அன்று மதூரியை சினிமாவுக்கோ பீச்சுக்கோ அழைத்துச்செல்வான்.

“என்ன பா சொல்கிறாய்! பூனையைக் கொல்வது பாவமில்மையா?” என்று பதறினான் நட்டூ.

”அட உப்பில்லாதவனே, பூனையைக் கொல்லவா சொன்னேன். அந்தக் கழுதையை எங்காவது விரட்டிவிட்டு வா என்கிறேன். பூனையைக் கொல்வது பாவம் என்று எனக்குத் தெரியாதா…. பேசிகிறான் பார்.”

”எங்கேயென்று போய் விரட்டுவது, பா. விரட்டுவதற்கு முதலில் அது கண்ணில் பட்டால்தானே. எல்லாம் உன் அஜாக்கிரதையினால்தான். பூஜை பண்ணுகிறேன் என்று, ஊருக்கு முன்னால் பால் கிண்ணத்தை எடுத்து வந்து நடுக்கூடத்தில் வைத்துவிட வேண்டியது. அப்புறம், ஹாய் ஹாய் என்று அலற வேண்டியது.” (ஹாய்=அய்யோ)

“போதும் போதும்”, ரொம்ப சமர்த்தாகாதே. பூஜை எப்படிப் பண்ணுவது என்று இனி நான் உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது.”

“சரி சரி, விடு. சூரியிடம் சொல்கிறேன். அவந்தான் இந்த மாதிரி வேலைக்கு லாய்க்கு.”

“உன் மூளை பிசகித்தான்விட்டது! போயும் போயும் அந்த துஷ்டப் பயலா. அந்த அக்கிரமி பூனையை நிஜமாகவே கொன்றாலும் கொன்ருபோட்டுவிடுவான். ஜாக்கிரதை.”

“நீ அதைப்பற்றிக் கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் நட்டூ தீர்மானமாக.

சூரி - பப்லிப் பாட்டியின் தம்பி ரஞ்சித்சிங்கின் மூத்த மகன் சுரேந்திரன். வேலைவெட்டி இல்லாதவன். ‘பளிச்’சென்று உடைகள் அணிந்து நண்பர்கள் புடைசூழ, கல்கத்தா பீடாவை ஓயாமல் குதப்பிக்கொண்டு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருப்பான். குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளின் எல்லாம் கெட்டவார்த்தைகளையும் சரளமாகப் பயன்படுத்துவான். கடவுளையும் பணக்காரர்களையும் அவனுக்குப் பிடிக்காது. ஆனால் அன்புக்குக் கட்டுப்பட்டவன். அக்ரஹாரத்தில் எல்லாத் தப்பு-தண்டாவுக்கும் அவன்தான் கட்டைப் பஞ்சாயத்து. ‘நீதிக்குப் பின்தான் சாதி’ என்ற அடிப்படையில் சில நாட்களுக்கு முன்பு, அக்ரஹாரத்திற்க்குப் பூ விற்க வந்த பெண்ணிடம் வம்புசெய்த ஒரு குஜராத்தி நடுவயதுக்காரர்களின் சைக்கிளைச் சேறும் பாசியும் படிந்த கோயில் தெப்பக்குளத்திற்குள் தூக்கிக் கடாசிவிட்டான்.

சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்துகொண்டிருந்த மதூரிக்குத் தாயும் மகனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. அவள் அந்த வெள்ளைப் பூனையை நினைத்துக்கொண்டாள்.

அந்த வயதான பூனை முகம் தளர்ந்து, தோல் சுருங்கி, ரோமம் உதிர்ந்து சாகக் காத்திருக்கும் பாவனையில் பரிதவித்துக் காணப்படும். அது உற்றுப்பார்த்தபோது திடீரென்று ஏதாவது பேசத்துவங்கிவிடும் என்றுகூடத் தோன்றும் அவளுக்கு. பப்லிப் பாட்டி வீட்டில் இல்லாத சமயங்களில் அது முன்கதவருகே வந்து களைத்துப்போன குரலில் ‘மியாவ்’ என்று வாயைப் பிளந்து காட்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் அதற்குப் பால் கொடுத்திருக்கிறாள் மதூரி. ஒரு வகையில் தனக்கும் அந்த பூனைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று நினைத்தாள். அந்தப் பூனைபோலவே தானும் பதுங்கிப் பதுங்கி வாழ்வதாகப் பட்டது. அந்தப் பூனைக்குக் குட்டிகள் இருக்குமா? நிச்சயம், அதன் பருவத்தில் அது ஓரிரு குட்டிகளையாவது ஈன்றிருக்கும்.

அல்லது ஒருவேளை அதுவும் தன்னைப்போல் மலடுதானா. அதன் நிராதரவான சின்ன வாழ்க்கையின் சின்ன சாகஸங்களைப்போல்தான் தன் வாழ்க்கையிலும் என்று நினைத்தாள் மதூரி.

பூனைக்கு ஒரு கிண்ணம் பால் என்பது தனக்கு ஒரு புடவை அல்லது கடற்கரையில் ஒரு மாலை அல்லது ஒரு இந்திப் படம். அந்த பூனையைப் போலவே தானும் ஒரு நாள் முதிர்ந்து சிதைந்துவிடுவோம் என்று தோன்றியது. அந்த பூனையைப்போலவே தன்னையும் ஒரு நாள் தனிமை வாட்டும். அன்புக்கான சந்தர்ப்பம் வயோதிகத்தில் நிச்சயம் இருக்காது.

செலுத்துவதற்காக மண்டியா கிடக்கிறது அன்பு. அப்படியானால் யாருடைய இதயத்தில். பப்லிப் பாட்டியின் இதயத்திலா. தன் கணவன் நட்டூவின் இதயத்திலா. எங்கே… எங்கே பதுங்கிக் கிடக்கிறது அன்பு என்ற அபத்தம். அந்த கிழட்டுப் பூனையின் பழுப்பு நிறக் கண்களிலா?

பிசைந்த சப்பாத்தி மாவைத் திரட்டித் தட்டில் ஓங்கி அறைந்தாள் மதூரி.

நட்டூவுக்குப் பூனை விஷயம் பெரியதாகப் படவில்லை. அவன் அதை உடனே மறந்துவிட்டான். ஹவேலியிலிருந்து திரும்பும்போது சூரியைப் பார்த்ததும்தான் ஞாபகம் வந்தது.

”மனே கயி தீத்துந்தே நட்டூ பாய்! சம்ஜோ தமாரு காம் தய் க்யூந்.”(என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, நட்டூ அண்ணா. உங்கள் காரியம் ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்.) சூரி உற்சாகமாகக் கூறினான். “நீங்கள் சொன்னால் அந்தப் பூனையை அக்ரஹாரத்தைவிட்டு என்ன, அமெரிக்காவிற்கேகூட ‘பாக்’ செய்யமாட்டேனா என்ன?”

நட்டூ கலவரத்துடன், “அதெல்லாம் வேண்டாம். 25-ஆம் நம்பர் பக்கம் வராமல் செய்துவிடு. அது போதும்” என்றான்.

“டன், நட்டு அண்ணா டன்” என்று ஆங்கிலத்தில் உறுதி அளித்தான் சூரி.

மறுநாள் காலை பாட்டியின் மாப்பிள்ளை ஹன்ஸ்ராஜ் வேலை விஷயமாகக் கொச்சியிலிருந்து வந்து இறங்கினார். அவர் எப்போதும் இப்படித்தான். சொல்லாமல்கொள்ளாமல் திடுதிப்பென்றுதான் வருவார்.

பப்லிப் பாட்டி தன் மாப்பிள்ளையை ரொம்பவும் உயர்வாகத்தான் மதித்தாள். அவரிடம் அவளுக்குப் பிடிக்காத விஷயம் அவர் பொடிப் போடுவார் என்பதுதான். ஹன்ஸ்ராஜூக்கு முப்பத்தெட்டு வயதுதான். பாகவதர் கிராப்போடு முகத்தை மறைக்கும் அடர்ந்த தாடி மீசையுடன் பேண்ட் போட்ட சாமியார்போல் இருந்தார். கல்யாணத்திற்குப் பிறகுதான் இப்படி ஆகிவிட்டார் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள்.

பப்லிப் பாட்டியின் மகள் நிம்மு, கல்யாணத்திற்கு முன் சாதாரணமாக இருந்தவள், கல்யாணம் ஆனவுடன் திடீரென்று உடல் பருக்க அரம்பித்துவிட்டாள். முதலில் ஏதோ கல்யாணமான சந்தோஷத்தில் தான் உடல் பருக்கிறது என்று நினைத்தார்கள். பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக அவ்ள் ரொம்பவும் குண்டாகிப்போனபோதுதான் அது எதோ வியாதி என்று தெரிந்தது.

ஹன்ஸ்ராஜுக்குப் பூர்வீகச் சொத்தும் இருந்ததோடு அவரும் நிறையச் சம்பாதித்தார். தன் மனைவிக்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தார். பயன் இல்லை. நிம்மு முப்பது வயதில் அசாத்திய குண்டாகிவிட்டாள். ஜாக்கட் தைக்க 2 1/4 மீட்டர் துணி தேவைப்பட்டது. ஆட்டோவில் அவள் ஒருத்திதான் உட்கார முடியும். பத்து அடி நடப்பதற்குள் மூச்சுவாங்கும்.

வீட்டில் கூட அவள் உட்கார்ந்தோ தவழ்ந்தோதான் காரியங்களைச் செய்வாள். அவளது  உடல்வாகிற்கு அனுகூலமான வகையில் சமையல்கட்டையே மாற்று அமைத்திருந்தார்.

ஹன்ஸ்ராஜ். நிம்மு தன் பருமனைபற்றி அதிகம் கவலைப்படமாட்டாள். சிரிக்கச் சிரிக்க எல்லோரிடமும் அன்பு பாராட்டுவாள். அவளுடன் பத்து நிமிடம் பழக நேர்பவர்கள்கூட நெகிழ்ந்து துடித்துவிடுவார்கள். விருந்தினர்கள் வரும்போது, சமையலைறைக்குள் ஒரு சிறு குழந்தையைப்போல் தவழ்ந்து தவழ்ந்து காரியங்கள் செய்து உபசரிப்பாள். அதிகம்போனால் அவள் இன்னும் பத்து ஆண்டுகள்தான் உயிர்வாழ்வாள் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்கள். “நான் செத்தால் என்னைத் தூக்குவதற்குப் பதினாறு பேர் வரவேண்டும் என்று சொல்லி ‘கெக்கெ கெக்கெ’ என்று சத்தமாக சிரிப்பாள் நிம்மு. ஹன்ஸ்ராஜூக்கு தன் நிம்முமீது உயிர்.

ஹன்ஸ்ராஜ் தங்கியிருந்த ஒரு வாரமும் பூனை பப்லிப் பாட்டி வீட்டுப்பக்கம் வரவில்லை. மாப்பிள்ளைக்கு உபசரணை செய்யும் மும்மரத்தில் பாட்டிகூட அதை மறந்துவிட்டிருந்தாள்.

ஹன்ஸ்ராஜ் ஊருக்குக் கிளம்பும்போது நிம்முக்குப் பிடித்த பட்சணங்களை ஒரு பெரிய டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.

“இந்தக் தீபாவளியிலிக்காவது நிம்முவை அழைத்துவர முடியுமா என்று பாருங்கள்,” என்றாள்.

“அவள் நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. அவள் வருவதென்றால் வேன் வைத்துத்தான் அழைத்துவர வேண்டும். அதற்கு நீங்களே பேசாமல் கொச்சிக்கு வந்து ஒரு வாரம் தங்கிவிட்டுப் போங்களேன். உங்களுக்கும் மாறுதலாக இருக்கும்.”

”என்ன மாறுதல் போங்கள். நீங்கள் சொன்னால் ஆகிவிட்டதா? நான் கிளம்பிவிட்டால் வீட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? இவளுக்கு துப்பிக் கிடையாது. கவர்னர் பட்வாரிக்குக் கூட நேரம் கிடைத்துவிடும். எனக்கு எங்கே?” என்று மருகினாள் பாட்டி.

வாசல் பக்கம் நட்டூவைப் பார்த்ததும், “சரி நீங்கள் கிளம்புங்கள். நட்டூ ரிக்‌ஷாக்கூடக் கூட்டிவந்துவிட்டான்.”

வாசல்வரை வந்து வழியனுப்பிய பாட்டி, தன் மகளை நினைத்து, அந்த அழுகையை அடக்கிக்கொண்டாள். “போய்வருகிறேன் சகோதரி” என்று மதூரியைப் பார்த்துச் சொல்லிவிட்டுக்

கிளம்பினார் ஹன்ஸ்ராஜ்.

பத்து நாட்கள் கழித்து தீடீரென்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 25-ஆம் எண் கட்டடத்திற்குச் சூரி வந்தான் அந்த கிழட்டுப் பூனையுடன். பப்லிப் பாட்டு வீட்டுக் கதவருகே வந்ததும் குழந்தைகளும் பெரியவர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். சூரியின் மடக்கிய இடது கைக்குள், அவன் மார்பில் தலைசாய்ந்து ஒரு குழந்தையைப்போல் ஒடுங்கிக்கொண்டிருந்தது பூனை.

”என்ன ஜாலம்டா இது! திருட்டுச் சனியன் உன்னிடம் இப்படிக் குழைகிறதே” என்று வியந்தாள் பப்லிப் பாட்டி.

“அதுதான் சூரி! தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பத்து நாட்களில் ஐந்து லிட்டர் பாலையும் எட்டு டபுள் ஆம்லெட்டுகளையும் விழுங்கியிருக்கிறது இது. பூனையை வசியம்செய்வது என்றால் சும்மாவா! கொண்டுபோய் விடுவதற்குமுன் உங்களிடம் காண்பித்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். சொல்லுங்கள் அத்தை, எங்கே கொண்டுபோய் விடட்டும்…. திருவொற்றியூரிலா திருவான்மியூரிலா?”

சூரி தன் வலது கையால் அதன் முதுகைத் தடவிக் கொடுக்கக் கொடுக்க, பூனை புதுப்பெண்போல் கூச்சத்துடன் நெளிந்து நெளிந்து காட்டியது.

பூனையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பப்லிப் பாட்டி, ஏதோ தீர்மானித்தவள்போல், “டேய் சூரி, போய்விடாதே, இதோ வருகிறேன்” என்று உள்ளே சென்றாள். தன் மாப்பிள்ளை மறந்துவிட்டுச் சென்ற பொடி டப்பியைத் தேடினாள்.

அவசரமாகத் திரும்பி வாசலுக்கு வந்தாள். ரகசிய பாவத்துடன் கையசைத்துச் சூரியை அருகே வரச்சொன்னாள். பின் தாழ்ந்த குரலில் பூனையைத் தன்னருகே கொண்டுவரும்படி சொன்னாள். சூரி பூனையின் வயிற்றைப் பிடித்தபடி அதை பாட்டிக்குமுன் நீட்டினான். பாட்டி, சட்டென்று இடுப்பில் வைத்திருந்த மூடிய கையைப் பூனையின் முகத்தருகே கொண்டுவந்து, அதேநொடியில் உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த மூக்குப்பொடி முழுவதையும் பூனையின் மூக்கில் வைத்து அழுத்தித் தேய்த்துவிட்டாள்.

மறுகணம், மின்சாரம் தாக்கியதுபோல் பூனை சூரியின் கைகளிலிருந்து எகிறி மல்லாக்கக் கீழே விழுந்தது. அதற்குப் பொறி கலங்கியிருக்க வேண்டும். பூனை எழுந்து நிற்க முனைந்ததும் மறுபடியும் எம்பித் தாறுமாறாக விழுந்தது. முற்றத்தின் குழாயடி, சாக்கடை, கழிவறைக் கதவு என்று மாறி மாறி மோதி விழுந்தது. அது எழுப்பிய வினோதமான குரல் பயங்கரமாக இருந்தது. ஒவ்வொரு முறையுமது சமாளித்து எழுந்து நடக்க யத்தனித்தபோது கால்கள் குழைந்து விழுந்தன. தன் சிறிய தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பிப் பரிதாபமாகத் தும்மித்தும்மி விழிந்தது.

பப்லிப் பாட்டி கையை உதறினாள். பூனைக்குப்போக, எஞ்சியிருந்த மூக்குப்பொடி காற்றில் பறக்க, குழுமி இருந்தவர்கள் பலரும், சூரி உட்படத் தும்ம ஆரம்பித்தார்கள். தள்ளி நின்றுகொண்டிருந்த சில ஆண்களும் சிறுவர்களும் பூனை தும்மி விழுவதைப் பார்த்துக் குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார்கள். பூனை அந்த முதல் மாடி விளிம்பின் ஒற்றைக்கல் சுவரில் ஏறி, மீண்டும் தும்மி, சத்தத்துடன் கீழ்த்தளத்தில் விழுந்தது. பிறகு மெல்ல எழுந்து கட்டடத்தை விட்டு ஓடியது.

சிரிந்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து மிக மிக ஆபாசமான ஒரு வசையைக் கத்திவிட்டுச் சூரி பூனையைத் தொடர்ந்து கீழே ஓடினான்.

திடீரென்று அங்கு ஒரு நிசப்தம் படர்ந்தது. ஒவ்வொருவராக எல்லோரும் கலைய ஆரம்பித்தார்கள். பாட்டி, வீட்டின் உட்புறம் திரும்பியதும், நடுக்கூடத்தில் மதூரி நின்றுக்கொண்டிருந்தாள். பாட்டி சட்டென்று தலைகுனிந்து முன்னே நகர்ந்து அவளைக் கடந்தாள்.

அன்று மாலை பாட்டியைப் பார்க்க யாரோ வந்தார்கள். பப்லிப் பாட்டி ஆரம்பித்தாள் : “புஷ்டி மார்க்கம் என்ன சொல்கிறதென்றால்……..”

நன்றி – சொல்வனம்

மூங்கில் குருத்து - திலீப்குமார்

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவையிலிருந்த தையல்

கடைகளில் வாரக்கூலி முறை அமல்படுத்தப்பட்டிருந்தது. திரு.கிருஷ்ணாஜிராவ்

கடையிலும் அப்படித்தான்.

வாராவாரம் வியாழக்கிழமை தட்டி-பாஸ் தயவில் ’குலேபகாவலி’, ‘குலமகள் ராதை’ போன்ற

ஒப்பற்ற ‘திரைக்காவியங்களை’ இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டுக்

கனவுக்கன்னிகளின் திரட்சிகளை மனத்திற்குள் ஆலிங்கனம் செய்து, லுங்கியைக்

கறைபடியச் செய்து கெட்டுப்போய்க் கொண்டிருந்த அநேகம் கடைப் பையன்களைப்

போலத்தான் நானும். அண்ணன் சென்னைக்கு ஓடித்தொலைத்தாயிற்று. அக்காவை

நீலகிரியில் ஒரு எஸ்டேட் மானேஜருக்குத் தாரை வார்த்தாகிவிட்டது. அக்காவின்

அழகு அவளுக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டத்தையும் கூட்டிக் கொடுத்தது. தம்பிக்கு

ஐம்பது ரூபாயில் ஒரு ரெடிமேட் ஃபாக்டரியில் வேலை. எனக்குத் திரு

கிருஷ்ணாஜிராவ் கடையில்.

தறிநெய்கிற தேவாங்கச் செட்டிமார்கள் அதிகமாகப் புழங்குகிற தியாகராஜ

புதுவீதியில் இட்லி விற்கும் ஒரு விதவைச் செட்டிச்சியின் வீடு.

கட்டடவியலுக்குக் களங்கம் கற்பிக்கிற ஒரு வினோதமான கர்ப்பக்ரஹம் அது. இருளைக்

கிழித்து உள்ளே நுழைந்தால், இருபத்தி நாலு வயதில் அப்பாவை இழந்த அம்மா

வெள்ளையணிந்து கோட்டுருவமாய்ச் சமைந்து காணப்படுவாள். ஆஜானுபாகுவாயிருந்த

அப்பா மூல வியாதி முற்றி ஆசனவாயிலிருந்து ரத்தம் கசியக்கசியக் கதறிய அந்தக்

கடைசிக் கதறல் என் நாலு வயது மனத்தில் வடுவாய்ப் பதிந்துவிட்டது. அந்த

நாட்களில் அம்மாவின் அழுகுரல் கூரையிலிருந்து அடிபட்டுச் சரியும் காகத்தின்

மழுங்கின கரைதலைப் போல் இருக்கும். இன்றும் அக இரைச்சலற்ற அமைதியான இரவுகளில்

அந்தக் குரல் எப்போதாவது உயிர்த்தெழும்.

திரு கிருஷ்ணராஜி ராவ் மராத்தியர். குள்ளம், குண்டு நிறைய கெட்ட வார்த்தைகள்

பேசுவார். நிறையக் குடிப்பார் என்றாலும் தொழிலில் படுகில்லாடி. இதன் விளைவாகவே

வெள்ளைக் கார கலெக்டர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மிகவும் நெருக்கமானவராக ஒரு

காலத்தில் திகழ்ந்தார். மல்யுத்த வீரன் கிங்காங்குக்கு “சூட்” தைத்து அதன்

கச்சிதத்தில் அந்த மாவீரன் மயங்கி, உற்சாகத்தில் திரு ராவை, குழந்தையைத்

தூக்குவதுபோல் தலைக்கு மேல் உயர்த்திக் கொஞ்சி விட்டுப் போனதும், பெருந்தலைவர்

காமராஜர்க்குக் கதர்ச்சட்டை தைத்துக் கொடுத்ததும் இவரது நீண்ட தொழில்

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

அந்த நாட்களில் இவர் சம்பாதித்த பணம் ஏராளம்! சினிமா எடுத்துத் தோற்றுப்போனது

போக மிச்சத்தைப் போத்தனூரின் ஆங்கிலோ - இந்தியப் பரத்தைகளிடம்

கரைத்துவிட்டார். இப்போது, காலேஜ் காண்ட்ராக்டிலும், கிழடாய்ப் போய்விட்ட

இவரது இளம் வாடிக்கையாளர்களின் தயவிலும் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

சுபிட்சத்திலிருந்து தரித்திரத்திற்குச் சரிந்த திரு ராவின் வீடு, தையற்கடை,

நவாப் ஹகீம் ரோடின் கோடியில் ஒரு சினிமாக் கொட்ட கைக்கு எதிரில் இருந்தது.

மேஜை, நாற்காலிகள், ‘கௌண்டர்கள்’, தையல் இயந்திரங்கள் அனைத்துமே நவீனமற்றுச்

சிதைந்து பழமை பகரும். ஒரு கம்மிய இருள் கடைக்குள், எப்போதும்.

செவ்வகமாயிருந்த கடையின் பின்பகுதியை வீடாக உபயோகித்துக் கொண்டிருந்தார்

திரு,ராவ். ஒரு குமாரனையும் மூன்று குமாரத்திகளையும் திரு ராவுக்காகப்

பெற்றுத்தந்த திருமதி லக்‌ஷ்மிபாய் கொள்ளை அழகாக இல்லாவிட்டாலும் தளராத

உடம்புக்காரி. நல்ல உடம்பு. நாற்பத்து மூன்று வருஷங்களை விழுங்கிவிட்டு

முப்பதாய் காட்டுகிற வசீகரம். திரு ராவ் குடித்து விட்டு இவளை அறைந்தும்

குத்தியும் அவள் இடது காது செவிடாகி இருந்தது. மூத்த பெண் சுமித்ரா பியுசி

படித்துக்கொண்டு, ‘சிமெண்ட்டா’ல் மெழுகின, ‘பாவ’மில்லாத முகத்துடன், மதிய

வேளைகளில் பாவாடை விலகி, கால்கள் தெரியக் கிடப்பாள். (வீட்டுக்குள்ளிருந்த

தொலைபேசி, திரு.ராவ் இல்லாத சமயமொன்றில் கிணுகிணுத்ததனால் கிட்டிய தரிசனம்).

இரண்டாவது பெண் கௌரிக்கு வயது பதின்மூன்று. நீண்ட பெரிய கண்கள். நீண்ட நாக்கு.

அடுத்தது பையன். எட்டு வயதில் சொத்தைப் பற்களுடன் எல்லோரையும் திட்டிக்

கொண்டுத் தாவும் வானரம். கடைசியாய் ’லட்டு’ என்ற சுலோச்சனா. மூணு வயது.ஒரு

நாளைக்கு முப்பது தடவை மலம் கழிப்பவளாக இருந்தாள்.

கோபிநாத்ராவ், பத்மநாத் ராவ் , கோவிந்த ராவ், தேஷ் பாண்டே, ரகுநாத் ராவ்,

பாண்டுரங்க ராவ், மல்லிகார்ஜுன ராவ் என்று ஒரு ஏழை மராட்டியர் பட்டாளத்தையே

வேலைக்கு அமர்த்தியிருந்தார் ராவ். சில்லரை பண்ணுகிற சுகுமாரன் (வயது 10)

மலையாளி. கணக்குப் பார்க்கிற நான் குஜராத்தி. கணக்கு என்றால் ஏதோ பெரியபெரிய

பேரேடுகளைப் புரட்டிப் புரட்டி எழுதுகிற வேலை இல்லை. திரு. ராவ் இல்லாத

சமயங்களில் வசூலாகும் பணத்தைக் கணக்கு வைத்து, அவர் வந்து வெற்றுடம்போடு

அமர்ந்து ‘கத்திரி’ மார்க்கைச் சப்தத்துடன் உறிஞ்சி ஊதிக்கொண்டிருக்கிற

சுமுகமான மனநிலையில் விவேகத்துடன் கொடுத்துவிட வேண்டும். என் சக ராவ்கள் தினம்

ஒன்று இரண்டு என்று வாங்கும் முன்பணத்தைப் பற்று எழுத வேண்டும். அளவு

எடுக்கும் போது குறித்துக்கொள்ள வேண்டும். குறித்ததைத் துணியுடன் ஒரு துண்டுக்

காகிதத்தில் எழுதி கட்டிங் மாஸ்டர் கோபிநாத் ராவிடம் கொடுக்க வேண்டும்.

(கோபிநாத் ராவ் 50 களின் இந்திப்பட வில்லன்களைப் போல மங்கிய முகத்தில் அம்மைத்

தழும்புகளோடு கண்கள் ஜ்வலிக்க, பார்ப்பவர்களைக் கலவரப்படுத்துகிற மனிதன். திரு

ராவுக்கும் இவனுக்கும் ஏற்படும் சச்சரவுகளின் போது 32ஐ 22 ஆக வெட்டித்

தள்ளிவிடுவான். தான் எழுதித் தரும் துண்டுச் சீட்டிலும் மாற்றிவிட்டு

என்னையும் மாட்டிவிடுவான். பிறகு என் கற்பும், என் அம்மாவின் கற்பும் திரு

ராவின் நாக்கில் துவண்டு சிதைந்து பறிபோகும்),

கடையில், எத்தனை முறை தட்டினாலும் போகாத தூசியைத் தட்ட வேண்டும். கௌரிக்கு

லீவ் லெட்டர் மற்றும் ‘எக்ஸ்கர்ஷன்” பற்றிய காம்போசிசன் எழுதித்தர வேண்டும்.

‘லட்டு’வைக் கொஞ்ச வேண்டும். மிச்சமிருக்கிற நேரத்தில் ஒரு கணக்குப்

புத்தகத்தை முன்னால் பிரித்துப் போட்டுவிட்டு மேஜைக்கு மேலே தொங்கும் மங்கிப்

போன கண்ணாடியில் கணக்குப் பார்க்கிற பாவனையில், முகத்தை வெறித்துக்

கொண்டிருக்கலாம்.

அன்று சனிக்கிழமை.

திரு ராவ் காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டிருந்தார். எதிர்க் கொட்டகையில்

திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு

டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க

ஆரம்பித்திருந்தார்கள்.

இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க,

இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில்

கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில்

காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு,

அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் -

தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக

இருக்கக் கூடாது என்று அறிந்த - புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில்

சரிக்கட்டி இருந்தான்.

கோபிநாத்ராவ் வாசலில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். கடைக்குள்

அமைதியாக இருந்தது.

பொதுவாக இந்த நேரத்தில் ‘ராவ்’கள் எல்லோரும் உற்சாகமாகப் பேசிக்கொள்வார்கள்.

தையலைப் பற்றி, தையல் இயந்திரங்களைப் பற்றி, அங்கே இல்லாத ‘காஜா’ எடுக்கும்

இயந்திரங்களைப் பற்றி... இந்தப் பேச்சுகள் எங்கிருந்து துவங்கினாலும் அநேகமாக

எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே சென்று

முற்றுப்பெறும். - எல்லா இந்திய சர்ச்சைகளையும் போல். அன்று அது பற்றிக்கூட

பேச ஒன்றுமில்லாததுபோல மௌனமாக இருந்தார்கள் எல்லோரும்.

அன்று வசூல் பிரமாதம் இல்லை. பிற்பகல் மூன்று மணிவரை பதினைந்து ரூபாய்கூட

வரவில்லை. இதற்குள் எல்லோரும் என்னிடம் ஓரிரு முறை வசூல் எவ்வளவு என்று

தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தார்கள். மாலைக்குள் இருநூறு

ரூபாயாவது ஆனால்தான் அனைவருக்கும் கூலி தர முடியும். ஆகும் என்ற நம்பிக்கை

யாருக்கும் இல்லை.

திரு ராவின் ஊழியர்களுக்கு இம்மாதிரியான இக்கட்டுகள் புதியவை அல்ல. மாதத்தின்

கடைசி வாரத்தில், அநேகமாக எல்லா மாதங்களிலும், இப்படி நடந்துவிடும். சென்ற

மாதம் திரு ராவ் பெங்களூர் சென்றிருந்தபோது வசூலே ஆகாத ஒரு சனிக்கிழமையன்று

திருமதி லக்ஷ்மிபாய் எல்லோருக்கும் இரண்டுலிட்டர் அரிசி கொடுத்தனுப்பினாள்.

ஆனால் திரு ராவ் இம்மாதிரியான அதீதச் செயல்களில் இறங்கமாட்டார். இன்று பணம்

வராவிட்டால் அரிசி கூட இல்லாமல் வெறும் கையோடு செல்லவேண்டியது நிச்சயம்.

எல்லோரும் கூலியைப் பற்றிய பீதியில் அரைமனத்துடன் வேலை செய்து

கொண்டிருந்தார்கள்.

புதிதாய்க் கல்யாணமானவன் பத்மநாத் ராவ், தாய்வீட்டிலிருந்த தன் மனைவியை

அழைத்து வர, கூலியைத் தவிர இருபது ரூபாயை முன்பணமாக எதிர்பார்த்தவன். உற்சாகம்

குன்றி அடிக்கடி எழுந்துசென்று பீடிகுடித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. அவள் கூட எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள்.

இன்றோடு அரிசி தீர்ந்தது என்று மதியமே அறிக்கைவிட்டிருந்தாள். மறுநாள்

அப்பாவின் ’திவசம்’ வேறு.திவசத்தன்று பிராமணனுக்குப் போடுகிற சாப்பாடு

அப்பாவைச் சென்றடைகிறதோ இல்லையோ, இப்படி மாதக் கடைசியில் செத்துப் போய்

கழுத்தறுத்திற்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டேன். பின் அதற்காக

வருத்தப்பட்டேன். தொடர்ந்து, நான் பெரியவனான பின் அப்பாவின் திவசத்திற்கு

ஊரையே கூட்டி சாப்பாடு போடவேண்டும் என்று லஜ்ஜையன்று மனது உறுதி பூண்டது.

அண்ணாவும் கருணாநிதியும் கொடி கட்டி ஆண்டுகொண்டிருந்த காலம். தமிழக

லாட்டரிக்கு மக்கள் நாயாக அலைந்துகொண்டிருந்தார்கள். அரிசி மட்டும் மலிவாய்க்

கிடைத்தது. வாடையடிக்கிற பழுப்பு நிறத்தில், ரூபாய்க்கு இரண்டு படி!. அம்மா

அதற்குச் செல்லமாக பெயர் கூடச் சூட்டியிருந்தாள், ‘ரப்பர் சம்பா’ என்று.

இல்லாத வேலைக்காரியையும் சேர்த்து நாலு பேருக்கு 12 கிலோ, கோதுமை 4 கிலோ,

எல்லாம் சேர்த்து பதின்மூன்று ரூபாய் சொச்சம். தம்பியின் முதலாளி முன்பணம்

தராத ராட்சசன். என் வாரக்கூலியில் ரேஷன் வாங்க வேண்டும் என்பது தான் வழக்கமான

திட்டம். நான் வாசலைநோக்கியபடியே அமர்ந்திருந்தேன் நிறைவேற.

பாண்டுரங்கராவ் சுகுமாரோடு பேச ஆரம்பித்தான்.

எதிர்த் திசையிலிருந்து தெருவைக் கடந்து திரு ராவ் வருவது தெரிந்தது. நன்றாக

வெயிலில் அலைந்ததால் முகம் கிழடு தட்டிய ஆப்பிள் பழம் போல் சிவந்திருந்தது.

அவர் ஒவ்வொரு அடியை வைத்த போதும் அவர் தொந்தி குலுங்கி குலுங்கி ஆடியது. திரு

ராவின் தொந்தியானது மற்றெல்லா தொந்திகளைவிடவும் பிரத்தியேகமானது.

ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய்

முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின் ‘வெடுக்’கென்று இறங்கிச்

சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண

வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத்

தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக்

குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை.

இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக்

குலுங்கிக் கொண்டிருந்தது.

மற்ற ராவ்கள் கவனிக்கும் முன் திரு ராவ் கையிலிருந்த துணிப்பொட்டலத்தை

மேஜைமேல் போட்டபடி உள்ளே நுழைந்தார். நான் ஏற்கனவே எழுந்துவிட்டிருந்தேன்.

திரு ராவ் வந்ததை அறியாத பாண்டுரங்க ராவ் தனக்குத் தெரிந்த ஒரு மலையாளக் கெட்ட

வார்த்தைக்குச் சுகுமாரிடம் அர்த்தம் கேட்டு அவனைச் சீண்டிக்கொண்டிருந்தான்.

திரு ராவ் மௌனமாக ஒரு ஒற்றனைப் போல் அவர்களையே கவனித்துக் கொண்டு நின்றார்.

மற்ற ராவ்கள் எல்லோரும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்கள்.

நாணிச் சிணுங்கிச் சிரித்தபடித் தலைநிமிர்ந்த சுகுமாரன் திரு ராவைக் கண்டதும்

திகைத்து மிரண்டு போனான். திரு ராவுக்குக் கோபம் பீறிட்டது. மேஜைமேல் வைத்த

துணிப் பொட்டலத்தை அவன் முகத்தை நோக்கி வீசிக் கொண்டே “என்னடா லௌடே கா பால்

சிரிக்கிறே?” என்று பாய்ந்தார். துணிப் பொட்டலம் சுகுமாரனின் பிடரியில் பட்டு

சிதறியது. அவன் நடுங்கிக் குனிந்தபோது அவன் காதில் பாதியும் கன்னத்தில்

பாதியும் சேர்த்து ஒரு அறை விழுந்தது. “மாதர் சோத்! வேலையெ பாப்பானா

சிரிச்சிட்டிருக்கான்... லௌடே கா பால்” தொடர்ந்து திட்டியபடி திரு ராவ்,

பாண்டுரங்க ராவ் பக்கம் திரும்பினார். அவர் திரும்புவதற்காகவே காத்திருந்தவன்

போல சட்டென்றுத் தலையைக் கவிழ்த்து வேலையில் ஆழ்கிற பாவனை செய்தான் இவன்.

இப்படிச் செய்ததும் திரு ராவுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது.

“ஏய் காய் கொஸ்டியே, புத்தி நஹி பெஹ்ன் சோத்” (ஏய் என்ன பேச்சு இது! புத்தி

இல்லையா பெஹ்ன் சோத்) என்று உரத்த குரலில் சத்தம் போட்டார் திரு ராவ்.

பாண்டுரங்கராவ் ஏதோ சமாதானம் சொல்ல வாயெடுத்தான். உடனே திரு ராவ் அவனை

மறித்து, “அமி விட்சார்த்தோ (த்) கசாலா? கசாலா ரே மா....தர் சோத்?” (நான்

கேட்கிறேன் எதற்கு? எதற்கடா மாதர்சோத்?) என்று முன்பை விட வேகமாகக் கத்தினார்.

பின் ஓரிரு வார்த்தைகளைத் தாழ்ந்த குரலில் முனகிவிட்டு மீண்டும் குரலை

உயர்த்தி “புட்டா மாதர் சோத்!... புட்டா மாதர் சோத்!” (கிழட்டு மாதர்

சோத்! கிழட்டு மாதர் சோத்) என்று தீர்மானமான குரலில் கூறிவிட்டு வேகமாகத் தன்

நாற்காலியை அடைந்து அமர்ந்தார்.

பாண்டுரங்க ராவ் குறுகி, மடியிலிருந்த கோட்டின் கைக்குப் பட்டன் வைக்க

ஆரம்பித்தான். பாண்டுரங்கராவுக்கு அறுபது வயதிருக்கும், வழுக்கைத் தலை. சென்ற

மாதம் தான் பருவமடைந்த அவன் பேத்தி இறந்துபோயிருந்தாள்.

திரு ராவ் கோபம் தணியாமல் பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்.

கௌரி, அருகே பெட்டிக்கடை வைத்திருந்த சூப்பியிடமிருந்து அந்த வாரத்து ‘ராணி’யை

இரவல் வாங்கிக்கொண்டு அப்போது தான் உள்ளே நுழைந்தாள். தன் மகளைப் பார்த்ததும்

திரு ராவின் கோபம் சட்டென்று அவள் பக்கம் திரும்பியது. கடுமையான மராத்தியில்

அவளை அழைத்தார். திரு ராவ் வந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்த கௌரி ஒரு கணம்

தயங்கி நின்றாள். பின், மெல்ல, பயந்துகொண்டே அவரருகில் சென்றாள். காட்டமான

ஐந்து மராத்திக் கேள்விகளுக்கு அச்சம் கலந்த நான்கு பதில்களே வந்தன. பின்

திடீரென்று ஐந்தாம் கேள்விக்குப் பதிலாக கௌரியின் கன்னத்தில் ஓர் அறை

விழுந்தது. அவள் அழுதுகொண்டே விலகினாள். திரு ராவ் அவளைப் பிடிக்க முயன்றார்.

கௌரியின் பின்னல் திரு ராவின் கையில் சிக்கி நழுவியது. கௌரி உள்ளே ஓடினாள்.

திரு ராவும் அவளைத் துரத்திக்கொண்டு உள்ளே சென்றார். தொடர்ந்து கௌரியின்

கதறலுடன் அவள் பிடரியிலும் முதுகிலும் விழுந்த நாலைந்து அடிகளின் சத்தம்

கேட்டது.

ஒன்றுமே நடக்காதது போல் உள்ளே வந்தான் கோபிநாத்ராவ். தன் மேஜையின்

மையத்திலிருந்த கத்தரிக் கோலை ஓசைபட நகர்த்தி வைத்துவிட்டு, அடுத்து வெட்ட

வேண்டிய துணியை விரித்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து ஃபோன் கிணுகிணுத்தது.

ஃபோன் செய்தவரோடு நெடுநேரம் ஒருமையில் சிரித்துப் பேசிவிட்டு வெளியே வந்தபோது

திரு ராவின் கோபம் கணிசமாய் மறைந்துவிட்டிருந்தது.

இயங்கிக் கொண்டிருந்த தையல் இயந்திரங்களைத் தாண்டி அங்கொரு நிசப்தம் நிலவியது.

நான் தயங்கித் தயங்கி திரு ராவிடம் டீ குடிக்க வெளியே செல்ல அனுமதி கேட்பதற்கு

மணி ஏழாகிவிட்டது. இரவுக் காட்சிக்காக நின்ற கும்பலை விலக்கித் தெருவுக்குள்

இறங்கியதும் திடீரென்று ஒரு விடுதலையுணர்வு ஏற்பட்டது.

சிறிது தூரம் சென்றதும் இஸ்திரி போடுகிற நடராஜன் தலைப்பாகையோடு

எதிர்ப்பட்டான். நடராஜன் படுசோம்பேறி. மனைவி, பகலெல்லாம் தோள்கள் வலிக்கத்

துவைத்து சம்பாதிக்கிற பணத்தை மாலையில் இவன் குடித்துத் தீர்த்துவிடுவான்.

என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே அருகே வந்து, “ராவ் இருக்கானா?”என்று

கேட்டான். திரு ராவ் எதிரில் இல்லாத சமயங்களில் அவரை ஒருமையில் அழைப்பது தான்

வழக்கம். பதிலாக, நான் தலையை ஆட்டியதும் உற்சாகத்துடன் “வரட்டுமா” என்று

வேகத்தைக் கூட்டி நடந்து சென்றான்.

நம்பியார் கடை ரேடியோ விவசாயிகளுக்கான நிகழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சுவையில்லாத ஆனால் சூடான டீ தொண்டைக்குள் இறங்கியதும் சிறிது தெம்பாக

இருந்தது. கடைக்குள் நிறைய பேர்களிருந்தனர். சிக்கனம் பார்க்கிற பதினெட்டு

வயதுட்குட்பட்ட கடைப்பையன்களும், ஐம்பதைத் தாண்டிய கஞ்சத்தனம் பிடித்த ஜவுளிக்

கடை குமாஸ்தாக்களுமே அதிகம் இருந்தனர். காரணம், மற்ற இடங்களில் பதினைந்து

காசுக்கு விற்கும் டீ நம்பியார் கடையில் பன்னிரெண்டு காசு!

டீக் கடையிலிருந்து வெளியே வந்து ‘டவுன் ஹால்’ பக்கமாக நடக்க ஆரம்பித்தேன்.

டவுன் ஹால் அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பது தெரிந்தது. கூட்டத்தின்

நடுவிலிருந்து அடர்த்தியான கரிய புகை மேலே எழும்பிக்கொண்டிருந்தது. நான்

வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கூட்டத்தை நெருங்க நெருங்க ரப்பர் எரியும்

துவர்ப்பான நெடி அடிப்பதை உணர்ந்தேன். வழக்கம்போல், நரிக்குறவர்கள் டயர்

துண்டுகளை எரித்துச் சோறு சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

அரை வட்டமாகச் சுற்றி நின்ற கூட்டத்தின் நடுவே இரண்டு போலிஸ்காரர்கள்

குறவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே பிரம்பால்

அடித்துக்கொண்டிருந்தார்கள். குறவர்கள் அடிக்குப் பயந்து பதறிப் பதறி

இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

சாக்கடை விளிம்பிலிருந்து சற்று விலகி, காய்ந்த மலங்களினூடே மூன்று கற்களாலான

அடுப்புகளின் மேல் சிறிய சிறிய சட்டிகளில் சோறு வெந்துகொண்டிருந்தது. இதுவரை

எப்படியோ அவற்றைக் கவனிக்கத் தவறிய போலிஸ்காரன் ஒருவன் அதைக்

கவனித்துவிட்டான். மறுகணம் சட்டிகளை எட்டி உதைத்தான் அவன். ஒரு குரூரமான

உற்சாகத்துடன் அவன் அதைச் செய்தான். சட்டிகள் உருண்டு சாக்கடைகளில் விழுந்தன.

உடைந்த ஒரு சட்டியின் பகுதி மட்டும், சோறு வழிய சாக்கடை விளிம்பிலேயே

நின்றுவிட்டது. அதைக் கண்ட மற்றவன் அதையும் எட்டி உதைத்துச் சாக்கடையில்

தள்ளினான். கூட்டம் நிதானமாக வேடிக்கை பார்த்தது.

குறவர்களைக் குறித்த சில அடிகள் தப்பி அவர்களின் சிறிய குழந்தைகளின் மீதும்

விழுந்துகொண்டிருந்தன. கதறிக்கொண்டிருந்த குழந்தைகளுடன் குறத்திப் பெண்களும்

ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள்.

ஓரிரு நிமிடங்களுக்குப் பின் சட்டிகளை எட்டி உதைத்தவன் எதையோ சாதித்து விட்ட

களைப்பில் திரும்பினான். கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்கு மீண்டும் கோபம் வர

ஆரம்பித்தது. அவன் திட்ட ஆரம்பிப்பதற்கு முன் நான் விலகி நடந்தேன்.

கடைக்குத் திரும்பியபோது திரு ராவ் உற்சாகமாக ஒரு வாடிக்கையாளரிடம்

சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். தவிர, இன்னும் பல வாடிக்கையாளர்கள் வந்து

போனதற்கான தடயங்கள் காணப்பட்டன. பத்மநாத் ராவ் ஒரு சட்டை காலரின் உட்பக்க

தையலை முடித்து விட்டு அதை வெளிப்பக்கம் உதறலுடன் திருப்பி நிமிர்ந்தான்.

என்னைப்பார்த்ததும் பற்களைக் காட்டிச் சிரித்தான். கூலிக்கான பணம்

வசூலியாகியிருக்க வேண்டும்.

எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

மணி ஒன்பதரை.

தரையில் அமர்ந்து வேலை செய்வதற்காக காலையில் விரித்த ‘காடா’ துணியை பாண்டுரங்க

ராவ் உதறி மடிக்க ஆரம்பித்தான். நான் என் மேஜைக்குச் சென்றமர்ந்து ஒவ்வொருவார்

கணக்கையும் சரிபார்த்து வைத்துக் கொண்டேன். பின் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கம்

போல கூலி பட்டுவாடா நடைபெற்றது.

திரு ராவ் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்துப் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக

எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தன் பாக்கெட்டில் எத்தனை ரூபாய் இருக்கிறது

என்று யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் மிக நாட்டம். அனாவசியமாக

இக்கூலிப்பட்டாளத்தின் முன்னே பணத்தைப் பிரஸ்தாபித்து அதன் விளைவாக இவர்கள்

முன்பணம் கேட்கத்தூண்டப்பட்டு, கேட்டுப் பின் ஏமாந்து, (தன்னை) சபித்துச்

சோர்ந்து திரும்புகிற அவஸ்தையில் ஆழ்வதைத் திரு ராவ் என்றுமே விரும்புவதில்லை.

ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் கூலியைப் பெற்று கிளம்பினார்கள்.

அதிர்ஷ்டவசமாக பத்மநாத் ராவ் மட்டும் இருபது ரூபாய் முன்பணத்தை எப்படியோ

பெற்றுக் கொண்டான்.

நானும் திரு ராவும் தனிமையில் விடப்பட்டோம்.

ஒரு சில கணங்களின் யோசனைக்குப் பின் திரு ராவ் என்னைப் பார்த்து “நீ

திங்கட்கிழமை வாங்கிக் கொள்கிறாயா?” என்று இந்தியில் கேட்டார். அம்மாவின்

சிவந்த மூக்கு ஞாபகம் வர எனக்கு வயிற்றைக் கலக்கியது. நான் தாழ்ந்த குரலில்

”நாளை ரேஷன் வாங்க வேண்டும்” என்றேன். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார் திரு

ராவ். சிறிது நேரத்துக்குப் பின் தன் பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தை வெளியே

எடுத்தபடியே கறாரும் அலட்சியமும் கலந்த குரலில் “வீட்டில் ஏதாவது பணம் தேவையா

என்று கேட்கிறேன். தேவையில்லை என்றால் உனக்குத் தருகிறேன். அல்லது நீ

திங்கட்கிழமைதான் வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி லக்ஷ்மிபாய்க்குக்

குரல் கொடுத்தார்.

லக்ஷ்மிபாய்க்கு நூறு ரூபாய் தேவைப்பட்டது. திரு ராவ் பணத்தை

எண்ணிப்பார்த்தபோது அதில் எழுபத்தைந்துரூபாய்தான் இருந்தது. அறுபது ரூபாயை

லக்ஷ்மிபாயிடம் கொடுத்து பின் மராத்தியில் ஏதோ கூறினார். “பதினைந்து ரூபாய்

தான் இருக்கிறது. நாளை எனக்கு செலவுக்கு வேண்டும். நீ திங்கட்கிழமை

வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறிவிட்டு நாற்காலியில் சென்று

அமர்ந்தார். நான் நிராசையுடன், கடைசியாக மூட வேண்டிய கதவை மூட முனைந்தேன்.

என்னையே வெறித்துக்கொண்டிருந்த திரு ராவுக்குத் திடீரென்று ஒரு யோசனை

தோன்றியது. “நாளைக் காலை ஏன் நீ காலேஜுக்குச் சென்று கோட்டுகளை டெலிவரி செய்து

விட்டு வரக்கூடாது? பணம் வந்தால் நீயும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கும்

உபயோகமாக இருக்கும்”. இதைக் கூறியவுடன் என் மனத்திற்குள் நம்பிக்கை,

பொறியாய்த் துவங்கித் தீயாய் வியாபித்தது. நான் ஆர்வத்துடன் பலமாகத் தலை ஆட்டி

அதை ஏற்றுக் கொண்டேன். “நேரமாகிவிட்டது. கோட்டுகளை நாளைக் காலை வந்து ‘பாக்’

செய்துகொள்ளலாம்” என்று திரு ராவ் கூறிக்கொண்டிருக்கும்போது “என்னா.....ராவ்”

என்று உற்சாகத்துடன் கூவிக்கொண்டே உள்ளே நுழைந்தார் எதிர்க் கொட்டகை மானேஜர்

ராமநாதன். ராமநாதன் வந்தால் அன்று விசேஷம் தான்.

விரல்களிலிருந்த மோதிரம் மின்ன வெள்ளை வேட்டியும் சட்டையும் உடுத்தியிருந்த

கொட்டகை மானேஜர் ராமநாதன் சொகுசு மாப்பிள்ளை! கொட்டகை, நகைக்கடை

வைத்திருக்கும் அவர் மாமனாருக்குச் சொந்தமானது. தன் சொத்தை முழுவதும்

கிண்டியில் ஓடிய நத்தைகளாய்ப்பார்த்து பந்தயம் கட்டித் தீர்த்துவிட்டு, இருபது

வருஷமாய் இந்தப் புளியங்கொம்பைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்

ராமநாதன். அவர் மனைவிக்கு உடம்பெல்லாம் வெண்குஷ்டம்.

திரு ராவும் ராமநாதனும் நெடுநாள் ஸ்நேகம். ஒரே தம்ளரில் பட்டை அடிப்பார்கள்.

ஒரே பொம்பளையுடன் படுத்துக் கொள்வார்கள். கொட்டகையில் புதிய திரைப்படங்கள்

வெளியாகும் சந்தர்ப்பங்களில், திரு ராவ் கடையில் தொழில் மந்தமாக இருந்தால்

முதல் வாரம் முழுதும் காட்சிக்கு 25 டிக்கெட்டுகளைத் தந்துவிடுவார் ராமநாதன்.

நானும் நடராஜனும்தான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, ஒன்று தொண்ணூறை ஒன்பது

ரூபாய்க்கு விற்றுவிட்டு வருவோம். நடராஜன் எம்டன்! அடிக்கிற சுங்கிடியைத் தவிர

திரு ராவிடம் டிக்கெட் ஒன்றுக்கு எட்டணா வாங்கிவிடுவான்.

விடைபெற்றுக்கொள்ள திரு ராவின் முன் சென்று நின்ற போது ராமநாதன் என்னைப்

பார்த்து லேசாக முறுவலித்தார்.

“போகிற வழியில் அப்படியே கொஞ்சம் நடராஜனை வரச் சொல்லிவிட்டுப் போ” என்று கூறிய

திரு ராவ் “மாணவர்கள் சினிமா பார்க்க, அங்கே இங்கே கிளம்பிவிடுவார்கள். காலை

ஆறு மணிக்கே புறப்பட்டால்தான் அவர்களைப் பிடிக்க முடியும்” என்று

எச்சரித்தார். நான் தலையாட்டிவிட்டு வெளியே வந்தேன்.

நடராஜனின் வீடு டோபி-கானாவில் இருந்தது. சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது

சிம்னி விளக்கின் ஒளியில் பெரிய நிழலோடு கிடந்தான் அவன். என்னைப் பார்த்ததும்

எழுந்து வரவேற்றான். நல்ல வேளை! சுவாதீனமாகவே இருந்தான். நான் விஷயத்தைக்

கூறிவிட்டுத் திரும்பி நடந்தேன்.

தியாகராஜ புதுவீதியை அடைந்ததும் “பாவா கெண்ட என்த்த” என்ற தெலுங்குக் குரல்

வரவேற்றது. யாருக்காகவோ தெருவில் காத்திருந்த பெண்தான் யாரிடமோ கேட்டாள். மணி

பத்தரை ஆகிவிட்டிருந்தது.

கதவு வெறுமனே சாத்திக் கிடந்தது. அம்மா ‘அகண்ட் ஆனந்த்’ (மத சம்பந்தமான

குஜராத்திப் பத்திரிக்கை) படித்தபடியே கண்ணாடியுடன் உறங்கிப் போயிருந்தாள்.

நான் குனிந்து கண்ணாடியைக் கழற்றி ஓரமாக வைத்தேன். அம்மா குழந்தையைப் போல்

படுத்துக் கிடந்தாள். கண்கள் குழிவிழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய், சதை

தளர்ந்து சிதைவுற்றுப் போயிருந்தது முகம். நெற்றியில் மெலிதான ரேகைகளாய்ச்

சுருக்கங்கள் விழுந்துகொண்டிருந்தன. இளம் வயதில் அடர்த்தியாய்

சுருள்சுருளாய்த் ததும்பி வழிந்த கேசம், இப்போது களைத்துப்

படிந்துவிட்டிருந்தது. காதோரங்களில் நரை கண்டுவிட்டது. வயதாகிவிட்டது. ஆமாம்.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது. எத்தனை நாட்கள்; எத்தனை வருடங்கள். வருடங்களை அவள்

தின்றுவிட்டிருந்தாள்; வருடங்கள் அவளைத் தின்றுவிட்டன.

முகம் கழுவிவிட்டு வந்தபோது அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

வாரக்கூலி கிடைக்கவில்லை என்று அறிந்தபோது ஆவேசமாய், திரு ராவின்

குடும்பத்திற்கே சாபம் கொடுத்தாள் அம்மா. பின் குழம்பிப் போய் மௌனமானாள்.

அம்மாவின் சீற்றம் இப்படி ஒரே வரியில் வெளிப்பட்டு அடங்கிவிட்டது எனக்கு

நிம்மதியாயிருந்தது. ஓரிரு கணங்கள் நிசப்தத்தில் கழிந்தன. ஒருவேளை விஷயம்

இன்னும் உறைக்கத் துவங்கவில்லையோ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும்போதே

“ராஸ்கல், நாளை உன் அப்பாவுக்கு திவசத்தை வைத்துக் கொண்டு வெறும் கையோடு

வந்திருக்கிறாயே! வெட்கமாக இல்லையா நாயே” என்று நான் கூறிய செய்தியை நம்ப

மாட்டாவளாய் பரபரப்போடு எழுந்து கையை ஓங்கிக் கொண்டே என்னை நோக்கி திடீரென்று

ஓடி வந்தாள் அம்மா. பிறகு, ஓங்கிய கையை மடக்க மறந்து தமிழும் குஜராத்தியும்

கலந்த மணிப்பிரவாளத்தில் திட்ட ஆரம்பித்தாள். ஒவ்வொரு வாக்கியத்திற்குமிடையே

ஓரிரு கணங்கள் இடைவெளி விட்டு விட்டுக் குரலை உயர்த்தி உயர்த்தித் திட்டினாள்.

வசவுகளை மட்டுமே மனத்தில் கொண்டு ஆத்திரத்தில் ஆரம்பித்துவிட்ட அநேக

வாக்கியங்களை முடிக்க முடியாமல் திணறிய போதெல்லாம் என்னையும் சபித்தாள். நான்

பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் வசைப்பாட்டில் உள்ளடக்கமாய்த் திரு ராவ் இருந்தாலும் உருவாக நாளை வர

இருந்த பிராமணரே திகழ்ந்தார். பிராமணர் தமிழர்தான். குஜராத்தி பிராமணர்களை

அழைப்பது கைக்கு மீறிய காரியம். சோறு போட்டு ரூ 5.25 தட்சிணை தவிர ஒரு மேல்

துண்டாவது தர வேண்டும். சலவன் வீதியில் வியர்வை வழியும் கறுத்த வெற்றுடம்புடன்

திண்ணையில் அமர்ந்து மலிவான பேச்சுப்பேசி மகிழும் தரித்திரம் பிடித்த தமிழ்

பிராமணனே போதும் என்று முடிவுசெய்து பல வருடங்கள் ஆகிவிட்டது இந்த வீட்டில்.

வாக்குக் கொடுக்கப்பட்ட அந்த பிராமணர் நாளை வந்து எப்படி இந்த நிலைமையை

எதிர்கொள்வார் என்று கற்பனை செய்த போது வேடிக்கையாகவும் வருத்தமாகவும்

இருந்தது.

ஒரு சில நிமிடங்களுக்குப் பின் கடை சைக்கிளை ஓசைப்படாமல் சாத்தி

வைத்துவிட்டுத் திடீரென்று உள்ளே நுழைந்தான் தம்பி. அவன் வந்ததும் ஒரு கணம்

மௌனமாய் இருந்துவிட்டு, அவனுக்கும் விஷயம் தெரியட்டும் என்று, கோபத்துடன்

“நாளைக்கு நீங்களும் மண்ணைத் தின்னுங்கள்! வருகிறவனுக்கும் மண்ணைப் போடுங்கள்”

என்றாள்.

தம்பியின் முகத்தில் திடீரென்று படர்ந்த திகைப்பையும் உற்சாகமின்மையையும்

பார்த்த அம்மா தனது ஆற்றாமை குறைந்தவளாய் சீரான மூச்சு விட்டுக் கொண்டு,

அர்த்த புஷ்டியான மௌனம் அனுஷ்டித்துக் காத்திருந்தாள்.

விஷயத்தை ஓரளவு புரிந்துகொண்ட தம்பி அதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள என்னைக்

கலவரத்துடன் பார்த்தான். பின் தயங்கி “உன் முதலாளி பணம் தரவில்லையா?” என்று

கேட்டான். நான் தலையை ஆட்டிப் பதிலைச் சொன்னதும் அவன் முகம் வாட ஆரம்பித்தது.

அம்மா தன் கோபத்தைப் பகிர்ந்துகொள்ளவும் நியாயப்படுத்தவும் இன்னுமொரு ஆள்

கிடைத்தான் என்று சில கணங்களாகத் தேக்கி வைத்த குரோதத்துடன் மீண்டும்

வெளிப்பட்டாள். “அவன் எப்படி வாங்கிக்கொண்டு வருவான்? அந்த பாழாய்ப்போன

ராவுக்குப் பாடை கட்டிய பிறகுதான் வாங்கிக்கொண்டு வருவான். சூதாடி நாய்!

குடிகார நாய்!” அம்மா பேசிக்கொண்டே இருந்தாள்.

அவனையே உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த தம்பி திடீரென்று, “லெக்சர் போதும்,

நிறுத்து இனி” என்று உறக்கக் கத்தி அவளை அடக்க முயன்றான். அம்மா அடங்கவில்லை.

மாறாக, “நான் பேசுவதை லெக்சர் என்றா சொல்கிறாய் நாயே” என்று அவன் பக்கம்

பாய்ந்தாள். தம்பி சும்மா இருக்கப் பழகி இருந்தான்.

ஒருவாறாக அம்மாவின் ஓலம் அடங்கி கீழ்ஸ்தாயியில் அவள் பொரும ஆரம்பித்த

பிறகுதான் வெகுநேரமாய் ஒரே இடத்தில் நின்றுவிட்டிருந்ததை நான் உணர்ந்தேன்.

லுங்கியை உடுத்திக்கொண்டு சமையற்கட்டின் விளக்கைப் போட்டான் தம்பி.

அப்போது ஏறக்குறைய தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த அம்மா பேச்சோடு பேச்சாகக்

குரலை உயர்த்தி, “இந்த லட்சணத்தில் உன் அக்கா மூங்கில் குருத்தையும்

வாங்கிக்கொண்டு வந்து போட்டு விட்டாள், நாளை குழம்பு வைக்க!” என்ற

செய்தியையும் சொல்லி வைத்தாள்.

சட்டென்று எங்கள் இருவரின் பார்வையும் சுவரில் மாட்டியிருந்த பைக்குள்

ஒளிந்துகொண்டிருந்த மூங்கில் குருத்துகளின் மேல் விழுந்தது. நான் உடனே போய்

அதை எடுத்துப் பார்த்தேன். நன்றாகத்தான் இருந்தன. பசுமையாய்!.

மூங்கில் குருத்துகள் அப்பாவின் நண்பர் நாயகத்தின் எஸ்டேட்டில் நிறைய

விளைந்தன. கத்தரிக்காயின் மழமழப்போடு, வாழைக்காயின் மதர்ப்போடு, தாவரங்களின்

முரட்டு மனம் கமழ, ஊறிய குழம்பு பீறிட்டு, அவை மொளுக் மொளுக் என்று

தொண்டைக்குள் இறங்கும் போகமே அலாதி தான். பருப்புச் செலவு இல்லாமல் குழம்பு

வைத்துவிடலாம் என்பதோடு சாப்பிடும்போது ஏதோ ஒரு வித்தியாசமான உணவைச்

சாப்பிடுகிறோம் என்கிற பெருமிதம் உபரி. மூங்கி குருத்துக் குழம்பு

எல்லோருக்கும் பிடித்த ஒன்று. குறிப்பாக அப்பாவுக்கும் அம்மாவுக்கும்.

எதேச்சையாக அப்பா இறந்த தினத்தன்றும் அம்மா மூங்கில் குருத்தையே

சமைத்திருந்தாள். அப்பாவின் திவசத்தன்று தவிர மற்ற நாட்களில் அம்மா அதைச்

சாப்பிட மாட்டாள்.

அம்மா சுவரையே வெறித்துக் கொண்டிருந்தால். அவளது மூக்கிலும் காதுகளிலும்

லேசாகச் செம்மை படர்ந்திருந்தது. அவள் மூச்சிலும் ஒரு தீவிரம் தலைப்பட்டது.

இன்னும் ஓரிரு கணங்களில் அவள் அழக்கூடும். அம்மா செருமி, திடீரென்று அதிகம்

சப்திக்காத, வதைக்கும் விசும்பல்களுடன் அழுதாள்.

மூங்கில் குருத்தை இந்த வருஷமும் அம்மா சாப்பிட மாட்டாள் என்று நினைத்தபோது

ரொம்பவும் அபத்தமாகப் பட்டது.

சிறிதுநேரம் அழுதபின்பு சேலையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தீர்மானமாக

எழுந்தாள். முகத்தில் படிந்த கலவரத்தை விழுங்கித் தின்றுவிட்டு, கண்களில் ஒரு

விவேகமிக்க சோகத்தைத் தேக்கிக்கொண்டிருந்தாள் அவள்.

நான் பையை மாட்டிவிட்டுச் சமையல் கட்டிற்குள் நுழைந்தேன். அம்மா அந்த

வாரத்தின் கடைசிச் சோற்றைப் பரிமாறினாள்.

இரவு வெகுநேரம் கழித்துத் தம்பி இருட்டிலிருந்து ஏதோ பேசினான். அம்மா

தூக்கமும் களைப்பும் பாரித்த குரலில், “வீட்டுக்காரியிடம் இரண்டு ரூபாய்

கைமாத்து வாங்கித் தருகிறேன். காலையில் பிராமணன் வந்ததும் ‘கிருஷ்ணா

மந்தி’ரில் அளவுச் சாப்பாடும் ஒரு ஸ்வீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு

வந்துவிடு, அடுத்த வருஷம் வீட்டிலேயே சாப்பிட வைக்கலாம்” என்று கூறிவிட்டுத்

திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

தெருவில் இருளையும் அமைதியையும் நேர்க் கோட்டில் கிழிக்கிற மாதிரி நீளமாய்

‘விசில்’ ஊதிச் சென்றான் பாராக்காரன்.

மறுநாள் காலை வீட்டைவிட்டுக் கிளம்பிய போதே ஆறேகால் ஆகிவிட்டது. வீட்டுக்காரச்

செட்டிச்சி மஹா கறார்க்காரி! வாங்கப் போகும் இரண்டு ரூபாயை மதியம் வந்ததும்

கொடுத்துவிட வேண்டும் என்ற ஷரத்து விதித்து அனுப்பினாள் அம்மா.

நவாப் ஹகீம் ரோடு வழக்கத்தை விட ரொம்பவும் அமைதியாய் இருந்தது. ‘முபாரக் டீ

ஸ்டாலி’ன் முன்பெஞ்சில் அமர்ந்து ‘டீ’யைச் சப்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக்

கொண்டிருந்த தாடிக்கார சாயபுகள், டீக்கடை ரேடியோவின் சன்னமான நாதஸ்வர முனகல்,

பின்னால் குறுகி நீள்கிற தெரு, மூடிய கடைகள், அப்பால் கிழக்கில் உதித்த

சூரியனின் சாயலில் நீலம் மின்ன ஆரம்பித்திருந்த வானம். வெண்மையான மேகங்கள்.

ஒலியெழுப்பி மறையும் காகங்கள், குருவிகள். எல்லாம் ரம்மியமாகத்தான் இருந்தன.

இரைச்சல் மிக்க கசப்பான யதார்த்தங்களிலிருந்து இன்று தெருவுக்கே விடுமுறை.

டீக்கடையைப் பார்த்ததும் டீ குடிக்கவேண்டும் போல தோன்றியது. பாக்கெட்டிலிருந்த

பதினைந்து பைசாவுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி இரண்டு சிகரெட்டா அல்லது சிங்கிள்

டீயா என்ற சின்ன மனப் போராட்டத்தில் ஈடுபட்டு, கடைசியில், ஜெயித்த சிகரெட்டைப்

பற்றவைத்துக் கொண்டு நகர்ந்தேன்.

‘ஐந்துமுக்கு’ சந்திப்பை அடைந்தபோது ஓரிரு கசாப்புக் கடைகள் திறந்திருந்தன.

உயிரும் தோலும் உரிக்கப்பட்ட ஆடுகள் மாமிசப் பிண்டங்களாகக் கால்களுடன் வெளியே

தொங்கிக் கொண்டிருந்தன. உள்ளே சிறிய சிவப்பு விளக்கு பதிக்கப் பெற்ற கடவுள்

படத்தின் கீழ் ஊதுபத்திகள் எரிந்துகொண்டிருந்தன. குருதியின் பச்சை நெடி அந்த

இடமெங்கும் படர்ந்திருந்தது.

கொட்டகை வாசலில் தரை, பெஞ்சு டிக்கட்களுக்காக இப்போதே மனிதர்கள்

குழுமிவிட்டார்கள். அநேகமாக எல்லோரும், கண் விழித்துக் களைத்துப் போய்

அரைத்தூக்கத்தில் இருந்தார்கள். இரண்டு வரிசைகளாகத் தவளைகள் போல் நெருக்கமாக

அணிவகுத்து அமர்ந்திருந்தார்கள்.

தெருஇவிலிருந்து பார்த்தபோது கடையின் ஒரு கதவு திறந்திருப்பது தெரிந்தது.

லக்‌ஷ்மிபாய் விழித்திருக்க வேண்டும். நான் அவசர அவசரமாக மாடிப்படிகளில்

ஏறினேன். இரண்டாவது படியில் வலது காலை வைத்ததும் பாதத்தில் ஏதோ குறுகுறுத்துக்

குழைவது போல் தோன்றியது. மலம்! நான் உணர்ந்து குனிவதற்குள்

விரலிடுக்களிலிருந்து பிதுங்கி காலெங்கும் அசிங்கமாகிவிட்டது. ஒரு கணம்

தயங்கி, பின் மேலே ஏறினேன். மற்ற படிகளும் அசிங்கமாவதைத் தவிர்க்க

முன்பாதத்தைத் தரையில் படாமல் உயர்த்திக் குதியை மட்டும் பதித்துப் பதித்து

நடந்து கதவை அடைந்தேன். உள்ளே “லட்டு” வெற்றுடம்போடு திரிந்து கொண்டிருந்தாள்.

மலம் கழித்ததற்கான அடையாளங்கள் அவள் புட்டத்தில் இருக்கின்றனவா என்று

தேடினேன். நிறைய இருந்தன.

லக்‌ஷ்மிபாய் உள்ளே உட்கார்ந்து அடுப்பு ஊதிக்கொண்டிருந்தாள். மலம் அப்பிய என்

காலைப் பார்த்துக்கொண்டே அவளை அழைத்தேன். அவள் காதில் அது விழவில்லை. நான்

மீண்டும் அழைத்தேன். அதுவும் அவள் காதில் விழவில்லை. நான்காவது முறை அவளைக்

கூவி அழைத்தபோது தான் அவள் ஒருபக்கச் செவிடு என்பது எனக்கே ஞாபகம் வந்தது.

உடனே எனக்கு திரு ராவின் கழுத்தை நெரித்துவிட வேண்டும்போல் தோன்றியது.

எதற்காகவோ கதவுப் பக்கம் திரும்பிய லக்‌ஷ்மிபாய் என்னைப் பார்த்ததும் தலையை

ஆட்டி பற்கள் தெரிய சிரித்தாள். பின் மீண்டும் அடுப்பு ஊத திரும்பிக்கொண்டாள்.

‘லட்டு’ என்னையும் தன் தாயாரையும் மாறிமாறிப் பார்த்து வியந்து

சிரித்துக்கொண்டு நின்றாள். நான் காலைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.

ஓரிரு நிமிடங்கள் கழித்து ஒருவாறாக விறகு எடுக்க வெளியே வந்தபோது லக்‌ஷ்மிபாய்

கால் கழுவ தண்ணீர் கொடுத்தாள். ‘லட்டு’வை ஒரு கிள்ளும் கிள்ளி வைத்தாள்

கோபத்துடன்.

திரு ராவ் ‘கட்டிங் டேபி’ளின் மேல் உறங்கிப் போய்விட்டிருந்தார். அருகே பட்டை

அடித்ததின் ருசுக்களாக சோடா பாட்டில்கள் இருந்தன.

நான் வேகமாகக் கோட்டுகளை மடித்துக் காகித உறைகளில் போட்டுக்கொண்டேன். மொத்தம்

ஒன்பது தேறின. எல்லாம் கம்பெனிக் கோட்டுகள். அதிகம் இல்லாவிட்டாலும் நல்ல

கணம். லக்‌ஷ்மிபாயிடம் ஒரு ரூபாயை பஸ்ஸூக்காக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

நான் வாசற்படிகளைக் கடந்ததும் அவள் கழுவ ஆரம்பித்தாள்.

வழக்கமாக இந்தக் கோட்டுகளுக்கான முழுப் பணத்தைக் கல்லூரி நிர்வாகமே

வசூலித்துவிடும். ஆனால் இந்தத் தொகைக்கு ஏற்றார்போல் தையல் தரமும் சுமாராகவே

இருக்கும். கோட்டுகளின் உள்ளே இடப்படும் உள்துணி மலிவானதாய் இருக்கும். இதை

விரும்பாத மாணவர்கள் தனியே பத்து ரூபாய் கொடுத்து உயர்ந்த ரக உள்-துணையைப்

போட்டுக்கொள்ளலாம். இந்தக் கோட்டுகள் அனைத்தும் ‘சாட்டினை’ உள்-துணியாகக்

கொண்டவை. மொத்தம் தொண்ணூறு ரூபாய் வசூலாகும். நான் எனது பதினைந்து ரூபாயை

அசைபோட்டுக்கொண்டு நடந்தேன்.

கல்லூரி, நகரத்திலிருந்து சுமார் நான்கு மைல்கள் தள்ளியிருந்தது. ஊரின்

மையத்தைக் கடந்ததும் சாலையோரங்களில் பசுமை காண ஆரம்பித்தது. பசுக்கள் பின்

தொடர வெற்றுடம்போடு நடந்த பால்காரர்கள், சிறுவர்கள், வயலில் வேலை செய்த

பெண்கள்... எல்லாம் ரொம்பவும் இயல்பாக இயங்குவது போல் இருந்தது. பஸ்ஸில்

டிரைவரும் கண்டக்டரும் கூட பரபரப்பற்று நிதானமாகவே காணப்பட்டார்கள். முழுதாய்

விடிந்துவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்கள்!

அந்தப் பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதி. பின் கட்டில் இருந்தது.

கல்லூரியின் முன்புறக் கட்டடத்தை ஒட்டி நீண்ட பாதை தெருவிலிருந்து சுமார்

இரண்டு பர்லாங்கு இருக்கும். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நான் பாக்கெட்டிலிருந்த

மற்ற சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கல்லூரி அரவமற்று

அமைதியாய்க் கிடந்தது.

பாதித்தூரம் சென்றபின் காக்கிச் சட்டையணிந்த தோட்டக்காரன் பதறியபடி

“சிகரெட்டைக் கீழே போடுய்யா” என்று கோபமாக என்னை நோக்கி சிறிய அடிகள் எடுத்து

ஓடிவந்தான். நான் பயந்து போய் சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்தேன். நான் கடந்து

செல்லும் வரை இடையில் கைகளை வைத்து என்னையே வெறித்துக்கொண்டு அசையாமல்

நின்றான் அவன். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தபோது அவன் மீண்டும்

குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

விடுதி, ஒரு பெரிய மைதானத்தைச் சுற்றி, நான்கு பிரம்மாண்டமான கட்டடங்களாக

நின்றது. ஒவ்வொரு கட்டடத்திலும் நூற்றியெண்பது விசாலமான அறைகள் இருந்தன.

மைதானத்தின் மையத்தில் நாலைந்து மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி

செய்துகொண்டிருந்தார்கள். அமைதியாக இருந்ததால் அவர்கள் கீழ்ஸ்தாயியில்

பேசுவதைக் கூட கேட்க முடிந்தது. வேறு சில மாணவர்கள் மைதானத்தைச் சுற்றி

ஓடிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் மெதுவாகவே ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு

மாணவன் மட்டும் ஆழ்ந்த சுயபிரக்ஞையோடு, கோபித்துக்கொண்டு ஓடிப்போன நாயகியைத்

துரத்தி ஓடும் தமிழ்ப் படக் கதாநாயகனைப் போல் கால்களை உதறி உதறி

ஓடிக்கொண்டிருந்தான்.

‘ஏ’ ப்ளாக்கில் சீதாராமனும் ஹரிஹர கிருஷ்ணனும் இருந்தார்கள். சீதாராமன் அறை

பூட்டி இருந்தது. இரண்டாவது மாடியிலிருந்த 132இல் இருந்த ஹரிஹர

கிருஷ்ணனுக்குப் பதிலாக, கண்ணாடியுடன் பனியன் வேட்டி அணிந்துகொண்டு ஒரு மாணவன்

மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான். ஹரிஹர கிருஷ்ணன் ஊருக்குப்

போயிருந்தான்.

‘சி’யில் யாருமில்லை. ‘டி’யில் மூன்று பேர். ‘பி’யில் கிருஷ்ணகிரி என்ற

ஒருவன், மற்றவர்கள் இந்தக் கட்டடங்களுக்குப் பின்னாலிருந்த ‘பழைய விடுதி’யில்

இருந்தார்கள். ‘டி’ பிளாக் சலனமற்று இருந்தது. இரண்டு மாடிகளை ஏறி

இறங்கியதுதான் மிச்சம். எல்லோரும் டவுனுக்குப் போய்விட்டிருந்தார்கள்.

படிகளில் இறங்கும்போது இரண்டு மாணவர்கள் கையில் ‘குமுதம்’ சகிதமாக

எதிர்ப்பட்டார்கள். என் கையிலிருந்த பாக்கெட்டுகளைப் பார்த்து ஒருவன்,

“என்னப்பா டிரை கிளீனர்ஸா” என்று அசிரத்தையாய்க் கேட்டான். நான் பதில்

சொன்னதும், மற்றவன் சம்பந்தமில்லாமல் விசில் அடிக்க, இருவரும் என்னைக் கடந்து

சென்றார்கள்.

கிருஷ்ணகிரியின் அறையில் நாலைந்து மாணவர்கள் லுங்கி அணிந்து கட்டிலில்

உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை இருமுறை தட்டி உள்ளே

நுழைந்ததும் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் சுபாவமாகத் தோன்றிய ஒரு

மாணவனின் முகத்தைப் பார்த்து விஷயத்தைக் கூறினேன். அவன் நான் சொல்லி

முடித்ததும் ஒரு கணம் யோசித்தான். பின், “அவன் தூங்கறாம்பா” என்று தயங்கினான்.

நான் அப்போது தான் கவனித்தேன். கட்டிலின் சுவரோரப் பகுதியில் நீள மூட்டையாய்

உறங்கிக்கொண்டிருந்தான் கிருஷ்ணகிரி. ஒரு மாணவன் கிருஷ்ணகிரியை எழுப்ப யோசனை

கூறினான். மற்றவன் அதை மறுத்தான். நான் அமைதியாக யோசித்துக்கொண்டு நின்றேன்.

அதற்குள் ஒருவன் கிருஷ்ணகிரியை இடைக்குக் கீழே பக்கவாட்டில் அடித்து

எழுப்பினான். கிருஷ்ணகிரி முனகிக்கொண்டு திரும்பிப் படுக்க ஆரம்பித்தான்.

எழுப்பிக்கொண்டிருந்தவனோடு மற்ற இரண்டு பேர்களும் சேர்ந்து உற்சாகத்துடன்

கிருஷ்ணகிரியின் துயில் கலைப்பதில் முனைந்தார்கள்.

இவர்கள் அவனது போர்வையை இழுத்தவுடன் கிருஷ்ணகிரி பதறிக்கொண்டு எழுந்தான்.

நழுவியிருந்த லுங்கியைக் கட்டிக்கொண்டே மற்றவர்களைத் திட்ட வாயெடுத்தவன்

என்னைப் பார்த்ததும் மௌனமாகித் திகைத்தான். கிருஷ்ணகிரி ரொம்பவும் மெலிந்து

காணப்பட்டான். முதல் சவரம்கூடப் பண்ணாத முகத்துடன், ஒரு குழந்தையைப் போல

இருந்தான். துறுதுறுவென்று நேசிக்கும் சிறிய கண்கள். நான் ‘குட்மார்னிங் சார்’

என்று பேச்சைத் துவங்கினேன். நிதானமாக எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தன்னிடம்

பணம் இல்லை என்றும் புதன்கிழமை தானே வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினான்.

பழைய விடுதியின் முற்றத்திலேயே பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்,

குருமூர்த்தியும் கருணாகரனும். நான் தனித்தனியாய் அவர்களை அணுகிக் கேட்டபோது,

இரண்டு வித்தியாசமான பற்பசைகளின் மணங்கள் கமழ கிருஷ்ணகிரி சொன்ன பதிலையே

அவர்களும் சொன்னார்கள். கடைசியாய், நான் ரமேஷ்பாபுவின் அறைக்கு நடந்தேன்.

ரமேஷ்பாபு என்ற பெயர் அவன் வட இந்தியனாக இருக்கக் கூடும் என்பதாகப் பட்டது.

அப்படியிருந்தால் அவனிடம் இந்தியிலேயே பேசலாம் என்று தீர்மானித்தேன். என்

கொச்சையான இந்தியைத் தவிர்த்து எவ்வாறு செறிவாகப் பேசலாம் என்ற என் வார்த்தை

வாக்கியங்களை மனதிற்குள் அமைத்துக்கொண்டே சென்றேன். அறைக்கதவு பாதி

மூடியிருந்தது. நான் தட்டித் திறந்தேன்.

யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்தது போல் தோன்றிய ரமேஷ்பாபு, தாடியும் கண்ணாடியும்

அணிந்து என் கற்பனை வரம்பிற்குள் அடங்காத அளவு அகலமாகவும் உயரமாகவும்

இருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு கணம் பயமாகக் கூட இருந்தது. என்னைக்

கண்டதும் ‘விருட்’டென்று எழுந்துகொண்டான். பின் பரபரப்புடன் என்னை நோக்கி

வந்தான். ஒரு கணம் அப்படியே நின்றவன் நெற்றியின் நரம்புகள் புடைக்கக்

கண்களாலேயே அலட்சியமாக என்னை விசாரித்தான். நான் தடுமாறித் தடுமாறி உடைந்த

ஆங்கிலத்தில் அவனிடம் விஷயத்தைக் கூறி முடித்தேன். அடுத்த கணம் அவனை ரௌத்ரம்

கொண்டாண்டது. “நான் உன்னைக் கொண்டுவரச் சொன்னேனா?” என்று கோபத்துடன் துண்டாகக்

கேட்டான். நான் மீண்டும் தயங்கி “இல்லை” என்றேன். “பின் போ! வந்து

வாங்கிக்கொள்ள எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டுக் கதவைப் படாரென்று

சாத்திக் கொண்டான்.

நான் அசடு வழிய கோட்டுகளைச் சுமந்து வெளியே வந்தேன்.

விடுதியின் பிரதான வாசலைக் கடக்கும்போது சுமார் இருபது இருபத்தைந்து

ஆட்டுக்குட்டிகள் அன்றைய மதியப் புலால் உணவுக்காக உள்ளே

இழுத்துசெல்லப்பட்டுக்கொண்டிருந்தன. சில சின்னக் குட்டிகள் உற்சாகத்துடன்

கத்தியும் துள்ளியும் ஓடின.

கடையில், திரு ராவ் இல்லை என்பதை உணர்ந்தேன். கோட்டுகளைத் திரும்பவும் மாட்டி

வைத்துவிட்டு லக்‌ஷ்மிபாயிடம் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கிளம்பினேன்.

வழக்கம்போல் கொட்டகைவாசலில் கூட்டம். குறவர்கள் மறுபடியும் பாதையோரத்தில்

கிளைத்துவிட்டிருந்தார்கள். வெள்ளைப் பூண்டையும், பின்னூசிகளையும் வினோதக்

கலவையாக வைத்து விற்றுக்கொண்டிருந்த ஒரு குறத்தி குழந்தைக்குப் பால்

கொடுத்துக்கொண்டிருந்தாள். ஒரு குறவன் தலையைக் குனிந்து காது குடைவதில்

முனைந்திருந்தான். அவர்களருகே நேற்று சிதறிய சோற்றுப்பருக்கைகள் மண்ணில்

தோய்ந்து இறைந்துகிடந்தன. நல்ல வெயில். நல்ல பசி. நான் நடையைத் தளர்த்திக்

கொண்டு நடக்கத் துவங்கினேன்.

வீட்டுக்குள் தம்பி ‘மதர்-இந்தியா’வின் பழைய இதழ் ஒன்றிலிருந்து கேள்வி-பதில்

பகுதியைப் படித்துக்கொண்டிருந்தான். அம்மா ஒரு மூலையில் சுருண்டு கிடந்தாள்.

உடையை மாற்றிக்கொண்டு நானும் ஒரு பாயை விரித்துக்கொண்டேன். யாருமே பேசவில்லை.

மறுநாள் கடைக்குச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அம்மா என்னையே

வெறித்துக்கொண்டிருந்தாள். சுத்தமாகக் குளித்துவிட்டுப் பளிச்சென்று

காணப்பட்டாலும் அவள் முகம் பட்டினியால் வாடித்தான் போயிருந்தது. நான்

தலைவாரிக் கொண்டிருந்தேன். தலைவார நேரம் பிடித்தது. அம்மா கவனித்துக்

கொண்டிருந்ததால் ஒரு வேளை நானே வேண்டுமென்று அதிக நேரம் எடுத்துக்கொண்டேனோ!

நான் வாசற்கதவை அடைந்ததும் தன்னருகே இதற்காகவே வைத்திருந்த பையை, “இதைக்

குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போ” என்று வன்மத்துடன் என்னை நோக்கி வீசி

எறிந்தாள் அம்மா. பை என் காலில் பட்டுத் தெறித்தது. அதிலிருந்த மூங்கில்

குருத்துகள் தரையெங்கும் சிதறின. அவை வாடிப்போயிருந்தன.

நான் அம்மாவுக்கு முதுகைக்காட்டியவாறே ஒரு கணம் நின்றேன். திரும்பி அவளை

நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை. மனம் குழம்பி, நிறையக் கோபம்

எங்கிருந்துமில்லாமல் வந்தது. “நீயே போய்ப் போட்டுக்கொள்” என்று கூறிவிட்டு

நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது.

தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய்

ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.

வெயில் அறைந்து தாக்கியது.

நன்றி - கடவு தொகுப்பு, பன்புடன் குழுமம்

கண்ணாடி - திலீப் குமார்

அந்த மூலையில், அந்த நகராட்சி மரம் நிழலை நிறையவே கொட்டி நின்றது.

பழனியம்மாள், துவைக்கிற சோப்பால் ஜெகதீஸ்வரியைக் குளிப்பாட்டிவிட்டு மரத்தின் நிழலுக்குக் கூட்டி வந்தாள். ஜெகதீஸ்வரியின் தலை முழுதும் நன்றாகச் சிரைக்கப்பட்டிருந்தது. பழனியம்மாள், அருகிலிருந்த பெட்டியிலிருந்து ஒரு மூட்டையை எடுத்து அதிலிருந்த ஒருகிழிந்த கவுனைக் குழந்தைக்கு மாட்டினாள். காலை நேரத்து இதமான வெயிலில் குழந்தை சுகித்துச் சிரித்தது.

மரத்தைச் சுற்றி அரைவட்டமாகப் படுத்திருந்த மாரியப்பனுக்கு அப்போதுதான் விழிப்புத் தட்டியது. மூட்டையை முடிந்து வைத்தபடியே பழனியம்மாள் அவனைப் பார்த்தாள். அவன் மெளனமாக எழுந்து உட்கார்ந்தான். பழனியம்மாளுக்கு ரொம்பவும் பசித்தது. நேற்று காலை சாப்பிட்டதுதான். அதன் பின்பு ஒன்றுமே இல்லை. தன் கிழிந்து போன போர்வையை விலக்கி வைத்துவிட்டு, அவசரமில்லாமல் சட்டைப்பையிலிருந்து ஒரு பீடியைத் துழாவி எடுத்துப் பற்றவைத்துக் கொண்டான் மாரியப்பன்.

புகையை உள்ளே இழுத்து ஊதியபோது அடுத்த கட்டு பீடிக்குத் தன்னிடம் சில்லரையில்ல என்கிற நினைப்பு அவனுள் அவசரமாய் வந்து போனது. இன்னும் ஒரே ஒரு பீடி மட்டும்தான் மீதி இருந்தது. என்றாலும், அவன் மனத்தில் ஒரு சன்னமான தெம்பு இருக்கத்தான் செய்தது. முதல் நாள் இரவு பழனியம்மாள் தனது சேலைத் தலைப்பில் பத்திரமாக முடிந்து வைத்த 25 காசு நாணயத்தை அவன் ஞாபகம் வைத்திருந்தான்.

தெரு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தெருவை மிக உற்சாகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது குழந்தை. அது விரைவில் பசித்து உணவுக்காக அழும் என்று எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்தாள், பழனியம்மாள்.

மாரியப்பன் பீடியை கடைசியாகத் தாபத்தோடு இழுத்து வீசிவிட்டு இருமினான். தொடர்ந்து, வாய் நிறைய எச்சிலையும் கோழையையும் திரட்டித் தூர உமிழ்ந்துவிட்டு எழுந்தான்.

பழனியம்மாள் தனக்குள் ஆழ்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

மாரியப்பன் தன் முகத்தை நன்றாகக் கழுவி, தனது அழுக்கு வேட்டியின் தலைப்பால் துடைத்தபடி மரத்தடிக்கு வந்தான். பெருக்கி முடித்துவிட்டுப் பழனியம்மாள் அமைதியாகக் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரத்தைச் சுற்றியிருந்த இடம் இப்போது சுத்தமாகக் காட்சியளித்தது. சுவரோரம் இரண்டு பெரிய ஜாதிக்காய்ப் பெட்டிகள் இருந்தன. முதல் பெட்டியின் மேல் மூன்று மண்சட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது பெட்டி, மேல்பலகையே இல்லாமல் இருந்தது. அதனுள், இரண்டு மூன்று சிறியதும் பெரியதுமான துணி மூட்டைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளி, கழுத்துடைந்த ஒரு கருப்புப் பானை இருந்தது. அதனருகில் பெரிய தகரப் பீப்பாய் ஒன்றும் இருந்தது. பீப்பாயில் முக்கால்வாசிக்கு மேல் தண்ணீர் சலனமற்று இருந்தது. நீரின் மேல், மரத்திலிருந்த விழுந்த சின்ன இலை ஒன்று அசையாமல் மிதந்து கொண்டிருந்தது.

மாரியப்பனுக்கும் ரொம்பப் பசித்தது. தன் மனைவியின் அருகில் வந்து அவனும் உட்கார்ந்துகொண்டான். பின், நயமாகப் பேச்சை ஆரம்பித்தான்.

'டாத்தண்ணிக்கு ஏதாவது வளி பண்ணுவியா ? '

'நா என்னத்தெ வளி பண்றது ' நீயே பண்ணு. '

ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தபின் மீண்டும் மாரியப்பனே பேசினான்.

'செரி, போச்சாது போ, காசு எதனாச்சும் குடு புள்ளே. '

'ஏது காசு ' '

'சும்மா யாரெ ஏமாத்தறே. நேத்து ராத்திரி முடிஞ்சுவைச்சு நாலணா மறந்து போச்சா ? '

'ஓ அதுவா ' அது தீந்தது எப்போ ' காலைலெயே கொழந்தைக்கு டா வாங்கிக் குடுத்தாச்சு. மிச்சம் அஞ்சு காசு. அதுக்குப் பொகைலெ வாங்கியாச்சு. '

'நெசமாலுமா ? '

'நெசமாத்தான். '

மாரியப்பன் அவளை நம்பாதவனாக, 'இல்லே பொய்யீ... இ...இ ' என்று நீட்டி இளித்தான். மாரியப்பனுக்கு மேல் வரிசையில் நடுப்பல் விழுந்துவிட்டது. தன் கணவனைப் பார்த்தபோது பழனியம்மாளுக்குப் பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. மறுகணம், இவளது பசியும் எரிச்சலும் கோபமுமாய் வெளிப் பட்டன.

'ஆமா ' பொய்யீ....இ..இ...இ ' எப்பப் பார்த்தாலும் இப்படியே இளி,பல்லுப் போன கொரங்கு மாதிரி. உருப்படியா ஒண்ணும் செய்யாதே ' ஆம்பிளையெப்..... பாரு, ஆம்பிளையெ. '

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மாரியப்பன் சிரிப்பதை உடனே நிறுத்திக் கொண்டான். அடுத்த கணம் ஆவேசம் வந்தவனாய், பாய்ந்து எழுந்து ஆக்ரோஷமான குரலில் ஒரு கொச்சையான வசையைக் கூவிக்கொண்டே பழனியம்மாளின் மார்பில் எட்டி உதைத்தான். 'ஐயோ ஐயோ ' என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தனது நீட்டிய கால்களுக்கிடையே கவிந்து கொண்டாள் பழனியம்மாள். அவன் அவளை முதுகில் மிதித்தான். இம்முறை பழனியம்மாளின் அலறல் முன்பைவிட உரக்கக்கேட்டது. இவனை அது என்னவோ செய்திருக்கவேண்டும். ஆவேசம் கூடியவனாய் அவளருகில் மண்டியிட்டு அவள் முதுகில் ஒரு குத்துவிட்டான். பழனியம்மாள் மீண்டும் கதறினாள். இவன் மீண்டும் அவளைக் குத்தினான். பழனியம்மாள் அவனை அசிங்கமாகத் திட்டிக்கொண்டே கதறினாள். இவன் மறுபடியும் குத்தினான். பிறகு, தொடர்ந்து வெறியுடன் அவளைக் குத்திக் கொண்டேயிருந்தான்.

பயத்தில் குழந்தை வாயைப் பிளந்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தது. மாரியப்பன் ஒருவாறாக அடித்துக் களைத்தான். அவனுக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது. முகத்தைத் துடைத்துக் கொண்டான். தனது கடைசி பீடியைப் பற்றவைத்தான். கண்களையும் நெற்றியையும் சுருக்கி, புகையை நிறையவே இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

இவர்களை வேடிக்கை பார்த்த கூட்டம் மெல்லக் கலையத் துவங்கியது.

மணி இரண்டைத் தாண்டிவிட்டது. தெரு அமைதியாகக் காய்ந்து கொண்டிருந்தது. பழனியம்மாள் அடிவாங்கிய களைப்பில் உறங்கிப் போயிருந்தாள். மாரியப்பனும் சற்றுத்தள்ளி உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தை பசியாலும் பயத்தாலும் குழம்பிப் போயிருந்தது.

சிறிது நேரம் கழித்து, குழந்தை பழனியம்மாளின் தோளை உலுக்கி எழுப்பியது. விழித்து எழுந்த பழனியம்மாள் ஒரு கணம் குழம்பினாள். எதிரில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும் அவளுக்கு விஷயம் புரிந்தது என்றாலும், நிதானமாகத் தனது கொண்டையை அவிழ்த்து உதறினாள். பழனியம்மாளின் தலைமுடி மிக நீளமாய் இருந்தது. பின், கைகளை உயர்த்தித் தலையை நன்றாக அழுந்த வருடி, முடியை இறுக்கி இணைத்து, கொண்டையை மீண்டும் முடிந்து கொண்டாள். இவள் கொண்டை முடிகிறவரை பொறுமையாகக் காத்திருந்த அந்தச் சிவப்பான பிராமணப் பெண் இவளைப் பார்த்து 'ஏம்மா, கொஞ்சம் பாத்திரமெல்லாம் ஈயம் பூசணும், பூசித் தர்றயா ? ' என்று கேட்டாள். அந்தப் பெண் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். பழனியம்மாளின் நீளமான கேசத்தை அவள் ஏக்கத்தோடு பார்த்தாள்.

'ஓ ' பூசித் தர்றேனுங்க ' எவ்வளவு பாத்திரமுங்க ? '

'என்ன ஒரு இருபது, இருபத்தஞ்சு இருக்கும். '

'செரி, கொண்டுவாங்க. '

'கொண்டுவர எல்லாம் முடியாது. நீதான் வந்து எடுத்துக்கணும். எடுத்துட்டு வர ஆளில்லை, அதனாலேதான். '

'செரி, நம்ம வூடெங்கங்க ? '

'கிட்டக்கத்தான் ' அடுத்த தெருதான். '

'செரி, இருங்க. நானே உங்களோட வர்ரேன். '

பழனியம்மாள் அந்தப் பெண்ணோடு அடுத்த தெருவிற்கு நடந்தாள். தெரு, மிகவும் களைத்துப் போய் உறங்கத் துவங்கியிருந்தது. வழியில் இவர்கள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அந்தப் பெண் பழனியம்மாளைவிட ஒரு கஜம் முன்னால் தள்ளியே நடந்தாள்.

அந்தப் பெண்ணின் வீடு, நிறைய பேர்களடங்கிய குடும்பம் வசிக்கிற ஒரு சாதாரணமான, ஆனால் பெரிய வீடு. பழனியம்மாளை வீட்டின் சந்து வழியாக வரச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் முன் கதவு வழியாக உள்ளே சென்றாள். இவள் அந்த நீண்ட சந்தைக் கடக்க ஆரம்பித்தாள்.

வீட்டின் உள்பக்கத்திலிருந்து ஒரு அறை சந்தைப் பார்த்த மாதிரி இருந்தது. திறந்திருந்த அதில் பெரிய நிலைக்கண்ணாடி பதித்த பீரோ ஒன்றும் இருந்தது. பழனியம்மாள் அதைக் கடந்த போது இவள் பிம்பம் அதில் விழுந்தது. இவள் சட்டென்று, கண்ணாடியில் முழுதாய் விழுந்த தனது உருவத்தைக் காண நின்றாள். இவள் இதுவரை தன்னை முழுதாகப் பார்த்துக் கொண்டதே இல்லை.

பழனியம்மாளுக்குப் பகீரென்றது. அந்த உருவம் ஒல்லியாய்க் களைத்து காணப்பட்டது. அதன் இடது கண்ணுக்குக் கீழே இருந்த மச்சம் அதை இன்னும் கோரமாக்கியது. கண்கள் எதையோ, எப்போதும் தேடிக்கொண்டிருப்பவையாகக் காட்சி அளித்தன. இரக்கமற்ற காலம் உடலை தின்றுவிட்டிருந்ததோடு, மனத்தின் யெளவனத்தையும் திருடிச் சென்றுவிட்டிருந்தது. அந்த ஒரு கணத்தில், வாழ்க்கையே தன்முன் சுருண்டு, விரிவதாய் இவள் உணர்ந்தாள். அந்நிமிஷத்தின் சிந்தனையற்ற மெளனம் அவளை வதைத்தது. என்றாலும், பழனியம்மாள் அதில் லயித்துத்தான் போனாள். ஓரிரு கணங்களுக்குப் பின் அவள் நகர்ந்து சந்தைக் கடந்தாள். அந்தப் பெண் இவளுக்காகக் காத்திருந்தாள். இப்போது அவள் கண்ணாடி அணிந்திருக்கவில்லை.

சிறிது நேரத்தில் பாத்திரங்களைச் சுமந்தபடி மரத்தடிக்கு வந்து சேர்ந்தாள் பழனியம்மாள். அந்தப் பெண்ணிடம் கூலிபேசி, இரண்டு ரூபாயை முன்பணமாகவும் பெற்று வந்திருந்தாள்.

முதலில் எதிர் சாரியிலிருந்த டாக்கடையிலிருந்து குழந்தைக்கு இரண்டு பன்னையும் ஒரு டாயையும் வாங்கிக் கொடுத்தாள். தானும் ஒரு டாயை வாங்கிக் குடித்தாள். வெற்றிலை, பாக்கு, புகையிலை போட்டுக்கொண்டாள். மறக்காமல் மாரியப்பனுக்காக ஒரு கட்டு பீடியை வாங்கி வைத்தாள். 'நாடார் மளிகை ' யிலிருந்து அரிசி வாங்கிவரக் குழந்தையை அனுப்பியபின் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

வழக்கமாகப் பறிக்கிற இடத்தில் குழியைப் பறித்தாள். குழி நிறையக் கரியை அடுக்கி நெருப்பு மூட்டினாள். பின் பெட்டியிலிருந்து, ஊதுகுழல், ஈயம், நவசாரம், இடுக்கி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொண்டாள். திரும்பிவந்த குழந்தையிடம், நெருப்பை ஊதச் சொன்னாள். பிறகு பாத்திரங்களை ஒவ்வொன்றாக மெதுவாகக் கழுவ ஆரம்பித்தாள். மாரியப்பன் ஒரு குழந்தையைப் போல் உறங்கிக்கொண்டிருந்தான். அவனையே இவள் வெறித்துக் கொண்டிருந்தாள். இவள் கோபம் தணிந்துகொண்டிருந்தது.

மணி நான்கானபோது, மாரியப்பன் விழித்தான். நெருப்பு நன்றாகக் கனிந்து, சிவப்புப் புள்ளிகளாய் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தது. பழனியம்மாள் பாத்திரங்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். மாரியப்பன் ஒரு முறை எல்லாவற்றையும் கண்களைச் சுழற்றிப் பார்த்தான். பின், எழுந்து சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்து நெருப்பின் அருகில் உட்கார்ந்துகொண்டான். துடைத்து வைத்த பாத்திரத்திலிருந்து ஒரு பெரிய குண்டானை இடுக்கியால் பிடித்து நெருப்பின் மீது வைத்தான். பாத்திரத்தைச் சுழலவிட்டு, அது முழுதும் சூடேறியபின், ஒரு துணியால் நவசாரத்தைத் தொட்டுப் பாத்திரத்தின் உள்பாகமெங்கும் துடைத்தான். நெருப்பின் சூட்டால் நவசாரத்தின் துவர்ப்பான நெடியும் ஆவியும் அந்த இடமெங்கும் பரவியது.

பழனியம்மாள், பீடிக்கட்டை இவன் பக்கம் நகர்த்தினாள். இவன் அவளைப் பார்க்கக் கூசி முகத்தைத் திருப்பி ஒரு பீடியை உருவிப் பற்றவைத்துக் கொண்டான். 'ஏய் ' ஜெகதீஸ்உ ' போய் ஒங்கப்பனுக்கு ஒரு டா வாங்கிட்டு வந்து குடுடி ' என்றாள் அவள். குழந்தை உற்சாகமாகக் குதித்து ஓடியது. சுமார் ஏழு மணி வரை இவர்கள் ஒன்றுமே பேசாமல் வேலையை முடித்தார்கள். இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த நெருப்பின்மீது சோற்றுக்கு உலை வைத்தாள் பழனியம்மாள். பின், தலைப்பைச் சுருட்டி தலையில் பொருத்தி அதன் மேல் பாத்திரங்களை எடுத்து வைக்க ஆயத்தமானாள். அதற்குள் மாரியப்பன் எழுந்து பாத்திரங்களை எடுத்து அவள் தலைமேல் ஏற்றிவைத்தான். பழனியம்மாள் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையைச் சத்தத்தோடு உமிழ்ந்து விட்டு நடக்க ஆரம்பித்தாள்.

பழனியம்மாள் திரும்பி வந்தபோது மாரியப்பன் ஜெகதீஸ்வரிக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான்.

நகராட்சிக் குழாயில் வழக்கமாக அந்த நேரத்தில் மட்டும் வருகிற தண்ணீர் வந்ததும், மாரியப்பன் குளிக்கச் சென்றான். பழனியம்மாள் அவனுக்கு முதுகு தேய்த்துவிடப் போனாள். அவனுடைய முதுகுத்தண்டில் அழுக்கு நிறையவே சேர்ந்திருந்தது. சதையே இல்லாமல் இருந்த, அவன் முதுகைத் தேய்த்துவிடும் போது அவனது விலா எலும்புகள் இவள் கையைக் குத்தின. இவள் அவனுக்காகப் பரிதாபப்பட்டாள். தானும் குளித்துவிட்டு வந்த பின்பு, 'ஜெகதீஸ்உ ஒங்கப்பனே கூட்டிட்டுச் சாப்பிட உக்காருடி ' என்று அவனைப் பூடகமாக அழைத்தாள் பழனியம்மாள். மூவரும் சாப்பிட அமர்ந்ததும், குழந்தை மட்டும் ஆர்வமாய்ச் சாப்பிட்டது. இவர்கள் மெளனமாகவே சாப்பிட்டு முடித்தார்கள்.

எச்சில் பாத்திரங்களைக் கழுவிவிட்டு வந்தபோது மணி பத்துக்குமேல் இருக்கும். குழந்தை அப்படியே உறங்கிப்போயிருந்தது. பழனியம்மாள் படுப்பதற்காக மரத்தடியைச் சுத்தம் செய்து, தரையெங்கும் நீரைத் தெளித்தாள். மண்ணுக்குள் ரகசியமாய்ப் புதைந்திருந்த தகிப்பு, நீரை ஆர்வமாய் உறிஞ்சிக் கொண்டது. திடாரென்று காற்றில் வெப்பம் படர்ந்து, பின் மெல்லக் குளுமை பரவியது. பழனியம்மாள் வழக்கம்போல், அதிகம் கிழிபடாத சேலையை எடுத்து மரத்தைச் சுற்றி ஒரு மறைப்பை ஏற்படுத்தினாள். நைந்துபோன பாயில் குழந்தையைக் கிடத்திவிட்டு மற்றொரு சேலையைத் தனக்கு விரித்துக் கொண்டாள். பிறகு, துணி மூட்டைகளில் ஒன்றை எடுத்து, தலைக்கு வைத்துக் கொண்டு ஒருக்களித்துப் படுக்க ஆரம்பித்தாள்.

சுவரோரமாகச் சாய்ந்திருந்த மாரியப்பன் பீடியைத் தூர எறிந்துவிட்டு, மெல்ல பழனியம்மாளை நெருங்கினான். அவள் இவனுக்கு முதுகைக் காண்பித்துப் படுத்துக்கொண்டிருந்தாள். ஒரு சில கணங்களுக்குப்பின் மாரியப்பன் ஆரம்பித்தான்.

'எம்மேலே கோவமா புள்ளே ? '

'ம்...ஹ்உ...ம் '

'பின்னே ? '

'..... '

'தூக்கமா ? '

'ம்...ஹ்உ...ம் '

'பின்னே ? '

'....... '

பழனியம்மாள் பேச மறுத்தாள். மாரியப்பன் மெல்ல அவளுடைய கைகளை வருடினான்.பின் மெதுவாக அவளைத் தழுவித் தன் பக்கம் திருப்பி அவளது உதடுகளில் முத்தமிட்டான். பழனியம்மாள் சலனமற்றுக் கிடந்தாள். கண்ணாடியில் முழுதாய்த் தெரிந்த தன் உருவத்தை நினைத்துக் கொண்டாள். திடாரென்று, இரண்டாவது முறை பாத்திரங்களைத் திரும்பக் கொடுக்கச் சென்றபோது அந்த நிலைக்கண்ணாடியிருந்த அறை மூடப்பட்டிருந்தது என்பது ஞாபகம் வந்தது.

அவள் விலகிப் படுத்தாள்.

கடிதம் - திலீப்குமார்

'மதியம் மூன்று மணிக்குச் சரியாக வந்துவிடு'' என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப் பணம் கேட்டு உருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். மிட்டு மாமா என் பாட்டியின் சகோதரர், பரம ஏழை. கண்ஷியாம் மாமா மிட்டு மாமாவின் ஷட்டகர், பெரிய பணக்காரர்.

பொதுவாக மிட்டு மாமா எழுதும் கடிதங் கள் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால், வயது காரணமாக மிட்டு மாமாவின் கைவிரல்கள் நடுக்கம் கண்டுவிட்டதால் அவருக்கு மாதம் ஓரிரு கடிதங்கள் எழுதித்தர நான் ஒப்புக்கொண்டிருந்தேன். தவிர, இந்தக் கடிதங்கள் மிக அந்தரங்க மான தஸ்தாவேஜுகள் என்பதாலும் அவற்றை நான் மட்டுமே கையாள நியமிக்கப் பட்டேன். விளைவாக, மிட்டு மாமாவுக்கும் எனக்கும் இடையே ஒரு கனவானுக்கும் அவனது ஆசைநாயகிக்கும் இடையே ஏற்படக்கூடியதைப் போன்ற சின்னச்சின்ன ரகசியங்கள் இழைந்த ஒரு அந்நியோன் னியம் உருவாகியிருந்தது.

நான் சென்ற போது மிட்டு மாமா பெரிய திண்டில் தலை சாய்த்துப் படுத்திருந்தார். கால்கள் பாலித்தீன் பைகளில் உறைந்து இரு சிறு மூட்டைகளாக ஒரு சிறிய தலையணைமேல் கிடந்தன. என்னைப் பார்த்ததும், ''வாடா, பயில்வான்'' என்று அன்புடன் அழைத்தார். மிட்டு மாமாவுக்கு வயது 70 இருக்கும். பெரிய கண்கள், ஒட்டிய கன்னங்கள், அடர்த்தியான புருவம், நீண்ட மூக்கு, மெலிந்த தேகம், கதர் முண்டு, கதர் பனியன், நைந்து போன பூணூல், மிட்டு மாமாவின் மனைவி ஜமுனா மாமி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கட்டடத்தின் பின்புறம் இருந்த மகன்கள் மற்றும் மருமகள் களோடு அவருக்கு ஒத்துவரவில்லை. தெருவைப் பார்த்த மாதிரி இருந்த இந்த முன் அறைக்கு அவரை ஒதுக்கிவிட்டிருந் தார்கள்.

''எழுதிக்கொள்'' - மாமா வழக்கமான பீடிகையுடன் ஆரம்பித்தார்.

''குறுக்கே எதுவும் பேசாதே'' என்றும் எச்சரித்தார்.

''மதிப்புக்குரிய கண்ஷியாம்ஜி அவர்களுக்கு,
சென்னை சவுக்கார்பேட்டைவாசி மற்றும் தங்களின் ஷட்டகர் மிட்டுவின் வணக்கங் களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இங்கு நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறோம். அதேபோல், உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள் என்பது குறித்த சமாச்சாரத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தற்போது எழுத நேர்ந்த விஷயம் என்ன வென்றால் கொஞ்சநாட்களாகவே எனக்கு மனசே சரியில்லை. சரியாகச் சொல்வ தானால் கடந்த ஒரு வாரமாக. நான் செத்துப் போக வேண்டும் என்று இங்கு எல்லோரும் விரும்புகிறார்கள். நானும், செத்துப் போக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஆனால், சாவதும் வாழ்வதும் நம் கையிலா இருக்கிறது! நான் தற்கொலைகூடச் செய்து கொள்வேன். ஆனால், தற்கொலை செய்து கொள்வதற்கும் எனக்கு ஓரிரு இடையூறுகள் இருக்கின்றன. முதலாவதாக, என் 73 வயதில் ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டால் யாரும் அவனுக்காக வருத்தப் படப்போவதில்லை. ஒழிந்தது சனியன் என்று இருந்துவிடுவார்கள். இரண்டாவதாக, என் கால்கள், என் பாதங்களில் வெடிப்பும் முழங்கால்களில் சிரங்கும் உள்ளது பற்றித் தாங்கள் அறிவீர்கள். இந்தக் கால்களை வைத்துக் கொண்டு நான் எப்படி எங்கே போய்த் தற்கொலை செய்து கொள்ள முடியும்? மேலும், சீழும் நீரும் வடியும் நாற்றமடிக்கும் கால்களோடு நான் செத்தால் அது நன்றாக இருக்காது. இதையும் தாங்கள் அறிவீர்கள். எப்படியும், என் பந்துக்கள் விரும்புவது போல் நான் சாகவே விரும்பு கிறேன்.

சென்ற மாதம் நீங்கள் தயவு செய்து அனுப்பிய பணத்தால் நான் நேற்று முன்தினம் வரை, ராவண ஐயர் தெருவில் உள்ள குஜராத் சகாய ஆஸ்பத்திரிக்குப் போய் என் கால்களுக்கு மருந்தும் கட்டும் போட்டு வந்து கொண்டிருந்தேன். பிரதி மாதமும் 3ஆம் தேதி வரும் சரும நோய் நிபுணர் டாக்டர் தாமரைக்கண்ணன் அவர்களுக்குப் பதிலாக இந்த மாதம் புதிதாக ஒரு டாக்டர் வந்திருந்தான். அவன் பெயர் சனத்குமார் ஜெயின். மார்வாடி.

இவனது தந்தை சுகன்மல் ஜெயினுக்குத் தங்கசாலைத் தெருவில் எவர்சில்வர் ஹோல்சேல் பாத்திர வியாபாரம் உள்ளது. NSC போஸ் ரோட்டின் திருப்பத்தில் நியூ ஆனந்த பவன் ஓட்டல் அருகேதான் இவரது கடை உள்ளது.

ஆளைப் பார்த்தால் நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்க ளுக்குத் தெரியாதவராய் இருக்க முடியாது. டாக்டர் சனத்குமார் வயதில் சின்னவன் தான். மற்றபடி, கெட்டிக்காரன். பிரபல சரும நோய் நிபுணர் டாக்டர் தம்பையாவிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றவன். என் கால்களைப் பரிசோதித்து மருந்து மாற்றிக் கொடுத்திருக்கிறான். பூசிக்கொள்ள ஆயின்மென்ட்டும், சாப்பிடுவதற்குச் சில மாத்திரைகளும் கொடுத்திருக்கிறான்.

கட்டுக்கூட ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றினால் போதும் என்று சொல்லி விட்டான். அரிப்பையும் நீர் வடிவதையும் இன்னும் ஆறு மாதத்தில் நிச்சயம் குணப் படுத்திவிட முடியும் என்று கூறியிருக்கிறான். உங்களுக்குத் தெரியும். சிகிச்சை என்ன வோ இலவசம்தான். ஆனால், ரிக்ஷாவில் தானே போக வேண்டியிருக்கிறது. ரிக்ஷாக் காரன் காத்தவராயன்தான் என்னைக் கைத்தாங்கலாகப் பிடித்து அழைத்துச் செல்கிறான். போய் வருவதற்கு இரண்டு ரூபாய் என்று பேசிவைத்திருக்கிறேன். சென்ற வாரத்தோடு பணம் தீர்ந்து விட்டதால் அவன் என்னை இப்போது கடனுக்குத்தான் அழைத்துச் செல்கிறான். அவனுக்கு நான் 6 ரூ. பாக்கி, காத்தவ ராயனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று காலையில்தான் தகவல் வந்தது. எனவே காத்தவராயன் செங்கல்பட்டுக்குப் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பிவருவான் என்பது சொல்வதற் கில்லை. மாற்று ஏற்பாடு செய்துகொண்டு விடலாம்தான். ஆனால் காத்தவராயன் போல வருமா? தவிர, புதிய ரிக்ஷாக் காரனுக்குக் கொடுக்கப் பணம்?

அதனால்தான் கூறுகிறேன், எனக்கு எல்லாம் வெறுத்துப் போய்விட்டது. நான் சாவதுதான் எல்லோருக்கும் நல்லது. உங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்பும் சுமையும் குறையும்.

உங்களுக்குத் தெரியும், என் மகன்கள் யாரும் சரியில்லை என்பது. பெரியவன் புல்புல்தாரா வாசித்துக் கொண்டும், தன் மனைவி பின்னால் அலைந்து கொண்டு மிருக்கிறான்.

அவன் மனைவி - அந்தக் குள்ள ராணி - எப்பேர்ப்பட்டவள் என்பதும் உங்களுக்குத் தெரியும். பூனை மாதிரி இருந்து கொண்டு என்ன அட்டகாசம் செய்கிறாள்! சென்ற வாரம் ஒரு நாள் (சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளக் கொடுத்த மோரிதாலில்) 'குழம்பில் உப்பு கொஞ்சம் குறைகிறது. எடுத்து வா' என்றேன். இது ஒரு தவறா? முகத்தை லலிதா பவார் பாணியில் ஒரு வெட்டு வெட்டித் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். வயசுக் காலத்தில் உப்பைக் குறைத்தால் என்ன என்று அவளுக்கு சப்போர்ட்டாகப் பேசவந்து விட்டான் இந்த லாயக்கற்ற நாய் (என் மூத்த மகன்). சின்னவன் கதையும் உங்களுக்குத் தெரிந் ததுதான். பாங்க்கில் வேலைசெய்கிறான் என்று பெயர்தானே தவிர, கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாத பயல். யார் இவன்? நீங்கள் போட்ட பிச்சையில்தானே B.Com. படித்து முடித்தான். இப்போது பெரிய பக்தனாகி விட்டான். சனிக்கிழமை இரவுதோறும் கூட்டு பஜனைக்கு ஏற்பாடு செய்து வீட்டையே துவம்சம் பண்ணுகிறான். தபேலாவும், சப்ளாக் கட்டையும் வைத்துக் கொண்டு அவன் நண்பர்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சமில்லை. இப்படி பஜனை முடிந்ததும் நள்ளிரவுக்கு மேல் இந்த நாய்கள் எல்லோரும் மகேஸ்வரி பவனில் பூரியும் லஸ்ஸியும் பீடாவும் சாப்பிடக் கிளம்பி விடுவார்கள். மகேஸ்வரி பவனில் நான் சாப்பிடாத பூரியா, போடாத பீடாவா, இவனுக்கு நன்றாகத் தெரியும் மகேஸ்வரி பவன் பூரி என்றால் எனக்கு இஷ்டம் என்று. ஆனால், ஒருநாள்கூட வாங்கி வந்ததில்லை. இந்த ராஸ்கல். பெரிய கவர்னர் என்று நினைப்பு. கவர்னர் என்றதும் ஞாபகம் வருகிறது. பிரபுதாஸ் பட்வாரி நம் ஸ்ரீநாத்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தார். என்ன எளிமை! என்ன எளிமை! நம் நாத்தியின் முன் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்துவிட்டுப் போனார். அவர் சொன்னார்: எங்களுக்கு இந்திராகாந்தி மேல் எந்தக் கோபமும் இல்லை. அந்தம் மாவுக்கு எப்பவுமே கொஞ்சம் வீம்பு ஜாஸ்திதான்.

என் இரண்டாம் நம்பர் பையன் ரஜினி தான் பாவம், நல்லவன்...''

இந்த இடத்தில் நான் குறுக்கிட்டுக் கேட்டேன் - ''மாமா, இரண்டாம் நம்பர் என்று எழுத வேண்டுமா? கண்ஷியாம் மாமாவுக்கு ரஜினி என்றாலே புரியுமே!''

''பேசாமல் நான் சொல்வதை எழுது. அவனுக்கு மனைவி, குழந்தைகளுக்குச் செய்தே மீள முடிவதில்லை. நேற்று முன்தினம் நடந்தது. இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் தளும்புகிறது.''

நான் மிட்டு மாமாவின் கண்களைப் பார்த்தேன்.

''என்னடா பார்க்கிறாய்? எழுது.''

''வீட்டில் தேங்காய் எண்ணெய் தீர்ந்து விட்டது. இவன் தண்ணீரை விட்டுத் தலையைச் சீவிக்கொண்டு போகிறான். மூத்தவனும் சின்னவனும் சிகரெட்டுக்கும் பீடாவுக்கும் செலவழிக்கிறார்களே ஒழிய எண்ணெய் வாங்கித்தர மாட்டேனென் கிறார்கள். வீட்டில் இப்போது எல்லோரும் தினமும் தலைகுளித்து, எண்ணெய் போடுவதை மாலைவரை ஒத்திப் போட்டு விட்டுச் சமாளித்துவிடுகிறார்கள். எண் ணெய் போடாமல் என் முன்வழுக்கை காய்ந்து தலையே எரிகிற மாதிரி இருக் கிறது. என் கொஞ்சநஞ்ச முடியும் தேங்காய் நார் மாதிரி சிலுப்பிக்கொண்டு நிற்கிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே பயமாக இருக்கிறது...''

நான் மாமாவின் தலையைப் பார்த்து அவர் எழுதச் சொன்னதை உறுதி செய்த கொண்டேன்.

''நான் சாவதற்கு முன் சில விஷயங்களை ஒழுங்குசெய்துவிட விரும்புகிறேன்.

உங்களுக்குத் தெரியும், என்னிடம் சொத்து ஒன்றும் கிடையாது. நான் வெறும் 'டண்-டண் கோபால் (செல்லாக்காசு, ஓட்டாண்டி) தான். உங்கள் சகோதரி, அதாவது என் மனைவி, இறந்தபோது அவளுடைய டாகுர்ஜிக்களின் சேவையைத் தொடர்ந்து செய்ய நான் ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் இறப்புக்கு முன்பாக, இந்த விக்கிரகங்களை நான் உங்களிடம் தந்துவிட விரும்புகிறேன். இந்த விக்கிரகங்கள் எங்கள் குடும்பத்தில் வழிவழியாக இருந்து வருபவை. என் அம்மா (அதற்கு முன் என் பாட்டி) அதிகாலையில் எழுந்து குளித்து முழுகிவிட்டு, வெறும் வயிற்றில் இந்த விக்கிரகங்களுக்குப் பூஜை செய்துவிட்டுத்தான் பச்சைத் தண்ணீர்கூடக் குடிப்பாள். அவளுக்குப் பிறகு உங்கள் சகோதரியும் அப்படியே செய்து வந்தாள். உங்கள் சகோதரி போனபின் நான்தான் ஏதோ முடிந்தவரை செய்துவருகிறேன். நான் தினம் குளிக்க முடிவதில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். கால்கட்டு மாற்றும் அன்றுதான் குளிக்க முடிகிறது. அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் பூஜை செய்கிறேன். எனக்கு வருத்தமெல்லாம், சுப தினங்களில்கூட இந்த விக்கிரகங்களுக்குச் சரியான நைவேத்தியம் படைக்க முடிவ தில்லை என்பதுதான். தினம் பதினோரு மணிக்கு எனக்கு வரும் உணவைதான் (மூன்று சப்பாத்திகளும் கொஞ்சம் சாதமும்) சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. மாலையில் அம்பிஸ் கபேயிலிருந்து வரும் இரண்டு இட்டிலியும் ஒரு வடையும்தான். கடவுள் இதை ஏற்றுக்கொள்வார் என்றுதான் நம்புகிறேன். எல்லாவற்றுற்கும் சிரத்தைதான் முக்கியம்.

என் மருமகள்களை நம்ப முடியாது.

அவர்களுக்கு இவற்றின் அருமை தெரியாது. வீசி எறிந்துவிடுவார்கள். அல்லது குழந்தை களுக்கு விளையாடக் கொடுத்து விடுவார்கள். இந்த விக்கிரகங் களில் குறிப்பாக ஒன்று முக்கியமானது. புல்லாங்குழல் சகிதம் தவழ்ந்து வரும் பாலகிருஷ்ணனின் ஐந்து அங்குலம் உயர விக்கிரகம்தான் அது. பார்க்க மிக அழகாக இருக்கும். பட்டு வஸ்திரமும் ஜரிகைக் குல்லாயும் போட்டுப் பொட்டும் இட்டுவிட்டால் சாட்சாத் கிருஷ்ணனே நம் முற்றத்தில் வந்து தவழ்ந்து கொண்டிருப் பது போல் இருக்கும். நான் இறந்து விடுவதற்கு முன் இந்த டாகுர்ஜிக்களை உங்களிடம் ஒப்படைத்து விட விரும்புகிறேன். என் சகோதரியிடம், அதாவது உங்கள் மனைவியிடம் கூறுங்கள். இது என் கடைசி ஆசையென்று. நம் காலம் முடிந்த பின் குழந்தைகள் இதை ஒழுங்காகச் செய்வார் கள் என்று சொல்ல முடியாது. என் சகோதரிககு முடிகிறவரை டாகுர் ஜிக்களின் சேவையைச் செய்யட்டும். அதற்குப் பிறகு கிணற்றிலோ அல்லது நதியிலோ அவற்றைச் சமர்ப்பணம் செய்து விடுங்கள். இதுதவிர என்னிடம் சில தெய்வீகப் புத்தககங்களும் ஒரு குட்டிக் குடத்தில் கொஞ்சம் கங்கா ஜலமும் இருக்கிறது. இதையெல்லாம்கூட நான் உங்களுக்கே கொடுத்துவிட விரும்பு கிறேன். புத்தகங்களில் குறிப்பாக, 'ஹனு மான் சாலிசாவும்' (ஆஞ்சயே கவசம்) டோங்கரே மஹ்ராஜின் ஆசிபெற்ற பாக வதமும் நீங்கள் அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால், வீட்டில் பேய் பிசாசுகளின் நடமாட்டம் இருக்காது என்பதோடு சுபிட்ச மும் ஏற்படும்.

நான் செத்துப்போகத் தயாராக இருக்கி றேன் என்பது தங்களுக்குப் புரிந்து போயிருக்கும். ஆனால், சாவு எப்படி, எங்கிருந்து வரும் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை. நாம் வலியப் போய் நின்றாலும் இந்தப் ப்ருத்வியில் நம் பிரயாணம் முடியும் வரை, சாவு நம்மை அரவணைத்துக் கொள்ளாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம், பட்டம் விட்டுக் கொண்டிருந்த ஜீவன்லாலின் எட்டு வயது மகன் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டான். அவன் அதிர்ஷ்டம், அந்த நேரம் பார்த்து, அழுக்குத் துணி களடங்கிய பொதியோடு போய்கொண் டிருந்த 'ஏகாம்பரேஸ்வரர் பின்மென்' காரனின் கழுதைமேல் சொல்லி வைத்தாற் போல் குறி தவறாமல் விழுந்து தப்பித்தான். ஒரு கீறல் இல்லை, ஒரு காயம் இல்லை. இடறி விழுந்ததில் கழுதைக்குத்தான் பாவம், பின்னங்கால் முறிந்துவிட்டது. ஜீவன்லாலை உங்களுக்குத் தெரியும். மகாக் கஞ்சன். கழுதையின் சிகிச்சைக்கு ஒரு பைசாக்கூடத் தரமாட்டேன என்று கூறிவிட்டான். கழுதையை ரிக்ஷாவில் வைத்து மாட்டாஸ் பத்திரிக்குக் கொண்டு போவதற்கு அவனிட மிருந்து மூன்று ரூபாயை வாங்குவதற்குள், போதும் போதுமென்றாகிவிட்டது.

அந்த டோபி மிக அசிங்கமான, ஆனால் ஒரே சொற்றொடரைப் பயன்படுத்தி குஜராத்திகள் வம்சத்தையே ஏசிவிட்டுப் போய்விட்டான்.

இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

ஆனாலும், நான் நினைக்கிறேன், நான் சாகத்தான் வேண்டும் என்று. நான் சாவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தும், நான் சாகாமல் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வருகிறது.

என்னோடு படித்த ரஞ்சித் ப்ரோக்கர் பத்து நாட்களுக்கு முன்பு எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் ஒரே மூச்சில் போய்விட்டான். இப்படி எனக்குத் தெரிந்து, இந்த ஒரு மாதத்திற்குள்ளேயே, இந்தத் தெருவிலேயே மூன்று பெரிய உயிர்கள் போய்விட்டன.

எல்லோரையும் டியபடீசும் மாரடைப்பும் புருஷன் பெண்டாட்டி போல் ஜோடி சேர்ந்து கொண்டு வந்து இழுத்துப் போய் விட்டன. என் மருமகள் சுபத்திராவுக்கும்கூட இந்த இரண்டு வியாதியும் இருக்கிறது. எனக்குத் தான் ஒன்றும் இல்லை. சிரங்கு, வெடிப்பு என்று சில்லறை வியாதிகள் தவிர. சென்ற வாரம் என் பெரிய மருமகள் சொன்னது போல் நான் நிஜமாகவே நொண்டி நாயைப் போல் உணர்கிறேன்.

இந்த ஏகாம்பரேஸ்வர் அக்ரகாரத்தில் எனக்காக அழப்போகிறவர்கள் இனி யாரும் இல்லை. இந்த அக்ரகாரமே களை இழந்துபோய்விட்டது. தெப்பக்குளம் வற்றிவிட்டது. பெயருக்கென்று கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பிளாஸ்டிக் தாமரைகளை மிதக்கவிட்டிருக்கிறார்கள். தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த காவிப் பட்டை அடித்த சுவரை இடித்துவிட்டு மாடிக் கட்டிடம் கட்டி எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டார்கள். ராவண ஐயர் தெருவிலுள்ள பள்ளிக்கூட மணிக்கூண்டு இப்போது தெரிவதில்லை. கோவில் பிரகாரத் தூண்களில் மைக்குகளைப் பொருத்தி மெல்லிசை பஜனைகள் செய்கிறார்கள். அப்பழுக்கற்ற குஜராத்திகள் புழங்கிய தெருக்களில் இப்போது பாத்திரக் கடை மார்வாடிகள் நிரம்பி வழிகிறார்கள். அக்ரகாரத்தின் பழைய அமைப்பை நினைவுபடுத்தும் வகையில் கோயில் அரச மரம் மட்டும்தான் இருக்கிறது. இன்னும் நிழல் தருகிறது. அந்த நிழலை உணர்ந்து அனுபவிக்கும் மனிதர்கள் மறைந்து விட்டார்கள். அந்த அரச மரம் முன்பு தந்த ஆசுவாசம் இப்போது காணாமல் போய் விட்டது. கிழக்குக் கோடியில் என் தங்கை நாத்தி பெஹ்ன் இருக்கும் கட்டடத்தையும் விலை பேசிவிட்டார்கள் அறுபது லட்சத் துக்கு. இதனால், முப்பது குடும்பங்கள் தெருவில் நிற்கப்போகின்றன. கூடு கலைத்து விரட்டப்பட்ட பறவைகள்போல அவர்கள் பிரியக் காத்திருக்கிறார்கள். சூழல் மாறிவிடப் போகிறது. வாழ்க்கைக்கு அர்த்தமே சூழலில்தான் இருக்கிறது. சூழல் போனால் வாழ்க்கையே போய்விடும்.

நான் தினமும், கடவுளை அல்ல, யம ராஜனை வேண்டிக் கொள்கிறேன், 'இந்தக் கிழவனை இழுத்துக் கொள், உன் பாசக் கயிற்றுக்கு மோசம் வந்துவிடாது' என்று. கடைசியாக, இன்னொரு வேண்டுகோள். நான் இறந்துபோனால், என் ஆன்ம முக்திக்காக என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில் என்றாலும் பரவாயில்லை, பாகவத பாராயணம் அவசியம் செய்துவிடுங்கள்.

மற்றபடி விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறொன்றும் இல்லை.

மகிழ்ச்சியும் சந்தோஷமும் பற்றிய சமாச் சாரத்தை எழுத வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
மன்மோகன் தாஸ் துவாரகா தாஸ்
(மிட்டு)

பி.கு: உங்களுக்கு வசதிப்படுமென்றால், ஒரு 100 ரூபாய் M.O. மூலம் அனுப்பி வைக்க வேண்டுகிறேன் - மிட்டு.''

தாள்களை ஒழுங்குபடுத்தி அந்த நீண்ட கடிதத்தை மடித்துக் கொண்டேன். வழக்கம் போல் மிட்டு மாமா தனது பூணூலில் தொங்கிய சின்னச் சாவியைக் கொண்டு தன் தகர கஜானாவைத் திறந்து ஒரு பெரிய உறையையும் தபால் தலைகளையும் கொடுத்தார். முகவரி எழுதி எடுத்துக் கொண்டதும் கூறினார் ''சோம்பல்பட்டுக் கடிதத்தைக் கண்ட தபால் பெட்டியில் போட்டுவிடாதே. நேராக பார்க் டவுன் போஸ்ட் ஆபீசுக்கே போய்விடு. போட்ட பின் எனக்கு வந்து சமாச்சாரமும் சொல்லிவிடு.'' பிறகு ''இதை நீ வைத்துக் கொள்'' என்று ஒரு 50 காசு நாணயத்தைக் கொடுத்தார். நான் கிளம்பினேன்.

மூன்று நான்கு நாட்கள் கழித்து இரவு எட்டு மணிக்குத் தந்தி மூலம் செய்தி வந்தது. நான் மிட்டு மாமாவுக்குத் தாக்கல் சொல்ல ஓடினேன்.

மிட்டு மாமா அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்தார். நான் அவரது தோளை உலுக்கி எழுப்பினேன்.

''என்னடா விஷயம்?''

''நாம் மோசம் போய்விட்டோம் மாமா.''

''என்ன ஆயிற்று?''

''உடுமலைப்பேட்டையிலிருந்து தந்தி வந்திருக்கிறது. கண்ஷியாம் மாமா போய் விட்டார்.''

மிட்டு மாமா பதறி எழுந்தார், ''என்ன சொல்கிறாய் நீ?''

''ஆமாம் மாமா, நிஜமாகத்தான். இன்று மதியம் ஆபீஸிலிருந்து வந்திருக்கிறார். எல்லோருடனும் நன்றாகச் சிரித்துப் பேசியபடி சாப்பிட்டிருக்கிறார். உங்கள் கடிதத்தைக்கூட இரண்டு மூன்று முறை படித்தாராம். சிறிது தூங்கப்போனவர் பிறகு எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது. ஹார்ட் அட்டாக்தான்.''

மிட்டு மாமா தன் கால்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நீண்ட மெளனத்திற்குப் பின் தத்துவார்த்தமாகக் கூறினார்: ''போகிறவர்கள் போய்ச்சேர்ந்து விடுவார்கள். ஆனால், இருக்கிறவர்களுக்கு வேறு வழி இல்லை. அவர்கள் இருந்துதான் ஆக வேண்டும்.''

கண்ஷியாம் மாமாவின் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்ளப் போன எங்கள் உறவினர் கள் எல்லோரும் கூடவே மிட்டு மாமாவின் கடிதத்தையும் படித்துவிட்டு வந்திருந் தார்கள். கண்ஷியாம் மாமாவுக்குப் பதிலாக மிட்டு மாமாவே செத்துப்போயிருக்கலாம் என்று வெளிப்படையாகவே அபிப்பிரயாம் தெரிவித்தார்கள். மிட்டு மாமாவின் மகன்களுக்கும் மருமகள்களுக்கும் பெருத்த தலைகுனிவு ஏற்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, மிட்டு மாமாவின் மூத்த மருமகள் ஆவேசமாகக் கொந்தளித்தாள். கிழவனின் நாக்கை இழுத்து அறுத்துவிட வேண்டும் என்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடிதத்தை எழுதிக்கொடுத்த என்னுடைய கைகளையும் வெட்டிப்போட வேண்டும் என்றும் விரும்பினாள் அவள். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த மாதிரி விபரீதம் ஏதும் நடக்கவில்லை. எப்படியும், நான் மிட்டு மாமாவுக்குக் கடிதம் எழுதித் தருவதை நிறுத்தும்படி ஆனது.