கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கலகக் குரல் எழுப்பிய கவிஞர் கம்பதாசன் - சென்னிமலை தண்டபாணி

சந்திர சூரியர்கள் -என்றன்
தாளங்க ளாகுமடாலி
விந்தைக் கடலலைகள்- அதிலே
விம்மி எழும் ஒலியாம்
பளிச்சிடும் தாரகைகள்- என்றன்
பாடலின் வார்த்தைகளாம்
ஒளித்திரு வானவில்லே- என்றன்
உள்ளத் துணர்ச்சியடா''

என்ற கம்பீரத்தோடு கவிதை வானில் வலம் வந்தவர் கவிஞர் கம்பதாசன். 1916-ல் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் உலகாபுரத்தில் கொலுபொம்மைகள் செய்து விற்றுவந்த சுப்பராயர்- பாலம்மாளுக்கு மகனாகப் பிறந்து 1973-ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் தன் பாட்டுப் பயணத்தை நிறுத்திக்கொண்ட கவிஞரின் பள்ளிப்படிப்பு ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டது, சின்ன வயதிலேயே சென்னைக்கு சிறகு விரித்து வந்த கவிஞர்- பாரதி, பாரதிதாசனின் கருத்தாக்கங்களில் உருப்பெற்று காலப்போக்கில் தன் சிந்தனைத் திறத்தால் தனக்கொரு தனியிடத்தைக் கவியுலகில் கட்டிக்கொண்டவர். கவிஞரின் பல கவிதைகள் பாரதி, பாவேந்தர் கவிதைகளை அடியொற்றி எழுதப்பட்டதுதான் என்றாலும் 

    ""நீ சிரித்தால் என்ன
    நிலா சிரித்தால் என்ன?
    கான் சிரித்த பூக்கள்
    காலக் காற்றில் போச்சே! -காதல்
    கனவும் மறையலாச்சே!''

என்று புதிய திசையில் புறப்பட்டுக் குரலெழுப்பியவர். ஆண்டவனுக்கும் ஆள்பவர் களுக்கும் பல்லக்குத் தூக்கிக்கொண்டிருந்த பாட்டை எளியவர்களை நோக்கித் திருப்பிவிட்ட பெருமை பாரதிக்கும் பாவேந்தருக்குமே உரித்தது என்றாலும் கம்பதாசனும் பாவேந்தரைப்போலவே எளிய வாழ்நிலை மாந்தர்களைத் தன் கவிதைகளில்  உச்சத்தில் ஏற்றிவைத்து உள்ளம்மகிழ்ந்தவர். தொழிலாளி, செம்படவன், கொல்லன், பரவர், ரிக்ஷாக்காரன், படகோட்டி, நெல் அறுப்போன், நெல்குத்தும் பெண், மாடுமேய்க்கும்சிறுவன், வளையல்காரன், கூடைமுடைபவன், ஒட்டன், பிச்சைக்காரன், குலாலன், பஞ்சாலைத் தொழிலாளி என்று எவரைத்தான் எழுதாமல் விட்டார் கவிஞர்? காரணம் என்ன?  அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் தான்.

""மண்பாண்டம் செய்யும் குயவனும் -புது
மனைகட்டித் தந்திடும் கொத்தனும்
எண்ணெய் விளைத்திடும் வாணியன் -சிகை
எழிலுறச் செய்திடும் நாவிதன்
புண்ணைத் துடைக்கும் மருத்துவன்- கல்வி
போதிக்கும் பள்ளியின் ஆசானும்
கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும்- அவர்
காணும் பசியே சமத்துவம்''

 என்ற தெளிவு அவருக்கு இருந்தது. காந்தியத்தின் பக்கம் கவிஞர் கண்பதித்திருந்தபோதும் அவர் சிந்தையில் செங்கொடி அசைந்தாடியது. சமத்துவம், இயற்கை, உழைப்பு, சோசலிஸம் என்று அவர் மனம் 

பல்வேறு வெளிகளில் பயணப்பட்டது. 
""சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்ற தாக -மலை
தினைக்காட்டில் வெய்யிலிலே செல்லல் போல
அற்றவரும் உற்றவரும் அணிவகுத்து -நொய்
அரிசிக்கு நிற்குநிலை பாராய் தம்பி''

என்று மனம்வருந்தி

""பன்றி வசிக்கும் நிலைபோல்- மிகு
 பஞ்சை மக்கள் குடும்பம்
 இன்றும் வதிகின்ற தெனிலோ- மனம்
 ஏக்கத் தீயால் எரியும்''

என்று தனக்குள் எரிந்து கொண்டேயிருந்தார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாத கவிதை என்ன கவிதை?  நமுத்துப்போன சொல்லடுக்குகளில் தங்களுக்குள் தாங்களே முணு முணுத்துக் கொண்டிருந்தால் அது கவிதையுமல்ல; அதைக் காகிதத்தில் கக்குபவன் கவியுமல்லன்.  நம் கவிஞரோ,

    ""தீண்டாத குப்பையைத் தீண்டியே -தேச
     சேவைசெய் தோட்டி குடிசையில்''

என்று சொல்லி,

    ""கண்ணன் இருந்தானாம் -திரௌபதி     
    கட்டத் துகில் தந்தானாம்
    உண்மையில் அவனிருந்தால் -எனக்கே
    ஓர் கந்தை தாரானோ?''

என்று ஏளனக் குரலில் வெப்ப வினாவை வீசுகிறார். 

அதுமட்டுமல்ல; “கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவப் பெருந்தகை கொந்தளித்தாரே அந்தக் 
கொந்தளிப்பு அடங்காமல் நம் கவிஞர் கம்பதாசனிடம்-

    ""உண்ண உணவது இல்லை என்று -ஏழை
    உயிரும் துடித்து  இறப்பதற்கோ? -புவி
    பண்ணிய குயப்பயலான தெய்வம் -இன்றே   
    பட்டொழிய வழிகண்டிடுவேன்''

என்று எதிரொலிக்கிறது ஒருபிடிச் சோற்றுக்கு வழியின்றி அலையும் அவலத்தைவிட, கொடுமையைவிட வேறென்ன அவலம், கொடுமை இருந்துவிட முடியும்? இதோ கவிஞரின் குரல் கேட்கிறது-

 ""கண்ணிளைப் பாறிடத் தூக்கமுண்டு- அற்பக்
 கழுதை யிளைப்பாறிடத் துறையுமுண்டு
 பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு -எங்கள்
    பசியிளைப் பாறிட உண்டோ இடம்?''

என்று கேட்டுவிட்டு அவரே சொல்கிறார்

 ""சொரிதவளை தங்கக் கேணியுண்டு -.சாவைக்
 சொல்லிடும் கூகைக்குப் பொந்துமுண்டு
 வறியவர் எஙகட்கு என்ன உண்டு? -உங்கள்
 வாயேச்சும் வயிற்றுப் பசியுமுண்டு!''  

என்பதோடு நிற்கவில்லை.

""தெருச்சுற்றும் நாய்களைச் சுட்டுத்தள்ளி -தோலைச்
சீராக்கி விற்றிடக் கற்றவரே!
அருளின்றேல் எங்களைச் சுட்டுத்தள்ளி- உற்ற
ஆவியைக் காற்றாய் அனுபவிப்பீர்!'' 

என்கிறார். ஏன் இப்படிப் பாடுகிறார் என்றால் அவர் கண்முன்னால் எப்போதும் எளிய மனிதர் களின் வாழ்க்கை எங்களுக்கு என்ன வழி என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 ""வயிறாம் அடுப்பில் பசித்தீயுண்டு- விழி
 வழங்கும் நீர்த்துளி சமைப்பதற்கு
 உயிர்தளும்பும் உடல் பானையுண்டு- தங்கி
 உண்டிட சாவாம் விடுதியுண்டு

என்று அவர்களின் அவலக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? கவிஞர்  முழங்குகிறார்..

 ""விவசாயி..! விழி! அச்சம்
 விடுவிடு!- ஏரின்
 தவச்சாலை நிலம்... வித்தை
 நடு!நடு!'' 

என்று.  ஆனால் என்ன நடக்கிறது?  அதையும் கவிஞரின் மொழியிலேயே கேட்போம்..

 ""உடல்பொருள் ஆவிய தெல்லாம்
 பண்ணைச் செல்வருக் கீந்து -ஆலை
 பட்ட கரும்பென வாகி
 கண்ணீர் உகுக்கையில் கண்டேன்- அய்யோ
 கலந்திருந்தது ரத்தம்! -அதில்
 கடவுள் துடித்திடக் கண்டேன்''

தன்னுடைய கலகக் குரலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.. எப்படித் தெரியுமா?

 ""நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர்
 நாங்கள் பலபேர் ஏர்உழுவோர்
 நீங்கள் சிலபேர் விருந்துண்போர்
 நாங்கள் பலபேர் பசித்திருப்போர்!
 நீங்கள் சிலபேர் ரோஜாமலர்
 நாங்கள் பலபேர் கூர்முட்கள்
 நீங்கள் சிலபேர் தோன்றுபிறை
 நாங்கள் பலபேர் நட்சத்திரம்''  

என்று நெஞ்சுயர்த்திச் சொல்லி

 ""நாளுக்கு நூறுமுறை - அஞ்சி
 நாய்போல் வாழ்வதிலும்
 தோளுயர்த்திச் சாவின் -முத்தம்
 சூடுவோம் ஓர் முறையே.. 

என்று பிரகடனப்படுத்துகிறார். இவை மட்டுமல்ல; மணக்க மணக்க இயற்கையை தன் கவிதைகளில் பதியனிட்டு வைத்திருக்கிறார் கவிஞர்.  வசந்தம் வருவதை,

 ""மாமரம் செந்தளிர் நாவை நீட்டிட
 மலர்கள் பூத்து வியந்து நோக்கிட
 காமனின் சரம்போல் கோகிலம் கூவிட
 கந்தம் சுமந்து தென்றல் தள்ளாட
 வந்தது வசந்தம்! வந்தது வசந்தம்!
 இன்பக் காவியம் இயற்கை ஏட்டில்
 எழிலுறக் காணுது மலர் எழுத்தினால்'' 

என்று வசந்தத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து மலர்களைப் பொழியவைக்கிறார். விண்மீன் களைப்பற்றி எப்படி எழிலோவியம் தீட்டுகிறார் என்றால்-

  ""நீலமல ரொன்றில் பட்டாம்பூச்சி- பல
  நின்று மஞ்சள் நிறச்சிறகை மெள்ளக்
  கோலம் ஒளிர அசைப்பதுவோ?- இமை
  கொட்டும் குளிரொளித் தாரகைகள்
  வானெனும் பெரிய கம்பளமேல்- இருள் 
  வஞ்சியே சொக்கட்டான் தானாட
  மீனெனும் சோழி குலுக்கிக்கொட்டி- அதில்
  மிளிர்ந்திடும் எண்ணினைக் கூட்டுறாளோ?''

 கம்பதாசனின் சொற்சித்திரங்கள் படிக்கப்படிக்க பற்பல வண்ணங்களை நமக்குள் வாரியிறைப்பவை.  வானவில்லைக் கவிதையாக்கியவர்-

  ""பூமியாம் காதலி தன்னுடனே -வானம்
  பொங்கிக் கலவிகொள் போதினிலே
  தேமலர் வாய்மென்ற தாம்பூலத்தை -துப்பச்
  சித்திர வானவில் ஆனதடா!''   

என்று நமக்குள் ஒரு பெருஞ்சித்திரத்தை வரைந்துவைக்கிறார். இயற்கையை, மானுடத்தை உண்மையில் நாம் நேசிக்கிறோமா என்றால் எதிர்மறையான விடைதான் நமக்கு எப்போதும் கிடைக்கும்.  அதனால்தான் கவிஞர்-

 ""மூடிய வானக் கூடையின் கீழே
 கோழிக் குஞ்சென நாழிகை போக்கி
 வாழும் மானிட வாழ்வின் குருத்தே!'' 

என்று நம்மை விளித்து

 ""தரைமகள் அணிந்த தாவணிதான்
 சரிந்தே காற்றில் பறப்பதைப்போல்
 விரிவோடு வளைந்து செலும்பாதை
 விசித்திரம் காணக் காண இன்பம்.''

என்பதை விளக்குகிறார்.

 அவருடைய சொல்லாட்சியும் உவமைகளும் உருவகங்களும் அன்றைய காலத்தில் எத்தனையோ பேரை எழுதவைத்தது. 

 1941-ல் கவிஞரின் "கனவு' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து "முதல்முத்தம்', "விதியின் விழிப்பு', 
"அருணோதயம்', "புதுக்குரல்', பாட்டுமுடியுமுன்னே, "தொழிலாளி', "கம்பதாசன் கவிதைகள்' என்று பல படைப்புகள் படையெடுத்தன. தன்னுடைய "பாட்டு முடியுமுன்னே' என்ற கவிதை நூலுக்கு 1952-ல் கவிஞர் எழுதிய முன்னுரை இப்படிப் போகிறது: "இந்தப் புத்தகத்தில் உள்ள பாட்டுகள் எனது உணர்ச்சி வேகத்தில், என் காதலி என்னைப் பிரிந்தபோது, ஒரே இரவில் எழுதிய பாட்டுகளாகும். அன்பை உணர்ந்த கலை உள்ளங்கள். குற்றங்களைப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் அதுவே எனது இதய நோய்க்கு மருந்தாகும்' என்று. கவிஞரின் காதல் காயம் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கவிஞர் பாவேந்தரின்  அடியொற்றி வளர்ந்தவர். அவரால் பாராட்டப்பட்டவர். இவருடைய கலையுள்ளம் பம்மல் சம்பந்தம் முதலியாரால் விரிந்தது. ஆரணி குப்புசாமி முதலியாருடன் ஏற்பட்ட நட்பால் எழுதத்தொடங்கிய கவிஞர், நடிகராகவும், பாடகராகவும், திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார். இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் திசைகளில் பட்டுத் தெறித்தபோது, கேட்ட உள்ளங்கள் எல்லாம் கிறுகிறுத்தன. 1945-ல் "சாளவாகனன்' படத்துக்குப் பாடலோடு கதை, வசனமும் எழுதினார். புகழ் அவருக்குப் பூமாலை சூட்டியது. மகாகவி வள்ளத்தோள் கவிஞருக்கு உறவானார். செல்வச்செழிப்போடும் புகழோடும் வளைய வந்த கவிஞரை வறுமை வட்டமிடத்தொடங்கியது.

""பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையை
பக்கம் வைத்தே நடந்தாய்''

என்று பாடியவர் தன் கவிதைகளை,

      ""சின்னஞ் சிறுகவிதை -மலர்மேல்  
      சிந்தும் பனித்துளிபோல்
      சின்னஞ் சிறுகவிதை- உழவன் 
      சிந்தும் விதைநெல்போல்
      சின்னஞ் சிறுகவிதை -அகலின்
      தீப ஒளியதுபோல்
      சின்னஞ் சிறுகவிதை -குழந்தை 
      செவ்விதழ் முத்தம்போல்''

என்று சொற்சித்திரமாக்கினார். கவிதை, திரைப் படப் பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், சிறுகதை கள் என்று நிறைய எழுதிக் குவித்த கவிஞரை வறுமை காவுகொண்டது. ஈரல் கோளாறும் காசநோயும் கவிஞரின் பயணத்தை முடித்துவைத்தன.

""காரிருள் நேரம்
காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே''

என்று கண்மூடிய கவிஞரை வழியனுப்ப வந்தவர்கள் மூன்றுபேர்தான் என்றசெய்தி எவ்வளவு வேதனைக்குரியது? என்றாலும்-

""சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் -நான்    
விழித்துக் கொண்டே துயில்கின்றேன்
சிலர் வாழ்வார் சிலர் சாவார் -நான்
வாழ்ந்து கொண்டே சாகின்றேன்''


என்று தொடர்ந்து வாழ்வோடு போராடிய கவிஞரின் கலகக் குரல் எழுப்பிய  கவிதைகள் எப்போதும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை கவிதை நெஞ்சங்கள் மறுக்க முடியுமா?

நன்றி - இனிய உதயம் 01 03 2014

ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி


ஆத்மாநாமின் மறைவும், அவர் மறைந்த விதமும் அவரது கவிதைகளைப் பற்றி சற்றுத் தூக்கலாகப் பேச நம்மைத் தூண்டிற்று என்று நினைக்கிறேன். பிரிவின் கொடுமையை எதிர் கொள்ளும் தருணங்களில் மிகை எப்போதும் தவிர்க்க முடியாததாகவே இருந்திருக்கிறது. அவர் நம்மை விட்டுப் பிரிந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் கவிதைகளும் நம் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டது. இன்று அவரைப் பரிசீலனை செய்ய இந்த இடைவெளி நமக்கு உதவக்கூடும்.

ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்த பின்னும் தன் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறான். 'என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க இயலாது ' என்றார் ஆத்மாநாம். என்னை அழித்தும் என்னை அழிக்க இயலாது என்றும் சொல்லியிருக்கிறார். அது சரிதான். அவருடைய் சாரம் இன்றும் நம்மிடம் இருக்கிறது. அவருடன் உறவாட முடிகிறது. இந்த நேரத்தில் ஆத்மாநாமின் கவிதைகளை முழுமையாகவும் சிறப்பாகவும் பதிப்பித்து தந்திருக்கும் பிரம்மராஜனின் பணியை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. காலத்தின் வரிசையில் கடைசியாக தன்னிடம் வந்து சேர்ந்திருக்கும் கவிதைகளின் பொதுக் குணத்தை பிரதிபலித்தல் இவருக்கு இயற்கையாக இல்லை. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. ஞானக்கூத்தனின் ஆரம்பகாலக் கவிதைப் போக்கை பிரதிபலித்து இவர் எழுதியுள்ள 'இன்னும் ' என்ற தலைப்பிட்ட கவிதையில்தான் இவர் சுத்தமாக இல்லாமல் இருக்கிறார். மற்றக் கவிதைகளில் - மொத்தம் 143 கவிதைகள் - இவரது ஆளுமை, பலவற்றில் மங்கலாகவும் ஒரு சிலவற்றில் மிகச் சிறப்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது. இந்த தெளிவு கூடிவரும் வகையை உணருவது இன்று சிரமமாக இருக்கிறது. இவரது கவிதைகளை கால வரிசைப்படுத்தித் தர பிரம்மராஜனுக்குச் சாத்தியப்பட்டிருக்கும் என்றால் இவர் பெற்றுள்ள வளர்ச்சியை இன்னும் துல்லியமாக நாம் மதிப்பிட்டிருக்க முடியும்.

சுதந்திரம் மனித ஆளுமைக்கு தரும் விகாசம், வாழ்நிலை சார்ந்த அபத்தங்களும் கேவலங்களும் தரும் வருத்தம், மனிதனை ஆசுவாசப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கும் இயற்கை, நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம், இவை சார்ந்த உணர்வுகள் அவர் கவிதைகளில் அழுத்தம் பெறுகின்றன. தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் இவர். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. ஏற்கும் புதுமையின் பொருள் என்ன என்பதிலும் இந்த மண் சார்ந்து அதன் பொருத்தம் என்ன என்பதிலும் அவர் கவனங்கள் கொண்டிருந்தார்.

மேற்கத்திய சோதனைகளின் பிரமிப்புகள் மீது அல்ல; உலக இலக்கியத்தின் தரம் மீதே இவர் பற்றுக் கொண்டிருக்கிறார். பழைய கவிதைகளின் அலங்காரங்கலை புறக்கணித்த புதுக்கவிதைகள் மூலம் உறுதிப்பட்டு வந்து கொண்டிருந்த புதிய அலங்காரங்களையும் இவர் புறக்கணித்திருக்கிறார். பேச்சு அல்லது கடிதங்களில் நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு மேற்பட்ட 'கவிச்சொற்கள் ' அவர் கவிதையில் இல்லை. கவிதைக்குரிய வலுக்களாகக் கருதப்படும் உவை, உவமேயம், படிமங்கள் இவற்றின் மீது சார்ந்து நிற்காமல் -இயற்கையாக கூடிவருவது வேறு- அர்த்தங்கள் தரும் அனுபவ அலைகளை நம்பி கவிதைகளை எழுதியிருக்கிறார். அநேக கவிதைகளில் குழாயின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு தண்ணீர் ஓடி இறங்குவது போல முதல் வரியிலிருந்து கடைசி வரிக்கு அர்த்தம் விரைந்து ஓடுகிறது. ஒரு சில கவிதைகளில் முன் பகுதியும், பின் பகுதியும் தொடர்பின்றி பிளந்து கிடக்கின்றன. இது வாசிப்பு சார்ந்த நம் குறையாகவோ அல்லது நோயுற்ற காலங்களில் கவிஞருக்கு ஏற்பட்ட தடையாகவோ இருக்கலாம்.

ஆத்மாநாமின் அநேக கவிதைகள் குறிக்கோளைச் சென்றடையவில்லைதான். நிறைவான கவிதையை அடைய முன்னுவதும் குறையாக அவை முடிந்து போவதும் கவிதைத் தொழிலின் விதி என்று கூறும் அளவுக்கு மிகச் சிறந்த கவிஞர்கள் கூடி வராமலேயே கவிதையை முடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

ஆனால் ஆத்மாநாமின் கவிதைகளில் அலங்காரத்தினால் தடைபட்டவை என்றோ பிரமிப்பினாலோ மயக்கத்தினாலோ செயற்கையினாலோ இருப்பை மிகைப்படுத்திக்காட்ட விரும்பியதினாலோ தடைபட்டவை என்றோ அதிகம் இல்லை. அனுபவத்த்தில் மனம் இழையும் பயணம் எந்தப் புள்ளியில் கவிதையின் உடலாக மாறுகின்றது என்ற கேள்விக்கு திட்ட வட்டமான பதில் இல்லை. அநேக கவிதைகளில் இந்த உடல் உயிராக மாறும் காரியம் அவருக்கு நடக்கவில்லை.
கவிஞரான ஆத்மாநாமை அவர் வாழ்ந்த காலத்தின் நேர்மையான மனிதன் என்றும் சொல்லலாம். இது அபூர்வமான தகுதி. அவருடைய தொடர்புகள் சிறு வட்டத்தினுள் இருந்திருக்கலாம். உடல், காலம் இடம் சார்ந்த வரையறை கொண்டது. ஆனால் அவருடய கனவுகளின் எல்லை மேலான கவிதையின் விரிந்த தளத்தில் இருந்தது. மேலான கவிதையை மேலான வாழ்விலிருந்து பிரிக்க இயலாத லட்சியவாதியாகவும் அவர் இருந்தார்.

அவரது கவிதைகள் அவரது அனுபவ சாரங்களின் நாட்குறிப்புப் போல இருக்கின்றன. தன் அனுபவங்களை தான் விளங்கிக் கொண்ட விதத்தை சக மனிதனிடம் - மக்களிடம் அல்ல - அநேக சமயங்களில் ஒரு நண்பனுக்குச் சொல்லும் விதமாக - இவர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். ஒலி பெருக்கியால் எழுதாமல் தன் மனதால் எழுதிய கவிதைகள் சக மனிதனின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவன் காதோடு சொல்லும் வரிகளுக்குரிய அந்தரங்கத்தோடு இருக்கின்றன. அந்த வரிகள் பொருட்படுத்தத் தகுந்தவை என்றால் தன்னுடைய நண்பனிடம் அவன் இந்த வரிகளைச் சொல்வான். ஒரு மனதிலிருந்து மற்றொரு மனதிற்கு கவிதை இப்படித்தான் தவழ்ந்து செல்கிறது.
மென்மையான கவிஞர் என்று இவரைச் சொல்லலாம். இவருடைய ரீங்காரம் தான் மென்மையானதே தவிர ரீங்காரத்துக்கு ஆதாரமான கம்பி - உள்பலம்- வலிமையானது. சுயத்தின் மீது நம்பிக்கை கொண்ட உள்பலம் இது. தன் அனுபங்களை சதா அசை போடுவதில் கூடிவரும் உள்பலம். அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று. கூடிவராத கவிதைகளில் கூட காலத்துக்கும் கவிதைக்கும் இடையே பழமையின் களிம்பு இல்லை.

பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. இதனால் அடையாளங்கள் அற்று வெற்று அம்பலத்தில் வெளிறிப்போன கவிதைகளாக இவருடையவை இருக்கின்றன என்பது இல்லை. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது.

-1993

நன்றி - திண்ணை

கவிதை - புதுமைப்பித்தன்

கவிதை, கவிதை என்று சொல்லுகிறார்களே அதைப் பற்றி எழுத வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை. இன்றைக்குத்தான் முடிந்தது.
'பேனா எங்கேயடா ? அடே ராசா நீ யெடுத்தையா ? குரங்குகளா ஒன்றை மேஜை மேல் வைக்க விடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது ? இருந்தாலும், இந்தக் குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம்! அதைவிட ஒரு ஓட்டை கிராமபோனை வைத்துக்கொண்டு காதைத் துளைத்துக் கொள்ளலாம் '.

சிற்றிதழ்களில் கவிதை ஒரு கண்ணோட்டம் - தி.மா. சரவணன்

''உள்ளத்துள்ளது கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை'' என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிதை என்பது பாடு பொருளில் உயர்ந்திருக்க வேண்டும். உணரவும், உள்வாங்கவுமான செய்கை உன்னதமானது. அதை படைப்பாக வெளிக்கொணரும்போது நோகாமல், தெளிவாக புரியவும், அறியவுமாக வருவது அந்தபடைப்பை இலக்கியத் தகுதிக்கு உயர்த்தும்.

வடிவத்தைவிட கருத்தை தெளிவாய் பிரதிபலிக்கும் கவிதைகளும், கவிஞனுமே காலத்தால் போற்றப்படும் நிலையில் உள்ளனர். ''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்'' என்றார் மகாகவி பாரதி. கவிஞன் உண்மையை உணரும் பக்குவத்திலும், மூன்று காலத்திற்குமான சமுதாய சிந்தனையை தாக்கமாய் தருவதிலும் தேர்ந்தவனாய் தன்னை தயாரித்துக் கொள்வது அவசியமானது அந்த அவசியமே அவனது தெளிவான திடமான படைப்பில் ஒன்றாய் கலந்து சுடர்விடும்.

இலக்கணத்திற்கு உட்பட்டு வந்த கவிதைகள், அந்தமரபு வீணாக்கப்படாமல் சமூகத்திற்கு பயன்படும் விதமாக பொழுதை பொன்னாக்க பயன்படுத்த வேண்டும். கவிதையும் அப்படியானது தான். கவிஞன் அதை அறிந்திருக்க வேண்டும். மனித குலத்தின் தேவை உணர்ந்து தனிமனிதனையும், சமுதாயத்தையும் நல்ல பாதைக்கு நாடிச்செல்ல வைப்பது கவிஞனின் வேலை.

ஒரு நல்ல கதையோ, நல்ல கட்டுரையோ செய்யும் செயலைவிட ஒரு நல்ல கவிதை கூடுதலாக செய்யும்! சிந்திக்க வைக்கும்! கவிதைக்குள் ''விதை'' இருப்பதே ஒரு ''விருட்சத்தை சுமக்கிறோம்'' என்ற உண்மையை அறிவிக்கவே! ஆம்.

கவிதை பொருள் பொதிந்த சொல். கதையாகவும் விதையாகவும், கவியாகவும் உருமாற்றம் அடையும் அதிசய உத்தியை தன்னுள் புதைத்தது. எடுப்பவனின் கையில் போர் வாளாகி சுழற்றப்படும் போதுதான் இந்த ஆயுதத்திற்கே மரியாதை கிட்டுகிறது. இலக்கிய வகைகளில் உயர்வான இதை உறைக்குள் இட்டே ஊனப்படுத்துவது அறிவிலித்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. காலம், மானுடம், பூபாகம் என்ற ஒவ்வொன்றின் நேசிப்பிலும் கவிதை உயிர்ப்புடன் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு பயணிக்கிறது.

பாதிப்பும் பகிர்வும் படைப்பு என்றாகிறது. வரிகளின் நீளத்தைச் செதுக்கி செதுக்கி ஒளியூட்டும்போது படைப்பு கவிதையாகிப்பளீரிடுகிறது. இப்படியாக வளர்க்கப்படும் இந்த நூற்றாண்டின் கவிதை நெடிய வரலாறு கொண்டது.

தமிழர் வாழ்வியலில் பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் பாடல் வடிவங்களே ஆளுமை செலுத்தின. மரபுக்கவிதை, பாடல் என்ற இயலிலேயே சூழல்கள், பண்பாடு, கலாச்சாரம், மொழிக்கூறு, கலை என்ற இயக்கங்கள் இருத்தப்ட்டிருந்தன. பாட்டிற்குள் சகலமும் என வாழ்ந்த நிலை பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உடைப்பட்டது. உரை நடை தோன்றியது. ஒரு கால் இரு கால்களாகி வலம் வந்தன. ஆனாலும் கவிதைக்கான கௌரவம் குலைந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் காலாய் முளைத்தது வசன கவிதை.

சோதிமிக்க நவகவிதை என்று மார்தட்டி ஆர்ப்பரித்து வந்தான் மகாகவி பாரதி. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மரபும், வசனமுமாய் இருவழி இலக்கிய முயற்சிக்கு பாரதி வழி காட்டினான். இனி எல்லோரும் கவிதையை எழுதலாம் எளிமையாய் என்றதன் பின்னால் மெல்ல அணி வகுப்பு நகர்ந்தது.

1910 -ல் விதை ஊன்றப்பட்டு 1933-ல் மணிக்கொடியில் துளிர்விட்டு 1959-ல் எழுத்துவில் வலிமையாய்த் தலை தூக்கியது வசன கவிதை.

பாரதியும் அவனுக்குப்பின் பாரதிதாசனும் வசன கவிதைக்கு வழிகாட்டிகளாக வாய்த்தனர். ஆனாலும் சி.சு. செல்லப்பாவின் எழுத்தே வசன கவிதைக்கான வாய்ப்பாட்டைத் தந்து ஆழமாகவும், அழகாகவும் வகிடெடுத்துக் கொடுத்தது. ந. பிச்சமூர்த்தியின் நளின வரிகளினூடே வசன கவிதை மெல்ல மெல்ல புதுக் கவிதையாய்ப் பரிணாமம் பெற்றது.

மரபுகளைச் சிதைக்காமல் புது விதமாய் நோக்க வைத்த நவீன கவிதை. மேலைய தாக்கத்தை உள்வாங்கி தத்துவச் சிந்தனை தந்து ஒரு மயக்கத்தினூடே இருப்பையே சோதிக்க வைக்கிற நவீனத்துவக் கவிதை.. என கவிதைகள் மேலும் சில கூண்டுகளைக் கூடாரங்களாக்கின.

ஐந்தோடு ஆறாக 1970களில் வாகன வடிவமாய் நடமாடியது ''குறும்பா''வாக ஹைக்கூ. ஒரு கவிதை வடிவமாய் வகைப்படுத்தப் பட்டது இதுவும். இப்படியான வரிசையான வகையில் இந்த நூற்றாண்டில் கவிதைகள் வளர்ச்சியுற்றன; வளர்க்கப்பட்டன; வளர்க்கப்படுகின்றன.

ஒரு நூற்றாண்டை வழி அனுப்புகின்ற பொறுப்போடும் மற்றொரு நூற்றாண்டை வரவேற்கிற தவிப்போடும் நிற்கின்ற தருணம் இது. முடிந்த பாதையிலிருந்து தொடர இருக்கின்ற பயணம் பற்றிய கருத்தாக்கம் அவசியமானது. சமூகத் தொடர்பியலின் வழிகாட்டிகளாக அமைகின்ற இலக்கியத்தில் கவிதைகளின் போக்குளைக் கொண்டாடி மகிழ்கிற காலச் சூழலில் கவிதைகளின் நாளைய தேவை பற்றி கூடி மதிப்பிடலும் அவசியமானதே.

''அவநம்பிக்கையும், நம்பிக்கையும், சமுதாயமும், தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும், ஆசையும், ஆதங்கமும், லட்சியமும், யதார்த்தமும், உண்மையும் போலியைக் கண்டு ஆத்திரமுமாக முதல் கவிதைக் குரல்கள் ஒலித்தது'' என்கிறது எழுத்து இதழ். 1959ல் ஒலித்த இந்தக் கனமான குரல்களைப்போலவே மாற்றமில்லாமல் இன்றைக்கும் கவிதைக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றனவா?

சில ஆயிரங்கள் எண்ணிக்கை காட்டலாம். இன்றைக்கும்கூட பல நூறு கவிஞர்களின் பேனா ஓயாமல் உழைக்கிறது. இந்த எண்ணிக்கைச் சிறப்பைப் போலே தமிழ்க் கவிதைக்கும் சிறப்பு கிட்டியுள்ளதா என்பது ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டிய கேள்வி! வாழ்வியலை, சூழலை, சிக்கல்களை, போராட்ட குணங்களை, அவலங்களை, தீர்வுகளை எத்தனை கவிதைகள் துல்லியமாய் சுட்டியுள்ளன. சுய விமர்சனத்திற்கான கேள்வியாய் உங்கள் முன் விதைக்கிறேன்!

கண்ணோட்டம்

''தமிழர் வாழ்வு உயர்வு பெற வேண்டும்'' என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் தமிழரின் முதல் கவிதை இதழ் வெளிவந்தது. இன்றைக்கு அந்தச் சிந்தனையைதான் கவிதைகள் தருகின்றனவா? தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பத்தைப் பெற எத்தனை கவிதைகள் முயல்கின்றன? வார்த்தைகளை ஒடித்துப் போடுவதும், பதச் சேர்க்கையில் பிரமைகளைத் தோற்றுவிப்பதும் கவிதையாகுமா?

போகிற போக்கில் மன உளைச்சல்களைக் கொட்டி நறுக்கென முள்குத்தலாய் முடிவைத் தந்து வாசிப்பவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கவிதைகள் எத்தனை வருகின்றன?

யோசிக்கையில் முழுமை சிதைந்த மனத்தைப்போலவே படைப்பிலக்கியமும் நீர்த்து வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது! எமக்குத் தொழில் கவிதை என்பதும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதும் வழக்கமான சம்பிரதாயச் சொல்லாகிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை!

இந்த நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் சிறு இதழ்களின் வளர்ச்சி என்பது அபரிமிதமாக உள்ளது. கவிதையைப் போலவே வளர்ச்சிப்போக்கில் சிறு பத்திரிகைகள் என்றாலும் இதற்குள்ளேயும் சில கிளைகள் சிற்றிதழ்கள், சீரிதழ்கள் என கவிதைகளும் இப்படித்தான் பலவகையில். அதைப்போலவே, பல்சுவை என்ற வகைக்குள் சிக்கி பக்க நிரப்பிகளாக பல சிறு இதழ்களும் ஒரே சுற்றில் சுழல்கின்ற போக்குகளும் தற்கால இதழியலில் கவலை அளிப்பவைகளே!

சிறு இதழ்கள்

கவிதைகளின் வளர்ச்சிக்கு சிறு இதழ்களின் பங்களிப்பு மகத்தானது. இதழ்களின் வழியேதான் கவிதைகள் தம்மை அடையாளம் காட்டிச் செல்கின்றன. சிறு இதழ்கள் இல்லையென்றால் தமிழ்க் கவிதைகள் தளம் இல்லாமலேயே தகர்ந்து போயிருக்கும்.

தமிழின் முதல் இதழ் 1812 இல் தான் வெளிவந்தது என்றாலும் தமிழின் முதல் முழுமையான கவிதை இதழ் 1935இல் தான் வெளிவந்தது. வசன கவிதையைத் தோற்றுவித்த பாரதியின் பெயரால் ''ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்'' என்ற கவிதை இதழைப் பாரதிதாசன் வெளியிட்டார். சுரதாவின் காவியம், பொன்னடியானின் முல்லைச் சரம், தெசினியின் கவிதை என தனித்த கவிதை இதழ்கள் முன்னோடி முயற்சிகளாக வெளிவந்தன.

நவீன இலக்கிய வெளிப்பாடாக படைப்பும், விமர்சனமுமாக பல இதழ்களும் கவிதைகளை வளர்த்தன. மணிக்கொடி(Manikkodi), கிராம ஊழியன், கலாமோகினி(Kalamohini), சரஸ்வதி(Saraswathi), எழுத்து(Ezhuthu) என கவிதையை வளர்தெடுக்க முனைப்பாக முயன்றன சில இதழ்கள்.

1970களில் வானம்பாடியின் வருகைக்குப் பிறகு பலருள்ளும் கவிதைச் சிறகு முளைத்தது. புதுக்கவிதை வானத்தில் நட்சத்திரங்களாய் கவிதைப் பரப்புவிரிந்தது.

அதே கால அளவில்தான் மொழி பெயர்ப்பு வழியாகவும் சுயமாகவும் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாயின. தமிழின் முதல் முழுமையான ஹைக்கூ கவிதை இதழாக சீனு-தமிழ்மணியின் ''கரந்தடி'' இதழ் 1988இல் வெளிவந்தது. இலக்கையில் 1993 இல் ''புள்ளி'' ஹைக்கூ கவிதை இதழ் வெளிவந்தது.

கவிதையை தமிழ் இலக்கியத்தின் தனித் துறையாக வளர்த்து சிறப்பினைப் பெற்றுத் தருகிற கடமையை சிறு இதழ்கள் நேற்று இன்றுமாய் சிறப்பாகச்செய்து வருகின்றன. மண்மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்றால் இதழ்கள் புதிய புதிய கவிதைகளைப் புனைந்து தருகின்றன. இலக்கியப் பத்திரிகையில் கவிதைகளை வெளியிடுவதை ஒரு கடமையாக கொண்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டிலும் புதிது புதிதாக 200க்கும் மேற்பட்ட சிறு இதழ்கள் தோன்றுகின்றன. மறு ஆண்டில் இதில் பத்து விழுக்காடு கூடத் தொடர்வதில்லை. துவங்குகின்ற சிறு இதழ்களில் பெரும்பாலானவை கவிதைகளை முதன்மையாக வெளியிடுகின்றன. கவிதை இல்லாமல் தமிழில் வருகின்ற சிறு இதழ்கள் மிகக் குறைவே.

இந்த நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு சிறு இதழ்களில் கவிதை வளர்ச்சிக்கு பங்களிப்பைச் செலுத்திய கவிஞர்களைப்பட்டியலிட்டால் மகிழ்ச்சியே பெருகும். நீண்ட நெடிய வரிசையில் தமிழ்க்கவிஞர்கள். தமிழ்ச் சூழலில் ''சிறு பத்திரிகைகளை சிறு சிறு குழுக்களே நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு குழுவும் சுயநலத்தாலான சில காரணங்களுக்காகத் தம்மால் அங்கீகரித்துக் கொள்வதென்பது புதுக்கவிதை வரலாற்றின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் போக்கு என்ற குற்றச்சாட்டு உடைபடுகிறது.

20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இருந்த சூழல்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் இருக்கிறது. இருக்கப்போகிறது. இன, மொழி, கலை, இலக்கியச் சீரழிவுகள் தான் வேறு வேறு பெயர்களில் இன்றைக்கும் ஆளுமை செய்கின்றன. கவிதை என்ற ஒரு மையத்தில் இந்த சீரழிவுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு சிற்றிதழ்கள் முழுமையாகத் தனது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

தமிழ்க் கவிதைகளை முன்வைத்து - மு.சேக் அப்துல்லா

பிரதி - அர்த்தப்படுத்துதல் - வாசிப்பு

ஏதேனும் ஒரு வகையில் சமூகத்தில் படைக்கப்பெற்ற அல்லது கட்டமைக்கப்பட்ட, எந்த ஓர் பொருளினையும், நிகழ்வினையும் அல்லது வாசிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றவைகளை நாம் பிரதியாக கவனப்படுத்தலாம்.

இன்றுள்ள திறனாய்வு முறைகளில் பிரதி என்ற சொல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த ஒன்றினையும் நாம் வாசிப்பிற்கு உட்படுத்தலாம் என்ற கருத்தியல் நவீன திறனாய்வுச் சிந்தனை மரபில் முன்னிறுத்தப்படுகிறது. இவற்றினை அடிப்படையாக்கி எது பிரதி / பிரதிக்கான வரையறை / படைப்பாளன் பிரதி / வாசக பிரதி / பிரதியை தேர்வு செய்யும் முறைமை / அதன் இயங்கியல் / வாசிப்பு / அர்த்தப்படுத்துதல் என்பது போன்ற சில கேள்விகளை முன் வைத்து பார்க்கலாம்.

பிரதி என்பது வரிசை கிரமமாக அச்சில் கோர்க்கப்பட்ட இலக்கிய படைப்பை மட்டுமல்லாது ஏனைய படைப்புகளாகிய ஓவியம், சிற்பம், திரைப்படம், நாடகம் அல்லது ஒரு பொது கட்டமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்டவைகளை குறித்து நிற்கிறது. ஒரு நபரை நாம் பிரதியாக கொண்டால் அவர் ஒவ்வொரு நிலையிலும் வேறுபட்ட தன்மையினை (Multi Dimension) கொண்டு விளங்குகிறார். ஒரு வயப்பட்ட தன்மையோடு இருப்பதில்லை. மையம் X விளிம்பு என மாறி மாறி அமைகிறார். (இதே அளவுகோல் இன்றைய பிரதிகளுக்குப் பொருத்திப் பார்க்கப்படுகிறது.) அவர் ஆண் அல்லது பெண் பிரதியாக/ அவர் சார்ந்த சமூகப் பிரதியாக / குடும்பத்தின் பிரதியாக வெளிப்படுகிறார். மேற்கூறிய ஒவ்வொரு தளத்திலும் பல்வேறுபட்ட அபிப்ராயம் மற்றும் குறிப்பிட்ட தன்மைகள் உடையவராக, உட்கொண்டவராக விளங்குகிறார். நிச்சயமாக ஒவ்வொரு தளத்திலும் மாறுபட்ட புரிதல்களை வெளிக்காட்டுவார்.

எடுத்துக்காட்டாக பாரதியின் பிரதிகளை (பாடல்) நாம் சற்று விரிவாக இங்கு வாசித்துப் பார்க்கலாம். பாரதியின் பிரதி பல்வேறு வாசிப்புகளுக்கு இடம் தரக்கூடியது. இன்றுள்ள நவீன கோட்பாடுகளான தலித்தியம், பெண்ணியம் பற்றிய கருத்துக்களை பறையருக்கும் / புலையருக்கும் விடுதலை / பறவரோடு குறவருக்கும் / மறவருக்கும் விடுதலை என்றும்

கற்பு என்றால் இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம் / ஆணும் / பெண்ணும் நிகரென கொள்வதால் / அறிவில் / ஓங்கி / வையகம் / தழைக்குமாம் / என பெண்ணியம் குறித்தும் பேசியுள்ளார். மேலும் குழந்தைகள் பற்றிய விளிம்பு நிலைப் பதிவும் / ஓடிவிளையாடு பாப்பா / எனவும் ஆண் உரு கொண்ட பெண்களும்/ அலிகளும்/ வீணில்/ இங்கிருந்தென்னை வெறுத்திடல் / என்பேன் என அலிகளை பற்றி பதிவு செய்துள்ளார். இதே போன்றும் சுதந்திரம் ஆடுவோமே / பள்ளு/ பாடுவோமே என்றும் சமத்துவம் வேதியராயினும்/ ஒன்றே அன்றி வேறு குலத்தவர்/ ஆயினும்/ ஒன்றே என்கிறார்.

பிரதியின் தன்மை இலகுவானது அல்ல. அது ஒற்றை தன்மையினையோ, ஒரு வித தோற்றச் சாயலையோ கொண்டு இருப்பதில்லை. மேலும் படைக்கப்பட்ட தன்மையோடு அதே நேர்கோட்டில் பயணித்து வாசகனிடம் போய்ச் சேர்வதில்லை. ஒவ்வொரு பிரதிக்கும் தனித் தன்மையும், பல்வேறுபட்ட உட்கூறுகளும் உண்டு. இது சொல்லாடல் சார்ந்தது. ஏனெனில் சொல் குறிகளால் ஆனது. குறிகளின் இயங்கு தன்மை பொறுத்து வாசகனுக்கும் படைப்புக்கும் இடையே நடைபெறும் போராட்டம் தான் அர்த்தப்படுத்தல் என்ற சசூரின் சிந்தனை கவனிக்கத்தக்கதும், குறிப்பிடத் தகுந்ததும் கூட. வாசகனுக்கும் படைப்புக்கும் உள்ள குறுக்கீடு மிக மையமானது. எடுத்துக்காட்டாக "வாய்மையே வெல்லும்" என்பதை சற்று மாற்றி "வாய் மெய்யை வெல்லும்" என்றும் அர்த்தப்படுத்தலாம். இவ்விரு தொடர்களுக்கும் உள்ள அர்த்தத் தளம் சற்றும் சம்பந்தமில்லாதது. பிரதி எந்த அளவிற்கு அர்த்தங்களை உற்பத்தி செய்யுமோ அதே அளவிற்கு தன்னில் அர்த்தங்களை கொண்டு இருக்கும்.

மொழியின் அடிப்படை கட்டுமானம் குறிகளால் ஆனது. கட்டமைக்கப்பட்டது.

வரலாறு (History)/ தத்துவம்(Philosophy)/ பொருளாதாரம்(Economics)/ அரசியல்(Politics)/ சமூகம்(Social)/ மானுடவியல்/ உளவியல் ஆகியவை குறிகளால் ஆனவை என்பதை வி.எஸ்.பியர்ஸ் முன்வைத்தார். இவ்விரு சிந்தனைகளும் மொழி பற்றிய மதிப்பீடுகளையும் நவீன இலக்கிய பார்வைகளையும் முற்றிலுமாக மாற்றி அமைத்தன. குறிகளின் இயங்குதளம் படைப்பில் வெவ்வேறு வகையில் விரவிக் கிடக்கின்றது. இது வாசகன் பிரதியை அணுகும் முறைமை/ அவனது கால/ அனுபவ சூழல்களை பொறுத்தது. அர்த்தங்கள் நிர்ணயம் சிக்கலானது. இதற்கு மொழிக்கிடங்கு அதிகரித்தல் அவசியம். நவீன வாசிப்பு முறையில் உள் வாங்குதல், புரிந்து கொள்ளல் மிகக் கடுமையான செயலை முன் வைத்து செய்யப்படுவதாகும். படைப்பின் இயங்கியல் தன்மை வாசக இயங்கியலோடு சற்று ஏறத்தாழ ஒட்டி நெருக்கமான முறையில் செல்ல இலக்கிய சொல் கிடங்கு திறன், மொழி ஆளுமை, பரந்துபட்ட வாசிப்புத் திறன் மிக அவசியம். அதனால் சங்க இலக்கியப் பிரதிகளை நாம் உரை இல்லாமல் அணுகுவது மிகக் கடினமாகிறது.

பிரதியினை நாம் தேர்வு செய்யும் தன்மையினை பொறுத்து அதன் வெளிப்பாட்டுத் தன்மை அமையும். வாசிப்பில் பிரதியை தேர்ந்தெடுத்தல் மிக முக்கிய நிகழ்வாகிறது. ஒரு சிறுவன் பிரதியை தேர்ந்தெடுப்பதற்கும், தேர்ந்தெடுக்கும் முறைமைக்கும், மெத்த படித்த ஒருவர் தேர்ந்தெடுக்கும் முறைமைக்கும் வேறுபாடு உண்டு. ஏனெனில் இருவரும் ஒரே வகையான வாசிப்பு முறையை பின்பற்றுவதில்லை.

வாசிப்பு என்பது ஆழமாக கூர்ந்து உற்று நோக்கலின் மூலம் தொடர்பு செயல்பாட்டின் அடிப்படையில் அமைவதாகும். சி.மணியின் "அறைவெளி" எனும் பிரதியை வாசித்தால் மேலெழுந்தவாரியாக, எளிமையாக தெரியும். இப்பிரதி ஆழமான வாசிப்பின் மூலமாக வேறு பரிணாமம் கொடுக்கும். மேற்கே நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ கிழக்கே/ நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ வடக்கே நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர் தெற்கே/ நடந்தேன்/ இடித்தது/ ஒருசுவர்/ எம்பி குதித்தேன் இடித்தது/ ஒரு சுவர். இது என் வாசிப்பின் படி, நாம் நித்தம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதன் சாத்தியப்பாடுகளையும், மனிதன் அவற்றிலிருந்து விடுபட்டு வேறு ஒன்றில் சிக்கிக் கொள்வதையும் பேசுகிறது. இதே பிரதி வேறு ஒரு வாசகன் பார்வையில் முற்றிலுமாக மாறுபடலாம்.

வாசிப்பு அகவயம் சார்ந்ததாகவும் அதன் வெளிப்பாட்டுத் தன்மை புறவயம் அல்லது சமூக சூழல்களிலிருந்து தோற்றம் பெறுவதாகவும் அமையலாம். ஒரே மாதிரியான அர்த்தப்படுத்தல் என்பது நிறுவனமயப்பட்ட அல்லது - அதிகாரச் சூழலினை நம் (வாசகன்) கீழ் கொண்டு வரச் செய்யும் முயற்சியாகும். சில சமயம் வாசிப்பு நிறுவனமயப்பட்ட செயலாகிப் போகும். காரணம் வாசிப்பவரின் நிறுவன அமைப்பு / மதிப்பீடுகள் / அழகியல் கூட்டமைப்பு / ஒழுக்க முறை விதிகள் சார்ந்தது. வாசிப்பு மறைத்தல்/ மௌனம்/ அழித்து எழுதுதல்/ போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இது அறுதியிட்ட முடிவினை நமக்கு தராது.

பிரதிக்கு ஊடான இடைவெளிகளை கனகச்சிதமாக இட்டு நிரப்ப முடியாது. நிரப்புதலும், புரிதலும் சரியானதாகவோ, அல்லது தவறானதாகவோ இருக்கலாம். இதனை அறுதி புள்ளியிட்டு நிறுத்த முடியாது. மேலும் துல்லியமானதாகவோ அல்லது தீர்க்கமான முடிவினை உடையதாகவோ அமையாது. ஒவ்வொரு வாசிப்பும் முந்திய நிலையிலிருந்து மறுவடிவம்/ தோற்றம் பெறுகிறது. பிரதியின் கட்டமைப்பு பெறுத்து சற்று உளைச்சல் மிகுந்ததாகவோ, சிரமப்படுத்துவதாகவோ இருக்கும். (எ.கா- பிரமிள், அபி, நகுலன் படைப்புகள்) சராசரி தமிழ் வாசகமனம் சிக்கலுக்குரிய பிரதியை தேர்ந்தெடுப்பதில்லை. தமிழ் சமூக சூழலின் அமைப்பிற்கு ஒத்துழைக்கக் கூடிய, ஆமோதிக்கக் கூடிய ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்துத் தொகுப்பை ஆதரிக்கும். குறிகளின் தன்மையினை பொறுத்து படைப்பின் அர்த்தம் மாறுபடும். ஏனெனில் படைப்பு நேரடியாக வெளிப்படுத்துவதில்லை.

கருப்பு/ வளையல்காரி/ குனிந்து/ வளைந்து/ பெருக்கினாள்/ வாசல் சுத்தமாச்சு/ மனசு குப்பையாச்சு - கல்யாண்ஜி

பொட்டுடனே/ வீட்டோடு/ வந்த/ தங்கை/ பூக்காத/ செம்பருத்தியின்/ வெறும்/ கிளையின்/ மொய்த்து/ ஏமாறும்/ வண்ணத்து/ பூச்சி/ கண்டு/ அழுவாள் - கலாப்பிரியா

பழத்தின்/ அழகை பாராட்டுவர்/ உள்ளிலிருந்து/ குடையும் வண்டின்/ குடைச்சலை/ யாரறிவார் - அபி

முதல் பிரதி ஒரு விதவையைக் குறியீடாக / அடுத்தது வாழாவெட்டி என்பதன் குறியீடாக / மூன்றாவது பொதுவான பெண்களை குறியீடாக கொண்டுள்ளது எனலாம்.

இலக்கியம் வாசகன் ஒருவன் படிக்கும் போது தான் வாழ்வு பெறுகிறது என்கிறார் "ஸ்டான்லிபிள்". வாசிப்பில் தான் பிரதி பற்றிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இங்கு மொழி பற்றிய கருத்துக்களும் சற்று குறிப்பிடத்தக்கது. மொழியை அமைப்பியல் அமைப்பாக பார்க்கிறது. பின் அமைப்பியல் மொழியை மீறிய ஆற்றலாக பார்க்கிறது பின் நவீனத்துவம் குறிகளின் விளையாட்டாக பார்க்கிறது. பின் அமைப்பியலின் சில கூறுகள் பின்நவீனத்துவத்திற்கும் பொருந்தி வருகின்றன. இது போன்ற கருத்துகள் இன்றும் சிக்கலுக்கும், விவாதத்திற்கும் உரியவை. மொழியும் குறிபற்றிய சிந்தனைகளும் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தின. இது வரைப்பட்ட திறனாய்வு முறைமை (மரபு வழிப்பட்ட) ஆசிரியனை மையப் பொருளாக்கி அவனுக்கு அதீசு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் நவீன திறனாய்வு முறை காத்திரமாக படைப்பாளியின் சுதந்திரத்தை வாசகனுக்கு மாற்றியது. படைப்பின் இயங்கு தளம் பற்றிய பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. "ஆசிரியன் இறந்து விட்டான்" என்ற கருத்தை ரோலண்ட் பார்த் வைத்தார். ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பு சார்ந்தது என்கிற நிலை மாறி படைப்பின் தன்மை முன்னெடுத்து செல்லப்பட்டது.

வாசிப்பின் இயங்கியல் தொடர்புபடுத்திப் புரிதல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இது கோட்பாட்டின் அடிப்படையில் பனுவல் இடை உறவு (Intertextuality) எனப்படுகிறது. ஒரு பிரதிக்கும் இன்னொரு பிரதிக்கும் இடையிலான உறவு பனுவலிமை உறவு எனப்படும். (எ.கா- அகலிகை பற்றிய பல்வேறு படைப்புகள் குறிப்பாக சாபவிமோசனம்)

படைப்பு மனச் செயல்பாடு என்பது மிகவும் மிகவும் சிக்கலுக்குரிய ஒன்றாகும். வெளிப்பாடு எளிமையான முறையில் அமையாது. ஏனெனில் படைப்பாளி மனம் புறவய சூழலினை பிரதிபலித்து அமையும். எளிமை என்ற பொதுக் கருத்தினை கொள்வது, வெறும் கருத்து தொகுப்பினை அங்கீகரிப்பதாகும். எந்த படைப்பும் பொதுமைபடுத்தப்பட்ட கூறு அல்லது கட்டமைப்பினை கொண்டு இருக்கும். இதே போன்ற இன்னொரு வேறுபட்ட இணை தொடர்பில் உள்ள தொடர்புகளை வேறுபடுத்தி புரிதலை வாசிப்பு என மேம்போக்காக வரையறை செய்யலாம்.

பெரும்பாலும் இது போன்ற மேற்கூறிய அடிப்படைகளை சராசரி தமிழ் வாசக மனம் ஏற்றுக் கொள்ள / புரிந்து கொள்ள மறுக்கிறது. நிறுவனமயப்பட்ட சந்தித்தலும், மரபின் ஊடாட்டமும் வாசக இயங்குதலின் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிக்கலுக்குரியவைகள், குழப்பமானவைகளை தள்ளிப் போடுகின்றது. மேற்கண்ட அடிப்படையில் விஷயங்களைச் சந்திக்காவிடில் நவீன புரிதல்களை சந்திப்பதற்கும், எதிர் கொள்வதற்கும் சராசரி தமிழ் வாசகமனம் தடுமாற்றம் கொள்ளும் என்பது காத்திரமான உண்மை.

நன்றி: புதிய காற்று 2007

கவிதை காத்திருக்கும் கலை - குவளைக் கண்ணன்

சுந்தர ராமசாமியின் கவிதை உலகம்

பல விதமான நலப்படுகைகளைக் கொண்டது பூமி. இந்த நலப்படுகைகளில் ஏதோ ஒரு ஆழத்தில் உள்ள நீரோட்டம் தனக்கு மேலேயுள்ள கல்லையும் மண்ணையும் விலக்கித் தள்ளி மேலே கிளம்பிப் பூமியின் மேற்பரப்பில் வெளிப்படும் போது அது சுனையென்றும் எறு"றென்றும் அழைக்கப்படுகிறது. திரவப்பொருள் திடப்பொருளைத் துளைத்து மீறி வெளிப்படுகிறது. நீரோட்டத்தின் அளவையும் விசையையும் பொறுத்து சுனை நீர் பள்ளம் நோக்கி பாய்கிறது. தனது ஓட்டத்தின் வேகத்தால் தான் ஓடும் பாதையில் உள்ள ஊற்றுகளை உடைத்து நீர் சேர்த்து கிளைத்தும் கிளை சேர்த்தும் அகன்றும் குறுகியும் ஓடி அந்தப் பிரதேசத்தை வளப்படுத்துகிறது. நிதி தனது விசையோட்டத்தால் பாதையில் உள்ள குன்றுகளின் பாறைகளைக் கூட அறுத்தெறிந்து விடுகிறது. நீரோட்டத்தின் அளவு குறைவதாலோ அல்லது குறைந்த விசையாலோ சுனை நீர் குளம் குட்டையாக தேங்கியும் நின்று விடுகிறது.

உலகின் மூத்த நாகரிகங்கள் அனைத்தும் நதிக்கரை நாகரிகங்கள்தான். இலக்கியத்தில் மூத்த கலை வடிவம் கவிதை தான். மூத்தது என்பதால் பழமையானதாக ஆகிவிடுவதில்லை. நிதியும் மலையும் கடலும் பழமையடைவதில்லை. மலையை உடைத்துக் கல்லெடுத்து நதியிலிருந்து மணலும் தண்­ரும் எடுத்து மனிதர்களால் எழுப்பப்படுபவை & கோட்டைகளிலிருந்து & குடிசைகள் வரை & அனைத்தும் பழமை அடைந்து ஒரு கட்டத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்றுப் போய்விடுகின்றன. கவிதையை மனித மனத்தின் சுனையாகக் கொள்ளலாம்.

ஊற்றுப் பீறிட்டுக் கிளம்புவதில் கவிதை எழுதுபவனுக்குப் பங்கில்லை. ஊற்றின் விசையைப் பொறுத்துப் பள்ளம் நோக்கிப் பாய்கிற போது அது நதியென்று ஆகிறது. நதியின் பாதையைக் கூட கவிஞன் தீர்மானித்துவிட முடிவதில்லை. நதியின் பாதையை நதியே தீர்மானிக்கிறது. சமுதாய அசுத்தங்கள் கலந்து மாசுபடாமல் நதியைப் பாதுகாப்பதே நதிக்கும் நாகரிகத்துக்கும் ஒரு கவிஞன் செய்துவிடக்கூடிய மிகப் பெரிய பணி. நதியுடனான ஊடாட்டத்தின் மூலம் அவனுடைய சுய அசுத்தங்கள் அவ்வப்போது கழுவப்படுவதே கவிதையால் கவிஞனுக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய பயன். மற்றபடிக்குத் திடக்கழிவு மேலாண்மை திரவக்கழிவு மேலாண்மை போன்றவை நகராட்சிப் பணிகள். கவிஞனுக்கு வேறு பணிகள் தரப்பட்டுள்ளன.

ஒருவர் அதிகபட்சம் தனது எந்தெந்த அசுத்தங்கள் நதியால் எந்தெந்த சமயத்தில் கழுவப்பட்டன என்று எழுதலாம். ஒரு தேர்ந்த கவிஞனால் நதியை மடைமாற்றிவிட இயலலாம். எப்படியானாலும் இங்கே நதிதான் முன்னிலைப்பட வேண்டும். வேறு மாதிரியாக இருக்கும்போது வாசகருக்குக் கவிஞர் கிடைப்பர். கவிதை கிடைப்பதில்லை. வாழ்வின் ஊற்று இருத்தலின் ஊற்று ஒரு தனிமத்தின் வழியாக கவிதையென வெளிப்படுகிறது எனலாம். ஒரு மோசமான கவிதையில் கூட வாழ்வின் கீற்றை உயிர்ப்பின் ஒளியைப் பார்த்துவிட முயல்வதால் வாழ்வின் சாரமே கவிதையென வெளிப்படுகிறது என்று சொல்லிவிடலாம்.

கவிதை என்றால் என்ன? எது நல்ல கவிதை என்கிற வகையிலான கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. சிலர் இதுதான் கவிதை எனச் சொல்லத் துணிந்ததைக் காலம் கவ்விச் சென்றுவிட்டது. இதுதான் கவிதை என்று யாராலும் திட்டவட்டமாக சொல்லிவிடமுடியாது. எது கவிதை அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வகைக் கூறுகள் சிலவற்றை சுந்தர ராமசாமியும் சொல்லியிருக்கிறார். கட்டுரைகளிலும் சொல்லியிருக்கிறார். கவிதையிலும் சொல்லியிருக்கிறார். அவர் கவிதையில் சொல்லியிருப்பதை பார்ப்போம். கவிதை என்பது சுதந்திரம் எனும் தலைப்பில் உள்ள கவிதையின் (முழுக் கவிதை இந்த இடத்தில் திசை மாற்றும் என்பதால்) சில வரிகளைப் பார்ப்போம்.

கவிதை என்பது சுதந்திரம்

கவிதை என்பது கட்டுப்பாட்டின் அட்டகாசம்

எனும் வரிகளைக் கவிதை தோன்றுவதற்கான சாதக நிலையாகவோ கவிதை எழுதுதல் எனும் முறைபாட்டைச் சொல்வதாகாவோ

கவிதை என்பது பூஜ்ஜியம்

உளறல்களின் பேரர்த்தம்

கவிதை என்பது ஊடுருவி உருக்குலைப்பது

எனும் மூன்று வரிகளையும் கவிதையின் தன்மையாகவும்,

கவிதை என்பது பற்றுக்கோலின் கண்கள்

கவிதை என்பது உடலுறவின் உச்சக்கட்டம்

எனும் இரண்டு வரிகளையும் கவிதையின் செயலாக்கத்தைச் சொல்லும் வரிகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

கதவைத் திற எனும் தலைப்பிலுள்ள கவிதையைப் பார்ப்போம்!

கதவை திற காற்று வரட்டும்

சிறகை ஒடி

விசிறியின்

சிறகை ஒடி.

விசிறிக்குக் காற்று

மலடிக்குக் குழந்தை

கதவைத் திற காற்று வரட்டும்

உணவை ஒழி

உடலின் ஒழி

உணவில் உயிர்

நீருள் நெருப்பு

கதவைத் திற காற்று வரட்டும்

சிலையை உடை

என்

சிலையை உடை

கடலோரம்

காலடிச் சுவடு

கதவைத் திற காற்று வரட்டும்.

உலக அமைதிக்காகவும், மனிதர்கள் வீடுபேறு அடைவதற்காகவும், பீடம் அமைத்துத் தியானம் போதிக்கிற சமீபத்திய தியான குரு ஒருவர் தமிழ்வாரப் பத்திரிக்கை ஒன்றில் தமிழர்களின் அக இருளைப் போக்கவும், அகப் புழுக்கத்தை நீக்கவும் பேசிய/ எழுதிய தொடரின் தலைப்பாக கதவைத் திற காற்று வரட்டும் எனும் வரி உபயோகிக்கப்பட்டது. தமிழர் நாகரிகப்படி, இது இந்தக் கவிஞரின் கவிதை வரி என்ற குறிப்பு காணப்படவில்லை. இந்தக் கவிதை வேறொரு காரணத்திற்காக இங்கே தரப்பட்டுள்ளது. அந்தக் காரணத்தைப் பின்னர் பார்ப்போம்.

சுந்தர ராசாமியின் கவிதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவரது முதல் கவிதை பிரசுரமான 1959 முதல் 1975 வரை முதல் வகையாகவும், 1975 முதல் 2005 வரை உள்ள கவிதைகள் இரண்டாம் வகையாகவும் பிரிக்கலாம். கரட்டு வடிவத்தில் விடப்பட்டுப் பிரசுரம் பெறாமல் இத்தொகுப்பில் இப்போது சேர்க்கப்பட்டுள்ள கவிதைகளை மூன்றாம் வகையாகப் பிரிக்கலாம். முதல் கட்டக் கவிதைகளில் ஒருவிதச் சந்தம் இழையோடுகிறது. இந்தப் பாங்கு இரண்டாம் கட்டக் கவிதைகளில் அருகிவிடுகிறது. கரட்டு வடிவக் கவிதைகளில் மீண்டும் ஒருவிதச் சந்தம் தொனிக்கிறது. இரண்டாம் கட்டக் கவிதைகளின் உருவாக்கத்தின் போது சந்தம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது கவிஞரின் நம்பிக்கைகள் சார்ந்து கவிதைகள் வெளிப்படும்போதே சந்தத்தைத் தவிர்த்த நடையில் வெளிப்பட்டிருக்கலாம். மூன்றாம் கட்டத்தில் கவிதைகள் வெளியாகும்போது & கவிஞரை மீறி மீண்டும் சந்தத்தோடு வெளிப்பட்டிருக்க வேண்டும்.

மனித மனத்தின் பல தளங்களில் மொழி சற்றே ஆழமான தளத்தைச் சார்ந்தது. மொழியின் தளத்தைவிட ஆழமான தளத்திலிருந்து கிளம்பும் கவிதையானது மொழித் தளத்திலிருந்து தனக்கான சொற்களைத் தன்னோடு எடுத்துக் கொண்டு வந்துதான் கவிஞனின் வழியாக வெளிப்படுகிறது.

சுந்தர ராமசாமியின் பல கவிதைகளைப் பொதுமனக் குரலுக்கு எதிரான தனி மனத்தின் எதிர்ப்புக் குரலாக, பொது மனத்துக்குத் தனிமனம் விடுகிற சவாலாகப் பார்க்க முடியும். ஒருபக்கம் மரங்கள், கடல் பறவைகள், பறவைகளின் குரல் என்று போகும் கவிதைகள், மறுபக்கம் மணக்கோலத்தில் நிற்கும் பெண், ரயிலடியில் அழுதபடி இருப்பவள், தலையில் சுள்ளிக் கட்டுடன் உள்ள கறுத்த பெண், சைக்கிளில் பூ விற்பவர் எனச் சமூக வாழ்வின் பல தளங்களில் உள்ளவர்களோடு உறவு கொள்கின்றன. இயற்கையோடும், தான் காண்கிற அனைவருடனும் நட்புக் கொள்ள விரும்புகிற தன்மையை, அனைத்தோடும் அனைவரோடும் பங்கு கொள்ள விரும்புகிற தன்மையை சுந்தர ராமசாமியின் கவிதை உலகின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதலாம். இத்தகு உறவால் கண­ருக்குப் பல வண்ணங்கள் எனும் வரி கரட்டு வடிவிலுள்ள கவிதை ஒன்றில் வெளிப்படுகிறது. சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பதற்றமும் தத்தளிப்பும் நிறைந்த உண்மையின் பாற்பட்ட அகவுலகின் வெளிப்பாடுகளாக, புறவுலகிற்கு எதிரான வெளிப்பாடுகளாகக் கொள்ளலாம். இந்தப் பதற்றமும், தத்தளிப்பும் இவரது கட்டுரைகளிலோ, கதைகளிலோ வெளிப்படையாகக் காணக் கிடைப்பதில்லை.

இவரது கவிதை உலகின் மற்ற முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

மரணம் பற்றிய குறிப்புகளைப் பரவலாக அங்கங்கே சில கவிதைகளில் காண முடியும். நான், என், எனது தன்மை போன்ற ஒருமைப் கட்டுகளால் ஆன சொல்முறை ஏறத்தாழ ஐம்பது கவிதைகளில் உபயோகிக்கப்படுகிறது. நண்பரிடம் பேசுவது போன்ற தன்மையிலான கவிதைகள் சில உள்ளன. மூளையில் தர்க்கம்/ அறுபட்டு விழித்ததும், முகவையில் அளந்த காட்டு என/ சின்ன மூளை கொக்கரிக்கும். சிறுகச் சிறுக நான் என் மூளையில் ஒட்டி/ சிறுகச் சிறுக பிறருடைய மூளைகளிலும்/ நான் ஒட்ட ஆரம்பித்தபோது/ சீரழியத் தொடங்கினேன். அவன் மூளை நரம்பில் என் ஜ“வன் கரையும் போது கூடும். இந்த வகையான மூளை செயல்படாமல், நாம் அறிவைக் கடந்து அப்பால் சென்றுவிட்டால் அந்த உலகம் எப்படி இருக்கும்? கவிஞர் வாழும் கணங்கள் எனும் தலைப்பில் எழுதியுள்ள கவிதையைப் பார்ப்போம்.

மூளை நரம்பொன்று அறுந்து

ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது

மனவெளியும் நிலவொளியில் குளிர

செவிப்பறை சுயமாய் அதிர

மண்ணில் ஒருபோதும் கேட்டிராத

ஓசை உவகைகள் எழும்பின

பாஷை உருகி ஓடிற்று

ஒரு சொல் மிச்சமில்லை

என பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது

ஒரு கணம்தான்

மறுகணம்

லாரியின் இரைச்சல்

எதிரே நாற்காலி.

சுந்தர ராமசாமியின் கவிதை உலகை மேலும் அறிய அவருடைய பிரத்தியேகமான குரல் என நாம் கொள்ளக்கூடிய குரலில் அமைந்த சில வரிகளைப் பார்போம்.

நகத்தை வெட்டியெறி & அழுக்குச் சேரும் + என்னை அழிக்க யாருண்டு/ எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான் + அலையாதே/ அலைந்து திரியாதே + என்று ஆடை உரித்து/ அம்மணம் பற்றும் என் பார்வை + எழுதுவது எப்படி என்று என்னைக் கேட்காதே/ எழுது அதுவே அதன் ரகசியம் + நண்ப/ வருந்தாதே / வெட்கப்படாமல் துக்கப்படு + என் கனவை உணர்ந்த ஒரு இதயம்/ எனக்காக அதைக் கட்டும்/ தன் கனவில் + சவுக்கின் சொடுக்கு நம் மரணத்தில் கெக்கலிப்பது/ நமக்குத் தெரியாமல் போயிற்று + என் அனுபவம் பொய்க்கட்டும்/ கனவு நிறைவேறட்டும்/ மனிதர்கள் மீண்டும் குழந்தைகளாகும் கனவு.

இதுவரை நாம் செய்த வகைப்பாடுகளுக்குள் அடங்காத ஒரு கவிதையைப் பார்ப்போம். "தனித் தனியே'' என்ற தலைப்பில் உள்ள கவிதை:

ஒரு பறவையின் சிறகுகள்

பறவையின்றிப் பறப்பதைக் கண்டேன்

சிறகுகளின்றிப் பின் வந்த பறவை

ஒரு இசையின் குழைவில்

லாவகமாய் தன் சிறகுகளைத்

தன்னோடு இணைத்துக்கொண்டது.

பறந்து பறந்து

பறவையின்றிப் பறக்கச் சிறகுகளுக்கும்

சிறகுகளின்றிப் பறக்கப் பறவைகளும்

கூடி வந்த சூட்சுமம்

என் அகத்தில் விரிந்தபோது

துவண்டுகிடந்த என் மனத்தில்

ஒரு பூ மலர்ந்தது.

முதலில் சிறகுகள் மட்டும் பறவையின்றிப் பறப்பது பார்க்கப்படுகிறது. அதன் பின்னால் சிறகுகளின்றி வரும் பறவை இசையின் குழைவில் தன்னுடைய சிறகுகளைத் தன்னோடு இணைத்துக் கொள்கிறது.

கவிதையை இன்னொரு முறை வாசித்துப் பார்ப்போம். இப்போது வேறு வகையாக முயன்று பார்ப்போம். இந்தக் கவிதையில் கடைசியிலிருந்து இரண்டாம் வரியில் கவிதையின் வாசல் உள்ளதுபோல் இருக்கிறது. மனம் துவண்டுகிடக்கிறது. ஏதோ பிரச்சினை, பிரச்சினைகூட இல்லை, நெருக்கடி, நமக்கு ஒரு நெருக்கடி ஏற்படும்போது நம் அறிவுக்கு எட்டுகிற அனைத்தையும் முயன்றுபார்க்கிறோம்.

அந்த நெருக்கடியை நமது அறிவால் அலசிப் பார்க்கிறோம். நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை கையறு நிலையில் ஓய்ந்து விடுகிறோம். அந்த நெருக்கடியை ஆராய்வதை விட்டுவிட்டு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நெருக்கடியை ஆராய்வதை விட்டுவிட்டு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நெருக்கடியால் ஏற்படும் விளைவைச் சந்திக்கத் துணிகிறோம். அப்போது ஏதோ ஒரு சொல், ஏதோ ஒரு காட்சி நமது மனதில் தோன்றி நெருக்கடியைத் தீர்த்து வைத்துவிடும். அந்தச் சொல், ஒரு மொழியின் அகராதியில் இல்லாததாக, பரிச்சயமற்ற வேறொரு மொழியினுடையதாக இருக்கலாம். அந்தக் காட்சி சாதாரணமாகச் சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் அந்தச் சொல் அந்தக் காட்சி நிமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திவிடும். நிமது மேல் மனத்தால் ஏற்படும் —நிருக்கடிக்கு மேல்மனத்தின் தர்க்கத்திற்கு உட்படாத ஆழ்தளங்களிலிருந்து வரும் பதில்கள் புதிர்களைப் போன்ற குறியீடுகளாக வருமெனச் சொல்லப்படுவதுண்டு.

கவிஞர் பகிர்ந்துகொள்கிறார். பறந்து பறந்து எனும் வரிதான் அந்தச் சூட்சுமம். இசை என்பதைச் சீரான, சீராக்கப்பட்ட ஒலிக்குறிப்புகள் என்று வைத்துக் கொள்ளலாம். இப்படியான சீர் நெகிழ்ந்து குழையும் போது சிறகுகளைப் பறவை தன்னோடு இணைத்துக் கொள்கிறது. நெருக்கடிக்கான காரணங்கள் நம்மிடையே வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நெருக்கடி நமக்குப் பொதுவானது. ஆழ்மனம் அனுப்பும் பதிலை அகத்தில் விரித்துப் புரிந்துகொள்வதுதான் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி என்பதுபோல் உள்ளது.

கதவைத் திற

கதவைத் திற காற்று வரட்டும்

காலடிச் சுவடு

கடலோரம்

சிலையை உடை

என்

சிலைய€ உடை

கதவைத் திற காற்று வரட்டும்

நீருள் நெருப்பு

உணவில் உயிர்

உணவை ஒழி

உடலின்

உணவை ஒழி

கதவைத் திற காற்று வரட்டும்

மலடிக்குக் குழந்தை

விசிறிக்குள் காற்று

சிறகை ஒடி

விசிறியின்

சிறகை ஒடி

கதவைத் திற காற்று வரட்டும்

இந்தக் கவிதை இக்கட்டுரையில் தவறுதலாக இரண்டு முறை பிரசுரமாகிவிடவில்லை. கடைசி வரியில் இருந்து முதல்வரியை நோக்கி மேல்நோக்கி முயற்சி செய்து பார்க்கப்பட்டுள்ளது. தலைகீழாகக் கீழிலிருந்து மேலாக வாசிக்கும்போது அர்த்தம் தருவது, குறிப்பாக அதே அர்த்தத்தைத் தருவது இந்தக் கவிதையின் அழகு.

சுந்தரராமசாமி கவிதைகள் எனும் இந்தத் தொகுப்பைப் படித்துவிட்டு சுந்தரராமசாமி அடிப்படையில் ஒரு கவிஞர், அதனால்தான் அவரால் உடைநடையில் உயரங்களை எட்ட முடிந்தது. எனும் முடிவுக்கு நம்மால் வர முடியும். இந்தத் தொகுப்பைப் படிப்பவர்களுக்கு அவரவர் மனப்பாங்கைப் பொறுத்து வெவ்வேறு கவிதைகள் படிக்கலாம். நிச்சயமாக ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் பிடித்துப்போகும் என்று சொல்ல முடியும். தமிழின் முக்கிய ஆளுமைகளில் ஒரவரான சுந்தரராமசாமி கதைகள், கட்டுரைகளில் போலவே கவிதையிலும் தனக்கான இடத்தைத் தக்க வைத்திருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள இதுவரை பிரசுரமாகாத கரட்டு வடிவிலான கவிதைகளின் பல அற்புதமான வரிகள் உள்ளன. அவற்றில் கவிதை பற்றி அவர் இதுவரை தெரிவித்துள்ள பல கூற்றுகளுக்கும் சாராம்சமான வரிகள் உள்ளன.

கவிதை எளிமை இல்லை

எழுத யாரும் முற்படலாம்

கூடி வருவதில்லை

கவிதை காத்திருக்கும் கலை.

சுந்தர ராமசாமியின் 46 ஆண்டுகளில் 110 கவிதைகள் காத்திருந்தவர்.

ஒரே ஒரு கவிதை

போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது நம் நம்பிக்கை அதை எழுதிவிடக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

எனும் வரிகள் இடம்பெறுகின்றன. இந்த நம்பிக்கை கவிதை எழுதுகிற எல்லோருக்கும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அந்தக் கவிதையை எழுதிவிடக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் எழுதும் கவிதைகள் அனைத்தும் அந்த ஒரே ஒரு கவிதையை எழுதிவிடுதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும். அந்தக் கவிதையை எழுதிவிட்டதாக நினைத்துவிடக்கூடாது கடைசிவரை. சுந்தரராமசாமி அவரது அந்த ஒரே ஒரு கவிதையை எழுதிவிட்டார்.

இப்போது நான் மீண்டும்

நண்ப, எனக்கு உறக்கமில்லை

இருளின் செழுமை சேர்ந்து

ரகசிய அறைகளில் நெசவாகிக் கொண்டிருக்கும்

இனங்கூற முடியாத ஏதோ ஒன்று

இன்றுவரை (உன்) அன்பைச் சொல்வதில்

தோல்வியே தொடர்கிறது

அன்பு என்பது ஆபத்து

இசை என்பது அவசரம்

கலை என்பது கொலை

அச்சுக் காட்டில் முளைத்து நிற்கும்

அறிவின் அகங்காரம்

கண்­ரைத் துடைக்க முடியாது

(என்) துக்கத்திற்கு விடுமுறை இல்லை என்பதறிவேன்

இருப்பினும் அது சற்றுத் து‘ங்கினால்

நானும் சற்றுத் து‘ங்கமுடியும்

சதா ஒரு சத்தம்

செவிப்பறையைத் துளைக்கும் இரைச்சல்

சந்தடி: அவலங்களின் கோலங்கள்

நடுநெஞ்சில் அவலம் பீறிட்டது

மீண்டும் இறந்தேன் நேற்று

ஆனால் வருவேன் மீண்டும்

வருவேன் என்று ஒரு முன் சொன்னவன்

வந்த பின் வருவேன் நான்.

என்னை அழைக்கிறது

அந்த அடிவானம்

சலனமற்ற தடாகத்தில்

நீரின் மொக்குகள் போல்

குமிழிகள் பூத்துக் குலுங்குவதைக்

கவனித்தேன்.

குமிழிகளின் மலர்ச்சி

பின் அவற்றின் மறைவு

இல்லாததற்கு இருப்புத் தருவது

காய்ந்த சருகு சலசலக்கும்

புகைத்தெரியும்

பச்சை இலை காய்ந்து உதிரும்

முன்னகர்த்தி என்ன வீசும் இலைகடல்

அலை என்பது காற்றின் வடிவம்

என் தாய் போல் காற்று

அழைத்துச் செல்லும் அது

ஒற்றையடிப் பாதைகளில் நகரும் காற்றை

நான் ஒருபோதும் பார்த்ததில்லை

அங்கொரு உயிர்

அல்லது உயிரின நிழல்

(அந்தக்) குழந்தையின் காலோசை (நம்மை)

அழைக்கிறது

காலடி ஓசை

அல்லது காலடி ஓசையின் நிழல்

அந்து இருளில் குளிர் ஊடுருவி நின்றது

இருளும் குளிரும்

இருளிலிருந்து இழை எடுத்து

சவுக்குகளிலிருந்து மலர் தொடுத்து

அந்த உலகின் அற்புதங்கள்

யாராலும் நிகழ்த்திக் காட்ட முடியாது.

அந்த உலகின் வர்ணங்கள்

வானத்தின் விற்கள் அறிய முடியாதவை.

இயற்கையின் இமைகள்

துடிக்கின்றன

இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன்

என்னை அழைக்கிறது அந்த அடிவானம்

இப்போது என் கைக்கிளி புள்ளியாய் அடிவானத்தில்.

குறிப்பு: மேலேயுள்ள இரு கவிதைகளும் நான் எழுதியவை. இவற்றில் உள்ள வரிகள் அனைத்தும் சுந்தர ராமசாமியின் கரட்டு, வடிவக் கவிதைகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அடைப்புக் குறிகள் என்னுடையவை. ஓவியத்தில் கொலாஜ் என்கிற வடிவம் உண்டல்லவா, அதுபோல் கவிதையில் ஒரு முயற்சி. இயங்குதளம் அமைத்துத் தந்த முன்னோர் ஒருவருக்குச் செய்யும் சிறு மரியாதை.

நன்றி: காலச்சுவடு 2006

கவிதையின் கவிஞர் சுரதா - ஈரோடு தமிழன்பன்

கடந்த நூற்றாண்டின், முதல் ஐம்பதுகளில், பாரதிதாசன் கவிதை ஆளுமை அவருக்கென்று ஒரு பெரிய பரம்பரையை உருவாக்கி வைத்தது. பாரதி பரம்பரையில் பாரதிதாசன் ஒருவருக்கு மட்டுமே அப்படிப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சி வாய்த்தது. அவருடைய தமிழ் உணர்வு, சமூகப்பார்வை, அரசியல் சாய்வு பாரதிதாசன் பரம்பரை என்று முத்திரை பதித்த கவிஞர்களிடமும் தொடர்தன. கவிதையாக்க நெறிமுறைகளும் நியமங்களும்கூட பாரதிதாசத் தளத்தின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தலைமையிலேயே அவர்களிடம் பதிவாகி இருந்தன. பாரதிதாசனின், பரம்பரையில் ஒருவர் சுரதா.

சுரதா தனக்கென ஒரு பரம்பரையைக் கண்ட பெருமையும் சுரதாவுக்கு உண்டு. நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சீதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என்று தொடரும் பட்டியல் இவ்வரலாற்று உண்மைக்குச் சான்று. மேலும் மீரா, அப்துல் ரகுமான், காமராசன் முதலிய பலருக்கும் கவிதைக் குருவாக அவர் இருந்திருக்கிறார் என்பதை அவர்களே வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். கவிதையாக்க நெறிமுறைகளில் வேறுபட்ட உத்திகள், வெளிப்பாட்டுப் பாங்குகள் எனத் தனித்துவம் உள்ளவராகத் தன்னை வளர்த்து, தனக்கென ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர் சுரதா. ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகான தமிழ்க் கவிதை உலகில் அவர் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியபோதிலும், தொடர்ந்து கவிதைத் தளத்தில் தன் பரிமாணங்களை வளர்த்துக் கொண்டவர் என்றோ, புதிய எல்லைகளைத் தொட்டவர் என்றோ சொல்லமுடியாதபடி, தன் வளர்ச்சியின் ஒரு காலகட்ட வலுவைக் கொண்டே தன்னை நிறுவி, கவிதைச் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டார் சுரதா.

திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடல் ஆசிரியர், கவிதை இதழ் ஆசிரியர், கவியரங்கத் தலைவர் எஞ்சிய பன்முகச் செயல்பாடுகள் கொண்டவர் சுரதா. தன் மனத்திருப்பத்தை மேடைகளில், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுவார். உவப்பான உரையாடலாளர் என்கிற தன்மைகளையும் கொண்டிருந்தார். எதார்த்த நிபந்தனைகளை ஏற்று தன்னைத் தகவமைத்துக் கொள்ளும், சமரசம் என்னும் பெயரிலான சரிவுக்குச் சரியென்று ஒத்துப்போகாதவர்; போயிருந்தால் விளம்பரமும் பணமும் குவிந்திருக்கக் கூடும். இன்று அவர் மேல் பொழியப்படும் புகழ், மரணத்தை அடுத்து எப்படிப்பட்டவர் மேலும் சடங்கு நிலையினதாகக் கற்பிதம் செய்யப்படும் புனைவுத்தன்மை உள்ளதாக இல்லாமல் இருப்பதற்குக் காரணமே, அவருடைய - அவரே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் கட்டமைப்புதான். அவரது வாழ்வில் அவ்வப்போது காணப்பட்ட திசை மாற்றங்கள்கூட, ஒரு கவிஞனுக்குரிய உணர்வு முனைப்பின், விடுதலைப் போக்கின் வெளிப்பாடுகளே அல்லாமல், தர்க்கப்படுத்தலுக்கு உள்ளடங்கும் காரணகாரிய மூலக்கூறுகளை உடையன அல்ல. கருத்தியலில் திராவிட இயக்கச் சார்பு இருந்ததெனினும், அவர் கவிதைகளில் இயக்கச் சார்பு அதிக அளவிலும், அழுத்தமான கொள்கை பரப்புப் போக்கிலும் இருந்ததில்லை. சுரதாவின் உளவியல், கவிதை ஆக்க நெறிமுறைகளில் தொழிற்பட்ட முறை வேறுவகையாகவே இருந்தது. இதுவே, அவரை பாரதிதாசனிடமிருந்து பிரித்துக்காட்டியது என்றும் சொல்லலாம். கொள்கைக் கவிஞர் என்பதினும் பார்க்க, கவிதையின் கவிஞர் என்னும் படிவமே அவரைப்ற்றி மேலோங்கி நின்றதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லலாம்.

"நுண்புலக் கவிதை வகை" (Metaphysical Poetry) அடையாளங்களோடு தமிழ்க் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை சுரதாவுக்கு உண்டு. மானுடத்திற்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்வை மெய்யில் பார்வையோடு காணும் நெறியே மெட்டாஃபிசிக்கல் என்பது. தாந்தே, மில்டன் ஆகியோரது படைப்புகளில் செயல்பட்ட தத்துவார்த்தம் இது. நுண்புலக்கவிதை, உணர்ச்சியின் கட்டற்ற வெள்ளப் பெருக்காக இல்லாமல், அறிவுத்திறனின் ஆற்றல் வெளிப்பாடாக இருப்பது பொருளோடு, வழக்கமாகப் பொருத்திப் பார்க்கும் உவமைகளைப் புறந்தள்ளிவிட்டு, எங்கோ வெகுதொலையில் உள்ளவற்றைக் கொண்டு வந்து உவமைகளாக்கிக் கவிதைகளில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவது, அத்துடன் வரலாற்றிலும் வாழ்க்கை அனுபவத்திலும் சந்தித்த அரிதான தகவல்களையும் நிகழ்வுகளையும் கவிதைகளில் கொண்டு வந்து திறமையோடு கலந்து வைத்தனர் இந்த கவிஞர்கள். கற்பனைகள் வேட்டையாடிக் கொண்டு வருவதை இக்கவிதைப் போக்கு விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். 1660 ஆம் ஆண்டுக்குப்பின் இத்தகைய நுண்புலக் கவிதைகள் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான டி.எஸ். எலியட் இக்கவிதைகள் பற்றி எழுதியதன் விளைவாக, மீண்டும் நுண்புலக் கவிதைப் போக்கு புத்துயிர்த்தெழுந்தது. புதுக்கவிதை வளர்ச்சியில் தன் சாயலைப் படிய வைத்தது.

அவைகளைத் "தண்­ரின் ஏப்பம்" என்றும், மாநிறம் என்பது "கறுப்பின் இளமை" என்றும், பல்லியைப் "போலி உடும்பு" என்றும், அழுகையைக் "கண்மீனின் பிரசவம்" என்றும் உவமைப்படுத்தும் சுரதா கவிதைகள், தமிழில் முதன் முறையாக நுண்புலக் கவிதைத் தன்மையாகிய அறிவுநுட்பத்தைக் கொண்டு வந்து சேர்த்தன என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளில் தொடர்ந்துவரும் பொதுத்தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றோடு சேர்த்துத் தனது படைப்புத் திறனின் பங்காக வெளிப்படுத்தியுள்ள கவிதைத் தொழில் நுட்பம் இது. அவர் கவிதைக் கற்பனைகளை ஆதரிக்காதவர் என்றபோதும், இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தில் கற்பனைத்திறன், கைவிடமுடியாதபடி அவருடைய அறிவுநுட்பத்தின் அங்கமாக அடையாளப்பட்டு விடுகின்றது.

சுரதா, வெள்ளமாகக் கவிதையை ஒருபோதும் கொட்டிவிடுவதில்லை. ஒரு கவிதை அவரிடமிருந்து கிடைக்கப் பலமணிநேரம், ஏன் பல நாட்கள், பல மாதங்கள் கூட ஆகலாம். அவருக்குக் கவிதை என்பது ஒரு தச்சு வேலை போலத்தான். இக்காரணத்தாலேகூட, அவர் படைப்புகளை அதிகமாகச் செய்யாமல் போயிருக்கலாம். தொடர்ந்து இருந்துவரும் சிந்தனைத் தடத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தனக்கான புதுச்சிந்தனையைத் தேடிப்போய்விடுவார் சுரதா. திரும்பி வரும்போது நமக்குத் திகைப்பூட்டும் கவிதை மின்னல்கள் கிடைக்கும். நிலவைப் பற்றிச் சொல்ல, பளிங்கு நிலா, பால்நிலா, வெள்ளிநிலா, தங்கநிலா, முத்துநிலா என்று ஏற்கனவே கவிதைக் களத்தில் உள்ளனவற்றையெல்லாம் தவிர்த்துத் தாண்டிப்போய் அவர் உழைக்க முற்பட்டுவிடுவார். வெண்மைக்கு வேறுவேறு மூலங்களை நோக்கிப் போய், வேறு என்ன வார்த்தை கிடைக்கும் என்று தேடுவார். முடிவில் துணி வெளுக்கப்பட்டதும் சலவைத் துணி என்று சொல்லப்படும் சொல்வழக்கு அவர் கவித்துவ இயக்கத்தின் எல்லைக்குள் வந்து சேரும். எவரும் எதிர்பார்க்காதபடி பளிச்சென்று வந்து விழும் சலவைநிலா என்னும் புதிய வார்ப்பு. இது சுரதாவின் கவிதைத் தொழில் நுட்பப் கூறுகளில் முக்கியமான ஒன்றாக அமைந்து, அவருக்கே உரிய தனித்துவச் சிறப்பானதோடு, அவரைப்பின்பற்றி எழுதுகிறவர்களுக்கும் அப்படி எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிவிட்டது.

நதியின் அலை நுரைகளையும் அவற்றில் தோன்றும் குமுழிகளையும் நரைத்த நுரை முட்டையிட்டுக்கொண்டிருந்த நதி நீட்டம் என்று வித்தியாசமாகச் சொன்ன சுரதா, கால நதியில் கலந்துவிட்டாலும், காலத்தை வெல்லும் உவமைகளாலும், புதிய வார்த்தை வார்ப்படங்களாலும், மிடுக்கான நடையின் ஓசைச் சிலிர்ப்புகளாலும் தொடர்ந்து வாழ்வார்.

நன்றி: தீராநதி 2006

பின் நவீனத்துவ கவிதை - முனைவர் க. நாகநந்தினி

தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார்.

நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ''மணிக்கொடி'', ''எழுத்து'', ''நடை'' போன்ற பத்திரிகைகள் தமிழில் கவிதை வடிவம் பெறுவதற்கான சூழலை விமர்சனங்கள் எழுந்தபோதும் உருவாக்கித்தந்தன.

வசனம் நடந்தால் உரைநடை, நடனமாடினால் கவிதை என்றும், அழகிய சொற்கள் அழகிய வரிசையில் நிற்றல் என்றும், உணர்ச்சிகளின் பிரவாகம் என்று கவிதை பல்வேறு நிலைகளில் விளக்கப்பட்டது என்றாலும் கவிதை எழுதப்பட்ட போது அதற்கான காரணம் பின்வருமாறு கூறுப்பட்டது.

''வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சோர்ந்தவைதான். வசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. தம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப்போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது. என்ற ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. மனதுடன் தொடர்புடைய அகவய அனுபவமாக வெளிப்பட்ட கவிதை மரபில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட அவநம்பிக்கை, மனமுறிவு, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் புறநிகழ்வால் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட ஆற்றாமை, இதுவரை கட்டிக்காத்த மதிப்பீடுகளின் சரிவு, மேற்கத்திய இலக்கியம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்க்கவிஞர்களையும் எழுதத் தூண்டியது.

''வாழ்வின் வினையேதும்

அறியாத இருள் ஊடே

உலகத்தின் சாலையில்

ஊடாகும் சாலையில்

ஊடாகும் நிழல்கள்'' - ந. பிச்சமூர்த்தி

''திருமனிதா

தெருவில் சாவோலம்

மிக நெருங்கி வருகிறது.

ஓடு இருட்டுக்கு காட்டுக்கு

எங்காகிலும் ஓடு

உலகத்தைவிட்டு - எஸ். வைத்தீஸ்வரன்

பின்னாலும் போகவில்லை

முன்னாலும் போகவில்லை

நடுக்கிணற்றில் நிகழ்காலம் - ச. மணி

வாழ்க்கையின் மீது கொண்ட இத்தகைய நம்பிக்கையின்மை, எங்கிருந்து பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் வெல்லேன் கூறுகிறார்.

''நம்பிக்கை

அது

இருண்டவானத்திற்குள்

ஓடி ஒளிந்துகொண்டது''

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியே இதற்குப் பதிலாகும்.

அதன்பிறகு வானம்பாடி இயக்கம் முதல் கவிதை வெகுஜன மக்களுக்கும் புரியும் வடிவமானது. வானம்பாடி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு கவிதை எழுதுவதாக அறைகூவியது.

''இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்'' எனத் தன் சமகால விடுதலை விரும்பிகளுக்கு வருங்காலப் பொதுமை விரும்பிகளுக்கும் வெடிப்புறப் பேசியும், நயம்படச் சொல்லியும், அறைகூவல் விடுத்த தமிழ்ச்சாதியின் நிர்மாணச் சிற்பியும், ஆசியாவின் ஒப்பற்ற மனிதாபிமானிகளுள் ஒருவனும் இருபதாம் நூற்றாண்டின் உலகமாக கவிஞர்களுள் ஒருவருமான பாரதிக்கு, அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள்'' என்று வானம்பாடிக் கவிதை இயக்கம் தொடங்கியது.

நம்

கரங்களின் உழைப்பைக்

காலம் அலட்சியப் படுத்தும் போது

நிறங்களின் சிவப்பையே

நாம்

நிச்சியக்கமுடியும்''

என்ற சிலப்புச்சிந்தனை, பொதுவுடமை கொள்கை முழக்கமாக வெளிப்பட்டது கவிதை. அதன் பிறகு படிமக் கவிதை, உருவக் கவிதை, எள்ளல் கவிதை என்று கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்பாடாக கவிதை உருவெடுத்தது.

எண்பதுகளில் நடுவில் கவிதை என்பது பாரதி எழுத்து ரீதியான ஒரு பொருள் என்று சொல்கிற நிலையில் புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் கவிஞன் என்ற மனிதன் ஆளுமை கொண்டவனாக தரிசனம் மற்றும் உள்ளொளி கொண்டவனாக சித்தரிக்கப்படவில்லை. படைப்பாளியை விட படைப்பே முக்கியத்துவம் பெற்றது. எனவே, படைப்பு மொழி பற்றிய சிந்தனையும் மாறியது. தினசரி மொழியின் பெரும்பாலான கூறுகள் பத்திரிக்கைச் செய்தி, விளம்பர மொழி, சின்னத்திரை, பெரியதிரை, நாடகம், நகைச்சுவைமொழி, வெகுஜன வார மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் என்ற பல்வேறு தளங்களில் மொழி தன் கூர்மை மழுங்கிய நிலையில், இந்த மொழி எனக்குத் தேவையில்லை என்றனர் சில படைப்பாளிகள், தன் சுயம் இழந்த மொழித்தளத்தை மீறிய மொழித்தளத்தில் கவிதை எழுத நினைத்த இவர்கள் சாதாரண வாசகரின் பங்கு பற்றி சிந்தனை மறந்துபோய் கவிதையை சிக்கலான மொழியில் எழுதினர். அமைப்பியல் ஆய்வாளர் கூறுவதன்படி கவிதைமொழி சொல்லாடல்களாக உருவாகிறது. கவிதை மொழியைப் புதைநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக எதிர்கவிதை, காண்கவிதை தொடர்பற்ற வார்த்தை வடிவம் சொல்லாக்க கவிதை வடிவம் போன்ற மாற்றங்கள் கவிதை வடிவத்தில் ஏற்பட்டன.

இதற்கடுத்த காலகட்டத்தில்தான் பின்நவீனத்துவ மரபு எழுகின்றது.

கவிதையில் மையமிழந்த தன்மையும் (ஆசிரியன் இறந்துவிட்டான்) பல குரல்களும், வாசிப்பு அனுபவத்தை பல்வேறு அனுபவங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கவிதை என்பது ஒரு கட்டமைப்பு என்றே பார்க்கப்படும். ஒரே கவிதையில் ஒன்றுக்கொண்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைப்பிக்கப்பட வேண்டிய அவசியமிராது.

கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு அவ்வளவுதான் என்று நவீன கவிதை இயல்பு குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கவிதை வேறெதையும் குறிக்கவில்லை

தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம்

சொற்களால் உருவாகவில்லை. சொற்களின்

இடைவெளியில் - மௌனங்களில் தோன்றியது

என்று விளக்கம் தரப்பட்டது.

''புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது

நிஷ்சிந்தையில் மலரும் ராட்சதக் காளான்

மௌனநிறம் போல

என் மூளையின் பின்னாலே நினைவூட்டாது

ஏதுமின்றி

என் மேலதீத நானிடமே

துமில்லாமல்...'' ஞாபகச்சிற்பம்

என்ற கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதிய பிரம்மராஜன் கதைத்தளத்தை திறந்த வெளிக்கு எடுத்துச் செல்கிறார். அதாவது கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து இவைபேசும் பொருட்கள், நிலைகள், மௌனங்கள் ஆகியவை சிதையாமல் அமைவதற்கு இவற்றின் திறந்தவெளி அமைப்பே காரணமாகும். இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள பிறதுறை அறிவும், பயிற்சியனுபவமும் தேவையாகவுள்ளது. இத்தகைய முயற்சிகளை புரியாத கவிதையென்று ஒதுக்க முடியாது.

நன்றி: தற்கால தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் - சு. ஜெயசீலா

ஆரம்ப கால கட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ''நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, சனநாயகம், தேசியஉருவாக்கம், நகரநிர்மாணம், மத்தியதரவர்க்க உருவாக்கம், நீதிவழக்குமுறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை'' எனலாம்.

(அ. மார்க்ஸ் - உடைபடும் புனிதங்கள் - பக். 7,8)

தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:-

1. கவிதை மரபைப் புறக்கணித்தல்.

2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு.

3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல்.

4. பூடகத்தன்மை.

கவிதை மரபைப் புறக்கணித்தல்:-

தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

''என் வீடு

ரொம்பச் சின்னது

யாராவது நண்பர்கள் வந்தால்

தங்க வைக்க முடியாது'' (விக்ரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

இக்கவிதை வரிகள் ஆசிரியர், வாசகர்களிடம் நேரிலே பேசுவது போன்று உள்ளன. இதில் கவிஞருக்குரிய மரபு இலக்கணங்கள் எதுவுமில்லை. வீடு மிகச் சிறியது. யாரு வந்தாலும் தங்குவதற்கு முடியாது என்பதை அப்படியே உரைநடையைப் பிரித்துக் கவிதையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு:-

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபுக் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். நவீனக்கவிதைகளில் இடைவெளிக் குறைகிறது. கவிஞன் தன் குடும்ப நிலையையும், தன்னையும், குடும்பத்திலுள்ளவர்களையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி மிகவும் குறைந்து விடுகின்றது.

''அம்மா சொன்னாள்

ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத

நீயென்ன பிள்ளை?

வீட்டுக்காரி கேட்டாள்

எப்படி வாழப்போகிறீர்கள் (விக்கிரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

என்ற இக்கவிதை வரிகளில் கவிஞரின் வறுமை பற்றியும், வீட்டிலுள்ளோர் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கவிஞன் தன் நண்பருடைய வீட்டினைப் பற்றி இவ்வாறு கூறினார்.

''கறுப்பேறிப் போன

உத்திரம்

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும்

உயரத்தில்'' (கலாப்ரியா - உலகெங்கும் சூரியன்)

பொதுவான பிரச்சனையை விடத் தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது.

வாசகனுக்குச் சிந்திக்க இடமளித்தல்:-

படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக் கூறி வாசகன் அதை அப்படியே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும். என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

''வாடாமல்லிப்பூ மாலைக்கு

வசீகரமில்லை

தனிப் பூவுக்கோ

தாங்க முடியாத அழகு

மண் புழுக்களை நேசிக்கிற

மனம்

இன்றும் இருக்கிறது'' (கல்யாண்ஜி - முன் பின்னில்)

இவைகளிலிருந்து வாசகன் நேரடியான மையத்தினைப் பெற முடியும். அல்லது வாசகனின் மனநிலைக்கு ஏற்ப வேறொரு மையத்தைப் பெற இடமளிக்கிறது.

''அந்தி (போன்ற) நேரங்களில்

மிகச் சுறுக்காகவும்

கறுக்காகவும்

அடிக்கடி திருப்பிக் கொண்டும்

தினந்தோறும் - அது

பறக்கக் காண்கிறேன்'' (கலாப்ரியா - உலகமெலாம் சூரியன்)

இக்கவிதையில் படைப்பாளன் குருவியைப் பற்றிக் கூறினாலும் வாசகன் வேறு பலவற்றைச் சிந்திக்க முடியும்.

பூடகத் தன்மை:-

நேரடியாக மையத்தினைப் பெற முடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவதொரு குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத்தன்மை எனலாம்.

''ரத்தம் சுண்டிய

கரப்பான்களும்

ஒட்டுப்பூச்சிகளும்

ஏலக்காய்ச் செடிகளைக்

கெட்டியாய்ப் பற்றிக் கொண்ட

வெளிரிப் போன பல்லிகளும்

இன்னும் சில

ஜ“வராசிகளும்

கூட்டணிகள் அமைத்துப்

போராடத் தயாராயின

ஓட்டுச் சீட்டைக்

கையில்

தயாராய் வைத்துக் கொண்டன'' (ஆத்மநாம் - ஆத்மநாம் கவிதைகள்)

''வகுப்புக்கு வரும் எறும்புக் கூடு'' என்னும் கவிதையில் வரும் மேல்கண்ட வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கிப் பார்த்தால்தான் இதன் கருவைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்திற்குச் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் தான் தேவை. அநியாயத்தை எதிர்த்துக் கேட்கும் எளியவர்கள் நசுக்கப்படுகின்றனர். எனும் கருத்தை மையமாகக் கொண்டு இக்கவிதை உள்ளது.

இவ்வாறு நவீனத்துவக் கவிதைகள் மரபுக்கவிதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எந்தவொரு சிறு விசயத்தைப் பற்றி கூறுவதற்கும் இடமளிக்கின்றது. வாசகனும் ஒரு படைப்பாளன் நிலைக்குச் சிந்திக்க இடமளிப்பதால் தற்கால கவிதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்