13/09/2011

சிற்றிதழ்களில் கவிதை ஒரு கண்ணோட்டம் - தி.மா. சரவணன்

''உள்ளத்துள்ளது கவிதை - இன்ப உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை'' என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிதை என்பது பாடு பொருளில் உயர்ந்திருக்க வேண்டும். உணரவும், உள்வாங்கவுமான செய்கை உன்னதமானது. அதை படைப்பாக வெளிக்கொணரும்போது நோகாமல், தெளிவாக புரியவும், அறியவுமாக வருவது அந்தபடைப்பை இலக்கியத் தகுதிக்கு உயர்த்தும்.

வடிவத்தைவிட கருத்தை தெளிவாய் பிரதிபலிக்கும் கவிதைகளும், கவிஞனுமே காலத்தால் போற்றப்படும் நிலையில் உள்ளனர். ''உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்'' என்றார் மகாகவி பாரதி. கவிஞன் உண்மையை உணரும் பக்குவத்திலும், மூன்று காலத்திற்குமான சமுதாய சிந்தனையை தாக்கமாய் தருவதிலும் தேர்ந்தவனாய் தன்னை தயாரித்துக் கொள்வது அவசியமானது அந்த அவசியமே அவனது தெளிவான திடமான படைப்பில் ஒன்றாய் கலந்து சுடர்விடும்.

இலக்கணத்திற்கு உட்பட்டு வந்த கவிதைகள், அந்தமரபு வீணாக்கப்படாமல் சமூகத்திற்கு பயன்படும் விதமாக பொழுதை பொன்னாக்க பயன்படுத்த வேண்டும். கவிதையும் அப்படியானது தான். கவிஞன் அதை அறிந்திருக்க வேண்டும். மனித குலத்தின் தேவை உணர்ந்து தனிமனிதனையும், சமுதாயத்தையும் நல்ல பாதைக்கு நாடிச்செல்ல வைப்பது கவிஞனின் வேலை.

ஒரு நல்ல கதையோ, நல்ல கட்டுரையோ செய்யும் செயலைவிட ஒரு நல்ல கவிதை கூடுதலாக செய்யும்! சிந்திக்க வைக்கும்! கவிதைக்குள் ''விதை'' இருப்பதே ஒரு ''விருட்சத்தை சுமக்கிறோம்'' என்ற உண்மையை அறிவிக்கவே! ஆம்.

கவிதை பொருள் பொதிந்த சொல். கதையாகவும் விதையாகவும், கவியாகவும் உருமாற்றம் அடையும் அதிசய உத்தியை தன்னுள் புதைத்தது. எடுப்பவனின் கையில் போர் வாளாகி சுழற்றப்படும் போதுதான் இந்த ஆயுதத்திற்கே மரியாதை கிட்டுகிறது. இலக்கிய வகைகளில் உயர்வான இதை உறைக்குள் இட்டே ஊனப்படுத்துவது அறிவிலித்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட. காலம், மானுடம், பூபாகம் என்ற ஒவ்வொன்றின் நேசிப்பிலும் கவிதை உயிர்ப்புடன் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு பயணிக்கிறது.

பாதிப்பும் பகிர்வும் படைப்பு என்றாகிறது. வரிகளின் நீளத்தைச் செதுக்கி செதுக்கி ஒளியூட்டும்போது படைப்பு கவிதையாகிப்பளீரிடுகிறது. இப்படியாக வளர்க்கப்படும் இந்த நூற்றாண்டின் கவிதை நெடிய வரலாறு கொண்டது.

தமிழர் வாழ்வியலில் பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் பாடல் வடிவங்களே ஆளுமை செலுத்தின. மரபுக்கவிதை, பாடல் என்ற இயலிலேயே சூழல்கள், பண்பாடு, கலாச்சாரம், மொழிக்கூறு, கலை என்ற இயக்கங்கள் இருத்தப்ட்டிருந்தன. பாட்டிற்குள் சகலமும் என வாழ்ந்த நிலை பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உடைப்பட்டது. உரை நடை தோன்றியது. ஒரு கால் இரு கால்களாகி வலம் வந்தன. ஆனாலும் கவிதைக்கான கௌரவம் குலைந்துவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் காலாய் முளைத்தது வசன கவிதை.

சோதிமிக்க நவகவிதை என்று மார்தட்டி ஆர்ப்பரித்து வந்தான் மகாகவி பாரதி. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மரபும், வசனமுமாய் இருவழி இலக்கிய முயற்சிக்கு பாரதி வழி காட்டினான். இனி எல்லோரும் கவிதையை எழுதலாம் எளிமையாய் என்றதன் பின்னால் மெல்ல அணி வகுப்பு நகர்ந்தது.

1910 -ல் விதை ஊன்றப்பட்டு 1933-ல் மணிக்கொடியில் துளிர்விட்டு 1959-ல் எழுத்துவில் வலிமையாய்த் தலை தூக்கியது வசன கவிதை.

பாரதியும் அவனுக்குப்பின் பாரதிதாசனும் வசன கவிதைக்கு வழிகாட்டிகளாக வாய்த்தனர். ஆனாலும் சி.சு. செல்லப்பாவின் எழுத்தே வசன கவிதைக்கான வாய்ப்பாட்டைத் தந்து ஆழமாகவும், அழகாகவும் வகிடெடுத்துக் கொடுத்தது. ந. பிச்சமூர்த்தியின் நளின வரிகளினூடே வசன கவிதை மெல்ல மெல்ல புதுக் கவிதையாய்ப் பரிணாமம் பெற்றது.

மரபுகளைச் சிதைக்காமல் புது விதமாய் நோக்க வைத்த நவீன கவிதை. மேலைய தாக்கத்தை உள்வாங்கி தத்துவச் சிந்தனை தந்து ஒரு மயக்கத்தினூடே இருப்பையே சோதிக்க வைக்கிற நவீனத்துவக் கவிதை.. என கவிதைகள் மேலும் சில கூண்டுகளைக் கூடாரங்களாக்கின.

ஐந்தோடு ஆறாக 1970களில் வாகன வடிவமாய் நடமாடியது ''குறும்பா''வாக ஹைக்கூ. ஒரு கவிதை வடிவமாய் வகைப்படுத்தப் பட்டது இதுவும். இப்படியான வரிசையான வகையில் இந்த நூற்றாண்டில் கவிதைகள் வளர்ச்சியுற்றன; வளர்க்கப்பட்டன; வளர்க்கப்படுகின்றன.

ஒரு நூற்றாண்டை வழி அனுப்புகின்ற பொறுப்போடும் மற்றொரு நூற்றாண்டை வரவேற்கிற தவிப்போடும் நிற்கின்ற தருணம் இது. முடிந்த பாதையிலிருந்து தொடர இருக்கின்ற பயணம் பற்றிய கருத்தாக்கம் அவசியமானது. சமூகத் தொடர்பியலின் வழிகாட்டிகளாக அமைகின்ற இலக்கியத்தில் கவிதைகளின் போக்குளைக் கொண்டாடி மகிழ்கிற காலச் சூழலில் கவிதைகளின் நாளைய தேவை பற்றி கூடி மதிப்பிடலும் அவசியமானதே.

''அவநம்பிக்கையும், நம்பிக்கையும், சமுதாயமும், தன்னம்பிக்கையும், கவலையும் உறுதியும், ஆசையும், ஆதங்கமும், லட்சியமும், யதார்த்தமும், உண்மையும் போலியைக் கண்டு ஆத்திரமுமாக முதல் கவிதைக் குரல்கள் ஒலித்தது'' என்கிறது எழுத்து இதழ். 1959ல் ஒலித்த இந்தக் கனமான குரல்களைப்போலவே மாற்றமில்லாமல் இன்றைக்கும் கவிதைக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றனவா?

சில ஆயிரங்கள் எண்ணிக்கை காட்டலாம். இன்றைக்கும்கூட பல நூறு கவிஞர்களின் பேனா ஓயாமல் உழைக்கிறது. இந்த எண்ணிக்கைச் சிறப்பைப் போலே தமிழ்க் கவிதைக்கும் சிறப்பு கிட்டியுள்ளதா என்பது ஒவ்வொருவருக்குள்ளும் எழ வேண்டிய கேள்வி! வாழ்வியலை, சூழலை, சிக்கல்களை, போராட்ட குணங்களை, அவலங்களை, தீர்வுகளை எத்தனை கவிதைகள் துல்லியமாய் சுட்டியுள்ளன. சுய விமர்சனத்திற்கான கேள்வியாய் உங்கள் முன் விதைக்கிறேன்!

கண்ணோட்டம்

''தமிழர் வாழ்வு உயர்வு பெற வேண்டும்'' என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் தமிழரின் முதல் கவிதை இதழ் வெளிவந்தது. இன்றைக்கு அந்தச் சிந்தனையைதான் கவிதைகள் தருகின்றனவா? தீக்குள் விரலை வைத்து தீண்டும் இன்பத்தைப் பெற எத்தனை கவிதைகள் முயல்கின்றன? வார்த்தைகளை ஒடித்துப் போடுவதும், பதச் சேர்க்கையில் பிரமைகளைத் தோற்றுவிப்பதும் கவிதையாகுமா?

போகிற போக்கில் மன உளைச்சல்களைக் கொட்டி நறுக்கென முள்குத்தலாய் முடிவைத் தந்து வாசிப்பவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கவிதைகள் எத்தனை வருகின்றன?

யோசிக்கையில் முழுமை சிதைந்த மனத்தைப்போலவே படைப்பிலக்கியமும் நீர்த்து வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது! எமக்குத் தொழில் கவிதை என்பதும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதும் வழக்கமான சம்பிரதாயச் சொல்லாகிப்போவதில் எனக்கு உடன்பாடில்லை!

இந்த நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் சிறு இதழ்களின் வளர்ச்சி என்பது அபரிமிதமாக உள்ளது. கவிதையைப் போலவே வளர்ச்சிப்போக்கில் சிறு பத்திரிகைகள் என்றாலும் இதற்குள்ளேயும் சில கிளைகள் சிற்றிதழ்கள், சீரிதழ்கள் என கவிதைகளும் இப்படித்தான் பலவகையில். அதைப்போலவே, பல்சுவை என்ற வகைக்குள் சிக்கி பக்க நிரப்பிகளாக பல சிறு இதழ்களும் ஒரே சுற்றில் சுழல்கின்ற போக்குகளும் தற்கால இதழியலில் கவலை அளிப்பவைகளே!

சிறு இதழ்கள்

கவிதைகளின் வளர்ச்சிக்கு சிறு இதழ்களின் பங்களிப்பு மகத்தானது. இதழ்களின் வழியேதான் கவிதைகள் தம்மை அடையாளம் காட்டிச் செல்கின்றன. சிறு இதழ்கள் இல்லையென்றால் தமிழ்க் கவிதைகள் தளம் இல்லாமலேயே தகர்ந்து போயிருக்கும்.

தமிழின் முதல் இதழ் 1812 இல் தான் வெளிவந்தது என்றாலும் தமிழின் முதல் முழுமையான கவிதை இதழ் 1935இல் தான் வெளிவந்தது. வசன கவிதையைத் தோற்றுவித்த பாரதியின் பெயரால் ''ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்'' என்ற கவிதை இதழைப் பாரதிதாசன் வெளியிட்டார். சுரதாவின் காவியம், பொன்னடியானின் முல்லைச் சரம், தெசினியின் கவிதை என தனித்த கவிதை இதழ்கள் முன்னோடி முயற்சிகளாக வெளிவந்தன.

நவீன இலக்கிய வெளிப்பாடாக படைப்பும், விமர்சனமுமாக பல இதழ்களும் கவிதைகளை வளர்த்தன. மணிக்கொடி(Manikkodi), கிராம ஊழியன், கலாமோகினி(Kalamohini), சரஸ்வதி(Saraswathi), எழுத்து(Ezhuthu) என கவிதையை வளர்தெடுக்க முனைப்பாக முயன்றன சில இதழ்கள்.

1970களில் வானம்பாடியின் வருகைக்குப் பிறகு பலருள்ளும் கவிதைச் சிறகு முளைத்தது. புதுக்கவிதை வானத்தில் நட்சத்திரங்களாய் கவிதைப் பரப்புவிரிந்தது.

அதே கால அளவில்தான் மொழி பெயர்ப்பு வழியாகவும் சுயமாகவும் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாயின. தமிழின் முதல் முழுமையான ஹைக்கூ கவிதை இதழாக சீனு-தமிழ்மணியின் ''கரந்தடி'' இதழ் 1988இல் வெளிவந்தது. இலக்கையில் 1993 இல் ''புள்ளி'' ஹைக்கூ கவிதை இதழ் வெளிவந்தது.

கவிதையை தமிழ் இலக்கியத்தின் தனித் துறையாக வளர்த்து சிறப்பினைப் பெற்றுத் தருகிற கடமையை சிறு இதழ்கள் நேற்று இன்றுமாய் சிறப்பாகச்செய்து வருகின்றன. மண்மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்றால் இதழ்கள் புதிய புதிய கவிதைகளைப் புனைந்து தருகின்றன. இலக்கியப் பத்திரிகையில் கவிதைகளை வெளியிடுவதை ஒரு கடமையாக கொண்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டிலும் புதிது புதிதாக 200க்கும் மேற்பட்ட சிறு இதழ்கள் தோன்றுகின்றன. மறு ஆண்டில் இதில் பத்து விழுக்காடு கூடத் தொடர்வதில்லை. துவங்குகின்ற சிறு இதழ்களில் பெரும்பாலானவை கவிதைகளை முதன்மையாக வெளியிடுகின்றன. கவிதை இல்லாமல் தமிழில் வருகின்ற சிறு இதழ்கள் மிகக் குறைவே.

இந்த நூற்றாண்டின் விளிம்பில் நின்றுகொண்டு சிறு இதழ்களில் கவிதை வளர்ச்சிக்கு பங்களிப்பைச் செலுத்திய கவிஞர்களைப்பட்டியலிட்டால் மகிழ்ச்சியே பெருகும். நீண்ட நெடிய வரிசையில் தமிழ்க்கவிஞர்கள். தமிழ்ச் சூழலில் ''சிறு பத்திரிகைகளை சிறு சிறு குழுக்களே நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு குழுவும் சுயநலத்தாலான சில காரணங்களுக்காகத் தம்மால் அங்கீகரித்துக் கொள்வதென்பது புதுக்கவிதை வரலாற்றின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் போக்கு என்ற குற்றச்சாட்டு உடைபடுகிறது.

20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இருந்த சூழல்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் இருக்கிறது. இருக்கப்போகிறது. இன, மொழி, கலை, இலக்கியச் சீரழிவுகள் தான் வேறு வேறு பெயர்களில் இன்றைக்கும் ஆளுமை செய்கின்றன. கவிதை என்ற ஒரு மையத்தில் இந்த சீரழிவுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு சிற்றிதழ்கள் முழுமையாகத் தனது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: