13/09/2011

வட்டார வழக்கும் எழுத்தாளர்களும் - இமையம்

மொழியை மக்கள் உருமாற்றம் செய்கிறார்கள். இவ்வுலகின் பெரிய அறிஞர்கள் அவற்றை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறார்கள். மக்களின் மொழிப் பிரயோகத்திற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.

- ழாக் ப்ரெவர்

ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட கால வாழ்க்கை முறையை ஆவணமாக, இலக்கியமாக, வரலாறாக, கலையாக உருவாக்குபவன் எழுத்தாளன். மொழியியல் சார்ந்த விதிமுறைகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அளவுகோல்களை அவன் உருவாக்குவதில்லை என்றாலும் இவை அனைத்தும் உருவாவதற்கான காரணிகளை உருவாக்குவதில் எழுத்தாளனின் பங்கு மிக முக்கியமானது.

மொழி குறித்து, அதன் கூறுகள், அதன் பன்முகத் தன்மை, அதன் பயன்பாட்டுப் பரப்பு குறித்துப் பேசுவதற்கு நுணுக்கமான பார்வை தேவை. காரணம், மாறிக்கொண்டேயிருப்பது, அதே நேரத்தில் வளர்ந்து கொண்டேயிருப்பது மொழி. மொழி தனித்து இயங்கக் கூடிய ஒன்றல்ல. அது குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கைமுறை சார்ந்து, நிலம் சார்ந்து, கலைகள், தொழில்கள், கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து உருவாவது. இந்த மொத்தக் கூறுகளும் சேர்ந்ததுதான் மொழி. இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.

மொழி என்பது பேசுவதற்கானது, கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்கானது, புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சம். ஒரு வாழ்க்கைமுறைதான் மொழியை உருவாக்குகிறது. மொழி ஒருபோதும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குவதில்லை.

ஒரு மொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தனிமனித வாழ்க்கையை, ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. விரிந்த பொருளில் ஒரு படைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு காலத்திய வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ள முடியும். அப்படி விவரிக்கிற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். சிறந்த படைப்பிலக்கியத்தின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கையை, வரலாற்றை அறிய முடியும். அப்படி அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழி.

தமிழ் மொழியை, அதன் கூறுகளை, அலகுகளை, பயன்பாட்டுப் பரப்பை, பரிமாணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது - எழுத்தாளன் என்ற வகையில் எனக்கு எளிதாக இல்லை. குறிப்பாக, தமிழ் மொழியின் வழக்குகளைப் புரிந்துகொள்வதில், தற்காலத் தமிழைக் கையாள்வதில், மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது எளிய காரியம் அல்ல. அதிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகள் கொஞ்சமல்ல. எனக்கு மட்டுமல்ல, மொழியைப் புரிந்துகொண்டு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு - மொழியில் சிக்கல்கள் பெருகியபடியே இருக்கின்றன - இருக்கும் என்பதுதான் உண்மை.

தமிழ் மொழியில் வட்டார வழக்குகள் குறித்த பேச்சு வெகு காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு, விவாதத்தில் பல படிநிலைகளைக் கடந்து செயல்பாட்டளவில் பல வரையறைகளுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நாம் இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறோம். அதிகப்படியான போக்குவரத்து வசதி, தொழிற்சாலைகள், நகரங்களை நோக்கிய குடிபெயர்வு, அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், உலகமயமாக்கம் என்று எல்லாமும் சேர்ந்து தமிழ் வாழ்க்கைமுறையை முற்றிலுமாகக் குலைத்துப் போட்டுவிட்ட நிலையில் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவது சற்று வேடிக்கையானதுதான். தற்போதைய தமிழ் வாழ்க்கைமுறையில் வட்டாரம் என்பதற்கும் வட்டார வழக்குகள் என்பதற்கும் அர்த்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

தமிழ் மொழி காலம் காலமாக ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டே வந்திருக்கிறது. போர்த் தொடுப்புகள், வடமொழி ஆக்கிரமிப்பு, சமஸ்கிருதத்தின் தாக்கம், மிஷனரிகளின் வருகை, பிரிட்டிஷ் நிர்வாக முறை, ஊடகங்களின் மொழி என்று நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் தாக்குதலில் தமிழ் மொழி இழந்ததும் அளப்பரிய பெற்றதும் அளப்பரியது.

உலகெங்கும் சிறுசிறு இனக்குழுக்கள் சர்வதேசக் கலாச்சார வன்முறையால், அச்சு, காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை வேகமாக இழந்துவருகின்றன. தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நூற்றாண்டு காலக் கிராம ஒழுங்குகள், நீதி நியமங்கள், நடைமுறைகள், அமைப்புகள் ஊடகங்களால் கொந்தளிப்பை ஒத்த தாக்குதலுக்குட்பட்டு நிலைகுலைந்துள்ள நிலையில் நாம் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிறோம்.

வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது இருக்க முடியாது. இல்லை. ஆனால் உயர் வழக்கு, புலவர் தமிழ், பாமரர் வழக்கு, சாதி வழக்கு, இழிசனர் வழக்கு, கொச்சைத் தமிழ் என்று பல ரகமாகக் காலம் காலமாகப் பிரித்து வைத்திருக்கிறோம். இப் பிரிவினை மொழி வளர்ச்சிக்கு உதவாது. உலகத்தில் இன்று செழுமையான மொழிகள் என்று சொல்லப்படும் எல்லா மொழிகளுமே ஒரு காலத்தில் வட்டார மொழிகளாக, பேச்சு மொழிகளாகத்தான் இருந்துள்ளன என்பது வரலாறு. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வட்டார வழக்குகள், பொதுப் பேச்சு வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். படைப்பு மொழி, தனது உயிர்ப்பைப் பேச்சு - வட்டார வழக்கிலிருந்துதான் பெறுகிறது.

தமிழ் மொழியில் கிராமப்புற, உழைக்கிற மக்களின் மொழியை 'நீச பாஷை'' என்று புறக்கணித்த நிலை இருந்துள்ளது. இதனால் மொழியின் செழுமையான ஒரு பகுதி தமிழ் மொழியில் சேராமலேயே போய்விட்டது. கிராமப்புற நிகழ்த்துக் கலைகளின் வழக்குகள், கதைகள், பாடல்கள், சடங்குகள், விளையாட்டுகள், விடு கதைகள், பழமொழிகள் போன்றவற்றோடு தொடர்புடைய பல வழக்குகளை இழந்துவிட்டு நிற்கிறது தற்காலத் தமிழ். வட்டார வழக்கு பொது வழக்காக, எழுத்து வழக்காக மாறும். அப்படி மாறும்போது மொழிக்குப் பெரிய பலம் சேரும். வட்டார வழக்கின் பலத்தை இன்னும் அறியாதவர்களாகவே நாம் இருக்கிறோம்.

இயல்பான தமிழில் எழுதுகிற மனோபாவம் நம்மிடம் இல்லை. மேடைப் பேச்சுத் தமிழையே எழுத்துத் தமிழாகப் பாவிக்கிற மனோபாவத்தைத் திராவிட இயக்கங்கள் வலுவாக வேர் ஊன்றச் செய்துவிட்டன. அந்த மனோபாவத்திலிருந்து தமிழர்கள் இன்னும் மீளவே இல்லை. மொழி என்பது ஒரு இனக் குழுவின் அடையாளம். நாம் நம் அடையாளத்தை, அதற்குரிய நிஜமான பொருளில் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, அதை வேகமாக இழந்துவருகிறோம் என்பதுகூட நமக்கு உறைக்கவில்லை.

குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் பயன்படுத்தும் மொழியில் சிலபல வழக்குகள் பிற நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் அறியாத வழக்குகளாக இருப்பவற்றைக் குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழக்குச் சொற்கள் என்று வரையறை செய்யலாம். இப்படிப் பல நிலப்பகுதிக்குள் தனித்தனியாக உச்சரிக்கப்படுகிற வழக்குகளையே அந்தந்த நிலப்பகுதிக்குரிய வழக்குச் சொற்கள் என்று வகைப்படுத்தலாம். இந்த வரையறை ஒருபோதும் முழுமையானதாக இருக்க முடியாது. காரணம். நிலைத்த, நீடித்த சொல் வழக்கு என்று எந்த நிலப்பகுதியிலும் இருக்காது இருக்கவும் முடியாது. மொழி காலந்தோறும் மாறக்கூடியதாக இருக்கிறது. மாறக்கூடிய, மாற்றம் கொள்ளக்கூடியதாக இருக்கிற நிலையில் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நின்றுதான் வரையறுக்க முடியும்.

கிராமத்தையும் விவசாயத்தையுமே அடிப்படையாகக் கொண்ட நாட்டில் இவற்றை மையப்படுத்தித்தான் இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருக்குமாயின் பெருமளவில் கிராம வாழ்க்கையும் மொழியும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும். அது தமிழ் மண்ணில் காலம் கடந்துதான் நடந்தது. அதுகூட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எழுத வந்த பிறகுதான் நிகழ்ந்தது. அதுவும் 1980க்குப் பிறகு. இலக்கியத்தில் கிராமப்புற வாழ்வையும் மொழியையும் அதன் தன்மை மாறாமல் ஓரளவு பதிவுசெய்தவர்கள் என்று கி. ராஜநாராயணன், ஆர். சண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களை முன்னோடிகளாகச் சொல்லலாம். இவர்களுடைய பாணியைப் பின்பற்றி நிறையப் பேர் ஒரு இயக்கமாகவே செயல்பட்டார்கள். இவர்களும் சரி, இவர்களுக்குப் பினனால் வந்தவர்களும் சரி, வட்டார வழக்கின் ஜ“வனை, அதன் பன்முகத் தன்மையை, பண்பாட்டுப் பரப்பைப் புரிந்துகொண்டு எழுதினார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் மனத்தில் பட்டதை எல்லாம் எழுதினார்கள் என்று சொல்லலாம்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட வட்டார வழக்கின் ஜ“வனைக் கண்டுபிடித்து எழுதுவான் என்று சொல்ல முடியாது. கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒருவர் எழுதுவதெல்லாம் வட்டார வழக்கு எழுத்து இலக்கியம் என்று சொல்ல முடியாது. ஒருவர் அனுபவ பலத்தில் எழுதும்போது தன்னியல்பாக வட்டார வழக்குகள் சிறப்பாக அமைந்து ஒரு படைப்பை மதிப்பு மிக்கதாக மாற்றிவிடலாம். தன்னியல்பாக அமைகிற மொழி முக்கியமானது. அதோடு வாசிப்பின் மூலம் பெறுகிற மொழியும் முக்கியமானது. இரண்டு மொழியையும் மிகவும் சரியாகப் பயன்படுத்துவதற்கு எழுத்தாளனுக்குத் தேர்ந்த பயிற்சி வேண்டும். பிறரைக் காட்டிலும் எழுத்தாளனுக்கு மொழியில் தெளிவும் பயிற்சியும் இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு பாத்திரத்தை உருவாக்குவதுதான் எழுத்தாளனின் வேலை. அதற்குரிய மொழியைத் தீர்மானிப்பதில்லை. குறிப்பிட்ட பாத்திரம் அதற்கான மொழியைத்தானாகவே உருவாக்கிக்கொள்ளும். கவிதைக்கான மொழியும் புனைகதைக்கான மொழியும் வெவ் வேறானவை. சொற்களின் மீதும் மொழியின் மீதும் கவர்ச்சியும் மோகமும் கொண்டவனாக எழுத்தாளன் இருக்கக் கூடாது. மொழியைக் கவர்ச்சியுடன் பயன்படுத்துவதைவிட அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதே மொழி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. வடிவ ஒழுங்கும் மொழி நேர்த்தியும் மட்டுமே ஒரு படைப்பை மதிப்புமிக்கதாக மாற்றிவிட மாட்டா.

பொது எழுத்து மொழியைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுகிறவர்கள் கூடுதல் அக்கறையுடன் மொழியின் வலுவைப் புரிந்துகொண்டு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வட்டார வழக்குகள் நிறைந்த படைப்பைப் படிப்பதில் பிரச்சினைகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி இருப்பின் அவை சிறிய பிரச்சினைகளாகவே இருக்கும்.

தமிழில் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தொழில் சார்ந்து பெரு நகரங்களில் நிரந்தரமாகக் குடியேறி, கிராமத்தோடு தொடர்பு விட்டுப்போனவர்கள், தங்களுடைய ஞாபகங்களை மறுஉருவாக்கம் செய்து எழுதுகிறவர்கள். இவர்களுடைய வட்டார வழக்கு - எழுத்து மொழி, பொதுப் பேச்சுமொழி, அரைகுறை வட்டார வழக்கு மூன்றும் கலந்து - புது வழக்காக இருக்கிறது. மற்றொரு வகையினர் நிரந்தரமாக, குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. கச்சிதத்தன்மை பற்றி அக்கறையில்லாமல், தங்களுக்குத் தெரிந்த வழக்குகளை எல்லாம் ஒரு மோஸ்தராகப் பதிவுசெய்கிறவர்கள். இந்த இரண்டு வகையினர் எழுதும் வட்டார வழக்குகளைக் கொண்டு வட்டார வழக்குகள் குறித்த எந்த அலகையும் உருவாக்க முடியாது. படைப்பு என்பது மொழி சம்பந்தப்பட்டது. ஒரு சிறந்த படைப்பில் மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, உருவாக்கிக்கொள்ளவும் செய்கிறது.

வட்டாரம் சார்ந்த வழக்குகளைப் பயன்படுத்தும்போது சிக்கலில்லை என்று சொல்ல முடியாது. அய்யர் என்றால் பிராமணர் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. காலனியில் ஒரு அய்யர் இருக்கிறார், அவர் பிராமணர் அல்ல, வள்ளுவப் பண்டாரம். இவர்தான் காலனி வாழ் மக்களுக்குத் திருமணம், சாவு, ஜோசியம் பார்த்தல் போன்ற சடங்குகளைச் செய்பவர். இவரை அய்யர் என்றுதான் காலனி வாழ் மக்கள் அழைப்பார்கள். பிற வகுப்பினர் இவரைப் "பண்டாரம்" என்றுதான் அழைப்பார்கள். இந்த அய்யரை நாவலில் பதிவுசெய்யும்போது (கோவேறு கழுதைகள், 199ள் செடல், 2006) கூடுதலாக ஒரு பத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே மாதிரி - ஆறுமுகம் நாவல் (1999) மொழிபெயர்க்கப்பட்டபோது - "சாண்டே குடிச்சவன" என்பதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. சாண்டு என்றால் பெண்களின் சிறுநீரைக் குறிப்பது. மொழி பெயர்ப்பாளர் சாண்டு என்றால் பெண்களின் மாதவிடாய், அழுக்கு, கழிவு என்பதாகத் தமிழ் லெக்சிக்கனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். கோவேறு கழுதைகள் நாவலில் (1994) "என்னோட லிபி" அவ்வளவுதான் என்று ஆரோக்கியம் என்ற பாத்திரம் சொல்லும். லிபி என்பது சமஸ்கிருதச் சொல். இச்சொல் எப்படி ஆரோக்கியம் என்ற பாத்திரத்திற்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை. நாவலுக்குள் எப்படி அச்சொல் வந்தது என்பதும் எனக்குத் தெரியவில்லை. இச்சொல் தன்னியல்பாக வந்து விழுந்துள்ளது. இது சமஸ்கிருதச் சொல் என்று சொல்ல வேண்டுமா, வட்டாரச் சொல் என்று சொல்ல முடியுமா?

என் விருப்பத்திற்கேற்ப மொழியைப் பாத்திரத்தின் மொழியாக மாற்றுவதில்லை. ஒரு பாத்திரத்தின் மீதோ அதன் மொழியின் மீதோ நான் குறுக்கீடு செய்வதில்லை. மொழியால் வாசகரை ஈர்க்க நினைப்பது, பிரமிக்கவைப்பது என்பது படைப்பை ஊனப்படுத்தும்.

வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிற நமக்கு எது எழுத்து வழக்கு, எது பேச்சு வழக்கு, எது வட்டார வழக்கு என்ற தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்குமான இடைவெளி எது, பேச்சு வழக்குக்கும் வட்டார வழக்குக்குமான இடைவெளி எது, அவற்றை எப்படி இனம் காண்பது, எந்த அலகால் வரையறை செய்வது? தீர்மானிப்பது? இதற்கு நடைமுறை சார்ந்த அணுகு முறை என்ன, விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை என்ன என்பது குறித்த தெளிவோ அக்கறையோ எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல மொழியியலாளர்களுக்கு, கல்வித் துறையைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கேகூட இருப்பதாகத் தெரியவில்லை. இதில் தெளிவும் அறிவும் ஏற்படாதவரையில் மொழியின் ஒரு பிரிவான வட்டார வழக்குக் குறித்து நாம் எந்த அலகுகளையும் உருவாக்க முடியாது. அதுவரை எழுத்து மொழியையும் பேச்சு மொழியையும் வட்டார வழக்கையும் ஒரே வாக்கியத்தில் நம் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எழுத்தாளர்கள் மொழியியல் குறித்து அக்கறைப்படுவதில்€ல் மொழியியலாளர்கள் இலக்கியம் குறித்துக் கவலைப்படுவதில்லை. இந்தத் தனித்தனித் தீவுகள் ஒன்றிணையும்போது மட்டுமே மொழி குறித்து, வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவதில் அர்த்தம் இருக்க முடியும்.

"கைமுதல், கைப்பாவை, கையாலாகாதவன், கைநாட்டு, கைமாத்து, கைக்கிளி, கையை விரிச்சிட்டான், அவனுக்குக் கை நீளம்" ஆகிய சொற்களைக் கழனியூரன் என்பவர் வட்டார வழக்குச் சொற்களாகப் பட்டியலிடுகிறார் (குமரிக்கடல் - ஜூன் 2006 - பக்கம் 21, 22). இச்சொற்கள் எந்த வட்டாரத்திற்குரியவை என்பதைக்கூடக் கழனியூரன் குறிப்பிடவில்லை. இதே மாதிரி அ.கா. பெருமாள் தொகுத்த நாஞ்சில் நாட்டுச் சொல்லகராதியில் (2004) நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குகளாக "நக்கல், நடவு, சுண்டைக் காய், சுமைதாங்கி, குட்டிக்கரணம், கனகச்சிதம், அடம், அட்டூழியம், அடிமாடு" என்று பட்டியலிடுகிறார். அ.கா. பெருமாள் தொகுத்துள்ள சொல்லகராதியில் தமிழகம் எங்கும் உள்ள எழுத்து வழக்கு, பேச்சு வழக்குச் சொற்களையே அவர் தொகுத்துள்ளார். நம்முடைய வட்டார வழக்குச் சொல்லகராதிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.

2000ஆம் ஆண்டு இந்திய அரசின் பண்பாட்டுத் துறை எனக்கு இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை வழங்கியது. இளநிலை ஆய்வு நல்கைக்காக நான் தொகுத்த "தலித்" சொல்லகராதி பாதியிலேயே நின்றுவிட்டது. காரணம் தற்போதைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையில் சாதி ரீதியான ஒரு வழக்குச் சொல்லகராதியை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது என் அனுபவத்தில் தெரிந்தது. இது வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சோதனைக்காக கி. ராஜநாராயணன் தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதி (1982), பெருமாள்முருகன் தொகுத்த கொங்கு வட்டாரச் சொல்லகராதி (2000), நான் தொகுத்த தலித் சொல்லகராதி (2002) ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது மூன்றுக்குமிடையில் மிக நெருங்கிய உறவிருப்பது தெரியவந்தது. அந்த ஒப்பீடு தமிழ் வாழ்க்கைமுறை மிக வேகமாக மாறிவருகிறது என்பதைக் காட்டியது.

பிறரைக் காட்டிலும் மொழி குறித்து அக்கறைப்பட வேண்டியவன் எழுத்தாளன்தான். அவன்தான் வார்த்தைகளால் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் காட்டுகிறான். அதனால் படைப்பில் புதிய எழுத்து முறையை, புதிய மொழியைக் கண்டடைய வேண்டிய அவசியம் எழுத்தாளனுக்குத்தான் இருக்கிறது. அதற்கு அவன் மொழியை நடப்பியல் ஆய்வு முறையோடு, புதிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மொழி குறித்த தெளிவும் பயிற்சியும் இல்லாமல் உருவாக்கப்படும் படைப்பின் மொழி உயிரற்றதாகவே இருக்கும். பண்டைக்காலத் தமிழை, இடைக்காலத் தமிழை, தற்காலத் தமிழை - தற்காலத் தமிழில் எழுத்து மொழியாக இருந்தாலும் சரி, வட்டார வழக்காக இருந்தாலும் சரி - ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை, முன்னேற்றங்களைக் கணக்கில் கொண்டு செயல்படுவது படைப்பு மொழிக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நல்லது.

குறிப்பு: CIIL, French Institute of Pondicherryயும் இணைந்து நடத்திய வட்டார வழக்குகள் குறித்த கருத்தரங்கில் 13.8.2006இல் படிக்கப்பட்ட கட்டுரை.

நன்றி: காலச்சுவடு 2007

கருத்துகள் இல்லை: