கம்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கம்பனுக்குக் கற்பித்த சூளாமணி - பொ.வேல்சாமி

தமிழ் மொழியின் கவிதை அழகையும் இலக்கணப் பரப்பையும் வெளிப்படுத்திக் காட்டியவர்கள் சமண சமயத்தினர் தான் (குறிப்பு 1). ஐம்பெரும் காப்பியங்களும் ஐஞ்சிறுகாப்பியங்களும் சமணர்களாலும் பௌத்தர்களாலும் படைக்கப்பட்டன. அவற்றுள் கவிதைச் சிறப்புமிக்க நூல்கள் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய மூன்றும் தான். இவற்றுள் தான் தோன்றிய காலத்திலிருந்து முதன்மை பெற்ற நூலாக சூளாமணி திகழ்ந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டில் சமய சாதிய அரசியல் காரணங்களால் சூளாமணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் நடுநிலையான தமிழ் அறிஞர்களின் உள்ளத்தில் அது முதன்மை பெற்றே இருந்தது. தெ. பொ. மீ. கூறுகிறார். “பாடல்கள் முழு மணிகளாய் உள்ளன. வருணனைகள் எழிலுடனும் ஈர்ப்புடனும் அமைந்துள்ளன. சூளாமணி ஆசிரியரின் இயற்கை வருணனை மனிதனோடு அதனை ஒன்றச் செய்கிறது. மரங்களையும் செடிகொடிகளையும் குகைகளையும் இயற்கை அரண்மனைகளாகவும் திருமண மன்றங்களாகவும் வருணனை செய்கின்ற இடத்தில் அவர் சிறந்தோங்குகின்றார்”(குறிப்பு 2). தமிழ் மொழியின் அழகை வெளிப்படுத்தும் கவிதைகள் நிரம்பிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலை அழியவிடாது காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு ஏற்பட்டது. எனவே ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சிடுவதற்காக பெரும்பாடுபடுகின்றார். இதற்காக அவர்பட்ட துன்பங்களை சூளாமணி முன்னுரையில் விரிவாகக் கூறுகின்றார்.


19-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருந்தன. எனவே இத்தகைய நூல்களின் ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது அரிதாக இருந்தது. அப்படி ஒன்றிரண்டு சுவடிகள் கிடைத்தாலும் அவைகள் பெரும்பாலும் முழுமையாக இல்லாமல் சிதைந்து இருந்தன. எனவே அவற்றை வைத்துக் கொண்டு மூல ஆசிரியர் என்ன எழுதியிருப்பார் என்று காண்பதற்கே பெரும்புலமையாளர்களும் போராட வேண்டி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தாமோதரம் பிள்ளைக்கு திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து ஒரு சுவடியும் கரூர் வேங்கடராம அய்யங்காரிடமிருந்து ஒரு சுவடியும் கிடைக்கின்றன. தஞ்சாவூரில் நீதிபதியாக இருந்த கனகசபை முதலியார் என்பவர் வேதாரண்யம் அருமை பெருமாள் முதலியார் மகன் அநந்த விஜய முதலியார் பிரதி ஒன்றும் பெருமண்டூரிலிருந்த ஒரு சைவப் புலவர் பிரதி ஒன்றும் அனுப்பி வைக்கின்றார். விழுப்புரத்தில் முன்சீப்பாக இருந்த இராமச்சந்திரையர் என்பவர் வீடூர் சைனப்புலவர் அப்பா சாமி சாஸ்திரி என்பவரிடமிருந்து ஒரு பிரதி வாங்கி அனுப்புகிறார். இதன் பின்னர் “ஆயிரத்தி எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்” நூலைப் பிற்காலத்தில் எழுதிய கனகசபை பிள்ளையின் பிரதி ஒன்றைக் காவல்துறை அதிகாரியாக இருந்த கிருஷ்ணசாமி நாயுடு என்பவரிடமிருந்து பெறுகின்றார். இவற்றைக் கொண்டு நூலை அச்சிட்டு விடுகின்றார். இந்த நேரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு பிரதி கிடைக்கின்றது. முன் பார்த்த பிரதிகளுக்கு எல்லாம் மாறாக காஞ்சிபுரம் பிரதி இருந்ததாகவும் இதனால் நூலை மீண்டும் திருத்தி அச்சிட்டதாகவும் கூறுகின்றார்.


நம்முடைய இன்றைய காலத்திற்கும் சி.வை.தா., உ.வே.சா. போன்றவர்கள் நூல்களை வெளியிட்ட காலத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் நிலவியதை நாம் தவறாது கவனத்தில் கொள்ளவேண்டும். இன்றைக்கு நூல்களை அச்சிட்டு முறையாக விளம்பரப்படுத்தியும், அரசு நூலகங்களிலும் விற்பனை செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய வசதிகள் 19-ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் பாதி காலம் வரையிலும் முற்றிலும் இல்லாமல் இருந்தது. எனவே நூல்களை வெளியிடுபவர்கள் ஜமீன்தார்களையும் பெரும் வணிகர்களாகிய செட்டியார்களையும், நிலப்பிரபுகளையும் ஆதீனங்களையும் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பெரிய மனிதர்களையும் அண்டி அவர்களுடைய உதவிகளைப் பெற்றுத்தான் நூல்களை வெளியிட வேண்டிய நிலை இருந்தது. எனவே அந்த கால கட்டத்தில் வெளியான பெரும்பாலான நூல்களில் முதல் பக்கத்தில் அத்தகையவர்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஒரு நூலுக்குப் பலரிடம் உதவிகள் பெற்றிருந்தால் முன்னுரையின் இறுதியில் அந்த உதவியவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். அன்றைய நூல் வெளியீடுகளின் ஒரு பகுதியாக இந்த உதவியவர்கள் இருந்துள்ளனர். சூளாமணி நூலுக்கு முழுமையாகப் பணம் கொடுத்தவர்கள் பர்மாவில் வசித்த சி.வை.தாவின் தம்பி இளைய தம்பிப் பிள்ளையும் அவருடைய நண்பர் சிலரும் ஆவார்கள். சூளாமணி முன்னுரையின் இறுதியில் இவர்களுடைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போடி நாயக்கனூர் ஜமீன்தார் ‘திருமலை போடய காமராச பாண்டிய நாயக்கர்’ என்பவர் கொடுத்த பணத்தை ‘இலக்கண விளக்கம்’ நூலை வெளியிடப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார்.


அடுத்து செம்மையான ஏட்டுச் சுவடிகள் கிடைக்காத நூல்களில் உள்ள பிழையான அல்லது புரியாத பகுதிகளைப் பதிப்பாசிரியர் தன்னுடைய அனுபவத்தின் மூலமாகத் திருத்தி வெளியிடலாமா என்பதைப்பற்றி விவாதிக்கின்றார். எட்டு வகையான விளக்கங்களில் சில பகுதிகளைத் திருத்தி வெளி யிடுவது தவறாகாது என்கின்றார். அதற்குத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட வீரசோழிய நூலைக் குறிப்பிடுகின்றார். தான் ஏடுகளில் உள்ள வாறே வெளியிட்டதனால் படிப்பவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்தது தான் பலன் என்கின்றார். இன்றைய நிலை வரை எந்தப் புலவனும் அதற்கான திருத்தத்தைக் கூறவில்லை என்கிறார். பிற்காலங்களில் நூல் பதிப்பை மேற்கொள்பவர்களுக்கான ஒரு ஆய்வுக் குறிப்பாக இந்தப் பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.


“இவ்வாறு பலவகையாலும் சிறப்புற்ற இந்நூல் முதன்முதலாக 1889-ஆம் ஆண்டில் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்களால் அச்சிடப் பட்டது. அதன்பின் யாரும் முழு நூலைப் பதிப்பிக்க முன் வராமற் போயினமையால் தமிழகத்தில் இவ் வருமையான நூல் கிடைப்பது அருமையாயிற்று. இக்குறை நீங்கத் தாமே ஒரு பதிப்பை வெளியிடக் காலஞ்சென்ற மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமி நாதையரவர்கள் கருதியதுண்டு. அக்கருத்து அவர்கள் காலத்திலே நடைபெறாமற்போனது தமிழகத்தின் துர்ப்பாக்கியமே. ஐயரவர்கள் காலத்துக்குப் பின் அவர்கள் குமாரர் பரி கலியாண சுந்தர ஐயரவர்களைப் பல ஜைன அன்பர்கள் இந் நூலைப் பதிப்பிக்கும்படி அடிக்கடிதூண்டி வந்தனர். எவ்வாறேனும் இந்நூலை ஐயரவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களோடு ஒரு நல்ல பதிப்பாகக் கொண்டுவர அவர்களும் முயன்றார்கள். அதற்காக அவர்கள் பேராசிரியர் திரு. அ. சக்ரவர்த்தி நயினார், எம். ஏ. அவர்களிடம் இருந்த நான்கு ஏட்டுச் சுவடி களைப் பெற்று வந்தனர். அவை - 1. பாண்டிப்பிரதி 2. வீடூர்ப்பிரதி 3. பெருமண்டூர்ப்பிரதி 4. ஆலக் கிராமப்பிரதி என்பனவாகும். அவற்றோடு சென்னைக் கீழ்த்திசைக் கையெழுத்துப் புத்தக சாலையில் இருந்து ஒரு காகிதப் பிரதியையும் பெற்றனர். மேற்கூறிய ஐந்து பிரதிகளுடன் இந்நூல் நிலையத்தில் ஐயரவர்களால் பார்த்து வைக்கப்பெற்ற ஓர் ஏட்டையும் ஒப்பிட்டுப் பாடபேதங்கள் குறிக்கப் பெற்றன.”


1954-ஆம் ஆண்டில் உ. வே. சா. நூலகம் இந் நூலை மீண்டும் வெளியிட்ட நோக்கத்தை எழுது வதுடன் நூலின் பெயர்க்காரணம், நூலாசிரியருடைய பெயர், நூலின் காலம், நூலாசிரியரான தோலா மொழித்தேவரை ஆதரித்த மன்னன், இந்நூலை மேற்கோள் காட்டிய புகழ்பெற்ற உரையாசிரியர்கள் போன்ற ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் தந்துள்ளனர். மேலும் உரை எதுவும் எழுதப்படாதிருந்த இந் நூலுக்கு ச.கு.கணபதிஐயர், வி.துரைசாமிஐயர் ஆகியவர்களைக் கொண்டு குறிப்புரையும், 12 இயல்களைக் கொண்டுள்ள இந்நூலின் ஒவ்வொரு இயலுக் கான கதைச் சுருக்கம், அரிய சொற்களுக்கான விளக்கமாக “அரும்பத அகராதி” நூலின் உள்ளே வருகின்ற மக்கள் பெயர், ஊர்ப் பெயர்கள் போன்ற வற்றை விளக்கும் “அபிதான விளக்க அகராதி” இந்நூலின் மூல நூலாகக்கருதப்படுகின்ற ‘ஸ்ரீ புராணம்’ என்ற நூலின் ஒரு பகுதியில் மணிப் பிரவாள நடையில் கூறப்பட்டுள்ள கதைப்பகுதி, என்று நூல் விளக்கத்திற்கான பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்கள் பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதற்கான உரையும், உரைவிளக்கங்களும் இல்லாதிருந்தது.


இந்தக் குறையை மனதில் கொண்டு சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1962-இல் பொ.வே.சோம சுந்தரனாரையும் சு. அ. இராமசாமிப்புலவர் என்பவரையும் கொண்டு பொழிப்புரையும் விளக்க வுரையும், கதைச் சுருக்கமும் எழுதி இந்நூலை வெளியிட்டனர். இந்நூலுக்கான அணிந்துரையிலும் கதைச் சுருக்கத்திலும் பொ. வே. சோமசுந்தரனார் நூலிலுள்ள கவிதைச் சிறப்பை எடுத்துக் காட்டும் பாடல்களைச் சுட்டி விளக்குகிறார். கூடவே அவர் குறிப்பிடும் இரண்டு அம்சங்கள் குறிப்பிடத்தக்க வையாக உள்ளன. பெரும்பாலான சைவ சமயம் சார்ந்த புலவர்கள் (குறிப்பு 3). இந்நூல் 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாக எழுதுகின்றனர். இத்தகையவர்- களுடைய கருத்து பொருந்தாது என்று சோம சுந்தரனார் கருதுகிறார். சமணர்களைக் கடுமையாக வெறுத்த சைவர்கள் ஆதிக்கம் மிகுந்திருந்த காலம் 9, 10 நூற்றாண்டுகள். எனவே அந்த காலகட்டத்தில் இந்நூல் தோன்றி இருக்க முடியாது என்றும் தேவார ஆசிரியர்களின் காலத்திற்கு முந்தியதாகத் தான் சீவகசிந்தாமணி, பெருங்கதை, சூளாமணி போன்ற நூல்களின் தோற்றம் இருக்க முடியும் என்றும் எழுதுகிறார். தன் கருத்திற்கு நீலகேசி நூலைப் பதிப்பித்து அந்நூலுக்கு 300 பக்கங்களுக்கு மேல் முன்னுரை எழுதி அதில் சமண சமய நூல்களின் காலத்தையும் ஆராய்ந்து விளக்கிய பேராசிரியர் சக்ரவர்த்தி நயினாரை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்நூலின் பதிப்புரையில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இக்கருத்தை மறுத்து எழுதி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.


சோம சுந்தரனார் விளக்கம் எழுதி வரும்போது பல பாடல்களுக்கு உரை எழுதுவது கடினமாக, இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். இந்நூலின் 275 ஆம் பாடல் (குறிப்பு 4). வெகுகாலம் பொருள் விளங்காமல் இருந்ததாகவும் இந்நூலினுள் வருகின்ற சமண சமய தத்துவங்களை விளங்கிக் கொள்ளும் பொருட்டு அத்தத்துவங்களை விளக்கும் நீலகேசி நூலைப் படிக்கும் போது நீலகேசி நூலின் உரையாசிரியர் சமயதிவாகர முனிவர் பாடல் 576க்கு எழுதிய விளக்கத்திலிருந்து தான் இந்தப் பாடலுக்கான பொருளைப் புரிந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.


அவர் குறிப்பிடும் செய்தி இன்றைய நிலையில் புதுமையானதாகவே உள்ளது. அதாவது மாதுளம் விதைகளை நடும் போது அந்த விதைகளில் செவ் வரக்கு பூசி நட்டால் செந்நிற மலர்களும், காரரக்கு பூசி நட்டால் கருமைநிற மலர்களும் பூக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற எந்தப் பழைமையான தமிழ் நூலிலும் இத்தகைய செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய காலம் வரையிலும் இத்தகைய சமண சமயம் சார்ந்த நூல்களுக்குச் சரியான கால வரையறை செய்யப்படவில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றில் சுமார் 1300 ஆண்டுகள் பல துறை களிலும் செல்வாக்குச் செலுத்திய இந்நூற்களின் தாக்கம் தமிழ்ப் பண்பாட்டில் தன் முத்திரையைப் பதித்த பகுதிகள் இருண்டே உள்ளன. இந்திய மொழிகள் எவற்றிலும் காணப்படாத பல தன்மைகளை உள்ளடக்கி நீண்ட நெடுங்காலமாக நம் மொழியைப் பெருமைப்படுத்தி வருகின்ற இத்தகைய நூல்கள் இன்றைய இளைஞர்களுக்கு உரிய முறையில் அறிமுகப்படுத்த வேண்டும்.


குறிப்புக்கள் 


1.     அச்சமணர் தமிழ் மொழியில் தெள்ளறிவு பெற்றுப் புலவர்களாகத் திகழ்ந்தனர். அன்றியும் அவர்கள் நாட்டிலுள்ள தமிழ்ச் சங்கங்களிலும் இடம்பெற்று அரிய தமிழ்ப்பணி இயற்றி வந்தனர். தனிப் பாடல்கள், பெருங் காப்பியங்கள், சிறு காப்பியங்கள், நீதிநூல்கள், சமய நூல்கள், பிரபந்தங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள், உரைகள் ஆகிய பலதுறை நூல்கள் இயற்றுவதிலும் அவர்களது ஞானம் மேலோங்கி விளங்கியதைக் காண்கின்றோம்.


       தோலாமொழித் தேவர் இயற்றியருளிய சூளாமணி


       டாக்டர் உ. வே. சா. நூலகம் 1954. முகவுரை


2.     தமிழ் இலக்கிய வரலாறு, தெ. பொ. மீ பக். 123


       தமிழாக்கம் மு. இளமாறன்


       தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் நினைவு அறக்கட்டளை மதுரை-2000


3.     1930களில் ‘கலாநிலையம்’ பத்திரிகை நடத்திய சேஷாசலம் அய்யர், இராமரத்தின அய்யருடன் சேர்ந்து சூளாமணி பாடல்கள் 238-க்கு உரை எழுதி வெளியிட்டிருந்தனர். இவர்களின் தொடர்பால் இப்பாடல்களையும் அதன் உரைகளையும் படித்த தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அந்த 238 பாடல்களின் கருத்தையும் உரை நடையில் எழுதி, அந்தப் பாடல் களை இணைத்து 1944-இல் ஒரு நூலாக வெளி யிட்டுள்ளார். இதே கால கட்டத்தில் நான்கு இயல்களுக்கு வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை எழுதியதாகக் குறிப்பு உள்ளது.


4.     மு. அருணாசலம் எழுதுகிறார் “குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டத்தரமான கதைகள், குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள்; காரணம் தன் புருஷனைத் தானே மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றமையால். ஆகையால் முனிச் சந்திர முனிவனை தெருட்டமுயன்று தோல்வியுற்ற காளிக்கு வலிமை தருபவளாகவும் குண்டலகேசியை வெல்லக்கூடியவளாகவும் இருக்கத் தக்க ஒரு ‘பெரிய பிசாசு’ தேவைப்பட்டது.


       10-ஆம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு - பக்-77 தி பார்க்கர் பதிப்பகம் 2005.


       மு. அருணாசலம் போன்ற நிறைவான தமிழ்ப்புலமை பெற்ற அறிஞரே இப்படிக் கூறினால் மற்றவர்கள் எப்படி இருந்திருப்பார்கள். ஒன்று சமண சமயம் சார்ந்த நூல்களைப் புறக்கணிப்பது அல்லது தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற சமணசமயம் சார்ந்த நூல்களை விதண்டாவாதத்தால் அச்சமயம் சார்ந்த நூல்கள் அல்ல என்று விவாதித்துக் குழப்பி விடுவது. இதுவும் முடியாவிட்டால் அருணா சலம் போன்று மட்டரகமான நூல்கள் என்று சேற்றை வாரி இறைப்பது. 20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் இச்செயல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - உங்கள் நூலகம் 2011



கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம்.

ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன.


‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு:


“தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை

 துள்ளி, மீது எழுபுள் எலாம்

 தேய்கை ஒத்த மருங்குல் மாதர்

 சிலம்பின் நின்று சிலம்புவ

 கேகயத்து அரசன் பயந்த விடத்தை

 இன்னது ஓர் கேடுசூழ்

 மா கயத்தியை, உள்கொதித்து

 மனத்து வைவன போன்றவே!”


 (கைகேயி சூழ்வினைப் படலம்-229)


 “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இருந்தது... நீராடும் குளங்களிலிருந்தும், மரங்களிலிருந்தும் துள்ளிக் குதித்துக்கொண்டு மேலே பறக்கிற மெல்லிய சிறகுகளை உடைய பறவைகள், தேய்ந்துள்ள இடையைப் பெற்ற மகளிரின் காற்சிலம்புகள் போல ஒலியை எழுப்பிய காட்சி” என்கிறார் கம்பர்.


எனவே, வில்லனைக் ‘கயவன்’ என்றும், வில்லியைக் ‘கயத்தி’ என்னும் இனி அழைக்கலாம்; எழுதலாமே...!

நன்றி - தமிழ்மணி 2020

கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை - முனைவர் மணி.கணேசன்

காப்பிய இலக்கியக் கால கட்டத்தில் சிலம்பும் மணிமேகலையும் பெண்ணிய எழுச்சியின் அடையாளங்களாக விளங்கினாலும் வழக்கத்திலிருந்த பலதார மணமுறைக்கான எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை. சீவக சிந்தாமணியோ ஒருபடி மேலே சென்று மணநூல் என்று போற்றும் அளவிற்கு ஓர் ஆண் பல பெண்களை மணமுடிக்கும் வழக்கத்தை வலியுறுத்தி நிலையாமைத் தத்துவத்தை வெகுமக்களிடம் புகட்ட முனைந்தது. இத்தகைய சூழலில் பிற்காலத்தில் உருவாகி, ஒருதார மணத்தை ஆணுக்கு வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் புதியதோர் சமுதாயம் உருவாக மக்களை நல்வழிப்படுத்திய பெருமை கம்பராமாயணத்திற்கே உண்டு.

அதுபோல், கம்பன் படைத்துக் காட்டிய புதுமைப்பெண் கல்வியறிவும் சொத்துரிமையும் நிரம்பப் பெற்றவளாகக் காணப்பட வேண்டுமென்பதைத் தம் நாட்டுப்படலத்தில் சுட்டிக்காட்டப்படும்,

பெருந்தடங்கண் பிறை நுதலார்க்கு எல்லாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலாய்

என்னும் வரிகளின் வாயிலாக அறியவியலும். ஏனெனில், குடும்பம் செழிக்கவும் மகிழவும் முக்கிய காரணமாகத் திகழும் பெண்ணை மதித்து,சங்க காலத்தில் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தால் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி விரும்பி ஈன்ற செய்தி ஐங்குறுநூற்றில் (257) காணப்படுகின்றது. மேலும், கொடையளிக்கும் உரிமையைப் பெண் பெற்றிருந்ததைப் பெருந்தலைச் சாத்தனாரின் புறப்பாடலொன்று (151) தெரிவிப்பது உணரத்தக்கது.

இவற்றைக் கருத்தில்கொண்டு கவிச்சக்கரவர்த்தி கம்பன் பெண்கள் மீளவும் பழையபடி அறிவாலும் ஆற்றலாலும் சமுதாய மதிப்புப் பெற்றுக் கோலோச்சிட வேண்டுமானால் சொத்துரிமையுடன் கூடிய சுயசார்பும் கல்வியறிவும் அவசியமென்று அறிவுறுத்துவதை எளிதில் இன்றும் எடுத்துக் கொள்ளவியலாது. பெண் கல்வி கற்பதன் மூலமாகப் பல்வேறு சமூகத்தளைகள், கட்டுப்பாடுகள், கடப்பாடுகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.மேலும், எல்லாவற்றிற்கும் ஆண்களைச் சார்ந்திராமல் பெண்கள் தம் சுய தேவைகளைத் தாமே நிறைவேற்றிக் கொள்ளவும் பிறருக்கு மனமுவந்து கொடுத்துதவி சமுதாயத்தில் உரிய மதிப்புப் பெறவும் மேம்படவும் ஆணுக்கு நிகரான சொத்துரிமை அவர்களுக்கு இன்றியமையாதது என்று எடுத்துரைப்பது சாலச் சிறந்தது.

காலந்தோறும் கம்பனைப் போற்றிக் கொண்டாடும் இத்தருணத்தில் மேற்குறிப்பிடப்பெற்ற  அவருடைய பெண்ணியச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் முன்னத்தி ஏர்களாக விளங்குவது நமது தலையாயக் கடமையாகும்.

நன்றி - திண்ணை 2014

கண்களோ, காதல் காவியம்!

கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். குறிப்பாக, பெண்களின் கண்களை சங்க இலக்கியச் சான்றோர்கள் முதல், குறும் பா புலவர்கள் வரை வர்ணிக்காதவர்களே இல்லை எனலாம். எந்த ஒரு நாட்டில் பெண்களின் கண்கள் அங்குமிங்கும் அலைபாயாது இருக்கிறதோ, அந்த நாட்டில் கற்பொழுக்கம் மிகுந்து காணப்படும் என்கிறார் கம்பர். ஆடவரும் பெண்டிரும் தத்தம் ஒழுக்கலாறுகளிலிருந்து பிறழாத நாடு கோசலம் என்கிறார்.

""ஆசல ம்புரி ஐம்பொறி வாளியும்
காசல ம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறம்செலாக்
கோசலம்''

பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே? பொறிகளைப் புலன்வழி விட்டுத் துன்புறுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே! ஆடவர்களுக்கு ஐம்பொறிகளால் வரும் தீங்கு, பெண்களுக்குக் கண்களால் மட்டுமே வந்துசேரும். பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள் என்ற பொருளில் "பூசலம்பு' என்கிறார். எந்த நாட்டில் பெண்களின் கண்கள் புறம் செல்கின்றனவோ, அங்கு ஒழுக்கம் சீர்குலையும் என்பது கம்பரின் மதிப்பீடு.

கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்) - முனைவர் மு.பழனியப்பன்

அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை வளமும் நலமும் சேரும் வகையில் படைப்பாளர்களால் கையாளப் பெற்று வருகின்றன.

தமிழிலக்கிய வரலாற்றில் அகம் என்ற பாடுபொருள் புறம் என்ற பாடுபொருளைவிட அதிக அளவில் மாறுபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாமல் எடுத்தாளப் பெற்று வந்திருக்கிறது. புறம் என்ற பாடுபொருளில் பற்பல மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டிற்கு தொல்காப்பிய கால போர்முறைக்கும், தற்கால போர்முறைக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதையும், அவற்றை இலக்கியங்கள் பதிவு செய்திருப்பதையும் காட்டலாம். இவ்வடிப்படையில் புறம் என்ற விரிந்த எல்லையை உடைய பாடுபொருள் - அறம், போர் முறை, கொடை, கொடைமடம், சான்றாண்மை போன்ற பல நிலைகளில் வேறுபட்டும், மாறுபட்டும் படைப்பாளர்களால் தமிழ் இலக்கியங்களில் கையாளப் பெற்று வந்திருப்பதை தமிழிலக்கியத் தொடர் வாசிப்பின் மூலம அறிய இயலும்.

இவ்வடிப்படையில் கம்பராமாயணத்தில் அமைந்துள்ள புறத்திணைக் கூறுகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. புறத்திணைக் கூறுகள் என்பது இக்கட்டுரையைப் பொறுத்த அளவில் போர்நெறிகள் என்பதாக மட்டும் கொள்ளப் பெறுகின்றது. இக்கட்டுரைக்காக கம்பராமாயணம் - யுத்த காண்டம் - முதற்போர் புரி படலம் மட்டும் எல்லையாகக் கொள்ளப்படுகிறது.

கம்பரின் காலம், கம்பர் படைத்த இராமனின் காலம், கம்பனைக் கற்கும் சுவைஞரின் காலம் என்ற மூன்று வேறுபட்ட கால தளத்தில் கம்பர் கையாண்ட புறத்திணைக் கூறுகளை ஆராய வேண்டிய சூழல் இக்கட்டுரைக்கு அமைகின்றது. இராமாயணச் செய்திகளைச் சங்ககாலப் புலவர்கள் அறிந்திருந்தனர் என்பதற்.குப் பல அகச் சான்றுகள் சங்க இலக்கியங்களிலேயே காணப்பெறுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட காலம் கருதிய சிக்கலுக்கு ஓரளவிற்குத் தீர்வு காண இயலும், கம்பர் தன் இராமாயணப் போர்முறையை இராமாயண காலத்துடன் பின் ஒட்டில் ஒட்டுவதான சங்ககால அதாவது தொல்காப்பிய காலப் பின்புலத்தில் அணுகியிருக்க வேண்டும் என்று கருத முடிகின்றது.

கம்பர் தம் போர்ச் செய்திகளைத் தொல்காப்பிய அடிப்படையிலேயே வழங்கியுள்ளார் என்பதற்குச் சிறந்த சான்றாக விளங்குவது கம்பராமாயணத்தில் அமைந்துள்ள முதற்போர் புரி படலம் ஆகும், தொல்காப்பியத்திற்கு அடுத்ததாகத் தோன்றிய பன்னிரு படலம் கம்பரின் காலத்திற்கு முன் தோன்றிய புறப்பொருள் நூல் என்ற போதிலும் அந்நூல் செய்திகளைக் கொண்டு கம்பர் தம் போர்காட்சிகளை வகுத்துக் கொண்டிருக்க இயலாது. அதற்குப் பின்வரும் இரு காரணங்கள் உள்ளன, அவை பின்வருமாறு. பன்னிருபாட்டியல் நூல் முழுவதும் கிடைக்கப்பெறாத சூழல் நிலவுவதாலும், காப்பியரின் புறத்திணை மரபு தொன்மை மிக்கது என்பதும், பன்னிருபடலம் காட்டும் இலக்கணமரபு பிற்பட்டது என்பதும் தெளுவு  ( சோ, ந, கந்தசாமி, புறத்திணை வாழ்வியல், ப, 8) என்ற கருத்தினாலும் கம்பர் பன்னிருபடலத்தின் அடிப்படையில் கம்பராமாயண புறப்பொருள் செய்திகளை ஆக்கியிருக்க இயலாது என்று முடியலாம். புறப்பொருள் வெண்பாமாலை, வீரசோழியம் ஆகியன கம்பர் காலத்திற்கு ஏறக்குறைய பிந்தையன என்பதையும் இங்கு கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் கம்பர் தொல்காப்பியத்தையே மூலநூலாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது தெளுவாகிறது. கால அடிப்படையில் ஏற்கப் பெறும் இக்கருத்து இலக்கிய அடிப்படையில் முதற்போர்புரி படலத்தினை ஆராய்கையில் இன்னும் வலுப்பெறுகிறது.

கம்பராமாயண யுத்த காண்டத்திற்குள் நுழைகையில் கற்பவர் மனதில் ஓர் அடிப்படை கேள்வி எழும். இராமாயணக் கதைப்படி இராமனின் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து போகிறான். இராவணனிடமிருந்துச் சீதையை மீட்க இராமன் எண்ணுகிறான். ஒரு பெண் குறித்து எழுந்த இந்த முரண்பாடு இராமன் இராவணன் ஆகியோர் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு மட்டுமே. தனிப்பட்ட இரு மனிதர்க்குள் நிகழ்ந்த இம்முரண்பாடு பெரிய போராக்கப்பட்டு ஏன் இரு பகுதி வாழ் மக்களையும் இது பாதிப்படையச் செய்ய வேண்டும் என்பதே யுத்த கா;ண்டத்துள் புகும் கற்பவருக்கு ஏற்படும் அடிப்படைக் கேள்வியாகும். இக்கேள்விக்கு உரிய பதில் வெள்ளிடைமலை என்ற போதிலும் காப்பிய ஆசிரியரான கம்பர் இத்தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய போர்க்குரிய காரணமாகக் காட்ட ஏற்ற சூழலை தன் காப்பியத்துள் அமைத்துக் கொண்டுள்ளார்.

போர்க்கான காரணம்

தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்ந்து தன்கண் ஆவியை விடுக (யுத்த காண்டம்-945) என்று இராவணனிடம் பேசிய அங்கதனின் தூது மொழிகள் முரண்பாடு போராக மாற்றம் பெற்றதற்கான அடையாள மொழிகளாகின்றன. மாறியதற்கான சூழலைத் தருகின்றது, இராவணன் என்ற தனிமனிதன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அரக்கர் குலத்திற்குத் தலைமை வகிப்பவனாகவும், இலங்கை நாட்டின் அரசனாகவும் விளங்குவதன் காரணமாக- இராமன் தனிமனிதனாக மட்டுமில்லாமல் அவன் அறத்தின் நாயகனாகவும், குரங்கு இனத்தின் தலைவனாகவும் இருப்பதன் காரணமாக- இரு தனி மனிதர்களுக்கு இடையேயான முரண்பாடு பெரிய போராக இரு பகுதி மக்களுக்கு இடையே உருவெடுக்கிறது.

இத்தனிமனிதர்கள் அடைய விரும்பும் பொருள் அவ்வவ் நாட்டு மக்களுக்கு ஏற்புடையதோ, இல்லையோ இவ்விருவர் விருப்பத்தினையும் இவ்விரு நாட்டின் மக்களும் ஏற்க வேண்டிய கட்டாய சூழல் உண்டாக்கப்படுகிறது, எனவே தனிமனித முரண்பாடு பெரிய போராக மாற்றம் பெறுகிறது.

எயில்போர்

போர் ஏற்படுத்தப்பட்டுவிட்ட சூழலில் முதன் முதலாக இராமன் அவனது கூட்டத்தினரிடம் எயில் போர் தொடங்கக் கூறுகிறான்.

இடுமின் பல்மரம் எங்கும் இயங்கு அறத்

தடுமின் போர்க்கு வருக எனச் சாற்றுமின்

கடுமின் இப்பொழுதே கதிர் மீன் செலாக்

கொடிமதில் குடுமித்தலைக் கொள்க என்றான் (யுத்த, 960)

கடல்கடந்து வந்த வானரப்படைகளின் எதிரில் இலக்கை நகரின் காப்பு மதில் பெரிதாக நிற்கிறது. இராமன் இம்மதிலையும் அதனைச் சுற்றி உள்ள அகழியையும் அழிக்கத் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். எயில் போர் தொடங்கும் இம்மரபு தொல்காப்பியப் போர் மரபை ஒட்டியதாகும்.எயில் கருதி விளைவிக்கும் போர் உழிஞை என தொல்காப்பியத்தால் அழைக்கப் பெறுகிறது.

உழிஞைதானே மருதத்துப் புறனே

முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனைமரபிற்று ஆகும் என்ப

என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி கோட்டையைக் காத்தலும், கோட்டையை அழித்தலும் உழிஞை எனத் தொல்காப்பியரால் சுட்டப்பெறுள்ளது. தொல்காப்பியத்திற்குப் பின்னால் எழுந்த இலக்கண நூல்களில் அரண் முற்றல், அரண் அழித்தல் ஆகியன நொச்சி உழிஞை ஆகிய இருதிணைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. கம்பர் தொல்காப்பிய அடிப்படையிலே அரண் முற்றல் அழித்தல் இரண்டையும் ஒரே காட்சியில்(படலத்தில்) அமைத்துக் கொண்டுள்ளார். இராமனின் சார்புடைய வானரப்படைகள் அரணை அழிக்க முயல்வதும், இராவணனின் சார்புடைய அசுரப்படைகள் அரணைக் காப்பதும் ஒரே காட்சியாகக் கம்பரால் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் தொல்காப்பியர் காட்டும் உழிஞைத் துறைகள் பல கம்பராமாயணத்துள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு.

கொள்ளார்தேயம் குறித்த கொற்றம்

பூசலே; பிறிது இல்லை  எனப் புறத்து

ஆசை தோறும் முரசம் அறைந்து என

பாசறைப் பறையின் இடம் பற்றிய

வாசல் தோறும் முறையின் வகுத்திரால்  (யுத்த 958)

என்ற இப்பாடல் இராவணனின் நாட்டை வளைக்க இராமன் குறித்த கொற்றமாகும்.

உள்ளியது முடிக்கும் வேந்தனது ஆற்றல்

நினைத்ததை முடிக்கும் வேந்தனது ஆற்றல் குறித்தது இத்துறையாகும்,

மற்றும் நின்ற மலையும் மரங்களும்

பற்றி வீசிப் பரவையின் மும்முறை

கற்ற கைகளினால் கடி மாநகர்

சுற்றி நின்ற அகழியைத் தூர்த்திரால்  (யுத்த 956)

என்ற பாடல் வழி நாட்டைப் பெற மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தூர்க்க வேண்டும் என்று இராமன் தன் படைகளுக்குக் கட்டளையிடுகிறான். இதன் மூலம் அவன் நாட்டைப் பெற வேண்டும் என்ற இராமனின் எண்ணம் வெளிப்படுகிறது,

தொல் எயிற்று இவர்தல்

தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடைச்

சீர்த்த பேர் அணை தன்னையும் சிந்தின;

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு கொண்டு

ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே  (யுத்த 970)

என்ற இப்பாடலில் வானரப்படைகள் அகழியைத் தூர்த்து மதிலில் ஏறியமை சுட்டப்பட்டுள்ளது. தொல் எயிற்று இவர்தல் என்பது மதிலின் மீது பகைப்படைகள் பரந்திருத்தலைத் தெரிவிக்கும் துறையாகும்.

தோலது பெருக்கம்

பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் கல் கொடும் சென்றது அக்கவியின் கடல்  (யுத்த 976) என்ற அடிகள் இராமனின் படைப்பெருக்கம் காட்டும் அடிகள் ஆகும்..

அகத்தோன் செல்வம்

வில் கொடும் நெடு வேல் கொடும் வேறு உள எல் கொடும் படையும் கொண்டது இக்கடல் (யுத்த 976) என்ற பாடலடிகள் அரணின் அகத்து உள்ள இராவணனின் படைச் சிறப்பைக் காட்டும் வரிகளாகும். இதுதவிர குதிரைப்படை (996), யானைப்படை(994), தேர்ப்படை(995), காலாட்படை(997) ஆகியனவும் அரணிலிருந்து வெளிப்பட்ட அழகைக் கம்பர் காட்டுகின்றார். இவை அகத்தோன் செல்வம் என்ற நிலையில் இராவணனின் படைப்பெருக்கத்தைக் காட்டும் பகுதிகளாகும்.

புறத்தோன் அணங்கிய பக்கம்

சாய்ந்த தானைத் தளர்வும் சலத்து எதிர்

பாய்ந்த தானைப் பெருமையும் பார்த்து உறக்

காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்

ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் (யுத்த 1000)

என்ற பாடலின்வழி புறத்தோர் ஆகிய இராமனின் படைகள் அயர்வுற்றமை காட்டப்பெறுகிறது. இதனைத் தடுக்க சுக்கிரீவன் முனைகின்றான். அவன் ஒரு மராமரத்தை ஏந்தி சேரர்வுற்ற வானரப்படைகளுக்குத் துணையாகப் போர்புரியக் களமிறங்குகிறான்.

திறல்பட ஒருதான் மண்டிய குறுமை

வாரணத்து எதிர் வாசியின் நேர் வயத்

தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து

ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்

தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். (யுத்த 1001)

என்ற இப்பாடலில் அழிந்து பட்டு நிற்கும் வானரப்படையைச் சுக்கிரீவன் ஒரு தானாக நின்றமை காட்டப் பெறுகிறது. சுக்கிரீவன் ஒருவன் தானாகக் களமிறங்கிய போதும் அவன் பல பிரதிகளாக அரக்கர் படைஞர் ஒவ்வொருவர் முன்பும் எதிர்த்து ஒவ்வொருவனாக நின்றான் என இத்துறைக்கு சிறப்பு தந்து கம்பர் பாடல் புனைந்துள்ளார்.

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சி

இராமனின் படைகள் இராவணனது அரணை அழித்து அக்காவலில் ஈடுபட்டிருந்த படைத்தலைவர்களை அழித்து வெற்றி கண்டது. அப்பகுதி பின்வருமாறு.

வடக்கு வாயிலில் வச்சிர முட்டியும

குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும்

அடக்கரும் வலத்து ஐம்பது வெள்ளமும்

படச் சிதைந்தது நம்படை என்றனர்.

வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ

தென்திசைப் பெரும் வாயிலில் சேர்ந்துழி

பொன்றினான் அச் சுபாரிசன்; போயினார்

இன்று போன இடம் அறியோம் என்றார்.

கீழை வாயில் கிளர் நிருதர் படை

ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின

ஆழி அன்ன அனீகத் தலைமகன்

பூழியான்; உயிர் புக்கது விண் என்றார். (யுத்த 1040-42)

இலங்கையின் அரண் அழிந்தது. இராவணனின் வலிமைக்கு அரணாக இருந்த வாயில் காப்பாளர்கள் அனைவரும் இறந்து பட்டனர். இதன்மூலம் இராமன் முதல் வெற்றியைப் பெறுகிறான்,

கம்பர் தமிழ்ப் புறப்பொருள் மரபில் சிறிதும் மாறுபடாமல் இவ்வெயில் போரை தன் இராமணயத்துள் நடத்தியுள்ளார். உழிஞைத் திணையும் அதன் துறைகளும் கம்பரின் காப்பிய வளர்ச்சிக்கு உதவியுள்ளன. இதனைக் கற்கும் சுவைஞர்கள் கம்ப ராமாயணத்தை தமிழ் மரபுக் காப்பியமாகவே அனுபவிக்க இப்புறப்பொருள் செய்திகள் துணைபுரிகின்றன,

தும்பைத்திணை

இராமனால் இராவணனுக்கு எதிராக எயில் போர் தொடங்கப் பெற்று அதில் அவன் முழு வெற்றியும் பெற்றுவிடுகிறான். இச்சூழலில் இராவணன் தன் அரண் பகைவரால் அழிக்கப் பெற்றது அறிந்து துன்பமுற்று, பகைவரின் ஊடுறுவலைத் தடுக்க படையுன் வருகிறான். அவன் தும்பைப் போரைத் துவக்க ஆயத்தமாகின்றான்.

தும்பைப் போர் என்பது மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்று தலைஅழிக்கும் சிறப்பிற்று  என்ற இலக்கணமுடையதாகும். இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார்.

மற்றும் வான்படை வானவர் மார்பிடை

இற்று இலாதன எண்ணும் இலாதன

பற்றினான்; கவசம் படர் மார்பிடைச

சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)

இராவணன் போருக்கு தயாராகையில் பலவித அணிகலன்களையும் போர்க்கருவிகளையும் அணிந்து கொள்கிறான். வாள்படை, வானவரிடத்தும் இல்லாத படைகள், கவசம் ஆகியனவற்றை அணிந்த அவன் தும்பை மாலையையும் சூடுகிறான். இதன்மூலம் இராவணன் தும்பைப் போரை தன் பக்கமிருந்து முதன்முதலாகத் தொடங்குகிறான். இப்போருக்குப் பதில் தருபவனாகவே இராமன் இனி செயல்பட வேண்டும்.

இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூடுகிறான், இப்பகுதி வாயிலாக வட நாட்டுச் சார்புடை இராமகாதை தென்நாட்டின் புறப் பொருள் கொள்கைகளை ஏற்பதாகக் கம்பரால் காட்டப்பெற்றுள்ளது. இராமன் தும்பைப்பூ சூடிய பாடல் பின்வருமாறு.

கிளர் மழைக் குழுவிடைக் கிளர்ந்த மின் என

அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;

இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்

துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)

இராமாயணத்தைப் பொறுத்த வரையில் தும்பைப்போர் தொடங்கப்பட்டுவிட்டது என்றாலும் அப்போரின் வெற்றி தோல்வி உடன் நிகழ்ந்து விடவில்லை, முதற் போரில் தோற்ற இராவணனன் பின்பு தன் மகன், தம்பி ஆகியோரை போர்க்களத்திற்கு அனுப்புகிறான், இதன் காரணமாக போர் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக விளங்குகிறது, இதனால் தும்பைப்போரின் முழுத் துறைகளுக்கான பாடல்களை முதற்போர்புரி படலத்தில் காணமுடியவில்லை. சில துறைகள் மட்டும் கம்பரால் இப்படலத்துள் காட்டப்பெறுகின்றன. இவை பின்வருமாறு.

தானைநிலை, குதிரைநிலை

இராவணன் தும்பைப்போரைத் துவக்கியதும் அவனது தானை, குதிரை ஆகியன போர்க்குத் தயாராகின, அவற்றை உணர்த்தும் துறைகள் தானைநிலை, குதிரைநிலை ஆகியனவாகும், இவற்றுக்கு ஏற்ப கம்பர் பாடல்களைப் படைத்துள்ளார்.

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட

மூரி வல் நெடுந் தானையின் முற்றினான்;

நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்.

மேரு மால்வரை என்ன விளங்கினான். (யுத்த 1057)

என்பது தானை நிலைத் துறைக்குரிய பாடலாகும்,

ஆயிரம் பரிபூண்டது; அதிர் குரல்

மா இரும் கடல் போன்றது; வானவர்

தேயம் எங்கும் திரிந்தது; திண்திறல்

சாய இந்திரனே பண்டு தந்தது. (யுத்த 1052)

என்பது இராவணன் ஏறிய தேரில் கட்டப்பெற்றிருந்த குதிரை நிலை உரைக்கும் பாடற்பகுதியாகும்,

இராமனும் போர்க்குத் தயாராகித் தன் பக்கத்து வீரர்களுடன் சென்று இணைகின்றான். அப்பாடல் பின்வருமாறு.

ஊழியின் உருத்திரன் உருவு கொண்டு தான்

ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என

வாழிய வரிசிலைத் தம்பி மாப் படைக்

கூழையின் நெற்றி நின்றானை கூடினான். (யுத்த 1075)

இப்பாடல் வழியாக இராமன் பக்கத்துத் தானை நிலை உணரப்பெறுகிறது.

தான் மீண்டு எறிந்த தார்நிலை

தன் தலைவனைப் பகைவர் சூழக் கண்ட படைத்தலைவன் ஒருவன் அரசனைக் காக்கும் பொருட்டு, தன் போர்த்தொழில் விட்டு வந்து அரசனைக் காத்தல் என்பது இத்துறையாகும்.

சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம்

குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை

உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர்,

வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான். (யுத்த 1089)

இப்பாடலில் சுக்கிரீவன் இராவணனுடன் போர் செய்து தளர்வடைய, அத்தளர்வில் இருந்து அவனைக் காக்க அனுமன் வருவதாகக் காட்டப் பெறுகிறது.

இருவர் தலைவர் தபுதிப் பக்கம்

இரு பக்கத்துப் படைத்தலைவர்களும் மோதிக்கொள்வது இத்துறையாகும்.

சாய்ந்தது நிருதர் தானை தமர்தலை இடறித் தள்ளுற்று

ஓய்ந்ததும் ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக; அன்றே

வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரிவில்; வெம்பிக்

காய்ந்தது அவ் இலங்கை வேந்தன் மனம் எனும் காலச் செந்தீ. (யுத்த1112)

இலக்குவனும் இராவணனும் தம்முள் மோதிக் கொண்ட போர்த்தன்மையை இப்பாடல் சுட்டுகிறது.

ஒருவன் ஒருவனை உடைபுடை புக்கு கூழை தாங்கிய பெருமை

நீலன் அம்பொடு சென்றிலன்; நின்றிலன் அனிலன்;

காலனார் வயத்து அடைந்திலன், ஏவுண்ட கவயன்;

ஆலம் அன்னது ஓர் சரத்தொடும் அங்கதன் அயர்ந்தான்;

சூலம் அன்னது ஓர்வாளியால் சோம்பினன், சாம்பன்.(யுத்த1156)

மற்றும் வீரர்தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப,

கொற்ற வீரமும் ஆண்தொழில் செய்கையும் குறைந்தார்;

சுற்றும் வானரப் பெருங்கடல் தொலைந்தது; தொலையாது

உற்று நின்றவர் ஓடினர்; இலக்குவன் உருத்தான் (யுத்த1156)

இவ்விரு பாடல்களும் வானரப்படைத் தலைவர்கள் கையற்றுப்போன சூழலில் இலக்குவன் போர்களத்திற்குள் இரங்கி வானரப்படையைக் காத்த நிலையை உரைக்கின்றன. இத்துறைக்கு இவ்விருபாடல்களும் உரியனவாகின்றன.

படையறுத்து பாழி கொள்ளும் ஏமம்

படைக் கருவிகளை அழித்து எதிர்பக்கத்துத் தலைவனை வெற்றி கொள்ளுதல் இத்துறையாகும். இராமாயணத்தின் மிகு உயர் பகுதியாகக் கருதப்படும் இன்று போய்ப் போர்க்கு நாளை வா  என்ற தொடர் இத்துறைக்கு உரியதாகும். இராமன் இராவணனோடு போர் செய்து இராவணனது படைக்கலன்கள் ஒவ்வொன்றாக அறுத்தான். அவனது மணிமுடி தேர் முதலியனவற்றையும் இராமன் அழித்தான்.

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக்

கொன்றல் என்  தனி வெறும் கை நின்றான் எனக் கொள்ளா,

இன்று அவிந்தது போலும், உன் தீமை என்று இசையோடு

ஒன்ற வந்தன வாசகம், இனையன உரைத்தான்; (யுத்த 1207)

என தன் பெருமிதத்தை இராவணனுக்கு இராமன் இப்பாடல் வழி உணர்த்துகிறான். தும்பைத்திணையும் அதற்குரிய துறைகளும் இவ்வளவில் முதற்போர்புரிப்படலத்தில் கம்பரால் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

இன்னும் இராமாயணப் போர் தொடர்ந்து செல்லும் காப்பியப்போக்கில் கம்பரால் பல இடங்களில் புறத்திணை மரபுகள் பின்பற்றப் பெறுகின்றன. அவை விரிந்த அளவில் ஆராயத் தக்கனவாகும்,

முடிவுகள்

கம்பர் தன் இராமயணத்தில் தொல்காப்பிய புறத்திணை மரபுகளைப் பின்பற்றியுள்ளார்.

முதற்போர் புரிப்படலம் கம்பரின் புறத்திணை மரபுகளைப் பின்பற்றியமைக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது,

இப்படலத்தில் தொல்காப்பியம் காட்டும் இலக்கண வரையறைப்படி உழிஞை மற்றும் தும்பைத் திணைகள் எடுத்தாளப்பெற்றுள்ளன. அவற்றின் துறைகளும் பயின்று வருமாறு பாடல்கள் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளன.

இவற்றின் வாயிலாகக் கம்பராமாயணம் தமிழ்மரபு சார் காப்பியமாக விளங்குகின்றது.

____

உதவிய நூல்கள்

கந்தசாமி,சோ.ந..,புறத்திணை வாழ்வியல்,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,1994

கோவிந்தன்,கா,., பண்டைத் தமிழர் போர்நெறி, வள்ளுவர் பண்ணை,சென்னை, இரண்டாம் பதிப்பு 1984.

பூவண்ணன், மாணிக்கம்.அ, கம்பராமாயணம், யுத்த காண்டம், முதல்தொகுதி, வர்த்தமாணன் பதிப்பகம், சென்னை, 2004

தமிழ்இணையப்பல்கலைக்கழக இணையதளநூலகம்

கம்பராமாயணத்தில் இயற்கை இகந்த (மீவியற்கை) நிகழ்ச்சிகள் - கோ. செகநாதன்

கம்பராமாயணக் காப்பியக் கதை சமயத்தையும் இறைவனையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருப்பதால் அதன் ஒவ்வொரு அணுவிலும் மீவியற்கைக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன. வான்மீகியின் மூல அடிப்படைக் கதையை மாற்றாமல் கம்பன் இராமனையும் சீதையையும் திருமாலாகவும் திருமகளாகவும் மீட்டுருவாக்கம் செய்து காட்டியிருப்பதால் அந்நிலையிலும் மீவியல்பு பண்புகள் உள்ளன. பெரும்பாலும் உலகப் பழங்காப்பியங்கள் அனைத்திலும் இத்தகைய மீவியற்கைக் கூறுகளைக் காணுகின்றோம்.

கம்பராமாயணத்தில் மீவியற்கை:-

மீவியல்பு கூறுகள் பாத்திரப் படைப்பு, பாத்திரப் பண்புகள், செயல்கள், கதை நிகழ்வுகள், கதைச் சூழல், கவிதைப் பொருள், சொல்லாட்சி ஆகியனவற்றில் எல்லாம் இடம்பெறலாம் என்பதைக் கம்பராமாயணம் சுட்டுகின்றது. ''மீவியல்பு இன்றேல் கதையுமில்லை; காப்பியமும் இல்லை'' இருப்பினும் கம்பன் மீவியல்பு பண்புகளை உலகியலோடு இணைத்துக் காட்டியிருக்கும் பாங்கு எண்ணத்தக்கதாகும்.

காப்பியக் கதையின் நிகழ்வுகளில் மீவியற்கை:-

காப்பியக் கதையின் முதல் நிகழ்ச்சியிலேயே மீவியற்கைப் பண்பு உள்ளது. மகவருள் ஆகுதியும், பூதம் எழுதலும், பிண்டம் அளித்தலும், இராமன் பிறப்பும் என இது தொடர்கின்றது. இவ்வாறு முதன்மைக் கதையில் அமைந்த மீவியற்கைக் கூறுகள், கவிஞனின் கற்பனை வளத்தினால் கிளைக்கதைகளிலும் இடம்பெறுகின்றன. மகவருள் ஆகுதி வழங்கிய கலைக்கோட்டுமுனி, உரோமபதன் நாட்டில் மழை பெய்யச் செய்த முன்வரலாறு இங்குச் சுட்டத்தக்கது. கம்பனின் இராமாயணத்தில் அரக்கர், குரங்கினம், தேவர் ஆகியோர் கதை மாந்தர்களாக இடம்பெறுவதால் மீவியல்பு பண்பு தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகின்றது.

பாத்திரப் படைப்புகளில் மீவியற்கை:-

கம்பராமாயணத்தில் அரக்கரின் உருவமும், செயலும், ஆற்றலும், பண்பும், பிறவும் மீவியற்கையாக அமைகின்றன. இரணியனின் அபூத உருவமும், இராவணனின் பத்துத் தலையும் இருபது கரமும், கும்பகருணனின் விண்முட்டும் மேனியும், தலையற்ற கவந்தவடிவமும், சீதைக்குக் காவலர்களாக அமைந்த அரக்கியர்களின் உடல் தோற்றங்களும் எனப் பல முதன்மை, துணைமை, சிறுபாத்திரங்களும் மீவுருவம் கொள்ளுகின்றனர். அரக்கர்கள் இன்றிக் காப்பியத்தை அமைய முடியாது என்று சொல்லும் அளவிற்குக் காப்பியத்தின் பிற்பகுதி அரக்கர்களின் பங்கேற்பால் நிறைந்திருக்கின்றன. தாடகை வதமும், முனிவர் வேள்விக் காக்க அசுரரை அழித்தலும் காப்பியத்தின் முன்பகுதியில் இடம்பெறினும், சூர்ப்பணகை என்னும் அரக்கி காப்பியக்களனில் பாத்திரமாக இடம் பெற்றபின்பு அவள் தொடர்பான மீவியல்பு பண்பு கூறுகள் மிகுதியாக இடம்பெறுகின்றன.

குரங்கினத்தை மனிதப் பண்புகளுடனும் அதீத ஆற்றல்களுடனும் படைத்துக் கதைமாந்தர் ஆக்குதல், மீவியல்பு பண்புநிலையில் சீதையை மீட்டல், இராவணனை அழித்தல் ஆகிய காப்பியக் கதையின் முடிவுகளுக்கு மிகவும் தேவையானதாக்கி அமைத்தலும் - அவ்விழையில் மீவியல்பு பண்புகளைப் படைத்துக் காட்டியிருப்பதும் கம்பனின் கவித்திறனைக் காட்டும் சான்றுகளாகும். தேவர்களும் காப்பியப் போக்குகளும் கதையோட்டத்திற்கும் இன்றியமையாதவர்களாகின்றனர். சில சூழல்களில் காப்பியச் சிக்கல்களை அவிழ்க்கவும், தீர்வு காணவும் முடிவுகூறவும் தெளிவுறுத்தவும் வழிகாட்டவும் தேவர்களின் பாத்திரப் படைப்புத் துணைபுரிவதைக் காணுகின்றோம்.

''திருவடி சூட்டுபடலத்தில்'' பரதன் இராமனை ஆளும்படி கூறுகின்றான். இராமன் பரதனை ஆளும்படி வேண்டுகின்றான். பரதன் தானும் துறவு பூண்டு காடுறைவேன் என்கின்றான். இவ்வாறு அரசாட்சி நட்டாற்றில் விடப்படுவதைத் தவிர்க்கத் தேவர் இடையில் வருகின்றனர். இமையவர் பரதன் நாடாள வேண்டும் என்ற முடிவைக் கூறிப் பிரச்சனைக்குத் தீர்வு காணுகின்றனர். இதனை மீவியல்பு உத்தி எனக் கொள்ளலாம்.

''அவ்வழி இமையவர் அறிந்து கூடினார்

இவ்வழி இராமனை இவன் கொண்டுஏகுமேல்

செவ்வழித்து அன்றுநம் செயல்என்று எண்ணினார்

கவ்வையர் விசும்பிடைக் கழறல் மேயினார்''

''ஏத்த அரும் பெருங்குணத்து இராமன் இவ்வழி

போத்து அரும் தாதைசொல் புரக்கும் பூட்சியான்

ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந்நிலம்

காத்தல் உன்கடன்இவை கடமை என்றனர்''

அனுமன் வாலைச் சுடாதபோதும், சீதை தீயில் புகும்போதும் அவியும் போதும் நெருப்புக் கடவுள் இன்றியமையாத செயற்மிகு பாத்திரமாக அமைவதைக் காணலாம்.

அவ்வாறே தேவர் இடையில் புகுந்து இராமனின் ஐயத்தை நீக்கும் செயலையும் குறிப்பிடலாம். இறந்த தசரதன் வானுலக்த்திலிருந்து வரும் அளவிற்கு மீவியல்பு கூறுகள் மரணத்தையும் கடந்து செல்லுவதைக் காணலாம். மறுமையின் நித்திய வாழ்வைக் காட்டும் நோக்கமும் இம்மீவியல்பில் அமைகின்றது.

மானிடக் கதைமாந்தரில் மீவியல்பு பண்புகள்:-

கம்பனால் மானிடராகப் படைக்கப்பட்ட இராமன், சீதை பாத்திரப் படைப்பிலும் மீவியல்பு பண்புக்கூறுகள் மிகுதி. இறையவதாரத் தொடர்பு பற்றி இதனுள் அமைதி காணலாம். சீதை தீயைச் சுடாதே எனல், தீக்கடவுளிடம் தன் கற்பை நிலைநாட்டக் கூறுதல் என்பனவும் சுட்டலாம். முனிவர்கள் மீவாற்றல் பண்பினராகப் படைக்கப்படுதல். அவர்கள்தம் சாப ஆற்றலால் வரமளித்தல் போன்றவற்றால் இதனை அறியலாம். தசரதன் முனிகுமரனை அறியாது கொன்று சாபமடைதல், அகலிகை சாபம், வாலி, இராவணன் போன்றோர் வாழ்வின் சாபங்கள் என இது விரிந்து காப்பியக் கதைப்போக்கிற்கும் கட்டமைப்பிற்கும் உதவுவதைக் காணலாம்.

இதனைத் தவிர தேவர் ''மலர்மாரி பொழிதல்'' என்னும் செயல் கம்பன் காப்பியத்தில் பன்முறை உத்தியாக வருகின்றது. தேவர்களது துன்பத்தை நீக்குதல் இராமன் பிறப்பின் நோக்கம் என்பதால் ஒவ்வொரு படிநிலையிலும் இராமன் பெறும் வெற்றி, தேவர் வாழ்வுக்கு உய்வு என்பதால் அவர் மகிழ்ந்து பூமழை பொழிவதாகக் காட்டியிருக்கும் கம்பனின் உத்திநயம் போற்றத்தக்கதாகும்.

''இத்திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும்

முத்திறத்து உலகத்தாகும் முறைமுறை விரைவில் மொய்த்தன்

தொத்த உறுமலரும் சாந்தும் சுண்ணமும் இணையர் தூவிட

வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனார்''

எனத் தேவர்கள் கடல் கடக்க நின்ற அனுமனை வாழ்த்துவது இதற்குச் சான்றாகும். காப்பிய நிகழ்வுகளில் வருணனிடம் வழிகேட்டல், சேது உருவாகுதல், மாயாசீதை, மாயாசனகன் உருவாதல் ஆகியனவும் மீவியல்பு பண்பு கூறுகளே ஆகும்.

கம்பன் மூலநூலாசிரியனாகிய வான்மீகியைப் பின்பற்றி மூலக்கதைக்கு ஏற்றவாறே மீவியல்பு பண்புகளைப் படைத்துக் காட்டியிருக்கின்றான். எனினும் இரணியன், மாயாசீதை போன்ற நிகழ்ச்சிப் பகுதிகள் கம்பனால் புதியனவாகப் படைக்கப்பட்டனவாகும். கம்பராமாயணக் கதையின் செயலுக்கும் திருப்பத்திற்கும் தேவரும் அரக்கரும் காரணமாகக் காட்ட பெறுவதால் தோற்றமும் திருப்பமும் முடிவும் எல்லாம் மீவியல்பு பண்புகளைக் கம்பன் படைத்துக் காட்டியுள்ளான்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கம்பராமாயணத்தில் பறவைகள் - க. செல்வராசு

இலக்கியம் காலக்கண்ணாடி என்பது மட்டுமல்லாமல், அது உளநூல் அறிவை விளக்கும் பெட்டகம் என்றும் சொல்லலாம். கம்பர் காட்டும் உவமைகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன. அனுமனைக் கண்ணுற்ற வானரங்களின் மகிழ்ச்சி தாய்ப்பறவையைக் கண்ட குரங்குகள் போல விளங்கியது. இதனை,

''பறவை பார்ப்புத் தாய்வரக் கண்டதன்ன உவகையின் தளிர்த்தார்''

என்ற கம்பராமாயணத் தொடரால் அறியலாம். மற்றொரு நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கது. இராவணனின் கொடுஞ்சொல் கேட்ட சீதை மிக்க துயருருகிறார். இத்துயர் நிகழ்ச்சி, தாய்பறவை நெருப்பில் வீழ்வதைக் கண்ணுற்ற குஞ்சு அடைந்த துன்ப நிலைக்கு ஒப்பாகக் காட்டுகின்றார் கம்பர். இவ்வாறு உளவியல் நிலையை விளக்குவதற்குப் பறவைகளின் பண்புகள் உதவுவதைக் காணலாம்.

அன்னம்:-

மாதர்களின் மென்னடைக்குக் கவிஞர்களால் அன்னம் உவமையாக உவமிக்கப்படும் சிறப்பு வாய்ந்தது. பாலில் நீர் கலந்திருப்பதால் அதைப் பிரித்துப் பாலைமட்டும் தனியாக உண்ணும் இயல்பினது அன்னம் என்று கம்பரும் மற்ற கவிஞர்களும் உரைத்துள்ளார்கள். இத்தன்மையைக் கம்பர் விபீடணன் மூலம் நன்கு விளக்குகிறார். குரங்குப்படையின் ஊடே சில அரக்கர்படையினைச் சேர்ந்த ஒற்றர்கள் புகுந்துள்ளனர். இதனை விபீடணன் நீரைப் பிரித்துப் பாலை உண்ணும் அன்னம்போல் ஒற்றர்களைப் பிரித்துணர்ந்தான் என்று கம்பர் சுட்டுகின்றார். இதனை,

''சோர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தெளித்த வேனும்

நீரினை வேறு செய்யு மன்னத்தின் நீர் னானான்'' (கம்ப-யுத்-709)

எனும் கம்பராமாயணத் தொடரால் அறியலாம்.

கம்பர் சீதையின் மென்னடைக்கு, அன்னத்தின் நடையை உவமையாக்குகிறார். இதனை அழகாக,

''ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையளாகும்

சீதைதன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்'' எனக் கம்பர் கூறியுள்ளார்.

சிரல்:-

இலக்கியங்களில் சிரல் என வழங்கப்படும் இப்பறவை€யே மீன் கொத்தியாகும். இது வெகு விரைவில் அம்புபோல் பாய்ந்து மீனைக் கொத்தி எடுத்து வந்து உண்ணும் தன்மையாதலால் இதற்கு அப்பெயர் அமைந்துள்ளது. கம்பர் இச்சிரல் பறவையின் பாயும் வேகத்தை ஓரிடத்தில் உவமையாகக் கையாண்டுள்ளார் சீதையைக் கவர்ந்து செல்கிறான் இராவணன். வழியில் எதிர்ப்பட்ட சடாயு எனும் கழுகின் வேந்தன் இராவணனின் தோளின் மேலும், மார்பு மேலும் சிரல் பறவைபோல் பாய்ந்தான் எனக் கம்பர் அப்பறவையின் வேகத்தை உவமைப்படுத்தியுள்ளார்.

மயில்:-

அழகுமிக்க பறவை மயில் தோகை விரித்தாடும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆண்மயிலே தோகை விரித்தாடும் இயல்புடையது. மயிற்பீலி மென்மையானதும் பாரம் மிகக் குறைவானதுமாகும்.

''பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்''

என வள்ளுவர் இதன் தன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.

முனிவர்கள் குண்டலம் வளர்த்து வேள்வி செய்வது அவர்களுடைய முக்கிய செயல்களில் ஒன்றாகும். அவ்வாறு அவர்கள் வளர்த்த குண்டலங்களிலுள்ள நெருப்புகள் புகைந்து அணையத் தொடங்கும். நெருப்பு அணைந்திடாமல் இருக்கும் பொருட்டு, காற்றுவீசி நெருப்பைக் கொழுந்து விட்டு எரியச் செய்வது முனிவர்களின் செயலாகும். இதைக்கண்ணுற்ற மயிலொன்று, அணையும் நேரத்தில் குண்டலத்தின் அருகே சென்று, தன் கூந்தல் போன்ற மெல்லிய தோகையை விரித்து விசிறி காற்றினைச் செலுத்தி நெருப்பினை எரியச் செய்கின்றது இதனை,

''ஏந்து நான்மணி மார்பின் ராகுதிக் கியையக்

கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலிக்

காந்து குண்டலத்தி லடங்கெரி யெழுப்புவ காணாய்'' எனும் பாடலால் அறியலாம்.

கிளி:-

மனைக்கு அரசியாக விளங்கும் மங்கையர்களின் இனிமைக்கு இலக்காகத் திகழ்வது கிளி. கிளி மக்களோடு பழகிப் பேசும் ஆற்றலுடையது. இதனை ''சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை'' என்ற சொற்றொடரிலிந்து உணர்ந்து கொள்ளலாம். பறவையை வைத்து, சிறந்ததொரு உலகியல் பண்பைக் கம்பர் உணர்த்தியுள்ளார். பழுத்த மரத்தை நாடிச் செல்லும் இயல்பு பறவைகளுக்குண்டு, பழங்கள் அற்றபின் மரத்தைவிட்டுப் பிரிந்து செல்லும் இயல்புடையன. இப்பண்பை வைத்து உலகியல் நிலையை உணரலாம். செல்வம் உளள ஒருவரைப் பலர் சூழ்ந்து கொண்டு அன்பராய் இருத்தலும், செல்வம் நீங்கியவழி அன்பின்றி, நன்றியுமில்லாமல் அவரைக் கைவிட்டுச் செல்லும் நிலையையும் காணலாம்.

இவ்வுலகியல் நிகழ்ச்சியைக் கம்பர் பறவைகளின் பண்பை வைத்து மறைவாக உணர்த்திவிடுகிறார். இதனை,

''திணிநெடு மரமென் றாழி வாண்மழுத் தாக்கச் சிந்திப்

பனை நெடு முதலு நீங்கப் பாங்குறும் பறவை போல''

எனும் பாடலால் அறியலாம்.

நீண்ட வலிய ஒரு மரத்தைக் கோடாரி கொண்டு தாக்க, அதன் கிளைகளும், அடிமரமும் உட்பட பறவைகளும் சாய்ந்துவிடுகின்றன. அவ்வாறு மரம் சாய்ந்துவிட அங்கு வாழ்ந்த பறவைகளும் அம்மரத்தை விட்டு நீங்கிவிடுகின்றன. இது போல்தான் உலகியலும் என்பதைக் கம்பர் மறைமுகமாக விளக்கிவிடுகிறார். இல்லத்தலைவியாக விளங்கும் சில மாதர்கள், தங்களின் கணவன் பெயரைக் கிளிக்குக் கற்றுக்கொடுத்து, அதனை அக்கிளிகள் திருப்பிச் சொல்லுமாறு செய்தல் உண்டு. இதனை,

''விரைசெய்பூஞ் சேக்கையாந் தெப்ப மீமிசைக்

கரை செயா வாசையங் கடலு ளாளொரு

பிலைசமென் குதலையாள் கொழுநன் பேரெலாம்

உரை செயுங் கிள்ளையை யுவந்து புல்லினாள்'' (கம்ப-பால-1066)

எனும் பாடலால் அறியலாம்.

பூமெத்தைப் படுக்கையின்மேல் படுத்துள்ளாள் ஒரு மங்கை நல்லாள். தேன்போன்ற இனிமையான மொழியுடையாள். அவள் ஆசைக்கடலுள் ஆழ்ந்துள்ள நேரம், அந்நேரம் பார்த்தறிந்த கிளி, அவளுடைய கணவனின் பேரைச் சொல்கின்றது. அவ்வாறு தன் கணவனின் பேரைச் சொல்லும் கிளியை அவள் தழுவி சுகம் மகிழ்கின்றாள். இவ்வாறு பறவைகளின் செயல்களை விளக்கிக்காட்டி அவற்றின்மூலம் உலகியல்புகளைக் கம்பர் தெற்றென விளக்கியுள்ள திறம் வியந்து போற்றுதற்குரியதாகும்.

அன்றில்:-

பனைமரத்தில் கூடுகட்டி என்றும் இணைபிரியாது வாழும் தன்மையுடையது அன்றில் பறவை. இதில் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால்கூட உயிர்வாழாது இறந்துபடும் என்று கூறுவர். தலைவனைப் பிரிந்து தலைவி வருந்தும் நிலைக்கு அன்றில் பறவையின் பிரிவுத் துன்பத்தை உவமை கூறுவது தமிழிலக்கியங்களில் பெருவழக்காகும். இதன் தலையில் சிவந்த கொண்டை ஒன்று இருப்பதைச் ''செந்தலை அன்றில்'' எனச் சிறப்பிக்கப்படுவதால் அறியலாம். இந்திரசித்தி படையைப் பிளவுபட்ட வாயினை உடைய அனறில் வடிவம் போல் அணிவகுத்து நிறுத்தினான் என்று கம்பர் குறிப்பிட்டுள்ளதால், அதன் அலகின் வடிவு பற்றி நாம் உய்த்துணர முடிகின்றது.

நீர்காகம்:-

நீர்காகத்தின் முக்கிய உணவு மீனாகும். சிறுகுட்டைகளில் மூழ்கி அங்குள்ள மீன்களைப் பிடித்து உண்ணும் இயல்பினது, இதனை,

''குழுவு மீன்வளர் குட்டமெனக் கொளா

எழுவு பாட விமிழ் கருப் பேற்றி திரத்

தொழுகு காற்றகன் கூனையி னூழ்முறை

முழகி நீர்க்கருங் காக்கை முளைக்குமே'' (கம்ப-கிட்கிந்தா-914)

என்கின்றார் கம்பர்.

கரும்பாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் ஒலி இனிய பாடல் போன்று ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கருப்பஞ்சாறு, ''மிடா'' எனும் வாயகன்ற கலத்தில் நிரம்பிக் கொண்டிருக்கின்றது. கருப்பஞ்சாறு, ''மிடா'' எனும் பாத்திரத்தைச் சிறுகுட்டை என நினைத்து அதில் மூழ்கி எழுகின்றது நீர்காக்கை. இதிலிருந்து அக்கால உழவர்கள் எவ்வளவு வளத்தோடு வாழ்ந்தார்கள் என்பதை நாம் கம்பரின் கூற்றின் மூலம் உணர்கிறோம்.

நன்றி: ஆய்வுக்கோவை

 

கம்பன் உணர்த்திய அறம் - வே. சீதாலட்சுமி பாஞ்சாலன்

கம்பன் காப்பியத்தில் பலவகை அறங்கள் பேசப்படுகின்றன. தனிமனித அறம், சமுதாய அறம், போர் அறம், ஆட்சி அறம் என அறம் பலவகைப்படும். அறங்கள் எக்காலத்துக்கும் யாவர்க்கும் பொதுவானவை. பெருங்காப்பியம் படைக்கும் கவிஞன் அறத்தை உணர்த்துகிறான். கம்பன் காப்பியத்துள் மனிதன் மேற்கொள்ள வேண்டிய அறம் பற்றி ஆராய்வது கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

தனிமனித அறம்:-

இராமன் வாழ்வில் மேற்கொண்ட அறம் பற்றிக் கம்பன் பல இடங்களில் உணர்த்துகிறான். எடுத்துக்காட்டாக,

இந்த இப்பிறவிக்கு

இருமாந்தரைச் சிந்தையாலும் தொடேன்

எனக் கூறுகிறான். இராமன் வாழ்ந்து காட்டிய அறவழி தனிமனித அறவழி என்பதைக் கம்பன் காப்பியத்துள் காணமுடிகிறது.

இராமன் தந்தை சொல் தட்டாத தனயனாக வாழ்ந்து காட்டுகிறான். இராமன், சகர புத்திரர்கள் கதையைக் கேட்ட நான் தந்தை சொல் எவ்வாறு தட்ட முடியும் எனக் கேட்கிறான். தந்தை சொல் மீறாத அறவழியில் இராமன் வாழ்ந்தான் என்பதைக் கம்பன் பாடல்களில் காணலாம்.

தாடகை என்ற அரக்கியை இராமன் கொல்லும்போது தயங்குகிறான். இராமன் தயக்கத்திற்குக் காரணம் தாடகை ''பெண்'' என்பதே. தனக்குத் தீங்கு செய்தவர்களையோ அல்லது தீமை விளைவிப்பவர்கைளையோ கொல்வது தவறாகாகது என்பதை விசுவாமித்திரர் இராமனுக்கு உணர்த்துகிறார். அதன் பின்பே இராமன் தாடகையைக் கொல்கிறான்.

வாலி இராமனுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. சுக்கிரீவனுக்காக வாலியை இராமன் கொன்றான். வாலி கொல்லப்படுவதற்கு உரியவன் என்பதை வள்ளுவர் அறத்தை கொண்டு கம்பன் உறுதிபடுத்துகிறான். வாலியின் குற்றம் இராமன் கூற்றால் உணரப்படுகிறது. பாடல் வருமாறு,

ஈரம் ஆவதும், இற்பிறப்பாவதும்

வீரமாவதும், கல்வியின் மெய்ந்நெறி

வாரமாவதும், மற்றொருவன் புணர்

தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ? (கிட்கிந்த. வாலிவதை. 99)

இரக்கம் என்று சொல்வது, உயர்ந்த குடிப்பிறப்பு என்று கூறுவது, வீரம் என்று விளம்புவது, கல்வியினால் அறிந்த உண்மை நெறியென்று உரைக்கப்படுவது, அன்பு என்று கூறுவது இவை எல்லாம் மற்றொருவனுடைய மனைவியைத் தன்னுடைய மனைவியாகக் கொள்ளும் கர்வமா? என்பது மேற்சுட்டிய பாடலின் கருத்து. மற்றொரு பாடல்,

தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும்

இருமையும், தெரிந்து எண்ணலை, எண்ணினால்

அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப்

பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ. (மேற்படி - 100)

தருமம் என்றால் இன்னது என்று நீ எண்ணிப் பார்க்கவில்லை. அதனால் அடையும் இம்மை மறுமைப் பயன்களை ஆராய்ந்து பார்க்கவில்லை. இவைகளைப் பற்றியெலலாம் நீ நினைத்துப் பார்த்திருப்பாயானால் அருமையான உன் தம்பியின் ஆருயிர் மனைவியை நீ கவர்ந்து கொள்வாயா? உன்னுடைய பெருமையை இழந்து நிற்பாயா? என இராமன் வாலியைப் பார்த்துக் கேட்கிறான்.

இவ்விரு பாடல்களிலும் வாலி செய்த பெருங்குற்றம் பிறன்மனை நயத்தல். இக்குற்றமே வாலி செய்த பெருங்குற்றமாகும். அதுவே அறக்குற்றம். மறைந்திருந்து கொல்வது தவறு எனத் தெரிந்தும் இராமன் வாலியைக் கொன்றான். வாலியின் அறமற்ற செயலைத் தடுக்கும்போது இராமன் செயல் அறவழியாக அமைகிறது.

இராவணன் தன் மாமனாகிய மாரீசனிடம் போனான். சீதையின் மீது தான் கொண்ட காதலைக் கூறினான். அவளைக் கவர்ந்து கொண்டு வருவதற்குத் தனக்குத் துணை செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்குப் பதிலாக மாரீசன் இராவணணுக்கு எடுத்துக்கூறும் அறம் பாரட்டத்தக்கது. பாடல் வருமாறு,

நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா

வாரம் கொண்டார், மற்றொரு வர்க்காய் மனைவாழும்

தாரம் கொண்டார், என்றிவர் தம்மைத் தருமந்தான்

ஈரும் கண்டாய்! கண்டகர் உயர்ந்தார் எவர்ஐயா?

நடுவுநிலைமை தவறிய அன்பு கொண்டவர்கள்; பிற நாட்டைப் பலவந்தமாகக் கவந்தவர்கள்; ஒழுக்கமற்ற செயல்களிலே ஆசை கொண்டவர்கள்; மற்றொருவர்க்கு உரியவளாய் அவர் மனையிலே வாழும் தாரத்தைக் கவர்ந்தவர்கள். இவர்களை எல்லாம் தர்மமே அழித்துவிடும். மாரீசன் வாயிலாக அதர்மத்தின் வழி நடப்பவர்களைத் தர்மம் தண்டிக்கும்.

கும்பகருணன் இராவணணுடைய தம்பி. அவன் இறுதி வரையிலும் இராவணன் பக்கத்திலே நின்று போர் செய்தவன். அவனும் இராவணனை இடித்துக் கூறுகிறான். சீதையைச் சிறையெடுத்த காரணத்தால் அரக்கர்குலம் அழியக்கூடிய தீமைக்கு ஆளாயிற்று என்கிறான் கும்பகருணன்,

ஆயிரம் மறைப்பொருள்

உணர்ந்து, அறிவமைந்தாய்

தீவினை நயப்புறுதல் செய்தனை (யுத்த. மந்திரப். 48)

நல்லொழுக்கமற்றவர்கள் செய்யும் பழிச்செயல் இது. இதைவிடப் பெரும் பழி வேறு ஏதேனும் உண்டோ? எனக் கூறும் கும்பகருணன்,

ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம்

மாசில் புகழ் காதல் உறுவோம்! வளமை கூரப்

பேசுவது மானம்! இடைபேணுவது காமம்

கூசுவது மானுடரை! நன்றுநம் கொற்றம்

மேற்சுட்டிய பாடல் மூலம் விளக்குகிறான். இராவணன் அறத்திற்கு மாறாக நடந்தான் என்பதைக் கம்பன் கும்பகருணன் வாயிலாகச் சுட்டுகிறான்.

இவ்வாறு இராமன் மனிதனாகப் பிறந்து அறவழியில் உயர்ந்ததால் தெய்வமாக உயர்த்தப்படுகிறான். இராவணன் மனிதனாகப் பிறந்து அறமற்ற வழியில் சென்றதால் அரக்கனாகத் தாழ்கிறான். தனிமனிதன் பின்பற்றிய அறம் அவன் உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற உண்மை கம்பன் காப்பியத்துள் விரவிக் கிடக்கின்றது.

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கம்பராமாயணத்தில் உள்ளுறை - நா. நாகலிங்கம்

சங்க அகப்பாடலுக்கு உரிய உத்தியாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் ''உள்ளுறை'' குறிப்புப் பொருளாகவும் தொனிப்பொருளாகவும் பிற இலக்கியங்களிலும் இடம்பெறுவதைக் காணுகின்றோம். கவிஞன் மனத்தில் ஆழ்ந்த கருத்துக்கள் தோன்றும்போது அவற்றை வெளிப்படுத்துவதற்கு இக்குறிப்புப் பொருள் வாயிலாக அமைகின்றது. பின்வரும் நிகழ்வை முன்னுணர்த்தும் மறைச்சுட்டாகவும், கவிஞனின் காப்பியப் பொதுநோக்கில் இடம்பெறும் சில பாவிக எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளியிடவும் உள்ளுறை பயன்படுகின்றது. இவ்வாறு உள்ளுறை உத்தியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். உள்ளுறையில் ஒன்றுக்கொன்று மாறான இருநிலைகள் உள்ளன.

1. ஒரு கருத்தைச் சொல்லுவதனால் அதற்கு இணையான மற்றொரு பின் கருத்தைக் குறிப்பாகச் சுட்டுவது.

2. வலியுறுத்தப்படுகின்ற கருத்தால் எதிர்மறைக் கருத்து வெளிப்படுவது. இவற்றைத் தக்க சான்று மூலம் கம்பராமாயணத்தைக் கொண்டு விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒத்த எண்ண இணைவுக் குறிப்பு - கம்பனின் சகோதரத்துவச் சிந்தனை:

கம்பன் நாட்டுப் படலத்தில் கோசல நாட்டின் வளத்தையும் மருதநிலச் சிறப்புக்களையும் வெளிப்படுத்தும்போது பல்வகை உயிரிணைவைக் காட்டுகின்றான். அன்னமும் எருமையும் தவளையும் இணைந்து வாழும் ஒரு இன்பப் பின்னணி வருணனைப் பாங்கில் சுட்டப்பெறுகின்றது.

''சேல்உண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்

மால்உண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை

கால்உண்ட வேற்றுமேதி கன்ற உள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பால்உண்டு துயில் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை''

பலவகை உயிரினங்களும் வாழும் மருத நிலத்தில் பறவையினத்தைச் சார்ந்த அன்னமும், விலங்கினத்தைச் சேர்ந்த எருமையும், நீரிலும், நிலத்திலும் வாழும் தவளையும் அன்பு பூண்டு ஒன்றையொன்று ஆதரித்து முரணின்றி வாழ்வது இங்குச் சுட்டப்பெறுகின்றது. கோசல நாட்டின் இயற்கைப் பின்புலத்தைப் புலப்படுத்தும் இக்காட்சி, அந்நாட்டு இளவரசனான இராமனின் வருங்கால இயல்பைக் குறிப்பாகச் சுட்டுவதாகத் தொனிப்பொருளில் அமைகின்றது. இறைவன் அவதாரமாகிய இராமன் அரச மரபில் வந்து மானுடனாகத் தோன்றிய போதும் பலவகை உயிரினங்களோடும் நட்பும் சகோதரத்துவமும் கொண்டு வாழ்கின்றான். பறவையினத்துச் சடாயு, குரங்கினத்துச் சுக்கிரீவன், அனுமன், அங்கதன், அரக்கர் இனத்து வீடணன், வேடர் இனத்துக் குகன் ஆகியோர் இராமனுக்குச் சகோதரர்களாகவும் நெருக்கமுடையவர்களாகவும் அமைகின்றனர். குகனைத் தம்பியாக ஏற்றதால் ஐவராகவும், சுக்கிரீவனையும், வீடணனையும் இணைக்கவே எழுவராகவும் அமைய இராமன்.

''குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின்குன்று சூழ்வான்

மகனொடும் அறுவர் ஆனேம் எம்உழை அன்பின்வந்த

அகன் அமர்காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங்காமை தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''

எனக் குறிப்பிடுவதிலிருந்து இதனை அறியலாம். இந்த உயிரிணைவுச் சிந்தனை பல்இனஒற்றுமைக் கருத்து நாட்டுப் படலத்தில் கோசலக் காட்சியில் குறிப்பாகச் சுட்டப்படுகின்றது.

எதிர்மறைச் சிந்தனை:

நாட்டுப் படலத்தில் குறிக்கோள் நாட்டைக் கற்பித்து அதனைக் கோசலமாகப் பொருத்திக் காட்டுகின்றான் கம்பன். ஆயினும் இக்குறிக்கோள் தன்மையிலிருந்து முரண்பட்ட நிறைகளும் குறைகளும் உடைய ஒரு நாடு தொடர்ந்து வரும் படலங்களிலும் காண்டங்களிலும் சுட்டப்படுவதையும் காணுகின்றோம். சான்றாக,

''கூற்றம் இல்லை ஓர்குற்றம் இலாமையால்

சீற்றம் இல்லைதம் சிந்தையின் செம்மையால்

ஆற்றல் நல்அறம் அல்லது இலாமையால்

ஏற்றம் அல்லது இழிதகவும் இல்லையால்''

என்னும் பாடல் எதிர்மறையாக வரும் கூற்றத்தையும், குற்றத்தையும், சீற்றத்தையும் செம்மையில்லாச் சிந்தனையையும் மறத்தையும் இழிவையும் குறிப்பாகச் சுட்டுவதையும் காணுகின்றோம். காப்பியத் தொடக்கத்தில் நிலவிய இன்பமான சூழல் கூனியின் சீற்றத்தாலும் செம்மையில்லாச் சிந்தனையாலும் மாறுகின்றது. அவளது கூற்றமன்ன சொற்கள் கைகேயியை நிலையிழக்கச் செய்து மறவழியில் செலுத்துகின்றன. உருவாகிய குற்றம் தசரதன் உயிரைக் குடிக்கின்றது. அயோத்தி பொலிவிழக்கின்றது. இராமன் காட்டிற்குச் செல்லுகின்றான். இவ்வாறு காப்பியத்தின் தொடக்கப்படலப் பாடல்களில் சில எதிர்நிலையாக வரும் நிலையழிவுக் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. குறிக்கோள் உலகை முன்வைத்த காப்பிய நோக்கம், பிற்பகுதிகளில் குற்றத்தையும் போரையும் உயிரிழப்புக்களையும் கூற்றத்தையும் காட்டுவதும் சிந்திக்கத் தக்கதாகும்.

சொல்லில் குறிப்புப் பொருள்:

சொல்லிலும் குறிப்புப் பொருள் அமையும் பாங்கு நகர் நீங்கு படலத்தின் இராமன் உரையில் அமைவதைக் காணுகின்றோம். ஓரளவு இங்கு வெளிப்படையாகவே பொருள் சுட்டப்படுகின்றது. தானும் இராமனுடன் காட்டிற்கு உடன்வருவேன் எனச் சுற்றி நிற்கும் சீதையை விலக்க எண்ணிய இராமன், ''விளைவு உன்னுவாய் அல்லை. போக அமைந்தனை ஆதலில் எல்லை அற்ற இடர்தருவாய்'' என அறிவுறுத்துகின்றான் இங்கு வெளிப்படையாக இன்ன இடர் உறும் என விளக்கப் படாதபோதிலும், சீதை இராமனுடன் காட்டிற்குச் சென்றால் துன்பம் வரும் என்பது ஓரளவு புலப்படத் தொனிக்குறிப்பாக வெளிப்படுவதைக் காணுகின்றோம்.

எரியில் புகுவதுபோலத் தாமரையில் அமர்ந்த அன்னங்கள்:

பம்பை வாவிக் காட்சியில் எரியில் புகுவது போன்ற தோற்றத்துடன் தாமரையில் அமர்ந்த அன்னங்களைக் கம்பன் அமைத்துக் காட்டுகின்றான்.

''அரிமலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்

புரிகுழல் புக்க இடம் புகல்கிலாதயாம்

திருமுகம் நோக்கலாம் இறந்து தீர்றும் என்று

எரியினில் புகுவனஎனத் தோன்றும் ஈட்டது''

சீதையை இழந்த பிரிவுச் சூழலில் இராமனின் மனத்துயரத்திற்கு ஏற்றவாறு இந்தத் தற்குறிப்பேற்றக் காட்சி அமைக்கப்பட்டிருப்பினும், ஏற்கனவே பலமுறை கம்பன் சீதையை அன்னமாகக் காட்டியிருப்பதால், இவ்விடத்தில் ஒரு குறிப்பையும் தருவதாகச் சொல்லலாம். இராவணன் அழிவிற்குப் பின்னர் இராமனின் ஐயம் நீங்கச் சீதை தீப்புகுந்ததன் முற்குறிப்பு இங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.

குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் கவிவன்மை:

இவ்வாறு ஆழமாக நோக்கினால் கம்பனின் ஒவ்வொரு காட்சியிலும் புனைவிலும் சொற்றொடரிலும் தொனியும் குறிப்பும் உள்ளுறையும் புலப்படுவதைப் பரவலாகக் காணலாம். குறிப்பாக உள்ளுறையில் பொருள் தரும் கம்பனின் இக்கவிவன்மை, உலாவியற் படலத்தில் - இராமனைக் கண்ட மகளிர்,

''தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம்அன்ன

தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே''

எனச் சுட்டுவதிலிருந்து அறியலாம். அம்மகளிர் இராமனின் மூன்று செயல்களின் குறிப்பான புலப்பாட்டை இங்குக் காணுகின்றனர்.

1. தோள்கண்டார் - இராமன் மிதிலை மக்கள் முன்னிலையில் வில்லொடித்த நிகழ்ச்சி

2. தாள்கண்டார் - இராமன் பாதம்பட்டு அகலிகை உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி

3. தடக்கை கண்டார் - இராமன் செய்த தாடகை வதம் பற்றிய நிகழ்ச்சி

இவ்வாறு சங்க அகப்பாடலுக்குரிய உள்ளுறை உத்தியைக் கம்பம் தன் காப்பியக் கட்டமைப்பில் செறிவாகவும் பொருத்தமாகவும் அமைத்துக் கற்பனை வளத்தினால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியச் சுவைமிக்க உள்ளுறைகள் காப்பியம் முழுமையும் பரவலாக இடம்பெற்றிருப்பதைக் காணுகின்றோம்

நன்றி: ஆய்வுக்கோவை.

 

வாலிவதை - ஒரு கண்ணோட்டம் - இரா. நாராயணன்

கம்ப இராமாயணத்தில் இடம்பெறும் வாலிவதை, சீதை தீ புகுதல் ஆகிய இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு புதிய விளக்கம் கொடுக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்படுகிறது. இராமனுடன் எப்போதும் கூடவே இருக்கும் இலக்குவன் இராமனின் ஆளுமையைப் பாதிக்கிறான் எனற கருத்து இக்கட்டுரைக்குக் கருதுகோளாக அமைகிறது. இராமன் - இலக்குவன் இருவரின் மனம் சார்ந்த போராட்டமே இவ்விரண்டு நிகழ்வுகளுக்கும் காரணம் என்பதை இக்கட்டுரை விளக்க முயல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் சமூக வாழ்க்கையில் பல்வேறு இக்கட்டான சூழல்களைக் கடந்து வரவேண்டியிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதன் அடிப்படையிலேயே வாழ்க்கைப் போக்குத் தீர்மானிக்கப்படுகிறது. வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஒருவன் எடுக்கும் முடிவுகள் அவன் வாழ்க்கையின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. இப்படி ஒருவன் முடிவுகளை எடுக்கும்போது அவன் சார்ந்திருக்கும் சமூகம், அமைப்பு, இனம், தனிநபர் முதலானவற்றின் தாக்கமும் குறுக்கீடும் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது.

''இனம் இனத்தைச் சேரும்'', ''சேர்ந்ததன் வண்ணமாகும்'' என்ற பழமொழிகள் மனிதன் சார்புநிலை கொண்டவன் என்பதை வெளிப்படுத்துகின்றன எனலாம். அவன் முடிவுகளை எடுக்கும்போது புறநிலையில் நின்று தனித்து இயங்குவதில்லை. அவன் சார்ந்திருக்கும் அகக்கூறுகளும் அவன் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாகின்றன. இதனையே, ''எவராலும் முற்றிலும் புறவயமாக எதையும் பார்க்க இயலாது. மொழி, கருத்தியல் மற்றும் தன்னிலையால் (subject) பிரதிகள் கட்டப்பட்டுள்ளது போல, மனித தன்னிலையும் கட்டப்பட்டதுதான் என்று பின்னை நவீனத்துவம் கூறுகிறது.'' எனவே, ஒருவன் எதைச் சார்ந்து இருக்கிறானோ அதன் அடிப்படையிலேயே அவனுடைய அறிவுத்தளம் இயங்கும் எனலாம்.

''மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்

கினத்துள தாகும் அறிவு''

என்பார் திருவள்ளுவர். இதனுடைய பொருளாவது, ''ஒருவனுடைய அறிவானது எப்படிச் செயல்படும் என்றால், தன்னுடைய மனத்தைக் கொண்டு தானே செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும். ஆனால் உண்மையாக நோக்கும்போது அவன் சேர்ந்த இனத்தின் அடிப்படையிலேயே இயங்கும்'' என்பதாகும்.

(பரிமேலழகர் உரை: அறிவு - அவ்விசேட உணர்வு: ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உளதாம்) பரிமேலழகர் இக்குறளுக்கு விளக்கம் எழுதும்போது ''மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும், பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின்'' என்று எழுதுவார். எனவே ஒருவன் எடுக்கும் முடிவுகள் அவன் மனத்திலிருந்து அவனே செயல்படுவது போலத் தோன்றினாலும் ஆராய்ந்து பார்க்குமிடத்து அவன் சார்ந்து இருக்கும் சூழல் அடிப்படையிலேயே அவனுடைய அறிவு இயங்குவதைத் தெளியலாம். இந்த அடிப்படையில் அணுகும் போது இராமன் எடுக்கும் முக்கியமான முடிவுகள் அவன் உடன் இருந்து இயங்கும் இலக்குவனை முன்னிறுத்தியே எடுக்கப்படுகின்றன என்று சொல்வதற்கான வாய்ப்பைத் தருகிறது.

அயோத்தியை விட்டு வந்து கானகத்தில் உறையும் இராமன் - இலக்குவன் இடையே கருத்து வேறுபாடு தோன்றும் முதல் நிகழ்ச்சி மாரீசன் மானாக வந்த நிகழ்ச்சியாகும். இராவணனின் ஏவலால், மாயப்பொன்மான் வடிவம் தாங்கிச் சீதை முன் வருகிறான் மாரீசன். மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனிடம் தான் கண்ட மானின் தன்மையைக் கூறுகிறாள். அப்போது ராமன் மானைச் சென்று பார்க்கலாம் என்று கூறுகிறான். ஆனால் இலக்குவன் இதில் மாயம் இருக்கிறது என்ற எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறான். அதனைக் கேட்காத இராமன் மானைப் பார்க்க அழைத்துச் செல்கிறான். மானைக் கண்டவுடன் இலக்குவன்,

''ஈண்டு கண்டது கனக மானேல்....மீள்வதே மேன்மை''

''வெய்ய வல்அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த கைதவ மான்''

என்று எடுத்துரைக்கிறான். இவ்வாறாக மானைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் தொடர்கின்றன. இறுதியில் இலக்குவன், தான் சென்று மானைப் பிடித்து வருவதாகக் கூறுகிறான். அப்போது சீதை இராமனை நோக்கி ''நாயக நீயே பற்றி நல்கலை போலும்'' என்கிறாள். உடனே இராமன் தம்பியை நோக்கி,

''மான் இதுநானே பற்றி வல்லையின் வருவென் நன்றே

கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி''

என்று கூறிவிட்டு மானைப் பிடிக்கப் புறப்படுகிறான்.

மானச் துரத்திச் சென்ற இராமன் அது மாயமான் என்பதை உணர்ந்து அம்பு எய்து மானைக் கொன்றுவிடுகிறான். மானின் அலறல் குரல் கானகம் முழுவதும் கேட்கிறது. அதனைக் கேட்ட சீதை,

''ஒருபகல் பழகினும் உயிரை ஈவரால்;

பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ

வெருவலை நின்றனை; வேறுஎன்? யான்இனி

எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு''?

என்று கூறுகிறாள். உடனே இலக்குவன், ''வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ?'' என்று இராமனைத் தேடிப்புறப்படுகிறான்.

வழியில் இலக்குவனைக் கண்ட இராமன் ''நீ இங்கு எதைக்கருதி வந்தாய்?'' (நின்று உன்னி வந்த நிலை என்கொல்?) என்று வினவுகிறான். அதற்கு இலக்குவன் ''மாயக்குரல்'', ''அரக்கர் சூழ்ச்சி'' என்றெல்லாம் எடுத்துக்கூறினேன். கேளாத சீதை,

''ஏகாதுநிற்றி எனின்யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா மாகானகத்தினிடை ஓடலோடும் மனம்அஞ்சி வஞ்ச வினையேன் போகாது நிற்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா

ஆகாது இறக்கை அறன்அன்று எனக்கொடு இவண் வந்தது''

என்கிறான் பின்னர் இருவரும் சீதையிருந்த இடத்தை அடைந்தபோது அங்கே சீதையைக் காணமல் அரற்றுகின்றனர்.

இப்பகுதியானது உளவியல் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழச் செய்யும் இடமாக அமைகிறது.

அண்ணனின் ஆணையை மீறியதால் தானே சீதையை இழக்க நேர்ந்தது? என்ற வருத்தம் இலக்குவனுக்கு ஏற்படுகிறது. தான் சொன்ன காரணங்களை அண்ணன் ஏற்றுக்கொண்டானா? ''வஞ்ச வினையேன்'' என்று சீதை சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்று அண்ணன் நம்மீது ஐயம் கொள்வானா? என்பன போன்ற எண்ணங்கள் இலக்குவன் மனதில் எழ இங்கே வாய்ப்பிருக்கிறது எனலாம்.

''வஞ்ச வினையேன்'' எனறு சீதையால் கடியப்பட்ட இலக்குவனின் மனக்கலக்கத்தைப் போக்க வேண்டிய தேவை இராமனுக்கு ஏற்படுகிறது. நான் உன்மீது எந்தவித ஐயமும் கொள்ளவில்லை. சீதையின் பிரிவிற்கு நீ காரணமில்லை; உன்மீது எனக்குத் துளியும் வருத்தம் இல்லை. உன்னை நான் உண்மையிலேயே நேசிக்கிறேன் என்பதை விளக்க வேண்டிய மனப்போராட்டம் இராமனுக்கு ஏற்படுகிறது. இதை எப்படிச் செய்வது என்ற மனப்போராட்டத்துடன் வந்து கொண்டிருக்கும் இராமனுக்கு வாலி - சுக்ரீவன் என்ற அண்ணன் - தம்பி போராட்டம் வாய்ப்பாக வந்து அமைகிறது.

சுக்ரீவன் மீது ஐயம்கொண்டு வாலி அவனைக் கொல்லக் கருதியதைக் கேள்விப்பட்ட (சவரி, சுக்ரீவன் மூலமாக) இராமன்,

''மற்று இனி உரைப்ப என்னே? வானிடை, மண்ணின், நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும், உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது; என்காதல் சுற்றம், உன்சுற்றம்; நீஎன் இன் உயிர்த் துணைவன்''

எனக் கூறிவிடுகிறான். இலக்குவன் மீது தான் ஐயம் கொள்ளவில்லை என்பதை உணர்த்த வேண்டிய தேவை இருந்த இராமனுக்கு இந்த இடம் வாய்ப்பாக வந்து அமைந்துவிடுகிறது. எடுத்த எடுப்பிலேயே அபயம் கொடுத்து விடுகிறான்.

நடந்த நிகழ்வுகளை அனுமன் தெளிவாகக் கூறியபோது இராமன்,

''உலகம் எழினோடு ஏழும்வந்து அவன் உயிருக்கு உதவி விலகும் என்னினும், வில்லிடை வாளியின் வீட்டி, தலைமையோடு, நின்தாரமும், உனக்குஇன்று தருவென்; புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு.''

என்று புகல்கிறான். இங்குத் ''தம்பி மீது ஐயம் கொள்ளும் அண்ணன் கொல்லப்பட வேண்டியவன்'' என்ற கருத்தை முன் வைக்கிறான் இராமன். இதன் மூலம் தான் இலக்குவன் மீது ஐயம் கொள்ளவில்லை என்ற தன் மனக்கருத்தை வெளிப்படுத்துகிறான் எனலாம். அதனாலேயே வேறு நின்று கொல்ல வேண்டிய நிலையும், வாலியின் நியாயமான வினாக்களுக்கு இராமனால் விடையளிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது எனலாம்.

இராம-இலக்குவர் மனப்போராட்டத்தின் தொடச்சியாகவே சீதை தீயில் இறங்கிய நிகழ்வைக் காணலாம். ''வஞ்ச வினையேன்'' என்று சீதையால் கடியப்பட்ட இலக்குவனின் மனவருத்தத்தைப் போக்கும் விதமாகவே இந்நிகழ்வு அமைகிறது. ''இருத்தி'' என்ற இராமனின் ஆணையை மீறுவதற்குக் காரணமான கடுஞ்சொல்லே சீதை தீயில் இறங்கக் காரணமாகிறது. இதற்கு வலிமை சேர்க்கும் வகையிலேயே இலக்குவனைக் கடிந்த சொற்களை நினைத்துச் சீதை வருந்தும் பகுதி அமைகிறது. அசோக வனத்தில்,

''என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்

சொன்ன வார்த்தை கேட்டு, ''அறிவுஇலள்'', எனத் துறந்தானோ''

என அவள் நினைவைக் கொல்வதைக் காண முடிகிறது.

இராமன் எடுக்கும் முடிவுகள் இலக்குவனை முன்நிறுத்தியே எடுக்கப்பட்டன என்பது இங்கு விளக்கப்பட்டது. இதன் மூலம் வாலி வதைக்கு ஒரு புதிய விளக்கம் கிடைக்கிறது எனலாம். மேலை நாட்டாரின் உளவியல் கோட்பாடு அடிப்படையில் காப்பியத்தை அணுகினால் மேலும் பல விளக்கங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது.|

நன்றி: ஆய்வுக்கோவை.

 

கம்பன் காப்பியக் கட்டமைப்பு - நா. மணிமேகலை

முன்னுரை: தமிழிலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத் தான் காப்பியகாலம் தொடங்குகிறது. இக்காப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டவர் இளங்கோவடிகள். காப்பியம் என்ற சொல் காவ்யம் என்ற வடசொல்லின் திரிபு என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. காவியம் என்ற வடசொல்லின் பொருள் ''பாட்டு'' அல்லது செய்யுள் என்பதாகும். ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ஒரு கட்டமைப்பு உண்டு. கவிஞன் ஒலிகள், சொற்கள், தொடர்கள் முதலியவற்றைப் பயன்படுத்திக் கவிதை புனைகின்றான். எனினும் இவற்றிற்கு அப்பால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கின்ற ஒருமைப்பாடு ஒன்றுள்ளது. அவ்வொருமைப்பாடு தான் அக்கவிதைக்கு ஓர் உள்ளுறைப் பொருளைத் தருகின்றது. காப்பிய இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் அதன் பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைக்கும் ஒருமைப்பண்பு ஒன்றுள்ளது. அதனையே கட்டமைப்பு என்று கருதலாம். அக்கட்டமைப்பு கம்பராமாயணத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கட்டமைப்பு பற்றிய கொள்கைகள்: காப்பியக் கட்டமைப்பு குறித்து அரிஸ்டாட்டில் முதல், இடை, கடை என்றும் முத்திறம் பெற்று முழுமையாக அமைதல் வேண்டும் என்று கூறுகின்றார். மேலும் அவர் பல்வேறு உறுப்புகளைக் கொண்டிருப்பினும் உறுப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து உயிர்ப் பொருளின் இயல்பைப் புலப்படுத்துவதைப் போன்று நாடகம், காப்பியம் முதலியன அமைதல் வேண்டும் என்றும் கூறுகின்றார். ஒரு தலைவனைக் குறித்து வருவன அனைத்தும் ஒருமை உணர்ச்சியைத் தோற்றுவிக்க முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்ச்சிகள் மட்டும் கட்டமைப்புக்குத் துணை செய்யும் என்று அரிஸ்டாட்டில் விளக்குகின்றார். தமிழ்க் காப்பிய மரபுகளில் கட்டமப்பு குறித்து விளக்கமாக கொள்கை ஒன்றும் இல்லை. ஒரு தலைவனைப் பற்றிய வரலாறு காப்பியமாகப் பாடப்படும் மரபு தமிழில் உள்ளது என்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னிகரில்லாதத் தலைவனுடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை இல்லறம், அரசியல் பற்றிய செய்திகளைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.

பாடுபொருள்: காப்பியம் முழுவதையும் ஒருங்கிணைக்கின்ற பாவிகத்தை உள்ளுறைப் பொருள் என்று குறிப்படுகின்றோம். காப்பிய நிகழ்ச்சிகள் முழுவதிலும் உட்பொருளாக நின்று அனைத்தையும் இணைப்பது உள்ளுறைப் பொருள் என்னும் கருத்தில் இங்கு ஆளப்படுகின்றது. பாவிகம் என்பது காப்பியப் பண்பு என்கிறது தண்டியலங்காரம். இது கூறுகின்ற பாவிகம் காப்பியக் கட்டமைப்பைக் குறிக்கும் என்பார் எஸ்.இராமகிருஷ்ணன். காப்பியத்தில் இடம் பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஊடுருவி நிற்கும் ஒருமைப்பாடு உணர்ச்சியைத் தான் பாவிகம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கருதலாம். கதையின் நடுநாயகமான பொருள் பாடுபொருள் எனப்படுகிறது. கதை நிகழ்ச்சிகள் அனைத்தும் எதனை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றனவோ, அது இங்கே பாடு பொருள் எனக் குறிக்கப்படுகின்றது. பாடு பொருளும் பாவிகமும் தொடர்புடையன. பாடு பொருள் வெளிப்படையான கதையின் மையப் பகுதியைக் குறிப்பது. பாவிகம் அல்லது உள்ளுறை அக்கதையின் குறியீட்டுப் பொருளைக் குறிப்பது ஆகும். கம்பராமாயணக் கதையை எடுத்துக் கொண்டால் இராவண வதம் அதன் பாடுபொருள். காப்பிய நிகழ்ச்சிகள் அமைத்தும் இத்தலைமை பொருளை மையமாகக் கொண்டு பின்னப்படுகின்றன. இராவணவதத்தின் உள்ளுறைப் பொருள் அறத்தின் வெற்றியாகும். இராவணன் அறத்திற்கு எதிராக நிற்கின்றான். அவனுடைய வீழ்ச்சி அறத்தின் வெற்றியாகின்றது. இதனை வேறொரு வகையில் சொல்வதாக இருந்தால் சீதையின் கற்புத் திறத்திற்குக் கிடைத்த வெற்றி எனலாம். கற்பின் வெற்றி, அறத்தின் வெற்றி. எனவே அது பாவிகப் பொருளாகின்றது. எனவே எடுத்த எடுப்பிலேயே

''ஆசலம்புரி ஐம்பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண்எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோச வம்புனை ஆற்றுஅணி கூறுவோம்''

என்று சீதையின் கற்புத் திறத்தைப் பாராட்டுகின்றார் கம்பர்.

கட்டமைப்புத் திறன்: காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மையக் கதையோடு ஒருங்கு இணைக்கப்படுகின்ற திறத்தைக் கட்டமைப்புத் திறன் என்று வ.வெ.சு குறிப்பிடுகின்றார். பாடுபொருளின் முதன்மையை வலியுறுத்தும் வகையில், முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் காப்பியப் பாடுபொருளுக்கு உறுதுணையாகின்றன. இராவணன் வீழ்ச்சி கம்பராமாயணத்தின் பாடுபொருளாதலால் காப்பிய நிகழ்ச்சகள் அதனை நோக்கி உருவாவதைக் கம்பர் ஆங்காங்கு குறிப்பிட்டுச் செல்லுகின்றார். கம்பராமாயணத்தின் பாடுபொருள் இராவணன் வீழ்ச்சி இராவணனை அழிப்பதற்காகப் பரம்பொருளான திருமால் அயோத்தியில் தசரதன் மகனாக அவதரிக்கின்றான். மனிதனாக நடிக்கின்றான். இதனைக் கம்பர் காப்பியம் முழுவதிலும் மறவாது நினைவுறுத்திக் கொண்டு செல்லுவார். எல்லா நிகழ்ச்சிகளிலும் இப்பாடு பொருள் ஊடுருவி நிற்பதைக் காட்டுவார். பாலகாண்டத்தில், முனிவனின் வேள்வியைச் சிதைக்க முனைந்த தாடகையை இராமன் கொல்லுகின்றான். இராமன் ஏவிய பகழி அவள் மார்பில் ஊடுருவிச் செல்ல, அவள் தரையில் வீழ்கின்றாள். அவளுடைய வீழ்ச்சி இராவணன் வீழ்ச்சிக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகக் கம்பர் பாடுகின்றார். இராவணன் இறுதியை முன்னரே அறிவிப்பது அவனுடைய வெற்றிக் கொடி அறுந்து வீழ்ந்ததைப் போன்று தாடகை வீழ்ந்தாள் எனக் கம்பன் உவமிக்கும் பொழுது காப்பியப் பாடு பொருள் நினைவூட்டப்படுகின்றது.

இராமன் கைகேயின் சூழ்வினையால் முடிதுறந்து காடேகுகின்றான். காட்டிலே இருந்த தன் மனைவியை எடுத்துச் சென்ற இராவணனைக் கொன்று தன் மனைவியைச் சிறை மீட்கின்றான். எனவே இவ்விரண்டும் தொடர்பில்லாத தனிக் கதைகள் என்றும், இவ்விரண்டையும் ஒன்றாக இணைத்து, ஒருவனைத் தலைவனாக்கி வால்மீகர் அதனை ஒரு காப்பியமாக்கினார் என்று ஜெர்மானிய திறனாய்வாளர் கூறுகின்றார். மேற்போக்காகக் காண்போமாயின், தயரன் அரண்மனைச் சூழ்ச்சிக்கும் இராவணன் அழிவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை - ஆழ்ந்து சிந்தித்தால் இக்கருத்து உண்மையன்று என்பது புலப்படும். தயரதன் எவ்வளவோ மன்றாடியும் கைகேயின் மனம் மாறவில்லை. தேவர்களின் சூழ்ச்சியால் கைகேயின் மனமாற்றம் நிகழ்கின்றது. இராவணன் வீழ்ச்சிக்குரிய வித்து அயோத்தியா காண்டத்தில் விதைக்கப்படுகின்றது. காப்பியப் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சிக்கு இடையூறு செய்வது போலமைகின்றது பரதன் செயல். இராமனைத் திரும்பவும் அயோத்தி நகருக்கு அழைத்துச் செல்லப் பரதன் முயல்கிறான். இராமனுக்கும் பரதனுக்கும் நடக்கும் அன்புப் போட்டியில் இராமன் உரையிழந்து நிற்கிறான். இவ்வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல், செவ்வழித்து அன்று நம் செயல் என்று தேவர்கள் சிந்தையழிந்து கூறுகின்றனர். தேவர் கட்டளையை மறுக்காது குறித்த காலம் முழுவதும் அரசாள வேண்டும் என்று இராமன் பரதனை வேண்ட, அவன் திருவடி நிலைகளைப் பெற்றுக் கொண்டு திரும்புகின்றான். இராவண வதமே காப்பியப் பாடுபொருள் என்னும் கட்டுக்கோப்புத் திறனை உணர்ந்த கம்பர் கதையில் எழும் சிக்கலைத் தேவர் குறுக்கீட்டால் நீக்கி, இராமனைப் பஞ்சவடிக்குக் கொண்டு செல்கிறார். காப்பியத்தின் முழுப் பொருளில் கவனம் செலுத்துகின்ற கம்பர் இராவணன் தலையறுப்புண்டு தரையில் சாயப் போவதிற்குக் கடைக்கால் இட்ட நிகழ்ச்சியாகச் சூர்ப்பனகையின் மானபங்கத்தைச் சித்தரிக்கின்றார்.

இறுதியில் இராமன் கணைகளால் இராவணன் வீழ்கின்றான். முக்கோடி வானாளும் முயன்றுடைய பொருந்தவமும் உடைய வீரன் மண்ணிலே வீழ்ந்து கிடக்கின்றான். அப்பொழுது அவன் மனைவி மண்டோதரி அவன் மேல் விழுந்து அழுது புலம்பும் பொழுது, கதை முழுவதையும் ஒன்றாக இணைத்து அவள் வாயிலாகப் பேச வைக்கின்றார் கம்பர்.

''காந்தையருக்கு அணி அனைய சானகியார்

பேரழகும், அவர்தம் கற்பும்,

ஏந்துபுயத்து இராவணனனார் காதலும், அச்

சூர்ப்பனகை இழந்த மூக்கும்

வேந்தர்பிரான், தயரதனார் பணிதன்னால்

வெங்கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்

பெருந்தவமாய்ப் போயிற்று அம்மா''

கைகேயின் சூழ்ச்சியால் இராமன் காடுபுக்கதும், சூர்ப்பனகையின் தோற்றமும், இராவணன் சீதை மேற்கொண்ட காதலும், இராவணன் அழிவுக்கும், அரக்கர்களின் அழிவிற்கும் காரணமாகித் தேவர்களின் வாழ்வுக்குத் துணையாகின்றன என்று புலம்புகின்றாள் மண்டோதரி. காப்பியத்தின் பாடுபொருளான இராவணன் வீழ்ச்சி கம்பரின் புலமைத் திறத்தால் முன்னும் பின்னும் செவ்விதாக இணைக்கப்பட்டு முழுமை அடைகின்றது. கம்பருடைய கட்டுக்கோப்புத் திறத்தை வியந்து பாராட்டும் வ.வே.சு அச்சம்பவங்கள் அனைத்தும் பளிங்குக் கற்கள் போல நின்று இராவண வதமாகிய மண்டபத்தைக் கட்டவே கருவியாக நிற்கின்றன என்பது கவியின் அபிப்ராயம் எனக் குறிப்பிடுகின்றார்.

முழுமைக் காட்சி: அரிஸ்டாட்டிலின் கருத்துப்படி கதையமைப்பு முதலும், இடையும், கடையும் அழகுற அமையப் பெற்று உறுப்புக்கள் ஒன்றோடென்று ஒன்றி இயங்கும் ஓர் உயிர்பொருளை ஒத்திருக்கின்றது கம்பராமாயணக் கதையமைப்பு. இராமாயணக் கதையின் முதற்பகுதியாக விளங்குவது மந்தரை சூழ்ச்சியாகும். அதற்குமுன் நிகழும் நிகழ்ச்சிகள் அம்முதல் பகுதிக்குத் துணையாகின்றன. இராமன் அரசு துறந்து காடுபுகுதலும், முனிவர்களைச் சந்தித்தலும் இம்முதற் பகுதியின் விளைவுகளாகும். இடைப்பகுதி, சூர்ப்பனகை சூழ்ச்சியில் தொடங்குகின்றது. கரதூடணர் வதையும், இராமன் சுக்கீரிவன் நட்பும் இவ்விடைப் பகுதியின் விளைவுகளாகின்றன. இலங்கைப் படையெடுப்பின் மூலமாக இராவணன் கொல்லப்படும் நிகழ்ச்சி கதையின் இறுதிப் பகுதியாகும். பரம்பொருள் இராமனாக அவதரித்ததன் நோக்கம் இங்கு நிறைவேறுகின்றது. அரக்கர்களின் அழிவு, நல்லவர்களின் வாழ்வாக அறத்தின் வெற்றியாக அமைகின்றது. இவ்வாறு முதல், இடை, கடை என்னும் முப்பகுதிகளும் ஒன்றோடொன்று இணைந்து முழுக்கல்லில் செதுக்கிய சிற்பத்தைப் போன்று முழுமைக்காட்சி அளிக்கின்றது.

காப்பியத்தின் தொடர்பழகு: காப்பியத்தில் முன்னும் பின்னும் நிகழ்கின்ற செயல்கள், பேசும் பேச்சுக்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, ஒன்றின் விளக்கமாகவோ, வளர்ச்சியாகவோ நினைவூட்டலாகவோ அமைந்து காப்பியத்தின் ஒருமைப்பாட்டு நயத்தை உயர்த்துகின்றன. ''இராமாயணத்தை முழுமையாக, ஒவ்வொரு பாடலையும் முழுமையின் பாகமாக, ஒவ்வொரு சொல்லையும் பாகத்துட் பாகமாக உறவு முறையோடு காண வேண்டும்'' இதுவே காப்பியத் தொடர்பழகு என்று வ.சு.ப.மாணிக்கம் கூறுகிறார். தொடர்பழகினால் காப்பியம் ஒருமைக் கோலம் பெறுகின்றது. விசுவாமித்ர முனிவனின் பின்னே தயரதன் இராமனை அனுப்பியதை உவமிக்கப் புகுந்த கம்பர் ''மன்னன் இன்னுயிர் வழிக்கொண்டாலென'' என்று உயிர் உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உவமையைக் கூறினார். இராமன் தாடகையை அழித்து முனிவன் வேள்வியைக் காத்து, வில்லையிறுத்துச் சானகியைக் கரம்பற்றவிருக்கும் வேளையில், மிதிலைக்கு வந்த தயரதன் இராமனைச் சந்திப்பதை உவமிக்கின்ற புலவர் முன்னர்க் கூறிய உவமையை மறவாது,

''தேவரும் தொழுகழல் சிறுவன் முன்பிரிவது ஓர்

ஆவிவந் தென்னவந்து, அரசன் மாடு அணுகினான்''

என்று அமைப்பார். முன்னர்க் கூறிய உவமைக்குப் பொருத்தமாக நூற்றுக்கணக்கான பாடல்களுக்குப் பின்னர் ''பிரிந்த உயிர் உடலைமேவியதென்று'' உரைத்து உவமையை முழுமையாக்கும் தொடர்பழகு சிறப்புடையதாகும்.

காண்டங்களின் அமைப்பு: காப்பியப் பெரும்பிரிவுகளாகச் சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பெயர்களைத் தண்டியலங்காரம் கூறுகின்றது. கம்பருடைய காப்பியம் வால்மிகி காப்பியத்தைப் போலன்றி ஆறு காண்டங்களுடன் நிறைவு பெறுகின்றது. கம்பராமாயணத்தின் பெரும்பிரிவுகளான காண்டப் பெயர்கள் வால்மீகத்தை ஒட்டியே பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம் சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனப் பெயர் பெறுகின்றன. இராமனுடைய இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விளக்குவது பால காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் தவிர ஏனைய அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள் அவ்வவ்விடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் தலைமை கருதிப் பெயர் பெறுகின்றன. யுத்த காண்டம் இராம இராவணப் போரைக் குறிக்கின்றது. சுந்தரகாண்டம் இலங்கையில் நிகழினும் அப்பெயர் பெறவில்லை. இராமன் நேரடியாகப் பங்கேற்காத காண்டம் இக்காண்டம். காப்பியத் தலைவன், தலைவியரின் ஞான சௌந்தரியத்தை, அழகைப் புலப்படுத்துவதால் சுந்தரகாண்டம் என்னும் பெயர் பெற்றது என்பர். யுத்த காண்டம் என்னும் பெயர் தமிழ் இலக்கண மரபுக்குப் பொருந்தவில்லை என்று கூறி, அது இலங்கை காண்டம் என்று பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என்று முருகப்பா என்பவர் கூறுவார். எனவே கம்பர் முதல் நூலை பின்பற்றியிருப்பது தெளிவாகின்றது.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.