ரஞ்சகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஞ்சகுமார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோளறுபதிகம் - ரஞ்சகுமார்


பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்திரிகளுக்கே உரிய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் திரிந்தன. நான் OPD க்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். 

ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றுபடி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஓரத்திலிருந்து கிழிபட்டுப்போன தோலோ, தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள ஒரு சிவந்த பேப்பர் நாடா போன்று காற்றில் துடித்தது. மிகுதிக் கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்துப் போயிருந்தன. பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டுச் சொட்டாக பாகுத்தன்மையுடன் ஒழுகித் தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று. 

ஒரு ஸ்ரெட்சரில் பிரதேசம் கிடத்தப் பட்டிருந்தது. மறுகரம் சேதமெதுவுமின்றிச் சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட்சரின் ஓரத்தைப் பற்ற விளைந்தது போல் பாவனை காட்டிற்று. விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம் வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது. 

ஒரு பெண்ணின் பிரதேசம் தான். 

சனங்கள் சிலர் கூடினார்கள். கூடவே ஈக்களும். ஓரு ஓடலிப் பையன் இன்னெரு ஸ்ரெட்சரை ஓசையெழத் தள்ளியபடி அவசரமாக வந்தான். தோசையைத் திருப்பிப் போடுவதுபோல அசிரத்தையுடனும், இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டிப் போட்டுக் கொண்டு OPD ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம் போலும் 

அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் அணிந்திருந்தாள். முழங்கால்களுக்கு கீழே உள்ள வாளிப்¡ன தசைப்பிடிப்பான கால்கள் விறைத்துப் போய் திகம்பரமாகத் தெரிந்தன. முகம் முழுக்க இரத்தவிளாறாக அடிக்கப்பட்டிருந்தது. இடது புருவத்துடன் கூடவே ஒரு குண்டு பாய்ந்திருந்தது. அவ்விடத்தில் ஒரு புடைப்பு. அதிலிருந்து இரத்தக் கூழ் ஒழுகிற்று. மற்றைய குண்டு இடது மார்பில் பாய்ந்திருக்க வேண்டும். சட்டையின் மேற்புறம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. 

சேதமாகிப் போன மேல் சட்டையினூடு வெளுப்பான திரட்சியான மார்புத்தசைகள் தெரிந்தன. ஒரு ஆணின் ஸ்பா¢சத்தையோ, ஒரு குழந்தையின் இதழ்களையோ அனுபவத்தறிந்திராத மார்பகங்கள். 

ஆகக் கூடினால், இருபது வயதிருக்கலாம். 

OPD யிலிருந்து ஒரு டாக்டரம்மா ஸ்டெதஸ்கோப்பையும், வார்த்தைகளையும் சுழற்றி வீசிய வண்ணம் வந்தாள். அவளுக்கு நிறைந்த களையான முகம். கூடவே ஒரு தாதி. முகம் முழுக்க பருக்களும் பீதியும்.

பிறகு சனங்களும் ஈக்களும். சனங்களுக்கென்ன, எல்லாமே புதினம் தான்! ஈக்களுக்கு ருசிமிகுந்த சாப்பாடு!!

ஆளரவம் அடங்கிக் கொண்டிருக்கும் ஒடுங்கிய நீண்ட ஆளோடிகளினூடாக நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னே நடுத்தர வயதைக் கடந்த மெலிந்த உயரமான ஒரு பெண்ணும், அவளைத் தாங்கியபடி வேறும் ஒரு பெண்களும் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு தொடைகளில் கூனிய முதுகுடன், கால்களைப் பதனமாக எடுத்து வைத்து தள்ளாடித் தள்ளாடி மெல்ல அவள் நடந்து கொண்டிருந்தாள். அவர்களைக் கடக்கும் போது ஓரப்பார்வையால் பார்த்தேன். 

அந்தப் பெண்ணின் முகத்திலுள்ள தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய் துடித்தன. வாயும் கண்களும் அகல விரிந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கிப் போய்க்கிடக்க, வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது. 

அவளுக்கு நோயல்ல, துக்கம்! தாங்க முடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும் அப்படியான துக்கங்களை முழுமை வெளிக்கொணர முடியாது. அனேகமாக அவளது கணவனோ, குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ, துப்பாக்கிச் சூட்டிலோ மிக மோசமாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இறந்து கூடப் போயிருக்கலாம். 

நான் ஒரு பத்தடி தூரம் கடந்திருப்பேன். பின்னாலிருந்து 'ஐயோ ஐயோ ஐயோ' என ஈனஸ்வரத்தில் மூச்செடுக்க முடியாத அவதியுடனம் அவசரத்துடனும் ஒரு குரல் பிறந்தது. வர வர அதன் ஸ்தாயி கூடி உரத்த வீரிடல்களாகத் தெறிந்தது. ஒடுக்கமான ஆளோடியின் இருபுறமும் உயர்ந்திருந்த சுவர்களுக்குள்ளும் கூரையின்கீழும் திரிகின்ற அசுத்தமான காற்று அந்த அவலக் கூக்குரலினால் மேலும் அசுத்தமாக்கப்பட்டு என் நெஞ்சினுள் புகுந்து கொண்டது. 

இன்னும் ஒரு நொடிகூட அந்தக்காற்றை என்னால் சுவாசிக்க முடியாது. என்னால் எதையும் காணமுடியாது. அவசர அவசரமாகத் திரும்ப நடந்தேன். 

வெளியே சைக்கிள் பார்க்கின் முன்புறம், தேவனைச் சந்தித்தேன். வெகுகாலத்துக்குப் பிறகு அவனைக் கண்டதில் சிறிய மகிழ்ச்சியும், பெருவியப்பும் ஒருங்கே எய்தினேன். கூடவே கொஞ்சம் பயமும்....


தேவனை நான் கடைசியாகக் கண்ட போது ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான். 

"அரசியல்லை தோத்தவனும், புறமொதுக்கப் பட்டவனும் இலக்கியத்திலோ அல்லது வேறேதாவது கலைத்துறையிலோ ஈடுபடவேண்டியது அவசியம்...., மச்சான்" என்றான். 

பிறகு, "அதுக்கிடையிலை நான் செத்தாலும் செத்துபோவன் போல கிடக்கு" என்றபடி 'ஹோ...ஹோ' என போலிக்குரலில் சிரித்தான். 

கூடவே, "மாட்டன்..." என சங்கல்பமும் செய்தான். 

அதன்பின் இன்று தான் அவனைக் காண்கிறேன். முன்னரைவிட கொஞ்சம் பருந்தும், உற்சாகமாகவும் இருந்தான். வழக்கம்போல இதழ்கள் சிவக்க, வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பித் துப்பிக்கொண்டிருந்தான். 

தேவனை நான் முதன் முதலாகக் கண்டபோது அவனது 'அய்யா'வின் கைகளைப் பற்றிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சிலேற் மிகவும் பழையதாகவும் அழுக்கேறிக் கீறல் விழுந்ததாகவும் இருந்தது. புத்தகம்கூட மேலுறையை உரித்து விட்டும் பக்கங்கள் எல்லாம் ஓரம்மடிந்தும் காணப்பட்டது. எனது சிலேற்றும் புத்தகமும் புத்தம் புதியனவாயும் மிளிர்ந்தன. புத்தகத்திலிருந்து புதிய காகிதத்தின் இனிய மணமும், சிலேற்றிலிருந்து காய்ந்த மண்ணின் வாடையும் வீசின. 

தேவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காக வருவது கிடையாது வரும் நாட்களிலும் அனேகமாக வாங்கின் மீது ஏறி நிற்பது கட்டாயமாகப் பட்டது. எல்லாப் பாட வேலைகளிலும் அநேகமாக அடி வாங்கினான். கணக்குப்பாட வேளைகளில் அகோர அடி விழுந்தது. ஆனால் அவன் அழுவது கிடையாது. கல்லுளி மங்கன் போல முழித்துக் கொண்டே நிற்பான். அவன் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தவன். எனினும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு அவன் பாடசாலைக்கு வரவில்லை. 

அதன் பின், அவனது 'அய்யா'வுக்குப் பின்னால், அவனும் ஒரு பழைய, பொ¢ய 'கா¢யர்' பூட்டிய சைக்கிளில் ஓலைப்பறியுடன் வலைகளைப் பொதிந்து ஏற்றியபடி முன்னால் சற்றே வளைந்தவனாய் சைக்கிளை உழக்கிக் கொண்டு 'வீச்சு'க்குப் போகக் காண்பேன். அந்நாட்களில் தான் அவன் வெற்றிலை போடப பழகியிருக்க வேண்டும்.

தேவனது வீட்டுக்கு ஒரே ஒருதரம் போயிருக்கிறேன். அது எங்களது வீட்டிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்தது. ஒரே ஓலைக் கூரையின் கீழான ஒரு சிறு அறையும், சற்றே அகன்ற காற்றோட்டமான மாலும் தான் வீடு. அறையின் சுவர்கள் தென்னங்கீற்றுகளால் நெருக்கமாக அடைக்கப்பட்ட தட்டிகளினால் ஆனவை. மாலுக்குள் கிடந்த தீராந்திகளிலும் வேலிகளிலும் வலைகள் கிடந்து மீன் நாற்றத்தை ஈன்றன. பக்கத்திலே இன்னுமொரு சிறு கொட்டில். அது அடுக்களை. அதற்குள் நுழைவதெனில், ஆள்பாதியாக மடியவேண்டும். எந்நேரமும் அதற்குள் புகை வண்டிச் சுழலும். 

எனக்கொரு பழையவலை அவசரமாகத் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் நிறைய தக்காளிகள் இருந்தன. கிளிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருந்தது. வலைபோட்டால் கிளிவிழாது என அப்பு ஆலோசனை சொன்னார். ஆனாலும் ஒரே ஒரு கிளியாவது வலையில் விழவேண்டும் என நான் உள்ளூர ஆசை வைத்திருந்தேன். தேவனிடம் வாங்கப் போகும் வலையில் சிறு துண்டொன்றை வெட்டியெடுத்து 'கிளிக்கூண்டு' ஒன்றை செய்யும் உத்தேசமும் எனக்கு இருந்தது. அந்த வலையை கிளிகள் அறுக்க மாட்டா என அந்த இரண்டுங்கெட்டான் வயதிலும் பேதமையுடன் நான் நம்பினேன். 

மாலின் ஒரு மூலையில் ஒரு பழைய 'சன்லைட்' பெட்டியும் அதற்குள் நிறையப் புத்தகங்களும் கிடந்தன. அவை எல்லாம் தேவனின் புத்தகங்கள்! பள்ளிக்கூடத்தில் மாடுபோல் அடிவாங்கிய தேவனால் இவ்வளவு புத்தகங்களைப் படிக்க முடிகிறதா? 

பிற்காலங்களில் அவனை அடிக்கடி இலக்கியக் கூட்டங்களில் காண நேர்ந்தது. நான் எண்ணியது போல தேவன் மக்கு அல்ல. அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கித் திரும்பப்பட்டிருந்தன. 

இன்னும் கொஞ்ச காலம் போனதும், அவனது சைக்கிளின் பொ¢ய 'கா¢யர்' வைக்கப்பட்டது. அவனது "அய்யா" வுக்கும் அவனுக்கும் ஒத்து வரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து செல்லத் தக்கவாறு உருமாற்றப்பட்டது. அத்துடன், ஹாண்டிலில் ஒரு பொ¢ய துணிப்பை தொங்கிய வண்ணம் இருந்தது. அது சிறிய, கனமான சில பொருட்களைச் சுமந்தது. 

ஒரு நாள், அவனது வீட்டின் பக்கமாக இருந்து பெரும் இடியோசை போன்ற சத்தத்துடன் கூடவே புதை மண்டலம் எழுந்தத. தீயில் கருகிய சருகுகள் வெகு உயரத்துக் கிழம்பி காற்றினால் அடித்து வரப்பட்டதையும், பலர் கூடி சத்தமிடுவதையும் கேட்டேன். அதற்குப் பிறகு வெகு நாட்களாக தேவனைக் காணவில்லை. அவனது "அய்யா" 'அவனைக் கண்ட இடத்திலை வெட்டுவன்' எனச் சொல்லித் திரிந்தார். அவர்களது சொற்ப சொத்துக்களான வலைகளும், அந்தச் சிறிய கொட்டில் வீடும், துணிமணிகளும், தேவனது புத்தகங்களும் அந்த விபத்தில் நாசமாய்ப் போயின. 

அதற்குப் பிறகு, 'ஒப்பந்தம்' முடிந்த கையோடே அவனைப் புத்தகக் கடை ஒன்றில் முன் கண்டேன். அப்போது தான், அவன் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். அன்று முழுக்க வெற்றிலை கூடப் போடவில்லை என்றும் சொன்னால் மிக மெலிந்து போய் இருந்தான். என்னிடம் கொஞ்சம் காசு 'கடன்' வாங்கினான். 

அதற்குப் பிறகு இன்று தான் காண்கிறேன். என்னுடன் தங்குவதற்கு தேவன் விரும்பினான். 


நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் பேய்களும் அத்து மீறிக் குடியேறிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வீடு மிகப் பொ¢யது. புதிய 'பாஷனில்' அமைந்திருந்தது. மேல் மாடியில் நான் மட்டும், கீழே ஒரு இளந்தம்பதிகளும், அழகிய துடியான பெண்குழந்தையும் வீட்டின் முன்புறம் 'பாஷனுக்கு' சற்றும் பொருந்தாத வகையில் ஒரு நீற்றுப் பூசினிக்காயில் குங்குமத்தினால் வரைந்த கோரமுகம் தொங்கியது. பேய்களுக்கு 'சாந்தி' செய்வித்ததை அது கட்டியம் கூறிற்று. சாந்தி செய்த பிறகு பேய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டனவாம். 

அதற்கு முன்னரே வெனில், தினம் தினம் இருட்டியதும் தாகத்துடன் யாரோ நாவைச் சப்புக் கொண்டுவதும், அங்குமிங்கும் 'தடதட'வென ஓடித்திரிவதும். உபாதைகளுடன் முனகுவதும் என சத்தங்கள் கேட்குமாம். கதவுகளும் ஜன்னல்களும் தம்பாட்டில் திறந்து 'படார்' என சாத்திக் கொள்ளுமாம். 

எனது அறையின் ஜன்னலைத் திறந்தால், பூஞ்செடிகள் வா¢சையாக வளர்ந்திருந்த முற்றமும், சுற்றுமதிலும், அநேகமாக மெளனமாகவே இருக்கும் பாதையும் தெரியும். கதவைத் திறந்தால், கால்வட்டமாக வளைந்தபடி மாடிப்படிகள் இறங்கி ஹோலுக்குள் போவதைக் காணலாம். அந்தக் கால்வட்ட விளிம்புடைய சுவா¢ன் சரிபாதியில் ஒரு கண்ணாடி அலுமாரி போல உள்வாங்கிய பீடம் இருக்கிறது. அதற்குள் செம்மஞ்சள் ஒளியில் குளிக்கின்ற கண்ணன்சிலை வேய்க்குழலை உதடுகளில் பொருத்தியபடி குறுஞ்சிரிப்புச் சிரிக்கிறது. 

அந்தக் கண்ணன் சிலை, இதே வீட்டில் முன்பு நடந்த கோரங்களுக்கு சாட்சியாக அப்போதும் குழலூதிச் சிரித்திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாகப் போயினவாம். இதே மாடிப்படிகளின் வழியாக இரத்த ஓடை குதூகலத்துடன் கீழிறங்கிப் போயிற்றாம். உட்கட்சிப் போராட்டத்தை சில துப்பாக்கிக் குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்தமாக பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடிகளுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் மயான அமைதி நிலவிற்றாம். அதற்குப் பிறகு அந்தப் பன்னிரண்டு பேரும் பேய்களாகி விட்டார்களாம். இல்லாத தொந்தரவுகள் எல்லாம் உண்டாக்கிக் காட்டினார்களாம். இரவானதும் சந்தடிகள் மிகச் செய்து தமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தைச் சொல்லிப் புலம்பினார்களாம். 

பிறகு குடியிருக்க வந்தவர்கள் சாந்தி செய்தார்கள். எனக்கும் குடியிருக்க ஒரு அறையும், கொஞ்சம் பயமும் கிடைத்தன. 

எனக்குப் பேய் பிசாசுகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தேவனுக்கும் இதையெல்லாம் சொன்னேன். 

"எனக்கு இப்ப ஒண்டிலும் நம்பிக்கை இல்லை மச்சான்" என்றான். 

தேவனின் 'அய்யா' வின் தகப்பனார்- இப்போது இறந்து போய்விட்ட அப்பு-பல பேய்க்கதைகளைத் தேவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாராம். அடிக்கடி அவர் பலபேய்களைப் பேய்க்காட்டிவிட்டு வெறும் பறியுடனும் காய்ச்சலுடனும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறாராம். 

ஒரு நாள், நல்ல நிலவு. அப்பு விடிகாலையில் வீச்சுக்குப் போக ஆயத்தங்கள் பண்ணிவிட்டு படுக்க எண்ணினார். வெள்ளி காலிக்கும் போது கனகன் வந்து கூப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறான். அப்பு, ஆச்சியிடம் அண்ணாந்து முகட்டு வளையைப் பார்த்தபடி படுத்திருக்கிறார். அன்றிரவு நாய்கள் மிகுதியாகக் குரைத்தன. ஆச்சி சுருட்டுப் பிடித்தபடி கால் உளைவு போக்க முணுமுணுத்தபடி தைலம் தடவுகிறாள். சுருட்டின் காரநெடியுடன் தைலத்தின் வாசனையும் சேர்ந்து அபூர்வமான கிறக்கும் வாசனை. அப்பு கிறங்கினார்.

"எடேய்!...கந்தப்பு...வாடா!" எனக் கண்டாயத்திலிருந்து கனகன் கூப்பிடுவது போலக் கேட்கிறது. அப்பு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தார். வலைகளைத் தூக்கித் தோளில் போட்ட வண்ணம் ஆச்சியைப் பார்த்தார். ஆச்சி நல்ல நித்திரை. தலைமாட்டில் குறைச் சுருட்டு கருகிப் போய்க்கிடக்கிறது. தீப்பெட்டியும், சுருட்டும், வெற்றிலைக் கொட்டப் பெட்டியும், திருநீற்றுச் சம்புடமும், வில்லுக் கத்தியும் எடுத்து 'மடியில்' பொதிந்து கொண்டு அப்பு முற்றத்தில் இறங்கினார். நிலவு வெளிச்சத்தில் கண்டாயத்தடியில் யாரோ நிற்பது தெரிகிறது. 

"டேய்....கந்தப்பு வெள்ளி காலிச்சுப் போட்டுது.... வாடா" என கனகனின் குரல் கேட்கிறது. அப்பு மடியைத் தடவிய வண்ணம் அவனுடன் போய்க் கொண்டிருக்கிறார். நிலவு வெளுறி ஒளியிழக்கிறதோ, அல்லது மேகங்கள் மூடி மறைக்கிறதோ? அப்பு வானை நிமிர்ந்து பார்த்தார். விடிவெள்ளி காலிக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாகப் பட்டது. பக்கத்தில் வருபவன் சுண்ணாம்பு கேட்கிறான். சுண்ணாம்பு எடுத்துக் கொடுத்தபோது தான் அவனுக்குக் கால்கள் இல்லாததை அப்பு கண்டார். விக்கித்துப் போனார். திரேகம் 'ஜில்' விட்டுக் குளிர்ந்தது. எவ்விடத்திலே நிற்கிறோம் என அறிய, சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே தண்ணீர் மினுங்குகிறது. குளிர்காற்றை அள்ளித் தெளிக்கிறது. மறுபடியும் பக்கத்தில் பார்த்தால், கூடவந்தவனைக் காணோம்!

"கந்தப்பா...வீசடா வீசு...நல்லா மீன் படும்!" என அசா£ரி மட்டும் கேட்கிறது. அப்பு அவதியுடன் நீருக்குள் இறங்கினார். 'தொளப்' என தண்ணீர் குழப்பத்துடன் ஒலியெழுப்ப மேலும் மிரண்டார். அரையில் கட்டிய நான்கு முழத்தையும் 'மடியில்' பாரங்களையும் சேர்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டார். திருநீற்றை எடுத்து நெற்றியில் தா¢த்துக்கொண்ட 'வைரவா' என உளமுருகி உரக்கக் கூவினார். 

"கந்தப்பா...கந்தப்பா" என கரையிலிருந்து குரல் நைச்சியம் பண்ணிக் கூப்பிடுகிறது. அப்புவுகுக்கு தேவாரங்கள் நல்ல மனனம் கோளது பதிகத்தை வா¢சைக் கிரமமாக பத்திலயத்துடனும், பயத்தால் நடுங்கும் குரலுடனும் பாடத்தொடங்கினார். பாடுகிறார் பாடுகிறார்... பயம் பறக்கிறது. விடிவெள்ளி மெல்ல உதயமாகி அப்புவுக்கு ¨தா¢யம் சொல்லிற்று. தூரே ஊரிலிருந்து கோழிகள் கூவி அப்புவுக்கு சுருதி சேர்த்தன. அப்பு கோளறு பதிகத்தை திரும்பத் திரும்பப் பாடுகிறார். கிழக்கு வெளுக்கிறது. மேனி விறைக்கிறது. அப்பு ¨தா¢யமாகக் கரையில் ஏறினார். உடல் நடுங்குகிறது. நடுங்கிய படியே வீட்டில் வந்து விழுந்தவர் தான். ஒரே குலைப்பன் காய்ச்சல். 

"அட....மேனே, இப்ப உந்த இஞ்சின் போட்டுகள் கடலுக்குள்ளை ஓடடா ஓடெண்டு ஓட...பேயும் இல்லைப் பிசாசும் இல்லை....நம்மோடொத்தவனுக்கு மீனும் இல்லை" என்று தேவனின் அப்புவின் கதை முடியுமாம். 

என்னுடைய அம்மாவின் தகப்பனார்-இன்னும் ஜீவியவந்தராய் தாடியைக் கோதிக் கொண்டிருக்கும் எனது அப்பு-ஒரு தரம் ஒரு பேய்க்கு துவரந்தடியால் விளாசியிருக்கிறார். அந்தப் பேய் வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென்னியைத் திருகுமாம். உடலைப் பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்குமாம், உடலை முறுக்குவதையும், வாய் பிதற்றுவதையும் நானே நோ¢ல் கண்டிருக்கிறேன். தொடர்ந்து "இங்கிலீசு மருந்து"க்கும் ஒத்து வராது. காய்ச்சல் குடிநீரை அம்மா சுண்டச் சுண்டக் காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப்பாள். அப்பாவோ வெனில், நல்ல தென்னஞ் சாராயத்தில் 'ஒரு அரை' எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். கிழவனார் ஆசையால் கண்கள் மின்ன சாராயக் கிளாஸை பதபக்குவமாக பற்றுவார். 

"போடா அங்காலை...எளிய வடுவா, வாய் பாக்காமல்..." என்று என்னை விரட்டுவார். பிறகு,தொண்டையைச் செருமுவதும், நாவைச்சப்புக் கொட்டுவதும் கேட்கும்.

சற்று நேரத்தில், "இஞ்சை வாடா மேனே...." என கிழவனார் ஆ¨சாயக்க் கூப்பிடுவார். அவரது முகத்திலிருந்தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும். ஒளியிழந்த கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இளிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளாசிய கதை நூறாவது தடவைக்கு மேல் எனக்கு விஸ்தாரமாகச் சொல்லப்படும். கேட்கக் கேட்க அலுக்காத கதை. அப்பு கதை சொல்லும் பாணியே அலாதி. அடிக்கடி நான் 'ஊம்' கொட்டி எனது ஆர்வத்தைக் காட்டி, அவரது வீரத்தையும் மெச்ச வேண்டியது அவசியம்!

அப்பு கல்வீட்டினுள் படுப்பது கிடையாது. வேப்பமரத்தின் குளிர் நிழலின் கீழ் கிழவனார் தனக்காக ஒரு கொட்டில் போட்டு வைத்திருக்கிறார். தீராந்திகளில் கலப்பையும், பிக்கானும், நுக்காலும், நாலைந்து துவரந்தடிகளும், இரும்புப் பூண் இட்ட கா¢ய ஏழுமுள்ளுக் கொட்டனும் சொருகப்பட்டிருக்கும். பாம்புகள் மாதிரி மாடுகளின் கழுத்துச் சங்கிலிகள் வளைந்தபடி தூங்கும். ஒரு பழைய உறுதியான நார்ப்பெட்டிக்குள் லாடங்கள். மாட்டின் கழுத்துச் சதங்கைகள்.... இன்னும் பல கிழவனாரின் அரிய பொக்கிஷங்கள் எல்லாம் உண்டு. அவையெல்லாம் அவருக்கு மிக இனியவை அவரது வாலிபத்தின் நினைவுகளைத் தூண்டுவனவல்லவா? அவை எவ்வளவு கதைகளை அறிந்திருக்கும்? எவ்வளவு பேய்களுடன் அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்!

"அப்ப நான் நல்ல வடக்கன் மாடுகள் ஓறிணை வைச்சிருந்தனான்...என்னைவிட உயரம்...மாவெள்ளை நிறம்...ஒரு நாளைக்கு ஒரு கடகம் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வேணும்...." என்று கதை தொடங்கும். 

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. எங்களது வீட்டுக்கு அப்போ மதில் கட்டப்படவில்லை. அலம்பரும் பனையோலையும் கொண்டு மிக நெருக்கமாகவும் கலா நேர்த்தியுடனம் அடைக்கப்பட்ட அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்தில், எங்களூரில் தோட்டவேலையும் வயல்வேலையும் குறைந்த வெயில் மிகுந்த ஆனி ஆடி மாதங்களில், எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து "அலம்பல் காட்டுக்கு" வண்டி பூட்டிப் போவார்கள். போகமுதல் வைரவர் கோயிலில் மடை பரவுவார்கள், ஒரு கிழமையோ, பத்து நாட்களோ பயணம். பானைசட்டிகள், அரிசி, நல்லெண்ணைய், பருப்பு, கருவாட்டுடன் போவார்களாம். 

ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம், நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற 'வடக்கன்' களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று 'கட்டை' பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?

நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதைகளும் தான். வண்டி நிறைந்த பாரம். 'வடக்கன்'கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் 'கம்'மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீரில் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார். 

வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார். 

"வேசைபிள்ளை, எடடா கையை... துவரங்கம்பாலை வெளுப்பன்."

அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று. 

"எளிய வடுவா..." என உறுமியபடி, ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தெரியாதாம். அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார். 

"நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?" என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார். 

"பயத்திலை கழிஞ்சு போடுவாய்" என பொக்கைவாய் சிரிக்கும். 

"இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய்பிசாசெல்லாம் எந்தப் பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது" என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார். 

இதையெல்லாம் நான் அடங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன். தேவன் வெகு சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு தொண்டைக்குள்ளாகவே ஒரு சிரிப்புக் சிரித்தான். பேசாமல் சிலநேரம் படுத்துக்கிடந்தோம். 

வெளியேயிருந்து இரவின் மிகவும் சூக்குமமான ஒலிகள் கேட்டன. இருந்தாற்போல சிறு தொலைவிலிருந்து ஒரு நாய் ஊளையிட்டழுதது. பிறகு இந்தத் தெருவிலிருக்கும் எல்லா நாய்களும் சேர்ந்து எச்சரிக்கையும், பயபிராந்தியும் கலந்த குரலில் குரைக்கத் தொடங்கின. எங்களது வீட்டின் பின்புறமாக சில நாய்கள் பயந்தடித்து ஓடியதால் ஏற்பட்ட துடியான காலடிச் சத்தங்களையும், அடித்தொண்டையிலிருந்து புறப்பட்ட அவற்றின் பீதி கலந்த முனகல் ஒலிகளையும் தெளிவாகக் கேட்டோம். 

ஒரு வெடிச்சத்தம் இருளை உறுக்கியது. நாய்களின் சந்தடிகள் ஓய்ந்தன. தெருவிளக்குகள் மட்டும் அச்சம்தரும் அமைதியைக் குலைக்க மாட்டாதனவாய் வெறித்துப் பார்த்தன. 

ஜன்னலை எச்சரிக்கையாகத் திறந்தோம். தெருவில் சிலபேர் கனமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டு ஓரங்களினாலும் அவர்கள் வா¢சையாகப் போனார்கள். நிழல்கள் போல, காலடி அரவங்களைப் கிளப்பாது, ஈசலைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளெனப் போயினர். சுற்றுச் சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும தோற்றமொன்றை அவர்கள் வெகு இலகுவாகக் கொடுத்துச் சென்றனர். 

யாரோ ஒருவன் பாடினான் போலும். அர்த்தம் புரியாத வேற்று மொழியில் ஒரு முரடான கரகரத்த குரல்....ஆனால் ஆத்மார்த்தமாக உணர்ச்சியைச் சிந்தும் வண்ணம் பாடிற்று. அனேகமாக அதுலொரு விரகந்தெறிக்கும் காதல் பாடல். 

விளக்குகளை அணைத்துவிட்டு சிறு பெருமூச்சுகளுடன் படுத்தோம். 

சற்று நேரத்தில், சற்றுத் தூரத்திலிருந்து இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. வெகுநேரம் வரை எமது காதுகளுக்குள் அந்தச் சத்தம் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டேயிருந்தது. 


விடிந்தது, தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாகச் சொன்னான். எனது சைக்கிளை சில நாட்களுக்கு இரவல் தரும்படியும் கோரினான். 

மிகச் சில நாட்களே என்னுடன் தங்கினான். நன்கு இருட்டிய பிறகு, சாப்பாட்டுப் பார்சலுடனும், அலைந்து திரிந்த களைப்புடனும், வியர்வை நாற்றத்துடனும், துர்மரணங்களைப் பற்றிய செய்திகளுடனும் வருவான். இந்தச் சில நாட்களில் தேவனது பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். 

தேவன் என்னை விட்டு மறுபடியும் பிரிந்து போனபிறகு வீட்டில் ஒரு விசித்திரமான விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ வாடைக் காற்று மாறி சோளகம் புறப்பட்டுவிட்டது. இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுகளும், விவா¢க்க முடியாத பயப்பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாகச் சோளகம் வீசிற்று. 

ஜன்னல்களும் கதவுகளும் தம்பாட்டில் திறந்து கொள்ள காற்று புழுதியையும் சருகுகளையும் அள்ளிக்கொண்டு வீட்டினுள் விசையாக நுழையும். 'தடார் தடார்' என ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கொள்ளும். சற்று நேரத்தில் தாமே திறந்து கொள்ளும். யாரோ சிலர் பிராணாவஸ்தையுடன் முனகும் அவல ஓலங்கள் கேட்பதைப் போலிருக்கும். மிக நெருங்கும் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் அவதியுடன், மூத்திரம் முட்ட சிலபேர் வீட்டினுள் தாறும் மாறுமாக தடுமாறி ஓடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. சிலவேளைகளில் சொட்டுச் சொட்டாக நீர் விரைந்து சிந்துவதைப்போல, ஆனால் மிகவும் பெருத்த உரப்புடன் குளியலறையிலிருந்து சத்தங்கள் வரும். 

எனதுடல் வியர்க்கும். இதயம் துடிக்கும். வேகவேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ மறுபுறம் திரும்பிப் பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக்கிடப்பேன். 

ஒரு தரம், ஒரு கனவு கண்டேன். 

தேவனை யாரோ சிலர் கூட்டிக் கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி. அது மார்கழி மாதமாக இருக்க வேண்டும். ஒரே பனிப்புகார். தேவன் மறுபடியும் மெலிந்திருக்கிறான். அவனது மேலில் சேட்இல்லை. வலையை தோள்கள் மீது போட்டிருக்கிறான். கிழிந்துபோன பழைய சாரன் உடுத்திருக்கிறான். அவனுக்கு கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறான். ஒரு நிறைந்த நீர்நிலைப்பக்கமாக அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் 'அடே தம்பி...வாடா...' என நைச்சியம் பண்ணும் குரலில் கூவி அழைத்தனர். அவன் மேலும் நீருக்குள் இறங்குகிறான். சாரனை கழற்றி தலையில் முண்டாசாக கட்டிக்கொள்கிறான். திருநீறு பூசிக்கொள்கிறான். ஏதோ முணுமுணுக்கிறான். அவர்கள் கைகளை வீசி வீசி அவனைப் பயமுறுத்த எத்தனிக்கின்றனர். மலநாற்றம் வீசுகிறது. மலநாற்றமா அல்லது பிணம் கருகும் நெடியா? அது மார்கழி மாதப்பனியா, அல்லது ஊர்கள் எல்லாம் சுட்டொ¢க்கப்படும் புகையா? எனக்கு மூச்சு முட்டுகிறது. ஒன்றுமே தெளிவாகத் தெரியமா டேன் என்கிறது. 

மிகப் பிரயாசைப்பட்டு கண்விழித்தேன். உடல் வியர்த்திருந்தது. மிகத் தாகமாக இருந்தது. நீர்க்குவளை இருந்த பக்கம் கைகளைத் துளாவி, அதை இருட்டில், நிலத்தில் உருட்டி உடைத்தேன். 


அடுத்த நாள் காலையில், தேவனின் நண்பன் ஒருவன் என்னைத் தேடிவந்தான். தேவனைக் கண்டாயா, என வினாவினான். 

மேலும் சில நாட்கள் கழித்து இன்னொருவன் வந்தான். இரண்டொரு நாள் கழித்து இரண்டு பேர் வந்து தேவனை விசாரித்தார்கள். 

அதற்குப் பிறகு நான் தேவனைக் காணவேயில்லை!

அத்துடன் நான் வீடு மாறிவிட்டேன். பேய்கள் பற்றி நான் மிகவும் அஞ்சுகிறேன். இரவுகளில் நிம்மதியின்றி தூக்கத்துக்கு போகிறேன். நடுஇரவில் விழித்தெழுந்து வேதனை நினைவு படுத்த முயற்சித்தவாறு, நெடுநேரம் புகைபிடிக்கிறேன்.

நன்றி - நூலகம்

கோசலை - ரஞ்சகுமார்


"குலம்!....மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே"

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். 

"கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்....மாடுகள் கத்துதெல்லவே!......"

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதிரி. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ¤ம் படிந்து பழுப்புநிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது. 

"குலம்!....கொஞ்சம் வைக்கல்.....

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான். 

"நீயே இழுத்துப்போடேன்...எனக்கு ஒரே அலுப்பு"

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள்.

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான். 

எவ்வளவு அருமையான மகன்!

அவன் ஏன் அப்படிப் போனான்?

ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே பனங்கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின்றன. மாலைநேரங்களில அம்மா அவ்விடங்களில் புல் செதுக்கிக் கொண்டு வரப்போவாள். சைக்கிள் ஓட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக்கிளில் சாய்ந்த படியே ரோட்டில் காத்து நிற்பான். அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங்கலாகத் தெரியும் போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான். 

அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக்கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்றாக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும், சந்தனமுமாக திரும்பி வரும்போது, சீலன் வீட்டில் 'பளிச்'சென விளக்கேற்றியிருப்பான். 

மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விகசித்துத் தெரியும்படிக்கு அவன் உட்கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும் பக்கத்திலே சைக்கிள் முன்சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளீரென ஒளிவீசிச் சிரிக்கும். 

மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி!

மாடுகள் கழுத்துமணிகள் கிணுகிணுக்க புல்லை அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும், கேட்கும் சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும், கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வெனக் கொக்கா¢க்கும். 'படபட' வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும். 

சுடச்சுட ஒரு கோப்பை தேநீர்...கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில்.....அருமையான தனது பிள்ளைகளுடன் அம்மா அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை!

எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயினவோ?

அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனாள். 

ஓரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு வேறு குணம் கொண்டவர்களாய் ஆகிப் போனார்கள்? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதிரித்தான் சீராட்டினாள். ஒரே மாதிரித்தான் உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான், கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, எண்ணெய் பூசிபடியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள். 

குலம் மட்டும் படிப்பை ஒரேயடியாகக் குழம்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடாமலே போனான். ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளையமகன் மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்குப் புரியவில்லை. 

சீலன் அமைதியாகப் படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தெரியாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பொ¢தாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும்....விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல. 

சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென்மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்....அம்மாவின் இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புணர்பூச நட்சத்திரம். 'இவன் பொ¢ய காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவன்' என அவனது சாதகம் சொல்லிற்று. 

குலம் அத்த நட்சத்திரம். அது தான் அவனிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ? அத்தம், அதமம் என்றார்கள் சாத்திரிமார். 

மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டிவிடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயிலில் வாடித் துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஓடித்திரியும் 'கர்ர்ர்' எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்க்கைகள் நீர் தேடிப் பறக்கும். 

குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஓய சில நாளாயிற்று. 

என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும்...அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர். 

குலத்துக்கு மிகவும் முரட்டுத் தலைமயிர். சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள்வாங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும், ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி. குலம் ஒரு மெக்கானிக் ஆகவேண்டி ஆயிற்று. அவனது மாமனைப் போல, நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில்லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானோ, என்னவோ? ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான். 

நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சைப் பிழக்கும்படி நெடுமூச்சு எறிந்தது. 

சீலன் ஏன் அப்படிப் போனான். 

அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக்கோலைப் பிடிங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், 'சில்லென' இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள். 

நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள். 

'சொதசொத' வென்ற மாரி காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது. 

மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பொ¢ய காரியவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன்னான். 

"வளர்ந்தாப் பிறகு நல்லது...மரநாய் வராதம்மா....கோழிகளுக்குக் காவலாயிருக்கும்."

தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்குத் தெரியும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று. 

அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது. 

வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக...எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்!

அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்தமாக முடுக்கி விட மாட்டான். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து எதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் 'பளபள' வென மின்னுமாறு சைக்கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.

அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்துபோய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட சுவரோடு சாய்ந்து வைக்கப்பட்டு விட்டது. 

குலத்துக்கு சைக்கில் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம், காரோ, வானோ, மோட்டார் பைக்கோ....காற்றைக் கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்பான். 

சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப்பெரு மூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். புரியாத பேதை. அழகிய சிறு மொட்டு. 

சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனான்?

அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சரியாகவே இல்லை. பா£ட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. 

எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தெரிந்தது. 

பா£ட்சையை நினைத்துக் கலவரப் படுகிறானே? ஏன், நன்றாகத்தானே படித்தான்!

பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவுநேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக்கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சாரீரமே மிதந்து வருகிறது போல...உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென....அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என....அவனுக்காக எங்கோ ஒரு அரிய நங்கை வளர்ந்து வருகிறாள் என...அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என....

சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பா£ட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல்...என்று ஏதாவது?....அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள். 

"நேரமாகுதெல்லே மேனே...."

சரியாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான், வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை. 

மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான். 

"போயிட்டு வாறன் அம்மா....."

"வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ...."

பிறகும் ஏன் நிற்கிறான்......

"நேரமாகுதெல்லே...."

"நான் போறன்....." மொட்டையாக முணுமுணுத்தான். 

மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள் முடுக்கால் திரும்பி மறையுமுன் 'சட்' என ஒருதரம் திரும்பிப் பார்த்தான். 

அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினாள். 

வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள். 

சீலன்!

என்னவாயிற்று இன்று இவனுக்கு?

மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டுப் போனானோ? 

திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது. 

"ஏன் மேனே தலையிடிக்குதோ....."

"சாச் சாய்....."

குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான்.

"இரு கோப்பி போட்டுத் தாறன்...."

"........"

"இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?"
அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான்.

"அப்ப ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?"

"......."

"காசு....கீசு....ஏதாவது வேணுமோ?"

சிரித்தான் அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன. 

"தங்கச்சி எங்கை அம்மா......?"

"ப்ச்...உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்"

"......"

"ஏன்"

"சும்மா தான்"

"அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு....நேரம் போகுது....."

ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்!

"நான்......போ-ற-ன்....அம்மா!"

வெடுக்கெனத் திரும்பிச் சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்கிறதென....

அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தெரிந்தது. 

அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவங்களைச் சுருக்கினாள். 

மாலையில் யாவும் புரிந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக்கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப்பினான். 

வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சரிபண்ணிக் கொண்டான். 

"சீலன்....இதை...இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்...."

"ஆங்!. சீலன் எங்கையப்பு..."

"......"

"ஐயோ! என்ரை பிள்ளை...."

அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைத் குனிந்தவனாய் விடுவிடென விரைந்து போனான். 

அம்மா பதைத்தாள் கிரீச்சிட்டாள். 

"சீலன் எங்கையப்பு...."

பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினான். 

"சீலன் எங்கையப்பு...."

இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது. 

இவ்வாறான எத்தனை அன்னையா¢ன் சோகங்களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது.

"ஐயோ, என்ரை சீலன் எங்கே...."

சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள். 

இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று. 

"சீலன் எங்கை?" 

அவளுக்குத் திருப்பிதயான பதிலைத் தர ஒருவரும் இல்லை.

"சீலன் எங்கை?"

அம்மாவின் பா¢தாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினார்கள். 

அவளுக்குப் புரிந்தது சீலன் எங்கே போனான் என்று! இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப்போயினர். 

பிறகு,

அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூடப் போய்விட்டதாய்....

வெறுமை,

மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கிக் கொண்டு வரப் போவாள். முழுத் தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள். 

அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாருமில்லை.

அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்கு பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக. சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும்...மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும்.... முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும்...இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்...

அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள். 

வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித்திரியும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய அடையாளங்களும்...சாணியும்...

அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது. 

கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். "சூ" என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கா¢ப்புகளாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும். 

அம்மாவே தனியாக, அவற்றின் கூடுகளில் அடைக்கவேண்டி இருந்தது. 

புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேஜையின் மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ஒரு ரேடியோ. அருகிலே மகள் அமர்ந்திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்! 

அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை. 

அம்மா வரவர மெலிந்தாள். கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க்கொண்டிருந்தாள். 

இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ விபா£த எண்ணங்கள் தோன்ற பெருமூச்சுகள் விடுவாள். 

குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும் புரியவில்லை. எப்போதாவது மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை வருவான். அம்மா அரைத்தூக்கத்தில் அவஸ்தையுடன் புரளும்போது கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஓயும். குலம் 'திமுதிமு'வென உள்ளே வருவான், அம்மாவுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமலே...அம்மா முகத்தைச் சரியாக ஏறிட்டுக் கூடப் பார்க்காமலே...கைகளில் பணத்தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஓலைப்பாயை விரித்து, தலையணைகூட இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி....கால்களை ஆட்டியபடி...மயிரரும்பும் மார்புகளும் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான். 

இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறானே, அது மாதிரி! ஒரு காட்டுப் பிறவி"

* * * 

இப்போ,

குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் விரியும். அடிவயிறு குலுங்கும். 

'அவர்கள்' அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கன ரகவாகனங்களின் உறுமலைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் "மகன் எங்கே?" என உறுக்கியபடி அவர்கள் போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக் கூட்டிச் செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது. 

"கடவுளே!...நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு..."

ஊரில் தினமும் இரவுநேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் 'கிண்' என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய் விடுகின்றது. 

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன. 

அம்மாவுக்கு மிகவும் பா¢ச்சயமான அந்த வயல் வெளிகளிலே, பனங் கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல்களிலே பொடியன்கள்' குண்டு வெடிக்கவைத்துப் பழகுகின்றார்கள் என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல்லினர். 

சீலனும் அவர்களுள் ஒருவனான இருக்கலாமோ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால் சீலனைக் கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை. 

அவன் எந்த ஊரில் குண்டு வெடிக்கவைத்துப் பழகுறானோ? அம்மா பிற ஊர்களை அதிகம் அறியாள். இந்தச் சிறு குடிசைவீடும்....முருகன் கோயிலும்.....புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும் ....பனங்கூடல்களும் ...திடல்களும் ...மாடுகளும் ...கோழிகளும் தான் அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளீட்டிய ஈடற்ற செல்வம். 

2

இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று. 

குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள். 

இவன் என்ன பிள்ளை? வீட்டுக்கு வருவதே குறைவு வந்தவுடன் விழுந்து படுக்கிறான். 

"அம்மா...பசிக்கிது" என ஒரு வார்த்தை!

ம் ஹ¤ம்.

பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே. இதுகூடப் புரியாது. ஒரு காட்டுப்பிறவி. 

எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ?

இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள். 

இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தெரிகிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் திரிவதை அம்மா பார்த்துக்கொண்டிருத்தாள். பூவரசயிலைகள் மங்கின நிலவொளியில் பளபளத்துத் தெரிகின்றன. 

அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கில் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஓடுவதை, நிலத்தைப் பிராண்டுவதை...அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். 

சிள்வண்டு ஒன்று கிரீச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது. நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினாள். 

செங்காரிப்பசு வேதனையான குரலில் கதறியது "எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். 

நடுநிசியின் மணத்தையும், உருவத்தையும் சத்தத்தையும் அம்மா உன்னிப்பாக கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு வழுவி வழுவி வேலிக்குள் வருகிறதோ?....அம்மாவுக்கு ஒரே பயம்!

குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண்டினாள். 

அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. நிலமும், காற்றும் வானும் அதிர்கின்றன. அடிவயிறு குலுங்குகிறது.


சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே, பிசாசுகளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு திரிய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துக்களை எவ்வாறு சிரிப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்? இவ்வாறு வேகத்தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்? 

"கடவுளே"....எவளெவள் பெத்த பிள்ளையளோ,...இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்...."

குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க, அருவருப்பான சத்தம் அரை குறையில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல. 

அம்மாவுக்கு உடல் 'பட்'டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு சொல்லிற்று. 

எழுந்து மேசையை நோக்கிப் போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினாள். இறங்கி முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போத்திக்கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலைக் கால்களுக்கிடையில் நேராகத்தொங்கப் போட்டபடி செவிகளை வானோக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்பதும்...பிறகு ஓடுவதும்...கெட்ட சேதியன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்ததும் போலும்!

செங்காரிப் பசு மீண்டும் கதறியது. சிள்வண்டின் பிலாக்கண ஓசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டுவாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது. 

அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்துவிட்டது போலத் திமிறித்திமிறி மூச்சுவிட்டாள். 

சீலனை நினைத்து நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவும் பகலும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது, துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று. 

சற்றுத் தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத்தான நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொணடு காப்பாற்ற ஓடிக் கொண்டிருப்பதாக....

எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.

கோழிஒன்று பா¢தாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது. நாள் துரத்திக் கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன் திரும்பி வருகிறது. 

விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள். 

வயல் வெளியில் அம்மா நிற்கிறாள், சூரியன் பயங்கரமாகக் காய்ச்சுகிறான். மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக்கிற்று மழைநீர். அம்மா ஓடுகிறாள், ஒழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது ஒரு சிவப்பு நூல்போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போனாள். வெகுதூரம்...வெ-கு-தூ-ர-ம்...கடையில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகிறது; மழைநீரில் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது. 

கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீரிட நினைத்தாள். இயலாமல் போயிற்று. 

குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித்தாள். 

கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கா¢த்தன, கூவின. முதல் நாள் இரவில் பறிபோன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனைதாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டுவரும் ஒருவனைப் போல, சூரியன் மெல்ல மெல்ல உதயமாகினான். 

புரியாத பேதையான மகள் சோம்பல் முறியடித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், புரியாத பார்வையால் அளந்தாள். அம்மாவின் ஜீவன் எங்கே ஓடி ஓளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமாக தேகத்தைப் பூமியில் புரட்டி விடும். 

மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண் அம்மாவைத்தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா?

ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்குத் துரத்த வேண்டியிருந்தது. கோழிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அம்மா யந்திரகதியில், அவற்றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப்போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும்...பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்...தூரே அர்த்தமற்றுப் பார்வை பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்...

சூரியன் யாருக்கும் பிரிவு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போரிட்டு தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை. 

சீலன் என்ன ஆனான்?

குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை?

அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின. 

தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்!

நாலாவது இரவு வேகமாக வந்தது.

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.

அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்து போய் ஒளித்துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து, 'சடக்' எனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டுப் பிடித்துக்கொண்டு போனான் போலும். 'கும்'பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது. 

வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. 'ஹோர்ன்' ஐ ஒலித்து, வந்துவிட்டதாகச் சேதி சொல்லிற்று.

அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். 

கடவுளுக்கு நன்றி! குலம் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறான்!

கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டுமல்ல வேறும் சிலர் வந்திருக்கவேண்டும். குசுகுசுவெனக் கதைக்கின்ற சத்தம். படலையை மெல்லத் தள்ளித் திறந்தனர். கூட்டமாக வந்தனர். 

யாரோ ஒருவனைக் கைத் தாங்களில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென எழுந்தாள். விளக்கை தூக்கி உயரப்பிடித்தாள். 

குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின்றனர். வலது கையை ஒருவன் மென்மையாகப் பற்றியபடி வந்தான் மணிக்கட்டுக்குக் கீழே இரத்தம் ஊறிப்போன ஒரு துணிப் பந்து!

ஐயோ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்ன வாயிற்று?

அம்மா அலற நினைத்தாள், முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. 

அம்மா அசைய நினைத்தாள், முடியவில்லை பாதங்களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து அறைந்ததுமாதிரி.

அவர்கள் ஓலைப்பாயை விரித்தனர். தலையணைகளைப் போட்டனர். குலம் பொறுக்க முடியாமல் முனகியபடி சரிந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலுரிந்திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினான். 

"அம்மா....."

தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. 

அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத்தான் அம்ம இமைக்க மறுக்கும் விழிகளால் அவர்களைப் பார்த்தாள். 

அவர்களை அம்மா அடையாளங் கண்டாள்! நடு நிசிகளில் ...யாருமற்ற வெளிகளில்....திரிகின்ற புதல்வர்கள்!!

ஓ! குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்தான்?

"கோப்பி வச்சுக்குடுங்கோ...."

அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னான். 

அவளுடைய முரட்டு மகன், புரியமுடியாத புதல்வன் கையைக் காவு கொடுத்து வந்திருக்கிறான்! தாகத்தால் தவிக்கிறான்!!

கடவுளே! அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்கமாட்டாயோ?

அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது. 

அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களைப் பெயர்ந்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஓரடி எடுத்து வைத்தாள். 'மொளக்'கென ஏதோ சுளுக்கிக் கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள். 

அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஓலைப்பாயை விரித்தனர். தலையணைகளைப் போட்டனர். பாயில் அம்மாவை மெல்லச் சரித்தனர். 

ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ?

அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர்ப் பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர். 

"கையிலையே வெடிச்சிடுத்தாம்..." ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள். 

குலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டு சொட்டாக கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது. 

முத்து முத்தாக சூடான கண்ணீர் அம்மாவின் கன்னங்களை நனைத்தபடி சிந்தத் தொடங்கிற்று. 


3

முதுகுப் பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகுவேகமாகக் கிழவியாகிக் கொண்டிருந்தாள். ஊரில் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சிரிப்பதில்லை. 

ஒரு அழகிய சிறுமொட்டு. புரியாத பேதை. வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள், ஏக்கங்கள். தாயின் வேலையில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத் தோள்களில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத்துடன், வாடிய முகத்துடன். கண்களில் பிந்திவிட்டதில் கலவரமும் பயமும் தெறிக்க, மார்பில் புத்தகக் கட்டுக்களை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஓட்டமும் நடையுமாக விரையும். 

ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக் கீழே அவனது ஒரு கரத்தைத் துணித்து விட்டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக் மிகவும் மூளைசாலி. அவசியமானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக்கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொரு முறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும். எதோ ஒரு வெறியும் காண்போரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஓலைப்பாயை விரித்தபடி தலையனைகூட இன்றித் தூங்கிப்போவான். 

வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை மிகவும் உக்கிப் போய்விட்டது. முற்றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும். 

ஒரு நாய். அதைக் கவனிப்பாரில்லை. எலும்பெடுத்துத் தெரிய மெலிந்துவிட்டது. சொறி பிடித்துவிட்டது. காதுகளில் உண்ணிகள் படையாகப் பெருகிவிட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டிவிட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப்பதோ, ஓடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும். 

அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின்றனர். கதறக் கதற ஒரு பசுவையோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக் கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை அழைக்கும். பா¢தாபமான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து அழும். 

இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும் மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஓலம் மெல்ல மெல்லத் தேய்ந்து தூரே போய் மறையும்.

அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள். 

குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக்கொண்டு பெயர் பெற்ற சாத்திரிமார்களைத் தேடிப் போகிறாள். 

சீலன் புனர்பூச நட்சத்திரம்! ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம் தான்!!

அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது! கடலைக் கிடக்க நேர்ந்தது! அதர்மர்களுடன் நெடூகலும் போரிட்டுக் கொள்ள நேர்ந்தது. 

வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும் வென்றான்!

சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்!

அவனும் பேதங்களைக் கடந்தவன், குரங்கும் வேடனும் அவனது தோழர்கள்!

ஓ! ஆயினும் ராமன் போ¢ல் அன்பு கொண்டவர்கள் அவன் பா¢வால் துன்புற நேர்ந்தது.

தசரதன்!...கோசலை!...சீதை!

குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார்கள் சாத்திரிமார்.

அவன் ராஜத்துரோகமான காரியங்களில ஈடுபடுவான் என்றும்......

மிகப் பொ¢ய கண்டங்களில் மாட்டிக்கொள்ள நேரும் என்றும்.....

மறியல் வீட்டுக்குப் போகின்ற பலன் கூட அவனுக்கு உண்டென்றும்.....

கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக்கின்றனவென்றும்......

நன்றி - நூலகம்

கபரக்கொய்யாக்கள் - ரஞ்சகுமார்


சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.

கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை. 

ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!

சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து 'சறுக்கீஸ்' விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதிரி லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும், வெற்றிலையும், அரிசி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. 'சாளி'யின் சாப்பாட்டுக் கடை, ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை; நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!

ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்றுப் போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி, தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன. 

பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரத்துக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும், எருமைத்தயிரும் காற்றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும். 

அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும், போகிற போக்கில் குசாலாக கண்ணடித்துவிட்டுப் போகிற விளையாட்டுக்காரப் பெண்ணைப்போல, சில நிமிட நேரங்களில் ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும்; துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதிரி. 

எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி 'சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து விடவிடென்று நடந்து போவான். தென்னந் தோப்புகள் தெரியும். அழகியருத்தி ஒருக்களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச் செதுக்கியிருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தெரியாத பற்றைகள். நம்மூரின் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள் வலு மிகுந்திருந்தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதிரி. எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தெரியும். 

ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னேவிரியும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பிரிந்துவருகிற பாதை, மார்பின் நுனிக்காம்பில் வலதுகைப் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கரி. இன்னும் போக ரோட்டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதிரி 'சளசள' சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். பெயர் தெரியாத ஆறு. தண்ணீரில் களிமண் நிறம் நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகிறதென மலைச் சிகரமென்று ஆசைகாட்டும். 

மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு 'ஜல்' என்று நீர் சரிந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச்ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம். உச்சியில் முத்தமிட்டுக் களைத்துப் பிரிந்து போவதென 'ஓ'வென்று அழுதவாறு தண்ணீர் பாயும். 

மற்றபடி எங்கும் போலவே இவ்வூரிலும் சனங்கள். சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!

திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கைகளைப் பூட்டி, ஒற்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள். 

காய்ச்சிய தேங்காயெண்ணெய்யைப் பூசி தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள், கடைசியில் 'களுசுருட்டு' கேட்பார்கள். 

ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள் மாதிரி பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்' உம் 'பன்சில்' உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமா¢கள். 

இந்தக் கபரக்கொய்யாக்கள் மட்டும்....?

எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தெரியாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.

தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்...' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்து கொண்டு, துருத்தித் தெரிகின்ற மூஞ்சியில் மூக்குகள் விரிந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தெரியக் கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும். 

நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெறிவன. 

அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல்மிகக் கொள்ளும்படி முன் கதவில் 'படீர்' என்று ஓசைஎழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங்களுக்கு விருந்து போடுகிறமாதிரி என்ன ஒரு வலிமையான சொடுக்கல்! கத்தி முனைகள் மாதிரி. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும். 

இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....!

கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள்மாதிரி வா¢சையாகக் காம்பராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி...மீன் வியாபாரிக்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது ஆரியவதி ஆமினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டுக் கழிய கடைசிக் கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டது போல் பொ¢ய மேசை...சுறுட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்குப் படுக்கப் பாய் விரிக்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்புகளாலும் பச்சை மண்ணாலும் 'அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதிரி பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்படியாக. 

சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு 'வயர்' ஓடியது, இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன. 

இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். "முணுக் முணுக்..." என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப் பிரித்துப் பிரித்து-...கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....

இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். "ஹ¤ம்" என்று கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கிச் சுழலும், சுவர்களும் செவிகளுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும் புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவா¢லே படியவிடும். 

நெலா கண்ன பா(?)
மகே அத்த திகெ நா(?)
அனே !ஐ தவ மல் பிப்பிங்!

சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்து போகும் நீரென சுவர்களைத் தழுவி இதமாகத்துளைத்துக் கொண்டு நாதம் பிரம்மமெனப் பெருகும். 

அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன!
எனது கைகள் பறிக்கவென நீளும்போது
அவை கூழங் கைகளாய்ப் போவதென்ன?
ஓ!.... அழகிய மலர்கள்,
இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன. 

கல்லா மேசைமீது அரைத் தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நீலக்கல்லு மோதிரம் சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன். 

"ஆர் அந்தப் பெட்டை? பக்கத்துக் காம்பராவிலை பாட்டுப் பாடிக்கொண்டு..."

"அவளரு மாதிரியான...பெட்டை!..."
'தனியவோ இருக்கிறவள்!.."
"சாய்...கனபேர் வந்து போவினமே..."
கனபேர் வந்துபோனார்கள்.

கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்..., ஒரு டீச்சரம்மா என எனக்குள் கணக்குப் போட்டேன். 

கட்டைக் காற்சட்டை போட்ட ஒரு பையன், 'அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு தின்னு...ராசா!" என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.

பிறகு,

தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை குத்தும்படி, தாடிவைத்த ஒருவன்...' காமா சோமாவென்று உடுத்துவான். 

சாறனைத் தூக்கிக் கட்டியபடி...தொடைகளில் 'பிலு பிலு' என்று உரோமம் மண்டித் தெரியும் ஒருவன்..., தலைமயிர் நீக்ரோமாதிரி சுருண்டிருக்கும். 

மைம்மலாக இருள் மெதுவாகச் சூழும்போது வருவார்கள். இராப்பொழுதுகள் அவளுக்குக் குறுகிப் போயின. சமையல் அன்றையப் போதுகளில் மணக்கும். தீய்ந்துபோகிற மீனின் வாசனை வரும். 

மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான். 

சனங்கள் பெரும் மர்மத்தைக் காண்பதைப் போலப் பார்த்தார்கள். 

பெருங்கோட்டையன்றைப் பிடிக்கும் திட்டமொன்றுக்காக, அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற மாதிரி தென்பட்டனர். 

கோட்டைகள் பிடிபட்டன!

றேடியோக்கள் கறுப்புக்குரலில் கத்தத் தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. சந்தைகளை வைத்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன் போனது கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின. 

றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும், ஜீப்புகளும் தென்பட்டன. 

பின் கதவைத் திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில் கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தெரிந்தது. வளைந்தபடி சூரியனை நோக்கிக் கையசைத்தபடி, ஆற்றாமையுடன் தலைவிரித்து காற்றைச் சாடும் தென்னைகள் அரற்றின. 

புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கா¢ய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல..., கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல...,

இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்துத் தெரிந்தன. 

ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ரின்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது. 

பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவா¢லே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக் கொண்டிருந்தது. 

மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில் ஒருகோடி சூரியர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். 

ஒரு கட்டில், வெள்ளை விரிப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். 'கூஜா ஒன்றை மூடிக் கவிழ்ந்தபடி ஒரு தடித்த 'கிளாஸ்'. சுவரோடு ஒட்டிப் பதிக்க அலுமாரி ஒன்று.

மற்றபடி எங்கும் தூய்மை. 

மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல...,

நண்பர்களை எண்ணித் துக்கித்திருந்தாள் போல...,

இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. 

குழம்பிக் குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொய்யாக்கள் வாலைச் சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன. 

சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வதுபோல இன்னுமொன்று. உறுமி உறுமி நெருங்கி வருவனபோல்...,

வெளியே சப்பாத்துக் கால்களில் சந்தடிகள் 'திமுதிமு' என்று கேட்டன. கதவை உதைத்துத் திறந்தார்கள்!

அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எரிச்சல் மிகக் கொள்ளும்படி கதவில் 'படீர்' என வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல...,

'மொடமொட' வென்று எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தனரென..., கட்டிலை கொரகொரென இழுத்துத் தள்ளுவதென..ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு போனது போல...,

காட்டுக் கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.

தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர்விழத் திளைத்து களிக்கினபோது, கள்ளத்தனமாக அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென......

....ஏதோ ஒன்று....

எந்நேரமும் சதா துள்ளலுடன், கூரிய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு, பீரிடும் வீரியத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை...பிணையல்களை அறுத்துவிட....!

பூமியில் விழுத்திப் புரட்டினார்களென...மூஞ்சியில் ஒருவன் பாரமாகக் குந்தியிருக்க கால்களை அகலவே பிரித்து அமுக்க... தொடைகளின் நடுவே...தொடைகளின் நடுவே... வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென.... பொறுக்க முடியாத வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன. 

கால்களைப் படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து தேய்ந்து போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச, அதுவும் போய்...

பிறகு,

வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும். 

நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூரியன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவந்தான். 

முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர். 

புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடைகளில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி...

சனங்கள் கந்தையை மறந்துபோய் இதைப் பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின. 

காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,

தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தெரிய...,

பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வவென வாயை 'ஆ'வெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக....,

எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக...

சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

வாலைச் சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையைப் பிய்த்தெடுத்துக் காகங்களை கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன!

சனங்கள்.
காமினி, அப்புஹாமி, ஆரியவதி ஆமினே....,
சுநீதா முதலாளி....அருள்..., சாளி,
சனங்கள்!
ஒருசாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!!


{கபரக்கொய்யா:-

இது முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன், முதலையைப் போல அவ்வளவாகத் தீங்கற்றது. ஆனால் உடும்பைப் போல சாதுவும் அல்ல. நீரிலும் நிலத்திலும் உயிர் வாழும். மலைப்பாங்கான ஆற்றோரக் காடுகளில் மிகவும் பெருவாரியாகக் காணப்படும். அசிங்கங்களை உண்டு உயிர்வாழும். சிங்களப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணலாம்.]

நன்றி - நூலகம்