பிரபஞ்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரபஞ்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நீரதன் புதல்வர் - பிரபஞ்சன்


அலுவலகத்தைவிட்டு வெளிவந்தான் மூர்த்தி. வாசலில் நின்றிருந்த போலீஸ்காரன் அடித்த வணக்கத்தை அசிரத்தையாக எதிர்கொண்டான். தெருவில் இருட்டு இல்லை. அந்த நாட்டு முதல் அரசர் பணி செய்யும் பகுதி என்பதால், தெரு இருளாமல்பார்த்துக் கொள்வார்கள். ஆனால், தெருவில் நாய்கள் அதிகமாகி இருக்கின்றன. மனிதகுலத்துடன் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டு இருக்கும் அவைதான் எங்கு போகும்?

அவனுடைய நண்பன் செல்லில் வந்தான். வந்துகொண்டு இருப்பதாகவும் அலுவலகத்தில் இன்று வேலை அதிகம் என்றும் சொன்னான். ஆறு மணிக்கு வெளிப்பட்டிருந்தால், அலுவலக காரில் சென்று சோழ பஜாரில் இறங்கியிருப்பான். ஆட்டோ பேசி ஏறி அமர்ந்தான். 'ஆச்சர்யமா இருக்கு சார், நீங்கள்லாம் ஆட்டோவில் போறது... முதல் அரசருடன் நீங்கள் இருக்கிற நிறைய போட்டோவைப் பத்திரிகையில் பார்த்திருக்கிறேன் என்றார் ஆட்டோ டிரைவர்.

''ஆட்டோ இல்லை தம்பி, பஸ்ஸில் போறதுதான் என் தகுதி. நண்பர் காத்திருக்கிறார். அதுக்காகத்தான்.''

சோழ பஜாரில், அந்தப் பழங்காலக் கட்டடத்தின் மேல் தளத்தில் நான்கு புத்தக விற்பனைக் கடைகள் இருந்தன. அதில் ஒன்று மூர்த்தியின் நண்பருடையது. மூர்த்தி உள்ளே போய் அமர்ந்ததும் சட்டென்று வெக்கை தாக்கியது. மேலே மொட்டை மாடி. வெயில் காலத்தில் வெக்கை, கோழி இறகுபோல் இறங்கும். கடந்த ஏழெட்டு ஆண்டுகளாகவே அடுத்த கோடைக்குள் ஏ.சி. போட்டுடுவேன் என்று சொல்லிவருகிறான் பரிமேலழகன். கைக்கெட்டும் தூரத்தில் இருந்த ஆர்.கே-வின் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான். 'அருமையான புத்தகம் என்றான். அழகான தயாரிப்பு. ஆனால், ரேக்கில் இருந்த நான்கு புத்தகங்களும் அப்படியே இருந்தன.

கடையைச் சாத்திப் பூட்டிவிட்டுப் புறப்பட்டான் பரிமேலழகன். இரண்டு பேரும் சோழ பஜாரின் லேண்ட்மார்க்காக இருக்கும் அந்த ஹோட்டல் பாருக்குச் சென்றார்கள். கோடை காலத்தில் பார்கள் நிறைந்து வழிவதற்கு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் மூர்த்தி. முடித்து எழுந்த இருவரின் இடத்தில் அவர்கள் அமர்ந்தார்கள்.

''என்ன சார் லேட்? வழக்கம் போலத்தானா?'' என்று விசாரித்தார் பாலு. அவர்கள் தலையசைத்தார்கள். பார் மிகவும் இரைச்சலாக இருந்தது.

''சாராயக் கடையில் இந்தச் சத்தம் இல்லை'' என்றான் மூர்த்தி.

''ஆனால், இங்கே வருகிறவர்கள் சற்று மேம்பட்டவர்கள் என்பது ஐதீகம்.''

''சாராயக் கடையில் பார்த்திருக்கிறேன். ஆயிரம் யோசனைகளுடன் வருவார்கள். சரக்கையும் பாக்கெட் வாட்டரையும் வாங்கிக் கொண்டு அப்படி ஒதுங்குவார்கள். என்ன காரணத்தாலோ குடித்து முடிப்பதில் அவசரம் காண்பிப்பார்கள். முன்னால் இருக்கும் சாராயக் குவளையை உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். உலகத்தில் ஒட்டுமொத்தக் கசப்பும் அந்தக் குவளையில் மிதப்பதை அவர் மட்டுமே அறிவார். குடிக்கிறது, எதையும் மறக்கிறதுக்கு இல்லை பரி. எல்லாத்தையும் நினைச்சுக்கிறதுக்கு!''

அவர்களுக்கு உரியது அவர்களுக்கு முன் வைக்கப்பட்டது. மற்றும் சுண்டல், முறுக்குகள். மூர்த்தி சிக்கனும் பரி மீனும் வாங்கிக்கொண்டார்கள். கூட்டம் குறைந்துகொண்டு இருந்தது. மேசைகளின் மேல் கவிழ்ந்து இருக்கும் பல்புகளைச் சுற்றும் புகையையே பார்த்துக்கொண்டு இருந்தான் மூர்த்தி. ஒளியூட்டப்பட்ட சிலந்தி வலையைப் போல இருந்த புகையின் சாம்பல் கோடுகள் மேலேயும் பக்கவாட்டிலும் கிளைத்து இருட்டில் கரைந்தது.

''ரொம்பக் களைப்பா இருக்குது. இன்னிக்கு வேலை அதிகம். ஆபீஸுக்குள் நுழைஞ்சவுடன் முன்னூறு பக்கப் புத்தகத்தைக் கொடுத்துட்டார் செகரெட்டரி. இன்னிக்குள்ள படிச்சு குறிப்புகள் எடுத்துக் கொடு. அரசர் டேபிளுக்கு ஏழு மணிக்குப் போகணும்னு சொல்லிட்டார்.''

''கிழக்கு ஆசியப் பிரச்னைகள். வென்டல்டாம் எழுதியது. நாளைக்கு தெற்கு ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் கோஷ்டி ஒண்ணு வருது. அவர்களைச் சந்திக்கணுமே அரசர்.''

அவர்கள் ரிபீட் பண்ணினார்கள்.

''இன்னிக்கு அ- நாட்டுத் தூதர் வந்திருந்தார். முதல் அரசரோட நட்புமுறையான சந்திப்பு...'' என்றபடிச் சிரிக்கத் தொடங்கினான் மூர்த்தி.

''எதாச்சும் தமாஷ் நடந்ததா?''

''சாதாரண தமாஷ் இல்லப்பா. சூப்பர் டூப்பர் தமாஷ்.''

தூதர் ஸ்டீபன், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் நாடுகளின் தூதுவர். நாம் மேலே இருக்கிறோமா. நம்மை ஆள்பவர்கள் மட்டும்தான் மேலே இருக்கிறார்கள். அவர், இரவு நேரங்களில் நம் ஊரின் வெளிச்சத்தை வாரி அடிக்கும் கூட்டங்கள், கல்யாணம், ஊர்வலம், வயசுக்கு வந்த பெண்ணைக் காரில் ஏற்றி நடத்தும் பவனிகள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். மின்சாரம் குறைந்து இருட்டில் வாழும் அவர் நாட்டுக்கு, மின்சாரம் பற்றிய புரிதல் தேவைப்படுகிறது. பேச்சு அதில் இருந்து தொடங்கியது.

''சார், உங்களுக்கு இந்த 'பவர் எங்கிருந்து வருகிறது. பவருக்கு எந்த முறையைக் கடைப்பிடித்துச் சேமிக்கிறீர்கள்?''

''பவர் என்று அந்தத் தூதுவர் சொன்னது... மின்சாரம் பற்றிதானே? மேலே சொல்.''

''நம் அரசர் என்ன சொன்னார் தெரியுமோ?''

'' 'என் பவர் இந்திரா காந்தியிடம் இருந்து மூப்பனார். மூப்பனாரில் இருந்து எனக்கு. இந்த நாட்டில் நான்தான் உச்ச பவர் உள்ளவன் என்றார். நான் சிரித்துவிட்டேன். அரசர் என்னைக் குழப்பத்தோடு பார்த்தார். அதைவிடப் பெரும் குழப்பத்தோடு அந்தத் தூதுவர் இருந்தார். பவர் என்கிற ஆங்கிலப் பதத்துக்கு என்னென்ன வேறு அர்த்தங்கள் இருக்குமோ என்கிற குழப்பத்தில் ஆழ்ந்துபோனார். சற்றும் அக்குழப்பத்துக்கு குறையாத மனோபாவத்தோடு இருந்தார்கள், அவரோடு வந்தவர்கள்.

தூதர் சிரித்துக்கொண்டார். கடினமான கேள்விகள், சூழல்கள் அவர் மேல் திணிக்கப்பட்டாலோ, அவருக்குத் தெரியாததைக் கேட்டாலோ, அவர் பதிலாகச் சிரிக்க வேண்டும் என்றே அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தூதர் மேலும் சிரித்துக்கொண்டார். வேறு விஷயத்துக்குத் தன்னை மாற்றிக்கொண்டார்.

''மதர் இறைவனடி சேர்ந்ததுபற்றி செய்திகளைப் பார்த்தோம். என்னுடையதும் எங்கள் நாட்டுடையதுமான வருத்தங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் சார்.''

அரவிந்தர் ஆஸ்ரமத்து அன்னை சென்ற வாரம்தான் காலமாகி இருந்தார். ஆனால், நம் அரசரின் அம்மாவும் போன வாரம்தான் காலமாகி இருந்தார். உனக்குத் தெரியும்தானே பரி? தன் அம்மாவைப் பற்றித்தான் தூதர் வருத்தம் தெரிவிக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நம் அரசர் பொங்கிவிட்டார். கேவிக் கேவி அழத் தொடங்கிவிட்டார்.

''பரதேவதை. போய்ச் சேர்ந்துட்டா. மூணு வருஷத்துக்கு முன்னால செத்துப்போன என் அப்பாவோடதான் என் அம்மா இருப்பா. பதினாறு குழந்தைங்க சார். நான் ஆறாவது, அப்பா கட்டட மேஸ்திரி. கொறைச்ச சம்பளம். எங்களை எல்லாம் ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பானு யோசியுங்க. வெச்சு ஆதரிச்சு மூணு வேளை கஞ்சி ஊத்த எனக்குக் கொடுத்துவைக்கலை.''

பக்கத்து மேசைக்காரர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தது, அவர்கள் சிரிப்பு.

மூர்த்தி தொடர்ந்தான், ''ஆனாலும் பாரு, பல விஷயங்கள் எங்களுக்குள்ள நடந்திருக்கு. அதை நானும் மறக்கலை. முதல் அரசரும் மறக்கலை. உயிருக்கு உயிரா அவர் நேசிச்ச சொர்ணா வரச் சொன்னாள்னு, இவர் அவள் வீட்டுக்குப் போனப்ப, திடும்னு சொர்ணாவோட அப்பா வந்து ஏகப்பட்ட களேபரம். விஷயம் வெளியே கசிஞ்சு அவர் அரசியல் வாழ்க்கை வீணாகிடக் கூடாதுன்னு அதுக்கு மறுநாளே ரிஜிஸ்டர் ஆபீஸ்லவெச்சு என் செயின், வாட்ச், மோதிரம் எல்லாத்தையும் வித்து அவர் கல்யாணத்தை நான் நடத்தி வெச்சதை அவர் மறக்கலை. அதனாலதான் பதவிக்கு வந்ததும் என்னைக் கூப்பிட்டு நல்ல சம்பளம் கொடுத்து வெச்சுக்கிட்டார். அதே போல கட்சிப் போராட்டத்துல கலந்துக்கிட்டு நான் ஜெயிலுக்குப் போனப்ப, அது எனக்குக் கல்யாணம் ஆயிருந்த நேரம். ஆறு மாசம் என் குடும்பத்துக்கு அவர்தானே சோறுபோட்டார். நாங்க ரெண்டு பேருமே எங்களை மறக்கலை!''

பாரை விட்டு வெளியே வந்தார்கள். பரிக்கு விடை கொடுத்து அனுப்பினான்.

வீடு தூரத்தில் இல்லை. நடக்கலாம் என்றது, இரவுத் தெருவும் குளிர்ச்சியான காற்றும், மழை வரலாம் போலத் தோன்றும் சூழலும். இரவுகளில் மட்டும் வேறு முகம் காட்டும் வீடுகளிடம் அதுகுறித்து கேட்க வேண்டும். நிறைய நாய்கள் தெருவில் தென்பட்டன. சில தூக்கத்தில் இருந்தன. சில இவனை நண்பனைப் போலப் பார்த்தன. சில நாய்களின் பார்வையில் நெருப்பு கனன்றது. சில, இவனை அலட்சியப்படுத்தின. பூமியின் மேல் மூர்த்தி என்கிற மனிதன் பிறக்கவே இல்லை. அவன் நம் முன் நடக்கவே இல்லை என்பதுபோல அவனைப்பார்த்துக் கொண்டே அவனைப் புறக்கணித்தன.

குழந்தைகளின் விடுமுறைகளைக் கொண்டாட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும் மகாலட்சுமியை நினைத்துக்கொண்டான். வாசனைப் புல் போன்றது அவள் கூந்தல். முட்டை ஓடு போன்றவை நகங்கள். குழந்தைகள் அமைதியாக உறங்கிக்கொண்டு இருப்பார்கள். மகிழ்ச்சியாக நாளைய காலையை எதிர்கொள்வார்கள். விடுமுறைக் காலங்களில் மட்டும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள். ஆபீஸ் சகா ரத்னாவுக்கு நாளை காலை புரோக்கரைப் பார்த்து வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். லேடீஸ் ஹாஸ்டல் வாழ்க்கை, ஷூக்களில் குடும்பம் நடத்துவது மாதிரி இருக்கிறது என்றாள். அற்பக் கணவன்... செயலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை, பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவா தற்காலிகமாக வைத்திருப்பது என்று அரசரிடம் சொல்லி, நிரந்தரப்படுத்த ஆவன செய்ய வேண்டும். நான் இப்போது அரசருக்கு நெருக்கம் என்று உலகமே நினைக்கிறது. அரசர் அடித்துச் சேர்த்த கஜானாவில் பாதி எனக்கானது என்று நினைக்கின்றன நட்பும் சுற்றமும். அலுவலக மேஜையைத் திறந்தால், தவளைகள் குதித்து வெளியேறுகின்றன. ஜன்னல் வழியாகப் பாம்புகள் நுழைந்து, அலுவலக அறைக்குள்ளேயே புற்று கட்டுகின்றன.

மூர்த்தி வீடு வந்து சேர்ந்தான். பாக்கெட்டைத் துழாவி, சாவியை எடுத்து, சிரமப்பட்டுக் கதவைத் திறந்தான். வீட்டு வாசலில் ஒரு பல்பைப் பொருத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டு, உள் விளக்குகளை எரியவிட்டான். தண்ணீர் குடித்தான். கைலிக்கு மாறினான். படுக்கையில் தலையணைகளை மேடாக அடுக்கிச் சாய்ந்துகொண்டு, படித்துக் குப்புறக் கவிழ்த்துவைத்து இருந்த 'காந்திக்குப் பிறகான இந்தியா என்ற புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினான்.

இரவு ஒரு மரவட்டையைப் போல மெள்ள மெள்ள ஊர்ந்துகொண்டு இருந்தது. திடுமென நாய் ஒன்று குரைத்து அடங்கியது.

அவசர நிலையின்போது ஆபத்துக்கு உள்ளானவற்றில் பத்திரிகைச் சுதந்திரமும் ஒன்று. முதல் வாரத்திலேயே அரசு, பத்திரிகைகளுக்கு முன் தணிக்கையை அறிமுகம் செய்தது. செய்திகள் எவையென்று அரசாங்கமே வகுப்பெடுத்தது. தணிக்கைக் குழுவில் இருந்த அறிவாளிகள், தக்காளி விலை ஏற்றம்பற்றிய செய்தியைக்கூட அபாயகரமான செய்தி என்றார்கள். சோ ராமசாமி அரசியல் சட்டத் திருத்தங்கள்பற்றிய, ஒரு தேசிய விவாதம்பற்றிய கேலிச் சித்திரத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பிவைத்தார். தேசிய விவாதத்தில் இரண்டு பேர், ஒருவர் இந்திராகாந்தி, மற்றவர் சஞ்சய் காந்தி மட்டுமே விவாதத்தில் கலந்துகொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். பெயர் அற்ற ஒரு ஜனநாயகவாதி, 'டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், மரண அறிவித்தல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 'D.E.M.O’ கிரேசி மரணம். வருத்தமுடன் அஞ்சலி செய்வோர், அவர் மனைவி டி.ருத் (Truth) மகன் எல்.ஐ. பெர்ட்டி (Liberty), மகள்கள் ஃபெய்த் (faith), ஹோப் மற்றும் ஜஸ்டிஸ்.

படித்துக்கொண்டு இருந்தவன், புத்தகத்தின் முக்கியமான பகுதியில் கோடிடுவதற்காக எழுந்து மேசை மேல் இருந்த பென்சிலை எடுத்தான். வெளியே நாய்கள் மிகப் பலமாகக் குறைத்தன. கூடவே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மூர்த்தி மணியைப் பார்த்தான். நள்ளிரவைத் தாண்டிக்கொண்டு இருந்தது காலம். சட்டையைப் போட்டுக்கொண்டு வந்து கதவைத் திறந்தான். மங்கிய வெளிச்சத்தில் ஒரு போலீஸ் உருவம் தென்பட்டது. அவனது தோளின் வழியாக, வாசலில் காவல் துறை வாகனங்கள் இரண்டும் போலீஸ்காரர்களும் நிற்பது தெரிந்தது.

''யார்?'' என்றான் மூர்த்தி.

''அண்ணே, நான் நாராயணசாமி.''

நினைவு வந்தது. அண்மையில் ஒரு கிரிமினல் வழக்கில் சிக்கி, மூர்த்தியின் காலைக் கட்டிக்கொண்டு அழுத கண்ணீரால் இரங்கி காப்பாற்றப்பட்ட துறையின் ஒரு திருகாணி அவன்.

''என்னப்பா, இந்த நேரத்துல... அரசர் கூப்பிட்டிருக்காரா.''

''இல்லண்ணே, உள்ள வாங்க சொல்றேன்.''

மூர்த்தி அமர்ந்தான். நாராயணசாமி நின்றபடி சொன்னான்.

''மேலிடத்து உத்தரவு அண்ணே... உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கேன்.''

''மேலிடம்னா? அரசரா உத்தரவு போட்டார்?''

''அரசர் பக்கத்துல இருப்பவர் நீங்க. அவர் சொல்லாமே இது நடக்குமாண்ணே?''

தொடர்ந்து அவனே சொன்னான்.

''எனக்கு எஸ்.பி. உத்தரவு அண்ணே...''

''எதுக்குன்னு சொன்னாங்களா?''

''கஞ்சா கேஸ்தாண்ணே?''

''அது தெரிஞ்ச விஷயம்தானேப்பா... நாம், நமக்குப் பிடிக்காதவங்க மேல அந்த கேஸ்தானே போடுவோம். அதெல்ல நான் கேக்கறது. என்ன காரணத்துல அரசருக்கு என் மேல கோபமாம்?''

''சரியாத் தெரியலைண்ணே. அரசரைக் கேலி பண்ற மாதிரி அவர் முகத்துக்கு முன்னால, அதுவும் யாரோ வி.ஐ.பி. முன்னால...''

மூர்த்திக்கு நினைவு வந்தது.

அந்த பவர் டில்லியில் இருந்து முயல் குட்டி மாதிரி வருவது, அம்மாவுக்கு அதாவது மதருக்குக் கஞ்சி ஊத்தாத விவகாரம் நினைவுக்கு வந்தது.

''இப்படித்தான் அவர் முன்னால் சிரிச்சீங்களா?''

''ஆமா!''

''என்னண்ணே..?''

நாராயணசாமி, இடது பாக்கெட்டில் இருந்து சில பொட்டலங்களை எடுத்துவைத்தான்.

''கஞ்சாவை இப்படித்தான் பாக்கெட் பண்ணுவாங்களா?''

''ஆமாண்ணே.''

''நான் எத்தனை பொட்டலம் வெச்சிருந்தேனாம்?''

''நம்ம சண்முகம் நாலைஞ்சு பேரைக் கூட்டிக்கிட்டுக் கிளம்பி இருக்காண்ணே. கிடைக்கிறதைப் பொறுத்து...''

''சரி... அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு. முகம் கழுவிக்கிட்டு வந்துடறேன்.''

''பொறுமையா வாங்கண்ணே.''

திரும்பி வந்த மூர்த்தி, ஜோல்னா பையில் சில புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டான். 'காந்திக்குப் பிறகான இந்தியா புத்தகத்தையும் சேர்த்துவைத்துக்கொண்டான்.

''வாப்பா போகலாம்.''

அரசரின் மாளிகை ஓர் ஆற்றங்கரையில் இருந்தது. வெளிப்புறச் சுற்றுச் சுவர் தாண்டி காக்கைகள் பறக்கத் தயங்கின. சுவரில் முட்டிக்கொண்டு மூக்குடைந்த பறவைகள் அதிகம் இருந்தன. இருபுறமும் திறக்கத் தக்கதான இரு பெரும் கதவுகள் வாயிலை அடைத்தே இருக்கும். வாயிலுக்கு எதிரில் காவலர் துப்பாக்கியுடன் நிற்பார்கள். காலை ஒன்பதரை மணிக்கு இரண்டு பெரும் கதவுகளும் பெரும் சத்தத்துடன் திறக்கும். உள்ளிருந்து வரிசையாகப் புறப்பட்டு வரும் கார்கள், யுத்தக் களத்துக்குப் போவது மாதிரி உறுமிக்கொண்டு சீறிப் பாயும். அவற்றுக்கு முன் தெருவில் நாய், பூனை, ஈ., எறும்பு மற்றும் மனிதர்கள் யாரும் காணாதபடிக் காவலர்கள் பார்த்துக்கொள்வார்கள். அரை மணி முன்பாகவே, தெருவின் இருபுறமும் கடக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிடும். கல் பாவிய தெருவில், கானங்கள் மட்டும் மிதந்தபடி இருக்கும்.

வாயிலையும் தெருவையும் இணைக்கிற சிமென்ட்டு பால வளைவில் மக்கள் வேடிக்கை பார்க்கவும் வாழ்த்து கோஷம் போடவும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாகக் கைக்குழந்தையுடன் மகாலட்சுமி காணப்பட்டாள். காலை எட்டு மணிக்கே அவள் அங்கு வந்துவிடுவாள். கடும் வெயில் காரணமாகச் சமயங்களில் குழந்தை புழுங்கி அழும். சமயங்களில் அயர்ந்து உறங்கும். வெயிலில் இருந்து குழந்தையின் தலையைக் காக்க, தன் மேலையே போர்த்தியிருந்தாள்.

சில நாட்களில் ஒரு போலீஸ்காரன், தன் கைத்தடியால் மக்களை நெட்டித் தள்ளி, சத்தம் போட்டு, இல்லாத ஒழுங்கை உருவாக்கிவிட்டுப் போவான். மக்கள், அசைந்து அசைந்து மீண்டும் ஒரு புதுக் கும்பலை உருவாக்கிவிடுவார்கள். அரசர் கார் வளைந்து கடக்கும்போது, மகாலட்சுமி உடைந்து அழுவாள். அவள் அழுகையை அரசர் காண நேரும் என்று அவள் நம்பினாள். ஒரு நாள், ஒழுங்கை நிலைநாட்டும் அந்தக் காவலர், மகாலட்சுமியிடம் ''யாரும்மா நீ, என்ன வேணும்?'' என்றார்.

தன் கணவன் அரசரிடம் வேலை பார்த்ததையும் கஞ்சா வழக்கில் சிறையில் இருப்பதையும் அரசரிடம் மன்றாடித் தன் கணவரின் விடுதலை கோரவே, தான் அங்கு வருவதாகச் சொன்னாள். இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் வழிந்தது.

''மூர்த்தி சார் மனைவியா, நீங்க..?''

''உம்...''

''அடக் கடவுளே!''

சிமென்ட் பாலத்தின் தொடக்க முனையில், மரத்தடியில் தனியாக, அரசரின் கார் வெளி வரும்போது அவர் பார்வை படும்விதமாக மகாலட்சுமி நிற்க ஏற்பாடு செய்து தந்தார் காவலர். தொடர்ந்து முப்பத்தேழு நாட்கள், கோடை வானத்தின் கீழ் நின்று தினம் தோறும் அரசரின் காரைப் பார்த்ததும் அழுதாள் மகாலட்சுமி.

முந்தைய தினம் நள்ளிரவுக்கு மேல்தான் விடுதலை ஆனான் மூர்த்தி. ஜீப்பில் அவனைக் கொண்டு இறக்கிவிட்டுப் போனார்கள். களைப்பில் உறங்கிப்போனவன் காலை எட்டு மணிக்கு மேல் கண் விழித்தான்.

''நல்ல காபி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி'' என்றான் மகாலட்சுமியிடம்.

அவள் முகம் வாடியது. காபித்தூள் இல்லை. பால் இல்லை. காசும் இல்லை என்பதைப் புலப்படுத்தினாள் மகாலட்சுமி.

பத்து மணிக்கு மேல் பரிமேலழகனுக்குத் தொலைபேசினான் மூர்த்தி.

''பரி. விடுதலை ஆகி வீட்டில் இருக்கிறேன். வரியா சாயங்காலம் பேசுவோம். வீட்டுல பைசா இல்லை. இருக்கிறதை யாரிடமாவது கொடுத்து அனுப்பு. அவசரம்.''

அடுத்த அரை மணிக்குள் பரி, ஆட்டோவில் வந்து சேர்ந்தான். ''இதுல ரெண்டாயிரம் இருக்கு. இப்போதைக்குச் செலவுக்கு வெச்சுக்கோ.''


இருவரும் வெளியே கிளம்பிப் போய் காபி சாப்பிட்டுவிட்டு, காபியும் பலகாரமும் பார்சல் வாங்கிக்கொண்டுத் திரும்பினார்கள்.


குளித்து, ஒரு நூறு ரூபாயை மகாலட்சுமியிடம் வாங்கிக்கொண்டு, பஸ் பிடித்து அலுவலகம் போனான் மூர்த்தி. அவன் மேஜை சுத்தமாக இருந்தது. மேஜையில் ஏதோ ஓர் அறிக்கை இருந்தது. அதை மொழிபெயர்க்கச் சொன்னார் செயலர், தொலைபேசி வாயிலாக. அவன் குனிந்து வாசிக்கத் தொடங்கினான்.

சலசலப்பு கேட்டுத் தலை நிமிர்ந்தான் அவன். அரசர் வந்துகொண்டு இருந்தார். இவன் அருகில் வந்து நின்று, ''என்ன மூர்த்தி, நல்லா இருக்கியா...'' என்றார். அவன் தோளில் கை வைத்து.

''இருக்கண்ணே!''

''சரி, வேலையைப் பார்!'' என்றபடி நகர்ந்தார் அரசர்.

திடுமென அவன் அறையைச் சுற்றிலும் வெறுமை கவிழ்ந்தாற்போல இருந்தது.

அறிக்கையை ஆழ்ந்து வாசிக்கத் தொடங்கினான்!

நன்றி - விகடன்

கரிய முகம் - பிரபஞ்சன்

கதவு தட்டப்பட்டது.

'சார் சார் ' என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு, கதவின் அருகில் போனேன். கதவை ஒட்டி, சாருவும், குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சப்தம் கேட்டு அவர்கள் எழுந்து விடக்கூடாது, மெதுவாகக் கதவைத் திறந்தேன்.

வீட்டுக்காரர் நின்றிருந்தது புகைப்படம் போல் தெரிந்தது. நான் குடியிருந்தது இரண்டு மாடிவீடு. தரைப் பகுதியில் வீட்டுக்காரர் உறவினர் குடும்பமும், முதல் மாடியில் வீட்டுக்காரர் குடும்பமும், இரண்டாம் மாடியில் நாங்களும் குடியிருந்தோம். வீட்டுக்காரர் என்றதும் கடுமையான, பணத்தில் கறாரான் மனிதர் ஒருவரின் முகம் உங்களுக்கு நினைவில் வரலாம். வந்தால், அது தவறு. தமிழகத் தலைநகரில் சிதைந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் ஒருவர் அல்லர் அவர்.

'என்ன சார் ? ' என்றேன் நானும். என் குரலும் ரகசியக் குரலாக, நான் அறியாமலே ஆகியிருந்தது.

'பக்கத்து வீட்டில் திருடன் புகுந்திருக்கிறான். ஒருத்தன் உள்ளே இருக்கிறான். ஒருத்தன் நம்ம வீட்டு மொட்டைமாடியில் இருக்கிறான். கதவைச் சாத்திக் கொள்ளுங்கள். நான் சத்தம் போட்டால் மட்டும் கதவைத் திறவுங்கள். ஜாக்கிரதை. '

அவர், முன்னங்காலில் சப்தம் எழுப்பாமல் படியில் இறங்கினார். நான் கதவைச் சாத்திக் கொண்டேன். திருடன் என்றதும், இரவு நேரத்தில் மனம் சொரசொரக்கத் தான் செய்கிறது. அதுவும் கையெட்டும் தூரத்தில் அவன் இருக்கையில். பாம்பு, பேய்க் கதைகள் மாதிரித் திருடன் கதைகளும் சாஸ்வதமானவைதானே ? திருடன் என்பவன், முகமூடி அணிந்து கையில் கத்தி அல்லது துப்பாக்கி அல்லது உருட்டுக் கட்டை அல்லது சைக்கிள் செயின் என்று ஏதாவது ஓர் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவன் என்றுதானே கற்பிக்கப்பட்டிருக்கிறது.

கதவைச் சரியாகத் தாழ்போட்டிருக்கிறேனா என்பதை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன். கதவின் தரம், பலம் குறித்து எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே எனக்குக் கவலை ஏற்படத்தான் செய்தது. சாருவை எழுப்பலாமா என்று தோன்றியது. ஆனாலும், என்னைவிடவும் அதிகமாக உழைத்துக் களைத்துத் தூங்கும் அவளை எழுப்ப மனம் வரவில்லை.

என் போர்ஷனுக்கு மேல் இருக்கும் மொட்டை மாடியில் திடுதிடு என யாரோ சிலர் ஓடும் சப்தம் கேட்டது. அப்புறம் இரவைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு, திருடன் திருடன் என்ற அலறல் எழுந்தது. நான் ஜன்னல் திரையை விலக்கிக் கொண்டு வெளியே பார்த்தேன். எனக்கு அடுத்த வீட்டு மொட்டைமாடி மற்றும் மூன்றாவது வீட்டு மாடியில் நிறைய மனிதர்கள் தட்டுப்பட்டார்கள். குழப்பமாகவும் இருந்தது.

சாரு எழுந்து கொண்டாள்.

'என்ன சத்தம் ? ' என்றாள்.

'திருடன் ' என்றேன்.

அவள் சுருங்கியது தெரிந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டாள்.

'....கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இரு.. நான் போய்ப் பார்த்துவருகிறேன்.

'நானும் வர்றேன். '

'குழந்தைகள் தனியே இருக்குமே ? '

அவள் தயக்கத்துடன் 'சரி ' என்றாள்.

நான் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

'கதவைச் சாத்திக்கோ... '

படியில இறங்கித் தெருவுக்கு வந்தேன். மாடியைப் பார்த்தேன். சாரு, கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு வெளியே நிற்பது தெரிந்தது. அவள் துணிச்சல்காரி. அந்தச் சூழ்நிலையில் சாருவைப் பற்றிப் பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது.

தெரு சுத்தமாக விழித்துக் கொண்டு, விளக்கு வெளிச்சத்தில் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தது. திருடன் பிடிபட்டு விட்டானாம்.

அவரவரும் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் சம்பந்தப் பட்ட திருடர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரிடையர்டு ரெவின்யூ ஆபீசர் மகாதேவன், தான் சேலத்தி ஒரு பெரிய திருட்டுக் கும்பலைப் பிடித்த கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். யாருக்குத் தான் கற்பனை இல்லை ?

தெருமுனை திரும்பி ஒரு கூட்டம் வந்துகொண்டிருந்தது. திருடன் கையைக் கட்டி அழைத்து வந்தார்கள். திருடன் முகத்தில் மூடி இல்லை. வயசும் இருபதுக்கு ஒட்டித்தான் இருக்கும். மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்கிற சிறுவர்கள் மாதிரி நடுங்கிப் போய் இருந்தான். இவனா திருடன் ? 'ஐயோ பாவம் ' என்றிருந்தது.

வக்கீல் குமாஸ்தா புதைத்துக் கொண்டிருந்த சிகரெட்டால், அவனைச் சுட்டார். கூட்டம் 'சூ.....சூ ' என்றது. வீட்டுக்கார், 'அதுதப்பு.... ' என்றார்.

'சொல்லுடா... கூட வந்தவன் எங்கே ? இன்னும் எத்தனைபேர் உங்க கோஷ்டி ? ' என்றார் வரதராஜன்.

தமிழே தெரியாதவன் போலும். ஊமை போலும். அவன் வாயைத் திறக்காமல் இருந்தான். கல்லூரி மாணவர்கள் போலத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் திடுமென பாய்ந்து அவனைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அந்தத் திருட்டு சிறுவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அத்தனை அடிகளையும் வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு தரையில் அமர்ந்தான்.

எங்கள் வீட்டுக்காரர் அம்மாள்தான் திருட்டு நடந்ததை முதலில் கண்டுபிடித்தவள். ராத்திரி அடுப்பறையில் ஏதோ சத்தம் கேட்டு அவள் எழுந்திருந்தாள். தண்ணீர் குடிக்கப் போயிருக்கிறாள். குடித்துத் திரும்புகையில், அடுத்த வீட்டு பின் அறையில் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறாள். ஊருக்குப் போய் இருக்கும் ஸ்டேட் பாங்க் தம்பதிகள் வந்துவிட்டார்களா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாள். தபால்கள் அவர்களுக்கு வந்தவை, தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. பாகீரதி அம்மாளின் மகனுக்குக் குழந்தை பிறந்துவிட்டதா, என்ன குழந்தை என்று அறிய ஆவல் கொண்டிருக்கிறாள். தபால்களை எடுத்துக் கொண்டு, தெரு வாசலுக்கு வந்திருக்கிறாள். பூட்டு நாதாங்கியோடு பெயர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது. ஆகவே உள்ளே இருப்பது திருடர்கள் என்கிற சம்சயம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. நடுங்கிப்போன அவள், திரும்பி வந்து புருஷனை எழுப்பிச் சொல்லியிருக்கிறாள்.

அறைக்குள் இருவரும், மொட்டைமாடியில் ஒருவனுமாக இருந்துகொண்டு அவர்கள் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் மூன்று பேர். மேலே இருந்தவன் ஆள் நடமாட்டத்தை அவதானிப்பது. கீழே இருப்பவர்கள், பொருள்களை மூட்டை கட்டுவது அவர்களின் திட்டமாக இருந்தது.

வீட்டுக்காரர், சப்தம் போடாமல் தெருவுக்கு வந்தவர், அடுத்த அடுத்த வீட்டுக் கதவுகளைத் தட்டி உஷார் படுத்தியிருக்கிறார். ஒரு சிறு கூட்டம் கூடி இருக்கிறது. கூட்டம் பாங்க்காரரின் வீட்டுத் தெருக்கதவைச் சுற்றி தயாராக நின்றிருக்கிறது. எப்படியும் திருடர்கள் தெருவழியாகத் தானே வெளியேற வேண்டும் ?

மாடியில் இருந்தவன், அபாயத்தைப் புரிந்து கொண்டிருக்கிறான். விசித்திரமான குரல் கொடுத்துள்ளான். திருடர்கள், சுருட்டிய பொருளுடன் வெளியே வந்தவர்கள் பொருள்களைப் போட்டுவிட்டு, கூட்டத்தை இடித்துத் திமிறிக் கொண்டுஓடியிருக்கிறார்கள். கூட்டம் துரத்தியிருக்கிறது. ஒருவன் சிக்கிக் கொண்டான்.

அவன் பெயர் செங்கோடனாம். நிறைய அடிகளை வாங்கிக் கொண்ட பிறகு அவன் அதைச் சொன்னான். முகம் வீங்கியிருந்தது. உதடுகள் கிழிந்து இரத்தம் கசிந்தது. உடம்பை உதறிக் கொண்டு, மழைக் காலத்துச் சிட்டுக் குருவி மாதிரி அமர்ந்திருந்தான்அவன். யாரோ ஒரு மனிதர் வந்து அவன் முகத்தில் உதைத்தார். அவன் தரையில் விழுந்தான். அவன் கைகள் இன்னும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன.

வீட்டுக்கார் சொன்னார்.

'சார்...அப்படியெல்லாம் ஒரு மனுஷனைச் சித்திரவதை செய்யக் கூடாது. '

'திருடனுக்கு என்ன சார் வக்காலத்து ? '

'திருடனா இருக்கலாம். அவனும் நம்மைப் போல மனுஷன் தான். அவனைப் போலீசிடம் ஒப்படைக்கலாமே.. அதுதானே சரி... ? '

அவன்கள் காசு வாங்கிக் கொண்டு விட்டு விடுவான்கள். இவனை அடித்துக் கொல்வதுதான் சரி. '

அவர் அவனை மீண்டும் தன் பூட்ஸ் காலால் உதைத்தார்.

'சார்...இது அநியாயம் ' என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடிந்தது.

செங்கோடன் அழுக்குப் பனியனும், நாலு முழவேஷ்டியும் அணிந்திருந்தான். பனியன், அடி உதைகளால் கிழிக்கப்பட்டிருந்தது.

'தண்ணி....தண்ணி ' என்று முனகினான் அவன்.

வீட்டுக்கார அம்மாள் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மடக் மடக்கென்று சப்தம் வர அவன் அதைக் குடித்தான்.

'இவனைஎன்ன செய்வது ? '

'போலீஸ்ல ஒப்படைச்சுடலாம். '

ஒருவர் வந்து, 'ஏந்திரிடா ' என்றார்.

'என்னை விட்ருங்க அண்ணே.. போலீசுகிட்டே ஒப்படைக்க வேணாம்... இனி திருட மாட்டேன்... ' என்று திக்கித் திணறிச் சொன்னான் அவன். கை கூப்பினான்.

வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி நிறுத்தினார் ஒருவர். அவன் சரிந்து விழுந்தான்.

'ஐயோ ' என்றாள் வீட்டுக்கார அம்மாள்.

'வெறும் நடிப்பு சார் அது '

'உதைங்க... எழுந்திருவான். '

ஒருவர் பிரம்பை எடுத்து வந்து அவனைச் சுளீர் எனத் தாக்கினார். அவன் துடித்தபடி எழுந்தான்.

போலீஸ் ஸ்டேஷனை நோக்கி அந்த ஊர்வலம் புறப்படத் தயாராகியது. வீட்டுக்காரர் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

'உம் புறப்படுங்க ' என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு வீட்டுக்கார அம்மாள் வந்தார். அவர் கை டம்ளரில் டா இருந்தது.

'என்னடி இது ' என்றார் வீட்டுக்காரர்...

'டா... ஆனாலும் அந்தக் குழந்தையை அப்படிப் போட்டு அடிச்சிருக்கப்படாது ' என்றார் அந்த அம்மாள்.

செங்கோடன் டாயைக் குடித்தான்.

ஊர்வலம் தொடர்ந்தது.

 

காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள் - பிரபஞ்சன்

பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1

தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியிருக்கின்றன. ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்’ என்கிறது புறநானூறு. பண்பையும் பாட்டையும் இணைத்திருக்கிறார் டி. கே. சி. பண்பாட்டுக்கு மேத்யூ அர்னால்டு தந்த விளக்கம் மிகச் செறிவானது. தனிமனிதன் அறிவு, குணத்தை நிரப்பிக்கொண்டு தன்னை முழுமையாக்கிக்கொள்வதோடு, சமூக நலத்தை மேலும் பேணும் தன்மை. ஒரு இனம் அறிந்தவற்றுக்குள்ளேயே சிறந்ததும் சிந்தித்தவற்றுக்குள்ளேயே உயர்ந்ததும் பண்பாடு எனலாம் என்கிறார் அவர்.

o

நிறைந்த பல விழுமியங்களைக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய இருப்பாகக் காதலையும் திருமணத்தையும் குடும்பத்தையும் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் அழுத்தமாகவே சொல்கின்றன. சங்க இலக்கியங்கள் - பாட்டும் தொகையுமான அந்தப் பதினெட்டுத் தொகுப்புகளின் பாடல்கள் எழுதப்பட்ட காலம் கிறிஸ்து பிறப்புக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் பின்னால் இருநூறு வருஷங்கள் என்னும் அந்த ஐந்நூறு ஆண்டுக் காலகட்டத்துத் தமிழர் வாழ்க்கையை அச்சங்க இலக்கியப் பாடல்கள் சித்தரித்துள்ளன என்பதைப் பொதுவாகக் கருத்தில் கொள்ளலாம். தமிழ் ஆய்வுலகம் பெரும்பான்மை இந்தக் கால அளவை ஏற்றுக்கொள்கிறது.

இந்த ஐந்நூறு ஆண்டுக் காலப் படைப்புகள், தம் காலத்து யதார்த்தத்தைச் சித்தரித்தன என்று சொல்வதற்கில்லை. அவை ஒரு இலக்கிய மாதிரியை முன்வைத்தன; புனைவும் நாடகத்தன்மையும் யதார்த்தமும் கூடியவை அவை என்ற புரிதலோடு அப்பாடல்களைப் பயில்தல் வேண்டும். மற்றும் அவை தமக்கு முன்பிருந்த காலத்து வழக்கையும் மரபுகளையும் நினைவுகளையும் தம் சமகாலத்ததாகக் கொண்டும் புனையப்பட்ட பாடல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டே அக்காலத்துத் தமிழர்களின் -இந்து பண்பாடு என்னும் பெரும் தலைப்பில் அடக்கப்படும் காதல், ஒழுக்கம், திருமணம், குடும்பம் ஆகிய நிறுவனங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

o

சங்க இலக்கியத்தில் காதலாகிய ‘அகம்’ சார்ந்த பாடல்களே, புறம் சார்ந்த பாடல்களைவிடவும் அதிகமாக இருக்கின்றன என்பது கொண்டே, சங்க காலம் காதலுக்கு இரு கதவுகளையும் திறந்துவைத்த சமூகமாகவே தோன்றும். அக்காலத்து அறிவாளர்களாகிய புலவர்கள், மிகவும் உற்சாகமாகவே காதலைப் பாடி, காதல் நிரம்பிய சமூகத்தை உருவாக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சங்க இலக்கியத்தில் சுமார் 89 இடங்களில் காதல் என்ற சொல் பயின்றுவந்துள்ளது என்கிறார் பெ. மாதையன்2. காதல் என்பதைக் குறிக்கக் காமம் என்னும் சொல் 91 இடங்களில் வந்துள்ளது. இதேபோல ‘நட்பு’ எனும் சொல்லும் கேண்மை எனும் சொல்லும் ‘தொடர்பு’ என்பதும் காதலைக் குறிக்கப் பயன்பட்டுள்ளன என்றும் கூறுகிறார் அவர்.

சில காதலர்களை நாம் சந்திக்கலாம். ஒருத்தி தன் காதலைத் தோழியிடம் இப்படிச் சொல்கிறாள்: (குறுந்தொகை)

 

குறிஞ்சிப் பூக்கள் மலர்ந்திருக்கும் மலைத் தலைவனுடன் நான் கொண்ட நட்பு, நாம் வாழும் நிலத்தைக் காட்டிலும் அகலமானது. வானத்தை விடவும் உயர்ந்தது. கடலைவிடவும் ஆழமானது.

காதலின் தொடக்கத்தில் மிகப் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தங்கள் காதலர்மேல் காதலிகளுக்கு ஏற்படத்தான் செய்கின்றன. தலைவியின் காதல் உணர்வுக்குச் சற்றும் குறையாமல்தான் தலைவர்களின் நட்பின் மணம் இப்படி வீசுகிறது.

‘அழகிய சிறகுகளைக் கொண்ட வண்டே! பூக்கள் பலவற்றின் மணத்தையும் நுகர்ந்து, அவற்றின் தேனையும் உணவாகக் கொண்டு வாழும் இயல்பினைக் கொண்ட வண்டே. என்னோடு நட்பாக இருக்கும் மயில் போன்ற சாயலையும் அழகிய பற்களையும் கொண்டிருக்கிற என் இந்தச் சினேகிதியின் அழகிய கூந்தலைவிடவும் வாசனையுள்ள இன்னொரு பூவை நீ அறிந்திருக்கிறாயா? மாட்டாய். இருந்தால் எனக்கு அதைச் சொல்வாயாக’

- குறுந்தொகை

இது தலைவன் தலைவியின் நலம் பாராட்டிச் சொல்லும் வாசகம். தன் காதலியின் கூந்தலைக் காட்டிலும் மணம் கொண்ட வேறு ஒரு பொருள் பூக்களிலும்கூட இருக்க முடியாது என்பது அவன் தீர்மானம். அவனுக்கும் அவளுக்குமான புணர்ச்சி (உடல் புணர்ச்சிதான். இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் விரும்பியதை அவர்கள் நிறைவேற்றிக்கொண்டார்கள்.) நடந்து முடிந்த பிறகு, தலைவியின் இன்ப நலத்தைச் சொல்லிச் சிலாகிக்கிற பாடல் இது. தலைவிக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும்தான். இந்த இரண்டு பாடல்களையும் ஒப்புநோக்கும்போது, நமக்குப் பிடிபட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. தலைவி சொன்ன முதல் பாடலின் காதல் உக்கிரமும் அழகியல்ரீதியாக அதன் ஆழமும் திடநம்பிக்கையும் தெளிவும் தலைவன் நலம் பாராட்டலில் இருக்கின்றனவா என்பதே நாம் ஆராய வேண்டிய விஷயம். தலைவன் பேச்சில் அனுபவித்த திருப்தியும் ஒருவகை எக்களிப்பும் இன்னும் கூடுதலாக ஓடும் நதியின் நீருக்குள் புரளும் கிளிஞ்சல்போல, சத்தம் எழுப்பாத ஆண்தன்மையைக்கூட உணரக் கூடும்.

சங்கக் காதலர்களின் பிரச்சினை இங்குதான் தொடங்குகிறது. தனிமையில் அவர்கள் சந்திக்க நேரும்போது, அக்காலத்தில் மக்கள்தொகைக் குறைவும் காடுகள் நிறைந்த நிலப்பகுதியையும் கணக்கில் கொண்டால், மெய்யுறு புணர்ச்சி ஏற்படுதல் இயல்பும் இயற்கையுமே ஆகும். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் மெய்ப்புணர்வை ஏற்கவுமே செய்கின்றன. புணர்ச்சிக்குப் பிறகு, தலைவன் நியாயமான காரணத்தாலோ நியாயமற்ற காரணத்தாலோ சந்திப்பைத் தவிர்க்க முனைந்தால் தலைவிக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடுகிறது. காதல் வண்டு மற்றொரு மலருக்குத் தாவிவிட்டதோ என்று தவித்துப்போகிறாள். மீண்டும் சந்திக்கும்போது அவன் அவளிடம் ஆயிரம் சத்தியம் செய்கிறான்.

‘குவளை மலரின் மணம் வீசுகின்ற, திரண்ட கரிய கூந்தலையும் ஆம்பல் மலரின் மணம் தரும் பவள வாயினையும் உடையவளே. அஞ்சாதே என்று நான் சொல்லிய சொல்லே உனக்கு அச்சமூட்டியதோ? உன்னைப் பிரிந்தால் இந்த உலகமே எனக்குப் பரிசாகக் கிடைத்தாலும் அதை நான் புறக்கணிப்பேன். உன் நட்பே எனக்குப் பெரிது . . .’

பெண்ணுக்கு அப்போதைக்குச் சமாதானம் ஏற்படுகிறது. தொடர்ந்து நிகழ்ந்த சந்திப்புகள் அவளிடம் வேறுவகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிறைய காதலர்கள் நிறைய காதலிகளிடம் செய்த சத்தியங்கள் வெடித்த பஞ்சுபோலக் காற்றில் பறப்பதையும் உதிர்த்த மதுமயக்கம் நனைந்த வார்த்தைகள் நீரில் மிதந்து செல்வதையும் காதல் செய்த பெண் திடுக்கிடலோடு பார்க்க நேர்கிறது. ‘பொய்யும் வழுவும் புகுந்த காலம்’ என்று இலக் கணக்காரர்கள் இக்காலத்தையே சொல்கிறார்கள். மேலும் பெண்ணின் காதல் உறவு மற்ற பெண்கள் மற்றும் ஆண்களால் ‘அலர்’ தூற்றப்படுகிறது. சங்க இலக்கியம் இந்த மற்றவர் வாழ்க்கையை மகிழ்ந்து புறம் பேசுகிற வழக்கத்தை ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் குறிப்பிடுகிறது.

குறிப்பாகப் பெண்கள் அந்தரங்கம் பற்றிப் பிறர் பேசும் வழக்கத்துக்கு 2500 ஆண்டு வயது என்பதிலும் தமிழர் பெருமைப்படலாம். இப்படிப் பேசப்படும் அவர் பேச்சுக்கு மனம் நைந்துபோகிறாள் தலைவி. திருமணத்தை நோக்கிய அவளது நகர்வுக்கு ‘அலர்’ முக்கியக் காரணமாகிறது. புணர்ச்சி காரணமாகவும் கவலை காரணமாகவும் (தான் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற கவலை) உடல் இளைக்கிறது. உடம்பில் பசலை படர்கிறது. தாய் இதைக் கவனிக்கிறாள். பெண்ணுக்கு முருகு அல்லது அணங்கு போல ஏதோ காத்துகருப்பு தோஷம் என்று எண்ணி வேலனை (பூசாரியை) அழைத்துப் பூசை போட்டுக் (வெறியாட்டு) குறி கேட்கிறாள். தாய்மார்களுக்குத் தம் பெண்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும்கூடும் என்கிற நம்பிக்கையே வருவதில்லை. தாய்மார்களுக்குத் தம் பெண்கள் என்றும் குழந்தைகள். கொஞ்சம் கொஞ்சமாக விஷயம் புரிபடுகிறது, தாய்மார்களுக்கும். தாய்மார்கள் சிலர் பெண்களைக் கோல் கொண்டு அடித்ததாகச் சங்கப் பாடல்கள் உண்டு. காதலனுக்குத் தன் உடம்பில் சுதந்திரம் கொடுத்த பெண்ணுக்குப் பல சந்தர்ப்பங்களில் அவன் முகவரிகூடத் தெரிவதில்லை. அதோ அந்த மலைக்கு அந்தப் பக்கம் என்று பொத்தாம்பொதுவாக அவன் சொல்வதை அவள் கேட்டு அமைதி அடைந்திருக்கிறாள். ‘அவனை நான் விட்டுவிடுவேனா என்ன, ஊர், நாடு எங்கும் போய் வீடு வீடாகத் தேடி அவனைக் கண்டுபிடித்து விடமாட்டேனா?’ என்கிறார் சங்கப் பெண்மணி ஒருவர். ‘அடக் கஷ்டகாலமே. என்னை அறிந்த அவன், நாளை உன்னை எனக்குத் தெரியாதே என்றால் என்ன செய்வது? எங்கள் உறவை அறிந்தவர்கள் யாரும் இல்லையே. ஆங். . நாங்கள் உரையாடிக் களித்த அந்தக் குளத்தருகே ஒரு நாரை நின்று கொண்டிருந்தது’ என்று பேதைத்தனமாக நினைக்கும் தலைவியையும் சங்கப் பாட்டில் காண முடிகிறது.

பெண்ணின் காதல் விவகாரம் தாய்க்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது. தேரில் (இன்று காரில்) வந்த இளைஞன் ஒருவன் ஊர்ப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த சிலர் சொல்கிறார்கள். வீட்டுக்கு எதிரே தெருவில் ஒருவன் நின்றதாகப் பார்த்தவர்கள் வந்து சொல்கிறார்கள். குளிக்கப்போன இடத்தில் தலைவி அருவியில் வழுக்கிவிழ, எங்கிருந்தோ வந்த இளைஞன் ஒருவன் அவளைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றியதையும் தோழிகள் தாய்க்குச் சொல்கிறார்கள். ‘அடடா, அவள் கூந்தல் மாறுபட்டும் முலை முகம் மாறுபட்டும் வளர்ந்தும் இருந்ததைப் பார்த்துச் சந்தேகித்த அன்றைக்கே அவளை வீட்டுக்குள் (இற்செரிப்பு) அடைத்துவைக்காமல் போனேனே’ என்று வருந்துவார் தாய். வீட்டுச் சூழல் மாறி அனலடிப்பதையும் தாயின் கண்களில் சினம் வழிவதையும் காண நேர்ந்த தலைவி தலைவனுடன் உடன்போக்கில் (இன்றைய தமிழ் - ஓடிப்போதல்) அவன் ஊருக்குச் செல்கிறாள். காதலின் ஆழத்தை அறிந்த பெற்றோர் அவளையும் அவனையும் அழைத்து வந்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

o

தமிழ்ப் பண்பாட்டின், சங்கத் தமிழர் வாழ்க்கை முறையில் மிக முக்கியமானதாக அறிஞர் உலகம் கருதிவரும் தமிழர் தம் ‘களவு’ வாழ்க்கையை அது திருமணத்தில் முடிவுற்றமையை மிகச் சுருக்கமாகக் கண்டோம். பெற்றோர் அறியாமல் பெண்ணும் ஆணும் ‘ஊழ்’ வலிமையது காரணமாக எதிர்ப்பட்டுக் காதலாகிக் கரந்து புணரும் வாழ்க்கை நெறியே களவு ஆகும். பத்துப்பாட்டில் ஒன்றாகிய, கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டை, ‘ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது’ என்று பின்வந்தோர் பரவலாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

இயற்கைப் புணர்ச்சியையும் அது பற்றிய செய்திகளையும் தோழி அன்னைக்குச் சொல்லிக் காதலர்களின் களவு வாழ்க்கையை வெளிப்படுத்தும் பாட்டாகும் இது. இதைத் ‘தமிழ் அறிவித்தல்’ என்றே குறிப்பிட்டார்கள் என்றால், தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாகக் களவு வாழ்க்கை முறையைக்கொண்டிருந்தார்கள் என்பது விளங்கும். என்றாலும் இது குறித்து மேலும் விளங்கிக்கொள்ளச் சில புரிதல்களுக்கு நாம் வருதல் வேண்டும்.

1. சங்க இலக்கியங்களாகிய பாட்டும் தொகையும் (ஆக மொத்தம் 18 நூல்கள்) காதலை மிகுத்தும் மேல் வழியும் புளகாங்கிதத்தோடும் பாடினாலும் அக்காலச் சமூகம் காதலை முற்றும் ஏற்றுக்கொண்டதாகக் கருதுவதற்கில்லை.

2. இற்செரிப்பு எனும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்துவைத்துத் துன்பம் தருகிற துறை, அன்றைச் சமூகத்தில் நிலவிய வழக்கத்தையே சொல்கிறது எனில், பெற்றோர் பார்த்துவைக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொள்ளும் முறையே நீடித்துக்கொண்டிருக்கும் சமூக நிலையாகச் சங்கச் சமூகம் இருக்க வேண்டும்.

3. களவுச் செய்தியை அறிந்த தாய்மார்கள் தம் பெண்களைக் கோல்களால் அடித்திருக்கிறார்கள். இது காதலுக்கு அவர் காட்டிய முகம்.

4. அலருக்கும் அம்பலுக்கும் பெண்கள் இவ்வளவு அச்சம்கொள்ள வேண்டி இருப்பது சமூகத்துக்குப் பயந்தல்ல. மாறாகத் தம் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் என்றும் கருதலாம்.

5. உடன்போக்கு எனும் காதலர் வெளியேறுதல் திருமணம் நடக்கத் தடைவரும் என்று நிச்சயமான நிலையில்தான் நிகழ்ந்திருக்கிறது.

மாறிவரும் சமூகச் சூழலையே சங்கக் கவிதைகள் சித்தரிக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் சங்க காலத்துக்கும் முன்னால் பெண்களை, இள மகளிரைப் பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடைய இடுப்பில் கயிற்றைக் கட்டி மறுபுறக் கயிற்றைத் தங்கள் கையில் வைத்துக் காத்திருக்கிறார்கள் தாயார்கள். இரவு நேரத்தில் அவர்கள் கால்களில் கயிறு கட்டிக் காத்திருக்கிறார்கள். நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக் கயிறு மேகலை (ஒட்டியாணம்) ஆகவும் கால் கயிறு சிலம்பாகவும் மாறியது. பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் கழற்றும் சடங்கு ஒன்று இருந்துள்ளது. அதற்குச் சிலம்புக் கழி நோன்பு என்று பெயர்3 என்று கூறுகிற பாலசுந்தரம் அவர்களின் கூற்றால் பழங்காலம் என்கிற காலத்திலிருந்து சங்க காலம் எனப்பட்ட காலத்துக்கும் முந்தைய, சம காலத்திய தமிழர் எண்ணங்கள் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன என்று யூகிக்கலாம்.

பேராசிரியர் மாதையன் ஒரு குறிப்பை நல்குகிறார். குறுந்தொகையில் இரண்டு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றின் (136, 205) சாரம் இது.

‘காமம் காமம் என்று உலகத்தார் சிலர் அதை இழித்துப் பேசுகிறார்கள். அது அச்சமூட்டும் பேய், பிசாசு அல்ல. நோயும் இல்லை. அதி மதுரத் தழையைத் தின்ற யானைக்கு மதம் சிறிது சிறிதாகக் கூடுவதுபோல, மனம் விரும்புகிறவரைக் கண்டு அடைந்த பிறகு மனிதர்க்கு ஏற்படும் (மதம்போல) பரவச நீட்சியாகும் காமம்.

காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும். அது விருந்தே ஆகும்.’

இந்த இரு குறுந்தொகைப் பாடல்களும் முக்கியமானவை. காமம் குறித்து அதாவது சமூகத்தில் பெருகிவரும் காதல் - காதல் திருமணம் குறித்து எதிர்மறையாக விமர்சித்தவர்கள் இருந்துள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வதே இப்பாடல்கள். தவிரவும் ‘விருந்து’ என்ற சொல், ‘புதியது’ என்று பொருள் தந்து சமூகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிற புதிய (பெண் ஆண் காதல் கொள்வது, பிறகு திருமணம் செய்துகொள்வது) பழக்கத்தையும் புதிய சமூக நடைமுறை ஒன்று உருவாகிவருவதையும் உணர்த்துவதாக இருக்கிறது என்பதாக மாதையன் கருதுகிறார்.

இது மேலும் ஆராயப்பட வேண்டிய கருத்து என்றாலும் ஏற்றுச் சிந்திக்கத் தக்கதாகவே இருக்கிறது. மனித சமூகம் அதன் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டே வந்துள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் அறிவோம். அப்படி மாறிக்கொண்டே வந்த சமூகச் சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் புதிதாக வந்தது காதல். ஒரு காலத்தில் பாலுறவு அக்கணத்து மனம் விருப்பம் தேவை சார்ந்ததாக, உறவுமுறைகள் ஏதும் அற்றதாக, வரையறையற்ற புணர்ச்சிச் சுதந்திரமாக இருந்துள்ளது. புணர்ச்சிச் சுதந்திரம் சுருங்கிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் ஒருவன் ஒருத்தி என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த ஒருவன் ஒருத்தி கருதுகோள் அப்போது புதிதாக அமைந்துகொண்டு வந்த அரசுகளுக்கும் அதிகாரப் பிரயோகத்துக்கும் வசதியாக இருந்தது. குடும்பங்கள், ஒரு சின்ன அளவு அரசாங்கம். அரசாங்கத்தில் அரசன் முதன்மை என்றால், ஆண் ஆதிக்கக் குடும்பத்தில் கணவன் அதிகாரி. அரசனுக்கு ஆளப்படுபவர் மக்கள் என்றால் கணவன் ஆட்சிக்கு உட்பட்டவர் மனைவி. அரசனுக்குட்பட்ட அதிகாரிகள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை ஒடுக் குவதுபோல, தந்தைக்கும் தாய்க்கும் ஒடுக்குவதற்கு ஏற்றபடியாகப் பிள்ளைகள். தனிச் சொத்துரிமை வழக்கத்துக்கு வந்ததும் கற்பு என்கிற ஆண் இன்பக் களவுகளும் உருவெடுக்கின்றன. மன்னனின் அந்தப் புரங்கள், மனைவிகள், விருப்பப் பெண்கள், போரில் கொண்டுவந்த மகளிர்கள் என்று நிரம்பி வழிகிறது என்றால், குடும்பத் தந்தைக்கு அல்லது தலைவனுக்குப் பரத்தைகள். (ஒரு நல்ல விஷயம்: பரத்தைக்கு ஆண்பாலாகப் ‘பரத்தன்’ என்ற சொல்லும் அகநானூற்றில் இடம்பெற்றுள்ளது.)

தலைவனின் சொத்து அவன் வாரிசுகளுக்கே சென்று சேர்வதை ஒருவன் ஒருத்தி திருமணம் உறுதிப்படுத்தியது. பெண் தன் சுதந்திரத்தை உறுதிபட இழக்கிறாள் என்பதையும் அத்திருமண முறை உறுதிப்படுத்தியது.

o

சங்கத் திருமணங்கள் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.

காலையிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தோடுகூடிய நாளையே திருமணத்துக்கு நல்ல பொழுதாகத் தமிழர்கள் நம்பியிருக்கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். மகன்கள் பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக் கிறார்கள். சுற்றத்தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள். அன்றே முதல்(?) இரவு நடைபெறுகிறது.

இன்னொரு வசதியான வீட்டுத் திருமணம் இது. நெய்மிக்க வெண்மையான சோற்றினை இறைச்சியுடன் சேர்த்து ஆக்கி எல்லோரையும் உண்பித்தார்கள். புள் (பறவை) நிமித்தம் பார்த்தார்கள். வளர்சந்திரன் ரோகிணியோடு கூடிய நாளில், மண இடத்தை அழகுபடுத்தினர். கடவுள் வழிபாடு நடந்தது. மண வாத்தியம், முரசுகள் முழங்கின. மங்கள மகளிர் மணப் பெண்ணை நீராட்டினர். மணமகனுக்கு வெள்ளை நூலால் காட்டி நூலை (பேய் பிசாசுகளிடம் இருந்து காக்கும் நூல்) அணிவித்துப் புதுப் புடவையால் சுற்றினார்கள். அணிகலன்கள் பூட்டினார்கள். பெண்ணுக்கு வியர்வை தோன்றியது. அதைத் துடைத்துவிட்டார்கள். அன்றே முதல் இரவு நடந்தது.

சங்கத் தமிழர் திருமணம் இவ்வளவுதான். ‘மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டும் காலம் வரவில்லை . . . ஆனால் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும்தான் நடந்தது. சங்க காலத்துக்குப் பிறகு சுமார் 200 ஆண்டுகளாவது பிராமண சாட்சியாகத் திருமணம் செய்துகொள்ளக் கோவலன் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வைணவப் பிராமணக் கொழுந்தும் மாபெரும் கவியுமான ஆண்டாள் கண்ட திருமணக் கனவு சமூக வளர்சிதை மாற்றத்தை உணர்த்தும்.

வில்லிபுத்தூர் நகரத்தில் ஊர் முழுக்கத் தோரணங்கள் கட்டப்பட்டுப் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளை வதுவை மணம் என்றுதான் குறிப்பிடப்பட்டு விட்டது. பாளையும் கமுகும் மற்றும் முத்துச் சரங்களும் தொங்கவிடப்பட்ட பந்தலில் அவர் அமர்ந்திருக்கிறார். இந்திரன் முதலான தேவர் குழாம் எல்லாம் வந்திருந்து நாரணன் நம்பி சார்பாக மணம் பேசுகிறார்கள். மந்திரிக்கிறார்கள். நால்திசைகளில் இருந்தும் புனித நீர்க் குடங்கள் வருகின்றன. பார்ப்பன சிஷ்டர்கள் அவனுக்குக் காட்டிக் கட்டுகிறார்கள். மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ், மதுசூதனன் வந்து அவளைக் கைப்பற்றுகிறான். வாய் நல்ல பிராமணர்கள் மறை ஓதுகிறார்கள். ‘நாங்கள்’ தீவலம் செய்கிறோம். நம்பி என் காலை எடுத்து அம்மிமேல் வைக்கிறான். என் கையையும் நாராயணன் கையையும் என் தாய் மற்றும் சுற்றத்தார் இணைத்துவைக்கிறார்கள் . . .

ஆண்டாள் தன் சாதிக்குரிய சடங்குகளோடு கூடிய திருமணத்தைப் பார்த்து இருக்கக்கூடும். அப்படியே கனவும் காண்கிறாள். சில கற்பிதங்கள் இருந்தாலும் அவள் விரும்பிய திருமணம் இது.

o

தமிழர் திருமணத்தில் தாலியும் தீவலம் வருதலும் இல்லை என்பதையும் முக்கியமாகப் பார்ப்பனப் புரோகிதர் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே உறங்கி எழுந்ததும் தலைவிமார்கள் தங்கள் தாலியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்கள். தாலியின் மகிமையைப் பற்றியும் பேசிமாயும் நிர்ப்பந்தமும் அவர்களுக்கு இல்லை.

காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது. ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. பெண்ணின் பெருந்தகைமையை அவளது உடலுக்குள் பிரவேசித்த அதிகாரபூர்வமான கணவனின் உறுப்பு மட்டுமே தீர்மானித்தது. பெண் என்கிற மனுஷியின் மனமோ விருப்பமோ தேர்வோ தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் எப்போதும் உரையாடலுக்குட்படுத்தப்படவில்லை.

திருமணத்துக்குப் பிந்தைய தலைவிகள் தங்கள் கணவர்கள்மேல் காட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கப்பட்ட விசுவாசத்தில் வெகுகுறைவான சதமானமே கணவர்மார்களால் தங்கள் தலைவிகள் மேல் காட்டப்பட்டது என்பதற்கே நிறைய உதாரணங்கள் கிடைக்கின்றன. களவுக் காலத்தில் காதலன் தன்னைப் புறக்கணித்துவிடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்பட்ட பெண் கற்புக் காலத்தில் கணவன் தன்னைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந்து விடுவானோ என்கிற பதற்றத்திலேயே வைக்கப்படுவது தான் நம் சங்கப் பெண்களின் பேரவலம். குறுநில மன்னனும் பெரும் வள்ளலுமான பேகன், மனைவி கண்ணகி என்பவளைப் பிரிந்து பரத்தையரைச் சார்ந் தான். இதைக் கண்டிக்கும் (மிக மிக மென்மையாக) முகமாகக் கபிலர், பரணர், பெருங்குன்றூர் கிழார், அரிசில் கிழார் என்று அக்காலத்திய பெரும்புலவர்கள் பஞ்சாயத்து பண்ணிப் பேகனைக் கண்ணகியிடம் கொண்டு சேர்க்கிறார்கள். பரத்தையர் பிரிவு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காகவே சமூகத்தில் இருந்துள்ளது. அறிவாளர்களாகிய புலவர்கள் தலைவியர்கள் பால் கரிசனம் கொண்டார்களே தவிர, பரத்தையரின் அவலத்தைப் பாடவில்லை என்பது கருதத்தக்க ஒன்று. இன்னொன்றையும் கூடவே சொல்ல வேண்டும். இன்னல்களுக்குரிய வாழ்க்கையைக் கொண்டவர்களேனும் பரத்தையர், தலைவிகளைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்தோடு வாழ்ந்திருக்கிறார்கள்.

கற்பு வேடம் பூண்ட பெண்டிர் சற்றேறக்குறைய தெய்வங்களாகவே புனையப்பட்டுள்ளார்கள். தாய் வீட்டில் தேனும் பாலும் பருகி வளர்ந்த பெண், கணவன் வீடு வறுமையுற்றதால், மான் கலக்கிய கலங்கல் நீரைக் குடித்துப் பசியை ஆற்றுகிறாள் என்கிறது ஒரு சங்கக் கவிதை. அடுப்புப் புகையால் கண் சிவந்து, நீர் சொரிந்தாலும் தான் சமைத்த உணவைக் கணவன் மிக விரும்பிச் சாப்பிடுவதைக் கண்டு பேருவகை அடைகிறாள் ஒரு கற்புக்கரசி. கணவன் பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்தால் மனைவி கோபப்படக் கூடாது, ஊடல் கொள்ளலாம். அதற்கு மேல் தம் கோபத்தை வெளியிடப் பெண்களுக்கு அனுமதி இல்லை. போர் காரணமாகவோ கல்வி மற்றும் பொருள் சேர்க்கவோ கணவன் 12 மாதங்கள்வரை பிரியலாம். மனைவிகளுக்கு இந்த மூன்று உரிமைகள் இல்லை. மனைவி வீட்டுக்கு விலக்காக (கலம் தொடா மகளிர் என்று பெயர் இவர்களுக்கு) இருக்கும்போது, கணவன் பரத்தையரிடம் போகலாம். ஆனால் மனைவி குளித்து முழுகித் தயாராகிக் கணவன் என்னும் தெய்வத்தை வரவேற்கத் தயார் ஆக வேண்டும். வெறும் டி.எம்.டி. கம்பிகளுக்கு இருக்கிற மரியாதைகூடப் பெண்களுக்கு அக்காலத்திலும் இல்லை. எக்காலத்திலும் இல்லை.

ஆண் குழந்தை பெறும்போது பெண்ணுக்குக் குடும்பத்தில் ஓரளவு கவனிப்பு கிடைக்கிறது. ஆண் குழந்தை பெற்றவரே மங்கள மடந்தையர். மற்றவர்கள் அமங்களர்கள்.

கணவனை இழந்த பெண்கள் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு பாடல் - புறம் 146.

“சான்றோர்களே! உன் கணவன் இறந்துவிட்டான். நீ அவனது சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறு என்று சொல்லாமல் என்னைத் தடுக்கின்ற சான்றோர்களே! நான் என் கணவனுடன் எரிந்து போகவே விரும்புகிறேன். வெள்ளரிக்காய் விதையைப் போல, விரைத்த, தண்ணீர் பிழிந்த சோற்றைக் கீரைக் குழம்போடு, எள் துவையலுடன், சமைத்த வேளைக் கீரையைத் தின்று கொண்டு பாய்கூட இல்லாமல் பருக்கைக் கல் மேல் படுத்துக் கைம்மை நோன்பு இயற்றி வருந்தும் பெண்களைப் போல நான் இல்லை. என் கணவனை எரிக்கத் தயாராகும் இந்தத் தீ, எனக்குத் தாமரைப் பொய்கையைப் போன்றது. . . என்னைச் சாகவிடுங்கள். . .”

கைம்மை நோன்புக்கு அஞ்சி உயிரையே கொடுக்கச் சித்தமான இந்தப் பெண் சராசரிப் பெண் அல்ல. மன்னன் பூதப் பாண்டியன் மனைவி பெருங்கோப் பெண்டு! மன்னனின் மனைவிக்கே கைம்மை நோன்பு இத்தனை கொடுமை தரும் எனில் பிறபெண்கள் எத்தகைய துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்?

o

1. பல்வேறு மணங்களைக் கால வளர்ச்சியில் கண்ட தமிழ்ச் சமூகம் ஒருதார மண நிலையை எய்தியது சங்க காலத்துக்குச் சற்று முன்னர்தான். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் காதலிக்கும் சுதந்திரத்தை ஓரளவாவது பெற்றார்கள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காதல் திருமணத்தை விரும்பவில்லை.

2. சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள்- தலைவர், தலைவி இருவரும் உயர்குடும்பத்தினர். உழைக்கும் வர்க்கத்தினர் இழிசனர்கள் என்றும் புலையர்கள் என்றும் வினைவளர்கள் என்றும் அடியோர்கள் என்றும் இழிக்கப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டார்கள். அவர்கள் பற்றிப் பாடினால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற உயர்காதல் ஒழுக்கத்தை வைத்துப் பாடும் ஐந்திணைகளில் பாடாமல் கைக்கிளை, பெருந்திணை போன்றவற்றில் வைத்துப் பாடலாம். அந்த இழிசனர்களுக்குக் காதலின் நுணுக்கம் தெரியாது. அதோடு காதலை முழுமையாக எடுத்துச் சென்று பயிலத் தகுதி இல்லாதவர்கள் அவர்கள் என்கிறது, திட்டவட்டமாக இலக்கணம்.

3. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்பதே தமிழ் இலக்கணம்.

4. வைதீக இந்து மதத்தின் வருணாஸ்ரமக் கருத்துகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் அதிகம் கலக்காத, மிகவும் அரிதாகக் கலந்த இலக்கியமே சங்க இலக்கியம். அந்த வகையில் அது ஆரோக்கியமானது.

5. சமண சித்தாந்தங்களும் பௌத்தக் கருத்தாடல்களும் விரவிவருகிற காரணத்தால், சங்க இலக்கியம் உயர்தன்மையைப் பெற்றுள்ளது.

6. சங்க இலக்கியம் சுமார் 500 ஆண்டுக் காலப் படிநிலை வளர்ச்சியைப் பெற்றது. மக்கள் சார் சிந்தனையும் மன்னர் சார் சிந்தனையும் விரவிவருகிற இலக்கியமாகவும் இருப்பதற்கு அதுவே காரணம்.

7. 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டின் சில பகுதிகள் குறித்த சங்க இலக்கியம் இப்படியாக நமக்குச் சில தெளிவுகளைத் தருகிறது.

o

1. தமிழர் பண்பாடு, வையாபுரிப்பிள்ளை, தமிழ்ப் புத்தகாலயம், பதிப்பு 1949, பக். 51, 55.

2. சங்க இலக்கியத்தில் குடும்பம், என்.சி.பி.எச். பதிப்பு 2010.

3. தொல்காப்பியம், ஆராய்ச்சிக் காண்டிகை உரை, பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம், பதிப்பு 1989.

 

நன்றி காலச்சுவடு

தமிழ் இழப்பும் இருப்பும் - பிரபஞ்சன்

பற்பசையும் சோப்பும் தயாரிக்கும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தம் அண்மைத் தயாரிப்புகளில், மூலிகைகளைச் சேர்த்துப் புதுமை படைத்துள்ளன. பல உள்நாட்டு மூலிகைகளின் பட்டியலைச் சொல்லித் தங்கள் தயாரிப்புகளின் விஷேசத்தை ஊடகங்களில் உரத்துக் கூறுகின்றன. இதன் அர்த்தம் யாது? உள்நாட்டு மூலிகைப் பயன்களை இப்போது தான் அவை கண்டுபிடித்தனவா என்ன? இல்லை. உண்மையில், ஒரு நாட்டின் தட்ப வெப்பங்களில் விளையும் மூலிகைகளே, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் வைத்தியர்கள் பொறுப்பை ஏற்கின்றன. இயற்கையின் பரவலாக்கும் விசேஷ குணம் இது. ஆங்கில ஆதிக்கம், அழித்த பல சுதேசிப் பயன்பாடுகளில் மருத்துவமும் ஒன்று. நகரில், ஆங்கில பள்ளிகளுக்கு அடுத்தபடியாக முளைத்திருக்கும் தீமைகளில் ஒன்றான அலோபதி மருந்துக்கடைகள், இந்த உண்மைக்குச் சாட்சியம். எனினும், ஒரு ஆங்கில ஆதிக்கம் இருந்த பூமியில் பன்னாட்டு ஆதிக்கம் நேர, அவற்றில் ஒன்றான இந்த வியாபார நிறுவனங்கள், திடுமென தமிழ்நாட்டு மூலிகைகளைப் பயன்படுத்தும் காரணங்கள் என்ன? இரண்டு. ஒன்று, வித்தியாசம் எதையேனும் செய்து, வியாபாரத்தை விருத்தி செய்வது, மற்றது, இயல்பாகவே தமிழர்களின் பார்வை தம் மண்ணை நோக்கிக் திரும்பி இருப்பது.

இது ஒரு சாதகமான நல்ல அம்சம். வேப்ப எண்ணையைக் கொண்டும், துளசியைக்கொண்டும் சோப்புகள், பல மருந்துகளால் ஆன முகப்பூச்சிகள் எல்லாம் கடைவிரித்திருக்கின்றன. அண்மையில் கல்லூரி மாணவிகள், கைத்தரிப் புடவையில் ஈடுபாடு காட்டியது போல, இருபாலரும், சித்த ஆயுர்வேத மருந்துப் பொடிகளில் ஆர்வம் கொள்கின்றனர். கல்வி தொடர்பாகத் தமிழ் மொழிக்கு நியாயமாக முதல் இடம் அளிக்கக் கோரும் இயக்கம் கனிந்து கொண்டிருக்கிறது. சுதேசிக்கலர், பவன்டோ போன்ற பானங்களின் இடத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் முயற்சியில் கைப்பற்றி இருக்கின்றன. தமிழர் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில், வாழ்க்கை முறையில், ''தமிழம்'' இல்லை. தமிழ் மண்ணோடு, தமிழ்ப்பண்பாட்டோடு இணைந்த சாரம், தமிழர் வாழ்க்கையில் இல்லை. தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழக்கங்கள் தமிழர் வாழ்வில் இல்லை.

சேர சோழ பாண்டிய மற்றும் வேளிர்களோடு, அவர்களின் குழுப் பெயர்களோடு இணைந்த சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு போன்ற பெயர்களாலும், தம் ஊர், தம் சாதிகளாலுமே, தமிழர் சிந்தனை குறுகி இருந்தது. தமிழ் அறிஞர்களான புலவர்களே அன்று, இவற்றை இணைத்துத் ''தமிழகம்'' என்றார்கள். தமிழ் என்பது மொழியோடு இணைந்த வெறும் சொல்லாக அர்த்தப்படவில்லை. மாறாக, தமிழ், தமிழ் பேசும் இனமான தமிழர், அவர் வாழ்ந்த இடமான தமிழ் மண் என்பதாகவே தமிழ் என்னும் சொல், பொருள் கொண்டது. தமிழ் என்னும் சொல் இலக்கண, இலக்கியத்தையும், அகப்பொருள் பண்பாட்டையும் குறித்தது. பண்பு அடிப்படையில் தமிழ், இணிமை, வீரம் என்று பல பொருளைக் கொண்டது. சங்க காலம் தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு வரை, தமிழை முன்வைத்து, தமிழனைத் தமிழக மனிதனாக உருவகித்த செயற்பாடு, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சரிந்தது. அரிய, சமஸ்கிருத ஊடுருவல், தமிழர் வாழ்வை, அதன் சத்தான பல பகுதிகளை மாற்றிப் போட்டது. தமிழர்கள் தமிழை விட்டு வெளியேற்றப்பட்ட முயற்சிகள் 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி 700 ஆண்டுகள் நடந்து, 10-ஆம் நூற்றாண்டில் வெற்றியைக் கண்டது.

தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான, தமிழர் கண்டுபிடிப்பான, தாம் வாழும் வாழிடங்களுக்குச் சுற்றுப்புறத் தாவரங்களின் பெயரையே சூட்டிக் கொள்ளும் அசலான தமிழ்ப் பண்பாடு குலைக்கப்பட்டது. தில்லை மரங்கள் சூழ்ந்த ஊரைத் தில்லை என்றே அழைத்தனர், தமிழர். அது சிதம்பரம் ஆயிற்று. மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று. பழைய மலை அல்லது பழமலை விருத்தாச்சலம் ஆயிற்று. குளம், தீர்த்தம் ஆயிற்று. இயற்கையோடு இரண்டறக் கலந்திருந்த தமிழ் வாழ்வு, பிடுங்கப்பட்டு மரங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டது. தங்கள் நிலத்தோடு, மரங்களோடு, பூக்களோடு வாழ்ந்த தமிழ் வாழ்க்கை, கோயிலோடு பிணைக்கப்பட்டது, ஒரு இன மக்களின் மண் சார்ந்த மனோபாவங்கள் அழிக்கப்படுகிறபோது, தமிழர்களின் மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமும் அபகரிக்கப்பட்டு அவர்களின் வெற்றிடத்தில் மதம் திணிக்கப்பட்டது. அருண்மொழித்தேவன், ராஜராஜன் ஆன பிறகு, அவன் ராஜரீகம் எத்தன்மையதாய் இருக்கும் என்பதில் வியப்படைய வேண்டியதில்லை.

வாழும் நிலம், தட்பவெப்பம், நீர், உணவு ஆதாரங்களே, பண்பாட்டைத் தகவமைக்கும் காரணங்கள். தமிழர்களின் இசை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை நிலங்களை, சூழலை ஆதாரமாகக் கொண்டவை. அந்த நிலங்களின் பெயர்களிலேயே பண்கள், இசைக்கருவிகள் இருந்தன. தமிழர் இழந்த ஆகப் பெரும் செல்வம், இசை. இன்றைய கர்நாடக சங்கீதத்தின் தோற்ற மூலமாக இருந்தது, பழந்தமிழர் இசையின் ஆதி இசை, இது வைதிகம் வளர்ந்த காலத்துச் சமஸ்கிருத வடிவம் ஏற்றுப் பின்னர். தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கு பேசி வளர்ந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டியது, கீர்த்தனைகளின் மொழி மாறியதேயன்றியும், இந்துஸ்தானி இசை கர்நாடக இசையோடு கொண்டும் கொடுத்தும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது. இந்துஸ்தானியே, கர்நாடக சங்கீதத்தின் குட்டி எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். மேலும் வைதிகத்தை எதிர்த்து கடுமையாக ஐந்து, ஆறு நூற்றாண்டுகள் போர் செய்து தமிழ் மண்ணில் வேரூன்றிய பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்கள், சங்கீதத்தை, நாட்டியத்தை, கூத்தைத் தத்தம் தத்துவ வழியில் நின்று புறக்கணித்தன. கடுமையான ''ஒழுக்க''மும், துறவும், உணவு முறையும் கொண்டிருந்த சமணம், ஓரளவு நெகிழ்வுற்ற பௌத்தம், இசையையும் கூத்தையும் தம் கையில் எடுத்திருக்குமேயானால், தமிழக வரலாறு மாறி இருக்கும். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி நடந்த பக்தி இயக்கமும் தோன்ற வழியற்றுப் போயிருக்கும். மற்றும் ஒரு முக்கிய சமூக நிகழ்வும் உண்டு. இசையைத் தம் வாழ்வாகக் கொண்டிருந்த பறையர், துடியர், பாணர்கள், பாடினிகள் சமூக வாழ்விலிருந்துமே விலக்கி வைக்கப்பட்டமை, தமிழர், பண்டை இசையையும், விலக்கி வைக்கப்பட்டதாக ஆயிற்று. கோயில்கள் கலாச்சாரப் பிரதேசமாக ஆக்கப்பட்டுவிட்டபின், கோயிலுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்ட ஆதி தமிழர்களின் இசை எங்ஙனம் வளர்ச்சியுற முடியும்? இந்த விபரீதத்தின் இன்னொரு பக்கமே, தமிழ்க் கோயில்களில் தமிழ் வழிபாடு, தமிழ்க் குடமுழுக்கு இல்லாமையும்.

தமிழர்களின் மண்ணும் இசையும் நிறம் மாறியபின், அவர்களின் இறைவர்கள் மாறினர். குன்றின் தலைவனாம் குறிஞ்சித் தலைவன், அழகையுடைய முருகன், ஸ்கந்தன் ஆக்கப்பட்டான். ஏற்கனவே அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. அவன் காதல் மனைவியின் பெயர் வள்ளி. வைதிகம், தங்கள் பங்களிப்பாகத் தேவயானையைத் திருமணம் செய்வித்தது அவனுக்கு. சிவப்பானவன் என்ற பொருளில் சிவன் என்றழைக்கப்பட்ட இறைவன், முருகனுக்குத் தந்தையானான். பார்வதி என்பவள் மனைவியானாள். ''கதையல்ல நிஜம்'' நிகழ்ச்சியில் பிரிந்தவர் கூடுவது போல, அன்றைக்கும் இந்தக் கதை நிஜமாயிற்று போலும், பாலைக்கடவுள், கொற்றவை, இருஉருவம் எடுத்தாள். காளி என்றும், சிவன் மனைவி என்றும் ஆனாள். இப்படியாகத் தமிழர்கள் அறியாத கடவுளர்கள் பெருகி, ஏறக்குறைய பாரதி காலத்து (1921) இந்திய ஜனத்தொகை அளவுக்குப் பல்கினர் - முப்பத்து முக்கோடி.

வடவேங்கடமும், தென்குமரியும், இரு பக்கக்கடல்களும், தமிழ்நாட்டில் எல்லைகளாக ஒரு காலத்தில் இருந்தன. இன்றைய மலையாளமும் (மலைஞாலம்) கன்னடப் பெரும் பகுதியும், ஆந்திரப்பகுதியும் தமிழ்நாடேயாகும், எருமை நாடு மகிஷாசுர நாடு ஆகி, மைசூர் அனது. காவிரி, தென் தமிழ்க்குமரி. காவிரியை இழந்தோம். பவானியை இழக்கப் போகிறோம், பவானியில் கேரளாவில் அணை கட்டுகிறார்கள் என்று செய்தி வருகிறது. மலைவளம், வீரப்ப அரசால் ஆளப்பட்டுத் தனித்தீவாகியிருக்கிறது. உதகையை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல பறவை இனங்கள், மர இனங்கள் அழிந்தே போயின. இன்றைய சென்னை நகரில் மட்டும் 19 -ஆம் நூற்றாண்டில், சுமார் நூறு ஏரிகள் இருந்தன. வள்ளுவர் கோட்டம் இருக்கும் பகுதிக்கு ஏரிக்கரை என்பதே பழைய பெயர். ஏரி அப்பால் ஏறிப்போன இடத்தை முப்பால் அறிஞரும் அறியார். தேவி குளம், பீர்மேடு தமிழகத்துக்கு வேண்டும் என்று சிலர் சொன்னபோது, ''மேடாவது, குளமாவது'' என்ற காமராசர், இப்போதிருந்தால் வருத்தப்படுவார்.

தமிழர், அகம், புறம் என்று வகுக்கப்பட்ட வாழ்வில் திளைத்தனர் என்பார்கள். அகம், புறம் என்பது காதலும் வீரமும் ஆம். 24 மணி நேரமும் காதலிப்பது என்பது சாத்தியம் இல்லை. (சிட்டுக்குருவி மற்றும் அஸ்கவகந்தி லேகியம் சாப்பிட்டாலும் கூட) அதே போல 24 மணி நேரச் சண்டையும் ஆகாது. இடைப்பட்ட நேரத்தில் தமிழர் என்ன தான் செய்தனர்? அரசர்கள், காலை நேரங்களில் தங்கள் அரியாசனத்தில் அமர்ந்து மக்களுக்குத் தரிசனம் தந்தார்கள், வழக்குத் தீர்த்தார்கள். நெய்யோடு புலால் கலந்த அரிசிச்சாதம் சாப்பிட்டார்கள், பாணர்களுக்குப் பணம் தந்தார்கள், பின்னர், தம் மார்பால் தம் உரிமை மகளிரைத் தழுவிக்கொண்டு ஓய்வு கொண்டார்கள். தீயோரைத் தண்டித்தார்கள். வீரர்களுக்குச் சௌகர்யம் செய்து கொடுத்தார்கள். சுற்றத்தை வறுமை இன்றி வாழ வைத்தார்கள் (உரையூர் முதுகண்ணன் சாத்தனார் பாட்டு - புறநானூறு).

அரச வாழ்க்கை இப்படியானது. புலவர்கள் குடும்பத்தில் வறுமை மிஞ்சியது. தொழிலாளர்கள், உழைத்தார்கள். இயற்கையாகவே சுரண்டப்பட்டார்கள். சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள் புனைவும், யதார்த்தமும் கூடியவை. கடும் யதார்த்தமும், மிகையும் உண்டு. பொதுவாக, அவை மேட்டுக்குடி வாழ்க்கையைச் சித்திரித்தன. வாழ்வின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் இலக்கியத்தகுதி பெறாமல் தான் இருந்தார்கள்.

ஒன்று நிச்சயம்.

தமிழனின் வீரம், புறம் கொடாத்தன்மை, மானத்துக்காகப் போரிடல் இவை இன்றும் நீடிக்கும் தமிழ்ப் பண்புகள். தன்னிடம் இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தல் இன்னும் நீடிக்கும் தமிழ்க்குணம்

பழந்தமிழர்கள், அரசர்கள், அந்தணர்கள் என்கிற பிராமணர்கள், போர்விரர்கள், சேவகர்கள், அரசு சார்ந்த மேல் கீழ் உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், நெசவு மற்றும் குயவர்கள், கிராம அதிகாரிகள், ஏவலர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள் என்று பிரிக்கப்பட்டு வாழ்ந்தார்கள். சோழச் சமுதாயம் இடங்கை, வலங்கை என்ற சாதிப்பிரிவினையைக் கொண்டது. அரசனைச் சார்ந்தோர் மட்டுமே (இன்றைய ஐ.ஏ.எஸ், ஐ.பி.ஏஸ், மேல் அதிகாரிகள், கார்பரோட் தலைவர்கள்) நல்ல, சுகமான வாழ்க்கை நடத்தினர். கல்வி பொது வாய்ப்பாகச் சங்க காலத்துக்குப்பின் இல்லை. பெண்கள், எக்காலத்திலும் உயர்தரத்தில், மனித மரியாதைகளுடன் இருந்ததாகச் செய்தி இல்லை. பழைய தமிழ்ச் சமுதாயம் ஆண் சாமுதாயமே. பரத்தையர், விலை மகளிர் உண்டு என்பதால் விபசாரத்தைப் பேணிய சமுதாயம் உயர் சமுதாயமாக இருக்க முடியுமா என்ன?

நிலத்தை ஐவகையாகப் பிரித்த தமிழர்கள், காலத்தையும் மிக நுட்பமாகப் பிரித்தார்கள். பெரும்பொழுது என்ற பகுப்பில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில் அடங்குவன. காட்டை அழித்து, நீர் நிலைகளையும் அழித்த பின் காலங்கள் குழம்பின. இன்றைய தமிழனுக்குப் பெரும்பொழுது இல்லை. காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் வைகறை என்ற சிறுபொழுதின் வகை 10 - 5 உத்தியோக வாழ்வில் குழம்பித்தான் போகும். இல்லறம் நல்லறம். ''பிரேமானந்த'' வாழ்க்கை விலக்கு. விதி விலக்கிற்கும் கடவுள் நம்பிக்கை உண்டு ''ஐயப்போ'' மற்றும் ஆதிபராசக்திச் சிவப்பு இல்லை. அன்றைய திருமணம், இன்றைய சீர்த்திருத்த மணம் மாதிரிதான் இருந்தது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும் நிலமை சிலம்பு காலத்தில் வந்தது. பெண்கள் கற்பு வலியுறுத்தப்பட்டது. கவனிக்கவும், பெண்கள் கற்பு மட்டும்தான். கணவன் பிரிந்து தாசி வீட்டுக்குப் போனால் பெண்களுக்குக் கோபம் வராது. ஊடல்தான் வரலாம்

கணவனை இழந்த பெண், உடன்கட்டை ஏறினாள். பல சமயம், கைம்கை நோன்பு நோற்றாள். தலையை மழிக்கும் பழக்கம் தமிழருடையது. வரி, கொஞ்சம் கூடுதல்தான், மன்னர்களின் அந்தப்புர ஜனத்தொகை கூடினால் வரியும் கூடியது.

பொதுவாக மக்கள் அரிசிச் சோறு (புழுங்கல் அரிசி) உண்டனர். வரகும், சாமையும் உண்டதுண்டு. கடுகுதாளித்து, மிளகு, புளி உப்பு சேர்த்து சமைத்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மிளகாய் பஜ்ஜி தெரியாது. மிளகாய் அன்று இல்லை. புளிப்புக்கு மாங்காய், நாவல்பழம் பயன்பட்டது. ஊறுகாய் இருந்தது. வாழை, பலா, மாங்காய், நுங்கு, இளநீர், சோம்பு, வள்ளிக்கிழங்கு போன்றவையும் இருந்தன. எல்லாச் சாதியாரும் பார்ப்பாரும் இறைச்சி உண்டனர். கள் குடிக்கும் நல்ல பழக்கம் (பிராந்தி, விஸ்கி, கிடைப்பதில்லை) தமிழரின் சுகப்பழக்கம். தேள் மற்றும் பாம்பு விஷம் போல் போதை ஏறவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆண்கள் (உயர்குடி) வேட்டியும், மேலாடையும் அணிந்தார்கள். பெண்கள், கீழே புடவை மட்டும் கட்டினர். மார்புகளை மறைக்கும் பழக்கம் இல்லை. நகரங்களில் மாடி வீடுகள் இருந்தன. கிராமங்களில் பெரும்பாலும் குடிசைகள்தான். பெண்கள் பந்து விளையாட்டிலும், பல்லாங்குழியிலும் நேரம் போக்கினர். (அக்காலத்தில் டி.வி. இல்லை அழவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது) எனவே, விளையாட நேரம் இருந்தது. கூத்துக்கள் நடந்தன. ராஜாக்கள், மேட்டுக்குடிகள் கலைகள் வேறு, மக்கள் கலை வேறு.

திரும்பிப் பார்த்தது போதும், கொஞ்சம் முன்னால் பார்க்கலாம். தமிழன் என்ற அடையாளம் அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும், மேலும் அது முற்றும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டாக வேண்டும். சில கேள்விகள் நமக்கு உதவ முடியும். தமிழனை இனம் காட்டுவது எது? இரண்டாயிர ஆண்டுகாலத் தொடர்ச்சியாக வரும் தமிழ்ப் பண்பாட்டின் இன்னும் இருக்கும் மிச்சம் எது? அது இன்னும் செழிப்பாகப் போஷ’க்கப்பட மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்த பட்ச செயல்திட்டம் என்ன? சிறப்புற உருவாகி வரும் தலித், பெண்கள் இயக்கங்களை இந்த மீள் செப்பத்தில் இணைத்துக் கொள்வது எப்படி?

வைதிகத்திலிருந்தும் முற்றாகத் துண்டுபடுத்திக் கொள்ளும் தமிழ் முயற்சிகள் ஊக்குவிடப்பட வேண்டும். ஓரளவு சமய, சாதி சாராத பொது இலக்கியமாகத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட திருக்குறளுக்கு இந்த முன் நகர்த்தலில் இருக்கும் பங்கு என்ன? சிலப்பதிகாரக் கண்ணகியிடம் இந்தவிதத் சிந்தனைக்குத் தர ஏதும் இருக்குமா? ''பீடன்று'' என்ற சொல்லும், கவுந்திக்கு அவள் அருளிய பொதுச் சொற்களும் அவையில் அவள் நிகழ்த்திய உரையும் இக் கண்ணோட்டத்தில் என்ன பயன் தரும்? சங்க இலக்கியங்களின் ஊடாகப் பெறக்கூடிய தமிழ்ப் பொதுப்பண்புகள் என்ன? இருபதாம் நூற்றாண்டு தொடங்கி பின்னோக்கி எழுதப்படவேண்டிய தமிழ் தமிழின மக்கள் வரலாற்று நூல்களின் தேவை யோசிக்கப்பட வேண்டும். பிராந்திய மாவட்ட வரலாறுகள் எழுதப்பட்டவை தொகுக்கப்படவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளில், வைதிகம், சாதி, வர்க்கம் ஆகியவைகள் மேல் எடுக்கப்பட்ட போராட்டங்களின், எழுச்சிகளின் வரலாறுகள் தொகுக்கப்பட வேண்டும். வாய்மொழி வரலாறுகள், நாட்டுப்புறக்கதைகள், பாடல்கள் இந்த வரலாற்றில் பெரும் பங்கு எடுக்க முடியும் என்பது உணரப்பட வேண்டும். தமிழ் இசைத்துறையில், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், தமிழிசை மூவர்கள், முதலான மாற்றுச் சிந்தனைகள் தொகுக்கப்பட வேண்டும். தமிழ் நாடக கூத்துக்களின் அசல் வடிவம் கண்டு தேர வேண்டும். உலகத்தின் சகல அறிவுத்துறைகளின், கலை இலகியங்களின் உச்சங்கள் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். தமிழின் அற்புதப் பங்களிப்புகள் மேலை மொழிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, உடனடியாகச் செய்யத்தக்கது, தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வி, ஆய்வுக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பக் கல்வி ஆகியவற்றில் தமிழ் முழுப் பங்கு வகிக்குமாறு செய்யப்பட வேண்டும், கல்வி, மத்திய அரசின் பட்டியலில் இருந்து முழுமையாகத் தமிழ் நாட்டு அதிகாரத்துக்கு உட்பட வேண்டும். தமிழகத்துக்கு தமிழ் அரசிடம் இருந்து எந்த அரசுத்துறையிலிருந்தும் வரும் அறிக்கைகள், தமிழில் இருந்தாக வேண்டும். தமிழக நீதிமன்றத்தில், தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் நீதிபதிகள், தமிழ் வாதி பிரதிவாதிகளிடம் தமிழில் பேச ஆணையிடும் வழிவகை காணப்படவேண்டும்.

இவை அனைத்துமே பல்வேறு காலமாகத் தனிமனிதர்களாலும் அமைப்புகளாலும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இவை தொகுக்கப்படவில்லை. இவை சரியாக விமர்சிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்படவில்லை.

வைதிகம், உயர்சாதி, மேல்வர்க்கக் குணாம்சங்கள் கொண்டவர்களே தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் விரோதிகளாக இருக்கிறார்கள். பதவி அரசியல், தமிழனைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு மூலதனங்களில் தரகர்களுக்கும் தமிழ் அடையாளம் பிடிக்காது. தமிழ், தமிழின விரோதிகள் தமிழகத்துக்கு வெளியில் மட்டும் அல்ல. தமிழ் நாட்டுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர், தமிழ், தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டுத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சிலர் மடங்களின் தலைவர்கள்.

நன்றி: திறனாய்வு சில புதியதேடல்கள்.

2005