அகத்திணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகத்திணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன! - ச. சுப்புரெத்தினம்


இளம் பெண்களின் கைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் வளையல்கள் அழகூட்டுவனவாகும். அகத்திணைத் தலைவன் ஒருவன், தான் விரும்பிய தலைவியை ஊரறியத் திருமணம் செய்து கொள்ளக் காலம் தாழ்த்துகிறான். இதனால் அவனது தலைவியும் தலைவியின் தோழியும் வருத்தமுறுகின்றனர்.


இந்நிலையில், களவில் இரவு நேரத்தில் தலைவியின் இல்லத்தருகே வந்து தலைவியின் கண்ணில் படாமல் நின்று கொண்டிருக்கிறான் தலைவன். இதனையறிந்த தோழி, அவனது வருகையை அறியாதவள்போல் நின்றுகொண்டு, தலைவியின் இக்கட்டான நிலையை அத்தலைவனுக்குப் புலப்படும்படி தலைவியிடம் கூறுவாள்போல் பின்வருமாறு கூறுகின்றாள்:


'மழைக்கால ஆம்பல் மலர்போன்ற தோற்றத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு கொக்கினது பார்வைக்கு அஞ்சித் துன்புற்ற நண்டு, அதனிடமிருந்து தப்பி, கட்டறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் எருதினைப் போன்று, அருகிலுள்ள தாழஞ்செடியின் வேருக்கு அருகேயுள்ள தனது வளையினுள் புகும்பொருட்டு விரைந்து செல்லும் அத்தகைய கடல்துறையை உடையவன் தலைவன். அவன் தலைவியாகிய உன்னைக் காண வாராதிருந்தாலும் இருக்கட்டும். ஏனென்றால், அவனது வருகை தொடர்பாக இரண்டு இடையூறுகள் உள்ளன.


முதலாவது, களவு ஒழுக்கத்தில் தலைவன் இங்கு வருதலென்பது, பிறரறிந்து தூற்றவும் பின்பு தலைவியாகிய உன்னை “இற்செறித்தல்” (வெளியே வரத் தடை விதித்து இல்லத்தே அடைத்து வைத்தல்) செய்யவும் காரணமாகி, அது நமக்கு இன்னலைத் தந்துவிடும். இரண்டாவது, அவன் வாராமலிருந்து விட்டாலோ, உனது தோள்கள் மெலிந்து, கைவளையல்களும் நெகிழ்ந்துவிடும்.


ஆக, இவ்விரண்டும் துன்பம் தரக் கூடியனவே ஆயினும், இவற்றுள் தலைவன் வாராத வழி, கைகளுக்கு மிகவும் பொருந்திய அளவிலான பெரிய வளையல்கள் உனது உடல்மெலிவால் கழன்று வீழ்ந்துவிட்டாலும் பரவாயில்லை. வளையல் விற்போரிடத்துச் சிறிய வளையல்களும் உள்ளன. அவற்றை வாங்கிச் செறிய அணிந்து கொண்டு உடல் மெலிவைப் பிறரறியாமல் தவிர்த்துவிட முடியும். தலைவன் வருகையைப் பிறர் அறியாமல் நாம் மறைத்தல் கூடாது. அதைவிடத் தலைவன் வாராதிருத்தலே நன்று!'' என்கிறாள் தோழி.


இதன்மூலம், களவுக்காலத்தில் இரவிலும் பகலிலும் வந்து செல்ல வேண்டாம். மாறாக, தலைவியை விரைந்து வரைதலே (திருமணம் செய்து கொள்ளுதல்) நல்லது என்று தலைவனின் மனத்தில் படும்படி குறிப்பாகச் சொல்கிறாள் தோழி.


குன்றியனார் என்ற சங்க காலப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்.


மாரி ஆம்பல் அன்ன கொக்கின்


பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு


கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்


கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்


வாராது அமையினும் அமைக


சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே


(குறுந்தொகை 117)


வானில் பறக்கும் பொழுது வெண்ணிறத்தில் தோன்றும் கொக்கு, நீர்நிலையில் இரைக்காகக் கூர்ந்து நோக்கிக் கூம்பி நின்றுகொண்டிருக்கும்பொழுது, கார்காலத்தில் கூம்பி நிற்கும். அல்லியின் மொக்குப் போன்ற உருவிலும் நிறத்திலும் இருக்கும் என்பது புலவரின் உவமை நயத்தைச் சுட்டுகிறது.


தலைவனை நெடுநாட்களாகச் சந்திக்கவில்லையெனில் தலைவியின் உடல் மெலிவதுண்டு. இம்மெலிவால் கையிலுள்ள வளையல்களும் கழன்று வீழ்தலும் இயல்புதான் என்பதை இப் பாடலாசிரியர் கூறுகின்றார். தலைவன் பிரிந்தமையைத் தனது முன்கையின் மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள் பலரறியப் பழி கூறாது இருக்குமோ எனக் கூறி வருந்தும் திருக்குறள் தலைவியின் கூற்றும் (குறள் 1157) இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


உடல் மெலிவால், தலைவியின் வளையல்கள் கழன்றுவிட்ட நிகழ்வினை மறைக்க வேண்டும். அதற்கு, சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி, தலைவி செறிய அணிந்து கொள்ளலாம் என்பது தோழி அறிந்த நல்ல உளவியல் நுட்பமாகும்.


நண்டு விரைந்து சென்று அதன் வளையினுள் புக முயல்வது, "அலர்' வெளிப்படுமுன் கற்பு வாழ்க்கை நிகழ்த்தத் தலைவனின் இல்லத்திற்கு (வரைவுக்குப் பின்) விரைந்து சென்றுவிட வேண்டும் என்ற தோழியின் குறிப்பான செய்தியை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.


தலைவியின் உடல்மெலிவை மறைக்கச் சிறிய வளயைல்களே போதுமாதலால், சின்ன வளையல்களும் வளையல் விற்போரிடம் உள்ளன என்பது நல்ல இலக்கியநயம் ஆகும்.


நன்றி - தமிழ்மணி ஜூலை 2024


இலக்கிய உத்திகள்

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவை இரண்டையும் "குறிப்புப் பொருள் உத்தி' எனவும் அழைப்பர்.

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது உள்ளுறை உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி.

உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.

உள்ளுறை உவமைக்கு நாற்கவிராச நம்பி தரும் இலக்கணம் பின்வருமாறு:
""ஆராய்ந்தறியும் பகுதியினையுடைத்தாய்ப் புள்ளொடும்
விலங்கொடும் பிறவொடும் தோன்றும் உள்ளுறை உவமை''
(ஒழிபியல்-28)

அவற்றுள், ""உள்ளுறையுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடு புலப்படும்'' (ஒழி-29) இதற்கு எடுத்துக்காட்டுப் பாடலாக அமைவது,

""இழை விளையாடும் இளமுலை சாயற்கு இடைந்தமஞ்ஞை
கழை விளையாடும் கடிப்புனம் காத்தும் கலையகலாது
உழை விளையாடும் உயர் சிலம்பா! இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதிற்றஞ்சை வாணன் மலையத்திலே
"மானைப் பிரியாது கழை விளையாடும்''

என்பதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாட வேண்டும் என்ற பொருள் உள்ளுறை உவமம், விலங்கொடு தோன்றிப் புலப்படுமாறு அமைந்துள்ளது.

தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,

""அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே''
(பொரு-48)

என்று கூறியுள்ளார். குறிப்புப் பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,

""உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே''
(பொரு-47)

என்று கூறியுள்ளார். உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49,51) சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொரு-50) சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.

இவ்வகை உள்ளுறைகளில் உவம உள்ளுறை நீங்கலாக, மற்றவை சங்க இலக்கியங்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களால் பாடல் உரையில் பொதுவாக விளக்கிக் காட்டப்படவில்லை.

நற்றிணைக்கு உரைவகுத்த பின்னத்தூர் நாராயணசாமியும், உவம உள்ளுறை என்பதையும் (இறைச்சி என்ற பெயரில்) வேறு உள்ளுறையையும் மட்டும் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில், நற்றிணையில் ஐவகை உள்ளுறைகளும் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உவம உள்ளுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு: தலைவனைத் தோழி வரைவு கடாவுகிறாள் (களவில் தோழி-தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ளும்படி வேண்டுதல்). ""கொல்லவல்ல ஆண்புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பனின் சொற்களை மெய்யெனத் தேறி, யாம் நடுஇரவிலும் உறங்கப்பெறாது, எமது நலத்தை இழந்துவிட்டோம். இப்பழி தூற்றும் ஊர், அலர் கூறும் பெண்களின் அம்பல் மொழியை மெய்யென நம்பி, மேன்மையிலாத் தீய சொற்களைப் பொதித்த ஒலியை உடையதாகத் தான் இழந்தது என்ன?'' (நற்றி-36) என்பது பாடலின் கருத்து.

""கொல்லவல்ல ஆண் புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே, பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பன்'' என்பது குறிப்புப் பொருளை உள்ளடக்கி உள்ளது. இஃது உவம வகையால், கொடுமை நிறைந்த தலைவியின் தமர் (உறவினர்) தலைவியை நாடிவரும் இடத்திலே தலைவி புலம்புமாறு தலைவனுக்குத் துன்பம் இழைப்பர்-என்று குறிப்புப் பொருளைத் தோற்றுவித்தலின் உள்ளுறை உவமம் ஆயிற்று. இவ்வகையில் மேலும் சில இடங்களைச் சுட்டலாம்.

இறைச்சி:

இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. வடமொழியில் உள்ள "தொனி'-கோட்பாடுடன் இதனை இணைத்துப் பார்க்கும் போக்கு தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி.

""இறைச்சி தானே உரிப்புறத் ததுவே''
(தொல்.1175)

மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி; பிற உயிர்களின் காதல் செயல்கள் உரிப்புறத்தன. எனவே இறைச்சி என்பது உரிப்புறத்தது. இது எந்த ஒரு குறிப்புப் பொருளையும் சுட்டித் தன்னுள்ளே வேறொரு பொருள் தருவது. இலக்கியங்களில் பாடப்படும் இறைச்சியின் பொருளுக்கும், விலங்கினம்-பறவையினம் போன்ற கருப்பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவது. உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன "இறைச்சி' என்பர்.

தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே ûறைச்சிப் பொருள் என்பது அகப்பொருள் வரையறை.
""கருப்பொருட் பிறக்கும்
இறைச்சிப் பொருளே'' (ஒழி-31)

கருப்பொருளின் வகைகளாக அகப்பொருள் பதினான்கு வகைகளைக் குறிப்பிடுகிறது. "ஆரணங்கு (தெய்வம்), உயர்ந்தோர், தாழ்ந்தோர் (அல்லாதோர்), புள், விலங்கு, ஊர், நீர், பூ, உணவு, பறவை, யாழ், பண், தொழில் எனக் கருவீரெழுவதைத் தாகும்' (அகத்-19). ஐந்து திணைகளுக்கு உரிய கருப்பொருள் இவையிவை என பொருள் தெளிவாகக் கூறுகின்றன.

வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது; சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர்இதை ஆய்வு நோக்கில், கருப்பொருள் இறைச்சி, தெரிபொருள் இறைச்சி, குறிப்புப்பொருள் இறைச்சி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அது அன்பு, காதல், அருள், மனிதநேயம் ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும். மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது.

தெரிபொருள் இறைச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

தெரிபொருள் இறைச்சியில் கருப்பொருள்களின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்படும்.
""விருந்தெவன் செய்கோ தோழி சாரல்
அரும்பர மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் .....   ......''(நற்-112)

வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்ததும், அவன் வராதது கண்டு ஆற்றாமையில் வாடிய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, ""அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் மலைநாடன் உன் தலைவன். எனவே, அவன் உனது பசப்பு வருந்திக் கெட, உனக்கு உண்டான காமநோயைப் போக்கி உன்னைவிட்டு அகலாமல் இருப்பான்'' என்பது குறிப்பு. இந்தக் கருப்பொருளாகிய களிற்று யானையின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்பட்டதால் இது இறைச்சிப் பொருளானது. நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன.

காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, "உள்ளுறை உவமை' மற்றும் "இறைச்சி'யை இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.

நன்றி - தமிழ்மணி

அகஇலக்கிய மரபுகளும் நாட்டுப்புறக் காதல் பாடல்களும் - பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ

அகம்:

மனிதன் உள்ளிட்ட எந்தவகை உயிரினத்திற்கும் உள்ள உயிர்க்கடமை இனப்பெருக்கத்தில் ஈடுபடலே. உயிரினங்கள் உண்பதும் உயிர்வாழ்வதும் இந்தவொரு பணிக்காகவே. இனப்பெருக்கத்திற்காகவே பாலினஈர்ப்பும் இன்பநாட்டமும் இயல்பாக எல்லா உயிரினங்களிடமும் அமைந்துள்ளன. தொல்காப்பியர் இதனை,எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும் (தொல். பொருள். பொரு. 27.)என்கிறார். இன்பநாட்டம் உல்லா உயிரினங்களுக்கும் உரிய இயல்பூக்கம் என்று இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர். இந்த இயல்பூக்கத்திற்கான ஒருவகை வெளிப்பாடே அகம். ஆணும் பெண்ணும் கூடிக்கலக்கும் பாலியல் தேவைக்கான அழகியல் வெளிப்பாட்டு வடிவமே அகப்பாடல்கள். இத்தகு அகப்பாடல்கள் இலக்கிய ஆக்கம் பெற வடிவமைத்துக் கொள்ளப்பெற்றவைகளே அகப்பொருள் மரபுகள்.நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். பொருள். அகத். 56.)என்ற நூற்பாவில் புலனெறி வழக்கம் என்று இத்தகு மரபுகளைக் குறிப்பிடுவார் தொல்காப்பியர்.

அகத்திணை மரபுகள் - இரா. குணசேகரன்

அகத்திணை நெறியில் பொருள் வரம்பு உண்டு. உலகியல் வழக்கினும் செய்யுள் வழக்கினும் பயின்று வரும் பொருள்களை மூவகையாகப் பகுத்துப் பேசுவது அகத்திணை மரபு. அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று வரையறைப்படுத்திப் பேசப்பெறும். அதனை,

''முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே

நுவலுங்காலை முறை சிறந்தனவே

பாடலுள் பயின்றவை நாடுங்காலை'' (தொல். பொருள் இளம் நூ.3)

என்று தொல்காப்பியர் இதற்கு விதி செய்து காட்டுவர். இவை செய்யுளில் பயின்று வருதலால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடையது. அகப்பொருள் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகத்திணைப் பாகுபாடு:

அகத்திணையைத் தொல்காப்பியம் கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை என்று ஏழு திணைகளாகப் பகுத்துள்ளது.

ஐந்திணைப் பாகுபாடு:

குறிஞ்சி முதலான ஐந்தும் ஒத்த காமத் தன்மையால் ஒன்றாயினும், ஒழுக்க வகையால் தனிநிலை குறிப்பிப்பதற்காக ''ஐந்திணை'' என்று எண்ணுப்பெயர் பெற்றன. ஐவகை ஒழுக்கங்களை தொல்காப்பியர்,

''புணர்தல்புரிதல் இருத்தல் இரங்கல்

ஊடல் அவற்றின் நிமித்தம் என்றவை

தேறுங்கலைத் திணைக்குரிப் பொருளே'' (தொல். பொருள் இளம் நூ.16)

என்று குறிப்பிடுவர். இவ்வாறு ஒழுக்கங்கள் ஐந்து வகையாகப் பிரித்து பேசப் பெறுவதால் இவற்றை ''ஐந்திணை நெறி'' என்று குறிப்பிடும் வழக்கம் உண்டு. இந்த ஐந்து ஒழுக்கங்களும் எல்லா நிலத்து மக்களிடமும் நிகழும் பொதுவான நிகழ்ச்சிகளே எனினும், மலை நாட்டில் புணர்தல் நிகழ்வதாகக் கூறுவது மரபு. பாலை நிலத்தில் பிரிதல் நிகழ்வதாகவும், மருத நிலத்தில் ஊடல் நிகழ்வதாகவும், நெய்தல் நிலத்தில் இரங்கல் நிகழ்வதாகவும் இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது.

1. முதற்பொருள்

1. முதற் பொருள் குறித்து,

''முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே'' (பொ.3)

என்ற தொல்காப்பியர் நிலம், காலம், இரண்டையும் குறிப்பிடுகின்றார். ஒரு செயல் செவ்வனே நடைபெற இடமும் காலமும் இன்றியமையாதவை.

நிலம்:

மூலற்பொருளின் ஒரு பகுதியாகிய நிலத்தினை நான்கு பகுதியாகப் பகுத்துக் கூறுவார் தொல்காப்பியர். பாலை இயற்கை மாறுபட்டால் பருவ மழை பெய்யாது வளங்குன்றிய காலத்தில், மல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் இயல்பை இழந்து புதியதொரு தன்மையைப் பெறும். இத்தன்மையுடைய நிலத்தைத் தமிழர்கள் பாலை என்று அழைத்தனர்.

''முல்லைபும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்தப்

பாலை என்பதோர் வடிவங் கொள்ளும்'' (சிலப். காடுகாண். 64 - 66)

என்று சிலப்பதிகாரம் கூறுவதாலும் இது நன்கு விளங்கும்.

அ. குறிஞ்சி:

மலையும் மலை சார்ந்த இடமும் புணர்ச்சிக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். குறிஞ்சி இயற்கை வளம் நிறைந்து காணப்படும். கூதிர் காலம் என்ற பெரும் பொழுதையும் யாமம் என்ற சிறு பொழுதையும் புணர்ச்சிக்குரிய காலமாகக் கூறுவர். குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் குறவர் ஆவர்.

ஆ. முல்லை:

முல்லை காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கம் இருத்தல் ஆகும். முல்லை மலர்கள் இப்பகுதியில் அதிகம் காணப்படும். இந்நிலத்திற்குரிய பெரும் பொழுது கார்காலம்; சிறு பொழுது மாலை நேரமாகும். முல்லை நிலத்தில் வாழும் மக்கள் ஆயர் ஆவார்.

இ. மருதம்:

வயலும் வயல்சார்ந்த இடம் மருதம் ஆகும். வற்றாத நீரையுடைய ஆறு கால்வாய்களாகப் பிரிந்து பாயும் நிலத்தை உடையது இப்பகுதி. வைகறை, விடியல் என்ற சிறுபொழுதுகள் இரண்டு, பெரும் பொழுதுகள் ஆறும் இதற்கு உரியவை எனக் கொள்வர். உழவர், உழத்தியர் இப்பகுதியில் வாழ்பவர்கள்.

ஈ. நெய்தல்:

நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த இடமும் ஆகும். பெரும்பொழுது அனைத்தும் இதற்குண்டு. நுளையர், நுளைச்சியர் இப்பகுதியில் வாழ்வார்கள்.

உ. பாலை:

காதலால் கூடிக்கலந்த இருவரது பிரிவு ஒழுக்கத்தினைக் குறிப்பது பாலைத்திணை ஆகும். பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், சிறுபொழுது, நண்பகல், இதற்குப் பின்பனியும் உரித்து எனத் தொல்காப்பியர் கூறுவர்.

2. காலம்:

முதற்பொருளில் இன்னொரு பகுதியாக காலத்தைப் பெரும் பொழுது என்றும், சிறுபொழுது என்றும் பகுத்துப் பேசுவர். பெரும்பொழுது என்பது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பனவாகும். சிறுபொழுது என்பது வைகறை, விடியல், ஏற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என்று குறிப்பிடுவர்.

2. கருப்பொருள்:

முதற் பொருளிலிருந்து தோன்றுவது கருப்பொருள். அது இடத்திலும் காலத்திலும் தோன்றும். அது தெய்வம், உணவு, விலங்குகள், பறவைகள், தொழில், பண், நீர், பூ போன்றவை.

இதற்குத் தொல்காப்பியர்

''தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகை இ

அவ்வகைப் பிறவும் கருவென மொழிப'' (பொருள் 20)

என்று வரையறுத்துக் காட்டுவர்.

3. உரிப்பொருள்:

உரிப்பொருளாவது மக்கட்கு உரியப்பொருள். உரிப்பொருள் மக்கள் வாழ்வையொட்டி இருக்கும். அவர்கள் வாழ்க்கை நெறியே ஒழுக்கமே உரிப் பொருளாகும். உரிப்பொருளைத் தொல்காப்பியர் ஐந்து பகுதியாகப் பிரித்துக் காட்டுவர். ஒரு நாடகத்தை பற்றி பேசும் போது இன்ன இடம் என்றும், இன்னகாலம் என்றும், இன்ன பாத்திரங்கள் என்றும், ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிடுவர். அவ்வாறே, அகப்பொருள் நிகழ்ச்சிகட்கு இந்த முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் உறுப்புகளாக அமைகின்றன. ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியே இவை அமைதல் வேண்டும் என்றும் வரையறை செய்து காட்டுவார் தொல்காப்பியர். உயிர்ப்பொருள்தான் இவற்றின் உயிர் நாடியாக இருப்பதாகும். காதல், நாடகத்தின் இயக்கம் இதுவே என்றும் கூறலாம்.

உரிப்பொருளாகிய காதல் நிகழ்ச்சியை இன்ன காலத்தில் இன்ன பொருள்களைச் சூழ்நிலையாக அமைத்துக் கவிஞர்கள் கவிதையை ஆக்கும் போது இந்த மூவகைப் பொருள்களும் அதில் காட்சி அளிக்கின்றன.

நிறைவுரை:

தமிழ் அகத்திணை கூறுகின்ற பல்வேறு காதற் கூறுகள் தமிழகத்தின் நிலக்கூறுகளின் அடிப்படையில் எழுந்தவையாகும். குறிஞ்சி முதலான ஐந்திணைகளும் ஒத்த தன்மையால் ஒன்றாயினும், ஒழுக்க வகையால் தனிநிலை குறிப்பதற்காக அன்பின் ஐந்திணை எனப் பெயர் பெற்றுள்ளன. புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் ஆகிய ஒழுக்கங்கள் நிலத்தின் பெயரைச் சார்ந்து அமைந்துள்ளன என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற உரையில் அதன் வைப்பு முறை அமைந்திருப்பது, பண்டைத் தமிழரின் வாழ்க்கை நிலையை எடுத்துக்காட்டும் கருவூலமாகத் தொல்காப்பியம் அமைகின்றது.

நன்றி: தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும்

 

தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு - அ. ஜோஸ்பின் புனிதா

தொல்காப்பியர் கூறும் அகத்திணை மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவள் செவிலியாவாள். நற்றாயை விடச் செவிலித் தாயும் தோழியும் தலைவியின் காதல் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செவிலி பற்றித் தொல்காப்பியம் மற்றும் சங்க அக இலக்கியங்கள் வழி ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் செவிலி:

தொல்காப்பியர் களவியல், கற்பியல் ஆகிய இரு இயல்களில் செவிலியின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றார்.

''ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின்

தாயெனப்படுவாள் செவிலியாகும்'' (தொல்.பொருள்களவு-112)

என்கிறார். நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்குரிய மறைப்பொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாய் எனப்படுவாள் செவிலி என்று கூறுகின்றார்.

தலைவன் தலைவியின் ஒழுகலாறு அயலாருக்குப் புலனாகி அவர் தூற்றப்பட்டவிடத்தும் தலைவிமாட்டு உள்ளதாகிய வேட்கை அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுதும் புணர்ச்சியால் தலைவியின் உடல் மாறுபாடு அடைந்தவிடத்தும், தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும், கட்டு வைப்பித்த வழியும், செவிலியும், நற்றாயும் தலைவியின் நிலை கண்டு வெறியாட்டு மேற்கொண்ட பொழுதும், காதல் மிகுதியால் தலைவனை எள்ளிக் கனவின்கண் அரற்று தற்கண்ணும், இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும், தெய்வத்தை வேண்டியும், தலைவன் வரையாது பிரிந்தவழி ஒழிந்த தலைமகள் அலராடுதலும் இன்றி, வேறுபாடும் இன்றி, ஒரு மனப்பட்டிருந்த உள்ளக் கருத்தை அறிந்த வழியும், தலைவன் குடிமை தன் குடிமையோடு ஒக்குமென அறைதற் கண்ணும் என்று இவ்வாறாக பதின்மூன்று நிலைகளில் செவிலி கூற்று நிகழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். (தொல். பொருள் களவு:113)

''கிழவோன் அறியா அறிவினள் இவளென

மையாறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிழவியின் அறிதலும் உரித்தே'' (தொல். பொருள். களவு:115)

என்று நற்றாய் - செவிலித்தாய் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.

''தாய் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும்'' (தொல் பொருள்.களவு:136)

நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோடு ஒக்கும் என்றும் எடுத்துரைக்கிறார்.

''கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்குரிய ஆகும் என்ப'' (தொல். பொருள். கற்பு:151)

என்பதனால் இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவை என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

அறத்தொடு நிற்றல்:

தலைவியின் செயல்பாடுகளில் மாற்றத்தினைத் தமது நுண்ணுனர்வினால் அறிந்த செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள்.

''பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய

நால்ஊர்க் கோசர் நல்மொழி போல

வாய்ஆ கின்றே தோழி ஆய்கழல்

செயலை வெள்வேல் விடலையொடு

தொடுவளை முன்கை மடந்தை நட்பே'' (குறுந்தொகை - 15)

இப்பாடலில் தலைவி உடன் போக்கு போன பிறகு தோழி செவிலித்தாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பிறகு செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பின் வரும் பாடல் செவிலி அறத்தொடு நிற்றலுக்கும் சான்றாகக் காட்டத்தக்கதாகும்.

இற்செறிப்பு:

தலைவி தலைவனோடு களவொழுக்கம் புரிதலை அறிந்த செவிலி தலைவியை மறைமுகமாக இற்செறிக்கின்றாள். ஊரில் அலர் தூற்றப்படுவதாலும் தலைவியிடத்து காண்பதாலும் இந்நிகழ்வினைச் செவிலி செய்விக்கின்றாள்.

''அன்னையு மறிந்தன அலரும் ஆயிற்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்''

என்ற இப்பாடலில் எங்கள் தாயும் நமது களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள். ஊர் முழுவதும் பழிச்சொல்லும் பரவுகிறது. இதுகாறும் இன்பமாக இருந்த எங்கள் வீடும், நாங்களும் தனிமைத் துயரத்தை அனுபவிக்க ஏற்றதாகிவிட்டது என்று தலைவி தலைவனிடம் புலம்புகின்றாள்.

''புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை

தான் அறிந்தன்றோ இலளே பானாள

சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பி

கடுவான் போல நோக்கும்

அடுபால் அன்னஎன் பசலை மெய்யே''

என்னும் இப்பாடலில் தலைவனோடு கொண்ட உறவை இதுவரை அன்னை அறியவில்லை. எனினும் பாதிநாள் இரவில் சேரியின் அழகிய பெண்டிர் சிறுசொல்லாகிய அலரை நம்பிக் காய்ச்சிய பால் போன்ற என் பசலை படர்ந்த உடலைச் சுடுதல் போல அவள் நோக்குவாள். இவ்வாறு அலர் காரணமாகவும், பசலைக் காரணமாகவும், தாய் தலைவியின் களவிளை உணர்கின்றாள் என்பது கூறப்படுகின்றது.

வெறியாட்டு:

தலைவி தினைபுனம்காக்கச் செல்கின்றாள். சென்ற இடத்தில் தலைவனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் களவு நிகழ்கின்றது. ஆனால் தாய் சென்ற இடத்தில் தலைவிக்கு அணங்கு ஏறப்பெற்றாள் என்று எண்ணி வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துகின்றாள்.

''..............தோழி வேறு உணர்ந்து

அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி

வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

பொன்நேர் பசலைக்கு உதவா யாறே'' (நற் - 47.7 -11)

என்னும் இப்பாடலில் தாய் தலைவியின் நிலையினை அறிந்து வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவது கூறப்படுகின்றது.

குழந்தை பராமரிப்பு:

செவிலி தலைவியை அரவணைத்து வளர்த்ததோடு மட்டுமல்லாமல் தலைவியின் குழந்தையையும் அரவணைத்து அன்பு காட்டி வளர்க்கும் நிலையினையும் கீழ்வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

''வெறிஉற விரிந்த அறுவை மெல்அணைப்

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசுநெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர்கெழுமடந்தை ஈர் இமை பொருத்த'' (நற் - 40, 5-9)

இப்பாடலில் நறுமணம் உண்டாக விரிந்திருந்த நூலாடையுடைய மெல்லிய படுக்கையில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலி அருகில் உறங்குகிறான். சிறப்பு மிக்க தலைவி வெண்சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அண்மைக்காலத்தில் பசிய நெய் விளக்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கிக் கிடந்தான் என்று தலைவியின் மகன் செவிலித்தாய் அருகில் உறங்கியதாகக் கூறப்படுகின்றது.

உடன்போக்கு:

தலைவன் தலைவி ஆகிய இரு குடும்பத்தார்களும் திருமணத்திற்கு உடன்படாதபோது உடன்போக்கு நிகழும். உடன்போகிய தலைவியை நினைந்து மனையிலிருந்து புலம்புதல் தாய்க்குரியதாகவும் மனையிலிருந்து புலம்புதல் மட்டுமின்றிப் பின்சென்று தேடுதல் செவிலிக்குரியதாகவும் அமைகின்றன.

''ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே'' (தொல். அகத்திணை. 37)

நற்றாய் செவிலி இருவரது செயல்களும் உணர்வால் ஒன்றுபட்ட படைப்பில் செயலால் வேறுபடும் தொல்காப்பியர் தாயர் எனப் பன்மைப்படுத்திக் கூறியமை மனைப்புறத்துச் சென்று தேடிய தாயைச் செவிலி எனப் பாகுபடுத்தக் காரணமாய் இருந்திருக்கலாம். வீதிகளில் சென்று தேடியவள் செவிலி, இருந்து புலம்பியவள் தாய் என்று விளக்கம் தருகின்றனர்.

தலைவன் தலைவியிடம் பொய் சொல்லியும் பாராட்டியும் மயக்கிக் கொண்டு சென்றுள்ளான் என்று தாய் கூறுகின்றாள். தலைவனைப் பொய்யன் என்றே கூறுவதைக் காணமுடிகிறது.

''ஏதிலன் பொய்மொழி நம்பி''

''கூர்வேல் விடலை பொய்ப்போகி

சேக்குவள கொல் லாதானே''

''மையணல் காளை பொய்புகலாக

அருஞ்சுரம் இறந்தனள்''

என்று செவிலித்தாய் தலைவி தலைவனின் பொய்யுரைகளையும் இன்சொல்லினையும் நம்பிப் பாலை வழியில் சென்று விட்டாள் என்று தலைவனை இடித்துரைத்துத் தலைவியின் எதிர்கால வாழ்வினை எண்ணி வருந்தும் நிலையை அறியமுடிகிறது.

செவிலி - தோழி:

தலைவியின் செவிலித்தாய் தான் தோழியின் தாயாவாள். செவிலியின் சிறப்பைப் போற்றும் முறையில் தொல்காப்பியர் தாய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவள் செவிலியே ஆகும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுவார்.

''தோழிதானே செவிலியது மகளே'' (தொல்.பொருள். களவு-123)

செவிலி தோழியின் நற்றாயாகவும் தலைவியின் வளர்ப்புத் தாயாகவும் நிகழ்கிறாள். தோழி - செவிலி ஆகியோரின் சொந்த வாழ்வியல் நிகழ்வுகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் உள்ளது. தலைவிக்கு அமைந்த தோழியைப் போன்றே நற்றாய்க்குத் தோழியாகச் செவிலி படைக்கப்பட்டுள்ளாள். செவிலியின் கணவனைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. தலைவிக்குள்ள உரிமைகள் அனைத்தும் தோழிக்குத் தருவதைப் போன்று நற்றாய்க்குள்ள உரிமைகள் அனைத்தும் செவிலிக்கும் வழங்கப்படுகின்றன.

ஒரு குடும்பத்தில் பிறந்த இருதலைமுறையினர் தலைமக்கள் வாழ்வில் பெரும்பங்கு கொண்டு அவர்களுக்காகத் தொண்டாற்றும் சிறப்பைப் பெறுகின்றனர். அவர்கள் செவிலியும் தோழியும் ஆவார்.

''அரிநகைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமெலிந் தொழியச் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி'' (நற்.110 6-8)

என்னும் இப்பாடலில் தோழியை எவ்வாறெல்லாம் செவிலித்தாய் வளர்த்தாள் என்னும் குறிப்பு இல்லை. செவிலி தலைவியின் நலனில் அக்கறைக்கொண்டு அவளின் வாழ்வுக்காகவே வாழ்ந்த இயல்பினளாக விளங்குகிறாள்.

செவிலியின் உயர்பண்புகள்:

தலைவியின் களவினைத் தோழி கூறுவதற்கு முன்பு செவிலித்தாய் தமது நுண்ணறிவினால் அறிந்து கொள்ளும் மனநிலை கொண்டவளாக இருப்பதனை அறிய முடிகிறது. பின்னர் இற்செறிப்பின் மூலம் செவிலி தமது குலப்பெருமையும், குடிப்பெருமையும் காக்கும் கடமை உணர்வு மிக்கவளாகக் காணப்படுகிறாள். வெறியாட்டு பற்றிய செயல்களைக் காணும் போது தலைவி மீது கொண்டுள்ள பாச உணர்வு வெளிப்படுகிறது.

தலைவி உடன்போக்குச் சென்ற பிறகு செவிலி நற்றாயிடம் அறத்தொடு நின்று தமரின் உடன்பாட்டுடன் நாடறிய நல்மணம் செய்விக்க விழைகின்றாள். இவற்றால் செவிலியின் மனஉணர்வும், கடமையுணர்வும், பொறுப்புணர்வும் வெளிப்படுவதனை அறிய முடிகிறது.

சங்ககாலச் சமுதாயத்தில் பெண்ணின் உணர்வுகள் பெண்களால் மதிப்பளித்தும் போற்றியும் காக்கும் நிலையைச் சங்க அக இலக்கியங்களில் காணப்படும் பெண் பாத்திரங்களான நற்றாய் - செவிலி, தலைவி - தோழி மூலம் அறியலாம்.

இன்றைக்கும் கிராமப்புற சமுதாயங்களில் ஒரு தாயின் குழந்தையை மற்றொரு தாய் பராமரித்தலும், பாலூட்டி வளர்த்தலும் போன்ற நிகழ்வுகளைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் காணும் பொழுது ஒரே கணத்தினைச் சார்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு உள்ளத்து உணர்வுடன் செய்ல்பட முடியும் என்பதை கண்டு கொள்ள முடிகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்