பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதிதாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அந்தப் பாடல் எங்கே?

கருத்தொற்றுமை கொண்ட சமகாலப் படப்பாளிகளின் படைப்புகளைத் தேடிப் படிக்கிறபோதும், தொகுக்கின்ற போதும், எது, யாருடைய படைப்பு என்பதில் மயக்கம் தோன்றிவிடுவது உண்டு.

வடிவத்தாலும், உள்ளடக்கத்தாலும் தவிர்க்க இயலாத நிலையில் தோன்றும் இத்தகு மயக்கங்கள் தீர்க்கப்பட்டுத் தெளிவு படுத்தப்பட்டு உண்மை உணர்த்தப்பட்டபிறகும், அவை குறித்த பதிப்பாக்கங்களில் இத்தவறுகள் களையப்படாமல் இருப்பது, தமிழ் இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்துவரும் வருந்தத்தக்க பதிவாகும். இத்தகு நிலைக்கு ஆளான படைப்பாளிகள் மகாகவி பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர்.

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 19 : இனிமைத் தமிழ்மொழி எமது...

"புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசன்

தமிழர், வடமொழி நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் கடமைப்பட்டவரேயென்னும் போலி எண்ணம் பெரும்பாலான அறிஞர்களிடம் ஊறியிருந்தது. "வேட்டி' என்று வழங்கும் அன்பர்களை அறிவோம். வடமொழியில் வழங்கும் இச்சொல்லே தமிழில் வழங்கியதென்பதால் இச்சொல்லின் தமிழ்த் தன்மையை உணரவில்லை. வெட்டப்படுவதால் "வேட்டி', துண்டிக்கப்படுவதால் "துணி', அறுக்கப்படுவதால் "அறுவை' என்று வழங்கும் பிற சொற்களையும் காண்க. எச்சொல்லையும் பிரித்துப் பார்த்தால் தமிழா பிற மொழியா என்பது விளங்கும். இவ்வியல்பினரைத் திருத்தாது விடுவோமாயின், ஆட்டுக்குட்டியென்பதை "ஆஷ்டுக்குஷ்டி' என்பதிலிருந்து வந்ததாகவும் கூறுவர். யான் அவரிடம் சென்று, "உமக்குத் தெரியாததில் தலையிடுவது சரியில்லை. ஆடுகுட்டி யென்றால், வினைத் தொகைநிலைத் தொடராகி ஆடியகுட்டி, ஆடும் குட்டியென்றாற் போலல்லவா பொருள்படும்?' என்று கூறினேன்.

பாரதியின் 'தராசு' அல்லது பாரதி - பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது? - ஆ.இரா.வேங்கடாசலபதி

'தராசு' என்ற சொல் பாரதியோடு இணைந்ததோர் உருவகம். 1941-42இல் சுதேசமித்திரன் நாளிதழின் ஆசிரியர் ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் அதன் வாரப் பதிப்பில் தொடர் கட்டுரை எழுத வேண்டி, என்ன எழுதலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தாராம். கடைசியில் அதற்குத் தராசு என்று அவர் மகுடமிட்டதாகவும், அவ்வாறு தலைப்பிட்ட உடனே, 'கலகலவென்று சிரிப்பு காதில் பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அகக் கண்முன் பாரதி பிரத்தியக்ஷம் ஆனார்' என்று கூறுமளவுக்குப் பாரதியோடு இணைந்த உருவகமாகத் தராசு விளங்குகிறது. 1942இல் இக்கட்டுரைத் தொடரை ஸி.ஆர். ஸ்ரீநிவாஸன் தராசு என்ற தலைப்பிலேயே நூலாக்கியபொழுது எழுதிய முன்னுரையின் இறுதியில், 'பாரதியின் தராசு, (பழம்பெரும் இதழாளர் எஸ். ஜி.) ராமாநுஜலு(நாயுடு)வின் படிக்கல், இவை சஹிதமாக இன்று கடையைத் திறந்துவிட்டேன்' என்று இவ்வுருவகத்தை விரிவாக்கியிருக்கிறார் (1980களில் தமிழ்ப் புலனாய்வு இதழியலைத் தோற்றுவித்த தராசு இதழையும் இங்கு எண்ணிப்பார்க்கலாம்).

பாரதியோடு தராசு இவ்வளவு நெருக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பினும், இடைப்பிறவரலான சில குறிப்புகளையும் ரா.அ. பத்மநாபன் எழுதிய ஒரு கட்டுரையினையும் தவிரத் தராசு பற்றிய விரிவான ஆய்வை இதுவரை நான் கண்ணுற்றதில்லை. கவிதை மட்டுமல்ல, நவீன உரைநடையும் கைவரப்பெற்றவன் பாரதி என்பதற்குத் தராசுவும் ஒரு சான்று. பாரதியின் கூர்மையான பார்வையும், அதனை வெகுசனம் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் ஆற்றலும், நுட்பமான நகைச்சுவையும், பொருத்தமான பழமொழிகளும் மண்டிக் கிடக்கும் பிரதி 'தராசு'. இந்தப் பகைப்புலத்தில் தராசு பற்றிய விரிவான ஆய்வுக்கு முன்னோட்டமாக இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது, தராசு எழுதி, வெளியிடப்பட்ட காலம், அதன் பாடம், அதன்வழி அறியலாகும் சில சமகாலச் செய்திகள், சுதேசி இயக்கத்தின் தோல்விக்குப் பின்பான பாரதியின் கருத்துநிலை முதலானவற்றை இக்கட்டுரை முக்கியமாகக் கருத்தில் கொள்கிறது. பாரதி-பாரதிதாசன் முதல் சந்திப்பு என்ற இலக்கிய வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்ச்சிக்கு ஆதாரமாகக் கிடைக்கும் ஒரே சமகாலச் சான்று என்பதாலும் தராசுவின் காலக் கணிப்பு இன்றியமையாததாகிறது.

காலம்

சுதேசமித்திரன் நாளேட்டில் தராசு தொடராக வெளிவந்தது என்பது பொதுவாக அறியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படும் செய்தி. 'தராசு என்ற தலைப்பின் கீழ் பாரதியார் பல வியாசங்கள் எழுதினார். புதுவையிலிருந்து மித்திரனுக்கு வழங்கினார்' என்று ஸி.ஆர். ஸ்ரீநிவாஸனும்குறிப்பிடுகிறார். ஆனால் சுதேசமித்திரன் இதழிலிருந்து தொகுக்கப்படாத பாரதி எழுத்துகளைத் தொகுத்து, தொகுக்கப்பட்ட படைப்புகளுக்கு முதல் வெளியீட்டு விவரங்களையும் வழங்கிய பெ. தூரனின் பாரதி தமிழ் (1953) நூலில் தராசுவின் முதல் வெளியீடு பற்றிய குறிப்புகள் இல்லாதது வியப்புக்குரியது.

இருப்பினும், பாரதி காலமான ஓராண்டுக்கு முன், நவம்பர் 1920இல் 'சுதேசமித்திரன் ஆபீஸ்' வெளியிட்ட 'கவிராயர் சுப்பிரமணிய பாரதியார் எழுதிய அநேக விஷயங்கள் அடங்கிய' கதாமாலிகா என்ற நூலில் தராசுவின் கடைசிப் பகுதி (14) வெளிவந்துள்ளது. எனவே, சுதேசமித்திரனில்தான் தராசு தொடராக வெளிவந்தது என்பதில் ஐயமில்லை. மேலும், இதனைக் 'காளிதாஸன்' என்ற தம் புனைபெயரிலேயே பாரதி வெளியிட்டிருக்கிறார் என்பதும் கதாமாலிகாவிலிருந்து தெரிகிறது. நூலுக்குள்ளேயும் 'ஆஹா, காளிதாஸா, நல்ல கேள்வி கேட்டாய்! (ப. 63) என்றே தராசு, கதைசொல்லியை விளிக்கிறது (ப. 42). தராசுக் கடையில் நிகழும் உரையாடல்களிலும் 'காளிதாஸன்' ஒரு முக்கிய உறுப்பினனாகவே விளங்குகிறான்; 'தராசுக் கடை ஐயர்' என்றும்கூடச் சுட்டப்பெறுகிறான்.

இப்பொழுது நமக்குக் கிடைக்கப்பெறும் தராசுவின் பாடம் 1928இல் பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. 'பாரதி பிரசுராலயம்' என்பது பாரதியின் தம்பி சி. விசுவநாதன் வேறு இரண்டு பாரதி அன்பர்/உறவினர் உதவியுடன் தொடங்கிய பதிப்பகமாகும். பாரதி மறைந்த இரண்டொரு ஆண்டுகளில் தொடங்கப்பட்ட செல்லம்மா பாரதியின் பதிப்பகமான 'பாரதி ஆச்ரமம்' தோல்வியடைந்தபின் தொடங்கப்பட்ட பாரதி பிரசுராலயமே பாரதியின் எழுத்துகளைப் பெருமளவில் முதல் முறையாக நூலாக வெளியிட்டது. பாரதி பிரசுராலயத்தின் தராசு பதிப்பில் பதிப்புரை எதுவும் இல்லாததால் எதன் அடிப் படையில் நூல் வெளியிடப்பட்டது என்ற செய்தியை அறிய இயலவில்லை. ஏற்கனவே அச்சான நூல்களை மறுஅச்சிட்டதோடு, பல்வேறு இதழ்களில் வெளிவந்த படைப்புகளைப் பாரதியின் கோப்புகளிலிருந்தும் பிறவற்றைக் கையெழுத்துப்படிகளிலிருந்தும் வெளியிடுவதுமே பாரதி பிரசுராலயத்தின் நடைமுறையாக இருந்திருக்கிறது. தராசுவின் வடிவத்தை நோக்க, அது பத்திரிகையில் தொடராக வெளிவந்தது என்பது கண்கூடு. புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிவந்த My Journal of Thoughts and Deeds என்ற குறிப்பேட்டில் தாம் எழுதிவந்தவற்றின் பட்டியலில் தராசுவைக் குறிப்பிட்டிருக்கிறார். என்பதையும் கண்டறிய வேண்டியுள்ளது. இச்செய்திகளிலிருந்து இது நூலாகக் கருக்கொள்ளப்படவில்லை என்று உணர முடியும். அச்சிட்ட செய்தித்தாள் நறுக்குகளிலிருந்தே பாரதி பிரசுராலயம் தராசுவை வெளியிட்டது என்பதில் தவறில்லை. நூலின் முதல் பத்தியில், சில தொடர்கள்/வரிகள் இல்லை என்பதைக் காட்டும் புள்ளிகள் இடம்பெற்றிருப்பதும் சிதிலமடைந்த செய்தித்தாள் நறுக்குகளே மூலப்படி என்பதைச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

பருவ இதழியலில் 'பத்தி எழுத்து' (column writing) என்ற வகையைச் சார்ந்தது தராசு. ஒரு குறிப்பிட்ட பார்வை அல்லது நிலைப்பாட்டிலிருந்து அவ்வப்போது நிகழும் செய்திகளைப் பற்றிக் கருத்துரைப்பது இதன் தன்மை. புனைபெயரில் பத்தி எழுதும்போது அதற்கேற்ப ஓர் ஆளுமையை அமைத்துக்கொண்டு அந்த அமைதிக்கேற்பப் பத்தி எழுதப்படுவதும் உண்டு. தராசு இவ்வகையைச் சார்ந்தது. அக்காலகட்டத்தில் சுதேசமித்திரன் போன்றதொரு நாளேட்டிலேயே இத்தன்மைத்தான ஒரு வடிவத்தைப் பாரதி கையாண்டிருக்க இயலும். தராசுவிலேயும்கூட இரண்டொரு இடங்களில் பாரதி சுதேசமித்திரனைக் குறிப்பிடுகின்றான்.

எக்காலப் பகுதியில் தராசு தொடராக வெளியானது என்பது அடுத்த கேள்வி. அகச் சான்றுகளிலிருந்தே இதைக் கணக்கிட வேண்டியுள்ளது.

1907ஆம் ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் நின்றுபோன பாரதியாரது கட்டுரைகள் சுதேசமித்திரனில் 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்தான் மறுபடியும் வெளிவரலாயின. 1915 ஜூன் 15இல் 'எதிர் ஜாமீன்' என்ற கதை வெளியாயிற்று. பிறகு அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் 'கிச்சடி'யைப் பார்க்கிறோம். 1916 பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து கட்டுரைகள் வர ஆரம்பிக்கின்றன.

என்கிறார் பெ. தூரன். (ஆயினும் முன்பே குறிப்பிட்டவாறு தராசு பற்றிய எந்தக் காலப் பதிவையும் அவர் வழங்கவில்லை.)

பல இடங்களில் முதல் உலகப் போரைப் பற்றிக் குறிப்பிடுவதால் 'தராசு' 1914-1918 என்ற பகுதியில் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.

'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி....' (ப. 21)

'ஐரோப்பாவிலே சண்டை எப்போது முடியும்?...' (ப. 38)

'ஐரோப்பா யுத்தத்தைப் பற்றியது'. (ப. 51)

'சண்டையினால் கப்பல்களின் போக்குவரவு சுருங்கிவிட்டது' (ப. 61)

'சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது' (ப. 72)

சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் காந்தி ஆற்றிய உரை பற்றிய குறிப்பு 12ஆம் இயலில் உள்ளது. இது 27 ஏப்ரல் 1915இல் நிகழ்ந்ததாகும். அதே இயலில் அகமதாபாதில் காந்தி ஸத்யாக்கிரஹ ஆசிரமம் ஏற்படுத்திய செய்தியும் உள்ளது. சபர்மதி ஆசிரமம் 20 மே 1915இல் தொடங்கப்பட்டதாகும்.

புதுக்கோட்டை மன்னர் ஓர் ஆஸ்திரேலியப் பெண்ணை மணம் புரிந்ததைப் பற்றி 3ஆம் இயல் குறிப்பிடுகிறது. இத்திருமணம் நிகழ்ந்தது 10 ஆகஸ்டு 1915இல்.

தராசுவின் இரண்டாம் இயல் 'பம்பாயில் நடக்கப் போகிற காங்கிரஸ் ஸபை' பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே டிசம்பர் 1915க்குச் சில மாதங்களுக்கு முன் இது எழுதப்பட்டதைக் காட்டுகிறது.

அ. மாதவையா செய்யூரிலிருந்ததைப் பற்றிய குறிப்பும் (ப. 9) உள்ளது. அவருடைய மகன் மா. கிருஷ்ணனின் குறிப்பிலிருந்தும் இது 1915-16ஆக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

கடைசி இயலில் அன்னி பெசண்ட் உதகைக்குள் சிறைவைக்கப்பட்டதைப் பற்றிய குறிப்பு உள்ளது. இது நிகழ்ந்த காலம் 1917 ஜூன் 16 முதல் செப்டம்பர் 5 வரையிலுமாகும்.

இவற்றிலிருந்து தராசு எழுதப்பட்ட காலம் 1915 இடைப்பகுதியிலிருந்து 1917 இடைப்பகுதிவரை என்று துணியலாம். ஆனால் இதையும் சிறிது தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இன்று படிக்கக் கிடைக்கும் தராசு நூலின் பெரும் பகுதி (14இல் 12 இயல்கள்) 1915க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

நூலின் ஈற்றயல் இயல் (13) 'சில தினங்களாக நமது தராசுக் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை' (ப. 60) என்று தொடங்குகின்றது. கடைசி இயல் 'தராசுக் கடையை நெடுநாளாக மூடிவைத்துவிட்டேன்' (ப. 66) என்ற பீடிகையுடனேயே தொடங்கி, 'தராசுக் கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை' (ப. 66) என்று பாரதி தொடர்கிறான். இதில்தான் அன்னி பெசண்ட்டின் சிறைவாசம் பற்றிய குறிப்பும் உள்ளது. இதிலிருந்து கடைசி இயல் / இயல்கள் மட்டும் 1917இன் இடையில் வெளிவந்திருக்கலாம் - ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு.

இன்று கிடைக்கும் தராசுவின் பாடத்தில் சில இயல்கள் வரிசை மாறி முன்பின்னாக இருக்கவும் வாய்ப்புண்டு. சுதேசமித்திரன் இதழ்கள் முழுவதுமாகவோ, பாரதியின் கோப்புகளோ கிடைத்தால்தான் இது பற்றிய தெளிவு ஏற்படும்.

பாரதி - பாரதிதாசன் சந்திப்பு

தராசுவின் காலம் பற்றிய கணிப்பு வேறு ஒரு முக்கிய இலக்கிய வரலாற்றுச் செய்தியைத் தீர்மானிக்க இன்றியமையாததாகும். பாரதியைத் தமது கொட்டடி வாத்தியார் வேணு நாய்க்கர் மணவிழாவில் சந்தித்ததாகப் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பு 1908இலேயே நேர்ந்துவிட்டது என்ற கருத்து பாரதிதாசன் ஆர்வலர்களிடையே பொதுவாக நிலவுகிறது. மன்னர்மன்னன், ச.சு. இளங்கோ போன்றோர் இக்கருத்தைக் கொண்டுள்ளனர். பாரதி-பாரதிதாசனுக்கிடையேயான உறவைச் சுட்டும் 'பாரதியோடு பத்தாண்டுகள்' என்ற தொடர் பாரதியின் புதுவை வாழ்க்கையினையே (1908-1918) கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இரா. இளவரசு பிற சூழல்நிலைச் செய்திகளைக் கொண்டு 1910இன் இறுதி அல்லது 1911இன் தொடக்கத்தில் இச்சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் எனத் துணிந்துள்ளார்.

பாரதிதாசனைப் பற்றிப் பாரதி (பெயர் சுட்டாமலாயினும்) குறிப்பிடும் ஒரே இடம் தராசுவில்தான் பயில்கின்றது என்பது தமிழுலகம் நன்கு அறிந்த செய்தி. இருப்பினும் இதன் சுவை கருதியும் முக்கியத்துவம் கருதியும் அதனை இங்கு முழுமையாகக் காண்போம். (காண்க: பெட்டி)

பாரதிதாசனின் விருப்பத்திற்கிணங்க அவர் பெயரைச் சுட்டாது, சாதியைக் கொண்டே தராசு அவரை அடையாளப்படுத்துகிறது. மேலும் அவருக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதும் தெளிவுறுத்தப்படுகிறது. அதுவரை 'நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை' என்று அவர் விழிக்கிறார். அதன்பின் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்ற புகழ்பெற்ற பாடலைப் பாரதிதாசன் பாடுகிறார். யாரிடம் தமிழ் படித்தார் என்று கேட்டுவிட்டு, 'சரிதான், ஆரம்பம் குற்றமில்லை' என்கிறது தராசு. கடைசியில் பாரதிதாசன் பாரதியை 'குரு' என ஏற்று வணங்கியதும், 'எழுக! நீ புலவன்!' என்று வாழ்த்தியபோதிலும், பாரதிதாசன் ஒரு பெருங்கவிஞராக மலரவிருக்கிறார் என்பதைப் பாரதி முன்னுணர்ந்ததாகக் கொள்ள தராசு இடம் தரவில்லை.

பாரதி - பாரதிதாசன் முதல் சந்திப்புப் பற்றி இன்று கொள்ளப்படும் காலக் கணிப்பைத் 'தரா'சின் பின்புலத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இச் சந்திப்புப் பற்றிய ஒரே சமகாலப் பதிவு தராசுதான் என்னும்போது, இதனையே முதன்மைச் சான்றாகக் கொள்ள வேண்டியுள்ளது. இரு பெருங் கவிஞர்களின் சந்திப்பைப் பற்றிப் பாரதி ஆய்வாளர்கள் அதிகம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. பாரதி ரமணரைச் சந்தித்தாரா இல்லையா என்பது போன்ற முதன்மையற்ற செய்திகளே அவர்களை ஆட்கொண்டுள்ளன. பாரதிதாசன் ஆய்வாளர்களோ தராசின் காலத்தைப் பற்றி ஆராயாமல் வேறு பிற்சான்றுகளைக் கொண்டுள்ளது வியப்புக்குரியது.

பாரதியைப் பற்றிப் பல பாடல்களையும் கட்டுரைகளையும் பொழிவுகளையும் இயற்றிய பாரதிதாசன் தராசுவில் இடம்பெற்ற நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன் என்பதும் புலப்படவில்லை. பாரதியின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதற்காகப் பாரதிதாசன் எழுதிய திரைக்கதையிலும் நாடகத் தன்மையுடன் காட்சிப்படுத்துவதற்கு ஏற்ற இந்நிகழ்ச்சி இடம் பெறாதது ஏன் என்பதும் தெரியவில்லை.

ஆயினும் தராசுவின் ஆதாரத்தைக் கொண்டு இரு பெருங்கவிஞர்களின் முதல் சந்திப்பு 1915இன் இடைப் பகுதியில் நிகழ்ந்தது என்று கொள்வதே இன்றைய நிலையில் பொருத்தமானது.

நோக்கமும் அமைப்பும்

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் அன்றாடம் நிகழும் செய்திகளைப் பற்றித் தன் பார்வையில் கருத்துரைப்பதே பாரதியின் நோக்கம்.

பலவிதமான செய்திகளையும் கலந்து பேச நேரிடுமாதலால் 'பலசரக்குக் கடை' என்று மகுடமெழுத உத்தேசித்தேன். அது அதிக விளையாட்டாக முடியுமாதலால் விட்டுவிட்டேன். எனக்கும் ஒரு செட்டியாருக்கும் சினேகம். அவரைப் போல் நாம் ஒரு பலசரக்குக் கடை வைத்தால் அவருக்குக் கோபம் ஏற்படுமென்று கருதி அந்த மகுடத்தை விலக்கினேன். ...... தராசு என்று பொதுப்படையாகப் பெயர் வைத்திருக்கிறேன். எல்லா வஸ்துக்களையும் நிறுத்துப் பார்க்கும். எல்லாச் செட்டியார்க்கும் இதனால் உதவியுண்டு

என்ற பீடிகை தொடக்கத்திலேயே உள்ளது.

மூன்றாம் இயலில் புதுக்கோட்டை மன்னரின் திருமணம் பற்றிக் கேட்கும்போது, 'பெரிய மூட்டை; சீமை வியாபாரம்; நாட்டு வியாபாரத்துக்குத்தான் நம்முடைய தராசு உதவும். வேறு கடைக்குப் போம்' என்று பாரதி விளையாட்டான தன்னடக்கத்தோடு குறிப்பிடுகிறான்.

'எல்லாம் தெரிந்து எந்தக் கேள்வி கேட்டாலும் விடை சொல்லக்கூடிய மாயத் தராசு' என்றும் நூலிடையில் ஒருவர் பாராட்டுகிறார்.

மற்றுமோர் இடத்தில் (இயல் 6 தொடக்கத்தில்) 'இங்கு நீடித்த விலைமதிப்புள்ள ஸாமான் மாத்திரமே நிறுக்கப்படும். விரைவில் அழிந்துபோகக்கூடிய, விலை குறைந்த சாமான்கள் நிறுக்கப்பட்ட மாட்டா' என்று விளம்பரம் செய்யப்படுகிறது.

தராசுவின் அமைப்பு கதைசொல்லியும் தராசும் உடனிருக்க வெவ்வேறு வகையான ஆள்கள் உள்ளே நுழைந்து கேள்விகள் கேட்கவும் கதைசொல்லியின் கூற்றுகளை இடைமறித்தும் இடையிட்டும் தராசு கருத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. தராசு கருத்துரைப்பதற்கு வாய்ப்பாகவே கதைசொல்லியின் கூற்றுகள் அமைகின்றன. கிரிக்கெட்டிலிருந்து ஓர் ஒப்புமையைக் கூற வேண்டுமென்றால் தராசு பவுண்டரி அடிப்பதற்கு வாகாகப் பந்து வீச வேண்டிய பொறுப்பு கதைசொல்லிக்கு உரியது. தராசுவின் ஆளுமை இதில் முக்கியமானது. சடப்பொருளாக இருப்பதால் அதனால் சமூகத்தின் எந்த ஒரு பிரிவையும் சாராமல், விலகி நின்று கருத்துச் சொல்லும் நிலைப்பாட்டுப் புள்ளி தராசுக்கு வாய்க்கிறது. ஆயினும் அதற்குரிய கருத்தியல் நிலை உண்டு என்பதையே அது வெளிப்படுத்தும் கூற்றுகள் காட்டுகின்றன. அதற்கென ஒரு மனித உருவம் இல்லாததால் வாசகனின் கற்பனை விரிவுகொள்வதற்கும் கருத்துரைப்பவரின் சார்பைக் கணக்கிலெடுக்காமல் கருத்தில் கவனம் செல்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது. தராசு இருக்கும் அவையில் வெவ்வேறு ஆட்கள் வரவும், அவர்கள் கேட்கின்ற கேள்விக்கேற்பத் தராசு கருத்துச் சொல்வதுமாக நூல் அமைந்துள்ளது.

தராசு நீக்கப்பட்டால் இந்த அவை என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாகப் பாரதியின் 'உல்லாஸ சபை' கட்டுரை (சுதேசமித்திரன், 29 மார்ச் 1916) உள்ளது. தராசுவில் நடமாடும் ஜிந்தாமியான் ஸேட், எலிக்குஞ்சு செட்டியார், காளிதாசன் ஆகியோரும் இவ்வுல்லாஸ சபையில் அடங்குவர். தராசுவின் மையமான முக்கியத்துவத்தை தனது இன்மையின் மூலம் 'உல்லாஸ சபை' கட்டுரை எதிர்மறையாகக் காட்டுகிறது.

இங்குச் சமூகத்தின் அலகுகள் பற்றிய தராசுவின் பார்வையைக் குறிப்பிட வேண்டும். தராசுவில் இடம்பெறும் நபர்கள் எல்லாம் சாதிய அடையாளங்களோடுதான் இடம்பெறுகின்றனர் என்பது மட்டுமல்லாமல் சாதிய அடையாளத்தோடு மட்டுமே இடம்பெறுகின்றனர். செட்டியாருக்குக் கேலிப்பெயராக 'எலிக்குஞ்சு' என்ற அடை அமைகின்றது. பாரதிதாசன் பெயர்கூட இல்லாமல் 'கைக்கோள ஜாதி' எனச் சுட்டப்படுகிறார். தன்னைத் தானே 'தராசுக் கடை ஐயர்' என்றும் பாரதி கூறிக்கொள்கிறான். பிராமணப் பிள்ளை, செட்டிப் பிள்ளை என்ற சுட்டுகள் விளங்குகின்றன. இரண்டோ ரிடத்தில் மிக நுணுக்கமாகவே சாதியப் பிரிவுகள் பேசப்படுகின்றன. 'தம்பி, அய்யங்காரே உன் பெயரென்ன?' என்று தராசு கேட்டதும், 'லஷ்மி வராஹாசார்யர்; வடகலை; ஸ்வயமாசார்ய புருஷர் வகுப்பு' எனப் பதில் வருகிறது. இவ்வுரையாடல் நிகழும் தருணத்தில் நுழையும் ஒரு பாட்டி தெலுங்கு பிராமணர்களிலே 'நியோகி என்ற பிரிவைச் சேர்ந்தவள்' என்று அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

இவர்களெல்லாருமே மேல்சாதியினராகவும் இடைநிலைச் சாதியினராகவும் இருக்கின்றனர். கீழ்நிலைச் சாதிகள் யாருமே இல்லை. 'ஜிந்தாமியான் சேட்' மட்டும் ஒரு முஸ்லிம் என்ற குறிப்பு 'உல்லாஸ சபை'யில் காணப்படுகிறது. 'நம்ம குரான்' என்று கூறுவதோடு, 'உங்க ஹிந்துக்களுடைய நாலு வேதத்துக்குப் பெயர் என்ன?' என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார். 'பாட்டி' என்ற நிலையில் ஒரேயொரு பெண் மட்டுமே தராசுக் கடையில் பங்குகொள்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் உருவாகிவந்த பொதுக்களத்தின் (public sphere) உருவகமாகத் தராசுக் கடையைக் கொள்ள இயலும்.

அரசியல்

பாரதியின் எழுத்துகளில் பொதுவாக இடம்பெறும் கிழக்கு வூ மேற்கு என்ற இருமை எதிர்வு 'தராசு'விலும் வலுவாக இடம்பெறுகிறது. 'கிழக்கு' என்றால் 'பரமார்த்திகம்', 'மேற்கு' என்றால் 'லௌகீகம்' என்ற கீழைத்தேயவியல் வகைமாதிரி (Orientalist stereotype) பாரதியிடம் உரம் பெற்றுள்ளது.

'தமிழ்ச் சாதி' பாடலில் இடம்பெறும் மேலை மருத்துவம் x சுதேச மருத்துவம் என்ற உருவகங்களின் வழியாக வெளிப்படும் நவீன இந்திய அறிவாளர்களின் மரபுக்கும் மாற்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஈரடி நிலை தராசுவில் சுதேச மருத்துவத்தின் சார்பாகத் தீர்க்கப்படுகிறது.

வேதாந்தத்தைப் பின்பற்றி ஒழுகியதால் இந்தியாவுக்கு ஏற்பட்ட உலகியல் தாழ்வுகளைக் கண்டிக்கும் அதே வேளையில் இந்திய வைதீக மரபைப் பாரதியால் விட்டுக்கொடுக்க முடியவில்லை என்பதையும் தராசுவில் காண்கிறோம்.

அடிப்படை மாற்றங்களின் மூலமாகவோ இந்து சமயத்தின் ஆதாரக் கூறுகளை விமரிசனம் செய்வதன் மூலமாகவோ அல்லாமல் சீர்திருத்தங்களின் மூலமாக மட்டுமே இந்தியச் சமுதாயத்தைத் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையும் பாரதியிடம் தொழிற்படுகின்றது.

ஆங்கிலத்திற்கு எதிராகத் தமிழையும் தமிழ்க் கலைச் சொல்லாக்க முயற்சிகளையும் வரவேற்பதோடு, 'சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர்கள் (அடுத்த பிறவியில்) குரங்குகளாகப் பிறப்பார்கள்' என்று சபிக்கும் பாரதியின் தமிழ்ச் சார்பு, வடமொழியோடு ஒப்பிடுகையில் அவ்வளவு துலக்கமாக வெளிப்படவில்லை.

1915-16 உலகப் போர் உச்சத்திலிருந்த காலம். 'சென்ற சுபகிருது வருஷத்திலே ஒரு புதிய உணர்ச்சி உண்டாயிற்று' என்று பாரதி உரைத்த சுதேசி இயக்கம் ஒரு பெரும் வீச்சுக்குப் பிறகு 1911-12 அளவில் ஒடுங்கிவிட்டது. சுதேசி இயக்கத் தலைவர் பலர் சிறையிலிருக்கவும், ஆஷ் கொலைக்குப் பிறகு ஒரு பெரும் அச்சமும் நிலவியது. பாரதி புதுவையில் கரந்துறை வாழ்க்கை நடத்திவந்தான். தலைமேல் கத்தி என்பதுபோல் அச்சத்திலேயே அவன் வாழும் கட்டாயம் பல ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. (தராசுக் கடைக்கும்கூட ஒரு போலீஸ் உளவாளி வந்துபோகிறான்!) அரசியல் இயக்கம் நடைபெறாத காலம் இது.

இக்கட்டத்தில் எழுதப்பட்ட தராசுவிலும் இதன் வெளிப்பாடுகள் காணக் கிடைக்கின்றன. அரசியல் பற்றி எழுதக் கூடாது என்ற முன்நிபந்தனையின் பேரிலேயே மீண்டும் சுதேசமித்திரனில் எழுதும் வாய்ப்பு பாரதிக்கு 1915இல் வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாகவே இருக்கலாம். இதற்கேற்பவோ என்னவோ 'அரசியல் பேசமாட்டேன்' என்று பல இடங்களில் தராசு உறுதிபடக் கூறுகிறது.

ஊன்றிப் பார்க்கையில் உலகப் போர் என்பது இதற்கோர் முகாந்திரமாகவே இருக்கிறது. 'சண்டை சமயத்தில் ராஜ்ய விஷயங்களைப் பற்றி யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருப்பதே நாம் இந்த ராஜாங்கத்தாருக்குச் செலுத்த வேண்டிய கடமையென்று... சொல்வது முழுதும் நியாய மென்பதை அங்கீகரித்து, நம்மால் கூடியவரை இந்த ராஜாங்கத்தாருக்குத் திருப்தியாகவே நடந்துவிட்டுப் போகலாமென்று' (ப. 21) தராசு தொடக்கத்தில் எடுக்கும் முடிவு, கடைசிப் பத்திவரை (ப. 72-73) நீடிக்கிறது:

'தராசு ராஜாங்க விஷயத்தை கவனியாது. சண்டை முடிகிறவரையிலும் ராஜாங்க விஷயமான வார்த்தை சொல்லுவதிலே தராசுக்கு அதிக ருசி ஏற்படாது. சண்டை பெரிது; நம்முடைய கடை சாதாரணம்; ராஜாங்க விசாரணைகளோ மிகவும் கடுமை.'

பாரதியின் பலவீனமாக அல்லாமல் இந்தியத் தேசியத்தின் ஒரு பெரும் பலவீனமாக இதைப் பார்க்கலாம். அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைத்து இயக்கம் நடத்தாத நிலையை இது காட்டுகிறது. இதனால் அரசியல் இயக்கம் வலுவிழக்கும் தருணங்களிலேயே சமூகச் சீர்திருத்த விஷயங்களில் அதன் கவனம் செல்கிறது. அரசியல் இயக்கம் தொய் வடைந்த தருணத்தில் இயற்றப்பட்ட தராசுவும் இதைக் காட்டுகிறது. அரசியல் இயக்கம் உச்சத்திலிருக்கும் வேளையிலோ 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி'தான்!

'எழுக! நீ புலவன்!' - பாரதி

இன்று நமது கடைக்கு ஒரு தமிழ்க் கவிராயர் வந்தார்; கைக்கோள ஜாதி; ஒட்டக்கூத்தப் புலவர்கூட அந்தக் குலந்தானென்று நினைக்கிறேன்.

இவருக்கு இங்கிலீஷ் தெரியாது. தம்முடைய பெயரை வெளிப்படுத்தக் கூடாதென்று சொன்னார். ஆதலால் வெளிப்படுத்தவில்லை.

தராசு முகமலர்ச்சியுடன் சிரித்தது. "இப்படி ஒரு கவிராயன் வந்தால் எனக்கு ஸந்தோஷம். எப்போதும் வீண் வம்பு பேசுவோரே வந்தால் என்ன செய்வேன்?" என்றது. "கவிராயரே, என்ன விஷயம் கேட்க வந்தீர்?" என்று தராசு கேட்டது.

"எனக்குக் கவிராயர் என்பது பரம்பரையாக வந்த பட்டம். என்னுடைய தகுதியால் ஏற்படவில்லை. அத்தகுதி பெற முயற்சி செய்து வருகிறேன். அந்த விஷயமாகச் சில வார்த்தைகள் கேட்க வந்தேன்" என்று கவிராயர் சொன்னார். "இதுவரை பாடின பாட்டுண்டானால் சொல்லும்" என்று தராசு கேட்டது.

"இதுவரை நாற்பது அல்லது ஐம்பது அடிகளுக்கு மேல் பாடியது கிடையாது. இப்போதுதான் ஆரம்பம். அது அத்தனை ரஸமில்லை" என்று சொல்லிக் கவிராயர் விழித்தார்.

"மாதிரி சொல்லும்" என்றது தராசு.

புலவர் பாடத் தொடங்கினார். தொண்டை நல்ல தொண்டை.

"காளை யொருவன் கவிச்சுவையைக் - கரை

காண நினைத்த முழு நினைப்பில் - அம்மை

தோளசைத் தங்கு நடம் புரிவாள் - இவன்

தொல்லறி வாளர் திறம் பெறுவான்.

ஆ! எங்கெங்கு காணிலும் சக்தியடா! - தம்பி

ஏழு கடலவள் மேனியடா!

தங்கும் வெளியினிற் கோடியண்டம் - எங்கள்

தாயின் கைப் பந்தென வோடுமடா!

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து

கர்ச்சனை செய்தது கேட்டதுண்டோ ?

மங்கை நகைத்த ஒலியதுவாம் - அவள்

வாயிற் குறுநகை மின்னலடா!"

தராசு கேட்டது: "புலவரே, தமிழ் யாரிடம் படித்தீர்?"

கவிராயர்: "இன்னும் படிக்கவில்லை; இப்போதுதான் ஆரம்பம் செய்கிறேன்."

தராசு: "சரிதான் ஆரம்பம் குற்றமில்லை. விடா முயற்சியும் தெய்வபக்தியும் அறிவிலே விடுதலையும் ஏறினால் கவிதையிலே வலிமையேறும்."

இங்ஙனம் வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கையில் சீட்டிக் கடை ஸேட் வந்தார். . . .

கவிராயர் தராசை நோக்கி, "நம்முடைய ஸம்பாஷணைக்கு நடுவிலே கொஞ்சம் இடையூறுண்டாயிற்று" என்றார்.

தராசு சொல்லுகிறது: "உமக்கும் அதுதான் காணும் வார்த்தை. நெசவிலே நாட்டு நெசவு மேல். விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வதே மேல். பணம் நல்லது; ஆனால் பணத்தைக் காட்டிலும் தொழிலருமை மேல். காசிப்பட்டுப் போலே பாட்டு நெய்ய வேண்டும். அல்லது உறுதியான, உழவனுக்கு வேண்டிய, கச்சை வேஷ்டி போலே நெய்ய வேண்டும். 'மல்' நெசவு கூடாது. 'மஸ்லின்' நீடித்து நிற்காது. பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையுமிருக்க வேண்டும். இதற்கு மேலே நல்ல வர்ணஞ் சேர்த்தால் குற்றமில்லை. சேராமலிருந்தால் விசேஷம்."

அப்போது புலவர் தராசை நோக்கி: "நீயே எனது குரு" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினார்.

தராசு: "எழுக! நீ புலவன்!" என்றது.

நன்றி - காலச்சுவடு 2006

பாரதிதாசன் கவிதைகளில் நாட்டுப்புற இலக்கியங்களின் செல்வாக்கு - முனைவர் அ.முத்துவேலன்

இருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்புமற்ற எழுச்சிப் பாடல்களை இயற்றித் தமிழை வளப்படுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். அரசியல் பற்றி அதிகம் எண்ணாமல் சமுதாய உயர்வு பற்றி எண்ணியவர் பாரதிதாசன்.

சமுதாயத்தைப் பற்றி எண்ணாத இலக்கியங்களால் மக்கள் பெறும் பயன் குறைவு எனலாம். தங்கக் கோபுரத்தில் ஏறித் தாழிட்டுக் கொள்ளும் தங்களை மறந்த மனிதர்கள் அவற்றின் உரிமையாளர்கள். கண்ணையும் கருத்தையும் கற்பனையிலும் கனவுலகிலும் உலவவிட்டுத் தங்களைச் சமுதாயத்தினின்றும், ஒதுக்கிக் கொள்கிறவர்கள் அவர்கள்.

பாரதிதாசன் இவ்வகையினரைச் சார்ந்தவர் அல்லர். ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றை வளர்த்தும் பயன்படுத்துவது அந்தச் சமுதாயத்தின் இலக்கியமே. ஆகையால் அதுவே மனிதர்கள் வாழ்வைப் பெரிதும் மாற்றி அமைப்பது என்பதில் அவர் உறுதி கொண்டவர் என்பார் கூற்று பாவேந்தரை இனம் காண உதவுகிறது. இவரது பாடல்களில் நாட்டுப் புற இலக்கியத்தின் கூறுகள் ஆங்காங்கு காணப்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து காண்பது இக்கட்டுரை.

நாட்டுப்புற இலக்கியம்

வரலாற்றுக்கும் எட்டாத மிகப் பன்னெடுங் காலமாகவே நாட்டுப்புறப் பாடல்கள் தமிழகத்தில் பட்டிதொட்டிகளில் எல்லாம் வழங்கி வந்துள்ளன. அற இலக்கியங்களுள் கதை இலக்கியங்களுள் அறிஞரிடையே மதிப்புப் பெற்றுள்ளதைப் போன்று நாட்டுப்புற மக்களுக்குப் பயன் தரும் சமுதாய இலக்கியமாக விளங்கியமையால் இவை நாட்டுப்புற இலக்கியம் என்னும் பெயரைப் பெற்றன.

வழிவழியாக வளர்ப்பமை குன்றா எழிலுடன் இலங்குவது நாட்டுப்புற இலக்கியம். இது என்று தோன்றியது என எண்ணற்கியலாப் பழமையுடையது. பண்டு முதல் இன்று வரையிலான ஏட்டிலக்கியச் செழுமைக்கும் இவ்விலக்கியப் பேழையின் இடைத் தொடர்பு காரணம் எனில் அது மிகையாகாது என்பார் கூற்று இதனை வலியுறுத்தும்.

நாட்டுப்புற இலக்கியம் ஏட்டிலக்கியத்தில் தனது செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளதைத் தமிழண்ணல் போன்ற அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்3 அறிந்தோ அறியாமலோ ஒரு ஆசிரியனால் இரவல் வாங்கப்பட்ட கருத்துக்களால் தூண்டப்பட்டுதான் இலக்கிய வளர்ச்சியே ஏற்படுகிறது என்பர். இக்கருத்திற்கு கால முதல் ஏட்டிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்ததைக் காணமுடிகிறது.

நாட்டுப் புறப்பாடல் கூறுகளாக நம்பிக்கை, திரும்பத் திரும்ப வருதல், பழமொழிகள் சடங்குகள், சுட்டி ஒருவர்ப் பெயர் கூறா மரபு. புராண மரபுச் செய்திகள், விடுகதைப் பாங்கு, பேச்சு வழக்குச் சொற்கள் ஆகியவற்றை ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

இங்குக் குறிப்பிட்ட இலக்கியக் கூறுகள் பாரதிதாசன் பாடல்களில் உடன்பாட்டிலோ எதிர்மறையிலோ இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

நம்பிக்கை

நாட்டுப்புறப் பாடல்களில் இன்றியமையாத கூறு நம்பிக்கை. பண்டையக் காலம் முதல் மனிதன் இயற்கையோடியைந்து வாழ்ந்து வருகிறான். இயற்கை மாறுதலுக்கேற்ப மனித மனமும் மாறுபடுகிறது. இயற்கையோடியைந்த மனித வாழ்வில் நம்பிக்கைகள் தோன்றலாயின.

நம்பிக்கைகளில் முதன்மை பெறுவது தெய்வ நம்பிக்கை நாட்டில் மழை பெய்வது நாடு செழிக்க வேண்டுமானால் மாரியம்மனின் அருள் வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடையே பலமாக இருந்தது. மாரியை வேண்டி வரங்கிடந்தமையாலோ என்னவோ அவளுக்கே மாரி என்ற பெயர் ஏற்பட்டு விட்டது. நாட்டில் உண்டாக்கும் அம்மை முதலான நோய்களுக்கும் மாரியம்மனே காரணம் என நம்பினர். மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்துவந்தனர். மாரிக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனைச் செலுத்தாவிட்டால் பல குற்றங்கள் நேரும் என நம்பினர்.

ஆரு கடன் நின்றாலும்

மாரி கடன் ஆகாது

மாரிகடன் தீர்ந்தவர்க்கு

மனக்கவலை தீருமம்மா

என்பது போன்ற பாடல்களில் இதைக் காணலாம்.

ஓர் கடவுள் உண்டு - தம்பி

உண்மை கண்ட நாட்டில்

உள்ள தொரு தெய்வம் - அதற்கு

உருவமில்லை தம்பி!5

என்று இவர் பாடுவதில் தொடக்க காலத்தில் இவர் தெய்வ நம்பிக்கை உடையவராக இருந்தார் என்று கருதலாம்.

திரும்பத் திரும்ப வருதல்

பாடல்களில் சொற்கள் மீண்டும் மீண்டும் வரப்பாடுவது நாட்டுப்புற இலக்கியத்தின் கூறு. இது உலக நாட்டுப் புற இலக்கியங்கள் அனைத்திலும் காணப்படும் பொதுவான பண்பு என்பர்.6

ஒரே அடியிலோ அடுத்தடுத்த அடியிலோ வந்த சொல் அல்லது சொற்றொடர் திரும்பத் திரும்ப வந்தால் அதனைத் தொடர்ந்து வரல் (Continious) என்றும் ஒரு அடி விட்டு அடுத்த அடியிலோ அல்லது ஒவ்வொரு பத்தியின் இறுதியிலோ வந்தால் விட்டு வரல் (Un Continious) என்றும் இத்தொடர்ந்து வரல் பண்பு இருவகைப்படும்.

காட்டை அழிப்பதும் கூடும்-அலை

கடலையும் தூர்ப்பது கூடும்

மேட்டை அகழ்வதும் கூடும்-விரி

விண்ணை அளப்பதும் கூடும்.

என்ற நாட்டுப் புறப்பாடலில் ''கூடும்'' என்ற தனிச்சொல் அடி தொறும் மீண்டும் மீண்டும் வருகின்றது.

தமிழுக்கு அழுதென்று பேர்! - அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நில வென்று பேர்! இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மண மென்று பேர்!......இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!7.

என்ற பாவேந்தர் பாடலில் இதைக் காணலாம்.

பேச்சு வழக்கு

நாட்டுப்புற இலக்கியப் பாடல்களில் கொச்சைச் சொற்கள் அதாவது மக்கள் உலக வழக்கில் பேசிக் கொள்ளும் சொற்கள் நிறைய இடம் பெறுவது வழக்கு

பம்பப் புளிய மரம்

பந்தடிக்கும் நந்தவனம்

பந்தடிச்சி வீடுவந்தா

பச்சத் தண்ணி யார் தருவா?

கடன் வாங்கிச் சோறு தின்னா

கங்காரன் நச்சரிப் பான்!

கண்கலங்கி நிக்கையிலே

கண்ட சனம் பேசுமய்யா!

என்ற நாட்டுப்பாடலில், பந்தடிச்சி, பச்சத் தண்­, தருவா, தின்னா, நிக்கையிலே என்னும் கொச்சைத் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைப் போன்றே பாவேந்தர் பாடல்கள் சிலவற்றில் கொச்சை வழக்குச் சொற்களைக் காணலாம்.

எண்ணா கெழவா!

பொடிய னெங்கே? இங்கேவா!

கன்னா பின்னான்று

கத்துறியே என்னாது?

மாடவுளை மேய்க்கவுடு

மாந்தோப்பில் ஆடவுடு

காடுவுளே சுத்தவுடு

கல்வி சொல்லித் தாராதே!6

பழமொழிகள்

நாட்டுப்புற மக்களின் எழுதா இலக்கியங்களாக அமைபவை பழமொழிகள். தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துக் கூறுமளவுக்கு அவர் காலத்தில் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தன பழமொழிகள். பழமொழிகளை முதுமொழிகள் என்பர் அவர்.

நுட்பமான கருத்துக்கள், சுருங்கிய வடிவம், தெளிவான பொருள் விளக்கம், எளிமை, ஆகியவற்றைப் பெற்று குறித்த பொருள்களை விளக்குவதற்கு வருவன பழமொழிகள் என்பது தொல்காப்பியர் வகுக்கும் இலக்கணம்.

நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும்

எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப9

என்பது அவர் நூற்பா,

கள்ளனை நம்பினாலும்

குள்ளனை நம்பிடாதே!

ஆக்கப் பொறுத்தவன்

ஆறப் பொறுக்கலாகாதா?

என்பன சமுதாயச் தொடர்புடைய பழமொழிகள்.

இதனை

குள்ளர் வழிச் சென்று-நீ

குழியில் விழ வேண்டாம் என்பர்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

என்பது பழமொழி.

உப்பிட்டாரை உள்ளளவும் மறவாள் என்பது பாவேந்தர் கூற்று. இவ்வாறு பல பழமொழிகள் ஆட்சிப் பெற்றுள்ளதை காணலாம்.

தாலாட்டு

நாட்டுப்புறப் பாடலில் தாய்மை இலக்கியமாக அமைவது தாலாட்டு தாய் தன் மன உணர்வுளைத் தாலாட்டில் வடிக்கிறாள். குழந்தை உறங்குவதற்கும் தன் பிறந்தகத்துப் பெருமையும் தாய் பாடும் தாலாட்டின் நோக்கமாக அமைகின்றன.

பாவேந்தர் தனத கவிதைத் தொகுப்பில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என இரு தாலாட்டுகளைப் பாடுகின்றார். பாவேந்தர் தாலாட்டுகளை தமது கொள்கையைப் பரப்பிப் பயன்படுத்தியுள்ளார்.

ஆண் குழந்தைத் தாலாட்டில்

1. வடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்

மூடப்பழக்கத்தைத் தீதென்றாய் முட்டவரும்

மாடுகளைச் சீர் திருத்தி வண்டியிலே பூட்டவந்த

ஈடற்ற கோளா! இளந்தோளா! கண்ணுறங்கு!

எனப்பாடுகிறார்.

பெண் குழந்தைக்கு

மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற

காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே

என்று பாடிப் பகுத்தறிவுப் பாலை ஊட்டுகிறார்.

நன்றி: வேர்களைத் தேடி

பாவேந்தரின் பாடல்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் - சோ.சிவசுப்பிரமணியன்

முதல் திராவிட மறுமலர்ச்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழ்மொழியும் தமிழினமும் தழைத்தோங்கத் தம் வாழ்நாள் முழுவதும் உரிமைக்குரல் கொடுத்தார். பகுத்தறிவு, பெண் விடுதலை, மொழியுணர்வு, இனவுணர்வு ஆகியன அவர்தம் பாடல்களைத் தாங்கும் தூண்களாகத் திகழ்ந்தன. தம் பாடற் கருத்துகள் எளிய பாமர மக்களின் உள்ளத்திலும் பதிய, அப்பாமர மக்களின் நாட்டுப்புறப்பாடல் வடிவத்தை நம் பாடல்களில் மேற்கொண்டார் பாவேந்தர். இலக்கியம் மக்கள்தம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதற்கு நாட்டுப்புறப் பாடல்களே சிறந்த சான்றாகும். பாவேந்தரின் பாடல்களில் இலக்கியங்களின் தாயாக விளங்கும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் நிறைந்து காணப் பெறுகிறது.

தாலாட்டுப் பாட்டு, ஏற்றப்பாட்டு, பள்ளுப்பாட்டு, கும்மிப் பாட்டு, விளையாட்டுப் பாட்டு, கப்பல் பாட்டு, நிலாப்பாட்டு, விடுகதைகள், கதைப்பாட்டு மற்றும் ''சிந்து'' என்னும் நாட்டுப்புற இலக்கிய வடிவம் ஆகியவை பாவேந்தரின் பாடல்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலைமுறையை மாற்றிய தாலாட்டு:-

தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான இனிய கலை வடிவமாகத் திகழ்வது தாலாட்டு ஆகும். அழுகையோடு தொடங்கும் குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதும் கூட என்பதைக் குழந்தைக்கு உணர்த்துவது தாயின் தாலாட்டு ஆகும். ''தாயின் மனநிலைக்கேற்பவும் குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கும். தாலாட்டின் பணி நீலாம்பரி ஆகும். இங்ஙனம் குழந்தையை உறங்க வைப்பதற்காகப் பாடப்பெறும் தாலாட்டுப் பாடல் வடிவத்தை மேற்கொண்டு பாவேந்தர் தமிழ்ச் சமுதாயத்தை விழிப்புடன் செயல்படும் படியாக உணர்த்தும் வகையில் பாடியுள்ளார்.

''யானைக் கன்றே தூங்கு - நீ

யாதும் பெற்றாய் தூங்கு

தேனே தமிழே தூங்கு - என்

செங்குட்டுவனே தூங்கு''

என்னும் இத் தாலாட்டுப் பாடலில் ஆண் குழந்தையை யானைக் கன்றுக்கு ஒப்புமையாகக் கூறுகிறார். தேனாகவும் தமிழாகவும் குழந்தையைப் பாராட்டுகிறார். மேலும் சேரன் செங்குட்டுவனைப் போலக் குழந்தையும் தமிழுக்கு எதிரான வடமொழியையும் இந்தியையும் தீரத்துடன் எதிர்க்கும் உணர்வுடன் விளங்கவேண்டும் என வலியுறுத்துகிறார் பாவேந்தர்.

ஆண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடலில் மூடத்தனத்தைப் போக்கிப் பகுத்தறிவை ஊட்டும் கருத்துகளை எடுத்துரைக்கிறார் பாவேந்தர்.

சமயத்தின் பேராலும் இறைவனின் பேராலும் அடுத்தவர் பொருளையும் உழைப்பையும் விழுங்கும் மனிதர்களுக்கு எதிரான சிந்தனைத் தெளிவை பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல் மூலம் ஊட்டுகிறார் பாவேந்தர். இதனை,

''எல்லாம் அவன் செயலே என்று பிறர்பொருளை

வெல்லம் போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்

வேர்ப்பீர் உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும்'' என்று கூறுகிறார் பாவேந்தர்.

அறிவும் உரிமையும் உடைய பெண்கள் நிறைந்த வீடு அழகும், ஆனந்தமும் நிறைந்ததாகத் திகழும். இத்தகையப் பெண்களாலேயே சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிக் கொடுமையைக் களைய முடியும். மதத்தின் பேரால் மூடத்தனத்தை வளர்க்கும் மூடர்களின் கூட்டத்தைக் களையெடுக்க வருபவர்களாகப் பெண் திகழ வேண்டும் என்பதைப் பெண் குழந்தைத் தாலாட்டில் பாடும் போது,

''வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

புண்ணிற் சரம்விருக்கும் பொய்ம்மத்தின் கூட்டத்தைக்

கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!''

என்கிறார் பாவேந்தர். தாலாட்டில் மாமன் பெருமைகளை நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடும் போது, பாரதிதாசன் தமிழ் மண்ணுக்குச் சொந்தமில்லாத அயலவரால் விதைக்கப்பட்ட மூடப்பழக்க வழக்கம் முதலான சமுதாய அழுக்குகளைக் களையும் கருவியாகத் தாலாட்டுப் பாடலைப் பாடுகிறார்.

தமிழர் வாழ்வில் ஏற்றம் தரும் ஏற்றப் பாட்டு:-

''ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டில்லை'' என்பது வழக்கு. பாவேந்தரின் ஏற்றப்பாட்டுக்கு எப்பொழுதும் எதிர்ப்பாட்டில்லை. ஏனெனில், இதுவே ஓர் எதிர்பாட்டு - எதிர்ப்புப் பாட்டு எனலாம். ''ஏற்றப்பாடலிலே மாறாத இலக்கிய நயம் இருக்கிறது. ஒரு வனத்தை வருணிப்பதனாலும் அரைத்துக் குளிக்கும் மஞ்சளின் அழகை எடுத்துச் சொல்வதனாலும் ஒரு புராணக் கதையை பேசுவதனாலும் ஏற்றப்பாடல் பாடும் குடியானவன் கற்பனையின் சிகரத்திற்கே போய் விடுகிறான் என்பவர் நா. அய்யாசாமி.

ஏற்றப்பாடல் என்னும் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் இனியப் பாடலைப் பாடியுள்ளார் பாவேந்தர். ஏற்றப்பாடலை முற்பகல், பிற்பகல் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு நூறு நூறு கண்ணிகளாய் பாடியுள்ளார். ஏற்றப்பாடலில் நூறு நூறாகப்பாடும் தன்மையே உள்ளது. பாவேந்தர் பகுத்தறிவு நெறியின்பாற்பட்டவர் ஆதலில் இவர்தம் ஏற்றப்பாடலில் ''விநாயகர் துதி இல்லை. பாவேந்தர் தம் ஏற்றப்பாடலில்,

''ஊர்க் குழைக்க வேண்டும் - நீ உண்மையுடன் தம்பி!

நாட்டுக் குழை தம்பி - இந்த நானிலத்தை எண்ணி!

பச்சை விளக் காகும் - உன் பகுத்தறிவு, தம்பி!

பச்சை விளக் காலே - நல்ல பாதை பிடி தம்பி''

என்று பாடும் போது உழைப்பு என்பது வீட்டுக்கு என்று உள்ளதைப் போல் நாட்டுக்காகவும் அமைதல் வேண்டும்; அதுவும் உண்மையானதாக அமைதல் வேண்டும். அத்தகைய நாட்டுக்கான உழைப்பும், பகுத்தறிவு என்னும் பச்சை விளக்குப் பாதையில் பயணம் செய்வதாகத் திகழ வேண்டும் என்கிறார் பாவேந்தர். இங்ஙனம் பாவேந்தர் கருத்துக்களைப் புதிய வடிவில் தரவேண்டும் என்ற உந்துதலில் ஏற்றப்பாடல் என்னும் வடிவில் பாடியுள்ளதைக் காண முடிகிறது.

சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்:-

நாட்டுப்புற மக்களிடம், சிறுவர்களின் உடலுக்கும், உள்ளத்துக்கும் நிறைந்த மகிழ்ச்சியைத் தருவனவாய் அமைவன விளையாட்டுகள். அங்ஙனம் விளையாடும் போது இனிய பாடல்களைப் பாடுவர். குழந்தைகளுக்காக விளையாட்டுப் பாடல்களைப் பாடும் போது,

''கைவீ சம்மா கைவீசு

கடலை வாங்கலாம் கைவீசு

வெய்யில் போகும் கைவீசு

வெளியில் போகலாம் கைவீசு

தட்டாங்கி தட்டாங்கி

தலைமேலே தாழம்பூ

பட்டாலே சட்டை

பஞ்சாலே சல்லடம்

செட்டாக அணிந்து

சீராக முந்தி

தட்டுநீ தட்டு

தட்டாங்கி தட்டாங்கி''

இனிய நாட்டுப்புறப் பாடலின் பாங்கில் பாடுகிறார் பாவேந்தர்.

தொழிற் பாடல்கள்:-

நாட்டுப்புற மக்களின் முதன்மையான தொழிலாக அமைவது விவசாயமும் கால்நடைகள் வளத்தலுமே ஆகும். உழவுத் தொழிலைச் சார்ந்த ஏர்பிடித்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், ஏற்றமிரைத்தல், அறுவடை, கதிரடித்தல், வண்டியில் கொண்டு செல்லல் போன்ற தொழில்களைச் செய்யும் போது உடல் வருத்தம், தெரியாமல் இருக்கப் பாடல் பாடிக் கொண்டே தொழில் செய்வர்.

நெடுந்தூரம் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர் பாடும்போது,

''கலகலத்தது வண்டி - அந்தக்

காளை மாடும் நொண்டி

பொல பொலத்தது கூரை - மட்சிப்

பொடியைச் சிந்தும் ஆரை''

என்றும், தட்டார் தங்க நகை செய்யும் அழகைப் பற்றிக் கூறும் போது,

''தங்க நகை செய்வார் - அவர்

வெள்ளி நகை செய்வார்

வங்கி நல்ல மாலை - கெம்பு

வயிரம் வைத்துச் செய்வார்''

என்று நயமுற எடுத்துரைக்கின்றார் பாவேந்தர்.

விடுகதைகள்:-

தொல்காப்பியரால் பிசி என்றழைக்கப்படும் விடுகதை விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விடுகதை சிந்தனைக்கு ஒரு பயிற்சியாகவும் அறிவுக்கு உறைவிடமாகவும் திகழ்வது. புதிர்த் தன்மைகளை உள்ளடக்கி வினா அடிப்படையில் அமைந்து, கற்பனை, உவமை, உருவகம், ஓசை போன்ற நயங்களை உள்ளடக்கியாக விடுகதை அமைந்துள்ளது. பாவேந்தர் பாரத நாட்டை பற்றிப் பாடும் போது விடுகதை வடிவத்தில் பாடுகிறார்.

''கங்கை நதி தலையிலுண்டு சிவனார் அல்ல

காலடியில் குமரியுண்டு ராமனல்ல

சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல

சாத்திரத்தின் ஊற்றனையாள் கலைமாதல்ல

எங்குலத்தைப் பெற்றதண்டு பிரமனல்ல''

என்று சிறுவர் சிறுமியர் தேசிய கீதத்தில் விடுகதை போடுகிறார். பாவேந்தர் ஒரு நாட்டுப்பற்றுமிக்க கவிஞர் என்பதற்கு இத்தகைய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே சான்று ஆகும்.

சிந்துப் பாடல்கள்:-

சிந்துப் பாடல்களே நாட்டுப்புற இலக்கியத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றவை எனலாம். இவ்விலக்கிய வடிவம் எளிய பாமர மக்களிடம் கூட அரிய கருத்தைக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தது. இவ்வடிவத்தை கையாண்டு வெற்றி பெற்றதாலேயே பாரதியார் ''சிந்துக்குத் தந்தை'' எனப் பாராட்டப்படுகிறார். பாரதியாரைப் பின்பற்றி நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து போன்ற நாட்டுப்புற பாடல் வடிவங்களைப் பாவேந்தர் பயன்படுத்தியுள்ளார்.

''வானிடை ஓர் வானடர்ந்த வாறு - பெரு

விண்சிளை மரங்கள் என்ன வீறு! நல்ல

தேனடை சொரிந்ததுவும்

தென்னை மரம் ஊற்றியதும்

ஆறு - இன்பச்

சாறு''

எனக் காட்டின் அழகைக் காவடிச்சிந்தில் இசைக்கிறார் பாவேந்தர். அவர்மேலும்,

''ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம்

உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ

அரசென ஒரு சாதி - அதற்

கயலென வேறொரு சாதியுண்டோ''

என்று நொண்டிச் சிந்தில் பாடுகிறார் பாவேந்தர்.

இங்ஙனம் பாவேந்தரின் படைப்புகளில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் நிறைந்துள்ளமைக்கு காரணம், அவர் தமிழ் மண்ணையும், தமிழரையும், தமிழ்மொழியையும் போற்றியவர். ஆகவே மண்ணின் மணத்தோடு கூடிய நாட்டுப்புறப் பாடல்களில் அவருடைய பள்ளுப்பாட்டு, சிறுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு ஆகியன பெரும் செல்வாக்குப் பெற்றன. தம் பாடல்கள் பாமர மனிதருக்கும் சென்று சேர வேண்டும் என எண்ணிய பாவேந்தர் பாமர மக்களின் பாட்டு வடிவமாகிய நாட்டுப்புறப் பாடல்களின் வடிவத்தில் தம் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களையும் அழகுறவும் ஆழமாகவும் எடுத்துரைக்கிறார்.

நன்றி: வேர்களைத்தேடி

பாரதிதாசன் - புதுமைப்பித்தன்

பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன் என்று சொல்ல வேண்டும்.

எங்கெங்கு காணினும் சக்தியடா! - தம்பி

ஏழுகடல் அவன் வண்ணமடா

என ஸ்ரீ கனக சுப்புரத்தினம் தமது கன்னிக் கவிதையைக் கொணர்ந்து சமர்ப்பித்த பொழுது, பாரதியாரின் ''தராசு'', "எழுக புலவன்" என்று ஆசிர்வதித்தது. அன்று முதல் பாரதிதாசன் ஆகிவிட்ட ஸ்ரீ கனகசுப்புரத்தினம் பாரதி வகுத்த பாதையிலே பல அழகுக் கனவுகளை நிர்மாணித்துத் தந்திருக்கிறார். பாரிச வாய்வும், பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றையக் கவிதையுலகிலே, அவருடைய பாட்டுக்கள் ஒன்றுதான் நிமிர்ந்து நடக்கின்றன. எனது நண்பர் ஸ்ரீ கனகசுப்புரத்தினம் நம்மிடையே வாழ்பவர்; நம்மைப் போல, கருத்து விசித்திரங்களும், கருத்து விருப்பு வெறுப்புகளும் ஆணித்தரமான அபிப்பிராயங்களும் கொண்டவர்; பாரதிதாசன் கவி; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். ''குள்ளச் சிறு மனிதர்களின் எத்து'' நூல் வைத்து அவரது காவிய மாளிகைகளை முழம்போட முயல்கிறவர்களுக்கு, ஸ்ரீ கனகசுப்புரத்தினம், இடை மறித்து நின்று தம் கருத்துகளைக் காட்டி மிரட்டி ஓட்டி விடுவார். பாரதிதாசனைப் பழகி அனுபவிக்க வேண்டுமெனில் ஸ்ரீ கனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகம்மல்ல; ''நட்ட கல்லும் பேசுமோ'' என்று பாடியவரை விட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில், ''ராமாயணம் என்னும் பெரும் புளுகும்'', ''எங்கள் மடாதிபதி'', ''சைவத்தை ஆரம்பித்த'' விமரிசையும் இருந்தால் என்ன குற்றம்? அவர் கவி.

கோட்டைப் பவுன் உருக்கிச் - செய்த

குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகளைப்

பார்க்கத் தெரியாத ரஸ’கரர்களைக் ''குருடேயும் அன்று நின் குற்றம்'' என்று அவ்வையுடன் சேர்ந்தே ஆசிர்வதிக்க வேண்டியிருக்கிறது. பாரதிதாசன் கட்டிவைத்துள்ள கவிதைக் கோயிலிலே எத்தனையோ ஆயிரக்கால் மண்டபங்கள் உண்டு. அவற்றின் நடுநாயகமாக விளங்குவது என நான் கருதுவது, புரட்சிக்கவி என்ற அவரது பாட்டு. கதை எல்லாம் பழைய கதைதான்; ஆனால் பழசு என்று சொல்லிவிட்டால் போதுமா? ''முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் பெற்றியதாக'' உள்ள மனுஷ இதிகாசக் கருத்து. விஷயம் தெரிந்த விவேகிகள், பில்ஹ­யத்தின் கருத்துதானே என்று அதைத் தாண்டிச் சென்று விடுவார்கள். அரசன், கவி. என்னதான் கவிராயர்கள் தம்மைப் புவியரசர்களுக்கு மேல் எனக் கற்பனை பண்ணிக் கொண்டிருப்பதை, அந்தப் புவியரசர்கள் புன்சிரிப்புடன் சகித்துக் கொண்டிருந்தாலும், தம் நெஞ்சை, அந்தஸ்தைத் தொடும் காரியத்துக்குள், கவிராயர்கள் பிரவேசித்துவிட்டால், தமது சுய உருவைக் காட்டிவிடுவார்கள் என்பதுதான் ஆதாரக் கருத்து. பழைய பில்ஹ­யம் உருவாகும் காலத்திலே பிராமணர்கள் பூலோகப் பிரம்மர்கள், பிரபிக்கப்பட்டு வந்தார்கள். பிராமணனைக் கொல்வது பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்று நம்பப்பட்ட காலம். தன் அந்தஸ்துக்காக ஆசைக் குமரியின் வாழ்வையே பாழ்படுத்திவிடத் துணிந்த மன்னனைப் பிரம்மஹத்தி தோஷம் என்ற பயந்தான் தடுக்கிறது. அந்த நாகரிகம் இன்று நம் ஏட்டில் பார்த்து நுகரும் ஒரு விவகாரம். இன்றைய நாகரிகத்தில் பிராம்மணர்களும், மன்னர்களும் தம் பழைய அந்தஸ்துகளை இழந்துவிட்டார்கள். தன்னுடைய அந்தஸ்துக்காக ஒருவனை உயிர் வதை செய்யத் துணியும் மன்னனுக்கு ராஜ்யத்தில் இடமில்லை என்பதுதான் இந்தப் புதிய புரட்சிக் கவியின் ஆதாரக் கருத்து.

களவையும் நிலவையும் பற்றிப் பாடிக்கொணடிருந்த கவிஞன், பிரெஞ்சுப் புரட்சிக்கு உதய கீதம் பாடிய ரூஸோவைப் போல கனல் விடுகிறான். ''அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே'' என்று கொண்டு பட்டினத்தார் தம் வீட்டுக்குத்தான் நெருப்பு வைக்கப்பார்க்கிறார். புரட்சிக் கவியான உதாரனது பேச்சு - வீண் கருவம், டம்பம், வரம்பற்ற தன்னிச்சை, கொலை வெறி, அந்தஸ்து என்ற உச்சாணிக் கொப்பு என்ற உழுத்துப்போன கருத்துக்களைச் சுட்டுச் சாம்பலாக்குகிறது. கூளங்கள் கொதித்தெழுந்து உயிர்வதைக்குத் துணிந்திட்ட மன்னனைத் தேடி வரும்போது மன்னன், இன்றைய வள முறைப்படி, நாட்டை விட்டு வெளியேறி விடுகிறான். ஓடிப்போன ராஜா மான்டிகார்லோவில் பந்தயக் குதிரை வளர்க்கிறாரா அல்லது ஹாலிவுட் அழகியை மணக்கிறாரா என்று நாம் தேடிச் சென்று கொண்டிருக்க வேண்டாம். ஓடிபோகிற ராஜாக்கள் அப்படித்தான் செய்வார்கள். பழைய பில்ஹ­யத்துக்கும், இந்தப் புதிய புரட்சிக் கவிக்கும் இவ்வளவுதான ஒற்றுமை, இவ்வளவு வேற்றுமை. இவை இரண்டும் இரண்டு விதமான மனப்பக்குவங்களைக் காண்பிக்கிறது. நாம் வெகு நேரமாகப் புரட்சிக் கவியின் முற்றத்தில் நின்றே பேசிக்கொண்டிருந்துவிட்டோம். காவியத்தைப் பார்ப்போம். அதிலே வரும் ஒவ்வொரு பாத்திரமும் பச்சைத்தமிழன்; சாயச்சரக்கல்ல; மழை பெய்த மூன்றாம் நாள் சாயம் விட்டுப்போகும் பண்ருட்டிப் பொம்மை அல்ல.

அரசன் தனது மகளான அமுதவல்லிக்கு, அகத்தில் எழுந்த கவிதையை, புறத்தில் பிறர்க்குப் புலப்படுத்துவதற்குச் செய்யுள் இலக்கணம் கற்பித்துக் கொடுக்க, நல்லதொரு ஆசான் வேண்டும் என அறிவிக்கிறான். அமைச்சனின் சிபாரிசுப்படி உதாரன் என்ற உயர் கவிஞன் அமர்த்தப்படுகிறான். கவியின் வாலிபத்தையும், கன்னியின் மனசையும் சேரவொட்டாமல் தடை செய்துவிட, அமைச்சனுடைய குள்ளத்தனமான யோசனை கையாளப்படுகிறது. உதாரன் குருடனெனவும், அமுதவல்லி பெருநோய் கண்டவள் எனவும் சொல்லி இடையில் ஒரு திரையிடுகிறார்கள்.

மன்னவன் ஆணைப்படி - கன்னி

மாடத்தைச் சேர்ந்ததொரு

பன்னரும் பூஞ்சோலை..... நடுப்

பாங்கிலோர் பொன்மேடை

அன்னதோர் மேடையிலே - திரை

ஆர்ந்த மறைவினிலே

மின்னொளி கேட்டிருப்பாள் - கவி

வேந்தன் உரைத்திடுவான்.

இவ்வாறு யாப்பிலக்கணம் கேட்டு வரலானாள் அமுதவல்லி. விழி அற்றவனைப் பார்பபது அபசகுனம் என்றிருந்தாள் அவள்; பெருநோயை நினைத்து உதாரனும் பார்க்கவில்லை. இவ்வாறிருக்கையிலே இவர்களிடையே கிடந்த திரைச் சீலையைக் கிழித்தெறிந்தது பௌர்ணமி நிலா. நிலாவைக் கண்டு பாடினான் உதாரன். திரைச் சீலைக்குள் நிற்கும் தன்னை உவமித்தது போல் அமுதவல்லி நினைத்துக்கொள்ளும்படி இருந்தது அந்தப் பாட்டு.

நீலவான் ஆடைக்குள் உடல்மறைத்து

நிலாவென்று காட்டுகிறாய், ஒளிமுகத்தைக்

கோலமுழுவதும் காட்டிவிட்டால் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்

சோலையிலே பூத்ததனிப் பூவோநீ தான்

சொக்கவெளிளிப் பாடற்குடமோ, அமுதவூற்றோ

காலைவந்த செம்பருதி கடலில்மூழ்கி

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!

''அந்தி இருளாற் கருகும் உலகு கண்டேன்

அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;

பிந்தியந்தக் காரிருள் தான் சிரித்ததுண்டோ

பெரும் சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவேநீ தான்

சிந்தாமல் சிதறாமல் அழகைஎல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும்ஊட்டி

''இந்தா''வென்றே இயற்கை அன்னைவானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந்தானோ

என்று சாதகப்புள் மாதிரி உதாரன் தன்னை மறந்து பாடுகிறான். ''ஏதடா குருடனாச்சே'' என்று பிரமிக்கிறாள் அமுதவல்லி. திரைச்சீலை விலகுகிறது. பயமறியாது சிரிக்கின்றன இரண்டு இளம் நெஞ்சுகள். உதாரன் முதலில் தடுத்துத்தான் பார்க்கிறான். ஆனால் அது தனது நெஞ்சத்தையே பொய்த்துப் பேசும் சமத்காரம். அவன் சொல்லுகிறான்:

நன்று மடமயிலே, நான் பசியால் வாடுகிறேன்:

குன்றுபோலன்னம் குவிந்திருக்கு தென்னெதிரில்!

உண்ணமுடியாதே ஊராள்வோன் கூர்வாளும்

வண்ணமுடிச் செல்வாக்கும் வந்துமறிக்குதடி!

வேல்விழியால் என்னை விலாப்புறத்தில் கொத்தாதே!

பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!

காதல் நெருப்பால் காடலுன்மேல் தாவிடுவேன்

சாதி எனும் சங்கிலி என் தாளைப் பிணிக்குதடி!

பாளைச் சிரிப்பில் நான் இன்று பதறிவிட்டால்

நாளைக்கு வேந்தன் எனும் நச்சரவுக்கென் செய்வேன்?

என்று சொல்லித் தடுக்கிறான். அதற்கு அமுதவல்லி சொல்லுகிறாள்:

வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை

நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்

வேறு கதியறியேன், வேந்தன் சதுர்வருணம்

சீறும்எனில் இந்தவுடல் தீர்ந்தபின்னும் சீறிடுமே.

பிறகு

இன்பவுலகில் இருவர்களும் நாள் கழித்தார்

பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெல்லாம்

மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்

வேறுவழியின்றி வேந்தனிடம் ஓடி

அறிவிக்கிறார்கள். அரசனே நேராக வந்து ஒளிந்திருந்து பார்க்கிறான். மண்டையிலே ஆயிரந்தேள் கொட்டியதுபோல மனமுடைந்தான். உதாரனைக் கைப்பிடியாகப் பிடித்து வரும்படி காவலரை ஏவுகிறான். கடுஞ்சினத்துடன்,

வாள் பிடித்தே புவி ஆளுமரசர் என்

தாள் பிடித்தே கிடப்பர்! - அட

ஆள்பிடித்தால் பிடி ஒன்றிருப்பாய், என்ன

ஆணவமோ உனக்கு?

மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை

வெல்லத் தகுந்தவனோ - இல்லை

மாள்வதற்கே இன்று மாள்வதற்கே

என்று மன்னன் கர்ஜிக்கிறான்.

அதற்கு உதாரன் தனது குற்றத்தைச் சமத்காரமாக ஒப்புக்கொள்கிறான்.

மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்

ஆர்க்கும் மலைநாடா - குற்றம்

ஆம் என்று நீ யுரைத்தால் குற்றமே, குற்றம்

அன்றெனில் அவ்விதமே!

கோமகள் என்னைக் குறைஇரந்தான் அவள்

கொள்ளைவனப்பினிலே - எனைக்

காமனும் தள்ளிடக் கால் இடறிற்று

கவிழ்ந்த வண்ணம் விழுந்தேன்!

இவன் பேச்சு அரசனது கோபத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது. சேதி கேட்டு அமுதவல்லி ஓடிவருகிறாள். ''சாதி வருணக்கரிசனம் இருந்தால், இலக்கணம் சொல்லிக் கொடுக்க அவனை அமர்த்துவதேன்?'' என்று கேட்கிறாள். கவிஞன் பக்கத்தில் சென்று நிற்கிறாள். அவளை இழுத்துத் தள்ளிவிட்டு உதாரனை அழைத்துச் செல்லக் கட்டளை இடுகிறான். அதிலும் என்ன சமத்காரம் பாருங்கள்:

நின்றகொலைஞர் உதாரனையும் ''நட.... நீ'' என்று தட்டினர்....

அச்சமயம் மந்திரி மன்னன் மகளை மட்டுமாவது கொல்லவேண்டாம் என்கிறான். ''நீதி நன்று மந்திரியே'' என்று சிரிக்கிறாள் அமுதவல்லி.

மன்னன் கர்ஜிக்கிறான்:

''என் ஆணை மறுப்பீரோ சபையில் உள்ளீர்!

இசைகிடைந்த என் செங்கோல் தன்னை வேற்றார்

நான் நாணும் படிசும்மா இருப்பதுண்டோ?

பிழைபுரிந்தால் சகியேன் நான்! உறுதிகண்டீர்

என் ஆணை; என் ஆணை! உதாரனோடே

எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மை

கல்மீதிலே கிடத்திக் கொலை செய்வீர்கள்

கடிது செல்வீர்! கடிது செல்வீர்''.......

அமுதவல்லியும் சொல்கிறாள்:

அவையினிலே அசைவில்லை பேச்சுமில்லை

அச்சடித்த பதுமைகள் போல் இருந்தார் யாரும் -

இருந்திங்கே அநிதியிடை வாழவேண்டாம்

இறப்புலகில் இடையறா இன்பம் கொள்வோம்;

பருந்தும் கண்மூடாத நரியும் நாயும்

பலிபீட வரிசைகளும்கொடு வாள்கட்குப்

பொருந்தட்டும், கொலைசெய்யும் ஏதேச்சை மன்னன்

பொருந்தட்டும், பொதுமக்கள் ரத்தச்சேற்றை

அருந்தட்டும்......

கொலைக்களத்துக்கு உதாரனும் அமுதவல்லியும் இழுத்துவரப்படுகிறார்கள். வேடிக்கை பார்ப்பதற்காக நாட்டு மக்கள் வீடுபூட்டி வந்திருக்கிறார்கள். தலைப்பாகை அதிகாரி கொடுத்த வசதியை உபயோகித்து, உதாரன் பேசுகிறான். அவன் மனசு எரிமலைபோல் கொப்புளிக்கிறது. புரட்சிக் கனலை அவன் நினைவறிந்து ஏற்றினானோ என்பது சந்தேகம். அவன் பேச்சு ஊரைச் சுட்டது. ஊரில் உள்ள உளுத்த கருத்துக்களைச் சுட்டது. அவனுடைய பேச்சே தமிழ் இலக்கிய வரிசையிலே உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறது.

(நன்றி: புதுமைப்பித்தன் கட்டுரைகள், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. 1954)

 

சஞ்சீவிப் பர்வதத்தின் சாரலில் வஞ்சியின் பாத்திரப் படைப்பு - நா. ஞானப்பழம்

பாரதிதாசன் கவிதைப் பயணத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய இரண்டு சந்திப்புகளில் ஒன்று பாரதி - பாரதிதாசன் சந்திப்பு. இரண்டாவது பாரதிதாசன் - பெரியார் சந்திப்பு ஆகும். தன்னுடைய கவிதை நடையில் மாற்றத்தை விளைவித்ததன் மூலம் கவிதையின் உருவமாற்றத்திற்குப் பாரதியின் சந்திப்பே காரணம் என்கிறார் பாதிதாசன். பின்னர்ப் பெரியாரைச் சந்தித்ததன் மூலம் கவிதையின் உள்ளடக்கம் மாறியது என்கிறார். சுயமரியாதை இயக்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவுப் பாதையைக் காட்டிக் கொண்டிருந்த பெரியாரைப் பெரிதும் விரும்பினார் பாரதிதாசன். ''சுயமரியாதை இயக்கத்தின் பயனாகப் பகுத்தறிவு, பொதுவுடைமை, சீர்திருத்தம், கடவுள் மறுப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, திராவிட நாட்டுப் பிரிவினை ஆகிய புதிய சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுடன் தமிழ்நாட்டுச் சிந்தனையாளர்களையும், கவிஞர்களையும் கவர்ந்தார் பெரியார்''. மேலும் அவருடைய பெண் விடுதலைக் குரலும் பாரதிதாசனை வெகுவாகவே கவர்ந்தது. பாரதிதாசன் - பெரியார் சந்திப்பு நிகழ்ந்தது 1928 - ஆம் ஆண்டு. பெரியாரின் புரட்சிக் கருத்துக்களைப் பாரதிதாசன் உள்வாங்கத் தொடங்கிய காலக்கட்டம்.

கவிஞரது இளமைக் காலத்தில், 1930 - ஆம் ஆண்டில் எழுதப்பட்ட முதல் காவியம், கவிஞரது ஆற்றல்வாய்ந்த கவிதைகள் இடம்பெற்ற முதல் தொகுதியில் முதலாவதாக இடம்பெற்ற காவியம் சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் ஆகும். தலைவனும் தலைவியும் தங்களது அன்பு நிறைந்த காதல் வாழ்க்கையைத் தொடங்க ஏற்ற இடமாக மலையும் மலைசார்ந்த இடத்தைத் தேர்வு செய்திருந்தனர் நம் முன்னோர். காதலையே பெரிதும் விரும்பிப் பாடும் பாவேந்தரும், தமது காதல் ஜோடிகளான வஞ்சியும் குப்பனும் சந்தித்துப் பேச ஏற்ற இடமாக

''குயில்கூவிக் கொண்டிருக்கும் கோலம் மிகுந்த

மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற்

காற்றுக் குளிர்ந்தடிக்கும் கண்ணாடி போன்ற நீர்

ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு

பூக்கள் மணங் கமழும் பூக்கள் தோறும் சென்று தேன்

ஈக்கள் இருந்தபடி இன்னிசை பாடிக் களிக்கும்''.

மலைச்சாரலைத் தெரிவு செய்கிறார். இங்கே காதல் செய்ய ஏற்ற இடத்தைத் தேர்ந்தெடுப்பவள் பெண். பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தால் சமூகத்தில் விளைந்த இடர்ப்பாடுகள் ஏராளம். பெண்ணிண் பிரச்சினை ஆரம்பமாவதே இந்தத் திருமணத்தில் தான். எனவே, நாட்டு மக்களுக்கு ஓர் நல்லறிவிப்புச் செய்கிறார்.

''காட்டுமறவர்களும் காதல் மணம் செய்வதுண்டு நெஞ்சில் நிறுத்துங்கள் இந்த இடத்தைத் தான் சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் என்று சொல்லிடுவர்''.

தமிழ்ச் சமுதாயம் பாழ்பட்டுப் போனதற்குக் காரணமான மூட நம்பிக்கைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும், புராண இதிகாசங்களையும், சாதி சமயங்களையும், பெண்ணடிமை நிலையையும் பாரதிதாசன் எதிர்த்தார். இவையே, காப்பியத்தின் மையப் பொருளாகவும் அமைகின்றன.

''சாதிப் பிரிவு சமயப் பிரிவுகள்

நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்

மூடப் பழக்க வழக்கங்கள் எல்லாம்

முயற்சி செய்தே ஓடச் செய்தால்''

சமூகமும் நாடும் விடுதலை பெறும் என்பது கவிஞரது எதிர்பார்ப்பு. ''கவிஞரின் மிக இளமைக் காலத்திலேயே எழுதப்பெற்ற இந்நூலில் பெண் விடுதலை பேசப்படுகிறது. பெண்ணடிமை செய்கின்ற தமிழ்நாட்டைக் கண்டு கவிஞர் எந்த அளவு சீற்றம் கொள்கிறார் என்பதை அறிய முடிகிறது''. இந்நாட்டின் சமுதாயக் குறைகள் 1936 - ஆம் ஆண்டிலேயே கவிஞனை எங்ஙனம் விழிப்பு அடையச் செய்தன என்பதை அறிய முடிகிறது.

மனிதனை இன்புறுத்துவன இயற்கையும் காதலுமாகும். பாவேந்தர், தமது படைப்புகளில் இவற்றை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். இயற்கையோடியைந்த நம் தமிழர் வாழ்க்கைமுறை கவிஞரைக் கவர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய முதல் காவியத்தில் காதல், வீரம் என்ற உள்ளடக்கத்தோடு பெண் விடுதலையை முதன்மைப்படுத்திப் பாடியதன் மூலம் தன் கவிதை வாழ்வின் இலட்சியத்தைப் பிரகடனப்படுத்திவிட்டார்.

மனிதநேயம் தான் கவிஞரது கவிதைக் கொள்கை. அதற்குப் பங்கம் வந்தால் கவிஞரது கதைமாந்தர்கள் கத்தியையும் கொலைவாளினையும் எடுக்க அஞ்சுவதில்லை. அன்பு வாழ்க்கையையே பேசும் (இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்) பாவேந்தர் இக்காவியத்திலும் அன்பொழுகும் காதல் மாந்தர்களைப் படைத்துள்ளார். காட்டு மறவர்கள் கூடக் காதல் மணம் செய்வதைக் கண்டு உள்ளம் பூரிக்கும் கவிஞர், நாட்டு மனிதர்கள் தான் சாதியின் பெயரால், சமயத்தின் பெயரால் காதல் எதிரிகளாக இருப்பதைக் கண்டு மனம் வெம்புகிறார். காவியத் தொடக்கத்திலேயே வாடி நிற்கும் குப்பனையும் வாடாமலர் அணிந்து வரும் வஞ்சியையும் தலைமைப் பாத்திரங்களாக அறிமுகம் செய்து வைக்கிறார்.

கதைத் தலைவன் குப்பனோ, காதலையும், கனியிதழ் முத்தத்தையும் வேண்டி கெஞ்சிக் கூத்தாடும் பரிதாப நிலையில் உள்ளான். வஞ்சியோ எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டிய நிலையில் உள்ளாள். காட்டு வழியில் கற்கள் முட்கள் நிறைந்திருக்கும். அவற்றின் மேல் நடந்தால் உன் கால்கள் வலிக்கும் என்று கூறும் குப்பனிடம், குறிக்கோளை அடைந்தே தீருவது என்று எண்ணிவிட்டால் எவ்வித வருத்தமும் தெரியாது என்று பதில் தருகிறாள்.

1930களில் பெண்களுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லாத கால கட்டமாகும். எந்த ஒரு சிறு செயலுக்கும் ஆண்களையே சார்ந்திருந்த காலம். பெண்கள் வெளிக்காரியங்களில் ஈடுபட அனுமதிக்காத காலம். இக்காலக்கட்டங்களில் வாழ்ந்த பாரதிதாசன் படைத்த பெண்கள், பெண்ணிய வாதிகள் காணவிரும்பிய இலட்சியப் பெண்களைப் போல செயல்படுவார்கள். தங்கள் வாழ்வில் நேரிடும் பிரச்சினைகளைத் தாங்களே எதிர்கொள்ளும் திறன் வாய்க்கப் பெற்றவர்கள். பெண்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன், ஆண் பாத்திரங்களை வலிவு குன்றியவர்களாகப் படைத்துள்ளார். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும்போது அதைக்கண்டு அஞ்சிப் பின்வாங்கும் ஆண்களுக்கு உரம் ஊட்டுபவர்களாகப் பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளம், உடல்சார்ந்த பிரச்சனைகள், குறிக்கோள்வாதிகளைக் குறி வைத்துத் தாக்காது என்பதனை வஞ்சியின் பாத்திரப் படைப்பு நிரூபணமாக்குகிறது. சக்திமிக்க மூலிகைச் செடிகளைத் தேடிச் செல்கையில்,

''கல்லில் நடந்தால் உன் கால் கடுக்கும்''

என்ற குப்பனின் பேச்சுக்கு

''காலிரண்டும் நோவதற்கு காரணமில்லை, நெஞ்சம்

மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்பதால்''

என்று பதில் கூறுகிறாள்.

பாழ் விலங்கால் அந்தோ படுமோசம் நேரும் என்றான். இருந்தாலும் வஞ்சி விடுவதாக இல்லை. இந்நாள் வரை இருந்து வந்த இலக்கிய வழக்கையையே மாற்றுகிறார் கவிஞர். அஞ்சுவது பெண்ணியல்பு ஆறுதல் கூறுவது ஆணியல்பு. அந்நிலையை மாற்றி, இன்ப துன்பம் இணைந்தது தான் வாழ்க்கை என்ற வாழ்வியல் தத்துவத்தை இங்கே பெண் பேசுகிறாள்.

''வாழ்வில் எங்கும் உள்ளது தான் வாருங்கள்''

என்று குப்பனைத் தன்னுடன் வருமாறு அழைப்பு விடுக்கிறாள் வஞ்சி. சாதாரணக் குடும்பத்தில் தோன்றிய வஞ்சியிடம் தன்னம்பிக்கை மிகுந்து இருப்பதைக் காண்கிறோம். கதைத் தலைவனிடமோ அவநம்பிக்கையே மிகுந்து இருக்கிறது. வாழ்க்கை என்றால் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். மனத் துணிச்சலோடு அதனை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று வஞ்சி கூறுகிறாள். இதன் மூலம் தானும் இயங்கி தன்னைச் சேர்ந்தவர்களையும் இயக்கும் இரண்டுவித சக்திகளைப் பாரதிதாசனின் பெண் பாத்திரமாகிய வஞ்சியிடம் காணமுடிகிறது. ஆணுக்கு நிகராகப் பெண் செயல்பட வேண்டும் என்பது பெண்ணியவாதிகளின் கருத்து. பாரதிதாசன் படைத்த பெண்களோ ஆண்களுக்கே வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.

பேச்சுரிமை:-

காலங்காலமாக ஏன்? எதற்கு? எப்படி? என்று எந்தவிதமான கேள்வியும் கேட்க முடியாமல், தவித்தது பெண்ணினம். ஆண்களின் பேச்சை அப்படியே வேதவாக்காக ஏற்று நடக்க வேண்டும் என்ற கால கட்டத்தில் கவிதை எழுத வந்தவர் பாரதிதாசன். பெண்களை அடிமைப்படுத்தியிருந்த ஆணாதிக்கச் சமுதாயத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்கப் புறப்படுகிறார். வெளியிலுள்ள ஆண்களின் முன்னிலையில் மட்டுமல்லாது வீட்டிலுள்ள கணவனிடம் கூடத் தன் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க முடியாத சூழ்நிலை நிலவிய காலம். ஒருவேளை, ஏதாவது பேசிவிட்டாலோ அது ஆடவர்களை அவமரியாதை செய்ததை ஒக்கும் செயலாகும். அப்படிப் பேசும் பெண்களை அடங்காப் பிடாரிகள் - வாயாடிகள் என்று வர்ணிக்கும் ஆணுலகம். கவிஞர் அன்றைய சமூகத்தில் பெண் இருந்த நிலையைக் கூறி அதற்கேற்ற தீர்வும் கூறுகிறார். மூலிகை பறிக்கச் செல்ல வேண்டும் என்ற வஞ்சியை நோக்கி,

''என்னடி பெண்ணே நான் எவ்வளவு சொன்னாலும்

சொன்னபடி கேட்காமல் தோசம் விளைவிக்கின்றாய்

பெண்ணுக்கு இது தகுமோ''

என்று குமுறுகிறான் குப்பன். வஞ்சி கூறிய பேச்சை இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் குப்பன் ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதாகப் புலம்புகிறான்.

பேச்சுரிமை மறுக்கப்பட்ட பெண்ணினத்தின் அடிமைநிலையை அடியோடு மாற்றி அமைக்கத் திட்டம் தீட்டுகிறது கவியுள்ளம். ஆண்டாண்டு காலமாக, பாதிப்புக்குள்ளான பெண் வாயிலாகவே, நாங்கள் அடிமைப் பட்டிருந்தது போதும். இனிப் பொங்கி எழுவோம், போர்க்குரல் கொடுப்போம் என்று ஆவேசக் குரல் கொடுக்கச் செய்கிறார்.

''பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலைமை தான் ஆடவர்க்கும் உண்டு''

என்று பெண்ணின் பேச்சுரிமையைப் பறித்த ஆணினத்தை எச்சரிக்கை செய்கிறாள் வஞ்சி. மேலும் ஒரு நாட்டின் உண்மையான விடுதலையே, அந்நாட்டுப் பெண்களின் விடுதலையைப் பொறுத்தாகும்.

அறிவு நலத்தில் சிறந்தவர்கள் ஆண்களே என்ற கருத்தாக்கத்தைத் தகர்க்கவே குப்பனை வையமறியாதவனாகப் படைத்துள்ளார் கவிஞர். அறிவுரை வழங்குபவர்கள் ஆண்கள்; அதனைப் பெறுபவர்கள் பெண்கள் என்கிற பழம்போக்கை மாற்றுகிறார் பாவேந்தர். உலக அனுபவமற்றவனாக அறியாமை மிகுந்தவனாகப் படைக்கப்பட்டுள்ள குப்பனுக்கு அறிவு கொளுத்தும் விளக்காக வஞ்சி உருவாக்கப்பட்டுள்ளாள். புராணச் சொற்பொழிவை - புரட்டை உண்மையென்று நம்பி விடுகிறான். மலையை அசைக்க முடியாது என்ற சாதாரண அறிவுகூட இல்லாத குப்பனுக்கு,

''வஞ்சியவள் நகைத்தே இன்ப மணாளரே!

சஞ்சீவிப் பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்

மனிதரும் இல்லை! மலையும் நடுங்காது''

என்று உலகியல் பாடம் நடத்தும் பெண்ணாக வஞ்சி படைக்கப்பட்டுள்ளாள்.

ஆண் பெண் சரிநிகர் சமானம் என்ற சமத்துவப் பெண்ணிய நோக்கில் வஞ்சியின் பாத்திரப் படைப்பு அமைந்திருக்கிறது. பெண் விடுதலையின் முதற்படி பெண் கல்வி. தான் கற்றுச் சிறப்புற்றதோடு, அறிவில் குறைந்த ஆண்மகனுக்கும் அறிவொளி தருபவளாகப் பெண் சித்திரிக்கப்பட்டுள்ளாள். பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நாடு சிறக்காது. பெண்ணுரிமைகளைப் பெண்ணே போராடிப் பெற வேண்டும் என்ற பெண்ணியச் சிந்தனையுடன் வஞ்சி திகழ்கிறாள். மூடப்பழக்க வழக்கங்களால் மூழ்கிப் போன தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க, பகுத்தறிவுக் கரம்கொண்டு தமது மீட்புப் பணியை மேற்கொள்கிறாள், வஞ்சி. கொண்ட இலட்சியத்தில் உறுதியுள்ள பெண்ணைப் படைத்து, இனிவரும் பெண் சமுதாயத்திற்குப் புரட்சிப் பெண்மணியாக வஞ்சியை வளம்வரச் செய்துள்ளார் பாவேந்தர்.

நன்றி: ஆய்வுக்கோவை

பாவேந்தர் பாரதிதாசனின் திரைத்தமிழ் - செ. மகேஸ்வரி

முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் தி€க்கதை, உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வளையாபதி - மூலக்கதை:

ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.

தி€க்கதை அமைப்பு:

காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.

கதை மாற்றம்:

மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.

பாத்திரப்படைப்பு:

திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.

உரையாடல் திறன்:

திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,

குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,

சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா?

வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா?

சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்!

வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....!

சுந்தரி : (கண்­ருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி

நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.

சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா?

வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா?

சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.

வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி

அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.

முடிவுரை:

பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.

நன்றி: கட்டுரை மாலை

 

பாரதிதாசன் கவிதைகளில் யாப்பு - ம. தேவகி

முன்னுரை:

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிஞர் பாரதிதாசன். நல்ல ஆசிரியராக சமுதாயச் சீர்திருத்தவாதியாக சிறந்த இதழாசிரியராக விளங்கியவர். பன்முகப் பாங்குக்கொண்ட பாவேந்தர் தொட்ட துறைகளிலெல்லாம் புகழ் நாட்டியவர். இத்தகைய சிறப்புடைய பாவேந்தரின் கவிதைத் தொகுப்புகளிலுள்ள கவிதைகளின் யாப்பு வடிவங்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பாவேந்தர் கவிதைகளில் யாப்பு:

பாவேந்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்குக் கற்றறிந்தவர். இவர்

''இலக்கணமும் இலக்கியமும்

தெரியாதான் ஏடெழுதல்

கேடு நல்கும்''

என்கிறார். ஆகவே பாவேந்தர் தன்னுடைய கவிதைத் தொகுப்புகளில் யாப்பு வடிவங்களைக் கையாண்டு இருப்பார் என்று ஆராய்ந்தபொழுது

1. பாக்கள், 2. பாவினங்கள், 3. இசைப்பாடல்கள், பாக்கள், பாவினங்கள், இசைப்பாடல்கள் ஆகிய இம்மூன்றும் கலந்த படைப்புகள் என்று அவருடைய கவிதை வடிவங்களை வகைப்படுத்த முடிகிறது.

பாக்கள்:

பாவேந்தர் நால்வகைப் பாக்களுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்றுபாக்களை மட்டும் கையாள்கிறார்.

வெண்பா:

பாரதிதாசனின் நான்கு கவிதைத் தொகுதியிலுள்ள மொத்தப்பாடல்கள் 561. அவற்றுள் 11 கவிதைகள் மட்டுமே வெண்பாயாப்பினால் அமைந்துள்ளன. இக்கவிதைகளும் முற்றிலுமாக வெண்பாயாப்பில் அமைந்துள்ளன என்று கூறவியலாது. ''வகையுளி'' அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. தளைவேறுபாடு உள்ள இடங்களில் குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஆய்தம் அலகு பெறாது. இக்கருத்தும் இவரது கவிதைகளில் பயன்படுகிறது. மேலும் பின்னால் வந்த புலவர். குழந்தை, அ.கி.பரந்தாமனார் தளைதட்டக்கூடிய இடத்து ''ஒற்று நீக்கி'' அலகிடலாம் என்கிறார்கள். மெல்லின இடையின ஒற்றுக்கள் மட்டுமே நீக்கப்படும். இருப்பினும்

''பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை''

''அச்சோ மழைதான் மழையேதான் அத்தான் அச்சேதி''

''தோலும் எரியும் தோய்கலவை மேலும்''

''என்றாள் எதிர்வந்தாள் எடுத்துக்கொள் கத்தி என்றாள்''

என்ற அடிகளிலுள்ள சீர்கள் வெண்பாவிற்குரியனவாக அமையினும் தளைவேறுபாடு காணப்படுகின்றன. மேலும் வெண்பாவின் இறுதியடியானது சிந்தடியாக அமையவேண்டும். ஆனால் ''இன்றைக்கு ஒத்திகை'' என்ற கவிதையில்

''ஒத்திகை இன்றைக்கு நாளைக்குக் கூத்து''

என்று அளவடியாக அமைந்துள்ளது. மேலும் 7 கவிதைகள் 12 அடிக்குமேல் 49 அடி வரை வேறுபட்ட அடிவரையறைகளைக் கொண்டுள்ளன. கதவுபேசுமா -12, தேன்கவிகள் தேவை-65, செந்தமிழ்நாடு-17, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-419, சிரிப்போ குத்தகைச் சீட்டு-27, பள்ளிக்குப்போகும் புள்ளிமான்-28, இன்றைக்கு ஒத்திகை-24, பச்சைக்கிளி-72

12 அடிக்கு மேற்பட்ட அடிகளையுடைய கவிதைகளைப் பஃறொடை வெண்பா என்கிறார் அமிர்தசாகரர். வீரசோழியத்தாரும், புலவர் குழந்தையும் இதனைக் ''கலிவெண்பா'' என்கிறார்கள். மூன்று கவிதைகள் நேரிசை வெண்பாவினால் ஆனது. ஒரு கவிதை சவலை வெண்பாவினால் ஆனது(வீரசோழிய இலக்கணப்படி)

ஆசிரியப்பா:

பாரதிதாசன் கவிதைகளில் 42 கவிதைகள் ஆசிரியப்பாவினால் ஆனது. இக்கவிதைகளில் சில இடங்களில் வகையுளியும், ஜகாரத்தைக் குறுக்கமாக்கியும் தளைதட்டக்கூடிய இடங்களில் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆசிரியப்பாவானது ஏ,ஓ,ஈ,ஆய்,என்,ஐ, ஆகிய எழுத்துக்களை ஈற்றடியின் இறுதிச் சீராகக் கொண்டு முடியும். ''அகத்தியன் விட்ட புதுக்கரடி'' என்ற கவிதையில்

''அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்''

என்று மாறியமைந்துள்ளது. நேரிசையாசிரியப்பாவின் இலக்கணப்படி 30 கவிதைகளும், இணைக்குறள் ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 9 கவிதைகளும், நிலைமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 3 கவிதைகளும் அமைந்துள்ளன.

கலிப்பா:

பாரதிதாசன், கவிதைத் தொகுதியில் 2 கவிதைகள் மட்டுமே கலிப்பாவிற்குரியனவாக அமைந்துள்ளன. இக்கவிதைகளிலும் தளைதட்டக்கூடிய இடத்து, வகையுளியும், ஐகாரத்தைக் குறுக்கமாக்கியும் பயன்படுத்த வேண்டியுள்ளது. கலிப்பாவில் மாச்சீர்கள் மற்றும் விளங்கனிச்சீர்கள் இடம்பெறக்கூடாது. ஆனால்

''அருகு மடவார் அடைகாய் தரவும்''

''இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்''

''சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்''

''சாற்றுதல் கேனீர் தமிழை வடநாட்டார்''

''ஒழுக்கம் கெடுக்கும் உணர்வை ஒடுக்கும்''

என்ற அடிகளில் இவ்வாறு மாச்சீர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு கவிதைகளும் வெண்டளையால் அமைந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பாவினால் ஆனது.

பாவினங்கள்:

பாரதிதாசன் ஆசிரியப்பாவிற்குரிய இனமான ஆசிரிய விருத்தத்தையும் கலிப்பாவிற்குரிய இனமான கலிவிருத்தத்தையும் கட்டளைக் கலித்துறையையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆசிரியவிருத்தம்:

பாரதிதாசன் 28 கவிதைகளை எண்சீர்விருத்தத்தாலும், 7 கவிதைகளை அறுசீர் விருத்தத்தாலும், 1.கவிதையைப் பதினான்குசீர் விருத்தத்தாலும் ஆக்கியுள்ளார். இப்பாவினங்களுக்குச் சீர் தளை வரையறை இல்லை. ஆனால் கழிநெடிலடியாக அமையுமென்ற அடிவரையறை உள்ளது. இம்முறையிலிருந்து ஒரு கவிதையானது மாற்றமடைந்துள்ளது.

எ.கா.: ''எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே

பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றே நீ

செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய

கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே''

இவ்வாறு அளவடியாக அமைந்துள்ளன. கலிவிருத்தம் என்றுரைக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

கலிவிருத்தம்:

நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தமாகும். ஒரு கவிதையானது இவ்வாறு அமைந்துள்ளது. இப்பாவினத்திற்கும் சீர், தளை வரையறை கிடையாது. (எ.கா)

''மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்

செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ

பொய்வண்ண பூசணிக்காய் கறியுனைச் செய்துண்டேன் உன்

கைவண்ணம் அங்குக்கண்டேன் கறிவண்ணம் இங்குக்கண்டேன்''

என்ற பாடலில் ''முடிக்கின்றாய் நீ'' ''இங்குக் கண்டேன்'' என்று வகையுளியாக்கினால் இக்கவிதை கலிவிருத்தமாகும்.

கட்டளைக்கலித்துறை:

அடிதோறும் வெண்டளை பிறழாது ஐந்து சீர்களைக்கொண்டு முடியும். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும். மேலும் நேர் எனற அசையில் தொடங்கும் அடியானது ஒற்று நீங்கலாக 16 எழுத்துக்களைக் கொண்டும், நிரை என்ற அசையில் தொடங்கும் அடியானது ஒற்றுநீங்கலாக 17 எழுத்துக்களைக் கொண்டும் முடியும். பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கட்டளைக் கலித்துறையினால் ஆனது. ''வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்'' என்ற கவிதையில் ஒரடி மட்டும் இவ்விலக்கணத்திலிருந்து பிறழ்ந்துள்ளது. எ.கா,

''தொன்னூற் படியில்லை

திராவிடர் தூய கலைஒழுக்கம்''

வெண்டளையானது பிறழ்ந்து கலித்தளை இடம் பெற்றள்ளது. நேர் என்ற அசையில் ஆரம்பிக்கக்கூடிய இவ்வடியானது 17 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

இசைப்பாடல்கள்:

பாவேந்தர் தம்முடைய கருத்துக்களை வெளியிட மரபுவழிப்பட்ட யாப்பு வடிவங்கள் போதுமானவை அல்ல என்று கருதிப் பாமரர்க்கும் புரியும்படியான இசைப்பாடல்களைக் கையாண்டார். இவர் 1.சிந்து 2.கும்மி 3.கண்ணி 4.கீர்த்தனை ஆகியவற்றைக் கையாண்டுள்ளார்.

சிந்து:

பாரதிதாசன் கவிதைகளில் 13 கவிதைகள் சிந்து என்று குறிக்கப்பட்டிருந்தாலும் அம்முறைப்படி அமையாத கவிதைகளே மிகுதி. இச்சிந்துப்பாக்கள் இடம்பெறும் சீர்களின் அடிப்படையில் வியனிலைச்சிந்து, சமனிலைச்சிந்து என்று பிரிக்கப்பட்டுள்ளது. 5 கவிதைகள் சமனிலைச்சிந்தாக உள்ளன. 2 கவிதைகள் இருசீரிரட்டையாகவும், 2 கவிதைகள் முச்சீரிரட்டையாகவும் 1கவிதை நாற்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. 2 கவிதைகள் வியனிலைச்சிந்தாக அமைந்துள்ளன. 1 கவிதை நாலிருசீரிரட்டையாகவும், மற்றொரு கவிதை சநாலுச்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. ஏனைய 6 கவிதைகள் இவ்விலக்கண முறையிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளது. இவற்றை வியனிலைச்சிந்து என்ற இசைப்பாடலில் சேர்க்கலாம் என்ற எண்ணமானது தோன்றுகிறது.

கும்மி:

பாரதிதாசன் கவிதைகளில் 3 கவிதைகள் கும்மி என்றுக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை கும்மிக்குரிய இலக்கணப்படி அமையவில்லை. எழுசீர்களைக் கொண்டுள்ளன. ஆனால் வெண்டளையானது பிறழ்ந்துள்ளது. (எ.கா)

''தோட்டத்து வாசல் திறக்கும் தினம்

சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்''

கண்ணி:

கண்ணியானது 1.நூலின் உறுப்பாக வரும் கண்ணி 2. தனிச்செய்யுளாக வரும் கண்ணி 3. இசைப்பாட்டாக வரும் கண்ணி என்று பிரிக்கப்பட்டுள்ளது. முதல்வகையினைப் பயன்படுத்தி 2 கவிதைகளையும், இரண்டாவது வகையினைப் பயன்படுத்தி 1 கவிதையினையும், மூன்றாவது வகையினைப் பயன்படுத்தி 17 கவிதைகளையும் படைத்துள்ளார்.

கீர்த்தனை:

பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கீர்த்தனையின் இலக்கணப்படி அமைந்துள்ளன.

பாக்கள், பாவினங்கள், இசைப்பாட்டுகள் கலந்து வரல்:

பாரதிதாசன் ''புரட்சிக்கவி'' ''கடற்மேற் குமிழிகள்'' என்ற 2 காவியங்களிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார். ''வீரத்தாய்'' என்ற காவியத்திலும் ''புரட்சித்திருமணத்திட்டம் நடத்தும் முறை'' என்ற கவிதையிலும் பாக்களும் பாவினங்களும் விரவிவந்துள்ளன. சிலப்பதிகார காவியத்தில் சிறிது விருத்தப்பாக்களும், சிறிது இசைப்பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரதியார் தன்னுடைய ''குயில் பாட்டு'' என்ற படைப்பிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார்.

இம்முறையினைப் பின்பற்றியே பாரதிதாசன் இப்படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

முடிவுரை:

பாரதிதாசன் தன்னுடைய தொடக்கக் கால கவிதைகள் மரபிற்குட்பட்டுப் படைத்துள்ளார். கவிஞன் என்பவன் சமகாலப் பிரச்சனைகளைப் பாமர மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் கூறவேண்டும் என்பதற்காக இசைப்பாடலான புதிய யாப்பு வடிவங்களைக் கையாணடார். கவிதையின் கருத்து வெளியீட்டிற்கு இந்த யாப்பு வடிவங்கள் தடையாக இருந்தபொழுது அவற்றினை மீறவும் அவர் தயங்கவில்லை என்பதனை இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்