21/08/2011

பாவேந்தரின் பாடல்களில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் - சோ.சிவசுப்பிரமணியன்

முதல் திராவிட மறுமலர்ச்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தமிழ்மொழியும் தமிழினமும் தழைத்தோங்கத் தம் வாழ்நாள் முழுவதும் உரிமைக்குரல் கொடுத்தார். பகுத்தறிவு, பெண் விடுதலை, மொழியுணர்வு, இனவுணர்வு ஆகியன அவர்தம் பாடல்களைத் தாங்கும் தூண்களாகத் திகழ்ந்தன. தம் பாடற் கருத்துகள் எளிய பாமர மக்களின் உள்ளத்திலும் பதிய, அப்பாமர மக்களின் நாட்டுப்புறப்பாடல் வடிவத்தை நம் பாடல்களில் மேற்கொண்டார் பாவேந்தர். இலக்கியம் மக்கள்தம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று என்பதற்கு நாட்டுப்புறப் பாடல்களே சிறந்த சான்றாகும். பாவேந்தரின் பாடல்களில் இலக்கியங்களின் தாயாக விளங்கும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் நிறைந்து காணப் பெறுகிறது.

தாலாட்டுப் பாட்டு, ஏற்றப்பாட்டு, பள்ளுப்பாட்டு, கும்மிப் பாட்டு, விளையாட்டுப் பாட்டு, கப்பல் பாட்டு, நிலாப்பாட்டு, விடுகதைகள், கதைப்பாட்டு மற்றும் ''சிந்து'' என்னும் நாட்டுப்புற இலக்கிய வடிவம் ஆகியவை பாவேந்தரின் பாடல்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தலைமுறையை மாற்றிய தாலாட்டு:-

தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான இனிய கலை வடிவமாகத் திகழ்வது தாலாட்டு ஆகும். அழுகையோடு தொடங்கும் குழந்தையின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதும் கூட என்பதைக் குழந்தைக்கு உணர்த்துவது தாயின் தாலாட்டு ஆகும். ''தாயின் மனநிலைக்கேற்பவும் குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ இருக்கும். தாலாட்டின் பணி நீலாம்பரி ஆகும். இங்ஙனம் குழந்தையை உறங்க வைப்பதற்காகப் பாடப்பெறும் தாலாட்டுப் பாடல் வடிவத்தை மேற்கொண்டு பாவேந்தர் தமிழ்ச் சமுதாயத்தை விழிப்புடன் செயல்படும் படியாக உணர்த்தும் வகையில் பாடியுள்ளார்.

''யானைக் கன்றே தூங்கு - நீ

யாதும் பெற்றாய் தூங்கு

தேனே தமிழே தூங்கு - என்

செங்குட்டுவனே தூங்கு''

என்னும் இத் தாலாட்டுப் பாடலில் ஆண் குழந்தையை யானைக் கன்றுக்கு ஒப்புமையாகக் கூறுகிறார். தேனாகவும் தமிழாகவும் குழந்தையைப் பாராட்டுகிறார். மேலும் சேரன் செங்குட்டுவனைப் போலக் குழந்தையும் தமிழுக்கு எதிரான வடமொழியையும் இந்தியையும் தீரத்துடன் எதிர்க்கும் உணர்வுடன் விளங்கவேண்டும் என வலியுறுத்துகிறார் பாவேந்தர்.

ஆண் குழந்தைக்குப் பாடும் தாலாட்டுப் பாடலில் மூடத்தனத்தைப் போக்கிப் பகுத்தறிவை ஊட்டும் கருத்துகளை எடுத்துரைக்கிறார் பாவேந்தர்.

சமயத்தின் பேராலும் இறைவனின் பேராலும் அடுத்தவர் பொருளையும் உழைப்பையும் விழுங்கும் மனிதர்களுக்கு எதிரான சிந்தனைத் தெளிவை பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாடல் மூலம் ஊட்டுகிறார் பாவேந்தர். இதனை,

''எல்லாம் அவன் செயலே என்று பிறர்பொருளை

வெல்லம் போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்

காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்

வேர்ப்பீர் உழைப்பீர் என உரைக்கும் வீணருக்கும்'' என்று கூறுகிறார் பாவேந்தர்.

அறிவும் உரிமையும் உடைய பெண்கள் நிறைந்த வீடு அழகும், ஆனந்தமும் நிறைந்ததாகத் திகழும். இத்தகையப் பெண்களாலேயே சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிக் கொடுமையைக் களைய முடியும். மதத்தின் பேரால் மூடத்தனத்தை வளர்க்கும் மூடர்களின் கூட்டத்தைக் களையெடுக்க வருபவர்களாகப் பெண் திகழ வேண்டும் என்பதைப் பெண் குழந்தைத் தாலாட்டில் பாடும் போது,

''வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்

தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!

புண்ணிற் சரம்விருக்கும் பொய்ம்மத்தின் கூட்டத்தைக்

கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!''

என்கிறார் பாவேந்தர். தாலாட்டில் மாமன் பெருமைகளை நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடும் போது, பாரதிதாசன் தமிழ் மண்ணுக்குச் சொந்தமில்லாத அயலவரால் விதைக்கப்பட்ட மூடப்பழக்க வழக்கம் முதலான சமுதாய அழுக்குகளைக் களையும் கருவியாகத் தாலாட்டுப் பாடலைப் பாடுகிறார்.

தமிழர் வாழ்வில் ஏற்றம் தரும் ஏற்றப் பாட்டு:-

''ஏற்றப்பாட்டுக்கு எதிர்பாட்டில்லை'' என்பது வழக்கு. பாவேந்தரின் ஏற்றப்பாட்டுக்கு எப்பொழுதும் எதிர்ப்பாட்டில்லை. ஏனெனில், இதுவே ஓர் எதிர்பாட்டு - எதிர்ப்புப் பாட்டு எனலாம். ''ஏற்றப்பாடலிலே மாறாத இலக்கிய நயம் இருக்கிறது. ஒரு வனத்தை வருணிப்பதனாலும் அரைத்துக் குளிக்கும் மஞ்சளின் அழகை எடுத்துச் சொல்வதனாலும் ஒரு புராணக் கதையை பேசுவதனாலும் ஏற்றப்பாடல் பாடும் குடியானவன் கற்பனையின் சிகரத்திற்கே போய் விடுகிறான் என்பவர் நா. அய்யாசாமி.

ஏற்றப்பாடல் என்னும் நாட்டுப்புற இலக்கிய வடிவத்தில் இனியப் பாடலைப் பாடியுள்ளார் பாவேந்தர். ஏற்றப்பாடலை முற்பகல், பிற்பகல் என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு நூறு நூறு கண்ணிகளாய் பாடியுள்ளார். ஏற்றப்பாடலில் நூறு நூறாகப்பாடும் தன்மையே உள்ளது. பாவேந்தர் பகுத்தறிவு நெறியின்பாற்பட்டவர் ஆதலில் இவர்தம் ஏற்றப்பாடலில் ''விநாயகர் துதி இல்லை. பாவேந்தர் தம் ஏற்றப்பாடலில்,

''ஊர்க் குழைக்க வேண்டும் - நீ உண்மையுடன் தம்பி!

நாட்டுக் குழை தம்பி - இந்த நானிலத்தை எண்ணி!

பச்சை விளக் காகும் - உன் பகுத்தறிவு, தம்பி!

பச்சை விளக் காலே - நல்ல பாதை பிடி தம்பி''

என்று பாடும் போது உழைப்பு என்பது வீட்டுக்கு என்று உள்ளதைப் போல் நாட்டுக்காகவும் அமைதல் வேண்டும்; அதுவும் உண்மையானதாக அமைதல் வேண்டும். அத்தகைய நாட்டுக்கான உழைப்பும், பகுத்தறிவு என்னும் பச்சை விளக்குப் பாதையில் பயணம் செய்வதாகத் திகழ வேண்டும் என்கிறார் பாவேந்தர். இங்ஙனம் பாவேந்தர் கருத்துக்களைப் புதிய வடிவில் தரவேண்டும் என்ற உந்துதலில் ஏற்றப்பாடல் என்னும் வடிவில் பாடியுள்ளதைக் காண முடிகிறது.

சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்:-

நாட்டுப்புற மக்களிடம், சிறுவர்களின் உடலுக்கும், உள்ளத்துக்கும் நிறைந்த மகிழ்ச்சியைத் தருவனவாய் அமைவன விளையாட்டுகள். அங்ஙனம் விளையாடும் போது இனிய பாடல்களைப் பாடுவர். குழந்தைகளுக்காக விளையாட்டுப் பாடல்களைப் பாடும் போது,

''கைவீ சம்மா கைவீசு

கடலை வாங்கலாம் கைவீசு

வெய்யில் போகும் கைவீசு

வெளியில் போகலாம் கைவீசு

தட்டாங்கி தட்டாங்கி

தலைமேலே தாழம்பூ

பட்டாலே சட்டை

பஞ்சாலே சல்லடம்

செட்டாக அணிந்து

சீராக முந்தி

தட்டுநீ தட்டு

தட்டாங்கி தட்டாங்கி''

இனிய நாட்டுப்புறப் பாடலின் பாங்கில் பாடுகிறார் பாவேந்தர்.

தொழிற் பாடல்கள்:-

நாட்டுப்புற மக்களின் முதன்மையான தொழிலாக அமைவது விவசாயமும் கால்நடைகள் வளத்தலுமே ஆகும். உழவுத் தொழிலைச் சார்ந்த ஏர்பிடித்தல், நாற்று நடுதல், களையெடுத்தல், ஏற்றமிரைத்தல், அறுவடை, கதிரடித்தல், வண்டியில் கொண்டு செல்லல் போன்ற தொழில்களைச் செய்யும் போது உடல் வருத்தம், தெரியாமல் இருக்கப் பாடல் பாடிக் கொண்டே தொழில் செய்வர்.

நெடுந்தூரம் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டு செல்பவர் பாடும்போது,

''கலகலத்தது வண்டி - அந்தக்

காளை மாடும் நொண்டி

பொல பொலத்தது கூரை - மட்சிப்

பொடியைச் சிந்தும் ஆரை''

என்றும், தட்டார் தங்க நகை செய்யும் அழகைப் பற்றிக் கூறும் போது,

''தங்க நகை செய்வார் - அவர்

வெள்ளி நகை செய்வார்

வங்கி நல்ல மாலை - கெம்பு

வயிரம் வைத்துச் செய்வார்''

என்று நயமுற எடுத்துரைக்கின்றார் பாவேந்தர்.

விடுகதைகள்:-

தொல்காப்பியரால் பிசி என்றழைக்கப்படும் விடுகதை விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். விடுகதை சிந்தனைக்கு ஒரு பயிற்சியாகவும் அறிவுக்கு உறைவிடமாகவும் திகழ்வது. புதிர்த் தன்மைகளை உள்ளடக்கி வினா அடிப்படையில் அமைந்து, கற்பனை, உவமை, உருவகம், ஓசை போன்ற நயங்களை உள்ளடக்கியாக விடுகதை அமைந்துள்ளது. பாவேந்தர் பாரத நாட்டை பற்றிப் பாடும் போது விடுகதை வடிவத்தில் பாடுகிறார்.

''கங்கை நதி தலையிலுண்டு சிவனார் அல்ல

காலடியில் குமரியுண்டு ராமனல்ல

சங்கையற்ற வயதுண்டு கிழவி அல்ல

சாத்திரத்தின் ஊற்றனையாள் கலைமாதல்ல

எங்குலத்தைப் பெற்றதண்டு பிரமனல்ல''

என்று சிறுவர் சிறுமியர் தேசிய கீதத்தில் விடுகதை போடுகிறார். பாவேந்தர் ஒரு நாட்டுப்பற்றுமிக்க கவிஞர் என்பதற்கு இத்தகைய நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே சான்று ஆகும்.

சிந்துப் பாடல்கள்:-

சிந்துப் பாடல்களே நாட்டுப்புற இலக்கியத்தில் பெரும் செல்வாக்குப் பெற்றவை எனலாம். இவ்விலக்கிய வடிவம் எளிய பாமர மக்களிடம் கூட அரிய கருத்தைக் கொண்டு செல்லும் ஆற்றல் படைத்தது. இவ்வடிவத்தை கையாண்டு வெற்றி பெற்றதாலேயே பாரதியார் ''சிந்துக்குத் தந்தை'' எனப் பாராட்டப்படுகிறார். பாரதியாரைப் பின்பற்றி நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து போன்ற நாட்டுப்புற பாடல் வடிவங்களைப் பாவேந்தர் பயன்படுத்தியுள்ளார்.

''வானிடை ஓர் வானடர்ந்த வாறு - பெரு

விண்சிளை மரங்கள் என்ன வீறு! நல்ல

தேனடை சொரிந்ததுவும்

தென்னை மரம் ஊற்றியதும்

ஆறு - இன்பச்

சாறு''

எனக் காட்டின் அழகைக் காவடிச்சிந்தில் இசைக்கிறார் பாவேந்தர். அவர்மேலும்,

''ஒருவனும் ஒருத்தியுமாய் - மனம்

உவந்திடில் பிழையென உரைப்பதுண்டோ

அரசென ஒரு சாதி - அதற்

கயலென வேறொரு சாதியுண்டோ''

என்று நொண்டிச் சிந்தில் பாடுகிறார் பாவேந்தர்.

இங்ஙனம் பாவேந்தரின் படைப்புகளில் நாட்டுப்புற இலக்கியத்தின் தாக்கம் நிறைந்துள்ளமைக்கு காரணம், அவர் தமிழ் மண்ணையும், தமிழரையும், தமிழ்மொழியையும் போற்றியவர். ஆகவே மண்ணின் மணத்தோடு கூடிய நாட்டுப்புறப் பாடல்களில் அவருடைய பள்ளுப்பாட்டு, சிறுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு ஆகியன பெரும் செல்வாக்குப் பெற்றன. தம் பாடல்கள் பாமர மனிதருக்கும் சென்று சேர வேண்டும் என எண்ணிய பாவேந்தர் பாமர மக்களின் பாட்டு வடிவமாகிய நாட்டுப்புறப் பாடல்களின் வடிவத்தில் தம் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களையும் அழகுறவும் ஆழமாகவும் எடுத்துரைக்கிறார்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: