சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘புதுமைச் சித்தர்’ சுஜாதா - விஜய திருவேங்கடம்


தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் சுஜாதா. தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் எழுத்து நடையால் வாசகர்களைக் கவர்ந்தவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படக் கதை - வசனங்கள், தொலைக்காட்சித் தொடர் எனப் பல துறைகளில் தன் முத்திரையைப் பதித்தவர்.

சுஜாதா என்கிற ரங்கராஜன் 1935-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி சென்னை, திருவல்லிக்கேணியில் பிறந்தவர். படித்து, வளர்ந்தது ஸ்ரீரங்கத்தில்.

1987-ஆம் ஆண்டு, அறிவியல் கலைச் சொல்லாக்கம் பற்றியும் பாமரர்க்கு அறிவியல் பற்றியும் "இளையான்குடி டாக்டர் ஜாகிர் ஹுசேன்' கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டைத் தொடங்கிவைக்க சுஜாதாவை அழைத்தோம்.

பெங்களூருவிலிருந்து இளையான்குடிக்குக் காரில் பயணம். வழிநெடுக வானொலியில் அறிவியல் பற்றி வளமான ஆலோசனைகள் தந்தார் சுஜாதா. இளையான்குடி மாநாட்டில்தான் தமிழில் கணினிக் கலைச் சொற்கள் ஆயிரம் ஆக்கித் தருவதாக அறிவித்தார். மாலை 4 மணிக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் மாணவரிடையே பேசினார். அப்போது கவிஞர் மீரா, அக்கல்லூரியின் முதல்வர்.

சுஜாதாவிடம் மாணவர் ஒருவர் கேட்டார், ""சிறுகதை எழுத என்ன செய்ய வேண்டும்?''

"இதோ, இந்த ஹாலிலேயே சிறுகதை இருக்கிறது. மாணவர்களே! எல்லோரும் "பெஞ்ச்'களில் அமர்ந்திருக்கிறீர்கள். மாணவிகளில் சிலர் தரையில். அதைப்போலவே இதோ, இந்தச் சுவர்களில் நேரு, இராஜேந்திர பிரசாத், உள்ளூர் பிரமுகர்கள் என்று ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லாத புகைப்படங்கள். இதில் கதை இருக்கிறது. ஆக, உங்களைச் சுற்றிப் பாருங்கள், உற்றுப் பாருங்கள்'' என்றார்.

1991-ஆம் ஆண்டு தேசிய அளவிலான அறிவியல் நெடுந்தொடர் திட்டமிடல் கூட்டத்தில் பங்கேற்று நிகழ்ச்சித் தொடரின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

1993-ஆம் ஆண்டு ஓர் அறிவியல் நாடகம் எழுதித் தருமாறு சுஜாதாவைக் கேட்டோம். நாடகத்தை எழுதித் தந்ததோடு அதன் தயாரிப்புத் தரத்திலும் தனிக்கவனம் செலுத்தினார். நாடகத்துக்குத் தேவையான சிறப்பான ஒலிக்குறிகளும், "டிஜிட்டல்' ஒலிப்பதிவு வசதியும் அப்போது சென்னை வானொலியில் கிடையாது. சுஜாதாவின் பரிந்துரையில் அருண் வீரப்பனின் "மீடியா ஆர்ட்டிஸ்ட்' பதிவகத்தில் நாடகத்தைப் பதிவு செய்தோம். இதற்காக வானொலி நிலையத்தின் விதிகளைத் தளர்த்த வேண்டியிருந்தது. வானொலிக்காகச் சிந்தித்த அந்த புதுமைச் சித்தருக்காக இதைச் செய்ததில் எங்களுக்குப் பெருமை.

இதே காலகட்டத்தில் பண்பலைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. 1993-ஆம் ஆண்டு பொங்கல் புது நாளில், சென்னை பண்பலை ஒலிபரப்பை ஐந்து மணி நேர மாலை ஒலிபரப்பிலிருந்து காலை, பகல் என்று நேரத்தை மிகுதிப்படுத்தினோம். பின்னர், ஆகஸ்ட் இறுதிக்குள் 24 மணி நேர ஒலிபரப்பாக விரிவாக்கிச் சரித்திரம் படைத்த சமயம். இத்தகைய வளர்நிலையில் அறிவிப்புகளில் பல புதுமைகளைப் புகுத்தினோம். அதைக் குறிப்பாகப் பாராட்டி, சுஜாதா தமது "கற்றதும் பெற்றதும்' தொடரில் எழுதியிருந்தார்.

"பெல்' நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னையில் குடியேறி, "குமுதம்' ஆசிரியப்பணி, திரைப்படம் முதலிய பன்முகப் பணியின் ஓர் அங்கமாகப் புத்தாயிரம் ஆண்டின் உதயத்தில் "பெண்டா மீடியா' இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தின் "நம் டி.வி' (இணைய டி.வி, வானொலி) ஆலோசகராக நான் பொறுப்பேற்றேன். அந்த வானொலியின் வளர்ச்சியில் சுஜாதா பெரும் பங்காற்றினார். அவரது ஆலோசனைகளுள் ஒன்று: தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் "வேங்கடம் முதல் குமரிவரை' தொடரை வாசிப்பது. அந்தத் தொடருக்குத்தான் "ஹிட்ஸ்' அதிகம்.

குமுதத்தில் எழுதிய "நைலான் கயிறு' என்ற முதல் நாவலின் மூலமாகவே வாசகரின் மனதில் இடம்பிடித்து விட்டவர் சுஜாதா. "கணேஷ்-வசந்த்' துப்பறியும் தொடர், நாற்காலி நுனிக்கு அழைத்துச் செல்லும் சுவாரஸ்யமான கதைகள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றன.

"நித்யா-ஆத்மா' இடம்பெறும் விஞ்ஞானக் கதைகள் தமிழில் இப்போதும் அதி நவீன இடம்பிடித்து முன்னணியில் இருக்கின்றன. ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள் போன்ற அவருடைய சிறுகதைகள் தமிழில் பலரை எழுத்தாளராக்கிய திறம்படைத்தவை. என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற விஞ்ஞானக் கதைகளும், மூளையைப் பற்றி எழுதிய "தலைமைச் செயலகம்' என்ற விஞ்ஞானத் தொடரும் ஒரு தலைமுறை தமிழர்களுக்கு விஞ்ஞான அறிமுகத்தை அளித்தது என்று பெருமையாகக் கொள்ளலாம்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கொண்டுவந்ததில் சுஜாதாவின் பங்களிப்பு அதிகம். திரைப்பட வசன கர்த்தாவாகவும் (விக்ரம், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன்), கடைசி மூச்சு வரை இளமையான தமிழுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார்.

2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி தம் 73-ஆம் வயதில் காலமானார்.

ஒவ்வொரு வார்த்தையிலும் இலக்கியம் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளியான சுஜாதாவை நாம் முறையாக கெளரவிக்கத் தவறிவிட்டோம் என்பது தேர்ந்த இலக்கிய ரசிகர்களின் ஆறாத ஆதங்கம்தான்.

இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று அனைத்து ஊடகங்களிலும் புதுமைகள் பல செய்த சுஜாதாவை "ஆனந்த விகடன்' இவ்வாறு வர்ணித்தது: "20-ஆம் நூற்றாண்டின் தமிழ்மொழி, தமிழிலக்கிய ஃபாஷன் டிசைனர் சுஜாதா'!

நன்றி - தமிழ்மணி

வாட்டர் கார் விவகாரம் - சுஜாதா


'அன்புள்ள டாக்டர் ராகவானந்தம்,

உங்கள் 16-8-73 தேதியிட்ட விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்ட முறைப்படி தானியங்கும் ஊர்தியன்றைத் தயாரிப்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் நம்புவதால் உங்கள் விண்ணப்பத்தை ஏற்பதற்கில்லை.

இக் கடிதம் உங்கள் 17-8-73 தேதியிட்ட ஞாபகக் கடிதத்தையும் தீர்வு செய்கிறது.

உங்கள் விசுவாசமுள்ள

கூப்சந்த்

காரியதரிசி, இந்திய அரசாங்க வர்த்தகத் தொழில் துறை அமைச்சகம்.'

சிங்க முத்திரைக் கடிதத்தை மடித்தேன். எதிரே டாக்டர் ராகவானந்தம் சிவந்த மூக்குடன் நின்றிருந்தார்.

''நான் இவர்களுக்கு எழுதியது தப்பு. சுப்ரமணியத்துக்கு நேராக எழுதி இருக்க வேண்டும்.''

''நீங்கள் என்ன எழுதியிருந்தீர்கள்?''

''ஒரு கார் தயாரிப்பதற்கு லெட்டர் ஆஃப் இன்டெண்ட் கேட்டிருந்தேன்.''

''கார் தயாரிப்பதற்கா? பேஷ். பெட்ரோல் விற்கிற விலையில் இப்போது எதற்கு என்று அவர்கள்...''

''என் கார், வாட்டர் கார். அதற்கு பெட்ரோல் வேண்டாம்.'

''புரிந்தது, போட் மாதிரியா? பரிசல், ஓடம் மாதிரியா?''

''இல்லை. தரையில்தான் ஓடும். பெட்ரோலுக்குப் பதில் தண்ணீர். ஜஸ்ட் வாட்டர்.''

''டாக்டர், எங்கே அந்த கார்? நான் ஓட்டிப்பார்க்க வேண்டும்.''

டாக்டர் தன் இடது புருவத்துக்கு ஒரு சென்டிமீட்டர் மேலே தட்டி, ''இங்கேதான் இருக்கிறது. இரண்டு மாதம் பொறு. டிசைன் தயாராகிவிட்டது. எனக்கு வேண்டியது ஒரு பட்டறை, ஒரு மெக்கானிக், ஒரு வெல்டிங் செட். பொறு.''

டாக்டர் அவர்கள், தன் வாட்டர் கார் வேலை செய்யப் போகிற விதத்தை எனக்கு விளக்கியபோது நான் அயர்ந்துபோய் விரலில் மூக்கை வைத்து, ''ஒண்டர்ஃபுல் டாக்டர். கை கொடுங்கள்'' என்று அவர் கையைப் பற்றிக் குலுக்கினேன். ''இது நிச்சயம் வேலை செய்யும். கையில் என்ன டாக்டர் பிசுபிசு என்கிறது- திருநெல்வேலி அல்வா மாதிரி?''

''வஜ்ரப் பசை. என் முதல் மாடலை என் சொந்தச் செலவிலேயே தயாரிக்கப்போகிறேன். தயாரித்து பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு அவர்களை காரில் அழைத்துச் சென்று, 'இதோ பார், இதற்குத்தான் அரசாங்கம் அனுமதி தர மறுத்துவிட்டார்கள்' என்று சொன்னால்...''

''அப்புறம் இந்திராவிடமிருந்து போன். 'டாக்டர், ஐயாம் எக்ஸைட்டட்...' ''

''விஷயத்தை உனக்குள்ளேயே வைத்துக்கொள். ஐடியாவைத் திருடிவிடுவார்கள். அப்புறம் சந்திக்கலாம்'' என்று என்னை வெளியே தள்ளி அறைக் கதவைத் தாளிட்டுக்கொண்டார்.

அந்த மேதையை நினைத்துக்கொண்டே நடக்கையில் மோதிக்கொண்டேன், மாலதியின் மேல்.

''ஹலோ மாலதி...''

அவள் தன் ஆண்பிள்ளைச் சட்டையை உதறிக்கொண்டாள். ''யார் நீங்கள்?''

நான் என் தலைமுடியைப் பிரித்துக் காட்டினேன்.

''யூ?''

''ஆம்! அதே யூ. யுவர்ஸ் ட்ரூலி.''

''மேலே மயிர் ஜாஸ்தி வளர்த்திருக்கிறாய். எங்கே வந்தாய்?''

''உன்னிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்.''

''என்ன..? நீ முன்று மாதம் முழுகாமல் இருக்கிறாயா?''

''ஹ்ஹ. சிரித்தாகிவிட்டது. இனி ரகசியம். உன் அப்பா இன்னும் இரண்டு மாதத்தில் லட்சாதிபதி ஆகிவிடுவார்.''

''அடுத்த மாதம் அப்பா லட்சாதிபதியாவதை விவித் பாரதியில் நிரோத் விளம்பரம் போல நிறைய தடவைக் கேட்டாகிவிட்டது.''

''டாக்டர், அவர்கள் இந்தத் தடவை ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்திருக்கிறார். பெட்ரோல் இல்லாமல் போகும் கார்.''

''தள்ளினால் எல்லா காரும் போகும்.''

''ச்ச்ச். இரண்டாவது உலக யுத்த ஜோக். டாக்டரின் கார் தண்ணீர் சக்தியால் போகிறது. ஹைட்ராலிக் டர்பைன் பிரின்சிபிள் தெரியுமா உனக்கு?''

''தெரியாது. தேவை இல்லை. நீயும் அப்பாவும் சேர்ந்து அடித்த கூத்தெல்லாம் நான் மறக்கவில்லை. உன் மாதிரி மறை கழன்ற ஆசாமிகளுடன் பேச எனக்கு நேரமில்லை. உனக்கு வேறு வேலை இல்லை என்றால் பனகல் பார்க்கில் சிமென்ட் பெஞ்ச்சில் உட்காரப் போ.''

அது நிகழ்ந்து ஒரு மண்டலம் வரை, என்னால் டாக்டர் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. ஒரு மாலை பெரியண்ணன் கடையில் மசாலா டீ சப்பிக்கொண்டு இருந்தபோது, என் எதிரே அரை வேஷ்டியை முண்டாசாக அணிந்து, காதில் பீடி செருகி இருந்த சைக்கிள் ரிக்ஷா ஓட்டி ஒருவனும் அவன் நண்பனும் பேசிக்கொண்டு இருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.

''நாளைக்குத்தான்டா ஓடுதாம்.''

''இன்னாடா?''

''காரு. தண்ணி போட்டா ஓடுதாம். ஒரு கெய்வன் கண்டுபிடிச்சிருக்கானாம். இத பார், போட்டிருக்கு.''

''இன்னாடா இது ஜீனி வேலை? டைவர் தண்ணி போட்டா காரு ஓடுதா? அட!''

''ஐயா! அந்த செய்தித்தாளை சற்றுத் தருகிறீர்களா?''

''இன்னா நய்னா... ஷோக்கா சட்டையெல்லாம் போட்னுகீறே? தமிள்ள பேசறே. பாஞ்சு பைசா கொடுத்து வாங்க்யேன்.''

நான் அவன் சொல்வதில் நியாயமிருப்பதை உணர்ந்து, அந்தப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கிப் பார்த்தேன். அதில்-

நாளை வெள்ளோட்டம்!

நீரில் ஓடும் சிற்றுந்து(கார்)!

பெட்ரோல் தேவையில்லை!

அந்தப் பத்திரிகை ஆபீஸில் உள்ள ஆச்சர்யக்குறிகள் அனைத்தையும் விரயமாக்கி, டாக்டர் ராகவானந்தத்தின் அதிசய கார் நாளை மக்கள் முன் பவனி வரப்போகும் செய்தி முன் பக்கம் முழுவதும் பரவி இருந்தது.

நான் உடனே டாக்டருக்கு டெலிபோன் செய்தேன்.

''பையா, எங்கே காணாமல் போய்விட்டாய் உடனே வா.''

நான் பறந்து அங்கே சென்றபோது மாலதி ஸ்டார் டஸ்ட் படித்துக்கொண்டு இருந்தாள். என்னைப் பார்த்துவிட்டு மறுபடி படிப்பில் ஆழ்ந்தாள்.

''மால், டாக்டர் எங்கே?''

''ஷெட்'' என்றாள், அதைவிடச் சுருக்கமான வார்த்தை கிடைக்காததால்.

''கார் ஓடுகிறதா?''

அவள் என்னைப் புரியாமல் பார்த்தாள்.

''கார்?''

''வாட்டர் கார்?''

''எனக்கு என்ன தெரியும்?''

''மாலதி, நாளைக்கு இனாகுரேஷன். பேப்பர் பார்க்கவில்லையா?''

''அப்படியா? சென்ற பதினைந்து நாட்களாக ஷெட்டில்தான் இருக்கிறார். அங்கேதான் சாப்பாடு, உப்புமா, காபி எல்லாம் போகிறது. உள்ளே என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு இது மட்டும் தெரியும். நாளைக்கு இங்கே ரகளை, அடிதடி நடக்கப்போகிறது; நான் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். இதோ அப்பா.''

டாக்டர் அவர்கள் ஈஸ்ட்மென் கலரில் நடந்து வந்தார். உடம்பில் பச்சை பெயின்ட். காது நுனியில் மூக்குக் கண்ணாடியில் இடது செருப்பில் சிவப்பு பெயின்ட். உடம்பின் மற்ற சிற்சில இடங்களில் அங்கங்கே மஞ்சள் நிறம். இப்படி. கையில் ஒரு ஃப்ளிட் டின்.

''வந்துவிட்டாயா. மாலதி, பிரெஸ் கான்ஃபரன்சுக்குப் பிரம்பு நாற்காலிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுவரில் நம்பர் எழுதியிருக்கிறேன். போன் பண்ணிவிடு.''

''டாக்டர், கார் ஓடுகிறதா?''

''ஓடும்... ஓடும். ஃபினிஷிங் டச்சஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஸ்ப்ரே பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறேன். பையா, மாலதி கடைசியில் காலை வாரி விட்டுவிட்டாள். மாட்டேன் என்கிறாள்.''

''மாட்டேன், மாட்டேன், மாட்டேன்'' என்றாள் மாலதி.

''என்ன மாட்டாய்?''

''நான் அந்த காரை நாளை ஓட்ட வேண்டுமாம். செத்தாலும் மாட்டேன். நீ அதைப் பார்த்தாயோ? அது கார் போலவே இல்லை. ஒட்டகம் போல் இருக்கிறது. அதில் நான் உட்கார்ந்து அதுவும் பத்திரிகைக்காரர்களின் முன்னிலையில்... சே.''

''ஒரு பெண் அதை ஓட்டினால் க்ளாமர் இருக்கும்.''

''டாக்டர், அது ஓடுமா?''

''ஓடாது'' என்றாள் மாலதி.

''ஓடும்'' என்றார் டாக்டர். ''நான் ஜாக் பண்ணி உயர்த்தி முந்நூறு மைல் ஓட்டிப் பார்த்தேன். பையா நான் உன்னைக் கூப்பிட்டதன் காரணம் அதுதான். நீதான் நாளைக்குப் பத்திரிகைக்காரர்கள் முன் என் காரை ஓட்டப்போகிறாய். இளம் சமுதாயத்தின் கார் இது. இளம் சமுதாயம்தான் ஓட்ட வேண்டும்...''

''நானா?''

''நீதான். சரித்திரம் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.''

''டாக்டர், எனக்கு டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்பது சரித்திரத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.''

''மேலும், இவருக்கு ஈயைத் தவிர வேறு எதையும் ஓட்டத் தெரியாது என்பதும் சரித்திரத்துக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.''

''டாக்டர், நான் நாளைக்கு திருவான்மியூர் வரைக்கும் பொடிநடையாகப் போய்விட்டு வர வேண்டும். ஒரு வேண்டுதல்.''

''அப்பா, கழல்கிறார் பாருங்கள். கோழை. புறமுதுகு காட்டும் இழிதகை.''

எனக்கு ரோசம் வந்துவிட்டது. ''டாக்டர், ஆல்ரைட். உங்கள் காரை நான் ஓட்டத் தயார். மாலதி, கட்டுண்டோம். காத்திருப்போம். நாங்கள் சிரிக்கும் காலம் வரும். டாக்டர், நான் காரைப் பார்க்க வேண்டும்.''

''ஷி இஸ் எ ப்யூட்டி. வா, காட்டுகிறேன்'' என்றார்.

ஷெட் கதவைத் திறந்ததும் என் மூஞ்சியில் அறைந்தது போல பளிச் என்று அந்த கார் தெரிந்தது. அதை கார் என்று அறுதியிட்டுச் சொல்வது கார்களின் வளர்ச்சிக்கு ஆக்கமளித்திட்ட சான்றோர்களைப் புறக்கணிப்பதாகும். கார் போலவும்இருந்தது. கார் இல்லை போலவும் இருந்தது. நல்ல உயரம். வாளிப்பான உடம்பு. அதன் மாடியில் ஒரு செப்டிக் டேங்க் அளவுக்குப் பெரிய டேங்க் ஒன்று இருந்தது. அதிலிருந்து பதினெட்டு டிகிரி சாய்வில் ஒரு குழாய் சரிந்தது. மற்றொரு டேங்க்.

''மேலே இருப்பது மெயின் டேங்க். கீழே ஆக்ஸிலரி டெயில் ரேஸ் டேங்க். இதுதான் பட்டர்ஃப்ளை வால்வ் கன்ட்ரோல். அதை இழுத்தால் வேகம் அதிகமாகும். விட்டால் குறையும். அது பிரேக். இது ஸ்டீயரிங். அவ்வளவுதான். எப்படி இருக்கிறாள் பார்ப்பதற்கு?''

''ஓ, ஓ. நன்றாகத்தான் இருக்கிறாள். ஸீட் கொஞ்சம் உயரமாக இருக்கிறது.''

''படி இன்னும் வைக்கவில்லை. இந்த டிரம் மீது ஏறி ஸீட்டில் உட்கார்ந்துகொள்ள வேண்டும். தச்சனிடம் படிச்சுச் சொல்லியிருந்தேன். அவன் கொடுத்த காசைக் குடித்துவிட்டு, நாளைக்கு என்று சொல்லிவிட்டான். பரவாயில்லை. ஏறிப் பார்.''

''டாக்டர், நாளை காலை பார்த்துக்கொள்ளலாமே.''

''பயப்படாதே. ஏறி உட்கார்ந்து பார்.''

நான் ஃபைட்டர் விமானத்தை எட்டி வேடிக்கை பார்க்க ஏறும் மந்திரி போல் அந்த டிரம் மீது கால் வைத்து காரினுள் ஏறிக்கொண்டேன்.

டாக்டர் டிரம்மை அந்தப் பக்கம் உருட்டிச் சென்று அதன் மேல் ஏறி, என் அருகே உள்ள ஸீட்டில் ஏறிக்கொண்டார்.

ஏறும்போது, 'கீச் கீச்' என்ற சத்தமும் அதன் பின் 'க்ளங்' என்று நிறைந்த கங்காளம் அசைவது போல் சத்தமும் கேட்டது. தவிர, டாக்டரின் மாடியிலிருந்து ஒரு திவலைத் தண்ணீர் வழிந்து என் பேன்ட்டை தொடை பாகத்தில் நனைத்தது.''

''ஃபுல் டேங்க், நூறு மைல் ஓடும்'' என்று கண் சிமிட்டினார் டாக்டர்.

''மர ஸீட். இன்னும் மெத்தை தைக்கவில்லை போலும்'' என்றேன்.

''யூஃபோமுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறேன்.''

ஸ்டீரியங் மேல் கைவைத்துக்கொண்டேன். மாலுமி போல் உணர்ந்தேன். அது என்ன?''

''அது கன்ட்ரோல் சுவிட்ச்.''

அது ஊ ஊ உ என்றது கார். ''ஓ யெஸ். இது ஹாரன்.''

மாலதி ஓரத்தில் கீழே நின்றுகொண்டு இருந்தாள்.

''அங்கிருந்து உங்களைப் பார்த்தால் முல்லைக்குத் தேர் ஈவதற்கு முன்பான பாரி போல இருக்கிறீர்கள்.''

நான் அவளை மதிக்கவில்லை. உலகம் எப்போதும் முதலில் சிரிக்கத்தான் செய்யும்.''

''டாக்டர், இது என்ன குமிழ்?''

அதுதான் த்ராட்டில் கன்ட்ரோல்... ஏய், ஏய், இழுக்காதே. இழுக்காதே!''

இழுத்தாகிவிட்டது!

அந்த சரித்திரப் பிரசித்தமான பயணம் அப்போதுதான் துவங்கியது.

இழுக்காதே என்று சொன்ன குமிழை இழுத்ததால் ஜோ என்று அந்தரங்கத்தில் (கடைசியாக நான் குற்றாலத்தில் கேட்ட ) சத்தம் கேட்டது.

டாக்டரின் கார் பெல்டன் வீல் தத்துவத்தில் அமைந்தது. வால்வைத் திறந்தால் மேலே நிரம்பி இருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுக் குழாய் வழியாக மிக வேகமாகச் சரிந்து, கீழ் டேங்குக்கு ஓடும். போகிற போக்கில் டர்பைன் சக்கரத்தைச் சுற்றிவிட்டு ஓடும். டர்பைனுடன் இணைக்கப்பட்ட காரின் சக்கரங்கள் சுழல, கார் ஓடும்.

திறந்துவிட்டேன் போலிருக்கிறது, கார் ஒரு முறை சோம்பல் முறித்துக்கொண்டு குலுங்கி நகர ஆரம்பித்தது.

''டாக்டர், நகர்கிறது. எனக்கு ஓட்டத் தெரியாது.''

''பையா, உடனே எழுந்திரு. ஸீட் மாற்றிக்கொள்ளலாம். என்னால் சமாளிக்க முடியும்.''

நான் எழுந்திருக்க முயன்றேன். முடியவில்லை.

''டாக்டர், என் பேன்ட் ஸீட்டில் ஒட்டிக்கொண்டுவிட்டது.''

''பெயின்ட் ஈரமாக இருந்திருக்கிறது. பையா, க்விக். பேன்ட்டைக் கழற்றிவிட்டு எழுந்திரு.''

''டாக்டர், டாக்டர் லுக் அவுட்.''

கார் ஷெட்டுக்கு வெளியே வந்து நேராக 'சிறு குடும்பம் போதுமே' சுவரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது.

''பையா, ஸ்டீயரிங்கைத் திருப்பு.''

''டைட்டாக இருக்கிறது டாக்டர்.''

''பயப்படாதே, நான் இருக்கிறேன். அந்த பிரேக்கை லேசாக அழுத்து. ஸ்மூத்தாகப் போகும். பிரேக்கை அழுத்திப் பார்.''

''டாக்டர், பிரேக் தொளதொளவென்று இருக்கிறது.''

''ஓ, மறந்துவிட்டேன். ஒரு கனெக்டிங் ராடை இன்னும் இணைக்கவில்லை.''

''டாக்டர், ஏதாவது செய்யுங்கள். கார் ஓடிக்கொண்டு இருக்கிறது...''

''அதானே, த்ராட்டிலை மூடிவிட்டேன். வால்வை மூடிவிட்டேன். இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறதே, இது ஓடக் கூடாது.''

''டாக்டர், இறங்கிவிடலாமே. நல்ல சரிவு. வேகம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.''

''பையா, யூர் எ ஜீனியஸ். அதானே? ஏன் ஓடுகிறது என்று இப்போது தெரிந்துவிட்டது. சரிவு, அதனால்தான் ஓடுகிறது. ஏனென்றால் தண்ணீரை நான் அப்போதே நிறுத்தியாகிவிட்டது.''

என் கணுக்கால் வரை தண்ணீர் ஏறி நனைத்திருந்தது.

நாயர் கடை நோக்கி நாங்கள் விரைந்துகொண்டு இருந்தோம். அந்த முச்சந்தியில் ரோடு இடம் வலமாகப் பிரிகிறது. அந்த மெயின் ரோட்டில் பஸ்களும் லாரிகளும் உற்சாகமாகச் சென்றுகொண்டு இருந்தன. ஒரு போலீஸ்காரர் டியூட்டி ஏற்றுக்கொள்ளலாமா என்கிற உத்தேசத்தில் எதிரே நாயர் கடையில் பன் கடித்துக்கொண்டு இருக்க... எங்கள் ஊர்வலம் வருவதைப் பார்த்து கலவரப்பட்டு, அங்கிருந்தே 'ஸ்டாப்' அடையாளம் காட்டினார்.

ஸ்டாப்பாவது, அடையாளமாவது! எங்கள் காரை நிற்க வைப்பது யார்?

போலீஸ்காரர் தன் ஆணைக்குப் படியாமல் தன்னையே நோக்கி எங்கள் கார் வருவதை உணர்ந்து, பன்னைக் கீழே போட்டுவிட்டு விசில் ஊதித் தள்ளினார். நாங்கள் அந்த முச்சந்தியை அடைய கார்கள் 'கிறீச் கிறீச்' என்று பிரேக் போட்டுச் சமாளித்து நிற்க... ஏதோ ஒரு பூர்வ ஜென்ம ஞாபகம் போல் கார் அந்த நாயர் கடையை ஏகாக்கிரச் சிந்தையுடன் அடைந்து, ஒரு பாய்லரை வென்று, ஓரிரண்டு பெஞ்சுகளை உருட்டிவிட்டு, நான்கைந்து டீ குடிப்பவர்களை கையில் செருப்பை எடுத்துக்கொண்டு ஓடவைத்து, கடையின் தற்காலிகச் சுவரை உடைத்து, பின் கட்டில் ஒரு சிறிய அறையில் ஒரு பெண்ணுக்குப் பாட்டு சொல்லிக்கொண்டு இருந்தவரை வாரிச் சுருட்டிக்கொண்டு ஆர்மோனியத்துடன் ஓடவைத்து... மரத்தூண் ஒன்றின் மேல் மோதி...

அதற்கப்புறம் என் நினைவுகள் அவ்வளவு தெளிவாக இல்லை. என்னைச் சுற்றி நீர் சூழ்ந்துகொள்ள... யாரோ, ''என்ன அக்கிரமம், தண்ணி லாரியை வீட்டுக்குள்ளேயே ஓட்டறாங்களே படுபாவி'' என்று புகார் செய்வது கேட்க... என் மூக்கு, நெற்றிப் புருவம், தலை மயிர் என்று தண்ணீர் ஏற... நான் உள்ளே உள்ளே உள்ளே...

நன்றி - விகடன் 

அயோத்யா மண்டபம் - சுஜாதா


கிருஷ்ணமூர்த்தி குரலில் உற்சாகம் பொங்க போன் செய்தான், ‘‘கண்ணே கலைச்செல்வி, பாஸ்போர்ட், ஏர்டிக்கெட் எல்லாம் தயார். வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ப்ளைட்டில ஷய்க்! சிங்கப்பூர் நாரிட்டா சான்ஃப்ரான்சிஸ்கோ ஆண்டர்சன் ஏர்போர்ட்டுக்கு வந்துருவான், எல்லாம் பேக் பண்ணிட்டயோல்லியோ?’’

‘‘இன்னும் திணிச்சுகிட்டே இருக்கேன்’’ என்றாள் கலை.

‘‘நாசமாப் போச்சு, ஒரு மாசமாத் திணிச்சுண்டிருக்கே, இன்னும் முடியலையா?

‘‘ஒரு மாசமா கணவன் போத்திகிட்டு படுத்துக்கிட்டிருந்தா?’’

‘‘ரெண்டு நாள்தான் இருக்கு. மாம்பலத்துக்குப் போய்த் தலையைக் காட்டிட்டு வந்துர்றேன்’’.

‘‘நானு?’’

கிருஷ்ணமூர்த்தி தயங்கினான். ‘‘ம்.. நீ வேண்டாம். கலை இப்ப வேண்டாம். அப்பாக்கு இன்னும் சமாதானமாகல்லை.’’

அவள் குரல் உயர்ந்தது. ‘‘எப்ப சமாதானமாவார், எனக்கு அறுபது வயசாகணுமா?’’

‘‘சே சே குழந்தை பெத்துகிட்டப்புறம்.’’

‘‘நான்சென்ஸ். நான் என்ன வேற்று கிரகத்து மனுசியா?’’

‘‘பாரு, சந்தோஷ சமயத்தில் இந்த டாபிக் வேண்டாமே’’

‘‘நாம யு எஸ் போவுறது உங்கப்பாருக்குத் தெரியுமில்ல?’’

‘‘இன்னும் சொல்லலை’’

‘‘பாரு கிருஷ், சரியாகக் காதில வாங்கிக்க உங்கப்பாவைச் சந்திக்காமப் புறப்படறது எனக்குப் பிடிக்கலை. டாமிட். மாமனாரைப் போய்ப் பாத்தா என்ன? கடிச்சுருவாரா? நான் என்ன பாவம் செய்தேன்?’’

‘‘அப்படி இல்லை கலை, மைகாட் நான் இதை எப்படி ஆல்ரைட் சரி முதல்ல நான் போய்ப் பூர்வாங்க வேலைகளைக் கவனிக்கறேன். புறப்படறதுக்கு முன்னாடி பார்க்கணும்கறான்னு சொல்லிப் பார்க்கறேன். சரி கூட்டிண்டு வான்னா…’’

‘‘அந்த அளவுக்கு என்னை வெறுக்க காரணம் என்ன?’’ என்று கண்ணீரை ஒத்திக் கொண்டாள்.

‘‘உனக்குப் புரியாதும்மா, அவங்களுக்கு என்னால எவ்வளவோ மனத்தாங்கல் ஏமாத்தம்’’.

‘‘என்னை அவங்க பாத்தது கூட இல்லையே.’’

‘‘அம்மாகிட்ட போட்டோ காட்டிருக்கேன்’’.

‘‘அது போதாது’’

‘‘சரி சரி சரி கத்தாதே’’

‘‘பாரு கிருஷ், முதல்ல உனக்குத் தைரியம் வேணும். உங்கப்பாம்மாவைச் சந்திக்காம நான் அமெரிக்கா வரமாட்டேன். நாம செஞ்சுகிட்டது என்னவோ சொல்வாங்களே ‘காந்தர்வ விவாஹம் இல்லை ரிஜிஸ்ட்ரார் முன்னால நண்பர்கள், பெரியமனுசங்க சாட்சியோட …’’

‘‘ஆல்ரைட், வெள்ளிக்கிழமைக்குள்ள கூட்டிண்டு போறேன்’’.

‘‘ஏர்ப்போர்ட் போறதுக்கு முன்னே அஞ்சு நிமிஷமா.’’

‘‘ஹய்யோ கூட்டிண்டு போறேங்கறேனே’’ என்றான் அதட்டலாக. இப்ப ஒரு கிஸ் குடு, என்று அவளை அணைத்துக்கொள்ள முற்பட்டவனைத் தள்ளினாள்.

மேற்கு மாம்பலத்தில் இரண்டு பல மாடி நடுத்தரக் குடியிருப்புகளின் மத்தியில் அபத்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தது அந்த ஓட்டு வீடு, அப்பா வாசலில் தொடையில் திரித்து தகளி நூற்றுக் கொண்டிருந்தார். முன்பு பார்த்ததற்கு மெலிந்திருந்தார். முகத்தில் ஒரு வார தாடி, குடுமி.

அவனை மேலும் கீழும் பார்த்து நூற்பதைத் தொடர்ந்தார். ‘‘பார்வதி உன் பிள்ளை வந்திருக்கான். நான் கடைக்குப் போறேன்’’ என்று எழுந்தார்.

‘‘கொஞ்சம் இருப்பா உன்னோடதான் பேசணும்.’’

அவர் அவனை அடிபட்ட பார்வையுடன் பார்த்தார்.

‘‘எங்கிட்ட பேச என்ன இருக்கு. எல்லாம் சந்தி சிரிக்க பேசியாச்சே’’

‘‘நான் பேசவந்தது சந்தோஷமான விஷயம்பா.’’

‘‘உங்கிட்ட எனக்கு பேச ஏதும் இல்லை, கிச்சா. நீ எங்களுக்குத் துரோகம் பண்ணிட்ட. முதுகில குத்திட்ட. அதை முதல்ல ஒத்துக்கோ’’.

‘‘சரிப்பா சரி. நாங்க ரெண்டு பேரும் வர வெள்ளிக்கிழமை அமெரிக்கா போறோம்’’.

‘‘தாராளமா போ, லோகத்தையே ஜெயிச்சுட்டு வா.’’

‘‘போறதுக்கு முன்னால கலைச்செல்வி உங்க ரெண்டு பேரையும் சந்திக்கணும்ங்கறா’’.

‘‘கலைச் செல்விங்கறது?’’

‘‘விளையாடாதப்பா, என் அகமுடையாள் கலைச்செல்வி’’.

‘‘ உனக்கு கல்யாணம் ஆயுடுத்தா.’’

‘‘ஏம்பா இப்படி படுத்தறே. எத்தனை நாளைக்குப்பா கோபம்? நான் என்ன செய்யணும்னு விரும்பற? வீடு வீடா போய் அமாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கணும்னா.. மண்டபத்தில உக்காந்துண்டு ருத்ரம் சமகம்னு…’’ இதற்குள் அம்மா வந்து அவனைக் காப்பாற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

‘‘அவருக்கு இன்னும் கோபம் ஆறலை. ரொம்ப அவமானப்பட்டு போய்ட்டோம். அந்தப் பொண்ணு மேல எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை கிச்சு. நடராஜையருக்கு வாக்குக் கொடுத்து தவறிட்டோம். பந்தக்கால் நட்டாச்சு. கல்யாண மண்டபம் புக் பண்ணி திருமாங்கல்யம் பண்ணியாச்சு. நாயனக்காராளுக்கு சொல்லியாச்சு.’’

‘‘தெரியும்மா, தெரியும்மா ‘‘அதனால பவித்ராவுக்கு கல்யாணம் ஆகாம போச்சா சொல்லு’’.

‘‘கொத்திண்டு போயாச்சு. என்ன அழகு, என்ன படிப்பு, நமக்குத்தான் கொடுத்து வெக்கலை. என்ன காதல் கன்றாவியோ, உன் ஆம்டையா கருப்பா சேப்பான்னு கூட தெரியாது. அந்த அழகு இருப்பாளாடா?’’

‘‘போட்டோ காட்டினேனம்மா.

‘‘பாத்தேன். கொஞ்சம் பூசினா மாதிரி உனக்கு அக்கா மாதிரி இருக்கா’’.

‘‘அம்மா!’’ என்று அதட்டலாகத் தாயைப் பார்த்தான்

‘‘ரெண்டு பேருக்கும் அமெரிக்காவில் ஒரு பெரிய அசைன்மெண்ட் கிடைச்சிருக்கு. போறதுக்கு முந்தி நீதான் அப்பாவைச் சமாதானப்படுத்தி வெக்கணும் நாளைக்கு.’’

‘‘வா இப்பவே கேட்டுரலாம்’’.

திண்ணைக்குத் திரும்ப வந்தபோது அப்பா, ‘‘எங்க என் பனியன்’’ என்று கேட்டார். ‘‘இருக்கியா சாப்பிட்டுட்டுப் போ?’’

அம்மா அழுத்தமாகவே சொன்னாள். ‘‘போனாப் போறதுன்னா அவளை வரச் சொல்லலாமே. கல்யாணமோ ஆய்டுத்து, பெரியவாதான் தாழ்ந்து போக வேண்டியிருக்கு’’.

‘‘இப்ப என்ன சொல்றே? பாக்க மாட்டேன்னு சொன்னா வத்தக்கொழம்பு பண்ணமாட்டியா?’’

‘‘அந்தப் பொண்ணு உங்ககிட்ட வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கணுமாம்.’’

‘‘என்ன விசேஷம்?’’

‘‘சொன்னேனேப்பா, ரெண்டு பேரும் அமெரிக்கா போறம். குறைந்த பட்சம் ரெண்டு வருஷத்துக்கு பாக்க முடியாது.’’

‘‘அதுவரைக்கும் இருக்கமாட்டேன்னு சந்தேகமா?’’

‘‘என்ன பேச்சு இதெல்லாம்?’’

அப்பா நூற்ற நூலை சீராக பூணூல் பிரியாகப் பண்ணி, பிரம்ம முடிச்சுப் போட்டு, மஞ்சள் தொட்டு லாகவ விரல்களால் ஒரு பரத நாட்டிய முத்திரைபோலத் திருப்பி எட்டு வடிவில் சுற்றிச் சுற்றி விரல்களின் ஊடே சேகரித்தார். மௌனமாக காத்திருந்தான். அவர் நெற்றியில் யோசனை ஓடியது.

‘‘சரி! அமாவாசை வருது. நான் கடைல இருப்பேன். அங்க வந்து பாக்க சொல்லு. அந்த பொண்ணை நான் பாக்கணும், அவ்வளவுதானே?’’

‘‘பாத்து பேசணும்ப்பா. ரொம்ப நல்ல பொண்ணு’’

கிருஷ்ணமூர்த்தி பேருவகையில் உடனே கலைச் செல்விக்கு செல்லடித்தான்.

‘‘கலைக்குட்டி குட் நியூஸ். நீ உடனே அயோத்தியா மண்டபம் வரே’’.

அயோக்கியா மண்டபமா? அது எங்கருக்கு’’

‘‘அயோத்யா அயோத்யா ராமர் பிறந்த ஊர்’’

‘‘மாம்பலத்திலயா பொறந்தாரு’’.

‘‘கட் தி காமெடி! நீ என்ன பண்றே, மேற்கு மாம்பலத்தில அயோத்தியா மண்டபம்னு இருக்கு. ஆட்டோகாரன்கிட்ட கேட்டா சொல்வான். அங்க வந்துரு’’.

‘‘உங்கப்பா அந்த மண்டபத்திலயா குடியிருக்கார்?’’

‘‘இல்லைடி, அவர் கடை எதுத்தாப்பல இருக்கு.’’

‘‘என்ன கடை?’’

‘‘நீ வந்து பாரேன்’’ என்றான்.

‘‘அப்பா, இதான் கலைச் செல்வி’’.

அவர் ஒரு முறை நிமிர்ந்து அவளைப் பார்த்துவிட்டு, வேறு யாரையோ ‘‘வாங்கோ, சவுண்டிகரணம் சுபஸ்வீகாரம் ஆச்சா?’’ என்றார். கலைச்செல்வி அந்தக் ‘கடையை வினோதமாகப் பார்த்தாள். நாமக்கட்டி, விபூதிப் பொட்டலம், குங்குமம், ஓலைப்பெட்டி, தோத்திரபுத்தகங்கள், திருப்பதி பெருமாள் படம் பல சைஸ்களில், சல்லிசு மர வேலைப்பாடுள்ள பெட்டிகள், உருத்திராட்ச மாலைகள், இச்சிலி பிச்சிலி சாமான்கள். மொத்தம் அந்தக் கடையில் ஐம்பது ரூபாய்க்குத்தான் பொருள் இருக்கும் போலத் தோன்றியது.

‘‘அய்யா, நானும் உங்க மகனும் ஐ.ஐ.டி.யில ஒண்ணா படிச்சோம். ஒண்ணா ஒரே கம்பெனியில வேலை பாக்கறோம். கிருஷ் ஒரு ஜெம். ரொம்ப நல்லா வளத்திருக்கீங்க’’.

‘‘ராங் ஓப்பனிங், பார்ட்னர்’’ என்று முணுமுணுத்தான்.

‘‘ம் வளத்தது யாரு’’ என்று ஏளனமாகப் பார்த்தார்.

‘‘ரெண்டு பேருக்கும் ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்கா போற சான்ஸ் கெடைச்சிருக்கு’’.

‘‘எல்லாம் சொன்னான் தாராளமா போய்ட்டு வாங்கோ’’.

‘‘அய்யா, இது என்ன கடை?

‘‘பூணூல், தர்ப்பை சமாசாரங்கள். பிராமின்ஸுக்கு ஏகப்பட்ட கடமைகள், சம்பிரதாயங்கள் இருக்கும்மா. தாயார், தோப்பனார் சொல்றைத கேக்கணும் முதல்ல. அதெல்லாம் யார் இப்ப பாக்கறா. வில்வ இலை, தர்ப்பை பூணூல் மாத்தறது மாசியம் சோதம்பம்னு சடங்குகள் மட்டும் பாக்கியிருக்கு.’’

‘‘இதெல்லாம் சாமி சமாசாரம்ங்களா?’’

‘‘சாமி மட்டும் இல்லை பித்ருக்களை அப்பப்ப கூப்ட்டு சிரார்த்தம் பிண்டாதானம் செய்ய வெக்கறது. இது எங்க பேமிலியோட பரம்பரைத் தொழில். இது என்னோட நின்னு போகட்டும். இவனை இவம்மா திருமாங்கல்யத்தைக் கூட வித்து. படிக்க வெச்சோம்.’’

‘‘எங்கப்பா உழவு மாட்டை வித்தாருங்க’’.

‘‘ஏம்மா அம்மாப்பா வச்சபேரே அது என்னது கலைச்செல்விதானா இல்லை பணங்கட்டி மாத்திண்டதா?’’

‘‘இல்லங்க.. ஒரு பேர்தான் கலைச்செல்வி’’

‘‘உங்கம்மா பேரு’’.

‘‘தமிழ்ச்செல்வி’’.

‘‘அம்பாள் பேரா ஏதும் இல்லையா’’.

‘‘கலைச்செல்வின்னா சரஸ்வதிப்பா’’.

‘‘நீங்கள்ளாம் என்ன ஜாதி?’’

‘‘போச்சுரா!’’ என்று கிருஷ்ணமூர்த்தி ‘‘அப்பா அது வந்து, எனக்கே அது தெரியாது’’ என்று குறுக்கிட்டுப் பார்த்தான்.

‘‘இர்றா’’.

‘‘க்ருஷ், பெரியவர் கேக்கட்டும். நான் சொல்றன். அய்யா. நாங்க வந்து பிற்பட்டவங்க’’.

‘‘பிற்பட்டவங்கன்னா என்ன ஜாதி?’’

அவள் சொல்வதற்குள் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் முன் சீட்டில் இருவர், பின் சீட்டில் மூவர் என்று ஐந்து பேர் பளபளவென்று உருட்டுக்கட்டைகளுடன் இறங்கி வந்து ‘மடேர் மடேர் என்று அப்பாவின் மண்டையிலும் தோளிலும் தாக்கினர். ஒருவன் கத்தியால் விலாவில் தாக்க, கலைச் செல்வி குறுக்கிட்டாள். ‘‘த்தா சாவுங்கடா’’ என்று கடையில் இருந்த அனைத்தையும் கவிழ்த்து விட்டு பெட்ரோல் குண்டு வீசி விட்டு இன்ஜின் ஓடிக் கொண்டிருந்த ஆட்டோவில் மீண்டும் பாய்ந்து ஏறிச் சென்றனர். புரியாத வாழ்க கோஷம் காற்றில் கரைய, கலைச்செல்வியின் கரங்களில் அப்பாவின் ரத்தம் பிசுபிசுத்தது.

ட்ராவல் ஏஜெண்டிடம் சொல்லி பிரயாண ஏற்பாடுகளை தள்ளி வைத்து விட்டு டிக்கெட்டுகளை ரீ புக்கிங் செய்யச் சொல்லிவிட்டு கிருஷ்ணமூர்த்தி பி.ஆர். ஆஸ்பத்திரிக்கு வந்தான். ஒன்பதாவது அறையில் கலைச்செல்வி அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஸ்பூனில் ஆர்லிக்ஸ் புகட்டிக் கொண்டிருந்தாள். அவர் தோளிலும் தலையிலும் கட்டுப்போட்டிருந்தது. ஒரு கண் இடுங்கியிருந்தது. உதடு தடித்திருந்தது.

‘‘நல்ல வேளை தப்பிச்சிங்கப்பா’’.

‘‘எதுக்கு என்னை அடிச்சா? எதுக்கு கடையை எரிச்சா? நான் யாருக்கும் துரோகம் பண்ணலையே’’ என்றார் மெலிய குரலில்.

‘‘சில கேள்விகளுக்கு விடையே கிடையாதுப்பா’’.

‘‘நல்ல வேளை நீங்க ரெண்டுபேரும் தப்பிச்சது தெய்வாதினம்தாம்மா. அமெரிக்கா போற சமயத்தில ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகலை! அவங்களை புடிச்சட்டாளாமே’’

‘‘வேற யாரையோ ரௌடி ஷீட்டரை அரஸ்ட் பண்ணி வச்சுட்டு என்னை அடையாளம் காட்டச் சொன்னாப்பா. எல்லாம் கண்துடைப்பு!’’

நர்ஸ் வந்து, ‘‘க்ளுக்கோஸ் கொண்டு வந்ததா?’’ என்று கேட்டாள். கிருஷ்ணமூர்த்தி க்ளுகோஸ் பாட்டில்களைக் கொடுத்தான்.

‘‘டயபடிஸ், பிபி எதும் இல்லைப்பா உனக்கு. ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாப்பா‘’.

‘‘அமெரிக்கா போகலையா?’’

‘‘ஒரு வாரம் போஸ்ட்போன்பண்ணிட்டோம்பா’’ என்றாள் கலை. அவர் தலையைத் தடவிக் கொடுத்து உதட்டில் எச்சிலைத் துடைத்துவிட்டாள். ‘‘எவ்வளவு தலைமயிர்ப்பா உங்களுக்கு! கிருஷ், சீப்பு கொண்டு வரச்சொன்னனே?’’

‘‘கலை! அவன் போகட்டும். நீ இரேம்மா. எங்க கூட இரேன்.’’

கலைச் செல்வி கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தாள். அவன் சிரித்து, ‘‘இல்லைப்பா இவதான் சிஸ்டம் ப்ரொக்ராமர். நான் ஆர்கிடெக்ட். ரெண்டு பேரும் போகணும்.’’

‘‘சரி நல்லபடியா போய்ட்டு வாங்கோ. அது என்ன எடம்?’’

‘‘ஸான் ஹோஸே, சாக்ரமெண்ட்டோன்னு ரெண்டு எடத்தில், கலிஃபோர்னியாலப்பா’’.

‘‘அங்க அம்மாவாசை தர்ப்பணம் பண்ணி வெக்கறவா யாராவது நம்மவா இருக்காளா? விஜாரி, தர்ப்பையைத் தூக்கிண்டு வந்துர்றேன். என்னால இனிமே அடி தாங்கமுடியாது’’ என்றார்.

கலைச்செல்வியின் கண்ணீர் அவர் மணிக்கட்டில் உருண்டது.

நன்றி - சிறுகதைகள்.காம்