24/08/2011

பாரதியார் கவிதைகளில் நாட்டுப்புறப் பாடல் தாக்கம் - ஜெ.பிருந்தாஸ்ரீ

எழுதா இலக்கியங்களாய்த் திகழ்வன நாட்டுப்புற இலக்கியங்களாகும். அவற்றுள் மக்களின் இயற்கையோடியைந்த வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்திருக்கும் ஒன்று நாட்டுப்புற பாடலாகும். பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புற பாடலின் பொருள்களாகின்றன. நாட்டுப்புறப்பாடலில் ஓசை நயம் இருக்கும். உணர்ச்சி இருக்கும், சொல், தொடை அழகிருக்கும், உவமைகள் இனித்திருக்கும். கேட்போரின் உள்ளத்தைப் பிணிக்கும் இத்தகைய நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கம் சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை விரவிக்காணப்படுகிறது அவற்றில் குறிப்பாக பாரதியாரின் கவிதைகளில் இத்தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என விளக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சிறுதெய்வ வழிபாட்டுப் பாடல்:-

நாட்டுப்புறப் பாடல்களில் பல பக்திப்பாடல்களாக உள்ளன. இயற்கையையும், சிறுதெய்வ, பெருந்தெய்வங்களையும் வழிபடும் பாடல்களாக அவை உள்ள ஆரு கடன் நின்றாலும் மாரி கடன் ஆகாது என்ற நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் மாரியம்மனைப் பற்றிப் பாடும் போது,

ஆதி பரஞ்சோதி ஆழகான ராக்காயி

கண்ணனூறு பேட்டையிலே கண்வளரும் தாயரு

ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆகாது

மாரிகடன் தீர்த்தவர்க்க மனக்கவலை தீருமம்மா

என்று பாடுகின்றனர்.

இதைப் போன்றே பாரதியாரும் மாரியம்மன் குறித்துப் பின்வருமாறு பாடுகிறார்.

உலகத்து நாயகியே எங்கள் முத்து

மாரியம்மா எங்கள் முத்து மாரீ

உன்பாதம் சரண்புகுந்தோம் எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்து மாரீ

இப்பாடலில் நாட்டுப்புறப் பாடல்களில் சொற்றொடர்கள் திரும்பத்திரும்ப வருவது போன்ற அமைப்பில் வரிகளை அமைத்துள்ளமை எண்ணத்தக்கது. எளிய சொற்களைக் கொண்டு பாமரர்களும் உணரும் வண்ணம் இப்பாடலைப் படைத்தளித்துள்ளார் பாரதியார்.

கும்மிப்பாட்டு:-

நாட்டுப்புறப் பாடல்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகைப்பாடலாகக் கும்மிப்பாடல் விளங்குகிறது. சிறுமியரும் இளம்பெண்களும் வட்டமாகக் கூடி நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம் பாடியவாறு கைகளைக் கொட்டி ஆடுவதே கும்மிப்பாட்டாகும். குனிந்து கைதட்டிப் பாடுவதால் கும்மிப்பாட்டு ஆயிற்று. கன்னிப் பொங்கலன்று சிறுமியர் வீடுவீடாகச் சென்று கும்மியடித்து அரிசியினைப் பெற்றுவந்து பொங்கலிட்டு மகிழ்வர்.

இவ்வாறு பல்வேறு மகிழ்ச்சியான சூழல்களில் பாடப்படும் இப்பாடலை பாரதியார் பெண் விடுதலை கூறப் பயன்படுத்தியுள்ளமை எண்ணி இன்புறத்தக்கது.

கும்மியடித் தமிழ்நாடு முழுதுங்

குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி

நம்மைப் பிடித்து பிசாசுகள் போயின

நன்மை கண்டோ மென்று கும்மியடி

எனத் தொடங்கும் பாடலில் பெண்ணடிமையை எதிர்த்தல் கற்புநிலை பேசுதல், பெண்ணறிவின் சிறப்பு, இல்லறம் பேணும் முறை போன்ற பெண்மையின் பன்முக ஆற்றலையும் ஒருங்கே சித்தரிக்கும் வண்ணம் படைத்து அளித்துள்ளார். பெண்களால் மகிழ்ந்தாடப்படும் கும்மியின் மூலமாகப் பெண்கள் தாங்கள் விடுதலை அடைந்ததைக் கூறும் வண்ணம் பாரதியார் இப்பாடலை அமைத்துள்ளார்.

வண்டிக்காரன் பாட்டு:-

வண்டியோட்டிச் செல்கின்ற ஒருவன் பாடுவது வண்டிக்காரன் பாட்டு எனப்படும் இவ்வகையில்

வட்ட வட்டப் பாறையிலே - குட்டி

வரகரசி தீட்டையிலே

ஆர் கொடுத்த காயச்சீலை - கட்டி

ஆலவட்டம் போடுதடி...

என்ற பாடல் அமைகிறது. மேற்கண்ட பாடலின் எஞ்சிய பகுதி கேள்விக்கு பதிலுரைப்பது போல் அமைந்துள்ளது. அவ்வரிகளாவன

வான்பாடு பட்டுத்தான் - மச்சான்

வாங்கினேன் சாயச்சீலை

என்பதாகும்.

இவ்வாறே உரையாடல் அமைப்பில் உள்ள பாரதியாரின் வண்டிக்காரண் பாட்டு காதலன் காதலி உரையாடுவது போல் அல்லாமல் அண்ணன் தம்பி உரையாடுவதாக அமைந்துள்ளது.

காட்டு வழிதனிலே அண்ணே

கள்ளர் பயமிருந்தால் எங்கள்

வீட்டுக் குலதெய்வம் தம்பி

வீரம்மைக் காக்குமடா

நிறுத்து வண்டி யென்றே - கள்ளர்

நெருக்கிக் கேட்கையிலே எங்கள்

கறுத்த மாரியின் பேர் சொன்னால்

காலனும் அஞ்சுமடா

என்னும் அப்பாட்டு, நாட்டுப்புற மக்களின் வழிபடு தெய்வங்களை முதன்மைப்படுத்தி உரைக்கும்.

புதிய கோணங்கி பாட்டு:-

குடுகுடுப்பைக்காரன் தன் கருவியை ஒலியெழச் செய்து மக்களுக்கு குறிசொல்வான். குறத்தியரும் குறி சொல்வதுண்டு. குறிசொல்வேர் குறிசொல்வதற்கு முன்னால் பல தெய்வங்களை அழைத்துப் பாடுவர் பின்னர் சொல்கின்ற குறிகளையும் பாடல் வடிவிலேயே சொல்லுவர். குடுகுடுப்பைக்காரன் குறிசொல்வது போன்ற அமைப்பில்

யந்திரம் பெருகுது தந்திரம் வளருது

மந்திர மெல்லாம் வளருது வளருது

குடுகுடு குடுகு குடுகுடு குடுகுடு

சொல்லடீ சொல்லடீ மலையாள பகவதீ

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடுகுடு குடுகுடு

என்ற பாடல் அமைகின்றது. இப்பாடலில் பாரதியார் தன்னைப் புதிய கோணங்கியாக பாவித்து பாரத நாட்டின் நல்ல காலத்தை நயத்துடன் கூறுதல் கருதத்தக்கது.

பள்ளு:-

பள்ளுப்பாட்டு என்பதும் நாட்டுப்புற கொண்டாட்டப் பாடல்களில் ஒன்றாகும். பள்ளு என்ற தனி இலக்கிய வகையே ஒன்று உண்டு. பள்ளர்களின் வாழ்க்கை முறையைச் சித்திரிக்கும் முக்கூடற்பள்ளு என்ற நூல் நாட்டுப்புறக் கூறுகளை தன்னுள் கொண்டமைந்துள்ளது. பாரதியார் அமைத்துள்ள பள்ளுப்பாடல் பள்ளர்களின் களியாட்டத்தைக் குறிக்கிறது.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

என்று தொடங்கும் பாடலில்

எங்கும் சுதந்தரம் என்பதே பேச்சு - நாம்

எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு

என்று சமத்துவ சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார் பாரதியார்.

மறவன் பாட்டு:-

பள்ளர்கள் இசைக்கும் பள்ளுப் பாட்டைப் போலவே மறவர்கள் பாட்டிசைக்கும் வண்ணம் மறவன் பாட்டைப் படைத்துள்ளார் பாரதியார். மறவன் பாட்டில்

மண்வெட்டிக் கூலிதின வாசசே எங்கள்

வாள்வலியும் வேலிவலியும் போச்சே

விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே இந்த

மேதினியில் கெட்டபெய ராச்சே

என்று மறவன் முறையிடும் வண்ணம் பாரதியார் அமைத்துள்ளார்.

பண்டாரப்பாட்டு:-

ஆண்டிப்பண்டாரம் பாடுவது போன்று ஓர் பாடலை அமைத்துள்ளார் பாரதியார். இப்பாடலும் நாட்டுப்புறப் பாடல் கூறுகளைக் கொண்டுள்ளது. அப்பாடலுக்குப் பண்டாரப்பாட்டு என்றே தலைப்பிடுகிறார் பாரதியார். அப்பாடலானது,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்ற நாட்டுப்புறப்பாடலின் வாய்பாட்டு அமைப்பைக் கொண்டு விளங்குகின்றது.

உவமையைக் கையாளுதல்

நாட்டுப்புற பாடல் வகைகளில் மிகச்சிறந்தது என பலராலும் பாராட்டப் பெறுவது ஏற்றப்பாட்டாகும். ஏற்றப்பாட்டிற்கு எதிர்ப்பாட்டில்லை என்ற பழமொழியே இதற்கு சான்றாகும். அந்த ஏற்றப்பாட்டின் சிறப்பான தொடர்கள் கம்பரையே வியப்படையச் செய்தது என்பர் ஏற்றப்பாட்டிலுள்ள,

மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே

என்னும் இத்தொடர்கள் உவமையாகப் பாரதியின் எண்ணிய முடிதல் வேண்டும் என்று தொடங்கும் மஹாசக்தி விண்ணப்பத்தில் கையாளப்பட்டுள்ளது. இதனை,

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனியே போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்

என்ற வரிகளால் உணரலாம்.

மேற்கண்ட சான்றுகள் மட்டுமின்றி காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, கிளிக்கண்ணி, அம்மாக்கண்ணுப் பாடல் போன்ற பலவகையான பாடல்களிலும் நாட்டுப்புறப் பாடல்களின் சாயல்நிறைந்து காணப்படுகிறது. பாரதியார் நாட்டுப்புற வகைகளைத் தன் கருத்து விளக்கத்திற்கரிய வடிவங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் நாட்டுப்புற தெய்வ வழிபாடு மொழிநடை, உவவை ஆகியவற்றையும் உணரமுடிகிறது. பாரதியார் பாடல்களின் வெற்றிக்குக் காரணமான பல கூறுகளில், நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கமும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: