24/08/2011

நாட்டுப்புற விளையாட்டுகளில் தாய்ச்சி - மூ.பாலசுப்பிரமணியன்

நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகளில் விளையாட்டுக்குத் தனி இடமுண்டு. நாகரிக மாற்றத்தால் பண்பாட்டுக் கூறுகள் சில வேளைகளில் நெகிழ்வு பெறுகின்றன. ஆனாலும் பண்பாட்டு எச்சங்கள், அவற்றின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் உணர்த்த மறப்பதில்லை. அந்த வகையில் நாட்டுப்புற விளையாட்டுகள் இன்று மங்கி மறைந்து வருகின்ற ஒன்றாகிவிட்டன. தாக்குப் பிடித்து இன்று வரை இருக்கும் ஒரு சில விளையாட்டுகள், சிதைந்து வரும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் மனிதத்தையும் நினைவூட்டுகின்றன. நாட்டுப்புற விளையாட்டுகள் ஒரு புறம் முற்றிலும் மறையத் தொடங்கிவிட்டன. மறுபுறம் உருமாற்றம் பெறுகின்றன அல்லது இறக்குமதி செய்யப்படுகின்றன.

நாட்டுப்புற விளையாட்டுகள்:-

நாட்டுப்புற மக்களின் கலைகளையும் நம்பிக்கைகளையும் வாய் மொழி இலக்கியங்களையும் புராணங்களையும் பழக்க வழக்கங்களையும் முறைப்படி ஆய்வது ''நாட்டுப்புற இயல்'' என்பர். நாட்டுப்புறக் கலைகளில் விளையாட்டுகளும் அடங்கும். ''விளையாட்டு'' என்பது வாழ்க்கைக்குப் பயிற்சியளிக்கும் களம் என்பார் இரா. பாலசுப்பிரமணியம். விளையாட்டில் பொழுது போக்குதல் என்பது பொது கருத்து ஆனால் அதில் உடல் நலமும் மனநலமும் அடங்கியிருக்கின்றன. ''உயிரினங்கள் வாழ்க்கையில் ஆவலாகச் செய்ய வேண்டிய வேலைகளுக்காகத் தங்களைத் தயார் செய்து கொள்வது விளையாட்டு மூலமாகும்'' என்பார் தாம்சன். எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாகவே குழந்தையிடமுள்ள மனவெழுச்சி, அதன் உடல் வளர்ச்சிக்கும் விளையாட்டு இன்றியமையாததாகிறது. ஒரு மொழி எவ்வளவு தொன்மை வாய்ந்ததோ அதே போன்று அந்தந்த நாட்டின் விளையாட்டுகளும் தொன்மை வாய்ந்தன. தொன்மை வாய்ந்த விளையாட்டுகள் பல ஆய்வுக்குரியன. அந்த வகையில் விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் தாய்ச்சி என்ற சொல்லும் ஆய்வுக்குரியதே.

தாய்ச்சி - சொல் விளக்கம்:-

''தாய்ச்சி'' என்னும் சொல் நாட்டுப்புற விளையாட்டுகளில் பயன்படுத்தும் கலைச் சொல்லாகும். தாய்ச்சி என்பது தாய்ப்பால் கொடுப்பவர் (Wet nurse); இந்த வழக்குக்குத் தாய்ச்சி இவர் தான் (Origin, moving, spirit) கர்ப்பிணி (pregnant Woman); விளையாட்டில் தலைமையாள் (Leader of a party in a game); விளையாட்டில் தொட வேண்டிய இடம் (Appointed place to be touched in a game) என தமிழ் லெக்சிகன் விளக்கம் தருகிறது. தாய்ச்சித்தம்பலம் என்று தமிழ் அகராதி விளக்கம் கூறுகிறது. தமிழ் மொழியகரதி, தாய்ச்சி என்பதற்குக் கர்ப்பிணி தாய், முந்நீடுகாரன், தாய்ச் சிற்றம்பலம், ஒரு விளையாட்டு என விளக்கம் தரும். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ''பிள்ளைத் தாய்ச்சி'' என கூறுகிறது. பொதுவாக நாட்டுப்புற விளையாட்டுகளில் தலைமையேற்று நடத்தும் நபரையோ அல்லது உயிரற்றப் பொருட்களையோ ''தாய்ச்சி'' என்று அழைப்பர். தாய், விளையாட்டை வழி நடத்துபவர், உயிரற்ற பொருள் ஆகிய மூன்று இடங்களில் தாய்ச்சி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இன்று தாய்ச்சி என்ற சொல்கூட வழக்கில் இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாகப் பல சொற்கள் கையாளப்படுகின்றன. அலலைஸ் (Allalice), ஐ ஸ்பை (Eyespy), டெண்டோ (Dendo) மலை, கள்ளம், கிட்டக்கல் போன்றவை இன்று தாய்ச்சி என்ற சொல்லுக்குப் பதிலிகள், வெளிநாட்டு விளையாட்டுக்களோடு தொடர்புப்படுத்தி நாட்டுப்புற விளையாட்டுகள் விளையாடப்படுவதால் இவ்வாறு கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதும் மாற்றப்படுவதும் இயல்பாகி விட்டது.

விளையாட்டுகளில் தாய்ச்சியின் பணிகள்:-

நாட்டுப்புற விளையாட்டுகளில் தாய்ச்சி என்பது, தலைமையேற்று விளையாட்டை வழி நடத்துபவரையும் உயிரற்றப் பொருட்களையும் குறிக்கும். விளையாட்டுகளில் தாய்ச்சியாயிருக்கும் நபர் பங்குபெறும் குழந்தைகளின் ஒத்த வயதினராக இருப்பதில்லை பெரும்பாலும் மூத்தவயதினராக இருப்பர். சில விளையாட்டுகளில் ஒத்த வயதினராகவும் இருப்பதுண்டு. குழு விளையாடல்களிலும் அணி பிரிந்து விளையாடும் விளையாடல்களிலும் தாய்ச்சி பங்கு பெறுகிறார். சில விளையாட்டுகளில் ''தாய்ச்சி'' உயிரற்றப் பொருட்களாக இருக்கும். விளையாட்டுகளின் விதிகளை நன்கு தெரிந்தவராகவும் விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுப்பவராகவும் தாய்ச்சி இருக்கிறார். சில விளையாடல்களில் தாய்ச்சி பங்குபெற மாட்டார். அந்த வகையான விளையாட்டுகளில் தாய்ச்சியின் பணி வழி நடத்துவதும், பேதங்கள் வருமிடங்களில் தீர்ப்பதுமாகும்.

பட்டவரைத் தேர்ந்தெடுத்தல்:-

பொதுவாக விளையாட்டின் தொடக்கத்தில் பட்டவரைத் தேர்ந்தெடுக்கும் பணியைச் செய்பவர் தாய்ச்சியாவார். இந்த வகையான தாய்ச்சி ஒத்த வயதினராகவும் விளையாட்டில் பங்கு பெறுபவராகவும் இருப்பார். தொட்டு விளையாடல் போன்ற விளையாடல்களில் பட்டவரைத் தேர்ந்தெடுப்பதற்குச் சில விதிமுறைகளின்படி பட்டவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

காயா?பழமா?

தாய்ச்சி ஒரு சிறு கல்லினைக் கையில் வைத்துக் கொண்டு மற்றைய சிறுவரிடம் கையினை நீட்டுவார். நீட்டிய இரு கைகளில் கல்லுள்ள கையினைப் பிடித்தவரை ''பழம்'' என்றும், கல்லில்லாத கையினைப் பிடித்தவரைக் ''காய்'' என்றும் செல்வதுண்டு. இதன் மூலம் பட்டவரைத் தாய்ச்சி தேர்ந்தெடுப்பார்.

பாடல் முறை:-

பட்டவரைத் தேர்ந்தெடுக்க பாடல் முறையும் பயன்படுத்தப்படுகிறது. தாய்ச்சி, பாடலைச் சொல்லி ஒவ்வொரு குழந்தையினையும் தொட்டு வருவார். பாடலின் இறுதிச் சொல் யார் மேல் முடிகிறதோ அவர் ''பழம்'' இப்படியே எல்லோரும் பழமாக இறுதியில் ஒருவர் பட்டவராகிறார்.

''ஒருப்பத்தி - இருப்பத்தி

ஓரிய - மங்கலம்

ஒப்பு - சிறுக்குவலி

உங்கையா - பேர்ரன்ன

முருக்கந்தண்டு தின்னவரே

முள்ளிச்சோறு குடிச்சவரே

தார் தார் - வாழைக்காய்

புதுப்புது மண்டபம்

பூமாதேவி கையெடு''

தற்பொழுது அந்தவகை பாடல்கள் மறைந்து எண்கள் எண்ணப்பட்டுப் பட்டவரைத் தெரிவு செய்கிறார்கள். இதையும் தாய்ச்சியே செய்கிறார்.

கட்சி பிரிதல்:-

அணி விளையாட்டாக இருந்தால் கட்சி பிரித்தாடும் இயல்பு காணப்படுகிறது. இதற்கு உத்தி பிடிக்கும் முறை என்பர். தாய்ச்சி எனப்படும் தலைமையேற்பவர் இருவர் இருக்கின்றனர். இங்கு தலைவராக இருப்பவர் உத்திதார் எனப்படுகிறார். இவர்கள் இருவர் தவிர மற்றவரெல்லாம் இரண்டு இரண்டு பேராகச் சேர்ந்து கொண்டு மறைவான இடத்திற்குச் சென்று தங்களுக்குள் ஒரு பெயர் வைத்துக் கொண்டு வருவர். உத்திதாரிடம் சென்று, ''உத்தி உத்தி யாரு உத்தி'' என்பர். முறை வைத்து உத்திதார் அடுத்தடுத்து தங்கள் அணிக்கு நபர்களைத் தேர்ந்தெடுப்பர். உத்திதார் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார். இங்கு தாய்ச்சி இருவரும் உத்திதார் எனப்படுகிறார். மெல்லவந்து மெல்லப்போ, கிளித்தட்டுப் போன்ற விளையாட்டுகளில் இந்த முறை பின்பற்றப்பெறுகிறது.

தோல்விக்குத் தண்டணை:-

அனைவரும் விளையாடும் விளையாட்டுகளிலும், அணி விளையாட்டுகளிலும் தோல்வி பெறும் நபர்களுக்குத் தண்டணைக்குக் குறித்துக் கூறுவதும் நடைமுறைப் படுத்துவதும் தாய்ச்சியின் பணி. சில நேரங்களில் தண்டணைக்குத் தளர்வும் உண்டு. அது தாய்ச்சி பொறுத்து அமையும். சில விளையாட்டுகளில் விதிமுறை, தண்டணையை வகுத்திருந்தாலும் தாய்ச்சி சொன்னால் தண்டணைத் தளர்வு உண்டு. இதனை விளையாட்டும் சக நபர்களைப் பொறுத்துத் தளர்வு அமையலாம்.

தாய்ச்சி இடம் பெறும் விளையாட்டுகள்:-

தமிழர் நாட்டு விளையாட்டுகள் என்ற நூலில் இரா. பாலசுப்பிரமணியம் நாட்டுப்புற விளையாட்டுகள் சுமார் 126 வகையிருப்பதாக தெரிவிக்கிறார். அதன் அடிப்படையிலும் கள ஆய்வின் அடிப்படையிலும் கண்ணாமூச்சி, மெல்லவந்து மெல்லப்போ, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, கிளித்தட்டு, ராஜாமந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, கட்டலங்கா புட்டலங்கா, ஐயன் கொம்பு, சீப்பு விக்கிது, தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகளில் தாய்ச்சி இடம் பெறுகிறார்.

இவற்றில் கண்ணாமூச்சி, உருண்டை திரண்டை, அந்தக் கழுதை இந்தக் கழுதை, கல்லுக் கொடுத்தான் கல்லே வா, ராஜா மந்திரி, பருப்புக் கடைந்து, அத்தளி புத்தளி, கில்லாப் பறண்டி, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, சீப்பு விக்கிது. தொட்டுப் பிடிச்சு, ஐஸ் பால் போன்ற விளையாட்டுகள் ஒரே குழுவாக விளையாடும் விளையாட்டுகளாகும். இந்த விளையாட்டுகளில் ஒரு தாய்ச்சி இருந்து வழி நடத்துவார்.

மெல்லவந்து மெல்லப்போ, பூச்சொல்லி போன்ற விளையாட்டுகளில் இரு உத்திதார் இருக்கிறார்கள். இவை அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகள். சில இடங்களில் உத்திதாய்ச்சி என்று அழைக்கப்படுகிறார்.

குழுவாக விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்றான கண்ணாமூச்சி விளையாட்டில் தாய்ச்சியானவர் பட்டவரை ஏதேனும் ஒருமுறையில் தெரிவு செய்கிறார். பின்னர், பட்டவர் கண்ணினை, தாய்ச்சியாக இருப்பவர் மூடிக்கொள்ள, மற்ற குழந்தைகள், ஓடி ஒளிந்து கொள்வர். மற்றவர்கள் ஓடி ஒளிந்து கொள்ளும் நேரத்தில் தாய்ச்சிக்கும் பட்டவருக்கு இடையில் கீழ்க்கண்டவாறு உரையாடல் நிகழும்.

தாய்ச்சி : கண்ணா மூச்சி ரேரே

பட்டவர்: உம்...ம்..ம்..

தாய்ச்சி: எத்தனை முட்டையிட்டே?

பட்டவர்: மூணு முட்டையிட்டேன்

தாய்ச்சி: ஒரு முட்டையைத் தின்னுப்புட்டு

ஒரு முட்டையைத் தண்ணியிலே போட்டுப்புட்டு

ஒரு முட்டையைக் கொண்டு வா.

பாடல் முடிந்தவுடன் பட்டவரின் கண்ணைத் தாய்ச்சி விடுகிறார் பட்டவர், ஒளிந்திருக்கும் மற்ற குழந்தைகளைத் தேடுவார். பட்டவரிடம் அகப்படுவர் பட்டவராகிறார். மீண்டும் விளையாட்டுத் தொடரும். பட்டவர் தேடும்பொழுது பட்டவரிடம் அகப்படாமல் குழந்தைகள் தாய்ச்சியைத் தொட்டுவிட்டால் அவர்கள் பழமாவார்கள். அதுபோல் அணி பிரிந்து விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றான மெல்ல வந்து கொட்டிப் போ என்ற ஆட்டத்தில் இரு தலைவர்கள் இருப்பர். அவர்கள் உத்திதார் அல்லது உத்தித்தாய்ச்சி எனப்படுகிறார். அணிக்கு ஆட்களைத் தெரிவு செய்தல், பின் விளையாட்டை நடத்தல் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். இரு அணியினரும் குறிப்பிட்டத் தூரத்தில் எதிரெதிர் வரிசையாக அமர்வார். இங்கு, பங்கு பெறும் குழந்தைகளுக்கு மாற்றுப் பெயர் அதாவது பூக்களின் பெயர் வைக்கப்படுகிறது.

''ரோஜாப்பூவே ரோஜாப் பூவே

மெல்ல வந்து தொட்டு போ''

என பல முறை ராகம் பாடி கூறுவர். குறிப்பிடும் நபர் மெல்ல தலையில் கொட்டிவிட்டு போவர். சென்ற பின், தாய்ச்சி.

''எல்லோரும் தலை வெட்டி நாயிக்குப் போடுங்க...''

என்று தன் அணியினரைப் பார்த்துக் கூறிவிட்டு பொத்தியிருக்கும் கண்களை விடுவார். அந்த நபர் யார் கொட்டியது என்று சரியாகச் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால் வெற்றி, சொன்ன அணிக்கும், சொல்லாவிட்டால் எதிரணிக்கும் செல்லும், அதற்கு சில நடைமுறைகள் கையாளப்படுகின்றன. இவ்விளையாட்டுப் பண்டைக்கால போர் முறையில் அமையும் விளையாட்டாக இருக்கக் காணலாம்.

விளையாட்டை இடையில் நிறுத்தல்:-

நாட்டுப்புற விளையாட்டுகளில் பங்குபெறும் நபர்களில் யாரேனும் தவிர்க்க வியலாத காரணத்தால் கலந்து கொள்ள இயலாத நிலை வரும்போது ''இடையில் நிறுத்தல்'' என்ற செய்கை நடைபெறுகிறது. ஆடை ஆவில்வது, கூந்தல் கலைவது, உடலில் அடிபடல் போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். அச்சமயம் ''தூ'' என்பதை மற்ற நபர்களிடம் தூவாச்சி என்பதை தாய்ச்சியிடம் தெரிவிக்கின்றனர். இந்த முறையில் தாய்ச்சி பங்கும் தலைமையும் இங்கே உணர்த்தப்படுகின்றன.

''ஒரு குடம் தண்ணியெடுத்து'' என்ற விளையாட்டு தெலுங்கர்களுக்கும் துலூக்கர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுச் செய்தியைப் பிரதிபலிப்பது பேல் ''பூப்பூப் புளியப்பூ'' மலையிலே தீப்பிடிக்குது போன்ற விளையாட்டுகள் பின்புல செய்திகள் உடையவை. அந்த வகையில் தாய்ச்சி என்ற கலைச்சொல்லும் மனித உறவுடன் தொடர்புடையதே. நாட்டுப்புற விளையாட்டுகளையும் சொற்களையும், ஆராய்ந்தால் வரலாற்றினை மீட்டுருவாக்கலாம் என்பது தெளிவு.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: