நகுலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகுலன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அசோகமித்திரனின் 'நம்பிக்கை ' என்ற கதை - நகுலன்


இலக்கியத்தைப் பற்றி என் அணுகல்முறை பற்றி ஓரிரு தகவல்கள். நான் வேறு இடங்களில் சொல்லியிருப்பது போல எந்த கலைப்படைப்பிற்கும் விளைநிலம் அனுபவமே. அதன் தளங்களும் நுணுக்கங்களும் ஆழங்களும் விரிந்துகொண்டே செல்பவை. இதை அறிய ஒரு சிருஷ்டிபரமான உள்ளத்தை நாடுகிறோம். இதனால்தான் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்ற ஒரு பார்வை ஏற்பட்டிருக்க வேண்டும். பல கலைஞர்கள். பல பார்வைகள்.

சிறுகதை என்ற வடிவத்தைப் பற்றி நான் அறிந்த வரை அதில் ஆரம்பமும் முடிவும் சிறப்பாக அமைந்திருக்கவேண்டும். ஒரு மையம் இருக்கவேண்டும். மிகவும் இறுக்கமான ஒரு கட்டுக்கோப்பு உடையதாக இருக்கவேண்டும். அதனால்தான் அதில் 'ஒரு சிறு ' என்பது 'ஒரு பெரு ' என்று அர்த்தப்படுகிறது. இங்கு கூறப்பட்ட எல்லா விதிகளையும் தாங்காமலேயே ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்கலாம்; எழுதப்பட்டிருக்கிறது. ஒரு சிறுகதையில் நடை முக்கியம். அதுவும் கட்டுக்க்கோப்பின் ஒரு அம்சமாக இருக்கிறது.

அசோகமித்திரனின் 'நம்பிக்கை ' என்ற சிறுகதையைப் பார்ப்போம்(வாழ்விலே ஒரு முறை தொகுப்பு). இரு பாத்திரங்கள். ஒரு தையல்காரனும் அவனிடம் ஒரு சட்டையை தைக்கக் கொடுக்கவருபவரும் (இவர்தான் கதையைச் சொல்கிறார்).பிறகு அவர் மகன். (இவன் இருப்பவன். இறந்து போனவன் இவனுக்கு மூத்தவன்) ஒரு சைதன்ய பிரபு என்று கூறப்படும் சித்த புருஷர் படமாக தொங்குகிறார். கதையில் குறிப்பிடப்படும் சம்பவமும் முக்கியமானது. அதைச் சொல்பவர் அந்த தையல்காரர். அவருக்கு சித்தபுருஷர் மீது அவ்வளவு சிறந்த அபிப்பிராயம் இல்லை என்று குறிப்பிடுகிறார். ஏன் சில ஆண்டுகளுக்கு முன் அவர் மகன் கடும் நோயினால் சாகக்கிடக்கும் தருணத்தில் அவன் பிழைப்பானா என்று அவரைக் கேட்கப்போனபோது அந்த சித்த புருஷர் ஒன்றும் சொல்லாமல் அவருக்கு ஒரு லட்சுமி விக்கிரகத்தை கொடுக்கிறார். பையன் சாகிறான். அந்த தையல்காரர் பிறகு ஒரு மந்திரவாதியிடம் செல்கிறார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. ஆனாலும் அவர் அந்த சித்தபுருஷர் படத்தை வழிபடுகிறார். ஏன் ? இந்தச் சிறுகதையின் கதைத்தளம் இப்படிச் செல்கிறது.

இந்தக் கதையில் சில உத்திகள் கையாளப்படுகின்றன. நடை மிகவும் எளியது. அதே சமயம் மிக நுட்பமானதும் கூடு. முதலில் கதை ஆசிரியரால் சொல்லப்படவில்லை. அந்த தையல்காரர் பேச்சில்தான் நிகழ்கிறது. இங்கு மூன்று அல்லது நான்கு பாத்திரங்கள். அந்தச் சித்தபுருஷர் தரும் லட்சுமி விக்கிரகம். அது ஒரு உள் வியாபகமான படிமமா ? இல்லை ஒரு தகவல் மட்டும் தானா ? தையல்காரர் வாழ்க்கையில் வெற்றிக்குக் காரணம் அவருடைய நாணயமும் தொழில்திறனும்தான், எனவே அவர் தன் மகன் மரணப்படுக்கையில் இருக்கும்போது நான்கு பெக் மது அருந்தி ஸ்கூட்டரில் வெகு வேகமாக ஒரு வித விபத்துமின்றி போகிறார். இந்த நம்பிக்கை பிராந்தியின் விளைவா தற்செயலா அல்லது அந்த சைதன்ய பிரபுவின் அருளா ? அந்தக் கதை சொல்லி அந்தப் படத்தை ஐந்து முறை பார்க்கிறார் ஏன் ? நம்பிக்கையா நம்பிக்கையின்மையா ? 'நம்பிக்கை ' என்பது தலைப்பு. நம்பிக்கை! யார்மீது ? இதற்கு துல்லியமான விடை என்ன ?

ஐராவதம், மா அரங்கநாதன் கதை பற்றிக் கூறும்போது அதில் ஒரு புதிர்த்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார். இக்கதையிலும் அதே போல ஒரு புதிர் உள்ளது. நம்பிக்கையின் விளைநிலம் என்ன ? மனிதன், கடவுள் அல்லது ? இந்த மாதிரி சொல்லாமலேயே சொல்வதில்தான் ஒரு சிறுகதையின் கலை ஒருமை உள்ளது. வாழ்க்கை என்ற புதிரை கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் மனவார்ப்புக்கு ஏற்பப் பார்க்கையில் கதையின் தளம் வெவ்வேறு திசையில் நகர்கிறது. இவ்வாறு நமது மரபு சார்ந்த அணுகல்களைக் கலைத்து ஒவ்வொரு வாசகனும் தன் இயல்புக்கேற்ப வாசிக்கும்படி கதை செல்கிறது. அவருடைய இத்தன்மை மூலமே அசோகமித்திரன் சிறந்த கலைஞராக நமக்கு பிடிபடுகிறார். ஒரு சில தகவல்கள் உதாரணமாக. மனம் அதிக அளவு அவதிப்படும்போது உறக்கம் வருகிறது என்ற ஒரு கட்டம். கா. நா. சு. வின் ஒரு கதையிலும் இதற்கிணையான ஒரு கட்டம் உண்டு.

எந்த ஒரு கதை தன் தளங்களைத் தாங்கி அதையும் மீறிச் செல்கிறதோ அப்போதுதான் அது கலையாக மாறுகிறது. இக்கதை எனக்கு 'செகாவ் ' எழுதிய 'தி டார்லிங் ' என்ற கதை ஞாபகம் வருகிறது. இன்றைய மொழியியல் விமரிசன ரீதிகள் கலையை ஒரு பெயர்ச்சொல்லாக பார்க்காமல் வினைச்சொல்லாகவே பார்க்கின்றன. இந்த அம்சத்தையும் இக்கதையின் வாசிப்பைப்பற்றி பேசும்போது குறிப்பிடலாம்.

கனவு இதழ் 21 1993

***

நன்றி - திண்ணை

தில்லைவெளி – நகுலன்

அவன் அதே தெருவில்தான் இருந்தான். அவரும். அவன் பென்ஷன் பெற்ற பிறகு தனது 60 ஆவது வயதில் தொடங்கி (இப்பொழுது அவன் 68 ஆவது வயதிலும்) தான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு ட்யூட்டோரியல் காலேஜில் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். 9 .30  ல் இருந்து 12 .30  வரை வேலை. பிறகு காலம் அவன் கையில். அது ஒரு சௌகரியமான ஏற்பாடாகவே அவனுக்குத் தோன்றியது. நடுவில் செல்லப்பா எழுதிய "வெள்ளை" என்ற கதை அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வரும். போலவே "வாழ்க்கையில் காதல்" என்ற கதையில் அவர் படைப்புத் தொழில் குறித்து சிருஷ்டி பரமாக எழுதியது. அவன் பிரக்ஞையில் அடிக்கடி தோன்றி மறைந்து தோன்றி மறைந்த வண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இதெல்லாம் இருந்தும் நடுவில் நடுவில்  வாழ்க்கைக் கசப்பை மறக்கப் பிராந்திக் கசப்பும் வேண்டித்தான் இருந்தது. எல்லாமே அப்படித்தான். ஆனால் இதையெல்லாம் பின்தள்ளி அவர் உருவம் விசுவரூபமாக அவன் மனதில் என்றுமே உருக்கொண்டு உருக்கொண்டு அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தது.

இப்பொழுதெல்லாம் அவன் வேலை செய்யும் ஸ்தாபனத்தில் திரும்பி வரும்பொழுது அவர் வீட்டைப் பார்த்துகொண்டு வருவான். வீடு காலியாகப் பூட்டப்பட்டிருந்தது. உள்ளில் சுவர்கள் பச்சை வண்ணம். நடுஅறையில் ஒரு சாய்வு நாற்காலி. வருபவர்களுக்கு ஒரு  ஸெட்டி. எதிரில் ஒரு டி.வி. மனைவியை இழந்த பிறகு அவரும் தனிமையை உணர்ந்திருக்கவேண்டும். அவன் மனம் இதே தடத்தில் சென்று கொண்டிருந்தது. இன்று அவர் வீட்டில் சாய்வு நாற்காலி, ஸெட்டி, டி.வி. கார் இல்லை. ஏன், அவரே இல்லை. இல்லை? அவ்வீடு என்றுமே திகம்பரமாகத் தில்லை வெளியாக இருந்தது.

அவரைப் பற்றியே மனம் சுற்றிச் சுற்றி வந்தது. ஒரு நாள் அவனை வழக்கம் போல் கைதட்டிக் கூப்பிட்டார். போனான். கேட்டார். "உனக்கு எவ்வளல்வு பென்ஷன்?" சொன்னான். மறுபடியும் கேட்டார். "என்ன சொல்கிறாய்? இவ்வளவுதானா? D .A . உண்டென்பது தெரியாதா? ". அவன் ஒன்றும் சொல்லவில்லை. சொன்னார். "உன்னை எனக்குத் தெரியும். நீ ஒரு சண்டைக் கோழியாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அரசாங்கத்திற்கு இதைப்பற்றி எழுதினால் கிடைக்கும். எழுது. சும்மா இருந்து விடாதே". அவன் தலையை அசைத்து விட்டு திரும்பி விட்டான். அடுத்த நாள் தன் கைத்தடியை தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன்வந்து நின்றார். கேட்டார். "எழுதினாயா?". அவன் பேசவில்லை. மறுபடியும் சொன்னார். "நீ இவ்வாறு இருந்தால் போதாது. என்னுடன் வா" என்றார். அவன் போனான். கடிதத்தை எழுதச் சொன்னார். எழுதினான். அவரே ஒரு போஸ்ட் கவரைக் கொடுத்துத் தபால் பெட்டியில் போடச் சொன்னார். போட்டான். இரண்டு வாரம் கழித்து மறுபடியும் கைத்தடியைத் தாங்கிக்கொண்டு அவன் அறை ஜன்னல் முன் நின்றார். அவன் அவரை உள்ளே வரச் சொல்லி நாற்காலியில் உட்காரச் சொன்னான். உட்கார்ந்தார். கேட்டார். "பதில் வந்ததா?". "சாதகமாகவே வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இலகாவிற்குப் பழைய பாக்கியுடன் D .A . கொடுக்க உத்தரவு சென்றுவிட்டது". மறுபடியும் கேட்டார். "அங்கு சென்று விசாரித்தாயா?". அவன் பேசவில்லை. அவர் பேசினார். "நீ இப்படி இருந்தால் போதாது. குறிப்பிட்ட இலகாவிற்குச் சென்று விசாரி" என்று சொல்லி விட்டுச் சென்றார். அதை அவன் செய்த பிறகுதான் அவனுக்கு அந்த அனுகூலம் கிடைத்தது. அவர் சொன்ன வேறு ஒரு விஷயமும் அவனுக்கு ஞாபகம் வந்தது. "இதோ பார். உனக்கு ஒன்றும் தெரியாது. இந்த உலகம் ஒரு மாதிரியானது. எந்த விஷயத்திலும் கடைசி வரை ஊர்ஜிதமாக இருந்து நாம்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இந்த உலகம் ஒரு மாதிரியானது".

அவரை அவன் முற்றிலும் புரிந்து கொண்டு விட்டான் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு உயர்ந்த உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றுத் தனியாகத்தான் வீட்டில் இருந்தார். அவருக்குச் சொந்த மக்கள் இருந்தார்கள் என்றாலும், அடிக்கடி அவனிடம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், நம்பிக்கையுடன் சமயோசிதமாகச் சிந்திக்க நீ என்னைப் பழக்கிக் கொள்ளவேண்டும் என்பார்.

இன்னும் அவன் வழக்கம்போல் வீடு திரும்புகையில் அந்த காலி வீட்டைப் பார்த்துக் கொண்டுதான் வந்தான். இது இப்பொழுதெல்லாம் ஒரு அர்த்தம் நிறைந்த பழக்கமாகி விட்டது. மறுபடியும், மறுபடியும் அவர் நினைவு அவனைச் சூழ்ந்தது. உடல் இடம் கொடுத்த வரையில் அவர் வீட்டிலிருந்து சற்றே தொலைவிலிருந்த கோவிலுக்கு அங்கு சேர்கிற வரை "ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண ஹரே "என்று ஓங்கிய குரலில் சப்தித்துக் கொண்டே போவார். அதே மாதிரி அவர் வீடு திரும்புகையில், வீடு எட்டும்வரை இதைச் செய்வார். ஒரு முறை அவன் அவரிடம் கேட்கவும் செய்தான். "ஏன் இவ்வாறு தெருவெல்லாம் கேட்க கிருஷ்ண கோஷம் செய்துகொண்டு போகிறீர்கள் ?"சொன்னார், "உனக்கு ஒன்றும் தெரியாது. பல முறைகளில் இந்தப் பழக்கத்தால் அனுபவபூர்வமாக எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீ சாது என்றாலும் நீயும் இந்த தலைமுறையைச் சார்ந்தவனாதலால் இதெல்லாம் உனக்குப் புரியாது" என்றார். அவனும் அவரை முழுவதும் புரிந்துகொண்டான் என்று சொல்லமுடியாது. ஒரு முறை அவன் வீட்டில் யாருமில்லை. அன்று வீட்டு வேலைக்காரி வரவில்லை. (அவருக்கு அவன் தனியானவன் என்றதால் ஒருவித அனுதாபம் இருந்தது) அவன் வீட்டின் முன் தளத்தில் இருந்தான். சாப்பிடும் இடத்திலிருந்து ஒரு ஓசை கேட்டது. சென்று பார்த்தான் தரையில் ஒரு நீண்ட சாரைப் பாம்பு அவனைக் கண்டதும் ஓடிவிட்டது. இருநாட்கள் அந்தப் பக்கம் அவன் போகாமலே இருந்தான். மூன்றாவது நாள் அவரிடம் சென்றான். சொன்னான். சொன்னார், "ஒரு ஐந்து ரூபாய் கொடு, நான் வழக்கம்போல் கோவிலில் ஒரு நாக பூஜை செய்கிறேன்" என்றார். அவன் அவரைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார். "நான் உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கேட்கிறாயா?" என்றார். அவன் தலையை அசைத்தான். "எங்கள் பூர்வீகத்தில் ஒரு கிழவர் இருந்தார். ஒரு வகையில் சித்திகள் பெற்றவர். பாம்புக் கடியால் மரித்தவரை உயிர் பிழைப்பிக்க வல்லவர். இது அவர் குருவிடமிருந்து படித்தது. ஆனால் அந்தக் குரு அவர் அதைப் பிரயோகித்தால் அவர் மரணம் அடைவார் என்றும் சொல்லியிருந்தார். பிறகு அவர் நெருங்கிய உறவில் ஒரு இளைஞன் பாம்புக்கடியால் இறந்து விட்டான். அவன் பெற்றோர்கள் அவன் சடலத்தை அவர் முன்கிடத்தி அவனுக்கு உயிர்ப் பிச்சை அளிக்குமாறு கெஞ்சினார்கள். அவர் சிறிது  நேரம் பேசாமலிருந்து விட்டு ஒரு பிடி அரிசியைக் கொண்டுவரச் சொல்லி அதைத் தரையில் வாரி இறைத்தார். உடன் ஒரு பட்டாளம் எறும்புகள் அங்கிருந்து சென்று திரும்பி வர கடித்த பாம்பும் வந்தது . எறும்புகள் சுற்றி வளைத்த அப்பாம்பு தன் தலையை தரையில் அடித்துக் கொண்டு செத்தது. அந்த இளைஞனும் தூக்கத்தில்லிருந்து எழுந்தவன் மாதிரி உயிர் பெற்றான்." இதைச் சொல்லிவிட்டு அவர் சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டுப் பின், "ஒரு வாரம் கழித்து அந்தக் கிழவரும் இறந்தார்". அவன் பேசாமல் இருந்தான்.

அவர் மறுபடியும் சொன்னார். "இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை வராது. ஆனால் எனக்கு அப்படியில்லை." இதைப் போலவே அவரிடமிருந்து உலக வாழ்வைப்பற்றி, அதீத அனுபவங்களைப் பற்றி அவன் பலவற்றைத் தெரிந்துகொண்டான்.ஒரு நாள் மாலை அவரைப் பார்க்க வேண்டும்போல் தோன்றவே அங்கு சென்றான். ஒரு சிலர் இருந்தார்கள் மௌனபூர்வமாக.
கேட்டான் "அவர் இருக்கிறாரா?"

"நேற்று மாலை உங்கள் சிநேகிதர் அவர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று காலமாகி விட்டார்."

அவன் திரும்பி விட்டான். இப்பொழுதும் அவன் அத் தெரு வழியில் போகும் பொழுதெல்லாம் அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டுதான் சென்றான். ஆனால் அதைக் காலி வீடு என்று அவனால் நம்பமுடியவில்லை.

விருட்சம் கதைகள் 1992 . விருட்சம் வெளியீடு.

நன்றி - அழியாச்சுடர்கள்

ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்

என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகின்றேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வது கூடப் பிசகு. சுமார் 15 (கதை, குறுநாவல், கவிதை) பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13க்கு ஒரு விதச் சன்மானமும் கிடைக்கவில்லை. 14வது கதைக்கு வந்த செக்கைக் கமிஷன் குறைத்துக் கையில் கிடைத்தது 4 ரூ. 25 பைசா.

நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் ஒரு தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரணமான நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை.

நான் வேலை செய்து வரும் பாங்கில் எல்லோருக்கும் உத்தியோக உயர்வு, எனக்கு முன்னரே ஏற்பட்டது. எனக்கு ஒரு வருஷத்திற்கு முன்தான் உயர்வு கிடைத்தது. அப்பொழுது விலைவாசியும் உயர்ந்தது. என் உடன்பிறந்தவர்கள் அயலூரில் இருக்கிறார்கள். மூன்று வருஷங்களுக்கு முன் என் பெற்றோர்களும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

ஆனால் இதனால் ஒன்றும் நான் அசைந்துவிடவில்லை. எனக்கு ஒருவிதக் கசப்பும் ஏற்படவில்லை.

நான் கடந்த 5 வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன்.

அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை, உயரமும் இலை, நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜூ என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டிவிட்டது. இருந்தாலும் அது என்னுடன் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்.

”ராஜூ மகாலக்ஷ்மி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமா? என்ன சொல்கிறாய்?”

அது படுத்துக்கொண்டே வாலையாட்டும்.

“ராஜூ உனக்குக் கதை பிடிக்குமா? குறுநாவல் பிடிக்குமா?”

அது என்னைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொண்டிருக்கும்.

ஜூரத்தில் நான் படுத்துக் கொண்டிருந்தால் என்னை விட்டு ஒரு அடி நகராது.

அப்படி ஒரு தடவை நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் என் காலில் என்னவோ வழவழவென்று ஊர்வது மாதிரி ஒரு உணர்ச்சி. நான் பயந்து சத்தம் வெளிவராத நிலையில் கண்ணைத் திறந்த பொழுது ராஜூ என் காலை நக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

ஒரு நிமிஷம் நான் அசடாகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் இவ்வளவு அன்புள்ள ராஜூ எனக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு பெருஞ்சோதனையாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் வேலைக்காரன் அதற்கு இறைச்சி வாங்கி வருவான்.

அதை அவன் பாகமாக்கிக் கொடுக்க 12.30 மணி ஆகும். எனக்குக் காப்பிக் கொடுத்துவிட்டு அவன் இறைச்சி வாங்கப் புறப்படுவான்.

ஆனால் ராஜூ 11.30 மணிக்கே என் அறைக்கு வந்துவிடும்.

என்னைப் பார்த்துவிட்டு சமையல் அறைப்பக்கம் வேலைக்காரன் இருக்கும் இடத்திற்கு ஓடும். பிறகு என்னிடம் வரும், பிறகு அவனிடம் போகும். நான் அதட்டுவேன்.

ஒரு அரை நாழிகை அடங்கிக் கிடக்கும். பிறகு என்னைப் பார்த்துவிட்டு என் முகபாவம் சரியாக இருந்தால், சமையல் அறைப்பக்கம் பார்க்கும், பிறகு மெல்ல எழுந்திருக்கும். நான் ஒன்றும் சொல்லாவிட்டால் பழைய பல்லவி அதற்கு இறைச்சி வருவதற்கு முன் எனக்குக் காபி வரும்.

அது என்னையே பார்த்துக் கொண்டிருக்கும்.

உங்க மனித ஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலுகால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால்தான். இருந்தாலும் நீங்கள்தான் பிரதானம் என்ற திமிர் என்று சொல்வது போல் இருக்கும். நான் கவனிக்க மாட்டேன்.

ஆனால் வேலைக்காரன் வந்து இறைச்சி வாங்க என்னிடம் காசு கேட்க வருவான்.

அப்பொழுது நீங்கள் ராஜூவைப் பார்க்க வேண்டும். திடீரென்று அறை முழுவதும் தலைதெறிக்க ஓடும். என் இரண்டு கால்களின் நடுவில் நுழைந்து என் கால்களை உரசிக் கொண்டு, என் காலை நக்கிக் கொடுக்கும்.

நான் எவ்வளவோ தடவை கண்டித்தும் அடித்தும் அதன் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.

நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்? நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் இருக்கும்.

அதன் சுபாவத்தை என்னால் மாற்ற முடியவில்லை. அதனால் நான் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டிலிருக்கும் போது கூடக் கான்வாஸ்ஷூஸ் அணிந்து கொள்வது வழக்கமாகி விட்டது. ராஜூ அதைப் பொருட்படுத்தவில்லை. செருப்பை நக்குவதில் அதற்குப் பன்மடங்கு உற்சாகம். என் நண்பர்கள் கூட ஏதாவது ”சருமவியாதி பிடித்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் அவர்களிடன் என்ன சொல்வது. “வெள்ளிக்கிழமை தோறும் 12 மணிக்கு இறைச்சி கிடைக்கும் என்பதால் என் ராஜூ என் காலை நக்கித் தின்கிறது” என்று சொல்ல முடியுமா? நான் சிரிப்பேன்.

ஆனால் 10 நாட்கள் முன்பு நடந்த சம்பவம்தான் என்னை அசத்தி விட்டது.

அன்றும் ஒரு வெள்ளிக்கிழமை.

பாம்பேயிலிருந்து என்னைக் காண்பதற்குப் பிரசித்த எழுத்தாளர் என். எஸ். கானேகர் வருவதாக எழுதியிருந்தார்.

இத்தனைக்கும் அவர் என்னை ஸ்டேஷனுக்கு வரக்கூட எழுதவில்லை, நான் போகவுமில்லை.

அவராகத்தான் வீடு தேடி வந்தார்.

நான் அவருக்கு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுக்கவில்லை.

அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை.

ஏன், முதல் நாள் அவர் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டார் என்பதால் அடுத்தநாள் என் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிடவும் செய்யவில்லை.

ஆனாலும் அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். வெகு காலமாக எங்கள் இருவருக்கும் இலக்கியம் மூலமாக ஒரு பிணைப்பு. ஒவ்வொரு சமயம் என்னிடம் “என்னை விட நீ நன்றாக எழுதுகிறாய்” என்று சொல்லியிருக்கிறார்.

எனக்கு அவர் என்னை உற்சாகப்படுத்த அப்படிச் சொல்கிறார் என்பது தெரியும். இல்லாவிட்டாலும் எங்களிருவரிடையும் நீ பெரியவன் நான் சின்னவன் என்ற சின்னத்தனமான பாவம் என்றுமே இருந்ததில்லை.

அப்படிப்பட்டவரிடம் நான் வெள்ளிக்கிழமை என்பதையும் மறந்து பேசிக் கொண்டிருந்தேன். ராஜூ சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. பிறகு சமையல் அறைப்பக்கம் சென்றது. மீண்டும் என்னருகில் வந்தது. மீண்டும் வாசல் திண்ணைக்குச் சென்றது. மீண்டும் என்னிடம் வந்தது.

“இவருடன் ஏன் சமயத்தை வியர்த்தமாக்குகின்றாய்? ஏதாவது இறைச்சி கிடைக்குமோ?” என்று கேட்பது போல் இருந்தது.

திடீரென்று அது வாசல் திண்ணையில் இருந்த காக்கையை துரத்திச் சென்றது.

கானேகர் என்னிடம் “உன் நாய் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது?” என்று கேட்டார்.

நான் ஒன்றுமில்லை என்றேன். அப்படி இல்லாமல் நான் அவரிடம் என் செருப்பை நக்கச் சமயம் கிடைக்காததால் அதற்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?

மணி 12 அடித்த பொழுது கானேகர், “வா வெளியில் போய் சாப்பிடலாம்” என்றார்.

அப்பொழுதுதான் ராஜூ ஓடிவந்து என் காலின் ஆடு சதையை கடித்தது. கானேகர் ஆடிவிட்டார். அவர் முதலில் நாயைப் பிடித்துக் கட்டு என்றார். ஆனால் ராஜூ நான் அதட்டியவுடன் அடங்கிவிட்டது. வேலைக்காரன் அதைக் கட்டினான்.

கானேகர் ஊருக்குத் திரும்பும் முன் என்னுடன் டாக்டரிடம் வந்தார். டாக்டர் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். கானேகர் ரயிலில் ஏறினதும் (நான் ராஜு என்னைக் கடித்ததும், அதன் பரபரப்பின் காரணத்தைச் சொல்லியிருந்தேன்) சிரித்துக் கொண்டே நாய்க்கு ஒரு ராத்தல் இறைச்சி என்றால் இவ்வளவு சபலமா என்று கேட்டது ஞாபகத்திற்கு வந்தது.

பத்து நாட்களுக்குப் பிறகு என் வேலைக்காரன் ராஜூவை கார்ப்பரேஷன் நாய் பிடிக்கிறவனிடம் சேர்த்த பொழுது எனக்குச் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஏனென்றால் அது செய்தது அவ்வளவு பெரிய குற்றமாக எனக்குப் படவில்லை. ஆனால் நான் வேலைக்காரனைத் தடுக்கவில்லை. ஏனென்றால் அது கடித்ததைவிட அது வாரந் தவறாமல் என் காலை நக்கினதுதான் எனக்குச் சகிக்க முடியவில்லை.

கணையாழி, 1968