தமிழண்ணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழண்ணல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வையாபுரிப் பிள்ளையும் தமிழும் - முனைவர் தமிழண்ணல்

பேரா.வையாபுரிப் பிள்ளையின் சில கருத்து முடிபுகள் மட்டும் விமர்சனத்திற்கு உட்பட்டன என்பது உண்மையே. அதற்காக அவரது தமிழ் ஆய்வுப் பணியைக் குறைத்து மதிப்பிட இயலாது.

அவரது காலத்தில் வடமொழிச் சார்புக் கருத்துரு, தமிழ்ச் சார்புக் கருத்துரு என இரண்டு பார்வைகள் முளைவிட்டிருந்தன என்பதும் உண்மையே. இதில் வடமொழிச் சார்பினர் "தமிழ் தம் மொழியின் துணையோடுதான் வளர்ந்தது' என்பது போன்ற கருத்தினைப் பலவாறு வெளிப்படுத்தினர். மேலும், இது சிலருக்கு விமர்சனத்திற்கு உட்பட்டது. இது, வடமொழிச் சார்பினர் சிலர், "தமிழில் எதுவுமே சொந்தமாக இல்லை' என்ற கருத்துக்கு இட்டுச் சென்றது. இதற்கு மறுதலையாக எல்லாமே தமிழ்தான் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதாயிற்று. அன்று வடமொழிச் சார்பினர்க்கு செல்வாக்கு மிகுதி. இதுவும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியது. குறிப்பாக சிலவற்றைப் பார்ப்போம்:

1.   திருக்குறள் வடமொழி அர்த்த சாத்திரம், காமசூத்திரம் போன்றவற்றைப் பார்த்து எழுதப்பட்டது.

2.   திருக்குறளின் காலம் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு.

3.   புறநானூற்றில் "மோரியர்' என்று வரும் ஐந்து இடங்களையும் மாற்றி "ஒளரஸ்' என்ற சொல்லே "மோரியர்' என ஆயிற்று எனக் குழம்பியது.

4.   சிலப்பதிகாரத்தின் காலத்தினைப் பின்னுக்குத் தள்ள பெருமுயற்சி மேற்கொண்டமை. வஞ்சிக்காண்டம் பிற்சேர்க்கை என்றெல்லாம் பலவாறு திரித்து எழுதியதில் பிள்ளை அவர்கட்கும் பங்குண்டு.

5.   அவர் தொகுத்த பேரகராதியில் பல சொற்கள் வடமொழி வழிப்பட்டவை எனக் குறித்திருப்பது. தமிழர் - விளிம்பில்லாத பாத்திரம் என எழுதியிருப்பது.

6.   தமிழ் அகத்திணைப் பாடல்களை, கிரந்தத்தில் உள்ள "கதா சப்தகவியோடு' ஒப்பிட முயல்வது.

7.   தொல்காப்பியம் வடமொழிப் பாணினியத்தைப் பார்த்து எழுதப்பட்டது எனல்.

8.   பல்வேறு இடங்களில் தமிழ் வடமொழி வழிப்பட்டு வளர்ந்தது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது.

9.   பாரதப் போரில் கடுமை காரணமாகப் படைகள் சோர்வுற்றபோது, சேரமன்னன் இரண்டு படைகளுக்கும் பெருஞ்சோறு படைத்தான் என வருவதைப் "புனைகதை' என்பார். அது பாரதப்போர் என்ற நாடகம் என்பார். சங்கப் பாடல்களில் புனைவு என்பதில்லை.

10.   குறுந்தொகையில் "பொன்மலி பாடலி பெறீஇயர்' என வருமிடத்தில், "பாடிலி' என்பது தவறான பாடம். பாடலி என்பதே சரியான பாடம் என்று கண்டு சொன்னவர், "அப்பாடல் கேள்விப்பட்டு பாடியது' என்பார். அவர் உள்ளம் தமிழின் தொன்மையை ஏற்க மறுக்கிறது. பாடலி (பாடலிபுத்திர நகரம்) எனக் கண்டு சொன்னவர், அந் நகரத்தின் காலத்தே பாடப்பட்டது அது என்பதை ஏற்கவில்லை. சுருங்கச் சொன்னால், அவர்தான் வையாபுரிப் பிள்ளை!

இன்னோரன்னவற்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நிறையும் குறையும் உள்ளதில் குறையைச் சுட்டிக் காட்டினாலே, "இவர்கள் தனித் தமிழார்வலர்கள்' என்ற சிமிழுக்குள் அடக்க முயன்ற காலம் மலையேறிவிட்டது. நடுவுநிலை என்றால் அது இரு சார்பினருக்கும் பொருந்தும்தானே!

நன்றி - தமிழ்மணி

"பாடலிபுத்திரம்' எங்கே இருந்தது? - தமிழண்ணல்

பல சிற்றரசுகளை எல்லாம் ஒருங்கிணைத்த மகதப் பேரரசுதான் இந்திய வரலாற்றில் முதலிடம் பெறுகிறது. தொடக்கத்தில் பிம்பிசாரனும் அவன் மகன் அஜாதசத்துருவும் ஆட்சி செய்தனர். பிம்பிசாரன் இராஜகிருகம் என்ற தலைநகரிலிருந்து ஆண்டான். ஆனால் அவன் மகன் அஜாதசத்துரு தலைநகரைக் கங்கைக்கரைக்கு மாற்றினால், அரசை விரிவுபடுத்தவும் சிற்றரசுகளை அடக்கி ஆளவும் உதவும் என எண்ணினான். இவ்வாறு ஓரளவு நடுவண் உள்ள இந்தியப் பகுதியில், பாடலிபுத்திரம் என்ற நகரை மிகவும் திட்டமிட்டு, உலகிற் சிறந்ததாக உருவாக்கினான்.

150 ஆண்டுகள் மகதப் பேரரசு சிறந்து விளங்கியது. பின்னர் நந்தர்கள் என்ற சிற்றரசு மேலோங்கி, மகத நாட்டை, பாடலிபுத்திர நகரையே தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். ஏறத்தாழ 250 ஆண்டுகள் நந்தர்கள் ஆட்சி சிறந்தோங்கியது. நந்தர் புகழ் இந்திய நாடு முழுவதும் பரவியது. தமிழகத்திலும் அது பரவியதால், சங்க இலக்கியத்தில் அவர்கள் தொடர்பான குறிப்பு இடம்பெற்றுள்ளது.

கி.மு.550 முதல் கி.மு.322 வரை சிறப்புற்றிருந்த நந்தர்களைப் பற்றிக் குறிக்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் அக்காலத்தது என்பதில் ஐயம் இல்லை. "பாடலிபுத்திர நகரம்' எங்கே இருந்தது? கங்கைக் கரையோரம் இருந்ததாக வரலாற்றறிஞர் எல்லோரும் எழுதியுள்ளனர். ஆனால், அது கங்கையில் கலக்கும் "சோனை' என்ற சிறு கிளை நதியின் கரையில்தான் இருந்தது. சோனை நதி கங்கையிற் கலக்கும் சங்கமுகத் துறைக்கு இரண்டு கல் தொலைவில் அந்நகரம் இருந்தாலும், உலகறிந்த கங்கைக் கரையில் என எழுதும் பழக்கம் தொடர்ந்தது.

தளபதி வாடல் என்பார், அகழ்வாராய்ச்சி மூலம் 1892-இல் இதனை வெளியிட்டார். அதன் அடிப்படையில், இந்திய வரலாற்றறிஞர் வி.ஏ.ஸ்மித் விரிவாக எழுதியுள்ளார்.

""பாடலிபுத்திர நகரம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது; அது கங்கையுடன் சோனை நதி கலக்கும் சங்கமுகத் துறையை ஒட்டிய இடத்திலிருந்து, சோனை நதியின் வடக்குக் கரையில், கங்கையிலிருந்து சில கல் தொலைவில் உள்ளது அது’'

இந்த அரிய செய்தி, சங்க இலக்கியப் பாடல் ஒன்றில் பதிவாகியிருப்பதுதான் பெருவியப்பு அளிக்கிறது. குறுந்தொகையில், படுமரத்து மோசிகீரனார், ""வெண் கோட்டு யானை சோனை படியும், பொன்மலி பாடலி'' (75) என்று, சோனை நதிக்கரை என்பதைப் பதிவு செய்திருப்பது வேறு எங்கும் காணாததாகும். சங்க இலக்கியம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை நிறுவ இது வலுவான சான்றாக அமைகிறது.

நன்றி - தமிழ்மணி

கருப்பும் கறுப்பும்! - தமிழண்ணல்

கருப்பு

கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே.
கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன.

"கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம்.
உரிச்சொல் இலக்கணத்தில்,

""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.
கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன. 

கறுப்பு

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' (தொல்.855)

வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. "நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (856) நிறத்து உரு - நிறம் வேறுபடல் (கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர். மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறி, கறுத்துக்கொண்டு வரும். "வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி-22) இது கருநிறம் மட்டுமன்று; மிக முற்றிய கருநிறம். "கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறிவருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் "நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். "எச் சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் "நிறத்துரு' - தோற்றம் பெறும்; பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

"நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின "ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். "கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

நன்றி - தமிழ்மணி