ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு பிரமுகர் - ஜெயகாந்தன்

அது ஒரு கிராமத்துச் சாலை! அந்தச் சாலையிலே ஒரு பாழ் மண்டபம். பாழ் மண்டபத்துக்கு எதிரே ஒரு வேல மரம். அந்த வேலமரத்தின் தயவில் அதைப் பற்றிப் படர்ந்திருக்கிறது ஏதோ ஒரு காட்டுக்கொடி. காட்டுக்கொடி தண்டு முற்றி. தலை கிழடு தட்டிவிட்டதால். ஒரு பழுப்பு இலை மட்டும் உதிராமல் பூமியை நோக்கி வரம் கேட்கிறது. தண்டின் வேர்ப் பகுதியை ஒட்டி வேல மரத்தில் ஒரு பொந்து. பொந்து வாயிறீல். பழுப்பு இலைக்கு நேர்க் கீழே ஒரு சிறு மண்ணுருண்டை!…

மீசையை நீவி விட்டுக்கொண்டு கம்பீரமான ஆகிருதியுடன் வெளியே வந்தது ஒரு பெரிய கட்டெறும்பு!

“உலகத்தைப் பார்த்து ரொம்ப நாளாச்சு…” என்று முனகிக்கொண்டே ஏகாந்தமான வனத்தில் தன்னிச்சையுடன் திரியும் ஒரு சிங்கத்தைப்போல் தலையை ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் திருப்பி உலகத்தை நோட்டம் விட்டது எறும்பு!

அவசர அவசரமாய் அதன் எதிரே வந்தது ஒரு சிற்றெறும்பு.

“என்னடா பயலே சொக்கியமா?” என்று கர்ஜனை புரியும் தோரணையில் சிற்றெறும்பைப் பார்த்துக் குசலம் பேசியது கட்டெறும்பு!

கேட்ட கேள்விக்குப் பதில்கூட சொல்ல முடியாமல் நடு நடுங்கிப் போய். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு ஓட்டம் பிடித்தது சிற்றெறும்பு.

“உடம்பில் பயமிருக்கிறதா? பிழைத்துக்கொள்வாய் போ!” என்று முனகிக் கொண்டே மறுபடியும் மீசையை நீவி விட்டுக்கொண்ட கட்டெறும்பு. எழுந்து நின்று. உலகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்தும்போது…

“ இதென்ன குறுக்கே என்னவோ மறைக்கிறதே…”

“ஓ… இந்த மலைதானா?” இரண்டடி முன் நகர்ந்து வந்து மண்ணுருண்டையின்மேல் தனது முன் கைகயை வைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து. சந்தையிறீருந்து திரும்பி வரும் மனிதர்களைப் பார்த்தது.

கதாயுகத்தைப் பூமியில் ஊன்றிக்கொண்டு நிற்கும் பீமசேனனைப் பற்றி அதற்குத் தெரியுமோ என்னவோ? அதன் பாவனை அப்படித்தான் இருந்தது.

“யாரது. மனுசப்பசங்களா? சுத்த சோம்பேறிகள்…”

திடீரென்று அதற்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. உலகில் மனுசப்பசங்க ஜாஸ்தியா? நம்ம எறும்புக்கூட்டம் ஜாஸ்தியா?

யோசித்து யோசித்துப் பார்த்தது. அந்தக் கணக்கு அதற்குச் சரி வரவில்லை. ‘அவர்களில் யாரையாவது கூப்பிட்டுக் கேட்டால் என்ன? அதுவும் சரிதான்.

மண்ணுருண்டைக்குப் பின்னே நின்று. தலையை நீட்டி இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு கடுகு பிளந்தன்ன வாயைத் திறந்து “ஏ. மனுசப் பயல்களா…உங்களில் ஒருவன் இங்கே வாருங்கள் என்ற கர்ஜனை புரிந்தது.

அவ்வளவுதான்! சாலையில் போய்க் கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் சிதறி ஓடினர்… பாழ் மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

“அடேடே. என்னைக் கண்டு உங்களுக்கு இவ்வளவு பயமா? அட கோழைப் பயல்களா?…” என்று கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு மண்ணுருண்டையைச் சுற்றிச் சுற்றி ஓடி வந்தது கட்டெறும்பு.

“என்ன இது. இந்த வெய்ய காலத்திலே திடீர்னு மழை புடிச்சிக்கிடுத்தே?”

“கோடைமழை அப்படித்தான்”.

“பாழ் மண்டபத்தி-ருந்த மனிதர்கள் பேசிக் கொண்ட வார்த்தைகள் எறும்புக்குக் கேட்டது. மழையா? என்று அதிசயித்தது எறும்பு.”

“இது என்னடா. சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கே…மழையாமில்லே. நான் கூட வெளியேதானே நிக்கறேன்; வானம் என்னமோ இருட்டி இருக்குங்கறது வாஸ்தவம்தான். அதுக்குள்ளே இவ்வளவு பயமா? சுத்தப் பயந்தாங்கொள்ளிப் பசங்க. மழையாம் மழை!” என்று அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டு குதித்தது எறும்பு…

“இந்த மனுசங்களே இப்படித்தான்; ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் பிரமாதப்படுத்துவாங்க” என்று மனிதர்களை நினைத்து வியந்து கொண்டிருக்கையில் வானம் பளீரென ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

பாழ் மண்டபத்தில் ஒதுங்கிய மனிதர்கள் நடையைக் கட்டினர். எறும்பின் கேறீச் சிரிப்பு அவர்கள் காதில் விழவில்லை.

சற்று நேரத்தில். பூமியில் படிந்த நீர்த்திவலைகளிறீருந்து ஆவி கிளம்பியது. உஷ்ணம் தகித்தது.
மற்றொரு கூட்டம் சாலையில் நடந்து கொண்டிருந்தது!

“உஸ்… அப்பா என்ன புழுக்கம்!” என்று ஒருவன் விசிறிக் கொண்டான்.

வேலமரத்தில் படர்ந்திருந்த கொடியிலுள்ள பழுப்பு இலையில் படிந்திருந்த நீர்த் துளிகள் ஒன்றொன்றாய் உருண்டு நடுக்காம்பில் சேர்ந்து பெரிய முத்தாய்த் திரண்டது… திரண்ட முத்து மெள்ளமெள்ள உருண்டது…

கீழே இருந்த மண்ணுருண்டையின் மீது ஆரோகணித்திருந்த கட்டெறும்பின் தலையில் விழுந்த நீர் முத்தைத் தொடர்ந்து பழுப்பு இலையும் உதிர்ந்து மண்ணுருண்டையின் மீது விழுந்தது.

“ஐயோ… பிரளயம்…. பிரளயம்…… வானம் இடிந்து விழுந்து விட்டதே….” என்று கதறியவாறு பழுப்பு இலையை நீக்கிக்கொண்டு வெளியே வந்த கட்டெறும்பு மண்ணுருண்டை கரைந்திருப்பதைக் கண்டு. கூக்குரலிட்டது.

“அடே மனிதர்களே. பிழைத்துப் போங்கள்… சீக்கிரம் ஓடுங்கள். பிரளயம் வந்து விட்டது…. ஓடுங்களடா ஓடுங்கள்…” என்று அலறியவாறு என்ன செய்வது என்று தெரியாமல் பரபரத்து முன்னும் பின்னும் ஓடியது!

“அப்பா என்ன உஷ்ணம்” என்று மேல் துண்டை வீசிக்கொண்டு ஒருவன் மரத்தடியில் ஒதுங்கினான்.

அட பைத்தியக்கார மனிதர்களே! ஒன்றுமில்லாதற்கெல்லாம் உலகமே புரண்டு விட்டதாக ஓடுகிறீர்களே – இப்பொழுது பேராபத்து விளைந்துவிட்ட சமயத்தில் முட்டாள் தனமாக நடந்து கொள்கிறீர்களே… சீசீ… உங்கள் முகத்தில் விழிக்கக் கூட வெட்கமாயிருக்கிறது. நான் இப்பொழுது எப்படி என்னைப் பாதுகாத்துக்கொள்ளுவேன்? பிரளயம் வந்துவிடும் போறீருக்கிறதே… என்று கூவியவாறு விழுந்தடித்து ஓடி. தனது பொந்துக்குள் போய்ப் புகுந்துகொண்டது கட்டெறும்பு!

நன்றி - சிறுகதைகள்.காம்

சட்டை - ஜெயகாந்தன்

அவன் துறவி!

வாழ்க்கையை வெறுப்பது அல்ல. வாழ்வைப் புரிந்துகொண்டு, அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வதுதான் துறவு எனில், அவன் துறவிதான்.

முப்பது வயதில் அவன் புலனின்ப உணர்வுகளை அடக்கப் பழகிக் கொண்டான் என்று சொல்வதை விட, அவற்றில் நாட்டம் இல்லாததே அவனது இயற்கையாய் இருந்தது என்று சொல்வதே பொருந்தும். இதற்கு அர்த்தம் அவனிடம் ஏதோ குறைஎன்பதல்ல. அவன் நிறைவான மனித வாழ்வின் தன்மையிலேயே குறைகள் கண்டான். ‘ஓட்டைச் சடலம் உப்பிருந்த பாண்டம்’ என்று பாடும் சித்தர்களின் கூற்றைப் பரிகசிக்காமல் அந்தப் பரிகசிப்பின் காரணங்களை ஆராய்ந்து அதில் உண்மைகள் இருக்கக் கண்டான். எனவே, பக்தியின் காரணமாகவோ, மோட்சத்தை அடைய இது தவமார்க்கம்
என்று கருதியோ அவன் துறவு பூணவில்லை.

சொல்லப்போனால் ‘கண்ட கோயில் தெய்வம் என்று கைஎடுப்பதில்லை’ என்ற சிவவாக்கியரின் ஞானபோதனையின்படி எவ்வித ஆசாரங்களையும் கைக்கொள்ளாமல்தான் இருந்தான்.

அவன் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறவன் மாதிரி விழித்தானே அல்லாமல், ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டானில்லை.

அவன் அந்தச் சிவன் கோயில் வாழ்ந்து வந்தான். அதற்குக் காரணம் பக்தி அல்ல; அங்கேதான் அவனுக்கு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் அவனுக்கு மடப்பள்ளியிருந்து உணவு தந்தார். அதற்குப் பதிலாய் அவனிடம் வேலை வாங்கிக் கொண்டார். கோயின் பக்கத்திலுள்ள நந்தவனப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் சில சமயங்களில் பூப் பறித்துக் கொண்டு வருவதும் அவனுக்கு அவரிட்ட பணிகள்.

அரையில் ஒரு துண்டும். நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடுமó அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.

பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும். அவன் சோம்பேறி அல்ல. சாமியார் என்ற பட்டம் பெற்ற பிறகும் கூட அவன் நாள் முழுவதும் ஏதோ ஒரு வேலையை யாருக்கோ செய்து கொண்டிருக்கிறான். வேலையின் தன்மைகளோ அது உயர்வா, தாழ்வா என்றபாகுபாடோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல.

செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். செட்டியார் வீட்டுக்கு…. எள் மூட்டை சுமப்பான்; பட்டாளத்துப் பிள்ளை வீட்டு வண்டியில் ஏறிப்போய் நெல் அரைத்துக்கொண்டு வருவான். அவன் எல்லாருக்கும் தொண்டன்….. ஒரு வேளை பிறவியின் அர்த்தமே இந்தப் பயன் கருதாத் தொண்டில் அவனுக்குக் கிட்டுகிறதோ
என்னவோ?

“பூந்தோட்டத்துச் சாமி” என்று யாராவது கூப்பிட்டுவிட்டால் போதும். சம்பளம் கொடுத்து வைத்துள்ள ஆள்கூட அவ்வளவு கடமை உணர்ச்சியோடு ஓடிவரமாட்டான்…..

எனவே அவனுக்கு வேலையும் வேலையிடும் எஜமானர்களும்
நிறையவே இருந்தனர்.

இரவு பதினோரு மணிக்குமேல் கோயில் பிரகாரத்தில் உபந்நியாசத்துக் காகப் போட்டிருந்த பந்தலடியில் இருளில் – நிலா வெளிச்சம் படாத நிழல்- கருங்கல் தளவரிசையில் வெற்றுடம்போடு மல்லாந்து படுத்திருந்தான் பூந்தோட்டத்துச் சாமி.

பிரகாரம் எங்கணும் கொட்டகையின் கீற்றிடையே விழுந்த நிலவொளி வாரி இறைத்தது போல் ஒளி வட்டங்களை அவன் மீது தெளித்திருந்தன…..

அவன் மனத்தில் அன்று காலையிருந்து உறுத்திக்கொண்டிருந்த ஒரு சம்பவமும். அதைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளும் சம்பந்தமற்றது போலும். சம்பந்தமுடையன போலும் குழம்பின.

செட்டியார் வீட்டு அம்மாளை. பிரார்த்தனையை எண்ணியபோது. வீட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வடக்கே வெகு தூரம் ஓடிப்போன அவள் மகனின் நினைவும் அவனுக்கு வந்தது.

இன்று அதிகாலையில். பூந்தோட்டத்துச்செடிகளுக்கு அவன் நீர்வார்த்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் விம்மலும் அழுகையும் கலந்த பிரார்த்தனை கேட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது. மாணிக்கம் செட்டியாரின் மனைவி. குளித்து முழுகிய ஈரக் கோலத்தோடு கை நிறைய மஞ்சள் குவளை மலர்களை ஏந்திக்கொண்டு விநாயகர் சந்நிதியில் முழந்தாளிட்டு வேண்டிக் கொண்டிருந்தாள்.

என் அப்பனே….. விக்னேஸ்வரா….. எனக்கு நீ குடுத்தது ஒண்ணுதான்… அவன் நல்லாயிருக்கும்போதே என்னைக் கொண்டு போயிடு தெய்வமே!…. அந்தக் குறையும் பட்டு வாழ முடியாது அப்பனே!…. அவன் எங்கே இருந்தாலும் ‘நல்லபடியாய் இருக்கேன்’னு அவன் கிட்டேருந்து ஒரு கடுதாசி வந்துட்டா வரவெள்ளிக்கிழமை உன் சந்நிதியிலே அம்பது தேங்காய் உடைக்கிறேன்….”

தன்னையும், சூழ்நிலையையும் மறந்து அந்தத் தாய் அந்த நட்ட கல்லைத் தெய்வம் என்று நம்பிப் புலம்புவதைப் பூந்தோட்டத்துச் சாமியார் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தத் தள்ளாத சுமங்கக் கிழவியின் தாளாத ஏக்கம் – அவன் கண்களைக் கலக்கிற்று.

அவள் பிரார்த்தனை முடிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தபோது தன்னையே பார்த்தவாறு நிற்கும் பூந்தோட்டத்துச் சாமியாரைப் பார்த்தாள்.

“ரெண்டு நாளா ராத்திரியெல்லாம் தூக்கமில்லே சாமியாரே!….. நம்ம தம்பி இருக்கிறஊர்லேதான் இப்ப கடுமையா சண்டை நடக்குதாம்; ஆஸ்பத்திரி மேலே எல்லாம் குண்டு போடறானுங்களாமே பாவிங்க…… எங்கப்பன் விக்னேஸ்வரரு என்னைச் சோதிக்க மாட்டாரு….. அப்புறம் கடவுள் சித்தம்!” என்று பொங்கி வரும் கண்ணீரை மீண்டும் முந்தானையால் துடைத்துக் கொண்டாள் கிழவி.

“விக்னேஸ்வரர் துணையிருப்பாரு; கவலைப்படாதீங்க அம்மா” என்று பூந்தோட்டத்துச் சாமியும் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

“சாமியாரே!…. உன் வார்த்தையை நான் விக்னேஸ்வரர் வாக்கா நம்பறேன். நீயும் அவர் மாதிரிதான்! என்று அவனை வணங்கி ஏதோ ஒரு நம்பிக்கையும் ஆறுதலும் தைரியமும் பெற்று அங்கிருந்து நகர்ந்தாள் கிழவி.

பூந்தோட்டத்துச் சாமியார் அந்தப் பிள்ளையார் சிலையை வெறித்துப் பார்த்தான்.

‘நட்ட கல்லைத் தெய்வம் என்று’ பாட்டு அவன் மனத்தில் ஒலித்தது.

“இந்தக் கிழவிக்கு இந்த நட்டகல் தரும் ஆறுதல் பொய்யா?” என்று தோன்றியது.

நல்ல வேளை அந்தப்பாடலை அவள் படித்திருக்கவில்லையே என்றெண்ணி மகிழ்ச்சியுற்றான் அவன்…..

மத்தியானம் பிரகாரத்தில் கொட்டகை வேய்ந்து கொண்டிருந்தார்கள். இன்றிருந்து ஒரு வாரத்துக்குக் கோயில் பகவத் கீதை உபந்யாசம் நடக்கப்போகிறது. யாரோ பெரிய மகான் பட்டணத்திருந்து வந்து கீதை சொல்கிறாராம். சாயுங்காலத்தில் கோயில் கொள்ளாத ஜனக்கும்பல் வந்து விடும். பூந்தோட்டச் சாமியாருக்கும்வேலைக்குப் பஞ்சமில்லை.

கொட்டகை போடுவதற்காக மூங்கில் கட்டி மேலே உட்கார்ந்து ஓலை வேய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு உதவியாய்க் கீற்றையும், கயிற்றையும் ஏந்தி, அண்ணாந்து நின்றுகொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அப்போது அவனைத்தேடிக்கொண்டு வந்த தர்மகர்த்தா. “சாமி!
ஓடிப்போயி நம்ப பட்டாளத்துப் பிள்ளை வீட்டிலே அம்மாக்கிட்ட கேட்டு. கல்யாண சமக்காளம் இருக்காம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாங்கன்னு கேளுங்க. ஓடுங்க” என்றதும். கையிருந்த கீற்றைப் போட்டுவிட்டு ஓடினான் அவன்.

அவன் பட்டாளத்துப் பிள்ளை வீட்டருகே வரும்போது அந்த வீட்டுத் திண்ணையில் ஒரு கூட்டமே கூடி நின்றிருந்தது.

பட்டாளத்துப் பிள்ளை என்று அழைக்கப்படும் பெரியசாமிப் பிள்ளை காலையிலும் மாலையிலும் பத்திரிகை படிக்கும் பழக்கமே அப்படித் தான்.

பட்சணக்கடை மணி முதலி ஜோசியர் வையாபுரி. எண்ணெய்க்கடை மாணிக்கம் இன்னும் கீழே சில சிறுவர்கள் நின்றிருந்தனர். மடியில் மூன்று வயதுள்ள தன் பேரப்பையனை உட்கார வைத்துக்கொண்டு பெரியசாமிப் பிள்ளை பழுப்பேறிய தமது நரைத்த மீசையைத் திருகிக்கொண்டு உற்சாகமான குரல் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்.

பத்திரிகையிருந்து ஒரு செய்தியைப் படித்துவிட்டு,

“போடு…..! இந்தியான்னா இளிச்சவாயன்னு நெனச்சிக்கிட்டு இருக்கானுவளா? நம்ப ஊர்லே செஞ்ச விமானங்கள் ஐயா…. ஓய் செட்டி யாரே. இதைக் கவனியும் – ஜெட் விமானங்களை நொறுக்கிட்டு வருது ஐயா! சபாஷ் நானும் நெனைச்சிருக்கேன் ஒரு காலத்திலே…. நமக்கு எதுக்குப் பட்டாளம் – இந்தத் தேசத்து மேலே எவன் படையெடுக்கப் போறான்னு…. இப்ப இல்லே தெரியுது – அந்தக் காலத்திலே ஹிட்லர் செஞ்ச மாதிரி டாங்கிப் படையெ வெச்செ நம்ப அடிச்சுடலாம்னு திட்டம். இந்தியத் துருப்புகள் கைப்பற்றியிருந்த டாங்கியின் படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததை உட்கார்ந்திருந்தவர்களிடம் காட்டினார் பெரியசாமிப் பிள்ளை.

“பயங்கரமான டாங்கி! அந்தக் காலத்திலே இவ்வளா பெரிசு கெடையாது….. டாங்கின்னா என்னான்னு நெனக்கிறே….. ஊருக்குள்ளே பூந்துடுச்சின்னா அவ்வளவுதான்! ராட்சஸக் கூட்டம் வந்த மாதிரிதான். ஒண்ணும் பண்ண முடியாது – நம்ப ஊரிலே இப்ப டிராக்டர் வச்சு உழவு நடத்தல்லே அந்த மாதிரி ஊரையே உழுதுட்டுப்போயிடும்.. வீடு தெருவு கோயிலு எல்லாம் அதுபாட்டுக்கும் நொறுக்கித் தள்ளிட்டுக் காடு மலைன்னு பாக்காம குருட்டுத்தனமாப் போகும்! சும்மா…. நம்ப படைங்க அந்த மாதிரி டாங்கிகளைப் போட்டு நொறுக்கி விளையாடுது போ! அடடா…. நமக்கு வயசு இல்யே….. இருந்தா போயிடுவேனய்யா பட்டாளத்துக்கு!” என்று உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கையில், வையாபுரி சோசியரின் தோளுக்கு மேல் எக்கி அந்த டாங்கியின் படத்தைப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

அவன் வந்து நிற்பதையே கவனிக்காத பிள்ளை தொடர்ந்து பத்திரிகையைப் படிக்கும்போது திடீரெனக் குரலைத் தாழ்த்தினார்: ஒரு மேஜரின் வீர மரணம் – புதுடெல். செப்டெம்பர் பதினேழு. சென்றபதிமூணாந் தேதியன்று சியால்கோட் அருகே நடந்த டாங்கிப் போரில் பகைவர்களால் சுடப்பட்ட மேஜர் முகமது ஷேக் வீர மரணம் எய்தினார்” என்பதைப் படித்துவிட்டு மௌனமாகத் தலைகுனிந்தார்
பிள்ளை.

அவர் மடியிருந்த குழந்தை அவரது மீசையைப் பிடித்திழுத்துச் சிரித்தது.

சில வருடங்களுக்கு முன் போர் முனையில் வீரமரணமுற்றஇப் பேரக் குழந்தையின் தகப்பனின் – தன் மகனின் – நினைவு வரவே உணர்ச்சி மயமானார் கிழவர்.

“சண்டையினாலே ஏற்படறநஷ்டங்களைப் பார்த்தீரா?” என்றார் சோசியர் வையாபுரி.

சிவந்து கலங்கும் விழிகளோடும் முகம் நிமிர்ந்தார் பிள்ளை.

“நஷ்டம் தான்…. அதுக்காக? மானம் பெரிசு செட்டியாரே. மானம்
பெரிசு!…” என்று குழந்தையை மார்புறத் தழுவிக்கொண்டு கத்தினார் பிள்ளை. “என் வாழ்க்கையிலே பாதி நாளுக்கு மேலே ரெண்டு உலக யுத்தத்திலே கழிச்சிருக்கேன் நான்….. என் ஒரே மகனையும் இந்தத் தேசத்துக்குக் குடுத்துட்டதிலே எனக்குப் பெருமைதான்….. அவன் சொன்னானாமே….. “பூ உதிரும் ஆனாலும். புதுசு புதுசாவும் பூக்கு” மின்னு….. ஆ! அவன் வீரனய்யா…. வீரன்…..” என்று மீண்டும் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்ட பிள்ளை. சற்று தானே தன் உணர்ச்சிகளைச் சமனப்படுத்திக் கொண்டு வழக்கமாய்ப் பத்திரிகை படித்து விவாதிக்கும் தொனியில் பேசினார்.

“நாம சண்டைக்குப் போகலே…. எவ்வளவோ பொறுமையாகவே இருந்திருக்கோம்…. நல்லவங்க எவ்வளவுதான் விரும்பினாலும் கெட்டவங்க உலகத்திலே இருக்கறவரைக்கும் சண்டை இருக்கும் போலத் தான் தோணுது…. ஆனா. எம் மனசுக்கு இது சந்தோஷமாத்தான் இருக்கு…. பாத்துடுவோம் ஒரு கை. சண்டை வேண்டியதுதான்” என்று மீண்டும் உணர்ச்சி வெறியேறி அவர் பிதற்றிக் கொண்டிருக்கையில் மாணிக்கம் குறுக்கிட்டுக் கேட்டார்:

“”சண்டை நடக்கிறது சரி. நீங்க சண்டை வேணும்னு சொல்லறது வேடிக்கையாய் இருக்கு. அதுவும் நீங்க. அந்தக் கொடுமையையெல்லாம் பார்த்த நீங்க – அனுபவிச்ச நீங்க – அப்படிச் சொல்லலாமா?” என்று கேட்டார். அப்போதுதான் பெரியசாமிப் பிள்ளைக்கும் நினைவு வந்தது. செட்டியாரின்மகன் – இப்போது நடக்கும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோத்பூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்கிற விவரம். அந்த – நினைவு வந்தததும் செட்டியாரின் முகத்தை ஒரு விநாடி உற்றுப்பார்த்துவிட்டு. அவரது தோளைப்பற்றி அழுத்தி. “பயப்படாதீர்! கடவுள் இருக்கிறான்” என்றார்.

அந்தச் சாதாரண நம்பிக்கைதான் செட்டியாருக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது என்பது அந்நிலையிருந்து பார்க்கிறவர்களுக்குத்தான் தெரியும். பூந்தோட்டத்துச் சாமியாருக்கும் தெரிந்தது.

“ஐயோ! எவ்வளவு நாசம். எவ்வளவு அழிவு” என்று முணுமுணுத்துக் கொண்டார் சோசியர்.

“அழியாட்டிப் போனா வளர்ச்சி ஏது? ஒண்ணு சொல்றேன். கேளும். தர்மம்! தர்மம் மட்டும் அழியாது. அதர்மமும் அக்குறும்பும்தான் சண்டை வந்தா அழிந்தே போகும். சத்தியத்துக்குத்தான் போராடறகுணமும் உண்டு; பொறுத்திருக்கிறகுணமும் உண்டு. சண்டைன்னு வந்துட்டா அப்புறம் சண்டையெ நெனச்சி பயப்படக் கூடாது. சண்டையில்லாத காலமே கெடையாதே ஐயா!…. ராமாயண காலத்திலே. மகாபாரத காலத்திலே கூடத்தான் சண்டை இருந்திருக்கு…. யோசிச்சுப் பாரும். எந்தச் சண்டையிலேயாவது அநியாயம் ஜெயிச்சிருக்கா? சொல்லும்!…..”

-வந்த காரியத்தை மறந்துவிட்டு பிள்ளையின் பிரசங்கத்தை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

“யாரு. பூந்தோட்டத்துச் சாமியா? எங்கே வந்தீங்க?” என்றார் பிள்ளை.

உறக்கத்திருந்து விழித்தவனைப் போல் ஒரு விநாடி சுதாரித்து “தர்மகர்த்தா ஐயா ஜமுக்காளம் வாங்கிகிட்டு வரச்சொன்னாரு” என்றான்.

“உள்ளே போயிக் கேளுங்க…. அம்மா. கௌரி…..பூந்தோட்டத்துச்சாமி வராரு பாரு…. அந்தக் கல்யாண ஜமுக்காளத்தை எடுத்துக்குடு… மத்தியானமே கேட்டாங்க. மறந்துட்டேன்” என்று உட்புறம் திரும்பிக் குரல் கொடுத்தார் பிள்ளை.

“உங்களுக்கு சண்டையெத் தவிர வேறஎன்ன ஞாபகமிருக்கும்ஃஃ என்று உள்ளேயிருந்து ஒலித்த தன் மனைவியின் குரலை அவர் பொருட்படுத்தவேயில்லை.

வீட்டிற்குள்ளே வந்து கூடத்து வாசற்படி அருகே நின்றபூந்தோட்டத்துச் சாமியாரின் விழிகள் கௌரியைப் பார்க்கையில் கலங்கின. அவள் ஜமுக்காளத்தை எடுக்க அறைக்குள் போனாள். அப்போது கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த ராணுவ உடையில் – பார்க்கப் பார்க்க விகசிப்பது போன்ற புன்னகையுடன் – உள்ள சோமநாதனின் போட்டோவை வெறித்துப் பார்த்தான் பூந்தோட்டத்துச் சாமியார்.

சோமநாதன் ராணுவத்தில் சேர்ந்த அடுத்த வருஷம் லீவில் வந்திருந்த போது கோயிலுக்கு வந்து தன்னோடு பேசியிருந்து குசலம் விசாரித்த நிகழ்ச்சிகள் எல்லாம் இப்போது மனத்தில் தோன்றின. பொழுது போகாததால் வீட்டைச் சுற்றிலும் புஷ்பச் செடிகள் பயிராக்க எண்ணித் தன்னிடம் செடிகளும் விதைகளும் வாங்கி வந்து பயிரிட்ட சம்பவங்களெல்லாம் பெருகி வந்து நெஞ்சை அடைத்தன.

அவன் திரும்பி நின்று அந்த வீட்டைச் சுற்றிலும் செழித்துக் கிடக்கும் புஷ்பச் செடிகளைப் பார்த்து மீண்டும் திரும்பி அந்தப் போட்டோவைப் பார்த்தான்.

வெளியே வீட்டுத் திண்ணையில் பெரியசாமிப் பிள்ளை ன்னும் மிகுந்த உற்சாகத்தோடு யுத்தச்செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தார்.

அன்று மாலை கோயில் பிரகாரத்தில் ஜனக்கும்பல் நிரம்பி வழிந்தது.

காவி நிறப் பட்டிலே அங்கி தரித்திருந்த அந்தப் பண்டிதர் மிக அழகாக கீதையை உபதேசம் பண்ணினார்; அந்தப் பண்டிதரின் ஒரு பழைய உதாரணம் பூந்தோட்டச் சாமியாருக்குப் புதுமையாகவும் மிகவும் பிடித்ததாகவும் இருந்தது. இந்த உடம்பு நம்ஆத்மாவின் சட்டை; சட்டை பழசானதும் ஆத்மா இதை உதறிவிடுகிறது…. “ஒன்றுமே செய்யாமல் ஒருவனுமே இருக்க முடியாது. எல்லா ஜீவன்களும் இயற்கையான தன்மையினாலே தமது இச்சையின்றியே ஏதாவது ஒரு தொழிலோடு பூட்டப்பட்டிருக்கின்றன. “ஹே! அர்ஜுனா… உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரம் உண்டு. பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதும் இல்லை…. அவ்விதமான கர்மத்தின் பயனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்து கொண்டிருக்கிறானோ அவனே துறவி. அவனே யோகி’ என்பதாகவெல்லாம் பகவான் சொல் யிருக்கிறார்…..

கூட்டத்தினர் அனைவரும் அந்தப் பண்டிதரின் ஞான வாசகங்களை ஏதோ பாட்டுக் கச்சேரி கேட்பது போல இடையிடையே “ஹா ஹாஃ என்று சிலாகித்தவாறு கேட்டிருந்தனர்.

பூந்தோட்டத்துச் சாமியார் ஒரு மூலையில் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு தாடியை நெருடியவாறு அங்குப் பேசப்படும் மெய்ஞ்ஞானங்களையெல்லாம் ஹிருதய பூர்வமாகக் கிரகிப்பது போல் கூரிய நோக்கோடு நின்றிருந்தான்.

உபந்நியாசம் முடிந்து கூட்டம் கலைந்த பிறகு பிரகாரத்தின் கருங்கல் தள வரிசையில் ஓர் ஓரமாய்ப் படுத்து வானத்தை வெறித்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்த அவனுக்கு ஏனோ அடிக்கடி அந்தச் சோமநாதனின் முகமே எதிரில் வந்து தோன்றுகிறது.

பத்து வருஷங்களுக்கு முன் தனக்கு யாருமே பந்தம் இல்லாது போனதன் காரணமாய்ப் பிறந்த ஊரைவிட்டு ஓடிவந்துவிட்ட தன்னைப் பற்றியும் அவன் யோசிக்கிறான்.

வாழ்க்கையின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்துவிட்டு. தன் ஒரே மகனையும் யுத்தத்தில் இழந்து விட்டு. இன்னும்கூட மனத் தளர்ச்சியில்லாமல் தர்மத்தின் தன்மைகளைப் பற்றிப் பேசுகின்றபெரியசாமிப் பிள்ளையை விட. கீதை உபந்நியாசம் பண்ணிய அந்த மகா பண்டிதர் எந்த விதத்தில் துறவி என்று எண்ணிப் பார்க்கிறான் அவன்.

அவன் வெகுநேரம் உறக்கமில்லாது வெறித்த விழிகளோடு எதை எதையோ சிந்தித்தபின். ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் அங்கிருந்து எழுந்து நடந்து கோயிலை விட்டு வெளியேறினான்….

பிறகு அவன் திரும்பவே இல்லை!

ஒரு நாள் கடைத்தெருவில் பெரியசாமிப் பிள்ளையைப் பார்த்த கோயில் குருக்கள் மனம் பொறுக்காமல் அங்கலாய்த்துக் கொண்டார். “மடப்பள்ளியிலே ரெண்டு வேளை சாப்பாடு போட்டு நல்லபடியா வெச்சிருந்தேன்…. ஓய் பிள்ளை. இதைக் கேளும்!….. அந்தப் பூந்தோட்டத்துச் சாமியார் பய சொல்லாமல் கொள்ளாமல் எங்கேயோ ஓடிட்டான்…..

நாலைஞ்சு நாளாச்சு….. நீர் எங்கேயாவது பார்த்தீரா?”

அப்போது ஒரு ராணுவ லாரி அவர்களைக் கடந்தது. பெரியசாமிப் பிள்ளை தமது வழக்கமான ஆர்வத்துடன் அந்த லாரி நிறைய நிற்கும் ராணுவ வீரர்களைப் பார்த்தார்.

சற்றுத் தள்ளிச் சென்று லாரி நின்றது…..

அதிருந்து ஒரு ராணுவ வீரன் “தொபீரெனக் குதித்து “சரக் சரக்ஃ கென நடந்து வந்தான்….

தன் மகன் சோமநாதனே வருவது போன்றபிரமிப்பில். வருவது யார் என்று தெரியாமல் பரவசமாகி நின்றிருந்தார் பிள்ளை.

வந்தவன் பேசிவிட்டுப் போகட்டும் என்றநினைப்பிலோ, பட்டாளத்துக்காரன் என்ற பயத்திலோ குருக்கள் தெருவோரமாய் விலகி நின்றார்.

அருகில் வந்த நின்றஅந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்து, “தெரியலயே” என்றார் பிள்ளை.

“நான்தாங்க….. பூந்தோட்டச்சாமி. தெரியங்கள? என்ன சாமி….. உங்களுக்குமா தெரியலை? உங்ககிட்ட எல்லாம் சொல்லிக்காம போறேனேன்னு நெனச்சேன்…. நல்ல வேளை பார்த்துட்டேன்…. ரயிலுக்குப் போறோம். வரட்டுங்களா?” என்று கைகூப்பி நிற்கும் அவனை வெறித்துப் பார்த்த பிள்ளை. அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டார்.

மழுங்கச் சிரைத்த மோவாயும் உதட்டுக்கு மேல் முறுக்கிவிட்ட மீசையும்…… கிராப்புத் தலையும். காக்கிச் சட்டைக்குள் புடைத்துக் கவசமிட்டது போல் கம்பீரமாய் உயர்ந்த மார்பும்……

“சபாஷ்” என்று அவன் முதுகில் தட்டினார் பிள்ளை.

சட்டையில்லாத வெற்றுடம்பில் அரைத்துண்டும். தலை நிறைய முடியும். தாடியுமாய் இருந்த அந்தப் பழைய கோலத்தையும் இந்தப் புதிய கோலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த குருக்கள்-

“சட்டையெல்லாம் போட்டு. தாடியை எடுத்திட்டு…. நம்ப பூந்தோட்டத்துச் சாமியா? நம்ப முடியயே…” என்று கண்களைச் சிமிட்டினார்……

அவன் சிரித்தான்.

“ஆத்மாவுக்கு உடம்பே ஒரு சட்டைதானுங்களே….. இந்த ஆத்மாவுக்கு அந்தச் சட்டையே சம்பந்தமில்லே….. அதுக்கு மேலே எந்தச் சட்டெயப் போட்டுக்கிட்டாத்தான் என்ன? சொல்லுங்க சாமி?” என்றான்.

இந்தக் காக்கி உடுப்புக்குள் இருந்து இந்த வார்த்தை வருவதைக் கேட்கப் பிடிக்காத குருக்கள் குறுக்கிட்டார்:

“இந்தப் பேச்சையெல்லாம் இனிமே விடு. நீ வாழ்க்கையெ வெறுத்துச் சாமியாரா இருந்தப்போ அது சரி….. இனிமே பொருந்தாது” என்றார் அவர்.

“வாழ்க்கையெ வெறுத்தா? வாழ்க்கையெ வெறுத்தவன் தற்கொலை பண்ணிக்குவான் சாமி – சாமியாராகிறதில்லே…..” என்றான் அவன்.

தூரத்தில் அவனுக்காக நின்றலாரி ஹாரனை முழக்கிற்று.

“அப்போ நான் வர்றேன்ஃஃ – என்று பெரியசாமியையும், குருக்களையும் மீண்டும் வணங்கி விட்டு இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு லாரியை நோக்கி அந்தப் ‘பூந்தோட்டச்சாமி’ ஓடுவதைக் குருக்களும் பிள்ளையும் பார்த்தவாறு இருந்தனர்.

“ம் அவன் துறவிதான்” என்று தீர்மானமாகச் சொன்னார் பிள்ளை.

குருக்கள் கண் கலங்கப் பெருமூச்சுவிட்டார்.


03 அக்டோபர் 1965 

நன்றி - சிறுகதைகள்.காம்

ஜெயகாந்தனும் எனது பாவனைகளும் - பி.ச.குப்புசாமி


(திரு. பி.ச. குப்புசாமி மீசை முளைக்காத பருவத்திற்கு முன்பே ஜெயகாந்தன் அவர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்ட நண்பர். இவர் வடாற்காடு மாவட்டம் குக்கிராமம் ஒன்றில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் இருக்கும் காடு, மலை தேடி ஜெயகாந்தன் அடிக்கடி சென்று விடுவார். இவர் ஒரு நல்லாசிரியர். நன்றாக எழுதுவார். எழுத்தின் மீதுள்ள மதிப்பினாலேயே எழுதுவதைக் குறைத்துக் கொண்டவர். இவரது 'கங்கவரம் ' சிறுகதை திரு. விட்டல் ராவ் அவர்களால், இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளுள் ஒன்றாகத் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெயகாந்தனைப் பற்றி நிறையக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயகாந்தனையும் அவர் தம் படைப்புகளையும் நன்கறிந்தவர். இக்கட்டுரை ஜெயகாந்தன் அவர்களின் மணிவிழாவின் போது 1994-ல் எழுதப்பட்டது.)

பாரதி விழாவில் எங்கள் ஊருக்கு பேச வருமாறு அழைக்கச் சென்றபோது 1960 செப்டம்பரில் ஜெயகாந்தன் அவர்களை முதன்முதலில் சந்தித்தோம்.

அப்பொழுது நான் என் பையல் பருவத்தை வழியனுப்பிக் கொண்டிருந்தேன்.

எனது சொந்த வீட்டில் கிடைத்த சங்க இலக்கியத் தொட்டில் அறிவையும், தமிழ் மொழி பற்றிய தாலாட்டுணர்ச்சிகளையும் கடந்து பாரதியால் பளீரென்ற புதிய ஓர் உலகத்திற்கு வந்து விட்டிருந்தேன். எனது பேதை மனதில் அப்போதெல்லாம் காலூன்றி எழுந்த பெரிய ஏக்கம், பாரதி வாழ்ந்த காலத்தில் நாம் இல்லாமல் போனோமே; அப்படி ஒரு மூர்த்திகரத்தைத் தரிசிக்காமல் போனோமே என்பது தான். பல நாள் பல பொழுது அந்தப் பருவம் பூராவும் அவ்வாறு ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கம் பரிபூரணமாகத் தணியும் என்று ஏக்கம் பிறந்த காலத்தில் நான் எண்ணியதே இல்லை.

ஆனால், அந்த ஏக்கம் தணிந்தது.

பண்டிதர்களின் நூல்கள் நிறைந்த எங்கள் வீட்டுப் படிப்பறையில் நான் 'சரஸ்வதி ' என்னும் புதிய பத்திரிகையைப் படிக்கலானேன். அது ஆழி என்றால் அதன் அமுத கலசம் அவர். கைக்கு அடக்கமான அந்தச் சிறிய பத்திரிகையில் வெளிவந்த அவர் கதைகள் ஆளை அடித்து நிறுத்தின. எனது பையல் பருவ மனவெளியில் அவற்றின் திடும் பிரவேசம், இப்போதும் கூட நினைவிருக்கிறது.
ஓர் அதீதக் கவர்ச்சியின் திகைப்பு என்னை ஆட்கொண்டது. அந்த மனிதர்பால் ஓர் அச்சமும் பிறந்தது. சகஜமான சமூக ஜீவிகளுக்கு தம்மினும் மேலான மனோதர்மமுடைய ஒருவரிடத்தில் தோன்றும் மரியாதை கலந்த அச்சம் அது. ' இந்த மனிதர் கறாரானவர்; தனது பார்வை தீட்சண்யத்தால், எல்லா வேஷங்களையும் கலைத்து வெளிச்சமாக்குபவர்; எல்லாருடைய சமூகப்பிரக்ஞைகளையும் நிறுத்தி விசாரிக்கிறவர். ' - என்பனவற்றையெல்லாம், அந்தக் கதைகளைப் படித்து அவரைப் பாராமலேயே அறிந்து கொண்டோம்.

வேறு விதமாகவும் கூறி, எச்சரிக்கை செய்து உலகம் எங்களை அவரிடம் அனுப்பி வைத்தது. சென்னையில் எந்தப் பத்திரிகை அலுவலகத்திலும், யாராவது ஒருவர், அவரை, முன்கோபி, முரடர், கெட்ட வார்த்தை பேசுபவர், என்றெல்லாம் பயங்காட்டினார். எழும்பூர் ஹைரோடில் அவர் குடியிருந்த வீட்டின் வாயிலில் நின்றபோது எங்களுள் லேசாக ஒரு நடுக்கம் இருந்தது உண்மைதான்.

ஆனால், சிறிது நேரத்தில் முற்றிலும் புறம்பான அனுபவம் நேர்ந்தது. 'யாரது ? ' என்று அவர் எழுந்து வந்து எங்களைப் பார்த்த நிமிஷத்திலிருந்து மிகப்பாங்கான விதத்தில் எங்களுள் பதிந்து விட்டார். அந்த அனுபவம் பின்னால் எனக்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வதற்குத் துணைநின்றது. மகான்களைப் பார்த்தவுடன் மயங்கிய மனிதர்களின் மனநிலை எனக்கு நன்கு புரியலாயிற்று.
எங்கள் சந்திப்புக்கு இப்படி ஒரு சித்திரம் போடலாம். பாரதி பிறந்த பூமி என்றும், புதுமைப்பித்தன் பிறந்த பூமி என்றும் ஏதும் பெருமைகள் இல்லாத வடாற்காடு ஜில்லாவிலிருந்து வந்தவர்கள் - சென்னையின் இலக்கியச் சந்தடியில் அடிபட்டுக் காய்ப்பேறிப்போகாதவர்கள் - கண் விழித்த குழந்தை உலகை எவ்வளவு வியப்புவகையோடு பார்க்கிறதோ, அவ்வாறு கலை இலக்கியம் பூராவையும் பார்க்கிற தன்மை உடையவராய் இருந்ததன்றி வேறு சிறந்த அருகதை ஏதும் இல்லாதவர்கள் - பாரதி மாதிரியான ஓர் இலக்கிய புருஷன் காணக்கிடைக்க வில்லையே என்று அருந்தவம் ஆற்றியவர்களான இளைஞர்கள் - மீசை கூட இப்போதுதான் முளைக்கிற கன்னிப்பருவத் தூய்மையினர் - இவர்கள் சரஸ்வதியின் கதைகள் என்கிற அலைவரிசையால் ஏற்கனவே ஆகர்ஷிக்கப்பட்டு, வழியில் இடைபட்ட மனிதரெல்லாம் எச்சரித்துப் பயமுறுத்தியும், ஒரு நல்விதியால் பிறழாது சென்று, தங்கள் கலை இலக்கியத்தாபங்களுக்கேற்ற இலக்கை அடைந்த சித்திரம் - அந்த சந்திப்பு! அந்த க்ஷணம் முதல் வாழ்வில் பல விஷயங்கள் தெளிவடையத் தொடங்கின. அந்தச் சந்திப்பே பின்னால் எங்கள் சகலமார்க்கங்களையயும் வகுத்தளித்தது. வரலாற்றில் கிறிஸ்து பிறந்தது எவ்வளவு முக்கியமாயிற்றோ, அவ்வளவு எங்கள் தனிப்பட்ட வாழ்வில் அந்தச் சந்திப்பு முக்கியமாயிற்று. காலம் என்கிற பெருங்கூற்று அதனால், எங்களால் இரண்டே இரண்டு பெரும் பிளவுகளாகப் பிளக்கப்பட்டது என்று நாங்கள் இன்றளவும் இறும்பூதெய்துகிறோம். எல்லாமே அவரைச் சந்திப்பதற்கு முன்பு, சந்தித்ததற்குப் பின்பு என்று இரண்டாயின.

அப்புறம் நடந்த நெடிய ஆண்டுகள், எங்கள் பாவனையின் பல்வேறு ஆடை அணிகலன்களைப் புனைந்து கொள்கின்றன.

ஏக்கமொன்றிருந்ததாகச் சொன்னேனே, அது இல்லாமல் போயிற்று.

அதாவது பாரதி வாழ்ந்த காலத்தில் உடனிருந்து பார்த்திருந்தால் எங்களுக்கு என்ன மனக்குறை நீங்கியிருக்கும் என்று எண்ணினோமோ அது நீங்கப்பெற்று, இந்தச் சமூக வாழ்வின்சகல குறைபாடுகளுக்கும் மாற்றாக நாங்கள் ஓர் மாபெரும் நிறைவுற்றோம்.

கலி சாடும் திறன் கண்ணெதிர் கண்ட நிறைவு அது!

தமிழுக்கு வசை கழிய வருவார், மறைந்தார் இலர் எனும் மனநிறைவு அது!

இந்தப் பாவனையால் நாங்கள் மாபெரும் செல்வந்தர்கள் ஆனோம். எங்கள் பொக்கிஷம் நிரம்பலாயிற்று. வாழ்வில் ஓர் பீடு பிறந்தது. எங்கள் தனிப்பட்ட வாழ்வின் துன்பங்களுக்கும், குறைபாடுகளுக்கும் அவரது பெருமையும், சிறப்பும் மாற்றீடாய் விளங்கின. சுற்றுகிற சக்கரத்தின் மோனத்தில் மனித விரல் தொட்டதும் பூத்துச்சொரியும் மண்பாண்டம் போல எங்கள் பாவனை மேலும் மேலும் செழுமை பெறலாயிற்று. காலத்தின் சிறந்த நாயகனை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம்.

எதையும் பாவித்துக் கொள்ளலாம். அது அவரவர் இஷ்டம்; சுலபம். ஆனால், வெறும் பாவனைகள் நிற்கவல்லன அல்ல. மிகுந்த உணர்ச்சி நய முகத்திரைகள் அணிந்த குடும்ப உறவுகள் என்னும் பாவனையே, வெறும் காசு பண உறவென்னும் நிலைக்குக் கிழித்தெறியப்படுகிற நாட்களில், கிட்டத்தட்ட ஒருவரை அவதார புருஷர் என்று பாவித்துக் கொள்வது தொடர்ந்து சாத்தியப்படுகிறது என்றால், அதிலே ஒரு விஞ்ஞானபூர்வமான உண்மை இருக்கிறது. பாவிக்கப்பட்ட பாத்திரம் அந்தப் பாவனைக்குத் தக்கதாயிருந்தது. மேலும் சரியாகச் சொன்னால், எங்கள் பாவனை ஒரு வஸ்துவின் நிழல்போல் இருந்ததெனில், அவர் அந்த வஸ்துவாகவே இருந்தார். புறவெளியில் அடித்துக் கொண்டிருந்த பொது ஒளியில் நாங்கள் இதை ஊர்ஜிதம் செய்து கொண்டோம். இந்த பாவனை சாத்தியப்பட்ட பெருமைக்கு நாங்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும். எங்கள் பாவனையின் நிழல்கள் அழகாக விழுவதற்கு - இந்த தேசத்தின், மொழியின், ஜாதியின் கலாச்சார வேலைச் சித்திரங்களுக்கு இடமளிக்கக் கூடிய வகையில் உருவக அழகுகளோடு விழுவதற்கு, அவர் என்னும் அந்த வஸ்து பரிமாணம் கொண்டிருந்தது.
ஒரு காலத்தில் ஒரு பெண்ணின் காலடி மண்ணை நான் பவித்ரமானதாகக் கருதினேன். பின்னொரு காலத்தில், ஒரு ஜன நெரிசலில் அவளது புஜம் என் மீது உராய்ந்துகொண்டு சென்றபோது கூட எனக்குப் பழைய உள்ளக்கிளர்ச்சி உண்டாகவில்லை. நடைமுறை உலகில் பாவனைகளுக்கு உள்ள பேராபத்துக்கு இது உதாரணம்.

இந்த விபத்து சம்பவிக்காமல் எங்கள் பாவனை வளர்ந்து வந்தது மேலும் விசேஷமாகும்.
அது மட்டும் அன்று.

எங்கள் பாவனைகள் மேலும் கொடியோடிப்படரலாயின. நாங்கள் பாரதியை மட்டுமே பார்த்தோம் இல்லை. அவனுக்கு முன்பிருந்த கம்பனையும் கண்டோம். மெள்ள, மெள்ள, கால விலாசங்கள் எல்லாம் மங்கிப்போய், இதிகாசங்களின் அகாலவெளியில் பிரவேசித்து, அந்தப் பாத்திரங்களின் பண்புகளின் உருவங்களையெல்லாம் பார்த்தோம்.

இது ஒன்றும் நட்சத்திரக்காதல் அன்று. அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடி விதைத்துக்கொள்ளும் பட்டப்பகலின் சோம்பேறிக் கனவும் அன்று. நாங்கள் அவரை அறிந்த இந்த முப்பத்து நான்கு ஆண்டுக் காலத்தை உள்ளடக்கிய அவரது நாற்பத்தைந்தாண்டுக் கால எழுத்து, கூட்டம் கூட்டமென்று இத்தமிழ்நாட்டின் வானமெல்லாம் அவர் வரைந்த லட்சியங்கள், உற்ற நிலங்களில் எல்லாம் அவர் இட்ட விதைகள், ஒரு மாபெரும் கலைஞனின் கம்பீரமும் பேரெழில்களும் துலங்க அவர் வாழ்க்கையை நடத்திய விதம் - என்னும் யதார்த்த வேலைகளில் இருந்துதான் அந்த பாவனைகளின் மத்தாப்புச் சிதறல்கள் வெளிப்படுகின்றன.
சமூகம் என்ற காளிங்கனின் சகல தலைகள் மீதும் கால் பதித்து இவர் நட்டம் பயின்றார் என்று எனக்கு பாவனை.

அவர் தலையைச் சுற்றி ஒரு சக்கரம் சுழல்வது போல் கூட எனக்குத் தோன்றும்.
மேடைகளில் நின்று பேசுந்தோறும், பழைய காலத்துச் சதுக்கங்களில் நின்று பேசிய தீர்க்கதரிசிகளை யொத்தார்.

தான் உகந்த லட்சியங்களை எல்லாம் தன் தோளில் தூக்கிப் பாதுகாக்கும், சொல்லால் மல்யுத்தம் செய்யும் பீமசேனனாகச் சித்தாந்தச் சமர்களில் நின்றார்.

சாக்ரடாஸ், கேட்கும் ஆர்வலரான ஜனம் தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்க எங்ஙனம் சஞ்சரித்திருப்பார் என்பதை அவர் சூழலில் நினைத்துக் கொள்வேன்.

அவர் மட்டும் அல்லாமல் அவரது கதை மாந்தர்களும் எனக்குப் பாவனைகளை வழங்கினர்.
ஒரு கிருஷ்ண நாடகச் சூத்திரம் ' போர்வை ' என்னும் கதையில் பொதிந்துள்ளது.
உலகு அறியாத ஒரு பிராயத்து ஏசுவின் குணங்கள்தான் அவரது ஹென்றியின் குணங்கள்.
இவர் காட்டும் பெண்களின் சுயரூபம் எல்லாம் சக்தியின் சொரூபம்.

' முக்காடிட்டவாறு கதவின் பின்னால் மறைந்து நின்று அடக்க ஒடுக்கமாகப் பேசும் குலஸ்திரீ ஆனாலும் சரி, வாயில் தாம்பூலம் தரித்துக் கொண்டு, வெளித்திண்ணையில் உட்கார்ந்து போவோர் வருவோரைப் பார்த்து சிரிக்கும் பரஸ்திரீ ஆனாலும் சரி, நான் பராசக்தியையே காண்கிறேன் ' என்னும் பரமஹம்ஸரின் வாக்கியத்திற்குப் பொருத்தமாக அந்தப் பாத்திரங்கள் வந்து நிற்கும். நான் பிறமொழிகள் அறியேன். தமிழில் பெண்களைப் பரமஹம்ஸர் போல் பார்த்த எழுத்தாளர் அவர்தான். ' அந்த அக்காவைத் தேடி ' கதையில், பெண்களின் மேல் சுமத்தப்பட்டுள்ள வேலைப்பளு என்கிற கொடுமைக்கு, அவர் ஒரு லெனின் அளவு மனமிரங்கியிருப்பதைக் காணலாம்.

பெண் விடுதலையின் பேரால் நடக்கும் பல அசட்டுக் கூத்துக்களை அவரால் சகிக்க முடியாதெனினும், பெண்களின் மாபெரும் வக்கீல் என்று நான் அவரை நினைக்கிறேன்.
எங்கள் பாவனைகள் குறித்து, இது ஒரு குருட்டு வழிபாடாகக் கொள்ளப்படும் என்கிற லஜ்ஜையே ஏதும் எங்களுக்கு உண்டாகவில்லை. வழிபடத்தக்கனவற்றை வழிபடவேண்டும் என்பது எமது மரபு. வழிபடத்தக்கனவற்றை வழிபடாவிட்டால், வழிபடத்தகாத சைத்தான்களுக்கு எல்லாம் சலாம் வரிசை வைக்க வேண்டி வரும் என்று நாங்கள் பேசுவோம்.

- அதுவுமன்றி, குருவை வழிபடுவதன்றி வேறு என் செய்வது ?

மறுபடியும் நான் என் பாவனையில் தொற்றிக் கொள்கிறேன்.

அவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவை பலமுறை நாங்கள் குரு சிஷ்யச் சாயலில் கருதியும் கூறியும் பார்த்தோம். இத்தகைய ஆபத்துகளை அவர் அறியாதவரா என்ன ? நாங்கள் குரு என்று பணிந்தால், ' சற்குரு ' என்று உடனே அதை யாருக்கோ பார்சல் செய்து விடுவார். குருசிஷ்ய உறவுமுறைகள் இறுதியில் எய்தும் கோளாறுகளிலிருந்து தப்பிப்பதில் அவர் சதா காலமும் ஜாக்கிரதையாயிருந்தார்.

ஆனாலும், இந்தக் காலக்கட்டத்தில் எழுதக் கோல் எடுத்த எங்களுக்கு அவர் குருதான்.
அவரால்தான், வாழ்க்கையைக் கவனிப்பதற்கும் ஒரு படைப்புக்கும் இருக்கிற ஆழ்ந்த சம்பந்தத்தை நாங்கள் அறிந்து கொண்டோம்.

அவரால்தான் ஒரு காட்சியைப் புரிந்து கொள்வதற்கு நாங்கள் கற்பிக்கப்பட்டோம்.
அவரால்தான் இந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் வாரித் தழுவியவாறே புதியதோர் வாழ்வை வார்ப்பது எப்படி என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.

அவரால்தான் ஓர் அடிமையின் போலி மரியாதைப் பண்புகளை அறியாத சோஷலிஸக் குடிமகனின் அடிப்படைப் பண்புகளை அறிந்தோம். இந்தக் கல்வியை இவ்வளவு நுணுக்கமாக அதற்கென இருக்கும் கட்சிகள் கூட அவ்வளவு தாக்கத்துடன் தந்ததில்லை.

வாதிப்பது என்னும் அருங்கலையை அவரால் நாங்கள் அறிந்தோம். ' வாதத் தருக்கமெனும் செவி வாய்ந்து அதில் துணிவெனும் தோடணிந்தாள் ' என்று சரஸ்வதி தேவியைப் பாரதி விவரித்தபோது, எனக்கு அந்தத் தோடு அவரென்று தோன்றிற்று.

ஜில்லாக்களையும், ஜாதிகளையும், மனுஷச் சண்டைகளையும், புலன்களுக்கு அளிக்க வேண்டிய மேலான நுகர்வுகளையும், வாழ்வின் தர்மம் என்று வர்ணிக்கப்படுவதையும், வார்த்தைப் பிரயோக நுணுக்கங்களையும் - இன்னும் சொல்லப் போனால், திவ்ய க்ஷேத்திரங்களையும், கதைகள் சொல்லும் நதிகளையும், நித்யானுஷ்டான நியமக் கருமங்களின் நேர்த்தியையும் பற்றிக்கூட அவர் எங்களுக்கு நெடுங்காலம் சிறுகச் சிறுகக் கற்பித்ததால் நெஞ்சார நாங்கள் குரு என்று துதிக்கலாம்.

குறைந்தபட்சம், எங்கள் தனிமனித வாழ்க்கை நெறிகளிலும், பொது உலக லட்சியங்களிலும், அவருக்கு இழுக்கு உண்டாக்காதவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். இது குறித்து திருப்தியே. ஆனால், அவரோ, அடிப்படையில் நாம் எல்லாருமே சிக்கியுள்ள கண்ணிகளைப் பற்றிப் பேசுகிறார். எனவே, நமக்குக் கவலையுண்டாகிறது.

கோஷ்டி சேர்த்துக் கொள்பவர்களைப்பற்றி நான் அறிவேன். எல்லாருடனும் நயப்பாங்குடனேயே நடந்து தீருவது அவர்கள் தலைவிதி. சுடரும் சாம்பரும் தெறிக்கும் ஒரு ருத்ரனின் தேஜஸ் கொண்ட இவருக்குச் சேரும் கோஷ்டி, நைச்சியத்தால் பெற்ற வெறும் கலக மானுடப் பூச்சிகளின் கோஷ்டி அன்று. அகண்டகார இலக்கிய போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப் பூரணமாய், ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிடலாம் என்று, தாம் எடுத்த தேகம் விழுமின் புசிப்பதற்குச் சேர வந்த ஜெகம் அது. சத்தியதரிசனம் காணும் எழுத்து என்பதைச் சரியாகப் புரிந்துகொண்ட சமகால நபர்களை எல்லாம் அவரது கோஷ்டி என்று சரித்திரம் நாளை அடையாளம் காட்டும்.

காலங்கள் தோறும் பிறந்து, ஒவ்வொரு ராகத்தையும் புதிதாகவும் அற்புதமாகவும் இசைத்துக் காட்டுகிற மகத்தான சங்கீதக் கலைஞர்களைப் போல், வல்லவர்களும், தகுந்தவர்களும் எதிர்காலத்தில் வந்து, எனது இந்தப் பாவனைகளுக்குக் காரணமான இவரை மேலும் சிறப்பாக விவரிப்பார்கள். அந்தத் தலைமுறை இவரைப் போல் ஒருவரை மறுபடியும் பார்பபதற்கு ஏங்கும்.

நன்றி: நானும் எனது நண்பர்களும், தொகுத்தவர்: ஜெயகாந்தன் - 1995 - தேன்மழைப் பதிப்பகம், சென்னை - 16

நன்றி - திண்ணை

தவறுகள், குற்றங்கள் அல்ல...! - ஜெயகாந்தன்

தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை.
மென்மையான சுபாவமுடைய தெரஸாவின் மிருதுவான குரலில் வெளிவந்த அந்த வார்த்தைகளில் இன்னும் கூட மரியாதை கலந்திருந்தது. அவரைப் பற்றி அவளுக்கு வருத்தம்தான் மிகுந்திருந்ததே தவிர, அவரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணமோ, விரோதமோ அவள் முகபாவத்தில் தெரியவில்லை.

'சீ' என்று அவள் காறித் துப்பியோ அல்லது 'யூ டாமிட்' என்று கத்தியோ தன்னை அவமதித்திருந்தால் கூடத் தேவலாம் போலிருந்தது நாகராஜனுக்கு. அவ்வித அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டதுண்டு.

அது மாதிரி சந்தர்ப்பங்களில் தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்று நாகராஜனுக்குத் தெரியும். அவருடைய அதிகாரம், செல்வாக்கு, தோரணை, வயது, சமூக அந்தஸ்து இவை எல்லாமோ, அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றோ அவருக்குத் துணை நிற்கும். 'என்ன நின்று என்ன? பட்ட அவமானம் பட்டதுதானே! எவ்வளவு பட்டும் எனக்குப் புத்தி வரவில்லையே!' என்று தன்னையே தன் மனத்துள் கடிந்துகொண்டபோது, அவரது கண்கள் வெட்கமற்றுக் கலங்கின. அவர் அவமானத்தாலும், தன் மீதே ஏற்பட்ட அருவருப் பாலும் தலைகுனிந்து உட்கார்ந்து, தன்னைப் பற்றிக் கசப்புடன் யோசித்தார்.

'சீ..! நான் என்ன மனுஷன்! வயது ஐம்பது ஆகப் போகிறது. தலைக்கு உயர்ந்த பிள்ளையும், கல்லூரியில் படிக்கும் பெண்ணும்... அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்திருந்தால் இந்நேரம் நான்கு பேரக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருப் பேன்! சீ..! நான் என்ன மனுஷன்?'என்று பல்லைக் கடித்துக்கொண்டார். இரண்டு கைகளையும் கோட்டுப் பாக்கெட்டுக் குள் நுழைத்து, விரல்களை நெரித்துக்கொண்டார். கண்களை இறுக மூடி, நாற்காலியில் அப்படியே சாய்ந்து, தன்னை அறி யாமல், 'வாட் ஷேம்!' என்று முனகியவாறே, தலையை இடமும் வல மும் உருட்டினார். அவ ருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து வந்து நின்றது.
சற்று முன்...

ரத்தமாகச் சிவந்து, நெற்றியில் சிகை புரள, உதடுகள் தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களிலிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீருடன், ''ப்ளீஸ்... லீவ் மீ! ரிக்ரெட்... ஃபார் எவ்ரிதிங்...'' என்று அவரிடமிருந்து திமிறி விலகிச் சென்று, உடல் முழுவதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்...

அவள் கண்களிலிருந்து பெருகிய நீர், அவள் தனது ஸ்கர்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்துத் துடைப்பதற்குள் 'பொட்'டென்று அவரது டேபிளின் மீது... இந்தக் கண் ணாடி விரிப்பின் மேல் விழுந்து, இதோ இன்னும் உலராமல்சிதறிக் கிடக்கிற இரண்டு நீர் முத்துக்கள்...

அவர் எதிரே நின்று தான் அழுதுவிட்ட நாகரிகமற்ற செயலுக்கு வருந்தி, ''...ஆம் ஸாரி'' என்று தனக்குள்ளேயே விக்கியவாறு, கர்ச்சீப்பில் முகம் புதைத்துக் கொண்டு அங்கிருந்து தனது அறைக்கு ஓடினாளே... அதோ, அவளது ஸ்லிப்பர் சப்தம் இப்போதுதான் ஓய்ந்து, 'பொத்'தென அவள் நாற்காலியில் விழுகிற ஓசை...

அவர் காதில் அவளது வார்த்தைகளும்... அவர் நினைவில், அவமானமும் துயரமும்கொண்டு ஓடினாளே அந்தக் காட்சியும்தான் இந்தச் சில நிமிஷங்களில் திரும் பத் திரும்ப வந்து நிற்கின்றன.

அவள் எவ்வளவு பெருந்தன்மையானவள்! எவ்வளவு உயர்ந்த, மென்மையான இயல்புகள் கொண்டவள் என்பதை உணர் கையில் அவருக்கு நெஞ்செல்லாம் வலிக்கிறது.

'நான் அவளிடம் இப்படி நடந்துகொள்வேன் என்று அவள் கனவுகூடக் கண்டிருக்க மாட் டாள்' என்பது புரிகையில், தன்னைத்தானே இரு கூறாகப் பிளந்துகொள்ளலாம் போலிருக்கிறது அவருக்கு. ஒரு நிமிஷத்தில் தான் அடைந்துவிட்ட வீழ்ச்சியை எண்ணி எண்ணி அவர் நெஞ்சைப் பிசைந்துகொள்கிறார்.

'தெரஸாவுக்கு எப்படிச் சமாதானம் கூறுவது? இந்த மாசை எப்படித் துடைப்பது? மறுபடியும் அவள் மனதில் தனது பழைய கௌரவத்தை எவ்விதம் நிலை நிறுத்துவது?'

'ம்..! அவ்வளவுதான். எல்லாம் போச்சு! கொட்டிக் கவிழ்த்தாகி விட்டது! எவ்வளவு பெரிய நஷ்டம்?' - நாகராஜன் நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுகிறார். நெற்றி வியர்க்க வியர்க்கத் துடைத்துக்கொள்கிறார். எங்கா வது போய் அழலாம் போல் தோன்றுகிறது.

தான் சில நாட்களாகவே அவள்பால்கொண்ட சபலங்களுக்கு அவளது நடவடிக்கைகள், புன்சிரிப்பு, உபசரிப்பு... எல்லாவற் றுக்கும் மேலாகத் தனது வயதை யும், தான் அவளிடம் காட்டுகிற பரிவையும் உத்தேசித்து ஒரு தகப்பனிடம் தெரிவிப்பதுபோல் அவள் தனது வாழ்க்கையின் அவலங்களையும் ஏமாற்றங்களை யும் கூறி மனம் கலங்கியது முதலிய வற்றைச் சாதகமாகக்கொண்டு, அவளுக்குத் தன் மீது நாட்டம் என்று நம்பிய தனது கேவலத்தை எண்ண எண்ண, உள்ளமெல்லாம் குமட்டுகிறது அவருக்கு.
அப்படியரு அசட்டு நம்பிக்கையில்தான், அவள் தடுக்கமாட்டாள் என்ற தைரியத்தில் அவர் அவளிடம் அப்படி நடந்துகொண்டார்.

இந்தப் பத்து நாட்களாய், வழக்கமாகச் சாப்பாடு பரிமாற வருகிற அந்தக் கன்னையா சொல்லிக்கொள்ளாமல் ஓடிப் போனானே, அந்தத் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் 'லஞ்ச்' டயத்தில் தெரஸாவும் நாகராஜனும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

மத்தியானத்தில் ஆபீஸிலேயே சாப்பிடுகிற வழக்கத்தை உண்டாக்கியவன் கன்னையாதான். அவன் அவர் வீட்டோடு வந்து சேருவதற்கு முன்... இரண்டு வருஷத்துக்கு முன்னால் வரை, அவர் லஞ்ச்சுக்கு மத்தியானத்தில் வீட்டுக்குப் போய்த்தான் வரு வார். ஆனால், வீட்டுக்குப் போனால் 'சாப்பிட்டோம், வந் தோம்' என்று முடிகிறதா? கொஞ்சம் இளைப்பாற வேண்டும்; படுக்க வேண்டும்; சிறு தூக்கம் போட வேண்டும். திரும்ப ஆபீஸ§க்கு வர, நாலு மணி ஆகிவிடுகிறது.

நாகராஜன் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் ஆபீஸ§க்கு வரலாம்; போகலாம். அவரை யாரும் கேட்க மாட்டார்கள். அந்தக் கம்பெனியின் முதலாளிக்கு அடுத்தபடி அதிகாரம் உள்ளவர் அவர்தான். சில விஷயங்களில் முதலாளிக்கும் கொஞ்சம் மேலே என்று சொல்லுகிற அளவுக்குப் பொறுப்பும் உடையவர். இருபத்தைந்து வருஷ காலமாக இந்தத் தலைமை ஆபீஸில் இருந்துகொண்டே மாகாணம் முழுவதும் பல கிளைகளைத் தோற்றுவித்து, இன்றிருக்கும் நிலைக்கு இந்த ஸ்தாபனத்தை உயர்த்தியவர் நாகராஜன் என்றால், அவர் அந்த அளவுக்குப் பொறுப்பும், முதலாளிகளின் நம்பிக்கையையும் பெற்றிருப்பதனால்தானே முடிந் திருக்கிறது!
கன்னையா தன் வீட்டோடு வந்த பிறகு, ஆபீஸ§க்குச் சாப்பாடு கொண்டுவந்து, தானே அவருக் குப் பரிமாறிவிட்டுப் போக ஆரம்பித்தான். அவர் முக்கியமாக வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவதற் கான காரணம், தானே போட்டுக் கொண்டு சாப்பிடப் பழகாதது தான். அது அவருக்குப் பிடிப்பது இல்லை.

கன்னையா, நாகராஜன் வீட்டு வேலைக்காரனோ சமையற் காரனோ என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவன் அவரது சொந்த அத்தை மகன் என்பதும், சம வயதுடைய பால்ய கால நண்பன் என்பதும் ரொம்பப் பேருக்குத் தெரியாது. தெரியும்படி அவன் நடந்துகொள்ளவும் மாட்டான்.

அவனுக்குக் குடும்பம், கல்யாணம், வீடு, உறவு என்றெல்லாம் ஒன்றுமே ஏற்படவில்லை. சொந்தக்காரர்கள் வீடுகளில்... அவனைச் சொந்தக்காரன் என ஏற்றுக்கொள்கிற வீடுகளில் வந்து கொஞ்ச நாள் தங்குவான். தங்கி இருக்கிற காலத்தில், அந்த வீட்டுக்கு அவன் ஒரு பலமாக விளங்குவான்

குழந்தைகளுக்குத் தாதி மாதிரியும், கூப்பிட்ட குர லுக்கு ஓடி வரும் சேவகனாகவும் இருப்பான். தோட்டங்கள் கொத் துவான்; துணி துவைப்பான்; கடைக்குப் போவான்; கட்டை பிளப்பான்; சுமை தூக்குவான்; சுவையாகப் பேசிக்கொண்டும் இருப்பான்.

'சொல்லிக்கொள்ளாமல்கூட ஓடிப் போனானே அந்த ராஸ்கல்!' என்று இப்போது பற்களைக் கடிக்கின்ற நாகராஜன், சற்று முன்னால், தான் செய்த காரியத்துக்குக்கூட அவன்தான் பொறுப்பு என்று சுற்றி வளைத்துப் பழியை அவன் தலையில் சுமத்த முயல்கிறார்.

'அந்தப் பயல் ஒழுங்காக வந்து மீல்ஸ் ஸெர்வ் பண்ணி இருந்தால், இவள் இவ்வளவு நெருக்கமாக வந்திருக்க மாட்டாளே!' என்று நினைத்தபோது, கன்னையாவைப் பற்றிய நினைவுகள் அவருக்கு மிகுந்தன.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய நாகராஜன், காரை ஷெட்டில் நிறுத்துவதற்காகத் திரும்பியபோது, ஷெட்டின் ஒரு மூலையில் தாடியும் மீசையுமாய் ஒரு பரட்டைத் தலையன் எழுந்து நிற்பதைப் பார்த்து, கார் விளக்கை அணைக்காமல் வெளியே தலை நீட்டி, ''யாரது, அங்கே?'' என்று மிரட்டுகிற தோரணையில் கேட்டார்.

அவன் அருகில் ஓடிவந்து, ''நான்தான் கன்னையா. என்னைத் தெரியலியா மாப்பிளே?'' என்று ரகசியம் போல் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, நாக ராஜனுக்கு மனசை என்னவோ செய்தது.

''என்னடா இது கோலம்? வா... வா!'' என்று அழைத்து வந்து, வீட்டில் உள்ளவர்களுக்குப் பரிச்சயம் செய்து வைத்து, அங்கேயே தங்கி இருக்கச் சொன்னார். கொஞ்ச நாட்களில் அவரது குடும்பத்துக்கு அவன் மிகவும் தேவைப்பட்ட மனிதனாக மாறி இருந்தான்.

ஆரம்பத்தில், அவனை வீட்டில் சேர்த்துக்கொண்டதற்காக மற்ற உறவினர்கள் எல்லாம் நாகராஜனையும் அவன் குடும்பத் தினரையும் மிகவும் எச்சரிக்கை செய்தவாறு இருந்தனர். ஆனால், நாகராஜன் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அவனைச் சேர்த் துக்கொள்வது தனது கடமை என்று அவர் நினைத்தார். எனினும், அந்தக் காரணங்களை அவர் யாரிடத்தும் இதுவரை பகிரங்கப்படுத்திக்கொண்டது இல்லை.

அந்தப் பழைய பால்ய அனுபவங்களின் நினைவுகளை, எப்போதாவது தனியாக இருக்கையில் அவனோடு பகிர்ந்துகொண்டு மகிழ்வார் நாகராஜன்.
அந்தக் காலத்தில் இந்தக் கன்னையா ரொம்ப நல்ல பிள்ளை யாக இருந்தான். ஒன்றுமே தெரி யாத அவனை புகை பிடிக்கப் பழக்கியதும், மதுவருந்தச் செய்த தும், அந்த மாதிரியான விளை யாட்டுகளில் ஈடுபடுத்தியதும் நாகராஜன்தான். அவற்றை அவர் மறக்கவில்லை. அதன் பிறகு, அவை யாவும் ஏதோ ஒரு பருவத் தின் கோளாறு என்று ஒதுக்கி - அல்லது, உண்மையிலே ஒரு பருவத்தின் கோளாறுகளாக அவை இவரிடமிருந்து நீங்கிய பின், இவரால் பழக்கப்படுத்தப் பட்ட அந்தக் கன்னையன் அவற்றிலேயே வீழ்ந்து அழுந்தி மூழ்கிக்கொண்டு இருப்பதாகக் கேள்விப்பட்ட காலங்களில், நாகராஜன் குற்ற உணர்வினால் உறுத்தப்பட்டிருக்கிறார்.

நாகராஜனைப் பொறுத்தவரை அந்தப் பழக்கங்கள் யாவும் மகா பாவங்கள் என்று கருதுகிற ஒழுக் கக் கண்ணோட்டம் எதனாலும் அவனுக்காக அவர் வருந்த வில்லை. இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி ஒருவன் வாழ்க்கை யின் சகல மரியாதைகளையும் இழப்பது பரிதாபகரமான வீழ்ச்சி என்பதனால், அவனிடம் அவர் அனுதாபம்கொண்டார்.

இப்போதும்கூட நாகராஜன் எப்போதாவது பார்ட்டிகளிலும், சில சமயங்களில் வீட்டிலேயேகூட மது அருந்துவது உண்டு. அது யாருக்கும் தெரியாது. நாகராஜ னும் புகை பிடிக்கிறார்; பெண்களை இச்சையோடு பார்க்கிறார்

எல்லாவற்றுக்கும் ஒரு அத்தும் அளவும் இல்லாதபோதுதானே மனிதன் தலைகுப்புற வீழ்ந்து விடுகிறான்!

அப்படி வீழ்ந்துவிட்டவன் கன் னையா. அவன் அப்படி விழக் காரணம், ஏதோ ஒரு வகையில் தானே என்று நினைக்கையில், அவனைப் பார்த்துப் பெருமூச் செறிவார் நாகராஜன்.

பிறர் பார்வையிலும் சமூக அந்தஸ்திலும் அவன் வீழ்ந்து விட்டவன்தான் என்றாலும்கூட, அவனைத் தனது அந்தரங்கத்தில் சமமாகவே பாவித்தார் நாக ராஜன். அவனும் அதே மாதிரி அந்த எல்லை மீறாது அவரோடு சமத்துவம்கொண்டான்.

எப்போதாவது, தான் மது அருந்தும்போது அவனையும் அழைத்து, அவனுக்கும் கொடுப்பார். தனக்கு மகுடாபிஷேகம் நடந்த மாதிரி களி கொள்வான் அவன். அப்போதும்கூட மிகவும் வெட்கத்தோடு, கையில் தம்ளருடன் ஒரு மூலையில் போய்த் திரும்பி நின்றுகொண்டு, மறை வாகக் குடிப்பான். ''போதும்... போதும்'' என்று சொல்லித் தம்ளரை வைத்துவிட்டு ஓடி விடுவான். கேட்டால், ''நமக்கு இந்தச் சரக்கெல்லாம் சரிப்பட்டு வராது. ரெண்டு ரூபா பணம் குடு மாப்பிளே, எதுக்கு இதெ வேஸ்ட் பண்றே?'' என்று பணத்தை வாங்கிக்கொண்டு போனால், இரவில் எந்நேரம் வந்து அவன் ஷெட்டில் படுத்துக்கொள்கிறான் என்று யாருக்கும் தெரியாது.

யாருக்கும் தெரியாமல் அந்தச் செலவுக்காக வாரத்தில் இரண்டொரு தடவை அவர் அவனுக்குப் பணமும் கொடுப்பார்.

அவன் சாப்பாடு பரிமாறிச் சாப்பிடுவது, அவருக்கு எப்போ தும் ரொம்பத் திருப்தியாக இருக்கும். வீட்டில் இருக்கும்போது கூடச் சில சமயங்களில் அவன்தான் அவருக்குப் பரிமாறுவான். நாகராஜனின் மனைவி ஸ்தூல சரீரி. அவளுக்கு உடம்புக்கு நோய் வந்துவிடும். ஈஸிசேரிலிருந்து அவளை எழுந்து வரச் செய்வதைக் கூடியவரை தவிர்க்கவே விரும்புவார் அவர்.
சில சமயங்களில் டிரைவர் இல்லாதபோது, கன்னையாவோடு தனியே காரில் செல்கையில், அவனோடு தமாஷாகச் சமத்துவமாய் பழைய காலம் மாதிரி பேசி மகிழ்வார் நாகராஜன். அது மாதிரிச் சமயங்களில் அவனும் தன்னை மறந்து 'டா' போட்டுக் கூடப் பேசுவான். அது ரொம்ப இயல்பாக, சுருதி பிசகாமல் இருக்கும்.

''டேய், கன்னையா..! நம்ம செக்ரட்டரி அம்மா எப்படி இருக்கா?'' - புடவை கட்டாத அந்தச் சட்டைக்காரி எதிர்ப்படும்போது, அவன் நாணிக்கோணி நிற்பதை அவர் பல தடவை கண்டிருக்கிறார். அதனால்தான் கேட்டார். அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் முதலில் அவன் சிரிப்பான்.

''சொல்லு, உனக்கு என்ன தோணுது அவளைப் பார்த்தா?''

''எனக்கு என்ன தோணுது?'' - மார்பில் முகவாய் படிகிற மாதிரி தலை குனிந்துகொண்டான் கன்னையா. கொஞ்சம் நேரம் கழித்து ஒரு அசட்டுச் சிரிப்புடன், ''நீ விட்டு வெச்சிருப்பியா மாப்பிளே! எனக்குத் தெரியும்டா!'' என்று முழங்கையால் இடித்துக் கொண்டு, கிளுகிளுத்துச் சிரித்தான்.

''சீ... சீ! அதெல்லாம் இல்லை. நீ முன்ன மாதிரியே என்னை நெனைச்சிக்கிட்டு இருக்கியா? வயசாச்சே!'' என்பார் நாகராஜன்.

''அப்படின்னா அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது தெரியுது!'' என்று கண்களைச் சிமிட்டி, அவரைக் குஷிப்படுத்தினான் அவன்.
'அந்தப் பாவிதான் இந்த எண்ணத்துக்கு முதல் பொறி வைத்தவனோ?'
இவ்வளவும் அந்தரங்கமாய்ப் பேசுவானே தவிர, அவள் முன்னிலையில் இடுப்பில் கட்டிய துண்டை அவிழ்க்காமல், தலை நிமிர்ந்து பார்க்காமல், அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். தட்டைப் பார்த்து, எது வாய்க்கு ருசிக்கிறது என்று அறிந்து, கேட்குமுன் பரிமாறுவான்.

அவன் பரிமாறுவதையும், அவருக்குப் பணிவிடை புரிவதையும் தெரஸா பார்த்திருக்கிறாள்.

அதனால்தான், அவன் வராமல் அன்று அந்த டிரைவரே அவருக்குப் பரிமாறத் தெரியாமல், இவர் போட்ட சத்தத்தில் பயந்து, கையில் உள்ளதைக் கீழே போட்டு, இவர் ஒன்றுமே சாப்பிடாமல் 'எடுத்துக்கொண்டு போ!' என்று கத்திவிட்டு, அன்று ஓட்டலில் இருந்து டிபன் வரவழைத்துச் சாப்பிட்டதை எல்லாம் கவனித்த தெரஸா, அடுத்த நாள் மத்தியானம் அவர் தானே பரிமாறிக்கொள்ள முனைகையில்...

''உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் பரிமாறலாமா?'' என்று விநயத்துடன் ஆங்கிலத்தில் கேட்டாள்.

அப்போது நாகராஜனுக்குக் கன்னையா நினைவு வந்தது. 'அவளுக்கு உம்மேலே ஒரு கண்ணு இருக்குது. அது எனக்குத் தெரியுது!'

நான்கு வருஷமாகத் தன்னிடம் ஸ்டெனோவாகப் பணியாற்றும் தெரஸாவை அன்றுதான் அவர் அப்படி ஒரு பார்வை பார்த்தார். ''யூ லுக் நைஸ் டுடே!'' என்று அவள் அழகைப் புகழ்ந்தார்.

''தாங்க் யூ'' என்று அவள் நன்றி கூறினாள்.

அன்று தெரஸாவையும் தன்னோடு அமர்ந்து சாப்பிடச் சொன்னார் நாகராஜன்.
முதலில், தான் டிபன்பாக்ஸில் கொண்டுவந்து இருக்கும் எளிய உணவை அவரோடு உட்கார்ந்துசாப் பிட, அவள் தயங்கினாள். ஆனால், அவர் மிகவும்வற் புறுத்தவே, அவளும் அவர் எதிரே அமர்ந்து, ஒரே மேஜையில்சாப்பிட்டாள்.

சாப்பிடும்போது கன்னையாவைப் பற்றிக் கேட்டாள். ''வேர் இஸ் தட் மேன்?''

''அந்த ராஸ்கல் ஐந்நூறு ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல்ஓடிப் போய்விட்டான்'' என்று ஆத்தி ரமாகக் கூறினார் நாகராஜன்.

ஐந்நூறு ரூபாயா? பணத்தை அவ்வளவு அஜாக்கிரதையாக வேலைக்காரர்கள் கண்படவைக் கலாமா?”

''அவன் வேலைக்காரன் அல்ல; என்னுடைய கஸின்!''

''! ஆம் ஸாரி!''

''பரவாயில்லை. திருட்டுப் பயலுக்கு வேலைக்காரன் பட்டமே கொஞ்சம் அதிகம்தான்!''

''புவர் மேன்!'' என்று அவள் அவனுக்காக வருத்தப் படுவது அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'ஹி வாஸ் வெரி நைஸ் அண்ட் ஹெல்ப்ஃபுல்!'' என்று முனகிக் கொண்டாள்.

நாகராஜனும் பெருமூச்செறிந்தார். தனக்கு வந்திருந்த உணவு வகைகளை அவளோடு பகிர்ந்து கொண்டார். அவள், அவர் அன்போடு தருவதை நன்றியோடு ஏற்றுக்கொண்டாள். அவளும் கன்னையா மாதிரி மிகவும் பரிவோடும், ருசி அறிந்தும் பரிமாறி னாள். மிகுந்த உரிமையோடு அவளது டிபன்பாக்ஸ் உணவையும் அவர் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்.
ஆபீஸ் விஷயம் தவிர வேறெதுவும் பேசாத அவர் கள், இந்த 'லஞ்ச் அவரில்' பொது விஷயங்களையும், சொந்த விஷயங்களையும் பரிமாற்றம் செய்துகொள்ள ஆரம்பித்தனர்.

முன்பெல்லாம் அந்த 'ஏர் கண்டிஷன்ட்' அறையில் அவருக்காக உள்ள ஈஸிசேரில், சாப்பிட்ட பிறகுசற்றுப் படுத்துக் கண்ணயர்வார். இந்தப் பத்து நாட்களாக, ஈஸிசேரில் சாய்ந்து, மேஜையருகே உட்கார்ந்திருக்கும் தெரஸாவுடன் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தார் நாகராஜன்.
அவள் தன்னைப் பற்றி எதையுமே மறைக்காமல், நம்பிக்கைக்குரிய ஒரு பெரிய மனிதரின் பரிவுக்குக் காட்டுகிற நன்றியுணர்ச்சி போலும், இத்தகைய ஒரு கனவான் தன்பால் காட்டுகிற ஈடுபாட்டுக்குக்கொள்ளும் பெரு மிதம் போலும் மனம்விட்டுப்பேசி னாள். குழந்தை மாதிரி சிரித்தாள். தனது சிரிப்பாலும் பேச்சாலும் அவர் மிகவும் மகிழ்ச்சியுறுகிறார் என்பதால், இவரை மகிழ்ச்சி யூட்டவே அவள் சிரித்தும் கல கலப்பாகப் பேசியும் ஒரு நல்ல உடனிருப்பாய்த் திகழ்ந்தாள். அவர் அவளது பேச்சை மாத்திரம் அல்லாது, அவளையே முழுமை யாய் ரசித்தார். அவளது சிரிப்பை யும் பரிவையும் கலகலப்பையும் மோகனமான சாகஸமாகக் கருதி, தன்னை ஒவ்வொரு நாளும் முழுமையாய் இழக்க முனைந்தார்.

சில தினங்களுக்கு முன் அவள் அடுத்த வாரம் வரப்போகும்தனது பிறந்த தினத்துக்கு வீட்டுக்கு வர வேண்டும் என்று அவரை அழைத் தாள். இந்த நான்குஆண்டுகளாக அவருக்கு ஒரு ஸ்வீட் தந்து ஆசி பெறுவதைத் தவிர, அவரை விருந்துக்கு அவள்அழைத் ததில்லை. அதற்குக் காரணம், இந்த நான்கு ஆண்டுகளாய்அவர் அவளுக்கு எஜமான் ஸ்தானத்தில் இருக்கிற ஒருவராக இருந்துஇப் போதுதானே ஒரு நல்ல நண்ப ராகவும் மாறியிருக்கிறார் என்கிற இயல்பான காரணத்தை விடுத்து இல்லாத ஏதோ ஓன்றைக் கற்பித் துக்கொண்டார் நாகராஜன்.

''வில் இட் பி காக்டெயில் பார்ட்டி'' என்று கண்களைச் சிமிட்டியவாறு அவர் கேட்ட போது...

''அஃப்கோர்ஸ்! என் தந்தை- தாய் இருவருமே பர்மிட் ஹோல் டர்கள்'' என்று அவள் கூறினாள்.

''நீ ஏன் ஒரு பர்மிட் வாங்கிக் கொள்ளக் கூடாது?'' என்றார் நாகராஜன்.

''நோ! நான் குடிப்பதில்லை'' என்றாள் தெரஸா.

''உன் பிறந்த தினத்தன்று நான்உன்னைக் குடிக்க வைக்கப் போகிறேன் பார்!'' என்றார் நாகராஜன்.

அவள் சிரித்துக்கொண்டே, ''அது மாதிரியான விசேஷ சந்தர்ப்பங்களில் 'பார் கம்பெனி'ஸ் ஸேக்' கொஞ்சம் ருசி பார்க்கிறது உண்டு'' என்று சொல்லித் தொடர்ந்து அவள் ஆங்கிலத்தில் எப் படிக் கிறுஸ்துமஸ்ஸின்போது அவளது தந்தை வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் ஓயின் தருவார் என்று விளக்கினாள்.

தங்களது கலாசாரப்படி குடிப்பதும், ஆண்களும் பெண்களும் இணையாக நடனமாடுவதும் எவ்வளவு பரவசமிக்கது என்பதைத் தன்னை மறந்த லயத்துடன் அவள் அவருக்குச் சொன்னாள். அவ்வி தம் சொல்லிக்கொண்டு இருக்கையில் அவள் தனது போன வருஷப் பிறந்த தின வைபவத்தின் நிகழ்ச்சிகளை நினை வில்கொண்டாள். அந்த நினைவில், அப் போது அவளது நம்பிக்கைக்கும் காத லுக்கும் பாத்திரமாய் இருந்து, பின்னர் அவளிடமிருந்து விலகிப்போன ஒரு பாய்ஃப்ரெண்டைப் பற்றியும் அவரிடம் விவரித்தாள். அப்போது அவள் சற்று உணர்ச்சிவயமானாள். பிறகு தானே சமாளித்துக்கொண்டு புன்னகை செய்தாள்.

இவை எல்லாவாற்றையுமே நாகராஜன் வேறு ஒரு கோணத்திலிருந்து புரிந்து கொண்டார்.

அதன் விளைவுதான் சற்று நேரத்துக்கு முன் வழக்கம் போல் உல்லாசமாகச்சாப் பிட்டு முடிந்ததும் அவள் மேஜைஅருகே அமர்ந்து தனது கைப் பையிலிருந்து சிறு கண்ணாடியை எடுத்து உதட்டுச் சாயத்தை சரி செய்துகொண்டு இருக்கையில் டவலில் கைத் துடைத்துக்கொண்டே அவள் பின்னால் வந்து நின்ற நாகராஜன்...

சற்று முன்...

ரத்தமாய்ச் சிவந்த முகத்தில் சிகை புரள, உதடுகள்தீப்பட்டவை போல் சிவப்புச் சாயம் கலைந்து துடிதுடிக்க, கண்களி லிருந்து கலங்கிச் சுரந்த கண்ணீ ருடன் ''ப்ளீஸ் லீவ் மீ! ரிக்ரட் ஃபார் எவ்ரி திங்...'' என்று அவரி டமிருந்து திமிறி விலகி,உடல்முழு வதும் நடுநடுங்க அவள் நின்ற தோற்றம்...
தெரஸாவின் அந்த முகமே அவர் நினைவில் வந்து நிற்கிறது.

மணி இரண்டு.

மத்தியான இடைவேளைக்குக் கலைந்து போன ஆபீஸ் ஊழியர் களின் நடமாட்டமும் டைப் ரைட்டர்களின் இயக்கமும் மந்தமாக அந்த ஏர்- கண்டிஷன்ட் அறைக்குள் கேட்கிறது.

நாகராஜன் ஒரு மணி நேரத் துக்குள் ஏழு, எட்டு சிகரெட்டு களை ஊதித் தீர்த்திருந்தார்.

தெரஸாவை அழைக்கின்ற 'காலிங்' பெல்லின் பொத்தானை அழுத்தினார்.
அடுத்த விநாடி தெரஸாஅவர் எதிரே வந்து நின்றாள். நாகராஜ னால் தலை நிமிர்ந்து அவளைப் பார்க்க முடியவில்லை. அவர் தலை குனிந்தே இருந்தது.
'' ஆம் ஸாரி... தெரஸா!''

அவள் என்ன பதில் கூறினாள் என்று அவருக்கு விளங்கவில்லை. அவள் இன்னும் அழுதுகொண்டு அதே கோலத்தில்தான் நிற்கி றாளோ? தனது ராஜிநாமாக் கடிதத்தை முகத்தில் விட்டெறியப் போகிறாளோ? என்ற குழப்பத் துடன் அவர் தலை நிமிர்ந்துஅவ ளைப் பார்த்தார்.

அவள் எப்போதும் போல எதுவுமே நடக்காதது போன்று சற்றுமுன் கர்ச்சிப்பில் முகம் புதைத்துக்கொண்டு ஓடியது, தானல்லாதது போல ஒரு புன்முறுவலும், கையில் ஷார்ட் ஹாண்ட் நோட்ஸ் எடுக்கும் ஒரு சிறு புத்தகமும் பென்சிலுமாய் வந்து நின்றிருந்தாள்.

இவள் ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று அவருக்குப் புரிந்தது. அவள் வந்துநின்ற கோலம் தனது டிக்டேஷனை எடுத்துக்கொள்ளக் காத்திருப்பது போல் தோன்றியது. அன்று பல வேலைகள்- பல கடிதங்கள்எழுத வேண்டிய வேலைகள் இருப்பது அவளுக்குத் தெரியும். எல்லா வற்றுக்கும் முன்னால் ஒரு கடிதம் டிக்டேட் செய்ய வேண்டும்என்ற எண்ணம் திடீரென இந்த நிமிஷம்தான் அவருக்குத் தோன்றியது.

சில நேரங்களில் கடிதங்களை இவர் எழுந்து நடந்துகொண்டே டிக்டேட் செய்வார். அது போல அவர் எழுந்து தனது நாற்காலிக் குப் பின்னால் தலையைக் குனிந்தவண்ணம் நடந்தார்.பிறகு அவளைப் பார்த்து ''ப்ளீஸ் ஸிட் டௌன்'' என்றதும் தெரஸாஅவரது மேஜைக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

''டியர் மிஸ் தெரஸா'' என்ற அவரது குரல் கேட்டு...''எஸ்ஸார்'' என்று நிமிர்ந்தாள் தெரஸா.

''புட் டவுன்! திஸ் இஸ் லெட்டர்'' 'இது கடிதம், எழுதிக் கொள்' என்று அவர் சொல்லவும் அவள் மௌனமாகத் தனது கடமையென எழுத ஆரம்பித்தாள். அவர் முகம் திரும்பித் தன் முதுகு மட்டுமே அவளுக்குத் தெரிய நின்றுகொண்டு ஆங்கிலத் தில் சொன்னார்.

''மிஸ் தெரஸா, ஒரு மகளைப் போல் கருதி அன்பு காட்டவேண் டிய உன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதற்காக, நான் வெட்கப்படுகிறேன். என்னைப் மன்னித்துவிடுவதும், அல்லது தண்டிப்பதும் உனது மனோ பாவத்தைப் பொறுத்தது. நான் உன் கணிப்பில் இருந்து, தரத்தி லிருந்து, உயரத்திலிருந்து ஒரு விநாடியில் வீழ்ச்சியுற்றுவிட் டேனே, இதுதான் எனக்குத் தண்டனை.

தெரஸா நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று எண்ணி எண் ணிப் பார்க்கிறேன்.
இது- இப்படி நான் நடந்து கொள்வது இதுவே முதல் தடவை அல்ல. உன்னிடம் என் பல வீனத்தை ஒளிவின்றி ஒப்புக் கொள்வதன் மூலம், அப்படி ஒப்புக்கொள்கிற பக்குவம் இந்த நிமிஷம் எனக்கு ஏற்படுவதன் மூலம், என்னைப் பிடித்திருந்த ஒரு வியாதி, ஒரு விகாரம் என்னிடமிருந்து விலகுகிறது என்ற நம்பிக்கையோடு இதனை உன்னிடம் சொல்கிறேன். நீ வயதில் எவ்வளவு இளைய வளாக இருப்பினும், பெருந் தன்மை மிகுந்தவள்; கண்ணியமா னவள் என்று நான் உணர்ந்தி ருக்கிறேன். எனவேதான் பாவ மன்னிப்பு போல் உன்னிடம்'கன் பெஷன்' செய்துகொள்கிறேன்.
உன்னிடம் நடந்துகொண்டது போல் முறைகேடாக நான் பல சந்தர்ப்பங்களில் நடந்துகொண் டிருக்கிறேன்.

'பிரயாணங்களிலும் தியேட் டரிலும் ஏற்படுகிற நெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு நான் முறைகேடாக நடந்தது உண்டு. அப்போது, அவர்கள் ஏதோ ஒரு அச்சத்தாலும் அவமானத்துக்கு அஞ்சியும், நாகரிகம் கருதியும் அமைதியாய் இருப்பதை, நான் சம்மதம் எனக் கருதி ஏமாந்திருக் கிறேன். பின்னர் அதற்காக வருந் தியதும் உண்டு. நான் இப்போது தான் அறிகிறேன். இது ஒரு நோய். இதிலிருந்து உனது பெருந் தன்மையால் நான் குணமடை கிறேன். நீ இதை மறந்து ஒரு தந்தை உங்கள் மரபுப்படி ஒரு மகளை அன்பு காரணமாய் முத்தமிட்டதாகக்கொள்ள வேண்டுகிறேன். அல்லது இந்தக் குற்றத்துக்காக எனது இந்த வீழ்ச்சி மாத்திரம் போதாது எனின், நீ தருகிற எந்தத் தண்ட னையையும் ஏற்கச் சித்தமாயிருக் கிறேன்.'' என்று கூறிச் சுமை இறக்கிய வழிப்போக்கன் மாதிரி ஆச்வாசத்துடன் அவளைப் பார்த்தார் நாகராஜன்.

தெரஸா கண்களைக் கர்ச்சீப் பால் இரண்டு முறை ஒத்திக் கொண்டாள். அவளது முக்கும் கன்னங்களும் கன்றிச் சிவந்திருந் தன.

''அதைப் டைப் செய்து கொண்டு வா'' என்று அவளை அனுப்பிய பின்,ஒரு சிகரெட் டைப் பற்ற வைத்துக்கொண்டு தனது இருக்கையில் அமர்ந்தார் நாகராஜன். தெராஸாவின் அறை யில் டைப்ரைட்டரின் ஓசை படபடத்தது.
தெரஸா டைப் செய்த காகிதங்களை கொணர்ந்து, அவர் முன் மேஜை மீது வைத்துவிட்டு, அவர் முகத்தை பார்த்தவாறு நின்றாள். அவர் கண்ணாடியை எடுத்து அணிந்து கடிதத்தின் முதல் வரியைப் ''மரியாதைக்குரிய நண்பரே!'' என்னும் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தவாறே அவளைப் பார்த்தார்.
அவள் பணிவுடன் தலை கவிழ்ந்தாள்.

அவர் தொடர்ந்து அதைப் படிக்கலானார். ''நீங்க என்னிடம் டிக்டேட் செய்து, டைப் செய்து கொண்டுவரப் பணித்த உங்கள் கட்டளையை நிறைவேற்றாமல் வேறோரு கடிதத்தைக் கொண்டு வந்து உங்களிடம் தருகிற என் செயலை முதலில் மன்னிப் பீர்களாக. நீங்கள் மனம் திறந்து பேச ஒரு வாய்ப்பாகத்தான் அதை ஒரு கடிதமாக டிக்டேட் செய்திருக்கிறீர்கள். என்னிடம் மன்னிப்புக்குக் கோருகிற ஒரு கடிதத்தை என்னைக்கொண்டே எழுத வைத்தது உங்களுடைய வெள்ளை மனத்துக்கு மேலும் ஒரு சான்று. கடிதம் என்றுசொல் லப்படுகிற உங்கள் மனம் திறந்த பேச்சில் மிகவும் சத்தான என் எண்ணத்தை அப்படியே பிரதி பலித்த வாசகம், 'ஒரு தந்தை உங்கள் மரபுப்படி ஒரு மகளை அன்பு காரணமாய்' என்று கூறி னீர்களே அதுதான். நான் அப்படிக் கருதிச் சமாதானமுற்றப் பிறகு நீங்களும் அவ்விதம் சொன் னது எனக்கு அளவில்லா ஆனந் தம் தருகிறது. இது உங்கள்வீழ்ச்சி அல்ல. இது ஒரு சறுக்கல்...''
இந்த இடத்தில் அந்த ஆங்கிலச் சொற்களை அவளைப் பாராட்டுகிற தோரணையில் ''ஜஸ்ட் ஸ்லிப், நாட் ஃபால்'' என்று ஒரு முறை வாய்விட்டு உச்சரித்துக் கொண்டே அவளைப் பார்த்த பின் கடிதத்தைத் தெடர்ந்தார் நாகராஜன்.

''நீங்கள் கூறுகிற மாதிரி அது ஒரு வியாதியெனில் அதற்குத் தண்டனையல்ல, சிகிச்சையே தேவை. அப்படிப்பட்ட முறை கேடான நடத்தைகள் தவறுகள் தான். ஆனால், குற்றங்கள் அல்ல. குற்றங்கள்தான் தண்டிக்கப்படு வன. தவறுகள் திருத்தப்படுவன. மன்னிக்கப்படுவன. நான் உண் மையான கிறிஸ்துவப் பெண். மன்னிக்கிறவர்களே மன்னிக்கவும் படுவார்கள். நான் உங்களை மன் றாடிக் கேட்டுக்கொள்கிறேன். இதனை மறந்து, இதற்காக வருந் துவதை விடுங்கள்.

நமது ஒப்பந்தப்படி நீங்கள் என் பிறந்த தின விருந்துக்கு வரு கிறீர்கள். உங்கள் நலுனுக்காக நான் குடிப்பேன். உங்கள் உண்மையுள்ள....''

''தெரஸா! நீ எவ்வளவு உயர்வான ஆத்மா!''

இரவு எட்டு மணிக்கு வீடு திரும்பிய நாகராஜன் காரை ஷெட்டில் விடுவதற்காகத் திரும் பியபோது ஷெட்டின் ஒருமூலை யில், தாடியும் மீசையுமாய்ப்பரட் டைத் தலையுடன் உட்கார்ந்திருந்த கன்னையா எழுந்து நின்றான். சிறிது நேரம் விளக்கை அணை காமல் அவனைக் கூர்ந்து பார்த் தார். வெளிச்சத்தாலோ வெட்கத் தாலோ கூசிக் குறுகி முகத்தை மூடிக்கொண்டான் கன்னையா.

வராந்தாவில் நாகராஜனின் மகளும் மனைவியும் கன்னை யாவை உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காகத் துவார பாலிகை களாக நின்றிருந்தனர்.

''அவன் வந்தால் உள்ளே நுழைய விடாதீங்க'' என்று நாக ராஜன் உத்தரவிட்டிருந்தார்.

நாகராஜன் காரிலிருந்து இறங் கியதும் கன்னையா அவரருகே வந்து அழுதான்.

''மாப்பிள்ளே, என்னமோ தெரியாம செஞ்சுட்டேன். ஏன் செஞ்சேன்னு தெரியல்லே. அதைச் செஞ்ச அடுத்த நிமிஷத் திலேருந்து ஒவ்வொரு நிமிஷமும் வருத்தப்பட்டேனே ஒழிய சந்தோ ஷமாகவே இல்லே, மாப்பிளே.. அறிவுகெட்டவன் நான்'' என்று நெற்றியில் அடித்துக்கொண்டு அவன் அழுதான்.

நாகராஜன் மௌனமாக 'டை' யைத் தளர்த்திக்கொண்டு வராந்தாவில் கிடந்த பிரம்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தார்.

அவர் மகளும், மனைவியும் உள்ளே போயினர். கன்னையா வெளிச்சத்தில் வந்து அவர் எதிரே நின்றான்.

அவன் மௌனமாகத் தலை குனிந்து நின்றதைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. அவர் நினைத்தார்.

'இவன் வெறும் திருடன் என் றால், இப்போது ஏன் திரும்பி வர வேண்டும்? இந்த வீட்டில் உழைக்கிற உழைப்பை எங்கே தந்தாலும் இவன் வயிற்றுக்குச் சோறு கிடைத்துவிடுமே. எனவே பிழைப்புக்காக இவன் திரும்பி வந்திருக்கிறான் என்று நினைப்பது பேதமை. இதோ எதிரே நேற்றி லிருந்து பூக்க ஆரம்பித்திருக்கிறதே இந்த மல்லிக்கைச் செடி, இதைக் கொண்டுவந்து நட்டு, நீர் வார்த்த பாசம் அவனைத் திரும்பி வர இழுத்திருக்கிறதா? ஒவ்வொரு வேளை சாப்பிடும்போதும், நான் அவளை நினைக்கிற மாதிரியே அவனும் என்னை நினைத்திருக்க மாட்டானா? பின் ஏன் அப்படி அந்தப் பணத்துக்குஆசைப் பட்டு அதை எடுத்துக்கொண்டு ஓடினான்..?

''ஏன்டா, என்னைக் கேட்டால், உனக்கு நான் பணம் தந்திருக்க மாட்டேனா? ஏன் திருடன் மாதிரி இப்படிச் செய்தே?'' வீட் டிலிருந்தும் மற்றவர்களின் திருப்திக்காகச் சற்று உரத்த குரலில் விசாரித்தார் அவர்.

''அதான் யோசிச்சு யோசிச்சுப் பார்க்கறேன். பணத்தை அந்த 'ஷெல்ப்'லே பார்த்தப்போ... வேற யாருமே இல்லே. 'யாருமே இல்லாத இடத்தில் பணத்தை பார்த்தா எடுத்துக்கணும்கிற திருட்டுப் புத்தியிலே எடுத்திட் டேன். இது முதல் தடவையா? எத்தனையோ தடவை இந்த மாதிரி, சீ!'' அவன் தன்னைத் தானே நொந்துகொண்டான்.

இன்று மத்தியானம் இதே நிலையில் தான் இருந்ததை நாக ராஜன் எண்ணிப் பார்த்தார்.

''அது ஒரு வியாதிடா'' என் றார்.

''அமாம். வியாதிதான்'' என்று தலையில் அடித்துக்கொண்டான் கன்னையா. ''நீ என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்கறேன், மாப் பிளே..'' என்று கைகளைப்பிசைந்து கொண்டு கண்ணீர் உகுத்தான்.

நாகராஜன் நிர்மலமாய்ச் சிரித் தார்.

''வியாதிக்கு சிகிச்சைதான் தேவை, தண்டனை இல்லே'' என்று சொல்லும்போது அவ ருக்கே கண் கலங்கிற்று.

''உன் வியாதி நீங்கிப் போச்சு... மனப்பூர்வமா மன்னிக்கறது தான் இதுக்குச் சிகிச்சை. இந்தச் சிசிச்சையை உனக்கு யாருமே இது வரை செய்ததில்லே. இனிமே சரியாயிடும். போ, உள்ளே! நீ செய்தது தப்புத்தான்... தண்டனை தர வேண்டிய குற்றமில்லே'' என்ற அவர் சொல்வதைக்கேட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரது மகளும் மனைவியும் ''எவ்வளவு பெருந்தன்மை மிக்க மனிதர் இவர்! என்று நாக ராஜனைப் பற்றி எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.

அவர்களுக்கு என்னதெரியும்?

மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள் என்பது.

நன்றி - விகடன்