ஜி.நாகராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜி.நாகராஜன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாற்று ஒழுக்கத்தை முன்வைத்த ஜி.நாகராஜன் - சு.இரமேஷ்



புதுமைப்பித்தனில் தொடங்கிய நவீனத்துவ கதைசொல்லும் மரபு, தொடர்ந்து பல்வேறு கதாசிரியர்களின் முயற்சிகளின் ஊடாக அதன் ஆழத்தையும் விரிவையும் தேடிப் பயணப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் கதையாசிரியர் தன் பங்காக ஏதோ ஒரு சோதனை முயற்சியை தம் படைப்பின் வழியாகத் தேடுகிறார். அத்தேடுதல் ஒரு முற்றுப்பெறாத முடிவை நோக்கி அவரை நகர்த்திச் செல்கிறது. இவ்வாறாக முற்றுப்பெறாத மாற்று ஒழுக்கத்தின் தேடலை நோக்கி தம் புனைகதைகளைச் செலுத்திய மகத்தான எழுத்தாளர்தான் ஜி.நாகராஜன்.

1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மதுரையில் பிறந்தார். தந்தை பெயர் கணேச ஐயர். ஜி.நாகராஜனுக்கு இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்.

ஜி.நாகராஜனின் நான்காவது வயதிலேயே தாயார் இறந்துவிட்டதால், அவரின் பிள்ளைப்பருவம் அவரது தாய்வழிப்பாட்டி வீட்டில் கழிந்தது. இளமையிலேயே ஜி.நாகராஜன் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக விளங்கினார். இவரின் ஆங்கில உச்சரிப்பைக் கண்டு பலரும் வியந்தனர். இவருக்குப் பிடித்த பாடம் கணிதம். இன்டர் மீடியட்டை மதுரைக் கல்லூரியில் படித்து சிறப்பான முறையில் தேறினார். அப்போது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதற்காக அறிவியல் அறிஞர் சி.வி.ராமனிடமிருந்து "தங்கப் பதக்கம்' பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயல்பாகவே கற்பிக்கும் பணியில் அளவிலாத ஈடுபாடு கொண்டிருந்த ஜி. நாகராஜன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய காலகட்டத்தில்தான் அவருக்கு கம்யூனிச இயக்கத்தோடும் இலக்கியத்தோடும் தொடர்பு ஏற்பட்டது.  

மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திறமையைக் கண்ட அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம், ஜி.நாகராஜனை அமெரிக்காவுக்கு அனுப்பவும் முடிவு செய்திருந்தது. ஆனால், கம்யூனிச இயக்கத்தோடு கொண்டிருந்த தொடர்பு காரணமாக நிர்வாகம் இவரை வேலை நீக்கம் செய்தது. பின்னர், கட்சிப் பணிகளில் ஈடுபட்டபடியே மாணவர்களுக்குத் தனியாகப் பாடம் கற்பித்தார். கட்சித் தோழரான சங்கரநாராயணன் நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து, 1956 முதல் 1970 வரை  பணியாற்றினார்.

1957-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அணுயுகம் என்ற சிறுகதை "ஜனசக்தி' வாரமலரில் பிரசுரமானது. இக்கதையிலிருந்துதான் ஜி.நாகராஜனின் படைப்புலகம் தொடங்கியது. சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா முதலிய இதழ்களில் நாகராஜனின் எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தன. ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள், நாவல்கள் படைத்துள்ளார். ஏழு நாவல்கள், ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் வாயிலாகவே தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவைதவிர, "புற்றுக்குடிப் புலவர்' என்ற புனைபெயரில் ஞானரதம் இதழில் மூன்று கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய மொத்தப் படைப்புகளையும் தொகுத்து "ஜி.நாகராஜன் படைப்புகள்' என்ற பெயரில் ராஜமார்த்தாண்டன் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

1959-ஆம் ஆண்டு ஜி.நாகராஜன் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான நான்கு மாதத்துக்குள்ளேயே மனைவி, இயற்கை எய்தினார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் நாகலட்சுமியை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்தி, கண்ணன் என இரு குழந்தைகள்.

ஜி.நாகராஜனின் முதல் நூலாக வெளிவந்தது "குறத்தி முடுக்கு' என்ற குறுநாவல். "பித்தன் பட்டறை' என்ற பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி குறுநாவலையும், தாம் எழுதிய கதைகளிலிருந்து 14 கதைகளைத் தேர்ந்தெடுத்து "கண்டதும் கேட்டதும்' என்ற பெயரில் ஒரு தொகுப்பையும் தாமே கொண்டு வந்தார். 1973-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை "ஞானரதம்' இதழில் இவருடைய மற்றொரு நாவலான, "நாளை மற்றுமொரு நாளே' தொடராக வெளிவந்தது. அந்நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

ஜி.நாகராஜன், இந்த உலகில் குறைந்த காலமே வாழ்ந்தாலும், எக்காலத்திலும் பேசக்கூடிய பக்கங்களைத் தொட்டுச் சென்றவர். நாகராஜனின் கதை உலகம் இதுவரை தமிழ்ச் சூழல் கண்டிராத ஒன்று. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத விளிம்புநிலை மக்களான பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எழுதி, நவீன இலக்கியத்தின் பக்கங்களை விரிவாக்கியவர். இதில் ஜெயகாந்தனின் பங்கையும் மறுக்க முடியாது. ஆனாலும் ஜெயகாந்தனிலிருந்து முற்றிலும் வேறு திசையில் பயணித்தவர் ஜி.நாகராஜன்.

ஜி.நாகராஜனின் கதை உலகம் என்பது சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத தகுந்த அங்கீகாரமில்லாத நகரத்தின் இடுக்குகளில் வாழும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தது. தமிழ்ப் புனைவுகள் அதுவரை கண்டிராத ஓர் உலகத்தை தம் கதைகளின் வாயிலாகக் கட்டமைத்தார்.

இதுகாறும் நம்பப்பட்டு வந்த ஒழுக்கத்தையும் அதன் விதிகளையும் அதன் எல்லைவரை சென்று தன் கதைகளின் மூலமாகத் தகர்த்தெறிந்தவர் ஜி.நாகராஜன். மனித சமூகத்தின் இனக்குழு அடையாளத்தை தன் "குறத்தி முடுக்கு' என்ற நாவலின் மூலமாக மீட்டவர்.

நாகராஜனின் சிறுகதைகளைவிட அவருடைய இரு நாவல்களும் அதிகமாக கவனிக்கப்பட்டவை. அவருடைய இரண்டு நாவல்களுக்கும் இணையான ஒரு சிறுகதை, "கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா' என்ற கதை.

"சாவும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்'' என்று கூறிய ஜி.நாகராஜன், 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார்.

"பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கியவர் ஜி.நாகராஜன் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புகளைத் தகர்த்தெறிய அறியப்படாத இருண்ட பகுதிகளில் வெளிச்சம் பாய்ச்சியவை இவரது புனைவுகள். விளிம்புநிலை மக்களின் இனவரைவியலைத் தேடும் எழுத்தாளர்களுக்கு ஜி.நாகராஜன் நிறைய விட்டுச் சென்றிருக்கிறார். ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்'' (தீராநதி, அக்.-2010) என்ற சி.மோகனின் கருத்துதான் ஜி.நாகராஜனை விமர்சிப்பவர்களுக்கான பதில்.

நன்றி - தமிழ்மணி

கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா - ஜி.நாகராஜன்

``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

பச்சைக்குதிரை - ஜி.நாகராஜன்

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.

'பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!'

ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது.

'எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு  மாணிக்கம் வாத்தியார்கூட, 'டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு' என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்...'

மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை ராஜு இலேசாகத் தொட்டுக் கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது. 'இன்னைக்கு தின்ன என்னவோ?... இருட்டிடுச்சு... ஒருமிக்க சோத்தைத் தின்னுட்டு படுத்துர வேண்டியதுதான். ஐயோ, காதெ யாரும் பாக்காம இருக்கணுமே; ராஜு மீண்டும் காதைத் தொட்டுக் கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. 'அம்மா பாத்தா 'ஓ'ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லே, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும்... போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு.. காலையிலேயே போலீசுகாரன் வரும்போதல்ல தெரியும்'

இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீசுக்காரன் வந்திட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்குமாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவருகே ஒளிந்து கொண்டு நிற்கிறான். 'அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சிட்டான்' என்கிறான் போலீஸ்காரன். 'எங்க வீட்டு ராஜுவா? அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது' என்கிறார் அப்பா. போலீஸ்காரன் விட்டால் தானே! 'ஒடிக்கமாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.

'பொய்யப் பாரு பொய்யை! நான் ஒன்ணும் காலை வாரிவிடலேப்பா... அந்தச் செல்லத் துரைக்கு பென்சில் தரலையாம், பொய் சொல்றான். மாணிக்கம் வாத்தியாரும் கூடச் சேர்ந்துக்கிட்டாரு' என்று கத்திக்கொண்டு ராஜு அப்பாவின் முன் வருகிறான். 'திருட்டுப்பயலே, நீதானா?' என்று கூறிக்கொண்டு போலீஸ்காரன் ராஜுவை எட்டிப் பிடிக்கிறான். ராஜு ஓடுகிறான். போலீஸ்காரன் விரட்டுகிறான். அப்பா போலீஸ்காரனைக் தடுக்கப் பார்க்கிறார். அப்பா கைமீது போலீஸ்காரன் ஒரு போடு போடுகிறான். ராஜுவைத் தரதரவென்று இழுக்கிறான். அப்பா பின்னால் ஓடிவருகிறார். 'பத்து வயசுக் குழந்தை அய்யா, அவனை விட்டிடுங்க. நான் வேணா அந்தக் கையொடிஞ்ச பையனுக்கு நிறையப் பணம் தரேன். அவனை விட்டிடுங்க அய்யா!' என்று கெஞ்சுகிறார் அப்பா. போலீஸ்காரனுக்கு நெஞ்சு கல். 'கையை ஒடிச்சிருக்கான். பத்து வயசுக் குழந்தையாம்' என்று இரைகிறான். பல்லைக் கடித்துக் கொண்டு ராஜுவை இழுத்துச் செல்கிறான். 'இந்த ஒரு தரம் விட்டிடுங்கையா, இனிமே ஒடிக்கமாட்டேன். யார் கையையும் ஒடிக்கமாட்டேன்'' என்று அழுகிறான் ராஜு...

ராஜுவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. வாய் உலர்ந்தது, வாயைத் திறக்க முடியவில்லை. நாக்கு வாயோடு ஒட்டிக்கொண்டது. தொண்டையில் ஏதோ உருண்டை மாதிரி நின்றது. 'நான் காலை வாரிவிடலேப்பா. எல்லாம் இந்த செல்லத் துரையாலே, எத்தனை பொய் சொல்றான்! அவன் சொல்றதை வச்சிக்கிட்டு இந்த மாணிக்கம் வாத்தியார் போலீசிலே பிடிச்சுத் தருவாராம், அப்பா.'

பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சு போச்சு. 'கையொடிஞ்சிருச்சே! வீட்டிலே கொன்னுப்புடுவாங்களே'ன்னு கத்தினான். 'சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னைக் காலை வரிவிடலே, நீ கையை வச்சு முதுகிலே அழுத்தினபோது இலேசாகக் குனிஞ்சேன், சோமு.' சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், 'நான் வேணும்னு ஒண்ணும் செய்யலே சோமு, என்னை மட்டும் சும்மா விட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலைலே மங்கு மங்குன்னு குட்டினாரு. என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்ன்னு அடிச்சிருக்காரு. எல்லோரும் எம்மேலே விழுந்து என்னைக் கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னைப் போலீசிலே வேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு. அந்தச் செல்லத்துரை சொல்றான்.

'சோமுவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்களே! பாவம், இனிமே என்ன செய்வான்? பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கையொடிஞ்சவனைக் கடையிலே வச்சிக்க மாட்டாங்க. பாவம் சோமு நொண்டிப் பிச்சைக்காரனா ஆக வேண்டியதுதான். 'அய்யா சாமி! கொஞ்சம் தர்மம் போடுங்களேன். அந்த செட்டிப்பய ராஜு என் கையை ஒடிச்சிட்டானே' இந்த அப்பா ஒண்ணு. அவனுக்கு ஏதாச்சியும் தாங்களேன்னா, 'அவன் கையொடிஞ்சா நாம் என்ன செய்யறது?'ன்னுடுவார். 'இல்லேப்பா நான்தான் பாவம் அவன் கையை ஒடிச்சேன். 'நீதான் ஒடிச்சயா! போ, அவனோடே நீயும் போ..' ராஜு நந்தவனத்துக்கு வந்தான். தொட்டியிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினான். அங்கு சீப்பு, கண்ணாடி வைத்திருந்தார்கள். தலையைச் சீவிக் கொண்டான். சட்டையையும், டிராயரையும் சரிப்படுத்திக் கொண்டான். கழுவிய முகத்தில் கண்ணீர் மீண்டும் முத்துப் போல் உருண்டு விழுந்தது. துடைத்துக்கொண்டான். வீடு சேர்ந்ததும் யாருடனும் பேசவில்லை. வேலைக்காரி சோறு போட்டாள். சாப்பிட்டான். நேராகக் கட்டிலுக்குச் சென்று குப்புற விழுந்தான். அலைக்கழிந்த மனம் அமைதியை நாடியது.

இரண்டு மணி வெயில் மண்டையைப் பிளந்தது. ராஜுவும் அவர்களும் வேலாங்குளம் கண்மாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வேலுச்சாமி ஒருவன். தர்மராஜன் ஒருவன். மூன்றாவது யாரோ.. ராஜுவுக்கே தெரியாது. நிழலுக்காக, ரோட்டிலே நடக்காது ரோட்டோரமாக இருந்த மேட்டிலே நடந்து சென்றனர். ஒவ்வொருவராக சட்டையைக் கழற்றி முண்டாசாகக் கட்டிக்கொண்டனர். சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தின் மீது புகைவண்டி ஒன்று சென்றது. வண்டியைக் கண்டதும் அவர்கள் நின்று அதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர். கண்டபடித் திட்டினர். ரெயிலில் போகிறவர்களை, வேலுச்சாமி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி வண்டியைப் பார்த்து கூத்தாடினான். ராஜுவுக்கு கூச்சலிடவும் கூத்தாடவும் மனமில்லை. 'இதெல்லாம் என்ன?' என்று உள்ளூர அலுத்துக் கொண்டான்.

கண்மாயில் ஏக கலாட்டா. நாலு பேரும் தண்ணீரிலே குதியாட்டம் போட்டனர். வேலுச்சாமி மட்டும் ஒரு கோவணம் கட்டியிருந்தான். மற்றவர்கள் பிறந்த மேனியில் இருந்தனர். நாலு பேர்களுக்கும் கையும் காலும் வெளிறிப்போய் கனத்துவிட்டது. கண்கள் சிவந்து நீரைக் கக்கின. தலையில் கல்லைக் கட்டி அழுத்துவது போலிருந்தது. போதாதற்கு வயிறு நிறைய தண்ணீர். ஒவ்வொருவராக வேலுச்சாமியைத் தவிர மற்ற மூவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர். அரைகுறை நீச்சலடித்து சுற்றி வந்தான் வேலுசாமி. அவ்வப்போது கால்களையோ கைகளையோ தரையில் ஊன்றிக் கொண்டான. சுற்றிச் சுற்றி வந்தவன் சற்று விலகிச் சென்றுவிட்டான். கால்கள் தரையை எட்டவில்லை. ஆழத்துக்குப் போய்விட்டான். தத்தளித்துத் தத்தளித்துத் தலையை மேலே தூக்கினான். உரக்கச் சத்தமிட முயன்றான். தண்ணீர் அலை அலையாக வாய்க்குள் புகுந்தது. ஒரே உளறல் மட்டும் கேட்டது. தரையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 'திக்'கென்றது. தர்மராஜன் நிலைகுலையாது நின்றான். ஒருவன் 'அய்யோ அப்பா' என்று கத்திக் கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென்று தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது.

பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். 'நல்ல பையன், ரொம்ப சாது' என்று அனுதாபப்பட்டார். 'அந்த வேலுச்சாமிக்காகத் தான் ராஜு செத்துப் போனானாம்' என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான்.

'தம்பி எழுந்திரு. உங்க பெரியய்யா, மகன் வந்திருக்காரு' என்று வேலைக்காரி கூறியதும் ராஜு எழுந்து உட்கார்ந்தான். 'செத்ததெல்லாம் கனவுதான்! உம் அந்த சோமுக்கு கையொடிஞ்சதும் கனவாயிருக்கக்கூடாதா?'' ராஜு வெளியே நடந்து வந்தான். பெரியப்பா மகன் நடராசன் இரண்டு சகாக்களோடு நின்று கொண்டிருந்தான். 'என்ன தம்பி, செல்லத்துரை நேத்து சேட்டை பண்ணினானாமே? உடனே எங்கிட்டே ஏன் சொல்லலே? பெரிய சண்டியருன்னு நினைச்சிட்டிருக்காம்போலே, இன்னைக்கில்லே அவனுக்கு தெரியப் போவுது!'' என்று நடராஜன் ஆரம்பித்தான். 'இல்லே, அண்ணே, நான் சோமு கையை ஒடிச்சிட்டேங்கிறாங்க' என்று ராஜு இழுத்தான். ''கையொடியரவரு ஏன் விளையாட வந்தாராம்'' என்று கேட்டுவிட்டு, நடராஜன், ''தம்பி, நீ தின்னுட்டு வா... இன்னைக்குப் பள்ளிக்கூடத்திலே வச்சு சாத்தற சாத்திலே, அவரு சண்டியத்தனமெல்லாம் பறக்கணும், ஆமா' என்று கூறிக்கொண்டே ராஜுவிடம் விடை பெற்றுக்கொண்டு, சகாக்களின் தோள்களில் கைகளை வைத்தவாறே நகர்ந்தான் நடராஜன். ராஜு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினான்.

"கையொடியரவரு ஏன் பச்சக்குதிரை தாண்டணுமாம்?" என்று சொல்லிக்கொண்டே பல்லை விளக்கினான். உடனே நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். ''தம்பி வெந்நீர் ஊத்திவச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்திரு. இல்லாட்டி ஐயா கோவிப்பாரு'' என்றாள் வேலைக்காரி. ''குளிக்கவும் மாட்டேன்; ஒண்ணும் மாட்டேன், நான் ஒடனே போகணும். இப்ப இட்லியை வைக்கிறயா, இல்லையா?'' என்று அதட்டினான் ராஜு.

''உன் அதட்டலும் மிரட்டலும் இங்கே வச்சுக்காதே; மருவாதையாய் போய்க் குளி'' என்று கண்டிப்புடன் பேசினாள் வேலைக்காரி.

''என்னை யாருன்னு நினைச்சே! இங்கே பார், நான் இன்ஸ்பெக்டராக்கும்'' என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தோல் பெல்ட்டால் வேலைக்காரிக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ராஜு.

********

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி.நாகராஜன்

போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் இல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா இன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.

ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் இருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது 'டபில்' மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. 'நைட் புக்கிங்'குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் 'நைட் புக்கிங்' ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை இலேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு இரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் இருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.

மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை இறுகக் கட்டினாள். அவள் இழுத்த இழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் இளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை இரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் இல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் இரும்பு வளையத்துக்கும் உள்ள இடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே இருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் இல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு இரண்டாக வகுத்துக்கொண்டாள். இப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் இருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. இவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு இதிலெல்லாம் அனுபவம் போதாது. இரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. 'இப்போது இதுக்கு என்ன அவசரம்?' என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.

அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.

''கதவெத் தெறக்க இந்நேரமா?'' என்றான் அத்தான்.

''மேலே இருந்தேன்'' என்றாள் தேவயானை.

''கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு இருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?'' என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட இருந்தவரும் உள்ளே நுழைந்தார்.

''உம், லைட்டைப் போடு'' என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து இருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ''சரிதானேங்க?'' என்றான் அத்தான், அவரைப் பார்த்து.

ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க'' என்றார் அவர்.

''இங்கே எல்லாம் சுத்தமாகத்தான் இருக்கும்'' என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ''அப்ப நா வர்றேன்.''

''பணம்?'' என்றார் வந்தவர்.

''எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்'' என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.

வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ''வாங்க'' என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.

''இப்படி உட்காருங்க'' என்றாள் அவள்.

''இல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி இருக்கே, அதை எடுத்திட்டு வா'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று அவர் விளக்கினார்.

பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவயானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.

''நீ அழகா இருக்கே'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.

''கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க'' என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ''உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.''

அவள் அவ்வாறே செய்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.''

அவள் மீண்டும் சிரித்தாள்.

''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்'' என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.

''நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?'' என்று அவள் சிரித்தாள்.

''ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்'' என்றார் அவர்.

அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ''உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க'' என்றார் அவர்.

''நீங்க உட்கார்ந்துதானே இருக்கீங்க, வெறுமனே'' என்றாள் அவள் சிரிக்காமல்.

''நான் இங்கே உக்காந்து இருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்'' என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.

''உங்களுக்கு ஆசை இல்லையா?'' என்றாள் அவள்.

''நிறைய இருக்கு.''

''அப்ப?''

''அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்.''

''பாத்துகிட்டே இருந்தாப் போதுமா?'' அவள் சிரித்தாள்.

''தொட்டுப் பார்க்கலாம்.''

''நீங்க தொட்டுப் பாக்கலயே.''

''தொட்டா நீ சும்மா இருக்கணுமே!'' என்றார்.

அவள் சிரித்தாள். ''நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.''

வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.

''இல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு'' என்றான் அத்தான்.

''இப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க'' என்றார் அவர்.

அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.

''கொடுமை'' என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.

''எது?'' என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.

''இந்த நேரக் கணக்குதான்'' என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது இரு கன்னங்களிலும் இறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.

''சரி, நீ போய்ப் படுத்துக்க'' என்கிறார் அவர்.

''நீங்க என்ன செய்யறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.

''இங்கே இருக்கேன்'' என்கிறார் அவர்.

''அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?''

''பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.''

அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.

''எனக்குத் தண்ணி தவிக்குது'' என்கிறாள் தேவயானை.

அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.

நின்றுகொண்டிருக்கும் அவர், ''சென்று வருகிறேன்'' என்கிறார்.

''அடுத்த வாட்டி எப்ப வருவீங்க'' என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.

இரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ''அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்'' என்றாள்.

''யாரவன்?'' என்றான் அத்தான்.

''அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.''

''மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் இன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?''

''அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?''

''ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!''

''இன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?''

''ஆமாம், இருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. இன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே இருந்திட்டேன்.''

''அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?''

''டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, இல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?''

''இல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் இருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.''

அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.

''கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட இல்லே'' என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.

''தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே இன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?''

''நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?'' என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் இரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.

''எங்கே போயிருக்கும்; இங்கேதான் எங்காவது இருக்கணும்'' என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.

''எது?'' என்றான் அத்தான்.

''அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.''

''நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?'' என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.

''நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க'' என்றாள் தேவயானை, இன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.

''ஒருவேளை மேலே மாடியிலே இருக்கும்'' என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு இரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.

ஓடிய கால்கள் - ஜி.நாகராஜன்

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல.

உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. இருபது ஆண்டுகளாவது புழுதியிலும் பாறையிலும், இரண்டு கைகளுக்கு ஆதரவாக மனிதனின் மிகப் பூர்வகாலக் கருவிகளின்றி வேறெதையும் கொள்ளாமல் இயற்கையோடு முட்டி மோதி, வேறெந்தப் பலனையும் காணாமல் ஒரு வைரத்தின் உறுதியைப் பெற்றுவிட்ட உடல். கறுத்து மென்மையை இழந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான முரட்டுத் தோலை வாழ்க்கைப் போரில் கிடைத்த மற்றொரு சிறு வித்தாகக் கொண்டுவிட்ட உடல். அவ்வுடலில் இயற்கைக்கு மாறாக, ஆங்காங்கு கைகளிலும், புயத்திலும், விலாப்பக்கங்களிலும் தடிப்புகள். மாணிக்கம்போல் உறைந்துவிட்ட கீற்றுகள். ஆங்காங்கே கறுப்பு வரிக்கோடுகள் சில இடங்களில், குறிப்பாக மார்பில் நாலு ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் தடயங்கள் இடுப்புக்குக் கீழே அழுக்கடைந்த வேட்டி. உங்களுக்குச் சற்றுக் கூரிய பார்வை இருந்தால், உடலின் முழங்கால்கள் சற்றுப் பருத்து இருப்பதுபோல் வேட்டிக்கு மேலேயும் தெரியும். மேலும் அவை சிறிதும் அசையாமலேயே கிடக்கின்றன.

சூரிய ஒளி ஒரு ரூபாய் அளவுக்கு வட்ட வடிவில் உடலின் கையை எட்டியது. அதன் இயக்கத்தில் ஒரு விளையாட்டுத் தன்மை இருந்தாலும், அதன் முகத்தில் செம்மை, தாமிரத் தகடுபோல் தகித்தது. உடல் கழுத்தை அசைத்தது; கண்களை விழித்தது. ஒரு பெருமூச்சு உடலைக் குலுக்கிற்று. நா வறண்டது. ‘தண்ணீர்!’ உடல் கத்திவிட்டது. உடல் அவனாயிற்று.

”உம்...ண்ணி” அவன் செவிகளுக்குள் ஒலி புகுந்தது. திரும்பிப் பார்த்தான். லாக்கப்பின் கம்பிகளுக்கு அப்பால் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.

”அய்யா, கொஞ்சம் தண்ணீ” - உடல் முறையிட்டது.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த டெலிபோன் மணி அடிக்கடும் போலீஸ்காரர் ஃபோனுக்கு ஓடினார். சிறிது நேரம் ஏதோ பேச்சு. பிறகு போலீஸ்காரர் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில்.  “அய்யா, கொஞ்சம் தண்ணி தாங்கைய்யா. தவிச்சு சாகணும்னு நெனைச்சிருக்கீங்களா?”

”த...யெழி” தடியைச் சுழற்றிக்கொண்டு போலீஸ்காரர், பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு, நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார்.

”மூணு பேர் சீட்டுக் கிளிஞ்சிருக்குமே இன்னிக்கு. அரைமணி நேரம் போயிருந்தா உன்னை எவன் போய் எப்படிக் கண்டுபிடிச்சிருப்பான்? சந்தை நாள் வேறே....! நீ என்ன மாமூல்வாதியா பிடிச்சிக்கலாம்னு விட்டுட?”

மனிதனுக்கு சுருக்கென்றது. அவன் ஒரு கைதி. தப்பி ஓட முயன்ற கைதி. சட்ட ஒழுங்கு சக்திகளோடு அவன் மோதினான். போதுமான சுதந்திரம் இல்லாமல் அதன் விளைவு இது. நா வறட்சி மறந்துவிட்டது. நினைவு வேலை செய்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நடந்த விபரீதம். இரவிலேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று, டாக்டர் சர்ட்டிபிகேட் எடுத்து லாக்கப்புக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். காலை எட்டு எட்டரைக்குத்தான் எழுந்திருப்பான். சுமார் பத்துப் பன்னிரெண்டு கைதிகளோடு அவனும் ஒருவனாய் போலீஸ் ஸ்டேஷனின் பின்புறத்தில் ஒரு தாழ்வாரத்தில் இருந்ததை உணர்ந்தான். அவர்கள் எல்லாரும் ஏற்கனவே விழித்துக்கொண்டு விட்டவர்கள். ஸ்டேஷனுக்குள் ஏழெட்டு போலீஸ்காரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் இருப்பவர் வெளியே போவதும், வெளியிலிருந்து புதுப் போலீஸ்காரர்கள் வருவதும், உடைகள் மாற்றிக்கொள்வதும், பீடி சிகரெட் பிடிப்பதும், சமயங்களில் கலகலப்பாகவும், சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடிந்தும், பொதுவாக உரக்கப் பேசியவர்களாகவும் சிரித்தவர்களாகவும் இருந்தனர். அவன் தன்னைச் சுற்றியிருந்த கைதிகளைப் பார்த்தபோது அவர்கள் அனைவருமே தமக்குள்ளோ, வெளியிலிருந்து வந்தவர்களோடோ, போலீஸ் அதிகாரிகளோடோ பேசியவண்ணமும் சமயங்களில் தர்க்கித்தவண்ணமும் இருந்தனர். தாழ்வாரத்தில் இருந்த பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்ததாலும், அதில் தொடர்ந்து தண்ணீர் பைப்புகளின் வழியே கொட்டிக்கொண்டிருந்தாலும், கைதிகளும் போலீஸ்காரரும் சற்றுச் சிறுக விலகி நின்று பல் விளக்குவதும், கழுவுவதும், பலகாரங்கள் உண்டுவிட்டு வாய் கழுவிக்கொள்வதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது. ஆனால் அது இன்னும் தணியாத போதையின் விளைவு. இயற்கையில் அவனுக்குப் பொறுமை கிடையாது. தரித்திருத்தலுக்கு, அவனைப் பொறுத்தமட்டில் அது ஒரு அவசியப் பண்பு அல்ல.

தாழ்வாரத்தில் ஒரு வேயப்பட்டிருந்த பகுதியில் ஒரு சுவரோரம் சுருண்டு கிடந்த அவன் எழுந்து உட்கார்ந்ததும் விருட்டென்று எழுந்து தாழ்வாரத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் பிரிக்கும் நிலைக்கு வந்து நின்றான். வெளியே கலகலப்பான நகரம், கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் நிலையைக் கடந்து ஸ்டேஷனுக்குள் காலெடுத்து வைத்தான். காலி கிளாஸ் டம்ளர்களைக் கொண்ட தேநீர் ஏந்தலோடு ஒரு சிறுவன் அவனை இடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து வெளியே சென்றான். சிறுவனுடைய கால்களையே அவனுடைய கால்களும் பின்பற்றிச் சென்றன. அவனையோ சிறுவனையோ யாரும் தடுக்கவில்லை. B-4 காவல் நிலையத்தை விட்டு அவன் தப்பி விட்டான். சிறுவயதில் கள்ளத்தனமாகக் கருதைக் கசக்கி மடியில் போட்டுக்கொண்டு, ஏதாவது சிறு ஓசை கேட்டாலும், அந்தப்புறம் இந்தப்புறம் திரும்பாது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அம்பு போல ஓட்டம் என்று சொல்ல முடியாதபடி வேகமாக நடப்பானே அப்படியே நடந்தான். பிறகு...? ஒரு கை அவன் தோளைப் பற்றியது, அவன் ஓடியது, ஒரு லாரியில் முட்டிக்கொண்டது, பிடிபட்டது, உதைபட்டது, கட்டுப்பட்டது, ஸ்டேஷனுக்கு இழுத்து வரப்பட்டது, லத்தியால், பெல்ட்டால், பூட்ஸ் காலால் நையப் புடைக்கப்பட்டது. இறுதியில் அவன் பிடிபட்டிருக்காவிட்டால் வேலை இழந்திருக்கக்கூடிய இரண்டு போலீஸ்காரர்கள் மல்லாந்து கிடந்த அவனை முழங்கால்களில் லத்திகளால் தாக்கியது. அத்தனையும் அவனது நினைவு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டு உள்ளே வர இடம் இல்லாததுபோல் தவித்தது.

அவனுக்குப் பேச வேண்டும்போல் மட்டும் இருந்தது.

“அய்யா, தண்ணி தாங்கய்யா” என்று மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினான்.

“தண்ணியா... தர்றேன்” என்று சொல்லிக்கொண்டு அப்போது டியூட்டியில் இருந்த ஒரே அதிகாரியான அவர் சிறிதும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மிகவும் சுறுசுறுப்பாக தாழ்வாரத்துக்குச் சென்று ஒரு வாளி தண்ணீரைக் கொண்டுவந்து அவன் முகத்திலும் உடலிலும் வாரியிறைத்தார். ஒரு சில இடங்களில் சற்று எரிந்தாலும், தண்ணீர் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது அவனுக்கு.

“என்ன ஏட்டையா, யாருக்குக் குளியல்?” என்று கேட்டுக்கொண்டே ஒரு வாலிப போலீஸ்காரன் வந்தான்.

“காலேலே எஸ்கேப் ஆனாரு இல்லே. அவருக்குத்தான்.”

“இந்தத் தா... தானா?” வாலிப போலீஸ்காரன் லாக்கப்புக்குள் இருந்த கைதியை உற்றுப் பார்த்தபடி பெல்ட்டை அவிழ்த்தான். “ஏட்டையா கொஞ்சம், லாக்கப்பை தெறந்து விடுங்க” இளைஞன் உத்தரவிடுவதுபோல பேசினான்.

“நீ ஒண்ணு சந்தானம். பயலெ நல்லா நெறுக்கிப் போட்டாங்க. சாவக் கெடக்கறான். தண்ணி தண்ணீனு அலர்றான்.”

”தா.. மூணு குடும்பத்தோரை நடுத்தெருவிலே நிறுத்தி இருப்பான். நீங்க கதவெத் தெறங்க ஏட்டையா”

ஏட்டையா சாவியைக் கொடுத்தார். கைதி அப்படி இப்படி அசையாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மட்டும் திறந்த கதவின் பக்கம் திரும்பியது. அவ்வளவுதான், கண்ணைச் சேர்த்து தோல்பெல்ட்டால் ஒரு சவுக்கடி. கைதிக்கு ஜாக்கிரதை உணர்வு மேலோங்கியது. கண்களை மூடிக்கொண்டு, இலேசாகப் பற்களை நெறித்தவண்ணம் அசைவற்றுக் கிடந்தான். அப்பப்பா, முழங்கால்களில் அப்படி ஒரு திடீர் வலி. இரண்டு கைகளையும் தூக்கவோ திருப்பவோ முடியவில்லை. அடி பெறாத மணிக்கட்டு இருந்த இடது கையை வேண்டுமானால் சிறிது அசைக்கலாம். முகத்திலும், கழுத்திலும், தோள்பட்டைகளிலும் மாறி மாறி அடிகள் விழுந்தன. முகத்தில் எச்சில் விழுந்தது. எதற்கும் அவன் அசையவில்லை. இறுதியில் முழங்கால்களில் ஒரு முரட்டுத்தனமான அடி. “அய்யோ, அய்யோ” என்று அலறினான். மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் வந்தது. கைதியை கதற வைத்துவிட்ட திருப்தியோடு போலீஸ் இளைஞன் பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொண்டான்.

இன்னும் ஒருவன் வர வேண்டியிருந்தது கைதிக்குத் தெரியாது. வேலை இழந்திருக்கக்கூடிய மூவரில் இருவர்தான் அவனைப் பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். மூன்றாமவன் நாற்பது வயதாகியிருந்த ’டூ நாட் சிக்ஸ்’ அதிகம் வம்பு தும்புகளுக்குச் செல்லமாட்டார். அவரிடம் ஒரு எலக்ட்ரிஷன் சர்ட்டிபிகேட் ஏ கிரேடோ, பி கிரேடோ தெரியாது. இருந்தததால் மேல் வரும்படியை  நியாயமான முறையிலேயே சம்பாதித்தார். லஞ்சம் கையூட்டு இவற்றை எல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் அனுமதிக்க மாட்டார். இத்தியாதி தர்மங்களை பின்பற்றுபவரை இகழவும் மாட்டார். காட்டியும் கொடுக்கமாட்டார். அநேகமாகப் பிறரைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார். ஒரு பிளாக் மார்க் இல்லாது இருபது வருஷ போலீஸ் சர்வீசை முடித்துவிட்டார். இன்றுதான் இந்தச் சோதனை.

அடி, உதை, அவமானம். இன்னும் குறையாத போதை. இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி. இத்தனையையும் பொறுத்துக் கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு. இவற்றின் விளைவால் உறங்கிக்கொண்டிருந்தான் கைதி. லாக்கப்பில் கதவு திறந்து கிடந்ததோ, அதனுள் ’டூ நாட் சிக்ஸ்’ நுழைந்ததோ, அவனை ஏற இறங்கப் பார்த்ததோ, இலேசாகக் காலால் உதைத்ததையோ அவன் உணரவில்லை. அசையாது கிடந்த உடலை உற்று நோக்கிவிட்டு அவன் முகவாயை உற்றுக் குனிந்து இரண்டு கைகளாலும் பற்றி இழுத்தார் ‘டூ நாட் சிக்ஸ்’. உடல் பக்கவாட்டில் சலனமின்றி நேராக நகர்ந்தது. ‘டூ நாட் சிக்ஸ்” அந்த உடல் கிடக்கும் நிலையும், திசையும் ஏதோ முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல பார்த்தார். அமைதியாக அவர், உடலை ஒருமுறை சுற்றி வந்தவண்ணமே தன்னுடைய கூர்மையான பார்வையால் அதன் பல பாகங்களையும் உற்று நோக்கினார். பிறகு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.

கைதியின் உடல், நீண்டநேரம் தன்னைத்தானே உணர்வுகளின் சீண்டல்களிலிருந்தும், வெறித்தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில், உடல் வெருண்டு இறுகியது. அது தனித்தனிப் பகுதிகளாகத் துடித்தது. உடலின் ஒவ்வொரு மூலையிடுக்கிலும் அப்படி ஒரு தாக்குதல்; நரம்புகளைச் சுண்டி இழுத்து தன் இச்சைப்படி செயல்படாதவாறு முடக்கிவிடும். சொடுக்கு சதைகளைக் கவ்விக்கொள்ளும். நட்டுவாய்க்காலியின் பிடி இருதயத்தைப் பந்துபோல் துள்ள வைக்கும் திகைப்பு. காதுகளிலே ஒரு அடைப்பு. கண்களை திறக்கவொட்டாது தடுக்கும் சதை இழுப்பு. தொண்டையின் ஆழத்திலிருந்து “தண்ணி, தண்ணி” என்பதுபோல் உறுமல், வாயில் நுரையைத் தள்ளிக்கொண்டு பீறிட்டு வந்தது. ‘டூ நாட் சிக்ஸ்’ அதையெல்லாம் முகம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவிட்ச்சை மட்டும் ஆஃப் செய்தார். தனக்கு போலீஸ் டியூட்டி இல்லாத நேரங்களில் மிகவும் கௌரவமான முறையில் மேல் வருமானம் வாங்கிக் கொடுத்த அவருடைய எலக்ட்ரிக் ஞானம், அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களில் மின்சாரச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்கும் ஆற்றலால் அவருக்கு ஸ்டேஷனில் மரியாதையும் மதிப்பும் வாங்கிக் கொடுத்த அதே மின்னறிவு, இன்று தப்பியோட முயன்று தன்னை அவமானத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய கைதியைப் பழி தீர்த்துக்கொள்வதிலும் அவருக்கு உதவியதில் நம்பர் டூ நாட் சிக்ஸுக்கு உண்மையிலேயே மிகவும் உள்ளடங்கிய மகிழ்ச்சி.

*********

 

பொன் மொழிகள் - ஜி.நாகராஜன்

சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை ' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே ' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை ' உதிர்க்கிறேன்.

1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

துக்க விசாரணை - ஜி.நாகராஜன்

துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா ?

நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு! அந்தப் பரப்பில்தான் எப்படி 'நான் ' என்ற உணர்வே கரைந்துவிடும் நிலையை எட்டி விடுகிறது! கடலின் அலைகள் கரையைத் தொடுவதும் தொடாததுமாக விளையாடிக்கொண்டிருந்தன. கீழ்வானத்தில் சில நிமிடங்கள் நிலைத்த சிவப்பொளி அவசர அவச்ரமாகக் கருமையைத் தொட ஆரம்பித்தது ஏதோ காணதததைக் கண்டுவிட்டது போல ஒருி ஈ மிகுந்த தன்னம்பிக்கையோடு என் மூக்கு நுனியில் வந்து உட்கார்ந்து கொண்டது, ஒரு கையால் அதனை விரட்டியத்தேன், என்மீது என்னவோ அதற்கு திடார் பாசம் ஏற்பட்டது போல 'ஈ ' என்று ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு என் காதில் மீண்டும் உட்கார்ந்து கொண்டது. தலையை அசைத்தேன். அது காதிலிருந்து தலைக்குத் தாவியது. தலையைச் சொறிந்தேன். அது மீண்டும் என் முன் 'ஈ ' என்று வட்டமிட்டது. செகண்டுக்கு தன் இறகுகளை ஆயிரந் தடவைகள் அடித்துக் கொள்ளும் அந்த ஈ! செகண்டுக்கு ஒரு முறை அடித்துக் கொள்ளும் மனித இதயம்.! ஈயின் இதயம் செகண்டுக்கு எத்தனை தடவைகள் அடித்துக் கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடும்; துக்க விசாரணைக்குச் செல்லவேண்டும்.

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

1

'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

'ஆமாங்க ' என்றான் கைதி.

'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.

'அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.