30/01/2013

மாற்று ஒழுக்கத்தை முன்வைத்த ஜி.நாகராஜன் - சு.இரமேஷ்



புதுமைப்பித்தனில் தொடங்கிய நவீனத்துவ கதைசொல்லும் மரபு, தொடர்ந்து பல்வேறு கதாசிரியர்களின் முயற்சிகளின் ஊடாக அதன் ஆழத்தையும் விரிவையும் தேடிப் பயணப்பட்டது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் கதையாசிரியர் தன் பங்காக ஏதோ ஒரு சோதனை முயற்சியை தம் படைப்பின் வழியாகத் தேடுகிறார். அத்தேடுதல் ஒரு முற்றுப்பெறாத முடிவை நோக்கி அவரை நகர்த்திச் செல்கிறது. இவ்வாறாக முற்றுப்பெறாத மாற்று ஒழுக்கத்தின் தேடலை நோக்கி தம் புனைகதைகளைச் செலுத்திய மகத்தான எழுத்தாளர்தான் ஜி.நாகராஜன்.

1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி மதுரையில் பிறந்தார். தந்தை பெயர் கணேச ஐயர். ஜி.நாகராஜனுக்கு இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள்.

ஜி.நாகராஜனின் நான்காவது வயதிலேயே தாயார் இறந்துவிட்டதால், அவரின் பிள்ளைப்பருவம் அவரது தாய்வழிப்பாட்டி வீட்டில் கழிந்தது. இளமையிலேயே ஜி.நாகராஜன் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக விளங்கினார். இவரின் ஆங்கில உச்சரிப்பைக் கண்டு பலரும் வியந்தனர். இவருக்குப் பிடித்த பாடம் கணிதம். இன்டர் மீடியட்டை மதுரைக் கல்லூரியில் படித்து சிறப்பான முறையில் தேறினார். அப்போது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதற்காக அறிவியல் அறிஞர் சி.வி.ராமனிடமிருந்து "தங்கப் பதக்கம்' பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயல்பாகவே கற்பிக்கும் பணியில் அளவிலாத ஈடுபாடு கொண்டிருந்த ஜி. நாகராஜன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அமெரிக்கன் கல்லூரியில் பணியாற்றிய காலகட்டத்தில்தான் அவருக்கு கம்யூனிச இயக்கத்தோடும் இலக்கியத்தோடும் தொடர்பு ஏற்பட்டது.  

மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் திறமையைக் கண்ட அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம், ஜி.நாகராஜனை அமெரிக்காவுக்கு அனுப்பவும் முடிவு செய்திருந்தது. ஆனால், கம்யூனிச இயக்கத்தோடு கொண்டிருந்த தொடர்பு காரணமாக நிர்வாகம் இவரை வேலை நீக்கம் செய்தது. பின்னர், கட்சிப் பணிகளில் ஈடுபட்டபடியே மாணவர்களுக்குத் தனியாகப் பாடம் கற்பித்தார். கட்சித் தோழரான சங்கரநாராயணன் நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து, 1956 முதல் 1970 வரை  பணியாற்றினார்.

1957-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அணுயுகம் என்ற சிறுகதை "ஜனசக்தி' வாரமலரில் பிரசுரமானது. இக்கதையிலிருந்துதான் ஜி.நாகராஜனின் படைப்புலகம் தொடங்கியது. சரஸ்வதி, சாந்தி, ஜனசக்தி, இரும்புத்திரை, ஞானரதம், கண்ணதாசன், கணையாழி, சதங்கை, இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா முதலிய இதழ்களில் நாகராஜனின் எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தன. ஆங்கிலத்திலும் சில சிறுகதைகள், நாவல்கள் படைத்துள்ளார். ஏழு நாவல்கள், ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் வாயிலாகவே தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவைதவிர, "புற்றுக்குடிப் புலவர்' என்ற புனைபெயரில் ஞானரதம் இதழில் மூன்று கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய மொத்தப் படைப்புகளையும் தொகுத்து "ஜி.நாகராஜன் படைப்புகள்' என்ற பெயரில் ராஜமார்த்தாண்டன் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

1959-ஆம் ஆண்டு ஜி.நாகராஜன் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான நான்கு மாதத்துக்குள்ளேயே மனைவி, இயற்கை எய்தினார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பின்னர் நாகலட்சுமியை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்தி, கண்ணன் என இரு குழந்தைகள்.

ஜி.நாகராஜனின் முதல் நூலாக வெளிவந்தது "குறத்தி முடுக்கு' என்ற குறுநாவல். "பித்தன் பட்டறை' என்ற பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி குறுநாவலையும், தாம் எழுதிய கதைகளிலிருந்து 14 கதைகளைத் தேர்ந்தெடுத்து "கண்டதும் கேட்டதும்' என்ற பெயரில் ஒரு தொகுப்பையும் தாமே கொண்டு வந்தார். 1973-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை "ஞானரதம்' இதழில் இவருடைய மற்றொரு நாவலான, "நாளை மற்றுமொரு நாளே' தொடராக வெளிவந்தது. அந்நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

ஜி.நாகராஜன், இந்த உலகில் குறைந்த காலமே வாழ்ந்தாலும், எக்காலத்திலும் பேசக்கூடிய பக்கங்களைத் தொட்டுச் சென்றவர். நாகராஜனின் கதை உலகம் இதுவரை தமிழ்ச் சூழல் கண்டிராத ஒன்று. சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத விளிம்புநிலை மக்களான பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எழுதி, நவீன இலக்கியத்தின் பக்கங்களை விரிவாக்கியவர். இதில் ஜெயகாந்தனின் பங்கையும் மறுக்க முடியாது. ஆனாலும் ஜெயகாந்தனிலிருந்து முற்றிலும் வேறு திசையில் பயணித்தவர் ஜி.நாகராஜன்.

ஜி.நாகராஜனின் கதை உலகம் என்பது சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத தகுந்த அங்கீகாரமில்லாத நகரத்தின் இடுக்குகளில் வாழும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தது. தமிழ்ப் புனைவுகள் அதுவரை கண்டிராத ஓர் உலகத்தை தம் கதைகளின் வாயிலாகக் கட்டமைத்தார்.

இதுகாறும் நம்பப்பட்டு வந்த ஒழுக்கத்தையும் அதன் விதிகளையும் அதன் எல்லைவரை சென்று தன் கதைகளின் மூலமாகத் தகர்த்தெறிந்தவர் ஜி.நாகராஜன். மனித சமூகத்தின் இனக்குழு அடையாளத்தை தன் "குறத்தி முடுக்கு' என்ற நாவலின் மூலமாக மீட்டவர்.

நாகராஜனின் சிறுகதைகளைவிட அவருடைய இரு நாவல்களும் அதிகமாக கவனிக்கப்பட்டவை. அவருடைய இரண்டு நாவல்களுக்கும் இணையான ஒரு சிறுகதை, "கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா' என்ற கதை.

"சாவும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்'' என்று கூறிய ஜி.நாகராஜன், 1981-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி காலமானார்.

"பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கியவர் ஜி.நாகராஜன் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். சமூகத்தின் இறுக்கமான கட்டமைப்புகளைத் தகர்த்தெறிய அறியப்படாத இருண்ட பகுதிகளில் வெளிச்சம் பாய்ச்சியவை இவரது புனைவுகள். விளிம்புநிலை மக்களின் இனவரைவியலைத் தேடும் எழுத்தாளர்களுக்கு ஜி.நாகராஜன் நிறைய விட்டுச் சென்றிருக்கிறார். ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்'' (தீராநதி, அக்.-2010) என்ற சி.மோகனின் கருத்துதான் ஜி.நாகராஜனை விமர்சிப்பவர்களுக்கான பதில்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: