31/01/2012

வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்

இது ஜனநாயக யுகம்அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள் என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். வாலி வதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகி என்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை அமைக்க முயன்றிருப்பாரேயானால், அவர் காவியம் முற்றுப்பெறாமலேதான் இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஆனால் வால்மீகி மகரிஷி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது. இன்று எழுதுகிற ஒவ்வொருவருமே மகரிஷிதான்; சந்தேகமில்லை.

இலக்கியாசிரியன் தன் வாசகனை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு தன் படைப்புக்களைச் செய்கிறான் என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். நினைப்பதேயில்லை என்பதிலிருந்து, ‘ஏதோ கொஞ்சம் லேசாக நினைவிருக்கும்என்பதுவரை சொல்லலாம். ஆனால் இலக்கியச் சரித்திரத்தில் காணக்கிடக்கிற ஒரு உண்மை தப்ப முடியாததாக இருக்கிறதுஎந்தக் காலத்தில் வாசகன் முக்கியத்துவம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அந்தக்காலத்தில் இலக்கிய சிருஷ்டி ஓரளவுக்குத் தரம் குறைந்ததாக இருப்பது தெரிகிறது. உதாரணமாக சமஸ்கிருத இலக்கியத்தில் 9,10 நூற்றாண்டுகளில் கவிக்குத் தருகிற அளவுக்கு வாசகனுக்கும் முக்கியத்துவம் தந்து, அந்த வாசகன் கவியேபோல, சில சமயங்களில் கவியையும் விட முக்கியமானவன் என்று அவனுக்கு ஸஹ்ருதயன் என்று பெயர் தந்து பாராட்டினார்கள். இதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு கவிதையே க்ஷ£ணமடைந்து தரங்குறைந்து தேய்ந்து ஒடுங்கிவிட்டது என்பது சரித்திர உண்மை.

வாசகனே இல்லாவிட்டால் இலக்கியம் எதற்கு, ஏது என்று சொல்பவர்கள் இருக்கலாம். வாசகன் இல்லாத நிலையோ, முக்கியத்துவம் பெறாத நிலையோயல்ல விஷயம். சர்வ ஆதிக்கமும் வாசகனுடையதாக இருப்பதற்கும், சர்வ ஆதிக்கமும் எழுதுபவன் கையிலேயே என்று இருப்பதற்கு இடை நிலையில் ஒரு இடம் இருக்கவேண்டியதுதான் லக்ஷிய நிலை என்று சொல்ல வேண்டும். வா¡சகனை மனதில்கொண்டு, வாசகனை நாடி எழுதுகிற இலக்கியாசிரியர்களை விட, வாசகனை மனதில் கொள்ளாத, எவனுக்கெந்தக் கலை இருக்கிறதோ படிக்கட்டும், சர்வ ஜனரஞ்சகமானது என்று ஒரு தரம் இலக்கியத்திலேயே கிடையாது என்று நினைக்கிறவனே நல்ல இலக்கியாசிரியனாக இருக்கவேனும்இருந்து வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும்.

பொதுவாக இதெல்லாம் சரி. உன் கதைகளையோ உன் நாவல்களையோ, உன் கவிதைகளையோ, உன் விமர்சனக் கட்டுரைகளையோ பற்றி உனக்குள்ள (அது ஒன்றைரையே அரைக்காலோ, அல்லது இருநூறோ) வாசகன் என்ன நினைக்கிறான், அவன் நினைப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேள்வி கேட்கப்பட்டால், என்னால் நிதானித்து ஒரு பதில்தான் சொல்ல முடியும். “அது அப்படியொன்றும் விவரிக்ககூடிய உறவு அல்ல. வாசகனுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள உறவு வார்த்தைகளுக்கு அகப்படாது,” என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தும் அதையும்தான் சற்றுச் சொல்லிப் பார்க்கலாமே என்று நினைத்துக் குறிப்புக்காட்டுகிற மாதிரிதான் வாசகர்கள் சிலருடன் கடித மூலமாகவோ நேரடியாகவோ நான் நடத்திய சம்பாஷணைகள் என்னை என்ன நினைக்கத் தூண்டுகின்றன என்பதைச் சொல்லுகிறேன்.

மதுரையிலிருந்து ஒரு வாசகர் மணி மணியான எழுத்துக்களில் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் என் ஒவ்வொரு கதையும் வெளிவந்தவுடன் பாராட்டிஆஹா அற்புதம்! பிரமாதம்என்றெல்லாம், ஒரு தபால் கார்டில் அடங்கக்கூடிய அளவில் எழுதுவார். இந்தக் கடிதங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப் போதுமான அறிவு எனக்கில்லை. என் மனைவி அவற்றைத் தொகுத்துப் பத்திரப்படுத்தி வைப்பாள். இன்னமும் வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன். இந்த அன்பரின் பெயரை வெளியிட எனக்கிஷ்டமில்லை. ஏனென்றால் இன்று அவர் தன்னைப் பிரபலமான எழுத்தாளராகக் கருதிக்கொண்டிருக்கிறார். ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் பிரபலமாகத் தொடங்கிய தேதியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். இந்த ஒருவர் தன்னுடைய ஸஹ்ருதயா என்று நான் இவர் எழுதிய கடிதங்களை வைத்து ஏற்றுக் கொண்டால் நான் எழுதுவதன் தொடக்கம், நான் எழுதுகிற பாணி, இலக்கியம்பற்றி என் கொள்கைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்கு நான் தயாரில்லை. அதற்காக இந்த வாசகர் தான் நம்பாததைச் சொன்னதாகவும் நான் கருதவில்லை. ஏதோ சொன்னார்கார்டு எழுத வசதியிருந்தது அவ்வளவுதான். அவருடைய கையெழுத்தைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டு என்றும் சொல்ல விரும்புகிறேன்.

இன்னொருவரிடமிருந்தும் எனக்கு அந்த நாட்களில் அடிக்கடி கடிதம் வரும். நாவல், கதை, எது எழுதினாலும் அதைப்பற்றித் தீர்க்கமாக விவாதித்து இது சரியென்று எனக்குத் தோன்றுகிறதுஇது சரியல்ல என்று எண்ணுகிறேன் என்று எழுதுவார். அவர் கடிதங்களுக்கு நான் பதில் எழுதியதில்லைஆனால் அவர் அதற்காக எழுதுவதை நிறுத்திவிடவில்லை; எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சற்றுக் காலதாமதமாக அவரே ஏதோ நாவல், கதை ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு, அவர் சரியல்ல என்று எனக்குச் சொன்ன பாணியைப் பின்பற்றி எழுதுகிறார் என்று கண்டு, அவரைச் சந்தித்தபோது அது பற்றிக் கேட்டேன். “உண்மைஎன்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் அப்படி என்று சொல்ல அவருக்குத் தெரியவில்லை.

என் வாசகர்கள் பற்றி இது போதும் என்று எண்ணுகிறேன். ஆனால் பொதுவாக விமர்சனக்கட்டுரைகள் எழுதும்போதுதான் மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். “நீங்கள் அழிக்கும் விமரிசனம் ஏன் எழுதுகிறீர்கள்? ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா?” என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. “அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமரிசனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால் ஆக்க விமரிசனம் இல்லாமல் அழித்தல் விமரிசனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றேஎன்றுதான் பதில் தரவேண்டும்.

மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடுஅதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.

இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்.

நன்றி: ஞானரதம்மே 1970.

30/01/2012

மிதிபட…. – வண்ணதாசன்


உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக் கலரில் பெயிண்ட் அடித்த ஒரு கதவு சாத்தியிருக்க, கையில் சற்றுக் கனமாகத் தொங்குகிற பையுடனும் இன்னொரு கையில் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கிற மண்ணெண்ணெய் ஸ்டவ்வுடனும் உள் நுழையச் சாத்தியமற்று அவள் வெளியிலேயே நிற்கும்படி ஆயிற்று.

கசப்பாக ஒரு வாசனை – வண்ணதாசன்


பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச் சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது.

என்னைப் பார்த்ததில் இருந்து பாலாவின் வாய் ஓயவே இல்லை. சித்தி, சித்தி என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தான். பழைய புத்தகக் கடையில் ஒன்றரை ரூபாய்க்கு வாங்கிய கபில் படத்தை மேஜைக்கு நேரே ஒட்டியிருந்தான். ‘மேலே வா சித்தி ‘ ‘ என்று கையைப் பிடித்துக்கொண்டு போய்ப் பிளாஸ்டிக் வாளியில் வளர்க்கிற மீன் குஞ்சுகளைக் காட்டினான். படிகளில் ஏறும்போதே அடித்தவேப்பம் பூ வாசனையில் மனம் இன்னும் கிறங்கிக் கிடந்தது. ஆரஞ்சு வாளியில் நீந்துகிற மீனை முற்றிலும் ரசிக்க முடியவில்லை.

குமாரவனம் – பாவண்ணன்


தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக் கொள்கிற சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பது போல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீர் அலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட்படுத்தாமல் சில கணங்கள் வேகவேகமாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தாலும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடிவதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத்தும்.

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் – வண்ணதாசன்


சங்கர நாராயணன் வீடு இதுதானேஎன்று கேட்டவர் முழுக்கைச் சட்டை போட்டுக் கொண்டிருந்தார். கையில் ஒரு தகரப்பெட்டி இருந்தது. இதுவரை பார்த்திராத ஒரு சின்ன அளவில், மட்டமான ஒரு பச்சை வண்ணம் அடிக்கப்பட்டதாக, நீலப் பூக்கள் நான்கு முனைகளிலும் வரையப்பட்டு அந்த பெட்டி இருந்தது.

அவர் யாரைப் போலவும் இருந்ததாக யோசித்துக் கொள்ளமுடியும். ரயில் பெட்டியின் நெரிசலில் தூங்கிக் கொண்டே எதிரே வருகிறவர். சாராயக் கடை வாசலில் மேலும் குடிப்பதற்கு காசின்றி நிற்பவர். கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து எழுப்பி வெளியே தள்ளப்பட்டவர். மூணு சீட்டு விளையாடுவதாகக் கைது செய்யப்பட்டு, கோர்ட் வராந்தாவில் போலீஸ்காரர்களுக்கு, வெளியே போய்க் கம்பித் தூக்கில் டா வாங்கி வருகிறவர், இப்படி யாராகவும் அவரை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

அறிமுகம் – நீல.பத்மநாபன்


இன்னும் பத்துநிமிஷத்தில் அங்கே வந்துடறேன்நீயும் கிளம்பு ஒண்ணாகவே போய் பாத்துவிடுவோம். கொஞ்சம் சீரியஸ்உண்ணுதான் டாக்டர் சொன்னார்.

உத்தமன் போனை வைத்துவிட்டான்.. இவன் மனம் அடித்துக் கொண்டது.

பாவம் சங்கரன்.

அவனுக்கு இப்படி வந்திருக்கக் கூடாது.

காரியாலயத்தை விட்டு ஒருமணி நேரம் முன்னாடி வெளியில் போக அனுமதிக்காக கடிதம் எழுதிக் கொண்டிருக்கையில், மீண்டும் மீண்டும் உள்ளே மின்வெட்டும் அந்த முகம்.

நேர்ந்தது – விக்ரமாதித்யன் நம்பி


அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில் வீடு பார்த்து வைத்திருந்தார்கள். அம்மாவை வந்து பார்க்கச் சொன்னார்கள். திருநெல்வேலியில் இனிமேல் இருக்கமுடியாது என்று சின்னப்பிள்ளைக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொன்னார்கள்.

ஒண்டுக் குடித்தனம் – இரா.முருகன்


சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில்பிடி ஜூட்என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன் ஒருத்தன்.

இந்த நஜீபை இழுத்துப் போட்டு உதைக்க வேண்டும்.

சரவணனுக்குப் பங்க்ளாதேஷ் காரன் நஜீப் மேல் வந்த ஆத்திரத்தை மீறி அரையில் முட்டிக்கொண்டு வந்தது.

29/01/2012

தமிழும் தமிழ்நாடும்! – மகாகவி பாரதியார்


தென்றலுடன் பிறந்த பாஷை

பொறுப்பென்பதே அற்ற சில மூட வாலிபர்கள் தாம் அரைகுறையாகக் கற்றிருக்கும் அன்னிய பாஷைத் தருக்கு மேலிட்டவர்களாகித் தமிழ்மொழியே இறந்து போய்விட வேண்டுமென்றும் கூறுவதை நன்கு கண்டித்துப் பேசியிருக்கிறோம். இவர்கள் கிடக்க, மற்றபடிப் பொதுவாக இந்நாட்டில் ஆங்கிலம் கற்றோரெல்லாம் சுபாஷாபிமானம் என்பது மிகவும் குன்றியிருப்பது அன்றி, அதன் நயமறியாது திட்டுவதை நினைக்கும்பொழுது நமக்கு வருத்தமுண்டாகிறது. இதன் சம்பந்தமாகச் சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய மஹா வித்வான் ஸ்வாமிநாதையர் சொல்லிய வார்த்தையொன்று நமது நெஞ்சை விட்டு ஒருபோதும் அகலமாட்டாது. மேற்படி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் ஒருமீட்டிங்நடந்தது. தமிழ் பாஷையின் அருமையைப் பற்றி ஏதோ பிரஸ்தாபம் வந்தது.

புர்ரா – எஸ்.ராமகிருஷ்ணன்


அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.