கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

குமாரவனம் – பாவண்ணன்


தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள் உரசிக் கொள்கிற சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. எங்கோ ஒரு நீர்நிலை இருப்பது போல மின்னும். கண்கள் கூசும் அளவுக்கு நீர் அலைகள் நெளிவது போலத் தெரியும். சட்டென ஒரு நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும். உடல் வலியையும் அசதியையும் பொருட்படுத்தாமல் சில கணங்கள் வேகவேகமாக நடப்பான். எவ்வளவு தொலைவு நடந்தாலும் அந்த நீர்நிலையை அவனால் நெருங்க முடிவதில்லை. கண்பார்வையிலிருந்து அந்த நீர்நிலை திடுமென மறைந்துவிடும். மறுகணமே அளவுக்கு அதிகமான சோர்வு அவனை அழுத்தும்.


சட்டென வானில் சில கொக்குகள் பறப்பதைப் பார்த்தான். அவனுக்குள் மீண்டும் நம்பிக்கை சுரந்தது. கண்டிப்பாக அங்கு ஏதாவது குளமோ அல்லது ஏரியோ இருக்கக் கூடும் என நினைத்தான். எதிரில் நாலைந்து பெண்கள் நடந்து வந்தார்கள். குளித்து வரும் அடையாளம் அவர்களிடம் தென்பட்டது. சட்டென அவன் நம்பிக்கை மேலும் வலுப்பட்டது. அந்த நீர்நிலையின் இடத்தைப் பற்றி அவர்களிடம் கேட்க நினைத்தான். அந்தப் பெண்கள் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து வேகவேகமாக அவனைக் கடந்து போன விதம் ஆச்சரியத்தைத் தந்தது. சலிப்புடன் தொடர்ந்து நடந்தான்.

முதலில் அடர்ந்த தோப்பொன்று தென்பட்டது. நுழைந்ததுமே குளிர்ந்த காற்றை உணர்ந்தான். உடல் சோர்வுக்கு அக்காற்று இதமாக இருந்தது. தோலாடைகளுடன் இரண்டு பெண்கள் மீண்டும் தென்பட்டார்கள். வேகமாக அவர்கள் கடந்துவிடும் முன்னால் அவர்கள் முன்னால் அவசரம் அவசரமாகச் சென்றுஇங்கே குளம் எங்கே இருக்கிறது ? ‘ என்று கேட்டான். அப்பெண்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். அவர்கள் பார்வை அச்சத்தில் தத்தளித்தது. சட்டென அப்பார்வை ஒரு ஆணின் பார்வை போலத் தெரிந்தது. மறுகணமே தன் பிழைக்காகத் தன்னை நொந்து கொண்டான்.

இங்கே குளம் எங்கே இருக்கிறது ? ‘ இளன் மறுபடியும் கேட்டான்.

இந்தப் பாதை முடியும் இடத்தில்

உடனே அந்தப் பெண்கள் கிளம்பிப் போய்விட்டார்கள். ‘இரண்டு நாட்களாகத் தொடர்பயணம். குதிரையும் நானும் களைத்துப் போய்விட்டோம். எப்படியோ எங்கோ வழிதவறிவிட்டதுஎன்று அவன் சொன்ன சொற்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை. சில மான்கள் சட்டென ஒரு பாதையிலிருந்து வெளிப்பட்டு பாதையைக் கடந்து மறுதிசையில் ஓடின. அப்போதுதான் சற்றே தள்ளி மரத்தடியில் சில நடுவயதுப் பெண்கள் சுள்ளிகள் சேகரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவர்கள் அவனையோ அக்குதிரையையோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அப்பெண்கள் தற்செயலாகவாவது அவன் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடும் எனச் சில கணங்கள் தொடர்ந்து அங்கேயே நின்றிருந்தான். வனத்தில் யாரையுமே எதிர்கொள்ளாததைப் போல அவர்கள் தம் வேலையில் மூழ்கியிருந்தார்கள். சலிப்புடன் குதிரையின் கடிவாளத்தை இழுத்தபடி குளத்தை நோக்கி நடந்தான்.

நாலாபுறமும் விழுதுகள் இறங்கிய ஆலமரத்தின் அடியில் ஒரு குடில் தென்பட்டது. குடிலின் ஓரமாய் அழகான பூந்தோட்டம் தெரிந்தது. மறுபக்கம் திண்ணையில் ஒரு இளநங்கை முயல் குட்டிகளுக்குத் தழையை ஊட்டியபடியிருந்தாள். அந்தக் குடில் அழகான தவச்சாலை போலிருந்தது. எந்தக் கணமும் குடிலுக்குள்ளிருந்து வெண்தாடியுடன் ஒரு முனிவர் வெளிப்படக் கூடும் என்று நினைத்தான்.

சாலையில் இருபக்கங்களிலும் மரங்கள் அடர்ந்திருந்தன. இதமாக வீசிய காற்று உடலைத் தழுவியதும் களைப்பு குறைந்த மாதிரி இருந்தது. எங்கு பார்த்தாலும் விதம்விதமான பறவைகள். ஒரு கிளையில் உட்கார்வதும் சில கணங்களுக்குப் பிறகு இறகுகளைப் படபடவென்று அடித்தபடி பறந்து மேலெழுவதும் வேகவேகமாகத் தரையில் இறங்கி அப்பாவி போல நாலுபுறமும் பார்த்துக் கீச்கீச்சென்று சத்தமிட்டன. நின்று அப்பறவைகளின் பாடலைக் கேட்க வேண்டும் போல இருந்தது. தண்ணீருக்கான தவிப்பு முன்னோக்கித் தள்ளியது. தண்ணீரை நினைத்ததுமே நெஞ்சு உலர்ந்தது. எச்சிலை மறுபடியும் கூட்டி விழுங்கினான்.

சட்டென்று புதரின் இடைவெளியிலிருந்து ஏழெட்டுப் பெண்கள் வெளிப்பட்டார்கள். எல்லாருமே இடுப்பில் குடம் சுமந்திருந்தார்கள். வெற்றுக் குடங்கள். அவனைத் தாண்டி அதே திசையில் வேகவேகமாக நடந்ததைப் பார்த்த பிறகுதான் அவர்களும் குளத்துக்குத்தான் செல்கிறார்கள் போலும் என்று நினைத்தான். அவர்கள் அவனைக் கடந்த தருணத்தில் இனிய பூமணமொன்று கமழ்ந்தது. இதுவரை அறியாத பூமணம். காலமெல்லாம் அந்த வாசத்தை நுகர்ந்தபடி இருக்கலாம் போலிருந்தது. அந்த வாசம் தன்னைவிட்டுத் தள்ளிப்போவதை பெரும் வேதனையாக உணர்ந்தான்.

அவர்களில் யாருமே ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் போனது ஏமாற்றத்தையளித்தது.

குளத்தை நெருங்க நெருங்கக் குளிர்ந்த காற்று வீசியதை உணர்ந்தான். இனிய சாரல் போலிருந்தது காற்று. ஒரு பெரிய வெள்ளித்தட்டு போல வெயிலில் குளம் தகதகத்தது. துணியொன்று காற்றில் அலையலையாய் நெளிவதைப் போல அலைப்பரப்பு நெளிந்தது.

அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான். குளத்துத் தண்ணீரைக் கண்டதும் அவன் ஆவல் அதிகரித்தது. குதிரை அவனுக்கு இணையாக நடந்தது. பக்கவாட்டில் ஒரு பெண் கோடலியால் விறகு பிளப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். இன்னொரு பக்கம் ஏழெட்டுப் பெண்கள் சேர்ந்து ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் மண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தாள். மற்றொரு பெண் சுவரெழுப்பிக் கொண்டிருந்தாள். குடிசைக்கு மேல் வேய கிளைகளை அளவாக நறுக்கியபடி இருந்தாள் இன்னொருத்தி. தொலைவில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தாள் ஒரு மூதாட்டி. மற்றொரு பக்கத்தில் நிழலில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் இளம்பெண்கள். அவர்கள் மாற்றி மாற்ற்ி வீசிக் கொண்டிருந்த பந்து அந்தரத்திலேயே அலைபாய்வது போலிருந்தது. அவர்கள் அழகு அவனைச் சுண்டியிழுத்தது. ஒருகணம் தாகத்தை மறந்து அவர்களை உற்றுப் பார்த்தான். அவனது இருப்பால் சிறிதும் பாதிக்கப்படாதவர்களைப் போல அவர்கள் சுதந்தரமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சிரிப்பும் துள்ளலும் அவனைப் படுத்தின.

கரையை நெருங்கினான். ஏராளமான கொக்குகள் பறந்தவண்ணமும் கூரையின் மீது இறங்கியவண்ணமும் இருந்தன. எங்கெங்டூம் எராளமான பெண்கள் குளித்தபடியும் விளையாடியபடியும் இருந்தார்கள். பார்த்த இடமெங்கும் பெண்களைக் கண்டு அதிசயப்பட்டுப் போனான். தொலைவில் சில யானைகள் தெரிந்தன. அவற்றின் துதிக்கைகளைத் தடவியபடி பெண்கள் வந்தார்கள். அவற்றின் பிளிறலில் கொக்குகள் அஞ்சி வேறுபக்கம் பறந்தன. உடனே அந்தப் பெண்கள் அதட்டினார்கள். மறுகணமே அந்த யானைகள் அடங்கின. உப்பிய வயிற்றை ஆட்டிக் கொண்டு அவன் பின்னால் நடந்தன. குளத்தில் இறங்கித் தண்ணீர் குடித்தன.

எங்கெங்கும் பெண்களைப் பார்த்ததும் அவனுக்குள் குழப்பமும் அச்சமும் உருவாகின. நிகழ்பவை அனைத்தும் ஒருகணம் கனவோ எனத் தோன்றியது. வனத்துக்குள் நுழைந்த கணத்திலிருந்து பார்த்ததையும் பார்த்தவர்களையும் அவன் மனம் மீண்டும் அசைபோட்டது. அந்தக் கணம் வரை ஒரு ஆணைக் கூடத் தான் சந்திக்கவில்லை என்று நினைத்ததும் உடல்முழுக்க ஏதோ ஒரு பீதி பரவியது. இதயத்துடிப்பு அதிகரித்தது. உண்மையிலேயே அவர்கள் பெண்கள்தாமா அல்லது பெண்கள் உருவத்தில் இருக்கிற ஆண்களோ என்று தோன்றியது. திரும்பி உற்றுப் பார்த்தான். உண்மையிலேயே பெண்கள். அடர்ந்த செறிவான கருங்கூந்தல். செழிப்பான உடல்வாகு. சிரித்தபடி அவர்கள் தமக்குள் பேசிய உரையாடல்களின் குரல்கள் பெண்களின் குரல்களாகவே இருந்தன.

அடியே மைத்ரி, பந்து எங்கே ? ‘ என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் கேட்டாள். அந்த இளம்பெண் இன்னொரு பெண்ணின் கூடையில் ஒளித்து வைத்திருந்த பந்தைக் கொண்டுவந்து தந்தாள். ஒளித்து வைத்த பெண் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். அதற்குள் இன்னொருத்தி ஓடிவந்து அப்பந்தைத் தட்டிவிட்டாள். உருண்டோடும் பந்தைப் பிடிக்க வேறொருத்தி ஓடினாள். அவள் பின்புறம் அவன் மனத்தைச் சஞ்சலத்துக்குள்ளாக்கியது. ஏக்கத்துடனும் அச்சத்துடனும் அவர்களைக் கடந்தான்.

குளம் மிகுந்த ஆரவாரமாகக் கிடந்தது. பல பெண்கள் குளத்துக்குள் இறங்கி ஆடிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பெண்கள் ஒருசேரச் சேர்ந்து குளிக்கிற காட்சியை அவன் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை. ஒவ்வொரு கணமும் அவன் தடுமாற்றம் கூடுதலாகிக் கொண்டிருந்தது.

அந்த வனத்தை அவனால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. தனது இருப்பிடத்திலிருந்து சற்றே தொலைவில் இருக்கிற இடத்தில் எங்கெங்கும் பெண்களே நிறைந்த இப்படியொரு வனம் இருப்பது புதிய சங்கதியாக இருந்தது. தன் வனத்திலிருப்பவர்களுக்கு இது தெரியாத சங்கதியா அல்லது தெரிந்தும் தன்னிடம் மறைத்துவிட்டார்களா என்று குழம்பினான். ஏதோ ஒரு கனவு கண்டதைப் போலிருந்தது. மெலிந்தும் உயர்ந்தும் குள்ளமாகவும் பருமனாகவும் பலவிதமான பெண்களே எங்கெங்கும் நிறைந்திருந்தார்கள். மரத்தடியில் பெண். குளக்கரையில் பெண். குடிசையில் பெண். பசுக்களை மேய்த்தபடியும் பெண். புதிராகவும் பீதியாகவும் உணர்ந்தான். தண்ணீரை அருந்திவிட்டு உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட வேண்டும் என்று உள்ளூர விரும்பினான். ஆனால் எங்கும் நகர்ந்துவிடாதபடி நிலத்தில் அழுத்தமாய் அவன் கால்கள் பதிந்திருக்க, கண்கள் பெண்கள் நடுவே அலைமோதிக் கிடந்தன.

கரையை நெருங்க்ினான். கரையோரம் ஒரு தென்னை விழுந்து கிடந்தது. அதில் உட்கார்ந்திருந்த பத்துப் பதினைந்து பெண்கள் கால்களைத் தண்ணீரில் தொங்கவிட்டடிருந்தார்கள். கைகளால் தண்ணீரை அள்ளி ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண் டிருந்தார்கள். நொடிக்கு நொடி அவர்கள் சிரிப்பொலி அதிகரித்தபடி இருந்தது. குளத்தில் கால் வைத்ததும் குளுமையில் உடல் சிலிர்த்தது. கரையோரத்தில் இருந்த ஒருத்தி ஏஎன்ன வேண்டும் ? என்று கேட்டாள். அக்குரலின் இனிமை அவனை மேலும் தடுமாற வைத்தது. அத்தனை இனிய பெண்குரலை அவன் அதுவரை கேட்டதே இல்லை. அவன் நாக்குக் குழறதாகம். தண்ணீர் குடிக்கலாமா ? ‘ என்று கேட்டான். கூடவே குளத்துத் தண்ணீரைக் குடிக்க இந்தப் பெண்களின் அனுமதி எதற்கு என்கிற எண்ணமும் ஓடியது.

வாளிப்பான உடல்வாகு கொண்ட அப்பெண்குடிக்கலாமேஎன்று உடனேயே பதில் சொன்னாள். அவள் பதிலில் பரிவு தெரிந்தது. மறைமுகமாக கேலியும் கிண்டலும் பொதிந்திருப்பதாகவும் தோன்றியது. தண்ணீர் குடிக்காமல் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான் அவன். அதற்குள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் என்று மறுபடியும் ஒருமுறை சென்னாள் அப்பெண். அவள் உதடுகளின் அசைவையே அவன் உற்றுப் பார்த்தபடி இருந்தான். அவன் தடுமாறிக் கொண்டிருக்கும் தருணத்தில் குளத்தில் இறங்கிய குதிரை தாகம் தீருமட்டும் தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து நிம்மதியாக மூச்சுவிட்டது.

என் பெயர் இளன். பக்கத்து வனத்தில் சிரார்த்த தேவனின் மகன். குதிரையேறிச் சுற்றும் போது வழி தவறி விட்டதில் நிறைய அலைந்துவிட்டேன்

அப்பெண்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதுவும் பேச்சில்லை. அவன் குனிந்து வேட்கை தீர தண்ணீரை அள்ளிக் குடித்தான். அத்தண்ணீரின் சுவை ஆச்சரியமாக இருந்தது. அதுவரை அப்படி ஒரு சுவையான தண்ணீரை தான் குடித்ததே இல்லை என நினைத்துக் கொண்டான்.

அம்மா என்று மூச்சு வாங்க எழுந்து அப்பெண்களைப் பார்த்தான். அவர்கள் அப்போதும் எதுவும் பேசவில்லை. மெதுவாகக் கரையேறி மரத்தடியில் உட்கார்ந்தான். அதன் நிழல் களைப்புக்கு இதமாக இருந்தது. தலைக்கு மேல் அண்ணாந்து பார்த்தான். கிளைகளுக்கிடையே கட்டப்பட்ட பரண்களில் பெண்கள் உட்கார்ந்து கதைபேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னொரு பக்கத்தில் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டிருந்தார்கள் வேறு சில பெண்கள்.

பார்வையைச் சட்டெனத் தாழ்த்தினான் இளன். அவனை ஏதோ கலவர உணர்வு அரிக்கத் தொடங்கியது. திடுமென ஒரு தேர் ஓடிவரும் சத்தம் கேட்டது. மெல்ல புழுதிமண்டலம் எழுந்து வானை நோக்கி சுருண்டு சுருண்டு எழுந்தது. குதிரைகளின் குளம்பொலிச் சத்தம் நெருங்க நெருங்க அவன் இதயத்துடிப்பு அதிகரித்தது. எழுந்து ஓட வேண்டும் போல இருந்தது. அதே கணத்தில் அசையவிடாமல் செய்தது ஓர் ஈர்ப்பு. புழுதி பறக்க ஓடிவந்த தேர் குளக்கரையில் நின்றதும் சுற்றிலும் ஆடிக் கொண்டிருந்த பெண்கள்பார்வதி பார்வதிஎன்று சொல்வது கேட்டது. தேரில் பார்வதியைச் சுற்றி உட்கார்ந்திருந்த பெண்கள் வேகமாக இறங்கி அவள் இறங்கத் துணைபுரிந்தனர். அப்போதுதான் தேரோட்டியைக் கவனித்தான் இளன். அவளும் பெண். மேல்மூச்சு வாங்கியபடி குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடி நின்றிருந்தாள் அவள்.

அவள் குளத்தில் இறங்கினாள். ஒருமுறை குளத்தைச் சுற்றிப் பார்த்தாள். மறுபக்கம் யானையைக் குளிப்பாட்டியபடியிருந்த பெண்கள் எல்லாரும் எழுந்து கரைக்கு வந்தார்கள். அங்கு நின்றிருந்த எல்லாப் பெண்களும் தன்னையே பார்ப்பதாகத் தோன்றியது இளனுக்கு. அந்த எண்ணம் ஒருவிதப் பதற்றத்தைத் தந்தது.

சட்டென எழுந்து குதிரையை நடக்கவிட்டுத் தொடர்ந்தான். அவனுக்கு எல்லாமே குழப்பமாகவும் கனவு போலவும் தோன்றியது. யாரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பெண்கள். சுறுசுறுப்பாக ஏதாவது வேலை செய்தபடி இருந்தார்கள். அல்லது தமக்குள் சந்தோஷமாகச் சிரித்தபடி களியாட்டத்தில் மூழ்கியிருந்தார்கள்.

சிறிது தொலைவில் மானோடு தன்னந்தனியாக ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள். அவளை நெருங்கிக் கேட்கலாம் என்ற தோன்றியது. அவள் முகம் ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக இருந்தது. உடனே அவளை நோக்கி நடந்தான். மெலிந்த உருவம். சுருள்முடி. வட்டமுகம். தளிர்நிறக் கன்னங்கள் செழுமையாக இருந்தன. சற்றே பெரிய கண்கள். அவளை நெருங்கி ஏவணக்கம்ஏ என்றான். தன் குரல் வித்தியாசமாக ஒலித்த விதம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. அவள் சற்றே கலவரத்துக்குள்ளானவளாக நிமிர்ந்துஎன்ன வேண்டும் ? ‘ என்பது போலப் பார்த்தாள்.

இப்போது தேரில் போனது இந்த வனத்தின் அரசியா ? ‘ தடுமாறிக் கேட்டான் இளன்.

ஆமாம்என்றாள். அவள் கண்கள் அவனை ஊடுருவின. அந்த வெளிச்சம் அவனை மேலும் மேலும் பதற வைத்தபடி இருந்தது.

பார்வதி என்றார்களே ? அப்படியென்றால்.. ? ‘

ருத்ரனின் மனைவி பார்வதி. இந்தக் குமாரவனத்துப் பேரரசி

இதன் பெயர் குமாரவனமா ? ‘

ஆமாம்

நான் பக்கத்து வனத்தைச் சேர்ந்தவன். திசைமாறி இங்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்று சொல்ல முடியுமா ? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது

வெளியே செல்வதா, நல்ல கதை. இங்கிருப்பவர்கள் பெரும்பாலோர் திசைமாறிவந்து அகப்பட்டவர்கள்தாம். ஒருமுறை உள்ளே வந்தவர்கள் மறுமுறை வெளியே செல்வது அரிது.. ‘

ஐயையோ.. ‘ அலறினான் இளன். ‘நான் எப்படியாவது வெளியேற வேண்டுமே. எனக்கு உதவ மாட்டாயா நீ.. ? ‘ அழாத குறையாக கெஞ்சினான்.

உதவியா ? உனக்கு உதவும் வழி எனக்குத் தெரிந்திருந்தால் நான் ஏன் இன்னும் இங்கிருக்கிறேன்அவள் கசந்த சிரிப்புடன் சொன்னாள்.

இளனுக்கு மூச்சே நின்றதைப் போல இருந்தது. ‘அப்படியென்றால் என் கதி.. ? ‘

இங்கிருக்கும் எல்லாருக்கும் என்ன கதியோ அதே கதிதான் உனக்கும். குமாரவனத்துப் பெண்களின் கூட்டத்தில் நீயும் ஒருத்தியாக இருந்து காலம் தள்ளலாம்அவள் நிதானமாகவும் குறும்பாகவும் சொன்னாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது

பெண்ணே, என்ன சொல்கிறாய் நீ.. ? ‘ கிட்டத்தட்ட அலறினான் இளன்

உண்மையைத்தான் சொல்கிறேன். குமாரவனத்துக்குள் நுழையும் யாரும் மறுகணமே பெண்ணாகி விடுவார்கள். குமாரவனத்தில் ருத்ரனைத் தவிர எல்லாரும் பெண்கள்தாம்

நீ சொல்வதெல்லாம் நிஜம்தானா ? என்னால் நம்பவே முடியவில்லையே

உன்னிடம் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் ? இன்னும் நீ உன் உடம்பைப் பார்த்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஒருமுறை உன்னை நீயே பார்

நெருப்பு தீண்டிய மாதிரி இருந்தது. அதிர்ச்சியில் அவன் உடல் துாக்கி வாரிப்போட்டது. சட்டெனத் தனது முகத்தைத் தொட்டுப் பார்த்தான். மழமழப்பான கன்னங்களும் மெலிந்த உதடுகளும் அவனுக்கே அருவருப்பைத் தந்தன. தனது முகமா இது என அதிர்ச்சி கொண்டான். ‘ஐயோஎன்று தலையில் கைவைத்தான். சட்டென தலைப்பாகை அவிழ இடுப்புவரை நீண்டு விழுந்தது கூந்தல். ஆடைக்குள் தட்தட்டென்று மார்புகள் அதிர்வதை உணர்ந்தான்.

பீதியில் அவன் அலறினான். எப்படி மீள்வது என்று புரியாமல் ஒருகணம் உறைந்து நின்றான். மறுகணமேபெண்ணே, இதன் சாப விமோசனம் உனக்குத் தெரியாதா ? தயவுசெய்து சொல். இனி எப்போதும் குமாரவனத்தின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்க மாட்டேன். தயவுசெய்து விமோசனம் சொல்என்று ஆவேசத்துடன் கெஞ்சினான். அதற்குள் ஏழெட்டு பெண்கள் அங்கே கூடிவிட்டார்கள். ‘சத்தியமாகச் சொல்கிறேன். நான் குமாரவனத்துக்குள் வந்தது தெரியாமல் செய்த பிழை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இங்கிருந்து வெளியேற வழி காட்டுங்கள்எல்லாரையும் பார்த்துக் கைகூப்பி வேண்டினான்.

இரு இருஎன்றாள் ஒருத்தி. ‘இந்தக் குமாரவனத்துக்குள் எங்கள் சொந்த முடிவு என்பதே எதுவும் இல்லை. ருத்ரனே எல்லாக் கட்டளையும் பிறப்பிக்கிறவன். ருத்ரனே மூலம். ருத்ரனே வழி. ருத்ரனே வாழ்க்கை. ருத்ரன் கொடுத்த சாபத்தை ருத்ரனாலேயே மாற்றியமைக்க முடியாது என்பதை நீ அறிய மாட்டாயா ? ‘

இளனுக்கு அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று புரியாமல் குழப்பமாக இருந்தது. குழப்பம் பெரும்பாரமாக தலையை அழுத்த சோர்ந்து உட்கார்ந்தான். அழுதான். தன் எதிர்காலம் ஒருபெரும் கேள்விக் குறியாக மாறியதை நினைத்து அச்சத்துக்குள்ளானான். சட்டென ஒரு கணத்தில் தன் உடல் ஒரு பெண்ணுக்குரியதைப் போல குலுங்கியதை உணர்ந்து கூசினான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ