29/05/2011

சாராயப் பீப்பாய் - எட்கார் அல்லன் போ (அமெரிக்கா) – புதுமைப்பித்தன்

அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என்னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வஞ்சம் தீர்த்துவிட வேண்டியதே என்று முடிவு கட்டிவிட்டேன். அதிலே எனக்கு ஒரு ஆபத்தும் நேரக்கூடாது. ஒருவனைத் தண்டிக்கும் பொழுது, தண்டனை கொடுப்போனுக்கு அபாயம் ஏற்பட்டால், அது தண்டனையாகாது. ஆதலால், ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டேன்.

இதனாலேயே அவனுக்கு என் விஷயத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. எப்பொழுதும் போல, அதாவது எனக்கு இந்தக் கோபம் ஏற்படுவதற்கு முன் இருந்தபடி, நான் அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
     அவன் ஒரு விஷயத்தில் பலவீனமானவன். மற்ற விஷயங்களில் எல்லாம் அவனுக்கு எல்லோரும் மரியாதை செய்து பயப்படுவார்கள். ஒரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் தலைக்கு மிஞ்சிய அகங்காரம். திராக்ஷைச் சாராயத்தில் தனக்குத்தான் எல்லா விஷயங்களும் தெரியும் என்றும், மோசமான சாராயத்தைக் கொடுத்துத் தன்னை ஏமாற்றி விட முடியாது என்றும் தலைக்கு மிஞ்சிய தற்பெருமை. எல்லா இத்தாலியருமே அப்படித்தான். சமயம் ஏற்பட்டால், பிரிட்டிஷ், ஆஸ்திரிய கோடீஸ்வரர்களையும் ஏமாற்றுவதற்கு முயலுவார்கள். இந்த விஷயத்தில் அவன் தன் தேசத்தார்களைப் பார்க்கிலும் கொஞ்சம் உண்மையானவன். அவன் பெருமை கொள்ளுவதில் அதிசயமில்லை. உண்மையிலேயே அவன் கெட்டிக்காரன் தான்.

அப்பொழுது கார்னிவல் என்ற திருவிழாக் காலம். பொழுது சாயும் சமயம். அவனை வழியிலே சந்தித்தேன். அவன் அதிகமாகக் குடித்திருந்தாலும், என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டான். அவனை அன்று பார்ப்பதற்கே விசித்திரமாக இருந்தது. கோமாளி வேஷம்; கோணல் குல்லாய்; அதிலும் மணி கட்டிய குல்லாய். அவனைப் பார்ப்பதற்கு, நான் மிகவும் சந்தோஷம் கொண்டவன் போல், அவனது கையைப் பிடித்துக் குலுக்கினேன்.

"பார்ச்சுனாடோ ! நல்ல காலமாக உன்னைச் சந்தித்தேன். இன்றைக்கு என்ன, ரொம்ப குஷால் போலிருக்கிறது? நான் ஒரு சாராயப் பீப்பாய் வாங்கியிருக்கிறேன். அதை மிகவும் விலை உயர்ந்த 'அமான்டிலாடோ ' என்று சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."

"அது எப்படி? அமான்டிலாடோ வா? இந்தத் திருவிழாக் காலத்திலா?" என்று கேட்டான்.

"எனக்குச் சந்தேகந்தான். ஆனால், முட்டாள்தனமாக அதற்கு முழு விலையும் கொடுத்துவிட்டேன். உன்னை சந்தித்து, உன்னிடம் அபிப்ராயம் கேட்க அவகாசமில்லை. ஒரு வேளை, சாமான் கிடைக்காமல் போய்விடுமோவென்று அவசரத்தில் வாங்கிவிட்டேன்" என்று நான் பதில் சொன்னேன்.

"அமான்டிலாடோ வா?"

"எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது! உனக்கு வேலை இருக்கிறதுபோல் தெரிகிறது. நான் லூசேஷியிடம் கேட்டுக் கொள்கிறேன். அவனுக்கு இந்த விஷயத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. நான் அவனிடம் போய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றேன் நான்.

"அவனுக்கு என்ன தெரியும்?"

"சில முட்டாள்கள் அவனுக்கு என்னமோ தெரியும் என்று சொல்லுகிறார்களே!"

"சரி, வா, போகலாம்!" என்றான் அவன்.

"எங்கே?"

"உன்னுடைய சாராயப் பீப்பாய் வைத்திருக்கும் அறைகளுக்குத் தான்."

"சிரமம் வேண்டாம். நீ நல்லவன் என்று உன்னிடம் அதிகக் கஷ்டத்தைக் கொடுப்பதா? நான் லூசேஷியிடம்."

"இல்லை, இல்லை. எனக்கு வேறு வேலை இல்லை. வா, போகலாம்" என்றான் அவன்.

"என்னத்திற்கு இவ்வளவு சிரமம்? மேலும், உனக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது போல் தெரிகிறது. மேலும் அந்த அறை பூமிக்குக் கீழே கட்டப்பட்டிருக்கிறது. அதனாலே எப்பொழுதும் ஈரம் சுவறியிருக்கும். மேலும் அந்த இடத்திலே விஷ வாயு நிறைந்திருக்கும். உனக்கு ஒத்துக் கொள்ளாது" என்றேன் நான்.

"இருந்தாலும், போகலாம் வா; ஜலதோஷம் ஒன்றும் பிரமாதமில்லை. அமான்டிலாடோ ! உன்னை ஏமாற்றி விட்டான்! லூசேஷி - அவனுக்கு என்ன தெரியும்!" என்று சொல்லிக்கொண்டே அவன் என்னை என் வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போனான்.
     வீட்டிலே வேலைக்காரர்கள் எல்லோரும் திருவிழாப் பார்க்கக் கம்பி நீட்டிவிட்டார்கள். "நாளைக் காலைவரை நான் வீட்டிற்குத் திரும்ப மாட்டேன்" என்று சொல்லியிருந்தேன்; அவர்கள் ஏன் வீட்டிலேயே காத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

வீட்டிற்குள் சென்று, இரண்டு தீப்பந்தங்களை ஏற்றி, ஒன்றை அவன் கையில் கொடுத்து விட்டு, மற்றொன்றை வைத்துக் கொண்டு சாராயப் பீப்பாய் இருக்கும் நிலவறைக்குப் புறப்பட்டேன். படிக்கட்டுகளில் ஜாக்கிரதையாக இறங்கும்படி சொல்லிவிட்டு, வழி காட்டிச் சென்றேன். கடைசியாக ஈரம் சுவறும் நிலவறைகளை அடைந்தோம்.

அவன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். குல்லாயில் இருக்கும் மணிகள் கிணு கிணு என்று அடித்தன.

"பீப்பாய் எங்கே?" என்றான் அவன்.

"இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. சுவரைக் கவனித்தாயா?" என்றேன் நான்.

அவன் என்னை ஏறிட்டுப் பார்த்தான். கண்கள் இரண்டும் குடிவெறி உச்ச ஸ்தாயியை எட்டி விட்டது என்று காண்பித்தன.

"விஷ வாயுவா?" என்றான் அவன்.

"ஆமாம். அதுதான் - உனக்கு இருமல் வந்து ரொம்ப நாள் ஆகிறதோ?" என்றேன் நான்.

அதற்குப் பதிலாக, வெகு நேரம் தொடர்ந்தாற் போல் இருமினானே ஒழிய, பதில் சொல்லவில்லை.

"அது ஒன்றும் பிரமாதமில்லை." என்றான் கடைசியாக.

"வா. திரும்புவோம். உனக்கோ உடம்பு சரியாக இல்லை. உள்ளே வந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டாம்" என்றேன்.

"சரி. போதும் போதும், இருமல் ஒருவனைக் கொன்று விடாது. அது எங்கே இருக்கிறது?" என்றான் அவன்.

"ஆமாம், உன்னை அனாவசியமாகப் பயப்படுத்த வேண்டும் என்பது என் எண்ணமல்ல. உன்னை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. இதோ இந்தப் புட்டியில் இருக்கும் சாராயத்தைக் குடித்தால் குளிருக்கு ஜோராக இருக்கும்" என்று அவன் கையில் ஒரு பாட்டிலை எடுத்துக் கொடுத்தேன்.

அவன் பாட்டிலைக் கழுத்தைத் தட்டிவிட்டு மடமடவென்று குடித்தான்.

"நம்மைச் சுற்றிலும் புதையுண்டு கிடக்கும் மனிதர்களின் ஞாபகத்திற்காக இதைக் குடிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே நான் குடித்தேன்.

"உனது சுக வாழ்விற்கும்" என்றான் அவன்.

பிறகு இருவரும் கைகோத்துக் கொண்டு மேலே நடந்தோம்.

என் குடும்பப் பெருமைகளை அவனிடம் சொல்லிக்கொண்டே நிலவறைகளின் வழியாக அவனை வெகுதூரம் அழைத்துச் சென்று விட்டேன். விஷவாயுவின் கோரம் அதிகரித்ததினால் அவன் இன்னொரு பாட்டிலைக் காலி செய்தான்.

காலி செய்துவிட்டுச் சிரித்துக்கொண்டே ஒரு விசித்திரமான சமிக்ஞை செய்தான். நான் அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தேன். மறுபடியும் அதே மாதிரிக் காண்பித்தான்.

"உனக்கு அர்த்தமாக வில்லையோ?" என்றான் அவன்.

"இல்லை" என்றேன் நான்.
     "அப்பொழுது நீ மேஸன் இல்லை போல் இருக்கிறது" என்றான் அவன்.

(மேஸன் என்றால் இங்கிலீஷில் கொற்றன் என்று அர்த்தம். மேலும் மேஸன் சங்கம் என்று ஒரு இரகசிய சங்கமும் உண்டு. அது உலகம் பூராவும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுதும் அந்தச் சங்கம் இருந்து வருகிறது. அதில் இப்பொழுது அதிகார வர்க்கத்திற்கு ஆதரவு கொடுப்போர்களும் அதிகாரிகளுமே அங்கத்தினர்களாய் இருந்து வருகிறார்கள். அந்த இரகசியச் சங்கத்திற்குக் கொற்றனுடைய சுண்ணாம்புக் கரண்டி ஒரு சின்னம்.)

"ஆமாம், ஆமாம், நானும் அப்படித்தான்" என்றேன் நான்.

"நீ! இருக்க முடியாது. நான் நம்பவில்லை" என்றான் அவன்.

நான் என் சட்டைப்பையில் இருந்து ஒரு சுண்ணாம்புக் கரண்டியை எடுத்துக் காண்பித்தேன். அவன் திடுக்கிட்டு நாலைந்து அடி பின் நடந்து "நீ வேடிக்கை பேசுகிறாய்! வா! அது எங்கே இருக்கிறது? காண்பி!" என்றான்.

நாங்கள் போகும் இடத்தில் விஷ வாயு அதிகமாக இருந்ததினால் கையில் இருந்த வெளிச்சங்களும் சுவாலைவிட்டு எரியாமல் மங்கி மினுமினுத்தன.

கடைசியாக ஒரு சிறு அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். அது மிகவும் சிறியது. நாலடி நீளம், மூன்றடி அகலம், ஏழு அடி உயரம், சுவரைக் குடைந்து அதில் இருந்த சுண்ணாம்பையும் எலும்புகளநயும் தோண்டி எடுத்துச் சிறு குகை போல் சுவரில் குடையப்பட்ட இடம்.

அவன், மங்கிய வெளிச்சத்தைக் கண்டு அங்கே என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்க்க முயன்றான்.

"உள்ளே தாராளமாகப் போ. அங்கேதான் அமான்டிலாடோ இருக்கிறது. பாவம்! லூசேஷி."

"அவன் ஒரு முட்டாள்" என்று சொல்லிக்கொண்டே தள்ளாடிய வண்ணம் உள்ளே சென்றான்.

உள்ளே போய் அந்தப் பக்கத்துச் சுவரின் பக்கம் சென்றதும் சுவரில் இருக்கும் சங்கிலியை அவனது இடுப்பைச் சுற்றிப் போட்டுப் பூட்டி விட்டேன்.

"சுவரைத் தடவிப் பார். அங்கெல்லாம் விஷ வாயு எல்லாம் ஜாஸ்தியாக இருக்கிறது! ஜில் என்று குளிர்ச்சியாக இல்லையா? இங்கே வந்துவிடு! உனக்கு வேண்டிய உதவி எல்லாம் நான் செய்கிறேன்."

அவன் ஆச்சரியத்தால் திடுக்கிட்டான். ஆனாலும் "அமான்டிலாடோ !" என்று கேட்டான்.

"ஆமாம், ஆமாம்" என்று சொல்லிக் கொண்டே கீழேயிருந்த கல், எலும்பு இவைகளையெல்லாம் வைத்து அந்தச் சிறு நிலவறையின் வாயை அடைக்க ஆரம்பித்தேன்.

ஒரு வரிசை கல்வைத்து முடிவதற்குள் அவனுக்குக் குடிவெறி எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தெரியும்படியாக ஒரு குரல் கேட்டது. அது குடிவெறியில் இருப்பவனின் ஓலம் இல்லை.

இரண்டாவது, மூன்றாவது, நாலாவது வரிசையை வைத்துக்கொண்டு போக ஆரம்பித்தேன். அதுவரை அவன் மௌனமாக இருந்தான். ஆனால் சங்கிலி சலசலவென்று சப்தம் போட்டது. அதுவும் பின்பு நின்றுவிட்டது. மறுபடியும் நான் சுவரை எழுப்பிக் கொண்டே போக ஆரம்பித்தேன். சுவர் என் நெஞ்சுவரை உயர்ந்துவிட்டது. பந்தத்தை வைத்துக்கொண்டு, உள்ளே எட்டிப் பார்த்தேன்.

சப்தமும் கூப்பாடும் அதிகரித்தன. அவனது துன்பத்தைப் போக்க எண்ணி இடையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து இருட்டில் துழாவினேன். சுவரில் கைகளை வைத்தேன். அது பலமாக நின்றது. அவன் கூப்பாடுகளுக்குப் பதில் சப்தம் போட்டுக்கொண்டே சுவரைக் கட்ட ஆரம்பித்தேன்.

நடு நிசி ஆகிவிட்டது. பத்தாவது வரிசைவரை கட்டி முடித்தேன். கடைசியாக ஒரு கல்லை வைத்தால் சுவர் முடிந்துவிடும்.
     அதைச் சிரமப்பட்டுத் தலைக்கு மேலாகத் தூக்கி அதன் மேல் வைக்க முயன்றேன். அப்பொழுது உள்ளிருந்து ஒரு மெதுவான சிரிப்புக் கேட்டது. பின்பு துயரம் நிறைந்த குரல்களுடன் என்னமோ சொல்ல ஆரம்பித்தது. அது, - அந்தச் சிரிப்பு, அந்தப் பேச்சு, அந்தக் குரல் - எல்லாம், என் மனத்தில் ஒரு பெருத்த பயத்தை உண்டாக்கின.

"என்ன வேடிக்கை! எத்தனை நாள் சிரிப்பு! அப்புறம், அந்தச் சிரிப்பு?"

"அமான்டிலாடோ !" என்றேன் நான்.

"ஆமாம், அதுதான் வேடிக்கை! வீட்டிலே மனைவி காத்திருப்பாள், நேரமாகிறது போவோம் வா!" என்றான் அவன்.

"ஆமாம், போவோம் வா!" என்றேன் நான்.

"கடவுளுக்காக!" என்றான் அவன்.

"கடவுளுக்காக" என்றேன் நான்.

அதற்குப் பதிலே கிடையாது. நெடு நேரம் கழித்து அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். பதில் இல்லை. வெளிச்சத்தை வைத்து உள்ளே எட்டிப் பார்த்தேன். மணிச் சப்தம்தான் கேட்டது. நிலவறையின் குளிர்ச்சியாலும் கெட்ட நாற்றத்தாலும் எனக்கு மயக்கம் வந்தது. மீதி ஒரு கல்லையும் வைத்து மூடிவிட்டுத் திரும்பினேன். சென்ற இருபத்தைந்து வருஷங்களாக ஒருவரும் அங்கு வரவில்லை. இனி? ஓம் சாந்தி!

நிர்விகற்ப சமாதி – புதுமைப்பித்தன்

ஸ்ரீமான் உலகநாத பிள்ளை பரம வேதாந்தி. தம்முடைய பரம்பரைத் தன்மைக்கு மாறாக சைவ சித்தாந்தத் தத்துவங்களை ஒதுக்கி, மடத்துச் சைவம், ஏகான்மவாதம் என்று ஒதுக்கிய அத்வைதத்துக்குள் தம்மை இழந்தார். ஊர்க் குருக்களையாவுக்கு அவரைக் கண்டால் பிடிக்காது. காரணம் அவரது ஏகான்மவாதம் அல்ல. பணம் இன்மை.

கிராமத்துத் தபாலாபீஸில் போஸ்ட் மாஸ்டராக உத்தியோகம் பார்ப்பதில் உள்ள சங்கடங்களும் சௌகரியங்களும் பல. எந்நேரத்துக்கு வந்தாலும் ஆபீஸ் மூடிவிட்டது என்று சொல்லி தபால் வில்லைகளை விற்பதற்கு மறுக்க முடியாது. மாதத்தில் இருபத்தியொன்பது நாளும் தபால்தான் கிடையாதே என்று மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு வெளியே நடந்துவிட முடியாது. வெற்றுப் பையை அரக்கு முத்திரை வைத்து ஒட்டி, 'ரன்னர்' எப்போது வந்து தொலைவான் என்று காத்திருக்க வேண்டும். அவனிடம் காலிப் பையைக் கொடுத்துவிட்டு, மற்றொரு காலிப் பையை வாங்கிக் கொள்ள வேண்டும்.

     நிற்க. எப்போதோ ஏதோவென்று தபால் பெட்டியில் வந்துவிழும் காகிதங்களை குருக்களையாவுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். குருக்களையாவுக்கு கடுதாசி வாசிக்கும் பழக்கம், பட்டணத்துக்காரரின் பேப்பர் படிக்கும் தன்மையை ஒத்திருந்தது என்று சொல்லவேண்டும். காந்திஜி பட்டினி கிடக்கிறார் என்றால் ஊரே அல்லோலகல்லோலப்படும்; பத்திரிகையும் மகாலிங்கய்யர் ஓட்டல் இட்டிலி மாதிரி விற்பனையாகும். ஆனால், அதற்காக ஊர்க்காரர்கள் எல்லாம் பட்டினி கிடந்து உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அர்த்தமா? அப்படி ஒன்றும் ஆபத்து நேர்ந்துவிடாது. இந்தத் தமிழ்நாட்டிலே, சட்டத்தின் பேரிலும் ஒழுங்கின் அடிப்படையிலும் பிரிட்டிஷார் 150 வருஷங்களாகக் கட்டிவைத்த ஏகாதிபத்தியக் கோயில் தமிழ் நாட்டாரின் ஆவேசத்தினால் ஆட்டமெடுத்துவிடாது. திலகர் கட்டத்தில் கூடி நீண்ட பேருரைகள் செய்வோம்; நீண்ட அறிக்கைகள் வெளியிடுவோம்; கோழைத்தனத்துக்கு அஹிம்சைப் போர்வை போர்த்திக் கொள்வோம்; கருத்து வேற்றுமைகளை நயமாக சுசிபிப்போம்; ஆவேசம் காட்டிய 'ஒரு சிலர்' கொலை, ஆபத்தில்லையெனவும், சௌகரியம் உண்டு எனவும் பொழிந்து பாராட்டுவோம்; தனிப்பட்ட முறையில் "இந்தப் பசங்களே இப்படித்தான் சார்" என்று சொல்லுவோம்; இதற்கெல்லாம் பேப்பர் அவசியம்! மேலும் ஹோம் மாத்திரைக்கு விலாசம் தெரிந்துகொள்ள பேப்பர் ரொம்ப முக்கியம். இதே மாதிரிதான் குருக்களையாவுக்கு வேற்றாரின் கடுதாசிகளும் கார்டுகளும்.


உலகநாத பிள்ளைக்கு சோம்பல் ஜாஸ்தி; அதனால்தான் கடுதாசி படிக்கும் வழக்கம் வேப்பங்காய்.

குருக்களையா வந்துவிட்டார் என்றார் ஐயாவுக்கு சிம்ம சொப்பனந்தான்.

வரும்போதே, "என்னவே, அந்த மேலத்தெரு கொசப் பய, பணத்துக்கு எழுதினானே, பதில் வந்ததா?" என்று கேட்டுக் கொண்டுதான் நடைப் படியை மிதிப்பார். 'மேலத் தெரு கொசப்பயல்' என்று சூட்சுமமாகக் குறிப்பிடுவது சுப்பையர் என்ற முக்காணிப் பிராமணனைத்தான்.

தென்னாட்டில், திருச்செந்தூர் பிராமணர்கள் முன்குடுமி வைத்திருப்பார்கள்; குயத்தொழிலில் ஈடுபட்டுள்ள வகுப்பினரும் முன் குடுமி வைத்திருப்பார்கள். இதனால்தான் இந்த ஏச்சு.

நிற்க, ஸ்மார்த்தர்கள் யாவரும் ஏகான்மவாதிகள்; ஆகையால் அவர்களை வைவது சங்கர சித்தாந்தத்தை நோக்கி எய்யும் பாசுபதாஸ்திரம் என்பது குருக்களையாவின் அந்தரங்க நம்பிக்கை. இம்மாதிரி சொல்வதால் இவரை சைவ சித்தாந்த பவுண்டுக்குள் அடைத்துவிடலாம் என்பது அதற்கு அடுத்தபடியான நம்பிக்கை.

உலகநாத பிள்ளைக்கு இது தைக்காது; ஏனென்றால், சுப்பையரிடம் ஏதோ பாக்கி தண்ட வேண்டும் என, சென்ற பத்து வருஷங்களாக குருக்களையா சொல்லிவரும் புகார், மனசை அந்தத் திசையிலேயே திருப்பிவிடும்.

சுப்பையர் ஏன் பணத்துக்கு கடிதம் எழுத வேண்டும்? அதற்கு இதுவரை பதில் ஏன் வராதிருக்க வேண்டும் என்பதைப் பற்றி உலகநாத பிள்ளை சிந்தித்தது கிடையாது. சிந்திக்கும்படி மனம் தூண்டியதும் கிடையாது. வேலாயுதத் தேவரின் தாயார் மருதி, கொளும்பில் உள்ள தன் பேரனுக்கு முக்காலணா கார்டில் மகாபாரதத்தில் ஒரு சர்க்கத்தையே பெயர்த்து எழுதுகிற மாதிரி, ஒரு மாத விவரங்களை எழுதுவதற்கு பிள்ளையவர்கள் வீட்டு நிழலை அண்டி நிற்பதும் அதை எழுதி முடிப்பதை ஹடயோக ஸித்தியாக நினைத்து பெருமைப்படுவதுடன் மறந்துவிடுவதும் பிள்ளையவர்கள் குணம்.

அதேமாதிரிதான் வேலாயுதத் தேவரின் எதிர்வீட்டு பண்ணையாரான தலையாரித் தேவரின் தேவைக்கும் ஊரில் உள்ள கேட்லாக்குகளை எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து, சாம்பிள் காலண்டர் இனாம் என்று இடங்களுக்கெல்லாம் காலணா கார்ட் காலத்திலிருந்து முக்காலணா கார்ட் சகாப்தம் வரை எழுதித் தீர்த்துக் கொண்டிருக்கும் வைபவத்துக்கு உலகநாத பிள்ளையின் ஒடிந்துபோன இங்கிலீஷ் அத்யாவசியம். பூர்வ ஜென்மாந்திர வாசனைபோல் எங்கே உள்ளூர ஒட்டிக்கொண்டிருக்கும் ஷெப்பர்ட் இலக்கண பாஷைப் பிரயோகத்தை அனுசரிப்பதாக நினைத்து ரிலீப்நிப் பேனா வைத்து வாட்ட சாட்டமாக உட்கார்ந்து எழுதி, தபாலை எடுத்துவந்து பையில் போட்டு, அரக்கு முத்திரைவைத்து ஊர்வழி அனுப்புவது உலகநாத பிள்ளையின் கடமை. பிறகு ஒரு வாரமோ அல்லது பத்து நாளோ கழித்து ரன்னர் மத்யானம் இரண்டு மணிக்குக் கொண்டுவரும் பட்டணத்து கடுதாசி வைபவங்களைக் கொண்டு போய் தேவரவர்கள் சன்னிதானத்தில் காலட்சேபம் செய்ய வேண்டும். இங்கிலீஷ் வருஷ முடியும் கட்டம் வந்துவிட்டால் அதாவது டிஸம்பர் மாதத்தில் உலகநாத பிள்ளையின் 'இலக்கிய சேவைக்கு' ரொம்ப கிராக்கி உண்டு. பண்ணைத் தேவர் வாங்கின ரவிவர்மாப் படம் போட்டு வெளியான காலண்டர் நன்றாக இருந்துவிட்டால் கம்பனிக்கு இன்னும் சில கடிதங்கள் எழுத வேண்டியேற்படும். ஆனால் அவற்றிற்கு இந்தப் பத்து வருஷங்களாக பதில் வராத காரணம் உலகநாத பிள்ளைக்குப் புரியவில்லை. ஏக காலத்தில் பல விலாசத்தில் ஒரே கையெழுத்தில் இலவச காலண்டர்களுக்கும் சாம்பிள்களுக்கும் கடிதம் போனால் கம்பனிக்காரன் சந்தேகப்படக்கூடுமே என்பதை உலகநாத பிள்ளை அறிவார். அவ்வாறு அறிந்ததினால்தான் ஒவ்வொரு கடிதத்தின் கீழும், 'கடிதம் எழுதுகிறவருக்குக் காலண்டர் தேவை இல்லை. விலாசதாரர்களுக்கு இங்கிலீஷ் தெரியாததினாலும் தாம் ஒருவர் மட்டுமே அந்த பாஷையை அறிந்தவரானதினாலும், அவர்களுக்காக கடிதம் எழுத வேண்டியிருக்கிறது' என்பதை ஸ்பஷ்டமாக குறிப்பிடுவார். அப்படி எழுதியும் அந்தக் கம்பனிக்காரர்கள் நம்பாத காரணம் அவருக்குப் புரியவில்லை. ஆனாலும் பண்ணையாருக்கு தவிர வேறு யாருக்கும் அச்சடித்த படம் எதுவும் வந்தது கிடையாது.

     இதிலே கொஞ்ச நாள் உலகநாத பிள்ளை பேரில் சந்தேகம் ஜனித்து, அவர் தபால் பைக்குள் கடிதங்களைப் போட்டு முத்திரையிடும் வரை ஒரு கோஷ்டி அவரைக் கண்காணித்தது. கடிதத்தை அவர் கிழித்தெறிந்துவிட்டு பண்ணையாருக்குப் போட்டியாக வேறு யாரும் ஏற்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்ளுகிறாரோ என்ற சந்தேகம் அர்த்தமற்ற சந்தேகமாயிற்று. அதன் பிறகுதான் பண்ணைத் தேவர் அதிர்ஷ்டசாலி என்ற நம்பிக்கை ஊர் ஜனங்களிடையே பலப்பட்டது. அவர் எடுத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும் என்று ஊர் ஜனங்கள் நினைப்பதற்கு இந்தக் காலண்டர் விவகாரமே மிகுந்த அனுசரணையாக இருந்தது. இதன் விளைவாக விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் தேவரின் கைராசி நாடாத ஆள் கிடையாது.


பண்ணைத் தேவர் பண்ணைத் தேவரல்லவா; இந்த விவகாரங்களில் எல்லாம் ஜனங்களின் ஆசைக்கு சம்மதித்து இடம் கொடுப்பது, தமது அந்தஸ்துக்கு குறைவு என்று நினைத்தார். உலகநாத பிள்ளையின் கைராசி என்றும் கடிதம் எழுதும் லக்னப் பொருத்தமே அதற்குக் காரணம் என்றும் சொல்லித் தட்டிக் கழித்துப் பார்த்தார். நம்பிக்கையும் வெறுப்பும் கொடுக்கல் வாங்கல் விவகாரமா? நினைத்தால் நினைத்த நேரத்தில் மாறக் கூடியதா?

உலகநாத பிள்ளை இவ்வளவு செய்கிறாரே இத்தனை வருஷ காலங்களில் தமக்கு என்று சொந்தமாக ஒரு காலணா செலவழித்து கார்ட் எழுதியது கிடையாது. இப்போது முக்காலணா கார்ட் யுகத்தின் போது கடிதம் எழுதிவிடப் போகிறாரா?

குருக்களையாவின் சேர்க்கையினால் அவருக்கு ஊர் விவகாரம் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் அவருக்குத் தெரியாது. ஏன், சொல்லப்போனால் அவருடைய சொந்த வீட்டு விவகாரமே தெரியாது.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்கு போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் மாயை; உள்ளூர நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விசாரத்தை சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பதுபோல தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருந்தும் அவர்களைப் பொருட்படுத்தாது நின்ற கடவுள், ஏதோ எப்போதோ ஒரு சங்கரர் சொன்னதை உலகநாத பிள்ளை வாஸ்தவமாக நம்புகிறாரா? இல்லையானால் சோதிக்கவா மூட்டை கட்டிக்கொண்டு வரப்போகிறார்?

டவுள் தமது நம்பிக்கையை பரிட்சை பண்ணி சுமார் முப்பத்தி ஐந்து சதவிகிதமாவது பாஸ் மார்க்கெடுக்க வரவேண்டும் எனவோ அல்லது வருவார் எனவோ எதிர்பார்த்தது கிடையாது.

வராமலிருக்க வேண்டுமே என அவர் எதிர்பார்ப்பது எல்லாம் இரண்டு பேரைத்தான். ஒன்று ரன்னர்; இரண்டாவது குருக்களையா. ரன்னரைக்கூட சமாளித்துவிடலாம்; குருக்களையாவை சமாளிக்கவே முடியாது.

அன்று நால்வர் ஏககாலத்தில் வந்து சேர்ந்தார்கள். 'ஐயாவோ' என்று கூப்பாடு போட்டுக் கொண்டு வெளியே வந்து நின்ற ரன்னர் முத்தையா தொண்டைமான்.

இரண்டாவது ஆசாமி கார்டும் கவர் கூடும் வாங்க வந்த சுப்பையர்.

     மூன்றாவது ஆசாமி குருக்களையா, அவர் தமது வழக்கப் பிரகாரம் 'பத்திரிகை' படிக்க வந்திருந்தார்.


நாலாவது ஆசாமி ஏதோ ஊருக்குப் புதிது. பட்டணத்துப் படிப்பாளி போல் இருந்தது. சுமார் நாற்பது நாற்பத்தி ஐந்து வயசிருக்கும். அவரும் ஏதோ ஸ்டாம்பு வாங்குவதற்காக உலகநாத பிள்ளை வீடு தேடி வந்து வெளியில் சைக்கிளை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தார்.

"யாரது?" என்று கேட்டார் உலகநாத பிள்ளை.

"ஸ்டாம்பு வேணும். வாங்கலாம் என்று வந்தேன்" என்றார் வந்தவர்.

"என்னேடே முத்தையா கடுதாசி எதுவும் உண்டுமா?" என்று முழங்காலை தடவினார் குருக்களையா.

"எனக்கென்ன தெரியும்? பைக்குள்ள என்னவோ. ஆனா எசமானுக்கு சர்க்கார் கடுதாசி வந்திருக்கு" என்றான் முத்தையா.

"பிள்ளைவாள் நமக்கு ஒரு காலணா கார்ட் குடுங்க; கடையிலே யாருமில்லே; சுருக்கா போகணும்" என்றார் சுப்பையர்.

"சுப்பையர்வாள்! என்னமோ செவல்காரன் உங்கள் பாக்கியை குடுத்துடுவான்னு விடேன் தொடேன்னு கடுதாசி எழுதினியளே பார்த்தீரா? ஒரு பதில், உண்டு, இல்லை என்று வந்துதா?" என்று அதட்டினார் குருக்களையா.

"நான் எழுதினது உமக்கு எப்படித் தெரியும்; பதில் வரவில்லை என்று உமக்குக் கெவுளி அடித்ததோ" என்றார் சுப்பையர்.

"ஊர்த் தபால் எல்லாம் உலகநாத பிள்ளை வாசல் வழியாகத்தான் போக வேண்டும்! தெரியுமா? எனக்குக் கெவுளி வேறே வந்து அடிக்கணுமாக்கும்!" என்றார் குருக்களையா மிதப்பாக.

"தாலுக்கா எசமானை மாத்தியாச்சு; நாளைக்கு புது ஐயா வாராரு; இங்கே நாளண்ணைக்கு செக்கு பண்ண வருவாகன்னு சொல்லிக்கிடுராவ" என்றான் முத்தையா.

"அது யாருடா புது எஜமான்!" என்று சற்று உறுமினார் குருக்களையா.

"போடுகிற கடுதாசியையெல்லாம் படிக்கிற வழக்கமுண்டா" என்று புதியவர் உலகநாத பிள்ளையை வினயமாகக் கேட்டார்.

"நாங்க படிப்போம், படிக்கலை, நீ யார் கேட்கிறதுக்கு. படிக்கிறோம்; நீர் என்ன பண்ணுவீர்; ஏன் பிள்ளைவாள், மக்காந்தை மாதிரி உட்காந்திருக்கீர்; தபால் ஸ்டாம்பு குடுக்க முடியாதுன்னு சொல்லி அய்யாவெ வெளியேற்றும்" என்று அதட்டினார் குருக்களையா.

"நீங்க சும்மா இருங்க; ஸார் ஸ்டாம்பு ஸ்டாக்கு ஆயிட்டுது. கையில் இரண்டு ஒரணா ஸ்டாம்பு தானிருக்கு; கார்ட் தரட்டுமா?" என்றார்.

"ஏன் முன்கூட்டியே வாங்கி வைக்கவில்லை?" அதட்டினார் வந்தவர்.

"என்னவே அதட்டுரே?" என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.

"ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது 'பிளாக் மார்க்' போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா?" என்றார் புதியவர்.

     "எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை... புகார்..."


"பரம ஏகான்மவாதமோ... பகிர் நோக்கு இல்லையாக்கும்" என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.

"நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது..." என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.

உலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.

"என்ன பிள்ளைவாள்! அந்தப் பய காலண்டர் அனுப்பலியே" என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.

எல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு "என்ன விசேஷம்" என்றார்.

"இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம்! உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ" என்று ஏளனம் செய்தார் குருக்களையா.

"இவுகளா? சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது" என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.

"ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்" என்றார் புதியவர்.

"மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்!" என்றார் தேவர்.

"சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்" என்றார் சுப்பையர்.

நவசக்தி பொங்கல் மலர், 1945

கொன்ற சிரிப்பு – புதுமைப்பித்தன்

சோழ சாம்ராஜ்யத்தின் கடைசி உயிர்ப்பு. அந்தகன் என்ற சோழன் பழைய வீர வம்சத்தின் கனவுகளையெல்லாம் பாழாக்கி, படாடோ பத்திற்கும் வீண் மிடுக்கிற்கும் மட்டும் குறைவில்லை - பொம்மையரசனாக அந்த வீரர்களின் சிங்காதனத்தை அபசாரம் செய்து கொண்டிருக்கிறான். தெற்கே பாண்டியர்கள் இவன் நாடுகளைக் கபளீகரித்து விட்டனர். மேற்கே சேரர்கள்... அவர்கள் எந்த நிமிஷத்தில் இவன் சிங்காதனத்தையே காலி செய்துவிடுவார்களோ! வடக்கே, அம்மம்ம! எத்தனையோ பெயர் தெரியாத அரசர்கள்! அவர்களில் புதிதாக என்னமோ மிலேச்சராம், துருக்கராம், இன்னும் எத்தனையோ பேர்! அந்தகன், மனிதன் தனக்கு நித்திய வாழ்வு என்று மனப்பால் குடிப்பதுபோல், கவலையின்றி அரசாண்டுகொண்டிருக்கிறான். அதுவும், சம்பிரதாயமாக அவன் ஆட்சி செய்துகொண்டிருப்பதாகப் பாவனைதான்...

மருதனூர் என்பது ஒரு சிறு கிராமம். இயற்கையின் எழில் கொழிக்கும் ஒரு தனி... என்ன சொல்வது? வனப்பை வருணிக்க அந்தக் கிராமத்தின் தவப்புதல்வன், அந்த இயற்கை யன்னையின் தாய்ப்பால் பருகிய கானப்பிரியன் தான் பாடவேண்டும். என்னால் கூற முடியுமா? அவன் அங்கு யாருக்குப் பிறந்தான் என்று ஊராருக்குத் தெரியாது.

ஒரு நாள் இரவு குழந்தையொன்று காளிதேவியின் கோயில் வாசலில் தாயை நோக்கியழுதது. எந்தத் தாயை நோக்கியோ, அந்தத் தேவிதான் அருளினாளோ என்னவோ! அதிலிருந்து காளி கோயில் பூசாரி எடுத்து வளர்த்தான். காளியின் புத்திரன், பூசாரியின் வளர்ப்புப் பிள்ளை... இதுதான் கானப்பிரியனின் இளமைச் சரிதம்.

அந்த மோகனமான பொழுதிலே இயற்கைத் தாயின், காளியின் கோர ஸ்வரூபத்திலே, குதூகலித்துக் குரலெழுப்பும் பறவைகளிடத்திலே அவன் கல்வி கற்றான். அது கானமாகக் கவிதையாக எழுந்தது. எல்லோரும் கானப்பிரியன் என்றார்கள். அவனும் கானப்பிரியன் என்று தன்னை யழைத்துக்கொண்டான்.

எப்பொழுதும் அந்தத் தடாகத் துறையிலே என்ன அதிசயமோ! கானப்பிரியனை அங்கு காணாமல் இருக்க முடியாது. இல்லாவிட்டால் குரலெழுப்பும் குயில் கிளைகளின் அடியில் அவன் நின்று கவனித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்பொழுது அவன் கண்கள் - அவை என்ன தெய்வ தரிசனத்தைக் கண்டனவோ? அவற்றில் என்ன கனவு, எவ்வளவு உற்சாகம்! என்ன என்ன என்று என்னால் சொல்ல முடியுமா? கவிஞனைக் கேட்டுப் பார்க்கவும்.

கானப்பிரியன் சங்கோசப் பிராணி. மனிதர்கள் என்றால் அவன் உற்சாகம் எல்லாம் எங்கோ பதுங்கி ஒடுங்கிவிடும். அதிலும் பெண்கள்... கேட்கவே வேண்டாம். அவனிடம் பேசுவது என்றால் எல்லாருக்கும் ஆசை; அவனுக்கு மட்டும் கூச்சம். அவனைப் பார்ப்பதிலே ஒரு தனிப் பெருமை.

ஊர் அம்பலக்காரரின் மகள் பெண்களின் இலட்சியமாயும் ஆண்களின் கனவாயும் இருந்தாள். அவள் தான் அவனை எப்படியோ பேசவைத்துவிட்டாள். அவன் உள்ளத்தையறிந்தவள் அவள் ஒருத்திதான். அவன் கவிதையின் கனிவைக் கண்டவள் அவளே.

அவளைச் சாயங்காலம் சந்தித்தால் கானப்பிரியனுக்குப் புதிய பாட்டுக்கள் தேவி அருள் புரிவாள். நாவில் ஸரஸ்வதி நர்த்தனம் செய்வாள். இவர்கள் கூட்டுக் களியிலே, தனிப்பட்ட கனவிலே, தேவியின் பாதுகாப்பிலே உலகத்தின் இலட்சியம் மறைந்து வாழும்.

அவள் பெயர் காவேரி. அன்று காவேரியின் கன்னி எழில் கம்பனை வளர்த்தது. அது பழைய கதை. இப்பொழுது காவேரி, இந்தக் காவேரி...

அன்று காவேரி ஜலம் எடுத்துவரச் சற்றுத் தாமதம். கானப்பிரியனுக்குக் குயில் சொன்ன கதையையும், மலர் பாடிய பாட்டையும் அவளுக்குச் சொல்ல ஆவல். அந்தச் சூரியாஸ்தமனத்தை அவளிடம் காண்பிக்க...

அதோ அவள் வருகிறாள். ஆசைக் காவேரி!

"கானனா? வா, வா!" என்று குடத்தை ஜலத்தில் நழுவவிட்டு அவன் மீது சாய்கிறாள்.

"இன்று ஏன் இவ்வளவு நேரம், போ! அந்தக் குயில்..."

"கானா, இன்று உனக்கு ஒரு சமாசாரம், நீ ஏன் உன் கவியைக் கொண்டு மன்னனிடம் பரிசு பெறக் கூடாது? இன்று யாரோ ஒரு கவியாம், போகிறானாம். அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நீ பாடுவதில் நூற்றில் ஒன்று கூட இல்லை. வெறும் வார்த்தைக் குப்பை. நீயேன்..."

"நானா! அரசனிடமா? நானா!"

"ஏன், கானா? நாம் இருவரும்..." என்று தழுவிக் குழைந்து அவன் கண்களில் உற்று நோக்கினாள். இருவரும் ஐக்கியப்பட்ட வாழ்க்கையின் கனவு அவள் கண்களில் தவழ்ந்தது.

"காவேரி! உனக்காக நான் போகிறேன்...!"

"என்ன, கானா, எனக்காகவா?"

"இல்லை கண்ணே, நமக்காக" ... சற்று மௌனம்.

இருவரும் தழுவி நிற்கின்றனர்.

அந்த மௌனத்தில் அவர்கள் அறிந்தது எவ்வளவோ.
2

சோழ சமஸ்தானம்.

அந்தகன் கொலுவில் உல்லாசமாக இருக்கிறான். பக்கத்தில் அவனது பிரியை - அதாவது, மரியாதையாக வைப்பு - வாஸந்திகை என்ற ஆந்திரப் பெண். மற்றப் பக்கத்தில் அடைப்பைத் தொழில் புரியும் பணிப்பெண்கள். இடையில் மெல்லிய கலிங்கம். மேலே முத்துவடக் கச்சு.

சற்றுக் கீழே இவனுக்கு ஏற்ற மந்திரி பிரதானிகள். அவன் நாட்டிலே மாதம் மூன்று மழை பெய்து வருகிறதா, திருடர்கள் கொஞ்சமாகக் கொள்ளையடிக்கிறார்களா, அந்நியர் வசமாகமல் இன்னும் எத்தனை பிரதேசங்கள் வரி வசூலிக்க இருக்கின்றன என்பதைப் படாடோ பத்துடனும் கூழைக் கும்பிடுடனும் சமூகத்தில் தெரிவித்துக்கொள்ளும் மந்திரிகள்!

சேவகன் ஒருவன் ஓர் ஓலையைக் கொண்டுவந்து அடிபணிந்து நிற்கிறான். அரசன் அதைத் தொட்டுக் கொடுக்க, கற்றுச் சொல்லி பிரித்து, "ராஜாதி ராஜ ராஜ கம்பீர அந்தகச் சோழ மண்டலாதிபதி சமஸ்தானத்திற்குக் கானப்பிரியன் எழுதிக்கொண்டது; எனது கவியைச் சமுகத்தில் அரங்கேற்ற ஆசை - கானப்பிரியன்" என்று படித்தான்.

"என்ன வாஸந்திகா?"

"வரட்டுமே!"

"இந்த நடிகைகள் கொஞ்சம் நன்றாகப் பாடி ஆடுகிறார்களே!"

"அவன் தான் வரட்டுமே!"

"சரி, சேவகா, வரச்சொல்!"

கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களில் ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கையின் திறன், பெருமிதம், இறுமாப்பு - எல்லாம் சற்று மலைப்பை உண்டுபண்ணுகின்றன.

கவிஞன் அரசனைப் பார்க்கிறான். அந்தகன் கானப்பிரியனைப் பார்க்கிறான். வாஸந்திகை இருவரையும் நோக்குகிறாள். இருவரையும் வெல்ல ஒரு வலை வீச்சு. உலகத்தின் சக்தி அவள் காலின் கீழ். ஏன் உலகத்தின் இலட்சியம் அத்துடன் இருக்கக்கூடாது?

கானப்பிரியன் அவளைக் கவனிக்கவில்லை.

அரசனை நோக்கிப் பாடுகிறான்.

ஒரு காதற் பாட்டு.

அந்தக் காலத்திலே பாட்டுடைத் தலைவன் பரிசில் கொடுக்க வேண்டிய அரசனாக இருக்க வேண்டியது மரபு.

அதெல்லாம் நினைக்கவில்லை. ஏன்? தெரியாது.

அவனது காவேரியின் காதல், அவள் கன்னி எழில், வாழ்க்கைக் கனவு எல்லாம் கவிதையாக வடிவெடுத்துப் பொங்குகிறது. கம்பீரமான, மோகனமான குரலிலே பாடுகிறான்.

அங்கிருக்கும் சிங்காதனம் கூட உருகிச் சிரக்கம்பம் செய்யும் போலிருக்கிறது. ஏன்? கம்பன் குரலைக் கேட்டதுதானே!
அங்கு இரண்டு உள்ளங்களை அது தொடவில்லை. ஒன்று வெற்றியை நினைத்து வலை வீசிய கண்களையுடையது. இன்னொன்று, அவளைக் குறித்துப் பாடுவதாக, அவள் மீது அநாவசியமாகக் காதல் கொண்டுவிட்டதாக நினைத்த நெஞ்சம்.

பாட்டு முடிந்தது!

எங்கும் நிசப்தம்
திடீரென்று, ஆஸ்தான மண்டபமே எதிரொலிக்கும்படி எக்காளச் சிரிப்பு!

ஏளனத்திலே, பொருளற்ற கேலிக்கூத்திலே, கீழ்த்தரக் காமச் சுவையிலே தோன்றி அலைமேல் அலையாயெழுந்த அந்தகனின் எக்காளச் சிரிப்பு!

"சபாஷ், வென்றுவிட்டாயடி வாஸந்திகா!" என்று அவளுக்குக் கீச்சங் காட்டிக்கொண்டு, அவசரத்தில் எச்சிலை ஸ்படிகத்திற்குப் பதில் யார் முகத்திலோ உமிழ்ந்துவிட்டான். இருந்தாலும் உற்சாகம் ஓயக் காணோம். "என்ன, இருந்தால் உன் அழகு இப்படியல்லவா சபையில் இருக்க வேண்டும்! நூற்றில் ஒரு பெண்! நீதான் என் அரசி!" என்று இன்னும் இடியிடி என்ற ஒரு சிரிப்பு!

இது ஓயுமுன் கானப்பிரியன் அங்கு இல்லை.
3

கானப்பிரியனுக்கு உடலெல்லாம் குன்றி உயிர், உற்சாகம், கவிதை, யாவும் குவிந்தன.

நெஞ்சில் இந்திர தனுசால் அடிபட்ட மாதிரி!

பொருளற்ற, அர்த்தமற்ற மிடுக்கு, படாடோ பம்! அரசியலாம், பரிசிலாம்...சீச்சி...

அன்று இருட்டியபின்...

காளி கோயிலின் முன் கானப்பிரியன் தலைவிரி கோலமாகக் கிடக்கிறான். வெளியே இருந்த இருள் அவன் உள்ளத்தைக் கவ்வியது. இருளில் ஓர் உருவம்.

"காவேரி!"

"கானப்பிரியா?"

பதில் இல்லை.

ஓடிவந்து தரை மீது கிடந்த தனது... எடுத்து மடிமீது கிடத்துகிறாள், மார்புடன் அணைக்கிறாள்.

"கானா! பிரியா!"

"உன் அன்பிலே, தேவி அருளிலே..." அவ்வளவுதான். கானப்பிரியனின் உயிர் தேவியின் திருவருளை நாடிச் சென்றுவிட்டது.

"அடி காவேரி! உனக்கு வேண்டும். கம்பனையே பாடுபடுத்திய சோழ பரம்பரையல்லவா! உனக்கு வேணும்! ஏன் உன் பிரியனையனுப்பினாய்?"

"அடி காவேரி...!"

'புதுமைப்பித்தன் கதைகள்', தொகுப்பு - 1940

08/05/2011

குமரேசனின் அதிர்ஷ்டங்கள் நான்கு - பெருமாள் முருகன்



மிக இளம் வயதிலேயே அதாவது இருபதாம் வயதில் அரசு வேலை கிடைத்தது குமரேசனுடைய அதிர்ஷ்டம்தான். அதுவும் மிகப் புனிதமான ஆசிரியப் பணி. ஆட்சி மாறும்போதெல்லாம் அரசு வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதிமுறைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஒரே ஆட்சியேகூட அடிக்கடி விதிகளை மாற்றிக்கொள்கிறது. அதனால் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதை நெருங்கும் கிழவர்களுக்குச் சிலசமயம் வாய்ப்புக் கிடைக்கிறது. புதுரத்தம் வெதுவெதுப்போடு ஓடும் இளைஞர்களுக்கும் சிலசமயம் வேலை கிடைத்துவிடுகிறது. நடுத்தர வயதில் இருப்பவர்கள்தாம் பாவம். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற மாதிரி விதிகள் வரும் என்று காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

குமரேசன் ஆசிரியர் பயிற்சி முடித்த சமயம் அதிஇளைஞர்களுக்குச் சாதகமாக விதிகள் இருந்தன. அவசர அவசரமாகச் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு ஓடினான். சூடு ஆறும் முன் வேலைக்குத் தேர்வாகிவிட்டான். கலந்தாய்வு முறை மூலம் பணியிடம் ஒதுக்கப்பட்டது. முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்காகச் சில காலியிடங்களை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருந்தார்கள். இடம் தேர்வு செய்த பின்னும் ஆணை வழங்கச் சிலரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டார்கள். ஒரு சிலருக்கு அந்தக் கணமே ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக ஆணை பெற்றவர்களில் குமரேசனும் ஒருவன். அதுவும் அவனுடைய சொந்த ஊரிலேயே வேலை.

ஆணையைப் பெறுவதற்கு முன் இருந்த குமரேசனும் பெற்ற பின்னான குமரேசனும் ஒருவர் அல்லர். பெற்று வந்தபின் முகம் கடுகடுப்பாக மாறிவிட்டது. வீட்டை முழுவதுமாகச் சுற்றிப் பார்த்தான். இரண்டே அறைகள்தாம். எதுவும் ஒழுங்காக இல்லை. ஒரு நாள் முழுக்க எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த முனைந்தான். மாலையில் பார்த்தபோது ஓரளவு திருப்தியாக இருந்தது. இன்னும் ஓரிரு நாள் முயன்றால் முழுவதும் சரியாகிவிடும் என்று நினைத்தான். ஆனால் காலையில் எழுந்தபோது எல்லாம் கலைந்திருந்தன. அம்மாவுக்கு இரவு வெகுநேரமும் விடிகாலையிலும் தொடர்ந்து வேலைகள் இருந்தன. அதற்காக அவள் பொருட்களை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். அதில்தான் இந்தக் கலைதல். அம்மாவுடன் கடுமையாகச் சண்டை போட்டான். விரல்களை நீட்டுவதும் கைகளை ஓங்குவதும் பற்களைக் கடிப்பதும் பேசும் சொற்களும் மிகப் பொருத்தமாக அமைந்தன. பயந்துபோன அம்மா அவன் வைத்தது போலவே மாலைக்குள் ஒழுங்குபடுத்தி விடுவதாகச் சொன்னாள்.

ஆடைகள் அழுக்குப் படியாமலும் மடிப்புக் கலையாமலும் பார்த்துக்கொண்டான். சட்டைக் காலரில் லேசாக அழுக்குப் படிவு தென்பட்டாலும் அம்மாவின் முகத்தில் வீசியடித்தான். எவ்வளவு கவனம் எடுத்துத் தேய்த்தாலும் தம்பியின் வேலையில் குறை சொன்னான். அவன் செருப்புகளைப் பரா மரிக்கும் விதமே தனி. வீட்டிலிருந்து கிளம்பும்போது செருப்பின் அடியில் துளிகூட மண் இருக்கக் கூடாது. நான்கு அடி வைத்ததும் மண்பாதையில்தான் இறங்க வேண்டும். ஆனால் அந்த நான்கடி தூரம் முக்கியம். அதேபோல வீட்டுக்குத் திரும்பியதும் துளிகூட மண் இல்லாமல் துடைத்துச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டுத்தான் உள்ளே நுழைவான்.

வீட்டை ஒழுங்குபடுத்த ஒரே விதி கொண்ட சட்டத்தையே அமல்படுத்தினான். அது: ‘எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.’

எப்போதும் ஏதாவது ஒரு பொருள் இடம் மாறிவிடும். அவன் கண்களுக்கு மட்டும் அது தெளிவாகத் தெரியும். யார் இந்த வேலையைச் செய்தது என்று பெரிய விசாரணை நடத்துவான். அதற்கு ஒத்துழைத்தாலும் யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். யாராவது ஒருவர் பொறுப்பேற்கும்வரை விடமாட்டான். தலை சீவியதும் சீப்பைக் கண்ணாடி மேல் வைக்காமல் அவன் புத்தகங்களின் மேல் வைத்துவிட்டதைப் பற்றி நடந்த விசாரணையின்போது ‘முட்டாள்கள் முட்டாள்கள்’ என்று திட்டினான். ‘மறந்து வைத்தது நீயாகக்கூட இருக்கலாம்’ என்று அவன் தம்பி சொன்னதும் மௌனமாகிவிட்டான். கொஞ்சநேரம் இடைவெளி விட்டு தம்பியின் வாய்த் துடுக்கைப் பற்றிப் பேச தொடங்கினான். நல்ல வேளையாகப் பள்ளிக்கு நேரமானதால் அப்போதைக்குத் தம்பி தப்பித்தான்.

அவனுக்குச் சாப்பாடு போடும் போது ஒரு பருக்கைகூட இரையக் கூடாது. பாத்திரத்தில் இருந்து எடுக்கும்போது குழம்போ ரசமோ சிறிது சிந்திவிட்டாலும் அவன் முகம் பொரியும். ‘போன ஜென்மத்துல திருவள்ளுவனாப் பொறந்தது இவந்தான்’ என்று அவனில்லாத போது அம்மா சொல்ல எல்லாரும் சிரிப்பார்கள். எப்போது சாப்பிட்டு முடித்து எழுந்து போவான் என்று அம்மா எதிர்பார்த்துக்கொண்டே இருப்பாள். உடனடியாகப் போகவும் மாட்டான். சோற்றை நன்றாக மென்று தின்ன வேண்டும், எச்சிலும் சோறும் சேர்ந்து அரைக்கப்பட்டு வயிற்றுக்குள் போனால்தான் எளிதாக ஜீரணமாகும் என்று ஏதோ புத்தகத்தில் படித்திருந்தான். அதனால் சோற்றை வெகுநேரம் மெல்லுவான். கூழானால்தான் விழுங்குவான். ருசி பற்றி அவனுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. மணிக்கணக்கில் உட்கார்ந்து சாப் பிடுபவனை என்ன செய்வது? அவன் வெளியே கிளம்பும்வரை அம்மா பதற்றத்தோடே இருப்பாள். பின் பெரிய சுமை இறங்கிவிட்டது போலப் பெருமூச்சு விட்டு நிதானமாவாள்.

சிறுவயதில் வேலை. அவன் ஊதியம் குடும்பத்திற்குத் தேவைப்பட்டது. அரசு வேலையில் இருப்பது அந்தச் சிற்றூரில் பெரிய கௌரவம். அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்பா, தம்பி, தங்கை எல்லாரும் தங்கள் காரியங்களை முடித்துக்கொண்டார்கள். வீட்டுக்குள் அவன் நுழைகையில் யாரும் இருக்க மாட்டார்கள். அம்மாவுக்கு வேறு போக்கிடம் இல்லை. தன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு எல்லாரும் போய்விடுகிறார்களே என்று புலம்புவாள். குளியலறைக்குள் போனால் அங்கிருந்து கத்துவான். சோப்பைத் தண்ணீரோடு யாராவது வைத்திருப்பார்கள். ஷாம்பு காகிதத்தை உள்ளேயே போட்டிருப்பார்கள். கழிப்பறையில் இருந்தும் கத்துவான். கால் வைக்கும் இடத்தில் சிறு கறை தெரியும். குழாயிலிருந்து நீர் லேசாகச் சொட்டும்.


ஆடைகள் யாருடையதும் இன்னொருவருடையதோடு கலந்துவிடக் கூடாது. காலை அவசரத்தில் ஒருமுறை தம்பியின் ஜட்டியைப் போட்டுக்கொண்டு போய்விட்டான். தம்பியும் கிட்டத்தட்டத் தோளுக்கு மேல் வளர்ந்தவன் என்பதால் சட்டென வித்தியாசம் காண முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது இடுப்புப் பகுதியில் இறுக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தான். கழிப்பறையில் போய்க் கழற்றிப் பார்த்தால் தம்பியின் ஜட்டி. அன்றைக்கு மாலையில் வந்து வீட்டில் எல்லாரையும் உண்டு இல்லை என்று செய்துவிட்டான். துணி மடிக்கும்போது ஏன் மாற்றி வைத்தாய் என அம்மாவுக்குக் கேள்வி. உன்னுடைய ஜட்டியைக் காணவில்லை என்று நீ சொல்லியிருக்க வேண்டாமா எனத் தம்பிக்கு. வீட்டில் எந்த ஒழுங்கும் கிடையாது. ஒழுங்கு இருந்தால் ஒழுக்கம் வரும். ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இருந்தால் பொறுப்பு வரும். பொறுப்பு இருந்தால்... இப்படி ரொம்ப நேரம் நீட்டிப் பேசிக்கொண்டேயிருந்தான்.

ராத்திரித் தூக்கத்தில் திடுமென எழுந்து பார்த்தபோதும் அண்ணன் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு தம்பி பயந்தான். அறை முழுக்க அண்ணனின் குரல் ஒழுங்குக்கு உட்பட்டு ஒலித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தூங்குவதற்கு வெகுநேரமாயிற்று. தன்னுடைய துணிக்குள் ஒரு ஜட்டி கூடுதலாக வந்து சேர்ந்ததை அண்ணன் ஏன் கண்டுபிடிக்கவில்லை? அணிந்துகொள்ளும்போதும் தெரியவில்லையா? ஆனால் இவற்றை அண்ணனிடம் எப்படிக் கேட்பது? ஏற்கனவே அதிகப் பிரசங்கி என்று தம்பிக்குப் பெயர். காலையில் எழுந்ததும் ஒரு கம்பெனியின் பேரைச் சொல்லி இனிமேல் அந்தக் கம்பெனி ஜட்டியைத்தான் தம்பி போட வேண்டும் என்று சொல்லிவிட்டான். வெவ்வேறு கம்பெனி என்றால் மாறாதல்லவா? அவன் சொன்ன கம்பெனி தம்பிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பட்டா பட்டி டிராயர் போல ஜட்டி தயாரிக்கும் கம்பெனி அது. கோவண வடிவில் ஜட்டியை வடிவமைத்துச் சந்தையில் விற்பனைக்கு விட்டிருக்கும் புதிய கம்பெனி ஒன்றின் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது தம்பியின் சமீபகால ஆசை. அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால் தம்பி அண்ணனைக் கடுமையாக வெறுத்தான்.

சில நாட்களாகத் தன்னைப் பள்ளி விடுதியில் சேர்த்துவிடும்படி தங்கை நச்சரித்தாள். பணம் பிரச்சினையாக இருக்கும் என்றாலும் விடுதியில் இருந்தால் ஒழுங்கு வரும். காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, கடன்களை முடிப்பது, படிப்பது, பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று வேலைகளில் ஒழுங்கு படிந்துவிட்டால் எதிர்காலத்தில் ஒழுக்கமும் பொறுப்பும் கொண்ட குடிமகளாகி விடுவாள் தங்கை. ஆசிரியர் என்னும் பெயரில் பிரம்புகளைக் கையில் சுழற்றிக்கொண்டு எந்நேரமும் கண்காணிக்க விடுதியில் ஆட்கள் இருப்பார்கள். கண் காணிப்புக்கு உட்படாத பிள்ளைகள் உருப்படாது. கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்தபின் பார்க்கலாம் என்று சொல்லிவைத்தான். அவள் பள்ளிப் படிப்பை முடிக்கும்வரை அப்படியேதான் சொல்லிக்கொண்டிருக்க நேர்ந்தது. அண்ணனிடமிருந்து தப்பிக்க அவளுக்கு வழியே கிடைக்கவில்லை. படிக்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தம்பி தன் நண்பர்களின் வீடுகளில் இரவுகளைக் கழித்தான். பையனாகப் பிறக்காமல் போனோமே என்று தங்கை மனதுக்குள் வருந்தினாள்.

மழைநாள் விடுமுறை ஒன்றில் வீட்டுக் கதவை ஒட்டி நின்றுகொண்டு குமரேசன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். வீட்டில் எல்லாரும் அன்றிருந்தார்கள். மழையை ரசிக்கும் முகமும் அவன் உதடுகளில் ஆனந்தமான சிரிப்பும் தெரிந்தன. கண்களை இறுக மூடிக்கொண்டு மழையோசையில் லயிப்புண்ட அவன் தோற்றம் எல்லாருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ஏதோ நடக்கிறது என்று நினைத்துக்கொண்டிருந்தபோதே அவன் முகம் இறுகிக் கோபத்தில் முனகினான். ‘மழ பெய்யுது பாரு, சனியன்’. சீராகப் பெய்துகொண்டிருந்த மழை காற்று வீசலில் அலைப்புண்டு ஒலி மாறத் தொடங்கியதுதான் அவன் கோபத்திற்குக் காரணம்.

வேலை அலுப்புக்காக மாதம் ஒருநாள், இரண்டு மாதத்திற்கு ஒரு நாள் என்று எப்போதாவது அவன் அப்பன் குடிப்பது வழக்கம். அப்படிக் குடித்து வந்த ஓர் இரவில் குமரேசன்தான் கதவைத் திறக்க நேர்ந்தது. அப்பனிடமிருந்து வந்த மதுமணம் அவன் மூச்சுக்குள் நுழைந்து கிறக்கத்தை உண்டாக்கியது. சட்டெனச் சுதாரித்துக் கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டான். விழித்துப் பார்த்த அம்மாவிடம் ‘போதையில இருக்கற ஆள உள்ளவிடக் கூடாது’ என்று சொல்லிவிட்டான். ‘எம்பையனத் தப்பான வேலக்கிப் படிக்க வெச்சிட்டனே’ என்று புலம்பித் தலைமேல் கைவைத்துக் கொண்டு வாசலில் உட்கார்ந்தார். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்த அம்மா எழுந்துபோய்க் கதவைத் திறந்தாள். ‘அம்மா’ என்றான் வேகமாய். ‘நானும் வெளிய போறண்டா’ என்று சொல்லிக் கதவை மூடி வெளியே போய்விட்டாள். அதன் பின் அவருக்குக் குடிக்கத் தோன்றினால் சமையல் அறையிலேயோ குளியலறையிலேயோ அவனுக்குத் தெரியாமல் குடித்துவிட்டுப் பேசாமல் படுத்துக்கொள்ளும் ஏற்பாட்டை அம்மா செய்தாள்.


சமையலறை மின்விளக்கு ஆள் இல்லாத நேரத்திலும் எரிந்துகொண்டிருப்பது அவனுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது. வெளியே வரும்போது அணைத்து விடுவதும் உள்ளே போகும்போது போட்டுக்கொள்வதும் என்னும் ஒழுங்குகூட இல்லை என்றால் இத்தனை வருசம் அம்மா என்னத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறாள்? இரவில் கழிப்பறைக்குப் போனால் விளக்கை நிறுத்துவதில்லை. சிலநாள் வெளி விளக்கு விடிய விடிய எரிந்துகொண்டேயிருக்கிறது. திடுமெனத் தூக்கத்திலிருந்து விழித்து எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்ப்பான். ஏதாவது எரிந்தால் அம்மாவை எழுப்புவான். ‘நீயே நிறுத்தேண்டா’ என்பாள் அம்மா. வீட்டைத் தன் னால் ஒழுங்குக்குக் கொண்டுவர முடியவில்லையே என்று பலசமயம் நினைத்து வருந்துவான். விடி விளக்கை நிறுத்திவிட்டுப் படுப்பாள் அம்மா. படுக்கும்போது சிறுவெளிச்சம் வேண்டும் என்பதற்காகத்தானே அந்த விளக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்? அவன் அதைப் போட்டுவைப்பான். அம்மா நிறுத்தியிருந்த விளக்கை அவன் போட்ட ஓர் இரவில் அம்மாவும் அப்பனும் கட்டிப் பிடித்துத் தூங்குவதைப் பார்த்து உடனே அணைத்துவிட்டான். சிலநாள் மனமே சரியில்லை. பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் அம்மாவும் அப்பனும் இப்படி நடந்துகொள்கிறார்களே என்று வருத்தமான வருத்தம். ஒழுக்கமற்ற குடும்பத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்று பிறப்பையே நொந்துகொண்டான். சின்ன விஷயத்தில்கூட ஒழுங்கு இல்லை. அப்புறம் எங்கிருந்து ஒழுக்கம் வரும்?

பள்ளியில் ஆசிரியர்களிடையே அவனுக்கு நல்ல பெயர். பள்ளியில் மூன்றே வகை ஆசிரியர்கள்தாம் இருந்தனர். கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள், ஓரளவு கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள், ஒழுங்கைக் கடைபிடிப்பவர்கள். முதல் வகையில் குமரேசன் வந்தான். எந்த வேலையாக இருந்தாலும் தலைமையாசிரியர் முதலில் அவனைத்தான் கூப்பிடுவார். எதையும் ஒழுங்காகச் செய்வான். பள்ளிப் பிள்ளைகள் எப்போதும் வரிசையாகத்தான் போக வேண்டும், வரவேண்டும். வரிசை குலைந்தால் ஆக்ரோசம் கொண்டு விடுவான். அவன் பேச மாட்டான். பிரம்புதான் பேசும். எத்தனை கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிப்பவன் அவன் என்பதற்குப் பள்ளி வட்டாரத்தில் ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்கள். இடைவேளை நேரத்தில் சிறுநீர் கழிக்க வரிசையாகப் பிள்ளைகளை அனுப்பிக்கொண்டிருந்தான். வரிசை என்றால் ஒருவர்பின் ஒருவராக எப்படி வேண்டுமானாலும் போவதல்ல. முன்னால் நின்று பார்த்தால் எல்லோரின் தலைகள் மட்டும் தெரிய வேண்டும். சிறு விலகல் கூட இருக்காது. சிறுநீர் வரிசையில் ஒரு பையன் சற்றே விலகி ‘சார் அவசரம்’ என்றான். அவனது மற்றொரு கை கால்சட்டையை அழுத்திப் பிடித்திருந்தது. அவனுடைய அவசரம் பற்றி ஒன்றுமில்லை. வரிசையில் ஓர் உடம்பு விலகலாமா? குமரேசனின் கை பிரம்பை உயர்த்தியதும் உடம்பு மூச்சு விடாமல் வரிசையில் முழுமையாகச் சேர்ந்துகொண்டது. முறை வரும்வரை அடக்கிக்கொண்டிருக்க முடிந்தது. அப்புறம் எதற்கு அவசரம் என்று கேட்டான்? ஒழுங்கைக் குலைப்பதுதான் நோக்கம். அதற்கு இடம் கொடுத்திருந்தால் அவன் வெற்றி பெற்றிருப்பான் என்று தன் வெற்றிப் பெருமிதத்தைப் பற்றிச் சொல்வான்.

ஓரளவு கட்டாயமாக ஒழுங்கக் கடைபிடிக்கும் ஆசிரியர் ‘அவசரமாக வருபவர்கள் வரிசையின் முன்னால் வந்துவிடுங்கள்’ என வரிசை ஒழுங்கை ஓரளவு மாற்றியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். கேட்டவனை மட்டும் ‘ஒரே ஓட்டமாக முன்வரிசைக்கு வந்துவிடு’ எனச் சொல்லியிருக்க லாம் என்பது ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஆசிரியரின் அபிப்ராயம். ‘அவசரமாக வருகிறது என்று எல்லாரும் ஒரே சமயத்தில் சொன்னால் என்ன செய்வது?’ என்பது குமரேசனின் கேள்வி. அவனைவிடப் பல ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்கள்கூட அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

சிறுவயதாக இருந்தாலும் குமரேசன் சிறந்த ஆசிரியர் என்றும் அவனுக்கு நல்லாசிரியர் விருது கொடுக்க அரசிடம் பரிந்துரைக்கலாம் என்றும் தலைமையாசிரியர் முடிவு செய்தார். அதற்காக உள்ளூர் அரசியல்வாதியிடம் பரிந்துரைக்கச் சொல்ல வேண்டும். அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும். என்ன செய்வது? வீட்டுச் சுமைகளைக் கொஞ்சம் குறைத்தபின் பார்க்கலாம் என்று குமரேசன் சொல்லிவிட்டதால் நல்லாசிரியர் விருது தாமதமானது. கையெழுத்து கிறுக்கல் முறுக்கலாக இருக்கக் கூடாது, புத்தகங்கள் நோட்டுக்கள் கிழியக் கூடாது, மூக்கில் சளி ஒழுகக் கூடாது, உடைகள் அழுக்காகும்படி விளையாடக் கூடாது, கத்திக் கூச்சல் போடக் கூடாது என்று கூடாது வகை விதிமுறைகள் பலவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பான். வகுப்பாசிரியராகக் குமரேசன் அமைந்துவிடக் கூடாது எனப் பிள்ளைகள் கூடுதலாக ஒன்றையும் சேர்த்துக்கொள்வார்கள்.

ஐந்து நிமிடம் குறைவாக நேரத்தைக் காட்டுகிறது கடிகாரம் என்று திட்டிவிட்டு வேகமாக அவன் வெளியேறிய பொழுதொன்றில் தம்பியும் தங்கையும் அம்மாவைப் பார்த்தார்கள். அவர்கள் பார்வையில் வெறுப்பு திரண்டிருந்தது. இது தவறாயிற்றே என நினைத்த அம்மா அவர்கள் முன்னால் உட்கார்ந்தாள். சிரித்துக்கொண்டே ‘உங்க அண்ணன் சாமிகிட்ட வரம் வாங்கி வந்தவன்’ எனத் தொடங்கி அந்தக் கதையைச் சொன்னாள். ஈஸ்வரனும் ஈஸ்வரியும் இந்த உலகத்து உயிர்களுக்கெல்லாம் படியளந்து கொண்டிருந்தார்கள். ‘இன்ன வேலையைச் செய்து உன் வயிற்றை நிரப்பிக் கொள்’ என்று வரம் கொடுப்பதுதான் படியளப்பு. ஒவ்வோர் உயிராக வந்து வரம் வாங்கிச் சென்றது. எல்லாருக்கும் வரம் வழங்கி முடித்தபோது ஈஸ்வரனுக்குப் பசி. சாமியே ஆனாலும் வயிற்றுப் பிரச்சினை வந்துவிட்டால் கோபம் வருவது இயல்பு. இருவரும் புறப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் அவசர அவசரமாகப் பேன் ஓடி வந்தது. ரொம்ப நேரம் தூங்கிவிட்டது அது. பேனைக் கண்டு கொள்ளாமல் ஈஸ்வரனும் ஈஸ்வரியும் புறப்பட்டார்கள். சாமியின் காலைப் பிடித்துக்கொண்ட பேன் ‘நான் எங்க இருக்கறதுன்னு வரங் குடுங்க சாமீ’ன்னு கெஞ்சிச்சு. ‘போ போயி மசுருல இருந்துக்க’ என்று கோபமாகக் கத்தினார் ஈஸ்வரன். அவர் சொல்லிவிட்டால் அதை அவராலேயே மாற்ற முடியாது. பேன் அழுதுகொண்டே மயிரில் வசிக்கப் போயிற்று. அதன் அழுகை ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரிக்கும் கஷ்டத்தைக் கொடுத்தது. அடடா, கோபத்தை அரைநொடி நேரம் கட்டுப்படுத்தியிருந்தால் ஒரு உயிருக்குக் இந்தக் கஷ்டம் வந்திருக்காதே என்று வருத்தப்பட்டார்கள். என்ன செய்வது? பேனின் வாழ்க்கையில் ஒழுங்கு இல்லை. சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழும் ஒழுங்கு இருந்திருந்தால் அதற்கு இந்தத் துன்பம் வந்திருக்குமா என்று யோசித்தார்கள்.


அந்தச் சமயத்தில் குமரேசன் உள்ளே நுழைந்தான். ‘ஏழைப் பெற்றோரின் மூத்த மகனாகப் பிறந்ததால் வேலைகளை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது’ என்றான். மனமிரங்கிய ஈஸ்வரனும் ஈஸ்வரியும் ‘எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்து போ’ என்று வரம் வழங்கி அனுப்பிவிட்டார்கள். அதனால்தான் அவனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது என்று அம்மா சொல்லி முடித்தாள். கதையின் முதல் பாதி அவர்களுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் பிற்பாதி ரொம்பவும் பிடித்திருந்தது. கதைகள் தரும் குதூகலத்தை அவர்கள் அனுபவித்தார்கள். தங்கை பாயில் படுத்தபடி படித்துக்கொண்டிருந்தபோது அண்ணன் வந்துவிட்டான். ‘ச்சீ என்ன பழக்கம்? படுத்துக்கிட்டுப் படிக்கறது?’ என்று சீறி விழுந்தான். தங்கை சட்டென்று எழுந்து உட்கார்ந்துகொண்டாள். படித்ததெல்லாம் மறப்பது போல இருந்தது. முகம் கூம்பிவிட்டது. அதைப் பார்த்த தம்பி மெல்ல அவளருகே வந்து காதில் ‘வரம்’ என்றான். தங்கை அடக்க முடியாமல் சிரித்தாள். அதுமுதல் அண்ணனின் கோபத்தைச் சமாளிக்க ‘வரம்’ அவர்களுக்குக் கைகொடுத்தது.

‘பேனுக்கும் கடசியாப் போன ஆளு, எங்களுக்குத் தெரியாதா?’ என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் குமரேசன் வரம் பெற்ற கதை பரவலாகிவிட்டது. எதையும் சமாளிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுப்பதுதானே கதை. அரசல் புரசலாகக் கதை குமரேசனின் காதுகளிலும் விழுந்தது. கடவுளிடம் தானே வரம் வாங்கினேன் என்று சமாதானம் சொல்லித் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கதைக்குக் கால்கள் முளைத்து விதவிதமாகப் பரவிற்று. ஈஸ்வரன் ஈஸ்வரி கால்களைப் பிடித்துக்கொண்டு குமரேசன் கதறினான் என்றும் உள்ளே போகும்போது மூக்கொழுகிச் சளி வாய்வரை வந்திருந்தது எனவும் கதை விரிந்தது. வரம் பெற்றுத் திரும்பும்போது காற்றில் ஆடிப் படார் படாரென்று அடித்துக்கொண்டிருந்த கைலாசத்தின் ஜன்னல் பலகைகளுக்குக் கொக்கியை மாட்டிவிட்டும் கதவுக்குக் கட்டையைப் பொருத்திவிட்டும் வந்தான் எனவும் அவன் செய்ததைப் பார்த்து ஈஸ்வரனும் ஈஸ்வரியும் வியந்துபோனார்கள் எனவும் கதையின் பின்பகுதியில் கொஞ்சம் சேர்ந்துகொண்டது. மூக்குச் சளியைச் சிந்திவிட்டும் கால் கழுவிவிட்டும் ஈஸ்வரி அவனைச் சுத்தமாக அனுப்பினாள் என்று ஒருமுறை அவன் அப்பன் சொன்னார். ‘எம்பையனுக்கு ஈஸ் வரியே கால் கழுவி உட்டிருக்கறா’ என்பார் போதையில்.

வரத்திற்கு ஏற்றபடி நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் அவனுக்கு இருந்தது. முன்னைவிடக் கடுமையாக ஒழுங்கு பார்க்கத் தொடங்கினான். அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தபோது அது வெளிப்பட்டது. அவனுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்துவிடுவதில் அம்மாதான் தீவிரமாக இருந்தாள். கல்யாணம் முடிந்த உடனே தனிக்குடித்தனம் அனுப்பிவிட வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தாள். ஆனால் பெண் கிடைப்பதுதான் பெரியபாடாக இருந்தது. அவர்கள் சாதியில் படித்த பெண்கள் மிகக் குறைவு. படிப்புக்கேற்ற வேலை செய்யும் பெண்களோ அரிதினும் அரிது. ஆசிரியப் பணியிலிருக்கும் பெண்ணாக இருந்தால் நல்லது என்று முதலில் நினைத்தான். அவர்களிடம் ஒழுங்கு தானாகவே படிந்திருக்கும், குழந்தைகளையும் நல்ல ஒழுக்கத்தோடு வளர்ப்பார்கள் என்று எண்ணம். அதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிந்ததும் சரி, ஓரளவு படித்த பெண்ணாக இருந்தால் போதும் என நினைத்தான். நிறையப் பெண்களைப் போய்ப் பார்த்து வந்தான். ஒருவரையும் பிடிக்கவில்லை. தோற்றம் பற்றி அவன் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை. ஆனால் செயலில் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்க வேண்டும் என்பதுதான் அவன் எதிர்பார்ப்பு.

ஒரு பெண்ணின் ரவிக்கையின் கை ஒருபக்கம் நீளமாகவும் இன்னொரு பக்கம் குட்டியாகவும் இருந்தது. ‘அவசரத்துல டெய்லர் தெச்சுக் குடுத்திருப்பாங்க. அதனால என்னடா?’ என்றாள் அம்மா. ரவிக்கையில்கூட நேர்த்தி இல்லாத பெண்ணோடு எப்படி வாழ்வது? இன்னொரு பெண்ணின் தலை மயிர் கொஞ்சம் நெற்றியில் வந்து விழுந்திருந்தது. ஒழுங்காகப் படியச் சீவ வேண்டாமா? ‘இந்தக் காலத்துல அப்பிடி மயிர எடுத்து விட்டுக்கறது பழக்கம்டா’ என்றாள் அம்மா. பொட்டு சரியில்லை, சேலை சரியில்லை, நகை அணியத் தெரியவில்லை, காப்பி டம்ளரை எடுத்த முறை சரியில்லை, கைக்கு வைத்த மருதாணியில் ஒழுங்கு இல்லை என்று இல்லைகளைப் போட்டு மறுத்துக்கொண்டிருந்தான். இந்த ஜென்மத்தில் இவனுக்குக் கல்யாணம் இல்லை என்று அம்மா கவலைப்பட்டாள். பெண் பார்க்கப் போகும் இடத்தில் மெதுவாகப் பெண்ணின் அறைக்குள் போய் அம்மாவே எல்லாவற்றையும் சரி செய்தாள். அப்படியும் அவன் கண்ணுக்கு ஏதாவது ஒழுங்கின்மை தென்பட்டு விடும்.

சில இடங்களில் மாமியார் இப்பொழுதே கட்டளை போடுகிறாள் என்று அம்மாவை விமர்சித்தார்கள். ‘இப்படியுமா ஒருவன் வரம் வாங்கி வந்திருப்பான்’ என்று நொந்து போனாள் அம்மா. பெண் பார்க்கிற வேலை தொடங்கியதிலிருந்து அதைப் பற்றியே பேச்சு. வீட்டு ஒழுங்குகளைக் கொஞ்சம் மறந்திருந்தான். அதில் எல்லாருக்கும் நிம்மதி. ‘எவளயாச்சும் பாத்து அவனையே கூட்டிக்கிட்டு வரச் சொல்லு’ என்று சலித்துச் சொன்னார் அப்பன். ‘அந்தக் கொடுப்பின அவனுக்கு ஏது? அவனத் தெரிஞ் சவ எவளாச்சும் கூட வருவாளா?’ என்றாள் அம்மா. அவனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்தும் நெருங்கியவர்களிடம் ஆலோசனை கலந்தும்கூட எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. பெண் பார்க்கும் படலம் தொடர்ந்துகொண்டேயிருந்தது. ஆசிரியராக இருப்பவனுக்குப் பெண் கொடுக்கப் பலரும் தயாராக இருந்தார்கள். அதிக வேலை இல்லை, விடுமுறை நிறையக் கிடைக்கும், கை நிறையச் சம்பளம், சமூகத்தில் மதிப்பு இன்ன பிற காரணங்களை எல்லாரும் தெரிந்து வைத்திருந்தார்கள். பல்லாயிரம் கோடி ஊழல் செய்தியைச் சிறிதாகப் போட்டுவிட்டு ஒரு சதவீத ஈட்டுப்படி அரசு ஊழியர்கள் எல்லாருக்கும் அரசு அறிவித்தால்கூட ‘ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்’, ‘ஆசிரியர்களுக்கு லக்கிப் பிரைஸ்’ என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போடும் உள்ளூர்ச் செய்தித்தாள்களை மக்கள் தவறாமல் படிப்பதனால் உண்டான அறிவு அது.

பார்க்கும் பெண்களை எல்லாம் குமரேசன் மறுத்துக்கொண்டிருந்த போதும் புதிது புதிதாகப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துக்கொண்டேயிருந்தது. பெண் தேடத் தொடங்கிய சமயத்தில் பார்த்த ஒரு பெண்ணின் தந்தை விடாமல் பல வழிகளில் முயன்று கொண்டிருந்தார். அந்தப் பெண் ஐந்தாம் வகுப்புவரை படித்தவள். அத்துடன் கொஞ்சம் கறுப்பு. கறுப்பாக இருப்பதால்தான் மாப்பிள்ளை மறுக்கிறார் என்று அவராக முடிவுசெய்து அதற்காக நகைகளும் பணமும் கூடுதலாகக் கொடுப்பதாகச் சொல்லி அனுப்பினார். அந்தப் பெண்ணை என்ன காரணம் சொல்லி மறுத்தான் என்பது மறந்து போயிருந்தது. அவள் நகங்கள் அழுக்குப் படிந்து கருத்திருந்தன என்பதாக நினைவுக்கு வந்தது. உடல் கறுப்பல்ல, நகக் கறுப்பே அவன் பிரச்சினை. ‘நகத்தக்கூட வெட்டி ஒழுங்கா வெச்சுக்கத் தெரியாதவ எதையம்மா ஒழுங்கா வெச்சுக்குவா?’ என்றான். ‘ஏம்பயா, உன்னாட்டம் அந்தப் பொண்ணு வாத்தியாரு வேலயா பாக்குது? நகத்துல அழுக்குப்படாம ஊட்டு வேல செய்ய முடியுமா? பாத்திரங் கழுவோணும் , ஊடு கூட்டோணும், துணி தொவைக்கோணும். இதா எங்கையப் பாரு, நகமெல்லாம் கருத்துத்தான் கெடக்குது. வெட்டுனாலும் அப்பிடித்தான் ஆவுது. பெருவெரல் நகத்தயெல்லாம் பொம்பளைங்க வெட்ட முடியாது பையா. வெங்காயம் தொலிக்கோணும், மொளகா கிள்ளோணும், அதுக்கு நகம் வேணுமில்ல’. பொறுமையாக அம்மா சொன்ன காரணங்கள் சரியாகவே பட்டன. ‘எதுனாலும் நீ ஒரு சமாதானம் சொல்லீருவ’ என்றான். ‘கட்டிக்கிட்டு வந்ததுக்கப்பறம் நகத்துல அழுக்குப்படாத நாம வெச்சுக்கலாம். நான் வேண்ணா வெங்காயம் தொலிச்சுக் குடுத்தர்றன்’ எனச் சிரிக்காமல் சொன்னாள் அம்மா. மௌனமாக இருந்தான்.

ரொம்ப நாளாகப் பெண் பார்த்ததில் அவனுக்கும் அலுப்பு வந்திருந்தது. முன்னெல்லாம் வாரம் ஒருமுறை என்றிருந்த லுங்கி ஈரம் இப்போது ஒருநாள் விட்டு ஒருநாள் ஆனதால் தான் ஒழுங்காக இருக்கிறோமா என்னும் கவலையும் மிகுந்திருந்தது. அவன் மௌனத்தைச் சாதகமாகக்கொண்டு பெண் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டாள். இருபதாம் வயதில் வேலை கிடைத்த அதிர்ஷ்டத்தைப் போலவே இருபத்தைந்தாம் வயதில் திருமணம் அமைந்தது. உண்மையில் வேலையைப் போலத்தான் அவன் மனைவியும். ஒரு சிக்கலுமில்லை. பள்ளியிலாவது கையில் பிரம்பு வேண்டும். வீட்டில் எதுவும் தேவை யில்லை. வா, போ, எடு, போடு, வை, படு, கழற்று, ஊற்று இப்படி ஏராளமான வினைச்சொற்களை அவளிடம் பயன்படுத்தினான். நில், உட்கார், எழுது, படி, ஓடு என்பவை அவன் பள்ளியில் அதிகம் பயன்படுத்துபவை. ஒழுங்கு குலைந்ததைக் கண்டுபிடித்து அவன் திட்டினால் பேசாமல் வாங்கிக்கொள்வாள். ‘இனிமே இப்படிச் செய்யாத’ என்று முடிப்பான். ‘சரிங்க’ என்பாள் அவள். ‘சரிங்க சார்’ என்று பிள்ளைகள் பள்ளியில் சொல்லும். தன் வீட்டில் ஏராளம் வேலைகள் செய்து களைத்துப் போனவள் அவள். குமரேசன் ஒருவனைச் சமாளிப்பது பெரிய விஷயமாயில்லை.

தனிக்குடித்தனம் அனுப்பும்போது அவனுடைய அம்மா சொல்லியனுப்பிய மாதிரி நகங்களை அழுக்கு அண்டாமல் வைத்துக்கொள்ள முயன்றாள். சின்ன வெங்காயம் தொலிப்பதற்குக் கஷ்டம். பெரிய வெங்காயம் பயன்படுத்தினால் கத்தியில் அரிந்தால் தோல் தானாக வந்துவிடும். ஏதாவது பொருள் தினமும் வாங்கிக்கொண்டேயிருப்பதால் பிளாஸ்டிக் பைகள் சேர்ந்தபடியே இருக்கும். பைகளைக் கைகளுக்கு உறைபோல மாட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட்டுக்கொள்வாள். அதற்கு நல்ல பலன் இருந்தது. அவன் பார்வை தினந்தோறும் ஒருமுறையாவது அவள் நகங்களை நோக்கி நகர்ந்துவிடும். பார்த்துத் திருப்திகொள்வான். அவன் பொருட்களை அனுமதி இல்லாமல் அவள் எடுக்கமாட்டாள். அவளுடைய எச்சரிக்கையை மீறியும் ஏதாவது கண்டு பிடித்தால் மிகப் பழைய சட்டத்தைச் சொல்வான். ‘எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வை’. எழுதி வைக்கவில்லை என்றாலும் சுவர்கள் அந்த வாசகத்தை எதிரொலித்துக்கொண்டேயிருந்தன.

ஒழுங்கு, ஒழுக்கம், பொறுமை இத்யாதிகள் பற்றி அவன் அதிக நேரம் வகுப்பெடுக்கும் அன்றைக்கு மாமியார் வீட்டுக்குப் போய்ச் சொல்லி அழுவாள். மாமியார் சிரித்தபடி ‘அவன் அப்படித்தான்’ என்பாள். தான் தப்பித்துக்கொண்ட மகிழ்ச்சியை வேறெப்படி வெளிப்படுத்த முடியும்? தம்பி ‘வரம்’ என்பான். ‘அண்ணி, பள்ளிக்கொடத்துல இப்பப் பரிட்ச நடக்குது. முடியற வரைக்கும் வீட்டுலதான் வகுப்பு. பரிட்ச முடிஞ்சு பள்ளிக்கொடம் தொறந் திட்டாங்கன்னா செரியாப் போயிரும்’ என்பாள் அவன் தங்கை. அவர்கள் சொற்கள் தரும் ஆறுதலோடு திரும்பி வீட்டுக்கு வருவாள். கல்யாணமாகி இரண்டு மாதத்திற்குப் பின் ஓர் இரவில் அவள் கிச்சத்தில் முகம் புதைத்திருந்தபோது சட்டென விலகிக் ‘குளிச்சயா?’ என்றான். அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். ‘போ குளிச்சிட்டு வா’ என்று திரும்பிப்படுத்துக்கொண்டான். அவள் எழுந்து போகவில்லை. அவமானத்தை அழுது கரைத்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவனாகவே அவள் பக்கம் திரும்பி ‘சாரி சாரி... எம் மூக்க அறுத்தெறி யோணும்’ என்று சொல்லிச் சமாதானமானான். அன்று முதல் இரவில் ஒருமுறையும் குளிக்கப் பழகிக்கொண்டாள். மறுபடியும் ஒருமுறை அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்துவிடுமோ என்று பயந்தாள். அதற்குள் அவனுக்கு மறுபடியும் அதிர்ஷ்டம்.

மூன்றாவது மாதம் அவள் வாந்தியெடுத்தாள். கட்டுப்படாத வாந்தி. அவள் அம்மா வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்தான். ஒருவாரம் தனியாக வீட்டிலிருந்து பார்த்தான். வழக்கம் போல வீட்டில் ஏதாவது ஒழுங்கு குலைந்திருக்கும். ஆனால் யாரிடம் சொல்வது? பேசாமல் இருக்கவே முடியவில்லை. பக்கத்துத் தெருவில் இருந்த அம்மாவிடம் போனான். அவன் மனைவி குழந்தை பெற இன்னும் ஏழெட்டு மாதமாகும். கைக் குழந்தையோடு அனுப்ப மாட்டார்கள். குழந்தைக்கு ஏழு மாதம் ஆக வேண்டும். இன்னும் ஒரு வருசத்துக்கு மேல் ஆகும். இங்கேயே வந்து தங்கிவிடுவானோ என்று அம்மா பயந்தாள். மூன்று மாத நிம்மதி அவ்வளவுதானா என்று அப்பன் புலம்பினார். தம்பி, தங்கைகள்தான் அம்மாவுக்கு அந்த யோசனையைச் சொன்னார்கள். வீட்டைத் தனியாக விடக் கூடாது. அண்ணன் அங்கேயே இருக்கட்டும். வேளாவேளைக்குச் சாப்பாட்டைக் கொண்டுபோய்க் கொடுத்துவிடலாம். அம்மா சின்ன வேலை சொன்னாலும் செய்ய மறுக்கும் பிள்ளைகள் அண்ணனுக்குச் சோறு கொண்டு போய்த் தரும் வேலையைத் தட்டாமல் செய்தார்கள். முடிந்தவரை சோற்றை வைப்பதும் எடுப்பதும் அண்ணன் கண்ணில் படாத வகையில் நடந்தது.

குமரேசன் ஒன்றிரண்டு முறை மாமனார் வீட்டுக்குப் போய் வந்தான். மனைவி நன்றாகக் கவனித்தாள். ஆனால் மாமனார் வீட்டில் ஒரு ஒழுங்கும் கிடையாது. அவனுக்குப் பிடிக்கவேயில்லை. யாரிடமும் சொல்லக் கூடிய சுதந்திரமும் அங்கே இல்லை. மனைவியைக் கூட அங்கே வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்தச் சமயத்தில் அவன் பக்கத்து வீட்டுக்காரர் தன் மகன் சரியாகப் படிக்காமல் எந் நேரமும் விளை யாடிக்கொண்டே இருக்கிறான் என்று சொல்லி அவனிடம் ட்யூசன் எடுக்க முடியுமா என்று கேட்டார். மிகக் கடுமையாக ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஆசிரியர் அவன் என்றும் எவ்வளவு குறும்பு செய்யும் பையனாக இருந்த போதும் அவன் வழிக்குக் கொண்டு வந்து விடுவான் என்றும் அவருக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். அவன் மிகுந்த சந் தோசத்தோடு ட்யூசனை ஆரம்பித் தான்.

பக்கத்து வீட்டுக்காரரைப் போலவே பிள்ளைகள் பற்றிக் கவலை கொண்ட பெற்றோர் ஏராளம். ட்யூசனுக்குக் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவனுடைய மாலைப் பொழுது அருமையாகக் கழிந்தது. எந்தப் பிள்ளை ஒழுங்காக இருக்கிறது? அவனுக்குப் பள்ளியைப் போலவே ட்யூசனிலும் வேலை நிறைய இருந்தது. சம்மணம் போட்டு ஓரிடத்தில் ஒருமணி நேரம் பிள்ளைகளை உட்கார வைப்பதே பெரிய சவால்.

கிள்ளுதல், பிடுங்குதல், அடித்தல் என்று எப்போதும் ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யும் பிள்ளைகளைப் பண்படுத்தும் பெரிய பொறுப்பு. கிட்டத்தட்ட ஒன்றரை வருசம். சந்தோசமான வேலைக்குக் கூடுதலாகப் பணமும் கிடைத்தது.

அவனுக்கு எப்போதும் அதிர்ஷ்டம் தான். கடவுள் வரம் வாங்கிய பிறவி. அழகான பெண் குழந்தையோடு அவன் மனைவி வந்து சேர்ந்தாள். குழந்தை தவழும் பருவத்தில் இருந்தது. குழந்தைக்கு ‘ரிதிஷ்னா’ என்று பெயர் வைத்திருந்தான். ‘ரி’ என்ற எழுத்தில்தான் பெயர் வைக்க வேண்டும் என ஜோதிடர் சொல்லியிருந்தார். ரிஷ்கா, ரிக்ஷா, ரிம்பா, ரிதா, ரித்தா, ரித்னா, ரித்தினா, ரிங்கா, ரிச்சிகா, ரிதிஷ்கா, ரிதிஷ்னா என்று சொல்லப்பட்ட பல பெயர்களிலிருந்து ‘ரிதிஷ்னா’வைத் தேர்வு செய்திருந்தான். தன் பள்ளித் தமிழாசிரியர் ஒருவரிடம் இந்தப் பெயரை வைக்கலாமா என்று கேட்டான். அவர் ‘தாராளமாக வைக்கலாம்’ என்று சொல்லிப் பெயருக்கு விளக்கமும் கூறினார். ‘ரிதம்’ என்றால் சந்தம் என்று பொருள். சந்தம் என்பது என்ன? ஒழுங்குக்கு உட்பட்ட ஓசை. ஆகவே ரிதிஷ்னா என்றால் ஒழுங்குள்ளவள் அல்லது ஒழுங்குக்கு உட்பட்ட ஓசை போன்றவள். விளக்கம் குமரேசனுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்தது. எனினும் சின்னச் சந்தேகம். இது தமிழ்ப் பெயர்தானா? தமிழ்ப் பெயராகவும் இருந்துவிட்டால் பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம். அந்தத் தமிழாசிரியர் கடும் தனித்தமிழ்ப் பற்றாளர் என்றபோதும் பெரும்போக்கானவர். ‘உலகத்து முதல்மொழி தமிழ். தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றின. ஆகவே எந்தச் சொல்லாக இருந்தாலும் அது தமிழ்ச் சொல்தான்’ என்றார்.

பெயருக்கு ஏற்றபடி ரிதிஷ்னா ஒழுங்குக்கு உட்பட்டவளாக இல்லை. பெரிய அதம் செய்தாள். கைக்கு எட்டும்படி ஒரு பொருளையும் வைக்க முடியாது. இழுத்துத் தள்ளிவிடுவாள். எடுத்து வாயில் போட்டுக் கொள்வாள். ஓங்கிப் போட்டு உடைப்பாள். ஒன்றிரண்டு நாட்கள் குழந்தையைப் பார்த்த சந்தோசம் இருந்தது. அவன் எடுத்துக் கொஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் மடியிலேயே ஆய் போய்விட்டாள். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வட்டலுக்கு அருகில் மண்டு வைத்தாள். அவன் கண்ணெதிரிலேயே ஒரு புத்தகத்தை எடுத்துச் சுக்கலாகக் கிழித்தாள். ஒன்றாம் வகுப்புப் பாடப் புத்தகம் அது. இப்பவே கிழிக்கிறாள், படிச்சாப்பலதான் என்று நினைத்தான். வயிற்றை இழுத்துக்கொண்டு வீடு முழுக்க ரிதிஷ்னா ஊர்ந்தாள். கால் முட்டி போட்டுக் கையை ஊன்றிச் சில சமயம் தவழ்ந்தாள். ஏதாவது பிடிமானம் கிடைத்தால் எழுந்து நின்றுகொண்டாள். பொருளற்ற ஒலிகளைச் சத்தமாக எழுப்பினாள். அவள் இழுத்தும் தூக்கியும் எறியும் பொருள்களின் ஓசையைவிட அதிகமாகக் கத்தினாள்.

எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் வீடு முழுக்கப் பொருட்கள் இரைந்து கிடக்கும். மனைவியைப் பார்த்துக் கத்துவான். அவள் ஓடி வந்து எல்லாவற்றையும் பொறுக்கி அதனதன் இடத்தில் வைப்பாள். ஏராளம் பொம்மைகள் வாங்கிப் போட்டான். எந்தப் பொம்மையாக இருந்தாலும் சில நிமிச நேரம்தான். தூக்கி வீசிவிட்டு வேறொரு பொருளுக்குப் போய்விடுவாள். மனைவி மேல் எவ்வளவு கோபித்தும் பயனில்லை. எல்லாவற்றையும் சரி செய்கிறாள். குழந்தையை முடிந்த அளவு இடுப்பில் தூக்கி வைக்கிறாள். எந்நேரமும் வைத்திருக்க முடியவில்லை. குழந்தையும் இடுப்பில் இருக்கப் பிரியப்படுவதில்லை. கீழே தவழ்ந்து ஓடத்தான் விரும்பும். வேலைகளைப் பார்க்கும்போது குழந்தையைக் கீழே விட்டாக வேண்டும். இப்படிப்பட்ட குழந்தையை எதிர்காலத்தில் ஒழுங்காக வாளர்க்க முடியுமா என்று கவலைப்பட்டான். தன் குழந்தையை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டானோ அதற்கு நேர்மாறாகக் குழந்தை வந்து பிறந்திருக்கிறது. இரண்டு வயது வரை வீட்டில் தான் வைத்திருந்தாக வேண்டும். பள்ளிக்கு அனுப்ப முடியாது. முடிந்தால் விடுதியில் சேர்த்துவிடலாம். அதற்கும் உடனடியாக வழியில்லை. பிள்ளைகளை வளர்த்திருக்கும் முறை பற்றிப் பல பெற்றோரைத் திட்டியிருக்கிறான். தன்நிலையே கேவலமாகப் போய் விடும் போலிருக்கிறதே என்று வருந்தினான். தவழ்ந்து குழந்தை வேகமாக வருவதைப் பார்த்தாலே பயம் வந்தது. இதென்னா அரக்கக் குழந்தையா?

அவன் மனைவிக்குக் கவலை ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. குழந்தையைக் கொஞ்சுவதும் அதன் மொழியில் ஏதேதோ பேசுவதும் எனச் சந்தோசமாக இருந்தாள். அது என்ன செய்தாலும் துளிகூடக் கண்டிப்பதோ மிரட்டுவதோ இல்லை. குழந்தையை இவள்தான் கெடுக்கிறாள் என நினைத்தான். விடுமுறை நாளொன்றில் கண்ணாடியைக் கழற்றிப் புத்தகம் ஒன்றின்மேல் வைத்துவிட்டு அலமாரியில் என்னவோ தேடிக்கொண்டிருந்தான். குழந்தை எவ்வளவோ முயன்றும் கைக்குக் கிடைக்காத பொருள் ஒன்று இப்போது கைக்கு எட்டும் தொலைவில். வேகமாக வந்த குழந்தை சட்டெனக் கண்ணாடியை எடுத்து உட்கார்ந்துகொண்டது. இரண்டு கைகளிலும் பற்றி வாய்க்குக் கொண்டுபோனது. பதறி ஓடி வந்தான். அவன் பிடுங்கி விடுவான் என்பதை அறிந்து கண்ணாடியை வீசி எறிந்தது குழந்தை. சுவரில் பட்டுப் பிரேமில் விரிசல் விழுந்துவிட்டது.

அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அப்படியே குழந்தையை ஆவேசமாகத் தூக்கிப் பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினான். பொருள்களை வீசுவது போலக் குழந்தையை வீசிவிட எத் தனித்த கணம். ஓடி வந்த மனைவி குழந்தையைப் பிடுங்கிக்கொண்டாள். பயந்து வீரிட்டு அலறியது குழந்தை. மாரோடு சேர்த்துத் தேற்றினாள். கண்ணில் நீர் நிரம்ப அவனைப் பார்த்துக் ‘குழந்தைங்க’ என்றாள். குழந்தை யோடு திரும்பி வந்தபின் அவள் பேசும் அதிகபட்ச வார்த்தை அது என்று உணர்ந்தான். அவள் முகமும் சொன்ன தொனியும் அவன் இறுக் கத்தைத் தளர்த்தின. படுக்கையில் விழுந்தவன் யோசித்தபடியே தூங்கிப் போனான்.

திடீரென முகத்தில் தண்ணீரைக் கொட்டியது போலச் சில்லிப்பு. விழித்தான். குழந்தை சிரித்தபடி அவனருகே உட்கார்ந்து கையால் அடித்துக்கொண்டிருந்தது. ஒத்தடம் கொடுப்பது போல அத்தனை சுகமாக உணர்ந்தான். அப்படியே கண்களை மூடிக் கொஞ்ச நேரம் அதை அனுபவித்தான். தூக்கி வீசப் பார்த்தவன் அவன் என்பதை அதற்குள் மறந்துவிட்டதா குழந்தை? பிரியமாய்க் குழந்தையைத் தூக்கி வயிற்றின்மேல் இருத்திக் கொண்டான். இரு கைகளாலும் நெஞ்சில் அடித்தது. அதன் சிரிப்பில் சந்தோசம் பொங்கியது.

குழந்தையோடு சேர்ந்து வீட்டைப் பார்த்தான். எல்லாப் பொருள்களும் ஒழுங்கில் இருப்பதாகத் தோன்றியது. இங்கே வைத்த பொருள் அங்கே இருந்தால் என்ன? எல்லாம் இடம்தானே. முழுதான பொருள் உடையட்டும். எப்போதிருந்தாலும் உடையப் போவதுதான். குழந்தையின் பார்வையை முழுதாக வாங்கிப் பார்த்தான். ஒழுங்கு என்று ஒன்றுமில்லை. ஒழுங்கற்று இருப்பதே ஒழுங்கு. குழந்தையோடு சேர்ந்து சந்தோசமாகச் சிரித்தான். கடவுள் தனக்கு ஒரு வேலையும் கொடுக்கவில்லை என்று அப்போது தோன்றியது.

காலச்சுவடு ஏப்ரல் 2011


புத்தனாவது சுலபம் - எஸ்.ராமகிருஷ்ணன்

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாக்க் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**

கணையாழி ஏப்ரல் 2011

நான்காவது கனவு - யுவன் சந்திரசேகர்

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புறநகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் உரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா?

அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே  கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் - என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவ. அவள் வந்த மறுநாள் வெள்ளிக்கிழமைக் காலை எங்கள் வீட்டுச்சுவரில் தொங்கிய முகம் பார்க்கும் கண்ணாடி தவறி விழுந்து நொறுங்கியது. என்னுடைய அம்மா கண்ணாடிச் சில்லுகளை ஒற்றியெடுக்கச் சாணி உருண்டை தேடிப் போனாள். நியாயமாக அந்த வேலையைச் செய்ய விரைபவள் அத்தையாகத் தான் இருக்கும்-அவளோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

உத்தரத்தைப் பார்த்து நிலைகுத்தின விழிகளிலிருந்து கரகரகரவென்று கண்ணீர் ஊற்றியது. என்னுடைய அப்பா அவளருகில் சென்று தோளைத் தொட்டு, என்னாச்சு வனஜீ என்று கேட்க முனைந்தார்.

'போயிட்டாண்டா, என் ஒத்தெப் பிள்ள போயிட்டாண்டா. என்னை ஒத்தெ மரமா நிக்கவிட்டுட்டுப் போயிட்டாண்டா' என்று குமுறி அழுதாள் அத்தை. நீண்ட நெடுங்காலமாகக் கைம்பெண்ணாய் இருந்துவரும் அவளுக்கு ஏதோ காரணத்தால் திடீரென்று மரை கழண்டுவிட்டதுபோலிருக்கிறதே என்று நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.

ஆனால் சரியாக மறுநாளைக்கு மறுநாள் மிலிட்டரியிலிருந்து தந்தி வந்து சேர்ந்தது. கிழக்குப் பாகிஸ்தானில் வைத்து லட்சுமணன் - அதுதான் வனஜா அத்தையின் மகன் - எதிரியின் பீரங்கி வெடியில் அகப்பட்டுச் சிதறிவிட்டான் என்று சொன்னது. தேச சேவைக்கு மகனை அர்ப்பணித்த தாய்க்குத் தன் மரியாதையையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தது இந்திய அரசாங்கம்.

எங்களுக்கானால் ஆச்சரியம் தாங்கவில்லை. அது என்ன மாதிரியான தொலைத்தொடர்பு என்று புரியவும் இல்லை... எதற்கு இவ்வளவும் சொன்னேன் என்றால், ஒரு தலைமுறைக்கு அமானுஷ்யமாகத் தெரிவது இன்னொரு தலைமுறைக்கு நடைமுறையான விஷயமாக இருக்கிறது என்பதற்காகத்தான்.




நான் யார் என்றே சொல்லாமல் என் யோசனைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு போகிறேன், இல்லையா? அதன் காரணமாக, திடும்மென்று ஆரம்பித்து நான் சொல்லிவரும் விஷயங்களில் லேசாகப் புகைமூட்டம் படர்கிறது, இல்லையா? என்னைப் பற்றிய தகவல்களைச் சொல்லிய பிறகும், நான் சொல்லப்போகிற விஷயத்தை விஸ்தாரமாகச் சொல்லி முடித்த பிறகும் தற்போது நிலவும் இதே குழப்பம் தொடர்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

இத்தனை வருஷம் கழித்து எனக்கே சற்றுக் குழப்பமாகத்தானே இருக்கிறது.

நான் சுந்தரேசன். தற்போது வயது அறுபத்தொன்று. விற்பனைப் பிரதிநிதியாகத் தொடங்கி, அகில இந்திய நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர் பதவிவரை உயர்ந்தவன். சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றேன். முதன்முதலில் கர்நாடகத்தில் உள்ள ஒரு மதுவடிப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு சர்வதேச மென்பான நிறுவனம். அதன் பிறகு சிகரெட் நிறுவனம். கடைசியாக வேலை பார்த்த நிறுவனம் போதைப் பாக்குக்குப் பெயர் பெற்றது. இன்றைக்கு இந்தியா முழுவதும் இளைஞர்கள் சதா மென்றுகொண்டும் துப்பிக்கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதில் என்னுடைய பங்களிப்பு கணிசமானது.

வாழ்நாள் முழுவதும் லாகிரி வஸ்துக்களை விற்றுவந்திருக்கிறேனே தவிர, அவற்றில் எதையும் நான் ருசிபார்த்ததுகூடக் கிடையாது.

எங்க சுந்தரம் மாதிரி ஒருத்தனைப் பார்க்க முடியாது. பாக்குத் துண்டு பல்லுலெ படாதே என் தங்கத்துக்கு. என்று இருபத்தைந்து வருடத்துக்கு முன் காலமாகிவிட்ட என் அம்மா அடிக்கடி சொல்வாள். பிதுர்லோகத்திலிருந்து பார்க்கும்போதும் அவள் என்னை எண்ணிப் பெருமைப்படத் தான் செய்வாள் என்று நம்புகிறேன். இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கும் நான் 'மிஸ்ட்டர் டீட்டோட்டல' ராக (அப்படித்தான் என் கடைசி நிறுவனத்தின் உபதலைவர் ஏ.கே. ஸின்ஹா என்னை அழைப்பார்) இருப்பதற்கும் நேரடித் தொடர்பு ஏதாவது இருக்கிறதோ என்னவோ?

ஆனால் எனக்குப் பிடித்தமான லாகிரி வேறு ஒன்று இருந்தது. தொழில் சார்ந்து ஊர் ஊராக அலையத் தொடங்கியவன் நான். பதவி உயர்ந்தபோது மாநிலம் மாநிலமாகத் திரிந்தவன். ஏழெட்டு முறை வெளிநாடு கூடச் சென்று வந்திருக்கிறேன், ஸிலோன், மாலத் தீவு, சிங்கப்பூர், பங்களாதேஷ், நேபாளம் என்கிற மாதிரி. அந்த நாட்களில், போகிற இடமெல்லாம் பரிச்சயமாகிற மனிதர்கள் விதவிதமான சம்பவங்களைக் கதைபோலச் சொல்வதைக் கேட்பதில் அலாதியான போதை எனக்கு.

சொன்னால் வியப்பீர்கள், யாருக்குமே சொல்வதற்கு ஒரு பேய்க்கதையோ பாம்புக்கதையோ இருக்கிறது அல்லது பரம்பரைப் பெருமைக் கதை. மேற்சொன்ன எதுவும் இல்லையா, ஒரு ராஜாராணிக் கதை நிச்சயம் உண்டு. வேற்றுமொழி பேசும் அயல் பிரதேசத்தில், எந்த நேரமும் ஏதோவொரு அவமானம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. அதற்குத் தன்னை சதா ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கும் மனத்தில் சன்னமான பீதி நிரந்தரமாக இருக்கும். மேற்படிக் கதைகளைக் கேட்பது என்னை நடைமுறை அன்றாடத்திலிருந்து விலக்கிக் காப்பதோடு, கதைசொல்லியின் மனத்தில் என் சம்பந்தமாக ஒரு நம்பிக்கையையும் இதத்தையும் உருவாக்கிவிடும்.

நான் கேட்ட கதைகள் யாவற்றையும் விடாமல் என் நாட்குறிப்பில் பதிவுசெய்து வந்திருக்கிறேன். சமீபத்தில் என் சிநேகிதன் ஒருவனிடம் அதைக் காண்பித்தபோது, அவன் வெகுவாக ஆச்சரியப்பட்டான். கதைகளில் குவிமையம், செய்தியென்றெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும் சுவாரசியத்திற்குக் குறைவில்லையென்றும், நான் கேட்டவிதமாக மட்டும் கதைகளை எழுதாமல் சொந்தச் சரக்காகச் சில வர்ணனைகள், சில வாக்கியங்களைச் சேர்த்திருப்பதால் இவற்றுக்கு ஒரு தனித் தன்மையும் சமச்சீர்மையும் உருவாகியிருப்பதாகவும், இளம் வயதில் எழுதியவை என்பதால் மொழியில் ஒரு முறுக்கும் விறுவிறுப்பும் இருப்பதாகவும் தமிழில் தற்சமயம் எழுத்தாளர்களின் எண்ணிக்கையை விடப் பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறபடியால் என் குறிப்புகளை ஒரு புத்தகமாகப் போடுவது எளிது என்றும் சொன்னான்.

அவனுடைய ஏற்பாட்டின்படி, மேற்படிக் கதைகளை மாநிலவாரியாகப் பிரித்துப் புத்தகமாகப் போட ஒரு பிரசுர நிறுவனம் முன்வந்திருக்கிறது. நான் காலவரிசையில் அடுக்கலாம் என்றிருக்கிறேன் - அதாவது நான் அவற்றைக் கேட்ட கால வரிசையில்.

ஆரம்பித்த இடத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப்போய்விட்டது என்று நினைத்துவிட வேண்டாம், நான் கூறிய முதல் பத்தியின் பின்னணியில் இன்னொரு விஷயம் மிக முக்கியமானது. சமீபத்தில் பொழுதுபோகாமல் என் நாட்குறிப்பை வரிவிடாமல் வாசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது தான் நானே இதைக் கண்டுபிடித்தேன்.

அதாவது, இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் கொலைகள் நடைபெற்ற நாட்களிலெல்லாம் நான் வேறு மாநிலங்களில் இருந்திருக்கிறேன் என்பதை.

ரயில்வே அமைச்சராக இருந்த லலித் நாராயண் மிஸ்ரா சமஷ்டிபூரில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டபோது நான் பீகாரிலேயே இருந்தேன். ஜர்னெய்ல் சிங் பிந்தரன்வாலேயைக் கொல்ல ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்தபோது மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருந்தேன். தமது பாதுகாவலர்களால் திருமதி. காந்தி கொல்லப்பட்ட தினத்தில் வங்காளத்தின் 24 பர்கானாஸ் மாவட்டத்தில். அவருடைய மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்த நாளில் மேகாலயாவில். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுநாள் ஆந்திரத்தின் கடப்பைக்கு அருகே ஒரு கிராமத்து ரயில் நிலையத்துக்கு வெளியே நாள் முழுவதும் தடுத்துவைக்கப்பட்ட ரயிலில் இருந்தேன். இப்படி ஒரு விசித்திரமான பிரயாணத் திட்டத்தை எனக்கு வகுத்துத் தந்த கரம் மானுடக் கரமாக இருக்கச் சாத்தியமே இல்லை.

நாட்குறிப்பைப் படித்துவந்த போது, கடப்பையில்-உண்மையில் கடப்பை தாண்டி, எர்ரகுண்ட்லாவும் தாண்டி, பிறகு வந்த சிறு நிலையத்தையும் கடந்தபிறகு வந்த கிராமத்தின் வெளிவிளிம்பில் - சந்தித்த அல்லூரி வெங்கடேச ராவ் சொன்ன கதை அழுத்தமாக நெஞ்சில் வந்து அமர்ந்தது. அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.

அன்று அதிகாலையில் கடப்பையைத் தாண்டிக் கொஞ்சநேரம் ஊர்ந்த ரயில் திடீரென்று வேர் பிடித்த மாதிரி நின்றது. ஓட்டுநரும் கார்டும் ரயில் இப்போதைக்கு நகராது என்ற தகவலையும் அதற்கான காரணத்தையும் பெட்டிபெட்டியாக அறிவித்துக்கொண்டு சென்றார்கள். நாள் முழுவதும் நகராதிருக்கும் ரயில் பெட்டிக்குள் சும்மா உட்கார்ந்திருப்பது சாதாரண விஷயமில்லை. மே மாத வெய்யில் கனக்கத் தொடங்கும் போது, ரயில்பெட்டி கொதிக்கும் இட்லிக் கொப்பரையின் உட்புறம் போல வெம்மைகொள்ளும். முந்தின இரவு நமக்கு நண்பராகிய அயல் மாநிலத்துக்காரரை மறுநாள் காலையில் விரோதியாக்குகிற அம்சங்கள் பெருகத் தொடங்கும்.

போக்கிடம் இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் ரயிலுக்குள் சிறையிருக்கும் பயணிகளுக்குச் சாப்பாடு முதல் எல்லாமே பிரச்சினையாகி விடும் அல்லவா? அக்கம்பக்கத்து ஜனங்கள் திடீர் வியாபாரிகளாவார்கள். அவசரத் தயாரிப்பின் அவல ருசியும் அளவுப் பற்றாக்குறையும் எச்சில்தொட்டி நாய்கள்போல அடித்துக்கொள்ள வேண்டிவருவதும் ரயில் பயணிகளுக்குள் தீராத குரோதத்தை விளைவிக்கும். தவிர, வேறு வழியேயில்லாமல் நாற்பது ஐம்பது முகங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்தரங்கமான, விதவிதமான, கொலைவெறிகள் கூடிவிடும். தண்ணீர் காலியாகிவிட்ட கழிவறை சொந்த உடல்மீதே அசாத்தியமான வெறுப்பை உண்டாக்கும். குழந்தைகள் சலிக்காமல் அழும் ஒலி சதா கேட்டவாறிருக்கும்.

ரயிலைவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

பொதுவாகவே, கல் விளையும் பூமி அது. விதவிதமான அளவுகளில் தகடுகளாக வெட்டியெடுக்கும்போது விளிம்புகளில் சேதமுற்ற கல்பலகைக் கற்கள் சிதறிக்கிடந்தன. கண்ணுக்கெட்டியவரை ஆகாயத்தில் செருகிக்கிடக்கும் புகைபோக்கிகள் கொண்ட சிமெண்ட்டுத் தொழிற்சாலைகள் மண்டிய பிரதேசம். காலடியில் நிரநிரக்கும் மண்ணில் சாம்பல் நிறம் பூத்திருந்தது.

பாறைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட பெரும் பள்ளங்கள். கிணறுகள்போல ஆழம் கொண்ட அவற்றின் படுகையில் பாசிபடர்ந்த மழைத் தண்ணீர்மீது மேலும் தூசிகள் சென்று அடர்வது வெறும் கண்ணுக்கே தெரிந்தது. தரையையொட்டிக் கிடந்த அழுக்குத் தண்ணீரைக் குடிக்க இறங்கிச் சென்றிருந்த மைனா ஒருமுறை தலை நிமிர்த்தி என்னைப் பார்த்தது. கணவனும் மனைவியும்போலத் தென்பட்ட சக பயணிகள் இருவர் என்னை விரைந்து கடந்தார்கள். அந்தப் பெண் ஒரு புதருக்குப் பின் அவசரமாக ஒதுங்கினாள். அவன் அசட்டுப் பார்வையுடன் காவலுக்கு நின்றான்.

ரயிலின் சாந்தத்தில் ஏதாவது சலனம் இருக்கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்துசென்றேன். மெல்ல வேகம் எடுத்த காற்றில் வறட்சியும் வெம்மையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்தன. சிறிய தோட்ட வீடு போன்ற ஒன்று கண்ணில் தட்டுப்பட்டது. ஆலமரம்போல அகலித்து வளர்ந்த பிரம்மாண்டமான வேப்ப மரத்தின் நிழலில் சாவகாசமாக நின்றிருந்த வீடு.

அங்கேதான் வெங்கடேச ராவைச் சந்தித்தேன்.

கடப்பைக் கல் கழிவுகளைச் செங்கற்கள்போல உபயோகித்துக் கட்டப்பட்ட குடில் அது. வாசலில் சிறு கீற்றுக்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதற்குள் இரண்டு மர பெஞ்சுகள். வெளியில், மெருகேற்றப்பட்ட ஏகப்பட்ட கல்பலகைகள் சாத்திக் கிடந்தன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் பிடிமானமேயற்று அந்தரத்தில் தொங்கின. நேர்கோடுகளே இல்லாத லிபிகொண்டது தெலுங்கு மொழி என்று ஒரு அபிப்பிராயம் தோன்றியது.

எனக்குத் தெலுங்கு வாசிக்கத் தெரியாது. ஆனால் மிகச் சரளமாகப் பேசவும் புரிந்துகொள்ளவும் முடியும். மெல்லின ஓசைகள் நிறைந்ததும், பல சந்தர்ப்பங்களில் மூக்கால் பேசுகிறார்களோ என்று தோன்றவைக்கிறதுமான மொழியைச் சங்கீதத்துக்கான சிறப்பு மொழி என்று காலங் காலமாகச் சொல்லிவருகிறார்களே, இதற்கெல்லாம் என்ன அடிப்படை என்று ஒரு சந்தேகம் உண்டு எனக்கு. வெங்கடேச ராவ் பேசுவதைக் கேட்டபிறகு, இந்த மாதிரியான மூத்தோர் கூற்றுகளில் சட்டென்று புலப்படாத ஒருவகை ஞானம் ஒளிந்திருப்பது தெரியவந்தது.

தொழில் காரணமாக ஆந்திரா முழுவதும் மூன்று வருடங்கள் சுற்றியலைந்திருக்கிறேன். கர்நூல் என்னுடைய தலைமையிடமாக இருந்தது அப்போது. தவிர, மார்க்கெட்டிங் துறையில் என்னுடைய அபார வளர்ச்சிக்கு புதிய பாஷைகளை விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமையும் ஒரு காரணம் என்று என் முன்னாள் உபதலைவர் ஸின்ஹா பாராட்டுவார். ரூபாய் நோட்டில் போட்டிருக்கும் மொழிகள் பலவற்றிலும் என்னால் சரளமாகப் பேச முடியும். சொன்னால் நம்பமாட்டீர்கள், உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியில் மைதிலி என்ற பாஷை பேசுவார்கள். அதில்கூட என்னால் சகஜமாக உரையாட முடியும்.

கொட்டகைத் தூணாக நின்ற மூங்கில் கழிகளில் சாத்தியும் தரையிலும் கிடந்த பலகைகள் பலவும் பெயர்ப் பலகைகள். எழுத்துகள் பிசிறில்லாமல் பொறிக்கப்பட்டிருந்தன என்பதுபோக, அவற்றின் அமைப்பில் ஒரு நேர்த்தியும் சுற்றிலுமிருந்த அலங்கார வேலையில் நூதனமான வடிவங்களும் இருந்தன. இவ்வளவு தேர்ந்த கைவேலைக்காரன் இப்படி ஒரு அத்துவான வெளியில் வந்து குடியிருக்கிறானே, வாடிக்கையாளர்கள் எங்கிருந்து வருவார்கள் என்று ஆச்சரியமும் ஆதங்கமும் ஒரே சமயத்தில் தோன்றின. குடிலின் பின்புறம் இருந்த கிணற்றின் உறைச் சுவரையொட்டிக் கிளம்பிய வண்டிப் பாதையின் தடம் முடியும் இடத்தில் உயர்ந்திருந்த நாலைந்து காரைக் கட்டடங்கள் சிறுநகரொன்று அண்மையில் இருப்பதற்கான தடயம் அறிவித்தன. என் முதுகுப்புறம் யாரோ செருமும் ஒலி கேட்டது.

என்ன வேண்டும்?

சற்றுக் கிறீச்சிட்ட குரல்தான். வயதான மனிதர். பல நாட்களாக மழிக்கப்படாத முகத்தில் முள்முள்ளாகப் படர்ந்திருந்த வெண்முடிகள். பஞ்சு வெண்மையில் அடர்த்தியாக இருந்த தலைமுடி. மீசை கிடையாது. தாடைவரை இறங்கியிருந்த வெண் கிருதா. ஆனாலும் முகச் சருமத்திலும் முன்னங்கைகளிலும்கூடச் சுருக்கங்கள் எதுவும் இல்லை. சாம்பல் நிற விழிகள் பார்வையை அகற்றவொட்டாமல் ஈர்த்தன.

சும்மாதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வியாபார விஷயமாக வரவில்லை.

அதுதான் தெரிகிறதே. அந்த ரயிலிலிருந்து இறங்கி வந்தவர் தானே....?

அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

... அதனால்தான் கேட்டேன். சாப்பாடா தண்ணீரா, என்ன வேண்டுமென்று!

கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்.

பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் சீசாக்கள் புழக்கத்துக்கு வராத காலகட்டம் அது. பெரியவர் வாய் அகண்ட ஒரு தாமிரப் போணியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ரயிலில் கிடைத்த தண்ணீர் போல இல்லை அது. புத்துணர்ச்சியும் மென்மையும் நிரம்பிய குளிர்நீர். என் ஆச்சரியத்தைக் கவனித்தவர் போல, 'மண்பானைத் தண்ணீர்' என்று புன்னகைத்தபடி குடிலின் உட்புறம் கையைக் காட்டினார். தண்ணீரில் ஏதோ வேர் போட்டிருப்பதாகச் சொன்னார். தெலுங்கு வேர். சரியாகப் புரியவில்லை.

குடிலின் வாசலைப் பார்த்தபோது இரண்டாவது ஆச்சரியம் தொற்றியது. அதன் உள் ஷரத்தாக, இத்தனை நேரம் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டேன் என்று ஒரு உப ஆச்சரியமும் கிளர்ந்தது.

நிமிர்ந்து நின்றிருந்த ஆளுயரச் சிலை ஒன்று. வெண் பளிங்கால் ஆன சிலை. இந்தப் பிரதேசத்தில் கிடைக்கும் கற்கள் படிவக் கற்கள் அல்லவா? முதிராத பாறைகள், சிற்பம் செய்ய லாயக்கற்றவை என்றல்லவா சொல்வார்கள்? எனக்கு சிற்பத்துக்கும் சிலைக்கும் வித்தியாசம் தெரியாது அல்லது இரண்டும் ஒன்றுதானா என்பதுகூடத் தெரியாது. என்றாலும், அசந்தர்ப்பமாக அந்த இடத்தில் நின்றுகொண்டிருக்கும் சிலையை அருகில் சென்று பார்க்கத் தோன்றியது. பெரியவரிடம் அனுமதி கேட்டேன்.

'தாராளமாய்' என்றார் அவர்.

முழுமையாக விளைந்த ஒரு ஆணுடம்பின் சிற்பம் அது. பொதுவாகக் கோவில் சிற்பங்களில் உள்ள திருத்தமும் நேர்த்தியும் சமகால நபர்களை வடித்த சிலைகளில் இருக்காதல்லவா? அசல் நபரின் தொலைதூர நகல் மாதிரிக்கூட இல்லாத பஞ்சுமிட்டாய் நிறங்களில் வர்ணம் பூசப்பட்ட, சிமெண்ட் பொம்மைகளை எத்தனை கிராமங்களில் பார்த்திருக்கிறேன். அவற்றின் காரணமாக உருவாகும் அரசியல் தகராறுகளையும் வெட்டுக் குத்துகளையும் சாமான்யர்கள் உயிரிழப்பதையும் எத்தனை செய்திகளில் படித்திருக்கிறேன். இந்தச் சிற்பம் அப்படிப்பட்டதல்ல. அதன் வடிவத்திலும் திருத்தத்திலும் ஒரு புராணிகத் தன்மை இருந்தது. இந்த நாள் ஆச்சரியங்களின் தினம் போல என்று ஒரு கணம் தோன்றியது. அந்த வாலிபன் தன் வலது கையில் ஒரு சுத்தியலையும் இடது கையில் உளியும் வைத்திருந்ததுகூடப் பெரிய ஆச்சரியம் அல்ல, அவனுடைய கண்கள் உயிருள்ள கண்கள் போலவே என்னைப் பார்த்தன என்பதுதான் பேராச்சரியம். விலகி நின்று வேறு கோணத்தில் பார்த்தபோதும் அவனுடைய கண்களின் வெண்ணிறக் கருவிழிகள் என்னைப் பார்த்தன. விழிகளில் சலனமெதுவும் இருக்கிறதோ என்று ஒரு சந்தேகம் உதித்தது. மின் அதிர்ச்சிபோல அச்சம் என் முதுகுத் தண்டில் தாக்குவதை உணர்ந்தேன். தவறான இடத்தில் வந்து வேண்டாத வேலையில் இறங்கிவிட்டேனோ?

"பரவாயில்லையே. ஒரு பார்வையில் கண்டுபிடித்துவிட்டீர்களே?" முதுகுப்புறம் கிறீச்சிட்ட குரல் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது. திரும்பிப் பார்த்தேன். நான் என்ன கண்டுபிடித்தேன் என்று இவர் கண்டுபிடித்தார்?

"இந்தச் சிற்பத்தின் சிறப்பே அதுதான். எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மைப் பார்க்கிற மாதிரி இருக்கும். ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? இன்னும் கிட்டச் சென்று பார்க்கலாம். அது சிற்பம்தான். ஒன்றும் செய்துவிடாது..." குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

இன்னும் அருகில் சென்றேன். நெருங்கிப் பார்த்தபோது இன்னமும் தீர்க்கமாக ஆகியது சிற்பம். மார்பின் குறுக்கே ஓடிய பூணூலின் புரிகள் துலக்கமாகத் தெரிந்தன. சிங்கத்தின் பிடரி போன்று தோளில் படர்ந்திருந்த கேசத்தின் ஒவ்வொரு இழையும் துல்லியமாய்த் தெரிந்தது. ராஜஸ்தானிய பாணி உருமாலில் துணி மடிப்புகளும் சுருக்கங்களும் குச்சத்தின் நுனிப் பிசிறுகளும் தத்ரூபமாய் இருந்தன. கண் இமைகளின் முடிகள் ஒவ்வொன்றும் தனித் தனியாக நீட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது எனக்கு மூச்சுத் திணறியது. பளிங்கின் நிறமில்லாமல் இயல்பான நிறங்கள் மட்டும் இருந்திருந்தால் உயிருள்ள ஆள் உறைந்து நிற்கிறான் என்றே நம்பியிருப்பேன்.... பெரியவரிடம் கேட்டேன்.

யார் செதுக்கிய சிற்பம் இது?

செதுக்கியதா? என்று கேட்டார்.

ஆழமாக இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டார். ஏதோ ஞாபகம் வந்த மாதிரி உதட்டோரம் சிறு முறுவல் உதித்தது.

நான் ஒன்றும் தவறாகக் கேட்டுவிடவில்லையே?

அட. அதெல்லாம் இல்லை. இந்தச் சிற்பத்தின் கதை பெரியதாயிற்றே. . .

தொலைவில் மரவட்டையின் பிரேதம்போல நின்றிருந்த ரயிலை ஒருமுறை பார்த்தார்.


.... அது இப்போதைக்குக் கிளம்பாது. உட்காருங்கள். சாவகாசமாகச் சொல்கிறேன். என்றவாறு குடிலின் உள்ளே சென்று திரும்பினார்.

ஒரு கையில் பருத்த சுரைக் குடுக்கையும் மறுகையில் ஒருவர் மட்டும் அமர்கிற மாதிரி சதுரமான கோரைத் தடுக்கும் கொண்டுவந்தார். தரையில் உட்கார்ந்து கொட்டகையின் தூணாக நின்ற கழியில் சாய்ந்துகொண்டார். தமக்கெதிரில் தடுக்கைப் போட்டு என்னை அமரும்படி சைகைகாட்டினார்.

குடுக்கையின் தக்கையைத் திறந்தவுடன் உறைந்து பல நாட்களாய்க் காடியேறிய ஊளைமோரின் புளிப்பு மணம் கொட்டகை முழுவதும் நிரம்பியது.

'கொஞ்சம் கள் சாப்பிடுகிறீர்களா?' - என்று என்னை நோக்கி நீட்டினார்.

'பழக்கமில்லை...' என்று தலையசைத்த மாத்திரத்தில், அவர் மனம் புண்பட்டுவிடக் கூடாதே என்று அவசரமாய்ச் சொன்னேன்.

"வாசலில் உள்ள பலகைகள் நீங்கள் பொறித்ததா? பிரமாதமாக இருக்கின்றன."

அவர் பெருமிதமாகச் சிரித்துக்கொண்டார்.

"சும்மாவா? நான் பிறந்த வம்சத்தின் பெருமை அல்லவா அது? இதோ நிற்கிறாரே, இவர் யார் தெரியுமா?..." - மூலையில் நின்ற சிற்பத்தை மோவாயால் சுட்டிக்காட்டினார். இதற்குள் நாலைந்து மிடறுகள் அருந்தவும் செய்திருந்தார். பேசுவதற்காக வாய்திறந்தபோது இன்னும் விசையுடன் புளிப்பு பீறியது.

கர்நாடகத்தில் ஒரு ராஜாவின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர். எனக்கு இருபது தலைமுறைக்கு முந்தியவர்.

ஏயப்பா. பல நூறு வருஷம் ஆகியிருக்குமே. அவருடைய சிலைதானா இது?

அவசரப்படாதீர்கள். அதை நிதானமாகச் சொல்ல வேண்டும் என்றுதானே இதை எடுத்துவந்திருக்கிறேன்.

குடுக்கையைச் செல்லமாகத் தட்டினார். மெல்ல மெல்ல அவர் கண்கள் சிவந்து வந்தன. கொஞ்சமும் தடுமாறாத மொழியில், ஏற்கனவே பலதடவை சொல்லி ஒத்திகை பார்த்துக்கொண்டது போன்ற நிதானத்தில், தான் காண்கிற கனவைக் காணும்போதே அடுத்தவருக்குச் சொல்கிற மாதிரிக் கிறக்கத்தில் சொல்லிக் கொண்டே போனார். இதுபோல ஆழ்ந்து கதை சொன்ன பலபேர் என் முகத்தைத் திரைபோலப் பாவித்து அதில் தெரியும் காட்சிகளை எனக்கே எடுத்துச் சொல்கிறவிதமாக என்னை உற்றுப் பார்ப்பதை ரசித்து அனுபவித்திருக்கிறேன். இவர் கதை சொல்லும்போது என் முகத்தை ஊடுருவிப் பார்த்தபடி சொன்னார். எனக்குப் பின்புறம் வேறெங்கோ தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் உண்மைக் கதைபோலும் அது.

.... கர்நாடகத்தில் ஒரு ராஜா என்று சொன்னேனே, அது எந்த ராஜா, எந்தக் காலகட்டம் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை. எங்கள் வம்சம் வெகு கறாராகக் கடைப்பிடித்துவரும் ரகசியம் அது. ஊரையும் பேரையும் சொன்னால் தீராத சாபம் பிடித்துவிடும். தெற்குக் கர்நாடகத்தில் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தார் அந்த ராஜா.

என் மூதாதை - அதுதான் இங்கே சிலையாக நிற்கிறாரே, அவர் - அந்தச் சமயத்தில்தான் கர்நாடகம் வந்து சேர்ந்தார். அவருடைய பூர்வீகம் ராஜஸ்தானம். கல் தச்சர்கள் பரம்பரை. குடும்பத்தவரோடு ஏதோ பிணக்கு ஏற்பட்டு வெளியேறிவிட்டார். அப்போது இருபத்தோரு வயது அவருக்கு. தனியராகவும் கைவசம் சாமான் மூட்டை எதுவுமின்றியும் தம் முன்னால் வந்து நின்ற வாலிபனைப் பலவாறாகக் கேள்விகள் கேட்டு இவர் ஒரு சிற்பி என்று அறிந்துகொண்டார் ராஜா. கோவில் பணியில் சில சில்லறை வேலைகளைக் கொடுத்தார். இவருடைய வேகமும் திறமையும் ஒரே வாரத்தில் வெளிப்பட்டுவிட்டதாம். உடனடியாகப் பெரிய வேலைகளை இவர்வசம் ஒப்படைத்தார்.

குறிப்பாக, கோவிலில் விழா மண்டபத்தின் முகப்பில் நிறுத்துவதற்கான பெண் சிலை. பொதுவாக, அந்தக் காலகட்டத்தில் கருங்கல் அல்லது மாக்கல்லில்தான் சிற்பங்களைச் செதுக்கிவந்தார்கள். நமது சிற்பி ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவரல்லவா? வெண்பளிங்கில் வடிக்க முடிவெடுத்தார். ஆனால், கல்லைத் தேர்ந்தெடுக்கத் தம் பூர்வீக ராஜ்யத்துக்குப் போக மறுத்துவிட்டார்.

ராஜாவின் ஏற்பாட்டில் ராஜஸ்தானத்திலிருந்து தரமான கற்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவதற்கு நாற்பத்தியிரண்டு சிற்பிகள் கொண்ட ஒரு குழு ராஜஸ்தானம் புறப்பட்டுச் சென்றது. அவர்களுக்குப் பதினைந்து நாள் பாடம் சொல்லிக் கொடுத்தாராம் நமது சிற்பி. அறுபது யானைகள் சுமந்துவந்த பளிங்குக் கற்கள் கர்நாடகம் வந்து சேர்வதற்கு மூன்று மாதங்கள் பிடித்தன. அதுவரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த சிற்பி, கற்களைப் பொறுப்பெடுத்துக்கொண்ட மாத்திரத்தில் பிசாசுபோல இயங்க ஆரம்பித்தார்.

உசிதமான கல்லைத் தேர்ந்தெடுக்க மட்டுமே ஒரு மாதம் ஆகிவிட்டதாம். தினசரியும் காலையில் கற்கள் குவிக்கப்பட்டிருக்கும் திடலில் வந்து ஒவ்வொரு கல்லையும் அங்குலம் அங்குலமாகத் தட்டி அதன் நாதத்தைக் கேட்டுக்கொண்டிருப்பாராம். முடிவாக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தார். அன்றாடம் நீராடிவிட்டு வந்து அதன் முன்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்துவிடுவாராம். சரியான முகூர்த்த நாள் ஒன்று பார்த்து, அன்று சிற்பப் பணி ஆரம்பித்தது.

ராப்பகலாக வேலை. அவருக்குத் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் உண்டு. பிரம்மச்சாரி என்பதால் சுயம்பாகமாகச் சமைத்துச் சாப்பிடுபவர். பல நாட்கள் வேலை மும்முரத்தில் தாம்பூலம் தவிர வேறெதுவும் சாப்பிடாமலே பொழுது கழிந்துவிடுமாம். சுபாவமாகவே பிறருடன் அதிகம் உரையாடல் எதுவும் வைத்துக்கொள்ளாத தனிமை விரும்பி. இந்த வேலையை ஏற்றுக்கொண்டதன் பிறகு பேச்சு இன்னமும் குறைந்துவிட்டது.

இவருக்குத் தனியாக ஒரு விஸ்தாரமான குடில் அமைத்துத் தரச் செய்தார் ராஜா. தாமே சமைத்துச் சாப்பிடுகிறார் என்று கேள்விப்பட்டு இனி அது தேவையில்லை, தினமும் அரண்மனையிலிருந்தே ஆசாரமான சாப்பாடு வந்து சேரும் என்று ஏற்படுத்தினார். இரவில் இவர் உறங்கும்போது விசிறுவதற்காக இரண்டு பணிப்பெண்களை அமர்த்தித் தந்தார். ஓரிரு நாட்கள் கழித்து இந்தப் பெண்கள் வர வேண்டியதில்லை என்று சிற்பி கூறிவிட்டாராம். யாராவது பார்த்துக்கொண்டிருக்கும்போது உறக்கம் தன்னியல்பாக வந்து கவிய மறுக்கிறது என்று காரணம் சொல்லியிருக்கிறார்.

கற்கள் வந்து சேர்ந்த நாட்களிலேயே, ராஜாவின் ஒரே மகளான ராஜகுமாரி தினசரி வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஒருமுறை ராஜகுமாரி சிற்பியிடம் கேட்டாள்.

சிற்பம் செதுக்குவதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அது ரொம்ப சுலபம் அம்மா. எந்தக் கல்லுக்குள் நாம் தேடும் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும்.

சிற்பியின் பதில் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு. ஆனால் அவருடைய கண்களைவிட்டுப் பார்வையை விலக்கிக்கொள்ளவும் முடியவில்லை.

ஓ... வேலை தொடங்குவதற்கு முன்னால் நாட்கணக்காகத் தியானத்தில் அமர்ந்தது எதற்காக?

சுற்றிப் போர்த்தியிருக்கும் பாறைத் திப்பிகளைத் தட்டி உதிர்ப்பதற்கு சிற்பத்தின் அனுமதியை வேண்டித்தான்.

இந்தவிதமாக அவ்வப்போது உரையாடிக்கொண்டு, சேடியர் கொண்டுவந்த அலங்கார நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் வேடிக்கை பார்த்தது சிற்பத்தையா சிற்பியையா என்பது பெரும்பெரும் சர்ச்சையையும் தர்க்கத்தையும் விவாதத்தையும் ராஜ்யம் முழுவதும் ஏற்படுத்தியதாம்...

புதிதாக வந்த ஒருவனுக்கு இவ்வளவு சௌகரியமும் அங்கீகாரமும் கௌரவமும் கிடைப்பது சக சிற்பிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தத்தானே செய்யும்? தலைமைச் சிற்பியாய் இருந்த கிழவர் இதை ஒரு விநோதமான வழியில் தீர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். ராஜஸ்தானத்திலிருந்து வந்த கற்களில் நமது சிற்பி வேண்டாம் என்று ஒதுக்கிய ஒன்றை எடுத்துத் தாம் ஒரு சிலை செய்யத் தொடங்கினார்.

அவர் செதுக்கிய சிலை வேறெதுவுமல்ல, நமது சிற்பியின் உருவம்தான். பெண் சிற்பம் உருவாகி முடியும் நாளில், தாம் வடிக்கும் சிலையையும் முடித்துவிடும் திட்டத்துடன் வேகமாக வேலை பார்த்து வந்தார். ஆனால் இந்த வேலை மிக ரகசியமாக நடந்துவந்தது. நமது சிற்பியின் வேலைபோலப் பகிரங்கமாக அல்ல.

ஆரோக்கியமான தாய் வயிற்றில் வளரும் சிசுவைப் போலப் பெண் சிற்பம் நன்கு வளர்ந்து வந்தது. ராஜகுமாரி அரண்மனை திரும்பும் நேரமும் தாமதமாகிவந்தது. ஓரிரு இரவுகள் குடிலிலேயே தங்கவும் செய்தாள்.

ஒரே சிற்பத்தை எவ்வளவு நேரம் அம்மா பார்த்துக்கொண்டிருப்பாய்?

என்று ராஜாகூட மகளைச் சற்றுக் கோபமாகக் கேட்டாராம்.

ஒரே ராஜ்யத்தை எவ்வளவு காலமாக ஆண்டுகொண்டிருக்கிறீர்கள்? என்று பதிலுக்குக் கேட்டாளாம் மகள்.

அவள் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவளே அல்ல. சிற்பியின் சகவாசம்தான் காரணமோ என்று மனம் புழுங்கியிருக்கிறார் மன்னர்...

ஆயிற்று, சிலைக்கு நாளைக் காலை கண்திறக்க வேண்டியதுதான் பாக்கி.

முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவிவந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்குச் சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்துகிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடிவந்திருந்த மரப் பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்தவண்ணமிருந்தது. சிற்பி கை மறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்துபோயிற்று.

ஆகாயத்தில் பரவிவிட்ட இரவையும் அதன் இருள் அடர்த்தியையும் தன் தனிமையையும் வெறித்துக் கொண்டு உறக்கம் பிடிக்காமல் உட்கார்ந்திருந்தார் சிற்பி. வெக்கை முற்றியபோது ஆயாசம் தாங்காமல் கண்கள் தாமே மூடிக்கொண்டன. உறக்கத்தினுள் வழுக்கினார்.

முதல் ஜாமம்




முதலாம் ஜாமம் ஆரம்பித்து ஒரு நாழிகை சென்றபின் ஒரு கனவு வந்தது. வழக்கமாகக் கனவுகளில் நிலவுவதுபோன்ற சாம்பல் நிற வெளிச்சம் இல்லை. கோடை நாளின் உச்சிப்பொழுது போன்ற ஒளி. கண்களை முழுக்கத் திறந்து பார்க்க இயலாதபடி பார்வை கூசியது.

தன் எதிரில் நிற்பது சிற்பம் அல்ல, உயிருள்ள தேவதை என்று கண்டு சிற்பி அதிர்ந்தார். முந்தைய கணத்தில் உளியும் சுத்தியும் திறந்துவைத்த கண்களை முழுசாக மலர்த்திச் சிரித்தாள் அந்த மந்திரக் கன்னி. நேற்றுவரை உறைந்திருந்த சிரிப்பில் இல்லாத ஒரு கபடம் தற்போதைய சிரிப்பில் கூடியிருப்பதைக் கவனித்தார் சிற்பி. கண்களும்கூடத் தான் திறந்துவைத்த விதமாக இல்லாமல், அகலம் அதிகரித்திருப்பதைக் கண்டார். அவை அவ்வப்போது இமைக்கவும் செய்தன.

வெக்கையின் ஊடாகத் திடீரென்று ஒரு குளிர்ந்த காற்றலை ஊடுருவிச் சென்றது. திகைப்பின் காரணமாக மூடிய சிற்பியின் கண்கள் மீண்டும் திறந்தபோது சிலை பீடத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்திருந்தது.

அது நின்ற நிலையும் அதன் கன்னச் சதையின் துடிப்பும் நீட்டிய கைகளில் இருந்த பரபரப்பும் அதன் நோக்கத்தை வெளிப்படையாகத் தெரிவித்தன. தன் மார்பின் குறுக்காக இரண்டு கைகளையும் கோத்துக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தார் சிற்பி.

என்னம்மா வேண்டும் உனக்கு?

நீர்தான்.

தயக்கமில்லாமல் பதிலளித்தாள் சிற்பக் கன்னி. தீவிரமான யோசனை போல மௌனத்தில் அமிழ்ந்தார் சிற்பி. கண்களை மறுபடியும் மூடிக்கொண்டார். கண்களின் உட்புறம் எதையோ நிகழ்த்திப் பார்க்கிறவர் மாதிரி இமைகளுக்கடியில் விழிகள் உருண்டன. சில நிமிடங்கள் கழித்து கனிவான குரலில் பதிலிறுத்தார்.

அது முறையல்ல அம்மா.

ஏன்?

கல்லிலிருந்து உன்னைப் பிறப்பித்தவன் நான்தான். ஆகவே, உனக்குத் தகப்பன் ஸ்தானம். உன்னை என் மகளாகத்தான் பார்க்கிறேனே தவிர, பெண் உடம்பாகப் பார்க்க முடியாது.

உளறுகிறீர். கல்லிலிருந்து என் வடிவத்தைத்தான் உருவாக்கினீர். கல்லை நீர் உருவாக்கவில்லை. தவிர, என் உடம்பு பற்றிச் சொன்னீரே...

ம்.

மிக அருகிலிருந்து உம்முடைய உடம்பை அன்றாடம் பார்த்து வந்திருக்கிறேன் அல்லவா...

இன்று காலைதானே உன் கண்களைத் திறந்துவிட்டேன்?

... கண்ணை மூடிப் படுத்திருக்கும்போது உம் அருகில் யாராவது வந்தால் உம்மால் உணர முடியாதா?

வாஸ்தவம்தான்.

உம்மீது கிளர்ந்த மோகத்தின் கிறக்கம் தாளாமல்தான் இறங்கி வந்திருக்கிறேன். நான் பார்த்துப் பார்த்து மோகித்த அந்த உடம்பை ஒருமுறை தழுவி இன்புற்றாக வேண்டும் எனக்கு.

தொடர்ந்து உரையாடல் போய்க்கொண்டேயிருந்தது. சிற்பியின் சுண்டுவிரல் நகம்கூடச் சிற்பக் கன்னியின்மீது படவில்லை. விவாதத்தின் உச்சத்தில் அவர் முடிவாகச் சொன்னார்.

பாறையுடன் சம்போகம் செய்யும் திராணி எனக்கு இல்லை அம்மா - என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.

அவள் அடிவயிற்றிலிருந்து சாபமிட்டாள்.

என்னைச் சிலை என்றுதானே பரிகசிக்கிறீர். அடுத்த பிறவியில் நீரும் சிலையாக இருக்கக் கடவீர். அப்போதுதான் புரியும் என் தகிப்பு.

மீண்டும் சிற்பமாக உறைந்தாள் அவள்...

உடல் விதிர்த்து விழித்துக்கொண்டார் சிற்பி. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். யதேச்சையாக வந்த குட்டிமேகத்துக்குப் பின்னால் மறைந்துகொண்டாலும் நிலாவின் வெளிச்சம் அது இருந்த இடத்தைச் சுற்றிலும் வெகுதூரத்துக்கு ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இருளின் ரகசியத்துடன் ஓயாமல் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டிருந்த நட்சத்திரங்கள் விநோதமான ஏக்கத்தைக் கிளர்த்தின. வெற்றிலைப் பையை எடுத்துத் திறந்தார். தாம்பூலம் தந்த கிறுகிறுப்பு தனிமைக்கு மிக இதமான துணையாக இருந்தது. எழுந்து சென்று சக்கையைத் துப்பிவிட்டுத் திரும்புகிறார், சிலை தம்மையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார். முதுகில் பூரான் ஓடுகிற மாதிரி ஒரு குறுகுறுப்பு. மேகத்தைவிட்டு வெளியே வந்திருந்த நிலா பளிரிட்டது. சிற்பம் கேட்டதைக் கொடுத்திருக்கலாமோ? என்று ஒரு கணம் சிந்தை தயங்கியது.

வாசலில் இருந்த மூங்கில் படலை யாரோ திறக்கிற மாதிரி சப்தம் கேட்டது. பாத சரங்கள் ஒலிப்பது போலவும், அவற்றின் ஒலி மிகவும் பரிச்சயமானது போலவும் தோன்றியது. இந்த நேரத்தில் யார் வரப் போகிறார்கள், பிரமையேதான் இது என்று சமாதானம் கொண்டு கண் கிறங்கினார்.

இரண்டாம் ஜாமம்

விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல, அதே கனவு மீண்டும் வந்தது. இந்தமுறை மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்ந்துவிட்டிருந்தது...

கண் திறந்த சிலையின் முகம் ராஜகுமாரியின் முகம்போலவே இருந்தது.

சிற்பம் முந்தைய கனவில்போல வேண்டுகோளெல்லாம் விடுக்கவில்லை. தன்னியல்பாக நெருங்கி வந்து அணைத்துக்கொண்டது. தனது பொருளைத் தான் எடுத்துக்கொள்ளும் சுவாதீனத்துடனும் வெகு நாளாகக் காணாமல்போயிருந்த பொருள் யதேச்சையாகக் கிடைத்து விட்ட ஆவேசத்துடனும் இன்னும் கொஞ்ச நேரம்தான், பிறகு அது நிரந்தரமாகக் காணாமல் போய்விடும் என்பது போன்ற பதற்றத்துடனும் பலநாள் திட்டத்தின் விளைவாகச் செயல்படுவது போன்ற சிரத்தையும் கச்சிதமும் கொண்டு சேர்க்கையின் பல்வேறு அடுக்குகளுக்கு இட்டுச்சென்றது.

தேர்ந்த சிற்பி ஆட்டுரல் கொத்துவதுபோல எளிமையாகவும் வாகாகவும் தன் உடம்பு கையாளப்படுவதை உணர்ந்தார் சிற்பி.

கனவில் நிகழ்ந்த முத்தங்களின் ஒலியும் மென்சதையின் ஸ்பரிசமும் மறைவிடங்களின் மணமும் எச்சிலின் ருசியும் அலையலையாக முன்னெழுந்த சதையின் திரட்சியும் என எதுவுமே கனவில்போல இல்லை. நிஜம்போலவே அவ்வளவு அண்மையில், அவ்வளவு நேரடியாக, அவ்வளவு கிளர்ச்சி தருவதாக இருந்தன.

உச்சத்தின் விளிம்பில் சட்டென்று தான் பிடுங்கி வீசப்படுகிற மாதிரி உணர்ந்தார் சிற்பி.

விழிப்புத் தட்டியது.

குடிலுக்கு வெளியில் குதிரைக் குளம்படிபோல ஒலிகள் கேட்டன. தழைந்த பேச்சுக் குரல்களும் இணைந்துகொண்டன. வெகு தத்ரூபமான ஒலிகள். இருளைத் தவிர வேறு மர்மங்களும் இரவின் நிசப்தத்தின் திரைக்குப் பின்னால் ஏதோ பயங்கரங்கள் ஒளிந்திருப்பது போல, பிரமை தட்டியது.

உடம்பு கடுமையாக வியர்த்திருந்தது. படுக்கை விரிப்பில் அகலமாக ஈரத்தடம் பதிந்திருந்ததைப் பார்க்க விகாரமாக இருந்தது.. வெளியில் வெக்கை இன்னும் அதிகரித்துவிட்ட மாதிரித் தோன்றியது. வெக்கை நிஜமாக இருப்பது எங்கே, சூழ்நிலையில்தான் நிலவுகிறதா அல்லது தனக்குள்ளிருந்து ஊறுகிறதா என்று தீர்மானிக்க முடியாமல் திகைத்தார். கைகள் அனிச்சையாகத் தாம்பூலப் பையை எடுத்தன.

குடிலுக்கு வெளியே குளம்படித் தடங்கள் இருக்கின்றனவா என்று பார்த்துவிட்டால் கைகளின் நடுக்கம் சற்றுக் குறையக்கூடும் என்று தோன்றியது. விரும்பத்தகாத ஏதாவது உறுதியாகிவிடுமோ என்று கவலையாகவும் இருந்தது.

கனத்த மனத்துடன் பஞ்சணையில் சரிந்தார்.

ஆறுதலாகத் தொற்றியது உறக்கம்.

மூன்றாம் ஜாமம்

இந்தமுறை வந்த கனவு அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு விநாடிகள் இருக்கலாம். அவ்வளவுதான். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டன.

முந்தைய இரண்டுமுறைகள் போலவே இப்போதும் சிற்பம் உயிர் கொண்டது. ஆனால் பெண்ணுக்குரிய அம்சங்கள் யாவற்றையும் துறந்துவிட்டு ஒரு பயில்வானைப் போன்று உடல்வாகை உருமாற்றிக் கொண்டது. முந்தைய ஜாமத்தில் உடலெங்கும் பொங்கித் தீர்ந்த பரபரப்பையும் உச்சத்தில் தொற்றிய கிளுகிளுப்பையும் மீண்டும் நிகழ்த்திக்கொள்ளும் ஆவலுடன் விரித்த கைகளுடன் நெருங்கிய சிற்பியின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியது.

தனது வலது புஜத்தில் முளைத்துப் பெரிதாகப் புடைத்திருந்த மருவைச் செதுக்கியெறியும்படி சைகை காட்டியது. குடிலின் உள்ளே சென்று உளியும் சுத்தியலும் எடுத்துவந்தார் சிற்பி.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைச் செந்தூக்காய்த் தூக்கியது சிற்பம். முந்தைய ஜாமத்தின் மிருதுத் தன்மையும் காதலும் அறவே நீங்கியிருந்த ஸ்பரிசம். போர்வீரன்போல மாறியிருந்தது ராஜகுமாரியின் முகச் சாயல். சிற்பியைப் பீடத்தில் நிறுத்தியது.

தன் பாதங்களின் அடிப்புறம் நூல் சரங்கள்போல வேர் முளைத்துப் பீடத்துக்குள் ஊன்றிக்கொள்வதையும் தலைப்பகுதியிலிருந்து மரத்துக் கொண்டே வருவதையும் உணர்ந்த சிற்பி, ஏதோ ஒரு விபரீதச் சுழியின் மையத்தில் தான் சிக்கிக்கொண்டதை அறிந்து தப்பிக்க முனைந்த மாத்திரத்தில் அந்த உருவம் குடிலை விட்டு வெகுவேகமாக வெளியேறுவதைக் கண்டார். குதிரைக் குளம்படியோசை எழுந்து நகர்ந்து மெல்லத் தேய்ந்து மறைந்தது. நகரத் திராணியின்றி நின்றிருந்தார் சிற்பி.

நாலாம் ஜாமம்

வயலை நோக்கிக் கலப்பைகளுடனும் மண்வெட்டிகளுடனும் பிரம்புக் கூடைகளுடனும் சென்றுகொண்டிருந்த ஆண்களும் பெண்களும் ஆச்சரியத்துடன் பார்த்தார்களாம் - நேற்றுவரை ஒரு பெண் சிலை நின்றிருந்த இடத்தில் இப்போது ஆண் சிலை நிற்கிறதே என்று...

இதுவரைதான் என்னுடைய நாட்குறிப்பில் இருக்கிறது. அதன் பிறகும் பலதடவை கடப்பை வழியாகச் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறைகூட அந்தக் குடிலுக்கு மறுபடியும் போக வாய்க்கவில்லை. வாழ்க்கை என்னை உந்திச் சென்ற பாதைகள் அப்படி. கொஞ்சம்கூட அவகாசம் தராதவை.

எனக்குக் கதைசொன்ன பெரியவர் தற்போது உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவுதான் என்று தோன்றுகிறது. நான் சந்தித்தபோதே அவருக்கு வயது எழுபதுக்கு அருகில் இருக்கலாம். அந்தச் சிற்பம் யார்வசத்தில் இருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆனால் என் ஞாபகத்தில் வெகு அழுத்தமாக ஏதோ முந்தாநாள்தான் பார்த்த வஸ்துவின் பிம்பம்போல அவ்வளவு திருத்தமாக அது வீற்றிருக்கிறது.

தொடர்ந்து பல வருடங்கள் அந்தச் சிற்பியின் கதையை அசைபோட்டு வந்தபோது இயல்பாகச் சில சந்தேகங்களும் எழுந்து வந்தன.

1. ராஜஸ்தானியரான சிற்பியின் இருபத்தோராம் தலைமுறை வாரிசு, ஆந்திரத்தின் ராவ் ஆனது எவ்விதம்?

2. பிரம்மச்சாரியாக வந்து சேர்ந்து பிரம்மச்சாரியாகவே வாழ்வு முடிந்த சிற்பிக்கு வாரிசுகளும் வம்சமும் தோன்றியது எப்படி?

3. இவருக்குப் போட்டியாக தலைமைச் சிற்பி செய்த சிலை பிறகு என்னாயிற்று? எங்கே போயிற்று?

4. ராஜகுமாரிக்குச் சிற்பியின் மீது ஒரு அந்தரங்கமான இச்சை உருவான செய்தியும் கதையில் வந்ததே, அவள் என்னவானாள்?

5. தன்னந்தனியாக வாழ்ந்து மறைந்தவராயிற்றே சிற்பி? அவருடைய மறைவுக்கு முந்திய துர்ச்சகுனங்களின் பட்டியலை யார் கவனித்துக் கோத்தார்கள்? நிகழப்போகும் அசம்பாவிதத்தின் முன்குறிகள் அவை என்று யாருக்குத் தோன்றியது?

ஓய்வுபெறுவதற்குச் சிலமாதங்கள் முன்பு, உத்தியோகரீதியாக மஹாராஷ்ட்ரம் செல்ல வேண்டி வந்தது. கடைசியாக அதுதான் நான் கடப்பையைத் தாண்டிச் சென்றது. அந்தமுறை இன்னொரு விசித்திரமான சந்தேகம் தோன்றியது.

அந்தக் கனவுகள் மூன்றையும் கண்ட மனிதன்தான் சிலையாகிவிட்டானே, நான் பார்த்த பெரியவர் வரை கர்ணபரம்பரையாக அவை எவ்விதம் வந்து சேர்ந்தன?

அப்புறம் சமாதானம் செய்துகொண்டேன்... போகட்டும், உயிருள்ள மனிதன் சிலையாக மாற முடியும் என்றால், ஒருவருடைய கனவை இன்னொருவர் காண்பதும் நடக்கக்கூடிய விஷயம் தானே!

******