30/01/2013

துன்பக்கேணி... - வண்ணநிலவன்


“ஏடே!... இது ஆரு?... இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டி மலைச்சியில்லாடே?... இவ எங்கன கெடந்துடே ஆம் புட்டா?...” என்று ஆச்சரியத்தோடும், பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர்.
பட்டப்பகல் மாதிரி நிலா வெளிச்சம் இருந்தாலும் நம்பித்தேவர் உட்கார்ந்திருந்த இடத்தில் பூவரச மர நிழல் விழுந்து அவரை மறைத்திருந்தது.

அவளுடன் அந்த ஆட்கள் பதில் சொல்வதற்கு முன்பாகவே வண்டி மலைச்சி, “என்ன மாமோவ்...பொம்பளையின்னா வேண்டானிட்டு அனுப்பி வச்சிருவீயளா?...” என்று சொல்லிக் கொண்டே நம்பித்தேவரின் கால்மாட்டில் போய் உட்கார்ந்தாள்.

’ஏ பெயபுள்ளே! அதுக்குச் சொல்லல. ஆரோ அன்னைக்கி ஊருக்குள்ள, நீ முளுவாம இருக்குன்னு பேசிக்கிட்டாவ... முளுவாம இருக்கவளப் போயி இந்த வேலைக்குக் கூட்டிட்டு வந்துருக்கானுவனேன்னுதான் கேட்டேன்... இந்தமுள்ளுக் காட்டுக்குள்ள சரக்கத் தூக்கிக்கிட்டுப் பத்துப் பன்னெண்டு மைலு நடக்கணும் நீ... ம்... இதுல மத்த வேலையவுடக் கூட ரெண்டு ரூவா கெடைக்குமுன்னு பாத்தியாக்கும்!... எந்தப் பாவிப் பெய வுட்ட சாவமோ தெரியல!... 

எப்பேர்க்கொத்த மறக்குடிச் சனங்க எல்லாம் இப்படிக் கெடந்து சீரழியணும்னிட்டு இருக்குது!...”“நீங்க எதுக்கு மாமோய் இந்த முள்ளுக் காட்டுக் குள்ள இத்தனை வயசுக்குப் பொறவும் ஒத்தையிலே கெடந்து சாராயம் காச்சிக்கிட்டு, எந்த நேரம் எவன் வருவானொன்னு செத்துக்கிட்டுத் திரியுதீய?...

”வேற என்ன... துட்டுக்குத்தான்.

”இதைக் கெட்டுவிட்டு வண்டிமலைச்சி லேசாகச் சிரித்தாள்.

”சரி... பெருசு.. மணி எட்டு எட்டரைக்கி மேல இருக்கும் போல, நெலா மேல ஏற ஆரம்பிச்சாச்சி சீக்கிரமா எடத்தக் காலி பண்ணணும். பொழுது விடியறதுக்குள்ள சரக்கக் கொண்டு போயி நாசரேத்துல சேப்பிக்கணும்... இந்தக் கொள்ளைக்குள்ள மொபைல் பார்ட்டிக்கி புது இன்ஸ்ப்பெக்டரு வந்திருக்காராம்! கொஞ்சம் கடுத்தமான ஆளு போல. எச்சரிக்கையாக கொண்டுட்டுப் போகணும்னு மொதலாளி சொல்லி அனுப்பிச்சிருக்காரு... சரக்க டின்னுலே அளந்து அடச்சிட்டீருல்ல?.. வண்டி மலைச்சி கதய நாளைக்கு ஊருக்கிள்ள போயிப் பேசிக்கிடலாம்...” என்று சொன்னான் சங்கரபாண்டி.

வண்டிமலைச்சி ஓடை மரங்களுக்கு மேலே தெரிந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கரபாண்டி பேசினது நம்பித்தேவருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வண்டிமலைச்சியைப் பார்க்க பார்ர்க்க அவருக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.”இந்தத் திமிருனாலதாம்லே கெட்டுக் குட்டிச் சொவராப் போறிங்க... அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கி இப்படியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும்?...

வண்டிமலைச்சிக்கு அவள் புருஷன் சண்முகத்தை நினைத்ததும் ஒரு மாதிரியாகப் படபடவென்று வந்தது. தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் நகர்ந்து அப்படியே அடிமரத்தோடு மரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். எங்கோ தூரத்தில் பஸ் போகிற சத்தம் கேட்டது.
பஸ் சத்தம் வந்த திசையை பார்த்தாள் வண்டிமலைச்சி. கிழக்குத் திசையில், அடிவானத்தில் போய்க் கொண்டிருந்த பஸ்ஸின் ஹெட் லைட் வெளிச்சம் திட்டுத் திட்டாக முள் மரங்களுக்கு மேல் விட்டு விட்டுத் தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, சத்தமும் வெளிச்சமும் மறைந்தே போய்விட்டன.
அது எந்த ஊருக்குப் போகிற பஸ்ஸாக இருக்கும்? ஒருவேளை சாத்தான்குளம் பஸ்ஸாக இருந்தாலும் இருக்கலாம், கல்யாணம் ஆன பிறகு அம்மன் கோயில் கொடை, பொங்கல் என்று இந்த நாலு வருஷத்தில் எத்தனை தடவை திருச்செந்தூர் – சாத்தான்குளம் பஸ்ஸில் சண்முகத்தோடு போய் வந்திருக்கிறாள். ஒரு தடவை சண்முகம் வேலை பார்த்த வாழைத் தோட்டத்திலுருந்து நாகர்கோவிலுக்கு வாழைக்காய் லாரி லோடு ஏற்றிக்கொண்டு போனபோது, சாத்தான்குளம் வழியாகத் தான் போகிறது என்று, திடீரென்று தோட்டத்திலிருந்து அவசர அவசரமாக வந்து இவளை புறப்படச் சொன்னான் சண்முகம்.

சாத்தான்குளத்துக்கு லாரி போய்ச் சேரும்போதும் இதே நேரம் இருந்தது. இதே மாதிரித்தான் அன்றும் நிலவுகூட இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து வீட்டுக்குச் சின்னச் சின்ன முடுக்குகளைக் கடந்துதான் போக வேண்டும். நிலா வெளிச்சத்தில் அவனோடு சிரித்துப் பேசிக்கொண்டே அந்த சின்னஞ்சிறு முடுக்குகளினூடே நடந்து போன போதுதான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அப்போது அய்யாவும் ஆத்தாவும் இருந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்தபோது அவர்களுக்கும்தான் எவ்வளவு சந்தோஷம். ஆத்தா தோசை சுட்டுக் கொடுத்தாள். ராத்திரி வெகுநேரம் வரை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் மழையே இல்லாமல் போய் ‘தண்னீர் தட்டு’ வந்த பிறகுதான் எல்லாமே ரொம்ப மோசமாகி விட்டது. சண்முகத்துக்குத் தோட்டத்தில் வேலை இல்லாமல் போய் விட்டது. நாளைக்கு ஒரு இடத்தில் கூலி வேலை பார்க்க ஆரம்பித்தான். சாத்தான்குளத்தில் அய்யாவும், ஆத்தாவும் அடுத்தடுத்து ஒரு வருஷத்துக்குள் செத்துப் போய்விட்டார்கள். அண்ணன் சாத்தான்குளம் வீட்டைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு விட்டான். இத்தனைக்கும் அண்ணன் இவள் மேல் ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று எவ்வளவோ பாசமாக இருந்துவந்தான். ஆனாலும் அவனுக்குக்கூட வீடு, வாசல், சொத்து என்றதும் பாசமெல்லாம் விட்டுப் போய்விட்டது. வீட்டு விவகாரத்துக்குப் பிறகு பேச்சுவாத்தைகூட வேண்டாம் என்று, உறவே விட்டுப் போய்விட்டது.
சண்முகத்துக்கு வாழைத் தோட்டத்தில் வேலை போன பிற்பாடு எல்லாமே தலைகீழா மாறி விட்டது. இரண்டு மாதத்துக்கு மின்னால் குரும்பூர் பஜாரில் ஏதோ தகராறு வர கோபத்தில் ஒருத்தனை வெட்டிக் கொன்று விட்டான். கல்யாணமாகி நாலு வருஷத்துக்கிப் பிறகு அப்போதுதான் வண்டிமலைச்சி முதல் முதலாக உண்டாகியிருந்தாள்.

சண்முகம் திருச்செந்தூர் சப்-ஜெயிலில்தான் இருக்கிறான். அவன் மேல் கேஸ் போட்டிருக்கிறார்கள். அண்ணனிடம் போய் கேட்டதுக்கு, “கொலைகாரப் பெயலுவோ பொங்சாதிமாருக்கெல்லாம் இந்த வூட்டுல என்ன வேலை...?” என்று கோபமாகச் சொல்லி விரட்டி விட்டான்.அன்றைக்கு ராத்திரியே ஊருக்குத் திரும்பி விட்டாள். அரளி விதையை அரைத்துக் குடிக்கப்போனவளை ராமாக்கவின் மகள் பார்த்து விட்டாள்.

”வண்டிமலைச்சி அக்கா அரளி வெதயை அரைச்சுக்கிட்டிருக்கா...” என்று சொல்லி விட்டாள். பிறகு, ராமக்கா ஓட்டமாக ஓடிவந்து அரைத்ததைப் பிடுங்கி எறிந்தாள். இவளைக் கண்ட மாதிரி திட்டினாள்.”

ஏ, சங்கரபாண்டி!... நீயும் மணிப்பெயலுமா குளத்துக்குள்ள பதிச்சு வச்சிருக்க டின்னைத் தூக்கிக்கிட்டு இங்கன வாங்கடே!... இங்கனே வச்சே அத அளந்து டின்னுகள்ல ரொப்பிரலாம்...” என்றார் நம்பித் தேவர்.

”பாத்தேரா... ஒம்ம சோலியக் காட்டிட்டீரே! ரெண்டு நாளாகக் காட்டுக்குள்ள கெடந்து சாராயம் காச்சுத ஆளுக்கு இந்த டின்னுகள்ல அளந்து ரோப்பி வக்கத் தேரமில்லாமேப் போயிட்டுதாக்கும்... இதுக்கு ஆளு வரட்டும்னு பாத்துக்கிட்டு இருந்தீராக்கும்... இதுதான ஒம்ம கிட்ட உள்ள கெட்ட பளக்கம்...”

”பெரிய கெவுனரு மவனுவோ இவனுக.... போங்கலே போயித் தூக்கிட்டு வாங்கடா!... இந்தப் புள்ளய வேற கூட்டிக்கிட்டு வந்துட்டியோ. வயித்துத் தள்ளிக்கிட்டு இதுவேற இங்கன தனியா உக்காந்திருக்கு, என்னத்தெயாவது ஒண்ணக் கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா?...””ஒமக்கேன்ன... ஒம்ம சோலி முடிஞ்சிது... இன்னைக்கி ராவு பூரா காட்டுக்குள்ள பதுங்கிக் கெடந்து போட்டு நாளைக்கிக் காலையில மொதலாளியப் பாத்து சம்பளத்தக் கணக்குப் பாத்து வேண்டி முடிஞ்சுகிட்டுப் போயிருவீரு! வந்த எடத்துல போனமான்னு இல்ல... சரக்க டின்னுல ரோப்பிக்கிட்டு இன்னும் பத்துப் பன்னெண்டு மைலு லொங்கு லொங்குன்னு ஒடணும்!... மூணு நாளா இங்கனயே கெடக்கேரு... இந்த டின்னுகள ரொப்பி வைக்க முடியல ஒம்மாலே?...” என்று மூணு மூணுத்துக்கொண்டே பக்கத்தில் தெரிந்த குளத்து மேட்டைப் பார்க்க நடந்தார்கள் சங்கரபாண்டியும், மணியும்.

அவர்கள் போகுபோது, “ஏய்!... அங்கன குளத்தாங்கரை மேலேயே நாலஞ்சாறு டின்னுக கெடக்கும்... அந்த எடத்துக்கு நேரே கீள கொளத்துக்குள்ள எறங்குக்க... தண்ணிக்கரை ஒரத்துல ஒரு கல்லு அடையாளங் கெடக்கும் கல்லைப் பொரட்டிப் போட்டு கீள தோண்டுங்க...

”அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் நம்பித் தேவர். அவர்கள் குளத்துமேட்டில் ஏறுவதைப் பார்ர்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

”ஏளா!... என்னடா இந்தக் கெழட்டுப் பெய இப்பிடிச் சொல்லுதேன்னென்னுட்டு வருத்தப்படாத. இதேல்லாம் பொம்பள செய்யக்கூடிய வேலையா?... மொதலாளிமாருக்குச் சாராயம் கடத்ததுக்கு ஆம்பளயவுடப் பொம்பளையோதான் ரொம்பத் தோது. யாரும் சந்தேகப்பட மாட்டாவ... அவெனுவோ நாலஞ்சு தாரானுவோங்கிறதுக்காவ வவுத்துப் புள்ளக்காரி இப்படி ஓடியாரலாமாளா?..

.இந்தக் கண்றாவிய ஆரு கிட்டச் சொல்லி அழ?... நாஞ் சொல்லுததக் கேளு. இன்னையோட இத வுட்டுரு. நாளையே ஒன் அண்ணங்காரன் கால்ல போயி வுளு. அந்தச் செறுக்கி மவென் ஏதாவது ஏடாகூடமாப் பேசினாம்னாக்க எங்கிட்டே வந்து சொல்லு... ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டிப் பேசிப்புடுவோம்!... நாஞ் சொல்லுததக் கேளுளா... இது வேறு வாக்கிலியத்த தொழிலுளா... இன்ன நேரமின்னு இல்லாம எப்பயும் போலிஸூக்குப் பயந்து சாகணும்ளா...

வண்டிமலைச்சி மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த படியே அழ ஆரம்பித்து விட்டாள்.

”மாமோய்!... நான் வேணுமுன்னா இங்க வந்தேன்?... தவிச்ச வாய்க்கித் தண்ணி தாரதுக்கு எனக்கு ஒரு நாதி இல்லேயே! அந்த மனுஷங் கோவத்துல ஆரையோ வெட்டிச் சாய்க்கப் போயி ஊருக்குள்ள கெடந்து நாமுல்லா சீரழியுதேன்... என்னையும் அந்தப் பன்னருவாளால வெட்டிக் கொன்னுருக்கக் கூடாதா அந்தப் பாவி மவென்? அந்த ஆறுமுகமங்கலம் சொடலைக்கிக் கூடக் கண்ணு இல்லாமே போச்சுதே...” என்று சத்தம் போட்டுப் புழங்கிப் புழங்கி அழுதாள் வண்டிமலைச்சி.

”கடவுளா வந்து ஒனக்கு நிக்கப் போறாரு?... அழாத அழாத! சரி. நீ ஒண்ணு பண்ணு... இந்தா ஒரு பத்து ரூவா இருக்கு. இத வச்சுக்க நாளைக்கிக் காலம்பறயே சாத்தாங்க கொளத்துக்குப் போறப்பட்டுப் போயிரு. நாளைக்கி ராவும் நான் சரக்க ஏத்திவுட வேண்டியிருக்கு... நாளன்னிக்கிக் காலம்பற பத்துமணி வண்டிக்கி நான் சாத்தாங்கொளத்துக்கு வந்துருதேன்... நீ ஒன் அண்ணங்காரன் அடிச்சாலும் புடிச்சாலும் அவேன் வூட்டுத் திண்ணையிலௌயே வூளுந்து கெட... கோவிச்சுக்கிட்டு வந்திராத. நான் வந்து எல்லாம் பேசிக்கிடுதேன்...” என்று அவளிடம் ரூபாயைக் கொடுத்தார்.
”இது எதுக்கு மாமா? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடு படுதீய. இதுல எஞ் சொமை வேறயா ஒங்களுக்கு?...”

”ஏழைக்கி ஏழைதான் தொணை... என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்புட்டுத்தானள்ளா!..

மூன்று பேரும் டின்களைத் தலையில் வைத்துக் கொண்டு மெயின் ரோட்டை விட்டுத் தள்ளி ஒரு மைல் தூரத்துக்கும் மேல் உள்ள காட்டுக்குள் வேகமாக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். ஆளுக்குப் பத்து லிட்டர் வீதம் சுமந்து கொண்டு போகத் தலைக்கு பத்து ரூபாய் கூலி என்றுதான் பேச்சு. சங்கரபாண்டியும் மணியும், வண்டிமலைசி மேல் இரக்கப்பட்டு அவள் தலையில் ஆறு லிட்டர் மட்டுமே ஏற்றி விட்டனர். பாக்கி நாலு லிட்டரைத் தங்கள் டின்களில் நிரப்பிக் கொண்டார்கள்.
தலையில் சுமை இருந்தாலும், தேரிக்காட்டுக் காற்றும் நிலா வெளிச்சமும் சேர்ந்து வழியைத் தோற்றாமல் செய்து விட்டன. ஆறு மைல் போல நடந்திருப்பார்கள்.

கீரையூருக்குத் தெற்கே போகும் போது ஒரு வெட்ட வெளியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்தார்கள்.சங்கரபாண்டியும் மணியும், கொண்டு வந்திருந்த ஒரு அரைச் சிரட்டியில் சாராயத்தை ஊற்றிக் குடித்தார்கள் வண்டிமலைச்சி ஒரு பக்கத்தில் ஆயாசமாகப் படுத்துவிட்டாள். அவளையும் குட்டிக்கச் சொன்னார்கள். அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
மணி அவளைக் குடிக்கச் சொன்னபோது அவளுக்கு சண்முகத்தின் ஞாபகம் வந்து விட்டது. அவனும் அவளும் எத்தனையோ தடவை குடித்திருக்கிறார்கள். சாராயத்துக்குக் கருவாட்டைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.”மணி என்ன இருக்கும்?...”  என்று படுத்துக் கொண்டே கேட்டாள் வண்டிமலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும் தொள்களும் ரொம்பவும் வலித்தன.

மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!...” என்றான்.”ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது!...”

”அதுக்குத்தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்...” என்றான் மணி.

”குடிக்கலாந்தான்... ஆனா வவுத்தல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்பாவது ஆயிப் போச்சின்னா?...”

”நீ ஒருத்தி!... இந்தப் பெயகிட்டே போயி பெருசா வெளக்கம் பேசிக்கிட்டு இருக்கியே? கெர்ப்பமா இருக்கவ குடிச்சாள்னா கெர்ப்பம் கலைஞ்சி போயிரும்டா... ஒழுங்கா மொளத் தெரியாத பேய.. ஒனக்கு எதுக்குடா இதேல்லாம்?...” என்றான் சங்கரபாண்டி.பேசிக்கிண்டிருக்கும்போதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது. கொங்ச நேரம் கவனித்துக் கேட்ட பிறகு, குசுகுசுவென்று ரொம்பத் தாழ்வான குரலில் மனிதக் குரல்கள் பேசுவது கேட்டது.“

ஏலேய்!.. மோசம் போயிட்டமடா!... ஏட்டீ வண்டிமலைச்சி எந்திரி... எந்திரி... லே மணி, பக்கத்துல தங்கவேல் நாடார் வெளையில கெணறு இருக்குது. அதுல தூக்கிப் போட்டுட்டு ஓடிருவோம்... தூக்கு தூக்கு” என்று அவரப்படுத்தினான் சங்கரபாண்டி.”நான் அப்பயே உட்காரப் போவயிலேயே சொன்னேன். நீ கேட்டியா?.. காட்டுக்குள்ள தேரத்துக்கு ஒரு தெசையில் இருந்து காத்து அடிக்கும், டின்னைத் தொறந்தா வாடை காட்டிக் குடுத்துரும்னு சொன்னேனே... கேட்டியா?... இப்ப எல்லாரையும் சேத்து மாட்டி வுட்டுட்டியே?...””செறுக்கி மவனே.. கூடச் சேர்ந்து குடிச்சுப் போட்டுப் புத்தியா சொல்லிக்கிட்டிருக்க? ஒரே இறுக்கா இறுக்கிப் பொடுவேன்... தூக்கிலே டின்னை...
”மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சங்கரபாண்டி, மணி இவர்களோடு, வண்டிமலைச்சியும் உட்கார்ந்திருந்தாள்.

(1980ம் ஆண்டு ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறுகதை)

'வாழ்வியல் வழிகாட்டி' அப்துற் றஹீம்! - புலவர் சு.சுப்புராமன்



என் உயிருள்ளவரை, ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காது எழுத்துத் துறையில் உழைத்து என் பிறவிக் கடனை நிறைவேற்றுவேன்'' என்று வாழ்ந்த பேரறிஞர் அப்துற் றஹீம்.

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற வாழ்வியல் இலக்கியங்களைப் படைத்த மாமேதையாகவும், இளைஞர்களின் வருங்கால வாழ்வுக்கு வழிகாட்டிய ஒளிவிளக்காகவும் திகழ்ந்த அப்துற் றஹீம், 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி, மு.றா.முகமது காசிம் என்பவருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.


கல்லூரிக் கல்வியை முடித்து வெளிவந்த அவர் வாழ்வை எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் கிடைத்த நூல்களைக் கற்றார். "படித்து முடித்து சம்பாதிக்காமல் இருக்கிறானே' என்று பலர் எள்ளி நகையாடினர். அவர்களுடைய ஏளனப் பேச்சு அப்துற் றஹீமுக்கு வருத்தத்தைத் தருவதற்கு மாறாக வேகத்தைத் தந்தது.

அந்த நேரத்தில் தொண்டியில் "வளர் பிறை' நூலகம் என்ற இலவச நூலகம் அமைக்கப்பட்டது. அந்த நூலகத்திற்கு பலர் நூல்களை நன்கொடையாக வழங்கினர். அவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து, எண் இடும் பணி அப்துற் றஹீமிற்கு வழங்கப்பட்டது. அங்குதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் எழுதிய "லார்ட் ஆப் அரேபியா' என்ற நூலும் நன்கொடை நூல்களுள் இருந்தது. படிப்பதில் பெருவிருப்பம் கொண்ட அவர், அந்நூலை மொழிபெயர்த்து எழுதினால் என்ன? என்று எண்ணினார். தனது விருப்பத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். "உன்னால் முடிந்தால் செய்' என்றார் தந்தை. அந்த வார்த்தைகள்தான் அவர் எழுத்துத்துறைக்கு வர உந்துசக்தியாயின.

1944-இல் "அரேபியாவின் அதிபதி' என்ற பெயரில் அவரது முதல் நூல் வெளிவந்துது. அப்போது அவருக்கு வயது 22. தமிழறிஞர் சாமிநாதசர்மா அந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

காரல் மார்க்சின் மூலதனம்தான், கப்பலுக்கு நிலக்கரி அள்ளிப்போடும் தொழிலாளியாகப் பணியாற்றிய ஹோசிமினைப் புரட்சியாளனாக மாற்றியது. ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத்தேற்றம்' நூலும், டால்ஸ்டாயின் "ஆண்டவன் ராஜ்ஜியம் உனக்குள்ளே', "இனி நாம் செய்ய வேண்டுவது யாது?' போன்ற நூல்களும் காந்தியடிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் நூல்களை இயற்ற வேண்டும் என்ற எண்ணம் அப்துற் றஹீமின் உள்ளத்தில் ஆழப்பதிந்தது.

மக்கள் நலமாக வாழ, வெற்றிபெற்ற பல சான்றோர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்தார்.

பிறவிப்பயனை நுகரவும், அர்த்தமுடன் வாழவும் என்ன செய்தால் வெற்றி பெறலாம்? என்பதை "வாழ்க்கையில் வெற்றி' என்ற நூலில் விளக்கியுள்ளார்.

"வாழ்க்கையில் வெற்றி' முதற்பதிப்பு வந்தது. இந்நூலே தமிழில் வெளிவந்த (அவர் எழுதிய 28 வாழ்வியல் நூல்களில்) முதல் வாழ்வியல் இலக்கியம். அவர் தோற்றுவித்த "யூனிவர்சல் பப்ளிசர்ஸ்' வெளியிட்ட முதல் நூலும் இதுதான். இந்நூல் முப்பது பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

"கவலைப்படாதே', "முன்னேறுவது எப்படி?' "சுபிட்சமாய் வாழ்க', "வியாபாரம் செய்வது எப்படி?', "வாழ்வைத் துவங்கு', "வாழ்வது ஒரு கலை', "வழி காட்டும் ஒளி விளக்கு', "மகனே கேள்', "அன்புள்ள தம்பி', "வாழ்வின் வழித்துணை', "வாழ்வின் ஒளிப்பாதை', "மன ஒருமை வெற்றியின் இரகசியம்', "அகிலத்தின் அறிவுத் திறன்', "இல்லறம்', "விளக்கேற்றும் விளக்கு', "இளமையும் கடமையும்', "உன்னை வெல்க', "படியுங்கள் சிரியுங்கள்', "படியுங்கள் சிந்தியுங்கள்', "படியுங்கள் சுவையுங்கள்', "ஒழுக்கம் பேணுவீர்', "நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி' முதலான பல நூல்களில் புதிய புதிய செய்திகளைப் புதைந்து வைத்துள்ளார். இவை தமிழர்க்குக் கிடைத்துள்ள அறிவுப் புதையல்களாகும்.

அப்துற் றஹீம், பொழுதுபோக்கவோ, புகழுக்காகவோ, பிழைப்புக்காகவோ எழுதவில்லை. சமுதாயத்தின் பழுது நீக்க எழுதினார். எழுதுவதைப் புனிதமான தொண்டாகக் கருதினார். 71 ஆண்டுகள் எழுதுவதற்காகவே வாழ்ந்தார். விருதுகளையும், பட்டங்களையும் ஏற்றுக்கொள்ள நாணினார். மரபுகளையும் பண்பாட்டையும் பேணினார். இளைஞர்களின் எதிர்காலம் வீரிய விதைகளின் விளைச்சலாக வேண்டுமென்று சிந்தித்தார். படிப்பதையும், எழுதுவதையும் தவமாகக் கொண்டார்.

""ஆடம்பரமற்ற தூய வாழ்வு வாழ விரும்பிய எனக்கு எழுதுவது ஏற்றதாக இருந்தது'' என்றார். வாழ்விற்கும் எழுத்துக்கும் இடைவெளி இன்றி வாழ்ந்தார்.

அவர் எழுதிய வரலாற்று இலக்கியங்கள், தமிழாக்கம் செய்த நூல்கள், இஸ்லாமிய இலக்கியங்கள் பலப்பல. 2400 கவிதைகள் கொண்ட "நபிகள் நாயகக் காவியம்' என்ற நூல் அவரை மிகச் சிறந்த கவிஞராக உலகுக்கு அடையாளம் காட்டியது. அந்நூலே அவரது நிறைவு நூலாகவும் அமைந்தது. ஆம்! அந்நூலைக் காணாமலேயே 1993-இல் அப்துற் றஹீம் காலமாகிவிட்டார்.

அவர் தமிழுலகுக்குத் தந்துள்ள தன்னம்பிக்கைச் செல்வங்கள் பொன்னினும் சிறந்த கருவூலங்கள். தமிழ் உலகில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு அவரே முன்னோடியாகத் திகழ்ந்தார்.

""ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும். அதில் கட்டாயம் அப்துற் றஹீமின் நூல்கள் இடம்பெற வேண்டும்'' என்ற அறிஞர் அண்ணாவின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

நன்றி - தமிழ்மணி

'கல்விக்கடல்' கம்பராமன்! - மா.சின்னு




சைவ சமயக் குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசர் மீது கொண்ட பற்றினை வெளிப்படுத்திய அப்பூதியடிகளைப் போன்றவர் "கல்விக்கடல்' இராமராஜன்.

நாமக்கல் மாவட்டம் வரகூரில் 1922-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி ரெட்டியாருக்குத் தவப்புதல்வராகப் பிறந்தவர். இளமையிலேயே நம்பெருமாள் ரெட்டியாரிடம் தமிழ்க் கற்றதுடன், திருவையாறு அரசர் கல்லூரியில் படித்து 1945-ஆம் ஆண்டு புலவர் பட்டம் பெற்றார். 1947-இல் நாமக்கல் மாவட்டம் வேலூரில் உள்ள வள்ளல் சங்கர கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதித் துறையில் பணியாற்றினார்.


இவருடைய தந்தை பட்டம் பெறாத தமிழறிஞர். சிறிய மாமனார் ஜகந்நாத ரெட்டியார் புலவர் பட்டம் பெற்ற தமிழறிஞர். இந்தச் சூழலும், தணியாத இலக்கிய-இலக்கண வேட்கையும் இளமையிலேயே முகிழ்ந்ததால், உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும்போதே நுண்மான் நுழைபுலம் மிக்க தமிழ்ப் பேரறிஞராகி, தமிழகச் சான்றோர்களின் உள்ளம்கவர் கள்வரானார். இவருள்ளமோ கம்பனையும் இராமனையும் காதலித்தது. அதனால் "கம்பராமன்' எனும் புனைபெயருடன் கம்பன் விழா உள்ளிட்ட அரங்குகள்தோறும் கவிமழை பொழிந்து தமிழ்ப் பயிரைச் செழிக்கச் செய்தார். தம் இல்லத்திற்கும் "கம்பன் நிலையம்' என்று பெயர் வைத்தார். தம் இரண்டாம் புதல்வனுக்கு "இளங்கம்பன்' எனும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

கம்பராமன் செய்ந்நன்றி மறவாச் செம்மல். திருவையாறு தமிழ்க் கல்லூரியில் தமக்குத் தமிழமுதம் ஊட்டிய "வைணவப் பெருங்கடல்' புருஷோத்தம நாயுடுவின் பெயரை தம் மூத்த மகனுக்கு வைத்ததுடன், ஆசிரியர் திருவுருவப் படத்தை இல்லத்தில் வைத்து நாளும் வழிபட்டார்.

"கம்பன் இல்லம்' சான்றோர் பலர் கூடும் சங்கப் பலகையாகத் திகழ்ந்தது. கம்பன் இல்லம் நோக்கி இலக்கண-இலக்கியத் தாகம் கொண்டோர் பலர் வருவர். "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி., "தமிழ்க் கடல்' இராய.சொக்கலிங்கம், "வாகீச கலாநிதி' கி.வா.ஜ., "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன், நீதிபதி மு.மு.இஸ்மாயில், ஜஸ்டிஸ் மகராஜன், எஸ்.இராமகிருஷ்ணன், "சிந்தாமணிச் செம்மல்' மு.இராமசாமி முதலிய தமிழறிஞர்கள் வருவர். நாள் கணக்கில் தங்குவர். இலக்கண-இலக்கிய விவாதங்கள் நிகழும். சூழ்ந்திருப்போர்க்கு தமிழ் விருந்தும் கிடைக்கும்.

கம்பராமன் ஆங்கிலம் படிக்காதவர்; ஆனாலும், ஆங்கில வல்லுநர் சீனிவாசராகவனுடன் பழகி ஷேக்ஸ்பியர், மில்டன், ஷெல்லி இவர்களின் கவிதை நயங்கள் அவர் கூறக்கேட்டு, தம் மனதில் பதியவைத்து, வேண்டுவோர்க்கு வழங்கி வியப்புறச் செய்வார்.

கண்ணனை வழிபட்ட கம்பராமன் கர்ணனாக விளங்கினார். இவருடைய தந்தை வரகூர் வரும் ஏழைத் தமிழ்ப் புலவர்களின் வறுமையைப் போக்கியது போலவே இவர் நல்லற மூர்த்தியாக வாழ்ந்து காட்டினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, சென்னைக் கம்பன் கழகத்தின் விருது, ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவையின் "கல்விக்கடல்' விருது எனப் பல விருதுகள் பெற்று "பொற்கோட்டிமயம்' போல் புகழ் மணக்கும் உச்சியில் உயர்ந்து நின்ற இவர், "சிறியாரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்' என்ற பாரதியின் கொள்கையைத் தம் வாழ்வில் கடைப்பிடித்து, ஏழை மாணவர் பலருக்குப் பொருளாதார உதவிகள் செய்தார். கல்லூரிப் படிப்புவரை உதவி, அவர்கள் பட்டம் பெற்று உயரச் செய்தார். பட்டம் பெற்ற மொழியாசிரியர்களைப் பேராசிரியர்களாக - முனைவர்களாக உயரச் செய்து மகிழ்ந்தார்.

"அடையா நெடுங்கதவும் அஞ்சல் என்ற சொல்லும் உடையாராய்' மனைத்தக்க மாண்புடைய மனையாள் விஜயகெüரி இருக்க, மூத்த, இளைய புதல்வர்கள் முறையே ஆங்கிலம், பொறியியல் துறை வல்லவராகி விளங்க, நாளும் அன்பர்கள் புடைசூழ வேலூரில் வாழ்ந்த கம்பராமன் இறுதிக் காலத்தில் திருவரங்கம் சென்று தங்கி, 6.6.2004-இல் இறைவனடி சேர்ந்தார்.

கம்பராமன் இயற்றிய இறவாப் புகழ் நூல்களுள் சில: வரோதயம், மேகநாதம், குமார சம்பவம், சந்திர விநாயகர், திருமுறை(1000), திருவேங்கடமுடையான் திருவாயிரம், சந்திர விநாயகர் கலித்தொகை, சுகோதயம், காஞ்சிப் பெரியவர் கலம்பகம், கம்பனும் ஆழ்வார்களும்.

இவற்றுள் தமிழறிஞர்களை மிகமிகக் கவர்ந்த காவியம் "மேகநாதம்'. இராவணன் மைந்தனாகிய மேகநாதன் (இந்திரஜித்) இறுதிக் காலத்தைக் காட்டும் காவியம் இது. கம்பனை நிகர்த்த விருத்தப்பாக்கள் அணி செய்யும் காப்பியம் இது.

நன்றி - தமிழ்மணி

'தமிழிலக்கியத் தேனீ' வி.கனகசபைப் பிள்ளை - முனைவர் பா.இறையரன்



சங்க காலத்திலிருந்தே இலங்கையில் மிகச் சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இலங்கையிலிருந்து, வின்சுலோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த தமிழ் ஆங்கில அகராதி, கிறிஸ்துவமறை மொழிபெயர்ப்பு ஆகியவற்றைப் பதிப்பிக்க ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், விசுவநாதன் ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். வின்சுலோ செய்த "தமிழ்-ஆங்கில அகராதி' அச்சிடும் பணியில் உதவிவந்த விசுவநாதன் மகன்தான் கனகசபை. இவர் 25.5.1855-இல் பிறந்தவர்.

கனகசபை, சென்னை அரசினர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபின், அஞ்சல் துறையில் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்று ஓராண்டில் சட்டவியலில் இளநிலைப் பட்டம் (பி.எல்.) பெற்றார். பின்னர் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பொன்னையாப் பிள்ளையின் மகள் செல்லம்மாளை மணந்தார். அதனால், மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். முதல் வழக்கிலேயே வெற்றி பெற்றார். ஆனால், இவர் வெளியில் செல்லும்போது வழக்கில் தோற்றவர் இவரைப் பற்றி அவதூறாகப் பேசியதால், மனம் நொந்த கனகசபை வழக்குரைஞர் தொழிலைக் கைவிட்டு, சென்னையில் அஞ்சல்துறை மேற்பார்வையாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை மாநில அஞ்சலகங்களில் உயர்நிலைக் கண்காணிப்பாளரானார்.

கனகசபையின் தந்தையும் தாயும் அடுத்தடுத்த ஆண்டில் (1884, 1885) இறந்தனர். தந்தையையும் தாயையும் இழந்த துன்பம் போதாதென்று கனகசபையின் குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். வாழ்வில் ஏற்பட்ட துன்பம் கண்டு துவண்டுபோன தம் உள்ளத்தைத் தமிழ்ப் பற்றால் தேற்றி, அலுவலகப் பணிபோக மீதி நேரமெல்லாம் தமிழ் இலக்கியங்களில் மூழ்கினார்.
அக்காலச் சென்னை மாநிலத்தின் அனைத்து ஊர்களுக்கும் அஞ்சலகங்களை மேற்பார்வையிடும் பொருட்டுச் சென்றுவந்தார். அவ்வாறு செல்லும் ஊர்களில் கிடைக்கும் ஏட்டுச்சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார்.

தமிழ் இலக்கண-இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தொகுக்கவும், படியெடுக்கவும், குறிப்புகள் எழுதவும் அப்பாவுப்பிள்ளை என்பவர் 20 ஆண்டுகள் கனகசபையின் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். 20 ஆண்டு கடும் உழைப்பில் தொகுக்கப்பெற்ற அவ்வளவு ஏடுகளையும் உ.வே.சாமிநாதையருக்கு அவ்வப்போது வழங்கினார் கனகசபை.

பனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்த கனகசபை, இலக்கியங்களை வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை "மெட்ராஸ் ரெவியூ' இதழில் ஆங்கிலத்தில் எழுதிவந்தார். இக்கட்டுரைகளை "ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள்' ( Tamils Eighteen Hundred Years ago ) என்ற ஆங்கில நூலாக வெளியிட்டு, அந்நூலை சுப்பிரமணிய ஐயருக்குக் காணிக்கை ஆக்கினார்.

சீன நாட்டினருக்கும் தமிழ் நாட்டினருக்கும் இருக்கக்கூடிய பண்பாட்டு, நாகரிக இன ஒற்றுமைகளைத் தம் நூலில் கனகசபை நிறுவியுள்ளார். சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு தமிழக நிலப்பிரிவு நில அமைப்பு, அயல் நாட்டு நிலப்பிரிவு நில அமைப்பு, அயல்நாட்டு உள்நாட்டு வணிகம், பழங்குடியினர் வாழ்வு, மூவேந்தர் ஆட்சி, இலக்கியம், சமயம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரிகளின் செம்மாந்த வாழ்வியலை கனசபையின் இந்நூல் வரலாற்று அடிப்படையில் ஆங்கிலத்தில் உலகுக்கு உணர்த்தியது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் தோன்றிய களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவை, தமிழரின் தொன்மை பற்றிய ஆங்கில இதழில் ( The Tamilian Antiquary ) தமிழ் வரலாற்று இலக்கியங்கள் ( Tamil Historical Texts ) என்ற தலைப்பில் வெளிவந்தன. சீன நாட்டுத் தொடர்பை நிறுவிய கனகசபை, தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் ( The conquest of Bengal and Burma by the Tamils: Rajaraja chola ) ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுக் குழுக்களில் கனகசபை தேர்வாளராக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் 1905-இல் தலைமை தாங்கித் தமிழரின் வரலாற்றுப் பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். எட்வர்ட் இளவரசர் சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை நல்கினார்.

வலங்கைமான் கணியர் (ஜோதிடர்) இருவரின் வழி காட்டுதலில் "ஓகம்' (யோகப் பயிற்சி) கற்றிருந்த கனகசபை, உடற்பயிற்சியும் செய்து நல்ல உடற்கட்டுடன் வாழ்ந்தவர். அஞ்சலக மேற்பார்வைப் பணி தொடர்பாகக் காஞ்சிபுரம் சென்றிருந்தபோது உடல் நலங்குன்றி 21.2.1906-இல் காலமானார்.

எங்கெல்லாம் ஓலைச் சுவடிகள் உள்ளதோ அங்கெல்லாம் சென்று தேனீபோல் உழைத்து, இலக்கண-இலக்கியம் என்னும் தேனை சேகரித்துத் தந்த கனகசபைக்கு தமிழ்கூறுநல்லுலகம் மிகுந்த கடமைபட்டுள்ளது.

நன்றி - தமிழ்மணி

'படிக்காத மேதை' மஞ்சரி தி.ஜ.ர.! - வளவ.துரையன்



தமிழில் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் "தி.ஜ.ர.' என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய "மஞ்சரி' எனும் இதழின் பெயராலேயே "மஞ்சரி தி.ஜ.ர.' என்றழைப்பதும் சாலப்பொருத்தம்.

1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை.

தி.ஜ.ர.வின் தந்தை "கர்ணம்' வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னாளில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார்.

தொடக்கத்தில் சில காலம் நில அளவைக்கான பயிற்சி பெற்று கர்ணம் வேலை பார்த்தார். பின் தன் 14-ஆவது வயதில் சுந்தரவல்லி என்பவரைத் திருமணம் புரிந்தார். பிறகு மாமனார் ஊரில் சில மாதங்கள் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், தஞ்சாவூரில் வக்கீல் குமாஸ்தாவாக, கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடையில் சிற்றாளாக - இப்படிப் பல பணிகள் செய்துள்ளார்.

1916-ஆம் ஆண்டு தம் 15-ஆவது வயதில் திருவாரூர் அருகில் இருக்கும் "திருக்காராயல்' எனும் சிற்றூரில் இருந்த தம் சின்னம்மா இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஐந்து பாகங்கள் கொண்ட "ஐரோப்பிய யுத்த சரித்திரம்' என்னும் தமிழ் நூலைப் படித்தார். ""அந்த நூல்தான் எனக்குத் தலைமை ஆசான்'' என்று தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்ததைத் தொடர்ந்து அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார்.

தி.ஜ.ர., எழுதிய முதல் கட்டுரை 1916-இல் "ஆனந்தபோதினி' என்னும் இதழில் வெளிவந்தது. அப்போது "ஸ்வராஜ்யா' இதழில் அவர் எழுதிய கவிதையும் வெளிவந்தது. தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த "சமரசபோதினி' என்னும் இதழில் தி.ஜ.ர., துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஊழியன், சுதந்திரச்சங்கு ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணிபுரிந்துள்ளார்.

அவரது முதல் சிறுகதைத் தொகுதி "சந்தனக் காவடி' என்னும் பெயரில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நொண்டிக்கிளி, காளி தரிசனம் போன்றவை வெளிவந்தன. தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் தி.ஜ.ர., முக்கியமானவர். அவருடைய கட்டுரைகளை பொழுதுபோக்கு, சமகாலச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என்று மூன்று வகைகளில் உள்ளடக்கலாம். தி.ஜ.ர., தமது கட்டுரைகளைப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் விதத்தில் அமைத்தார். சொல் அலங்கார நடையை அவர் வலிந்து மேற்கொள்ளாதவர்.

1923-இல் சமரசபோதினியில் தொடங்கிய அவரின் இதழ்ப்பணி 1972-இல் மஞ்சரியிலிருந்து விலகும்வரை நீடித்தது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துள்ளார்.

தி.ஜ.ர., சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள், இராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகள், வெண்டல் வில்கி என்ற அமெரிக்க எழுத்தாளரின் "ஒரே உலகம்' என்னும் நூல், லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள், லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, போன்ற பல மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார்.

1940 முதல் 1946 வரை "சக்தி' இதழில் பணிசெய்தபோது தி.ஜ.ர., பாலன், நீலா எனும் புனைபெயர்களில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதினார். சிறுவர்களுக்காக அவர் எழுதிய சித்திர ராமாயணம் குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் போன்று பல படைத்து தி.ஜ.ர., குழந்தை இலக்கியத்துக்கும் அணி சேர்த்துள்ளார்.

தி.ஜ.ர.வின் சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. தமிழக அரசு குழந்தை இலக்கியம் வளர்த்தமைக்காக அவருக்குப் பரிசளித்தது. தி.ஜ.ர., இறுதி நாள்களில் பேசமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறதி நோய்க்கும் ஆளானார். பின்னர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார்.

"தி.ஜ.ர.வின் வாழ்க்கை, பலவிதமான குறைகள், அவதிகள், கஷ்டங்கள் நடுவில் சுறுசுறுப்பு, உற்சாகம், நம்பிக்கை, அறிவுத்தேடல் ஆகியவற்றைக் கொண்டது' என்று தன் இரங்கல் குறிப்பில் "கணையாழி' (நவம்பர் 1974) குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். "படிக்காத மேதை'யான தி.ஜ.ர., நம்மைப் படிக்கவைத்த படைப்புகள் ஏராளம்... ஏராளம்...!

நன்றி - தமிழ்மணி

'ஆராய்ச்சி அறிஞர்' பேரா.சுந்தர சண்முகனார் - பேராசிரியர் சு.ச.அறவாணன்



கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் சிற்றூரில், 1922-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சண்முகம். தன் தந்தையாரின் பெயரான சுந்தரம் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு சுந்தர சண்முகம் ஆனார்.

இவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கு அடித்தளம் இட்டது திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயம் ஆகும். இவர் 5-ஆம் பட்டத்து அடிகளின் மாணாக்கராவார். ஞானியார் அடிகளாரின் அறிவுரையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் தன்னுடைய 14-வது வயதில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். பிறகு, மயிலம் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1940-ஆம் ஆண்டு அதாவது, தன்னுடைய 18-வது வயதில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அப்பணியை விடுத்துப் புதுச்சேரி வந்தார். 1947-இல் தன்னுடைய ஷட்டகர் (சகலர்) - புரவலர் சிங்கார குமரேச முதலியார் உதவியுடன் "பைந்தமிழ்ப் பதிப்பகம்' ஒன்றைத் தொடங்கி, "வீடும் விளக்கும்' என்னும் தன்னுடைய முதல் நூலை வெளியிட்டார். 1947-இல் ஏற்பட்ட அந்த எழுத்து விளக்கு, 1997-ஆம் ஆண்டு வரைத் தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

1948-58-ஆம் ஆண்டுகளில் திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதம் இருமுறை வெளிவரும் திருக்குறள் ஆய்வு இதழ்களை நடத்தித் தமிழகம் முழுவதும் அறிமுகமானார். 1948-இல் பாவேந்தரால் மதிப்புரை வழங்கப்பட்ட "தனித்தமிழ்க் கிளர்ச்சி' என்னும் அம்மானை நூலை எழுதி வெளியிட்டார்.

பின்னர், 1949-ஆம் ஆண்டு முதல் 1958-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1958 முதல் 1980 வரை புதுச்சேரி அரசினர் பயிற்சி மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றியபோது "திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம்' என்னும் அமைப்பை நிறுவி, யாப்பதிகார வகுப்பும், திருக்குறள் வகுப்பும் நடத்தினார். அவ்வமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்றனர்.

இவர், பல அறிஞர் பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். பாவேந்தருடன் மிகவும் நெருங்கிப் பழகிய இவர், அவரோடு இணைந்து "பல ஆண்டுகள்' என்னும் நூலை எழுதியுள்ளார்.

1980-ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார். 1985-க்குள் தமிழ் அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ் இலத்தீன் பாலம், தமிழ் நூல் தொகுப்புக்கலை முதலிய உன்னத நூல்களை எழுதி வெளியிட்டுத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப்படுபவராக உயர்ந்தார். மேற்கூறிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு முன்னோடி நூல்களாகும்.

இவருடைய புலமைக்குப் பரிசாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் இவருக்குப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் பதவியை வழங்கினார். 1982-ஆம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தவர், உடல்நலக் குறைவு காரணமாக 1983-இல் பணியிலிருந்து விலகினார்.

சுந்தர சண்முகனார் 69 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் கவிதை நூல்கள் 8, காப்பியங்கள் 2, முழு உரை நூல்கள் 7 (திருக்குறள் தெளிவுரை, நாலடியார் நயவுரை, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, இனியவை நாற்பது இனியவுரை, நன்நெறி நயவுரை, முதுமொழிக் காஞ்சி உரை மற்றும் நல்வழி உரை), உரைநடை நூல்கள் 52 (துறைவாரியான) ஆகும்.

பல்துறைகளிலும் நூல்கள் எழுதிய இவரின் சான்றாண்மையைப் போற்றி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத் "தமிழ்ப் பேரவைச் செம்மல்' என்னும் பட்டத்தை (17.10.1991) வழங்கிச் சிறப்பித்தது. மேலும், தங்கள் கல்விக் குழுவின் வாழ்நாள் உறுப்பினராகவும் இவரை நியமித்தது.

"அகாரதிக்கலை' எழுதி அழியாப் புகழ் பெற்றவர்' என்னும் சிறப்பை இவருக்குப் பெற்றுத்தந்த "தமிழ் அகராதிக் கலை' என்னும் இவருடைய நூலின் முதல் பதிப்பு 1965-இல் வெளிவந்தது. இந்நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதே ஆண்டுதான்

இவரின் "பணக்காரர் ஆகும் வழி' என்னும் நூலுக்கும் மத்திய அரசு பரிசு கிடைத்தது.

இவர் பெற்ற விருதுகளில் தலையாயது தமிழக அரசு 15.1.1991-இல் வழங்கிய "திருக்குறள்' விருதாகும். அடுத்து எம்.ஏ.சி. அறக்கட்டளை விருது. இவர் பெற்ற பட்டங்களிலேயே இவர் மிகவும் விரும்பிய பட்டம் இவருடைய குரு பீடமான ஞானியார் மடாலயம் வழங்கிய "ஆராய்ச்சி அறிஞர்' என்ற பட்டம்தான். இவருடைய ஆறு நூல்களுக்குத் தமிழக மற்றும் மந்திய அரசுகள் பரிசுகள் வழங்கியுள்ளன. பல நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

"உடன் பிறந்தே கொல்லும் நோய்' என்று கூறுவது இவர் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. 1946-ஆம் ஆண்டிலிருந்து மூளைக்கட்டி (பிரைன் டியூமர்) நோயுடன் போராடிப் போராடி வெற்றி கண்டு வந்த இவரை, 1997-ஆம் ஆண்டு

அக்டோபர் 30-ஆம் தேதி இந்நோய் இறுதியாக வென்றது.

"தனக்கு மரணமே இல்லை' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். உண்மைதான்! இறவாப் புகழ்பெற்ற தன்னுடைய நூல்கள் மூலம் தமிழ் உள்ளளவும் இவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சுந்தர சண்முகனார் நினைவாக இவருடைய மாணாக்கர்கள் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் என்பதே இவர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குச் சான்று!

நன்றி - தமிழ்மணி

'மகாவித்துவான்' உ.கந்தசாமி முதலியார் - முனைவர் மா.சா.அறிவுடைநம்பி



கருவூரில், 1838-ஆம் ஆண்டு புரட்டாசி திங்கள் 5-ஆம் நாள் உலகநாதர் - பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். இவருடைய முன்னோர் சேலம் மாவட்டத்தில் குடியேறி வாழ்ந்தவர்கள். பின்னாளில் காலவேறுபாட்டால் கோயம்புத்தூரில் வந்து குடியேறினர். முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக சேலம் மாவட்டத்தில் கிராமக்கணக்கு வேலை பார்த்து வந்தனர். தம் இளவயதிலேயே தந்தையாரை இழந்த கந்தசாமி, தாயார் பிறந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தார்.

அங்குள்ள கிறிஸ்தவப் பள்ளியில் தமிழும் ஆங்கிலமும் கற்றார். அக்காலத்தில் கிறிஸ்தவ சமயம் பலவகைக் காரணங்களால் எங்கும் பரப்பப்பட்டுப் பரவி இருந்தது. கந்தசாமி முதலியாரும் கிறிஸ்தவ சமயத்தினரால் ஈர்க்கப்பட்டு அதில் மயங்கி, அச்சமயத்தின் முடிவுகளையும் அதன் கொள்கைகளையும் பேசுவதைத் தம் கடமையாகக் கொண்டு செய்து வந்தார். தாம் கற்ற சைவ சமயக் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் இழித்துப் பேசுவதுமாக இருந்து வரலானார்.

சமணராக இருந்த மருள்நீக்கியார் (அப்பர்) சைவ சமயத்தைத் தழுவியது போன்றதொரு நிலைதான் கந்தசாமியின் வாழ்விலும் நடந்தது. கிறிஸ்தவ சமயத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த மனநிலையுடன் ஒருநாள் பேரூரில் நடந்த திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றார். அத் திருவிழாவுக்கு வந்திருந்த சந்திரசேகரம் பிள்ளை என்ற சைவச் சான்றோர், கந்தசாமியை அழைத்து, பலவாறாகப் பேசி, பத்தி நெறியையும், பழவடியார் தாள் பணியும் புத்தி நெறியையும் எடுத்துரைத்தார். கந்தசாமி முதலியாரைத் தடுத்தாட்கொண்டு கிறிஸ்தவ சமயத்திலிருந்து மீட்டார்.

அச்சான்றோர் பேசியதைக் கேட்ட கந்தசாமியின் மனம் மாறியது. சைவ சமயத்தின்பால் உள்ளம் திரும்பியது. உடனே திருக்கோயிலுக்குள் சென்றார். பட்டிப் பெருமானை உளமுருக வணங்கி அருள் பெற்றார். அன்று முதல் சைவ சமயத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.

பின்னர் கோயம்புத்தூரில் குடியேறினார். மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்திரம் மற்றும் சிறப்பு நாள்களில் பேரூருக்குச் சென்று பட்டீசரை வழிபட்டு வந்தார். அத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்தார். இறைவன்மீது செந்தமிழ்ப் பாக்களும் பல பாடினார்.

மாதவச் சிவஞான முனிவரிடத்திலிருந்து தொடங்கி வரும் மாணாக்கர் பரம்பரையிலிருந்து வந்தவர் சந்திரசேகரம் பிள்ளை. கந்தசாமி முதலியார், சந்திரசேகரம் பிள்ளையிடம் கல்வி கற்றுத் தேர்ந்து மகாவித்துவானாக ஆனார்.

அந்தக் காலத்தில் வழக்குரைஞர் தொழிலுக்கென்று தனியாகச் சட்டத்தேர்வு இல்லை. வழக்குரைஞர்களை அரசியலார் ஒவ்வொரு நீதிமன்றத்திற்கென்று நியமித்தனர். அதற்கு அந்நாளில் "அன்கவனென்டெட் சிவில் சர்வீசஸ்' என்றொரு தேர்வு வைத்திருந்தனர். கந்தசாமி அதில் சேர்ந்து படித்துத் தேர்வில் வெற்றி பெற்றார். முதன் முதலாகக் கொள்ளேகாலம் உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அவ்வேலையை ஒப்புக் கொள்ளவில்லை.

அந்நாளில் கோயம்புத்தூரில் மாவட்ட நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்கள் செயல்பட்டன. மொத்தம் 20 பேர் வரை வழக்குரைஞர்கள் இருந்தனர். வழக்குரைஞர்களுக்குள் போட்டியில்லை; ஒற்றுமை இருந்தது. அவர்கள் மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர் என்றும், உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞர் என்றும் இரு வகையினர்.

கந்தசாமி முதலியார் கோவையில் தங்கியிருந்து தனியாக வழக்குரைஞர் தொழிலை நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின்னர் கோவை உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞராக நியமனம் செய்யப் பெற்றார். பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கந்தசாமி வழக்காடவில்லை. பேரூர் கோயில் திருப்பணியிலேயே அவரது உள்ளம் ஈடுபாடு கொண்டது.

கோயம்புத்தூர் வட்ட இந்து தேவஸ்தானக் குழு என்ற சபையில் உறுப்பினராகவும் அதன் தலைவராகவும், மேற்படி சபை தொடங்கிய காலம் முதல் இருந்து வந்தார். பேரூர் கோயிலில் பல்வேறு வகையான திருப்பணிகளை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது, பேரூர் பச்சைநாயகியாரூசல், மரகதவல்லியம்மன் மாலை, பச்சை நாயகியம்மையார் ஆசிரிய விருத்தம், திருப்பேரூர் மும்மணிக்கோவை, திருப்பேரூர் போற்றிக் கலிவெண்பா, கோயம்புத்தூர் கோட்டை சங்கமேசுவரர் பதிகம், மருதாசலபதி உயிர் வருக்க மாலை, சிவகிரி அடைக்கலப்பத்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வெண்பா மாலை, முத்து விநாயகர் ஆசிரிய விருத்தம், வெள்ளை விநாயகர் பதிகம், பழனிநாதர் உயிர் வருக்க மாலை, நந்தியம்பெருமான் தோத்திரம், திருப்பொருளாட்சி (பொள்ளாச்சி) ஸ்ரீ சுப்பிரமணியர் திருஇரட்டை மணிமாலை, அவிநாசிக் கருணாம்பிகை பதிகம் முதலிய பல சிற்றிலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.

கந்தசாமி முதலியார் சில நூல்களை எழுதியதுடன் நில்லாமல், பேரூர் புராணம், திருநணா என்கிற பவானி கூடற்புராணம், திருஅவிநாசித் தலபுராணம், திருக்கருவூர் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், திருக்கொடுமுடி புராணம், பேரூர் பச்சைநாயகியம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார். இவர் 1890}ஆம்
ஆண்டு காலமானார்.

இவ்வாறு "மகாவித்துவான்' கந்தசாமி முதலியார் தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பல பணிகளைச் செய்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளார். பெரியபுராணம் முழுவதற்கும் விரிவான வகையில் உரையெழுதிய "சிவக்கவிமணி' சி.கே.சுப்பிரமணிய முதலியாரின் தந்தையார் இவர் என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.

நன்றி - தமிழ்மணி

'இசைத் தமிழ் வித்தகர்' வீ.ப.கா.சுந்தரம்! - புலவர் தங்க.சங்கரபாண்டியன்



"இசைத்தமிழ்ப் பேரறிஞர்' என்று மறைமலைநகர் தமிழ் ஆய்வரங்கம் பட்டமளித்துப் பாராட்டிய பெருமைக்குரியவர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம். இசைத் துறையிலும், தமிழ் இலக்கியத் துறையிலும், சொல்லாராய்ச்சியிலும், இசைக்கருவிகள் இசைப்பதிலும் கைதேர்ந்தவர்.

மதுரை மாவட்டம் உத்தமபாளையத்துக்கு அருகில் உள்ள கோம்பை எனும் ஊரில், வீ.பரமசிவம்பிள்ளை-காமாட்சி இணையருக்கு 1915-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி  பிறந்தவர். இளமையில் நாடகம் பார்ப்பதில் ஆர்வம் காட்டிய இவர், பாடல்கள் பாடுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். பட்டப்படிப்பு முடித்த பின்பு மதுரையிலுள்ள பசுமலை ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் தலைமை ஆசிரியராக 17 ஆண்டுகள் பணிபுரிந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி 1975-இல் பணி ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு, மதுரையிலுள்ள "அரசரடி இறையியல்' கல்லூரியில் மேல்நாட்டு மாணவர்களுக்கு இசையும் (வாய்ப்பாட்டு), இசைக்கருவியும் பயிற்றுவித்தார். மதுரையிலும் திருச்சியிலும் தங்கி தமிழாய்வு செய்துவந்தார். ÷இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வித்துவான் மற்றும் தமிழ் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் "பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரையில் வாழ்ந்தபோது சோமசுந்தர பாரதியாரிடம் தொடர்பு கொண்டு தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியத்தையும் ஐந்தாண்டுகள் பாடம் கேட்டார். மதுரையில் வாழ்ந்த சி.சங்கரசிவனார் என்னும் இசை அறிஞரிடம் இசையியல், காலக்கணக்கியல், கஞ்சிரா முழக்கம்
பற்றி பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பாடம் பயின்றார்.
மத்தளவியல், அருட்குறள், பைந்தமிழ்ப் பயிற்று முறை, ஆளுடையப் பிள்ளையாரும் அருணகிரிநாதரும், தொல்காப்பியத்தில் இசைக் குறிப்புகள், (ஆராய்ச்சி), இன்றுள்ள இசைத்துறை வடசொற்களுக்குத் தமிழ்ச்சொல், சிறுவர் இன்பம், பஞ்சமரபு, பஞ்சமரபுக் கழகம் போன்ற பல (இசை) நூல்களை எழுதியுள்ளார். "பஞ்சமரபு' என்னும் இசைத்தமிழ் நூலுக்கு விரிவான விளக்க உரையும் எழுதியுள்ளார்.

""தொல்காப்பிய இயற்றமிழ் இலக்கணத்துள் இழையோடிக் கிடக்கின்றது இசைத்தமிழ் இலக்கணம். கீர்த்தனைகளுக்குரிய யாப்பிலக்கணம் தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கின்றது'' என்று "இசைக் குறிப்புகள்' நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசனார் இவரை "அறிஞர்' என்றும், "தம் நண்பர்' என்றும் போற்றியுள்ளார். பண்ணாய்வுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும் நூற்றுக்கணக்கான முறை பங்கேற்றுப் உரை நிகழ்ச்சியுள்ளார்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நாட்டிய, தாள அளவீடு பற்றிய ஆய்வுரையின்போது பேச்சாளர் கூறியதில், தாளத்துக்கும் ஆட்டத்துக்கும் பொருத்தம் இல்லாது உள்ளதைக் கண்ட வீ.ப.கா.சுந்தரம் பேச்சின் இடையே குறுக்கிட்டு, குறித்த தாளத்தின் கணக்கைத் தாளமிட்டுக் காட்டி அவையோரின் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது முதல், அவர் பல்லாண்டுகளாகத் தொகுத்து ஆய்வு செய்து கண்ட முடிவுகள் "தமிழிசைக் கலைகளஞ்சியம்' (நான்கு தொகுதிகள்) என்னும் பெயரில் அரிய நூலாக 12 ஆண்டுகள் அவருடைய கடின உழைப்பில் - முயற்சியில் வெளிவந்தது.

இக்கலைக் களஞ்சியத்தில் மொத்தம் 2232 தலைமைச் சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இவைதவிர, பல்லாயிரம் கிளைச் சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் தமிழகத்திலும் வெளிந்துள்ள இசைக் கலைக்களஞ்சியங்களுள் இந்நூல்தான் மிகப்பெரிய நூல் எனப் புகழப்படுகிறது. இசை வல்லார் பயன்படுத்தும் பிறமொழிச் சொற்களுக்கு இவர் பலநூறு தனித்தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் "கருணாமிர்த சாகரம்', விபுலானந்தரின் "யாழ் நூல்' ஆகியவற்றுக்குப் பின் வீ.ப.கா.சுந்தரத்தின் "தமிழிசைக் கலைக்களஞ்சியம்' தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய புதையலாகும். தாம் பலகாலமாக எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்து "தமிழ் இசை வளம்' என்னும் பெயரில் நூலாக்கினார். இந்நூல் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றும் தமிழ் இசையைப் பரப்பினார். ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும் தம் இசை ஈடுபாட்டை நிலைநிறுத்தி வந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் இசை ஆய்வறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கலைக் களஞ்சியப்பணி நிறைவுற்றதும், மதுரை பசுமலையில் தங்கி இசை ஆய்வுகள் செய்துவந்தார். இறுதியாக, முறம்பு என்னும் ஊரில் அமைந்திருந்த பாவாணர் தோட்டத்தில் தொடர்ந்து உரை நிகழ்த்தி வந்த அந்த இசைக்குயில், 2003-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இசையுலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டது.

புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவரான இவர், தமிழரின் முதல் இசைக்கருவி புல்லாங்குழல்தான் என்றும், முல்லைப் பண்ணே முதல் பண் என்றும் நிறுவியவர். தாளக் கருவிகளை இசைப்பதில் அளவில்லா ஈடுபாடு கொண்ட வீ.ப.கா., இசை குறித்து மேலும் பல நூல்களை எழுதத்  திட்டமிட்டிருந்தார். அதற்குள் காலன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

நன்றி - தமிழ்மணி

'தமிழ் முழக்கம்' செய்த கவி.காமு.ஷெரீப்! - கலைமாமணி விக்கிரமன்



கவி.காமு.ஷெரீப், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் இன்று மறக்கமுடியாத கவிஞர்கள். லட்சத்துக்காக எழுதாமல், லட்சியத்துக்காகக் கவிதைகள் எழுதியவர்கள். திரைப்படங்களில் பிரபலமாகாமலேயே இன்றும் அந்தக் கவிதைகளை முணுமுணுக்கும் தமிழ்மக்கள் இருக்கிறார்கள்.

கவி.காமு.ஷெரீபைத் தமிழ்நாடு முற்றிலும் உணரவில்லை என்பதைத் தெரிவிக்கவே அவருடன் பழகிய, அவர் காலத்தே வாழ்ந்த நான், அவரைப் பற்றி மறக்க முடியாத சிலவற்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே' - இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?' - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய்மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப்போகுமா?', "ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே' ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில் - யார் எழுதியது? என்று "குவிஸ்' நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.காமு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்துவிட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.

கவி.காமு.ஷெரீப் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீச்வரம் என்னும் ஊரில் 1914-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய்-முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்-தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின.

15-ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.

"தமிழரசு' கழகத்துடன் இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி.காமு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.

"தமிழ் முழக்கம்', "சாட்டை' போன்ற பரப்பரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காவியம் 1, அறிவுரைக் கடிதநூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி.காமு.ஷெரீப், கவிதைகள் மட்டும் எழுதவில்லை, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தொண்டைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத்தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல்காதர் போன்றோருக்குப் பிறகு கவி.காமு.ஷெரீபை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.

கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி.காமு.ஷெரீப். ""அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. "ஒளி' என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்'' என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.

""கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்கவேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்'' என்று சொன்னவர் கவி.காமு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.

கவிதைப் பயிர் வளர்க்கும் பாட்டாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர். ""எனக்கென எஞ்சி நின்றவை - புதிய தமிழக அமைப்பின் போர்க்களப் பாடல்கள். ஆம், என்னளவிற்குப் புதிய தமிழக அமைப்பின் களப்பாடல்களை வேறு யாரும் பாடியிருக்கவில்லை என்று என்னைப் பற்றி கணித்துக் கொள்வது மிகையன்று'' என்றும், ""புதிய தமிழகம் தோன்றி உழைத்தவர்களில் ஒருவன் நான் என்பதை வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது'' என்றும் உறுதியுடன் தன் விளக்கம் கூறியுள்ளார் காமு.ஷெரீப்.

தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை "குடியரசு' ஏட்டில் 1934-ஆம் ஆண்டு வெளிவந்தது.

""கலைமாமணி விருது பெற்ற கவிஞர் அருந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்'' என்று சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிடுகிறார்.

""சீறாப்புராணம் சொற்பொழிவைக் கேட்ட பிறகு அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்'' என்று கி.ஆ.பெ. புகழ்ந்துள்ளார்.

""தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டுகொண்டேன். அவருடைய பாக்களைப் படித்து அதனின்றும் இன்பத்தைக் கங்கு கரையின்றி அனுபவிப்பீர்களாக'' என்று 1946-ஆம் ஆண்டிலேயே அறிஞர் வ.ரா. பாராட்டியிருக்கிறார்.

1939-ஆம் ஆண்டில் "சந்திரோதயம்' என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். "அன்னையா? கன்னியா?' என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956-இல் "சாட்டை' இதழில் எழுதினார். "தமிழில் பிறமொழிச் சொற்கள்' என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.

சிவாஜி, பாரததேவி, தினமணி கதிர், ஹிந்துஸ்தான், ம.பொ.சி.யின் தமிழ்முரசு - என அவர் கவிதை எழுதாத இலக்கிய ஏடுகள் இல்லை. ஆனால், ம.பொ.சி.யின் தமிழ்அரசு இயக்கக் கவிஞராகத் திகழ்ந்த பெருமையை "தமிழகக் களக்கவிஞர்' என்று தன்னை அழைத்துக்கொள்ளும் துணிவை அளித்தது.

தமிழ்நாடு மலர திருத்தணியை, சென்னையை மீட்ட ம.பொ.சி.யின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப்பெற்றார். திரு.வி.க. விருது பெற்றார். சொன்னபடி செய்தார்; செய்வதுபோல் வாழ்ந்தார். மகாத்மா காந்தி, நேருவிடம் மிக்க மரியாதை கொண்டிருந்தார்.

1948-இல் அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்' நாடகத்தில் "திருநாடே' என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி "ரிக்கார்டு'களுக்காக வசனமும், பாடலும் எழுதி, திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால், அதையே முழுமையாக நம்பவில்லை.

"மாயாவதி' என்ற படத்துக்குப் பாடல் எழுதி திரையுலகில் நுழைய முற்பட்டார். "பெண் தெய்வம்', "புதுயுகம்' ஆகிய படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

கவிதையில் கொடி நாட்டியதுபோல் உரைநடையிலும் தன் திறமையை ஆழப் பதித்தவர். பிறப்பால் முஸ்லிம் ஆயினும் இந்து சமய இதிகாசங்களில் மிக்க நாட்டம் கொண்டவர். இதை "மச்சசந்தி' என்னும் நூலின் வாயிலாக அறியலாம்.

திரைப்படத் துறையில் ஈடுபட்டாலும் ஒழுக்கம் குன்றாக் கவிஞர் காமு.ஷெரீப். "சிவலீலா' என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்; "பாட்டும் நானே பாவமும் நானே' என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.

தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான "காதர்ஷா முகம்மது ஷெரீப்' என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக்கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது!

இளங் கவிஞர்களை ஊக்குவித்த பெருமையை உடைய கவிஞரின் கவிதைப் பயணம் 1993-ஆம் ஆண்டோடு நிறைவுற்றது. தமிழ் முழக்கமும் ஓய்ந்தது.

இவர் எழுதிய, இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா? நல்ல மனைவி, தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி, விதியை வெல்வோம் ஆகிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழி உள்ளவரை கா.மு.ஷெரீபின் பெயர் நின்று ஒலிக்கும்.

நன்றி - தமிழ்மணி

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன் - செங்கோட்டை ஸ்ரீராம்



தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனி இடம் பெற்றவர் ரா.வீழிநாதன். சிறந்த படைப்பாளி. இலக்கியவாதிகள், வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பெயர். தமிழில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்களைப் படைத்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்தவர். இதற்காக அவர் கற்றவை மிக அதிகம். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வெகுகாலம் பணி செய்த இவர், பின்னாளில் காஞ்சி மகாபெரியவர் ஆசியுடன் வெளிவந்த "அமரபாரதி' மாத இதழின் நிறுவன ஆசிரியரானார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்தியிலிருந்து தமிழில் இவர் மொழிபெயர்த்துள்ளவை மிக அதிகம். குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர்.

 1920-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் உள்ள திருவீழிமிழலை இறைவன் பெயரையே பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.

 அடிப்படைப் படிப்பறிவே ஆடம்பரமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில், ரா.வீ.க்கு ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளும் படிக்க ஆசை. அந்தக் கிராமத்திலேயே வசித்த வி.கே.சுப்பிரமணிய ஐயர் இவரைத் தன் மகன்போல் நேசித்து, எந்தவித குருதட்சிணையும் இன்றி ஹிந்தி கற்றுக் கொடுத்தாராம். தொடர்ந்து சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளும் கற்றார் ரா.வீ.

 இவருக்கு 14 வயது இருக்கும்போது, தவளாம்பாள் என்ற பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவரே ரா.வீ.யின் மூச்சுக்கும் பேச்சுக்கும் காரண சக்தியாக விளங்கினார். பெரும்பாலானோர், குடும்பம் ஓர் இம்சை என்று கருதும் நிலையில், ரா.வீ.யின் எழுதும் இச்சைக்கு உயிரூட்டியவர் மனைவி தவளாம்பாளே. இதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ரா.வீ.

 காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தி ராஷ்டிரபாஷா தேர்வில் தென்னாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்தி பிரசார சபைகளிலும், திருச்சி ஜோசப் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரிகளில் இந்தி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரசார சபை நடத்தி வந்த "இந்தி பத்ரிகா' இதழிலும் பங்காற்றியுள்ளார். சென்னையில் இந்தி பிரசார சபா வெள்ளிவிழாவுக்கு காந்திஜி வருகை தந்தபோது, அவருடன் இணைந்து பங்காற்றிய பெருமை ரா.வீழிநாதனுக்கு உண்டு.

 வீழிநாதனின் முதல் சிறுகதை "ரயில் பிரயாணம்' 1942-இல் "கலைமகள்' இதழில் வெளியானது. தொடர்ந்து "காவேரி' இதழில் இவர் படைப்புகள் வெளிவரலாயின. அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது.

 "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது. இவைதவிர, சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை அதிகம் எழுதியுள்ளார். காவேரி, கல்கி, நவயுவன், கலைவாணி, சக்தி, கலைமகள், ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், நவசக்தி, நாடோடி, தென்றல், மாலதி, திரைஒலி, சிவாஜி, ஹிந்துஸ்தான், நல்ல மாணவர், அணுவிரதம், தமிழ்நாடு, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, முத்தாரம், மஞ்சரி, விஜயபாரதம், கோகுலம், பூந்தளிர், சுதேசமித்திரன், தினமணி, தினமணி கதிர் என அந்தக் காலத்தைய அனைத்து பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.

 குறும்பன், அட்சயம், ஆங்கிலம், மாரீசன், ராமயோகி, ராமகுமார், கிருத்திவாஸ், ராவீ, விஷ்ணு என்றெல்லாம் புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதினார் ரா.வீழிநாதன். "காசி யாத்திரை' என்ற நூல் இவரின் எழுத்துலக அனுபவத்துக்குச் சான்று. விசும்பரநாத் கெüசிக் எழுதிய பிகாரினி (பிச்சைக்காரி) நாவலை இவர் யசோதரா என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இதில் சாண்டில்யனின் முன்னுரை, நூலின் சிறப்பை உணர்த்தும்.

 குறிப்பாக, ஜெகசிற்பியனின் ஜீவகீதம் நாவல், "பஹர் க அத்மி' என்ற பெயரில் மொழிபெயர்ப்பானது. ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நவீன உத்தரகாண்டம் ஆகியவை இதே பெயர்களில் இவரால் இந்திக்குச் சென்றன. நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம் உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்தி இலக்கிய உலகில் இடம்பிடிக்கக் காரணமாக அமைந்தவர் ரா.வீ.

 1980 பிப்ரவரி முதல் இவர் நிறுவன ஆசிரியராக இருந்து நடத்திய "அமரபாரதி' பத்திரிகையை குடும்பப் பத்திரிகை என்றே சொல்வார் ரா.வீ. பத்திரிகைப் பணிகளில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே உதவி செய்ததால் அவ்வாறு கூறுவதாகச் சொல்வார் ரா.வீ.

 ""எழுதுவது அற்புதமான கலை. சக்தி வாய்ந்தது. அதற்கு நல்ல கல்வியறிவும், விஷயங்களைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் திறனும் மிகத் தேவை. நல்ல மொழியறிவு அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான் எழுத்தின் மூலம் நல்ல கருத்துகளை, சொல்ல வருவதை மிகத் தெளிவாக அழகாக வாசகரிடம் கொண்டு சேர்க்க முடியும்'' - இது ரா.வீழிநாதன் அடிக்கடி சொல்லும் விஷயம்.

 சிறிய துண்டுத் தாளில்கூட குறிப்புகளை எழுதுவார். துணுக்குகள் படைப்பார். தம் 75-ஆம் வயதில் அவர் மறையும் வரை, துணுக்குகள் எழுதுவதைக்கூட அவர் கைவிடவேயில்லை. "என்னதான் இலக்கியவாதியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பு இலக்கியத் துறையில் ஈடுபடுபவரை இரண்டாம்தரக் குடிமகனாகக் கருதும் போக்கு வருந்தத்தக்கது' என்பதை அவரே ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 மஞ்சரி இதழில் ரா.வீ.யின் எழுத்துகள் அதிகம் இடம்பெற்றன. மொழி பெயர்ப்புக் கலை குறித்த இவருடைய சிறு சிறு கட்டுரைகள், தமிழ்ப் படைப்புகள் உலகை ஆக்கிரமிக்க வழி சொல்லுபவை. மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனித்துவம் பெற்ற இதழாளர். நவீன உலகில் தமிழின் ஆளுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் அடையாளமாகக் கொள்ள வேண்டியவரும்கூட!

நன்றி தமிழ்மணி 28 08 11

'அணையா விளக்கு' ஆர்.வி.! - கி.குருமூர்த்தி



இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி., என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன்.

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள், இராமையர்-சீதாலட்சுமி இணையருக்குப் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்ட பிரசாரக் கூட்டங்களில் பங்குகொண்டு துண்டுப் பிரசுரங்கள் எழுதித் தருவது, பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபட்டார். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் விடுதலைப் போராட்டத்துக்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

1956-ஆம் ஆண்டு வெளிவந்த இவருடைய "அணையா விளக்கு' நாவல் பரபரப்பாகப் பேசப்பட்டது. "ஆதித்தன் காதல்' என்ற சரித்திர நாவலில் கொஞ்சி விளையாடிய தமிழ் நடையையும், "திரைக்குப் பின்' நாவலின், புயல் வர்ணனைகளையும் படித்தவர்களால் மறக்க முடியாது.

வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஆர்.வி.யின் இளம் உள்ளத்தில் சுதந்திர வேட்கையைக் கிளர்ந்து எழச்செய்தது. 12-ஆம் வயதில் கதராடைக்கு மாறிய ஆர்.வி., வாழ்நாள் முழுவதும் கதராடையே அணிந்து வந்தார்.

1941-இல் நடைபெற்ற தனி நபர் சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு மூன்று மாதம் சிறைத்தண்டனை பெற்றார். அப்போது, இவருடைய பள்ளிச் சான்றிதழ்களைப் போலீசார் பறித்துச் சென்றுவிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஊர் ஊராகச் சென்று, தீவிரமாகப் பிரசாரம் செய்து, போராட்டங்களில் கலந்துகொண்டு, சான்றிதழ்களை இழந்து, சிறைத்தண்டனை அனுபவித்து பல இன்னல்களுக்கு ஆளாகியும்கூட சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்காக வழங்கப்படும் ஓய்வூதியத்தையோ, சலுகைகளையோ அனுபவிக்கவில்லையாம்.

ஆர்.வி., பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எழுதிய முதல் சிறுகதைதான் "தனிக் குடித்தனம்'. பள்ளிப் பருவத்திலேயே ஆனந்த விகடன், கலைமகள் போன்ற பிரபல பத்திரிகைகளுக்குச் சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார் ஆர்.வி.

1942-ஆம் ஆண்டு அப்போதைய "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியரான கே.சந்தானம், ஆர்.வி.யை சென்னைக்கு அழைத்துவந்து, கல்கியிடம் அறிமுகம் செய்து வைத்தாராம். கல்கியில் பணியில் சேர இருந்த ஆர்.வி., தற்செயலாகக் கலைமகள் காரியாலயத்தில் கி.வா.ஜ.வைச் சந்திக்க நேர்ந்ததும், அதன் பயனாகக் கலைமகள் அலுவலகத்திலேயே பணியில் அமர்ந்ததும் தனிக் கதை. கலைமகள் பத்திரிகையை இலக்கியத் தரம் வாய்ந்த உயர்ந்த பத்திரிகையாக வளர்த்ததில் ஆர்.வி.யின் பங்கு மகத்தானது. மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று பிரபலமாகப் பேசப்படும் பல மூத்த எழுத்தாளர்களைக் கலைமகளில் எழுதவைத்த பெருமையும் ஆர்.வி.யைச் சேரும்.

கலைமகள் நிறுவனம் 1950-இல் "கண்ணன்' என்ற சிறுவர்களுக்கானப் பத்திரிகையைத் தொடங்கியபோது அதன் ஆசிரியர் பொறுப்பு ஆர்.வி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.வி.யின் அனுபவம், கற்பனை வளம், எழுத்தாற்றல் இவை தமிழில் சிறுவர் இலக்கியம் வளர உரமாக அமைந்தன. புதுமையான நடையில் அற்புதமானச் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் கண்ணனில் எழுதினார். கண்ணன் வாயிலாக, பாரபட்சமின்றி பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, ஊக்கமூட்டி எழுத வைத்தார். குழந்தை இலக்கியத்திற்காகக் கலைமகள் நடத்திய "கண்ணன்' இதழ் வெளிவந்த 22 ஆண்டுகள், தமிழில் குழந்தை இலக்கியத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

கல்கியைத் தலைவராகக்கொண்ட தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாகக் காரணமாகி, அதில் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார். விக்கிரமன், சாண்டில்யன், த.நா.குமாரசுவாமியுடன் சேர்ந்து எழுத்தாளர்கள் தங்கள் நூல்களைத் தாங்களே வெளியிட்டுக்கொள்ள உதவும் வகையில் "தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம்' அமையவும் காரணமாக இருந்தவர் ஆர்.வி.

குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியதோடு, அன்றைய குடியரசுத் துணைத் தலைவர், ஜாகிர் ஹுசேன் முன்னிலையில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் குழந்தை இலக்கிய மாநாட்டை நடத்தினார்.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் கிளையைச் சென்னையில் தொடங்கியதோடு, "ஆதர்ஸ் கில்டு' என்ற இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக் கிளை உருவாகக் காரணமாக இருந்து, அதன் செயல் உறுப்பினராகவும் இருந்தார்.

ஆர்.வி.யின் அணையா விளக்கு, குங்குமச் சிமிழ், சந்திரகிரிக் கோட்டை ஆகிய நூல்களுக்கு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசுகள் கிடைத்தன. காரைக்குடியில் நடைபெற்ற குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் ஏழாவது குழந்தை இலக்கிய மாநாட்டில், கேடயம் வழங்கி கெüரவிக்கப்பட்டார் ஆர்.வி.

2004-ஆம் ஆண்டு 27-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருது ஆர்.வி.க்கு வழங்கப்பட்டது. 33-ஆம் ஆண்டு கம்பன் விழாவில் சிறந்த எழுத்தாளருக்கானப் பாராட்டும், பொற்கிழியும் வழங்கப்பட்டன.

ஆர்.விக்குத் திருமணம் நடந்தபோது அவருடைய வயது 18; மனைவி பட்டம்மாவின் வயது 13. தமது எழுத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து, நான்கு மகன்களையும், மூன்று மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்துவைத்து, தம் 90-வது அகவை வரை நிறைவான வாழ்க்கை வாழ்ந்த ஆர்.வி., 2008-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28-ஆம் தேதி காலமானார்.

தமிழ்ப் படைப்பிலக்கியம் வாழ-வளர உழைத்த சில மூத்த எழுத்தாளர்களுள் முன்னிலையில் இருக்கும் ஆர்.வி.யின், நூல்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதே பலரது பேரவா!

நன்றி - தமிழ்மணி

வானொலி நாடக உலகின் வாடா மலர் சுகி.சுப்பிரமணியம் - கலைமாமணி விக்கிரமன்



சின்னத்திரையில் நாடகங்கள் "பெயரில்' ஒளிபரப்பப்படும் நாடகங்கள் வந்த பிறகு கேட்கும் நாடகங்களின் மதிப்புக் குறைந்துவிட்டது. படிக்கும் நாடகங்கள், பார்க்கும் நாடகங்கள், கேட்கும் நாடகங்கள் என்று நாடகக் கலை கோலோச்சிய காலத்தில் கேட்கும் நாடகங்களை வளர்ப்பதில் வானொலி நிலையங்கள் பெரும் பங்காற்றின.

வானொலி நாடகங்களைத் தயாரித்து நாடகத்துறையில் பல்வேறு சுவையான உரையாடல்களுடன்கூடிய பதினைந்து நிமிட, அரைமணி, ஒரு மணி நேர நாடகங்களைக் கேட்டு ரசிக்கும் சுவையை ஏற்படுத்தியவர்களுள் - படைப்பிலக்கியச் சிற்பிகளுள் சுகி.சுப்பிரமணியம் முதன்மையானவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாதவக்குறிச்சி என்ற கிராமத்தில் 1917-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி பிறந்தார். தந்தையார்-நல்லபெருமாள்; தாயார் முத்தம்மாள்.

வானொலிக்குச் சிறந்த நாடக ஆசிரியர்களை உருவாக்கியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. நாடகங்கள், நாவல்கள், நகைச்சுவைக் கட்டுரைகள் முதலியவற்றை எழுதியுள்ளார். இவை எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைந்தவை, இவரின் சமூகப் பிரச்னைகள் மிக்க வானொலி நாடகங்களே ஆகும். "புதிய படிக்கற்கள்' என்ற வானொலி நாடகம் இவருக்குப் புகழ் சேர்ந்த நாடகங்களுள் ஒன்று. அந்த நாள் வானொலி ரசிகர்கள் "காப்புக் கட்டிச் சத்திரம்', "சுபாஷ் வீடு' போன்ற நாடகங்களை ஆவலுடன் கேட்டு மகிழ்ந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

பெரிய மனிதர் பெரியார், நெஞ்சம் கவர் நேருஜி, காக்கை குருவி எங்கள் ஜாதி, குட்டிக் கதைகள் எனக் குழந்தைகளுக்கான நூல்களையும் படைத்துள்ளார். சமூக சீர்திருத்தக் கருத்துகளிலும் அதிக நாட்டம் செலுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் என்பதால், ரசிகமணியிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர். அவருடைய வட்டத்தொட்டியின் விரும்தோம்பல் போல் தன் வீட்டிலும் நண்பர்களை அழைத்து உணவளித்து உபசரிப்பதில் மிகுந்த ஈடுபாடுடையவர்.

தாகூரின் இலக்கியப் படைப்புக்களை சிறப்பாகத் தமிழில் தந்த பிரபல விமர்சகர், அமரர் காரைக்குடி வி.ஆர்.எம். செட்டியார், இவரின் "கற்பகக் கனிகள்', "சாம்பார் சாதம்' என்னும் நூல்களைப் பாராட்டியபோது, ""இவரின் அருவிக்கரைக் கட்டுரைகள் அருவிபோலச் சுழன்றோடுகின்றன. ஆசிரியரின் சொந்த நடையும் தந்த நடையாகக் காட்சியளிக்கிறது. இதயச் சிற்பம் அருவியைத் தழுவி நிற்கிறது. இதுதான் உண்மையான கட்டுரைப் போக்கு'' என எழுதியுள்ளார்.

""எந்தப் பொருளுக்கும் இசைத் தன்மை, கவிதைத் தன்மை இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நாடகத் தன்மை இல்லாத கவிஞன் இல்லை. நாடகத் தன்மை இல்லாத உரைநடை, பேச்சுநடை எழுத்துலகில் இல்லை. எந்தச் சிறந்த இலக்கிய வடிவத்திற்குள்ளும் நாடகத் தன்மை கதிரவனுக்கு ஒளிபோல, தாமரைக்குள் அழகுபோல, வைரத்திற்குள் பட்டைபோல ஒன்றிக்கிடக்கும். ஒலி வடிவம் உலகத்தை ஒன்றுபடுத்தும் பண்பு வடிவம், பாச வடிவம். காரிருளிலும் கனமான வெளிச்சத்திலும் செலாவணியாகும் வடிவம், ஒலி வடிவம். ஒளிவு மறைவு இல்லாத பிறவி வானொலி வடிவம்'' எனப் "பண்பை நம்பும் நாடக விழா' கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

""வானொலி நாடகங்களில் எழுதும் ஓசைக்கு அப்பால் எழுகிற ஓசை என்று ஒன்று உண்டு. எழுதும் ஓசைக்குள் நாடகாசிரியன் இருப்பான். எழுதா ஓசைக்குள் முழுக்க முழுக்க நடிகர்களே இருப்பார்கள். அங்க அசைவுகள், முகபாவம், உணர்ச்சிக் குவியல்கள், கோப-தாபங்கள், இன்ப-துன்பங்கள், கனவுகள், கனிவுகள் எனும் எழுத்து ஓசைகள்தாம் ஒலி நாடகத்துக்கு உயிர். எழுதும் ஓசை உடல்; எழுதா ஓசை உயிர் என நாடக எழுத்தைவிட நடிப்புக்குப் புகழ், பணம், செல்வாக்கு மிகுதியாக ஏற்படுகிறது. நடிப்பு இங்கே நடிகரின் குரல் மூலம் வெளிப்படுகிறது'' என்று சுகி.சுப்பிரமணியம் கூறியதை, பிரபல எழுத்தாளர் எஸ்.குலசேகரன் கூறும்போது சுகி.சுப்பிரமணியத்தின் ஒலி நாடகக் கணிப்பு நன்கு புலப்படுகிறது.

 இவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்பதற்குப் பல உதாரணங்கள் கூறலாம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய, "நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னும் நூலைப் பற்றி "எனக்குப் பிடித்த புத்தகம்' என்னும் கட்டுரையில் எழுதிய வரிகளே சான்று.

நேஷனல் புக் டிரஸ்டுக்காக "ஓரங்க நாடகங்கள்' என்னும் நூலைத் தயாரித்து அளித்துள்ள இவர், அதில் நாடகங்கள் பற்றியும், நாடக ஆசிரியர்கள் பற்றியும் மிகச் சிறப்பாக இருபத்தி இரண்டு பக்க முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ""நாடக எழுத்தை விட, நடிப்புக்குப் புகழ், பணம், செல்வாக்கு மிகுதியாக ஏற்படுகிறது'' என்கிறார்.

பல நாடக நூல்களைப் படித்து மிகச் சிறந்த திறனாய்வாளராகவும் இருந்துள்ளார். நாடகங்கள் இவர் வாழ்வோடு ஒன்றிப்போயுள்ளன. வானொலி நிலையத்துக்கு ஒலிபரப்ப வரும் நாடகங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படித்து, பத்து நாள்களில் முடிவைத் தெரிவித்து விடுவாராம். பிற எழுத்தாளர்களின் படைப்புகளை மிகத் துல்லியமாக எடைபோடும் இவர் சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. "கல்கி' நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் சிறுகதை உலகில் காலடி எடுத்து வைத்தார்.

"தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்' என்னும் இவருடைய கட்டுரைத் தொடர் "காதல்' இதழில் தொடர்ந்து வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. 30 நாவல்கள், 3 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாடகங்கள், 3 சிறுவர்களுக்கான நூல்கள் எழுதியுள்ளார். 1939-ஆம் ஆண்டு "ஹனுமான்' இதழிலும், 1985-ஆம் ஆண்டு "அமுதம்' இதழிலும் பணியாற்றியிருக்கிறார்.

1940 முதல் 1977-ஆம் ஆண்டு வரை முப்பத்தி ஏழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இவருக்குத் தமிழக அரசு "கலைமாமணி' விருது அளித்துச் சிறப்பித்துள்ளது.

இவருடைய லட்சிய எழுத்தாளர் "கல்கி' கிருஷ்ணமூர்த்தி. தன் பெயரின் முதல் எழுத்தையும், அவர் பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து "சுகி' என்ற பெயரைப் பயன்படுத்திக்கொண்டார்.

புதுமைப்பித்தன் எழுத்துகளில் மிகுந்த பற்றுடையவர். அவரைச் "சிறுகதை வள்ளுவர்' என்று புகழ்ந்து கட்டுரை (வீட்டிற்கு வந்த வள்ளுவர்) எழுதியுள்ளார்.

இவர் புதல்வர் சுகி.சிவத்தை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சிறந்த சொற்பொழிவாளர். தன் பெயருக்கு முன்பாக "சுகி' என்னும் தந்தையின் பெயரையும் இணைத்துக்கொண்டு தந்தைக்குப் பெருமை சேர்த்தவர்.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளராக, வானொலி நாடக ஆசிரியராக, நகைச்சுவை எழுத்தாளராக, சிறுகதை ஆசிரியராக, குழந்தை எழுத்தாளராகத் திகழ்ந்தவர் சுகி.சுப்பிரமணியம். இவர் படைப்பிலக்கிய உலகில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியவர்.

1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி சுகி.சுப்பிரமணியம் இயற்கை எய்தினார். நாடக உலகம் உள்ளவரை இவருடைய பெயரும் நின்று நிலவும்.

நன்றி - தமிழ்மணி

'கம்பீரமிக்க கவிதை' பாலா! - முனைவர் சொ.சேதுபதி



தமிழையும் ஆங்கிலத்தையும் தமது தாய்மொழிகள் எனும்படி சரளமாய்க் கவிதை மணக்கத் திறனாய்வு நோக்கில் கம்பீரமாகப் பேசும் சிவகங்கைச் சீமைக்காரர் கவிஞர் பாலா. தேர்ந்த திறனாய்வாளர்; நல்ல மொழிபெயர்ப்பாளர்; பீடுடைய பேராசிரியர்; நுட்பமிகு சொற்பொழிவாளர் - இவை அனைத்தும் ஒருங்கு திரண்ட இனிய மனிதர்.

13.1.1946 அன்று இராமதாஸ்-ஞானாம்பிகை தம்பதியருக்கு மகவாய்த் தோன்றிய இரா.பாலச்சந்திரன், சிவகங்கை மன்னர் பள்ளியில் பள்ளிக் கல்வியும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கல்லூரிக் கல்வியும் பெற்றவர். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டமும் பெற்ற பாலா, கவிஞர் மீராவின் தாயன்பில் தழைத்தவர்.

வானம்பாடி, தீபம், கண்ணதாசன் மற்றும் தாமரை இதழ்களில் தடம்பதித்து வளர்ந்த கவிஞர் பாலாவின் உன்னதத் தமிழ்ப்படைப்பு, புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை. நெடிய மரபில் ஆயிரக்கணக்கான ஆண்டுக்கால பரிமாணங்களோடு செம்மாந்து நிற்கும் தமிழ்க்கவிதை விருட்சத்தின் வேர்களையும் விழுதுகளையும் சரிவர அடையாளம் காட்டி, புதிதாய் எழுத வருகிறவர்களுக்கு உரிய திசைகளைக் காட்டிக் கூடவரும் ஒரு கவிதைப் பயணியாக, பாலா நின்று நிலைக்கும் உயிருள்ள புத்தகம்.

 புதுக்கவிதையாளர்க்குரிய புதுத் தொல்காப்பியம் மரபு உதறிப் பொதுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என உலா வந்த காலத்தில், புதுக்கவிதைகள் என இவர் தந்த கவிதைகளின் தொகுப்பு நூல், "இன்னொரு மனிதர்கள்', "திண்ணைகளும் வரவேற்பறைகளும்', இவற்றோடு "நினைவில் தப்பிய முகம்' ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் தமிழுக்குத் தந்தவர். மேலும், "வித்யாபதியின் காதல் கவிதைகள்' இவர்தம் மொழியாக்கமாகத் தமிழுக்கு வாய்த்தது. "தமிழ் இலக்கிய விமர்சகர்கள்', "கவிதைப்பக்கம்' ஆகியன இவரது கட்டுரைத் தொகுப்புகள்.

வானொலி மற்றும் மேடைக்கவிதை அரங்குகளில் இவரது தலைமை பீடுடையது. கம்பீரக்குரலில் எவரையும் ஈர்த்து, அவரவர் இதயங்களுக்குள் உறைந்துகிடக்கும் கவிதை உணர்வைத் தூண்டி எழுப்பிக் கண்களில் மின்னல் தோன்ற வைத்துக் கைதட்டல்களை அறுவடை செய்வார்.

மகாகவி பாரதியிடம் மாறாத அன்புகொண்ட பாலா தந்த ஒப்பிலக்கிய நூல், "பாரதியும் கீட்சும்', "சர்ரியலிசம்' இவரது ஆங்கிலப் புலமையின் செறிவுக்குப் பிறந்த இனிய தமிழ்த் திறனாய்வுக் குழவி. நினைவில் உறையும் கவிஞர் மீரா குறித்து இவர் ஆங்கிலத்தில் தந்த ஙங்ங்ழ்ஹ: ஏண்ள் ப்ண்ச்ங் ஹய்க் அழ்ற் - ஓர் அன்பின் காணிக்கை. தேர்ந்தெடுத்துப் பழகும் இவரது நட்பு வட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளைத் தெரிவுசெய்து தொகுத்தளித்த பாலா, கவிஞர் சிற்பியின் மணிவிழாக் காலத்தில், அவரது கவிதைகளைத் தொகுத்து, "சிற்பியின் கவிதை வானம்' எனும் நூல் தந்தார்.

சிற்பியின் 70-ஆவது வயதில், "சிற்பி-கவிதைப் பயணங்கள்' எனத் தெரிவுசெய்த கவிதைகளைத் தொகுத்துத் தந்தார். சக படைப்பாளிகளுக்கும், இளங் கவிகளுக்கும் இவர் அளித்த முன்னுரைகளின் தொகுப்பு, "முன்னுரையும் பின்னுரையும்'. ஆங்கிலம் தமிழ்மொழிகளில், சுமார் 20 நூல்களை எழுதியவர்; ஏராளமானவர்களை எழுதவைத்தவர். இராசிபுரம், தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள அரசுக் கல்லூரிகளில் ஆங்கில இணைப் பேராசிரியராகப் பணியாற்றி, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார். கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஒப்பாய்வுத்துறையில், வருகைதரு பேராசிரியராகத் திகழ்ந்து, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த கவிஞர் பாலா, ஏராளமான தேசிய, சர்வதேசியக் கருத்தரங்குகளை, பயிலரங்குகளைத் தலைமையேற்று நடத்தியவர்.

இலங்கை கலாசார அமைச்சகம் நடத்திய மாநாட்டிலும், நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டிலும், 2005-இல் கனடாவில் நடைபெற்ற சார்க் மாநாட்டிலும் பங்கேற்று, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர். சாகித்ய அகாதெமியின் தேசியக் குழு உறுப்பினராகவும், தமிழ்மொழியின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்படப் பணியாற்றியவர். "என் கவிதை' என்று தலைப்பிட்டு,


கவிதையைப் புதிதாக்குவது பற்றி

என்னிடம் பேசாதீர்கள்!

நான் உண்மையைக்

கவிதையாக்கிக்

கொண்டிருக்கிறேன்...


என்று எழுதிய பாலா,


வணக்கம் என்பார்

வணங்க மாட்டார்

நலம் பார்த்தறியார்-

நலமென் றெழுதுவார்

பொதுவான பொய்களில்

பொலிகிறது வாழ்க்கை!


என்று போலி வாழ்க்கையைப் பகடி செய்கிறார்.

பாரதியின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட பாலா, அவர்தம் நினைவு நாளன்றே 11.9.2009-இல் அமரரானார். என்றாலும், பிரிவின் துயர்பொறாது கலங்கும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் வந்து காணவேண்டும் என்பதற்காகக் கண்ணாடிப் பேழையில் இரு வாரங்களுக்குமேல், அவருடைய உடலை வைத்துக் காத்தனர் அவர்தம் இல்லத்தார். காலங்கடந்து கவிதையாய் வாழும் பாலாவின் கவியுளம் காலத்தை அசைபோடுகிறது இப்படி-


கடந்த காலம்

ஒரு உடைந்த

மண் கலம்

எதிர் காலம்

ஒரு அமுதப்

பொற்கலசம்

நிகழ்காலம்

ஒரு வெற்றுப்

பாத்திரம்

- எனினும்

உள்ளே தெரியும்

வர்ணமயமாய்

கனவுகள்

பழைய நிராசையின்

பூரண நிழலாய்!


தமிழின் கவிதை வரலாற்றில் பூரண நிழலாய்த் தங்கிச் சிரிக்கிற பாலாவின் இருக்கை இன்னும் காலியாகவே இருக்கிறது.

நன்றி - தமிழ்மணி