27/08/2011

நிகும்பலை – புதுமைப்பித்தன்

விடிந்து வெகு நேரமாகிவிட்டது.

அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.

எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர் மாணவன் கையிலிருந்த புத்தகத்தில் ஏகாக்கிர சிந்தையாக இருந்தான்.

அன்று இரவு அவனுக்குச் சிவராத்திரி; பரீட்சை நெருங்கினால் பின் மாணவர்களுக்குச் சிவராத்திரி ஏன் வராது?

வெளியே தடதடவென்று கதவைத் தட்டும் சப்தம் அவனது யோகத்தைக் கலைத்தது.

"மிஸ்டர் ராமசாமி! மிஸ்டர் ராமசாமி!" என்று அவன் நண்பனின் குரல்.

கதவைத் திறக்கிறான்.

"என்னவே! நீரெல்லாம் இப்படி 'ஸ்டடி' செய்தால் பரீட்சை தாங்குமா? 'கிளாஸ்' தான்!" என்று வந்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.

"ஏது, ரொம்ப நேரமாகிவிட்டது போலிருக்கே? நீர் உள்ளேயிரும்; நிமிஷத்தில் ஜோலியை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்; 'இண்டியன் ஹிஸ்ட்ரி'யை முடித்துவிடலாம். 'எ மினிட்' " என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான்.

"உம்ம படிப்புக்கு நான் எங்கே?" என்றார் வந்தவர்.

இருவரும் பி.ஏ. பரீட்சைக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். உள்ளே தங்கியவர் பெயர் நடேசன். இல்லை, மிஸ்டர் நடேசன்.

"என்னவே! அதுக்குள்ளையா குளித்துச் சாப்பிட்டு விட்டீர்?"

"ஆமாம், ஆமாம்!" என்று ஈரம் சொட்டிக் கொண்டிருந்த தலையைத் துடைத்துக்கொண்டே வின்சென்ட் ஸ்மித் என்பார் எழுதிய இந்திய சரித்திரத்தை எடுத்துப் புரட்டினான்.

'அடிமை அரசர்களினால் உண்டான நன்மைகள்' என்ற பகுதியைத் திருப்பி வைத்துக்கொண்டு நாலாயிரப் பிரபந்தத்திற்காகத் தொன்று தொட்டு ஏற்பட்ட ராகத்தில் வாசிக்க ஆரம்பித்தான்.

மிஸ்டர் நடேசனும் தனது மூளைக்குப் பக்கபலமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு இருந்தவர், இரண்டு மூன்று நிமிஷம் கழித்து, "இதெல்லாம் 'எக்ஸாமினேஷனு' க்கு வராதுவே; வந்தாலும் ஜமாய்த்துவிடலாம். நம்ப புரொபெஸர் கொடுத்த நோட்ஸை எடுத்து நல்ல 'டாப்பிக்கலா' இரண்டு 'சப்ஜெக்ட்ஸ்' வாசியும்!' என்றார்.

இருவரும் ஐந்து நிமிஷமாகத் தேடினார்கள். அட்டைகள் இரண்டும் அந்தர்த்யானமாகி, பக்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துழையாமை செய்து கொண்டிருந்த ஒரு காகிதக் குப்பையை எடுத்தார்கள். அதை நோட்டுப் புஸ்தகம் என்பது உயர்வு நவிற்சி. எழுத்துக்கள் பிரம்மலிபி; ஆதியும் அந்தமும் இல்லாத சிவனார் போல் விளங்கியது.

இவ்வளவு அனந்த கல்யாண குணங்களும் நிறைந்த அந்த 'நோட்டுப் புஸ்தகத்தை'ப் பலவிதமாகப் புரட்டி, ஒரு மாதிரித் திருப்தியடைந்தவன்போல் 'பர்மிய யுத்தங்களின் சுருக்கம்' என்ற பகுதியைப் படிக்க ஆரம்பித்தான்.

"என்ன மிஸ்டர் இதைப் படிக்கிறீர்? போன ஸெப்டம்பருக்கு கேட்டாச்சே. மேலும், இந்த 'லெவன்த் அவரில் தரோ ஸ்டடி' முடியுமா? 'வார்ஸ்' வந்த காரணங்களைப் படியும். 'ஈவண்ட்ஸ்' விட்டுவிடும்; 'எப்பெக்டஸ்' படியும். 'பிரிப்பேர்' பண்ணவே தெரியலையே" என்று கடிந்து, சுருக்க வழி சொல்லித் தந்த மிஸ்டர் நடேசன் அதற்குள் அணைந்துபோன சிகரெட்டைப் பற்றவைத்துக் கும்பரேசக பூர்வமாக பிரம்ம பத்திரத்தின் சூக்ஷ்ம சக்தியை வெகு சுவாரஸ்யமாக ஆகர்ஷித்துக்கொண்டு இருந்தார்.

பரீட்சைப் பாராயணம் நடந்தது.

"என்ன மிஸ்டர்! மணி 'ஒன்' ஆகிவிட்டது போலிருக்கே! மத்தியானம் வந்து முடித்துவிடுவோமே!" என்றார் மிஸ்டர் நடேசன்.

"சரி."

*****

 

மத்தியானம்.

அகோரமான வெயில்.

"இந்த 'ஹாட் ஸ்ன்'லே வந்தது ரொம்ப 'டயர்டா'க இருக்கு!" என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்த நடேசன், ஒரு பாயை விரித்துக் கொண்டு சாய்ந்தான்.

"எனக்கும் 'டயர்டா'த்தான் இருக்கிறது. ஆனால் முடியுமா? சாயங்காலத்திற்குள்ளாவது 'இண்டியன் ஹிஸ்டிரி'யை முடித்துக்கொண்டு 'பாலிட்டிக்ஸ்' ஆரம்பித்து விடலாம்!" என்றார் மிஸ்டர் ராமசாமி.

"ஸ்! இந்த 'ஹெவி ஸ்ன்'லே 'சப்ஜெக்ட'ஸா? ஏதாவது 'லைட்'டா 'நான் டீட்டெயி'லை எடுத்துப் படி."

ஒரு மேல்நாட்டு நாவலாசிரியர் எழுதிய நாவல் ஒன்றை எடுத்து முதலிலிருந்து ஆரம்பித்தான்.

"என்ன மிஸ்டர் உமக்குச் சொன்னாலும் தெரியவில்லையே. சட்டர்ஜி 'நோட்ஸ்' எடுத்துப் படியும். இதில் மூன்று 'டாபிக்ஸ்'. அதை அவன் நல்லா 'டீல்' பண்ணியிருக்கிறான்."

படிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் மிஸ்டர் நடேசன் பரீட்சையை மறந்தார். இருவரும் சுவாரஸ்யமாகக் குறட்டைவிட்டார்கள்.

"'ஹால் டிக்கட்ஸ்' வந்துவிட்டதாம்!" என்று இரைந்து கொண்டே உள்ளே வந்தார் ஒரு மாணவர்.

"என்ன தூக்கம்? 'ஹால் டிக்கட்ஸ்' வந்துவிட்டதாம் ஸார்" என்று மறுபடியும் சொல்லி எழுப்பினான் வந்தவன்.

"எப்போ? எப்போ?" என்று எழுந்திருந்தார்கள் இருவரும்.

"'மார்னிங்'தான் வந்ததாம்; போய் வாங்கிக் கொண்டு வந்துவிடுவோமே" என்றார் வந்தவர்.

"புறப்படுவோம், 'எ மினிட்'..." என்று சொல்லிக்கொண்டு இருவரும் மேல்சட்டையைப் போட்டுக்கொண்டார்கள்.

"என்ன மிஸ்டர் சண்முகம்? 'சப்ஜெக்ட்' எல்லாம் முடிச்சாச்சா?" என்று கேட்டான் ராமசாமி.

"என்ன பிரதர், 'சப்ஜெக்ட்ஸ்' எல்லாம் அப்படியே இருக்கு; இங்கிலீஷைத் தொடவே இல்லை. நீங்கள் எதுவரைக்கும் முடித்திருக்கிறீர்கள்?" என்றார் சண்முகம்.

"என்ன 'பிரதர்?' அன்னிக்கே நீங்க 'ஹிஸ்டரி'யை எல்லாம் முடித்தாய்விட்டது என்றீர்களே!" என்று சிரித்தான் நடேசன்.

"ஒரு தடவை 'டச்' பண்ணா போதுமா? 'ஸ்டடி' பண்ண வேண்டாமா?" என்றார் சண்முகம்.

"எங்களுக்கு ஒரு தடவை 'ரிவைஸ்' பண்ணவே 'டயம்' இல்லையே. பிரதர்! கொஞ்சம் ஒங்க 'எக்கனாமிக்ஸ்' நோட்டைக் கொடுங்கள். 'மார்னிங்' தந்துவிடுகிறேன்" என்றான் ராமசாமி.

"இல்லை 'பிரதர்'; அதைத்தான் இப்போ நான் 'ஸ்டடி' பண்றேன். நாளைக்குக் கொண்டுவாரேனே!"

"ஏன் பிரதர், நீங்களும் நம்ப ரூமிற்கு வந்தால் ராத்திரியிலேயே எல்லோரும் 'ஸ்டடி' செய்துவிடலாமே, எப்படி?" என்றான் நடேசன்.

"சரி."

"இப்படி ஹோட்டலுக்குப் போவோம். 'டய'மாகி விட்டது!" என்றான் ராமசாமி.

மூவரும் கலாசாலையை நெருங்கினார்கள். அப்பொழுதுதான் கலாசாலை ரைட்டர் தனது அறையைச் சாத்திப் பூட்ட எத்தனித்தார்.

"பிரதர், கொஞ்சம் தயவு செய்யணும்!" என்று சண்முகம் ஓடிப்போய்க் கையைப் பிடித்தான்.

"ஏன் சார், 'ஆபீஸ் அவர்'ஸில் வரக்கூடாது? எனக்குக் கொஞ்சம் 'பிஸினெஸ்' இருக்கிறது. சார்" என்று பிரமாதப் படுத்திக்கொண்டார் ரைட்டர் அனந்தராம் அய்யர்.

சண்முகத்தின் கையிலிருந்த ஏதோ ஒரு சிறிய விஷயம், ரைட்டர் பையில் 'கிளிங்' என்ற சப்தத்துடன் விழுந்தது. வேதாரண்யத்தில் கதவைத் திறக்கச் செய்யும்படி பாடினார்களாமே, அந்தப் பாட்டைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தது! உடனே ரைட்டர் முகம் மலர்ந்து உபசரிக்க வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

மூவரும் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.

எதிரே இவர்களுடைய சரித்திர ஆசிரியர் வந்தார். இவர் மூளையில் இல்லாதது சரித்திரம் சம்பந்தப்பட்ட மட்டில் பரீட்சைக்கு அவசியமில்லாதது என்று சொல்லிவிடலாம். அட்சரம் பிசகாமல் அவர் படித்த புத்தகங்களின் கதம்பமாக இருக்கும் அவர் பிரசங்கங்கள், சரித்திரங்களை யூனிவர்சிட்டி கேள்விகளின் விடைகளாக மாற்றிக் கற்றுக்கொடுப்பதில் நிபுணர்; பரீட்சையில் மாணவர்கள் தோற்காதபடி பார்த்துக் கொள்வதிலும் நிபுணர்.

இவர்களைக் கண்டதும், "என்னடே! 'ஸ்ப்ஜெக்ட்ஸ்' எல்லாம் ஆகிவிட்டதா? 'இண்டியன் ஹிஸ்டரி' முடித்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

"ஆம் சார்" என்றான் நடேசன்.

"இந்த மார்ச்சில், 'டல்ஹௌ'ஸியில் ஒரு கேள்வி வருமப்பா. படித்தாகிவிட்டதா?" என்றார்.

"'பாலிஸி ஆப் லாப்ஸ்' தான் சார் அதில் முக்கியம்!" என்றான் நடேசன்.

"அதைச் சொல்லு பார்ப்போம்" என்றார் புரொபெஸர்.

நடேசன் தனது சொந்த இங்கிலீஷில் சொல்லிக்கொண்டு வந்தான்.

புரொபெஸர் இடைமறித்து, "இப்படி எழுதினால் உனக்குச் சுன்னம்தான். நீ என் 'நோட்ஸை'ப் படித்தாயா?" என்று கேட்டுவிட்டு, "ராமசாமி, நீ சொல்லு பார்ப்போம்" என்றார்.

ராமசாமி பிளேட் வைத்தான். இடையில் ஒரு வார்த்தை திக்கிற்று; புரொபெஸர் அதைத் தொடர்ந்தே பாராயணம் பண்ணி முடித்தார். "கேர்புல்லாகப் படியுங்க. இன்னும் ஒரு வாரந்தான் இருக்கிறது" என்று புரொபெஸர் விடைபெற்றுக் கொண்டார்.

"ராமசாமிக்குக் 'கிளாஸ்'தான்!" என்று சிரித்தான் நடேசன்.

"இதைத் தவிர தெரியாதே. நீயாவது சொந்தமா ஏதும் அடிச்சு விடுவாய்" என்றான் ராமசாமி.

"மிஸ்டர், ஒங்க நம்பர் என்ன?" என்றான் நடேசன்.

"உம்முடையதைச் சொல்லுமேன்" என்றார் சண்முகம்.

"நமக்கு கோளாத்தான்!" என்றான் நடேசன்.

"அதென்ன ஜோஸியம்?" என்றான் ராமசாமி.

"நம்பரில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒற்றை நம்பராக 1, 3, 5 உள்ளதாக வந்தால் பாஸ். இல்லாவிட்டால் கோளா?"

"என்னுடையது 8700" என்றான் ராமசாமி.

"கொளுத்திவிட்டீர். 'கிளாஸ்' தான். அப்பவே சொன்னேனே!" என்றார் நடேசன்

"என் நம்பர் 7743" என்றார் சண்முகம்.

"உமக்குப் பாஸ்தான், சந்தேகமா?"

"மிஸ்டர் நடேசன், உம்ம நம்பர் என்ன?"

"அப்பவே சொன்னேனே கோளா என்று."

"சொல்லுமையா. எங்கே இங்கு கொடும்" என்று ஹால் டிக்கெட்டைப் பிடுங்கிப் பார்த்தார்கள்.

நடேசன் நம்பர் 7744.

மூவரும் ஹோட்டலுக்குள் சென்றார்கள்.

2
ஒரு வாரம் கழித்து.

பரீட்சை தினம். பட்டம் பெறுவதற்கோ அல்லது திரும்பப் பணங்கட்டி அதிர்ஷ்ட தேவதையை வரிக்க முயலுவதற்கோ ஏற்பட்ட திருநாள். கிண்டிக்கும் சர்வகலாசாலைக்கும் ஒரே விதமான நியாயம், ஒரே விதமான போட்டி ஜயிக்கும்வரை அல்லது பணம் இருக்கும்வரை, வரையாது கொடுக்கும் வள்ளல்களாக இருக்க வேண்டும். அதுவும் தினம் சராசரி வருமானம் 0.1.3வாக இருக்கும் இந்தியப் பெற்றோரின் குழந்தைகள்.

நடேசன் கோஷ்டியார் வாசித்துவந்த கலாசாலையில் காலை எட்டு மணியிலிருந்தே ஆர்ப்பாட்டம். உண்மையில் கலாசாலை மைதானத்திலும் வராந்தாவிலுமே இந்த அமளி, இரைச்சல்.

உள்ளே பரீட்சைப் புலியைப் பத்து மணிக்கு மாணவர்களுக்காகத் திறந்துவிடுவதற்காகவோ என்று எண்ணும்படி, கதவுகள் சிக்கென்று அடைக்கப்பட்டிருந்தன. கலாசாலை வேலைக்காரன் பொன்னுசாமி - வேலைக்காரன் என்றால் பொன்னுசாமிக்குக் கோபம் வந்துவிடும்! 'பியூன்' என்று சொல்லவேண்டும் - ரைட்டர் அய்யரைப் பின்பற்றி ஒரு பெரிய காகித மூட்டையை எடுத்துச் செல்லுகிறான். உள்ளே எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா? மூக்குத்தான் தட்டையாகிறது.

*****
இன்று தான் மாணவர்கள் வெகு கோலாஹலமாக உடுத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு மூன்று முழுத் துரைகளையும் (உடுப்புவரைதான்) காணலாம். ஒவ்வொருவர் கையிலும் கத்தைப் புஸ்தகங்கள். இதில் சிலர், 'எப்பொழுதும்போல் இருப்பேன் இன்னும் பராபரமே!" என்பவர் போல் கவலையற்ற உடையுடன் வந்திருக்கிறார்கள். இந்த ரகம் மாணவர்கள்தான் அதிகப் படிப்பு. சிலர் 'என்ன வரும்' என்ற தர்க்கம்; 'வந்தால் என்ன எழுதுவது' என்ற பிரசங்கம். சிலர் புரொபெஸர்களை வளைத்துக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைக்கெடியாரம். ஒரு மாணவன் பிக்-பென் (Big-Ben)னையே தூக்கிக்கொண்டு வந்து விட்டான். ஒவ்வொருவர் வசத்திலும் குறைந்தது இரண்டு பௌண்டன் பேனாக்கள்; சிலரிடம் ஒரு பெரிய ஸ்வான் இங்க் புட்டி. மாணவர்களிலும் சில அபூர்வ பிரகிருதிகள் உண்டு. அவை, டார்வின் கூற்றுக்கு உதாரணமாக, மோட்டுக் கிளைகளில் உட்கார்ந்து புஸ்தகத்தை ஆழமதியுடனே படிப்பதைக் காணலாம்.

நடேசன் கோஷ்டியும் அதோ வருகிறார்கள்.

*****

 

கலாசாலை மணி.

பரீட்சை ஆரம்பமாகிவிட்டது!

சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும், 'போர் முடிந்தது. இன்று போய் நாளை வா!' என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும், "ஸ்டாப் பிளீஸ்" என்று காவலிருந்த புரொபெஸர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை, ஒரு பையனைப் பண்டிதர் இழுப்பிற்கும் விடாமல் எழுதச் செய்கிறது.

சிலர் தங்கள் நம்பர்களைப் போட மறந்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ரைட்டர் அய்யர், பொன்னுசமி முதலியோர் அவனைக் கண்டுபிடித்து நம்பரைப் போடச் செய்யுமுன் மூளை கலங்கிவிடும். இப்படி வெளியேறியவர் ஒருவர் இருவர் தாங்களே வந்து போட்டுவிட்டு, கலாசாலைத் தொழிலாளிகளின் வசைமொழி பெற்றுத் திரும்புவார்கள்.

நடேசன் கோஷ்டியும் வெளியே வந்தார்கள். ஆனால் உற்சாகமில்லை. ஒரு வேளை களைப்பாகவும் இருக்கலாம். "எல்லாம் 'டவுட் புல்' லாக இருக்கிறது!" என்று பேசிக் கொண்டார்கள். அவர்களுக்குள் ஒரு கேள்விக்கு எப்படி விடை எழுதுவது என்ற தர்க்கம்.

இப்படித்தான் மற்ற நாட்களும்.

பரீட்சை ரிஸல்ட் வந்துவிட்டது. மூவரும் தேறி விட்டார்கள்.

இப்பொழுது செர்விஸ் கமிஷன் பரீட்சை எழுதுவதாகத் தீர்மானம். அதிலும் தேறிவிடுவார்கள்.

நன்றி – சென்னை லைப்ரரி.காம்

நாசகாரக் கும்பல் - புதுமைப்பித்தன்

டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல் தயாரித்துவிட்டு, பென்ஷன் பெற்று, திருச்செந்தூர் ஜில்லா போர்டு ரஸ்தாவில் பாளையங்கோட்டைக்கு எட்டாவது கல்லில் இருக்கும் அழகியநம்பியாபுரம் என்ற கிராமத்தில் குடியேறினார். (என் திருநெல்வேலி நண்பர்கள் அழகியநம்பியாபுரத்தைத் தேடி ஜில்லாப் படத்துடன் மோதி மூளையை வரள வைத்துக் கொள்ள வேண்டாம். அதில் இல்லை.)

ஏறக்குறைய அதே சமயத்தில் தான், குடிமகன் மருதப்பனும் இலங்கைத் தோட்டத் துரைகளுக்கு க்ஷவரகனாக இருந்து, படிப்படியாகக் கொழும்பு கோட்டைத் தெருக்களில் ஸலூன் வைக்கும் அதிர்ஷ்டமடைந்து, அதில் ஒரு பத்து வருஷ லாபத்தாலும், அங்கு சிறிது மனனம் செய்து கொண்ட 'வாகட சாஸ்திரம்', 'போகர் இருநூறு', 'கோரக்கர் மூலிகைச் சிந்தாமணி' இவற்றின் பரிச்சயத்தாலும் உயர்திரு. மருதப்ப மருத்துவனாராகி அழகியநம்பியாபுரத்தில் வந்து குடியேறினான்.

இவ்விருவரும் இவ்வூருக்கு ஒரே சமயத்தில் படையெடுத்தது தற்செயலாக ஏற்பட்ட சம்பவம். ஆனால், அழகியநம்பியாபுரத்தில் இவர்கள் வருகைக்கப்புறம் ஒரு மறைமுகமான மாறுதல் ஏற்பட்டது.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை சாதாரண வேளாளர் வகுப்பில் பிறந்து, வைத்தியத் தொழில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் வாலிப காலத்தில் அதில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில் வைத்தியக் கல்வி படிக்க வருகிறவர்களுக்கு 'ஸ்டைப்பன்ட்' (உபகாரச் சம்பளம்) கொடுத்ததும் இவருக்கு இந்தத் தொழிலில் ஆசை விழ ஒரு தூண்டுகோல் என்று சொல்ல வேண்டும். மேலும், அக்காலத்தில் சர்க்கார் உத்தியோகம் கைமேலே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளைக்கார வைத்திய சாஸ்திரம் இவ்வளவு பிரமாத அபிவிருத்தியடையவில்லை. உளுத்துப்போன அந்த 'மெடீரியா மெடிகா'வும் சீமையிலிருந்து தளும்பி வழிந்த வைத்திய சாஸ்திரமுமே இந்திய விதேசி வைத்தியசாலை 'வடிகால்களில்' ஓடின. ஆகையால், பாஸ் செய்வதற்கும் உத்தியோகம் பார்ப்பதற்கும் அவ்வளவாகச் சிரமமில்லாதிருந்தது. மேலும் வெள்ளைக்காரர்கள் தங்கள் வைத்திய சாஸ்திரத்தைப் பிரசாரம் செய்வதிலேயே ஊக்கங் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை படித்துத் தேறி, பணம் சம்பாதித்தது ஒரு பெரிய வசன காவியம்; அதற்கு இங்கு இடமில்லை. ஆனால், அந்தப் 'பிணமறுக்கும் தொழில்' அவரை நாஸ்திகராக்கிவிடவில்லை. அவருக்கு 'மெடீரியா மெடிகா'வில் எவ்வளவு அபார நம்பிக்கையோ, அவ்வளவு சைவ சித்தாந்த நூல்களிலும் உண்டு. சிவஞான போதச் சிற்றுரையும், 'ஸ்டெதாஸ்கோப்'பும், உத்தியோக காலத்தில் அபேதமாக இடம்பெற்றன. மேலும் திருநீறு முதலிய புறச் சின்னங்களின் உபயோகத்தையும் அவர் நன்கறிந்தவர்.

ஸ்ரீ விசுவநாத பிள்ளை பொதுவாக நல்ல மனுஷ்யர். நாலு பெயரிடம் சுமுகமாகப் பேசிப் பழகக்கூடியவர். எடுப்பு, மாஜி சர்க்கார் உத்தியோகஸ்தர் என்ற மிடுக்கு, ஒன்றும் கிடையாது.

பிள்ளையவர்களின் குடும்பம் விசாலமானதன்று. பெரிய கட்டுக் கோப்பில் தம் வம்சம் விருத்தியாகி லோகத்தின் அஷ்ட திக்கிலும் சென்று ஜயக்கொடி நாட்ட வேண்டும் என்று அவர் ஆசை கொள்ளாதவர் என்பதை அவருடைய ஏகபுத்திரன் மிஸ்டர் கிருஷ்ணசாமி நிரூபித்தான். ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை - அதாவது 'சாலாச்சியம்மா' (விசாலாட்சியம்மாள்) - நிரந்தரமாக, பிள்ளையவர்களின் சலித்துப் போன வைத்தியத்திற்கும் மீறின வயிற்று சம்பந்தமான வியாதி உடையவள் என்பதை மத்தியானத்தில் மட்டிலும் அருந்தும் கேப்பைக் கஞ்சி எடுத்துக் காட்டுகிறது. சாலாச்சியம்மாள் பழைய காலத்து வேளாளக் குடும்ப நாகரிகத்து மோஸ்தர் பின்கொசுவம் வைத்துக் கட்டிய உடையுடனும், கழுத்து காதணிகளுடனும் வீடு நிறைந்து காட்சியளிப்பாள்.

மிஸ்டர் கிருஷ்ணசாமி அப்பாவின் வறுபுறுத்தலுக்காகப் 'பட்டணத்தில்' வைத்தியப் படிப்பில் தகப்பனார் சென்ற பாதையில் நம்பிக்கைகொள்ள முயலுகிறான்.

உயர்திரு. மருதப்ப மருத்துவனார் வாழ்க்கை இதே ரீதியில் செல்லவில்லை. மேடு பள்ளங்களைக் கண்டது. தலை நரைக்கும்வரை உழைப்பில் காய்த்துப்போன கை, காசு பணத்தை நிறையக் காணவில்லை.

அநுபவத்தின் கொடூரமான அல்லது இன்பகரமான சாயை விழாத, நம்பிக்கையும் நேசப்பான்மையும் நிறைந்த வாலிபப் பருவத்தில் குடிமகன் மருதப்பன் தூத்துக்குடியில் கொழும்புக்குக் கப்பலேறினான். திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புக்களிடை கொழும்பு என்றால் இலங்கையின் ரப்பர் தேயிலைத் தோட்டங்கள் என்றுதான் பொருள். உயர்ந்த வேளாள வகுப்புக்களிடையேதான் கோட்டைப் பகுதி மண்டி வியாபாரம் என்ற அர்த்தம். மருதப்பன் நம்பிக்கையும் மேற்சொன்ன விதத்தில்தான்.

நூரளைத் தோட்டத் துரைகளுக்கும் உயர்தரத் தோட்ட உத்தியோகஸ்தர்களுக்கும் க்ஷவரத் தொழில் செய்து, கை நிறையக் கொடுத்த பக்க்ஷிஸ், சம்பளம், உணவு இவற்றுடன், இடையிடையே தொல்லைப்படுத்திய மலைக்காய்ச்சலும் பெற்று, கடைசியாகத் தன் முப்பதாவது வயதில் கொழும்பில் ஸலூன் வைத்தான். அந்தக் காலத்தில் ஸலூன் தொழிலில் அவ்வளவு போட்டி கிடையாது. இந்தியாக்காரர்கள் அவனுக்கு ஆதரவு அளித்தனர். தொழில் வளர்ந்தது. எப்பொழுதோ ஒரு முறை செய்த அவனுடைய இந்தியப் படையெடுப்பும் கலியாணமும் இடையிடையே நடைபெற்ற சம்பவங்கள்.

ஸலூன் முயற்சியில் நல்ல பலன் ஏற்பட்டதோடு, சித்த வைத்தியசாஸ்திரத்தில் சிறிதளவு பரிச்சயம் பெற்றுக்கொள்ள அவகாசமும் கிடைத்தது. இதனுடன் சமீபகாலமாக, இலங்கை மருத்துவ குல அன்பர்களின் சர்ச்சைகளின் மூலஸ்தானமாக விளங்கும் இலங்கைத் தினசரி ஒன்றும் அவன் மன விசாலத்திற்கு உற்ற துணையாக இருந்தது.

மருத்துவனார் தம் ஐம்பதாவது வயதில் தாய் நாடு திரும்பும் இலங்கைக் குடியேற்ற விருதுகளுடன் திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய பொழுது கையில் ரொக்கமாக ரூ.5,000 மும், மேற்கொண்டு அழகியநம்பியாபுரத்தில் மூன்று கோட்டை நன்செய்யும், கொழும்பு ஸலூனில் வாரிசாக அவர் புத்திரனும் உண்டு.

அழகியநம்பியாபுரத்திற்கு பஸ் வந்துவிட்டது என்பதற்கு ரஸ்தாவின் இடப்பக்கத்துப் புளியமரத்தடியில் இருக்கும் எட்டாவது மைல் கல், அதற்குப் பக்கத்தில் உள்ள வயிரவன் பிள்ளை வெற்றிலை பாக்குக் கடை, டாக்டர் விசுவநாத பிள்ளையின் நந்தவனம் என்ற புன்செய்த் தோப்பின் மூங்கில் கேட், இவை எல்லாவற்றிற்கும் எதிராக இருக்கும் மருதப்ப மருத்துவரின் இரண்டடுக்குக் காறை வீடு - யாவும் பறைசாற்றினாற்போல் அறிவிக்கும்.

ரஸ்தாவில் இரு புறமும் மிகவும் நெருக்கமாக வளர்ந்த புளிய மரங்கள்; பஸ் நிற்கும் ஸ்தானத்துக்கு அருகில் எப்போதோ ஒரு காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்; அதன் குறுக்குக் கல் யதாஸ்தானத்தைவிட்டுக் கீழே விழுந்து எத்தனை காலமாயிற்றோ! பொதுவாக, நம்மில் பலர் தம்மை எந்த ஹோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்களோ, அதே உரிமையில் அதற்குச் சுமைதாங்கி என்ற பெயர் கிடைத்திருக்கிறது.

நேரம் நல்ல உச்சி வெய்யில், ஆனாலும், சாலையில் இம்மிகூடச் சூரிய வெளிச்சம் கிடையாது. பலசரக்குக்கடைச் சுப்புப் பிள்ளை பட்டறையில் உட்கார்ந்து, சுடலைமாடன் வில்லுப்பாட்டுப் புஸ்தகம் ஒன்றை ரஸமாக உரக்கப் பாடி, கடைச் சாய்ப்பின் கீழ் துண்டை விரித்து முழங்காலைக் கட்டி உட்கார்ந்திருக்கும் இரண்டொரு தேவமாரை (மறவர்) மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார். தம்பலத்தால் வாயில் எச்சில் ஊற்று நிறைய நிறைய, வாசிப்புக்கு இடையூறு ஏற்படாதபடியும், கீழே உட்கார்ந்திருப்பவர் மீது சிறிதும் தெறிக்காதபடியும் லாவகமாகத் தலையை வெளியே நீட்டி அவர் துப்பும்போது, கடையின் பக்கத்துச் சுவரில் துப்பாமலிருப்பதற்கு நீண்ட நாள் அனுபவம் மட்டும் போதாது; அதற்குத் தனித் திறமையும் வேண்டும் என்பது தெரியும். ஆனால் கப்புப் பிள்ளையின் தனித் திறமை கேட்டிருக்கும் மறவர் கண்களில் படவில்லை. உலகத்தில் புகழையும் பெருமையும் சமாதி கட்டித்தானே வழிபடுகிறார்கள்! அழகியநம்பியாபுர மறவர்களுக்கும் இந்தத் தத்துவ இரகசியம் தெரிந்திருந்தது என்றால் அவர்களைப் பற்றி மனிதர்கள் என்று நம்பிக்கை கொள்ளாமல் வேறு என்ன செய்வது?

மலையாளம் போனியானா, ஏ, சுடலே!
நீ மாறி வரப் போரதில்லை!...

என்று இழுத்தார் பிள்ளை.

"ஆமாமிய்யா! மலையாளத்திலே அந்தக் காலந்தொட்டே கொறளி வேலைக்காரனுவ இருக்கானுவளா?" என்றான் பலவேசத் தேவன் என்ற அநுபவமில்லாத இளங்காளை. அவனுடைய முறுக்கேறிய சதை அவன் வேலை செய்கையில் உருண்டு நெளிவதைச் சாப்பாடில்லாமலே பார்த்துக்கொண்டிருக்கலாம். அவன் தலையாரித் தேவனின் மகன்.

"நீ என்னலே சொல்லுதே? அந்தக் காலத்துலேதான் இந்த வித்தை பெரவலம். சொடலையையே சிமிளிலே வச்சு அடச்சுப் பிட்டானுவன்னா பார்த்துக்கிடேன்!" என்றான் வேலாண்டி. அவன் ஒரு கொண்டையன் கோட்டையான் (மறவர்களுக்குள் ஒரு கிளை). வயது விவேகத்தைக் குறிக்க வேண்டிய நரைத்த தலை அந்தஸ்தைக் கொடுத்தது; ஆனால் உடல் அநுபவமற்ற இளங்காளைகளின் கட்டு மாறாமல் இருந்தது. வாரத்திற்கு நிலத்தைக் குத்தகை எடுத்து, அதில் ஜீவிக்க முயலும் நம்பிக்கையின் அவதாரமான தமிழ்நாட்டு விவசாயிகளில் அவன் ஒருவன். இடுப்பில் வெட்டரிவாள் ஒன்று வைத்திருப்பான். அதன் உபயோகம் விறகு தறிப்பது மட்டுமல்ல என்று தெரிந்தவர்கள் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், நாணயஸ்தன்; பொய் சொல்லுவது மறக் குலத்தோர்க்கு அடுக்காது என்று பழக்கத்திலும் அப்படியே நடப்பவன்.

இந்த இடைப் பேச்சைக் கேட்ட சுப்புப் பிள்ளை, கண்ணில் போட்டிருந்த பித்தளைக் கண்ணாடியை நெற்றிக்கு உயர்த்தி, சிறிது அண்ணாந்து பார்த்து, "அட்டமா சித்தியும் அங்கேயிருந்துதான் வந்திருக்கிறது. புராணத்திலேயேதான் சொல்லியிருக்கே!" என்று ஒரு போடு போட்டார்.

இப்படிப்பட்ட விஷயங்களில் சுப்புப் பிள்ளையின் தீர்ப்புக்கு அப்பீலே கிடையாது; ஏனெனில், பெரும்பாலும் அழகியநம்பியாபுரவாசிகளில் பலர் அவரிடமே குட்டுப்பட்டு சுவடிப் பாடம் கற்றிருக்கின்றனர். பலவேசமும் இதற்கு விதிவிலக்கல்லன். இப்பொழுது அவன் கோணல் மாணலாகக் கையெழுத்துப் போடுவதெல்லாம் அவர் புண்ணியத்தில்தான்.

"நம்மவூர்லே இருந்தானே கள்ளப்பிரான் பிள்ளை, கட்டேலே போவான், அவன் வேலெமானத்தைப் பாத்திரச் சாமான் விக்கிறவன் தடுக்காட்டி... நானே நேர்லே கண்டெனே! நம்ம வைத்தியர் வாளுக்குந்தான் தெரியும்!" என்று தலையை எதிர்வாடையை நோக்கி நிமிர்த்தி ஆட்டினார் சுப்புப் பிள்ளை.

சம்பத்துக் காரணமாக ஜாதி வித்தியாச மனப்பான்மையைச் சிறிது தளர்த்தி, ஒரு விதத்திலும் பட்டுக் கொள்ளாமல் 'வைத்தியர்வாள்' என்று மருதப்ப மருத்துவனாரை அழைப்பது அவரது சமீபத்திய சம்பிரதாயம்.

'வைத்தியர்வாள்' இச்சந்தர்ப்பத்தில் வீட்டு முற்றத்தில் ஏதோ பச்சிலைகளை ஸ்புடமிட்டு முகம் வியர்க்க ஊதிக் கருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பாம்புச் செவியில் சம்பாஷணை அரை குறையாக விழுந்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்த மருத்துவனார், "பிள்ளையவாள், என்ன சொல்லுதிஹ?" என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

"என்ன! நம்ம கள்ளப்பிரான் பிள்ளே இருந்தானே... அவனைத் தான் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேன்... அவனைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே..." என்று கடையிலிருந்தபடி குரலெழுப்பினார்.

உடலைத் துடைத்துக்கொண்டு, வேஷ்டியை உதறிக்கட்டியவண்ணம் கடையை நோக்கி நடக்கலானார் வைத்தியர்.

2
அப்பொழுது தூரத்தில் மோட்டார் ஹார்ன் சப்தம் கேட்டது.

"ஏது மணியும் ஒண்ணாயிட்டுது போலிருக்கே. அன்னா கேக்கது மெயில் பஸ்தானே! பிள்ளைவாள் தானம் (ஸ்நானம்) பண்ணியாச்சா? வாரியளா - செல்லுமா?" என்றார் சாய்ப்புக் கம்பைப் பிடித்து நின்ற வைத்தியர்.

"போகத்தான். ஏலே, ஐயா பலவேசம், கடையெச் சித்தெ பாத்துக்கிட மாட்டியா?" என்று பஸ் வரும் திக்கை நோக்கினார். மெயில் பஸ் என்றும் மத்தியானம் ஒரு மணிக்கு அழகியநம்பியாபுரத்தைத் தாண்டிச் செல்வது ஒரு விசேஷமான சம்பவம். கடைப்பிள்ளைக்குத் திருநெல்வேலி டவுனிலிருந்து ஏதாவது சாமான் வரும்; டாக்டர் விசுவநாத பிள்ளை (வகுப்புவாரிப் பிரதிநிதித்வம், சைவத்தின் உயர்வு, ஆரியர் சூழ்ச்சி இத்யாதி விஷயங்களில் நம்பிக்கை கொண்ட ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்தான், ஆனாலும்...) அவர்களுக்கு 'ஹிந்து' பத்திரிகை வரும்; சமயா சமயங்களில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் வரக்கூடிய தொலைப் பிரயாணிகள் வருவார்கள்.

இரண்டொரு நிமிஷத்தில் பஸ் வந்து ஏக ஆர்ப்பாட்டமாகக் காய்ந்த சருகுகளை வாரி வாரி இறைத்துக் கொண்டு சுமைதாங்கி முன் நின்றது.

பஸ் டாப்பில் இருந்த கடைச்சரக்கை உருட்டித் தள்ள கண்டக்டர் டாப்பில் ஏறினான். டிரைவர் - ஐயா பீடி பற்ற வைக்க இறங்கிக் கடைப்பக்கம் வந்தார். இவ்வளவு நேரமாக வாமனாவதாரமெடுத்துக் கால்களைச் சுருட்டிக் கிடந்த பிரயாணிகளில் இரண்டொருவர் கீழே இறங்கினார்கள்.

முன்புறம் க்ஷவரம்; பின்புறம் பின்னல்; ஈய வளையம் இழுத்துத் தோளோடு ஊசலாடும் காது; இடையில் வேஷ்டியாகக் கட்டிய பழைய கிழிந்த கண்டாங்கிச் சேலை - இக்கோலத்தில் இடுப்பில் சாணிக்கூடை ஏந்திய இரண்டொரு பறைச் சிறுமிகள் எட்டி நின்று கார் வினோதத்தைப் பார்த்தனர்.

கடைச் சரக்கை மேலிருந்தபடியே எறிந்த கண்டக்டர், "ஸார், ஸுட்கேஸ் பெட்ஷீட் வேங்கிக்கிடுங்க!" என்று குரலெடுத்தான்.

டிரைவர் பக்கத்தில் இருக்கும் 'ஒண்ணாங் கிளா'ஸிலிருந்து, கையில் வதங்கிப் போன பத்திரிகை ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு 'மோஸ்தர்' வாலிபன் நாஸுக்காக இறங்கினான். அவனது 'சென்னை பிராட்வே' பாஷன் பிளேட் மூஞ்சியும், விதேசி மோஸ்தர் உடையும் யதாஸ்தானத்தை விட்டகன்ற மூலவர் போன்ற ஒரு விசித்திர சோபையை அவனுக்கு அளித்தன. அந்தக் காட்டு மிராண்டி ரஸ்தாவில் அந்தப் பழைய பசலி பஸ் எப்படியோ, அப்படி, லண்டனில் பழசானாலும் சென்னையின் நிகழ்காலமான அவனது உடை மோஸ்தர், அந்தக் கி.மு. உலகத்தில் அவனை வருங்கால நாகரிகனாக்கியது.

"ஏடே! தெரஸரய்யா மவன்லா வந்திருக்காவ!" என்று சொல்லிக் கொண்டே ஓடினான் பலவேசம் பெட்டியை இறக்க.

மாஜி உத்தியோகஸ்தர் மகன் என்றால் கிராமத்தில் எப்பொழுதும் ஓர் அந்தஸ்து உண்டே! அதைக் கொடுத்தனர் கடையில் பொழுது போக்க முயன்ற நபர்கள்.

"அதாரது?" என்று பொதுவாகக் கேட்டான் வேலாண்டி, கையைத் தரையில் ஊன்றி எழுந்திருக்க முயன்றுகொண்டு.

"என்னப்பா, இன்னந் தெரியலையா? நம்ம மேலவீட்டு தெரஸர் பிள்ளை இருக்காஹள்லா - அவுஹ மகன் மகராச பிள்ளை! - என்னய்யா சௌக்கியமா?" என்று கடைப் பட்டறையிலிருந்தபடியே விசாரித்தார் சுப்புப் பிள்ளை.

மகராஜன் அவர் திசையைப் பார்த்துச் சிரித்தான்.

"என்ன எசமான் சவுக்கியமா - அங்கே பட்டணத்திலே மளெ உண்டுமா? - ஐயா, உடம்பு முந்தி பாத்த மாறுதியே இரிக்கியளே!" என்றான் வேலாண்டி.

பீடியை இரண்டு தம் இழுத்து எறிந்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்ட டிரைவர், ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு, 'வண்டி புறப்படப் போகிறது. பிரயாணிகள் ஏறிக்கொள்க!' என்ற பாவனையில் ஹார்ன் அடித்தான். கண்டக்டர் அப்பொழுதுதான் தனக்கு ஞாபகம் வந்த 'ஹிந்து' பத்திரிகையை அவசர அவசரமாகக் கடைக்கு எடுத்து ஓடினான்.

தங்கள் தேக உபாதையை நீக்கிக் கொள்ளச் சென்றிருந்த பிரயாணிகள் அவசர அவசரமாக ஓடி வந்தனர். அதில் ஒரு முஸ்லீம் அன்பர் - பார்வைக்குச் செயலுள்ளவர் போல் முகத்தில் களை இருந்தது - அவர் முன் ஸீட்டைப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவசரமாக அதில் குறிவைத்து ஓடிவந்தார்.

இவ்வளவு கூட்டத்தையும் கவலையின்றிக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர், "என்ன மரைக்காயர்வாளா? ஏது இப்படி?" என்று முகமலர்ந்து குசலப் பிரச்னம் செய்தார்.

மரைக்காயர்வாள் செவியில், அவர் ஸீட்டைப் பிடித்து மேல் துண்டைப் போட்டு ஏறி உட்காரும் வரை, அது ஏறவில்லை. ஏறி உட்கார்ந்து வெளிக்கம்பியைப் பிடித்து உடலை முறுக்கிக் கொண்டு, தலையணி ஒருபுறம் சரிய, "வைத்தியர்வாள்! வரவேணும், ஒரு அவசரம், ஒரு நிமிட்!" என்றார்.

மருதப்ப மருத்துவனார் முகம் மலர்ந்தது. "ஏது மரைக்காயர்வாள், எங்கே இப்படி?" என்று சொல்லிக் கொண்டே பஸ் அருகில் ஓடினார்.

"நம்ம மம்முது கொளும்புக்குப் போரான் இல்லெ! டவுன் இஸ்டேஷன் வரை கொண்டுபோயி வளியணிப்பிப்புட்டு வருதேன். வாவன்னா கோனா இருக்காஹள்லா, அவுஹ அளெச்சுக்கிட்டுப் போரதாவச் சொன்னாஹ. அதிரியட்டும், நமக்கு ஒரு லேஹியஞ் செஞ்சு தாரதாவ சொன்னிஹள்லா? அதெத்தாங் கொஞ்சம் ஞாபகப் படுத்தலாமிண்டுதான்... இம்பிட்டுத்தான்... நீங்க வண்டியெவிடுங்க - சலாம்!" என்று அவர் பேச இடங்கொடாமல் காரியத்தை முடித்துக் கொண்டார் மாப்பிள்ளை மரைக்காயர்.

"சதி, சதி!" என்று சொல்லிக்கொண்டே பின் தங்கினார் மருத்துவனார். வண்டி புகையிரைச்சலோடு கிளம்பியது.

"பிள்ளைவாள்! என்ன வாரியளா?" என்று துண்டை உதறிவிட்டுத் தோளில் போட்டுக் கொண்டார் மருத்துவனார்.

"வாரியலா வைக்கச்சண்டா" என்று முணுமுணுத்துக்கொண்டே பட்டறையைவிட்டு இறங்கினார் சுப்புப் பிள்ளை.

இதுவரை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு சிகரட் பிடித்து நின்றது அலங்காரப் பொம்மை.

"நான் சின்ன எசமாஞ் சாமானெ எடுத்துக்கிட்டுப் போகுதேன், ஐயா, கடயெ பார்த்துக்கலே, பலவேசம் - வாங்க எசமான்!" என்று மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி மேல் துண்டுச் சும்மாட்டில் படுக்கையையும் தோல் பெட்டி ஒன்றையும் தூக்கிக்கொண்டு முன்னே நடந்தான் வேலாண்டி.

வைத்தியரும் கடைக்காரப் பிள்ளையும், டாக்டர் விசுவநாத பிள்ளை தோட்டத்திற்குள் மூங்கில் கதவைத் தள்ளிவிட்டு மறைந்தனர்.

சாலையில் முன்போல உயிரற்ற அமைதி. சுள்ளி பொறுக்கும் சிறுமிகள் கூட மறைந்துவிட்டனர்.

3
டாக்டர் விசுவநாத பிள்ளையின் தோட்டம் வெய்யிலுக்கு உகந்தது. வியர்க்க விருவிருக்கச் சுற்றியலைகிறவர்களுக்கு வேப்ப நிழலுக்கும் எலுமிச்சைக் காட்டுக்கும் மத்தியில் கட்டப்பட்டிருக்கும் சவுக்கை பூலோக சுவர்க்கம். சாப்பாட்டு நேரங்களைத் தவிர மற்றப் பொழுதைப் பிள்ளையவர்கள் சவுக்கையிலேயே மெய்கண்ட சிவாச்சாரியார் உறவிலேயே கழிப்பார். மத்தியானப் பொழுதில் 'ஹிந்து'ப் பத்திரிகையோடு விளங்குவார்.

இருபக்கமும் நந்தியாவட்டையும் அரளியும் செறிந்த பாதை வழியில், வைத்தியருடன் சென்ற கடைக்காரப் பிள்ளை, "ஐயா! என்ன அங்கெ இருக்கியளா? மஹராசன் வந்திருக்கான் போலிருக்கே!" என்று குரல் கொடுத்தார்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த பிள்ளை எழுந்து, குனிந்த வண்ணம் மூக்குக் கண்ணாடியின் மேல்வழியாகப் பார்வையைச் செலுத்தி, "லீவு! வர்ரதாக எளுதியிருந்தான் - எங்கே?" என்று கேட்டுக்கொண்டே அந்தஸ்தாக எழுந்திருந்தார்.

"வேலாண்டி வீட்டுக்கு அளச்சுக்கிட்டுப் போனான். இந்தாருங்க உங்க பேப்பர்!... சண்டை எப்பிடி யிருக்கு?" என்று பதில் எதிர் பார்க்காமலே மருத்துவரைத் தொடர்ந்தார் பிள்ளை.

சிறிது நேரத்தில் பிள்ளை மூங்கில் கதவையடைத்துக்கொண்டு போகும் சப்தம் கேட்டது.

விசுவநாத பிள்ளை தோட்டத்துக் கமலைக் கிணறு குளிக்க மிகவும் வசதியுள்ளது. கல் தொட்டியில் தண்ணீரை இறைத்து விட்டுவிட்டு நாள் பூராவும் குளித்துக் கொண்டிருக்கலாம்.

சுப்புப் பிள்ளை தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு, துலாக் கல்லில் காலை வைத்து நின்று, வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டார்.

மருத்துவர், தொட்டியில் பாதியளவு கிடந்த தண்ணீரைத் திறந்து விட்டுத் தொட்டியைக் கழுவ ஆரம்பித்தார்.

"ஐயா, ஒங்ககிட்ட ஒரு சமுசாரமிலா கேக்கணுமிண்ணு இருக்கேன்... நம்ம கொளத்தடி வயலிருக்கெ, முக்குருணி வீசம், அது வெலைக்கி வந்திருக்கரதாவப் பேச்சு ஊசலாடுது; அதான் நம்ம பண்ணையப் பிள்ளைவாள் வரப்புக்கு மேக்கே இருக்கே, அதான். நம்ம மூக்கம் பய அண்ணைக்கு வந்தான். ஒரு மாதிரி பேசறான். வாங்கிப் போட்டா நம்மது ஒரு வளைவ அமஞ்சு போகுதேன்னு நெனச்சென். நீங்க என்ன சொல்லுதிய?"

'உஸ்' என்றபடி முதல் வாளித் தண்ணீரைத் தொட்டியில் ஊற்றிவிட்டு, கிணற்றுக்குள் மறுபடியும் வாளியை இறங்கினார் சுப்புப்பிள்ளை. வாளியில் தண்ணீர் நிறைந்தது. நிமிர்ந்து வைத்தியரைப் பார்த்தார்.

"வே! ஒமக்கு என்னத்துக்கு இந்தப் பெரிய எடத்துப் பொல்லாப்பு? அது பெரிய எடத்துக் காரியம். மூக்கம் பய படுத பாட்டெப் பாக்கலியா! பண்ணையார்வாள்தான் கண்லே வெரலே விட்டு ஆட்ராகளே! ஒரு வேளை அது மேலே அவுகளுக்குக் கண்ணாருக்கும் - சவத்தெ விட்டுத் தள்ளும்!"

"என்னய்யா, அவுகளுக்குப் பணமிருந்தா அவுஹமட்டோ டே; அவுக பண்ணையார்ன்ன கொடிகட்டிப் பறக்குதா? அதெத்தான் பார்த்து விட்ரணும்லா! நான் அதுக்கு அஞ்சுனவனில்லெ. நாளெக்கே முடிக்கேன். என்னதான் வருது பாப்பமே!" என்று படபடத்தார் மருதப்பனார்.

"என்னமோ நாஞ் சொல்லுததெச் சொன்னேன்; உம்ம இஸ்டம்!" என்றார் பிள்ளை.

4
அன்று மாலை பொழுது மயங்கிவிட்டது. மேல்வானத்துச் சிவப்புச் சோதியும், பகல் முழுதும் அடங்கிக் கிடந்து மாலையில் 'பரப்பரப்' என்று ஓலை மடல்களில் சலசலக்கும் காற்றுந்தான் சூரியன் வேலை ஓய்ந்ததைக் குறிக்கின்றன.

குளக்கரைக்கு (ஏரிக்கரை) மேல் போகும் ரஸ்தாவில், முண்டாசு கட்டிக் கொண்டு கையில் இரண்டொரு பனை மடல்களைப் பிடித்த வண்ணம் நடந்து வருகிறார் சுப்புப் பிள்ளை.

குளத்துக்குக் கீழ்புறமிருந்து ரஸ்தாவுக்கு ஏறும் இரட்டை மாட்டு வண்டித்தடத்தின் வழியாக, வண்டிக்காரனுடைய தடபுடல் மிடுக்குகளுடன், மாட்டுச் சலங்கைகள் கலந்து புரள, குத்துக்கல்லில் சக்கரம் உராயும் சப்தத்துடன் ஒரு இரட்டை மாட்டு வண்டி மேட்டிலிருந்த ரஸ்தாவில் ஏறிற்று.

மங்கிய இருளானாலும் தொப்ளான் குரல், பண்ணையார் வண்டிதான் என்பதை நிச்சயப்படுத்தியது.

சாலையில் ஒதுங்கி நின்ற சுப்புப் பிள்ளை, "என்ன அண்ணாச்சி, இந்த இருட்லெ எங்கெ போயிட்டு வாரிய?" என்று குரல் கொடுத்தார்.

வண்டியுள் திண்டில் சாய்ந்திருந்த பண்ணையார் சிதம்பரம் பிள்ளை, "ஏடே, வண்டியை நிறுத்திக்கொ" என்று உத்தரவிட வண்டி சிறிது தூரம் சென்று நின்றது.

பிள்ளையவர்கள் உள்ளிருந்த செருப்பை ரஸ்தாவில் போட்டுவிட்டு மெதுவாக அதில் காலை வைத்து இறங்கினார்.

"கீளநத்தம் மேயன்னா இருக்காஹள்லா..."

"ஆமாம் நம்ம நாவன்னா கோனாவோட மச்சினப்பிள்ளை..."

"அவுஹதான்... அவுஹளோட சமுசாரத்தோட ஒடப்பிறந்தாளெ மருந்தூர்லே குடுத்திருந்தது - அவ 'செல்லா'யிப்போனா... பதினாறு... போயிட்டு வாரேன்!"

"மதினி போகலியா...?"

"அவ வராமெ இருப்பாளா? கூடத்தான் வந்தா; அங்கே ஆள் சகாயம் ஒண்ணுமில்லே - இருந்துட்டு வாரனேன்னா - விட்டுட்டு வந்திருக்கேன்; இப்பொ அவ இங்கெ சும்மாதானெ இருக்கா?..." என்றார்.

"ஆமாம், அதுக்கென்ன!... வயசென்ன இருக்கும்?" என்றார் சுப்புப் பிள்ளை மீண்டும்.

"வயசு அப்படி ஒண்ணும் ஆகலெ - முப்பது இருக்கும்!" என்றார்.

"புள்ளெக ஏதும் உண்டுமா?... சரி, அதிருக்கட்டும். அண்ணாச்சி, ஒங்கிட்ட ஒரு சமுசாரம்லா சொல்லணும்னு நெனச்சேன். ஏங்காதுலே ஒரு சொல் விழுந்தது. ஒங்கிளுக்கு அதெத் தெரிவியாமே இருந்தா, நாயமில்லை!" என்றார்.

பணத்திற்கு ஏதோ அடிப்போடுகிறாரோ என்று பயந்த பண்ணையார் "ஏது, அனுட்டானமாச்சா?" என்று கேட்டுக்கொண்டே குளத்தினுள் இறங்கினார்.

கரைச் சரிவில் செருப்பை விட்டுவிட்டுத் தண்ணீருள் இறங்கிய பண்ணையார் பலத்த உறுமல்கள், ஓங்காரங்கள் முழங்க, கால் முகம் கழுவ ஆரம்பித்தார்.

முன்பே தம் மாலைப் பூஜை விவகாரங்களை ஒரு மாதிரி முடிவுகட்டிய சுப்புப் பிள்ளை, வேஷ்டி துவைக்கும் கல்லில் அமைதியாக உட்கார்ந்து காரியம் முடியட்டும் என்று எதிர்பார்த்திருந்தார்.

திருநீறிட்டு, திருமுருகாற்றுப்படையையும் திருவாசகத்தில் இரண்டொரு செய்யுட்களையும் மனனம் செய்துவிட்டு, "சிவா!" என்ற குரலெழுப்பிக் கரையேறினார் பண்ணையார்.

"நம்ம மருதப்பன் இருக்கான் இல்லியா, பய கொளும்புலெ ரெண்டு காசு சம்பாரிச்சிட்டான்னு மண்டெக் கருவம் தலை சுத்தியாடுது. இண்ணக்கி புதிய தெரஸர் புள்ளெவாள் கெணத்துலெ குளிச்சுக்கிட்ருக்கப்பச் சொல்லுதான், 'பண்ணையப் பணம்னா அவுகமட்டோ ட, ஊரெல்லாம் என்ன பாவட்டா கட்டிப் பறக்குதா?' என்று; உங்களெ ஒரு கை பாத்துப்பிட்டுத்தான் விடுவானாம்; பாருங்க ஊரு போரபோக்கை!"

"சவம் கொலைச்சா கொலைச்சுட்டுப் போகுது! அவர் இப்ப மருத்துவர்லா! அப்படித்தான் இருக்கும் - எதுக்காம் இவ்வளவும்?"

"ஒங்க வயக்காட்டுப் பக்கம் முக்குருணி வீசம் இருக்குல்லா - நம்ம மூக்கன் பய நெலம், அதுக்குத்தான் இம்புட்டும். வாங்கப் போரேன்னு வீரியம் பேசுதான்."

"மூக்கப்பய நெலமா?... எங்கிட்டல்லா கால்லெ விழுந்து கெஞ்சிட்டுப் போனான்; அந்த நன்னிகெட்ட நாய்க்கு ஒதவப் படாதுன்னு தான் வெரட்னேன். அவன் கால்லெ போய் விளுந்தானாக்கும்! அதுலெ என்ன வீராப்பு?"

"'ஒனக்கு எதுக்குடா அந்த நெலம், அதெ வாங்குததுலெ பிள்ளைவாளுக்குத்தானே சௌகரியம்'ணேன். அவ்வளவுதான். இந்தவூரு புள்ளெமாரே அப்படித்தானாம்; எப்பவும் அடாபிடியாம்; அவன் கிட்ட காரியம் நடக்காதாம்!"

"அப்பிடியா சேதி! ஏலே தொப்ளான், நாங்க நடந்து வருதோம்; வண்டியைக் கொண்டுபோய் அவுத்துப் போட்டுப்புட்டு, எந்த ராத்திரியும் மூக்கன் பயலே கையோட புடிச்சா!"

"நாம வாங்குதாப்லியே காம்பிச்சுக்கப்படாது; தெரஸர் பிள்ளை வாள்தான் வேணும்னாஹள்ளா - அவக பேரச் சொல்லி வைக்கது."

"அதெதுக்கு? கூட நாலு காசெ வீசினா போகுது. அந்த நாய்கிட்ட பொய்யெதுக்கு?"

"இல்லெ அண்ணாச்சி, உங்களுக்கு தெரியாது; நான் சொல்லுதைக் கேளுங்க!"

"ராத்திரி கடையடச்சம் பொரவு இப்படி வீட்டுக்குத்தான் வாருங்களேன், பேசிக்கிடலாம்!"

5
"அப்பா! அம்மைக்கி உடம்பு என்ன அப்படியே இருக்கே; நீங்க கெவுனிக்கரதில்லெ போல்ருக்கு!" என்றான் மகராஜன்.

எதிரிலிருந்த ஹரிக்கன் லைட் மீது ஒரு விட்டில் வந்து மோதியது. சிறிது மங்க ஆரம்பித்த திரியைத் தூண்டினான்.

"நம்ம கையிலே என்ன இருக்கு? இருவது வருஷமா குடுக்காத மருந்தா?" என்று மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுக் கண்களை நிமிண்டியவண்ணம் கூறினார் விசுவநாத பிள்ளை.

"நீங்க பென்ஷன் வாங்கினதோட, வைத்தியமும் உங்ககிட்ட பென்ஷன் வாங்கிட்டுதா? - நீங்களே இப்பிடிப் பேசுனா?"

"பேசுரதென்ன? உள்ளதத்தான் சொன்னேன். குடல் பலகீனப் பட்டுப் போச்சே! எது குடுத்தாலுந்தான் ஒடலோட ஒட்டமாட்டேங்குதே!"

"நான் ஒரு முறையைப் பிரயோகம் பண்ணிப் பாக்கட்டுமா? இயற்கை வைத்தியம். முதல்லே கொஞ்சம் பட்னி இருக்கணும்; அப்பொ ஒரு 'கிரைஸிஸ்' (வியாதி நிலையில் நெருக்கடி, கவலைக்கிடமான நிலை) ஏற்படும். அப்புறம் சிகிச்சையை ஆரம்பித்தால் பலனுண்டு."

"என்னடா, நீ மெடிக்கல் ஸ்கூல்லெதானெ படிக்கிறே! இயற்கை வைத்தியம் எங்கெ வந்துது? வீணாக் காலத்தைக் கழிச்சு பெயிலாப் போகாதே!"

"அதுக்கும் படிக்கத்தான் செய்யரேன். இந்த முறையிலே எத்தனையோ பேருக்கு உடம்பு குணமாயிருக்கிறதே! நானெ செய்திருக்கிறனே!"

"சரி, பாரேன்! நானா வேண்டாமுங்கேன்?"

இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் சவுக்கைக்கு வெளியில் செருப்புச் சப்தம் கேட்டது. தொப்ளான், ஹரிக்கன் லைட்டோ டு ஒதுங்கி நிற்க, பண்ணையார்வாளும் சுப்புப் பிள்ளையும் உள் வெளிச்சத்தில் பிரசன்னமாயினர்.

"அட, பண்ணையார்வாளா? ஏது இந்த இருட்லெ? இந்த நாற்காலியிலே உக்காரணும்; சுப்பு பிள்ளை, நீர் இந்த பெஞ்சிலே இப்டி இரியும். ஏது அகாலத்திலே?" என்று தடபுடல் காட்டி எழுந்து நின்றார் விசுவநாத பிள்ளை.

"விசேசமென்னா! இப்படி வந்தேன்! ஒங்களெ எட்டிப்பாத்துட்டுப் போகலாமெண்ணுதான் நொளஞ்சேன். ஏது மாப்ளெ எப்ப வந்தாப்லெ? ரசாவா?" என்றார் பண்ணையார். மகராஜனை மாப்பிள்ளை என்றழைப்பதில் அவருக்குப் பரமதிருப்தி.

"ஆமாம், கோடை அடைப்பு; மதியந்தான் வந்தான். ராசா, நீதான் பிள்ளைவாள் கடையிலே போயி ஒரு பொகயிலைத் தடை வாங்கிட்டு வா..." என்று வருகிறவர்களுக்காகத் தாம்பாளத்தில் வைத்திருக்கும் வெற்றிலையை அடுக்கிப் பண்ணையார் முன்பு வைத்தார்.

"நான் அப்பமே கடையடைச்சிட்டனே!..."

"எனக்கா இந்தச் சிருமம்? தடைப் போயிலைண்ணாத்தான் நமக்கு ஆகாதே. ஏலே தொப்ளான், செல்லத்தை வைய்யென்லே! என்னலே முளிக்கே!" என்று சுப்பு சிதம்பரம் பிள்ளைகள் ஏக காலத்தில் பேசினார்கள்.

வெளியே புறப்பட்ட மகராஜன் மறுபடியும் தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்.

"சவுக்கெலெயே காத்தைக் காணமே, ஊருக்குள்ள பின்ன ஏன் வெந்து நீறாகாது! அண்ணாச்சி இந்த வருஷம் காய்ப்பு எப்படி?" என்று தலையை இருட்டில் நீட்டி எச்சிலைத் துப்பிக் கொண்டே கேட்டார் சிதம்பரம் பிள்ளை.

"காய்ப்பென்ன, பிரமாதமா ஒண்ணுமில்லெ - ஏதோ வீணாக காயிரதுக்கு கெணத்துத் தண்ணி வேரடியிலே பாயிது..."

"இல்லெ, ஒரு பத்து முப்பது ரோசாக் கம்பு வச்சுத் தளுக்க வச்சா பிரயோசனமுண்டு - ஒரு பயலைப் போட்டாப் போகுது" என்றார் சிதம்பரம் பிள்ளை.

பேச்சில் சோர்வு தட்ட அவர் சுப்புப் பிள்ளையைப் பார்த்தார்.

"தெரஸர் பிள்ளைவாள், ஒங்ககிட்ட ஒரு விசயமா கலந்துகிட்டுப் போகலாமுண்ணு வந்தேன் - ஐயாவும் வந்தாஹ - ஊர் விசயம் - தலை தெறிச்சுப் போய் அலயரான்கள் சில பயஹ - இப்பிடி வாருங்க..." என்று எழுந்து விசுவநாத பிள்ளையை வெளியில் அழைத்துக் கொண்டு போனார் சுப்புப் பிள்ளை.

"ஆமாம், ஆமாம், சரிதான்... வாங்குதவன் பாடு குடுக்கவன் பாடு, நமக்கென்ன?... அப்படியா! பிள்ளைவாளுக்கு எடைலேயா வந்து விளுந்தான்... அப்பமே எனக்குத் தெரியுமே... காறை வீடு கட்னா கண்ணவிஞ்சா போகும்?..." என்ற விசுவநாத பிள்ளையின் பேச்சுக்கள் இடைவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன.

இருவரும் சில நிமிஷங் கழித்துச் சவுக்கைக்குள் ஏறினர்.

"என்ன!..." என்று சிரித்தார் பண்ணைப் பிள்ளை.

"இதுக்கு நீங்க எதுக்கு வரணும்? சொல்லிவிட்டா நான் வரமாட்டனா?... ராசா, நீ வீட்டுக்குப் போயி கண்ணாடி அலமாரியிலே சாவிக் கொத்தை வச்சிட்டு வந்துட்டேன்... எடுத்தா... அப்பிடியே அம்மைக்கி அந்த டானிக்கை எடுத்துக் குடு... எல்லாம் நாளைலேயிருந்து ஒன் வயித்தியத்தெப் பாக்கலாம்..." என, மேல்வேஷ்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினான் மகராஜன்.

"வீட்டுலே உடம்புக்கு எப்படி இருக்கு - தாவளையா?... நம்ம மாப்ளைக்கி இன்னம் எத்தனை வருஷம் படிப்பாம்?... காலா காலத்லெ கலியாணத்தெ கிலியாணத்தெ முடிச்சுப் போட வேண்டாமா?..."

"நானும் அப்பிடித்தான் நெனச்சேன். அடுத்த வருசத்தோட படிப்பு முடியிது... வார தை மாசம் நடத்திப் போடணும்னு உத்தேசம்... மூக்கம் பயலெ எங்கே இன்னம் காணம்?..." என்று வெளிக்குரலை எதிர்பார்த்துத் தலையைச் சாய்ந்தபடி கேட்டார்.

"சவத்துப் பய இப்பம் வருவான்... ராத்திரி பத்திரத்தை எளுதி முடிச்சுக்கிடுவோம்... காலெலெ டவுனுக்குப் போயி ரிஸ்தர் பண்ணிப் போடுதது... கூச்சல் ஓஞ்சப்பரம் பத்திரத்தெ எம்பேருக்கு மாத்திக்கலாம்..."

"அது அவாளுக்குத் தெரியாதா?... காரியம் முடிஞ்சாப் போதும்..." என்றார் சுப்புப் பிள்ளை.

6
நாலைந்து நாள் கழிந்து ஒரு நாள் மத்தியானம். நல்ல உச்சி வெய்யில் 'சுள்' என்று முதுகுத் தோலை உரிக்கிறது.

வயல் காட்டு வரப்புகளில் படர்ந்து கிடக்கும், அவருக்கு மட்டும் தெரிந்த, சில மூலிகைப் பச்சிலைகளைக் கை நிறையப் பிடுங்கி வைத்துக் கொண்டு, குளக்கரை மேல் போகும் ரஸ்தாவில் ஏறி, மறுபுறம் செங்குத்தாக இறங்கும் கல்லடுக்கிய சரிவு வழியாக இறங்கி, மருத்துவ மருதப்பனார் பச்சிலைகளைக் குளத்திலிட்டு அலச ஆரம்பித்தார். தலையில் முக்காடாக அணிந்திருந்த துணி, விலகி விலகிக் குனிந்து வேலை செய்வதற்கு இடைஞ்சல் கொடுத்ததால் நிமிர்ந்து நின்று தலையில் கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு மறுபடியும் குனிந்தார்.

"வைத்தியரய்யா! என்ன, தெரஸர், பிள்ளைவாள் ராவோட ராவா மூக்கன் நெலத்தைக் கொத்திக்கிட்டுப் போயிட்டாகளாமே!" என்ற குரல் மருத மரக்கிளை ஒன்றிலிருந்து கேட்டது.

அண்ணாந்து பார்த்தார். மருதக் கிளை ஒன்றிலிருந்து கீழே நிற்கும் ஆடுகளுக்குக் குழை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் வேலாண்டி.

"ஊர் வெள்ளாளன்மாரு கூடிக்கிட்டா என்ன? ஆனைக்கு ஒரு காலம்னா பூனைக்கு ஒரு காலம் வரும். பண்ணையப் பிள்ளைவாளுக்கு அந்த நெலம் வந்துதான் நெரயணுமாக்கும்; வாங்கினா ஒரே வளவாப் போயிடுமேன்னு நெனச்சேன். சவத்துக்குப் பொறந்த பயஹ பேச்சேத் தள்ளு!"

"ஆமாம். மூக்கம் பய கொளும்புக்கில்லா போயிட்டானாம்... அந்தப் பயலுக்கு என்ன அவசரம் இப்பிடி அள்ளிக்கிட்டுப் போவுது..."

"மூதி தொலைஞ்சுட்டுப் போகுது. அண்ணெக்கி வந்து மூக்காலே அளுதானேன்னு பாத்தேன்... ஊர்லே தேவமாருன்னு பேர் வச்சுக் கிட்டு பூனையாட்டம் ஒண்டிக்கெடந்தா என்னதான் நடக்காது... புள்ளைமாருக்குன்னுதான் இந்த வூரா... அப்போ நாங்க போயிருந்தோம்... அதெத்தான் அத்துப் பேசட்டுமே... என்னடே தொப்ளான், எங்கே அவசரம்?" என்றார் வைத்தியர்.

தலை தெறிக்க ஓடிவந்த தொப்ளான், "நீங்க இங்கியா இரிக்கிய, தெரஸய்யா சமுசாரத்துக்குத் தடபுடலாக் கெடக்கு, ஒங்களெ சித்த சத்தங்காட்டச் சொன்னாவ - டவுன் பஸ்ஸு போயிட்டுதா? பாத்தியளா?" என்று பஸ் எதிர்பாக்கப்பட்ட திசையை வெறிக்கப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

"அதுவும் அப்பிடியா! காத்தெக் கட்டிப்போட முடியுமா? வேலாண்டி, நான் அப்பம் ஒரு சேதி சொன்னேனே பாத்தியா - பாத்துக்கோ..."

ஈரம் சொட்டும் பச்சிலை முடிப்போடு குறுக்குப் பாதை வழியாக ஊரை நோக்கி நடந்தார் மருத்துவர்.

"என்னடே! தொப்ளான் - நீ எங்கலே போரே...?"

"நான் ஒரண்டையும் போகலே... பட்டணத்து எசமான் பெரிய டாக்குட்டரெக் கூப்பிட டவுனுக்குப் போராவ..."

"என்னடே பஸ் வந்துதா?" என்று கொண்டே 'மெட்ராஸ்' மெருகிழந்து, கவலை தேங்கிய முகத்துடன் வந்தான் மகராஜன்.

"இல்லே எசமான், ஒண்ணையும் காங்கலியே!" என்றான் தொப்ளான்.

7
நேற்றிரவு பன்னிரண்டு மணி சுமாருக்கு ஸ்ரீமதி விசுவநாத பிள்ளை - அதாவது 'சாலாச்சி ஆச்சி' - இறந்துபோனாள். கிராமம் என்றால் கேட்கவா வேண்டும், இழவு வீட்டுச் சம்பிரமத்தை? அப்பொழுது பிடித்து ஓயாது ஒழியாது அழுகையும் கூச்சலும்.

வெளியே விசுவநாத பிள்ளை தலை குனிந்தவண்ணம் பெஞ்சியில் உட்கார்ந்திருக்கிறார். மகராஜன் தூணில் சாய்ந்து தலை குனிந்த வண்ணம் நகத்தை நிமிண்டிக் கொண்டிருக்கிறான். வெளிப் பெஞ்சியில் பண்ணையார் சிதம்பரம் பிள்ளை தமது ஓயாத வெற்றிலைத் துவம்சத்துடன் துஷ்டிக்கு வருகிறவர்களோடு பேசியும், சிற்றாள்களையும் சுப்புப் பிள்ளையையும் வேலை ஏவிக்கொண்டும் இருக்கிறார்...

சாலாச்சியம்மையின் தேகம் பலஹீனப்பட்டுப் போயிருந்தாலும் மகராஜனது இயற்கை சிகிச்சை பிரயோகிக்கப்பட்டிராவிட்டால் இவ்வளவு சீக்கிரத்தில் விழுந்துவிட்டிருக்காது.

'கிரைஸிஸை' எதிர்பார்த்துப் பூர்வாங்க சிகிச்சை நடத்தினான் மகராஜன். வியாதியே 'அன்னத் துவேஷமாக' இருக்கையில் பட்டினி முறை உடலை ஒரேயடியாகத் தளர்த்திவிட்டது. இரண்டே நாள் உபவாசம் நாடியையும் அரைகுறையாக்கியது.

அந்த நிலையில்தான் மருதப்ப மருத்துவனார் அழைக்கப்பட்டார். கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, "இன்னும் நாற்பத்தெட்டு நாழிகை கழித்துத்தான் ஏதும் சொல்ல முடியும்; அதுவரை உடம்பில் சூடு விடாமல் தவிட்டு 'ஒத்தடம்' கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்" என்று அபிப்ராயம் சொல்லிவிட்டு வெளியேறினார். இரவு எட்டு மணிக்கு வந்த டாக்டர் கொடுத்த இரண்டு 'இஞ்செக்ஷேன்கள்' சுமார் ஒரு மணிநேரம் கவலைக்கிடமான தெளிவை உண்டாக்கின. 'மகனுக்குப் பண்ணையப் பிள்ளை மகளை முடிச்சுவைக்கப் பார்க்கக் கொடுத்து வைக்கலியே' என்ற ஏக்கத்தோடு ஆவி பிரிந்தது...

"ஏலே தொப்ளான், என்னலே இன்னங் குடிமகனைக் காணலெ; போனியா?" என்று அதட்டினார் பிள்ளை.

"வூட்லெதான் இருந்தாரு; 'நீ போ, இதாவாரென்'னு சொன்னாரு!" என்றான் தொப்ளான்.

"என்ன இன்னமா வர்ரான் - ரெண்டு மணி நேரமாச்சே... நீ போய் இன்னொரு சத்தங் குடு..."

இரண்டு தென்னங் கீற்றுகளை இழுத்துவந்து தொப்பென்று போட்ட பலவேசம், "மாடசாமியத்தானெ கேக்கிய? அவன் வைத்யரு வீட்டெப் பாத்துப் போகுததெக் கண்டேன்!" என்றான்.

"நீதான் போயி அவனெ இப்படிக் கையோட கூட்டியா... நேரம் என்ன ஆகுது பாரு..." என்றார் சிதம்பரம் பிள்ளை.

"ஆகட்டும், எசமான்!" என்று சென்றான் பலவேசம்.

கால் மணி கழித்து, தனியாகவே திரும்பி வந்தான் பலவேசம். ஆனால் ஓடி வந்தான்.

"எசமான், நான் போனேன். வெளிலே மருதப்பரு நிண்ணுக்கிட்டிருந்தாரு. 'இனிமே, குடிமகன் இந்த வேலைக்கு வரமாட்டான்; அவன் தொளில் இதில்லே; இனிமேச் செய்ய முடியாதாம்ணு போய்ச் சொல்லு'ன்னு சொல்லிப்பிட்டாரு!" என்றான் பலவேசம்.

"மாடசாமியா அப்படிச் சொன்னான்?" என்று தென்னங்கீற்றைத் தடுக்காக முடைந்துகொண்டிருந்த சுப்புப் பிள்ளை எழுந்தார்.

"இல்லெ, மருதப்பருதான் சொன்னாரு."

"அவன் சொன்னான், இவன் கேட்டுகிட்டு வந்தானாம். நீ சாதி மறவனாலே! அப்பிடியே அலகிலே, ரெண்டு குடுத்துக் கூட்டியாராமே! என்ன வேலாண்டி, நீ என்ன சும்மா நிக்கே? ரெண்டு சிறுக்கி மகன்களையும் பின்கட்டுமாறாக் கட்டிக் கொண்டா - முதுகுத் தொலியே உறிச்சுப்பிடரேன்!" என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.

"என்னண்ணாச்சி, நாலு காசுக்குப் பால்மார்றான் போலே, விசிறி எறிஞ்சாப் போகுது..." என்று சமாதானம் செய்ய வந்தார் விசுவநாத பிள்ளை.

"ஒங்கிளுக்கு ஊரு வளமே தெரியாது; அம்பட்டப் பயலா காரியமாத் தெரியலியே! ஏலே, நீ புளிய மிளார் நல்ல பொடுசாப்பாத்துப் பறிச்சுக்கிட்டு வாலே, தொப்ளான்!" என்று மறுபடியும் கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.

கால்மணிக்கூறு கழிவதற்கு முன் சிதம்பரம் பிள்ளை சுக்ரீவாக்ஞையின் பலன் ஏக இரைச்சலோடு விசுவநாத பிள்ளை வீடு நோக்கி வந்தது.

மேல்துண்டை வைத்துப் பின்கட்டுமாறாக மருதப்பரையும், மாடசாமியையும் கட்டிக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான் வேலாண்டி.

"திரும்பினியா, பாளெ யறுவாளெக்கொண்டு தலையைச் சீவிப்புடுவேன் - நடலெ! என்ன முளிக்கே!" என்ற அதிகாரத் தொனி பின்னால் வயிற்றிலடித்துக் கொண்டு ஓலமிட்டுவரும் நாவிதக் குடும்பத்தின் இரைச்சலுக்கு மேல் கேட்டது.

"ரெண்டு பயல்களையும் அந்தத் தூணோடு வச்சுக்கட்டு! என்னலே மாடசாமி, சோலியப் பாக்கியா இன்னமும் வேணுமா?" என்றார் சிதம்பரம் பிள்ளை.

"முடியாதையா!" என்று முணுமுணுத்தான் மாடசாமி.

உள்ளே அழுதுகொண்டிருந்த பெண்களும் ரகளை பார்க்க வந்துவிட்டனர்.

"மிளாரெ எங்கடா?" என்று ஒன்றை வாங்கி முழங்காலிலும் முதுகிலும் மாறி மாறிப் பிரயோகித்தார். அவன் வலி பொறுக்கமாட்டாமல் குய்யோ முறையோவென்று கத்த ஆரம்பித்தான்.

அவன் மனைவி போட்ட ஓலத்தால் மருதப்பர் தூண்டுதல் என்பதும் எல்லோருக்கும் வெளியாயிற்று.

"பிள்ளைமாருன்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? பிரிடீஸ் ராச்சியமா என்ன? ரொம்ப உறுக்கிரஹளே! மனிசனைக் கட்டிப் போட்டு அடிக்கதுன்னா நாய அநியாயமில்லையா - இண்ணக்கி சிரிக்கிரவுஹ நாளைக்கி வாரதையும் நினைச்சுப் பாக்கணும்!" என்றார் மருதப்பர்.

"நாசுவப் பயலா காரியமாத் தெரியலெயெ; வேலாண்டி, அவன் மொளியை (முழங்காலை)ப் பேத்துக் கையிலெ குடு! அவனுக்குக் குடுக்கிற கொடைலே இவன் சங்கெத் தூக்கணும்; என்ன பாத்துக்கிட்டு நிக்கே?"

வேலாண்டி கையிலிருந்த குறுந்தடியை ஓங்கி முழங்கால் குதிரையில் ஒரு போடு போட்டான். "ஐயோ அம்மா! என்னியப் போட்டுக் கொல்ராண்டோ ! ஊர்லே நாயமில்லியா! நீதியில்லியா!" என்று கதறினார் வைத்தியர்.

விசுவநாத பிள்ளை ஓடியே வந்து வேலாண்டியிடமிருந்த குறுந்தடியைப் பிடுங்கிக் கொண்டு, "அண்ணாச்சி, பாக்கச் சகிக்கலே - காரியத்தைப் பாத்துச் செய்யணும். சவத்துப்பய போரான்... அவ அதிட்டம் இப்படியிருந்தது; இந்தப் பயல்களுக்கும் இப்படிப் புத்தி போகுது..." என்று ஆரம்பித்தார்.

"எங்கை எப்படியிருக்குன்னு பார்லே!" என்று மறுபடியும் ஒரு குத்துவிட்டான் வேலாண்டி. மருதப்பன் பல்லில் முன்னிரண்டும் விழுந்துவிட்டன.

ரத்தங் கண்டதும் பீதியடித்துப் போன மாடசாமி, கண்களில் நீர் பெருக, சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தான்.

"சவத்தெ அவுத்து விடுடா! இந்தத் தெசேலே தலைவச்சுப் படுத்தா மாறுகால் மாறுகை வாங்கிப் போடுவேன், ஓடிப்போ நாயே!" என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை. அவிழ்த்துவிடப்பட்ட மருதப்பரும் மனைவியின் கைத்தாங்களில் நொண்டிக் கொண்டே தூரத்தில் சென்று, ஒரு பிடி மண் எடுத்து வானத்தில் எறிந்து, "இப்பிடி சுட்ட மண்ணாப் போகணும்! என் வயிரெரியிராப்லே போணும்" என்று ஏச்சு அழுகையுடனே கூவிவிட்டுச் சென்றார்.

அப்படியும் இப்படியுமாகப் பிரேத சம்ஸ்காரம் முடிந்து திரும்ப மணி நான்காகிவிட்டது.

மாடசாமி முதுகுவலிக்குக் காரணமே வைத்தியர் மருதப்பர் அவனுக்கு முன்பு கொடுத்திருந்த சிறுகடன் தான் என்றும், 'அதைத் திருப்பிக் கொடு அல்லது இந்த வேலை செய்' என்று போதிக்கப்பட்டது என்றும் சிதம்பரம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

"போலீஸுக்கு கீலீஸுக்கு எட்டுச்சுன்னா அவன் தலை அவன் களுத்திலே இருக்காது!" என்று மருதப்பருக்கு வேலாண்டி மூலம் எச்சரித்தனுப்பிவிட்டு, விசுவநாத பிள்ளைக்குத் தக்க சமாதானங்கள் சொல்ல ஆரம்பித்தார்.

மனைவியையிழந்தது, தெருக்கூத்தாகக் கிரியை நடந்தது, உத்தியோக காலத்தில் சர்க்காரின் அதிகார எல்லையைத் தெரிந்து கொண்டிருந்தது - எல்லாம் அவரை ஒரேயடியாகப் பீதியடிக்க வைத்துவிட்டன.

பரஸ்பரப் பேச்சில் மனைவியின் கடைசி ஆசையையும் சொல்லி வைத்தார் விசுவநாத பிள்ளை, பேச்சுவாக்கில்.

"நீங்க சொன்னாப்லெ வர்ர தை மாசம் முடிச்சிப்புடுவம்!" என்று அந்தப் பேச்சை முடிவு கட்டினார் பண்ணையார்.

மருதப்பர் அன்று வீட்டுக்குள் சென்று படுத்தவர், மானத்தாலோ மனக்கொதிப்பாலோ அல்லது அடி பலத்தாலோ வெளியேறவில்லை.

இரகசியமாக இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பிராது அனுப்பினார். ஏற்க மறுத்து எச்சரித்து விரட்டப்பட்டான் போன ஆள். ஊரே திரண்டு எதிர்க்கும் பொழுது பணமிருந்து என்ன பயன்? போதாக் குறைக்குத் தாழ்த்தப்பட்ட, கிராமங்களில் அவமானகரமானது என்று கருதப்படும் ஒரு தொழிலைச் செய்யும் ஜாதி! சில சமயத்தில் ஊரையே அழித்துவிட வேண்டும் என்ற நபும்ஸகக் கோபம் அவரைத் தகித்தது. அடுத்த நிமிஷம் ஒரே மலைப்பு!

சம்பவமும், செய்தி பாதி வதந்தி முக்காலாக 'உஸ் ஆஸ்' என்று பக்கத்தூர்களில் பரந்தது. வேளாளருக்கு நெஞ்சு விரிந்தது. "சவத்துப் பயல்களைச் சரிக்கட்டிப் பாருங்க, இல்லாட்டா அங்கயெப்போல மலையாளத்து அம்பட்டனெ குடியேத்திப் போடுவோம்..." என்று மூட்டை கட்டி வந்து இலவச அபிப்பிராயம் சொல்லிவிட்டுச் சென்றனர் பலர்.

மகராஜனுக்கு அழகிய நம்பியாபுரத்தில் இருப்பே கொள்ளவில்லை. 'எப்பொழுதடா பதினாறு கழியும், சென்னைக்குப் போய்விடுவோம்' என்ற துடிதுடிப்பு.

இப்படியிருக்கையில் மருதப்பரைக் காணோம் என்ற பேச்சுக் கிளம்பியது. இது ஊர்க்காரருக்கே அதிசயத்தை விளைவித்தது. வீடு அடைத்துப் பூட்டிக் கிடந்தது. எங்கு போனார், எப்படிப் போனார் என்பதே ஆச்சரியம்.

சிதம்பரம் பிள்ளை இதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. "சவம் தன்னைப் பயந்து கொளும்புக்கு ஓடியிருக்கும்!" என்று திருப்தி கொண்டார்.

விசுவநாத பிள்ளைக்கு இப்பொழுது சாப்பாட்டுக்குக் கூட வீட்டுக்குப் போவதென்றால் வேம்பாகிவிட்டது. மகராஜனே சமயாசமயங்களில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவான். "அப்பாவைத் தனியாக இங்கே விட்டுவிட்டுப் போவதா, உடன் வந்தால் என்ன?" என்று நினைத்தான். ஆனால் சவுக்கை மோகம் கொண்ட பிள்ளையவர்கள் மறுத்துவிட்டார்கள். பிள்ளையும் பண்ணையாரும் அன்னியோன்னியம். பிரிந்து காண்பது துர்லபம். அப்படி ஒட்டிக் கொண்டனர். சிதம்பரம் பிள்ளையின் முரட்டுத் தைரியத்தில் டாக்டருக்கு நிலைதளராத நம்பிக்கை; டாக்டரின் குருட்டுக் குழந்தைத் தன்மையில் அவருக்கு ஒரு முரடனின் பிரேமை. சுப்புப் பிள்ளைக்கு நினைப்பு புது மாதிரியாக ஓடியது. இவ்வளவு கோளாறுக்கும் அந்த நிலந்தான் காரணம் என்ற உண்மையைக் கண்டுபிடித்து, பிள்ளையவர்கள் காதில் ஓதினார். அதிரடித்துப்போன நெஞ்சில் இது சடக்கென்று வேரூன்றியது. அதனால் அவரையறியாது வெளிக்காட்டிக் கொள்ள தைரியமற்ற ஒரு பயங்கர வெறுப்பும் உறவாடியது. அதை வைத்தே தன் மகளை இரண்டாந்தாரமாக டாக்டருக்கு முடித்துவிட்டால் என்ன என்று கோட்டை கட்டினார் சுப்புப் பிள்ளை. சொத்துக்குச் சொத்தாச்சு. இந்த அல்லற் பிழைப்பும் ஒழியும்.

பதினாறும் கழிந்தது. சமயம் பார்த்து விதை ஊன்றினார் சுப்புப் பிள்ளை. பயிரிட வேண்டியதுதானே பாக்கி! தானாகவே முளைவிடும் என்பதில் சுப்புப் பிள்ளைக்கு அபார நம்பிக்கை.

அடுக்களைத் தாலி கட்ட வைத்தால் போகிறது!

8
பதினாறு முடிந்த ஐந்தாவது நாள் விடியற்காலம் மூன்றரை மணி. முண்டிதமான தலையுடன் பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கிறான் மகராஜன். கூடவே தகப்பனாரும், பண்ணைப் பிள்ளையும், சுப்புப்பிள்ளையும் நிற்கின்றனர்.

பஸ் வந்து நின்றது. இருட்டில் ஒருவர் இறங்கினார்.

மகராஜன் ஏறினான்; சாமான்களும் ஏற்றப்பட்டன. வண்டி புறப்பட்டது.

"போனதும் லெட்டர் போடு!" என்றார் விசுவநாத பிள்ளை.

"என்ன தெரஸர் பிள்ளையா? யாரு போராஹ?" என்றது அந்தப் புதிய குரல்.

"மரைக்காயர்வாள்! ஏது இப்படி!"

"பண்ணையார்வாளெப் பாக்க வந்தேன்; அன்னா, அவுஹளே நிக்காஹளே! நீங்க மூக்கன்கிட்ட வாங்கினிஹளாமில்லா, அந்த நெலத்தை எனக்கு முன்னாலேயே அடமானம் வச்சிருந்தான் - சமுசாரத்தைச் சொல்லிப்புட்டுப் போகலாமுண்ணு வந்தேன். நம்ம வைத்தியர்வாளும் அவுஹ பொஞ்சாதியும் நேத்துத்தான் இஸ்லாத்தைத் தளுவினாஹ! இந்த பஸ்லேதான் நம்ம கடெலே மானேசராயிருக்க கொளும்புக்குப் போராஹ!" என்றார் மரைக்காயர்.

"கோடு இருக்கே, நடத்திப் பார்ப்போமே!" என்றார் சிதம்பரம்பிள்ளை.

மணிக்கொடி, 01-11-1937

நன்றி - சென்னை லைப்ரரி.காம்

 

26/08/2011

நேர்காணல் - ரவிக்குமார்

நவீன தமிழ் இலக்கிய தலித் அரசியல் விழிப்புணர்வு மற்றும் தலித்திய சிந்தனைக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளவர் எழுத்தாளர் ரவிக்குமார். பின்நவீனத்துவ சிந்தனைகளையும், படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்ததுடன், பின்நவீனத்துவ கோட்பாடுகளின் பின்புலத்தில் தமிழகச் சூழலை அணுகி, இவர் எழுதியுள்ள கட்டுரைகள் பல்வேறு விவாதங்களும் புதிய சிந்தனைப் போக்கும் உருவாக காரணமாக இருந்தன. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் ஒருவரான ரவிக்குமார் தலித், போதி என்னும் இரண்டு சிற்றிதழ்களைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினார். கண்காணிப்பின் அரசியல் (1995), உரையாடல் தொடர்கிறது (1995), தலித் கலை, இலக்கியம், அரசியல் (1996), தலித் என்னும் தனித்துவம் (1998) கொதிப்பு உயர்ந்து வரும் (2001) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். மக்கள் சிவில் உரிமைக்கழகம் (Pucl) அமைப்பின் தமிழ்நாடு புதுவைத் தலைவராக இருக்கிறார். இந்த சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தலித்திய அரசியல் மற்றும் இன்றைய தமிழக அரசியல் குறித்து நம்முடன் பேசினார் ரவிக்குமார்.

தீராநதி: தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டோம், அதனைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்து, அந்த அறிவிப்பில் நீண்டகாலமாக உறுதியுடனும் இருந்த விடுதலைச் சிறுத்தைகள், முதல்முறையாக தங்கள் பாதையை மாற்றி 1999 பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்த முடிவை எடுக்க, நீங்களும் ஒரு காரணமாக இருந்தீர்கள் என்று சொல்லப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்ற உங்கள் ஆலோசனைக்கு என்ன காரணம்?

ரவிக்குமார்: 1999 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடுமையான ஒடுக்குமுறைகளை எங்கள் கட்சி சந்தித்தது. கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்கள். அன்றிருந்த தி.மு.க., பா.ம.க. கூட்டணியால் வடமாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையும் அரசு வன்முறையுமாக இரண்டு விதமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்கொண்டோம். மேலும், வன்முறையாளர்கள் என்று எங்களைப் பற்றி அவப்பெயரை ஏற்படுத்தவும் சதிகள் நடைபெற்றன. எனவே, இதனை எதிர்கொள்ள தேர்தலையும் ஒரு போராட்டக் களமாக மாற்றுவோம் என முடிவெடுத்தோம். தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கான முக்கியக் காரணம் இதுதான். கருணாநிதியும் ராமதாஸதிம்தான் எங்களை இந்த முடிவை நோக்கி நகர்த்தினார்கள். மார்க்சியயூ லெனினிய இயக்கத்தில் இருந்து வந்தவன் என்னும் முறையில், தேர்தல் புறக்கணிப்பைத்தான் நான் தொடர்ந்து பேசியும் செயல்படுத்தியும் வந்திருக்கிறேன். ஆனால், அதன்பிறகு மார்க்சியயூ லெனினிய அரசியலையும், இந்தியா பற்றி அது கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்திய போது, இந்தியப் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், இந்திய அரசியல் அமைப்பையும்கூட இங்குள்ள மார்க்சியயூ லெனினியவாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்தப் புரிதலின்மையுடன்தான் பல்வேறு நடைமுறைகளை அவர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை, குறிப்பாக தலித் மக்களை ஒன்று திரட்டுவதற்கு பாராளுமன்றப் பாதையைப் புறக்கணிப்பதைவிட, அந்தப் பாதையைப் பயன்படுத்துவது அதிக வலிமையானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அந்த விதத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும் முடிவை எடுத்தபோது எனது ஆலோசனைகள் இருந்தன. அது அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்திருக்க வேண்டும். என்னைப் போன்று பலரும், அவருக்கு இந்த ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒருவிதமான அரசியல் யுக்தி. அதே நேரத்தில், தேர்தல் புறக்கணிப்பிலேயே தொடர்ந்து நீங்கள் இருக்கும்போது, அதில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. இதனாலும் நாங்கள் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். 1999 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இரண்டு இடங்களில் நாங்கள் போட்டியிட்டோம். சிதம்பரத்தில் இரண்டேகால் லட்சம் ஓட்டுகளை திருமாவளவன் பெற்றார். அது தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியிலேயே தனியாக ஒரு வேட்பாளர் பெற்ற அதிகம் ஓட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு மிகப் பெரிய திரட்சிதான். அந்தத் திரட்சி படிப்படியாக அதிகரித்து இன்று வடமாவட்டங்கள் முழுக்க பரவியிருக்கிறது. இந்தத் தேர்தலில் வடமாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கும் வெற்றிக்குக் காரணம் அதுதான்.

தீராநதி: உங்கள் கட்சியின் நீண்டகால போராட்டமும் இலட்சியமுமான தலித்துகள் விடுதலையை, தேர்தல் அரசியல் மூலம் பெறமுடியும் என்று நம்புகிறீர்களா?

ரவிக்குமார்: இந்தியாவில் சாதிய சமூகத்தால் தலித்துகள் மட்டுமல்லாமல் அனைத்துச் சாதியினரும்கூட ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எல்லோருமே சாதிய சமூகத்துக்குள் பிணைக்கப்பட்டு, தங்களது சுதந்திரமும் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். சாதிய சமூகத்தின் பலனை அனுபவிப்பவர்களும் இதில் மாட்டிக்கொண்டுஇருக்கிறார்கள். எனவே, தலித்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே விடுதலை தேவையாக இருக்கிறது. அந்த விடுதலை சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது. ஒரு வர்க்கம் அழியும்போது, அது தொழிலாளிக்கு மட்டுமல்லாமல் எப்படி முதலாளிக்கும் விடுதலையைக் கொடுக்குமோ அப்படி, சாதி அழியும்போது, அது எல்லோருக்கும் விடுதலையைக் கொடுக்கும். அந்த விடுதலையை தேர்தல் பாதையில் எட்டிவிட முடியும் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய ஒரு போராட்டத்தால்தான் சாத்தியமாகும். இந்திய சமூகத்தில் சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது ஆக வன்மையான ஒரு போராட்டமாக இருக்கும். அதற்கான பாதையை வகுப்பதில் தேர்தல் அரசியலையும் ஒரு யுக்தியாக பயன்படுத்தமுடியும். அது சிறிய அளவில் உதவவும் செய்யலாம், அவ்வளவுதான். பாராளுமன்றப் பாதையைப் பயன்படுத்தும் போதே மற்ற போராட்ட வடிவங்களையும் கைவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தீராநதி: நீங்கள் தேர்தலில் நிற்கும் முடிவை எப்போது எடுத்தீர்கள்?

ரவிக்குமார்: தனிப்பட்ட முறையில் தேர்தலில் நிற்பதை நான் விரும்பவில்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தேர்தலில் நிற்கும்படி என்னை வற்புறுத்தினார். இன்னொரு பக்கம், வாக்களிப்பது என்கிற செயல்பாட்டை அவ்வளவு சுலபமாக நாம் நிராகரித்துவிட முடியாது. மக்கள் தங்கள் அதிகாரத்தை பிரயோகிக்கிற ஒரு விஷயமாகத்தான் அதனை நினைக்கிறார்கள். அந்தவகையில் வாக்குச்சீட்டுக்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தியை மக்களின் நன்மைக்கு தக்கவாறு திருப்பும்போது ஒரு திரட்சி நடக்கிறது. எனவே தேர்தலில் நிற்க நான் ஒப்புக்கொண்டேன். இலக்கியம் என்பது தத்துவத்தை அணுகுவதற்கு இன்னொரு வழி என்று மிஷெல் பூக்கோ குறிப்பிடுகிறார். அந்த வழியின் மூலமாக அரசியலுக்குள்ளும் நுழைய முடியும். இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவை எப்போதுமே நான் வலியுறுத்திதான் வந்திருக்கிறேன். இவ்வளவு காலமும் இலக்கியத்தின் அரசியலை கண்டு சொல்கிற விமர்சகனாக இருந்த நான், இப்போது அரசியலுக்குள் இலக்கியத்தின் பண்புகளை ஏற்றுகிற படைப்பாளியாக மாறுகிறேன். நான் உருவாக்கி வந்த கருத்துருவாக்கப் பணிக்கு இந்தப் பதவி ஒரு விதத்தில் இடையூறுதான் என்றாலும், இதன் வாயிலாகவும் செய்யக்கூடிய காரியங்கள் பல இருக்கின்றன.

தீராநதி: வெற்றிபெற்று சட்டசபைக்குச் சென்றபிறகு இக்கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறீர்களா?

ரவிக்குமார்: நிச்சயமாக. பல போராட்டங்கள் நடத்தி அதற்குப் பிறகு சாத்தியமாகும் விஷயங்களை இப்போது எளிதில் நிறைவேற்ற முடிகிறது. நான் சட்டப்பேரவையில் முதல்முறையாகப் பேசியபோது, ஈழப்பிரச்னை முதல் நூலகங்களுக்கு வாங்கும் புத்தகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுவரை, பல்வேறு பிரச்னைகளின்பால் அவையின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. அவற்றில் ஒன்றிரண்டில் வெற்றி பெறுவதும் சாத்தியமாயிற்று. நூலகங்களுக்கு அறுநூறு புத்தகங்கள்தான் இதுவரை வாங்கிக்கொண்டிருந்தார்கள். நான் பேசிய பிறகு, அது ஆயிரம் புத்தகமாக மாறியிருக்கிறது. பத்து வருடம் போராடினாலும் இது நடக்குமா என்பது சந்தேகம்தான். சட்டப்பேரவையில் பேசினால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று நான் சொல்லவில்லை. சிலவற்றையாவது வெல்லலாம் என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தீராநதி: வழக்கமான மற்ற அரசியல்வாதிகள் மாதிரியில்லாமல் ஒரு எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றவர் நீங்கள். எழுத்தாளர் என்ற அடையாளத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?

ரவிக்குமார்: இந்தத் தேர்தலில், என்னைத் தவிர வேறு சில எழுத்தாளர்களும் போட்டியிட்டார்கள் என்றாலும், எழுத்தாளர் என்ற அடைமொழியோடு வாக்காளர்களிடம் சென்றது அனேகமாக நான் மட்டுமாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். பெரும்பகுதி கிராமங்களைக் கொண்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில், எழுத்தாளன் என்ற இந்தப் பிம்பம் ஒரு அன்னியத்தன்மையை ஏற்படுத்திவிடுமோ என்ற தயக்கம் தொடக்கத்தில் எனக்கு இருந்தது. ஆனால், மிக விரைவில் இந்த அன்னியத்தன்மை சாதகமான விளைவையும் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன். “வழக்கமான அரசியல்வாதிகளில் ஒருவரல்ல இவர் என்ற எண்ணத்தை எழுத்தாளன் என்ற பிம்பம் எனக்கு வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கியது. அது என் மீது ஒரு பரிவுணர்வையும் உண்டாக்கியது. எனது எழுத்துலகப் பின்னணியை எடுத்துக்கூறும் விதத்தில், தேர்தலையட்டி தினமணி மற்றும் ‘டெக்கான் க்ரானிக்கிள் நாளேடுகளில் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் சிற்றிதழ் வட்டாரத்தில் மட்டும் அறியப்பட்டிருந்த என்னை ஒரு பரந்த தளத்தில் அறிமுகம் செய்துவைத்தன. நகர்புறத்தவர்கள் மத்தியில் எங்கள் கட்சி மீதிருந்த ஒவ்வாமை உணர்வை மாற்ற அந்தக் கட்டுரைகளை நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு எழுத்தாளனின் கற்பனையும் படைப்பூக்கமும் அரசியல் தளத்தில் சாதகமான விளைவுகளேயே ஏற்படுத்தும் என்று நான் எண்ணுகிறேன். தானும் ஓர் எழுத்தாளராக இருக்கிற முதலமைச்சரும் இதேவிதப் பண்புகளைக் கொண்டிருப்பார் என்பது என் நம்பிக்கை.

தீராநதி: இந்திய அரசியலமைப்பை முதலாளித்துவ அரசியலமைப்பு என்கிற விதமாக பேசியும் எழுதியும் வந்துள்ள நீங்கள், இப்போது அந்த அமைப்பில் பங்கெடுத்துக் கொள்வது ஒரு முரண் இல்லையா?

ரவிக்குமார்: எனது எழுத்துகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தவறான புரிதல் இது. மார்க்சியயூ லெனினிய இயக்கத்தில் இருந்தபோதும்கூட, இந்திய அரசியலமைப்பை பூர்ர்வா அமைப்பு என்று நான் கருதியதில்லை. இந்திய அரசியலமைப்பை அரை காலனிய, அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு என்று மார்க்சியவாதிகள் வரையறுத்தார்கள். இந்த வரையறையும் சரியானதில்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இந்திய சமூகத்தை மதிப்பிட இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை. அப்படியான ஆய்வுகள் இங்கு எந்த மார்க்சியர்களாலும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, மார்க்சிய சித்தாந்திகள் என்று சொல்லப்பட்டவர்கள், ஏற்கெனவே இங்கு நிலவிய இந்துத்துவ கருத்தியலோடு சமரசம் செய்து கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். மிகச்சிறந்த உதாரணம் நம்பூதிரிபாடு.

உண்மையில் இந்திய சமூக அரசியல் ஒரு பூர்ர்வா அமைப்பு கிடையாது. முதலாளித்துவ அரசியல் அமைப்பில் தனிமனிதன் என்கிற ஒரு அங்கீகாரம் இருக்கும். இங்கு தனிமனிதனை அங்கீகரிப்பதே இல்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, இதுபற்றி ஒரு விவாதமே உருவானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை அலகாக எதனை எடுத்துக் கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, காந்தியவாதிகள் ஒரு கிராமத்தைத்தான் அடிப்படை அலகாக கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது, அம்பேத்கர் ஒருவர் மட்டும்தான் தனிமனிதனை அடிப்படை அலகாக எடுத்துக்கொள்ள வேண்டும், கிராமத்தை எடுத்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி அதனைக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில்தான் நமது உரிமைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு முதலாளித்துவ அரசியல் அணுகுமுறைதான். ஆனால், மனிதர்களை மனிதர்களாகவே அங்கீகரிக்காத சாதிய சமூகத்தில், ஒரு தனிமனிதனாக சுரண்டுவதற்குக்கூட தலித்துகளை எடுத்துக்கொள்ளத் தயாராக இல்லாத சமூகத்தில், இது ஒரு முற்போக்கான நடைமுறை.

தீராநதி: மேலும், அதிகார மையங்களுக்குள் சென்று அதனைப் பயன்படுத்தி ஒன்றுமே செய்ய முடியாது, அதிகார மையங்களை அழிப்பது அல்லது தகர்ப்பதுதான் முக்கியமானது என்று அதிகார மறுப்பு மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை பேசியும் வலியுறுத்தியும் வந்துள்ளீர்கள்.

ரவிக்குமார்: பின்நவீனத்துவவாதிகள் என்று சொல்லப்படும் பலர் அதிகாரம் என்பதை அணுகியிருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு அதனை அணுகியவர் மிஷெல் பூக்கோதான். கார்ல் மார்க்ஸ் தொடங்கி மார்க்சியவாதிகள் அனைவரும் அதிகாரத்தின் ஒரு முகத்தை மட்டும்தான், குறிப்பாக அதன் ஒடுக்கும் பண்பை மட்டும்தான் பார்த்தார்கள். எனவே அதனை எதிர்க்கவேண்டும், நிராகரிக்கவேண்டும் என்னும் நிலைப்பாடு எடுத்தார்கள். அதனை வலியுறுத்தி பேசினார்கள். மாறாக மிஷெல் பூக்கோ, அதிகாரத்தின் ஆக்கும் பண்பைப் பார்த்தார். அழிப்பதை மட்டுமல்லாமல் உற்பத்தியையும் அதிகாரம் செய்யும் என்பதை அவர் அடையாளம் காட்டினார். அதிகாரம் இரட்டைத்தன்மை கொண்டதாக இருக்கும் போது, அதுகுறித்த உங்கள் அணுகுமுறை ஒரேவிதமானதாக இருக்க முடியாது. "துப்பாக்கிக் குழாய்களிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது. அதிகாரத்தை அழிப்போம்" என்று மாவோ சொன்னது இன்று பொய்யாகிவிட்டது. புரட்சியிலிருந்தும் அதிகாரம் பிறந்திருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். அது துப்பாக்கியிலிருந்து பிறந்த அதிகாரத்தைவிட கொடுமையானதாகி, சர்வாதிகாரத்தைக் கொண்டு வந்தது. விடுதலையின் பெயராலேயே ஒருவனை அடிமையாக்க முடியும் என்பதைத்தான் கம்யூனிச சமூகங்கள் நிரூபித்திருக்கின்றன. இந்நிலையில், அதிகாரத்தைத் தகர்ப்பதல்ல, அதிகாரச் சமன்பாடுகளை மாற்றியமைப்பதுதான் நாம் செய்யக்கூடியது என்கிறார் பூக்கோ. அதாவது, நமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது.

அதேநேரத்தில், அதிகாரத்தைக் கைக்கொள்வதும், துறப்பதும் ஒரே நேரத்தில் நடக்கவேண்டும். அதாவது, அதிகாரத்துக்காகப் போராடுகிற அதே நேரத்தில், அதனைத் துறப்பதுக்கான மனநிலையும் உங்களிடம் இருக்கவேண்டும். இந்தியச் சமூகம் துறவையே அதிகாரத்துக்குப் பயன்படுத்தின சமூகம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் அதிகாரத்தைக் கைக்கொள்வதற்கான வேட்கையையும் அதனை துறப்பதற்கான மனநிலையையும் ஒரே நேரத்தில் வைத்துக்கொள்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம். ஆனால், அதனை அம்பேத்கரிடம் நான் பார்க்கிறேன். இவ்வகையில் பூக்கோவின் நிலைப்பாட்டுக்கும் அம்பேத்கரின் நிலைப்பாட்டுக்கும் உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது. அதிகாரத்தைப் பற்றிய என்னுடைய புரிதல் இப்படித்தான் இருக்கிறது. நான் தேர்தலில் பங்கெடுப்பது என்பது அதிகார சமன்பாட்டை மாற்றியமைப்பதுக்கான ஒரு சிறிய முயற்சிதான். ஆனால், அதிகார போதைக்குள் ஆட்பட்டுவிடக்கூடார் அதனைத் துறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். எனவேதான், தேர்தல் முடிந்ததும் நடைபெற்ற எங்கள் கட்சியின் முதல் கூட்டத்தில் இனிமேல் தேர்தலில் நிற்கமாட்டேன் என்று அறிவித்தேன். இதற்கான தூண்டுதல் அம்பேத்கரிடம் இருந்தும் பூக்கோவிடம் இருந்தும் எனக்கு வருகிறது.

தீராநதி: சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் செய்ய திட்டமிட்டிருக்கும் விஷயங்கள் என்ன?

ரவிக்குமார்: வெகுஜன அரசியல் கவனத்தில் கொள்ளாத அனைத்தையும் அதன் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். சட்டசபையில் நான் பேசிய முதல் கன்னிப் பேச்சே இதனை உங்களுக்குச் சொல்லும். இருபத்தைந்தாயிரம் தொகுக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் இன்னும் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கின்றன. தமிழின் தொன்மையையும் வரலாற்றையும் தெரிந்துகொள்ள இந்தக் கல்வெட்டுகள்தான் ஆதாரம். தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் சொல்லும் நமது வேண்டுகோளுக்கு இந்தக் கல்வெட்டு ஆதாரங்கள் மிக முக்கியமானவை. எனவே இந்தக் கல்வெட்டுகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். மேலும், தமிழக அரசு ஆவணங்கள் பெருமளவில் லண்டன் ஆவணக் காப்பகத்தில் இருக்கின்றன. அவற்றின் நகலை இங்கே கொண்டுவர முயற்சி எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினேன். இவைகள் வேறு எந்த சட்டமன்ற உறுப்பினராலும் எழுப்ப சாத்தியமில்லாத பிரச்னைகள். ஆனால், தமிழக அரசியலைப் பொறுத்தவரைக்கும் மிக ஆதாரமான விஷயங்கள். இந்த விஷயங்கள் எழுப்பப்பட்டால் அதனை மதித்துச் செய்ய விரும்பும் அரசாங்கம் இன்று இருக்கிறது என்பதும் சந்தோஷமான ஒரு விஷயம். எதிர்க்கட்சி அணியில் இருக்கும்போதும் இந்தப் பாராட்டை சொல்லவேண்டும்.

எனது தொகுதியைப் பொறுத்தவரைக்கும் அந்தத் தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது எனது திட்டம். பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவது, மாணவர்களுக்கான கல்வித் திட்டத்தில் கவனம் செலுத்தி சில முக்கியமான காரியங்களைச் செய்வது, பின்தங்கியிருக்கும் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்தவர்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவது, இந்திய அளவில் முக்கியமான பல்வேறு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களை தொகுதிக்கு அழைத்து, தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தை உருவாக்குவது என்று பலவற்றைத் திட்டமிட்டிருக்கிறேன்.

தீராநதி: பெரியார், திராவிட இயக்கம் மற்றும் திராவிட கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்த நீங்கள், இப்போது ஒரு திராவிட இயக்கக் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ரவிக்குமார்: நான் சொல்வது உங்களுக்கு அதிரடியானதாகக்கூட இருக்கலாம். ஆனால், ஆனைமுத்துவுக்கு அடுத்தபடியாக பெரியாரை மீண்டும் மீண்டும் படித்தவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன். பெரியாரைப் படித்து, அதனை வெவ்வேறு சூழலுடன் பொருத்தி, பின்நவீனத்துவப் பின்புலத்துடன் அவருடைய போராட்டங்களைப் பார்த்து, மறுவாசிப்பு செய்த ஆரம்பகால எழுத்தாளர்களில் நானும் ஒருவன். பெரியார் குறித்த விவாதங்களை கிளப்பி, அவருடைய எழுத்துக்கள் மீண்டும் பெரிய அளவில் வாசிக்கப்படவும் நாங்கள் காரணமாக இருந்தோம். இந்த விவாதங்களில் நான் முன்வைத்த, மையமாக எழுப்பிய பிரச்னைகளை யாருமே கண்டுகொள்ளவில்லை அல்லது அதிலிருந்து நழுவிப்போக விரும்புகிறார்கள்.

1998இல் திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஆதரவு தருகிறது. எனக்கு அது ஒரு அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், அதனை மற்றவர்களைப் போல் தி.முக. தலைவரின் அல்லது கட்சியின் சந்தர்ப்பவாதம், நிலைப்பாடு என்று குறுக்கி என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அதன் சிந்தனையிலேயே இதற்கான காரணங்கள் இருக்கிறதா என்று தேடத் தொடங்கினேன். அப்போது பெரியாரிடம் அதற்கான வேரைப் பார்த்தேன். குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், "சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார். இதனால், மத அடிப்படைவாதம் உச்சத்தில் இருந்த சூழலில், அதனை எதிர்கொள்ள பெரியாரியம் போதாது என்று எனக்குத் தோன்றியது.

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னால், அம்பேத்கர் சிறுபான்மையினர் பிரச்னையை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்து பேசியதை, பெரியாரின் இந்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். "சிறுபான்மையினர் கையில்தான் அதிகாரம் இருக்க வேண்டும். பெரும்பான்மை கையில் போகக்கூடாது" என்கிறார் அம்பேத்கர். "இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை என்பது மதப் பெரும்பான்மை. இது மாறாதது. பொதுவாக, பெரும்பான்மை ஆட்சி செய்வதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்றாலும், அந்தக் கோட்பாட்டை அப்படியே இந்தியாவில் பொருத்தினீர்கள் என்றால் அது இங்குள்ள மதப் பெரும்பான்மையினர் மத்தியில் அதிகாரத்தைக் கொடுத்துவிடும். அது கூடாது. மதப் பெரும்பான்மையை நாம் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்கிறார். முடிவாக, ‘‘சிறுபான்மையினர் அனைவரும் சேர்ந்து ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கும் அதே நேரத்தில், சிறுபான்மை உதவி இல்லாமல் பெரும்பான்மை மட்டும் ஆட்சியமைக்க வழி இருக்கக்கூடாது" என்றும் சொல்கிறார். அம்பேத்கருடைய நிலைப்பாடும் பெரியாருடைய நிலைப்பாடும் எதிர் எதிரானது. இந்நிலையில், அம்பேத்கரை வடநாட்டுப் பெரியார் என்று சொல்வதும், பெரியாரை தென்னாட்டு அம்பேத்கர் என்று சொல்வதும் முட்டாள்தனமானது. இரண்டு பேரும் பார்ப்பனியத்தை எதிர்த்தார்கள் என்பதிலும் இருவரும் அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துள்ளார்கள் என்பதிலும் ஒற்றுமை இருக்கலாம். ஆனால். அணுகுமுறையில், சிந்தனை முறையில் இருவருக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.

பெரியார் குறித்த எனது விமர்சனங்களின் அடிப்படை நோக்கம், பெரியாரை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப மறுவாசிப்பு செய்யவேண்டும், இன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமுள்ளதாக அவரது சிந்தனைகளை மாற்றவேண்டும் என்பதுதான். இதனைத் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்று நான் சொல்வதாகத் திருப்பிவிட்டார்கள். பெரியாரை சிந்தனை தளத்தில் அங்கீகரித்து, அவருடைய சிந்தனைகள் நமக்கு எப்படிப் பயன்படும் என்று நான் பார்த்திருக்கிறேன். உண்மையில் பெரியாரியவாதிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்களானால் என்னை அவர்கள் சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, அவர்கள் எனக்கு அவதூறு கடிதங்களையும் மிரட்டல் கடிதங்களையும் எழுதினார்கள். தொலைபேசியில் மிரட்டும் விதமாகப் பேசினார்கள். அந்தளவுக்குத்தான் பெரியாரை அவர்கள் உள்வாங்கி இருக்கிறார்கள்.

பெரியார், தொடர்ந்து மாறிக்கொண்டும் தன்னையே மறுத்தும் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார். அவரது வாரிசுகளான திராவிட இயக்கத்துக்காரர்களாலோ, தி.மு.க. கட்சிக்காரர்களாலோ அந்தவகையில் அவரைப் பின்பற்றுவது சாத்தியமே இல்லாதது. பொதுவாழ்க்கையில் மானம் பார்க்கக்கூடாது என்று சொன்னார் பெரியார். ‘‘மேடையில் செருப்பை வீசினால் இன்னொரு செருப்பையும் தேடி எடுத்துக்கொண்டு வா என்றார். அதாவது, பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு இந்தமாதிரி பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாகப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, அதுபோல் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். ஆனால், அவரது வாரிசுகள், மானம் பார்க்கிறவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரக்கூடாது என்பதுபோல் அதனை மாற்றிவிட்டார்கள். இவர்களால் அவரது உண்மையான வாரிசாக இருக்கமுடியார் அது சாத்தியமுமில்€ல் நாம் இதனை அவர்களிடம் எதிர்பார்க்கவும் கூடாது. திராவிட கட்சிகளின் கடந்த நாற்பதாண்டு ஆட்சியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் நிலமற்றவர்களாக மாற்றப்பட்டதும் அவர்களது கல்வி நிலை மோசமானதும் திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான். மொத்தத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது என்பதனை உணர்ந்து, அதன் அடிப்படையில்தான் அதனை விமர்சிக்கிறேன். அதேநேரத்தில், அவர்கள் செய்த நல்ல விஷயங்களை ஆதரிக்கவும் செய்திருக்கிறேன்.

தேர்தல் கூட்டணி என்பது அரசியல் அதிகாரப் பகிர்வுக்காக, இரண்டு வெவ்வேறு கொள்கையுள்ள கட்சிகள் ஏற்படுத்திக் கொள்கிற ஒரு தற்காலிக ஏற்பாடு. கொள்கை சார்ந்து எந்தக் கூட்டணியும் அமைய முடியாது. கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடலாமே. திராவிட கட்சிகளுடன் விமர்சனங்கள் வைத்திருந்தாலும், இந்தக் கூட்டணி தேவையாக இருக்கிறது.

தீராநதி: இது ஒரு சமரசம் இல்லையா?

ரவிக்குமார்: சமரசம்தான். நடைமுறையில் சமரசம் இல்லாமல் எதுவும் சாத்தியமும் கிடையாது. ஆனால், கருத்தியல் தளத்தில் சமரசம் கிடையாது.

தீராநதி: இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்த உங்கள் விமர்சனங்கள் என்ன?

ரவிக்குமார்: பல குறிப்பிடத்தக்க தலைவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள். கலைஞர் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவரளவுக்குத் தன்மைகள் கொண்ட இன்னொரு ஆளுமையை இனிமேல் பார்க்க முடியாது. எழுதுகிற, பேசுகிற, படிக்கிற ஆற்றல் கொண்ட தலைமுறை கிட்டத்தட்ட அவருடன் முடிகிறது. இதனால் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒரு ஆளுமையாக இன்று அவர் இருக்கிறார். ஜெயலலிதா துணிவு, தன்னம்பிக்கை, தைரியம் இவற்றுக்கு எடுத்துக்காட்டாக சொல்கிற ஒரு ஆளுமையாக இருக்கிறார். பெரிய தியாகங்களைச் செய்துவிட்டு அதுபற்றிய எந்தவொரு எண்ணமும் இல்லாமல் இருக்கும் நல்லகண்ணுவும் அவருடைய எளிமையும் மிகவும் போற்றக்கூடியது. இளையதலைமுறை தலைவர்களில் வேறு யாரைவிடவும் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட ஓர் ஆளுமையாக திருமாவளவன் இருக்கிறார். இவ்வளவு சக்திவாய்ந்த, வித்தியாசமான பல்வேறு ஆளுமைகளை வேறு ஏதாவது இந்திய மாநிலங்களில் பார்க்கமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்களிடமிருந்து அடுத்த தலைமுறையினர் சாதகமான பண்புகளை உள்வாங்கவேண்டும். நிச்சயமாக இந்தத் தலைவர்கள் அனைவரிடமிருந்தும் ஆரோக்கியமான பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று நினைக்கக் கூடியவனாகத்தான் நான் இருக்கிறேன்.

தீராநதி: தலித் இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது?

ரவிக்குமார்: பிற்படுத்தப்பட்டோர் என்று பொதுவாகப் பேசினாலும், அதற்குள் இருக்கும் சாதிகள் எப்படித் தனித்தனியாக இருக்கிறதோ, அதுபோல் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் இருக்கும் சாதிகளும் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. இது முக்கியக் காரணம். ஆனால், தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையிலான உறவு, இந்து மதத்துக்குள் இருக்கும் சாதியினருக்கு இடையில் இருப்பதுபோல் பகைமைத்தன்மை கொண்டதாக இல்லாமல் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறையின் அடிப்படையில் அவர்களுக்கிடையே ஒருமித்தப் பண்புகள் இருக்கிறது. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்தி எல்லோருக்குமான கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னேச் செல்லும்போது பரந்த தளத்தில் இவர்கள் அனைவரையும் திரட்டமுடியும் என்கிற நம்பிக்கையும், உட்சாதி பிரிவுகளைக் கடந்துபோகவேண்டும் என்ற பார்வையும் கருத்துப் பின்புலமும் எங்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். சில தலைவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட ஈகோ காரணமாக அது சாத்தியப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. விரைவில் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடையே மட்டுமல்லாமல் மற்ற எல்லா சாதியினருக்கு இடையேயும் ஒரு உறவை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

நன்றி: தீராநதி 2006

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள் - சு.சிவசங்கர்

பக்தி இயக்கப் படைப்பாளிகள், ஏனைய படைப்பாளிகளைப் போன்று தமது படைப்பில் எளிதில் நிறைவு கொள்வதில்லை. தாம் சார்ந்துள்ள சமயக் கருத்தியலை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே அவர்களுடைய முதல் நோக்கமாகும். அதற்காக அவர்கள் மேற்கொண்ட உத்திகள் பல. முதலாவதாகப் பயணம், அவர்களை மக்கள் முன் அவர்கள் சார்ந்துள்ள கருத்தியலின் தூதுவர்களாக நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக இசை, அவர்கள் கைக்கொண்ட இசை வடிவங்கள் மக்களை அவர்கள் முன் நிறுத்தி வைத்தன. மூன்றாவதாக அவர்கள் பேசிய, பாடிய மொழி மக்களின் பேச்சு நடையை ஒத்ததாக இருந்தது. பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். திருநின்ற செம்மையரான திருநாவுக்கரசர், தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தையும் பண்பாட்டினையும் சமூகத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அரிய முயற்சியில் ஆழ்ந்திருந்தார். நாட்டுப்புற வழக்குகள் பல அவரது தேவாரப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பழமொழிகளும் உண்டு.

வாழ்க்கை அனுபவங்களின் பிழிவாகக் காணப்படுபவை பழமொழிகளாகும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகின்றனர். அவற்றுள் சில மகிழ்ச்சிக்குரியன, சில வருத்தத்திற்குரியன, சில நினைத்துச் சுவைக்கத்தக்கன. சில மறந்து விடத்தக்கன. அனுபவம் எதுவாயினும் அதனுடைய சாரத்தைத் தனக்குப் பின்வருவோர் உணருமாறு மனிதன் கூறியவையே பழமொழிகள் எனலாம். பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அறியலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறும். பழமொழி, பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொலவம், சொலவடை என்று பலவாறான பெயர்கள் பழமொழிக்கு இருப்பதுவே அதன் தொன்மையை விளக்கும்.

''ஏதுநுதலிய முதுமொழி'' என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால், பண்பாடு தொடங்கிய காலந்தொட்டுப் பழமொழிகள் இருந்து வந்தமையை அறிய முடிகிறது.

''நன்று செய் மருங்கில் தீதில் என்னும்

தொன்றுபடு பழமொழி''

என அகநானூறும் எடுத்துக்காட்டுகிறது. பழமொழிகளின் அருமையை உணர்ந்த முன்னோர் அவற்றை ஏட்டில் எழுதா நாட்டுப்புற இலக்கிய நிலையிலிருந்து மாற்றிப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே, ''பழமொழி நானூறு'' என்னும் இலக்கியமாகும். திருக்குறள், நாலடியார் முதலான நூல்களிலும் பழமொழிகள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. தொடர்ந்து எழுந்த பக்தி இலக்கியங்களிலும் பழமொழிகள் குறிப்பிட்டதோர் இடத்தைப் பெற்றுள்ளன.

மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படல் பழமொழியின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. Trench Proverbs and their lessions பழமொழி உரைநடை சார்ந்தது எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைக் காணலாம். பழமொழி உவமைப் பண்பு கொண்டது. சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன என வேறு சில இயல்புகளையும் தே. லூர்து கூறுகின்றார் (தே. லூர்து நாட்டார் வழக்காறுகள் பக்.6,7). குறைந்தபட்சம் ஒரு தலைப்பையும் ஒரு முடிவுரையையும் உள்ளடக்கிய மரபுவழி உரைக் கூற்றே பழமொழியாகும் எனப் பழமொழிக்கு வரையறை தருகிறார் ஆலன்டண்டிஸ். அமைப்பியல் அடிப்படையில் அவர் கூறும் பழமொழி வகைகளுள் ''வேறுபடுத்திக் காட்டும் முரணுடைய பழமொழிகள்'' என்பதும் ஒன்று (நாட்டார் வழக்காறுகள் பக்.11,14). திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்பெறும் பழமொழிகளுள் பெரும்பாலானவை மேற்கூறிய இயல்புகளுக்குப் பொருந்தி வருவனவாகும். வேறுபடுத்திக் காட்டும் முரணுடையப் பழமொழிகள் என்னும் அமைப்பிலேயே அப்பர் கூறும் பழமொழிகள் மிகுதியும் அமைந்துள்ளன.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி (Proverb) அல்லது சொல்லடை (Proverbial phrase) வருமாறு அமைந்துள்ளது. வேறு பல பாடல்களிலும் பழமொழிகள் பயின்று வருவதையும் காணமுடிகிறது.

திருப்பாடல்தோறும் ஒரு பழமொழி அமையப்பெற்ற தன்மையினால் நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியோ, சொல்லடையோ இடம் பெறுகின்றன. இவற்றுள் சில இன்றளவும் மக்கள் வழக்கில் உள்ளவை.

''மெய்யெலாம் வெண்­று சண்ணித்த

மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி

உழிதந்தென் உள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ

மயில்ஆலும் ஆரூ ரரைக்

கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்

காய்கவர்ந்த கள்வ னேனே''

என்பது இப்பதிகத்திலுள்ள முதற்பாடல். ''கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'' என்னும் குறள்வரியை இப்பாடல் நினைவுபடுத்துகிறது. இப்பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறும் ''கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே'' என்னும் பழமொழியும் இதே கருத்தை கூறும். சைவ சமயத்தை விட்டுப்பிரிந்து, சமணம் சார்ந்து பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சைவம் திரும்பியவர் திருநாவுக்கரசர். சமணத்திற் புகுந்ததால் இழிநிலை ஏற்பட்டதாகக் கருதி, சைவத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக இப்பதிகப் பழமொழிகள் அமைந்துள்ளன.

இரண்டாம் பாடலில் அமையும் பழமொழி, ''முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே'' என்பதாகும். முயலின் பின் போதல் எளிது, காக்கையின் பின் போதல், பறத்தல் இயல்பில்லாத மனிதர்க்கு அரிது. தமக்கு இயல்பல்லாத சமண நெறியில் சென்ற இழிநிலை இப்பாடலில் அப்பரால் கூறப்படுகிறது. இருக்கிறதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போவது என்னும் உலக வழக்குப் பழமொழியை மேற்கண்ட பழமொழிகள் ஒத்துள்ளதைக் காணலாம்.

''அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே'' என்னும் பழமொழி மூன்றாம் பாடலில் அமைகின்றது.

''நல்லவனை நாலு பணம் கொடுத்து வாங்கு

கெட்டவனை நாலு பணம் கொடுத்தாவது விலக்கு''

என்று ஒரு பழமொழி கூறுகிறது. இதன் மறுதலையாய் விலை கொடுத்து மறம் வாங்குவது எத்தனை பேதமை என்பதனை இப்பாடல் வரி விளக்குகின்றது. ''தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே'' என்னும் ஒன்பதாம் பாடற் கருத்தும் இதுவேயாம்.

மணல் வீடு கட்டுவது, நீர்க்கோலம் போடுவது போன்ற நிலைபேறற்ற செயல்களைச் செய்வது அறிவிலிகள் செயல் ஆகும். இதனைத் தாம் செய்ததாக அறிவிக்கும் அப்பரடிகள் கீழ்க்காணும் தொடரைக் கூறுகிறார்.

''பணி நீரால் பாவைசெயப் பாவித்தேனே''

சமண நெறியால் வீடுபெறக் கருதுதல் என்பது அறிவீனமாகும் என்னும் கருத்தை இப்பாடல்வரி கொண்டுள்ளது.

அறிவிலியோடு சேர்ந்தால் அழிவு உறுதி என்னும் கருத்து அடுத்த பாடல் பழமொழியில் பெறப்படுகிறது.

''எதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே''

என்னும் இப்பாடல் வரி, ''பின் இன்னா பேதையார் நட்பு'' என்னும் பழமொழி நானூற்றுக் கருத்துக்கு ஒத்திசைக்கிறது.

கொண்ட கொள்கையின் தன்மை அறியாமல், கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் முட்டாள் தனத்தை,

''இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்தவாறே'' என்னும் பாடல் பழமொழி எடுத்தியம்புகிறது.

பயனற்ற செயலைச் செய்து ஓய்ந்து போகும் செயல்பாடு மனிதனிடம் இன்றளவும் உள்ளது. ''விழலுக்கு இறைத்த நீர்'' என்னும் தொடர் அதனை உணர்த்தும். இக்கருத்து அமைய, அப்பரடிகள் ''பாழ் ஊரிற் பயிக்கம்புக்கு எய்த்தவாறே'' என்னும் சொல்லடையை தமது அடுத்த பாடலிற் கூறுகின்றார். (பயிக்கம் = பிச்சை) இதே கருத்தினை ''பயிர்தன்னைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீரிறைத்து'' (4:52:7) என்று மற்றொரு பாடலிலும் அமைத்துப் பாடுகின்றார்.

வழி தெரிந்தவன், தெரியாதவனுக்கு வழி காட்டுவது உலக இயல்பு. மாறாகக் ''கொத்தைக்கு மூங்கை வழிகாட்டும்'' போக்கினைப் பற்றி கூறுகின்றார் அப்பரடிகள் (கொத்தை = குருடன், மூங்கை = ஊமை) (4:99:2).

நாட்டுப்புற வழக்காறுகளிலும், பழமொழிகளிலும் காணப்படுகின்ற ''விளக்கினில் விழும் விட்டிற் பூச்சியையும் (4:31:5), ஆற்றினிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரையும் (4:87:6), இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பையும் (4:75:6), பாம்பின் வாய்த் தேரை''யையும் (4:52:7) தமது திருப்பாடல்களில் எடுத்துக் காட்டுகின்றார் அவர்.

''நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட

மிக்க தையலை வெள்வளை கொள்வது

தொக்க நீர்வயல் தோணிபுரவர்க்குத்

தக்கதன்று தமது பெருமைக்கே'' (5:158:7)

என்னும் பாடல், ''பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை'' என்ற பழமொழியை நினைவுறுத்துவதாய் அமையக் காணலாம்.

''நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த கதை''யும் அப்பரடிகளால் இரு இடங்களில் (4:27:5, 5:213:7) கூறப்பெற்றுள்ளது. கதையைப் பிழிந்தெடுத்த சாறென இப்பழமொழி அமைகின்றது.

எந்த ஓர் இலக்கியமும், மனிதனை விட்டு விலகி நின்றால் நிலைக்க முடியாது. சாதாரண மனிதனின் கருத்துகளும், பேச்சுகளும் இலக்கியத்தில் இடம் பெறும் போது அவை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தருகின்றன. தமது காலச் சமூகத்தினை, அதன் பண்பாட்டினைச் செப்பம் செய்ய வேண்டிய கட்டுப்பாடு, சமய, சமுதாயப் போராளியான திருநாவுக்கரசருக்கு இருந்தது. அவர்தம் பாடல்கள் சராசரி மனிதனுக்கும் சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. எனவே, அப்பர் தேவாரத் திருப்பாடல்கள், நாட்டுப்புற மக்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி அவர்களுடைய பேச்சு வழக்குகளை - பழமொழி முதலான வழக்காறுகளை உள்ளடக்கியதாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.

நன்றி: வேர்களைத்தேடி

திருமணப் பாடல்களில் மனித உணர்வின் வெளிப்பாடுகள் - செ.பாலு

மனிதனுடைய வாழ்க்கையில் தென்றலும், புயலும், இடியும், மின்னலும், இன்பமும் துன்பமுமாக வாழ்க்கை சுழற்றியடிக்கப்படுகின்றது. இந்நேரத்தில் மனிதன் தன் உணர்வுகளைப் பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர். இன்பத்தின் போது இனிமையான பாடல்களும், துன்பத்தின் போது சோகமான பாடல்களும் பாடி உணர்வுகளை வெளிப்படுத்துவது மனித இயல்பு திருமணப் பாடல்கள் இன்பவுணர்வுகளை வெளிப்படுத்தவும், மனித உறவுகளை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டவை.

திருமணச் சடங்குகளில் மணமக்களை வாழ்த்தும் மரபு புதியது அல்ல. அகநானூற்றில் இதன் அரும்பினை காணலாம். சிலப்பதிகாரத்தில் இதன் வளர்ச்சியைக் காணலாம்.

''காதலர்ப் பிரியாமல்

கவவுக்கை நெகிழாமல்! தீது அறுக!''

என்று வந்திருந்த உறவினர்கள் கோவலனையும், கண்ணகியையும் வாழ்ந்தினர் என்பது உண்மை. திருமணப் பாடல்களைத் திருமணத்திற்கு முன்பு பாடப்படுபவை, திருமணத்தின் போது பாடப்படுபவை, தாலிகட்டிய பின்பு பாடப்படுபவை என்று பகுக்கலாம். அவ்வாறு பார்த்தால் நலங்குப் பாடல்கள், மணமக்களை வாழ்த்தும் பாடல்கள், மணமக்களைக் கேலி செய்து பாடும் பாடல்கள் என்றும் கூறலாம். இதன் மூலம் உறவினர்களின் மன உணர்வையும் எதார்த்தங்களையும் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திருமணத்திற்கு முன்பு பாடப்படும் பாடல்கள்:-

திருமணத்தின் தொடக்கமாக மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் பெண் வீட்டைப் பார்க்கச் செல்வார்கள். இவர்கள் அனைவரும் பெண் வீட்டைப் பார்த்துச் சென்றவுடன் மாப்பிள்ளை வீட்டார் வந்தது போல பெண் வீட்டாரும், உறவினர்களும் மணமகன் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கமாகும். பெண் கொடுப்பது முறை மாமனுக்கு முதல் உரிமையாக வைத்திருந்தேன். முறை மாமன் ''பெண் வேண்டாம்'' என்று சொன்னால் தான் மற்ற உறவினர்களுக்குத் தருவது மரபாக தமிழர்கள் கொண்டுள்ளார்.

சங்க காலம் முதல் இன்று வரை பெண் பார்க்க வந்தாலும் நிச்சயம் செய்வதற்கு வந்தாலும் தனது குலதெய்வத்தை வணங்கி மங்கலப் பொருட்கள் கொண்டு வருவது மரபாகும். அவ்வாறு கொண்டு வரும் பொருட்கள் குத்துவிளக்கு, மல்லிகைப்பூ, மாலைச்சுருள், வெற்றிலை, பாக்கு, புடவை, கண்ணாடி, பொட்டு, மஞ்சள் போன்ற பொருள்கள் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் பெண் கேட்பார்கள் கீழ் வரும் பாடல் அந்த நிகழ்வை வழிகாட்டுகிறது.

குத்து விளக்கோட வந்தேனண்ணா!

கொடமல்லிப் பூவோட வந்தேனண்ணா

மால சுருளோட வந்தேனண்ணா!

.......

மேற்சொன்ன பாடலில் அண்ணன், தங்கை உறவு முறையையும் பெண், என் மகனுக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று தன் உறவு முறையைத் தெளிவாகக் கூறினாள்.

முறைமாமன் பெண் கேட்க வருவது:-

தனது தாய் மாமன் பெண் கேட்க வருவதை ஒரு பெண் பெருமைப்படக் கூறினாள்.

வாராங்க வாராங்க மாமன் பெருஞ்சேனை

வந்து நிறைஞ்சாங்க மாமன் பெருஞ்சேனை

பாக்கு வெட்டி காலால சூதாடி வாராங்க

சுண்ணாம்பு காலால சூதாடி வாராங்க

வெத்தல கட்டால விளையாடி வாராங்க

வெத்தல கட்டுவது விளையாமோ பாண்டியற்கு

நல்ல நாள் கேட்டு நாள் இட்டு வாராங்க

வீடு வந்து புகுந்தோடனே

வணக்கமும் சொன்னாங்க

தக்க பதில் வணக்கம்

தாங்களும் இட்டாக.....

பெயர் பொருத்தம் பார்ப்பது:-

உலகில் மனிதனின் அறிவால் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. கனிணியுகம், அறிவியலின் ஆக்கம் என மிகப் பெரிய சாதனைகள் எல்லாம் நிகழ்கின்றன. சங்க காலம் முதல் தற்போதைய கலியுக காலம் வரை தமிழர்கள் மணமக்கள் இருவருக்கும் திருமணத்தின் போது சோதிடம், அதாவது பெயர்ப் பொருத்தம் பார்ப்பது என்ற மரபு காலம் காலமாக கடைபிடித்து வருகின்ற அவ்வுணர்வை,

ரபார்த்த பிராமணர்க்குப்

பஞ்சாங்கம் தான் எடுத்துப்

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்

பெயர் பொருத்தம் தாம் பார்த்து!

கழுத்துப் பொருத்தமது

கணவருக்கு நல்லது என்றார்

குடங்கைப் பொருத்தமது

கொண்டவர்க்கு நல்லது என்பார்!

வயிற்றுப் பொருத்தமது

வளமாக இருக்குது என்பாள்

மாரு பொருத்தமது

மன்மதற்கு நல்லது என்பார்

பத்துப் பொருத்தங்களும்

பாங்கா இருக்குதுன்னார்

ஐந்து பொருத்தங்களும்

அமைப்பா இருக்குதுன்னார்''

திருமணப் பத்திரிக்கை வைப்பது (அ) பாக்கு வைப்பது:-

இரு வீட்டிலும் திருமண நாள் முடிவானவுடன் அழைப்பிதழ் கொடுத்தும், பாக்கு வைத்து அழைப்பதும் மரபு. இவ்வழக்கம் அன்று முதல் இன்று நடைமுறையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை,

கீழ்வரும் பாடல் உணர்த்தும்.

''கல்யாணம் கல்யாணம் என்று சொல்லி

கடலேறி பாக்கு வைத்தார்

படியிலே பாக்கு அளந்து

பங்காளிக்கும் பாக்கு வைத்தார்

உழக்குல பாக்கு அளந்து

உரைமறைக்குக் கொடுத்துவிட்டார்

மேற்கத்தி நாட்டாருக்கும்

மீனாவுக்கும் சீட்டெழுதி

மேற்கத்தி நாட்டாரும்

மீனாவும் வந்து இறங்க''

மேற்சொன்ன திருமணப்பாடலின் மூலம் பத்திரிக்கை வைப்பது, பாக்கு வைப்பது என்ற மரபு காதணி விழா, வீடு குடிபுகுதல், கோவில் விழா, கல்லூரி திறப்பு விழா, கடை திறப்பு விழா போன்ற விழாக்களில் பத்திரிக்கை வைப்பது வழக்கமாகி உள்ளது.

தெய்வ வழிபாடு:-

"கடவுளை நம்பினோர் கைவிடப்படார்'' என்ற பொன் மொழிக்கு இனங்க மனிதன் எந்தவொரு செயல் தொடங்கினாலும் இறைவனை வணங்கித் தொடங்குவது கடமையாக கொண்டிருந்தனர். இங்கே மணமக்கள் இருவரும் சிறப்புடன் வாழவேண்டும் என்பது உறவினரின் நோக்கமாகும்.

''செம்பொன் மலரெடுத்துச்

சிவனாரைப் பூசைசெய்து

பசும்பொன் மலரெடுத்துப்

பார்வதியைப் பூசை செய்து

வெள்ள மலரெடுத்து

வினாயகரைப் பூசை செய்து...''

மேற்சொன்ன பாடல் முடிந்தவுடன் மணமகன் கழுத்தில் தாலிக் கட்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

திருமணத்திற்குப் பின்பு பாடப்படும் பாடல்கள்

(1) வாழ்த்துதல்

தாலி கட்டிய பின்பு திருமணத்திற்கு வருகை தந்திருந்த சுற்றத்தார்கள் அனைவரும் மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று வாழ்த்துவர் அதை,

''பூவும் மணமும்

பொருந்திய தன்மைபோல்

தேவியரும் மன்னவரும்

சேமமாய் வாழ்ந்திடுங்கள்''

..........

''ஆல்போல் தழைத்து

அருகுபோல் பேரூன்றி

நலமுடன் எந்நாளும்

ஞானமுடன் வாழ்ந்திடுங்கள்''

என்ற பாடலின் மூலம் அறியலாம்.

சீதனங்கள் கொடுப்பது:-

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சீர்வரிசைக் கொடுத்து, திருமண முறைகளில் ஒன்று அதற்குப் ''பரிசம்'' என்று பெயர். ஆனால் தற்போதைய காலமே வேறு, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும் சீதனம் பற்றிய திருமணப்பாடலில்

''பத்து விரலுக்கும் பவுனால மோதிரங்கள்

பட்டி நிறைந்து இருக்கும்

பசுமாடு சீதனங்கள்

ஏரி நின்று இருக்கும்

எருமை மாடு சீதனங்கள்

குட்டை நிறைந்து இருக்கும்

குறும்பாடு சீதனங்கள்''

.........

என்ற அக்காலத்தில் ஆடு, மாடுகளைச் சீதனப் பொருள்களாகக் கொடுத்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பணமாகவும், வேலை வாய்ப்பாகவும், சீதனங்கள் வழங்கப்படுகின்றன.

பெண்ணை கேலி செய்யும் பாடல்:-

திருமணம் முடிந்த மணமக்கள் வீட்டினுள் சென்று அமர வைத்து அவர்களுக்குப் பாலும் பழங்களும் கொடுத்துக் கேலி செய்வார்கள் முறைப் பெண்கள். இங்கே மாப்பிள்ளைகள் தங்கைகள், அக்கா போன்றவர்கள் பெண்ணைக் கேலி செய்வதாக இப்பாடல்,

நல்லெண்ண தடவி எங்கண்ணா

நலமா தலை முழுகி

நடுலூரு பாதைக்கு கிடலாட போகையில

புண்ணிமா போவுதுண்ணு

எங்கண்ணா பூ முடிச்சு வைச்சாங்க

எங்கண்ணன் கல்லைய தின்னுகிட்டு

கடைவீதியில போகயில

கடங்கார அத்த மவ கடவாய்ச் சப்புனியே''

மணமகனைப் கேலி செய்யும் பாடல்:-

மாப்பிள்ளைக்கு முறைப் பெண்கள் அதாவது அக்கா மகள், அத்தை மகள், மாமன் மகள் போன்றவர்கள் மணமகனுக்கு இனிப்பு வகையைக் கொடுத்தும், ஏமாற்றியும் கேலி செய்வார்கள். இந்த நிகழ்ச்சியைக் கீழ்வரும் பாடல் உணர்த்தும்.

''ஆணை அடிபோல இங்க அதிரசங்கள் நூறு வச்சன்

அத்தனையும் தின்னு வந்த அந்த ஓதடி மகன்!

கம்ம தட்ட வெட்டி வெட்டி

காலு ஒடிஞ்ச மாப்பிள்ளைக்கு

வச்சிருந்து கெண் கொடுத்தேன்

வரனே பசுங்கிளியே''

நாட்டுப்புற மக்களின் திருமணங்கள் சடங்கு முறையால் முற்றிலும் நகர்ப்புற திருமணத்தினின்று வேறுபட்டன. மேலே சொல்லப்பட்ட திருமணப் பாடல்களில் மனித நேயமும், உறவின் அழமும் உணர்த்தப்படுகின்றன. நாட்டுப்புற மக்கள் திருமண சடங்கு முறையை எவ்வாறு பின்பற்றுகிறார்கள் என்பதையும் சமுதாய, சமூக விழிப்புணர்வு கருத்துக்களைச் சேர்த்து எவ்வாறு கூறுகிறார்கள் என்பதையும் இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமணப் பாடல்கள் மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உலாவரும் உள்ளத்தின் உண்மையான உணர்ச்சி வெளிப்பாடுகளே! எனவே, இனிவரும் ஆய்வாளர்கள் திருமணப்பாடல்களை ஆய்வு செய்தால் நாட்டுப்புறத் திருமணப் பாடல்கள் பாதுகாக்கப்படுவதோடு பழங்காலத் திருமணமுறைகளை அறிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

நன்றி: வேர்களைத்தேடி

24/08/2011

கவிதையின் கவிஞர் சுரதா - ஈரோடு தமிழன்பன்

கடந்த நூற்றாண்டின், முதல் ஐம்பதுகளில், பாரதிதாசன் கவிதை ஆளுமை அவருக்கென்று ஒரு பெரிய பரம்பரையை உருவாக்கி வைத்தது. பாரதி பரம்பரையில் பாரதிதாசன் ஒருவருக்கு மட்டுமே அப்படிப்பட்ட வரலாற்றின் தொடர்ச்சி வாய்த்தது. அவருடைய தமிழ் உணர்வு, சமூகப்பார்வை, அரசியல் சாய்வு பாரதிதாசன் பரம்பரை என்று முத்திரை பதித்த கவிஞர்களிடமும் தொடர்தன. கவிதையாக்க நெறிமுறைகளும் நியமங்களும்கூட பாரதிதாசத் தளத்தின் அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் தலைமையிலேயே அவர்களிடம் பதிவாகி இருந்தன. பாரதிதாசனின், பரம்பரையில் ஒருவர் சுரதா.

சுரதா தனக்கென ஒரு பரம்பரையைக் கண்ட பெருமையும் சுரதாவுக்கு உண்டு. நீலமணி, பொன்னிவளவன், பனப்பாக்கம் சீதா, நன்னியூர் நாவரசன், முருகுசுந்தரம் என்று தொடரும் பட்டியல் இவ்வரலாற்று உண்மைக்குச் சான்று. மேலும் மீரா, அப்துல் ரகுமான், காமராசன் முதலிய பலருக்கும் கவிதைக் குருவாக அவர் இருந்திருக்கிறார் என்பதை அவர்களே வெளிப்படுத்தியும் இருக்கின்றனர். கவிதையாக்க நெறிமுறைகளில் வேறுபட்ட உத்திகள், வெளிப்பாட்டுப் பாங்குகள் எனத் தனித்துவம் உள்ளவராகத் தன்னை வளர்த்து, தனக்கென ஓர் ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர் சுரதா. ஆனால் பாரதிதாசனுக்குப் பிறகான தமிழ்க் கவிதை உலகில் அவர் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியபோதிலும், தொடர்ந்து கவிதைத் தளத்தில் தன் பரிமாணங்களை வளர்த்துக் கொண்டவர் என்றோ, புதிய எல்லைகளைத் தொட்டவர் என்றோ சொல்லமுடியாதபடி, தன் வளர்ச்சியின் ஒரு காலகட்ட வலுவைக் கொண்டே தன்னை நிறுவி, கவிதைச் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டார் சுரதா.

திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடல் ஆசிரியர், கவிதை இதழ் ஆசிரியர், கவியரங்கத் தலைவர் எஞ்சிய பன்முகச் செயல்பாடுகள் கொண்டவர் சுரதா. தன் மனத்திருப்பத்தை மேடைகளில், விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுவார். உவப்பான உரையாடலாளர் என்கிற தன்மைகளையும் கொண்டிருந்தார். எதார்த்த நிபந்தனைகளை ஏற்று தன்னைத் தகவமைத்துக் கொள்ளும், சமரசம் என்னும் பெயரிலான சரிவுக்குச் சரியென்று ஒத்துப்போகாதவர்; போயிருந்தால் விளம்பரமும் பணமும் குவிந்திருக்கக் கூடும். இன்று அவர் மேல் பொழியப்படும் புகழ், மரணத்தை அடுத்து எப்படிப்பட்டவர் மேலும் சடங்கு நிலையினதாகக் கற்பிதம் செய்யப்படும் புனைவுத்தன்மை உள்ளதாக இல்லாமல் இருப்பதற்குக் காரணமே, அவருடைய - அவரே அமைத்துக் கொண்ட வாழ்க்கைக் கட்டமைப்புதான். அவரது வாழ்வில் அவ்வப்போது காணப்பட்ட திசை மாற்றங்கள்கூட, ஒரு கவிஞனுக்குரிய உணர்வு முனைப்பின், விடுதலைப் போக்கின் வெளிப்பாடுகளே அல்லாமல், தர்க்கப்படுத்தலுக்கு உள்ளடங்கும் காரணகாரிய மூலக்கூறுகளை உடையன அல்ல. கருத்தியலில் திராவிட இயக்கச் சார்பு இருந்ததெனினும், அவர் கவிதைகளில் இயக்கச் சார்பு அதிக அளவிலும், அழுத்தமான கொள்கை பரப்புப் போக்கிலும் இருந்ததில்லை. சுரதாவின் உளவியல், கவிதை ஆக்க நெறிமுறைகளில் தொழிற்பட்ட முறை வேறுவகையாகவே இருந்தது. இதுவே, அவரை பாரதிதாசனிடமிருந்து பிரித்துக்காட்டியது என்றும் சொல்லலாம். கொள்கைக் கவிஞர் என்பதினும் பார்க்க, கவிதையின் கவிஞர் என்னும் படிவமே அவரைப்ற்றி மேலோங்கி நின்றதற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லலாம்.

"நுண்புலக் கவிதை வகை" (Metaphysical Poetry) அடையாளங்களோடு தமிழ்க் கவிதையை வளர்த்தெடுத்த பெருமை சுரதாவுக்கு உண்டு. மானுடத்திற்கும் பிரபஞ்சத்திற்குமான தொடர்வை மெய்யில் பார்வையோடு காணும் நெறியே மெட்டாஃபிசிக்கல் என்பது. தாந்தே, மில்டன் ஆகியோரது படைப்புகளில் செயல்பட்ட தத்துவார்த்தம் இது. நுண்புலக்கவிதை, உணர்ச்சியின் கட்டற்ற வெள்ளப் பெருக்காக இல்லாமல், அறிவுத்திறனின் ஆற்றல் வெளிப்பாடாக இருப்பது பொருளோடு, வழக்கமாகப் பொருத்திப் பார்க்கும் உவமைகளைப் புறந்தள்ளிவிட்டு, எங்கோ வெகுதொலையில் உள்ளவற்றைக் கொண்டு வந்து உவமைகளாக்கிக் கவிதைகளில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவது, அத்துடன் வரலாற்றிலும் வாழ்க்கை அனுபவத்திலும் சந்தித்த அரிதான தகவல்களையும் நிகழ்வுகளையும் கவிதைகளில் கொண்டு வந்து திறமையோடு கலந்து வைத்தனர் இந்த கவிஞர்கள். கற்பனைகள் வேட்டையாடிக் கொண்டு வருவதை இக்கவிதைப் போக்கு விரும்பவில்லை என்றே சொல்ல வேண்டும். 1660 ஆம் ஆண்டுக்குப்பின் இத்தகைய நுண்புலக் கவிதைகள் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான டி.எஸ். எலியட் இக்கவிதைகள் பற்றி எழுதியதன் விளைவாக, மீண்டும் நுண்புலக் கவிதைப் போக்கு புத்துயிர்த்தெழுந்தது. புதுக்கவிதை வளர்ச்சியில் தன் சாயலைப் படிய வைத்தது.

அவைகளைத் "தண்­ரின் ஏப்பம்" என்றும், மாநிறம் என்பது "கறுப்பின் இளமை" என்றும், பல்லியைப் "போலி உடும்பு" என்றும், அழுகையைக் "கண்மீனின் பிரசவம்" என்றும் உவமைப்படுத்தும் சுரதா கவிதைகள், தமிழில் முதன் முறையாக நுண்புலக் கவிதைத் தன்மையாகிய அறிவுநுட்பத்தைக் கொண்டு வந்து சேர்த்தன என்று சொல்லலாம். தமிழ்க் கவிதைகளில் தொடர்ந்துவரும் பொதுத்தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு, அவற்றோடு சேர்த்துத் தனது படைப்புத் திறனின் பங்காக வெளிப்படுத்தியுள்ள கவிதைத் தொழில் நுட்பம் இது. அவர் கவிதைக் கற்பனைகளை ஆதரிக்காதவர் என்றபோதும், இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தில் கற்பனைத்திறன், கைவிடமுடியாதபடி அவருடைய அறிவுநுட்பத்தின் அங்கமாக அடையாளப்பட்டு விடுகின்றது.

சுரதா, வெள்ளமாகக் கவிதையை ஒருபோதும் கொட்டிவிடுவதில்லை. ஒரு கவிதை அவரிடமிருந்து கிடைக்கப் பலமணிநேரம், ஏன் பல நாட்கள், பல மாதங்கள் கூட ஆகலாம். அவருக்குக் கவிதை என்பது ஒரு தச்சு வேலை போலத்தான். இக்காரணத்தாலேகூட, அவர் படைப்புகளை அதிகமாகச் செய்யாமல் போயிருக்கலாம். தொடர்ந்து இருந்துவரும் சிந்தனைத் தடத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு, தனக்கான புதுச்சிந்தனையைத் தேடிப்போய்விடுவார் சுரதா. திரும்பி வரும்போது நமக்குத் திகைப்பூட்டும் கவிதை மின்னல்கள் கிடைக்கும். நிலவைப் பற்றிச் சொல்ல, பளிங்கு நிலா, பால்நிலா, வெள்ளிநிலா, தங்கநிலா, முத்துநிலா என்று ஏற்கனவே கவிதைக் களத்தில் உள்ளனவற்றையெல்லாம் தவிர்த்துத் தாண்டிப்போய் அவர் உழைக்க முற்பட்டுவிடுவார். வெண்மைக்கு வேறுவேறு மூலங்களை நோக்கிப் போய், வேறு என்ன வார்த்தை கிடைக்கும் என்று தேடுவார். முடிவில் துணி வெளுக்கப்பட்டதும் சலவைத் துணி என்று சொல்லப்படும் சொல்வழக்கு அவர் கவித்துவ இயக்கத்தின் எல்லைக்குள் வந்து சேரும். எவரும் எதிர்பார்க்காதபடி பளிச்சென்று வந்து விழும் சலவைநிலா என்னும் புதிய வார்ப்பு. இது சுரதாவின் கவிதைத் தொழில் நுட்பப் கூறுகளில் முக்கியமான ஒன்றாக அமைந்து, அவருக்கே உரிய தனித்துவச் சிறப்பானதோடு, அவரைப்பின்பற்றி எழுதுகிறவர்களுக்கும் அப்படி எழுத வேண்டும் என்னும் ஆர்வத்தையும் ஆசையையும் தூண்டிவிட்டது.

நதியின் அலை நுரைகளையும் அவற்றில் தோன்றும் குமுழிகளையும் நரைத்த நுரை முட்டையிட்டுக்கொண்டிருந்த நதி நீட்டம் என்று வித்தியாசமாகச் சொன்ன சுரதா, கால நதியில் கலந்துவிட்டாலும், காலத்தை வெல்லும் உவமைகளாலும், புதிய வார்த்தை வார்ப்படங்களாலும், மிடுக்கான நடையின் ஓசைச் சிலிர்ப்புகளாலும் தொடர்ந்து வாழ்வார்.

நன்றி: தீராநதி 2006

தாலாட்டில் மனப்பதிவுகள் - ஆ.அரிகிருட்டிணன்

நாட்டுப்புறப் பாடல்கள் கிராமத்து மக்களின் மனக்கதவைச் சமூகத்திற்குத் திறந்து காட்டுபவை. மனத்தின் உணர்வு உந்துதல்கள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. நாட்டுப்புறப்பாடல்களை, இலக்கியத்தை, சமூகத்தை, பண்பாட்டை ஆய்பவர்கள் நாட்டுப்புற மக்களின் மனப்பதிவுகளை வெளிப்படுத்துகின்றனர். இத்தகு சமூக அமைப்பிற்குக் குடும்ப வாழ்வே பின்னனி. பிறப்பு முதல் இறப்பு வரை சமூகம் பரிமாறிக் கொள்ளும் ஒட்டுமொத்த தொகுப்பிற்கும், தனிமனிதச் செயலுக்கும் மனப்பதிவே முதன்மை வகிக்கிறது.

மனமும் பதிவும்:-

மனிதன் பார்ப்பவை, கேட்பவை அனைத்தும் மூளையில் பதியமிடுகின்றன. எத்தகைய பதிவாக இருப்பினும், பதிவு மனித உடற் கூற்றின் இயற்கை, வெளியீடுகள் மனிதப் பண்பின் வேறுபாடுகளால் வருகின்ற விளைவே ஆகும். குழந்தைப் பருவத்தில் பதிவுகள் எளிதாகப் பதியும் தன்மை வாய்ந்தவை. அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும்போது கேட்கும் கருத்துக்கள் ஆழமாகப் பதியும் சக்தி வாய்ந்தவை. தாலாட்டில் இறை உறக்கத்திற்கு உதவுவது போல் பிஞ்சு மனத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது என்பதால் தாலாட்டுப் பாடப்படுகிறது.

ஊர்வாழ தேசம் வாழ

இனம் சுற்றம் எல்லோரும் வாழ

குருவுக்கும் சிவனுக்கும்

நல்லபிள்ளையாய் இருந்து வாழ்க

இப்பாடலில், ஊரும் தேசமும் வாழவேண்டும். சுற்றமும், உறவினமும் வாழக் குருவையும் தெய்வத்தையும் வணங்க வேண்டும். சமூகத்தில் குழந்தை வளர்ந்த பிறகு தவறுகளைச் செய்யக்கூடாது. எல்லோரும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தாலாட்டுப் பாட்டு மனப்பதிவுகளாகப் பாடப்படுகின்றன.

தாலாட்டில் மனப்பதிவுகள்:-

வாழ்க்கையினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

குழந்தை

இளமை

முதுமை

இந்த மூன்று பருவத்தில் குழந்தைப் பருவம் தாலாட்டாக அமைகிறது. இளமைப்பருவம் காதலாக அமைகிறது. முதுமைப் பருவம் பக்தியும், ஒப்பாரியுமாக அமைகிறது. ''கோயிலில்லாத ஊர்பாழ்'' ''குழந்தையில்லா வீடு நரகம்'' என்பர்

ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் குடும்பம் எனும் ஓவியம். ஓவியத்திற்கு மெருகூட்டுவது நிறங்கள். நிறமாக வருவதே குழந்தைச்செல்வம். பெண்மையின் சிறப்பே தாய்மைதான். ''தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசைவில் தாலாட்டு என்னும் நல்முத்து பிறக்கின்றது. இருவர்கொள்ளும் காதலைவிட, உடன்பிறந்தார் கொள்ளும் வாழ்க்கைவிட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசமே, ஆழமானது. வலிமைமிக்கது உணர்ச்சிமயமானது.

''பெண்மைக்குத் தாய்மை கிடைத்துப் பூரித்துப்போகும் வாழ்வின் உயிர் நிகழ்ச்சியே பிள்ளைப்பேறாகும். பல படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய செல்வ வளமிக்கவர் ஆனாலும், மயக்கத்தைத் தரும் மக்கள் இல்லாத வாழ்நாள் வீனாகும். என்கிறான் பாண்டிய மன்னன்.

இப்படி எதிர்பார்ப்புகளையும், இயலாமையும் மனப்பதிவுகளாக உருவாக்குகின்ற தாலாட்டின் மூலம் தங்கள் மனப்பதிவுகளுக்கு ஓரளவு மருத்துவம் காண்கின்றனர்.

மனப்பதிவில் புலன் உணர்வுக்காட்சிகள்:-

''புலன் உறுப்புகளால் உருவாகிய அமைப்பு வகைகளைப் பொறுத்து புலன் உறுப்புக் காட்சி அமையப்பெற்றுள்ளது. புலன் உறுப்புகளில் தூண்டுதல்கள் தாக்கும்பொழுது பொருளைப் பற்றிய பிம்பங்களையும் வகைகளைப் பற்றியும் மனிதனுக்கு அளிக்கப்பெறுகின்ற செய்திகளே புலன் காட்சி ஏற்படுவதற்குரிய அடித்தளமாக அமைகிறது.

புலன் உணர்வுக்காட்சியின் விளைவால் குழந்தை மடிப்பிச்சையாக ஏற்றுக் கொள்கிறாள் நாட்டுப்புறத்தாய். குழந்தை இல்லாத ஏக்கத்தால் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்ற போது அவளின் மனப்பதிவுகள் புலன் உணர்வு காட்சிக்கு ஆட்படுகிறாள். இப்பதிவின் விளைவாகக் குழந்தைப்பேறும் அடைந்ததை,

''காணிக்கை கொண்டு - என் கண்ணான சாமி

கடத்தெரு போகயிலே

மாணிக்கமுனு - என் கண்ணே

மடிப்பிச்சை தந்தாளோ'' எனப்பாடுகிறாள்.

மனப்பதிவில் ஆளுமைத்திறன்:-

மனிதனின் ஆளுமை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றை அஃது நிலை, மேனிலை அகம், அகம் என்பார் உளவியலாளர். ஒவ்வோர் ஆளுமையும் ஒரு தனித்த அமைப்பாகும். ஆளுமையைப் பல்வகையாகவும், குழுவாகவும் வகைப்படுத்த எடுக்கப்பெறும் முயற்சிகளின் தொடர்பில் உணரவேண்டும்.

ஆளுமைச் செயலில் மனப்பதிவுகள் நடைபெறுகின்றன என்று உளவியல் நோக்கில் தாலாட்டுப் பாடல்களை ஆய்ந்தால் தாயுள்ளம் படும் பதிவுகளை வேதனைகளாகவே காட்டும் இயல்பினை உடையது.

தாய்ப் பாசத்தில் தனியுடமையைக் கவிஞர் கண்ணதாசன் மழையை - தேனுக்கும், மணலை - பொன்னுக்கும் ஒப்பிட்டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது மழலைச்செல்வமே. மனிதனின் ஆளுமையின் உச்சநிலையாக,

''மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?''

எனப் பாடியுள்ளார். இதையே நாட்டுப்புறத்தாய்

''ஆறிரண்டும் காவேரி

அதனடுவே சீரங்கம்

சீரங்கமாடி....

எட்டாத கோவிலுக்கு

எட்டி விளக்கேற்றி

...........

வெள்ளி முழுகி

வெகுநாள் தவமிருந்து

தைப்பூசமாடி

தவம்பெற்று வந்தவனே''

என்றுதன் வீட்டு வேலைக்குத் தொல்லைதராமல் இருப்பதற்கும், விரைவாக முடிப்பதற்கும் தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைக்கின்றாள்.

மனப்பதிவில் சமூகம்:-

இலக்கியத்துடன் நெருக்கமுடையது சமூகவியல். மனித நாகரீகம் தொடங்கியது முதல் இன்றுவரை தனி மனிதனையும் சமூகத்தையும் பாடி வருகின்றனர். ''காதல் தொடங்கி குடும்பம் வரை காணும் சிக்கல்களை இலக்கியவாதிகள் தத்துவவாதிகளைப் போலவே எண்ணிப்பார்த்துள்ளமை சிந்தித்தற்கப்பாலானது.*

சமூகத்தில் பெண்ணே முதன்மைப் பங்காக இருக்கின்ற காரணத்தினால்; பெண்களால் சமூக நிலையையும், அவர் தம் மனப்போக்கையும் தாலாட்டுப் பாடல்களில் நயமாக உணரமுடிகிறது.

காதல்:-

சமூகக் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் மனக்குமுறலைப் பதிவுகளாக வெளிப்படுத்தும் திறனுக்கும் போக்கிடம் அமையாததால் தாலாட்டில் வெளிப்படுத்துகிறாள். காதலிக்கும் போது கருவுற்றவளைச் சமூகம் சாடாமல் விடுவதில்லை. இச்சாடல்களிலிருந்து விலக முடியாமல் தவிக்கின்றாள். ஆறுதலுக்கு குழந்தை மட்டுமே. ஆறுதல் சொல்லும் நிலையில் குழந்தையும் இல்லை''

இருப்பினும் தன் மனப்பதிவுக் குமுறலை இறக்க முனைகின்றாள். அடித்தாலும், பழித்தாலும் தாய் அனைய சமூகத்தைச் சாடாமல் நம்பிக்கைத் துரோகம் செய்த காதலனையே,

''சாலையிலே கூட்டங்கூடி சாதிநாயம் பேசயிலே

சாதிகெட்ட பையனாலே சபையிலே கையெடுத்தேன்

என் கண்ணான கண்ணே கண்ணுறங்கு'' என பழிக்கின்றாள்.

பரத்தமை:-

சமூகப் பண்பில் ஒழுக்கமே சிறந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே நலம் பயக்கும். அத்தகு பண்பில் தன் உடன் பிறந்தானின் செய்கையின் மனப்பதிவை.

''தங்கக் குடை பிடிச்சு

தாசிக்கே விட்ட பணம் - ரெண்டு

தங்க மடம் கட்டலாமே''

பரத்தையின் பால் சென்றதைப் பாடுகின்றாள். இப்பரத்தைப் பண்பால் குடும்பம் சீரழிந்த நிலையை ஒவ்வொரு குடும்பமும் உணரவேண்டும் என்பதை மெய்ப்பிக்கவும் தவறவில்லை.

கல்வி:-

அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு? என்ற சமூகச் சூழ்நிலையில் வாழ்ந்த நாட்டுப்புறப் பெண்ணுக்குத் தம் குழந்தையாவது கல்வி பெற வேண்டும் எனத் தம் மனப்பதிவில் முனைப்பாக இருக்கின்றாள். அம்முனைப்பில் சமூகச் சூழலால் ஒதுங்கியவர்கள் தம் குழந்தைகள் தாய்மொழியைக் கற்க வரவேற்கின்றாள்.

''தாழைமடல் ஓலை கொண்டு

தமிழ் படிக்க வந்தவனோ''

என்றும்; தமிழோடு ஆங்கிலமும் கற்றால் சமூகத்தில் தன் மதிப்பும் கூடும் என்பதை

''பாடுவதும் வேதாந்தம்

படிக்கிறதும் இங்கீலீசு

என்று தாலாட்டில் பாடி தனக்குள் பெருமிதம் அடைகின்றாள்.

தொழில்:-

நாட்டுப்புறப் பெண்கள் வேளாண்மையில் நாள்முழுவதும் வெய்யில், மழை எனப் பாராமல் உழைக்கும் வர்க்கத்தினராக இருந்தனர். இந்நிலையில் தன் குழந்தைகளாவது கல்வி கற்று அதிகாரியாக வேண்டும் என மனத்திற்குள் பதியமிடுகிறாள். அப்பதிவே ''வினையே ஆடவர்க்கு உயிர்'' என்னும் கோட்பாட்டில்:

''வெள்ளி எழுத்தாணி

வெண்கலத்தால் மைக்கூடு

தொட்டுக் கணக்கெழுதும்

துரை ராஜா''

எனப் பாடுகிறாள். தன் மகன் அதிகாரியாக வேண்டும் என்பதையும், சமூகத்தில் பொறுப்புள்ளவனாகவும் அமையவேண்டும் என்னும் சமூக நிலைக்குத் தன் மனப்பதிவுகளைத் தாலாட்டில் அசைபோடுகின்றாள்.

பொருளியல்:-

நாட்டுப்புற மக்களுக்குக் குழந்தைச் செல்வத்தோடு பொருளியல் செல்வமும் ஒருங்கே அமைந்தால் ஒட்டு மொத்த மகிழ்ச்சியை அடைகின்றாள். இதை,

''தெற்கே மழை பொழியத்

தென்புறமாய் காற்றடிக்கத்

தென்மதுரை மீனாள்

சேங்கைக்கே தண்­ர் வர

------------------------------

தென்னை வந்தும் வீசாதா

தென்காற்று அடியாதா

செல்வ மகன் கண்ணயர''

தம் மனப்பதிவாகப் பொருளியல் சிந்தனையைக் குழந்தையின் தூக்கத்தோடு உரமூட்டுவதாக நினைத்துப் பாடுகிறாள்.

இறைமை:-

சமூகத்தில் ஆணும், பெண்ணும் உயர்த்தப்படவேண்டும். அத்தகைய உயர்வில் குடும்பம் நன் மதிப்பைப் பெறவேண்டும். இம்மதிப்பிற்கு இறைநம்பிக்கையும் அவசியமாகிறது. நல்லதைச் செய்யவில்லை என்றாலும் தீயதை நினைக்காமல் இருந்தால் போதும் என்ற மனப்பதிவுக்கு வந்தார்கள். இத்தகைய சூழலில் தன் கணவன் செய்த இறை நம்பிக்கையைப் பாராட்டுகிறாள்.

''காசி விசிறி கொண்டு

கைலங்கிரி செம்பு கொண்டு

போகிறார் உங்கள் ஐயா - உன்னைப்போல்

ஒரு புத்திரன் வேண்டுமென்று''

இத்தாலாட்டில் தன் கணவனும் தானும் செய்த இறை தவத்தால் தான் நீ பிறந்தாய் என்பதை மனப்பதிவுகளாகக் கூறுகிறாள்.

பெண்கள் தாம் விரும்பிய இலட்சியம், சந்தித்த மனித உறவுகள், வாழ்வின் எல்லை, சாதித்த செயல்கள் முதலியவற்றை மனப்பதிவுகளாகத் தம் குழந்தைகளுக்குத் தாலாட்டோடு இணைத்துப்பாடும், சமூக உறவின் மேம்பாடாக விளங்குகின்றனர் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.

இதனால் தான் நாட்டுப்புற இலக்கியத்தின் தனிச்சிறப்பே வாழ்க்கையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எதிரொலிப்பதாகும் என்னும் மாக்சிம் கார்க்கியின் கூற்றோடு ஒத்திட்டுப் போகிறது எனலாம்.

நன்றி: வேர்களைத்தேடி