09/06/2015

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம்

இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். பெண்ணின் மீது ஆண் செலுத்திய ஆதிக்க மனோபாவமும், வன்முறை வெறியாட்டமும் அவள் இறந்தவுடன் பழியெடுக்கக்கூடும் என்ற பய உணர்வுமே அவள் பேயாய் வருவதாக நம்பினான்.

கடைச்சங்க காலத்தில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனப் புலவர்களுக்கும் அருளாளர்களுக்கும் பெயர்கள் வழங்கி வந்துள்ளன.

"பேய்' என்னும் சொல் அச்சுறுத்துவது, அஞ்சுவது என்னும் பொருள்படும். அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப் பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி(சடைமுனி) அரமகள், அணங்கு எனப் பேய் இனம் பலதிறந்ததாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச்சாத்தான் என்பர். 

பேய்களில் காட்டேறி, தூர்த்தேறி முதலிய பலவகைகள் இருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம், பெரும்பூதம் என இரு வகை உண்டு. சூர், சூர்மகளிர், சூர்அர மகளிர், வரை அரமகளிர், வான் அரமகளிர் முதலிய பெயர்களில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் அணங்கும் சக்திகளாகும். இவற்றின் பெயரால் சூள் (சத்தியம், ஆணை) உரைத்த வழக்கமும் அன்று இருந்துள்ளது. சூள் பொய்த்தால் சூள் உரைத்தவரையும் தவறு செய்வோரையும் அந்தத் தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சம் இருந்தது. இதுவே பின்னர் "பூதம்' என்று அழைக்கப்பட்டது. ""குண்டைக் குறப்பூதம்'' என்கிறது தேவாரம் ( 944:1).

அக்காலத்தில் போரில் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாதவாறு, பெண்களும், உறவினரும் வேப்பந் தழையை வீட்டில் செருகியும், மையிட்டும், வெண் விறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

சதுப்பு நிலங்களில் அழுகிய பொருள்களிலிருந்து கிளம்பும் ஆவியும் (Gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு "கொள்ளிவாய்ப் பேய்' என்பது மக்களின் அறியாமையே ஆகும்.
நீர் நிலைகளெல்லாம் வற்றி, வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழுங்காடாதலால், பிணந்தின்னும் பேய்களுக்குத் தலைவியாகிய காளியே அவற்றுக்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப்பரணிப் பகுதிகளாலும் அறியலாம்.

""ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு
அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு''
(புறநா. 356)

என்று பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள்.
 ""பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்றார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்). இக் கூற்றிலிருந்து பேய்க்கும் பிணத்துக்கும் ஒரு தொடர்பு கூறப்படுகிறது. ""பெருமிழலைக் குரும்பர்க்கும் பேயர்க்கு மடியேன்'' என்று காரைக்கால் அம்மையாரைப் போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

""வயங்குபன் மீனினும் வாழியர் புலவென
உருக்கெழு பேய்மக ளயர்''
(புறநா.371:25-26)

என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார், "அரசன் பல்லாண்டு வாழ்வானாக' என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதைக் கூறியுள்ளார். இத்தகைய செய்திகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மேலும், "காடுபடர்ந்து கள்ளி மிகுந்து பகற்காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்து விட்டெரியும். அங்கு அகன்ற வாயையுடைய பேய் மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர்' என்றும் பாடியுள்ளார் (புறநா.356:1-4) கதையங்கண்ணனார் என்னும் புலவர்.

""பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்''
(புறநா.359:1-8)

என்று சுடுகாட்டில் நிகழ்வதைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறார் காவிட்டனார்.
போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களை உடைய யானை பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறை தலைப்பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள் என்று பாடியுள்ளார் (மதுரைக்காஞ்சி.24-28) மாங்குடி மருதனார்.

பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் பெற்ற பேய் வடிவத்துக்கு விளக்கம் கூறும் உரைக்காரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""காரைக்காலம்மையார் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளால் பெற்ற உடம்பு இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதலிய புறக்கரணங்களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்'' என்கிறார்(காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருநூல்களும் பக்.52). ஆனால், சாதாரணமான பேய்களோவெனின், வடிவற்ற வாயு உடம்பு அல்லது சூக்கும உடம்பு உடையன என்பது கருத்தாகும்.

பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பதும், சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் நன்கு புலனாகிறது.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 35

சர்ரோகசி' என்ற சொல் சமீப காலமாகப் பெருமளவில் பயன்பாட்டிற்கு வந்த போதிலும், சர்ரோகசியின் பயன்பாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லாச் சமூகங்களிலும், எல்லாச் சமயங்களிலும் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பைபிளில் கூறப்படும் யூத தம்பதியரான சாரா - ஆப்ரகாமின் கதையை நாம் அறிவோம். அவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகள் வானில் உள்ள விண்மீன்களைவிட அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டாலும், வயதான காரணத்தால் இனி தான் குழந்தைப்பேறு பெறமுடியாது என்று எண்ணி, சாரா தன்னிடம் பணிபுரிந்த ஹாகர் என்னும் எகிப்து நாட்டு அடிமைப் பெண்ணை வாடகைத் தாயாக்குகிறாள். அவளுக்குப் பிறக்கும் குழந்தை இஷ்மயில் (Ishmael). ஆனால், பின்னாளில் வயது முதிர்ந்த பின்னர் சாராவும், ஐசக் என்ற குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

மகாபாரதத்தில் இதற்கு எதிர்மாறாக, பாண்டவர்களின் தந்தையாகிய பாண்டுவும் கெüரவர்களின் தந்தையாகிய திருதராஷ்டிரனும் வாடகைத் தந்தையின் மூலம் பிறந்தனர் என்று காண்கிறோம். இதனால்தானோ என்னவோ "சர்ரோகசி' என்பதைத் தற்போது (1) சம்பிரதாயமான சர்ரோகசி (traditional surrogacy) என்றும், (2) சூழ்நிலை சர்ரோகசி (gestational surrogacy) என்றும் பிரிக்கிறார்கள் போலும்! இவற்றைக் கருத்தில் கொண்டு இந்தவாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

புலவர் செ.சத்தியசீலன் சர்ரோகேட், சர்ரோகசி என்பவை பெயர்ச்சொற்கள் என்றும், இச்சொற்களுக்கு மாற்றுத்தாய், செவிலி, மாற்று, பதிலி, பதிலாள் போன்ற சொற்கள் பொருந்தி வரும் என்றும் எழுதியுள்ளார்.

தெ.முருகசாமி, பதிலி அல்லது பிரதிநிதி என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். மு.தனகோபாலன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்று நிலையாளர் என்ற சொல்லும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு வாடகைத்தாய் என்ற சொல்லும் பொருந்தும் என்கிறார். வெ.அனந்தகிருஷ்ணன் துணை குரு, பெயராள், வாடகைத்தாய், துணைக்குரு பதவி, மாற்றாள், பதிலானது, பதிலாள், பகரமானது, பகரப்பொருள் என்னும் சொற்களை எழுதியுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு நிகராள், நிகராளி, நிகராளர், பதிலி, பதிலாள், பதிலாளர், பெயராள், பெயராளர், இணையாள், இணையாளர் என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு, இரவல் கருத்தரிப்பு, இரவல் கருவளர்ப்பு, செயற்கைக் கருத்தரிப்பு, செயற்கைக் கருவளர்ப்பு, நடவுத்தாய், பதிலித்தாய், வாடகைத்தாய், நிகர் நிலைத்தாய், நிகர்த்தாய், தாய்நிகர் என்னும் சொற்களையும் அனுப்பியுள்ளார்.

ஹரணி என்பவர், பதிலி, மாற்றாள், பதிலித்தாய், பதிலிப் பொறுப்பு முதலிய சொற்களையும், சோம.நடராசன், துணையாள், பெயராள், பதிலாள், மாற்றாள், சார்பாள் ஆகிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு பதிலாள், மாற்றாள், மாற்றான், மாற்று, பதிலி, துணை, செவிலி என்னும் சொற்களையும், சர்ரோகசி என்ற சொல்லுக்கு மாற்றுக்காணல், பதிலித்தெரிவு, பதிலி உருவாக்கு முறை, மாற்று உருவாக்கு முறை என்னும் சொற்களையும் கூறியுள்ளார். மேலும், சர்ரோகேட், சர்ரோகசி என்னும் சொற்களுக்கு இணைச்சொற்களாக, க்ளோனிங் சைல்டு (cloning child) என்ற சொல்லுக்குப் படியாக்கக் குழந்தை என்ற ஒரு அழகான சொல்லையும் உருவாக்கி அனுப்பியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழக ஆங்கிலம் - தமிழ் சொற் களஞ்சியத்தில் முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு துணைகுரு, பெயராள் என்னும் சொற்களையும், சர்ரோகேட்ஷிப் என்ற சொல்லுக்கு துணை குரு பதவி என்ற சொல்லையும் இணைச் சொற்களாகக் குறிப்பிட்டுள்ளார். மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி, "சர்ரோகேட் என்ற சொல் லத்தீன் சொல்லான சர்ரோகேடஸ் என்ற சொல்லிருந்து 1533-இல் உருவானதாகவும், அது செயப்படுபொருள் குன்றாவினை (transitive verb) ஆகப் பயன்படுத்தப்படும்போது, ஒருவருக்கு பதிலாகவோ, வாரிசாகவோ, துணையாகவோ, இன்னொருவரை நியமிப்பது என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படும்' என்றும் கூறுகிறது.

ஆனால், சர்ரோகேட் என்ற சொல் பெயர்ச்சொல்லாகப் (noun) பயன்படுத்தப்படும்போது, அச்சொல்லுக்கு (1) ஒருவரது இடத்தில் செயல்படுவதற்காக நியமிக்கப்படும் இன்னொருவர், (2) சில மாநிலங்களில் (நியூயார்க்கைப் போல்) உயில்களைச் சான்றளிப்பதற்கும், பாதுகாவலர்களைக் கண்காணிப்பதற்கும், அதிகார வரம்பு பெற்ற நீதித்துறை அலுவலர், (3) ஒருவருக்கு பதிலாக செயல்படும் இன்னொருவர் ஆகிய மூன்று பொருள்களைத் தருகிறது.

ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மூன்று வகையான பொருள்களைத் தருகிறது. அவை: (1) ஒரு அலுவலரின் பணியைக் கவனிக்கும் இன்னொருவர், (2) திருமண உரிமங்களை (marriage license) வழங்கும் அதிகாரம் பெற்ற துணை குருமார் அல்லது பேராயரின் உதவியாளர் (Bishop’s Deputy), (3) உயிலுக்குச் சான்றளித்தல்,

வாரிசு உரிமையை அங்கீகரித்தல் மற்றும் இளவர்களின் (Minor) பாதுகாவலர்களைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு நீதிபதி. ஆனால், பேராயரின் உதவியாளர் என்ற பொருளும், உயிலுக்கு சான்றளிக்கும் நீதிபதி என்ற பொருளும் தற்போது வழக்கொழிந்துபோன காரணத்தால், சர்ரோகேட் என்ற சொல்லுக்கு குழந்தைப்பேறு தொடர்பாக ஒரு பொருளும், ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் அவரது பணியை கவனித்தல் என்ற இன்னொரு பொருளும் மட்டுமே தங்கி இருப்பதாகத் தெரிகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த வாரக் கடிதங்களைப் பார்த்தோமேயானால், சர்ரோகசி என்ற சொல்லுக்கு கருநடவு என்ற சொல் ஒரு புதுச் சொல்லாக்கமாகத் தெரிகிறது. சர்ரோகேட் என்ற சொல்லுக்கு மாற்றாள் என்ற சொல் பல்வேறு பொருள்களையும் உள்ளடக்கி காட்டுகிறது.


எனவே, சர்ரோகேட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் மாற்றாள். சர்ரோகசி என்ற சொல்லுக்கு இணையான சொல் கருநடவு.

நன்றி - தமிழ்மணி 07 07 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 34

இந்து' நாளிதழில் கடந்த (2013 ஜூன்) 23-ஆம் தேதி, UFOs sighted in Chennai?' (சென்னையில் பறக்கும் தட்டுக்கள் காணப்பட்டனவா?) என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமானது. முகப்பேரில் ஒரு வங்கி அலுவலர் தானும், தன் குடும்பத்தாரும் பளிச்சிடும் மஞ்சள் நிற ஒளியோடு ஐந்து தட்டுக்கள் தெற்கிலிருந்து வடக்கே பயணித்ததைப் பார்த்ததாகக் கூறினார் என்றும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் அவை விண்ணிலிருந்து விழும் எரிமீன்களாக இருக்கலாம் என்று கருத்தறிவித்தது என்றும் அச்செய்தி கூறியது.

அறிவியலுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்திகளும், நிகழ்வுகளும் உண்டு என்றும், இல்லை என்றும் காலங்காலமாக மாறுபட்ட கருத்துகள் உலவி வருகின்றன. ஆயினும், அவற்றின்பால் மனிதனுக்குள்ள ஆர்வமும், ஈடுபாடும் என்றென்றும் குறைவதில்லை. 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான "பாராநார்மல் ஆக்டிவிடி' என்ற திரைப்படம், வெளியிடப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், 1945 திரையரங்குகளில் அமெரிக்காவில் மட்டும் 108 மில்லியன் டாலர்களையும், வெளிநாடுகளில் 85 மில்லியன் டாலர்களையும் வசூலில் அள்ளிக் குவித்தது என்பதிலிருந்தே ஆவி உலகத்தின் மேல், இப்புவி உலகத்திற்கு உள்ள ஆர்வம் புலப்படும்.

"நார்மல்' என்ற சொல்லுக்கு இயல்பான, வழக்கமான என்ற பொதுப்பொருள்கள் உண்டு. எனவே, இயல்பைக் கடந்த அல்லது நிலையில் திரிந்தவற்றை ஆங்கிலம் அப்நார்மல் (abnormal) என்று குறிப்பிடுகிறது. அதே சமயம், இயல்நிலைக்குக் குறைந்த ஒன்றை ஆங்கிலத்தில் சப்நார்மல் (subnormal) என்று குறிப்பிடுகின்றனர். இவற்றைத் தாண்டி, அறிவியலால் விளக்கவொண்ணாதவற்றைப் பாராநார்மல் என்று குறிப்பிடும் சொல் வழக்கு 1920-ஆம் ஆண்டில் உருவானதாகவும், பாராநார்மல் என்ற சொல்லுக்கு சூப்பர் நேச்சுரல் (super natural) என்ற பொருளையும் மெரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகரமுதலி தெரிவிக்கிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

ஆசிரியர் பெ.கார்த்திகேயன், பன்னாட்டு அகராதிகள், பாராநார்மல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அடிப்படை அறிவியல் கோட்பாடுகள், புரிதலை மீறி ஏற்படுவதாகத் தோன்றும் செயல்கள், எண்ணங்கள், சக்திகள் என்று கூறுகின்றன என்றும், அவை உண்மை நிலையை மீறுவதாக இருப்பதால் அமானுஷ்யம் என்ற வடமொழிச் சொல் பொருந்தும் என்றும், காணாநிலை, உண்மையிலாத் தோற்றம், அறிவியல் மீறுநிலை, மாயநிலைக் கோட்பாடு அல்லது நிலை, கனவுநிலை, வேறுபாடுநிலைத் தோற்றம், பொய்நிலை, கண்டுணராக் காட்சிநிலை, அறிவியல் வரம்பு மீறும் கோட்பாடு, மெய்யில்லாநிலை, மெய்மீறிய நுண்ணுணர்வு, பொய்த்தோற்றம், தன்னுணர்வு அற்ற புறநிலைசார் அறிவு எனப் பல தமிழ்ச் சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்.

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, விளக்கவொண்ணா, விஞ்ஞானம் விடைகாணா, விஞ்ஞானம் விளம்பா, விஞ்ஞானம் வழுவிய, விஞ்ஞானம் மருவா, விஞ்ஞானம் தழுவா, ஆய்வுகாணா, ஆய்வுகடந்த, ஆய்வுக்கப்பால், இயற்கை அல், இயற்கைஎதிர், இயல்பு அல், இயல்பு எதிர், அல்வழி, அன்வழி, ஆய்வு மீறிய, அறிவு மீறிய என்றெல்லாம் கூறலாம் என்கிறார்.

முனைவர் பா.ஜம்புலிங்கம், ஆரம்ப நிலை, அதீத நிலை, உயர்தனி நிலை, இயற்கைக்கு மேலான நிலை, இயற்கைக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு அப்பால், இயல்புக்கு மீறிய என்று கூறுகிறார். புலவர் செ.சத்தியசீலன், அறிவுக்கெட்டா இயல்பு, புலணுணராப் புலம் ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும், மு.தனகோபாலன் பூடகமான (அறிவியலுக்கும், மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சோலை. கருப்பையா, வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான, சிறப்பான அல்லது விதிவிலக்கான ஆகிய சொற்கள் பொருந்தும் என்கிறார். ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், நமக்குப் புரியாமல் இயங்கும் சக்தியை, அறிவியல் எல்லைக்குள் கொண்டு வரமுடியாத சக்தியை இச்சொல் குறிப்பதால், "அறியாச் சக்தி' என்ற தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்கிறார்.

தெ.முருகசாமி, இயல்புக்கு மாறாக (சித்தப்பிரமை போல்) உள்ள நிலை, உடன்பாடில்லாத நிலை, முறை பிறழ்ச்சி (dis-order) என்றும் கூறலாம் என்றும், அதனால் இயல்புக்கு மாறுபட்ட நிலை என்றும் கூறலாம் என்றும் கூறியுள்ளார்.

டி.வி.கிருஷ்ணசாமி, சாதாரண நிலை போன்ற, ஒத்த சாதாரண நிலை, சற்று தேவையான அல்லது உண்மையான பிரதி என்பவை பொருத்தமாக இருக்கும் என்று உரைத்திருக்கிறார்.

கோ.மன்றவாணன், இயல்பெதிர்வு, இயல்முரண், இயல்பு பிறழ்வு அல்லது இயல்பிறழ்வு, அமானுஷ்யம், புனைவு, புனைநிகழ்வு, பொய் நிகழ்வு, புலன்மீறு உணர்வு, புலன் எட்டா நிகழ்வு ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

 சென்னைப் பல்கலைக்கழக (பதிப்பாசிரியர்: முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியர்) ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியத்தில் பாராநார்மல் என்ற சொல்லுக்குப் பொருள் தரப்படாவிட்டாலும், சூப்பர் நேச்சுரல் என்ற சொல்லுக்கு இயற்கை கடந்த, இயற்கைக்குள் அடங்காத, இயன்முறைக் காரண காரியத் தொடர்புக்கு அப்பாற்பட்ட, ஆவித்தொடர்புடைய, தெய்வீக ஆற்றல் சுட்டிய ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், அறிவியல் மீறு நிலை, இயல்புஎதிர், இயல்பிறழ்வு ஆகிய சொற்கள் பொருந்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால், அறிவியலாளர்கள் இச்சொல்லை அறிவியலுக்கு அப்பாற்பட்ட அல்லது இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிலை அல்லது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பேசுவதால், அறிவறியா நிலை அல்லது இயல்பறியா நிலை என்று கூறுவது பொருந்தும். இவற்றுள் இயல்பு என்ற சொல், நார்மல் என்ற சொல்லின் நேரடிப் பொருளாக இருப்பதால், பாராநார்மல் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "இயல்பறியா நிலை’.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

எப்படிப் பிறக்கிறது கதை? - வாஸந்தி

எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை உண்டு. வியாசர் இடைவெளியில் நிறுத்தாமல் கதை சொல்வதற்குத் தயாரென்றால் எழுத நான் தயார் என்று விநாயகர் வந்து அமர்ந்து தனது தந்தத்தை உடைத்து எழுதியதாகப் புராணம். தெய்வீக அருள் இருந்தால்தான் அத்தகைய ஒரு முயற்சி சாத்தியம் பெறும் என்று அர்த்தமாக இருக்கலாம்.

சாதத் ஹசன் மண்டோ பாகிஸ்தானின் பிரபல உருது சிறுகதை எழுத்தாளர் [1912-1955] அவரது எழுத்தின் வசீகரம் மங்காத ஒன்று. அவரைச் சந்திக்க வரும் நிருபர்களும் வாசகர்களும் அவரை விடாமல் கேட்பார்கள். ‘எப்படி எழுதுகிறீர்கள்?’

அவர் ஒருமுறை ஒரு சொற்பொழிவில் விளக்கினார்.

“என் அறையில் சோஃபாவில் அமர்ந்து ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பேன். என்னைச் சுற்றிலும் எனது மூன்று பெண்களும் ஏகமாய் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். எழுதும்போது இடையில் அவர்களுடன் பேசுவேன். அவர்களது சண்டைகளைத் தீர்த்துவைப்பேன். ஏதேனும் கொரிக்க எடுத்துவருவேன். நடுவில் யாரேனும் என்னைச் சந்திக்க வந்தால் அவரை உபசரிப்பேன். நான் எப்படித்தான் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால், எனது எழுத்துப் பாணிக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் அதாவது சாப்பிடுவது, குளிப்பது, சிகரெட் பிடிப்பது அல்லது சும்மா இருப்பது போன்ற விஷயங்களுக்கும் ஏதும் வித்தியாசமில்லை என்றுதான் சொல்வேன்.

நான் ஏன் எழுதுகிறேன்? ஏன் என்றால் அது ஒரு போதை எனக்கு, மதுவின் போதையைப் போல. எழுதவில்லை என்றால் நான் நிர்வாணமாக இருப்பதுபோல, நீராடாமல் இருப்பதுபோல, மது அருந்தாததுபோல உணர்கிறேன்.

ஆனால் ஒரு சிறுகதையையும் என் மூளை உற்பத்தி செய்யாது. கர்ப்பமாக முடியாத பெண்ணைப் போலக் களைத்துப் படுப்பேன். எழுந்து பறவைகளுக்குத் தீனி வைக்கிறேன். பெண்களை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டுகிறேன். இறைந்து கிடக்கும் காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறேன். குப்பையை அள்ளிக் கொண்டுபோய் வைக்கிறேன். அந்தப் பாழாய்போன கதை என்னவோ பையிலிருந்து வெளியேறி என் மூளைக்குச் செல்ல மாட்டேன் என்கிறது.

நிஜத்தைச் சொல்ல வேண்டுமென்றால், இறைவன் முன்னிலையில் சொல்கிறேன், எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. எதுவும் எழுத வரவில்லை என்று மனைவியிடம் சொல்லும் போதெல்லாம், அவள், ‘யோசிக்காதே, சும்மா பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதி ஆரம்பி’ என்கிறாள்.

அவள் சொல்வதைக்கேட்டு நானும் பேனாவையும் தாளையும் எடுத்து காலி மண்டையுடன், கதை நிறைந்த சட்டைப் பையுடனும் எழுத அமர்வேன். திடீரென்று கதை ஒன்று தானாக வந்து நிற்கும். நான் ஒரு பிக்பாக்கெட் மட்டுமே. என்னுடைய பாக்கெட்டில் இருப்பதைத் திருடி உங்கள் முன் வைப்பவன். நீங்கள் உலகம் முழுவதும் பயணித்தாலும் என்னைப் போன்ற ஒரு முட்டாளைப் பார்க்க முடியாது.”

மண்டோ சர்ச்சைக்குரிய எழுத்தாளராக இருந்தார். போலித்தனமான மதக் கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் வெளிப்படையாகத் தாக்கினார். ஆபாச எழுத்து என்று பல வழக்குகளில் சிக்கினார். என் எழுத்து ஆபாசமில்லை, ஆபாசம் இருப்பது சமூகத்தில் என்பார். ஒரு முறை நீதிபதியிடம், ‘தனது உணர்வுகள் புண்படுத்தப்படும் போதுதான் எழுத்தாளன் தனது பேனாவை எடுக்கிறான்.’ என்றார்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறிய மண்டோ பிரிவினை காலத்துக்கு முந்தைய பிந்தைய காலகட்டத்துத் துயரங்களைத் தனது கதைகளில் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தவர். மிக மோசமான காலம் அது. அந்நாட்களில் காண நேர்ந்த தார்மீகச் சரிவு அவரை விரக்தி கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடு அவரது எழுத்தில் தெரிந்தது. பிரிவினையால் நேர்ந்த அபத்தங்களை அவை ஏற்படுத்திய மனப் பிறழ்வுகளை தோபா தேக் சிங் என்ற அவரது கதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.

அவர் தனது கல்லறையில் கீழ்க்கண்ட வாசகங்கள் எழுதப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார்:

‘கருணை நிறைந்த இறைவன் நாமத்தில், சாதத் ஹசன் மண்டோ இங்கு படுத்திருக்கிறான். அவனுடன் புதைந்திருக்கின்றன சிறுகதை எழுத்துக் கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும். பல டன் கணக்கு மண்ணுக்கு அடியில் படுத்திருக்கிறான், யார் சிறந்த கதாசிரியன், அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்…’


அந்தப் போட்டியில் தான் தோற்றுபோனதாக அவர் உண்ர்ந்திருக்க வேண்டும்.

நன்றி - தி இந்து 30 08 2014

அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை - ரெங்கையா முருகன்


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை
வாளுவமே தினம் வேள்வி யாலிலில்
புனை மூவாயீர வேட்டியர் மிகவே பூசனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சா.விடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

நன்றி - தி இந்து 09 08 2014

07/06/2015

சொந்த வீடு - ஆர்.சூடாமணி

அரண்மனை மாதிரி வீடு என்பார்களே. அதுபோன்ற விசாலமான வீடு. பெரிய பெரிய அறைகள் இரண்டு கட்டு. முற்றம் கூடம் தாழ்வாரம் என்று தினம் ஒரு கல்யாணம் செய்யலாம். ஏன். அவர் பெரிய பெண்ணுக்கு நிஜமாகவே இந்த வீட்டில் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது.

அரண்மனை ஆனால் வேறொருவரின் அரண்மனை விட்டுப் போகும் காலம் வந்துவிட்டது. சொந்தக்காரன் போகச் சொல்லிவிட்டான்.

அவன் எப்போதோ போகச் சொல்லியிருப்பான்.

கார்த்திகேயன் “நான் சொந்தமா ஃப்ளாட் வாங்கப்போறேன் சார். வாங்கினதும் அங்க போயிடுவோம். சீக்கிரமே ஏற்பாடாயிடும். அதுவரை கொஞ்சம் பொறுத்துக்குங்க. வாடகை வேணும்னாலும் சேர்த்துத் தரேன்.” என்று பேசி கடந்த ஐந்து மாதங்களாக ஆயிரம் ரூபாய் வாடகை தந்து கொண்டிருந்தான். இத்தனை பெரிய வீட்டுக்கு இந்த நாளில் ஆயிரம் ரூபாய் கூட பிச்சைக்காசுதான். ஆனால், பழைய வட்டாரம் “பாஷ் லொக்கா-டி” இல்லை. கட்டடமும் “ஹைதர் காலத்து வகை. ஆகவே. முன்பை விடக் கூடுதலான முந்நூறு ரூபாயை வீட்டுக்காரர் ஒப்புக்கொண்டு “வாய்தா” தந்திருந்தார்.

மேலும், இக்குடும்பத்துக்கு வெகு காலம் பழக்கப்பட்டவர். வீட்டைத் தரைமட்டமாக்கி அங்கு அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டி ஒவ்வொரு தளத்தையும் மூவாயிரம். நாலாயிரம் என்ற வாடகையில் கம்பெனிகளுக்கு விடுகிற திட்டத்தைச் சிறிது காலம் இவர்களுக்குத் தள்ளிப்போட இசைந்தார்.

இப்போது கார்த்திகேயன் ஃப்ளாட் வாங்கி விட்டான். அடையாறுக்கு அருகே இடம். தற்கால பாணி வீடு. வாஷ்பேஸின். மேனாட்டு வகை ஃப்ளஷவுட். சுவருக்குள் அமைந்த “வார்ட்ரோப்”. கண்ணுக்குத் தெரியாத மின் இணைப்பு கீஸருக்கு வசதி. மிக்ஸி. கிரைண்டர்களுக்குத் தயாராய் சாக்கெட்டுகள் என்று எல்லாம் உண்டு. புதிய காலனியின் நாகரிகச் சூழல் ஜன்னல்களைத் திறந்தால் “முடியைப் பிய்த்துக் கொண்டு போகிற” கடற்காற்று. கார்த்திகேயனை விடவும் அவனுடைய “டீன் ஏஜ் பெண் ஜோதிக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி உற்சாகம்.

“அப்பாடா. இனிமே வெக்கப்படாம என் பெரண்ட்ஸயெல்லாம் வீட்டுக்கு இன்வைட் பண்ணலாம்” என்றாள்.

நாகராஜன்தான் சோர்ந்து காணப்பட்டார். தம் அறையில் பிரமை பிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தார். பிள்ளை சொந்தமாய் வீடு வாங்குகிறான் என்ற மகிழ்ச்சி. பெருமை எல்லாம். ஆனால் வீடு என்ற சொல் உடனுக்குடன் மனசில் பதிந்தது. அவருக்குப் பழகிய வீட்டு இலக்கணம்தான். பெரிசு பெரிசாய் நிறைய அறைகள். விசாலமான உறைவிடம். காலார வீட்டுக்குள் இரண்டு சுற்று நடந்து வந்தாலே தேகப்பயிற்சி கிடைத்துவிடுகிற விஸ்தாரம்.

பால் காய்ச்சிக் குடிக்க உற்சாகமாய்க் குடும்பத்தின் ரோடு சென்ற அன்றுதான் யதார்த்தம் முகத்தில் அறைந்தது. ஃப்ளாட் என்பதன் அர்த்தம் அவருக்கு மட்டும் தெரியாதா? ஃப்ளாட்டும் வீடுதான் என்றாலும் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கண்கூடாய் பார்க்கும் வரை ஏன் உணர்வில் பதிவாகவில்லை?

இது “இரு படுக்கையறை ஃப்ளாட். பதினாலுக்குப் பத்தடி அறைகள். நடுவில் அதற்குச் சற்று சிறிய அளவில் பொது ஹால். அங்கு அடுக்கி அலங்கரிக்க மருமகளும். பேத்தியும் நிறைய நாகரிகப் பதுமைகள் வாங்கப் போகிறார்கள். இன்னும் சோபா செட்டும் டி.வியும் வேறு இருக்கிறது. பத்துப் பேரை சேர்ந்தாற்போல உட்காரவைத்து இலைபோட இடம் கிடையாது. ஒரு மூளையில் பெரிய அண்டாவின் அளவும் வடிவமும் கொண்ட. காது வைத்த. பித்தளைத் தொட்டியில் குரோட்டன்ஸ் வைக்க வேண்டுமென்று பேத்தி தீர்மானமாய்ச் சொல்லிவிட்டாள். இப்போதெல்லாம் அதுதான் பாஷனாம். சிநேகிதிகளை வீட்டுக்கு அழைக்கக் கூடியவர்களாக்கும் தகுதிகளில் அந்த அண்டாத் தொட்டியும் ஒன்று என்று தோன்றியது. பேத்திக்கு ஓர் அறை. மற்றொன்று மகனுக்கும் மருமகளுக்கும் முன்னால் இருந்த சின்ன வராந்தாவின் முனையில் மரத் தடுப்பால் அவருக்கு ஓர் அறை உருவாக்கிக் கொடுக்க கார்த்திகேயன் எண்ணியிருந்தான்.

“எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும் அப்பா. அங்கே நீங்க படிக்கிறதோ. ஓய்வெடுக்கிறதோ எல்லாம் செய்யலாம். வீட்டில் யார் வந்தாலும் போனாலும் உங்களுக்குத்
தொந்தரவு இருக்காது. உங்க ப்ரைவஸிக்கு இடைஞ்சல் இல்லை. நீங்களாய் இஷ்டப் பட்டா மத்தவங்களோடு கலந்துக்கலாம். ராத்திரியில் மட்டும் பாதுகாப்பாய் உள்ளே ஜோதி ரூமில்
படுத்துக்குங்க.”

மகன் நல்லவன். அவருக்கு வேண்டியதையெல்லாம் கவனித்துச் செய்கிறவன்.

“அதெல்லாம் சரிதான் கார்த்தி. ஆனா…..” என்று நாகராஜன் இழுக்கிறார். பால் காய்ச்சிக் குடித்துவிட்டு வீடு திரும்பிய அன்று மாலை.

“என்ன ஆனா?”

“ரொம்ப சின்ன இடமாயிருக்கேடா!”

கார்த்திகேயன் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன.

என்னப்பா சின்னது? நாம இருக்கறது நாலே பேர். நாளைக்கே ஜோதி கல்யாணமாகிப் போய்ட்டால் மூணு பேர்தான். நம்ம தேவைகளுக்கு அந்த ஃப்ளாட் போதாதா? இப்ப இந்த வீட்டுல பாதி இடம் பூட்டித்தானே கிடக்குது?”

ஒரு காலத்தில் இங்கே நிறைய மனுஷங்க புழங்கி இருக்காங்க. தெரியுமா? உங்கம்மா உயிரோடு இருந்தப்ப; உனக்கும் உன் அக்கா. தங்கச்சிகளுக்கும் கல்யாணமாகறதுக்கு முந்தி; நம்ம தூரத்து உறவுக்காரங்கள்லாம் இங்கே வந்து தங்கிப் படிச்சி கிட்டிருந்த காலத்துல.”

“அந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சுப்பா; இப்ப இந்த வீட்ல நாம நாலு பேர்தான்னு எத்தனை வாட்டி ஞாபகப்படுத்தணும்? முந்தி புழங்கின இடத்தில் முக்கால்வாசி இப்போ நமக்குத் தேவையில்லாம தட்டுமுட்டு சாமான்கள் போட்டுப் பூட்டி வச்சிருக்கோம். வீடு “ஹோ”ன்னு இருக்கு.

நீங்க ஒண்டி ஆளாய் உங்க ரூமில் கமலாவும் நானும் இன்னொரு ரூமில் ஜோதி மூணாவது மூலையில் ஒருத்தரையொருத்தர் தேடிக்கிட்டு கண்ணாமூச்சி ஆடலாம். அத்தனை காலி இடம்.”

“இவ்வளவு சாமான்களும் அந்த ஃப்ளாட்டில் எப்படிக் கொள்ளும்?”

“இவ்வளவு சாமான்களையும் யார் அங்க எடுத்துட்டுப் போகப் போறாங்க?”

நாகராஜன் திடுக்கிட்டார்.

“பூட்டி வச்சிருக்கிற சாமானெல்லாம் நமக்குத்தேவைப்படாதப்பா! பழைய மரச்சாமான்கள் கள்ளிப்பெட்டிகள்.  கட்டில்கள். யாருக்கானும் கொடுத்துடலாம். இல்லே வித்துடலம்.”

“யாரு வாங்குவாங்களாம். பழங்கால கிராமபோனும் உடைஞ்சுபோன ஊஞ்சப்பலகையும் மாதிரியான சாமான்களை?” என்றாள் மருமகள் இடையில்.

“சரியாய்ச் சொன்னே கமலா. இத பாருங்கப்பா. இதெல்லாம் சும்மா இடத்தை அடைச்சுக்கிட்டுத்தூசி சேர்த்துக்கிட்டு இருக்கற அநாவசியப் பொருள்கள்தான். நம்ம பர்னிச்சரையும் தான் பாருங்க. யானை யானையா சோபாக்களும் பீரோக்களும்! இதையெல்லாம் லாரி வச்சு மர்ரே கம்பெனிக்கு அனுப்பிச்சிட்டு லேசா. எளிமையா. ஆனா நாகரிகமான சோபா செட் வாங்கி நம்ம ஃப்ளாட் ஹால்ல போடப் போறேன்”.

“பீரோ…… பீரோக்களையுமா போட்டுடப் போறே?” என்றபோது நாகராஜன் குரல் லேசாய் நடுங்கியது.

பின்னே? இத்தனை பீரோக்களுக்கு அங்க இடம் எது?

“இந்த வீட்டுல ரூமூக்கு நாலு பீரோ. முக்கால்வாசி பூட்டியே கிடக்குது. சாவி எங்கேன்னு கூடத் தெரியாது. எந்தக் காலத்திலோ யாரோ உபயோகிச்சா இப்போ என்னப்பா? நம்ம தேவைக்கு ஒரு காட்ரெஜ் பீரோ. இன்னும் ஒண்ணு இருந்தா போதும். உங்களுக்குப் படிக்கிறதில் ஆசை. அதனால் உங்க புஸ்தகங்களுக்கு ஒரு சின்ன பீரோ. மத்தபடி பீரோ எதுக்கு? புது மோஸ்தர் கட்டடத்தில் பில்ட்-இன் வார்ட்ரோட் இருக்கு. சமையால் ரூமில் பில்ட்-இன் ஷெல்ப்கள் இருக்கு. வேற எதுக்கு
பீரோ.”

நாகராஜன் சிறிது நேரம் தலைகுனிந்து பேசாதிருந்தார்.

திடீரென்று சொன்னார். “இல்லடா கார்த்தி. இத்தனை சாமான்களையும் தூரப் போட்டுடறது சரின்னு தோணலே அந்த ஃப்ளாட் வேணாம்……”

“ரொம்ப அழகாயிருக்குப்பா. கோவாப்ரேடிவ் சொஸட்டியில் முதல் தொகை டௌன் பேமென்ட்
செஞ்சுபாலெல்லாம் காய்ச்சிக் குடிச்சிட்டு வந்தப்புறம், பாழடைஞ்ச வீடு மாதிரி இந்தப் பெரிய இடத்தைக் கட்டிக் கிட்டு ஆயுசுக்கும் கிடக்கணும்னுதான் உங்களுக்கு ஆசையா? எனக்கு அந்தத் தண்டனை கொடுக்காதீங்க?”

“இல்லேடா. நான் அப்படி சொல்லலே…..”

“நீங்க இருக்கணும்னு சொன்னாலும் வீட்டுக்காரர் இனிமே பொறுக்கமாட்டார். முப்பத்தோராம் தேதி நாம கிளம்பிப் போனதுமே ஒண்ணாந்தேதி காலையில் மம்முட்டி கடப்பாரையோட இங்க வாசல்ல ஆளுங்க வந்து நிக்கப் போறாங்க.”

“நான் இங்கேயே இருக்கணும்னு சொல்லலே கார்த்தி! அவ்வளவு சின்ன ஃப்ளாட் வேணாம்னுதான் சொல்றேன். கொஞ்சம் தாரளமாய் இடம் இருக்காப்ல பாரேன்….. இன்னும் நாலு பீரோ வைக்க முடியறாப்பல……”

“இந்த ஃப்ளாட்டுக்கே எனக்கு அஞ்சு லட்சம் ஆகப் போகுது தெரியுமா? ஹவுஸ் லோன் வாங்கியிருக்கேனே. அதைப் பத்தி எத்தனையோ கவலை. இத்தனையும் தாண்டி ஏதோ நம்ம மகன் சொந்த வீடு வாங்கறேன்னு பாராட்டத் தெரியாட்டியும் குறை சொல்ல நல்லாத் தெரியுது.”

“கோச்சுக்காதேடா! நான் அதுக்குச் சொல்லலே….. ஏ கார்த்தி! கார்த்தி!”

அவர் கூவக் கூவ அவன் திரும்பிப் பாராமல் எழுந்து சென்றான்.

“சே. இந்த அப்பா! ஒவ்வொரு குடும்பத்தில் பிள்ளை அப்பனை அநாதரவாய்த் தெருவில் விட்டுவிடுகிறான். நான் அப்படியா? எவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொள்கிறேன். முழங்கால் மூட்டு வலியால் படி ஏற சிரமப்படப்போகிறாரே என்று கிரௌண்ட் ஃப்ளோரில் இடம் வாங்கியிருக்கிறேன். இத்தனைக்கும் மாடியில்தான் இன்னும் நல்ல காற்று. தெரு இரைச்சல்களால் தொல்லை இல்லை. சே! பெற்ற தகப்பனாயிருந்தாலும் கொஞ்சம் நன்றியுணர்வு வேண்டும்…..”

நாகராஜன் நின்ற இடத்தில் வெகு நேரத்தில் வெகு நேரம் கல்லாய் இருந்தார். கார்த்தி கோபித்துக் கொண்டு விட்டான்.

இனி எதுவும் சொல்வதில் பயனில்லை.

அவர் மெல்லத் தம் அறைக்கு நடந்தார். அவருடைய பிரத்தியேக அறை. எப்பவும் போல் உங்களுக்குன்னு ஒரு தனி ரூம் இருக்கும்” என்றானே. இந்த அறையும் அந்த மரத்தடுப்பும் பொந்தும் ஒன்றா? மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு அறையைச் சுற்றி அவர் பார்வையை மெல்ல செலுத்தினார். இந்தப்பக்கம் மூன்று.அந்தப்பக்கம் மூன்று பீரோக்கள். பெரியவை.

ஒவ்வொன்றிலும் முட்ட முட்டப் புத்தகங்கள். பற்பல பொருள் பற்றி. தமிழ். ஆங்கிலம் வடமொழி.
எத்தனை காலமாய்ச் சேர்த்தவை! ஆண்டுகள் ஒன்றா இரண்டா! நாற்பது ஆண்டுகள் சேகரிப்பு.
இளமைப் பருவத்திலிருந்தே முளைவிட்ட ஆசை உத்தியோக காலத்தில் நிறைவு காண ஆரம்பித்தது. இரும்புச் சாமான்கள் நிறுவனம் ஒன்றில் இருபத்திரண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தபோது மாதச் சம்பளம் இருநூற்றைம்பது ரூபாய். அதில் பத்து ரூபாயைப் புத்தகம் வாங்கவென்று எடுத்து வைத்து விடுவார். மிச்சத்தில் ஓர் ஆள் அதிக சிரமமின்றி வாழ முடிந்தது அந்தக் காலத்தில். எந்த நெருக்கடியிலும் அந்தப் பத்து ரூபாயைத் தொட்டதில்லை.அது புத்தகங்களுக்காக மட்டுமே.

பின்னால் நிலைமையும். சம்பளமும் உயர உயர புத்தகப்பணமும் உயர்ந்தது. “விலை இரண்டு அணா” என்று அச்சிட்ட உள்ளங்கையளவு தல புராணங்களிலிருந்து இப்போது இரண்டு மாதம் முன்பு புத்தகக் கண்காட்சியில் இரண்டு பாகங்களில் இந்திய வரலாற்று நூல் நூற்றெழுபது வரை ஆயிரத்தைந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அவரை நட்புடன் பார்த்துக் கொண்டு இந்த பீரோக்களில் நிற்கின்றன.

ஒவ்வொரு பீரோவினுள்ளும் புத்தகங்களைக் கண்களால் கொஞ்சித் தடவினார். பிறகு திறந்து கைகளால் தடவினார். தொட்டுச் சீராட்டினார். தேவையானால் ஒருவேளை சோறுண்டு அவரால் வாழ முடியும். இரண்டே ஆடைகளை மாற்றி மாற்றி உடுத்திக் கொண்டு வாழ முடியும். பொந்து அறைக்குள் சந்தோஷ்மாய் வாழ முடியும். ஆனால் இந்தப் புத்தகங்கள் இல்லாமல் வாழ்வது……?

இவை யாவற்றையுமே முறை வைத்துக் கொண்டு ஒன்று விடாமல் திரும்பத் திரும்பப் படிக்கிறார் என்பதில்லை. மிகவும் பிடித்தவை என்று சில உண்டு. திரும்பத் திரும்பப் படிக்க வேறு சில. ஆண்டுக்கணக்காய்த் தொடப்படாமலேயே பீரோவுக்குள் தூசி படிந்து பழுப்பாகிக் கொண்டு வருவதும் உண்டு. அதற்காக அவற்றைத் துறந்துவிட முடியுமா? இந்த நூல்கள் அனைத்தும் அவர் வாழ்ந்த நாட்களின் சாட்சி. அவர் மனநிறைவின் ஸ்தூல அடையாளம். படிக்காத நேரங்களில் கூட அவற்றின் பின்னணியில் மௌனமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது சொந்த வீட்டில் இருப்பது போன்ற இதம் சுரக்கிறது.

ஒரு சின்ன பீரோவுக்குள் அடங்கும் அறைக்குத்தானே அனுமதி கொடுக்கிறான். மிஞ்சிப் போனால் நூறு புத்தகங்கள் தேறுமா? நூற்றைம்பது? இருநூறா? எவற்றைத் தேர்ந்தெடுப்பது எவற்றையெல்லாம் விடுவது? உன் உடம்பின் அங்கங்களில் இரண்டொன்று வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் வெட்டி எறி என்றால் என்ன பதில் சொல்ல? சுண்டுவிரலேயானாலும் வெட்டிவிட மனம் வருமா?

தட்டுமுட்டு சாமான்கள் போலவும். பழங்காலக் கட்டில் சோபாக்கள் போலவும் இவற்றை அநாவசியம் என்று தூக்கிப்போடுவதா?

பேத்தியிடம் புத்தக ஆசையை வளர்க்க அவர் பலதரம் முயன்றதுண்டு. ஆனால் அவர்களுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதிலிருந்த ஆர்வம் புத்தகம் படிப்பதில் இல்லை. “இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் தாத்தா உக்கார்ந்து படிப்பாங்க? போர். இந்தக் கதையைத்தான் விறுவிறுப்பாக பி.பி.சி.யில் சின்ன சீரியலாய்க் காட்டினாங்களே” என்பாள்.

வண்ணப் படங்களைக் காட்டிச் சுவையூட்டப் பார்த்தால், “இதைவிட தத்ரூபமா இந்தக் காட்டு மிருகங்களைப் பத்தி ஒரு டாகுமெண்டரி வந்துதே டிவி.யில!” என்பாள்.

தலைமுறை இடைவெளி என்பது இதுதானா? அல்லது நான்தான் இந்த ஜெட் யுகத்தில் வாழவே தகுதியற்றவனாகி விட்டனோ? நானும் தூசி படிந்து பழுப்பாகி…….

புத்தகங்களைத் தொட்டுத் தடவிய விரல்கள் நடுங்கின. கண்களில் ஈரம் திசை கவித்தது.

என்ன செய்வான் என் புத்தகங்களை? ஏதாவது லைப்ரரிக்காவது நன்கொடையாய்த் தருவானா அல்லது கிலோவிற்கு இவ்வளவென்று பேரம் பேசி பேப்பர்காரனிடம்……முருகா!

உள்ளுக்குள் மௌனமாய் ஓர் அலறல் வெடித்தது. கண்முன் இருள் சூழ ஆரம்பித்தது தெரியும். உடல் தரையைத் தொட்டது தெரியாது.

மங்கல் மாங்கலாய். கருவளையங்களாய். கண்ணினுள் ஏதோ சுழற்சிகள். உரக்கக் கத்துவதுபோல் இருந்தது. முடிவற்ற பள்ளத்தின் இருளில் மௌனமாய் மூழ்குவது போலவும் இருந்தது. இது மகனின் முகம்தானே? ஆனால் அடையாறு ப்ளாட் அல்லவா இந்த முகத்தோடு சிரிக்கிறது? இன்னொரு பக்கம் அழுகையொறீ. பீரோக்களிறீருந்தா? கைகால்களை உதைத்துக் கொள்கிற அமைதியின்மை. மீண்டும் இருள்.

மீண்டும் மங்கலாய் ஒளி ஊடுருவல். வெள்ளத்தில் சிறிது சிறிதாய் நீச்சல் போட்டு மூச்சு வாங்க ஒருவாறு மெல்லத் தலையை நீர்மட்டத்திற்கு மேல் தூக்கி நிமிர்ந்தபோது எதிரே இருந்த முகம் ஒரு கணம் மங்கிக் குழம்பிப் பிறகு தெளிந்தது.

“அப்பா கண்ணை விழிச்சிட்டார்! கண்களை மலர்த்தினார். இப்போதுதான் தூங்கப் போய்க் கண் விழித்தது போல் இருந்தது. ஆனால் சுவர்க் காலண்டரில் மூன்று தாள்கள் கிழிக்கப்பட்டிருந்தன.

“அப்பா”

கார்த்திதான் எதிரில். கண்களை அசைத்தபோது பக்கத்து மேஜைமேல் ஏதோதோ பாட்டில்கள். மருந்துகள்.

“இப்போ எப்படிப்பா இருக்கு?”

கார்த்திகேயன் கை அவர் நெற்றியில் படிந்தது. “அப்பாடா. ஜுரம் இறங்கியிருக்கு.”

மருமகளின் முகம் நாற்காலியருகில் அவன் பின்னால் தோன்றியது. புன்னகையுடன்.

“கமலா. டாக்டருக்கு போன் பண்ணி அப்பாவுக்கு விழிப்பு வந்திடிச்சுன்னு சொல்லு.”

எனக்கு… இப்போது தந்தையும் மகனும் மட்டுமே.

“என்ன ஆச்சு கார்த்தி?” அவர் குரல் அவர் காதுக்கே வித்தியாசமாய் மெலிந்து ஒலித்தது. யாரோ எங்கிருந்தோ பேசுவதுபோல்.

“கடுமையான காய்ச்சல்ப்பா. நூத்துநாலு டிகிரி. கண் திறக்காம மயக்கம். மூணு நாளாச்சு. பயந்தே போய்ட்டோம்…டாக்டர் நல்லா இருக்கணும்.”

மூன்று நாட்கள். மீண்டும் காலண்டர் மேல் கண்கள் நினைவுகள் மெல்லப் புரண்டு கொடுத்தன. வீட்டைக் காலி செய்ய இன்னும் ஒன்பதே நாட்கள்…. கண்களுக்குள் உப்பு உறுத்தியது.

“மயக்கத்தில் ஏதேதோ பேசினீங்கப்பா.” அவன் குரலிலும் முகத்திலும் இரக்கம் குரல் தாழ்ந்தது.

“என்கிட்ட முதல்லயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கக் கூடாதா?”

கார்த்தி அவர் புறங்கை நரம்புகளை மெல்ல நீவிக் கொடுத்தான்.

“கவலைப்படாதீங்க. உங்கள் அத்தனை புஸ்தகங்களும் நம்மோட வரும். எப்படியோ நான் வச்சுக் கொடுக்கறேன்.”


வெளியறையில் மருமகள் டாக்டருக்கு டெலிபோன் செய்யும் குரல் கேட்டது. 

கடற்கரையில் ஒரு புதுவித ஜோடி - ஆர்.சூடாமணி

கிழவி தன் கறுப்பு நிற ப்ரீமியர் பத்மினியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தாள். தனியாக இருந்தாள். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருந்தாள். தண்ணீர் ஒற்றைக் காலடியில் வைத்திருந்தாள்.

மெரீனா கடற்கரையில் இன்று நல்ல காற்று. தினம் இப்படி இருக்கும் என்று நம்ப முடியாது. சில மாலை நேரங்களில் கதவடைத்த அறைபோல் கடற்கரையே புழுக்கமாயிருக்கும். வெளிறிய வானத்திலிருந்து காற்றுக்குப் பதில் அனல் இறங்கும். கழுத்தும் முகமும் வேர்வையாய்ப் பெருகும். ‘ராத்திரி மழை பெய்யப் போகுது’ என்று மனசுக்கு லாலிபாப் தந்து ஆறுதலுறுத்த வேண்டி இருக்கும். இன்று அப்படியில்லை. உண்மையாகவே இரண்டு நாள் நல்ல மழை பெய்திருந்த ஈரத்தின் குளிர்ச்சி, காற்றில் விரவியிருந்தது. தன்மையாய்க் கிழ உடலுக்குச் சாமரம் வீசியது. மழைக்கால இருளும் சூழ ஆரம்பித்திருந்தது. அல்லது மாலை ஆறரை மணியின் இருளாகவும் இருக்கலாம். “ஆறரையா?” மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறரைக்கு எட்டு நிமிஷம் இருந்தது. கடற்கரையில் வழக்கமான கூட்டம் இல்லை. சுண்டல் விற்கும் பொடிசுகளைக் கூடக் காணோம். மழைப் பயத்தாலோ அல்லது இருட்டி விட்டதாலோ பெரும்பாலும் மக்கள் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். வெறிச்சோடிய மணற்பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பொறுக்கி எடுக்கலாம் போல தலைகள்.

அவனும் இருந்தான். இளைஞன். சாயம் போன பழுப்பு நிற பான்ட் அணிந்திருந்தான். “இன்” பண்ணிய முழுக்கை சாம்பல் நிறச் சட்டை, ஒரு காலத்தில் வெள்ளையாய் இருந்திருக்கலாம். சட்டைக் கைகளை மடக்கி விட்டிருந்தான். ஒட்டு மீசை, ஒட்டிய தாடைகள், சராசரிக்கு மேல் உயரம் ; ஒல்லியோ – பருமனோ இல்லாத உடல்வாகு. அவன் இங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கிழவி முன்னமே கவனித்திருந்தாள். சற்று நேரம் முன்பு வரை அவள் காருக்கருகில் ஒரு யமாஹா பைக்கில் இரு இளம் பெண்கள் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பையலுக்கு அங்கேயே திருட்டுப் பார்வை. அந்தப் பக்கமாய் வாக்கிங் செய்கிறவன் மாதிரி முன்னேயும் பின்னேயுமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது ஓரக் கண்ணால் கிழவியையும் பார்த்துக் கொண்டான். இளசுகளிடம் வம்பு செய்ய முடியாமல் கிழடு ஒன்று பக்கத்தில் இருப்பது அவனுக்கு சுத்தமாய்ப் பிடிக்கவில்லை என்று தோன்றியது.

இந்த அசடுகள், இறுக்கிப் பிடிக்கும் பனியன்களின் பிரக்ஞை இல்லாமல், கண்ட கழிசடைகளின் கண்களுக்கு விருந்தாய் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறதுகளே! சினிமா பற்றிய பேச்சாயிருக்கும். அதுதான் அத்தனை லயிப்பு. கடற்கரையில மனித நடமாட்டம் குறைந்து வருகிறது என்ற எச்சரிக்கை கூட இல்லாமல்… இருட்டு நேரம் வேறு. என்ன பைத்தியக்காரத் துணிச்சல்! என்னதான் மாடர்ன் என்றாலும் பெண்மைக்குள் எப்போதும் சிவப்புக் கண் விழித்திருக்க வேண்டாமோ?

அந்தப் பயல் இன்னும் இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தான்.

ஒரு தீர்மானத்துடன் கிழவி காரை விட்டிறங்கி அந்தப் பெண்களை அணுகினாள்.

“எக்ஸ்கியூஸ் மீ.”

தலை நரைத்து முகத்தில் கோடுகளுடன் கைத்தறிப் புடவை சுற்றிய ஒரு கிழ வடிவம் சாந்தி நிகேதன் ஹேண்ட்பாகும் ஷோலாப்பூர் சப்பல்களுமாய் ஆங்கிலம் பேசக் கேட்ட அதிர்ச்சியில், பேசிக் கொண்டிருந்தவர்கள் வாயில் “பிரசாந்த்…” பாதியில் நின்றார்.

“நான் சொல்றத தப்பா எடுத்துக்காதீங்க யங் லேடீஸ். உங்களுக்குப் பாட்டியாயிருக்கக் கூடிய வயசு எனக்கு. உங்க நல்லதுக்காக ஒன்று சொல்றேன்…”

“என்ன, ஜீஸஸ் வரப் போறாரா?” என்றாள் ஒருத்தி சீரியஸான முகத்துடன். இன்னொருத்தி சிரமப்பட்டுச் சிரிக்காமல் இருந்தாள்.

“சமத்து சொட்டுது. கிண்டல் பண்ணாலும் பொருத்தமாப் பண்ணணும். நெத்தியில் கால் ரூபா அளவுக்கு இருக்குற குங்குமப் பொட்டைப் பார்க்கமா பேசறீங்களே. இவ்வளவுதானா உங்க கவன சக்தி? போகுது. இப்ப நான் சொல்றதையாச்சும் கவனமா கேளுங்க. அதோ அங்க பாருங்க. தீவட்டித் தடியன் ஒருத்தன் இங்கயே சுத்திக்கிட்டிருக்கான். நான் ரொம்ப நேரமா கவனிக்கறேன். பயல் உங்களத்தான் டாவடிக்கறான். இருட்டிட்டு வருது. ஆள் நடமாட்டம் அதிகமில்லே. வம்பை விலைக்கு வாங்காம்ம சேதமில்லாம வீடு போய்ச் சேருங்கம்மா குழந்தைகளா. பிரசாந்த் விமர்சனத்தை வீட்ல வச்சிக்கலாம். அதுக்குள்ள அவருக்கு ஒண்ணும் வயசாயிடாது.”

அந்த “டாவடிக்கறான்” என்ற அருமையான சொற்பிரயோகம். அவள் வெறும் பஞ்சாங்கமல்ல ; இன்றைய பிரக்ஞை உள்ள நாகரிகப் பாட்டி என்று உணர்த்தியிருக்க வேண்டும். ஒரு கணம் ஆராய்ச்சியுடன் அவளை நிமிர்ந்து பார்த்த இளம் பெண்கள் தலை திருப்பி நோக்கினார்கள். “தீவட்டித் தடியன்” இவர்கள் மீது பதிந்திருந்த கண்களைச் சட்டென்று வேறெதையோ பார்ப்பது போலத் திருப்பிக் கொண்டதைக் கவனித்த போது முகங்களில் கலவரம் தெரிந்தது.

“ம்.ம் கிளம்புங்கடியம்மா. பாட்டி சொல்லைத் தட்டாதேண்றது வெறும் சினிமா மட்டும் இல்லே.”

“ஷி இஸ் ரைட், சுசி. வா, போயிடலாம்.”

“சரிடி. நாங்க போயிடறோம் பாட்டி, தாங்ஸ்.”

“வெல்கம்.”

அந்த மறுமொழி கேட்டு மீண்டும் ஒரு சிறிய ஆச்சரியத்துடன் மறு கணம் இரு பெண்களும் பைக்கில் சிட்டாய்ப் பறந்து மறைந்தார்கள். கிழவி மிதப்பாய் புன்னகை செய்து கொண்டாள். தடியன் மேல் திருப்தியுடன் ஒரு பார்வை வீசிவிட்டு, திரும்பி வந்து காரில் உட்கார்ந்தாள்.
இதெல்லாம் முடிந்து சிறிது நேரம் ஆகியிருந்தது. பயல் இன்னும் ஏன் இடத்தைக் காலி பண்ணவில்லை? இங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, வேறு யாரும் இளம் பெண்கள் கண்களில் படவில்லையே?

மூன்று ஆண்கள் வானத்தைப் பார்த்து, “இன்னிக்கும் மழை வரும்” என்று
பேசியபடி, செருப்பு சரசரக்க விரைந்து கடந்து சென்றார்கள்.

கிழவி கவனித்தாள். பயல் தலை தெரியவில்லை. ஒரு வழியாய்ப் போய்த் தொலைந்தானா? அப்பாடா, தானும் கிளம்ப வேண்டியதுதான்.

இந்த ‘பார்க்கிங்’ பகுதியில் அவள் காரைத் தவிர வேறு வாகனங்கள் இல்லை. அவள் வந்த போது இங்கிருந்த இரண்டு டூரிஸ்ட் பஸ்களும் ஓர் ஊதா நிற மாருதியும் மூன்று பைக்குகளும் எப்போதோ போய்விட்டிருந்தன. அந்தப் பெண்களும் போன பின்பு வேறு வாகனங்களில்லை.
சில்லென்று அடித்த காற்றில் நரைமுடி படபடத்தது. கையால் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். தலையைத் திருப்பினாள். வியப்புற்றாள். அவள் கார் பக்கத்திலேயே முளைத்திருந்தான் அந்த இளைஞன்.

திறந்திருந்த கார் கதவின் மேல் லேசாய் சாய்ந்த படி அவளையே பார்த்தான். உதடுகளில் வினோதமான புன்னகை. அந்த அருகாமையில் ஷர்ட்டின் லேசான வியர்வை வாடை அடித்தது.

ஏன் இங்கே வந்து நிற்கிறான்? அந்தப் பெண்களை அப்புறப்படுத்தி விட்டாளென்ற ஆத்திரத்தில் அவளிடம் கூச்சலிட வந்திருக்கிறானா? ஜிவ்வென்ற கோபடம் இழை காட்டியது.

“யாருப்பா நீ? எதுக்காக இங்க வந்து நின்னுட்டிருக்கே? உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போ.”

“என் வேலையத்தான் பார்த்துக்கிட்டுப் போறேன்.” நாகரிகக் குரல். உரக்காத, ஆனால் தெளிவான தொனி. மறுபடியும் அந்தப் புன்னகை. “ஏன் பெர்சு, உன் கூட யார் வந்திருக்காங்க? புருஷனா? புள்ளயா? பேரனா?

அவள் பேச்சின்றி வெறித்தாள்.

“சொல்லு பெர்சு, யார் வந்திருக்காங்க? சமுத்திரத்துல கால் நினைக்கப் போய்ட்டாங்களா, இங்க உன்னை தனியாவிட்டுட்டு?”

கோபத்தை மீறிக் கலக்கம் எழுந்தது. கண் எட்டும் தூரம் வரை, தான் தனியாக இருப்பது உறைத்தது. எதையும் காட்டிக்கொள்ளாமல் தைரிய நகலுடன் பேசினாள்.

“ஏய் யாருடா நீ? எதுக்கு இங்க வந்து அநாவசியமா கலாட்டா பண்றே? மரியாதையா போயிடு.”

“இல்லாட்டி என்ன செய்வே?”

கிழவியின் வாய் உலர்ந்தது. இளைஞன் கையில் திடீரென்று பளீரிடும் அந்த மின்னல் கத்தி, இடது சட்டைக் கை மடிப்பு பிரித்துவிடப்பட்டிருந்தது. எப்படிச் செய்தான் இமை நேரத்தில்-
“உன் புருஷனோ, புள்ளையோ, பேரனோ இல்ல. எல்லாருமோ திரும்பி வரதுக்குள்ள நான் என் வேலைய முடிச்சுக்கிட்டுப் போயிடறேன். நோ, நோ, நோ பயந்துக்காத பெர்சு. நான் சொல்றபடி கேட்டியானா உன்னை ஒண்ணும் செய்யமாட்டேன். முதல்ல, கொஞ்சம் அந்த சைடுக்கு தள்ளி உக்காரு. நான் உள்ள ஏறி உன் பக்கத்துல உக்காந்துக்கறேன். ஒருத்தர் ரெண்டு பேர் எதிர்க்க நடந்து போறவங்களுக்கு அப்பத்தான் சந்தேகம் வராது.”

அவன் சரேலென்று பின் இருக்கையில் அவள் பக்கத்தில் ஏறி அமர்ந்து கதவை மூடி இரு கதவுகளையும் “லாக்” செய்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அவன் இடது கை கத்தியோடு அவள் முதுகுக்குப் பின் இருந்தது.

“முனை உறுத்துதில்ல பெர்சு? ஜாக்கிரதை. நீ ஏதானும் சத்தம் போட்டு கலாட்டா பண்ணினே, முனையோடு முழுக்கத்தியும் உன் உடம்புக்குள்ள பூந்துடும்.”

பயங்கரக் கனவு காண்பது போல் இருந்தது. ஏதோ திகில் படம் டி.வி.யில் பார்ப்பது போலிருந்தது. அவளும் ஒரு பாத்திரம். கதை தெரியாமல் பங்கேற்கும் பாத்திரம். எப்படி முடியப் போகிறது?

நரை மயிர்க்கால்களிலிருந்து வெப்ப அலைகளாய் வியர்வை பெருக்கெடுத்தது.

“ஒரு வேடிக்கை தெரியுமா பெர்சு? உன் கார் பக்கத்துல பைக் மேலே ரெண்டு பொண்ணு உக்காந்திருந்தாங்க இல்லே? அவங்க இருக்கறபோது எப்படி உன்னை நெருங்கி வந்து மிரட்டறது அப்படின்னு எனக்கு ஒரே டென்ஷன். இந்த நாள் பொண்ணுங்க வெவரமானவங்க. சந்தேகமான ஆளுனு தோணிச்சுன்னா அப்படியே பாஞ்சு வந்து ஆளுக்கு நாலு கராத்தே உதை உதைச்சு போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. என்னடா செய்யறதுன்னு யோசனையோடு குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டே இருந்தேன். அவங்களோ கிளம்பற வழியாத் தெரியல. அப்புறம் என் அதிர்ஷ்டம் ; நீயே அவங்களண்ட போய் ஏதோ சொல்லி விரட்டியடிச்சிட்டே!” மறுபடியும் சிரித்தான்.

அவள் அதிர்ச்சியுற்றாள். அட ஈஸ்வரா, இப்படி ஒரு விதி விளையாட்டா? தானே தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு… இன்று அவளுக்கு ஆபத்து என்பது விதியின் தீர்மானம் போல் இருக்கிறது. இனி பயந்து ஆவதொன்றுமில்லை.

“சரி பெர்சு, விஷயத்துக்கு வருவோம்…”

“இந்தாப்பா, பேச்சுக்குப் பேச்சு அது என்ன, ஏளனமாய் ‘பெர்சு’? பெரியவங்களா ஆகறது ஒரு குத்தமா? மனுஷன் ஆயுசை எப்படியெல்லாம் நீட்டிக்கலாம்னு ஒரு பக்கம் அறிஞர்கள் மாஞ்சு மாஞ்சு ஆராய்ச்சி பண்றாங்க. கட்டுரை எழுதறாங்க. இன்னொரு பக்கம் வயசாளின்னா கிண்டலா? நீ கிழவனா ஆகவே மாட்டியா? ஒரு நாள் நீயும் ‘பெர்சு’ ஆகமாட்டியா? ஒருவேளை அற்பாயுசுலேயே செத்துப்போயிடலாம்னு ஏதானும் சங்கல்பம் பண்ணியிருக்கிறயா என்ன?”
அவன் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்.

“அட, பலே கிழவியாயிருக்கியே! பெர்சுங்கள்ளாம் கூட இப்படிப் பேச முடியுமா? சரி. இனிமே பெர்சுன்னு கூப்பிடலே. அதுக்காக உன்னை விட்டுடப் போறேன்னு அர்த்தமில்ல.”

அவளுக்கு மறுபடியும் பயம் பற்றியது. தொலைவில் கடலலைகள் இரைச்சல். மணல்மேல் ஒரு சிலர் தென்பட்டார்கள். இங்கு கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு எதிராக சிலர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கார்மீதும் இரண்டொரு பார்வைகள் பட்டன. பாட்டியும் பேரனும் அழகான குடும்பக் காட்சி. இந்த நாளிலும் இப்படியொரு பாசமுள்ள பேரனா என்று வியந்திருப்பார்கள் ஒருவேளை.

கூச்சல் போடலாமா? கொலை கொலை என்று கத்தலாமா? வாயைத் திறப்பதற்குள் கூர் முனை ஒன்று முதுகில் உரசியது. திறக்க இருந்த வாய் மூடிக் கொண்டது.

அவர்கள் கடந்து போய்விட்டார்கள். கடற்கரையில் இப்போது ஈ, காக்காய் இல்லை. இருட்டில் அழுத்தம் கூடியிருந்தது. மப்பு மூடிய இரவின் சோடியம் வேப்பர் விளக்கொளியை அது சட்டை செய்யவில்லை. சிலுசிலுவென்ற காற்றினாலோ, பயத்தாலோ கிழ உடம்பு முள்குத்தி நின்றது.

“ஏண்டாப்பா உனக்குப் பாட்டியே கிடையாதா? இந்த அக்கிரமம் பண்றியே!”

“நிச்சயம் நீ புது டைப்தான் ஆயா, வம்பு பண்ற பசங்களண்டை பொண்ணுங்க உனக்கு அக்கா, தங்கச்சி கிடையாதான்னு கேட்பாங்க. நீ என்ன, உனக்குப் பாட்டி கிடையாதான்னு கேக்கற?”

“ஒரு பாட்டியத்தான நீ மிரட்டிகிட்டிருக்கே. அதுவும் தவிர, இதுதான் சரியான கேள்வி. எல்லாப் பசங்களுக்குமே அக்கா, தங்கச்சி இருக்கணும்னு அவசியமில்லே. ஆனா உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு பாட்டி இருந்துதானே ஆகணும்.”

அவன் சிரித்தான். “கில்லாடி ஆயா நீ, ஆமா உன் ஆளுங்க என்ன இன்னும் திரும்பி வரல்லே? இருட்டி இவ்வளவு நேரத்துக்கப்புறமுமா ஒரு வயசான பொம்பளயை தனியா விட்டுட்டு தண்ணியில அளைஞ்சி கிட்டிருப்பாங்க?”

கிழவி பேசவில்லை. அவன் அவளைக் கூர்ந்து பார்த்தான். “ஓ தனியாத்தான் வந்திருக்கியா?” மௌனம். “குருட்டு தைரியம்தான். அப்போ கார் ஓட்டத் தெரியும்னு சொல்லு.” மௌனம். “பின்ன ஏன் பின் சீட்டில் உட்கார்ந்திருக்கே?” “காத்து வாங்கணும். அதுக்காக முன் சீட்டில் கதவைத் திறந்து உக்காந்திருந்தா கார் லைட் கண்ணைக் குத்தாதா? என் கூட பூனை – எலி விளையாட்டு விளையாடாதேப்பா. கையெடுத்துக் கும்பிடறேன். இந்தக் கிழவிக்குத் தாங்காது. உனக்கு என்ன வேணும்?”

“ஒரு கிழவிகிட்ட என்ன வேண்டியிருக்கும்? நகை, பணம், இல்லாட்டி உயிர்.” காத்து வாங்க வந்து உக்காந்த இடத்துல நகைக்கும் பணத்துக்கும் எங்கே போக? காத்ரேஜ் பீரோவா கொண்டு வந்திருக்கேன்?” “இருக்கறதைக் கொடுத்தால் போதும். அதோ உன் காதுல பெரிசா தங்கக் கம்மல் மின்னுதே. உனக்குத் தேவையில்லாத கனம். அப்புறம் கழுத்துல தங்கச் செயின். மூணு பவுன் தேறுமா?” வெடுக்கென்று செயினை இழுத்துப் பார்த்துக் கையில் எடையைக் கணித்தான். “தேறும். கையில் ரிஸ்ட்வாட்ச் வேற கட்டியிருக்கே. க்வார்ட்சா? நல்ல விலை போகும். இன்னொரு கையில் தங்க வளையல்.”

“நகையெல்லாம் கவரிங்.” “அதை நான் பார்த்துக்கறேன். அப்புறம் ஹேண்ட் பாக். பலே, ஸ்டைலான ஆயாதான். ஹேண்ட் பேக் காலியாவா இருக்கப் போகுது? பேரனுக்காக ஏதேனும் கொண்டு வந்திருப்பியே?” அவசரமாய் தொடைக்கடியில் மறைத்துக் கொள்ள முயன்ற கைப்பையை உரிமையாய் வெளியே இழுத்து, திறந்தான். இந்தத் தங்கக் கம்மலும் செயினும் வளையும் கடிகாரமும் பார்த்துவிட்டுத்தானா அவளைக் குறி வைத்திருந்தான்? கடங்காரன்! திருட்டு ராஸ்கல்! இன்று உயிரோடு தப்பிச் சென்றால் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான்.

கார் விளக்கை ஏற்றிக் கொண்டு கைப்பையில் இருந்தவற்றை அவன் ஆராய்ந்து கொண்டிருந்தான். “பேரு, அட்ரஸ் – கிழவிங்களுக்குக் கூட சரோஜான்னு பேர் இருக்குமா என்ன? டிரைவிங் லைசென்ஸ், கார் சாவி, சின்னப் பொட்டலத்தில் ஏதோ மாத்திரை, இன்னொரு பொட்டலத்தில் குங்குமம், ஒரு கைக்குட்டை, பால்பாயிண்ட் பேனா, கொஞ்சம் வெத்துக் காகிதம்… பணமே இல்லையே?” அவள் பேசாதிருந்தாள். “ஆ. இதென்ன இன்னொரு ஜிப்? அட, இந்தப் பையில் நோட்டுங்கதான்! ஒருநூறு, ஒரு அம்பது. இவ்வளவுதானா? காரெல்லாம் வச்சிருக்க, ஒரு ஆயிரமாவது கொண்டுவரக் கூடாது?” உதட்டைப் பிதுக்கினான். “கஞ்சப் பாட்டி! போகுது ; அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.”

“பாதி வழில திடீர்னு கார்ல பெட்ரோல் தீர்ந்து போயிட்டா அஞ்சு லிட்டராவது போட்டுக்கிட்டு போயிடலாம்னுதான்.”

“அதான் முன்யோசனையுள்ள ஆயாவுக்கு அழகு. இப்போ பேரனுக்கு உதவுது பாரு! பையிலேர்ந்து பணத்தை மட்டும் எடுத்துக்கறேன் ஆயா?” விளக்கை அணைத்துவிட்டு நோட்டுகளை பான்ட் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டு மற்ற எதையும் எடுக்காமல் ஹேண்ட் பேகை மூடி அவளிடம் கொடுத்தான். “அதென்ன, காலண்டை ஏதோ பளபளக்குது? ஓ, தண்ணி பாட்டில்தானா? சுத்தமான வீட்டுக் குடிநீராக்கும்! வச்சிக்க. சரி ஆயா, சத்தமில்லாம நகைங்களையும் ரிஸ்ட் வாட்சையும் கழட்டிக் குடு. நான் போயிடறேன். நீயும் வீட்டுக்குப் போவாணாமா? உன் புருஷனும் புள்ளயும் பேரனும் கவலைப்படுவாங்களில்ல?”

கிழவி தலை குனிந்து அசையாமல் உட்கார்ந்திருந்தாள். “ம் ம், சீக்கிரமாக கழட்டிக் குடு கிழவி, எனக்கு நேரமாகுது. இன்னும் ரொம்ப நேரம் என் பொறுமை நிக்காது.”

கிழவி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். காருக்குள் மங்கலாய் விழுந்த கடற்கரை விளக்கின் ஒளியில் அவன் சில கணங்கள் அந்தப் பார்வையை எதிர்கொண்டான். பிறகு கண்களை விலக்கிக் கொண்டான். “என்னை அப்படி உருக்கமா பார்க்காதே ஆயா. ஒண்ணும் பிரயோஜனமில்லை. சீக்கிரம் நகைங்களும் வாட்சும் குடுத்துட்டியானா நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது.” கிழவி மௌனமாய் கைக்கடிகாரத்தைக் கழற்றினாள். வளையலைக் கழற்றினாள். கழுத்துச் சங்கிலியைக் கழற்றினாள். காதுக் கம்மல்களைக் கழற்றினாள். எல்லாவற்றையும் உள்ளங்கையில் வைத்து அவனிடம் நீட்டினாள். “துண்டு துண்டாயிருந்தா எப்படி எடுத்துட்டுப் போறது? ஒண்ணு கீழே விழுந்தாக் கூடத் தெரியாது. கர்சீஃப் வச்சிருக்கயில்ல? அதில் சுத்திக் கொடு.” சுற்றி முடிச்சுப் போட்டுக் கொடுத்தாள்.

அவன் வாங்கினான். பான்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கத்தியை மடக்கி, பிரித்து விட்டிருந்த சட்டைக் கையில் வைத்து மறுபடியும் சுருட்டி மடித்துக் கொண்டான். கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான். அவளைப் பார்த்துத் தலையசைத்தான்.

“போய் வரேன் ஆயா. குட் நைட். நைஸ் டு ஹவாவ் மெட் யு.”

அவன் வேகமாய் நடந்து சிறிது தூரம் சென்று விட்டான். காற்று, விட்டு விட்டுச் சுழன்று வீசியது. மேக அடர்த்தியில் நட்சத்திரங்கள் மறைந்து கொண்டிருந்தன. திடீரென்று பின்னாலிருந்து அவள் குரல். தொலைவினால் பலவீனமாய் இருந்தாலும் இயன்ற வரையில் உரக்க அழைத்த அவசரக்குரல். “இந்தாப்பா… இந்தாப்பா… பையா… யங்மேன், உன்னைத் தான். ஒரு நிமிஷம் நில்லேன் ப்ளீஸ்!” அவன் நின்று திரும்பினான். நாலடி முன்னால் வந்தான். “என்ன ஆயா, ஏதானும் ட்ரிக் செய்யாலாம்னு பார்க்கிறியா? என்னாகும் தெரியுமில்ல?”

மடித்த சட்டைக் கையைப் பிரிக்க முனைந்தான். “இங்கே ரெண்டாம் பேர் கிடையாது, கவனமிருக்கட்டும்.” “இல்லேப்பா, அபடியெல்லாம் ஒண்ணுமில்ல.” “பின்னே என்ன?”

“கொஞ்சம்… கொஞ்சம் அந்த கடிகாரத்தில் மணி பார்த்துச் சொல்றியா? ஏழரை மணிக்கு நான் என் பி.ப்பி மாத்திரை சாப்பிடணும் நேரப்படி அந்த மாத்திரையை முழுங்காட்டி ரத்த அழுத்தம் எகிறிடும். டாக்டர் ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்னு சொல்லியிருக்கார்.”

கெஞ்சலாய் வந்த குரல். கண்களும் கெஞ்சியிருக்கும் மப்பலான வெளிச்சத்தில் அவனால் தெளிவாய்ப் பார்க்க முடியவில்லை. அவள் கிழக் கண்களுக்கும் அவன் முகபாவம் சரியாய்ப் பிடிப்படவில்லை. அவன் தன்னையே சிறிது நேரம் உற்றுப் பார்ப்பது மட்டும் தெரிந்தது. அவன் நெருங்கி வந்தான். கார் கதவைத் திறந்தான். பான்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை வெளியே இழுத்து முடிச்சைப் பிரித்து கடிகாரத்தை எடுத்து, கார் விளக்கை ஏற்றி அதனடியில் பிடித்துப் பார்த்தான்.

“ஏழு நாப்பது, கொஞ்சம் லேட். பரவாயில்லே.” கைப்பையிலிருந்து மாத்திரைப் பொட்டலத்தைப் பிரித்து மாத்திரையை எடுத்துக் கொண்டாள். வாயில் போட்டுக் கொண்டு பிளாஸ்டிக் பாட்டிலைத் திறந்து தண்ணீரோடு சேர்த்து மாத்திரையை விழுங்கினாள். நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “ரொம்ப தாங்ஸ்ப்பா.” அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிதானமாய் மீண்டும் காரில் ஏறி அமர்ந்தான். “என்னப்பா…? எ… எதுக்கு…? அவன் ஏதும் பேசாமல் அவள் கையை மென்மையாய்ப் பற்றி எடுத்து கடிகாரத்தை அவள் மணிக்கட்டில் கட்டிவிட்டான். நகைகளை மறுபடியும் கைக்குட்டையில் முடிந்து அவள் ஹேண்ட்பேக்கினுள் வைத்தான். தன்பான்ட் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாய் நோட்டையும் ஐம்பது ரூபாய் நோட்டையும் எடுத்து அவற்றையும் அவள் கைப்பையில் வைத்து மூடி அவள் மடியில் பையை வைத்தான். கார் விளக்கை அணைத்து விட்டு இறங்கி நின்றான்.

வியப்பில் அவளுக்கு வாயெழவில்லை.

“வரேன் ஆயா. நான் பிறவித் திருடனில்லை. தொழில் முறைத் திருடன் இல்லை. சொன்னா நம்புவியோ என்னமோ, நான் சரியா சாப்பிட்டு அஞ்சு நாளாகுது. நேத்திலிருந்து என் ஆகாரம் வெறும் டீ தான். அதுக்காக என்னை என்னமோ அப்பு சப்புன்னு நினைச்சிடாதே, எம்.காம். படிச்சிருக்கேனாக்கும்! ஒரு கழுதையா பிறந்திருந்தா அந்தப் பட்டம் அச்சிட்ட காகிதத்தையாவது சாப்பிட்டுப் பசியாறியிருக்கலாம்.” கார் கதவை மூடினான். “குட் நைட் ஆயா. உடனே கிளம்பி ஒழுங்கா வீட்டுக்குப் போய் சேரு. உன் வயசுக்கு இந்த நேரத்துல ஒத்தையில வெளிய கிளம்பறது நல்லதில்லே. ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தி!”

சிரித்து விட்டுப் பரபரவென்று நடந்து செல்லலானான். “இந்தாப்பா… ஏ பையா… பேர் தெரியாதது கஷ்டமா இருக்கு. ஏ ஜென்டில்மேன் திருடா. கொஞ்சம் நில்லுப்பா யங் மேன்…” “வாட் நௌ?” எரிச்சலுடன் திரும்பினான். இரைக்க இரைக்க ஓடி வந்து அவன் எதிரே நின்றிருந்தாள் கிழவி. அவன் கையில் எதையோ திணித்தாள்.


இரண்டு நோட்டுகள். நூறு, ஐம்பது. “பிச்சை போடறியா?” என்றான் சீற்றமாய். “இல்லை. நான் உயிர் தப்பிச்சச் சந்தோஷத்தைக் கொண்டாடறேன். முதல்ல போய் ஒரு நல்ல ஹோட்டல்ல ஒரு முழுச் சாப்பாடு வாங்கி வயிறாரச் சாப்பிடு. மிச்சப் பணத்தைக் கைச் செலவுக்கு வச்சிக்க. அப்புறம் – அடிக்க வராதே – உன் எம்.காமைக் கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு அந்த ஹோட்டல்லயே ஏதாவது எடுபிடி வேலையாவது இப்போதைக்குக் கிடைக்குமான்னு கேட்டுப் பாரு. ஒண்ணும் தப்பில்லே. நீ நல்ல பையன். ஆல் தி பெஸ்ட்.” காரிடம் விரைந்து திரும்பினாள். வேகமாய் அதை செலுத்திக் கொண்டு அவனைக் கடந்து சென்றபோது பலமாக விழத் தொடங்கியிருந்த மழைத் துளிகளின் உணர்வே இல்லாமல் அவன் அதே இடத்தில் பிரமித்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது. 

நன்றி - இந்தியா டுடே மார்ச் 2000

05/06/2015

ஆய்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? - முனைவர் ச.சுப்புரெத்தினம்

ஆய்த எழுத்தை உச்சரிக்கும்பொழுது "அக்கன்னா' என்றும், "அக்கேனா' என்றும் உச்சரிக்கிறார்கள். இது தவறானது.

குழந்தைகளுக்குத் தமிழிலுள்ள உயிரெழுத்துகளைச் சொல்லிக் கொடுக்கும்போது "அ' என்பதை "ஆனா' என்றும், "ஆ' என்பதை "ஆவன்னா' என்றும் வரிசைப்படுத்தி, "ஒளவன்னா' என்பது ஈறாகச் சொல்லி முடித்துப் பின், ஆய்த எழுத்தை (ஃ) "அக்கன்னா' என்று ஒருவித ஒலிநயத்துடன் சொல்லி முடிப்பதைப் பார்க்கிறோம்.

எழுத்துகளை விட்டிசைக்காமல் ஓர் இயைபு பட உச்சரிப்பதற்காகவே தனி எழுத்துகளின் பின் கரம், காரம், கான் என்ற சாரியைகளைச் சேர்த்துச் சொல்வது தொல்காப்பியர் காலத்திலிருந்தே வழக்கத்திலிருந்து வந்துள்ளது. அதாவது, "அ'கரம், "ஆ'காரம், "ஐ'காரம் அல்லது "ஐ'கான் எனப் போல்வன சாரியைகளோடு இயைந்த அத்தகைய உச்சரிப்புகளாகும்.

இத்தகைய சாரியைகளைத் தவிர ஆனம், ஓனம், ஏனம் (தொல்.சொல்.நூ.296-சேனாவரையம்) என்பவைகளும் வழக்கிலிருந்தன. அவற்றுள் ஒன்றான "ஏனம்' என்பதே ஆய்த எழுத்திற்குரிய சாரியை ஆகும் எனக் கொள்ளவேண்டும்.


தனித்தியங்கும் ஆற்றலில்லாத ஆய்த எழுத்து "அ' என்னும் உயிரை முன்னொட்டாகப் பெற்று "அஃ' என்றாகி, அதனுடன் "ஏனம்' என்பது சேர்ந்து "அஃஏனம்' என்று உச்சரிக்கப்பட வேண்டும். அல்லது "அஃகு' என்பதுடன் (தொல்.மொழிமரபு.நூ.38) "ஏனம்' என்பது சேர்ந்து "அஃகேனம்' என்றும் உச்சரிக்கப்படலாம். எனவே, அக்கன்னா, அக்கேனா என்பன தவறான உச்சரிப்புகள். "அஃஏனம்' அல்லது "அஃகேனம்' என்பதே சரியான உச்சரிப்புகளாகும்.

நன்றி தமிழ்மணி 10 11 13

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 33

1906-ஆம் ஆண்டு, வியன்னா நாட்டுக் குழந்தை நல மருத்துவர் க்ளமென்ஸ் ஃபான் பிர்க்வி (Clemens Von Pirquet) என்பவர்தான் முதன்முதலில் அலர்ஜி என்ற சொல்லை உருவாக்கினார். பழைய கிரேக்கச் சொற்களாகிய அல்லாஸ் (Allos) மற்றும் எர்கான் (Ergon) ஆகிய இரு சொற்களின் கூட்டுச் சேர்க்கையாக அவர் இச்சொல்லை உருவாக்கி, தூசு, மகரந்தம் அல்லது ஒருசில உணவுப் பொருள்கள் சில நோயாளிகளின் உடலில் மிகத் தீவிரமான நுண்ணுணர்வை ஏற்படுத்துவதைக் குறிக்க இச்சொல்லைப் பயன்படுத்தினார். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எப்படி பல்வேறு வகையான அலர்ஜி ஏற்படுகிறது என்பது 1960க்குப்பின் மருத்துவ உலகில் இம்யுனோகுளோபுலின்-இ (Immunoglobulin-E) என்ற நோய் எதிர்ப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான், தெள்ளத் தெளிவாக விளங்கியது. இனி இவ்வாரக் கடிதங்களைப் பார்ப்போம்.

வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, உடலுக்கு ஒத்துக்கொள்ளாத திட, திரவ மற்றும் வாயுப் பொருள்களை அலர்ஜி என்பதால், இதற்கிணையான சொல் "ஒவ்வாமை' என்கிறார். புலவர் சி.செந்தமிழ்ச்சேய், உடல் எதிர்ப்புணர்வு, ஏற்காமை, ஏலாமை மற்றும் பொருந்தாமை முதலிய பொருள்களைக் கொள்ளலாம் என்கிறார்.

வழக்குரைஞர், கோ.மன்றவாணன், ஒவ்வாமை, ஊறுணர்வு, எதிருணர்வு, எதிர்ச்சி, நுண் ஊறுணர்வு, நுண் எதிருணர்வு, ஊறுபொருள் விளைவு, ஊடுபொருள் எதிர்விளைவு, ஊடுபொருளின் ஏலாமை, ஊடுபொருள் பொருந்தாமை முதலிய பொருள்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

டாக்டர் ஜி.ரமேஷ், "ஒவ்வாமை' என்றும், முனைவர் பா.ஜம்புலிங்கம், ஒவ்வாமை, ஏற்காமை, பீதி, ஏற்கா சூழல் மற்றும் ஒத்துக்கொள்ளா நிலை முதலிய சொற்களையும் பரிந்துரைத்துள்ளனர்.

என்.ஆர்.சத்யமூர்த்தி, ஒவ்வாமை, கடும் ஒவ்வாமை, ஏலாமை என்று நேர்ப்பொருளிலும், வெறுப்பு, மிகு வெறுப்பு, கடும் வெறுப்பு என்று அணிசேர் பொருளிலும் பொருள் கொள்ளலாம் என்கிறார்.

சோம.நடராசன், பொதுவாக அலர்ஜி என்பதற்கு மருத்துவ ரீதியில் "ஒவ்வாமை' எனப்பொருள் கொண்டாலும், அது "வேறு' என்ற பொருள் கொண்ட அல்லாஸ் (Allos) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும், வினை என்ற பொருள் கொண்ட எர்கான் (Ergon) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் வந்தது என்றும், அதனால், அலர்ஜி என்பதை வேற்றுவினை, வேற்று ஆற்றல், பிறவினை, மற்றவினை மற்றும் அல்வினை என்று மொழியாக்கம் செய்யலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, ஒவ்வாமை அல்லது ஒத்துவராமை என்று பொருள் கொள்ளலாம் என்கிறார். தெ.முருகசாமி, "ஒவ்வாமை' என்றும், இதை வள்ளுவரும் ""மாறுபாடில்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடில்லை உயிர்க்கு'' என்ற குறளின் மூலம் மறைமுகமாகக் குறிப்பதாகவும் மேலும், அலர்ஜி என்பதற்கு உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு என்று சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதி பொருள் தருகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அலர்ஜி மருத்துவம் சார்ந்த ஆங்கிலச் சொல் என்றும், ஒருவர் தம் உடற்கூறுக்கு முரணான உணவினை உட்கொள்வதால் ஏற்படும் இயல்பல்லாத உணர்ச்சி மற்றும் உடலில் போடப்படும் ஊசி, பூசப்படும் களிம்பு வகைகள், மணப்பொருள்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத நிலையையும், இவற்றைத் தாண்டி, ஒலிகளால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் என்றும், எனவே ஊண் ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, உணர்வு ஒவ்வாமை, எதிர்விளைவு ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்றும் புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.

சோலைக் கருப்பையா, "ஒவ்வாமை' என்றும், வெ.ஆனந்தகிருஷ்ணன் ஒவ்வாமை, அல்லது மிகுநுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர் விளைவு ஆகிய சொற்களையும், க.அன்பழகன் (ஹரணி) மிகு விளைவு, உடல் மிகுவினை, மேனி மாற்றம், மெய் எதிர் தோற்றம், அயல்பொருள் மிகுவினை முதலிய சொற்களையும், பெ.கார்த்திகேயன், ஒவ்வாமை, இயலாமை, பொருந்தாமை, ஏற்காமை, இசையாமை உடல் எதிர் விளைவு முதலிய சொற்களையும், ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஏற்றுக்கொள்ளாமை, பொருந்தாமை, விரும்பாமை ஆகிய சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு வாசகர் விக்கிபீடியா தொகுப்பின் அடிப்படையில் இச்சொல்லுக்குப் பண்டைத் தமிழ் மருத்துவத்தில் "அழற்சி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், சித்த மருத்துவர் சிவராமன், அழற்சி என்ற சொல் இன்ஃப்ளமேஷனைக்  (inflammation)  குறிக்கும் என்கிறார்.

முனைவர் சிதம்பரநாதன் செட்டியாரால் பதிப்பிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு மிகு நுட்ப ஊறுணர்வு, உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவு, ஊறுபொருள் அல்லது உயிர்க்காப்பு மூலம் பொருள்வகையில் ஏற்படும் கூருணர்வு நிலை ஆகிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், இச்சொற்களும், மன்றவாணன் பரிந்துரைத்துள்ள நுண் ஊறுணர்வு போன்ற சொற்களும் அலர்ஜியின் அடையாளம் அல்லது வெளிப்பாடான ஹைப்பர் சென்ஸிடிவிடியைக் குறிப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எனவே, இவையனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஒவ்வாமை, ஏற்காமை, ஏலாமை, பொருந்தாமை ஆகிய அனைத்துச் சொற்களும் அலர்ஜி என்ற சொல்லுக்குப் பொருந்தும் போல் தோன்றுகிறது. இவற்றுள் பெருமளவில் "ஒவ்வாமை' என்ற சொல் பயனாக்கத்திற்கு வந்து விட்டதாகத் தெரிகிறது. (சென்ற ஞாயிறன்று சொல்வேட்டையைப் படித்த உடனேயே, எனது கைபேசியில் குறுஞ்செய்தியின் மூலம் ஒவ்வாமை என்ற சொல்லை நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் அனுப்பிவிட்டார்).

எனவே, அலர்ஜி என்ற சொல்லுக்குப் பெருவாரியான வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் இணைச்சொல் "ஒவ்வாமை' ஆகும்.

நன்றி - தமிழ்மணி 23 06 2013

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 32

Alter ego  என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் ரோமாபுரியின் புகழ்பெற்ற பேச்சாளர், வழக்குரைஞர், தத்துவ மேதையான மார்கஸ் துல்லியஸ் சிசேரோ (cicero) ஆவார். சிசிலி மாகாணத்தின் ஆளுநரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் (2000 ஆண்டுகளுக்கு முன்னரே லஞ்ச ஊழல் வழக்கத்திற்கு வந்துவிட்டது போலும்) வெற்றிகரமாகச் சிறைக்கு அனுப்பியதன் மூலம் புகழ் ஏணியில் ஏறத்தொடங்கிய சிசேரோ, பேச்சாற்றலைப் பற்றி இரு பெரும் நூல்களை எழுதினார். நட்பைப் பற்றி கி.மு. 44-இல் சிசேரோ எழுதிய த அமிசியா (De Amicitia) என்ற நூலில்தான் முதன்முதலாக "ஆல்டர் ஈகோ' என்ற சொல் உருவாக்கப்பட்டது. ஒத்த கருத்தும், ஒரே சிந்தனையும் உடைய நண்பனைக் குறிக்க, சிசேரோ இச்சொல்லைப் பயன்படுத்தினார்.

ஆனால், உளவியல் துறை வளர்ச்சி காணத் தொடங்கியதும், ஒரு மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு படிமத்தையும், குறிப்பாக ஒரு மனிதனுக்குள் மறைவாகச் செயல்படும் தீய படிமத்தையும் குறிப்பதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் உளவியல் அறிஞர் ஆண்டன் மெஸ்மெர் (அவர் பெயரால்தான் மெஸ்மெரிசம் என்ற சொல் ஏற்பட்டது) ஹிப்னாசிஸ் முறையில் (தூண்டப்பட்ட அறிதுயில் நிலையில்) ஒருவரது ஆல்டர் ஈகோவைப் பிரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 19-ஆம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson)) எழுதிய "டாக்டர் ஜெகில் மற்றும் திருவாளர் ஹைடு அவர்களின் விசித்திரமான வழக்கு' (The Strange Case of Dr.Jekyll and Mr.Hyde) என்ற நூல், ஒரு மனிதனுக்குள் மறைவான அல்லது மோசமான இரண்டாம் பக்கம் இருக்கக்கூடும் என்பதைக் கதையமைப்பாகக் கொண்டு, விற்பனையில் சாதனை படைத்தது. இத்தகவல்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, "ஆல்டர் ஈகோ' என்பதை "ஒருவரின் மாற்று ரூபம்' எனலாம் என்று கூறுகிறார். சோம.நடராசன், "ஆல்டர்' என்றால் மாற்று; "ஈகோ' என்றால் தன் (முனைப்பு) என்றும், "ஆல்டர் ஈகோ' என்ற சொல்லுக்கு என்மாற்று, மாற்றுயான், இரண்டாம் நான், என் போன்றான் என்னும் சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.

டி.வி.கிருஷ்ணசாமி, "பொருத்தமான இன்னொன்று' என்பதே இதன் இணைச் சொல்லாகும் என்கிறார். புலவர் செ.சத்தியசீலன், ஒத்தமைவு, போன்றிருத்தல், போலி ஆகிய சொற்களைக் கொள்ளலாம் என்கிறார். திருமதி. ஹரணி, தன்னியல்புப் பிரதி, தன்னுருப் பிரதி, தன்னுரு நகல், தன்னுரு மெய், தன் மாற்றுரு, மாற்றாளன், மெய்யுரு மாற்று, தன் மாற்று வடிவு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். 

சோலை.கருப்பையா, ஒருவரின் குணநலன், நடத்தை, உருமாற்றம் ஆகியவற்றைக் கொண்டு அவர் முன்னைப்போல இல்லை; ஆளே மாறிவிட்டார் என்று சொல்வதைப்போல், "ஆல்டர் ஈகோ' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் காலம் மாற்றிய கோலம், காலம் செய்த கோலம், காலத்தின் மாறுபாடு ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்று பொருந்தும் என்கிறார்.

வெ.ஆனந்தகிருஷ்ணன், நெருங்கிய நண்பர், ஆளின் மறுவடிவம், தன் மாற்று வடிவம், உற்ற நண்பர், உயிர்த்தோழன், ஆத்ம சிநேகிதன் ஆகிய சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிறார். முனைவர் பா.ஜம்புலிங்கம், அன்புப் பிரதிபலிப்பு, நேசப்பிரதி, பாசப்பிரதி, நட்புப்பிரதி, உள்ளங்கவர் பிம்பம், மாற்று அன்பு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் ஜி.ரமேஷ், மாற்றுத் தோற்றம், வேறு முகம், எதிர்ப் பண்பு, வேறுபட்ட ஆளுமை, மாறுபட்ட செயல்பாடு ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார்.

கோ.மன்றவாணன், இரட்டை ஆளுமை, மாற்றாளுமை, தன்நகல், படிவார்ப்பு, தன்னுள் மாற்றாள், இன்னொரு நான், தன்மாற்று வடிவம், தன்முனைப்பு மாற்றீடு, மாற்றுத் தன்முனைப்பு, உயிர் நண்பர், ஆருயிர் நண்பர் முதலிய சொற்களைப் பரிந்துரைக்கலாம் என்றும், இச்சொல்லுக்கு விளக்கமாக உன்னைப்போல் ஒருவன், அந்நியன், மனிதனின் மறுபக்கம், உனக்குள் ஒருவன் ஆகிய பயன்பாடுகளும் புழக்கத்தில் உள்ளன என்றும் கூறியுள்ளார். என்.ஆர்.சத்தியமூர்த்தி, உற்ற நண்பன், நசையறு நண்பன், இன்னொரு முகம், மற்ற முகம், மாற்று முகம், உள்ளுறை முகம், பிறிதொரு முகம், மாற்று உள்ளீடு ஆகிய சொற்களைக் குறிப்பிடலாம் என்கிறார்.

முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் இச்சொல்லுக்கு ஆளின் மறுபடிவம், தன்மாற்று வடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர் என்னும் பொருள்களைத் தருகிறார். ஆனால், இச்சொல் தோன்றிய வரலாற்றையும், அது காலப்போக்கில் உளவியல் துறையின் தாக்கத்தால் பெற்றிருக்கும் மாற்றத்தையும், கருத்தில் கொண்டு பார்த்தால், இச்சொல் (1) நல்ல நண்பன், (2) ஒரு மனிதனின் மாற்று அல்லது இரண்டாம் வடிவம் ஆகிய இரு பொருள்களையும் தாண்டி, ஒரு மனிதனுக்குள் நன்மையின் பாற்பட்டு நிற்கும் புறத்தோற்றத்தின் பின்னால், தீமையின் பாற்பட்டு மறைந்து நிற்கும் மாற்றுத் தோற்றத்தைக் குறிக்கவும் பயன்படுவது தெரிகிறது.


ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியும் இச்சொல்லுக்கு (1) மிகவும் நெருக்கமான நம்பிக்கைக்குரிய நண்பன், (2) ஒரு மனிதனின் இரண்டாவது அல்லது மாற்று வடிவம் ஆகிய இரு பொருள்களைத் தருகிறது. அதனால்தான், பெருவாரியான வாசகர்கள் மாற்று என்ற சொல்லையும், வடிவு, உரு, பிரதி ஆகிய சொற்களையும் இணைத்து வழங்கியுள்ளனர். இந்த வகையில் பார்க்கும்போது, தன் மாற்றுரு, மாற்று முகம் ஆகிய இரு சொற்களுமே ஆல்டர் ஈகோ என்ற சொல்லின் பல பரிமாணங்களையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது. எனவே, இச்சொல்லுக்கு மிகப் பொருத்தமான இணைச்சொல் "தன் மாற்றுரு' எனலாம்.

நன்றி - தமிழ்மணி 16 06 2013

04/06/2015

கலகக் குரல் எழுப்பிய கவிஞர் கம்பதாசன் - சென்னிமலை தண்டபாணி

சந்திர சூரியர்கள் -என்றன்
தாளங்க ளாகுமடாலி
விந்தைக் கடலலைகள்- அதிலே
விம்மி எழும் ஒலியாம்
பளிச்சிடும் தாரகைகள்- என்றன்
பாடலின் வார்த்தைகளாம்
ஒளித்திரு வானவில்லே- என்றன்
உள்ளத் துணர்ச்சியடா''

என்ற கம்பீரத்தோடு கவிதை வானில் வலம் வந்தவர் கவிஞர் கம்பதாசன். 1916-ல் திண்டிவனத்துக்குப் பக்கத்தில் உலகாபுரத்தில் கொலுபொம்மைகள் செய்து விற்றுவந்த சுப்பராயர்- பாலம்மாளுக்கு மகனாகப் பிறந்து 1973-ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் தன் பாட்டுப் பயணத்தை நிறுத்திக்கொண்ட கவிஞரின் பள்ளிப்படிப்பு ஆறாம் வகுப்போடு நின்றுவிட்டது, சின்ன வயதிலேயே சென்னைக்கு சிறகு விரித்து வந்த கவிஞர்- பாரதி, பாரதிதாசனின் கருத்தாக்கங்களில் உருப்பெற்று காலப்போக்கில் தன் சிந்தனைத் திறத்தால் தனக்கொரு தனியிடத்தைக் கவியுலகில் கட்டிக்கொண்டவர். கவிஞரின் பல கவிதைகள் பாரதி, பாவேந்தர் கவிதைகளை அடியொற்றி எழுதப்பட்டதுதான் என்றாலும் 

    ""நீ சிரித்தால் என்ன
    நிலா சிரித்தால் என்ன?
    கான் சிரித்த பூக்கள்
    காலக் காற்றில் போச்சே! -காதல்
    கனவும் மறையலாச்சே!''

என்று புதிய திசையில் புறப்பட்டுக் குரலெழுப்பியவர். ஆண்டவனுக்கும் ஆள்பவர் களுக்கும் பல்லக்குத் தூக்கிக்கொண்டிருந்த பாட்டை எளியவர்களை நோக்கித் திருப்பிவிட்ட பெருமை பாரதிக்கும் பாவேந்தருக்குமே உரித்தது என்றாலும் கம்பதாசனும் பாவேந்தரைப்போலவே எளிய வாழ்நிலை மாந்தர்களைத் தன் கவிதைகளில்  உச்சத்தில் ஏற்றிவைத்து உள்ளம்மகிழ்ந்தவர். தொழிலாளி, செம்படவன், கொல்லன், பரவர், ரிக்ஷாக்காரன், படகோட்டி, நெல் அறுப்போன், நெல்குத்தும் பெண், மாடுமேய்க்கும்சிறுவன், வளையல்காரன், கூடைமுடைபவன், ஒட்டன், பிச்சைக்காரன், குலாலன், பஞ்சாலைத் தொழிலாளி என்று எவரைத்தான் எழுதாமல் விட்டார் கவிஞர்? காரணம் என்ன?  அவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் தான்.

""மண்பாண்டம் செய்யும் குயவனும் -புது
மனைகட்டித் தந்திடும் கொத்தனும்
எண்ணெய் விளைத்திடும் வாணியன் -சிகை
எழிலுறச் செய்திடும் நாவிதன்
புண்ணைத் துடைக்கும் மருத்துவன்- கல்வி
போதிக்கும் பள்ளியின் ஆசானும்
கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும்- அவர்
காணும் பசியே சமத்துவம்''

 என்ற தெளிவு அவருக்கு இருந்தது. காந்தியத்தின் பக்கம் கவிஞர் கண்பதித்திருந்தபோதும் அவர் சிந்தையில் செங்கொடி அசைந்தாடியது. சமத்துவம், இயற்கை, உழைப்பு, சோசலிஸம் என்று அவர் மனம் 

பல்வேறு வெளிகளில் பயணப்பட்டது. 
""சிற்றெறும்பு ஒன்றன்பின் ஒன்ற தாக -மலை
தினைக்காட்டில் வெய்யிலிலே செல்லல் போல
அற்றவரும் உற்றவரும் அணிவகுத்து -நொய்
அரிசிக்கு நிற்குநிலை பாராய் தம்பி''

என்று மனம்வருந்தி

""பன்றி வசிக்கும் நிலைபோல்- மிகு
 பஞ்சை மக்கள் குடும்பம்
 இன்றும் வதிகின்ற தெனிலோ- மனம்
 ஏக்கத் தீயால் எரியும்''

என்று தனக்குள் எரிந்து கொண்டேயிருந்தார். சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாத கவிதை என்ன கவிதை?  நமுத்துப்போன சொல்லடுக்குகளில் தங்களுக்குள் தாங்களே முணு முணுத்துக் கொண்டிருந்தால் அது கவிதையுமல்ல; அதைக் காகிதத்தில் கக்குபவன் கவியுமல்லன்.  நம் கவிஞரோ,

    ""தீண்டாத குப்பையைத் தீண்டியே -தேச
     சேவைசெய் தோட்டி குடிசையில்''

என்று சொல்லி,

    ""கண்ணன் இருந்தானாம் -திரௌபதி     
    கட்டத் துகில் தந்தானாம்
    உண்மையில் அவனிருந்தால் -எனக்கே
    ஓர் கந்தை தாரானோ?''

என்று ஏளனக் குரலில் வெப்ப வினாவை வீசுகிறார். 

அதுமட்டுமல்ல; “கெடுக உலகியற்றியான் என்று வள்ளுவப் பெருந்தகை கொந்தளித்தாரே அந்தக் 
கொந்தளிப்பு அடங்காமல் நம் கவிஞர் கம்பதாசனிடம்-

    ""உண்ண உணவது இல்லை என்று -ஏழை
    உயிரும் துடித்து  இறப்பதற்கோ? -புவி
    பண்ணிய குயப்பயலான தெய்வம் -இன்றே   
    பட்டொழிய வழிகண்டிடுவேன்''

என்று எதிரொலிக்கிறது ஒருபிடிச் சோற்றுக்கு வழியின்றி அலையும் அவலத்தைவிட, கொடுமையைவிட வேறென்ன அவலம், கொடுமை இருந்துவிட முடியும்? இதோ கவிஞரின் குரல் கேட்கிறது-

 ""கண்ணிளைப் பாறிடத் தூக்கமுண்டு- அற்பக்
 கழுதை யிளைப்பாறிடத் துறையுமுண்டு
 பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு -எங்கள்
    பசியிளைப் பாறிட உண்டோ இடம்?''

என்று கேட்டுவிட்டு அவரே சொல்கிறார்

 ""சொரிதவளை தங்கக் கேணியுண்டு -.சாவைக்
 சொல்லிடும் கூகைக்குப் பொந்துமுண்டு
 வறியவர் எஙகட்கு என்ன உண்டு? -உங்கள்
 வாயேச்சும் வயிற்றுப் பசியுமுண்டு!''  

என்பதோடு நிற்கவில்லை.

""தெருச்சுற்றும் நாய்களைச் சுட்டுத்தள்ளி -தோலைச்
சீராக்கி விற்றிடக் கற்றவரே!
அருளின்றேல் எங்களைச் சுட்டுத்தள்ளி- உற்ற
ஆவியைக் காற்றாய் அனுபவிப்பீர்!'' 

என்கிறார். ஏன் இப்படிப் பாடுகிறார் என்றால் அவர் கண்முன்னால் எப்போதும் எளிய மனிதர் களின் வாழ்க்கை எங்களுக்கு என்ன வழி என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது.

 ""வயிறாம் அடுப்பில் பசித்தீயுண்டு- விழி
 வழங்கும் நீர்த்துளி சமைப்பதற்கு
 உயிர்தளும்பும் உடல் பானையுண்டு- தங்கி
 உண்டிட சாவாம் விடுதியுண்டு

என்று அவர்களின் அவலக் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? கவிஞர்  முழங்குகிறார்..

 ""விவசாயி..! விழி! அச்சம்
 விடுவிடு!- ஏரின்
 தவச்சாலை நிலம்... வித்தை
 நடு!நடு!'' 

என்று.  ஆனால் என்ன நடக்கிறது?  அதையும் கவிஞரின் மொழியிலேயே கேட்போம்..

 ""உடல்பொருள் ஆவிய தெல்லாம்
 பண்ணைச் செல்வருக் கீந்து -ஆலை
 பட்ட கரும்பென வாகி
 கண்ணீர் உகுக்கையில் கண்டேன்- அய்யோ
 கலந்திருந்தது ரத்தம்! -அதில்
 கடவுள் துடித்திடக் கண்டேன்''

தன்னுடைய கலகக் குரலை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறார்.. எப்படித் தெரியுமா?

 ""நீங்கள் சிலபேர் நிலம்படைத்தோர்
 நாங்கள் பலபேர் ஏர்உழுவோர்
 நீங்கள் சிலபேர் விருந்துண்போர்
 நாங்கள் பலபேர் பசித்திருப்போர்!
 நீங்கள் சிலபேர் ரோஜாமலர்
 நாங்கள் பலபேர் கூர்முட்கள்
 நீங்கள் சிலபேர் தோன்றுபிறை
 நாங்கள் பலபேர் நட்சத்திரம்''  

என்று நெஞ்சுயர்த்திச் சொல்லி

 ""நாளுக்கு நூறுமுறை - அஞ்சி
 நாய்போல் வாழ்வதிலும்
 தோளுயர்த்திச் சாவின் -முத்தம்
 சூடுவோம் ஓர் முறையே.. 

என்று பிரகடனப்படுத்துகிறார். இவை மட்டுமல்ல; மணக்க மணக்க இயற்கையை தன் கவிதைகளில் பதியனிட்டு வைத்திருக்கிறார் கவிஞர்.  வசந்தம் வருவதை,

 ""மாமரம் செந்தளிர் நாவை நீட்டிட
 மலர்கள் பூத்து வியந்து நோக்கிட
 காமனின் சரம்போல் கோகிலம் கூவிட
 கந்தம் சுமந்து தென்றல் தள்ளாட
 வந்தது வசந்தம்! வந்தது வசந்தம்!
 இன்பக் காவியம் இயற்கை ஏட்டில்
 எழிலுறக் காணுது மலர் எழுத்தினால்'' 

என்று வசந்தத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து மலர்களைப் பொழியவைக்கிறார். விண்மீன் களைப்பற்றி எப்படி எழிலோவியம் தீட்டுகிறார் என்றால்-

  ""நீலமல ரொன்றில் பட்டாம்பூச்சி- பல
  நின்று மஞ்சள் நிறச்சிறகை மெள்ளக்
  கோலம் ஒளிர அசைப்பதுவோ?- இமை
  கொட்டும் குளிரொளித் தாரகைகள்
  வானெனும் பெரிய கம்பளமேல்- இருள் 
  வஞ்சியே சொக்கட்டான் தானாட
  மீனெனும் சோழி குலுக்கிக்கொட்டி- அதில்
  மிளிர்ந்திடும் எண்ணினைக் கூட்டுறாளோ?''

 கம்பதாசனின் சொற்சித்திரங்கள் படிக்கப்படிக்க பற்பல வண்ணங்களை நமக்குள் வாரியிறைப்பவை.  வானவில்லைக் கவிதையாக்கியவர்-

  ""பூமியாம் காதலி தன்னுடனே -வானம்
  பொங்கிக் கலவிகொள் போதினிலே
  தேமலர் வாய்மென்ற தாம்பூலத்தை -துப்பச்
  சித்திர வானவில் ஆனதடா!''   

என்று நமக்குள் ஒரு பெருஞ்சித்திரத்தை வரைந்துவைக்கிறார். இயற்கையை, மானுடத்தை உண்மையில் நாம் நேசிக்கிறோமா என்றால் எதிர்மறையான விடைதான் நமக்கு எப்போதும் கிடைக்கும்.  அதனால்தான் கவிஞர்-

 ""மூடிய வானக் கூடையின் கீழே
 கோழிக் குஞ்சென நாழிகை போக்கி
 வாழும் மானிட வாழ்வின் குருத்தே!'' 

என்று நம்மை விளித்து

 ""தரைமகள் அணிந்த தாவணிதான்
 சரிந்தே காற்றில் பறப்பதைப்போல்
 விரிவோடு வளைந்து செலும்பாதை
 விசித்திரம் காணக் காண இன்பம்.''

என்பதை விளக்குகிறார்.

 அவருடைய சொல்லாட்சியும் உவமைகளும் உருவகங்களும் அன்றைய காலத்தில் எத்தனையோ பேரை எழுதவைத்தது. 

 1941-ல் கவிஞரின் "கனவு' கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து "முதல்முத்தம்', "விதியின் விழிப்பு', 
"அருணோதயம்', "புதுக்குரல்', பாட்டுமுடியுமுன்னே, "தொழிலாளி', "கம்பதாசன் கவிதைகள்' என்று பல படைப்புகள் படையெடுத்தன. தன்னுடைய "பாட்டு முடியுமுன்னே' என்ற கவிதை நூலுக்கு 1952-ல் கவிஞர் எழுதிய முன்னுரை இப்படிப் போகிறது: "இந்தப் புத்தகத்தில் உள்ள பாட்டுகள் எனது உணர்ச்சி வேகத்தில், என் காதலி என்னைப் பிரிந்தபோது, ஒரே இரவில் எழுதிய பாட்டுகளாகும். அன்பை உணர்ந்த கலை உள்ளங்கள். குற்றங்களைப் பார்க்காமல் ஏற்றுக்கொண்டால் அதுவே எனது இதய நோய்க்கு மருந்தாகும்' என்று. கவிஞரின் காதல் காயம் அவரை எவ்வளவு ஆழமாக பாதித்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கவிஞர் பாவேந்தரின்  அடியொற்றி வளர்ந்தவர். அவரால் பாராட்டப்பட்டவர். இவருடைய கலையுள்ளம் பம்மல் சம்பந்தம் முதலியாரால் விரிந்தது. ஆரணி குப்புசாமி முதலியாருடன் ஏற்பட்ட நட்பால் எழுதத்தொடங்கிய கவிஞர், நடிகராகவும், பாடகராகவும், திரைப்பட நடிகராகவும் வலம்வந்தார். இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் திசைகளில் பட்டுத் தெறித்தபோது, கேட்ட உள்ளங்கள் எல்லாம் கிறுகிறுத்தன. 1945-ல் "சாளவாகனன்' படத்துக்குப் பாடலோடு கதை, வசனமும் எழுதினார். புகழ் அவருக்குப் பூமாலை சூட்டியது. மகாகவி வள்ளத்தோள் கவிஞருக்கு உறவானார். செல்வச்செழிப்போடும் புகழோடும் வளைய வந்த கவிஞரை வறுமை வட்டமிடத்தொடங்கியது.

""பாட்டு முடியுமுன்னே மீட்டிய வீணையை
பக்கம் வைத்தே நடந்தாய்''

என்று பாடியவர் தன் கவிதைகளை,

      ""சின்னஞ் சிறுகவிதை -மலர்மேல்  
      சிந்தும் பனித்துளிபோல்
      சின்னஞ் சிறுகவிதை- உழவன் 
      சிந்தும் விதைநெல்போல்
      சின்னஞ் சிறுகவிதை -அகலின்
      தீப ஒளியதுபோல்
      சின்னஞ் சிறுகவிதை -குழந்தை 
      செவ்விதழ் முத்தம்போல்''

என்று சொற்சித்திரமாக்கினார். கவிதை, திரைப் படப் பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், சிறுகதை கள் என்று நிறைய எழுதிக் குவித்த கவிஞரை வறுமை காவுகொண்டது. ஈரல் கோளாறும் காசநோயும் கவிஞரின் பயணத்தை முடித்துவைத்தன.

""காரிருள் நேரம்
காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே''

என்று கண்மூடிய கவிஞரை வழியனுப்ப வந்தவர்கள் மூன்றுபேர்தான் என்றசெய்தி எவ்வளவு வேதனைக்குரியது? என்றாலும்-

""சிலர் விழிப்பார் சிலர் துயில்வார் -நான்    
விழித்துக் கொண்டே துயில்கின்றேன்
சிலர் வாழ்வார் சிலர் சாவார் -நான்
வாழ்ந்து கொண்டே சாகின்றேன்''


என்று தொடர்ந்து வாழ்வோடு போராடிய கவிஞரின் கலகக் குரல் எழுப்பிய  கவிதைகள் எப்போதும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை கவிதை நெஞ்சங்கள் மறுக்க முடியுமா?

நன்றி - இனிய உதயம் 01 03 2014