03/06/2015

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 29

'லிட்மஸ்' என்பது கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள். லிட்மஸ்-தாள் என்பது வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். ஒரு கலவையின் (mixture) அமிலத்தன்மையையோ (acidity) அல்லது காரத்தன்மையையோ (alkaline) பரிசோதிக்கச் செய்யப்படும் சோதனை, லிட்மஸ் டெஸ்ட் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்குப் பயனாகும் ஒரு காரணி அல்லது கூறு (indicator or factor) என்றும் இச்சொல்லுக்கு பொருள் கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டு ரசவாதி அர்னால்டு த வில்லா நோவா என்பவர்தான் கற்பாசியிலிருந்து வரும் லிட்மûஸ முதன் முதலில் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பயன்படுத்தியதாகவும், அதன் பின்னர் விஞ்ஞானிகள் கற்பாசியிலிருந்து உருவாக்கப்பட்ட கரிய, செரிமானமுடைய கூட்டுப்பொருள் அமிலங்களில் சிவப்பாகவும், காரங்களில் நீலமாகவும் மாறுவதைக் கண்டுபிடித்ததாகவும், பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் நீலவண்ணச் சாய (dye) நிறமாற்றத்திற்கு அது பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. அமிலத் தன்மை மிகும்போது நீலவண்ணத் தாள் சிவப்பாகவும், காரத்தன்மை மிகும்போது சிவப்புவண்ணத் தாள் நீலமாகவும் மாறுவதை வைத்து வேதியியலில் PH குறியீடு கண்டுபிடிப்பதற்கு இச்சோதனை பயன்பட்டது.

மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலியில், லிட்மஸ் என்ற சொல்லுக்கு, ஒரு முடிவுக்கு வரப் பயன்படும் ஒரு காரணி அல்லது கூறு என்று பொருள் உள்ளது. அதிலிருந்து இந்த லிட்மஸ் டெஸ்ட் என்ற சொல் முதன்முதலில் அறிவியலில் பயன்பாட்டுக்கு வந்தாலும், அதன்பிறகு ஆறு நூற்றாண்டுகளைத் தாண்டி இந்தச் சொல் பல விஷயங்களுக்கு உருவகமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, ஒரு கொள்கையையோ ஏற்றுக்கொள்ளத் தக்கதா என்று சோதிப்பதற்குப் பயன்படும் ஒரே ஒரு காரணியை 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் லிட்மஸ் டெஸ்ட் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்படுபவர்களுக்கு நடத்தப்படும் பொது விவாதங்களில் (அல்லது நேர்வில்) அவர்களுடைய தகுதியை அல்லது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் தன்மையைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் சில முக்கியமான கேள்விகள் தற்போது லிட்மஸ் டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக கருச்சிதைவைப் பற்றிய ஒருவருடைய கொள்கை, ஓரினத் திருமணங்களைப் பற்றிய ஒருவருடைய கொள்கை இவையெல்லாம் லிட்மஸ் டெஸ்டுகளாக நீதிபதிகளின் நியமனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சமீப காலமாக இச்சோதனையைப் பற்றிய விமர்சனங்களும் எழத்தொடங்கியுள்ளன.

பேராசிரியர் யூஜின் வோலோக் 2005-ஆம் ஆண்டில் எழுதிய "வோலோக் சதித்திட்டம்' என்ற கட்டுரையில் லிட்மஸ் சோதனையில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் பெற்ற ஒருவர் தனது நியமனத்துக்குப் பின்னால் தனது தீர்ப்புக்களில் வேறுவிதமாக முடிவெடுத்தால் அது சூழ்ச்சி என்று கருதப்படுமா அல்லது மனமாற்றம் என்று கருதப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

சமீப காலமாக மேலாண்மையியலில் தகுதி வாய்ந்தவர்களை மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைக்குத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி கற்பாசியிலிருந்து தோன்றி, வேதியியலுக்கு ரசாயன மாற்றம் பெற்றுப் பின்னர் அரசியலுக்குப் போய் அதிலிருந்து மேலாண்மையியலுக்கு வந்து நின்றிருக்கும் இச்சொல்லுக்கு, வாசகர்கள் எந்த இணைச் சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முனைவர் கோ.இரமேஷ் இச்சொல்லுக்கு நீலச்சாய சோதனை, அமில-காரத் தன்மை ஆய்வு, உண்மைபலம், மதிப்பு அறியும் ஆய்வு ஆகிய சொற்களைக் குறிப்பிட்டுள்ளார்.

புலவர் சி.செந்தமிழ்ச்சேய், வேதியியல் நெறியில் திரிநிற தேர்வு, நிறந்திரி தேர்வு, கருத்தறி தேர்வு, உள்ளறி தேர்வு, நிலையறி தேர்வு ஆகிய பொருள்கள் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்குரைஞர் கோ.மன்றவாணன், குணத்தேர்வு, பண்புத்தேர்வு, தன்மைத்தேர்வு, பண்பாய்வு, பண்பறி தேர்வு, பண்பறிச் சோதனை ஆகிய சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். 

என்.ஆர்.ஸத்யமூர்த்தி, இச் சொற்றொடரின் நேரடிப் பொருள் அமிலமறிச் சோதனை என்றும், அச்சொல் மனிதர்களின் ஆற்றல்களையும், பண்புகளையும் பன்முகப் பரிமாணங்களையும் ஒரே ஒரு கூறை அடிப்படையாகக்கொண்டு மதிப்பீடு செய்யப் பயன்படுத்தப்படும்போது அதற்கு அணிசார் பொருளாக அடிப்படைத் தகுதி தேர்வு, உரைசால் தேர்வு ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

வெ.ஆனந்த கிருஷ்ணன், மரம், செடி, மண் ஆகியவற்றில் பூசணம் பூத்துள்ள fungus அமிலமா? காரமா? என்பதைக் கண்டறிய தொன்றுதொட்டுப் பயன்படும் சோதனை லிட்மஸ்தாள் ஆய்வு அல்லது நிறத்தாள் ஆய்வு என்று அறியப்படுவதால், நிறத்தாள் ஆய்வு அல்லது பூஞ்சுத்தாள் ஆய்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வாசகர்கள் எழுதிய கடிதங்களையும், இந்தச் சொற்றொடர் தோன்றிய வரலாற்றையும், அது தற்போது பெற்றிருக்கும் நிறமாற்றத்தையும் (உருமாற்றம்) கூர்ந்து ஆய்ந்தால், இச்சொற்றொடர் ஒரு பொருள் அல்லது ஒருவரது கருத்தியல் கோட்பாட்டின் பலத்தைப் பரிசோதிக்கும் ஒரு சோதனையைக் குறிப்பதாகப் பயன்படுத்தப்படுவது தெரிகிறது. எனவே, நிலையறி தேர்வு, பண்பறி தேர்வு, உரைசால் தேர்வு ஆகிய மூன்று சொற்றொடர்களும் பொருந்தி வருவதாகத் தெரிகிறது. ஆனால், இம்மூன்று சொற்றொடர்களுக்குள்ளும் நிலையறி தேர்வு என்ற சொற்றொடர் ஒரு பொருள், ஒரு நபர், ஒரு கொள்கை, ஒரு மனநிலை ஆகிய பலவற்றுக்கும் பொருந்துவதாகத் தோன்றுகிறது. மேலும், அச்சொற்றொடர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தோன்றும் நிலைப்பாட்டை அதன் மாறும் தன்மையோடு சுட்டிக்காட்டுவதாகத் தெரிவதால், லிட்மஸ் டெஸ்ட் என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் நிலையறி தேர்வு என்பதே.


நன்றி - தமிழ்மணி 26 05 2013

கருத்துகள் இல்லை: