28/10/2010

இல்மொழி - எஸ்.ராமகிருஷ்ணன்

சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட வீடு.  வீட்டில் அவர்களையும் சேர்த்து இருபத்தியொரு பேர் இருந்தார்கள். இரண்டு அண்ணன், அண்ணி, ஆச்சி, சித்தி சித்தப்பா என்று யாவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதற்கிருந்த ஒரே காரணம் அவர்களது கோவில்கடைகள்.


கோவிலின் மண்டபத்தில் அவர்களுக்கு மூன்று கடைகளிருந்தன. ஒன்று படக்கடை , காலண்டர். சுவாமி படங்கள், குங்குமம் விபூதி விற்பது. இன்னொன்று வளையல் கடை மூன்றாவது இருந்த கடை கல்கண்டுபால் விற்பது. இதை மூன்றையும் நிர்வாகம் செய்வதற்காக ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதற்காகவே அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.

சுப்பையாவுக்கு தாழையூத்தில் பெண் எடுத்தார்கள். கல்யாணம் ஆனது என்ற பெயர் தானே தவிர அவர்களால் பெண்டாட்டியோடு தனித்திருந்து பேச நேரம் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை பேசிக் கொண்டாலும் அடுத்தவர் காதிற்கு கேட்காமல் பேசுவது சாத்தியமேயில்லை.

சாப்பாடு பரிமாறும் போது வேணாம் போதும் என்று சொல்வது தான் அவர் உபயோகித்த அதிகமான வார்த்தைகள். சுப்பையா தான் படக்கடையை கவனித்து வந்தார். உண்மையில் அதில் கவனிப்பதற்கு என்று தனியே எதுவுமில்லை. சாமிக்கு பயந்தவர்கள் இருக்கும் வரை உறுதியான வியாபாரம். பொம்பளைகள் இருக்கும் வரை குங்குமம் மஞ்சள் விற்பனை. பிறகு என்ன?

கடையை திறந்து வைத்தவுடன் அவர் தினமணியை பிரித்து வைத்து படிக்க ஆரம்பித்தால் சாப்பிட வீடு வரும்போது தான் முடிப்பார். அப்படி ஒரு நாள் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது பாலத்தின் அருகில் தான் அந்த யோசனை உண்டானது.


இந்த சள்ளையை எத்தனை நாள் கொண்டு கழிக்கிறது. பேசாம நாமளா ஒரு பாஷையை உண்டாக்கினா என்ன? யோசித்தவுடன் பளிச்சென்றிருந்தது. வீடு வரும்வரை அந்த பாஷையை பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அன்றிரவு மனைவியிடம் அந்த யோசனைய சொன்னார். அவள் உங்க இஷ்டம் நாலும் யோசிச்சி செய்யுங்க என்றாள். இது வழக்கமாக அவர் எதை பற்றி கேட்கும் போது அவள் சொல்வது தான் என்பதால் மறுநாள் கடைக்கு போகும்வழியில்  கவனமாக சைக்கிளை லாலாகடை அருகில் நிறுத்தி செந்தில்விலாசில் எண்பது பக்க நோட்டு ஒன்றை வாங்கி கொண்டார்.

கடையில் போய் உட்கார்ந்தவுடன் கர்மசிரத்தையாக தான் உருவாக்க போகின்ற மொழியை பற்றி யோசிக்க துவங்கினார். முதலில் அதற்கு என்ன பேர் வைப்பது என்று யோசனை எழுந்தது. சாமி பெயரிலே இருக்கட்டும் என்று நெல்பா என்று அந்த பாஷைக்கு பெயரிட்டார்.

அதற்கு எழுத்து வடிவம் வேண்டுமே என்று முடிவு செய்து அவராக அ ஆவன்னா போல எழுத்தை உருவாக்கினார். அது போலவே அதற்கு என்று ஒலி குறிப்பு வேண்டும் என்று உச்சரிப்பும் உருவாக்கினார். கடையில் இருந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொரு பொருளுக்கும் அவர் நெல்பாவில் எப்படி வரும் என்று நோட்டில் எழுத துவங்கினார். தினசரி அவர் கணக்கு நோட்டு போட்டு எழுதி வருவதை கண்ட மணியம்பிள்ளை சுப்பையாவின் தகப்பனாரிடம் உம்மபிள்ளை ரொம்ப கணக்காக வியாபாரம் பண்றான் என்று புகழ்ந்து தள்ளினார்.

ஒரு மாசத்திற்கு நோட்டு நிரம்பி போகும் அளவு வார்த்தைகள் அதிகமாகின. அந்த நோட்டை பர்வதத்திடம் தந்து மனப்பாடம் செய்துவிடும்படியாக சொன்னார். அவளுக்கு இந்த மனுசன் வேற கோட்டி புடிச்சி அலையுறானே என்று எரிச்சலாக வந்தது. ஆனாலும் வழியில்லாமல் அந்த பாஷையை பழகிவிட்டாள்.

அதை சோதித்து பார்ப்பதற்காக சாப்பாடும் போடும்போது நெல்பா பாஷையில் அவர் கேட்பார். அவளும் நெல்பாவில் பேசுவாள். இரவில் படுக்கையில் கொஞ்சுவது கூட நெல்பாவிற்கு மாறிப்போனது.  அதன்பிறகு அவர் பெரிய நோட்டாக வாங்கி நெல்பாவிற்கான சொற்களை சேகரிக்க துவங்கினார். ஒரு வருசத்திற்குள் அந்த பாஷை அவர்கள் ரெண்டு பேருக்கும் அத்துபடியாகியது.

வீட்டில் உள்ளவர்கள் மீது ஆத்திரமானால் கூட வெளிப்படையாக நெல்பாவில் பர்வதம் திட்டுவாள். யாருக்கும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது. சுப்பையா மிகுந்த சந்தோஷமானார். உலகில் தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த மொழி இருக்கிறது என்பது பெரிய விஷயமில்லையா.


ஒரு நாள் கடை திறப்பதற்காக வந்த சுப்பையாவின் அப்பா கடையில் வைத்திருந்த நெல்பா நோட்டுகளை புரட்டி பார்த்துவிட்டு இந்த எழவை கூட்டுறதுக்காகவா கடைக்கு உன்னை வச்சிருந்தேன் என்று கோவித்து கொண்டு எல்லா நோட்டுகளையும் கடையின் முன்னால் போட்டு எரித்ததோடு எல்லோரிடமும் சொல்லியும் காட்டினார். சுப்பையாவிற்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் கடையை நம்பி பிழைப்பதால் மனதிற்குள்ளாக நெல்பாவில் திட்டிக் கொண்டார்.

இது நடந்த இரண்டாம் வருசம் சுப்பைவின் அப்பா இறந்து போகவே கடை பாகம் பிரிக்கபட்டது. சண்டை போட்டு படக்கடையை தன்வசமாக்கி கொண்டு சாந்தி நகரில் வேறு வீடு பார்த்து குடிபோய்விட்டார் சுப்பையா.

வீடு மாறியதும் செய்த முதல்வேலை இனிமேல் வீட்டில் நெல்மாவில் தான் பேச வேண்டும்  என்றார். அதன்பிறகு அவர் மட்டுமில்லாது அவரது பிள்ளைகள், பெண்கள் யாவரும் அதை கற்றுக் கொண்டார்கள். எப்போதாவது வீட்டில் சண்டை நடக்கும் போது அவர்கள் நெல்மாவில் கத்தி சண்டையிடுவார்கள். அருகாமை வீட்டில் ஒருவருக்கும் ஒன்றுமே புரியாது.


ஒரு முறை பங்குனி உத்திரத்திற்கு திருசெந்துர் போவதற்கு பர்வதம் கிளம்பிய போது சுப்பையா கடையில் வேலையிருப்பதாக போக கூடாது என்று தடுத்தவுடன் அவள் கோபத்தில் மடமடவென நெல்மாவில் கத்தினாள். ஆனால் அவள் பேசியதில் பாதி சொற்கள் என்ன வென்று அவர் அறிந்தேயிருக்கவில்லை அவளிடம் எப்படி போய் அர்த்தம் கேட்பது என்று யோசனையும் வலியுமாக கடைக்கு போனார். ஒரு உண்மை அவருக்கு புரிந்திருந்தது. அவள் தனக்காக மட்டும் அந்த மொழியில் சிறப்பு சொற்கள் நிறைய உருவாக்கி கொண்டுவிட்டாள் . இதை வளர விட்டால் தனக்கு தான் ஆபத்தாக முடியும் என்று நினைத்தார்.

அன்றிரவே வீட்டில் யாரும் இனிமேல் நெல்மாவில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்கு அவர்களுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் சுப்பையாவின் கோபத்திற்கு பயந்து நெல்மாவை மறந்து போனார்கள். நல்லவேளை பிரச்சனை முடிந்தது என்று தன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மதியம் தலைவலி அதிகமாகி அவர் வீடு திரும்பிய நேரம் பர்வதமும் அவரது மகனும் ஏதோவொரு பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று ஒருவரியும் புரியவில்லை, அவர்கள் சரளமாக பேசிக் கொண்டார்கள். சுப்பையா தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே குடிக்க தண்ணீர் கேட்டார். உள்ளே மகள் சிரிப்போடு அதே புரியாத பாஷையில் தன் அண்ணனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சுப்பையாவிற்கு எரிச்சலாக வந்தது.

அந்த நிமிசம் அவர் தன் அப்பாவை நினைத்து கொண்டார். புத்தி கெட்டு போயி தெரிந்த பாஷையை என்ன எழவுக்கு மாத்தினோம் என்று அவர் மீதே அவருக்கு கோபம் கோபமாக வந்தது. ஆனால் அதை எந்த பாஷையில் சொல்வது என்று புரியாமல் திகைத்துபோயிருந்தார்.

**

 

பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள் - எஸ்.ராமகிருஷ்ணன்

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ஆர்யமாலா என்ற பணிப்பெண் மட்டுமே உடனிருந்தார். பி. விஜயலட்சுமிக்கு அளிக்கபட்ட சிகிட்சை பற்றி அவளது பெற்றோருக்கு எதுவும் தெரியாது. அவளது கணவரான வைகுந்தராமன் மட்டும் மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமையில்  அவளை பார்ப்பதற்கு அனுமதிக்கபட்டிருந்தார்; ஆனால் அவர் பெரும்பாலும் வருவதேயில்லை. மருத்துவசெலவிற்கான தொகை மட்டும் மருத்துவமனை பெயருக்கே காசோலையாக அனுப்பபட்டு வந்தது.

சிகிட்சைக்கு கொண்டு வரப்பட்ட நாள்:

ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலையில் பி. விஜயலட்சுமி 21.4. 2003 அன்று பின்னிரவில் நாலு மணிக்கு  உள்நோயாளியாக அனுமதிக்கபட்டாள். அன்று அவள் டி.என்.3792 என்ற டாக்சியில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருந்தாள். அவள் வந்த இரவு கொச்சினை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துகொண்டிருந்தால் காரின் ஒட்டுனர் வழி தவறி நெடுங்காடு என்ற இடத்திற்கு சென்று சுற்றியலைந்து விசாரித்த போது அது போல ராமவர்மா வைத்தியசாலை இங்கே இல்லை என்றும் அது அடுத்த ஊரான சர்ப்பக்காவில் இருக்க கூடும் என்றார்கள்.

வயல்வெளிகளில் கார் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த போது பின்சீட்டில் சுருண்டுகிடந்தாள் பி. விஜயலட்சுமி. அவளது காலில் லேசாக குளிர்காற்று உரசிக்கொண்டிருந்தது. தலைமயிர் சுற்றிய பித்தளை வளையம் ஒன்று அவளது இடதுகாலை கவ்விபிடித்தபடியிருந்தது. பித்தவெடிப்பேறிய அவளது பாதங்களை மடக்கிவிட்டு அருகில் உட்கார்ந்திருந்தாள் பரிமளம். யாரோ கதவை தட்டுவது போல மழை காரின் மீது தன் விரல்களால் தட்டியபடியே வந்தது. அவளை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் மட்டுமே வந்திருந்தார்.அவரும் சக்கரைநோயாளி என்பதால் உறக்கத்தை கட்டுப்படுத்துவது இயலாததாக இருந்தது. கார் புனலுர் தாண்டும் போதே உறங்கியிருந்தார்.

காரை ஒட்டிவந்த சுப்பு மட்டும் எப்போதாவது பின்சீட்டில் இருந்த விஜயலட்சுமியை பார்த்து கொண்டே வந்தான். ஒரு சாயலில் அவன் குடியிருந்த லயன் வீட்டில் இருந்த கணபதி புலவரின் மகளை போலவே அவள் இருந்தாள். பி. விஜயலட்சுமியின் தோற்றம் உருக்குலைந்திருந்தது.அவளது தலைமயிர் எண்ணெய் வைக்கபடாமல் சிடுக்கேறியிருந்தது. நெற்றி ஏறிப்போய் கழுத்து எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருந்தன. அவளது வலதுகையில் பெரிய காயம் ஒன்று சீல்வடிந்து கொண்டிருந்தது. தண்ணீருக்குள் விழுந்த பஞ்சை போல அவள் உடம்பு சுருங்கிப்போயிருந்தது. அவளது கண்கள் மஞ்சளேறியிருந்தன. இமைகள் பருத்து வீங்கி அவள் பல நாட்களாக உறங்காமலேயிருக்கிறாள் என்பது பார்த்த நிமிசத்திலே தெரிந்தது.

சர்ப்பக்காவில் உள்ள வைத்தியசாலையை தேடி டாக்சியில் சென்று சேர்ந்தபோது வெளிவாசலை மூடியிருந்தார்கள். மழைக்குள்ளாகவும் ஏதோவொரு மூலிகை செடியின் வாசனை கமந்து கொண்டிருந்தது. நோயாளியை உள்ளே கூட்டிக் கொண்டு போய்விடலாமா என தெரியாமல் டிரைவர் வெளியில் இருந்தபடியே ஹார்ன் அடித்து கொண்டிருந்தான். யாரும் வரவில்லை. மழைசப்தத்தில் கேட்காமலிருக்க கூடும் போலிருந்தது. பாதி உறக்கத்தில் இருந்த வரதராஜ பெருமாள் ஹார்ன் சப்தத்தில் விழித்து கொண்டு உள்ளே போய் கேட்டுவரச் சொன்னார்

டிரைவர் மழைக்குள் இறங்கி ஒடத்துவங்கிய போது பி. விஜயலட்சுமி மழைக்குள் அசைந்தபடியே இருக்கும் ஒரு கேந்திபூச்செடியை பார்த்து கொண்டேயிருந்தாள். மழையின் வேகத்தை தாங்கமுடியாமல் கேந்திச்செடி வளைந்து கொண்டிருந்தது. டிரைவர் உள்ளே ஒடியபோது ஒரேயொரு எண்ணெய் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. அவன் பலத்த குரலில் சப்தமிட்டான். உள்ளிருந்து அறுபது வயதை கடந்த ஒரு ஆள் வெறும்மேலோடு வெளியே வந்து நின்று யார் வேணும் என்று மலையாளத்தில் கேட்டார். சங்கரன்கோவிலில் இருந்து தான் வருவதாகவும் நோயாளியை கொண்டு வந்திருப்பதாகவும் சொன்னான். ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டதற்கு அதைபற்றி தனக்கு தெரியாது என்றும் நோயாளி ஒரு பெண் என்றும் சொன்னான். அந்த ஆள் உள்ளேயிருந்த லைட்டை போட்டு பெரிய பேரேடு ஒன்றை புரட்டி பார்த்து கொண்டிருந்தபோது அறையின் மூலையில் வைக்கபட்டிருந்த பாடம் பண்ணப்பட்டிருந்த முதலை ஒன்றை கண்டான். அறையில் ஆள் உயர விளக்கு ஒன்று இருந்தது. சுவரில் நடனமாடும் பெண்ணின்  சித்திரம் ஒன்று தீட்டப்பட்டிருந்தது.

மருத்துவமனை ஆள் பொண்ணுக்கு என்ன கோளாறு என்று கேட்டான். டிரைவர் தயங்கியபடியே சித்தபிரம்மை என்று சொன்னதும் அதுக்கு வைத்தியசாலை ஆள் ஆனங்குளம் வைத்தியசாலைக்கு இல்லே நீங்கள் போகணும் என்றான். டிரைவர் அது எங்கேயிருக்கிறது என்று கேட்டதும் நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள். இப்படியே நாற்பது கிலோ மீட்டர் கிழக்காக போனால் மெயின்ரோடு வந்து சேரும். அங்கிருந்து மேற்காக பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தான்.

டிரைவர் மழைக்குள்ளாகவே வாசலுக்கு வந்தபோது காரின் பின்கதவு திறந்து கிடந்தது. பின்சீட்டில் இருந்த பரிமளம் கிழே இறங்கி போய் ஒரு செடியின் மறைவில் குத்துகாலிட்டு உட்கார்ந்து மூத்திரம் பெய்து கொண்டிருந்தாள். அவளது முதுகில் மழை பெய்து கொண்டிருந்தது. பி. விஜயலட்சுமி அந்த கேந்தி செடியை விட்டு கண்ணை விலக்கவேயில்லை. தலையில் விழுந்த மழைத்துளியை தட்டிவிட்டபடியே பரிமளம் காரில் ஏறிக் கொண்டு என்னப்பா ஆச்சு என்றாள். அந்த ஆஸ்பத்திரி வேற எங்கயோ இருக்காம் என்றபடியே காரை எடுத்தான் டிரைவர்.

பரிமளம் தனது பருத்த கையால் பி. விஜயலட்சுமியின் தலையில் ஒரு அடி கொடுத்தபடியே இந்த எழவை கட்டி இழுக்குறத்துக்குள்ளே என் தாலி அறுந்து போகுது என்றாள். பி. விஜயலட்சுமியின் கவனம் அப்போதும் அந்த செடியின் மீதே இருந்தது. மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க துவங்கியிருந்தது.

மிக மெதுவாக கார் ஊர்ந்து சென்றது. ஒரு செக்போஸ்டில் கார் நின்றபோது வரதராஜ பெருமாள் தனக்கு பசிக்கிறது என்றார். டாக்சி டிரைவரும் அவரும் இறங்கி சாலையோர உணவகத்தில் பிஸ்கட் சாப்பிட்டார்கள். ஆனங்குளத்தை தேடி அவர்கள் போய் சேர்ந்த போது மழை பெய்து முடித்திருந்தது.

வைத்தியசாலை நூற்று நாற்பது ஏக்கர் பரப்பில் மிகப்பெரியதாக இருந்தது. நுழைவாயிலில் யானை சிலை ஒன்றிருந்தது. இரவெல்லாம் பெய்த மழையில் நனைந்து அந்த சிலை நிஜ யானையை போன்றேயிருந்தது. தாழ்வான ஒடு வேய்ந்த கட்டிடங்கள். சிறியதும் பெரியதுமான குடியிருப்புகள். செதுக்கி வளர்க்கட்டிருந்த பெரிய புல்தரை, வளைந்து செல்லும் மரங்கள் அடர்ந்த சாலைகள் என அது ஒரு தனி உலகமாக இருந்தது. கார் உள்ளே சென்ற போது இரவு பணியாளர்கள் விழித்திருந்தனர். ஏதோ தைல எண்ணெய் காய்ச்சிக் கொண்டிருப்பது போல மணம் கமழ்ந்து வந்து கொண்டிருந்தது. வரதராஜ பெருமாள் அவர்கள் நீட்டிய பேரேடுகளில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார்.

முண்டு அணிந்த ஒரு வயதான பெண் காரின் கதவை திறந்து பி. விஜயலட்சுமியை எழுப்பிய போது அவள் அங்கிருந்த கல்வாழையின் இலை அசைவதை  பார்க்க துவங்கியிருந்தாள். முண்டு அணிந்தவள் பரிமளத்திடம் நீங்கள் அவளது அம்மாவா என்று கேட்டாள். அதற்கு பரிமளம் எரிச்சலுடன் அந்த நாய்கள் தன்வேலை முடிச்சிருச்சினு எங்க தலையில கட்டிட்டு போயிட்டாங்க. நாங்க தான் உசிரை கொடுக்கிறோம் என எரிச்சல் அடைந்தபடியே நான் இவ அத்தை என்றாள். முண்டு அணிந்தவள் விஜியை கைகொடுத்து துக்கிய போது ஒரு பள்ளி சிறுமியை துக்குவது போலவே இருந்தது.ஒரே ஜாக்கெட்டை பலமாதமாக அணிந்திருந்த காரணத்தால் அவளது முதுகில் பட்டை போல தடம் விழுந்திருந்தது.பி. விஜயலெட்சுமியின் பொருட்கள் என்று ஒரு பழைய வயர்கூடையில் அடைத்து எடுத்து வரப்பட்டிருந்த பொருட்களை பரிமளம் தன் கையில் எடுத்து கொண்டாள்.

முண்டு அணிந்தவள் மழை தண்ணீர் தேங்கியிருந்த பாதையில் விஜயலட்சுமியை தன்னோடு சாய்த்து கொண்டு நடந்த போது விஜயலட்சுமிக்கு நடக்கவே கால் கூசுவதை உணர்ந்தாள். உடம்பில் பிசுபிசுப்பும் துர்நாற்றமும் வந்து கொண்டிருந்தது. கிழக்கு பார்த்த ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே விஜயலட்சுமியை படுக்கையில் உட்கார வைத்த போது பரிமளம் பெருமூச்சுவிட்டபடியே கதவை மூட வேண்டாம் அவ துங்கவே மாட்டா . நிலை குத்தினது மாதிரி உட்கார்ந்தே இருப்பா. என்றாள். முண்டு அணிந்தவள் தலையசைத்தபடியே அறையின் பூட்டை மேஜையின் மீது வைத்து விட்டு வெளியேறினாள்.

வரதராஜ பெருமாள் அந்த அறைக்கு வந்து சேர்ந்தபோது விஜயலட்சுமி சுவரை பார்த்தபடியே ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பரிமளம் இரவிலே கிளம்பி போய்விடுவதா இல்லை காலையில் புறப்படலாமா என்று கேட்டாள். இருவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டேயிருந்தார்கள். முன்பு வந்த அதே முண்டு அணிந்த பெண் இப்போது ஒரு பிளாஸ்டிக் வாளியும் கொசுவர்த்தி சுருள் ஒன்றும் கொண்டு வந்து வைத்தபடியே ஆம்பளைகள் இங்கே தங்குவதற்கு அனுமதியில்லை என்றாள். வரதராஜ பெருமாள் தாங்கள் இரவிலே கிளம்பவுதாக சொல்லியபடியே இரண்டு நாட்களுக்குள் அவளுக்கு துணையாக யாராவது ஒரு ஆளை ஊரிலிருந்து அனுப்பி வைப்பதாக சொன்னார். முண்டு கட்டியவள் அதைக் கேட்டு கொண்டதாகவே தெரியவில்லை. வரத ராஜ பெருமாள் கிளம்பும் போது அந்த பணிப்பெண்ணிடம் இவளுக்கு பச்சைதண்ணி ஆகாது.. குளிக்க வச்சா கத்துவா என்று சொல்லியபடியே டாக்சியை நோக்கி நடந்தார்.

மழைக்கு பிந்திய இரவு என்பதால் வானில் நட்சத்திரங்களே இல்லை. டிரைவர் அந்த வைத்தியசாலையை விட்டு வெளியே வந்த போது வரதராஜ பெருமாள் இதுக்கு மாசம் ரெண்டாயிரம் ஆகும். இந்த சனியனை கட்டிகிட்டு வந்ததுக்கு என்னவெல்லாம் தொரட்டை அடைய வேண்டியதிருக்கு பாரு என்றார். பரிமளம் பின்சீட்டில் தனி ஆளாக சாய்ந்து படுத்தபடியே மூளைக்கோளாறு ரொம்ப நாளாவே இருந்திருக்கணும். நம்ம தலையில கெட்டி வச்சிட்டாங்க இனிமே இவ செத்தாலும் பிழைச்சாலும் நமக்கென்ன விடு என்றாள்.

கார் பிரதான சாலைக்கு வந்த போது விடிய துவங்கியிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திரும்பவும் பசிக்க துவங்கியிருந்தது. அவர் ஏதாவது சாப்பிடவேண்டும் என்று ஹோட்டலில் நிறுத்த சொன்னார். டிரைவர் ஆற்று பாலத்தை கடந்து போன போது அப்படியே வண்டியை நிறுத்திவிட்டு குளித்து ஒரு துக்கம் போடலாம் என்று நினைத்தான். காரில் இருந்த இரண்டு பேரும் உறங்கியிருந்தார்கள். சாலை ஈரத்தில் நனைந்து கிடந்தது. ஏனோ அவனுக்கு பி. விஜயலட்சுமியை பற்றிய வருத்தம் உண்டானது. அவன் பாதி துக்கமும் மனதில் வலியுமாக வண்டியை சங்கரன்கோவிலை நோக்கி ஒட்டி போய் கொண்டிருந்தான்

நோய் குறிகள்

பி. விஜயலட்சுமி கடந்த ஒரு வருட காலமாக உளவியல் மருத்துவர் டாக்டர் செல்வமகேந்திரனிடம் சிகிட்சை பெற்றிருக்கிறாள். அவரது மருத்துவகுறிப்பின்படி அவளுக்கு ஏற்பட்டிருப்பது அதீத பயம் மற்றும் மனசிதைவு. இதற்கான காரணங்களாக அவர் கருதுபவை
1) விஜயலட்சுமி திருமணம் நடந்த நாளில் இருந்து ஒரு மாதகாலம் பகலிரவு என பேதமில்லாமல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டிருக்கிறாள். அதனால் அவளது பால்உறுப்பு அழற்சி அடைந்திருக்கின்றது. அத்தோடு அவளது உடலில் பதினோரு இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்பல்லில் ஒன்று பாதி உடைபட்டிருக்கிறது
2) விஜயலட்சுமி கடந்த 11.7.2002 முதல் தொடர்ந்து நாற்பத்திரெண்டு நாட்கள் துங்காமல்  இருந்திருக்கிறாள். ஆரம்ப நாட்களில் அவள் படுக்கையில் கிடந்தபடியே உறக்கம் வராமல் புரண்டு படுத்திருக்கிறாள். அதன்பிறகு அவள் படுத்துக்கொள்வதேயில்லை. சுவர் ஒரமாகவே இரவு முழுவதும் நின்று கொண்டேயிருந்திருக்கிறாள். யாராவது அவளை அழுத்தி உட்கார வைத்தால் கூட தானா எழுந்து நின்று கொண்டு விட்டிருக்கிறாள்.  இதற்காக அரசு பொதுமருத்துவனையில் மூன்று நாட்கள் சிகிட்சை அளிக்கபட்டபிறகு அவள் எழுந்து நிற்பதில்லை. மாறாக கர்ப்பசிசுவை போல கைகால்களை ஒடுக்கி கொண்டு உட்காந்திருந்திருக்கிறாள்
3) 2002ம் வருட ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை அவளை திருவந்தியம் கோவிலுக்கு அழைத்து போயிருந்த போது அவள் இடைவிடாமல் மூத்திரம் பெய்தபடியே இருந்திருக்கிறாள். அதனால் ஆத்திரமாகி அவளை அடித்ததில் இடதுதொடையில் பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது
4) பி. விஜயலெட்சுமி திருமணமாகி வந்த இரண்டு மாதங்களில் நாலைந்து முறை  கணவனோடு சண்டையிட்டிருக்கிறாள். ஒவ்வொரு சண்டையின் முடிவிலும் அவளை கணவனோ அல்லது அவனது வீட்டு ஆட்களோ தாக்கியிருக்கிறார்கள். ஒரு முறை அவளை வீட்டில் உள்ள ஒரு ஆண் ( யார் என்று தெரியவில்லை) தனது ஆண் உறுப்பை அவளது முகத்தில் தேய்த்திருக்கிறார். அன்று அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்து கண்டுபிடிக்கபட்டு சமையல்பொருட்கள் போட்டு வைக்கும் அறையில் மூன்று நாட்கள் அடைத்து வைக்கபட்டிருக்கிறாள்.
5) இரண்டு முறை அவளுக்கு கர்ப்பசிதைவு ஏற்பட்டிருக்கிறது. முதல்முறை திருமணமான நாற்பதாவது நாளும் இரண்டாவதுமுறை கரு வளர்ந்து 95 நாட்கள் ஆன பிறகும் ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் அவள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோரையும் கடுமையாக திட்டியிருக்கிறாள். சில நேரங்களில் அவள் அழுவது நாள் கணக்கில் நீடித்திருக்கிறது
6) 2002ம் ஆண்டின் மேமாதத்தில் அவள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தனது பதிவு எண்ணை நீடிப்பதற்காக சென்னை செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். அதை அனுமதிக்க மறுத்ததோடு அவள் தானே கிளம்பி போய்விடக்கூடும் என்று அவளது சான்றிதழ்களை யாவையும் எரித்து விட்டார்கள் என்றும் அன்றிரவு அவள் திரும்புவம் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றபட்டு தயாளன் ஆர்எம்பி என்ற மருத்துவரிடம் சிகிட்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்த சிகிட்சை முடிந்து வந்த சில வாரங்களுக்கு பிறகு அவளது உடலில் ஆங்காங்கே காரணமில்லாமல் பருத்து வீங்க துவங்கியிருந்தது. இதற்கான சிகிட்சை அளிக்கபடவேயில்லை
7) துக்கமின்மை. நடந்த விசயங்களை திரும்ப திரும்ப சொல்வது. கற்பனையாக பயம் மற்றும் தான் இறந்து போய்விட்டதாக நம்புவது உள்ளிட்ட பல நோய்கூறுகள் அவளிடம் துல்லியமாக வெளிப்படுகின்றன


உளவியில் மருத்துவரின் இந்த நோய்கூறுகள் பற்றிய அவதானிப்புகளை போல அவளது கணவன், மாமனார், மாமியார், சின்ன அத்தை மற்றும் அந்த வீட்டின்  வேலைக்காரி  ஆகியோர் அவதானித்த அவளது நோய் குறிப்புகள்

1) விஜயலட்சுமிக்கு திருமணத்தின் போது இருபத்தைந்து வயது முடிந்திருக்கிறது. ஆனால் அதை பெண் வீட்டில் இருபது என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இதை அவளது கணவன் வைகுந்தராமன் சான்றிதழ்களில் இருந்து கண்டுபிடித்தான். அதைபற்றி விஜயலட்சுமியிடம் கேட்டபோது வைகுந்த ராமனுக்குகூட முப்பத்தைந்துவயது முடிந்து விட்டிருக்கிறது, ஆனால் பொய் சொல்லிதானே கல்யாணம் செய்திருக்கிறான் என்று வீண்வாதம் செய்தாள். இதனால் அவளை வைகுந்தராமன்  கண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அன்றிரவு இந்த சண்டை காரணமாக அவள் உடலுறவு கொள்வதற்கு அனுமதி மறுக்கவே வைகுந்தராமன் அவளை கட்டிலில் இருந்து கிழே தள்ளி வன்புணர்ச்சி மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது அவள் பிடித்து தள்ளியதில் வைகுந்தராமனின் முந்நுறு ரூபாய் பெறுமானமுள்ள ஆல்வோ கடிகாரத்தின் கண்ணாடி உடைந்து போனது குறிப்பிட்டதக்கது.


2) விஜயலட்சுமி வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் தபாலில் எம்ஏ படிக்க முயன்றிருக்கிறாள். அப்படி அவளுக்கு வந்த பாடப்புத்தகங்களை அவள் ஒளித்து வைப்பதற்கு இடமில்லாமல் படுக்கையின் அடியில் வைத்திருந்தை தற்செயலாக அவளது மாமனார் வரதராஜ பெருமாள் கண்டுபிடித்து விசாரித்த போது அவள் படிப்பது தவறு ஒன்றும் இல்லையே என்று வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்த போது அவர் வழியில்லாமல் அவளது செவுளில் இரண்டு அடி தரவேண்டியதாகியது. அன்றிரவும் விஜயலட்சுமி வன்புணர்ச்சிக்கு உள்ளாகினாள். ஆனால் அவள் மற்ற நாட்களை போல இல்லாமல் ஆடைகளே இல்லாமல் வீட்டின் ஹாலுக்கு வந்து தனது மாமனார் முன் நின்றபடியே நீதானடா சொல்லி குடுக்குறே. என்று மரியாதையின்றி கத்தியிருக்கிறாள்.


3) விஜயலட்சுமியின் தம்பி விடுமுறைக்கு வந்த நாளில் அக்காவின் கட்டிலில் ஒரு மதியம் உறங்கி கொண்டிருந்ததை கண்டு வைகுந்தராமன் அவனை அடித்து எழுப்பி விரட்டவே அந்த பிரச்சனையை விஜி பெரிதாக எடுத்து கொண்டு கத்தியிருக்கிறாள். அப்போது அவளை வைகுந்தராமன் அடிக்க முற்பட அதை விஜியின் தம்பி தடுத்திருக்கிறான் வேறு வழியில்லாமல் அந்த பையன் கழுத்தை பிடித்து தள்ளி இனிமேல் அவனோ, அவளது வீட்டு ஆட்களோ அவளை தேடி வரக்கூடாது என்று விரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது


4) விஜயலட்சுமிக்கு சினிமா பாட்டுகளை கேட்பதும் பாடுவதுமான பழக்க மிருந்திருக்கிறது. எப்போதும் ஏதாவது ஒரு சினிமா பாடலை பாடிக் கொண்டேயிருந்ததால் அதை தடுப்பதற்கு வேறு வழியில்லாமல் அவளது உதட்டில் சூடு போட வேண்டிய நிர்ப்ந்தம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது


5) விஜயலட்சுமி கணவனையும் மற்றவர்களையும் சிறைக்கு அனுப்ப திட்டம் போட்டு  தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது அதை தடுத்து அவளை பொதுமருத்துவமயில் சேர்த்து மின்சார சிகிட்சை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் செலவு மட்டும் பனிரெண்டாயிரம் ஆனது. அதை மாமனார் வீட்டில் வைகுந்தராமன் பெருந்தன்மையாக கேட்கவேயில்லை

6) கணவரை உடல் உறவில் திருப்தி படுத்த முடியாத தன்மையும், வீட்டில் வேலைகள் செய்யாமல் கற்பனையில் முழ்கி கிடப்பதும் புத்தகம் படிப்பதும் அவளது முக்கிய நோய்குறிகள்.

பி. விஜயலட்சுமியின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள்

2002ம் வருடம் மார்ச் மாதம் 8 ம் தேதி செய்துங்கநல்லுர் பெத்தையா- செல்லம்மாள் தம்பதியின் குமாரத்தியான பி. விஜயலெட்சுமி என்ற விஜயாள் பி.ஏவிற்கும், சங்கரன்கோவில் பூவிளங்கும் பெருமாள் பேரனும் வரதராஜ பெருமாளின் சிரேஷ்ட பையனும் கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரியும் வைகுந்தராமன் பி.காம். டி.கோப் அவர்களுக்கும் சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில் காலை 9 முதல் 10.30 வரையான முகூர்த்ததில் திருமணம் நடைபெற்றது. அந்த விழாவில் வைகுந்தராமனின் நண்பர்கள் நுற்றுக்கும் மேற்பட்டவர்களும் விஜயலெட்சுமியோடு படித்த கண்மணி , விமலா என்ற இருவர் மட்டும் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமியின் திருமணத்திற்காக நாற்பது பவுன் நகையும் 50 ஆயிரம் ரொக்க பணமும் ஒரு யமஹா பைக்கும் வாங்கி தருவது என்று நிச்சயக்கப்பட்டிருந்த வண்ணம் யாவும் இனிதாக நிறைவேற்றி வைக்கபட்டது. விருந்தில் விஜயலட்சுமி இன்னொரு அப்பளம் கேட்டபோது வைகுந்தராமன் ஏண்டி சாப்பாட்டுக்கு அலையுறே என்றதும் அவனது குடும்பமே சிரித்தது.

திருமணநாளின் மதியத்தில் விஜயலட்சுமியும் வைகுந்தராமனும் புது தலையணை, போர்வை சகிதமாக ஒரு அறையில் தங்க வைக்கபட்டபோது வைகுந்தராமன் அவளிடம் தான் பத்து நாட்களாக ஜிம்மிற்கு போய் உடம்பை தயார் செய்து வைத்திருப்பதாகவும் அதனால் இன்றிரவு அவள் பலமுறை உடல்உறவுக்கு தயராக இருக்க வேண்டும் என்றும் கூறினான். அவள் பதிலே சொல்லவில்லை.

இரவு அவள் படுக்கைக்கு சென்ற போது அவளது வலதுகையை முறுக்கியபடியே அவன் ஒரே கடியில் முழு ஆப்பிள் ஒன்றை தின்றபோது அவளுக்கு பயமாக இருந்தது. அவளின் விருப்பம் கூடுவதற்குள் அவன் தனது செயலை முடித்துவிட்டு தட்டில் வைத்திருந்த பழங்கள் யாவையும் தின்று தீர்கக துவங்கினான். அவள் எழுந்து மூத்திரம் பெய்துவிட்டு வர விரும்பினாள். அதற்கு கதவை திறந்து வெளியே போக வேண்டும். உள்ளே வருதற்குள் போய்விட்டு வந்திருந்தால் என்ன என்று அவன் கத்தினான். அவள் சுருண்டு படுத்து கொண்டாள்.  விடிந்து எழுந்த போது அவளது உடலில் நாலைந்து சிறு காயங்களிருந்தன. அதை விடவும் அவன் பாதி கடித்து போட்டிருந்த ஆப்பிள்சதைகள் ஆங்காங்கே கிடந்தை காணும் போது அருவருப்பாக இருந்தது. அவள் துக்க கலக்கத்தோடு அவசரமாக மூத்திரம் பெய்வதற்காக வெளியே சென்றாள்.

**
திருமணமான பத்து நாட்களுக்கு பிறகு அவர்கள் வைகுந்தராமனின் பாட்டி ஊருக்கு சென்றிருந்தார்கள். அந்த வீடு மிக சிறியது. உள்ளே ஒரு நார்கட்டில் போட்டிருந்தார்கள். அதில் இருவர் படுக்க முடியாது. ஆனாலும் அவனது கட்டாயத்தால் அவள் அதில் ஒட்டிக் கொண்டு படுக்க வேண்டியதாகியது. இரவில் அவனது ஆத்திரத்தால் அவளது கால்முட்டியில் கட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. இந்த கிராமத்தில் எந்த டாக்டரை பார்ப்பது என்று அவன் திட்டியதோடு அப்படியே விட்டுவிட்டான் . அங்கிருந்த மூன்று நாட்களும் அவளால் வலது காலை அசைக்கவே முடியவில்லை.  ஊருக்கு வந்ததுமே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் ஆத்திரத்தில் அவள் காய்ச்சலை பற்றி பொருட்படுத்தாமல் அவளோடு உறவு கொண்டான். மறுநாள் அவள் மருத்துவரிடம் காட்டியபோது அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கும் படியாக சொன்னார். வைகுந்தராமன் அவளை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு ஊருக்கு போன் செய்து அவளது அப்பாவை வரச்சொல்லிவிட்டு தனக்கு அலுவலக வேலை இருப்பதாக சென்னைக்கு கிளம்பி சென்றான்


**
வீட்டு பிரச்சனைகளில் இருந்து மனதை திசைதிருப்புவதற்காக விஜயலட்சுமி  வாடகை நுலகம் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தாள். அங்கே உள்ள புத்தகத்திலே மிக அதிகமான பக்கங்கள் கொண்ட ஏதாவது ஒரு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து வந்து வாரக்கணக்கில் படித்து கொண்டிருப்பாள். அப்படி ஒரு நாள் அவள் யாருக்காக மணி ஒலிக்கிறது என்ற புத்தகத்தை எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்த போது  வீட்டு பெண்களை போல அவள் வேலைகள் செய்யாமல் எதற்கு படித்துக் கொண்டேயிருக்கிறாள் என்று ஆத்திரமாக கத்திய வைகுந்தராமன் உடனடியாக அந்த நாவலை பிடுங்கி கிழித்து அடுப்பில் போட்ட போது அவள் வேண்டும் என்றே தனது தலையை சுவரில் பலம் கொண்ட மட்டும் முட்டிக் கொண்டாள். ஆனால் அப்போதும் அவளது மண்டை உடையவேயில்லை அத்தோடு அவளது ஆத்திரமும் தீரவில்லை.


**
ஒரு நாள் மதியம் சாப்பாடு போடும்போது தட்டில் ஒரு தலைமயிர் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணம் காட்டி விஜயலட்சுமியின் மாமனார் வரதராஜ பெருமாள் அன்றிலிருந்து அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்று கத்தினார். அதை வைகுந்தராமனும் ஆமோதித்ததோடு அப்போதே அவள் தரையில் போட்டு சாப்பிட வேண்டும் என்றான். அன்றிலிருந்து விஜயலட்சுமி தானாகவே தரையில் சாப்பிட துவங்கினாள். அதை பின்நாட்களில் ஒருவரும் தடுக்கவேயில்லை


**
வைகுந்தராமன் அலுவலகத்திலிருந்து வரும்வரை இரவில் அவள் படுக்கையில் சும்மா உட்கார்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறாள் என்பதால் தேவையற்ற மின்சார செலவு ஏற்படுகிறது என்று மின்விளக்குகளை அணைக்க சொல்லி சண்டையிட்ட பிறகு அவள் தனது அறையில் எப்போதுமே விளக்கு போடாமல் இருட்டிலே இருக்க பழகத்துவங்கினாள். இந்த பழக்கம் பகலிலும் நீண்டுவிடவே அவளாக வீட்டு ஜன்னல்களை ஆணி வைத்து அடித்து ஒரு போதும் திறக்க முடியாதபடி மூடிவிட்டாள்.


**
துணி துவைக்கும் சோப்பு மற்றும் அவளுக்கான எண்ணெய், பவுடர், சீப்பு போன்றவற்றை அவர்கள் தங்களது அலமாரியில் வைத்து பூட்டிக் கொண்ட நாளில் இருந்து அவள் ஒரே உடையில் நாள் கணக்கில் இருக்கவும் குளிப்பதற்கு மறுக்கவும் துவங்கினாள்


***
ஒவ்வொரு முறை கர்ப்பம் கூடி கலைந்த போதும் அவள் தனது பிறக்காத குழந்தைக்கு ஒரு பெயரிட்டு அதை தான் வளர்ப்பது போன்று கற்பனையாக செயல்பட துவங்கினாள். இதற்காகவே அவள் அடிவாங்கியதும் சிலமுறை நடந்தேறியிருக்கிறது.


வைத்தியசாலையில் சில  தினங்கள்

விஜயலட்சுமி வைத்தியசாலைக்கு வந்த நாலு வாரங்கள் யாரோடும் பேசவேயில்லை. ஒரு இரவு அவள் தனது அறையினுள் வந்துவிட்ட தவளை ஒன்றை இரவு முழுவதும் அருகில் உட்கார்ந்து பார்த்து கொண்டேயிருந்தாள். தவளை கண்ணை மூடுவதும் திறப்பதையும் காண்பது வசீகரமாக இருந்தது. விடிகாலையில் அந்த தவளை அறையை விட்டு படியில் தாவி குதித்தது. அப்போது அவளும் படிக்கு வந்து நின்றாள். தவளை இன்னொரு குதி குதித்து செடிக்குள் மறைந்த போது அவள் சந்தோஷத்துடன் கைதட்டினாள்

**
ஒரு நாளிரவு அறையின் ஜன்னல் வழியாக நிலா வெளிச்சம் தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. விஜயலட்சுமி தனது கைகளை அந்த வெளிச்சத்தில் காட்டினாள். நிலா வெளிச்சம் கைகளில் ஊர்ந்து போக துவங்கியது. நிலா அறையில் நகர நகர அவளும் தன் கைகளை நீட்டிக் கொண்டேயிருந்தாள். அன்று இரவு அவள் உடலில் நடுக்கம் அதிகமானது.


**
ஒரேயொரு முறை அவள் எண்ணெய் குளியல் செய்வதற்காக அழைத்து போகபட்டபோது வழியில் கிடந்த சிவப்பு துணியை காட்டி இது பாம்பில்லை துணி என்ற ஒரேயொரு வார்த்தை பேசினாள். அதன்பிறகு பலவாரங்கள் பேசவேயில்லை.
**
பலாமரத்தில் ஒரு நாளைக்கு எத்தனை எறும்புகள் ஏறுகின்றன எத்தனை எறும்புகள் இறங்குகின்றன என்று  பகல் முழுவதும் எண்ணிக்கொண்டேயிருந்தாள். ஏறிய எறும்புகளில் பத்துக்கும் மேற்பட்டவை கிழே இறங்கவேயில்லை என்பது அவளுக்கு வருத்தம் தருவதாக இருந்தது
**
கூட்டு பிரார்த்தனைக்காக அழைத்து போகப்பட்ட போது அவள் மனம் உருகி தான் ஒரு கொசுவாக மாறிவிட்டால் மற்றவர்களின் ரத்தத்தை உறிஞ்சி வாழலாம் என்று பிரார்த்தனை செய்தாள்.
**
இருளிலிருந்து வெளிச்சத்திற்கும் மௌனத்திலிருந்து பேச்சிற்கும் அவள் நகர்ந்து வருவதற்கு ஆறு மாதங்களுக்கும் மேலானது. ஆனாலும் அவளது உடலில் உள்ள தழும்புகளை கண்ணாடியில் கண்டதும் அவள் முகம் வெளிறி ஒடுங்கி போவதை ராஜ வைத்தியத்தாலும் குணப்படுத்த முடியவேயில்லை


**
பின்குறிப்பு : 21.12.2003 மதியம் இரண்டு மணிக்கு ஆனங்குளத்தில் உள்ள வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த ஐம்பது வயதை தாண்டிய நபர் நரைத்த தலைமயிரும் கவலை தோய்ந்த முகமும் கொண்டிருந்தார். அவரது கண்களில் துக்கம் படிந்திருந்தது. நடுங்கும் குரலில் தான் விஜயலட்சுமியின் தகப்பன் என்றும் தங்களிடம் விஜயலட்சுமி படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாக வைகுந்தராமன் சொல்லி ஏமாற்றிவிட்டான் என்றும் அவளை தான் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று சொன்னார். வைத்திசாலை ஆட்கள் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அந்த வயசாளி தன்னை மீறி அழுதபடியே என் பொண்ணுய்யா என்று கத்தினார்.


வழியில்லாமல் ஒரு முறை அவளை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அவர் பார்த்தபோது சிறிய பச்சைநிற அங்கி அணிந்தபடியே அவள் படியில் உட்கார்ந்திருந்தாள். அவளது தலைமயிர் கொட்டி போயிருந்தது. அவள் தன் அப்பாவை பார்த்ததும் பலவீனமான குரலில் நீயும் இங்கே வந்துட்டயாப்பா என்று கேட்டாள். அவர் பதில் சொல்லமுடியாமல் கதறிஅழுதார்.

அன்றிரவு வைத்தியசாலையில் இருந்த பணிப்பெண்ணிற்கு பணம் கொடுத்து யாரும் அறியாமல் தன் பெண்ணை அவர் அங்கிருந்து கூட்டிப் போய்விட்டார் என்றும் ஒருவேளை அவர்கள் ஆந்திராவில் உள்ள மதனபள்ளியிலோ, கர்நாடகாவில் உள்ள கொல்லுரிலோ. மஹாராஷ்டிராவில் உள்ள சீரடியிலோ  காணக்கூடும் என்கிறார்கள்.

உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நமது நற்குடும்பத்தின் சந்தோஷ வாழ்வை எவ்விதத்திலும் தொல்லை செய்யமாட்டார்கள். அவர்கள் போகட்டும் விட்டுவிடுங்கள்.


**

- உயிர்மை இதழில் வெளியானது.

 

27/10/2010

வாழ்வின் நிழல் சுவடுகள் - வைக்கம் முஹம்மது பஷீர்

சோனாகாச்சி - மாதவிக்குட்டி

கணவன்மீது உயிரையே வைத்திருப்ப வளும் வசதி படைத்தவளுமான ஒரு மனைவியும், ஏழு வயது கொண்ட ஒரு மகனும் அவனுக்கு இருந்தார்கள். சண்டை, சச்சரவு எதுவுமே இல்லாத வீட்டுச் சூழ்நிலை... எனினும், ஞாயிற்றுக்கிழமை மதிய தூக்கத்தை விட்டு கண் விழித்து எழுந்தபோது, தனக்கு அறிமுகமாகியிருந்த ஒரே விலைமகளான அமலாவை அவன் நினைத்துப் பார்த்தான். கல்கத்தாவிற்குப் பயணம் செய்து, இரண்டு நாட்களாவது அவளுக்கு அருகில் இருக்க வேண்டுமென்று அவன் மிகவும் விருப்பப்பட்டான்.
தூங்கிக் கொண்டிருந்த தன் மனைவியின் சதைப்பிடிப்பான கை, கால்களிலிருந்து வேகமாக கண்களை எடுத்துக்கொண்ட அவன், அமலாவின் மெலிந்த உடலின் அசாதாரணமான அழகை, ஒரு வேதனை யுடன் நினைத்துப் பார்த்தான். வெயில் பட்டு வாடிப்போன ஆம்பல் மலரின் தண்டைப் போல கருத்து தளர்ந்துபோய் காணப்பட்ட அந்தக் கைகளில் தான் ஓய்வு எடுப்பதை மனதில் நினைத்துப் பார்த்தபோது, அவனுடைய அடிவயிறு சந்தோஷம் கொண்டு வேதனை எடுத்தது. ""ஓ அமலா... என் அமலா...'' அவன் முணுமுணுத்தான்.

அவனுடைய மனைவியின் கண்கள் திறந்தன. பயமே இல்லாத கண்கள்... சந்தேகங்கள் இல்லாத கண்கள். ""என்ன சொன்னீங்க?'' அவள் கேட்டாள். வெட்கத் துடன் பாவாடையை இறக்கிவிட்டுக் கொண்டு அவள் தன் கணவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இனிப்பான கனிகள் வளர்ந்திருக்கும் தோட்டத்தைப்போல அவள் இருந்தாள். மரத்தில் காற்றும் வெயிலும் பட்டு பழுத்த ஒரு மாம்பழம்.
""நான் கல்கத்தாவிற்குப் போகணும். ஒரு வாரம் கழித்துத்தான் திரும்பி வருவேன்.'' அவன் உறுதியான குரலில் சொன்னான்.

""ம்... வர்றப்போ நானும் மகனும் சாப்பிடுவதற்கு ரசகுல்லாவும் சந்தேஷும் வாங்கிக் கொண்டு வரணும்.'' மனைவி தூக்கத்தின் சாயலுடன் முணுமுணுத்தாள்.

அவன் அமலாவை நினைத்துப் பார்த்தான்.

கல்கத்தாவிலிருந்து இடம் மாற்றம் கிடைத்த நாளன்றுதான் முதன் முறையாக ஒரு விலை மகளிர் இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். பெங்காலி பெண்கொடிகளின் வசீகரத் தன்மையைப் பற்றி அவனுடைய நண்பர்கள் மது அருந்தும் வேளையில் பாராட்டிப் பேசுவதை அவன் பல நேரங்களில் கேட்டிருக்கிறான். ஒரு முறையாவது அவர்களின் செயலைப் பின் பற்ற வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. கன்னித் தன்மையை விடாமல் இருக்கும் ஆணுக்கு ஒரு குற்ற உணர்வு உண்டாவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. யாரையும் துணைக்கு அழைக்காமல் அவன் சோனாகாச்சிக்குச் சென்றான். கையில் ஆயிரத்து முந்நூறு ரூபாய்கள் இருந்தன. அமலாவைச் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த வயதான பெண் சொன்னாள்: ""முந்நூறு தந்தால் போதும்.''

அவளுடைய தலை முடியின் வாசனையைப் பற்றிக் கூறியபோது அமலா சிரித்தாள்.

""நான் கேசரஞ்சன் தைலத்தைத் தேய்க்கிறேன். அதன் வாசனைதான்.'' அவள் சொன்னாள். ""காலை வரை என்னுடன் இருக்க வேண்டு மென்றால், கிழவி ஆயிரத்து இருநூறு ரூபாய் வாங்குவாங்க.'' கமலா சொன்னாள்.

அவன் பணத்தை எண்ணிக் கொடுத்தான். அதை கையில் வாங்கிக் கொண்டு அமலா கிழவியைத் தேடிச் சென்றபோது, அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றிலும் பார்த்தான். நிலைக் கண்ணாடி தொங்கிக் கொண்டிருந்த சுவர்... செயற்கை ரோஜா மலர்கள்... கொசுவின் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பு... அவனுக்கு தன்மீதே வெறுப்பு உண்டானது.

""கொசு அல்ல... மூட்டைப் பூச்சி...  என் உடலின் பல இடங்களிலும் தடித்துப் போய் இருப்பது மூட்டைப் பூச்சி கடித்ததுதான்.'' அமலா சொன்னாள். பொழுதுபோக்கிற்காக தான் ஏதோ சொன்னோம் என்பதைப்போல அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். பல்லாயிரக் கணக்கான மூட்டைப் பூச்சிகளும் பேன்களும் தன்னுடைய தலை முடியிலும் உடலிலும் ஓடித் திரிவதைப்போல அந்த நிமிடத்தில் அவனுக்குத் தோன்றியது. எனினும், அவன் அங்கேயேதான் படுத்தான். காலையில் வானம் வெளுப்பது வரை அவளுடைய கூந்தலை வாசனை பிடித்துக்கொண்டு அவளுடைய அணைப்பிற்குள் சிக்கிக்கொண்டு படுத்திருந்தான்.

""இங்கு சாதாரணமாக வருபவர்கள் எல்லாரும் செந்நாய்கள்தான். என்னைக் கடித்து ஒரு வழி பண்ணி விடுவார்கள். உங்களுடன் சேர்ந்து கொண்டு இப்படிப் படுத்திருக்குறப்போ, என் இளம் வயது தோழியான மீராவுடன் சேர்ந்து நான் படுத்துக்கிடப்பதைப்போல தோன்றுகிறது'' என்றாள் அமலா.

அவன் ஒரு ஆணாகத்தானே அமலாவை நெருங்கினான்? அவன் தேடிக் கொண்டிருந்தது ஒரு இளம் வயது தோழியை மட்டுமா? எப்போதோ மரணத்தைத் தழுவிவிட்ட அவனுடைய அன்னையின் தலைமுடியையா அவன் வாசனை பிடித்து அறிந்து கொண்டான்?

""உங்களுக்கு பெரிய ஒரு தொகை கையை விட்டு இழக்க நேரிட்டுவிட்டது. நீங்கள் ஏன் வெறுமனே படுத்து சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்?'' அமலா கேட்டாள். அவளுடைய பற்கள் வெற்றிலை போட்டது காரணமாக இருக்க வேண்டும்- சிவந்து காணப்பட்டது. நெற்றியில் வைக்கப்பட்டிருந்த குங்குமம் வியர்வையில் நனைந்துவிட்டிருந்தது. இடையில் அடிக்கொரு தரம் அவள் இருமினாள்.

""எனக்கு சயரோகம் எதுவும் இல்லை. பயப்பட வேண்டாம். போன வாரம் மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. இருமல் முழுமையாக விட்டுப் போகவில்லை.'' அவள் சொன்னாள். காலையில் அங்கிருந்து கிளம்பியபோது, ஜன்னலுக்கு அருகில் அமலாவின் முகம் ஒரு லில்லி மலரைப்போல மலர்ந்து நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தெருவின் கடைசி வரை அவளுடைய கண்கள் அவனையே தொடர்ந்து கொண்டிருந்தன. இனி வருவீர்கள் அல்லவா என்று அவள் கேட்க வில்லை. கேட்டிருந்தால், ""இல்லை'' என்று கூறுவதற்கு அவனிடம் தைரியம் இல்லை.

அதற்குப் பிறகு அவனுடைய உத்தியோகப் பதவி, விலை மகளிர் இல்லங்களுக்கோ மது அருந்தும் இடத்திற்கோ செல்வதற்கு முடியாத நிலையை உண்டாக்கியது. அவன் எல்லாருக்கும் தெரியக்கூடிய ஒரு ஆளாக ஆகிவிட்டான். அவனுடைய முகம் வார இதழ்களிலும் பத்திரிகைகளிலும் வர ஆரம்பித்தது.

அவனுடைய மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சாலைகளை நடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்த அவனுக்கு, நல்ல குணத்தைக் கொண்டவளும், அழகான தோற்றத்தைக் கொண்டவளுமான ஒரு பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. திருமண வாழ்க்கை சண்டை, சச்சரவே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் கடுமையாக முயற்சித்தான். முயற்சி வெற்றி பெற்றது.

எனினும், அந்த ஞாயிற்றுக்கிழமை சுகமான தூக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தபோது, அமலாவை மீண்டும் கட்டிப்பிடித்து அணைக்கவில்லையென்றால் தன்னுடைய பிறவி வீணாகிவிடும் என்று அவன் பயந்தான். அவளுடைய மெலிந்த மணிக்கட்டில் விரல் நுனிகளை வைத்து அழுத்துவதற்கு... அவளுடைய தலைமுடிக்குள் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்வதற்கு... அவளுடைய இருமல் சத்தத்தைக் கேட்பதற்கு... அவளுடைய நெருக்கத்தை மெதுவாக அனுபவித்து சந்தோஷப்படுவதற்கு...

கல்கத்தா முற்றிலுமாக மாறிப்போய் விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. நன்கு தெரிந்த கட்டடங்களுக்கு பதிலாக ஃப்ளாட்டுகள் எல்லா இடங்களிலும் உயர்ந்து நின்றிருந்தன. விலை மாதர்கள் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் தந்திருந்த முகவரியைத் தேடி அவன் சாயங்கால நேரத்தில் சிறிது நேரம் அலைந்து திரிந்தான். அமலா சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியிருக்க வேண்டும்; அவள் வசதி படைத்த ஒரு விலைமகளாக ஆகிவிட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவன் சிந்தித்தான்.

முன்பு சலவைத் தொழிலாளர்கள் வசித்துக் கொண்டிருந்த ஒரு காலனியில், துத்தநாகப் பட்டையால் மேற்கூரை வேயப்பட்ட ஒரு வீட்டில் அமலா வசித்துக் கொண்டிருந்தாள். வெளியே அழுக்கு படிந்த கோழியின் முடியும் மீனின் செதில்களும் இறைந்து கிடக்கும் வாசல். மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் மெலிந்து போன நாய்.

""அமலா!'' அவன் அழைத்தான்.

""யார் அது?'' உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் குரல்.

அமலா கண்களைச் சுருக்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்த்தாள்.

""என்னை மறந்து விட்டாயா? ராஜேந்திரன்... என்னுடன் சேர்ந்து படுத்திருப்பது ஒரு இளம் வயது தோழியுடன் சேர்ந்து படுத்தி ருப்பதைப்போல இருக்கிறது என்று நீ சொன்னது ஞாபகத்தில் இல்லையா?'' அவன் கேட்டான்.

""நான் என்னுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். பழைய கதைகள் எனக்கு ஞாபகத்தில் இல்லை.'' அவள் சொன்னாள்.

""வியாபாரம்! நான் வியாபாரத்திற்காக வரவில்லை. வெறுமனே உனக்கு அருகில் படுத்திருப்பதற்காக. உன்னைத் தொடாமல் படுப்பேன்- உன் தலை முடியின் கேசரஞ்சன் தைலத்தின் வாசனையை முகர்ந்து கொண்டு...'' அவன் மேலும் மூச்சு விட்டுக் கொண்டே சொன்னான்.

அமலா அதிகமாக வெளிறிப் போய் காணப்பட்டாள். அவளுடைய தோலுக்குக் கீழே விளக்குகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவளுடைய கைகளில் நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.

""என்னை உள்ளே நுழைய அனுமதி.'' அவன் சொன்னான்.

அமலா கதவை நன்கு திறந்தாள். அவள் ஒரு கசங்கிய பருத்திப் புடவையை அணிந்திருந்தாள். இரவிக்கை அணியவில்லை.

""அப்பாவி மனிதா... உங்களுக்கு என்ன பிரயோஜனம்?'' அமலா சிரித்தாள்.

""பிரயோஜனமா?'' அவன் கேட்டான்.

""நான் எப்போதோ வியாபாரத்தை நிறுத்திவிட்டேன். எனக்கு டி.பி. நோய் வந்திருச்சு. அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் இரண்டு இடுப்பு எலும்புகளை நீக்கிட்டாங்க. அதற்குப் பிறகும் நான் நிறுத்தாமல் இருமிக் கொண்டு இருக்கிறேன்.'' அவள் சொன்னாள்.

""எனக்கு அருகில் வா.'' அவன் சொன்னான். பந்தயக் குதிரையைப் போல மேலும் கீழும் மூச்சு விட்டவாறு அவள் அவனை நெருங்கினாள்.

""இனி என்னால் எதுவும் செய்ய முடியாது. டி.பி. நோய் வந்து, நான் மிகவும் தளர்ந்து போய்விட்டேன்.'' அவள் சொன்னாள்.

மறுநாள் சூரியன் உதயமாகும் வரை அவன் அந்தப் பெண்ணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருந்தான். எனினும், அவளுக்கு அவன் ஒரு அறிமுகமற்ற மனிதனாகவே இருந்தான்.

""எனக்கு உங்களுடைய முகம் ஞாபகத்திலேயே இல்லை.'' அவள் ஒரு கவலையுடன் சொன்னாள்.
""நீ யாருடைய முகத்தையாவது ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா?'' அவன் கேட்டான்.

""இல்லை... எனக்கு யாருடைய முகமும் ஞாபகத்தில் இல்லை.'' கறுத்த பற்களை வெளிப்படுத்திக் கொண்டே அந்த அப்பாவிப் பெண் சொன்னாள்.

மருதாணி - மாதவிக்குட்டி

மறுநாள் காலையில் முகூர்த்தம். கைகளில் மருதாணி இடும் பெண்ணிடம் மணப் பெண் சொன்னாள்: ""இந்தத் திருமணம் நடக்கப் போவ தில்லை.''

திருமணம் நடக்காதா? கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். சமையல் அறையின் வாசலில் சமையல் செய்து கொண்டிருந்த பிராமண இனம் அதிர்ந்து போனது.

வீட்டு வேலைக்காரிகள் அதிர்ச்சியடைந்தார்கள். உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

""அம்மு, என்ன முட்டாள் தனமா பேசுகிறாய்?''

வளைகுடா நாட்டிலிருந்து விடுமுறை எடுத்து வந்திருந்த மாமா உரத்த குரலில் சொன்னார்:

""எதை வேண்டுமானாலும் கூறுவதா?'' அண்ணனின் மனைவிகள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார் கள்.

""இந்தத் திருமணம் நடக்காது.'' அம்மு உறுதியான குரலில் கூறினாள். மருதாணி இடுவதை நிறுத்திவிட்டு அழகு நிலையத்தைச் சேர்ந்த பெண் மணமகளிடம் கேட்டாள்:

""அப்படியென்றால் இன்னொரு கையில் மருதாணி இட வேண்டாமா?''

""இரண்டு கைகளிலும் மருதாணி இட வேண்டும்.  அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்ஜினியரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னேன்.''

""அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் என்ஜினியருக்கு அப்படியென்ன குறை? பார்ப்பதற்கு நல்லவனாக இருக்கிறான். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். உனக்கு இப்படிக் கூற எப்படித் தோன்றியது?'' அம்மா கேட்டாள்.

""யாரும் கேட்க வேண்டாம். பெண்ணை அளவுக்கும் அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள்.'' மாமா சொன்னார்.

""நான் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறேன் என்று தோன்றுகிறதா, அண்ணா?'' அம்மா கேட்டாள்.

""நான் குற்றம் சுமத்தியது உன்னை அல்ல. அம்முவின் அப்பாவை... பணிக்கர் எல்லாவற்றையும் கொடுத்து கெடுத்து விட்டார். குணம் மிகவும் மோசமாக ஆகிவிட்டது.'' மாமா சொன்னார்.

திருமணத்தை தாங்கள் நடத்துவோம் என்று சித்தப்பாக்கள் கூறினார்கள். ""பெண்ணுக்கு மயக்க மருந்து கொண்ட ஊசியைப் போட்டு பந்தலில் உட்கார வைப்போம். ஒருவரையொருவர் மாலை அணிவிக்கச் செய்வோம். குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்று வோம். திருமணம் முடிந்து இரண்டு இரவுகள் கடக்கும்போது அம்மு புதிய மணமகனுக்குச் சொந்தமானவளாக ஆவாள்.'' அவர்கள் கூறினார்கள்.

""எனக்கு எய்ட்ஸ் வந்து இறப்பதற்கு விருப்பமில்லை.'' அம்மு கூறினாள்.

""ரவிக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று யார் சொன்னார்கள்? நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பையன். எய்ட்ஸ் இருக்கிறது என்று எந்தச் சமயத்திலும் நீ சொல்லிப் பரப்பி விடாதே. வேறு எந்த நோய் வந்தாலும், எய்ட்ஸ் வரவே கூடாது என்பதுதான் என் பிரார்த்தனையே.'' மாமா சொன்னார்.

""என் பிரார்த்தனையும் அதேதான்.'' அம்மு சொன்னாள்.

""அம்மு... முட்டாள்தனமா பேசாதே. இந்தத் திருமணம் நடக்காமல் போனால் உன் தந்தை அவமானத்தால் தற்கொலை செய்து கொள்வார்.'' அம்மா சொன்னாள்.

""எய்ட்ஸ் வந்தால், நானும் தற்கொலை செய்து கொள்வேன்.'' அம்மு சொன்னாள்.

""இந்த  ஊரில் வளர்ந்த யாரையாவது கொண்டு வரக்கூடாதா? யாராக இருந்தாலும் நான் திருமணம் செய்து கொள்வேன். பணக்காரனாக இருக்கத் தேவையில்லை. பெரிய படிப்பும் வேண்டாம். ஒரு சாதாரண மனிதன் போதும்.'' அம்மு சொன்னாள்.

""உனக்குப் பொருத்தமான ஒரு ஆள்கூட இந்த ஊரில் இல்லை, அம்மு.'' சித்தப்பாக்கள் கூறினார்கள்.

""அப்படியென்றால் திருவனந்தபுரத்திற்குச் சென்று பாருங்க. அங்கு நல்ல இளைஞர்கள் இல்லாமலிருக்க மாட்டார்கள்.'' அம்மு சொன்னாள்.

""இன்று திருவனந்தபுரத்திற்குச் சென்றால், நாளை காலையில் திருமணம் செய்வதற்குத் தயாராக இருக்கும் யாரையும் பார்க்க முடியாது. பிறகு... ரவியும் அவனுடைய ஆட்களும் வரும்போது நாங்கள் என்ன கூறுவது?'' மாமா கேட்டார்.

""எய்ட்ஸ் என்று  கேட்டாலே எனக்கு பயம் என்று கூறுங்கள். உண்மையைத் திறந்து சொல்லுங்க.''

""ரவிக்கு எய்ட்ஸ் இல்லை.''

""மாமா, அது எப்படி உங்களுக்குத் தெரியும்? மருத்துவச் சான்றிதழைக் காட்டினார்களா?''

""மருத்துவச் சான்றிதழைக் காட்டுங்கள் என்று நாங்கள் எப்படிக் கூற முடியும்? வரதட்சணைகூட வேண்டாம் என்று சொன்ன பையன். நன்றிகெட்டத் தனமாக நடக்க முடியாது.'' மாமா சொன்னார்.

""இந்தத் திருமணம் நடக்காது.'' அம்மு சொன்னாள்.

""யாருடைய முகத்தையும் என்னால் பார்க்க முடியாத நிலை உண்டாகும். நான் இப்போதே பாலக்காட்டிற்குச் செல்கிறேன். என் தாயின் வீட்டிற்கு...'' அம்மா வெறுப்புடன் சொன்னாள்.

""நாங்கள் ஓடித் தப்பி விடுகிறோம். மணமகனின் ஆட்கள் வரும்போது பெரியவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அம்முவே அவர்களைத் திருப்பி அனுப்பி வைக்கட்டும்.'' சித்தப்பாக்கள் சொன்னார்கள்.

""சமையல்காரர்களுக்கு யார் பணம் கொடுப்பது?'' அம்மா கேட்டாள்.

""யாராவது கொடுக்கட்டும்.'' அம்மு சொன்னாள்.

""மருதாணி காய்வதுவரை கையில் நீர் படக்கூடாது.'' அழகு நிலையத்தைச் சேர்ந்த பெண் கூறினாள்.

""மருதாணி நல்ல முறையில் பிடிக்கட்டும். நான் நீர் படாமல் பார்த்துக் கொள்கிறேன்.'' அம்மு கூறினாள்.

பாயசம் - தி.ஜானகிராமன்

சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.

“நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்கு இருக்கு? நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண்டம் பூர்ண ஆயுசா? சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு?” என்று யாரோ   சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. அவரேதான் சொல்லிக் கொண்டார். அந்த மனதே மேலும் சொல்லிற்று. “எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா? என்னையா, அவனையா? பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா? அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா? கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா? கலியாணம் பண்றானாம் கலியாணம்! உலகம் முழுக்கக் கூட்டியாச்சு! மோளம் கொட்டி, தாலிகட்டி கடைசிப் பொண்ணையும் ஜோடி சேத்து, கட்டுச் சாதம் கட்டி எல்லாரையும் வண்டி ஏத்திப்ட்டு, நீ, என்ன பண்ணப் போறே? கோதுமைக் கஞ்சியும் மாத்திரையும் சாப்பிட்டுண்டு; பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பைத் துடச்சுக்கப் போறே! கையைக் காலை வீசி இப்படி, ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்குப்போட முடியுமான்னேன்!”

சாமநாது சுற்றும்முற்றும் பார்த்தார். அரசமரத்து இலைகள் சிலுசிலுவென்று என்னமோ சொல்லிக் கொண்டிருந்தன. காவேரிக்குப் போகிற சந்தில் இந்தண்டையும் அந்தண்டையும் குளித்தும் குளிக்கவும் ஆண்கள், பெண்கள், குளுவான்கள் எல்லாம் கடந்துகொண்டிருந்தார்கள். முக்கால்வாசி புது முகங்கள் - போகிற வாக்கில் பட்டுப் புடவைகள், வெறுங் குடங்கள் - வருகிற வாக்கில் சொளப்சொளப்பென்று ஈரப் பட்டுப் புடவைகள், நிறை குடங்கள். ஈரக்காலில் பாதை மண் ஒட்டி மிளகு மிளகாகத் தெறிக்கிறது. கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி - ஐந்தாறு வயசு - குளித்துவிட்டு அம்மணமாக வருகிறது. காவேரியில் குளித்துவிட்டு அங்கேயே உடை மாற்றி, நீல வெளுப்புடன் சேலம் பட்டுக்கரை வேஷ்டிகள் நாலைந்து வருகின்றன. முக்காலும் தெரியாத முகங்கள்.

“கலியாணமா?” என்று ஒரு சத்தக் கேள்வி. ஒரு நீல வெளுப்பு வேட்டிதான் கேட்டது.

”ஆமாம்.” என்று சாமநாது அந்த முகத்தைப் பார்த்தார் கண்ணில் கேள்வியோடு. மனசிற்குள் ‘ஏன் இப்படிக் கத்தறே? நான் என்ன செவிடுன்னு நெனச்சுண்டியா?” என்று கேட்டார்.

“தெரியலியா?” என்றது அந்த சலவை ஜரிகை வேஷ்டி. “நான்தான் சீதாவோட மச்சினன் - மதுரை!”

“அப்படியா?... ஆமாமா இப்ப தெரியறது. சட்டுனு அடையாளம் புரியலெ... இன்னும் பலகாரம் பண்ணலியே. போங்கோ... ராத்திரி முழுக்க ரயில்லெ வந்திருப்பேள்” என்று உபசாரம் பண்ணினார் சாமநாது.

“இவா, சுப்பராயரோட சித்தப்பா. குடும்பத்துக்கே பெரியவாளா இருந்துண்டு, எல்லாத்தையும் நடத்தி வைக்கறவா” என்று பக்கத்திலிருந்த இன்னொரு சலவை வேட்டியிடம் அறிமுகப்படுத்திற்று மதுரை வேட்டி. அவர் போனார்.

“இவர் வந்து...” என்று என்னமோ யாரோ என்று அறிமுகப்படுத்தவும் செய்தது.

“நீங்க போங்கோ - நான் ஸ்நானம் பண்ணிவிட்டு வந்துடறேன்” என்று சாமநாது அவர்களை அனுப்பினார்.

மனசு சொல்லிற்று. “சீதாவுக்கு மச்சுனனா? சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே! ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ!”

அரசமரத்தை விட்டு, பாதை அதிர அதிர, காவேரியை நோக்கி நடந்தார் சாமநாது. நுனியை எடுத்து இடுப்பில் செருகி, முழங்கால் தெரிகிற மூலக்கச்சம். வலது தோளில் ஒரு ஈரிழைத் துண்டு - திறந்த பாள மார்பு, எக்கின வயிறு, சதை வளராத கண், முழுக்காது - இவ்வளவையும் தானே பார்த்துக்கொண்டார்.

காவேரி மணலில் கால் தட்டு முன்பே, தெருவிலிருந்த தவுல் சத்தம் தொடங்குவது கேட்டது. நாகஸ்வரமும் தொடர்ந்தது. பத்தரை மணிக்குமேல்தான் முகூர்த்தம். மணி எட்டுக்கூட ஆகவில்லை. சும்மா தட்டுகிறான்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும். சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலுபிள்ளைகளையும் பெற்றான்.

தண்ணீர் முக்கால் ஆறு ஓடுகிறது. இந்தண்டை கால் பகுதி மணல். ருய்ருய் என்று அடியால் மணல் அரைத்துக் கொண்டு நடந்தார்.

மேளம் லேசாகக் கேட்கிறது. கூப்பிடுவார்கள். குடும்பத்திற்குப் பெரியவன். சித்தப்பா சித்தப்பா என்று சுப்பராயன் கூப்பிட்டுக்கொண்டு வருவான் - இல்லாவிட்டால் அவன் தம்பிகள் கூப்பிடுவார்கள் - என்னமோ நான்தான் ஆட்டி வைக்கிறாற் போல... கூப்பிடட்டும்....

சாமநாது பார்த்தார் - இடது பக்கம்.

ஆற்றின் குறுக்கே புதுமாதிரிப் பாலம் - புதுப்பாலம் - சுப்பராயனா அது நடந்துபோவது?... இல்லை... எத்தனையோ பேர் போகிறார்கள். லாரி போகிறது; சுமை வண்டிகள்; நடை சாரிகள் - எல்லாமே சுப்பராயன் மாதிரி தோன்றுகின்றன - லாரிகூட, மாடுகூட. சுப்பராயன்தான் பாலம் இந்த ஊருக்கு வருவதற்குக் காரணம். அவன் இல்லாவிட்டால் நாற்பது மைல் தள்ளிப்போட்டிருப்பார்கள். சர்க்காரிடம் அவ்வளவு செல்வாக்கு.

வலது பக்கம் - பின்னால் - வேளாளத் தெருவில் - புகை - வெல்லம் காய்ச்சுகிற புகை. புகை பூத்தாற்போல, அந்ததண்டை கருப்பங் கொல்லை கருப்பம் பூக்கள் - காலை வெயில் பட்டு பாதிப் பூக்கள் சிப்பிப் பூக்களாகியிருக்கின்றன - கூர்ந்து பார்த்தால் சுப்பராயன் மாதிரி இருக்கிறது... சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு - எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை - எல்லாம் சுப்பராயன்.

அதோ பள்ளிக்கூடம் - சுப்பராயன்.

பாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி - சுப்பராயன்.

“ஏன் கிடந்து வேகறேள்! உங்க அண்ணா பிள்லைதானே அவன்! நானும் உங்க கையைப் பிடிச்சுண்டு படியேறி இருபது வருஷம் பாதி நாளைக்குப் பழையது, வத்தக் குழம்பு, இந்தப் பவழமலை - வேற என்னத்தைக் கண்டேன்? சுப்பராயனுக்கு மாசம் நாலு ரூவா சம்பளம் அனுப்பிக்க முடிஞ்சுதா, உங்களாலியும், உங்க அண்ணாவாலேயும்! யாரோ உறவுன்னு ஒருத்தரைப் பிடிச்சு மலைக்கோட்டையிலே கொண்டு படிக்க வச்சேளே - நன்னாப் படிக்கிறான்னு - அதுதான் முழுக்க முடிஞ்சுதா உங்களாலே, உங்க அண்ணாவாலே? முகாலரைக் கால் கிணறு தாண்ட வச்சாப்பல, கடசீ வருஷத்திலே போரும் படிச்சதுனு இழுத்துண்டு வந்தேள். குழந்தை ஆத்திரமா திரும்பி வந்தான். அலையா அலைஞ்சான். ஓடாக் காஞ்சான். லக்ஷ்மி வந்து பளிச் பளிச்சுன்னு ஆடலானா, குடும்பத்துக்குள்ளே...”

சாமநாதுவுக்குக் கேட்க இஷ்டமில்லை. அது அவர் மனைவி குரல். இப்போது காற்றில் கேட்கிறது. ஏழெட்டு வருஷம் முன்பு, நேரில் கேட்டது.

சுப்பராயனைப் படிக்க வைக்க முடியவில்லைதான். ஊருக்கு வந்தான். ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான். அங்கே சண்டை. கடை வாடிக்கை ஒருவரிடமே கடன் வாங்கி பாதி பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான். பயலுக்கு என்ன ராசி! முகராசியா! குணராசியா! சின்னக் கடை மொத்தக் கடையாகி, லாரி லாரியாக நெல் பிடித்து, உளுந்து பிடித்து, பயறு பிடித்து இருபது வருஷத்துக்குள் இருபது லட்சம்  சொத்து. உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கியாகி விட்டது.

அதையே பாகம் பண்ணி சாமநாதுவுக்குப் பாதி கொடுத்தான். சாமநாதுவுக்குக் கோபம். அவர் பங்கு ஊருக்கு சற்று எட்டாக் கையில் விழுந்தது. அது மட்டுமில்லை. ஆற்றுப்படுகைக்கும் எட்டாக்கை. சண்டை. அப்போதுதான் வாலாம்பாள் சொன்னாள்: “என்ன! கொடுத்து வச்சேளா? உங்க பாட்டா சம்பாதிச்ச சொத்தா - இல்லே உங்க அப்பா சம்பாதிச்சதா? ஒண்டியா நின்னு மன்னாடி சம்பாதிச்சதை பாவம் சித்தப்பான்னு கொடுக்கறான். இந்த தான மாட்டுக்கு பல்லு சரியாயில்லெ, வாலு சரியாயில்லியா? பேசாம கொடுத்ததை வாங்கி வச்சுக்கட்டும். ஊரிலே கேட்டா வழிச்சுண்டு சிரிப்பா. நான் ஊர்ப் பெரியவாள்ள ஒருத்தியா இருந்தேனோ....”

“நீ இப்பவேதான் வேறயா இருக்கியே! நீ அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் ஆம்படையாளா. எங்க அண்ணா ஆம்படையாளான்னே புரியலியே-”

“தூ- போறும் - அசடு வழியவாண்டாம்” என்று வாலாம்பாள் நகர்ந்துவிட்டாள்.

“ம்ஹஹ” என்று அவருடைய அடித்தொண்டை மாட்டுக் குரலில் சிரித்தது - பெருமையோடு. பெருமை அசட்டுத்தனத்தோடு. பிறகு அவராகவே குழைந்து தொடர்ந்தார். “கோச்சுக்காதெ. உன் மனசு எப்படியிருக்குன்னு பார்த்தேன்.”

”போரும். என்னோட பேச வாண்டாம்.”

மூன்று நாள் வாலாம்பாள் பேசத்தான் இல்லை - அந்த அசட்டு விஷமத்திற்காக.

அவள் கண்ணை மூடுகிற வரையில் சொத்துத் தகராறு இல்லை. பாகம் பிரித்தாகிவிட்டது. ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இனிமேல் என்ன?

ஆனால் முழு பாகமும் கிடைக்கவில்லை. சாமநாதுவின் வாலாம்பாள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவள் பெற்ற முதல் இரண்டு பிள்ளைகள் - இந்த உலகத்தில் இல்லை. மூன்றாவது பெண் - இல்லை. நாலாவது பெண் - கலியாணமாகி மூன்றாவது வருடம் கணவனை இழந்து, பிறந்து வீட்டோடு வந்துவிட்டாள். பழுப்பு நார் மடி கட்டிக்கொண்டு பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். குடும்ப வழக்கப்படி தலைமுடியை வாங்கி நார்ப்பட்டுப் புடவை அணிவித்தார்கள். சுப்பராயனுடைய மூன்றாவது பெண்ணோடு ஒரே பந்தலில்தான் அந்தக் கலியாணம் நடந்தது.

ஐந்தாவது - பையன் - டில்லியில் ஏதோ வேலையாய் - சித்திரம் வரைகிறானாம் - ஆறாவது பையன் - எடுப்பாள் மாதிரி இந்த சுப்பராயனின் இந்த ஏழாவது பெண் கலியாணச் சந்தடியில் அலைந்துகொண்டிருக்கிறான். “போய், குளிச்சுட்டு வாங்களேன். சட்சட்டுனு. பெரியவாளா யாரு இருக்கறது?” என்று அவன்தான் அவரைக் காவேரிக்குக் குளிக்கத் துரை படுத்தி அனுப்பினவன்.

ஈரிழையை இடுப்பில் கட்டி முடிச்சிட்டு சாமநாது தண்ணீரில் இறங்கினார். முழுக்குப் போட்டு, உடம்பைத் தேய்த்தார்.

பாலத்தின் மீது பஸ் போகிறது. பஸ்ஸின் தலைக்கட்டு மேல் வாழை இலைக்கட்டு - ஒரு சைகிள் - நாலைந்து மூட்டைகள் - கருப்பங்கட்டு - எல்லாம் சுப்பராயன். “அப்படியே அந்தப் பயலைக் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கண்ணு பிதுங்க.... அவன் பெண் பிள்ளைகளை எல்லாம் ஒரு சாக்கில் கட்டி...” அவர் பல்லை நெரித்தார்.

“காவேரியிலே கொண்டு அமுக்கட்டும். அப்பதானே கரையேறாத நரகத்திலே கிடக்கலாம். இப்பவே போங்கோ.”

அவளேதான். வாலாம்பாள்தான். துவைக்கிற கருங்கல்லில் அவள் மாதிரி தெரிகிறது. கறுப்பு நிறம். அலைபாய்கிற மயிர் - பவழமாலை. கெம்புத்தோடு. ரவிக்கையில்லாத உடம்பு. நடுத்தர உடம்பு. அவள் காவேரியில் குளிக்கும்போது எத்தனையோ தடவை அவரும் வந்து சற்றுத் தள்ளி நின்று குளித்திருக்கிறார். யாரோ வேற்றுப் பெண்  பிள்ளையைப் பார்ப்பதுபோல, ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறார். அந்த ஆற்று வெளியில், வெட்ட வெளியில் ஈரப்புடவையை இடுப்பு, மேல்கால் தெரிந்து விடாமல் சிரமப்பட்டு அவள் தலைப்பு மாற்றிக்கொள்ளும்போது ஒரு தடவை அவர் பார்த்துக்கொண்டேயிருந்து, அவள் அதைக் கவனித்ததும் - சரேலென்று அவர் ஏதோ தப்புப் பண்ணிவிட்டது போல, அயல் ஆண் போன்று நாணினது...

இப்போதும் அது தெரிகிறது! ஏன் அவள் மேலுலகத்துக்கு முந்திக்கொண்டாள்?

”சம்பாதிச்சதிலே பாதி நமக்குக் கொடுத்திருக்கான். மீதியை தன் தம்பியோட பாகம் பண்ணிண்டிருக்கான் சுப்பராயன். அவன் பிள்ளைகளுக்கு அதிலியும் கால் கால்னுதான் கிடைக்கும். ஏன் இப்படிக் கரிக்கறேள்...?” என்று இந்தக் காவேரியில் அவரைப் பிடித்து அலசினாள் அவள் ஒருநாள்.

ராட்சச முண்டை! கடைசி மூச்சு வரைக்கும் என்ன நியாய புத்தி! என்ன தர்ம புத்தி!

“என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே - போயிட்டியேடி” என்று முனகினார். கண்ணில் நீர் வந்தது. திரும்பிப் பார்த்தார். அடுத்த துவைகல் எங்கோ இருந்தது. யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். கேட்டாலும் சுலோகம் போலிருந்திருக்கும்.

(நர்மதே சிந்து காவேரி என்று சுலோகம் சொல்லிக்கொண்டே பிழிந்து) உடம்பைத் துடைத்து (க்கொண்டு) அரை வேட்டியைப் பிழிந்து கொசுவி உதறிக் கட்டி (க்கொண்டு) விபூதி பூசிக்கொண்டு நடந்தார் சாமநாது. (சித்தப்பா சித்தப்பா என்று அரற்றுவான் சுப்பராயன் பாவம்.)

நாயனமும் தவுலும் நெருங்கிக்கொண்டிருந்தன. அரசமரத்து மேடைமுன் நின்று பிள்ளையாரையும் கல் நாகங்களையும் கும்பிட்டுவிட்டு விரைந்தார். தெருவில் நுழைந்தார்.

கிராமமே கலியாணப் பெண் போல ஜோடித்துக்கொண்டிருக்கிறது. புதுப் புடவைகளும் நகைகளும் சிவப்புப் பாதங்களும் சிவப்பு ஆடு சதைகளும் முகங்களும் வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றன. நாலு திண்ணைகளில் சீட்டாட்டம். தெருவெல்லாம் சலவை வேஷ்டி. நாலு மூலைத் தாச்சி பாய்கிற குளுவான் இரைச்சல்கள்.

“மணலூரார் கலியாணம்னா கலியாணம்தான்” - சாமநாதுவே சொல்லிக்கொண்டார். அவர் குடும்பம் ஊரே இல்லை. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (புரோகிதப்) பிழைப்புக்காக மணலூரை விட்டு இங்கு குடியேறி, ஒரு (அக்ரஹாரத்து) ஓரத்தில் ஒரு குச்சில் நுழைந்தது. இப்போது தெரு நடுவில் பக்கம் பக்கமாக இரண்டு மூன்று கட்டு வீடுகளில் சொந்த இடம் பிடித்துவிட்டது. மணலூர்ப் பட்டம் போகவில்லை. உள்ளூரான்களை எகிறி மிஞ்ச வந்த இந்த நிலை சாமநாதுவின் பார்வையிலும் நடையிலும் இந்தக் கணம் எப்படித் தெறிக்காமல் போகும்? உள்ளூர், வந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும்.

அவர் வீடு, சுப்பராயன் வீடு இரண்டும் அண்ணன் தம்பியாக நிற்கின்றன. இரண்டு வாசல்களையும் அடைத்து பந்தல், திண்ணையெல்லாம் புது வேட்டிக் கூட்டம். உள்ளே கூடத்தில் பூ, பிச்சாணா, குழந்தைகள் இரைச்சல், ட்ரங்குகள்.

தாண்டிக்கொண்டு உள்ளே போனார். வேட்டியைக் கட்டிக்கொண்டார். கொல்லைக்குப் போய் காலை அலம்பி வந்து ஜபத்திற்கு உட்கார்ந்தார். முன்பெல்லாம் அறையின் நான்கு சுவர்களிலும் கிருஷ்ணன், ராமன், பிள்ளையார் என்று வரிசையாகப் படங்கள் மாட்டியிருக்கும். இப்போது ராமனும் கிருஷ்ணனும் பிள்ளையாரும் பூஜை அலமாரிக்குள் மட்டும் இருந்தார்கள். சுவர்களில் மாது எழுதின படங்களாக மாட்டியிருக்கின்றன.

மாது - அவருடைய மூன்றாவது பையன். கலியாணத்திற்கு வரவில்லை. சுப்பராயன் பெண்கள் பிள்ளைகள் என்ற எத்தனை கலியாணத்திற்குத்தான் வருவான்?

“அப்பா!”

கூப்பிட்டது அவர் பெண்தான். நார்மடியும் முக்காடுமாக நின்ற பெண்.

“மாப்பிள்ளையை அழைச்சு மாலை மாத்தப் போறா. பரதேசக கோலம் புறப்படப் போறது. போங்களேன். நாளைக்கு ஜபம் பண்ணிக்கலாமே.”

“சரி, சரி - வரேன் போ.”

அவள் ஏறிட்டுப் பார்த்தாள் அவரை. குழப்பம்.

“போயேன். அதான் (நான் இதோ) வரேன்னேனே... இதான் வேலை” கடைசி வார்த்தைகள். அவள் காதில் விழவில்லை.

முண்டனம் செய்த தலை. முப்பத்தோரு வயது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது.

”போன்னா போயேன். வரேன்.”

அவள் நகர்ந்தாள் - கதவை லேசாக சாத்திக்கொண்டு. அவர் கழுத்துக்குள் அனலாகச் சுடுகிறது.

சுற்றும்முற்றும் பார்த்தார். மாது வரைந்த படங்கள்.  கூர்ந்து பார்த்தார். சிரிப்பு வருகிறது. ஒரு படம் முழுதும் வெறும் முழங்கால். அதில் ஒரு கண். கண்ணில் ஒரு சீப்பு செருகியிருக்கிறது. இன்னொன்று பெண்பிள்ளை மாதிரி இருக்கிறது. ஒரு கால் பன்றிக்கால். வயிற்றைக் கிழித்துக் காட்டுகிறாள். உள்ளே நாலு கத்தி - ஒரு பால் டப்பா - ஒரு சுருட்டின சிசு. இன்னொன்று - தாமரைப் பூ - அதன்மேல் ஒரு செருப்பு. பாதிச் செருப்பில் ஒரு மீசை...

என்ன இதெல்லாம்! திகைப்பூண்டு மிதித்தாற்போல மனம் ஒடுங்கிப் பார்த்துக்கொண்டே நின்றார். கால் வலிக்கிறது. எனக்குக்கூடவா?

மேளச்சத்தம்.

”அப்பா, கூப்பிடுறாப்பா?” - நார்மடித் தலை எட்டிப் பார்த்தது. சிறிசு முகம்.

“இதோ.”

சாமநாது வெளியே போனார்.

“சித்தப்பா, எங்க போய்ட்டேள்?”

சுப்பராயன் குரல். மூச்சு வாங்குகிற குரல், கூனல் முதுகு.

மாலை மாற்றுகிறார்கள் - பெண்ணும் பிள்ளையும். அதையும் ஊஞ்சலையும் பார்த்தால், பார்வதி பரமேச்வரனை, லக்ஷ்மி நாராயணனைப் பார்க்கிற புண்யமாம். ஊரிலிருக்கிற விதவைகள்கூட மூலை முடுக்கெல்லாம் வந்து நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பல். ஒடிந்த பல், அழுக்கிடுக்குப் பல், தேய்ந்த பல், விதவைப் பல், பொக்கைப் பல், சமையற்காரன் கூட வந்து நிற்கிறான்.

“கண்ணூஞ்சலாடி நின்றார்....”

நாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்த ‘ஊஞ்சலை’!

சாமநாதனுக்கு மூச்சு முட்டிற்று. மெதுவாக நகர்ந்தார். வியர்வை சுடுகிறது. காற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். கூடத்தில் ஈ, காக்காய் இல்லை. கொல்லைக்கட்டு வாசற்படி தாண்டி கடைசிக்கட்டு. அங்கும் யாருமில்லை. கோட்டையடுப்புகள் மொலாமொலா என்று எரிகின்றன. கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிந்தது. தவலை தவலையாகக் கொதிக்கிறது. சாக்கு மறைவில் எண்ணெய்ப் பாடத்தோலும் அழுக்குப் பூணூலுமாக ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிறான். வேறு ஒரு பிராணி இல்லை. பார்வதி பரமேச்வராள் மாலை மாற்றுகிற காட்சியில் இருக்கிறான்கள்.

கோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு - மேல் வயிறளவு உயரம் பாயசம்  மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. எப்படித்தான் தூக்கி மேடைமீது வைத்தான்களோ? மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராகத் தூக்கினால்தான் முடியும். ஐந்நூறு அறுநூறு பெயர் குடிக்கிற பாயசம்.

நான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்.

சாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார். ப்பூ - இவ்வளவுதானே. அடுத்தநொடி, வயிறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்துவிட்டது. பாயாசம் சாக்கடையில் ஓடிற்று.

வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிற பயல் ஓடிவந்தான்.

“தாத்தா தாத்தா!”

சாமநாதுவுக்கு முகம், தோலியெல்லாம் மணல் படர்ந்தது.

அரிவாள் மணையை எடுத்துண்டுன்னா வரான் பயல்!

கை கால் உதறல் - வாய் குழறிற்று.

“படவாக்களா, எங்கே போயிட்டேள் எல்லாரும் - இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்சவிட்டுவிட்டு. இத்தனை பாயாசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் - கிராதகன்களா! மூடக்கூடவா தட்டு இல்லே?”

ஒரு வேலைக்காரி ஓடிவந்தாள்.

”என்னா பெரியசாமி!”

“ஆமாண்டி - பெரியசாமி பார்க்காட்டா, பெருச்சாளி முழுகின பாயசம்தான் கிடைச்சிருக்கும். போங்கோ, எல்லாரும் மாலை போட்டுண்டு ஊஞ்சலாடுங்கோ..?”

இன்னும் நாலைந்து பேர் ஓடிவந்தார்கள்.

நார்மடியும் முக்காடுமாக அந்தப் பெண்ணும் ஓடி வந்தாள்.

வேலைக்காரி அவளிடம் சொன்னாள்.

“எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டியை சாச்சேள்!”

அவள் உடல், பால்முகம் - எல்லாம் குரு படர்கிறது.

“போ அந்தாண்டை” என்று ஒரு கத்தல். “நான் இல்லாட்டா இப்ப எலி பாஷாணம்தான் கிடைச்சிருக்கும். பாயசம் கிடைச்சிருக்காது.”

பெண் அவரை முள்ளாகப் பார்த்தாள். கண்ணில் முள்  மண்டுமோ?

சாமநாதுவுக்கு அந்தப் புதரைப் பார்க்க முடியவில்லை. தலையைத் திருப்பிக்கொண்டு, “எங்க அந்த சமையக்கார படவா?” என்று கூடத்தைப் பார்க்கப் பாய்ந்தார்.

- பெ பெ பே பே
பே பெ பே பே எ -

ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.

வாலாம்பாள் பாடுகிற மாதிரியிருந்தது.

காக்காய் பார்லிமெண்ட் - மகாகவி பாரதியார்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண்  காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். “போனால் போகட்டும். ஐயோ, பாவம்” என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

“இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்’’ என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கிவிடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலேகூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

“நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்:

“ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது. அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக் காகம் சொல்லுகிறது:

“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது” என்று சொல்லிற்று.

அப்பொழுது ஒரு அண்டங் காக்கை எழுந்து: “கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்” என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

19/10/2010

சந்திரிகையின் கதை - மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்

தொல்காப்பியரின் வெற்றி - கி.வா.ஜகந்நாதன்

தென்னாட்டிற்கு அகத்திய முனிவர் புறப்பட்டார்

தாம் போகிற நாட்டிலே வாழ்வதற்கு அந்த நாட்டு மொழி தெரிய வேண்டாமா? சிவபெருமானிடத்திலே தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். போகிற இடத்தில் காடும் மலையும் அதிகமாக இருப்பதால் தமக்குத் தெரிந்தவர்கள் வேண்டும். 'குடியும் குடித்தனமு'மாக வாழ்வதற்கு வேண்டிய சௌகரியங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். இதற்காக அவர் ' கங்கையாரிடத்தில் காவிரியாரையும், யமதக்கினியாரிடத்தில் திருணதூமாக்கினியாரையும், புலத்தியனாரிடத்தில் உலோபமுத்திரையாரையும், துவாரகைக்குப் போய் பதினெட்டு அரசர்களையும், பதினெண் கோடி வேளிர்களையும் அருவாளரையும் பிறரையும்' பெற்றுப் புறப்பட்டார், ஜமதக்கினியின் புதல்வர் திருணதூமாக்கினி அகத்தியருக்கு மாணாக்கரானார்.

போகிற இடத்தில் தாம் போய் நிலைத்த பிறகு மனைவியை, அழைத்து வரவேண்டும் என்பது அகத்தியர் எண்ணம்போலும். புலத்தியர் கன்னிகாதானம் செய்து கொடுக்க மணந்துகொண்ட அந்த லோபா முத்திரையை அங்கேயே விட்டுவிட்டு, "பிறகு அழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லி வந்து விட்டார்.

தென்னாட்டுக்கு வந்து அங்குள்ளவர்களை யெல்லாம் வசப்படுத்திப் பொதிய மலையில் தம்முடைய ஆசிரமத்தை அழகாக அமைத்துக்கொண்டார், அகத்தியர். அந்த ஆசிரமத்தை அமைத்துக்கொள்வதற்கு அவர் எவ்வளவோ சிரமப்பட்டார். தென்னாட்டில் இராவணனுடைய தலைமையின் கீழ் அட்டஹாஸம் செய்துவந்த ராட்சசர்களை அடக்கிக் காட்டையெல்யாம் அழித்து நாடாக்கி தம்மோடு அழைத்து வந்தவர்களை அங்கங்கே நிறுவி ஒருவாறு அமைதி பெற்றார்.

நாட்டைப் பிடித்தார்; மலையையும் கைக்கொண்டார்; ஆசிரமமும் கட்டியாயிற்று. வீட்டுக்கு விளக்கு, தர்மபத்தினியாயிற்றே? தம்முடைய பத்தினியாகிய லோபாமுத்திரையின் நினைவு முனிவருக்கு வந்தது. 'அடடா! எத்தனை காலம் மறந்து இருந்து விட்டோம்! கல்யாணம் பண்ணிக்கொண்ட அன்று பார்த்ததுதான்!' என்று ஏங்கினார்.

அவர் மாணாக்கராகிய திருணதூமாக்கினியார் காப்பியக் குடியில் வந்தவர். அவரே தொல்காப்பியர். அகத்தியர் அவரை அழைத்தார்;"புலத்தியரிடத்தில்போய் லோபாமுத்திரையை அழைத்து வா" என்று ஆணையிட்டார். "உத்தரவுப்படி செய்கிறேன்" என்று தொல்காப்பியர் புறப்பட்டார். அதற்குள் அகத்தியருக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ? "நீ எப்படி அவளை அழைத்து வருவாய்?" என்று கேட்டார்.

பாவம்! தவமும் கல்வியும் நிறைந்த அந்தப் பிரம்மசாரிக்கு உலக இயல் தெரியாது. யானையா, குதிரையா, ரதமா, என்ன இருக்கிறது அழைத்துவர? தம்முடைய குருபத்தினிக்குத் தாமே வாகனமாக ...... ......ல் (text missing) அவர் உதவுவார். இந்த யோசனை அகத்தியர் மனத்தில் உண்டாயிற்று. 'இந்தக் கட்டழகுக் காளை, விரைவில் வரவேண்டுமென்று நினைத்து அவளைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்தால் அவள் பிரஷ்டையாய் விடுவாளே!' என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது. தம் ஆணைக்கு அடங்கிய மாணாக்கனது தூய்மையை அவர் அறிந்தாலும் பெண்களின் சஞ்சல புத்தியை நினைந்து கலங்கினார். "அவளருகில் செல்லாமல் நாலு கோல் தூரம் இடை விட்டு அவளை அழைத்து வா" என்று கட்டளையிட்டுத் தொல்காப்பியரை அனுப்பிவிட்டுத் தம் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார் முனிவர்.

உத்தம மாணாக்கராகிய தொல்காப்பியர் புலத்திய முனிவரிடம் சென்று தம் ஆசிரியரது கட்டளையைத் தெரிவித்து லோபாமுத்திரையை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். நாலு கோல் நீளம் இடை விட்டே அழைத்து வந்தார். காடும் மலையும் தாண்டிச் சோழ நாடும் கடந்து பாண்டி நாட்டுள்ளே புகுந்தார். பாண்டி நாட்டினிடையில் வையையைற்றில் இறங்கி அக்கரைக்கு வரும் சமயத்தில் திடீரென்று வெள்ளம் வந்துவிட்டது. தொல்காப்பியர் எப்படியோ கரையேறிவிட்டார். லோபாமுத்திரையால் ஏற முடியவில்லை. வெள்ளம் இழுத்துக்கொண்டு போயிற்று.

"ஐயோ, என்னைக் காப்பாற்று!" என்று லோபாமுத்திரை கதறினாள்.

தொல்காப்பியருக்கு அகத்தியர் இட்ட கட்டளை *நினைவுக்கு* வந்தது. 'இவரை நான் எப்படிக் கரையேற்றுவது! "நாலுகோல் தூரம் இடை விட்டு அழைத்து வரவேண்டும்" என்று ஆசிரியர் கட்டளையிட்டாரே' என்று மயங்கினார்.ஆனாலும் ஆபத்து வந்தபோது அதையெல்லாம் பார்க்கமுடியுமா?

லோபா முத்திரை ஆற்றோடு போய்க்கொண்டிருந்தாள். "அட பாவி! என்னை வந்து எடுக்கக் கூடாதா?" என்று அவள் அழுதாள். "தாயே, என்ன செய்வேன்!" என்று இரக்கத்தோடு தொல்காப்பியர் வருந்தினார். 'மரம் மாதிரி நிற்கிறாயே; கரையில் இழுத்துவிடத் தெரியாதா?' என்று அவர் நெஞ்சமே கேட்டது.

லோபாமுத்திரை நீரில் மூழ்கிக்கொண்டிருந்தாள். இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்துவிட்டாள். கண் முன்னே ஒருவர் உயிர்விடும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்பதா? இதைவிட, அமிழ்த்திக் கொலை செய்துவிடலாமே!

'ஆபத்துக்குப் பாவம் இல்லை' என்று துணிந்து விட்டார் தொல்காப்பியர். கரையில் நின்ற ஒரு மூங்கிலை மளுக்கென்று ஒடித்தார். அதை நதியில் நீட்டினார்.லோபாமுத்திரை அதைப் பற்றிக்கொண்டு தட்டுத் தடுமாறிக் கரைக்கு வந்து சேர்ந்தாள். மூங்கிற் கோலை முறித்து நீட்டும் எண்ணம் மின்னல்போல ஒரு கணத்தில் தொல்காப்பியருக்குத் தோன்றியது. 'நாம் குருநாதனுடைய ஆணையை முற்றும் மீறவில்லை. நாலு கோல் தூரம் இல்லாவிட்டாலும் ஒரு கோல் தூரத்துக்குக் குறையவில்லை' என்று சமாதானம் செய்துகொண்டார்.

குருபத்தினியை வெள்ளத்திலிருந்து கரையேற்றாமற் போயிருந்தால் முனிவர் பிரானிடம் சென்று, 'உங்கள் பத்தினியை வைகைக்கு இரையாக்கிவந்தேன்' என்று சொல்லி நிற்பதா? தம்முடைய பத்தினியை இறவாமல் காப்பாற்றியதற்கு அவர் தம் மாணாக்கரைப் பாராட்டுவாரே யன்றிக் குறை கூறுவாரா? இவ்வளவு காலம் தொல்காப்பியரோடு பழகி அவருடைய இயல்பு முனிவருக்குத் தெரியாதா?- இந்த எண்ணங்கள் ஒன்றன்மேல் ஒன்று தோன்றித் தொல்காப்பியருக்குத் தைரியமூட்டின. ஆனாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருக்கத்தான் இருந்தது.

மனைவியையும் மாணாக்கரையும் கண்ட முனிவருக்கு உண்டான மகிழ்ச்சி வைகை வெள்ளத்தை விட அதிகமாக இருந்தது. "சௌக்கியமாக வந்து சேர்ந்தாயா? வழியில் ஒரு குறையும் நேரவில்லையே!" என்று தம் மனைவியைப் பார்த்துச் சாதாரணமாகக் கேட்டார் முனிவர். "நான் பிழைத்தது புனர்ஜன்மம். உங்கள் சிஷ்யன் இல்லாவிட்டால் ஆற்றோடே போயிருக்க வேண்டியதுதான்"

அகத்தியருக்குப் பகீரென்றது. "என்ன செய்தி?" என்று ஆவலோடு கேட்டார். லோபா முத்திரை விஷயத்தைச் சொன்னாள்.

அந்தக் குறுமுனிவருடைய சந்தேகக் கண்களுக்கு எல்லாம் தந்திரமாகப் பட்டது. 'வெள்ளம் வந்தால், இவளுக்கு நீந்தத் தெரியாதா? அல்லது நீரோட்டத்தின் போக்கிலே போய்க் கரையேற முடியாதா? தொல்காப்பியன் இவளைத் தொடவில்லை என்பது என்ன நிச்சயம்? நாம் இவனை அனுப்பியது தவறு' என்றெல்லாம் அவர் எண்ணலானார்.

தம்முடைய மனைவி ஒரு கண்டத்திலிருந்து தப்பி வந்தாள் என்பதாக அவர் எண்ணவில்லை. தம் மாணாக்கன் தமக்குத் துரோகம் செய்துவிட்டதாகவே

"அடே,பாபி! நான் நாலு கோல் இடம் விட்டு அழைத்துவரச் சொன்னேனே! நீ ஏன் இப்படிச் செய்தாய்?" என்று கடுங் கோபத்தோடு உறுமினார் அகத்தியர்.

"ஸ்வாமி, நான் என்ன செய்வேன்! ஆபத்துக் காலத்திலே ஆசாரம் பார்க்கலாமா? இவரை வைகையிலே விட்டுவிட்டு வந்து தேவரீர் முகத்தில் எப்படி விழிப்பேன்! நான் சிறிது நேரம் ஒன்றும் செய்யாமல் தான் இருந்தேன். இவர் என் கண்முன் மூழ்கி உயிர் துறக்க நான் பார்த்திருக்கலாமா? எவ்வளவு கடின சித்தமுடையவனானாலும் அந்தச் சமயத்தில் சும்மா இருப்பானா? நான் மூங்கிற்கோலை நீட்டிக் கரையில் இழுத்துவிட்டேன். வேறு என்ன செய்வது?"

இந்தக் கதையெல்லாம் முழுப் புரட்டென்றே அகத்தியர் தீர்மானித்துக்கொண்டார். ருத்திர மூர்த்தியைப் போலக் கோபம் மூள உடல் துடிக்க எழுந்தார். "நீங்கள் பாபிகள்; பிடியுங்கள் சாபத்தை: உங்களூக்குச் சுவர்க்க பதவி இல்லாமற் போகக்கடவது!"என்று இடிபோலக் குமுறினார்.

தொல்காப்பியர் என்ன செய்வார்! லோபா முத்திரைக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாம் நன்மையே செய்திருக்கவும் தம் ஆசிரியர் அதை உணராமல் முனிந்ததைக் கண்ட தொல்காப்பியருக்கும் கோபம் மூண்டது. "நாங்கள் ஒரு பாவமும் அறியோம். எங்களை அநாவசியமாகக் கோபித்த எம் பெருமானுக்கும் சுவர்க்க பதவி இல்லாமற் போகட்டும்!" என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.

தொல்காப்பியர் அகத்தியரைப் பிரிந்து வந்தாலும் தமிழைப் பிரியவில்லை. அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுப்பது. அது பரந்து விரிந்து கிடந்தமையாலும் முதல் இலக்கணமாகையாலும் அதில் சில விஷயங்கள் ஒன்றனோடு ஒன்று கலந்திருந்தன. தொல்காப்பியர் தம்முடைய ஆசிரியரைப் பிரிந்தும் அவர் திருவடியை மறவாமல் தியானித்துத் தமிழ் நூல்களை ஆராய்ந்துவந்தார். இயற்றமிழுக்குத் தனியே ஓர் இலக்கணம் செய்யவேண்டும் என்ற கருத்து அவருக்கு உண்டாயிற்று. பல நாள் சிந்தித்து இயற்றலானார். அறிவும் அன்பும் உடைய அவர் கருத்து நிறைவேறியது. தமிழ் மொழியின் இலக்கணத்தை ஒழுங்காகத் திரட்டி அமைத்த, 'தொல்காப்பியம்' என்னும் பேரிலக்கணத்தை அவர் இயற்றி முடித்தார்.

அக்காலத்தில் பாண்டிநாட்டில் பாண்டியன் மாகீர்த்தி என்பவன் அரசாண்டு வந்தான். தொல்காப்பியர் அக்கால வழக்கப்படி, தொல்காப்பியத்தை அரசன் அவைக்களத்தில் பல புலவர் முன்னிலையில் அரங்கேற்ற எண்ணினார். அதனை அறிந்த அரசன் அதற்கு உரியவற்றை ஏற்பாடு செய்தான். அதங்கோடு என்ற ஊரில் ஒரு சிறந்த புலவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்தணர். வேத சாஸ்திரங்களிலும் தமிழிலும் தேர்ந்தவர் யாரும் அப் பெரியாருடைய சொந்தப் பெயரைச் சொல்லுவதில்லை.'அதங்கோட்டு ஆசான்' என்றே சொல்லிவந்தனர். அரங்கேற்றுகையில் அவரையே சபைத்தலைவராக இருக்கும்படி அரசன் கேட்டுக்கொண்டான்.

தொல்காப்பிய அரங்கேற்ற விழா நெருங்கியது. அரசன் அகத்திய முனிவருக்கும் செய்தி அனுப்பினான். சமாசாரத்தைக் கேட்டாரோ இல்லையோ, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற்போல அவர் கோபங்கொண்டார். ' வஞ்சகன், துரோகி, என் ஆணையை மீறியதோடு, நான் செய்த இலக்கணத்துக்கு எதிரிலக்கணம் வேறு செய்துவிட்டானா?' என்று படபடத்தார்; பல்லை நெறித்தார்; தரையில் ஓங்கி அறைந்தார். 'அதங்கோட்டாசானா அதைக் கேட்கப்போகிறவன்? பார்க்கலாம் அவன் கேட்பதை! இப்போதே சொல்லி அனுப்புகிறேன்' என்று எழுந்தார்.

அகத்தியரிடமிருந்து ஆள் வந்ததென்றால் அதங்கோட்டாசிரியர் நிற்பாரா? நேரே பொதியமலைக்குப் போய் அகத்தியரைத் தொழுது வணங்கினார். "முனிவர்பிரானே, என்னை அழைத்தது எதற்கு?" என்று கைகட்டி வாய் புதைத்து நின்றார்.

"அந்தத் தொல்காப்பியன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக்கூடாது. அவன் மாகா பாதகன், குருத் துரோகி!"

'இதைச் சொல்லவா இவ்வளவு அவசரமாக அழைத்தார்!' என்று அதங்கோட்டாசிரியர் வியந்தார்; அவர் நூலை அரங்கேற்ற வேண்டும் என்று பாண்டியன் உத்தரவு இட்டிருக்கிறானே!" என்றார்

பாண்டியன் வேண்டிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தொல்காப்பியர் எத்தனை தடவை அவரிடம் வந்து பணிவோடு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்! அவர்பேச்சிலே எத்தனை பணிவு! நடையிலே எவ்வளவு அடக்கம்! தமிழிலே எவ்வளவு அன்பு! அவருடைய மதிநுட்பந்தான் எவ்வளவு அருமையானது! தொல்காப்பியருடைய இயல்பிலும் அறிவிலும் ஈடுபட்டு அவருடைய வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காகவே தொல்காப்பிய அரங்கேற்றத்தில் தலைமை வகித்து அதைக்கேட்க அதங்கோட்டாசிரியர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அகத்தியர் இப்படிச் சொன்னால் அவர் என்ன செய்வார்?

"அவர் பேரில்என்ன குற்றம், சுவாமி?"

"அதெல்லாம் உனக்கு என்ன? அவன் என்னிடம் வருவதே இல்லை. என்னிடம் பாடம் கேட்டுவிட்டு என் இலக்கணம் இருக்கும்போது அவன் ஓர் இலக்கணம் இயற்றலாமா?"

"முனிவர் பிரானே, அடியேன் சொல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. வளருகிற பாஷைக்கு வளர வளர இலக்கணங்கள் உண்டாவதில் என்ன பிழை? தேவரீருடைய இலக்கணம் எல்லாவற்றிற்கும் அடிநிலையாக இருக்குமே.தொல்காப்பியர் நன்றாகக் கற்றவர். அவருடைய முயற்சியைப் பாராட்ட வேண்டுவது நம் கடமையல்லவா?"

அகத்தியருக்கு மேலும் மேலும் கோபம் வந்ததே யொழிட அதங்கோட்டாசிரியர் வார்த்தை ஒன்றும் அவர் காதில் ஏறவில்லை;"இந்த நியாயமெல்லாம் இருக்கட்டும்.அந்தக் கயவன் செய்த இலக்கணத்தை நீ கேட்கக் கூடாது."

இந்தப் பிடிவாதத்துக்கு மருந்து எங்கே தேடுவது? "சுவாமி, அடியேனைத் தர்ம சங்கடமான நிலையில் மாட்டிவிடக் கூடாது. நான் கேட்பதாக ஒப்புக் கொண்டுவிட்டேன். இனிவார்த்தை பிசகக்கூடாது."

"நான் சொல்வதை நீ கேட்க மாட்டாயா?"

"எப்படிச் செய்தால் நான் அபவாதத்துக்கு ஆளாகாமல் இருக்க முடியுமோ அப்படிச் செய்யச் ....... .......

"நீ கேளாமல் இருக்க முடியாதா?"

"முடியாதே"

அகத்திய முனிவருடைய கோபம் மேலே மேலே படர்ந்ததே ஒழியத் தணியவில்லை. அவருக்குப் பேச வாய் எழவில்லை.அதங்கோட்டாசிரியரும் மௌனமாக இருந்தார். முனிவரது முகத்தைப் பார்த்தால் அங்கேயே அவரைச் சுட்டுச் சாம்பலாக்கி விடுவார் போல இருந்தது. 'இதற்கு என்ன வழி?' என்று ஆசிரியர் யோசிக்கலானார். சிறிது நேரம் கழிந்தது.

"சுவாமி, ஒரு வழி தோன்றுகிறது. கட்டளையிட்டால் விண்ணப்பித்துக் கொள்கிறேன்-" என்று மெல்ல ஆரம்பித்தார்.

முனிவர் இன்னும் கோபக் கடலில் திளைத்திருந்தார். "ஹூம்!" என்று கனைத்தார்.

"சொல்லட்டுமா?"

"சொல்"

"அரங்கேற்றத்தின்போது தொல்காப்பியத்தில் அங்கங்கே குற்றம் கண்டுபிடித்துக் கேள்வி கேட்கிறேன். பல பல கேள்விகள் கேட்டுத் தொல்காப்பியரைத் திணற வைக்கிறேன்."

அகத்தியர் இந்த வார்த்தைகளைக் கவனித்தார்; யோசித்தார்.

"நல்ல யோசனை! நாலு பேருக்கு நடுவில் அவன் முகத்தில் கரியைத் தீற்றி அனுப்புவது சரியான தண்டனை. நல்லது. உன் அறிவுக்கேற்ற தந்திரம். நல்ல காரியம்."

அகத்தியர் ஆனந்தக்கூத்தாடினார். தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் அடியோடு வீழ்த்தி விட்டோம் என்பது அவர் ஞாபகம்.

தொல்காப்பிய அரங்கேற்ற விழாவுக்குரிய நாள் வந்தது. பாண்டியன் சபையில் நடப்பதென்றால் சொல்ல வேண்டுமா? இடைச்சங்கப் புலவர்கள் எல்லோரும் கூடினர். இலக்கணம் வகுப்பதற்கு எவ்வளவோ திறமை வேண்டும். ஆயிரம் இலக்கியங்கள் எழுந்தால் ஓர் இலக்கணம் உண்டாகும். அவ்வளவு பெரிய காரியத்தைத் தொல்காப்பியர் சாதித்திருக்கிறார்.

பாண்டியன் மாகீர்த்தி உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு அருகே மற்றோர் உயர்ந்த இருக்கையில் அதங்கோட்டாசிரியர் எழுந்தருளியிருக்கிறார். எங்கும் புலவர் கூட்டம்; தமிழ் பயில்வார் தலைகள்.

அரங்கேற்றம் முறைப்படி தொடங்கியது. கற்றுச் சொல்லி ஒருவன் தொல்காப்பியச் சூத்திரத்தை வாசித்தான். தொல்காப்பியர் பணிவோடு உரை கூறலானார். அவ்வளவு பேரும் ஒலியடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு சூத்திரம் முடிந்தது. அதங்கோட்டாசிரியர் மெல்ல அந்தச் சூத்திரத்தில் ஒரு தடையை எழுப்பினார்.

புலவர்களெல்லாம் திடுக்கிட்டனர்; "இதென்ன? ஆரம்பிக்கும் போதே இப்படிக் கண்டனம் செய்கிறாரே!"என்று அஞ்சினர். ஆனால் அடுத்த கணத்தில் தொல்காப்பியர் தக்க விடையைக் கூறவே, சபையினர் தம்மை அறியாமலே ஆரவாரம் செய்தனர்.

அந்த முதற் சூத்திரத்தில் ஆரம்பித்த தடையை அதங்கோட்டாசிரியர் நிறுத்தவே இல்லை. மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனார். அவற்றுக்கு உடனுக்குடன் தக்க விடைகளைச் சொல்லி வந்தார் தொல்காப்பியர். அந்த வினாவிடைப் போரில் தொல்காப்பியருடைய அறிவுத் திறமை பின்னும் ஒளி பெற்றது. சிங்கக்குட்டி துள்ளி எழுவது போல அவருடைய விடைகள் பளீர் பளீரென்று அவர் வாயிலிருந்து எழுந்தன. அதங்கோட்டாசிரியர் அவர் கூறும் விடைகளைக் கேட்டு அகத்துள்ளே மகிழ்ச்சி பூத்தார். அவர் கேட்கும் கேள்விகள் அகத்தியருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தானே? அறிவின் ஒளியைக்கண்டு போற்றுவதில் உண்மை அறிவாளியாகிய அந்தப் பெரியார் தாழ்ந்தவர் அல்லவே?

ஒரு நாள், இரண்டு நாள், பல நாட்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. தமிழின் இலக்கணத்தை மூன்று அதிகாரங்களாகத் தொல்காப்பியர் வகுத்துச் சொல்லியிருந்தார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற அந்த மூன்றுள் ஒவ்வொன்றிலும் ஒன்பது ஒன்பது இயல்களை அமைத்திருந்தார். எழுத்ததிகாரம் அரங்கேற்றி முடிந்தது; அதன் ஒழுங்கான அமைப்பு, புலவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சொல்லதிகாரம் நடந்தது; அதிலுள்ள முறை வைப்பும், வகையும் அறிஞர்களுக்கு வியப்பை உண்டாக்கின. பொருளதிகார அரங்கேற்றம் தொடங்கியது. தமிழ் மொழிக்கே சிறப்பைத் தரும் பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியர் எப்படி இயற்றியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் புலவர்களுக் கெல்லாம் மிகுதியான ஆர்வம் இருந்தது. அகப்பொருளையும் புறப்பொருளையும் பற்றி விரிவாக இலக்கணம் வகுத்திருந்தார். தமிழ்ச் செய்யுளின் பரப்பை அளவிட்டுச் செய்யுளியலைச் செய்திருந்தார். உவம இயல், மெய்ப்பாட்டியல் முதலியவற்றில் மிகவும் நுட்பமாக உவமானத்தின் வகைகளையும் சுவைகளையும் மெய்ப்பாடுகளையும் உணர்த்தியிருந்தார்.

இவ்வளவையும் கேட்டவர்கள், 'இவர் தெய்வப் பிறப்பு' என்று பாராட்டினர். 'நூல் இயற்றியது பெரிதன்று; இதை இங்கே அரங்கேற்றியதுதான் பெரிது. இந்த ஆசிரியர் கூறும் கண்டனங்களுக்குத் தக்க சமாதானஙகளைத் தைரியமாகச் சொன்னாரே; இவருக்கு எவ்வளவு அறிவுத் திறன் இருக்கவேண்டும்!' 'விஷயம் கருத்தில் தெளிவாகப் பதிந்திருக்கும்போது யார் எத்தனை கேள்வி கேட்டால் என்ன? மலையைப் போல இருக்கும் இவர் அறிவை எந்தக் காற்றால் அசைக்க முடியும்?' என்பன போலப் பல பல வகையாகத் தொல்காப்பியருக்குப் புகழுரைகள் எழுந்தன.

நல்ல வேளையாக அரங்கேற்றமே முடிந்தது.அதங்கோட்டாசிரியர் தொல்காப்பியரை வாயாரப் பாராட்டினர். "இந்த நூல் தமிழுக்கு ஒரு வரம்பு. சங்கப் புலவருக்கு இதுவே இலக்கணமாக இருக்கும் தகுதியுடையது. தொல்காப்பியர் ஆசிரியரென்ற சிறப்புப் பெயர் பெறும் தகுதி உடையவர்"என்று உள்ளங்குளிர்ந்து கூறினார். பாண்டியன் மாகீர்த்தி, "என்னுடைய அவையில் அரங்கேற்றும் பேறு எனக்கு இருந்தது. என் பெயர் மாகீர்த்தி என்பது தங்கள் நூலினால்தான் பொருளுடையதாயிற்று. இனி ஆசிரியர் தொல்காப்பியர் என்றே தங்களை உலகம் வழங்கும்." என்று வாழ்த்திப் பரிசில்களை அளித்தான்.

அன்று முதல் திருணதூமாக்கினி,ஆசிரியர் தொல்காப்பியர் ஆனார்.

இந்த அரங்கேற்றம் நிறைவேறின போது தொல்காப்பியத்திற்கு ஒரு புலவர் சிறப்புப் பாயிரம் பாடினார். அதன் பிற்பகுதி வருமாறு:

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவில் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே."

[மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த, அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணமும் மயங்கா முறையால் செய்கின்றமையால் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி, கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியிலுள்ளோனெனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை உடையோன். -நச்சினார்க்கினியர் உரை.]

- - - - - - - - - - -

சில குறிப்புகள்

இந்த வரலாற்றுக்கு ஆதாரம் தொல்காப்பியப் பாயிரத்துக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரைப்பகுதி. அது வருமாறு:

'பாண்டியன் மாகீர்த்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானாதலின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவு மிக்கிருத்தலின் அவர்கள் கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற்கெல்லாம் குற்றந்தீர விடைகூறுதலின் அரில்தப என்றார்.

அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, "நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேளற்க" என்று கூறுதலானும், தொல்காப்பியரும் பல்காலும் சென்று "யான் செய்த நூலை நீர் கேட்டல் வேண்டும்" என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்நூற்குக் குற்றங்காட்டி விடுவலெனக் கருதி, அவர் கூறிய கடாவிற்கெல்லாம் விடை கூறுதலின் "அரில் தபத் தெரிந்து" என்றார்.

'அவர் கேளற்க என்றற்குக் காரணம் என்னையெனின், தேவரெல்லாங் கூடி யாம் சேர இருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரிய ரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிர் உள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி, "நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக," எனக் கூற, அவரும், "எம்பெருமாட்டியை எங்ஙனம் கொண்டு வருவல்?" என்றார்க்கு, "முன்னாகப் பின்னாக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டு வருக" என, அவரும் அங்ஙனம் கொண்டு வருவழி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக்கொண்டுபோக, தொல்காப்பியனார் கட்டளை இறந்து சென்று ஓர் வெதிர்ங்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி ஏறினார். அது குற்றமென்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனாரையும், "சுவர்க்கம் புகாப்பிர்" எனச் சபித்தார்;

"யாங்கள் ஒரு குற்றமும் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானும் சுவர்க்கம் புகாப்பிர்" என அவர் அகத்தியனாரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேளற்க வென்றாரென்க.'

செவ்வாழை - அறிஞர் அண்ணா

செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும் தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டுவிட்டது.

செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப் பிள்ளை போல் வளர்த்து வந்தான். இருட்டுகிற நேரம் வீடு திரும்பினாலும் கூட, வயலிலே அவன் பட்ட கஷ்டத்தைக் கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று, செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா என்று கவனித்து விட்டுத்தான், தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்து வந்தான். கன்று வளர வளர, அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும் போதும், கல் மண்ணைக் கிளறிவிடும் போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். கரியனிடம் - அவனுடைய முதல் பையன் - காட்டியதைவிட அதிகமான அன்பும் அக்கறையும் காட்டுகிறாரே என்று ஆச்சரியம், சற்றுப் பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு.

"குப்பி! ஏதாச்சும் மாடுகீடு வந்து வாழையை மிதிச்சிடப் போகுது. ஜாக்ரதையாக் கவனிச்சுக்கோ. அருமையான கன்று-ஆமாம், செவ்வாழைன்னா சாமான்யமில்லே. குலை, எம்மாம் பெரிசா இருக்கும் தெரியுமோ? பழம், வீச்சு வீச்சாகவும் இருக்கும், உருண்டையாகவும் இருக்கும்-ரொம்ப ருசி-பழத்தைக் கண்ணாலே பார்த்தாக் கூடப் போதும்; பசியாறிப் போகும்" என்று குப்பியிடம் பெருமையாகப் பேசுவான் செங்கோடன்.

அப்பா சொல்லுவதை நாலு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள் - அது மட்டுமா - பக்கத்துக் குடிசை - எதிர்க் குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடமெல்லாம், இதே பெருமையைத்தான் பேசிக்கொள்வார்கள். உழவர் வீட்டுப் பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக்கொள்ள முடியும் - அப்பா வாங்கிய புதிய மோட்டரைப் பற்றியா, அம்மாவின் வைரத் தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா, எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான், அவர்களுக்கு, மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன், "செவ்வாழைக் குலை தள்ளியதும், ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்" என்று சொல்லுவான்.

"ஒண்ணுக்கூட எனக்குத் தரமாட்டாயாடா - நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும் - வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன்; கவனமிருக்கட்டும்"-என்று எதிர்க் குடிசை எல்லப்பன் கூறுவான்...

கரியனின் தங்கை, காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக்கொண்டே "உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு இரண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றவாது பையன் முத்து, "சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்து போகாதீங்க ஆமா - பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்து விடுவாங்களோ, யாரு கண்டாங்க" என்று சொல்லுவான் - வெறும் வேடிக்கைக்காக அல்ல - திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்து விடுவது என்று தீர்மானித்தே விட்டான்.

செங்கோடனின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை. உழைப்பு அதிகம் வயலில். பண்ணை மானேஜரின் ஆர்ப்பாட்டம் அதிகம். இவ்வளவையும் சகித்துக்கொள்வான் - செவ்வாழையைக் கண்டதும் சகலமும் மறந்துபோகும். குழந்தைகள் அழுதால், செவ்வாழையைக் காட்டித்தான் சமாதானப்படுத்துவான்! துஷ்டத்தனம் செய்கிற குழந்தையை மிரட்டவும் செவ்வாழையைத்தான் கவனப்படுத்துவான்!

குழந்தைகள், பிரியமாகச் சாப்பிடுவார்கள் செவ்வாழையை என்ற எண்ணம் செங்கோடனுக்கு. பண்ணை வீட்டுப் பிள்ளைகள் ஆப்பிள், திராட்சை தின்ன முடிகிறது - கரியனும் முத்துவும், எப்படி விலை உயர்ந்த அந்தப் பழங்களைப் பெற முடியும்? செவ்வாழையைத் தந்து தன் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணந்தான் செங்கோடனை, அந்தச் செவ்வாழைக் கன்றைச் செல்லமாக வளர்க்கும்படிச் செய்தது. உழவன் செங்கோடனிடம், எவ்வளவு பாடுபட்டாலும், குழந்தைகளுக்குப் பழமும், பட்சணமும், வாங்கித் தரக்கூடிய 'பணம்' எப்படிச் சேர முடியும்? கூலி, நெல், பாதி வயிற்றை நிரப்பவே உதவும் - குப்பியின் 'பாடு' குடும்பத்தின் பசியைப் போக்கக் கொஞ்சம் உதவும். இப்படிப் பிழைப்பு! பலனில் மிகப் பெரும் பகுதியோ, பண்ணைக்குச் சேர்ந்து விடுகிறது. இந்தச் 'செவ்வாழை' ஒன்றுதான் அவன் சொந்தமாக மொத்தமாக பலன் பெறுவதற்கு உதவக்கூடிய, உழைப்பு!

இதிலே பங்கு பெற பண்ணையார் குறுக்கிட முடியாதல்லவா? அவருக்காகப் பாடுபட்ட நேரம் போக, மிச்சமிருப்பதிலே, அலுத்துப் படுக்க வேண்டிய நேரத்திலே பாடுபட்டு, கண்ணைப் போல வளர்த்து வரும் செவ்வாழை! இதன் முழுப் பயனும் தன் குடும்பத்துக்கு! இது ஒன்றிலாவது தான் பட்ட பாட்டுக்கு உரிய பலனைத் தானே பெற முடிகிறதே என்று சந்தோஷம் செங்கோடனுக்கு.

இவ்வளவும் அவன் மனதிலே, தெளிவாகத் தோன்றிய கருத்துகள் அல்ல. புகைப்படலம் போல, அந்த எண்ணம் தோன்றும், மறையும் - செவ்வாழையைப் பார்க்கும்போது பூரிப்புடன் பெருமையும் அவன் அடைந்ததற்குக் காரணம் இந்த எண்ணந்தான்.

கன்று வளர்ந்தது கள்ளங்கபடமின்றி. செங்கோடனுக்குக் களிப்பும் வளர்ந்தது. செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே செவ்வாழை இருந்த இடந்தான்! மலரிடம் மங்கையருக்கும் தேனிடம் வண்டுகளுக்கும் ஏற்படும் பிரேமை போல, அந்தக் குழந்தைகளுக்குச் செவ்வாழையிடம் பாசம் ஏற்பட்டு விட்டது.

"இன்னும் ஒரு மாசத்திலே குலை தள்ளுமாப்பா?" கரியன் கேட்பான், ஆவலுடன் செங்கோடனை.

"இரண்டு மாசமாகும்டா கண்ணு" என்று செங்கோடன் பதிலளிப்பான்.

செவ்வாழை குலை தள்ளிற்று - செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையைப் பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப் பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய வைர மாலையைக் கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார்! செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைர மாலையைவிட விலை மதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும் சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமே 'அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று.

"எப்போது பழமாகும்?" என்று கேட்பாள் பெண்.

'எத்தனை நாளைக்கு மரத்திலேயே இருப்பது?' என்று கேட்பான் பையன்.

செங்கோடன், பக்குவமறிந்து குலையை வெட்டி, பதமாகப் பழுக்க வைத்துப் பிள்ளைகளுக்குத் தரவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். உழைப்பின் விளைவு! முழுப் பலனை நாம் பெறப் போகிறோம் - இடையே தரகர் இல்லை - முக்காலே மூன்று வீசம் பாகத்தைப் பறித்துக்கொள்ளும் முதலாளி இல்லை. உழைப்பு நம்முடையது என்றாலும் உடைமை பண்ணையாருடையது - அவர் எடுத்துக் கொண்டது போக மீதம் தானே தனக்கு என்று, வயலில் விளையும் செந்நெல்லைப் பற்றி எண்ண வேண்டும் - அதுதானே முறை! ஆனால் இந்தச் செவ்வாழை அப்படி அல்ல! உழைப்பும் உடைமையும் செங்கோடனுக்கே சொந்தம்.

இரண்டு நாளில், குலையை வெட்டிவிடத் தீர்மானித்தான் - பிள்ளைகள் துள்ளின சந்தோஷத்தால். மற்ற உழவர் வீட்டுப் பிள்ளைகளிடம் 'சேதி' பறந்தது - பழம் தர வேண்டும் என்று சொல்லி, அவலோ, கடலையோ, கிழங்கோ, மாம்பிஞ்சோ, எதை எதையோ, 'அச்சாரம்' கொடுத்தனர் பல குழந்தைகள் கரியனிடம்.

பாடுபட்டோம், பலனைப் பெறப் போகிறோம், இதிலே ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு ஈடு எதுவும் இல்லை. இதைப் போலவே, வயலிலும் நாம் பாடுபடுவது நமக்கு முழுப் பயன் அளிப்பதாக இருந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்! செவ்வாழைக்காக நாம் செலவிட்ட உழைப்பு, பண்ணையாரின் நிலத்துக்காகச் செலவிட்ட உழைப்பிலே, நூற்றுக்கு ஒரு பாகம் கூட இராது - ஆனால் உழைப்பு நம்முடையதாகவும் வயல் அவருடைய உடைமையாகவும் இருந்ததால் பலனை அவர் அனுபவிக்கிறார் பெரும்பகுதி.

இதோ, இந்தச் செவ்வாழை நம்மக் கொல்லையிலே நாம் உழைத்து வளர்த்தது - எனவே பலன் நமக்குக் கிடைக்கிறது - இதுபோல நாம் உழைத்துப் பிழைக்க நம்முடையது என்று ஒரு துண்டு வயல் இருந்தால், எவ்வளவு இன்பமாக இருக்கும். அப்படி ஒரு காலம் வருமா!

உழைப்பவனுக்குத்தான் நிலம் சொந்தம் - பாடுபடாதவன் பண்ணையாராக இருக்கக் கூடாது என்று சொல்லும காலம் எப்போதாவது வருமா என்றெல்லாம் கூட, இலேசாகச் செங்கோடன் எண்ணத் தொடங்கினான்.

செவ்வாழை இதுபோன்ற சித்தாந்தங்களைக் கிளறிவிட்டது அவன் மனதில். குழந்தைகளுக்கோ நாக்கிலே நீர் ஊறலாயிற்று.

செங்கோடன் செவ்வாழைக் குலையைக் கண்டு களித்திருந்த சமயம், பண்ணை பரந்தாமர், தமது மருமகப் பெண் முத்துவிஜயத்தின் பிறந்தநாள் விழாவை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அம்பிகை கோயிலில் அபிஷேக ஆராதனை செய்வதற்காக, 'ஐயரிடம்' சொல்லி விட்டார். கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, 'பட்டி' தயாரிக்கச் சொன்னார். பல பண்டங்களைப் பற்றிக் குறிப்பு எழுதும் போது, 'பழம்' தேவை என்று தோன்றாமல் இருக்குமா? 'இரண்டு சீப்பு வாழைப்பழம்' என்றார் பண்ணையார்.

"ஏனுங்க பழம்-கடையிலே நல்ல பழமே இல்லை-பச்சை நாடாத்தான் இருக்கு" என்று இழுத்தான் சுந்தரம், கணக்கப்பிள்ளை.

"சரிடா, அதிலேதான் இரண்டு சீப்பு வாங்கேன்? - வேறே நல்ல பழமா எங்கே இருக்கு!" என்று பண்ணையார் சொல்லி முடிப்பதற்குள், சுந்தரம், "நம்ம செங்கோடன் கொல்லையிலே, தரமா, ஒரு செவ்வாழைக் குலை இருக்குதுங்க - அதைக் கொண்டுகிட்டு வரலாம்" என்றான். "சரி" என்றார் பண்ணையார்.

செங்கோடனின் செவ்வாழைக் குலை! அவனுடைய இன்பக் கனவு!! உழைப்பின் விளைவு!! குழந்தைகளின் குதூகலம்!!

அதற்கு மரண ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்!

எத்தனையோ பகல் பார்த்துப் பார்த்து, செங்கோடனின் குடும்பம் பூராவும் பூரித்தது அந்தக் குலையை! அதற்குக் கொலைக்காரனானான் சுந்தரம். மகிழ்ச்சி, பெருமை, நம்பிக்கை இவைகளைத் தந்து வந்த, அந்தச் செவ்வாழைக் குலைக்கு வந்தது ஆபத்து.

தெருவிலே, சுந்தரமும் செங்கோடனும் பேசும்போது குழந்தைகள், செவ்வாழையைப் பற்றியதாக இருக்கும் என்று எண்ணவே இல்லை! செங்கோடனுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்றிற்று - நாக்குக் குழறிற்று - வார்த்தைகள் குபுகுபுவென்று கிளம்பி, தொண்டையில் சிக்கிக் கொண்டன.

மாட்டுப் பெண்ணுக்கு பிறந்த நாள் பூஜை - என்று காரணம் காட்டினான் சுந்தரம். என்ன செய்வான் செங்கோடன்! என்ன சொல்வான்? அவன் உள்ளத்திலே, வாழையோடு சேர்ந்து வளர்ந்த ஆசை - அவன் குழந்தைகளின் நாக்கில் நீர் ஊறச் செய்த ஆசை - இன்று, நாளை, என்று நாள் பார்த்துக் கொண்டிருந்த ஆவல் - எனும் எதைத்தான் சொல்ல முடியும்?

கேட்பவர் பண்ணை பரந்தாமர்! எவ்வளவு அல்பனடா, வாழைக் குலையை அவர் வாய் திறந்து, உன்னை ஒரு பொருட்டாக மதித்துக் கேட்டனுப்பினால் முடியாது என்று சொல்லி விட்டாயே! அவருடைய உப்பைத் தின்று பிழைக்கிறவனுக்கு இவ்வளவு நன்றி கெட்டதனமா? கேவலம், ஒரு வாழைக் குலை! அவருடைய அந்தஸ்துக்கு இது ஒரு பிரமாதமா! - என்று ஊர் ஏசுகிறது போல் அவன் கண்களுக்குத் தெரிகிறது.

'அப்பா! ஆசை காட்டி மோசம் செய்யாதே! நான் கூடத்தான் தண்ணீர் பாய்ச்சினேன் - மாடு மிதித்து விடாதபடி பாதுகாத்தேன் - செவ்வாழை ரொம்ப ருசியாக இருக்கும். கல்கண்டு போல இருக்கும் என்று நீதானே என்னிடம் சொன்னாய்.

அப்பா! தங்கச்சிக்குக் கூட, 'உசிர்' அந்தப் பழத்திடம். மரத்தை அண்ணாந்து பார்க்கும்போதே, நாக்கிலே நீர் ஊறும். எங்களுக்குத் தருவதாகச் சொல்லிவிட்டு, இப்பொழுது ஏமாற்றுகிறாயே. நாங்கள் என்னப்பா, உன்னைக் கடையிலே காசு போட்டுத் திராட்சை, கமலாவா வாங்கித் தரச் சொன்னோம். நம்ம கொல்லையிலே நாம் வளர்த்ததல்லவா!'-என்று அழுகுரலுடன் கேட்கும் குழந்தைகளும், 'குழந்தைகளைத் தவிக்கச் செய்கிறாயே, நியாயமா?' என்று கோபத்துடன் கேட்கும் மனைவியும், அவன் மனக்கண்களுக்குத் தெரிந்தனர்!

எதிரே நின்றவரோ, பண்ணைக் கணக்கப்பிள்ளை! அரிவாள் இருக்குமிடம் சென்றான். 'அப்பா, குலையை வெட்டப் போறாரு - செவ்வாழைக் குலை' என்று ஆனந்தக் கூச்சலிட்டுக் கொண்டு, குழந்தைகள் கூத்தாடின. செங்கோடனின் கண்களிலே நீர்த்துளிகள் கிளம்பின! குலையை வெட்டினான் - உள்ளே கொண்டு வந்தான் - அரிவாளைக் கீழே போட்டான் - 'குலையைக் கீழே வை அப்பா, தொட்டுப் பார்க்கலாம்' என்று குதித்தன குழந்தைகள். கரியனின் முதுகைத் தடவினான் செங்கோடன். "கண்ணு! இந்தக் குலை, நம்ம ஆண்டைக்கு வேணுமாம் கொண்டு போகிறேன் - அழாதீங்க - இன்னும் ஒரு மாசத்திலே, பக்கத்துக் கன்னு மரமாகிக் குலை தள்ளும். அது உங்களுக்குக் கட்டாயமாகக் கொடுத்து விடறேன்" என்று கூறிக்கொண்டே, வீட்டை விட்டுக் கிளம்பினான், குழந்தையின் அழுகுரல் மனதைப் பிளப்பதற்குள்.

செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்திற்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவெனக் கண்ணீர் கிளம்பிற்று. துடைத்துக் கொண்டு, படுத்துப் புரண்டான் - அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப் பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்...!

அவருக்கு அது ஒரு பிரமாதமல்ல - ஆயிரம் குலைகளையும் அவர் நினைத்த மாத்திரத்தில் வாங்க முடியும்! ஆனால் செங்கோடனுக்கு...? அந்த ஒரு குலையைக் காண அவன் எவ்வளவு பாடுபட்டான் - எத்தனை இரவு அதைப் பற்றி இன்பமான கனவுகள் - எத்தனை ஆயிரம் தடவை, குழந்தைகளுக்கு ஆசை காட்டியிருப்பான்! உழைப்பு எவ்வளவு! அக்கறை எத்துணை! எல்லாம் ஒரு நொடியில் அழிந்தன!

நாலு நாட்களுக்குப் பிறகு, வெள்ளித் தட்டிலே, ஒரு சீப்பு செவ்வாழைப் பழத்தை வைத்துக் கொண்டு, அன்னநடை நடந்து அழகு முத்துவிஜயா அம்பிகை ஆலயத்துக்குச் சென்றாள்.

நாலு நாட்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன்.

கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தது. கணக்கப்பிள்ளை பண்ணை வீட்டிலே இருந்து நாலு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான் - அவன் விற்றான் கடைக்காரனுக்கு - அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்! "பழம், ஒரு அணாடா, பயலே-காலணாவுக்குச் செவ்வாழை கிடைக்குமா - போடா" என்று விரட்டினான், கடைக்காரன். கரியன் அறிவானா, பாபம், தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை, இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாபம்! எத்தனையோ நாள் அந்தச் சிறுவன், தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டிற்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக் கொண்டே.

செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழை மரத்துண்டுடன்.

"ஏம்பா! இதுவும் பண்ணை வீட்டுக்கா?" என்று கேட்டான் கரியன்.

"இல்லேடா, கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப் போயிட்டா, அந்தப் பாடையிலே கட்ட" என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் துண்டு!

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும், மற்றக் குழந்தைகளும் பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். "எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று.

"எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையைப் பண்ணை வீட்டுக்குக் கொடுத்து விட்டோம் - மரத்தை வெட்டி 'பாடை'யிலே கட்டி விட்டோம்" என்றான் கரியன்.

பாபம் சிறுவன்தானே!!

அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.

உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ்.ராமகிருஷ்ணன்

பிரபவ வருடம்

சித்திரை இரண்டாம் நாள்

முகாம். திருவாவடுதுறை ,

தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு,

தங்கள் அடிப்பொடியான் வலசைஏகாம்பரநாதன் எழுதும் மடல்

திருப்புல்லணி பால்வண்ணசாமி எழுதிய பசுபதி விளக்கம் நுாலில் அடிக்குறிப்பாக இடம்பெற்றிருந்த ஆற்காடு ரத்னசாமி முதலியாரால் எழுதப்பட்டதாக சொல்லபடும் (ஒரு வேளை தழுவி எழுதப்பட்டதாக கூட இருக்கலாம் ) உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை என்ற நுாலை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளவேண்டி நான் கடந்த சில மாதங்களாக திருவாவடுதுறை சந்நிதானத்தில் உள்ள சரஸ்வதி நுாலகத்தில் காலம் கழித்து வருகிறேன். இந்த நுாலை பற்றி மெய்ஞானவிளக்கவுரையில் குமரேசஅடிகள் குறிப்பிடுவதை தவிர வேறு எந்த தகவலையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. மேலசிவபுரி தமிழ்பாடசாலையில் தாங்கள் தமிழ்பணியாற்றிய போது தங்களிடம் சிவஞானபோதத்திற்கு பொருள்விளக்கம் கேட்டு நான் வந்திருந்ததை தாங்கள் மறந்திருக்க மாட்டார்கள். சிவஞானபோதத்திற்கு தாங்கள் காட்டிய வழி தான் இன்று என்னை திருவாவடுதுறை வரை கொண்டுவந்து சேர்ந்திருக்கிறது. கொளத்துார்தேசிகரின் சைவசித்தாந்த வழிகாட்டியில் இது குறித்த சங்கேதமாக சில வாசகங்கள் இடம்பெற்றிருந்த போதும் மூலநுாலைப்பற்றிய விபரங்கள் தெளிவாகயில்லை.

சூளைமேட்டிலிருந்த நவஜோதி அச்சகத்தில் 1906ம் வருடம் அச்சிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த புத்தகம் வெளியாகியுள்ளது என்ற குறிப்பை சாமிநாத சர்மா பட்டியல் ஒன்றில் கூட பார்வையிட நேர்ந்தது, இதை பற்றிவிசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றபோது வித்வான் சாமிநாத சர்மாவை சந்திக்கும் பேறு கிடைக்கவில்லை, ஆனால் அவரது நேர்வழி மாணாக்கர் கனகசபாபதியின் வீட்டை கண்டுபிடித்தறிந்து உசாவிய போது அவர் தான் பலவருடகாலம் சாமிநாத சர்மாவிற்கு படியெடுத்து தரும் பணியில் இருந்ததால் இப்புத்தகம் குறித்து கேள்வியுற்றிருப்பதாகவும் சர்மாவும் மேற்படி நுாலை வாசிக்க வேண்டும் என்ற பேராவல் கொண்டிருந்தாகவும் தெரிவித்தார். சூளைமேட்டில் உள்ள சிவன்கோவில் தெருவில் தான் நவஜோதி அச்சகம் இருந்ததாக அவர் தெரிவித்தபடி நான் அச்சகவிலாசத்தை பெற்றுக்கொண்டு நேரில் விசாரித்து வரலாமென்று சென்றிருந்தேன்.

சூளைமேட்டில் அதே இடத்தில் நவஜோதி அச்சகம் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களிடம் இந்த நுாலைப்பற்றி விசாரித்த போது அதன் உரிமையாளர் தாங்கள் பனிரெண்டுவருடமாகவே இந்த அச்சகத்தை வாங்கி நடத்திவருவதாகவும் அதற்கு முன்பாக அச்சக உரிமையாளராகயிருந்த சிவனொளி குடும்பத்தில் சில விபரீத சம்பவங்கள் நடந்து போனதால் அவர்கள் சென்னையை விட்டு திரும்பவும் தங்களது பூர்வீக ஊரான வந்தவாசிக்கு போய்விட்டதாகவும் ஒருவேளை அங்கே சென்று விசாரித்தால் இந்த நுாலை பற்றிய விபரம் தெரியக்கூடும் என்றார். நான் வந்தவாசியில் அவர்களது விலாசம் கிடைக்குமா என கேட்டதற்கு சரியான விலாசமாகயில்லை ஆனால் அவர்கள் வீட்டின் அருகே ஒரு தேவார பாடசாலையிருந்தாக சொல்லியிருக்கிறார்கள் என்றார். நான் நவஜோதி அச்சகத்தில் அச்சேறிய வேறு ஏதாவது தமிழ் நுால்கள் இருக்ககூடுமா என்று கேட்டதற்கு அச்சகத்தில் இருந்த புத்தகங்கள் யாவற்றிற்கும் வீட்டிலிருந்த பெண்மணி தீவைத்து கொளுத்தியதில் யாவும் எரிந்து போய்விட்டதாகவும் இது தான் அந்த வீட்டில் முதலாக நடந்த துர்சம்பவம் என்று சொல்லியதோடு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு அவசரமாக ரசீதுகள் அடித்துக் கொண்டிருப்பதால் இரவு திரும்பி வருவதாகயிருந்தால் தனக்கு தெரிந்த விபரங்களை சொல்வதாக உரிமையாளர் கோலப்பன் சொல்லியிருந்தார். நான் வந்தவாசிக்கு சென்று விசாரித்துவிட்டு திரும்பிவரும் போது அவரை பார்ப்பதாக சொல்லியடி ரயில்கெடிக்கு சென்றேன்

வந்தவாசி மிகசிறிய ஊராகயிருந்தது. சமணசமயத்தை சார்ந்த குடும்பங்கள் அதிகமிருப்பதாக வாசித்திருக்கிறேன். தேவாரப்பாடசாலையை கண்டுபிடிப்பது எளிதாகவேயிருந்தது. ஆனால் அதை ஒட்டிய வீட்டில் யாருமேயில்லை. வீடு இடிந்து நிலைகதவு கூட பிடுங்கி போகப்பட்டிருந்தது. துார்ந்து போயிருந்த ஒரு கிணற்றை தவிர வேறு எதுவும் அங்கேயில்லை ஒரு வேளை அருகில் இருக்க கூடுமோ என்று தேடியபோது இரண்டு வீடுகள் தள்ளி முதுகுன்றத்தில் தபால்துறையில் வேலைசெய்யும் குமாஸ்தா சேதுப்பிள்ளையின் வீடு இருந்தது. அவர்கள் சிவனொளியின் குடும்பம் சூளைமேட்டில் குடியிருப்பதாகவும் அவரது வீட்டில் சில துர்சம்பங்கள் நடந்து போய்விட்டதால் வேறு இடத்திற்கு மாறி போயிருக்க கூடுமென்றார்கள்.

சேதுப்பிள்ளையின் தாயார் மிகுந்த அன்போடு எனக்கு உப்பிட்ட கூழும் வெங்காயமும் தந்து சாப்பிடச் சொன்னார். சேதுப்பிள்ளையின் தாயாருக்கு சிவனொயின் மனைவி ஒன்றுவிட்ட தங்கை முறை வரக்கூடியவள் தான் என்றும் சிவனொளி ஒன்று சொல்லிக் கொள்கிறமாதிரி பண்டிதர் இல்லை என்றும் அவருக்கு கொஞ்சம் சித்தகலக்கம் இருந்ததாகவும் சில வேளைகளில் அதைப்பற்றி வீட்டு பெண்கள் பேசிக் கொண்டதாகவும் சொன்னார். நம்பமுடியாமல் நான் சிவனொளிக்கு சித்தம் பேதலித்திருந்திருந்தா என்று கேட்டேன். சில நேரம் அச்சாகிவந்த சில புத்தகங்களை படித்து சிவனொளி அழுது கொண்டிருப்பதை பார்த்திருப்பதாக பெண்கள் சொல்லியிருக்கிறார்கள் என்றும் சேதுப்பிள்ளையின் தாயார் சொன்னாள்.

நான் கூழை குடித்துவிட்டு சிவனொளியின் மனைவி தான் அச்சகத்தில் தீவைத்துவிட்டதாக பேசிக்கொள்கிறார்களே என்று கேட்டேன். சேதுவின் தாயார் குழப்பத்துடன் அப்படியெல்லாமிருக்காது அந்த மனுசன் அபாண்டமாக பழியை போட்டிருக்கிறான். அவரே கொளுத்திவிட்டிருப்பான். அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் போட வேண்டுமென்ற போது சீராக கொண்டுவந்திருந்த அட்டிகையை கழட்டி கொடுத்தவள் பூரணவல்லி, அவள் தீவைத்திருக்க மாட்டாள், இத்தனைக்கும் அவளது தகப்பனார் சப்ஜட்ஜாகயிருந்தவர், கல்விமான் என்று சொல்லிக் கொண்டே போனாள். சிவனொளியின் வீட்டார் சூளைமேட்டில் குடியிருக்கவில்லை என்றும் நான் ஒரு புத்தகத்திற்காக அவர்களை தேடியலைவதாகவும் சொன்னேன்.

புறப்படும் சமயத்தில் சேதுவின் தாயார் ஒரேயொரு சம்பவத்தை கேள்விபட்டதாகவும் அது நிஜம் தானா என்று தனக்கு தெரியாது என்றும் சொன்னார். இச்சம்பவமாவது

சிவனொளிக்கு ஆறு பெண்பிள்ளைகளும் இரண்டு பையன்களுமிருந்தார்கள். ஒன்பதாவதாக ஒரு பெண்சிசுவை பிரவசித்து குருதிப்போக்கு அதிகமாகி இத்துப்போன உடலோடு படுக்கையில் கிடந்தாள் பூரணவல்லி. குழந்தையும் லிர்க்கைப்போலிருந்தது. முன்கட்டில் அச்சகமும் பின்கட்டில் வீடுமிருந்தது. அநேகமாக பிரசவமாகி ஆறாம் நாளோ என்னவோ, அச்சகத்திற்கு வெண்பாபுலி பிச்சையாபிள்ளை தனது பரிவாரங்களுடன் வந்திருந்தார். திருக்குறளுக்கு தான் புதிதாக எழுதிய உரையை சீடர்களுக்கு வாசித்துகாட்டுவதற்காக அழைத்து வந்திருந்தார். அச்சகத்தில் இருந்த சிவனொளிக்கு பிச்சையாபிள்ளையை விசேசமாக உபசரிக்க முடியாதபடிக்கு வீட்டில் சுககேடாகியிருக்கிறாளே என்று ஆத்திரமாகயிருந்தது. வெற்றிலை சீவலும், அதிசரமும், சீங்குழலும் தட்டில் கொண்டுவந்து வைத்தபடி சிவனொளியின் மூத்தபெண் அடுப்படிக்கும் அச்சகத்தின் முகப்பறைக்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்தே குழந்தையின் அழுகை சப்தம் கேட்டபடியிருந்தது. பிச்சையாபிள்ளை அதிசரத்தினை பற்றிய சிலேடைபாடல் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். குழந்தையின் அழுகை சிவனொளியின் காதுகளை துளையிடுவதை போல கேட்டுக் கொண்டேயிருந்திருக்க வேண்டும். கோபத்துடன் எழுந்து உள்ளே போய் அவள் படுத்திருந்த அறையை சாவியால் பூட்டி சாவியை துாக்கி பரணில் எறிந்துவிட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து கொண்டார். மதியம் வீட்டிலே விருந்துக்கும் ஏற்பாடிகியிருந்தது. கறிவேப்பிலை பொடியை வெண்பாபுலி சாதத்தில் போட்டபடியே வெந்த சோற்றிற்கும், மூடனுக்குமாக ஒப்புமையை பற்றிய ஒருபாடலை புனைந்தார். இரவுவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு யாவரும் திருப்பருத்திக்குன்றம் செல்வதாக வண்டியை அமர்த்துக் கொண்டு புறப்பட்டார்கள் சிவனொளியின் கடைசிமகன் பரணில் ஏறி சாவியை தேடியெடுத்து அறையின் கதவை திறந்துவிட்டான். அறையிலிருந்த வெளிச்சத் துடைத்து எறியப்பட்டிருந்தது. மூத்தமகள் நற்பின்னை பூண்டுகஞ்சி கொண்டு போய் தாயாரிடம் கொடுத்தபோது அம்மா கட்டிலில் இருந்து அவளை திரும்பி பார்க்கவேயில்லை. பிள்ளையை யாரும் துாக்கவும் விட மறுத்துவிட்டாள். அதன்பிறகு பூரணவல்லடி குளிப்பதற்கோ, சாப்பிடுவதற்கு என எதற்கும் மறுக்க துவங்கினாள். பிள்ளைகள் அவளை இழுத்துவந்து சாப்பிடச் செய்தார்கள். குழந்தை அழுவதாக ஒலியெழுப்பினால் உடனே அவள் தன்விரலை குழந்தையின் வாயில்கொடுத்து அழுகையை அடக்கிவிடுவாள்.

சிவனொளியிடம் பேச்சே அற்றுப்போனது. அவர் சில சமயம் அந்த அறைக்குள் நுழைந்த போது அவள் தன்பற்களை நரநரவென கடிப்பதை கேட்டிருக்கிறார். அதை கேட்டதும் அவருக்கு மிகுந்த ஆத்திரமாகவரும், அறையிலிருந்த இருளை போலவே அவளும் உருமாறிக்கொண்டு வருவதாக நினைத்தபடி அவசரமாக வெளியே வந்துவிடுவார். ஒரு இரவு அவர் அச்சகவேலையாட்களை அனுப்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்திருந்த போது அவசர அவசரமாக வெளியே எழுந்து போன பூரணவல்லி புத்தககட்டுகளின் மீது சூடவில்லைகளை கொளுத்தி போட்டுவிட்டு அவை தீபற்றி எரிவதை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்இமைக்கும் நேரத்தில் காகிதங்கள் எரியத்துவங்கி புகை வீடெங்கும் நிரம்பியது. சிவனொளி ஒடிவருவதற்குள் நெருப்பு அச்சுகாகிதங்களில் பற்றி எரியத்துவங்கியது. இரவு முழுவதும் நெருப்பை அணைக்க முடியவேயில்லை. சிவனொளி தன்மனைவியை ஒங்கிஒங்கியறைந்தார். பிள்ளைகள் தகப்பனுக்கும் தாயாருக்குமான மூர்க்கமான சண்டையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது நடந்த சில நாட்களுக்கு பிறகு பூரணவல்லிக்கு பித்தம் தலைக்கேறிவிட்டதாக காளஹஸ்திக்கு சிட்சைக்கு அனுப்பிவிட்டார்கள். அதுவரைக்கும் தான் தனக்கு தெரியும் என்றாள் சேதுவின் தாயார்

வேதனையாகயிருந்தது. திரும்பவும் அந்த அச்சகத்திற்கு போய் விசாரிக்க மனம் ஒப்பவில்லை. அதனால் நான் ஊர் திரும்பிவிட்டேன். அதன் பிறகு தான் மேலகரத்திலிருந்த சிவசுப்ரமணிய ஒதுவாரை பற்றி கேள்விபட்டேன். அவர்கரதலைபாடமாக தேவாரத்தை அறிந்து வைத்திருந்தவர். ஒருவேளை அவருக்கு மேற்படி நுாலைப்பற்றிய விபரங்கள் தெரிந்திருக்ககூடும் என்று அவரை சந்திப்பதற்காக சென்றேன்.

நான் நினைத்திருந்த உருவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. காய்ந்த வாழையிலை போன்று மெலிந்துபோன உடலுடன் ஒற்றை தட்டுவேஷ்டி கட்டியபடி காடுடையார்கோவிலில் தான் ஒதுவாராகயிருப்பதாக தெரிவித்தார். எனது பெயரை மறந்துவிட்டவரை போல அடிக்கொரு தரம் கேட்டுக் கொண்டார். நான் ஏகாம்பரநாதன் என்று சொன்னதும் ஏகாம்பரத்தின் விளக்கமென்ன என்று தெரியுமா என்று கேட்டார். நான் அவர் சொல்லி கேட்க சித்தமாகயிருப்பதாக தெரிவித்தேன்.

ஆமிரம் என்ற வடசொல் மாமரத்தை குறிக்கும் ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி பின்னர் ஏகாம்பரம் என திரிந்திருக்கின்றது. கச்சிஏகம்பம் என்று தேவாரத்தில் பாடப்பெற்ற திருக்கோவிலில் பழமையாக மாமரம் இருப்பதை பார்த்திருக்கீறீர்களா ? கம்பை என்னும் வேகவதியாற்றை அடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் பெற்றிருக்கவும் கூடும் என்றார். நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் பத்தொன்பதாவது தலைமுறையாக தான் ஒதுவாராகயிருப்பதாக சொல்லியபடி எதற்காக இந்த நுாலை தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டார். நான் மிகுந்த சங்கோஜத்துடன் மனதில் ஒரு சந்தேகம் அதை தெளிவு பெறுவதற்காக அலைந்து கொண்டிருப்பதாக சொன்னேன். ஆச்சரியத்துடன் அவர் சந்தேகத்தில் ஒன்று இரண்டு என்று பேதமிருக்கிறதா என்ன ? சந்தேகம் ஒரு காட்டை போன்றது ஒன்றுக்குள் ஒன்று விரிந்து கொண்டே போய்க்கொண்டிருக்கும். சந்தேகத்தை தீர்த்துவிடக்கூடாது. இத்தனை வருடமாக தேவாரம் பாடும் எனக்கு இருக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டால் பயந்து போய்விடுவீர்கள். சில நேரங்களில் எனக்கு தேவாரப் பாடல்கள் யாவும் நானே புனைந்தது போலதானிருக்கிறது. ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர் எல்லாம் வெறும் பெயர் தானே ?. ஈசனுக்கு ஆயிரம் பெயர் இருப்பது போல இதுவும் ஒரு மயக்கம் தானோ என்னவோ ? நான் அவரது நிழலை போல ஒடுக்கத்துடன் கூடவே நடந்து வந்தேன்.

இருவரும் வீடு வந்து சேர்ந்த போது அவர் தன்னிடம் ஒன்றிரண்டு ஏடுகளை தவிர வேறு எதுவும் கிடையாது என்றும் தனக்கு அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை பிடிக்கவில்லை. காகிதங்கள் வெள்ளைகாரர்கள் மலம் துடைக்க பயன்படுத்துகிறார்கள் என்று தனக்கு தெரியும் என்றார். நான் அது வேறுவகையான காகிதம் என்றேன். ஒதுவார் அதைக் கேட்டுக்கொண்டதாக தெரியவில்லை. புன்சிரிப்போடு நான் தேடிவந்த புத்தகத்தின் பெயரை திரும்பவும் கேட்டார். உலகம் ஒரு பெரிய எழுத்துகதை என்று சொன்னேன். அவர் திண்ணையில் சாய்ந்தபடியே பனையோலை விசிறியால் வீசிக்கொண்டு விரலால் ஏதோ கணக்கு போட்டார். பிறகு வெற்றிலை சாற்றை துப்பிவிட்டு என் நினைவில் அப்படியொரு புத்தகம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இது புத்தகமல்ல ஒரு சங்கேதம் என்றே தெரிகிறது. எதற்கும் தேவாரஏட்டில் கயிறுசாத்திபார்த்து சொல்வதாக சொல்லியபடி தன்வீட்டிலிருந்த தேவாரஏடுகளை எடுத்துவந்து கண்ணை மூடிக்கொண்டு கயிற்றை ஊடேஇழுத்து ஒரு ஏட்டை தனியே பிரித்து வாசித்தார். ஞானசம்பந்தரின் பாடல் ஒன்று வந்தது. அவர்பாடலை பண்ணோடு பாடியபடி நீங்கள் தேடிவந்த நுால் திருவெண்காட்டில் இருக்ககூடும் என்றார். நான் எனது சந்தேகத்தின் சுமையை உடல் முழுவதும் ஏந்திக் கொண்டபடி அவரிடமிருந்து வீடு திரும்பினேன்.

இரண்டு மாதகாலம் அந்த நுாலை மறந்துவிட்டு நித்யகாரியங்களில் ஈடுபடவேண்டும் என்று மனதை கட்டுப்படுத்திக் கொண்டேன். இந்த நுால் ஒரு சங்கேதம் என்று ஒதுவார் சொன்னது மிகவும் சரியானதாகவேயிருந்தது. நானாக மனதில் அந்த நுாலினை பற்றி சில கற்பனைகளை உருவாக்க ஆரம்பித்தேன். சிலவேளைகளில் அந்தக் கற்பனையில் உருவான பாடல்களை தொகுத்து எழுத துவங்கினேன். சில நாட்கள் தொடர்ந்தாற் போல இந்த நுாலைப்பற்றிய எண்ணங்கள் உருவாகும், அப்போது சில காட்சி ரூபத்திலும் சில தெளிவற்றும் மனதில் தோன்றும். நான் ரகசியமாக அந்த காட்சிகளையும் கருத்துக்களையும் காகிதத்தில் எழுதிவரத்துவங்கினேன். ஆறேழு மாதங்களுக்கு பிறகு நான் எழுதியிருந்த காகிதங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது அது சிறிய நுால்வடிவிலிருந்தது. அந்த நுாலிற்கும் உலகம் ஒரு பெரி எழுத்துகதை என்று தலைப்பிட்டு நல்லுாரில் உள்ள அச்சகம் ஒன்றில் அச்சிற்கும் கொடுத்து வந்தேன். அச்சு கோர்க்கும் போது அருகிலே இருந்து பார்க்கவேண்டும் என்று ஆசையாகயிருக்கும். ஆனாலும் தினமும் மாலையில் நல்லுாருக்கு போய் அச்சகத்தில் வேலை நடைபெறுகிறதா என்று பார்த்துக் கொண்டு மட்டும் வருவேன். ஒரு இரவில் உறக்கத்தில் யாரோ சொல்வது போல கேட்டது.

தேவாரப்பாடல்கள் எல்லாம் நான் எழுதியது போல தானிருக்கிறது. எல்லாம் வெறும் பெயர்கள் தானே ?

பயத்துடன் கண் விழித்து எழுந்து கொண்டேன். ஒதுவார் சொன்னதை தான் நான் செய்திருக்கிறேனா ? இப்போதே போய் அச்சடிக்க கொடுத்த புத்தகத்தை நிறுத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு விடியும்வரைக்கும் பொறுமையில்லாமல் நல்லுாருக்கு புறப்பட்டேன். நான் போய்சேர்ந்த போது விடிகாலையாகியிருந்தது. நல்லுாரிலிருந்த அருமருந்துடையார் கோவில் திறந்திருந்தது. கோவிலினுள் நுழையும் போது தேவாரப்பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. பிரகாரத்தில் நின்றபடி கேட்டுக் கொண்டிருந்தேன். காலைவெளிச்சம் படர்ந்து வருவது போல அப்பாடல் கோவிலின் பிரகாரத்தில் மெதுவாக ஒளியை உண்டாக்கி கொண்டிருந்தது. தேவாரம் ஒரு பாடல் அல்ல ஒரு ஜோதி அல்லது ஒளிப்பிரவாகம் என்று மனதில் தோன்றியது. நெடுநேரம் பிரகாரத்திலே நின்றிருந்தேன். தேவாரத்தை பாடிய மனிதன் போய்விட்டிருக்ககூடும். ஆனால் கோவிலின் கற்துாண்களில் அப்பாடலின் ரீங்காரம் ஒளிந்திருந்தது. ஒதுவாரின் குரல்கேட்டுகேட்டு சாந்தம் கொண்டிருந்த கோவில்கற்களை பார்க்கும் போது மனதில் இதுவரையில்லாத ஒரு பேரமைதி உண்டானது. கல்யானை ஒன்றின் காதை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மனது அதை விட்டு அகலவேயில்லை. யானையின் சிரிப்பு எப்படியிருக்கும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். மடைப்பள்ளிக்காரர்களில் ஒருவன் எனக்கு திருவமுது தந்தபோது தான் தன்னுணர்வு பெற்றேன். தையல் இலையை பிரகாரத்திலே வைத்துவிட்டு அச்சகத்திற்கு விரைந்து சென்றேன்.

அன்று மாலையோடு அச்சுகோர்ப்பு முடிவதாகயிருந்தது. நான் அதுவரை செய்த வேலைக்குரிய கூலியை தருவதாக சொல்லியபடி எனது கைப்பிரதியை வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன். எனக்கு சந்தேகமாகயிருந்தது. ஒருவேளை நான் எழுதியது தான் அந்த புத்தகமா. ? சில நாட்களில் அதை வீட்டில் வைத்திருக்கவே அச்சமுண்டாகியது. அதை வேண்டுமென்றே கோவிலின் தலவிருட்சத்தினடியில் சுருட்டிவைத்துவிட்டு வந்தேன். யாரோ ஒருவன் அதை எடுத்துப் போய் படிக்க கூடுமல்லவா ? அவன் இதுதான் உலகம் ஒரு பெரிய எழுத்துபுத்தகம் என்று படிக்ககூடுமானால் அதன் மூலப்புத்தகத்தை விடவும் எனது நுால் முக்கியமானதாகிவிடுமல்லவா ? மனதில் சந்தோஷமும் ஏமாற்றிவிட்டோமோ என்ற குற்றஉணர்ச்சியும் ஒன்றாக தோன்றியது. நான் சில நாட்கள் இதற்காகவே வெளியூர் பயணத்திற்கு ஆயுத்தமானேன்.

தற்செயலாகவா அல்லது திட்டமிட்டுதான் வந்தேனா என்று தெரியாமல் திருவெண்காட்டிற்கு வந்திருந்தேன்ந். திருவெண்காட்டுபதிகம் எனக்கு விருப்பமானது.. பாடல்பெற்ற ஸ்தலத்தில் அமர்ந்து கொண்டு மனதை வேறுகாரியங்களுக்கு பழக்கப்படுத்த முயற்சித்தேன். அப்போது என் அருகில் அமர்ந்தபடி வில்வகாய் ஒன்றை கையில் வைத்தபடியிருந்தவர் என்னை பார்த்து சிரித்தபடி உலகம் ஒரு பெரிய எழுத்து கதைதானா ? என்று கேட்டார். நான் பயத்துடன் உங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா என்று கேட்டேன். மனது உடலின் உள்ளேயிருப்பதில்லை. அது உடலுக்கு வெளிளேயிருக்கிறது தெரியுமா என்றார். நம்பமுடியாமல் நிஜமாகவா ? என்றேன். காற்று உடலுக்குள் சென்றுவெளியேறி வருவதை நம்புகிறாயா ? அப்படியானால் மனமும் அது போல உள்ளும் வெளியும் சென்றுவரக்கூடியது ஒரிடத்தில் நிரந்தரமாகதங்காதது என்றால் நம்பமாட்டாயா என்று கேட்டார்

எனது குழப்பம் உலகத்தால் பெரிதாக்கபட்டுக் கொண்டேயிருந்தது. நான் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன். அவர் வில்வகாயை என்னிடம் கொடுத்துவிட்டு சிரித்தபடியே கோவிலை விட்டு வெளியேறி நடந்தார். நான் வில்வகாயுடன் கோவிலை விட்டுவெளியே வந்த போது மாலையாகியிருந்தது. இரண்டுமூன்று நாட்கள்திருவெண்காட்டிலேயிருந்தேன். மனது மெதுவாக அடங்க துவங்கியது. பிறகு ஊர் திரும்பினேன்.

வழியெல்லாம் நான் எதற்காக ஒரு நுாலைதேடி அலைக்கழிக்கபடுபவனாக உருமாறினேன் என்பதை பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன். எனது ஊரில் சரவணக்குளம் என்று ஒரு குளமிருக்கிறது. அதில் எப்போதும் கலங்கிய நிலையில் தண்ணீர் இருக்கும். அதன் கரையில் ஒருவாகைமரமிருந்தது. ஒரு காலத்தில் பெரிய குளமாகயிருந்திருக்க கூடும். நான் சிறுவனாகயிருந்த போது அது இடிந்து துார்ந்து கிடந்தது. குளத்தை சுற்றி அடர்ந்திருந்த செடிகொடிகளில் எதையாவது பறிப்பதற்காக நான் செல்வேன். ஒரு நாள் அரளிப்பூவை பறித்து கையில் வைத்துக் கொண்டு வரும் போது ஒரு ஆள் என்னைப் பெயர் சொல்லி கூப்பிட்டான்.

அவனை நான் முன்னதாக அறிந்திருக்கவில்லை. அவன் அருகில் போனதும் சிரித்தபடியே உனக்கு நெல்லிக்காய் பிடிக்குமா என்று கேட்டான். பிடிக்கும் என்று சொன்னேன். அவன் எதற்காக பிடிக்கும் என்று கேட்டான். நான் நெல்லிக்காயை தின்றபிறகு தண்ணீர்குடித்தால் இனிப்பாகயிருக்கும் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே நாக்கில் இனித்துக் கொண்டேயிருக்கும் இன்னொரு பொருளை கொடுத்தால் தின்று பார்ப்பாயா என்று கேட்டார். நான் சரியென்று சொன்னேன். அவர் என்னை அருகில் இழுத்து காதில் ஒரு பாடலை சொன்னார். அப்பாடலை எப்படி பிரித்து பொருள் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி தந்தார். ஆச்சரியமாகயிருந்தது. அப்பாடலை ஒவ்வொரு விதத்தில் பிரிக்கும் போது ஒரு அர்த்தம் தந்ததோடு நாவில் அறியாத ஒரு சுவை நிறைவது போலவேயிருந்தது. வீட்டிற்கு திரும்பி பலமுறை அப்பாடலை பிரித்து பிரித்து மனதிற்குள்ளாக பாடினேன். அன்றைக்கு காரணமில்லாமலே எனக்கு சிரிப்புவந்து கொண்டிருந்தது. பிறகு எப்போது தனிமையிலிருந்தாலும் அப்பாடலை நாவு உருட்டத் துவங்கிவிடும். மனதில் சந்தோஷம் நிரம்பும். அதன் பிறகு பித்தேறியது போல நான் யார்யாரோ எழுதிய பாடல்களை, நுாற்களை வாசிக்க துவங்கினேன். மனதில் ஆசை அடங்கவேயில்லை.

என் கதையை நான் விஸ்தாரமாக தங்களிடம் முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். இப்போது நினைவு படுத்த வேண்டிய காரணம். நான் திருவெண்காட்டிலிருந்து ஊர்திரும்பி சில நாட்களுக்கு பிறகு எனது கனவில் நான் சிறுவயதில் சந்தித்த மனிதன் வந்தார். என்னிடம் நீ அடுத்த வெள்ளிகிழமை திருச்சுழிக்கு சென்றால் அங்கே சிவப்பு பை கொண்டுவரும் ஒருவன் உன்னை சந்திப்பான் அதை வாங்கிகொண்டு வந்துவிடு உனக்கு தெளிவு கிடைக்கும் என்றார். நான் அவர் சொன்னநாளில் திருச்சுழிக்கு சென்றேன். கனவில் சொன்னது போலவே ஒருவன் என் எதிரில் வந்து சிவப்பு பையை என்னிடம் தந்துவிட்டு சென்றார். வீடுதிரும்பும் வரை அதில் என்ன இருக்கிறது என்றே பார்க்கவில்லை. இரவில் பிரித்து பார்த்த போது அதனுள் தலைப்பிடப்படாத ஒரு நுால் இருந்தது. ஆனால் அது என்ன மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. தமிழ்போலவும் சில நேரங்களில் வெறும் குறிகளாலும் நிரம்பியிருந்தது. அதை எப்படி வாசிப்பது என்று தெரியவில்லை. முன்னும் பின்னும் புரட்டியபடியிருந்தேன். சில நாட்கள் பிறகு இன்னொரு கனவு வந்தது. அக்கனவில் அதே ஆள் திரும்பவும் என்னிடம் தோன்றி நீ அழகர்கோவிலுக்கு போ.. உன்னை யார் கூப்பிட்டு இந்த புத்தகம்பற்றி கேட்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துபடிக்க சொல், நீதேடும் நுாலை கண்டடைவாய் என்றார். நான் அதன்பிறகு பலமுறை அழகர்கோவிலுக்கு போய்வந்தேன். யாரும் என்னிடம் பேசவேயில்லை.

ஒரு நாளில் சுனையருகேயிருக்கும் மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஆள் என் முதுகை தட்டி எத்தனை நாட்களாக இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்கிறாயே ? எங்கே அந்த புத்தகம் என்றார். எனக்கு வியப்பாகயிருந்தது. பலமுறை இதே ஆளை பார்த்திருக்கிறேன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதேயில்லை. பதட்டத்துடன் பையிலிருந்த புத்தகத்தை அவர் கையில் கொடுத்தேன்.. அவர் தனக்கு எழுதப்படிக்கதெரியாது நான் இதை என்ன செய்வது என்றார். நான் குழப்பத்துடன் உங்களுக்கு படிக்க தெரியும் என்றார்களே என்றேன். அவர் அப்படியா சொன்னார். அப்போ கொடு படித்து பார்க்கலாம் என வாங்கி ஒரு பாடலை பாடினார். அதன் அர்த்ததை சொல்லாமலே சபாஷ் என்றபடி புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரேயொரு வாசனை சோப் வேண்டும், வாங்கித் தரமுடியுமா என்றார். நான் மதுரையிலிருந்து வாங்கிவந்து தருவதாக சொன்னேன். அவர் தான் ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாக சொல்லியபடி கடந்து போய்விட்டார்.

ஒரு முறையல்ல இருபத்திநான்கு முறை வெவ்வேறு வாசனை சோப்புகள் வாங்கி தந்துவிட்டேன். ஆறேழு மாதமாகியும் அவர் எனக்கு புத்தகத்தை வாசித்துகாட்டவேயில்லை. ஒரு நாள் நான் கோபமடைந்து கத்தியதும் அவர் ஆத்திரத்துடன் அந்த புத்தகத்தை வாங்கி என் கண் எதிரிலே கழிவுநீர்குட்டையில் துாக்கி எறிந்தார். நான் சப்தமாக அழுதேவிட்டேன். அவர் என்னை பற்றிய கவனமேயின்றி திரும்பவும் தன்வேலையை கவனிக்க சென்றுவிட்டார். நான் அவரை மறுமுறை பார்த்த போது அவர் நான்வைத்திருந்தது உண்மையான புத்தகமல்ல. என்றதோடு புத்தகத்தில் இருப்பது எதுவும் உண்மையுமல்ல என்றார். அவரை நான் என்ன செய்வது என்று தெரியமால் வீடு திரும்பினேன்.

இதுவரை தங்களிடம் சொல்லாத ஒரு சேதியை இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது எனக்கு பதினான்கு வயதிலே திருமணம் நடந்துவிட்டது. நான் மாமனாரின் வீட்டில் தான் இருந்துவருகிறேன். எனது சமீபத்திய செயல்கள் அவர்களை வெகுவாக பாதித்திருக்க வேண்டும் எனது வீட்டிற்கு நான் திரும்பிவந்த நாளில் எனது மாமனார் மிகுந்த ரெளத்திரம் கொண்டவராக என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். நான் அவமானத்தாலும்., இனி என்ன செய்வது என்று தெரியாமலும் வெளியேறினேன். சில நாட்கள் அதே ஊரில் திரிந்தேன் . பிறகு எப்படியாவது அந்த பெரிய எழுத்து கதையை திரும்பவும் அடைந்தே தீர்வது என்று தேடி திரிய ஆரம்பித்தேன்.

எனக்கு இந்த உலகத்தை புலன்களால் மட்டும் அறிவது போதுமானதாகயில்லை. உலகம் பெரிய எழுத்து கதை என்ற நுால் உலகை புலனுக்கு அப்பால் அறிந்து கொள்வதை பற்றியதாகயிருக்க கூடும் என்று எனக்கு ஒரு ஐயமிருக்கிறது.

இப்போது எனது வயது நாற்பதை கடந்து விட்டிருக்கிறது. இந்த நுாலகத்தில் உள்ள ஒரு லட்சத்து பதினாயிரம் பிரதிகளில் அந்த நுால் இருக்ககூடுமா என்று ஐயமாகவேயிருக்கிறது. உண்மையில் அப்படியொரு நுால் வெளியாகியிருக்கிறதா அல்லது என்னை போலவே பலரும்அடைந்த ஒரு அனுபவம் தான் அப்படியொரு கற்பனைபுத்தகமாக குறிப்பிடப்படுகிறதா ? என்னால் இதை பற்றி எவ்விதத்திலும் முடிவுசெய்ய முடியவில்லை. தாங்கள் பல்கலை நுாற்களை கற்றறிந்த மேதை. தாங்கள் தான் இதற்கு விடைதர வேண்டும். தாங்கள் பதில் அனுப்பும் நாள்வரை நான் ஆதின நுாலகத்தில் தான் தங்கியிருப்பேன்.

தாங்கள் தங்களது மாணாக்கனுக்கு வழிகாட்டி உதவிசெய்யவேண்டும் என்று தாழ்பணிந்துகேட்டுக் கொள்கிறேன். உங்கள் பதிலில் தான் எனது எதிர்காலம் அடங்கியுள்ளது.

என்றும் தங்கள் பாதம்பணிந்த

ஏகாம்பரநாதன்

***