19/10/2013

சங்ககால சறுக்கல் சிந்தனைகள் - அ.ப.பாலையன்

காலந்தோறும் புதிய புதிய கருத்துகள் உண்டாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. உருவானவற்றில் விழுமியவையும் மானுடத்தை மேம்படுத்துபவையும் எவ்வளவு காலமானாலும் நிலைத்து நிற்கின்றன. சில பிற்போக்காகவும் சுயநலத்தோடு தோன்றியவையாகவும் இருந்து மக்களில் ஒரு சாரார்க்கு மட்டுமே பயன்படுபவையாக அமைந்துவிடுதல் உண்டு. வலுவாகப் பரவிய பல கருத்துகளுக்கு வலுவான பின்னணியும் இருக்கும். ஆனால் கருத்துகளில் கவனம் செலுத்தும் மக்கள் அக்கருத்து தோன்றிய பின்னணியை மறந்துவிடுதல் இயற்கை.

இக்கட்டுரையில் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த சில கருத்துகளையும் அவை தோன்றியதற்கான பின்னணியையும் பார்ப்போம்.

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தோன்றிய பழங்காலத்தில் பெண்கள் உரிமையற்ற இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்பட்டனர். ஆண்களுக்கு அடங்கியவராக இருந்தனர். சில விதிவிலக்குகளும்கூட இருந்தன. கணவனை இழந்த பெண்டிர் எத்துணை துயரங்களைத் தாங்கியிருந்தனர் என்பதற்குப் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு (புறம் 246) பாடிய பாடலே சான்று.

பெண்கள் சமூகத்தால் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்ட போதிலும் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டும் உள்ளார்கள். ஆண் மக்களைப் பெற்று வளர்த்து போருக்கு அனுப்பிய பெண்கள் "மூதின் மகளிர்' என வாயாரப் புகழப்பட்டு உள்ளனர்.
சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)

இவளது எண்ணம் கெடுக. (வாழ்க எனப் பொருள்) இவள் பெண்களில் சிறந்தவள். முதல்நாள் போரில் இவள் தந்தை யானையைக் கொன்று மடிந்தான். அடுத்தநாள் இவள் கணவன் பசுக் கூட்டத்தை எதிரிகளிடமிருந்து காத்து மாண்டான். போர் தொடர்ந்தது. தன் ஒரே மகனை அழைத்து ஆடை உடுத்தித் தலைவாரி விட்டு கையிலே வேலைக் கொடுத்து வென்று வா என அனுப்பினாள் அத்தாய்.

இப்பெண் வாழும் நாட்டு மன்னனுக்கும் அடுத்த நாட்டு அரசனுக்கும் மண்ணாசை மீதுரப் பெற்றதால் போர் நடக்கிறது. அப்போருக்கு இவள் தன் ஒரே ஆண் மகனைப் போருக்கு அனுப்புகிறாள்.

இப்படி இப்பெண் தன்னைக் காப்பாற்ற இருக்கும் ஒரே மகனான சிறுவனையே தன்னைப் பற்றிய கவலையின்றி அரசனின் மண்ணாசைக்குப் பலி கொடுக்க அனுப்புகிறாள்.

இதனால் இவள் வாழ்க எனவும் மிகவும் துணிச்சல்காரி எனவும் மூதின் மகளிர் எனவும் அளவு கடந்து பாராட்டப்படுகிறாள்.

பெண்ணுக்குப் போதுமான உரிமை அளிக்காமலும் ஆண் செய்யும் அடாவடிச் செயலைத் தட்டிக் கேட்காமலும் அடக்கப்பட்ட பெண்கள் போருக்கு மகனை அனுப்பும்போதும் ஆண் மகனைப் பெற்றுத் தரும்போதும் (புறம் 312) பலபடப் பாராட்டப்படுவதும் புகழப்படுவதும் எதனால்?

அங்கேதான் அக்கால ஆண்கள் உண்டாக்கிய சூட்சுமமான கருத்து இருக்கிறது.

சங்கச் சமூகம் போரும் பூசலும் நிரம்பிய சமூகம். அரசர்கள் தமக்குள்ள மண் போதாதென்று தம் மக்களைப் பலிகொடுத்து அவர் பெண்டுகளை விதவை களாக்கியும் பிள்ளைகளை அனாதைகளாக்கியும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட காலம் அது.

அதனால்தான் அக்காலத்திய புலவர் பெருமக்கள் "ஒருவரை ஒருவர் அடுதல் புதுவதன்றே' எனப் போரிடும் அரசர்கள் செயலை ஏற்றித் தாளம் போட்டனர்.

மன்னர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பலம் வாய்ந்த வீரர்கள் தேவை; வீர மறவர்களைப் பெற்று மனம் கோணாமல் போருக்கு அனுப்பும் பெண்களும் தேவை. 

வீரர்களை அனுப்பும் பெண்கள் பாராட்டப்படவும் மதிக்கப் படவும் வேண்டும். அத்தகைய கருத்தை சமுதாயத்தில் பரப்பிக் காத்தலும் வேண்டும். அப்போதுதான் நினைத்தபோதெல்லாம் பெண்கள் எவ்வளவு துன்ப துயரங்களை ஏற்றாலும் பாராட்டுக்கு மயங்கி கணவர்களையும் பிள்ளைகளை யும் போருக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

அரச மரபினரின் ஆசைக்கு அவர்களின் விசுவாசி களால் உண்டாக்கிப் பரப்பப்பட்ட இக்கருத்து பெண்களை மயக்கிய கருத்துப் பரப்பல் என அறிதல் வேண்டும்.

அரசனுக்காக வீரர்கள் போரிட்டு மடிவர்; அப்படி மடிபவர்கள் மகிழ்ச்சியோடும் புகழ் போதை யோடும் மடிய வேண்டும் என்பதற்காகவே ஒரு கருத்து உண்டாக்கப்பட்டு நம்பிக்கையாக வளர்க்கப்பட்டிருந்தது அன்று; இன்றும் அக்கருத்து வேறு வடிவில் தொடர்கிறது.

ஓடல் செல்லா பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப.
(புறம் 287)

"போர்க்களத்தில் அஞ்சிப் புறம் கொடுக்காதவர் மறவர். மருத நிலத்து ஊர்களைக் கொடையாகப் பெறுவது அவர்களுக்குப் பெருமை அன்று. போரில் விழுப்புண்ணோடு மடிந்து மேலுலகம் புகுந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவதே அவர்களுக்குப் பெருமை' என்பது சாத்தந்தையார் எனும் புலவரின் கருத்து.

போரில் வீரர்கள் சாவது இயற்கை. செத்தவர்கள் சொர்க்கம் (மேலுலகம்) புகுவர் என்பதும் புகுந்தவர் தேவகுல மகளிரையே மணப்பர் என்பதும் உண்மைக்கு மாறானவை என்று அறிந்திருந்தும் இக்கருத்துகளைப் பரப்பி வந்துள்ளனர் புலமை உடையோர், ஏன்?

இல்லாத ஒன்றை அடைவதில்- நம்புவதில் மனிதர்க்கு எப்போதும் போதை உண்டு. நன்னீரை விடக் கானல் நீரைப் பருகத் துடிப்பவர்கள் உண்டல்லவா? மேலும் தேவகுலப் பெண்களை மணக்கும் பாக்கியம் வேறு கிடைக்கிறது.

இவ்விரண்டையும் அடைய அவாவிய வீரர்கள் சாரை சாரையாகப் புறப்பட்டால்தானே மன்னனுக்கு வெற்றி கிடைக்கும். அவன் வெற்றிபெற மறவர்க்கு ஏற்றப்பட்ட போதையே மேலுலகமும் தேவமகளிரும் என அறிதல் வேண்டும்.

மேலுலகத்தை ஒத்துக்கொண்ட வள்ளுவர் ஓரிடத்தில் மேலுலகத்தை மறுத்துவிடுதலையும் இவன் நினைக்கலாம். "மேலுலகம் இல் எனினும்' (குறள் 222) என்பது அது.

இப்பாடலுக்கு விளக்கம் எழுதிய உரை வேந்தர் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் "போர்க்களத்து உயிர் கொடுக்கும் மறவர் துறக்க உலகை அடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவர் என்பது பண்டையோர் கொள்கை' என்று எழுதினார். (புறநானூறு- கழகப் பதிப்பு. பா. 287)

நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டிருக் கும். அச்சிற்பத்திற்கு மேலே வானர மகளிர் மலர் தூவி அவனை வரவேற்பது போலவும் சிற்பம் இருக்கும்.

இந்நடுகல் சிற்பத்தையும் புறப்பாடல் கருத்தோடு ஒப்பிட்டு ஒரே கருத்து இருவேறு முறைகளில் இருப்பதை உணரலாம்.

பண்டைக் காலத்தில் மன்னன் சில வீரர்க்கு மட்டும் தனியே சிறப்புகளைச் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது. அவ்வீரர்கள் உடல், பொருள், ஆவியைத் தரும் விசுவாசிகளாய் இருப்பர் போலும்!

ஓர் அரசன் ஒரு வீரனுக்கு மட்டும் தனியே கள்ளைக் கொடுத்துப் பாராட்டி இருக்கிறான். ஆனால் போரில் அவன் சாகவில்லை.

இதனை நினைத்து அவனைப் பெற்றவள் ஏங்குகிறாள்; அழுகிறாள்.

"என் மகன் போரிலே மடிந்திருந்தால் 
அரசன் கண்ணீர் மல்க அவனைப் பாடையிலே கிடத்தி 
அவன் மேலே தூய வெள்ளாடை போர்த்தி மரியாதை செய்திருப்பானே. 
அப்பேறு அவனுக்குக் கிட்டாமல் போயிற்றே' 
என வருந்துகிறாள். இதோ பாடல்.
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூயவெள் அறுவை போர்ப்பித் திலதே.
(புறம் 286)

அரசன் செய்யும் இச்செயலுக்குப் பின்னணி யில் வீரர்கள் இப்பேறு பெற போருக்கு விரும்பிச் செல்லும் ஆசை உண்டாக்க வேண்டும் எனும் உந்துதல் மறைந்திருப்பதைக் காணமுடியும்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எந்தக் கருத்தும் தோன்றுவதற்கு வலுவான பின்னணி இல்லாமல் தோன்றுவதில்லை. இன்று மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் பொருளற்ற மூட நம்பிக்கைகளாகிய சொர்க்கம், நரகம், மறுபிறவி, தலையெழுத்து, வானுலகம் போன்ற அனைத்தும் தோன்றிய பின்னணியும்கூட இப்படித்தான் இருக்கும்.

ஒரு கருத்துப் பரவிய பிறகு, மக்கள் கருத்தை மட்டுமே உடும்புப் பிடியாகப் பற்றி நிற்பர்; பின்னணி கால வெள்ளத்தில் கரைந்து போகும். கருத்துகளின் பின்னணியை ஆராய்வ தால் அக்கருத்துத் தோற்றத்தின் மூலத்தை அறியலாம். சமூகத்திற்குப் பண்டு தோன்றிய கருத்துத் தேவையெனின் பின்பற்றலாம்; தீமை தருமெனின் நிராகரிக்கலாம்.


நன்றி - இனிய உதயம்

காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம்: பாரதி - பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி

மானுடத்தை வாழ்விக்க வந்த நம் மகாகவி பாரதிக்கு டிசம்பர் 11-ல் 130 வயது. அந்தக் கவிதைப் புலவனின் இலக்கியப் பயணம், சகல திசைகளிலும் புரட்சி வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எரிமலைக் குழம்பைத் தொட்டுத் தொட்டு கவிதை எழுதிய பாரதி, மலர்ச்சாறு கொண்டும் மனதுக்கு இதமாக மாகவிதைகள் தந்தவன். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என புதுப்பாய்ச்சல் நடத்திய பாரதி, நாடகக் களத்தை மட்டும் விட்டுவைப்பானா என்ன? நிறைய நாடகங்களை அவன் எழுதிக்குவிக்கவில்லை. எனினும் நாடக முயற்சியிலும் களமிறங்கி, சிலம்பம் சுற்றிப்பார்த்திருக்கிறான். பாரதியின் ஏனைய படைப்புகளின் மீது ஆய்வாளர்கள் பார்வை செலுத்திய அளவிற்கு அவனது நாடகப் படைப்புகளின் மீது பெரிதாக யாரும் பார்வை செலுத்தவில்லை. 

அந்தக் குறை என்னுள் நீண்டநாளாய் நெருடியதால் நான், பாரதியின் நாடகத் தமிழன்பால் ஆர்வம் கொண்டு அவற்றை அலசினேன்.

பாரதி, சொற்ப வயதிற்குள் சில நூற்றாண்டுகளுக்கான வாழ்க்கையை வாழ்ந்தவன். அவன் அக்கிரஹாரத்தில் இருந்து முளைத்து வந்த புரட்சி விருட்சம். சடங்கு சம்பிரதாய வலைகளில் சிக்க மறுத்த வீறுமிகும் விலாங்குமீன். அவன் சமூகத்திற்காக உதடு திறந்தவன். விடுதலைக்காக எழுதுகோல் பிடித்தவன். அச்சங்கள் அறியா அடர்நெருப்பு பாரதி. அவனது எழுத்துக்களின் வெம்மையும் கதகதப்பும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். அவன், காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம், நவரசங்களாலும் நிரம்பி வழிந்த நாடகம். 

""கலை என்பது சமூக - அழகியல் நிகழ்வு  ஆகும். அது சமூகத்தின் பண்பாட்டினுள் நிலை கொண்டு நிற்பது. பண்பாடு என்பது (அச்) சமூகத்தின் வாழ்க்கை முறைமையாகும். அதற்குள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் (மதம், உணவு, சூழல், மனித உறவு முறைமை, 

பொருளாதார நடவடிக்கைகள், சமூக ஒருங்கமைப்பு, வாழ்க்கை நோக்கு முதலியன) இடம் பெறும்'' என்னும் கா.சிவத்தம்பியின் கூற்றுடன் பொருத்தப்பாடு உடையதாக மகாகவி பாரதியின் படைப்புகளைக் காணமுடிகிறது.

பாரதி வாழ்ந்த காலம் குறைவானது என்றாலும் தன் படைப்பின் மூலம் சிகரங்களைத் தொட்டவன். கவிதையாளனாக இதழாசிரியனாக, கட்டுரை யாளனாக, சிறுகதை ஆசிரியனாக, எல்லாவற்றிலும் புதுமைச் சிந்தனை கொண்டவனாக வெளிப்பட்ட பாரதி நாடகப் படைப்பாக்க முயற்சியிலும் கவனத் திற்கு உரியவனாகத் திகழ்கிறான்.

தமிழ் நாடகத் தொடக்கமும் பாரதியும்

19-ஆம் நூற்றாண்டின் இறுதி தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். இக்காலத்தில் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922), பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964), பரிதிமாற் கலைஞர் (1870-1903) ஆகியோர் தமிழ் நாடகத்தின் முன்னோடி களாவர். இவர்களில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் இந்துத்துவத் தன்மை கொண்டது. புராண இதிகாசக் கதைகளைக் கூத்து வடிவில் அரங்கேற்றம் செய்தது. பம்பல் சம்பந்த முதலியாரின் நாடகமோ இந்தியத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மேனாட்டு நாடக வடிவமைப்பை உள்ளடக்கியதாக விளங்கியது. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியன படைத்த பரிதிமாற் கலைஞரின் நாடகங்கள் படித்தவர்களால் கற்கப் பட்டனவே அன்றி நடிக்கப் பெறவில்லை.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயேருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. இதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த,""வெள்ளையர்களுக்கு அடிமையாகி வாழ்ந்த சூழலில் நாடகம் எதிர்ப்பு உணர்வின் குரலாக மாறியது. நாடகமேடை அரசியல் தளமானது. பாடல்களும் வசனங்களும் உருமாறின. நடிகர்கள் மேடையில் கைது செய்யப்படுவதும் பிரதிகள் தடை செய்யப்படுவதும் தொடர, நாடகம் எதிர்ப்பின் விளைநிலமாகி விட்டது... நாடகம் ஓர் எதிர்ப்புக் குரல் என்றே அறியப்பட்டது''  என்னும் எஸ்.இராமகிருஷ்ணனின் கூற்று விடுதலைப் போராட்டக் கால இயங்குநிலையை வெளிப்படுத்துகிறது.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த பாரதியின் (1882-1921) நாடகப் படைப்பாக்க முயற்சி புதிய தன்மை உடையதாய்க் காணமுடிகிறது. ஆங்கிலேயேரை எதிர்த்து விடுதலைப் பாடல்கள் இயற்றி வந்த பாரதி 1912-ல் வியாச பாரதத்தின் ஒரு பகுதியாகிய "பாஞ்சாலி சபத'த்தை "மறுவாசிப்புத் தன்மையில் படைத்தான். பாரத தேவியாக உருவகம் செய்து படைக்கப்பட்ட பாஞ்சாலியின் உரையாடல்கள் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் அவல நிலையை எடுத்து இயம்பின. பொறுப்பற்ற பொறுமையைச் சாடின. இவைகள் விடுதலை வேண்டிப் போராடிய மக்களினை மேலும் தீவிரமாகப் போராடத் தூண்டின. ஆனால் பாஞ்சாலி சபதத்தின் வடிவம் நாடகப் படைப்பாக்கம் என்று கூறுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதுமின்றி காவிய வடிவம் கொண்டதாக அமைந்து இருந்தது. இதன்பிறகு இயற்றப்பட்ட ஜகத் சித்திரம், விடுதலை ஆகியன புதிய நோக்கிலான நாடக முயற்சியாய்க் காணமுடிகிறது. 

ஜகத் சித்திரம்-தோற்றுவாய்

1919 -ல் புதுவையிலிருந்து தன் தாய்மண்ணான தமிழ் நாட்டிற்குள் பாரதி வருகிறான். ஆங்கிலேயர்கள் அவனைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைக்கின்றனர். ஏறக் குறைய ஒருமாதத் தனிமைச் சிறைவாசமும் புதுவை குள்ளச்சாமியின் மூலம் ஏற்பட்ட "கஞ்சா' பழக்கமும் அவன் மனதைப் பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாக்குகிறது. சிறையிலிருந்து வெளிவரும் பாரதி அப்பழக்கத்திலிருந்து மீண்டாலும் குடும்பச் சூழலும் பொருளாதாரமும் அவன் வாழ்க்கையில் பெரும் நெருக்குதலை உண்டாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் "ஜகத் சித்திரம்' நாடகம் பிறக்கிறது. அந்நாடகத்தில் அவனது மன உளைச்சல், குழப்பம், பொருளாதாரச் சிக்கல்கள், பசி, அதனை எதிர்கொள்ளல் ஆகியன தெளிவாக வெளிப்படுகின்றன.

ஜகத் சித்திரம்- நாடகம்

காட்சி, இடம், நேரம், இடம்பெறும் பாத்திரங்கள் என அனைத்தும் நாடக வடிவ முறைப்படி எழுதும் பாரதி, பாத்திரங்களாக காக்கையரசன், தேவேந்திரன், தேவசேவகன், நாரதர், கிளி, குயில், குருவிகள், நாகணவாய், காக்கை, அணில், பசுமாடு, எருமை எனப் பலவற்றைப் படைத்துள்ளார்.  காளி கோவில், வானுலகம், கடற்கரை என மூவிடங்களில் நாடகம் பயணம் செய்கிறது. மொத்தம் ஐந்து காட்சிகளைக் கொண்டதாக ஜகத் சித்திரம் விளங்குகிறது.

நாடகம் உயிர் பெறுவதென்பது பாத்திரங்கள் மூலம்தான். படைக்கும் பாத்திரங்கள் சரியான வகையில் அமைய விட்டால் அதன் உயிர்த்தன்மை கெட்டுப் போகும். மேலும் அப்பாத்திரங்களுக்கான வசனமும் அவை வெளிப்படுத்தும் மௌனமும் கூட நாடகத்தை வலுவறச் செய்யும். இவ்வகையில் பாரதி பாத்திரப்படைப்பினை, உரையாடலை மிகத் திறமையாகவே கையாண்டுள்ளான்.

முதல் காட்சியில் காக்கையரசன் காளிக் கோவிலின் தெப்பக்குள மண்டபத்தின் மையப் பகுதியில் அமர்ந்தபடி, இந்த உலகத்தில் எல்லாம் இனியன. புட்கள் பூங்குரலுடையன. 

ஆனால் மனித குலத்தின் உள்ளத்தில்தான் இன்பம் இல்லை என்கிறது. 

அதற்குக் காரணமாக, 

""மனம்தான் சத்துரு. வேறு பகை நமக்குக் கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது. மனந்தான் பகை'' (ப-267)

எனக் கூறும் காக்கையரசன் மேலும்,

""அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்''  (பக்-268) என்றும் கூறுவதாகக் காட்சி அமைகிறது.

இதில் கொத்துவோம், கிழிப்போம், வேட்டையாடுவோம் என்னும் பாரதியின் எழுத்துக்களில் ஒரு புதிய ஒளி வீசுகிறது. எங்கு வாழ்ந்தால் என்ன? எந்தச் சூழ்நிலை இருந்தால் என்ன? மனம்தான் சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்ள மறுக்கிறது. அதுதான் பகை. அதைக் கிழிப்போம், கொத்துவோம், வேட்டையாடுவோம் எனக் கூறுவது போல் அமையும் இக்காட்சி தமிழகத்திலிருந்து புதுவைக்கும் புதுவையிலிருந்து தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்து வாழ்ந்தும் அங்கு கிடைத்த அனுபவங்களும் சிறை அனுபவமும் ஏற்படுத்திய மனக் குழப்பங்களின் வெளிப்பாடாகும். 

பசிப்பிணி

பாரதியின் இத்தகைய வாழ்க்கைச் சூழல் அவனை இறைவன் உள்ளானா? எனத் தனக் குள்ளாகக் கேட்கும் துணிவை ஏற்படுத்துகிறது. ஓர் அத்வைதியாக வாழ்ந்தவன் "தத்வமஸி' என்று கவிதையில் உரைத்தவன், நாராயணன் எங்கிருக்கிறான்?  என்கிற வினாவை எழுப்புகிறான். பின்னர் ஏதோ ஒரு வகையில் தெளிவு பெற்றவனாக,""இந்திரன் : உங்களுடைய நாராயண ஸித்தாந்தத்தின் துணிவு யாது?

நாரதர் :     எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லாத் தன்மைகளும் எல்லா சக்திகளும் எல்லா சூழல்களும் எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்'' 

என்ற உரையாடல்கள் மூலம் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதனைக் காணமுடிகிறது. ஆனாலும் கூட வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி இறைவன் இருக்கிறான் என்பதனையும் ஒன்றுக்கொண்று சமானம் என்பதனையும் மறக்கடிக்கிறது. மனம் சோர்வடைகிறது. தைரியம் அற்றுப் போகிறது. கவலை வளர்கிறது. தற்கொலைக்கு முனைகிறது. இதற்கு அடிப்படையாகப் "பசி' அமைகிறது. மனிதர்களுக்கு எப்போதும் துன்பம் தரும் பசியினால் ஏற்படும் விளைவு பற்றி நாடகத்தின் மூன்றாவது காட்சியில்,""எங்களுக்கு உடம்பு சிறிது; ஆதலால் தீனி சொற்பம் .அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்''

என நாகணவாய் என்னும் பாத்திரம் கூறுவதாகத் தன் கருத்தினைப் பதிவு செய்கிறான் பாரதி. பசி மனிதர்களுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய துன்பம் அவர்களுக்குள்ளாக காதலின்பத்தை (அன்பினை) அழிப்பதேயாகும். அதனால்தான் பாரதி, "தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடுகிறான். மேலும் அவனின் "பசி' அனுபவமே இங்கு "ஜகத் சித்திரமாய்' எல்லோருக்குமானதாய் வடிவங் கொள்கிறது.

விடுதலை - நாடகம்

பசியிலிருந்தும் உலக ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் விடுபடும் வழிதான் எது? என எண்ணும் பாரதியை ருஷ்யாவின் சோசலிசம் கவர்கிறது. எல்லாம் எல்லார்க்கும் உடைமை என்னும் தத்துவம் அவனுக்குள்ளாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது அவனுடைய இரண்டாவது நாடகமான "விடுதலை'யில் வெளிப்படுகிறது. இரண்டு காட்சிகளை மட்டும் கொண்டு முழுமையற்ற நிலையில் இந்நாடகம் காணப்படுகிறது. பாத்திரங்களாக இந்திரனும் அவன் ஏவலுக்கு உரியவர்களும் வசுபதி என்னும் கற்பனை (!) பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளன.

இந்நாடகத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் தனக்குக் கீழேயுள்ள ஏவலாள்களான பிற தேவர்களைத் "தோழர்' என்றே விளிக்கிறான். அவர்களும் இந்திரனைத் "தோழர்' என்றே அழைக்கின்றனர். இது பாரதிக்குள்ளே ஏற்பட்டு இருக்கும் சோசலிசப் பொதுவுடைமை சித்தாந்தத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. நாடகத்தினுள் காணும் உரையாடல்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு, தேவர்களுக்குப் பிரம்மன் இட்ட பணியாக வரும், 

""மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளையெலாம் சிதறுக''

என்னும் உரையாடலை இந்திரன் வழி கூறுவதும் அதனைத் தொடர்ந்து வேற்றுமைகளைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அமிழ்தம் உண்போம் அது அனைவரையும் சமமாக்கும் என்றும் கூறுவது போல உரையாடலை வளர்த்துச் செல்வதும் மேலும் மேலும் உறுதி செய்வதாக அமைகிறது. 

சுதேசமித்திரனில் பாரதி படைத்த கட்டுரைகளில் ஒன்று "செல்வம்' என்பதாகும். இதில் ருஷ்யாவில் சோசலிசக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றம் குறித்து எழுதியுள்ளார். மேலும் இந்தியாவில் அக்கொள்கையைப் பரவலாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுடைமைச் சமுதாயமான இந்தியாவில் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை அலசுகிறான். அதற்கான முக்கியக் காரணமாக,""கோடிக் கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும் லஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளை கஞ்சி கிடைக்காமலேயே சுத்தப் பட்டினியால் மரணம் எய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலையை நாம் ஒரு ஷணங் கூட சகித்திருப்பது நியாயமில்லை'' (பக்-509) என்று இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலையைக் குறித்துக் கட்டுரைக்கிறான். இதே கருத்தினை மையமாகக் கொண்டுதான் அவனுடைய இறுதிக் காலப் படைப்பான நாடகங்கள் அமைவதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. 

முடிவு

நாடகம் முக்கிய இடத்தினைப் பெற்ற காலத்தில் வாழ்ந்த பாரதியின் படைப்பில் இரண்டு நாடகங்களை மட்டுமே காண முடிகின்றது. அவையும் முழுமையற்று மிகச்சிறிய அளவில் எழுதப்பட்டுள்ளன. இது பாரதி நாடகம் எழுத முயன்றதின் தொடக்கமாக அறிய முடிகின்றது. 

நாடகங்கள் தொடக்க காலத்தில் புராண இதிகாசப் பாத்திரங்களைக் கொண்டு இந்துத்துவத் தத்துவங்களை விளங்கும் வகையில் அமைய, பாரதியின் நாடகத்திலோ அவை மட்டுமின்றி அஃறிணை உயிர்களும் மானுட குலத்தின் நன்மை நோக்கியே படைக்கப்பட்டன. அவ்வகையில் தன்னைச் சார்ந்தும் தன் வாழ்நிலை, குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் சார்ந்தும் உலகம் தழுவிய பார்வையோடு பாரதி நாடகம் படைத்திருப்பதனை உணரமுடிகிறது.

மேலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்த காலத்தில் உலகப்போரின் விளைவில் தாமதமானாலும் நிச்சயமாய் தேசத்திற்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவனை முன்னதாகவே "விடுதலைக்கும்மி' பாட வைத்தது. அதன் தொடர்ச்சியாகவே அடுத்த தளத்திற்கு நகரும் வகையில் மனிதனைத் துன்பத்தில் உழல வைக்கும் வறுமை, பசி, பொருளாதாரச் சிக்கல், மனக்கவலை, காதலற்ற நிலை, மரண பயம் போன்றன நீங்க வேண்டியும் சமத்துவ சமுதாயம் காண வேண்டியும் நாடக வடிவத்தைப் பாரதி பயன்படுத்த முயன்றிருக்கலாம் என்பதாக ஊகிக்க சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கின்றன.

நன்றி - இனிய உதயம் 2012

ஆத்திச்சூடிகள் - ஓர் ஒப்பீடு - அ.ப.பாலையன்

தமிழுக்குத் தொண்டு செய்த பாரதிக்குப் பிடித்த செந்தமிழ்ப் புலவர்கள் வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள், ஔவையார் ஆவர். இவர்களில் பெண்பாற்புலவராகிய, இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரே அவருக்கு  மிகவும் பிடித்தவர். "தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப்பெருஞ்செல்வம் என்று மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். என்னும் பாரதியார் கூற்று அவர் ஔவைமீது கொண்ட பேரன்பைக் காட்டும். (பாரதியார் கட்டுரைகள் பக்-.161).

பாரதி, ஔவைமீது வைத்திருந்த மதிப்பே அவரை ஔவையின் ஆத்திசூடியைப் பின்பற்றி புதிய ஆத்திசூடியை எழுதத் தூண்டியது. ஔவையின் ஆத்திடிசூடியைத் தழுவிச் செய்தாலும் அதிலிருந்து தன்னுடையது பாடுபொருளில் மாறுபட்டது என்பதற்காகவே அதற்குப் புதிய ஆத்திசூடி எனப் பெயரிட்டார் பாரதி.

ஔவை- பாரதியார் காலம்:

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை, "கொன்றை வேந்தன்' எனும் ஔவையின் கடவுள் வாழ்த்தை செந்துறை வெள்ளைப்பா (சூத் 63) என எடுத்துக்காட்டுகிறது. தமிழண்ணல். ஔவையார். (பக்-56, 57)

இதனால் ஔவையின் காலம் கி.பி.10 -ஆம் நூற்றாண்டு (பிற்காலச் சோழர் காலம்) எனலாம்.

பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்தார். அப்போது புதிய ஆத்திசூடி எழுதப்பட்டு 1914-ல் அச்சாகி வெளிவந்தாகத் தெரிகிறது. (பன்முகப் பார்வையில் பாரதி. தொகுப்பு மு.சாயபு மரைக்காயர். பக்-367).

அமைப்பு முறை:

செழுமை நிறை நம் மொழி இலக்கண வளமும் இலக்கியப் பெருக்கமும் உடையது. இவ்வளவு இலக்கியக் குவியல்கள் இருந்தும் சோழர் காலத்தில் இருந்த ஔவையார் ஒருவர் தான் தமிழ்க்கல்வியையும், சிறார்க்கு அகர வரிசையில் கற்பித்தலையும் இலக்காகக் கொண்டு ஆத்திசூடி   நூலைச் செய்துள்ளார்.

ஔவை, ஆத்திசூடியை உயிர் எழுத்தில் பன்னிரண்டும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் பதினெட்டும் உயிர்மெய்யில் ககர வரிசையில் பன்னிரண்டும் ச, த, ந, ப, ம, வ ஆகிய வரிசையில் ஔகாரம் நீக்கிப் பதினொன்றுமாக 109 வரிகளில் பாடியுள்ளார்.

ங, ஞ, ய ஆகிய மூன்று உயிர்மெய்யும் சில இடங்களில் மட்டுமே மொழிக்கு முதலில் வருவதால் அவற்றை விட்டுவிட்டார். 

ஏனைய உயிர்மெய் மொழிக்கு முதலில் வாரா. 

ஔவை பாடிய ஆத்திசூடி பெரும்பாலான பதிப்புகளின் 109 என எண்ணிக்கை இருக்கவும் முனைவர் தமிழண்ணல் 108 எனக்கொள்கிறார். அவர் அங்ஙனம் கொள்வதற்குரிய காரணமும் விளங்கவில்லை. (ஔவையார், பக்- 60) 

பாரதியார் செய்த புதிய ஆத்திசூடி எண்ணிக்கையிலும் கருத்துகளிலும் வேறுபடுகிறது.

பாரதி தம் நூலில் உயிர் எழுத்தில் பன்னிரண்டும் உயிர் மெய்யில் க, ச, த வரிசையில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டும் "ஞ' கரத்தில் ஐந்தும் நகரத்தில் பதினொன்றும் "ப'கரத்தில் பத்தும் மகரத்தில் பதினொன்றும் "ய'கரத்தில் மூன்றும் "ர'கரத்தில் எட்டும் "ல'கரத்தில் ஆறும் வகரத்தில் எட்டும் என 110 வரிகளை எழுதியுள்ளார்.

உயிர் ஏறிய மெய்யெழுத்திலும் ஆய்த எழுத்திலும் பாரதி எழுதவில்லை. ஆனால் ஔவை ஒதுக்கிய "ர'கரத்திலும் "ல'கரத்திலும் கூடுதலாகவே எழுதியுள்ளார்.

ஔவை அகரம் ஏறிய பதினெட்டு மெய்யெழுத்தில் ஆத்திசூடி செய்தது அவருக்கே எழுதிய பிறகு பிடிக்கவில்லை போலும்! பின்னர் எழுதிய கொன்றை வேந்தனில் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் அவர் எழுதவில்லை!

ஒற்றுமையும் வேற்றுமையும்

தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த குறுநில அரசுகள் மங்கி சோழப் பேரரசு தோன்றிய காலத்தில் ஔவை வாழ்ந்தார்.

விடுதலை தவறி, கெட்டு பாரத நாடு பரங்கியரிடம் பாழ்பட்டு நின்றபோது நாட்டு மக்களுக்கு "நாமிருக்கும் நாடு நமதென்று' உணர்த்தி விடுதலை வேட்கையை ஊட்ட வந்தவர் பாரதியார்.

ஆகவே இவர்கள் கருத்துகளில் ஒற்றுமையைவிட வேற்றுமைகளே மிகுந்திருப்பது இயற்கை.

கால இடைவெளி இருப்பினும் இருவர் கருத்துகளிலும் காணப்படும் ஒத்த கருத்துகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

முடியரசு காலத்தில் வாழ்ந்த ஔவை, 
    கைவினை கரவேல் 
    பொருள்தனைப் போற்றிவாழ் 
    பூமி திருத்தி உண்' 

என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் உழுதுண்டு வாழ்பவரின் உயர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அடிமைக் காலத்தில் வாழ்ந்த பாரதியாரும்

    கைத்தொழில் போற்று 
    பணத்தினைப் பெருக்கு 
    மேழி போற்று

என ஔவை கூறியதையே வேறுசொற்களில் அறிவுறுத்தி யிருப்பதை நோக்கும்போது சான்றோர்கள் இடம் வேறுபட் டாலும் காலம் வேறுபட்டாலும் ஒத்த கருத்தையே கொண்டிருப்பர் எனும் கருத்தே நினைவுக்கு வருகிறது.

இருவரும் முரண்பட்ட இடங்களும் உண்டு.

"தையல்சொல் கேளல்' என அவ்வையே கூறியுள்ளது நியாயம்தானா? அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூகத்தில் பெண்ணடிமைத் தனம்  வேரூன்றி இருந்தது. பெண்ணுக்குக் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட காலம் அது. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும்பே தைமைத்தே.' எனும் கருத்து கோலோச்சிய காலமாதலால் ஔவை இப்படிச் சொல்ல நேர்ந்தது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடலூர் வள்ளலார் போன்ற பெருமக்கள் பெண்ணுரி மைக்குக் குரல்கொடுத்த பிறகு அவர்கள் வழியில் வந்தவர் பாரதியார். அதனால் தான் தெளிவோடும் துணிவோடும்"தையலை உயர்வுசெய்' எனப் பாடினார். 

தமிழர்கள் எப்பொழுதும் போரையும் காதலையும் இருகண் எனப் போற்றியவர்கள்.

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும் தன் நாளை எடுத்து. (குறள்-776) 

என்பது தான் சங்ககால மக்கள் கடைப் பிடித்த போர் நெறி. 

அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ் வுலகத் தியற்கை (புறம்-76) 

எனும் குரலே அன்று வீரர்கள் எழுப்பிய குரல்.

"பழந்தமிழ்ப் புலவர்களில் பெரும்பான்மையா, 

அரசனுக்காகப் போரிடும் படி வீரர்கள் நடுவிலும் அரசனுக்கு இணங்கித் திறை செலுத்தும்படியாக எதிரி மன்னர்களிடத்தும் அரசனைத் தெய்வத்துக்கு இணையாகப் புகழ்ந்து மக்கள் நடுவிலும் பிரசாரம் செய்தவர்கள்' என்கிறார் பேராசிரியர் கோ. கேசவன் (மண்ணும் மனித உயிர்களும் பக்-80)

சோழப் பேரரசு காலத்திலும் இரவலர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இக்காலத்தில் ஔவையார் நடைமுறையில் இருந்த கருத்துக்கு மாறான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

    போர்த்தொழில் புரியேல்
    முனைமுகத்து நில்லேல்

என்பன ஔவை போருக்கும் அரசர்க்கும் வீரர்க்கும் எதிராகக் கூறும் கருத்துகள்.

ஏன் இங்ஙனம் கூறினார்? போர் மலிந்திருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கைம்பெண்களும் குழந்தைகளும் குடும்பத் தலைவனைப் போரிலே இழந்து, பட்ட பாட்டை நேரிலே கண்டு, கசிந்து கண்ணீர் மல்கி, போரே வேண்டா, எங்கும் அமைதி நிலவவேண்டும் என நினைத்து இப்படி எழுதினாரா?

நாடுபிடிச் சண்டையில் நேரிடும் ஊர் அழிவு, விளை நிலங்கள் பாழ்படல், வீடுகள் எரிப்பு, மக்கள் சொத்தை வீரர்கள் கொள்ளையிடல் போன்ற பேரழிவு களைக் கண்டு நைந்துருகிப் போருக்கு எதிராக இப்படி எழுதியிருப்பாரோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

"களிறு எறிதல் காளைக்குக் கடனே' -(புறம் 312) என்று பொன்முடியார் பாடிய பாடலுக்கும் "போர்த்தொழில் புரியேல்' எனும் ஔவையின் கருத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வேறுபாடு தெரிகிறது. 

ஆனால் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாகிய பாரதி தமிழரின் வீரத்தைக் காட்டும் மரபிலே நின்று, 

    போர்த்தொழில் பழகு
    முனையிலே முகத்து நில்

 என்றே எழுதினார்.

இப்படி எழுதிய பாரதிக்கு வன்முறை, குண்டு எறிதல், ஆயுதந்தாங்கிப் போரிடல் ஆகியவை உடன்பாடன்று. அவரே எழுதுவதைப் பார்ப்போம்.

"இந்த முறைமை (ருஷ்யாவில் லெனின் தலைமையில் ஏற்பட்ட சோசலிஸ்ட் முறை) போர், கொலை, பலாத் காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக் குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து?' (பாரதியார் கட்டுரைகள். பக்- 383)

28-11-1917-ல் சுதேசமித்திரன் இதழில் இப்படி எழுதிய பாரதி, 1914-ல் வெளியான புதிய ஆத்திசூடியில் "முனைமுகத்து நில்' என எழுதியது முரண்பாடு போலத் தோன்றுகிறது.

பாரதிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஒருபக்கப் பார்வை ஆகும். அவருக்கே இன்னொரு பக்கமும் உண்டு. அதனையும் பார்ப்போம். 

"ஆங்கிலேயரிடம் சமாதான வழியில் விடுதலை கேட்கும் பிச்சைக்காரத்தனத்தை விட்டுவிட்டு சரீரப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்நாட்டிலே விருத்தியடையுமாறு பிரயத்தனப் படுவோமாக'. (இந்தியா- 13-10-1906) மேற்கோள். தொ.மு.சி.ரகுநாதன். பாரதி காலமும் கருத்தும் பக்-329) என்றும் எழுதியவர் பாரதி.

அதனால் புதிய ஆத்திசூடியில் பாரதி கூறியவை அவருக்கு உடன்பாடானவையே என உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெரியக்காணலாம்.

ஔவையும் பாரதியும்:

ஔவை தன் நூலில் ஞ, ய எனும் உயிரிமெய் எழுத்துகளை விட்டமை சரியெனப்படவில்லை. 

எனினும் வு, வூ, வொ, வோ எனும் மொழி முதலாகா நான்கெழுத்தையும் உயிரைச் சேர்த்து

    உத்தமனாய் இரு
    ஊருடன் கூடிவாழ்
    ஒன்னாரைத் தேறேல்
    ஓரம் சொல்லேல்.

எனக் கூறியிருப்பது அவரது மொழிப்புலமையைக் காட்டுகிறது. 

ஔவை ஏற்ற ஆய்த எழுத்தை பாரதி ஒதுக்கிவிட்டார். அவர் ஏற்காத "ஞ'கரத்தையும் "ய'கரத்தையும் பாரதி சேர்த்துக்கொண்டார். ஆனால் பாரதி மொழி முதலாகா ரகரத்திலும் "ல'கரத்திலும் புதுவதாகப் பதினான்கு வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுகூட தமிழ்ச்சொல் இல்லை. இவற்றை அவர் எழுதாமலே இருந்திருக்கலாம்.

ஔவையைப் போலவே பாரதியும் மொழிமுதலாகச் சொற்களோடு உயிர் எழுத்தைச் சேர்த்தும் எழுதியுள்ளார்.

(உ) லுத்தரை இகழ்
(உ) லோகநூல் கற்றுணர் 

    எனும் தொடர்களே சான்று.

பாரதியின் தனிச்சிறப்பு

பாரதி வாழ்ந்த காலம் தொழிற்புரட்சி ஏற்பட்டு பல்தொழில்களும் நவீனக் கல்விமுறையும் வளர்ந்த காலம். அதனால் ஔவை சொல்ல நினைக்காத புதுமைக் கருத்துகளையும் பாரதி கூறியுள்ளார்.

"சரித்திரத் தேர்ச்சிகொள்'

என நாட்டு வரலாறு, மக்கள் வரலாறு போன்றவற்றை ஊன்றிக் கற்கவேண்டியதன் நிலையையும்
"ரேகையில் களிகொள்'

எனப் புவியியல் பாடம் படிக்கவேண்டிய தேவையையும்

"வானநூற் பயிற்சிகொள்'

என வானியலில் உள்ள அனைத்துக் கூறுகளையும் அறியவேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளமை பாரதியின் தொலைநோக்கைக் காட்டுவன ஆகும்.

ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி இரண்டையும் தமிழ்க் குழந்தைகளுக்குக் கசடறக் கற்பித்தால் அவர்கள் எதிர்காலத்தில் நாட்டையும் மொழியையும் காக்கும் நல்ல குடிகளாக உருவெடுப்பர் என்பது உறுதி.


நன்றி - இனிய உதயம்