கோணங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோணங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோணங்கி எனும் மாயக்கதையாளன் - எஸ்.ராமகிருஷ்ணன்


எழுத்தாளன் மண்புழுவைப் போல கிராமத்து மண்ணைத் தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மௌனம் அவனுக்குப் புரிய வேண்டும். சிம்னி விளக்கை விபூதியால் துடைத்து சுத்தம் செய்வது போல மொழியை அவன் சுத்தம் செய்து ஒளிர வைக்க வேண்டும். அடிவானம்வரை வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு கிராமத்தையும் அவன் சுற்றிவர வேண்டும். நரித்தடத்தில் கால் பதியாதவன் ஒரு போதும் படைப்பாளியாக இருக்க முடியாது. உவர்மண் எடுக்கப் போகும் கழுதைகளோடு சேர்ந்து நாமும் நடந்து போய் வந்தால் மட்டுமே அதை உணர முடியும். கிளியாக இல்லாமல் ஒரு நாளும் மரத்தைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

இப்படியான கிளர்ச்சியூட்டும் எண்ணங்களை அடுத்தடுத்து சொல்லிக் கொண்டும் இடைவிடாமல் ஊர் சுற்றிக்கொண்டுமிருந்த எழுத்தாளர் கோணங்கியை என் பள்ளியிறுதி வகுப்பின் விடுமுறையில் முதல் முறையாக சாத்தூரில் இருந்த என் தாத்தாவின் வீட்டில் சந்தித்தேன். அவர் என் அண்ணனின் நண்பர். என் மாமாவோடு ஒன்றாக கூட்டுறவு பயிற்சி படித்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேரப் பணியாளர் ஆகி மக்களுக்கு சேவை செய்வது என்ற பெருங் கனவுடன் கோணங்கியும் என் அண்ணனும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.  அப்போது  கோணங்கியின் பெயர் இளங்கோ. கோணங்கி என்ற அவரது புனைபெயர்  மிக வசீகரமாயிருந்தது. அதைச் சொல்லும் போதே பலர் கிளர்ச்சியடைவதைக் கண்டிருக்கிறேன்.

கோவில்பட்டி அருகில் உள்ள கிராம கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை  முடித்திருந்தார்.  இருவருக்கும்  மக்கள் சேவையின் மீது மிகுந்த அக்கறையும் பிடிப்பும் இருந்தது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ புத்தகங்கள் மற்றும் ஜார்ஜ் தாம்சன், மார்க்சிய அழகியல், ஜீலியஸ் பூசிக் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

வியப்போடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். புத்தக வாசிப்பில் ஊறிக்கிடந்த எனக்கு அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள விருப்பமாக இருக்கும். ஆனாலும் விலகியே இருந்தேன். அந்த நாட்களில் கோணங்கிக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் ஜோதி விநாயகம் மற்றும் தோழர். எஸ்.ஏ.பெருமாள். இருவரையும் அடிக்கடி சந்தித்து தன் திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். இருவரும் கோணங்கி மீது அளவற்ற அக்கறை கொண்டவர்கள்.

தோழர் எஸ்.ஏ.பெருமாள். ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால்  தீவிர இலக்கியம் அறிந்தவர். தேடித் தேடி உலக இலக்கியங்களை வாசித்தவர். தேர்ந்த பேச்சாளர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். கோணங்கி அவரைச் சந்திக்க செல்லும்போது கூடவே இருப்பேன். இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ருஷ்யக் கதைகள், அரசியல், வரலாறு எனப் பேச்சு நீளும். அந்தப் பேச்சின் ஆரம்பத்தில் உற்சாகமாகக் கலந்து கொள்ளத் துவங்கிய கோணங்கி சில நிமிசங்களிலே தான் கிராமப் புறங்களில் கண்ட மனிதர்கள் நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கத் துவங்கிவிடுவார். பேச்சு அப்படியே திசைமாற்றம் கொண்டுவிடும். கோணங்கியின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தன் சொல்லின் வழியே அந்த மனிதர்களைக்  கண்முன்னே உயிருடன் நடமாட விடுவார்.

ஜிப்ஸிகளைப் போல தேர்ந்த நாடோடிக் கதைசொல்லி கோணங்கி என்று எஸ்ஏபெருமாள் மனதாரப் புகழ்வார். ஆனாலும் கோணங்கி தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதைவிட மக்கள் சேவையே முக்கியம் என்று உறுதியாகச் சொல்வார்.

இதற்காகவே சென்னை செல்வது என்று முடிவு செய்து சிலமாதங்கள் சென்னையில் கட்சி ஊழியராகப் பணியாற்றிவிட்டு ஒரு நாள் இரவு கோணங்கி என் அண்ணனைப் பார்க்கத் திரும்பி வந்திருந்தார். தோளில் ஒரு ஜோல்னா பை. அது நிறைய புத்தகங்கள். ஜிப்பா. பேண்ட் அணிந்திருந்தார். 

சென்னை எப்படியிருக்கிறது என்று அண்ணன் ஆர்வமாகக் கேட்டபோது, சென்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ் வந்து கொண்டிருக்கிறது. எல்லா பஸ் பயணிகளும் நகரின் வெளியே நின்று ஒண்ணுக்கு அடிக்கிறார்கள். ஒரு நாள் யாராவது ஒரு ஆள் ஒண்ணுக்கு அடிக்கும் போது ஒரு சொட்டு மூத்திரம் தரையில் பட்டதும் நகரம் மூழ்கிவிடப்போகிறது பார். சென்னை ஒரு மாபெரும் கழிப்பறை போலிருக்கிறது. அந்த ஊரில் ஆந்தைகளே கிடையாது. காய்ந்து போன நத்தைக் கூடுகள் போலத்தான் வீடுகள் இருக்கின்றன. மனிதர்கள் தூக்கத்திலும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். சுண்ணாம்புக் காளவாசல் போல நகரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அங்கே போகவே கூடாது என்றார்.

அவர் சொன்னவிதம் யாவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. சென்னையைப் பற்றிய இது போன்ற விவரணை எதையும் நான் முன்கேட்டதேயில்லை. ஆனால் கோணங்கி அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைப் பற்றிச் சொல்வது போல சென்னையைப் பற்றிய வியப்பான கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
சில வாரத்தின் பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்த கோணங்கி சிகரம் இதழில் தனது முதல்சிறுகதை இருட்டு வெளியாகி உள்ளது என்று அண்ணனிடம் படிக்கத் தந்தார். இரவெல்லாம் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தக் கதையைப் படித்து பார்த்தேன். அற்புதமான சிறுகதை அது. நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் தான் மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் என்ற ஒரு கதையை எழுதத் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது.
அதன் பிறகு ஒருநாள் மாலையில் சாத்தூரில் உள்ள ஆற்றுப்பாலத்தின் அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது அருகாமை வீதியில் இருந்து கோணங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்தபடியே கையில் ஒரு வெள்ளரிப்பிஞ்சைத் தந்து இந்த வெள்ளரிப்பிஞ்சிற்குள் கொல்ல பட்டி கிராமத்து வெயில் இருக்கிறது. தின்று பார். வெயிலின் ருசி தெரியும் என்றார்.

நானும் அவரும் சாலையில் நின்றபடியே வெள்ளரிப்பிஞ்சைத் தின்றோம். ஒரு டவுன்பஸ் வந்து கொண்டிருந்தது. வா ஏறு என்று சொல்லி அதில் ஏறச்சொன்னார். அதில் ஏறி சாத்தூருக்கு ரெண்டு டிக்கெட் என்று கேட்டார். கண்டக்டர் இதுதானே சாத்தூர் என்றதும் இல்லை இப்படியே சுற்றி சர்ச் பின்னாடி போய் பேருந்து நிலையம் வரை செல்லும் தானே. அதற்கு ஒரு டிக்கெட்  கொடுங்கள் என்றார். அந்தப் பேருந்தில் சாத்தூரில் ஏறி சாத்தூருக்கு டிக்கெட் கேட்ட முதல்ஆட்கள் நாங்கள் தான்.

அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிசங்களில் பேருந்து நிலையம் வந்தது. அவர் எப்படியிருந்தது பார்த்தியா இப்படி வித்யாசமான பயணம் போகவேண்டும் என்றார். அவரது செய்கை  காரணமில்லாமலே எனக்குப் பிடித்திருந்தது.

அதன்பிறகு அவரைப் பார்ப்பதற்காகக் கோவில்பட்டிக்குச் சென்றேன்.  கோணங்கி வீடு  ரயில்வே லைனை ஒட்டிய  இந்திரா  நகரிலிருந்தது. என்னைப்  பார்த்தவுடன்  நீண்ட நாள் பழகியவர் போல அன்போடு கூடவே வைத்துக் கொண்டார்.

மறுநாள் அவர் வேலை செய்யும் கீழஈரால் கிராமக் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குச் சென்றோம். நிறைய வேம்பு அடர்ந்த கிராமம். சிறிய அலுவலகம். அது ஒரு நபர் அலுவலகம் போலும். அதன் வெளியே ஊழியர் இன்று அவசர அலுவல் காரணமாகத் தலைமை அலுவலகம் சென்றிருக்கிறார்  என்ற  பலகை  தொங்கிக் கொண்டிருந்தது. அது எப்பவும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும். நான் வந்தால் மட்டுமே உள்ளே எடுத்து வைப்பேன் என்றபடியே அந்தப் பல கையை உள்ளே எடுத்து வைத்து விட்டு அருகாமை வீடு ஒன்றிற்குப் போய் ஒரு செம்பில் தண்ணீர் வாங்கி வந்தார்.

தன்னுடைய வேலை கூட்டுறவுக் கடன்களை விவசாயிகளிடம் வசூல் செய்வது என்று சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஒரு விவசாயி  வீட்டிற்குப்  போனார். அங்கே என்னைக் காட்டி, தலைமை அலுவலகத்தில் இருந்து வசூல் பண்ண வந்திருக்கிறார். ஆகவே வட்டியாவது கட்டிவிடுங்கள் என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

விவசாயியோ தன் கையில் பணமில்லை என்று சொல்லி, தவணை கொடுக்கும்படியாகச் சொன்னார். அப்போ கோழி அடிச்சி சாப்பாடாவது போடுங்கள் என்றார். அடுத்த சில மணிநேரங்களில் கோழிக் குழம்புடன் சாப்பாடு தயார் ஆனது. எனக்கோ சிரிப்பாக வந்தது. சாப்பிட்டுவிட்டு கயிற்றுக் கட்டிலைப் போட்டு உறங்கினோம். மாலை அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, கோவில்பட்டிக்கு டவுன் பஸ்ஸில் கிளம்பினோம்.

கோணங்கியின் ஆளுமை வியப் பூட்டக்கூடியது. கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்டும் என்ற ஆதங்கமும் நிரம்பிய படைப்பாளி அவர். தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சில  நிமிசங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபவர். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரது சட்டை பேனா பை என்று எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார். பருந்தைப் போல அவரும் ஒரு இடத்தில் நில்லாமல் வட்டமடித்துக் கொண்டேயிருப்பார்.

பழைய இசைத்தட்டுகள், புத்தகங்கள்,  கலைப்பொருட்கள்,  புகைப்படங்கள், மைக்கூடு, பேனா, ஹேண்ட் மேட் காகிதங்கள், குதிரையின் கால் எலும்புகள், கூழாங்கற்கள், விதவிதமான ஜோல்னா பைகள் என்று அவர் விசித்திரமான எதைஎதையோ சேகரித்து வந்தபடி இருப்பார்.

அவருக்கு அலுவலக வேலை செய்வதில் விருப்பமேயில்லை. நாடோடியாக அலைவதில்தான் மனம் ஒன்றியிருந்தது. சில வருசங்களில் அந்த வேலையை  விட்டு விலகியும்  விட்டார்.

கோணங்கி வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. எழுத்தாளர் தமிழ் செல்வன் அவரது அண்ணன் என்பதால் அவர் தீபம், கணையாழி, தாமரை என்று இலக்கிய இதழ்களும் சமகால இலக்கிய புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

கோணங்கியும் தன்பங்கிற்கு தேடித்தேடி புத்தகங்கள் சேகரித்து வருவதாகச் சொன்னார். அப்படிச் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை தான் யாருக்கும் காட்டுவதில்லை. ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறேன் என்று சொல்லி என்னிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி இது தான் ஆரோக்கி நிகேதனம். மிகச் சிறப்பான வங்காள நாவல் என்றார். 

நான் படிப்பதற்காகச் சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டேன். இரு  எடுத்து  வருகிறேன்  என்று வெளியே காத்திருக்க வைத்துவிட்டு அவர் வீட்டின்  உள் அறையில் இருந்த புத்தகச் சுரங்கத்தில் இருந்து மூன்று புத்தகங்களைக் கொண்டுவந்து தந்தார். ஒன்று பிளக்கனோவ் எழுதியது. மற்றது எலியா ஹிரன்பெக் நூல். மூன்றாவது சோசலிச யதார்த்தவாதம்.

கோணங்கி கொடுத்த புத்தகங்கள் ஆயிற்றே என்று அதை மண்டையை உடைத்துக் கொண்டு படித்தேன். ஒரு வரி கூட உள்ளே போகமுடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் குடியிருந்த மல்லாங் கிணறுக்கு கோணங்கி வந்து சேர்ந்தார். இந்தப் புத்தகங்களைப் படிக்கவே முடியவில்லை என்று சொல்லியதும் அவர் சிரித்துவிட்டு நானும் படிச்சதில்லை. யாராவது படிக்கட்டு மேனு வாங்கி வச்சிருக்கேன் என்றார்.
நாங்கள் இருவரும் மல்லாங்கிணற்றின் புறவெளியில் சுற்றியலைந்தோம். வறண்ட கிராமம் அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கக்கூடும். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். உடைந்த பாலத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஆந்தை அருகில் வந்து எங்களைப் பார்த்தபடியே இருந்தது. ஆந்தை பற்றி வியப்போடு பேசினார்.

அவருக்கும் எனக்குமான வயது படிப்பு போன்ற இடைவெளிகளைத் தாண்டி மிகுந்த நெருக்கம் உருவானது. நினைத்த நேரத்தில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினோம். கோணங்கியின் அம்மாவும் அக்காவும் போல அன்பைத் தந்தவர்கள் உலகில் இல்லை. எந்த நேரம் வந்தாலும் எங்களுக்குச் சாப்பாடு தந்து சிரித்தபடியே எங்கய்யா போயி ஊரைச் சுத்திவிட்டு வருகிறீர்கள் என்று கேட்பார்கள்.

கோணங்கி வீடுதான் என்னை வளர்த்தது. கோணங்கியின் அப்பாவும் எழுத்தாளர் என்பதால் அவர் எங்களை மிகுந்த அக்கறையுடன் பேசி என்ன எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கேட்பார். தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.

கோணங்கியின் தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ். அப்பா எழுத்தாளர் சண்முகம். அண்ணன் எழுத்தாளர் தமிழ்செல்வன். தம்பி நாடக இயக்குனர் முருகபூபதி, இப்படிக் குடும்பமே இலக்கியப் பங்களிப்பு நிரம்பியது. இந்தச் சூழல் என்னை மட்டுமில்லை. இன்று வரை பலரையும் படைப்பாளியாக்கியிருக்கிறது. அடர்ந்த ஆலவிருட்சம் போல அவர்கள் வீடு யாவருக்கும் புகலிடமாக இருந்தது.
 
நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த போது என் விடுதி அறையில் கோணங்கி தங்கிக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளா இருப்பார். நூலகத்திற்குச் சென்று படித்துவருவார். இரண்டு நாட்களில் அது அலுத்துப் போய்விடும். இருவரும் ஊர்சுற்றக் கிளம்புவோம்.
இருவரிடமும் போதுமான பணம் இருக்காது. ஆனால் அதைப்பற்றிய கவலையின்றிப் பயணம் செய்வோம். எந்தப் பயணமும் முன்திட்டமிட்டதில்லை. எந்த ஊர் பஸ் முதலில் வருகிறதோ அதில் ஏறிக்கொள்வோம்.
ஒருமுறை பேருந்தில் செல்லும்போது வழியில் மயில் தனியே அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மயிலின் பின்னாலே சென்றோம். மயில் ஆடுவதை வேடிக்கை பார்த்தோம். பிறகு வெட்ட வெளியில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பயணம் எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தது.
குறிப்பாக மனிதர்களின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் பயணமே வளர்த்து எடுத்தது. முன்பின் அறியாத  மனிதர்களோடு  உறவு கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் அதுவே வழிவகுத்தது.

அதே நேரம் பயணம் எப்போதும் சந்தோஷம் தருவதல்ல. அது தந்த அவமானங்கள், புறக்கணிப்புகள், வெறுப்பு யாவும் கசப்பாக மனதின் ஒருபக்கம் மரப்பிசின் போல ஒட்டிக் கொண்டும் இருக்கிறது.

ஒரு இரவுப் பயணத்தில் வேலூர் அருகே பேருந்து நின்று போனது. மாற்றுப் பேருந்து வரும்வரை அங்கே பேருந்து நின்றது. நானும் கோணங்கியும் யாருமற்று நீண்டு கிடந்த நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டோம். எங்களைப் பார்த்து மற்றப் பயணிகள் இறங்கி  வந்து  சாலையில் படுத்துக் கொண்டார்கள். தலைக்கு மேலாக நட்சத்திரம்.  முடிவற்ற ஆகாசம். சீரான காற்று. அந்த இரவு அற்புதமாக இருந்தது.

கோணங்கி எதற்காக நாம் இப்படி அலைகிறோம் என்று கேட்டார். நான் உரத்துச் சொன்னேன்:
“நாம் சனி ஞாயிறு என்று விடுமுறை நாட்களில் கதை எழுதுபவர்கள் அல்ல. தேடி அலைந்து நிலமெல்லாம் சுற்றிக் கதைசொல்பவர்கள். தமிழ்க் கதையுலகினை உலகம் அறிய செய்ய முயற்சிப்பவர்கள். நாடோடிக் கலைஞர்கள்.”

அதைக் கேட்டதும் உற்சாகத்துடன்  எழுந்து  உட்கார்ந்து  கொண்டார். விடியும் வரை இருவரும் கதைகள் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பைத்திய மனநிலை அது. ஆனால் அதை விரும்பியே நாங்கள் பெற்று வந்தோம்.

கோணங்கிக்கு ரயில் பயணம் மிகவும் பிடித்தமானது. எங்கே கிளம்பினாலும் ரயிலில் போகலாம் என்பார். ரயிலில் அவர் உட்கார்ந்து பயணம் செய்யமாட்டார். ரயிலின் கதவைப் பிடித்தபடியேநின்று கொண்டிருப்பார். கடந்து செல்லும் காட்சிகளின் மீது அத்தனை ஆர்வம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கி, கீழே போய் நின்று கொள்வார்.

ஒரு முறை சென்னை செல்வதற்காக இருவரும் வைகை ரயிலில் சென்று கொண்டிருந்தோம். விழுப்புரம் ரயில்நிலையத்தில் வண்டி நின்றது. இறங்கி, தண்ணீர் குடித்துவருவதாகச் சென்றார். ரயில் புறப்படும்வரை வரவேயில்லை. ரயில் கிளம்பி விட்டது. என்னவானார் என்று புரியாமல் திகைத்துப் போனேன். அவர் அந்த ரயிலில் வரவேயில்லை. எங்கே போயிருப்பார் என்று புரியாமல் சென்னையில் சுற்றியலைந்தேன்.
நாலு நாட்கள் பின்பு சென்னையில் ஒரு நண்பர் அறையில் அவரை திரும்ப சந்தித்தேன். எங்கே போனீர்கள் என்றதும் எதிரே வந்த கடலூர் பாசஞ்சர் ரயில் காலியாக இருந்தது. ஆகவே அதில் ஏறிப் போய்விட்டதாகச் சொல்லிச் சிரித்தார். அன்றிரவே நாங்கள் இருவரும் மறுபடி ஒரு திட்டம் போட்டு அடுத்த பயணம் கிளம்பினோம்.

கோணங்கியின் மதினிமார்கள் கதை சிறுகதைத் தொகுதி தமிழின் சிறந்த கதைதொகுதிகளில் ஒன்று. அதில் உள்ள கதைகள் வாழ்வின் ஈரம் நிரம்பியவை. கதை சொல்லும் முறையில் அவர் அற்புதங்கள் நிகழ்த்தியிருப்பார். குறிப்பாக கருப்பு ரயில், கழுதைவியாபாரிகள், மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் போன்றவை மிகச் சிறப்பான சிறுகதைகள்.

புதுமைப்பித்தனிடம் காணப்படும் நையாண்டி நிறைந்த எழுத்து கோணங்கியிடம் உண்டு. அதுபோலவே கு.அழகிரிசாமியைப் போல கிராமத்து மனிதர்களை உயிரோட்டமாக வார்த்தைகளில் உருவாக்க கோணங்கியால் முடிந்தது. ருஷ்ய இலக்கியம் அவரை ஆழமாக பாதித்திருந்தது. ஆகவே அந்த எழுத்தைப்போல கதாபாத்திரங்களின் தனிமையை, மனவோட்டத்தைத் தன் எழுத்தில் கொண்டு வந்தார் கோணங்கி

இந்தக் கதைகளுக்கு இலக்கியச் சூழலில் மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. அவரது கொல்லனின் ஆறுபெண் மக்கள் சிறுகதைத் தொகுதியில் உள்ள கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தனித்துவமான குறுநாவலாகும். விவசாயக் கடனால் தன் வாழ்வு அழிந்து போன விவசாயி தோளில் குரங்குடன் பிழைக்க வழியில்லாமல் மதுரை டவுன் ஹால் ரோட்டில் அலைவதைப் பற்றிய கதையது. அப்படியொரு விவசாயியை நாங்கள் நேரிலே பார்த்தோம். அது ஆழ்ந்த மனவலி தருவதாயிருந்தது. தன் படைப்பின் வழியே அந்த வலியை வாசகன் உணரும் படியாகச் செய்திருந்தார் கோணங்கி.

தமிழ்நாட்டில் அதிக நண்பர்கள் உள்ள ஒரே எழுத்தாளர் கோணங்கி என்று சொல்வார்கள். அது உண்மை என்பதை நான் அறிந்திருக்கிறேன். வயது வித்தியாசம் பாராமல் பழகக்கூடியவர். அதுபோலவே தான் சந்திக்கச் செல்லும் நபர்களின் வீட்டோடு சிலமணி நேரத்தில் ஒன்றிப் போய்விடக்கூடியவர். இதற்காகவே  அவர் வருகையை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

அவரது கற்பனையாற்றல் இயல்பாகவே மிகையுணர்வு கொண்டது. ஆகவே அது முடிவற்ற படிமங்களும் உருவகங்களுமாகத் தன்னை வெளிப்படுத்தக் கூடியது. ஆழ்ந்த கவித்துவ நிலைகளை அவரது கதைகளில் காணமுடியும். உரைநடையில் கவித்துவமான தளங்களை உருவாக்கியதில் கோணங்கி ஒரு முன்னோடிக் கலைஞன்.

அதே நேரம் வெகுஜன ஊடகங்களில் தன் படைப்புகள் வெளியாகக்கூடாது என்பதில் அவர் எப்போதுமே கூடுதல் கவனம் கொண்டிருந்தார். ஊடகப் பரபரப்பிற்கு வெளியில் தனித்து இயங்கி தன் அடையாளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் என்றைக்கும் உள்ளது.

கல்குதிரை என்ற சிற்றிதழை கோணங்கி கொண்டு வந்த போது அதற்காக நானும் அவரும் ஊர் ஊராகச் சென்று படைப்புகள் மொழியாக்கங்கள் பெற்று வந்தோம். குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கிக்காக சிறப்பு இதழ் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தேடித்தேடி படைப்புகள் சேகரம் செய்தோம்.

வெண்ணிற இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றிற்காக திருச்சியில் பேராசிரியர் ஆல்பர்ட் வீட்டிற்கு ஒருநாள் விடிகாலை நாலு மணிக்குப் போய், கதவைத் தட்டினோம். பின்னிரவின் இருள் படிந்த வீதி. மெலிதான மஞ்சள் வெளிச்சம் கதவின் பின்னால் கசிந்தது. கதவைத் திறந்து ஆல்பர்ட் வெளியே வந்து சிரித்தார்.

நாங்கள் தஸ்தாயெவ்ஸ்கி இதழுக்கான மேட்டர் என்றதும் வாருங்கள் என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார். இரவெல்லாம் விழித்து தான் அதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மணி நேரம் தந்தால் எழுதி முடித்துவிடுவதாகவும் சொன்னார். நாங்கள் அவரது உழைப்பைக்  கண்டு வியந்தபடியே வெண்ணிற இரவுகள் பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரையின் முதல் இரு பக்கங்களை வாசித்தோம். மிக நுட்பமாக தஸ்தாயெவ்ஸ்கியை அணுகியிருந்தார்.

அவருக்கு இந்த விடிகாலையில் இலக்கிய வேட்கை கொண்டு வந்திருக்கிறார்களே என்று எங்கள் மீது ஆச்சரியம். அவர் எழுதி முடிக்கட்டும் என்று மறுநாள் வருவதாகக் கிளம்பிப் புதுக்கோட்டைக்குச் சென்றோம். நாங்கள் தேடிச்சென்ற கந்தர்வன் ஊரில் இல்லை. எங்கே தங்குவது என்று தெரியவில்லை. வழியில்லாமல் அன்றிரவு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒன்றின் வெளியே போஸ்டர்களை எடுத்துப் போட்டுப்படுத்து உறங்கி விடிகாலையில் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தோம். கையில் காசில்லாமலே ஊர் சுற்ற முடியும் என்ற நம்பிக்கை கோணங்கியிடமிருந்தே நான் பெற்றேன். பசி தூக்கம் போன்றவை பெரிய பிரச்சினைகள் இல்லை என்பதை அவரே கற்றுத் தந்தார்.

சேர்ந்தே பயணம் செய்த போதும் இருவருக்குள்ளும் எந்த நேரமும் பிரிந்து விடுவோம் என்ற மனநிலை இருந்து கொண்டேயிருக்கும். ஒரு  திருமண வீட்டிற்காக இருவரும் இரவுப் பேருந்தில் திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டோம். வழியில் பேருந்துப் பயணத்தில் மௌனி பற்றிய பேச்சு வந்தது. நான் சில வரிகளைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் மௌனியைக் கொண்டாட முடியாது என்றேன். அது கோணங்கிக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கி தான் சென்னை செல்வதாகக் கிளம்பினார். நான் மதுரை போவதாக வேறு பேருந்தில் ஏறினேன். அந்த இடத்தில் இருவரும் பிரிந்துவிட்டோம்.

கோணங்கியோடு சண்டை போட்டதால் எதற்காக கல்யாண வீட்டிற்குப் போகாமல் இருக்க வேண்டும் என்று நான் தனியே கல்யாண வீட்டினைத் தேடிச் சென்றேன். கல்யாண வீட்டின் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் கோணங்கி.  என்னைப் பார்த்தவுடன் சிரித்தபடியே உட்காரச் சொன்னார். அவ்வளவு தான் கோபம். மறுபடி  ஒன்றுசேர்ந்து மறுபயணம் என்று சுற்றித் திரிந்தோம்.
இப்படி உறவும் பிரிவுமாக அவருடன் பதினைந்து ஆண்டுக்காலம் சுற்றியிருக்கிறேன். கோணங்கியின் எழுத்து மெல்ல மாறிக்கொண்டிருப்பதை அறியத் துவங்கினேன் பட்டு பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் துவங்கி பாழி, பிதுரா வரையான அவரது எழுத்துகளின் அதீதப் புனை கதையாடல் குறித்து அவரோடு நிறைய விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் மரபான கதை சொல்லும் முறைக்கு மாற்றாக புதிய கதை சொல்லும் முறையை உருவாக்குகிறார். அது புரியவில்லை என்று தீவிரமாக எதிர்வினை கொள்ளப்படுகிறது. புரியவில்லை என்பதைத் தாண்டி என்ன சொல்ல முயலுகிறது என்று ஆழ்ந்து வாசிக்க முயன்றால் கோணங்கி எவ்வளவு தளங்களை ஒன்றிணைக்கிறார் என்பது புரியக்கூடும்.

சரித்திரம், இசை, தொன்மம், ஓவியம், நுண்கலைகள் பௌத்தம் சமணம், கலோனியல் குறிப்புகள். செவ்வியல் இலக்கியம், என்று அவரது புனைவுகள் பல்தளங்களில் இயங்கக் கூடியது. சிதறுண்ட மனதின் வெளிப்பாடாகவே அவரது கதைகள் உள்ளன. சந்நதம் கொண்ட புராதனக் கதை சொல்லி அவர்.
நவீன ஓவியங்களின் மீது அதிக ஈடுபாடு அவருக்கு உண்டு.  லண்டன் பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள ம்யூசியம்களை, கண்டதை விரிவாக அவர் பேசிய போது அது அரிய பதிவாக இருந்தது.
அவரது சமீபத்திய சிறுகதைகள் நினைவுகளை சிதறடித்து பல்வேறு சங்கேத சரடுகளால் ஒன்றிணைந்தவை. அதை ஒரு கணிதப்பின்னல் போன்றே கருத வேண்டியிருக்கிறது. கதை சொல்லும் மொழியை பெரிதும் படிமங்களாகவே மாற்றியிருக்கிறார். அது போலவே கதை என்பது குறித்த தனது புரிதல்களையும் கதை மொழியிலே தருகிறார்.

இந்தக் கதைகளை நாம் வழக்கமான கதைகள் போல திரும்பச் சொல்ல முடிவதில்லை. அதனால் பலநேரம் அதை வாசிக்க இயலாமல் போகிறோம். கோணங்கியின் மொழியும் அதில் வெளிப்படும் அற்புதப் பிரயோகங்களும் தமிழ் உலகிற்குப் புதியது. அதன்மீதுள்ள விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அந்தக் கதையாடலின் ஆழத்தை நாம் கட்டாயம் கவனம் கொள்ளவே வேண்டும்.

கல்குதிரை இதழ்களின் வழியே உலக இலக்கியம் குறித்து தமிழில் ஆழமான பதிவுகளை முன்வைத்த கோணங்கி, தன் படைப்பாற்றல் மட்டுமின்றி, தனித்து இயங்கி ஒரு இலக்கிய இயக்கம் போலவே செயல்பட்டிருக்கிறார்.

அவர் நடத்தும் இலக்கியக் கூட்டங்கள் மாறுபட்டவை. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் வெளியீட்டினை அவர் மதுரையில் இருந்து போடி வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் நடத்தினார். வாசகர்கள் அனைவரும் ரயிலின் ஒரு பெட்டியில் ஒன்று சேர்ந்து பயணித்து வழி முழுவதும் இலக்கியம் பேசினோம். அதுபோலவே இன்னொரு கூட்டத்தை பாண்டவர்மலையின் உச்சியில் இரவில் நடத்தினார்.  நவீன இலக்கியம் குறித்து கிராமப்புறங்களில் கூட்டம் நடத்திய முன்னோடி எழுத்தாளர் கோணங்கியே.

நானும் அவரும் ஒன்றாக எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் சந்தித்தோம். இலக்கில்லாமல் பயணம் மேற்கொண்டோம். பேருந்து நிலைய கழிப்பிடங்களில் குளித்துக் கொண்டு கதர்க்கடைகளில் மாற்றுடை வாங்கி அணிந்தபடியே மாநிலம் மாநிலமாகச் சுற்றியலைந்தோம். நூலகங்களைத் தேடிச்சென்று புத்தகங்களை வாசித்தோம். திருடி வந்தோம். அறிந்தவர் அறியாதவர் என யாவர் வீட்டிலும் தங்கினோம். கால்கள் போன படியே சுற்றியலைந்தோம். அவரவர் மனப்போக்கில் எழுதினோம்.

அவரது தொடர்ந்த உந்துதலே என்னை எழுத்தாளன் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. என் கதைகளின் தீவிர விமர்சகர் அவர். அதே நேரம் என் எழுத்தின் மீது எப்போதுமே அக்கறை கொண்டவர். அவரது படைப்புகள் குறித்து விமர்சனம் கொண்ட போதும் அவர் கதை சொல்லும் முறையில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கவித்துமான உரைநடையை கோணங்கி போல யாராலும் எழுதமுடியாது .
சென்னைக்கு நான் இடம்மாறி வந்த பிறகு அவரோடு சேர்ந்து சுற்றுவது குறைந்து போனது. ஆனாலும் சந்தித்த நேரங்களில் இருவரும்  எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பயணம் கிளம்பிவிடுவது இன்றும் சாத்தியமாகவே உள்ளது.

சமீபத்தில் கோணங்கியின் மொத்த சிறுகதைகள் சலூன் நாற்காலியில் சுழன்றபடி அடையாளம் வெளியீடாக வந்துள்ளது. அதைத் திரும்பப் படித்த போது கோணங்கியும் நானும் சுற்றிய நாட்களின் ஈரம் மாறாமல் அப்படியே இருப்பதை உணர முடிந்தது.

சென்னையில் நாகர்ஜுனன் வீட்டில் கழித்த நீண்ட பகலிரவுகள், திருவண்ணாமலை பவா  செல்லதுரையோடு இலக்கியம் பகிர்ந்து கொண்ட நாட்கள், நகுலன்  வீடு,  பிரமீள் சந்திப்பு, நெய்வேலி ராமலிங்கத்தின் அன்பான நட்பு,  பத்தமடையில் உள்ள  தமிழ்செல்வன் வீட்டில் ஜோதி விநாயகத்துடன் பேசிய பேச்சுகள். மதுரை லோகு பாபு சுந்தர் சுபகுண ராஜனுடன் சுற்றிய வெயிலேறிய பகல்பொழுதுகள். ஏதோ ஊர்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்து உணவளித்த  நண்பர்களின் வீடுகள்.  சூறைக்காற்றைப் போல நினைவுகள் சுழல்கின்றன. 
புரிகிறது புரியவில்லை என்ற தடுமாற்றங்களைத் தாண்டி கோணங்கி தனக்கெனத் தனியான கதைமொழியும் கதைசொல்லும் திறனும் கொண்டவர். அவர் கையாண்ட விஷயங்களை வேறு எவரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. அவரது கதைகளை மொத்தமாக வாசிக்கும் போது பெரிதும் வியப்பாக இருக்கிறது. மொழியின்  தீவிர  தளங்களை  அவர்  எவ்வளவு அநாயாசமாகத் தொட்டிருக்கிறார் என்று புரிகிறது..
பிராயத்தில் துவங்கிய கோணங்கியின் நட்பு இன்றும் வலிமையுடையதாக இருக்கிறது. முகமறியாதவர்களுடன்  தன்னைப் பகிர்ந்து கொள்ளப் பேரன்பு வேண்டும். அது கோணங்கியிடம் நிறையவே இருக்கிறது. அது தான் அவரை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

கோணங்கி என்ற நித்யபயணி தன் எழுத்தின் வழியிலும் இயல்பிலும் மாயக்கதையாளனாகவே இருக்கிறார். பேக்பைப்பரின் இசைகேட்டு எலிகள் பின்னால் சென்றது போன்ற ஒரு மாயம் அவரிடமிருக்கிறது. அவரது எழுத்து செவ்வியல் இசை போல புராதனமானது. எவரையும் வசீகரம் செய்யக்கூடியது. திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரப் படைப்பாளியாக அவர் கொண்ட சமரசமற்ற இலக்கிய ஈடுபாடு இன்றைக்கும் கோணங்கியை நோக்கி இளம்படைப்பாளிகளை வரச்செய்தபடி உள்ளது.

இன்றும் ஏதோ நகரில் யாரோ அறியாத நபரின் தோளில் கைபோட்டபடியே கோணங்கி சென்று கொண்டிருக்கக்கூடும். இன்றோ நாளையோ அவர் உங்களைத் தேடி வந்து ஸ்நேகிக்கக் கூடும். சகமனிதன் மீது அன்பும் அக்கறையும் கொள்வதே கலையின் ஆதார நோக்கம். அதைத் தன் தினசரி நடவடிக்கையாகக் கொண்டிருப்பதே கோணங்கியின் தனிச்சிறப்பு.

*

நன்றி - உயிரோசை

''எனக்கும் பயணம் பிடிக்கும்'' – கோணங்கி

'நீநாடாறு மாதம், காடாறு மாதம் அலைபவன். உன்னைக் கேள்வி கேட்க யாருண்டு?' என்று வண்ணதாசன் சொன்னது கோணங்கியை!

'மதினிமார்கள்' கதையில் தொடங்கி 'சலூன் நாற்காலியில் சுழன்றபடி' வரை அவர் எழுதிய கதைகள் தமிழில் புது மொழி பேசுபவை. புனை கதைகளை நவீன மந்திரங்களுக்குள் குழைத்துத் தரும் எழுத்துப் பறவை கோணங்கி.

''நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு ஒருவர் வந்தார். அவரது சட்டையில் சில குழந்தைகளின் முகங்கள். 'இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் கடலுக்குள் போய்விட்டார்கள். இனி வர மாட்டார்கள்' என்று கலங்கிய கண்களுடன் சொன்னார். தனுஷ்கோடியை நோக்கி வந்த ரயிலை, அப்போது அடித்த புயல் உள்ளே இழுத்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியே சமாதியானார்கள். அதில் உள்ள முகங்களைத்தான் காட்டினார். அவருக்கு தனுஷ்கோடி வாத்தியார் என்று பெயர் வைத்தோம். ஐந்து பைசா, பத்து பைசா என கை நிறைய வசூலித்து, அவருக்குக் கொடுத்தோம். கடலுக்குள் போன ரயில் என்ன ஆனது என்று யோசித்தேன். 'தமிழ்நாடு' பத்திரிகையில் தனுஷ்கோடி பாலத்தின் படத்தைப் போட்டிருந்தார்கள். இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் பூதம் போல அது இருந்தது. அந்தப் பூதம்தான் குழந்தைகளைக் கொண்டுபோனதாக நினைத்தேன். அந்த இடம், நிலம், கடல்... இப்போது எப்படி இருக்கும்? என்னுடைய கற்பனைப் பயணத்தின் ஆரம்பம் அதுதான்.

கிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளி வரை செல்லும் சிமென்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவதுமாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடுபாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயக்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குருமலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன்.

பழைய வீடுகள் சொன்ன சேதியில்

இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. எந்த ஊருக்குப் போனாலும் நான் தேடிப் பார்ப்பது அந்தக் கிராமத்துக்கு ஒரு காலத்தில் தாகம் தணித்த கிணறுகளை. பெண்கள் தங்களது அந்தரங்கத்தைப் பரிமாறிக்கொள்ளும் இடம் அதுதான். கிணற்றடிப் பெண்களின் தோற்றத்தில்தான் எல்லாக் கிராமங்களும் மறைந்திருக்கின்றன. நாகலாபுரத்தில் பார்த்த பம்பை, ஆதக்காள், வேடப்பட்டி பாட்டி எனது கதைகளில் உலவுகிறார்கள். பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழுதப்பட்டுஇருக்கிறது.

வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசுகள் என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள் வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். வெளிப்படையாகத் தெரியும் கட்டடங்களைவிட, அதை எழுப்புவதற்கு முன்னால் இடிக்கப்பட்ட பாழடைந்த பங்களாக்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன. பட்டினியும் வறுமையும் பின்துரத்த புதுமைப்பித்தன் அலைந்த சென்னைத் தெருக்கள், ஜி.நாகராஜன் களைத்தெறிந்த மதுரைத் தெருக்கள், கிருஷ்ண லீலா, பவளக் கொடி, நல்ல தங்காள், கோவலன் கதைகளை நாடகமாடி முடித்த தென்னகத்தின் அத்தனை கலைத் தெருக்களையும் கால்களால் அளந்தும் களைப்பு வரவில்லை. ஓடிய கால்களுடன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

மத்தியப்பிரதேசம் மண்மாடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்தால் மாங்கி, தூங்கி என்ற இரண்டு மண் மலைகள் இருக்கின்றன. நிர்மல் சாகர் முனிமகாராஜ் என்ற தமிழ்ச் சமணன் சமாதி அங்கே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து போனவன் அவன். காட்டுப் பூக்களைப் பறித்து அவனது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். கல்லும் மணலுமான விநோதப் பரப்பில் நடக்கும்போது வனதேவதைகள் நமக்குப் பாதுகாப்பாக வரும். சூரியனின் நிழல் படாத உஜ்ஜயினியில்தான் விக்கிரமாதித்தனின் 32 சிம்மாசனங்கள் இருக்கின்றன. புதிர்க் கதைகளுக்கான 24 கம்பளங்கள் இருக்கின்றன. அங்கு உட்கார்ந்து எனக்கும் கதைகளைத் தருமாறு கேட்கிறேன். காலன், எமன், தூதன் மூவருக்குமான கோயில் அங்குதான் இருக்கிறது. அந்தச் சிறு கோயில் ஏதோ ஒன்றை எனக்கு ரகசியமாகத் தருகிறது.

ஆந்திராவின் அமராவதிச் சிற்பங்கள் நம்முடைய கலையை அப்படியே சொல் கிறது. ஆனால், அங்கு முழுமையாக இல்லை. அதில் பாதி சென்னை மியூஸியத்தில்தான் இருக்கிறது என்றார்கள். இங்கு வந்து பார்த்தேன். இதிலும் முழுமையாக இல்லை. லண்டன் மியூஸியத்தில் இருப்பதைத் தெரிந்து... அங்கும் போய்ப் பார்த்தேன். ஆக, அமராவதிச் சிற்பங்களை முழுமையாகப் பார்த்துவிட்டேன்.

அதே ஆந்திரத்தில் நாகார்ஜுனகொண்டா சிற்பக்கூடம் என்னையே செதுக்கியது. ஆந்திரா, பௌத்தத்துக்கு முக்கியமான இடம். சமணம் செழித்த கர்நாடகா காட்கலா நான் பல முறை பார்த்தது. இந்த நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000 அன்று அஜந்தாவில் இருந்தேன். ஒரு முறை பார்த்தால் உணர முடியுமா அஜந்தாவை? ஜப்பான் ஓவியன் ஒருவனை நான் பார்த்தேன். அஜந்தாவை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னான்.

நாளந்தாவுக்கும் கயாவுக்கும் மத்தியில் ராஜகிரகம் என்ற நகரம் இருக்கிறது. பதவி, ஆசை, அதிகாரம் அத்தனையும்விட்டு வெளியேறிய புத்தன் அங்குதான் தங்கினான். அவனது காலடி பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உருவானதாக ஐதீகம். அடுத்தது என்ன என்று அங்கே இருந்துதான் புத்தன் யோசித்தான். ஓர் இரவு அங்கு தங்கியிருந்தபோது, ஒளியற்ற இரவாக அந்த நிலவு தெரிந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரத்தைத்தான் என்னுடைய 'பாழி' நாவலில் கொண்டு வந்தேன். அது அசோகரின் மனைவி ஊர். அங்கு இருக்கும் ஆபு மலையைவிட்டு விலக அதிக நாட்கள் ஆகும். இப்படி என்னுடைய பயணம், மறைக்கப்பட்ட இடங்களைத் தோண்டிப் பார்ப்பதாக அமையும்.

போதி தர்மா, மார்க்கோபோலோ, யுவான் சுவாங் ஆகிய மூன்று பயணிகள் எனக்கு மலைப்பை ஏற்படுத்துபவர்கள். எந்த வசதியுமற்ற காலத்தில், தமது மன தைரியம் மட்டுமே அவர்களது மூலதனம். வானம், பூமி இரண்டு மட்டும்தான் பக்கத்துணை. அதில் போதி தர்மாவின் தைரியம் அசாத்தியமானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேடன் அவன். பௌத்தத் தத்துவத்தில் தேர்ந்த ஞானியாக மாறி, நாகப்பட்டினம், தனுஷ்கோடி வழியாக இலங்கை போய், அங்கே இருந்து சீனாவுக்குப் போனவன். தமிழகக் குஸ்தி யையும் கேரளக் களரிப் பயிற்றையும் அங்கு அறிமுகப்படுத்தியவன்.

தெரிந்த இடங்கள், பார்த்துப் பார்த்துச் சலித்த இடங்கள் என்று இல்லாமல் தொல்லியல் துறையாலேயே தொலைக்கப்பட்ட பகுதிகளைத் தேடி வருகிறேன். எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பிய வரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும். மதுரை போய்த் திரும்பலாம் என்று கோவில்பட்டியில் இருந்து பஸ் ஏறினால், மனம் என்னை மறுநாள் காலையில் காரைக்காலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அந்தக் கடல் மாமல்லபுரத்தை நோக்கித் தள்ளுகிறது. சிற்பங்கள், தஞ்சாவூருக்கு அழைக்கின்றன. பெரிய கோயில், என்னை மீனாட்சியை நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் மதுரைக்கு வருகி றேன். இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் இலக்கியத் தலைகள் எல்லாரையும் ஒரு தட்டு, செல்லக்குட்டு வைத்துவிட்டுத்தான் அவர்களிடம் இருந்து விடு படுகிறேன்.

இன்னமும் அலுப்புத் தட்டாமல் என்னை அரவணைத்துக்கொள்கிறது தனுஷ்கோடி. கடந்த 20 ஆண்டுகளில் 200 தடவைகள் தனுஷ்கோடி போயிருக்கிறேன். கறுப்பு ரயில், தனுஷ்கோடி, அல்பரூனி பார்த்த சேவல் பெண், திறந்த விழிகளுடன் தூங்கும் ஸ்த்ரீகள், ராமனின் கற்பனையான தற்கொலைப் பாலம் எனப் பல கதைகளுக்கு அதுதான் கரு. 'பாழி' நாவலும் அதுதான். தனுஷ்கோடி புயலில் அடித்துச் செல்லப்பட்ட ரயிலில் சமாதியான பிணங்கள், எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் என எல்லாவற்றின் எச்சங்களும் இன்னமும் இருக்கின்றன. செத்துப்போன பெண்களின் நகைகளைத் திருடி வாழ்ந்த ஒருவன் இன்று அங்கு பைத்தியமாக அலைகிறான். கடைசியாக பச்சைக் கொடி அசைத்து அந்த ரயிலை அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தேன். அந்த மணல் பரப்பில் கால்களைப் பதித்து நடக்கும்போது நானும் சில நாய்களும் மட்டும்தான் சுற்று எல்லையில் இருப்போம். என்னுடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சை இழுத்து நின்றுவிடும் நாய்கள். தனியாகப் போவேன். ரப்பர், தோலில் செய்யும் செருப்புகள் தேயும் என்பதால், டயர் செருப்புகளைப் பயன்படுத்துவேன். புனை கதை நூலகமாக, மணல் நூலகமாக எனக்கு அது தெரிகிறது. அந்த ரயிலில் நானும் போய்க்கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!''

நன்றி - விகடன்

கருப்பு ரயில் - கோணங்கி

முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். முனியம்மா மகன் போனாலும் கந்தனே போய்விட்டாலும் ரயில் தாத்தா இருப்பார். நிஜத்து ரயிலே போய்விட்டாலும் ரயில்தாத்தா சாகாவரம் பெற்று விடுவார்.

எல்லாச் சின்னபிள்ளைகளுக்கும் ரயில்தாத்தா வேண்டும். மேலத்தெரு வேப்பமர ஸ்டேஷனிலிருந்து துவங்குகிற ரயில் பிரயாணத்தை யாராலும் நிறுத்த முடியாது. கந்தனின் கரண்டு மேன் அய்யாவுடைய சிகப்பு ரப்பர் கையை மாட்டிக்கொண்டு வந்தாலே ரயில் நிற்கும்.

ஆனால் சின்னப்பாப்பாவின் குட்டி ரயிலை ரப்பர் கை காட்டியாலும் நிறுத்த முடியாது. அந்தக் குட்டிரயில் எப்போதும் பொன்வண்டுகளைத்தான் ஏற்றிக்கொண்டு வரும். பொன்வண்டு ரயிலைச் செய்வதற்கு காலித் தீப்பெட்டிகள் வேண்டும். காலித் தீப்பெட்டிகளுக்காக கடை கடையாய் அலைந்தான். ரோடுகளை அளந்தான். கந்தனின் பகீரத முயற்சிகளால் காலித் தீப்பெட்டிகள் சேர்ந்துவிட்டது. இனி ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பொன்வண்டு பிடிக்க வேண்டுமே. பொன்வண்டுகள் எப்போதும் காட்டிலும் காட்டுக்குப் போகிற தான் தோன்றிப் பாதைகளிலும் கிடைக்கும். அவற்றைப் பிடிப்பதே கஷ்டமானது.

இன்னும் பட்டு மெத்தைக்கு டெயிலர் அண்ணாச்சி வீட்டு குப்பைக்குழிக்குப் போக வேண்டும். அங்கு பட்டுத்துணி பதுங்கிக்கொண்டிருக்கும். குப்பையிலிருப்பதெல்லாம் குண்டு மணிதான். குப்பையைத் தோண்டத் தோண்ட பட்டு கிடைத்துவிடும். ஒவ்வொரு தீப்பெட்டிக்கும் பட்டு விரித்து, ஒரு ஜோடிப் பொன்வண்டுகளை பொண்ணு மாப்பிள்ளையாக உட்கார வைத்து தீப்பெட்டியை மூடினான். நூல் சம்பாதிக்க வேண்டுமே. அதற்கு டெயிலர் அண்ணாச்சியைத்தான் பிடிக்கணும். ஊதாக் கலர் - பச்சைக் கலர் - மஞ்சக் கலர் - வாடா மல்லிக் கலர் நூலை எல்லாம் மிஷினுக்குள்ளிருந்து எடுத்துத் தருவார். கலர்க் கலர் நூலையெல்லாம் ஒன்றாக்கி தீப்பெட்டிக்கு தீப்பெட்டி இடைவெளி விட்டு ரயில் பெட்டிகளை இணைத்தான்.

கந்தனுக்குத்தான் இப்படியெல்லாம் பொன் வண்டு ரயில் செய்ய வரும். சின்னப் பாப்பாவுக்கு வரவே வராது. அவள் பார்த்துக் கொண்டே சும்மா இருந்தாள். அண்ணனின் ஒவ்வொரு காரியத்தையும் உற்றுப் பார்த்தபடியே தலையைத் தலையை அசைத்து ஆமோதித்தாள். குட்டி ரயிலை நுனிவிரலால் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அது சின்னப்பாப்பாவின் குட்டி ரயில். ‘குப்...க்குப்....’ பென்ற ஊதலோடு கிளம்பி விட்டது. சிமெண்டுத் தரையில் சின்னப்பாப்பாவைச் சுற்றிச் சுற்றி வருகிறது. பொன்வண்டு ரயில் போவதைப் பார்த்து ‘க்கூ... க்கூ’ வென்று ஊதுகிறாள், சின்னப்பாப்பா.

இப்போது கந்தனின் கனவு ரயிலும் கிளம்பி விடும். ஊருக்குத் தெற்கு தூரத்தில் ஓடும் நிஜத்து ரயிலின் ஊதல் கேட்கும். இந்த ஊதலே அவனை எங்கெங்கோ அழைத்துப்போய் தொலைதூர அதிசயங்களைக் காட்டி அவனை ஆச்சரியப்படுத்தும். சினேகிதக் குருவிகளோடு பறந்து செல்வதாய் தானும் சிறகுகளை அசைத்துக் கொள்வான். காற்றோடு பறந்து போகும் வழிகளில் எங்கும் ஊருக்கு ஊர் ரயில் தாத்தாக்கள் இருப்பதைக் கண்டான். அவனுக்காகவே காத்திருக்கிற ரயில் தாத்தாவின் குறும்புத் தாடியைக் கண்டதும் ‘க்களுக்’கென்று சிரிப்பு உண்டாகி விட்டது. வாய் விட்டுச் சிரித்தான். அவனுக்குப் பின்னாலிருந்து யாரோ செல்லமாய் சிணுங்கியது கேட்கவும் திரும்பினான். அங்கும் சின்னப்பாப்பா நின்றிருந்தாள். அவனை விடாமல் தொடர்ந்து வரும் சின்னப்பாப்பாவின் சின்ன பூங்கையைப் பிடித்துக் கொண்டான். அவளை இழுத்துக் கொண்டு ரயில் தாத்தாவை நோக்கி ஓடினான். ஓட ஓட ரயில் தாத்தாவும் எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்தார். கம்பூணித் தாத்தாவை எட்டிப் பிடிக்கவே முடியாது. அவர் மறைந்தே போய் விட்டார்.

கந்தனின் ரயில் கனவை ஊடுருவிப் பார்ப்பதுபோல் சின்னப்பாப்பா அவனைப் பார்த்தாள், ஈரம் சொட்டும் மூக்கைச் சுழித்துக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்தாள்.

சிமெண்டுத் தரையில் ஓடும் பொன்வண்டு ரயிலுக்குள் பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சிச் சிரிப்பதை எல்லாம் சின்னப்பாப்பா கேட்டிருப்பாள். எங்கெங்கோ ஒளிந்திருக்கும் ஊருக்கெல்லாம் பொன்வண்டு போகிறதே. சின்னப்பாப்பா “தாட்டா, த்தாட்டா...” என்றாள். ஊருக்குப் போகிற பொன்வண்டிடம் “நானுக்கு ரயிலு.. நானுக்கு ரயிலு..” என்று தன்னைத் தானே காட்டிக் கொண்டாள்.

சின்னப் பாப்பாவின் ‘நானுக்கு ரயில்’ கிடைக்கா விட்டாலும் அவளது பள்ளிக்கூட நாட்களில் நானுக்கு ரயிலுக்கான தண்டவாளத்தை வரைந்தாள்.

பள்ளிக்கூடம் போகும் போதும் ரயில்தாத்தா கந்தனின் வாலைப்பிடித்துக் கொண்டுதான் போனாள். அவர்களின் பள்ளிக்கூடத் தெருவே பழையது. ‘கரேர்....’ ரென்ற கருப்பு ஒட்டிக்கொள்ளும் கோட்டைச்சுவரும் காரை பிளந்த வீடுகளுமே இருந்தது. சுவருக்கு கீழே நீளமாய் ஓடும் சாக்கடைத் திண்டின் மேல் கால் வைத்து நடந்தாலே இந்த கெசவால் குரங்குகளுக்கு நடக்கவரும். நீளமாய் நடந்துகொண்டே சிலேட்டுக் குச்சியால் கோட்டைச் சுவரில் கோடு கீச்சினாள். கோடுகள் தெருவோடு தெருவாய் சேர்ந்துகொண்டு நீளும். முக்கு திரும்பி வளையும் நெளியும். அடுத்து வீட்டு சுவருக்கு தாவும். இந்தக் கோடுதான் சின்னப்பாப்பாவின் குட்டிரயிலுக்குத் தண்டவாளமாம். இதைக் கண்டதுமே ரயில் தாத்தாவுக்கு கொண்டாட்டம் வந்துவிட்டது. அவனும் கோடு போட்டான். துருப்பிடித்த ஆணியால் கோடு இழுத்துக்கொண்டே அழியாத தண்டவாளத்தை எழுதினான். அவனது கனவு ரயிலின் தண்டவாளமே பெரியது. அதற்காகவும் இனி வருபவர்களுக்காகவும் தண்டவாளம் இருக்கும். யாரும் இதை அழிக்கவே கூடாது. தினந்தினம் பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் சுவரிலிருக்கும் தண்டவாளங்களாய் வளைந்து நெளிந்து கொண்டே போனார்கள்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமைக்கென்று பெரியரயில் இருக்கிறது. இந்த ரயிலே சாகவே சாகாதது. ஞாயிறு ரயிலுக்கு குட்டி ரயில்களெல்லாம் ஒன்று சேரும். வைக்கோலைத் திரித்துத் திரித்து கயறாக்கி, கயறுக்குள் ஒன்று சேரும் ரயில். ஒருவர் பின்னால் ஒருவராய் இணைந்து சட்டையையோ அரைஞான் கயித்தையோ பிடித்துக்கொள்ளணும். சடையைப் பிடித்துக்கொண்டும் ரயில் புறப்பட்டு வரும். எப்பொழுதோ புறப்பட்டு, எங்கெங்கோ இருக்கும் ஸ்டேஷனை நோக்கி ரயில்தாத்தா புறப்படுகிறார். பின்னால் இவர்களுக்கெல்லாம் ரயிலே கிடைக்காது. ரயிலே மறந்துவிடும். ரயிலுக்காக காத்திருப்பது கூட பெரும் ஏக்கமாகி பெருமூச்சு விடுவார்கள். இன்னொரு கூட்டம் ரயிலைத் தேடும். அவர்களுக்கு மத்தியில் ரயில்தாத்தா தோன்றிவிடுவார் தாடியுடன். புதுரயிலைச் செய்து கொண்டு பிரயாணம் துவங்கிவிடும்.

ரயில் போவதற்கு கந்தன் சட்டையை அசைத்து ‘செண்டா’ காட்டி விட்டான். அதற்குள் சின்னப்பாப்பா பிரயாணிகளுக்கெல்லாம் திக்கட்டு கொடுத்து முடித்திருந்தாள். கரண்டுமேன் அய்யாவின் ரப்பர் கையை தூக்கிக்கொண்டு ஓடியவன் கரையில் நின்று கைகாட்டியாகி,  கையைத் தூக்கவும் ‘ஹ்கூ...’ வென்ற ஊதலோடு வானமெல்லாம் புகையைக் கக்கிக்கொண்டு ரயில் புறப்பட்டது. புழுதியைக் கிளப்பிக்கொண்டு ரயில் தாத்தா வருகிறார். வேம்படி ஸ்டேஷனிலிருந்து தெருவைத் தாண்டி காளியங்கோயிலுக்குப் பின்புறமாக போய் வளைந்து திரும்பி கம்மாயை நோக்கி ரயில் போகிறது. திக்கெட்டு வாங்கிக்கொள்ளாத முனியம்மா மகனும் வரிசையில் வந்து கொண்டிருந்தான். அவனுக்குத்தான் கள்ள ரயில் விளையாட்டெல்லாம் தெரியும். ரயில்கார வாத்தியாராகையால் அவனுக்கு ரயிலை மீறிச் செல்ல சலுகையுண்டு. முனியம்மா மகனுக்கு அடிக்கடி ரயில் பதவிகள் மாறும். எஞ்சின் டிரைவராகவும் எஞ்சினாகவும் கடைசி பெட்டியில் வரும் குழாய்ச் சட்டைக்காரனாகவும் மாறி மாறி வருவான்.

கந்தன் திடீரென்று ‘நாந்தான் டீட்டியாரு...’ என்று காதில் குச்சியை சொருகிக்கொண்டு வந்தான். வரிசையை விட்டு விலகி நின்றபடி திக்கட்டு பரிசோதித்துவிட்டு மீண்டும் ரயிலோடு சேர்ந்து கொண்டான். கம்மாய்க் கரைமேல் ஏறப்போகிறது. கரைமேல் ஏறமுடியாமல் ஏறத்திணறிக் கொண்டிருந்தது. வைக்கோல் கயறு அந்து விடாமல் ட்ரைவர் காப்பாற்றி விட்டான்.

இப்போது ரயில் கம்மாய் கரைப் புள்ளையாரை அடைந்து தைப்பாறி மூச்சு வாங்கியது. அந்த இடத்தில் முனியம்மா மகன் ரப்பர் கையை மாட்டிக்கொண்டு குறுக்கே நின்றான். அசையாமல் கைகாட்டி மாதிரியே நின்றுவிட்டான். கந்தன் குதித்துக் குதித்து கோயில் மணியடிக்கவும் ரயிலில் வந்த மாரிமுத்துப் பண்டாரம் ஓடிப்போய் செடி செத்தைகளை அள்ளிக் கொண்டு வந்தான். புள்ளையாருக்கு பூசை வைக்கவேண்டுமே. புள்ளையார் ஸ்டேஷனில் வண்டி வெகுநேரம் வரை நிற்கும். பூசை முடிந்துதான் கிளம்ப வேண்டும். புள்ளையாரைக் கும்பிட்டக் கையோடு ‘சாமி காப்பாத்து... ஆத்தா காப்பாத்து... அய்யா காப்பாத்து... பாப்பா காப்பாத்து...’ என்ற முணுமுணுப்புகளோடு புள்ளையாரைச் சுற்றி வரும் ரயில். மூன்றாவது சுற்றில் பூசை முடிந்துவிடும். பூசையின் போது வேண்டிக் கொள்ளணுமே. அன்றொரு நாள் காளியங் கோயிலுக்குப் பின்னால் நடந்த அப்பாம்மா விளையாட்டில் முனியம்மா மகனுக்கும் மொதலாளி மகள் வெங்கட்டம்மாளுக்கும் பிறந்த கல்லுப்பிள்ளைக்கு பேர் வைக்கும்படி புள்ளையாரைக் கேட்டார்கள். இப்போது பேர் விட்டு முடியவும் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். வெறும் சிரட்டையை உடைக்கவும் சில்லுசில்லாய் சிதறும். அப்போது ரயிலும் சிதறிப் போகும். அவரவருக்கு கிடைத்த சிரட்டைத் துண்டை நாக்கால் நக்கிக் கொண்டு ருசிப்பார்கள்.

கடைசி மணியடித்து ரயில் ஒன்று சேரும். கந்தன் செண்டா காட்டவும் ரயில் புறப்படும். அடுத்த ஸ்டேஷன் உண்டு. வீரம்மா சின்னாத்தா ஊருக்கும் ஸ்டேஷன் இருக்கும். முள்ளுச்செடி ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது.

தெருவிலிருந்து பார்த்தால் தெரியும். கம்மாய்க்கரை மரங்களுக்கு ஊடே மறைந்து மறைந்து போகும் ரயில். நிழல் மூடிக் கருத்திருக்கும். நிற்கிற ஸ்டேஷனில் ஆள் இறங்கும். நிற்காத ஸ்டேஷனில் மரங்கள் அசைந்து பின் வாங்கும். அடுத்த ஸ்டேஷன் நோக்கி நகர்ந்து நகர்ந்து கடைசி ஸ்டேஷனை நெருங்கிவிடும். கம்மாய்க்கரை இறக்கத்தில் இறங்கும்போது ரயில் தள்ளாடித் தள்ளாடி நகரும். கம்மாய்க்குள் ஏமகாய் விரிந்து கிடக்கும் நீர்ப்பரப்பில் மிதந்து வரும் அலைகளைப் பூராவூம் பார்த்ததுமே சின்னவர்களின் டவுசர் அவிழ்ந்து கொள்ளும். ஒருகையில் டவுசரைப் பிடித்தபடி நீர் விளிம்பு வரைக்கும் வந்து, எல்லாம் களைந்து நிற்கிற அம்மணத்தோடு கடைசி ஸ்டேஷனில் நிற்கும் ரயில் திடீரென்று ‘ஹைய்ய்ய்...’ யென்ற பெருங்கூச்சலில் சிதறிச் சின்னா பின்னமாகி விடும். அப்போது ரயில் இருக்காது. ரயில்தாத்தா இருக்கமாட்டார். காணாமல் போன ரயில் கம்மாய் தண்ணிக்குள் அம்மணக் கும்மாளமடித்து மறையும்.

ஏனோ, இப்போதெல்லாம் கம்மாய் பாதைக்கு ரயில் வராமல் ஸ்டேஷனெல்லாம் மூடிவிட்டது. கம்மாய்க்குள் அலையடித்து மின்னிய நீர்ப்பரப்பே காணாமல் எங்கோ தொலைந்து போனது.

சிவகாசிக்குத் தொலைந்துபோன முனியம்மா மகனை திரும்பவும் சந்திக்கும்போது எல்லாப் பிள்ளைகளுக்கும் சின்னப் பொன்வண்டுக்கும் சந்தோஷம் வரும். சிரிப்பு வரும். எல்லாப் பொன்வண்டுகளும் சிவகாசிக்குப் போகும். இனிவரும் ரயில் விளையாட்டையெல்லாம் அங்கு வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஊரிலிருந்து புறப்பட்டுப் போகும் சிவகாசி ரயிலுக்கு சின்னப் பாப்பா வரைந்த தண்டவாளம் இல்லை. முள்ளுக்காட்டுத் தடத்து வழியில் பொன்வண்டு ரயில் போகிறது. சின்னச்சின்ன தீப்பெட்டிக்குள் சின்னப்பாப்பாவும் சிவகாசிக்குப் போகிறாள்.

கருக்கிருட்டில் தூங்கும் பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான ரயில் சத்தம் கேட்கும். அப்போது தெருவில் ஒரு கருப்பு ரயில் வந்து நிற்கும். வீடு வீடாய் கருப்பு ரயில் நின்று நின்று நகரும். சின்னப் பொன்வண்டுகளை கூவி அழைக்கும். இப்பவெல்லாம் கருப்பு ரயிலுக்கு புது ட்ரைவர்தான். அவன் கருப்பு மனுசன். ‘க்ரேர்..’ரென்று ரயிலின் நிறத்தில் இருந்தான். அவன் ரயில் தாத்தா மாதிரியே தாடி வைத்திருந்தான். துருப்பிடித்த தாடி குறும்பாய்ச் சிரித்தபடி பொன்வண்டுகளுக்கு தலையசைத்து வணக்கம் கூறினான். பொன்வண்டுகளை ஏமாற்றுவதே சுலபமானது. அவன் அழைக்கவும் பொன் வண்டுகள் தூங்கியபடியே எழுந்துவிடும். கருப்பு ரயிலில் ஏறிக்கொண்டு பிரயாணம் துவங்கி விடும். ரயிலுக்கு வெளியில் கிடப்பதெல்லாம் ரயிலோடு ஓடி வராது. ஆனால் அவர்களின் ஆதி நிலா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்து முள்ளுப் பாதையில் அழுது கொண்டே ஓடிவரும். ரயிலில் போகும் பொன்வண்டுகளைப் பிடிக்க முடியாமல் பாதி வழியில் முள்ளுக்காட்டில் சிக்கிச் சிதறி விடும்.

அங்கு போனால் நடுக்காட்டு இருட்டுச் சுரங்கத்தில் தீப்பெட்டிகள் குவிந்திருக்கும். தீப்பெட்டிக்குள் பொன் வண்டு இருக்கும். அந்த கருப்பு மனுசன் பொன் வண்டின் உடம்பிலிருந்து தீக்குச்சிகளை உருவி எடுப்பான். எடுக்க எடுக்க பொன்வண்டின் உடம்பெல்லாம் தீக்குச்சியாய் வரும். தீரவே தீராமல் தீக்குச்சி வந்து கொண்டிருக்கும். பிறகு பொன்வண்டுகளைத் தீப்பெட்டிக்குள் அடைத்து விடுவான். திரும்பவும் தீப்பெட்டியைத் திறப்பான். மூடுவான். தேவையான போதெல்லாம் தீப்பெட்டியைத் திறந்து பொன் வண்டிலிருந்து தீக்குச்சி எடுப்பான்.

பொன்வண்டுக்கே தெரியாமல் அதன் உடம்பிலிருக்கும் வண்ணமெல்லாம் உதிர்ந்து மறைந்து விடுகிறது. பறப்பதற்கு ரெக்கை வைத்திருக்குமே அதில் பொட்டுப் பொட்டாய் மின்னும் பாசிக்கலர் இருக்குமே. அதெல்லாம் மறைந்து ரெக்கை ரெண்டும் கருகிச் சுருண்டு பொன்வண்டே கருத்து வருகிறது.

மதினிமார்கள் கதை - கோணங்கி

உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.
சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.
இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?
அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.
நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.
கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.
மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.
பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். 'நென்மேனி மேட்டுப்பட்டி' க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.
பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.
பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.
செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.
என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.
இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு 'எம்மா.... எம்மா.......' என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் 'செம்புகோம்.... செம்புகோம்....' என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!
பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.
தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.
'அடேய் .... செம்புகோம் ..... ஏலேய்.....' என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் 'ஓய் ... ஓய் ....' என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.
பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். 'கொழுந்தன் வருகிறாரா ....' என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கீகாட்டுக்கறுப்பாய் 'கரேர் ....' ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள 'அய்யோ ... மயினீ ..... கிட்ட வராதே...... வராதே .....' என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். 'நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ......' என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, 'மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ.' என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் 'கலகலகல ....' வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.
குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.
பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் "இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே...." என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். 'ஓய்.....மருமோனே' என்ற கீகாட்டுப் பேச்சில் 'தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா ... மடத்துக்கு போயிறவா' என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் 'கெக்கெக்கே ...' என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.
ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.
அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு 'ஓசிக்கஞ்சீ ....' 'சட்டிப் பானை உருட்டீ....' 'புது மாப்ளே ...' என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.
தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் 'புரிச்சு ... புரிச் ...' என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.
'மாப்ளைச் சோறு போடுங்கத்தா .... தாய்மாருகளா.....' என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து 'சாப்பிட வாங்க மாப்பிளே ....' என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.
நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.
'செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் ... பாரேன்.....' என்று முகத்துக்கு நேராக 'பளீ' ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.
'அட போட்டீ... குட்டச்சீ' என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். 'மயினி ..... மயினி..... அழுவாத மயினீ ......' 'உம் ...' மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.
வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.
தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.
இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.
குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.
'இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்' என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.
சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். 'வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க....! ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி .... மயினி .....நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ..... மயினீ ....' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே ....! ' என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.
கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து 'ஊம்....' கொட்டினான்.
இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.
கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.
வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.
அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.
அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.
சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு 'திக்கு... திக்....' கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.
எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். 'காளியாத்தா அப்படி வரங்குடுதாயே....' என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். 'ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....' மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.
கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.
தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.
தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் - குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? - என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். 'என்ன வேணும்' மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.
இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.
வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் 'ஹைய்ய்ய்....' என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.
எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.
'கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா.....கன்னத்தில் கை வைக்காதிரும்.... செல்லக் கொழுந்தனாரே....எய்யா....' என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.
நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி - அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.

கோப்பம்மாள் - கோணங்கி

அஞ்சாம் வகுப்பு கோப்பம்மாளுக்கு பச்சைக்கலர் பாவாடைதான் இருக்கிறது. பாவாடை தான் பச்சை என்றால் பெயரைக் கூட பச்சையென்று கூப்பிட்டார்கள். ‘பள்ளிக்கூடம் வரும் போது தம்பிய தூக்கிட்டு வராதே…’ என்று அஞ்சாப்பு வாத்தியார் சொன்னார். பிள்ளை தூக்கப் போட்டுருவாக சார். எங்கைய்யா பள்ளிக்கூடத்துக்கு வுடரது சார் என்றாள்.

கோப்பாம்மாவுக்கு பள்ளியை விட்டு வெளியேறினால் அனேக வேலைகள் இருந்தன. ஊர்க்கஞ்சி எடுக்க போகணும். அதற்கெல்லாம் எப்பொழுதோ பழகிவிட்டாள். வீடுவீடாய் போய் விழுந்த உருப்படிகளை எடுத்து பொதியில் சேர்த்தாள்.

வீட்டில் கழுதைகள் நிற்காது. ஒவ்வொரு கழுதையும் ஒவ்வொரு திக்கில் நிற்கும். அவற்றை வீடு சேர்க்க வேண்டும். குட்டிக் கழுதை தரியில் நிற்காது. குட்டிக் கழுதை அவளைக் கண்டு ஓடும். மேட்டு நிலத்தில் நின்று பார்க்கும். கிட்டவராது. கன்னுக்குட்டி என்று பெயர் வைத்திருந்தாள், குட்டி கழுதைக்கு. உன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டது, ஓடையில் நிக்காதே… என்று செல்லம் கொஞ்சினாள். கோப்பம்மாள் கன்னுக்குட்டியிடம் போய் நின்றாள். சின்ன மூஞ்சில் அழகு வடிந்தது. திடீரென்று ஒடியது. அவளும் விரட்டினாள். வண்ணாக்குடியில் உள்ள கழுதை மேல் எல்லாம் அதிசயங்கள் இருந்தன. குட்டிக் கழுதை துள்ளியது.

வண்ணாப்புள்ளை பள்ளிக்கூடம் போவது வண்ணாத்திக்குப் பெருமை. பள்ளிக்கூடம் போனால் தம்பி அழுவான். குரங்குகுட்டி மாதிரி சவளைப்பிள்ளை அது. அண்டி தள்ளி வீசும். அவன்கிட்டத்தில் யாரும் ஒட்டவில்லை. தம்பி ஆயிருந்து விடுவான், பள்ளிக்கூடத்தில். முகம் சுழித்து வகுப்பறையே ஒடியது.

வண்ணாத்தியை அடிப்பதை என்று நிறுத்துகிறோமோ அன்றே உலகம் பாழ் என்ற பிரம்புக் கொள்கை வைத்திருந்தார், அஞ்சாப்பு வாத்தியார். வகுப்பறையைக் கழுவிவிட்டு சுத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். கோப்பம்மாள் அழுது கொண்டே சுத்தம் செய்தாள். எல்லாப் பிள்ளைகள் மூஞ்சிலும் சுழிப்பு இருந்தது. அவளுக்கு அவமானமாய் போய்விட்டது.

கோப்பம்மாளைக் கண்டு முகம் சுழிக்காதவர் ஒருசிலர் இல்லாமலில்லை. வண்ணாத்திப்பூச்சி என்பான் மாரியப்பன். மாரியப்பனின் மண்டை முன்னும் பின்னும் சப்பளிந்து இருந்தது. பிளசர் மண்டை என்றார்கள் அவனை. கிள்ளி வைப்பான் பிள்ளைகளை. பிளசர் மண்டையில் வாத்தியாரின் குட்டுகள் விழும்.

அவன் பள்ளிக்கூடம் வரும் போது ஊதா சட்டை போட்டு வந்தான். ஊதா பிளசர் என்றார்கள் அவனை. ஒருவர் மாற்றி ஒருவர் பட்டங்கள் கொடுத்தது பற்றிப் பெரியவர்கள் கவனிப்பதில்லை.

மாரியப்பன் வீட்டுக்கு அழுக்கு எடுக்கப் போனாள் கோப்பம்மாள். ஊதாச் சட்டைகள் 3 இருந்தன மாரியப்பனுக்கு. என்றோ செத்துப் போன அய்யாவின் சட்டைகளே அவை. மாரியப்பன் அய்யா விறகு வெட்டி. ஊதாசட்டையும் பெல்ட்டும் போட்டிருந்தார். அய்யா இருக்கும் போதே அவன் வீட்டில் 3 சட்டைகள் இருந்தன. டவுசர் மட்டும் போட்டிருந்தான் மாரியப்பன். அவனுக்கு ஊதா சட்டைகளை விட்டுவிட்டு அய்யா மண்ணுக்குள் போய்விட்டார்.

மாரியப்பனின் பஞ்சர் ஒட்டிய டவுசர்கள் நிறமிழந்துவிட்டன. பையில் வெல்லக்கட்டி போட்டு வைப்பதால் எலிகள் கொரித்தன. மாரியப்பன் வீட்டில் வட்டு திருடி வெல்லக்கட்டி தான் வாங்குவான். அடே மாரியப்பா வெல்லக்கட்டி திங்காதேடா. பல் சொத்தையாகிவிடும் என்றாள் அம்மா. இன்னிமே திங்க மாட்டம்மா என்றான் சமத்து.

டெயிலர் பொன்னுசாமி மாமா அவன் டவுசருக்கும் சட்டைக்கும் கலர்கலர் பீஸ்களில் தபால் பெட்டிகளை இணைத்தார். ஓசியில் அவனுக்கு மணிப்பர்ஸ் செய்து கொடுத்தார். பள்ளிக் கூடத்திலேயே மாரியப்பனிடம் தான் குட்டி மணிப்பர்ஸ் இருந்தது. அமுக்கு ப
ட்டன் வைத்த மணிப்பர்சு. மணிப்பர்சுக்குள் ரூவா தாள்கள் வைத்திருந்தான். 
நோட்டுப் புத்தகத்தில் நடு நடுவில் ரூவா படம் போட்டான். அதை பிளேடால் வெட்டி ரூவா சேர்த்தான். எல்லா பிள்ளைகளும் பார்க்கும் சமயத்தில், போஸ்ட் பாக்ஸை திறந்து குட்டி மணிப்பர்ஸை எடுத்தான். தலைகள் தொங்கின. டேய்டேய்… எனக்குடா, எனக்குடா என்று பிள்ளைகள் கைநீட்டி சூழ்ந்தன.

ஒவ்வொருவருக்கும் ரூவா தாள் கொடுத்துப் பெருமை பட்டான். அப்போது மாரியப்பன் கண்கள் சாகஸம் புரிந்தன. பெரிய சீமான் மாதிரி பென்சிலை வைத்து சீரேட் குடித்தான். வண்ணாத்திப்பூச்சி இந்தப்பக்கம் வரமாட்டாள். தம்பியோடு பலகையில் ஒதுங்கி நின்றாள். மாரியப்பன் யாருக்கும் தெரியாமல் அவளுக்கு மட்டும் ரூவா நோட்டு கொடுத்தான். அவளும் சுற்றி நோட்டம் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

அஞ்சாப்பு வாத்தியார் பிரம்பு, புஸ்தகத்துடன் வேட்டியைப் பிடித்தபடி உள்ளே நுழைந்தார். வகுப்பறையில் நடப்பதைப் பார்த்த மாத்திரம் தெரிந்து விடும் அவருக்கு. பள்ளிக்கூடத்தில் மிஷின் வைத்திருந்தார். அந்த மிஷின் டிராயருக்குள் வைத்திருந்தார். யார் யார் என்ன சேட்டை செய்தார்களோ அதையெல்லாம் பதிந்து விடும். வாத்தியார் வரவும் சொல்லிக் கொடுத்துவிடும்.

வந்ததும், வாரத்தில் முதல் நாள் சீருடை அணியாதவர்களைப் பள்ளியை விட்டு விரட்டினார். சார்… சார்.. மாரியப்பன் டவுசர் போடலை சார்… என்றான் கெசவால் ராமசாமி. வாத்தியார் மாரியப்பனை பிரம்புடன் அணைத்துக் கேட்டார். சார்… சார்… டவுசர் போட்டிருக்கேன் சார் என்றான். வேதக்கோயில் பாதிரியார் மாதிரி கால்களை மூடிய ஊதா சட்டையைப் பிடித்துக் கொண்டான். யாரும் சட்டையை தூக்கிவிடுவார்கள் என்று பயந்து நடுங்கினான்.

உடனே பிரம்பு சட்டம் அமலானது. மாரியப்பனை வகுப்பறையை விட்டு விரட்டினார். மேலும் சீருடை இல்லாத கோப்பம்மாவுடன் பிரம்பு பேசியது. மாரியப்பனும் வண்ணாத்திபூச்சியும் வகுப்பறையிலிருந்து வெளியேறினார்கள். பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வெயில். பூட்டிக்கிடந்த வீடுகளைக் கடந்து போனார்கள். தெருமுனையில் வகுப்பறைச் சத்தம் கேட்டது. அவர்கள் மனபோக்கின் சுதந்திரத்தைப் போல் வெயிலும் மாறியது. கோப்பம்மாள் இடுப்பில் தம்பி இருந்தான். தெருக்கடைசியில் விளையாட்டுப் பள்ளிக்கூடம் இருந்தது. நிழல் விளையாட்டு. அங்கு தான் ஒன்னாப்பு கோபால் வாத்தியார் இருந்தார்.

அஞ்சாப்பு பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டு கிடைக்காது. அஞ்சாப்பு வாத்தியார் ஆங்கிலம், தமிழ்ப்பாடம், கணக்கு அறிவியல் என்ற தான் பாடங்கள் நடத்துவார். அஞ்சாப்பு வாத்தியார் விளையாட்டின் எதிரி. அவரோடு பெற்றோர்களும் குதியாளம் போடுவதை எதிர்த்து வந்தார்கள்.

எல்லோரும் கோபால் வாத்தியாரிடம் நிழல் விளையாட்டு கற்றுக் கொண்டவர்கள் தான். கோப்பம்மாளும் விளையாடினாள். தம்பியை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் விளையாட்டில் சேர்க்க மாட்டார்கள். ஆகவே வாத்தியாருக்கு அருகில் நின்றாள். குட்டித்தம்பி அக்காளின் அசட்டுச் சடையைப் பிடித்து விளையாடுகிறான். அக்கா முகத்தில் பிஞ்சுக்கைகளை அலைத்துச் சிரித்தான்.

விளையாட்டில் சேர்ந்து கொண்ட பிள்ளைகள் குட்டித்தம்பிக்கும் கோப்பம்மாளுக்கும் காய் விட்டார்கள். மாரியப்பன் ஒன்னாப்பு பிள்ளைகளோடு விளையாடினான். வேம்பு எப்போது பூத்தது, பூத்ததை உதிர்த்தது, பிஞ்சும் பூவுமானது எப்போது என்றெல்லாம் கோவாலு வாத்தியார் பார்த்துக் கொண்டிருந்தார்.

நெ.மேட்டுப்பட்டி பிள்ளைகள் எப்பொழுதெல்லாம் வேம்புடன் விளையாடினார்கள். கோவாலு வாத்தியார் சின்னப் பிள்ளையாக இருந்த போது அவருக்கு நிழல் வ
ளையாட்டு சொல்லி கொடுத்தவர்களைப் பற்றியெல்லாம் தாத்தாவுக்கு முந்திய காலத்து வேம்பு மறக்கவே இல்லை.

நெ.மேட்டுபட்டியில் ரொம்ப வயசான வேம்பாகையால் தான் தோன்றிய காலத்தையும் நிழல் விளையாட்டுகள் தோன்றிய காலத்தையும் ஒரு வேளை மறந்து போயிருக்கலாம்.

கோப்பம்மாளை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத போது வேம்பு அவளை பார்த்தது. அவள் பச்சைப் பாவாடையிலிருந்து தொங்கும் நாடாவை எடுத்து கடித்துக் கொண்டிருந்தாள்.

கோபால் வாத்தியாரின் பார்வை மரக்கிளைகளின் ஆராய்ச்சியிலிருந்து கீழிறங்கி விளையாட்டீனூடே பிள்ளைகளை நோட்டம் பார்த்தது. திரும்பவும் விட்ட கிளை தாவி ஏறியது கோபால் வாத்தியாரின் கவனம்.

ஒடிசலான கோபால் வாத்தியார் பிள்ளைகளுக்கு நிழல் விளையாட்டின் மீது வரும் ஆர்வத்தை தூண்டி வருகிறார் ஒவ்வொரு காலமும்.

நெ.மேட்டுபட்டி தெற்குத் தெருவில் தேய்ந்து கிடந்த நீண்டகாலப் புழுதிக்கூட இந்த வழியே போன காற்றால் அடித்துச் செல்லப்படும். தெருவே கரடு தட்டுப் போன வண்டிப் பாதையாய்க் கிடக்கும். இந்த வழியில் இப்போது வண்டிகள் செல்வதில்லை. ஆள் நடமாட்டமில்லாது போய்விட்டது. இதே வரிசையான வீடுகளில் வண்ணாக்குடிகளும் மாறிவிட்டன. ரேழிக்கதவின் உள்ளே பறந்து கிடக்கும் வீடு. உள்ளே கோப்பம்மாள் குமர் இருந்து கொண்டிருந்தாள்.

தன் பள்ளிக்காலம் ஓடியபின் தெருவழியே நடப்பது கூட இல்லை. வண்டிப் பாதை வழியாக ஓரமாய் நடந்து போய்க் காட்டில் மேயும் கழுதைகளைப் பத்தியபடி முள்ளு விறகுடன் திரும்பி வந்தாள். மாரியப்பன் வேணாத வெயிலோடு பண்ணை ஆடுகளுக்குப் பின்னால் காடே கிடையாகக் கிடந்து காய்ந்த வாடக்கரடுகளை ஆடுகள் தின்னும் சத்தத்தைக் கேட்டபடி தொரட்டியை நிலையாக ஊன்றியபடி கல்தூணாகி நிற்பான். ஆடு யார் பொலியில் தின்னாலும் மேஞ்சாலும் கண்ணுக்கு தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பான்.

பனையேறி சேருமுக நாடாரிடம் குடித்த கள்ளு முட்டி உச்சிவெயிலில் தலைக்கேறும். ரத்தச் சிவப்பாக கண்ணு முழி பிதுங்கி நிற்கும். கண்ணில் ரத்தம் சொட்ட காத்துவாக்கில் மேற்காமல் திரும்பி நின்றபடி காட்டு கூப்பாடும் பாட்டுமாய் காடே தாங்காது. கட்டாந்தரை மாதிரி செம்பட்டையும் வங்கு வங்காய் பயல் உடம்பெல்லாம் சொரி உப்பரிஞ்சு போய் கிடப்பான் ஓடக் காட்டில்.

ஊதாச்சட்டை வெயிலில் அசைவதை பார்த்து சுற்றி சுற்றி முள்ளு சேகரிப்பாள் கோப்பம்மாள். அன்று ராத்திரி கோப்பம்மாள் சோறெடுக்க வந்தாள். எல்லோர் வீட்டிலும் வாங்கி கொண்டு மாரியப்பன் வீட்டிற்கு வந்தாள். மாரியப்பன் இருட்டில் நின்றுக் கொண்டு கோப்பம்மாள் என்றான். அவனிடம் வந்தாள். கோப்பம்மாளின் சோத்துப்பானைக்குள் கையைவிட்டு ஒரு கை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். நல்லா இருக்கு என்றான்.

கோப்பம்மா உனக்கு… என்று இன்னொரு கவளம் அள்ளி அவளிடம் நீட்டினான். மறுக்காமல் வாங்கிச் சாப்பிடாமல் பானையில் சேர்த்துக் கொண்டாள்.

அந்த இரவோடு அவள் சோறெடுக்க வரவில்லை. அவள் ஆத்தா தான் அழுக்கெடுக்க வந்தாள். கோப்பம்மாள் இப்பொழுதெல்லாம் வெளியில் வருவது கூட இல்லை. தண்ணிக் கிணத்தில் நின்ற போது கரை வழியாக ஆடுகளோடு புழுதிக் கிளப்பிப் போய்கொண்டிருந்தான் மாரியப்பன். அவள் இருந்த பக்கம் திரும்பி பாராமல் உர்… ரென்று முகத்தை வைத்துக் கொண்டு நடந்தான். அவள் அருகில் சப்தநாடி எல்லாம் அடங்கி நடந்து கொண்டிருந்ததே தெரியாமல் காட்டுக்குப் போனான்.

அவள் இருந்த பக்கம் எட்டி பார்க்காத நாளில் கோப்பம்மாளை பெண் கேட்டு வந்துவிட்டார்கள். தெற்கே வெகு தொலைவான விருந்தாளிகள். ராத்திரியோடு பெண்ணழைத்து போக இருந்தது.

கிணத்தங்கரை பக்கம் குடத்துடன் போய் காத்திருந்தாள். காட்டிலிருந்து வரவே இல்லை அவன்.

வீட்டுக்கு வந்த போது வாசலில் கிடந்த அழுக்குப் பொதியில் அது துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது.

இற்று உருக்குலைந்து போன ஊதாசட்டை தான். அதை யாருக்கும் தெரியாமல் உருவி எடுத்துக் கொண்டு போனாள்.

கந்தல் கந்தலாய் சிதிலமடைந்து போன ஊதாச் சட்டையில் எல்லா இடமும் பொத்தலும் ஒட்டுமாய் இருந்தது.

நெஞ்சுத் தூரத்தில் வெக்கை திரண்டு தீக்கங்கு போல் பழுத்து எரிந்தது.

உப்பரித்து வீசும் ஊதாச் சட்டையை மார்போடு புதைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். முகத்தில் ஒற்றிக் கொண்டாள். ஆறுதல் அடைய மறுத்த தீக்கணு எரிந்து கொண்டிருந்தது. கோப்பம்மாள் ஊதாச் சட்டையை ஊருக்குக் கொண்டு போக வேண்டிய மஞ்சள் பையில் தன் சேலையுடன் எடுத்து வைத்தாள்.

பின் வாசல் சுருக்கிருட்டில் இருட்டுப் பூச்சிகள் சத்தத்துடன் இருளைப் பெருக்கியடி இரைந்து கொண்டிருந்தன.


****