பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமொழிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அறிந்தோர் வாக்கும் அறிவியல் நோக்கும்!

தமிழர்கள் பேசிவந்த, இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச் சொற்களில் நாட்டுப்புறப் பேச்சுவழக்கில்; பழமொழிகளில் சொலவடைகளில் கூறப்பட்டுள்ள அறிவியல் செய்திகள், உலக அறிவியல் அறிஞர்கள் வியந்து ஒத்துக்கொள்ளக்கூடிய ஒப்பற்ற தேடல்களாகும். நம் தமிழர்கள் வாழ்வோடு அறிவியலையும் வகுத்து வைத்துள்ளனர். அவைகளில் சிலவற்றை மட்டும் காண்போம்.

""காட்டாடு மலையேறும்; கடலுதண்ணி மேடேறும்''. இதன் பொருளாவது, கடல் சீற்றமெடுத்துப் பொங்கி மேட்டு நிலத்தை அடையும் முன்பே அங்கிருக்கும் ஆடுகள் உயர்ந்த மேடான இடத்துக்கு ஓடிவிடும் என்பதாகும்.

""கொடிக்கா மின்னல் ஒடிக்கா வெத்திலை'' - கொடிக்கால் மின்னல் (தென்கிழக்கில் மின்னல்) மின்னினால், வெற்றிலை எல்லாம் வீணாகும் அளவுக்கு மழை உண்டு என்பதாகும்.

""போத்திடம் பெயரப் பேத்தடி வைக்காதே'' - காட்டில் சென்றுகொண்டு இருக்கும்போது செம்போத்து என்னும் பறவை நமக்கு முன்னால் சென்றால், அங்கு பாம்பு இருக்கிறது; அதை விரும்பி உண்ணச் செம்போத்துப் பறவைச் செல்கிறது; அதனால் அங்கு செல்லாதே! என்று கூறப்பட்டுள்ளது.

""மாரித் தென்னல் மாடுகொண்டு மலைஏறு'' அதாவது, மழைக்காலத்தில் திடீரென்று தென்றல் காற்று வீசினால் வெள்ளம் வரப்போகிறது; அதனால் மாடு-கன்றுகளை ஓட்டிக்கொண்டு மேடான பகுதிக்குச் செல் என்று பொருள்.

""நகுலம்பாய நல்லதுதானே!'' - நகுலம் (கீரிப்பிள்ளை) நமக்கு முன்னாலே பாய்தோடினால், அங்கே நல்ல பாம்பு இருக்கிறது, அதை உண்பதற்காகக் கீரிப்பிள்ளை செல்கிறது என்று பொருள்.

இதுபோன்ற அறிவியல் கருத்துகள் நம் முன்னோர்களால் இன்னும் ஏராளமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவைகளைத் தேடிப்பிடித்து, அதன் வழி நடப்பது தமிழர்களின் தலையாய கடமை.

நன்றி - தமிழ்மணி

செட்டிநாட்டுப் பழமொழிகள் - முனைவர் மு.வள்ளியம்மை

முன்னுரை

வாழ்க்கையில் கண்ட அனுபவ உண்மைகளின் வெளிப்பாடே பழமொழிகள். அவைகள் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள். சொல்லில் சுருக்கத்தையும், பொருளில் ஆழத்தையும், விளக்கத்தில் தெளிவையும் உடையன. இப்பழமொழிகள் பண்பாடு, பழக்க வழக்கம், சுற்றுச்சார்பு, தொழில் இவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை,

''அறிவு வளர்ச்சியிலே பிறந்து சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய பண்புகளால் என்றும் இறவாமல் இவ்வுலகில் வாழ்கின்றன'' என்று அரிஸ்டாட்டில் கூறுவார். ''பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்து விட்டன. பழமொழி மூலம் மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம்'' என்றும் கூறுவர். (சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு ப.105)

இவைகளுக்கேற்ப ஒவ்வொரு வட்டாரத்திலும் வழங்கும் பழமொழிகள் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. வட்டாரப் பழமொழிகள் என்று இவற்றைக் கூறலாம். அவ்வகையில் செட்டிநாட்டுப் வட்டாரப் பழமொழிகள் குறித்துச் சில கருத்துக்களை நோக்கலாம்.

வட்டாரப்படி பழமொழிகள்

ஒரே கருத்தைத் தரும் பழமொழிகள் பல வட்டாரங்களில் வழங்கப்பட்டலும் அவை சொற்களால் வேறுபடுகின்றன. அந்தந்த வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவை அந்த வட்டாரப் பழமொழிகளாகின்றன. அந்தச் சொற்களே அவ்வட்டாரத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. அதுபோல செட்டிநாட்டுப் பகுதிக்கு மட்டுமே உரிய சொற்களால் வழங்கப்படும் பழமொழிகளிலும் வட்டாரத் தனித்தன்மை மிளிர்வதைச் சிறப்பாகக் காணமுடிகிறது. பொட்டல், ஒய்யாரம், ஒக்கல், பனியாரம், நாளி, கெத்தா, ஒசத்தி, சமத்தி, காடிக்கஞ்சி, மாராப்பு, வரையோடு போன்றவை வட்டாரச் சொற்களுக்குச் சிலசான்றுகள். இவைகள் பழமொழிகளில் பயன்படுத்தப்பட்டவை.

செட்டிநாடும் சிக்கனமும்

செட்டிநாட்டைச் சிக்கனத்தின் இருப்பிடம் என்றும் கூறுவர். இதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். சிக்கனமாக வாழும் செட்டி நாட்டார் கஞ்சத் தனமாக வாழ்வதில்லை என்பதைத் திருமணச் செலவும், கோயில் திருப்பணிகளும் தெளிவாகக் காட்டும் கஞ்சத்தனம் என்றால் தேவைக்குக் கூடச் செலவு செய்யாமை. சிக்கனம் என்றால் தேவைக்கு மட்டுமே செலவு செய்து ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்துவது. வீண் ஆடம்பரம் அவர்கள் என்றும் விரும்பாத ஒன்று. இவர்கள் இறைபக்தியும், தர்ம சிந்தனையும், கலையுணர்வும், தமிழ்ப்பற்றும் மிக்கவர்கள். குழந்தைகளுக்குச் சிக்கனமாக வாழக் கற்றுக் கொடுப்பவர்கள் எதையும் வீணாக்காமை அவர்களின் பழக்கங்களில் தலையாயது. எனவே அவர்களின் பழமொழிகளில் ''வீண் ஆடம்பரம் வேண்டாமே'' என்ற கருத்து குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

வீண் ஆடம்பரம்

வாழ்க்கையில் வீண் ஆடம்பரத்தை விரும்பி வாழ்ந்தவர்கள் கடன்காரர்களாய், கடமையைச் செய்ய முடியாதவர்களாய் வாழும் நிலையை அனுபவத்தில் கண்ட முன்னோர்கள் வீண் ஆடம்பரம் தேவையில்லை என்பதை வலியுருத்தும் பழமொழிகளைக் கூறினர். பழமொழிகள் கிண்டல் நிறைந்தவனாகவும், வறுமையின் வெளிப்பாடாகவும், எப்படி வாழ வேண்டும் என்பதைச் சுட்டுவனவாகவும், இயல்பு வாழ்க்கை வாழ வழிகாட்டுவனவாகவும் அமைந்து சிறக்கின்றன.

''குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்''

என்பது பழமொழி. தேவைக்குத் துன்பப்பட்டுக் கொண்டு, ஆனால் வெளிப்பெருமைக்காகச் செயற்படும் தன்மையினை இது உணர்த்துகிறது. அடிப்படைத் தேவையை அறியாமல் செய்யும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.

வாழும்முறை

இந்தமாதிரியான நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்றால் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே,

''ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்''

என்ற பழமொழி. ஆறு பெரிதாக இருக்கிறதே என்பதற்காக அதிகமாகக் கொட்ட வேண்டியதில்லை. கொட்டுவதை அளந்தே கொட்டவேண்டும். எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும். யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும். அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

ஆளும் முறை

''குந்தித்தின்றால் குன்றும் மாளும்'', என்பது பொதுவான பழமொழி. முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை உழைத்துப் பெருக்காமல் உட்கார்ந்து தின்றால் அது குன்றளவு இருந்தாலும் குறைவுபடும். இதைச் சிலப்பதிகாரம் வணிக குலப் பிறப்பான கோவலன் வழிச் செம்மையாய்ச் சொல்லும்.

''சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்

குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத்தரும்'' என்பது சிலப்பதிகாரம்.

உழைக்காமல் கரைத்ததால், குலத்தில் முன்னோர்கள் சேர்த்ததைத் தான் இருந்து ஆளமுடியாமல், இலம்பாட்டைப் பெற்றான். எனவே முன்னோர்கள் வைத்து ஆண்டவற்றை வீண் ஆடம்பாரத்தால் அழித்துவிடாமல் பின்னோர்கள் வைத்து ஆளவேண்டும். இதை ''முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்'' என்ற செட்டிநாட்டுப் பழமொழி கூறும்.

சிறு குழந்தைகளுக்குச் செட்டி நாட்டில் கூறும் பல அறிவுரைகளுள் ஒன்று ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டுத் தொணக்காத'' அல்லது ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டு அழாதே'' என்பது. இது சிறுபிள்ளை முதல் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து. இல்லாததைக் கேட்டு அழுதால் அழுகைக்குப் பயந்து கடன்பட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும். தேவையற்ற கடன் தொல்லை வந்துசேரும். எனவே இருப்பதைக் கேட்டு அழுவதால் கொடுப்பவர்க்கும் துன்பமில்லை. பொருளைத் தேவைக்குத்தான் கேட்கவேண்டுமே தவிர வீணாகக் கேட்பது தவறு. இருப்பதை இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இதே கருத்து வேறுவிதமாகக் கூறப்படுவதும் உண்டு.

''இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு'' உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வு இன்பமாக இருக்கும். இல்லாததற்கு ஏங்கி அழக்கூடாது என்பதை இப்பழமொழி தெளிவாகச் சுட்டுகிறது. வசதிக்குத் தக்கபடி வாழ வேண்டும் என்பதன் வெளிப்பாடே இப்பழமொழி.

வெளிப்பகட்டு

''ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்'' என்ற பழமொழி வெளிப்பகட்டைக் காட்டுகிறது. வெளியே தாழம்பூ மணக்க இருக்கும் கொண்டை தன்னகத்தே பல அழுக்குகளைக் கொண்டிருக்கும். வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும், பேச்சளவிலும் நிற்பவர்களை இப்பழமொழி சுட்டிக்காட்டும், ''மதிப்புமசால் வடை பிச்சுப்பாத்தா ஊசவடை'' என்ற பழமொழியும் இக்கருத்திலேயே வழங்குகின்றது.

தகுதி வாழ்க்கை

பிறரைப்பார்த்து நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இயலாததை அவனைப் போல் செய்ய முயலக்கூடாது. அவனவன் தகுதிக்கேற்ப வாழும் வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை. செல்வந்தனின் வாழ்வுபோல் இல்லாதவனின் வாழ்வு அமைவதில்லை. இயன்றவன் செயல்களைப் போல் இயலாதவன் செயற்பட முடியாது. தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நல்லபாம்பைப் போல் மண்புழு ஆடமுடியாது. இதை, ''நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா'' என்று கூறுவர் (நாக்களாம்பூச்சி - மண்புழு)

முடிவுரை

''பழமொழி பொய்யின்னாப் பழயதும் சுடும்'' என்ற பழமொழி. மக்களுக்குப் பழமொழியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. சமுதாயத்தில், இதனைச் செய், இதனைச் செய்யாதே எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வில் அனுபவித்த சாரம் என்பதால் மக்களிடையே அதற்கொரு செல்வாக்கு உண்டு. அம்முறையில் செட்டியார்கள் என்று அழைக்கப்பெறும். தன வணிகர்களாகிய நகரத்தார்கள் எதையும் எண்ணித் திட்டமிட்டுச் செய்பவர்கள்.

''எண்ணிச் செய்கிறவன் செட்டி

எண்ணாமல் செய்கிறவன் மட்டி''

என்ற பழமொழி அவர்களின் திட்டமிட்டுச் செயலாற்றும் திறனை வெளிப்படுத்தும்.

''காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி''

சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்

செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?

என்ற வழக்கு செட்டியார்களின் கெட்டிக்காரத் தனத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

நன்றி - வேர்களைத் தேடி

பழமொழியின் விளக்கம் - எம்.லோகநாதன்

முன்னுரை

இயற்கைக் கவிஞர்களாகிய பாமர மக்கள் தங்கள் அனுபவத்தைக் கற்பனைக் களஞ்சியமாகக் கொண்டு பாடப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இன்பத்தைப் பாட்டால் பகிர்ந்து கொள்ளவும் சோர்வை போக்கிக் கொள்ளவும் வாய்மொழியாகத் தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை, விளையாட்டு பிசி, பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். தொல்காப்பியர் வாய்மொழி. பண்ணத்தி என்று சுட்டுவது நாட்டுப்புறப் பாடல்களே எனலாம். மக்கள் தங்கள் வாழ்வில் பிசி, பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பழமொழி என்பது மக்களின் பண்பாட்டினை ஒட்டிய வாழ்வியல் முறைகளில் தொன்மையான வாக்கிய முதிர்வு பெற்ற சொற்களைப் பழமொழி என்பர். பழமொழியை மலையாளத்தில் ''பழஞ்சொல்'' என்றும் தெலுங்கில் ''நாதுடி'' என்றும் கன்னடத்தில் ''நாண்ணுடி'' என்றும் ஆங்கிலத்தில் Proverb என்றும் வழங்கப்படுகின்றது. பழமொழிகள் மூலம் மக்கள் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சாலை இளந்திரையன் பழமொழிகளைப் பற்றி ''பழமொழிகளும் ஏனைய பாமரர் இலக்கியங்களும் அவைகளைப் படைத்து வழங்கி வந்த மக்களின் கருத்தோட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே மக்களின் சமுதாய இயல், அரசு இயல், நீதிஇயல், மற்றும் மத இயல், கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை''. (சமுதாய நோக்கில் பழமொழிகள்: 10) என்று குறிப்பிடுகின்றார். எனவே மக்களின் சமுகம், நீதி, அரசு, மதம் சார்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பழமொழிகள் உறுதுணை புரிகின்றன என்பதை அறிய முடிகின்றது.

பழமொழியின் தோற்றம்

மனிதன் என்று சிந்தித்துப் பேசத் தொடங்கினானோ அன்றே பழமொழிகள் தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றி இயைந்து இருப்பதால் இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறுதியிட இயலாததாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் சங்க இலக்கியத்தில் பழமொழிகளைக் குறித்த செய்திகள் வருகின்றன, அவற்றைக் குறிக்க பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்பதால் அதற்கு முன்பே பழமொழிகள் சிறப்புப்பெற்று இருந்திருக்க வேண்டும். நீதி நூல்களில் ''பழமொழி நானூறு'' என்ற நூலும் வெண்பாவால் இயற்றப்பட்டிருப்பது பழமொழிகளுக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது. பின்னாளில் எழுந்த, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், பழமொழி போதனை, பழமொழி போதம், பழமொழித் தாலாட்டு என்ற இலக்கியங்கள் எல்லாம் பழமொழியைப் பயன்படுத்தியும் பழமொழியின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பழமொழிகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ச.சிவகாமி பழமொழிகள் பழங்காலத்தில் இருந்தே மக்களிடையே வழங்கி வருகின்றன. காலந்தோறும் அவற்றிற்கிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன. வாழ்க்கை ஒழுங்கிற்கு எழுதாச் சட்டங்களாக நின்று வழங்கி வந்த பழமொழிகள் இலக்கிய உருவாக்கக் காலத்திற்கு முன்பே தோன்றின. (பன்முகக் பார்வையில் பழமொழிகள் ப.12) என்று உரைக்கின்றார். அதனால் பழமொழிகள் ஒவ்வொரு காலத்திலும் தோற்றம் பெற்று மக்களின் வாழ்க்கையோடு இயைந்தும் சிறந்தது நிலைத்தும் அல்லாதது மறைந்தும் போய் விடுகின்றன எனலாம். மனித வாழ்வின் ஒட்டு மொத்த பயன்பாட்டில் நல்லவற்றையும் தீயவற்றையும் சுட்ட வருவன பழமொழிகள். இவை அறிவின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் பண்பின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் தொழிலின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் வாழ்வியல் முறைகளின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் கொண்டே அந்தந்த நிகழ்ச்சிகளில் வல்லார் அந்தந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டிச் சிலபல பழமொழிக€ளை தோற்றுவித்தனர். அவையே பழமொழிகளாயின (பழமொழியும் பண்பாடும் ப.5) என்று செந்துறை முத்து குறிப்பிடுகின்றார்.

பழமொழி - இலக்கணம்

பழமொழிக்குத் தொன்மையான ஒரு வரையறயை முதன் முதலில் வகுத்தவர் தொல்காப்பியர்: பழமொழியை ''முது மொழி'' என்று சுட்டியிருக்கின்றார். நுண்மை, சுருக்கம் ஒளி உடைமை, எளிமை, குறித்த பொருளை முடித்தல், ஏது நுதலுதல் ஆகிய இலக்கணம் வாய்க்கப் பெற்றுக் குறிப்பிட்ட பொருளைக் காரணத்துடன் உணர்த்துவது பழமொழி. இதனை,

நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்- 177)

என்று பழமொழியின் அமைப்பை விளக்குகிறார். தமிழ்க் கோட்பாடு வரிசை 3 பழமொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை.

1. எளியோர் நாவில் வழங்கத்தக்கதாய் இருத்தல் வேண்டும்.

2. எதுகையிலோ மோனையிலோ அல்லது பிற வகையிலோ ஒரு வகை ஓசை நயம் இருத்தல் வேண்டும்.

3. கருத்தை நேரிடையாகக் குறிப்பிட வேண்டும்.

4. பழமொழி கூறும் கருத்து பலகாலும் அனுபவப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

5. உவமைகள் கண்ணாற் காணத்தக்கனவாக இருத்தல் வேண்டும்.

7. சொற்களை எடுத்து விட்டு வேறு சொல்லைப் பெய்து கொள்ளத் தக்க நெகிழ்ச்சி வேண்டும். (த.கோ.3.11-12)

என்று குறிப்பிடுகின்றது. அனுபவப்பட்ட மொழியாக இருப்பதோடு எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக கருத்தை உணர்த்துவன பழமொழிகள் என்பதை அறியமுடிகின்றது. நன்னூல் நூலுக்குரிய பத்து அழகும் நூற்பாவுக்கு வகுத்துள்ள இலக்கணமும் பழமொழியின் இலக்கணத்திற்கு பொருந்துவனவாய் உள்ளன என்று வ.பெருமாள் குறிப்பிடுகின்றார்.

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

''நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்

ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்

முறையின் வைப்பே உலகம் மலையாமை

விழுமியது பயத்தல் விளங்குதா தெடுத்த

தாகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே'' (நன்-13)

சுருக்கமும், விளங்க வைத்தலும் நன்மொழி புணர்த்தலும் ஆழ்ந்த கருத்து உறைத்தலும் பழமொழிக்கும் உண்டு என்பதால் இவை பொருந்துகின்றது எனலாம். பழமொழிகளின் அமைப்பினை ''ஒட்டு அல்லது உருவக அணியேற்று நின்று தொடர்புடைய கருத்தை உடனடியாக நெஞ்சில் எழச் செய்யும் முழுமையான வாக்கியமே பழமொழி என்பதோடு பழமொழி முறிவு பட்ட தொடராக இல்லாமல் முழுமையான வாக்கியமாகவே அமைய வேண்டும். முற்றுப் பெற்ற வாக்கியமாக இருத்தல் வேண்டும் என்றும். எந்தப் பழமொழியும் உரையாடல் முறையில் அமைவதில்லை. சுருக்கமும் ஒளியுடைமையும் பழமொழியின் முக்கியப் பண்புகள். எதுகை, மோனை, முரண், ஓசை நயம், வினா முதலிய உத்திகளைப் பழமொழி ஏற்றுவரும். கேள்வியாகப் பழமொழியை அமைப்பதே தமிழில் காணப்படும் பரவலான கருத்து. உவமைத் தொடர்களே சில நேரங்களில் பழமொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று (சமுதாய நோக்கில் பழமொழிகள்:15) சாலை இளந்திரையன் குறிப்பிடுகின்றார்

இதனால் சிறந்த கருத்தினைக் கொண்டதாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, நீதியை உரைப்பதாக, எதுகை, மோனை பெற்று சுருங்கிய வடிவில் வருவன பழமொழிகள் எனலாம்.

பழமொழியின் வேறு பெயர்கள்

பழமொழி என்னும் சொல்லுக்கு இணைப்பொருண்மைக் கொண்ட சொற்களாக இலக்கியங்களும் நிகண்டுகளும் அறிஞர்களும் பல்வேறு பெயர்களைச் சுட்டிருக்கின்றனர்.

1. ஏது நுதலிய முதுமொழி என்ப-தொல் 177

2. எவ்வஞ் சூழாது விலங்கிய கொள்கைக் (காலை யன்ன சீர்சால் வாழ்மொழி (பதி,பா,21)

3. நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழியின் (அக 101)

4. பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி (அக.66)

5. மொழிமை மூதுறை முன்சொற் பழஞ்சோல முதுசொல் என்பர் பழமொழியுமாமே (பி.நி.22)

6. மூதுரைப் பெருங்கதைகளும் மொழிவார் - (கம் சூர் 102)

8. புலிதானே புறத்து அக குட்டி போட்டது என்ற

9. ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ (கம்.ஆர.102)

10. திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழி யோதியே யுணர்ந்து (திருப்புகழ்)

11. வேத முதல்வர் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ (சில ஊர் 46.49)

என்று இலக்கியங்கள் பழமொழியைச் சுட்டுகின்றன, வ.பெருமாள் பழமொழியை 33 சொற்களால் குறிப்பிடுகின்றார்.

1. பழமொழி, 2. தொன்னெறி மொழி, 3. முதுமொழி, 4. முதுசொல், 5. தொன்றுபடுகிளவி, 6. தொன்றுபடு பழமொழி, 7. வாய்மை, 8. அறம், 9. நெடுமொழி, 10. பல்லவையோர் சொல். 11. பண்டைப்பழமொழி, 12. சொலவு, 13. மூதுரை, 14. பழஞ்சொல், 15. மூத்தோர் சொல், 16. வழக்கு, 17. உரை, 18. பழையநெறியினவாய்வரும்சொல், 19. பழவார்த்தை, 20. உலகமொழி, 21. உபகதை, 22. சுலோகம், 23. சொலவடை, 24. வசனம், 25. எழுதாஇலக்கியம், 26. வாய்மொழி இலக்கியம், 27. எழுதாக் கிளவி, 28. கேள்வி, 29. சுருதி, 30. நீதிமொழி, 31. முதுமை, 32. மொழிமை, 33. முன்சொல்

என்று குறிப்பிடுகின்றார். இதனால் பழமொழியைச் சுட்ட பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்து இருப்பதே அறிய முடிகின்றது

பழமொழியின் தன்மை

வாழ்க்கை அனுபவமே பழமொழிகள். அவை என்றும் பொய்ப்பதில்லை, பழமொழியின் பொதுத்தன்மைகள் குறித்து அறிஞர்கள்,

1. ஆயிரம் நூற்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும் - லாவேட்டர்

2. பழமொழிகள் இருட்டில் வழிகாட்டும் தீவர்த்தி - பாஸ்ளியல் பழமொழி

3. சிறந்த பொருளை சுருங்கிய முறையில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழியின் தன்மை-தாமஸ்கார் லைன் பழமொழி

4. வானம் இடிந்து விழுவதில்லை பழமொழி பொய்யவாதில்லை

5. பழமொழிக்கு உமியில்லை - இந்தியா

6. பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா? - அமெரிக்கா

என்று குறிப்பிடுவதால் பழமொழிகள் உண்மைகளை உரைப்பன என்பதை அறிய முடிகின்றது. பழமொழிகள் அனைத்திற்கும் பட்டறிவே அடிப்படையாக அமைகின்றது. அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள் என்று இங்கிலாந்தும் அனுபவத்தின் எதிரொலிகள் பழமொழிகள் என்று சுவிட்ஸர்லாந்து மொழியும் பழமொழியின் ஒருமித்த கருத்தாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.

பழமொழிகளுக்குப் பொருள் விளக்கங்களையும் மக்கள் தம் அனுபவத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். பழமொழிகளைக் கூறுபவர் சூழலுக்கேற்ப பழமொழியைக் கேட்பவர் அச்சூழலை உணர்ந்து அதன் பொருளை அறிந்து கொள்கின்றனர். ஒரு மொழி பேசுபவரிடையே பல வட்டார வழக்கு மாறுபாடுகள் இருப்பதைப் போல் பழமொழிகளும் வழங்குவதில் வழக்கு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்றைச் சிறப்பித்து மொழியும் பழமொழிகளுக்கு ஏற்ப அதே போன்று பிறிதொரு பழமொழியும் தோன்றுகிறது. இதனால் எது முந்தியது எதைப் பார்த்து எது பிறக்கிறது என்று சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

பயன்படும் சூழல்

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் பழமொழிகளைப் பயன்படுத்துவர் என்று குறிப்பிட இயலாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பழமொழியைப் பயன்படுத்துவர். அறிவுரை வழங்கும் போது தன்னிலை உணர்த்தும் பொழுது மதிப்பீடு செய்யும் பொழுது, தவறு செய்வோரை ஏசும் பொழுதும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகள் பொருள் அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும், சமய அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும், நில அடிப்படையிலும், செயல் அடிப்படையிலும், அளவு அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.

பழமொழிகள் வாழ்க்கைப் பயன் பாட்டிற்கு உதவுவதால், நன்மைத் தீமைகளைச் சுட்டுவதால் நீதிக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. மக்கள் தம் அனுபவத்தை என்றைக்கு வெளிப்படுத்த விரும்பினார்களோ அன்றே பழமொழிகள் தோற்றம் பெற்றன. பழமொழிகள் சுருக்கம், எளிமை கருத்து விளக்கம், எதுகை, மோனை, ஓசை நயம், வினா ஆகிய தன்மைகளைக் கொண்டு எதன் உதவியும் இன்றி தன் கருத்து வளத்தைக் கொண்டே நிலை பெறுகின்றது. மக்கள் தம் சிச்கல்களுக்கும் பேச்சுக்கும் ஓர் அழகைத் தருவதால் பழமொழிகளைக் காத்து வருகின்றனர். பயன்பாட்டில் அதிகம் இடம் பெறாத பழமொழிகள் நாளடைவில் மறைந்தும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய பழமொழிகள் தோன்றுகின்றன. காலத்திற்கும், பேச்சாளர்களும் தங்கள் கருத்து வளத்திற்குப் பழமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நன்றி - வேர்களைத் தேடி

பழமொழிகளின் பழம்பொருண்மைகள் - முனைவர் வை.சோமசுந்தரம்

முன்னுரை

நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும்

வகையில் இக்கட்டுரை அமைகிறது.

பழமொழிகள் - விளக்கம்

பழமொழிகள் பழைமை வாய்ந்த மொழிகள்; தொன்றுதொட்டு வழங்கிவரும் இயல்புடையன. பழுத்த(வர்) மொழி - வயது, பட்டறிவு அல்லது அனுபவத்தில் முதிர்ந்த பழுத்த மக்களின் உள்ளூணர்வின் வெளிப்பாடாக விளங்கும் மொழிகள் என்ற கருத்தும் நிலவுகிறது. பழம்மொழி - பழங்கள் பொதுவாக இலகுவாக உண்ணத்தக்கன: இலகுவில் உடலில் கலப்பன: உண்ணும்போது இனிப்பன. அவற்றைப் போல, பழமொழிகள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் வகையில் மனிதர்களின் உணர்வில் கலந்து மகிழ்விப்பன; அறிவுறுத்துவன. எனவே பழமொழிகளைப் பழைமை மொழி, பழம்மொழி, பழுத்த(வர்) மொழி என விரித்துப் பொருள் கொள்ளலாம்.

பழமொழிகளின் சிறப்பியல்புகள்

பழமொழிகள் சூத்திரம் போன்று, சுருக்கம், தெளிவு, திட்பநுட்பம் செறிந்தவை. அவற்றைச் சொன்னால், கேட்டால், எண்ணினால் இன்பம் விளைந்து, அறிவுறுத்தும் போக்கில் அமைவன.

நூலுக்கு இலக்கணிகளால் உரைக்கப்படும், சுருங்கச்சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்களுக்கு இனிமை, நன்மொழி புணர்தல் ஓசையுடைமை, ஆழம் உடைத்தல், முறையின் வைப்பு, உலகம் மலையாமை, விழுமியது பயத்தல், விளங்கு உதாரணத்தாக்குதல் எனும் பத்தழகுகள் பொருந்தி வரும் பான்மையின.

அதைப்போல நூலில் விலக்கத்தக்கனவாக இலக்கணிகள் கூறும் குன்றக்கூறல் முதலிய குற்றங்கள் நீங்கி அமையும் இயல்புடையன.

பழமொழிகள் வாழ்வியலின் முதிர்ந்த வெளிப்பாடாக, வாழ்வின் பல கோணங்களையும் விளக்கும் ஓவியங்களாகத் திகழ்கின்றன. அவற்றைச் வாழ்க்கைச் சூத்திரங்கள் என வருணிக்கலாம்.

நாட்டுப்புற மக்கள், வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குபவர்கள். பழமொழிகள் அவர்களின் பட்டறிவின் வெளிப்பாடுகள்; அனுபவ முதிர்ச்சியின் அடையாளங்கள்; அறிவு வளத்தின் ஊற்றுக் கண்கள்; சிந்தனை வளத்தின் செப்பேடுகள்; மொழி வளத்தின் முத்துச் சிதறல்கள்; வாழ்வியல் வளத்தின் வகைப்பாடுகள்!

பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்

1. அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்

இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. இன்று தமிழ் மக்களின் பண்பாட்டில் ஒரு சீரழிவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை அறிவுறுத்தி, அவர்களை நெறிபடுத்த முயலாமல் தமிழக நாட்டுப்புறங்களிலும் இன்று அடிக்கும் அம்மாக்கள்! அலறும் குழந்தைகள்! அவலம்!

இங்கு ''அடி'' என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.

2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் தீடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.

3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.

நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் ''போலீஸ்'' என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?

''வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:

போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை''

வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.

4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்

கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?

''கல்லான் ஆனாலும் கணவன்

புல்லான் ஆனாலும் புருஷன்''

கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.

5. களவும் கற்று மற.

திருடக்கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.

''களவும் அகற்று; மற''

சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்பில்லை.

6. ''சேலை கட்டிய மாதரை நம்பாதே''

இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜ“ன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.

சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.

7. ''சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்''

சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.

சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடிகை நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.

8. ''ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.''

இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.

''ஆயிரம் வேரைக் கொன்றவன்

அரை வைத்தியவன்''

என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.

9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது

இது கூட தெரியாதவர்காளகத் தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?

ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.

10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே

கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?

கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.

11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்

.......எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.

12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்

கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!

''கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்.'' இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.

13. மார்கழி பீடை மாதம்

இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.

14. தை பிறந்தால் வழி பிறக்கும்

இறைநிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் ''மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்'' என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.

முடிவுரை

இவ்வாறு சில பழமொழிகள் மூலம் அவற்றுக்குரிய இன்னைப் பொருளும்; முன்னைப் பொருளும் அறிந்தோம். பழமொழிகள் நமக்கு வாழ்க்கைப் பாடமாக அமைபவை. நீதி கூறுபவை; நம்மை நேர்ப்படுத்துபவை. எளிய சொற்கள் இனிய தொடர்களால் வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை. பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவர்க்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.

நன்றி - வேர்களைத் தேடி

பழமொழிகள் வழி பண்பாடு - செ.முருகநாதன்

மனித வாழ்வு, ஏறத்தாழ உலகம் முழுவதும் வழங்கும் பழமொழிகளை வைத்துப் பார்க்கின்ற பொழுது ஒரே தன்மையுடையதாக உள்ளது. ஆண் பெண் உறவு இல்லற வாழ்வு காதல் ஆகிய தொடர்பான செய்திகள் மனிதர்க்குப் பொதுவானவை. இந்தியாவில் உள்ளது போலவே பெண் பார்க்கும் முறை, சீர் கொடுத்தல், தாய்மைச் சிறப்பு முதலியன உலகின் பல நாடுகளிலும் வழக்கில்

இருந்து வருகின்றன. உலகம் முழுவதும் காசம் கருமைதான் என்னும் சீனப் பழமொழி வழங்கி வருகிறது. இதன் உட்பொருள் தம் கருத்திற்கு வலிவூட்டுவதாக உள்ளது.

வாழ்க்கை

மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும். ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், (அல்லது) ஒரு நூலாவது எழுதிருக்க வேண்டும் என்பது இத்தாலிய பழமொழி. மனிதன், சான்றோனாய் வாழ்தல் வேண்டும், அன்பு நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு ஐந்து சால் பூன்றிய தூண் என்பார் வள்ளுவர்.

ஆனால் இத்தகைய சான்றோராய் வாழ்வோர் எத்தனைப்பேர் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம் மக்களிடையே விலங்குணர்ச்சி மேலிட்டு நிற்கிறது. விலங்கிற்கும் மனிதனுக்கும் உள்ள ஒரே வேறுபாடு பகுத்தறிவு மட்டுமேயாகும்.

மனிதனைப் பகுத்தறிவுள்ள விலங்கு என்கிறது ஒரு நாட்டின் பழமொழி. இக்கருத்துடைய அரேபியா, இங்கிலாந்து, இந்தியா, லத்தீன் நாட்டுப் பழமொழிகள் ஒரே மாதிரியாக வழங்கி வருகின்றன. அவை

1. மனிதனும், விலங்கும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார் - அரேபியா

2. மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே - இங்கிலாந்து

3. மனிதன் தனக்குத்தானே சயித்தான் - இந்தியா

4. மனிதனுக்கு மனிதன் ஓநாயாக இருக்கிறான் - லத்தீன்

விலங்கு நிலையிலிருந்து மாறி மனிதர்க்குரிய உயர்ந்த இடத்தைப் பெற்று அறம், அன்பு, அருள் தொண்டு ஆகியவற்றின் சமுதாயத்தில் போற்றத் தக்கவராக வாழ்வதே மனித வாழ்வு. இத்தகைய மனிதப் பண்பு இல்லாதவன் அற்பப் பொருளாகவே கருதப்படுவான் என்கிறது செனீகா நாட்டுப் பழமொழி.

1. மனித சமூகத்தை விட்டு மேலெழுந்து நிற்காத மனிதன் ஓர் அற்பப்பொருள் ஆவான் -செனீகா

2. வாழ்க்கை ஒரு வெங்காயம் அதை உரிக்கும்போது கண்­ர் வரும் - பிரான்சு

3. வாழ்வும் துயரும் ஒன்றாகத் தோன்றியவை -இங்கிலாந்து

4. வாழ்க்கை என்பது அடித்தல் அல்லது அடிபடுதல் - ருஷ’யா

பிறக்கும்பொழுது மனிதன் அழுதுகொண்டே பிறக்கிறான். சாகும்போது அவன் சிரித்துக்கொண்டு சாகவேண்டும் மனிதன் சமுதாயத்திற்குத் தன்னால் இயன்ற தொண்டுகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விட்டு நேர்மையாக வாழ்ந்தோம் என்ற மனநிறைவோடு மரணத்தை எதிர்நோக்க வேண்டும்.

ஆணும் பெண்ணும்

''ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'' இது தமிழ் நாட்டின் பழமொழி. பெண்கள் என்றால் உலகம் முழுவதும் தாழ்வான உணர்வு நிலவி வருவதை பழமொழிகள் வாயிலாக அறியலாம்.

1. பெண்புத்தி பின்புத்தி - தமிழ்நாடு

2. பெண்களுக்குக் கூந்தல்தான் நீளம் மூளை குட்டை - அறிஞர் கால்மிக்

3. பெண்கள் சயித்தானின் சாட்டைகள் - அறிஞர் வேல்ஸ்

பெண்களை தெய்வமாக கருதுவதும் உண்டு. தூய பெண்குலத்தை தெய்வமாக அவமதிப்பது ஓர் ஆலயத்தை எரித்த பாவத்திற்கு நிகரானது.

4. நித்தியமான பெண்மை இயல்பு நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. -காதே

காதல்

காதல் சாதி வேற்றுமைகளைக் கடந்தது. காதலுக்குக் கண்ணில்லை. காதல் ஒரு மனிதனுக்குச் சிறைவாழ்வு போன்றது. காதல் மலர், கல்யாணத்தில் கனியும். அவசரக் காதல் விரைவில் அழியும். அன்புதான் காதலுக்கு அடிப்படை அந்த அன்புக்கு வயது தடையாகாது. முதுமையில் வரும் காதலுக்கு வலிமை அதிகம் என்று பாவேந்தர் குடும்ப விளக்கில் கூறியுள்ளார். காதலின் அன்பு, நாய் அன்புக்குக் கீழானது என்கிறது போலந்து நாட்டில் ஒரு பழமொழி. காதலைப் பற்றி வழங்கும் பழமொழிகள்

1. காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கிறது - இந்தியா

2. காதலின் உச்சத்தில் பேச்சு குறைந்து விடும் - செர்மனி

3. காதலர் கண்கட்கு ரோஜா மலர்தான் தெரியும் முட்கள் தெரியமாட்டா - செர்மனி

காதலைப் பற்றி உலக நாடுகளில் ஒரே நிலையில் இருந்தாலும், காதலின் வலிமை, உறவு ஆகியவை உலக அரங்கில் பொதுவானவை. தற்காலத்தில் வந்த திரைப்படப் பாடல் ஒன்றில்

காதல் என்பது பொதுவுடமை

கஷ்டம் மட்டும்தான் தனிவுடமை என்கிறது.

திருமணம் கணவன் மனைவி உறவு

ஒரு குடும்பத்தில் தாயின் குணநலன்களை ஆராய்ந்து பெண்ணின் குணநலம் அறிய முடியும், செல்வந்தர் வீட்டில் பெண் எடுத்தல் கூடாது. ஏழை வீட்டுப் பெண்ணே இல்லறப் பாங்குடையவள். அத்தை மகளைக் கட்டுவது முறையாகும். அத்தை மகளைவிட்டு அடுத்தவர் மகளைக் கட்டுவது மடமை என்றக் கருத்துகளை மையமாகக் கொண்டு நம் நாட்டிலும் மேல் நாட்டிலும் பழமொழிகள் உணர்த்துகின்றது. அவை

1. கரையைப் பார்த்துச் சேலை எடு; தாயைப் பார்த்து மகளை எடு. - துருக்கி

2. ஏழை வீட்டில் பெண் எடு; செல்வர் வீட்டில் குதிரை வாங்கு - பின்லாந்து

3. அத்தை மகளை விட்டு விட்டு வெளியில் பெண் எடுப்பவன் மூடன் - ஆப்பிரிக்கா

4. ஐந்தும் மூனும் எட்டு. அத்தை மகளைக் கட்டு - தமிழ்நாடு

ஒருவன் இளமையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அன்பு நீண்ட நாள் நீடித்து இருக்கும். திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிராகும். திருமணம் என்பது காதல் நோய்க்கு மருந்தாகும். திருமணம் மனிதனுக்குத் தண்டனை எனவும். கால்விலங்கு எனவும் கருதப்பட்டு வருகிறது திருமணம் பற்றிய பழமொழிகள்.

1. ஒன்று இளமையிலே திருமணம் செய்து கொள் அல்லது துறவியாகிவிடு. - பல்கேரியா

2. இளமைத் திருமணம் நீண்ட கால அன்பு - செர்மனி

3. ஒரு முறை விவாகம் கடமை, இருமுறை தவறு மும்முறை பைத்தியம் - ஆலந்து

எனப் பழமொழிகளில் உலக நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியாகக் கூறப்படுகின்றன. வாழ்க்கை, ஆண், பெண் உறவு, காதல், திருமண உறவு முறைகள் பற்றிய உலகப் பண்பாடுகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

நன்றி - வேர்களைத் தேடி

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள் - சு.சிவசங்கர்

பக்தி இயக்கப் படைப்பாளிகள், ஏனைய படைப்பாளிகளைப் போன்று தமது படைப்பில் எளிதில் நிறைவு கொள்வதில்லை. தாம் சார்ந்துள்ள சமயக் கருத்தியலை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே அவர்களுடைய முதல் நோக்கமாகும். அதற்காக அவர்கள் மேற்கொண்ட உத்திகள் பல. முதலாவதாகப் பயணம், அவர்களை மக்கள் முன் அவர்கள் சார்ந்துள்ள கருத்தியலின் தூதுவர்களாக நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக இசை, அவர்கள் கைக்கொண்ட இசை வடிவங்கள் மக்களை அவர்கள் முன் நிறுத்தி வைத்தன. மூன்றாவதாக அவர்கள் பேசிய, பாடிய மொழி மக்களின் பேச்சு நடையை ஒத்ததாக இருந்தது. பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். திருநின்ற செம்மையரான திருநாவுக்கரசர், தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தையும் பண்பாட்டினையும் சமூகத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அரிய முயற்சியில் ஆழ்ந்திருந்தார். நாட்டுப்புற வழக்குகள் பல அவரது தேவாரப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பழமொழிகளும் உண்டு.

வாழ்க்கை அனுபவங்களின் பிழிவாகக் காணப்படுபவை பழமொழிகளாகும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகின்றனர். அவற்றுள் சில மகிழ்ச்சிக்குரியன, சில வருத்தத்திற்குரியன, சில நினைத்துச் சுவைக்கத்தக்கன. சில மறந்து விடத்தக்கன. அனுபவம் எதுவாயினும் அதனுடைய சாரத்தைத் தனக்குப் பின்வருவோர் உணருமாறு மனிதன் கூறியவையே பழமொழிகள் எனலாம். பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அறியலாம் எனக் கலைக்களஞ்சியம் கூறும். பழமொழி, பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொலவம், சொலவடை என்று பலவாறான பெயர்கள் பழமொழிக்கு இருப்பதுவே அதன் தொன்மையை விளக்கும்.

''ஏதுநுதலிய முதுமொழி'' என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால், பண்பாடு தொடங்கிய காலந்தொட்டுப் பழமொழிகள் இருந்து வந்தமையை அறிய முடிகிறது.

''நன்று செய் மருங்கில் தீதில் என்னும்

தொன்றுபடு பழமொழி''

என அகநானூறும் எடுத்துக்காட்டுகிறது. பழமொழிகளின் அருமையை உணர்ந்த முன்னோர் அவற்றை ஏட்டில் எழுதா நாட்டுப்புற இலக்கிய நிலையிலிருந்து மாற்றிப் பதிவு செய்ய எண்ணியதன் விளைவே, ''பழமொழி நானூறு'' என்னும் இலக்கியமாகும். திருக்குறள், நாலடியார் முதலான நூல்களிலும் பழமொழிகள் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. தொடர்ந்து எழுந்த பக்தி இலக்கியங்களிலும் பழமொழிகள் குறிப்பிட்டதோர் இடத்தைப் பெற்றுள்ளன.

மக்களால் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படல் பழமொழியின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. Trench Proverbs and their lessions பழமொழி உரைநடை சார்ந்தது எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைக் காணலாம். பழமொழி உவமைப் பண்பு கொண்டது. சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறு போல அமைகின்றன என வேறு சில இயல்புகளையும் தே. லூர்து கூறுகின்றார் (தே. லூர்து நாட்டார் வழக்காறுகள் பக்.6,7). குறைந்தபட்சம் ஒரு தலைப்பையும் ஒரு முடிவுரையையும் உள்ளடக்கிய மரபுவழி உரைக் கூற்றே பழமொழியாகும் எனப் பழமொழிக்கு வரையறை தருகிறார் ஆலன்டண்டிஸ். அமைப்பியல் அடிப்படையில் அவர் கூறும் பழமொழி வகைகளுள் ''வேறுபடுத்திக் காட்டும் முரணுடைய பழமொழிகள்'' என்பதும் ஒன்று (நாட்டார் வழக்காறுகள் பக்.11,14). திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்பெறும் பழமொழிகளுள் பெரும்பாலானவை மேற்கூறிய இயல்புகளுக்குப் பொருந்தி வருவனவாகும். வேறுபடுத்திக் காட்டும் முரணுடையப் பழமொழிகள் என்னும் அமைப்பிலேயே அப்பர் கூறும் பழமொழிகள் மிகுதியும் அமைந்துள்ளன.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி (Proverb) அல்லது சொல்லடை (Proverbial phrase) வருமாறு அமைந்துள்ளது. வேறு பல பாடல்களிலும் பழமொழிகள் பயின்று வருவதையும் காணமுடிகிறது.

திருப்பாடல்தோறும் ஒரு பழமொழி அமையப்பெற்ற தன்மையினால் நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்பெறுகிறது. இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியோ, சொல்லடையோ இடம் பெறுகின்றன. இவற்றுள் சில இன்றளவும் மக்கள் வழக்கில் உள்ளவை.

''மெய்யெலாம் வெண்­று சண்ணித்த

மேனியான் தாள்தொ ழாதே

உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி

உழிதந்தென் உள்ளம் விட்டுக்

கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ

மயில்ஆலும் ஆரூ ரரைக்

கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்

காய்கவர்ந்த கள்வ னேனே''

என்பது இப்பதிகத்திலுள்ள முதற்பாடல். ''கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'' என்னும் குறள்வரியை இப்பாடல் நினைவுபடுத்துகிறது. இப்பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறும் ''கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே'' என்னும் பழமொழியும் இதே கருத்தை கூறும். சைவ சமயத்தை விட்டுப்பிரிந்து, சமணம் சார்ந்து பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சைவம் திரும்பியவர் திருநாவுக்கரசர். சமணத்திற் புகுந்ததால் இழிநிலை ஏற்பட்டதாகக் கருதி, சைவத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக இப்பதிகப் பழமொழிகள் அமைந்துள்ளன.

இரண்டாம் பாடலில் அமையும் பழமொழி, ''முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே'' என்பதாகும். முயலின் பின் போதல் எளிது, காக்கையின் பின் போதல், பறத்தல் இயல்பில்லாத மனிதர்க்கு அரிது. தமக்கு இயல்பல்லாத சமண நெறியில் சென்ற இழிநிலை இப்பாடலில் அப்பரால் கூறப்படுகிறது. இருக்கிறதை விட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போவது என்னும் உலக வழக்குப் பழமொழியை மேற்கண்ட பழமொழிகள் ஒத்துள்ளதைக் காணலாம்.

''அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே'' என்னும் பழமொழி மூன்றாம் பாடலில் அமைகின்றது.

''நல்லவனை நாலு பணம் கொடுத்து வாங்கு

கெட்டவனை நாலு பணம் கொடுத்தாவது விலக்கு''

என்று ஒரு பழமொழி கூறுகிறது. இதன் மறுதலையாய் விலை கொடுத்து மறம் வாங்குவது எத்தனை பேதமை என்பதனை இப்பாடல் வரி விளக்குகின்றது. ''தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே'' என்னும் ஒன்பதாம் பாடற் கருத்தும் இதுவேயாம்.

மணல் வீடு கட்டுவது, நீர்க்கோலம் போடுவது போன்ற நிலைபேறற்ற செயல்களைச் செய்வது அறிவிலிகள் செயல் ஆகும். இதனைத் தாம் செய்ததாக அறிவிக்கும் அப்பரடிகள் கீழ்க்காணும் தொடரைக் கூறுகிறார்.

''பணி நீரால் பாவைசெயப் பாவித்தேனே''

சமண நெறியால் வீடுபெறக் கருதுதல் என்பது அறிவீனமாகும் என்னும் கருத்தை இப்பாடல்வரி கொண்டுள்ளது.

அறிவிலியோடு சேர்ந்தால் அழிவு உறுதி என்னும் கருத்து அடுத்த பாடல் பழமொழியில் பெறப்படுகிறது.

''எதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே''

என்னும் இப்பாடல் வரி, ''பின் இன்னா பேதையார் நட்பு'' என்னும் பழமொழி நானூற்றுக் கருத்துக்கு ஒத்திசைக்கிறது.

கொண்ட கொள்கையின் தன்மை அறியாமல், கண்மூடித்தனமாய்ப் பின்பற்றும் முட்டாள் தனத்தை,

''இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்தவாறே'' என்னும் பாடல் பழமொழி எடுத்தியம்புகிறது.

பயனற்ற செயலைச் செய்து ஓய்ந்து போகும் செயல்பாடு மனிதனிடம் இன்றளவும் உள்ளது. ''விழலுக்கு இறைத்த நீர்'' என்னும் தொடர் அதனை உணர்த்தும். இக்கருத்து அமைய, அப்பரடிகள் ''பாழ் ஊரிற் பயிக்கம்புக்கு எய்த்தவாறே'' என்னும் சொல்லடையை தமது அடுத்த பாடலிற் கூறுகின்றார். (பயிக்கம் = பிச்சை) இதே கருத்தினை ''பயிர்தன்னைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீரிறைத்து'' (4:52:7) என்று மற்றொரு பாடலிலும் அமைத்துப் பாடுகின்றார்.

வழி தெரிந்தவன், தெரியாதவனுக்கு வழி காட்டுவது உலக இயல்பு. மாறாகக் ''கொத்தைக்கு மூங்கை வழிகாட்டும்'' போக்கினைப் பற்றி கூறுகின்றார் அப்பரடிகள் (கொத்தை = குருடன், மூங்கை = ஊமை) (4:99:2).

நாட்டுப்புற வழக்காறுகளிலும், பழமொழிகளிலும் காணப்படுகின்ற ''விளக்கினில் விழும் விட்டிற் பூச்சியையும் (4:31:5), ஆற்றினிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரையும் (4:87:6), இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பையும் (4:75:6), பாம்பின் வாய்த் தேரை''யையும் (4:52:7) தமது திருப்பாடல்களில் எடுத்துக் காட்டுகின்றார் அவர்.

''நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட

மிக்க தையலை வெள்வளை கொள்வது

தொக்க நீர்வயல் தோணிபுரவர்க்குத்

தக்கதன்று தமது பெருமைக்கே'' (5:158:7)

என்னும் பாடல், ''பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை'' என்ற பழமொழியை நினைவுறுத்துவதாய் அமையக் காணலாம்.

''நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த கதை''யும் அப்பரடிகளால் இரு இடங்களில் (4:27:5, 5:213:7) கூறப்பெற்றுள்ளது. கதையைப் பிழிந்தெடுத்த சாறென இப்பழமொழி அமைகின்றது.

எந்த ஓர் இலக்கியமும், மனிதனை விட்டு விலகி நின்றால் நிலைக்க முடியாது. சாதாரண மனிதனின் கருத்துகளும், பேச்சுகளும் இலக்கியத்தில் இடம் பெறும் போது அவை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தருகின்றன. தமது காலச் சமூகத்தினை, அதன் பண்பாட்டினைச் செப்பம் செய்ய வேண்டிய கட்டுப்பாடு, சமய, சமுதாயப் போராளியான திருநாவுக்கரசருக்கு இருந்தது. அவர்தம் பாடல்கள் சராசரி மனிதனுக்கும் சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. எனவே, அப்பர் தேவாரத் திருப்பாடல்கள், நாட்டுப்புற மக்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி அவர்களுடைய பேச்சு வழக்குகளை - பழமொழி முதலான வழக்காறுகளை உள்ளடக்கியதாக அமைந்ததில் வியப்பேதுமில்லை.

நன்றி: வேர்களைத்தேடி

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள் - முனைவர் ப.ஞானம்

''பாட்டிடைக் கலந்த பொருள வாகிப்

பாட்டின் இயல பண்ணத் திய்யே'' (தொல்.பொருள்.செய். 482)

எனத் தொல்காப்பியர் ''பண்ணத்தி'' எனக்கூறும் இலக்கியவகை நாட்டுப்புறப் பாடல்களையே குறிப்பன எனலாம். ''பழம் பாட்டினூடு கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி'' எனப் பேராசிரியர் உரைகூறும் திறன் சிந்திக்கத்தக்கது. இப் பண்ணத்தியை நாடோடி இலக்கியம் அல்லது வாய் மொழி இலக்கியம் என்றும் கூறுவர். (அ.மு பரமசிவானந்தம், வாய்மொழி இலக்கியம், ப.51) பண்ணொடு பொருந்தி வருவதும், எளிமையான சொல்லமைப்புகளைக் கொண்டதும், தொடர்கள் திரும்பத் திரும்ப வருவதும், அனைவராலும் எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதாக இதன் இயல்புகளை வரையறுக்கலாம்.

பொது மக்கள் இலக்கியமாகப் போற்றப்படும் பக்திப்பாடல்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற பாடல்களிலும் நாட்டுப்புறப்பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது. நாட்டுப்புற இலக்கியங்கள் மக்களின் இயல்பான எளிய வாழ்க்கையிலிருந்து எழுந்தனவாகவும், சோர்வை நீக்கி மகிழ்ச்சி தருவனவாகவும் விளங்குகின்றன. திருவாசகத்தில் காணப்படும் கோத்தும்பி, தெள்ளேணம், திருச்சாழல், தோணோக்கம், பழமொழி போன்ற வாய்மொழி இலக்கியக்கூறுகள் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளமையும் உள்ளம் கொள்ளத்தக்கது.

பக்தி இயக்க தொடக்க காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் சமணம் முளைத்திருந்த அக்கால கட்டத்தில் சைவ சமயச் சான்றோர்கள் தமிழ் மக்களைச் சைவ நெறியிலே செலுத்தக் கல்லையும் கனிவிக்கும் பக்திப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடி வந்தனர். நாட்டுப்புற மக்களின் அன்றாட வாழ்விலே இடம் பெறும் ஆட்டங்கள், விளையாட்டு, தினைகுற்றுதல், சுண்ணம் இடித்தல், கும்மி கொட்டுதல், ஊசல் விளையாட்டு போன்ற செயல்களைச் சைவ, வைணவ அடியார்கள் தம் பாடல்களிலே இடம் பெறச் செய்து இறை உண்மையை விளக்கியுள்ளார்கள். அம்மானை, உந்தியார், ஏசல், தாலாட்டு, கோத்தும்பி, கோலாட்டம், பூவல்லி, வள்ளைப்பாட்டு, விடுகதை, பழமொழி, வில்லுப்பாட்டு போன்றவை பெரும்பாலும் சமயச் சார்புடைய நாட்டுப்புற இலக்கியங்களாகவே உள்ளமை மனம் கொள்ளத்தக்கது.

திருநாவுக்கரசர் தேவாரத்தில் பழமொழிகள்:-

''நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

எதுறுதலிய முதுமொழி என்ப'' (தொல்.செய்.479)

எனத் தொல்காப்பியர் முதுமொழிக்குக் கூறும் இலக்கணம் பழமொழிக்குப் பொருத்தமுடையதாக இருத்தல் கருதத்தக்கது. நாட்டுப்புற மக்களின் வாழ்விலே இடம்பெறக் கூடிய பழமொழிகள் அவர்களின் அனுபவ வெளிப்பாடுகள். இறையடியார்களும் தங்களின் தாழ்நிலை உரைக்கவும், இறைவனின் உயர்நிலை கூறவும், சமயத்தின் பெருமையுணர்த்தவும், மக்களுக்கு இறைஉண்மை புகட்டவும் இப்பழமொழிகளைக் கையாண்டுள்ளனர். திருநாவுக்கரசரின் தேவாரத் திருப்பதிகங்களில் பல்வேறு நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுக்கூறுகள் இடம் பெற்றுள்ளதைக் காண முடிகிறது. அப்பர் சுவாமிகளின் பக்தி நெறி மக்களைவிட்டு வேறுதிசை நோக்கியதல்ல; நாட்டுப்புற பாமர மக்களுடன் அவருக்கு இருந்த தொடர்பினை அவர் பாடல்களில் அமைந்துள்ள பழமொழிகளால் அறியமுடிகிறது. மக்களின் வாழ்வியற்கூறுகளும், வழக்காறுகளும் பண்பாட்டு மரபுகளும் பழமொழிகளில் பொதிந்துள்ளமை மனம் கொள்ளத்தக்கது. பக்தி நெறி மக்கள் உள்ளங்களிலே மிக விரைவாகச் சென்று சேர்வதற்குரிய உத்தியாக இப்பழமொழிகள் அமைந்துள்ளமை காணலாம். திருநாவுக்கரசர் பெருமான் அருளிய நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளில் மொத்தம் முப்பத்தி இரண்டு பழமொழிகள் அமைந்துள்ளன. திருவாரூர் தலத்தைக் குறித்து எழுந்த பத்துபாடல்களிலும் ஒவ்வொரு பழமொழி இடம் பெற்றுள்ளமையால் இதனைப் பழமொழிப்பதிகம் என்றே கூறுவர். திருமுறைகளில் இடம் பெற்ற பழமொழிகள் உவமைகள் வாயிலாகவே அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.

நான்காம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இருபத்தைந்து பழமொழிகளில் பத்து மொழிகள் மட்டுமே ஆய்வுச்சுருக்கம் கருதி இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே - (4.பதிகம் 5-1)

''உடலெல்லாம் வெண்­று பூசிய சிவபெருமானின் திருவடிகளை வழிபடாமல் பொய்மையான சமண சமயத்தை உண்மையென்று கருதி அம்மதத்தைத்தழுவி அங்குள்ள பழக்க வழக்கங்களை மேற்கொண்டு உறியதைத் தூக்கிக் கொண்டு திரிந்து திருவாரூரிலே கோயில் கொண்டு விளங்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கி, சுவையுடைய கனி இருக்கவும் அதனை விடுத்து சுயைவற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே'' என்று வருந்துகிறார் திருநாவுக்கரசர்.

பழமையான சைவமரபிலே பிறந்திருந்த போதிலும் அதன் பெருமையுணராமல் உயிருக்கு உய்திதராத சமணம் சார்ந்தவை கனியிருக்கக் காய் கவர்ந்தது என்னும் பழமொழி மூலம் விளக்குகிறார். ''ஆரூரரைக் கையினாலே தொழா தொழிந்து'' என்னும் பகுதியால் கனியைக் கவராமை உணர்த்தப்பட்டது. ''உய்யலாமென்றெண்ணி உறிதூக்கி உழி தந்து'' என்பதால் காய்கவர்தலை விரும்பியநிலை உணர்த்தப்பட்டது. தன்னைக் கள்வன் என்று குறிப்பிடுவதும் கருதத்தக்கது.

................ஆரூரர்தம்

முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்

காக்கைப்பின் போனவாறே (4.5.2)

''எலும்புகளை அடித்தளமாக அமைத்து அவற்றோடு நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து உள்ளம் கோயிலாக்கி உலக இன்பங்களை அனுபவிப்பதற்குரிய இன்பங்களை அளித்த காலத்தில் சமணம் புகுந்த தீவினையால் அனைத்தையும் இழந்தேன். ஆனால் அன்புருவான ஆரூர் பெருமான் என்மீது அருள்செய்து ஆட்கொண்டார்'' என்று தம் கடந்தகால கசப்பான சமய வாழக்கையைக் கூற முற்பட்டபோது, ''முயல் விட்டுக் காக்கை பின் போனவாறே'' என்னும் பழமொழியை மொழிந்துள்ளார். முயல் பின் போதல் எளிது. காக்கையின் பின் போதல் பறத்தல் ஆகிய இயல்பில்லாத உயிர்க்கு அரிது என்ற மேம்போக்கான பொருளைத் தவிர முயலை சைவ சமயத்திற்கும் காக்கையைச் சமண சமயத்திற்கும் ஒப்புமையாகக் கூறியுள்ளார்.

அறுகயிறூசல் போல

வந்துவந் துலவு நெஞ்சம் (4.26.6)

தன் நிலையை விட்டுக் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்து சேரும் ஊசற் கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் ''கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும். இயல்பைப் பெற்றுள்ளேன் ஆயினேன் என்று பாடுவார்.

சென்று பற்றுதலும் பற்றியதை விட்டு மீண்டு வருதலும் நெஞ்சிற்கு இயல்பு. ஒன்றைவிட்டு ஒன்று பற்றிவந்து உலவும் நெஞ்சிற்குக் கயிறூதல் ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. ''ஊசல் கயிறு அற்று வீழ்ந்தால் தாய் தரையே ஆம்'' போல பாசம் அற்ற ஆன்மாவிற்கு நிலைக்களமாகக் கிடைத்தது இறைவன் திருவடியே என உணர்த்தினார்.

மத்துற தயிரே போல

மறுகுமென் னுள்ளத் தானும் (4.52.9)

''தீவினை செய்த அடியேன் பத்தனாக வாழ இயலாதேனாக, என் உள்ளம் முழுவதும் பரவி ஐம்பொறிகள் தீயசெயல்கள் பலவற்றையும் செய்ய அவை என்னை வருத்துவதனால் மத்தினால் கடையப்பட்ட தயிரைப்போல என் உள்ளம் நிலை சுழல்கின்றதே'' என்று பாடுவார்.

தழலெரி மடுத்த நீரில்

திளைத்து நின்றாடு கின்ற

ஆமை போய் தெளிவிலாதேன் (4.79-6)

ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் என் உள்ளத்தைச் சுற்றிநின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால் எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க அந்நீரிலே விட்ட ஆமையானது இதமான சூட்டிலே விளையாடி, தீயின் வெம்மையால் கொதிநீரில் வெந்து உயிர் நீங்கும் ''ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் இளைத்து தடுமாறுகின்றேன்'' என்று பாடுகின்றனர். ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பம் சிற்றின்பம்; நிலையானதல்ல சமண சமயம் சார்ந்த தாம் துன்புற்றதை ''உலையில் ஏற்றிய தழலெரிநீரில் நின்றாடும் ஆமை போல'' என்னும் பழமொழி மூலம் விளக்குகின்றார். நாலடியாரிலும் பேதமை என்னும் அதிகாரத்தில் இப்பழமொழி இடம் பெறுதல் காணலாம்.

பானுகோபன் வீரவாகு தேவரோடு போர் செய்த களிப்பில் தன் குலத்தோடு அழிதலை உணராமல் தெளிந்திலன் எனக் கூறிய கச்சியப்பமுனிவர் ''உலைபடும் இளவெந்நீரின் உளம்மகிழ் கமடம் ஒத்தான்'' எனப் பாடுவார் (தணிகை புராணம்)

கழியிடைத் தோணி போன்றேன் (4-31-6)

கடவூர் வீரட்டனீரே

''இந்த உடம்பாகிய பயன் அற்ற பாழ்நிலத்தில் பயன்படும் நீரை வீணாகப் பாய்ச்சி நேரிய வழியில் வாழமாட்டாதேனாய், இவ்வுலக வஞ்சனையே தெளிய மாட்டேனாய் ஐம்பொறிகளால் அலைக்கழிக்கப்பட்டு உப்பங்கழியில் அங்கும் இங்கும் அலையும் தோணிபோல் உள்ளேன்'' என்று பாடுகின்றார். கரை ஏறாமலும் கடலிடை ஆடாமலும் இருக்கும் தோணி போல என்ற பழமொழி அவர்தம் நிலை உணர்த்துகிறது.

''ஏழைத் தொழூம்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே''

என்று பாடுவார் மாணிக்கவாசகர் (திருவாசகம் 325)

பாழ்க்கு நீரிறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க்காற்றேன் (4-52-7)

இப்பாடலில் ''உயிர் நிற்றற்குரிய உடலைக் காலாகவும், துயரத்தை ஏற்றமரமாகவும், உள்ளத்தை ஏற்றச் சாலாகவும் கொண்டு துன்பமாகிய ஏற்றத்தோடு கட்டித்தொங்கவிடப்பட்டிருக்கும் கழியைப் பற்றிப் பயிர்கள் சுருண்டு போகுமாறு அவற்றை விடுத்து பாழான வீண்தரைக்கே நீரை இறைத்து மிக்க தளர்ச்சியோடு தன்னை தீயவழியிலே செலுத்தும் ஐம்பொறிகளின் ஆதிக்கத்தைத் தாங்க இயலாதேனாய் உள்ளேன்'' என்று பாடுகின்றார்.

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்து (4-75-7)

இப்பாடலில் பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல, அடியேனுடைய தீவினை என்னைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஓட்டாமல் கலக்க மயங்குகின்றேன் என்று பாடுகின்றார். காக்கைகள் மொய்த்தல் பிணத்திற்கும் வினைகள் மொய்த்தல் உயிருக்குமான பொருத்தமான பழமொழியைக் காணமுடிகிறது.

''ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய

வாதரைப் போல்'' (4-97-6)

''எல்லோர் உள்ளத்திலும் தெளிவு ஏற்படுத்தும் வண்ணம் இறைவன் கோயிலில் வீற்றிருப்பதை அறியாமலும் அவ்வாறு சென்றாலும் நெஞ்சுநிறைவு பெறாமலும் உள்ள புத்தியினர் ஆற்றில் இழந்த பொருளை குளத்திலே சென்று தேடும் அறிவிலிகளைப் போல இறைவனை காற்றைவிட மிக வேகமாகத் தேடித் திரிவர்'' என்று பாடுவார்.

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை யிழந்த தொத்த (4-27-5)

''ஆற்றிலுள்ள வரால்மீனை கவ்வச் சென்ற நரி, ஏற்கனவே தம் வாயிலிருந்த நல்ல ஊணை இழந்ததைப் போல'' என்ற பழமொழியால் சைவ சமயக் கொள்கைப் பிடிப்பு மிகுந்த சைவ மரபிலே பிறந்திருந்தாலும் அதனைவிட்டுச் சிந்தை தடுமாறிச் சமணம் புகுந்த நிலையை வெளிப்படுத்துகின்றார்.

நுண்மையும் சுருக்கமும் தெளிவும் பழமொழிகளின் தனித்தன்மையாதலால், தாம் கூறவந்த சமய அனுபவ உண்மைகளைப் பொருத்தமான உவமைகளால் விளக்குகின்றார் திருநாவுக்கரசர். சைவ சமயத்திலிருந்து சமணம் சார்ந்தமையால் தான் பட்ட துன்ப வரலாற்றையும் சைவ சமயத்தின் பெருமையுணர்ந்த அனுபவமொழிகளையும், உலகப்பற்றுக்களில் ஈடுபட்டமையால் அல்லல் உற்றமையும், இறைவன் பெருமைகளை அறியாமல் காலத்தை வீணாகக் கழித்தமையும், உயிரைப் பற்றியுள்ள வினைகளின் தன்மைகளையும் நாட்டுப்புற மக்களின் நடைமுறை வாழ்க்கையிலே பட்ட அனுபவப் பிழிவுகளான பழமொழிகளின் வாயிலாக தன்நிலை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.

நன்றி: வேர்களைத்தேடி

பழமொழியின் பொருட்பேறு - அமுத.இளவழகன்

தோற்றுவாய்:-

நாட்டுப்புற மக்களின் மரபுவழிப்பட்ட படைப்புகள் நாட்டுப்புற இயல் எனப்படும். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலை, இலக்கியம் முதலான அனைத்தும் நாட்டுப்புற இயலுக்கு உரியன. இவற்றுள் ஒன்றான இலக்கியம் கதை, கதைப்பாடல், பாடல், விடுகதை, பழமொழி எனப் பல வகைப்பாடுகளை உடையது. இவ்வெழுத்துரை பழமொழிகள் பற்றிய சில செய்திகளை மொழிவதாக அமைகிறது.

பெயர் விளக்கம்:-

பழமொழிக்குப் பழஞ்சொல், முதுசொல், முதுமொழி, மூதுரை, உரை, உவகதை, மக்கள் குரல், சொலவம், சொலவடை, நெடுமொழி (சிலம்பு) தொன்றுபடுமொழி (அகநானூறு), மூத்தோர் சொல்வார்த்தை (கொன்றை வேந்தன்), உலகமொழி (குமரேச சதகம்) எனப் பலபெயரீடுகள் உள்ளன. எனினும் பெருவழக்காகப் பயின்றுவரும் சொல் பழமொழி என்பதே.

பழமொழி என்பதை பழம் - மொழி எனவும், பழமை - மொழி எனவும், இருவகையாகப் பிரித்துக் கூறலாம். இருவகைப் பிரிப்புக்கும் உரிய பொருள்நிலைகளும் பழமொழிக்குப் பொருந்துவதே. பழம் போல் இனிமை தருவது என்றும், பழங்காலத்தில் இருந்தே வழங்கி வரும் செல்வாக்குடையது என்றும் அமையும் இருபொருள் நிலைகளும் ஏற்புடையதே.

தொன்மையைச் சுட்ட பழமையான மொழி என்றும், அனுபவ முதிர்ச்சியைச் சுட்ட பழம் போன்ற மொழி என்றும், இருவகைப்பொருள்களைக் காணலாம் என்று சு. சண்முகசுந்தரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொல்காப்பியத்தில் பழமொழி:-

தொன்மைத் தமிழ் நூலாம் தொல்காப்பியம், பழமொழியை முதுமொழி என்று பெயரிட்டு மொழிகிறது. நுண்மை, சுருக்கம், ஒளி, உடைமை, மென்மை முதலியன முதுமொழியின் (பழமொழியின்) தன்மைகள் என்பதும் தொல்காப்பியர் தரும் விளக்கமாகும்.

புலநெறி இலக்கியங்களில் பொது நெறித் தாக்கம்:-

ஏட்டிலக்கியங்களாகிய புலநெறி இலக்கியங்களில் நாட்டுபுறப் பழமொழிகளாகிய பொதுநெறி இலக்கியத் தாக்கம் பெருமளவில் உள்ளது.

''கனியிருப்பக் காய்கவர்தல்'', ''அடுத்தது காட்டும் பளிங்கு'' முதலான பழமொழிகள் திருக்குறளிலும் ''நன்று செய் மருங்கில் தீதுஇல்'' எனும் பழமொழி அகநானூற்றிலும், ''முயல் விட்டுக் காக்கை பின் போனவாறே'' என்ற பழமொழி அப்பர் தேவாரத்திலும், ''மகத்தில் புக்கதோர் சனி'' என்ற பழமொழி சுந்தரர் தேவாரத்திலும், ''உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதையைச் செவியறிந்து அற்றால்'' என்ற பழமொழி தொல்காப்பியப் பேராசிரியர் உரையிலும் இடம்பெற்றுள்ளமை எண்ணத்தக்கது.

பழமொழி நானூறு, தண்டலையார் சதகம், பழமொழிப் போதனை முதலான நூல்கள் ஒருமுகப்பட்ட பழமொழிகளின் தொகுப்பாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

பழமொழி பற்றிய பழமொழிகள்:-

உலக நடையை ஒட்டிய அனுபவப் பிழிவுகளே பழமொழிகள். அவை அரிய இலட்சியங்களை அறிவிப்பதாக இல்லையேனும் அன்றாட வாழ்வை வெற்றிகரமாக நடத்திட என்றும் துணைபுரியும் ஏற்றம் மிக்கவை. அனுபவத்தின் குழந்தையாய், இருள் நீக்கும் ஒளிவிளக்காய், அறிவுக் களஞ்சியமாய்த் திகழும் பழமொழியைப் பற்றியும், சில பழமொழிகள் வழங்கி வருகின்றன.

பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா?

பழமொழியில் உமி இல்லை.

என்னும் இவ்விரு பழமொழிகளும் பழமொழியின் பயன்பாட்டுத் தன்மையை, பொய்க்காத மெய்ம்மையைப் புகல்வன.

பழமொழிகளின் இருவேறு பொருள் நிலைகள்:-

பழமொழிகள்,

1. அவற்றுக்குரிய சரியான பொருளிலேயே வழங்கப்படுதல்.

2. வடிவமும் பொருளும் மாற்றம் பெற்று வழங்கப்பெறுதல் என இரு நிலைகளில் வழக்காறு பெற்றுள்ளன.

பொருள் மாற்றம் பெற்றுள்ள பழமொழிகளை மேலும் இரு கூறுகளில் அமைத்துக் காணலாம். அவையாவன,

1. உரிய உயர் பொருள் மறைந்து, புதிய பொருட்பேறு பெறுதல்.

2. உரிய பொருளினும் உயர் பொருள் காணும் நோக்கில், புதிய பொருட்பேறு பெறுதல்.

இவ்விரு கூறுகளும் சில சான்றுகளுடன் இங்கு விளக்கப்பெறுகின்றன.

முதற்கூறு: உயர் பொருள் மறைந்த புதுப்பொருள்

1) அறப்படித்த மூஞ்சூறு கழுநீர்ப் பானையில் விழுந்தது போல், என்பது ஒரு பழமொழி. இது அதிகம் படித்தும் அறிவற்றுச் செயல்படுவதைக் குறிப்பிடும் பொருள் அமைப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் உண்மை வடிவமும், தொன்மை வடிவமும் அறவடித்த முன்சோறு கழுநீர்ப்பானையில் விழுந்தது போல் என்பதே ஆகும். அரிசியைச் சமைக்கும்போது வடிதட்டின் கண்களில் (துளைகளில்) முன்னிற்கும் சோறு கஞ்சியில் விழுந்துவிடும். அப்படி வடித்த கஞ்சியைக் கழுநீர்ப் பானையில் ஊற்றிவிடுவார்கள். இச்செயலை விளக்கும் பழமொழி காலமாற்றத்தில் உருமாறிப் பொருள் மாற்றமும் பெற்று விடுகிறது.

ஒருவரை அளவுக்கு அதிகமாகக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது என்பதும், குணம் நாடிக் குற்றமும் நாடி, மிகை நாடி முடிவு செய்யவேண்டும் என்பதும் மூலப்பழமொழியின் முதன்மைக் கருத்தாகும்.

2) சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது ஒரு பழமொழி.

இதன் உண்மை வடிவம் சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதே. சோழியர் என்ற பிரிவினர் முடி சேர்த்து முடியும் குடுமியை, வழக்கத்திற்கு மாறாக முன்பக்கத்தில் அமைத்துக் கொள்வார்கள். இது சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா என்ற காளமேகப் பாடல் வழியும் உறுதிப்படுகிறது. முன்தலைப் பகுதியில் முடிந்தாலும், அந்தக் குடுமி தலையில் பாரம் சுமப்பதற்கு உதவும் சும்மாடு போலப் பயன்தரப் போவதில்லை என்பதே மெய்ப்பொருள்.

3. ஆனைக்கும் பானைக்கும் சரி என்பது ஒரு பழமொழி.

இப்பழமொழியின் வடிவம் மாறவில்லை எனினும் பொருள்நோக்கம் மாறியுள்ளது.

ஒருவன் அடுத்தவன் யானையைக் கடன் வாங்கினான். அது இறந்துவிடுகிறது. அவனோ பழைய யானையே வேண்டும் என்றான். அந்தப் பிடிவாதக்காரன் மற்றவனின் பழைய பானைகளை உடைக்குமாறு செய்துவிட்டனர் ஊர்ச் சபையடினர். இவனும் பழைய பானைகளைக் கேட்கச் சபையார் யானைக்கும் பானைக்கும் சரி என்று தீர்ப்பு வழங்கினர் என்பர்.

இந்த வேடிக்கைச் செய்திக்காக ஒரு பழமொழியா! இது பழமொழியின் பான்மைக்கே மறுதலையாகிறதே. உற்றுநோக்கினால் ஒர் உயர் பொருள் புலப்படும். ''ஆனை ஊர்பவன் அதிட்டம் - பானை பிடிப்பவள் பாக்கியம்'' ''ஆனையைப் பிடிப்பான் ஆண் பிள்ளைச்சிங்கம் பானையைப் பிடிப்பாள் பத்தினித்தங்கம்'' என்றும் இருபழமொழிகளோடும் ஒப்பிட்டு நோக்கினால் முதற் பழமொழியின் உயர் பொருள் புலப்படும்.

புறவாழ்க்கைக்கு நிகரான பெருமை உடையது அகவாழ்க்கை என்பதும் ஆணும், பெண்ணும், சரிநிகர் சமானம் என்பதும், இப்பழமொழியின் உண்மைக் கருத்தாகிறது.

இரண்டாம் கூறு: உயர் பொருள் கருதிய புதுப்பொருள்:-

1) மார்கழி மாதம் பீடை மாதம் என்பது ஒரு பழமொழி. இந்நாளில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுவது, விடிவதற்குள் பக்திப் பாடல்கள் ஒலிப்பது, வீடுகள் தோறும் கோலமிடுவது எனத் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ''மாதங்களில் நான் மார்கழி'' என்று கண்ணன் கூறியுள்ளதனால் மார்கழி மாதம் பீடை மாதமன்று; பீடுடைய மாதமே என்று புதுமொழி புகல்வர். இது மார்கழி மாதத்தை உயர்த்திக் காட்டும் நோக்குடையது.

ஐப்பசி முழுவதும் அடைமழையாகி - கார்த்திகையில் கால்கோடையாகி - மார்கழியில் கையிருப்புக் குறைந்து மார்கழி மாதப் பஞ்சம் மக்களை விற்றுத்தின்னும் - தை பிறந்தால் வழி பிறக்கும் எனப் பழமொழிகளை இணைத்து நினைத்தால் மார்கழி பீடை என்பது சரியானதே என்பதும் பழமொழியின் பொருளும் அதுவே என்பதும் புலப்படும்.

2) திருமணச் சந்தடியில் தாலிகட்ட மறந்தது போல என்பது ஒரு பழமொழி.

இது, பரபரப்பில், செய்யவேண்டிய செயலைச் செய்யாது விட்டுவிடுதைக் குறிக்க எழுந்தது. ''அவசரத்தில் அண்டாகைக்கொள்ளாது'' என்றொரு பழமொழியும் உண்டு. அண்டா என்பது வாயகன்ற பெரிய பாத்திரம். அது கைகொள்ளாமல் போக வாய்ப்பே இல்லை. ஆயினும் பரபரப்பில் செய்யும் செயல் தடுமாறிப்போகும் என்பதை விளக்க விளைந்ததே இப்பழமொழி. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. கருத்து விளக்கத்திற்காகச் சற்றே மிகைப்படுத்தல் இருப்பதும் பழமொழிக்கு இயல்பே. இந்த அடிப்படையிலேயே திருமணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை அமைகிறது. திருமணத்தில் தாலி கட்டுவது மறக்க முடியாத செயலாகும். எனவே பழமொழியை மாற்றித் திருமணத்தில் தாலி தாழ்த்த மறந்தது போல என்று வழங்கி வருகின்றனர். அவ்வாறு மாற்றும்போது பழமொழியின் நகைச்சுவைத் தன்மையும், உயர்வு நவிற்சியும் இல்லையாகிவிடும்.

3) சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது ஒரு பழமொழி.

பாத்திரத்தில் உணவு நிறைந்திருந்தால்தான், அதிலிருந்து அகப்பை மூலமாக எடுத்து பலருக்கும் வழங்கமுடியும் என்பது பழமொழியின் நேர்ப்பொருள்.

பொருள் இருந்தால்தான் பிறருக்கு வழங்க முடியும், சேமிப்பு இருந்தால்தான் சேவை செய்யமுடியும் என்னும் உட்பொருள் நோக்குடன் உருப்பெற்றது இப்பழமொழி.

இப்பழமொழியைச் சமய நோக்குடன் அணுகியபோது சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று புதுவடிவம் வழங்கப்பெறுகிறது. முருகனுக்குரிய திருநாளான சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிட்டும் என்று நம்பிக்கையூட்டும் பொருள் காட்டும் புதுமை நிகழ்ந்து விட்டது.

4) இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவான் என்பது ஒரு பழமொழி.

இருக்க இடமற்ற நாடோடி ஒருவனுக்காக, இரக்கப்பட்டு அவனைக் காலவரையின்றி இருக்கச் செய்தால் காலப்போக்கில் தங்கியிருந்த மடத்தையே தன்னுடையது என்று சாதிப்பான் என்பது இதன் உண்மைக் கருத்து.

ஒருவர் தன்னைப் பார்க்க வருபவர்களை உட்காரச் சொல்லாமல் நிற்க வைத்தே பேசியனுப்பி விடுவார். ''உட்காரச் சொல்லாத சர்க்கரை போல்பேச்சு'' என்றும் ஒரு பழமொழி உண்டு. வந்தவரை உட்காரச் சொல்லக் கூடாதா என்றால், ''உட்காரச் சொன்னால் எழுந்திருக்கச் சொல்லவேண்டும்'' என்பார். இப்படித்தான், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குதல் - மடத்தின் உரிமையைப் பிடுங்குதல் என்ற பொருளும் அமைந்தது.

இந்தப் பழமொழியையும் சமய நோக்கில் அணுகும்போது இறைவனுக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் நம் அறியாமையைப் போக்குவான் என்ற புதுப்பொருள் பிறந்தது.

5) பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது என்பது ஒரு பழமொழி.

நல்லது செய்யப் போய்க் கெட்டதாக முடிந்ததை இந்தப் பழமொழி உணர்த்தும். இந்நாளில் சிலர் இறைவழிபாடு பிள்ளையாரில் தொடங்கி ஆஞ்சநேயரை வழிபட்டு முடிக்கப்பெறுவதாகப் புதுவிளக்கம் கூறுவர்.

பழமொழிகளான புதுமொழிகள்:-

பழமொழிகள் பொருள் மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வரும் நிலையின் தொடர்ச்சியாகப் பழமொழிகள் போலவே உருவான புதுமொழிகளும் கருதத்தக்கவை. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.

1) இஸ்லாமியர் வருகையைத் தொடர்ந்து ''ஹைதர்காலம்'' என்ற பழமொழி எழுந்தது.

2) ஆங்கிலேயர் வருகையை ஒட்டி

''துரை உரைத்தது தோஷமில்லை

பட்லர் சிரித்தது பழியாய் வளர்ந்தது'' என்ற பழமொழி அனுபவமொழியாய் அமைந்தது.

3) போர் முறைகளில் மேல்நாட்டுத் தாக்கம் நிகழ்ந்தபோது புதிய புதிய போர்க் கருவிகள் உருப்பெற்றன. அந்த நிலையிலும் துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்தால் போல் என்ற புதுமொழி உருப்பெற்றது.

4) ''All that glitters are not gold''

என்ற ஆங்கிலப் பழமொழியின் தாக்கத்தால் ''மின்னுவதெல்லாம் பொன்னல்ல'' என்ற பழமொழி ஆக்கம் பெற்றது.

5) ''காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'' என்னும் பழமொழியின் சாயலிலேயே காலத்திற்குத் தகுந்தபடி

''கரண்ட் உள்ளபோதே தூங்கிக் கொள்'' என்னும் புதுமொழி மலர்ந்து பழமொழியாகி வருகிறது.

நாட்டுப்புற இலக்கியக் கூறுகளில் ஒன்றாகிய பழமொழியின் பொருட்பேறு பற்றிய சில சிந்தனைகள் இங்கு எழுத்துருப்பெற்றன. இது, பழமொழிகளின் பொருள்நிலைகள் பற்றிய மேலாய்வுக்கான ஒரு முன்மொழிதலாக அமைவதாக.

நன்றி: வேர்களைத் தேடி

 

கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகள் - சி.பாண்டியராஜன்

மனித வாழ்வியலின் காலங்காலமாகப் பட்டுணர்ந்த பட்டறிவின் காரணமாகத் தோன்றியவையே பழமொழிகள். ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் பல்வேறு நேர்வுகளில் பலவித நிகழ்வுகளைச் சந்தித்திருப்பர். அந்நிகழ்வுகளில் நல்லதும் நடந்திருக்கும் கெட்டவையும் நடந்திருக்கும். அவற்றை உற்று நோக்கிச் சில காரணத்தால் ஏற்பட்டிருக்கும் என்று நம்பி உரைத்த வாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின.

நாட்டுப்புற வாய்மொழி இலக்கியக் கூறுகளுள் ஒன்றான பழமொழியை முதுமொழி எனத் தொல்காப்பியம்

''நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்

மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்

குறித்த பொருளை முத்தற்கு வரும்

ஏது நுதலிய முதுமொழி என்ப''

என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இன்றும் மலையாள மொழியில் பழமொழியைப் பழஞ்சொல் என்றே கூறுவதைக் காணலாம்.

''பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாகுதல் வாய்த்தமை தோழி''

என அகநானூறும்,

''நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றே''

எனச் சிலப்பதிகாரமும் எடுத்துரைக்கும் இலக்கிய மேற்கோள்கள். பழமொழியானது தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற வகையில் கையாளப்பெற்று வருகின்றது.

தமிழகக் கிராமப்புறங்களில் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பல வகையான பழமொழிகள் கையாளப்பட்டு வருகின்றன. பேச்சு வழக்கில் இன்றைக்கும் பாமரமக்கள் மற்றும் படித்த மக்களால் பேசப்பட்டு வரும் பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளது இக்கட்டுரை.

பழமொழிகள் கையாளப் பெறும் சூழல்கள்:-

அனுபவத்தால் பிறக்கும் பழமொழிகள் அன்றாடப் பேச்சு வழக்கில், இன்ப நிகழ்வுகளின் போதும், துன்ப நிகழ்வுகளின் போதும், ஏசலாகவும், கேலியாகவும் அண்டை வீட்டாருடன் சண்டைகள் போடும்போதும், ஒருவரை ஒருவர் மறைமுகமாகச் (சாடை பேசுதல்) சாடுகின்றபோதும் பழமொழிகளைக் கையாளுகின்றனர். இவ்வகையில் பிறக்கும் பழமொழிகளை,

1. உவமையாக வரும் பழமொழிகள்.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்.

3. பொதுவாக வருவன.

1. உவமையாக வரும் பழமொழிகள்:-

1. ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல.

2. கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல.

3. பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் புலிபோல்.

4. எருமை மாட்டில் மழை பெய்தது போல.

5. இருதலைக் கொள்ளியின் ஓர் உயிர் போல.

6. தேன் எடுப்பவன் வீரல் சூப்புவது போல.

7. குப்பைமேடு கோபுரமானது போல.

8. குறைகுடம் கூத்தாடுவது போல.

2. உறவுகள் பற்றி வரும் பழமொழிகள்:-

1. பருவத்தே பயிர் செய்தல் வேண்டும்.

2. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

3. மாமியார் உடைத்தால் மண்சட்டி; மருமகள் உடைத்தால் பொன்சட்டி.

4. ஆடு பகை குட்டி உறவு.

5. நல்ல மாடு உள்ளுரில் விலைபோகும்.

6. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்டானாம்.

7. அப்பன் எவ்வழியோ பிள்ளை அவ்வழி.

8. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.

9. நித்தம் நித்தம் வந்தால் நெய்யும் புளிக்கும் பலநாளும் வந்தால் பாலும் புளிக்கும்.

10. ஆகாத பொண்டாட்டி கால் பாட்டாலும் குத்தம் கைப்பட்டாலும் குத்தம்.

11. பொருள் ஒரு பக்கம் போக பொல்லாப்பு ஒரு பக்கம் வரும்.

12. பெட்டியிலே பூட்டினாலும் போட்ட விதி தப்பாது.

13. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு.

இவை போன்று வரும் பழமொழிகள் உறவுகள் பற்றியும், உறவுகளால் வரும் துன்பங்கள் பற்றியும் கூறுவதாக அமைந்துள்ளன.

3. பொதுவான பழமொழிகள்

1. நாற்றில் வளையாதது மரத்தில் வளையாது.

2. நம்பினவனை நட்டாத்தில் விடுதல்.

3. சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான்.

4. தன் முதுகு தனக்குத் தெரியாது.

5. எலி வளையானாலும் தனிவளை வேண்டும்.

6. வல்லவனையும் வழுக்கும் வழுக்குப் பாறை.

7. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப் போச்சு.

8. கோடி கோடியா வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு கோடிதான் மிச்சம்.

9. குவளையைக் கழுவினாலும் கவலையைக் கழுவ முடியாது.

10. உப்பைத் தின்னவன் தண்­ர் குடித்தாக வேண்டும்.

11. உழுகிறவர்கள் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.

12. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி.

13. மடியில கனம் இருந்தால் தான் விழியல பயம்.

14. சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

15. அற்பனுக்கு வாழ்க்கை வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.

16. ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் வரையும் பாயும்.

17. ஏழையின் பேச்சு அம்பலம் ஏறாது.

18. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல்.

19 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

20. பேராசை பெரும் நட்டம்.

21. முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தல்.

22. ஆசை காட்டி மோசம் செய்தல்.

23. ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லை.

24. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.

25. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்.

26. இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பான்.

27. அவனே! அவனே! என்பதைவிடச் சிவனே! சிவனே! என்பது மேல்.

28. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணா இரு.

29. தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.

30. தன் வினை தன்னைச் சுடும்.

31. நாய் நடுகடலுக்குப் போனாலும் நக்கித்தான் தண்­ர் குடிக்க வேண்டும்.

32. ஓட்டச் சட்டியினாலும் கொழுக்கட்டை வெந்தா சரி.

இவை போன்று வரும் பழமொழிகள் பெண்களாலும், ஆண்களாலும், படித்தவர்களாலும், பாமர மக்களாலும் அவர்கள் இருக்கும் இடம் கருதியும் சூழலுக்குத் தக்கவாறும் கையாளப்படுகின்றன.

மேற்கூறப் பெற்றுள்ள பழமொழிகள் தமிழகத்தில் சில பகுதிகளில் வாழும் மக்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பேசி வருகிறார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

நன்றி: வேர்களைத் தேடி.

 

பழமொழிகளில் வெள்ளியைப் பற்றிய குறிப்புகள் - முனைவர் அ. சிவபெருமான்

நாட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துரைக்கப் பயன்படுவன பழமொழிகளாகும். இவை வாயிலாக வேளாண், மருத்துவம், தத்துவம், வரலாறு, பொருளியல், கணிதவியல் முதலான பல்வேறு துறைகளை அறிந்து கொள்ளலாம். இக்கட்டுரை மழைநிலையை அறிந்து கொள்ளப் பயன்படும் வெள்ளி என்னும் கோள்பற்றிய பழமொழிகளை மட்டும் சிந்திக்கின்றது.

மழைக்கோளும் வெள்ளியும்:-

சூரியக் குடும்பத்தில் புதனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கோள் வெள்ளியாகும். சூரிய மண்டலத்தில் அதிக ஒளியுடன் உள்ளதாக இக்கோள் காணப்படுகின்றது. விடியற்காலையில் கீழ்வானில் அதிக ஒளியுடன் இக்கோள் தோன்றுவதால் இதனை விடிவெள்ளி என்பர். இன்றைய அறிவியல் வானத்தின் தன்மையையும் அங்கு இயங்கும் கோள்களின் தன்மையையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆராய்ந்து மழைநிலையைக் கூறுகின்றது. அவ்வாறு கூறும் போது வெள்ளி என்னும் சுக்கிரன் நிலை முதன்மைப் பெறுகின்றது.

தமிழிலக்கண இலக்கியங்களில், வெள்ளி மழையை அறிவிக்கும் முக்கிய கோளாகக் கருதப்படுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் வெள்ளிநிலை என்றொரு துறை குறிக்கப்பட்டுள்ளது. உலகினருடைய துயர் தீரும்படி மேகம் மழையைப் பொழியும் என்றும் அவ்வாறு மழையைத் தருவதற்கு வெள்ளிக்கோளின் சிறந்த நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புறப்பொருள் வெண்பாமாலைக் குறித்துள்ளது. சேந்தன் திவாகரம், பிங்கலநிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகிய மூன்று நிகண்டுகளில் வெள்ளிக்குரிய பல்வேறு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்களுள் மழைக்கோள் என்ற பெயரும் ஒன்றாகும். வெள்ளியாகிய சுக்கிரன் மழையைத் தருவதற்குப் பெரிதும் துணையாக இருப்பதால் மழைக்கோள் என்ற பெயரைப்பெற்றது போலும்.

வெள்ளியைக் குறித்த பழமொழிகள்:-

1. துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை

2. தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை

3. கும்பத்து வெள்ளி குடங்கொண்டு சாய்க்கும்

4. சுவாதி சுக்கிரன் ஓயாமழை

5. மூடத்திலே வெள்ளி சாதிக்குதே நாட்டை மூடந்தள்ளிப் பேய்ந்தால் நாடு செய்த நன்மை.

மேற்குறித்த பழமொழிகளுள் சிலவற்றை மட்டும் சிந்தித்து அறிவோம்.

1. துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை

பன்னிரண்டு இராசிகளில் ஒன்று துலாராசி, துலாராசியில் வெள்ளி நின்றால் மழைபெய்யும். இக்கருத்தினைச் சூடாமணி உள்ளமுடையான் என்னும் நூல் ''சுக்கிர சரிதை'' என்னும் தலைப்பின் கீழ், துலாம், விருச்சிகம் ஆகிய இரண்டு இராசிகளில் வெள்ளி நின்றால் வெள்ளம் உண்டாகும் அளவிற்கு மழை பெய்யும் என்று குறித்துள்ளது. இக் கருத்தைத்தான், துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை என்று மக்கள் பழமொழியாகக் கூறிவருகின்றனர். ''உலாத்தி'' என்பதற்கு ''எங்கும் பரவலாக'' எனப்பொருள் கொள்க.

2. தெற்கேபோன வெள்ளி வடக்கே வந்தால் மழை

வெள்ளி தென்திசைக்குச் சென்றால் மழை பெய்யாது என்றும், வடதிசைக்குப் போனால் மழை பெய்யும் என்றும் நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர். இக்கருத்தைத்தான் மேற்கூறிய பழமொழியாகக் கூறிவருகின்றனர்.

வெள்ளி சிறிது வடக்குத் திசைக்குச் சென்றால் மழை பெய்யும் என்ற கருத்தைப் பதிற்றுப்பத்து உணர்த்தியுள்ளது. வெள்ளி தென்திசைக்குச் சென்றால் மழை பெய்யாது என்ற கருத்தைப் புறநானூறும் சிலப்பதிகாரமும் குறிப்பிட்டுள்ளன. வெள்ளி தென்புறம் செல்வது நாட்டிற்கு வரும் தீமையை உணர்த்தும் தீநிமித்தங்களில் ஒன்றாகும் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

3. மூடத்திலே வெள்ளி சாதிக்குதே நாட்டை;

மூடந்தள்ளிப் பேய்ந்தால் நாடு செய்த நன்மை

சூரியன் மிகப்பெரிய ஒளியை உடையவனாக விளங்கி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐங்கோள்களுக்கு ஒளியை வழங்கி வருகின்றான். செவ்வாய் முதலான ஐங்கோள்கள் சூரியனின் பத்துப் பாகைக்குள் நிற்கும்போது அத்தமனமும், பத்துப்பாகை நீங்கி நிற்கும்போது உதயமும் பெறுகின்றன. கோள்களின் அத்தமன நிலையை மூடன் என்றும் கூறுவர். கோள்கள் மூடத்தில் நிற்கும்போது நாட்டிற்கு மழை முதலான நன்மைகள் உண்டாகா. இக்கருத்தைத்தான் மேற்கூறிய பழமொழி உணர்த்துகின்றது.

வெள்ளிக்கு இரண்டு வகையான அத்தமன, உதயநிலைகள் உண்டாகும். அவற்றிலொன்று வெள்ளி கிழக்கே அத்தமனமாகி மேற்கே உதிக்கும். மற்றொன்று மேற்கே அத்தமனமாகிக் கிழக்கே உதிக்கும். வெள்ளி அத்தமன நிலையில் நிற்கும் போது மழை பெய்யாதென்றும், உதயநிலையில் நிற்கும்போது மழை பெய்யுமென்று கொள்ளலாம்.

தமிழக நாட்டுப்புற மக்கள் வெள்ளி பாட்ல இருக்கும்போது எப்படி மழை பெய்யும் என்றும், வெள்ளி பாட்ல இருக்கு எப்போது முளைக்கும் என்றும் தங்களுக்குள் வினாவுவது உண்டு. பாடு என்ற சொல் வெள்ளியின் அத்தமனநிலையைக் குறிக்கும் இச்சொல்லே பாட்ல என்று திரிந்துள்ளது.

சுக்கிரவனின் இயக்கத்தால் மழை நிலையை அறிந்து கொள்ள இயலும் என்பதை நாட்டுப்புற மக்கள் பழமொழிகளாக வைத்து வழங்கி வருகின்றனர் என்பதை அறிந்தோம்.

நன்றி: வேர்களைத் தேடி

 

பழமொழியும் கவிதையும் - ச. அகத்தியலிங்கம்

பழமொழி:-

பழமொழி என்பது நாட்டுப்புறச் சொற்கலையாக்கங்களில் ஒன்று. நாட்டுப்புறக் கவிதைகள், கதைகள், கதைப்பாடல்கள் (ballads) விடுகதைகள், நாட்டுப்புற இசைகள், நாட்டுப்புறத் தொன்மங்கள் (Anyths), நாட்டுப்புற வீரக் கதைகள் (Legends), போன்றவை மொழியினால் ஆக்கப்பட்ட கலையாக்கங்கள். இத்தகைய சொற்கலையாக்கங்களில் ஒன்றுதான் பழமொழியும்.

எது பழமொழி?

பழமொழி என்றால் என்ன என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதனைத்துல்லியமாக விவரண நிலையில் கூறுவது சற்றுக் கடினமே. எனினும் பல வேறு விளக்கங்கள் நம்மிடையே உள்ளன. பழங்காலந்தொட்டே நம்மிடையே வழங்கிவரும் ஒரு சொற்கலையாக்கம் பழமொழி. இது பழைமை என்ற அடிப்படையில் உருவான விளக்கம். ஆனால் பழைமையான மொழி அல்லது பழைமையான சொல் மட்டுமல்லாமல் அதற்கே உரிய சில பண்புகளை இத்தொடர் (பழமொழி) காட்டுவதில்லை.

பழமொழியினுடைய பண்பும் அதன் தேவையும் (Purpose and function) நாம் அறிய வேண்டியவை. பழமொழி எதற்காகத் தோன்றியது? அதன் பயன்பாடு என்ன? அந்த பயன்பாட்டை அடைவதற்குப் பழமொழி கொண்டிருக்க வேண்டிய பண்புகள் என்னென்ன? பொருள் அடிப்படையில் அதன் பண்பென்ன? வடிவ அடிப்படையில் அதன் பண்பென்ன? என்பன போன்றவற்றை உள்ளத்தில் நிறுத்திப் பார்த்தால் பழமொழி என்பதன் விவரண விளக்கம் ஒருவாறு புலப்படும்.

விவரண விளக்கம்

இந்நிலையில் பழமொழி என்பதன் விளக்கம் இங்குத் தரப்படுகின்றது. இதற்கு முன்னால் மேலைநாட்டினராலும் தமிழ் அறிஞர்களாலும் (தொல்காப்பியர் உட்பட) விவரண விளக்கம் தரப்பட்டுள்ளது. அவை பற்றிய பின்னர் ஆராயப்படும். நம்முடைய விளக்கம் இதுதான்.

முன்னோர்களின் நீண்ட அனுபவத்தில் உருவான மனித வாழ்க்கைக்கு வேண்டிய மிக முக்கியமான அனுபவங்கள் அல்லது அறிவுரைகள் மக்கள் மனதில் படும்படியாகவும் பொதுமைப்படும் நிலையிலும் கேட்போரை அறிவுறுத்தும் மக்கள் மனதில் படும்படியாகவும் பொதுமைப்படும் நிலையிலும் கேட்போரை அறிவுறுத்தும் நிலையிலும் உருவாக்கம் பெற்றுப் பரம்பரையாக மக்கள் மத்தியில் வாய்வழிவாழும் பழைமையான, எளிமையான சுருக்கமான சொற்கலையாக்கமே பழமொழி.

''அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை''

''அடியாத மாடு படியாது''

''காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு''

போன்ற பழமொழிகள் இப்பண்பைக் காட்டும்

பழமொழிகளின் ஒரு சிறப்புப் பண்பு:-

பழமொழிகளின் ஒரு சிறப்புப் பண்பு பழமொழிகளில் கூறப்படும் உண்மைகள். அப்பழமொழியில் கூறப்படும் உண்மைகளை மட்டும் குறிக்காது அவற்றோடு ஒத்த பிறவற்றுக்கும் உரியதாக இருப்பனவாகும்.

''அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை''

என்ற பழமொழியில் காணப்படும் செய்தி அல்லது உண்மை மாட்டுக்கு மட்டும் பொருந்தாமல் அந்த நிலையிலுள்ள எல்லாவற்றுக்கும் பொருந்துவது ஆகும்.

இதனுடைய பொருள் ''மனிதன் தனக்கு உரியவற்றில் பக்கத்தில் உள்ளவற்றில் காணமுடியாத சிறப்பைப் பிறருக்கு உரியவற்றில் தூரத்தில் உள்ளவற்றில் காண்கிறான்'' என்பது தான். தன்னுடையது சிறப்பாக இருந்தும் பிறருடையதுதான் சிறப்பாகத் தோன்றுகின்றது. அது தவறு என்ற உண்மையைக் கூற வருவதுதான் இந்தப் பழமொழியின் நோக்கம். பழமொழியில் காணப்படும் மொழிப் பொருளுடன் ஒத்த பிறவற்றையும் இணைத்துப் பொதுமைப்படுத்திக் கூறுவதுதான் பழமொழியின் ஒரு சிறப்புப் பண்பு எனக் கருதலாம். இதனைத் தான் பொதுமைப்படுத்திக் கூறுதல் என விளக்கத்தில் கூறுபட்டது. பெரும்பாலான பழமொழிகளில் இப்பண்பைக் காணமுடியும்.

''அடியாத மாடு படியாது''

என்பது மாட்டை பற்றி மட்டும் கூறாது மனிதர்களைப் பற்றியும் குறிப்பிடுவது காணலாம்.

''அடியாத மனிதன் பணியமாட்டான்''

போன்றவற்றைக் கூற வருவதுதான் இப்பழமொழி.

மக்களிடையே வாழக்காரணம்

இத்தகைய பழமொழிகள் மக்களிடையே வாழக்காரணங்கள்; முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று அது கூறும் உண்மை அல்லது பொருள். இரண்டு அதன் வடிவ அமைப்பு. சிறந்த கவிதைகளுக்கு உரிய இந்த இரண்டு பண்புகளும் எந்தப் பழமொழிக்கு உள்ளதோ அந்தப் பழமொழிதான் வாழும். மக்களிடையே தவழும்.

நம்மிடையே வாழும் பழமொழிகளில் ஒன்று.

''அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்''

என்பது. இது நம்மிடையே இன்றும் வாழக் காரணம், இது கூறும் பொருள். ''நகர்த்த முடியாத அம்மியையும் அடித்துக் கொண்டே இருந்தால் நகர்ந்துவிடும்'' என்பது இதன் சொற்பொருள் என்றாலும் முயற்சியைப் பற்றிக் கூறுவது இது ''மனிதனுக்கு வேண்டிய ஒரு பண்பு இது. இந்த நிலையில்தான் இது இன்றும் நம்மிடையே தவழ்கின்றது. கவிதையைப் பற்றிக்கூறும் ஆர்னால்ட் மனிதனுக்கு வேண்டிய அடிப்படையான சில பண்புகளை, உணர்வுகளைக் கூறும் கவிதைகளே வாழும்'' என்று கூறுவது கவனித்தற் கூறியது ஆகும்.

வடிவம் - சொல்நிலை

அதுகூறும் பொருள் மட்டும் அல்லாது அதன் வடிவமும் சிறந்து விளங்க வேண்டும்.

''அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்''

என்பது மோனை நயம் கொண்டு, செறிவும் செம்மையும் பெற்று விளங்கும் நிலையும் இதன் வாழ்வுக்குக் காரணம். மேலும் ''அடி'' என்ற ஒரே சொல்லையும் கொண்டு சில பாடல்களைத் திருவள்ளுவர் ஆக்கியிருப்பது போன்று ஆக்கப்பட்டிருப்பது இந்தப் பழமொழி.

வாக்கிய நிலை:-

சொல் நிலையில் மட்டுமல்லாமல் வாக்கிய நிலையிலும் ஒரே மாதிரியான வாக்கியங்களைக் கொண்டு வாழும் பழமொழிகளும் ஏராளம் ஏராளம்!

''அடிக்கும் ஒரு கை; அணைக்கும் ஒரு கை

பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்''

ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்

பாடிக்கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்''

''கூழ் ஆனாலும் குளித்துக்குடி

கந்தையாயினும் கசக்கிக் கட்டு''

போன்ற பழமொழிகள் இரண்டு வாக்கியங்களைக் கொண்டவை. ஆனால் ஒரே மாதிரியான வடிவத்தைக் (முற்றுவினை+பெயர்த்தொடர், நிபந்தனையச்சம்+பெயர்) கொண்டு உள்ளமைக் காணத்தக்கது. இவற்றைப் போன்றே மூன்றுவாக்கியங்களைக் கொண்டுள்ள சில பழமொழிகளும் காணக்கிடக்கின்றன.

''அங்கும் இருப்பான்; இங்கும் இருப்பான்;

ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான்''

இவ்வாறு ஒரே வகையான இலக்கியங்களைக் கொண்டு உருவாக்கப்படும் கவிதைகளும் ஏராளம். ஏராளம்!

''யாயும் ஞாயும் யாரா கியரோ''

''நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று''

போன்ற பாடல்கள் இத்தகைய நிலையில் உருவாக்கப்பட்டவை தாம்.

தொடை நயம்:-

எதுகை மோனை போன்றவற்றைக் கொண்டு ஏராளமான பழமொழிகள் காணப்படுகின்றன. இவை இல்லாத பழமொழிகளே இல்லை என்று சொல்லும் நிலையில் பழமொழிகள் காணப்படுகின்றன.

''அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்''

''அக்குத் தொக்கு இல்லாதவனுக்குத் துக்கம் ஏது''

அடாது செய்பவன் படாது படுவான் (தலையாகு எதுகை)

போன்ற பழமொழிகள் எதுகை மோனை நயம் கொண்டு விளங்குவன.

முரண்:-

எதுகை, மோனை போன்று முரண் (தொடை) கொண்டு விளங்கும் நிலையும் காணக்கிடக்கின்றது.

''அகத்தின் அழகு முகத்தில் தெரியும்''

''அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை''

போன்ற பழமொழிகள் முரண்காட்டி நிற்பவை.

ஒரே வகை இலக்கணக் கூறுகள்:-

பல பழமொழிகள் ஒரே வகையான இலக்கணக் கூறுகளை உரிய இடத்தில் கொண்டு அருமையாக ஆக்கப்பட்டுயிருக்கின்றன.

''அத்தோடே நின்னுது அலைச்சல்

கொட்டோடே நின்னுது குலைச்சல்''

''அண்டர் எப்படியோ, தொண்டரும் அப்படியே''

அடித்தாலும் புருஷன் பிடித்தாலும் புருஷன்''

போன்று வருவது காணத்தக்கது.

பொதுப் பண்பு மிக்கவை:-

சிறந்த கவிதைகள் உலகப் பொதுமை கொண்டு விளங்குபவை.

''யாயும் ஞாயும் யாராகி யரோ''

''நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று''

போன்ற கவிதைகள் உலகப் பொதுப்பண்பு கொண்டவை. இது போன்றே சிறந்த பழமொழிகளிளும் உலகப் பொதுமை கொண்டவை.

''அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை''

''கூடி வாழ்ந்தால் கோடி நன்மை''

''ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்''

போன்ற தமிழ்ப்பழமொழிகள் தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்குமே பொருந்தி வருவது காணத்தக்கது.

கவிதையும் பழமொழியும்:-

பழமொழிகள் சிறந்த உண்மைகளையும் செம்மையான அனுபவங்களையும் உள்ளடக்கி நிற்பதுடன் சிறப்பான வடிவ அமைப்பையும் கொண்டு விளங்குவன. இதே நிலையைத்தான் கவிதைகளிலும் காண்கிறோம். பழமொழி நாட்டு மக்களால் உருவாக்கப்படுவது. கவிதை, நயம் செறிந்த கவிதைப் பெருமக்களால் உருவாக்கம் பெறுவது. எனினும் கவிதைகளில் காணப்படும் எல்லாக் கூறுகளும் உத்திகளும் இதிலும் காணப்படுகின்றன.

ஓரடிக் கவிதைகளைப் போல இவையும் சிறந்த அமைப்பைக் கொண்டு விளங்குகின்றன. கவிதைகளைப் பற்றிப் பேசும் அரிஸ்டாட்டில், எமர்சன் போன்றவர்கள் ''ஓரடியில் காணப்படும் சில சொல்லாக்கங்களும் சிறந்த கவிதைகளே'' எனக்கூறிய போந்தனர் நாட்டுப்புற மக்களால் உருவாக்கப்பட்ட பழமொழிகளும் சிறந்த கவிதைப் பண்புகளைப் பெற்று விளங்குகின்றன என்றால் அதுமிகையாகாது.

நன்றி: வேர்களைத் தேடி

பழமொழிகளும் மொழிபெயர்ப்பு சிக்கல்களும் - கு. சிதம்பரம், ரம்யாராஜு

தாய்மொழியாக பேசப்படுகின்ற மக்களின் பண்பாட்டையும் அடையாளத்தையும் தன்னகத்தே கொண்டது மொழி. ஒவ்வொரு மொழியின் பின்னனியில் உள்ள மக்களின் பண்பாடுகள் ஒரே மாதிரி அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஒரே மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் என்றால் ஓரளவு பண்பாட்டு ஒற்றுமை இருக்க வாய்ப்புகள் உண்டு. வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் பின்னனியில் உள்ள பண்பாடுகள் என்றால் அவைகளுக்கிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகளின் இடைவெளிகள் கூடும். இதனால் ஒரு சமூகத்தில் நிலவி வரும் ஒரு சில பண்பாடுகள் மற்றொரு மொழி சமூகத்தில் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய மாறுபட்டப் பண்பாட்டுப் பின்புலத்தில் இருந்து வரும் இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் நிறைந்ததாகவும், ஒற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் குறைவாகவும் இருக்கும். மேலும், ஒவ்வொரு மொழியிலும் பண்பாட்டு தொடர்களாக பழமொழிகளும் (Proverbs), மரபுத்தொடர்களும் (Idioms and phrases) உள்ளன. இத்தகைய பண்பாட்டு தொடர்கள் மொழி பெயர்க்கப்படும்போது எதிர்கொள்கின்ற சிக்கல்களையும், முடிந்தவரை அதற்கான தீர்வுகளையும் விளக்க இக்கட்டுரை முனைகிறது.

பழமொழி:

பழமொழி என்பது மக்களின் அனுபவமொழி, இது மக்களின் அனுபவத்தின் அடிப்படையில் சூழலுக்கேற்ப பயன்படுத்தக்கூடிய ஒன்று. மூதுரை, முதுமொழி என வேறு பல பெயர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மொழிக்குள்ளே அனுபவ மொழியாக இருப்பது இதன் சிறப்பாகும். டச்சு நாட்டு பழமொழி ஒன்று ''அனுபவம் பெற்ற குழந்தைகளே பழமொழிகள்'' (Proverbs are the daughters of daily experience) என்று கூறுகிறது. ''மக்கள் நீண்ட காலமாக வழங்கி வருவதும், பேச்சில் ஆதாரமாகவோ உதாரணமாகவோ காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்'' என்று கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரையறுக்கின்றது. உலகோர் பெற்றுவரும் அனுபவ உண்மைகளே முதுமொழிகளாகின்றன.

இதனை சங்க காலப் புலவராகிய சொல்லூர் கோசிகன் கண்ணனார் (அகம் 66-இல்)

பல்லோர் கூறிய பழமொழியெல்லாம்

வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி'' (அகம் 66) என்று கூறுகிறார்.

பழமொழியும் பயன்பாட்டு சூழலும்:

பழமொழி என்பது பயன்படுத்தக்கூடிய சமூகத்தின் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. எனவே சூழலுக்கேற்றார்போல பயன்படுத்தப்படும்போது மட்டுமே தெளிவான பொருள்தரும் சூழலுக்கேற்ப பயன்படுத்தாவிட்டால் பொருள் தராது. ''காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'' Make hay while sun shines

என்ற இந்த பழமொழியை ஒருவர் பெற்ற அனுபவத்தின் மூலமாக சூழலுக்கேற்ப சமூகத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய பழமொழி ஒரு காரியத்தை செய்கின்ற போது அதற்கேற்ற தருணத்தில் செய்யப்பட வேண்டும். அதற்கேற்ற சூழலிலும் தருணத்திலும் செய்யாவிட்டால் அதனால் பயன் ஏதும் இராது. அக்காரியம் கெட்டுவிடும் என்பதை உணர்த்துகிறது. எனவே இதை அதற்கேற்ற சூழலில் பயன்படுத்த வேண்டும் மேலும் நேரடியாக ஒருவர் கதிர் அடித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது காற்றடிக்கும் போதே நெல்மணிகளை தூற்றிக் கொள்ளலாம் என்று சொன்னால், அது நேரடி வாக்கியமாகும். இத்தகைய பயன்பாட்டுச் சூழலில் பழமொழியாகாது.

பழமொழிகளை இனம் கண்டறிதல்:

பழமொழிகளை இனம் கண்டறிவதில் பெரும்பாலும் சிக்கல்கள் நிலவி வருகின்றன. பழமொழிகளையும், பொன்மொழிகளையும் ஒன்றென நினைக்கும் போக்கு பெரும்பாலான மொழிபெயர்பாளர்களிடமும், பழமொழிகள் தொகுப்பாளர்களிடமும் நிலவி வருகின்றன. இதற்கான முக்கியகாரணம் வேற்றுமைகளையும் ஒற்றுமைகளையும் பிரித்தரிய முடியாததே ஆகும். மேலும் பழமொழிகளை எப்படி எந்த கூறுகளின் அடிப்படையில் இனங்காண்பது என்ற தெளிவான வரையறைகள் இல்லாததே இதற்கு காரணம்.

பழமொழிகளைக் கீழ்க்கண்ட பண்புகளின் அடிப்படையில் இனங்காணலாம் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் பழமொழிகளையும், மரபுத்தொடர்களையும் மொழிபெயர்த்தல் எனும் செயலரங்கில் (Workshop) மொழியியல் அறிஞர்கள் முனைவர் வே.தயாளன் மற்றும் எல்.இராமமூர்த்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1. பழமொழிகளில் நேரடிப்பொருண்மை Denotative meaning) ஒன்றாகவும், சமூகப் பொருண்மை (Social meaning) வேறாகவும் அமையப் பெற்றிருக்கும்.

2. சூழலுக்கேற்ப (Context) பயன்படுத்தினால் மட்டுமே தெளிவான பொருண்மையை பெற முடியும், சூழலுக்கேற்றவாறு பயன்படுத்தாத போது பொருள் விளக்கம் பெற இயலாது.

3. பழமொழிகள் பண்பாட்டுக் கூறுகளையும் சமூகக் கருத்துக்களையும் தன்னுள்ளே கொண்டவையாகவும், பொதுப்படையானதாகவும் இருக்கும்.

4. பழமொழிகளின் புதைஅமைப்பு (Deep structure) ஒன்றாகவும் புற அமைப்பு (Surface structure) ஒன்றாகவும் இருக்கும்.

பழமொழியும் மொழிபெயர்பும்:

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் சொல்லப்படும் செய்திகளை மற்றொரு மொழிக்கு மாற்றியமைக்கும் அல்லது மொழியில் எடுத்துச் செல்லும் முறையாகும். பொதுவாக சொன்னால் மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள கருத்துக்களை மற்றொரு மொழியில் மாற்றும்பொழுது மூலமொழியில் காணப்படும் பொருள், சுவை, தன்மை போன்றவை சிறிதும் மாறாமலும், பெயர்க்கப்படும் மொழியின் அமைப்பு மற்றும் தன்மைக்கேற்பவும் அமைக்கப்படும் முறையாகும். (சி. சிவசண்முகம் மற்றும் வே.தயாளன், 1989).

மொழி தன்னுள்ளில் கொண்டுள்ள அனைத்து வகையான கருத்துகளையும் செய்திகளையும் மொழிப்பெயர்க்க ஒரே மாதிரியான மொழி பெயர்ப்பு முறையை கையாண்டால் மொழிபெயர்ப்பு சிறப்பாக அமையுமா? எனவே, அறிவியல் கருத்துகளை மொழி பெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும், இலக்கியங்களை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கேற்ற முறையையும் கையாள வேண்டும். அதேபோல பழமொழிகளை மொழிப்பெயர்க்கப்படும்போது அது தன்னகத்தே கொண்டுள்ள பண்பாட்டுக் கூறுகளையும், சமூக கருத்துக்களையும் ஒரு சேர மொழிபெயர்த்தலே சிறப்பானதாகும்.

1. நாய்விற்ற காசு குலைக்குமோ? 2. கிழவன் கொடுத்த காசுக்கு நரையுண்டா? 3. பூ விற்ற காசு மணக்குமா? 4. கருவாடு விற்ற காசு நாறுமா? 5. கம்பளி விற்ற காசுக்கு மயிர் முளைக்குமா? 6. வேப்பெண்ணை விற்ற காசு கசக்குமா? 7. கரி விற்ற காசு கருப்பா இருக்குமா?

இந்த பழமொழிகள் அத்தனையும் ஒரே பொருண்மை (Meaning) உடையதாக உள்ளது. ஆனால் பயன்படுத்தப்படும் சூழல் மட்டுமே மாற்றம் பெறக்கூடியதாக உள்ளது. (மொழியியல் அறிஞர் செ. சண்முகம் நிகழ்த்திய உரையில் இருந்து) எனவே இந்த பழமொழிகள் அனைத்திலும் வெளிப்படுத்தக்கூடிய சமூகப் பொருண்மை (Social meaning) இவ்வாறு அமைகிறது. அதாவது, ஈட்டக்கூடிய பணம் அது ஈட்டும் வழிகளுக்கேற்ப மாற்றமடையாது என்பதைக் காட்டுகிறது. ஒரே பொருண்மை உடைய பழமொழிகளை மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மொழி பெயர்த்துள்ளனர். மேலும் கொங்கு நாட்டு பழமொழிகள் என்ற நூலில் இரண்டு விதமான மொழி பெயர்ப்புகளை மேலே கொடுக்கப்பட்டுள்ள 1,7 என்ற இரண்டிற்கும் இரண்டு விதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

* Value of money will not change by the manner in which it was obtained

* Monetary qualities will not change with sale product

இப்படி ஒரு சமூக பொருண்மை உள்ள பழமொழிகளை வெவ்வேறு விதமாக மொழி பெயர்க்கப்படும்போது, அது வேறு கலாச்சார பின்னனியில் உள்ள மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தத் தவறிவிடும். எனவே ஒரே பொருண்மையுள்ள பழமொழிகளை ஒரே தலைப்பின் கீழ் கொண்டு வந்து அதை மொழிபெயர்ப்பது கற்றுக் கொள்வோர்களுக்கும், பயன்படுத்துவோர்களுக்கும் தெளிவை ஏற்படுத்தும்.

பழமொழியும் பின்புலமும்:

ஒவ்வொரு பழமொழியும் சமூகம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டதாக உள்ளது. எனவே ஒரு பழமொழியை மொழிபெயர்க்கப்படும்போது அதற்கான சமூகப் பின்புல கதைகளையும் கண்டறிவது சிறப்பானதாக அமையும் ''நாயானாலும் தாய் தாய்தான்'' என்ற இந்த பழமொழியின் பின்புலம் கீழ்க்கண்டவாறு அமைகிறது.

கதைபின்புலம்:

ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்ததாம். அந்த நாய்க்கு ரொம்ப அழகான ரெண்டு பெண் குழந்தைகள் பிறந்ததாம். அந்த ரெண்டு பெண் குழந்தைகளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்ததாம். பிறகு அதோட ரெண்டு பெண்களையும் நல்ல வசதி வாய்ப்பு படைத்த வரன்களைத் தேடி மணமுடித்ததாம். திருமணம் முடித்து ஒரு வருடம் கழித்து சின்னமக வீட்டுக்கு போனதாம். வீட்டுக்கு போன உடனே ஏண்டி நாயை வீட்டுக்கு உள்ளே வாரன்னு சொல்லி அடிச்சதாம். அடியை வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட அதோட பெரிய பொண்ணு வீட்டுக்கு போனதும், உடனே அம்மா என்னம்மா ஆச்சி என்று அழுது கொண்டே உள்ளார கூட்டிட்டு போய் மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்தாலாம். மாத்திரையெல்லாம் ஒன்னும் வேணாம் நான் இன்னும் இரண்டு மூணு நாள்ல செத்து போயிடுவேன், என் தலமேல உன் தங்கச்சி பலமா அடிச்சிட்டா நானு செத்துட்டா என்னை ஒரு சாக்குபயில போட்டுக் கட்டி நடுவீட்டுக்கு நேர்ல உள்ள துளத்துல கட்டிரு. கட்டிட்டு மூணுமாசம் கழிச்சி மறுபடியும் தொறந்து பாருன்னு சொல்லிட்டு செத்துப்போச்சாம்...... அப்புறம் ........

மூணுமாசம் கழிச்சி, தங்கச்சி அம்மா மூணுமாசமா காணமேன்னு தேடிட்டு அக்கா வீட்டுக்கு வந்து அக்காள கேட்டாளா. கேட்டதும் ஓ.....ன்னு அழுதுட்டே அம்மாவே இப்படி அடிச்சே கொண்ணுட்டேடி, என்னாத்தா நாயா இருந்தாலும் அவ தாய் இல்லியாடின்னு சொல்லி நடந்ததெல்லாம் சொல்லி சாக்கே பிரிச்சு காட்டினாளா, சாக்கு நெரையா தங்க காசு இருந்ததா. அப்பத்தா, சின்னபுள்ள ''நாயா இருந்தாலும் தாய் தாய்தான்ணு'' தாயின் பெருமையை உணர்ந்து ரெண்டுபேரும் சேர்ந்து அழுதாங்களா அப்புறம் அந்த தங்ககாசை எல்லாம் ஆளுக்கு பாதியா எடுத்துக் கொண்டார்கள்.

தீர்வுகள்:

பழமொழிகள், இனம் கண்டறிந்து அவைகள் சமூக கருத்தோடு பண்பாட்டுப் பின்புலத்தையும் கொண்டுள்ளதா அல்லது சமூக கருத்துகளை மட்டும் கொண்டுள்ளதா என்பதை மொழிப்பெயர்க்கப்படும் முன் கண்டறியப்பட வேண்டும். மொழிபெயர்ப்பு மொழியில் இணையான பழமொழி உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான ஒத்த பண்பாட்டுப் பின்புலம் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும். இணையான பழமொழிகள் இருக்கும் தருவாயில் மூலமொழியில் உள்ள பழமொழிகளை பெருமொழியில் அப்படியே பொருத்தி விட வேண்டும். மொழி பெயர்க்கப்படும்போது, பழமொழிகள் கொண்டுள்ள பண்பாட்டு கூறுகளையும், கருத்தையும் மாறாமல் பெறுமொழிக்குக் கொண்டு செல்ல வேண்டும். எத்தகைய சூழலில் பழமொழிகள் பயன்படுத்தப்படுகினறன என்பதையும் கண்டறிந்து மொழி பெயர்த்தலே சிறப்பானதாக அமையும்.

மேற்கூறிய தீர்வுகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டு இன்னும் சில கூறுகளையும், பண்புகளையும் கண்டறிந்து காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்றாற்போல பழமொழிகளை மொழிபெயர்த்து தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள தமிழ் மக்களின் பண்பாட்டை மேன்மேலும் பரவலாக்கம் செய்வது சிறப்பாகும்.

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

 

பழமொழிகள்: உருவாக்கமும் இன்றைய போக்கும் - சி. இளங்கோ

ஒவ்வொரு சமூகமும் தனக்கான பண்டங்களை உற்பத்திச் செய்வது மட்டுமல்லாமல் கலைகளையும் உற்பத்தி செய்கிறது. பண்ட உற்பத்தி அச்சமூகத்தின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. வாழ்க்கையோ கலைகளினால் உள்வாங்கப்படுகிறது. இவ்வடிப்படையில் ஒவ்வொரு இடம் சார்ந்து உற்பத்தி மாறுபடும் பொழுது வாழ்நிலை மாற்றத்திற்கேற்ப கலைகளும் மாறுபடுகின்றன. கலைகளில் மொழி உள்ளது. பண்பாடு உள்ளது. உத்தி உள்ளது. அழகியல் உள்ளது. இவற்றோடு கூடுதலாக முந்தைய சமூகம் பற்றிய பதிவும் உள்ளது. இவ்வம்சங்களைக் கொண்ட கலைகளுக்கு அடித்தளமாய் அமைவது நாட்டார் கலைகளே. நாட்டார் கலைகளை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1. வாய்மொழி மரபு சார்ந்த வழக்காறுகள். 2. நிகழ்த்துக் கலைகள். மரபு வழியாகவோ மரபுவழியைப் பின்பற்றிப் புதிதாகப் படைக்கப்பட்டோ மக்களிடம் இயல்பாய் வழக்கில் உள்ளவையும் அல்லது ஒரு குறிப்பிட்ட களத்தில் சூழலில் பயன்படுத்தப்படுபவையும் வழக்காறுகள் எனப்படும். இவை பாடலாகவோ, விடுகதைகளாகவோ, பழமொழியாகவோ, கதைப் பாடல்களாகவோ, அமையலாம். வாய்மொழியாக வழங்கி வந்த பழமொழிகள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் தொகுக்கப்பட்டது. அப்படித் தொகுக்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைமைகளில் பழமொழிகளைத் தொகுத்தனர். இதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் இங்கு பழமொழித் தொகுப்புகள் எப்படிப்பட்ட சூழலில் தொகுக்கப்படுகின்றன? அத்தொகுப்பின் தேவை என்ன? இன்று பழமொழித் தொகுப்புகளின் நிலை என்ன? எதிர்காலத்தில் எவ்வாறு பழமொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

பழமொழித் தொகுப்புகள் என்று கூறும் பொழுது அதனைப் பின்வரும் வகையில் பிரித்துக் கொள்ளலாம். 1. ஐரோப்பியருக்கு முற்பட்ட தொகுப்புகள், 2. ஐரோப்பிய காலத் தொகுப்புகள், 3. ஐரோப்பியர் காலத்துக்குப் பிற்பட்ட தொகுப்புகள். இங்கு நாம் ஐரோப்பியரை மையமாக வைத்து பிரித்தமைக்குக் காரணம் ஐரோப்பியர் காலத்தில்தான் திட்டமிட்ட பழமொழித் தொகுப்புகள் வெளிவருகின்றன. ஐரோப்பியர்கள் பழமொழிகளை மக்கள் வழக்கில் வழங்கும் முறையிலேயே பதிவு செய்கின்றனர். இவர்கள் தொகுப்பில் ஒரு சீரிய அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், ஆவணப்படுத்தல் என்ற முறையில் இவர்களின் தொகுப்புகள் அமைகின்றன.

ஐரோப்பியர் காலத்துக்கு முற்பட்டதாக நமக்கு கிடைக்கும் முதல் பழமொழித் தொகுப்பு நீதி நூல் காலகட்டத்தைச் சேர்ந்த பழமொழி நானூறு ஆகும். அதற்கு அடுத்து நமக்கு மிகவும் பிந்தையக் காலத் தொகுப்பாக தண்டலையார் சதகம் கிடைக்கிறது. இந்த இரண்டு நூல்களும் யாப்பு வடிவத்திற்கு ஏற்ப பழமொழிகளை மாற்றியமைத்தபடி பதிவு செய்கின்றன. இவற்றில் இடம்பெறும் பழமொழிகள் மக்கள் வழக்காக இல்லாமல் இலக்கிய வழக்காக மாற்றப்பட்டுள்ளன. மேலும் இவற்றில் அகரவரிசைப்படுத்தல் என்ற முறை இல்லை. எந்த வகையான ஆய்வு அணுகுமுறையும் இத்தொகுப்புகளில் இல்லை என்பதை நாம் குறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அன்றைய காலத்தில் தொகுப்பு முறை என்பது இன்று போல் ஆய்வு அடிப்படையாகவோ அல்லது கோட்பாட்டின் வழியோ வளர்ச்சியடையவில்லை.

ஆனால் ஐரோப்பியர் காலத்தில் நிலைமை அப்படியே மாறுகிறது. அவர்கள் பழமொழிகளை ஊர் ஊராகச் சென்று திரட்டினர். மக்கள் வழக்கில் உள்ள மொழியிலேயே அவற்றைப் பதிவு செய்து பின்னர் புரியாத சொற்களுக்குச் சொற்பொருள் விளக்கமும் அளிக்கின்றனர். எண்கொடுத்து அகரவரிசைப்படுத்தும் முறையும் கடைபிடித்தனர். இவ்வாறு ஓர் அய்வு நோக்கில் திட்டமிட்டத் தொகுப்பாக ஐரோப்பியர்கள் தொகுப்புகள் அமைகின்றன.

1842ல் முதல் பழமொழித் தொகுப்பை பெர்சிவெல் பாதிரியார் வெளியிடுகிறார். அவர் தமிழ்ச் சமூகத்தில் பழமொழிக்கு இருந்த இடத்தைப் பற்றி குறிப்பிடுகையில், தமிழ்மொழியில் பழமொழிகள் ஏராளமாக உள... ஓரிரு பழமொழிகளைப் பேச்சில் எதிர்கொள்ளாது ஒரு தமிழனுடன் ஒருவன் பேசிவிட முடியாது. சிறப்பாகத் தமிழ்ப் பெண்டிரைப் பொறுத்த வரை இதுதான் நிலைமை. எதனையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், வேண்டுகோளாக இருந்தாலும், உண்மையாக இருந்தாலும், முன்னுதாரணமாக இருந்தாலும், அல்லது வெறுமனே இல்லை என்று மறுப்பதற்கும் உண்டு என்று ஒத்துக் கொள்வதற்கும் எப்போதும் ஒரு பழமொழி அவர்வசம் இருக்கும் என்று தன் நூலில் பதிவு செய்கிறார்.

ஐரோப்பியர்களை அடுத்து நம்மவர்களும் பழமொழிகளைத் தொகுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். 1642 முதல் 1900 வரையில் நம் தமிழ் மரபில் வந்தவர்களில் பழமொழித் தொகுப்புகள் அனைத்தும் ஐரோப்பியர்கள் தொகுத்தளித்த முறையிலேயே அமைந்துள்ளன. பழமொழிகளைத் தொகுக்க வேண்டியத் தோவை திடீரென்று ஏன் ஏற்பட்டது என்று பார்த்தால் அது நமக்கு பல புதிய சுவையானத் தகவல்களைத் தருகிறது. நீதி நூல் காலகட்டத்தில் தொகுக்கப்பட்ட பழமொழி நானூறு என்ற நாவலின் நோக்கம் நீதியைப் புகட்டுவது என்பது மட்டுமே. ஏனெனில் அக்காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் நிலை அவ்வாறு இருந்தது. இதனால் தான் நீதி நூல்களே தோன்றியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அடிப்படையில் ஒரு நீதி வாக்கியமாகவே அக்காலகட்டத்தில் பழமொழி நானூறு தொகுக்கப்பட்டது. இதேபோல் சிற்றிலக்கிய காலகட்டத்தில் உருவான இலக்கியங்கள் ஒரு செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு தனக்குண்டான யாப்பமைதியில் அமைவனவாக வருகின்றன. இதனடிப்படையில் பள்ளு, குறவஞ்சி, உலா, என பலவகைமை இலக்கியங்கள் உருப்பெற்றன. இந்த அடிப்படையில்தான் தண்டலையார் சதகம் தோன்றியது. பழமொ‘ நானூற்றுக்கும் தண்டலையார் சதகத்ப தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பது எளிதில் புலனாகும்.

அடுத்து வரும் ஐரோப்பியர்காலத் தொகுப்புகளைப் பார்த்தால் அவை தோன்றிய பின்புலம் முற்றிலும் வேறாக உள்ளது. மதம் பரப்ப வந்த ஐரோப்பியர்கள் தங்கள் மதக் கருத்துக்களை அவ்வட்டார மக்கள் மொழியிலேயே சொல்ல நினைத்தார்கள். அதற்கு அம்மக்களின் வழக்காறுகள் துணைபுரியும் என்ற அடிப்படையில் வழக்காறுகளுக்கு முதன்மை கொடுத்து தொகுத்தல் வேலையில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் தான் பெர்சிவெல் பாதிரியார், ஜான் லாசரஸ், ஹெர்மன் ஜென்சன் போன்ற ஐரோப்பியப் பாதிரியார்கள் பழமொழிகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுவாகவே கிறித்துவர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்கு கதைகள், பாடல்கள் முதலான வடிவங்களைப் பயன்படுத்துவர். இவ்வடிவங்களை மேலும் உயிரோட்டமாக அமைப்பதில் பழமொழியின் இடம் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்தது. இதற்காகவே கிறித்துவ பாதிரியார்கள் பழமொழிகளைத் தொகுக்க முற்பட்டனர்.

பெர்சிவெல் பாதிரியார் தன்னுடைய பழமொழித் தொகுப்பு பற்றி குறிப்பிடுகையில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுடன் எந்த வகையிலாவது தொடர்புடையவர்களுக்கு (ஐரோப்பியர்களுக்கு) இத்தொகுப்பு மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிடுகிறார். ஐரோப்பிய பாதிரியார்கள் தொகுத்தளித்தப் பழமொழி நூல்களில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஆங்கிலத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது

அத்தொகுப்பு யாருக்காகச் செய்யப்பட்டது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதற்கு அடுத்து வரும் நம்மவர்களின் தொகுப்புப் பின்புலம் முற்றிலும் மாறுபட்டது. ஆரம்பத்தில் நம்மவர்களும் ஐரோப்பியர்களுக்குப் பழமொழிகளைத் தொகுத்து தமிழ் ஆங்கிலம் கலந்து வெளியிட்டுள்ளனர். உதாரணமாக 1888ல் த.கருப்பண்ணப் பிள்ளை என்பவர் வெளியிட்ட பழமொழித் திரட்டு என்ற நூலில் இந்நூல் ஐரோப்பியர்களுக்குப் பெரிதும் பயன்படும்படி தொகுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

இப்படியான சில தொகுப்புகள் ஆரம்ப காலத்தில் வந்தாலும் பின்னாளில் நம்மவர்கள் பழமொழிகளைத் தொகுத்து வெளியிடுவது என்பதை பதிப்பகம் சார்ந்த ஒரு வணிகமாக செய்ய ஆரம்பித்தனர். இப்படியாக பழமொழிகளைத் தொகுக்கும் முறையானது வேறு தளத்திற்குச் சென்றது. பழமொழிகளை மாணவர்களுக்கு தொகுப்பது, மேடைப் பேச்சாளர்களுக்குப் பயன்படுத்தும்படி, தொகுப்பது, கதை கட்டுரை எழுதுபவர்களுக்குத் தொகுப்பது, பொது வாசகனுக்குத் தொகுப்பது என்ற முறையில் தொகுப்புகள் பதிப்பகம் சார்ந்த தொழில் முறையில் இன்று வெளிவருகின்றன. இன்று குறிப்பிடத்தக்க தொகுப்பாக உள்ள நூல் கி.வா.ஜகந்நாதனின் தமிழ்ப் பழமொழிகள் ஆகும். இப்படியாகப் பழமொழித் தொகுப்பு வரலாறு ஒரு பரந்த தளத்தைக் கொண்டதாக அமைகிறது. இதன் விளைவாக பல சிக்கல்களும் ஏற்பட்டன.

பழமொழிக்கு தனியாக ஆசிரியர் என்பவர் இல்லை. தொகுப்பாளர்களே ஆசிரியர் என்பதால் ஒரு தொகுப்பில் ஏற்படும் சிக்கல்களுக்கு அவ்வாசிரியரே பொறுப்பாசிரியர். பழமொழித் தொகுப்பில் ஏற்படும் குறைகள் பெர்சிவெல் காலம் முதல் இன்று வரை தொடர்ந்தபடியேயுள்ளன. பெர்சிவெல் தொகுப்பில் மரபுத் தொடர், திருக்குறள் அடி, செய்திகள், உவமைகள் இப்படியானவைகளையெல்லாம் பழமொழிகளாகக் கருதி தொகுத்துள்ளார். இந்தக் குறைபாடு ஒவ்வொரு தொகுப்பிலும் தொடர்கிறது. இன்று சில தொகுப்புகளில் பழமொழிகளுக்கு விளக்கம் கொடுத்தல் என்ற பெயரில் தவறாக விவரம் செய்யப்பட்டு வெளிவருகின்றன. தி.எஸ்.கேசவ சர்மா என்ற ஜோதிடர் செய்த பழமொழி நூலில் ஒவ்வொரு பழமொழிக்கும் ஜோதிட கருத்துக்களைத் திணித்து விளக்கம் தருகிறார். இதேபேல் கே.ஜி.எப். பழனிச்சாமி என்பவர் பழமொழிகளைக் கொண்டு அதன் பொருள் சிதையும்படி நகைச்சுவை அமைக்கிறார். உதாரணமாக,

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு அவர் அமைத்த ஒரு நகைச்சுவையைப் பார்ப்போம்.

அவன்: உனக்கு படை நோய் வந்திருக்கு அதுக்கு வருத்தப்படறியா?

இவன்: ஏன் வருத்தப்படணும்? என் தம்பிதான் தோல் டாக்டராச்சே.

இவ்வாறு பழமொழியின் உண்மைக் கருத்தைச் சிதைக்கும் தன்மையில் இன்று பல நூல்கள் வருகின்றன. இதுவரை வெளிவந்தப் பழமொழித் தொகுப்புகளில் குறைகளாகக் கருதப்படுபவை.

- எந்த மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டது என்று கூறப்படாமை.

- உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யாமல் திருத்திப் பதிவு செய்வது.

- பழமொழிகளைப் பொருள் அடிப்படையில் அகரவரிசைப்படுத்தாமல் அமைப்பது

- புரியாத பழமொழிகளுக்கு விளக்கம் அளிக்காமல் தொகுத்துத் தருவது

- பழமொழிகளை விவரணப்படுத்துதல் என்ற பெயரில் தவறான கருத்துக்களைக் கூறுவது.

இவைகள் எல்லாம் பழமொழிகளைத் தொகுப்பவர்கள் செய்யும் குறைபாடுகளாக உள்ளன.

நாம் இன்று பழமொழித் தொடர்பான ஆய்வில் மிகப் பின்தங்கியுள்ளோம். இன்றுவரை தொகுக்கும் பழமொழிகளைத் தொகுக்கும் பணியே முடிந்தபாடில்லை. ஊர் ஊராகச் சென்று பழமொழிகளைச் சேகரிக்கும் முறை இன்று நம்மிடம் குறைந்து விட்டது. வட்டாரம் சார்ந்த பழமொழித் தொகுப்புகளின் வரவு என்பதே அரிதாகிவிட்டது. பொருள் வகைப்பாகுபாடு செய்யப்பட்ட தொகுப்புகள் மிகக் குறைவாகவே வெளிவருகிறது. இவையெல்லாம் நாம் பழமொழித் தொடர்பான ஆய்வை முன்னெடுப்பதில் உள்ள குறைகளாக அமைகின்றன.

பழமொழிகள் எவ்வாறு ஒவ்வொரு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அதில் உள்ள அம்மக்களின் வாழ்க்கைப் பதிவு என்ன? இப்படியான ஆய்வுகள் எல்லாம் நாம் பதுமொழிகளைக் கொண்டு செய்யவில்லை. இலங்கையில் வழங்கப்படும் ஒரு பழமொழி மாமியார் குற்றம் மறைப்பு மருமகள் குற்றம் திறப்பு என்று உள்ளது. ஆனால் இதே பழமொழி நம் தமிழ்ச் சூழலில் மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று வழங்கப்படுகிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் ஒரு பழமொழியின் ஒரு வடிவம் எவ்வாறு ஒவ்வொரு இடம் சார்ந்து மாறுபடுகிறது என்றும் நமக்கும் அவர்களுக்கும் எவ்வகையில் வாழ்வியல் ஒற்றுமை உள்ளது என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொண்டால் அது சிறந்த சமூகவியல் ஆய்வாக அமையும். பழமொழிகளைக் கொண்டு அதன் அமைப்பியல் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் பழமொழியும் உளவியலும் எவ்வகையில் தொடர்புடையது என்பது பற்றிய ஆய்வுகளைச் செய்யலாம். ஆனால் அவற்றில் நாம் இன்று ஒரு மைல் கல்லைக்கூட கடக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

நன்றி: நாட்டுப்புறவியல் ஆய்வுகள்