23/09/2011

செட்டிநாட்டுப் பழமொழிகள் - முனைவர் மு.வள்ளியம்மை

முன்னுரை

வாழ்க்கையில் கண்ட அனுபவ உண்மைகளின் வெளிப்பாடே பழமொழிகள். அவைகள் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கருவிகள். சொல்லில் சுருக்கத்தையும், பொருளில் ஆழத்தையும், விளக்கத்தில் தெளிவையும் உடையன. இப்பழமொழிகள் பண்பாடு, பழக்க வழக்கம், சுற்றுச்சார்பு, தொழில் இவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதை,

''அறிவு வளர்ச்சியிலே பிறந்து சுருக்கம், தெளிவு, பொருத்தம் ஆகிய பண்புகளால் என்றும் இறவாமல் இவ்வுலகில் வாழ்கின்றன'' என்று அரிஸ்டாட்டில் கூறுவார். ''பழமொழிகள் மக்களது வாழ்வுடன் வாழ்வாகப் பின்னிப் பிணைந்து விட்டன. பழமொழி மூலம் மக்களது பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம்'' என்றும் கூறுவர். (சக்திவேல். சு. நாட்டுப்புற இயல் ஆய்வு ப.105)

இவைகளுக்கேற்ப ஒவ்வொரு வட்டாரத்திலும் வழங்கும் பழமொழிகள் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன. வட்டாரப் பழமொழிகள் என்று இவற்றைக் கூறலாம். அவ்வகையில் செட்டிநாட்டுப் வட்டாரப் பழமொழிகள் குறித்துச் சில கருத்துக்களை நோக்கலாம்.

வட்டாரப்படி பழமொழிகள்

ஒரே கருத்தைத் தரும் பழமொழிகள் பல வட்டாரங்களில் வழங்கப்பட்டலும் அவை சொற்களால் வேறுபடுகின்றன. அந்தந்த வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவை அந்த வட்டாரப் பழமொழிகளாகின்றன. அந்தச் சொற்களே அவ்வட்டாரத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றன. அதுபோல செட்டிநாட்டுப் பகுதிக்கு மட்டுமே உரிய சொற்களால் வழங்கப்படும் பழமொழிகளிலும் வட்டாரத் தனித்தன்மை மிளிர்வதைச் சிறப்பாகக் காணமுடிகிறது. பொட்டல், ஒய்யாரம், ஒக்கல், பனியாரம், நாளி, கெத்தா, ஒசத்தி, சமத்தி, காடிக்கஞ்சி, மாராப்பு, வரையோடு போன்றவை வட்டாரச் சொற்களுக்குச் சிலசான்றுகள். இவைகள் பழமொழிகளில் பயன்படுத்தப்பட்டவை.

செட்டிநாடும் சிக்கனமும்

செட்டிநாட்டைச் சிக்கனத்தின் இருப்பிடம் என்றும் கூறுவர். இதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். சிக்கனமாக வாழும் செட்டி நாட்டார் கஞ்சத் தனமாக வாழ்வதில்லை என்பதைத் திருமணச் செலவும், கோயில் திருப்பணிகளும் தெளிவாகக் காட்டும் கஞ்சத்தனம் என்றால் தேவைக்குக் கூடச் செலவு செய்யாமை. சிக்கனம் என்றால் தேவைக்கு மட்டுமே செலவு செய்து ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்துவது. வீண் ஆடம்பரம் அவர்கள் என்றும் விரும்பாத ஒன்று. இவர்கள் இறைபக்தியும், தர்ம சிந்தனையும், கலையுணர்வும், தமிழ்ப்பற்றும் மிக்கவர்கள். குழந்தைகளுக்குச் சிக்கனமாக வாழக் கற்றுக் கொடுப்பவர்கள் எதையும் வீணாக்காமை அவர்களின் பழக்கங்களில் தலையாயது. எனவே அவர்களின் பழமொழிகளில் ''வீண் ஆடம்பரம் வேண்டாமே'' என்ற கருத்து குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

வீண் ஆடம்பரம்

வாழ்க்கையில் வீண் ஆடம்பரத்தை விரும்பி வாழ்ந்தவர்கள் கடன்காரர்களாய், கடமையைச் செய்ய முடியாதவர்களாய் வாழும் நிலையை அனுபவத்தில் கண்ட முன்னோர்கள் வீண் ஆடம்பரம் தேவையில்லை என்பதை வலியுருத்தும் பழமொழிகளைக் கூறினர். பழமொழிகள் கிண்டல் நிறைந்தவனாகவும், வறுமையின் வெளிப்பாடாகவும், எப்படி வாழ வேண்டும் என்பதைச் சுட்டுவனவாகவும், இயல்பு வாழ்க்கை வாழ வழிகாட்டுவனவாகவும் அமைந்து சிறக்கின்றன.

''குடிக்கிறது கூழாம் கொப்பளிக்கிறது பன்னீராம்''

என்பது பழமொழி. தேவைக்குத் துன்பப்பட்டுக் கொண்டு, ஆனால் வெளிப்பெருமைக்காகச் செயற்படும் தன்மையினை இது உணர்த்துகிறது. அடிப்படைத் தேவையை அறியாமல் செய்யும் ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது.

வாழும்முறை

இந்தமாதிரியான நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்றால் எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதே,

''ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்''

என்ற பழமொழி. ஆறு பெரிதாக இருக்கிறதே என்பதற்காக அதிகமாகக் கொட்ட வேண்டியதில்லை. கொட்டுவதை அளந்தே கொட்டவேண்டும். எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும். யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும். அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்.

ஆளும் முறை

''குந்தித்தின்றால் குன்றும் மாளும்'', என்பது பொதுவான பழமொழி. முன்னோர்கள் வைத்துவிட்டுப் போன சொத்துக்களை உழைத்துப் பெருக்காமல் உட்கார்ந்து தின்றால் அது குன்றளவு இருந்தாலும் குறைவுபடும். இதைச் சிலப்பதிகாரம் வணிக குலப் பிறப்பான கோவலன் வழிச் செம்மையாய்ச் சொல்லும்.

''சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடிக்

குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத்தரும்'' என்பது சிலப்பதிகாரம்.

உழைக்காமல் கரைத்ததால், குலத்தில் முன்னோர்கள் சேர்த்ததைத் தான் இருந்து ஆளமுடியாமல், இலம்பாட்டைப் பெற்றான். எனவே முன்னோர்கள் வைத்து ஆண்டவற்றை வீண் ஆடம்பாரத்தால் அழித்துவிடாமல் பின்னோர்கள் வைத்து ஆளவேண்டும். இதை ''முன்னோர்கள் ஆண்டதைப் பின்னோர்கள் ஆளனும்'' என்ற செட்டிநாட்டுப் பழமொழி கூறும்.

சிறு குழந்தைகளுக்குச் செட்டி நாட்டில் கூறும் பல அறிவுரைகளுள் ஒன்று ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டுத் தொணக்காத'' அல்லது ''வீட்டில் இல்லாத பொருளைக் கேட்டு அழாதே'' என்பது. இது சிறுபிள்ளை முதல் மனதில் பதிய வைக்கப்படும் கருத்து. இல்லாததைக் கேட்டு அழுதால் அழுகைக்குப் பயந்து கடன்பட்டாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் வரும். தேவையற்ற கடன் தொல்லை வந்துசேரும். எனவே இருப்பதைக் கேட்டு அழுவதால் கொடுப்பவர்க்கும் துன்பமில்லை. பொருளைத் தேவைக்குத்தான் கேட்கவேண்டுமே தவிர வீணாகக் கேட்பது தவறு. இருப்பதை இன்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் இதே கருத்து வேறுவிதமாகக் கூறப்படுவதும் உண்டு.

''இட்ட போசனத்தை இன்பமா சாப்பிடு'' உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்தால் வாழ்வு இன்பமாக இருக்கும். இல்லாததற்கு ஏங்கி அழக்கூடாது என்பதை இப்பழமொழி தெளிவாகச் சுட்டுகிறது. வசதிக்குத் தக்கபடி வாழ வேண்டும் என்பதன் வெளிப்பாடே இப்பழமொழி.

வெளிப்பகட்டு

''ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்'' என்ற பழமொழி வெளிப்பகட்டைக் காட்டுகிறது. வெளியே தாழம்பூ மணக்க இருக்கும் கொண்டை தன்னகத்தே பல அழுக்குகளைக் கொண்டிருக்கும். வெளிப்பகட்டாகவும், ஆடம்பரமாகவும், பேச்சளவிலும் நிற்பவர்களை இப்பழமொழி சுட்டிக்காட்டும், ''மதிப்புமசால் வடை பிச்சுப்பாத்தா ஊசவடை'' என்ற பழமொழியும் இக்கருத்திலேயே வழங்குகின்றது.

தகுதி வாழ்க்கை

பிறரைப்பார்த்து நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இயலாததை அவனைப் போல் செய்ய முயலக்கூடாது. அவனவன் தகுதிக்கேற்ப வாழும் வாழ்க்கையே நிம்மதியான வாழ்க்கை. செல்வந்தனின் வாழ்வுபோல் இல்லாதவனின் வாழ்வு அமைவதில்லை. இயன்றவன் செயல்களைப் போல் இயலாதவன் செயற்பட முடியாது. தோற்றத்தில் ஒரேமாதிரியாக இருந்தாலும் நல்லபாம்பைப் போல் மண்புழு ஆடமுடியாது. இதை, ''நல்லபாம்பு ஆடுதுன்னு நாக்களாம் பூச்சி ஆடமுடியுமா'' என்று கூறுவர் (நாக்களாம்பூச்சி - மண்புழு)

முடிவுரை

''பழமொழி பொய்யின்னாப் பழயதும் சுடும்'' என்ற பழமொழி. மக்களுக்குப் பழமொழியின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. சமுதாயத்தில், இதனைச் செய், இதனைச் செய்யாதே எனக் கட்டளையிடவும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர். மக்களின் வாழ்வில் அனுபவித்த சாரம் என்பதால் மக்களிடையே அதற்கொரு செல்வாக்கு உண்டு. அம்முறையில் செட்டியார்கள் என்று அழைக்கப்பெறும். தன வணிகர்களாகிய நகரத்தார்கள் எதையும் எண்ணித் திட்டமிட்டுச் செய்பவர்கள்.

''எண்ணிச் செய்கிறவன் செட்டி

எண்ணாமல் செய்கிறவன் மட்டி''

என்ற பழமொழி அவர்களின் திட்டமிட்டுச் செயலாற்றும் திறனை வெளிப்படுத்தும்.

''காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி''

சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்

செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?

என்ற வழக்கு செட்டியார்களின் கெட்டிக்காரத் தனத்திற்குச் சான்றாக விளங்குகிறது.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: