22/09/2011

நாட்டுப்புறப் பாடலில் தொழில்பாடல் - து.வேணி, முனைவர் பட்ட ஆய்வாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

முன்னுரை

ஒரு நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சமான நாட்டுப்பாடல்கள் சோர்ந்திருக்கும் விவசாயிக்கு உற்சாகத்தையும் அவர்கள் இல்லக்கிழத்திக்கு மட்டிலா மகிழ்ச்சியையும் தரவல்லன. அந்த நாட்டுப் பாடல்கள் வயலில் உழுகிறவர்கள், நாற்று நடுபவர்கள், அருவி வெட்டுகிறவர்கள், கிணறு வெட்டுகிறவர்கள், தண்­ர் இறைக்கின்றவர்கள், மீன் பிடிப்பவர்கள் ஓடம் விடுகிறவர்கள், வண்டி ஓட்டுபவர்கள் ஆகியோர்தம் தொழிலில் ஈடுபடும்போது சோர்வு நீங்கப் பாடப்படும் பாடல்கள் தொழிற் பாடல்கள் எனப்படும்.

நாட்டுப்புறப் பாடல்

நாடடுப்புறப் பாடல்கள் என்பவை பெரும்பாலும் எழுத்தறிவில்லாத நாட்டுப்புறத்து மக்களிடையே தொன்று தொட்டு வழங்குபவை. இவற்றை இயற்றியவர் யார்? இவை தோன்றிய காலம் எது? என்று அறிதியிட்டுக் கூறமுடியாது. செவி வழியாகத் தலைமுறை தோறும் அவை நீடித்து வந்துள்ளன. இவை தாமாக மலர்ந்து மனம் வீசும் காட்டுமலருக்கு ஒப்பானவை. இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தும் மக்களின் உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடும் தன்மை வாய்ந்தது. நாட்டுப்புறத்து மக்களின் ஆசி, நம்பிக்கை, கனவு, காதல், மகிழ்ச்சி, ஆகிய எல்லாவற்றையும் இவை பொன்னொளி வீசிப் போற்றுகின்றன.

வேளாண்மை

வேளாண்மைப் பாடல்கள் நீட்டம் உழவன் ஏரில் காளைகளைப் பூட்டியதிலிருந்து தொடங்கி விதைவிதைத்தது. அதனை அறுவடைசெய்து கதிரடித்துக் குவித்துக் குதிரில் போடுகின்ற வரை தொடரும் இசையால் பயிர் வளர்கிறது என்ற புதிய ஆராய்ச்சியை சற்று மாற்றி இசைப்பாட்டின்றி நெற்பயிர்களை உழவர்கள் பயிராக்குவதில்லை என்று கூறலாம்.

பொதுவாக உழவர் பலர் பள்ளர்களாக இருப்பார்கள் வயல் வேலைகள் முழுவதும் அவர்களால் செய்யப்பட்டு வரும். அவர்கள் வயலில் வேலை செய்யும்போது பாடிவரும் பாடல்கள் மனத்தைப் பறிகொடுத்து இலக்கியப் புலவர்கள் சிலர் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளுப் பாடல்களை இயற்ற ஆரம்பித்தனர். இச்சிற்றிலக்கியம் தோன்றக் காரணமாக இருந்தது இவ்வேளாண்மை பாடல்களை ஆகும்.

வேளாண் வகைகள்

வேளாண்மைத் தொழில்களான ஏர் பூட்டுதல் ஏர் உழுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், களையெடுத்தல் கதிரறுத்தல் கதிர் அமைத்தல், பொலி குவித்தல், சூடு மிதித்தல், நெல்குற்றம் ஆகிய எல்லாத் தொழில்களும் பாட்டுத்துணையுடனேயே நடைபெறும்.

நாடற்பொருள்

இவ்வேளாண்மைப் பாடல்களின் பொருள்கள் பெரும்பாலும் கழனியை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றுவிடாமல், பண்ணையார், அவர் வாழ்க்கை, உழும்மாடு, நெல்வகை உழவுக்கருவிகள் வேலை செய்யும் ஆண், பெண் இவர்களின் உரையாடல்கள் முதலியவற்றைப் பற்றியனவாகும்.

உழவுப்பாடல்

மாட்டை உழுவன் செல்லமாக செல்லன் என்று அழைத்துச் சொந்தப் பிள்ளையிடம் கொஞ்சுவது போலப் பாடிக் கொண்டு மாட்டிற்கு வரப்பைத் தலையணையாகவும், வாய்க்காலை பஞ்சு மெத்தையாகவும் கூறி? நடக்கும் மாடுகளின் நடையை அன்ன நடையென வருணித்து ஏர் ஓட்டுகின்றான்.

''வரப்பீர் தலைகானி - செல்லனுக்கு

வாய்க்காலோ பஞ்சுமெத்தை

செல்லன் நடந்த நடை - இன்று

சொல்ல வொண்ணா அன்னநடை

இந்த நடை நடந்து செல்லநாம்

எப்போ கரை சேருவதோ''

நடவுப்பாடல்

நடவு நடைபெறும்போது பாடப்படும் பாடலொன்று நல்ல சொல்லோட்டமுடையதாகவும் பாடுபடுவதன் பலன் எப்படியிருக்க வேண்டுமென்றும் கூறுவதாக இருக்கிறது.

''நிறுத்தின திரு அலகு

நின்று பயிர் ஏறவேனும்

சாத்தின திரு அலகு

சாய்ந்து பயிர் ஏறவேனும்

நெல்லா விளையவேனும்

நெடுகளங்கள் ஏறவேனும்

கதிரா விளையேம் - எங்களையா

களஞ்சியங்கள் ரொம்பவேணும்''

இப்பாடலில் உழவர்களின் ஆசையையும் வயலில் எதிர்பார்க்கும் பலனையும் அறிகின்றோம்.

பண்ணையார் பெருமை

பொதுவாக நிலக்கிழார்களைப் பொல்லாதவர்கள் என்றும் உழவர்களைத் துன்புறுத்துபவர்கள் என்றும் சிலர் வருணிப்பர். நாட்டுப்புறப் பாடல்களுள் இக்கருத்தை சொல்லும் சில பாடல்கள் இருப்பினும் ஒரு நாட்டுப் புறப்பாடல் பண்ணையார் பெருமைகளைக் கூறும்பொழுது பின்வருமாறு சொல்லுகின்றது.

''காசாப் படியளந்தால் - கரைந்த

நேரஞ் செல்லு மிண்ணு

நெல்லா படியளந்தால்

நீண்ட நேரம் செல்லுமிண்ணு

அரிசியாப் படியளந்தால்

ஆக்க நேரஞ் செல்லுமின்னு

சோறாப் படியளக்கும் எங்களையா

சுவாமி பண்ணையிது''

இவ்வாறு பாடலில் பண்ணையாரின் கொடை உள்ளம் உழவனால் நன்கு காட்டப்படுகிறது.

இவ்வாறு வேலைக்குத்தகுந்த பொருள் கொண்டு வேளாண்மை பாடல்கள் அமைந்திருக்கும் வேளாண்மைத் தொடர்பான அறுவடைப் பாடல்கள்.

களையெடுக்கும் பொழுது பாடும் பாடல்

பயிர்கள் வளரவொட்டாமல் தடுக்கும் களைகளைப் பிடுங்கி எறிவதனைக் களை எடுத்தல் என்பர். களைகளை களைந்தெரியும் வேலையை ஆண்களும் பெண்களும் செய்வார்கள்.

''கண்ணாடி வளையல் போட்டு களையெடுக்க வந்தபுள்ள

கண்ணாடி பின்னலிலே களையெடுப்பு பிந்துதடி

வெள்ளிப் புடிவளையல் விடலைப்புள்ளை வைகளையல்

சொல்லி அடிச்ச வளை - நல்லா கூழட்டுறப்ப நெல்களைய

கதிரறுக்கும் பொழுது பாடும் பாடல்

முற்றிய கதிர்களை ஆண்களும், பெண்களும் சேர்ந்து அறுப்பார்கள் அறுத்த தாள்களை வரிசையாகப் போடுவார்கள். கதிரறுக்கும் பொழுது பாடும் பாடல்கள் மனதை நெகிழவைக்குமா,

''உன்னரிவாள் என்னரிவாள் ஏலேலோ அன்னக்கிளி

உன்விவச்ச கருக்காவாள் ஏலேலோ அன்னக்கிளி

வெள்ளிப் பிடியரிவாள் ஏலேலோ அன்னக்கிளி

வெடலைப் பிள்ளை கையரிவாள் ஏலேலோ அன்னக்கிளி''

என அரிவாளின் சிறப்பைப் பற்றிப் பாடுகின்றனர்.

''கதிரறுத்துக் கிறுகிறுத்துக்

கண்ணிரண்டும் பஞ்சடைஞ்சி

தூக்கிலாடும் கொத்தளாரே

தூரக்களம் போய்ச் சேர

சுறுப்பறுத்து திரிதிரிச்சி

அன்னம் போல நடைநடந்து

சின்னக் கட்டாக் கட்டச் சொல்லி

சினுங்கினாளாம் அத்தை மகள்''

உலக்கைப் பாடல்

வீட்டைக் கட்டுவதற்குச் சுண்ணான்பை இடித்து அதைக் கொண்டு வீடு கட்டினார்கள் உலக்கையைக் கொண்டு நெல்லைக் குத்தி அரிசியாக்கி உணவு சமைத்தார்கள்.

உலக்கை பிடித்துக் குத்தும்போது களைப்பு தெரியாமலிருக்கப் பாடும் பாடலில் இசைக்காக முத்துத் தில்லாலே என்று பாடுகின்றார்.

''பாதையிலே கல்லுரலாம் - முத்து தில்லாலே

பாடியாடி குத்துநாளாம் - முத்து தில்லாலே

பாடியாடி ஒடுத்துலக்கை - முத்து தில்லாலே

பல்வரிசை நோகுதம்மா - முத்து தில்லாலே

ஆடி ஆடி குத்துராளாம் - முத்து தில்லாலே

அங்கமெல்லாம் நோகுதம்மா - முத்து தில்லாலே

அடி வயிறு நோகுதம்மா - முத்து தில்லாலே''

என்று நெல்குத்தும் போது நோகும் இடங்களைப் பட்டியலிடுகிறாள் ஒரு பெண். கம்பு சோளம் இடிக்கும் போது மாமன் பார்த்ததால் மாவு இடிக்க முடியவில்லை என்கிறாள் உலக்கை குத்தும் ஒரு பெண். வீடு கட்ட அன்னம் இடிப்பது ஒரு சிறந்த வேலையாகும். பெண்களில் ஒருத்தி பாட்டுப்பாட மற்ற பெண்கள் சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி கேட்பதற்கு இனிமையாக இருக்கும் பாரதியார் சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் என்று கூறியுள்ளார்.

படகு ஓட்டுபவர் பாடல்

ஆறுகளின் குறுக்கே படகைத் தள்ளிக் கொண்டு செல்வது ஆபத்தான வேலை. ஆட்களையம் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும்பொழுது படகு கவிழ்ந்தாலும் கவிழ்ந்துவிடும். படகில் மீன் பிடிக்கச் செல்லும்போது தெய்வத்தைப் பாடி வணங்குவார்கள் நீரில் துடுப்புகள் தள்ளும் அசைவுக் கேற்றபடி பாடல்களைப் பாடுகின்றனர்.

நீரில் சென்று மீன் பிடிக்கும் போது படகுகளைப் பாடுவது படகுப்பாடல்கள் ஆகும்.

''தம்மியே தங்கப்பா என்படகு - ஐலசா

தாவுமாம் தண்ணிரில் என்படகு - ஐலசா

பாக்கு மரத்தாலே என்படகு - ஐலசா

பாயுமாம் தண்ணிரில் என்படகு - ஐலசா

தேக்கு மரத்தாலே என்படகு - ஐலசா

தேங்குமாம் தண்ணிரில் என்படகு - ஐலசா

உடுக்கையடிப்போர் பாடல்

உடுக்கை என்ற கருவியை அடித்துப் பாடும் பாடல்களே உடுக்கைப் பாடல்கள் இவர்கள் கோயிலில் பூசாரியாக இருப்பார்கள். இவர்கள் உடுக்கையை அடித்து அம்மனை ஆளின் மேல் வரவழைப்பார்கள்.

குறிசொல்லுவோர் பாடல்

கிராமத்தில் உடலில் நோய் ஏற்பட்டதும் சாமியை வரவழைத்துக் குறிகேட்பார்கள் குறிசொல்லும் கடவுளாக மாடன், கருப்பன், முனியன், காளி மாரி ஆகிய தெய்வங்களையே வரவழைக்கின்றனர்.

துணி துவைப்போர் பாடல்

ஊராரின் துணிகளைத் துவைப்பார்கள் வண்ணார்கள் துணியை வெள்ளாவி வைத்து நாள் முழுவதும் தண்­ரில் நின்று கொண்டு ஓங்கி அடிக்கும் துணி கல்லிலே தாளம் போட வண்ணான் நாவினால் பாடல் பாட ஏரியிலோ, குளத்திலோ, ஆற்றிலோ பெரிய இசைக்கச்சேரியை நிகழ்த்துவான்,

''ஆழத்துறை தனிலே அழகான கல்பதிச்சு

நீளத்துகில் பிடித்து நின்றடிக்கும் வண்ணாரே''

குருவிக்காரர் பாடல்

குறவன் குறத்தி வேட மணிந்து பொருள் பெற்றுத் திருவிழா நடத்துவர். வேடமணிந்த பொழுது பாடும் பாடல்கள் ஆகும். குருவிக்காரர்கள் உணவினைப் பெறச் செய்யும் தொழிலைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

''ததிம்மிதா குடதகா தக

தத்தாரித்த சிட தக - தரிபி

குருவிக்காரர் நாங்களய்யா - இந்தக்

குவலயக் காட்டினில் குடியிருப்போம்

அரிதாகிய புலி சிறுத்தை

செந்தாய் ஒநாய்களை

நாங்கள் பிடிப்போம்''

மீன் பிடிப்போர் பாடல்கள்

காற்று வெயிலெனப் பாராமல் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் தங்கள் களைப்பினைப் போக்கிக்கொள்ளப்படும் பாடல்கள், மீனவர் பாடல்கள் என்றும் அம்பா பாடல் என்றும் கூறுவர்.

''வெகு தொலைவுக்கு வந்துவிட்டோம்

ஆண்டவனே ஐயாவே அரசமன்னா

காலுவனா காலலனா

கரை கொண்டு சேர்க்க வேண்டும்

ஆண்டவனே ஐயவே அரசமன்னா

காவலனா காவலனா''

என்று பாடுகின்றார்.

முடிவுரை

நாட்டுப்புற மக்கள் தொழில்புரியும்போது களைப்புத் தெரியாமல் இருக்க பாடப்படும் இவ்வகைப் பாடல்கள் தொழில் பாடல்கள் எனப் பெயர் பெற்றுள்ளது.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: