23/09/2011

சிறுமியர் விளையாட்டுக்கள் - முனைவர் வே.சசிகலா

1. முன்னுரை - விளையாட்டு விளக்கம்

விளையாட்டு என்பது சிறுவர்க்கு உரியது. ''பாலர்களுக்கு அழகு விளையாட்டு'' என்கிறது ஒரு வடமொழிப் பழமொழி. ''விளையாட்டாவது விரும்பியாடும் ஆட்டு'' என்கிறார் பாவாணர். (தமிழ் நாட்டு விளையாட்டுக்கள், ப.196) ''விளை'' என்பது விருப்பம் என்பதைக்குறிக்கும். ''ஆட்டு'' என்பது ஆட்டம் என்பதாகும் சிறுவர்கள் தாமாக விரும்பி அதில் ஒன்றி ஆடுவது விளையாட்டாகும். மனம் லயித்து ஆடும் விளையாட்டுகள் கிராமப்புறங்களில்தான் இன்றளவும் ஆடப்படுகின்றன. இன்றைய சூழலில் கல்விக் கூடங்களில் ''விளையாட்டு'' என்பதுற்குத் தனி வகுப்புகள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். எனினும் அவை உண்மையில் விரும்பி ஆடும் ஆட்டமா என்பது கேள்விக்குறியே, ஏனெனில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நபர்களுடன் விளையாட வேண்டுமென்ற வரையறை கல்வி நிலையங்களில் காணப்படுகிறது.

இது போலன்றி இயல்பாகப் பலரோ, சிலரோ கூடி தங்கள் விருப்பப்படி விளையாட்டைத் தேர்ந்தெடுத்து விதிமுறைகளை வரையறுத்து, ஓர் ஒழுங்கு முறையை அமைத்துக் கொண்டு வெற்றி தேல்விக்கான வரன் முறைகளைத் தீர்மானித்து ஆடுவதே விளையாட்டாகும். நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் இங்ஙனம் பல விளையாட்டுக்களை விளையாடுகின்றனர். பெரிய நகர்ப்புறங்களிலும் ஓரளவு கிராமச்சூழலிலும் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்படுகிறது என்றாலும் நாட்டுப்புறங்களில் சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டுக்கள் மிகுதி. நாட்டுப்புற விளையாட்டுக்களைச் சிறுவர்க்குரியவை, சிறுமியர்க்குரியவை, இருபான்மையர்க்கும் உரியவை என்று வகைப்படுத்தலாம். இக்கட்டுரை சிறுமியர்க்குரிய விளையாட்டுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டமைகிறது.

2. சிறுமியர் விளையாட்டுகள்

தென்காசி வட்டாரத்தில் தட்டாங்கல், பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, அல்லி மல்லி தாமரை, செங்கல் எடுத்துச் சிறு வீடு கட்டு, டில்லி அக்கா தண்ணிக்குள்ள, அக்கக்கா கிளி செத்துப் போச்சு, உருண்டை உருண்டை கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரை மேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத்தண்ணி இறைப்பேன், ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது, கிச்சு கிச்சுத் தாம்பாளம், வெத்தலப் பெட்டியைக் காணல, வளையல் விளையாட்டு, பானை சட்டி, நொண்டி, ஆபத்துக்கு கை கொடுத்தல், பூச்சொல்லி விளையாட்டு, சூடு சூப்பி, துணி துவைத்தல், அக்கக்கா சிணுக்கோரி, மெல்ல வந்து கிள்ளிபோ ஆகிய சிறுமியர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

2.1. பங்கு பெறுவோர்

கண்டறியப்பட்ட விளையாட்டுகளில் இருவர் ஆடுவது, பலர் ஆடுவது ஆகிய இருபிரிவு விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. பலர் ஆடும் விளையாட்டுகளில் ஒருவர் தலைமை பெறுவதும், இருவர் தலைமை பெறுவதும் காணப்படுகிறது. அதாவது பலர் ஆடிய போதிலும் ஒருவர் ஒருவராக இருவர் இருவராக ஆடும் முறை உள்ளது. சான்றாகப் பாட்டி பேத்தி விளையாட்டைக் குறிப்பிடலாம். பாட்டி பேத்தி விளையாட்டு பலர் ஆடும் வகையானது. எனினும், பாட்டி பேத்தி பங்கினை ஏற்போர் நிகழும் உரையாடல் இவ்விளையாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. சான்றாக.

''பாட்டி பாட்டி என்ன வேணும்

தின்ன வேணும் என்ன தின்ன வேணும்''

என்பதைக் குறிப்பிடலாம்.

தட்டாங்கல், பல்லாங்குழி, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், கிச்சு கிச்சுத் தாம்பாளம் ஆகியன நான்கும் இருவர் ஆடும் விளையாட்டுக்கள். பிற அனைத்தும் பலர் அடங்கிய குழுவினர் ஆடும் விளையாட்டுக்களே. அவற்றுள்ளும் பாட்டிபேத்தி, வெத்தலைப் பெட்டியைக் காணல, கயிறு குதித்தல், பூப்பறிக்க வருகிறோம், ஆகியன ஒருவர் ஒருவராக அல்லது இருவர் இருவராக ஆடும் விளையாட்டுக்களாகும்.

2.2 விளையாடும் முறை

சிறுவர் விளையாட்டுகளினின்றும் பெரிதும் வேறுபடும் சிறுமியர் விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்தோ அல்லது வட்டமாக நின்று கொண்டோ, ஆடுபவையாக உள்ளன. தட்டாங்கல், பல்லாங்குழி, அல்லி மல்லி தாமரை, உருண்டை உருண்டை, அக்கக்கா கிளி செத்துப்போச்சு, கிச்சு கிச்சு தாம்பாளம் வளையல் விளையாட்டு, பானை சட்டி, பூச்சொல்லி, அக்கக்கா சிணுக்கோரி ஆகிய விளையாட்டுக்கள் ஓரிடத்தில் அமர்ந்து ஆடும் வகையின, பூப்பறிக்க வருகிறோம் பாட்டி பேத்தி, செங்கல் எடுத்து சிறு வீடு கட்டு, கல்லெடுத்தல், குளத்துக்குள்ள கரைமேல, கீ கீ ரோஜா, ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன், மெல்ல வந்து கிள்ளி போ, வெத்தலைப் பெட்டியை காணல, துணி துவைத்தல் கயிறு குதித்தல் ஆகியன ஓரிடத்தில் நின்று கொண்டு ஆடும் வகையின, டில்லி அக்கா தண்ணிக்குள்ள நொண்டி, ஆபத்துக்குக் கை கொடுத்தல், ஆகிய விளையாட்டுக்கள் மட்டுமே ஓடி விளையாடும் விளையாட்டுகளாகும்.

சிறுமியர் விளையாட்டுக்கள் விளையாடப்படும் முறையை நோக்கினால் இவை உடல் வலிமையை வளர்க்கும் நோக்கத்திற்காக ஆடப்படுவதில்லை எனலாம். பொழுது போக்குதல், கூடி மகிழ்தல் ஆகியவற்றுக்கே சிறுமியர் விளையாட்டுக்கள் முக்கியத்துவம் தருகின்றன.

2.3. விளையாடுமிடம்

சிறுமியர் விளையாட்டுக்கள் யாவும் அவர்கள் வசிக்கும் இல்லங்களை ஒட்டியே ஆடப்படுகின்றன. அவற்றுள் அமர்ந்து ஆடும் விளையாட்டுக்கள், வீட்டுக்குள்ளே விளையாடப்படும் பலர் கூடி விளையாடுவதற்கு வீட்டு முற்றங்களே போதுமானவை. வெளி இடங்களில் விளையாடப்படும் விளையாட்டுக்களாகிய நொண்டி முதலியனவற்றிற்கும் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு எல்லை வரையறுக்கப்டுகிறது.

''சிறுமியர் வயது வந்த சமூகத்தினருக்குக் கட்டுப்பட்டோர் என்ற முறையில் அச்சமுகத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கும், செல்வாக்கிற்கும், கட்டுப்பட்டவர்கள் பெண் மக்கள். பெற்றோர் கட்டுபாடின்றி அவர்களை தொலைதூரத்திற்குப் போக அனுமதிப்பதில்லை'' (தே.லுர்து, நாட்டார், வழக்காற்றியல் சில அடிப்படைகள் ப.333) எனவே நாட்டுப் புறங்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சமுக ஒப்புதலுடன் நிகழத்தான் வாய்ப்புள்ளன.

2. சிறுமியர் விளையாட்டுகளின் தன்மைகள்

விளையாட்டுக்களில் சிறுமியர் விளையாட்டுக்கள் சிறுவர் விளையாட்டுக்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. சிறுமியர் விளையாட்டுகளிலிருந்து ஓடுதல், சாடுதல், தவ்வுதல், குதித்தல் தொங்குதல் போன்ற செயல்கள் அவற்றையும் சிறுமியர் விளையாட்டில் காண்பதரிது. சிறுமியர் விளையாட்டுக்கள் ஆடும் முறை ஆடும் இடம் போன்றவற்றால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. வருங்காலப் பெண் என்ற அடிப்படையில் கீழ்படிதல் (தலைமை இருக்கும் விளையாட்டுக்களில்) பொறுப்புணர்வு (ஒரு குடம் தண்ணி எடுத்து ஒரு பூப் பூத்தது) சுய கட்டுப்பாடு (கயிறு குதித்தல்) போன்ற பண்புகளை வளர்க்கும் விதத்தில் சிறுமியர் விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. ''கட்டுப்பாடு'' என்பதனை அவை பெரிதும் வலியுறுத்துகின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் அமர்ந்து ஆடுதல், நின்று ஆடுதல் என்ற இருவகைகள் இதனைத் தெளிவாக்குகின்றன. ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல் என்பதே ஒரு வகை கட்டுப்பாடு. நின்னு ஆடும் விளையாட்டுக்களில் கூடப் பலவற்றில் வட்டமாக நிற்க வேண்டும் என்ற விதத்தில் உள்ளது. வட்டம் அமைத்து அந்த வட்டத்தில் நின்றுதான் விளையாடவேண்டும். என்பததைப் பலர் கூடி ஆடும் விளையாட்டுக்கள் உணர்த்துகின்றன. இவ்விளையாட்டுக்கள் வட்டத்தில் நிற்க வைக்கும் கட்டுப்பாட்டை வலியுறுத்துகின்றன.

4. பண்பாட்டுக் கூறுகள்

சிறுமியர்களின் விளையாட்டுக்கள் பண்பாட்டுக்கூறுகள் பலவற்றை எதிரொலிக்கின்றன. சிறுமியர் விளையாட்டுக்களில் பேச்சின்றி ஆடப்படுபவை வெகு சிலவேயாகும். பாடல் பாடிக் கொண்டோ உரையாடிக்கொண்டோ நிகழ்பவையாகப் பல சிறுமியர் விளையாட்டுக்கள் காணப்படுகின்றன. விளையாட்டுக்களில் பாடப்படும் பாடல்களிலும், நிகழும் உரையாடல்களிலும் உறவு முறைகள், அவற்றின் தன்மைகள் குறிப்பிடப்படுகின்றன. சான்றாக உருண்டை உருண்டை விளையாட்டில்,

''அடுப்புக்குள்ள மோதிரம் போட்டா

யார் எடுத்தா?

அம்மா எடுத்தா

அம்மன் கோயிலைக் கும்பிட்டு எடுத்தா

உருண்டே உருண்டே''.

என்ற பாடல் பாடப்படுகிறது. இதில் ''தாய்'' உறவு குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமின்றித் தாய் அம்மனை வழிபடும் வழக்கமும் இடம் பெறுகிறது. கீ கீ ரோஜா என்னும் விளையாட்டில் ''எந்திரி பாப்பா எந்திரி'' என்று பெண் பிள்ளை குறிக்கப்படுகிறாள். மேலும் ''கண்­ரைத்துடை'' என்ற அடுத்த வரி பெண்களுக்குரிய இரக்ககுணத்தைக் குறிப்பிடுகிறது. பாட்டி பேத்தி விளையாட்டு மாமன் உறவினை எடுத்துரைக்கிறது.

''எங்க போனீங்க

மாமா வீட்டிற்கு

என்னென்ன தின்னீங்க

லட்டு பூந்தி மிக்சர் அல்வா

எனக்கு

ஐய்யய்யோ இல்லையே''.

என்ற பாடல் வரிகளில் மாமன் வீட்டுக்குச் செல்லுதலும், திண்பண்டங்கள் தின்னுதலும் உரைக்கப்படுகின்றன. தாய் இறைவழிபாடு பாப்பா, கண்­ர் துடைத்தல் மாமன்-தின்னத் தருதல் என்ற நிலையில் உறவுமுறைகள் அவற்றின் செயல்பாடுகள் ஆகியன உணர்த்தப்படுவது மிக சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு எனலாம்.

சிறுமியர் விளையாட்டுக்களில் பெண்களுடன் தொடர்புள்ள பல பொருட்கள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது. பூக்கள் அணிகலன்கள் ஆகியவை சிறப்பிடம் பெறுகின்றன. அல்லி மல்லி தாமரை என்னும் விளையாட்டில் பூக்களின் பெயர்கள் தாள்களில் எழுதிப் போடப்பட்டு விளையாட்டு நிகழ்கிறது. பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டில் சிறுமியர் பல பூக்களின் பெயர்களைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்டு விளையாடுகின்றனர். உருண்டை உருண்டை விளையாட்டில் மோதிரம் என்றும் அணி குறிக்கப்படுகிறது.

இது தவிரப் பெண்களுடன் தொடர்புடைய பல பொருட்கள் சிறுமியர் விளையாட்டுக்களில் குறிக்கப்படுகின்றன. ஈஞ்சக்காத் தண்ணி இறைப்பேன் விளையாட்டில் மஞ்சள் குறிக்கப்படுகிறது. வெத்தலைப் பெட்டியைக் காணல விளையாட்டில் வெத்தலைப் பெட்டி, நெல், சுண்ணாம்பு ஆகியன குறிக்கப்படுகின்றன. பானைசட்டி விளையாட்டில் சட்டி பானை இடம் பெறவில்லை. எனினும் சிறுபிள்ளைகள் சட்டிகளாகவும், சற்றே பெரிய சிறுமியர் பானைகளாகவும் உருவகப்படுத்தப்படுகின்றனர். பானைசட்டி விளையாட்டு சமையலறையை நினைவூட்டுகிறது. துணி துவைத்தல் விளையாட்டு துவைக்கும் வேலையை நினைவூட்டுகிறது. அக்கக்கா சிணுக்கோரி விளையாட்டு, பெண்கள் தலையைச் சிடுக்கு எடுக்கப் பயன்படுத்தும் சிணுக்கோரியைக் குறிப்பிடுகிறது.

சிறுமியர் விளையாட்டுக்களில் அவர்கள் இல்லம், அதில் அவர்கள் செய்யும் வேலைகள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன என்பதை உணர முடிகிறது. எனவே சிறுமியர் விளையாட்டுக்கள் மிகச்சிறந்த பண்பாட்டுப் பிரதிபலிப்பு என்று குறிப்பிடலாம். இதனைச் சிறுமியர் விளையாட்டுக்களில் பெயர்களும் வலியுறுத்தப்பட்டு அமைகின்றன. குழுவாகக் கூடி விளையாடும் நிலையில் பலபயன்பாட்டுக் கூறுகளை இளம்பிஞ்சு உள்ளங்கள் தாமாகவே உணர்ந்துக் கொள்கின்றன. அதற்கு விளையாட்டுக்கள் வழிவகை செய்கின்றன.

முடிவுகள்

1. நாட்டுப்புற விளையாட்டுக்கள் மூவகையின. அவற்றுள் சிறுமியர் விளையாட்டுக்கள் ஒருவகை.

2. சிறுமியர் விளையாட்டுக்களில் இருவர், பலர் ஆடும் வகைகள் உள்ளன.

3. சிறுமியர் இல்லஞ்சார்ந்த இடங்களில் மட்டுமே விளையாடுகின்றனர்.

4. சிறுமியர் விளையாட்டுக்கள் உடல் வலிமையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. மாறாகப் பொறுப்புணர்வு கீழ்ப் படிதல், கட்டுப்பாடு போன்ற பண்புகளை வளர்க்கின்றன.

5. சிறுமியர் விளையாட்டுக்கள் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள், செய்யும் வேலைகள் போன்று உறவுமுறைகளைச் சுட்டுவதால் அவை மிகச் சிறந்த பயன்பாட்டுப் பிரதிபலிப்பாக விளங்குகின்றன.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை: