இரவு வீட்டுக்குத் திரும்பியபோது சுந்தரமூர்த்தி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்ததை உணர்ந்தார். ஊசிப்போன உணவு, அழுகிய மாமிசம், நாட்பட்ட மலம் போன்றவற்றின் கலவை; அது வீட்டை ஒட்டியிருக்கும் சாக்கடைக் கால்வாயிலிருந்து எழுந்துகொண்டிருக்கலாமென்று நினைத்தார்; அல்லது, செடிகொடிகள் மண்டிய முட்கம்பி வேலியிட்ட எதிரிலுள்ள காலிமனையிலிருந்தும் இருக்கலாம். அங்கு நீண்டகாலத்துக்கு முன்னால் ஒரு நாயின் உயிரில்லாத உடல் வீசப்பட்டிருந்தது. அது யாராலும் அகற்றப்படாமல் பல நாட்களாக அப்படியே கிடந்து நாற்றமடித்து மட்கி மண்ணானது. இப்போது அவருடைய இருசக்கர வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் வீட்டுக்கு எதிரில் வட்டமாக நீர் தேங்கியிருந்தது தெரிந்தது. அவர் தன் வாகனத்தைச் சற்றுத் தொலைவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். நெருங்கிப் பார்க்கையில் நீர் கொஞ்சம் கறுப்பாகவும் கலங்கலாகவும் இருந்தது. அதிலிருந்துதான் கெட்டவாடை அடித்துக் கொண்டிருக்கிறது போலும். வீட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரிலிருந்து உரத்துப்பேசும் குரல்கள் கேட்டன. நீரைத் தாண்டிச் சென்று அவர் இரண்டு மூன்று தரம் அழைப்புமணியை அழுத்தினார். உள்ளே அதன் இன்னிசை பொருத்தமில்லாமல் ஒலித்தது. அவர் திரும்பிவந்து தேங்கியிருந்த நீரைச் சுற்றிப் பார்த்தார். சரியாக வீட்டு வாசல்படி முன்னால் தெருவில் கோலம்போடும் இடத்தில் பரவியிருந்தது. ஒருவேளை, மனைவி ஏதாவது புனிதநாளுக்காக வீட்டைக் கழுவித் தள்ளியதால் வெளிப்பட்டிருக்கும். தினமும் கடமையுணர்வுடன் அழுத்திப் பெருக்குவதால் வீட்டுக்கெதிரில் மட்டும் கொஞ்சம் பள்ளமாகியிருந்தது. சற்று விலகியிருந்து பார்த்தால், தெருவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் பால்போல் பளபளத்தது நீர். அவருக்கு அதிலிருந்து தான் நாற்றம் வருகிறதாவென்ற சந்தேகமேற்பட்டது. கணவரின் வருகையை அறிந்து நடைவிளக்கைப் போட்டு வாகனத்தை ஏற்ற கதவை அகலத் திறந்தபடி அவருடைய மனைவி வெளியில் வந்தாள். தெரு நடுவில், கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு சுந்தரமூர்த்தி குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் வாகனம் அணைக்கப்பட்டு நின்றிருந்தது. கீழே குட்டை போல் கறுத்த நீர் தேங்கியிருந்தது.
சுந்தரமூர்த்தியின் மனைவி உடனே “ஐயோ சாக்கடை!” என்றவாறு புடவையின் அடியைச் சற்று உயர்த்தியபடி படிகளில் இறங்கினாள். அவர் பக்கத்திலிருந்த சாக்கடை போவதற்காகச் சிமெடால் கட்டப்பட்ட கால்வாயைப் பார்த்தார். அது வழக்கமாக பாலிதின் பைகளுடனும் குப்பைகளுடனும் நிலைத்த தோற்றத்தைக் கொடுக்கும். அடியில் கழிவுநீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும். எப்போதாவது துப்புரவுப் பணியாளர் அதன் மேற்புறத்திலிருப்பவற்றை மட்டும் வாரிப்போடுவார். அவர் வெளியிலெடுத்த குப்பை பல நாட்களுக்குத் தெருவெங்கும் இறைந்துகொண்டிருக்கும். அது புறப்பட்ட இடமான கால்வாய்க்கு மறுபடியும் வந்துசேரும். பிறகு குப்பைத் தள்ளுவண்டி வந்து கிடைத்ததை அள்ளிப்போட்டுக்கொண்டு போவதுண்டு. அந்தக் கால்வாய் இப்போது முழுமையாக நிறைந்திருந்தது. “யாராவது குழாயை ஒடைச்சிட்டாங்களா?” என்றபடி மனைவி, சுவருடன் பதித்திருந்த கழிவுநீர்க் குழாயை ஆராய்ந்தாள். அவளுக்கு அக்கம்பக்கத்தவர்களின்மீது எப்போதும் சந்தேகம் நிலவிக்கொண்டிருக்கும். அவர்கள் மந்திரிக்கப்பட்ட எலுமிச்சம்பழங்களையும் மிளகாய்களையும் நடுத்தெருவில் வைக்கிறார்கள். அந்தப் பக்கமாக அவ்வப்போது ஆட்டோக்களும் சிறிய டெம்போக்களும் புயல்களாகப் போய்வரும். அவையும்கூட கழிவுநீர்க்குழாயை இடித்துத் தள்ளிவிட்டிருக்கலாம். “ஒருவேளை செப்டிக் டேங்க் ரொம்பிட்டிருக்குமோ?” என்று மற்றொரு ஐயத்தை எழுப்பினாள் மனைவி. வீடு கட்டியதிலிருந்து இதுவரையிலும் மலத்தொட்டியைச் சுத்தம் செய்யாததால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது; அதை அறிந்துதான் மலம் சுத்திகரிக்கும் பையன்களும் அடிக்கடி முகவரி அட்டைகளை வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகிறார்கள். அடுத்த வீட்டுக்காரர் விளக்கைப் போட்டு எட்டிப் பார்த்துவிட்டுத் தனக்கேன் வம்பு என்பதைப்போல திரும்பவும் விளக்கை அணைத்துவிட்டு உள்ளே போனார். கொஞ்ச தூரம் தள்ளியிருந்த வீட்டுக்கெதிரில் இருட்டில் உட்கார்ந்து சில பெண்கள் கதைபேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டுதானிருப்பார்கள்.