பூமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோலி - பூமணி

சுப்புவுக்குப் பள்ளிக்கூடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி உட்காருவது நிற்பது பாடுவது படிப்பது ஒரே சமயத்தில் ஒண்ணுக்குப் போவது சாப்பிடுவது தண்ணீர் குடிப்பது ஒரே விளையாட்டைச் சேர்ந்து விளையாடுவது, அதென்ன படிப்பு. நெருக்கும் போது ஒண்ணுக் கடிக்கணும். தவிக்கும் போது தண்ணீர் குடிக்கணும். தோணும் போது விளையாடணும். இன்ன விளையாட்டு என்றல்லாம்  இஷ்டத்துக்கு விளையாடணும். வேப்ப மரத்தில் ஏறி ஊஞ்சலாடணும். வகுப்பில் ஒளிந்து தேடிப்பிடிக்கணும். பக்கத்திலுள்ள குமரன்கோயில் மலைக்கு ஓடி கால்வலிக்கப் படியேறி உச்சியில் நின்று ஊரை அளந்து விட்டு உருண்டு திரும்பணும். பள்ளிக்கூடக் கூரை விட்டத்தில் அருவியாக வடியும் குருவிக் கூட்டில் குடும்பம் நடப்பதை மல்லாந்து பார்த்தபடி கண்சொருகணும்.

கால்சட்டைப் பைக்குள் ரெண்டு கோலிக் காய்கள் துருதுருத்து உறுத்தின. அவ்வப்போது தொட்டுப் பிதுக்கி மோதவிட்டு சமாதானப்படுத்தினான். அவை பையை விட்டுக் கெலிக்கு முன் எடுத்து விரலுக்கொரு முறை வில்லாக வளைத்து 'அடி கடக்கோ' என்று தெறித்தால்தான் ஆசையடங்கும். எதிராளி முக்காமுக்கா மூணுதரம் கோலியைச் சுண்டி விரல்மொளி வீங்கணும். தேக்கித் தேக்கி முழங்கை தேயணும்.

ஊரும் மோசந்தான். எந்தப் பயலைப் பார்த்தாலும் ஏதாவது வேலை செய்கிறான். பெரிய வியாபாரி மாதிரி தோளில் பையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தாள் பொறுக்குகிறான். சீசா மூடியென்று கண்டதைக் கிண்டிக் கிளறுகிறான். கடையில் சைக்கிளுடன் மல்லுக்கட்டுகிறான். வண்டி தள்ளிக் கொண்டு கட்டை சுமந்துகொண்டு சைக்கிளில் தண்ணீர்க் குடங்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு... எல்லாம் நடக்கிறது. விளையாட்டைத்தான் காணவில்லை.

சிலநேரம் எல்லா இடத்திலும் விளையாட்டு நடக்கிறது. சாந்துச் சட்டியை சூட்டிக் கையாகக் கைமாற்றும் ஆட்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். கொத்தனார் கரண்டியால் சாந்தை சுவரில் வீசி பேட்மின்டன் விளையாடுகிறார். மம்பட்டி வேலைக்காரர்கள் ஹாக்கி விளையாடுகிறார்கள். சம்பளத்துக்காகச் சண்டை நடக்கும் போது சடுகுடு நடக்கிறது.

தெற்கு ரோடு மைதானத்தில் கொஞ்ச நாளைக்கு முந்தி ஹாக்கிமேச் நடந்தது. தூரத்திலிருந்தெல்லாம் விளையாட வந்திருந்தார்கள். ஊரே திரண்டு பார்க்கப் போனது. அவனுக்கு ஆசை. அம்மாவை அரித்தான். அவள் அசையவில்லை.

''வெளயாட்டுத்தானா சோறு போடுது''

சொல்லாமல் கம்பி நீட்டவும் முடியாது. ''அடே சுப்பு'' என்று வாய் வலிக்கத் தேடுவாள்.

எப்படியோ அவளை அசத்தி ஒருநாள் போய்விட்டான். மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லுகூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்.

கொஞ்சநேரம் சும்மா இருக்க முடியாது. எப்போதும் வேலைதான். காலையில் அக்காவுடன் கட்டையடுக்கணும. சுமந்து போய் தீப்பெட்டியாபீசில் சேர்க்கணும். வெத்துக்கட்டை வாங்கி வரணும். வரும் போது ரோட்டில் கல்லை எத்தி விளையாடக் கூடத் தோதிருக்காது. கட்டைமேல் உட்கார்ந்திருக்கும் குச்சுச் சாக்கு பயமுறுத்தும். கட்டையை இறக்கியதும் பள்ளிக்கூடப் பையைத் தூக்கணும்.

சாயங்காலம் வீடு திரும்பினால் வேலை சரியாக இருக்கும். மளிகைக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வரணும். கூடவே காத்திருந்து இட்லி தோசைக்கு மாவரைத்து வரணும். அந்த நேரத்திலும் விளையாட முடியாது. மாவு கொஞ்சம் குறைந்தால் அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டணுமே.

ராத்திரி அந்திக்கடையில் அம்மாவுக்குத் துணையாக இருக்கணும். பஜாரில் பஸ்டாண்டுக்கு முன்னால் எட்டு மணிக்கெல்லாம் கடை போடணும். சுடச்சுட இட்லி தோசை கிடைக்கும். வடை மொச்சைக் கிழங்கு என்று வகைவகையாக அம்மாவும் அக்காவும் பண்டம் செய்வார்கள். பொடி சட்னி ருசிக்காகவே ரொம்ப ஆட்கள் வருவார்கள். மிளகாய் எள்ளு பருப்பு இப்படி பொடியில் பல ரகம் உண்டு. சட்னி வகையில் மல்லி தக்காளி வெங்காயம் புதினா இன்னும் என்னென்னமோ.

அந்திக்கடை வியாபாரம் குடும்பத்துக்கு ஏந்தலாக இருந்தது. கடை தொடர்ந்து ஓடுவதற்கு எங்கெங்கோ கவனித்துச் சரிகட்ட வேண்டியிருந்தது. யார் யாரோ வந்து ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். அம்மா அக்கறையாகக் கவனித்துக் கொள்வாள்.

அவளே இலை விரித்து எல்லாம் பரி மாறணும். அம்மா இட்லி தோசை சுட்டுக் கொடுப்பாள். நேரம் கிடைக்கும்போது பொடியைக் குழைப்பதற்காக சிறுசிறு பாட்டில்களில் நல்லெண்ணெய் ஊற்றி வைக்கணும். அதோடு ராத்திரிச் சாப்பாட்டையும் முடித்துக் கொள்ளணும். சிலசமயம் லேசாக ஆடிக்கொண்டு பரிமாறு வான். ''அடே சுப்பு'' என்று அம்மா அதட்டுவாள்.

சாக்கடையை மூடியிருக்கும் சிமிண்டுப் பிளேட்டை விலக்கி உண்டு பண்ணிய வழியில் எச்சிலையைப் போட்டுக் கை கழுவணும். தண்ணீர் இல்லையென்றால் அவன் ஓடிப்போய் பம்பில் அடித்து வருவான். அது பெரிய வேலை.

திங்கள்கிழமை சந்தையென்பதால் கூட்டம் அதிகமிருக்கும். உட்கார நேரமிருக்காது. அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்துவிடும். நெருப்பு சூட்டில் கன்றிப் போன முகத்தைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

ரெண்டாவது ஆட்டம் சினிமா முடியும் வரை கடையிருக்கும். அதுக்குப் பிறகு சாமான்களைக் கழுவி எடுத்துவைத்து வண்டியைத் தள்ளிக்கொண்டு போகணும். வீடுபோய்ச் சேருமுன் உறக்கம் சொக்கும். போகிற வழியிலும் விளையாட முடியாது. அப்படியும் வண்டி உருளுவதற்கேற்ப கால்பின்னி நடப்பான். அதையும் அம்மா கவனித்து விடுவாள்.

''ஏம்ல காலு ஒரு தரையில நிக்காதா...''

''நான் வண்டிதான் தள்ளுறென்...''

''தள்ளுற லச்சணத்தப் பாத்துட்டுத்தான வாறென்... நல்லாச் சாப்பிட்டயா...''

அவன் பலமாகத் தலையாட்டிவிட்டு வண்டியைத் தள்ளுவான். மேடான இடங்களில் அம்மா கை கொடுப்பாள். அவர்கள் போகும்வரை அக்கா முழித்திருப்பாள். அப்போதும் அவள் கை சும்மா இருக்காது. அன்றைக்குக் காலையில் கம்பெனியிலிருந்து கட்டை சுமந்து வரும்போது நடுரோட்டில் பசப்பசவென்று மாட்டுச்சாணி குமித்துக் கிடந்தது. கஷ்டப்பட்டுக் குனிந்து பார்க்கையில் காலில் ஒரு குறுகுறுப்பு. ஒரே மிதியில் ரெண்டாக வெட்டினால் சாணி துள்ளிக் குதித்துச் சிதறும் அழகே தனி. கிராமத்தில் அவனுக்கு சாணி வெட்டிச் சண்டீர் என்று பட்டப்பேர் உண்டு. அப்படி மிதித்து ரெம்ப நாளாயிற்று.

வலதுகால் தானாக எழும்பியது. நடுச் சாணியில் ஓங்கி மிதித்தான். உள்ளே ஆணி முங்கிக்கிடந்திருக்கிறது. பாதத்தில் வசமாகக் குத்திவிட்டது. வலிக்கிறுகிறுப்பில் நொண்டி நொண்டி வீட்டுக்குள் வந்தான்.

''இதும் தலையெழுத்தா சொன்னபடி கேக்கமாட்டங்கானே''

அம்மாவின் முந்தானை தினமும் ஈரமானது.

அனாவசியமாக ஆஸ்பத்திரிச் செலவு. அதைச் சரிகட்ட அக்காவுடன் அனேக நேரம் உட்கார்ந்து கட்டையடுக்க வேண்டியிருந்தது. காலில் கட்டவுக்கும் வரை அம்மா கட்டை சுமந்தாள். ஒருத்தருக்குச் சம்பளம் கொடுத்து அந்திக்கடை நடந்தது. அம்மா அவனுக்குச் செருப்பு வாங்கிக் கொடுத்தாள்.

ஒரு லீவு நாளன்று குமரன்கோயில் மலைப்பக்கம் போயிருந்த போது மாட்டுக்காரப் பையன்கள் சுத்தியல் வைத்து பெரிய பெரிய கோலியாகத் தட்டிக் கொண்டிருந்தார்கள். ஓங்கித் தட்டத் தட்ட கல்குழியில் கருங்கோலி எவ்வித் துள்ளி உருண்டையானது. அவ்வளவு பெரிய காய்களை மோதவிட்டால் எருமைச்சண்டை போலிருக்கும். விரல் வலித்தாலும் கவலையில்லை.

ரெண்டு கோலி இருந்தால் கூட்டாளி சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டு விளையாடலாம். தட்டிக் கொடுக்கச் சொல்லலாமென்றால் அவ்வளவு நேரம் காத்திருக்க முடியாது. வீட்டில் வேலை காத்திருக்கும்.

ராத்திரி முழுக்க கனாவில் கோலி கோலியாக உருண்டது. கிராமங்களிலிருந்து பெரியவர்களும், சிறியவர்களும் பாறையளவு கோலிக்காய்களை டவுனுக்கு உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இரும்புத் தடியால் தெண்டித் தெண்டி உருட்டுகிறார்கள். நொடியான இடங்களை மம்பட்டியால் சரிப்படுத்திக் கொள்கிறார்கள். அடை கொடுப்பதற்கு வழியில் கற்களைக் காணவில்லை. எல்லாம் ரோட்டில் அமுங்கி உடைந்து முங்கிவிட்டது. பருத்திமார்க் கூடைகளை குப்புறக்கவுத்தி அடை கொள்கிறார்கள். வரவர அது இரும்புச்சட்டியாக மாறுகிறது. சொரசொரத்த ரோட்டுப் பாதை சமதளமாக விரிந்து வழுவழுத்த ரோடாகிறது. அதனால் சிரமமில்லாமல் உருட்டுகிறார்கள்.

ரோட்டுக்கு இருபுறமும் கரிசக்காடுகளை இரும்பு முள்வேலி வளைத்துப் போட்டிருக்கிறது. வேலிக்குள் வெள்ளைக் கட்டிடங் கள் முழிக்கின்றன. அதைச் சுற்றி என் னென்னமோ மரங்கள் செடிகள், புதுசு புதுசாகப் பூக்கள், சிரிப்பு சிந்தும் பருத்திப் பூவையும் ஆவரம்பூவையும் காணவில்லை.

சில நிலங்களில் அட்டைக்கம்பெனி விரட்டியடித்த கழிவுதான் களை முக்காடு போட்டுக்கொண்டு வெள்ளாமைப் பயிர்களும் செடிகளும் காற்றசைவில் அழுது புலம்புகின்றன. அமர்த்தி ஆறுதல் சொல்ல ஆளில்லை.

நெருங்க நெருங்க நிறைய நிலங்கள் கல்லறைத் தோட்டங்களாகத் தெரிகின்றன. எங்கு பார்த்தாலும் கல் முளைகள், குறுக்கும் நெடுக்குமாகச் சிந்திய செம்மண் பாதைகள், பெரும்பாதைகள் ரோட்டுடன் பின்னியி ருக்கின்றன.

இப்போது ரோட்டில் கோலிக்காய்களை வேகமாக உருட்டுகிறார்கள். அந்த வேகத் திற்கேற்ப ஆணும் பெண்ணும் ஓடி நடக்கிறார்கள்.

கோலிகள் உருளும் நறநறப்பு உறக்கத்திற்குத் தோதாக ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

குடும்பம் கிராமத்திலிருந்த காலமே தனி. அய்யா முக்குரோட்டில் டீக்கடை வைத்திருந்தார். அம்மா காட்டுவேலை செய்தாள். அக்கா வீட்டைக் கவனித்துக் கொண்டாள். அவன் பள்ளிக்கூடம் போனான்.

அப்போதெல்லாம் ராவும் பகலும் விளையாட்டுத்தான். நேரத்துக்கொண்ணு. திகட்டும் வரை ஓயாது.

வீட்டில் சகல விளையாட்டுப் பொருளும் இருக்கும். அம்மாவுடன் திருவண்ணாமலைக் கோயிலுக்கு போயிருந்த போது ஒரு பொட்டணம் தெல்லுக்காய் வாங்கி வந்தான். அதில் பாலாங்காய் பவளக்காய் போர்க்காய் கருப்புக்காய் எல்லாமே உண்டு. எச்சைத் தொட்டு குறிவைத்துத் தெறித்தால் என்னமாய் ஏறி அடிக்கும் தெரியுமா. காணாக் குறைக்கு பானையோட்டிலும் சோடா மூடியிலும் பலவிதமான தெல்லுக்காய் துணைக்குத் தயாராக இருக்கும்.

பம்பரத்தில் பத்து வகைக்குக் குறையாது. அத்தனைக்கும் தனித் தனிக்கயிறு. ஒவ் வொண்ணும் சுண்டிவிட்டால் அப்படி லொங்கும். அது போதாதென்று விளாம்பழப் பம்பரம் வேறு. கும்மென்று அதன் இரைச் சலே தனி.

அதுக்கடுத்து செதுக்கு முத்துக்கல் வரிசையாகப் படுத்திருக்கும். வழலை சாரை விருசு மங்கிணி என்று ஒண்ணொண்ணுக்கும் பேர் உண்டு. தரைக்குத்தக்கபடி எடுத்துத் தட்டிவிடணும். சர்சர் என்று பாய்ந்து புளிய முத்தை விரட்டியடிக்கும்.

அண்ணன் தம்பிகளைப் போல் பெரிசும் சிறிசுமாக கோலிக் காய்கள் பக்கத்தில் குமித்துக் கிடக்கும். எதை எடுத்து அடிக்கலாம் என்பது எதிராளியைப் பொறுத்தது.

பனங்கூத்து சோளத்தட்டை உடைந்த தோசைச்சட்டி சலிப்பு இரும்பு வளையம் இப்படி வண்டிகளும் உண்டு. ஊரைச் சுற்றிப் பார்க்கணுமென்றால்தான் வண்டி பூட்ட வேண்டியிருக்கும். அதுக்கு நிறையக் கூட்டாளிகள் சேரணும்.

எல்லாம் அய்யா கண்ணை மூடியதுடன் சரி. அத்தனை விளையாட்டும் மனசுக்குள் வற்றி வறண்டு வண்டலாகிவிட்டது. அவர் திடீரென்று கதையை முடித்துக்கொண்டார். கடுமையான காய்ச்சலில் மூணு நாள் முனங்கியவர் நாலாம்நாள் மூச்சையும் நிறுத்திக் கொண்டார். குடும்பம் திக்கித் திணறித் தவித்தது.

மூணுமாசம் கழித்து டவுனிலிருந்து வந்திருந்த மீனாட்சியத்தை அம்மாவுக்குத் தைரியம் சொன்னாள். குடும்பத்துடன் டவுனுக்கு வந்துவிடுமாறு யோசனையும் சொன்னாள். அவள் ரொம்ப நாளைக்கு முன் குடிபெயர்ந்து போனவள்.

அம்மா அழுது அழுது ஓய்ந்து அந்தப்படியே முடிவுசெய்தாள். ஊரை விட்டுக் கிளம்பும் போது சேக்காளிகளையும் விளையாட்டுகளையும் விட்டுப் பிரிய அவனுக்கு மனசே இல்லை. ரொம்ப வருத்தமாக இருந்தது. விளையாட்டுப் பொருட்களை சீதனம் கொடுத்துவிட்டு அம்மாவுக்குப் பின்னால் நடந்தான்.

மீனாட்சியத்தை பக்கத்து லைனில் வீடு பார்த்துக் கொடுத்தாள். அவன் மேலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். முதலில் அம்மாவும் அக்காவும் தீப்பெட்டி வேலை செய்தார்கள். பிறகுதான் அந்திக்கடை ஏற்பாடு நடந்தது.

மூணுவருசத்துக்கு மேலாகிவிட்டது. அவன் டவுன்காரானாகிவிட்டான். பொங்கல் பூசைக்கு கிராமத்திற்குப் போனால் உண்டு. ரெண்டு நாள் சேக்காளிகளுடன் குளிக்கலாம் விளையாடலாம். தலைக்குமேல் வேலை கிடக்கிறதென்று அம்மா அடுத்தநாள் கிளம்பிவிடுவாள். மனசுக்குள் குதியாளம் போடும் விளையாட்டு அமுங்கியடங்க ரொம்ப நாளாகும்.

செவ்வாய்க் கிழமை ராத்திரி. இன்றைக்கு ரெண்டிலொண்ணு பார்த்துவிட வேண்டியதுதான். எத்தனை நாளைக்கு கோலிக் காய்களை கால் சட்டையை விட்டு மாற்றிக் கொண்டிருப்பது. உறங்கும்போது தப்பி விடாமல் பொத்திப் பொத்திக் காப்பாற்றுவது. அம்மா கொடுத்த காசில் மிச்சம் வைத்து கடைகடையாக ஏறி வாங்கியது. ரெண்டும் தக்கட்டிப்பழம்போல் கண்ணுக்குக் குளிர்ச்சியான நிறம்.

பஜாரில் கூட்டமில்லை. பஸ் ஸ்டாண்டிலும் குறைவுதான். செவ்வாய்க்கிழமையானதால் பிரயாணம் போகும் ஆட்கள் கம்மி.

அந்திக்கடையில் ரெண்டுபேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். அம்மா ஆவலுடன் அங்குமிங்கும் பார்த்தாள். நிறைய ஆட்கள் வரும் போது அவள் முகத்தில் சந்தோசக் களை அப்படி மினுங்கும். மாவைக் கலக்கி தோதுப்படுத்துவதும் இட்லிக் கொப்பரையைத் திறந்து வேக்காட்டைச் சரிபார்ப்பதும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி கச்சிதமாக இளுகுவதுமாக அவள் கைகள் பம்பரமாகச் சூழலும். முந்தானையை இடுப்பில் சொருக நேரமிருக்காது. அந்த அவசரத்திலும் துட்டுக் கணக்கில் கவனமாக இருப்பாள்.

அவன் அடிக்கடி ரோட்டுப்பக்கம் வந்து பஸ் போக்குவரத்தைக் கவனித்தான். கொஞ்சநேரம் கிடைத்தால் போதும். ஒருமுறை அம்மா பார்த்துவிட்டு அரட்டினாள்.

''ஏய் சுப்பு அங்கென்ன வேல.''

அவனுக்குச் சப்பென்று போயிற்று. கிட்ட வந்ததும் கடிந்து கொண்டாள்.

"கடையெங்க இருக்குது ஒன் காலு எங்க திரியிது. வேலையக் கவனி. பசிச்சா சாப்பிட்டுக்கோ. இட்லி வேணுமா தோச ஊத்தவா...''

''எனக்குப் பசிக்கலம்மா, பெறகு சாப்பிட்டுக்கிறென்...''

ரோட்டுக்கு அந்தப்புறம் லாட்டரிக் கடையில் சீட்டுக்கள் காற்றுக்கு விசிறிக் கொண்டிருந்தன. ராத்திரியிலும் சீட்டு வாங்க ஆளில்லையென்றால் திறந்து வைத்திருப்பானா, பலகாரக் கடைகளில் சேவும் சீனிமிட்டாயும் கோபுரங்கட்டி நின்றன. சீனி மிட்டாய்க் கோபுரங்கள் தகர்ந்து சரிந்துவிடாமல் சுற்றிலும் அப்பியிருந்த தேன்குளவிகள் பிரயாசைப்பட்டுத் தாங்கிக்கொண்டிருந்தன.

ஆட்டோக்காரர்களின் சகடால் சச்சரவுகள் இல்லை. ரெண்டு மூணு ஆட்டோக்கள் மட்டும் அருவமில்லாமல் நின்றிருந்தன. உள்ளே டிரைவர்கள் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல வருமானமில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நேரமிருக்கவே நாலு தோசையும் மொச்சையும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பி விடுவார்கள்.

கடையில் இப்போது ஒருவர் காத்திருந்தார். அவருக்கு இலை போட்டு தண்ணீரும் வைத்துவிட்டான். எண்ணெயும் ரெடி.

அம்மா இட்லியை எடுக்கவும் தோசை போடவும் கொஞ்ச நேரமாகும். அதுக்குள் திரும்பிவிடலாம். அம்மாவை ஓரக்கண்ணால் கவனித்தப்படி மெல்ல ரோட்டுப் பக்கம் நழுவினான்.

பஸ்போக்குவரத்து அவ்வளவாக இல்லை. லாரிகள் மட்டும் விட்டுவிட்டு கூவிக் கொண்டு போனது. சுற்றுமுற்றும் பார்த்து விட்டுத் தயாரானான். அம்மாவையும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.

ஒரு பஸ் வந்து நின்று புறப்பட்டது. உடனே ரோட்டோரம் வெளிச்சமான இடத்துக்கு ஓடி கால்சட்டைப் பைக்குள்ளிருந்து அவரசமாக கோலிக்காய்களை எடுத்து உருட்டினான். முந்திப் போனதைப் பிடித்து மற்றதைக் குறிவைத்து அடித்தான்.

''கடக்கோ.''

இப்போது ஒரு விரலுக்குச் சந்தோஷம் சொல்ல முடியாது. மற்ற மூணு விரலும் துடித்தன.

அடிபட்ட காய் நடுரோட்டுக்கு விரண் டோடியது. அதுக்கு இன்னொரு கொடுப்பு கொடுக்கு முன் ஒரு பஸ் வந்து மறைத்துக் கொண்டது.

''ஓடவா செய்ற... இரு வாறென்..''

அந்த பஸ் கடந்ததும் ரோட்டுக்கு ஓடி விரண்டு போன கா¨யை ஆவலாகத் தேடினான். நல்லவேளைக்கு அது பஸ்ஸின் மிதிக்குத் தப்பிவிட்டது. மேற்கே பார்த்தபடி காயை எடுத்துக் கொண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தான். கிழக்கேயிருந்து வேகமாக வந்த லாரிக்காரனுக்கு நிலைமை பிடிபடவில்லை. பையன் ரோட்டைத் தான் கடக்கிறானாக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டான். திரும்பி வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் பிரேக்கைப் பிடிக்காமல் ஓரேயடியாக மிதித்துவிட்டான்.

தோசையைப் புரட்டிப்போட்ட அம்மா ஏறிட்டுப் பார்த்துக் குரல் கொத்தாள்.

''அடேய் சுப்பு...''

கருப்பு ரோட்டில் அவனது உடல் முழுக்க எண்ணெயில் குழைத்த மிளகாய்ப் பொடியைப் போல் நசுங்கிப் போயிருந்தது. தலைமட்டும் காயப்படாமல் பெரிய கோலிக் காயாக தனித்துக் கிடந்தது.

*****

நன்றி - அழியாச் சுடர்கள்

பேனாக்கள் – பூமணி

அவன் தாத்தா ரொம்பநாளாய் ஒரு பேனா வைத்திருந்தார். அவன் சின்ன வயசாயிருக்கும்போதே அவர் பையில் இருந்தது. கடைசிவரைக்கும் புதிசுமங்காமல் வைத்திருந்தாரே அதுதான் பெரிய காரியம். பையிலிருந்து அபூர்வமாய்த்தான் எடுத்து இரண்டு வரி எழுதுவார். எழுதும்போது கவரைப் பையில் குத்தியாகணும். பேனாவுக்குப் பின்னால் சொருகி எழுதுவதேயில்லை. கை நடுக்கத்திலும் தானாகவே மையடைப்பார். வெள்ளைத் துணி வைத்து மெனக்கிட்டு துடைத்து வெண்கலக் குடம் மாதிரி விளக்குவார்.


இத்தனைக்கும் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து ராம ஜெயம், நாலு பிள்ளையார் சுழிதான் எழுதியிருப்பார்.


தாத்தா கம்பூன்றி போகும் போதும் வரும்போதும் சட்டையில் மினுங்கிய பேனா அவனைத்  தொடர்ந்து உறுத்தியது. எத்தனையோ தடவை அபேஸ் பண்ணத் திட்டம் போட்டிருக்கிறான். பாச்சா பலிக்கவில்லை. அவர் பேனாவை கண்ணுக்குப் படும்படியாய் வைத்தால்தானே. ஒன்று அவர் போட்டிருக்கும் சட்டையில் இருக்கும் அல்லது மேஜை டிராயருக்குள்ளிருக்கும். டிராயர் சாவியையாவது வெளியே வைக்கட்டுமே. அரணாக் கயிற்றில் வாளிப்பு போட்டு வேட்டி மடியில் வைத்துக்கொள்வார். சில சமயம் குளிக்கையில் கழட்டி வைத்துவிடுவார் என்று கொட்டாவி விட்டிருக்கிறான். ஆனால் கைத்தடி மட்டுமே வீட்டு மூலையில் சாத்தியிருக்கும். சாவி அரணாக்கயிற்றில் மணியாட்டும்.


அவர் அசந்த நேரம் பார்த்து சாவியைக் கழட்டி விடலாமா என்றுகூட யோசித்தான். அப்படி அசந்த நேரமே தெரியாது. முக்கால் வாசி கண்ணை மூடிக்கொண்டுதான் இருப்பார். தூங்குகிற மாதிரி இருக்கும். எதிரே பூச்சி பறந்தால்கூட அருவங் கேட்டு விடுவார். எக்குத் தப்பாய் மாட்டிக்கொண்டால் கம்படி வாங்கிகட்ட வேண்டியதுதான்.


அவன் அப்பாவிடமும் ஒரு பேனா இருக்கத்தான் செய்தது. அது தாத்தா பேனா போல் இல்லை. அவன் வைத்திருந்த பேனாவுக்கும் மோசமாயிருந்தது. அவர் பஞ்சுக் கணக்கெழுதி பேனாவைப் படாதபாடு படுத்தியிருந்தார். அப்பா கூட தாத்தா பேனாவில் கண் வைத்திருப்பது பிந்தித்தான் தெரிய வந்தது. ஒரு நாள் பேச்சுவாக்கில் சொன்னார்:


”நயினா ஒங்களுக்கு இனி அந்தப்பேனா எதுக்கு சும்மாதானே வச்சிருக்கீக எனக்குக் குடுத்திருங்க. நாண் கணக்கெழுதிக்கிறென்”.


“ஏம்பா வேறபேனா கணக்கெழுத மாட்டன்னா சொல்லுது”.


அப்பா மறு பேச்செடுக்க வில்லை. தாத்தாவா கொக்கா.


அதற்குப் பிறகு தாத்தா அப்பாவிடம் அடிக்கடி பேனா கேட்க ஆரம்பித்தார்.


“ராமானுஜம் ஒம் பேனாவைக் கொஞ்சம் குடுத்து வாங்கிறயா. என்னதில் மையில்லையோ என்னமோ எழுத்து சரியாவே தெரியலே. கசியிற மாதிரியும் தோணுது.”


அப்பா முணுமுணுத்தவாறே பேனா கொடுப்பார்.


“கசியிதோ புதுசா”


அவன் பாட்டி அதைவிடக் கில்லாடி. கழுத்துப் பிடிக்காமல் நகை போட்டுக் கொண்டு கிறுங்காது. அவன் அம்மாவும் எத்தனையோ பிரயத்தனம் பண்ணிப் பார்த்து விட்டாள். மசியவில்லை.


பாட்டி குளிக்கும்போது நீட்டி முழக்கிக் கூப்பிடுவாள்.


“நாகலெச்சிமி ஓரெட்டு வந்து முதுகத் தேச்சுத் தண்ணி ஊத்தீட்டுப் போயிரு”


அம்மா காசலையாய்ப் போய் உடம்பெல்லாம் தேய்த்து விடுவாள். கழுத்தோரம் தேய்க்க வரும்போது மட்டும் பாட்டி சாதாரணமாயச் சொல்வாள்.


“இனி நான் தேச்சுக்கிறம்மா. நீ போயி வீட்டு வேலையப் பாரு”


திரும்பும்போது அம்மா சத்தம் கேட்கும்.


“அவ்வளவு சாமானவும் கழுத்திலை போட்டுக் குளிக்கீகளே, அடிக்கடி தண்ணி பட்ட என்னாத்துக்காகும் கண்ணி இத்துப்போகாதோ”


அதற்குங் கூட பாட்டி நடுக்கத்திலே பதில் வைத்திருப்பாள்.


“ஆமடியம்மா தண்ணிக்கு இத்துப்போற சாமானும் செஞ்சு குடுப்பான் பாரு எனக்கு”


அம்மா வெளியூருக்குப் போகிற சமயம் நகைகளை இரவல் கேட்டால்கூட பாட்டி கொடுப்பதில்லை.


“காலங் கெடக்கிற கெடையில சாமான் போடவா முடியுது. ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போகவே பயந்து கெடக்குது. இருக்கிறதப் போட்டுட்டுப் போனாப் போதும். ஆரும் கேட்க மாட்டாக”


நல்லவேளை அவன் அப்பா கூடப் பிறந்த அத்தையோ சித்தப்பாவோ இல்லை. அப்பா ஒருவர்தான். எப்படித்தான் அவரைப் பத்துவரை படிக்க வைத்தார்களோ.


தாத்தா சாக நாள் பிடித்தது. சட்டை போட்ட வாக்கில் ஈஸி சேரில் கண்ணயர்ந்திருந்தவர் எழுந்திருக்கவில்லை. சட்டைப்பையில் குத்தியிருந்த பேனாவை அப்பா எடுத்து அவர் பையில் சொருகிக் கொண்டார்.


அவன் கல்யாணச் சோறு தின்றுவிட்டுத்தான் கண்ணை மூடுவேன் என்று அடிக்கடி சொல்லுவார். பாவம், அதுவரை கூட்டில் உயிர் தங்கவில்லை.


அந்த யோகம் பாட்டிக்குத்தான் அடித்தது. அவன் வாத்தியார் வேலைக்குப் போய் கல்யாணம் முடித்து ஒரு மகனைப் பார்க்கும்வரை திடமாகவே இருந்தாள்.


எத்தனையோ முறை உயிர் இந்தா போகிறேன் என்று மிரட்டி முடக்குவாள். இரண்டாவது நாள் புடைத்தெடுத்த மாதிரி எழுந்து வெயில் காய்வாள்.


அம்மாவும் பீ மோத்திரம் எடுப்பதிலிருந்து சகல வேளைக்கும் சளைக்கவில்லை. அவன் மனைவியும் அம்மாவும் நான் முந்தி நீ முந்தி என்று பணிவிடை செய்தார்கள். காணாக்குறைக்கு அயலூரிலிருந்து அவன் அக்கா வேறு வந்து இருப்பு போட்டுக் கவனித்தாள்.


கடைசியில் தாமதமாய்த்தான் மூன்று பேருக்கும் பாட்டியைச் சுற்றி உட்கார்ந்து அழ வாய்த்தது. மயானத்திலிருந்து அப்பா கொண்டுவந்த பாட்டியின் நகைகளை அம்மா வாங்கிக் கொண்டாள். அவ்வளவையும் மறுநாளே மஞ்சள் தேய்த்துக் கழுவி அழுக்கெடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டாள்.


அவன் அக்கா அதற்குப் பிற்கு அவ்வளவாய் வீட்டுக்கு வருவதில்லை. முக்கியமான காரியத்திற்கு வந்தாலும் அவன் மனைவியுடன்தான் பெரும்பாலும் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்படுவாள்.


தாத்தா பேனாவை அப்பா வைத்துக் கொண்டது அவனுக்குக் கூட வருத்தந்தான். வெளியே எவ்வளவோ நல்ல பேனா விற்கத்தான் செய்கிறான். எல்லாம் தாத்தா பேனாவாக முடியாது. என்னேரமும் தங்கமாய் மினுங்கும். மூடியெது கீழ்ப்பாகமெது என்று கண்டுபிடிக்க முடியாதபடி திரடில்லாத வழவழப்பு. பேப்பரில் வைத்தால் பொரிந்து தள்ளும். முந்தி ஒருநாள் எழுதிப்பார்த்தது. வைத்திருந்தால் அப்படிப் பேனா வைத்திருக்கணும்.


பள்ளிக்கூடம் போய் கொஞ்ச நாளில் அவன் மகன் பேனா கேட்டு அடம் பிடித்தான்.


ஒரு பழைய பேனாவை எடுத்து ஒக்கிட்டுக் கொடுத்தான். அது மறுநாளே இருந்த இடத்தில் வாய் பிளந்து கொண்டு கிடந்தது. அவன் வைத்திருந்த பேனாவையே கேட்டு அழுதான்.


அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அப்பா மேஜைப்பக்கம் கைகாட்டி விட்டான். அவ்வளவுதான் அவர் குளிக்கப் போன சமயம் பேனாவை எடுத்து தரையில் எழுதி பின்னால் வளைத்து நெக்கைத் திருகி மறை கழண்டு ஆட்டம் குளோஸ். தாத்தாவைப் போல் அப்பாவுக்கு முன்னெச்சரிக்கை கிடையாது.


அப்பா பையனை பிடித்து கண்டபடி காதைத் திருகி வீங்கவைத்த பிறகும் கோபம் தணியவில்லை. எல்லோரையும் திட்டித் தீர்த்தார்.


“வீட்ல புள்ளையா பெத்து வச்சிருக்குதுக. கால சனியனா எறங்கியிருக்கானே..ஆகமான பேனா போச்சே.”


“என்னமோ பேனா போனதுக்குப் போயி புள்ளய இந்தப்பாடு படுத்தியிருக்கீகளே. இதுல்லனா வேற ஒண்ணு வாங்கிக்கிறது.”


“ஒனக்கென்ன தெரியும் அறிவு கெட்டவளே. இப்படிப் பேனா எவங்கிட்ட இருக்கும்.”


அவனும் அவன் மனைவியும் ஒன்றுமே பேசவில்லை. பிறகும் இரண்டு மூன்று நாட்கள் பையனை அவர் கண்ணில் படவிடாமல் வைத்துக்கொண்டதோடு அவன் பேனாவைப் பத்திரப் படுத்தவும் செய்தான்.


தாத்தா பேனாவுக்கு எங்கும் நெக்குக் கிடைக்கவில்லை. அவன் கேட்டான்.


“அத எங்கிட்டக் குடுந்திருங்களேம்ப்பா. எப்படியாச்சும் நெக்குச் சம்பாரிச்சு எழுக்கிறேன்.”


“நீ சம்பாரிச்சு எழுதிக் கிழிச்சது போதும். அது எங்கிட்டயே இருக்கட்டும்.”


அவர் வேறு பேனாவை எழுதப் பயன்படுத்திய போதும் தாத்தா பேனாவை ஒரு பார்வைக்காக பையில் குத்தில் கொள்ளத் தவறுவதில்லை.


ஒருநாள் அவன் பள்ளிக்கூடன் கிளம்பிக்கொண்டிருந்த போது பையில் பேனாவைக் கவனித்து விட்ட அப்பா கேட்டார்.


“நல்லா பேனாவா சம்பாரிச்சிருக்கயே. இண்ணக்கி ஒருநாள் எழுதக்குடேன். என் பேனாவ ரிப்பேருக்குக் குடுத்திருக்கென்.”


அவனும் தயங்காமல் சொன்னான்.


“இது ஏற்கனவே ரிப்பேருப்பா. சும்மா கெடந்துச்சு. இண்ணக்கித்தான் ரிப்பேருக்குக் குடுக்கலாம்னு எடுத்திட்டுப் போறென்.”


நாலாவது நாள் அவன் ஒரு விளாரை எடுத்துக்கொண்டு மகனை விரட்டி விரட்டி அடித்தான். எல்லோரும் பிடிக்கப் பிடிக்க அடித்தான். அவன் அப்பா மிரண்டு போய் கண்டித்தார்.


“அடே ஒனக்கென்ன வந்திருச்சு இப்ப. புள்ளையா என்னன்னு நெனச்ச. மடத்தனமா அடிக்கயே.”


அவன் வயிற்றெரிச்சலில் கத்தினான்.


“அவன் பண்ணீருக்கிற காரியத்துக்கு முதுகுத் தொலிய உரிச்சாக் கூடக் காணாது. அருமையான பேனாவ ஆணிவேற அக்கு வேற கழட்டிப் போட்டுட்டானே பாவி.”


“பெரிய பேனா. போடா போ. அண்ணைக்கே ரிப்பேர்னு சொன்னயே. அது போயித் தொலஞ்சா இனியொண்ணு வாங்கிக்கயேன்.”


அவன் மகன் அவருக்குப் பின்னால் ஒளிந்து நின்றிருந்தான்.


***


நன்றி : ’தேடல்’( ஜூன் 1978)


நன்றி - அழியாச் சுடர்கள்

நிலை - பூமணி

வழி நெடுக நினைவுகளைத் தூவிக்கொண்டே போனான். கனமேறும் இருட்டில் துல்லியப் படாத தார் ரோட்டு வளைவுகளை அடிக்கடி லாரி விளக்குகள் தேடிப் பாய்ந்தன.

மூத்த பையன் அவன் விரலுடன் கொக்கி மாட்டிக் கொண்டு நடந்தான். ஓரத்தில் லூசி கொடுங்கையிலும் வயிற்றிலுமாக அசைந்தாள். பாதையிறக்கத்தில் சர்ச் டவரின் சிலுவை ஜோதி பக்கத்து முகடுகளில் பரவியிருந்தது.

காலையில் பாஸ்டர் திடாரென்று வந்துவிட்டார். சொல்லிக் கொண்டு வந்திருக்கலாம். அவனுக்கு ஒண்ணுமே ஓடவில்லை. வாரம் மூணு முறை பார்க்கும் பாஸ்டர் தான். என்றாலும் இப்படி எதிர்பாராமல் வீடுதேடி வந்தது புதுசு. நல்ல வேளை பழைய சோற்றை கொஞ்சம் முந்தியே சாப்பிட்டு முடித்திருந்தான். சிறு பிளேட்டில் ஊறுகாயின் சுவடுகூட இல்லை. கீழே பருக்கைகளும் சிந்தியிருக்கவில்லை.

'என்ன மிஸ்டர் ஜேக்கப் எப்படியிருக்கீங்க. '

வராண்டாவில் நாலு செருப்புக்களைத் தாண்டி பாஸ்டர் நுழையும்போதே எச்சுப் பிளேட்டைக் கவனித்து விட்டுத்தான் கட்டிலில் உட்கார்ந்தார். உட்கார்ந்த பின்னும் அங்கி கரண்டைக் கால்வரை மூடியிருந்தது. அதற்குக் கீழே ஷ்உ பளபளப்பாக.

அவன் ஓடிப்போய் சட்டை மாட்டிக் கொண்டு வந்து பாய் போட்டுக் கீழே உட்கார்ந்தான். லூசி கர்ப்பக் கிறக்கத்திலும் வெளிறிய ஸ்தோத்திரம் சொல்லிவிட்டு பிளேட்டை அப்புறப்படுத்துவதில் அவசரப்பட்டாள். இந்த நாலு வருசமாக பாஸ்டரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை அவள். கருப்பும் வெள்ளையுமாகக் கலந்த மயிர்களை எண்ணெய் மினுங்க வாரிவிட்டு புருவங்கள் தேவ இறக்கை மாதிரி படிந்தவாக்கில் எதிலும் கூர்மைப்பட்டு.. இப்படிப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்ததில்லைதான்.

'சும்மாதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தென். ஒங்களுக்கு இன்றைக்கு ஆபீஸ் உண்டில்லையா ஜேக்கப். '

பேச்சுக்கொருக்க கேண்டில் விரல்களை மூடிமூடி விரித்தார்.

அது முக்கியமில்லை என்பது போல் அவன் சொன்னான்.

'பெறகு போயிறக்கிறலாம். '

'ஓ டைம் இருக்கு அப்ப. '

அவர் பார்வை ஷெல்பில் பைபிளின் சாயமடித்த பேப்பர் நுனியில் விழுந்தது. வாசலுக்கு மேல் ஏசுவின் இருதயம் திறந்த வாக்கில் ரத்தக் குழம்பாக படம் தொடங்கியது. அதற்குக் கீழே ரெண்டு வசனங்கள் தெளிவாகத் தெரிந்தன.

'கொழந்தைகளை எங்க காணும். '

லூசிக்கு முகம் களைப்பை மறந்திருந்தது.

'மூத்தவன் ஸ்கூலுக்குப் போயிருக்கான். பொண்ணு தூங்குதுங்கய்யா '

'காலையிலுமா தூக்கம். '

பாஸ்டர் முகம் மலர்த்தினார்.

'தூங்கித்தான் வீட்ல வேல பாக்க முடியிது. '

லூசி சுவர் மூலையில் பிடரியை உரசி கண்ணை மூடிச் சிரித்தாள்.

அவளுக்கு உள்ளூர சந்தோசம். முந்தியெல்லாம் எதிர்த்த வீட்டிற்கு பாஸ்டர் அடிக்கடி வந்தாலும் இந்தப் பக்கம் வருவதேயில்லை. அங்கே வராண்டாவில் சேர் போட்டு அல்போன்சும் அவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். சில சமயம் மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டுக் கூடச் செல்வதுண்டு. அவனாக அங்கு போய் ரெண்டு வார்த்தை பேசினால் கொஞ்ச நேரம் கூட உட்காரலாம்.

அல்போன்சுக்கு சொந்த வீடு. எல்லாவற்றிலும் நல்ல வசதியாக இருக்கும்.

பாஸ்டருக்கு ஒரு லிம்காவாவது வாங்கிக் கொடுக்கலாமென்றால் கடைகளும் பக்கத்தில் இல்லை. பஜாருக்குப் போய்த் திரும்ப எப்படியும் அரை மணி நேரமாகும். பாட்டிலோடு தருவானோ என்னமோ அதுவரை பாஸ்டர் காத்திருக்கணும். '

'பாஸ்டர் ஏதாச்சும் சாப்பிடுறீங்களா. '

'நோ தாங்ஸ். எல்லாம் முடிச்சிட்டுத்தான் வறேன். எனக்காக ஒண்ணும் சிரமப்பட வேண்டாம். '

என்ன இருந்தாலும் வீட்டுக்கு வந்த பாஸ்டருக்கு செய்தனுப்பத்தான் வேணும். ஞாயிறுகளில் சில வீடுகளுக்கு மொத்தமாக பிரேயருக்குச் சென்றால் என்னமாகச் செய்கிறார்கள். அல்போன்ஸ் வீட்டில் எல்லாவற்றுக்கும் மேல். நானூறு சம்பளத்தில் எப்படித்தான் செலவு செய்ய முடிகிறதோ. கோயிலுக்குக் காணிக்கை கொஞ்சமா போடுகிறார்கள்.

எல்லாரையும் ஒரு நாள் பிரேயருக்கு அழைக்கலாம். செலவு பெரிசில்லை. வாடகை வீடு போதுமானதாக இராதென்றாலும் ஒரு நாளைக்குச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இதுவரை யாரும் சும்மாகூடக் கேட்டுப் பார்த்ததில்லை. தானாக எப்படி அழைப்பது மற்ற வீடுகளுக்கென்றால் பாஸ்டரே புரோகிராம் போட்டு விடுவார். ஒரு வேளை இனிமேல் சொல்லுவாரோ என்னமோ.

பாஸ்டர் இருமினார்.

'நம்ம சபையிலருந்து கோயிலுக்கு காம்பவுண்டு கட்டலாம்னு திட்டம். கர்த்தர் பேரால அந்தக் காரியத்த நல்லாச் செய்யணும். என்ன சொல்றீங்க ஜேக்கப். '

'கண்டிப்பாச் செய்யணும் '

உள்ளே தொட்டிலில் தூங்கிய குழந்தை அழுதது. லூசி நகன்று போய் இழுத்துவிட்டு வந்து பழைய இடத்திலேயே உட்கார்ந்தாள். அவள் வந்த பிறகே பாஸ்டர் சொன்னார்.

'எல்லாருமாச் சேந்து காணிக்க குடுத்தா இதுல தடையிருக்காது. '

'அப்படித்தான் அத முடிக்கணும். '

'பெரும்பாலான வீட்ல சொல்லீட்டென். சபைக்காரங்க எல்லாம் இந்தப் புனிதப் பணிக்கு ஆதரவு தந்தாச்சு. இருநூறு முன்னூறுன்னு தராங்க. அல்போன்ஸ் நூறு ஈவினிங் சர்வீசுக்குக் கொண்டு வந்து கொடுக்கிறதாச் சொல்லீட்டாரு. மனசு எவ்வளவு ஆனந்தமாயிருக்கு தெரியுமா. நீங்களும் இயன்றதக் குடுங்க கர்த்தருக்கு. '

பாஸ்டர் லூசியையும் பார்த்தார். அவள் அவன் முகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

'அல்போன்ஸ் வீட்ல நூறா. அப்ப நானும் அவ்வளவு தந்துறென் ஈவினிங். '

இப்போது அவன் லூசிக்குத் திரும்பினான். அவள் சமையலறையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

'அப்ப நான் வரட்டுமா ஜேக்கப் தாங்க்ஸ். '

பாஸ்டருக்கு முன்னால் அவர்கள் மண்டியிட்டு ஜபித்தார்கள். அவரும் ஜபம் செய்து ஆசீர்வதித்து விட்டுப் போனார். அவர் கிரிச் கிரிச்சென்று போன பிறகும் அவரது சிரிப்பு சிறிது நேரம் வீட்டுக்குள் இருந்தது.

கோயில் மணியின் ஒலித்திண்ணமும் உள்ளதிர்வுத் தேய்வும் கலந்து மெல்லப் பரவியது.

பையில் ரூபாய்த் தாள்களைப் பிதுக்கிப் பார்த்துக் கொண்டான். அதை எடுத்து வரவே பெரும்பாடாகப் போயிற்று.

அவளுக்கென்றால் செயினுக்கு வட்டி கட்ட வேண்டுமென்று. அதுக்காகவே சண்டை போட்டு இந்த மாதம் எல்லாச் செலவுகளையும் சுருக்கி தனியாக நூறு ரூபாய் எடுத்து வைத்திருந்தாள். அவள் அப்பா வந்திருந்தால் இதற்குள் அது அடகுக் கடைக்குப் போயிருக்கும். அவர்தான் அடகு வைத்துக் கொடுத்து சீட்டையும் கொண்டு போனார். போன கிறிஸ்துமஸ்ஸ்உக்கு துணிமணியெடுத்து பெரிசாகக் கொண்டாடியது. இனி இந்த வருசப் பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மாச ஆரம்பத்திலேயே தசம பாகம் வேறு கொடுத்தாயிற்று.

பணத்தை எடுத்துக் கொடுக்க அவளுக்கு மனசே இல்லை. அதற்காக அடுத்தவனெல்லாம் கொடுக்கும்போது சும்மா இருக்க முடியுமா. பாஸ்டரிடம் உறுதி சொல்லிவிட்டு சும்மா போனால் நாளைக்கு சபையில் மதிக்க மாட்டார்கள்.

சர்ச்சுக்குள் சர்வீஸ் ஆரம்பமாகியிருந்தது. மண்டியிட்டு ஜபிக்க லூசி கஷ்டப்பட்டாள். முக்காட்டை லேசாக விலக்கி விட்டுக் கொண்டபோது மயிரொட்டி சிலுசிலுவென்று காற்று விசிறியது.

அவன் சுற்றிலும் திரும்பிப் பார்த்தான். அல்போன்ஸ் குடும்பம் இன்னும் வந்திருக்கவில்லை. முந்திப் போய் பாஸ்டரைப் பார்த்து காணிக்கையைக் கொடுத்துவிட்ட எண்ணினான்.

ஆர்மோனியத்தின் இசை சுண்டிச் சுண்டி உள்ளே நிறைய குரல்கள் ஒண்ணுக்கொண்ணு துணை பிடித்து ஏறின.

'புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே - ஆதிநாதா ஜோதிநீ

புத்திதா நான் புதிதாய் உய்யவே. '

ஜபக் குரல்கள் கேண்டில் ஜோதியின் விளிம்பைத் தீண்டி எங்கும் உள்நாதமாக வியாபித்துக் கலந்தன.

பாஸ்டர் நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டு பைபிளைத் திறந்தார்.

'1 கொரிந்தியர் அதிகாரம் 16 ' என்று ஆரம்பித்து வசனங்களை வாசித்து முடித்த பின் திருச்சபை ஏற்கவிருக்கும் புனிதப்பணி பற்ரி பிரசங்கத்தில் ரெம்ப் நேரம் சொன்னார். இப்போது அல்போன்ஸ் குடும்பம் பின்னால் உட்கார்ந்திருப்பதை நோட்டத்தில் கவனித்தான் அவன். லூசியிடம் அதைச் சொன்னான். அவளுக்கென்றால் வயிற்றுப் பாரத்தை முகத்தில் சுளிக்கவே சரியாக இருந்தது.

நூறு ரூபாயைக் காணிக்கை கொடுத்து பாஸ்டரின் ஆசீர்வாதத்துடன் திரும்பியபோதுதான் நிம்மதி அவனுக்கு. சர்வீஸ் முடிந்து வருகையில் வாசலோரம் அல்போன்ஸ் நின்றிருந்தார்.

'ஹலோ சார் இன்னும் காணிக்கை குடுக்கலயா. நாங்க குடுத்தாச்சு. '

அல்போன்ஸ் பட்டும் படாமல் சிரித்தார்.

லூசி கைக்குழந்தையை அவனிடம் மாற்றினான். இருவரும் ஆஸ்பத்திரி மேடேறுகையில் சர்ச் மணியின் ஜபநாதம் அதற்குள்ளேயே கரைந்து கொண்டிருந்தது. முன்னால் சென்ற மூத்தபையனைப் பார்த்து லூசி சொன்னாள்.

'அடே பாதையப் பாத்து மெதுவா போடா. '

'என்ன கட்டில்ல மொடக்கியாச்சு ஆபீசுக்குப் போகலயா. '

'போகணும். '

'அப்பக் கெளம்ப வேண்டியதுதான நேரங்காணாதா. '

'இண்ணைக்கு கேம்ப் போகணும் திருனவேலிக்கு. '

'அப்படியா... பிள்ளையப் பிடிங்க ரெண்டு வெறகெடுத்து அடுப்பில வச்சிட்டு வந்துறென். '

லூசி இடுப்பில் கை வைத்துக் கொண்டாள். அவன் பிள்ளையை வாங்கிக் கட்டிலில் இருத்தினான். அது சிணுங்க ஆரம்பித்தது.

'இந்தா பிடி இவள. நம்மகிட்ட ஆகாது. '

குழந்தையை இறக்கிவிட்டு எதிரே பார்த்தான். அல்போன்ஸ் சைக்கிளில் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ரெண்டு குழந்தைகள் வழியனுப்பின.

உள்ளிருந்து லூசி சொன்னாள்.

'அப்பா மேல அவ்வளவு பாசம். '

'ஆமா இப்ப அது ஒண்ணுதான் பாக்கி. '

'ஏன் பேசமாட்டாங்க. '

'மொதல்ல நான் போயித் தொலையணும். '

'எந்தப் பணம் வச்சிருக்கீங்க கனமாத் தூக்கிட்டுப் போக. '

'நீயொண்ணும் கேட்டு வாங்கீட்டு வர வேண்டாம். '

'இல்ல அப்படியும் சொல்லுங்களேன். எதிர்த்த வீட்ல வாயக்காட்டி வாங்கி வான்னு. அவங்கள விட நம்ம பணக்காரங்க காணிக்கைக்கு நூறத் தூக்கிக் குடுக்கொம். '

'இப்ப அதுக்கென்ன. அவங்க எவ்வளவு குடுத்தாங்களாம். '

'கேட்டுப்பாருங்க தெரியும். '

'என்ன. '

'ஐம்பது குடுத்திருக்காங்க. நீங்கதான் என்னமோ பெரிசாக் குடுத்திட்டாங்க. கோயில்லதான் ஏற்கனவே வேண்டிய பணம் இருக்குதாமில்ல. சரி நம்ம குடுத்து ஒருமாசம் ஆகுதில்லையா. அதுக்குப் பெறகும் எத்தனையோ கூட்டத்துல காணிக்கை காணிக்கன்னு சொல்லீட்டுத் தான் இருக்காங்க. '

'பணம் எவ்வளவு இருக்குதுன்னு இவளுக்குத்தான் தெரியும். '

'இல்ல நீங்கதான் கணக்குவழக்கு பாத்துட்டு வந்தீங்களாக்கும். ஒங்களத்தான் கிட்ட அண்ட விடமாட்டங்கிறாங்ளே. ஒயர எட்டி அந்தக் குத்துச் சட்டிய எடுங்க. அரிசியரிக்கணும். '

'ஒனக்கு ஒண்ணுந் தெரியாது. பாஸ்டரப் பத்தி அப்படியெல்லாம் நெனைக்காத. இப்பக்கூட வின்சென்ட் பையன் கிட்ட லட்டர் குடுத்தனுப்பியிருக்கென் ஒரு பத்து ரூவா பணங்கேட்டு. '

'அப்படியா வெசயம். இது எத்தன நாளா. '

'இண்ணைக்குத்தான். அவன் இப்ப வந்துருவான். கர்த்தர் அண்ணண்ணைக்குக் குடுக்காமலா விட்ருவார். '

வராண்டா வரை வந்து லாந்தி பாமாலையின் கண்ணியொன்றை முனகினான்.

'உம் சிலுவைப் பொருட்டே யாவும் நஷ்டம் எனவே... '

லூசி கட்டிலோரம் குழந்தையைப் போட்டு முதுகில் தட்டித் தூங்கச் செய்தாள்.

சற்று நேரத்தில் வின்சென்ட் வந்தான். அவனுக்கு சந்தோஷமாயிருந்தது. கொடியில் சட்டையையும் ஜன்னலில் சீப்பையும் பார்த்தான்.

'என்னடா சீக்கிரம் வந்தாச்சு. பாஸ்டர் இருந்தாரா. '

'இருந்தாரு. '

பேச்சோடு கால்ச்சட்டைப் பைக்குள்ளிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான். லூசி மெல்ல இமையுயர்த்திய போது அவன் உதட்டில் சிரிப்பு நீண்டிருந்தது.

'லெட்டரக் குடுக்கவும் என்ன சொன்னாரு. ஒடனே பணங் குடுத்துட்டாருல்ல. '

பையன் தயங்கிச் சொன்னான்.

'ஏன் அவரு வரமாட்டாரோ. லெட்டரெல்லாம் கொண்டு வரக் கூடாது. அடுத்த மாதம் இத மறக்காம கையில் குத்துறணும்னு சொன்னாரு. '

'அப்படியா சரி நீ போ. '

லூசி இன்னும் குழந்தையைத் தட்டிக் கொண்டிருந்தாள். ஜன்னலில் கிடந்த சீப்பை யெடுத்து வறட்வறட்டென்று சீவினான் அவன். வேட்டியை கொடியில் வீசியெறிந்துவிட்டு இன்னொண்ணு எடுத்துக் கட்டிக் கொண்டான். இது அதை விடக் கொஞ்சம் அழுக்கு கம்மியாக இருந்தது.

'ஏன் மண்ணா உக்காந்திருக்க. போயி தண்ணி கொண்டு வா. நான் கெளம்பி தொலைக்கணும். '

'எல்லாத்துக்கும் நான் ஒருத்தி இருக்கன்ல கொட்டித் தீத்துக்கிறதுக்கு. '

லூசி முழுக்க ஏறிட்டுப் பார்த்தாள். முகத்தில் கோவம் அழுகையை மீறியிருந்தது. அப்போதும் எழுந்திருக்க முயன்று கொண்டிருந்தாள்.

***

தொலைவு - பூமணி

பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று.

'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். '

ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள்.

அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான்.

'ஏலே சும்மா இரியேம்லே கையக்கால வச்சிட்டு. '

ரோசம்மா முறுவலித்தாள்.

'என்னதான் பேசி முடிப்பாவளாம். '

கல்யாணம் முடிந்தது நேற்றுப் போலிருக்கிறது. அதற்குள் ரெண்டு பிள்ளைக்காரனாகி விட்டான். மூத்தவள் ஏழெட்டு வருசத்தில் உட்கார்ந்து விடுவாள். பெண்ணுஞ் சரி பீர்க்கங்கொடியுஞ்சரி. சின்னவனைப் பற்றிக் கவலையில்லை. என்றைக்கிருந்தாலும் சம்பாதிப்பவனாயிற்றே.

அந்தோணி திடப்பட்டு விட்டான். மீசை புருவமெல்லாம் அய்யாவைப் போல் திரட்சியாக. ஏன் கன்னங்கூட ஒட்டிப் போய் அதே அச்சுதான். இதெல்லாம் பார்க்க அவர் இருக்கணும் இன்னேரம். வயலெட் கெட்டிக்காரியாக்கும். புருசனை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பந்தம். வசதிக்குக் குறைவில்லை. நிறைய நகை போட்டார்கள். ரொக்கம் வேறு கொடுத்தார்கள். இப்போதும் வருசத்துக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் அவள் வீட்டிலிருந்து அனுப்பி விடுகிறார்கள். அவளது வீட்டிற்குப் போய் ரொம்ப நாளாயிற்று. கல்யாணத்திற்குப் பிந்தி ஒரு நாள் போனது. சம்பந்தகாரர்களும் வருவதில்லை. அந்தோணி வந்தால்கூட இவன்தான் அங்கு போகணும். அப்படியொரு வழக்கம் ஏற்பட்டுப் போனது.

என்னமோ பிள்ளை குட்டிகளுடன் அவன் நன்றாக இருந்தால் சரி. அவனைப் படிக்க வைக்க கொஞ்சச் செலவா ஆயிற்று. விவசாயத்தில் வந்த வரவையெல்லாம் அவனுக்குத்தான் போட்டது. அவன் அய்யாவுக்கென்றால் ஒரே கிறுக்கு. எப்படியும் படிக்கவைத்து விட வேண்டுமென்று. கடைசியில் அவன் வேலைக்குப் போவதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கமலைத் தனத்தில் மாட்டுக்குத் தும்பறுந்து நிறை கூனையுடன் மோக்கால் மோதியதென்று படுத்தார். மனுஷனை அப்படியே அமுக்கிவிட்டது.

கர்த்தருக்கு முன்னால் எல்லாரும் மண்டியிட்டு ஜபித்ததெல்லாம் பலனற்றுப் போனது.

அப்போது மேரிக்குட்டி கைக்குழந்தை. அய்யா முகம் அடையாளந்தெரியாது. ரெம்ப நாளாக அய்யா ஊருக்குப் போயிருப்பதாகச் சொல்லித் திரிந்தாள். இன்றைக்கு நாலாவது வாசிக்கிறாள். மரிய செல்வம் கெட்டிக்காரி. வீட்டு வேலைக்குக் கவலையில்லை. அது சமைந்து ரெண்டு வருசமாகிறது. ஒருத்தனுக்குக் கொடுக்கணும். அது வேறு செலவு.

மேரிக்குட்டியை மேற்கொண்டு படிக்க வைக்கணும். அதுக்கு வீட்டில் ஓட்டமில்லை. மாடு வண்டியெல்லாம் விற்று விவசாயம் கால் குறுக்கத்தில் வந்து நிற்கிறது. கீரையும் காய்கறியும் விற்று எந்த மூலைக்கு அடைபடும். என்னேரமும் கமலை இறவையாடிய கிணற்றில் இன்றைக்கு தெலா முனக்கம் கேட்கிறத். அதற்கும்கூட யாரையாவது பிடித்து வரவேண்டியிருக்கிறது.

எல்லாம் அவரோடு சரி. அவர் கண்ணுக்குப் பின்னால் முற்றந்தெளிக்க சாணிக்குக்கூட அடுத்த வீடு போக வேண்டிய நிலைமை. என்னமோ ஒரு வருசமாக மரிய செல்வம் காளங்கண்ணு வளர்க்கிறாள். அதை விற்றால் அவளுக்கொரு தங்கச் சாமானுக்காயிற்று.

போன பண்டிகைக்கு எல்லாருக்கும் துணிமணியெடுக்க அந்தோணி பணம் அனுப்பினான். மூணு மாசத்திற்கு முந்தியே கடிதம் எழுதித் தூண்டியது. கர்த்தர் கிருபையில் பண்டிகைக்குக் குறையெதுவுமில்லை. இந்தப் பண்டிகைக்குக் அவனை குடும்பத்துடன் வரச் சொல்லணும். நிறையச் செலவாகும். அந்தச் செலவுக்கு இங்கே பண்டிகை கொண்டாடிவிடலாம். முதலில் மருமகள் என்ன சொல்கிறாளோ.

இப்போது வேறு வந்து போகிறான். கொழுந்தியாளுக்குக் கல்யாணமாம். வரவில்லையென்றால் மாமனார் கோவிப்பார். மருமகளுக்குச் சொல்லி முடியாது.

ரோசம்மாவுக்கு பஸ்டாண்டு இரைச்சல் உறுத்தியது. மேரிக்குட்டியின் தலையை வருடினாள். அதற்குப் பதிலாக குட்டி அண்ணாந்து பார்த்தாள்.

'ஏட்டி குட்டி அண்ணனோட பட்ணம் போறயா படிக்க. '

குட்டி தலையை வெட்டினாள்.

'ம்க்கும் அம்மாவும் வரணும். '

எதுக்கெடுத்தாலும் இப்படித்தான். கூடவே அம்மா இருக்கணும். கோயிலுக்குள் மண்டியிடும் போதுகூட முந்தியைப் பிடித்துக் கொண்டு வாயலுங்கப் பேசமாட்டாள். சோறு போட்டுவைத்தால் அம்மா பக்கத்திலிருந்து பிசைந்து கொடுக்கணும். மறுசோறு வேண்டுமா என்று கேட்டால் அமைதியாகச் சொல்வாள்.

'அம்மாவுக்குப் பிரியம் எப்படியோ அப்படி. '

'மகளே நீ பள்ளிக்கூடம் போயி எப்படி இருக்கயோ. '

ரோசம்மா குட்டியை அணைத்துக் கொண்டாள். சிகரெட்டை ஊதியவாறு பெட்டி படுக்கைகளைச் சரி பார்த்த அந்தோணி கேட்டான்.

'குட்டி என்னம்மா சொல்லுது. '

'அண்ணனோட போறயான்னு கேக்கென். அம்மாவும் வரணுமாம். '

அந்தோணி வயலெட்டைப் பார்த்தான். குழந்தைகளைப் பிடித்து வசக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

'குட்டிக்கு அம்மா கூடவே இருக்கணும். அம்மா வந்தா அக்கா என்னடா செய்வா. '

குட்டி அம்மா மடிக்குள் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.

'அக்காவ கலியாணம் முடிச்சுக் குடுக்கணும். '

எல்லோரும் சிரித்தார்கள். அந்தோணி பிறகு மெளனப்பட்டுப் போனான்.

ரோசம்மா பந்துத் தலையைச் சொறிந்து கொண்டாள்.

'ஏம்ப்பா கார் வர நேரமாவுமா. '

'இண்ணைக்கென்னமோ லேட்டு. '

'இப்படி சீரெட் ஊதுறயே அதென்ன வாயி நெறையுமா வயிறு நெறையுமா. வீண் செலவு தானப்பா. '

வயலெட் திரும்பிப் பார்த்தாள்.

'நானுந்தான் சொல்றத்தே. அவிய கேட்டாத்தான. ஒடம்பு எதுக்காவும். அவியளுக்கு யாரு சொல்லுவா. '

'ஒடம்பு மட்டுமா. மாசம் செலவென்ன ஆவும். அந்தக் காச எனக்கனுப்பினாக் கூட புள்ளைகளுக்குப் போடுவென். இல்ல ஒம்புள்ளைகளுக்குப் போடு. ஒம் புருசனக் கண்டிசன் பண்ணி வையி. துட்டு கரியாப் போவுதே. '

'அதோ பஸ் வந்தாச்சே. '

அந்தோணி சிகரெட்டை எறிந்து நசுக்கினான். வயலெட் எழுந்து சேலையைத் துடைத்தாள்.

'உள்ள எறிக்கடா. புள்ளைகளக் கூப்பிடு. '

'நீங்க பெட்டியத் தூக்குங்க. நான் சூட்கேஸ எடுத்துக்கிறென். '

'எனக்கிட்ட ஒண்ணு குடும்மா. '

'வேணாம். நானே தூக்கிப் போயி டிக்குல போட்டுட்டு வாறென். '

மேரிக்குட்டியும் ஏறிக்கொண்டாள். முன்சீட்டில் குழந்தைகளுடன் வயலெட் உட்கார்ந்தாள். பின்னால் அந்தோணியின் பக்கத்தில் ரோசம்மா உட்கார்ந்து மேரிக்குட்டியை மடியில் வைத்திருந்தாள்.

'சாமானெல்லாம் பத்தரமா இருக்குமாப்பா. '

அந்தோணி தலையாட்டினான். பிறகு எழுந்து முன்சீட்டைப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

'போற வழியில ஒறங்கக் கூடாதுப்பா. புள்ளைகளக் கூட்டிப் போறவன் கவனமாப் போவணும். '

அவன் ஜன்னல் வழியே டாக்கடையில் தொங்கிய புஸ்தகங்களைக் கவனித்திருந்தான்.

'அடிக்கடி காயிதம் போடணும். வீட்ட மறந்துறக்கூடாது. ரெண்டு வச்சுகிட்டு நான் கெடக்கேன் இல்ல. குட்டியப் படிக்க வைக்கணும். அவளுக்குக் காலாகாலத்துல ஒரு எடம் பார்க்கணும். பொறுப்பிலாம இருந்துறக்கூடாது. நம்ம ஒண்ணும் வசதியாப் பெழைக்கல. '

முன்சீட்டில் வயலெட் குழந்தைகளின் சேட்டைக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள். யாரோ ரோசம்மாவின் இடத்திற்காகக் காத்து நின்றார்கள். அந்தோணி சொன்னான்.

'குட்டியும் நீங்களும் எறங்கிக்கங்க. பஸ் பொறப்புடப் போவுது. '

'ரோசம்மா எழுந்தாள். அவளுக்கு முந்தியே குட்டி முன்சீட்டிற்கு வந்திருந்தாள்.

'கொழந்தைகள நல்லாப் பாத்துக்கிறணும்மா. கழுத்துல சாமாங்களப் போட்டுட்டு அயத்து ஒறங்கீறாத. போனதும் காயிதம் போடணும். அவன் மறந்தாலும் நீ மறக்கக் கூடாது. போயிட்டு வரட்டுமாம்மா. '

ரோசம்மா மூணுபேர் நெற்றியிலும் சிலுவையிட்டு முத்தி விட்டு நிமிர்ந்தாள்.

பின்னாலிருந்து அந்தோணியின் குரல் கேட்டது.

'பர்ஸ்க் குடிடா. குட்டிக்குக் காசு குடுக்கணும். '

வயலெட் பர்ஸைக் கொடுக்கவில்லை. அவளே ஒரு ரூபாய் நோட்டை எடுத்து குட்டியிடம் நீட்டினாள். குட்டி அம்மாவைப் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

பின் சீட்டிற்கு நகர்ந்த ரோசம்மா அந்தோணியின் நெற்றியிலும் முத்தி விட்டு குனிந்தவாறே காதருகில் சொன்னாள்.

'மாசம் மாசம் பணம் அனுப்பச் சொணங்காதப்பா. நான் வரட்டுமா. '

அந்தோணி தலையசைத்தான். குட்டியின் கையைப் பிடித்து மெல்ல இறக்கி விட்டாள் ரோசம்மா.

புறப்பட்டுபோன பஸ் இரைச்சல் ரெம்ப தூரத்தில் கேட்டது.

'புள்ளைகள இழுத்துட்டு எப்படித்தான் போயிச் சேரப் போறானோ. '

ரவிக்கைக்குள் கிடந்த சிலுவையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட ரோசம்மா ரூபாய் நோட்டை நீட்டி நின்ற குட்டியை இப்போது கவனித்தாள்.

'கர்த்தரே நான் பாவி. '

குட்டியை அழைத்துக் கொண்டு அவள் இன்னொரு பஸ்ஸைத் தேடியபோது புறாக்கூட்டம் மறுபடியும் இறங்கியிருந்தது.

***

போட்டி - பூமணி

மார்கழிக் குளிரில் சுவர்ந்துவரும் சுலோகங்களின் தாள லயத்தில் தூக்கமுற்றுகை தளர்ந்து மனசு மெல்லத் திறந்தது. அவன் மல்லாக்கப் புரண்டான். அலமாரிக் கண்ணாடியில் அழகிய புல்வெளியின் விரிப்பு மங்கலாகத் தெரிந்தது. பார்வையைத் துடைத்துக் கொண்டான்.

பசுமை படர்ந்த கோகுலக் காடுகள். மரத்தடியில் கால்பின்னிய கோலத்தில் மாயக்கண்ணன் கண்சொருகிக் குழலூதுகிறான். நிரவிக் கிடக்கும் ஆநிரைகள் நிலைமறந்த புல்லரிப்பில் சொக்கி நிற்கின்றன. இரையசையில் பிரிந்த தாடைகள் இணையாத கிறக்கம். கடைவாயில் கள்ளத்தனமாகக் கண்ணனைப் பார்க்கும் புல்லிதழ்கள். நீர்நிலையில் நிற்பவை செவிசாய்த்து இசைக் குடிக்கின்றன. சிலவற்றின் மடியில் அருவி சுரக்கிறது. பரவசத்தில் குதூகலிக்கும் செடிகள் பருவம் தாண்டி மொட்டவுக்கின்றன.

நீலக்கண்ணனின் நெற்றிக்கு மேலே மயிலிறகு ஒயிலாட புல்லாங்குழல் வழியே பொங்கிவரும் இன்னிசை அந்தரத்தில் சொற்களைத் தூவிக்கொண்டு ரீங்கரித்துச் செல்கிறது.

'இந்து என்று சொல்லடா

எழுந்து நிமிர்ந்து நில்லடா '

குட்டிபையன் தான் சுட்டிக்கண்ணனின் படத்தை ஒட்டியிருக்கணும். போட்டி வைத்தாலும் வைத்தார்கள். குழந்தைகளுக்கு ஏகக் கொண்டாட்டம். சுறுசுறுப்பு சொல்லமுடியாது.

அவர்கள் படித்த பள்ளி ஒரு இந்து அமைப்புடன் இணைந்து பாட்டுப் போட்டியை அறிவித்திருந்தது. பாடல்களை அச்சிட்டுக் கொடுத்தார்கள். அதில் எந்தப் பாடலைக் கேட்டாலும் ஏற்கனவே சொல்லிக் கொடுத்த ராகத்தில் பாடணும்.

அன்று மாலை குட்டி கும்மாளத்தில் ஓடிவந்து அம்மாவிடம் மூச்சுவிடாமல் ஒப்பித்தான். அக்காவை ஒருவார்த்தை பேசவிடவில்லை. அவன் முகம் பூத்து விரியவிரிய கண்கள் தெறித்துவிடும் பயம் அம்மாவுக்கு.

தலைக்குப் பொருத்தமான கண்கள். தலை பெரிசானது ஒரு கதை. பேறுகால வலிச்சுழல் நின்றுவிட கண்ணும் காதும் வாசலில் சிக்கிக் கொண்டன. ஊசிவலியின் துணையில் திக்கித் திணறி வெளியே வந்தான். கூம்பிப் போன தலையைத் தட்டி சீராக்கும் போது சற்றுப் படர்ந்துவிட்டது. நடுவில் குறுக்காக வாசல்நிலை பதித்த நதிப்பள்ளம். விசிறிவிட்ட காதுமடல் சுருள மறுத்துவிட்டது.

அம்மா மடியிமர்த்தி மட்டுப்படுத்தினாள்.

'போட்டியில செயிச்சா என்ன தருவாக. '

'மூணு பிரைசு. '

'ஏயப்பா மூணு உண்டா '

'மொதல் பிரைசு ஐநூறு ரூவா. ரெண்டாவது முன்னூறு ரூவா. மூணாவது எரநூறு. '

'அப்ப நம்ம வீட்டுக்கு ரெண்டு பிரைசு வரும்னு சொல்லு. '

குட்டியின் முகத்தில் வெற்றிப் பெருமிதம்.

'அம்மாம்மா ஐநூறு ரூவா எனக்குத்தான். '

'அக்காவுக்கு முன்னூறு ரூவா குடுத்துருவொம். பெழச்சிட்டுப் போகட்டும். '

அக்கா ஒத்துக் கொள்ளவில்ல.

'எனக்குத்தான் மொதல் பிரைசு. '

குட்டி அடம்பிடித்துச் சிணுங்கினான்.

'பாரும்மா அவன. நான் தரமாட்டென். '

நிலைமை மோசமாவதைப் பார்த்து அம்மா அப்பாவைக் கூப்பிட்டாள்.

'ஏங்க இங்க வாங்களேன். இவுக சண்டைய நம்மால தீத்துவைக்க முடியாது. '

அவன் வந்து விசாரணை நடத்தினான். நீண்ட பேச்சு வார்த்தைக்குப்பின் ஒரு வழியாக சமாதான உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி குட்டிக்கு முதல் பிரைசு. அம்முவுக்கு ரெண்டாவது. விட்டுக் கொடுத்ததற்காக அவளுக்கு ஒரு சாக்லேட் அதிகம் கொடுக்கணும்.

எப்படியோ கைகலப்பு தவிர்க்கப்பட்டதில் அம்மாவுக்கு நிம்மதி. குழந்தைகளிடம் அக்கறையாகச் சொன்னாள்.

'குடுத்திருக்கிற பாட்டுகள ஒண்ணுவிடாம மனப்பாடம் பண்ணுங்க. அப்பத்தான் பிரைசு கெடைக்கும். '

அதிலிருந்து வீட்டில் சதா ராக சஞ்சாரந்தான். அக்கா தம்பியின் ஆலாபனை கோகுல வனத்தில் எதிரொலித்தது. சன்னல் இடைவெளியில் உருண்டு புரண்டு கூடுகட்டும் அணிலுக்கு ஆச்சரியம். ராகரசிப்பில் சொகமாகச் சுருண்டு இளைப்பாறியது. சுவரில் அப்பியிருக்கும் பல்லி கீழ்வாக்கில் விழியுருட்டி நோட்டமிட்டது.பறந்துவந்து நடுவீட்டில் அமர்ந்த பஞ்சுக்குருவி குதித்துக் கூத்தாடிவிட்டுப் போனது.

என்ன வேலையாக இருந்தாலும் அம்மாவுக்குக் குஞ்சுக் குரல்கள் மீதே கவனமிருந்தது. இடையிடையே வந்து ராக ஏற்ற இறக்கங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனாள். அம்மியில் அவள் வாசித்த அரைப்புத் தாளம் பாடலுக்கு இசைவாக இருந்தது.

அவள் ஒவ்வொரு நாளும் குழந்தைகளை கரிசனையாகக் கவனித்துக் கொண்டாள். மாலையில் மறக்காமல் தீனி கொடுத்தாள். அவர்கள் வராண்டாவில் நின்றால் கடிந்தாள்.

'வெளிய நிக்காதங்க. குளிருக்குத் தொண்ட கட்டிக்கிரும். '

காலையில் சூடான பாலுடன் எழுப்பினாள். வென்னீரில் குளிக்க வைத்தாள். ருசியாகச் சமைத்து ஊட்டினாள்.

அவனுக்கென்றால் ஆத்திரம். அங்கயாய்த்தான்.

'மனுசன் நாயோபேயோ அலஞ்சிட்டு வாறது தெரியலயா. நமக்கு இந்தக் கவனிப்பு உண்டுமா. '

அவள் கறாராகச் சொல்லிவிட்டாள்.

'இனிமே ஒங்களுக்குத் தனியா கவனிப்பு கேக்குதோ. குடுக்கிறதத் தின்னுட்டு மொடக்கிறதுக்கில்லாம. '

'சம்பாதிக்கறவனுக்கு இந்தக் கதியா. '

'நம்ம சம்பாத்தியத்தப்பத்தி நம்மதான் பீத்திக்கிறணும். '

'மாசம் மாசம் சம்பளத்த வாங்கி அப்படியே குடுக்கென் பாரு. ஏன் பேசமாட்ட. '

'கூலிக்கு ஆளுப்புடிச்சுத்தான் இவுக சம்பளத்தச் சொமந்துட்டு வரணும். அத்தோட நிறுத்துங்க. '

'போற போக்கப் பாத்தா கொழந்தைகளுக்குச் சொந்தப் பாடம் மறந்துரும் போலருக்கு. '

'ஒரு வாரத்துல ஒண்ணும் குடிமுழுகிப் போயிறாது. '

'அப்ப நடத்துங்க நடத்துங்க. '

'நீங்கென்ன கேட்ட ஒடன நோட்ட எண்ணிக் குடுத்துறவா போறீக. முப்பது நாளைக்குப் பல்லக் கடிச்சுக்கிட்ருந்து பத்துப் பணத்தப் பாக்கவேண்டியிருக்கு. '

'சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும். '

சட்டியே ஓட்ட பெறகு எங்கருந்து வரும். '

'ஒடஞ்சு போகலயே. '

'அதும் நடக்கத்தான் போகுது. குடுக்கிற சம்பளத்த ஒரு நாளைக்குக் கண்ணுல பாக்கிறதோட சரி. மறுநா அது வெண்ண உருகினமாதிரி போற போக்குத் தெரியாது. மாசக் கடைசியில ஒரு பண்டம் தட்டியிருச்சுன்னா வாங்குறதுக்கு வழியிருக்கா. பாயி கடையில சிட்டபோட்டு வண்டி ஓடுது. அவன் தண்டத்துக்குக் கணக்கெழுதி வைக்கான். குடும்பத்துல வேற என்ன வருமானம் இருக்குது. வீடு பள்ளிக்கூடம் மருந்து மாத்திரன்னு அத்தன செலவும் சம்பளத்த வச்சுச் சமாளிக்கனும்... '

'கொஞ்சம் சிக்கனாருந்தா சரியாப் போகும். '

'அப்படின்னா வயித்துல ஈரத்துணியத்தான் கட்டிக்கிறணும். '

'கஸ்டத்துலதான் சந்தோசம் இருக்கு தெரியுமா. '

'சந்தோசத்துக்கென்ன கொறச்சல். வீட்ல மூடமூடையா அடுக்கிக் கெடக்குது. ஆனா ஒரு நல்ல நாளைக்கு நாலு உருப்படிக்குத் துணியெடுக்க முடியல. என்ன விடுங்க வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கிறவ. வெளி எடங்களுக்குப் போற மனுசன் நல்ல துணி உடுத்தணுமில்ல. அதிகாரின்னு சொல்லிக்கிறதுல மதிப்பென்ன இருக்கு. '

'அப்படிப்பட்ட மதிப்பும் மரியாதையும் நமக்கு வேணாம்மா. '

'நீங்க எப்படியும் போங்க. படிக்கற கொழந்தைகளச் சொல்லுங்க. மத்தவுகளப் போல நல்ல மொறையில அனுப்பனுமில்ல. '

'அவுங்களுக்கென்ன. '

'சும்மாருங்க. அதுக மாத்திப் போடுறதுக்கு உடுப்பு உண்டா. இருக்கிற ஒண்ணவும் தெனமும் தொவசச்சாத்தான் அடுத்த நாள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பமுடியும். அதுலயும் ஏழு கிழிசல். தச்சுத்தரலன்னா கண்ணக் கசக்குதுக. அழுத மூஞ்சியோட போனா மண்டையில பாடமெங்க ஏறும்... இப்படி நாலு காசு வந்தா அதுகளோட கஸ்டமாச்சும் தீருமில்ல. '

அவள் கண்கலங்கிவிட்டாள். கிண்டலில் ஆரம்பித்து கீறலில் முடிந்து கசிவது வழக்கந்தான். அவன் வாக்குறுதிகளை வாரி வழங்குவதும் அவள் வார்த்தைகளில் மயங்குவதும் புதிதல்ல. மெளனமேகம் கலைந்து மெல்லிய சிரிப்பிழையில் இணைவார்கள். கழுத்துச் சொகத்தில் அவள் சாப்பிட அழைப்பாள். அவன் ஒப்புக்கு மறுத்து உடன் படுவான். அப்போதைக்கும் கதை முடியும்.

மறுநாள் பாட்டுப் போட்டி. குழந்தைகள் நேரமிருக்கவே தயாரானார்கள். நீர் பாய்ச்சிய செடிகளைப் போல் அவர்கள் முகத்தில் குழைவான குளிர்ச்சி. கடல் நீல உடை பழசானாலும் புது அழகைக் கொடுத்திருந்தது. குட்டியின் கால் சட்டைக்குப் பின்புறம் கெட்டியான தையலிரண்டு எட்டிப் பார்த்தது.

அத்தனை பாடல்களையும் அம்மாவிடம் ஒப்பித்துவிட்டு பூஜையில் கலந்துகொண்டார்கள். வரிசை கோர்த்த தெய்வங்களுக்கு முன்னால் சிறிய மணி அதிகநேரம் முணுமுணுத்தது. அம்மா அவர்களுக்கு அழுத்தமாகத் திருநீறு பூசினாள்.

குட்டி ஓடிவந்து அலமாரிக் கண்ணனை அண்ணாந்து பார்த்தான். அந்தக் கண்ணனைப் போலவே அவன் கண்களிலும் களை ததும்பியது.

'நேரமாச்சு கெளம்புங்க. '

அம்மா அவர்களை வராண்டாவுக்கு அப்பாவிடம் அழைத்து வந்தாள். அவன் ஓங்கியுயர்ந்த பப்பாளி மரத்தில் பார்வை பதித்திருந்தான். அதன் கழுத்தைச் சுற்றி பிஞ்சும் பழமுமாகத் தொங்கின. பிஞ்சு காயானால் இன்னும் கனம் கூடும். ஒல்லியான மரத்தால் அவ்வளவு பாரத்தை எப்படித் தாங்க முடிகிறது. அம்மு அவன் சிந்தனையைக் கலைத்ததாள்.

'அப்பா போயிட்டு வாறொம். '

'பையி கொண்டு போகலயா. '

குட்டி முந்திக் கொண்டான்.

'இண்ணைக்குப் பாட்டுப் போட்டியாச்சே. பள்ளிக்கூடம் கெடையாதே. '

'அடடா அத மறந்துட்டேனே. போட்டியில கூச்சப்படாமப் பாடணும். தெரிஞ்சதா. பயப்படக்கூடாது. பத்தரமாப் போயிட்டு வாங்க. '

அம்மா முனங்கிக் கொண்டே குழந்தைகளைப் பின் தொடர்ந்தாள்.

'நம்ம எதத்தான் மறக்கல. '

மூவரும் படியிறங்கி மைதானத்தில் நடக்கும்போது எதிர்வீட்டு இலந்தைமரத்தில் விளையாடும் அணில் முன்னங்காலுயர்த்தி வழியனுப்பியது. அவன் பிஞ்சுகளைப் பெரிசாக்கி மீண்டும் பப்பாளியைச் சுமந்து கொண்டான்.

வேலை முடிந்து அவன் வீடு திரும்பும்போது அந்திமயங்கி விட்டது. குழந்தைகளுக்குப் பள்ளிஉடை வாங்கிவந்தான். நீண்டநாள் தவணை நிறைவேறிய மகிழ்ச்சி. அதை மனைவியிடம் கொடுத்தான்.

'கொழந்தைகள் எங்க. '

'மூத்தவ படிக்கா. குட்டி எழுதறான். '

'ஓகோ போட்டி முடிஞ்சதோ. '

'துணியெடுக்கக் காசு ஏது. '

'போட்டியில பிரைசு வாங்கீட்டு வந்துருப்பாகல்ல. அந்தத் தெம்புதான். '

'கிண்டலா. '

'ஏன் போட்டி நடக்கலயா. '

'எல்லாம் நடந்துருக்கு. '

'என்னாச்சு. '

'தேர்ந்தெடுக்கிறதுக்கு மூணு நீதிபதியாம். '

'ஒவ்வொருத்தரும் மார்க்போட்டு கூட்டிப் பாப்பாங்க. '

'அவங்கவங்களுக்குத் தெரிஞ்சவங்க கொழந்தைகளுக்கு அதிக மார்க் போட்டுட்டாங்களாம். '

'அதெப்படி. '

'அப்படித்தான் நடந்ததாம். '

'இருக்காதும்மா. '

'தெரிஞ்சவங்க போயி நீதிபதிக்கிட்ட குசுகுசுன்னு பேசிக்கிட்டாங்களாம். நமக்குத் தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க. நம்மதான் பள்ளிக்கூடத்துப் பக்கமே எட்டிப்பாக்கிறதில்லையே. அம்முவுக்கு கின்னா அவ்வளவு ஆத்தரம். குட்டி குமுறிக்குமுறி அழுகிறான். '

'நீயே அழுதுருவ போலருக்கே. '

'பெறகென்னங்க. இவ்வளவு கஸ்டப்பட்டு வெறுங்கையோட வந்தா வயித்தெரிச்சலா இருக்குதுல்ல. '

'யாரு கஸ்டப்பட்டது. நீயா கொழந்தைகளா. '

'எல்லாருந்தான். '

'ஒவ்வொருத்தரும் இப்படித்தான் கஸ்டப்பட்ருப்பாங்க. அத்தனபேருக்கும் குடுக்கணும்னா பிரைசுக் கெங்க போறது. '

'என்னருந்தாலும் மனசு ஆறமாட்டங்குது. '

'தண்ணிய ஊத்தி அமத்து ஆறிப்போகும். '

'அதுசரியே இந்தச் சமயத்துல காசு எங்கருந்து வந்தது. '

'கடன் குடுக்க ஆளா இல்ல. '

'கடன் வாங்கித் துணியெடுக்கணுமாக்கும். அப்படியென்ன அவசரம். '

'கைக்குக் காசு வாறதெப்ப துணியெடுக்கிறதெப்ப. '

கீழே உஞ்சவிருத்திக்கிழவரின் மிருதங்கத் தாளம் கேட்டது. கார்மேகவண்ணனின் லீலைகளை நெஞ்சுருகப் பாடிக்கொண்டிருந்தார். எப்போதாவது மைதானத்தை வலம்வந்து குரலைத் தூவிவிட்டுப் போவார். அவர் இருளில் மறைந்த பின்பும் பாடலும் தாளமும் உலவிக் கொண்டிருக்கும். இவ்வளவு காலமாக அவருக்குப் போட்டியாக யாரும் வந்ததில்லை.

அவன் குழந்தைகளை அழைத்தான்.

'அம்மு தாத்தா வந்துருக்காரு பாரு. '

இருவரும் ஓடிவந்தனர். அவன் ஆளுக்கொரு ரூபாய் கொடுத்தான். அதை அம்மா அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

'டப்பாவுல ரெண்டு எட்டணா எடுத்துட்டுப் போங்க. '

அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

'வழக்கமா குடுக்கிறதுதான. '

'இனிமே இதுதான் வழக்கம். '

திரும்பி வந்த குழந்தைகளுக்கு புது உடையைப் பார்த்ததும் பெரிய பரிசு கிடைத்த பூரிப்பு. அதை அணிந்து அழகுபார்த்து அழகுகாட்டிச் சண்டையிட்டு சமரசமாகி ஆடியடங்க அதிக நேரமானது. குட்டி புதுசிலேயே தூங்கிவிட்டான்.

மறுநாள் அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் துயிலெழுப்பினார்கள். முரசுகளின் கணுக்கணுவான தாளமும் அதை மொத்தமாகப் பிடித்து வைத்து குப்பென்று மடைதிறக்கும் ராட்சத ஜால்ராவின் முத்தாய்ப்பும் பம்பா நதிபோல் பாய்ந்து வந்தது.

சபரிமலை தேடும் அந்த ஓங்கார நாதம் தேயத் தேய வீட்டுக்குள் வானொலியின் இசை மெல்லப் பரவியது. அவன் பக்திப் பாடல்களைக் கேட்டவாறு படுத்திருந்தான். ஒருவர் கல்வாரி மலையிலிருந்து கணீரென்று அறைகூவினார்.

'கேளுங்கள் தரப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும்

தேடுங்கள் கிடைக்குமென்றார்-ஏசு

தேடுங்கள் கிடைக்குமென்றார். '

இன்னொருவர் மெக்காவிலிருந்து உருகினார்.

'இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை. '

மற்றொருவர் 'சுவாமிமலை....சுவாமிமலை... ' என்று நடுக்கத்தில் உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு கானகத்திற்கு ஓடி ஒளிந்து கொள்ளணும் போலிருந்தது அவனுக்கு. அப்போது சமையலறைக்குள்ளிருந்து அசரீரி வந்தது.

'பாட்டுக் கேட்டது போதும். பாடத்த எடுத்துப் படிங்க. '

அவன் அவசரமாக எழுந்துபோய் வானொலியை நிறுத்தி விட்டு முகங்கழுவப் போனான். பள்ளிக்கூடம் தந்த பாட்டுப் புஸ்தகங்கள் உரலோரம் குப்பைக் கூடையில் கிழிந்து கிடந்தன.

நீரினால் தூக்கக் கலக்கத்தைப் போக்கிவிட்டு வரும்போது ஒரு மூலையில் அமர்ந்திருந்த அம்மு பாடத்தை சுலோகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அலமாரிக்கு முன்னால் மண்டியிட்டிருந்த குட்டி கண்ணாடியை ஒருமுறை வெறித்துவிட்டு பைக்குள் பாரத்தைத் திணிக்க ஆரம்பித்தான். கண்ணாடியில் கோகுலக்கண்ணன் குழலூதிய இடத்தில் அவன் நேற்றிரவு கஷ்டப்பட்டுக் கட்டமிட்டெழுதிய கால அட்டவணை ஒட்டியிருந்தது.

எதிர்கொண்டு - பூமணி

வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை ஓயுதா. ராத்திரி நேரங்கூடத் தூங்குவாளோ என்னமோ. என்னேரம் பார்த்தாலும் வாய் பொரிப் பொரியும்.

சுட்டுப் போட்டாலும் இன்றைக்கு அவளுக்கு உறக்கம் வராது. கனைத்துக் கனைத்து அழுகணும்.

திருணையில் குப்புறப் படுத்து முதுகில் காலால் தாளம் போட்ட சுந்தரம் திருப்பிக்கொண்டான்.

நேரத்தோடு சோறுகேட்டு அம்மாவிடம் வசவு வாங்கிக் கட்டிக் கொண்டதுக்கு இதுக்குள் கீழ வீட்டுக்காரி கச்சேரி வைத்திருந்தால் தோதாக இருக்கும். சே சின்னத்தங்கச்சி என்னேரம் பார்த்தாலும் வாள் வாள் என்று கத்திக் கொண்டு அடுத்த ஆள் சத்தம் கேட்க விடாமல். இந்த அம்மா தான் அவளை எடுத்து அமர்த்தினால் என்ன.

பிச்சமணியாவது வந்தால் முற்றத்தில் பாய் விரித்து கச்சேரி கேட்கலாம். ஆறாங்கூட்டம் காராம்பசு என்று மேகத்தில் வெள்ளி பார்த்துக்கொண்டே சிரிக்கலாம். அவன் ஒரு குசுவிணிப் பயல். பேசாமல் முடக்கிப் படுத்திருப்பான்.

எல்லாம் இனிக் கொஞ்ச நேரத்தில் தெரியும். என்னென்ன வசவுதான் வாயில் வரப் போகிறதோ. அவளுக்கு இது காணாது. காட்டில் ஈ காக்காய் இறங்கினால் கூட மே வீட்டிலிருந்து கையைக் கண்ணாடி போட்டுப் பார்த்து நாறலாக வையச் சொல்கிறதா. அடேயப்பா நாயிலெத்தனை கழுதையிலெத்தனை.

எதுக்கு வைவதென்றில்லை. களத்தில் தும்பைச் செடி கும்மலுக்குள் வண்ணாத்திப்பூச்சி பிடித்ததுக்கெல்லாமா வையணும். ரெம்ப எரிச்சலாக இருந்தது. பிச்சமணியென்றால் ஓட்டம் பிடித்துவிட்டான். அவள் புருசன் வேறு பொதுக் பொதுக்கென்று கருத்த எருமை மாதிரி விசாரிக்க வந்துவிட்டார். அதுக்கு அவள் சொல்கிறாள்.

'சின்னக் கழுதைக களத்துல ஒழப்புதுக. சத்தம்போட்டா போகுதுகளான்னு பாருங்க. அந்த கெங்கையாப் பெய மகன் இருக்கானே. மொளச்சு மூணெலப் போடல. அதுக்குள்ள மொறச்சிட்டுல்ல போறான். துமுராக்கும். '

பெரிய மனுசனும் என்னமோ தானியம் ஒழப்பிக் கெடந்த மாதிரி 'அதெவம்லே கொழுப்பா இங்க வந்து ஒட்டிக்கிட்டு ' என்று துணைக்கு வைகிறார் குருட்டுப் பார்வை பார்த்தபடி. அதுக்குத்தான் இந்த வயசிலேயே கண்ணை மறைத்திருக்கிறது. முதலில் பெண்டாட்டி நின்ற இடம் தெரிந்ததோ என்னமோ.

கெங்கையாப் பயலாம். இன்றைக்கு வரைக்கும் அவள் ஒரு பிள்ளைகூடப் பெறவில்லை. வாயில் எப்படி வருகிறது. அய்யாவிடம் சொன்னதுக்கு. 'ஆமா அவ பெரிய வீட்டுச் சீமாட்டி. அப்படித்தான் பேசுவா. கழுத பொலம்பீட்டுக் கெடக்கு. ' என்று எச்சைத் துப்பிவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார். இதைப் போய் அம்மாவிடம் சொன்னால் அவள் கேட்கிறாள்.

'ஒனக்கு வண்ணாத்திப் பூச்சி புடிக்கிறது வேற எடமே கெடைக்கலயாலே. '

நல்ல அம்மாதான்.

பிச்சமணியைக் கேட்ட கேள்வியில் விக்கிப் போனான். பிறகென்ன எடுத்ததுக்கெல்லாம் விசுக்கென்று கழட்டிக்கொண்டு ஓடினால் எப்படி. முதுகில் ரெண்டு சாத்தலாம் என்று கூடத் தோணியது. பிறகு ஓயாமல் அழுவான். அமர்த்தி முடியாது.

அவன் மற்ற பிள்ளைகளுடன் சேரமாட்டான். எத்தனை அடித்தாலும் மாறி மாறி வீட்டுக்குத் தேடி வருவான். ஓயாமல் விளையாட்டுத்தான். பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. குண்டி கிழிந்த கால்சட்டையைப் போட்டுக்கொண்டு எப்படிப் போவதாம். அய்யாவிடம் கேட்டால் 'அது ஒண்ணுதான் கொறச்சலாக்கும் ' என்கிறார்.

ஊரில் நிறையப் பேர் ஆடுமாடு மேய்க்கிறார்கள். சாணியெடுக்கிறார்கள். எல்லாம் மத்தியான நேரம் ஊருணிக்கரையில் கூடினால் ஒரு கூட்டமே திரண்டு விடும். பள்ளிகூடப் பிள்ளைகள் அவ்வளவு இருக்காது.

வீட்டு மூலையில் அய்யா உஸ்ஸென்று மம்பட்டியை இறக்கினார். தலைத் துண்டை எடுத்து உச்சியில் சொறிந்தார். அம்மா வென்னீர்ப் பானையை இறக்கி கொட்டாரத்துப் பக்கம் கொண்டு போனாள். தங்கச்சியைத் தூக்கிக் கொண்டு பின்னால் போன அய்யா சொன்னார்.

'சுந்தர மொதலாளி யென்ன நேரத்தோடயே நித்திரையில கூடியாச்சு இண்ணைக்கு. '

இவர் ஒருத்தர் வாய்த்தார். மண்டையைச் சொறியத்தான் தெரியும்.

கீழத்தெருவில் கசபுசல் கேட்டது. ரெம்பப் பேர்சத்தம் போட்டார்கள். சே பொட்டக் கூத்தாக்கும். ஆரம்பித்தாயிற்றா இன்றைக்கும். இனி ஓய்ந்தாற் போலத்தான். ஒண்ணைத் தொட்டு ஒண்ணாக பின்னிக் கொண்டே போகும். கடைசியில் ஒருத்தி அழுகணும்.

கீழ வீட்டுக்காரி இன்னும் வந்திருக்க மாட்டாளோ. வீடெல்லாம் விளக்குப் பொருத்தியாயிற்றே. இதுக்குள் வந்திருப்பாளே. வழியில் எத்தனைப் பேரிடம் வாயைக் கொடுத்து நிற்கிறாளோ. வீட்டில் வந்து பிள்ளையையா அமர்த்தப் போகிறாள்.

ஊர்ச்சனம் முக்கால்வாசி அவள் வீட்டில் வேலை செய்கிறது. கொத்து வாங்க எத்தனை பேர் காத்திருக்கிறார்களோ வீட்டு வாசலில். அம்மாகூட அடிக்கடி பெட்டித் தூக்கிக் கொண்டு போவாள். அன்றைக்கெல்லாம் ராத்திரிச் சாப்பாடு பிந்திக் கிடைக்கும். அவள் வீட்டில் அப்படிக் காத்துக் கிடக்கணும். அதுகூட அவளுக்குப் பிடிக்காது. கிணற்றில் ரெண்டு பேர் குளித்தாலே விரட்டியடிக்கிறாளே அதை பொறுப்பாளா.

பிச்சமணிக்கு அன்றைக்குச் சரியன எறி. ஊருணியில் தண்ணீரில்லையென்று மாமரத்துக் கிணற்றுக்குக் குளிக்கப் போனதை எப்படியோ தெரிந்து வந்துவிட்டாள். கண்டபடி வைது மண்கட்டியால் எறிந்தாள். பிச்சமணியென்றால் கூப்பாடு போடுகிறான். எறிக்கு முங்கித் தப்பித்து வெளியேறியும் கண்ணில் மண் விழுந்து உறுத்தியது. கிணற்றை விட்டு ஏறும்போது மண்டையிலேயே குட்டினாள்.

கால்ச்சட்டையைக் கையிலெடுத்து ஓடி ஓடைக்குள் வைத்துப் போட்டுக் கொண்டபோது அவள் கழுகு மாதிரிமிதிகல்லில் நின்று இன்னும் வைது கொண்டிருந்தாள். ஓடும்போது 'அம்மணக்குண்டி அரட்டவாள ' என்று கேலி பண்ணிய கொத்து வேலைப் பெண்களைப் பார்த்து கல்லெறியலாமா என்றிருந்தது. பிச்சமணி மண்டையைத் தடவித் தடவி அழுதான். மண்டையில் உருண்டையாகப் புடைத்திருந்தது. அவன் அழுகையோடு சொன்னான்.

'இவள ஒரு நாளைக்காச்சும் நெத்தியில உச்சுறனா இல்லையான்னு பாரு. '

அப்படிச் செய்து அவள் அழுவதைப் பார்த்தால் நன்றாகத்தானிருக்கும்.

இதாச்சும் என்ன தைப் பொங்கலுக்குக்கூடப் பொலிகட்ட அவளது வேப்ப மரத்தில் குழை ஒடித்ததற்கு வைத வசவிருக்கிறதே ஒரு கடகமிருக்கும். மரம் தளிர்க்காமல் பட்டுப் போகுமாம். அவர்களுக்கு மட்டும் வேலைக்காரன் கட்டுக் கட்டாக ஒடிக்கிறானே அது எதுக்காம்.

இவளுக்கு இதோடா போயிற்று. இருக்கட்டும் இருக்கட்டும். முந்தா நாளே ஒரு ஆட்டம் ஆடியிருப்பாள். அதுக்கு லாய்க்கில்லாமல் போய்விட்டது. அதை பிச்சமணியே செய்தான். மத்தியானம் படப்பு மறைவில் அவள் வீட்டுக் கோழியை அடித்து வேலிக் கருவலைக்குள் திணித்துவிட்டு அருவமில்லாமல் வந்தாயிற்று. சரியான கோழி. ராத்திரிவரை வாயலுக்கத்தையே காணும். என்ன விஷயமென்று மறுநாள் போய்ப் பார்த்தால் வெருகு சரியானபடிக்குத் தின்றிருக்கிறது. அதுக்கு வளம். பிறகெங்கே வைவாள். வெருகைத் தேடி வைய வேண்டியதுதான். கதை அப்படியே இல்லையென்றால் தெருவில் சனங்கள் நடமாடியிருக்க முடியாது.

பிச்சமணிக்கென்றால் எரிச்சல்.

'இதுக்கு வேறெதாச்சும் வழியிருக்காடா. '

'இருக்குடா பெரிய வேட்டா வைக்க வேண்டியதுதான். '

அவள் வீட்டு வெளித் தொழுவில் பசுங்கண்ணுக்குட்டி மட்டும் கட்டிக் கிடந்தது. மதியந்தான். பசுமாட்டை அவுத்துக் கொண்டு காட்டுக்குப் போயிருந்தார்கள். வீட்டில் யாருமே இல்லை. சரி இதுதான் சமயமென்று கோலி தட்டும் கம்பியை எடுத்துப் போய் அதுக்கு நடுமண்டையில் ஒரேயடி. சொதுக்கென்று செத்து விழுந்தது. கயிற்றை அவுத்து நிறைசலுக்குத் தூக்கிக்கொண்டு போய் தூணோரம் நிற்கிற வாக்கில் தண்ணீர்ப் பானைக்குள் மூஞ்சியை ஒட்டிவைத்துவிட்டு மெல்ல நழுவும் வரை பிச்சமணி அடிக்கடி வெளியே வந்து ஆள் பார்த்தான்.

காரியத்தை முடித்துவிட்டு வருகையில் பிச்சமணி சொன்னான்.

'இதும் சரிப்படலன்னா ஒரு நா ராத்திரி மாமரத்துக் கெணத்துக்குப் போயி மிதிகல்ல ஒடச்சுப் போட்டுட்டு வந்துற வேண்டியதுதான். '

'அது பெறகில்ல. '

பொழுதடைந்ததும் வீட்டுக்கு வருவதாகச் சொன்ன பிச்சமணியைக் காணவில்லை. எந்த மூலையில் கிடக்கிறானோ.

இதுக்குள் கீழவீட்டுக்காரி வந்திருப்பாள். முதலில் நிறைசலுக்குப் போய் ரெம்பத் தோதாக முகங்கால் கழுவி விட்டு வீட்டுக்குவருவாள். இன்றைக்குச் சரியான கூத்துத்தான். தெருவெல்லாம் ஆட்டம்போடுவாள். அடுத்தவர்களின் ஆடுமாடு படப்புப்பக்கம் லாந்தினால் கூட கண்மூக்குத் தெரியாமல் எறியச் சொல்கிறதா. அதுக்கெல்லாம் வட்டி வாசியாக இன்றைக்கு ஆடணும். கீழத்தெருவில் போடும் சத்தம் மேலத் தெருவரைக்கும் கேட்கும். டிய்ய்ங்ங் ரேடியோ பாடப்போகிறது.

எத்தனை வைது என்ன செய்ய. யாராவது சொன்னால் தானே. பிச்சமணி லேசுக்குள் சொல்ல மாட்டான். மண்டையெறி மறக்கவில்லை.

வீட்டில் காத்திருப்பவர்களுக்கு இன்றைக்கு கொத்தளந்தாற் போலத்தான். இன்றைக்கில்லையென்றால் நாளைக்கு.

அய்யாவும் அம்மாவும் சாப்பிட்டு விட்டு வாசலில் உட்கார்ந்து எதையோ கசகசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சின்னத் தங்கச்சியை மடியில் போட்டுத் தட்டினாள் அம்மா. உள்ளே அக்காவும் மொட்டைத் தங்கச்சியும் சாப்பிட்டார்கள். அவர்களாவது பேசாமல் சாப்பிடக் கூடாதா.

கீழத் தெருவில் இருட்டைத் தள்ளிக் கொண்டு வசவுச் சத்தம் பெருகிவந்தது.

படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்த சுந்தரம் வாசலிலிருந்த அய்யாவை நெரித்து அம்மாவைத் தாண்டி ஓடி வெளிப்பானையில் வாய் நிறையத் தண்ணீர் கொப்புளித்து முற்றத்தில் வட்ட வட்டமாகப் பீச்சி விளையாடினான்.

'படுக்கிற முத்தத்தப் பாழாக்கிறியே ஒனக்கென்ன கோட்டியாலே இப்ப வந்தம்னாத் தெரியுமா ' என்று அம்மா அரட்டியதையும் சட்டை செய்யாமல் இப்போது பிச்சமணியிம் கூட இருந்தால் நன்றாக இருக்குமென நினைத்தான்.

ஆழம் - பூமணி

அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது.

கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம். அங்குமிங்குமாகத் திரியும் பறவைத் தூள்கள். தொலைவிலிருந்து சூரியனைப் புரட்டித் தள்ளிவரும் அலைகள்.

மைதானத்தில் மழை பரப்பியிருந்த நீரில் சர்க்கரைச் சாரல் உதிர்ந்து கரைந்தது. காக்காய்கள் குதித்துக் குதித்து தலையால் கோலிக் குளித்துச் சிலிர்த்தன.

மனைவி பாத்ரூமுக்குள்ளிருந்தாள்.

'தலைய ஒணத்துடா. '

முடியை உதறிக்கொண்டே மூத்தவள் வராண்டா சுவருக்கு மேல் அசையும் வாதுமைக் கொழுந்துகளை நீவிவிட்டாள். முன்பு கொழுந்துகளை எட்டிப் பார்த்தவள் இப்போது தொட்டுப் பார்க்கிறாள்.

சின்னவன் தாடை நடுக்கத்தில் சட்டை தேடினான். தலையில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அவனுக்குச் சிணுங்கல்கூடகுளிர்ந்துவிடுகிறது.

மனைவி துணி கும்மினாள்.

'அந்தப் பய அழுகிறது கேக்கலயா. காது இடிஞ்சா போச்சு. வீட்ல ஆம்பள இல்லன்னு எண்ணைக்கோ முடிவாயிருச்சு. '

அவள் வந்து சேலைத் தலைப்பால் சின்னவன் தலையை இன்னொரு தடவை துவட்டி ஈரம் பார்த்தாள். எழும்பியிருந்த முடியை மடக்கித் தடவினாள். சட்டையை எடுத்துக் கொடுத்துவிட்டு சமையலறைக்குப் போனாள்.

'வந்து கொட்டிக்கடா. ஸ்கூலுக்குப் போகணுமிங்கிறது ஞாபகமிருக்கா. இப்பவே தகப்பன் புத்தி தலையில ஏறிக்கிருச்சா. '

அவன் மும்முரமாகப் பேனாவில் சவாரிசெய்தான்.

'ஒடம்புச் சதைய அறுத்துக் குடுத்தமாதிரி மாசம் மாசம் ஸ்கூலுக்கு அழுகிறது ஒங்களுக்கெங்க தெரியும். '

மூத்தவள் கொழுந்துகளைப் பிரிந்து வந்தாள். சின்னவன் தயாராக உட்கார்ந்திருந்தான். சாப்பிட ஆரம்பித்தார்கள்.

'மழ வந்தா கொழந்தைக நனையாமப் போறதுக்கு ஒரு கொட உண்டுமா. தனக்குத்தான் வேண்டாம்னா அதுகளுமா நனையணும். '

அவன் தலை நிமிரவில்லை. கால்மடிப்பைத் தளர்த்தினான்.

பாத்ரூமுக்குள் மறுபடியும் துணியின் அங்கலாய்ப்பு.

'இடுப்பு வலிக்க எழுதி காலாணாவுக்கு வழி உண்டுமா. இந்த வயசுலயே கண்ணக் கெடுத்து கண்ணாடி போட்டாச்சு. தலையக் கொடஞ்சு மயிரு நரச்சிருச்சு. இங்க இப்படி உக்காந்துட்டுப் போயி ஆபீசுலயும் உக்காந்தா ஒடம்பு என்னத்துக்காகும். நம்ம படுத்துக்கிட்டா என்னன்னு கேக்கிறதுக்கு ஆளு உண்டுமா. நம்மளாத்தான் உருண்டு எந்திரிக்கணும். நோய வெலைக்கு வாங்குறதுக்கா எழுதணும். டாக்டருக்குக் குடுத்து முடியிதா.. எழுதியெழுதி கிழிச்சுப் போடுற பேப்பர கொழந்தைகளுக்குக் குடுத்தாலாவது பாடம் எழுதிப்பாக்கும். '

அவளுக்கு முன்னால் அழுக்கு நுரை கோபுரங்கட்டியிருந்தது. அடித்து இருத்திவைத்த குழந்தைகளைப் போல் கசக்கிய துணிகள் உம்மென்று உட்கார்ந்திருந்தன.

'தாலிக்கயறு நெறம் வெளுத்துட்டுப் போகுது. புதுசு ஒண்ணு வாங்கித் தாங்கன்னு சொல்லாற நாளில்ல. அத காதுலயே போட்டுக்கிறதில்ல. தங்கத்துல செயினா கேக்காக. நாலணாக்கயறு. அதுக்கும் பஞ்சமாப் போச்சு. ஒரு பியூன் வீட்டுக்காரி வெரல் தண்டியில செயின் போட்ருக்கா. பாத்தா வெக்கமாருக்கு. ஸ்கூலுக்குப் போனா அத்தனபேரும் கழுத்தவே பாக்கிறாங்க. சேலைய மூடி கழுத்த மறச்சா சொகமில்லையான்னு கேக்கிறாங்க... ஒரு நேரத்துல வித்தா ஒருநேரத்துல வாங்கணும். பின்னால வாங்கலாம்னு சொல்லித்தான வித்தொம். அடுத்த வருசம் அடுத்த வருசம்னு ஒவ்வொரு வருசமும் வந்துட்டுத்தான் போகுது. செத்ததுக்குப் பின்னால வாங்கினாச் சரி. '

அவளது கைகள் தொடர்ந்து உச் கொட்டின.

'குடும்பத்துல கஸ்டம் எந்நாளும் இருக்கத்தான் செய்யும். அதப்பாத்தா முடியுமா. இருக்கிறது ஒரு பொண்ணு. அது உக்காந்தா போட்டுப் பாக்க மினுக்குனு ஒரு பண்டம் இருக்குதா. ஆம்பளைகளே கழுத்துல போட்டு அத பெரிசா காட்டாட்டு அலையிறாங்க. பொம்பளைக ஒண்ணுமில்லாம இருந்தா யாரு மதிக்கிறாங்க. '

அவன் பேப்பரை மறுபக்கம் திருப்பியிருந்தான். குழந்தைகள் புஸ்தகங்களை அடுக்கிப் பைக்குள் திணித்தார்கள்.

'என்னப்போல கயறு போட்ருந்த கமலாகூட பெரிய செயின் வாங்கீட்டாங்க. நேத்து ஸ்கூலுக்குப் போறவங்க பாத்துட்டு பேசாமப் போறாங்க. நின்னு ஒருவார்த்த பேசினா என்ன. செயின பிடுங்கிக்கிருவாங்களா. இத்தன நாளும் என்பக்கத்துல உக்காந்து கொழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவாங்க. நேத்து கிட்டயே வரல. அவசரமா ஊட்டி முடிச்சிட்டு முந்திப் போயிட்டாங்க. எனக்கு அழுகையா வந்துருச்சு... யாருட்டச் சொல்றது. சொவர்லதான் முட்டிக்கிறணும். '

அவள் பக்கெட்டிலிருந்து பழைய தண்ணீரை வெடுக்கென்று ஊற்றி நுரையை விரட்டினாள். எல்லாம் சேர்ந்து கழிவுக் குழாயில் கொடகொடத்தது. டேப்பைத் திறந்துவிட்டாள். பக்கெட்டில் புதுத் தண்ணீரின் இரைச்சல். துணிகளை உள்ளே அமுக்கி குடுமியைப் பிடித்து தூக்குவதும் தண்ணீரைக் கொட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

அவன் முதுகுக் குறுக்கை நெளிக்கக்கூட நேரமில்லாமல் எழுத்தில் லயித்திருந்தான். கதை வெண்ணெயாகத் திரண்டு வந்தது.

கழுவிய துணிகள் நீர் கக்கிக்கொண்டு கொடியில் தொங்கின. அவள் வெளியே வந்து ஸ்டவ்வில் உட்கார்ந்திருந்த பானையின் மூடியைத் திறந்து பார்த்தாள்.

'வென்னீர் கொதிச்சிட்டுக் கெடக்கிறது யாருக்குத் தெரியிது. குளிக்கக்கூட நமக்கு நேரங்கெடைக்க மாட்டேங்குது.

துணி தேடி பானையை பாத்ரூமுக்குள் தூக்கிக்கொண்டு ஓடினாள். வந்து ஸ்டவ்வில் தண்ணீர் தெளித்து அணைத்தாள்.

'ஸ்டவ் ஒழுங்கா எரியிதா. தூண்டிவிட்டா குதிக்குது. ரிப்பேருக்குக் குடுத்தா ரூவா கேப்பான். இத என்னன்னு பாக்கிறதுக்கு முடியல. நம்ம கத இப்படியிருக்குது. '

வராண்டாவுக்கு வந்து வெளியே கைநீட்டினாள். மயிர்களில் சாரல் கோர்த்தது. ரெண்டு துண்டெடுத்து குழந்தைகளுக்கு முக்காடு கட்டினாள். பைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாள்.

'போயிட்டு வாறவரைக்கு வென்னீர் ஆறீட்டுக் கெடக்காம இருந்தாச் சரி. '

மாடிப்படிகளில் சின்னக் கால்களின் ஓட்டம் கேட்டது. அவனால் எழுத்தைத் தொடரமுடியவில்லை. மூக்குக்குள் சிரித்துக் கொண்டான். அதுகூட பலமாகக் கேட்டது. ஆபீஸ் கடிகாரமுள் நினவில் எழுந்து பாத்ரூமுக்கு விரைந்தான்.

சாயங்காலம் அவன் வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோசமாக இருந்தாள். பல்கோர்வை வெள்ளை முகத்தின் மெல்லிய மஞ்சள்பூச்சை அடிக்கடி மிஞ்சியது. தாலிக்கயிற்றிலும் மஞ்சளால் நிறமேற்றி வெளியில் தெரியும்படி போட்டிருந்தாள்.

அவன் முகங்கழுவிவிட்டு வந்து உட்கார்ந்தான்.

'கொழந்தைகள் எங்க. '

'கீழ வெளையாடுறாங்க. '

'ஆச்சரியமாருக்கே. '

'அதுகளுக்கும் கட்டிப் போட்டதுபோல இருக்குமில்ல. கொஞ்சநேரம் வெளையாடாட்டு வரட்டுமே. '

'ஒனக்கு பொறுமையா குளிக்கிறதுக்கெல்லாம் நேரங்கெடைக்குதா. '

'மதியம் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து குளிச்சென்... ஒங்களுக்கு ஒண்ணுதெரியுமா. '

'என்னவிஷயம். '

'இருங்க அடுப்பில காபி வச்சென். '

அவள் சூடாக காபி கொண்டுவந்து வைத்தாள். அவன் எடுக்கவில்லை.

'சொல்லு. '

'ஸ்கூல்ல கமலாவப் பாத்தென். '

அவள் வய்விட்டுச் சிரித்தாள்.

'இதுக்கென்ன சிரிப்பு. அவங்கள தெனமுந்தான பாக்கிற. '

'என்னோட பேசீட்ருந்தாங்க. '

'பேசமாட்டங்கிறாங்கன்னு காலையிலதான் அடிச்சுக்கிட்ட. '

'என்ன பேசினாங்க தெரியுமா. '

'சொன்னாத்தான தெரியும். '

'கழுத்துல பழையபடி கயறு போட்ருக்காங்க. '

'அதுக்குள்ள புதுச்செயின் எங்க போயிருச்சாம். '

'புதுச்செயினா. '

அவள் இன்னும் உரக்கச் சிரித்தாள்.

'ஏன் பழசா. '

'பழசுமில்ல புதுசுமில்ல. '

'அப்புறம்.... '

நேத்து வர்றதா அவங்க அப்பா ஊருலருந்து ஒருவாரத்துக்கு முந்தியே கடிதம் போட்ருந்தாராம். '

'அதுக்கென்ன. '

'வந்து செயின எங்கன்னு கேட்டா என்ன சொல்றது. '

'உள்ளதச் சொல்லவேண்டியதுதான. '

'வித்துத் தின்னுட்டம்னு சொல்லமுடியுமா. '

'அதுதான நடந்தது. அவரும் குடும்ப நெலமையத் தெரிஞ்சுக்கிறட்டுமே. '

'ஒங்கபுத்தி ஒங்களவிட்டு எங்க போகும். '

'சரி அதுக்காக என்ன செஞ்சாங்களாம். '

'அண்ணைக்கிலருந்து வீட்டுக்காரர அரிச்சிருக்காங்க. அவரு அங்க இங்க ஓடி பணம் பெரட்டி கனமா கவரிங் செயின் வாங்கி வந்துட்டாரு. அப்பா நேத்து வந்துட்டு இண்ணைக்குப் போயிட்டாராம். அவரு போன ஒடனே கயற எடுத்து மாட்டிக்கிட்டாங்க. '

'அடடா வீண்செலவுதான. பணத்துக்கு என்ன கஸ்டப்பட்டாரோ. '

'இனியும் அவங்க அப்பா வருவாருல்ல. அதனால பத்தரமா கழட்டி வச்சிட்டங்க. இல்லன்னா கவரிங் வெளுத்துப் போகுமே... நல்லவேள எனக்கு அப்பாவுமில்ல அம்மாவுமில்ல. '

அவனுக்கு நெற்றிக்குள் குடைந்தது. ராத்திரிக்கு கதையெழுதமுடியுமென்று தோணவில்லை. தூக்கம்கூடச் சந்தேகந்தான்.

'கொழந்தைக இன்னும் வரலயா. '

'காபி ஆறிப்போயிருக்கும். '

அவள் வெளியே நின்று குழந்தைகளைத் தேடினாள். அவன் அவளையே பார்த்தபடி காபியை விழுங்கும்போது தொண்டைக்குள் விக்கியது.

ரீதி - பூமணி

அப்படியே முடிவாயிற்று.

மூன்று பேரும் ஓடமரத்து நிழலில் போய் உருண்டார்கள். தொரட்டிக் கம்பு மரக்கொம்பைக் கவ்வி ஏலவட்டம் போட்டது.

உதிர்ந்து கிடந்த பூக்கருகல்களைப் பொறுக்கி நெறித்துக்கொண்டே பெரியவன் கேட்டான்.

“அப்ப இண்ணக்கி கஞ்சியில்லையாக்கும். எங்க வீட்டில ஆருருந்தா?”

சின்னவன் தொண்டையை நனைத்தான்.

“ஒங்கம்மா புள்ளையாட்டீட்டிருந்தா ‘புளிச்ச தண்ணிக்குள்ள” கூட இல்லனு கையை விரிச்சுட்டா... அவன் வீட்ல ஆளவே காணும்...”

“நீ குடிச்சிட்டு வந்தயா?”

“அதெல்லாம் கேலி மயிருல்ல. கொஞ்சம் நஞ்சம் இருந்ததவும் எங்கண்ணக்காரன் உருட்டீட்டான்.”

“ஆரு படிக்கிறவனா?”

“ஆமாமா அவன் ஒருத்தன் வந்து கெடக்கான்ல வீட்ல..”

கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையு கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது.

“செருப்புக் காலோட ஒரு ஓட்டம் ஓடி ஆட்டத் திருப்பீட்டு வந்துரு. எங்கயாச்சும் பெறப்புடுவோம்”

“இங்க திருப்பீட்டு வந்து என்ன செய்ய. ஆட்டுக்கு வகுறு நெறஞ்சா போகும். அந்தானக்கி சில்லாங் காட்டுக்குப் போவோம்.”

“அதுஞ் சரிதான். ரெண்டு கொப்புக் கொழைய வளச்சுக் குடுத்துட்டே போனாச்சுன்னா தென்னமரத்துக் கரண்டுக் கெணத்துக்குப் போயிறலாம்.”

அவர்கள் கிளம்புகையில் மேற்கே வெயிலலையில் ஆட்டுக்கூட்டம் நீய்வதுபோலத் தெரிந்தது.

”ஏலே ஆட்டக் குளுப்பாட்டி எத்தன நாளாச்சு. காணம் வந்துரும் போலருக்கு.”

“இவன் ஒருத்தன், ஆட்டுக்குத் தண்ணி காட்றதே பெரிசாருக்கு. இதுல குளிப்பு வேற கேக்குதோ.”

“அந்தா தெக்குத் தாருல கம்மந்தட்ட சும்மாதான கெடக்குது, அதுல வுட்டாக்கூட ரெண்டு கடிக்குமே.”

”வேறு வென வேண்டாம். அவரு தன்னால ரெண்டு மாட்ட வச்சிட்டு கூளத்துக்குத் திண்டாடுறாரு, கண்டுக்கிட்டாருன்னா நொக்கப் பிதுக்கிப்பிடுவாரு.”

இண்ணக்கி ஊட்டுக்கு என்னதான் செய்யப் போறமோ தெரியல’ எளங்குட்டி வீட்ல பாலுக்குப் பாடாப் படுத்தும்.

“அங்க பாரு மழ தண்ணியில்லாம மொச்சி கூடபட்டுப் போயிக் கெடக்குது.”

எதிர்ப்பட்ட பனைமரத்தில் கல் வைத்துச் சதைத்து நெஞ்சில் சாறு தெறிப்பதில் நிம்மதிப்பட்டான் இன்னொருத்தன்.

சின்னவனுக்கு வயிறு குடைந்தது. தூரத்தில் சில உருவங்கள் கோடுகளாய் நெளிந்தன.

“ஏய் நான் ரோட்டுக்கு வடக்கு கொய்யாத் தோட்டத்துக்குப் போயிட்டு வரட்டுமா?”

“எலேய் போயும் போயும் அதுலயா கை நீட்டப் போற. அவரு ஒரு பிசினாறி. கண்டாச்சுன்னா அலறீட்டு வருவாரு கடமாங்கொளவி மாதிரி.”

“நாயிருந்தாக்கூட வேட்டையாடலாம். அது இன்னியேரம் எங்க நாக்கத் தள்ளீட்டுக் கெடக்கோ.”

“எங்கயாச்சும் கரண்டுத் தொட்டிக்குள்ள கெடக்கும்.”

“அதுல்லாம அணிலு வேட்டையாடுவமே.”

“அருவாருக்குதுல்ல, ரெண்டு பனையப் பாத்து ஏறலாம்.”

“சரி வெளாரு செதுக்கீட்டு வா”

பெரியோடைக் கரையில் கும்மல் பனைகளில் அணில் கிடக்கும் நிழலை அருவம் பார்த்து முடிக்க ஐந்து பனை தேறியது. பெரியவன் மூன்று பனைகளில் ஏறி ஓலையோடு சேர்த்து அணில் கிடந்த பாகத்தை வெட்டி விழுத்தாட்டினான். பதமான வெட்டில் அவை கோரப்பட்டு விழுந்து செத்தன. விடலிப் பனையொன்றில் ஏறிய சின்னவன் குருத்தையொட்டிக் கிடந்த அணிலை ஓலையுடன் பிடித்தே நெறித்துக்கொன்றான். இன்னொன்று இந்தச் சலசலப்புக்கு நழுவிவிட்டது.

சின்னவன் சுதாரித்துச் சொன்னான்.

”நாலாச்சு.”

ஆடுகள் ஓடை மர அடர்த்திக்குள் மறுக்கி மறுக்கி நெற்றுப் பொறுக்கித் திரிந்தன.

“இப்ப தீக்குச்சு வேணுமே”

“நடுக்காட்ல ஆருட்டப் போயிக் கேக்குறது.”

“பெறகு இதத் தூக்கீட்டே அலையவா. சூட்டாங்கறி போட்ருவோம்.”

“அப்ப கொத்தப் பருத்தி கெடந்தா பெறக்கீட்டு வா. நான் ரெண்டு சீனிக்கல்லு பாத்துட்டு வாறென். சிக்கிமுக்கி தட்டுவோம்.”

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கரையோரம் தத்துக்குக்கீழ் தீமூட்டம் புகைந்தது. முகஞ் சுண்டச்சுண்ட நாலு அணில்களையும் நன்றாய் வாட்டிக் குடலெடுத்தனர்.

“சூட்டோட சூடா ரெண்டு மூணு கல்லத் தீக்குள்ள போட்டு வையி.”

“நீயென்ன அப்பிடிக் கொடலெடுக்க ஈரலெல்லாம் சேத்து, அத இங்க கொண்டா.”

சின்னவன் ஈரல் துண்டைக் கத்தரித்து தீயில் கருக வாட்டி வாயில் பிட்டுப் போட்டுக்கொண்டான்.

“ஆடு எங்க போகுதுன்னு பாருலே”

‘அது எங்கப் போகப்போகுது இந்த வெயில்ல.”

“நாயிருந்தாலும் இந்தக் கொடலத் திங்கும்”

சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்து கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள்.

கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்த போது ஆடுகள் அனேகமாய் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன.

“இண்ணிக்கி அம்புட்டுத்தான் தொலஞ்சோம்.”

குடல் தெறிக்க ஓடினார்கள். ஆடுகள் அத்தனையும் தோட்டத்தில் மிளகாய்ச் செடிகளை உழப்பிக்கொண்டு போய் கினற்றைச் சுற்றித் தளிர்த்திருந்த பாலாட்டஞ் செடிகளை மொய்த்திருந்தன.

தெற்கு மடக்கில் உழுதுக்கொண்டிருந்த புஞ்சைக்காரர் அவர்களுக்கு முந்தியிருந்தார். அவர் கையில் சாட்டைக்கம்பு இருந்தது.

அவர்கள் ஆட்டுக்கும்பலை ஓடித் திருப்பி விரட்டியதும் அவர் இரைந்தார்.

”ஏலே சாதிகெட்ட சலுப்புத் தேவிடியா புள்ளீகளா, இங்க வாங்கலே. வெள்ளாமக்காடு தெரியாம அம்புட்டென்னதே பூளக் கொழுப்பு. இப்ப மூணு பேரவும் தென்னமரத்துல கெட்டித் தொலிய உரிக்கனா என்னன்னு பார்.”

உழவு கட்டிக்குள் விழுந்தடித்து ஓடி சின்னவனைச் சாட்டையால் விளாசினார். அவன் கூப்பாடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதுக்குமேல் அவரால் பின் தொடர முடியவில்லை. மிச்சக் கோவத்தை கண்டனமாக்கி வைது தீர்த்துக்கொண்டார்.

முள்ளுக் காடெல்லாம் தாண்டி வந்தபிறகும் சின்னவனுக்கு விக்கலும் விம்மலும் அடங்கவில்லை. உடம்பைச் சுற்றி புரி முறுக்கியது போல் தடிப்பு சிவந்திருந்தது.

“பெலமாப் பட்ருச்சோடா?”

சின்னவன் பேசவில்லை, மூக்கை உறிஞ்சினான்.

“அந்தானக்கி அவனத் தொரட்டிக் கம்புட்டு ஒரு போடு போடுவமான்னு வந்துச்சு. என்னமோ வெள்ளாமையெல்லாம் அழிஞ்சு போனது போலல்ல வாரான். இருக்கட்டும் ஒரு நாளைக்குத் தொரட்டிக்கத்திய நல்லாத் தீட்டிட்டு வந்து தென்னங் குருத்தெல்லாம் அறுத்துப் போட்டுட்டுப் போயிருறேன்.”

“இவன் துமுறுக்கு இன்னேரம் நம்மூருனா கெதி என்னாகும். ஈரக்கொல செதறிப்போகும். இண்ணக்கினுல்ல தொயந்துகை நீட்டிட்டுத்தான் வாரான். எண்ணக்கித்தான் பூச வாங்கிக் கெட்றான்னு தெரியல.”

“ஆடு வெள்ளாமையில ஒரு எலகூடக் கடிக்கல. பாவம் காரப்பெய தொட்டித்தண்ணியில சாணியக் கரச்சுவுட்டுக்கிறதப் பாரு. ரெண்டு நெத்தப் பெறக்குனதுக்கு அதுக தண்ணிகூடக் குடிக்கல.”

“இனியொரு நாளைக்கு என்ன செய்யணும்னுருக்கென் தெரியுமா. வார வெருச்சியில கத்திக் கும்பு குத்தி ஏத்திறணும். இவனால செயிலுக்குப் போயிட்டாத்தான், என்ன. வாய்க்கால்ல நிண்ணு ஆடு தண்ணி குடிச்சிட்டாக் கொறஞ்சா போகுது அத்தனையும். பேசாம ரோட்டுக் கெணத்துக்கு ஆட்ட வுடு.”

ஒத்தக் கடையோரம் ரோட்டுக் கிணற்றில் கமலை இறவையாடியது.

குறண்டிச் செடிகளில் சில்லான் அடித்துவிட்டு அவர்கள் லாத்தலாய்ப் போனார்கள்.

பெரியவன் சின்னவனைக் கேட்டான்.

“ஒங்க அண்ணன் எதுக்குடா ரொம்ப நாளா இங்க வந்து கெடக்கான் படிப்ப வுட்டுட்டு.”

“என்னமோ பெரிய படிப்புப் படிக்கணும்னு சொல்லு ரெண்டு மூணு ஆட்ட வித்து அனுப்புனாக. அங்க அரிசியில்லாமச் சோறு சரியாப் போடமாட்டாங்கன்னு சத்தம் போட்டாங்களாம். எல்லாத்தவும் இழுத்து மூடி வெறட்டியடிச்சிட்டான்.”

“சோறில்லாம வகுத்துப் பசியோட எப்பிடி உக்காந்துட்ருக்கிறது. ஒங்கய்யாவுக்குக் கோவங் கோவமாருக்குமே.”

“அதுக்கென்ன செய்யிறது. பொட்டியாருக்கு கூழுக்களின்னா மொகஞ் சுண்டும். எங்கம்மா வேல செஞ்சிட்டு வார தவசத்துலதான் கம்மங்கஞ்சி காச்சிக் குடுக்கிறது.”

“ஒங்க வீட்டோரம் பிச்சையா குடும்பத்தோட எங்கயோ போயிட்டானாமில்லடா?”

“ஆமா, மலப்பக்கம் போயிட்டான். வீட்ல கஞ்சிக்கில்லன்னா என்ன செய்யிறது. வேற வேலையுமில்ல.”

“கெணத்துக் காடெல்லாம் தண்ணியில்லாமக் கெடக்கையில என்ன வேலருக்கும்.”

”ஙோத்தா, மழையாச்சும் பேயுதா. வேண்டாம் வேண்டாமிங்கப் பேயிறது. இப்பிடி நேரம் போட்டெடுக்கிறது.”

“கொஞ்ச நா போச்சுனா எல்லாரும் கிளம்ப வேண்டியதுதான்.”

கமலை மாடுகள் கக்கிய நுரைக்குமிழ்கள் பறந்தவண்ணமிருந்தன. கமலையடித்த கிழவர் கூனைக்கொருக்க கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டார். ஒரு கூனை தண்ணீர் ஊற்ற மாட்டு வாலைப் பிடித்துக்கொண்டு ரொம்ப தூரம் வடத்தில் உட்கார வேண்டியிருந்தது.

“அடேய் ஒழப்பீராம ஆட்டவுடுடா, எங்கயாச்சும் ஒடஞ்சிருச்சுனா எட வத்திப்போகும். ஆளுல்லாத நேரத்துல வண்ணாப் பெய வந்து வெளுத்துருக்கான் கெணத்துக்குள்ள. அவனுக்கு வேற எடங்கெடக்கல போலருக்கும். அது பாரு அந்த அழுக்குச் சீண்றத்துக்கு தண்ணிய வாயிக்கிட்டக் கொண்டு போக முடியல.”

ஆடுகள் ஆசை தீரத் தண்ணீர் குடித்துக் கிளம்பின. சில முதுகுதறி வெயிலுறைப்பை நாக்கால் தடவிச் சென்றன. கமலைக் குழியோரம் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பைத் தட்டிவிடாமல் பார்த்துக்கொண்டார் கிழவர்.

அவர்கள் மூன்ரு பேரும் முகங்கழுவித் தெளுச்சியாகப் புறப்பட்டார்கள்.

“ஒத்தக் கடையோரம் போயிக் கொஞ்சம் அமத்துவமே.”

”ரோட்டு மேலயா?”

“அதுக்கென்ன, வேற மரமெங்க இருக்கு. வாங்கப்பா போவோம்.”

சின்னவனுக்கு இதெல்லாம் மனசிலில்லை.

”எனக்குத் தண்ணித் தவிக்குது. இது வெறுஞ் சவருத் தண்ணி. வாயில் வய்க்க முடியல.”

”எங்களுக்கும் தவிக்கத்தான் செஞ்சது. என்ன செய்யிறதுன்னு இதுலதான் ரெண்டு கையள்ளிக் குடிச்சோம்.”

“தாயக் கழிச்சாலும் தண்ணியக் கழிக்கப்புடாதுலே.”

“நான் எங்கயாச்சும் போயிக் குடிச்சிட்டு வாறென்.”

“அந்தா வாகமரத்தோரம் கரண்டுக் கெணறு இருக்குது பாரு அங்க போயிக் குடிச்சிட்டு வா. நாங்க இப்படியே ஒத்தக் கடைக்குப் போறோம்.”

சின்னவன் வேகமாகப் போய்த் திரும்புவதற்குள் ஆட்டுக்கூட்டம் ரோட்டு வேம்படியில் கூடிக்குழை கடித்துக்கொண்டிருந்தது. பெரியவன் அவசரத்தில் தொரட்டிக்கம்பால் வேப்பங்குழைகளை வளைத்து இழுத்துப் போட்டான். ஆடுகள் அமர்ந்து தின்பதைப் பார்க்க சந்தோசமாயிருந்தது அவனுக்கு.

“என்னலே தண்ணி குடிச்சயா?”

“குடிச்சேன். கெணத்துக்காரப் பெய படிய இடிச்சுப் போட்ருக்கான்.”

”பெறகு?”

“கரண்டுக் கொழாயி வழியா எறங்கிக் குடிச்சிட்டு வாறென்.”

அண்ணாந்திருந்த பெரியவன் கொஞ்சம் குனிந்து பார்த்தான். அந்த நேரத்தில் கிழக்கேயிருந்து முரட்டுவாக்கில் வந்த கார்ச்சத்தத்துக்கு ஆட்டுக்கூட்டம் ஒரேயடியாக விரண்டதைப் பார்த்ததும் சின்னவன் வாய்க்கு வந்தபடி வைதுகொண்டே காருக்குப் பின்னால் ஓடிக் கல்லெறிந்தான். அப்பவும் பெரியவன் குழையிழுத்துக் கொண்டு தானிருந்தான்.

சிதறிக்கிடந்த ஆடுகளை ஒன்று திரட்டித் திருப்பி வந்த இன்னொருத்தன். “அந்தக் கொழாயில பெரிய பாறையத் தூக்கிப் போட்ருக்கணும்லே” என்று தென் சரிவில் உயர்ந்து தெரிந்த ட்ரான்ஸ்பாரத்தை நோக்கி கல் உச்சினான்.

வெள்ளாடுகள் குழைகடிப்பதில் அமைதி கண்டிருந்தன.