வண்னநிலவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வண்னநிலவன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துன்பக்கேணி... - வண்ணநிலவன்


“ஏடே!... இது ஆரு?... இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டி மலைச்சியில்லாடே?... இவ எங்கன கெடந்துடே ஆம் புட்டா?...” என்று ஆச்சரியத்தோடும், பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர்.
பட்டப்பகல் மாதிரி நிலா வெளிச்சம் இருந்தாலும் நம்பித்தேவர் உட்கார்ந்திருந்த இடத்தில் பூவரச மர நிழல் விழுந்து அவரை மறைத்திருந்தது.

அவளுடன் அந்த ஆட்கள் பதில் சொல்வதற்கு முன்பாகவே வண்டி மலைச்சி, “என்ன மாமோவ்...பொம்பளையின்னா வேண்டானிட்டு அனுப்பி வச்சிருவீயளா?...” என்று சொல்லிக் கொண்டே நம்பித்தேவரின் கால்மாட்டில் போய் உட்கார்ந்தாள்.

’ஏ பெயபுள்ளே! அதுக்குச் சொல்லல. ஆரோ அன்னைக்கி ஊருக்குள்ள, நீ முளுவாம இருக்குன்னு பேசிக்கிட்டாவ... முளுவாம இருக்கவளப் போயி இந்த வேலைக்குக் கூட்டிட்டு வந்துருக்கானுவனேன்னுதான் கேட்டேன்... இந்தமுள்ளுக் காட்டுக்குள்ள சரக்கத் தூக்கிக்கிட்டுப் பத்துப் பன்னெண்டு மைலு நடக்கணும் நீ... ம்... இதுல மத்த வேலையவுடக் கூட ரெண்டு ரூவா கெடைக்குமுன்னு பாத்தியாக்கும்!... எந்தப் பாவிப் பெய வுட்ட சாவமோ தெரியல!... 

எப்பேர்க்கொத்த மறக்குடிச் சனங்க எல்லாம் இப்படிக் கெடந்து சீரழியணும்னிட்டு இருக்குது!...”“நீங்க எதுக்கு மாமோய் இந்த முள்ளுக் காட்டுக் குள்ள இத்தனை வயசுக்குப் பொறவும் ஒத்தையிலே கெடந்து சாராயம் காச்சிக்கிட்டு, எந்த நேரம் எவன் வருவானொன்னு செத்துக்கிட்டுத் திரியுதீய?...

”வேற என்ன... துட்டுக்குத்தான்.

”இதைக் கெட்டுவிட்டு வண்டிமலைச்சி லேசாகச் சிரித்தாள்.

”சரி... பெருசு.. மணி எட்டு எட்டரைக்கி மேல இருக்கும் போல, நெலா மேல ஏற ஆரம்பிச்சாச்சி சீக்கிரமா எடத்தக் காலி பண்ணணும். பொழுது விடியறதுக்குள்ள சரக்கக் கொண்டு போயி நாசரேத்துல சேப்பிக்கணும்... இந்தக் கொள்ளைக்குள்ள மொபைல் பார்ட்டிக்கி புது இன்ஸ்ப்பெக்டரு வந்திருக்காராம்! கொஞ்சம் கடுத்தமான ஆளு போல. எச்சரிக்கையாக கொண்டுட்டுப் போகணும்னு மொதலாளி சொல்லி அனுப்பிச்சிருக்காரு... சரக்க டின்னுலே அளந்து அடச்சிட்டீருல்ல?.. வண்டி மலைச்சி கதய நாளைக்கு ஊருக்கிள்ள போயிப் பேசிக்கிடலாம்...” என்று சொன்னான் சங்கரபாண்டி.

வண்டிமலைச்சி ஓடை மரங்களுக்கு மேலே தெரிந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கரபாண்டி பேசினது நம்பித்தேவருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வண்டிமலைச்சியைப் பார்க்க பார்ர்க்க அவருக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.”இந்தத் திமிருனாலதாம்லே கெட்டுக் குட்டிச் சொவராப் போறிங்க... அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கி இப்படியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும்?...

வண்டிமலைச்சிக்கு அவள் புருஷன் சண்முகத்தை நினைத்ததும் ஒரு மாதிரியாகப் படபடவென்று வந்தது. தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் நகர்ந்து அப்படியே அடிமரத்தோடு மரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். எங்கோ தூரத்தில் பஸ் போகிற சத்தம் கேட்டது.
பஸ் சத்தம் வந்த திசையை பார்த்தாள் வண்டிமலைச்சி. கிழக்குத் திசையில், அடிவானத்தில் போய்க் கொண்டிருந்த பஸ்ஸின் ஹெட் லைட் வெளிச்சம் திட்டுத் திட்டாக முள் மரங்களுக்கு மேல் விட்டு விட்டுத் தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, சத்தமும் வெளிச்சமும் மறைந்தே போய்விட்டன.
அது எந்த ஊருக்குப் போகிற பஸ்ஸாக இருக்கும்? ஒருவேளை சாத்தான்குளம் பஸ்ஸாக இருந்தாலும் இருக்கலாம், கல்யாணம் ஆன பிறகு அம்மன் கோயில் கொடை, பொங்கல் என்று இந்த நாலு வருஷத்தில் எத்தனை தடவை திருச்செந்தூர் – சாத்தான்குளம் பஸ்ஸில் சண்முகத்தோடு போய் வந்திருக்கிறாள். ஒரு தடவை சண்முகம் வேலை பார்த்த வாழைத் தோட்டத்திலுருந்து நாகர்கோவிலுக்கு வாழைக்காய் லாரி லோடு ஏற்றிக்கொண்டு போனபோது, சாத்தான்குளம் வழியாகத் தான் போகிறது என்று, திடீரென்று தோட்டத்திலிருந்து அவசர அவசரமாக வந்து இவளை புறப்படச் சொன்னான் சண்முகம்.

சாத்தான்குளத்துக்கு லாரி போய்ச் சேரும்போதும் இதே நேரம் இருந்தது. இதே மாதிரித்தான் அன்றும் நிலவுகூட இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து வீட்டுக்குச் சின்னச் சின்ன முடுக்குகளைக் கடந்துதான் போக வேண்டும். நிலா வெளிச்சத்தில் அவனோடு சிரித்துப் பேசிக்கொண்டே அந்த சின்னஞ்சிறு முடுக்குகளினூடே நடந்து போன போதுதான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அப்போது அய்யாவும் ஆத்தாவும் இருந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்தபோது அவர்களுக்கும்தான் எவ்வளவு சந்தோஷம். ஆத்தா தோசை சுட்டுக் கொடுத்தாள். ராத்திரி வெகுநேரம் வரை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் மழையே இல்லாமல் போய் ‘தண்னீர் தட்டு’ வந்த பிறகுதான் எல்லாமே ரொம்ப மோசமாகி விட்டது. சண்முகத்துக்குத் தோட்டத்தில் வேலை இல்லாமல் போய் விட்டது. நாளைக்கு ஒரு இடத்தில் கூலி வேலை பார்க்க ஆரம்பித்தான். சாத்தான்குளத்தில் அய்யாவும், ஆத்தாவும் அடுத்தடுத்து ஒரு வருஷத்துக்குள் செத்துப் போய்விட்டார்கள். அண்ணன் சாத்தான்குளம் வீட்டைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு விட்டான். இத்தனைக்கும் அண்ணன் இவள் மேல் ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று எவ்வளவோ பாசமாக இருந்துவந்தான். ஆனாலும் அவனுக்குக்கூட வீடு, வாசல், சொத்து என்றதும் பாசமெல்லாம் விட்டுப் போய்விட்டது. வீட்டு விவகாரத்துக்குப் பிறகு பேச்சுவாத்தைகூட வேண்டாம் என்று, உறவே விட்டுப் போய்விட்டது.
சண்முகத்துக்கு வாழைத் தோட்டத்தில் வேலை போன பிற்பாடு எல்லாமே தலைகீழா மாறி விட்டது. இரண்டு மாதத்துக்கு மின்னால் குரும்பூர் பஜாரில் ஏதோ தகராறு வர கோபத்தில் ஒருத்தனை வெட்டிக் கொன்று விட்டான். கல்யாணமாகி நாலு வருஷத்துக்கிப் பிறகு அப்போதுதான் வண்டிமலைச்சி முதல் முதலாக உண்டாகியிருந்தாள்.

சண்முகம் திருச்செந்தூர் சப்-ஜெயிலில்தான் இருக்கிறான். அவன் மேல் கேஸ் போட்டிருக்கிறார்கள். அண்ணனிடம் போய் கேட்டதுக்கு, “கொலைகாரப் பெயலுவோ பொங்சாதிமாருக்கெல்லாம் இந்த வூட்டுல என்ன வேலை...?” என்று கோபமாகச் சொல்லி விரட்டி விட்டான்.அன்றைக்கு ராத்திரியே ஊருக்குத் திரும்பி விட்டாள். அரளி விதையை அரைத்துக் குடிக்கப்போனவளை ராமாக்கவின் மகள் பார்த்து விட்டாள்.

”வண்டிமலைச்சி அக்கா அரளி வெதயை அரைச்சுக்கிட்டிருக்கா...” என்று சொல்லி விட்டாள். பிறகு, ராமக்கா ஓட்டமாக ஓடிவந்து அரைத்ததைப் பிடுங்கி எறிந்தாள். இவளைக் கண்ட மாதிரி திட்டினாள்.”

ஏ, சங்கரபாண்டி!... நீயும் மணிப்பெயலுமா குளத்துக்குள்ள பதிச்சு வச்சிருக்க டின்னைத் தூக்கிக்கிட்டு இங்கன வாங்கடே!... இங்கனே வச்சே அத அளந்து டின்னுகள்ல ரொப்பிரலாம்...” என்றார் நம்பித் தேவர்.

”பாத்தேரா... ஒம்ம சோலியக் காட்டிட்டீரே! ரெண்டு நாளாகக் காட்டுக்குள்ள கெடந்து சாராயம் காச்சுத ஆளுக்கு இந்த டின்னுகள்ல அளந்து ரோப்பி வக்கத் தேரமில்லாமேப் போயிட்டுதாக்கும்... இதுக்கு ஆளு வரட்டும்னு பாத்துக்கிட்டு இருந்தீராக்கும்... இதுதான ஒம்ம கிட்ட உள்ள கெட்ட பளக்கம்...”

”பெரிய கெவுனரு மவனுவோ இவனுக.... போங்கலே போயித் தூக்கிட்டு வாங்கடா!... இந்தப் புள்ளய வேற கூட்டிக்கிட்டு வந்துட்டியோ. வயித்துத் தள்ளிக்கிட்டு இதுவேற இங்கன தனியா உக்காந்திருக்கு, என்னத்தெயாவது ஒண்ணக் கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா?...””ஒமக்கேன்ன... ஒம்ம சோலி முடிஞ்சிது... இன்னைக்கி ராவு பூரா காட்டுக்குள்ள பதுங்கிக் கெடந்து போட்டு நாளைக்கிக் காலையில மொதலாளியப் பாத்து சம்பளத்தக் கணக்குப் பாத்து வேண்டி முடிஞ்சுகிட்டுப் போயிருவீரு! வந்த எடத்துல போனமான்னு இல்ல... சரக்க டின்னுல ரோப்பிக்கிட்டு இன்னும் பத்துப் பன்னெண்டு மைலு லொங்கு லொங்குன்னு ஒடணும்!... மூணு நாளா இங்கனயே கெடக்கேரு... இந்த டின்னுகள ரொப்பி வைக்க முடியல ஒம்மாலே?...” என்று மூணு மூணுத்துக்கொண்டே பக்கத்தில் தெரிந்த குளத்து மேட்டைப் பார்க்க நடந்தார்கள் சங்கரபாண்டியும், மணியும்.

அவர்கள் போகுபோது, “ஏய்!... அங்கன குளத்தாங்கரை மேலேயே நாலஞ்சாறு டின்னுக கெடக்கும்... அந்த எடத்துக்கு நேரே கீள கொளத்துக்குள்ள எறங்குக்க... தண்ணிக்கரை ஒரத்துல ஒரு கல்லு அடையாளங் கெடக்கும் கல்லைப் பொரட்டிப் போட்டு கீள தோண்டுங்க...

”அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் நம்பித் தேவர். அவர்கள் குளத்துமேட்டில் ஏறுவதைப் பார்ர்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

”ஏளா!... என்னடா இந்தக் கெழட்டுப் பெய இப்பிடிச் சொல்லுதேன்னென்னுட்டு வருத்தப்படாத. இதேல்லாம் பொம்பள செய்யக்கூடிய வேலையா?... மொதலாளிமாருக்குச் சாராயம் கடத்ததுக்கு ஆம்பளயவுடப் பொம்பளையோதான் ரொம்பத் தோது. யாரும் சந்தேகப்பட மாட்டாவ... அவெனுவோ நாலஞ்சு தாரானுவோங்கிறதுக்காவ வவுத்துப் புள்ளக்காரி இப்படி ஓடியாரலாமாளா?..

.இந்தக் கண்றாவிய ஆரு கிட்டச் சொல்லி அழ?... நாஞ் சொல்லுததக் கேளு. இன்னையோட இத வுட்டுரு. நாளையே ஒன் அண்ணங்காரன் கால்ல போயி வுளு. அந்தச் செறுக்கி மவென் ஏதாவது ஏடாகூடமாப் பேசினாம்னாக்க எங்கிட்டே வந்து சொல்லு... ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டிப் பேசிப்புடுவோம்!... நாஞ் சொல்லுததக் கேளுளா... இது வேறு வாக்கிலியத்த தொழிலுளா... இன்ன நேரமின்னு இல்லாம எப்பயும் போலிஸூக்குப் பயந்து சாகணும்ளா...

வண்டிமலைச்சி மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த படியே அழ ஆரம்பித்து விட்டாள்.

”மாமோய்!... நான் வேணுமுன்னா இங்க வந்தேன்?... தவிச்ச வாய்க்கித் தண்ணி தாரதுக்கு எனக்கு ஒரு நாதி இல்லேயே! அந்த மனுஷங் கோவத்துல ஆரையோ வெட்டிச் சாய்க்கப் போயி ஊருக்குள்ள கெடந்து நாமுல்லா சீரழியுதேன்... என்னையும் அந்தப் பன்னருவாளால வெட்டிக் கொன்னுருக்கக் கூடாதா அந்தப் பாவி மவென்? அந்த ஆறுமுகமங்கலம் சொடலைக்கிக் கூடக் கண்ணு இல்லாமே போச்சுதே...” என்று சத்தம் போட்டுப் புழங்கிப் புழங்கி அழுதாள் வண்டிமலைச்சி.

”கடவுளா வந்து ஒனக்கு நிக்கப் போறாரு?... அழாத அழாத! சரி. நீ ஒண்ணு பண்ணு... இந்தா ஒரு பத்து ரூவா இருக்கு. இத வச்சுக்க நாளைக்கிக் காலம்பறயே சாத்தாங்க கொளத்துக்குப் போறப்பட்டுப் போயிரு. நாளைக்கி ராவும் நான் சரக்க ஏத்திவுட வேண்டியிருக்கு... நாளன்னிக்கிக் காலம்பற பத்துமணி வண்டிக்கி நான் சாத்தாங்கொளத்துக்கு வந்துருதேன்... நீ ஒன் அண்ணங்காரன் அடிச்சாலும் புடிச்சாலும் அவேன் வூட்டுத் திண்ணையிலௌயே வூளுந்து கெட... கோவிச்சுக்கிட்டு வந்திராத. நான் வந்து எல்லாம் பேசிக்கிடுதேன்...” என்று அவளிடம் ரூபாயைக் கொடுத்தார்.
”இது எதுக்கு மாமா? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடு படுதீய. இதுல எஞ் சொமை வேறயா ஒங்களுக்கு?...”

”ஏழைக்கி ஏழைதான் தொணை... என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்புட்டுத்தானள்ளா!..

மூன்று பேரும் டின்களைத் தலையில் வைத்துக் கொண்டு மெயின் ரோட்டை விட்டுத் தள்ளி ஒரு மைல் தூரத்துக்கும் மேல் உள்ள காட்டுக்குள் வேகமாக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். ஆளுக்குப் பத்து லிட்டர் வீதம் சுமந்து கொண்டு போகத் தலைக்கு பத்து ரூபாய் கூலி என்றுதான் பேச்சு. சங்கரபாண்டியும் மணியும், வண்டிமலைசி மேல் இரக்கப்பட்டு அவள் தலையில் ஆறு லிட்டர் மட்டுமே ஏற்றி விட்டனர். பாக்கி நாலு லிட்டரைத் தங்கள் டின்களில் நிரப்பிக் கொண்டார்கள்.
தலையில் சுமை இருந்தாலும், தேரிக்காட்டுக் காற்றும் நிலா வெளிச்சமும் சேர்ந்து வழியைத் தோற்றாமல் செய்து விட்டன. ஆறு மைல் போல நடந்திருப்பார்கள்.

கீரையூருக்குத் தெற்கே போகும் போது ஒரு வெட்ட வெளியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்தார்கள்.சங்கரபாண்டியும் மணியும், கொண்டு வந்திருந்த ஒரு அரைச் சிரட்டியில் சாராயத்தை ஊற்றிக் குடித்தார்கள் வண்டிமலைச்சி ஒரு பக்கத்தில் ஆயாசமாகப் படுத்துவிட்டாள். அவளையும் குட்டிக்கச் சொன்னார்கள். அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
மணி அவளைக் குடிக்கச் சொன்னபோது அவளுக்கு சண்முகத்தின் ஞாபகம் வந்து விட்டது. அவனும் அவளும் எத்தனையோ தடவை குடித்திருக்கிறார்கள். சாராயத்துக்குக் கருவாட்டைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.”மணி என்ன இருக்கும்?...”  என்று படுத்துக் கொண்டே கேட்டாள் வண்டிமலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும் தொள்களும் ரொம்பவும் வலித்தன.

மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!...” என்றான்.”ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது!...”

”அதுக்குத்தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்...” என்றான் மணி.

”குடிக்கலாந்தான்... ஆனா வவுத்தல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்பாவது ஆயிப் போச்சின்னா?...”

”நீ ஒருத்தி!... இந்தப் பெயகிட்டே போயி பெருசா வெளக்கம் பேசிக்கிட்டு இருக்கியே? கெர்ப்பமா இருக்கவ குடிச்சாள்னா கெர்ப்பம் கலைஞ்சி போயிரும்டா... ஒழுங்கா மொளத் தெரியாத பேய.. ஒனக்கு எதுக்குடா இதேல்லாம்?...” என்றான் சங்கரபாண்டி.பேசிக்கிண்டிருக்கும்போதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது. கொங்ச நேரம் கவனித்துக் கேட்ட பிறகு, குசுகுசுவென்று ரொம்பத் தாழ்வான குரலில் மனிதக் குரல்கள் பேசுவது கேட்டது.“

ஏலேய்!.. மோசம் போயிட்டமடா!... ஏட்டீ வண்டிமலைச்சி எந்திரி... எந்திரி... லே மணி, பக்கத்துல தங்கவேல் நாடார் வெளையில கெணறு இருக்குது. அதுல தூக்கிப் போட்டுட்டு ஓடிருவோம்... தூக்கு தூக்கு” என்று அவரப்படுத்தினான் சங்கரபாண்டி.”நான் அப்பயே உட்காரப் போவயிலேயே சொன்னேன். நீ கேட்டியா?.. காட்டுக்குள்ள தேரத்துக்கு ஒரு தெசையில் இருந்து காத்து அடிக்கும், டின்னைத் தொறந்தா வாடை காட்டிக் குடுத்துரும்னு சொன்னேனே... கேட்டியா?... இப்ப எல்லாரையும் சேத்து மாட்டி வுட்டுட்டியே?...””செறுக்கி மவனே.. கூடச் சேர்ந்து குடிச்சுப் போட்டுப் புத்தியா சொல்லிக்கிட்டிருக்க? ஒரே இறுக்கா இறுக்கிப் பொடுவேன்... தூக்கிலே டின்னை...
”மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சங்கரபாண்டி, மணி இவர்களோடு, வண்டிமலைச்சியும் உட்கார்ந்திருந்தாள்.

(1980ம் ஆண்டு ஆனந்தவிகடனில் வெளிவந்த சிறுகதை)

இதோ, இன்னொரு விடியல்! - வண்ணநிலவன்


ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்! ஆறு கவிதைகளை முள்ளுக்காடு ராஜுவே எழுதியிருந்தான். ஆசிரியர் முகில், இரண்டு கவிதைகள் எழுதியிருந்தார். இவை தவிர, தரமான பட்டுச் சேலைகளுக்கு கே.வி.சில்க்ஸ், நாவிற்கினிய இனிப்புகளுக்கு மீனா ஸ்வீட்ஸ், ஓட்டல் ஆனந்தா, ராஜா ராணி காபி பார், கீர்த்தி ஸ்டோர்ஸ் என உள்ளூர் விளம்பரங்களால் மற்ற பக்கங்களை நிரப்பியிருந்தார் முகில்.

'வாசல் கதவும் ஜன்னல்களும் திறந்துகிடக்கின்றன, உன்னை எதிர்பார்த்து' என்றொரு கவிதையும், 'தோட்டத்தில் குண்டு மல்லிகைகள் பூத்திருக்கின்றன, உன்னால் பறிக்கப்படுவதற்காக' என்றொரு கவிதையும் எழுதியிருந்தார் ஆசிரியர் முகில். எட்டாவதும் பத்தாவதும் படிக்கிற இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் காதல் கவிதைகள் எழுதியது முள்ளுக்காடு ராஜுவுக்கு என்னவோ போலிருந்தது!

முத்தையா என்ற முகிலுக்கு இலக்கியம் என்றால் 'அ'னா, 'ஆ'வன்னாகூடத் தெரியாது. ஏதோ ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சித்த சுபபோதினி விளக்கச் சொற்பொழிவுகள், யோகக்கலை என்று ஊரில் எந்தக் கூட்டம் நடந்தாலும், முத்தையா ஆஜராகிவிடுவார். அந்த மாதிரிதான் அவர் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு வந்தார். கதாபாத்திரங்களின் பெயர் வராதவாறு 'அவன், இவன்' என்று எழுதினால் போதும்... அந்தக் கதை இலக்கியத் தரமாகிவிடும் என்பது முகிலின் திடமான இலக்கியக் கொள்கை.

'பூக்காரி தெருவில் போனாள்
வாசம் ஜன்னல்
எட்டிப் பார்த்தது' என்ற ரகத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வார்த்தைகளை மடக்கி மடக்கிப் போட்டுக் கவிதைகளை எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். ஜன்னல் இல்லாமல் அவருக்குக் கவிதை எழுத வராது. அவரது அலுவலகச் செல்வாக்கினால், உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த இலக்கியச் செல்வர் ஆர்.எஸ்.ராமநாதன் கூட அவரது கவிதைகளைப் பாராட்ட ஆரம்பித்திருந்தார். ஆர்.எஸ்.ராமநாதன் நடத்தி வந்த 'பேனா' என்ற பத்திரிகைக்கு ஏராளமான விளம்பரங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் முகில்.

தனது 'தென்பொருநைத் தென்றல்' வெளியீட்டு விழாவுக்குக்கூட ஆர்.எஸ்.ராமநாதனைத்தான் அழைத்திருந்தார் முகில். இலக்கியச் செல்வர் ஆர்.எஸ்.ராமநாதன் காலையிலேயே ரயிலில் வந்து இறங்கிவிட்டார். அவரை முகிலும் முள்ளுக்காடு ராஜுவும் இதர இலக்கிய அன்பர்களும் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று, பகவதி லாட்ஜில் தங்க வைத்திருந்தனர்.

'தென்பொருநைத் தென்றல்' என்று யாராவது இவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி, கடைகளில் பத்திரிகையைக் கேட்டு வாங்குவார்களா என்ற தனது சந்தேகத்தை முள்ளுக்காடு ராஜு ஆரம்பத்திலேயே முகிலிடம் சொல்லிப் பார்த்தான். 'பொருநை' என்ற பெயரே போதும் என்பது முள்ளுக்காட்டின் அபிப்பிராயம். தெருத் தெருவாகப் பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டு இருந்த தன்னைக் கூப்பிட்டு வேலை போட்டுக் கொடுத்த முகிலிடம் அதிகமாகப் பேசினால் வேலையை விட்டே நிறுத்திவிடுவாரோ என்று முள்ளுக்காடு பயந்தான். தவிர, அவனுடைய ஆறு கவிதைகள் வேறு முதன்முதலாகப் பிரசுரமாகின்றன. முதல் இதழிலேயே ஆறு கவிதைகள் வெளியாகிறதென்றால், அது சாமான்யமான காரியமா! அதுவும் வரிக்கு வரி கலையும் இலக்கியமும் மிளிரும் ஒரு பத்திரிகையில் கவிதைகள் பிரசுரமாவது என்பது சாதாரண விஷயமே அல்ல! உலகத் தரம் வாய்ந்த இலக்கிய நிகழ்வல்லவா அது?!

முள்ளுக்காடு ராஜு, பஞ்சு மிட்டாய் வியாபாரத்தையும் இலக்கியப் பத்திரிகைகளில் பணிபுரிவதையும் மாறி மாறிச் செய்து வந்தான். தென்பொருநைத் தென்றலுக்கு முன்பே அர்ச்சனா, பாகீரதி போன்ற கலை இலக்கியத் திங்கள் இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் முள்ளுக்காடு ராஜுவுக்கு இருந்தது. அவை எல்லாமே இரண்டு மூன்று இதழ்களோடு நின்றுவிட்டன.

இரண்டு மாதம் உதவி ஆசிரியர் வேலை, திரும்பவும் பஞ்சு மிட்டாய் வியாபாரம் என்று அவனது கலை இலக்கிய நாட்கள் கழிந்துகொண்டு இருந்தன. என்ன வேலை பார்த்தாலும், கவிதை எழுத மட்டும் மறக்க மாட்டான். தினசரி நாலு கவிதைகளாவது எழுதினால்தான், அவனது கலை இலக்கிய தாகம் அடங்கும்.

'பஸ்ஸில் நாம் மட்டுமா செல்கிறோம்? இன்ஜினும் இருக்கைகளும் அல்லவா செல்கின்றன!' என்ற முள்ளுக்காடு ராஜுவின் கவிதை, அந்நியமாதலை அப்படியே உரித்துக் காட்டுகிறது என்று பிரபல கலை இலக்கிய விமர்சகர் டி.ஹெச்.சண்முகம் அடிக்கடி கூட்டங்களில் குறிப்பிடுவார். முள்ளுக்காடு ராஜுவின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசும்போது, அவருக்கு எப்போதும் தும்மல் வந்துவிடும். தும்மலும் அந்நியமாதலின் உடல்ரீதியான விளைவு என்பார் சண்முகம்.

கயல் அச்சக முதலாளி மணி, மேஜை டிராயரில் வெகு நேரமாக எதையோ தேடிக்கொண்டு இருந்தார். மேஜையில் காகிதங்களும், புரூஃப்களும், ஃபைல்களும் தாறுமாறாகக் கிடந்தன. மணியால் எதையாவது தேடாமல் இருக்க முடியாது. அச்சகத்தினுள் இயந்திரங்கள் ஓடுகிற சத்தமும், வேலையாட்களின் பேச்சுக் குரல்களும் கலவையாகக் கேட்டன. முள்ளுக்காடு ராஜு, முதலாளியின் தலைக்கு மேலே இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி நான்கு ஆகியிருந்தது.

தென்பொருநைத் தென்றல் வெளியீட்டு விழா, மாலை ஆறு மணிக்கு! இலக்கிய சாம்ராட் ஆர்.எஸ்.ராமநாதனை லாட்ஜிலிருந்து முகிலே அழைத்து வந்துவிடுவார். ஒரு ஐம்பது பிரதிகளாவது ஹாலுக்கு எடுத்துக்கொண்டு போனால் போதும்!

''ஃபாரம் எல்லாம் மடிச்சாச்சு. கட்டிங் பண்ணிப் பின் போட வேண்டியதுதான்'' என்று, தேடுவதை நிறுத்தாமலேயே பேசினார் மணி.

'அர்ச்சனா' பத்திரிகையும், 'பாகீரதி' பத்திரிகையும்கூட இதே அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டன. அந்தப் பத்திரிகைகளையும் ஆர்.எஸ்.ராமநாதன்தான் வெளியிட்டு, மிகுந்த உற்சாகமாகப் பேசினார். 'அர்ச்சனா' பத்திரிகையை நடத்தியவர் வாட்ச் கடை அதிபர். 'பாகீரதி'யை ஆரம்பித்தவர் ஸ்வீட்ஸ் ஸ்டால்காரர். பத்திரிகை வெளியிட யார் கூப்பிட்டாலும், ஆர்.எஸ்.ராமநாதன் சளைக்கவே மாட்டார். 'அர்ச்சனா' விழாவில், 'இலக்கியத்தின் விடிவெள்ளி' என்று அந்தப் பத்திரிகையைப் போற்றினார். 'பாகீரதி' வெளியீட்டு விழாவில், 'இதோ தமிழ் இலக்கியத்தின் விடியல்' என்றார். இரண்டு பத்திரிகைகளுமே நின்றுவிட்டன. என்றாலும், மங்காத உற்சாகத்துடன் ரயிலேறி, தென்பொருநைத் தென்றலை வெளியிட வந்துவிட்டார். ஊக்கமும் உற்சாகமும் ததும்பி வழியும் தமிழ் இலக்கியப் பிதாமகரல்லவா ஆர்.எஸ்.ஆர்.?

மலையாளக் கவி சுள்ளிக்காட்டுக்கும் தனக்கும் முக ஜாடை ஒத்திருப்பதாக ராஜுவுக்கு நினைப்பு! அதனால்தான் தன் பெயருக்கு முன்னால் முள்ளுக்காடு என்று போட்டுக்கொண்டு இருந்தான். மற்றபடி, கையகல முள்ளுக்காடுகூட முள்ளுக்காடு ராஜுவுக்குக் கிடையாது.

ராஜு வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள், மணி தயாராக நூறு பத்திரிகைகளைக் கட்டி வைத்திருந்தார். ஒரு ஆட்டோவில் பத்திரிகைக் கட்டை ஏற்றிக்கொண்டு, விழா நடைபெறும் ஹாலுக்குப் போனான் முள்ளுக்காடு. ஹாலில் பதினைந்து இருபது பேர் இருந்தனர். மேடையின் அருகே கட்டை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, ஹாலுக்குள் ஆசிரியர் முகிலும் ஆர்.எஸ்.ராமநாதனும் நுழைந்துகொண்டு இருந்தனர். கட்டைப் பிரித்து ஒரு பத்திரிகையை எடுத்தான் ராஜு. 'தென்பொருநைத் தெண்ரல்' என்ற பத்திரிகைத் தலைப்பின் கீழ், 'ஆசிறியர் முகில்' என்று அச்சாகியிருந்தது.

நன்றி - விகடன்

வண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் - விக்கிரமாதித்யன்


தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள், (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி முற்போக்குக் கதைகள், ஆண்-பெண் சினேகக் கதைகள், வேலையில்லாத் திண்டாட்டக் கதைகள், வரதட்சிணைக் கொடுமைக் கதைகள், பெண்ணிணக் கதைகள், குடும்பக்கதைகள், கோபம் கொண்ட இளைஞர்களின் அபத்தக் கதைகள், நேர்கோட்டில் இல்லாதக் கதைகள் இப்படி இரண்டாயிரம் வருஷத்துக்கும் போதுமான சிறுகதைகள் தமிழில் வந்து குவிந்து விட்டன.

இவ்வளவு சிறுகதைகளுக்கும் மத்தியில் சுயம்புவான, கலாபூர்வமான ஆழமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, சம்பத், நகுலன், அசோகமித்திரன், சார்வாகன், சுந்தர ராமசாமி, ஆர்.ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கோணங்கி, ஜெயமோகன், வண்ணநிலவன் முதலானோர் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கிய உன்னதம், மொழி வளர்ச்சியெல்லாம் இத்தகைய எழுத்துக்கலைஞர்களையே சார்ந்திருக்கிறது. இவர்களே உண்மையில் படைப்பிலக்கிய வாதிகளாகவும் புதிது செய்து சாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள். எஸ்தர் தொகுப்புக்கும் பாம்பும் பிடாரனும் தொகுப்புக்குமிடையே தெரியும் வித்தியாசம் நல்ல படைப்பாளியின் இயல்பான மாற்றம்.

எழுதுவது பெரிதில்லை. அது சிறுகதைக்கு வளம் சேர்ப்பதாக அமைவது முக்கியம். அதைச் சாதித்தவர்களில் முக்கியமான ஒருவர் வண்ணநிலவன். எஸ்தர், அழைக்கிறவர்கள், துக்கம், தருமம், அரெபியா, பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும் முதலான இவர் கதைகள் தமிழ்ச்சிறுகதையில் ஒரு தனி இடம் வகிப்பவை. இதுவரையுள்ள கதைபோல இல்லாதிருப்பதே ஒரு கதையின் விசேஷத் தகுதி, உயர்வு. இந்தக் கதையை இன்னொருவர் எழுதியிருக்க முடியாது என்று, நினைக்க வைக்கிற தனித்தன்மையே ஒரு படைப்பாளிக்குப் பெருமை. வண்ணநிலவன் கதைகள் அத்தகையவை.

வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திலேயே மிக முக்கியமான ஒன்று. கிறித்துவ வாழ்க்கைப் பின்புலத்தில் இலக்கியமாகி நிற்கிற எழுத்து.

'முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று '

-கதையின் முதல்வாக்கியம்

'வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள் ' -கடைசி வாசகம்.

இதற்கு நடுவே கதை. தென்கோடிக் கிராமம் ஒன்றில் மழை பொய்த்துப் போய் வறட்சியுண்டாகும் போது, ஒரு எளிய கிறித்தவக் குடும்பம் எதிர் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினையே கதையின் மையம்.

குறுநாவலாகத் தெரிகிற இதன் கதை வெளிப்படையானது. முடிவு தவிர்த்து. பாத்திரங்களைத் தன் போக்கில் காண்பித்துக் கொண்டு போவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை விஸ்தாரமாக விவரிப்பதும், காட்சிகளை அடுத்தடுத்து சித்தரிப்பதுமாக வளர்கிறது கதை.

அந்தக் குடும்பம் இனிமேலும் ஊரில் இருக்க முடியாது என்கிற நிலைக்குள்ளாகும்போது, பஞ்சம் பிழைக்க வெளியேறிப் போக வேண்டியிருக்கிறது. நடமாட முடியாத, காது கேளாத, கண் சரியாகத் தெரியாத பாட்டியை என்ன செய்வது ? இதுதான் பிரச்சினை.

அகஸ்டின், டேவிட், பெரிய அமலம், சின்ன அமலம், ஈசாக், பாட்டி, எஸ்தர் - இவர்கள்தாம் கதை மாந்தர்.

அகஸ்டின் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்யமுடியாது. அமைதியானவன்போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல. சதா சஞ்சலப்பட்டவன்.

அடுத்து டேவிட்.

பெரிய அமலம் ஒரு பெரிய குடிம்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். மிகவும் அப்பிராணி. அதிகம் பேசாதவள். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில்லாதவள்.

சின்ன அமலம் இதற்கு எதிரிடையான குணமுடைய பெண்.

ஈசாக் விசுவாசமான ஊழியன். அவனுடைய உலகம் காடு. விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு, மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்கின்றவன்.

எஸ்தர் இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வருகிறவள்.

பாட்டி ஒரு காலத்தில் எல்லோரையும் சீராட்டினவள். இப்போது உபயோகம் இல்லாதவள். பிழைக்கப்போகிற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போக முடியாது இருப்பவள்.

முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும் கேப்பையும் கொண்டுதான் சமையல்.

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். மேலத்தெருவில் ஆளே கிடையாது. இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது ? சாத்தாங்கோயில்விளையிலும் திட்டி விளையிலும் மாட்டைவிட்டு அழித்தாயிற்று. கூழ் காய்ச்சவும் வீட்டுச் செலவுக்கும் வரவரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது.

காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும் இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கை சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்சகாலமாய் மறைந்துவிட்டன.

'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன ? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா ? '-எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது.

யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு.

'நீங்க ரெண்டுபேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க ' - பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் பார்த்துச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி.

'நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க. மதுரையில போய்க் கொத்தவேல பார்ப்போம். மழை பெய்யுந்தன்னியும் எங்ஙனயாவது காலத்த ஓட்ட வேண்டியதுதானே! ஈசாக்கும் வரட்டும். '

'பாட்டி இருக்காள ? '

- டேவிட் கேட்கிறான்.

பதிலே சொல்லவில்லை எஸ்தர்.

அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுசீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்....

***

பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்...

யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின...

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..

***

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியானபிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டுவந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும்...

இவ்வளவு தீவிரமாக நம்பிக்கைகொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன ? ஈசாக் துணையாக இருப்பானா ?

***

பாட்டியை என்ன செய்வதென்ற பிரச்சனையை எஸ்தர் சித்திதான் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிர் கொள்கிறாள். தீர்த்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. தீர்த்து வைக்கிறாள். பாட்டியின் இருப்பு இவர்கள் பஞ்சம் பிழைக்கப் போகிறதற்கு முன் கேள்வியாகிறது. அதற்கு ஒரு விடை காண வேண்டியதிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எஸ்தர் சித்தி ஒருத்திதான் இதை எதிர் கொண்டு சமாளிக்கத் திராணி கொண்டவளாக இருக்கிறாள். கடினச் சித்தம் கொண்டு பாட்டியின் இருப்பை முடித்து வைக்கும்படி ஆகிறது அவளுக்கு.

காலில் காயம்பட்டு ஓட முடியாத பந்தயக்குதிரை சுட்டுக் கொல்லப்படுகிறது. அதன் இருத்தல் அர்த்தமற்றதாகப் போகையில் இப்படி முடிவு நேர்கிறது. குணப்படுத்தமுடியாத நோயின் கொடுமைக்கு ஆளாகிற உயிர், போரில் குண்டடிபட்டு பிழைப்பது கஷ்டம் என்கிற அலவுக்குள்ளாகும் சிப்பாய் இவர்களுக்கெல்லாம் Mercy Killing இருக்கிறது. இதே போல பாட்டிக்கும்.

வண்ணநிலவன் அதிகமான அன்பை பிரசாரம் செய்பவர், பொதுவில். இங்கே இப்படியாக இருக்க நேரும் 'அன்பு '. பாட்டியை என்ன செய்வது ? விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு என்ன செய்யலாம். 'கருணைக் கொலை 'தான் செய்யத் தோன்றுகிறது எஸ்தர் சித்திக்கு. வேறே வழியில்லை. அவள் பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவர்கள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுகிறாள். அகஸ்டினையும் டேவிட்டையும் ஈசாக்கையும் பஞ்சம் பிழைக்கக் கூட்டிக்கொண்டு போக முடிவு செய்கிறாள். பாட்டியை என்ன செய்வாள் ?

பாட்டியின் முடிவு சூசகமாகத்தான் காண்பிக்கப் படுகிறது. சிலவற்றை பூடகமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்த உயிரின் 'விடுதலை ' அப்படியானது.

படிக்காத பெண்ணின் ஜெபம், வாய்க்காலுக்கு அப்பால் வளராத ஊர், இளநீல வர்ணச் சுவர்கள், ஒரு வெள்ளை வெயில், உயிர் பெற்றுவிட்ட இருட்டு, ஆட்டுபிழுக்கை மணம் கலந்த காற்று, ரயில்வே ஸ்டெஷனில் தண்ணீர் பிடிப்பது, தண்டவாளத்தின் மீதேறி மந்தையாக கடந்து போகும் ஆடுகள் - காட்சிச் சித்தரிப்புகளெல்லாமே கதையம்சத்தில் கலந்திருப்பவை.

வழக்கமான கதையைக் காட்டிலும் இதில் விவரணங்கள், தகவல்கள் அதிகப்பங்கு வகிக்கின்றன. இவை கதையை தீவிர கதிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கின்றன.

நிறைய பாத்திரங்களும் அநேக விஷயங்களும் உள்ள இக்கதையின் உருவொழுங்கு சிதையாது, உருவ அமைதி கெடாது இருப்பது உண்டுபண்ணிக் கொண்டதாக இருக்க முடியாது. தன்னியல்பில் கூடிவந்ததாகவே இருக்கவேண்டும்.

இந்தக் கதையின் நடை 'கடல்புரத்தில் ' போல பைபிள் நடையில்லை யெனினும் பெரிதும் அதன் சாயலினான அமைதியும் எளிமையும் உள்ளது. அவனூர், அண்டை வீட்டார் கதைகளைவிடவும் பைபிள் சாயல் குரைவு.

இல்லாமையில் நேர்கிற நொம்பலங்கள், வறுமை, தரித்திர நிலையில் இருக்கும்படியான வாழ்வு, இவற்றைச் சரியாகச் சொல்கிற படைப்புகள், தமிழில் மிகமிகச் சொற்பம். இவை கலை இலக்கியமாவது கஷ்டம் என்பதோடு, சரியாக எழுதுபர்கள் இல்லை என்பதும் இன்னொரு உண்மை. எஸ்தர் இலக்கியமாகியிருக்கிறது என்றால், இதன் பின்னணியில் இந்தக் கலைஞனுக்கு இருக்கும் இது போன்ற வாழ்பனுபவமே காரணம். அனுபவ வறுமை யுள்ளவன் ஒருநாளும் கலைஞனாக மாட்டான். நிறையச் செய்யலாம். செய்து ?

இலக்கியம் செய்வது இல்லை. படைப்பது. எஸ்தர் - படைப்பு. படைப்பாளிகளாக விரும்பும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய படைப்பு.


பிரான்ஸிலிருந்து வெளிவரும் மெளனம் - கலை இலக்கிய இதழிலிருந்து. 1994

நன்றி - திண்ணை

இக்கதையை படிக்க

தமிழ் எழுத்துலகமும் சுதந்திரப் போராட்டமும் - வண்ணநிலவன்

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற காங்கிரஸ் மகா சபையின் கால்கோள் விழா சென்னையில்தான் நடைபெற்றது. 1883இல் சென்னை அடையாறில் பிரம்ம ஞான சங்கம் என்னும் தியாஸபிகல் சொஸைட்டி நிறுவப்பட்டது. இதற்கு முன்பே 1876இல் கல்கத்தாவிலும் பம்பாயிலும் இந்தியன் அஸோஸியேஷன்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதையொட்டிச் சென்னையில் மகாஜன சபை என்னும் அமைப்பு ஏற்பட்டது. இவையெல்லாம் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பு இருந்த சிறு அரசியல் அமைப்புகள்.

1884இல் சென்னை பிரம்ம ஞான சங்கத்தின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்தவர்களில் சுமார் 17 பேர் திவான்பகதூர் ரகுநாதராவ் என்பவரின் வீட்டில் கூடி அனைத்திந்திய அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என முடிவுசெய்தனர்.

கிறிஸ்துமஸ் சமயத்தில் அந்த அமைப்பைக் கூட்ட முடிவெடுத்தனர். ஏற்கெனவே 1878இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் ஹிந்து என்னும் ஆங்கில வார இதழை நடத்திவந்தார். இதில் இந்தியரது பிரச்சினைகள் குறித்த செய்திகள், கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. நான்கு ஆண்டுகள் கழித்து 1882இல் ஜி. சுப்பிரமணிய ஐயர் சுதேசமித்திரன் என்னும் வார இதழைத் தமிழில் தொடங்கினார். ஹிந்துவும் சுதேசமித்திரனும் இந்தியர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருந்தபோதுதான், காங்கிரஸ் மகாசபையைத் தோற்றுவிக்கும் எண்ணம் பிரம்ம ஞான சங்கக் கூட்டத்துக்கு வந்திருந்த கனவான்களுக்கு ஏற்பட்டது.

இதை முன்னின்று நடத்தியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற .ஸி.எஸ் அதிகாரி. சிப்பாய்க் கலகம் போன்ற ஒரு பெரும் கலகம் மீண்டும் நாட்டில் ஏற்பட்டு பிரிட்டீஷ் ஆட்சி சீர்குலைந்துவிடக் கூடாது என்னும் எண்ணத்தில், அவர் இந்தியர்களின் குரலை எதிரொலிக்கும் ஒரு மேடை தேவையென்று கருதினார். இந்தியர்களுக்குப் பிரிட்டீஷ் அரசில் சலுகைகள் பெற்றுத்தருவது, வேலைபெறுவது போன்ற நோக்கத்துடன்தான் முதலாவது காங்கிரஸ் மகா சபைக் கூட்டம் 1885 டிசம்பர் 28, 29, 30 தேதிகளில் பம்பாய் கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் சென்னையிலிருந்து எட்டுப் பேரும் செங்கல்பட்டிலிருந்து இருவரும் தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, கோயமுத்தூர், சேலத்திலிருந்து தலா ஒருவரும் கலந்துகொண்டனர். ஹிந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளின் அதிபரான ஜி. சுப்பிரமணிய ஐயரும் பம்பாய் மாநாட்டில் கலந்துகொண்டார். சென்னை மாகாணத்திலிருந்து சென்றிருந்த பிரதிநிதிகள் எல்லோரும் சென்னை மகாஜன சபையின் சார்பில்தான் சென்றிருந்தனர்.

 பம்பாய்க்குப் பின் கல்கத்தா, சென்னை, அலஹாபாத் என்று ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் காங்கிரஸ் மகாசபையின் கூட்டம் நடந்துவந்தது. அந்தக் காலத்தில், ஏதாவது ஒரு பொதுப் பிரச்சினையைப் பற்றி 'வினா-விடை' என்னும் தலைப்பில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது வழக்கமாக இருந்தது. இதைப் பின்பற்றி 1883லேயே ஜி. சுப்பிரமணிய ஐயர் சுய அரசாட்சி வினா-விடை என்னும் பிரசுரத்தை எழுதி வெளியிட்டிருந்தார். சுயாட்சி, சுயராஜ்யம், விடுதலை போன்ற கருத்தாக்கங்கள் காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பே அந்நாளைய சென்னை மாகாணத்தில் தோன்றிவிட்டன. தமிழ் எழுத்துலகம் அப்போதே சுதந்திர வேள்வியில் இறங்கிவிட்டது. பத்திரிகையாளர்களும் எழுத்துலகவாதிகளே என்றால் அக்காலத்தில் ஜி. சுப்பிரமணிய ஐயர், பிற்கால பாரதி போன்றோர் பத்திரிகையாளர்களே. ஜி. சுப்பிரமணிய ஐயரின் நண்பர் மு. வீரராகவாச்சாரியார். இவருக்குச் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வடக்குப்பட்டு கிராமம். சுப்பிரமணிய ஐயர் ஹிந்து பத்திரிகையைத் தொடங்குவதற்கு இவரும் துணையாக இருந்தார். ஹிந்துவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து தனது 50ஆம் வயதில் மரணமடைந்தார்.

காங்கிரஸ் மகாசபையின் மூன்றாம் மாநாடு 1887இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள மக்கீஸ்கார்டனில் நடைபெற்றது. இம்மாநாட்டுச் செலவுக்கு நிதி திரட்டுவதற்காக மு. வீரராகவாச்சாரியார் காங்சிரஸ் வினா-விடை என்னும் பிரசுரத்தை எழுதி வெளியிட்டார். சென்னை மாநாட்டில் சென்னை மகாஜன சபை, சென்னைப் பட்டதாரிகள் சங்கம், திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் போன்ற பட்டதாரிகளின் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். வீரராகவாச்சாரியார் இந்து நேசன் என்னும் பெயரில் மாதமிருமுறைப் பத்திரிகையையும் நடத்தியிருக்கிறார். இவையெல்லாம் ஆரம்பக் காலத்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தமிழ்நாட்டு எழுத்துலகம், பத்திரிகையுலகம் அளித்த பங்கு.

சென்னை மாநாட்டில் கும்பகோணம் சங்கரமடம், தருமபுர ஆதீனத்திலிருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் அந்நாள்களில் பிரிட்டீஷ் அரசருக்கு வாழ்த்துப் பாடிய பின்னரே சபை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வைஸ்ராய் இம்மாநாடுகளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் அவற்றை மாநாட்டில் வாசிப்பதும் யூனியன் ஜாக் கொடியை ஏற்றுவதும் நடைமுறைகளாக இருந்திருக்கின்றன. இது குறித்து மகாத்மா காந்தி தமது சுயசரிதையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, கலந்துகொண்ட கூட்டங்களில் ராஜ வாழ்த்து பாடப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் 1899இல் லார்டு கர்ஸான் என்பவர் வைஸ்ராய் ஆனார். அப்போது பிரிட்டீஷ் அரசின் இந்தியத் தலைமையகம் கல்கத்தாவில்தான் இருந்தது. வங்காளத்திலுள்ள படித்த இந்தியர்கள் பிரிட்டீஷாருக்குத் தலைவலியாக இருந்தனர். லார்டு கர்ஸான் வங்காளிகளை இந்து- முஸ்லிம் எனப் பிரிப்பதன் மூலம் வங்காளிகளின் அரசியல் எழுச்சியை ஒடுக்கலாம் என நினைத்து முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட சிட்டகாங், டாக்கா ஆகிய பகுதிகளைக் கிழக்கு வங்கம் என்றும் இதர பகுதியை மேற்கு வங்காளம் என்றும் அறிவித்தார். 1905இல் வங்கப் பிரிவினைச் சட்டம் அமலுக்கு வந்தது. இதைக் காங்கிரஸ் மகாசபை எதிர்த்தது. வங்கப் பிரிவினை சுதேசி இயக்கத்துக்கு வழிகோலிற்று.

காங்கிரஸ் கட்சியிலிருந்த மிதவாதிகள், 'சுதேசி இயக்கம் நடத்துவது ஆட்சியாளர்களுடன் மோதலை உருவாக்கும்' என்று எண்ணினர். தீவிரவாதிகள் சுதேசி இயக்கத்தை ஆதரித்தனர். இதன் எதிரொலியாக ..சி 1906இல் சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். பாரதி, சிவா, ..சி. போன்றோர் சுதேசி இயக்கத்தை ஆதரித்தனர். மிதவாதிகளைப் பழைய கட்சியார் என்றும் தீவிரவாதிகளைப் புதிய கட்சியார் என்றும் கூறினர். 1906இல் நடந்த கல்கத்தா காங்கிரஸுக்குச் சென்னை வக்கீல் வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் மிதவாதிகளும் பாரதியார் தலைமையில் சுதேசியரான தீவிரவாதிகளும் சென்றனர். மகாகவி பாரதி இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இப்படித்தான் அடியெடுத்து வைத்தார்.

தமிழின் முதல் நாவலென்று அறியப்படும் பிரதாப முதலியார் சரித்திரம் 1876இல் வெளிவந்தது. இதற்கு முன்பு ஏறத்தாழ இதே காலகட்டத்தில் கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரத்தை எழுதுகிறார். நந்தனார் சரித்திரம் பெரிய புராணத்தில் உள்ளதுதான் என்றாலும் அந்தச் சரித்திரத்தில் அந்தணர் பாத்திரம் கிடையாது. பெரிய புராண நந்தனார் ஏர்பிடித்து உழுபவரும் அல்ல. நந்தனார் சரித்திரம் என்பது பாரதியின் பாஞ்சாலி சபதத்தைப் போல், அந்நாளைய அந்நியர் ஆட்சியை மனத்தில் உருவகித்து எதிர்த்து எழுதப்பட்டது எனக் கருத இடம் உண்டு. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளி வந்த பிறகுதான் காங்கிரஸ் மகாசபை தோன்றுகிறது.

பாரதியைப் போல் பத்திரிகையாளராகச் செயல்பட்டவர் திரு.வி.. அவர் தொழிற்சங்கவாதியாகவும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். ஆனால், விடுதலைப் போராட்ட காலத்தில் 39ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதிபோல் ஒரு வியப்புக்குரிய எழுத்துலக ஆளுமை அவனுக்கு முன்பும் பின்புமில்லை. பத்திரிகை, இலக்கியம் என்ற இரு துறைகளிலும் பாரதி சண்டமாருதம்போல் செயல்பட்டிருக்கிறான். ஆனால், பாரதியைப் போல் கவித்துவ அழகுடன் எழுதாவிட்டாலும் நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளையும் கவி யோகி சுத்தானந்த பாரதியும் அக்காலகட்டத்திய குறிப்பிடத்தக்க கவிஞர்கள். பாரதிக்குப் பின் தோன்றிய மணிக்கொடிக்காரர்களில் பலர் கதரணிந்த காங்கிரஸார்தான். என்றாலும் அவர்களது சிறுகதைகளிலோ நீண்ட உரைநடைப் படைப்புகளிலோ சுதந்திரப் போராட்டம் பற்றிய எதிர்வினைகள் எதுவும் இல்லை.

 சி.சு. செல்லப்பா பின்னாள்களில் சுதந்திர தாகத்தை எழுதினாலும் சுதந்திரத்துக்கு முன்பு செல்லப்பாவும் சரி, அவரது சமகாலப் படைப்பாளிகளான கு..ரா, . பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, சிட்டி, பி.எஸ். ராமையா போன்ற மணிக்கொடி எழுத்தாளர்களும் சரி முழுக்க முழுக்க அகவாழ்வு குறித்த சமூகக் கதைகளையே பெரும்பாலும் எழுதியிருக்கின்றனர். கு..ரா. பாரதியைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்; பக்கிம் சந்திரரின் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

1972, 73 வாக்கில் இடைச்செவலிலிருந்த கி. ராஜநாராயணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பிரச்சார எழுத்து பற்றிப் பேச்சு வந்தது. அப்போது வியட்நாம் யுத்த காலம். 'வியட்நாம் யுத்தம் பற்றி எழுதாதவர்கள் படைப்பாளிகள் அல்ல' என்னும் கருத்து அந்நாள்களில் நிலவிவந்தது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வியட்நாம் யுத்தத்தின் கொடுமையைப் பற்றி ஒருவன் எப்படி எழுத முடியும்? மனத்தைப் பாதித்த விஷயங்களைத்தான் ஒரு எழுத்தாளனால் எழுத முடியும் எனக் கி.ராவும் இதர நண்பர்களும் கருதினர். ஆனால், பிரச்சார எழுத்து என்ற ஒருவகை எழுத்து உலக அளவில் இருந்துவருகிறது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புங்கூட நிலவிவருகிறது.

 இது குறையல்ல. மணிக்கொடிப் படைப்பாளிகளின் எழுத்து நோக்கின்படி, அவர்கள் அரசியல் சார்ந்து எழுதுவதைத் தவிர்த்திருக்கலாம். அதை அவர்கள் பிரச்சார எழுத்தாகக் கருதியிருக்கலாம். புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா போன்றவர்கள் செய்திப் பத்திரிகைகளிலேயே பணிபுரிந்திருக்கின்றனர். ஆனால், அவர்களது அக்காலத்திய சிறுகதைகளிலோ இதர உரைநடைப் படைப்புகளிலோ சுதந்திரப் போராட்டம் சார்ந்த விஷயங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

கா.சீ. வேங்கடரமணியின் நாவலையும் எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் இருபது வருடங்கள் என்னும் நாவலையும் தமிழ் இலக்கிய உலகம் சுதந்திரப் போராட்ட நாவல்களாக அங்கீகரித்துள்ளது. ஆனால், இவர்கள் அக்கால இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களல்ல.

பாரதிக்குப் பிந்திய நவீனத் தமிழ் இலக்கிய வட்டத்துக்கு அப்பால், ஒரு எழுத்தாளர் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார். பல லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தையும் அக்காலத்தில் நடைபெற்ற சமூகச் சீர்திருத்தங்களையும் கருவாகக்கொண்டு தியாக பூமி, அலை ஓசை, மகுடபதி போன்ற படைப்புகளை உருவாக்கினார். அவர்தான் கல்கி. அலை ஓசை அவரது மிகச் சிறந்த படைப்பு. சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்துவந்த மிதவாதம், தீவிரவாதம் ஆகிய இரு போக்குகளையும் கல்கி தனது அலை ஓசையிலும் மகுடபதியிலும் அருமையாகக் கையாண்டுள்ளார். பாரதிக்குப் பின் தோன்றிய மிகப் பெரும் பத்திரிகையாசிரியர், உரைநடைக்காரர் கல்கி. ஆனால், 'கல்கி'யைத் தற்கால நவீன, தீவிர எழுத்துலகம் ஒரு எழுத்தாளராகவே கருதுவதில்லை. பாரதியைப் போலக் கல்கி ஒரு மிகப் பெரும் சக்தி. பாரதியின் கவிதைகளையே வெறும் இசைப் பாடல்கள் எனக் கருதும் நவீன இலக்கிய உலகில் கல்கிக்கு இடம் இல்லாததில் வியப்பில்லை. இதனால் பாரதியின் நாமத்தையோ கல்கியின் நாமத்தையோ தமிழ் எழுத்துலகிலிருந்து அழித்துவிட முடியாது.

இக்கட்டுரை எழுத உதவிய நூல்கள்:

1. .பொ.சியின் விடுதலைப் போரில் தமிழகம்

2. இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - பெ.சு. மணி

3. ..சி கண்ட பாரதி

நன்றி - காலச்சுவடு 2008