தி.ஜானகிராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தி.ஜானகிராமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது:

“எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க... ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை... எழுந்திருக்க மாட்டிஙக்?... இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.”

இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, பெரிய பானையையும் தூங்கிக் கொண்டிருந்த பெரிய குழந்தையையும் தோளில் சார்த்தித் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினான் அவன். அதற்குள் அவன் பெண்டாட்டி, கைக்குழந்தை, இரண்டாவது மூட்டை இரண்டையும் எடுத்துக்கொண்டு நடந்தாள். இரைச்சலில் விழித்துக்கொண்ட நடுக் குழந்தை அவர்களுடைய அவசரத்தைக் கண்டு பரபரவென்று எழுந்து, அவர்களைத் தொடர்ந்தது. நன்னையன் அடுத்த வீட்டுத் திண்ணையில் கைச்சுமைகளை இறக்கி, வேட்டியை இறுக்கக் கட்டிக்கொண்டு, மீண்டும் நடந்து, எதிர்த்த சாரியில் ஆறேழு வீடு தள்ளியிருந்த பிள்ளையார் கோயில் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்தான்.

முதுகில் வெயில் விழத் தூங்குகிறவனை எழுப்புவது போல் அவள் எழுப்பினாளே தவிர, அப்படி ஒன்றும் கண் விழிக்க நேரமாகிவிடவில்லை. இருள் சற்றே பிரிந்திருந்தது. சல் சல்லென்று ஒவ்வொரு வாசலிலும் கேட்ட, சாணி தெளிக்கிற ஓசை கொஞ்சம் கொஞ்சமாக இருளை விரட்டிக் கொண்டிருந்தது.

கோயில் திண்ணை மீது போட்டதும் குழந்தைகள் மீண்டும் சுருண்டு துயிலில் ஆழ்ந்துவிட்டன. நன்னையனுக்குக் கண்ணெல்லாம் பொங்கிற்று. அவனுடைய பெண்டாட்டிக்கும் கண் திறக்க முடியாமல் பொங்கிற்று. இரவு  இருவரும் சாப்பிடவில்லை. இராக்காலப் பிச்சையாகக் கிடைத்த பழைய சோறு குழந்தைகளுக்கே சரியாகக் காணவில்லை. நாலு நாளாக ஒரு வேளைச் சாப்பாடுதான்; அதுவும் அரை வயிற்றுக்கு. ஆறாப் பசி, அடி வயிற்றில் அனலாகக் குமைந்தது. இப்படியே இன்னும் ஒரு வேளை இருந்தால் குமட்டல் கிளம்பிவிடும். தலை கனத்தது. வறட்சியினால் முணு முணு என்று வலித்தது. கண்ணைக் கசக்கித் தேய்த்துத் தெருவைப் பார்த்ததும், அந்த அம்மாள் கிழமை சொல்லிக் கூச்சல் போட்டது நினைவுக்கு வந்தது.

புரட்டாசி சனிக்கிழமைதான். உலகத்துப் பிச்சைக்காரரெல்லாம் ஊரிலே கூடி விட்டார்கள். ஒரு பெரிய ஆண்டிக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டிகள்! நாற்பது ஐம்பது இருக்கும்! பொழுது புலருவதற்கு முன்னால்  எத்தனை ஆண்டிகள்! இவர்கள் எப்போது கண் விழித்தார்கள்? இரவு எங்கே படுத்திருந்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? பல் தேய்க்கவில்லையா? எல்லாம் ஒரே வார்ப்பு! வெளுத்துப் போன காவித்துணி. கழுத்தில் கொட்டை, கையில் ஓடு. பாதி பேர் மொட்டை, பாதி பரட்டை, படுகிழங்கள், கண் குருடு, கால் விந்தல்! - முன்னை வினைப் பயன்கள் ஊர்வலம் போவது போல் இருந்தது நன்னையனுக்கு.

திண்ணையில் உட்கார்ந்தவாறே அவன் கேட்டான்:

“சாமி, எங்கே போறீங்க?”

“சிவகுரு செட்டியார் வீட்டிலே கொடுக்கறாங்க.”

“என்ன கொடுக்கறாங்க?”

“வர்ற பரதேசிங்களுக்கெல்லாம் ஒரு சல்லி, ஒரு பிடி அரிசி. போறோம்.”

“சல்லியா?”

”ஆமாம்.”

“சல்லிக்காசு யாருக்குய்யா ஆம்பிடுது இப்ப! பெரிய தர்மந்தான் போ!”

“கட்டின வீட்டுக்கு யார்தான் பளுது சொல்ல முடியாது?” என்று கூட்டத்தோடு நடக்கப் பெருநடை போட்டான் பரதேசி.

நன்னையன் கூட்டிப் பார்த்தான். அவன், பெண்டாட்டி, மூன்று குழந்தைகள் - ஐந்துபிடி அரிசியும் ஐந்து சல்லியும் தேறும்; கைக்குழந்தையையும் ஆளாக மதித்தால்.

“அஞ்சு பிடி அரிசி, ஒரு வயித்துச் சுவரிலே ஒட்டிக்கக் காணுமா?” என்று கேட்டுக் கொண்டான்.

“எல்லோரும் போறாங்களே. நீங்களும் போய்ப் பாருங்களேன்” என்று யோசனை சொன்னாள் மனைவி. 

“போய்ப் பாருங்களேனா? நீ வரலியா?”

”என்னாலே நடக்கறதுக்கு இல்லே. மூட்டை முடிச்செல்லாம் தூக்க முடியாது. இந்த மூணும் சுருண்டு சுருண்டு தூங்குது. வயித்துலே காத்துதான் இருக்கு. அதுக எப்படி நடக்கும்?”

அவன் மட்டும் எழுந்து உட்கார்ந்தான். அதற்குள் சிவகுரு செட்டியார் வீட்டு வாசலில் ஆண்டிகள் ‘க்யூ’ வரிசையில் உட்கார்ந்து விட்டார்கள். உட்கார்ந்த ஒழுங்கைப் பார்த்தால் தொன்று தொட்ட வழக்கமாகத் தோன்றிற்று. புரட்டாசியில் மட்டும் இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் சிவகுரு இந்தத் தர்மத்தைச் செய்கிறாராம். நாற்பது ஐம்பது பேருக்குப் பிறகு, கடைசி ஆளாக உட்கார வேண்டும் என்று நினைத்தபோது, நன்னையனின் காலும் உள்ளமும் ஏழெட்டு மைல் நடந்து வந்தது போல களைத்துவிட்டன.

இவர்களோடா உட்கார வேண்டும்? என்ன இருந்தாலும் அவன் பஞ்சத்து ஆண்டிதான். சுபிட்சம் என்ற வாடையை நுகராத இந்தப் பரம்பரை ஆண்டிகளோடா உட்கார வேண்டும்! உட்கார்ந்தாலும் மோசமில்லை. முகம் தெரியாத ஊர்தானே? ஆனால் செட்டியார் இன்னும் வாசலுக்கு வரவில்லை. ஒரு மணி நேரம் செல்லுமாம். பூஜையில் உட்கார்ந்திருக்கிறாராம். வெயில் கூடக் கிளம்பவில்லை. வேறு எங்கே போவது? நன்னையன் உட்கார்ந்தான். தான் வேறு என்ற தன்மையுடன், உள்ளங் குன்ற, உடல் குன்ற, ஓர் அடி தள்ளினாற் போல் உட்கார்ந்து கொண்டான். பரதேசிகளில் பலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அவனுக்குப் பக்கத்தில் இருந்த பரதேசிக்குக் கிராப்புத் தலை. சீவாத பரட்டைக் கிராப்பு; சீசாவுக்குள் விட்டுக் கழுவுகிற பிரஷ் மாதிரி. கழுத்தில் கொட்டை; தடிப்பயலாக வளர்ந்திருந்தான்.

“சாமிக்கு என்ன ஊரு?” என்று அவன் கேட்டான். நன்னையனுக்கு அவனோடு பேசுவதற்கே கௌரவக் குறைச்சலாக இருந்தது. பதில் சொல்லவில்லை.

“உங்களைத்தாங்க. எந்த ஊரு உங்களுக்கு?”

“ஏன்!”

“கேட்கக்கூடாதுங்களா?”

“சேலம்.”

“சேலமா? ஏ அப்பா? ரொம்பத் தொலைவான ஊராச்சே.”

“ஆமாம்.”

”எங்கே இம்மாந் தூரம்?”

வரிசையில் உட்கார்ந்த பிறகு, பதில் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

”ஆமாம், என்ன செய்யுறது? பிளைப்புப் போயிடுச்சு, பிச்சைக்குக் கிளம்பியாச்சு.”

“அப்படீன்னா வேறெ பொளப்பு உண்டுன்னு சொல்லுங்க!”

“இருந்தது. இப்ப இல்லே...”

“என்ன! வெள்ளாமையா?”

“நெசவு.”

“நெசவா? வேட்டி புடவையெல்லாம் நெய்வமுனு சொல்லுங்க.”

“துண்டு துப்பட்டிக்கூட நெய்வோம். நூல் இல்லே. எத்தினி நாளைக்கு இருக்கிறதை வித்துத் திங்க முடியும்! மூக்குலே, கையிலெ இருக்கிற வரைக்கும் நகைதான். வித்துக் காசாக்கிட்டா, ரெண்டு நாள் சோறுதானே! தீந்துது. இப்படிப் பண்ணிக்கிட்டே வந்தா, அப்புறம் விக்கிறதுக்கு என்ன இருக்கும்?”

“ஏன் நூல் கிடைக்கலே?”

“என்னமோ கிடைக்கலே.”

“வேற பிளைப்புக் கிடைக்கலியோ?”

“வேறெ ஏதாவது தெரிஞ்சால்ல செய்யலாம்? வேட்டி புடவை நெய்யத் தெரியும். பொழுதெல்லாம் தறியிலெ உக்காந்து, ரத்தம் செத்த கூட்டம் நாங்க. கோடாலி, மண்வெட்டி தூக்க முடியுமா? ஓடியாடி வேலைசெய்ய முடியுமா?”

“பாவம்!”

அதற்குள் அவனை அடுத்து உட்கார்ந்திருந்த ஓர் ஒற்றைக் கண்ணன் சொன்னான்: “பிச்சை எடுக்க மட்டும் தெம்பு வேண்டியதில்லைன்னு இதுக்கு வந்தீங்களோ? இதுவும் லேசுப்பட்டதில்லே. எங்களைப் பாரு, இன்னிக்கு ஒரு ஊரு, சாயங்காலம் ஒரு ஊரு, ராத்திரி வேறெ ஊரு, நாளைக்குக் காலமே எத்தனையோ தூரம் போயிருப்போம். இதுக்கும் ஓடியாடிப் பாடு பட்டாத்தான் உண்டு.”

பரம்பரைப் பிச்சைக்காரனின் தொழில் அபிமானத்துடன் பேசின அவனுடைய குரலில் கற்றுக்குட்டியைக் கண்டு அசட்டையும் ஆதரவும் தொனித்தன.

“இன்னிக்குத் தஞ்சாவூருன்னா, நாளைக்குக் கும்மாணம், நாளை ராத்திரி திருடறமருதூரு, நாளைத் தெறிச்சு மாயாவரம், அப்புறம் சீயாளி, கனகசபை, இப்படி நாளுக்கு ஒரு சீமையாப் பறக்கிறோம் நாங்க. நீங்க என்னமோ உடம்பு முடியலேன்னு பிச்சை எடுக்க வந்தேங்கிறீங்களே; என்னத்தைச் சொல்றது?”

“இப்படியே நடந்து நடந்து உயிரை விடவா நாம் பிறந்திருக்கோம்?”

“நடந்தாத்தான் சோறு உண்டு. ஒரே ஊரிலே சுத்திச் சுத்தி வந்தா, சனங்களுக்குக் கச்சுப் போயிடும்....  சும்மாக் குந்தியிருக்கிறது சோம்பேறிப் பிச்சைக்காரங்களுக்குத்தான். சாமிங்க, சிவனடியாருங்க இவங்களுக்கெல்லாம் யாத்திரை தான் கொள்கை.”

’நீ பிச்சை எடுக்க லாயக்கில்லை’ என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. நன்னையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “எப்பொழுதுமே பிச்சையா எடுக்கப் போகிறோம்? ஏதோ சோதனைக் காலம்! ஹும். வெட்டிப் பயல்கள்” என்று மனத்திற்குள் சபித்துக் கொண்டே எழுந்தான்.

“என்ன அண்ணே, எளுந்திக்கிட்டீங்க?”

”இருங்க. பல் தேய்ச்சிட்டு வந்திடறேன்” என்று எழுந்தான் அவன். தெருக்கோடி திரும்பி, ஆற்றங்கரை நடப்பில், குறுக்கே ஓடிய வாய்க்காலில் இறங்கினான். மதகின்மீது ஒரு செங்கல் துண்டை உரைத்துப் பல்லை விளக்கி, முகத்தைக் கழுவிக் கொண்டான். ஒரு கை தண்ணீர் மொண்டு விழுங்கினான். அது நெஞ்சையும் மார்பையும் அடைத்து, உயிரைப் பிடிப்பதுபோல் வலியைக் கொடுத்தது. நல்ல பசியில் வெறும் வயிற்றில் ட் தண்ணீர் ஊற்றிய அதிர்ச்சி அது. மெதுவாக அதை உள்ளே இறக்கி, வாய்க்கால் கரையிலேயே ஒரு நிமிஷம் உட்கார்ந்தான். மீண்டும் எழுந்து, வயிறு கொண்ட மட்டும் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தெருவை நோக்கித் திரும்பினான்.

சனிக்கிழமை; போட்டி ஏராளம். அதையும் மிஞ்சினால்தான் வயிற்றில் ஏதாவது போட முடியும். போட்டியை மிஞ்ச ஒரு வழிதான் உண்டு. உண்மையைக் கலப்படமில்லாமல் சொல்ல வேண்டும். பிச்சை நமக்குத் தொழில் அல்ல என்று படப்படச் சொல்ல வேண்டும். அப்படித்தான் கருணையை எழுப்பலாம்.

வெயில் வந்துவிட்டது. சிவகுரு செட்டியார் இன்னும் பூஜையில்தான் இருக்கிறார். பத்துப் பதினைந்து வீட்டைக் கடந்து சென்றான் அவன். அங்கும் ஒரு போட்டி காத்திருந்தது. ஒரு குரங்காட்டி, குச்சியை இரண்டு முழ உயரத்தில் பிடித்து, லங்கையைத் தாண்டச் சொல்லிக் கொண்டிருந்தான். லங்கையையா சமுத்திரத்தையா என்று யோசிக்காமல் குரங்கு தாண்டித் தாண்டிக் குதித்தது.  வேடிக்கை பார்க்கச் சிறுவர்களின் கூட்டம். ஒரே சிரிப்பு, கூச்சல்! மிகப் பெரிய போட்டி இது!  நன்னையன் இன்னும் இரண்டு வீடு தள்ளிப் போய் நின்றான்.

வீடு பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.

“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.

“ஏனையா அம்மாவைக் கூப்பிடறேஎ? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமென்னு காத்திருந்தியா முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?.... என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். பதில் சொல்லு சொல்லு என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால் அவன்  ஆரம்பிக்கலாம்; அவர் நிற்கவில்லை.

“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு - இப்படி வந்து நிக்கிறியே.... உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”

நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது. ஆனால் அதற்கும் அவர் விடவில்லை. திருப்பித் திருப்பி அவன் கண்ணாடியாக, குத்துவிளக்காக, கட்டின பெண்டாட்டியாக இல்லாததை, நாலைந்து தடவை இடித்துக் காட்டிவிட்டு, “உனக்குத்தான் வேலை. எங்க வீட்டுலெ ஒருத்தருக்கும் வேலையே கிடையாது. பத்துப் பசை தேய்க்கிறது, முகங்களுவறது, எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுட்டு, உன்னை வந்து உபசாரம் செய்யணும்; இல்லியா?-”

அப்பாடா!... கொஞ்சம் ஓய்ந்துவிட்டார்.

“இல்லீங்க” என்று சொல்ல வாயெடுத்தான் நன்னையன். ஆனால் மறுபடியும் அவர் பிடித்துக்கொண்டு விடப் போகிறாரே என்று பயந்து நேராக விஷயத்துக்கு வந்துவிட்டான்.

“நம்பளுக்குத் தொழில் நெசவுங்க. நமக்குச் சேலம். தறியிலே நெசுக்கிட்டு மானமாப் பொளச்சிட்டிருந்தோம். ஏளெட்டு மாசமா நூலே கிடைக்கலே. வேலை இல்லேன்னிட்டாங்க. இருந்ததை வித்துச் சாப்பிட்டோம். இங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு வந்தோம். இங்கேயும் அப்படித்தான் இருக்கு. மூணு நாள் கோயில்லே தேசாந்திரிக் கட்டளைக்குச் சீட்டுக் கொடுத்தாங்க. மூணு நாளைக்கு மேலே கிடையாதாம். அப்பாலெ நிறுத்திட்டாங்க. நாலு நாளாக் கால்வயித்துக்குக் கூடக் கிடைக்கலே. மூணு பச்சைக் குளந்தை பட்டினி கிடக்குது. நேத்திலேருந்து நானும் வீட்டிலேயும் பட்டினிங்க” என்று மூச்சு விடாமல் சொல்லி தீர்த்தான்.

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்லுறே? தறியும் நூலும் வாங்கித் தரச் சொல்றியா?”

“நாம்ப அப்படிக் கேக்கலாம்களா? குளந்தைகளைப் பார்க்க வளங்கிலீங்க-எதோ கொஞ்சம் வயித்துக்கு?”

“இந்த பாரு, எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்திடுச்சு. இந்தச் சேலம் டவுனு இப்ப இருக்கா, இல்லை ஈ காக்காய் இல்லாமெ ஒரே பொட்டைக்காடாப் போயிடிச்சான்னு தெரியலே. நானும் ஆறு மாசமாப் பாக்கறேன். லக்ஷம் பேரு உன் மாதிரி வந்திட்டாங்க. நூல் இல்லே. வேலையில்லேன்னு வயித்தை எக்கிக்கிட்டு வந்தி நிக்கிறாங்க. என்ன சொல்றே?”

“அப்பறம் என்னத்தைச் சொல்றதுங்க?”

“என்னத்தைச் சொல்றதுங்களா? நான் சொல்றேன் கேளு. பிச்சைக்கும் முதல் போட்டுத்தான் ஆகணும். அதோ பாரு அநுமார் நிக்கிறாரு. அவருதான் அவனுக்கு முதல்.”

திரும்பிப் பார்த்தான் நன்னையன். குரங்காட்டி அவர் பேசுவதைக் கேட்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.

பெரியவர் சொன்னார்:

“அந்த அநுமார் அவனுக்கு முதல், இன்னும் கொஞ்ச நாளியிலே பாரு: அந்த அலுமினிய ஜோட்டி நிறைய அரிசி ரொப்பிக்கிட்டுப் போயிடுவான். அவன் பொளைக்கிறவனா, நீயா? இந்த உலகத்திலே எந்தத் தொழிலுக்கும் முதல் வேணும்டாப்பா, முதல் வேணும்; பாம்பாட்டியும் குரங்காட்டியும். ஜாலராப் போட்டுக்கிட்டுப் பாடணும்; இல்லாட்டிக் கொத்தமல்லி கறிவேப்பிலை விக்கணும். இல்லாட்டி, மூட்டைதான் தூக்கலாம். அதுக்கும் உங்கிட்ட முதல் இல்லே. எலுமிச்சம்பழத்தை நறுக்கிப் பத்துநாள் புரட்டாசி வெயில்லே காயப்போட்டது போல நிக்கிறே.”

ஒரு கணம் மௌனம்.

’குரங்காட்டியைவிட மட்டமாகப் போய்விட்டோம்!’ அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சேலம், தறி, அவன் குடியிருந்த வீடு, பசுமாடு, முற்றத்தில் சாயம் நனைத்துத் தொங்கின நூல் பத்தை- எல்லாம் அவன் கண் முன் ஒருமுறை வந்து போயின. ‘எங்கோ பிறந்து, எங்கோ தொலைவில் வாழ்ந்து, யாரோ முகம் தெரியாதவரிடம் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோமே! எதனால்? எதற்காக?’ அவன் கண் நிரம்பிற்று. உதட்டைக் கடித்தால் கண்ணீர் தெறித்துவிடுமென்று மூச்சைப் பிடித்து நிறுத்தி, வாயைத் திறந்து கண்ணீரைக் கன்னத்தில் சொட்ட விடாமல், தேக்கினான்.

“என்ன சொல்றே?” என்று வழக்கமான கேள்வியைக் கேட்டார் அவர்.

இதற்கு என்ன பதில் சொல்வது? கண்டம் நடுங்கிற்று. அவன் பேசாமல் நின்றான்.

“சும்மா நின்னுக்கிட்டே இரு” என்று எழுந்து உள்ளே போய்விட்டார் அவர்.

குரங்காட்டி கேட்டான்: “நெசவு வேலையா உங்களுக்கு?”

நன்னையன் தலையை ஆட்டினான்.

“காலங் கெட்டுப் போச்சுய்யா. இந்த மாதிரி அவதியையும் பஞ்சத்தையும் ஒருநாளும் பாத்ததில்லே. பாயிலெ கிடந்தவங்க எல்லாரையும் தரையிலெ உருட்டிடிச்சே இந்தப் பாவி மவன் பஞ்சம். தருமம் கெட்ட உலகம்!” என்று, நொடித்தவன் நிலைமையை மனத்தில் வாங்கி, இரக்கம் சொல்லி, அவனையே பார்த்துக்கொண்டு நின்றான் குரங்காட்டி. ‘நாங்கதான் இப்படியே பிறந்திருக்கோம். நீயும் இப்படி ஆகணுமா, கண்ணராவி!” என்று அவன் மனம் கண்ணின் வழியாகச் சொல்லிற்று. அந்தப் பார்வையைப் பார்த்ததும் ஆடிக்கொண்டிருந்த நன்னையன் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தான்.

சற்றுக் கழித்துப் பத்துப் புது இட்லி, இரண்டு வயிற்றுக்குப் பழைய சோறு - எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் பெரியவர் மனிஅவி. குரங்காட்டிக்கும் குரங்குக்கும் இரண்டு இட்லி கிடைத்தன.

“இந்த பாரு! நித்யம் கிடைக்கும் இந்த மாதிரின்னு நெனைச்சுக்காதே, நாளைக்கு வந்தியோ கெட்ட கோபம் வந்திடும்! போ, பொளைக்கிற வளியைப் பாரு” என்று வாசல் நிலைப்படியிலிருந்தே சொல்லிவிட்டு அவனுடைய கும்பிடைக்கூட பார்க்காமல் பெரியவர் உள்ளே போய் விட்டார்.

நன்னையன் கோயில் திண்ணையை நோக்கி நடந்தான்.

”இந்தா, இதை வாங்கிக்க.”

அவன் பெண்டாட்டிக்கு அதைப் பார்த்ததும் சோற்றுக் களஞ்சியத்தில் குதித்துவிட்டாற்போல் இருந்தது.

“ஏது இத்தினி? கிளப்புலே வாங்கினீங்களா?”

”கிளப்புலெ வாங்கும்படியாத்தானே இருக்குறோம் இப்ப! பிச்சைதான்! வாங்கி வை.”

பெரிய குழந்தை பலகாரத்தை வளைத்துக் கொண்டது. நடுக் குழந்தை, “அப்பா. குரங்குப்பா!” என்று கத்திற்று. குரங்காட்டி, திண்ணை ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

“என்னாப்பா?”

“ஐயா, நீங்க பொளைக்கத் தெரியாதாங்க. அவங்க கொஞ்சம் சோறும் பலகாரமும் கொடுத்தாப் போதுமாய்யா? அப்படியே இன்னும் நாலு வீட்டிலெ அரிசியும் வாங்கியாரக் கூடாது? ராத்திரிப் போதுக்கு. மறுபடியும் ஒரு நடை அலையணுமால்லியா?”

“நீ சொல்லு.  உனக்கென்ன? நேத்து மத்தியானமே புடிச்சு எல்லா வயிறும் காயுது. இப்ப இதைத் தின்கிறது. அப்புறம் பாத்துக்கறோம்.”

குரங்காட்டி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு சொன்னான்:

”இந்த ஊரிலே யாரையாவது தெரியுமா உங்களுக்கு?”

“ஊரே புதிசு. ஏன்?”

“இல்லே, கேட்டேன். ஒரு சேதி சொல்லணும்.”

“என்ன சேதி!”

“சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“சேதியைச் சொல்லேன். கோவிச்சுக்கறது என்ன?”

”சரி, சோறு தின்னுட்டு வாங்க. இங்க ஒருத்தரு இருக்காரு. உங்களைப்போல ஆளுங்களுக்கெல்லாம் நிறையக் கொடுப்பாரு. அவருகிட்ட அளச்சிக்கிட்டுப் போறேன்.”

“யாரு சொல்லேன்! வியாபாரியா?”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க சாப்பிடுங்க.”

சாப்பாடு முடிந்ததும், திண்ணையிலிருந்து இறங்கிக் குரங்காட்டியோடு நடந்தான் நன்னையன். கடைத்தெருச் சதுக்கத்தைக் கடந்து, ரெயிலடி ரஸ்தாவில் நடந்தார்கள். கால் நாழிகை தூரம் போனதும் ஊர் முடிந்துவிட்டது. அப்பால் ஒரு குளம். அதர்கும் அப்பால் சாலையோரமாகத் தோட்டிகளின் சேரி. முப்பது குடிசைகள் இருக்கும். எங்கும் திறந்த வெளி. பச்சை வயல்கள். ரெயிலடிச் சாலையின் இரு மருங்கிலும் தென்ன மரங்கள். இந்தப் பச்சையைப் பார்க்கிறபோதெல்லாம் நன்னையன் காணாததைக் கண்டதுபோல் மயங்கி நின்றான்.

சேரிக்கு முன்னால் நின்று, “இங்கதான் இருக்காரு நான் சொன்ன ஆளு.”... “காளி, ஏ காளி!” என்று உரக்கக் குரல் கொடுத்தான் குரங்காட்டி.

“ஏன்?” என்று குடிசைகளின் நடுவேயிருந்து பதில் குரல் வந்தது.

“வைத்தியலிங்கத்தை அளைச்சுக்கிட்டு வா இப்பிடி.”

நன்னையன் ஒன்ரும் புரியாமல் விழித்தான்.

கையில் ஈயக் காப்பும் ஈய மோதிரமும் ஈயக் காதணியும் ஈய மூக்குத்தியுமாக ஒரு பெண்பிள்ளை வந்தாள். கூட, குட்டிப் பருவத்தைக் கடந்து வளர்ந்த குரங்கு ஒன்று ஓடிவந்தது.

“இந்த பாருங்க, இவன்தான் வைத்தியலிங்கம்.. ஏய் வைத்தியலிங்கம், வா இப்படி” என்று அழைத்தான் குரங்குக்காரன்.

குரங்கு துள்ளிக் குதித்தது. அவனுடைய அரைத் துணியைப் பிடித்து, அண்ணாந்து பார்க்கக் குலவிற்று. அவன் கையிலிருந்த குரங்கின்மேல் விழுந்து தள்ளிற்று.

“இந்த பாருங்க. அப்பவே கோவிச்சுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நெசந்தானா?”

“நான் சொன்ன ஆளு இந்த வைத்தியலிங்கந்தான்!”

“யாரு! என்னய்யா விளையாடறே?”

”பாத்தீங்களா? கோவிச்சுக்கிறீங்களே! இவனை நானும் எம் பொஞ்சாதியும் உசிராட்டம் வளர்த்து வரோம். இதை உங்களுக்குக் கொடுத்திடட்டுமா?”

“எனக்கு என்னாத்துக்கு?”

“ஆமாங்க! உங்களுக்குப் பிச்சை எடுக்கவே தெரியலியே! நெசவாளிங்களுக்கு எப்படிப் பிச்சை எடுக்கத் தெரியும்? அது பிறவியிலே வரணும். வமிச குணங்க. லேசிலே கத்துக்க முடியாது: தச்சு வேலை, கொல்லு வேலை மாதிரிதான். வன்னியர் ஐயா சொன்னாப்போல உங்களுக்கு மூட்டை தூக்கறாத்துக்குக்கூட முதல் இல்லே. நீங்க என்னா பண்ணப் போறீங்க? அதுவும் இந்த ஊரு. தரித்திரம் பிடிச்ச ஊரு. செட்டியாரு, சனிக்கிழமை காசும், அரிசியும் கொடுப்பாரு. மைத்த நாளிலே பிச்சைக்காரன் வாடையே அந்தப்பக்கம் வீச விடமாட்டாரு. வன்னியரும் தர்மசாலிதான். அதுக்காகத் தினந்தினம் அவங்க வீட்டு வாசல்லெ போயி நிக்கறதுக்கு ஆச்சா? அவங்க ரெண்டு பேருந்தான் கொடுக்கிறவங்க. மீதி அத்தனையும் பிடாரி. போறதுக்கு முன்னாடி மேலே உளுந்து புடுங்குவாங்க. தண்ணியை வாரி மேலே வீசுவாங்க. தர்மம் பெருத்த ஊரு! நீங்க ஏதாவது கொடுத்தா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும். அதுக்குத்தான் சொல்றேன்.

இந்த ஊர்லே ஒருத்தருக்கும் உங்களைத் தெரியாது. இந்த வைத்திலிங்கத்தை வச்சு ஆட்டுங்க. சோத்துக் கவலையே இராது. நெசவாளி நெசவாளின்னு சொன்னா நம்பறத்துக்கு இந்த ஊர்லெ ஆளு கிடையாது.”

நன்னையன் புன்சிரிப்பு சிரித்தான்.

“என்னையும் குரங்காட்டியா அடிச்சிடணும்னு பாக்கறே! ம்... சொல்லு சொல்லு. தலைக்கு மேலே போயிடுச்சு! அப்பாலே சாண் என்ன, முளம் என்ன!”

“தலைக்கு மேலே ஒண்ணும் போயிடலீங்க. பஞ்சம் பறந்து போச்சின்னா, நீங்க மறுபடியும் ஓட்டு வீட்டுக்குப் போயிடுவீங்க. இது எத்தினி நாளைக்கு? அதுவரைக்கும்தான் சொல்லுறேன். அப்படியும் குரங்காட்டின்னா மட்டம் இல்லே. ஐயா சொன்னாப்போல இது அப்படியே தங்கக்கட்டி, நல்ல முதலு, வேற யாரையாச்சும் கூப்பிட்டு இதைக் குடுத்திடுவேனா? உங்க குளந்தைகளையும் அம்மாவையும் பாத்தேன். எனக்குப் பொறுக்கலே.”

“காளி, இவங்க ய் ஆரு தெரியுமா? இவங்களுக்குச் சேலம். தறியிலே நெசு, மானமாப் பொளச்சிக்கிட்டிருந்தவங்க. நூல் கிடைக்கலியாம், கையிலே ஓட்டை எடுத்திட்டாங்க. இவங்க அம்மா லச்சுமி மாதிரி இருக்காங்க. அந்த மகா லச்சுமியும் வாடித் தேம்புது. பச்சைக் குளந்தை மூணு, துவண்டு துவண்டு விளுது, வைத்திலிங்கத்தை இவங்க வச்சுக்கட்டுமே. கண்ணராவியாக இருக்குது, பார்த்தா!”

“என்ன, வைத்திலிங்கத்தையா!”

“அட, என்னமோ? பதர்றியே? நம்மகிட்டத்தான் மூணு இருக்கே. ஒண்ணைக் கொடுக்கறது. இங்க வச்சு ஆட்றத்துக்கு ஆளைக் காணும். இவங்க மூஞ்சியைப் பாத்துப் பெரிய மனசு பண்ணு. உன் கலியெல்லாம் தீந்துரும். ஒரு ராசா பொறப்பான் உனக்கு.”

“அவங்க கேக்கக்கூட இல்லைபோல் இருக்கு. எடுத்துக்க, எடுத்துக்கன்னு அவங்க தலையிலெ கட்டுறியே?”

“எல்லாம் எடுத்துக்குவாங்க.”

“ஏஞ்சாமி எடுத்துக்கிறீங்களா?”

“எடுத்துக்கிறேன்னு சொல்லுங்களேன்” என்று குரங்காட்டி நச்சரித்தான்.

”சரிம்மா, எடுத்துகிறேன்.”

“பாத்தியா, உங்கிட்டையா சொல்லிட்டாரு, எடுத்துக்கிறேன்னு!”

அவள் பளபளவென்று வெண்முத்துச் சிரிப்புச் சிரித்தாள். அவனுடைய கருணை அவளையும் தொட்டுத்தான் விட்டது. அவள் சொன்னாள்: “பாத்தியா, என்னை இந்தக் குருமுட்டுலெ வச்சுச் சரின்னு தலையாட்டச் சொல்றே பாத்தியா..  இரு இரு.. சாமி! அவங்க சொல்றாங்க, கொடுக்கிறேன். எடுத்துக்கிட்டுப் போங்க. வைத்திலிங்கம் வயித்துக் கவலையே வைக்கமாட்டான்.”

கோயில் சிலைபோலக் கறுப்பாக, ஆரோக்கியமாக, பளபளவென்று வனப்பு வடிவாக நின்றாள் அவள்.

“அப்பாடா, காளியாத்தா மனசு இரங்கிட்டா! இனிமேக் கவலையில்லே!” என்று குரங்காட்டி சிரித்தான்.

சுற்றிலும் வயல். எட்டியவரையில் பரந்து நின்ற பச்சை வயலில் அலை ஓடிக்கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று. பஞ்சு பொதிந்த வானம். அவள், அவளுடைய போலிக் கோபம், சிரிப்பு எல்லாவற்றையும் பார்த்தான் நன்னையன். துணிவு பிறந்தது.

“இந்தக் குச்சியைக் கையிலே பிடியுங்க. பிடிச்சீங்களா? ‘லங்கையைத் தாண்டுடா’ன்னு சொல்லுங்க. சும்மாச் சொல்லுங்க.”

“லங்கையைத் தாண்டுடா!”

வைத்திலிங்கம் லங்கையை தாண்டிக் குதித்தது.

குச்சியை வாங்கி அதன் கையிலே கொடுத்து, “ஆடு மேய்டா வைத்திலிங்கம்னு சொல்லுங்க” என்று சொல்லி கொடுத்தான் குரங்காட்டி.

“ஆடு மேய்டா வைத்திலிங்கம்.”

குரங்கு குச்சியைப் பிடரியில் பிடித்துக்கொண்டு இப்படியும் அப்படியும் இரண்டு நடை போய் வந்து, அடுத்த கட்டளைக்குக் காத்து நின்றது.

பிறகு பள்ளிக்கூடம் போகும் கோலம், கைதி கை கட்டி நிற்கிற கோலம், பெண்டாட்டியோடு ரகசியம் பேசும் நிலை, கோபுரம் ஏறும் வித்தை - எல்லாவற்றையும் பாடம் சொல்லிக் கொடுத்தான் குரங்காட்டி.

நன்னையனையும் குரங்காக ஆட்டி வைத்துவிட்டான் அவன்!

அவள் சிரித்தாள்.

”நல்ல வேளை, பழகின குரங்கு, புதுக்குரங்கு இப்படிச் சுளுவா மசியாதுங்க” என்றாள் அவள், சிரித்ததற்குக் காரணம் சொல்வதற்காக. பிறகு, “சரி அளைச்சுக்கிட்டுப் போங்க” என்றாள்.

அதை உச்சிமோந்து காளி வழியனுப்பினாள். குரங்கு தான் போக மறுத்தது. சேரிக்குள்ளே ஓடிப்போய் ஒரு பிடி கடலை எடுத்துவந்து நன்னையனிடம் கொடுத்து, “இதைக் கையிலே வச்சுக்கிட்டு ஒண்ணொண்ணாப் போட்டுக்கிட்டே போங்க; ஓடியாரும்” என்று சொல்லிக் கொடுத்தாள் காளி.

“நீ வரலியா?” என்று கேட்டான் நன்னையன்.

“நான் பின்னாலெ வர்றேன், போங்க” என்று நின்றுவிட்டான் குரங்காட்டி.

“என்னாங்க இது, குரங்கைப் பிடிச்சுக்கிட்டு! ஏது”

“எல்லாம் பிளைக்கிறதுக்குத்தான். குரங்காட்டி கொடுத்தான்.”

“பஞ்சத்துக்கு மூணு குளந்தை பத்தாதுன்னு சொல்லியா?”

“அந்தக் குளதைங்கள்ளாம் திங்கத்தான் திங்கும். இது திங்கவும் திங்கும், சம்பாரிச்சும் போடும். தூக்கு மூட்டையை; எதிர்த்த வீட்டுத் திண்ணையில் கட்டிப் போடுவோம்.”

ஜாகை மாறிற்று. திண்ணையிலிருந்த ஜன்னல் கம்பியில் குரங்கைக் கட்டிப் போட்டான் அவன்.

கைக்குழந்தை சிரித்துக்கொண்டு கையைக் கொட்டிற்று. குரங்கைப் பிடித்துத் தலையில் அடித்தது.

“ரொம்ப நல்லக் குரங்கு. பழகின மாதிரியல்ல நடந்துக்குது!” என்றாள் அவள்.

இரண்டாவது குழந்தை வீல் என்று அழுதது. “ஏதுடா சனி!” என்று சொல்லப் போகிறாளே என்று பயந்து, நன்னையன் குரங்காட்டியின் வாதங்களைத் தான் சொல்லுகிற மாதிரி எடுத்து விளக்கினான்.

“நல்லதுதான். குழந்தைகளுக்கும் விளையாடுகிறதுக்கு ஆச்சு” என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் கவலையைத் தீர்த்தாள் அவள்.

முதல் குழந்தை பயந்துகொண்டு, தூரத்தில் நின்று கொண்டிருந்தது.

“இதைப் பாத்தியா, அநுமார்!” என்று ஆஞ்சநேயர் கதையெல்லாம் சொல்லி, அறிமுகப்படுத்தி பயத்தைப் போக்குவதில் ஈடுபட்டான் நன்னையன். தடவிக் கொடுக்கச் சொன்னான். தனக்கும் ஓர் ஒத்திகையாக இருக்கட்டும் என்று விளையாட்டுக் காட்டுகிற போக்கில், அதை லங்கையைத் தாண்டு, ஆடு மேய்க்கிற வித்தை முதலியவைகளைச் செய்து காட்டச் சொன்னான்.

கடைசியில் வைத்திலிங்கம் மூட்டையைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தது. அதற்கும் பசி வேளை.

“சும்மா எத்தினி நாளி விளையாடுவது? ராத்திரிக்கு என்ன செய்யறதாம்?”

பொழுது போனது தெரியத்தான் இல்லை. புதுக் குழந்தையோடு குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து, வெகுநேரம் மகிழ்ந்துவிட்டது குடும்பம்.

அலுமினியப் பேலாவை எடுத்துக்கொண்டு இறங்கினான் அவன்.

“ஏன், இதை அளச்சிக்கிட்டு போகலியா?”

”அதுக்குள்ளாறாவா?”

அவ்வளவு சீக்கிரமாகப் பரம்பரைப் பிச்சைக்காரனாகச் சரிந்துவிட அவன் உடன்படவில்லை. முழங்காலுக்குக் கீழே தொங்கத் தொங்கத் தட்டுச்சுற்றுக் கட்டி, உடம்பில் மல் பாடியும் போட்டுக்கொண்டு போனால் குரங்குங்கூட அவனை குரங்காட்டியாக மதிக்காது. சற்றுக் குழம்பி நின்று, கடைசியில் ஒன்றியாகவே போனான்.

உண்மைப் பல்லவியைப் பாடிக்கொண்டு, நாலைந்து தெருக்களில் வாசல் வாசலாக ஏறி இறங்கினான். ஊர் நடப்பே தெரியாத, தெரிந்துகொள்ளாத, கவலைப்படாத காதுகளெல்லாம் அவனுடைய நூல் பஞ்சக் கதையைக் கேட்டன.

நாலு தெருச் சுற்றிக் கால் ஓய்ந்தபோதுதான் குரங்காட்டி சொன்னது சரி என்று பட்டது அவனுக்கு. அந்தச் சின்னப் பேலாவில் பாதியை எட்டத் தவித்தது அரிசி. திரும்பி வந்து திண்ணையில் ஏறியபோது வெயில் நன்றாக ஏறிவிட்டது. காலணாவும் அரையணாவுமாக ஏழெட்டுக் காசு சேர்ந்திருந்தது. பட்டாணிக் கடலையும் வாழைப்பழமும் வாங்கி வந்தான்.

வெயில் கனல் வீசிற்று. புரட்டாசிக் காய்ச்சல் சுள்ளென்று காய்ந்தது. குழந்தைகள் கடலையையும் வாழைப்பழத்தையும் தின்று, தூங்கத் தொடங்கின. குரங்கும் அதையே தின்றது. வெயில் தாங்க முடியாமல், அதுவும் ஒருக்களித்துப் படுத்து அயர்ந்து உறங்கிவிட்டது. பெண்டாட்டியும் உறங்கினாள்.

தூங்கும் குரங்கைப் பார்த்து, நன்னையன் சிரித்துக் கொண்டான். அது மனிதன் மாதிரியே தூங்கிற்று. வெயில் பட்ட வெண் மேகத்தைப் பார்க்க முடியாமல் கண்ணை கையால் மறைத்துக்கொண்டு தூங்கிற்று. அதற்கு வயசு என்ன? ஆறு மாதம், ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள்  முப்பத்தைந்தும் முப்பதும் ஆன மனிதப் புருஷனின் பெண்டாட்டியையும் மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கச் சக்தியைப் பெற்றுவிட்டது. இந்தப் பொறுப்பு, தன் தலையில் விழுந்திருப்பது தெரியுமா அதற்கு? எங்கோ பிறந்து வளர்ந்தவனின் குடும்பத்தை நூற்றைம்பது மைலுக்கு அப்பாலுள்ள ஒரு தோட்டிச் சேரிக் குர்னக்கு எப்படிக் காக்க நேர்ந்தது. நன்னையன் வியந்து கொண்டிருந்தான். வயிறு நிறைந்திருந்ததால், துன்பத்தை நினைத்து அழாமல், சிரித்துக் கொள்ள மலர்ச்சியும் தெம்பும் இருந்தன அவனுக்கு. யுத்தம் நடந்தபோது அவன் வாழ்ந்த வாழ்வு, இந்த குரங்குக்குத் தெரியுமா! தினம் மூன்று ரூபாய்க்கு குறையாமல் கூலி கிடைத்தது. அவளும் நூல் இழைத்து எட்டணா, பத்தணா சம்பாதித்துக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் கிருஷ்ணா லாட்ஜில் இரண்டு இட்லியும் ஒரு முறுகல் தோசையும் காபியும் சாப்பிட்டு விட்டு, அவளுக்கும் குழந்தைகளுக்கும் வாங்கி வருவான். தாம் தூம் என்று செலவு. சினிமா தவறுவதில்லை. தேவைக்குமேல் வேட்டி, சட்டை, புடவைகள். அந்த நாளில் மாதம் பத்து ரூபாய் எளிதில் மிச்சம் பிடித்திருக்க முடியும். பிடித்திருந்தால்.....

கடைசியில் அவனும் அயர்ந்துவிட்டான்...

இரண்டு மணி நேரம் கழித்துக் கண்விழித்தபோது - தானாகக் கண்விழிக்கவில்லை அவன். குழந்தைகள் அவனை அடித்துத் தட்டிக் கூப்பிட்டன.

“அப்பா, அப்பா. எளுந்திரிங்கப்பா, குரங்கு ஓடிப் போயிடுச்சு. அப்பா, குரங்கு பிடிங்கிட்டுப் போயிடுச்சு”

விறுக்கென்று எழுந்து உட்கார்ந்தான்.

“குரங்கு போயிடுச்சு, அதோ பாருங்க”” என்றாள் அவள்.

“எங்கே?”

குரங்கு எதிர்த்த வீட்டு ஓட்டுக் கூரையின் கூம்பில் உட்கார்ந்திருந்தது.

“பா, பா!” என்று கூப்பிட்டான் அவன்.

“எப்படி ஓடிச்சு?”

“இதுங்களுக்கு விளையாட்டுக் காட்டறதுக்காக அவுத்துப் பிடிச்சுக்கிட்டிருந்தேன். விசுக்குனு பிடுங்கிக்கிட்டுப் போயிடுச்சு.”

“நல்ல கெட்டிக்காரிதான், போ!”

அவள், அவன் இருவரும் அழைத்தார்கள். கடலையும் வாழைப்பழமும் அவர்களுடைய வயிற்றில்தான் இருந்தன. வெறுங்கைகளைப் பார்த்ததும் அது இறங்கி வரத் தயங்கிற்று.

அதற்குள் தெருவில் போன சிறுவர்களும் சிறுமிகளும் கூடிவிட்டார்கள். ‘ஹோ ஹோ!’ என்று இரைச்சல்.

”ஏய், சீரங்கி!”

“ட்ரூவ்!”

கல்லை விட்டு அடித்தான் ஒரு பயல். வைத்திலிங்கம் நறுக்கென்று ஒரு தாவு தாவிப் பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிற்று. உச்சியில் கம்பிகளைப் பிடித்தது.

“போகாதே, போகாதே!” என்று யாரோ ஒருவர் கூச்சல் போட்டார். அவ்வளவுதான். உடம்பு ஒரு முறி முறிந்தது. கிரீச்சென்று கோரமான கூச்சல்! பேயடித்தாற்போலத் தடாரென்று அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தது குரங்கு. இரண்டு துடிதுடித்து, கண்ணை மூடி ஒடுங்கிவிட்டது.

அண்டை வீட்டுக்காரர்கள் கூடினார்கள். தெருவே கூடிற்று. அரைமணியில் ஊரே கூடிவிட்டது. மின்சாரம் தாக்கிய விலாப்பக்கம் அப்படியே கருகிப் போயிருந்தது. எதற்காக என்று தெரியாமல் நன்னையனும் பெண்டாட்டியும் அழுதார்கள். அதைப் பார்த்துக் குழந்தைகளும் அழத் தொடங்கின.

“ஏண்டா, உன் குரங்கா இது?” என்று கேட்டார் ஒரு வயசானவர்.

”ஆமாங்க.”

“எப்படிச் செத்துப்போச்சு?”

நன்னையன் கதையைச் சொன்னான்.

“ஏண்டா, அநுமார் அவதாரம்டா அது. சாக விட்டுட்டியே. இதை வச்சுக் காப்பாத்த முடியலியாடா. பாவிப்பயலே!” என்று அவன் முதுகில் இரண்டு குத்துவிட்டார் அவர். ஊருக்குப் பெரியவர்களில் ஒருவர் போல் இருக்கிறது. ஒருவரும் அவரைத் தடுக்கவில்லை. ஊரெல்லாம் இதை வந்து பார்த்தது.

காளியும் புருஷனும் ஓடிவந்தார்கள். காளி வைத்திலிங்கத்தைத் தொட்டுத் தொட்டு அழுதாள்.

“குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!” என்று நன்னையனைப் பார்த்து வெதும்பினாள்.

பரபரப்பு அதிகமாகிவிட்டது. தெருவில் உள்ளவர்கள் மும்முரமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சின்னச் சிங்காரச் சப்பரம் தயாராகிவிட்டது. சிறிய வாழைக்குலை, ஓலை நறுக்கு, இரண்டு மெழுகுவர்த்தி - சப்பரம் வெகு அழகாக இருந்தது. வைத்திலிங்கத்தைக் காலைத் தொங்கவிட்டு, கையை அஞ்சலி பந்தம் செய்து உட்காரவைத்து ஜோடித்தார்கள். உட்கார வைக்குமுன் குளிப்பாட்டியாகிவிட்டது. நெற்றியில் நாம, திருச்சூர்ன்ணம். மேலெல்லாம் குங்குமம். ஒரு ரோஜாப்பூ ஹாரம்.

பஜனை கோஷ்டி, ஜாலர் ஒலிக்க, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடிக் கொண்டு முன்னால் சென்றது. நல்ல கூட்டம். நன்னையன் கைதியைப் போல், பஜனை கோஷ்டியில் நடுவில் மாட்டிக் கொண்டுவிட்டான்.

ஒரு சந்துபொந்து விடாமல் ஊர் முழுதும் சுற்றி, ஆற்றங்கரைப் பாதையில் வாய்க்காலுக்குப் பக்கத்தில் நின்றது ஊர்வலம். பஜனை கோஷ்டியின் திவ்ய நாமம் ஆற்றங்கரை வெளியெல்லாம் எதிரொலித்தது. அரை மணி நேரம் ஆஞ்சனேயரின் நாமம் கடலலைபோல் முழங்கிற்று.

அழகாக இரண்டு முழம் உயரத்துக்குச் சிமிண்டு போட்டுச் சமாதி எழுப்பி விட்டார்கள். பின்னால் அரசங்கன்றும் நட்டு நீர் ஊற்றினார்கள்.

திவ்ய நாமம் முடிந்தது. எல்லோரும் விழுந்து வணங்கினார்கள்.

“என்னடா, சும்மா நிக்கிறியே, கொலைகாரப் பயலெ, விழுந்து கும்பிடுடா!” என்று ஊருக்குப் பெரியவர் ஓர் இரைச்சல் போட்டார். பரபரவென்று இடுப்பில் சோமனைக் கட்டி நெடுஞ்சாண்கிடையாக நாலுமுறை எழுந்து எழுந்து விழுந்தான் நன்னையன்.

- கலைமகள், அக்டோபர் 1951

நன்றி - பண்புடன் குழுமம்

பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள் - அம்பை


மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.

இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.

அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.
அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்று சொல்லலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.

எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.
அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதியுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).

எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.

இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.
அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.
வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.

பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.

***

இலக்கு - மே 1996 

***

நன்றி - திண்ணை


சுளிப்பு - தி.ஜானகிராமன்

அந்தப் பையனை ஒரு நிமிஷம் வெறித்துப் பார்த்தார் திருமலை. சர்க்கரைக் குட்டி, பட்டுக் குஞ்சு என்றெல்லாம் கொஞ்ச வேண்டும் போலிருக்கும். அத்தனை லட்சணம். அப்படி முகக் களை. புருபுருவென்று கண். சுருள் சுருளாகத் தலையில் மயிர். ஏழு வயதுக்கான வளர்த்தி இல்லை. உடம்பு மெல்லிசுவாகு. அதனாலேயே ஒரு கவர்ச்சி.. ஐயோ! இவ்வளவு பூஞ்சையாக இருக்கிறதே என்று ஒரு பரிவுக் கவர்ச்சி.

ஆனால் மண்டையில் இத்தனை களிமண்ணா! திருமலைக்கு அதுதான் ஆச்சரியம். அரை மணி நேரமாக அந்த மண்டையில் ஒரு கணக்கை ஏற்ற, சாகசம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஒரு  சாகசமும் பலிக்கவில்லை. அந்தச் சின்ன மண்டை ஒரு அறை போலவும், அதற்குப் பல கதவுகள் இருப்பது போலவும், ஆனால், உள் முழுவதும் ஒரே ஈரக் களிமண்ணாக இருந்ததால் கதவுக் கீலில் அந்த மண்ணெல்லாம் சிக்கித் திறக்க முடியாமல் அடைத்துக் கொண்டிருப்பது போலவும் உவமானப் படம் தோன்றிற்று. இன்னொரு தடவை அந்த மண்டையை வெண்ணைய் என்று நினைத்து அவர் ஊசி முனையால் குத்தப் போனது போலவும், ஆனால் ஊசி முனை உடைந்ததும், அது வெண்ணெய் இல்லை, வெள்ளைக் கருங்கல் என்றும் அவருக்குப் புரிந்ததாக ஒரு தோற்றம். இப்படி ஒவ்வொரு தோல்விக்கும் ஓர் உவமானப் படம் தோன்றிக் கொண்டிருந்தது.

அவர் கையில் ஒரு கட்டு மரக் குச்சி. சுளுந்துக் குச்சி. உள்ளங்கை வேர்த்து சுளுந்து கட்டும் கசகசவென்று நனைந்திருக்கிறது.

இத பாரு மூணும் மூணும் என்ன?”

விரல் விட்டு எண்ணிஆறுஎன்றான் பையன்.

உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்க அண்ணா கிட்ட மூணு குச்சி இருக்கு–”

எனக்கு அண்ணா இல்லியே.”

சரி, உங்க அக்கா கிட்ட இருக்கு.”

அக்காவும் இல்லே.”

நீ ஒரே குழந்தையா?”

ஆமாம்.”

சரி. உங்கிட்ட மூணு குச்சி இருக்கு. எங்கிட்ட மூணு குச்சி இருக்கு. மொத்தம் எத்தனை? இரண்டு கையையும் சேர்த்து?”

இரண்டு கையும் சேரவில்லையே என்று விழித்தான் பையன். கடைசியில் அவனுடைய இடது கையில் மூன்றும், வலது கையில் மூன்று குச்சியுமாக வைத்து, சேர்த்து எண்ணி ஆறு என்று ஏற்றிவிட்டார்.

அடுத்த கணக்குதான் அவருடைய மூளையின் பலங்களைத் தகர்த்துக் கொண்டிருந்தது.

என் கிட்ட மூணு குச்சி இருக்கு. உங்கிட்ட எங்கிட்ட இருக்கிறதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு. இப்ப ரெண்டு பேர் கிட்டவும் சேர்ந்து எத்தனை குச்சி இருக்கு?”

ஆறு.”

இல்லெ, என்கிட்ட மூணு குச்சி , உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கு . புரியறதோ. நான் சொன்னதைச் சொல்லு பார்ப்பம்.”

என்கிட்ட மூணு குச்சி , உங்கிட்ட அதைவிட மூணு குச்சி அதிகமா இருக்கூ …”

அவ்வளவுதான் இப்ப மொத்தம் எத்தனை?”

ஆறு.”

அவருடைய மேஜை மேல் சுளுந்துக் குச்சிகள் இறைந்து கிடந்தன.

கால் மணி போராடிவிட்டு, குச்சி வாண்டாம்; மூணு மாம்பழம்னு வச்சுக்கோயேன். எங்கிட்ட மூணு மாம்பழம் இருக்கு. உங்கிட்ட அதைவிட மூணு மாம்பழம் அதிகமா இருக்கு.”

பையன் தன் கையைப் பார்த்துக் கொண்டான்.

அப்ப மொத்தம் எத்தனை மாம்பழம் இருக்கும்?”

அவன் இப்போது ஆறு கூடச் சொல்லவில்லை. நேராக இருக்கிற சுளுந்துக் குச்சியே பலிக்கவில்லை. இல்லாத மாம்பழமா பலிக்கப் போகிறது?

உனக்கு மாம்பழம் பிடிக்குமா?”

பிடிக்காது?”

ஓகே. அப்படியா? ஏன் பிடிக்காது?”

சிரங்கு வரும்.”

உனக்கு எந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்?”

நாகப்பழம்.”

நாகப்பழம்.”

சரி. நாகப்பழம். உன் இந்தக் கையிலே மூணு நாகப்பழம் இருக்குஅந்தக் கையிலே அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு…. கேட்டியா, இந்தக் கையிலே மூணுஅந்தக் கையிலே? அதைவிட மூணு நாகப்பழம் அதிகமா இருக்கு. இப்ப ரண்டு கையையும் சேர்த்து எத்தனை பழம் இருக்கும்?”

ஆறு.”

ராமா.”

அரை மணி ஆகிவிட்டது.

மற்ற குழந்தைகள் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஓரிண்டு குழந்தைகள்தான் அலுத்துப்போய் ஒன்றை ஒன்று கிள்ளத் தொடங்கின.

இந்தப் பையனை அரை மணியாக நிறுத்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார் திருமலை. பையன் இரண்டு கையையும் தொங்கவிட்டவாறே பிசையத் தொடங்கினான். கால் நொந்ததோ என்னவோ நகர்ந்து நின்றான். கொஞ்சம் அசைந்து அசைந்து சிரமம் தீர்த்துக் கொள்வது போலிருந்தது. கால் மாற்றிக் கொண்டான்.

திருமலை நன்றாகப் பார்த்தார். வரவர பையனின் கண்கள் புருபுருவென இருந்தவை, மந்தமாகத் தூங்குவது போல வெளிச்சம் மங்கிவிட்டிருந்தது. அவரும் விடவில்லை. எப்படியாவது இந்தஅதிகத்தைமண்டையில் ஏற்றாமல் விடுவதில்லை என்று வீம்பு பிடித்துக் கொண்டது.

நன்னா கவனிச்சுக் கேக்கணும்என் கையிலேஇல்லெ. உன்னோட இடது கையிலேமூணு நாகப்பழம்…”

பையனின் முகம் இடுங்கிற்று. புருவம் சுருங்கிற்று. திருமலைக்குச் சட்டென்று வாய் மூடிக் கொண்டது. இந்த புருவச் சுருக்கம்…. பத்மாவின் முகம் மாதிரி. இந்தப் புருவச் சிணுக்கம் இப்போது அவர் கண்ணை வந்து குத்திற்று.

கல்யாணப் பந்தல். திருமலை மாப்பிள்ளை. சம்பந்திகளை இறக்கியிருக்கிற வீட்டிலிருந்து மேளதாளத்துடன் அவர் பரதேசக் கோலம் கிளம்புகிறார். இடுப்பில் முடமுட வென்று பஞ்சக் கச்சம். மயில்கண். மேலுக்கு ஒரு மயில் கண் ஐந்து முழம். கையில் விசிறி. காலில் செருப்பு. அவர் தம்பியோ யாரோ குடையைப் பிரித்து திருமலையின் மீது வெயில் படுவதும் படாததுமாகப் பிடித்துக் கொண்டு வந்தான். இடையில் பஞ்சக் கச்சம் அவிழாமல் பெல்ட்டு.

காலையில் அந்த கிராமத்துப் பரியாரி வந்து அவனுக்குச் சர்வாங்க க்ஷவரம் செய்து வைத்திருந்தான். திருமலைக்கு ஒரே கூச்சம். தலைமயிரை மட்டும் விட்டுவிட்டு மார்பு கை கால் என்று ஒரு இடம் விடாமல் மழித்து விட்டான். திருமலைக்குக் கொஞ்சம் சிரமம். மயிரெல்லாம் போனதும் கறுப்புத் தோலில் கொஞ்சம் கறுப்பு உதிர்ந்தாற் போல ஒரு திருப்தி. ஆனால் உடம்பு முகமெல்லாம்,நெற்றி முதல் பாதம் வரையில் அம்மிகல்லுரலைப் புளிந்தாற் போல அம்மை வடு. சிறுசிறு குழிகளாக பெரிய அம்மை வடு. அதனால் பரியாரியின் கத்தியும் வழவழவென்று மழித்து விடவில்லை. கர் கர் என்ற ஓசையுடன் அம்மைத் தழும்புகளையும், பள்ளங்களையும், வரம்புகளையும் நரநரத்துக் கொண்டிருந்தது. மலர் எல்லாம் போனதும் ஒரு அரிப்பு வேறு.

கல்யாணப் பந்தலில் புகுந்ததும் கிழக்கே பார்த்து நிற்க வைத்தார்கள் திருமலையை. கலியாணப் பெண் உள்ளேயிருந்து வந்து அவனுக்கு மாலையிட்டு ஊஞ்சலில் ஆட்டிய பிறகு, உள்ளே அழைத்துப் போக வேண்டும். தாயாரும் தங்கைகளும் கிழவிகளும் நடு வயதுகளும் புடைசூழ மொட மொடவென்று பட்டு மடிசாரும் தலையில் சூரியப் பிரபை, சந்திர பிரபையும் பூப்பின்னலுமக மெதுவாக வந்தாள்.

பார்றீ பத்மா, பாரு. நன்னாப் பார்த்துக்கோ ஆம்படையானைஎன்று மேளச் சத்தத்துக்கு நடுவில் ஒரு பெண் குறும்பாகக் கத்திற்று.

பதமா நிமிர்ந்து பார்த்தாள் ஒரு புன்னகையுடன். அதே கணம் முகத்தில் ஒரு சுளிப்பு. என்னமோ குத்தினது போல ஒரு வலி, ஒரு பயம்சிறிது நேரம் அவள் மார்பு, கை, பாதம் எல்லாம் சிலுசிலுப்பது போல ஒரு சிறு அதிர்வு. அதே சுளிப்போடு ஒரு பார்வை. மீண்டும் தலை குனிந்தது.

புன்னகையைக் காணவில்லை. அப்போது, தாலிகட்டும் போது, நலங்கின்போது-ம், ஹும், அந்தப் புன்னகை மறைந்தது மறைந்ததுதான்.

கலியாணப் பந்தலில் கண்ட அந்த முதல் சுளிப்பு! திருமலைக்குப் புரிந்துவிட்டது. அவன் நல்ல அட்டைக் கறுப்பு. அம்மை வடு. அகல மூக்கு. பல் சோழிப் பல். அவனுக்கே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள பல சமயம் வேதனையாயிருக்கும்.

முன்னால், பெண் பாக்கவில்லை. அம்மாக்களும் அப்பாக்களும் பார்த்து நிச்சயம் பண்ணிவிட்ட கலியாணம். கண்ணாடியைப் பார்க்கத் தயங்குகிற திருமலைக்கு எந்தப் பெண்ணையும் போய்ப் பார்த்து வேணும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கம்.

பத்மாவைப் பார்த்ததும் அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் என்மாதிரி இருக்கக் கூடாதோ? கொஞ்சம் பங்கரையாக, கட்டை குட்டையாகஇல்லை, ஒரு கால் விந்தலாக, இல்லை, ஒரு கண் பூ விழுந்துஇப்படி ஏன் மூக்கும் முழியுமா, மாநிறமா பளிச்சென்று ஒல்லியாக, பச்சை நரம்பு ஓட

இந்தப் பையனுக்கும் அப்படி பச்சை நரம்பு-ஒல்லி. முகத்தை ஏன் இப்படி சுளுக்கினாள்? என் முகத்தைப் பார்த்தா? பத்மா முகத்தைச் சுளுக்கினது போலவே இருந்தது. திருமலைக்கு மனசு மறுபடியும் பத்மாவுடன் ஓடிற்று. பத்மா நாளைந்து நாள் அப்படியிருந்தாள், இப்படி வந்து சேர்ந்து விட்டதே என்கிறது போல.

பிறகு படுக்கை அறையில்……….!

அப்பா! உடம்பைப் பாரு, சமையக்காரன் மாதிரி கண்டு கண்டா, ம்க்கும்என்று அவனுடைய இரண்டு கன்னங்களையும் ஒவ்வொரு கையின் ஐந்து விரலாலும் உள்ளங்களை அழுத்திக் கவ்வி மயக்கமும் சிரிப்பும்அவள் கை வேர்வையும் அவன் முதுகின் வேர்வையும் சேர்ந்து கசங்கி நசுங்கி……

சுளிப்பு மறைந்து விட்டது.

இந்தப் பையன் அப்படித்தான் முகம் சுளுக்கினான் இப்போது. பத்மாவை ஜெயித்தாற்போல் இவனை எப்படி ஜெயிக்க முடியும்?

படிக்கிற குழந்தைஏழு வயது….

திருமலை வெறித்துப் பார்த்தார் அவனை.

உங்கப்பா என்ன பண்றார்?”

செத்துப் போய்ட்டார்என்றான் பையன். கண்ணில் அழுகை இல்லை.

அம்மா?”

அம்மாவும் செத்துப் போயிட்டா!”

! எப்ப?”

போன வருஷம்!”

அண்ணா, தம்பியாவது இருக்காளா?”

ஒருத்தருமில்லை.”

நீ யார் கிட்ட இருக்கே?”

மாமா கிட்ட.”

மாமா என்ன பண்றார்?”

பக்கோடா, காராபூந்தி எல்லாம் பண்ணி தெருவோட வித்துண்டு போவார்! தலையிலே ஒரு பெரிய தட்டுலெ வச்சுண்டு.”

அப்படின்னா உனக்குக் கணக்கு நன்றாத் தெரிய வேண்டாமா?”

ஆமா.”

ஆமா?”

பையனின் முகம் மறுபடியும் சுளித்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டான்.

என்ன பண்றது?”

வயத்தை வலிக்கிறது. போகணும், போகணும், போகணும்என்று வலது கையின் ஆள் காட்டிபாம்பு விரல்களை நீட்டினான் பையன்.

சரி, சரி போஓடுஎன்றார் திருமலை.

பையன் ஓடினான். கால் சட்டையிலேயே போய்விடப் போகிறானே என்று கவலை. நல்ல வேளையா ஓடிவிட்டான்.

மற்ற பையன்கள் சிரித்தார்கள்.

பொய் சார்என்றான் ஒரு பையன் எழுந்து.

என்னடா பொய்!”

அவனுக்கு அப்பா அம்மா எல்லாம் இருக்கா சார்.”

ரண்டு அண்ணா இருக்கான் சார்.”

ஒரு தங்கச்சி கூட இருக்கா சார்.”

அவன்அப்பா , பக்கோடா விக்கலெ சார். பாட்டு வாத்தியார் சார். எங்க அக்காவுக்குக் கூடச் சொல்லிக் கொடுத்தார் சார்.”

அட!”

அவனும் நல்லாப் பாடுவான் சார்.”

அட.”

அப்பா அம்மா, யாருமே இல்லென்னானே?”

சும்மனாச்சிம் சார்.”

ஏன் சொன்னான்?”

குழந்தைகள் பதில் சொல்லவில்லை.

வரட்டும்என்றார்.

திருமலைக்கு குழப்பம். முதலில் கோபம். பிறகு தன் முகம் தெரிந்தது.

குழப்பம்.

வரட்டும்.”

எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். பையன் வரவில்லை. கால்மணி, அரைமணி, பகல் இடை வேளை ஆயிற்று. வரவில்லை. பிற்பகல் ஆயிற்று. வரவில்லை. மாலையில் கடைசி மணியும் அடித்தது. பையன் வரவில்லை. திருமலைக்கு வயிற்றில் புளி.

புஸ்தக மூட்டையை வச்சுட்டுப் போயிட்டானே. அவன் வீடு தெரியுமா உங்களுக்கு?”

நான் கொடுக்கிறேன் சார். எங்க தெருதான் சார்.” என்று ஒரு பையன் அந்தப் பையை எடுத்துக் கொண்டான். திருமலை சிறிது நின்றார்.

நானும் வரேன். வீட்டைக் காமிக்கிறீயா?” என்றார்.

வாங்க சார், காமிக்கிறேன்என்று பெருமையாக அவருக்கு முன் நடந்தான்.

இரண்டு மூன்று தெரு கடந்ததும், “அதோ அந்த சந்துதான் சார்என்றான்.

அடி வாங்கி வைப்பீங்களா சார் அவனுக்கு?” என்றான் மறுபடியும். எத்தனை ஆசை அவனுக்கு!

திருமலை பேசவில்லை.

இவங்கத்தான் சார் அவன் அம்மாஎன்று எதிரே வந்த ஒரு அம்மாவைக் காட்டினான்.

ஏண்டா குழந்தே! பள்ளிக்கூடம் விட்டாச்சா?”

விட்டாச்சே, இதோ நட்டுவோட பையி புஸ்தகமெல்லாம்என்று அவளிடம் கொடுத்தான்.

இவங்கத்தான் எங்க சார். மூணாவது சார்என்று அறிமுகப்படுத்தினான்.

திருமலை கும்பிட்டார்.

வயித்து வலின்னு ஓடி வந்தான் குழந்தை, புஸ்தகப் பையைக் கூட வச்சுட்டு வந்துட்டேன்னு அழுதான். அதான் எடுத்துண்டு வரலாம்னு கிளம்பினேன்என்றாள் அம்மா.

இப்ப தேவலையா?”

தேவலை. தூங்கறான்.”

திருமலை திரும்பி விட்டார்.

வழி காட்டின பையன், “ஏன் சார், நீங்க ஒண்ணும் சொல்லலே நட்டு அம்மா கிட்டேஎன்று நமூட்டுச் சிரிப்பு சிரித்தான். அவனுக்கு ரொம்ப ஏமாற்றம்.

சொன்னா அடிக்க மாட்டாங்களா

அடிச்சாத்தான், நாளைக்கு பொய் சொல்லாமல் இருப்பான்.”

நாளைக்கு அடிச்சுக்கலாம் போ. நீ போ வீட்டுக்குஎன்று அனுப்பி விட்டு விடு விடு என்று நடந்தார்.

பையன் முகம் இன்னும் அவர் கண்களில் சுளித்தது. பத்மாவின் பத்து விரல்களும் அழுத்திப் பிழிந்து நசுக்க வேண்டும் என்று அவர் கன்னங்கள் புருபுருவென்று பரந்தன. பயமும் தினவுமாக வேகமாக நடந்தார்.

***