இமையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இமையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாக்கியம் கொடுத்த பிராது! – இமையம்


ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான்.

ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்என்று காவல் நிலைய     எழுத்தர் கூறினார்.

வெளிய இருக்கோம் சார்!” என்று சொல்லிவிட்டு சலிப்புடன் வெளியே வந்தான் முத்துசாமி.

தங்கம்மாளும் தங்க நாற்கர சாலையும் – இமையம்

இரண்டு குட்டி ஆடுகள் எதிர் எதிரே நின்றுகொண்டு எம்பி எம்பி முட்டிக்கொள்ள ஆரம்பித்தன. அதைப் பார்த்த தங்கம்மாள், ”சீகழுதவுள எதுக்கு இப்பிடி முட்டி மோதிச் சாவுறீங்க?” என்று திட்டிவிட்டு, சண்டை போட்டுக்கொண்டு இருந்த குட்டிகளின் பக்கம் ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி விசிறினாள். சண்டையை நிறுத்தி விட்டு, இரண்டு குட்டிகளும் ஓடி வந்து அவளுடைய முகத்தை முகர்ந்து பார்க்கவும் நக்கவும் ஆரம்பித்தன. அதைப் பார்த்து ஆடும் மற்றொரு குட்டியும் ஓடி வந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்து பார்க்கவும் கால்களில் நக்கவும் ஆரம்பித்தன.

பயணம் - இமையம்

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லோகாம்பாள், நேரமாகியிருக்குமோ என்ற கவலையில் எழுந்து அவசரமாக வெளியே வந்து வானத்தைப் பார்த்தாள். வெள்ளி முளைத்திருந்தது. ``பேய் வந்து கண்ணெ அடச்சாப்ல தூங்கிப்புட்டனே'' என்று சொன்னாள். வீட்டுக்குள் வந்து சிமினி விளக்கை ஏற்றினாள். பாயை விட்டு விலகித் தரையில் சுருண்டு கிடந்த குமாரை இழுத்துப் பாயில் போட்டாள். கால்களைப் பரப்பிக்கொண்டு பாவாடை விலகிக்கிடக்கத் தூங்கிக்கொண்டிருந்த ராணியைப் பார்த்தாள். ``கழுத எப்பிடித் தூங்குது பாரு. துணி வெலகிறதுகூட தெரியாம'' என்று சொல்லிவிட்டுப் பாவாடையை இழுத்துவிட்டுச் சரிசெய்தாள். போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டாள். விளக்கை எடுத்து வந்து குமாரினுடைய முகத்தையும் ராணியினுடைய முகத்தையும் ஆராய்வதுமாதிரி கூர்ந்து பார்த்தாள். முகத்தைத் தடவிக்கொடுத்தாள். தலையைக் கோதிவிட்டாள், கைகால்களைப் பிடித்துவிட்டாள்.

``சனியன் புடிச்ச பனி எதுக்குத்தான் இப்பிடி மழ பெய்யுறமாரி கொட்டுதோ'' என்று சொன்ன லோகாம்பாள் பெருமாள் வீட்டுக்குப் பின்புறத்திற்குப் போய், மாடுகள் கட்டியிருந்த இடத்தில் கிடந்த சாணியை கைநிறைய அள்ளிக்கொண்டு வந்தாள். சாணியைக் கரைத்து வாசல் தெளித்தாள். வாசலைக் கூட்டினாள். கோலமாவு டப்பியை எடுத்து அவசரக் கோலம் ஒன்றைப் போட்டாள். பிறகு கரிக்கொட்டையை எடுத்துவந்து பல்விளக்க ஆரம்பித்தாள். ``ஐஸ் கட்டிமாரி இருக்கே'' என்று சொல்லிக்கொண்டு வாய்கொப்புளித்து முகம் கழுவினாள். பச்சைத்தண்ணீர் முகத்தில் பட்டதும்தான் தெரிந்தது குளிரின் கடுமை.

அம்மாசி வீட்டுக் கோழி கூவியது. லோகாம்பாளுக்கு விடிவதற்குள் காட்டுக்குப்போய்விட முடியுமா என்ற கவலை வந்தது. அவசர அவசரமாக வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். ``எழுந்திருப்பா'' என்று இரண்டு மூன்று முறை சொல்லியும் கட்டாயப்படுத்தியும் எழுந்திருக்காததால் குமாரை தூக்கி உட்காரவைத்தாள். ராணியையும் எழுப்பினாள். குமாரும் ராணியும் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்தனர். லோகாம்பாள் கத்துவது, திட்டுவது எதுவும் அவர்களுடைய காதில் விழவில்லை. ``தூங்காதீங்க'' என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கைக்காரியங்களையும் செய்துகொண்டிருந்தாள். நேற்றிரவு படுக்கும்போது தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சோற்றை தூக்குப் போகணியில் ஊற்றினாள். பழந்துணி ஒன்றை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு உப்பை அள்ளி வைத்து அதோடு ஏழுஎட்டு பட்ட மிளகாயையும் எடுத்து வைத்து முடிந்து தூக்குப் போகணியின் கைப்பிடியில் கட்டிவிட்டாள். பிறகு உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த குமாரையும், ராணியையும் இழுத்து வந்து முகம் கழுவிவிட்டாள். குளிர்ந்த தண்ணீர் முகத்தில் பட்டதும் குமார் அழுதான். ``எதுக்குடா அயிவுற? குளிருலயும் மழயிலயும், வெயிலுலயும் அடிப்பட்டாத்தான் ஒடம்பு தெடமா இருக்கும். மழ, வெயிலுக்கு ஒதுங்கி நிக்குறமாரியா ஒங்கப்பன் வச்சிட்டுப்போனான்? சோத்துப்பான ஒடஞ்சா மாத்துப்பான இல்லியே'' என்று சொன்ன லோகாம்பாள் இருவருக்கும் முகத்தைத் துடைத்துவிட்டு ஆளுக்கொரு போர்வையைக் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னாள். தூக்குப்போகணியை கையிலெடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் ``ஊட்டெ சாத்திப்புட்டு வெளிய வாங்க'' என்று சொன்னாள். வீட்டுக்குப் பின்புறம் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை அவிழ்த்து இழுத்துக்கொண்டு வந்தாள். சிணுங்கி அழுதுகொண்டே கதவைச் சாத்தினாள் ராணி. ``வௌக்க நிறுத்தாம கதவ சாத்திறியே தடிக்கழுத'' என்று சொல்லி ராணியை திட்டினாள். ``இதெ புடிப்பா'' என்று ஆட்டுக்குட்டியின் கழுத்துக் கயிறை குமாரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் போய் விளக்கை அணைத்துவிட்டு வந்து கதவைச்சாத்தினாள். அப்போது அம்மாசி வீட்டுக்கோழி இரண்டாவது முறையாகக் கூவியது.

``வேகமா நடெங்க, விடியுறதுக்குள்ளார காட்டுக்குப் போவணும், பனி நப்புலியே வேலய முடிச்சாத்தான் உண்டு'' என்று சொன்ன லோகாம்பாள் முதலில் நடக்க ஆரம்பித்தாள். அவளையடுத்து நடந்துகொண்டிருந்த குமாரும் ராணியும் லேசாக அழுதுகொண்டிருந்தனர். அவர்களுடைய அழுகையை லோகாம்பாள் பொருட்படுத்தவில்லை. அவளுடைய எண்ணமெல்லாம் விடிவதற்குள் காட்டுக்குப் போய்விட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அரைகாணி கொத்தமல்லியை நன்றாக வெயில் ஏறுவதற்குள் பிடுங்கிவிட முடியுமா என்று சந்தேகப்பட்டாள். முடியாது என்று தெரிந்ததும் வேகமாக நடக்க முயன்றாள். பனி ஈரத்தில் நனைந்திருக்கும் போது பிடுங்கினால்தான் கொத்தமல்லி உதிராமல் இருக்கும். வெயிலேறிய பிறகு பிடுங்கும்போதும், கீழே போடும்போதும் கொத்தமல்லி அதிகமாக உதிர்வதற்கு வாய்ப்புண்டு. அதனால் ஊருக்குள் யார் கொத்தமல்லி பிடுங்கினாலும் வெயில் ஏறுவதற்குள்ளாகவே பிடுங்கிவிடுவார்கள். பிடுங்குவது மட்டுமல்ல, அடிப்பதும்கூட இருட்டும்போது செங்குத்தாக அள்ளிவைத்து, நன்றாக பனியில் நனையவைத்து விடியற்காலையில்தான் பிணையைவிட்டு அடிப்பார்கள்.

தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. இருட்டிலும் பனியிலும் வீடுகள்கூட மங்கலாகத்தான் தெரிந்தது. அருகருகே நடந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. நிலவு இருந்தது. ஆனால் வெளிச்சமில்லை. முதல் தெருவைத்தாண்டி அடுத்த தெருவில் நடக்கும்போது தண்ணீர் எடுக்கக் கிணற்றுக்கு ஒரு பெண் கரும் பூதம்போல போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. தெருவின் முனை வீட்டில் வெளிச்சம் இருப்பது மாதிரி தெரிந்தது. ``வேகமா நடெங்க. இங்கியே நேரத்த போக்கிட்டுப் போவ முடியாது. சாலாக்கு நடெ நடந்தா காட்டுல கெடக்குற வேல எப்பிடி ஆவும்?'' என்று லோகாம்பாள் சொன்னதை ராணி காதில் போட்டுக் கொள்ளவில்லை. கண்களைத்தவிர உடலின் பிறபகுதிகளை வெளியே தெரியாமல் போர்த்திக்கொள்ள முயன்றுகொண்டிருந்தாள். குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டு ஆட்டுக்குட்டியின் இழுப்பிற்கேற்றவாறு நடப்பதற்கு குமார் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

ஊரைத்தாண்டி காட்டுக்குப்போகும் வண்டிப்பாதையில் நடக்க ஆரம்பித்தபோதுதான் கடுமையான இருட்டு தெரிந்தது. எங்குப் பார்த்தாலும் ஒரே இருட்டாக இருந்தது. ராணியையும், குமாரையும் மட்டுமல்ல லோகாம்பாளையும் இருள் பயமுறுத்தியது. இருட்டில் பேய்பிடித்துக்கொள்ளுமோ என்ற பயத்தில் ராணிக்கும், குமாருக்கும் முன்பைவிட இப்போது கைகால்கள் அதிகமாக நடுங்க ஆரம்பித்தன. பயமாக இருக்கிறது என்று சொல்லக்கூட அவர்கள் பயந்தனர். சத்தம் கேட்டு பேய் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம். அவர்களுடைய பயத்தை அறிந்த லோகாம்பாள் ``இதென்ன பெரிய இருட்டு? இந்தத் தடத்திலெ இன்னிக்கா நடக்குறோம்? தடம் தெரியாமப்போறதுக்கு? நடக்க நடக்க எல்லாம் சரியாப்போயிடும்'' என்று சொன்னாள். என்ன காரணத்தாலோ பின்னால் யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள். முன்னாலும் பார்த்தாள். சனங்களின் வாடையே இருப்பது மாதிரி தெரியவில்லை. ``கால பாத்து வச்சி வாங்க. பூச்சிப்பொட்டு கெடக்கும். கீய பாத்து நடக்கணும்'' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்தாள். பிறகு தனக்குத்தானே சொல்லிக் கொள்ளுவது மாதிரி ``எட்டு, ஒம்போது வயசி புள்ளவோ பாவத்தக்கூட அந்தக் கடவுளு பாக்கலியே. அவன் நாசமாத்தான் போவான்'' என்று சொன்னாள். வானத்தைப் பார்த்தாள். நிலவு பாடி சாய்ந்துவிட்டது.

ஓடையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரில் கால்களை வைக்க முடியாது. குளிரும் என்று சொல்லி அழுத ராணியை லோகாம்பாள் தூக்கிக்கொண்டு நடந்தாள். குமாருக்கு, பனிக்கட்டியில் கால்களை வைத்து நடப்பதுமாதிரி இருந்தது. தண்ணீரை தாண்டிவிட்டாலும், தண்ணீரில் கால்களை வைத்தபிறகுதான் குளிர் அதிகமாக தெரிந்தது. கால்கள் நடுங்க ஆரம்பித்தது. ஆட்டுக்குட்டியைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடப்பதால் அவனால் சரியாகப் போர்த்திக்கொள்ளக்கூட முடியவில்லை. குளிரைவிட, இருட்டைவிட, பனியைவிட பெரிய தொந்தரவாக இருந்தது, ஆட்டுக்குட்டியும் பேய்ப்பிடித்துக்கொள்ளுமோ என்ற பயமும்தான். ஓடைப்பக்கம்தான் பேய்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று பிள்ளைகள் சொன்னது நினைவுக்கு வந்ததும் அவனுக்கு நடக்கவே முடியவில்லை. குலை நடுங்கிற்று, அக்கம் பக்கத்தில் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை.

ஓடையைத்தாண்டி வாரிபோன்றிருந்த பாதையில் நடக்க ஆரம்பித்தனர். வாரியின் இரண்டு பக்கமும் ஆள் உயரத்திற்கு மேடாக இருந்தது. மேட்டில் இரண்டு பக்கமும் அடர்ந்த புதராக இருந்தது. புதருக்குள் பாம்பு இருக்குமோ, நடக்கிற பாதையில் பாம்பு படுத்திருக்குமோ என்ற பயத்தில் குமாருக்கும் ராணிக்கும் நடக்கவே கால்கள் கூசின. எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்ச உணர்வோடுதான் நடந்தனர். பயத்தை  மறைக்க முயன்றனர். மறைப்பதற்கான வழிதான் தெரியவில்லை. அக்கம்பக்கத்தைப் பார்க்கவும் சுற்றுப்புறத்தைப் பார்க்கவும் முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இருட்டாக இருந்தது. இருளைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. ராணி, குமார், லோகாம்பாள் மூவருமே இருட்டில் நகரும் கருத்த நிழல்களாகத்தான் தெரிந்தனர். லோகாம்பாள் மட்டும் எதற்கும் அஞ்சாதவள்மாதிரி பேயைப் போல வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவளை இருள் அச்சமூட்டியதுமாதிரி தெரியவில்லை. பட்டப்பகலில் நடப்பதுமாதிரி கால் கூசாமல் நடந்து கொண்டிருந்தாள். ஆனால் அடிக்கடி பெருமூச்சுவிட்டாள். அதேமாதிரி அடிக்கடி தனக்குத்தானே முனகிக்கொண்டுமிருந்தாள்.

``ஐயோ அம்மா'' என்று சொல்லி கத்திய ராணி சட்டென்று இடது காலைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தாள். ஐயோ அம்மா என்று ராணி கத்தியதுதான் தாமதம். லோகாம்பாளுக்கு உயிரே நின்று விட்டது போலிருந்தது. என்ன நடந்ததோ என்று குலை பதறிப்போனவள் ``என்னம்மா ஆச்சி?'' என்று கேட்டுக்கொண்டே கீழே உட்கார்ந்தாள். ``கல்லுகுத்திடுச்சி. ரத்தம் வருது பாரு'' என்று சொல்லி ராணி அழுதாள். அப்போதுதான் லோகாம்பாளுக்கு போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருந்தது? ``இதுக்காடி உசுருப்போறாப்ல கத்துனவ? ஒரு நிமிசத்திலெ என்னோட கொலய வாங்கிப்புட்டியே, ராத்திரி நேரத்திலெ கத்தாத. காலக் காட்டு. எந்த எடத்திலடி?'' என்று சொல்லி காலைப் பார்த்தாள்.

இருட்டில் காயம்பட்ட இடம் தெரியாததால் தடவிப் பார்த்தாள். கல் இடறி கட்டை விரலில் லேசாக சதைப் பிய்த்துக்கொண்டு வந்திருந்தது. ``பாத்து வர்றதில்லெ. என்னாடி புள்ளெடி நீ? சரிசரி அயிவாத. ராத்திரியில அதுவும் இருட்டு வேளயிலெதான் உசுருப்போறப்ல கத்துவியா?'' என்று சொல்லி திட்டி ரத்தம் வருகிற இடத்தில் குனிந்து பலமுறை ஊதிவிட்டாள். ரத்தம் வருவது நிற்காததால் நொய்மண்ணாக அள்ளி ரத்தம் வந்த இடத்தில் போட்டு சிறிது நேரம் பிடித்துக்கொண்டிருந்தாள். பிறகு ``எயிந்திரு. கால தாங்கித்தாங்கி நடக்காம விசிறி நடெ'' என்று சொல்லி ராணியைத் தூக்கி நிறுத்தி நடக்க வைத்தாள். அப்போது அவளுக்குக் கண்கள் கலங்கின. ``ஒங்கப்பன் உசுரோட இருந்திருந்தா ஒங்களுக்கு ஏன் இந்தத் தலவிதி? ரொம்ப அவசரமின்னு அந்தாளு போயிச் சேந்துட்டான். செத்தவனப்பற்றிப் பேசி இனி என்னாத்துக்கு ஆவப்போவுது? ஒடஞ்ச சட்டி ஒலக்கி என்னிக்கி ஒதவியிருக்கு? கூலி ஆளுவச்சி புடுங்கலாம். நூரு ரூவா போவுமேன்னு ஒங்கள நேரம்காலம் இல்லாம இயித்து அடிக்கிறான். இது என்னோட சாவம்தான்'' என்று சொன்னாள். வானத்தைப் பார்த்தாள். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நட்சத்திரங்கள் இருந்தன. வானம் தெளிந்து கொண்டிருப்பது தெரிந்தது.

``ரொம்ப குளிருதும்மா'' என்று சொன்ன ராணி தொடர்ந்து மூன்று நான்குமுறை தும்மினாள். பனி மூக்கை அடைப்பதுபோல இருக்கவே அடிக்கடி மூக்கை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். ``மொதல்ல அப்பிடித்தான் தெரியும். நடக்க நடக்கக் குளிரு கொறஞ்சிப்போயிடும் பாரு. வேகமா நடந்தா குளிரு அவ்வளவா தெரியாது. மின்னெ இருந்த குளிரா இப்ப இருக்கு? கால தாங்கித்தாங்கி நடக்காத, தூக்கிவச்சி நட'' என்று லோகாம்பாள் சொன்னாள். அப்போது மைனா ஒன்று ஒற்றையில் கத்திக்கொண்டு போயிற்று. ஊர்ப்பக்கமிருந்து நாய்குரைப்பது பக்கத்தில் குரைப்பதுமாதிரி கேட்டது. கிழக்குப் பக்கமிருந்து நரி ஒன்று ஊளையிடுவது கேட்டதும் குமார் ``நரி எங்கிருந்தும்மா கத்துது?'' என்று கேட்டான்.

``கீயக்காட்டுல இருந்துதான்.''

``அடப்புலயிருந்து எதுக்கு பூச்சிவோ இப்பிடி கத்துது?''

``விடியப்போவுதில்லெ. அதான் கத்துது.''

``விடியுறது அதுவுளுக்குத் தெரியுமா?''

``ஏன் தெரியாம?'' என்று சொன்ன லோகாம்பாள் எந்தெந்த பூச்சிகள் எப்படியெப்படி கத்தும், பறக்கும், எந்தெந்த வண்டுகள், குருவிகள், பறவைகள் எப்படியெப்படியெல்லாம் கத்தும், பறக்கும். அதுவும் எந்தெந்த நேரத்தில் கத்தும், பறக்கும் என்பதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாள். பனி, குளிர், உடல் நடுங்குவது, ஆட்டுக்குட்டி தாறுமாறாக இழுப்பது என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பூச்சிகளைப்பற்றி, வண்டுகள், குருவிகள், பறவைகளைப் பற்றி, அவைகள் கத்தும், பறக்கும் விதத்தைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

``என்னம்மா சும்மாசும்மா மேல பாக்குற?'' என்று குமார் கேட்டான். ``விடியுறதுக்கு இன்னம் எம்மாம் நேரம் இருக்குன்னு பாத்தன்'' என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் இருந்தவள் தானாகவே வெள்ளி என்பது என்ன, அது முளைக்கும் போது நேரம் என்ன, வால் நட்சத்திரம் எது, அது எந்த இடத்தில் முளைக்கும், நிலவு எப்போது பாடி சாயும். நட்சத்திரங்கள் எந்தெந்த மாதங்களில் அதிகமாக தெரியும். நிலவு எப்போது அதிகமாக வெளிச்சத்துடன் இருக்கும் என்பதையெல்லாம் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தாள். நட்சத்திரங்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்பதைவிட குமாரையும் ராணியையும் மலைப்பு தெரியாமல், பயத்தை அறியாமல் நடக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வந்தாள் லோகாம்பாள். அவளுடைய வாய் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தாலும் அவளுடைய கண்களும், மனமும் பாதையில் பூச்சி பொட்டு கிடக்கிறதா என்று பார்த்துக்கொண்டேயிருந்தது.

தலைப்பறத்தான் வாரி வந்ததும் லோகாம்பாள் பேசுவதை நிறுத்திவிட்டாள். காரணமின்றி அவளுடைய நெஞ்சு பதறிற்று. படபடப்பு உண்டாயிற்று. வேகமாக நடக்க முயன்றாள். அவள் நினைத்த அளவுக்கு அவளால் வேகமாக நடக்க முடியவில்லை. கருப்பன் சாவதற்கு முன்பு தலைப்பறத்தான் வாரி என்பது அவளுக்கு ஒரு அபசகுணமான இடமாக மட்டும் தான் இருந்தது. இப்போது அவளால் மறக்க முடியாத, வெறுக்கிற இடமாக மாறி இருந்தது. இப்போதுதான் என்றில்லை. அவளுக்குக் கல்யாணம் நிச்சயமான எட்டாவது நாளிலிருந்தே தலைப்பறத்தான் வாரி  அச்சமூட்டுகிற இடமாக அவளுக்கு மாறிவிட்டது. அந்த இடத்தை கடக்கும்போதெல்லாம் அவளுக்கு குலைபதறிப்போகும், காரணமில்லாமல் பயமும் பதட்டமும் உண்டாகும். எதை எண்ணி ஒன்பது வருசமாக அச்சப்பட்டுக் கொண்டிருந்தாளோ அது இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்தேவிட்டது. அவளுடைய எண்ணமும் கவலையும்தான் நிஜமாகிவிட்டதோ என்னவோ. மனதிலிருக்கும் எண்ணம் பலிக்குமா?

லோகாம்பாளுக்கும் கருப்பனுக்கும் கல்யாணம் நிச்சயமாயிற்று. மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரே ஊர் என்பதால் இரண்டு வீட்டிலிருந்தும் ஒரே நாளில் கல்யாண ஜவுளி எடுக்கப்போனார்கள். திட்டக்குடியிலிருந்து வரும்போது பஸ்ஸைவிட்டு இறங்கி தலைப்பறத்தான் வாரி வழியாகத்தான் ஊருக்கு வரவேண்டும். தலைப்பறத்தான் வாரியில் ஏழு பேர் ஒன்றாக வந்து கொண்டிருக்கும்போது மேற்கு கரையிலிருந்த அடப்பிலிருந்து எட்டு பத்து அடி நீளமுள்ள கருநாகம் ஒன்று பாதையைக்கடந்து கிழக்கிலிருந்த அடைப்பிற்கு ஓடும்போது, அதைப் பார்த்து பயந்துபோய் பின்னால் ஓடும்போது கூரைப்புடவை, தாலி என்று கட்டி தலையில் தூக்கிக்கொண்டுவந்த மூட்டை கீழே விழுந்துவிட்டது. பாம்பு போனபிறகு சிறிதுநேரம் கழித்துத்தான் மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு வந்தார்கள். செய்தி ஊருக்குள் பரவியதுமே ஒருவர் தவறாமல் கல்யாணத்தை நிறுத்துவதுதான் நல்லது என்று சொன்னார்கள். லோகாம்பாள் வீட்டில்கூட தயங்கினார்கள். கருப்பன்தான் ஒரே பிடிவாதமாக நின்றான். ஜோசியரிடம் கேட்டதற்கு `தோச பரிகாரம்' செய்துவிட்டால் சரியாகப்போய்விடும். இரண்டுபேருடைய ஜாதகத்திலும் குறைகள் என்று எதுவுமில்லை. ஜாதகப்பொருத்தம், ரட்சிப்பொருத்தம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னதால் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்து ஒரு மண்டலம் நல்ல விளக்கு ஏற்றினார்கள். அதன் பிறகுதான் கல்யாணம் நடந்தது. ஆனால் தோசபரிகாரம் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இரண்டு மாதத்திற்கு முன்பு கருப்பன் செத்துவிட்டான். தலைப்பறத்தான் வாரிக்கு கிழக்கில் இருக்கும் அண்ணாமலை உடையார் வீட்டு கரும்பு வெட்டிக்கொண்டிருக்கும்போது சருகிற்குள்ளிருந்த பாம்பு கடித்து கருப்பன் செத்துவிட்டான். கருப்பன் செத்ததும் ஊரார்கள் கல்யாணத்தின்போது ஏற்பட்ட சகுணத்தடையை மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதோடு தலைப்பறத்தான் வாரியைப்பற்றி கதைகதையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கருப்பன் ஆவியாக சுற்றுவதாக கதைகட்டிவிட்டுவிட்டார்கள். இப்போது ஊருக்குள் தலைப்பறத்தான் வாரியைப்பற்றியும் கருப்பனுடைய ஆவியைப் பற்றியும் தான் பேச்சு. உச்சிப்பொழுதில் இளம்பெண்கள், தீட்டுக்காரப்பெண்கள் வந்தால் அவர்களுடன் கருப்பனும் ஓடைவரை வருகிறான் என்றும், தலைப்பறத்தான் வாரியிலோ, அதற்கு அருகிலோ எது நடந்தாலும் அது கருப்பனுடைய ஆவியின் விளையாட்டுத்தான் என்றும் பேச்சாகிவிட்டது. சாதாரணமாக ஆடு, மாடுகள் மிரண்டு ஓடினால், யாருக்காவது கால்இடறி ரத்தம் வந்தால், வண்டி குடைசாய்ந்தால், அச்சாணி முறிந்தால் அதற்கெல்லாம் கருப்பனுடைய ஆவிதான் காரணம் என்று சொல்கிறார்கள். லோகாம்பாளுக்கு ஒன்றையும் நம்ப முடியவில்லை. கருப்பன் செத்த அன்றே சாமி, தெய்வம், பேய், ஆவி என்றிருந்த எல்லா நம்பிக்கைகளும் அவளுடைய மனதிலிருந்து அழிந்துபோய் வெற்றிடம் உருவாகியிருந்தது. அந்த வெற்றிடத்தின் அளவு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

தலைப்பறத்தான் வாரியில் நடக்கிற கெட்டகாரியங்கள் எல்லாவற்றுக்கும் கருப்பன்தான் காரணம் என்று ஊரார்கள் சொன்னதுமாதிரி, கருப்பன் பாம்பு கடித்து செத்ததற்கு ஊரார்களுடைய கண் ஓமல்தான் காரணம் என்று லோகாம்பாள் நினைத்தாள். ஊரில் எத்தனைபேர் செத்துக்கொண்டிருக்கிறார்கள்? அவர்களை எல்லாம் விட்டுவிட்டு கருப்பனை மட்டும் ஏன் வறுத்தெடுக்கிறார்கள் என்று எண்ணினாள். ``அந்தாளு செத்ததும் தலவிதிதான். அந்தாளுக்கு அவசரஅவசரமா நான் ரெண்டு புள்ளெ பெத்ததும் தலவிதிதான். நண்டும் சிண்டுமாஇருக்கிற புள்ளிவுள நட்டெநடுராத்திரியிலெ இயித்துக்கிட்டு இப்பிடிப் போறதும் தலவிதிதான். விதி எப்பிடியோ அப்பிடித்தான் நடக்கும். அதை மீறிக்கிட்டு உசுரோட இருன்னா இருக்க முடியுமா? நான் இப்பிடி ஆவறதுக்கு நான் யாருக்கு என்னா பாவம் செஞ்சனோ தெரியல. அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஊராங்களுக்குக் கொடுக்கத் தெரியாது. ஆனா நல்லா கெடுக்கத் தெரியும். போக்கத்தவனுக்குப் போறதெல்லாம் பாததான்ங்கிற கதெதான் நம்பளுக்கு'' என்று சொன்னாள். ராணி என்னவோ கேட்டாள். அவள் கேட்டதை காதில் வாங்காமல் தன்னுடைய நினைவிலேயே இருந்தாள் லோகாம்பாள். கருப்பன் செத்த பிறகு அதிகமாக அவள் தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள். சில நேரங்களில் அவளுடைய பேச்சில் பாதிகூட புரியாது. சிலநேரங்களில் அவளுடைய பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கும். இப்போதும் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது என்று ராணி நினைத்துக்கொண்டாள்.

இரண்டு பக்கமுமிருந்த அடைப்புகளிலிருந்தும் ``உஷ்உஷ். கிரிச்கிரிச், ஊஷ் ஊஷ்'' என்று பூச்சிகளும், வண்டுகளும், குருவிகளும் கத்திக்கொண்டிருந்தன. ``என்னா குருவிம்மா கத்துது?'' என்று குமார் கேட்டான். இரண்டு மூன்று குரலுக்குப் பிறகுதான் ``என்னா கேட்டெ?'' என்று லோகாம்பாள் கேட்டாள். அப்போது முன்னால் ஓட முயன்ற ஆட்டுக்குட்டியை பிடிப்பதில் மும்முரமாக இருந்தான் குமார். ஆட்டுக்குட்டியின்மீது  அவனுக்கு எரிச்சல் உண்டாயிற்று. முதல் காரணம் தேவையில்லாமல் அந்தப்பக்கம் அது ஓட முயன்றுகொண்டிருப்பது. மற்றொரு காரணம் இந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து, அதை விற்று, அதிலிருந்து வரக்கூடிய பணத்தில் மூன்று நான்கு ஆட்டுக்குட்டிகளை வாங்கி, வளர்த்து, அவைகளை விற்று ராணி வயதுக்கு வரும்போது திரட்டி சுற்ற வேண்டும் என்று இந்த இரண்டு மாதமாக லோகாம்பாள் சொல்லிக்கொண்டிருந்தாள். ராணிக்கு திரட்டி சுற்ற தான் ஆடுமேய்க்க வேண்டுமா என்பதுதான் குமாரின் கோபத்திற்குக் காரணம்.

வாரிலிருந்து மேடேறி வரகு நிலத்தின் வழியே சென்ற ஒற்றையடிப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். வரகில் இறங்கியிருந்த பனி கால்களில் பட்டு அதிகக் குளிரை கொடுத்தது. வாரியில் நடந்தபோது இருந்த குளிரைவிட இப்போது அதிகமாகத் தெரிந்தது. லேசாகக் காற்று அடித்தால்போதும் பனிக்கட்டியை முகத்தில் வைத்ததுபோல் அவ்வளவு குளிராக இருந்தது. பயிர் நிலத்திற்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்ததுமே ஆட்டுக்குட்டியின் தொந்தரவு அதிகமாயிற்று. வரகில் வாயை வைக்க ஓயாமல் இழுத்துக்கொண்டேயிருந்தது. அவ்வாறு இழுக்கும்போதெல்லாம் அதனுடைய கழுத்தில் கட்டியிருந்த மணியின் சத்தம் காடு முழுவதும் கேட்டது. வரகு நிலத்தைத்தாண்டி சோளக்கொல்லைக்குள் நடக்க ஆரம்பித்தனர். சோளத்தட்டை ஒன்றரை ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. இதுவரை இருந்ததைவிட சோளக்கொல்லைக்குள் அதிக இருட்டு இருப்பதுபோல தெரிந்தது. சோளக்கொல்லைக்குள் திருடர்கள் யாராவது இருப்பார்களோ, வழியை மறித்துக்கொண்டு அடிப்பார்களோ என்று குமார் ராணி மட்டுமல்ல லோகாம்பாளும் பயந்தாள். திருடனைப் பற்றி நினைத்ததுமே தன்னுடைய நிலத்தில விளைந்து நிற்கும் கொத்தமல்லி பற்றிய நினைவும் அவளுக்கு வந்தது. கொத்தமல்லியை யாராவது பிடுங்கிக் கொண்டு போயிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டாள். மூன்று நான்கு கட்டு கொத்தமல்லியைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் அரை மூட்டை ஒருமூட்டை என்று கொத்தமல்லி போய்விடுமே என்று கவலைப்பட்டாள். காட்டில் அதிகமா திருட்டுப்போவது கடலையும் கொத்தமல்லியும்தான். சாயுங்காலம் பார்த்துவிட்டுப்போனாலும் மறுகாலையில் போய்ப்பார்த்தால் வட்டவட்டமாகப் பிடுங்கியிருப்பார்கள். காட்டில் காவலுக்கு என்று படுத்திருப்பவர்கள்தான் திருடுவார்கள். பிறருடைய காட்டில் திருடிக்கொண்டுபோய் தங்களுடைய நிலத்தில் போட்டுக்கொள்கிறவர்கள் யார்யார் என்று யோசித்தாள். பிறகு ``வேகமா நடெங்க'' என்று சொன்னாள். ``திருட்டுக்கு ஏது இருட்டு'' என்று சொன்னாள். சிறிதுநேரம் கழித்து ``சோளத்தட்டயிலெ கால இடிச்சிக்காதீங்க. கால பாத்து நடக்கணும்'' என்று சொன்னாள்.

சோளக்கொல்லையைத் தாண்டியதும் வரகு நிலம் வந்தது. அதைத்தாண்டியதும் கொத்தமல்லி நிலம் வந்தது. ஆனால் கொத்தமல்லி நிலத்தில் நடக்கக்கூடாது என்று வழியை மறித்து முள் அடைப்பு போட்டிருந்தது. அதனால் அடைப்பை ஒட்டியே நடந்தனர். வழியை மறித்து அடைப்புப் போட்டிருந்த சட்டித்தலை படையாச்சியை லோகாம்பாள் திட்டினாள். ``நடக்கிற வழியிலெ முள்ளெப்போட்டு மறிக்கிறவன் நல்ல கதிக்குப்போவானா? இந்தமாரி செய்யுற பயலுவளத்தான் பெரியச்சாதிக்காரன்னு சொல்றானுவோ'' லோகாம்பாள் மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லாருமே சட்டித்தலை படையாச்சியைத் திட்டினாலும், கரித்துக்கொட்டினாலும், சாபம் கொடுத்தாலும், அவனுக்கு இதுவரை காய்ச்சல், தலைவலி என்று ஒருநாளும் வந்ததில்லை. உடம்பு சரியில்லை என்று அவன் ஒரு நாளும் வீட்டில் படுத்திருந்தது கிடையாது. காலையில் இருட்டாக இருக்கும்போது காட்டுக்குப்போனால் சாயுங்காலம் நன்றாக இருட்டிய பிறகு தான் வீட்டுக்கு வருவான். இரவும் பகலும் காட்டுப்பூச்சி மாதிரி காட்டிலேயே கிடந்தாலும் இதுவரை அவனை சாதாரண அரணைகூட கடித்தது கிடையாது. அவனை பாம்பு கடிக்க வேண்டும் என்று ஊருக்குள் ஆசைப்படாதவர்கள், சாமியிடம் வேண்டிக்கொள்ளாதவர்கள் என்று ஒரு ஆள்பாக்கியிருக்க முடியாது. ஆனால் இதுவரை அவனை ஒரு முள்கூட குத்தியது கிடையாது. பயிர்காலத்தில் மட்டுமல்ல கோடைக்காலத்தில்கூட அவனுடைய நிலத்தில் ஆட்கள் நடக்கவோ ஆடுமாடுகள் மேயவோ விடமாட்டான். ஆட்களும் ஆடுமாடுகளும் நடந்துநடந்து நிலம் இறுகிப்போய்விடும். அதனால் ஏர் ஓட்டும்போது சிரமமாக இருக்கும் என்று சொல்லிக் கத்துவான். பயிர் நிலத்தில் ஆடுமாடுகள் நுழைந்துவிட்டால் அவ்வளவுதான். பயிரை மேய்ந்த ஆடு மாடுகளின் வாலை அறுத்துவிடுவான். இல்லை என்றால் ஒரு வாரத்திற்கு மோட்டார் கொட்டகையில் கட்டி வைத்துவிடுவான். ஆடு மாடுகளுக்கு உரியவர்களிடம் செய்தியையும் சொல்லமாட்டான். ஆடுமாடுகள் என்ன, அவன் போட்டிருக்கிற முள் வேலியைத்தாண்டி ஆட்கள் போனால்கூட சாட்டையால் தான் அடிப்பான். சின்னப்பிள்ளைகள் என்றால் அவனுடைய நிலத்தைச் சுற்றி பத்து இருபது முறை ஓடிவரச்சொல்வான். முடியாதென்றால் சாட்டையால்தான் அடிப்பான். கீழச்சாதி ஆட்கள், பிள்ளைகள் என்றால் அவனுடைய தண்டனை இரண்டு மடங்காகக் கூடிவிடும். பத்துப் பன்னிரெண்டு வயது இருக்கும்போது லோகாம்பாள் ஒருமுறை அவனுடைய நிலத்தில் நுழைந்து நடந்ததற்காக நிலத்தைச் சுற்றி ஓடிவரச்சொன்னான். அழுததும் சாட்டையால் அடித்து தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க வைத்தான். மோட்டாங்காட்டில் மட்டுமல்ல அவனுடைய வயலில் கூட ஒரு காக்கா குருவி நுழைய முடியாது. காட்டுக்குப் போகிறவர்கள் தண்ணீர் எடுப்பார்கள் என்பதற்காக கிணற்றுப்படிக்கட்டில் நெருஞ்சி முள்ளைப்போட்டு வைத்திருப்பான். முள்ளை எடுத்துவிட்டு யாராவது தண்ணீர் எடுத்தால் அவ்வளவுதான். குடத்தைப் பிடுங்கி கிணற்றுக்குள் போட்டுவிடுவான். கீழ்ச்சாதிக்காரர்கள் யாராவது தொட்டியில் தண்ணீர் எடுத்தாலோ, குடித்தாலோ கூழாங்கல்லை கொடுத்து வாயில் போட்டு கடிக்கச் சொல்வான். ``இப்பிடிப்பட்டவனுக்கெல்லாம் சாவு வரமாட்டேங்குது பாரு'' என்று சொன்னாள். பிறகு என்ன நினைத்தாளோ குமாரிடமும், ராணியிடமும் ``நீங்க ஒருத்தங்க பண்டத்துக்கும் ஆசப்படாதீங்க. இன்னொருத்தங்க பொருள உசுருப்போனாலும் தொடாதீங்க'' என்று சொன்னாள்.

தூரத்தில் பேச்சுக்குரல் கேட்டது. லோகாம்பாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த நேரத்திற்கு எழுந்து வந்திருப்பார்கள் என்று சந்தேகப்பட்டாள். ஊருக்கு முன்னே தான்தான் காட்டுக்கு கிளம்பியதாக இதுவரை நினைத்துக் கொண்டிருந்தாள். தனக்கு முன்னே ஆட்கள் வந்திருப்பது தெரிந்ததும் அவளுக்கு சப்பென்றாகிவிட்டது. ``எல்லாம் இந்த ஒரு மாசம்தான். காட்டுல இருக்கிறத ஊட்டுல கொண்டு போயி பதனமா சேக்காட்டி ஒருவருச பொயப்பு அம்போன்னு போயிடுமே'' என்று சொன்னாள். மறுநொடியே தன்னுடைய நிலத்தைப்பற்றியும், அதில் விளைந்திருக்கும் கொத்தமல்லியைப் பற்றியும் யோசித்தாள். கருப்பனுக்கு சொந்தமாக அரைகாணி நிலம் மட்டும்தான் இருந்தது. அதில்தான் கடலைபோட்டுப் பிடுங்கிவிட்டு கொத்தமல்லி விதைத்திருந்தார்கள். கொத்தமல்லி விதைத்து பத்து இருபது நாட்களிலேயே கருப்பன் நிலத்தில் முளைத்திருக்கும் கொத்தமல்லியைப் பற்றி ஊருக்குள் ஒரே பேச்சாகிவிட்டது. அந்த அளவுக்கு செழிப்பாக முளைத்திருந்தது. சாதாரணமாக அரைகாணி நிலத்தில் நான்கு மூட்டை கொத்தமல்லி கிடைத்தாலே பெரிது. இந்த வருசம் கருப்பனுக்கு பத்து மூட்டை கிடைக்கும் என்று பேச்சாகிவிட்டது. லோகாம்பாள் கூட ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டுப்போனாள். கருப்பன் செத்ததும்தான் தெரிந்தது அது `சாவு வெள்ளாமை' என்று. அதனால் கொஞ்ச நாட்களுக்கு காட்டிற்குப் போகவோ கொத்தமல்லியைப் பார்க்கவோ அவளுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் இந்த பத்து இருபது நாட்களாக அந்த அரைகாணி நிலம்தான் அவளுக்குத் தெய்வமாகத் தெரிந்தது. இரவும் பகலும் அந்த நிலத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள். இனிமேல் கடலை, எள், கொத்தமல்லி என்று பணப்பயிர் விதைக்கக்கூடாது. சோற்றுக்கான வரகு, சோளம், கம்பு என்றுதான் பயிரிட வேண்டும். கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுத்தாலும் காட்டில் விளைந்ததுமாதிரி இருக்காது என்று நினைத்தாள். நிலமற்றவர்களுக்கு இரண்டு ஏக்கர் என்று அரசாங்கம் போன வாரம் கொடுத்தது. இவளுக்கு சொந்தமாக அரைகாணி இருந்ததால் அரசாங்கத்தின் இரண்டு ஏக்கர் நிலம் கிடைக்காமல் போய்விட்டது. ``அரக்காணிதான் ஒலகத்துலியே இல்லாத பெரிய சொத்துன்னு பேர எயிதாம வுட்டுட்டானுகளே கொலகார பயளுவோ'' என்று சொல்லி திட்டினாள். அடுத்த வருசத்திலிருந்து காட்டில் என்னென்ன பயிரிட வேண்டும். அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தாள். கருப்பன் இருந்தவரை இதுமாதிரி அவள் ஒருநாள்கூட யோசித்ததில்லை. அதேமாதிரி அவளுக்கு என்று ஆசைகள் எதுவும் இருந்ததில்லை. பெரிதாக ஆசைப்படவும் அவளுக்குத் தெரியாது. அதிகபட்சம் அவளுடைய ஆசைகள் எல்லாம் நல்ல சோறு சாப்பிட வேண்டும். நல்ல சேலை கட்ட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஆசைகள் இப்போது அவளிடமில்லை. ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரியபெரிய ஆசைகள் இப்போது அவளுக்கு வந்துவிட்டது. அவளைமாதிரி ஆசைகொண்ட பெண் இப்போது அந்த ஊரிலேயே இல்லை. அவளுடைய ஆசையிலேயே பெரிய ஆசையாக இருப்பது தன்னுடைய பிள்ளைகளுக்கு வயிறு நிறைய சோறு கிடைக்க வேண்டும் என்பதும், நோய்நொடி அண்டக்கூடாது என்பதும் தான். அதற்கடுத்து காடு நன்றாக விளைய வேண்டும் என்பது. அந்த ஆசைகள்தான் அவளுடைய இரவையும் பகலையும் வேகமாக நகர்த்திக்கொண்டிருந்தது. அந்த ஆசைகள் தான் இப்போது பனியையும், குளிரையும் அவளிடம் அண்டவிடாமல் தடுத்திருந்தது. அந்த ஆசைகள்தான் இருட்டிலும் நடப்பதற்கான தெம்பையும் பாதையையும் காட்டிக்கொண்டிருந்தது. ஆசைதான் இருட்டிலும் தங்குதடையின்றி, கால்கள் கூசாமல் பகலில் நடப்பதுமாதிரி நடக்க வைத்தது.

``விடியபோற நேரத்திலெ எதுக்குத்தான் இப்பிடி குளுந்த காத்து வீசுதோ, இந்தப் பனியிலயும் குளிருலயும் நடந்தா பெரியவங்களுக்கே ஒத்துக்காதே. புள்ளியோ வெறச்சிப்போயிடும்போல இருக்கே'' என்று சொன்ன லோகாம்பாள் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்த குமாரை கூர்ந்து பார்த்தாள். ``தம்பி'' என்று சொல்லி கூப்பிட்டாள். அவன் ``என்னம்மா?'' என்று கேட்டான். சொல்ல வந்ததை மறந்துவிட்டதுபோல பேசாமலிருந்தாள். சிறிதுநேரம் கழித்து தானாகவே ``நீங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போகலன்னா வாத்தியாரு அடிப்பாரா?'' என்று கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ``இனிமே நான் பள்ளிக்கூடத்துக்குப் போவ மாட்டனாம்மா?'' என்று குமார் கேட்டான்.

``ஒங்க தல எழுத்து எப்பிடி இருக்கோ, அது ஒங்கள படச்ச ஆண்டவனுக்குத்தான் தெரியும். பேனா புடிச்சி எயிதுறது மட்டும்தான் வேலயா? நாட்டுல உள்ளெ எல்லாருமே பேனா புடிக்கிற வேலக்கே போயிட்டா காட்டுல வேலெ செய்யறது யாரு? காட்டுல வேல செய்யாட்டி சோறு எப்பிடி திங்கிறது? எது இல்லன்னாலும் உசுரோட இருந்திடலாம். சோறு இல்லாம ஒரு நாளக்கி இருக்க முடியுமா? எம்மாம் பெரிய பணக்காரங்களா இருந்தாலும் அவுங்களும் வவுத்துக்குச் சோத்தத்தான தின்னாவணும். நமக்கு வேண்டியது சோறுதானே? கைகால நம்பு, காட்டெ நம்பு, கடவுளு தொண இருப்பான். நாம்ப மட்டுமா காட்டெ நம்பிக்கிட்டு இருக்கோம்? நாட்டுல எத்தனகோடி சனங்க காட்டெ சதம்னு நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆண மேயுற காட்டுல ஆடு மேயுறதுக்கு எடமில்லாமியா போவும்? கைகாலு தெடமா இருக்கணும். அதுதான் நம்பளுக்கு வேண்டியது. நோவுநொடி அண்டக்கூடாது. எல்லாத்துக்கும் மேல கடவுளு இருக்கான். காசு பணம் என்னாத்துக்கு ஆவும்? மெத்த மாளிகயில படுத்துத் தூங்குறவங்களும் ஒரு நாளக்கி சாவத்தான் போறாங்க. அவுங்க மட்டும் நூறு சம்பத்துக்கா வாயப்போறாங்க?'' என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் நடந்தாள். பிறகு அவளுக்கு என்ன தோன்றியதோ தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னாள். ``ஒங்க தலயில என்னா எயிதிருக்கோ, எய்தினபடிதான எல்லாம் நடக்கும். பால்குடி மறக்காதப் புள்ளிவுள ராத்திரியிலெ இப்பிடி இயித்துக்கிட்டு நடக்கும்படியா வச்சிப்புட்டானே பாயிம் கடவுளு, அவன் நல்லா இருப்பானா? என்னோட பாவம் அவன சும்மா வுடுன்னாலும் வுடுமா? முப்பித்திரெண்டு வயசிலியே என்னெ இப்பிடி பண்ணிப்புட்டானே சண்டாளன். அவன் எப்பிடி நல்லா இருப்பான்? அவன் நாசமத்துத்தான் போவான் பாரு. என்னோட பாவம் அவன கேக்காம வுடாது.''

லோகாம்பாளினுடைய பேச்சு குமாருக்கும் புரியவில்லை. ராணிக்கும் புரியவில்லை. புரிந்தாலும் அவளுடைய பேச்சைக் கேட்கிற மனநிலையில் அவர்கள் இல்லை. அவர்களுடைய மனமும் பார்வையும் வரகு நிலம், கொத்தமல்லி, சோளம், துவரை நிலம் என்று சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிலத்திற்குள்ளும் நடக்கும் போதும் அந்தந்தப் பயிர்களுடைய வாசனை வந்தது. எல்லா வாசனையையும்விட கொத்தமல்லி வாசனைதான் தூக்கலாக இருந்தது. இருட்டாக இருந்தாலும் வாசனையை வைத்தே அது என்ன பயிர் உள்ள நிலம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. தூரத்திலுள்ள நிலங்களில் இருக்கும் பயிரைக்கூட வாசனையை வைத்தே கண்டுபிடிக்க முடிந்தது. கைகால்கள் விறைத்துப் போகும் அளவுக் குளிர் இருந்தாலும், பனியும் குளிரும் அவர்களை இப்போது ஒன்றும் செய்யவில்லை. வரகு, சோளம், துவரை, கொத்தமல்லி நிலங்களிடையே கிடந்த ஒற்றையடிப்பாதையில் இருளோடு இருளாக நடந்துகொண்டிருந்தனர். இருள் இப்போது அவர்களுக்கு பழகிவிட்டது. வானம் தெளிந்துகொண்டிருந்தது. நிலம் தெளிந்துகொண்டிருந்தது.

தன்னுடைய நிலத்திற்கு அருகில் வரவர லோகாம்பாளினுடைய நடையில் வேகம் கூடியது. ராணியும் குமாரும் அவளுடைய நடையின் வேகத்திற்கு ஈடுகொடுத்தனர். அவர்களுக்கும் நன்றாக விடிவதற்குள் தங்களுடைய நிலத்திற்குப்போய்விட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டிருந்தது. ஆட்டுக்குட்டிக்கூட ஓயாமல் முன்னோக்கி இழுத்துக்கொண்டே இருந்தது. புகைப்படலம்மாதிரி பனி இறங்குவது தெரிந்தது. போர்த்தியிருந்த போர்வைகூட லேசாக நனைந்துவிட்டிருந்தது. அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. விடிவதற்குள் தங்களுடைய காட்டில் அடியை வைத்துவிட வேண்டும் என்பதைத்தவிர மூவருக்கும் வேறு சிந்தனைகளில்லை.

தங்களுடைய நிலத்தின் சனி மூலையில் வந்து நின்றார்கள். ``கிழக்கமா பாத்து கும்புட்டுட்டு மொத செடிய புடுங்குப்பா'' என்று சொன்ன லோகாம்பாள், கிழக்குப் பக்கமாகப் பார்த்து கும்பிட்டாள். அவள் கும்பிடுவது மாதிரியே ராணியும் குமாரும் கும்பிட்டனர். ராணி முதலில் பிடுங்கிவிடக் கூடாது. தான் தான் முதலில் பிடுங்க வேண்டும் என்று தண்ணீரில் நனைத்து நட்டு வைத்ததுபோல பனியில் நனைந்திருந்த கொத்தமல்லிச் செடி ஒன்றைப் பிடுங்கினான் குமார். அடுத்தது பிடுங்க ஆரம்பித்தாள் ராணி. லோகாம்பாள் கிழக்கு பார்த்து கும்பிட்டவாறு நின்று கொண்டிருந்தாள்.

நிலம் நன்றாகத் தெளிந்துவிட்டது.

நன்றி – தீராநதி

இமையம் - நேர்காணல்

டலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்' (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்' ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்' 1999லும், `செடல்' 2006லும் வெளிவந்துள்ள நாவல்கள். 2006 ஆம் ஆண்டு `ஆறுமுகம்' நாவல் கதா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது சிறுகதைகள் `மண்பாரம்' (2004), `வீடியோ மாரியம்மன்' (2008) என இரண்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை 2002 ஆம் ஆண்டு இமையத்திற்கு வழங்கியது. அதோடு பல முக்கியமான பரிசுகளையும் பெற்றுள்ளார். மனைவி சபா.புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன்.

தீராநதி : `உங்களுடைய இளமைக்காலம்' எப்படிப்பட்டதாக இருந்தது? இலக்கிய நூல்களை எப்போது படித்தீர்கள்? எழுதுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது?

இமையம் : ``இப்போது நினைக்கும்போது ஏன் வளர்ந்தோம் என்றிருக்கிறது. சிறுவனாக இருந்தபோது சீக்கிரம் வளர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. என்னுடைய ஆசை மட்டுமல்ல; மற்றவர்களுடைய ஆசையும் இந்த விசயத்தில் நிறைவேறாது. நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசைப்படுவதும்; அதற்காக ஏங்குவதும்தான் மனித இயல்பு, வாழ்க்கை. என்னுடைய பெற்றோர்கள் வெங்கட்டன், சின்னம்மாள். என்னுடைய அப்பாவுக்கு என்னுடைய அம்மா இரண்டாவது மனைவி. முதல் மனைவி என்ன ஆனார் என்பது மட்டுமல்ல, அவருடைய பெயர்கூட எங்களுக்குத் தெரியாது. அப்பாவுக்கு சொந்த ஊர் கீழ்ச்செருவாய் என்பது. அம்மாவுக்கு சொந்த ஊர் கழுதூர். அப்பாவினுடைய முதல் மனைவியின் ஊர் வதிட்டப்புரம். வெங்கட்டன் என்பவருக்கும், சின்னம்மாள் என்பவருக்கும் மொத்தம் ஆறு குழந்தைகள். அதில் இரண்டு குழந்தைகள் பிறந்த கொஞ்ச காலத்திலேயே இறந்துவிட்டார்கள். எஞ்சியதில் நான் மூன்றாவது ஆள். நாங்கள் பிறந்தது மேல்ஆதனூர் என்ற சிறிய கிராமத்தில். அது என்னுடைய பெரியம்மாவின் ஊர். அந்த ஊருக்கு என்னுடைய பெற்றோர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு ஏழு எட்டு வயதாகிறவரை மேல்ஆதனூரில் இருந்தோம். அதன்பிறகு கழுதூர் என்ற ஊருக்கு வந்து இன்றுவரை நாங்கள் அங்குதான் இருக்கிறோம். என்னுடைய பெரியம்மாவும், எங்களுடன் கழுதூருக்கே வந்துவிட்டார். சாகும்வரை எங்களுடன்தான் இருந்தார். எங்களை வயிற்றில் வைத்திருந்தது மட்டும்தான் அம்மாவினுடைய வேலை. எங்களை வளர்த்ததெல்லாம் பெரியம்மாதான்.

மேல்ஆதனூரில் ஒன்றிரண்டு வகுப்புகள் படித்தேன். பள்ளிக்கூடம்போன நாட்களைவிட ஓடையில் குதித்த நாட்களும், புளியந்தோப்பிலும், இலுப்பைத் தோப்பிலும் திரிந்த நாட்கள்தான் அதிகம். கழுதூரில் தொடக்கப்பள்ளிக்கூடத்திற்குப்போன நாட்களை எண்ணிவிடலாம். பொங்கலுக்கும், தீபாவளிக்கும் துணி கொடுக்கும்போது போயிருக்கிறேன். அதுதான் நல்லா நினைவிருக்கு. கழுதூரில் இருந்த சமயத்தில் நான் என் பெரியம்மாவுடன் தினமும் காட்டுக்குத்தான் போவேன். காட்டுக்குப் போகத்தான் அதிக ஆசையாக இருந்தது. பள்ளிக்கூடத்திற்குப்போக நான் ஒருநாள்கூட விரும்பியதில்லை. ஒரு நாள் காட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது வழியில் மறித்து அடித்து இழுத்துக் கொண்டுபோய் என்னுடைய அண்ணன் கணேசன் (Ex.M.L.A., Ex.M.P., Ex. மாவட்டப் பஞ்சாயத்துக்குழு தலைவர்-கடலூர் மாவட்டம்) தான் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். ஆறாம் வகுப்பிலிருந்து ஓரளவுக்கு பள்ளிக்கூடம் போனேன். +2 படிக்க 1982ஆம் ஆண்டு சேப்பாக்கம் என்ற ஊருக்குப் போனேன். ஒருநாள் நான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த இலுப்பைத் தோப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தோப்புக்குப் பக்கத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த ஐவத குடியைச் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாடகர் ஒருவர் என்னிடம் வந்து விசாரித்தார். பிறகு என்னை ஒரு கவிதை எழுதித்தரச் சொன்னார். ஒரு வாரம் கழித்து வந்து என்னை பெண்ணாடத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் கூட்டத்தில் என்னுடைய கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. பரிசாக `தாய்' நாவலைத் தந்தார்கள். தாய் நாவல்தான் படித்த முதல் கதை புத்தகம். அதன் பிறகு +2விலேயே பள்ளியில் நடந்த நாடகத்திற்காக `விலங்கு பண்ணை' (Animal Form) என்ற புத்தகத்தைப் படித்தேன். தமிழாசிரியர் கொடுத்தது.''

தீராநதி : எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

இமையம் : ``1984இல் நான் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்தேன். இயற்பியல் பாடப்பிரிவில் அதுவும் ஆங்கில போதனா முறையில் சேர்ந்திருந்தேன். இயற்பியலும் புரியவில்லை; ஆங்கிலமும் தெரியவில்லை. அதனால் நாளெல்லாம் மரத்தடியிலேயே உட்கார்ந்திருப்பேன். அப்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். ஈழத் தமிழருக்காக மாணவர்கள் போராட்டம், ஊர்வலம் நடத்தினார்கள். அதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். அப்போது தி.மு.க., ஈழத்தமிழர் பிரச்னையில் முழு ஈடுபாடு காட்டியது. அதுவும் காரணம் அப்போது பெரியார் கல்லூரியில் மாணவர்களை ஈழப்போராட்டத்தில் ஈடுபட வைத்த திருநாவுக்கரசு, தமிழ்ச்செல்வன் என்ற இருவரும் 1991இல் தி.மு.க.வின் சட்டமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள். ராஜீவ்காந்தி படுகொலையால் அவர்கள் இருவருமே தோற்றுப்போனார்கள். அதோடு அவர்களுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது.

1985-86இல் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயங்கி வந்த AICUF என்ற கேத்தலிக் மாணவர் அமைப்பும், தேன்மழை என்ற மாத இதழும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கு நான் கவிதை அனுப்பியிருந்தேன். அந்தப் போட்டியில் எனக்கு ஆறுதல் பரிசாக சான்றிதழ் தந்தார்கள். அதன்பிறகு 1986இல் AICUFம் சென்னை லயோலா கல்லூரியில் செயல்பட்டு வரும் Culture and Communication என்ற அமைப்பும் கொடைக்கானலில் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். பங்கு பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த பேரா.எஸ்.ஆல்பெர்ட் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுக்காதது மட்டுமல்ல; `அவன் எழுதியிருக்கிறத பாத்தா நக்ஸலைட் மாதிரி தெரியுறான். அவன் வந்தா எல்லாத்தயும் கெடுத்துடுவான்' என்று சொல்லிவிட்டார். அப்போது திருச்சி மண்டல AICUF-ன் பொறுப்பாளராக இருந்த திரு.மனோகரன் என்பவர் ஆல்பெர்ட்டை சமாதானம் செய்து அந்தப் பயிற்சிப்பட்டறையில் என் பெயரைச் சேர்த்தார். பயிற்சிக்காக கொடைக்கானல் சென்ற பிறகுதான் இலக்கியம், இலக்கியப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது. அதன் பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். அந்த மனோகரன் இல்லை என்றால், ஆல்பெர்ட் இல்லையென்றால் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், மண்பாரம், வீடியோ மாரியம்மன் கிடையாது. வேறு ஒரு திசையில் நான் போயிருப்பேன். 1984-காலகட்டம் என்பது புரட்சிகரமான கவிதைகளுக்கும், கவியரங்கங்களுக்கும் பெயர் பெற்ற காலம். அப்போது பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக, அரசு கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற விசயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள். நானும் அப்படித்தான். காலமும் சூழலும், நண்பர்களும் உருவாக்கிய ஆள் நான். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கதவைத் திறந்துவிட்ட AICUF மனோகரனை அந்தப் பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு நான் சந்திக்கவே இல்லை. என்னுடைய குடும்பத்தில் என் அப்பாவுக்குப் படிக்கத் தெரியும். அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. என் அண்ணன், தம்பி எல்லாருமே பட்டதாரிகள்தான். அவர்களுடைய குழந்தைகளும். ஆனாலும் என் எழுத்தை என் குடும்பத்தார்கள் யாருமே இதுவரை படித்ததில்லை. நானும் நூல்களை அவர்களுக்குத் தரவில்லை. காரணம் `நம்ம ஊரு வண்ணாத்தியப்பத்தியும்; நம்ம ஊரு ஆட்டக்கார செடலைப்பத்தியும் எழுதியிருக்கான். இதத்தான் கத எழுதுறன்னு சொல்லிக்கிட்டு திரிகிறான்' என்று சொல்வார்கள் என்பதாலேயே என் எழுத்தை அவர்களிடம் காட்டுவதில்லை. என் மனைவி புஷ்பவல்லி சபாநடேசன் கடந்த பத்தாண்டுகாலமாக என் எழுத்தில், என் படிப்பில் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவர்தான் என் முதல் வாசகர். கவிதைகள் எழுத ஆரம்பித்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே ஆல்பெர்ட், க.பூர்ணசந்திரன் போன்ற நண்பர்களைசந்தித்துவிட்டதால், புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டதால் படிப்படியாக கவிதைகளை எழுதுவதை குறைத்துக் கொண்டேன். உச்சபட்ச பைத்தியக்காரத்தனமாக `பத்திரிகை ஒரு பார்வை' என்ற  புத்தகத்தையும், புதிய கல்விக் கொள்ளை ஒரு X-ray கண்ணோட்டம் என்ற சிறு வெளியீட்டையும் நானே வெளியிட்டேன். அதிலிருந்து சொந்தமாக புத்தகம் போடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கோவேறு கழுதைகள் நாவல் வெளிவருவதற்கு முன் பெரும்பத்திரிகைகளுக்கோ, சிறுபத்திரிகைகளுக்கோ எந்தப் படைப்பையும் நான் அனுப்பியதில்லை. `கோவேறு கழுதைகள்' நாவல் வெளிவந்து ஓரளவு அங்கீகாரம் பெற்ற பிறகு காலச்சுவடுக்கு ஒரு சிறு நாடகம் ஒன்றை அனுப்பினேன். `இதைவிட காத்திரமான படைப்பை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்' என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இது ஒன்றுதான் என் எழுத்து வாழ்க்கையில் நடந்தது.''

தீராநதி : உங்களுடைய மூன்று நாவல்களும் மூன்று விதமான உலகை சித்திரித்துள்ளது. இது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?

இமையம் : ``இந்தக் கேள்விதான் எழுத்தாளன் யார் என்பதை அடையாளம் காட்டுவது. சவால்களை எதிர்கொண்ட எழுத்தாளனுக்குத்தான் இக்கேள்வி பொருந்தும். இந்தக் கேள்விதான் எழுத்தாளனுக்கான சவால். பரந்துபட்ட அனுபவம், அறிவு, வெளிப்பாட்டுத் திறன், கையாளும் மொழி இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு எழுத்தாளனின் ஆளுமையை மட்டுமல்ல யார் எழுத்தாளன் என்பதையும் காட்டுகிறது. நான் எழுதிய மூன்று நாவல்களிலும் முற்றிலும் வேறுபட்ட மூன்று விதமான உலகை; வாழ்க்கை முறையை எழுதியது முக்கியமல்ல. அவை மூன்றும் நாவலாக இருக்கிறதா, இலக்கியப் படைப்பாக இருக்கிறதா, எழுத்தாளனின் அனுபவம் வாசகனின் அனுபவமாக மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதுதான் முக்கியம். வாசகர் உலகம் இதுவரை அறியாத ஒரு உலகை, வாழ்க்கை முறையை எழுதுவதால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியப் படைப்பாகிவிடுமா? ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட வாழ்க்கை அனுபவம் இருக்க வேண்டும். வாழ்க்கை அனுபவம் இருந்தால் மட்டும் போதாது. அந்த அனுபவத்தை இலக்கியப் படைப்பாக மாற்றுகிற நுட்பமும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் கைகூடாதவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படைப்பை மட்டுமல்ல, சாதாரண படைப்பைக்கூட உருவாக்க இயலாது. வாழ்க்கை அனுபவம் என்பதும் மட்டும் அல்ல. படைப்பாக்கத்திற்கான நுட்பம் இல்லாதவர்கள், ஆனால் எதையாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களால், பழக்க தோசத்தால் எழுதிக் கொண்டிருப்பவர்களால் எழுத்தில் புதிய எல்லைகளைத் தொடமுடியாது; புதிய சவால்களையும் எதிர்கொள்ள முடியாது.

என்னுடைய முதல் நாவல் `கோவேறு கழுதைகள்' (1994) வெளிவந்தபோது, என்னுடைய அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு யூகம் இருந்தது. அந்த யூகத்தை `ஆறுமுகம்' (1999) நாவல் பொய்யாக்கியது. என்னுடைய மூன்றாவது நாவலான `செடல்' (2006) முந்தைய இரண்டு நாவல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகைக் காட்டியது. வாசகர்களுக்கு புதியபுதிய உலகைக் காட்டவேண்டும் என்பது என் நோக்கமல்ல. இதை எழுது என்று எந்த அசரீரி வாக்கும் எனக்கு கட்டளையிடவில்லை. பயணம் செய்யும்போது நாவலுக்கான மையக்கரு என்னை வந்து அடையவுமில்லை. பிரமாண்டமான நாவல்களை உருவாக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் ஆசைப்பட்டதுமில்லை. அதற்கான அவசியமுமில்லை. நான் திருச்சியில் படிக்கும்போது ஒரு நாள் இரவு வீட்டுக்கு வந்தேன். அப்போது ஆரோக்கியம் (கோவேறு கழுதைகள் நாவலின் மையப்பாத்திரம்) வீட்டைக் கடக்கும்போது அந்தப் பெண் அப்போது ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார். அந்த ஒப்பாரியை, அழுகையை ஒரு பத்து நிமிடம் கேட்டிருப்பேன். அந்த ஒப்பாரிப் பாடலும்,  அழுகையும்தான் `கோவேறு கழுதைகள்' நாவலை எழுத வைத்தது. பாண்டிச்சேரிக்குச் செல்லும்போது, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த ஒரு பெண் பேருந்தில் ஏறினாள். பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். அதனால் இறங்கியதும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்றேன், அவள் சென்று சேர்ந்த இடம் செக்குமேடு. (பாலியல் தொழில் நடக்கிற இடம்) பெயர் தெரியாத அந்தப் பெண்ணையும் செக்குமேட்டையும் சுற்றிவந்ததன் விளைவுதான் ஆறுமுகம் நாவல். பொங்கல் பணம் கேட்டு வந்த செடலைப் பார்த்தபோதுதான், செடலைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் வளர்ச்சிதான் செடல் நாவல். கோவேறு கழுதைகள் நாவலின் மையப் பாத்திரம் என்னுடைய தெருவின் கடைசி வீட்டுக்காரர். செடல் என்னுடைய தெருவிலிருந்து மூன்றாவது தெருவில் இருந்தார். நான் பிறந்ததிலிருந்தே ஆரோக்கியத்தையும் செடலையும் எனக்குத் தெரியும். ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியமும், ஆறுமுகமும் பாண்டிச்சேரியிலுள்ள செக்குமேட்டில் சந்தித்த, உறவாடிய, பழகிய மனிதர்கள்.

என்னுடைய மூன்று நாவல்களிலும் மூன்றுவிதமான உலகையும், மனிதர்களையும், வாழ்க்கை முறையையும் எழுத வேண்டும் என்பது ஏற்கெனவே திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் மூன்று பெண்களைச் சந்தித்தேன். பழகினேன். அதனால் மூன்று நாவல்களை எழுதினேன். அந்த மூன்று பெண்களைச் சந்தித்திருக்காவிட்டால் மூன்று நாவல்களை எழுதியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. நாவல் எழுதுவதற்காக நான் எந்தப் பெண்ணுக்காகவும் காத்திருக்கவில்லை. அந்தப் பெண்களாகத்தான் வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையை என் வழியாக எழுதிக்கொண்டார்கள். அவ்வளவுதான். இதில் நான் ஒரு கருவி மட்டுமே, கண்ணாடி.''

தீராநதி : உங்களுடைய கதைக்கான கரு எப்படி உருவாகிறது? கிடைத்த கருவை எப்படிக் கதையாக்குகிறீர்கள்?

இமையம் : ``என்னுடைய நாவல்கள், சிறுகதைகள் பெரும்பாலானவை என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை; என்னைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையில் நடந்தவைதான். கற்பனையாக, அனுமானமாக, பிறர் சொல்லக் கேட்டு எழுதியது என்று என்னால் என்னுடைய எழுத்தில் சிறு பகுதியைக்கூட காட்ட முடியாது. நான் கதை எழுத முனையும்போதெல்லாம் என்னுடைய இளமைக் காலத்திற்குத்தான் செல்கிறேன். அதுதான் என்கு பொக்கிஷமாக இருக்கிறது. இன்றைய என்னுடைய வாழ்க்கை தக்கையைப் போன்றது. நிகழ்காலம் கொடூரமானது, கடந்தகாலம் சொர்க்கமானது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, துக்கத்தை, ஏக்கத்தை, ஏன் வருத்தத்தைக்கூட தரவில்லை. கனவற்ற ஒரு வாழ்க்கை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்த பத்தாண்டுகளில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் கதையான பகுதி மிகவும் குறைவுதான். அந்த அளவுக்கு வறட்சியாக இருக்கிறது. அதிர்ஷ்டமற்றவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் அந்த எதிர்ப்பார்ப்புகள்தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. மனம் தொடர்ந்து அதிசயங்களைத் தேடுகிறது. நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான வழி எது, வாசல் எது? மரணம்தான். அதற்கு முந்தையதுதான் படைப்பு. வாழ்க்கை என்பது எழுதக்கூடியதல்ல; உணரக்கூடியது. மனதிற்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டதுதான் வாழ்க்கை. பனித்துளியும் கடல் நீரும் இரண்டுமே தண்ணீர்தான். அவை இரண்டும் ஒன்றா?''

தீராநதி : எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் எழுதுகிறீர்கள்?

இமையம் : ``கணக்கு கிடையாது. இந்த இடத்தில் உட்கார்ந்தால்தான் எழுத வரும் என்றோ, இன்ன நேரத்தில்தான் எழுத வரும் என்றோ எனக்கு வரையறை கிடையாது. எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதே எழுதுவேன். எந்த இடமாக இருந்தாலும், தனியாக நடக்கும்போது, பேருந்தில் பயணம் செய்யும்போது, தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும்போதுதான் கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரும். என்னுடைய நாவல்களில் பெரும் பகுதியும், அனேக சிறுகதைகளும் பயணத்தில் எழுதப்பட்டவைதான்.''

தீராநதி : உங்களுடைய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி பெண்கள்தான் மையமாக இருக்கிறார்கள். அடுத்ததாக குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண்கள் பெண்களுக்குப் பின்னால் நிற்பவர்களாகவே இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

இமையம் : ``நான் பார்த்த, சந்தித்த, பழகிய மனிதர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவ்வளவுதான். நான் எதையுமே திட்டமிட்டு செய்யவில்லை. ஒரு ஒப்பாரியின் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் கோவேறு கழுதைகள் நாவலின் முக்கிய பாத்திரமான ஆரோக்கியம். பொங்கலன்று காசு கேட்க வந்த அன்றுதான் செடலின் மீது என்னுடைய கவனம் குவிந்தது. பிரயாணத்தில்தான் ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தை சந்தித்தேன். ஆரோக்கியத்தையும், செடலையும் பிறந்ததிலிருந்தே எனக்குத் தெரியும். ஒரே ஊர்க்காரர்கள், தெருக்காரர்கள். சட்டென்று ஒரு கணத்தில்தான் அவர்களைப்  பற்றி எழுதினால் என்ன என்ற கேள்வி எனக்குள் வந்தது. நான் ஒரே ஒரு முறை சந்தித்த பாத்திரம் ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம். இவர்களைப் பற்றி எழுதினால் என்ன என்ற கேள்வி மட்டும்தான் என்னுடையது. பிறகு அவர்கள் எனக்குள்ளிலிருந்து தங்களைப் பற்றி எழுதிக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களைப் பற்றி எழுதுவதைவிட சிறுவர்களைப் பற்றி எழுதுவதுதான் கடினம். நான் எழுதிய பெரும்பாலான சிறுகதைகளில் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இப்போது யோசிக்கும்போது எப்படி நிகழ்ந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சிறுவர்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இப்போது வருகிறது. எழுத முடியுமா என்பது தெரியவில்லை.''

தீராநதி : உங்களுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் துயரமும், துக்கமும்தான் மிகுதியாக இருக்கிறது. உங்களுடைய எழுத்தின் வெற்றியாகவும் இதுதான் இருக்கிறது. மனித வாழ்க்கை என்பது துக்கமும், துயரமும்தானா?

இமையம் : ``கடலைப்போல நம்மைச்சுற்றி வறுமையும் பசியும்தான் சூழ்ந்திருக்கிறது. கோவேறு கழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியத்தின் அதிகபட்ச தேவையும், போராட்டமும் பசியைப் போக்கிக் கொள்ளத்தானே. செடல் நாவலில் வரும் செடல் எதற்காக பலியிடப்படுகிறாள்? எதற்காக தன் வாழ்நாள் எல்லாம் ஓயாமல் அவள் போராடுகிறாள்? சோறுக்காகத்தானே. ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியத்தின் அதிகபட்ச தேவை என்ன? நெல்சோறு சிறுகதையில் வரும் சிறுவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? ருசியான சோறல்ல; சாதாரண சோற்றைக்கூட வழங்காத ஒரு சமூகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல; குழந்தைகளும்கூட எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அவர்களுக்கு எப்படி வரும் கொண்டாட்டத்திற்கான எண்ணம். இவ்வளவு விளைநிலமும், உற்பத்தியும் இருந்தும்கூட இரண்டு வேளை சோறுகூட கிடைக்காத நாட்டில், இருக்கிற விளை நிலங்களையும் ரியல் எஸ்டேட்களாக மாற்றிவிட்டால் என்னாகும் என்ற நிலையைத்தானே `உயிர்நாடி' சிறுகதையில் பார்த்தீர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையில் சிரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் இடமேது? நான் சித்திரிக்கும் உலகிலும் வாழ்வில் வறுமையும் துயரமும்தான் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆரோக்கியம், தனபாக்கியம், செடல் மூன்று பெண்களுமே பேராசை கொண்டவர்கள் அல்ல. அவர்களைப் போலவே, அவர்கள் வாழ்க்கையைப் போலவே, அவர்களின் தேவையும் எளியவைதான். அந்த எளிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத்தான் போராடுகிறார்கள். போராட்டத்தில் தோற்றுப் போகிறார்கள். இது எப்படி நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்று ஆராய்வதுதான் என் எழுத்து, என் நாவல்கள்.''

தீராநதி : ஒரு எழுத்தாளருக்கு அவர் எழுதிய ஒவ்வொரு படைப்புமே முக்கியமானதாக, மதிப்பு வாய்ந்ததாகத்தான் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு விதத்தில் கூடுதலான ஈர்ப்பை சில படைப்புகள் பெறலாம் அல்லவா? அந்த வகையில் கேட்கிறேன், உங்களுடைய நாவல்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தது? அதே மாதிரி சிறுகதைகளில் எது உங்களை மிகவும் பாதித்தது?

இமையம் : ``இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. பிடித்தது, பிடிக்காதது என்பதெல்லாம் இருக்க முடியாது. பிடித்தால்தானே எழுதுகிறேன். பிடிக்காத விசயத்தை யாராவது எழுதுவார்களா? உயர்ந்தது, தாழ்ந்தது என்பதெல்லாம் மனநிலையைப் பொருத்தது. உங்களுடைய கேள்வியை மூன்று நாவல்களிலும் வரக்கூடிய பெண்களில் யார் அதிகமான துன்பத்திற்கு ஆளானார் என்பதாக நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். இந்த அர்த்தத்தில் செடல்தான் முக்கியமான பாத்திரம், வணங்குதலுக்குரியவளாக இருக்கிற அதே நேரத்தில் வஞ்சிக்கப்படவும் செய்கிறாள். சாமியாக இருக்கிறவளே ஒரு வாய்ச்சோற்றுக்காகவும் அலைகிறாள். சோற்றுக்காக ஏங்காத நாள் அவளுக்கு வாய்க்கப் பெறவே இல்லை. கோவேறு கழுதைகள் நாவலில் வருகிற ஆரோக்கியமும் சரி, ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியம், ஆறுமுகமும் சரி தங்களுடைய வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் போராடினார்கள். ஆனால் செடல் அப்படியல்ல. தனக்காக மட்டுமல்ல ஊருக்காகவும், உலகத்திற்காகவும் போராடுகிறாள். செடலை பொட்டுக்கட்டி விடுவதே ஊரின் நன்மையைக் கருதித்தான். ஆரோக்கியம், தனபாக்கியம் என்ற பாத்திரங்களைவிட அதிகமான நெருக்கடிகளையும், கூடுதலான சவால்களையும் எதிர் கொண்டவள் என்ற விதத்தில் செடல்தான் பிரதானம். செடல் பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண் மட்டுமல்ல; ஆட்டக்காரி மட்டுமல்ல, நல்ல மனுஷியாகவும், தெய்வம் என்ற நம்பிக்கைக்கு உரியவளாக கடைசிவரை இருக்கிறாள்.

சந்தர்ப்பமும் சூழலும் தீர்மானிப்பதாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. ஒரு பிடி, கைப்பிடி சோற்றுக்காக தன்வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நாள் இரவிலும் நிற்க வைத்தது எது? தனபாக்கியத்தை கிருஷ்ணாபுரத்தை விட்டு செக்குமேட்டுக்கு நகர்த்தியது யார்? பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது அவளுடைய வாழ்நாள் ஆசையா? எதன்பொருட்டு தனபாக்கியத்தை விட்டு ஆறுமுகம் ஓடினான்? அவளை அவன் மீண்டும் சந்திக்கும்போது, அவளை விட்டு அவன் ஓடும்போது அவள் செய்திருந்த குற்றத்தைவிட அவன் பார்வையில் ஆயிரம் மடங்கு கூடுதலான குற்றத்தைச் செய்திருக்கிறாள். ஆனால் எந்தவிதமான மனத்தடையுமின்றி, குற்றவுணர்வுமின்றி தன் தாயை ஏற்றுக்கொள்கிறான். எதன் மூலம் இந்த பக்குவ நிலை அவனுக்கு வந்தது? ஏன் வந்தது? இதுதான் வாழ்க்கை. மனிதர்கள் வாழ்க்கையை உருவாக்கவில்லை. வாழ்க்கைதான் மனிதர்களை உருவாக்குகிறது. ஒரு விதத்தில் நாம் எல்லாருமே கருவிகள்தான்.''

தீராநதி :  நீங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால் உங்களுடைய பார்வையில் `செடல்'தான் மிகவும் முக்கியமான நாவல். அப்படித்தானே?

இமையம் : ``நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்.''

தீராநதி : சிறுகதைகளில் பிடித்தது எது?

இமையம் : ``உண்மையில் என்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் மிகவும் ரசித்துத்தான் எழுதுகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக எனக்கு முக்கியமானதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். டைம்ஸ் ஆப் இந்தியா_சிறப்பு மலரில் வெளிவந்த உயிர்நாடி என்ற சிறுகதைதான். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இன்று இந்தியாவில் ரியல் எஸ்டேட் என்கிற பெயரில், கம்பெனி தொடங்குகிறேன் என்கிற பெயரில் நடக்கிற கொள்ளையை அனுபவபூர்வமாக விவரிக்கிறது இந்தக் கதை. ரியல் எஸ்டேட்களாக, மாறிய நிலங்களும் பெரிய பெரிய கம்பெனிகளின் கம்பி வேலிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் நிலங்களும் எதன்பொருட்டு கைமாறியது? அந்த நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், அந்த நிலத்தையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள், என்ன ஆனார்கள்? இன்று தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கிற நிலங்கள் எல்லாம் தொழில் அதிபர்களுடைய சொத்துக்களாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம், ஐந்தாயிரம், ஏழாயிரம் ஏக்கர் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார்கள். கால்காணி, அரைகாணி நிலத்தை மட்டுமே தங்களுடைய சொத்தாக, வாழ்க்கையாக இருந்த நிலங்களைப் பறிகொடுத்த மனிதர்களைப் பற்றிய கதை அது. விடிந்து எழுந்ததும் முன்பு காட்டுக்குப் போனவர்கள் இன்று டீக்கடையின் முன் நிற்கிறார்கள். பெண்கள் தொலைக்காட்சிப் பெட்டியின்முன் உட்கார்ந்திருக்கிறார்கள். பழைய காலம் மாதிரி மீண்டும் அடிமை முறை வரும் என்று தோன்றுகிறது. இது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். அரசு உடனடியாக இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலம் வாங்க தனிமனிதர்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? வரி கட்டியிருக்கிறார்களா? சென்னையில் உள்ளவர்கள் ஏன் கடலூர் மாவட்டத்திலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் நிலம் வாங்குகிறார்கள். வேறு தாலுகாவைச் சேர்ந்தவர்கள், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலென்ன? ஐந்தாயிரம்கூட மதிப்பில்லாத நிலங்களும், கேட்பாரற்றுக் கிடந்த நிலங்களும் இன்று மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று விலைபோகிறது.இப்படியே போனால் ஒரு விவசாயி நிலம் வாங்க  முடியுமா? இந்தக் கேள்விகளைத்தான் உயிர்நாடி சிறுகதை விரிவாகப் பேசுகிறது. அதனால்தான் இந்தக் கதை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.''

தீராநதி : கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்தபோது தலித் இலக்கிய விரோதி என முத்திரை குத்தப்பட்டீர்கள். உங்களுடைய பேச்சும், கட்டுரைகளும் உங்கள் மீது சுமத்தப்பட்ட முத்திரை சரி என்பது போலத்தான் இருக்கிறது. உண்மையில் நீங்கள் தலித் இலக்கியத்திற்கு எதிரானவரா?

இமையம் : ``உங்கள் விருப்பம்போல சொல்லிக் கொள்ளுங்கள். என்னுடைய படைப்பிலிருந்து கேள்வி கேட்கிறீர்களா, என்னுடைய நடவடிக்கைகளிலிருந்து கேள்வி கேட்கிறீர்களா? எது முக்கியம்? எல்லாவற்றுக்கும் மேலாக, தலித்யவாதி, பெண்ணியவாதி, மார்க்சியவாதி, இருத்தலியல் வாதி இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவைகளுக்கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? அறிதலுக்கும் அப்பாற்பட்டதாக, எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக அறிபவனுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது வாழ்க்கையின் எதார்த்தம். அதனால் நான் எந்த தத்துவப் பின்னணியிலிருந்தும் வாழ்க்கையை பார்க்கவோ அணுகவோ இல்லை. அதேமாதிரி எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டும் நாவலோ சிறுகதையோ எழுதவில்லை. நான் மெத்தப் படித்தவனல்ல. அதிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தத்துவங்களை, இசங்களை அதிகம் படித்தவனல்ல. எளிய மனிதன். என்னளவில் என்னுடைய வாழ்க்கையையும் என்னைச் சுற்றியுள்ளவர்களுடைய வாழ்க்கையையும் என்னுடைய சொந்தக் கண்களால் பார்க்கிறேன். அவ்வாறு பார்ப்பதில் எதை எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறதோ அவற்றை மட்டும், நானறிந்த மொழியில், என்னைச் சுற்றியுள்ளவர்களுடைய மொழியில் எழுதுகிறேன். எந்தப் பொய்யுமில்லாமல், கலப்புமில்லாமல், வாழ்க்கையை எழுதுகிறேன். அந்த வாழ்க்கையில் எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கிற அதிகாரம் அந்த வாழ்க்கைக்குத்தான் இருக்கிறது, எனக்கில்லை. அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தலித் இலக்கியத்திற்கு மட்டுமல்ல;  எந்த ஒரு புதிய போக்குக்கும் நான் எதிரானவன் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. நான் எந்த இசத்தின் வாதி என்பதைவிட இலக்கியவாதியா என்பதுதான் முக்கியம். என் எழுத்துக்கள் சொல்லும் நான் யார் என்பதை. எனக்கு என்னுடைய எழுத்துத்தான் ஆதாரம். உங்களுடைய கேள்விக்கு என்னுடைய எழுத்துத்தான் பதிலும், அதற்கான ஆதாரமும். நானல்ல. நான் நன்றாக எழுதவில்லை என்று சொல்லுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் ஏன் இந்தச் சட்டகத்திற்குள் எழுதவில்லை என்று கேட்பதை நான் அனுமதிக்க முடியாது. அப்படி கேட்பதற்கான அதிகாரமோ உரிமையோ உங்களுக்கு மட்டுமில்லை, உலகில் யாருக்குமே இல்லை. நீங்கள் போற்றுகிற பெரிய படைப்பாளிகள் யார் யார் எந்தெந்த சட்டகத்திற்குள்ளிருந்து எழுதினார்கள் என்று சொல்ல முடியுமா? நானறிந்தவரை ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி, அதை இலக்கியப்படைப்பாகவும் மாற்றியதோடு, அதில் வெற்றியும் பெற்றவர்கள் என்று ழின்பால் சார்த்தருடைய `மீள முடியுமா?' நாடகத்தையும், ழிக் பிரட்லென்ஸினுடைய `நிரபராதிகளின் காலம்' நாடகத்தையும்தான் சொல்வேன். தத்துவங்களும், கோட்பாடுகளும், இசங்களும் எந்த இடத்தில் முடிவடைகிறதோ, அந்த இடத்திலிருந்துதான் வாழ்க்கை துவங்குகிறது என்பது என் எண்ணம். அறிந்ததையும், அறியாததையும், அறியத்துடிக்கும் தாகம்தான் இலக்கிய சிருஷ்டி.''

தீராநதி :  தலித் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?

இமையம் : ``தமிழில் தலித் இலக்கியம் தேங்கிவிட்டதா என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் இப்படிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தற்போது ஊடகக்காரர்கள் ஏன் இப்படியொரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? தலித் இலக்கியம் தேக்க நிலையை அடைய வேண்டும் என்பது ஊடகக்காரர்களின் உள்மனதின் விருப்பமா? முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழில் `தலித்' என்ற சொல்லின் பொருள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற சூழலில் இக்கேள்வி உள்நோக்கம் கொண்டது எனலாம். ஆர்ப்பாட்டங்களும், ஆரவாரங்களும்தான் காரியத்தைச் செய்யும் என்பதல்ல; மௌனம்கூட வீரியமிக்க ஆற்றல்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். செயல்களைவிட செயலின்மை முக்கியத்துவம் வாய்ந்தது. சூழலில் பல்வேறு விதமான போக்குகள் வரலாம், போகலாம். அதற்காக ஒரு நிலைப்பாட்டினுடைய செயலூக்கம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை. ஒரு மிகச்சிறந்த படைப்பு உருவாகுமானால் அது குறித்த உரையாடலின் மூலம் பெரிய விவாதத்தை, தாக்கத்தைச் சூழலில் உருவாக்க முடியும், உருவாகும் என்றநிலையில் இது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை. தலித் இலக்கியம் குறித்த பேச்சு துவங்கி கால் நூற்றாண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. அதற்குள் ஒரு முடிவுக்கு வருவது ஏற்கத்தக்கதல்ல. பிற தத்துவங்கள் மக்களை நேரடியாக பாதிப்பதாக; அடையாளப்படுத்துவதாக இருந்ததில்லை. `தலித்'தியம் என்பது மட்டும் வெகுசன மக்களை அடையாளப்படுத்துவதாக மட்டுமல்ல அடையாளமாகவும் இருக்கிறது. குறிப்பாக, இருத்தலியல் போன்றதல்ல தலித்தியம்.''

தீராநதி: க்ரியா தொடர்ந்து உங்களுடைய நூல்களை வெளியிட்டு வருகிறது. இது எப்படி நிகழ்கிறது?

இமையம் : ``க்ரியா என்னுடைய நூல்களை மட்டுமே வெளியிடுவதாகச் சொல்ல முடியாது. `இதுவரை' சி.மணியின் (கவிதை-1996) புகழினுடைய `முக்தி' (2002-சிறுகதைத் தொகுப்பு) `ஆசை'யினுடைய `சித்து' (கவிதை 2006) கீழை நாட்டுக் கதைகள் (2006) ந. முத்துசாமியின் `தெற்கத்தி கொம்பு மாடுகள்' (சிறுகதைத் தொகுப்பு-2009) என்று க்ரியா பலருடைய எழுத்தையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. க்ரியா என்னுடைய ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளது உண்மைதான். இமையம் என்ற எழுத்தாளனுக்காக இந்த நூல்களை க்ரியா வெளியிடவில்லை. என்னுடைய எழுத்தின் வலிமைக்காக, தரத்திற்காக, அதனுடைய இன்றைய தேவைக்காகவும்; பொருத்தப்பாட்டிற்காகவும்தான் வெளியிடப்படுகிறது. க்ரியா ராமகிருஷ்ணன் நட்பைவிட மொழிக்கு, எழுத்துக்கு, இலக்கியத்துக்கு, கலைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். சமரசம் என்பது அவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரிடம் ஆளுக்கு மதிப்பில்லை. எழுத்துக்கு மட்டும்தான் க்ரியா பதிப்பகத்தில் மதிப்பு. தரம் மட்டும்தான் முக்கியம். ஆளல்ல, க்ரியா முப்பது ஆண்டு காலமாக இதை நிரூபித்திருக்கிறது. இதற்குக் காரணம் ராமகிருஷ்ணனுக்கு இலக்கியம் குறித்து; மொழி குறித்து, படைப்பு என்பது என்ன, படைப்பு மொழி என்பது என்ன என்பது குறித்த தெளிவும் பார்வையும் இருக்கிறது. இந்தப் பார்வையும், தெளிவும்தான் எந்த நூலை வெளியிட வேண்டும்; எந்த நூலை வெளியிடக்கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. தமிழில் வேறு எந்த பதிப்பாளரிடமும் இல்லாத குணம் இது. நானறிந்தவரை ஆளுக்காக, பெயருக்காக க்ரியா இதுவரை எந்த நூலையும் வெளியிடவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். என்னுடைய ஐந்து நூல்களை தொடர்ந்து வெளியிட்டதற்கு நட்பு காரணமல்ல. என்னுடைய எழுத்து ராமகிருஷ்ணனுக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தான் வெளியிடுகிறார். அதோடு அவர் கேட்கிற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு (என்னுடைய எழுத்துலகம் அவருக்குப் புதியது, அவர் அறியாதது என்பதால்) விளக்கமளிக்கவும், தெளிவுபடுத்தவும் நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன். அவருக்கு தெளிவுபடுத்தும்போது நானும் தெளிவடைகிறேன். இந்தத் தெளிவு ஒரு எழுத்தாளனாக எனக்கு முக்கியமாகப்படுகிறது. என்னுடைய எழுத்து ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல; படிக்கிற எல்லாருக்குமே புரிய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எழுதியதுதான் உன்னதமானது. அதில் கேள்வி கேட்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது என்று நான் அடம் பிடிப்பதில்லை. கையெழுத்துப் பிரதியைக் கொடுத்த ஒரு மாதத்திலேயே புத்தகம் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுவதுமில்லை; அவசரப்படுவதுமில்லை. இப்படிப் பல காரணங்களால்தான் க்ரியா என்னுடைய நூல்களை வெளியிடுகிறது என்று நினைக்கிறேன். சுந்தர ராமசாமியினுடைய எழுத்துக்களை க்ரியா தொடர்ந்து வெளியிட்டபோது ஏன் இந்தக் கேள்வியை யாரும் கேட்கவில்லை?''

தீராநதி : தமிழ்ப் படைப்பாளிகள் பொதுவாக தங்களுடைய படைப்புகளில் எடிட் செய்வதை விரும்புவதில்லை. அவ்வாறு செய்யக்கூடாதென்றும் நினைக்கிறார்கள். எடிட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் பெருமைக்கும் ஆளாகிவரும் க்ரியா ராமகிருஷ்ணனிடமிருந்து உங்களுடைய ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளது. எடிட்டிங் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இமையம்: ``எடிட்டிங் என்றால் என்ன?, எடிட்டர் என்பவர் யார்? அவருடைய வேலை என்ன என்பது தெரியாததால் வரக்கூடிய குழப்பம் இது. எனக்கு மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா எழுத்தாளர்களுக்குமே எடிட்டர் அவசியம். ஒரு படைப்பின் முதல் வாசகர் எடிட்டர்தான். ஒரு மோசமான பிரதியை எவ்வளவு திறமைசாலியான எடிட்டராலும் நல்ல பிரதியாக மாற்றிவிட முடியாது. வெட்டி எடுப்பது மட்டும்தான் எடிட்டரோட வேலையா? எழுத்தாளனோடு வாசக அனுபவம் சார்ந்த பரிமாற்றத்தை செய்கிறார் எடிட்டர் என்பவர். எழுதும்போது நாம் மிக வேகமாக எழுதுவோம். திரும்பிப் படித்துப் பார்க்கும்போது எல்லாம் சரியாக இருப்பதுபோலவே இருக்கும். பிறர் சுட்டிக்காட்டும்போதுதான் நாம்செய்திருக்கிற தவறு நமக்குப் புரியும். இந்த சுட்டிக்காட்டுகிற வேலையைத்தான் எடிட்டர் என்பவர் செய்கிறார். இந்த வேலையைத்தான் மிகவும் சரியாகச் செய்கிறார் க்ரியா ராமகிருஷ்ணன். எடிட்டிங் என்பதை அனுபவத்தில்தான் உணர முடியும். சொல்வது சுலபமல்ல.

க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பலபேர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் எழுத்தாளரின் பெயருக்காகப் புத்தகம் போடுபவர் அல்ல. அதேமாதிரி புது எழுத்தாளராக இருந்தாலும் சரி, பழைய எழுத்தாளராக இருந்தாலும் சரி பிரதியைப் படித்துப் பார்த்துத்தான் போடலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறார். புத்தகமாகப் போடலாம் என்று முடிவெடுத்த பிறகு பிரதியிலுள்ள நிறை குறைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.  எடிட்டருக்கும், எழுத்தாளனுக்குமான பிரதி குறித்த உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது. இந்த உரையாடல்களிலிருந்து ஒரு எழுத்தாளன் பிரதி குறித்த தெளிவை மட்டுமல்ல; படைப்பு- மொழி- எழுத்தாளனின்  பங்கு போன்ற பல்வேறு விசயங்களில் தெளிவைப் பெறுகிறான். இது மிகவும் முக்கியம். எழுதும்போதோ, எழுதுவதற்கு முன்போ எழுதுவது குறித்த எந்தப் பயிற்சியையும் நாம் மேற்கொள்வதில்லை. பிரதி உருவான பிறகுதான் இந்த வேலையைச் செய்ய முடியும். பிரதியைச் சரிபாருங்கள். திரும்பத் திரும்ப சரிபாருங்கள் என்று சொல்வதும், பிரதியில் பிழைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், கவனப்படுத்துவதும் எந்த விதத்தில் குற்றமாகும்? கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஆள் நிச்சயமாக எழுத்தாளனாகவே இருக்க முடியாது. எல்லாம் தெரிந்தவர் என்று யாரையாவது காட்ட முடியுமா? நான் எழுதியதுதான் சரி. அது மாறாதது; மாற்றம் செய்ய முடியாதது; மாற்றத்திற்கு உட்படுத்த முடியாதது என்று ஒருவர் சொன்னால் அவரை நம்மால் என்ன செய்ய முடியும்? தமிழ்நாட்டில் பெரும்பாலான எழுத்தாளர்கள் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

க்ரியா என்னுடைய ஐந்து நூல்களை வெளியிட்டிருக்கிறது. 1991- முதல் க்ரியா ராமகிருஷ்ணனுடன் என் பிரதிகளை முன்வைத்து நீண்ட உரையாடலையும், விவாதத்தையும் நடத்தியிருக்கிறேன். இந்த உரையாடலும், விவாதமும் எழுதுவதற்கு மட்டுமல்ல; ஒரு நூலைப் படிப்பதற்கும் கூட உதவிகரமாக இருக்கிறது. ஒரு பிரதியில் ஊளைச்சதையாக இருக்கிற பகுதியை நீக்க வேண்டும் அல்லது சரி செய்யவேண்டும் என்பார். ஒரு பிரதியில் சில பகுதிகளை நீக்குவதன் மூலம் பிரதிக்குப் புதுமெருகு கூடும் என்பது என் அனுபவம். ஒரு பிரதியில் வாசகனுக்குத் தெளிவை ஏற்படுத்திக் கூடுதலாக எழுதுவதும், தேவையற்ற இடத்தில் கூடுதலாக இருக்கிற தகவல்களை நீக்க வேண்டும் என்று சொல்வதும் எப்படி குற்றமாகும்? இச் செயல் ஒரு பிரதிக்கு மதிப்பைத்தான் தேடித்தரும், இழிவை அல்ல. இது நம் எழுத்தாளர்களுக்குப் புரிந்தால் நல்லது. ஒரு வார்த்தையை, வாக்கியத்தை எடுக்கலாம் என்று நினைத்தால் கூட இறுதி முடிவை ராமகிருஷ்ணன் என்னிடம்தான் விடுவார். அவர் சொல்கிற காரணம் சரியாக இருந்தால்தான் நான் ஏற்றுக் கொள்வேன். இல்லையென்றால்  `அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லிவிடுவேன். என்னுடைய ஐந்து நூல்களிலும் கட்டாயப்படுத்தி ஒரு வார்த்தையை, வாக்கியத்தை நீக்கினார் என்றோ அல்லது ஒரு வார்த்தையை, வாக்கியத்தை கட்டாயப்படுத்தி எழுத வைத்துச் சேர்த்தார் என்றோ சொல்ல முடியாது. ஒரு படைப்பில் எது இருக்க வேண்டும், எது இருக்க வேண்டியதில்லை என்று இறுதி முடிவை எடுக்கிற அதிகாரம் எழுத்தாளனுக்குத்தான் இருக்கிறது. எடிட்டருக்கு இல்லை. இந்த வார்த்தையை அடிக்கடி  ராமகிருஷ்ணன் என்னிடம்  சொல்லியது மட்டுமல்ல; சொல்வது மாதிரியே நடந்து கொண்டும் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கிற பதிப்பாளர்கள் க்ரியா ராமகிருஷ்ணன் செய்கிற வேலையைச் செய்தால் இந்தக் கேள்வியே எழாது. பிரதியைப் படித்துப் பார்த்து புத்தகம் போடுகிற பதிப்பாளர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ராமகிருஷ்ணன் மீது பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இருக்கிற கோபம் தங்களால் செய்ய முடியாததை பிறர் செய்யும்போது ஏற்படுகிற கோபம். கையலாகாத்தனத்தின் வெளிப்பாடு.

உங்களுடைய படைப்பை நண்பர்களிடம்  கொடுத்துப் படிக்கச் சொல்வதில்லையா? அவர்கள் சொல்கிற கருத்துக்களை கேட்பதில்லையா? இல்லை, அவர்கள் சொல்கிற திருத்தங்களைத்தான் செய்வதில்லையா? எடிட்டிங் என்பது எடிட்டர்தான் செய்கிறார் என்றில்லை. நம்முடைய மனதில் தோன்றுவதையெல்லாம் அப்படியே எழுதுகிறோமா? மனதிலேயேஎத்தனை முறை சரிபார்த்துக்கொண்டு எழுதுகிறோம். இந்த சரிபார்த்தல்தான் எடிட்டிங். மனதிலேயே பலமுறை  சரிபார்த்து எழுதிய பிறகும் அடித்து, திருத்தி எத்தனை முறை திரும்பத் திரும்ப எழுதுகிறோம்? இதற்குப் பெயர் என்ன? இவ்வளவு உழைப்பிற்குப் பிறகும் பிரதியில் வாக்கிய அமைப்பில், கருத்தில், தகவலில், முன்பின் எழுதிய முறையமைப்பில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன. இவற்றை கவனப்படுத்துவதுதான் எடிட்டரின் வேலை. அதைத்தான் ராமகிருஷ்ணன் செய்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக க்ரியா பதிப்புத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. தற்காலத் தமிழ் அகராதியையும் வெளியிட்டதில் கிடைத்த அனுபவமும் முக்கியமானது. அதனால் மொழி, மொழியின் பயன்பாடு - இயங்குதளம் குறித்த கூடுதலான அறிவைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு பிரதியிலும் கூடுதல் கவனம் செலுத்திப் புத்தகம் வெளியிடுகிறார்கள். ஒரு பிரதியில் அவர்கள் காட்டுகிற அக்கறையும், புத்தக உருவாக்கத்தில் அவர்கள் காட்டுகிற சிரத்தையும்தான் என்னை `கோவேறு கழுதைகள்' நாவல் பிரதியை அவர்களிடம் எடுத்துக்கொண்டு போக வைத்தது.''

தீராநதி  : உங்களுக்குப் பிடித்த - பாதித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள்?

இமையம் : ``பிடித்த எழுத்தாளர்கள், பிடிக்காத எழுத்தாளர்கள், பாதித்தவர்கள், பாதிக்காத எழுத்தாளர்கள் என்று ரகம் பிரிப்பது சிரமம். ஒரு எழுத்தாளருடைய ஒரு படைப்பு பிடித்திருக்கும், மற்றொன்று பிடிக்காமல் இருக்கும். அதற்காக அவர் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்று பொருளல்ல. அதேமாதிரிதான் பாதிப்பு சம்பந்தப்பட்டாலும். ஆரம்பக்காலத்தில் தமிழ் எழுத்தாளர்களைவிட, அதிகமாக ரஷ்ய எழுத்தாளர்களைப் படித்தேன். அன்றைய சூழல் அப்படி. மற்றொரு காரணம் மலிவு விலையில் கிடைத்தது. ஒரு காலத்தில் ழிசிஙிபி படிப்பு ஆர்வத்தைத் தூண்டும்விதமாக; மிக முக்கியமான சக்தியாக இருந்தது. ஆனால் இன்று தீவிர வாசகன் ஒருவன் ழிசிஙிபில் நுழைந்தால் மனம் வெதும்பிப் போவான். அந்த அளவுக்குக் குப்பைகளாகக் கொட்டி வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் அறிவுச் சூழல் உருவாவதற்கும், வளர்வதற்கும் காரணமாக இருந்த அவர்களா இவர்கள்? இடதுசாரிகளுக்கும் இன்று பணம்தான்; வியாபாரம்தான் முக்கியமாகிவிட்டது.

ஆரம்பக்காலத்தில் ஜெயகாந்தன் பிடித்திருந்தது. அதன்பிறகு தி. ஜானகிராமன். அதன்பிறகு சுந்தர ராமசாமி. கடைசியில் சண்முகசுந்தரம். லா.ச. ராமாமிர்தம் எழுத்தில் ஒரு கட்டத்தில் மயக்கம் இருந்தது. அந்த மயக்கம் அவருடைய மொழியால் ஏற்பட்டது. பிறகு இல்லை. ஒவ்வொருவிதமான எழுத்தின்மீது ஈடுபாடு இருந்தது. புதிதாக எழுதுகிற, ஒரே ஒரு நூல் மட்டுமே எழுதிய எழுத்தாளரின் எழுத்தில்கூட எனக்கு ஈடுபாடும், அக்கறையும் ஏற்பட்டிருக்கிறது. ஆக, நான் படித்த எல்லா எழுத்தாளர்களுமே ஏதோ ஒரு விதத்தில் தொடக்கத்திலிருந்தே என்னுடைய எழுத்தும், நடையும், மொழியும் தனித்த அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதற்கு என்னுடைய படைப்புகளே சாட்சியாக இருக்கின்றன.''

தீராநதி : நீங்கள் தி.மு.க.வில் தீவிரத் தொண்டராக இருக்கிறீர்கள். உங்கள் எழுத்து வாழ்க்கையில் கட்சி சார்ந்த ஈடுபாடு பயனுள்ளதாக இருக்கிறதா? இடையூறாக இருக்கிறதா?

இமையம் : ``நான் தெளிவான ஆள். இலக்கியத்தில் கட்சியையும், கட்சி செயல்பாட்டில் இலக்கியத்தையும் கலப்பதில்லை. குழப்பிக் கொள்வதுமில்லை. எழுத்தில் என்னுடைய சொந்த வெறுப்பு, விருப்பங்களுக்கு இடமில்லை. கோவேறு கழுதைகள் நாவல் 1994இல் வந்தது. அதிலிருந்து இதுவரை என்னுடைய கட்சி சார்ந்த ஈடுபாட்டின் வெளிப்பாட்டை எந்தப் படைப்பிலும் காணமுடியாது. அதற்கான அவசியமும் கிடையாது. அதே மாதிரிதான் நான் தி.மு.க.வைச் சார்ந்த எழுத்தாளன் என்று நான் சொன்னதுமில்லை; அதற்கான அங்கீகாரத்தையும் நான் கோரியதில்லை. அது வேண்டாம் என்றே நான் கருதுகிறேன். லட்சக்கணக்கான உறுப்பினர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான். நான் கட்சியின் தலைமையில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான அவசியமும் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதுகூட கட்சியின் தலைமைக்குத் தெரியாது. தெரியவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் நான் உறுப்பினரானேன். அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். உறுப்பினராவதற்கான படிவம் அப்போது மங்களூர் ஒன்றிய கழகச் செயலாளராக இருந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராசு என்பவரிடம் இருந்தது. எங்களுடைய ஊரான கழுதூருக்கும் திட்டக்குடிக்கும் பதினெட்டு கிலோ மீட்டர் தூரம். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு நான் மட்டும் தனியாகச் சென்றேன். ராசு வீட்டில் இல்லை. செங்கல் சூளையில் இருந்தார். திட்டக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி செங்கல் சூளை இருந்தது. அங்கு சென்று ராசுவை அழைத்து வந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று வந்து உறுப்பினராகச் சேர்ந்தேன் - சின்னப் பையன் தனியாக கட்சியில் சேருவதற்காக விண்ணப்பம் கேட்டு வந்திருக்கிறானே என்று ஆச்சரியப்பட்ட ராசு, சைக்கிள் வாடகை ஒரு ரூபாயும், இட்லி சாப்பிட ஐம்பது காசும் தந்தார். அன்றிலிருந்து தி.மு.க.வின் உறுப்பினராகவே இருக்கிறேன்.''

தீராநதி : முன்பு மார்க்சியம் பேசி, பின்பு தலித் இலக்கியம் பேசி, தற்போது நேரிடையாகத் தலித் அரசியல் நிலைப்பாட்டில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிற சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிக்குமார் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? திரு. ரவிக்குமார் இலக்கியவாதியாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இமையம் : ``திரு. ரவிக்குமார் இலக்கியவாதி என்பதைவிட அதிகமாக அரசியல்வாதியாகத்தான் எல்லா காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய திருமணம் சமய சடங்குகளற்றதாக, மார்க்சியவாதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மூன்று நாள் நடந்தது. அந்த மூன்று நாளும் அரசியல் விவாதங்கள்தான்நடந்தது. கடைசியில்தான் திருமணம். றிஹிசிலிலில் அவர் செயலாற்றியபோதும் சரி, மார்க்சிய சார்புடையவராக இருந்தபோதும் சரி, தலித்திய சிந்தனையாளராக, அறிவு ஜீவியாக இருந்த காலத்திலும் சரி அவர் எழுத்தைவிட செயல்பாட்டை முன்னெடுத்தவர். அவருடைய தொடர்ந்த செயல்பாடுகளுக்கு எழுத்து அவருக்கு பக்கபலமாக இருந்தது என்பதுதான் உண்மை. `சிறந்த செயல் எதுவோ அதுவே சிறந்த சொல்' என்ற வாசகத்தை ரவிக்குமார்தான் எழுதினார். இந்த ஒற்றைச் சொல்லே ரவிக்குமார் யார் என்பதைக் காட்டும். அவருடைய மொத்த எழுத்துமே அரசியலை மையமாகவும், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தியதாகவும் இருக்கும். இதை அவருடைய நூல்களான `கண்காணிப்பின் அரசியல்' (1995) உரையாடல் தொடர்கிறது (1995), கொதிப்பு உயர்ந்து வரும் (2001) `க்ஷிமீஸீஷீனீஷீ–ƒ ஜிஷீ–நீலீ' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்துள்ள அவருடைய நூலையும் படித்தாலே தெரியும். தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் ரவிக்குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தப் பங்களிப்பு இன்றுவரை தொடர்ந்து இருக்கிறது. இலக்கியவாதி என்பதைவிட இயக்கவாதி என்று சொல்வதுதான் ரவிக்குமாரைப் பொறுத்தவரை சரியாக இருக்கும். இலக்கியத் துறையில் இருந்தாலும் சரி, அரசியல் துறையில் இருந்தாலும் சரி, தான் யார் என்பது அவருக்குத் தெரியும். அதில் அவருக்கு எந்தக் குழப்பமுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.''

தீராநதி : உங்கள் முதல் நாவலுக்கு சுந்தர ராமசாமிதான் முதல் விமர்சனம் எழுதினார். `கோவேறு கழுதைகள்' நாவலுக்கு இணையான நாவல் தமிழில் இல்லை என்று எழுதினார். அவருடைய விமர்சனம் காலச்சுவடில் வெளிவந்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிற்று. தொடர்ந்து நீங்கள் காலச்சுவடில் எழுதி வந்தீர்கள். இப்போது உங்களுக்கும், காலச்சுவடுக்கும் என்ன பிரச்சனை? இனிமேலும் காலச்சுவடில் எழுதுவீர்களா?

இமையம் : ``நிச்சயமாக எழுதுவேன். காலச்சுவடும் என் எழுத்தை வெளியிடும் என்றுதான் நம்புகிறேன். தமிழில் வரக்கூடிய இலக்கியப் பத்திரிகைகளில் காலச்சுவடும் ஒன்று. முக்கியமான பத்திரிகையும்கூட. எனக்கும் காலச்சுவடுக்கும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் கூறுவது தவறு. நூலக  ஆணைக்குழு குறித்த சில தவறான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டதோடு, தவறான தகவல்களை உண்மையென நிரூபிக்கவும் பரப்பவும் அப்பத்திரிகை முயன்றது. காலச்சுவடு தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தருகிறது என்று நான் கூறினேன். அவ்வளவுதான். இதைத்தவிர எனக்கும் காலச்சுவடுக்கும் முன்பும் சரி, நிகழ்விற்கு பின்பும்சரி தனிப்பட்ட வெறுப்போ கசப்போ கிடையாது. ஒரு விசயம் குறித்து விவாதிப்பது சகஜமானது. விவாதத்தின் போக்கு சரியாக இருக்கலாம்; தவறாக இருக்கலாம். ஆனால் விவாதம் முக்கியம். அதற்குமேல் அந்த விசயத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலச்சுவடின் கருத்திற்கு வேறு யாராவது எதிர்வினையாற்றி இருந்தால் விவாதம் வேறுவிதமாகப் போயிருக்குமோ என்னமோ. என்னைப் பொறுத்தவரை அந்த விசயம் அப்போதே முடிந்துவிட்டது.''

தீராநதி :  தற்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? முந்தைய நாவல்களிலிருந்து வேறுபட்ட உலகமா? இந்த நாவலிலும் பெண்தான் மையப் பாத்திரமா?

இமையம் : ``நோய்ப்புற்று என்ற நாவல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முந்தைய நாவல்களிலிருந்து வேறுபட்டதுதான். இந்த நாவலில் பெண் மையப் பாத்திரமல்ல, இந்த நாவலில் பெண்கள் மிகவும் குறைவாகத்தான் வருகிறார்கள். ஆனால் நாவல் முழுமை பெறுமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது? என்ன காரணத்தினாலோ அந்த நாவல் என்னை ரொம்பவும் வதைக்கிறது. மூன்று நீலீணீஜீ‡மீக்ஷீலேயே நிற்கிறது. மேலே நகர மறுக்கிறது. மனநிலை கூடிவரவில்லை. இதே மனநிலை நீடித்தால் அந்த நாவல் எழுதப்படாமலேயே, வாசக கவனத்திற்கு வராமலேயே போகக்கூடும். ஒரு மனநிலையில் அந்த நாவல் வராவிட்டால் என்ன நஷ்டமாகிவிடும் என்ற கேள்வியும் எழுகிறது. இல்லை அந் நாவல் வருவதால் என்ன இங்கு நிகழ்ந்துவிடப் போகிறது? நான் இத்தனை நாவல் எழுதியிருக்கிறேன் என்று என்னுடைய சுய குறிப்பில் எழுதிக்கொள்வதைத்தவிர, எதுவுமே நம்கையில் இல்லை. நேற்றுவரை திட்டமிடப்பட்டிருந்த ஒரு படைப்பு இன்றோ, நாளையோ எழுதப்படாமலேயே போகலாம். இன்றுவரை மனதில் தோன்றாத விசயம் நாளை ஒரு படைப்பாக வரலாம். எதுவும் சாத்தியமே.''

தீராநதி :  எதார்த்த முறையில் அதாவது நேரடியாக் கதை சொல்லல் முறை உங்களுடையது. அதில் உச்சத்தைத் தொட்டது உங்களுடைய எழுத்து. இந்த வகை எழுத்தைப் பலர் மதிப்பதில்லையே?

இமையம் : ``கதை சொல்லல் அதாவது எழுதுதல் என்ற செயல்பாடே பிறருக்காகத்தான். பிறருக்காக என்று வரும்போது நிச்சயமாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், புரியும்படியாகச் சொல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்பும்படியாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் கதை சொல்லலின் அடிப்படை. நாம் யாரைப்பற்றி, எதைப்பற்றி, எந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறோமோ, அந்த மனிதர்களுடைய மொழியில்தான் எழுத வேண்டும். படிப்பறிவின் மூலம் கிடைக்கப்பெற்ற மொழியிலோ, ஊடகம் வளர்த்த பொது மொழியிலோ எழுதக்கூடாது. சராசரி மனிதனுடைய கதையை எழுதுவேன். அவனுக்கு அந்நியமான மொழியில், யாருக்கும் புரியாத மொழியில் எழுதுவேன் என்று சொல்வதும், எழுதுவதும் நாடகம். மொழியின் செயல்பாடு, இயங்குதளம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் செய்கிற காரியம். மொழி என்பது ஒரு வாகனம் மட்டுமே, அதுவே படைப்பல்ல. மொழிதான் படைப்பு என்று பலர் இன்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையைப் பொதுப்பண்பாகவும் மாற்றிவிட்டார்கள். இது விநோதமானது. வாழ்க்கைதான் மொழியை உருவாக்குகிறது. மொழி ஒருபோதும் வாழ்க்கையை உருவாக்காது. தெய்வ மொழியில் எழுதியிருக்கிறேன், அதை வாசகன் குறைந்தது நான்கு ஐந்து முறை படித்தால்தான் புரியும் என்று சொல்கிறவர்களுடைய எழுத்தில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. எதார்த்த வகை எழுத்துத்தான் என்றும் நிலைத்திருக்கும் என்பது என் எண்ணம்.''

தீராநதி :  சமீபத்திய தமிழ்ப்படைப்புலகம் குறித்த உங்கள் எண்ணம் என்ன?

இமையம் : ``கசப்பாக இருக்கிறது. 90களில் தமிழில் வந்த படைப்புகளின் தரத்திற்கு இணையாகக்கூட இன்று வரவில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கதை அம்சத்திலும் சரி, சொல் முறையிலும் சரி. காத்திரமான படைப்புகள் என்று பட்டியலிடுவது சிரமம். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் தனது நாவலில் `இருட்டு தாரை தாரையாக வழிந்து வீட்டைச் சுற்றிலும் நிரப்பிக் கொண்டிருந்தது' என்றும்; `அந்த விளக்கை எப்படியாவது கவ்வித் தின்றுவிட வேண்டும் என்பதுபோல இருட்டு வீட்டைச் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தது' என்றும்; `மாட்டு வண்டி சென்று இறங்கியது' என்றும்; `தெருக்களில் வெயில் மெதுவாக ஊர்ந்து வரத் துவங்கியிருந்தது' என்றும் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தாளரின் நாவலுக்குள் இதுபோன்று குறைந்தது ஆயிரம் வாக்கியங்களையாவது என்னால் காட்ட முடியும். இந்த வாக்கிய அமைப்புகள் எதைக் காட்டுகின்றன? இது இன்று எழுதக்கூடிய பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். என்ன எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கவனம் இல்லாமல் கூடவா எழுதுவார்கள்? வாக்கியமைப்பு சரியில்லை என சுட்டிக் காட்டினால் உங்களுக்கு நவீன எழுத்தின் செழுமையும் மகிமையும் புரியவில்லை. நான்கு ஐந்து முறை படியுங்கள் அப்போதுதான் புரியம் என்று சொல்கிறார்கள். நவீன இலக்கிய மனதின் வெளிப்பாடு எது, ஆற்றல் எது என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு படைப்பை எதன் பொருட்டு கொண்டாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல; எதன் பொருட்டு பதிப்பிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. யார் வேண்டுமானாலும், எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். `இது சரியா?' என்று மட்டும் கேட்கக்கூடாது. மீறிக் கேட்பவர்கள் நவீன இலக்கியத்தை, நவீன மொழியின் வெளிப்பாட்டை, நவீன கலையாக்கம் குறித்த எந்த அறிவுமற்றவர் என்று குற்றம் சாட்டுகிற சூழல்தான் நிலவுகிறது. 70களில், 80களில், ஏன் 90களில்கூட என்ன எழுதுகிறோம் என்ற தெளிவும், எந்த மொழியில் எழுதுகிறோம் என்ற அக்கறையும் இருந்தது. இன்று தெளிவும் இல்லை. அக்கறையும் இல்லை. விளம்பரமாக வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் இருக்கிறது. இந்த ஆசை இலக்கிய ஆக்கத்திற்கு எந்தவிதத்திலும் உதவாது. நவீன காலத்தில் சொற்கள் மதிப்பிழந்துவிட்டன. இலக்கியத்தின் உண்மையான மொழி சொற்கள் அல்ல; மௌனம். இலக்கியத்தின் மொழி மட்டுமல்ல, குரலும் மௌனம்தான். வாழ்க்கையின் குரலும் மௌனம்தான். இது நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசை எனக்கானது அல்ல. மொழிக்காக; இலக்கியத்திற்காக.''றீ

எழுத்துக்காரன் - இமையம்

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரெதிரில் சற்றுத் தொலைவில் பெரிய வேப்பமரம் நின்று கொண்டிருந்தது. அதனுடைய நிழலில் ஐந்தாறு பேர் தனித்தனி ஈச்சம்பாயை விரித்துப்போட்டுக் கிழக்குமுகமாக உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் முன்னும் மரத்தாலான எழுதுபலகை இருந்தது. வரிசையின் முதல் ஆளாக உட்கார்ந்திருந்தவன் அன்றையச் செய்தித்தாளில் லாட்டரிச் சீட்டு பகுதியில் மூழ்கியிருந்தான். அவனுக்கு வலது கைப் பக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தவன் வட்டாட்சியர் அலுவலகத்தையே பார்த்தவாறு இருந்தான். வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்த சிவராமன் பட்டைப் பட்டையாக நெற்றியில் விபூதியை அப்பியிருந்தான். அவனுடைய முகம் எதையோ பறிகொடுத்ததுபோல் வாடிப்போய்க் கிடந்தது. மற்ற எழுத்துக்காரர்களைப் போலவே அவனும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்திற்குப் போய்க்கொண்டிருந்த ஒன்றிரண்டு ஆட்களைப் பார்த்து ‘பெட்டிசன் எழுதணுமா?’ என்று வலியக் கேட்டவாறு இருந்தான்.
சிவராமன் வட்டாட்சியர் அலுவலகத்தைப் பார்த்தான். பதினோரு மணிக்கு மேலாகியும் அதிகக் கூட்டமில்லாமல் இருந்தது. சார்பதிவாளர் அலுவலகத்திலும் இன்று அதிகக் கூட்டம் இல்லை. அந்த அலுவலகத்திற்கு முன் நின்றுகொண்டிருந்த வேப்ப மரத்தின்கீழ் உட்கார்ந்து கொண்டிருந்த எழுத்துக்காரர்களின் முன் ஒரு ஆள்கூட இல்லை. காலையிலிருந்து ஒரு மனுகூட எழுத வாய்க்கவில்லையே என்று சிவராமனுக்கு ஆத்திரமாக இருந்தது. திங்கள்கிழமையே இப்படி இருந்தால் என்ன செய்வதென்று அலுத்துக்கொண்டான். ஒரு பீடியோ சிகரெட்டோ குடித்தால் தேவலை போலிருந்தது. அவனுக்கு இடது கைப்பக்கம் உட்கார்ந்து கொண்டிருந்த சின்னசாமியிடம் ‘சிகரெட் இருக்குமா?’ என்று கேட்டான். இல்லை என்று அவன் வாயைத் திறந்துகூடச் சொல்லாமல் வெறுமனே உதட்டை மட்டும் பிதுக்கிக் காட்டிவிட்டு முன்பு போலவே மனு எழுதித்தர கேட்டு யாராவது வருகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தான்.
‘காலையிலிருந்து டீக்கு, பீடிக்குக்கூட வருமானம் பொறக்கலியே’ என்று சொன்ன சிவராமனுக்கு சுரத்தில்லாமல் ‘வெரப்புக் காலத்திலெ அப்பிடித்தான் இருக்கும்’ என்று சொன்ன சின்னசாமி பாயின்மீது விழுந்திருந்த வேப்ப இலைகளை எடுத்து விட்டெறிந்தான்.
ஒரே நேரத்தில் ஐந்தாறு பேருமே ‘இங்க வாம்மா’ என்று கூப்பிட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த அந்தப் பெண் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் எழுத்துக்காரர்களைப் பார்த்ததுதான் தாமதம். அந்தப் பெண் தங்களுடைய பக்கம் நின்று பார்த்ததையே சாக்காகவும், பிடிமானமாகவும் வைத்துக்கொண்டு ‘என்னம்மா வேணும்?’ மனுகினு எழுதணுமா? இங்க வாம்மா. வந்து பாயிலே குந்து’ என்று ஐந்தாறு பேருமே கூப்பிட்டனர். யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்று யோசித்த அந்தப் பெண், தனக்கு நேராக உட்கார்ந்திருந்த சிவராமனை நோக்கி இரண்டு மூன்று அடிகளை எடுத்துவைத்து நடக்க ஆரம்பித்ததுமே மற்றவர்கள் மறித்துக் கூப்பிட்டுவிடுவார்களோ என்ற பயத்தில், ‘வாம்மா, வாம்மா’ என்று சிவராமன் அவசரமாகக் கூப்பிட்டான். அதோடு ரொம்பவும் வேண்டியவர்களுக்கு, பெரிய மனிதர்களுக்குச் செய்வது மாதிரி பாயை ஒருமுறை துண்டால் விசிறிவிட்டு ‘குந்தும்மா குந்து. என்னா வேணும் சொல்லு. எதுக்கு நிக்குற? வந்து குந்தும்மா’ என்று ரொம்பவும் உரிமையுடன் கூப்பிட்டான். ஒன்றும் புரியாமல் குழம்பிப் போன அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறே தயங்கித் தயங்கி மேலும் சில தப்படிகள் முன்னே வந்து நின்றாள். அந்தப் பெண் தயங்கி நிற்பதைப் பார்த்த சிவராமன் ‘வாம்மா. நான் கரடியா புலியா? பயப்படுறதுக்கு? மொதல்லெ பாயிலே வந்து குந்து’ என்று கட்டாயப்படுத்திக் கூப்பிட்டான்.
‘எம்மவனெ கவுருமெண்டு ஆஸ்டல்ல சேக்கறதுக்கு இந்தப் பாரத்திலெ இன்னா சாதி, இன்னா எனம்னு சொல்லி எயிதி ஒரு கையெழுத்து வாங்கியாரச் சொன்னாங்க’ என்று அந்தப் பெண் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ‘அவ்வளவுதான. அதுக்கு ஏன் தயங்குற. வந்து குந்து’ என்று சொல்லி லேசாக சிவராமன் சிரித்தான். அந்தப் பெண் அவனை நோக்கி ஒன்றிரண்டு அடிகள் முன்னே வந்தான்.
‘எடுத்த எடுப்புலெ நேரடியா விண்ணப்பத்திலெ கையெழுத்துப் போட்டுத் தர மாட்டாங்க. அதுக்கு மொதல்லே ஒரு மனு கொடுக்கணும். அந்த மனுவுலெ கையெழுத்துப் போட்டுத் தருவாங்க. அதெ எடுத்துக்கிட்டுப் போயி மணியாரு, ஆர்.ஐ.ன்னு இருக்கிறவங்கக்கிட்டெ கையெழுத்து வாங்கியாந்த பின்னாலெதான் தாசில்தார் கையெழுத்துப் போடுவாரு’ என்று சொன்ன சிவராமன், எங்கே அந்தப் பெண் நழுவிப் போய்விடப் போகிறாளோ என்ற கவலையில் அவனே மீண்டும் பேச ஆரம்பித்தான்.
அந்தப் பெண் சிறுபிள்ளை மாதிரி ‘அந்தக் கையெழுத்த நீ வாங்கித் தர்றியா?’ என்று கேட்டாள். அதற்கு லேசாகச் சிரித்துக்கொண்டே ‘வாங்கிக்கலாம் வாம்மா. மொதல்லெ நீ வந்து பாயிலெ குந்து. ஒரு நாளு ரெண்டு நாளு அலையணும். அவ்வளவுதான். இதுக்கு எதுக்குக் கவலப்படுற?’ என்று சொன்னவன் சாதிச்சான்று, வருமானச்சான்று, நிரந்தரக் குடியிருப்புச் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கமாகச் சொல்லிவிட்டுக் கடைசியில் ‘மனு எயிதித் தரட்டுமா?’ என்று கேட்டான்.
‘ரொம்பப் புண்ணியமா இருக்கும் சாமி. செத்தே எயிதித்தாங்க. எங்க ஊரு குள்ளக் கருப்பன்தான் ஒங்களெக் கொண்டாந்து இங்க வுட்டுருக்கான். நீங்க இல்லன்னா வய்யி வாயிக்கா தெரியாம அலஞ்சி திரிஞ்சிப் போயிருப்பன். ஒங்கெ புள்ளெ மக்கெ நல்லாயிருக்கே’ என்று சொன்ன அந்தப் பெண் வானத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டாள். பிறகு முன்னே வந்து சிவராமன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பாயை ஒட்டித் தரையிலேயே உட்கார்ந்து கொண்டாள்.
அவன் கேட்காமலேயே ‘எனக்கு நாலு புள்ளீவோங்க. தலெச்சன் பொட்டே. அடுத்தது ஆணு. கடேசியும் பொட்டக்குட்டி. மொதப் பயல நானும் என்னாலெ ஆனமுட்டும் அடிச்சி ஒதச்சிப் பாத்தங்க. பள்ளிக்கூடத்துப் பக்கமெ தலெ வச்சிப் படுக்க மாட்டன்னுட்டான். ஆனா ரெண்டாவது பயதான் கொஞ்சம் கருத்தா, வெகரமா இருக்கான். அவன் தாங்க என்னெக் காட்டு வேலெக்கி கூப்புடாதடி. நான் பள்ளிக்கூடத்துக்குத்தான் போவன்’னு போறாங்க. இப்படி இருக்கிற புள்ளய நாம்ப கெடுக்கலாமுங்களா. அதாங்க இந்தப பாரத்தெ தூக்கிக்கிட்டு வந்தன்.’
அந்தப் பெண்ணிடம், அவளுடைய ஊர், சாதி, வருமானம் போன்ற விபரங்களைக் கேட்டுக் கொண்டு ஒரு பேப்பரை எடுத்து எழுது பலகையின் மீது வைத்து சிவராமன் எழுத ஆரம்பித்தான். அப்போது அவனுடைய உதட்டில் லேசாகச் சிரிப்பு மலர்ந்தது. ஓரக்கண்ணால் பக்கத்துப் பாயில் உட்கார்ந்து கொண்டிருந்த சின்னசாமியைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். அதே நேரத்தில் சின்னசாமியின் முகத்திலிருந்த வெறுப்பைப் பார்த்தும் பார்க்காதவன் மாதிரி இருந்தான். விண்ணப்பத்தை எழுத ஆரம்பித்ததுமே அவனுடைய மனம் கணக்குப்போட ஆரம்பித்துவிட்டது. முதலில் டீ குடிக்க வேண்டும். ஒரு கட்டு பீடி வாங்க வேண்டும் என்ற எண்ணம் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது. அதோடு காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது ‘சாயங்காலம் நேரத்திலியே வாங்க. நீங்க வந்துதான் ஒலக்கி அரிசி வாங்கணும்’ என்று வள்ளி சொன்னது நினைவுக்கு வந்ததும், அவள்மீது கோபப்பட்டான். கோபத்தில் விண்ணப்பத்தை வேகமாக எழுத ஆரம்பித்தான்.
அந்தப் பெண் சிவராமனையே பார்த்தவாறு இருந்தாள். அவளால் ஒன்றையும் நம்ப முடியவில்லை. தானாகவே கூப்பிட்டுத் தன்னுடைய சொந்தக் காகிதத்தைப் போட்டுப் பொறுப்பாக எழுதிக் கொண்டிருக்கிறானே என்று அவனை மனதார வாழ்த்தினாள். விசயம் இப்படி எளிதில் முடியும் என்று தெரிந்திருந்தால் மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பத்தைக் கொண்டுவந்து பையன் கொடுத்த அன்றே வந்திருக்கலாம் என்று எண்ணினாள். மூன்று நாட்களாக முயன்றும் அவளால் வரமுடியவில்லை.
பஸ்ஸுக்குக் காசு, யாருக்காவது ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கொடுக்க வேண்டி இருக்குமோ என்று ஒரு இருபது ரூபாய்க்காக ஊரில் கேட்காதவர்களிடம் எல்லாம் கேட்டுப் பார்த்து விட்டாள். இரண்டு நாட்களாக அலைந்துவிட்டுக் கடைசியில் இன்று வீட்டிலிருந்த ஒரே ஒரு சின்ன குத்துவிளக்கை அடகு வைத்துவிட்டுத்தான் வந்தாள். அதற்காக அலைந்த அலைச்சலில் காலையில் கஞ்சி குடிக்கக்கூட அவளுக்கு நேரமில்லை. அவன் எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அவளுக்கு விளக்கை அடகுவைத்தது, நடந்துவந்த களைப்பு, காலையில் நீராகாரம் குடிக்காதது என்று எல்லாமும் மறந்துபோய்விட்டது. சந்தோசத்தில் அவளுடைய முகம் மலர்ந்திருந்தது. சிவராமன் எழுதுவதையே ஆர்வம் பொங்கப் பார்த்தாள். அவனுடைய பேனா எப்படியெல்லாம் வளைந்து நெளிந்து எழுதுகிறது என்பதைப் பார்த்து வியந்தாள். எழுதுவதற்காக ஏதாவது காசு பணம் கேட்பானோ என்ற சந்தேகம் திடீரென்று வந்தது. முகத்தைப் பார்த்தால் கேட்கமாட்டான் என்பதுபோல்தான் தெரிந்தது. மீறிக் கேட்டால் டீ சாப்பிடச் சொல்லி காசு தரலாம் என்று நினைத்தாள்.
ரொம்பவும் கவனத்துடன் எழுதுவது மாதிரி சிவராமன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான். ஒருமுறை தலையைத் தூக்கி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளுடைய தோற்றமும் ‘சாமி, சாமி’ என்று சொல்கிற வார்த்தையும் அவனுடைய நம்பிக்கையை வளர்ப்பதாக இருந்தன. ஒன்றிரண்டு ரூபாய் கூட்டிக் கேட்கலாமா என்று யோசித்தவன், பார்ப்பதற்குப் பிச்சைக்காரி மாதிரி இருக்கிறவளிடம் கூடுதலாகக் கேட்டால் பாவம் என்று நினைத்துக் கொணடான். அந்த நேரத்தில் மரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த காகம் எச்சமிட, அது சரியாக வந்து அவனுடைய தோள்பட்டையில் விழுந்தது. எச்சத்தைத் துடைத்து விட்டுக் காகத்தைத் திட்டிக்கொண்டே எழுதி முடித்ததை ஒருமுறைப் படித்துப் பார்த்தான். பிறகு அந்தப் பெண்ணிடம் ‘ரேகயா, கையெழுத்தா?’ என்று கேட்டான். ‘கை வெரலுதான் சாமி’ என்று சொன்னதும் அவளுடைய இடது கை பெருவிரலைப் பிடித்து மை டப்பாவில் தேய்த்து எடுத்து, விண்ணப்பத்தில் ரேகையைப் பதித்தான். மீண்டும் ஒருமுறை விண்ணப்பத்தைப் படித்தான். பிறகு விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தவன், மற்றொரு காகிதத்தை எடுத்து வேகமாக எதையோ எழுத ஆரம்பித்தவன், தலையை நிமிர்த்தி ‘இதெ எடுத்துக்கிட்டு நேரா ஆபீஸ்குள்ளாரப் போ. டி.டி.ன்னு ஒருத்தர் இருப்பாரு. இதெ அவுருகிட்டெ கொடு. அவுரு மனுவுலெ கையெழுத்துப் போட்டுத் தருவாரு. அதெ எடுத்துக்கிட்டுப் போயி ஒங்க ஊரு மணியாருகிட்டெ கொடு. மத்ததெல்லாம் அவுரு பாத்துக்குவாரு’ என்று சொன்னவன் மீண்டும் எழுத ஆரம்பித்தான்.
பூரித்துப்போன அந்தப் பெண் ‘கடவுளு மாரி நீ இருந்த சாமி. நீ இல்லன்னா ஒரு வெகரமும் தெரியாம தெவச்சி தெகயோடிப்போயிருப்பன். ஒன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒனக்கு ஒரு கொறயும் வுடமாட்டான்’ என்று சொன்னவள் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எழுந்தவளிடம் சாதாரணமாக சிவராமன் ‘ஐஞ்சி ரூவா கொடும்மா’ என்று கேட்டான். தன்னிடம்தான் கேட்டானா என்று சந்தேகப்பட்டவளாக ‘என்னியவா சாமி கேட்டெ?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.
‘ம்’ என்று தலையை ஆட்டிவிட்டு அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தான்.
‘எதுக்குச் சாமி பணம் கேக்குற?’ என்று அந்தப் பெண் கேட்டாள்.
‘எதுக்கா? எழுத்துக்கூலிம்மா.’
‘எயித்துக்கூலியா? இதுக்கா எயித்துக்கூலி கேக்குற? அதுவும் புக்காம கொள்ளாம ஐஞ்சி ரூவா’ ஒரு காகிதத்திலெ எழுதியதற்கு இவனே ஐந்து ரூபாய் கேட்டால் மற்றவர்கள் எவ்வளவு கேட்பார்களோ என்று பயந்துபோனான்.
‘வளவளன்னு பேசாம, எடும்மா ரூவாய.’
‘என்னாத்த எயிதிப்புட்டன்னு வடயாட்டம் ஐஞ்சி ரூவா கேக்குறவன்? இன்னா ஊரு, இன்னாரு மவன்னு எயிதினதுக்கா கூலி. அடக்கடவுளே, இது எந்தூர்லெ அடுக்கும்?’
‘காசெ கொடுத்திட்டுப் பேசாம போம்மா.’
‘இப்பிடி கேக்குறியே இது ஒனக்கே ஞாயமா படுதா? அவன் என்னோட மவன்ங்கிறது பொய்யா, இல்லே நான் தான் அவனோட அம்மாங்கிறது பொய்யா? தலெமொற தலெமொறயா நாங்க அந்தூர்லதானெ குடியிருக்கம். இதுக்கே நானு அந்தூர்லியே பொறந்து அந்தூர்லியே வாக்கப்பட்டு நாலு புள்ளெக்கித் தாயானவ. மூணு ஊரு எல்லெயிலே வாயிதா கட்டிக்கிட்டு வர்றம். உள்ளெத எயிதினதுக்கா பணம் கேக்குற? இந்தெக் கொள்ளெப்பிறிக் கூத்தெ நான் எங்கப் போயி சொல்லுவன்? எங்க ஊருப் பள்ளிக்கூடத்து வாத்தியாருகிட்டெ போயிருந்தா, ஓசியிலெ, வாத்தெயிலியே இந்த மாரி நூறாயிரம் சீட்டு எயிதிக்கிட்டு வந்திருப்பன். பாக்குறதுக்கப் பகரா இல்லாம பித்திச்சி வெறிச்சி மாரி இருக்காளேன்னு நெனச்சிக்கிட்டுப் பேசுறியா?’
‘எங்கிட்ட வசனமா பேசுற? இதெத் தூக்கிக்கிட்டு மணியாரு, ஆர்.ஐ. தாசில்தார்ன்னு அலைவ இல்லெ: அங்க அவுங்கக்கிட்டெ பேசு ஒன்னோட வசனத்தெயெல்லாம். பேசாம காசெக் கொடுத்துட்டு வாய மூடிக்கிட்டு போ. ‘நாலே நாலு எயித்து, அதுவும் நல்லா எயிதினியோ இல்லியோ அதுக்குப் போயி நெஞ்சுக்கு நீதியாத்தான் ஐஞ்சி ரூவா பணம் கேக்குறியே. இந்த நாயத்தெ கிராமத்தான்கிட்டெ சொல்லிப்பாரு தெரியும். படிக்கிற புள்ளெக்கி அதுவும் நாலு எயித்தெ காகிதத்திலே கிறுக்குனதுக்குப் பணம் கேக்குற ஆளெ இப்பத்தான் நான் பாக்குறன். ஒங்களெ மேரி ஆளுவுளாலதான் மானம் மழை பெய்யமாட்டேங்குது. நீ என்னாப் பண்ணுவ ஒலகம் அப்பிடிப் யோயிடிச்சி. யாரு ஏமாறுவா, புடுங்கித் திங்கலாமின்னு அலையுற ஒலகமா மாறிடிச்சிடாப்பா கடவுளே. தெரியாதெ எடத்துக்கு ஒருத்தி வந்தட்டாப்லெ என்ன வேணுமின்னாலும் பேசிப்புடுறதா?’
‘சுமாமா பேசக்கூடாது. பணத்தெ எடு. காலையிலியே வந்திருக்குது பாரு சனியன்’ என்று சிவராமன் சொன்னதுதான் தாமதம். மள்ளென்று அந்தப் பெண் அவனிடம் சண்டை போட ஆரம்பித்தாள். அவளுடைய முகம் நிறம் மாறிப்போயிற்று. பேய்ப் பிடித்தவள் மாதிரி கத்த ஆரம்பித்தாள். ‘யாரப் பாத்து சனியன்னு சொன்ன?’ என்று கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டாள். அவளுக்க ஈடு கொடுத்து சிவராமனும் கத்திப் பார்த்தான். ஆனால் அவனுடைய குரல் எடுபடவில்லை. அவனுக்கு ஆதரவாக மற்ற எழுத்துக்காரர்களும் அந்தப் பெண்ணிடம் சண்டைபோட ஆரம்பித்தனர். எழுத்துக்கூலி தந்துதான் தீரவேண்டும் என்று வாதிட்டார்கள். அந்தப் பெண் ஒரே நேரத்தில் பலருக்கும் பதில் சொல்ல முயன்றாள். அந்த இடத்தில் கூட்டம் சேரத் தொடங்கியது.
‘யாரப் பார்த்துச் சனியன்னு சொன்னவன்? இன்னொருத்தங்க ஒயலு எனக்கு வாண்டாம். பாப்பான் சம்பாரிச்சது பிண்டத்துக்கு,  துலுக்கன் சம்பாரிச்சது துண்டத்துக்கு, ஏர் ஓட்டுறவன் சம்பாரிச்சது தெண்டத்துக்குங்குற கதயாதான் இருக்கு. வாயத் தொறந்து கேட்டுப்புட்டெ இல்லன்னு சொன்னா ஏயி ஊரு பாவம் என்னே சுத்திக்கும். இந்தா, நீ எயிதுனதுக்கு இதுதான் தகும்’ என்று சொல்லி இடுப்பில் செருகியிருந்த வெற்றிலைப்பாக்குப் பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து சிவராமனிடம் நீட்டினாள்.
அந்த பெண்ணையும் தன்னையும் மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவனுக்கு அவமானத்தில் உயிரே நின்றுவிடும் போலிருந்தது. அருவருப்புடன் முகத்தைக் கோணிக்கொண்டு ‘போம்மா எட்டெ போ’ என்று சொல்லி கத்தினான். அவனுடைய கத்தலை அந்தப் பெண் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் ‘ஐயோன்னா எனக்குப் பாவம் புடிச்சிக்கும். இந்தா ஒங்காசி’ என்று சொல்லி பாயில் நாணயத்தைப் போட்டுவிட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வேகமாக  நடக்க ஆரம்பித்தாள்.
சிவராமன் மற்ற எழுத்துக்காரர்களைப் பார்த்தான். ‘ஐயோ பாவம்’ என்று அவர்கள் இவனைப் பார்ப்பது தெரிந்ததும் அப்படியே குறுகிப் போனான். தலையைக் கவிழ்த்துக்கொண்டான்.