15/02/2011

இமையம் - நேர்காணல்

டலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்' (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்' ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்' 1999லும், `செடல்' 2006லும் வெளிவந்துள்ள நாவல்கள். 2006 ஆம் ஆண்டு `ஆறுமுகம்' நாவல் கதா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது சிறுகதைகள் `மண்பாரம்' (2004), `வீடியோ மாரியம்மன்' (2008) என இரண்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை 2002 ஆம் ஆண்டு இமையத்திற்கு வழங்கியது. அதோடு பல முக்கியமான பரிசுகளையும் பெற்றுள்ளார். மனைவி சபா.புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன்.

தீராநதி : `உங்களுடைய இளமைக்காலம்' எப்படிப்பட்டதாக இருந்தது? இலக்கிய நூல்களை எப்போது படித்தீர்கள்? எழுதுவதற்கு எது தூண்டுதலாக இருந்தது?

இமையம் : ``இப்போது நினைக்கும்போது ஏன் வளர்ந்தோம் என்றிருக்கிறது. சிறுவனாக இருந்தபோது சீக்கிரம் வளர்ந்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. என்னுடைய ஆசை மட்டுமல்ல; மற்றவர்களுடைய ஆசையும் இந்த விசயத்தில் நிறைவேறாது. நிறைவேறாது என்று தெரிந்தும் ஆசைப்படுவதும்; அதற்காக ஏங்குவதும்தான் மனித இயல்பு, வாழ்க்கை. என்னுடைய பெற்றோர்கள் வெங்கட்டன், சின்னம்மாள். என்னுடைய அப்பாவுக்கு என்னுடைய அம்மா இரண்டாவது மனைவி. முதல் மனைவி என்ன ஆனார் என்பது மட்டுமல்ல, அவருடைய பெயர்கூட எங்களுக்குத் தெரியாது. அப்பாவுக்கு சொந்த ஊர் கீழ்ச்செருவாய் என்பது. அம்மாவுக்கு சொந்த ஊர் கழுதூர். அப்பாவினுடைய முதல் மனைவியின் ஊர் வதிட்டப்புரம். வெங்கட்டன் என்பவருக்கும், சின்னம்மாள் என்பவருக்கும் மொத்தம் ஆறு குழந்தைகள். அதில் இரண்டு குழந்தைகள் பிறந்த கொஞ்ச காலத்திலேயே இறந்துவிட்டார்கள். எஞ்சியதில் நான் மூன்றாவது ஆள். நாங்கள் பிறந்தது மேல்ஆதனூர் என்ற சிறிய கிராமத்தில். அது என்னுடைய பெரியம்மாவின் ஊர். அந்த ஊருக்கு என்னுடைய பெற்றோர்கள் ஏன் சென்றார்கள் என்று எனக்குத் தெரியாது. எனக்கு ஏழு எட்டு வயதாகிறவரை மேல்ஆதனூரில் இருந்தோம். அதன்பிறகு கழுதூர் என்ற ஊருக்கு வந்து இன்றுவரை நாங்கள் அங்குதான் இருக்கிறோம். என்னுடைய பெரியம்மாவும், எங்களுடன் கழுதூருக்கே வந்துவிட்டார். சாகும்வரை எங்களுடன்தான் இருந்தார். எங்களை வயிற்றில் வைத்திருந்தது மட்டும்தான் அம்மாவினுடைய வேலை. எங்களை வளர்த்ததெல்லாம் பெரியம்மாதான்.

மேல்ஆதனூரில் ஒன்றிரண்டு வகுப்புகள் படித்தேன். பள்ளிக்கூடம்போன நாட்களைவிட ஓடையில் குதித்த நாட்களும், புளியந்தோப்பிலும், இலுப்பைத் தோப்பிலும் திரிந்த நாட்கள்தான் அதிகம். கழுதூரில் தொடக்கப்பள்ளிக்கூடத்திற்குப்போன நாட்களை எண்ணிவிடலாம். பொங்கலுக்கும், தீபாவளிக்கும் துணி கொடுக்கும்போது போயிருக்கிறேன். அதுதான் நல்லா நினைவிருக்கு. கழுதூரில் இருந்த சமயத்தில் நான் என் பெரியம்மாவுடன் தினமும் காட்டுக்குத்தான் போவேன். காட்டுக்குப் போகத்தான் அதிக ஆசையாக இருந்தது. பள்ளிக்கூடத்திற்குப்போக நான் ஒருநாள்கூட விரும்பியதில்லை. ஒரு நாள் காட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது வழியில் மறித்து அடித்து இழுத்துக் கொண்டுபோய் என்னுடைய அண்ணன் கணேசன் (Ex.M.L.A., Ex.M.P., Ex. மாவட்டப் பஞ்சாயத்துக்குழு தலைவர்-கடலூர் மாவட்டம்) தான் ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். ஆறாம் வகுப்பிலிருந்து ஓரளவுக்கு பள்ளிக்கூடம் போனேன். +2 படிக்க 1982ஆம் ஆண்டு சேப்பாக்கம் என்ற ஊருக்குப் போனேன். ஒருநாள் நான் ஆற்றுக்குப் பக்கத்திலிருந்த இலுப்பைத் தோப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தோப்புக்குப் பக்கத்தில் கரும்பு வெட்டிக் கொண்டிருந்த ஐவத குடியைச் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பாடகர் ஒருவர் என்னிடம் வந்து விசாரித்தார். பிறகு என்னை ஒரு கவிதை எழுதித்தரச் சொன்னார். ஒரு வாரம் கழித்து வந்து என்னை பெண்ணாடத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் கூட்டத்தில் என்னுடைய கவிதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. பரிசாக `தாய்' நாவலைத் தந்தார்கள். தாய் நாவல்தான் படித்த முதல் கதை புத்தகம். அதன் பிறகு +2விலேயே பள்ளியில் நடந்த நாடகத்திற்காக `விலங்கு பண்ணை' (Animal Form) என்ற புத்தகத்தைப் படித்தேன். தமிழாசிரியர் கொடுத்தது.''

தீராநதி : எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?

இமையம் : ``1984இல் நான் திருச்சி பெரியார் கல்லூரியில் படித்தேன். இயற்பியல் பாடப்பிரிவில் அதுவும் ஆங்கில போதனா முறையில் சேர்ந்திருந்தேன். இயற்பியலும் புரியவில்லை; ஆங்கிலமும் தெரியவில்லை. அதனால் நாளெல்லாம் மரத்தடியிலேயே உட்கார்ந்திருப்பேன். அப்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்த நேரம். ஈழத் தமிழருக்காக மாணவர்கள் போராட்டம், ஊர்வலம் நடத்தினார்கள். அதில் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். அப்போது தி.மு.க., ஈழத்தமிழர் பிரச்னையில் முழு ஈடுபாடு காட்டியது. அதுவும் காரணம் அப்போது பெரியார் கல்லூரியில் மாணவர்களை ஈழப்போராட்டத்தில் ஈடுபட வைத்த திருநாவுக்கரசு, தமிழ்ச்செல்வன் என்ற இருவரும் 1991இல் தி.மு.க.வின் சட்டமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள். ராஜீவ்காந்தி படுகொலையால் அவர்கள் இருவருமே தோற்றுப்போனார்கள். அதோடு அவர்களுடைய அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது.

1985-86இல் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயங்கி வந்த AICUF என்ற கேத்தலிக் மாணவர் அமைப்பும், தேன்மழை என்ற மாத இதழும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்கு நான் கவிதை அனுப்பியிருந்தேன். அந்தப் போட்டியில் எனக்கு ஆறுதல் பரிசாக சான்றிதழ் தந்தார்கள். அதன்பிறகு 1986இல் AICUFம் சென்னை லயோலா கல்லூரியில் செயல்பட்டு வரும் Culture and Communication என்ற அமைப்பும் கொடைக்கானலில் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். பங்கு பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த பேரா.எஸ்.ஆல்பெர்ட் என்னை தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெடுக்காதது மட்டுமல்ல; `அவன் எழுதியிருக்கிறத பாத்தா நக்ஸலைட் மாதிரி தெரியுறான். அவன் வந்தா எல்லாத்தயும் கெடுத்துடுவான்' என்று சொல்லிவிட்டார். அப்போது திருச்சி மண்டல AICUF-ன் பொறுப்பாளராக இருந்த திரு.மனோகரன் என்பவர் ஆல்பெர்ட்டை சமாதானம் செய்து அந்தப் பயிற்சிப்பட்டறையில் என் பெயரைச் சேர்த்தார். பயிற்சிக்காக கொடைக்கானல் சென்ற பிறகுதான் இலக்கியம், இலக்கியப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது. அதன் பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். அந்த மனோகரன் இல்லை என்றால், ஆல்பெர்ட் இல்லையென்றால் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், மண்பாரம், வீடியோ மாரியம்மன் கிடையாது. வேறு ஒரு திசையில் நான் போயிருப்பேன். 1984-காலகட்டம் என்பது புரட்சிகரமான கவிதைகளுக்கும், கவியரங்கங்களுக்கும் பெயர் பெற்ற காலம். அப்போது பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக, அரசு கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தவிர மற்ற விசயங்களில்தான் கவனம் செலுத்துவார்கள். நானும் அப்படித்தான். காலமும் சூழலும், நண்பர்களும் உருவாக்கிய ஆள் நான். என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான கதவைத் திறந்துவிட்ட AICUF மனோகரனை அந்தப் பயிற்சிப் பட்டறைக்குப் பிறகு நான் சந்திக்கவே இல்லை. என்னுடைய குடும்பத்தில் என் அப்பாவுக்குப் படிக்கத் தெரியும். அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. என் அண்ணன், தம்பி எல்லாருமே பட்டதாரிகள்தான். அவர்களுடைய குழந்தைகளும். ஆனாலும் என் எழுத்தை என் குடும்பத்தார்கள் யாருமே இதுவரை படித்ததில்லை. நானும் நூல்களை அவர்களுக்குத் தரவில்லை. காரணம் `நம்ம ஊரு வண்ணாத்தியப்பத்தியும்; நம்ம ஊரு ஆட்டக்கார செடலைப்பத்தியும் எழுதியிருக்கான். இதத்தான் கத எழுதுறன்னு சொல்லிக்கிட்டு திரிகிறான்' என்று சொல்வார்கள் என்பதாலேயே என் எழுத்தை அவர்களிடம் காட்டுவதில்லை. என் மனைவி புஷ்பவல்லி சபாநடேசன் கடந்த பத்தாண்டுகாலமாக என் எழுத்தில், என் படிப்பில் முக்கியமான பங்கு வகிக்கிறார். அவர்தான் என் முதல் வாசகர். கவிதைகள் எழுத ஆரம்பித்த ஒன்றிரண்டு வருடங்களிலேயே ஆல்பெர்ட், க.பூர்ணசந்திரன் போன்ற நண்பர்களைசந்தித்துவிட்டதால், புத்தகங்களை படிக்க ஆரம்பித்துவிட்டதால் படிப்படியாக கவிதைகளை எழுதுவதை குறைத்துக் கொண்டேன். உச்சபட்ச பைத்தியக்காரத்தனமாக `பத்திரிகை ஒரு பார்வை' என்ற  புத்தகத்தையும், புதிய கல்விக் கொள்ளை ஒரு X-ray கண்ணோட்டம் என்ற சிறு வெளியீட்டையும் நானே வெளியிட்டேன். அதிலிருந்து சொந்தமாக புத்தகம் போடக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கோவேறு கழுதைகள் நாவல் வெளிவருவதற்கு முன் பெரும்பத்திரிகைகளுக்கோ, சிறுபத்திரிகைகளுக்கோ எந்தப் படைப்பையும் நான் அனுப்பியதில்லை. `கோவேறு கழுதைகள்' நாவல் வெளிவந்து ஓரளவு அங்கீகாரம் பெற்ற பிறகு காலச்சுவடுக்கு ஒரு சிறு நாடகம் ஒன்றை அனுப்பினேன். `இதைவிட காத்திரமான படைப்பை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்' என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இது ஒன்றுதான் என் எழுத்து வாழ்க்கையில் நடந்தது.''

தீராநதி : உங்களுடைய மூன்று நாவல்களும் மூன்று விதமான உலகை சித்திரித்துள்ளது. இது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?

இமையம் : ``இந்தக் கேள்விதான் எழுத்தாளன் யார் என்பதை அடையாளம் காட்டுவது. சவால்களை எதிர்கொண்ட எழுத்தாளனுக்குத்தான் இக்கேள்வி பொருந்தும். இந்தக் கேள்விதான் எழுத்தாளனுக்கான சவால். பரந்துபட்ட அனுபவம், அறிவு, வெளிப்பாட்டுத் திறன், கையாளும் மொழி இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு எழுத்தாளனின் ஆளுமையை மட்டுமல்ல யார் எழுத்தாளன் என்பதையும் காட்டுகிறது. நான் எழுதிய மூன்று நாவல்களிலும் முற்றிலும் வேறுபட்ட மூன்று விதமான உலகை; வாழ்க்கை முறையை எழுதியது முக்கியமல்ல. அவை மூன்றும் நாவலாக இருக்கிறதா, இலக்கியப் படைப்பாக இருக்கிறதா, எழுத்தாளனின் அனுபவம் வாசகனின் அனுபவமாக மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதுதான் முக்கியம். வாசகர் உலகம் இதுவரை அறியாத ஒரு உலகை, வாழ்க்கை முறையை எழுதுவதால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியப் படைப்பாகிவிடுமா? ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட வாழ்க்கை அனுபவம் இருக்க வேண்டும். வாழ்க்கை அனுபவம் இருந்தால் மட்டும் போதாது. அந்த அனுபவத்தை இலக்கியப் படைப்பாக மாற்றுகிற நுட்பமும் கைவரப்பெற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் கைகூடாதவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படைப்பை மட்டுமல்ல, சாதாரண படைப்பைக்கூட உருவாக்க இயலாது. வாழ்க்கை அனுபவம் என்பதும் மட்டும் அல்ல. படைப்பாக்கத்திற்கான நுட்பம் இல்லாதவர்கள், ஆனால் எதையாவது எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களால், பழக்க தோசத்தால் எழுதிக் கொண்டிருப்பவர்களால் எழுத்தில் புதிய எல்லைகளைத் தொடமுடியாது; புதிய சவால்களையும் எதிர்கொள்ள முடியாது.

என்னுடைய முதல் நாவல் `கோவேறு கழுதைகள்' (1994) வெளிவந்தபோது, என்னுடைய அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு யூகம் இருந்தது. அந்த யூகத்தை `ஆறுமுகம்' (1999) நாவல் பொய்யாக்கியது. என்னுடைய மூன்றாவது நாவலான `செடல்' (2006) முந்தைய இரண்டு நாவல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகைக் காட்டியது. வாசகர்களுக்கு புதியபுதிய உலகைக் காட்டவேண்டும் என்பது என் நோக்கமல்ல. இதை எழுது என்று எந்த அசரீரி வாக்கும் எனக்கு கட்டளையிடவில்லை. பயணம் செய்யும்போது நாவலுக்கான மையக்கரு என்னை வந்து அடையவுமில்லை. பிரமாண்டமான நாவல்களை உருவாக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் ஆசைப்பட்டதுமில்லை. அதற்கான அவசியமுமில்லை. நான் திருச்சியில் படிக்கும்போது ஒரு நாள் இரவு வீட்டுக்கு வந்தேன். அப்போது ஆரோக்கியம் (கோவேறு கழுதைகள் நாவலின் மையப்பாத்திரம்) வீட்டைக் கடக்கும்போது அந்தப் பெண் அப்போது ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார். அந்த ஒப்பாரியை, அழுகையை ஒரு பத்து நிமிடம் கேட்டிருப்பேன். அந்த ஒப்பாரிப் பாடலும்,  அழுகையும்தான் `கோவேறு கழுதைகள்' நாவலை எழுத வைத்தது. பாண்டிச்சேரிக்குச் செல்லும்போது, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து வெளியில் வந்த ஒரு பெண் பேருந்தில் ஏறினாள். பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தாள். அதனால் இறங்கியதும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்றேன், அவள் சென்று சேர்ந்த இடம் செக்குமேடு. (பாலியல் தொழில் நடக்கிற இடம்) பெயர் தெரியாத அந்தப் பெண்ணையும் செக்குமேட்டையும் சுற்றிவந்ததன் விளைவுதான் ஆறுமுகம் நாவல். பொங்கல் பணம் கேட்டு வந்த செடலைப் பார்த்தபோதுதான், செடலைப்பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் வளர்ச்சிதான் செடல் நாவல். கோவேறு கழுதைகள் நாவலின் மையப் பாத்திரம் என்னுடைய தெருவின் கடைசி வீட்டுக்காரர். செடல் என்னுடைய தெருவிலிருந்து மூன்றாவது தெருவில் இருந்தார். நான் பிறந்ததிலிருந்தே ஆரோக்கியத்தையும் செடலையும் எனக்குத் தெரியும். ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியமும், ஆறுமுகமும் பாண்டிச்சேரியிலுள்ள செக்குமேட்டில் சந்தித்த, உறவாடிய, பழகிய மனிதர்கள்.

என்னுடைய மூன்று நாவல்களிலும் மூன்றுவிதமான உலகையும், மனிதர்களையும், வாழ்க்கை முறையையும் எழுத வேண்டும் என்பது ஏற்கெனவே திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் மூன்று பெண்களைச் சந்தித்தேன். பழகினேன். அதனால் மூன்று நாவல்களை எழுதினேன். அந்த மூன்று பெண்களைச் சந்தித்திருக்காவிட்டால் மூன்று நாவல்களை எழுதியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. நாவல் எழுதுவதற்காக நான் எந்தப் பெண்ணுக்காகவும் காத்திருக்கவில்லை. அந்தப் பெண்களாகத்தான் வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையை என் வழியாக எழுதிக்கொண்டார்கள். அவ்வளவுதான். இதில் நான் ஒரு கருவி மட்டுமே, கண்ணாடி.''

தீராநதி : உங்களுடைய கதைக்கான கரு எப்படி உருவாகிறது? கிடைத்த கருவை எப்படிக் கதையாக்குகிறீர்கள்?

இமையம் : ``என்னுடைய நாவல்கள், சிறுகதைகள் பெரும்பாலானவை என்னுடைய வாழ்க்கையில் நடந்தவை; என்னைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையில் நடந்தவைதான். கற்பனையாக, அனுமானமாக, பிறர் சொல்லக் கேட்டு எழுதியது என்று என்னால் என்னுடைய எழுத்தில் சிறு பகுதியைக்கூட காட்ட முடியாது. நான் கதை எழுத முனையும்போதெல்லாம் என்னுடைய இளமைக் காலத்திற்குத்தான் செல்கிறேன். அதுதான் என்கு பொக்கிஷமாக இருக்கிறது. இன்றைய என்னுடைய வாழ்க்கை தக்கையைப் போன்றது. நிகழ்காலம் கொடூரமானது, கடந்தகாலம் சொர்க்கமானது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, துக்கத்தை, ஏக்கத்தை, ஏன் வருத்தத்தைக்கூட தரவில்லை. கனவற்ற ஒரு வாழ்க்கை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் கடந்த பத்தாண்டுகளில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் கதையான பகுதி மிகவும் குறைவுதான். அந்த அளவுக்கு வறட்சியாக இருக்கிறது. அதிர்ஷ்டமற்றவர்களாக மாற்றுகிறது. அதே நேரத்தில் அந்த எதிர்ப்பார்ப்புகள்தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. மனம் தொடர்ந்து அதிசயங்களைத் தேடுகிறது. நம்மை நாமே புரிந்து கொள்வதற்கான வழி எது, வாசல் எது? மரணம்தான். அதற்கு முந்தையதுதான் படைப்பு. வாழ்க்கை என்பது எழுதக்கூடியதல்ல; உணரக்கூடியது. மனதிற்கும், தர்க்கத்திற்கும் அப்பாற்பட்டதுதான் வாழ்க்கை. பனித்துளியும் கடல் நீரும் இரண்டுமே தண்ணீர்தான். அவை இரண்டும் ஒன்றா?''

தீராநதி : எந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் எழுதுகிறீர்கள்?

இமையம் : ``கணக்கு கிடையாது. இந்த இடத்தில் உட்கார்ந்தால்தான் எழுத வரும் என்றோ, இன்ன நேரத்தில்தான் எழுத வரும் என்றோ எனக்கு வரையறை கிடையாது. எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதே எழுதுவேன். எந்த இடமாக இருந்தாலும், தனியாக நடக்கும்போது, பேருந்தில் பயணம் செய்யும்போது, தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருக்கும்போதுதான் கதை எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வரும். என்னுடைய நாவல்களில் பெரும் பகுதியும், அனேக சிறுகதைகளும் பயணத்தில் எழுதப்பட்டவைதான்.''

தீராநதி : உங்களுடைய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி பெண்கள்தான் மையமாக இருக்கிறார்கள். அடுத்ததாக குழந்தைகள் இருக்கிறார்கள். ஆண்கள் பெண்களுக்குப் பின்னால் நிற்பவர்களாகவே இருக்கிறார்கள். இது திட்டமிட்டு செய்யப்பட்டதா?

இமையம் : ``நான் பார்த்த, சந்தித்த, பழகிய மனிதர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவ்வளவுதான். நான் எதையுமே திட்டமிட்டு செய்யவில்லை. ஒரு ஒப்பாரியின் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் கோவேறு கழுதைகள் நாவலின் முக்கிய பாத்திரமான ஆரோக்கியம். பொங்கலன்று காசு கேட்க வந்த அன்றுதான் செடலின் மீது என்னுடைய கவனம் குவிந்தது. பிரயாணத்தில்தான் ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியத்தை சந்தித்தேன். ஆரோக்கியத்தையும், செடலையும் பிறந்ததிலிருந்தே எனக்குத் தெரியும். ஒரே ஊர்க்காரர்கள், தெருக்காரர்கள். சட்டென்று ஒரு கணத்தில்தான் அவர்களைப்  பற்றி எழுதினால் என்ன என்ற கேள்வி எனக்குள் வந்தது. நான் ஒரே ஒரு முறை சந்தித்த பாத்திரம் ஆறுமுகம் நாவலில் வரும் தனபாக்கியம். இவர்களைப் பற்றி எழுதினால் என்ன என்ற கேள்வி மட்டும்தான் என்னுடையது. பிறகு அவர்கள் எனக்குள்ளிலிருந்து தங்களைப் பற்றி எழுதிக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்களைப் பற்றி எழுதுவதைவிட சிறுவர்களைப் பற்றி எழுதுவதுதான் கடினம். நான் எழுதிய பெரும்பாலான சிறுகதைகளில் குழந்தைகள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இப்போது யோசிக்கும்போது எப்படி நிகழ்ந்தது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. சிறுவர்களைப் பற்றி நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இப்போது வருகிறது. எழுத முடியுமா என்பது தெரியவில்லை.''

தீராநதி : உங்களுடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் துயரமும், துக்கமும்தான் மிகுதியாக இருக்கிறது. உங்களுடைய எழுத்தின் வெற்றியாகவும் இதுதான் இருக்கிறது. மனித வாழ்க்கை என்பது துக்கமும், துயரமும்தானா?

இமையம் : ``கடலைப்போல நம்மைச்சுற்றி வறுமையும் பசியும்தான் சூழ்ந்திருக்கிறது. கோவேறு கழுதைகள் நாவலில் வரும் ஆரோக்கியத்தின் அதிகபட்ச தேவையும், போராட்டமும் பசியைப் போக்கிக் கொள்ளத்தானே. செடல் நாவலில் வரும் செடல் எதற்காக பலியிடப்படுகிறாள்? எதற்காக தன் வாழ்நாள் எல்லாம் ஓயாமல் அவள் போராடுகிறாள்? சோறுக்காகத்தானே. ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியத்தின் அதிகபட்ச தேவை என்ன? நெல்சோறு சிறுகதையில் வரும் சிறுவர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்? ருசியான சோறல்ல; சாதாரண சோற்றைக்கூட வழங்காத ஒரு சமூகத்தில் மனிதர்கள் மட்டுமல்ல; குழந்தைகளும்கூட எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்? அவர்களுக்கு எப்படி வரும் கொண்டாட்டத்திற்கான எண்ணம். இவ்வளவு விளைநிலமும், உற்பத்தியும் இருந்தும்கூட இரண்டு வேளை சோறுகூட கிடைக்காத நாட்டில், இருக்கிற விளை நிலங்களையும் ரியல் எஸ்டேட்களாக மாற்றிவிட்டால் என்னாகும் என்ற நிலையைத்தானே `உயிர்நாடி' சிறுகதையில் பார்த்தீர்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையில் சிரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் இடமேது? நான் சித்திரிக்கும் உலகிலும் வாழ்வில் வறுமையும் துயரமும்தான் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும். ஆரோக்கியம், தனபாக்கியம், செடல் மூன்று பெண்களுமே பேராசை கொண்டவர்கள் அல்ல. அவர்களைப் போலவே, அவர்கள் வாழ்க்கையைப் போலவே, அவர்களின் தேவையும் எளியவைதான். அந்த எளிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத்தான் போராடுகிறார்கள். போராட்டத்தில் தோற்றுப் போகிறார்கள். இது எப்படி நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்று ஆராய்வதுதான் என் எழுத்து, என் நாவல்கள்.''

தீராநதி : ஒரு எழுத்தாளருக்கு அவர் எழுதிய ஒவ்வொரு படைப்புமே முக்கியமானதாக, மதிப்பு வாய்ந்ததாகத்தான் இருக்கும். அதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு விதத்தில் கூடுதலான ஈர்ப்பை சில படைப்புகள் பெறலாம் அல்லவா? அந்த வகையில் கேட்கிறேன், உங்களுடைய நாவல்களில் எது உங்களுக்கு மிகவும் பிடித்தது? அதே மாதிரி சிறுகதைகளில் எது உங்களை மிகவும் பாதித்தது?

இமையம் : ``இதற்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. பிடித்தது, பிடிக்காதது என்பதெல்லாம் இருக்க முடியாது. பிடித்தால்தானே எழுதுகிறேன். பிடிக்காத விசயத்தை யாராவது எழுதுவார்களா? உயர்ந்தது, தாழ்ந்தது என்பதெல்லாம் மனநிலையைப் பொருத்தது. உங்களுடைய கேள்வியை மூன்று நாவல்களிலும் வரக்கூடிய பெண்களில் யார் அதிகமான துன்பத்திற்கு ஆளானார் என்பதாக நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். இந்த அர்த்தத்தில் செடல்தான் முக்கியமான பாத்திரம், வணங்குதலுக்குரியவளாக இருக்கிற அதே நேரத்தில் வஞ்சிக்கப்படவும் செய்கிறாள். சாமியாக இருக்கிறவளே ஒரு வாய்ச்சோற்றுக்காகவும் அலைகிறாள். சோற்றுக்காக ஏங்காத நாள் அவளுக்கு வாய்க்கப் பெறவே இல்லை. கோவேறு கழுதைகள் நாவலில் வருகிற ஆரோக்கியமும் சரி, ஆறுமுகம் நாவலில் வருகிற தனபாக்கியம், ஆறுமுகமும் சரி தங்களுடைய வயிற்றை நிரப்பிக் கொள்ளத்தான் போராடினார்கள். ஆனால் செடல் அப்படியல்ல. தனக்காக மட்டுமல்ல ஊருக்காகவும், உலகத்திற்காகவும் போராடுகிறாள். செடலை பொட்டுக்கட்டி விடுவதே ஊரின் நன்மையைக் கருதித்தான். ஆரோக்கியம், தனபாக்கியம் என்ற பாத்திரங்களைவிட அதிகமான நெருக்கடிகளையும், கூடுதலான சவால்களையும் எதிர் கொண்டவள் என்ற விதத்தில் செடல்தான் பிரதானம். செடல் பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண் மட்டுமல்ல; ஆட்டக்காரி மட்டுமல்ல, நல்ல மனுஷியாகவும், தெய்வம் என்ற நம்பிக்கைக்கு உரியவளாக கடைசிவரை இருக்கிறாள்.

சந்தர்ப்பமும் சூழலும் தீர்மானிப்பதாகத்தான் இருக்கிறது வாழ்க்கை. ஒரு பிடி, கைப்பிடி சோற்றுக்காக தன்வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நாள் இரவிலும் நிற்க வைத்தது எது? தனபாக்கியத்தை கிருஷ்ணாபுரத்தை விட்டு செக்குமேட்டுக்கு நகர்த்தியது யார்? பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது அவளுடைய வாழ்நாள் ஆசையா? எதன்பொருட்டு தனபாக்கியத்தை விட்டு ஆறுமுகம் ஓடினான்? அவளை அவன் மீண்டும் சந்திக்கும்போது, அவளை விட்டு அவன் ஓடும்போது அவள் செய்திருந்த குற்றத்தைவிட அவன் பார்வையில் ஆயிரம் மடங்கு கூடுதலான குற்றத்தைச் செய்திருக்கிறாள். ஆனால் எந்தவிதமான மனத்தடையுமின்றி, குற்றவுணர்வுமின்றி தன் தாயை ஏற்றுக்கொள்கிறான். எதன் மூலம் இந்த பக்குவ நிலை அவனுக்கு வந்தது? ஏன் வந்தது? இதுதான் வாழ்க்கை. மனிதர்கள் வாழ்க்கையை உருவாக்கவில்லை. வாழ்க்கைதான் மனிதர்களை உருவாக்குகிறது. ஒரு விதத்தில் நாம் எல்லாருமே கருவிகள்தான்.''

தீராநதி :  நீங்கள் சொல்வதிலிருந்து பார்த்தால் உங்களுடைய பார்வையில் `செடல்'தான் மிகவும் முக்கியமான நாவல். அப்படித்தானே?

இமையம் : ``நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்.''

தீராநதி : சிறுகதைகளில் பிடித்தது எது?

இமையம் : ``உண்மையில் என்னுடைய ஒவ்வொரு எழுத்தையும் மிகவும் ரசித்துத்தான் எழுதுகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாக எனக்கு முக்கியமானதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். டைம்ஸ் ஆப் இந்தியா_சிறப்பு மலரில் வெளிவந்த உயிர்நாடி என்ற சிறுகதைதான். இப்படிச் சொல்வதற்குக் காரணம் இன்று இந்தியாவில் ரியல் எஸ்டேட் என்கிற பெயரில், கம்பெனி தொடங்குகிறேன் என்கிற பெயரில் நடக்கிற கொள்ளையை அனுபவபூர்வமாக விவரிக்கிறது இந்தக் கதை. ரியல் எஸ்டேட்களாக, மாறிய நிலங்களும் பெரிய பெரிய கம்பெனிகளின் கம்பி வேலிக்குள் அடைப்பட்டுக் கிடக்கும் நிலங்களும் எதன்பொருட்டு கைமாறியது? அந்த நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள், அந்த நிலத்தையே தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் இன்று எங்கே இருக்கிறார்கள், என்ன ஆனார்கள்? இன்று தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கிற நிலங்கள் எல்லாம் தொழில் அதிபர்களுடைய சொத்துக்களாக மாறிவிட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம், ஐந்தாயிரம், ஏழாயிரம் ஏக்கர் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறார்கள். கால்காணி, அரைகாணி நிலத்தை மட்டுமே தங்களுடைய சொத்தாக, வாழ்க்கையாக இருந்த நிலங்களைப் பறிகொடுத்த மனிதர்களைப் பற்றிய கதை அது. விடிந்து எழுந்ததும் முன்பு காட்டுக்குப் போனவர்கள் இன்று டீக்கடையின் முன் நிற்கிறார்கள். பெண்கள் தொலைக்காட்சிப் பெட்டியின்முன் உட்கார்ந்திருக்கிறார்கள். பழைய காலம் மாதிரி மீண்டும் அடிமை முறை வரும் என்று தோன்றுகிறது. இது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். அரசு உடனடியாக இந்த விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் நிலம் வாங்க தனிமனிதர்களிடம் இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? வரி கட்டியிருக்கிறார்களா? சென்னையில் உள்ளவர்கள் ஏன் கடலூர் மாவட்டத்திலும், பெரம்பலூர் மாவட்டத்திலும் நிலம் வாங்குகிறார்கள். வேறு தாலுகாவைச் சேர்ந்தவர்கள், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தாலென்ன? ஐந்தாயிரம்கூட மதிப்பில்லாத நிலங்களும், கேட்பாரற்றுக் கிடந்த நிலங்களும் இன்று மூன்று லட்சம், ஐந்து லட்சம் என்று விலைபோகிறது.இப்படியே போனால் ஒரு விவசாயி நிலம் வாங்க  முடியுமா? இந்தக் கேள்விகளைத்தான் உயிர்நாடி சிறுகதை விரிவாகப் பேசுகிறது. அதனால்தான் இந்தக் கதை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.''

தீராநதி : கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்தபோது தலித் இலக்கிய விரோதி என முத்திரை குத்தப்பட்டீர்கள். உங்களுடைய பேச்சும், கட்டுரைகளும் உங்கள் மீது சுமத்தப்பட்ட முத்திரை சரி என்பது போலத்தான் இருக்கிறது. உண்மையில் நீங்கள் தலித் இலக்கியத்திற்கு எதிரானவரா?

இமையம் : ``உங்கள் விருப்பம்போல சொல்லிக் கொள்ளுங்கள். என்னுடைய படைப்பிலிருந்து கேள்வி கேட்கிறீர்களா, என்னுடைய நடவடிக்கைகளிலிருந்து கேள்வி கேட்கிறீர்களா? எது முக்கியம்? எல்லாவற்றுக்கும் மேலாக, தலித்யவாதி, பெண்ணியவாதி, மார்க்சியவாதி, இருத்தலியல் வாதி இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இவைகளுக்கும், வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? அறிதலுக்கும் அப்பாற்பட்டதாக, எண்ணத்திற்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக அறிபவனுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது வாழ்க்கையின் எதார்த்தம். அதனால் நான் எந்த தத்துவப் பின்னணியிலிருந்தும் வாழ்க்கையை பார்க்கவோ அணுகவோ இல்லை. அதேமாதிரி எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டும் நாவலோ சிறுகதையோ எழுதவில்லை. நான் மெத்தப் படித்தவனல்ல. அதிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தத்துவங்களை, இசங்களை அதிகம் படித்தவனல்ல. எளிய மனிதன். என்னளவில் என்னுடைய வாழ்க்கையையும் என்னைச் சுற்றியுள்ளவர்களுடைய வாழ்க்கையையும் என்னுடைய சொந்தக் கண்களால் பார்க்கிறேன். அவ்வாறு பார்ப்பதில் எதை எழுத வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறதோ அவற்றை மட்டும், நானறிந்த மொழியில், என்னைச் சுற்றியுள்ளவர்களுடைய மொழியில் எழுதுகிறேன். எந்தப் பொய்யுமில்லாமல், கலப்புமில்லாமல், வாழ்க்கையை எழுதுகிறேன். அந்த வாழ்க்கையில் எது இருக்க வேண்டும், எது இருக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கிற அதிகாரம் அந்த வாழ்க்கைக்குத்தான் இருக்கிறது, எனக்கில்லை. அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தலித் இலக்கியத்திற்கு மட்டுமல்ல;  எந்த ஒரு புதிய போக்குக்கும் நான் எதிரானவன் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. நான் எந்த இசத்தின் வாதி என்பதைவிட இலக்கியவாதியா என்பதுதான் முக்கியம். என் எழுத்துக்கள் சொல்லும் நான் யார் என்பதை. எனக்கு என்னுடைய எழுத்துத்தான் ஆதாரம். உங்களுடைய கேள்விக்கு என்னுடைய எழுத்துத்தான் பதிலும், அதற்கான ஆதாரமும். நானல்ல. நான் நன்றாக எழுதவில்லை என்று சொல்லுங்கள். நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் ஏன் இந்தச் சட்டகத்திற்குள் எழுதவில்லை என்று கேட்பதை நான் அனுமதிக்க முடியாது. அப்படி கேட்பதற்கான அதிகாரமோ உரிமையோ உங்களுக்கு மட்டுமில்லை, உலகில் யாருக்குமே இல்லை. நீங்கள் போற்றுகிற பெரிய படைப்பாளிகள் யார் யார் எந்தெந்த சட்டகத்திற்குள்ளிருந்து எழுதினார்கள் என்று சொல்ல முடியுமா? நானறிந்தவரை ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி, அதை இலக்கியப்படைப்பாகவும் மாற்றியதோடு, அதில் வெற்றியும் பெற்றவர்கள் என்று ழின்பால் சார்த்தருடைய `மீள முடியுமா?' நாடகத்தையும், ழிக் பிரட்லென்ஸினுடைய `நிரபராதிகளின் காலம்' நாடகத்தையும்தான் சொல்வேன். தத்துவங்களும், கோட்பாடுகளும், இசங்களும் எந்த இடத்தில் முடிவடைகிறதோ, அந்த இடத்திலிருந்துதான் வாழ்க்கை துவங்குகிறது என்பது என் எண்ணம். அறிந்ததையும், அறியாததையும், அறியத்துடிக்கும் தாகம்தான் இலக்கிய சிருஷ்டி.''

தீராநதி :  தலித் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?

இமையம் : ``தமிழில் தலித் இலக்கியம் தேங்கிவிட்டதா என்று கேட்பதற்குப் பதிலாகத்தான் இப்படிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தற்போது ஊடகக்காரர்கள் ஏன் இப்படியொரு கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்? தலித் இலக்கியம் தேக்க நிலையை அடைய வேண்டும் என்பது ஊடகக்காரர்களின் உள்மனதின் விருப்பமா? முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழில் `தலித்' என்ற சொல்லின் பொருள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற சூழலில் இக்கேள்வி உள்நோக்கம் கொண்டது எனலாம். ஆர்ப்பாட்டங்களும், ஆரவாரங்களும்தான் காரியத்தைச் செய்யும் என்பதல்ல; மௌனம்கூட வீரியமிக்க ஆற்றல்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். செயல்களைவிட செயலின்மை முக்கியத்துவம் வாய்ந்தது. சூழலில் பல்வேறு விதமான போக்குகள் வரலாம், போகலாம். அதற்காக ஒரு நிலைப்பாட்டினுடைய செயலூக்கம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை. ஒரு மிகச்சிறந்த படைப்பு உருவாகுமானால் அது குறித்த உரையாடலின் மூலம் பெரிய விவாதத்தை, தாக்கத்தைச் சூழலில் உருவாக்க முடியும், உருவாகும் என்றநிலையில் இது போன்ற கேள்விகள் அர்த்தமற்றவை. தலித் இலக்கியம் குறித்த பேச்சு துவங்கி கால் நூற்றாண்டு காலம்தான் முடிந்திருக்கிறது. அதற்குள் ஒரு முடிவுக்கு வருவது ஏற்கத்தக்கதல்ல. பிற தத்துவங்கள் மக்களை நேரடியாக பாதிப்பதாக; அடையாளப்படுத்துவதாக இருந்ததில்லை. `தலித்'தியம் என்பது மட்டும் வெகுசன மக்களை அடையாளப்படுத்துவதாக மட்டுமல்ல அடையாளமாகவும் இருக்கிறது. குறிப்பாக, இருத்தலியல் போன்றதல்ல தலித்தியம்.''

தீராநதி: க்ரியா தொடர்ந்து உங்களுடைய நூல்களை வெளியிட்டு வருகிறது. இது எப்படி நிகழ்கிறது?

இமையம் : ``க்ரியா என்னுடைய நூல்களை மட்டுமே வெளியிடுவதாகச் சொல்ல முடியாது. `இதுவரை' சி.மணியின் (கவிதை-1996) புகழினுடைய `முக்தி' (2002-சிறுகதைத் தொகுப்பு) `ஆசை'யினுடைய `சித்து' (கவிதை 2006) கீழை நாட்டுக் கதைகள் (2006) ந. முத்துசாமியின் `தெற்கத்தி கொம்பு மாடுகள்' (சிறுகதைத் தொகுப்பு-2009) என்று க்ரியா பலருடைய எழுத்தையும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. க்ரியா என்னுடைய ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளது உண்மைதான். இமையம் என்ற எழுத்தாளனுக்காக இந்த நூல்களை க்ரியா வெளியிடவில்லை. என்னுடைய எழுத்தின் வலிமைக்காக, தரத்திற்காக, அதனுடைய இன்றைய தேவைக்காகவும்; பொருத்தப்பாட்டிற்காகவும்தான் வெளியிடப்படுகிறது. க்ரியா ராமகிருஷ்ணன் நட்பைவிட மொழிக்கு, எழுத்துக்கு, இலக்கியத்துக்கு, கலைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். சமரசம் என்பது அவரிடம் கிடையாது. யாராக இருந்தாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரிடம் ஆளுக்கு மதிப்பில்லை. எழுத்துக்கு மட்டும்தான் க்ரியா பதிப்பகத்தில் மதிப்பு. தரம் மட்டும்தான் முக்கியம். ஆளல்ல, க்ரியா முப்பது ஆண்டு காலமாக இதை நிரூபித்திருக்கிறது. இதற்குக் காரணம் ராமகிருஷ்ணனுக்கு இலக்கியம் குறித்து; மொழி குறித்து, படைப்பு என்பது என்ன, படைப்பு மொழி என்பது என்ன என்பது குறித்த தெளிவும் பார்வையும் இருக்கிறது. இந்தப் பார்வையும், தெளிவும்தான் எந்த நூலை வெளியிட வேண்டும்; எந்த நூலை வெளியிடக்கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. தமிழில் வேறு எந்த பதிப்பாளரிடமும் இல்லாத குணம் இது. நானறிந்தவரை ஆளுக்காக, பெயருக்காக க்ரியா இதுவரை எந்த நூலையும் வெளியிடவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். என்னுடைய ஐந்து நூல்களை தொடர்ந்து வெளியிட்டதற்கு நட்பு காரணமல்ல. என்னுடைய எழுத்து ராமகிருஷ்ணனுக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தான் வெளியிடுகிறார். அதோடு அவர் கேட்கிற கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு (என்னுடைய எழுத்துலகம் அவருக்குப் புதியது, அவர் அறியாதது என்பதால்) விளக்கமளிக்கவும், தெளிவுபடுத்தவும் நான் எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன். அவருக்கு தெளிவுபடுத்தும்போது நானும் தெளிவடைகிறேன். இந்தத் தெளிவு ஒரு எழுத்தாளனாக எனக்கு முக்கியமாகப்படுகிறது. என்னுடைய எழுத்து ராமகிருஷ்ணனுக்கு மட்டுமல்ல; படிக்கிற எல்லாருக்குமே புரிய வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எழுதியதுதான் உன்னதமானது. அதில் கேள்வி கேட்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது என்று நான் அடம் பிடிப்பதில்லை. கையெழுத்துப் பிரதியைக் கொடுத்த ஒரு மாதத்திலேயே புத்தகம் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுவதுமில்லை; அவசரப்படுவதுமில்லை. இப்படிப் பல காரணங்களால்தான் க்ரியா என்னுடைய நூல்களை வெளியிடுகிறது என்று நினைக்கிறேன். சுந்தர ராமசாமியினுடைய எழுத்துக்களை க்ரியா தொடர்ந்து வெளியிட்டபோது ஏன் இந்தக் கேள்வியை யாரும் கேட்கவில்லை?''

தீராநதி : தமிழ்ப் படைப்பாளிகள் பொதுவாக தங்களுடைய படைப்புகளில் எடிட் செய்வதை விரும்புவதில்லை. அவ்வாறு செய்யக்கூடாதென்றும் நினைக்கிறார்கள். எடிட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கும் பெருமைக்கும் ஆளாகிவரும் க்ரியா ராமகிருஷ்ணனிடமிருந்து உங்களுடைய ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளது. எடிட்டிங் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இமையம்: ``எடிட்டிங் என்றால் என்ன?, எடிட்டர் என்பவர் யார்? அவருடைய வேலை என்ன என்பது தெரியாததால் வரக்கூடிய குழப்பம் இது. எனக்கு மட்டுமல்ல உலகத்திலுள்ள எல்லா எழுத்தாளர்களுக்குமே எடிட்டர் அவசியம். ஒரு படைப்பின் முதல் வாசகர் எடிட்டர்தான். ஒரு மோசமான பிரதியை எவ்வளவு திறமைசாலியான எடிட்டராலும் நல்ல பிரதியாக மாற்றிவிட முடியாது. வெட்டி எடுப்பது மட்டும்தான் எடிட்டரோட வேலையா? எழுத்தாளனோடு வாசக அனுபவம் சார்ந்த பரிமாற்றத்தை செய்கிறார் எடிட்டர் என்பவர். எழுதும்போது நாம் மிக வேகமாக எழுதுவோம். திரும்பிப் படித்துப் பார்க்கும்போது எல்லாம் சரியாக இருப்பதுபோலவே இருக்கும். பிறர் சுட்டிக்காட்டும்போதுதான் நாம்செய்திருக்கிற தவறு நமக்குப் புரியும். இந்த சுட்டிக்காட்டுகிற வேலையைத்தான் எடிட்டர் என்பவர் செய்கிறார். இந்த வேலையைத்தான் மிகவும் சரியாகச் செய்கிறார் க்ரியா ராமகிருஷ்ணன். எடிட்டிங் என்பதை அனுபவத்தில்தான் உணர முடியும். சொல்வது சுலபமல்ல.

க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து பலபேர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர் எழுத்தாளரின் பெயருக்காகப் புத்தகம் போடுபவர் அல்ல. அதேமாதிரி புது எழுத்தாளராக இருந்தாலும் சரி, பழைய எழுத்தாளராக இருந்தாலும் சரி பிரதியைப் படித்துப் பார்த்துத்தான் போடலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறார். புத்தகமாகப் போடலாம் என்று முடிவெடுத்த பிறகு பிரதியிலுள்ள நிறை குறைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.  எடிட்டருக்கும், எழுத்தாளனுக்குமான பிரதி குறித்த உரையாடல் என்பது மிகவும் முக்கியமானது. இந்த உரையாடல்களிலிருந்து ஒரு எழுத்தாளன் பிரதி குறித்த தெளிவை மட்டுமல்ல; படைப்பு- மொழி- எழுத்தாளனின்  பங்கு போன்ற பல்வேறு விசயங்களில் தெளிவைப் பெறுகிறான். இது மிகவும் முக்கியம். எழுதும்போதோ, எழுதுவதற்கு முன்போ எழுதுவது குறித்த எந்தப் பயிற்சியையும் நாம் மேற்கொள்வதில்லை. பிரதி உருவான பிறகுதான் இந்த வேலையைச் செய்ய முடியும். பிரதியைச் சரிபாருங்கள். திரும்பத் திரும்ப சரிபாருங்கள் என்று சொல்வதும், பிரதியில் பிழைகளை, குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், கவனப்படுத்துவதும் எந்த விதத்தில் குற்றமாகும்? கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத ஆள் நிச்சயமாக எழுத்தாளனாகவே இருக்க முடியாது. எல்லாம் தெரிந்தவர் என்று யாரையாவது காட்ட முடியுமா? நான் எழுதியதுதான் சரி. அது மாறாதது; மாற்றம் செய்ய முடியாதது; மாற்றத்திற்கு உட்படுத்த முடியாதது என்று ஒருவர் சொன்னால் அவரை நம்மால் என்ன செய்ய முடியும்? தமிழ்நாட்டில் பெரும்பாலான எழுத்தாளர்கள் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல.

க்ரியா என்னுடைய ஐந்து நூல்களை வெளியிட்டிருக்கிறது. 1991- முதல் க்ரியா ராமகிருஷ்ணனுடன் என் பிரதிகளை முன்வைத்து நீண்ட உரையாடலையும், விவாதத்தையும் நடத்தியிருக்கிறேன். இந்த உரையாடலும், விவாதமும் எழுதுவதற்கு மட்டுமல்ல; ஒரு நூலைப் படிப்பதற்கும் கூட உதவிகரமாக இருக்கிறது. ஒரு பிரதியில் ஊளைச்சதையாக இருக்கிற பகுதியை நீக்க வேண்டும் அல்லது சரி செய்யவேண்டும் என்பார். ஒரு பிரதியில் சில பகுதிகளை நீக்குவதன் மூலம் பிரதிக்குப் புதுமெருகு கூடும் என்பது என் அனுபவம். ஒரு பிரதியில் வாசகனுக்குத் தெளிவை ஏற்படுத்திக் கூடுதலாக எழுதுவதும், தேவையற்ற இடத்தில் கூடுதலாக இருக்கிற தகவல்களை நீக்க வேண்டும் என்று சொல்வதும் எப்படி குற்றமாகும்? இச் செயல் ஒரு பிரதிக்கு மதிப்பைத்தான் தேடித்தரும், இழிவை அல்ல. இது நம் எழுத்தாளர்களுக்குப் புரிந்தால் நல்லது. ஒரு வார்த்தையை, வாக்கியத்தை எடுக்கலாம் என்று நினைத்தால் கூட இறுதி முடிவை ராமகிருஷ்ணன் என்னிடம்தான் விடுவார். அவர் சொல்கிற காரணம் சரியாக இருந்தால்தான் நான் ஏற்றுக் கொள்வேன். இல்லையென்றால்  `அப்படியே இருக்கட்டும்' என்று சொல்லிவிடுவேன். என்னுடைய ஐந்து நூல்களிலும் கட்டாயப்படுத்தி ஒரு வார்த்தையை, வாக்கியத்தை நீக்கினார் என்றோ அல்லது ஒரு வார்த்தையை, வாக்கியத்தை கட்டாயப்படுத்தி எழுத வைத்துச் சேர்த்தார் என்றோ சொல்ல முடியாது. ஒரு படைப்பில் எது இருக்க வேண்டும், எது இருக்க வேண்டியதில்லை என்று இறுதி முடிவை எடுக்கிற அதிகாரம் எழுத்தாளனுக்குத்தான் இருக்கிறது. எடிட்டருக்கு இல்லை. இந்த வார்த்தையை அடிக்கடி  ராமகிருஷ்ணன் என்னிடம்  சொல்லியது மட்டுமல்ல; சொல்வது மாதிரியே நடந்து கொண்டும் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருக்கிற பதிப்பாளர்கள் க்ரியா ராமகிருஷ்ணன் செய்கிற வேலையைச் செய்தால் இந்தக் கேள்வியே எழாது. பிரதியைப் படித்துப் பார்த்து புத்தகம் போடுகிற பதிப்பாளர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ராமகிருஷ்ணன் மீது பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இருக்கிற கோபம் தங்களால் செய்ய முடியாததை பிறர் செய்யும்போது ஏற்படுகிற கோபம். கையலாகாத்தனத்தின் வெளிப்பாடு.

உங்களுடைய படைப்பை நண்பர்களிடம்  கொடுத்துப் படிக்கச் சொல்வதில்லையா? அவர்கள் சொல்கிற கருத்துக்களை கேட்பதில்லையா? இல்லை, அவர்கள் சொல்கிற திருத்தங்களைத்தான் செய்வதில்லையா? எடிட்டிங் என்பது எடிட்டர்தான் செய்கிறார் என்றில்லை. நம்முடைய மனதில் தோன்றுவதையெல்லாம் அப்படியே எழுதுகிறோமா? மனதிலேயேஎத்தனை முறை சரிபார்த்துக்கொண்டு எழுதுகிறோம். இந்த சரிபார்த்தல்தான் எடிட்டிங். மனதிலேயே பலமுறை  சரிபார்த்து எழுதிய பிறகும் அடித்து, திருத்தி எத்தனை முறை திரும்பத் திரும்ப எழுதுகிறோம்? இதற்குப் பெயர் என்ன? இவ்வளவு உழைப்பிற்குப் பிறகும் பிரதியில் வாக்கிய அமைப்பில், கருத்தில், தகவலில், முன்பின் எழுதிய முறையமைப்பில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன. இவற்றை கவனப்படுத்துவதுதான் எடிட்டரின் வேலை. அதைத்தான் ராமகிருஷ்ணன் செய்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக க்ரியா பதிப்புத் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. தற்காலத் தமிழ் அகராதியையும் வெளியிட்டதில் கிடைத்த அனுபவமும் முக்கியமானது. அதனால் மொழி, மொழியின் பயன்பாடு - இயங்குதளம் குறித்த கூடுதலான அறிவைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு பிரதியிலும் கூடுதல் கவனம் செலுத்திப் புத்தகம் வெளியிடுகிறார்கள். ஒரு பிரதியில் அவர்கள் காட்டுகிற அக்கறையும், புத்தக உருவாக்கத்தில் அவர்கள் காட்டுகிற சிரத்தையும்தான் என்னை `கோவேறு கழுதைகள்' நாவல் பிரதியை அவர்களிடம் எடுத்துக்கொண்டு போக வைத்தது.''

தீராநதி  : உங்களுக்குப் பிடித்த - பாதித்த எழுத்தாளர்கள் பற்றி கூறுங்கள்?

இமையம் : ``பிடித்த எழுத்தாளர்கள், பிடிக்காத எழுத்தாளர்கள், பாதித்தவர்கள், பாதிக்காத எழுத்தாளர்கள் என்று ரகம் பிரிப்பது சிரமம். ஒரு எழுத்தாளருடைய ஒரு படைப்பு பிடித்திருக்கும், மற்றொன்று பிடிக்காமல் இருக்கும். அதற்காக அவர் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்று பொருளல்ல. அதேமாதிரிதான் பாதிப்பு சம்பந்தப்பட்டாலும். ஆரம்பக்காலத்தில் தமிழ் எழுத்தாளர்களைவிட, அதிகமாக ரஷ்ய எழுத்தாளர்களைப் படித்தேன். அன்றைய சூழல் அப்படி. மற்றொரு காரணம் மலிவு விலையில் கிடைத்தது. ஒரு காலத்தில் ழிசிஙிபி படிப்பு ஆர்வத்தைத் தூண்டும்விதமாக; மிக முக்கியமான சக்தியாக இருந்தது. ஆனால் இன்று தீவிர வாசகன் ஒருவன் ழிசிஙிபில் நுழைந்தால் மனம் வெதும்பிப் போவான். அந்த அளவுக்குக் குப்பைகளாகக் கொட்டி வைத்திருக்கிறார்கள். ஒருவகையில் அறிவுச் சூழல் உருவாவதற்கும், வளர்வதற்கும் காரணமாக இருந்த அவர்களா இவர்கள்? இடதுசாரிகளுக்கும் இன்று பணம்தான்; வியாபாரம்தான் முக்கியமாகிவிட்டது.

ஆரம்பக்காலத்தில் ஜெயகாந்தன் பிடித்திருந்தது. அதன்பிறகு தி. ஜானகிராமன். அதன்பிறகு சுந்தர ராமசாமி. கடைசியில் சண்முகசுந்தரம். லா.ச. ராமாமிர்தம் எழுத்தில் ஒரு கட்டத்தில் மயக்கம் இருந்தது. அந்த மயக்கம் அவருடைய மொழியால் ஏற்பட்டது. பிறகு இல்லை. ஒவ்வொருவிதமான எழுத்தின்மீது ஈடுபாடு இருந்தது. புதிதாக எழுதுகிற, ஒரே ஒரு நூல் மட்டுமே எழுதிய எழுத்தாளரின் எழுத்தில்கூட எனக்கு ஈடுபாடும், அக்கறையும் ஏற்பட்டிருக்கிறது. ஆக, நான் படித்த எல்லா எழுத்தாளர்களுமே ஏதோ ஒரு விதத்தில் தொடக்கத்திலிருந்தே என்னுடைய எழுத்தும், நடையும், மொழியும் தனித்த அடையாளத்துடன் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அதற்கு என்னுடைய படைப்புகளே சாட்சியாக இருக்கின்றன.''

தீராநதி : நீங்கள் தி.மு.க.வில் தீவிரத் தொண்டராக இருக்கிறீர்கள். உங்கள் எழுத்து வாழ்க்கையில் கட்சி சார்ந்த ஈடுபாடு பயனுள்ளதாக இருக்கிறதா? இடையூறாக இருக்கிறதா?

இமையம் : ``நான் தெளிவான ஆள். இலக்கியத்தில் கட்சியையும், கட்சி செயல்பாட்டில் இலக்கியத்தையும் கலப்பதில்லை. குழப்பிக் கொள்வதுமில்லை. எழுத்தில் என்னுடைய சொந்த வெறுப்பு, விருப்பங்களுக்கு இடமில்லை. கோவேறு கழுதைகள் நாவல் 1994இல் வந்தது. அதிலிருந்து இதுவரை என்னுடைய கட்சி சார்ந்த ஈடுபாட்டின் வெளிப்பாட்டை எந்தப் படைப்பிலும் காணமுடியாது. அதற்கான அவசியமும் கிடையாது. அதே மாதிரிதான் நான் தி.மு.க.வைச் சார்ந்த எழுத்தாளன் என்று நான் சொன்னதுமில்லை; அதற்கான அங்கீகாரத்தையும் நான் கோரியதில்லை. அது வேண்டாம் என்றே நான் கருதுகிறேன். லட்சக்கணக்கான உறுப்பினர்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான். நான் கட்சியின் தலைமையில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கான அவசியமும் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. இப்படி ஒருவன் இருக்கிறான் என்பதுகூட கட்சியின் தலைமைக்குத் தெரியாது. தெரியவேண்டும் என்ற அவசியமும் கிடையாது. தி.மு.க.வில் இளைஞரணி தொடங்கப்பட்டது முதல் அக்கட்சியில் நான் உறுப்பினரானேன். அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். உறுப்பினராவதற்கான படிவம் அப்போது மங்களூர் ஒன்றிய கழகச் செயலாளராக இருந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராசு என்பவரிடம் இருந்தது. எங்களுடைய ஊரான கழுதூருக்கும் திட்டக்குடிக்கும் பதினெட்டு கிலோ மீட்டர் தூரம். வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு நான் மட்டும் தனியாகச் சென்றேன். ராசு வீட்டில் இல்லை. செங்கல் சூளையில் இருந்தார். திட்டக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி செங்கல் சூளை இருந்தது. அங்கு சென்று ராசுவை அழைத்து வந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று வந்து உறுப்பினராகச் சேர்ந்தேன் - சின்னப் பையன் தனியாக கட்சியில் சேருவதற்காக விண்ணப்பம் கேட்டு வந்திருக்கிறானே என்று ஆச்சரியப்பட்ட ராசு, சைக்கிள் வாடகை ஒரு ரூபாயும், இட்லி சாப்பிட ஐம்பது காசும் தந்தார். அன்றிலிருந்து தி.மு.க.வின் உறுப்பினராகவே இருக்கிறேன்.''

தீராநதி : முன்பு மார்க்சியம் பேசி, பின்பு தலித் இலக்கியம் பேசி, தற்போது நேரிடையாகத் தலித் அரசியல் நிலைப்பாட்டில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிற சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவிக்குமார் அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன? திரு. ரவிக்குமார் இலக்கியவாதியாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?

இமையம் : ``திரு. ரவிக்குமார் இலக்கியவாதி என்பதைவிட அதிகமாக அரசியல்வாதியாகத்தான் எல்லா காலத்திலும் செயல்பட்டிருக்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அவருடைய திருமணம் சமய சடங்குகளற்றதாக, மார்க்சியவாதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மூன்று நாள் நடந்தது. அந்த மூன்று நாளும் அரசியல் விவாதங்கள்தான்நடந்தது. கடைசியில்தான் திருமணம். றிஹிசிலிலில் அவர் செயலாற்றியபோதும் சரி, மார்க்சிய சார்புடையவராக இருந்தபோதும் சரி, தலித்திய சிந்தனையாளராக, அறிவு ஜீவியாக இருந்த காலத்திலும் சரி அவர் எழுத்தைவிட செயல்பாட்டை முன்னெடுத்தவர். அவருடைய தொடர்ந்த செயல்பாடுகளுக்கு எழுத்து அவருக்கு பக்கபலமாக இருந்தது என்பதுதான் உண்மை. `சிறந்த செயல் எதுவோ அதுவே சிறந்த சொல்' என்ற வாசகத்தை ரவிக்குமார்தான் எழுதினார். இந்த ஒற்றைச் சொல்லே ரவிக்குமார் யார் என்பதைக் காட்டும். அவருடைய மொத்த எழுத்துமே அரசியலை மையமாகவும், சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தியதாகவும் இருக்கும். இதை அவருடைய நூல்களான `கண்காணிப்பின் அரசியல்' (1995) உரையாடல் தொடர்கிறது (1995), கொதிப்பு உயர்ந்து வரும் (2001) `க்ஷிமீஸீஷீனீஷீ–ƒ ஜிஷீ–நீலீ' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்துள்ள அவருடைய நூலையும் படித்தாலே தெரியும். தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கும், வளர்ச்சி பெறுவதற்கும் ரவிக்குமாரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அந்தப் பங்களிப்பு இன்றுவரை தொடர்ந்து இருக்கிறது. இலக்கியவாதி என்பதைவிட இயக்கவாதி என்று சொல்வதுதான் ரவிக்குமாரைப் பொறுத்தவரை சரியாக இருக்கும். இலக்கியத் துறையில் இருந்தாலும் சரி, அரசியல் துறையில் இருந்தாலும் சரி, தான் யார் என்பது அவருக்குத் தெரியும். அதில் அவருக்கு எந்தக் குழப்பமுமில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.''

தீராநதி : உங்கள் முதல் நாவலுக்கு சுந்தர ராமசாமிதான் முதல் விமர்சனம் எழுதினார். `கோவேறு கழுதைகள்' நாவலுக்கு இணையான நாவல் தமிழில் இல்லை என்று எழுதினார். அவருடைய விமர்சனம் காலச்சுவடில் வெளிவந்து பெரிய சர்ச்சையை உண்டாக்கிற்று. தொடர்ந்து நீங்கள் காலச்சுவடில் எழுதி வந்தீர்கள். இப்போது உங்களுக்கும், காலச்சுவடுக்கும் என்ன பிரச்சனை? இனிமேலும் காலச்சுவடில் எழுதுவீர்களா?

இமையம் : ``நிச்சயமாக எழுதுவேன். காலச்சுவடும் என் எழுத்தை வெளியிடும் என்றுதான் நம்புகிறேன். தமிழில் வரக்கூடிய இலக்கியப் பத்திரிகைகளில் காலச்சுவடும் ஒன்று. முக்கியமான பத்திரிகையும்கூட. எனக்கும் காலச்சுவடுக்கும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் கூறுவது தவறு. நூலக  ஆணைக்குழு குறித்த சில தவறான தகவல்களைத் தொடர்ந்து வெளியிட்டதோடு, தவறான தகவல்களை உண்மையென நிரூபிக்கவும் பரப்பவும் அப்பத்திரிகை முயன்றது. காலச்சுவடு தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தருகிறது என்று நான் கூறினேன். அவ்வளவுதான். இதைத்தவிர எனக்கும் காலச்சுவடுக்கும் முன்பும் சரி, நிகழ்விற்கு பின்பும்சரி தனிப்பட்ட வெறுப்போ கசப்போ கிடையாது. ஒரு விசயம் குறித்து விவாதிப்பது சகஜமானது. விவாதத்தின் போக்கு சரியாக இருக்கலாம்; தவறாக இருக்கலாம். ஆனால் விவாதம் முக்கியம். அதற்குமேல் அந்த விசயத்தில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலச்சுவடின் கருத்திற்கு வேறு யாராவது எதிர்வினையாற்றி இருந்தால் விவாதம் வேறுவிதமாகப் போயிருக்குமோ என்னமோ. என்னைப் பொறுத்தவரை அந்த விசயம் அப்போதே முடிந்துவிட்டது.''

தீராநதி :  தற்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? முந்தைய நாவல்களிலிருந்து வேறுபட்ட உலகமா? இந்த நாவலிலும் பெண்தான் மையப் பாத்திரமா?

இமையம் : ``நோய்ப்புற்று என்ற நாவல்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முந்தைய நாவல்களிலிருந்து வேறுபட்டதுதான். இந்த நாவலில் பெண் மையப் பாத்திரமல்ல, இந்த நாவலில் பெண்கள் மிகவும் குறைவாகத்தான் வருகிறார்கள். ஆனால் நாவல் முழுமை பெறுமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது? என்ன காரணத்தினாலோ அந்த நாவல் என்னை ரொம்பவும் வதைக்கிறது. மூன்று நீலீணீஜீ‡மீக்ஷீலேயே நிற்கிறது. மேலே நகர மறுக்கிறது. மனநிலை கூடிவரவில்லை. இதே மனநிலை நீடித்தால் அந்த நாவல் எழுதப்படாமலேயே, வாசக கவனத்திற்கு வராமலேயே போகக்கூடும். ஒரு மனநிலையில் அந்த நாவல் வராவிட்டால் என்ன நஷ்டமாகிவிடும் என்ற கேள்வியும் எழுகிறது. இல்லை அந் நாவல் வருவதால் என்ன இங்கு நிகழ்ந்துவிடப் போகிறது? நான் இத்தனை நாவல் எழுதியிருக்கிறேன் என்று என்னுடைய சுய குறிப்பில் எழுதிக்கொள்வதைத்தவிர, எதுவுமே நம்கையில் இல்லை. நேற்றுவரை திட்டமிடப்பட்டிருந்த ஒரு படைப்பு இன்றோ, நாளையோ எழுதப்படாமலேயே போகலாம். இன்றுவரை மனதில் தோன்றாத விசயம் நாளை ஒரு படைப்பாக வரலாம். எதுவும் சாத்தியமே.''

தீராநதி :  எதார்த்த முறையில் அதாவது நேரடியாக் கதை சொல்லல் முறை உங்களுடையது. அதில் உச்சத்தைத் தொட்டது உங்களுடைய எழுத்து. இந்த வகை எழுத்தைப் பலர் மதிப்பதில்லையே?

இமையம் : ``கதை சொல்லல் அதாவது எழுதுதல் என்ற செயல்பாடே பிறருக்காகத்தான். பிறருக்காக என்று வரும்போது நிச்சயமாகத் தெளிவாகச் சொல்ல வேண்டும், புரியும்படியாகச் சொல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்பும்படியாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் கதை சொல்லலின் அடிப்படை. நாம் யாரைப்பற்றி, எதைப்பற்றி, எந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறோமோ, அந்த மனிதர்களுடைய மொழியில்தான் எழுத வேண்டும். படிப்பறிவின் மூலம் கிடைக்கப்பெற்ற மொழியிலோ, ஊடகம் வளர்த்த பொது மொழியிலோ எழுதக்கூடாது. சராசரி மனிதனுடைய கதையை எழுதுவேன். அவனுக்கு அந்நியமான மொழியில், யாருக்கும் புரியாத மொழியில் எழுதுவேன் என்று சொல்வதும், எழுதுவதும் நாடகம். மொழியின் செயல்பாடு, இயங்குதளம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் செய்கிற காரியம். மொழி என்பது ஒரு வாகனம் மட்டுமே, அதுவே படைப்பல்ல. மொழிதான் படைப்பு என்று பலர் இன்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையைப் பொதுப்பண்பாகவும் மாற்றிவிட்டார்கள். இது விநோதமானது. வாழ்க்கைதான் மொழியை உருவாக்குகிறது. மொழி ஒருபோதும் வாழ்க்கையை உருவாக்காது. தெய்வ மொழியில் எழுதியிருக்கிறேன், அதை வாசகன் குறைந்தது நான்கு ஐந்து முறை படித்தால்தான் புரியும் என்று சொல்கிறவர்களுடைய எழுத்தில் எனக்கு எந்த மரியாதையும் இல்லை. எதார்த்த வகை எழுத்துத்தான் என்றும் நிலைத்திருக்கும் என்பது என் எண்ணம்.''

தீராநதி :  சமீபத்திய தமிழ்ப்படைப்புலகம் குறித்த உங்கள் எண்ணம் என்ன?

இமையம் : ``கசப்பாக இருக்கிறது. 90களில் தமிழில் வந்த படைப்புகளின் தரத்திற்கு இணையாகக்கூட இன்று வரவில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கதை அம்சத்திலும் சரி, சொல் முறையிலும் சரி. காத்திரமான படைப்புகள் என்று பட்டியலிடுவது சிரமம். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவர் தனது நாவலில் `இருட்டு தாரை தாரையாக வழிந்து வீட்டைச் சுற்றிலும் நிரப்பிக் கொண்டிருந்தது' என்றும்; `அந்த விளக்கை எப்படியாவது கவ்வித் தின்றுவிட வேண்டும் என்பதுபோல இருட்டு வீட்டைச் சுற்றிசுற்றி வந்து கொண்டிருந்தது' என்றும்; `மாட்டு வண்டி சென்று இறங்கியது' என்றும்; `தெருக்களில் வெயில் மெதுவாக ஊர்ந்து வரத் துவங்கியிருந்தது' என்றும் எழுதியிருக்கிறார். அந்த எழுத்தாளரின் நாவலுக்குள் இதுபோன்று குறைந்தது ஆயிரம் வாக்கியங்களையாவது என்னால் காட்ட முடியும். இந்த வாக்கிய அமைப்புகள் எதைக் காட்டுகின்றன? இது இன்று எழுதக்கூடிய பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். என்ன எழுதுகிறோம், எதற்காக எழுதுகிறோம் என்ற கவனம் இல்லாமல் கூடவா எழுதுவார்கள்? வாக்கியமைப்பு சரியில்லை என சுட்டிக் காட்டினால் உங்களுக்கு நவீன எழுத்தின் செழுமையும் மகிமையும் புரியவில்லை. நான்கு ஐந்து முறை படியுங்கள் அப்போதுதான் புரியம் என்று சொல்கிறார்கள். நவீன இலக்கிய மனதின் வெளிப்பாடு எது, ஆற்றல் எது என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு படைப்பை எதன் பொருட்டு கொண்டாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல; எதன் பொருட்டு பதிப்பிக்கிறார்கள் என்பதும் புரியவில்லை. யார் வேண்டுமானாலும், எந்தத் துறையைப் பற்றி வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம். `இது சரியா?' என்று மட்டும் கேட்கக்கூடாது. மீறிக் கேட்பவர்கள் நவீன இலக்கியத்தை, நவீன மொழியின் வெளிப்பாட்டை, நவீன கலையாக்கம் குறித்த எந்த அறிவுமற்றவர் என்று குற்றம் சாட்டுகிற சூழல்தான் நிலவுகிறது. 70களில், 80களில், ஏன் 90களில்கூட என்ன எழுதுகிறோம் என்ற தெளிவும், எந்த மொழியில் எழுதுகிறோம் என்ற அக்கறையும் இருந்தது. இன்று தெளிவும் இல்லை. அக்கறையும் இல்லை. விளம்பரமாக வேண்டும் என்ற ஆசை மட்டும்தான் இருக்கிறது. இந்த ஆசை இலக்கிய ஆக்கத்திற்கு எந்தவிதத்திலும் உதவாது. நவீன காலத்தில் சொற்கள் மதிப்பிழந்துவிட்டன. இலக்கியத்தின் உண்மையான மொழி சொற்கள் அல்ல; மௌனம். இலக்கியத்தின் மொழி மட்டுமல்ல, குரலும் மௌனம்தான். வாழ்க்கையின் குரலும் மௌனம்தான். இது நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசை எனக்கானது அல்ல. மொழிக்காக; இலக்கியத்திற்காக.''றீ

கருத்துகள் இல்லை: