("ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" நாவலுக்கு ஜனவரி 1971-ல் ஜெ.கே. எழுதிய முன்னுரை இத்தலைப்பில் இங்கு இடம் பெறுகிறது.)
காதல் என்பது மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பக் காரணங்களே போதும். காதல் வயப்பட்டவர்களிடையே கூட அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அந்தக் காதலோடு சேர்ந்த வேறு குணநலன்களே காரணமாயிருக்கின்றன.
இந்தக் கதையில் வரும் கல்யாணியோ ரங்காவோ காதலையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர்கள் அல்ல. வாழ்க்கையில் அவர்கள் இருவருக்குமே வேறு வேறு லட்சியங்களும் வேறு வேறு காரியங்களும் இருக்கின்றன. வாழ்க்கையின் முழு அர்த்தத்தோடு வாழ்கிற யாரும் 'எனக்கு இதுதான் லட்சியம்; இது ஒன்றுதான் லட்சியம்' என்று பிரகடனப் படுத்திக் கொள்ள முடியாது. அவரவர்க்கும் சில கொள்கைகள், சில விருப்பு வெறுப்புக்கள், சில 'கூடும்-கூடாது'கள் என்று இருக்கின்றன. அதற்கு ஒப்ப வாழ முயல்வதே அவரவர் வாழ்க்கையாய் இருக்கிறது. அதனால் இந்த வாழ்க்கைகளை லட்சியமற்ற வாழ்க்கை என்று சொல்ல முடியாது.
இன்ன லட்சியத்துக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று எழுதி நெற்றியில் ஒட்டிக் கொண்டவர்களைத் தவிர எஞ்சிய மக்களெல்லாம் இந்த விதமாய்த்தான் வாழ்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லாருமே - இன்ன லட்சியத்துக்காக நான் வாழ்கிறேன் என்று ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்குத் தாலி கட்டிக் கொண்டவர்களும் - அதற்கு மாறான லட்சியத்தில் தங்களைப் பிணித்துக் கொண்டவர்களை எதிர்ப்பதையும் அழிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தங்களுடைய நடைமுறையாகக் கொண்டிருக்கிறார்கள். அதேமாதிரியாக - சமுதாய, அரசியல், மத நம்பிக்கை போன்ற லட்சியங்கள் ஏதுமில்லாத மற்ற மக்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தங்கள் வாழ்க்கைத் துணைகளிடமும் குழந்தைகளிடமும் தங்களுக்கு அடக்கமானவர்களிடமும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் 'கூடும் கூடாது'களையும் ஏன், சாதாரண ரசனைகளையும் கூட அழித்து ஒழிக்கிற ஆக்ரமிப்பாளர்களாக இருப்பதை வாழ்க்கை நெடுகிலும் எல்லாரிடமும் நாம் காணலாம்.
கடைசியில், லட்சியவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களும் சரி, சாதாரண மனிதர்களும் சரி, இந்தப் பிறர் விஷயத்தில் தலையிடுவதையே தங்களது நடைமுறை வாழ்க்கையாகக் கொண்டிருப்பதன் மூலம் தங்களது லட்சியமே இதுதான் என்றாகி விட்டதை உணராதவர்களாகி விடுகிறார்கள்.
ஆக்ரமிப்பு என்பதும், பலாத்காரம் என்பதும், தலையீடு என்பதும் ஸ்தூலமாக நிகழ்வது மட்டுமல்ல. ஒருவன் வீட்டில் அத்துமீறிப் புகுவதும், ஒருவன் உடலைத் துன்புறுத்துவதும் மட்டும்தான் ஆக்ரமிப்பு, பலாத்காரம் என்று புரிந்து கொள்ளுவது மிகவும் ஆரம்ப அறிவே (Elementary Knowledge) ஆகும். இந்த அறிவுக்குப் புறம்பான அந்தச் செயல்கள், அதாவது ஒருவனின் வீட்டில் அல்லது நாட்டில் பிரவேசிக்கிற துராக்கிரகம் அல்லது ஒரு மனிதனை, ஒரு கும்பலை, ஓர் இனத்தைத் தாக்கி அழிக்கிற, அடக்குகிற, அடிமை கொள்கிற காரியங்கள் மிகவும் கொடூரமானவை, அநாகரிகமானவை என்று அறிந்திருக்கிறவர்களூம் - (மனுஷ சரித்திரத்தில் இதை அறிந்து கொள்வதற்கே எவ்வளவோ காலமாயிற்று - அதற்கு முன்னால் இதுவே ஒரு பெருமையாக இருந்த காலமும் உண்டு) இதனைக் கொடுமை, பாபம் என்று உபதேசிக்கிறவர்களும் கூட, கருத்து ரீதியாகவும் எண்ணங்களை அழிக்கிற காரியத்திலும் மிகவும் மூர்த்தண்யமாக ஈடுபடுவதில்தான் அக-வாழ்வின் பிரச்னைகள் எழுகின்றன.
சட்டங்களும், சமுதாயங்களூம், சாஸ்திரங்களூம், மதங்களும், அரசியலாரும், மகான்களூம் மட்டும்தான் இந்த ஆக்கிரமிப்புகளை, பலாத்காரங்களைக் கைக்கொண்டுள்ளனர் என்பதில்லை; அன்புள்ளம் கொண்ட அன்னையரும், நமக்காகவே உயிர் தரித்திருக்கின்ற நமதருமைக் காதலிகளூம், காதலர்களும், கணவர்களும், மனைவியரும் - தங்களுக்காகக் கூட அல்லாமல் அந்தந்த மறுதரப்பாரின் நலனுக்காகவே என்கிற நம்பிக்கையில் இந்த ஆக்கிரமிப்பையே, இந்த மனோ-பலாத்காரத்தையே காதல் என்றும், அன்பு என்றும், கடமை என்றும், பக்தி என்றும், பண்பு என்றும் கருதி அமைதியையும் நிம்மதியையும் இழந்த நிராசைகளை அறுவடை செய்து கொள்ளுகிறார்கள்.
வாய்விட்டு வாழ்க்கையைச் சபிக்கிறவர்களாகவும் - அப்படிச் செய்ய மனம்கூசி உள்ளூர உடைந்து போனவர்களாகவும் மாறிப்போய் ஒருவகைப் பழக்கத்தினால் - குறைபட்ட அன்பையும், மூளியான காதலையும் ஒப்புக்குச் செலுத்துகிற பக்தியையும், சுயநம்பிக்கையற்ற பண்புகளையும் சுமந்து வாழ்கிற கொடுமைகளே இவர்களுக்கு இறுதியில் எஞ்சுகின்றன.
வாழ்க்கை என்பது பெரும்பாலும், ஏன் முழுக்க முழுக்க இந்தக் கொடுமைதான். இந்தக் கொடுமையை அகற்ற முயலுவதை விட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதுதான் விவேகம். இந்தக் கொடுமைகளை எதிர்த்து அன்பு மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதோ, இதனை மறுத்து தீவிரமாக எதிர்த்து நிற்பதோ வாழ்க்கையைத் துறந்து எங்காவது ஏகாந்தம் நாடி ஓடுவதோ நம்முடைய நியாய உணர்வைக் காட்டுமே தவிர, அவை இந்த நிலைமைக்குத் தீர்வாகா. நம் ஒவ்வொருவரையும் பொறுத்த தனிவாழ்க்கை எனும் சிறுவட்டத்தில் கூட இவை தீர்வாக மாட்டா.
நாம் அமைதியென்று நினைத்துக் கொண்டிருக்கிற, சமாதான சூழ்நிலையென்று நம்பிக் கொண்டிருக்கிற வாழ்க்கைகள் எல்லாமே மோதுதலையும், யுத்தங்களையும் தவிர்த்துக் கொண்டிருக்கிற சந்தர்ப்பங்கள் தானோ? - என்று கூடத் தோன்றுகிறது; எனவே அமைதியும் சமாதானமும், துறவும் அன்பும், பற்றற்ற அன்பும் நம்முள் ஏற்படுவதே மிக முக்கியம். அது இல்லாதபோது புறத்தே ஏற்படுகிற அமைதி இரண்டு மோதல்களுக்கு நடுவே ஏற்படுகிற யுத்தங்களின், கலவரங்களின் இயல்பேயான ஓய்வுதான்.
அந்த ஓய்ச்சல் அமைதி ஆகாது. இது சமாதானம் என்கிற விஷயத்துக்கே சற்றும் சம்பந்தமில்லாததாகும். இந்த ஓய்ச்சலில் மனங்கள் அல்ல, யுத்தங்களே ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. இதிலிருந்து முன்னிலும் அதிக மூர்த்தண்யத்தோடு யுத்தமே கிளைக்கிறது. இந்த ஓய்விலிருந்து மறுபடியும் சச்சரவு ஆரம்பமாகிறது. இது அமைதியோ, சமாதானமோ, சாந்தியோ ஆகாது. உண்மையான அமைதி என்பது, சமாதானம் என்பது, சாந்தி என்பது நிரந்தரமானது. அது நிரந்தரமாகவே மோதலையும் பகைமையையும் யுத்தத்தையும் தவிர்ப்பது. அப்படி ஒரு சாந்தியை இந்த வாழ்க்கை இதுவரை கண்டதில்லை.
நாம் வாழ்க்கையில் காண்பதெல்லாம் இந்த ஓய்ச்சல்தான். அதனால்தான் நாம் மறுபடியும் மறுபடியும் யுத்தத்துக்குக் கிளர்ந்தெழுகிறோம். யுத்தம் நம்முள் நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஆக்கிரமிப்பாளராயிருக்கிறோம்.
இந்த வரையறுப்புக்கள் உலக அளவிலும் சமுதாய அளவிலும், குடும்ப அளவிலும், ஏன் - நான் என்கிற தனிப்பட்ட அளவிலும்கூடப் பொருந்தும்.
இந்தக் கதை சம்பந்தப்பட்ட இரண்டு தனி மனிதர்களான கணவன் - மனைவியரிடையே மிக உயர்வான தரத்திலேற்பட்ட ஆக்கிரமிப்பினை, நான் விரும்புகின்ற ஒரு மனைவி எப்படிச் சமாளிப்பாள் என்கிற லட்சியமாகிய கற்பனையே கல்யாணி.
கல்யாணி என் மனைவி அல்ல; என் காதலியும் அல்ல; நான் தான். ரங்காவும் நான்தான். அண்ணாசாமியும் கூட நான்தான். இந்தக் கதையில் வருகிற எல்லாப் பாத்திரங்களும் நான்தான். ஏன், என் கதைகளில் வருகிற எல்லாப் பாத்திரங்களுமே - ஒன்றைக் கவனியுங்கள்; என் பாத்திரங்களில் யாருமே முழுக்க முழுக்க நல்லவர்களுமில்லை; கெட்டவர்களுமில்லை. நான் தான். நான் போட்டுக் கொள்ளுகின்ற - வாழ்க்கையில் நான் சந்தித்த பிறர் மாதிரியான - வேஷங்களே அவை.
கல்யாணி மாதிரி ஸ்தூல உருவங்கள் உண்டு. ஆனால் அதனுள் இருக்கின்ற சூட்சும உருவம் நான். அது எந்த அளவுக்கு யதார்த்தமோ அந்த அளவுக்குப் பொய். கல்யாணி என்பவள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதாக நான் காட்டுகிறேன். நான் அறிந்த வாழ்க்கையில் அவள் இல்லை; ஆனால் இருக்கக் கூடாது என்பதுமில்லை.
நான் விரும்புகிற மாதிரி இவள் இருப்பதனால் எழுகின்ற பிரச்னைகளைப் பாருங்கள். அவளது அமைதியும் ஆக்கிரமிப்பின்மையும் அவளது அன்பையே சம்பந்தப்பட்டவனால் சந்தேகப்பட வைக்கிறது! அவனது சந்தேகத்தை அவள் மாற்ற முயலாதபோது, அது அசட்டையாகக் கூடப் படுகிறது. இதை அறிகிற நாம் பாதிக்கப்படுகிற அளவுக்குக் கூடப் பாதிக்கப்படாத ஒரு மனோநிலை கல்யாணிக்கு ஏற்படுவதுதான் அவளது வாழ்க்கையில் மோதல்களை - அவலங்களைத் தவிர்த்தது.
இதற்குப் புறவாழ்க்கையினால் சற்றும் பாதிக்கப்படாத மனோநிலை தேவையாகிறது. அப்படிப்பட்ட மனோநிலையினாலும் வேறு விளைவுகள் நேர வாய்ப்பேற்பட்டு விடுகிறது. மனித வாழ்க்கை யாந்திரீகமாகவும், ஜடத் தன்மையானதாகவும் மாறிப் போகலாம். உணர்ச்சிகளின் தொடர்பில்லாமை (non-communication) நிகழ்ந்து மனுஷ வர்க்கத்தின் மிக அற்புதமான அழகே இழந்து போகிற ஆபத்து நேர்ந்து விடலாம்.
communicative- ஆகவும் (பிறரோடு பேச்சால் செய்கையால் தொடர்பு கொள்ளுதல்) இருக்க வேண்டும்; non-agressive ஆகவும் (ஆக்ரமிக்காமை) இருக்க வேண்டும் என்பதைப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து அதனைச் சொந்த வாழ்க்கையின் சுய-தர்மமாகக் கொள்ளுகிற தன்மை வேண்டும்.
ஆக்ரமிப்பு என்பது அதிக துன்பத்தை ஆக்ரமிக்கப்பட்டவரைப் பார்க்கினும் ஆக்ரமித்தவனுக்கே இழைத்து விடுகிறது. ஆக்ரமித்தவன் வெற்றியையும் அந்த மகிழ்ச்சியையும் கொண்டாடுவது கூடத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுகிற முயற்சிதான். அவன் தன்னால் ஆக்ரமிக்கப்பட்டதை எண்ணியெண்ணி எப்போதும் அஞ்சிக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை; அந்த அச்சம் அவனை மேன்மேலும் ஆக்ரமிக்கத் தூண்டுகிறது. அவன் இன்னும் அதிக துன்பங்களையே ஆக்ரமிக்கிறான். ரங்காவுக்கு ஏற்படுவது இதுதான்.
இந்த ஆக்ரமிப்பும் அச்சமும், யுத்தமும், அழிப்பும் இரண்டு நாடுகளூக்கிடையேதான் இரண்டு கூட்டங்களுக்கு இடையேதான் இரண்டு பகைவர்களுக்கிடையேதான் ஏற்படும் என்பதில்லை; அப்படி ஏற்படுவது மிகவும் சாதாரணமான, எல்லோருக்கும் தெரிகின்ற, உலகமும் ஒவ்வொருவரும் அறிந்த பழைய விஷயமாகும்.
இது இன்னும் சூட்சுமமாக, மிகவும் subtle ஆகவே அதிகம் நிகழ்கிறது. சம்பந்தப்பட்டவர்கள்கூட உணர முடியாமல் இந்தப் பெரும் சண்டை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் பகைமை அல்ல; பாசம் இதற்குக் காரணம். ஒருவருக்கொருவர் அந்நியமாக இருப்பதல்ல; சொந்தமாக இருப்பதே.
தந்தையும், மகனும், தாயும் மகளும், எஜமானும் வேலைக்காரனும், கணவனும் மனைவியும் சண்டை போடுகிறோம் என்கிற பிரக்ஞையோடு தம்மை மறந்து கூச்சலிட்டுக் கோபத்தில் மோதிக் கொள்ளூகிறார்களே, அந்தச் சமயத்தில் மட்டும் அல்ல - அவர்கள் அன்பு செய்கிற போதும், ஒருவருக்கொருவர் உபசரணை புரியும் போதும், ஒருவர் நலனில் ஒருவர் நாட்டம் கொள்ளூகிற போதும் இந்தச் சண்டை, இந்த ஆக்ரமிப்பு, இந்த அழிப்பு வேலை அதிகம் மும்முரம் கொள்கிறது.
நாட்டு வெறியும், மத வெறியும், இன வெறியும், இஸ வெறியும் மட்டும்தான் கேடுகளையும் அழிப்புகளையும் உற்பவிக்கும் என்பதல்ல. அன்பு வெறியும், நியாய வெறியும், ஆசை வெறியும், இன்ப வெறியும், தந்தை வெறியும், தாய் வெறியும் அதனிலும் அதிகமான அழிப்புகளை (destruction) ஏற்படுத்தும்.
பாருங்கள்! அன்பு செய்கிறவர்கள் தாங்கள் யார்மீது அன்பு காட்டுகிறார்களோ அவர்களது சொந்தத் தன்மைகளை அழித்துக் கொள்ள உடன்பட அவர்கள் மறுக்கிறபோது, தங்கள் 'அன்பை' அழித்துக் கொள்ளூகிறார்கள். சிலர் தங்களையே அழித்துக் கொள்ளூகிறார்கள். அவர்களுக்குப் பிரதியாகத் தங்கள்மீது அன்பில்லை என்று அழுகிறார்கள். அன்புக்குப் பிரதியே இந்த ஆக்ரமிப்புக்கு ஆட்படுதல்தான். இல்லாவிட்டால் 'நாகரிக'மானவர்கள் அந்த அன்பையே திரும்பப் பெற்றுக் கொள்ளூகிறார்களாம். ஆ! என்ன நாகரிகம்!
தாங்கள் ஏமாற்றபப்ட்டு விட்டதாகச் சிலர் நிராசைப்பட்டு விடுகிறார்கள். அதாவது - ஆக்ரமிப்பின் தோல்வியில் புலம்ப ஆரம்பித்து விடுகிறார்கள். சிலர் சபிக்கிறார்கள்; சிலர் கொலை செய்கிறார்கள்; சிலர் மனஸ்தாபம் கொண்டு மறுதலையாகிறார்கள்.
'அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார்மறத்துக்கும் அஃதே துணை'
என்ற குறள் இங்கு நினைவுக்கு வருகிறது.
பொறாமை இல்லாத காதலை, சம்ப்ந்தப்பட்ட, காதலியோ காதலனோ கூடப் புரிந்து கொள்ளுவதில்லை. ஆக்ரமிக்காத அன்புக்கு எங்கேயும் அங்கீகாரம் இல்லை.
கல்யாணியோடு ரங்காவுக்கு ஏற்பட்ட பிரச்னையே அதுதான். அவளது காதலில் பொறாமை இல்லை. அவளது அன்பில் ஆக்ரமிப்பு இல்லை. ஆக்ரமிக்காத ஒரு நிறைவான அன்பு வாழ்க்கையில் சம்பவிக்கும்போது யாருமே அதனை ஏற்றுக் கொள்ளுவதில்லை. அது ஒரு குறையாகவேதான் கொள்ளப்படும் என்று தோன்றுகிறது.
வாழ்க்கைக்கு நிறைவைத் தேடுவதாகப் பேசுவதெல்லாம் பொய். வாழ்க்கை நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் நமக்கோ மேலும் மேலும் குறைகள் வேண்டும். குறைந்தபட்சம் நம்முளே இருக்கும் ஆக்ரமிப்புப் பேயின் அசட்டுத் திருப்திக்காகவேனும் நமது 'எதிரி' உடல் ரீதியாகவாவது குறைபட்டால்தான் - அந்த மூளியில்தான் இந்தப் பேய் திருப்தி கண்டு அடங்குகிறது.
மகாத்மாக்கள் கூட ரங்காக்கள்தான். கல்யாணி வெறும் லட்சியப் படைப்பு. அதைப் பறந்து போகாமலிருக்கும் பொருட்டே, தரையில் காலூன்றும் பொருட்டே, காலை ஒடித்துப் போடுகிற கொடுமையில் கதைக்கு முடிவு கண்டேன். நெஞ்சு ஒடிவதைவிட இது கொடுமை குறைந்த விபத்தல்லவா? எல்லாருக்கும் - ரங்காவுக்குக் கூட அவள்பால் திருப்தியும் அநுதாபமும் ஏற்பட்டு விடுகிறதல்லவா? பாவம்! மனித இயல்பு அப்படித்தான் ஆகிவிட்டது.
பெண் எதோ ஒரு விஷயத்தில் ஆணில் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்.
சமுதாய மாற்றங்களூம், வாழ்க்கை முறைகளும் மாறினாலும் இந்த விதியினால் விளைகிற பிரச்னைகளின் வடிவங்கள்தான் மாறும் போலும்.
இந்தப் புத்தகத்துக்கு இது முன்னுரையாக எவ்வளவு பொருந்தும் என்று எனக்குத் தெரியாது. இதைப் படித்து இந்தப் பின்னணியில் கதையைப் படித்தால் வாசகர்க்கு உதவும் என்று நம்புகிறேன்.
இதனைத் தொடர்கதையாகப் பிரசுரித்த ஆனந்த விகடனுக்கும் பதிப்பகத்தாருக்கும் என் நன்றி.
நன்றி: ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (நாவல்) - ஏழாம் பதிப்பு: ஆகஸ்ட் 1993 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1.
கருத்துகள்