14/02/2011

சுரேஷ்குமார இந்திரஜித் - நேர்காணல்

சுரேஷ்குமார இந்திரஜித் (1953) தனித்துவமான கதை சொல்லல் முறையால், நுட்பமான வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படுபவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் இவர், குறைவாக எழுதியிருந்தாலும் நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

``அலையும் சிறகுகள்'' (1982), ``மறைந்து திரியும் கிழவன்'' (1993), மொத்தக் கதைகளின் தொகுப்பான ``மாபெரும் சூதாட்டம்'' (2005) முதலியவை இவரது நூல்கள். 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுதிய கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் விரைவில் வெளிவர உள்ளது.


மனைவி மல்லிகா, மகள்கள் அபிநயா, ஸ்ரீ  ஜனனி. மூத்த பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. சுரேஷ்குமார் தாத்தாவாகி விட்டாலும் தோற்றத்தில் இளைஞராகவே உள்ளார். தோற்றங்களுக்கு அடியோடும் உண்மைகளைக் கூறும் கதைகளை எழுதி வரும் இவர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார்.

ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அழகர் கோவிலுக்கு அருகிலுள்ள ஒயாஸிஸ் என்ற திறந்தவெளி உணவகத்தில் சந்தித்தோம். இலக்கியம் மட்டுமல்லாது பொதுவான பிற விசயங்கள் சார்ந்தும் பேசியதிலிருந்து -

தீராநதி: சில ஆண்டுகளாக வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் எழுதி வருகிறீர்கள். இதற்கான விசேஷ காரணம் ஏதும் உண்டா?

சுரேஷ்குமார இந்திரஜித்: ஒரு எழுத்தாளனுக்கு அனுபவங்கள் மாறிக்-கொண்டே இருக்கும். `அலையும் சிறகுகள்' எழுதிய காலத்தில் வந்த கதைகள் ஒரு தனிமனிதனுடைய உலகத்தில் திகைப்பை அடையக்கூடிய சூழலில் வாழும் ஆளுமையுடைய பிரதிபலிப்பாக இருக்கும். `மறைந்து திரியும் கிழவன்'   புதிர்களைக் காணும் ஆளுமையின் பிரதிபலிப்பாக இருக்கும்.

இப்போது நான் எழுதும் கதைகள் வேறுவிதமான அனுபவங்களை, ஒரு புதுவிதமான முறையில் சொல்வது. தளங்கள் ஒவ்வொரு கால-கட்டத்திலும் வேறுபட்டுப் போய்க் கொண்டே இருக்கும். இந்தத் தளங்கள் எனக்குப் புதிதாக இருக்கும்போது, அதைப் புனைவாக உருவாக்கக்கூடிய ஒரு மனநிலை உருவாகிறது. அப்படியான ஒருமனநிலை அதிகம் எழுதக் காரணியாகலாம். சமீபத்தில் நான் எழுதிய கதைகளில் ``புதுவிதமான செடிகளும் வர்ணப்பூக்களும்'' (உயிர்மை மாத இதழ், பிப்ரவரி, 2009) என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தது. அந்தக் கதையின் மையம் `ஒரு சிருஷ்டியை, சிருஷ்டிக்கு எதிரான சக்திகள் ஒடுக்க முற்படுகிறது. சிருஷ்டியை உருவாக்குபவனை வன்முறையின் மூலம் சந்திப்பதற்காக, சிருஷ்டிக்கு எதிரான சக்திகள் விரும்புகிறது. நான்கு குற்றவாளிகளை சிருஷ்டிக்கு எதிரான சக்தி அனுப்புகிறது. அவர்கள் வெவ்வேறு குற்றத்தன்மை கொண்ட செயல்களைச் செய்தவர்கள். சிருஷ்டியை எப்போதும் ஒடுக்க முடியாது.

சோவியத்யூனியன் என்பது பெரும் அரசாங்கம். அவர்களால் ஜோசப் ஃபிராட்ஸ்கியை  - எழுத்துக்களை ஒடுக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய இரும்புக்கோட்டையாக இருந்தாலும் அதை அந்தச் செடி எப்படியாவது உடைத்து வெளியில் வந்துவிடும். நான் சொன்ன நான்கு குற்றவாளிகளில் ஒருவன் கழுத்தில் கிடக்கும் தங்கச் செயின்களை அறுக்கக் கூடியவன். இன்னொருவன் தான் ஒரு பெரிய ரௌடி என்ற நினைப்பில் யாரையும் வெட்டக்கூடிய ஆள். மூன்றாமவன் ஒரு பெண்ணைக் கற்பழிக்கக் கூடியவன். நான்காமவன் தன் பக்கத்து வீட்டுக்காரரைக் கொலை செய்தவன். இப்படியான நான்கு பேரை, ஒரு சிருஷ்டிகர்த்தாவை ஒடுக்க அனுப்பப்படுகிறார்கள். இந்தக் கதையில் ஒரு எழுத்தாளன் சிருஷ்டிகர்த்தாவாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளான். அந்த எழுத்தாளன் `படைப்பும் குழந்தையும்' என்ற தலைப்பில் பேசுகிறான். அவன் பேசும்போது, அந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தாங்கள் செய்த குற்றச் செயல்களுக்குப் பின்புலமாக இருக்கக்கூடிய மனநிலை சார்ந்த விசயங்களை அவர்கள் மனதுக்குள் அவர்களே தொடுகிறார்கள்.

உதாரணமாக, கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவன், அவனது சிறு வயதில் வேறொரு பெண்ணால் தவறாகப் பயன்படுத்தப்பட்டவன். வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கும் அவனுக்குமான உறவு கிட்டத்தட்ட தாயார் மகன் உறவு போன்றதுதான். ஆனால், அந்தப் பெண் இவனைத் தவறாகப் பயன்படுத்துகிறாள்.இது அந்த எழுத்தாளன் பேசும்போது அந்தக் குற்றவாளியின் மனதில் ஓடுகிறது.

இதேபோல, ரௌடிபோல உள்ளவனுக்குப் பால்யகால நினைவு வருகிறது. தாயாரால் சுத்தமாகப் புறக்கணிக்கப்பட்டு அன்பற்ற மனிதனாய், தாயாருக்கும் அவனுக்கும் விரோதமான மனநிலை உருவாகிவிட்டது மனதில் வருகிறது.

இப்படியான ஒரு மனநிலையில் நான்கு பேரும் தத்தளிக்கிறார்கள். `படைப்பும் குழந்தையும்' என்ற தலைப்பில் பேசப்பட்டதைக் கேட்டபிறகு, ஏற்றுக்கொண்ட குற்றச் செயலைச் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதே சமயம், அந்த எழுத்தாளன் புனைவு சார்ந்த மனநிலை கொண்டவன் என்பதையும், அந்தக் கதையில் காட்டியிருப்பேன். இந்தக் கதையின் அடிப்படைத் தன்மை சிருஷ்டி என்பதை அழிக்க முடியாது என்பதுதான்.

சிருஷ்டி என்றவுடன் பசுவய்யாவின் `சவால்' என்ற கவிதை ஞாபகம் வருகிறது. ``தொடைகள் பிணைத்துக்கட்டி

கயிறுண்டு உன் கையில்

வாளுண்டு என் கையில்''என்று வரும் அந்தக் கவிதையில். சிருஷ்டிகர்த்தா எல்லோர் கையிலும் ஒரு வாள் இருக்கிறது. ஒருவரிடம் கயிறு உண்டு என்றால், சிருஷ்டி கர்த்தாவிடம் வாளுண்டு. அந்தவாள் கயிறைத் துண்டித்து விடும். ஆக, சிருஷ்டி என்பது மிக முக்கியம். சிருஷ்டி என்பது புனைவு சம்பந்தப்பட்ட விசயம். சிருஷ்டி என்பது ஒரு கிரியாசக்தி சம்பந்தப்பட்டது. இது ஒரு மர்மப்பிரதேசம். இதை எந்தவிதமான சக்தியாலும் ஒடுக்க முடியாது. ஏதாவது ஒரு கால கட்டத்தில் வந்து கொண்டேதான் இருக்கும். அந்த வகையில், இப்போது என்னைப் புதுத்தளங்கள் குறுக்கிடும்போது, அது சார்ந்து புனைவுகளையும் சூட்சுமங்களையும் உருவாக்க வேண்டியிருக்கிறது. இப்போது குற்றவாளிகள் இயங்கும் பகுதிகளில் புகுந்து, அந்தக் குற்றவாளிகள் பற்றிய கதைகளை எழுதும் எண்ணத்தில் இருக்கிறேன்.

சமீபத்தில் நான் எழுதிய புதிய கதைகளில் பெண்களைப் பற்றிய ஆண் மனோபாவம் இயங்கும்விதம் பற்றி எழுதியுள்ளேன். தாயார் உறவு முறை, சகோதரி உறவு முறை இல்லாத எல்லாப் பெண்களிடமும் ஒரு மனிதனுக்கு பெரிய Fantasy இருக்கிறது. அந்த Fantasy பெருமளவிற்கு காமம் சம்பந்தப்பட்டது. காமம் அவனிடம் எப்போதும் அழியாமல் இருந்து கொண்டே இருக்கும்.

நம் சமூகத்தில் காமம் என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் activate ஆகிக்கொண்டே இருக்கும். மனிதனுக்கு activate ஆவதைப்போல மனுஷிக்கும் அப்படித்தான் இருக்கும். தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் எல்லாமே காமம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் எனப் பாகுபாடில்லாமல் காமம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. இதையும் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், நம்மிடையே வாழும் ஒரு மனிதன் காம மன உணர்வு இல்லாமல் ஒரு நாளைக் கழிக்க முடியுமா? எனத் தெரியவில்லை. காம உணர்வு என்றால் ஷிமீஜ்ல் ஈடுபடவேண்டும் என்று அவசியம் இல்லை. அதைத்தான் சமீபத்தில் நான் எழுதிய ``ஒரு காதல் கதை'' என்ற கதையில் சித்திரிக்க முயன்றிருப்பேன். அதில் மகனுக்குத் திருமணமான பின்பும் ஒருத்தன், ``பேரிளம் பெண்களுடன் அவனுக்கு இருக்கும் உறவுகளைப் பற்றி அந்தக்கதை சொல்லிக் கொண்டே போகும். ஆனால், அவனுடைய மனதில் இருப்பது பால்யகாலத்தில் அவன் சிநேகித்த ஒரு பெண்தான்.

இதைப்போன்ற புதுவிதமான பிராந்தியத்துக்குள் என் எழுத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்வது நிறைய எழுதத் தூண்டுவதாக இருக்கிறது என்று சொல்லலாம்.

தீராநதி : உங்களுடைய வேலை சார்ந்த புற உலக அனுபவத்திற்கும் உங்கள் எழுத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

சுரேஷ்குமார இந்திரஜித்: ஒரு தொடர்பும் கிடையாது. வேலை சார்ந்து சில அனுபவங்கள் ஏற்படலாம். ஆனால் எந்த அளவிற்கு படைப்பிற்கு உதவியாய் இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. சில கதாபாத்திரங்களின் மனநிலையை அறிய ஒருவேளை உதவியாய் இருந்திருக்கலாம். மற்றபடி அதற்குப் பெரிய முக்கியத்துவம் கிடையாது.

தீராநதி : இன்றைய நிலையில் தீவிரமாகத் தமிழ் மனதை உலுக்கி எடுக்கும் ஈழத்தமிழர்கள் நிலை பற்றி ஒரு படைப்பாளியாய் எப்படி உணர்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் அரசியலாகிவிட்டது. இப்படி அரசியல் ஆகாமல் இருந்திருந்தால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கலாம்.

தீர்வு காணக்கூடிய சூழல் ஆரம்பத்தில் இருந்தது. 1983இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இலங்கையில் ஆரம்பித்தபோது, தமிழகத்தில் அரசியலாக்கப்படாத ஒரு சூழ்நிலை இருந்தது. பின்பு வரவர அரசியலாக்கப்பட்டது. இன்றுவரை இங்கு அதை அரசியலாக்கப்படாமல் இருந்திருந்தால், வேறுவிதமான கட்டத்தை அடைந்திருக்கலாம்.

இன்றைய நிலையில் இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்றக்கூடிய ஒரே ஒரு அமைப்புதான் உள்ளது. இது ஒரு பிரச்சினை.

இப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை ஊடகங்களில் பார்க்கவே பயமாக உள்ளது. பொதுவாகவே எனக்கு ஒரு அவலத்தைப் பார்த்தாலே என்னால் தாங்க முடியாது. இதனாலேயே நான் திரைப்படம் கூடப் பார்ப்பது கிடையாது. அதனால் தீவிரமான திரைப்படக் காட்சிகளைக் கூடப் பார்க்கமாட்டேன். ஏனென்றால், அது என்னைத் துன்புறுத்தும். தூங்க முடியாது. மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டி வரும். ஒரு கட்டத்தில் serious திரைப்படங்களைப் பார்ப்பதை விட்டு விட்டேன். இப்போது தமிழில் கலைத்தன்மை கொண்ட பல திரைப்படங்கள் நிறைய வர ஆரம்பித்துள்ளன. அப்படிப்பட்ட படங்களின் சில காட்சிகளைத் தொலைக் காட்சியில் பார்க்கும்போது பெரிய மனப்பிரச்சினை உருவாகிறது. பெரிய அவலங்கள் எனக்குப் பெரும் சித்திரவதையாக மாறிவிடுகிறது. அதனாலேயே அவலங்களை விட்டுத் தூர இருக்கவே விரும்புகிறேன். இப்படிநான் சொல்வதால், அந்த அவலம் என்னை ஆட்டுவிப்பதில்லை என்று அர்த்தம் கிடையாது. அந்த அவலம் என்னைத் துன்புறுத்துவதால், அதைப் பார்க்கவே துயரமாக உள்ளது. ஆனால் அவலங்கள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம். இன்றைக்கு இலங்கையில் நடக்கும் கொடுந்துயரைக் காட்டும் ஒரு குறுந்தகடை என்னிடம் கொடுத்தால், அதை என்னால் பார்க்க முடியாது. அதைப் பார்க்காமலேயே அங்கு நடக்கும் அவலங்களை என்னால் புரிந்துகொள்ள முடியும். இது எனக்கான ஒரு பிரச்சினை.

தீராநதி : ஈழத்தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரை எத்தனையோ பேர் இழந்துள்ளார்கள். ஒரு பிரச்சினையைக் கவனப்படுத்த தீக்குளிப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்:தீக்குளித்தல் என்பது எப்போதுமே Emotional ஆன மனநிலையில் உருவாவது. தீக்குளித்துப் பிழைத்துக் கொண்ட ஒருவர், பெரிய தலைவராக ஒரு காலத்திலும் உருவாக முடியாது? அந்த ஒருவர் `பலி'யாகவே கருதப்படுவார். மனநல மருத்துவரை இது குறித்துக் கேட்டால் ஏதாவது காரணம் சொல்வார்கள். தன் உயிரைக் கொடுப்பதன் மூலமாக ஒரு முக்கியத்துவம் அடைகிறார். முக்கியத்துவத்தை அவர் விரும்பியிருக்கலாம். தமிழ்நாட்டில் தீக்குளிப்பு சம்பந்தமாகப் பெரிய பாரம்பரியமே உள்ளது. தீக்குளிப்பு சம்பந்தமான எண்ணம் சாதாரண ஒரு தொண்டனுக்குத்தான் வரும். பெரும்பாலும் தொண்டர்கள் எல்லோருமே பாமரர்கள்தான். அறிவு ஜீவிகளாய் இருக்கமாட்டார்கள். தலைமைப் பண்பு உள்ள ஒருவர் தீக்குளிக்கமாட்டார். ஒரு தொண்டர்  தீக்குளித்துப் பிழைத்துக் கொண்டால், அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்று யாராவது சொல்வார்களா, என்ன?

தீராநதி : பொதுவாகவே நவீன இலக்கியவாதிகள் அரசியலுக்குள் வரமாட்டார்கள் என்று பேச்சு உண்டு. அரசியல் சார்ந்து உங்களுடைய ஈடுபாடு?

சுரேஷ்குமார இந்திரஜித் : நான் ஒரு அரசு ஊழியனாய் இருப்பதால் எனது அரசியல் ஈடுபாட்டை நடைமுறைப்படுத்த முடியாது. ஆனால், என்னுடைய அரசியல் கட்சி சார்ந்தது கிடையாது. எனக்கு திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மீது ஒரு ஈடுபாடு உண்டு. திராவிட இயக்கத்தின் பழைய நூல்களை இப்போது படிக்கும்போது அதிகமான ஈடுபாடு உருவாகிக்கொண்டே வருகிறது. உதாரணமாக, அண்ணாதுரையின் `தீ பரவட்டும்' என்ற நூல் படித்தேன். அண்ணாதுரைக்கும் சி.சுப்ரமணியத்துக்கும் இடையில் ஏற்படும் வாதப்பிரதிவாதங்கள் சிறப்பாக உள்ளது. இதையெல்லாம் படிக்கும்போது இயல்பாகவே மனதில் ஒருவித ஈடுபாடு படிகிறது. திராவிட இயக்கம் சமூக சீர்திருத்த இயக்கமாகத் தோன்றி அரசியல்கட்சியாக மாறியது. எனக்கு எப்போதுமே சமூக சீர்திருத்தம் மீது ஆர்வம் உண்டு. அரசியல் கட்சி என்ற அமைப்பாக மாறும்போது, அதற்கே உரிய பிரச்சினைகள் உருவாகும். ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்போது, அது அதிகாரத்திற்கு வரவேண்டிய தேவை உள்ளது. அப்போது மக்களின் ஓட்டுக்கள் அவசியம். அதனால், அதற்குரிய கணக்கு வழக்குகளுடன் செயல்பட வேண்டும். அப்படிக் கணக்கு வழக்குகளுடன் செயல்படும்போது அடிப்படையான கோட்பாடுகளில் சில பிரச்சினை வரவே செய்யும். எனக்கு அதன் அரசியலைவிட அதன் பின்னே உள்ள கோட்பாட்டையே விரும்புகிறேன்.

தீராநதி: அப்படியென்றால் தந்தை பெரியார் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: பெரியார் ஒரு முக்கியமான சீர்திருத்தவாதி என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் கிடையாது. அடிப்படையில் அவர் சாதியை ஒழிக்க வேண்டும் என்றார். பெண்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்றார். விதவைகள் மறுமணம் செய்ய வலியுறுத்தினார். பால்ய விவாகம், தேவதாசி முறை கூடாது என்றார். பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்றார். மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளைத் துறக்கச் சொன்னார். கீழ்மைப் பட்டவர்களாகச் சொல்பவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முன்னேற்றம் தர வேண்டும் என்றார். இதையெல்லாம் யாரும் மறுக்க முடியாது. அப்படி மறுப்பவர்கள் சனாதனம் சார்ந்தவர்களாக இருப்பார்கள். திராவிட இயக்கம் என்பதே ஆச்சாரத்துக்கு எதிரான அநாச்சாரமான இயக்கம். இப்போது எப்படி இலக்கியவாதிகள் அநாச்சாரமாக இருக்கிறார்களோ அதைப்போல. ஒரு அரசியல் தலைவர் இரவில் சீட்டு விளையாடுவார் என்று நாம் நினைக்க முடியாது. அவர் `பொடி' போடுவார் என்று நினைக்க முடியாது. சினிமாவில் நடிப்பார் என்றோ, நாடகத்தில் நடிப்பார் என்றோ நினைக்க முடியாது. ஆரியம் என்றால் இவர்கள் திராவிடம் என்பார்கள். ராமன் என்றால் இவர்கள் ராவணன் என்பார்கள். கம்பராமாயணம் என்றால் அதற்கு மாற்றாக இவர்கள் வேறொன்றைச் சொல்வார்கள். இப்படி எல்லாவற்றிலும் மாற்றுக் கலாச்சாரத்தை வலியுறுத்திய ஒரு அனாச்சாரமான இயக்கம் தான் அது. ஆனால், அனாச்சார இயக்கத்தில் என்ன பிரச்சினையென்றால், நவீன இலக்கியவாதிகள் அனாச்சாரம் என்று வரும்போது, அவர்களிடம் Discipline குறைவு ஏற்படுகிறதோ, அதைப்போல எந்த அனாச்சார இயக்கத்திலும் ஏற்படும். அதேபோல மக்களிடம் ஓட்டு வாங்கி அதிகாரம் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் சில சிஷீனீஜீக்ஷீஷீனீவீƒமீ செய்துகொள்ள வேண்டியது வரவே செய்யும். அதைத் தவிர்க்க முடியாது. இது துயரமானதுதான். என்னுடைய ஈடுபாடு கட்சி சார்ந்த அரசியல் அல்ல.

தீராநதி : நம் தமிழ் எழுத்தாளர்கள் நிகழ்காலம் பற்றிய பதிவுகளை எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இலக்கியம் என்பதை நிகழ்கால வரலாறு என்று நினைக்கிறீர்களா?

சுரேஷ்குமார இந்திரஜித் : இல்லை. நமக்குக் கிடைக்கக்கூடிய இலக்கியத் தடயங்களை வைத்து அன்றைய வாழ்வைக் கணிக்கவே முடியாது. சங்க இலக்கியத்தை வைத்துக்கொண்டு அன்றைய தமிழர் வாழ்வைக் கணித்தால், அது சரியானதாக இருக்காது. இன்றைக்கு உள்ள இலக்கியத்தை வைத்து இன்றைய தமிழர் வாழ்வைக் கணிக்க முடியுமா? பிற்காலத்தில் இன்றைய எழுத்துக்களில் எவை எஞ்சி நிற்கும் என்று நமக்குத் தெரியாது. இன்றைக்கு இலக்கியங்களைப் பராமரிக்க எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. அன்றைய காலத்தில் அதற்கான வழியில்லை. எவ்வளவோ விசயங்கள் காணாமல் போயிருக்கலாம். எவ்வளவோ விசயங்கள் நம் அறிவுக்கே எட்டாமலிருக்கலாம். கிடைத்த இலக்கியங்களை வைத்து மனிதர்களின் வாழ்க்கை முறையைச் சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் சொல்ல முடியாது.

தீராநதி : உங்களது இளம் வயது தமிழ் சினிமா கதாநாயகர்கள் எம்.ஜி.ஆர். - சிவாஜி ஆகியோர் பற்றிக் கூறுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: என்னுடைய பால்ய காலத்தில் சிவாஜி படம் பார்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்தது. எம்.ஜி.ஆர். படங்களை விரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிவாஜி படங்களில் வரும் துயரங்கள் எனக்குப் பெரும் பிரச்சினை. எம்.ஜி.ஆர். படம் பார்த்தால் பார்வையாளர்களுக்கு எந்தவிதமான அவலங்களோ, துயரங்களோ கிடையாது. அவரது கதாபாத்திரத்தில் துயரம் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துத் திரும்பினால் மகிழ்ச்சிதான் மிஞ்சும். துயரத்தின் சுவடைக் கூடப் பார்க்க முடியாது. இதுகூட எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகியிருக்கலாம். எம்.ஜி.ஆரைப் பொறுத்த அளவில், அவரைப் போன்ற வசீகரமான ஒருவரை உருவாக்க முடியுமா எனத் தெரியவில்லை. இன்னும்  சொல்லப்போனால் அவரது பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை எல்லாமே ஆச்சரியமானது. பூர்வீகம் மலையாளி. இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து முக்கியமான ஆகிருதியாக வளர்ந்தார். அவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்குமான உண்மையான ஈடுபாடு என்ன என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஆனால், அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். அங்கு அவர் முக்கியமான சக்தியாக உருவானார். அந்தக் கட்சியின் அடையாளமாகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆரின் ஆதர்சம் யார் என்று பார்த்தால், என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களைத்தான் சொல்ல முடியும். அண்ணாதுரையையோ அல்லது வேறு யாரையோ அவரது ஆசானாகச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அண்ணா சொன்ன பல கருத்துக்களை எம்.ஜி.ஆர். கடைப்பிடித்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், என்.எஸ்.கிருஷ்ணன் தன்னை நாடி வந்தவர்களுக்கும் சுற்றி இருந்தவர்களுக்கும் பெரிய அளவில் உதவி செய்யக்கூடிய பரோபகாரியாய், தர்ம சிந்தனை உள்ளவராய் இருந்தார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மாதிரியான குணங்களை எம்.ஜி.ஆர். சுவீகரித்துக் கொண்டார். எம்.ஜி.ஆருக்கு வறுமை என்றால் என்னவென்று தெரியும். சிரமங்கள் என்றால் என்னவென்று தெரியும். கஷ்டங்கள் என்றால் என்னவென்று தெரியும். எம்.ஜி.ஆர். மற்றவர்களுக்கு செய்த எவ்வளவோ உதவிகள் வெளியில் தெரிந்தும், தெரியாமலும் இருந்திருக்கிறது. சிவாஜியைவிட எம்.ஜி.ஆருக்கு சமயோஜித புத்தி அதிகம். சூழ்நிலையைப் பக்குவமாகப் புரிந்து கொண்டு நடக்கக்கூடிய சமயோஜித புத்தி ரொம்பப் பிரமாதமாக எம்.ஜி.ஆரிடம் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அதுதான்  அவரை இறுதிக்காலம் வரை காப்பாற்றியிருக்கிறது. அதுபோக, அவர் வசீகரமான மனித உருவம். அந்த வசீகரத்தையும் கடைசிவரை காப்பாற்றி வந்தார். அவருக்கேகூட தன்னைப்பற்றி கட்டழகன் என்ற நினைப்பு இருந்திருக்கலாம்.

தீராநதி: உங்களுக்குப் பிடித்த நடிகைகள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: சினிமா நடிகைகளுடன் ஒரு பார்வை-யாளனுக்கு இருக்கின்ற உறவு அவர்களது உருவம் சார்ந்ததுதான். இங்கு பிரமாதமான நடிகைகள் என்று யாரும் கிடையாது. அந்த வகையில் ஆரம்ப காலத்தில் என்னை ஈர்த்தவர்கள் கே.ஆர். விஜயா மற்றும் லெட்சுமி. சிலருக்கு சில நடிகைகள் பிடிக்கும். அதே நடிகைகள் சிலருக்குப் பிடிக்காது. இதற்குக் காரண காரியம் உண்டா என்றால்? தெரியவில்லை. சில்க் ஸ்மிதாவை எல்லோருக்கும் பிடித்ததற்குக் காரணம், அவரது அழகு அல்ல; அவரது கவர்ச்சியான உடல்வாகுதான். சமயங்களில் குறைந்த அழகுகூட அதிகம் பேருக்குப் பிடிக்கலாம். சில்க் ஸ்மிதாவை அழகான பெண் என்று சொல்ல முடியாது; கவர்ச்சிகரமான பெண்.

இன்னொரு விசயத்தையும் இப்போது சொல்ல விரும்புகிறேன். நம் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் காம மனோநிலைக்கும் நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இங்குள்ளவர்களுக்குக் காம வெளித்தூண்டுதல்கள் கிடையாது. சினிமாவில் உள்ள பிம்பங்கள்தான் காம வெளித்தூண்டுதலாக உள்ளது. இதில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது.

தீராநதி : தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் நிரம்பி வழிகின்றன. மதுப்பழக்கம் பற்றி உங்கள் பார்வை என்ன?

சுரேஷ்குமார இந்திரஜித் : மதுப்பழக்கம் ஏழை எளியவர்களுக்கு எப்போதுமே பிரச்சினைதான். குற்றவாளிகள் பலரும் குடிப்பதற்காகவே சில குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள். நிறையக் குடும்பத்தலைவர்கள் தமது சம்பாத்தியத்தைக் குடிக்காக செலவு செய்கிறார்கள். பல குடும்பங்-களில் மனைவி சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் சூழ்நிலை உள்ளது. இது ஒரு பெரிய அவலம்.

இன்னொரு பக்கம் வசதி வாய்ப்புள்ளவர்கள் குடியை ஒரு கொண்டாட்டமாக உருவகித்து செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஒரு பக்கம் அவலமாகவும், மறுபக்கம் கொண்டாட்டமாகவும் இருக்கிறது.

தீராநதி : இலக்கியவாதிகள் என்றால் ஒழுங்கற்ற தன்மையுடன்தான் வாழ வேண்டுமா? பிரமிள் அப்படித்தான் எல்லோரையும் வசீகரித்தாரா?

சுரேஷ்குமார இந்திரஜித்: ஒழுங்கற்ற தன்மை உள்ளவர் என்று பிரமிளைச் சொல்ல முடியாது. ஜி. நாகராஜனை அப்படிச் சொல்ல முடியும். பிரமிளால் அப்படி இருக்க முடியாது? அவரால் எந்தச் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டு இருக்க முடியாது. சுதந்திரமாக இருக்கக் கூடியவர். சம்பாத்தியத்திற்காக ஒரு வேலை பார்க்க வேண்டும் என்ற மனநிலையெல்லாம் அவரிடம் கிடையாது. அதற்குத் தகுந்தாற்போல அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். சுந்தரராமசாமியைப் பொறுத்தவரை,  அவர் perfectionயை விரும்பக்கூடியவர். ஒழுங்கற்று இருப்பவரும் இலக்கியம் படைக்கலாம். துல்லியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பவரும் இலக்கியம் படைக்கலாம். இலக்கியம் படைப்பதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. உதாரணத்திற்குச் சொல்லப் போனால், ழான் ஜெனே ஒரு திருடன். வில்லியம் ஃபாக்னர் விபச்சார விடுதியில் கணக்கெழுதியவர். டால்ஸ்டாய் ஒரு பிரபு. தாஸ்தாவஸ்கி வறுமையில் வாடியவர். வசதி படைத்தவர் ஆண்டன் செகாவ். இப்படி எல்லோராலும் இலக்கியம் படைக்க முடியும். இது ஒருவரது ஆளுமை சம்பந்தப்பட்டது.

தீராநதி : பிரமிளுக்கும் உங்களுக்கும் நேரடிப் பழக்கம் உண்டா?

சுரேஷ்குமார இந்திரஜித்: நெருக்கமான பழக்கம் என்று சொல்ல முடியாது. எனக்கு அவர் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவரை மதுரைக்கு வரவழைத்து நானும் ராஜமார்த்தாண்டனும் சிலநாட்கள் தங்க வைத்தோம். என்னுடைய மகளின் பெயரை ஸ்ரீஜனனி என்று மாற்றியது பிரமிள்தான். ஜனனி என்று தான் முதலில் வைத்திருந்தோம். ஏதோ கணக்குகள் போட்டு ஸ்ரீஜனனி என்று சொன்னார். இப்படியான பெயர் மாற்றும் விசயங்களில் ஈடுபாடு கிடையாது. ஆனால், அவர் போடும் கணக்குகளைக் குதூகலமாகக் கவனிக்கும் மனநிலை இருந்தது. ஸ்ரீஜனனி என்ற பெயர் என் குடும்பத்தினருக்குப் பிடித்துப்போனது. அது பிடிக்காமல் போயிருந்தால் வேண்டாம் என்றிருப்பார்கள். என்னுடைய மனைவிகூட அதைப்பற்றி இன்றும் நினைவு கூர்வார். ஸ்ரீஜனனி இப்போதுவரை கெட்டிக்காரி-யாகத்தான் உள்ளாள். பெயர் மாற்றத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என்று நினைக்கவில்லை.

தீராநதி : பிரமிள் படைப்புகள் பற்றி...

சுரேஷ்குமார இந்திரஜித்: படைப்பு ரீதியாக பிரமிள் மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன். அவரது கவிதைகளை ஒருகாலத்தில் மனப்பாடமாகவே வைத்திருந்தேன். இலக்கியம் சார்ந்த தெரிந்தவர்களைப் பார்க்கும்போது அவருடைய கவிதைகளைச் சொல்வதே எனக்குப் பெரும் சந்தோசம் அளிக்கும் காரியமாக இருந்தது? ஆனால், இப்போது அந்தக் கவிதைகள் மீது முன்பு இருந்த ஈடுபாடு உள்ளதாகச் சொல்ல முடியாது. இன்றைய காலகட்டத்தில் `படிமங்கள்' என்பது தேய்ந்து போனதுபோல் உள்ளது. ஆரம்பத்தில் `படிமங்கள்' என்பது முக்கியமானதாக இருந்தது. மழையைப் பற்றி

``பரிதி கிழிந்து தொங்கும் மின்னல்''

என்று எழுதியிருப்பார். கவிதையில் படிமத்தைப் பார்த்து உற்சாகம் அடைவதில்லை இப்போது. அப்போது பரவசமே இருந்தது. பிரமிள் படிமங்கள் இல்லாமல்கூட நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். பிரமிளின் முக்கியமான கவிதைகளை இன்றும் நாம் படிக்க முடியும். `கன்னி' என்று ஒரு கவிதை. எனக்கு மிகவும் பிடித்தது. அவரது `அதிரடிக்கவிதைகள்' கவிதைகளாகக் கொள்ள முடியாது. அது ஒரு அரசியலுக்காக எழுதப்பட்டது.

தீராநதி : உங்களுக்கும் சுந்தரராமசாமிக்கும் உள்ள உறவு பற்றி. உங்கள் `மாபெரும் சூதாட்டம்' நூலை ``நண்பர் சுந்தரராமசாமிக்கு'' என சமர்ப்பணம் செய்துள்ளீர்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: சுந்தரராமசாமி எல்லோரிடமும் நண்பராகத்-தான் பழகினார். சுந்தரராமசாமியின் தனிப்பட்ட நேர்ப்பேச்சுக்களை நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவருடைய கட்டுரைகளைவிட மிகச் சுவாரசியமானது அவருடன் நிகழ்த்தக்கூடிய சம்பாஷணை. கட்டுரை எழுதும்போது வாக்கியங்களை அமைப்பதில் சிக்கல் இருக்கும். நேரடியான உரையாடலில் complication எதுவும் இருக்காது. எழுதும்போது அதன் பாணி வேறு. உரையாடலில் அதன் முறை வேறு. அற்புதமாகப் பேசக்கூடியவர் சுந்தரராமசாமி. அவரை முதன் முறையாகச் சந்தித்தது 1976 அல்லது 1977 என்று ஞாபகம். அவரது கடையில்தான் பார்த்தேன்.  அடுத்தநாள் வீட்டிற்கு சாப்பிட வரச் சொன்னார். முதல் சந்திப்பிலேயே நம்மை சாப்பிடக்கூப்பிட வேண்டிய தேவை இல்லை. ஆனால் என்னால் போக முடியவில்லை. பின்பு, அவர் மதுரை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருந்ததில்லை. நாகர்கோவிலுக்கும் சில சந்தர்ப்பங்களில் போயிருக்கிறேன். இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவருடன் மதுபான விடுதியில் பொழுதைக் கழித்துள்ளேன்.

தீராநதி: சுந்தரராமசாமி இமையத்தின் கோவேறுகழுதைகள் பற்றி அப்போது மிகைப்படுத்திப் புகழ்ந்து விட்டார் என ராஜமார்த்தான் ஒரு இதழில் எழுதியிருந்தார். பொதுவாக சுந்தரராமசாமி அப்படிப்பட்டவரா?

சுரேஷ்குமார இந்திரஜித்: அப்படி இல்லை. சுந்தரராமசாமி அந்தக் காலகட்டத்தில் `கோவேறு கழுதைகள்' நாவலை முக்கியமானதாகக் கருதினார். அப்போது `க்ரியா' பதிப்பகத்திலிருந்து வெளியில் வந்து விட்டார். என் ஞாபகம் சரியாக இருக்குமானால், சுந்தரராமசாமி க்ரியாவிலிருந்து வெளியில் வந்தவுடன் வெளிவந்த முதல் நூல் `கோவேறு கழுதைகள்'. சுந்தரராமசாமி அமெரிக்கா செல்வதற்குமுன் மதுரையில் இமையத்தின் நாவலுக்கு கூட்டம் நடத்தப்பட்டது அதில் நானும் கலந்து கொண்டேன். கோவேறு கழுதைகள் பற்றி அவரும் பேசினார். நானும் பேசினேன். அந்த நாவல் என்னைப் பெரிய அளவில் கவர்ந்த நாவல் என்று சொல்ல முடியாது. ஆனால், சுந்தரராமசாமி அந்த நாவலை முக்கியமானதாகவே நினைத்துப் பேசினார்.

தீராநதி : மதுரையில் பேராசிரியர். ஐ.சி. பாலசுந்தரம், அவர்கள் கவிஞர் மீரா, பிரமிள், சுந்தரராமசாமி எனப் பலருக்கும் நண்பர். அவர் உங்கள் ஆசிரியராக இருந்துள்ளார். அவரைப் பற்றிச் சொல்லுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: ஐ.சி.பாலசுந்தரம் ஒரு முக்கியமானஆளுமைதான். ஒரு எழுத்தாளனுடைய படைப்பை எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஒரு கலையாகவே பயின்று வைத்திருந்தார். நுட்பமாகப் படிக்கக் கூடியவர். பல கதைகளை, கவிதைகளை, செய்தித்தாள் படிப்பது போலவே மேலோட்டமாகப் படித்தே பழகியிருப்போம். அதில் நம்மையறியாமலே நம் மனதில் பதியக்கூடிய விசயங்கள் மட்டுமே இருக்கும். அந்தக் கதை, கவிதை பற்றி ஒருவன் நுட்பமாகப் பேசும்போது நாம் மிரண்டு கூடப் போவோம். ஒரு படைப்பை எப்படி நுட்பமாகப் படிக்க வேண்டும் என்பதை பாலசுந்தரம் அவர்கள் மூலம் தான் கற்றுக் கொண்டேன். மேலும், அவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பவராக இருப்பார். ஆனால் பின்னாட்களில் அவரை Vertigo என்ற நோய் தாக்கிய பிறகு அவருடைய மனநிலையிலேயே ஒருவிதமான மன அழுத்தம் கூடிப்போனது என்று நினைக்கிறேன். இப்போது அவரை நான் பார்த்தால், அந்த மன அழுத்தம் என்னையும் தொற்றி விடுமோ என்ற பிரமை உள்ளது? அதனாலேயே அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளேன். எப்போதும் அவர் கால நேரமின்றி இருப்பார். மதியம் 2 மணிக்குத் தூங்கி எழுந்து காலை உணவு உண்பார். மாலை 6 மணிக்கு மதிய உணவு சாப்பிடுவார். நாம் நிர்ணயித்த காலம் அவருக்குக் கிடையாது. அவருக்கு காலம் என்பதே குழம்பிப் போயிருக்கும். காலம் என்பது அவருக்குக் கிடையாது.

தீராநதி: எண்பதுகளில் புத்தகம் வெளியிடுவது என்பது இப்போதுபோல எளிதானதல்ல. உங்கள் முதல் நூல் வெளியிட்டது பற்றிச் சொல்லுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: சுரேஷ்குமார இந்திரஜித் என்ற பெயரில் 1980-ல் தான் எழுத ஆரம்பித்தேன். 1982லேயே என் முதல் நூல் `அலையும் சிறகுகள்' வந்துவிட்டது. அப்போது திருநெல்வேலியில் கண்ணதாசன், கலாப்ரியா, சிவசு இவர்கள் எல்லோரும் சேர்ந்து இலக்கியத்தேடல் என்ற அமைப்பு வைத்திருந்தார்கள். புதிதாக எழுதுபவர்களின் கதைகளை நூலாக்கம் செய்ய வேண்டும் என்பதை ஒரு நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். இலங்கை எழுத்தாளர் சாந்தனின் கதைத்தொகுப்பையும் என்னுடைய கதைகளையும் இலக்கியத் தேடல் மூலமாக வெளியிட்டார்கள். என்னுடைய நூல் சிறியதாக இருந்தாலும், முக்கியமானது என வெளியிட்டவர்கள் உணர்ந்தார்கள். அதில் சிவசுதான் பதிப்பாளராக இருந்தார். நான் கதை எழுதத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே நூலாக்கம் பெற்றுவிட்டது. என்னுடைய நண்பர் பிரபஞ்சனின் முதல் தொகுப்புக்கூட இதற்குப் பின்தான் வந்தது.

தீராநதி : உங்களது இரண்டாம் தொகுப்பை வெளியிட்ட கவிஞர் மீராவுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்ததா?

சுரேஷ்குமார இந்திரஜித்: நேரடியாகத் தொடர்பு இருந்தது. அப்போது க்ரியா பதிப்பகம் முதன்மையான, முக்கியமான பதிப்பகமாக இருந்தது. க்ரியா ஒரு நூலை வெளியிட்டால் அது முக்கியமானதாக இருக்கும் என்று எழுத்தாளர்கள் மத்தியிலும், வாசகர்கள் மத்தியிலும் இருந்தது. ஆனால், க்ரியா ராமகிருஷ்ணன் மிக முக்கியமான எழுத்தாளர்களின் நூலை மட்டுமே வெளியிட்டார். அப்போது மற்றவர்களின் நூலை வெளியிட பதிப்பகமே கிடையாது. இன்றைய நிலையில் நிறைய பதிப்பகங்கள் உள்ளன; எழுதுவதற்குத்தான் ஆள் இல்லை என்று சொல்லுமளவு இருக்கிறது. `க்ரியா'விற்கு அடுத்ததாக அப்போது இருந்தது கவிஞர் மீராவின் `அன்னம்' பதிப்பகம்தான். என்னுடைய கதைகளை மீராவிடம் கொடுத்தேன். படித்துப் பார்த்தார். வெளியிடுவதாகச் சொன்னார். மேலட்டை எல்லாம் நானே தயார் செய்து கொடுத்தேன். ஆனால், அதிக எழுத்துப் பிழைகள். `க்ரியா' போல இதிலெல்லாம் மீரா அதிகக் கவனம் செலுத்தமாட்டார். அதற்காக மீராவைக் குறைத்து நான் மதிப்பிடவில்லை. இளந்தலைமுறையினர் பலரின் நூல்களை வெளியிடக் கூடிய நிறுவனமாக அன்னம் இருந்தது. அந்த வகையில் அந்த நிறுவனம் ஒரு முக்கியமான நிறுவனம்.

தீராநதி : இன்றைய நிலையில் இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் எழுத்தாளர்களைத் தனிமைப்படுத்தும் விதத்தில் உள்ளது. இது உங்களைப் பாதிக்கிறதா?

சுரேஷ்குமார இந்திரஜித்: நான் யாருடைய  ஆளும் கிடையாது. இதனால் எனக்கு எந்தவிதப் பாதிப்பும் கிடையாது. காலச்சுவடில் போய் சுரேஷ்குமார் உங்களுடைய ஆளா? என்றால், அவர்கள் இல்லை என்று சொல்லி விடுவார்கள். `உயிர்மை'யில் கேட்டாலும் அதேதான் நடக்கும். `உயிர் எழுத்து'வில் கேட்டால், அவர் எங்களுடைய ஆள் இல்லை என்றுதான் சொல்வார்கள். அப்படியென்றால் நான் யாருடைய ஆளும் இல்லை என்றுதானே அர்த்தம்.

இலக்கியக் குழுக்கள் என்பதைத் தவிர்க்க முடியாது. ஒத்த கருத்துடைய-வர்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் செயல்பட முடியும். அதற்கு எவ்வளவோ கணக்கு வழக்குகள் இருக்கும். மனரீதியாக ஒரே அலைவரிசையில் உள்ளவர்களாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு சில கருத்துக்கள் இருக்கும். இது இன்றைக்கு அல்ல; ஆரம்பகாலந்தொட்டே இருக்கிறது. அது தொடரத்தான் செய்யும்.

தீராநதி : பிரபஞ்சன் அவர்களுக்கும் உங்களுக்குமான நட்பு பற்றிச் சொல்லுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: நான் சென்னையில் அரசுப் பணியில் இருந்தபோது அக்னிபுத்திரன் வீட்டில் தங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் முதன் முறையாகப் பாண்டிச்சேரியிலிருந்து பிரபஞ்சன் சென்னைக்கு வருகிறார். வானம்பாடிகள் எல்லோரும் இணைந்து செயல்பட்டதில் அக்னிபுத்திரனுக்கும் பிரபஞ்சனுக்கும் உறவு இருந்தது. ஆனால், இருவருமே மனநிலையில் வெவ்வேறுவிதமான ஆட்கள் என்று எனக்குத்தெரியும். நான் வேறுவிதமான ஆள். பிரபஞ்சன் வேறு விதமான ஆள். அக்னிபுத்திரன் வேறுவிதமான ஆள். பொதுவான இலக்கிய ஈடுபாடு என்ற விசயம் எல்லோரையும் இணைத்தது. அந்தச் சமயத்தில் அவருடன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு உருவாகிவிட்டது. தினமும் மாலையில் அவரைச் சந்திப்பேன். `பரிக்ஷாஞாநி அப்போது கீழ்த்தளத்தில் குடியிருந்தார். அக்னிபுத்திரன் இன்னொரு பிளாட்டில் இரண்டாம் தளத்தில் இருந்தார். அக்னிபுத்திரன் என்னிடம் ரொம்பவும் நட்பாக இருந்தார். இன்றைக்கும் அக்னிபுத்திரன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மாறாத அன்பு வைத்துள்ளேன். இப்போது அடிக்கடி அவர்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தால்கூட அவர்கள் எனக்குக் கொடுத்த இடமும் என்னை நடத்திய விதமும் பெரிய பாராட்டு உணர்வும் மதிப்பும் இப்போது எனக்கு உள்ளது. ஆனால், அவருடைய இலக்கியம் சார்ந்த எண்ணப் போக்கு கொள்கைகள், கோட்பாடுகள் சார்ந்த எண்ணப்போக்குக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. நான் ரொம்ப லகுவான ஆள். அக்னிபுத்திரன் கறாரான ஆள். எல்லாவற்றையும் தத்துவரீதியாகவே பார்ப்பார். பிரபஞ்சனும் என்னைப்போலவே ஒரு லகுவான ஆள்தான். பிரபஞ்சகவி என்ற பெயரில் வானம்பாடி இதழில் எழுதியிருந்தாலும் அவர் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஆள் கிடையாது. கோட்பாடு, தத்துவத்தை வைத்துத்தான் எதையும் அவதாணிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பிரபஞ்சனிடம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர் கெட்டிக்காரர் இல்லை. அவருக்கு எதிரான கோலை' அவரே போட்டுக் கொள்வார். அது அவருக்குத் தெரியவும் செய்யாது. அதனால் அவர் எப்போதுமே கஷ்டத்தில்தான் இருப்பார் என்ற அனுமானம் எனக்கு உண்டு. ஆனால், அவர் நல்லவர். பழகுவதற்கு இனிமையான மனிதர். அவர் மீது எனக்கு எப்போதுமே பெரும் மதிப்பு உண்டு. அவர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருக்கிறது. ஆனால், அது என்கையில் இல்லை. அவர் கையில்தான் உள்ளது.

தீராநதி: இசை சார்ந்த உங்கள் ஈடுபாடு பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். இசை சார்ந்த ஈடுபாடு எப்போது ஏற்பட்டது?

சுரேஷ்குமார இந்திரஜித்: என்னுடைய அண்ணனுக்கும் மாமாவிற்கும் இசை சார்ந்த ஈடுபாடு இருந்தது. கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்கு அண்ணன் தொடர்ந்து போய் கேட்கக் கூடியவர். ஒரு வித்வான் பாடினால், அந்தப் பாட்டின் ராகத்தை உடனடியாகச் சொல்லக் கூடிய திறமை வாய்ந்தவர். மாமாவும் அப்படிப்பட்டவர்தான். இவர்கள் மூலம்தான் எனக்கும் இசை ஈடுபாடு தொற்றிக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால், முதன் முதலில் கர்நாடக இசை நோக்கிப் போகக் காரணமாக இருந்தது எம்.எஸ். சுப்புலெட்சுமியின் சகுந்தலை படப்பாடல்கள்தான். அந்தக் குரல் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கூர்மையானது. கத்திமுனை போல கூர்மையான குரல். அவ்வளவு கமகங்கள், பிர்காக்கள், அந்தப் பாடல்களைக் கேட்டவுடன் கர்நாடக சங்கீதம் நோக்கி என்னைச் செலுத்தி விட்டது. இன்றைக்கும் அந்தப் பாடல்கள் கேட்கக் கூடியதாகவே உள்ளது. கூர்மையான குரலில் உள்ள நெளிவு சுளிவுகள் நம்மை எப்போதும் கேட்கத் தூண்டுபவை. பிறகு தொடர்ந்து கச்சேரிகள் கேட்கத் தொடங்கினேன். பாடல்கள் கேட்டேன். மதுரையில் உள்ள எல்லா சபாக்களிலும் உறுப்பினராக உள்ளேன். கிட்டத்தட்ட இருபதாண்டுகள் கச்சேரிகள் கேட்டு வருகிறேன்.

தீராநதி : நீங்கள் பாடுபவர்களை வைத்து ரசிப்பீர்களா? அல்லது பாடல்கள் சார்ந்தா?

சுரேஷ்குமார இந்திரஜித்: சங்கீதத்தைப் பொறுத்த அளவில் ஒரு பாடகர் ஒரு பாடலை எப்படிப் பாடுகிறார் என்பதுதான் மிக முக்கியமானது. சங்கீதத்தில் முக்கியமாக நான் ரசிப்பது ஆலாபனையும் சுரமும்தான். பாட்டு என்பது ஒரு சாக்குதான். ஒரு ராகத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்துத்தான் கீர்த்தனையை ரசிக்க முடியும். வெறும் பாடலை - கீர்த்தனையை மட்டும் பாடும்போது அதை ரசிக்க முடியவில்லை. ஆனால், ஒரு நல்ல இசைப்பாடலைப் பாடும்போது ரசிக்க முடியும். உதாரணமாக பாரதியார் பாடல்களைப் பாடும்போது அதன்மீது ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது. ஆனால், ஒரு தெலுங்குக் கீர்த்தனையோ அல்லது ஒரு பக்திப் பாடலையோ ஒரு சங்கீதப் பாடகர் பாடும்போது அதை அவர் எப்படிப்பாடுகிறார் என்ற இசை நுணுக்கத்தின் அடிப்படையில்தான் ரசிக்க முடியும். என்னுடைய எண்ணம் என்னவென்றால், கர்நாடக சங்கீதத்தில் திறமைசாலியாக இருக்க வேண்டுமென்றால், அதற்குப் பக்தி இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு பாடகன் பக்தி பாவத்தை உருவாக்க முடியும்; பக்தி என்பது இல்லாமலே தெலுங்குக் கீர்த்தனைகள் பலவும் கவிதைத் தன்மை அல்லாதவையாக இருக்கும். அல்லது பாடக்கூடிய எல்லாக் கீர்த்தனைகளும் கடவுளைப் பற்றியதாக உள்ளது. இது இல்லாமல் கர்நாடக இசைப் பாடகர்கள் இசைப்பாடல்களைப் பாடத் தொடங்கினால், அதன் மூலம் கர்நாடக சங்கீதம் பெரும் வீச்சுக்குப் போகக்கூடிய வாய்ப்பு உண்டு என்பது என் கருத்து.

கர்நாடக சங்கீதம் சபாக்களின் பராமரிப்பில் உள்ளது. சபாக்களை நிர்வகிப்பவர்கள் சனாதனமான ஆட்கள். சங்கீதத்தைக் கேட்க வருபவர்களும் சனாதனமான ஆட்கள்தான். அதனால் புதுவிதமான முயற்சிகளைச் செய்வதும் பெரும் சவாலாக உள்ளது. ஒரு திறமையான சங்கீதக்காரர் தன்னுடைய சங்கீதத்தின் வீச்சு மூலமாக அதைச் சாதிக்க முடியும்.

தீராநதி : எப்படியான இசைப்பாடல்களைப் பாட வேண்டும் என்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: உதாரணத்துடன் சொன்னால், சினிமாவில் பாடும் இசைப்பாடல்களைக்கூட சங்கீத வித்வான்கள் அற்புதமாகப் பாடமுடியும். `காலங்களில் அவள் வசந்தம்' என்ற பாடலை எடுத்துக் கொண்டால், அதை நல்லவிதமாகப் பாடமுடியும். அதே ராகம், தாளம், பல்லவியோடு ராகமாலிகையோடு சங்கீதத் திறமைகளைக் காண்பித்து அந்தப் பாடலைப் பாட முடியும். இதைப் போன்ற பாடல்களைத் தொடர்ந்து பாடும்போது, இதைப் போன்ற சிறப்பான புதிய பாடல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். அப்படிப் புதிய பாடல்களைப் பாடும் போது பக்தி சார்ந்த கீர்த்தனைகளைத் தவிர இசைப்பாடல்களைக் கர்நாடக சங்கீதத்தில் பாடுகிற மாற்றாக ஏற்படும். அந்தக் காலகட்டத்தை நான் ரொம்பவும் கற்பனை செய்து கொண்டுள்ளேன். ஆனால், அது நடக்குமா என்று தெரியவில்லை.

தீராநதி : நமது நவீன கவிதைகளைக் கர்நாடக சங்கீத முறையில் பாட முடியுமா?

சுரேஷ்குமார இந்திரஜித்: அது ரொம்பக் கஷ்டம். வார்த்தைகள் ராகங்களுக்கும் பாட்டு முறைக்கும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாக இருந்தால்தான் அது சாத்தியம். நம்முடைய நவீன கவிதைகள் படிப்பதற்கு மட்டுமே உரியது. பாடுவதற்கு சரியாக வராது. அப்படியான ஒரு சில கவிதைகளையும் கண்டுபிடிக்கலாம். அதைப் பொதுவான முறையில் சொல்ல முடியாது.

தீராநதி : உங்களைக் கவர்ந்த கர்நாடக இசைப் பாடகர்கள் யார் யார்?

சுரேஷ்குமார இந்திரஜித்: அதற்கு மூன்று பேரைச் சொல்வேன். சஞ்சய் சுப்ரமணியன், நெய்வேலி சந்தான கோபாலன், அருணா சாய்ராம். இதில் அருணா சாய்ராம் பற்றி அதிகம் தெரியாது. நெய்வேலி சந்தான கோபாலன் ரொம்பவும் திறமையான சங்கீத வித்வான். ஆனால், அவர் என்ன காரணத்தினாலேயோ பெரிய உபன்யாச கர்த்தாவாக மாறிவிட்டார். அவர் அப்படி உபன்யாச கர்த்தாவாக மாறியதாலோ என்னவோ நிறையப் பேசுகிறார். சங்கீதத்தை மட்டுமே அவர் பாவித்திருத்திருந்தால் இன்னும் பெரும் உயரத்திற்குப் போயிருக்க முடியும். அவர் பாடுகிற பாணி, உச்சரிப்பு முறை ரொம்பவும் வித்தியாசமானது. ஆனால், இப்போது அவர் உச்சத்துக்குப் போகும்போது குரல் உடைகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. மேலும் சந்தான கோபாலன் பெருமளவிற்கு சம்பிரதாயமான மனதுள்ளவர். ஆனால் மிகத் திறமைசாலியான பாடகர்.

சஞ்சய் சுப்ரமணியத்தைப் பொறுத்த அளவில், அவரிடம் நவீன மனம் உள்ளது. பரவசமூட்டக்கூடிய சங்கீதவித்-வான் அவர். வித்தியாசமாகப் புதுமையான முறையில் பாடல்களைப் பாடுகிறார்.

இன்றைய தேதியில் நெய்வேலி சந்தான கோபாலனைவிட அதிக உயரத்திற்குப் போனவர். அவரது கச்சேரிகளைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளேன். புதுவிதமான ராகங்களை எல்லாம் பாடிக்கொண்டுள்ளார். `சூழனி' என்ற ராகத்தில் அவர் பாடிக்கேட்டேன். அதை அற்புதமாகப் பாடியிருந்தார். சுரம்பாடுவதிலும் முக்கியமான தளத்தை அவர் அடைந்திருக்கிறார். அவரிடம் நவீன மனம் உள்ளதால், புதுமைகளை அவரால் செய்யமுடியும். அவரிடமிருந்து இன்னும் பல புதுமைகளை எதிர்பார்க்கிறேன். என்னவிதமான புதுமைகள் செய்யமுடியும் என்பதை அந்த வித்வான்தான் முடிவு செய்ய முடியும்.

அருணாசாய்ராமைப் பொறுத்தவரைக்கும் அவரது குரல் ஆண்தன்மை கலந்தது. எப்படி பாகவதரிடம் பெண் தன்மைக்குரல் கலந்திருந்ததோ அதைப்போல அருணாசாய்ராமிடம் ஆண் தன்மைக் குரல். நிறையப் புதுமைகள் செய்கிறார் இவர். உதாரணமாகச் சொன்னால், ``ஆடாது அசங்காது வா கண்ணா'' `மத்தியமாவதி' ராகத்தில் ஊத்துக்காடு வெங்கடசுப்ரமணியன் பாடல். இதை அவர் பாடிக்கொண்டே வரும்போது `தோடி'க்குத் தாவி விடுகிறார். தோடிக்குத் தாவுவதால் அந்தப் பாடலை முதலில் இருந்து, பாடுவதில்லை. `காலினில் சலங்கை கொஞ்ச' என்று பாதிப்பாட்டிலிருந்து தோடியைக் கொண்டு போகிறார்கள். அப்புறம் `ஜெயந்தஸ்ரீக்குப் போகிறார். அடுத்துப் பூபாளம், `அடாணா' என்று மாறி மாறிப் போய்க் கொண்டே இருக்கிறார். இது என்னவிதமான பயணம் என்று தெரியவில்லை. ஆனால், ரொம்ப பரவசமான அனுபவமாக உள்ளது.
அதேபோல அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களைப் பாடுகிற குறுந்தகட்டில் சுரபேதம் காண்பிக்கும்போது சுரத்திலேயே `தர்மவதி'க்குப் போவார். `தர்மவதி'யிலிருந்து `ரீதிகௌளை'க்குப் போவார். மேலும் காண ரஞ்சனி மற்றும் சில ராகங்களுக்குப் போவார். இதைக் கேட்கும்போது புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். அருணா சாய்ராமும் ஆலாபனை மற்றும் சுரத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெறும் கீர்த்தனைகளை மட்டுமே தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தால் சிறந்த சங்கீத நுகர்வோர்களுக்குத் திருப்தி ஏற்படாது. ஆனால், எனக்கு நம்பிக்கை இந்த மூவர்தான்.

தீராநதி : இளையராஜா பற்றி ஒரு இதழில் நீங்கள் எழுதியது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. இசை சார்ந்து அவரது முக்கியத்துவம் பற்றிச் சொல்லுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: இளையராஜாவின் இசை மீது ஆரம்பகாலத்திலிருந்தே பெரிய ஈடுபாடு ஏற்பட்டதில்லை. உயிர்மை இதழில் இளையராஜாவின் `மச்சானைப் பார்த்தீங்களா' பாட்டைக் கேட்கவே முடியாது என எழுதியிருந்தேன். அவரது குரலிலும் சுதி சேர்வதில்லை என்பதையும் அதில் சொல்லியிருந்தேன். இது எல்லோருமே ஒத்துக்கொள்ளக் கூடிய விசயமாகக் கூட இருக்கலாம். இளையராஜாவின் `Nothing But Wind','How to Name it', `திருவாசகம்' இது எல்லாம் இசை சார்ந்த சாதனை என்று தோன்றவில்லை. இளையராஜா மீது பலருக்கும் பிரமை சார்ந்து மதிப்பும் பாராட்டுணர்வும் இருக்கிறது. அவரை ஒன்றுமே இல்லாத பூஜ்ஜியம் என்று சொல்லவில்லை.

அவரிடம் புதுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நான் சொல்ல வருவது. அவருடைய இசை முழுக்கப் பழமையின் நெடி அடித்துக்கொண்டே உள்ளது. அதில் மூச்சுத் திணறுகிறது. ஆனால், அந்த மாதிரியான ஆயாசம் ஏ.ஆர். ரகுமானிடம் ஏற்பட்டது கிடையாது. அவருடைய `சங்கமம்' `மின்சாரக்கனவு' `தால்', `அக்பர்' போன்ற படங்களில் உள்ள பாடல்கள் எல்லாமே மிகப் புதுமையானவை.

`உயிர்மை'யில் எழுதிய பத்தியில் இளையராஜா பற்றிய என் கருத்துக்களை எழுதியபோது தனிப்பட்ட முறையில் எனக்கு எதிர்வினைகள் வந்தது; கொஞ்சம் கடுமையாகவே. நிறைய மிரட்டல்கள் தொலைபேசி வழி வந்தது. நான் வைத்த விமர்சனத்தை Communal ரீதியாகப் பார்த்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இசைக்கும் Communal க்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இளையராஜா பற்றிய விமர்சனத்தை Communal ஆகப் பார்ப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

தீராநதி : கவிஞர் கனிமொழி முயற்சியால் நடக்கும் `சங்கமம்' மாதிரியான நிகழ்வுகள் எப்படியான பாதிப்பை சமூகத்தில் உண்டாக்கும்?

சுரேஷ்குமார இந்திரஜித்: திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இப்படியான ஒரு கலாச்சார நிகழ்வுகளை நடத்துவதே எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது. சங்கமம் துவக்க விழாவைப் பார்த்தபோது, துவக்க விழாவே மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. சங்கமத்தின் வெவ்வேறு இடத்தில் நடந்த நிகழ்வுகளை நான் பார்க்கவில்லை. துவக்க விழாவில் classical,folk சம்பந்தப்பட்ட விசயங்கள் எல்லாமே நுட்பமான முறையில் இருந்தது. Drumsன் அதிசயங்கள் எல்லாமே பிரமாதமான முறையில் ஒன்றிணைந்திருந்தது. இதைப் பார்க்கும்போதே பரவசமடைந்தேன். இதை முக்கியமான நிகழ்வாகவே கருதுகிறேன். கவிஞர் கனிமொழியைப் பொறுத்த அளவில் கலாச்சாரத் தளத்தில் இயங்குவதில்தான் ஆர்வமுள்ளவராகத் தோன்றுகிறது. இதில் அவர் அதிகம் சாதிக்க வாய்ப்புக்களும் அதற்கு உண்டான சந்தர்ப்பங்களும் இருக்கிறது என்றே நினைக்கிறேன். நிறையச் சாதிப்பார் என்றே நினைக்கிறேன்.

தீராநதி: உங்கள் மனைவி, மகள்கள் உங்கள் எழுத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: அவர்கள் என்னுடைய எழுத்துக்களைப் படிப்பதே கிடையாது. என் மனைவி என்னைக் கணவராகவும், மகள்கள் தந்தையாக மட்டுமே பார்க்கிறார்கள். கூடுதலாகச் சொன்னால்  அறிவான தந்தையாகப் பார்க்கிறார்கள். எப்படி இவர் விசயங்களை அறிவுபூர்வமாக அணுகுகிறார். குடும்பத்தில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளை எப்படி அதை அறிவோடு எளிமையாகத் தீர்த்து வைக்கிறார் என்றுதான் பிரமிக்கிறார்களே ஒழிய, என்னை ஒரு எழுத்தாளராகப் படித்ததாய்த் தெரியவில்லை. அறிவான ஆளாக நினைப்பதால், இவர் எழுதுவதும் மதிப்புக்குரிய எழுத்தாக இருக்கும் என்று நினைத்திருக்கலாம். என் எழுத்தைப் படிப்பதோ, அதன் மீது ஈடுபாடோ இருப்பதாகத் தெரியவில்லை.

தீராநதி : வாழ்வின் மாறாததாக இருப்பது மரணம். மரணம் பற்றிய உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்கள்.

சுரேஷ்குமார இந்திரஜித்: வயது ஆக ஆக மரணம் பற்றிய அச்சம் எல்லா மனிதர்களிடமும் உருவாகிக் கொண்டே இருக்கும். ஏனென்றால், நம் எண்ணங்கள், நம் ஆசைகள், நம் விருப்பங்கள், நம் மனது இதுவரை  சேகரித்த விசயங்கள் எல்லாமே மரணத்தால் மறைந்து போகிறது. அதனால், மரணம் என்பது எல்லோருக்குமே அச்சம் தரக்கூடியதுதான். அதைத்தவிர, நம்முடன் வாழ்ந்தவர்கள், நமக்கு மூத்தவர்கள், சக வயதுக்காரர்கள் எல்லோரும் மறைந்து போகும்போது, நமக்குப் பெரும் பிரச்சினையாகத்தான் உருவாகும். மரணத்தைச் சந்திக்கும்போது ஒரு மனிதன் பலமான மனதோடு இருப்பான் என்று நான் நம்ப முடியவில்லை. ரொம்பத் தடுமாறித்தான் போகும். மரணத்தை யாரும் விரும்பமாட்டார்கள். பயம் வரத்தான் செய்யும். யாரும் அந்தப் பயத்தைத் தவிர்க்க முடியாது. வயது ஏற ஏற, பால்ய காலத்தை நோக்கி மனது போய்க்கொண்டே இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு உள்ளது.

ப. சிங்காரத்தின் நாவலில் பாண்டியன் என்ற கதாபாத்திரம் இறக்கும் சமயத்தில், அவனுக்குப் பால்யகாலத்திலிருந்து நினைவுகள் வந்ததாக அவர் எழுதியிருப்பார். என்னுடைய உறவினர் ஒருவர், பெரிய உத்தியோகத்தில் இருந்தவர் சமூகத்தில் பெரும் செல்வாக்காக இருந்தவர், முக்கியமான ஒரு ஆள் என்று சொல்லலாம். அவர் மரணப்படுக்கையில் சுருண்டு ஒரு குழந்தைபோல் இருந்தபோது, அவர் பேசியது ஆச்சரியமளித்தது. அவரது மனைவி, மகள், மகன்கள் முதலிய குடும்ப உறுப்பினர்கைளக் கூட அவரால் அடையாளம் காணமுடியவில்லை. அவரை நான் பார்த்தபோது `பொருட்காட்சிக்குப் போனபோது என்னோட அம்மா பந்து வாங்கித்தரமாட்டேன் என்கிறது' என்று சொல்லிக்கொண்டு இருந்தார். இது ஒரு முக்கியமான விசயம். அதிர்ச்சியான விசயம். இது ஒரு வித்து. இந்த வித்தை ஒரு கதையாக்க நினைத்துள்ளேன். மரணத்தின் முன்பு எல்லோரும் குழந்தைகளாகி விடுவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. பின்னோக்கிச் செல்லும் மனம்.

தீராநதி : கடவுள், மதம், சாதி பற்றிய உங்கள் பார்வை என்ன?

சுரேஷ்குமார இந்திரஜித்: இந்தியாவைப் பொறுத்த அளவில் சாதி இருக்கவே செய்யும். ஏற்றத்தாழ்வுகள் பெரும் பிரச்சினைதான்.இந்த மனநிலையைக் குறைப்பதற்கும், போக்குவதற்கும்தான் பாடுபட வேண்டியுள்ளது. மதத்தைப் பொறுத்தவரை புதிரான வாழ்க்கையை நிர்ணயிக்கும், இயக்கும் அமானுஷ்யமான ஒரு சக்தி, அதற்குப் பல ரூபங்கள் உள்ளது. வரும் வழியில் ஒரு மரத்திற்குப் பாவாடை கட்டி வழிபடுவதைப் பார்த்தேன். பட்டிக்கல்லை குலதெய்வம் என்று கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான மரங்கள் சாமி மரங்களாக நிற்கின்றன. மதத்திற்குள்ளே இருக்கின்ற சீர்திருத்த எண்ணம் கொண்டவர்கள் செயல்படுவதற்கு நிறையப் பகுதிகள் மதத்திற்குள்ளேயே இருக்கிறது. கலாச்சார நிகழ்வுகள் மதத்தோடு பிணைந்திருக்கின்றன. தாய்மாமன் மடியில் வைத்துக் காது குத்துவது, பூப்புச் சடங்கில் தாய்மாமன் இடம், திருமணத்தில் தாய்மாமன் பங்கு, இறுதிச் சடங்குகளின் பல நிகழ்வுகள் கலாச்சார சம்பந்தமுடையது. மதத்தைக் கழித்து விட்டும் இதைச் செய்யலாம். எனினும் ஒரு சமூகத்தை முழுதும் நாத்திக மயமாக்கிவிட முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கெட்ட சக்திகளும் மூட நம்பிக்கைகளும், மோசடிக்காரர்களும், காலத்திற்கு ஒவ்வாத சனாதனமும் ஆத்திகத்திற்குள் இருக்கும். அதைக் கட்டுப்படுத்த, அதை எதிர்க்க எப்போதும் நாத்திகம் போராடிக் கொண்டே இருக்கும். இரண்டும் ஒன்றையொன்று ஈர்த்தும், எதிர்த்தும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

தீராநதி: இன்றைய சமூகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: தமிழ்ச் சமூகம் அரசியல் கட்சிகளாகப் பிரிந்து கிடக்கிறது. பொதுநலன் கருதி ஒற்றுமை ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகத் தோன்றவில்லை. இவை தவிர சாதி, சாமி பிரச்சினைகள் இருக்கின்றன. கிராமங்களில் நிலவும் சமூக மதிப்பீடுகள் மிகவும் மோசம். கிராமங்கள் நகரமயமாக்குவதற்கான வழிமுறைகளை யோசிக்க வேண்டும். சாதிவாரியான பகுதிகள். தாழ்த்தப்பட்டவர்களை மட்டமாக நினைக்கும் மனோநிலை. சாமி கும்பிடுவது தொடர்பான பிரச்சினைகள். மரியாதை தொடர்பான பிரச்சினைகள். பீர் குடித்து சுருட்டுப் பற்ற வைத்துக் கொண்டு குறி சொல்பவரை சாமி என்று கும்பிடும் கூட்டம் உள்ள பூமி இது. சாமி கோபித்துக் கொள்ளும் என்று ஒரு ஊரில் உள்ள வீடுகளில் கதவும் நிலையும் இல்லாமலே வாழ்ந்து வருகிறார்கள். சாமி கோபித்துக் கொள்ளும் என்று ஒரு ஊர் முழுவதும் குடிசை வீடாகவே உள்ளது. எந்த முன்னேற்றத்தையும் ஏற்றுக் கொள்ளாத எத்தனையோ கிராமங்கள் இருக்கவே செய்கின்றன. அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் பிற சாதியினரையும் அர்ச்சகராக்குவது ஒரு புறம் இருக்கட்டும். கிராமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் பூசாரியாகக் கொண்டு வந்தால் எதிர்ப்புகளைத் தாண்டி, மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை வந்தால், அது பெரிய மாறுதல்களை உருவாக்கும். மக்கள் தங்கள் பழைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது சமூக மனோநிலையில் ஏற்படும் மாற்றம் மூலம் மட்டுமே சாத்தியம்.

தீராநதி : சமூக மனோநிலையில் மாற்றம் எப்படி ஏற்படும்?

சுரேஷ்குமார இந்திரஜித்: குழந்தைத் திருமண எதிர்ப்பு, உடன்கட்டை மறுப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்குப் பங்கு, திருமணங்களில் சடங்கு மறுப்பு, விதவைத் திருமணம், சாதி மாறி திருமணம் என்ற பல சமூக சீர்த்திருத்தங்கள் சமூக மனநிலையில் இடம்பெற்றுவிட்டன. மக்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள் என்று கூற முடியாது. எந்த சீர்திருத்தத்தையுமே எல்லோரும் ஆமோதிக்கமாட்டார்கள். இங்குள்ள சிக்கல் என்னவென்றால், பொதுமேடை என்பது நாடகமேடை போல ஆகிவிட்டது. பொதுவில் ஒன்றைச் சொல்வது, நடைமுறையில் வேறு மாதிரி இருப்பது. பொதுவில் எதைப் பேசினால் அறிவானது என்று உள்ளதோ அதைப் பேசுவது. பெண் தெய்வத்தை வழிபடுவோம். ஆனால், நடைமுறையில் பெண்களின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருப்போம். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரு வெவ்வேறு பாதைகளாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தின் மனோநிலையை பல சீர்திருத்த எண்ணங்கள் இடம்பெற்றிருப்பதற்கு பெரியார் ஒரு முக்கியக் காரணம். இது ஒருபுறம் என்றால், இன்னொருபுறம், எதிர்மறைக் கருத்துடையவர்கள் சிரமப்பட்டுச் செய்யும் ஒரு காரியத்தை அந்தப் பிராந்தியத்திற்குள்ளேயே செல்வாக்குடன் இருப்பவர்கள் சுலபமாகச் செய்துவிட முடியும்.

உதாரணமாக, ஒரு சாமியார் அல்லது ஆத்திக அடிகளார் பெண்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம் என்பதைச் செயல்படுத்தலாம். இன்னொருவர், வீட்டிற்கு விலக்கான பெண்கள் சாமி தரிசனம் பண்ண வரலாம் எனத் தெரிவிக்கலாம். இதற்கெல்லாம் பெரிய எதிர்ப்பு வராது. எதிர்மறைக்காரர்கள் இதைச் செய்வது கடினம். ஆனால் இத்தகைய சாமியார்கள் தங்கள் ஆளுகைக்குள் உள்ள கோயில்களில் மட்டுமே இதைச் செயல்படுத்துவார்கள். இதுமூலம் பொதுசமூகக் கருத்தாக உருவாக்கம் பெறுவதற்கு அவர்கள் காரியம் செய்வதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்ப்பு வரும்.

கருத்துகள் இல்லை: