25/02/2011

நாட்டின் கெளரவத்தை மீட்டெடுத்த கா.சி.வேங்கடரமணி - செங்கோட்டை ஸ்ரீராம்

சென்ற நூற்றாண்டின் இலக்கியச் செழுமைக்கு வளம் சேர்த்தவர்களுள் தலையாய இடத்தை வகித்தவர் கா.சி.வேங்கடரமணி என்ற காவிரிப்பூம்பட்டினம் சித்தாந்த வேங்கடரமணி. நாவல், சிறுகதை, கட்டுரைகளை ஆங்கிலம்-தமிழ் என இருமொழித் தளங்களிலும் படைத்தவர். சிறந்த காந்தியவாதி. இவருடைய கதைகளில் கிராமிய மணம் கமழும். கிராமப்புற வாழ்க்கையின் உன்னதத்தை எடுத்துச் சொல்லுவதில் ஆர்வம்  அதிகம்.

தமிழக வரலாற்றில் அழியா இடம்பெற்றது காவிரிப்பூம்பட்டினம். அங்கே 1891-ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தார் வேங்கடரமணி. தந்தை சித்தாந்த ஐயர், சுங்கவரி விதிப்பு அதிகாரி. தாயார் யோகாம்பாள். அரசுப்பணி என்றாலும், தஞ்சை மண்ணுக்கே உரிய தோரணையுடன் விவசாய மேற்பார்வையிலேயே பெரிதும் செலவழித்தார் சித்தாந்த ஐயர். தன் மகனுக்கும் தஞ்சை கிராமப் பகுதியின் மீதான ஆழ்ந்த பற்றுதலை உருவாக்கினார். இந்தப் பற்றுதலே பின்னாளில் வேங்கடரமணி, தமிழிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளை எழுதிக் குவித்தபோது மண்ணின் பெருமையும் மகிமையும் கலந்தே வெளிப்படக் காரணமானது. மேலும், தன் சிறுகதைகளில் சுங்க வரிவிதிப்பு அதிகாரி பாத்திரங்கள் வரும் இடங்களில் தன் தந்தையின் தோரணையையும், அதிகார வாழ்வையும் புகுத்தியிருக்கிறார்.

சென்னையில், 1951-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தம் 60-ஆம் ஆண்டுவிழாவில் கா.சி.வேங்கடரமணி உற்சாகமாகக் கலந்துகொண்டு தனது இளமைக் காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். அதில், ""மாயவரம் வந்தது மகிழ்ச்சியான இடமாற்றம். சுழல்களோடு பாய்ந்து செல்லும் காவிரி ஆற்றங்கரையில் பள்ளிநேரம் போக மற்ற நேரங்களில் நான் இயற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பேன். புனிதமான காவிரியாறு எனக்கு ஒரு புது சுதந்திர உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஊட்டி என்னை ஓர் இயற்கை ரசிகனாக்கியது. மனிதகுலம் மீது ஆர்வம் காட்டும் மனிதனாய் மாற்றியது. அதுவரை பாடப்புத்தக அறிவாளியாக இருந்த என்னைக் காவிரியாறும், எட்மண்ட்பர்க்கும், ஸ்ரீஅரவிந்தரும், பக்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தேமாதரம் பாடலும் வங்கப்பிரிவினையும் வெறும் புத்தகப் படிப்பின் பயனின்மையை உணர்த்தின. பாடப் புத்தகங்களும், அறிஞர்களின் வறட்டுப்பொருள் வளமும் புத்தக அறிவை மட்டும் தந்து, தேர்வு எனும் கசாப்புக் கடையில் அடிபடும் படிப்பாளியாக மட்டும் மாற்றும் என்பதை உணர்ந்தேன். இவை, என் நாட்டின் மீதும் மனித இனத்தின் மீதும் முதன்முதலாக அன்பை உருவாக்கி ஊக்குவித்தன. சிறுவனாக இருக்கும்போதே நாட்டின் நிலையில் ஏதோ குறையுள்ளது என்பதை உணர்ந்தேன்...'' என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.

சிறுவயதில் இவர் கண்ட இந்தக் குறையே நாட்டின் மீதான, சமூகத்தின் மீதான மறுசீரமைப்புக் களத்தை கண்முன் நிறுத்தியது. அதுவே படைப்புக் களத்தில், "களை' எடுத்து உணர்ச்சி உரமூட்டியது.

கா.சி.வேங்கடரமணி எழுத்தாளனாக உருவெடுப்பதற்கு முன்பு, முதலில் ஒரு பத்திரிகையாளனாக வெளிப்பட்டுள்ளார். இவர் நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தபோது, மாயவரம் நகராட்சியினரின் திறமையற்ற ஊழல் நிறைந்த ஆட்சி முறையைக் கண்டித்து நீண்டதொரு கடிதம் வரைந்தார். அதை, சென்னையில் இருந்து வெளிவந்த "இந்தியன் பேட்ரியாட்' நாளேட்டுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அது ஒரு நிருபரின் செய்தியாக இவர் பெயரில் வெளிவர, மாயவரம் நகரே கொந்தளித்தது. எழுதியவரைத் தேடி மூலை முடுக்கெல்லாம் அதிகார சக்திகள் அலைந்து விசாரிக்கவே, இவருக்குள் ஓர் உத்வேகம் பிறந்தது.

எழுத்தின் மாபெரும் ஆற்றலை உணர்ந்துகொண்ட வேங்கடரமணிக்கு பத்திரிகை ஆர்வம் பெருக்கெடுத்தது. நிறைய பத்திரிகைகளை வரவழைத்துப் படித்தார். அந்த ஆர்வத்தில் அடுத்து சென்னை விக்டோரியா விடுதி வாழ்க்கைக்கு மாறினார்.

இலக்கியப் படிப்பு முடித்து, அந்நாளைய இயல்புப்படி சட்டப் படிப்புக்குத் தாவினார். சட்டவியலில் பட்டம் பெற்றார். ஆனால், அந்தத் தொழிலில் அவ்வளவாகப் பிரகாசித்தாரில்லை. சொல்லப்போனால், வேங்கடரமணியின் மனப்பாங்குக்கு அவரைவிட வேறெவரும் வழக்கறிஞர் தொழிலுக்குப் பொருத்தமற்றவராக இருந்திருக்க முடியாது. அவருடைய லட்சிய மனப்பாங்கும், வழக்கறிஞர் தொழிலில் வெற்றிபெறத் தேவையான உணர்ச்சிக்கு இடமளிக்காத புத்திசாலித்தனமும் வேறுவேறு திசையில் செல்பவையாயிற்றே!

உயர் நீதிமன்றத்துக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டார் - தன் சகாக்களான உயர்தட்டு மக்களுடன் உரையாட! சிறுவயதில் உறவாடிய மண்ணின் வாசமும் சேர்ந்துகொள்ள, அவரிடம் எழுத்தார்வம் மீண்டும் தலைதூக்கியது. அவருடைய நாவல்களில் அவரின் வழக்கறிஞர் வாழ்க்கையின் எதிரொலிகள் இப்படித்தான் இணைந்தன. "முருகன் ஓர் உழவன்' - நாவலில் வரும் மார்க்கண்டம் எனும் வழக்கறிஞர் பாத்திரம், அப்போது சட்டத்துறையில் புகழ்பெற்று, பின்னர் அட்வகேட் ஜெனரலான ஒரு வழக்கறிஞரை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதே!

கா.சி.வேங்கடரமணி படைத்தது இரண்டே நாவல்கள்தான். ஆனாலும், அவர் பெயரின் வீச்சு மிக அதிகம். காரணம், நாவல்களின் கருப்பொருளும் காலமும்! 1927-ஆம் ஆண்டு வெளியான "முருகன் ஓர் உழவன்' - கதை ஆலவந்தி என்ற கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. கதை முழுதும் காவிரியின் ஓட்டம்தான்! கேதாரி, ராமச்சந்திரன் என்ற பாத்திரங்கள் கிராமத்தில் இருந்து நகர வாழ்க்கைக்கு மாறும்போது ஏற்படும் திணறல்கள், முருகன் கதாபாத்திரம் கிராமத்திலேயே சிக்கித் திணறுவது என மூன்று நண்பர்களின் பாத்திரப் படைப்பு காலத்தைக் கண்முன் நிறுத்துகிறது. 1932-இல் வெளியான "தேசபக்தன் கந்தன்'-இன்றளவும் பேசப்படும் நாவல். சுதந்திரப் போராட்ட வாழ்க்கையின் கோரங்களும் சாதனைகளும் வெளிப்படும் காலப் பெட்டகம் இந்த நாவல். இந்த இரு நாவல்களையும் வேங்கடரமணி ஆங்கிலத்திலேயே படைத்தார். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

தாய்நாட்டின் உண்மை நிலவரம் சர்வதேச அளவில் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கிய வேங்கடரமணி, ஒரு கட்டத்தில் தன் பார்வையைத் தமிழுக்கு மாற்றிக்கொண்டார். தாய்மண்ணின் மீது, தாய்மொழியின் மீது கொண்ட பற்றால் 1922-இல் "தமிழ் உலகு' எனும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளே அவரால் அதை நடத்த முடிந்தது. பிறகு 1938-இல் இன்னொரு தமிழ்ப் பத்திரிகையைத் தொடங்கினார். ஹிந்து பத்திரிகையின் துணையாசிரியராகவும், விக்னேஸ்வரா என்ற பெயரில் எழுதிப் புகழடைந்தவருமான என்.ரகுநாதன் துணையுடன் வேங்கடரமணி இந்த இதழைத் துவக்கினார். அதுவே, அவரை ஒரு சிறந்த கட்டுரையாளராக தமிழ்ச் சமூகத்துக்கு அடையாளம் காட்டியது.

"பாரதமணி' எனும் அந்த இதழ், தமிழ்ப் பத்திரிகை உலகில் வரலாற்றுப் புகழ் பெற்றது. பொருளாதார நஷ்டத்தைத் தாங்கிக்கொண்டு கொள்கைப் பிடிப்போடு மண்ணின் தன்மை மணக்கும்படி இதழை நடத்தினார். பெ.நா.அப்புசாமி, பி.ஸ்ரீ. போன்ற அறிஞர்கள், பல நல்ல எழுத்தாளர்கள் "பாரதமணி'யில் தொடர்ந்து எழுதினர். இதில், கா.சி.வேங்கடரமணி ஆசிரியராக இருந்து எழுதிய "போகிறபோக்கில்' என்ற தொடர் கட்டுரைகள் மிகப் பிரபலமானவை. ஆனாலும் பொருளாதார நெருக்கடி, சில ஆண்டுகளிலேயே பாரதமணியை முடக்கியது. ÷பாரதமணியிலும் இன்னும் சில இதழ்களிலும் இவர் எழுதிக் குவித்த நினைவோட்டக் கட்டுரைகள், சிறுகதைகள் பின்னாளில் "ஜடாதரன் முதலிய கதைகள்' என்னும் தலைப்பில் ரகுநாதனின் முன்னுரையுடன் வெளியானது.

காகிதப் படகுகள், மணல்மேட்டின் மீது, அடுத்த நிலை, சாம்புவுடன் ஒருநாள், மறுமலர்ச்சி பெறும் இந்தியா, படைப்புக் கலையின் இயல்பு, இந்திய கிராமம், சோதிடத்தில் நேர்பாதை என சில நூல்களையும் எழுதிய இவர், 1952-இல் மறைந்தார்.

தாய்நாட்டின் புகழை தம் கதைகளிலும் கட்டுரைகளிலும் வெளிப்படுத்திய சுதந்திரப் போராளி; நாடு இழந்த கெüரவத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதை வலியுறுத்திய தேசபக்தன்; நன்றிமறவாத ஒரு நாட்டின் குடிமக்கள் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டியவர் கா.சி.வேங்கடரமணி,

 

கருத்துகள் இல்லை: