பலவீனங்கள் - ஜெயகாந்தன்
காட்சி 1
பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக் கதவு வெளியே பூட்டியிருக்கிறது. அறையிலிருப்பவன் மத்தியானமே வெளியே போயிருக்க வேண்டும். வலது கோடியில் உள்ள டைனிங் டேபிளின் மேல் சாப்பிட்ட தட்டுகள் சுத்தம் செய்யாமல் கிடக்கின்றன. அது 'சிங்கிள் ரூம்' ஆனதால் டைனிங் டேபிளுக்குப் பின்னால் அந்த ஒற்றைக் கட்டில் இருக்கிறது. கட்டிலின் மேல் டிரஸ்ஸிங் கவுனும் நாலைந்து புத்தகங்களும் இறைந்து கிடக்கின்றன. நேரே சுவரில் உள்ள அல்லிப்பூ மாதிரி அமைந்த இரண்டு பல்புகளுக்கடியில் கடிகாரம் மாட்டப்பட்டிருக்கிறது. அறைக்குள் விளக்குகள் ஒன்றும் எரியாததால் இருளில் மணி என்னவென்று தெரியவில்லை. இடது கோடியில் உள்ள அறையின் கதவுக்கு மேலுள்ள 'வென்ட்டிலேட்டரின்' வழியாக வெளியே இருந்து ஒரு துண்டு வெளிச்சம் அறைக்குள் கட்டிலின் மீது விழுந்திருக்கிறது. கடிகாரத்துக்குக் கீழே ஒரு மேஜையில், படுக்கையில் படுத்தவாறே கை நீட்டி எடுத்துக் கொள்ள ஒரு கண்ணாடி ஜாடியில் தண்ணீரும், அதன் மீது கவிழ்த்த தம்ளரும் பக்கத்தில் டெலிபோனும், ஒரு சிறு நாற்காலியும், ஒரு ஈஸி சேரும்... அறையிலுள்ள பொருட்கள் யாவும் அந்த வெளிச்சத்தில் மங்கலாகத் தெரிகின்றன. அறையின் வலதுபுறச் சுவரில் பாத்ரூம் கதவு தெரிகிறது!...
அறைக்கு வெளியே மாடிப் படிகளில் இருவர் ஏறி வரும் ஷீஸ் அணிந்த காலடிச் சப்தம் கேட்கிறது. முதலில் லேசாக ஆரம்பித்து நெருக்கமாய் ஒலிக்கிறது காலடியோசை... (ஒரு கரகரத்த ஆணின் குரல் கேட்கிறது.)
ஆண்குரல்: ஹே! ஸ்டெல்லா வாட் ஆர் யூ டூயிங் தேர்? கமான் பேபி (ஏ! ஸ்டெல்லா, என்ன செய்கிறாய் அங்கே?... வா பேபி)
(அவனுக்குப் பதில் சொல்வது போல் சற்று தூரத்திலிருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கிறீச்சிட்டு ஒலிக்கிறது.)
ஆண்குரல்: (அதட்டுகிற தொனியில்) உஷ்! டோண்ட் ஷவ்ட், திஸ் இஸ் எ ஹொட்டேல். (உஸ்! சப்தம் போடாதே, இது ஒரு ஹோட்டல்.)
ஸ்டெல்லாவின் குரல்: ஸோ, வாட்? எ ஹொட்டேல் இஸ் அ ஹொட்டேல்... டு யூ மீன் டு ஸே இட் இஸ் அ சர்ச்? (அதனால் என்ன, ஹோட்டல் என்ன மாதா கோயிலா?)
(அவளது குழறிய குரல் நெருங்கி வந்து ஒலிக்கிறது. அறைக் கதவின் மேல் அவள் சாய்ந்த சப்தத்தோடு கதவு அதிர்வது தெரிகிறது.)
ஸ்டெல்லாவின் குரல்: ஹேய்! ராபர்ட்ஸ்! ஸீ... மை ஸ்லிப்பர்... ஒன் ஆஃப் மை ஸ்லிப்பர்ஸ் ஸ்லிப்டு அவே (ஏ! ராபர்ட்ஸ்... என் ஸ்லிப்பரில் ஒன்று கழன்று விழுந்து விட்டது.)
(மீண்டும் சிரிப்பொலியுடன் அவள் சாய்ந்திருக்கும் அறைக்கதவு அதிர்கிறது.)
ராபர்ட்ஸின் குரல்: (அவன் மாடிப் படியின் கீழே கிடக்கும் ஸ்லிப்பரை எடுக்கப் போய் அங்கிருந்து பேசுவதால் தூரத்திலிருந்து கேட்கிறது.) டோண்ட் ஸிட் தேர்... ஹேய்! (குரல் நெருங்கி வருகிறது.) வாட் இஸ் திஸ்? லெட் அஸ் கோ இன்டு தி ரூம். கெட் அப்.. ம்.. கெட் அப்! (அங்கே உட்காராதே! ஏய், என்னது? நாம் அறைக்குள்ளே போகலாம். எழுந்திரு.. ம்... எழுந்திரு!)
(கதவருகே சரிந்து உட்கார்ந்தவளைத் தூக்குகிறான் போலும்)
லிப்ட் யுவர் புட்! நோ, தெ அதர் ஒன்! (பாதத்தைக் காட்டு; அந்தப் பாதத்தை...)
ஸ்டெல்லாவின் குரல்: தாங்க் யூ... ராபர்ட்ஸ்...
அறைக் கதவு திறக்கப்படும் சப்தம்; கதவு திறக்கிறது. கோட்டணிந்த ஓர் ஆணுருவம் உள்ளே வந்து லேசாக விசில் அடித்தவாறு விளக்கின் ஸ்விட்சைப் பொருத்துவதற்காக ஒரு தீக்குச்சியைக் கிழித்துச் சுவர் முழுவதையும் தேடி அறையின் இடது கோடியின் பக்க வாட்டிலுள்ள வாசற்கதவை ஒட்டியிருக்கும் ஸ்விட்சைப் போட அறை முழுதும் வெளிச்சம் பரவுகிறது. வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி நிற்கும் அந்த ஆங்கிலோ - இந்தியப் பெண் ஸ்டெல்லா உள்ளே வருகிறாள். இருவரும் அறையை நோட்டம் விட்ட பின் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்முறுவல் செய்து கொள்கின்றனர்.
அவள் தூய வெண்மையில் 'ஸ்கர்ட்' அணிந்து கழுத்தில் ஒரு கறுப்பு 'ஸ்கார்ப்'பை சுற்றியிருக்கிறாள். நல்ல உயரம்; நல்ல வெண்மை; செம்பட்டை முடி, தோள்வரை புரள்கிறது. காலில் வெள்ளை ஸ்லிப்பர். கையில் ஒரு கைப்பை.
அவள் கட்டிலுக்குப் பக்கத்தில் அறையின் சுவரோரமாக இருக்கும் டிரெஸிங் டேபிள் கண்ணாடியில் இடமும் வலமும் திரும்பித் திரும்பிப் பார்த்துத் தன்னைத் தானே ரசித்துக் கொள்கிறாள். கையிலுள்ள சாவியைச் சுழற்றிக் கொண்டே அவன் சற்று உலவி நடக்கிறான்.
அவள் ஸ்கார்பை எடுத்துக் கட்டிலில் எறிந்து விட்டுக் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன - கையகல - டிரான்ஸிஸ்டரை எடுத்து டிரஸிங் டேபிளின் மேல் வைத்த பின், சீப்பை எடுத்துச் சிகையை ஒதுக்கி விட்டுக் கொண்டு திரும்புகையில் கால் தடுமாறிய போது அவன் அவளைப் பிடித்துக் கொண்டு சிரிக்கிறான்.
ஸ்டெல்லா: (சிரித்துக் கொண்டே அவனிடமிருந்து விலகி) கிவ் மீ எ சிகரெட். (எனக்கு ஒரு சிகரெட்.)
(அவன் அவளுக்குச் சிகரெட்டைத் தந்து, பற்ற வைத்துக் கொள்ள உதவி, அந்தப் பாக்கெட்டை அவளிடம் கொடுக்கிறான்.)
ராபர்ட்ஸ்: கீப் இட் (வைத்துக் கொள்.)
பிறகு அவன் கடிகாரத்தைப் பார்க்கிறான்.
ராபர்ட்ஸ்: (அவளிடம் திரும்பி) பேபி, இட்ஸ் நைன் தர்ட்டி; ஐ ஆம் கோயிங் (மணி ஒன்பதரை; நான் போகிறேன்.)
(... என்று கூறியவாறு ஒரு பாட்டிலைக் கோட்டுப் பையிலிருந்து எடுத்து டெலிபோன் உள்ள மேஜையின் மீது வைக்கிறான். பாட்டிலைப் பார்த்ததும் அவள் எழுந்து மேஜையின் அருகே வந்து மகிழ்ச்சியுடன் கூறுகிறாள்.)
ஸ்டெல்லா: ஓ! ஹவ் நைஸ் இட் ஈஸ்!
ராபர்ட்ஸ்: (அவள் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி) ஓ.கே. ஷெல் ஐ கோ நவ்? (சரிதானே நான் போகலாமா? - என்று தன் கையிலிருந்த அறைச் சாவியை அவளிடம் தருகிறான்.)
ஸ்டெல்லா: (கண்களைச் சிமிட்டி ஒரு புன்னகையுடன்) தாங்க்யு வெரிமச்! வில் ஹி கம் வெரி லேட் இன் தி நைட்? (நன்றி, அவன் இரவு வெகுநேரம் கழித்து வருவானோ?)
ராபர்ட்ஸ்: (தோள்களைச் சுருக்கி) ஐ திங்க் ஸோ! ஸோ வாட்? யூ ஹாவ் யுவர் கம்ப்பானியன் (அப்படித்தான் நினைக்கிறேன். அதனால் என்ன? நீதான் உனது துணையைப் பெற்றிருக்கிறாயே... என்று பாட்டிலைக் காட்டுகிறான்.)
ஸ்டெல்லா: (அவனை லேசாக அடிக்கிறாள்) ஏய்! பை தி பை இஸ் ஹி அன் ஆங்கிலோ - இன்டியன்? (அது சரி. அவனுங்கூட ஒரு ஆங்கிலோ - இந்தியனா?)
ராபர்ட்ஸ்: ஹீ (யார்?)
ஸ்டெல்லா: தி மேன் ஹீ லிவ்ஸ் ஹியர்? (இங்கே இருக்கின்ற அந்த ஆள்...)
ராபர்ட்ஸ்: நவ் எடேஸ் எவ்ரி இன்டியன் இஸ் அன் ஆங்கிலோ - இன்டியன் டூ!
(இப்போது, ஒவ்வொரு இந்தியனும் ஒரு ஆங்கிலோ - இந்தியன் தான்.)
ஸ்டெல்லா: ஐ டோண்ட் ஃபாலோ யூ (நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.)
ராபர்ட்ஸ்: (சிகரெட்டைப் பொருத்தியவாறு கேலிக் குரலில்) ஐ ஸே, நவ் எ டேஸ் இட் இஸ் இம்ப்பாஸிபில் டு ஸே, ஹீ இஸ் நாட் அன் ஆங்கிலோ இன்டியன்! அன்ட் ஐ ஸப்போஸ், எவ்ரி இன்டியன் ஹேஸ் பிகம் அன் ஆங்கிலோ இன்டியன் டூ! (இந்தக் காலத்தில் யார் ஆங்கிலோ - இந்தியன் யார் இந்தியன் என்று இனம் காண்பது ரொம்பவும் கஷ்டம். எல்லா இந்தியனும் ஒரு ஆங்கிலோ இந்தியனாகவும் மாறிவிட்டான் என்றே நான் கருதுகிறேன்!)
ஸ்டெல்லா: (எரிச்சலுடன்) டோன் டாக் நான்ஸென்ஸ்! மை ஹஸ்பன்ட் வாஸ் அன் இன்டியன்... அஃப்கோர்ஸ் ஹி வாஸ் எ ட்ரூ கிறிஸ்டியன் டூ! குட் ரோமன், எ குட் மேன்! ஓ! மோரீஸ்...! (உளறாதே! என் கணவர் ஒரு இந்தியனாகத்தான் இருந்தார். அதே சமயத்தில் அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவராகவும் இருந்தார். ஒரு நல்ல ரோமன்... ஒரு நல்ல மனிதன்... ஓ! மோரீஸ்...!)
(பேசிக் கொண்டே அவள் கண்கள் கிறங்கத் தன் கணவனின் நினைவில் லயிக்கிறாள்.)
ராபர்ட்ஸ்: ஐ ஆம் ஸாரி! (என்று அவள் தோளைத் தொடுகிறான்.)
ஸ்டெல்லா: (அவன் குரல் கேட்டு அந்த லயம் கலைகிறது.) யூ ஆர் கோயிங்...? ஸோ, குட்நைட் ராபர்ட்ஸ்.
- என்று அவனிடம் கை குலுக்குகிறாள்.
ராபர்ட்ஸ்: யு ஹாவ் டிரங்க் டூ மச்...! ( - என்று எச்சரிப்பது போல் கூறிவிட்டு) குட்நைட் பேபி... ஸீ யூ இன் தி மார்னிங்... ஐ வில் கம் அன் டேக் யூ! அறைக் கதவைத் திறக்கிறான். அவள் கதவருகே போய் நின்று அவன் வெளியே போனதும், கதவை மூடித் தாழிட்டுவிட்டு உள்ளே வருகிறாள்...)
மாடிப் படிகளில் ஷீஸ் அணிந்த பாதங்களின் சப்தம் ஒலித்துத் தேய்கிறது.
அவள் கதவருகேயிருந்து அறையின் நடுவே வந்து நின்று கண்ணாடியில் தெரியும் தனது தோற்றத்தைப் புகை பிடித்தவாறே பார்க்கிறாள். பின்னர், திரும்பி அறையில் மேலும் கீழும் சுற்றி உலவி வருகிறாள்... பிறகு கட்டிலின் ஓர் ஓரமாய்ச் சிந்தனை தோய்ந்த முகத்துடன் எங்கோ பார்வை வெறித்தவாறு உட்காருகிறாள். திடீரென நினைவு வந்தது போல் கால் மேல் கால் போட்டு முழங்கால் வரை அவளது மேனியின் நிறத்துக்குப் பேதமில்லாமல் அணிந்திருந்த நைலான் ஸாக்ஸை உருவி எடுத்து ஈஸி சேரின் மேல் போடுகிறாள். மேஜை மீது இருந்த ஆஷ்டிரேயில் சிகரெட்டை நெறித்து அணைத்து விட்டு எழுந்து, தனது மெலுடைகளைக் கழற்றி ஈஸி சேரின் மீது ஒழுங்காக மடித்து வைத்த பின் - தோள் பட்டையிலிருந்து முழங்கால் வரை இறுக்கமாய் அணிந்திருந்த வெண்மையான உள்ளுடையுடன் மேஜையின் பக்கமிருந்த நாற்காலியில் வந்தமர்ந்து டிரான்ஸிஸ்டரைக் கையிலெடுத்துத் திருப்புகிறாள்.
இனிய மேற்கத்திய 'டுவிஸ்ட்' இசை ஒலிக்கிறது... முதலில் சற்று நேரம் உட்கார்ந்த நிலையில் உடலை நௌ¤த்து விரலைச் சொடுக்கிக் கொண்டிருந்தவள் எழுந்து நின்று இடையை நௌ¤த்து நௌ¤த்து அடி எடுத்துக் கால் மாற்றி முன்னும் பின்னும் நகர்ந்தும், நிமிர்ந்தும், வளைந்தும் ஆடுகிறாள்.
இசையின் கதியில் முறுக்கேறுகிறது!
சற்று நேரம் ஆடிக் களைத்த பின், கட்டிலின் மீது விழுகிறாள்... பிறகு மேஜையின் மீதிருந்த பாட்டிலை எடுத்து அதன் கழுத்தை முறிப்பது போலத் திருகித் திறக்கிறாள்.
ஸ்டெல்லா: (தனக்குள்) ஓ மை குட்நஸ்! ஸோடா? என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கட்டிலருகேயுள்ள காலிங்பெல் ஸ்விட்சை அழுத்தச் சில வினாடிகளில் கதவு தட்டப்படுகிறது. எழுந்து கட்டிலின் மீது கிடந்த டிரஸிங் கவுனை எடுத்து அணிந்து இடுப்புக் கயிற்றை இறுகச் சுருக்கிட்ட பின் சென்று கதவைத் திறக்கிறாள்.
வெள்ளுடை தரித்த ஹோட்டல் பணியாள் ஒருவன், உள்ளே வந்து நிற்கிறான்!
ஸ்டெல்லா: (அவனிடம்) ஒரு அரை டஜன் ஸோடா வேணும்; ஐஸில் வச்சது இருக்கா?
பணியாள்: பாக்கறேன்... இல்லேன்னா ஐஸ்லே வெக்காதது இருந்தா கொண்டு வரட்டா...?
ஸ்டெல்லா: ஐஸ்லே வெச்சது கெடச்சா நல்லா இருக்கும்; இல்லாட்டியும் பரவாயில்லே, கொண்டு வா.
வெயிட்டர் கதவை மூடிக் கொண்டு போகிறான்.
டிரான்ஸிஸ்டரிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த இசையை அவள் நிறுத்தி விட்டு மேசையின் மீது இருந்த ஒரு 'ரைட்டிங் பேடை'யும் சில சிறிய புத்தகங்களையும் எடுத்துப் பார்க்கிறாள். அவை யாவும் மது எதிர்ப்புப் பிரசார வெளியீடுகள். சில ஆங்கிலத்திலும் சில தமிழிலும் இருக்கின்றன.
மீண்டும் கதவில் தட்டி ஓசை எழுப்பிய பின்னர், அந்த ஓட்டல் பணியாள் சோடா பாட்டில்களைக் கொண்டு வந்து மேஜையின் மீது வைக்கிறான். அவள் அந்தப் பிரசுரங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிப் பார்க்கிறாள். பிறகு கையிலிருந்த புத்தகத்தை மூடி அதன் மேல் எழுதியிருந்த தலைப்பைப் படிக்கிறாள்.
ஸ்டெல்லா: (வாய்விட்டு) ஒய் வி கன்டம் லிக்கர்? ஆல்க்கஹால்... இஸ் - தி - டெவில்!
(அந்த ஹோட்டல் பையனைப் பார்த்துப் புன்முறுவல் காட்டி)
ஸ்டெல்லா: உனக்கு மதராஸா?
பணியாள்: ஆமாம்...
ஸ்டெல்லா: உனக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா?
பணியாள்: தெரியும்...
ஸ்டெல்லா: அப்படின்னா, இதெ படி, எனக்கும் மதராஸ் தான்... சரியா சொன்னா திருச்சி... நீ திருச்சி போயிருக்கியா? இல்லே...? அங்கே பொன்மலை... ரயில்வேயிலே வேலை செஞ்சுக்கிட்டிருந்தார் என் புருஷன்... சரி; இதெப்படி...
(என்று அந்தப் புத்தகங்களில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைத் தேடி எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.)
பணியாள்: (படித்துக் காட்டுகிறான்.) நாம் ஏன் மதுவை எதிர்க்கிறோம்...
ஸ்டெல்லா: ஓ! ஒய் வி கன்டம் லிக்கர்?... நான் இது படிக்கிறேன்... கேளு...
(என்று ஒரு புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு எழுத்தாகப் படிக்கிறாள்.)
ஸ்டெல்லா: ம-து-அ-ர-க்-கன்... மது அரக்கன் சரியா... சோடாவுக்குப் பணம்?
பணியாள்: ரூம் கணக்கிலே சேர்ந்துடும்...
ஸ்டெல்லா: இந்தா உனக்கு...
(என்று தனது கைப் பையிலிருந்து ஒரு நாணயத்தை எடுத்துத் தருகிறாள்.)
பணியாள்: தாங்க் யூ மேடம்...
ஸ்டெல்லா: குட் நைட்...
(கதவைத் தாழிட்டு விட்டு வருகிறாள்.)
பின்னர் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு எங்கோ பார்த்தவாறு தானே வாய்விட்டுக் கேட்டுக் கொள்கிறாள்.
ஸ்டெல்லா: ஒய் வி கன்டம் லிக்கர்! ஹீ... கன்டம்ஸ்... லிக்கர்...? மீ? ஹஹஹ! (சிரிக்கிறாள்.)
(மேஜையருகே சென்று தம்ளரில் மது ஊற்றிச் சோடாவைக் கலக்கிறாள்.)
ஸ்டெல்லா: (தனக்குள்) ஐ டோன்ட் கன்டம் லிக்கர்... ஒய்? ஒய் ஐ டோன்ட் கன்டம் லிக்கர்? (நான் மதுவை வெறுத்து ஒதுக்கவில்லை? நான் ஏன் மதுவை மறுத்து ஒதுக்கவில்லை? - என்று கூறிக் கொண்டே தம்ளரைக் கையிலேந்தி ஆழ்ந்த யோசனையுடன் நின்றிருக்கிறாள்.)
அவள் முகம் மாறுகிறது. உதடுகள் துடிக்கின்றன. சப்தமில்லாமல் அவள் உதடுகள் 'ஒய் ஐ டோன்ட் கன்டம் லிக்கர்?... ஒய்?... ஒய்?' என்று அசைகின்றன.
ஸ்டெல்லா: பிக்காஸ் ஐ ஆம் வீக்! ஐ நீட் இட். இட் இஸ் மை வீக்னஸ். (ஏனென்றால் அது எனக்குத் தேவையாய் இருக்கிறது. அதுதான் எனது பலவீனம்.)
அவள் அதனை ஒரு வெறியுடன் உறிஞ்சிக் குடித்து விட்டுத் தம்ளரை மேஜையின் மீது வைக்கிறாள்...
தலையை நிமிர்த்திக் கண்களை மூடிக் கொண்டு தன்னையே சபித்துக் கொள்வது போலப் பற்களைக் கடித்தவாறு இரண்டு கைகளையும் இறுக முறுக்கிக் கொண்டு அவள் சப்தமில்லாமல் அலறுகிறாள்.
ஸ்டெல்லா: (கனமான ரகசியக் குரலில்) லெட் தி டெவில் கில் மீ! லெட் தி டெவில் டேக் மீ டூ ஹெல்! ஓ! மோரீஸ்... ஐ ஹேவ் பிகம் எ பிட்ச்! எ டிரங்கட்... எ ஸின்னர். ஓ!.. மோரீஸ்! (இந்த அரக்கன் என்னைக் கொல்லட்டும்; இந்த அரக்கன் என்னை நரகத்தில் கொண்டு சேர்க்கட்டும். ஓ மோரீஸ்... நான் ஒரு வேசியாகிப் போனேன். நான் ஒரு குடிகாரியாகிப் போனேன். நான் ஒரு பாபியாகிப் போனேன்.)
அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதவாறே கட்டிலில் போய் விழுகிறாள்.
ஸ்டெல்லா: (புலம்பும் குரலில்) மோரீஸ்! மை டார்லிங்! யு ஆர் நோ மோர்... யு டைட் இன் அன் ஆக்ஸிடென்ட்... ஸ்டில் ஐ எக்ஸிஸ்ட் - பை அன் ஆக்ஸிடென்ட் (ஓ! மோரீஸ், என் கண்மணி! நீ இப்போது இல்லை! நீ செத்துப் போய் விட்டாய் ஒரு விபத்தினால். நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன் - ஒரு விபத்தினால்...)
சற்று நேரம் அமைதி! பிறகு அவள் மெல்ல எழுந்து வந்து கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கண்களைத் துடைத்துக் கூந்தலை ஒதுக்கிச் சரி செய்து கொள்கிறாள். மேஜையருகே சென்று இன்னொரு முறை தம்ளரில் மதுவையும் சோடாவையும் கலந்து ஏந்தியவாறு கட்டிலில் அமர்கிறாள். அதை அவள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பருக -
விளக்கு மங்கலாகி... சிறிது சிறிதாய் இருள் படர்கிறது. முற்றிலும் இருளாகிறது.
காட்சி - 2
இருளில் படுக்கையில் அமர்ந்திருக்கும் ஸ்டெல்லா புகை குடிக்கையில் கனன்று பிரகாசிக்கும் சிகரெட்டின் நெருப்புக் கனிகிற வெளிச்சம் மட்டும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து வெளிச்சம் மிகுந்து அறை முழுமையும் வெளிச்சமாகிறது. ஸ்டெல்லா கட்டிலின் மீது கையில் மது நிறைந்த தம்ளருடன் உட்கார்ந்திருக்கிறாள். இப்போது அவள் தலை சற்றுக் கலைந்து, கண்கள் சிவந்து, லேசான முக மாற்றமும் போதை மிகுதியால் உடம்பே சற்றுத் தொய்ந்தும் காணப்படுகிறாள்.
அவள் படுக்கையிலிருந்து சுவர்க் கடிகாரத்தைப் பார்க்க மணி பன்னிரண்டாகிறது. பின்னர் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறாள். டிரான்ஸிஸ்டரை ஒரு கையால் திருப்புகிறாள்... வெறும் சப்தம் மட்டும் வர எரிச்சலுடன் அதை நிறுத்தி விட்டுக் கையிலிருந்த மதுவைக் குடித்த பின்னர் மீண்டும் அதை நிரப்பிக் கொள்ளும்போது -
கதவு தட்டப்படும் சப்தம் லேசாகக் கேட்கிறது. ஸ்டெல்லா அவசர அவசரமாகத் தம்ளரை மேஜையின் மீது வைத்து, பின்னர் கண்ணாடியருகே ஓடி, தலையை ஒழுங்கு பண்ணிக் கொண்டு திரும்புகையில் மீண்டும் கதவு லேசாகத் தட்டப்படுகிறது. "எஸ்... கம்மிங்" என்று குரல் கொடுத்தவாறே தான் அணிந்திருக்கும் அவனது டிரஸ்ஸிங் கவுனைக் களைந்து விடலாமா என்று யோசித்துப் 'பரவாயில்லை' என்ற நினைப்புடன் கதவைத் திறக்கிறாள்.
சுமார் நாற்பது வயதுள்ள ஓர் உயரமான மனிதன் முழங்கையில் மடித்துப் போட்ட ஓவர்கோட், தொப்பி, கையிலொரு பைல் சகிதம் உள்ளே வர -
ஸ்டெல்லா: ஹலோ!
வந்தவன்: ஹலோ! ஐ ஆம் பார்த்தசாரதி.
ஸ்டெல்லா: மிஸஸ் மோரீஸ்...
இருவரும் கை குலுக்கிக் கொண்டதும் அவனிடமிருந்து ஓவர்கோட்டையும் தொப்பியையும் வாங்கிக் கொண்டு போய்க் கட்டிலுக்குப் பின்னாலிருந்த ஹாங்கரில் மாட்டுகிறாள். அப்போது அந்தப் பார்த்தசாரதி முகம் மாறி ஏதோ ஒரு நெடியை மோப்பம் பிடிப்பவன் போல் சுற்றிலும் பார்த்து மேஜையின் மீது இருக்கும் பாட்டிலையும் தம்ளரையும் அவளது தள்ளாட்டத்தையும் பார்த்துத் திகைத்துப் போகிறான். கர்ச்சிப்பை எடுத்து மூக்கை மறைத்துக் கொண்டு அறைக்குள் வந்து நின்ற இடத்திலேயே நின்றிருக்கும் அவனை அவள் திரும்பிப் பார்த்துப் பின்னர் மேஜை மீதிருந்த பாட்டிலையும் தம்ளரையும் அவன் பார்வை வழியே தானும் பார்த்துப் புன்முறுவல் செய்கிறாள்.
ஸ்டெல்லா: ஹவ் அபவுட் எ டிரிங்க்?
பார்த்தசாரதி: ஐ ஆம் ஸாரி... ஐ டோண்ட் டிரிங்க் (நான் குடிப்பதில்லை.)
ஸ்டெல்லா: (சற்றுத் தயங்கி) எஸ்... ஐ ஸா ஸம் புக்லெட்ஸ் ஹியர்! ஆர் யூ கனெக்டட் வித் தட் சொஸைடி?... (ஆம்; நான் இங்கு சில புத்தகங்களைப் பார்த்தேன்... நீங்கள் அந்த சொஸைட்டியைச் சேர்ந்தவரா?)
பார்த்தசாரதி: எஸ்!
நறுக்கென்று சொல்லிவிட்டு அவளோடு பேசிக் கொண்டிருக்க மனமில்லாமல், பாத்ரூமுக்குள் போகிறான்... பின்னர் கதவைத் திறந்து ஹாங்கரில் தொங்கிய நீளக் கோடுகள் நிறைந்த பைஜாமாவையும் சட்டையையும் எடுத்துக் கொண்டு மீண்டும் கதவை மூடிக் கொள்கிறான்... ஸ்டெல்லா தனியாக உட்கார்ந்து குடிக்க ஆரம்பிக்கிறாள்... சிறிது நேரத்துக்குப் பின் தனது உடைகளையெல்லாம் மடித்து எடுத்துக் கொண்டு நீளக் கோடிட்ட பைஜாமாவும் சட்டையும் அணிந்து வெளியே வரும் அவன், துணிகளை ஒரு பெட்டியின் மேல் 'பொத்'தென்று போடுகிறான்... பின்னர் ஈஸிசேரில் கிடந்த அவளது ஆடைகளை அள்ளிக் கட்டிலின்மீது ஒருபுறம் வைத்து விட்டு ஈஸிசேரை இழுத்துப் போட்டு உட்காருகிறான். தனது ஆடைகளை அவன் எடுத்தது கண்டு...
ஸ்டெல்லா: ஐ ஆம் ஸாரி... (என்று அவற்றை ஒழுங்குற மடித்து வைக்கிறாள்.)
ஸ்டெல்லா: (ஆடைகளை மடித்துக் கொண்டே) மிஸ்டர் பார்த்தசாரதி... நீங்க மெட்ராஸ்தானே?... (எனத் திடீரெனத் தமிழில் கேட்டதும் அவன் ஆச்சரியமுறுகிறான்.) என்ன அப்படி பாக்கறீங்க?... இந்தச் சட்டைக்காரி தமிழ் பேசறாளேன்னா?... எனக்கு சொந்த ஊர் திருச்சி - பொன்மலை. நான் தமிழ் தெரிஞ்சவங்ககிட்டே எல்லாம் தமிழ்லே தான் பேசுவேன்.... இந்த பெங்களூர்லே பேசற தமிழைவிட என் தமிழ் சுத்தமா இருக்கும்; இருக்கா இல்லையா?
பார்த்தசாரதி: (இதுவரை இருந்த முகச் சுளிப்பு மாறிப் புன்முறுவலுடன்) ஐ நெவர் தாட்... யூ ஸ்பீக் டமில் ஸோ நைஸ்லி!...
அவள் சப்தம் போட்டுச் சிரிக்கிறாள். அவனுக்கு அது எரிச்சலாக இருக்கிறது... அவள் சிரித்தவாறே அவன் எதிரே கட்டிலில் சாய்ந்து உட்காருகிறாள்.
பார்த்தசாரதி: (தனக்குள்) தமிழ் பேசிட்டா ஒருத்தி தமிழச்சி ஆய்டுவாளா?
ஸ்டெல்லா: (சிரிப்படங்கி) என்ன... என்னமோ சொன்னீங்களே...
பார்த்தசாரதி: (திகைப்புடன்) நோ! நோ!... ஒண்ணுமில்லே!...
ஸ்டெல்லா: நீங்க மட்டும் இங்கிலீஷ்லே பேசினீங்களே; அதைப் பார்த்துத்தான் சிரிப்பு வந்தது எனக்கு... (சிரித்தவாறே சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனிடம் நீட்டுகிறாள்.)
ஸ்டெல்லா: சிகரெட்...
பார்த்தசாரதி: (ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டே, ஜென்ரலி... என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்து) சாதாரணமா நான் சிகரெட் பிடிக்கிறதில்லை... எப்போதாவது...
(என்று சொல்லிக் கொண்டிருக்கையில் நெருப்புக் குச்சியை உரசி, எரிகின்ற குச்சியுடன் நெருங்கி வர அவன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, அவளது நெருக்கத்தில் மதுவின் நெடி வீச முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.)
ஸ்டெல்லா: ஸாரி... உங்களுக்கு லிக்கர்னாவே ஒரு 'அவெர்ஷன்'... ம்?... இல்லாட்டி அந்த அளவுக்கு நீங்க ஒரு மாரலிஸ்டோ? (என்றவாறே தானும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொள்கிறாள்...)
பார்த்தசாரதி: மாரலிஸ்ட்!... (ஒரு லேசான சிரிப்புடன் புகையை ஊதியவாறு) நான், நீ சொல்ற மாதிரி, ஒரு மாரலிஸ்டா இருந்தா உன்னை இந்த நேரத்தில் இங்கே சந்திச்சு இருப்பேனா?
ஸ்டெல்லா: மாரல்ங்கிறது... (ஒழுக்கம்) செக்ஸ் சம்பந்தப்பட்டது மட்டும்தான்னு நெனைக்கிறீங்களா?... நான் அந்த நெனப்பிலே சொல்லலே... குடிக்கற விஷயத்தில் நீங்க அதை 'இம்மாரல்'னு நெனைக்கிறீங்களோன்னு...
பார்த்தசாரதி: (அவளை ஆச்சரியத்துடன் பார்க்கிறான்) ஒரு டிபேட்டுக்கு தயாராகிற மாதிரி இருக்கே!... நானும் நாளைக்கு நடக்கற ஸெமினார் விஷயமாகத்தான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு வந்தேன்... இப்ப நாம்ப பேசறமே இதுதான் சப்ஜக்ட்! பிளீஸ்! அந்த பைலை எடு... (ஸ்டெல்லா எழுந்து போய் பைலைக் கொணர்ந்து தருகிறாள். அதை வாங்கி அவன் புரட்டிப் பார்க்கிறான்.)
பார்த்தசாரதி: ஸீ... இதான் என்னுடைய சப்ஜக்ட்! ஒய் ஐ கன்டம் லிக்கர்?..
ஸ்டெல்லா: அதைத் தமிழ்லே சொல்லுங்க...
பார்த்தசாரதி: நான் ஏன் மதுவை - கன்டம் - வெறுக்கிறேன் - வெறுத்து ஒதுக்குகிறேன்?
ஸ்டெல்லா: நானும் அதைத்தான் கேக்கறேன்... ஒய் டூ யூ - (பேசிக் கொண்டே அவள் மேஜையருகே போய்க் கண்ணாடித் தம்ளரில் நிரப்பி இருந்த மதுவைக் கையிலெடுத்துக் கொண்டு அவனிடம் அனுமதி கேட்கிறாள்.)
ஸ்டெல்லா: மெ ஐ ஹாவ் மை டிரிங்க்!
பார்த்தசாரதி: (தர்மசங்கடத்துடன்) ம்... கேரி ஆன்! நான் இப்போ சைத்தானிடம் வேதம் படிக்கிறேன்...
ஸ்டெல்லா: என்னைச் சைத்தான்னு சொல்றீங்களா!...
பார்த்தசாரதி: இல்லே மிஸஸ் மோரீஸ்... நான் உன்னை சைத்தான்னு சொல்லலே... உன் உள்ளே இருப்பது - உன் கையிலே இருக்கிறது - சைத்தான்னு சொல்றேன்...
ஸ்டெல்லா: உங்கள் நலத்துக்காக - (என்று கூறிக் குடிக்கிறாள்.) நீங்கள் ஒரு டாக்டர்தானே?
பார்த்தசாரதி: இல்லை... நீயே கண்டுபிடி... நான் என்னவென்று?...
ஸ்டெல்லா: புரபஸர்?
பார்த்தசாரதி: ம்ஹீம்...
ஸ்டெல்லா: சோஷல் ஒர்க்கர்?...
பார்த்தசாரதி: நீ சொன்னது எல்லாமே பாதி சரி....
ஸ்டெல்லா: ம்... மீதியை நீங்க சொல்லுங்க...
பார்த்தசாரதி: ஐ ஆம் எ ஸைக்கியாட்ரிஸ்ட்!
ஸ்டெல்லா: ஸைக்காட்ரிஸ்ட்! ஓ! டாக்டர்னா உடம்புக்கு வந்த வியாதியைக் கண்டு பிடிச்சு அதுக்கு மருந்து தருவாங்க... நீங்க மனசுக்கு வர நோயைக் கண்டுபிடிச்சு மருந்து தருவீங்க - என்ன, சரிதானே?
பார்த்தசாரதி: (பாராட்டும் தோரணையில்) ரொம்பச் சரியாகச் சொல்லிட்டே...
ஸ்டெல்லா: அப்டீன்னா நீங்க ஏன் இதை வெறுக்கணும்! (மதுவைக் காட்டி) இதுதான் மனசைப் பிடிச்ச வியாதிக்கு மருந்து!...
(என்று மதுவை உறிஞ்சிக் குடிக்கிறாள். அவன் அவளைப் பரிதாப உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் போதை தலைக்கேறி - தடுமாறியவாறு அவனருகே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்கிறாள்... மது நெடி அவனுக்குத் தொண்டையை குமட்டுகிறது...)
ஸ்டெல்லா: டாக்டர்... நான் ஒரு பேஷண்ட்! ஸைக்கோ பேஷன்ட்! ஸீ... (அவள் முகத்தை, சிவந்து கலங்கும் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அவள் தொடர்ந்து பேசுகிறாள்.)
ஸ்டெல்லா: டாக்டர்... இது எனக்கு வேணும்... ஐ நீட் திஸ் லிக்கர்... யூ மே கால் இட் ஸாட்டன்... நீங்க இதை சைத்தான்னு சொல்லலாம்... ஒரு சைத்தான் கிட்ட போகறத்துக்கு இன்னொரு சைத்தானின் துணை வேண்டி இருக்கே டாக்டர். (என்று கூறியவாறே அவளும் அவன் முகத்தை வெறித்துப் பார்க்கிறாள்... அவள் முகத்தில் ஒருவகைக் கடுமைக் குறி தோன்றுகிறது. மௌ¢ள மௌ¢ள மாறிச் சிரிப்பு விகசிக்கிறது!...)
ஸ்டெல்லா: (ஒரு சிறு மௌனத்துக்குப் பின்) ஹேய்!... லீவ் இட்!... சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துலே... என்னத்துக்கு இந்தப் பேச்செல்லாம்?... டாக்டர்... வுட் யூ லைக் டு டான்ஸ்?... கமான்.. ஐ... ஃபீல் லைக் டான்ஸிங்!... கமான் டார்லிங்!
எழுந்து நின்று கண்களை மூடிக் கொண்டு அவனை நடனமாட அழைக்கிறாள். அப்போது அவளுள்ளே இனிய இசை எழுந்து ஒலிக்கிறது. அதற்கேற்ப செங்குத்தாய் நின்று தன் கைகளுக்குள் ஓர் ஆடவனின் தோள்கள் இருப்பது மாதிரிக் கரங்களை ஏந்தி, ஒரு ஆடவனின் கைக்குள் தான் சிக்கி இருப்பது போன்ற நளினத்துடன் கண்களை மூடி அந்தக் கற்பனைத் தோள்களில் கன்னம் உரசி உடல் சிலிர்க்க, அவள் மிகுந்த லாகவத்தோடு பாதங்களை எடுத்து வைத்துச் சுற்றிச் சுழன்று அறை முழுமையும் ஆடி வலம் வருகிறாள். அவன் இரண்டு கைகளிலும் மோவாயைத் தாங்கிப் பொறுமையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் ஆடி அசைந்து வருகையில் அவன்மீது வந்து மோதிக் கொண்டபோது அவளைப் பிடித்து நிறுத்த - திடுமென அந்த இசை நின்று விடுகிறது.
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்!... மியூஸிக் இல்லாமல் இது என்ன டான்ஸ்?
ஸ்டெல்லா: (கனவு கலைந்தது மாதிரி சுற்றும் பார்த்து ஒரு சிரிப்புடன்) மியூசிக் இல்லையா? உங்களுக்குக் கேக்கலே... நான் கேட்டேனே... அ... இப்போது தூரத்தில்.. ரொம்ப தூரத்தில் கேக்கலே. ஓ! வாட் எ ஒண்டர்ஃபுல் மியூசிக்...
(என்று சற்று முன் அவளுள் ஒலித்த இசையை விசிலில் பாடியவாறு அவள் மீண்டும் ஆட ஆரம்பிக்கையில் - அந்த இசை தூரத்தில் ஒலிக்கிறது! அவனுக்கு அது புரியாததால் அவளைப் பார்க்க அவனுக்கு வேடிக்கையாக இருக்கிறது... சற்று நேரம் அவள் ஆடிய பிறகு, எழுந்து நின்று கைகளைத் தட்டி அவளைப் பாராட்டுவதாய்ப் பாசாங்கு செய்கிறான். அவன் கைதட்டியதும் அவள் ஆட்டத்தை நிறுத்திப் புன்முறுவலுடன் மேற்கத்திய பாணியில் அவனுக்கு நன்றி தெரிவித்த பின் ஈசிசேரில் வந்து பொத்தெனச் சாய்கிறாள்.)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்! ஃபீலீங் டையர்ட்?... களைப்பா இருக்கா?
ஸ்டெல்லா: நோ... நோ... ஒரு நைட் பூரா என்னாலே டான்ஸ் ஆட முடியும்... பிளீஸ்... கிவ் மீ எ டிரிங்க்!...
(என்று அவள் மேஜையைக் காட்டவும், மனமில்லாமல் வேறு வழியில்லாமல் அவனே தம்ளரில் மதுவைக் கலக்குகிறான். அவள் கண்களை மூடியவாறு விசிலில் அந்த இசையைப் பாடுகிறாள் - அவன் மது தம்ளரை அவளிடம் நீட்டி...)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்!
ஸ்டெல்லா: தாங்க்யூ டார்லிங் (என்று அதனை வாங்கி அருந்துகிறாள்.)
அவன் அவள் எதிரே கிடந்த நாற்காலியில் அமர்ந்து அவளது சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் எடுத்து அவளிடம் தந்து தானும் ஒன்றை எடுத்து, அவளுக்கும் பற்ற வைத்துத் தானும் கொளூத்திக் கொள்கிறான். ஸ்டெல்லா புகையை ஊத, இருவருக்கும் இடையே சூழ்ந்த புகைத் திரட்சியைக் கையால் விலக்குகிறாள். பின்னர் அவனையே கூர்ந்து பார்க்கிறாள்.
ஸ்டெல்லா: ஆமாம்... நீங்க இங்கே என்னை எதுக்கு அழைச்சுக்கிட்டு வரச் சொன்னீங்க?...
பார்த்தசாரதி: (சற்றுத் தயங்கி) நீதான் சொன்னியே - ஒரு சைத்தான் கிட்டே போறதுக்கு உனக்கு இன்னொரு சைத்தானின் துணை வேண்டி இருக்குன்னு... உனக்கே புரியலியா? - மிஸஸ் மோரீஸ்!... நீ இதை மருந்துன்னு நெனச்சிக் குடிக்கிறே?... ஆனா இதுதான் உன் வியாதி!
ஸ்டெல்லா: (குறுக்கிட்டு, தன் கையிலுள்ள கண்ணாடித் தம்ளரைக் காட்டி) யூ மீன் திஸ் - இதுவா வியாதின்னு சொல்றீங்க?... யூ டோண்ட் நோ!... ஹாவ் யூ எவர் பீன் டிரங்க்!... நீங்க எப்பவாவது குடிச்சிருக்கீங்களா?... குடிச்சு இருக்கீங்களா?...
பார்த்தசாரதி: குடியெப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னா... (என்று ஏதோ சொல்ல வருகையில் அவள் குறுக்கிடுகிறாள்.)
ஸ்டெல்லா: (உயர்ந்த ஸ்தாயியில்) கேக்கறதுக்குப் பதில் சொல்லணும். நீங்க குடிச்சு இருக்கீங்களா? இல்லே, குடிச்சது இல்லே... அப்போ இதைப்பத்திப் பேச உங்களுக்கு ரைட் இல்லே... யூ ஹாவ் நோ ரைட் டு டாக் எபவ்ட் லிக்கர்!
(தனது குரலின் ஸ்தாயியின் உச்சத்தை அவளே உணர்ந்து உயர்த்திய கையுடன் பிளந்த வாயுடன் அப்படியே ஸ்தம்பித்து அந்த அமைதியில் சுற்றிலும் ஒரு முறை பார்த்து...)
ஸ்டெல்லா: உஷ்! ஹேய்... யூ நோ?... தி டைம் இஸ் மிட் நைட்! பிளேஸ் இஸ் எ ஹொட்டேல்! யூ ஆர் எ ரேக் அன்ட் ஐ ஆம் எ ஹோர்!.. நோ மோர் ஷவ்டிங்... டார்லிங், பிளீஸ் ஹாவ் யுவர் டிரிங்க். லெட் அஸ் கோ டு பெட்... டோன்ட் வேஸ்ட் யுவர் மணி அன்ட் டைம்... கமான் டார்லிங்!... (உஷ்!.. நேரமோ நடுநிசி! இடமோ ஒரு ஹோட்டல். நீயோ ஒரு ஸ்திரீலோலன்; நானோ ஒரு வேசி... சப்தங்கூடாது... வா... மதுவைக் குடி... நாம் படுக்கப் போவோம்... உனது காலத்தையும் பணத்தையும் விரயமாக்காதே... வா.)
பார்த்தசாரதி: (லேசாகச் சிரித்து) நீ சொல்றதெல்லாம் உண்மைதான். ஆனா முழு உண்மை இல்லை... நான் ஒரு டாக்டர்... நீ ஒரு பேஷன்ட்... நீ உன் தொழில்னு நெனச்சி வந்த இடத்திலே நான் என் தொழிலைச் செய்யறேன்...
ஸ்டெல்லா: (கிளுகிளுத்துச் சிரித்தவாறே) ஏய்!.. டாக்டர்... நீ நல்லா பேசறே! யூ டாக் வெரி லாஜிக்கலி மைபாய்! உன் தொழிலை ஆரம்பி... ம்! ஸ்டார்ட் இட்...
பார்த்தசாரதி: ஆல் ரைட்... ஐ ஹாவ் ஸ்டார்ட்டட். மிஸஸ் மோரீஸ்... யூ லைக் டிரிங்க்ஸ் வெரிமச்... மோர் தென் எனிதிங் எல்ஸ் இன் திஸ் ஓர்ல்ட்...
ஸ்டெல்லா: டாக்டர், தமிழ்லே பேசணும்... நான் திருச்சியிலே பொறந்தவ. என் புருஷன் ஒரு தமிழ்க் கிறிஸ்தவர். ஓ மை மோரீஸ்...
(அவளது நினைவு தடம் புரள்கிறது என்பதைப் புரிந்து கொண்ட அவன், அவளது தோள்களைக் குலுக்கி)
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ், நான் தமிழ்லேயே பேசறேன்... உனக்கு குடிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்... இந்த உலகத்திலே அதைவிடப் பிடிச்சது இன்னொன்று இல்லே...
ஸ்டெல்லா: என்னா?... உலகத்திலே...
பார்த்தசாரதி: (குறுக்கிட்டு) நோ.. கேக்கறதுக்கு மட்டும்தான் பதில்... ம் (புன்னகையுடன்) உனக்குக் குடிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்கும்... இல்லியா?...
ஸ்டெல்லா: எஸ்... ஐ லவ் இட்...
பார்த்தசாரதி: அதைவிடப் புடிச்சது உனக்கு ஏதாவது இருக்கா உலகத்திலே...
ஸ்டெல்லா: (தலையை உலுப்பி) நோ! அட் திஸ் மோமண்ட் - நத்திங்! (இல்லே... இந்த நிமிஷத்தில் ஒன்றும் இல்லை.)
பார்த்தசாரதி ஸ்டெல்லாவின் கண்களுக்குள் உற்றுப் பார்க்கிறான். அவள் ஒரு குழந்தை மாதிரிச் சிரிக்கிறாள். சிரித்துக் கொண்டே நெற்றியில் விழுந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு அவன் முகத்தருகே நெருங்கி வருகிறாள்.
ஸ்டெல்லா: என்னத்துக்கு என்னை இப்படிப் பார்க்கிறீங்க?... ம்... என்னத்துக்கு... (என்று ஒரு கண்ணைச் சிமிட்டுகிறாள்.)
பார்த்தசாரதி: (ஒரு பெருமூச்சுடன்) கேவலம்! இந்தக் குடியெவிடப் பிடிச்ச விஷயம் உலகத்திலே இன்னொண்ணு இல்லேங்கற விதமா இந்தக் குடி ஒரு பொண்ணை மாத்திட்ட மாயையை நெனச்சிப் பார்க்கிறேன்!.. ம்... உன் உடம்பிலே உயிர் இருக்கிறதனாலே இந்தக் குடியெ உன்னாலே ரசிக்க முடியுது - உயிர் இனியது இல்லியா!...
ஸ்டெல்லா: (ஒன்றுமே தெரியாத ஒரு அப்பாவிச் சிறுவனைப் பார்க்கிற மாதிரி, பரிகாசமாய்ச் சிரித்தவாறு) மிஸ்டர் பார்த்தசாரதி! நீங்க சரியான ராஜா வூட்டுக் கன்னுக்குட்டி போல இருக்குது. உங்களுக்கு உயிர் இனிதா இருக்கும்... எனக்கு உயிர் ஒரு பாரம்! சுமை! அந்தக் கஷ்டத்துக்குத்தான் குடிக்கிறது.
பார்த்தசாரதி: (உதட்டைக் கடித்துச் சூள் கொட்டியவாறு அவள் சொன்னதைக் கவனமாய்க் கேட்டபின்) ஓ! ஐ ஆம் ஸாரி! உனக்கு உயிர் ஆரம்பத்தில் இருந்தே சுமையாவோ, பாரமாவோ, கஷ்டமானதாகவோ இருந்திருக்க முடியாது. ஆமாம்... உயிர் இனிதுதான்... இயற்கையிலே... உனக்கு உன் உயிர் வாழ்வே சுமையாப் போனதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கணும்... அந்தக் காரணத்துக்கு முன்னே உனக்கு உயிர்மேலே ஆசை கொள்ளையா இருந்திருக்கும்; உனக்கு அருமையான சங்கீத ரசனை இருக்கு. அழகு உணர்ச்சி இருக்கு... கற்பனைகள் இருக்கு... இதெல்லாம் இருக்கிற மனுஷாளுக்கு உயிர் மேலே வெறுப்பு சாதாரணமா வந்துடாது...
ஸ்டெல்லா கையிலிருந்த மதுவைக் குடித்துத் தம்ளரைக் காலியாக்குகிறாள்... அவள் தம்ளரை வைப்பதற்காக எழுந்ததும் சற்றுத் தள்ளாடுகிறாள்...
பார்த்தசாரதி: ப்ளீஸ்... ஸிட்டௌன். ஐ வில் ஹெல்ப் யூ... வாண்ட் ஸம்மோர் டிரிங்க்?... (உட்காரு... உனக்கு என்னும் கொஞ்சம் குடிப்பதற்கு வேண்டுமா?)
ஸ்டெல்லா: நோ!.. இன்னிக்கு நான் ரொம்ப ரொம்ப குடிச்சிட்டேன்... ஓ! ஹவ் நைஸ் இட் இஸ்! - ஹேய்... யூ!... டாக்டர்... உஷ்! லிஸன்!... தெர்... தட் மியுஸிக்!... ரா... ரான்... ரா... ரரன் ரரரரா!...
கண்களை மூடியவாறு அவள் லயித்து நிற்கையில், அவளது கையிலிருந்து நழுவிய கண்ணாடித் தம்ளரைக் கீழே விழுந்து விடாமல் பிடித்து வாங்கி, மேஜையின் மீது வைக்கிறான். அவனது இரண்டு கரங்களையும் பற்றியவாறு கண்களை மூடிப் பிதற்றுகிறாள் ஸ்டெல்லா.
ஸ்டெல்லா: ஓ! மோரீஸ்!...
பார்த்தசாரதி: மிஸஸ் மோரீஸ்... (அவள் கண் திறந்து பார்க்க) நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன்... நீ ஏன் அடிக்கடி உன் புருஷனைக் கூப்பிடுகிறாய்?
ஸ்டெல்லா: டோண்ட் ஒரி! ஹி வில் நெவர் கம்... (பயப்படாதீர்கள், அவர் வரவே மாட்டார்.)
பார்த்தசாரதி: (மன்னிப்புக் கேட்பது போல) நோ நோ! நான் தப்பாக் கேக்கலே... நீ அடிக்கடி உன் புருஷனின் பெயரைச் சொல்லுகிறாயே... அப்படிப்பட்ட உணர்ச்சி ஏன் உனக்குத் தோணுதுன்னு தெரிஞ்சிக்கவே கேட்டேன்.
ஸ்டெல்லா: (பழைய நினைவுகளில் லயித்த ஒரு சிரிப்புடன்) உங்களுக்கு என் புருஷனைப் பத்தித் தெரிஞ்சிக்கணும் போல இருக்கா?...
பார்த்தசாரதி: உன்னைப் பத்தியே நெறையத் தெரிஞ்சுக்கணும்.
ஸ்டெல்லா: என்னைப் பத்தி மட்டுமா? தனியாவா? ம்... அது அவ்வள்வு இன்ட்டரஸ்டிங்கா இருக்காது... யோசிச்சுப் பாத்தா முடியாதுன்னே தோணுது... அன் இன்டிவிஜீவல்'ஸ் லைப் இஸ் நாட் ஜஸ்ட் அன் இன்டிவிஜீவல் லைப்! (ஒரு தனி நபரின் வாழ்க்கை என்பது ஒரு தனித்த வாழ்க்கையல்ல.)
பார்த்தசாரதி: யு ஆர் ரைட்!
ஸ்டெல்லா: நீங்களோ ஒரு டாக்டர்... மனசுக்கு ட்ரீட்மென்ட் தர்ர டாக்டர்... உடம்பைப் பத்தின கேஸா இருந்தா சௌகரியம்... இன்டிவிஜீவல்னாலே உடம்பு தானே? ஆனா மனசு? இன்டிவிஜீவலோட மனசுன்னு சொல்லலாமே தவிர தட் இட்ஸெல்ப் இஸ் நாட் அன் இன்டிவிஜீவல்! - ஸாரி டாக்டர், ஆம் ஐ டாக்கிங் ஸம் நான்சென்ஸ்?
பார்த்தசாரதி: ஓ! யூ டாக் ரியல் சென்ஸ்!
ஸ்டெல்லா: தாங்க் யூ! இவ்வளவு ஏன் சொல்றேன் தெரியுமா? என்னைப் பத்தி எனக்கு எதுவுமே தனியா நெனச்சுப் பார்க்க முடியலே, டாக்டர்... இட் ஸ்டார்ட்ஸ் லைக் திஸ்... மம்மா!... என்னுடைய சின்ன வயசை நெனக்கறப்போ... என்னோட அம்மா அப்பா நெனப்பு கூடவே வருது... என் அப்பாவுக்கு ரயில்வேயிலே... கோல்டன் ராக் ஒர்க்ஷாப்பிலே வேலை... ஆர்டினரி பிட்டராகத்தான் சேர்ந்தாராம்... அவர் சாகறப்போ... போர்மனா இருந்தாராம். எனக்கு அப்போ பத்து வயசு... மை மம்மா பிகேம் எ விடோ. எனக்குப் பெரியவங்க மூணு பிரதர்ஸ் இருக்காங்க. ஐ ஆம் தி ஒன்லி டாட்டர்... நான் எல்லோருக்கும் பெட்! என் பிரதர்ஸ்லே பெரியவர் இப்போதும் அங்கே தான் கோல்டன்ராக்லே இருக்கார். அவர் ரயில்வே ஆபீஸ்லே இருக்கார். டூ மெனி சில்ட்ரன்.. பெரிய ஃபேமிலி... இப்ப அவரோட செல்லத் தங்கச்சியெ பத்தியெல்லாம் நெனைக்க நேரம் இருக்குமா?... த்சொ... இன்னொரு பிரதர் - ஸம்வேர் இன் மலபார்... என்னவோ கெமிகல் இன்டஸ்ட்ரீஸ்லே சேல்ஸ் மானேஜரோ - ஸ்டோர் சூபரிண்ட்டோ ஸம் பிக் போஸ்ட்லே இருக்கார்... அவரும் மாரீட் - தி லாஸ்ட் பிரதர் - ஹி வாஸ் ஸடடியிங்... இப்ப என்ன பண்றாரோ?... இவர்களை எல்லாம் பார்த்து அஞ்சு வருஷம் ஆயிடுச்சி. (பார்த்தசாரதி கொட்டாவி விடுவதைக் கண்டு) ஃபீல் லைக் ஸ்லீப்பிங்? (தூக்கம் வருதா?...)
பார்த்தசாரதி: நோ நோ!
ஸ்டெல்லா: அஞ்சு வருஷத்துக்கு முந்தி நான் அவரைப் பார்த்தேன், நான் இப்போ மோரீஸைப் பத்திச் சொல்றேன்... மோரீஸ்! அவர் ஆங்கிலோ இண்டியன் இல்லே. இண்டியன் கிறிஸ்டியன். அவர் எங்க கிளப்புக்கு வருவார். வாலிபால் பிளேயர்... என் லாஸ்ட் பிரதர்னு சொன்னேனோ, அவரோட கிளாஸ் மேட். ஆனா அவர் ஹைஸ்கூல் படிப்போட நிறுத்திட்டு, சர்வீஸ்லே ஜாயின் பண்ணிட்டாரு. அவர் பயர்மேனா இருந்தார். ஓ! ஹவ் ஹாண்ட்ஸம் ஹி வாஸ்! நாங்க ரொம்ப பிரன்ட்லியா இருந்தோம்; அவருக்கும் கேர்ல் பிரண்ட்ஸ் நெறையப் பேர் இருந்தாங்க... எனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டு. அப்ப எனக்கு ட்வன்டி திரீ - ட்வன்டி ஃபோர் இருக்கும். அதுக்கு முன்னே எனக்கு ஒரு பிரண்ட் கிட்டே அட்ராக்ஷன் இருந்திச்சி. அவனைத்தான் நாம்ப லவ் பண்றோமோன்னு கூட நெனச்சிருக்கேன். அவன் எங்க கம்யூனிட்டி! அவனைத்தான் நான் லவ் பண்றதா வீட்டிலே நெனச்சிக்கிட்டிருந்தாங்க. ஆனா - அப்புறம் அது மோரீஸ்னு தெரிஞ்சவுடனே எல்லாரும் அப்ஸெட் ஆயிட்டாங்க!...
(அவள் பேசும்போது அடிக்கடி கண்கள் செருகின. இரண்டொரு தடவை கொட்டாவி வந்ததை அவள் அடக்கிக் கொண்டாள். அவள் தொடர்ந்து பேசுவதை, கூறுகின்ற விஷயங்களை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.)
ஸ்டெல்லா: (சற்று நேரம் மௌனமாக யோசித்தபின்) எனக்கொண்ணும் அது தப்பா தோணலே. ஆங்கிலோ - இன்டியன்ஸ்தானே நம்ப? இன்டியன்ஸ்னா நமக்கேன் கேவலம்? அதே சமயத்திலே ஒரு ஈரோப்பியன் வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுலே இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாம். இன்டியன்னா அவமானமாம். ஹவ் ஸ்டுபிட் இட் ஈஸ்; சரிதான் போங்கடான்னேன்; ஐ ஹாவ் அன்டகனைஸ்ட் எவ்ரிஒன் இன்மை பேமிலி பார் தி ஸேக் ஆப் மை மோரீஸ்! (என் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் எனது மோரீஸின் பொருட்டு நான் பகைத்துக் கொண்டேன்.)
(ஒரு சிகரெட்டை எடுத்து உதடுகளில் வைத்துக் கொண்டு அவள் தீப்பெட்டியைத் தேட, கீழே விழுந்து கிடந்த பெட்டியை எடுத்து அவள் சிகரெட்டில் நெருப்பைப் பொருத்துகிறான் அவன்.)
ஸ்டெல்லா: தாங்க் யூ! (எதையோ நினைத்துச் சிரித்தவாறே) யூ நோ மோரீஸ் வாஸ் அ ஸ்ட்ராங்மேன். (மோரீஸ் ரொம்பவும் பலசாலி.) ஸ்போர்ட்ஸ் மேன். என் கடைசி பிரதர் என்னவோ விஷமம் பண்ணி இருக்கான். அவ்வளவுதான்... ஹி நாக்டு ஹிம் அவுட். (என்று வீர சாகஸக் கதை சொல்கிறவள் மாதிரி முஷ்டியை மடக்கிக் கொண்டு அபிநயித்துக் காட்டுகிறாள்.)
ஸ்டெல்லா: அதுக்கப்புறம் விஷயம் ரொம்ப ஸீரியஸா ஆயிடுச்சி. என்னை மோரீஸை பார்க்கக் கூடாதுன்னு சொல்லா ஆரம்பிச்சாங்க. போங்கடான்னுட்டேன் நான். அப்டீன்னா 'யூ கெட் அவுட்'னாங்க... ஐ ஸெட் ஓ.கே... ஐ கேம் அவுட்! வெளியே வந்துட்டேனே தவிர, என்னா செய்யறதுன்னு புரியலே. எனக்கு ஒண்ணுமே தெரியாது. வீட்டை மெயின்டெய்ன் பண்ணத் தெரியும். ஐ கேன் வாஷ், ஐ கேன் குக் மீல்ஸ். எனக்கு அதான் பிடிக்கும். அதைத்தான் என் பிரதர்ஸீக்கெல்லாம் நான் செய்தேன். அந்த சமயம் மோரீஸ் டூட்டி மேலே போயிருந்தார். டூ டேஸ்!... இட் வாஸ் ஹெல்! கடைசியிலே அவர் வந்ததும் நாங்க மாரேஜீக்கு ஏற்பாடு பண்ணி அந்த மாசமே வீ காட் மாரீட். தென். அவருக்கு அந்த மாசமே வேலை இந்த ஊருக்கு மாறிச்சு. இங்கே வந்து ஸெட்டில் ஆனோம். ஓ! வாட் எ ஒண்டர்புல் லைப்! வேலை மாத்தி வரப்போ எங்க கையிலே ஆளுக்கு ஒரு ஸீட் கேசும், ஒரு படுக்கையும் தான்... ஆனா அவர் ஹார்ட்ஸ் வெர் ஃபில்ட் வித் டிரீம்ஸ் அன்ட் ஹோப்ஸ்! ( எங்கள் இதயங்கள் கனவுகளாலும், நம்பிக்கைகளாலும் நிறைந்து கிடந்தன.)
(அவளது தலை அண்ணாந்து கையிலிருந்து எதிர்பாராமல் நழுவி மேலே உயர்ந்து உயர்ந்து பறந்து போய்க் கொண்டிருக்கும் காஸ் பலூனைப் பார்த்து ஏங்குகிற குழந்தை மாதிரி பார்வை முகட்டில் அலைகிறது.)
ஸ்டெல்லா: (சிகரெட்டைப் புகைத்தவாறே பிதற்றுகிற மாதிரி) நாங்க மூணே மாசம்தான் வாழ்ந்தோம்... பதிமூணு ஸண்டேஸ்!... ஐ ரிமம்பர்... பதிமூணு ஞாயிற்றுக்கிழமையிலேயும் நாங்க என்னென்ன செய்தோம். எங்கே எங்கே போனோம். என்னென்ன பேசினோம்னு கூட சொல்றத்துக்கு முடியும் என்னாலே. வி வென்ட் டு பிக்சர்ஸ்... என் கஸினும் அவ ஹஸ்பன்ட் ராபர்ட்ஸீம் எங்க வீட்டுக்கு வந்தாங்க... அன்னக்கித் தான் ஃபஸ்ட் டைம் இன் மை லைப், நான் லிக்கர் சாப்பிட்டேன்... எங்க வீட்டிலே இருக்கிறபோது எப்பவாவது உண்டுனாலும் நான் சாப்பிட்டதே இல்லை. நான் அப்பல்லாம் நெனப்பேன்: 'கடவுளே! எனக்கு இதுலே ஒரு ருசியும், குடிக்கிற பழக்கமும் ஏற்படாம இருக்கட்டும்'னு வேண்டிக்குவேன்... இதை மோரீஸ் கிட்டே நான் சொன்னபோது மோரீஸ் சிரிச்சாரே பார்க்கணும்! நவ் ஐ ஹியர் தட் லாஃப்டர்! ஓ! மோரீஸ்! அவர் சிரிப்பு... அவர் கடகடன்னு சிரிச்சா அதிலேயே எனக்கு ஒரு எக்ஸைட்மென்ட்! சில சமயத்திலே - என்ன சொல்றது? எனக்கு எல்லாமே ஆயிடும்.. அப்பிடி ஒரு மான்லினஸ்! ஓ! மை மோரீஸ்.
(அவள் சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைக்கிறாள்.)
பார்த்தசாரதி: யூ வெர் டெல்லிங். ஃபார் தி ஃபர்ஸ்ட் டைம் யூ ட்ரேங் தட் டே வென் யுவர் கஸின் அன்ட் ஹர் ஹஸ்பன் கேம் டு ஸீ யூ. (நீ சொல்லிக் கொண்டிருந்தது - உன் கஸினும் அவளது புருஷனும் உன் வீட்டுக்கு வந்த அன்று முதன் முதலாக நீ குடித்ததைப் பற்றி.)
ஸ்டெல்லா: எஸ்! இட் வாஸ் மை ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்! எனக்கு என்னமோ புடிக்கல்லே. நான் மோரீஸ் கிட்டே அப்புறம் சொன்னேன். என்னைக் கம்பல் பண்ண வேணாம். இதுதான் ஃபஸ்ட் அன்ட் லாஸ்ட்! இனிமே மாட்டேன்; எனக்கு புடிக்கலைன்னு சொன்னப்போ... மோரீஸ் கோவிச்சுக்கப் போறார்னு நெனைச்சேன். ஹி டின்ட்! ஹி வாஸ் அ 'ஹீ மேன்!' அவர் பொம்பளைங்க கிட்டே கோவிச்சுக்க மாட்டார். அவர் சொன்னார்: யூ ஆர் நைன்ட்டி நைன் பர்ஸன்ட் சரியான தமிழச்சின்னு. அதெக் கேட்டப்போ எனக்கு சந்தோஷமாதான் இருந்தது.
சற்று அமைதியாக இருந்த பின்னர் - அவள் தானே எழுந்து சென்று மதுவைத் தம்ளரில் நிரப்பி அங்கேயே நின்று பாதியை மடமடவென்று குடித்த பின், மீண்டும் தம்ளரை நிரப்பிக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அவளது முகம் சிவந்து, கனிந்து, உப்பி இருந்தது...
ஸ்டெல்லா: மோரீஸ் அப்பவே அவங்களைப் பற்றி சொல்லுவார்... என் கஸினும் அவ ஹஸ்பண்ட் ராபர்ட்ஸீம். யூ நோ ஹிம்?
பார்த்தசாரதி: விச் ராபர்ட்ஸ்? ஹவ் டு ஐ நோ?
ஸ்டெல்லா: ஹேய்!.. ராபர்ட்ஸ்... என்னை யாருகிட்டே கூட்டியாரச் சொன்னீங்க? டாலா... ஸீட் போட்டுகிட்டு...
பார்த்தசாரதி: ஓ! யூ மீன் தட்...
ஸ்டெல்லா: எஸ். தட் பிம்ப்! அவங்களைப் பத்தி மோரீஸீம் நானும் பேசுவோம் - எங்களுக்கு அப்பவே அவங்க நடவடிக்கையிலே சந்தேகம். நமக்கென்ன? இட் இஸ் தெர் பிஸினஸ்! தெரிஞ்சவங்களே இல்லாத ஊர்லே சொந்தக்காரவங்கன்னு சொல்லிக்கிற மாதிரி அவ ஒருத்தி இருந்தா மை கஸின். கொஞ்சம் கொஞ்சமா ராபர்ட்ஸீம் மோரீஸீம் ரொம்ப நெருக்கமான பிரண்ட்ஸ் ஆயிட்டாங்க. எனக்கு மனசுக்குள்ளே திக்திக்குனு இருக்கும்... நான் மோரீஸ்கிட்டே இத்தெப் பத்திப் பேசினேன். என்னோட ட்யூடி இல்லியா அது? ஆனா அவருக்கு குடிக்கறதுக்கு அவன் ஒரு கம்பெனிங்கற இன்ட்ரஸ்ட் மட்டும்தான். அதெ அவரே எங்கிட்டே சொன்னாரு... இட் இஸ் ஆல்ரைட்னு விட்டுட்டேன். மோரீஸ் யூஸ்ட் டு டிரிங்க் டெய்லி! வாட் இஸ் ராங் இனிட்? ஆப்டர் எ ஹார்ட் லேபர்... கடுமையா உழைக்கிற மனுஷன்... நான் கண்டுக்கலே... எல்லாம் மூணு மாசத்துக்குள்ளேதான்... அப்பறம் ஒரு நாளு... ஓ! மை காட்! அதோ அந்த ஸீன் என் கண்ணிலேயே நிக்குது. சாயங்காலம் நாலு மணிக்குக் கையிலே டிபன் பாக்ஸை எடுத்துக்கிட்டு ஹாட்டை மாட்டிக்கிட்டு தெருக் கோடிக்குப் போறதுக்குள்ளே நாலு தடவை திரும்பித் திரும்பிப் பாத்து கையை ஆட்டறாரு... நானும் கையைக் கையை ஆட்டறேன். அவ்வளவுதான்... நான் அவரைக் கடைசியா... ஓ! மோரீஸ்! தட் வாஸ் தி என்ட்! அதான் கடைசி. அப்புறம் நான் அந்த முகத்தைப் பார்க்கவே இல்லை... மை மோரீஸ்! வேர் ஆர் யூ!
(என்று முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பிக்கிறாள்... அவள் கையிலிருந்த தம்ளரிலிருந்து மது தளும்பிச் சிந்துகையில் பார்த்தசாரதியின் புறங்கை மீதும் சிறிது வழிகிறது. அவன் அதைப் பொருட்படுத்தாமல் துடைத்துவிட்டு அவளது தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுக்கிறான்.)
பார்த்தசாரதி: பிளீஸ்... பிளீஸ் ஹாவ் யுவர் டிரிங்க்... ம்...
குழந்தை மாதிரி அவள் முகமும், உதடுகளும் அழுகையில் துடிக்கின்றன... அவன் அவள் கூந்தலை நெற்றியிலிருந்து ஒதுக்கி விடுகிறான்... அவள் விம்மியவாறே இரண்டு மிடறு மதுவை அருந்திய பின் சற்று அமைதி அடைகிறாள்.
பார்த்தசாரதி: வான்ட் எ சிகரெட்? (ஸ்டெல்லா தலை அசைக்கிறாள். அவள் வாயில் சிகரெட்டை வைத்து இரண்டு மூன்று தீக்குச்சிகளை வீணாக்கியும் தன்னால் பற்ற வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து சிகரெட்டை அவனிடம் நீட்டி...)
ஸ்டெல்லா: பிளீஸ்... லைட் இட்...
அவன் தனது உதடுகளில் ஈரம் படாமல் வைத்து நெருப்பைப் பொருத்திய பிறகு அவளது உதடுகளில் வைத்த பின் அதை அவள் புகைக்கிறாள். அவள் மனமும், கண்களும் கலங்கி இருக்கின்றன. பார்வை எங்கோ வெறிக்க முகம் பயங்கரமாய் மாறியிருக்கிறது.
ஸ்டெல்லா: (திடீரென்று தானே பேசுகிறாள்.) எனக்கு அதை யார் வந்து எப்படி சொன்னாங்க, நான் எப்படி அந்த எடத்துக்குப் போனேன் - இதெல்லாம் எவ்வளவு யோசிச்சு யோசிச்சுப் பார்த்தாலும் ஞாபகம் வரல்லே... ஒரு பிரிட்ஜீக்குப் பக்கத்திலே ரயில்வே டிராக் மேலே நாலைஞ்சு கம்பார்ட்மெண்ட் நிக்குது. ரெண்டு கம்பார்ட்மெண்ட் பிரிட்ஜீக்கும் ஆத்துக்கும் நடுவாலே தொங்குது... தண்ணியிலே தலை குப்புற முழுகிப் பாதி இன்ஜின் வெளியே தெரியுது... மோரீஸ் அதுக்கும் கீழே இருக்காராம். ஓ! இதைத்தான் நான் போய்ப் பார்த்தேன். ஐ நெவர் ஸா ஹிம். தட் இஸ் ஆல்! ஐ ஹாட் டு பிலீவ்... தட் ஹி இஸ் நோ மோர்!
பார்த்தசாரதி: த்சொ... த்சொ...
ஸ்டெல்லா: எனக்கு ஒண்ணுமே புரியலே... எனக்கு அழ முடியலே; தூங்க முடியலே; பசிக்கலே... நான் மரத்துப் போயிட்டேன். ஐ ஹாவ் பிகம் நம்ப்... அந்த மாதிரி எத்தினி நாளுன்னு எனக்குத் தெரியாது. செத்துப் போயிருந்தா நல்லா இருக்கும்னு இப்ப தோணுது. ஆனா அதுகூட அப்ப தோணலே. உயிரோட இருக்கிற மாதிரித் தோணினாக்காத்தானே சாகணும்னு தோணும்? அப்பல்லாம் ராபர்ட்ஸீம் என் கஸினும் தான் கூட இருந்தாங்க. ஒரு நாள் என் கஸின் என்னைக் கம்பல் பண்ணிக் குடிக்கச் சொன்னாள். அது நல்லதுன்னு சொன்னாள். நான் மறுப்பு சொல்லலே போல இருக்கு... ஐ டிரேங்க்... அதுக்கப்பறம் தூங்கினேன் - ஆனந்தமா தூங்கினேன்; கனவு கண்டேன். மோரீஸைப் பாத்தேன். திடீர்னு முழிச்சேன்... 'ஐ வான்ட் ஸம் மோர் டிரிங்க்'னு கத்தினேன். அறைக் கதவைத் திறந்துக்கிட்டு ராபர்ட்ஸ் ஓடி வந்தான். நான் அவனைக் கெஞ்சினேன். எனக்கு டிரிங்க்ஸ் வேணும்னு. அப்போ என் கஸின் இல்லே போலிருக்கு - யார் கூடவோ சினிமாவுக்குப் போயிருக்கணும்! ராபர்ட்ஸ் எனக்கு லிக்கர் கொண்டு வந்தான். அவனும் குடிச்சான். கொஞ்ச நாழிக்கப்புறம் திடீர்னு என் பக்கத்திலே உக்காந்து மோரீஸ் குடிக்கிற மாதிரி இருந்தது. உடம்பிலேயும் மனசிலேயும் எனக்கு திடீர்னு டென்ஷன் விண்விண்ணுனு தெறிக்க ஆரம்பிச்சுது. நான் 'மோரீஸ் மோரீஸ்'னு சொல்லிக்கிட்டே ராபர்ட்ஸைக் கழுத்தைக் கட்டிக்கிட்டு அழுதேன்; எனக்குத் தெரியுது... இது மோரீஸ் இல்லே - ராபர்ட்ஸ்ன்னு... ஆனாலும் அவனை மோரீஸா நெனச்சிக்கிட்டு அணைச்சிக்கிறதுலே ஒரு சுகம் இருந்தது. அந்த டென்ஷனுக்கு அது வேணும்! தென் ஹி கிஸ்டு மீ... வீ ஸ்லெப்ட் டுகெதர்...
பார்த்தசாரதி: (உதட்டைக் கடித்து விரல்களைச் சொடுக்கி) எக்ஸாக்ட்லி! திஸ் இஸ் மை பாயிண்ட்.
பார்த்தசாரதி எழுந்து போய் ஒரு பெட்டியைத் திறந்து ஒரு டேப் ரிக்கார்டரைக் கொண்டு வந்து கட்டிலின் மீது வைக்கிறான்.
பார்த்தசாரதி: நீ கேட்டியே, ஒய் டு யூ கன்டம் லிக்கர்னு? இதுக்குத்தான்! இதைப்பத்தி மெட்ராஸ்லே நான் ஒரு இடத்திலே பேசினேன். அப்ப உனக்கு ஏற்பட்ட மாதிரி அனுபவத்தைக் குறிச்சு நான் சொன்னேன். லிஸன்! அது தமிழிலே இருக்கு... உனக்குத்தான் தமிழ் நல்லா வருதே...
(என்று சொல்லிக் கொண்டே டேப் ரிக்கார்டரை 'ஸ்விட்ச் ஆன்' செய்கிறான். அவள் மதுவைப் பருகிக் கொண்டே கன்னத்தில் கையூன்றி அதைக் கவனிக்கிறாள்.)
பார்த்தசாரதியின் குரல்: (டேப் ரிக்கார்டரிலிருந்து)
மது மறுப்புச் சங்கத்தினராகிய நமக்கெல்லாம் இந்தியாவின் பல பகுதிகளில் மது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டிருப்பதில் ரொம்ப மகிழ்ச்சியே. எனினும் மது மறுப்புக் கொள்கை என்பது இங்கு ஒரு சிந்தனா பூர்வமான நெறியாகப் பயிலப்படவுமில்லை; பயிற்றுவிக்கப்படவுமில்லை. மது என்பது ஒரு பாவம், ஒரு தோஷம் என்ற கருத்தில் சட்டத்தின் துணையுடன் தடுக்கப்பட்டிருப்பதால், தடுக்கப்பட்ட வேறு இன்பங்களைப் போலவே இதுவும் பரவலாகவும் ரகசியமாகவும் மீறப்பட்டு வருகிறது. எனவே மது மறுப்பு என்பதை, ஒவ்வொருவர் மனத்திலும் உருவாக்க அறிவு ரீதியான - விஞ்ஞானரீதியான - விளக்கங்களை நாம் செய்தல் வேண்டும். அதுதான் நிரந்தரமான பயனைத் தரும். மது மயக்கம் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு தனி மனிதனையும் பாழாக்கி, அவனது தனிப்பட்ட சமூக அந்தஸ்தையும் ஆன்மீக அந்தஸ்தையும் சீர் குலைக்கிறது என்பதை உணர்த்த வேண்டும். இதனை வெறும் ஒழுக்கம் என்ற அளவு கோலினால் அளந்து பார்ப்பது சரியில்லை. நான் இந்த மது மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பது ஒழுக்கத்தின் அடிப்படையில் அல்ல. ஒழுக்கத்தைப் பற்றி எனக்கு நடைமுறை அர்த்தங்களுக்கு மாறுபட்ட கொள்கைகள் உண்டு. ஒழுக்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதோ, அவற்றை மீறுவதோ ஒரு மனிதனின் சுயேச்சையான நெறியாகும். ஆனால் மது மயக்கமோ ஒரு தனி மனிதனின் சுயேச்சைத் தன்மையைத்தான் முதலில் அழிக்கிறது. ஒருவன் அல்லது ஒருத்தி 'தான்' என்ற தன்மையை மறந்து ஒரு காரியத்தைச் செய்யலாகாது. நான் செய்யப்படும் காரியத்தின் தாரதம்மியத்தைக் கணக்கில் கொள்ளவில்லை. ஒருத்தி அல்லது ஒருவனால் செய்யப்படும் காரியம் - பாப காரியமோ, புண்ணிய காரியமோ, ஒழுக்கமானதோ, ஒழுக்கக் கேடானதோ - எதுவாயினும் 'இதை நான் செய்தேன்' என்று பொறுப்பேற்றுக் கொண்டு செய்வது தான் சுயேச்சை என்பது; அது தான் சுயமரியாதை. அது உயர்வானதாகவும் இருக்கலாம்; இழிவானதாகவும் இருக்கலாம். ஆனால் மது மயக்கம் முதலில் ஒருவனைத் தன்னிலை இழக்கச் செய்கிறது. தன்னை அறியாமல் செய்த காரியங்களுக்கு - தன்னை இழந்த நிலையில் செய்த காரியங்களுக்கு யாரும் பொறுப்பேற்க முடிவதில்லை. அது சைத்தானின் செயலாகிப் போகிறது. எனவே மது மயக்கத்தில் செய்த காரியத்திற்கு ஒருவரைப் பொறுப்பேற்கச் செய்வது நியாயமாகாது என்று நீதியும் கூட மயங்குகிறது. மது மயக்கம் உள்ளே நுழைந்து விட்டால், ஆத்மாவைக் கொன்று விடுகிறது. மது மயக்கம் தலைக்கேறி விட்டால் கணவனின் மீது உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண் தெய்வம் தன்னை ஒரு சைத்தான் கற்பழித்து விட்டுப் போகக்கூட அனுமதித்து விடுகிறாள்...
இந்த இடத்தில் அவன் ரெக்கார்டரை நிறுத்தினான். இவ்வளவு பொருத்தமாகக் கூறியிருக்கும் தனது பிரசங்கத்தைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் என்றறிய அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் அவனைப் பார்த்துக் கிறங்கிய கண்களுடன் புன்முறுவல் செய்தாள்.
ஸ்டெல்லா: இட் இஸ் யுவர் வியூ... தட் இஸ் ஆல்! (இது உங்கள் கருத்து, அவ்வளவுதான்.)
பார்த்தசாரதி: தட் இஸ் தி ட்ரூத் டூ! (அது உண்மையும் கூட.)
ஸ்டெல்லா: ட்ரூத்?... இட் இஸ் மோர் டீப்பர்; (உண்மையா? அது இன்னும் ஆழமானது.)
பார்த்தசாரதி: உனக்கு நடந்ததே ஒரு உதாரணமில்லையா அந்த உண்மைக்கு?
ஸ்டெல்லா: நோ... இட் இஸ் நாட். ஹி டின்ட் ரேப் மீ. (அப்படி இல்லை; அவன் என்னைக் கற்பழிக்கவில்லை.)
பார்த்தசாரதி: (அமைதியாக) தென் ஹீ? (பின்னே யாரு?)
ஸ்டெல்லா: இட் இஸ் தி டீப் ரூட்டட் மெமரி ஆப் மை ஹஸ்பன்ட் இன் மீ! தட் மேக்ஸ் மீ எவ்ரி திங். (அதுதான் என் உள்ளே ஆழமாக வேர் விட்டிருக்கும் என் புருஷனின் நினைவு; அதுதான் என்னை எல்லாம் ஆக்குகிறது.)
அவள் கையிலிருந்த மதுவை இறுதியாகக் குடித்த பின்னர் - தம்ளரை ஈஸி சேரில் எறிந்துவிட்டு எழுந்து நின்று இரண்டு கரங்களையும் அவனை ஏற்றுக் கொள்வதற்காக ஏந்தி நிற்கிறாள்.
ஸ்டெல்லா: (வாய் குழறுகிறது.) டார்லிங்! மை மோரீஸ்! யூ ஆர் ஹியர்! கமான்... ஓ! டார்லிங்.. ஹவ் லாங் ஐ ஆம் வெயிட்டிங் டார்லிங்! கிஸ் மீ!
அவள் அவன்மீது தாவி அவனை இறுகத் தழுவிப் பின்னி அவன் உதடுகளிலும் கழுத்திலும் முத்தம் சொரிகிறாள். அவன் அவளை நளினமாக விலக்கி அணைத்தவாறே படுக்கையில் கிடத்துகிறான்... அவள் படுக்கையில் கிடந்து காலை உதைத்துக் கொண்டு துடிக்கிறாள்.
ஸ்டெல்லா: டார்லிங்! நீ எங்கே போறே? வா... வா... மோரீஸ்... மோரீஸ்!
அவன் கட்டிலின் பக்கத்தில் நின்று கண்டிப்பான - தீர்மானமான - குரலில் அழைக்கிறான்.
பார்த்தசாரதி: ஸ்டெல்லா!
ஸ்டெல்லா: எஸ் டார்லிங்?
பார்த்தசாரதி: லுக் அட் மீ! ஐ ஆம் நாட் யுவர் மோரீஸ்... நான் மோரீஸ் இல்லை.
அவள் தலையை உயர்த்தி அவனை வெறித்துப் பார்க்கிறாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிகிறது.
ஸ்டெல்லா: (கெஞ்சுகிற குரலில்) பி மை மோரீஸ்... திஸ் மோமன்ட்!... ரிலீஸ் மீ ஃப்ரம் திஸ் டென்ஷன்!... ஓ... (என் மோரீஸாக இரு... இந்த சமயம்! இந்த 'டென்ஷனி'லிருந்து என்னை விடுவி!)
பார்த்தசாரதி: நோ! ஐ ஆம் நாட் யுவர் மோரீஸ்... ஐ ஆம் மைஸெல்ஃப். (முடியாது! நான் உன் மோரீஸ் அல்ல, நான் - நான்தான்.)
ஸ்டெல்லா: (தனக்குள் அடங்கிய குரலில்) எஸ், யூ ஆர் நாட் மோரீஸ்... மோரீஸ் இஸ் நோமோர். ஐ ஆம் அலோன். ஐ ஹாவ் நோபடி! (ஆமாம், நீ மோரீஸ் இல்லை! மோரீஸ் செத்துப் போயிட்டார். நான் தனியா ஆயிட்டேன். எனக்கு யாருமே இல்லே.)
விம்மியவாறே படுக்கையில் முகத்தை அவள் புதைத்துக் கொள்கிறாள். அவன் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாக அவளது முதுகைத் தட்டிக் கொடுக்கிறான். இரண்டொரு முறை விம்முகின்ற சத்தம் ஒலிக்கிறது. பின்னர் அமைதியாக அவள் தூங்கிவிட அவன் எழுந்து அவள்மீது போர்வையை இழுத்துப் போர்த்தி விடுகிறான். டேப் ரெக்கார்டரை மூடி எடுத்து வைக்கிறான். கண்ணாடி ஜாடியிலிருந்து அப்படியே தண்ணீரை எடுத்துக் குடிக்கிறான். ஈஸீ சேரிலிருந்த தம்ளரை மேஜையின் மீது வைத்துவிட்டு, ஒரு பெட்ஷீட்டுடன் ஈஸி சேரில் படுத்து நாற்காலியில் கால் நீட்டி ஓரளவு சவுகரியமாகப் படுத்துக் கொள்கிறான். ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்க்கிறான். வாழ்க்கையின் விபரீத லீலைகளை எண்ணி ஒரு கைத்த சிரிப்பு உதட்டில் நௌ¤கிறது.
விளக்கு மங்கி இருள் படிகிறது.
காட்சி - 3
அறை முழுதும் இருளாக இருந்தும் - இடது புறமுள்ள பாத்ரூம் கதவுக்கு மேல் பதித்திருக்கும் கண்ணாடியினூடே தெரியும் வெளிச்சத்தால் அறையிலுள்ள பொருள்கள் எல்லாம் மங்கலாகத் தெரிகின்றன. ஈஸிசேரில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி அதில் லேசாகப் புரள்கிறான். பாத்ரூமுக்குள்ளிருந்து ஷவரில் தண்ணீர் இரைகின்ற சத்தம் கேட்கிறது. பின்னர் அடங்குகிறது.
அவள் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விளக்கைப் பொருத்துகிறாள். முதல் காட்சியில் இருந்தது போல் உடையணிந்து நிற்கும் அவள் தோற்றத்திலும், முகத்திலும் இப்போது ஆச்சரியப்படத் தக்க மாற்றம் காண்கிறது. அவள் நடை அமைதியாக இருக்கிறது. இவள் வேறு ஒருத்தி என்பது போல பாவனைகளே மாறி இருக்கின்றன. அங்கே இறைந்து கிடக்கும் சாமான்களை ஒழுங்குற எடுத்து வைக்கிறாள்.
கடிகாரத்தைப் பார்க்கிறாள். மணி ஆறு ஆகிறது. ஒரு பக்கம் திரும்பி மறைவாகக் காலுறைகளை அணிந்து கொண்ட பின் ஒரு விருந்தினர் வீட்டில் வந்து சிக்கிக் கொண்டு தவிக்கிற குழந்தைமாதிரிக் கட்டில் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நகத்தைக் கடிக்கிறாள்.
அப்போது கதவு லேசாக இரண்டு முறை தட்டப்படுகிறது. காலடிச் சப்தம் கேட்காமல் மெதுவாக நடந்து போய்க் கதவைத் திறக்கிறாள். பான்ட்டும் ஸ்வெட்டரும் அணிந்த ராபர்ட்ஸ் உள்ளே வருகிறான்.
ஸ்டெல்லா: (மெதுவான குரலில்) குட்மார்னிங்!
ராபர்ட்ஸ்: ஓ! இட் இஸ் வெரி சில் அவுட்ஸைட்! (ஓ! வெளியே ரொம்பக் குளிராக இருக்கிறது என்றவாறு கைகளைத் தேய்த்துக் கொள்கிறான்.
ஸ்டெல்லா: ஸிட் டௌன்.
அவன் கட்டிலின் மீது உட்கார்ந்து ஈஸிசேரில் படுத்துறங்கும் அவனை வினோதமாகப் பார்க்கிறான். பின்னர் பாட்டிலைப் பார்க்கிறான்; அதில் மது பாதி இருக்கிறது. 'அவன் குடிக்கவில்லையா' என்று சைகையால் கேட்கிறான். அவளும் 'இல்லை' யென்று தலை அசைக்கிறாள். அவன் கண்களைச் சிமிட்டி எதையோ கேட்கிறான்.
ஸ்டெல்லா: ஹி இஸ் அன் 'ஏ' கிளாஸ் ஜென்டில்மன்...
அவன் பரிவாகத் தலையை ஆட்டிக் கொள்கிறான்.
ராபர்ட்ஸ்: ஷெல் ஐ ஆர்டர் ஸம் காபி? (நான் காப்பி கொண்டு வரச் சொல்லவா?.. என்றவாறு காலிங் பெல்லை அழுத்துகிறான். சற்று நேரத்தில் கதவு தட்டப்படுகிறது.)
ராபர்ட்ஸ்: கம் இன்.
ஹோட்டல் பணியாள் உள்ளே வருகிறான்.
ராபர்ட்ஸ்: காபி - திரீ.
பணியாள் போகிறான்.
பார்த்தசாரதி கைகளை விரித்துச் சோம்பலை உதறியவாறு தலை நிமிர்த்தி விழித்துப் பார்க்கிறான்... நிமிர்ந்து உட்கார்ந்து...
பார்த்தசாரதி: குட்மார்னிங்.
ஸ்டெல்லா - ராபர்ட்ஸ்: (இருவரும்) குட்மார்னிங்.
பார்த்தசாரதி எழுந்து போர்வையை மடித்து வைத்த பின் பாத்ரூமுக்குள் போய் வருகிறான். அந்த நேரத்தில் ராபர்ட்ஸ் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு மேஜை மீது கிடக்கும் புத்தகங்களைப் பார்க்கிறான்.
பணியாள் காப்பி கொண்டு வருகிறான். அந்த டிரேயை வாங்கி மேஜையின்மீது வைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு கப்பை எடுத்துத் தந்து தானும் ஒன்றை எடுத்துக் காப்பியை அருந்துகிறாள் ஸ்டெல்லா.
காப்பியைக் குடித்து முடித்த பின் ஸ்டெல்லா பார்த்தசாரதியின் அருகே வருகிறாள். அவனை நோக்கிக் கை நீட்டுகிறாள். அவள் கரத்தைப் பற்றி அவன் குலுக்குகிறான்.
ஸ்டெல்லா: தாங்க் யூ வெரி மச்! ஐ வுட் லைக் டு மீட் யூ எகைன்!... ஐ ஆம் ஸாரி... ஐ டின்ட் நோ தட் யூ ஹாவ் ஸச் அன் அவெர்ஷன் ஃபார் லிக்கர்... (நன்றி, உங்களை நான் மறுபடியும் சந்திக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியாது, உங்களுக்கு மதுவின் மீது இப்படி ஒரு வெறுப்பு இருக்கும் என்று...)
பார்த்தசாரதி: மே பி - இட்ஸ் மை வீக்னஸ்... (ஒருவேளை அது எனது பலவீனமாக இருக்கலாம்...)
ஸ்டெல்லா: நோ!... யுவர் வீக்னஸ் இஸ் சம்திங் எல்ஸ்... (இல்லை. உங்கள் பலவீனம் மற்றொன்று...)
பார்த்தசாரதி: (சிரிக்கிறான்.)
ஸ்டெல்லா: (ரகசியமாக) யூ ஆர் தி பஸ்ட் மேன் இன் மை லைப் - லீவிங் மீ லைக் திஸ் ஈவன் ஆப்டர் மை டிரிங்ஸ்! (நான் குடித்துவிட்ட பிறகும் என்னை இப்படி அனுப்புகின்ற முதல் மனிதன் நீங்கள்தான் என் வாழ்க்கையில்...)
பார்த்தசாரதி: தி கிரடிட் கோஸ் டு லிக்கர் - நாட் டு மீ... (அந்தப் பெருமை மதுவைச் சேர்ந்தது - என்னைச் சேர்ந்தது அல்ல...)
ஸ்டெல்லா: ஆர் யூ லீவிங் டு டே? (நீங்கள் இன்றைக்குப் போகிறீர்களா?)
பார்த்தசாரதி: எஸ்... ஸீ யூ ஸம்டைம். (ஆம், அப்புறம் எப்போதாவது பார்க்கிறேன் உன்னை.)
ஸ்டெல்லா: ஐ வில் டிரை டு கம் விதவுட் மை வீக்னஸ். ( எனது பலவீனத்துக்கு ஆளாகாமல் நான் வருவதற்கு முயல்கிறேன்.)
பார்த்தசாரதி: ஓ கே... ஆல் தி பெஸ்ட்...
ஸ்டெல்லா: பை...
ஸ்டெல்லா வெளியேறுகிறாள். அவளைத் தொடர்ந்து கதவருகே வந்து நிற்கிறான் பார்த்தசாரதி. ராபர்ட்ஸ் அந்த பாட்டிலை எடுத்து பான்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டு புறப்படுகிறான். அருகே வந்த போது அவனை நிறுத்துகிறான் பார்த்தசாரதி.
பார்த்தசாரதி: (ரகசியமாக ராபர்ட்ஸிடம்) ஷீ இஸ் அன் ஏஞ்சல்... டேக் கேர் ஆஃப் ஹெர்! (அவள் ஒரு தேவதை; அவளை ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொள்!...)
ராபர்ட்ஸ்: தாங்க் யூ ஸார்...
வெளியேறுகிறான். மாடிப் படிகளில் ஷீஸ் அணிந்த பாதங்களின் சப்தம் கேட்கிறது. காலடி ஓசை தேய்ந்து மறைந்த பின், கதவை மூடிவிட்டு - ஒருமுறை அறைக்குள் தனிமையில் சிந்தனையோடு நாலு புறமும் உலவி நடக்கிறான் பார்த்தசாரதி. பின்னர் பாத்ரூமுக்குள் சென்று கதவை மூடிக் கொள்கிறான். ஷவரிலிருந்து தண்ணீர் பிரவகிக்கின்ற சப்தம் கேட்கிறது.
(எழுதப்பட்ட காலம்: 1969)
கருத்துகள்