23/02/2011

வெங்கட் சாமிநாதன் - நேர்காணல்

உங்கள் இளமைப்பருவம் கழிந்த நிலக்கோட்டையிலிருந்து தொடங்கலாம். அந்த கிராமத்து அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன்?

நிலக்கோட்டை என்ற கிராமத்தில், அது கிராமமும் இல்லை, டவுனும் இல்லை, எனது மாமாவின் வீட்டில் நான் வளர்ந்தேன். அவர் மிகவும் கண்டிப்பானவர். அதே சமயம் ரொம்ப சாதுவும் கூட. அவரது சுபாவத்துக்கும், நிலக்கோட்டையின் வாழ்க்கை அனுபவத்துக்கும் உதாரணமாகச் சொல்லப் போனால், மாமா என்னை அதிகமாக எங்கும் வெளியில் செல்ல விடமாட்டார். கோடைகாலத்தில் குளத்தில், கிணறுகளில் எல்லாம் தண்ணீர் வற்றிப் போய் விடும். வீட்டிலிருந்து 2, 3 ஃபர்லாங் தொலைவில் கோட்டைக் கிணறு என்ற ஒன்று இருக்கும். அங்கு சென்று குளித்து விட்டு வருவோம். அது ஒரு ஏற்றக் கிணறு. உள்ளே இறங்கப் படியெல்லாம் இருக்கும். மாமா மெதுவாகப் படியிறங்கி என்னை அழைத்துச் சென்று, மூன்றாவது படியில் உட்கார வைத்து விட்டு, சொம்பால் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து என் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுவார். கிணற்றுக்குள் இறங்க விட மாட்டார். அவரும் இறங்க மாட்டார். ஏனென்றால் அவர் ரொம்ப சாது, மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். எங்களையும் அப்படியேதான் வளர்த்தார்.

என்னுடைய பாட்டி நான் அறிந்த காலத்திலிருந்து விதவை. ஆசாரமான, பக்தி நிறைந்த பிராமண விதவைக்கு வாழ்க்கை வீட்டுக்குள் அடங்கிக் கிடப்பதுதான். கோயில், கதாகாலட்சேபம் என்றெல்லாம் அந்த ஊரில் போக முடியாது. ஊருக்கு வெகு தொலைவே ஒரு மாரியம்மன் கோயில் இருந்தது. ஆனால் என் நினைவில் பாட்டி அந்தக் கோவிலுக்குப் போனது கிடையாது. ஒரு வேளை விதவைகளுக்கு கோவிலில் அனுமதி இல்லையோ என்னவோ? ஆக, ஆசாரமான பாட்டிக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவுக்குப் போவதுதான். பொழுதுபோக்கு மட்டுமில்லை. அதுதான் பாட்டியின் பக்திக்கு வடிகால் மாதிரியும் கூட. நாங்கள் இருந்த வீட்டிற்கு எதிர்த்தாற் போலத்தான் டூரிங் டாக்கிஸ் இருந்தது. அந்தக்காலத்தில் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள்தான். மோட்சத்திற்கு வழிகாட்டக் கூடியவை அந்தப் புராணப்படங்கள் என்று ஒரு நம்பிக்கை.

மூன்று நாளைக்கு ஒருமுறை அங்குள்ள தியேட்டரில் படம் மாற்றுவார்கள். பாட்டி எல்லா படத்தையும் பார்த்து விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அந்த சினிமாவிற்குக் கூட்டிக் கொண்டு போவாள். அந்த சினிமா தியேட்டர் முதலாளி அடிக்கடி எங்கள் தெருவிற்கு வருவார். கருப்பாக, அழகாக இருப்பார். ஆஜானுபாவன். முன் தலை வழுக்கை விழுந்திருக்கும். இருந்தாலும் வசீகரமான முகம். எப்போதும் கையில் ஒரு டார்ச் லைட் ஒன்று வைத்திருப்பார், பகல் பொழுதாக இருந்தாலும் கூட. எங்களையெல்லாம் அவருக்கு நல்ல பரிச்சயம் உண்டு. என்னைத் தூக்கிக் கொண்டு பாட்டி சினிமா கொட்டைகைக்குள் நுழையும் போதெல்லாம், ‘பாட்டியம்மா, பையனை கீழே இறக்கி விடுங்க. ஏன் கஷ்டப்படறீங்க? நான் டிக்கெட் கேட்க மாட்டேன்’ என்று சொல்வார். அதற்கு பாட்டி, ‘இவன் கேட்க மாட்டேங்கறாண்டா! என்னாலயும் தூக்கத்தான் முடியலை, என்ன பண்ணச் சொல்றே சொல்லு’ என்று சொல்லிக் கொண்டே என்னைக் கீழே இறக்கி விடுவாள் பாட்டி. மற்ற நாட்களில் நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் படத்தின் பாடல்களை, வசனங்களைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

அந்தக் காலத்தில் சினிமாவில் வந்த பாட்டுக்கள் எல்லாம் கேட்க மிக இனிமையாக இருக்கும். 60,70 வருடம் கழித்து இன்றும் அவற்றையெல்லாம் கேட்க முடிகிறது. அப்போதெல்லாம் நிறைய நாடகங்களும் நடக்கும். வி.எஸ். செல்லப்பா, தனலட்சுமி போன்றவர்கள் எல்லாம் ஸ்பெஷல் நாடகம் போட வருவார்கள் ஆக இரண்டு மூன்று வயசிலிருந்தே சினிமா, நாடகங்களோடு எனக்குப் பரிச்சயம் தொடங்கி விட்டது என்று சொல்லலாம்.

உங்கள் பள்ளி வாழ்க்கை பற்றி…

நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நான் படித்தேன். பள்ளிப்பாடங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. சரித்திரப் பாடம் என்றால் கேட்டுக் கொண்டிருப்பேன். கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் படித்தபோது, சுந்தரம் பிள்ளை என்று ஒரு ஆசிரியர். காங்கிரஸ்காரரா என்பது தெரியாது. ஆனால் சுதந்திரப் போராட்டம் பற்றியும், காங்கிரஸ்காரர்கள் பற்றியும் அதிகம் பேசிக் கொண்டிருப்பார். அவர் வகுப்பில் தவறாது கலந்து கொள்வேன். மற்றபடி இங்கிலீஷ், கணக்கு என்று எதுவுமே வராது. ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி எடுத்தால் எதிர்காலத்துக்கு உதவும் என்றார்கள். சரி என்று அதை எடுத்துக் கொண்டேன். முதல் நாள் வகுப்பிற்குச் சென்றால் ஒன்றுமே புரியவில்லை. அதனால், சரி இது நமக்கு சரிப்பட்டு வராது என்று வெளியே வந்து விட்டேன். அப்புறம் ஹிந்தி படிக்கலாம் என்று சொன்னார்கள். அதனால் ஹிந்தி வகுப்பில் போய் உட்கார்ந்தேன். இரண்டு வருடம் ஹிந்தி படித்தேன்.

நரசிம்ம நாயுடுதான் அவர் பெயர் என்று நினைக்கிறேன். அவர்தான் எனக்கு தமிழ் வாத்தியாராக இருந்தார். அவர் கும்பகோணம் சேர்ந்த ஆரம்ப வகுப்பிலேயே, தேமாங்காய், புளிமாங்காய் என்று ஆரம்பித்தார். அப்போதுதான் ஆர்.சண்முகம் என்பவன் எனக்கு நெருங்கிய நண்பனான். சண்முகம், ’இதெல்லாம் படிக்கவே வேண்டாம்’ என்று என்னிடம் சொல்வான். அவனுக்கு அதெல்லாம் படிக்காமலேயே கரதளபாடம். He was a born poet. சண்முகம் என்றாலே எனக்கு பிரமிப்பு தான். பின்னாட்களில் அவன் எனக்கு எழுதிய கடிதங்களைக் கவிதையாகவே எழுதுவான். கும்பகோணத்தில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்த காவேரி என்ற இதழில் அப்போது அவன் எழுதிக் கொண்டிருந்தான். ஒருநாள் அது வெளியாகி இருந்த பழைய இதழை எனக்குக் காட்டினான். அந்தக் கவிதை எனக்குப் புரியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் எனக்கும் அவனுக்கும் பலவிதங்களில் ஒத்த சிந்தனை இருந்தது. தமிழறிஞர்கள் என்று சிலரைச் சொல்வதை எங்களால் ஏற்க முடியவில்லை. பல புலவர்களை, கவிஞர்களை, அவர்களது கவிதைகளை ஏற்க என்னால் முடியவில்லை. இதையெல்லாம் நான் சண்முகத்திடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். சண்முகமும் அதை ஒப்புக் கொள்வான். பல கேள்விகள் கேட்டு, எங்களுக்குள் விவாதித்துக் கொள்வோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்கும் பதில்களைத்தான் அங்கீகரிக்க முடிந்ததில்லை.

எழுத்து மற்றும் புத்தகங்களின் மீதான ஆர்வம் வந்தது எப்போது?

நிலக்கோட்டையில் இருந்த போது முதலில் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு பின்னர் மாறிப் போனோம். முத்துசாமி ஐயர் என்பவரின் வீடு அது. பின்னர் அதை எங்கள் ஸ்கூல் கரெஸ்பாண்டண்ட் குடும்பத்தினர் வாங்கினார்கள். அந்த வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாதியில் கூரை போட்டிருக்கும். அதில் பழைய சாமான்களையெல்லாம் போட்டு வைத்திருப்பார்கள். அதில் இருந்த சில புத்தகங்கள் எனக்குக் கிடைத்ததன. அதில் ஒன்று பிரதாப முதலியார் சரித்திரம். அப்போது எனக்கு 11 வயது. அடுத்து சுவாமியும் சிநேகிதர்களும் படிக்கக் கிடைத்தது. ஆனந்த விகடனில் வந்த தொகுப்பு. ஆக சின்ன வயசிலேயே எனக்கு இலக்கியம் அறிமுகமாகி விட்டது என்று நான் சொல்லிக் கொள்ளலாம் இல்லையா? சொல்லிக்கொள்ளலாம்தான். ஆனால் உண்மை அதுவல்ல. படிக்கும் ஆர்வம் இருந்தது. கிடைத்ததை, சுவாரஸ்யமாக இருந்ததைப் படித்தேன். நன்றாகப் பொழுது போயிற்று. அவ்வளவுதான்.

அதற்கு சில வருடங்களுக்குப்பின் கும்பகோணம் வாணாதுரை ஹைஸ்கூலில் சேர்ந்த போது ஒரு நாள் பள்ளி நூலகத்திலிருந்து நூலகர் வந்து ஒரு அறிவிப்புச் செய்தார். “மாணவர்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொடுக்குமாறு ஹெட்மாஸ்டர் சொல்லியிருக்கிறார், நீங்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று. ஆனால் இலக்கியப் புத்தகங்கள்தான் தருவேன். கதைகள், நாவல்கள் எதுவும் கொடுக்க மாட்டேன் என்றும் சொன்னார். ஆக, எங்கள் பல்ளிக்கூட லைப்ரரியிலிருந்து எனக்குப் படிக்கக் கிடைத்தவை சுபாஷ் சந்திர போஸின் இளைஞனின் கனவு, வ.ரா. எழுதிய தமிழ்நாட்டுப் பெரியார்கள், நேருவின் பேச்சுக்கள் அடங்கிய நூல், முஸ்தபா கமால் பாஷா போன்ற வெ.சாமிநாத சர்மா நூல்களெல்லாம் அப்படித்தான் அறிமுகமானது.

சண்முகமும் அவ்வப்போது ஏதாவது புத்தகம் கொண்டு வந்து கொடுப்பான். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை போகும் ரோடில் அருகே உள்ள கொட்டையூர் தான் சண்முகத்தின் ஊர். ஒருமுறை அவன் ஊருக்குப் போயிருந்தபோது மலேயாவின் கோலாலம்பூரில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகம் கிடைத்தது. எனது போராட்டம் - என்ற ஹிட்லரின் சுயசரிதை. அப்போது, அந்த நூல் இங்கே தடைசெய்யப்பட்ட ஒன்று. இப்படி பல புத்தகங்கள் அறிமுகமாகின. சில மாதங்களில் நூலகத் திட்டம் சரியாகச் செயல்படாததால் புத்தகம் தருவதை நிறுத்தி விட்டார்கள். எனக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. அது போன்ற சமயங்களில் சண்முகம்தான் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து கொடுப்பான். சுத்தானந்த பாரதியின் நூல்கள், அப்புறம் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘முதல் இரவு’ என்ற நூல் அவன் மூலம் கிடைத்தது. அந்த நூல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒன்று. அந்தப் புத்தகம் எழுதியதற்காக கோர்ட்டில் கேஸ் எல்லாம் நடந்து ரகுநாதன் ஜெயிலுக்குக் கூடப் போக வேண்டி இருந்தது. தொ.மு.சி. பாஸ்கரத் தொண்டைமான், ரகுநாதனை, ‘அவன் எனக்குத் தம்பியே இல்லை,’ என்று ஒரு அறிக்கை கூடக் கொடுத்தார். அந்தப் புத்தகங்களையெல்லாம் என் இளம் வயதிலேயே படித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் அண்ணாதுரையின் பேச்சுகள் அடங்கிய நூல்கள் எல்லாம் சிறு சிறு நூல்களாக அச்சிடப்பட்டு கழக வெளியீடுகளாகக் கிடைக்கும். பின் வாசக சாலைகள், கழகப் படிப்பகங்கள் மூலமும் பல நூல்கள் அறிமுகமாகின. இது போன்ற நூல் அறிமுகங்களெல்லாம் என் 15 வயதிற்குள்ளேயே நடந்த விஷயங்கள். ஆனால் இந்த மாதிரி ஆரம்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. எல்லா மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிடைத்திருக்கிறது. கருணாநிதிக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொருத்தரையும் எங்கு எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. சிவாஜி கணேசனுக்கும் கிடைத்திருக்கிறது. அது அவரை எங்கேயோ கொண்டுபோய் சேர்த்திருக்கிறது, இல்லையா? அதனால் இந்த டைனமிக்ஸ் இருக்கிறதே, ஒருத்தர் பாதிக்கப்படுவது எதனால், எப்படி என்பதும், அதே போல, தான் தன் சூழலை பாதிப்பதும் அது எப்படி என்பதும் எதுவுமே எல்லோருக்கும் இருக்கக் கூடியதே, ஆனால் அதனால் பாதிக்கப்படுகிறோமா, அல்லது அதை மீறி எழ்த்தோன்றுகிறதா, என்கிற அந்த டைனமிக்ஸ்தான் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது.

இலக்கியம் மட்டுமில்லாது நாடகம், ஓவியம், இசை, சிற்பம் சினிமா, விமர்சனம் என்று கலையின் சகல துறைகளிலும் உங்களது பங்களிப்பு இருக்கிறது. இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

இந்த ஆர்வம் எப்படி வந்தது என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் இங்கிருக்கும் ஒவ்வொருவருமே ஏதோ ஒருவிதத்தில் எனக்கு இசை பிடிக்கும், இலக்கியம் பிடிக்கும், சினிமா பிடிக்கும் என்று சொல்லும் வகையான நிலைதான் இருக்கிறது. அதுபோன்று, மற்ற எல்லோரையும் போல, எனக்கும் இவையெல்லாம் பிடித்தது. ஆர்வமாக இருந்தது. ஒவ்வொன்றும் என்னை ஈர்த்தது. அந்த ஈர்ப்பிலிருந்து ஈடுபாடு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் நம்மை ரசிக்க வைக்கும். சில சமயங்களில் தொந்தரவு செய்யும். நமது முன் தீர்மானங்களை மாற்றி அமைக்கும். சிந்திக்க வைக்கும். அப்படித்தான் சிறுவயது முதலே எனக்கும் இவற்றில் எல்லாம் ஈடுபாடு ஏற்பட்டது. சிறுவயதில் நான் என்னைச் சுற்றி கேட்டதெல்லாம் சங்கீதம்தான். கல்யாண கச்சேரி, சினிமா, டிராமாவிலிருந்து, ராப்பிச்சைக்காரன் வரை. சுற்றிப் பார்த்ததெல்லாம் கோவில்கள், அந்தக் கோவில்களில் நடக்கும் பஜனைகள், மார்கழி மாத உற்சவங்கள் போன்றவைதான்.

தமிழக வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ஏற்றம் இறைத்தால் பாட்டு; நாட்டு நட்டால் பாட்டு; கல்யாணம் என்றால் பாட்டு; பாட்டு இல்லாத தமிழ் வாழ்க்கையே இல்லை. அதனால்தான் சினிமாவிலும் பாடல்கள் இருக்கறதா சினிமாக்காரங்கள்லாம் சொல்கிறது ஒரு விதத்திலே வாஸ்தவம்தான். ஆனால் வாழ்க்கையில் காணும் வாஸ்தவம்தான் சினிமாவில் இடம்பெறுகிறதா என்று பார்த்தால், இது அவர்கள் செய்வது கீழ்த்தரமான வியாபாரம். ஆனால் சொல்லிக்கொள்வது என்னமோ வாழ்க்கை அது இது என்று. வாழ்க்கையில் பாட்டு எங்கே எப்படி இடம் பெறுகிறது, அது சினிமாவில் எங்கே, எப்படி இடம் பெறுகிறது என்று பார்த்தால், அது இவர்கள் சும்மா அப்படி சொல்லிக்கிறதுதான். ஆனால் இவர்கள் பாட்டையும், டான்ஸையும் சினிமாவில் நுழைக்கிற காரணமும், நுழைக்கிற விதமும், வேறாக இருக்கும். நுழைக்கிற பாட்டும், டான்ஸும் கூட வேறேதான். ஆக வாழ்க்கையில் ஒரு profound diffusion of art இருந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையாக இருந்திருக்கிறது. அதை மேலே வளர்த்தெடுத்துச் செல்வதும் சாத்தியம். கொச்சைப்படுத்துவதும் சாத்தியம். எல்லா சினிமா ஸ்டார்களும் சொல்கிறார்கள் ‘எனக்கு சிறுவயது முதலே கலைகளில் ஈடுபாடு இருந்தது’ என்று. ஆனால் அவர்கள் சொல்லும் கலை, ஈடுபாடு என்பது வேறு விஷயம். ஆக இவற்றை வார்த்தைகளை மீறிப் புரிந்து கொள்ள வேண்டும். என்னளவில் எல்லோரையும் போலவே எனக்கும் இது போன்ற கலைகளில் சிறுவயது முதலே ஆர்வம் இருந்தது என்று சொல்லிக்கொள்ளலாம் தான். ஆனால், அது எப்படிப்பட்ட ஆர்வ மாக இருந்தது, பின் அதை எப்படி நான் வளர்த்துக்கொண்டேன் என்பதெல்லாம் வேறு விஷயங்கள்தான்.

மதுரையில் நான் படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பெயிண்டர்ஸ் ஷாப் இருக்கும். அந்த பெயிண்டர் ஹோர்டிங்க்குக்காக ஏதாவது வரைந்து கொண்டிருப்பான். நான் அதை உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். யாராவது ஏதாவது சொன்னால் கூட, ‘தம்பி அது பாட்டிலே பார்த்து விட்டுப் போகட்டும்,’ என்று சொல்லுவான். நான் ஸ்கூலுக்குப் போகும் போதும் வரும் போதும் வழியில் அங்கே நின்று அதைப் பார்த்து விட்டு வருவேன். நிலக்கோட்டையில் பள்ளிக்கூடம் போகும் வழியில் தகரக் கடையில் விளையாட்டாக துருத்தி ஊதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தது போல. இது போன்றவற்றைப் பார்த்துக் கொண்டு நேரம் போக்குவதில் எனக்கு ஒரு ஆர்வம். யாராவது ஏன் இங்கே நின்று கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் எனக்கு பதில் சொல்லவும் தெரியாது. எனக்குப் பிடித்திருக்கிறது, நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

அதற்கும் முன்னால் நிலக்கோட்டையில் இருக்கும்போது வீட்டின் சுவர்களில் லஷ்மி படம், முருகன் படம் எல்லாம் பென்சிலால் வரைந்து வைப்பேன். மாமா திட்டுவார். சுவற்றையெல்லாம் கரியாக்கிக் கொண்டிருக்கிறானே என்று. படித்து முடித்ததற்குப் பிறகு ஜம்ஷெட்பூரில் இருந்த மாமா வீட்டிற்குப் போயிருந்தேன், வேலை ஏதாவது கிடைக்குமா என்று கேட்பதற்காக. ஒரு ஆறுமாதம் வரை அங்கே இருந்தேன். அங்கிருக்கும் போதுதான் ஹிராகுட்டில் வேலை காலி இருப்பது தெரிந்தது. பின் ஹிராகுட் போனேன். நான் ஜம்ஷெட்பூர் போன இரண்டு, மூணுநாளிலேயே மாமா காந்தி, கஸ்தூரிபா எல்லோரையும் பென்சிலில் வரைந்து பிரேம் போட்டு வைத்திருந்ததைப் பார்த்தேன். மிக நன்றாகவே வரைந்திருப்பார். ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டும் நேர்த்தி கொண்டவைதான். ’பார்க்கறியா, எல்லாம் நான் தான் வரைஞ்சேன்’ என்று சொல்வார் மாமா. எல்லாவற்றிலும் ஆர்.என்.சாமி என்று கீழே அவர் பேர் போட்டிருக்கும். அவர் அதை எப்படி வரைவது என்றெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனந்த விகடனிலோ எதிலோ சுபாஷ் போஸின் படம் ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்து நானும் வரைந்திருந்தேன்.

அதைப் பார்த்த மாமி, ‘உங்க மருமான் படம் வரைஞ்சிருக்கான் பாருங்கோ, உங்களப் பார்த்து’ என்று மாமாவிடம் சொன்னாள். அவர் ‘எப்படிடா போட்டே?’ என்று கேட்டார். அவர் மெஷர்மெண்ட் எல்லாம் எடுத்து போடுபவர். ‘நானா பத்திரிகையிலே வந்த போட்டோவைப் பாத்து வரஞ்சேன்’னு சொன்னேன். மறுநாளைக்கே அவர் என்னை ஒரு ஆர்டிஸ்ட் ஸ்டூடியோவிற்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார். ஆனால் நான் அங்கே அதிகம் நாள் இல்லை. ஏனென்றால் டைப்-ரைட்டிங் படிக்க வேண்டும், ஷார்ட் ஹேண்ட் படிக்க வேண்டும். புக்-கீப்பிங் படிக்க வேண்டும். பின் அவரது ஆபிஸிற்குச் சென்று மூன்று மணிநேரம் வரை இருந்து ஆபிஸ் பற்றி, அங்கு என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி எல்லோரையும் கேட்க வேண்டும். மாமா அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் என்பதால் எல்லோரும் பதில் சொல்வார்கள். அவர்கள் என்ன சொல்வார்கள், நான் என்ன புரிந்து கொண்டேன் என்பது வேறு விஷயம். ஆனால் நான் கேட்டால் பதில் சொல்வார்கள். இப்படி பல அனுபவங்கள். ஆக, என்னுடைய மூலத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் ஒருவேலை நிலக்கோட்டைக்கு அதில் இடமிருக்கலாமோ என்னமோ?

ஹிராகுட் வாழ்க்கை அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

ஹிராகுட் என்னும் அணைக்கட்டு கட்டும் கேம்பில் நான் ஒரு ஆறு வருஷம் இருந்தேன். அங்கிருந்த போதுதான் க.நா.சு., தி.ஜானகிராமன் போன்ற பலரது இலக்கியங்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது டி.வி. கிடையாது. ஆரம்பத்தில் சினிமா தியேட்டர் கூட கிடையாது. சினிமா பார்ப்பதென்றால் சம்பல்பூர் என்னும் 9 மைல் தூரத்தில் உள்ள ஊருக்குத் தான் போக வேண்டும். குறுகிய சாலை. லாரி, பஸ் எல்லாம் விரைவாகச் சென்று கொண்டிருக்கும். அது 1950-51ம் வருடம். சாலைகளில் விளக்குகள் எல்லாம் இருக்காது. தனியாக நான் செல்வதென்றால் பஸ் பிடித்துதான் போக வேண்டும். ஐந்தாறு பேர்களாக இருந்தால் சைக்கிளில் போவோம். நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவர் பின் ஒருவராகச் செல்லாமல், சாலையை மறித்துக் கொண்டு ஒரே வரிசையாகத் தான் செல்வோம். இரவு 9 மணிக் காட்சிக்குச் சென்று விட்டு இரவே திரும்பி விடுவோம்.

அந்த ஆரம்ப காலங்களில் அதைத் தவிர வேறு பொழுதுபோக்குகள் கிடையாது. கோடைகாலங்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரை தான் ஆபிஸ் இருக்கும். அதன் பிறகு ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போய் விடுவோம். ஃபேனைப் போட்டுவிட்டு, கயிற்றுக்கட்டிலில் ஈரத்துணியைப் போட்டு விட்டு அதன் கீழே படுத்து ஒரு தூக்கம் போடுவோம். பிறகு மாலை 4, 5 மணிக்குத் தான் எழுந்திருப்போம். அப்போது என்னுடைய குவார்ட்டர்ஸில் என்னோடு ஒரு ஏழெட்டு பேர்கள் இருந்தார்கள். அவர்களுள் சிவ கோபால கிருஷ்ணன் என்பவர் கவிஞர். மற்றொருவர் வி.வி.சீனிவாசன். இவர் ஒரு great intellectual. ஆழ்ந்த படிப்பாளி. மிகுந்த புத்திசாலி. என்னுடைய நெருக்கமான நண்பர். He was very close to me. இருவருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான நட்பு. அவரது பேச்சு, செயல், சிந்தனை எல்லாமுமே மிக வித்தியாசமானதாக இருக்கும். எல்லோரும் மாலையில் ஒரு 3 மைல் தூரம் நடந்து சென்று, மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு கல்வெட்டில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம். ஒருவர் புத்தகம் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்போம். இப்படித்தான் ரஸ்ஸல், பெர்னார்ட் ஷா, ஆல்பெர்ட் ஷ்வைட்ஸர் உட்பட பலருடைய புத்தகங்கள் அறிமுகமாகின. இவற்றில் மற்றவர்கள் நட்புக்காகக் கலந்து கொள்வார்கள். ஆனால் அதிகமும் அதில் ஈடுபாட்டோடு இருந்தது நானும் சீனிவாசனும் தான். So, I was exposed to those things in life. அப்போதுதான், Will Durant-ý Story of Philosophy, 1,2,3 infinity, Short History of the World by H.G. Wells போன்று அந்த ஆறு வருஷத்தில் இது மாதிரி பல புத்தகங்களைப் படித்தோம்.

அங்கே இருக்கும் போது சம்பல்பூரில் இருந்து ஒருவர் சைக்கிளில் வருவார். அவருக்கு புத்தகம் விற்பது தான் வேலை. அவரது மனைவி ஆசிரியராகவோ என்னவோ வேலை பார்த்தார். இவர் இரண்டு பைகளில் புத்தகங்களை நிரப்பி சைக்கிளில் எடுத்துக்கொண்டு எங்களிடம் வந்து, என்ன புத்தகம் வேண்டும்? என்று கேட்பார். என்னென்ன புத்தகம் வந்திருக்கிறது என்று சொல்வார். கேட்பதை அடுத்த வாரம் கொண்டு வந்து கொடுப்பார். அவருடைய வேலையே இந்தப் புத்தகம் விற்பதுதான். இதில் என்ன லாபம் கிடைக்கும் என்று தெரியாது. ஏனென்றால் பெங்குவின் நூல்களே 12 அணா விற்றுக் கொண்டிருந்த காலம் அது. பெர்னார்ட் ஷாவின் மேஜர் பார்பராவையே நான் எட்டணாவுக்கு வாங்கிப் படித்திருக்கிறேன். அவர் வந்தாலே எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷமாக இருக்கும். பாதி வந்தாச்சா? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்போம். அவர் பெயர் பாதி.. “ஊர்வலம் வந்திண்டிருக்கா, சுவாமி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் கேட்பது போல, பாதி வந்தாச்சா? என்று எல்லோரும் ஆர்வத்துடன் விசாரிப்பார்கள்.

அதில் சீனிவாசன் மட்டும் ’மிஸ்டர் ஹாஃப்’ வந்தாச்சா? என்று தான் விசாரிப்பார். சீனிவாசன் ஒரு சிறந்த படிப்பாளி, விசித்திரமான மனிதர் என்று சொன்னேன். விசிததிரம் என்றால், அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நாம் சாதாரணமாக, செய்யும் காரியமாக இராது. என்னோடு அப்போது அவரும் இன்னும் நாலைந்து நண்பர்களும், வீடு கிடைக்காத காரணத்தால், என்னுடன் தங்கியிருந்தனர். அதில் ஒருவருக்கு காலில் என்னவோ வலிக்காகவோ என்னவோ ஞாபகமில்லை, ஆலிவ் ஆயில் தடவினால் சரியாகும் என்று டாக்டர் சொல்ல, ஆலிவ் ஆயிலுக்கு புர்லாவில் எங்கே போவது என்று தலையைச் சொரிந்து கொண்டிருந்தோம். இரண்டு நாளில் ஒரு நாளில் திடீரென்று சீனிவாசன் அந்தக் காலத்தில் பெட்ரோல் வாங்கும் கான் அளவு பெரிதான கானை எங்கள் முன்னால் வைத்து, “இந்தாய்யா நீர் தேடின ஆலிவ் ஆயில்” என்றார். “ஏதுய்யா இது, எங்கே கிடைச்சது? என்ன விலை? இவ்வளவு என்னத்துக்கு?” என்று திகைத்துப் போய் நாங்கள் சரமாரியாக் கேட்ட கேளவிகளுக்கு, “இந்தக் கேள்விகள் எல்லாம் அனாவசியம். ஆலிவ் ஆயில் உங்களுக்குத் தேவை. நான் வாங்கிண்டு வந்திருக்கேன். காலில் தடவிக்க. மிச்சம் இருந்தா இன்னும் யாருக்காவது கால்லே வலி வந்தால் உடனே தடவிக்க கை வசம் இருக்கும். அப்போ ஆலிவ் ஆயில் எங்கே கிடைக்கும்னு தேடீண்டு போகவேண்டாமில்லியா?” என்றார். காசைப் பத்தி கவலை இல்லை.

அவர் எங்களுடன் இருந்தவரை, சம்பல்பூருக்கு சினிமா பார்க்க எல்லாருக்கும் சைக்கிள் எங்கே கிடைக்கும்னு தேடவேண்டாம். பஸ்ஸிலே போய் அவதிப்படவும் வேண்டாம். அவர் வேலை செய்த காண்டிராக்டரின் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். நாங்கள் ஐந்தாறு பேர் கூட்டமாகத் தான் போவோம். சினிமாவுக்கோ எதற்குமோ.

அவர் ஒரு சிவில் கண்டிராக்டரிடம் அக்கௌண்டண்டாக வேல் பார்த்து வந்தார். ஒரு நாள் ‘நான் வேலையை விட்டுட்டேன் இனிமே அவன்கிட்ட வேலை பாக்கப் போறதில்லே’ என்றார். ஏன்யா? வேறே வேலை கிடைச்சிட்டதா? என்று கேட்டால்,  ‘அதெல்லாம் இல்லை, இனிமேதான் வேறே வேலை தேடணும். அவன் கிட்டே வேலை பண்ணப் பிடிக்கலை. அதான். ஒரு சிவில் கண்டிராக்டர், மெயின் டாமில் ஸ்பில்வே செக்ஷனில் வேலை பாக்கறான். அவனுக்கு ஹைட்ரோ டைனமிக்ஸ ஹைட்ரோ ஸ்டாடிக்ஸ் ஒண்ணுமே தெரியலை. தப்புத் தப்பா சொல்றான். அவன் கிட்டே எப்படி வேலை பண்றது?’ என்றார். அந்த மாதிரி விசித்திர மனிதர் அவர். That was a great time. ரஸ்ஸலின் எளிய தத்துவப் புத்தகங்கள் Marriage and Morals, Sceptical Essays, Portrait from Memory and other essays, ஷாவின் சின்ன நாடகங்கள், Androcles and the Lion, Major Barbara இப்படி, எல்லாம் அங்கே அப்படித் தான் படித்தோம்.

இவர்களோடு இன்னுமொரு முக்கியமான நண்பன் மிருணாள் காந்தி சக்கரவர்த்திதான். அவன் ஒரு வங்காளி. அவனுடைய தந்தை சுரேஷ் சந்தர சக்கரவர்த்தி. அவர் - a man of profound learning and scholarship. அவர் ஒரு ஹைஸ்கூலில் இங்கிலீஷ் டீச்சர்தான். மிருணாள் காந்தி என்னை விட மூன்று வயது பெரியவன். மிருணாள் சொல்வான் சின்ன வயசிலிருந்தே தன் அப்பாவிடம் ஏதாவது சந்தேகம் கேட்டால் - தவளைக்கு ஏன் பின்னங்கால் பெரிதாக இருக்கிறது; முன்னங்கால் சிறிதாக இருக்கிறது? இப்படி - அவனுக்கு அப்பாவிடமிருந்து பதில் கிடைக்காது. ஜுலியன் ஹக்ஸிலியின் முகவரியைக் கொடுத்து, அவருக்கு எழுதிக் கேட்டுக்கோ, என்பாராம். வங்கமொழி பற்றி ஏதாவது சந்தேகம் வந்தால், சுநிதிகுமார் சட்டர்ஜிக்கு எழுதிக்கேள் என்று அட்ரஸ் கொடுப்பாராம். அவர் தன் பையனை இப்படித்தான் வளர்த்தாராம். அவன் தன்னிடம் இப்படி எழுதி ஜூலியன் ஹக்ஸ்லியிடமிருந்தும், சுநிதி குமார் சட்டர்ஜியிடமிருந்தும் வந்த கடிதங்கள் இருப்பதாகச் சொன்னான். He was very very dear to me and I was also very dear to him. அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவன் மாதிரி நல்ல நெருக்கமான நட்பு எங்களுடையது. நாங்கள் அடிக்கடி சின்னச் சின்ன விஷயங்களில் சண்டை போட்டுக்கொள்வோம். ஒரு சமயம் சண்டை போட்டு அப்போதான் சமாதானமாயிருக்கிற சமயம். ஒரு நண்பனை அலுவலக மாற்றலில் பிரிய நேர்ந்த போது நாங்கள் இருவரும் அவனுக்கு கொடுத்த ‘பார்ட்டி’யின் போது, மிருணாள் மிகவும் மனம் நெகிழ்ந்து, தளதளத்த குரலில், ‘my father would feel very proud of having you as his son, more than me’ என்றான். அந்த இரவு எனக்கு மிக முக்கியமான இரவு. நான் கலந்து கொண்ட அந்த முதல் ‘பார்ட்டி’க்காகவும், மிருணாள் பாதி போதையில் சொன்ன அந்த வார்த்தைகளுக்காகவும்.

இப்படி இருக்கும் போது சில வருடங்களில் மகாநதியின் மறுகரையில் இருந்த புர்லா முகாமுக்கு தியேட்டர் வந்தது. சத்யஜித் ரேயைப் பார்த்தது அங்கேதான். மெட்ராஸில் இருப்பவர்கள் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதற்கு ஒரு ஆறேழு வருடம் கழித்து நான் மெட்ராஸ் வந்தபோது, பிராட்வே தியேட்டரில் பாதேர் பஞ்சலி ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டரில் ஒரு 12 பேர்தான் இருந்தார்கள். அது 1961. ஆனால் நான் 1954-55-லேயே அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் ஒரிஸ்ஸாவில் ஒரு அணைக்கட்டு முகாமில் இருந்த டெண்ட் தியேட்டரில் பார்க்கக் கிடைத்த பாதேர் பஞ்சலி, உலகப் பிரசித்தி பெற்ற பின்னும், சென்னை போன்ற இடத்தில் பார்க்க ஆளில் இல்லாமல் போய்விட்டது. ரித்திக் கட்டக், ரே போன்றோரின் படங்களையும், மற்றும் சில பெங்காலிப் படங்களையும் ஹிராகுட்டிலும், சம்பல்பூரிலும் போய்ப் பார்ப்போம்.

ஒரிய மொழிக்கும் வங்காளி மொழிக்கும் ஒரு நெருக்கமான உறவு இருந்தது. அதாவது தமிழுக்கும் மலையாளத்திற்கும் இருப்பது போன்று. 1951லிருந்தே வங்காளி படங்கள் எனக்கு மிகவும் பழக்கமான ஒன்றாக இருந்தது. இந்தப் பாட்டு, கூத்து இதெல்லாம் இல்லாமல், காமெடி சீன்ஸ் என்பதெல்லாம் இல்லாமல் நேரடியாக ஒரு கதையை கதையை மாததிரம் சொல்லும் மரபு அங்கே இருந்தது. மேலும் அங்கு திரைப்படங்களின் எல்லாக் கதைகளுமே சரத் சந்திரர், பங்கிம் சந்திரர் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடையதாக இருந்தது. அது எனக்கு இன்னும் ஒருவிதமான Exposure என்று சொல்லலாம். இங்கே தமிழ் வாழ்க்கை பாட்டும், நடனமும் கலந்தது; அதனால்தான் “கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப்போலாமா?” என்று பாட்டும் டான்ஸும் கட்டாயம் சேர்ப்பதாகச் சொல்கிறார்கள் இல்லையா? அதற்குக் காரணம் நம் தமிழ் வாழ்க்கைதான் என்கிறார்கள் இல்லையா? இதே பாட்டும், நடனமும் கலந்த வாழ்க்கைதான் வங்காளிகளினுடைய வாழ்க்கையும். ஆனால் அவர்கள் சினிமாவில் அப்படி மசாலாக்கள் அவர்கள் சேர்ப்பதில்லையே, ஏன்?

சினிமாவை வங்காளிகள் ‘பொய்’ (’boi’) என்று சொல்வார்கள். நாம் படம் என்று சொல்வதைத் தான் அவர்கள் ‘பொய்’ என்று சொல்வார்கள். அதற்கு புத்தகம் என்பது பொருள். சினிமா பார்க்க போகலாமா? என்று கேட்க,  ‘சொலுன், பொய் தேக் தே சொலி’ என்றுதான் சொல்வார்கள். படம் பார்க்க அல்ல - புத்தகம் பார்க்கப் போகிறேன் என்று. Mostly well known authors were brought on to the screen. அப்புறம் இல்லஸ்ட்ரேட் வீக்லியில் சி.ஆர்.மண்டி என்பவர் எடிட்டராக இருந்தார். அப்போது நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸோட ரீ-ப்ரொடக்‌ஷன்ஸ் எல்லாம் வரும் வீக்லியில். ஜெமினி ராய், டாகூர், கல்யாண் சென், பரிதோஷ், ஹுஸேன், அப்போ பாரிஸிலிருந்த டி ஸோஸா, அப்புறம கோவாவில் இருந்து ஒருவர், லக்ஷ்மண் பாய் இப்படி… I was drawn to all these artists..

இதற்கெல்லாம் முன்பு ஒருமுறை ஹிராகுட்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணின் பேச்சைக் கேட்க நேர்ந்தது. அவர் சம்பல்பூருக்கு வருகிறார் என்று சொன்னார்கள். நானும், மிருணாள் காந்தி சக்கரவர்த்தியும் போனோம். அது தேர்தல் நேரம். ஆனால் அவர் அதற்காக வரவில்லை. நாங்கள் அதற்கு முன்பே Hindu view of life , Indian Philiosophy, Bhagwat Gita எல்லாம் படித்திருந்தோம். அவர் ஆங்கிலத்தில்தான் பேசினார். He was great orator. ரொம்ப அற்புதமாகப் பேசினார்.

ஒரிஸ்ஸாவில் இருந்தபோது கல்கத்தா போயிருக்கிறீர்களா?

மகாநதியின் எதிர்க்கரையில் இருந்த புர்லாவில் நாங்கள் இருந்த போது ஒருமுறை கல்கத்தா போயிருந்தோம். ஒரு வாரம் கல்கத்தாவைச் சுற்றினோம். அங்கே விக்டோரியா மெமோரியல் ஹாலில் ராஜா ரவி வர்மா, பின் டேனியல் ப்ரதர்ஸின் கம்பெனி பெயிண்டிங்க்ஸ், ஒரிஜினல் பெயிண்டிங்கஸ் நிறைய இருந்தன. அவற்றையெல்லாம் நான் அங்குதான் ஒரிஜினலில் முதல் தடவையாகப் பார்த்தேன். அப்போது கல்கத்தாவில் அங்கே அகில இந்திய கலைக் கண்காட்சியும் ஒன்று நடந்து கொண்டிருந்தது. புதிதாக  அப்போது தொடங்கப்பட்டிருந்தது லலித கலா அகாடமி வருடா வருடம் நடத்தும் ஒரு அகில இந்திய கலைக் கண்காட்சியும் நடந்து கொண்டிருந்தது. அதில் ஹூசேனுடைய ஒரிஜினல் பெயிண்டிங்குகளையும் பார்த்தேன். நீலமும், மஞ்சளும் குழைத்து அப்படியே மனதை மயக்கி விடுவதாக அது இருந்தது. ஹுசேனுக்கு ஒரு tremendous sense of colours. வாட்டர் கலரிலேயே பெரிய பெரிய மாயங்களை, ஜாலங்களையெல்லாம் செய்து விடலாம். கோபால் கோஷ் அதில் மிகுந்த திறமைசாலி. ஷைலோஸ் முகர்ஜீயும்தான். இந்த ஓவியர்களும் சரி, ஓவியங்களும் சரி, இல்லஸ்டிரேடட் வீக்லியில் பிரசுரமாகியிருந்ததிலிருந்து பரிச்சயமானவை. சி.ஆர்.மண்டி என்பவர் அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது நிறைய அக்கால பிரசித்தி பெற்ற ஒவியர்களின் ஓவியங்கள் அதில் பிரசுரமாகும். அவற்றில் சிலவற்றை ஒரிஜினலாக கல்கத்தாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இப்படி ஒரு சின்ன ஆரம்பத்திலிருந்து அது வர வர தொடர்ந்து exposure வந்து கொண்டே இருந்திருக்கிறது. இப்போதும் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் என்னால் எங்கும் போக முடியவில்லை. பத்து வருடங்களாக என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. இங்கே அந்த மாதிரி இருக்கு, இல்லை என்று ஒன்றும் சொல்ல முடியவில்லை. It may vary in its intensity. It may vary in the degree of intensity in relationship now, but it is there, and it has been continuing.

உங்களுடைய அனுபவம் அல்லது அனுபவம் சார்ந்த அறிவு தமிழ்நாட்டைத் தாண்டியும் செறிவூட்டப் பட்டிருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டிலேயே இருந்திருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்டி ருக்குமா, அல்லது வெளியே சென்றதனால் அது மன விரிவு பெற்றதா?

பெரிய பெரிய அனுபவங்கள், ’பெரிய’ன்னு சொன்னால், என்னை உருவாக்கிய அனுபவங்கள் என்று சொல்லணும். அதெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கின்றன. என்னைத் தேடிப் போக வைத்த அனுபவங்களை விட தற்செயலாக என் முன்னால் வந்து நின்றவை அதிகம். முதலில் அவற்றை நான் தேடிப் போனேன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவை என் முன் எதிர்ப்பட்டு, அதில் எனக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டவுடன், நான் அதைத் தொடர்ந்து தேடிப்போக, அதன் மூலம் பின்னால் பல அனுபவங்கள் கிடைத்தன என்று சொல்லலாம். ஆனால் இங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. நிச்சயமாக இப்படி என்றும் சொல்ல முடியாது. அப்படி என்றும் சொல்ல முடியாது. ஆனால் அங்கே இருந்த அனுபவங்கள் இங்கே கிடைக்காது என்று சொல்லலாம். எனக்கு இங்கே அவை கிடைக்கவில்லை. இங்கே கிடைத்த அனுபவங்களுடன் என் உறவு எப்படி இருந்ததோ அதை, இன்னும் intense ஆக, மிக உக்கிரமாக அங்கே தொடர முடிந்தது.

ஆனால் அங்கே கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள் எதுவுமில்லாமல் நான் இங்கேயே இருந்திருந்தால் எனக்கு எவ்வித அனுபவமும் கிடைக்காமலேயே போயிருக்கும். ஓவியங்கள், சிற்பங்கள் என்று இப்போ இங்கேயும் ஏதோ இருக்கத்தான் இருக்கின்றன. “இப்போ” என்பதை அடிக்கோடிட்டுச் சொல்லணும். ஆனால் அப்போ அங்கே அவற்றோடு எனக்குக் கிடைத்த உறவுகள் குறிப்பிடத்தகுந்தவை. அதுபோல ஹிந்துஸ்தானி சங்கீதம் ஈர்த்த அளவு என்னை கர்நாடக சங்கீதம் ஈர்க்கவில்லை. இங்கு கர்நாடக சங்கீதம் சாகித்யத்தைச் சார்ந்தே இருந்திருக்கிறது. ஆனால் ஹிந்துஸ்தானி சாகித்யத்தைத் தாண்டி சஞ்சரிக்கிறது. ஒரு ஒன்றரை மணிநேரம் ஸ்லாமத் அலிகான் பாடுகிறார் என்றால் அவருக்கு வேண்டிய சாகித்யம் இரண்டே இரண்டு வரிகள் தான். மீதி எல்லாம் ’ஆ’ஹா காரத்திலேயே இழையும் இசைதான். வெற்று சப்த லோகத்தில் அவர் இழைக்கும் மாயம்தான். ஆனால் அது இங்கே சாத்தியமில்லை இங்கே சாகித்யத்தில் தான் ஒரு ராகத்தின் சப்த ரூபம் சொல்லப்படுவதால் சாகித்யத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. வாத்திய சங்கீதமாக இருந்தால் கூட ’நான் இந்தக் கீர்த்தனை பாடுகிறேன்’ என்று சொல்லித்தான் பாடுகிறார்கள். வாசிக்கிறவர் சொல்லாவிட்டலும் கூட, “காபி பாடினீங்களே ரொம்ப நல்லா இருந்தது, ‘என்ன தவம் செய்தனை’ தானே பாடினீங்க?” என்று கேட்டு மகிழ்கிறார்கள். வாத்தியத்தில் மொழியும் அர்த்தமும் தாண்டிய சப்த லோகத்தை உருவாக்கலாம் இல்லையா? எனக்குத் தெரியவில்லை. இதைச் சொல்வதற்கு எனக்குத் தகுதி உண்டா என்பதும் புரியவில்லை. ஆனால் என்னுடைய அனுபவத்தில், என்னுடைய பார்வையில் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் எழுதத் தொடங்கியது எப்போது, எப்படி?

இப்போது யோசித்துப் பார்க்கும்போது தெரிகிறது. பள்ளிப்பருவத்திலேயே வித்யாசமான மனது கொண்டவனாக இருந்திருக்கிறேன் என்று. சிறு வயதில் எனக்கு என் அக்கறைகளும், அனுபவங்களும் சாதாரணமாகத்தான் தெரிந்தன. ஆனால் நான் எழுதத் தொடங்கியது முதன் முதலில் ’எழுத்து’ பத்திரிகையில்தான். அதுவும் தற்செயலாகத்தான் நேர்ந்தது.

நான் ஹிராகுட்டில் இருந்து டெல்லிக்குச் சென்று, அங்கு மூன்று வருஷம் இருந்து விட்டு, பின்னர் ஜம்முவிற்கு மாற்றலாகிப் போனேன். அங்கே ஒரு மூன்று வருடம் இருந்தேன். அதற்கு முன்னால் டெல்லியில் இருந்தபோது அங்கே வீட்டிலிருந்து ஆபிஸிற்குச் செல்லும் வழியில் ஒரு வீட்டின் ஒரு காரேஜ். அங்கே ஒரு ரீடிங் ரூம் இருக்கும். அதில் கல்கி, ஆனந்தவிகடன் எல்லாம் வந்திருக்கும். அத்தோடு எழுத்து என்ற ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அது சி.சு.செல்லப்பாவினுடையது. அவர் எழுதிய ’மணல் வீடு’ கதையை ஏற்கனவே நான் படித்திருந்தேன். அதுபோல க.நா.சுவின் ’ஒருநாள்’ என்ற நாவலை நான் ஹிராகுட்டில் இருந்தபோதே படித்திருந்தேன். லா.ச.ரா., ஜானகிராமன் தொகுப்புகள் எல்லாம் கலைமகள் பிரசுரத்தின் மூலம் வரும். அதையும் நான் முன்பே படித்திருக்கிறேன். பிச்சமூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன் எழுத்துக்கள் எல்லாம் எனக்கு முன்பே பரிச்சயமானவைதான். எழுத்து பத்திரிகையைப் பார்த்தால் இவர்கள் எல்லாம் அதில் எழுதியிருந்தார்கள். என் மனத்தில் இருந்ததை எல்லாம் இவர்கள் சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் ஆச்சரியம்.

அதற்கு முன்னால் ஹிராகுட்டில் இருந்த போது ‘சாந்தி’ என்ற பத்திரிகை வரும். சிதம்பர ரகுநாதன் கதைகள், கு.அழகிரிசாமி கதைகள் என்று தொகுத்து புத்தகங்கள் வந்தன. சிதம்பர ரகுநாதன் தான் சாந்தியை நடத்திக் கொண்டிருந்தார். நான் ஒவ்வொரு மாதமும் நாலணா ஸ்டாம்ப் அனுப்பி அதை வரவழைத்துப் படிப்பேன். அதில் எல்லோரும் போற்றிக் கொண்டிருந்த கல்கியின் எழுத்துக்களைப் பற்றி ஒருமுறை அவர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதைப் படித்ததும் தான், நாம் நினைப்பதையே இவரும் எழுதியிருக்கிறாரே. ஆக, நாம் நினைத்தது நியாயமான ஒன்றுதான். வெளியில் சொல்லக் கூடிய ஒன்றுதான், அதில் பைத்தியக்காரத்தனம் ஏதும் இல்லை என்ற எண்ணம் வந்தது. அதே சமயம் அதெல்லாம் எழுத்திலும் வெளிவந்ததும் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. என்னை மாதிரி நிறைய பேர்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் வந்தது.

பின் எனக்கு ஜம்முவுக்கு டிரான்ஸ்பர் ஆனது. ஜம்முவில் தமிழர்கள் என்று யாருமில்லை. ஆக, நான் என் தமிழ் அக்கறைகளைப் பேசி, பகிர்ந்துகொள்ள ஜம்முவில் எனக்கு யாருமில்லை. எனக்கு ’எழுத்து’ தவறாமல் வரும். சுதேசமித்திரன் வரும். அதில் ஜானகிராமன் மலர்மஞ்சம் என்ற ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் தொடர்கதைகள் நிறைய வரும். எழுத்து இதழில் ’பெரியவன்’ என்று ஆர்.சூடாமணி எழுதிய கதை ஒன்று வந்தது. செல்லப்பா வேறு அந்தக் கதையைப் பாராட்டி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அந்தக் கதை எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் எழுத்தில் ஏன் வெளியானது? என்று எனக்கு எரிச்சல். உடனே நான் எழுத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பினேன். “இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று இதை வெளியிட்டிருக்கிறீர்கள், இது மிகவும் அபத்தமான கதையாக இருக்கிறதே! எழுத்தில் வருமளவிற்கு இதில் என்ன இருக்கிறது?, வேறு எங்காவது வெளியாகி இருந்தால் அதுபற்றி நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் உங்கள் எழுத்து பத்திரிகைக்கு இது ஏன்?” என்று கேட்டு நான் எழுதியிருந்தேன். உடனே சி.சு. செல்லப்பா அந்தக் கடிதத்தைப் பத்திரிகையில் பிரசுரம் செய்து, எழுத்து தலையங்கத்திலும் என் கடிதத்தைப் பாராட்டி சில வரிகள் எழுதிவிட்டு, தொடர்ந்து என்னை எழுத்துக்கு எழுதுமாறு கடிதமும் எழுதினார். அப்படித் தொடங்கியதுதான் எழுத்துப் பயணம். ஜம்முவில் எனக்குப் பேசுவதற்கு யாரும் ஆள் கிடைக்கவில்லை. யாரும் இல்லவும் இல்லை. மனதில் இருப்பதை எழுத ஒரு இடம் கிடைத்தது. எழுதினேன். அவ்வளவுதான். ஆக, தற்செயலோ அல்லது விபத்தோ, எப்படி எடுத்துக்கொண்டாலும், இப்படித்தான் நான் இங்கு, எழுத்துலகுக்கு வந்து சேர்ந்தது.

அப்படி நீங்கள் எழுதிய முதல் படைப்பு எது?

படைப்பு என்று சொல்வதா என்று எனக்குத் தெரியாது. எழுத்து, அல்லது என் எழுத்து என்று பேசலாமே. எனக்கு ஆத்மார்த்தமாக மனசுக்குள் இருக்கும் எதையும் இந்த மாதிரியெல்லாம் எழுதலாம் என்று எழுதுவதற்கு முதலில் தைரியம் கொடுத்தவர் ரகுநாதன். அவரது கதைகளைப் படித்து அதனால் ஈர்க்கப்பட்டவன் நான். அவர் ஒருமுறை ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தமிழ்நாட்டுக் கதைகள், நாவல்கள் எல்லாமே காதல், அது இது என்று மிக மோசமாக இருக்கிறது, வர்க்கப் போராட்டம், பாட்டாளிகள் போராட்டம், தொழிலாளர்கள் பிரச்சனை என்று மக்களை முன்னெடுத்துச் செல்லும் படைப்புகளையெல்லாம் யாருமே எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று. இப்படித்தான் ஏதோ எழுதியிருந்தார். அவர் எழுதியிருந்தது எதுவும் பிடிக்கவில்லை எனக்கு. வேடிக்கையாகவும் இருந்தது. உடனே, எழுத்து பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதினேன். அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாடு நடந்து முடிந்திருந்தது. அதன் தீர்மானங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றித்தானே இருந்தது? உடனே நான் அவருக்கு “நீங்கள், பஞ்சும் பசியும் எழுதியிருந்தீர்கள், அடுத்தபடியாக உங்கள் கட்சியின் அமிர்தசரஸ் மகாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி நாவல் எழுதுங்கள். அதில் நிறைய பாட்டாளிகள் பிரசினைகள் இருக்கு” என்று எழுத்து பத்திரிகைக்குக் கடிதம் எழுதினேன்

‘பஞ்சும், பசியும்’ நாவலை முதல் சமூக புரட்சி என்றும் பாட்டாளிகள் என்றும் பேசும் முதல் நாவல் என்று ஏதேதோ சொல்லுகிறார்கள். அதில் ஒரு தொழிலாளி, முதலாளியின் மகளைத் தான் காதிலிக்கிறான். ஏன் அவன் காதலிக்க வேறு பெண்ணே கிடைக்கவில்லையா? இப்படி என்னெனவோ பேத்தல் எல்லாம் அதில் இருந்தது. அதில் முக்கியமானது அவர் பாட்டாளி மக்களுக்குத் தலைமை தாங்குகிற ஒரு புரட்சியாளர். அவருக்கு முதலாளியின் மகள் மீது காதல். முதலாளியோ ஒரு வில்லன். டிபிகல் எம்.ஜி.ஆர் சினிமா கதை. இதைக் கடுமையாக விமர்சித்து நான் எழுத்து பத்திரிகைக்கு எழுதினேன். செல்லப்பாவும் அதைப் பிரசுரம் செய்து விட்டார். அதனால் ரகுநாதனுக்கு என் மேல் கோபம். “என்ன இருக்குன்னு இதைப் போட்டீங்க?” என்று செல்லப்பாவிடம் சண்டை போட்டதாக, அடுத்த முறை விடுமுறையில் நான் சென்னை வந்த போது செல்லப்பா சொன்னார். ஆக, இந்த ரகுநாதன் நான் முன்னர் அறிந்திருந்த ரகுநாதன் இல்லை. விசுவாசமான கட்சித் தொண்டராகக் கீழே இறங்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்ததாக நான் எழுதியதுதான் பாலையும் வாழையும்.

அதைப் பற்றிச் சொல்லுங்களேன்!

தமிழ்நாட்டில் எல்லாத் தளங்களிலும், எல்லா கலைகளிலும் ஒரு வறட்சி. creative vision இல்லாத, creative energy, creative spirit என்பதே இல்லாத ஒரு வறட்சி. ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு காவியத்திற்கு, ஒரு படைப்பிற்கு உரை எழுதினார்களே தவிர, அவர்கள் அதை கிரியேடிவாகப் பார்க்கவில்லை. அதாவது, ஏன் என்று பார்க்கவில்லை. அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதற்கு உரை எழுதினார்கள். அவ்வளவுதான். நம் பெரிய அறிஞர் பெருமக்கள் எல்லாம் வெறும் உரையாசிரியர்களாகவே இருந்திருக்கிறார்கள். அரும்பத உரையாசிரியரிலிருந்து ஆரம்பித்து இன்றைய, அல்லது நேற்றையவா?, மு.வரதராசனார் வரைக்கும். ஆக இது பாலை நிலம் இங்கே வாழைப்பயிருக்கு இடமில்லை என்பதாக எழுதியிருந்தேன். So that was the first long article covering all areas of creative endevour. அது எழுத்தில் வெளியானது. 1961ல் என்று நினைக்கிறேன்.

அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

வரவேற்பு என்றால் எழுத்து பத்திரிகை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அவ்வளவு தூரம் அதுவும் பரவியது. அகிலன், நா.பா என்னும் அந்த அளவிற்குப் பரவவில்லை. பரவாது. ஆனால் எழுத்து எடுத்துப் போகும் இடங்களுக்குப் போய்ச் சேர்ந்தது. சிலோனிலிருந்து அதற்கு நல்ல கவனிப்பு இருந்தது. ஆனால் இங்கே அந்த அளவிற்கு இல்லை. ஆனால் மிக முக்கியமான விஷயம் இதையெல்லாம் பற்றி எழுத முடிந்தது, அதைப் படித்து வரவேற்கிறவர்களும், கவனம் கொள்கிறவர்களும், தொடர்பவர்களும் இருந்தார்கள் என்பதுதான். அந்த எழுத்துக்கள் அந்தக் காலத்தில் அதைப் படித்தவர்களிடையே ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது ஒரு புது குரலாக அவர்களுக்கு இருந்திருக்கிறது. இருந்தாலும் அது சிறிய வட்டம் தான். மிகச் சிறிய வட்டம்.

படைப்பின் மீதான விமர்சனத்தை விடுத்து விமர்சனம் செய்தவரையே கடுமையாகச் சாடும் இலக்கியப் போக்கு குறித்து உங்கள் கருத்து என்ன?

அதற்கு என்ன செய்வது? அந்த மாதிரியான சூழல்கள்தான் இங்கே இருக்கின்றன. நான் சில இயக்கங்களை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியிருக்கிறேன். அதே போன்று இலக்கியத்தை வியாபாரப்படுத்தியவர்களை - தொடர்கதை போன்று - அகிலன், நா.பா வகையறாக்களை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இவர்களெல்லாம் இலக்கியம் என்று சொல்லி வேறு ஏதோ காரியத்தைச் செய்து கொண்டிருந்தவர்கள். அதற்கு எதிர்வினையாகக் கருத்துக் கூறாமல் என்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டியும், அமெரிக்கக் கைக் கூலி என்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள் எழுதினார்கள், பேசினார்கள். மற்றவர்களோ, ”நீ யார் என்னைச் சொல்ல, லட்சோப லட்சம் வாசகர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நீ எதற்கு?” என்று சொன்னார்கள். அதாவது பரவாயில்லை. அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. அது இலக்கியம் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் இருக்கலாம். சாதாரண மக்களின் ரசனைக்கேற்ப எழுதுகிறவர்கள், அவர்கள் எழுத்தில் ஒரு நிலைப்பாடு உண்டு. ஆகவே அவர்கள் கேள்வியில் ஒரு அர்த்தமுண்டு. அவர்கள் பார்வையை எழுதினார்கள். அதில் பொய்யில்லை. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் எனக்கு அமெரிக்காவில் இருந்து மணியார்டர் வருகிறது என்றெல்லாம் சொன்னார்கள். இது திட்டமிட்ட தெரிந்தே செய்த பொய் பிரசாரம். தி.க.சிவசங்கரனும் அவர்களுள் ஒருவர். சிகரம் செந்தில்நாதன் தன்னுடைய பத்திரிகையில் அப்படி எழுதினார். இதற்கெல்லாம் என்ன ஆதாரம்? என்று யாரும் கேட்கவில்லை. கோவை ஞானி மட்டுமே, ”ஏன் இப்படியெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதுகிறீர்கள்?” என்று கேட்டாராம். ஞானியை தொன்னூறுகளில் முதல் முறையாக கோயம்புத்தூர் போயிருந்தபோது சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச் சொன்னார். அதற்கு இவர்கள், ‘அவர் அமெரிக்கக் கைக்கூலியாக இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்படி எழுதியதால் இனிமேல் அமெரிக்காவிலிருந்து பணம் வருவதாக இருந்தால் அது வராமல் தடுத்து விடும் இல்லையா?’ என்றார்களாம். என்னை அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஆள், அமெரிக்காவுக்கு அடிக்கடிப் போய் வருகிறேன் என்றெல்லாம் 1994-95களிலிருந்தே கூறி வருகின்றனர். இன்னும் நான் அமெரிக்கா என்ன, கும்மிடிபூண்டி கூட நான் போனதில்லை. இந்தத் தகவல்களெல்லாம் வனமாலிகை நாகர்கோவிலிலிருந்து நடத்திய ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறது. அதை எழுதியவர் இப்போதும் இருக்கிறார். ஆனால் என்னை அமெரிக்க ஏஜெண்ட் என்று சொன்னவர்களின் கூட்டம் தலைவலி வயிற்று வலி என்று சொல்லிக்கொண்டு ரஷ்யா போய் வருவதை வழ்க்கமாகக் கொண்ட கூட்டம்தான். அடிக்கடி மாஸ்கோவிலிருந்தும் இவர்களுக்கு அழைப்பு வரும். இவர்களும் ஏதாவது அரசியல் முடிவு எடுக்க வேண்டுமெனில், இவர்களுக்கு உடனே வயிற்று வலி வரும். அதற்கு நம்மூர் ஆஸ்பத்திரி உதவாது. மாஸ்கோ போவார்கள். இப்போது அந்த வயிற்று வலி, தலை வலி எல்லாம் வருவது நின்று விட்டது போலும். அவர்கள் மாஸ்கோ போவதும் நின்றுவிட்டது.

ஒருமுறை நக்கீரனில் தேர்தல் பற்றிய ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். நக்கீரன் என்னை எழுதச் சொல்லிக் கேட்டு எழுதியதுதான். அப்போது நக்கீரன் பத்திரிகையையே நான் பார்த்ததில்லை. ”நான் என்ன எழுதுவது?” என்று என்னை எழுதச் சொல்லிக் கேட்க நக்கீரனிலிருந்து வந்தவரைக் கேட்டேன். ”இப்போ எலெக்‌ஷன் நடக்கப்போகுதுங்களே, அதைப் பத்தி எழுதுங்களேன்,” என்று சொன்னார்கள். எழுதினேன். அதில், அந்தக்காலத்தில் நீதிக்கட்சியின் பி.டி.ராஜனை, கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எதிர்த்து நின்ற பி.ராமமூர்த்தி, சிறையில் இருந்தவாறே ஜெயித்ததை, ’பிரியாணிப் பொட்டலங்கள், புடவை, வேட்டி, கொடுக்காமலேயே ஜெயித்தார்’ என்று எழுதியிருந்தேன். அது சம்பந்தப்பட்டவர்களை மிகவும் உறுத்தியிருக்கிறது. அதற்கு எனக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின தலைவரிடமிருந்து எதிர்ப்பும் கண்டனமும் வந்தது. அந்தக் கட்சியின் தலைவர் நக்கீரனுக்கு போன் போட்டுத் திட்டினார் என்று சொன்னார்கள். அந்தத் தலைவர் திட்ட ஆரம்பித்தால் என்ன பாஷையில் என்ன மாதிரியான திட்டுக்கள் விழும் என்று அனேகமாக எல்லோருக்கும் தெரியும். நீங்களும் யூகித்துக் கொள்ளலாம் என்றார்கள். பெரியார் திராவிட கழக தலைவர் ஒருவர் தன் மாப்பிள்ளையிடம், “இன்னும் கொஞ்ச நாளைக்கு உங்க ஃப்ரண்டை ’வெளியே தலை காட்ட வேண்டாம்னு சொல்லி வை.” என்று சொன்னதாக மாப்பிள்ளை எனக்கு டெலிபோனில் சொன்னார். அந்த மாப்பிள்ளை எனக்கு நண்பர். நான் தில்லியில் இருந்த காலத்திலிருந்து என் நண்பர். அவர் திராவிட கழக அனுதாபி என்பது எனக்குத் தெரியும். திராவிட கழகங்கள் பற்றி என் நிலை என்ன என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும் நாங்கள் நண்பர்கள். அவர் எனக்கு டெலிபோனில் எச்சரிக்கை செய்தார். இப்படியெல்லாம் இங்கே சூழல் நிலவியது. நிலவிக் கொண்டிருக்கிறது.

பல எழுத்தாளர்களது நூல்களைப் படித்து நீங்கள் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நிறைய படைப்பாளிகளை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள். இது எப்படி சாத்தியமானது?

அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆரம்ப காலத்தில் நல்ல எழுத்து என்று எடுத்துச் சொல்ல கொஞ்சப் பேர்தான் இருந்தார்கள். முடிந்தது. ஆனால் இப்போது நிறைய பேர் வந்திருக்கிறார்கள். எல்லோரையும் படிப்பது என்பது சாத்தியமில்லாதது. மேலும் நான் ஒன்றும் registrar of companies கிடையாது. அவங்க மாதிரி எல்லாத்தையும் படித்து நல்லது கெட்டது முத்திரை குத்த. என் விருப்பத்திற்கு, என் தேடலுக்கு படிக்கிறேன். ஆகையால் படிப்பது என்பது எனது சுதந்திரம். எனக்குப் பிடித்திருந்தால் படிக்கிறேன். படிப்பது மட்டுமில்லை, எனக்கு இன்னும் எத்தனையோ வேறு ஈடுபாடுகள். ஆகவே, தற்போது படிக்கிற நேரம் குறைவுதான். அப்போது ஹிராகுட்டில், ஜம்முவில் இருந்தபோது நிறைய நேரம் இருந்தது. நிறைய விஷயங்களைப் படிக்க முடிந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. மேலும் நிறைய படைப்பாளிகளைப் பற்றி நான் அபிப்ராயம் சொன்னதும் நடந்திருக்கிறது, அதற்கு மாறாக என் அபிப்ராயஙக்ள் தவறாகியிருப்பதும் உண்டு. துளிர்ப்பதைக் கண்டு சந்தோஷப்படுகிறோம். துளிர்ப்பது எலலாமே செடியாகி மரமாகி, காய்த்து, பழம் தர… அப்படியெல்லாம் நடப்பதில்லையே.

தற்காலப் படைப்பாளிகளில் தங்கள் மனம் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைச் சொல்வீர்கள்?

ஜெயமோகன், நாஞ்சில்நாடன், யூமா வாசுகி என்று பலரைச் சொல்லலாம். யூமா வாசுகியின் இரத்த உறவு ஒரு முக்கியமான படைப்பு. படிப்பது என்பது இன்பத்துக்காக, பொழுது போக்குவதற்காக, சிந்தனையை வளர்ப்பதற்காக என்று என்னென்னவோ சொல்வார்கள். ஆனால் இரத்த உறவின் ஒரு வரி கூட உங்களை சந்தோஷப்படுத்தாது. ரொம்பவும் gloomy and depressing. இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? இப்படியெல்லாம் பாட்டிகள், அப்பாக்கள் இருப்பார்களா? என்று திகைக்க வைக்கும். ஒரு இடத்தில் கூட, ஒரு சிறு புன்னகையைக் கூட தராத படைப்பு. எங்கு பார்த்தாலும் கொடுமைப் படுத்தும் உறவுக்காரர்கள். கொடுமைப்படுத்தும் உலகம். குழந்தைகளிடம் கூட ராட்சஸத்தனமாக நடந்து கொள்ளக் கூடிய மனிதர்கள் என்று. நினைத்துப் பார்க்கவே இயலாத படைப்பு. எப்படி இது சாத்தியமானது? எது உங்களை ஆர்வத்தோடு படிக்க வைப்பது? அது ஒரு முக்கியமான நாவல்.

அது போல இமையம். அவருடைய செடல் போன்ற படைப்புகள் மிக முக்கியமானவை. தேவதாசிகளின் வரலாற்றை மாறுபட்ட கோணத்தில் சொல்வது. ஒரு சின்னப் பெண்ணை பொட்டுக்கட்டி விடுவது, அவள் மாட்டேன் என்று சொல்வது என தலித் இலக்கியத்தில் அது ஒரு மாறுபட்ட படைப்பு. rebels can come from anywhere, from any strata of society. இதற்கு கல்வி வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் பற்றித் தெரியும் என்பதெல்லாம் கிடையாது. இது மனித சுபாவம். உள்ளுக்குள் இருப்பது. அதை யாரோ ஒருவன் தத்துவமாக எழுதி விட்டுப் போகிறான், அவ்வளவுதான். செடல் ஒரு தலித் பெண். அவள் எந்தப் பள்ளியில் படித்தாள்? பெற்றோரை, சமூகத்தை எதிர்க்கும் உணர்வும் தைரியமும் அந்த தலித் பெண்ணுக்கு யாரைப் பார்த்து வந்தது? அவளுடைய ரோல் மாடல் யார்? அவளுக்கு யார் இன்ஸ்பிரேஷன்? அது அவளுக்கு இயல்பாக வந்தது. எப்படி வந்ததென்று எப்படிச் சொல்ல முடியும்? அது மனிதர்களின் இயல்பான சுபாவம் இல்லையா? எல்லாவற்றுக்கும் மேலாக, தலித் சமூகங்களில் கூட பொட்டுக்கட்டும் வழக்கம் உண்டு என்பது இமையம் சொல்லித்தான் எனக்குத் தெரியும். இது போன்ற படைப்புகள் முக்கியமானவை. இப்படி அவர் எழுதி யிருப்பது அவர் சார்ந்துள்ள கட்சிக்கும் பிடிக்காது. தலித் சித்தாந்திகளுக்கும் பிடிக்காது. செடல் என்னும் இந்த தலித் சிறுமியிடம் காணும் எதிர்ப்புணர்வு, சமூகத்துடன் போராடும் தைரியம், எதுவும் தலித்துகளுக்காக்ப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சித் தலைவர்களிடம் கிடையாது. ஆக, செடலுக்கு ரோல் மாடல் செடலே தான்.

பெண் கவிஞர்களின் பெண்ணியம் மற்றும் பெண் உடல் மொழியை அடையாளப்படுத்துதல் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது இயல்பானதுதானா, அல்லது வலிந்து சொல்லப்படுவதா?

அது வலிந்து சொல்லப்படுகின்ற விஷயம்தான். இயல்பாக வரக்கூடிய, உள்ளே இருக்கும் ஆதங்கமோ, ஆத்திரமோ, வெளிக்கிளம்பி எரிமலை வெடிக்கிற மாதிரி வெடிக்கக் கூடிய நிலையில்தான் நாம் பெண்களை வைத்திருக்கிறோம். அது வேறு விஷயம். ஆனால் இதை எழுதுகிறவர்களிடமெல்லாம் உண்மையில், உள்ளத்தில் அது போன்று எரிமலையாக ஏதும் கொந்தளிக்கிறதா என்பது ஒரு விஷயம். மேலும் அந்த எழுத்துக்கள் எல்லாம் உண்மையில் எரிமலையாகக் கொந்தளிக்கக் கூடியவைதானா என்பதும் ஒரு விஷயம். இயல்பாக வரக் கூடியதென்றால், எந்த மொழியில் வர வேண்டுமோ அந்த மொழியில் வரவில்லை அது. தேடிச் சென்று பெற்ற மொழியாக அது இருக்கிறது. பெண்ணிய எழுத்துக்கு அடையாள மொழி இதுதான் என்ற முன் தீர்மானத்தில், நிர்ப்பந்தித்து வரும் ஒன்றாக அது இருக்கிறது. அது சமஸ்கிருத மொழியாகவே இருந்தாலும். அது ஏன்? அது செயற்கைதானே! இதெல்லாம் கொத்துக்கடலையில் மசாலா தூவுவது போன்ற காரியம்தான். கொரிக்க சுவையாக இருக்க வேண்டாமா? அப்பத்தானே சன்ங்க வாங்குவாங்க.

இதெல்லாம் உண்மையாகவே இருந்தால் இவர்களில் ஒரு சிலர் ஏன் பெண்களை மதிக்காத, பெண்களைக் கேவலப் படுத்துகிற, பெண்களை போகப் பொருளாகவும், அலங்காரப் பொருளாகவுமே நினைக்கிற கட்சியில், அக்கூட்டத்தினருடன் இணைய வேண்டும் என்பதும் ஒரு மிகப்பெரிய கேள்வி. இது மிகப்பெரிய முரண் இல்லையா? இதில் எங்கே இயற்கை இருக்கிறது?

புதுக்கவிதை வந்த பிறகுதான் தமிழில் சமஸ்கிருத வார்த்தைகள் மீண்டும் அதிகம் புழக்கத்தில் வந்தன என்பது குறித்து…

பெரும்பாலும் வானம்பாடிகளிடமிருந்து வந்தவைதான் அவை. முதலாவது அவர்கள் பேசக் கூடிய விஷயங்கள் கோஷங்களாகவே வந்து விழுகின்றன. அவர்கள் எழுதுவது அனுபவங்களாக இல்லை. உரத்த கோஷங்கள். அவை எல்லாமே மிகச் செயற்கையானவை. இரண்டாவது அவர்களது மொழியும் செயற்கையானது. ஒரு பரவலான கவனம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகச் செய்ததுதான் அது. சாதாரணமாக கவிஞர்கள் எல்லாம் தனித்த ஆளுமைகளாக இருப்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள் போல, வானம்பாடிகள் எல்லாம் ஒரு யூனியன். திராவிட கழக கவிஞர்கள் போல, வானம்பாடி என்பது ஒரு ட்ரேட் யூனியன். அவர்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து செயல்பட்டவர்கள். பின்னால் பிரிந்து போகும் வரைக்கும் அவர்கள், ஒருவருக்கொருவர் அனுசரணையாகத்தான் பேசினார்கள். தங்களுக்குள் சப்போர்ட்டாக இருந்தார்கள். கோவை ஞானி கூட இவர்களைப் பற்றி மிக உயர்வாக, மிகுந்த நம்பிக்கையோடு எழுதினார். வெளிச்சங்கள் என்று வெளிவந்த வானம்பாடிகள் கவிதைத் தொகுப்பின் முன்னுரையில். ஆனால் இப்பொழுதும் அதே வார்த்தையைச் சொல்வாரா என்பது எனக்குத் தெரியாது. நியாயமான பார்வை மாற்றம் என்பது, கருத்து மாற்றம் என்பது அப்படித்தான் வர வேண்டும். திடீர் திடீரென்று கட்சி மாறுவது பார்வை மாற்றம் ஆகாது.

முக்கியமான பெண் படைப்பாளிகள் குறித்து…

தமிழச்சி ஒரு நல்ல பேச்சாளர். சுமுகமாக ஏதும் பந்தா இல்லாமல் அனைவருடனும் பழகக் கூடியவர். அதுபோலத்தான் சல்மாவும். அவரது ஒரு சில கவிதைகளில் கையாண்ட மொழி செயற்கையாக இருந்தாலும் அவர் எழுதிய இரண்டாவது ஜாமங்களின் கதை ஒரு குறிப்பிடத்தக்க மிகவும் கவனிக்க வேண்டிய படைப்பு. அது அந்தச் சமூகத்து மக்கள் அன்றாடம் பேசும் வாய்மொழியை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் அவர்களது வாழ்க்கையை, அவர்கள் உறவுகளுக்குள்ளேயே உள்ள ஆசாபாசங்களை, தனக்குத் தெரிந்த உலகைச் சொல்லும் ஒரு இயற்கையான படைப்பு. அதை எழுதுவதற்கு உண்மையிலேயே ஒரு அசாதாரண தைரியம் வேண்டும். அதுவும் ஒரு பெண்ணுக்கு. முஸ்லீம் மத ஆண்களுக்கே இல்லாத தைரியம் சல்மாவிடம் இருக்கிறது. அது போல பாமாவின் படைப்புகளையும் சொல்லலாம். வெளியிலிருந்து தரப்பட்ட எந்த விதமான தியரிகளையும் பின்பற்றாமல், இயல்பாக, வாய்மொழி இலக்கியமாக அவரது எழுத்து இருக்கின்றது. ஆனால் அவரது அண்ணன் (ராஜ் கௌதமன்) ஒரு தியரிட்டீசியன். ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லும் அவசியம் அவருக்கு. அது அரசியல் இலக்கியம். ஆனால் பாமாவுக்கு வாழ்க்கையை எழுதினால் போதும். அந்த வாழ்க்கையின் யதார்த்தம் எந்த அரசியலுக்கு இட்டுச் சென்றாலும் சரி. பரவாயில்லை. அதை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஹிராகுட்டில் இருந்த போது நண்பர்களோடு சேர்ந்து படித்தோம் என்று சொன்னீர்கள், இலக்கியப் பரிச்சயங்களுக்கு அது ஒரு சிறந்த வழிதானா?

யாருமே தனித்திருந்து தனக்குள்தான் படிக்க வேண்டும். It’s something that you do in your - in the privacy of your - room, something between you and the book, Between you and the person and the world that you know, that emerges out of the book. அந்த மாதிரிதான். ஆனால் நாலைந்து பேர் சேர்ந்து ஒரு காரியம் செய்யும் போது ஒருவித ஒட்டுதல் ஏற்படுகிறது. இரண்டாவது அங்கே எனக்கும் சீனிவாசனுக்கும் இருந்த நெருக்கம். மூன்றாவது எல்லோருமே சேர்ந்து செய்யக் கூடிய காரியத்தைத்தான் செய்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் எல்லோரும் விருப்பப்பட்டுத்தான் அதற்கெல்லாம் வந்தார்கள். ரஸ்ஸலின் மேரேஜ் அண்ட் மாரல்ஸ் எல்லாம் தனியாக உட்கார்ந்து படித்தால் அல்லது ஒருவர் படித்துக் கேட்டால் அதன் ஆழம் தெரியாமல் போய் விடும் என்றெல்லாம் சொல்லக் கூடிய புத்தகமும் அல்ல. நாங்கள் படித்தபோது பெரிய டிஸ்கஷன்ஸ் எல்லாம் இருக்காது. எல்லாம் முடிந்த பிறகு சீனிவாசன் ஏதாவது கமெண்ட் செய்வார். சமயங்களில் அது அடாவடித்தனமாக இருக்கும். எல்லாம் strange and very interesting characters. இப்படித்தான் அந்தக் கூட்டு வாசிப்பு அனுபவங்கள் எல்லாம்.

விருதுகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அதாவது தகுதியானவர்களுக்கு அது வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்தென்ன?

இதைப் பற்றிப் பேசுவதற்கே லாயக்கில்லை. இந்தச் சமூகத்திலிருந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் வரும். நாம் எதிர்பார்க்க முடியும். அதைப் பற்றி நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இந்தச் சமூகம் மாறினால் ஓரளவு இவையெல்லாம் மாறலாம் என்று எதிர்பார்க்கலாம். உஸ்தாத் விலாயத் அலி கான், ”நீ யார் எனக்கு விருது கொடுக்க?” என்று விருது கொடுக்க வந்தவர்களைக் கேட்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை கோட்டூர்புரத்தில் அவர் வசித்த தெருவுக்கு வைக்கலாம் என்று முடிவு செய்தபோது, ”வேண்டாம், என்னை விட சீனியர் டி.கே.பட்டம்மாள். அவர் பெயரை வையுங்கள்,” என்று சொன்னார். அது போல ஆந்திராவில் ஒரு எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது, டி.சாம்பசிவ ராவ் அதை விளாசித் தள்ளிவிட்டார். சாகித்ய அகாதமியின் ஜர்னலில் அது வெளியானது. சாம்பசிவ ராவ் சாகித்ய அகாதமியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். அவர் அங்கே வேலை பார்த்துக் கொண்டே, அவர்கள் அகாடமி தேர்ந்தெடுத்துப் பரிசளித்த நூலை எப்படி விமர்சிக்கலாம் என்று பெரிய பிரச்சினை வந்தது. அப்போது சாகித்ய அகாதமியின் பிரெசிடெண்ட் ஆக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்தான் அவர் வேலைக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றினார். விஷயம் என்னவென்றால், சாகித்ய அகாடமியில் வேலை செய்யும் தெலுங்கு இலக்கிய ரசிகருக்கே விருது தரப்பட்ட புத்தகத்தின் தகுதி அகாடமி பத்திரிகையில் எழுதி கண்டிக்குமளவுக்கு மோசமாக இருந்திருக்கிறது. தன் வேலையைப் பணயம் வைத்து எழுதிய அவர் என் மதிப்புக்குரியவரானதில் ஆச்சரியமில்லை. இது எங்கள் இருவருக்கும் இயல்பானது.

லா.ச.ராமாமிர்தத்திற்கு விருது கிடைத்தபோது, என்னை அதுகுறித்து எழுதித் தருமாறு சாம்பசிவ ராவ் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் எழுதிக் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்துவிட்டு என்னை அலுவலகத்திற்கு வருமாறு கூப்பிட்டார். நானும் போனேன். அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவர் தொடர்ந்து அகாடமி வெளியிடும் இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகைக்கு என்னை எழுதச் சொன்னார். என்னுடைய ஆங்கிலத்தை பாராட்டிய ஒரே மனிதர் அவர்தான். மனதாரப் பாராட்டுவார். பின் அகாதமி விருது வாங்கிய சு.சமுத்திரம் பற்றி எழுதச் சொன்னார். நான் மறுத்ததும், நான்தான் எழுதவேண்டும் என்று வற்புறுத்தினார். நான் எழுதினேன். யாமினி கிருஷ்ணமூர்த்தி சந்தேகமேயில்லாமல் ஒரு கிரேட் டான்ஸர். But i had made some critical references about her performance. கதக்கிற்கு ரொம்ப பாஸ்ட் ஃபுட் வொர்க் வேண்டும். கால் தாளம் போடும் தபலாவாக மாறும். தபலா மீது விரல்கள் நர்த்தனமாடும். எல்லாமே ஒரே நேரத்தில் தாளம் போடும். ஆனால் அது ஆர்ட் அல்ல. சர்க்கஸ் வித்தை மாதிரித்தான். பரதநாட்டியம், குச்சுப்புடிக்கெல்லாம் பாவம் முக்கியமாக இருக்கும். இசையும் சேர்ந்திருக்கும். ஆனால் இதற்கு தாளமும் தப்லாவும்தான் முக்கியம். தபலா செய்கிற காரியத்தை உன் கால் ஏன் செய்யணும்? யானை ஸ்டூல் மேல் ஏறி நிற்கிற மாதிரிதான் என்று சொல்லிவிட்டு, ”Yamini need not do this. But she does it. She is capable of doing it. But that is not an art. கதக் ட்ரெடிஷனில் வரும் உமா ஷர்மாவுக்கு வேண்டுமானால் இதெல்லாம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் யாமினிக்கு இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் தேவையில்லை. அது பரத நாட்டியமுமில்லை” என்று எழுதினேன். அந்த கட்டுரை யாமினியின் ஃபைலில் இருந்ததைப் பார்த்தேன். Still, she suggested my name to write a monograph on her work. நானும் எழுதினேன். ஆனால் அது வெளிவரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அத்தகைய மனப்பக்குவமும், தன் கலையில் நம்பிக்கையும் யாமினியிடம் இருந்தது. அது பெரிய விஷயம் இல்லையா? அத்தகைய மனப்பக்குவம், தன் காரியத்தில் இருக்கும் சுய நம்பிக்கை, இப்போது நம் தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தில் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை

‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்திற்குப் பிறகு வேறு திரைப்படங்களில் பங்கு பெறாதது ஏன்?

ஒருத்தரும் கேட்கவில்லை. யாமினி கிருஷ்ணமூர்த்தியின் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்காக, ஸ்க்ரிப்ட் ஆறு எபிசோடுகளுக்கு எழுதக் கேட்டார்கள். எழுதினேன். அது நடனத்தையும், கோவிலையும் மையமாகக் கொண்டது. தஞ்சாவூர், சிதம்பரம், மும்பை எலிஃபெண்டா குகைகள் இப்படி ஆறு இடங்கள், முதல் ஆறு episodeக்கு யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. மற்றதற்கு நான் எழுதினேன். யாமினியைப் பற்றி முன்னதாகவே நான் ஒரு மோனோகிராப் எழுதியிருந்தேன். அப்புறம் Indian dance scene பற்றி பொதுவாக, what is creative - what is just grammatically correct but not creative - what is repetitive, what is just a circus like feat but passed off as a dance form இப்படியெல்லாம் விவரித்து எழுதியிருக்கிறேன். சங்கீத நாடக அகாடமி ஜர்னலுக்காகக் கேட்டார்கள். நான் எழுதிக் கொடுத்தேன். அதில் கொஞ்சம் பல பெரிய தலைகளை எல்லாம் கிண்டல் செய்திருப்பேன்.

யாமினி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய மோனோகிராப் நான் எழுதிக் கொடுத்த பிறகு அது பப்ளிஷ் ஆகவில்லை. காரணம், இன்னொரு ஜர்னலிஸ்ட். அவர் மிகவும் அழகானவர். She was quite close to many influential people. அவளுடைய கணவனை இவர் எழுதச் சொல்லியிருக்கிறார், தானே! அதுதான் இது வெளிவராததற்குக் காரணம்.. நான் எந்த அழகியோடு போட்டி போட முடியும்? சரி எந்த ஆண்தான் போட்டி போடமுடியும்? யாமினி கிருஷ்ணமூர்த்தி என்னை எழுதச் சொன்னார், நான் எழுதினேன். அது ஒன்றுதான். என்னை எழுதச் சொன்னால் எழுதுவேன். நானாகப் போய் யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. மேலும் இதற்கெல்லாம் ஒரு பாபுலர் இமேஜ் இருக்க வேண்டும். அதெல்லாம் எனக்குக் கிடையாது.

டெல்லி வாழ்க்கை அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!

என் வாழ்க்கையில் டெல்லி காலகட்டம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொருநாளும் ஒரு அனுபவம் என்று சொல்லலாம். மிகவும் exciting ஆக இருந்த நாட்கள் அவை. காலையில் நான் அலுவலகத்திற்குச் சென்றால் அலுவலகம் முடிந்த பின்னர் மாலையில் எங்கெல்லாமோ அலைந்து விட்டு இரவு 11 மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்ப வருவேன். சினிமா, நாடகம், நாட்டியம், ஆர்ட் எக்ஸிபிஷன் என்று ஒவ்வொரு நாளும் நண்பர்களோடு எங்காவது வெளியில் சென்று விடுவேன். பல மனிதர்களுடனான சந்திப்புகள். பலதரப்பட்ட அனுபவங்கள். அவர்களுள் தமிழரில் மறக்க முடியாதவர் க.நா.சுப்ரமண்யம். டெல்லியைப் பொருத்தவரை அங்கு பலபேர், மொழி போன்றவற்றைத் தாண்டி, தாங்கள் எந்தத் துறையில் இருக்கிறோமோ அதையும் தாண்டி மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவர்களாக இருந்தார்கள். அதனால்தான் நான் டெல்லியிலேயே பிழைக்க முடிந்தது. சங்கீத் நாடக அகாதமி, சாகித்ய அகாதமி என்று நான் எதிர் கருத்துக்களைச் சொன்னாலும் என்னை எதிரியாகப் பாவிக்காத நிலை அங்கே இருந்தது. என் கருத்துக்களை விரும்பாதவர்களும், எனக்கு எதிராக அவர்கள் காதில் ஓதிச் செல்லும் சென்னை நபர்களும் இருந்தார்கள்தான். சாகித்ய அகாதமி என்ற நிறுவனம் பல பேரின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் அதில் இருந்த பலபேரிடம், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி நட்போடு பழக முடிந்தது. உதாரணமாக சாகித்ய அகாதமியின் குழு உறுப்பினராக இங்கே இருந்து அங்கே சென்றவர்கள், என்னைப் பற்றி, என் தகுதி பற்றியெல்லாம் கேள்வி எழுப்பியும், அங்கே செயலாளராக இருந்த என் நண்பர் சச்சிதானந்தத்தை மீறி, சதாசிவராவை மீறி அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. ஆனாலும் என் எழுத்தின் மீது, என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு அவர் சில பொறுப்புகளை அளித்திருந்தார். He valued my friendship. இப்படித்தான் பல்வேறு அனுபவங்களோடும், பொறுப்புக்களோடும் இருந்தது டெல்லி வாழ்க்கை.


சமகால எழுத்தாளர்களுடனான உங்கள் அனுபவம் குறித்து…


நான் டெல்லி வருவதற்கு முன்பாகவே க.நா.சு அவரது ‘ஒருநாள்’ நாவல் மூலம் எனக்கு அறிமுகமாகியிருந்தார். அது ஒரு அற்புதமான நாவல். அப்போது டெல்லியில் ‘தாட்’ என்ற ஒரு பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் க.நா.சு எழுதி வந்தார். அதை நான் ஒருமுறை பார்த்தேன் - பின்னால் நானும் அதில் அதிகமாகவே எழுதியிருக்கிறேன். அவர் எழுதி வருவதை எல்லோரும் குறையாகச் சொல்வார்கள். ‘நன்றாக எழுதிக் கொண்டிருந்த மனுஷன் இப்போ விமர்சனம் அது, இதுன்னு ஏதேதோ பண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படி வீணாப் போய்விட்டார்’ என்று. அதாவது ‘நாங்கள் நாவல், கதைகள் எழுதுகிறோம். நீயும் எழுது. அதை விடுத்து எங்களை விமர்சனம் பண்ணிக் கொண்டிராதே’ என்பது அவர்கள் சொல்ல வருவது.

அப்போது நான் டெல்லி கரொல்பாக்கில் இருந்தேன். நான் எப்போதும் வெளியில் சென்று விட்டு லேட்டாகத்தான் வருவேன். ஒருநாள் என்னைப் பார்ப்பதற்காக ராஜாமணி என்ற நண்பருடன், க.நா.சு வந்து காத்திருந்ததாக அறை நண்பன் சொன்னான். நான் வரக்கூடும் என்று வெகுநேரம் வெளியில் செமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு கடலையைக் கொறித்துக்கொண்டிருந்ததாகவும், நான் வர லேட்டானதால் அவர்கள் சென்று விட்டனர் என்றும் மறுநாள் காலை வந்த ராஜாமணியிடம் செய்தி கேட்டு,  அதன்பிறகு அவர் முகவரியை விசாரித்து நான் போய்ப் பார்த்தேன். எங்களுக்குள் ஒரு நல்ல ஒத்திசைவு இருந்தது. அதன்பிறகு நாங்கள் எங்கு சென்றாலும் இருவருமாகத்தான் செல்வோம். பேசினால் எல்லாம் ஒரே இலக்கிய சர்ச்சையாகத்தான் இருக்கும். என்னைவிட எத்தனையோ வயது மூத்தவர். அறிவில் என்னை விட மிக உயர்வானவர். படிப்பே தொழிலாக வைத்துக் கொண்டு பல நூல்களைப் படிப்பவர். என்றாலும் என் கருத்துகளுக்கு - மடையன், அதிகப்பிரசங்கி, ஏதோ உளறுகிறான் என்றெல்லாம் நினைக்காமல் மிகவும் பொறுமையாக - அப்படியும் பார்க்கலாம் என்றுதான் பதில் சொல்வார். அவருக்கு ஈடுபாடு இல்லாத இடத்திற்கெல்லாம் கூட நான் அவரை வற்புறுத்தி அழைத்துச் செல்வேன். அவரும் வருவார். ஃபிலிம் ஷோஸ், பான் சாய் எக்ஸ்பிஷன்ஸ், ஆர்ட் எக்ஸிபிஷன்ஸ் என்று பல நிகழ்ச்சிகளுக்குப் போவோம்.

வெளியில் சொல்லாத பல கருத்துக்களைக் கூட அவர் என்னிடம் சொல்வார். அதே சமயம் - எனக்கு அப்போது அசோகமித்திரனோடு கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் அசோகமித்திரனுக்கு எனக்கு எதிராக கருத்து வேறுபாடு இல்லை, பகைமை இருந்தது. க.நாசு “நீ சண்டையெல்லாம் போடாதே,” என்று எனக்கு அறிவுறுத்துவார். “of course he was nasty with you. ஆனாலும் சண்டை எல்லாம் வேண்டாம்” என்பார். அந்த attitude எனக்குப் புரியவும் இல்லை. அப்படி என்னால் அப்படி இருக்கவும் முடியவில்லை. ஆனால் தன்னை கடுமையாக விமர்சித்து எழுதியிருந்த பி.எஸ். ராமையா மீதும் மிக அன்போடும், மரியாதையோடும் நடந்தவர் அவர். என் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். இவன் நம்மை தாக்குகிறான். இருந்து விட்டுப் போகட்டுமே. இவன் தாக்குவதால் நான் அழிந்து போய் விடப் போவதில்லை. அப்படியாவது அவன் வளரட்டுமே என்ற பெருந்தன்மை உணர்வோடு அவர் இருந்தார். அவர் மீது ஒரு மாறுபாடான அபிப்ராயம் இருந்து, அதைப் பற்றி அவரிடம் சொன்னால் அதைக் கேட்பார். ஆனால் அப்படி ஒரு மனப்பான்மை, சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை. எல்லோரும் சுயம் பிரகாச சுவாமிகளாக மிக உச்சத்தில் இருக்கிறார்கள். நமது இலக்கியச் சூழல் மிக மோசமான சூழல்.

அவரும், இவ்வாறு நாவல் என்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக - ”வம்பை விலைக்கு வாங்குவதாகச்” சொல்லப்பட்டதையும் - இது போன்றவற்றை எல்லாம் செய்தாக வேண்டும்; இந்தச் சூழலுக்கு இது அவசியம் தேவை என்று - விமர்சனங்களை - கண்டனங்களையெல்லாம் புறந்தள்ளி விடாப்பிடியாக எழுதி வந்தார். பல பேருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டாலும், நாம் செய்ய வேண்டும் என்று அவருக்கிருந்த அந்த கமிட்மெண்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செல்லப்பா கூடச் சொல்வார், ‘நீங்கள் ஏன் இதையெல்லாம் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு ஜீவன் இருந்தால் அதுவாகவே நிலைத்து நிற்கும். நீங்கள் விமர்சனம் செய்துதான் நிற்குமா?’ என்று.  ஆனாலும், க.நா.சு அதற்கு ’இல்லை, அது செய்தாக வேண்டிய காரியம்’ என்று செல்லப்பாவுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பாராம். அடிக்கடி… அதன்பிறகுதான் செல்லப்பா விமர்சனத்திற்கு வந்தார். க.நா.சு உருவாக்கிய ஆள்தான் செல்லப்பா என்ற விமர்சக அவதாரம். அவர் ‘இலக்கிய வட்டம்’ என்றொரு பத்திரிகை ஆரம்பித்தார். அதில் என்னை எழுதச் சொன்னார். அதற்கு முன்னால் 1947 முதல் 1964 வரை உள்ள தமிழ் எழுத்துக்களைப் பற்றி எழுதியிருந்தேன். அதை அவர் இலக்கிய வட்ட மலராக வெளிவந்த இதழின் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது பாலையும் வாழையும் தொகுப்பிலும் பின் வந்த பான்ஸாய் மனிதன் தொகுப்பிலும் இருக்கும்.


செல்லப்பாவும் அப்படித்தான். “நீ தப்புப் பண்றே. உனக்கு ஒண்ணும் தெரியலை” என்று என்னோடு சண்டை போடுவார். ஆனால் நல்ல மனிதர். நாங்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பதை யாராவது பார்த்தாலே கூட அது கூச்சல் நிறைந்ததாகத்தான் இருக்குமாதலால், ”இவர்களுக்குள் ஏதோ ஜென்மப் பகை போலிருக்கிறது, அதான் இப்படி அடித்துக் கொள்கிறார்கள்”, என்று நினைப்பார்கள். ஆனால் அவ்வளவு passionate ஆக ஒரு விஷயத்தைப் பற்றி அவர் பேசுகிறார் என்பதுதான் அதற்குப் பொருளே தவிர, கோபத்துடன் சத்தம் போடுகிறார் என்பதல்ல. டெல்லியிருந்து நான் லீவிற்குச் சென்னை வரும்போதெல்லாம் அவர் வீட்டிற்குப் போவேன். அவர் வீட்டுக்கு யார், யாரோ எல்லாமோ வருவார்கள். அவரைத் திட்டியவர்கள், வசை பாடியவர்கள், விமர்சனம், கேலி செய்தவர்கள், எதிர்முகாமில் இருந்தவர்கள் என்று. எல்லோருக்கும் காபி, டிபன் கொடுத்து நன்கு கவனிப்பார் செல்லப்பா. ஆனால் அவருக்கு வருமானம் என்று ஏதும் கிடையாது. எப்படி செலவுகளை எல்லாம் சமாளித்தார் என்பதும் தெரியாது.


அவரும், ‘பாரத மணி’ என்ற பத்திரிகையை நடத்துகிற காந்தி பக்தர் பி.என்.சீனிவாசன் என்பவரும் ஒருமுறை டெல்லி வந்திருந்தார்கள். செல்லப்பா காந்தி இறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். பிர்லா ஹவுஸிற்குச் சென்று எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தார். பின் காந்தி சுடப்பட்டு வீழ்ந்த அந்த இடத்திற்கு முன் அப்படியே வெகு நேரம் கை கூப்பியபடியே நின்று விட்டார். அந்த மாதிரி உள்ளம் அவர் உள்ளம். அவர் மிகவும் கஷ்டப்பட்டவர். மனைவியின் நகைகளை விற்று எழுத்து ப்த்திரிகையை நடத்தியவர். எழுத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். கி.வா.ஜகந்நாதன் கலைமகளுக்கு எழுதும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தபோது, செல்லப்பா நிர்தாட்சண்யமாக அதை நிராகரித்தார். ஒருமுறை “என்னமோ எனக்கு அதில் எழுதத் தோணலை. மூட் இல்லை” என்றார். மற்றொரு முறை “மதியாதார் வீட்டுக்கு எல்லாம் நாம் ஏன் போக வேண்டும்” என்றார். சமரசமே இல்லாத ஆள். நா.பா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏதாவது புத்தகம் போடுங்கள். சாகித்ய அகாதமி பரிசுக்காவது முயற்சிக்கலாம்” என்று. ஆனால் இவர் அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. ஒருமுறை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து அவருக்கு விருது கொடுத்தார்கள். “எனக்கு விருது கொடுக்க நீங்கள் யார்?” என்று அதை உதறித் தள்ளிவிட்டார். இத்தனைக்கும் அவர் மிகக் கஷ்ட நிலையில் இருந்தார். அவருக்குப் பணத்தேவை அப்போதிருந்தது. ஆனாலும் அனுசரித்துப் போகவில்லை. நிர்ப்பந்தத்தில் இருந்தாலும் வளைந்து கொடுக்காதவர், சமரசங்களுக்கு ஆட்படாதவர் செல்லப்பா. அவரை அக்காலத்தில் கேலி செய்தவர்கள் செய்த கோமாளித்தனங்களைச் சொல்ல வேண்டாம்.

நீங்கள் ஒருமுறை காந்தியைப் பார்க்கப் போனது பற்றி எழுதியிருந்தீர்களே, அதைத் திரும்ப எங்களுக்கும் சொல்லுங்களேன்…

ஒருமுறை காந்தி எங்கள் ஊருக்கு அருகே உள்ள அம்மைநாயக்கனூருக்கு வருவதாக இருந்தது. உடனே மாமா என்னை அழைத்து, “நீ வேண்டுமானால் மத்த பசங்களோட சேர்ந்து போய் விட்டுவா,” என்றார். எனக்கு ஒரே சந்தோஷம், உடன் கிளம்பி விட்டேன். நண்பர்கள் யாரும் கூட வரவில்லை. ஆனால் வழியெல்லாம் ஒரே கூட்டம். நிலக்கோட்டையிலிருந்து மட்டுமல்லாது, சுற்று வட்டார கிராமங்களிலிருந்தும் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் கும்பலாகச் சென்று கொண்டிருந்தனர் காந்தியைப் பார்க்க. இத்தனைக்கும் காந்தி அம்மைநாயக்கனூரில் பேசப்போவதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ரயிலில் வரும் வழியில், ஸ்டேஷனுக்கு முன்பாகவே ரயிலை மறித்து நிறுத்தி அவரைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தது கூட்டம். நானும் அந்தக் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று விட்டேன். மாமாவும் ஸ்கூல் மானேஜ்மெண்ட் ஏற்பாடு செய்த வில் வண்டியில் போய் விட்டார்.

காந்தியைப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம். போலீஸ் பந்தோபஸ்து எல்லாம் இல்லை. வண்டி பிளாட்பார்மில் வந்து நின்றது. கதவுக்கு அருகே காந்திஜி நின்று கொண்டிருந்தார். பின்னால் ராஜாஜி. காந்தியைப் பார்த்த மக்கள், என்னவோ திருப்பதி வெங்கடாஜலபதியையே தரிசனம் செய்கிற மாதிரி அப்படியே கையை உயர்த்திக் கும்பிட்டனர். ரொம்ப ஆச்சரியமான விஷயம். ஒரு எலக்ட்ரிபையிங் பவர் அவரிடம் இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் ஏதோ பேசினார். கூட்டத்தில் எல்லோரிடமும் ஒரே பரவசம். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் ரொம்ப எளிமையான மனிதர் என்று. ஆனால் காந்தியைவிட எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் W.B.சௌந்திரபாண்டி நாடார், ஏ.டி.பன்னீர் செல்வம் போன்றோர்தான். இல்லாவிட்டால் கவர்னர் ஆர்தர் ஹோப் போன்றோர்தான். ஒரு முறை ஆர்தர் ஹோப் கொடைக்கானலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, நிலக்கோட்டை பெரியவர்கள் ரோடில் அவர் காரை நிறுத்தி, அவருக்கு மாலை போட்டார்கள். இவர்களைத்தான் தலைவர்கள் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் காந்தியோ கோடையிடி ராமசாமி இல்லை. முத்துசாமி வல்லத்தரசில்லை. அண்ணாதுரையும் இல்லை. அவர்களைப் போல் இடிமுழக்கம் செய்யும் பேச்சாளரும் இல்லை. மிக ஒல்லியான ஒரு மனிதர், மென்மையான குரலில் பேசிக் கொண்டு, இடுப்பில் அணிந்த அரையாடைத் துணியுடன் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தார். வந்த மக்கள் எல்லோரும் அவர் பெருமையை விதம் விதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். “என்னமா உடம்பு தங்க ரேக்கு மாதிரி பளபளக்குதுங்கிறீங்க?” என்ற வியப்பு அவர்கள் பேச்சில் கேட்டது. இவ்வளவு பேரை, இந்தியா முழுதும், கோடிக்கணக்கில், அவரால் எப்படி ஈர்க்க முடிந்தது என்பது மிகவும் பெரிய விஷயமாக இருந்தது.

சுஜாதா பற்றிச் சொல்லுங்கள், உங்கள் அபிப்ராயம்?

நான் அதிகம் சுஜாதாவினுடைய புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் அவர் ரொம்ப புத்திசாலியான மனிதர். எல்லா துறைகளிலும் நிறைய விஷயங்கள் தெரிந்தவர். நிறைய எழுதியிருக்கிறார். பரவலான வாசிப்பு அனுபவம் உடையவர். ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். தன்னுடைய திறன்களை எல்லாம் சந்தைக்குக் கொண்டு வந்த மனிதர். ஆனால் சிலதெல்லாம் குப்பை என்பது அவருக்கு நன்கு தெரியும் - அப்படித்தான் நான் நினைக்கிறேன் - ஆனால் ஏன் செய்தார்? அவர் எதிர்நீச்சல் போட விரும்பவில்லை. அவருக்கு அந்த பலம் உண்டு. திறன் உண்டு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நிறைய விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு விட்டார். காரணம் பணம், புகழ் என்று சொல்வதை விட பிராபல்யம் என்று சொல்லலாம். சாகித்ய அகாதாமியின் ஸ்ம்காலீன் பாரதிய சாஹித்ய என்னும் இதழின் ஒரு விசேஷ இதழ், தமிழின் இன்றைய சிறுகதைகள் என்று தேர்ந்தெடுத்த சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறப்பிதழ் வெளியிட சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் அதற்கு 75, 80 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன். அவை மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்ததன. அதில் பெங்காளிகளையும், ஹிந்திக்காரர்களையும் மிகவும் பாதித்த, அவர்கள் மிகவும் விரும்பிய முதல் மூன்று சிறுகதையாசிரியர்கள். முதலில் சுஜாதா. அவரது அறிவியல் சார்ந்த சிறுகதை அவர்களை மிகவும் பாதித்தது. அடுத்தது ஜெயமோகன். அவரது எழுத்து மிக வித்தியாசமாக இருந்தது. அடுத்து வரவேற்பைப் பெற்ற எழுத்து ஆ.மாதவனுடையது. இப்படியெல்லாம் எழுதக் கூடியவர்கள் தமிழில் இருக்கிறார்களா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படித் திறமையான ஆள்தான் சுஜாதா. அவரது வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கும். அவரிடம் நான் ஒரு முறை ஒரு ஆலோசனை சொன்னேன். அவருடைய மொத்த கதைகளையும் எனக்குத் தந்தால், அதில் நான் தேர்ந்தெடுக்கும் கதைகளை ஒரு தனி வால்யூமாகப் போடலாம் என்று. அதில் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.

ஆரம்ப காலத்தில், அதாவது அறுபது எழுபதுகளில், நான், ஸ்ரீரங்கம் டி.எஸ்.ராஜகோபாலன், சுஜாதா, இன்னும் சில நண்பர்கள் எல்லோரும் டெல்லியில் கரோல் பாக் பகுதியில் வசித்தவர்கள். அங்கே ஒரு மெஸ் இருக்கும். அதன் அருகே ஒரு பெட்டிக்கடை இருக்கும். நாங்கள் எல்லாம் அங்கே வருவோம். கடை வாசலில் குமுதம், விகடன் எல்லாம் தொங்கவிடப்பட்டிருக்கும். அவற்றை அங்கேயே புரட்டிப் பார்ப்பதும், அதில் இருப்பதைக் கேலி செய்வதும் அப்போது நடக்கும். அதைப் பார்த்து சுஜாதா, ’இது மாதிரி ஆயிரம் கதை எழுதுவேன் நான்’ என்பார். உடனே டி.எஸ்.ராஜகோலான், ‘முடியாது. ஒரு ஸ்ரீரங்கத்துக்காரனால இவ்வளவு பேத்தலா எழுத முடியாது’ என்பார். இப்படி கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பின்னர் அதே குமுதத்தில் சுஜாதா கதை வெளியானது. நான் எது எழுதினாலும் குமுதம் போடும் என்று சந்தோஷத்தோடு சொல்லிக்கொண்டார். பின்னர் அவர்கள் மீண்டும் கேட்டுக் கொண்டதும் தான் விரும்பிய ஸ்டைலில் ஒரு கதையை எழுதி அனுப்பினார். ஆனால் அவர்கள் அதை பிரசுரம் செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து விட்டார்கள். “நீங்கள் உங்கள் பழைய ஸ்டைலிலேயே அனுப்புங்கள் இது வேண்டாம்” என்று. ஸோ, மார்க்கெட்டிற்கு எது தேவையோ அதை அவர்கள் டிமாண்ட் செய்தார்கள். இவரும் அதற்கேற்றவாறு எழுத ஆரம்பித்தார். ஆனால் அது சாமர்த்தியமா, அல்லது வெகு ஜன ரசனைக்காக தன்னுடைய திறனை தாழ்த்திக் கொண்டதா என்பதை அவரவர் தீர்மானத்திற்கு விட்டுவிடலாம். .

“இன்றைய தமிழ் எழுத்தில் சுஜாதா ஒரு ரஜினிகாந்த். ரஜினி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக என்ன செய்கிறாரோ அதையே சுஜாதா தனது வாசகர்களுக்காகச் செய்கிறார்” என்று நான் ஒருமுறை எழுதியிருந்தேன். ‘சுஜாதா - தமிழ் இலக்கியத்தின் சூப்பர் ஸ்டார்’ என்று யாரோ அதை கொட்டை எழுத்தில் எடுத்து பத்திரிகையில் போட்டு விட்டார்கள். இதனால் சுஜாதா மிகவும் காயப்பட்டுவிட்டார் என்பது என் கவனத்திற்கு வந்தது. பலபேரைக் கவரக் கூடியது வேறு விஷயம். பல பேரைக் கவரக் கூடியது எது என்று தெரிந்து கொண்டு அதை மட்டுமே செய்வது வேறு விஷயம். சுஜாதா மிகவும் திறமை வாய்ந்தவர். அந்தத் திறமை மூலம் படைப்பின் மிக உயரிய உச்சத்திற்குச் சென்றிருக்கக் கூடியவர். ஆனால் சமரசங்களின் மூலம் அவர் அதைச் செய்யாதது நமக்கு ஒரு பேரிழப்பு. ஆனால் அவர் ஒரு வித்தியாசமான மனிதர். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம், சாகித்ய அகாதமி போன்ற விருதுகளைப் பெற என்னென்னவோ தகிடுதத்த வேலைகளையெல்லாம் செய்த பொழுது, இவர் அது போன்ற எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் அமைதி யாக இருந்தார். நைலான் கயிறு எழுதிய சுஜாதாவைத்தான் தமிழகம் அறியுமே தவிர, இன்னொரு சுஜாதாவை, நாமறிந்த சுஜாதாவை இழந்து விட்டோமே என்று வருத்தப்படுகிற சுஜாதாவை, அவர்களுக்குத் தெரியுமா என்பது தெரியாது.

கண்ணதாசன் பற்றியும் சொல்லுங்கள்…

கண்ணதாசனை சினிமாவால் கெட்டவர் என்று சொல்லி விடலாம். ஆனால் அவர் மாதிரி தமிழை ஆண்டவர்கள் கிடையாது. தமிழ் அவருடைய நாவிலே விளையாடியது. அவருடைய மூன்றாவது தொகுப்பில் உள்ள மீனாட்சியம்மை பற்றிய பாடல்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமானவை. தனது மோசமான வாழ்க்கை நிகழ்வுகளை தெளிவாக, அதுபற்றிய எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லும் நெஞ்சுரம் - அது ஒரு பெரிய விஷயம். அவருக்கு இருந்தது. தான் கடந்துவந்த மோசமான அந்தப் பாதையை மீறி எழுந்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. உண்மையில் அவர் அதை மீறியும் எழுந்துவிட்டவர் என்பது நமக்குத் தெரியும். அதே சமயம் இவர் கூட்டாளிகள் தம் மோசங்களையும் ஆபாசங்களையும் மறைத்து பொய்களை வரலாறாக எழுதுவதும் நமக்குத் தெரியும். கண்ணதாசனுக்கு இருந்த தன்னம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்பத்ற்கு இதுவே நிரூபணம். இதையெல்லாம் மீறி, அவர் ஒரு சிறந்த கவிஞர் - பாடலாசிரியர். இன்னும் ஆரோக்கியமான, சுய விமர்சனம் கொண்ட சூழலில் அவர் இன்னும் பெரிய கவிதா வியக்தியாகியிருப்பார். தம் திறனையெல்லாம் சினிமா பாடல்களுக்கும் தரமற்ற அரசியல் பாட்டுக்களுக்கும் வியர்த்தமாக்கியவர். சுஜாதா பத்திரிகைப் புகழ், சினிமா புகழுக்கு ஆசைப்பட்டு தன் திறனை வியர்த்தமாக்கியது போல.

நிலக்கோட்டையில் நடந்த திருமணம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தீர்களே. அதையும் சொல்லுங்கள்:

ஒரு முறை எங்களுடைய ஸ்கூல் மேனேஜரின் மகளுக்குத் திருமணம். அவள் என்னுடன் படித்தவள். எங்கள் வகுப்பில் மூன்று பேர் பெண்கள் இருந்தார்கள். ராம திலகம் என்று ஒரு தாசி வீட்டுப்பெண். அப்புறம் தாலுகா ஆபீஸ்காரர் ஒருவரின் பெண் என்று மொத்தம் மூன்று பேர். மூன்று பேரும்தான் எப்போதும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். பணக்காரர், ஏழை என்ற ஏற்றத்தாழ்வுகளெல்லாம் இல்லாமல், சாதி வித்தியாசம் ஏதும் இல்லாமல், எப்போதும் சிரித்துப் பேசிக்கொண்டு, எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள். அதுபோல எங்கள் பக்கமும் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அங்கண்ணன் என்று ஒரு பையன் எங்களோடுதான் அமர்ந்து கொண்டிருப்பான் எப்போதும். அவன் செட்யூல்ட் கேஸ்ட் பையன். But nobody will say anything. எங்களுக்குள் அந்த வித்தியாசமெல்லாம் தெரியாது. அவனைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த முக்கியமானதொரு விஷயம், ஒவ்வொரு கிளாஸிலும் இரண்டு வருடம் இருப்பான் என்பதுதான். எங்கள் வகுப்பிலேயே மிக உயரமாக இருந்தவன் அவன்தான்.

அந்த மேனேஜரின் பெண்ணுக்கு, பையனுக்கு கல்யாணம் நடந்தது. பெரிய கல்யாணம். நிலக்கோட்டையிலேயே அந்த மாதிரிக் கல்யாணம் நடந்ததில்லை என்னும்படியாக மிக விமரிசையாக நடந்தது. ஒவ்வொருநாள் மாலையும் கச்சேரி நடந்தது. ஒரு கச்சேரியில் ஆலத்தூர் சகோதரர்கள் பாடினார்கள். மற்ற நாட்கள் கச்சேரி செய்தது யார் என்று எனக்கு ஞாபகமில்லை. என் வாழ்க்கையில் நான் கேட்ட முதல் கச்சேரி அதுதான். மறுநாள் நடந்த நாதஸ்வரக் கச்சேரி யார் பாடியது என்பது தெரியவில்லை. இப்படியெல்லாம் கூடக் கல்யாணம் நடத்துவார்களா என்று மிக விசேஷமாக அது நடந்தது. அதன்பிறகும் ஒரு 2,3 வருஷம் நிலக்கோட்டையில் இருந்திருக்கிறேன். ஆனாலும் யாரும் அவ்வளவு பெரிய திருமணம் நடத்தியதாக ஞாபகம் இல்லை. அந்தக் காலத்திலேயே பனிரெண்டாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். அது மிகப் பெரிய பணம்.

புலம்பெயர்ந்த படைப்பாளிகள் குறித்து நீங்கள் நிறைய எழுதியுள்ளீர்கள். குறிப்பாக ஈழ இலக்கியம் குறித்து நீங்கள் நிறைய அறிமுகம் செய்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமானது என்பது குறித்தும், உங்களைக் கவர்ந்த ஈழப் படைப்பாளிகள் குறித்தும் சொல்லுங்களேன்!

ஆரம்ப காலம் முதலே என்னுடைய எழுத்திற்கு இங்கிருப்பவர்களை விட ஈழத்து வாசகர்களே மிக அதிகமாக இருந்தார்கள். எழுத்து பத்திரிகை அதிக பிரதிகள் விற்றது அங்கேதான். அவர்கள் பரவலான இலக்கிய வாசிப்பை உடையவர்கள். தமிழ்நாட்டில் தன்னுடையதை மட்டுமே படிப்பார்கள் அல்லது தன்னைப் பற்றி புகழ்ச்சியாக ஏதாவது விமர்சனம் வந்தால் படிப்பார்கள். ஆனால் ஈழத்தில் அப்படி இல்லை. அவர்கள் எல்லாவற்றையுமே படிக்கக் கூடியவர்கள். அப்படி ஒரு நல்ல சூழ்நிலை அங்கே இருந்தது. ஆனால் அது பாதகமாகப் போனது இரண்டே இரண்டு பேர்களால். ஒருவர் க.கைலாசபதி. பெருமளவுக்கு இவரைத்தான் குற்றம் சாட்டவேண்டும். இவரை ஒட்டிப் பின்சென்றவர், மற்றவர் கா.சிவத்தம்பி. அவர்கள் ஆரோக்கியமான அந்தச் சூழ்நிலையையே மாற்றிக் கெடுத்து விட்டார்கள். அவர்கள் யார் யார்க்கு Good conduct certificate கொடுக்கிறார்களோ அது நல்ல இலக்கியமாகும் என்று சொல்லுமளவுக்கு ஈழத்துச் சூழலைக் கெடுத்து வைத்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “நீங்களா என்னை அங்கீகாரம் செய்தீர்கள், கைலாசபதிதானே எனது நூலுக்கு முன்னுரை கொடுத்தார் என்று”. அதாவது அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காரணத்தை அவ்வளவு வெளிப்படையாகச் சொல்லி ஒப்புக் கொண்டார் பெருமையுடன். அவர் வேறு யாருமல்ல. மல்லிகை டொமினிக் ஜீவாதான். இதையெல்லாம் கொஞ்சமாவது எதிர்த்து நின்றது எஸ்.பொ.தான். அவர் ஆரம்ப காலத்தில் கைலாசபதியின் great admirer ஆக இருந்தவர். பின்னால் விளைந்த சூழல்களைக் கண்டு பொறுக்க முடியாமல் மாறிவிட்டார்.

எழுத்து பத்திரிகைக்கு தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்காவில்தான் நிறைய சந்தாதாரர்கள் இருந்தார்கள். பின்னால் ஏற்பட்ட சில சூழல்களால் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக அங்கு வரும் பெரிய வணிக பத்திரிகைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால் சரஸ்வதி, எழுத்து போன்ற பத்திரிகைகள்தான் நிறுத்தப்பட்டன. சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களுக்கு பத்திரிகைகள் நேரடியாக அஞ்சல் மூலம் வரும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படிக் கிடைக்க வழியில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது எழுத்து மற்றும் சரஸ்வதிதான். எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது.

எழுத்து இலங்கையில் எந்த அளவுக்கு பிராபல்யமாக இருந்ததோ அந்த அளவிற்கு எழுத்தில் எழுதிய நானும் அவர்களிடம் அதிகம் தெரிய வந்தேன். உண்மையில் எழுத்தையும், அதில் வெளியான புதுக்கவிதைகளுக்காக செல்லப்பாவையும் அக்காலத்தில் எல்லோருமே கேலி செய்தார்கள். சி.சு.செல்லப்பாவுக்கு நெருக்கமான ராமையா, சிட்டி உட்பட பலருடைய கேலிக்கு எழுத்து ஆளானது. அநேகமாகக் கேலியில்தான் எழுத்து வாழ்ந்தது. வானம்பாடிகள் கேலி செய்தார்கள். இப்படி ஒர் சூழ்நிலை இங்கே அப்போது நிலவியது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், இங்கே சூழ்நிலைகள் அப்படியிருக்க, அங்கே நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அது ஏற்றுக் கொள்ளக் கூடியதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் மனோநிலை நிலவியது அவர்களிடத்தே அக்காலத்தில். இன்றுவரைக்கும் அது தொடர்கிறது. தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருந்தது. அப்போது நா.பா-வும், பகீரதனும் அங்கே போயிருந்தார்கள். அங்குள்ளவர்களிடம் போய் இவர்கள், “ஈழத்து இலக்கியம், தமிழ் நாட்டு இலக்கியத்தை விட இருபது வருடம் பின்தங்கி இருக்கிறது… ஆகவே நீங்கள் ரொம்பதூரம் முன் வரவேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே அங்குள்ள இலக்கியவாதிகள், வாசகர்கள் எல்லாம் இவர்களை வறுத்து எடுத்து விட்டனர். இதென்ன எஞ்சினியரிங் காலேஜ் விவகாரமா, அல்லது ரோடு போடும் வேலையா, பின் தங்கி இருக்கிறோம் என்று சொல்வதற்கு? என்று திட்டித் தீர்த்து விட்டனர். அப்படி ஒரு சூழல் அங்கே இருந்தது.

இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் அங்குள்ள நூல்கள், பத்திரிகைகள் எனக்கு வர ஆரம்பித்தது. பலர் தங்களுடைய புத்தகங்களை எனக்கு அனுப்பி வைத்தார்கள். டேனியல் போன்றவர்களைப் பற்றி அப்படித்தான் எனக்குத் தெரிய வந்தது. படிக்கவும் எனக்குப் பிடித்திருந்தது. சிலரைப் பற்றி எழுதினேன். இப்படித்தான் அது ஆரம்பித்தது. ஆனால் பிற்காலத்தில் அது தடைபட்டது. என்றாலும் அவர்களைப் பற்றி கொஞ்ச காலம் வரைக்கும் மிக அதிகமாக இங்கே எழுதியது என்றால் அது என்னைத் தவிர வேறு யாருமில்லை.

கைலாசபதியினுடையது எல்லாம் யந்திரத்தனமாக, மார்க்ஸியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாது வாய்ப்பாடாக வாந்தி எடுப்பதாக இருக்கும். படிக்கவே கஷ்டமாக மடத்தனமாக இருக்கும். அவரிடம் அதிகாரம், ஆட்சி இருந்ததால் அந்த மடத்தனம் அப்போது செல்லுபடியானது. புதுக்கவிதையை அவர் நிர்தாட்சண்யமாகவே கிண்டல் செய்தார். ஆனால் அவரே ஈரோடு தமிழன்பனின் கவிதைகளைப் பாராட்டி எழுதினார். ஏன்? தமிழன்பன் வானம்பாடி, முற்போக்கு முகாமில் தன்னைக் கண்டவர். ஆகவே பாராட்ட வேண்டும். அப்படித்தான் அங்கும் அவர் விருப்பும் வெறுப்பும் இருந்தது. ஆனால் திருமாவளவன், அகிலன் போன்ற கவிஞர்களை அவருக்குப் பின்னும் ஏன் கவனிக்கவில்லை? அல்லது அவரது கோஷ்டியினரால் அவர்கள் ஏன் பேசப்படவில்லை என்பது தெரியவில்லை. அதுபோல வ.அ.ராசரத்தினம். நன்கு எழுதக்கூடியவர். ஆனால் நாளடைவில் அவரும் - இங்குள்ள முற்போக்கு முகாம்களைப் போல - மாறி விட்டார். காரணம் அந்த ப்ராண்ட்தான் அங்கு செல்லுபடியாகும். அதுபோல ஒரு பெண் கவிஞர் - அவர் பின்னால் கொல்லப்பட்டு விட்டார் - சிவரமணி என்பது அவர் பெயர். ஆனால் அவர் இறந்தபிறகுதான் அவரது கவிதைகள் எல்லாம் சேர்த்து, தொகுக்கப்பட்டு வெளியானது. மிக நல்ல கவிஞர். அதுபோல இன்னொருவர் வில்வரத்தினம் - இவர் சுனாமி பாதிப்பின்போது இறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அவர் மிக நன்றாகக் கவிதைகள் எழுதக் கூடியவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ”காலத்துயர்”. என்று ஒரு கவிதைத்தொகுப்புதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. ஈழப் போரட்டத்தில் மக்கள் படும் அவதி, மரணத்தை என்னேரமும் எதிர்நோக்கியிருக்கும் அந்த அவல நிலை எத்தனை தலைமுறைகளாகத் தொடர்கிறது. இருப்பினும் அந்தத் துயரைச் சொல்ல வந்தவர் அலங்கார வாத்தைகளை, உவமைகளைத் தேடி மிகவும் பிரயாசைப்படுகிறார். பழங்கால புலவர் மரபில் செய்யுள் இயற்றும் முனைப்புத்தான் தெரிகிறதே தவிர, அடக்கமுடியாத துக்கமும் வேதனையும் பீறிடும் மொழியாக, அது இல்லை.

பொதுவாக, இலங்கையில் சமகால அனுபவத்தைப் பதிவு செய்கிறார்கள். அது ஒரு பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. எப்படிப் பதிவு செய்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் பதிவு செய்கிறார்கள். ராஜமார்த்தாண்டன் தமிழினிக்காக ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்திருந்தார். அது முழுக்க முழுக்க எனக்கு ஒப்புதலான ஒன்று. ஏனென்றால் யார், யார் எல்லாம் அதிக தம்பட்டம் அடித்து, அதிகார தோரணையில் தங்களை கவிஞர்களாக முன்னிறுத்திக் கொண்டார்களோ, அவர்களையெல்லாம் முற்றிலுமாக அவர் ஒதுக்கி விட்டிருந்தார். வானம்பாடிக் கவிஞர்கள், பிரம்மராஜன் எனப் பலரை அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அதுபோல சேரனுடைய கவிதைகளும் தனியாகத் தெரியக் கூடியவை. அவரைப் பற்றியெல்லாம் ராஜமார்த்தாண்டனைத் தவிர வேறு யார் கவனித்து எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போல அகிலன், திருமாவளவனைப் பற்றி ஈழத்தவர்களே அதிகம் பேசியதில்லை. இப்படி நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். நான் இவர்களையெல்லாம் கவனித்து வந்திருக்கிறேன். எழுதி வந்திருக்கிறேன்.

எழுத்து வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத அனுபவங்கள், நினைவுகள் பற்றிச் சொல்லுங்களேன்!

பல சம்பவங்கள் இருக்கின்றன என்றாலும் ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். நான் வெகுவாக ஒதுக்கப்பட்ட ஒரு மனுஷன். என்னுடைய விமர்சனங்களைக் கண்டு ஒருசமயம் எல்லோருமே என்னை வெறுத்தார்கள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் எத்தனையோ பேரை நான் பாராட்டியிருக்கிறேன் என்பது அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற புறக்கணிப்புகளால் நான் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். எனக்கு அந்த வாய்ப்பு வந்தது, எழுத ஆரம்பித்தேன். ஆனால் எனக்கிருந்த குறை என்னவென்றால் நான் யாருக்காக எழுத வேண்டும் - தமிழருக்காக எழுத வேண்டும் - அதுவும் தமிழில் எழுத வேண்டும். ஆனால் மற்றவர்களுக்காக ஆங்கிலத்தில் ஏன் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

1966-67ல் ’என்லைட்’ ஒன்று பத்திரிகை பரோடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. க.நா.சு என்னை அதில் எழுதச் சொன்னார். “இங்கிலீஷ்லேன்னா எழுதணும். இங்கிலீஷ்லே எழுதி எனக்குப் பழ்க்கமில்லையே. என் இங்க்லீஷ் செல்லுபடியாகுமா, தெரியலையே,” என்று தயக்கம் காட்டினேன். அதற்கு அவர், “சரிதான்யா, எழுதும், உம்ம இங்க்லீஷும் இங்கிலீஷ்தான். என் இங்கிலீஷும் இங்கிலீஷ்ங்கற மாதிரி. இங்கிலீஷிலே எத்தனையோ இங்கிலீஷ் இருக்கு. தைரியமா எழுதும்,“ என்றார். ஆக, நானும் அதில் எழுத ஆரம்பித்தேன். நான் இங்கிலீஷில் எழுத க.நா.சு தான் காரணம். முதலில் சுந்தரராமசாமி, அப்புறம் செல்லப்பா, ஆர்.சண்முகசுந்தரம், எம்.வி.வெங்கட்ராம், ஜெயகாந்தன் என்று வரிசையாக எழுதினேன். எனக்கு விருப்பமானவர்களைப் பற்றி எல்லாம் நான் எழுதினேன் என்று சொல்லலாம். அப்படி எழுதும் போது ஒருமுறை எம்.வி.வெங்கட்ராமிற்கு அவருடைய போட்டோ வேண்டும் வெளியிடுவதற்காக என்று கடிதம் எழுதினேன். அவர் அப்போது கும்பகோணத்தில் இருந்தார். நான் அவரைப் பார்த்ததில்லை. அவர் கும்பகோணத்தில் எங்கே இருக்கிறார் என்பதும் கூட சரியாகத் தெரியாது. அவரிடமிருந்து போட்டோ வந்தது. அவர் அங்கே இருக்கும் தன் நண்பர்களிடம் போட்டோவையும், என் கட்டுரையையும் காட்டியிருக்கிறார். கும்பகோணம் காலேஜில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த - சேஷாத்ரி என்று நினைக்கிறேன் - அவர் நண்பர், ’அவரை விட்டுடாதீங்கய்யா, ரொம்ப நல்லா எழுதற ஆள்’ என்று சொல்லியிருக்கிறார். பின் கும்பகோணம் செல்லும் போது எம்.வி.வெங்கட்ராமைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் எனக்கு நல்ல நண்பராகி விட்டார்.

ஒருமுறை அவர் வீட்டிற்கு என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஊரிலிருந்து என் மாமா வந்திருந்தார். அதனால் நான் அவர் வீட்டிற்குப் போகவில்லை. அதற்குள் அவர் பையனை என் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டார். பின்னர் நான் அவர் வீட்டிற்குப் போனால் அங்கே சாப்பாடு தயாராக இருந்தது. என்னை சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்திக் கொண்டிருந்தார். பின்னர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வாறு கும்பகோணம் செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திப்பது வாடிக்கையானது. நெருக்கமான நண்பராக அவர் இருந்தார்.

ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்த போது, தன்னோடு கூட மூன்றுபேரை அழைத்து வந்திருந்தார். அவர்கள் தஞ்சை பிரகாஷ், இருளாண்டி, பிரபஞ்சன் ஆகியோர். அன்று வெங்கட்ராம் ஒன்றுமே பேசவில்லை. ஆனால் வந்திருந்தவர்கள் சரமாரியாக என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். நானும் அவர்கள் விசாரணைக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சர்ச்சைக்கு உள்ளான ஆள். அதனால் அந்த மூவரின் அனுதாபம் எனக்கு எதிர்ப்பக்கம்தான் இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பிற்குப் பின் நடந்ததோ வேறு. எல்லோரும் எனக்கு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். அதைப் பற்றி பின்னால் இருளாண்டி ஒருமுறை சொன்னார், ”உங்களைக் கேள்வி மேல கேள்வி கேட்டு நல்லா மடக்கிப் போட்டுடறதுன்னு நினைச்சுட்டுதான் வந்தோம். ஆனா வெங்கட்ராம் சொல்லிட்டாரு, ’நான் ஏதும் பேச மாட்டேன். எங்களோட நட்பு வேற மாதிரி. அதுனால நீங்களே பேசிக்குங்கன்னு’. நாங்களும் சரின்னுட்டு வந்துட்டோம். ஆனா எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்க பேசினது எங்களுக்கு ரொம்ப அபூர்வமா இருந்தது.” என்றார். இருளாண்டி இடையில் காலமாகிவிட்டார். பின்னால் பிரபஞ்சனும் பிரபல பத்திரிகையாசிரியராகி விட்டார். தஞ்சை பிரகாஷ் மட்டும் நான் டெல்லியிலிருந்து கும்பகோணம் வரும்போதெல்லாம் வந்து என்னைச் சந்திப்பார். மணிக்கணக்காக ராத்திரி, பகல் என்றெல்லாமல் என் கூடவே இருப்பார். பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருப்போம்.

ஒருசமயம் இரவு நேரத்தில் நான் தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே எதேச்சையாக தனது நண்பர்களுடன் வந்திருந்த பிரகாஷ் என்னைப் பார்த்து விட்டார். ”என்ன இங்கே?” என்று கேட்டார். ஊருக்குப் போகிறேன் என்று சொன்னேன். அவ்வளவுதான். ‘நாம் சந்திக்காமல் எப்படிப் போவது?’ என்று சொன்னவர், தன் நண்பர்களை விட்டு அருகே உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போடச் சொல்லி, மூன்று நாள் வரைக்கும் அங்கேயே தங்க வைத்தார். அந்த மூன்று நாளும் அவரும் வீட்டுக்குப் போகவில்லை. அங்கே இன்னொரு எழுத்தாள நண்பரையும் சந்தித்தேன். அவர் கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார் - பெயர் நினைவில்லை - பல விஷயங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஏன் சொல்கிறேன் என்றால் பிரகாஷிற்கு என் மேல் அவ்வளவு ஈடுபாடு.

பிரகாஷ் நாவல்கள், சிறுகதைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு எழுத்தாளன் என்று தன்னை காட்டிக் கொண்டது கிடையாது. அவ்வப்போது நாடோடிக் கதைகள் என்று தாமரையில் எழுதியிருப்பது தெரியும். மற்றபடி அவர் தன்னை எழுத்தாளராக அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. மேலும் அவருக்கு தெலுங்கு தெரியும், மலையாளம் தெரியும். இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறார். லாரி ஓட்டுவதற்கான ஹெவி டிரைவிங் லைசென்ஸூம் அவர் வைத்திருந்தார். அவருடைய தாய் ஒரு ஐயங்கார். தந்தை தேவர். பிரகாஷின் பாட்டி ஒரு பெரிய டாக்டர். இதெல்லாம் எதுவுமே எனக்குத் தெரியாது. அவரது பேச்சு மட்டுமே தெரியும். ஆனால் அவர் நிறைந்த படிப்பாளி. பெங்காளி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் சிறந்த, ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் உடையவர். பல புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார். நல்ல ஞாபக சக்தி உடையவர். எனக்காக ஒரு பத்திரிகையே அவர் ஆரம்பித்து நடத்தினார். “வெங்கட்சாமிநாதன் எழுதுகிறார்” என்பதைச் சுருக்கி ‘வெசாஎ’ என்ற தலைப்பில் ஒரு புதிய பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். அதில் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். வேறு யாரும் கிடையாது. அவர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனாலும் பிடிவாதமாக நடத்தினார். இரண்டு இதழ் வந்தது. மூன்றாவது இதழ் வரும்போது அவர் இல்லை.

நான் டெல்லியில் இருந்த போது எனக்கு ஒரு பஞ்சாபி நண்பர் மிக நெருக்கமாக இருந்தார். நான் டெல்லியை விட்டு வரும்போது ‘இவர் இல்லாமல் இனி எப்படி இருக்கப் போகிறோம்’ என்று அவர் இல்லை என்ற வேதனையால் மனம் அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தது. அதேசமயம் தஞ்சை பிரகாஷ் இருக்கிறார், அவர் இருப்பது ஒரு இழப்புக்கு நிறைவு தருவதான ஒரு சமாதானம் இருந்தது. சந்தித்து நிறைய பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் எல்லாம் தவறாகப் போனது. நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்னாலேயே பஞ்சாபி நண்பர் இறந்து போய் விட்டார். இங்கு வந்த சில மாதங்களில் ப்ரகாஷூம் காலமாகி விட்டார். பஞ்சாபி என்றால் ரொம்ப முரட்டு சுபாவம் கொண்டவர்கள் என்பது பரவலாக தெரிந்தது. ஆனால் டண்டன் அப்படியெல்லாம் இல்லாமல் மிக அன்பானவராக அவர் இருந்தார். பஞ்சாபி, பிரகாஷினுடனான நட்பெல்லாம் ரொம்ப ஆழ்ந்தது. அன்னியோன்யமானது.

கருத்து ரீதியான விமர்சனம் என்பது குறித்த உங்கள் கருத்து என்ன?

நாம் ஒரு கருத்தைச் சொன்னால் அதைக் கருத்தாகவே எதிர் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் இங்கே கும்பல் சேர்ந்து கருத்தை எதிர்ப்பதை விட்டுவிட்டு ஆளை எதிர்க்கிறார்கள். அது மிக மிகத் தவறானது. அதற்கு அவரவர்கள் சார்ந்த கட்சிகள் உதவுகின்றன. உண்மையே இல்லாத விஷயங்களுக்காக, இவர்களும் உண்மையே இல்லாமல் கும்பல் சேர்ந்து, வெற்றுக் கோஷங்கள் எழுப்பி மிரட்டுவதால் மற்றவர்கள் அதற்கு பயப்படுகின்றனர். சில அமைப்பினரைப் பற்றி நான் இந்தியாடுடே தமிழ்ப் புத்தாண்டு மலரில் கருத்து தெரிவித்ததற்கு எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்ததென்று தெரியுமா? தஞ்சாவூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள எழுத்தாளர்கள், பேராசிரியப் பெருமக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டி, சாமிநாதன், வல்லிக்கண்ணன் எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ள இந்தத் பக்கங்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை எடுத்து அவ்வாறே செய்து, இந்தியா டுடே அலுவலகத்திற்கு பார்சலில் அனுப்பி வைத்தார்கள். இதில் பிரபல சில பேராசிரியர்களும் அடக்கம். அதில் முக்கியமானவர் அந்தோணி மார்க்ஸ் என்னும் அ.மார்க்ஸ்.

இதுதான் என்னுடைய கருத்திற்கு ஒரு பேராசிரியரின் பதில். இதிலிருந்தே அவர்களது தராதரத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். நான் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தது - இவர்கள் எல்லோரும் பாசிஸ்ட்ஸ், இவர்களுடைய attitude எல்லாம் பாசிஸமாகவே இருக்கும். இவர்கள் பாஸிஸத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதுதான் - அது அப்படி இல்லை என்று அவர்கள் கருத்தோடு என் கருத்தை எதிர்கொண்டிருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் நான் என்ன எழுதினேனோ அதை உண்மை என்று அவர்களே தம் செயல்கள் மூலம் நிரூபித்தும் காட்டிவிட்டார்கள். They proved that my charges were correct. இவர்களிடம் குடிகொண்டிருப்பது கருத்தோ சிந்தனையோ அல்ல. கும்பல் கலாசாரம்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியின் மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளரும் அடக்கம். இது நடந்த சில மாதங்களுக்குப் பிறகு - அகரம் அல்லது அன்னம் பதிப்பாக என்று நினைக்கிறேன் அந்த எழுத்தாளரின் இரண்டு நூல்கள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்தன. அதன் பிரதிகளை எனக்கு அனுப்பியிருந்தார் மீரா. ஏற்கனவே அந்தப் எழுத்தாளருடைய நூலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது சாம்பசிவராவ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நான் அந்த நூலைப் பாராட்டி இந்தியன் லிட்டரேச்சர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை எடுத்து இப்போது இந்தப் புத்தகத்தில் இணைத்திருந்தார்கள். நான் உடனே மீராவுக்கு எழுதினேன், “நான் எழுதிய எழுத்துக்கள் எல்லாம் மலம் துடைக்கத்தான் உதவும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திட்டவர் இந்த எழுத்தாளர்.  அதை அப்படியே எடுத்து இந்த எழுத்தாளர், என்னிடமும் அனுமதி கேட்காமல், தனது புத்தகத்துக்கு அலங்காரமாக வைத்துக் கொண்டது ஏன்?” என்று கேட்டு எழுதினேன். ஆனால் அதற்கு மீராவிடமிருந்தும் சரி, அந்த எழுத்தாளரிடமிருந்தும் சரி, எந்தப் பதிலும் வரவில்லை. என்னுடைய அனுமதி எதுவும் கேட்காமல், என்னுடைய எழுத்தையும் கேவலமாக தூஷித்து விட்டு, ஆனால் அதை தனது புத்தகத்தில் தனக்கான பாராட்டாக, அவர் பயன்படுத்தியிருந்தார். இது என்ன நியாயம்? இவர்களுக்கு விவஸ்தை என்று ஏதும் உண்டா?

பிறகு அதே எழுத்தாளர் சாகித்ய அகாதமி ஆலோசனைக் குழு உறுப்பினராக டெல்லிக்கு வந்தபோது, தனியாக அவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டேன். அவரால் அதற்குச் சரியானபடி பதில் சொல்ல முடியவில்லை. “நீங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தீர்கள்தானே! உங்களுக்கும் அந்தக் கருத்தில் ஒப்புதல்தானே! அதனால்தானே கையெழுத்திட்டீர்கள்” என்று கேட்க, “இல்லை, இல்லை. நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அவர்கள் அப்படிச் செய்தார்கள். ஆனால் என்னால் அதைத் தடுக்க முடியவில்லை” என்றார். இவரும் ஒரு எழுத்தாளர். சாகித்ய அகாடமி ஆலோசகர். ஆனால் செய்வது என்னவோ முதுகெலும்பில்லாத, வன்முறையைக் கண்டு எதிர்க்காமல், அதனோடு சேர்ந்து அதற்கு உறுதுணையாக இருக்கும் செயல். இதுதான் பாஸிஸம் என்பது. பயிற்றுவிக்கப்பட்ட கும்பல்கள் ஒன்று சேர்ந்து செய்யக் கூடியது. அதை எதிர்க்காமல் கண்டிக்காமல் மௌனமாக இருந்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். கள்ள மௌனம் சாதிக்கும் இவர்கள் செயலில் கண்ணியமோ, நேர்மையோ, விவஸ்தையோ எங்கிருக்கிறது? இது தான் தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் லட்சணம். இது தான் இங்கிருக்கும் சூழல்.

தற்போதைய பத்திரிகைச்சூழல் குறித்து உங்கள் கருத்தென்ன?, முன்னெல்லாம் நிறைய சிறுகதைகளுக்கு இடமிருக்கும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முன்பெல்லாம் கதை, கட்டுரை என்று நிறைய வரும். ஆனால் தற்போது வெறும் துணுக்குகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. அதுவும் மோசமான சினிமாவுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது பெரிய ஆக்கிரமிப்பாக இருக்கிறது. சினிமா  அரசியலைத் தீர்மானிக்கிறது. அரசியல் சினிமாவைத் தீர்மானிக்கிறது. ஒரே விஷச் சுழல் இரண்டு பக்கமும் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு சினிமாவும், சினிமாக்காரர்களுக்கு அரசியலும் அதிகமாக வேண்டியிருக்கிறது. அது ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஒன்றின் துணை மற்றொன்றுக்கு வேண்டியிருக்கிறது. அவர்கள் பத்திரிகை என்றில்லாமல் எல்லா ஊடகங்களிலும் விரவியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை ஆரோக்கியமானதல்ல. தமிழ்நாட்டில் எந்தத் தரத்தில் சினிமா இருக்கிறதோ அந்தத் தரத்தில்தான் அரசியலும். கடைத்தரமானதும், மூர்க்கமும் ஆபாசமும் கலந்ததும்தான்.

இப்போது நிலவும் இலக்கியச் சூழல் குறித்து உங்கள் கருத்து என்ன? சண்டைகளும், சர்ச்சைகளும் பெருகி வரும் சூழல் ஆரோக்கியமானதுதானா?

ஆரோக்கியம், ஆரோக்கியமில்லை என்பதை விட, அவ்வப்பொழுது வருவது வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நமது தேர்வுதான் முக்கியம். இந்தச் சூழல் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்பதில்லை. சில சூழல்கள் வரவேற்பிற்குரியதாயிருக்கலாம். சில பரபரப்பு கொண்டதாக இருக்கலாம். சிலவற்றிற்கு எதிர்ப்புகள் இருக்கலாம். அந்தந்த சூழலைப் பொறுத்து நமது எதிர்வினைகள் இருந்தால் போதும். ஆனால் நமக்கு வரும் எதிர்வினைகளுக்கு நாம் பணிந்து விடாமல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். ஆக சூழலைக் குறை சொல்லிப் பயனில்லை. அது அப்படி இருக்கிறது. சரி. அதை மீறி நீ என்ன செய்கிறாய்? என்பதுதான் முக்கியம். க.நா.சு அந்தச் சூழலை மாற்றி அமைக்க வேண்டும் என்று முயற்சிக்கவில்லையா? செல்லப்பா முயற்சிக்கவில்லையா, அவர் அதில் வெற்றிபெறவில்லை என்றாலும் முயற்சி செய்தார் அல்லவா? ஆக அந்த முனைப்புதான் முக்கியம். ஆனால் இப்போது எல்லோருமே அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து விடுகிறார்கள். அவர்களுக்குத் தேவை சலுகைகள். அதிகாரத்தின் கனிந்த பார்வை. முன்பு எதிர்த்து நின்றவர்கள், தற்போது சமரசம் செய்து கொள்ள வேண்டாதவர்கள் கூட, ஏனோ பணிந்து சமரசமாகி விடுகிறார்கள். அவ்வாறு கீழ்ப்படிந்தவர்களில் ரொம்ப பேர் அப்படிக் கீழ்ப்படிய அவசியமில்லாதவர்கள். ஆனால் ஆசை இருக்கே. அது மயக்குகிறதே. . அதனால் சில சௌகரியங்களுக்காக, ஆசைகளுக்காக பணிந்து போகிறார்கள்.

என்னைப் பொருத்தவரை எப்போதும் ஒரு ஆர்டிஸ்ட்  தனியன்தான். பெரும்பான்மையான சூழல் அவனுக்கு எதிரானதாகவே இருக்கும். இயல்பாக, அவன் இருக்கும்படிக்கு இருந்தால் அதில் போராட்டங்கள் இருக்காது. சௌகரியங்களுக்காகக் கீழ்ப்படிந்தால், எனக்கு அது கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்திற்காகப் பணிந்தால் அப்போதுதான் அது போராட்டமாகிறது. ஆகவே எனக்கு இது போது என்ற மனதோடு சமரசம் செய்து கொள்ளாத மனநிலையோடு இருந்தாலே போதும்.

(நேர்காணல் நிறைவடைந்தது. இந்த விரிவான நேர்காணலை சொல்வனத்தில் பிரசுரிக்க அனுமதி தந்த தென்றல் பத்திரிகைக்கும், மதுரபாரதி, அர்விந்த் சுவாமிநாதன் ஆகியோருக்கும் சொல்வனத்தின் நன்றிகள்.)

 

 

 

 

கருத்துகள் இல்லை: