கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

சித்தி - மா.அரங்கநாதன்

அங்கே மைதானங்கள் குறைவு. அவன் குடிக்கொண்டிருந்த அந்த இடம் காவல் துறைக்கு
சொந்தமானது. ரொம்ப நேரம் அவனைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த காவல்காரர்
ஒருவர் இடையே அவனது ஓட்டத்தை தடை செய்தார். "தம்பி - இங்கே ஓட அனுமதி வாங்க
வேண்டும்" என்று கூறி "ஆனாலும் நீ நன்றாக ஓடுகிறாய். முன்னுக்கு வருவாய்"
என்றும் சொல்லி சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தார்.

அந்த நாட்டில் விளையாட்டிற்கு அத்தனை மதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. இருந்த
போதிலும் வீரர்களைப் பற்றி தொலைக்காட்சி செய்திகள் மூலமாக மக்கள் அறிந்து
கொண்டிருந்தார்கள். கஷ்டம் நிறைந்த வாழ்க்கையை எந்தவித உணர்வுமில்லாது
இயல்பாகவே அவர்கள் ஏற்று நடத்திக் கொண்டிருந்தபடியால் விளையாட்டுகள் அங்கு
எடுபடவில்லை. காலங்காலமாக அவர்களுக்கு தெரிந்த விளையாட்டிலேயே ஈடுபட்டு
திருப்திப்பட்டுக் கொண்டனர். "ஒலிம்பிக்" போட்டிகளைப் பற்றி கேள்வியோடு சரி.
அந்த மண் உலகிலே ஒரு விசேடமான மண் போலும். அங்கே தான் அவன்
ஓடிக்கொண்டிருந்தான்.

"நீ என்ன படிக்கிறாய்?"

காவல்காரர் கேட்டார். அவன் அதற்குச் சொன்ன பதிலை காதில் வாங்கிக்கொள்ளாமலே
தொடர்ந்து கூறினார்.

"நீ இப்படி ஓடுவதற்கு முன்னே சில அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - நானும்
ஒரு காலத்தில் ஓடினேன். அதை தொடரவில்லை. என் அந்தகால வயதுத் திறனைவிட நீ
அதிகமாக இப்போது பெற்றிருக்கிறாய் - ஒன்று செய்யலாம்-கேட்பாயா…"

அவன் தலையசைத்தான்.

நான் தரும் முகவரிக்குப் போ. அந்த பெரியவரோடு பேசு. உனக்கு நல்லது கிடைக்கும்.

அவன் மெதுவாக நன்றி சொன்னான். அன்றைக்கு அவன் முடிவெட்டிக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் அந்தப் பணம் செலவாகி விட நேரும். அது ஆபத்து-மீண்டும் பணம்
கிடைப்பது அரிது. இந்நிலையில் அந்தக் காவலரின் யோசனைக்கு அவன் பதிலும்
நன்றியும் திருப்திகரமாக சொல்லியிருக்க முடியாது. ஆனாலும் அவர் ஒரு முகவரியைக்
கொடுத்து உற்சாகப்படுத்தி அவனை அனுப்பிவைத்தார்.

தன்னைச் செம்மைப்படுத்தி கொண்டு அவன் மறுநாள் இரண்டு மைல் தூரத்திலிருந்த அந்த
வீட்டிற்கு சென்றான். பெரிய மாளிகை போன்ற வீடு-வீட்டின் முழு பார்வையும் விழ,
தெருவிலிருந்து காம்பவுண்ட் சுவரைத் தாண்டி மரங்களடர்ந்த பாதை வழி நடக்க
வேண்டும். அந்தப் பாதையில் அவன்கால் வைத்த போது - அதன் அழகான நீட்சியில் - அந்த
கால்கள் ஓடுவதற்குத் தயாராயின. மாசு மறுவற்ற அந்தப் பாதை வீட்டை சுற்றிலும்
இருக்க வேண்டும் என்று நினைத்தான். வீட்டின் முகவாயிலில் நாற்காலியில் செடிகள்
சூழ்ந்த இடத்தில் அவர் உட்கார்ந்திருந்தார்.

பெரியவர் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் வருபவனுடைய நடை அவருக்கு எதையோ
ஞாபகப் படுத்தியிருக்க வேண்டும். தூரத்தில் வந்து கொண்டிருந்தவனை ஆவலுடன்
பக்கத்தில் காண விழைந்தார். "ஏன் இத்தனை நாள்-முன்பே ஏன் வரவில்லை" என்று
கேட்கவும் எண்ணினார். அவர்களது சம்பாஷணை இயல்பாக எளிதாகவிருந்தது. "நமது நாடு
பாழ்பட்டுவிட்ட நாடு. இதை இளைஞர்கள் தாம் காக்க வேண்டும்-இல்லையா" என்று
இரைந்து கேட்டார். நடப்பதற்கு முன்பே ஓட ஆரம்பித்து விட வேண்டுமென்று கூறி
சிரிப்பு மூட்டப் பார்த்தார்.

பெரியவருக்கு வயது அறுபதிருக்கும். விளையாட்டு விஷயங்களிலேயே தன்னை
மூழ்கடித்துக்கொண்டவர். அவைகளைத் தவிர உலகிலுள்ள எல்லாக் காரியங்களையும்
இயந்திரங்களைக்கொண்டு நிகழ்த்திவிடலாம் என்று நம்புகிறவர். அந்த நாட்டின் எல்லா
செய்தித் தாள்களிலும் வந்த படம் இவருடையதாகவேயிருக்கும். சீடர்கள்
அதிகமிருந்திருக்க முடியாது. இருந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறையில்
சேர்ந்திருப்பார்கள்.

"நான் எனது நாட்டிற்காக என் விளையாட்டுக் கலையை அர்ப்பணித்தவன்"

அவர் கண்கள் ஜொலித்தன. உண்மையில் அந்த கண்களில் அவர் சொன்னது தெரிந்தது. அவர்
பொய் சொல்பவராகத் தெரியவில்லை.

பல மாதங்கள் அவரிடம் தனது விளையாட்டுக்கலையின் பயிற்சிகளைப் பெற்றான் அவன்.
காலையிலெழுந்து - சூரியன் உதிக்கும் முன்னர் - நெடுஞ்சாலைகளில் ஓடினான். தனது
தம்பியைத்தோளில் ஏறச் சொல்லி அவனைத் தூக்கிக்கொண்டு மைல் கணக்கில் ஓடி பயிற்சி
பெற்றான். அவனது சாப்பாட்டிற்கு பெரியவர் ஏற்பாடு செய்திருந்தார். பிரியமான
கொழுப்புச் சத்துப் பொருட்களை பெரும்பாலும் தள்ளி ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு
அவ்வுணவுகலை நேரந்தவறாது உண்டான். பிற நாட்டு வீரர்கள்-போட்டிகள் பற்றி
அவ்வீட்டிலேயே திரைப்படங்கள் காட்டப்பெற்றன. அவன் அந்த நாட்டின் சிறந்த ஓட்டப்
பந்தய வீரனாக ஆக்கப்பட்டான்.

ஒரு தடவை மல்யுத்தப் போட்டிகளின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கையில்
பெரியவர் அந்த இரு நாடுகளைப் பற்றி விளக்கினார். அவன் கண்டு கேட்டறியாத
சங்கதிகள் - நாடு - மக்கள் இனங்கள் - இவைகளின் உணர்வு பூர்வமான விளக்கம் -
ஏறக்குறைய ஒரு சொற்பொழிவு.

அவன் மீண்டும் அந்த வீடியோ காட்சிகளில் ஆழ்ந்தான். போட்டியினிடையே காட்டப்
பெறும் மக்களின் ஆரவாரம் அவனுக்கு புதிதல்ல. இருப்பினும் வேற்று நாட்டுக்காரன்
குத்து வாங்கி மூக்கு நிறைய இரத்தம் விடுகையில் பார்த்தவர்களின் சப்தம்-இடையே
ஒரு பார்வையாளன் முடித்து விட்ட தனது சிகரெட் துண்டை ஆக்ரோஷத்துடன் கீழே
நசுக்கி துவம்சம் செய்தல்-இவ்வகைக் காட்சிகளைக் கண்டு முடிக்கையில் அவன்
தனக்குள் ஏதோ ஒன்று ஏற்பட்டிருப்பதான உணர்ந்தான். அது பயம் என்று பின்னர்
தெரிந்து கொண்டான்.

அன்றிரவு தொலைக்காட்சியில் "இந்த நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்" என அவன்
அறிமுகப்படுத்தப்பட்டான். அவனது படம் நன்றாக இருந்ததாக பலர் சொன்னார்கள்.
அவ்வாறு சொன்னது பொய்யென்று அவனுக்கு தோன்றிற்று.

ஆனால் நெடுஞ்சாலைகளில் அவனது அதிகாலை ஓட்டம் தொடர்ந்தது. மைதானங்களில் ஓடுவதை
விட இதைச் சிறந்ததாகக் கருதினான். அடிவானத்தைப் பார்த்தவாறு, இரு பக்கங்களிலும்
மரங்கள் தன்னைக் கடந்து செல்ல, கால்கள் மாறி மாறித் தரையைத் தொட்டு ஓடுகையில்
இதுவரை ஆபாசம் என்று அவன் கருதிக்கொண்டிருந்தவை யாவும் தன்னைவிட்டு அகல சுத்த
சுயம்புவாக எங்கோ சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். வானமும் தரையும்
சுற்றுப்புற சீவராசிகளும் தானும் வெவ்வேறல்ல என்று தெளிந்த வகையில் அவன்
ஓட்டமிருந்தது.

அன்று அவன் ஓடிய ஓட்டம் பொழுது நன்கு விடிந்துவிட்டதாலும் புறநகர்ச் சாலைகளில்
நடமாட்டம் ஏற்பட்டதாலும் இருபத்திரண்டு மைல்களுக்குள் நிறுத்தப்பட
வேண்டியதாயிற்று. சிலசமயம் பெரியவர் மாளிகையின் கேட்டைத் திறந்து, அங்கிருந்து
தொடங்கிய நடைபாதையிலும் ஓட்டம் தொடரும். நெடுஞ்சாலையில் ஓட முடியாதபோது அந்த
வீட்டைச் சுற்றி ஓடுவான். சில மணி நேரங் கழித்து யோசனையோடு பெரியவர் வெளிவந்து
அவனை நிறுத்தும்போது தான் முடியும். ஓட்ட அளவை நாளறிக்கையில் குறித்துக்கொண்டே
அவர் பலவித கணக்குகளைப் போட்டுப் பார்ப்பதை அவன் காண்பான். தான் ஓடிய ஓட்டம்
எவ்வளவு என்று கூட கணக்கு மூலம் கண்டறிய முடியாதவனிடம் அவர் விளக்கிச்
சொல்வார். இத்தனை தூரம் தொடர வேண்டியதில்லை என்றும் உலக ரிக்கார்டை அவன்
நெடுஞ்சாலைகளிலேயே முறியடித்துவிட்டான் என்றும் சொல்லி மகிழ்வார். அவனுக்கு
கீழ் நாடுகளில் பயிலும் யோகாசனம் பற்றியும் சொல்லித் தரவேண்டியதவசியம் என
எண்ணினார். "யோகா" என்ற பெயரில் ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் அந்த நாட்டில்
பிரபலமடைய தொடங்கியிருந்தன.

"ஒரு மராத்தன் தேறிவிட்டான்" என்றும் "இந்த நாடு தலை நிமிரும்" என்றும்
ஆணித்தரமாக பத்திரிக்கை நிருபர்களிடம் கூறினார்.

அவன் இருபத்தேழு மைல்கள் ஓடி தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் அடிபட்டபோது உலக
நாடுகள் அவனைக் கவனிக்கத் தொடங்கிவிட்டன. அடுத்த ஒலிம்பிக் வீரனென
பேசப்படுபவர்களில் ஒருவனானான். அவனது விவரங்கள் பேசப்பட்டன. அவன் பெயர் பலவாறு
உச்சரிக்கப்பட்டது. 'கார்போ' என்று சோவியத்தில் அவன் பெயரை தவறாகச்சொன்னார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் அவன் 'கிரிப்ஸ்'. கிழக்கே அவனை 'கிருஷ்' என்று
சொல்லியிருப்பார்கள். தென்புலத்தில் 'கருப்பன்' என்று இருந்திருக்கக்கூடும்.

அன்றுதான் அவனது பெயர் அதிகார பூர்வமாக வெளிவரவேண்டும் ஒலிம்பிக் போட்டியில்
கலந்துகொள்பவனாக. விளையாட்டரங்கு ஒன்றில் பத்திரிக்கையாளர் பேட்டி நடந்தது.
கையில் ஒரு சுருட்டுடன் பெரியவர் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்தார். அவர்
புகைபிடிப்பது அபூர்வம். பேட்டி பின்வருமாறு இருந்தது.

"நீங்கள் போட்டியிடும் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி தானே"

"எனக்கு ஓடுவதில் ரொம்பவும் மகிழ்ச்சி"

"நமது நாட்டிற்கு பெருமை தேடித்தருவீர்கள் அல்லவா"

"ஓடுவது ரொம்பவும் நன்றாகவிருக்கிறது"

"போன ஒலிம்பிக்கில் வென்ற வீரர் பற்றி உங்கள் கருத்து?"

"ஓடுபவர்கள் எல்லோருமே மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் எல்லாரையும் நினைத்தால்
நான் சமாதானமடைகிறேன்."

"நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா"

அவன் பேசாதிருந்தான். பெரியவர் தலைகுனிந்திருந்தார். கேள்வி திரும்பவும்
கேட்கப்பட்டது.

"எனக்கு ஓட மட்டுமே தெரியும். அதிலே எனக்கு கிடைப்பதுதான் நான் ஓடுவதற்கு
காரணம். நான் எனக்காகவே ஓடுகிறேன். ஓட்டத்தின் சிறப்புத்தான் அதன் காரணம்.
எனக்கு வேறெதுவும் தெரியாது."

பெரியவர் கையிலிருந்த சுருட்டு காலடியில் கிடந்தது. முகம் பல மேடு பள்ளங்களாக
மாற காலால் சுருட்டை நசுக்கி தள்ளினார். பின்பு மெதுவாக கைகளை தளர விட்டு
எழுந்து நின்றார். அப்போது பேட்டி முடிந்துவிட்டது.

சிறிய நிலவுடன் இரவு முன்னேறுகின்ற நேரம். அந்தக் கட்டடத்தின் வெளியே
வண்டியருகே நின்றுகொண்டிருந்த அவர் பக்கம் வந்து நின்றான் அவன். சிறிது நேரம்
வெட்ட வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தார் பெரியவர். பின்னர் தோள்களை குலுக்கிக்
கொண்டே காரின் கதவை திறந்தார்.

அவன் வெகுதூரத்திற்கப்பாலிருந்த குன்றுகளைப் பார்த்தவாறே அவரிடம் கெஞ்சலுடன்
கூறினான்.

"அந்த அருமையான நிலவில் ஓட முடிந்தால் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? காலையில்
அந்தக் குன்றுவரை சௌகர்யமாக ஓட்டம் முடிந்தது."

பெரியவர் காரின் உள்ளே நுழைந்து உட்கார்ந்து கதவை சாத்திக் கொண்டார். தலையை
மட்டும் வெளியே நீட்டி "நன்றாக இருக்கும் - வேண்டுமானால் நீ இப்பவே ஓடு. அந்த
குன்றின் உச்சிக்கே போய் அங்கிருந்து கீழே குதித்து செத்துத் தொலை" என்று
கூறிவிட்டு காரை ஓட்டிச் சென்று விட்டார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ