கலித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கபிலரின் வானியலறிவு - முனைவர் அ.சிவபெருமான்

'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

தலைவி நுண்ணிய நூலால் கட்டப்பெற்ற பூக்களைக் கொண்ட மாலையைத் தன் கூந்தலில் அணிந்திருந்தாள். அவ்வாறு அவள் அணிந்திருந்த அம் மலர்மாலை கார்த்திகை நட்சத்திரத்தைப் போல விளங்கியதாம். இக்கருத்தைக் குறிஞ்சிக் கபிலர்,

 "விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி

அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகையொப்ப''

(கு.கலி 28,அடி 3,4)

என்றவாறு குறித்துள்ளார். மேற்பாடலடியின் கருத்துப்படி கார்த்திகை நட்சத்திரம் பூமாலைக்கு உவமையாகக் குறிக்கப்பட்டுள்ளதால், பூமாலை போன்ற வடிவத்தை அந்நட்சத்திரம் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சூடாமணி நிகண்டு மாலைக்குரிய பல்வேறு பெயர்களைக் (மரப்பெயர்த்தொகுதி, செய்யுள், 66) குறித்துள்ளது. அப்பெயர்களுள் "கத்திகை' என்பது ஒன்றாகும். கலித்தொகை குறித்தவாறு கார்த்திகை நட்சத்திரம் மாலைபோல் விளங்குவதாலும், "கத்திகை' என்னும் சொல்லிலிருந்து கார்த்திகை என்னுஞ்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதலாகின்றது.

விழுப்புரம் மாவட்டக் கிராமப்புற மக்கள் கார்த்திகை நட்சத்திரத்தை "அஞ்சு குஞ்சு தாய்ப்பெட்டை' என்ற தொடரால் அழைப்பர். தாய்க் கோழியைச் சுற்றி ஐந்து கோழிக்குஞ்சுகள் நிற்கும் வடிவத்தை ஒத்தநிலையில் கார்த்திகை நட்சத்திரம் காணப்படுவதால் அப்பெயர் பெற்றது போலும். கார்த்திகை நட்சத்திரம் "ஆறுமீன் கூடிய ஒரு தொகுதி' என்பதை "ஐந்து குஞ்சுகளும் ஒருதாய்க்கோழியும்' (எண்ணிக்கையால் ஆறு) என்னும் தொடரால் உணர்க.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையும் (பா. 202) அகநானூறும் (பா.141) கார்த்திகை நட்சத்திரத்தை "அறுமீன்' என்னும் சொல்லால் குறித்துள்ளது ஒப்புநோக்கத்தக்கது. எல்லாவற்றையும் தொகுத்துணரின், வானில் விளங்கிக் கொண்டிருக்கும் கார்த்திகை நட்சத்திரம் ஆறுமீன் தொகுதி என்றும், அதுவட்ட வடிவமாக மாலை போல் விளங்கும் என்பதும் பெறப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கப் புலவராகிய கபிலர், குறிஞ்சிக்கலியில் கூறியுள்ள கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் இன்றைய வானியலோடும் ஒத்துவருவதை வானத்தைப் பார்த்து உணருங்கள். கோளரங்கில் கண்டு மகிழுங்கள், கபிலரின் வானியல் அறிவை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள்.

நன்றி - தமிழ்மணி

கண்களோ, காதல் காவியம்!

கண்கள் இதயத்தின் நுழைவாயில். காதலின் தூதுவன். குறிப்பாக, பெண்களின் கண்களை சங்க இலக்கியச் சான்றோர்கள் முதல், குறும் பா புலவர்கள் வரை வர்ணிக்காதவர்களே இல்லை எனலாம். எந்த ஒரு நாட்டில் பெண்களின் கண்கள் அங்குமிங்கும் அலைபாயாது இருக்கிறதோ, அந்த நாட்டில் கற்பொழுக்கம் மிகுந்து காணப்படும் என்கிறார் கம்பர். ஆடவரும் பெண்டிரும் தத்தம் ஒழுக்கலாறுகளிலிருந்து பிறழாத நாடு கோசலம் என்கிறார்.

""ஆசல ம்புரி ஐம்பொறி வாளியும்
காசல ம்பு முலையவர் கண்ணெனும்
பூச லம்பு நெறியின் புறம்செலாக்
கோசலம்''

பழக்கம் வரக் காரணமாகி, ஒழுக்கம் பிறழவும் காரணமாயிருப்பது ஐம்புலன்கள்தானே? பொறிகளைப் புலன்வழி விட்டுத் துன்புறுபவர்கள் பெரும்பாலும் ஆண்களே! ஆடவர்களுக்கு ஐம்பொறிகளால் வரும் தீங்கு, பெண்களுக்குக் கண்களால் மட்டுமே வந்துசேரும். பெண்களின் கண்கள் போர் செய்யவல்ல அம்புகள் என்ற பொருளில் "பூசலம்பு' என்கிறார். எந்த நாட்டில் பெண்களின் கண்கள் புறம் செல்கின்றனவோ, அங்கு ஒழுக்கம் சீர்குலையும் என்பது கம்பரின் மதிப்பீடு.

உயிருண்ணும் மாலைப்பொழுது!

மாலைப்பொழுது வந்தாலே மங்கையர் மனமும்,​​ உடலும் வாடும்.​ பசலை நோய் படர்ந்த நிலையில் அவர்தம் மேனியெல்லாம் ஒருவித மாற்றத்தைக் காணும்.​ திருமான பெண்டிர்ளின் உயிரை உண்ணும் வேலையைச் செய்யவே இந்த மாலைப்பொழுது வருதாக வள்ளுவர்,​​

""மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது''
என்று கூறுகிறார்.​

லித்தொகையில் ஒரு காட்சி.​ தம் தலைனைப் பிரிந்த தலைவி;​ மாலைப்பொழுது கண்டு ஆற்றாத தலைவி,​​ தோழிக்கு உரைக்கிறாள்.​ காலையில் பகற்பொழுது காலத்தைக் கக்கி,​​ மாலையில் மீண்டும் அதை விழுங்குகிறான்.​ அதனால் கதிர்கள் சுருங்கி,​​ கதிவன் மலைவாயில் மறைந்துள்ளான்.​ காரிருள் படர்கிறது.​ கார்மேக வண்னின் மேனி நிறைந்தது போல் வெண்ணிலவு தோன்றுகிறது.​ தாமரை மலர்களோ உறங்குதுபோல் கண்மூடிக் கிடக்கின்றன,​​ தம் புகழைத் தாமே கேட்ட பெரியோர் தலைதாழ்த்தி நிற்தைப்போல மரங்கள் கிளை தாழ்ந்து துயில்கின்றன.​ குழலின் ஓசைபோல வண்டுகள் ஒலிக்கின்றன.​ தம் பார்ப்புகளை நினைத்துத் தாய்ப்வைகள் பறக்கின்றன.​ கன்றுகளை நினைத்துக் கறவைப் பசுக்கள் தம் கொட்கைக்குச் செல்கின்றன.​ விலங்கினங்களோ தம் வாழ்விடம் நோக்கி விரைகின்றன.​ செந்தீ வளர்த்து அந்ணர்,​​ அந்திப்பொழுதை வழிடுகின்னர்.​ இப்படி அனைத்து உயிர்ளும் மாலைநேரம் வந்தால் வீடு திரும்புகின்றன.​ மணந்த,​​ மனம் கவர்ந்த தலைவனோ மாளிகை திரும்வில்லை.​ தன் உயிரே போய்விடும் போலிருக்கிறதே'' என்று தலைவி வருந்திக் கூறுகிறாள்.​

இளவேனிற் காலத்து இனிய காட்சி

தமிழ் மக்கள் ஓர் ஆண்டு காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்துக்கொண்டனர். அவைகளில் இளவேனிற் காலம் மட்டுமே வசந்தகாலம். தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற தலைவிக்குக் கசந்தகாலம். வாழ்வில் இன்பம் தருகின்ற இளவேனிற் காலத்தை, கலித்தொகை மிக அழகாக விவரிக்கிறது.

வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆண்கள் மனம் விரைவில் கரைந்து விடுவதுபோல பேசும் மடப்பத்தை, ஆண் மானின் பிணையான பெண் மானின் மிரண்ட பார்வையுடைய பெண்கள் முத்துப்பல் விரிவதுபோல எங்கும் அரும்பி பூத்துக்குலுங்குகின்ற முல்லை மலர்கள். களவியில் திளைத்துக் கலைந்த மகளிரின் கூந்தல்போல ஈரமான வைகை மணலிலே பூந்தாதுக்களும் தளிர்களும் விழுந்துகிடந்தன. இப்படி இனிய காலமான இளவேனில் என்னை வந்து வாட்டுகிறதே, என்பதை ""ஈதலிற் குறை காட்டாது'' என்று தொடங்கும் கலித்தொகைப் பாடல் (27) விளக்குகிறது.

கற்பழிக்கத் தூண்டிய கவிதை - எஸ்.இராமச்சந்திரன்

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர், மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்றார் என்று சைவர்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக அமைவது, மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளகாட்டுமாவது உரித்துஎனத் தொடங்கும் தேவாரப் பதிகமாகும். இப்பதிகத்தில், சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று தமது கோரிக்கையினைப் பத்து பாடல்கள் மூலமாகச் சம்பந்தர் வெளிப்படுத்தியுள்ளார். உண்மையில் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பது மட்டுமின்றி, சமண-பெளத்தப் பெண்டிரைக் கற்பழிப்பதும் - அல்லது கற்பழிக்குமாறு பொதுமக்களைத் தூண்டுவதும் - சம்பந்தரின் நோக்கமாக இருந்திருக்கவேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர்.
இவ்வாறு சிலர் வாதிடுவதற்கு ஆதாரமாக இருப்பதுபெண்ணகத்து எழிற் சாக்கியப் பேய் அமண் தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமேஎன்ற சம்பந்தரின் தேவாரப் பாடல் வரியாகும். ‘பெண்ணகத்து எழில்என்ற அடைமொழி இடம் பெற்றிருப்பதால்கற்பழிக்கஎன்று சம்பந்தர் குறிப்பிட்டிருப்பதுசாக்கிய (பெளத்த) மதத்தையும், சமண மதத்தையும் பின்பற்றும் பெண்டிரைக் கற்பழிக்கஎன்ற பொருளிலேயே ஆகும் என்பது இவ்வாறு வாதிடுவோரின் கட்சியாகும்.

கரணம் தப்பினால்... - புலவர் சீனி.நந்தகோபால்

பொதுவாக உலகியல் ரீதியாக, "கரணம் தப்பினால் மரணம்' என்று சொல்வார்கள். இதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம்? விபத்து ஒன்றில் இருந்து உயிர் தப்புவதையும், கயிற்றின் மேல் நடந்து சாகசம் புரிவதையும்தான் இதனுடன் தொடர்புடையதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

வள்ளுவரின், "மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற வாய்மொழிக்கு இணங்க, "கரணம் தப்பினால் மரணம்' என்பதற்கு இலக்கியப் பூர்வமான மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. "கரணம்' என்ற சொல்லுக்கு "வதுவைச் சடங்கு' என்று பொருள். அதாவது, பெண்ணுக்கு உரிய சிறப்பாகிய வரைவு அல்லது திருமணச் சடங்கு என்பது பொருள்.

துடி - நுண் பொருள் விளக்கம் - பேராசிரியர் செ.வைத்தியலிங்கன்

தமிழில் "துடி' என்பதற்கு, உடுக்கை, உடுக்கு, சிரந்தை எனப் புலவர்கள் பல இடங்களில் பொருள் கூறியுள்ளனர். "துடி' என்பது தோலிசைக் கருவி; அந்தத் தோற்கருவிக்கு முற்காலத்தில் பல நோக்கங்களில் சிறப்பிடம் தந்துள்ளனர்.

"துடி' மரத்தால் செய்யப்பட்டு, அதன் இருபக்க வட்டக் கண்களும் தோலால் போர்த்தப்பட்டு, தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் இடைப்பகுதி சுருங்கியிருப்பதால், "இடை சுருங்கிய பறை' என்றும் விளக்கியுள்ளனர். அழகிய மகளிரை வருணிக்கையில், அவர்களின் இடை-இடுப்பு-நளினமாகச் சுருங்கி அமைதல் பற்றி "துடியிடை மகளிர்' எனப் புலவர்கள் இலக்கியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.

ராமர் வாழ்ந்தாரா? சங்க இலக்கியம் தரும் பதில்! - ச.நாகராஜன்

ராமர் பாதம் பதித்த ஸ்தலங்கள் பாரதம் முழுவதும் பரவி உள்ளதை முந்தைய  இதழ் ஒன்றில் படித்தோம். தமிழ் நாகரிகத்தைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டே ராமர் வாழ்ந்தது உண்மைதானா என்று கேள்வி எழுப்புவோருக்கு தமிழ் இலக்கியம் என்ன பதில் தருகிறது? உலக இலக்கியங்களில் சங்க இலக்கியம் மிகவும் பழமையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று பெரும் சங்கங்கள் தமிழ் இலக்கிய வளத்தின் செழுமைக்குத் தக்க சான்று ராமர் ஒரு புனைகதைப் பாத்திரமா அல்லது ஜீவனுள்ள ஒரு உண்மை நாயகனா என்பதற்கு சங்க இலக்கியம் அற்புதமான பதிலைத் தருகிறது

புறநானூறின் 378ம் பாடல்

தென் பரதவர் மிடல் சாய

வட வடுகர் வாள் ஓட்டிய

தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்

கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்

நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்

புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி

எஞ்சா மரபின் வஞ்சி பாட

எமக்கென வகுத்த அல்ல மிகப்பல

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை

தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு

இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்

விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்

செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொ ழிந்தாந்தாஅங்கு

அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு

தென் பரதவரின் குறும்புகள் அடங்க, வட வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க, அவரை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்! இச் சோழனின் நெடு நகரிலே,

வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று என் கிணையை இயக்கி,

எஞ்சா மரபினனான சோழனின் வஞ்சிச் சிறப்பைப் போற்றிப் பாடினேன்.

எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு ஏராளமாக அளித்தான். அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன். அவர்கள் கண்டு திகைத்தனர்! விரலில் அணிவன செவியிலும், செவியில் அணிவன விரலிலும், அரைக்குரியன கழுத்திலும், கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்! அவரது செயலைக் கண்டவர் கைகொட்டி நகைத்தனர். 'சீதையின் அணிகளை கண்ட குரங்கினம் அணிந்ததென' இராமாயணத்தில் சொல்லப்படும் தன்மை போலிருந்தது அந்தக் காட்சி!

என் சுற்றத்தின் வறுமையும் தொலைந்தது! அவர் முகத்தில் நகையும் அரும்பிற்று.

பழமையான சங்க இலக்கியம் வழக்கில் இருந்து வரும் ஒரு செய்தியைச் சுட்டிக் காட்டி நகைச்சுவையுடன் 'குரங்குகள் சீதையின் ஆபரணங்களை மாறி மாறி அணிந்தது போல என் உறவினரும் மாறி மாறி அணிந்தனர்' என்று கூறுவது பொருள் பொதிந்த ஒன்று.

அகநானூறு 70ம் பாடல்

வென்வேற் கவுரியர் தொன்முது கோடி

முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்றுறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம் போல

ஒலி அவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே (அகம் 70 - வரிகள் 13 முதல் 17 வரை)

இராமன் அரக்கரை வெல்லுதற்குச் செய்யும் போர் பற்றிய அரிய மறைச் செய்தியை வானர வீரர்களோடு ஆராய்தற்பொருட்டுக் கோடிக்கரையில் பல விழுதுகளுடைய ஆலமரத்தின் கண் பறவைகள் ஆரவாரிக்கும் ஆரவாரத்தைக் கைகவித்து அவித்தனன் என்பது மேற்கண்ட பாடல் தரும் அற்புதச் செய்தி.

நடந்திருந்தாலன்றி இப்படிப்பட்ட புனைகதைகள் வழக்கில் வர முடியாது; அதிலும் பாடலில் மேற்கோளாக இடம் பெற முடியாது. தனுஷ்கோடியை 'தொன் முது கோடி' என்று பாடல் கூறுவது மிகவும் ஆழ்ந்த பொருளைத் தருவதாகும்.

'காலம் காலமாக இருந்து வரும் கோடி' என்ற அர்த்தத்தை உற்று நோக்கினால் எல்லையில் காலம் முன்னர் நடந்த அரிய சம்பவமும் அது சார்ந்த இடமும் நமக்குப் புலனாகும்.

கலித்தொகை தரும் இராவணன் பற்றிய தகவல்

இது தவிர கலித்தொகை பாடல் 139ல் 33 முதல் 37 முடிய உள்ள வரிகளைப் பார்ப்போம்:

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"

இந்த வரிகள் அரக்கர் கோமானான பத்துத் தலை இராவணன் இமய மலையை எடுத்ததை அழகுறக் கூறுகிறது. ஆக, இப்படி இராவணன் இமைய மலை எடுத்தது, இராமன் தனுஷ்கோடியில் ஆலோசனை செய்தது, குரங்குகள் சீதையின் ஆபரணங்களை இடம் மாறி அணிந்தது போன்ற செய்திகள் சங்க இலக்கியத்தில் அழகுற ஆங்காங்கே தக்க இடத்தில் அமைந்துள்ளன.

இராமன் வாழ்ந்தாரா என்ற கேள்விக்குச் சங்க இலக்கியம் தரும் பதில் இது!

சேது என்ற சொல்லின் பொருள்

சேது என்பது ஒரு பழமையான வடமொழிச் சொல். இதன் பொருள் அணை என்பதாகும். இதை 'ஸஹ இதும் கந்தும் ஷக்யதே அனேனேதி ஸேது:' என்ற பழமையான சொற்றொடரால் அறியலாம்.

இதுவே கரைகளை உடைத்து நீர் வெளிவராமல் இருக்கும் கரைக்கும் உரித்த சொல்லாக ஆகிறது. ஆகவேதான், 'நிஸ்ஸேது' என்ற சொல் சமூக மற்றும் கௌரவத்திற்குரிய சட்டங்களை உடைப்பவனையும் குறிக்கும் சொல்லாக ஆனது.

இமயம் முதல் சேது வரை ஒரே பாரதம்!

ராமர் அமைத்த சேதுவைக் காக்கும் உரிமை தமிழக மன்னர் குலமான சேதுபதிகளுக்கு உண்டு. அவர்களின் வரலாறு மிகவும் பழமை வாய்ந்தது; மரியாதைக்குரியது. ராமர் ஸ்தாபித்த சேது சமஸ்தானத்தின் முதல் சேதுபதி முதல் இன்றைய சேதுபதி வரை ராமர் பாலத்தை அவர்கள் கட்டிக் காத்து வருகின்றனர். கி.பி.1605ம் ஆண்டிலிருந்து சேதுபதி வம்சத்தின் ஆதாரபூர்வமான வரலாறு நமக்கு இன்று கிடைக்கிறது.

இந்தக் குறுகிய சுமார் 400 ஆண்டுகள் வரலாறை அலசி ஆராய்ந்து பார்த்தாலும் முழு பாரத தேசமே சேதுவின் மீது கொண்ட பக்தி எவ்வளவு என்பதை விளக்கும். சங்க இலக்கியம் இமயமலையை எடுத்த ராவணனையும் குறித்தது. கோடிக்கரையில் ராமனின் சேது பற்றிய ஆலோசனையையும் குறிக்கிறது.

தமிழின் சங்க இலக்கியத்தைத் தவிர, "ஆ ஸேது ஹிமாசல" - இமயம் முதல் சேது வரை என்ற சொற்றொடரை - ஒரே பாரதம் என்ற ஒற்றுமைத் தொடரை - வேறு எந்தப் பழமையான இலக்கியத்தால்தான் நிரூபிக்க முடியும்!?

(நன்றி : ஆதிப்பிரான்)

 

கலித்தொகை காட்டும் மகளிர் - அ. கீதாரமணி

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ''மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்'' (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ''கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி'' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

''இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'' என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

''சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல'' (43. 5-7) என்றும்

''நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்'' (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

''நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்'' (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ''அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே'' இக்கருத்தினை ''வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்'' என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

''அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்'' என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

''வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்'' (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

''வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்'' (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

''வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்''

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கலித்தொகையில் அறக்கருத்துக்கள் - சி. தமிழ்ச்செல்வி

மக்கள் நல்ல முறையில் வாழப் புலவர்கள் அறநெறிகளை வழங்கினர். அறக்கருத்துக்களைக் கூறும் தனி நூல்கள் தனியாக தோன்றாத காலத்தில் அகப்பாடல்களின் மூலம் அறக்கருத்துக்களை எடுத்து ஓதினர். இவ்வாறு அகப்பாடல்களின் மூலம் கூறும் கருத்துக்கள் அகமாந்தர்களுக்கு மட்டுமின்றிச் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்துமாறு அறிவுறுத்திய நூல் கலித்தொகை ஆகும். அறம் என்பது ஒழுக்க நெறியாகும். பிற உயிர்களுக்கு உதவுவதும், துன்பம் செய்யாமையுமே அறம் ஆகும். மேலும் அறம் என்னும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, ஈகை, புண்ணியம், அறக்கடவுள், சமயம் என்ற எட்டுவகையான பொருள்கள் பெரு வழக்கமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அறத்தின் தோற்றம்:

மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறருக்குத் துன்பம் தராத நல்ல நெறியிலேயே இவற்றைப் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், சமுதாயம், அரசியல் முதலியன அமைந்திருந்தன. இவ்வாறு சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றியபோது வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் அறக்கருத்துக்கள் தோன்றின.

அறத்தின் பிரிவுகள்:

தமிழர் காதலையும் வீரத்தையும் தம் கண்களாகப் போற்றினர். காதல் உணர்வை அகம் என்றனர். வீரத்தைப் புறம் என்றனர். அகவாழ்விலும் புறவாழ்விலும் அறநெறி கொண்டு வாழ்க்கை நடத்தினர். அறத்தினை அக அறம், புற அறம் என்றும் புற அறத்தினைப் போரறம், சமுதாய அறம் என்றும் பிரிப்பர்.

அகத்திணையில் அறநெறிகள்:

ஆணும் பெண்ணும் காதல் உணர்வு கொண்டு இன்புற்று வாழும் வாழ்வு ''அகம்'' என்பர். இதை அகத்திணை என்றும் கூறுவர். அகத்திணை மாந்தர்களான தலைவன், தலைவி, தோழி, செவிலி, தந்தை, தமையன் ஆகியோர் அறஒழுக்கம் கொண்டு ஒழுகினர்.

கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைமகன், தலைமகள், தோழி என்போர் புலவர்களாற் படைத்துக் கொள்ளப் பெற்றோரே எனினும் அக்காலத்து நன்மக்களின் இயல்புகளும் வாழ்க்கைக் கூறுகளுமே அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன. ஆகவே கலித்தொகை இன்பச் சுவையை கொடுப்பதுடன் அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர் வேளாளர்களும், பிறருமாகிய ஆடவரும் மகளிரும் இளமையிலும் முதுமையிலும் அறியவேண்டிய நன்னெறிகளை எடுத்தியம்புகிறது.

அகவாழ்வில் அறத்தோடு பொருந்தி இல்லற வாழ்வினை மேற்கொண்டனர். ஓர் ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் வறுமை நிலையிலும் மனம் ஒன்றி வாழும் ஒத்த அன்பு வாழ்க்கையே சிறந்த இல்லறம் என்பதை,

''ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை'' (9.23-24)

என்ற கலித்தொகை வரிகள் விளக்குகின்றன. கற்புடைய பெண்டிர் பிற தெய்வங்களைத் தொழுதல் இல்லை. கற்புடைய பெண்டிர் பிழையின்றி வறட்சி நிலவிய காலத்தும் மழையைப் பெய்விக்கும் ஆற்றல் வாய்ந்தவராக விளங்கினர். கற்புடைய பெண்ணினது கணவன் சென்ற வழியில் ஏற்படும் வெயிலின் வெம்மையை அறக்கடவுள் முன்னின்று விலக்கித் துணை செய்தது என்று கற்புத் திறம் போற்றப்படுகிறது. இதனை,

''வறனோடின் வையத்து வான்தரும் கற்பினாள்'' (16. 18-12) என்ற வரி விளக்குகிறது.

புறத்திணையில் அறநெறிகள்:

புறத்திணையில் அறம் என்னும் பொழுது மக்கள் நல்வாழ்வுக்கு அரசு இன்றியமையாததால் அறத்தின் வழியே ஆட்சிபுரிந்து அரசின் தலையாய கடமையாகும். மன்னன் அறவழியில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும், மன்னன் மட்டுமின்றி மன்னன் பயன்படுத்தும் செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறம் செய்பவையாக அமைகின்றன. அரசனது வெண்கொற்றக் குடை அறம் செய்யும் என்பதை,

''அறன்நிழல் எனக்கொண்டா ஆய்குடை அக்குடை'' (99.8)

மன்னன் கையில் உள்ள செங்கோல் நடுநிலைமை தப்பாது உலகம் புகழும்படி விளங்குகின்றதை

''பொய்யாமை நுவலுகின் செங்கோலச் செங்கோலின்'' என்னும் வரி விளக்குகிறது.

முரசானது மக்களின் பாதுகாப்பிற்குரிய அரணாக அமைகிறது. எனவே வேந்தனது செம்மையால் மாரி சுரக்கும். வெண்கொற்றக்குடை அறனிழவாகும், செங்கோல் பொய்யாமை நுவலும் முரசம் பாதுகாப்பை ஒலிக்கும் என்பன கலித்தொகை உணர்த்தும் அரச அறங்களாகும்.

போர்க்களத்தில் வலிமை இல்லாதவரோடு போர் செய்வது அறமாகக் கொள்ளப்படுவதில்லை. பகைவன் கருவியின்றி நிற்குமிடத்துத் தனக்கு நிகராகான் என்று அவனிடம் போர் செய்யாது விடுவதும் வீழ்ந்தவன் மேல் செல்வதும் வீரமன்று என்று கலித்தொகை உணர்த்துகின்றது.

சமுதாயவியல்:

சமுதாயத்தில் பின்பற்ற வேண்டிய ஈகை, இன்னா செய்யாமை, நிலையாமை ஆகிய கருத்துக்கள் சமுதாய அறமாக விளங்குகின்றன. ஈதலின் சிறப்பாக ''இரந்தோர்க்கு இல்லையென்னாது ஈதலும், பயன் கருதாது ஒருவருக்கு ஒரே பொருளைக் கொடுத்தலே ஈகையறமாகும். இதனை,

''ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்'' (133.6)

என்று நெய்தற் கலிப்பாடல் மூலம் அறியமுடிகிறது. ஈகை செய்து இல்லறம் நிகழ்த்தும் தீவினை இல்லாதவனுடைய செல்வம் பெருகும் என்பதை,

''ஈதலின் குறைகாட்டாது அறனறிந்து ஒழுகிய

தீதிலான் செல்வம் போல்'' (27.2)

என்ற வரிகள் அறிவுறுத்துகின்றன. மேலும் செய்த வினைப்பயன் பற்றுவிடாது பயன் தறுதல், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றில் அறத்தின் திறஞ்சேரார் மடலூர்தல் ஆகியவை கலித்தொகை கூறும் சமுதாய அறங்களாகும்.

மனவியல்:

''மகிழ்ச்சியினால் அறிவு பொலிவு பெறும்'' மன ஒழுக்கத்தினால் வாழ்நாள் சிறக்கும்'' ''உண்கடன் வழிபொழிந்து இரக்குங்கால் முகனுந்தாங்கொண்டது கொடுக்குங்கால் மகனும் வேறாகும்'', ''நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை'', என்பவை மனவியல் வழங்கும் உண்மைகளாகும்.

பறவை விலங்குகளின் வாழ்வை விளக்குவதன் மூலம் கலித்தொகை பல அறக்கருத்துக்களைக் கூறுகின்றது. மேலும் இறைவனின் படைப்பு ஓருயிர் மற்றொருயிரை செகுத்துண்ணுமாறு அமைக்கும் நோக்கமில்லாதது என்னும் உயரிய அறம் புலப்படுகின்றது.

நிலையாமை:

மன்னர் உலகத்து மன்னுதல் குறித்தோர் உணர வேண்டிய நிலையாமையை நெஞ்சில் நின்று நிலைபெறுமாறு கலித்தொகை கூறுகின்றது. வாழ்நாள், அழகு, இளமை, பொருள், காமம், ஆகிய ஐம்பெரும் நிலையாமை அழகான உவமைகளின் மூலம் விளக்கப்பெற்றுள்ளது.

''வளியினும் வரைநில்லாதது வாழுநாள் ஆகவே,

கடைநாள் இதுவென்று அறிந்தாரில்லை'' (கலி. 20.9)

அழகு, நீள்கதிர், அவிர்மதி நிறைவு போல் நிறையாது நாள்தோறுந் தன் நிலை குலைந்து விடும் என்பன இளமை பற்றிய செய்திகளை கலித்தொகை அறிவுறுத்துகிறது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் சிதறிக் கிடைக்கின்றன. இவ்வாறில்லாமல் ஒரேவொரு பாட்டாலும் பல அறவுரைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

''ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை

அறிவெனப்படுவது பேதையர் சொல்நோன்றல்

செறிவெனப் படுவது மறைபிற ரறியாமை

முறையெனப் படுவது கண்ணோட்டா துயிர்வெளவல்

பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்'', (133-14)

என்றிவ்வாறு அறநெறிக் கருத்துக்களைக் கலித்தொகை முதன்மைப்படுத்திக் கூறுகின்றது.

மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிகள் ஆங்காங்கே காணப்பட்டாலும் இப்பாடலில் மக்கள் பின்பற்ற வேண்டிய அறவுரைகள் ஒரே பாடலில் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளை அகப்பாடலின் வாயிலாக மென்மையாக எடுத்துக்கூறி அறிவுரை வழங்கினர். உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், செல்வந்தர், வறியவர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அறிவு புகட்டும் வகையில் கலித்தொகையில் அறநெறிகள் மிகுந்து காணப்படுகிறது.

''ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், கற்பித்தான் நெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் பொருளேபோல் தமியவே தேயும்'' என்று கலித்தொகையில் அறிவுரைக்கு அறவுரையே உவமையாக கூறப்பட்டுள்ளது. இதைக் காணும் பொழுது,

''அழுக்கா றுடையான்கண் ஆக்கம் போன்றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு'' (குறள்.35)

என்னும் நீதிக்கு நீதியையே உவமை காட்டும் திருக்குறளை எண்ண வைக்கின்றது. ஆகவே நீதி இலக்கியப் பண்புகள் சங்க காலத்தில் தோன்றிய கலித்தொகையில் அரும்பத் தொடங்கியுள்ளது என்பதை அறியமுடிகின்றது.

நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. கலித்தொகைப்பாடல்கள் அறநெறிகளோடு வாழவேண்டும் என்கின்ற பொதுவான கருத்துக்களைத் தெளிவுபட விளக்குகின்றன. அறவாழ்க்கையின் நோக்கத்தைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் கலித்தொகைப் பாடல்கள் தெளிவிக்கின்றன.

நன்றி: கட்டுரை மாலை

 

கலித்தொகை காட்டும் சங்ககாலத் தொழில்கள் - சு. அரங்கநாதன்

முன்னுரை: ஆதிகால மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவினை உண்டு வாழ்ந்தான். இயற்கை உணவின் உற்பத்திக் குறைவைப் போக்க அல்லது அதன் தேவையினை அதிகரிக்க, தானே உற்பத்தி செய்யும் முறையினை மேற்கொண்டான். கால ஓட்டத்தில் பொன் அணிகலன்கள், தங்கும் வீடுகள், ஆடைகள் இவற்றின் மதிப்பு அதிகரித்தது. இவற்றைச் செய்தற்குரிய தொழில் நுட்பங்களை அறிந்தவர்கள் இவற்றைத் தொழிலாகக் கொண்டனர். மேலும் ஆநிரைகளை மேய்த்தவர்கள் அதில் கிடைக்கும் பால், வெண்ணெய், மோர் இவற்றை விற்கக் கற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்ட தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றிபெற அவரவர் திறமைகளைக் காட்டத் துவங்கினர். இவ்வாறு பல்வேறு தொழில்கள் வளர்ந்த நிலையில், இருந்த சங்ககாலத் தொழில்கள் பற்றியும், அத்தொழில்கள் அவரவர் பயன்படுத்திய நுட்பங்கள் பற்றியும் கலித்தொகை மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கட்டடத் தொழில்: குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்த மனிதன் தனக்கென இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினான். அதன் வளர்ச்சியே மாளிகைகளும், அரண்மனைகளும், வீடுகளும் ஆகும். கலித்தொகை பாடல்களில் இவை குறித்த செய்திகள் அறியக் கிடைக்கின்றன.

''நிலன் நாவில் திரிதரூஉம் நீள்மாடக் கூடலார்'' (கலி.35:17)

என்ற வரியில் நீண்ட மாடங்களுடன் அமைக்கப்பட்ட மாளிகை குறிக்கப்படுகின்றது.

''ஆய்சுதை மாடத்து அணிநிலா முற்றத்துள்'' (கலி. 96:19)

என்பதில் அழகுடைய சாந்து பூசப்பட்ட மாடமும் அழகுடைய நிலா முற்றமும் குறிக்கப்படுகின்றன.

''சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர்சீர்த்தி'' (கல்.83-13)

''பெருந்திரு நிலைஇய வீய்கு சோற்று அகல்மனை

பொருந்தி நோன்கதவ ஒற்றிப் புலம்பியாம் உலமா'' (கலி.83:1-2)

ஆகிய வரிகளில் சாளரம் அமைக்கப்பட்டு, இரட்டைக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ள வீடு பற்றிய செய்தி கூறப்படுகின்றது.

ஆடைத் தொழில்: இலைகளையும், மரப்பட்டைகளையும் ஆடைகளாக அணிந்த மனிதன், நூலினாலான ஆடைகளை உடுத்தத் தொடங்குகிறான். வளர்ச்சி அடைந்த நிலையில் பல்வேறு வண்ணங்களையும் சிறப்புக் கூறுகளையும் உருவாக்கத் தொடங்கி மனிதன் அதில் பல்வேறு தொழில் நுட்பங்களைக் கையாண்டுள்ளான் என்பதனைக் கீழ்க்காணும் கலித்தொகை பாட்ல்வரிகள் காட்டுகின்றன.

அணிகலன்கள்: உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் பற்றியும், இவ்வணிகலன்கள் செய்யக் கையாளப்பட்ட நுட்பங்கள் பற்றியும் கலித்தொகையில் பல்வேறு பாடல்கள் சுட்டுகின்றன.

''அளிமாற பொழுதின் இவ்ஆயிழை கவினே (கலி-25)

நறா இதழ் கண்டன்ன செவ்விரற்கு ஏற்ப''

''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்''

''புனை இழை நோக்கியும்'' (கலி.76)

''மாணிழை ஆறாகச் சாறு'' (கலி.102)

''கடியவே கனங்குழாஅய் காடுஎன்றார்'' (கலி-11)

''ஞால்இயல் மென்காதின் புல்லிகைச் சாமரை'' (கலி-96)

''கிண்கிணித் தாரொடு ஒலித்து ஆர்ப்பு ஒண்தொடிப்'' (கலி-74)

என அமைந்த கலித்தொகை வரிகளால் ஆண் சுறாமீன் வடிவத்தில் உள்ள மோதிரம் அணிந்தமை பற்றியும், ஒளியை உடைய அணிகலன்கள் பற்றியும், பொன்னால் செய்த கனமான காதணி பற்றியும், கிழே தொங்கும் தன்மையுடைய புல்லிகை என்ற அணி பற்றியும், மணிகள் சேர்க்கப்பட்ட மாலை பற்றியும் அறிய முடிகிறது. மேலும், கைக்கவசம், தொடி, பொலன், கோதை, முத்தாரம், கழுத்தணி, வயந்தகம் போன்ற அணிகள் பற்றியும் அதில் செய்யப்பட்ட நுட்ப வேலைப்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

குவளை மலர் விற்றல்: பெண்கள் சூடும் மலர்களைக் கொய்து விற்பனை செய்யும் தொழில் பற்றிக் கலித்தொகை கூறுகின்றது.

''வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட'' (கலி.11)

சலவைத்தொழில்:

''சலவைத் தொழிலில் சங்ககால மக்கள் ஈடுபட்டுள்ளதை,

.....................................................................ஊரவர்

ஆடை கொண்டு ஒலிக்கும்நின் புலைத்தி

என்ற கலித்தொகை வரி காட்டுகின்றது.

வள்ளிக்கிழங்கெடுத்தல், தேனெடுத்தல்''

குறிஞ்சிநில மக்கள் வள்ளிக்கிழங்கினைத் தோண்டியெடுத்தலும், தேனெடுத்தலும் பற்றிய குறிப்பினைக் கலித்தொகை

''வள்ளி கீழ்வீழா, வரைமிசைத் தேன்தொடா'' (கலி.39)

என்று கூறுகின்றது.

ஆநீரை மேய்த்தல்: முல்லைநில மக்கள் ஆடு, மாடுகளையும் அவற்றைக் காத்து வைத்திருத்தலையும் முக்கியச் செயலாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பதனை முல்லைக்கலிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

''தத்தம் இனநிரை

பொழுதோடு தோன்றிய கார்நனை வியனிட புலத்தார்'' (கலி-106)

''மேயும் நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர் (கலி-108)

''பாங்கரும் பாட்டாய்கால் கன்றோடு செவ்வோம்யாம்'' (கலி-116)

என்பதன் மூலம் கோவலர்கள் மனைக்கு அருகில் உள்ள புல்வெளிகளுக்குக் கன்றோடு பசுவினையும் சேர்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர் என்பதையும் அதனைக் காக்க வேண்டிக் கோலூன்றி நின்றனர் என்பதையும் அறியமுடிகின்றது.

மோர் விற்றல்: ஆநிரையால் பெற்ற பாலை மோராக மாற்றி விற்கும் தொழிலில் மகளிர் ஈடுபட்டனர்.

''அகலாங்கண் அளைமாறி அலமந்து பெயருங்கால்

அளைமாறிப் பெயர் தருவாய்'' (கலி-108)

என்ற வரிகளினால் பெண்கள் அருகில் உள்ள சிற்றூரில் மோர் விற்றுத் திரும்பியதைத் தெரிய முடிகிறது.

வெண்ணெய் விற்றல்: முல்லை நிலத்துப் பெண்கள் மோரில் இருந்து வெண்ணெய் எடுத்து அதனையும் விற்றனர்.

''வெண்ணெய்க்கும் அன்னள்எனக் கொண்டாய் ஒண்ணுதல்'' (கலி-110)

வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே'' (கலி-115)

பனங்குருத்தால் பெட்டி புனைதல் : பனை ஓலை, தென்னை ஓலைகளைக் கொண்டு அன்றாடத் தேவைகளுக்குப் பொருட்களைச் செய்தனர். ஓலைகளைப் பயன்படுத்தி பலவிதமான கூடைகள் செய்தனர். அவை புட்பில் எனப்பட்டது என்பதனை முல்லைக்கலியல் உள்ள

''போழின் புனைந்த வலிப்புட்டில்'' (கலி-117)

''வரிகூழ வட்டி தழீஇ'' (கலி-109)

என்ற இவ்வரிகளினால் பெட்டிகள் செய்து அவற்றில் நெல்லினைக் கொண்டு சென்றதனையும் அறிய முடிகின்றது.

தினைப் புனங்காத்தல்: விளைந்த தினைக்கதிரைப் பறவைகள் வந்து உண்டுவிடாமல் இருக்க தினைப்புனங் காக்கின்ற தொழிலை தலைவியும் தோழியும் செய்தனர்.

''ஒளிதிகழ் ஞெகிழார் கவணையார் வில்லர்

களிறுஎன ஆ‘ப்பவர் ஏனல் காவலேரே'' (கலி-52)

''படிகிளி பாயும் பசுங்குரல் ஏனல்'' (கலி-50)

தினைப்புனங் காக்கும் மகளிர் கவனையும், வில்லையும் கொண்டு களிற்றினை விரட்டி ஆரவாரம் செய்தமையும் தினைப்புனத்திற்கு வருகின்ற கிளிகளைக் கவன் கொண்டு ஓட்டியமையும் கூறப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல்: சங்க காலத்தில வேட்டைத்தொழில் சிறப்பாக நடந்தது. வேட்டைக்குச் செல்வோர் அதற்குத் தேவையான கருவிகளுடன் சென்று காட்டில் எல்லாத் திசைகளிலும் அலைந்து வேட்டையாடுவதற்குரிய விலங்குகள் உள்ள இடத்தை அறிந்து தாக்கினர். அவர்கள் வெள்ளை யானை, மான் போன்றவற்றை வேட்டையாடியதனை,

''இலங்கொளி மருப்பின் கைம்மா உளம்புநர்

புலங்கொடி கவனையின் பூஞ்சினை உதிர்க்கும்

கொலைவெம் கொள்கையோடு நாயஅகப் படுப்ப

வலைவர்க்கு அமர்ந்தே மடமான்''

என்ற பாலைக்கலி வரிகளின் மூலம் அறியலாம்.

ஆறலைக்கள்வர்: பாலை நிலம் வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களிடம் அவர்தம் உடைமைகளைப் பறித்துச் செல்லும் ஆற்றலைக் கள்வர்கள் பற்றிய செய்தி கலித்தொகையில் இடம் பெறுகின்றது.

''அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர்தாம்

கொள்ளுப் பொருள் இலர்ஆயினும் வம்பலர்

துள்ளுநர்க் கண்மார் தொடர்ந்து உயிர் வெளவலின்'' (கலி.4)

தோற்பைகள் செய்தல் : கொல்லன் பட்டறையில் பயன்படுத்தப்பட்ட ஊதுலைக் கருவி தோலால் செய்யப்பட்டது. இது மெல்லிய தோலால் செய்யப்பட்டது.

''கழுவொரு சுடுபடை சுருக்கிய தோற்கண்'' (கலி.106)

என்பதனால் ஆநிரைகள் மேய்க்கச் செல்லும் போது முல்லை நிலக் கோவலர் கழுவோடு சூட்டுக் கோலையும் தோற்பையில் இட்டுச் சுருக்கிக் கட்டிக்கொள்வர் என்பதைத் தெரியமுடிகின்றது.

தச்சுத் தொழில்: சங்க காலத்தில் மரத்தினால் கட்டில்களையும் பொம்மைகளையும் செய்தனர் என்பதைப் பின்வரும் பாடல்வரிகள் மூலம் அறியமுடியும்.

''படைஅமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ

இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்'' (கலி: 72)

புரிபுனை பூங்காற்றில் பையல வாங்கி (கலி: 80)

கமயரணம் பாயாநின் கைபுனை வேழம் (கல்: 86)

முடிவுரை: சங்க காலத்தில் மக்கள் பல்வேறு தொழில்கள் செய்துவந்துள்ளனர், அத்தொழில்களில் அக்கால மக்கள் காட்டிய ஆர்வமும் செயல்திறனும் சிறப்புடையன. ஆண்களோடு இணைந்து அவர்கள் அறிந்த தொழிலைச் செய்து தம்குடும்ப பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டனர். சங்க கால மக்கள் தோல், நூல், பொன், மண்டபம், மரம் போன்ற பொருட்களினால் செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் தெரியமுடிகின்றது.

நன்றி: கட்டுரை மாலை.